Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. யாழ்ப்பாணம் அருகே சட்டவிரோதமாக மீன்பிடித்த இந்திய மீனவர்கள் நால்வர் கைது Published By: Vishnu 05 Aug, 2025 | 02:52 AM யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடற்பகுதியில், சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். குறித்த படகைச் சோதனையிட்ட கடற்படையினர், அதில் இருந்த நான்கு இந்திய மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகு, மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். பின்னர், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நோக்கில் அவர்கள் யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/221833
  2. Published By: Vishnu 05 Aug, 2025 | 01:18 AM (நா.தனுஜா) தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் உரிய சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதையும், அங்கு கண்டறியப்படும் மனித எச்சங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அகழ்வுப்பணிகளின்போது சர்வதேச கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்பன வழங்கப்படவேண்டும். அதன்படி வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள மனிதப்புதைகுழிகளை மீள் அடையாளப்படுத்துவற்கும், முறையான கண்காணிப்பை உறுதிசெய்வதற்கான சர்வதேசப்பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அதிமுன்னுரிமை வழங்கவேண்டும் என வட, கிழக்கு மாகாணங்களில் இயங்கிவரும் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கும், மனித உரிமைகள் பேரவையின் அங்கம் வகிக்கும் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுக்கும் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கட்சிகள் சார்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைவரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பி.ஐங்கரநேசன், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, ஜனநாயக தமிழரசுக்கட்சியின் தலைவர் கே.வி.தவராசா, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் ஆகியோரும், மதத்தலைவர்கள் 11 பேரும், 115 சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து அனுப்பியுள்ள இக்கூட்டுக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இக்கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கும் வட, கிழக்கு மாகாணங்களில் இயங்கிவரும் தமிழ் அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும் ஒத்த நிலைப்பாட்டின் அடிப்படையில் இயங்கிவரும் ஏனைய அமைப்புக்களுமான நாம், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை தொடர்பான எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி இக்கடிதத்தை எழுதுகிறோம். இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான வலுவான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரியும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் என்பன இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பவற்றுக்குக் கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரியும் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ப்பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம்வகிக்கும் 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுப்பிவைத்திருந்த கடிதம் தொடர்பில் மீண்டும் நினைவுபடுத்துகிறோம். இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மேமாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும், அதன் பின்னர் இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதிலும் ஐக்கிய நாடுகள் சபை அடைந்த தோல்வியானது, இப்போது உலகளாவிய ரீதியில் எதேச்சதிகாரப்போக்கிலான பல நாடுகளின் அரசாங்கங்கள் தண்டனையிலிருந்து விடுபட்டு, மிகமோசமான குற்றங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இவ்வாறானதொரு பின்னணியில் உங்களிடம் நாம் சில விடயங்களை வலியுறுத்த விரும்புகிறோம். அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின்போது, இலங்கையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு கடந்த 16 ஆண்டுகளில் பொறுப்புக்கூறல் செயன்முறையில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் எட்டப்படவில்லை என்ற விடயத்தை ஐ.நா பொதுச்சபை, ஐ.நா செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா பாதுகாப்புச்சபை ஆகிய கட்டமைப்புக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனக்கோரி உறுப்புநாடுகளால் தீர்மானமொன்று நிறைவேற்றப்படவேண்டும். அதேபோன்று உள்ளகப்பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கான வாய்ப்பையும் நேரத்தையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கக்கூடிய எந்தவொரு உள்ளடக்கத்தையும் நாம் முழுமையாக நிராகரிக்கிறோம். குறிப்பாக 'சுயாதீன குற்றப்பத்திர அல்லது சட்டவாதி அலுவலகத்தை' ஸ்தாபிப்பதே இலங்கையின் உள்ளகப் பொறுப்புக்கூறல் பொறிமுறையை நோக்கிய நகர்வாக அமையும் என சிலர் முன்மொழிந்துள்ளனர். இருப்பினும் இலங்கையின் அரச கட்டமைப்பில் ஆழமாக வேரூன்றியிருக்கும் பொறுப்புக்கூறல் செயன்முறையை நிறுவுவதற்கான தன்முனைப்பற்ற நிலையைக் கையாள்வதற்கு சுயாதீன குற்றப்பத்திர அலுவலகத்தை நிறுவுவது மாத்திரம் போதுமானதன்று. அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின்' நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்பதுடன் அதற்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை மேலும் காலநீடிப்புச் செய்வதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. இருப்பினும் அக்காலநீடிப்பானது குறித்து வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்கானதாகவும், இலங்கையை ஐ.நா பொதுச்சபை, ஐ.நா பாதுகாப்புச்சபை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகிய கட்டமைப்புக்கள் முன்னிலையில் பாரப்படுத்தவேண்டும் என்ற விடயத்தை உள்ளடக்கியதாகவும் அமையவேண்டும். அடுத்ததாக தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் உரிய சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதையும், அங்கு கண்டறியப்படும் மனித எச்சங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அகழ்வுப்பணிகளின்போது சர்வதேச கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்பன வழங்கப்படவேண்டும். வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள மனிதப்புதைகுழிகளை மீள் அடையாளப்படுத்துவற்கும், முறையான கண்காணிப்பை உறுதிசெய்வதற்கான சர்வதேசப்பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அதிமுன்னுரிமை வழங்கவேண்டும். https://www.virakesari.lk/article/221829
  3. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரஷ்ய அன்டோனோவ் ஏஎன் 26 விமானம் புருலியாவில் ஆயுதங்களை வீசியது. கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி இந்தி 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் 1995-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்தது. டிசம்பர் 17-ம் தேதி இரவு, சுமார் நான்கு டன் எடையுள்ள ஆபத்தான ஆயுதங்களை ஏந்திய ரஷ்ய அன்டோனோவ் ஏஎன் 26 (Antonov AN-26) சரக்கு விமானம் கராச்சியிலிருந்து டாக்காவுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் எட்டு பேர் பயணம் செய்தனர். அவர்களில் டென்மார்க்கைச் சேர்ந்த கிம் பீட்டர் டேவி, பிரிட்டனில் இருந்து வந்த ஆயுத வியாபாரி பீட்டர் ப்ளீச், சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தீபக் மணிகன் மற்றும் ஐந்து விமான பணியாளர்கள் இருந்தனர். அந்த ஐந்து பணியாளர்களும் ரஷ்ய மொழி பேசக்கூடிய லாட்வியாவின் குடிமக்கள். விமானம் வாரணாசியின் பாபத்பூர் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பியது. அப்போது, விமானத்தில் ஏற்றப்பட்ட ஆயுதங்களுக்கு மூன்று பாராசூட்டுகள் இணைக்கப்பட்டன. சிபிஐயிடம் அளித்த வாக்குமூலத்தில் பீட்டர் ப்ளீச் இந்த விவரங்களை ஒப்புக்கொண்டதுடன், கராச்சிக்கு வருவதற்கு முன்பே பல்கேரியாவின் புர்காஸ் நகரத்தில் ஆயுதங்கள் விமானத்தில் ஏற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். "வாரணாசியில் இருந்து புறப்பட்ட விமானம், கயா அருகே தனது பாதையை மாற்றியது. புருலியா என்ற மேற்கு வங்கத்தின் பின்தங்கிய மாவட்டத்தை அடைந்ததும், அது மிகவும் தாழ்வாக பறக்கத் தொடங்கியது. அங்கு, பாராசூட்டுகளுடன் இணைக்கப்பட்ட மூன்று பெரிய மரப் பெட்டிகள் கீழே விடப்பட்டன. அவை நூற்றுக்கணக்கான ஏகே-47 துப்பாக்கிகளால் நிரம்பியிருந்தன" என மூத்த பத்திரிகையாளர் சந்தன் நந்தி தனது புகழ்பெற்ற 'தி நைட் இட் ரெய்ன்ட் கன்ஸ்' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். "இந்த ஆயுதங்கள் ஆனந்த் மார்க்கின் தலைமையகத்திற்கு அருகிலுள்ள ஜல்டா கிராமம் அருகே கீழே விடப்பட்டன. அவற்றை வீசியவுடன், விமானம் மீண்டும், அதன் திட்டமிட்ட பாதையில் பறக்கத் தொடங்கியது. பின்னர் கல்கத்தாவில் தரையிறங்கி எரிபொருள் நிரப்பிய பிறகு, தாய்லாந்தின் புக்கெட்டுக்குப் பறந்தது." பட மூலாதாரம், Rupa படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் சந்தன் நந்தி எழுதிய 'தி நைட் இட் ரெய்ன்ட் கன்ஸ்' என்ற புத்தகம் பீட்டர் ப்ளீச்சின் நோக்கம் என்ன? சந்தன் நந்தி மற்றும் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் பீட்டர் போப்ஹாம் கூறுவதன் படி, விமானத்தில் இருந்த ஆயுத வியாபாரி பீட்டர் ப்ளீச், பிரிட்டிஷ் உளவுத்துறை அமைப்பான எம்ஐ-6 உடன் (MI6) தொடர்புடையவர். சில நேரம் அவர்களுக்காக உளவுப் பணிகளில் ப்ளீச் உதவியதாகவும் கூறப்படுகிறது. வாரணாசியிலிருந்து விமானம் புறப்பட்டபோது, தனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு விடுமோ என்று ப்ளீச் அஞ்சினார். "விமானம் புறப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, ஒரு டேனிஷ் வாடிக்கையாளர் அதிக அளவிலான ஆயுதங்களை வாங்க விரும்புவதாக என்னை அணுகினார் என்று பீட்டர் ப்ளீச் கூறினார். ஆயுதங்கள் எந்த நாட்டுக்காகவுமல்ல, ஒரு தீவிரவாத அமைப்புக்காகவே என்பதைக் கண்டறிந்ததும், அவர் இந்த விவரங்களை பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு தெரிவித்தார்" என பிரிட்டனின் 'தி இன்டிபென்டன்ட்' செய்தித்தாளின் 2011 மார்ச் 6-ம் தேதி வெளியான 'Up in Arms: The Bizarre Case of the British Gun Runner, the Indian Rebels and the Missing Dane' என்ற கட்டுரையில் பீட்டர் போப்ஹாம் எழுதியுள்ளார். "பீட்டர் ப்ளீச் தனது வேலையைத் தொடர வேண்டும் என பிரிட்டிஷ் உளவுத்துறை அவருக்கு அறிவுரை வழங்கியது. அவர் தீவிரவாதத்தை எதிர்க்கும் ஒரு மறைமுக நடவடிக்கையில் பங்கேற்கிறார் என்றும், ஆயுதங்கள் வீசப்படுவதற்கு முன்பே இந்திய பாதுகாப்பு அமைப்புகள் அதை இடைமறித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் நம்பி, அந்த திட்டத்தில் அவர் சேர்ந்தார்." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆயுத வியாபாரி பீட்டர் ப்ளீச் புருலியாவில் ஆயுதங்கள் வீசப்பட்டன ஆனால் அந்த பணி தொடங்குவதற்கு முன்பு, அதைத் தடுக்க இந்திய நிர்வாகம் முயற்சி செய்ததற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. "வாரணாசியில் இருந்து விமானம் புறப்பட்டதும், பீட்டர் ப்ளீச் கவலையடைந்தார். இந்தியர்கள் விமானத்தைச் சுட்டு வீழ்த்த முடிவு செய்திருக்கலாம் என அவர் நினைத்தார். தனது முடிவு நெருங்கிவிட்டதாக அவர் அஞ்சினார்"என பீட்டர் போப்ஹாம் எழுதியுள்ளார். ஆனால் இரவு நெருங்கியதும், விமானம் இருளில் ஆயுதங்களை வீசியது. அப்போது எதுவும் நடக்கவில்லை. பீட்டர் ப்ளீச்சின் பார்வையில், தனது பிரச்னைகள் முடிவடைந்துவிட்டன என்று தோன்றியது. ஆனால் உண்மையில், அப்போது தான் அவரது சிக்கல்கள் தொடங்கின. நூற்றுக்கணக்கான ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் தரையில் சிதறிக் கிடந்தன. டிசம்பர் 18 ஆம் தேதி காலை, புருலியா மாவட்டத்தில் உள்ள கனுதி கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் தண்டுபாய் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். திடீரென்று அவரது கண்கள் ஒரு மேட்டின் முன் இருந்த புல்வெளியில் ஏதோ ஒன்று பிரகாசித்துக் கொண்டிருந்ததைக் கண்டன. சுபாஷ் அருகில் சென்றபோது, அவர் இதுவரை பார்த்திராத ஒரு துப்பாக்கியின் மீது பார்வை பதிந்தது. அங்கு சுமார் 35 துப்பாக்கிகள் சிதறிக்கிடந்தன. இதைக் கண்டதும், அவர் உடனே ஜால்டா காவல் நிலையம் நோக்கி ஓடினார், என ஜால்டா காவல் நிலையத்தின் வழக்கு நாட்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. "செய்தியைக் கேள்விப்பட்டவுடன், நான் உடனே என் சீருடையை அணிந்து சிட்டாமு கிராமம் நோக்கி புறப்பட்டேன். அங்கு சென்றபோது, தரையில் கிடந்த ஆலிவ் நிற மரப் பெட்டிகள் உடைக்கப்பட்டிருந்தன. அவற்றில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அனைத்தும் காணாமல் போயிருந்தன," என்று நிலையப் பொறுப்பாளர் பிரணவ் குமார் மித்ரா, சந்தன் நந்தியிடம் தெரிவித்தார். "என்னுடைய சக ஊழியர்களில் ஒருவர் இந்திய ராணுவ வீரரை அழைத்தார். எனது வேண்டுகோளின் பேரில், அவர் அருகிலுள்ள குளத்தில் மூழ்கினார். அவர் வெளியே வந்தபோது, அவர் கையில் ஒரு டாங்கியை அழிக்கும் கையெறி குண்டு இருந்தது. அதன் பிறகு தான் முதல் முறையாக இது ஒரு தீவிரமான விஷயம் என்பதை உணர்ந்தேன்." பின்னர், ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை காவல்துறையிடம் திருப்பித் தர வேண்டும் என்று ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர், பல ஏகே 47 துப்பாக்கிகள் அருகிலுள்ள கிராமங்களான கட்டங்கா, பெலாமு, மராமு, பகாடோ மற்றும் பெராதிஹ் ஆகிய இடங்களில் கிடந்தன. ஒரு நபர் வந்து, வயலில் ஒரு பெரிய நைலான் பாராசூட் கிடப்பதாகவும், அதன் கீழே பல துப்பாக்கிகள் இருப்பதாகவும் கூறினார். கல்கத்தா நீதிமன்றம் பிரிட்டன், பல்கேரியா, லாட்வியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய கோரிக்கை கடிதத்தில், "மொத்தம் 300 ஏகே-47 துப்பாக்கிகள், 25 9 மிமீ பிஸ்டல்கள், இரண்டு 7.62 ஸ்னைப்பர் துப்பாக்கிகள், 2 இரவு நேரங்களில் பயன்படும் தொலைநோக்கிகள், 100 கையெறி குண்டுகள் மற்றும் 16000 சுற்று தோட்டாக்கள் புருலியா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டன. இவை அனைத்தின் மொத்த எடை 4375 கிலோ" என்று கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, புருலியாவில் கீழே வீசப்பட்ட ஆயுதங்கள் வலுக்கட்டாயமாக மும்பையில் தரையிறக்கப்பட்ட விமானம் தாங்கள் வீசிய ஆயுதங்கள், இந்திய பாதுகாப்புப் படையினரின் கைகளுக்கு கிடைத்துவிட்டதைக் கண்டதும், அந்த செயலில் ஈடுபட்டவர்களுக்கு வேறு மாதிரியான விஷயங்கள் நடக்கத் தொடங்கின. இதையெல்லாம் மீறி, அந்த விமானம் மீண்டும் கராச்சிக்குப் புறப்பட்டது. புக்கெட்டிலிருந்து திரும்பிய விமானம், கல்கத்தாவிற்குப் பதிலாக சென்னையில் எரிபொருள் நிரப்பி அங்கிருந்து புறப்பட்டது. மும்பை நகரத்திலிருந்து சுமார் 15–20 நிமிடங்கள் தொலைவில் அந்த விமானம் இருந்தபோது, விமானி அறை வானொலியில் ஒரு குரல் ஒலித்தது. அதில், இந்திய விமானப்படையின் மிக்-21 போர் விமானம், ரஷ்ய விமானத்தை மும்பை விமான நிலையத்தில் உடனே தரையிறக்க உத்தரவிடப்பட்டது. "விமானம் தரையிறங்கத் தொடங்கியதும், கிம்மின் முகத்தில் கவலை அதிகரித்தது. அவர் தனது பெட்டியில் இருந்து சில காகிதங்களை எடுத்து, அவற்றை சிறிய துண்டுகளாகக் கிழித்து எரித்தார். இதன் பிறகு, அவர் அவற்றை கழிப்பறைக்கு எடுத்துச் சென்று அவற்றை அப்புறப்படுத்தினார்" என்று சந்தன் நந்தி குறிப்பிட்டுள்ளார். "பின்னர் அவர் தனது பெட்டியில் இருந்து நான்கு ஃப்ளாப்பி டிஸ்க்குகளை எடுத்து துண்டுதுண்டாக உடைத்தார். பின்னர் ஒரு ப்ளீச் லைட்டரை எடுத்து தீ வைத்தார். அவர் இதனைச் செய்து முடிக்கும் நேரத்தில், விமானத்தின் சக்கரங்கள் மும்பை விமான நிலையத்தின் ஓடுபாதையைத் தொட்டன." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, புருலியா ஆயுத வழக்கின் மூளையாக செயல்பட்ட கிம் டேவி தப்பித்த கிம் டேவி விமானம் சஹார் சர்வதேச விமான நிலையத்தில் (மும்பை) தரையிறங்கிய போது, இரவு 1:40 மணி. ஆனால் விமானத்திற்காக அங்கு ஒரு நபர் கூட காத்திருக்கவில்லை. 10 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டு பேருடன் ஒரு விமான நிலைய ஜீப் அங்கு வந்ததாக, பீட்டர் ப்ளீச் சிபிஐக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். "டேவியும் ப்ளீச்சும் அந்த இரண்டு அதிகாரிகளிடமும் பேசிக்கொண்டே இருந்தனர். இந்திய அதிகாரிகளின் முட்டாள்தனமும் திறமையின்மையும் உச்சத்தில் இருந்தது. டேவி அவர்களிடம் தரையிறங்கும் கட்டணத்தைச் செலுத்த வேண்டுமா என்று கேட்டபோது, அந்த அதிகாரியின் ஆம் என்று பதில் கூறினார்" என்று சந்தன் நந்தி பதிவு செய்துள்ளார். "விமானம் தரையிறங்கிய சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு, மற்றொரு ஜீப் அங்கு வந்தது, அதில் 6 அல்லது 7 பேர் சாதாரண உடையில் இருந்தனர். அவர்கள் தங்களை சுங்கத்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு விமானத்தைச் சோதனையிட விரும்புவதாகக் கூறினர்." "சுங்கத்துறை அதிகாரிகள் விமானத்திற்குள் நுழைந்த பிறகு, டேவி விமானத்திற்குள் நுழைந்தார். அவர் ஒரு கோப்பில் இருந்த காகிதங்களை எடுத்துக்கொண்டு அமைதியாக விமானத்திலிருந்து இறங்கினார். இதற்குப் பிறகு, யாரும் டேவியைக் காணவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு, விமானம் 50 முதல் 70 ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினரால் சூழப்பட்டது." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கிம் டேவியை நாடு கடத்த இந்தியா முயற்சித்தது. விமான குழுவினருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது விமானத்தின் குழுவினருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பீட்டர் ப்ளீச்சும், குழு உறுப்பினர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுத்ததற்காக விசாரிக்கப்பட்டனர். இரண்டு ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பிறகு, அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு கிம் டேவி மீண்டும் காணப்பட்டார். கிம் டேவி டென்மார்க் முழுவதும் பயணம் செய்து தனது பணியைப் பற்றி பெருமையாகப் பேசினார். டேவியை நாடு கடத்த இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது, ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. பட மூலாதாரம், Getty Images டேவியின் பரபரப்பான கூற்று "இந்த முழு சம்பவத்திலும் இந்திய உளவுத்துறை நிறுவனமான ராவுக்கு (RAW) பங்கு இருந்தது. ஆயுதங்கள் கீழே வீசப்பட்டது குறித்து இந்திய அரசாங்கத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரியும். இந்த நடவடிக்கை ரா மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறை நிறுவனமான எம்ஐ6 (MI6) ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையாகும்" என்று ஏப்ரல் 27, 2011 அன்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் டேவி கூறினார். அவரது கருத்தை அரசாங்கம் மறுத்தது. இந்த சம்பவத்தில் எந்த அரசு நிறுவனமும் ஈடுபடவில்லை என்று சிபிஐ கூறியது. பின்னர், கிம் டேவி 'தே கால்டு மீ டெரரிஸ்ட்' ( 'They Called Me Terrorist') என்ற புத்தகத்தை எழுதினார். இதில், "பிகாரைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி மூலம் இந்தியாவிலிருந்து தப்பிச் செல்ல அவருக்கு உதவி செய்யப்பட்டது. அவரது உதவியுடன், விமானப்படை ரேடார்கள் சிறிது நேரம் ஆஃப் செய்யப்பட்டன, இதனால் ஆயுதங்கள் எந்தத் தடையும் இல்லாமல் வீசப்பட்டன. இந்த ஆயுதங்களின் நோக்கம் ஆனந்த் மார்கா மூலம் மேற்கு வங்கத்தில் வன்முறையைப் பரப்புவது. அதை ஒரு சாக்காகப் பயன்படுத்தி ஜோதி பாசு தலைமையிலான மாநில அரசு பதவி நீக்கம் செய்யப்படலாம்" என்று கிம் டேவி கூறியிருந்தார். கிம் டேவியின் கூற்றுகளுக்குப் பிறகும், அதற்கு முன்னதாகவும் இதுபோன்ற அனைத்து வகையான குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்த ஆனந்த மார்கா, சிலர் தங்களது அமைப்பின் மீது அவதூறு பரப்ப விரும்புவதாகக் கூறினார். ஆயுதங்கள் வீசப்பட்ட பிறகு காவல்துறை விசாரணை நடத்தியது. ஆனால், அங்கு அவர்கள் எந்த ஆயுதங்களையும் கண்டுபிடிக்கவில்லை என்று ஆனந்த மார்கா கூறினார். இந்த வழக்கு தொடர்பாக, இந்திய நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் சில எம்.பி.க்கள், இந்திய விமானப்படை ரேடார்கள் 24 மணி நேரமும் செயல்படுகின்றனவா என்று கேட்டபோது, இந்திய விமானப்படை பிரதிநிதி ஏர் வைஸ் மார்ஷல் எம். மெக்மஹோன், "ரேடர்கள் எரிந்து போகும் அபாயம் இருப்பதால், அவற்றை 24 மணி நேரமும் செயலில் வைத்திருப்பது சாத்தியமில்லை" என்று பதிலளித்தார். (-இந்த வழக்கு தொடர்பான மூன்றாவது அறிக்கை, பக்கம் 7) பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கிம் டேவி எழுதிய "அவர்கள் என்னை பயங்கரவாதி என்று அழைத்தார்கள்" எனும் புத்தகம் இந்தியாவுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்ததது - பிரிட்டன் உள்துறை அமைச்சர் தனது விமானம் எப்போது எங்குச் செல்லும் என்பதைக் குறித்து இந்திய நிர்வாகம் முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தது என்றும், விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர், விமானத்தில் எத்தனை ஆயுதங்கள் இருந்தன, அவற்றை எங்கு வீச வேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரியும் என்றும் கிம் டேவி கூறினார். எதிரி நாட்டிலிருந்து ஆயுதங்கள் நிரம்பிய ஒரு விமானத்தை, இந்திய அரசாங்கத்திற்குத் தெரியாமல் நாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என , எந்த புத்தியுள்ள நபராவது முயற்சி செய்வாரா?" என்று கிம் டேவி கேள்வி எழுப்பினார். "முன்னாள் ரா அதிகாரி ஆர்.கே. யாதவ் தனது 'மிஷன் ரா' என்ற புத்தகத்தில், 'பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் மைக்கேல் ஹோவர்ட் இந்தியா வந்தபோது, விமானத்தில் இருந்து ஆயுதங்களை கீழே வீசும் திட்டம் குறித்து பிரிட்டிஷ் அரசு முன்கூட்டியே இந்தியாவுக்கு தகவல் அளித்ததாக அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெளிவாகக் கூறினார். இதனால் கிம் டேவியின் கூற்றுகள் உறுதி செய்யப்பட்டன' என்று எழுதியுள்ளார்." "இத்தனைத் தகவல்கள் இருந்த போதும் , விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஏன் விமானத்தை கல்கத்தாவில் தரையிறக்க அனுமதித்தது? ராவுக்கு இதுகுறித்து முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தால், உளவுத்துறை, உள்ளூர் காவல்துறை அல்லது சுங்கத் துறை போன்ற பிற அரசு நிறுவனங்கள் வாரணாசியிலேயே விமானத்தை ஏன் சோதனை செய்யவில்லை?" பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முன்னாள் ரா அதிகாரியான ஆர்கே யாதவ் எழுதிய 'மிஷன் ரா ' புத்தகம். பீட்டர் ப்ளீச் மற்றும் குழுவினரின் விடுதலை "ரஷ்ய விமானம் விமான நிலைய கட்டடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் வேண்டுமென்றே நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அதிகாரிகள் அங்கு சென்றபோது, விமானத்தின் கதவு திறந்திருந்தது. டேவி, விமான நிலையத்தின் அரசு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். சுங்கம் அல்லது குடியேற்ற சோதனை எதுவும் இல்லாமல், அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டார்" என்று ஆர்.கே. யாதவ் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். ஒரு வெளிநாட்டு விமானம் இந்திய வான்வெளியில் அத்துமீறி நுழைந்து, பாராசூட் மூலம் ஆயுதங்களை நாட்டுக்குள் வீசுவது என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டதாகத் தெரிகிறது. "விமானம் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்டிருந்தாலும், இந்த முழு திட்டத்தின் மூளையாக இருந்த கிம் டேவி அல்லது நீல்சன், இந்திய பாதுகாப்பு அமைப்புகளின் கண் முன்னே மும்பை சஹார் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மர்மமான சூழ்நிலையில் தப்பிச் சென்றது புரிந்துகொள்ள முடியாத விஷயமாக உள்ளது" என்று சந்தன் நந்தி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். கிம் டேவியின் கூட்டாளியான பீட்டர் ப்ளீச், கைது செய்யப்பட்ட பிறகு, தன்னை விடுவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இந்த சம்பவத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு பிரிட்டனின் டோனி பிளேர் அரசு இந்திய அரசிடம் மன்னிப்பு கோரிய போது, இந்தியாவின் அப்போதைய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவருக்கு மன்னிப்பு வழங்கி, பீட்டர் ப்ளீச்சை விடுவித்தார். அப்போது அடல் பிஹாரி வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக இருந்தார். அதற்கு 4 ஆண்டுகள் முன்பாகவே, அதாவது 2000-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி, ரஷ்ய அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். அதே ஆண்டில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவுக்கு வரவிருப்பதை முன்னிட்டு, ஒரு நல்லெண்ண முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போதும் அடல் பிஹாரி வாஜ்பாய் தான் இந்தியாவின் பிரதமராக இருந்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிரிட்டன் பிரதமராக இருந்த டோனி பிளேர் கிம் டேவியை ஒப்படைக்க டென்மார்க் மறுப்பு இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. ஆனால், முதல் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணையின் வேகம் மெல்லமெல்ல குறைந்தது. 'வழக்கை தேங்கி நிற்க அனுமதித்தார்கள்' என்று சந்தன் நந்தி கருதுகிறார். "சிபிஐ இயக்குநர் பி.சி. சர்மா பதவியிலிருந்து விலகிய பிறகு, இந்த வழக்கில் எந்த சிபிஐ தலைவரும் ஆர்வம் காட்டவில்லை. 2001 முதல் 2011 வரை விசாரணை முற்றிலும் நின்றுவிட்டது. 2011 ஏப்ரலில், கிம் டேவி கோபன்ஹேகனில் ஒரு நாள் கைது செய்யப்பட்டார். ஆனால், அடுத்த நாளே டேனிஷ் காவல்துறை அவரை விடுவித்தது. இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் இருந்தபோதும், அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்கிறார் சந்தன் நந்தி. இந்தியாவில் டேவி சித்திரவதை செய்யப்படுவார் என்றும், அவரது மனித உரிமைகள் மீறப்படும் என்றும் அஞ்சியதன் அடிப்படையில், டேவியை இந்தியாவுக்கு அனுப்ப டென்மார்க் நீதித்துறை மறுத்துவிட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கிம் டேவியை இந்தியாவிடம் ஒப்படைக்க டென்மார்க்மறுத்துவிட்டது. விடை தெரியாத பல கேள்விகள் "முழுமையான விசாரணைக்குப் பிறகு, இந்த திட்டம் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்தது. கிம் டேவியிடம் இரண்டு போலி பாஸ்போர்ட்டுகள் இருந்தன. ஒன்றில் அவரது பெயர் 'கிம் பால்கிரேவ் டேவி' என்றும், மற்றொன்றில் 'கிம் பீட்டர் டேவி' என்றும் இருந்தது" என்று சந்தன் நந்தி எழுதியுள்ளார். இந்த இரண்டு பாஸ்போர்ட்டுகளும் 1991 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் வழங்கப்பட்டிருந்தன. இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால், இந்த ஆயுதங்கள் யாருக்காக வீசப்பட்டன? யார் அவற்றை வீசினார்கள், யார் அதற்கு பணம் கொடுத்தார்கள்? ஆயுதங்களுடன் அந்த விமானம் இந்திய வான்வெளியில் நுழைந்தவுடன் தடுத்து நிறுத்தப்படாதது ஏன்? இந்த ஆயுதங்கள் வீசப்பட்டது குறித்து ரா முன்கூட்டியே அறிந்திருந்ததா, ஆம் என்றால், முன்கூட்டியே தகவல் இருந்தும் ஏன் மற்ற அரசு அமைப்புகளுக்குத் தெரிவிக்கவில்லை? கிம் டேவி மும்பை விமான நிலையத்தை விட்டு வெளியேற எப்படி அனுமதிக்கப்பட்டார், அவர் தனது நாட்டிலிருந்து டென்மார்க்கிற்கு எப்படி சென்றார்? என்பன போன்ற பல கேள்விகள் இன்னும் விடை தெரியாமல் உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy98dp3plp1o
  4. 05 Aug, 2025 | 10:47 AM காசாவிற்குள் வான்வழியாக மனிதாபிமான உதவிகளை வீசியுள்ளதாக தெரிவித்துள்ள கனடா இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறுகின்றது என குற்றம்சாட்டியுள்ளது. சிசி - 130 ஜே ஹேர்குலிஸ் விமானத்தை பயன்படுத்தி கனடாவின் ஆயுதப்படையினர் காசாவுக்குள் மனிதாபிமான உதவி பொருட்களை போட்டனர் என தெரிவித்துள்ள கனடா அரசாங்கம் 21600 பவுண்ட் மனிதாபிமான உதவிகளை போட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கனடாவின் ஆயுதப்படையினர் தங்கள் விமானங்களை பயன்படுத்தி முதல்தடவையாக காசாவுக்குள் மனிதாபிமான பொருட்களை போட்டுள்ளனர் என கனடா ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை கனடா எகிப்து உட்பட ஆறுநாடுகள் 120 உணவுப்பொதிகளை காசாவிற்குள் வீசியுள்ளன என எகிப்து தெரிவித்துள்ளது. இதேவேளை இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் மனிதாபிமான அமைப்புகளிற்கு சவாலை தோற்றுவித்துள்ளன என தெரிவித்துள்ள கனடா மனிதாபிமான உதவிகளை தடுப்பது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் இதனை உடனடியாக கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/221848
  5. ACF நிறுவனத் தொண்டர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு Published By: Vishnu 04 Aug, 2025 | 08:32 PM திருகோணமலை மூதூர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திங்கட்சிழமை (04) திருகோணமலை மட்டிக்களி லகூன் பூங்காவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு 19 ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை எனவும் புதிய அரசாங்கத்தின் ஆட்சியிலாவது நீதி கிடைக்க வேண்டும் எனவும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதியன்று வழமை போல் கடமையின் நிமித்தம் மூதூரில் உள்ள அலுவலகத்துக்குச் சென்றிருந்த பணியாளர்கள் மூதூர் பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலையின் காரணமாக அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் அங்கேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது. இதன்போது 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது. குறித்த படுகொலைச் சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 17 உள்ளுர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். இப்படுகொலையில் 1. ரிச்சட் அருள்ராஜ் (வயது – 24) 2. முத்துலிங்கம் நர்மதன் (வயது – 23) 3. சக்திவேல் கோணேஸ்வரன் (வயது – 24) 4. துரைராஜா பிரதீபன் (வயது – 27) 5. சிவப்பிரகாசம் ரொமிலா (வயது – 25) 6. கணேஷ் கவிதா (வயது – 27) 7. எம். ரிஷிகேசன் (வயது – 24) 8. அம்பிகாவதி ஜெசீலன் (வயது – 27) 9. கனகரத்தினம் கோவர்த்தனி (வயது – 27) 10. வயிரமுத்து கோகிலவதனி (வயது – 29) 11. ஏ.எல்.மொகமட் ஜௌபர் (வயது – 31) 12. யோகராஜா கோடீஸ்வரன் (வயது – 30) 13. சிங்கராஜா பிறீமஸ் ஆனந்தராஜா (வயது – 32) 14. ஐ. முரளிதரன் (வயது – 33) 15. கணேஷ் ஸ்ரீதரன் (வயது – 36) 16. முத்துவிங்கம் கேதீஸ்வரன் (வயது – 36) 17. செல்லையா கணேஷ் (வயது – 54) ஆகியோர் கொல்லப்பட்டிருந்தார்கள். மூதூர் பொது வைத்தியசாலைக்கு அருகில் இயங்கிவந்த அக்ஷன் பாம் எனும் சர்வதேச தொண்டர் நிறுவனத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த மேற்படி 17 பணியாளர்களையும் ஆயுதம் தரித்த சீருடைக்காரர்கள் நிறுவன வளாகத்துக்குள் நுழைந்து நிலத்தில் குப்புறப் படுக்கப்பண்ணி பின்பக்கமாக தலையில் சுட்டு படுகொலை செய்ததாக அன்றைய செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/221826
  6. செம்மணி மனிதப் புதைகுழி: மேலும் 5 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு Published By: Vishnu 04 Aug, 2025 | 08:25 PM செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் திங்கட்கிழமை (4) மேலும் 05 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 135 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 126 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 30வது நாளாக இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு திங்கட்கிழமை (4) இடம்பெற்ற அகழ்வு பணிகளை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221825
  7. 04 Aug, 2025 | 04:23 PM (இராஜதுரை ஹஷான்) மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வதாயின் முழுமையாக, முறையாக பகிர வேண்டும். அல்லது ஒன்றும் செய்யாமலிருக்க வேண்டும். அதிகாரங்களை முறையாக பகிராமல் மாகாண சபைகள் வெள்ளை யானை என்று சித்தரிக்கப்படுவது முறையற்றது. வலது கையில் அதிகாரத்தை வழங்கி இடதுகையில் பறித்த நிலையே காணப்படுகிறது. இது முறையற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுயநிர்ணயம் தோற்றம் பெறும் என்று ஒரு தரப்பினர் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளார்கள். இதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் பொறுப்புக்கூற வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்த எடுத்துள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கொழும்பில் திங்கட்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, மாகாண சபை முறைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் பல தனிநபர் பிரேரணைகளை முன்வைத்துள்ளேன். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அவசியம் அரசாங்கத்துக்கு காணப்படுகின்ற நிலையில் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. மாகாண சபைத் தேர்தல் பற்றி அடுத்தாண்டு ஜனவரிக்கு பின்னர் தீர்மானிக்க முடியும் என்று அமைச்சர் ஒருவர் குறிப்பிடுகிறார். மாகாண சபை முறைமையில் காணப்படும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு 06 மாதங்களேனும் செல்லும் என்று பிறிதொரு அமைச்சர் குறிப்பிடுகிறார். மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான செல்வாக்கு குறைவடைந்துள்ளதால் மாகாண சபை முறைமையை இரத்துச் செய்யவோ அல்லது மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதற்கோ இடமளிக்க முடியாது. 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத சூழலே காணப்படுகிறது. இதற்கு 2010 இற்கு பின்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பொறுப்புக்கூற வேண்டும். 2015-2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டது. திருத்த யோசனையை முன்வைத்த அமைச்சரே குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார். ஒன்று பழைய தேர்தல் முறைமைக்கு அமைய விகிதாசார முறைமையில் சிறு திருத்தங்களை மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். அல்லது தற்போது காணப்படுகின்ற திருத்தங்களுடன் குழுவின் அறிக்கையின் யோசனையை பிரதமரால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து புதிய தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்த முடியும். இரண்டு முறைமையில் ஒன்றை தெரிவு செய்து காலம் தாழ்த்தாது அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். மாகாணசபை முறைமை மற்றும் மாகாணசபைத் தேர்தல் குறித்து மூன்று திருத்த யோசனைகளை பாராளுமன்றத்துக்கு முன்வைத்துள்ளேன். 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபை திருத்த பிரேரணை, 1989 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க மாகாண சபைகள் உப ஏற்பாடுகள் சட்ட திருத்த பிரேரணை, 1992 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க மாகாண அதிகார பரவலாக்க திருத்த பிரேரணை ஆகியன அவையாகும். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தனிநபர் பிரேரணைகள் குறித்து சட்டமாக அதிபர் 6 வார காலத்துக்குள் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். ஆனால் 15 அல்லது 20 வாரங்கள் கடந்துள்ள போதும் சட்டமா அதிபர் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு சட்டமா அதிபரை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்கிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. அரசியலமைப்பின் பிரகாரம் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வதாயின் அவற்றை சிறந்த முறையில் முறையாக பகிர வேண்டும். மாகாண சபை அதிகார பகிர்வில் பாரிய சிக்கல் நிலை காணப்படுகிறது. வலது கையில் வழங்கிய அதிகாரத்தை இடது கையில் பறிக்கும் நிலைக்கு மாகாண சபை அதிகார நிலை தள்ளப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு உரித்தான அதிகாரங்களை ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக பறித்துக் கொண்டுள்ளார். சுகாதாரம், கல்வி மற்றும் நிர்வாக கட்டமைப்பில் இந்த நெருக்கடி நிலைமை காணப்படுகிறது. மாகாணங்களுக்குரிய விடயதானங்கள் பலவந்தமான முறையில் மத்திய அரசுக்கு மீளப்பெறப்பட்டுள்ளன. மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வதாயின் முழுமையாக, முறையாக பகிர வேண்டும்.அல்லது ஒன்றும் செய்யாமலிருக்க வேண்டும். அதிகாரங்களை முறையாக பகிராமல் மாகாண சபைகள் வெள்ளை யானை என்று சித்தரிக்கப்படுவது முறையற்றது. மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்காமல், கைவிலங்கிட்டு எதனையும் செய்ய முடியாது. இவ்வாறான செயற்பாடுகளினால் மாகாண சபைகள் வினைத்திறாக செயற்படாமல், வெள்ளையானை போன்றே காட்சியளிக்கும். மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுயநிர்ணயம் தோற்றம் பெறும் என்று ஒரு தரப்பினர் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளார்கள். இதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் பொறுப்புக்கூற வேண்டும். மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் பற்றி விசேட அவதானம் செலுத்தப்படுகிறது. பொலிஸ் அதிகாரங்களை மாகாண முதலமைச்சருக்கு வழங்கினால் அது அரசியல் மயப்படுத்தப்படும் என்பதில் உறுதியாக உள்ளேன். தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஊடாக இந்த அதிகாரம் கண்காணிக்கப்பட வேண்டும். அத்துடன் காணி அதிகாரங்கள் தொடர்பில் காணி ஆணைக்குழு விசேட திட்டத்தை அல்லது வழிமுறையை செயற்படுத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசாங்கம் மந்தகதியில் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. முடிந்தால் மாகாண சபை விரைவாக நடத்துங்கள் என்று அரசாங்கத்திற்கு சவால் விடுக்கிறோம். மாகாண சபை அதிகாரத்தை எதிர்க்கட்சிகள் முழுமையாக கைப்பற்றும்.அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/221789
  8. சிட்னியில் பாலஸ்தீன ஆதரவு பேராட்டம் - பாலத்தின் ஊடாக பேரணியாக சென்ற ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் - அவுஸ்திரேலியா ஏன் இதுவரை இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவில்லை என கேள்வி? Published By: Rajeeban 04 Aug, 2025 | 12:04 PM அவுஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் போது ஆயிரக்கணக்கானவர்கள் சிட்னி துறைமுகத்தின் பாலத்தின் ஊடாக பேரணியாக சென்றனர். அவுஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. .இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வர்ணித்துள்ளனர். காசா யுத்தத்தை நிறுத்துமாறு அரசியல்வாதிகளை கோரும் செய்திகளுடன் ஆயிரக்கணக்கானவர்கள் கொட்டும் மழையிலும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டனர். விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சேயும் காணப்பட்டார். வெட்கம் வெட்கம் இஸ்ரேல் வெட்கம் வெட்கம் அமெரிக்கா என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோசமிட்டனர்? எங்களிற்கு என்ன வேண்டும் யுத்த நிறுத்தம் எப்போது வேண்டும தற்போது எனவும் அவர்கள் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டவர்களிற்கு ஆதரவாக பல பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் பாலத்தின் இருபக்கத்திலும் திரண்டிருந்தனர். காசா உலகின் ஏனைய பக்கத்தில் உள்ளது என்பது எனக்கு தெரியும் ஆனால் அது எங்களை இங்கு பெருமளவில் பாதிக்கின்றது என தெரிவித்த அலெக் பெவிலே என்ற தந்தையொருவர் காசாவின் சிறுவர்களை தனது மூன்று வயது மகனுடன் ஒப்பிட்டுள்ளதுடன் நாங்கள் உதவிகள் மூலம் மேலும் உதவுமோம் என தெரிவித்துள்ளார். எங்கள் அரசாங்கம் இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவில்லை என தெரிவித்த ஜாரா வில்லியம் தனது குழந்தையுடன் காணப்பட்டார்.மக்களை முழுமையாக பலவந்தமாக பட்டினி போட்டுள்ள நிலையில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என குறிப்பிட்டார். இரண்டு மணிநேரம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் 90,000க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/221762
  9. இங்கிலாந்து பேட்டிங் லைனை காலி செய்த சிராஜின் வியூகம் : கடைசி நேரத்தில் வகுத்த திட்டம் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார் கட்டுரை தகவல் தினேஷ் குமார். எஸ் பிபிசி தமிழுக்காக 22 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு டெஸ்ட் தொடர் வரலாற்றில் இடம்பெற வேண்டுமானால், அதன் தொடக்கம் சரியாக இருந்தால் மட்டும் போதாது; முடிவும் பொருத்தமாக அமைய வேண்டும். 2 ரன்களில் ஆஸ்திரேலிய அணி தோற்ற, எட்ஜ்பஸ்டன் டெஸ்டையும் ஆஷஸ் 2005 தொடரையும் இன்னமும் கிரிக்கெட் உலகம் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்கிறது. அதுபோல ஒன்றாக ஓவல் டெஸ்டும் ; ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரும், கிரிக்கெட் வரலாற்றின் மறக்க முடியாத டெஸ்ட் தொடராக மாறிவிட்டது. டெஸ்டை வென்று, 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரை கைப்பற்ற 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜேமி ஸ்மித்தும் ஓவர்டனும் ஐந்தாம் நாளில் இன்னிங்ஸை தொடர்ந்தனர். தூண்டில் போட்டு தூக்கிய சிராஜ் பட மூலாதாரம், Getty Images இந்திய அணி தொடரை 2-2 என்று சமன்செய்ய வேண்டுமானால், 4 விக்கெட்டுகளை கைப்பற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கியது. ஐந்தாம் நாளின் முதலிரு பந்துகளில் ஓவர்டன் பவுண்டரிகளை அடிக்க, இந்திய ரசிகர்களின் அடிவயிறு கலக்கத்தை சந்தித்தது. இந்த தொடரில், இந்திய அணி எப்போதெல்லாம் நெருக்கடியை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் கைகொடுத்து தூக்கிவிட்ட சிராஜ், ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் பஞ்சு போல மாறியிருந்த பழைய பந்தை கையிலெடுத்தார். முதல் இரண்டு பந்துகளை பேட்டில் தொடக்கூட முடியாத அதிரடி விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்துக்கு, மேலும் வைடாக வீசி ரிஸ்க் எடுத்து தூண்டில் போட்டார் சிராஜ். தனது பொறுமையை சோதிப்பது இந்திய அணியின் வியூகம் என்பதை உணராத ஸ்மித், மீண்டும் ஒருமுறை இலக்கின்றி பேட்டை வீசி, விக்கெட் கீப்பர் ஜுரெலிடம் கேட்ச்சை மட்டுமல்ல, ஆட்டத்தையே தூக்கிக் கொடுத்தார். டெஸ்ட் தொடரின் சர்ச்சையான தருணங்கள் அதிரடி டக்கெட்டை 'அன்புடன்' வழியனுப்பிய ஆகாஷ்: இந்தியா - இங்கிலாந்து தொடரில் அடுத்த சர்ச்சை2 ஆகஸ்ட் 2025 கடைசி டெஸ்டிற்கான பிட்ச் எப்படி இருக்கும்? பார்வையிட்ட கம்பீர் மைதான ஊழியருடன் வாக்குவாதம்30 ஜூலை 2025 சதத்தை நெருங்கிய போது டிரா கேட்ட ஸ்டோக்ஸ் - ஜடேஜா அளித்த பதில் என்ன?29 ஜூலை 2025 கையில் கட்டுடன் களமிறங்கிய வோக்ஸ் பட மூலாதாரம், Shaun Botterill/Getty Images கருமேகங்கள் சூழ்ந்த போதும், செயற்கை விளக்குகளை பய்ன்படுத்தாமல் இருந்தது ஆச்சர்யத்தை உண்டுபண்ணியது. புதிய பந்தை விட பழைய பந்தில் சிறப்பாக ஸ்விங் செய்யும் சிராஜ், தனது அடுத்த ஓவரில், அபாயகரமாக திகழ்ந்த ஓவர்டனின் கால்காப்பை தாக்கி, LBW முறையில் ஆட்டமிழக்க வைத்தார். லெக் சைடில் சென்றது போல கோணம் அமைந்ததால், ஏதொவொரு நம்பிக்கையில் டிஆர்எஸ் மேல்முறையீட்டுக்கு ஓவர்டன் சென்றார்; குருட்டு நம்பிக்கையில் கூட சென்றிருக்கலாம். ஓவர்டனுக்கும் இங்கிலாந்துக்கும் வேறு என்ன வழி இருந்தது? LBW உறுதிசெய்யப்பட, ஓவல் மைதானத்தின் குளிரையும் மீறி ஆட்டம் சூடுபிடித்தது. புதிய பந்தை எடுத்தவுடன் பிரசித்தும், சிராஜும் கட்டுக்கோப்பாக பந்துவிசீனர். ரன்களை வாரி இறைப்பதற்கு பெயர் போன பிரசித் கிருஷ்ணா, பதற்றத்தில் கண்டதையும் முயற்சி செய்யாமல், சரியான லைன் அண்ட் லெங்த்தில் வீசினார். புதிய பந்து எடுத்து மூன்றாவது ஓவரிலேயே, ஒன்பதாவது விக்கெட்டையும் வீழ்த்தி கையில் கட்டுடன் இருக்கும் வோக்ஸை பேட் அனுப்பியாக வேண்டும் என்று இங்கிலாந்து அணிக்கு செக் வைத்தார். சிராஜின் செட்டப் மாஸ்டர் கிளாஸ் டங் விக்கெட்டை அவர் எடுத்த விதம் செட்-அப் மாஸ்டர்கிளாஸ் என்றே சொல்லவேண்டும். தேர்ட் மேன் திசையில் இருந்த ஃபீல்டரை பவுண்டரி லைனுக்கு அனுப்பி, அடுத்து வருவது ஒரு பவுன்சர்தான் என்று டங்கை நம்பவைத்தார். அதேநேரம் யார்க்கர் லெங்த்தில் வீச முற்பட்டாலும், ஆக்சனில் கிடைக்கும் சமிக்ஞையை கொண்டு பேட்டர் சுதாகரித்து விடுவார் என்று, முழு நீளத்தில் கால் பக்கம் வேகமாக வீசி, டங்கை போல்டாக்கினார். வரலாற்று கடமையென நினைத்து கையில் கட்டுடன் வோக்ஸ் களமிறங்கியதும், வேறு வழியில்லை என்று எதிர்முனையில் இருந்த அட்கின்சன், அடித்து ஆட தலைப்பட்டார். சிராஜ் வீசிய முழு நீளப்பந்தை அபாயம் என்று தெரிந்தும் கவ் கார்னர் திசையில் தூக்கியடித்தார். எல்லைக் கோட்டில் ஆகாஷ் தீப்பின் முயற்சி பலனளிக்காமல் போகவே, அணியின் ஸ்கோர் 363 ஆக உயர்ந்தது. சரியாக கடைசி பந்தில் சிங்கிள் ஓடி, அடுத்த ஓவர் ஸ்ட்ரைக்கை அட்கின்சன் தக்கவைத்து கொண்டார். வியூகத்து மாறாக நடந்துகொண்டதால் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெலை சிராஜ் கடிந்துகொண்டார். கடைசி விக்கெட்டுக்கான ரிஸ்க் பட மூலாதாரம், Stu Forster/Getty Images ரன் ஓடுகையில், கடும் வலியையும் பொருட்படுத்தாமல் வோக்ஸ் ஓடியது, டெஸ்ட் கிரிக்கெட் மீதும் அணியின் நலன் மீது அவருக்கிருக்கும் மதிப்பை வெளிப்படுத்தியது. லெக் சைடில் பவுண்டரி குறைவான தூரம் என்பதால், பிரசித் கிருஷ்ணா ஓவரை குறிவைத்து தாக்க முற்பட்டார் அட்கின்சன். ஆனால், எவ்வளவு தான் கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றியும், பெரிய ஷாட் எதையும் அட்கின்சனால் அடிக்க முடியவில்லை. கடைசி பந்தில் வோக்ஸுக்கு சிரமம் ஏறப்பட்டு விடாதபடி, மிட் ஆஃப் திசையில் இந்தமுறையும் சிங்கிள் எடுத்துக்கொண்டார். இங்கிலாந்து வெற்றிக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 'செய் அல்லது செத்துமடி' என்ற நிலைமைக்கு தள்ளப்பட்ட சிராஜ், பெரிய ரிஸ்க் எடுத்து, குறை உயர ஃபுல்டாஸ் பந்தை வீசினார். லெக் சைடில் பெரிய ஷாட் ஒன்றை விளையாட முற்பட்ட அட்கின்சன் முயற்சி தோல்வியடையவே, பந்து ஆஃப் ஸ்டம்பை பதம்பார்த்தது. தொடரின் முந்தைய டெஸ்ட் போட்டிகளில் நடந்தது என்ன? போராடிய ஜடேஜா: லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவை வீழ்த்திய ஸ்டோக்ஸின் அஸ்திரங்கள் எவை?14 ஜூலை 2025 புதிய வரலாறு படைத்த இந்தியா: ஆகாஷ் தீப் அற்புத பந்துவீச்சில் தடம் புரண்ட இங்கிலாந்து7 ஜூலை 2025 வெற்றியை தாரை வார்த்த இந்தியா: இங்கிலாந்துக்கு எதிராக 5 சதங்கள் அடித்தும் தோற்றது ஏன்?25 ஜூன் 2025 ஆட்ட நாயகனான சிராஜ் பட மூலாதாரம், Getty Images ஒட்டுமொத்தமாக இந்த டெஸ்டில் 9 விக்கெட்களை அள்ளிய சிராஜ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகன் விருதை 754 ரன்கள் குவித்த கில்லும் 481 ரன்கள் எடுத்த புரூக்கும் பெற்றுக்கொண்டனர். கோலி, ரோஹித், அஸ்வின் என பெரிய தலைகள் இல்லாத நிலையில், கேப்டன் பொறுப்பை ஏற்ற கில், இங்கிலாந்து மண்ணில் பேட்டராக மட்டுமின்றி கேப்டனாகவும் சாதித்துள்ளார். இந்திய அணி அணித் தேர்வு, வியூக வகுப்பில் நிறைய தவறுகளை செய்தாலும், இந்த தொடர் முழுக்கவே கடைசி வரை போராடிப் பார்ப்பது என்ற விடாப்பிடித்தனதுடன் விளையாடினர். இந்திய கிரிக்கெட்டின் உச்சபட்ச தருணங்களில் ஒன்றாக ஓவல் வெற்றி கொண்டாடப்படும். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp37y2x93veo
  10. 04 Aug, 2025 | 07:12 PM மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தற்போது மன்னார் - மதவாச்சி பிரதான வீதியூடாக கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மக்கள் திங்கட்கிழமை (4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடினர். மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளாரின் அழைப்பிற்கு இணங்க அருட்தந்தையர்கள், மூர்வீதி ஜும்மா பள்ளி பிரதம மௌலவி, பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடினர். இந்த நிலையில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார் ஆகியோர் சென்று மாவட்ட அரசாங்க அதிபர் கா.கனகேஸ்வரனுடன் கலந்துரையாடினர். இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நிர்வாகம் எம்.பிரதீப் கலந்துகொண்டிருந்தார். இதன்போது தற்போது மன்னார் நகர பகுதியில் சில கிராமங்களில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களுக்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை (3) மன்னார் நகருக்குள் கனரக வாகனங்களில் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்த காற்றாலை மின் கோபுரம் அமைப்பதற்கான பாரிய பொருட்கள் மடு பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பொருட்களை மன்னாருக்குள் கொண்டு வர மக்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற நிலையில் குறித்த விடயங்கள் குறித்தும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. குறித்த கலந்துரையாடலின் போது குறித்த மின் திட்ட நடவடிக்கைக்கான அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளப் பட்டமை தெரியவந்துள்ளது.குறித்த வேலைத்திட்டத்தை அரச அதிகாரிகள் தடுத்து நிறுத்தும் பட்சத்தில் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் மேலதிக செலவீனங்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்ற விடையமும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் ஒன்றுகூடிய மக்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டமையினால் சட்ட ரீதியாக குறித்த விடயத்தை அணுக வேண்டி இருக்கின்றது. இவ்விடயம் தொடர்பாக நாங்கள் ஏனைய சட்டத்தரணிகளுடனும் உரையாடி இருக்கின்றோம். இவ்விடயம் தொடர்பாக எதிர் வரும் புதன்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை வழக்கு ஒன்றை தாக்கல் செய்து சில கட்டளைகளை பெற்றுக்கொள்ள உள்ளோம். எவ்வித ஆவணங்களும் இல்லாமல் உடனடியாக மாவட்ட நீதிமன்றத்தை நாடுகின்ற போது எமக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தும். எனவே எதிர்வரும் புதன்கிழமை வரை மக்களின் எதிர்ப்பை முன்னெடுக்கவேண்டிய தேவை உள்ளது. குறித்த நடவடிக்கைகளுக்கு எதிராக நீதி மன்றத்தின் கட்டளையை பெற்றுக் கொள்ளும் வரை எமது நடவடிக்கைகளை தொடர வேண்டும். குறித்த திட்டங்களினால் எதிர்கால சந்ததிகள் பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க உள்ளனர்.இந்த நிலையிலே குறித்த விடயம் தொடர்பாக சட்ட ரீதியாக சில நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட ரீதியில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் குறுகிய நேரத்தில் அதனை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலின்போது மன்னாருக்கு வருகை தந்து கூறியிருந்தார். மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை மின் உற்பத்தி திட்டம் முன்னெடுக்கப்படாது என்று குறித்த திட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என கூறி இருந்தார். இந்த நிலையிலே குறித்த திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் மக்களின் ஒத்துழைப்பு எமக்கு தேவை என தெரிவித்தார். இந்த நிலையில் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடியவர்கள் மன்னார் நகர சுற்று வட்ட பகுதிக்குச் சென்று ஒன்றுகூடினர். எதிர்வரும் புதன்கிழமை வரை தொடர்ச்சியாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பை தெரிவிப்பது என்றும் மன்னார் நகருக்குள் குறித்த காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்காக கொண்டு வரும் பொருட்களை நகருக்குள் கொண்டுவர அனுமதிப்பதில்லை என்றும் மக்கள் தெரிவித்தனர். மக்களுக்கு ஆதரவாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221820
  11. ஏழாவது(July) மாதச் செலவுகள் மூன்றாவது மாதத்தில் இருந்து புதிதாக காரைநகரைச் சேர்ந்த இரண்டு விசேட தேவையுடையவர்களுக்கு மாதாந்த உதவி வழங்க தொடங்கி உள்ளோம் மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுவோரின் விபரங்கள் 1) செல்வி இரட்சகன் நிவேதா (வயது 25) (காளுவன், சுழிபுரம் கிழக்கு) 5000 ரூபா இவருடைய தாயார் திருமதி இ.சுதாரஞ்சினி அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 2) திரு ஏரம்பு கண்ணதாசன் (வயது 34) 3) திரு ஏரம்பு கரிதாசன் (வயது 33) (பொன்னாலை மேற்கு, (ஒரே குடும்பம்) 10000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி ஏ.பராசக்தி அவர்களுடைய தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 4) செல்வன் மங்களேஸ்வரன் டினுசாந்த் (வயது 13) (பொன்னாலை மேற்கு) 5000 ரூபா செல்வன் ம.டினுசாந்த் அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 5) செல்வன் பாலசுப்ரமணியம் சுலக்சன் (வயது 20) (சுழிபுரம் மேற்கு) 5000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி பா.சந்திரகலா அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 6) செல்வி ஜசிந்தன் பவன்யா (வயது 16) (சுழிபுரம் மத்தி) 5000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி ஜ.சுபாஜினி அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 7) செல்வி மகாலிங்கம் நிரோஜினி (வயது 25) (தொல்புரம் மேற்கு) 5000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி ம.சரோஜினி அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 8) செல்வி சாந்தகுமார் கோபிசா (வயது 10) (பாண்டவெட்டை சுழிபுரம் கிழக்கு) 5000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி சா.ரஞ்சினி அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 9) செல்வி ஐங்கரன் கருண்யா (வயது 8) (விக்காவில், காரைநகர்) 5000 ரூபா இவர்களுடைய தாயார் திருமதி ஐ.ரதிலேகா அவர்களின் தபாலக சேமிப்பு கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. 10) செல்வி நாகராசா சசிகலா (வயது 36) (அல்வின் வீதி, காரைநகர்) 5000 ரூபா இவர்களுடைய சகோதரி செல்வி நா.மஞ்சுளாதேவி அவர்களின் இலங்கை வங்கிக் கணக்கில் மாதாந்தம் வைப்பிடப்படுகிறது. மாதாந்தக் கொடுப்பனவிற்காக 50000 ரூபா 22/07/2025 அன்று மீளப்பெறப்பட்டு அன்றே தபாலக சேமிப்புக் கணக்குகளில் 9 பேருக்கு வைப்புச் செய்யப்பட்டது. ஒருவருக்கு 23/07/2025 இலங்கை வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டது. எமது புலர் அறக்கட்டளைக்கு உதவ விரும்பும் கருணை உள்ளம் கொண்ட உறவுகள் +94 77 777 5448 அல்லது +94 77 959 1047 என்ற இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு உதவலாம். மூவர் இணைந்த வங்கி விபரம் K BALAMURUGAN R PARANEETHARAN S THEVAKUMARAN A/C NO: 107250178888 National Savings Bank Chankanai Jaffna Sri Lanka SWIFT CODE - NSBALKLX
  12. இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டெஸ்டில் 6 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா தொடரை 2 - 2 என சமப்படுத்தியது Published By: Digital Desk 3 04 Aug, 2025 | 05:19 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நிறைவடைந்த ஐந்தாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 ஓட்டங்களால் மிகவும் பரபரப்பான வெற்றியை இந்தியா ஈட்டியது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா 2 - 2 என சமப்படுத்திக்கொண்டது. கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ஓட்டங்களும் இந்தியாவின் வெற்றிக்கு 4 விக்கெட்களும் தேவைப்பட்டதால் போட்டியில் எதுவும் நிகழலாம் என்ற நிலை உருவானது. கடைசி நாள் ஆட்டத்தை 6 விக்கெட் இழப்புக்கு 339 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து மேலதிக 28 ஓட்டங்களுக்கு கடைசி நான்கு விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது. முதலாம் நாளன்று இடது தோற்பட்டையில் கடும் உபாதைக்குள்ளான கிறிஸ் வோக்ஸ் அடுத்த 3 நாட்களும் விளையாடாமல் ஓய்வுபெற்று வந்தார். ஆனால், இங்கிலாந்தின் வெற்றிக்கு மேலும் 17 ஓட்டங்கள் மாத்திரம் தேவைப்பட்டதால் கிறிஸ் வோக்ஸ் இடது கையில் பண்டேஜ் போட்டவாறு ஒற்றைக் கையுடன் துடுப்பெடுத்தாட 11ஆவது வீரராக களம் புகுந்தார். கிறிஸ் வோக்ஸை ஒரு பக்கத்தில் வைத்துக்கொண்டு 13 பந்துகளை எதிர்கொண்ட கஸ் அட்கின்ஸன் மொத்தமாக 29 பந்துகளை எதிர்கொண்டு 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மொஹம்மத் சிராஜினால் போல்ட் செய்யப்பட இந்தியா 6 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது. லீட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களாலும் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 22 ஓட்டங்களாலும் இங்கிலாந்து வெற்றிபெற்றிருந்தது. பேர்மிங்ஹாமில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 336 ஓட்டங்களால் இந்தியா வெற்றிபெற்றிருந்தது. போட்டியில் இரண்டு நாட்கள் முழுமையாக இருந்தபோது 3ஆம் நாள் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அன்றைய தினம் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. நான்காம் நாளன்று தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 3 விக்கெட்களை இழந்து 301 ஓட்டங்களைப் பெற்று மிகவும் பலமான நிலையில் இருந்ததுடன் நான்காம் நாளன்றே வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்தின் அடுத்த 3 விக்கெட்களை 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியதால் போட்டியில் எந்த அணியும் வெற்றிபெறலாம் என்ற நிலை உருவானது. இங்கிலாந்து 6 விக்கெட்களை இழந்து 339 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதால் அது இந்தியாவுக்கு சாதகமாக மாறியது. ஹெரி ப்றூக், ஜோ ரூட் ஆகிய இருவரும் மிகத் திறமையாக இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு நான்காம் நாளன்று குவித்த சதங்கள் இறுதியில் வீண் போயின. கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் 224 ஓட்டங்களையும் இங்கிலாந்து 247 ஓட்டங்களையும் இந்தியா 2ஆவது இன்னிங்ஸில் 396 ஓட்டங்களையும் பெற்றன. எண்ணிக்கை சுருக்கம் இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 224 (கருண் நாயர் 57, சாய் சுதர்சன் 38, வொஷிங்டன் சுந்தர் 26, கஸ் அட்கின்சன் 33 - 5 விக்., ஜொஷ் டங் 57 - 3 விக்.) இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 247 (ஸக் க்ரோவ்லி 64, ஹெரி ப்றூக் 53, பென் டக்கெட் 43, ஜோ ரூட் 29, ப்ரசித் கிரிஷ்ணா 62 - 4 விக்., மொஹம்மத் சிராஜ் 86 - 4 விக்.) இந்தியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 396 (யஷஸ்வி ஜய்ஸ்வால் 118, ஆகாஷ் தீப் 66, ரவிந்த்ர ஜடேஜா 53, வொஷிங்டன் சுந்தர் 53, த்ருவ் ஜுரெல் 34, ஜொஷ் டங் 125 - 5 விக்., கஸ் அட்கின்சன் 127 - 3 விக்., ஜெமி ஓவர்ட்டன் 98 - 2 விக்.) இங்கிலாந்து வெற்றி இலக்கு 374 ஓட்டங்கள் - 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 367 (ஹெரி ப்றூக் 118, ஜோ ரூட் 103, பென் டக்கெட் 54, மொஹமத் சிராஜ் 104 - 5 விக். , ப்ரதிஷ் கிரிஷ்ணா 126 - 4 விக்., ) ஆட்டநாயகன்: மொஹமத் சிராஜ் (86 - 4 விக்., 104 - 5 விக்.) இந்தியாவுக்கான தொடர்நாயகன்: ஷுப்மான் கில் ( 4 சதங்களுடன் 754 ஓட்டங்கள்) இங்கிலாந்துக்கான தொடர்நாயகன்: ஹெரி ப்றூக் (2 சதங்களுடன் 481 ஓட்டங்கள், 14 பிடிகள்) https://www.virakesari.lk/article/221803
  13. செம்மணி புதைகுழி நீதிக்காக பிளவுகளை உண்டு பண்ணும் அரசியலை தவிர்த்து தமிழ் தேச மக்களாக எழுந்து நிற்க அரசியல் தலைமைகள் ஒன்று பட வேண்டும் - அருட்தந்தை மா.சத்திவேல் 04 Aug, 2025 | 02:31 PM செம்மணி புதைகுழி நீதிக்காக பிளவுகளை உண்டு பண்ணும் அரசியலை தவிர்த்து தமிழ் தேச மக்களாக எழுந்து நிற்க அரசியல் தலைமைகள் ஒன்று பட வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று திங்கட்கிழமை (04) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செம்மணி சமூக புதைகுழியில் இருந்து தினமும் அகழ்ந்தெடுக்கப்படும் மனித எச்சங்கள் மனித உள்ளம் கொண்டவர்களை அதிர்ச்சிகுள்ளும் ஆழ்ந்த வேதனைக்குள்ளும் தள்ளுவதோடு படுகொலை செய்யப்பட்டோரின் அவல குரல் நீதியை தேடும் மக்களின் இதயத்தை தட்டிக் கொண்டிருக்கையில் கிரிசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் சோம ரத்தின ராஜபக்சவின் மனைவி ஜனாதிபதி, பிரதம மந்திரி, நீதி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள சர்வதேச விசாரணைக்கான கடிதம் பேரினவாத இன அழிப்பிற்கும் இனப்படுகொலைக்கும் துணை நிற்கும் இலங்கையின் நீதித் துறை, அரசியல் அதிகாரம், அரசியல் கட்டமைப்பு தமிழர்களுக்கு நீதியை நிலைநாட்டப் போவதில்லை என்பதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தி உள்ளது. கடந்த காலங்களில் நாட்டின் அரசியல் அவலங்களையும், அரசியல்வாதிகளின் அதிகார துஸ்பிரயோகங்களையும் மட்டும் அல்ல யுத்த அவலங்களையும் வெளிக்கொண்டு வந்து தமிழர்களுக்கு நீதிக்கான குரலாக உண்மையை வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர்கள், சாட்சிகள், சட்டத்தரணிகள் காணாமலாக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்டனர். விசேடமாக கிரிசாந்தி கொலை வழக்கின் சட்டத்தரணியாக முன் நின்ற குமார் பொன்னம்பலம் அவர்கள் பட்ட பகலில் நடுவீதியில் கொலை செய்யப்பட்டமை உலகமே அறிந்த விடயம்.அதற்கான நீதி விசாரணையை பேரினவாத ஆட்சியாளர்கள் புதைகுழியில் தள்ளியுள்ள நிலையிலேயே கிரிசாந்தி கொலை வழக்கில் குற்றவாளியாய் சிறை தண்டனை அனுபவிக்கும் சோம ரத்தின ராஜபக்ச 400க்கு அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் விதைக்கப்பட்டுள்ளமைக்கு சாட்சியாக இன்றும் உள்ளதோடு தற்போது சர்வதேச விசாரணை வேண்டும் என மனைவி மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கும் நிலையில் அக் குற்றவாளியின் உயிர் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு நீதிக்கான மக்கள் ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுகின்றனர். தமிழின படுகொலையோடும் யுத்த குற்றங்களோடும் தொடர்புபட்ட படைத்தரப்பின் உயர் மட்ட அதிகாரிகள் கடந்த கால ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாக பாதுகாக்கப்பட்டதோடு கௌரவ பட்டம் பதவி உயர்வு வழங்கப்பட்டதையும் இராஜதந்திர அந்தஸ்தோடு வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டதையும் நாம் அறிவோம். இந்தப் பின்னணியில் கொலை குன்றத்தண்டனை கைதியான சோமரத்தின தனது மனைவி மூலம் தமக்கு நீதி கிட்டவில்லை. தண்டிக்கப்பட வேண்டிய உயர் அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை. இலங்கையின் நீதி விசாரணையில் நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணை வேண்டும். அங்கு நான் சாட்சி கூற ஆயத்தமாக உள்ளேன்" என கூறியுள்ளமை இதுவரை காலமும் இலங்கை அரசின் மீது நம்பிக்கை இழந்து சர்வதேச நீதி விசாரணையை கோரி நிற்கும் தமிழர்களின் குரலுக்கு வலு சேர்பதாகவே உள்ளது. கறுப்பு ஜூலை 83 இனப்படுகொலை நினைவு நாளில் குத்தாட்டத்தோடு உல்லாச பயணம் மேற்கொள்ள அரச ஆதரவளித்த தற்போதைய ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடைகளில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடக்கும் ஆனால் எவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்தவர் சோம ரத்னவின் மனைவியின் கடிதத்திற்கு உண்மை உள்ளவராக இருப்பாரா? இனப்படுகொலையாளிகளான முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கர், மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு ஆதரவளித்து இனப்படுகொலையை அங்கீரத்ததோடு படையினரின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்தவர்கள் சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்பது தெளிவு.எனினும் இக் கடிதம் ஆட்சியாளர்களுக்கு சவாலே.பதில் கொடுக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.நாங்களும் அதனை உறுதி படுத்துகிறோம். தமிழ் அரசியல் தலைமைகள் சர்வதேச விசாரணைக்கான ஒரு துரும்புச் சீட்டாக சோமரத்னவின் மனைவி ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தை பாவித்து சர்வதேசத்திற்கு ஒருமித்த குரலோடு அழுத்தம் கொடுக்க வேண்டும்.செம்மணி சமூக புதைகுழி இனப்படுகொலையின் கொடூரத்தை மறந்தவர்களாக இருந்த எம்மை எம் ஈழ மண் தாய் எழுச்சி யுற்று உண்மைகளை வெளிக்கொணர்ந்து நீதிக்கான குரலாக நாம் ஒன்று திரள அழைக்கையில் பிளவுகளை உண்டு பண்ணும் அரசியலை தவிர்த்து தமிழ் தேச மக்களாக எழுந்து நிற்க அரசியல் தலைமைகள் ஒன்று பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம். https://www.virakesari.lk/article/221780
  14. செம்மணிக்கு மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர்கள் விஜயம் Published By: Digital Desk 2 04 Aug, 2025 | 02:33 PM செம்மணி மனித புதைகுழிகள் அகழ்வு பணிகளை மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர்கள் நேரில் பார்வையிட்டனர் மற்றும் மனித புதைகுழிகள் தொடர்பிலான சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழு தயார் என்று தெரிவித்துள்ளனர். மனித உரிமை ஆணைக்குழுவின் கலாநிதி ஜகன் குணத்திலாக, பேராசிரியர் தை. தனராஜ் மற்றும் பேராசியர் பாத்திமா பர்ஷான ஹனீபா ஆகியோர் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் உட்பட குழுவினர் சமீபத்தில் செம்மணி பகுதியில் அகழ்வு பணிகளை ஆய்வு செய்தனர். புதைகுழிகளை நேரில் பார்வையிட்டு ஊடகவியலர்களிடம் கருத்து தெரிவித்த ஆணையாளர்கள், அகழ்வு பணிகள் தொடர்பிலும் விசாரணைகள் தொடர்பிலும் தகவல் பெற்றுள்ளோம் என்று கூறினர். கிருஷாந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராஜபக்சே செம்மணி புதைகுழிகள் தொடர்பான சாட்சியங்களை வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, சிறையில் அவனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மனித உரிமை ஆணைக்குழு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என உறுதி தெரிவித்தனர். மேலும், 1996-97 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் விசாரணைகள் குறித்து 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை மனித உரிமை ஆணைக்குழு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/221779
  15. மூதூரில் தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு 19 ஆண்டுகள் பூர்த்தி 04 Aug, 2025 | 01:14 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை மூதூர் பகுதியில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி நடந்த தாக்குதல் சம்பவத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (4) 19 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்நிலையில், தங்களுடைய உறவுகள் படுகொலை செய்யப்பட்டு, 19 வருடங்களாகியும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றார்கள். 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி வழமை போல் கடமையின் நிமித்தம் மூதூரில் உள்ள அலுவலகத்துக்குச் சென்றிருந்த பணியாளர்கள், மூதூர் பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலையின் காரணமாக அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத காரணத்தால், அலுவலகத்திலேயே தங்கியிருந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மூதூர் பொது வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் இயங்­கி­வந்த அக்ஷன் பாம் எனும் சர்­வ­தேச தொண்டர் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்றிக்கொண்­டி­ருந்த 17 பணி­யா­ளர்­க­ளையும் ஆயுதம் தரித்த சீரு­டைக்காரர்கள் நிறு­வன வளா­கத்­துக்குள் நுழைந்து, பணியாளர்களை நிலத்தில் ­குப்புறப்ப­டுக்கச் செய்து, அவர்களை, பின்பக்கத் தலை­யில் சுட்டுப் படு­கொ­லை­ செய்ததாக அன்­றைய செய்­திகளில் குறிப்பிடப்பட்டன. இந்த சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 17 உள்ளூர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு: 1. ரிச்சட் அருள்ராஜ் (வயது – 24) 2. முத்துலிங்கம் நர்மதன் (வயது – 23) 3. சக்திவேல் கோணேஸ்வரன் (வயது – 24) 4. துரைராஜா பிரதீபன் (வயது – 27) 5. சிவப்பிரகாசம் ரொமிலா (வயது – 25) 6. கணேஷ் கவிதா (வயது – 27) 7. எம். ரிஷிகேசன் (வயது – 24) 8. அம்பிகாவதி ஜெசீலன் (வயது – 27) 9. கனகரத்தினம் கோவர்த்தனி (வயது – 27) 10. வயிரமுத்து கோகிலவதனி (வயது – 29) 11. ஏ.எல்.மொகமட் ஜௌபர் (வயது – 31) 12. யோகராஜா கோடீஸ்வரன் (வயது – 30) 13. சிங்கராஜா பிறீமஸ் ஆனந்தராஜா (வயது – 32) 14. ஐ. முரளிதரன் (வயது – 33) 15. கணேஷ் ஸ்ரீதரன் (வயது – 36) 16. முத்துவிங்கம் கேதீஸ்வரன் (வயது – 36) 17. செல்லையா கணேஷ் (வயது – 54) https://www.virakesari.lk/article/221770
  16. செம்மணியில் மேலும் மனிதப் புதைகுழிகளா? ; கணிப்பீடு செய்ய ஸ்கேன் நடவடிக்கை 04 Aug, 2025 | 01:25 PM செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கான் நடவடிக்கைகள் திங்கட்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டது. ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை அந்நிலையில், ஶ்ரீஜெயவர்வத்தன புர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை யாழ் பல்கலைகழகம் ஊடாக பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்நடவடிக்கையை அடுத்து , திங்கட்கிழமை (04) குறித்த ஸ்கானரை பயன்படுத்தி ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களான ஆடைகள் மற்றும் பிற பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காட்டும் வகையில் செவ்வாய்க்கிழமை (05) செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் மதியம் 1.30 மணி முதல் , மாலை 5 மணி வரையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சான்று பொருட்களை பார்வையிட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221771
  17. 19 வருடங்களிற்கு முன்னர் அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்ட மனிதாபிமான பணியாளர்கள் ; மூதூர் செல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை தடுத்த இராணுவத்தினர் ; வீதியை மறித்த கும்பல் ; ஆதாரங்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டாத பொலிஸார் Published By: Rajeeban 04 Aug, 2025 | 03:40 PM ஏசிஎவ் அமைப்பின் அறிக்கையிலிருந்து -- ஜூலை 31 ஆகஸ்ட் முதலாம் திகதி காலை பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 பணியாளர்கள் மூதூர் நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தங்கள் திட்டங்களை முன்னெடுப்பதற்காக புறப்பட்டு சென்றனர். பட்டினிக்கு எதிரான அமைப்பின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும் தேவையற்ற பயணங்களை மட்டுப்படுத்துவதற்காகவும் மூதூரில் ஒரு அலுவலகத்தை கொண்டிருந்தது. ஆகஸ்ட் முதலாம் திகதி அவர்கள் கடல்வழியாக மீண்டும் திருகோணமலை திரும்புவதற்கு திட்டமிட்டிருந்தனர், ஆனால் அவர்கள் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் கிளர்ச்சி படையினர் மூதூரை இலக்குவைத்து தாக்குதலொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன் காரணமாக அரசசார்பற்ற அமைப்பின் 17 பணியாளர்களும் அங்கேயே நிற்கவேண்டிய நிலையேற்பட்டது. இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையில் மூண்ட மோதல்காரணமாக மூதூரை சுற்றியுள்ள வீதிகள் பயணம் செய்வதற்கு பாதுகாப்பற்றவையாக மாறியதால் படகு போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கொழும்பிலும் பிரான்ஸ் தலைநகரிலும் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் 17 பணியாளர்களையும் மோதல்கள் முடிவிற்கு வரும்வரை மூதூர் அலுவலகத்திலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்வது என தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த பகுதி முழுவதும் கடும் மோதலில் சிக்குண்டிருந்தது, எனினும் திருகோணமலை அலுவலகத்துடன் தொடர்ச்சியான தொடர்புகள் பேணப்பட்டன. மூதூரில் உள்ள அலுவலகத்தில் 17 பணியாளர்களையும் தங்கியிருக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் அந்த தருணத்தில் சிறந்ததாக தோன்றியது. ஆகஸ்ட் 2ம் திகதி மூதூரில் நிலைமை மேலும் மோசமடைந்தது, மனிதாபிமான பணியாளர்களை வெளியேற்றுவது சாத்தியமற்ற விடயம் போல தோன்றியது. இதன் காரணமாக அந்த அலுவலகம் வெளியில் உள்ளவர்களின் கண்ணிற்கு தென்படுவதை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதனை அரசசார்பற்ற அலுவலகம் என அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. மறுநாள் மூதூர் அலுவலகத்தில் சிக்குண்டிருந்த பணியாளர்களை படகு மூலம் வெளியேற்றுவதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முயற்சிகளை எடுத்தது , ஆனால் அது சாத்தியமாகவில்லை.மோதலில் ஈடுபட்டிருந்த தரப்பினரிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதத்தை சர்வதேச செஞ்சிலுவை குழுவினால் பெற முடியாமல் போனதால் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகள் சாத்தியமாகவில்லை. மூதூர் அலுவலகத்தில் சிக்குண்டிருந்த 17 பேரையும் அகதிகளிற்கான முகாமிற்கு கொண்டுபோய் சேர்ப்பது குறித்தும் ஆராயப்பட்டது. எனினும் தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்கள் காரணமாக தங்களால் தங்கள் அலுவலகத்திலிருந்து வெளியே செல்ல முடியாத நிலை காணப்படுவதாக மனிதாபிமான பணியாளர்கள் தெரிவித்தனர். இந்த உரையாடல் இடம்பெற்று 20 நிமிடத்தின் பின்னர் அகதிமுகாம் எறிகணை தாக்குதலிற்குள்ளானது 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த காலப்பகுதியில் ஏசிஎவ் - பட்டினிக்கு எதிரான அமைப்பு இராணுவத்தினர் கடற்படையினர் பொலிஸாரை தொடர்புகொண்டு மனிதாபிமான பணியாளர்கள் நகரில் இருப்பதை தெரிவித்தது, அவர்களின் அலுவலகத்தின் ஜிபிஎஸ் விபரங்களை வழங்கியது. இந்த தகவல்கள் தங்கள் பணியாளர்கள் தங்கியுள்ள கட்டிடம் தற்செயலாக எறிகணை தாக்குதலிற்குள்ளாவதை தடுப்பதற்கு உதவும் என பட்டினிக்கு எதிரான அமைப்பு நம்பியது. இறுதியில் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற முடியும் எனவும் ஏசிஎவ் நம்பியது. ஏசிஎவ் குழுவினருக்கும் மூதூரில் சிக்குண்டிருந்த அதன் பணியாளர்களிற்கும் இடையிலான இறுதி தொடர்பாடல் நான்காம் திகதி காலை 7 மணிக்கு இடம்பெற்றது. ஆனால் அவர்கள் அன்றைய தினம் உயிருடன் இருந்தார்கள் என்பதை உறுதி செய்யக்கூடிய ஆதாரமற்ற தகவல்கள் கிடைத்துள்ளன. மூதூர் பணியாளர்களுடன் தொடர்புதுண்டிக்கப்பட்டதும் அந்த அலுவலகத்திற்கு தரை மூலமாக செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம், ஆனால் மூதூரிலிருந்து பத்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள இராணுவசாவடியில் உள்ளவர்களால் அது தடுத்துநிறுத்தப்பட்டது. ஆகஸ்ட் ஐந்தாம் திகதி பல தரப்பினரும் மூதூரில் உள்ள ஏசிஎவ் அலுவலகத்தில் 15 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவலை வெளியிட்டுக்கொண்டிருந்தனர். இரண்டாவது அணியொன்று திருகோணமலையிலிருந்து தோப்பூரிற்கு சென்று இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவினரை சந்தித்தது அவர்களும்; மூதூருக்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். எனினும் இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பான பயணத்திற்கு அனுமதி மறுத்ததால் அந்த முயற்சியும் கைகூடவில்லை. எனினும் அன்றைய தினம் மூதூர் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக காண்பிப்பதற்காக இலங்கை இராணுவத்தினர் பத்திரிகையாளர்கள் குழுவினரை மூதூருக்கு அழைத்து சென்றிருந்தனர். ஆறாம் திகதியளவில் மூதூர் அலுவலகத்தில் சிக்குண்டிருந்த எமது பணியாளர்களை உயிருடன் பார்ப்போம் என்ற நம்பிக்கை குறைவடைய தொடங்கிவிட்டது. எனினும் ஏசிஎவ் மூதூர் சென்று நிலைமையை கண்டறிவதற்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து தரைவழிப்பயணத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. எனினும் கிராமமொன்றை சேர்ந்த கும்பல் வீதியை மறித்து எங்களை தடுத்ததால் எங்கள் முயற்சி மீண்டும் தடைப்பட்டது. படகு சேவை மீண்டும் இயங்கியதும் படகு மூலம் அங்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம். எனினும் படகின் முன்னால் எறிகணைகள் விழுந்து வெடித்ததால் அந்த முயற்சியும் கைகூடவில்லை. எனினும் அதேகாலப்பகுதியில் மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பு மூதூரை சென்றடைந்திருந்தது. தரைவழியாக மூதூர் சென்ற அவர்கள் ஏசிஎவ் பணியாளர்கள் சிக்குண்டிருந்த அலுவலகத்தை சென்றடைந்தனர். அவர்கள் அங்கு சென்றவேளை முன்வாசலிலேயே 17 மனிதாபிமான பணியாளர்களும் உயிரிழந்த நிலையில் காணப்படுவதை பார்த்தனர். கொலைகளை எங்களிற்கு அவர்கள் உறுதிப்படுத்தினார்கள், குற்றம் இடம்பெற்ற இடத்தின் படங்கள் எடுக்கப்பட்டன. பெருமளவிற்கு ஏசிஎவ்வின் திருகோணமலை பணியாளர்கள் இடம்பெற்றிருந்த குழுவினரே உடல்களை சேகரித்தனர். மூதூருக்கு சென்றதும் நேரடியாக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அவர்கள் தாங்கள் உடல்களை சேகரிக்க வந்துள்ளதாக தெரிவித்தனர். ஐந்து பொலிஸார் அவர்களை மூதூர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர், படங்கள் எடுக்ககூடாது, தொலைபேசி அழைப்பில் ஈடுபடக்கூடாது என எச்சரித்தனர். பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்தை படமெடுத்தனர், ஆனால் உடல்களை சேகரிப்பதில் உதவவில்லை. ஆதாரங்களை சேகரிப்பதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடவில்லை. என்ன நடந்தது என்பதை கண்டறிவது குறித்து அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்பதற்கான ஆரம்ப அறிகுறியாக இது காணப்பட்டது. https://www.virakesari.lk/article/221786
  18. RESULT 5th Test, The Oval, July 31 - August 04, 2025, India tour of England India224 & 396 England(T:374) 247 & 367 India won by 6 runs
  19. 04 Aug, 2025 | 11:20 AM இஸ்ரேல் விமானதாக்குதல்களை நிறுத்தி காசாவிற்கான மனிதாபிமான விநியோக பாதையொன்றை நிரந்தரமாக திறந்துவிடுவதற்கு இணங்கினால் தன்னிடமுள்ள பணயக்கைதிகளிற்கு உணவு வழங்கும் விடயத்தில் ஒத்துழைக்க தயார் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஹமாசிடம் சிக்குண்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் பட்டினியால் வாடுவதை காண்பிக்கும் வீடியோ வெளியானதை தொடர்ந்து சர்வதேச கண்டனங்கள் எழுந்துள்ள நிலையிலேயே ஹமாஸ் இதனை தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டு முதல் ஹமாசிடம் பணயக்கைதியாக உள்ள எவ்யட்டார் டேவிட்டின் வீடியோவே வெளியாகியுள்ளது. 24வயது டேவிட் எலும்பும்தோலுமாக காணப்படுகின்றார். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார தலைவர் இந்த காணொளி பயங்கரமானது என தெரிவித்துள்ளதுடன் ஹமாசின் காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்து ஹமாசின் இராணுவபேச்சாளர் அபுஒபெய்தா பிடிபட்டுள்ள எதிரிகளிற்கு உணவு மருந்து பொருட்களை வழங்குவதற்கான சர்வதேச செஞ்சிலுவை குழுவின் வேண்டுகோள்களை சாதகமாக பரிசீலிக்க தயார் என தெரிவித்துள்ளார். எனினும் சில நிபந்தனைகளை விதித்துள்ள அவர் மனிதாபிமான விநியோகம் இடம்பெறும் போது இஸ்ரேல் விமானதாக்குதலை நிறுத்தவேண்டும், காசாவிற்குள் மனிதாபிமான விநியோகத்தை மேற்கொள்வதற்கான நிரந்தர பாதையை திறந்துவிடவேண்டும் என தெரிவித்துள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் காசாவில் பட்டினிமற்றும் போசாக்கின்மையால் மேலும் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காசாவில் பெரும் பஞ்சம் பட்டினிநிலை காணப்படுவதாக பல சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன. https://www.virakesari.lk/article/221758
  20. Published By: Vishnu 04 Aug, 2025 | 02:32 AM யாழ். பருத்திதுறையில் காணாமல் போன தனிநபர்கள் குறித்து விசாரிக்கச் சென்ற குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் பின்தொடர்ந்து வருவதாக குற்றப் புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறையில் காணாமல்போன தொடர்புடைய ஒரு விஷயத்தை விசாரிக்க தங்கள் துறைஅதிகாரிகள் சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு நபர்கள் அவர்களைப் பின்தொடர்ந்ததாகவும் இவர்களை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் கடற்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என்பது உறுதி செய்யப்பட்டதாகவும். அதனடிப்படையில் பின்தொடர்ந்த கடற்படை புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை செய்தபோது குற்ற புலனாய்வு பிரிவினரை பின்தொடருமாறு கடற்படை புலனாய்வுப் பிரிவின் லெப்டினன்ட் கமாண்டர் உத்தரவு பிறப்பித்ததாக அவர்கள் குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திற்கு மேலும் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/221733
  21. கேப்டனாக தடுமாறும் கில்: ஆதிக்கம் செலுத்திய இந்தியா வெகுமதியை தவறவிடக் காரணமான தவறுகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இங்கிலாந்தின் ஜோ ரூட் - ஹாரி புரூக் இணை கட்டுரை தகவல் தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக 4 ஆகஸ்ட் 2025, 02:01 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடரில் இதுவரை இந்தியா 31 செஷன்களை கைப்பற்றியுள்ளது. ஆனால், 20 செஷன்களை மட்டும் வெற்றி கொண்ட இங்கிலாந்து அணி தொடரில் 2–1 என முன்னிலை வகிக்கிறது. இந்தியா சிறப்பான கிரிக்கெட் விளையாடியும் அதற்கான வெகுமதியை பெற முடியாததற்கு முக்கிய தருணங்களில் செய்யும் தவறுகளே காரணம். ஓவல் டெஸ்டிலும் அப்படிப்பட்ட சில தவறுகள்தான் ஆட்டத்தை ஐந்தாம் நாள் வரை கொண்டுசென்றுள்ளன. வெற்றிக்கு 324 ரன்கள் தேவை என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸை டக்கெட்டும் போப்பும் தொடர்ந்தனர். மேகமூட்டத்தையும் ஈரப்பதத்தையும் பயன்படுத்திக் கொண்டு, சிராஜும் ஆகாஷ் தீப்பும் நல்ல ரிதத்தில் பந்துவீசினர். குறிப்பாக டக்கெட்டுக்கு எளிதாக பவுண்டரிகள் கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தனர். எதிர்பார்த்த வேகத்தில் ரன் குவிக்க முடியவில்லை என்ற அழுத்தத்தில், பிரசித் கிருஷ்ணாவின் முழு நீளப் பந்தை கவர் டிரைவ் விளையாட முயன்று, இரண்டாவது ஸ்லிப்பில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதிரடி தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில், இன்னிங்ஸை கட்டியெழுப்ப வேண்டிய சுமை போப், ரூட் ஆகியோரின் தலையில் இறங்கியது. பிரசித் கிருஷ்ணா ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசிய போப், அடுத்த ஓவரிலேயே சிராஜின் வோபுள் பந்துக்கு எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இந்த தொடர் முழுக்க வோபுள் சீம் (wobble seam) பந்துக்கு நிறைய விக்கெட்டுகள் விழுவதை பார்த்து வருகிறோம். வோபுள் சீம் பந்துவீச்சு என்பது பந்தை நேராக வைத்து, தையலை தளர்வாக பிடித்து வீசும் பாணிக்கு பெயர். வோபுள் சீம் (Wobble Seam) பந்தை இரண்டு விதமாக வீசலாம். தையலை (seam) வழக்கத்தைக் காட்டிலும் தளர்வாகப் பிடித்து வீசுவது ஒருமுறை. விரல்களை தையலின் மேல் அகலப் படரவிட்டுக் கொண்டும் வீசலாம். காற்றில் ஊசலாடியபடி பயணிக்கும் பந்தின் தையல் ஆடுகளத்தில் எந்தப் பக்கம் விழுகிறதோ அந்தப் பக்கம் பந்து திரும்பும். (seam). இதிலுள்ள சுவாரஸ்யமே தையல் எந்தப் பக்கத்தைப் பார்த்து விழுமென்பது பேட்டருக்கு மட்டுமில்லாமல் பந்து வீச்சாளருக்கும் தெரியாது என்பதுதான். இந்த எதிர்பாராத் தன்மைதான் வழக்கமான ஸ்விங் மற்றும் சீம் பந்துவீச்சில் இருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹாரி புரூக் நெருக்கடிக்கு உள்ளாக்கிய புரூக் 106 ரன்களுக்கு 3 விக்கெட்களை தொலைத்த நிலையில், பாஸ்பால் பாணியை கைவிட்டு, அடக்க ஒடுக்கமாக ரூட்–புரூக் ஜோடி விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அழுத்தமான சமயங்களில் எதிரணி மீது அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பாஸ்பால் வரையறையின்படி, இந்திய பந்துவீச்சாளர்களை புரூக் நெருக்கடிக்கு உள்ளாக்கினார். முன்னும் பின்னும் நகர்ந்து விளையாடி, அவர்களின் லைன் அண்ட் லெந்த்தை சிதைத்ததோடு உளவியல் ரீதியாகவும் இந்திய பந்துவீச்சாளர்களை நிலைகுலைய வைத்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹாரி புரூக் அடித்த பந்தை கேட்ச் பிடித்த முகமது சிராஜ் தவறுதலாக எல்லைக் கோட்டை மிதித்துவிட்டதால் நடுவரால் 6 ரன்கள் கொடுக்கப்பட்டன. 19 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சிராஜ் தவறவிட, அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட புரூக் சதத்தில்தான் போய் நின்றார். கடந்த 70 ஆண்டுகளில் குறைந்த டெஸ்ட்களில் 10 சதங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். உலகின் தலைசிறந்த பேட்டரும் உலகின் முதல்நிலை டெஸ்ட் பேட்டரும் எவ்வித பதற்றமும் இன்றி, வெற்றி இலக்கை நோக்கி வீறுநடை போட்டனர். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நான்காவது வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது வேகப்பந்து வீச்சாளர்களின் வேலைப்பளுவை அதிகரித்ததால் லைன் அண்ட் லெந்த்தில் அவர்கள் தவறு செய்தனர். களத்தடுப்பில் தாக்குதல் பாணியா, தற்காப்பு பாணியா என்பதை முடிவுசெய்ய முடியாமல் கில் தடுமாறியதை பார்க்க முடிந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் களைப்பில் தவித்த போதும் சுழற்பந்து வீச்சாளர்களை தாமதமாக கொண்டுவந்தது ஏன் என்பது சுத்தமாக விளங்கவில்லை. முந்தைய இன்னிங்ஸில் பிரசித் கிருஷ்ணாவுடனான மோதலால் கவனத்தை தொலைத்த ரூட், ஒன்றிரண்டு ரன்களை ஓடுவதை மறந்து, பவுண்டரிகளை மட்டும் குறிவைத்து சொதப்பினார். ஆனால், இந்தமுறை வழக்கமான ஒரு ரூட் இன்னிங்ஸ் எப்படி இருக்குமோ அப்படி விளையாடினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வழக்கமான ஒரு ரூட் இன்னிங்ஸ் எப்படி இருக்குமோ அப்படி விளையாடினார். களத்தில் இந்திய அணியினரின் உடல்மொழி, ஆட்டம் இங்கிலாந்து பக்கம் நகர்ந்துவிட்டதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. குல்தீப் அணியில் இருந்திருந்தால் ஆட்டம் வேறுமாதிரி, இந்தியாவுக்கு சாதகமாக கூட அமைந்திருக்கலாம். ஆகாஷ் தீப் பந்துகளில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகள் விளாசிய புரூக் , இறங்கிவந்து அடிக்கப் பார்த்து, பேட்டை காற்றில் பறக்கவிட்டு சிராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்தியாவுக்கு திறந்த கதவு ரூட்–புரூக் இணை, நான்காவது விக்கெட்டுக்கு 195 ரன்களை குவித்து ஆட்டத்தை முழுவதுமாக இங்கிலாந்து பக்கம் திருப்பிவிட்டது. களமிறங்கியது முதலே பொறுப்பில்லாமல் கண்ணை மூடிக் கொண்டு பேட்டை சுழற்றிக் கொண்டிருந்த பெத்தேல், 5 ரன்னில் பிரசித் பந்தில் போல்டாகி சென்றார். இங்கிலாந்து அணி இலக்கை சிரமமின்றி நெருங்கி கொண்டிருந்த போது , பிரசித் கிருஷ்ணாவின் ஒரு அற்புதமான பேக் ஆஃப் எ லெந்த் (back of a length)பந்தின் மூலம் ரூட் (105) விக்கெட்டை கைப்பற்றினார். ரூட் விக்கெட்டுக்கு பிறகு, ஆட்டத்தில் மீண்டும் இந்தியாவுக்கு ஒரு கதவு திறந்தது. ஜேமி ஸ்மித்தும் ஓவர்டனும் களத்தில் இருந்தபோது, மழை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. எப்படியும் நான்காம் நாளில் ஆட்டம் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஐந்தாம் நாளை நோக்கி ஆட்டத்தை இயற்கை நகர்த்தியிருக்கிறது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிசயத்தை நிகழ்ந்தினால் ஒழிய, இந்தியாவால் இந்த ஆட்டத்தில் தலையெடுக்க முடியாது. 9 பந்துகளில் பிரசித் கிருஷ்ணா ரூட், பெத்தேல் விக்கெட்களை தூக்கியிருப்பது இந்தியாவுக்கு ஒரு சிறு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இன்று 3 ஓவர்களுக்கு பிறகு புதிய பந்து கிடைக்குமென கூறப்படும் நிலையில், புதிய பந்தில் விக்கெட் எடுக்க இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முயற்சிக்க வேண்டும். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. எதிர்பாராததை எதிர்பார்க்க வைக்கும்படி சென்று கொண்டிருக்கும் இந்த டெஸ்ட் தொடர், கடைசி நாளில் என்ன ஆச்சரியங்களை வைத்திருக்கிறது என்று பார்க்கலாம். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce9382en8njo
  22. சோமரத்ன ராஜபக்ஷவின் கருத்து முக்கிய திருப்புமுனை: சர்வதேச விசாரணை தான் உண்மையை வெளிக்கொணரும் என தமிழ்த்தேசியக்கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தல் Published By: Vishnu 03 Aug, 2025 | 11:18 PM (நா.தனுஜா) செம்மணி பற்றிய உண்மைகளை சர்வதேச விசாரணையில் வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாக லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ கூறியிருப்பது இவ்விவகாரத்தில் மிகமுக்கிய திருப்புமுனையாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசியக்கட்சிகளின் பிரதிநிதிகள், இதனை ஒரு சர்வதேச கட்டமைப்பின் முன்னிலையில் விசாரிப்பதன் ஊடாக மாத்திரமே சகல உண்மைகளையும் வெளிக்கொணரமுடியும் எனவும், அதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதியும் சர்வதேச சமூகமும் முன்னெடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். யாழ் செம்மணி மனிதப்புதைகுழு விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அத்தோடு யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் நடாத்தப்பட்டுவந்த சித்திரவதைக்கூடங்கள் என்பன பற்றிய விபரங்களை வெளியிடுவதற்குத் தனது கணவர் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், 'செம்மணி பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக்ஷ கூறியிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். மரணதண்டனை விதிக்கப்பட்ட அவர், இப்போது உண்மையைச் சொல்வதற்குத் தயாராக இருக்கிறார். இருப்பினும் இந்த நாட்டுக்குள் உண்மைகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் தனக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதுவதனாலேயே அவர் சர்வதேச விசாரணையைக் கோருகிறார். இந்த சர்வதேச விசாரணையையே நாம் 2010 ஆம் ஆண்டிலிருந்து கோரிவருகிறோம். அவ்வாறிருக்கையில் தற்போது சிங்களத்தரப்பிலிருந்து, அதுவும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவரிடமிருந்து அந்தக் கோரிக்கை வந்திருப்பதை நாம் எமக்கான ஒரு விடையாகவே பார்க்கிறோம். அதேபோன்று தனக்கு ஆணையிட்ட உயரதிகாரிகள், படுகொலைக் குற்றங்களைப் புரிந்தவர்கள் உள்ளிட்ட சகலரது விபரங்களையும் வெளிப்படுத்துவதற்குத் தயார் எனவும் அவர் கூறியிருக்கிறார். எனவே நீதிக்கான பயணத்தில் சர்வதேசத்தின் தலையீடு அல்லது பங்களிப்பு இல்லாவிடின், அது உண்மையான நீதியாக இருக்காது என சிங்களவர்களே கூறுமளவுக்கு இன்று நிலைமை மாறியிருக்கிறது. எனவே இலங்கை அரசாங்கம் முதலில் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும். அதுமாத்திரமன்றி மீண்டும் மீண்டும் உள்ளகப்பொறிமுறை எனக்கூறி சகல தரப்பினரையும் ஏமாற்றுவதை விடுத்து, நீதியானதொரு சர்வதேசப்பொறிமுறையை நோக்கி நகரவேண்டும். அப்பொறிமுறை தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரக்கூடியதாக இருக்கவேண்டும்' என வலியுறுத்தினார். அதேவேளை சோமரத்ன ராஜபக்ஷவின் கடிதம் தொடர்பில் கருத்துரைத்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், 'கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கு விசாரணைகளின்போதே செம்மணியில் சுமார் 300 - 600 பேர் வரை புதைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அதனை ஒரு முக்கிய விடயமாகக் கருதி அடுத்தகட்ட விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. மாறாக அவ்வேளையில் உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் பலர் சிறை செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். 'இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படுமாயின் இதுபற்றிய உண்மைகளைக் கூறத்தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜக்ஷ தெரிவித்திருக்கிறார். எனவே இவ்விவகாரத்தை ஒரு சர்வதேச கட்டமைப்பின் முன்னிலையில் விசாரிப்பதன் ஊடாக மாத்திரமே சகல உண்மைகளையும் வெளிக்கொணரமுடியும். ஆனால் எவ்வேளையிலும் இராணுவத்தைப் பாதுகாப்பதற்கு முற்படும் இலங்கை அரசாங்கம், சர்வதேச விசாரணைக்கான நகர்வுகளை ஒருபோதும் முன்னெடுக்காது. ஆகவே மிகச்சிறந்த இந்தத் திருப்பத்தை சரியாகப் பயன்படுத்தக்கூடியவகையில் ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும்' எனக் குறிப்பிட்டார். மேலும் சோமரத்ன ராஜபக்ஷ சர்வதேச விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியிருப்பது இவ்விவகாரத்தில் மிகமுக்கிய திருப்புமுனையாக அமைந்திருப்பதாகத் தெரிவித்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இதுகுறித்து ஜனாதிபதி உரியவாறான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதுமாத்திரமன்றி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், இதுகுறித்து சர்வதேச சமூகம் அவதானம் செலுத்தவேண்டும் எனவும், நியாயமான சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/221729
  23. போக்குவரத்து திணைக்களம் முகவரி: இல. 341, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05, நாராஹேன்பிட்ட, இலங்கை. தொலைபேசி: +94 112 033333 E mail - Werahera : dmtweraheracom@gmail.com
  24. சோமரத்ன ராஜபக்ஷ வழக்கில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம் சிக்கலானதாகும் – சரத் வீரசேகர 03 Aug, 2025 | 05:35 PM (இராஜதுரை ஹஷான்) கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷவுக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவ்விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்வது சிக்கல் நிலையை ஏற்படுத்தும். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கை என்னவென்பதை எதிர்பார்த்துள்ளோம் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ சர்வதேச விசாரணைக்கு தயார் என்று அவரது மனைவி ஜனாதிபதி கடிதம் அனுப்பி வைத்துள்ளார். இலங்கையின் உள்ளக விவகாரத்தை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லும் ஒரு உத்தியாகவே இவ்விடயம் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச கட்டமைப்புக்கு செல்வதற்கு முன்னர் தேசிய நீதிக்கட்டமைப்பை நாடலாம் என்றும் குறிப்பிட்டார். கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவியான எஸ்.சி விஜேவிக்கிரம ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் குறித்து வீரசேகரிக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவியான எஸ்.சி விஜேவிக்கிரம ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் தொடர்பான விரிவான செய்தியை வீரகேசரி பத்திரிகை நேற்று தனது முதற்பக்கத்தில் பிரசுரித்துள்ளது. இந்த கடிதத்தில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கிருஷாந்தி படுகொலை வழக்கில் சோமரத்ன ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் குற்றம் புரிந்திருப்பார்களாயின் அவர்களுக்கு உள்ளக நீதிகட்டமைப்பின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். முறையான விசாரணைகளின் பிரகாரமே இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷவுக்கு உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவ்விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்வது சிக்கல் நிலையை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தை சர்வதேச விசாரணைக்கு கொண்டு சென்று சாட்சியமளிக்க சோமரத்ன ராஜபக்ஷ தயாராகவுள்ளதாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் உள்ளக நீதி கட்டமைப்பின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகள் என்னவென்பதை எதிர்பார்த்துள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/221716
  25. சோமரத்ன ராஜபக்ஷ கருத்து: "அதிஷ்டலாபச்சீட்டு விழுந்தது போலவே" – காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் வலியுறுத்தல் Published By: Vishnu 03 Aug, 2025 | 09:00 PM (நா.தனுஜா) லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் கருத்து தமக்கு அதிஷ்டலாபச்சீட்டு விழுந்ததைப்போன்று இருப்பதாகத் தெரிவித்துள்ள வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை வழங்குவதற்கு பாதிக்கப்பட்ட தரப்பினர், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், புலம்பெயர் தமிழர்கள் என சகல தரப்பினரும் இச்சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். யாழ் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அத்தோடு யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் அங்கு நடாத்தப்பட்டுவந்த சித்திரவதைக்கூடங்கள் என்பன பற்றிய விபரங்களை வெளியிடுவதற்குத் தனது கணவர் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சோமரத்ன ராஜபக்ஷவின் வெளிப்படுத்தல்கள் தமக்கு அதிஷ்டலாபச்சீட்டு விழுந்ததைப்போன்று இருப்பதாகவும், இச்சந்தர்ப்பத்தைத் நீதிகோரிப்போராடும் சகல தரப்பினரும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் எனவும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி கேசரியிடம் தெரிவித்தார். 'சோமரத்ன ராஜபக்ஷவின் கருத்து எமக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இதனைப் பாதிக்கப்பட்ட தரப்பினரும், தமிழ்த்தேசிய அரசியல் பிரதிநிதிகளும், சிவில் சமூக அமைப்புக்களும், புலம்பெயர் தமிழர்களும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இதுபற்றி சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளிடம் எடுத்துரைப்பதுடன் சர்வதேச நீதி விசாரணைக்குப் பரிந்துரைக்குமாறு அவர்களிடம் கோரவேண்டும். எனெனில் அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணையை நோக்கிச் செல்லப்போவதில்லை. ஆகவே இவ்விடயத்தில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள சகல தரப்பினரும் வழங்கவேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/221727

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.