Everything posted by ஏராளன்
-
ஊடகவியலாளர் குமணனை மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை அழைத்துள்ளனர்
ராஜபக்ச - நல்லாட்சி காலத்தை போல தொடர்ந்தும் செயற்படும் பாதுகாப்பு எந்திரம்; ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் - அம்பிகா சற்குணநாதன் Published By: RAJEEBAN 07 AUG, 2025 | 05:03 PM மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும் முறைசாரற்ற வழிகளில் வளர்ந்ததை நல்லாட்சி காலத்தில் அகற்றவில்லை. இதன் காரணமாகவே ஊடகவியலாளர்கள் சிவில் சமூகத்தினர் உட்பட பலரை பயங்கரவாத விசாரணை பிரிவினரும் குற்றப்புலனாய்வு பிரிவினரும் தொடர்ந்தும் விசாரணைக்கு அழைக்கின்றனர், கண்காணிக்கின்றனர், அச்சுறுத்துகின்றனர் என தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் அரசாங்கம் விசேட உத்தரவொன்றை பிறப்பிக்காவிட்டால் இது தொடரும் என எச்சரித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத விசாரணை பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ளமை பல வருடங்களாக இடம்பெறும் துன்புறுத்தல்கள் அச்சுறுத்தல்களின் சமீபத்தைய சம்பவமாகும். பயங்கரவாத விசாரணை பிரிவினர் குற்றப்புலனாய்வு பிரிவினர் தகவல் வழங்க கோரி அவரை பலமுறை விசாரணைக்காக அழைத்துள்ளனர், அவரை அச்சுறுத்தியுள்ளனர், அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர் அவரை பின்தொடர்ந்துள்ளனர். இவ்வாறான அழைப்பாணைகள் தொலைபேசி அழைப்புகள், வீடுகளிற்கு செல்லுதல் போன்றவற்றை எதிர்கொண்டவர் குமணன் மாத்திரமில்லை. பல சிவில் சமூக பிரதிநிதிகள் செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள், காணமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்கள் போன்றவர்களும் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர். இன்றும் இது தொடர்வது ஆச்சரியமளிக்கும் விடயம் மாத்திரமில்லை. ஏனெனில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும் முறைசாரற்ற வழிகளில் வளர்ந்ததை நல்லாட்சி காலத்தில் அகற்றவில்லை. தற்போது அது முன்னர் போலவே செயற்படுகின்றது. இந்த அரசாங்கம் இவற்றை நிறுத்துமாறு அவர்களிற்கு விசேட உத்தரவை பிறப்பித்தால் ஒழிய அது தொடரப்போகின்றது. விசாரணை, துன்புறுத்தலுக்குக் கொடுக்கப்படும் காரணங்கள் மற்றும் கேள்விகளில் மனித உரிமைகள் பிரச்சினைகள், வெளிநாட்டு நிதியைப் பெறுதல், இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்துதல், தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேச அளவில் விளம்பரப்படுத்துதல் மற்றும் ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்துடனான ஈடுபாடு ஆகியவை அடங்கும் பாதுகாப்பு நிறுவனங்கள் சட்டபூர்வமான அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட நடவடிக்கைகளை உண்மையில் குற்றமாக்குகின்றன. மேலும் ஒரு சமூகத்தை இன ரீதியாக அடையாளம் காணவும் துன்புறுத்தவும் அரிதான அரசு வளங்களை வீணாக்குகின்றன - தமிழர்கள் இயல்பாகவே சந்தேகத்திற்குரியவர்களாகவும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும் கருதப்படுகிறார்கள். https://www.virakesari.lk/article/222069
-
வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி போராட்டம்
சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை வலியுறுத்தி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் 07 AUG, 2025 | 06:28 PM இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத, சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இன்றைய தினம் (7) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு, மீளப் பெற முடியாத வகையில், சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை வலியுறுத்தும் வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் மூன்றாவது ஆண்டு தொடர்ச்சியும் மற்றும் அதனுடன் தொடர்புடைய கவனயீர்ப்புப் போராட்டமானது 100 நாள் செயல்முறையில் 7வது நாளான இன்று மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அந்தோனியார் புரம் பகுதியில் நடத்தப்பட்டது. "சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரே தீர்வாகும்" என்ற ஒரே கோசத்துடன் இந்த போராட்டம் பெரும் எண்ணிக்கையான மக்களின் பங்கேற்பில் நடைபெற்றது. இதன் நோக்கமானது, தமிழர்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் மறுபடியும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் கவனிக்கப்படவேண்டும் என்பதேயாகும். தொடர்ச்சியாக, 100 நாட்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் இத்தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வரிசையில், இன்றைய போராட்டத்தின் இறுதியில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் வாசிக்கப்பட்டது. இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனைவின் 5வது வருடம் இலங்கையின் இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே அவசியம். 1948க்குப் பின்னரான இலங்கையின் 75 வருடகால அரசியல் வரலாற்றில், இனத்துவ அரசியலே மேலோங்கிக் காணப்படுகிறது. இலங்கை அரசானது சிங்கள பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசாங்கங்களாலும் தலைவர்களாலும் ஆளப்பட்டு வருகிறது. 1908 முதற்கொண்டு ஏனைய தேசிய இனங்களான வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோருக்கு அரச அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கப்படவில்லை. அரசியல் அதிகாரம் உரிய முறையில் பகிர்ந்துகொள்ளப்படவில்லை. மாறாக, மொழி ரீதியான, மத ரீதியான அடக்குமுறைகள் மேலோங்கின. சுதந்திரம் கிடைத்து ஒரு வருடம் நிறைவடைவதற்குள் மலையகத் தமிழர்களுக்கு எதிராக 1948ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து, வடக்கு - கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தமிழர்களுக்கு எதிராக 50களில் கிழக்கிலும், மலையகப் பகுதிகளிலும், தெற்கிலும் மேற்கொள்ளப்பட்ட இன வன்முறைகள், சுதந்திரத்துக்குப் பின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் புறக்கணிக்கப்பட்டமை என இனவாதம் விரிவாகியது. அதன் உச்சமாக 1956இல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டமானது அரச கட்டமைப்பை சிங்களமாக்கியது. இதுவே வடக்கு - கிழக்கு தமிழர்கள் தமக்கான "சமஷ்டி" முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வை கோரக் காரணமானது. ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் அரசியல் தீர்வு பற்றி பல உறுதிமொழிகளை தமிழர்களுக்கு வழங்கினாலும், பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. மாறாக, இனவாதமும் அடக்குமுறைகளும் அதிகரித்து இறுதியில் தமிழின அழிப்பு யுத்தத்தில் நிறைவுற்றது. போருக்குப் பின்னரான காலத்தில் அரசியல் தீர்வு குறித்து அரசாங்கங்கள் அக்கறை காட்டவில்லை. திடமான அரசியல் தீர்வுக்கான உரையாடல்கள் முன்னெடுக்கப்படாமல், தமிழ் மக்களின் அரசியல் தளம் வெறுமையானது. இந்த நிலையை மாற்றி வடக்கு, கிழக்கு ரீதியாக மக்கள் மத்தியில் அரசியல் தீர்வுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி "அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனைவை" ஆரம்பித்தோம். வடக்கு, கிழக்கின் கிராமங்கள், நகரங்கள் என 100 இடங்களில் இந்த ஜனநாயக வழிப்பட்ட மக்கள் திரள் செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு 100வது நாளான 2022 நவம்பர் எட்டாம் திகதி "சமஷ்டி அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனத்துடன்" நிறைவேறியது. தற்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய தலைமைத்துவங்களுடன் இலங்கையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. "ஜனநாயகம்", "கட்டமைப்பு மாற்றம்", "இன, மத பேதமின்மை" எனும் கொள்கைகளை முன்வைத்து இவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளன எனும் அரசியல் தீர்வு குறித்து தேசிய மக்கள் சக்தி அரசு மௌனம் காத்துவருகிறது. வடக்கு, கிழக்கில் இராணுவமயமாக்கம், காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தில் ஆக்கிரமிப்பு, மகாவலி குடியேற்றம் மற்றும் சிங்களமயமாக்கம், பௌத்த மயமாக்கம், தமிழ் மொழி உரிமை புறக்கணிப்பு, இனவாத அச்சுறுத்தல்கள் ஆகியன தொடர்ந்தவண்ணம் உள்ளன. இந்த அடக்குமுறைகள் அனைத்தையும் வைத்துக்கொண்டு "இன மத பேதமின்மை" குறித்து அரசு கதைப்பது நேர்மையின்மையாகும். வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முன்வைத்து வரும் சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கையை "இன, மத பேதமின்மை" எனும் கோஷத்தின் பின்னால் மறைக்கவோ மறுதலிக்கவோ முடியாது. மேலும், 2015ஆம் ஆண்டில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1இல் இலங்கை அரசு இணைப் பங்காளராக இருந்து கையொப்பம் இட்டுள்ளது. இத்தீர்மானத்தின் ஏற்பாடு 20ஆனது அரசியல் அதிகாரப் பரவலுக்கான இலங்கையின் கடப்பாட்டை கூறுகிறது. ஆகவே. இனவாதத்தை சார்ந்திருந்த பழைய அரசுகளைப் போல் இல்லாமல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, நிலையானதும் கௌரவமானதும் உரிமைகளுடன் கூடிய சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தும் தீர்வுத் திட்டத்தை உடன் முன்னெடுக்கக் கோருகிறோம். சமஷ்டி அரசியல் தீர்வு என்பது நாட்டைப் பிரிப்பது அல்ல. அது மிகவும் உயரிய ஜனநாயக அரசியல் அமைப்பின் வெளிப்பாடாகும். போருக்குப் பின் ஜனநாயக அரசியலை முன்னெடுத்துவரும் நாடுகள், எமது அண்டை நாடான நேபாளம் அடங்கலாக, சமஷ்டி முறைமையையே பொருத்தமானதாக ஏற்று அமுல்படுத்துகின்றன. எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட இன அடக்குமுறையையும் முப்பது வருடகால இன அழிப்பு யுத்தத்தையும் எதிர்கொண்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொருத்தமான அதிகாரப் பகிர்வு இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வாகும். இதுவே வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் திடமான அரசியல் அபிலாசையாகும் என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்தது. https://www.virakesari.lk/article/222073
-
ஊடகவியலாளர் குமணனை மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை அழைத்துள்ளனர்
செம்மணி மனித புதைகுழியில் எடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் பின்னால் இருக்கும் துயரத்தையும் அரச பயங்கரவாதத்தையும் குமணனின் ஆவணங்கள் உலகிற்கு சொல்கின்றன என்பதாலேயே அவர் அனுரா அரசால் மிரட்டப்படுகிறார் - திருமுருகன் காந்தி Published By: RAJEEBAN 07 AUG, 2025 | 04:26 PM செம்மணி மனித புதைகுழியில் எடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் பின்னால் இருக்கும் துயரத்தையும் அரச பயங்கரவாதத்தையும் குமணனின் ஆவணங்கள் உலகிற்கு சொல்கின்றன என்பதாலேயே அவர் அனுரா அரசால் மிரட்டப்படுகிறார் என தமிழ்நாட்டின் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, செம்மணி புதைகுழி உள்ளிட்ட தமிழர் மீதான மனித உரிமை மீறல்(ஜெனோசைட்) தகவல்களை போராட்டங்களை புகைப்படங்களாக ஆவணப்படுத்தி ஊடகவியலாளராக செயல்படும் குமணனை 'பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கீழாக விசாரணைக்கு கொண்டு வந்துள்ளது அனுராவின் அரசு. குமணனின் புகைப்படங்கள் கூர்மையானவை, ஆவணப்படுத்தும் வகையிலான தகவல்களை உள்ளடக்கியவை. உலகளாவிய தரங்களுடனான இப்புகைப்பட பதிவுகள் ஊடகங்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச விசாரணைக்கும் பயன்படுபவை. செம்மணி மனித புதைகுழியில் எடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் பின்னால் இருக்கும் துயரத்தையும் அரச பயங்கரவாதத்தையும் குமணனின் ஆவணங்கள் உலகிற்கு சொல்கின்றன என்பதாலேயே அவர் அனுரா அரசால் மிரட்டப்படுகிறார். இலங்கையின் அனுரா அரசு இடதுசாரி அரசு எனவும் சிவப்பு அலை இலங்கையில் வீசுகிறதெனவும் பரப்புரை செய்யும் தமிழ்நாட்டு இடதுசாரிகள் வரை செம்மணி குறித்தும் குமணன் போன்றோர் மீதான அடக்குமுறைகள் குறித்தும் வெளிப்படையாக பேச வேண்டும். சிங்கள பேரினவாதிகளிடத்தில் கம்யூனிசம் ஒருகாலும் பூக்காது. இந்திய பார்ப்பனியத்தின் நிழலில் பாசிசம் மட்டுமே பூக்கும். சிங்கள பேரினவாதியான அனுராவின் ஜெ.வி.பி - என்.பி.பி அரசிற்கு மே17 இயக்கத்தின் வன்மையான கண்டனங்கள். https://www.virakesari.lk/article/222064
-
80 மீனவர்கள், 237 மீன்பிடிப் படகுகளை விடுவிக்குக: ஸ்டாலின் கடிதம்
55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவை மீட்பது எப்போது? - சீமான் கேள்வி 07 AUG, 2025 | 04:18 PM 55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவைமீட்பது எப்போது? - என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கற்பிட்டி கடற்பரப்பு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் நேற்று (05.08.2025) கைது செய்யப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற கடந்த 55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை இனவெறி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல லட்சம் மதிப்பிலான அவர்களின் விசைப்படகுகளும் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கையாலாகாத்தனமே தமிழ் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் இனவெறி அடக்குமுறைகள் தொடர்வதற்கான முதன்மைக் காரணமாகும். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கை கடற்படையால் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு 159 மீனவர்களும் - 19 படகுகளும்இ 2022 ஆம் ஆண்டு 237 மீனவர்களும் - 34 படகுகளும்இ 2023 ஆம் ஆண்டு 240 மீனவர்களும் - 35 படகுகளும்இ உச்சமாக 2024 ஆம் ஆண்டு 530 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுஇ அவர்களின் 71 படகுகளும் பறிக்கப்பட்டன. நடப்பு 2025 ஆம் ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் 64 மீனவர்களும்பிப்ரவரி மாதம் 60 மீனவர்களும்மார்ச் மாதம் 14 மீனவர்களும்ஜூன் மாதம் 8 மீனவர்களும் ஜூலை மாதம் 25 மீனவர்களும் ஆக மொத்தம் 167 மீனவர்களும் அவர்களின் 24 படகுகளும் இலங்கை அரசால் பறிக்கப்பட்டுள்ளன. தற்போது இராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மாணவர்கள் மீண்டும் இலங்கை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் மொத்தமாக 1300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களது வாழ்வினை அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தமிழ்நாடு அரசால் அமல்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மட்டும் இலங்கை இனவெறி கடற்படையினாரால் வருடம் முழுவதுமே மீன் பிடி தடைக்காலமாய் தொடரும் கொடுமை அரங்கேறுகிறது. இரண்டு மாத மீன்பிடி தடை காலத்தின்போது மீனவர் குடும்பங்களுக்கு உதவித்தொகை தரும் அரசு இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவப்பெருமக்கள் மீன்பிடிக்க முடியாமல் ஒவ்வொரு நாளும் நிலவும் தடைக்கு உதவித்தொகை வழங்க முடியுமா? இலங்கை கடற்படையால் படகுகள் பறிக்கப்படுவதை தடுக்க திறனற்ற அரசு படகுக்கு எரிபொருள் மானியம் கொடுப்பதால் என்ன பயன்? வெற்றுச் சலுகை தருவது மக்களை அடிமையாக்கும் சிந்தனை; உரிமையை பெற்றுத் தருவதுதான் விடுதலைக்கான சிந்தனை! எம் மீனவச் சொந்தங்களின் மீன்பிடிக்கும் வாழ்வாதார உரிமையை பறித்துவிட்டு அரசு எத்தனை சலுகைகள் கொடுத்தாலும் அவை ஒருபோதும் மீனவ மக்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது!! ஆகவே இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தமிழர்களை அழித்தொழிக்கும் இலங்கையை இனியும் நட்பு நாடென கூறுவதை விடுத்து தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதை தடுக்க கட்சத்தீவை திரும்பப் பெற்று நிரந்தர தீர்வினை காண வேண்டுமென வலியுறுத்துகிறேன். தமிழ்நாட்டு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் வழக்கம்போல கைது செய்யப்பட்ட தமிழ் மீனவர்களை மீட்க ஒன்றிய அரசிற்கு வெறும் கடிதம் மட்டுமே எழுதுவதை கைவிட்டு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கட்சத்தீவு வழக்கினை விரைவுப்படுத்திஇ ஐம்பதாண்டு காலமாய் கொடுத்து வரும் வாக்குறுதியை இனியாவது நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். https://www.virakesari.lk/article/222062
-
அம்பாறையை உலுக்கிய திராய்க்கேணி இனப்படுகொலை…
திராய்க்கேணி படுகொலை; 35 வது ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை - கண்ணீருடன் மக்கள் 07 AUG, 2025 | 03:51 PM அம்பாறை மாவட்டத்தின் திராய்க்கேணியில் 54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகளாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என 35 வது வருட திராய்க்கேணி படுகொலை தினத்தில் சம்பவத்தை பார்த்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள் கருத்துக்களை கண்ணீருடன் தெரிவித்தார்கள். 1990 ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இடம்பெற்ற திராய்க்கேணி படுகொலை சம்பவத்தின் 35 வது ஆண்டு நினைவேந்தல் திராய்க்கேணி எழுச்சி ஒன்றியம் ஏற்பாட்டில் சம்பவம் இடம்பெற்ற திராய்க்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் முன்றலில் புதன்கிழமை (6) மாலை இடம்பெற்றபோது அங்கு இவ்வாறு குறிப்பிட்டனர். மேலும் அங்கு தெரிவித்த அவர்கள், செம்மணி போன்று திராய்க்கேணியிலும் மனிதப்புதைகுழி உள்ளது. அதுவும் தோண்டப்படவேண்டும். அட்டாளச்சேனை கிழக்கு மாகாணம் பிரதேச கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் ஆறாம் திகதி நன்கு திட்டமிடப்பட்ட வகையில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை இன்றும் அந்த மக்களினுடைய இருப்பை கேள்விக்கு உள்ளாக்கி வருகிறது அம்பாறை மாவட்டத்தின் அட்டாளச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்திருக்கின்ற ஒரே ஒரு தமிழ் கிராமம் திராய்கேணியாகும். தமிழர் பண்பாடு மிகுந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமமாகும். சைவ ஆலயங்கள் இந்த கிராமத்தின் தன்மைக்கு ஆதாரமாய் இருக்கும் சான்றுகளாகும். இந்த கிராமத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்றும் அதேபோன்று அம்பாறையில் பல பகுதிகளையும் ஆக்கிரமித்து விட வேண்டும் என்றும் எண்ணம் கொண்டிருந்த பேரினவாத ஆக்கிரமிப்பின் வெளிப்பாடாகவே திராய்க்கேணி மீதான இனப்படுகொலை அரங்கேற்ப்பட்டது. இராணுவத்தினரின் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதியில் உதவியுடன் திராய்கேணி கிராமத்தில் நுழைந்த முஸ்லீம் ஊர்காவல்ப்படையினர். முஸ்லீம்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில காடையர்கள் போன்ற இனவழிப்பாளர்கள் அங்குள்ள மக்களை கோயில்களில் ஒன்று சேரும்படி அழைத்திருந்தனர். அதன் அடிப்படையிலேயே அங்கு மக்கள் கூட அங்கிருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ஆண்கள் 54 தமிழர்களை வெட்டியும் சுட்டும் வெறித்தனமாகக் காவு கொண்டனர். முதியவர்களை தங்களுடைய வீடுகளுக்குள்ளேயே வைத்து தீயிட்டு கொளுத்திய சம்பவங்களும் இன்றும் அங்கு நேரடியாக பார்த்த உறவுகளினுடைய கண்களில் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றது. தீக்கிரையாக்கப்பட்டதுடன் அன்றைய நாள் காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இந்த வெறியாட்டமானது பிற்பகல் வரை தொடர்ச்சியாக நீடித்திருந்தது. அம்பாறை மாவட்டத்திலுள்ள செயலகத்திற்குட்பட்ட திராய்க்கேணி எனும் 350க்கு மேலான வீடுகள் அழிக்கப்பட்டன. இந்த திட்டமிடப்பட்ட கொலையிலே சுமார் 40 பெண்கள் விதவை ஆக்கப்பட்டிருந்தார்கள் பலர் அங்கவீனப்பட்டிருந்தார்கள். இவ்வாறாக ஆண்டுகள் கடந்தும் இன்றும் அந்த உயிரிழந்த ஆன்மாக்களுக்கான பிரார்த்தனைகளையும் அஞ்சலிகளையும் செய்து நீதியினை எதிர்பார்த்து வலியோடு திராய்க்கேணி கிராம மக்கள் காத்திருக்கின்றார்கள். மற்றுமொருவர் உரையாற்றும் போது அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் காரைதீவிலே அகதி முகாம்களில் தங்கி யிருந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் தங்களுடைய மண்ணுக்கு திரும்பியிருந்தனர். அதனை தொடர்ந்து அக்கிராமத்தினுடைய அபிவிருத்தி சங்கத் தலைவர் மயிலிப்போடி அவர்கள் 1997 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது. காரணம் அவர் 1990 ஆம் ஆண்டு தங்களுடைய கிராமத்திலே இடம்பெற்ற படுகொலைக்கான நீதியினைக்கோரியிருந்ததோடு அங்கு தொடர்ந்து இடம்பெற்ற காணி அபுகரிப்புக்களையும் தடுத்து வந்ததாலும் நீதி மன்றத்தை நாடியதாலும் அவர் அந்த கொலைகளை செய்த கும்பலினரால் கொலை செய்யப்பட்டிருந்தார். இலங்கையில் 1956, 1985, 1990, 2009 வரை தமிழ் மக்கள் திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டு வந்திருக்கின்றார்கள். ஆனால் இதுவரை அப் படுகொலைகளுக்கு நீதியோ நஷ்ட ஈடோ கிடைக்கவில்லை. எந்த இனமாக இருந்தாலும் ஆலயம் என்பது புனித ஸ்தலமாக இருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக இலங்கையில் இந்து ஆலயங்களில் தான் அதிகமான படுகொலைகள் இடம் பெற்று இருக்கின்றன. ராணுவமும் முஸ்லீம் காடையர்கள் என கூறப்பட்டோரும் இந்த திட்டமிட்ட படுகொலையை செய்தனர். ஆனால் சில முஸ்லீம் மக்கள் அப்படுகொலை இடம்பெறும் போது எம்மை காப்பாற்றினர். அதை நாம் நன்றியுடன் நினைவு படுத்துகின்றோம். வீரமுனையிலும் ஆலயத்தில் வைத்து நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அம்பாறை மாவட்டத்திலேயே 58 தமிழ்கிராமங்களை இலக்கு வைத்து இன அழிப்பு நடத்தப்பட்டது. ஆலங்குளம், மீனோடைக்கட்டு போன்ற கிராமங்கள் ஒரு தமிழர்களும் இல்லாமல் முற்றாக கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் இராணுவமும் முஸ்லிம் காடையர்களும் இணைந்து செய்தார்கள் என்பது மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் இல்லை. அம்பாறை மாவட்ட தமிழர்களின் அடையாளத்தை இல்லா தொழிக்கவேண்டும் என்பதற்காக 1983 களிலிருந்து தொடர்ச்சியாக திட்டமிட்டு பல படுகொலைகளை செய்துள்ளார்கள். உண்மையில் அது நில ஆக்கிரமிப்பின் மறுவடிவமே. அந்த வகையில் குரூரமாக ஈவிரக்கமின்றி மேற்கொள்ளப்பட்ட திராய்க்கேணி படுகொலைக்கு இன்று 35 வருடங்களாகின்றன. 1990களில் ராணுவம் சில முஸ்லிம் இளைஞர்களின் உதவியோடு இங்கு செய்த இந்த குரூர கொலையானது பரம்பரை பரம்பரையாக தமிழ்மக்களின் மனங்களிலே நினைவு கூறப்படுகின்றது. முஸ்லிம் மக்கள் அனைவரும் இதில் சம்பந்தப்பட்டார்கள் என்று கூறவில்லை. ஆனால் ஒரு சில முஸ்லிம் இனவாதிகள் முன்னணியில் இருந்து செயற்பட்டதை நேரடியாக கண்ணால் கண்ட திராய்க்கேணி மக்கள் கூறுகின்றனர். இதுபோல் வீரமுனை, உடும்பன் குளம், நாவிதன்வெளி, காரைதீவு, பாண்டிருப்பு போன்ற பல இடங்களிலும் இவ்வாறு சம்பவங்கள் நடைபெற்றன. இன்னும் இந்த கொலைகளுக்கு நீதி கிடைக்கவில்லை என கண்ணீர் மல்க குறிப்பிட்டார். படுகொலை செய்யப்பட்ட 54 பேருக்காக ஆலயத்தில் விசேட பூசை இடம்பெற்றது. ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தி அக வணக்கம் செலுத்தப்பட்டது. படுகொலை சம்பவத்தில் கணவர்மாரை இழந்து விதவைகளான 40 பேரில் நேரிலே கண்முன்னே சம்பவத்தை பார்த்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தாய்மார்கள் மற்றும் கிராம தலைவர் உட்பட திராய்க்கேணி எழுச்சி ஒன்றியம் அங்கத்தவர்கள் ஆகியோர் துயர் பகிர்ந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/222050
-
ஊடகவியலாளர் குமணனை மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை அழைத்துள்ளனர்
முன்னைய அரசாங்கங்களின் இனவெறி நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டுவந்துவிட்டோம் என தெரிவிக்கும் அரசாங்கம் ஏன் ஊடகவியலாளர்களை தொடர்ந்தும் துன்புறுத்துகின்றது? - ஊடகவியலாளர் குமணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறித்து கஜேந்திரகுமார் கேள்வி 07 AUG, 2025 | 03:21 PM முன்னைய அரசாங்கங்களின் இனவெறி நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டுவந்துவிட்டோம் என தெரிவிக்கும் அரசாங்கம் ஏன் ஊடகவியலாளர்களை தொடர்ந்தும் துன்புறுத்துகின்றது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகவியலாளர் குமணன் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டி இந்த கேள்வியை எழுப்பியுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது முன்னைய அரசாங்கங்கள் தமிழர்கள் குறித்து இனவெறியுடன் நடந்துகொண்டன நாங்கள் அவற்றை முடிவிற்கு கொண்டுவந்துவிட்டோம் என தொடர்ச்சியாக் இந்த அரசாங்கம் தெரிவித்துவருகின்றது. அது உண்மையானால் ஏன் இந்த அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகின்றனர். ஊடகவியலாளர் குமணணை அவரது சமூக ஊடக பதிவுகளிற்காக விசாரணைக்கு அழைத்துள்ளனர். குமணண் வடக்குகிழக்கிலிருந்து உருவான மிகவும் நம்பகதன்மை மிக்க புலனாய்வு செய்தியாளராக தன்னை தொடர்ச்சியாக நிரூபித்து வந்துள்ளார். மிகவும் உயர்ந்த தர ஆவணப்படுத்தலையும் அவர் முன்னெடுத்து வந்துள்ளார். உலகில் ஊடகவியலாளர்களிற்கு எதிரான மிகவும் விரோதமான ஒரு சூழலில் அவரும் அவரது சகாக்களும் தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறான தொழில்சார் நிபுணர்களிற்கு உதவி தேவைப்படும் நேரத்தில் ஆதரவாக நிற்பது சரியான சிந்தனையுள்ள ஒவ்வொரு தனிநபரினதும் கடமையாகும். https://www.virakesari.lk/article/222051
-
மாற்றுத்திறனாளிகளின் கலைத் திறமைக்கு தேசிய மேடை!
கலாசார சித் ரூ- 2025 நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டம் மூன்றாமிடம்! கலாசார சித் ரூ- 2025 நிகழ்வில் குழு நடனத்தில் கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்றுச் சாதனை படைத்துள்ளது. மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "சித் ரூ-2025" கலை நிகழ்ச்சி நேற்று(05) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இதன்போது, மாகாணங்களிலிருந்து வெற்றி பெற்ற கலை நிகழ்வுகள் இங்கு அரங்கேற்றம் செய்யப்பட்டன. கிளிநொச்சி மாவட்டம் வடக்கு மாகாண போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட கிளிநொச்சி மாவட்டம் இவ்வாறு பங்கு பற்றி மூன்றாமிடத்தை பெற்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இலங்கை முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "ஒன்றாக - கைவிடாத" என்ற தேசிய கொள்கைக்கு இணங்க, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து சமூகமயப்படுத்தல், வலுப்படுத்தல், புனர்வாழ்வு மற்றும் நாட்டின் பொருளாதார செயற்பாட்டில் பங்கேற்பவர்களாகவும் பெருமைமிக்க பிரஜைகளாகவும், வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த சமூக சேவைகள் திணைக்களம் அதன் ஒரு மூலோபாயங்களில் ஒன்றாக "சித் ரூ" கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது. குறித்த நிகழ்வு 06 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் புனர்வாழ்வு, வலுப்படுத்தல் மற்றும் பாதுகாப்புக்காக சமூக சேவைகள் திணைக்களத்திற்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 632 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. விருது "சித் ரூ-2025" மாகாணப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் வழிகாட்டல் மையங்கள், சிறுவர் பராமரிப்பு மையங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு ஜனாதிபதி பரிசுகளையும் விருதுகளையும் வழங்கினார். பிள்ளைகளுடன் சிநேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அவர்களுடன் குழு புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். மாணவியொருவரால் வரையப்பட்ட ஜனாதிபதியின் புகைப்படம் ஒன்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைக்கப்பட்டது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே, பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தர்ஷனீ கருணாரத்ன மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தநிகழ்வில் கலந்து கொண்டனர். https://tamilwin.com/article/kilinochchi-3rd-plase-cultural-sidh-ru-2025-event-1754483929
-
குடியுரிமை இல்லை! சூரியாவின் மேடையில் கண்கலங்கிய ஈழத்து பெண்ணின் சாதனை
இந்தியாவில் தஞ்சம் புகுந்து அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஈழத்தமிழ் பெண்ணொருவர் அந்நாட்டில் சட்டத்தரணியாகி உள்ளார். இந்தியாவில் குடியுரிமை கூட பெறாத ஃபர்ஷானா என்ற இந்த பெண்ணின் இந்த சாதனை ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி உலக தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தென்னிந்திய திரைப்பட நடிகர் சூர்யாவின் அகரம் ஃபௌன்டேசன் வழங்கிய நிதியுதவியின் கீழ் இந்த பெண் தனது கடின உழைப்பு மற்றும் முயற்சியால் பட்டப்படிப்பு முடித்து சட்டத்தரணி ஆகியுள்ளார். அகதிகள் முகாம் இது தொடர்பில் குறித்த பெண் தெரிவிக்கையில்,"1980களில் எனது பாட்டி உள்ளிட்ட என் குடும்பத்தினர் இந்தியாவிற்கு வந்து விட்டார்கள். நான் இராமேஸ்வரத்தில் தான் பிறந்தேன். சில நாட்களின் பின்னர், கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள முகாம் ஒன்றிற்கு எங்களை அழைத்து சென்றார்கள். பாடசாலை படிப்பை முடித்த பின்னர், குடியுரிமை இல்லாததால் பட்டபடிப்பு படிப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், அகரம் ஃபௌன்டேசன் வழங்கிய நிதியுதவியின் மூலம் படித்து பட்டம் பெற்று சட்டத்தரணியாகியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த காலப்பகுதியில் நாட்டை விட்டு பல இலங்கை தமிழர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். https://tamilwin.com/article/surya-agaram-foundation-eelam-tamil-woman-1754475351
-
செம்மணி மனித புதைகுழியில் சிசுவின் எலும்புக்கூடு! கண்கலங்க வைத்த நிமிடங்கள்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி இன்றையதினம்(6) அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் இந்த எலும்பு கூட்டு தொகுதி அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அகழ்வு பணிகள் செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிறுவர்கள் , சிசுக்கள் உள்ளிட்ட 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமையுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/chemmani-mass-graves-updates-tamil-1754502270
-
400 பேருடன் சிறிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞன்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவன், குரோஷியா - செர்பியா நாடுகளுக்கிடையே வெர்டிஸ் என்ற சிறிய நாட்டை உருவாக்கியுள்ளதாக தி நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இளைஞன், குரோஷியாவிற்கும், செர்பியாவிற்கும் இடையிலான, டானூப் ஆற்றின் குறுக்கே 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, உரிமை கோரப்படாத நிலத்தை, வெர்டிஸ் குடியரசு நாடாக அறிவித்து, அதன் ஜனாதிபதி நான் தான் என, தனக்கு தானே அறிவித்துள்ளார். அதிகார பூர்வ மொழிகளாக அதன் கொடி, அமைச்சரவை, நாணயம் மற்றும் 400 குடிமக்களைக் கொண்டுள்ள இந்த சிறிய நாடு, இப்போது இத்தாலியில் உள்ள வாடிகன் நகரத்திற்குப் பின், உலகின் இரண்டாவது சிறிய நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் அதிகார பூர்வ மொழிகளாக ஆங்கிலம், குரோஷியன் மற்றும் செர்பியன் என அறிவிக்கப்பட்டுள்ளதாக, தி நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. https://tamilwin.com/article/australian-man-20-forms-new-country-1754510124
-
மன்னாரில் இளையோர்களினால் முன்னெடுக்கப்பட்ட 'கருநிலம் பாதுகாப்பு' மண் மீட்பு போராட்டம்
மன்னாரில் இல்மனைட் மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ..! 07 AUG, 2025 | 03:44 PM மன்னாரில் இல்மனைட் மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெறுகின்ற இளையோரின் போராட்டமான "கருநிலம்" போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதன்கிழமை (06) திருகோணமலை பிரதான கடற்கரையில் 'தளம் சூழலியல் குழுமம்' ஒருங்கிணைப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது திருக்கோணமலையை சேர்ந்த பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களும், நலன் விரும்பிகளும், சூழலியல் ஆர்வலர்களும், தளம் சூழலியல் குழுமத்தின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். மன்னார் இளையோரின் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவையும், வளச்சுரண்டலுக்கு எதிரான எதிர்ப்பையும், சூழலியல் பாதுகாப்பையும் வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த கவனயீர்ப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222047
-
காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு பெஞ்சமின் நெட்டன்யாகு இஸ்ரேலிய படையினருக்கு உத்தரவிடவுள்ளார் - சிஎன்என்
காசாவை ஐந்து மாதங்களிற்குள் முழுமையாக கைப்பற்றுவதற்கு பெஞ்சமின் நெட்டன்யாகு திட்டம் - இன்று அனுமதியளிக்கவுள்ளது பாதுகாப்பு அமைச்சரவை 07 AUG, 2025 | 02:32 PM ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகளிற்கு உயிராபத்து ஏற்படலாம் என்ற இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இன்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கவுள்ளது என இஸ்ரேல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஐந்து மாதங்களிற்குள் காசா முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் இன்று அனுமதி வழங்கவுள்ளது. இஸ்ரேலிய பிரதமரின் இந்த திட்டத்தினால் ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகளிற்கும் ஆபத்து ஏற்படும் உயர் இராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ள போதிலும் மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்களை இடம்பெயரச்செய்யக்கூடிய இந்த திட்டத்திற்கு இஸ்ரேல் இன்று அனுமதி வழங்கவுள்ளது என பல ஹீப்ரூ ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தைய பேச்சுவார்த்தைகள் முறிவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள ஹமாசினை அழிப்பதும், பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான அழுத்தத்தை கொடுப்பதுமே இந்த திட்டத்தின் நோக்கம். ஹமாசின் பிடியில் 20 பணயக்கைதிகள் உயிருடன் உள்ளனர் என இஸ்ரேல் கருதுகின்றது. காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டம் காசா நகரிலிருந்து ஆரம்பமாகி மத்திய காசா பள்ளத்தாக்கை நோக்கி நகரும். இதன்போது இந்த பகுதியில் உள்ள காசாவின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் மாவசி மனிதாபிமான வலயத்தை நோக்கி செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். சில அமைச்சர்கள் இந்த திட்டத்தை எதிர்க்கின்ற போதிலும் இந்த திட்டத்திற்கான ஆதரவு பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு கிடைக்கும் பாதுகாப்பு அமைச்சரவையின் பெரும்பான்மை ஆதரவு அவருக்கு கிடைக்கும். சிறிய குழுவொன்று கடந்த மூன்று நாட்களாக இது குறித்த கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது. இதன் போது காசா மீதான நீண்டகால நடவடிக்கைகளிற்கான பல திட்டங்களை இஸ்ரேலிய இராணுவத்தின் முப்படை பிரதானி லெப் ஜெனரல் எயால் சமீர் முன்வைத்துள்ளார். திட்டத்தில் உள்ள விடயங்கள் காசா நகரை முதலில் கைப்பற்றி அமெரிக்காவின் ஆதரவுடன் மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் நிலையங்களை விஸ்தரிக்கும் திட்டம் இஸ்ரேலிடம் உள்ளது. இதனடிப்படையில் முதற்கட்டமாக காசா நகரில் உள்ள மக்களை வெளியேறுவதற்கான உத்தரவை இஸ்ரேல் பிறப்பிக்கும், இந்த நகரில் ஒரு மில்லியன் மக்கள் உள்ளனர். முதல்கட்டம் பல வாரங்களிற்கு நீடிக்கும். இரண்டாவது கட்டத்தில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கும், இதன்போது இஸ்ரேலுடன் இணைந்து மனிதாபிமான உதவிகளை விரைவுபடுத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி விசேட உரையொன்றை நிகழ்த்துவார். இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை நான்கைந்துமாதங்கள் நீடிக்கும் இஸ்ரேலிய இராணுவத்தின் நான்கு படைப்பிரிவுகளை இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளனர் என இஸ்ரேலிய ஊடகங்களான வைநெட், சனல் 13 போன்றவை தெரிவித்துள்ளன. காசா நகரை கைப்பற்றுவதுடன், மத்திய காசாவில் உள்ள முகாம்களை நோக்கி செல்லும் திட்டம் உள்ளதாக கான் என்ற ஒலிபரப்புச்சேவை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினர் இதுவரை மத்திய காசாவை நோக்கி நகராதது குறிப்பிடத்தக்கது. இதேவேளை மக்கள் காசாவின் தென்பகுதி நோக்கி செல்லவேண்டிய நிலையேற்படும். பணயக்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் பகுதிகளில் அவர்களின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்படாமல் மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும். இதேவேளை யுத்த நிறுத்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ள கத்தார், எகிப்து போன்ற நாடுகள் இந்த நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுக்ககூடாது என வற்புறுத்தி வருகின்றன, அமெரிக்கா ஊடாக இந்த செய்தியை இந்த நாடுகள் தெரிவித்து வருகின்றன. அதேவேளை ஹமாஸ் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் எனவும் இந்த நாடுகள் வற்புறுத்துகின்றன. இதேவேளை மேலும் அதிகளவு காசா மக்களை தென்மாவாசி நோக்கி நகர்த்துவதே இந்த இராணுவ நடவடிக்கையின் நோக்கம் என கான் ஒலிபரப்பு சேவைக்கு தெரிவித்துள்ள பாதுகாப்பு தரப்பினர் காசாவிலிருந்து மக்களை வெளியேறச்செய்யும் திட்டத்திற்கு இது உதவலாம் என குறிப்பிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/222049
-
பாடசாலை மாணவர்களிடையே உளவியல் ரீதியான பாதிப்புகள் அதிகரிப்பு
பாடசாலை மாணவர்களிடையே உளவியல் ரீதியான பாதிப்பு அதிகரிப்பு Published By: DIGITAL DESK 3 07 AUG, 2025 | 01:30 PM பல்வேறு சமூக காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது குறிப்பிடத்தக்களவு உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாடசாலை சுகாதாரக் கணக்கெடுப்பின் இந்த வியடம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் உளவியல் செயற்பாட்டு பணியகத்தின் பிரதி பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான லக்மினி மகோதரத்ன தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, 22.4 சதவீதமான மாணவர்கள் தனிமையை உணர்ந்துள்ளனர். 11.9 சதவீதமான 13–17 வயதுடைய மாணவர்கள் கவலையின் காரணமாக தூக்கமின்மையை எதிர்கொள்கின்றனர். 18 சதவீதமான மாணவர்களுக்கு உளச்சோர்வு (Depression) அறிகுறிகள் காணப்படுகின்றன. 7.5 சதவீதமான மாணவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் இல்லை. 75 சதவீதமான மாணவர்கள் உளநலப் பிரச்சனைகளைப் பகிர்வதற்காக நெருங்கிய நபர்கள் இல்லையென தெரிவித்துள்ளனர். இது குறித்து விசேட வைத்திய நிபுணருமான லக்மினி மகோதரத்ன தெரிவிக்கையில், இலங்கையில் ஏன் இவ்வாறான நிலைமை ஏற்படுகிறது என எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் அதிக மன அழுத்தத்தில் உள்ளனர். அதேவேளை, பெரியோரும் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். பல்வேறு சமூக காரணிகள் மற்றும் அழுத்தங்கள் இந்த நிலைமைக்கு பங்களிக்கின்றன என தெரிவித்துள்ளார். தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் உளவியலாளர் வைத்திய நிபுணர் சஜீவன அமரசிங்க தெரிவிக்கையில், நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 08 உயிர் மாய்க்கும் சம்பவங்கள் பதிவாகின்றன. 1996 ஆம் ஆண்டு வெளியான உலகளாவிய ரீதயிலான தற்கொலை பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருந்தது. அந்த காலப்பகுதியில், 100,000 பேருக்கு 47 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழு எடுத்த தீர்மானங்களை அடுத்து அந்த விகிதம் கணிசமாகக் குறைந்தது. தற்போது, 100,000 பேரில் 15 பேர் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். வருடத்திற்கு சுமார் 3,500 பேர் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை நிலையானதாக உள்ளது." அத்துடன், நாளொன்றுக்கு சுமார் எட்டு உயிர்மாய்க்கும் சம்பவங்கள் இடம்பெற்றாலும், ஊடகங்களில் உயிர்மாய்ப்பு சம்பவம் ஒன்று மட்டுமே பதிவாகக்கூடும் எனவும், பல சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் போகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த உயிர்மாய்ப்பு சம்பவங்களின் விகிதம் கணிசமான அளவு குறையவில்லை என்றாலும், அண்மையில் பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. “இருப்பினும், கடந்த காலங்களைப் போலல்லாமல், ஊடகங்கள் இதுபோன்ற அனைத்து சம்பவங்களையும் வெளியிடுவதில்லை. இது ஒரு பாரிய முன்னேற்றம் எனத் தெரிவித்துள்ளார். நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ நெருக்கடியில் சிக்கி உதவி தேவைப்பட்டால், உடனடியாக உதவிகளை பெற வழிமுறைகள் உள்ளன: - அவசரமான சூழ்நிலைகளில், தேசிய மனநல உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்: 1926 - சுமித்ரயோ: +94 11 2 682535/+94 11 2 682570 - லங்கா லைஃப் லைன்: 1375 - CCCline : 1333 (இலவச சேவை) https://www.virakesari.lk/article/222035
-
ஊடகவியலாளர் குமணனை மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை அழைத்துள்ளனர்
ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைப்பு Published By: DIGITAL DESK 3 07 AUG, 2025 | 03:35 PM ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைத்துள்ளது. ஊடகவியலாளர் குமணன் காணாமல்போனோரின் உறவுகளின் போராட்டங்கள், நில அபகரிப்பு மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி போன்ற செய்திகளை தொடர்ச்சியாக களத்தில் நின்று வெளியிட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் அனுப்பப்பட்ட அழைப்பாணையில், வாக்குமூலமொன்றை பதிவுசெய்வதற்காக ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு முல்லைத்தீவு, அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/222054
-
செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்
செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த செந்தில் வேண்டுகோள் Published By: RAJEEBAN 07 AUG, 2025 | 11:28 AM செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். செம்மணி மனித புதைகுழி குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி கோரி நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் செயலாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் அதில் தெரிவித்துள்ளதாவது, ஆறாம் திகதி இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து உரையாற்றுவதற்கான அனுமதியை நான் கோருகின்றேன், எனக்கு அனுமதியளிக்கப்பட்டால் பின்வரும் விடயங்கள் குறித்து நான் பின்வருமாறு குறிப்பிடுவேன். இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணியில் சமீபத்தில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்த தமிழ்நாட்டின் வேதனையை தெரிவிப்பதற்காக நான் இங்கு உரையாற்றுகின்றேன். மீட்கப்பட்ட மனித எச்சங்கள், இலங்கையின் தமிழ் சமூகத்தின் நீண்டகாயங்களை மீண்டும் கிளறியுள்ளன. இவற்றில் சில மோதல்களின் போது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் மனித எச்சங்கள் என்ற கருதப்படுகின்றது. பல தசாப்தங்களாக இலங்கை தமிழர்கள் திட்டமிடப்பட்ட வன்முறைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல், போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர். அவர்களிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. மனித படுகுழி என்பது வெறுமனே ஒரு தடயவியல் இடம்மாத்திரமில்லை. இது மறைக்கப்பட்ட உண்மை தாமதிக்கப்பட்ட நீதிக்கான ஒரு குறியீடு. ஈழத்தமிழர்களுடன் கலாச்சார, மொழி உறவுகளை பகிர்ந்துகொண்டுள்ள தமிழக மக்கள் தொடர்ந்தும் அலட்சியமாக இருக்க முடியாது. இந்திய அரசாங்கம் உடனடியாக இந்த விடயத்தை இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக அணுகவேண்டும், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து முழுமையான வெளிப்படை தன்மையை கோரவேண்டும். செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும். நீதி நல்லிணக்கம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளிற்கான தனது நீண்டகால நிலைப்பாட்டை இந்தியா மீள வலியுறுத்தவேண்டும். இந்தியா வெறுமனே பிராந்திய ஒத்துழைப்பு குறித்து மாத்திரம் குரல்கொடுக்க முடியாது, எல்லைகளிற்கு அப்பால் தமிழ் மக்களின் கௌரவம் உண்மை நீதிக்காகவும் குரல் கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/222030
-
செம்மணி மனிதப் புதைகுழி: நீதி அமைச்சின் அரசியல் தலையீடும் அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
செம்மணி அகழ்வுக்கு அரசாங்கமும் ஒத்துழைப்பு - இளங்குமரன் எம்.பி தெரிவிப்பு Published By: VISHNU 07 AUG, 2025 | 02:12 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) செம்மணி விவகாரம் தொடர்பில் ஒருசில பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் பொய்யுரைத்து மக்களுக்கு தவறான செய்தியை கொண்டு செல்கிறார்கள். செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வுக்கு எமது அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி நிதி விடுவித்துள்ளது. மக்கள் உண்மையை விளங்கிக் கொள்வார்களென தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) நடைபெற்ற இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தை நீதியமைச்சர் காது வழி செய்து என்று குறிப்பிட்டதாக நேற்று (நேற்று முன்தினம்) பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபையில் குறிப்பிட்டார். இது முற்றிலும் தவறானது. நீதியமைச்சர் குறிப்பிட்ட விடயத்தை நான் தெளிவாக கேட்டிருந்தேன். செம்மணி மனிதப்புதைக்குழி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் உரையாற்றுகையில் திருகோணமலை, மண்டைத்தீவு பகுதியில் உள்ள மனிதப்புதைக்குழிகள் பற்றி குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் அனுமானத்தின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க முடியாது. பொலிஸ் அல்லது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளியுங்கள். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றார். இந்த விடயத்தை ஒரு தரப்பினர் திரிபுப்படுத்தி பாராளுமன்றத்தில் பொய்யுரைத்து மக்களுக்கு தவறானதொரு செய்தியை கொண்டு செல்கிறார்கள். செம்மணி விவகாரம் தொடர்பில் ஒருசில பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் பொய்யுரைத்து மக்களுக்கு தவறான செய்தியை கொண்டு செல்கிறார்கள். செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வுக்கு எமது அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி நிதி விடுவித்துள்ளது. மக்கள் உண்மையை விளங்கிக் கொள்வார்கள். எமது ஆட்சியே தொடரும் ஏனெனில் நாங்கள் மக்களுக்கு உண்மையாக செயற்படுகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/222010
-
இஸ்ரேலின் கொலனியாக இலங்கை மாறியுள்ளது - மரிக்கார்
Published By: VISHNU 07 AUG, 2025 | 01:59 AM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) பொத்துவில் அருகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருவதன் மூலம் இலங்கை இஸ்ரேலின் கொலணியாகியுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தில் இருக்கும் கொலை குற்றவாளிகள் மன ஆறுதல் பெறுவதற்கு இலங்கைக்கு வருகிறார்கள். இவர்களுக்கு அரசாங்கம் தற்போது இலவச விசா வழங்குகிறது என எஸ்.எம். மரிக்கார் குற்றம்சாட்டினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற இலங்கை மின்சாரம்(திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கட்சியில் இருக்கும்போது பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க தூதரகத்துக்கு முன்னாலும் வேறு இடங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்து வந்தது. ஆனால் இன்று இரண்டு மூன்று கொள்கைகளை கடைப்பிடித்த வருகிறது. பாெத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருகின்றன. அந்த பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின் மனித கொலைகாரர்கள், யுத்தக்குற்றம் இளைத்தவர்கள். அவர்கள் மன ஆறுதல் அடைவதற்கு இங்கு வருகிறார்கள். அந்தபகுதியில் ஹோட்டல்களை அமைத்துக்கொண்டு, இலங்கையர்களுக்கு செல்ல முடியாது. வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. நாட்டுப்பற்று தொடர்பில் கதைத்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் தற்போது ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது. 6 மாதங்களுக்கு முன்னர் இங்குவந்த இஸ்ரேல் இனத்தவர்கள் பாரியளவில் இருக்கின்றனர். இவ்வாறு இருக்கையில் அரசாங்கம் தற்போது இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கி இருக்கிறது. அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் எங்கே என கேட்கிறோம். அந்த பிரதேசத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களைவிட தமிழ், கிறிஸ்தவ பெண்கள் மற்றும் பிள்ளைகள் கையாட்களாகி இருக்கிறார்கள். அந்த பிரதேசம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பது இராணுவத்தினருக்கு புரிகிறது. ஆனால் பொலிஸார் எதனையும் கண்டும் காணாமல் போன்று, செயற்படுகிறார்கள். அவர்களுக்கு மேலிடத்தில் இருந்து யாராவது அழுத்தங்களை கொடுக்கிறார்களோ தெரியாது. இலங்கையில் அறுகம்பை பிரதேசத்தை இஸ்ரேலின் கொலிணியாக்குவதற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கப்போகிறதா என கேட்கிறோம். அதேபோன்று யுத்தக்குற்றவாளிகளின் அடைக்கலமாக ஏற்படுத்திக்கொள்ள இடமளிக்கப்போகிறதா என்று கேட்கிறோம். இலங்கை ஜனநாயகம் இஸ்ரேலாக்கப்பட்டு வருகிறது. எனவே இதுதொடர்பில் அரசாங்கம் தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்தில் இருப்பவர்கள் இதுதொடர்பில் அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/222005
-
96ஆவது அகவையில் தடம் பதிக்கிறது வீரகேசரி! : நூற்றாண்டை நோக்கி வீறுநடை!
"தரமான செய்திக்கு இடமுண்டு; அச்சு ஊடகத்துக்கு மதிப்பு குறையாது" - வீரகேசரி நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன் Published By: VISHNU 07 AUG, 2025 | 08:54 AM பத்திரிகை மற்றும் ஊடக துறையில் புதிய வடிவங்கள் உருவாகலாம், ஆனால் தரமான உள்ளடக்கம் ஒருபோதும் மக்களுக்கு பிடித்த பாணியிலிருந்து விலகாது. சரியான நேரத்தில் மற்றும் நம்பகமான அறிக்கைகள் ஒரு தவிர்க்க முடியாத செய்தியாக தொடரும் என்று வீரகேசரி பத்திரிகையை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவருமான குமார் நடேசன் தெரிவித்தார். வீரகேசரி பத்திரிகை நேற்று தனது 95 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடியது. இதனை முன்னிட்டு கிராண்ட்பாஸில் அமைந்துள்ள வீரகேசரி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே குமார் நடேசன் இவ்வாறு குறிப்பிட்டார். ‘‘நாம் உருவாக்கும் ஒவ்வொரு படைப்பும் மிக உயர்ந்த தரம் வாய்ந்ததாகவும், நுண்ணறிவுள்ளதாகவும், கவனமாக வடிவமைக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதிசெய்து, பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்க வேண்டும்’’ என்றும் குறிப்பிட்டார் குமார் நடேசன். 1930 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வீரகேசரி பத்திரிகை 95 வருட காலமாக பல சவால்களுக்கு மத்தியில் வெற்றிநடை போட்டு வருவதுடன் நூற்றாண்டை நோக்கி சாதனை பயணத்தை முன்னெடுக்கிறது. அச்சுப் பத்திரிகைகளை இன்னும் டிஜிட்டல் ஊடகங்களை விட அதிக நம்பகத்தன்மை கொண்டதாக மக்கள் கருதுகின்றனர். போலி செய்திகள் அதிகம் பரவும் இன்றைய சூழலில், நம்பகமான ஆதாரமாக அச்சு ஊடகங்கள் பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் இலங்கையின் கட்டமைப்பு மற்றும் அதன் இயங்குதன்மை தொடர்பில் தனது உரையில் சுட்டிக்காட்டிய குமார் நடேசன், நம்பகமான ஊடகங்களின் தேவை முக்கியமானதாகவுள்ளது என்று குறிப்பிட்டார். ‘‘இலங்கை போன்ற ஒரு நாட்டில், அதன் சொந்த கடினமான தேசிய பிரச்சினைகளுடன் போராடி வரும் நிலையில், நம்பகமான ஊடகங்களின் தேவை முக்கியமானது மற்றும் அவசியமானதாக இருக்கிறது’’ என்று கூறினார் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் தலைவர் குமார் நடேசன். மேலும் உலகளாவிய ரீதியில் அச்சுப் பத்திரிகை துறை வீழ்ச்சியடையவதாக தென்பட்டாலும் அச்சுப் பதிப்புக்கு எப்போதும் ஒரு இடம் இருக்கும் என்றும் உண்மை மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையை நோக்கி மக்கள் எப்போதும் நம்பிக்கையுடன் இருப்பார்கள் என்றும் குமார் நடேசன் எடுத்துக்கூறினார். ‘‘உண்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மைக்கான எங்கள் அர்ப்பணிப்புதான் நம்பிக்கையை உருவாக்கி நிலைநிறுத்துவதற்கான அடித்தளமாக உள்ளது. அச்சுக்கு எப்போதும் ஒரு இடம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்’’ என்று வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் குமார் நடேசன் மேலும் உரையாற்றுகையில், இன்று, ஆகஸ்ட் 6ஆம் திகதி உண்மையிலேயே ஒரு முக்கியமான நிகழ்வைக் கோடிட்டுக் காட்டுகிறது. வீரகேசரி பத்திரிகையின் 95ஆவது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடுகிறோம். தொண்ணூற்றைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1930 ஆம் ஆண்டு இதே நாளில், எமது வீரகேசரி செய்தித்தாளின் முதல் பதிப்பு அச்சகத்தில் வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு சேவையைக் கொண்டாடும் வகையில், இன்று நாம் இங்கு கூடியிருக்கிறோம். நீடித்த தொலைநோக்கு, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான வார்த்தையின் சக்திக்கு இது ஒரு சான்றாகும். வீரகேசரி வெற்றியின் உண்மையான அளவுகோல் அதன் இலாபத்தின் அளவைக் கொண்டு மட்டுமே வரையறுக்கப்பட்டதில்லை. அவ்வாறு ஒருபோதும் அந்த அளவுகோல் வரையறுக்கப்படாது. மாறாக, எங்கள் வாசகர்களிடமிருந்து நாம் பெரும் அசைக்க முடியாத நம்பிக்கை, சமூகங்களுக்கிடையில் எங்கள் அணுகலின் அகலம் மற்றும் இலங்கையிலும் உலகளாவிய புலம்பெயர்ந்தோர் மட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையில் நாம் ஏற்படுத்தும் ஆழமான தாக்கம் என்பவற்றில் எங்கள் பத்திரிகையின் மரபு உருவாகியுள்ளது. எங்கள் பயணம் நீண்டது மற்றும் தனித்துவமானதாக இருக்கிறது. ஆனால் எங்கள் பார்வை உறுதியாக நிலைநிறுத்தப்பட வேண்டும். கடந்த 95 ஆண்டுகளை நாங்கள் கொண்டாடுவது மட்டுமல்ல; அடுத்த 5 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை நாம் அமைத்து வருகிறோம். நமது நூற்றாண்டு விழாவை நோக்கி பயணிக்கிறோம். உண்மையில், அதற்குப் பிந்தைய தலைமுறைகளுக்கு நாம் அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும். இது நமது பகிரப்பட்ட மரபாகும். இது உங்களுடையதும் என்னுடையதுமாகும். இது - வளர்ப்பதற்கும் விரிவுபடுத்துவதற்குமானதாகும். இந்த தொடர்ச்சியான பொருத்தமான தன்மையை நாம் எவ்வாறு உறுதி செய்வது? இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு நம்பகமான நங்கூரமாக நமது உள்ளார்ந்த பலங்களை உருவாக்குவதன் மூலம் இதனை செய்யலாம். நாம் உருவாக்கும் ஒவ்வொரு படைப்பும் மிக உயர்ந்த தரம் வாய்ந்ததாகவும், நுண்ணறிவுள்ளதாகவும், கவனமாக வடிவமைக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதிசெய்து, பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்க வேண்டும். மேலும், நமது செய்திகளையும் கண்ணோட்டங்களையும் உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்தோருக்கு எடுத்துச் சென்று, அவர்களின் வேர்களுடனும், முக்கியமான பிரச்சினைகளுடனும் இணைக்கும் வகையில், எமது குரலை விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். இன்றும் கூட, வீரகேசரி ஒரு செய்திப் பத்திரிகையையும் தாண்டி ஒரு ஆழமான நோக்கத்தைக் கொண்டுள்ளது. எங்கள் பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நம்பகமான குரலாக உள்ளனர். சிறுபான்மை தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும், அவர்களுக்குத் தகவல் அளிக்கும், கல்வி கற்பிக்கும், இணைக்கும் உயர்தர வெளியீட்டை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும். இன்றைய பிரச்சினைகள் மற்றும் விவகாரங்களை நீங்கள் தெளிவுபடுத்துகிறீர்கள். மேலும் சிக்கலான உலகத்தைப் பற்றிய புரிதலை எங்கள் வாசகர்களுக்கு வழங்குகிறீர்கள். விசேடமாக முக்கியமான உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறீர்கள். இலங்கை போன்ற ஒரு நாட்டில், அதன் சொந்த கடினமான தேசிய பிரச்சினைகளுடன் போராடி வரும் நிலையில், நம்பகமான ஊடகங்களின் தேவை முக்கியமானது மற்றும் அவசியமானதாக இருக்கிறது. எமது நாட்டின் தேசியத் தலைவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களுக்கும் சமமான கருத்துகளையும் நல்ல ஆலோசனைகளையும் வழங்குவதில் எங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. உண்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மைக்கான எங்கள் அர்ப்பணிப்புதான் நம்பிக்கையை உருவாக்கி நிலைநிறுத்துவதற்கான அடித்தளமாக உள்ளது. கவனயீர்ப்பு அதிகரித்து வரும் இந்த யுகத்தில், குறுகிய கானொளிகள் மற்றும் பரபரப்பான தலைப்புச் செய்திகள் மட்டுமே மேலோங்கி நிற்கின்றன என்று சிலர் கூறலாம். ஆனால், நான் அந்தக் கருத்துடன் உறுதியாக உடன்படவில்லை. ஒரு விடயத்தின் உள்ளடக்கம், விதிவிலக்கான தரம், உண்மையான நுண்ணறிவு, அழகாக எழுதப்பட்டிருத்தல் மற்றும் ஆழமான பகுப்பாய்வு என்பன நம்பிக்கையான பார்வையாளர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் முடியும். இவை மறுக்க முடியாத சக்தியைக் கொண்டுள்ளன. புதிய வடிவங்கள் உருவாகலாம், ஆனால் தரமான உள்ளடக்கம் ஒருபோதும் மக்களுக்கு பிடித்த பாணியிலிருந்து விலகாது. சரியான நேரத்தில் மற்றும் நம்பகமான அறிக்கைகள் ஒரு தவிர்க்க முடியாத செய்தியாக தொடரும். இந்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றுவதற்கு, தலையங்கம், தயாரிப்பு, தொழில்நுட்பம் மற்றும் வணிகம் என ஒவ்வொரு செயல்பாடுகளிலும் ஒரு வலுவான, ஒருங்கிணைந்த மற்றும் திறமையான குழு தேவைப்படுகிறது. வலுவான மற்றும் சக்திவாய்ந்த ஊடக சக்தியாக மாறுவதற்கான எமது கூட்டு கனவை அடைய, நீங்கள் ஒவ்வொருவரும் தெளிவான குறிக்கோள் உணர்வு, அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் பிரகாசிக்கும் ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். அச்சுக்கு எப்போதும் ஒரு இடம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, வீரகேசரி இன்று இருப்பதை விட மிகவும் வித்தியாசமாகத் தோன்றலாம். ஒருவேளை வடிவம், பாணி, தொனி அல்லது அளவு கூட வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் இது ஒரு பலவீனம் அல்ல. மாறாக தழுவல் மற்றும் பரிணாமமாகும். இருப்பினும், எங்கள் முக்கிய நோக்கம் நிலையானதாக இருக்க வேண்டும். எதிர்கால தலைமுறை வாசகர்களுக்கு பொருத்தமானதாகவும் பயனுள்ளதாகவும் இருப்பது அவசியமாகும். இறுதியாக, வீரகேசரி குடும்பமாகிய நாம் மட்டுமே இந்த அவசியமான மாற்றங்களை ஏற்றுக்கொண்டு முன்னெடுக்க முடியும். ஏற்கனவே உள்ள வடிவங்கள் மற்றும் பணி செயல்முறைகளை நாம் மறுபரிசீலனை செய்ய முடியும் என்றார். இதேவேளை அச்சு பத்திரிகை சவால்களை எதிர்கொள்கின்ற நிலையில் அது பரிணாம வளர்ச்சி அடையும்" என்று ஆய்வுகள் கூறுகின்றன. அச்சுப் பத்திரிகை அதன் பாரம்பரிய வடிவத்தில் பல சவால்களை எதிர்கொண்டாலும், அது முழுமையாக முடிந்துவிடாது. மாறாக, புதிய யுகத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு, புதிய வடிவங்களில் தனது இருப்பை நிலைநிறுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சமூக ஊடகங்களில் விரைவான மற்றும் சுருக்கமான செய்திகள் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால், ஆழமான பகுப்பாய்வு, விரிவான கட்டுரைகள் மற்றும் புலனாய்வு செய்திகளை அச்சு ஊடகங்களே தொடர்ந்து வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/222004
-
''நான் அவன் அல்ல'' - வி.இராதாகிருஷ்ணன்
07 AUG, 2025 | 06:31 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நிதி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் உள்ள பி.இராதாகிருஷ்ணன் நானல்ல. நான் வி.இராதாகிருஷ்ணன் ஆகவே ''நான் அவன் அல்ல'' என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டாரவினால் பிரதமரிடம் கேட்கப்பட்ட வாய்மூல கேள்வியின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு 2005 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நிதி வழங்கப்பட்டது பற்றி கடந்த 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. குறித்த பெயர்ப் பட்டியலில் 2006 ஆம் ஆண்டின் முன்னாள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான பி.இராதாகிருஷ்ணுகாக திருமதி கே.இராதாகிருஷ்ணனுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. குறித்த அறிவித்தலை அடிப்படையாக கொண்டு தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எனக்கு அவதூறு ஏற்படும் வகையில் பொய்யான செய்திகள் சமூக வலைத்தளங்களிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் பரவுகின்றன. ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள "பி.இராதாகிருஷ்ணன்" என்னும் பெயர் "பெருமாள் பிள்ளை இராதாகிருஷ்ணன்" ஆக இருக்க வேண்டும் என்றும், அதில் குறிப்பிடப்படுவது "வேலுசாமி இராதாகிருஷ்ணன்" என்ற என்னைப் பற்றியல்ல என்றும், அந்த நேரத்தில் நான் மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினராக இருந்தேன் என்றும், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் இந்த உயரிய சபைக்கும் நாட்டு மக்களுக்கும் அறிவித்துக் கொள்கிறேன். அதேபோல் வாய்மூல வினாக்களுக்கான விடைகளையும் எதிர்பார்த்து தனிப்பட்ட உறுப்பினர்களை இலக்காகக் கொண்டு அவதூறுகளை ஏற்படுத்தும் வகையில் வினாக்களையும் விடைகளையும் வழங்குவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். இதை நிவர்த்தி செய்யுமாறும், பொறுப்பானவர்களை சிறப்புரிமைகள் குழுவிற்கு அழைக்குமாறும் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/222074
-
நிலவில் அணு உலை அமைக்கும் நாசா – சந்திரனை சுற்றி வல்லரசு நாடுகள் போட்டி
பட மூலாதாரம், NASA படக்குறிப்பு, நாசா ஃபிஷன் பரப்பு ஆற்றல் திட்டத்தின் மாதிரி புகைப்படம் கட்டுரை தகவல் ஜார்ஜினா ரானார்ட் அறிவியல் செய்தியாளர் 7 ஆகஸ்ட் 2025, 02:11 GMT நாசா நிலவில் அணு உலை அமைக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. நிலவில் மனித குடியேற்றத்துக்கான அடிப்படையாக இது பார்க்கப்படும் நிலையில் வல்லரசு நாடுகளில் போட்டிகளமாக நிலவு மாறிவிடுமோ என ஒரு தரப்பினர் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் இதே போன்றதொரு அறிவிப்பை ரஷ்யாவும் சீனாவும் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு உலை அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த உள்ளது என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான ஒரு நிரந்தர தளத்தை உருவாக்குவது அமெரிக்காவின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக உள்ளது. மறுபுறம் சீனாவும், ரஷ்யாவும் நிலவில் மனிதர்கள் வாழும் நிரந்தர தளங்களை உருவாக்கும் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக நாசாவின் செயல் தலைவர் பொலிடிகோ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அந்த நாடுகள் நிலவில் 'தடைசெய்யப்பட்ட மண்டலம்' ஒன்றை அறிவிக்கக்கூடும் என்றும் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், சமீபத்தில் நாசாவுக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதனைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த இலக்கும் காலக்கெடுவும் நடைமுறையில் எந்தளவுக்குச் சாத்தியமானது என்பது பற்றிய கேள்விகள் இன்னும் உள்ளன. மேலும், இந்தத் திட்டங்கள் புவிசார் அரசியல் நோக்கங்களால் தூண்டப்படுகின்றன என்று சில விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர். அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நிலவின் மேற்பரப்பை ஆராய விரைந்து செயல்படுகின்றன. அதேபோல் அங்கு நிரந்தர மனித குடியிருப்புகளை உருவாக்கவும் சில நாடுகள் திட்டமிடுகின்றன. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவின் நிலவு ஆராய்ச்சி "எதிர்கால நிலவு பொருளாதாரத்தையும், செவ்வாயில் அதிக ஆற்றல் உற்பத்தியையும், விண்வெளியில் அமெரிக்காவின் பாதுகாப்பையும் வலுப்படுத்த வேண்டுமெனில், இந்த முக்கிய தொழில்நுட்பத்தை விரைவாக மேம்படுத்த வேண்டும்," என நாசாவுக்கு அமெரிக்க போக்குவரத்து செயலாளர் சீன் டஃபி எழுதியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரை நாசாவின் தற்காலிக தலைவராக நியமித்துள்ளார். குறைந்தபட்சமாக, 100 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அணு உலையை உருவாக்கும் வகையிலான திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு வணிக நிறுவனங்களுக்கு டஃபி அழைப்பு விடுத்துள்ளார். இது ஒப்பீட்டளவில், குறைந்த அளவிலான ஆற்றல்தான். ஒரு வழக்கமான கரையோர காற்றாலை 2 முதல் 3 மெகாவாட் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. ஆனால், சந்திரனில் மின்சாரத்துக்காக அணு உலையைக் கட்டும் யோசனை என்பது புதிதல்ல. 2022இல், அணு உலையின் வடிவமைப்புக்காக நாசா மூன்று நிறுவனங்களுக்கு தலா 5 மில்லியன் டாலர் மதிப்பில் ஒப்பந்தங்களை வழங்கியது. 2035-க்குள் நிலவில் தானியங்கி அணு மின் நிலையம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தை சீனாவும் ரஷ்யாவும் இந்த ஆண்டு மே மாதம் அறிவித்திருந்தன. நிலவின் மேற்பரப்பில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கான சிறந்த வழியாகவோ அல்லது ஒரே வழியாகவோ இது இருக்கலாம் எனப் பல விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஒரு நிலவு நாள் என்பது பூமியில் நான்கு வாரங்களுக்கு சமம். இதில் இரண்டு வாரங்களுக்கு சூரிய ஒளி கிடைக்கும், மற்ற இரண்டு வாரங்கள் இருள்சூழ்ந்து இருக்கும். அதனால் சூரிய சக்தியை மட்டும் நம்பி இயங்குவது மிகவும் கடினமாகிறது. "ஒரு சிறிய குழுவினரை தங்க வைக்கும் வகையில், சாதாரணமான ஒரு இருப்பிடத்தைக் கட்டுவதற்குக் கூட மெகாவாட் அளவிலான மின்சாரம் தேவைப்படும். சூரிய மின்கலங்கள் மற்றும் பேட்டரிகளால் மட்டுமே இந்தத் தேவையைத் தொடர்ந்து பூர்த்தி செய்ய முடியாது" என்கிறார் சர்ரே பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு மற்றும் கருவிகள் துறையின் மூத்த விரிவுரையாளரான முனைவர் சங்வூ லிம். "அணுசக்தி விரும்பத்தக்க ஒன்றாக மட்டுமில்லாமல் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் ஆகிவிட்டது" என்றும் அவர் கூறுகிறார். பட மூலாதாரம், CNSA/CLEP படக்குறிப்பு, 2020-இல் சான்ஜ்-இ திட்டத்தில் சீனா தனது கொடியை நிலவில் நிறுவியது. லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் பூமி மற்றும் கோள் அறிவியல் பேராசிரியராக உள்ள லியோனல் வில்சனைப் பொருத்தவரை, "போதுமான நிதி ஒதுக்கப்பட்டால்" 2030ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு உலைகளை அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானது ஒன்று தான். வில்சனின் கூற்றுப்படி, சிறிய அணு உலைகளுக்கான வடிவமைப்புகள் ஏற்கெனவே உள்ளன. "அந்த நேரத்துக்குள் நிலவில் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு, நாசா போதுமான 'ஆர்ட்டெமிஸ்' ஏவுதல்களைச் செய்தால் அது முடியும்," என்கிறார். ஆர்ட்டெமிஸ் என்பது நாசா செயல்படுத்தும் சந்திரவெளிப் பயண திட்டம். இது மனிதர்களையும், உபகரணங்களையும் நிலவுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் இவ்வகை அணு உலை ஏவுதல்களில் பாதுகாப்பு குறித்தும் சில கேள்விகள் எழுகின்றன. "பூமியின் வளிமண்டலம் வழியாக கதிரியக்கப் பொருட்களை விண்ணுக்கு அனுப்புவது பாதுகாப்பு பிரச்னைகளை எழுப்புகிறது. அதற்கு சிறப்பு உரிமம் தேவை, ஆனால் அது ஒன்றும் முடியாத காரியம் இல்லை," என்கிறார் ஓபன் பல்கலைக்கழகத்தின் கிரக அறிவியல் நிபுணரான முனைவர் சிமியோன் பார்பர். 2026ஆம் ஆண்டில் நாசாவின் நிதி ஒதுக்கீட்டில் 24% குறைக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்த பிறகு, நாசாவில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து டஃபியின் உத்தரவு எதிர்பாராதவிதமாக வந்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து பூமிக்கு மாதிரிகளைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட 'மார்ஸ் சாம்பிள் ரிட்டர்ன்' போன்ற பல முக்கியமான அறிவியல் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நிலவை அடைவதற்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், இந்த முடிவு அரசியல் நோக்கத்துடன் எடுக்கப்பட்டது என விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கிறார்கள். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவின் நிலவு ஆராய்ச்சி "விண்வெளிக்குச் செல்வதில் போட்டி நிலவிய பழைய காலத்துக்கு, நாம் மீண்டும் திரும்புவது போல் தெரிகிறது. இது அறிவியல் ரீதியாக சற்று ஏமாற்றத்தையும் கவலையையும் உண்டாக்குகிறது," என முனைவர் பார்பர் கூறுகிறார். "போட்டி, புதுமைகளை உருவாக்கலாம். ஆனால் தேசிய நலன்கள் மற்றும் உரிமையை நிலைநாட்டுவது என்கிற குறுகிய நோக்கம் இருந்தால், சூரிய மண்டலம் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள பகுதிகளை ஆராயும் பெரிய நோக்கத்தை நீங்கள் மறந்து விடுவீர்கள்," என்றும் தெரிவித்தார். சீனாவும் ரஷ்யாவும், சந்திரனில் "ஒரு தடை மண்டலத்தை அறிவிக்க" வாய்ப்புள்ளது என்பது குறித்த டஃபியின் கருத்துக்கள், ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தம் எனப்படும் ஒப்பந்தத்தைப் பற்றி குறிப்பிடுவதாகத் தெரிகிறது. 2020 ஆம் ஆண்டில், நிலவின் மேற்பரப்பில் நாடுகள் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும் என்பது குறித்த கொள்கைகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் ஏழு நாடுகள் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தில், நாடுகள் நிலவில் உருவாக்கும் தளங்கள் மற்றும் சொத்துக்களைச் சுற்றி 'பாதுகாப்பு மண்டலங்கள்' அமைப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. "நீங்கள் சந்திரனில் ஒரு அணு உலையையோ அல்லது வேறு எந்த தளத்தையோ கட்டினால், அதைச் சுற்றி பாதுகாப்பு மண்டலம் இருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் அங்கு உங்களுடைய உபகரணங்கள் இருக்கும்," என்கிறார் முனைவர் பார்பர். "சிலருக்கு இது, 'நாங்கள் நிலவின் இந்தப் பகுதியை சொந்தமாக வைத்திருக்கிறோம். இங்கே நாங்கள் செயல்படப் போகிறோம், நீங்கள் வர முடியாது' என்று சொல்வதற்கு சமமாகத் தோன்றும்," என்றும் அவர் விளக்குகிறார். மனிதர்கள் பயன்படுத்தும் நோக்கில் நிலவில் அணு உலை அமைப்பதற்கு முன் பல சவால்களை கடக்க வேண்டியிருக்கும் என்று முனைவர் பார்பர் குறிப்பிடுகிறார். நாசாவின் ஆர்ட்டெமிஸ் 3 திட்டம் 2027 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவில் அனுப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், இது பல தடைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான குழப்பங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு தளத்திற்கு அணுசக்தி இருந்தாலும், அங்கு மனிதர்களையும் உபகரணங்களையும் கொண்டு செல்ல வழியில்லை என்றால், அது பயனுள்ளதாக இருக்காது என்று கூறிய பார்பர், தற்போது இந்த திட்டங்கள் ஒருங்கிணைந்த முறையில் நடப்பதாக தோன்றுவில்லை என்றும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crm4301jp79o
-
ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவு!
ஜப்பானின் ஹிரோசிமா மீது அமெரிக்கா அணுகுண்டை வீசி இன்றுடன் 80 வருடங்கள் - "உக்ரைன் மத்திய கிழக்கு மோதல்கள் அணுகுண்டினால் ஏற்படக்கூடிய பெரும் துன்பியல் நிகழ்வுகளை உலகம் புறக்கணிப்பதை காண்பிக்கின்றது" Published By: RAJEEBAN 06 AUG, 2025 | 03:42 PM உக்ரைன் மத்திய கிழக்கு நெருக்கடிகள் உலகம் அணுவாயுதத்தினால் ஏற்படக்கூடிய பெரும் துன்பியல் நிகழ்வுகளை புறக்கணிக்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என அமெரிக்காவின் அணுகுண்டுவீச்சிற்கு உள்ளான ஹிரோசிமாவின் மேயர் தெரிவித்துள்ளார். ஹிரோசிமா மீது அமெரிக்கா அணுகுண்டுவீச்சினை மேற்கொண்டு இன்றுடன் 80 வருடங்களாகின்ற நிலையில் அது தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஹிரோசிமாவின் அமைதிப்பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுமக்கள் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் 120 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஹிரோசிமாவின் மேயர் கசுமீ மட்சுய் உக்ரைனிலும் மத்தியகிழக்கிலும் இடம்பெற்ற மோதல்கள் அணுவாயுதங்களை ஏற்றுக்கொள்ளும் மனோநிலையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார். இந்த மோதல்கள் வரலாற்றின் துயரங்களில் இருந்து சர்வதேச சமூகம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களை புறக்கணிக்கின்றன என ஹிரோசிமா மேயர் தெரிவித்துள்ளார். பலர் மிகவும் கடினமாக உழைத்து உருவாக்கிய அமைதி கட்டமைப்பை கவிழ்த்துவிடுவோம் என அவர்கள் அச்சுறுத்துகின்றனர் என மேயர் தெரிவித்துள்ளார். அணுவாயுதங்களை ஏற்றுக்கொள்வது எதிர்காலத்தில் முற்றிலும் மனிதாபிமானமற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இளம் தலைமுறை உணரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். உலக நெருக்கடி காணப்படுகின்ற போதிலும் மக்களாகிய நாங்கள் ஒருபோதும் கைவிடக்கூடாது நேர்மையான அமைதியான உலகிற்காக அணுவாயுதங்களை அழிக்கவேண்டும் என்ற கருத்தொருமைப்பாடுடைய சிவில் சமூகத்தை நாங்கள் கட்டியெழுப்பவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். கைதட்டல்கள் முழங்க வெள்ளைப் புறாக்கள் வானத்தில் பறக்கவிடப்பட்டன. அதே நேரத்தில் உலகின் முதல் அணு ஆயுதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னத்தின் முன் ஒரு நித்திய "அமைதிச் சுடர்" ஏற்றப்பட்டது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் அணுகுண்டுத் தாக்குதல்களில் இருந்து தப்பிய வயதான ஹிபாகுஷாக்களில் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் அணு ஆயுதப் போரின் பயங்கரம் குறித்த நேரடி எச்சரிக்கைகளை அனுப்புவதற்கான கடைசி வாய்ப்பாக இந்த நிகழ்வை கருதுகின்றனர் சுகாதார அமைச்சின் சமீபத்திய தரவுகளின்படி 100000 க்கும் குறைவான உயிர் பிழைத்தவர்கள் இன்னும் உயிருடன் உள்ளனர் சராசரி வயது 86 க்கு மேல். புதன்கிழமை கடந்த ஆண்டில் இறந்த 4940 க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட உயிர் பிழைத்தவர்களின் பெயர்கள் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்கள் கல்லறைக்குள் வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் சேர்க்கப்பட்டன. இதனால் ஹிரோஷிமா குண்டுவெடிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 350000 ஆக உயர்ந்துள்ளது. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் ஆறாம் திகதி அமெரிக்காவின் யுஎஸ் பி29 குண்டுவீச்சு விமானம் 15கிலோதொன் யுரேனியம் குண்டை ஹிரோசிமா மீது வீசியதில் - அந்த வருட இறுதிக்குள் 150000 பேர் உயிரிழந்தனர். நகரம் முழுவதும் தீ பற்றி எரிந்தபோது ஒரு பெண் தண்ணீருக்காக கெஞ்சியதை மாட்சுய் தனது அமைதிப் பிரகடனத்தில் நினைவு கூர்ந்தார். பல தசாப்தங்களுக்குப் பிறகும் அந்த வேண்டுகோளைக் கேட்ட ஒரு பெண் அந்த இளம் பெண்ணுக்கு தண்ணீர் கொடுக்காததற்கு இன்னும் வருத்தப்படுகிறார்" என்று அவர் கூறினார். "அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காகப் போராடுவதுதான் இறந்தவர்களுக்குத் தன்னால் செய்யக்கூடிய சிறந்தது என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்." ஹிரோஷிமா பேரழிவிற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு அமெரிக்கா நாகசாகி நகரத்தின் மீது புளூட்டோனியம் குண்டை வீசி 74000 பேரைக் கொன்றது. இந்தத் தாக்குதல்கள் தார்மீக ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் நியாயமானவையா என்பது குறித்து விவாதம் தொடர்ந்தாலும் ஆகஸ்ட் 15 அன்று ஜப்பானை சரணடைய கட்டாயப்படுத்தியதாக பல அமெரிக்கர்கள் தொடர்ந்து நம்புகின்றனர். கடந்த ஆண்டு நோபல் பரிசு வென்ற குண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர்களின் நாடு தழுவிய வலையமைப்பான நிகோன் ஹிடயன்கோ 90 வீத அணுவாயுதங்களை வைத்துள்ள அமெரிக்கா மற்றும் ரஷ்யாவையும் - மற்றும் பிற அணுசக்தி நாடுகளையும் சவால் செய்ய மனிதகுலம் காலத்திற்கு எதிரான போட்டியில் உள்ளது என்றார். "நமக்கு அதிக நேரம் இல்லை அதே நேரத்தில் நாம் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரிய அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்கிறோம்" என்று அது ஒரு அறிக்கையில் கூறியது. "இப்போது நமது மிகப்பெரிய சவால் அணு ஆயுத நாடுகளை மாற்றுவதுதான்... கொஞ்சம் கூட." குண்டு வெடித்த சரியான நேரத்தில் காலை 8.15 மணிக்கு ஹிரோஷிமா ஒரு கணம் மௌன அஞ்சலி செலுத்தியது. பலர் தலை குனிந்து கண்களை மூடிக்கொண்டனர் சிலர் கைகளை ஒன்றாக இணைத்து பிரார்த்தனை செய்தனர். தனது பேரனுடன் அதிகாலையில் பூங்காவிற்குச் சென்ற சக்கர நாற்காலி பயனாளியான 96 வயதான யோஷி யோகோயாமா ஹிரோஷிமா தாக்குதலின் விளைவாக தனது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி இறந்துவிட்டதாக செய்தியாளர்களிடம் கூறினார். “குண்டுவெடிப்புக்குப் பிறகு எனது தாத்தா இறந்துவிட்டார், அதே நேரத்தில் எனது தந்தை மற்றும் தாய் இருவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர்” என்று அவர் கூறினார். “எனது மாமியாரும் இறந்துவிட்டார், எனவே எனது கணவர் போருக்குப் பிறகு போர்க்களங்களிலிருந்து திரும்பி வந்தபோது அவர்களை மீண்டும் பார்க்க முடியவில்லை. மக்கள் இன்னும் அவதிப்படுகிறார்கள்.” https://www.virakesari.lk/article/221960
-
பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவித்தல்!
07 AUG, 2025 | 06:52 PM நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை இன்று வெள்ளிக்கிழமை (07) முடிவடைகிறது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை எதிர்வரும் 19 ஆம் திகதி முடிவடையும். அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/222078
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி புதைகுழி: இதுவரை 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்; 133 அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது - சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் Published By: VISHNU 06 AUG, 2025 | 08:09 PM செம்மணி மனித புதைகுழியில் 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டதுடன் 133 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார். செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 32 ஆவது நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் புதன்கிழமை (6) முன்னெடுக்கப்பட்டது. அகழ்வு பணிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், புதிதாக ஆறு மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளது. மூன்று மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது. 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டதுடன் 133 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளது. எலும்புக்கூடொன்று நேற்று முன்தினம் செருப்புடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இடுப்பில் தாயம் ஒன்றுடன் எலும்புக்கூடொன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை செருப்பு, தாயம், காசு உள்ளிட்ட சான்று பொருட்கள் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. இன்றுடன் தற்காலிகமாக அகழ்வு பணிகள் நிறுத்தப்படுவதால் அடையாளம் காணப்பட்ட மேலும் எழு எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/221997
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
80 அடி இந்திய இழுவைப் படகுடன் 10 மீனவர்கள் கைது Published By: VISHNU 06 AUG, 2025 | 08:03 PM இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும், அவர்கள் வந்த படகையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 80 அடிக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த இழுவைப் படகு தமிழ்நாட்டைச் சேர்ந்ததாகும். இது பத்தலன்குண்டு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு, பின்னர் டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட படகில் நவீன தொழில்நுட்ப சாதனங்கள், GPS வரைபடங்கள் மற்றும் மீன்களைக் கண்டறியும் கருவிகள் இருந்ததாகவும், இதன் மூலம் இந்த மீனவர்கள் வேண்டுமென்றே இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்திருப்பது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கையில் இழுவை வலை மீன்பிடித் தொழில் சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், இது உள்ளூர் மீனவ சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உள்ளூர் மீனவர்கள் தமது வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்ளும் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளூர் மீனவர்களின் கடும் எதிர்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மருத்துவப் பரிசோதனை மற்றும் ஏனைய சட்ட நடைமுறைகளுக்குப் பின்னர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். https://www.virakesari.lk/article/221995
-
சம்பூர் கடற்கரையோர பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் - அகழ்வுப் பணிகளைத் தொடருமாறு நீதிமன்றம் உத்தரவு 06 AUG, 2025 | 08:20 PM மனித எலும்பு எச்சங்கள் காணப்பட்ட சம்பூர் காணியில் மேலும் மனித எலும்புக்கூடுகள், மற்றும் எச்சங்கள் உள்ளனவா என்பதை அறிய, கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளைத்தளபதியின் ஆலோசனையைப் பெற்று இராணுவ பாதுகாப்பு ஆளணியின் உதவியுடன் முறைப்படி அகழ்வு நடத்தப்பட வேண்டும் என்று மூதூர் நீதவான் தஸ்னீம் பெளஸான் இன்று (6) உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் 26ஆம் திகதி எடுத்துக்கொள்வதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன், இதுவரை அங்கு கண்டெடுக்கப்பட்ட மூன்று எலும்புக்கூடுகளில் ஒன்று, 25 வயதிற்கு குறைந்த ஆண் ஒருவருடையது; மற்றையது, 25 - 40 வயதுக்குட்பட்ட ஒருவருடையது; அடுத்தது 40 - 60 வயதுக்குட்பட்ட ஒருவருடையது என்றும் இன்றைய வழக்கு மாநாட்டின்போது மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய சட்ட வைத்திய அதிகாரி, இந்த இடம் மயானம் என்பதற்கு இதுவரை ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட எலும்பு எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த எச்சங்களுக்குரியவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தார்களா?அல்லது ஏதேனும் குற்றச்செயல்கள் மூலம் மரணம் நிகழ்ந்ததா? என்பதை கண்டறிய மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்று கூறினார். இக்காணி அரச காணியாக உள்ளபோதும் இங்கு ஒரு மயானம் இருந்ததற்குரிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று இந்த வழக்கு மாநாட்டில் தொல்பொருள் திணைக்களம், பிரதேச செயலக செயலாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரால் அறிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த அறிக்கைகளை ஆராய்ந்த பின்னரே நீதிமன்று அகழ்வு நடத்தப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்றைய வழக்கு மாநாட்டில் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்கள அதிகாரி, புவிச்சரிதவியல் துறை அதிகாரி, பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர், தேசிய கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினர், மெக் மிதி வெடி அகற்றும் நிறுவனத்தினர், பிரதேச செயலாளர், பிரதேச சபைச் செயலாளர், காணாமல் ஆக்கப்பட்டோர் தேசிய செயலகத்தின் சட்டத்தரணி, பிரதேச காணி உத்தியோகத்தர், பிரிவிற்கான கிராம சேவை அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டனர். கடந்த ஜூலை 19ஆம் திகதி மிதிவெடி அகற்றும் பணிகள் அப்பகுதியில் செயற்படுத்தப்பட்டபோது, மனித மண்டையோடு, கால் எலும்பு என்பன கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, கடந்த 23ஆம் திகதி சம்பவ இடத்தை மூதூர் நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டார். அதனையடுத்து, கடந்த 30ஆம் திகதி இவ்விடயம் தொடர்பில் மூதூர் நீதிமன்றில் விசாரணைகள் நடைபெற்றது. அன்றைய தினம் நீதிபதி விடுத்த அறிவிப்பின்படி, புதன்கிழமை (6) நீதிமன்ற கூட்டம் நீதிபதி தலைமையில் நடைபெறும் எனவும், இக்கூட்டத்தின் பின்னர் இந்த மனித எச்சங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221981