Everything posted by ஏராளன்
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
முகமது சிராஜ் தனது தவறையே மறுநாள் சாதிப்பதற்கான தூண்டுகோலாக மாற்றியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் தினேஷ் குமார்.எஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 1,113 பந்துகள்… சிராஜ் தொடர்பாக எழுதப்படும் எல்லா கட்டுரைகளிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு புள்ளிவிபரம் இதுவாகத்தான் இருக்கும். பொதுவாக ஒரு வேகப்பந்து வீச்சாளரின் பங்களிப்பை மதிப்பீடு செய்ய சராசரி, ஸ்ட்ரைக் ரேட், எகானமி ரேட் போன்றவற்றைதான் விமர்சகர்களும் ரசிகர்களும் முன்வைப்பார்கள். ஆனால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, ஒரு வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்துகளின் எண்ணிக்கை பேசுபொருளாக மாறியுள்ளது. 'பொதிகாளை' என்று வர்ணிக்கும் அளவுக்கு, தொடர்ந்து 5 டெஸ்ட்கள் ஓய்வின்றி விளையாடி இந்திய அணிக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார் முகமது சிராஜ். பும்ராவின் நிழலில் விளையாடுவதாலேயெ சிராஜின் சாதனைகளுக்கான நியாயமான அங்கீகாரம் கூட கிடைப்பதில்லை. சிராஜ் என்றைக்கும் பும்ராவின் இடத்தை இட்டு நிரப்பிவிட முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அதேயளவு உண்மை சிராஜின் பங்களிப்பு பும்ராவுக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல என்பதும். கிரிக்கெட்டில் இந்த சிக்கல், இன்று நேற்று தோன்றியது அல்ல. கடந்த காலங்களில் உச்ச நட்சத்திரங்களின் நிழலில் விளையாடும் போது, திறமையான வீரர்கள் எதிர்கொண்ட சவாலைத்தான் இப்போது சிராஜும் சந்தித்து வருகிறார். இயான் சேப்பல் தனது கட்டுரை ஒன்றில் ஒருமுறை இப்படி எழுதினார். விவியன் ரிச்சர்ட்ஸுடன் ஒன்றாக பேட் செய்யும் போது வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிரீனிட்ஜ் அடக்கித்தான் வாசிப்பார்; ஆனால், ரிச்சர்ட்ஸ் இல்லாத சமயங்களில் அவருடைய ஆட்டம் நம்பமுடியாத அளவுக்கு இருக்கும் என்பார் இயான் சேப்பல். பட மூலாதாரம், GETTY IMAGES இதை நாம் பும்ரா-சிராஜ் விஷயத்திலும் பொருத்திப் பார்க்கலாம். இந்த தொடரில் பும்ரா விளையாடாத பர்மிங்ஹாம், லார்ட்ஸ் டெஸ்ட்களில் 17 விக்கெட்களை சிராஜ் சாய்த்துள்ளார். பும்ராவுடன் பந்தை பங்கிட்டுக் கொண்ட மற்ற 3 டெஸ்ட்களில் மொத்தமாக 6 விக்கெட்கள் மட்டும்தான் எடுத்துள்ளார். பும்ராவுடன் விளையாடும் போதும் அதே 100 சதவீத ஈடுபாட்டுடன்தான் விளையாடுகிறார். பிறகு ஏன் விக்கெட்கள் கிடைப்பதில்லை? இதற்கு பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கலாம். பும்ராவுடன் சேர்ந்து விளையாடும் போது, சிக்கனமாக பந்துவீசி ரன் ரேட்டை கட்டுக்குள் வைப்பதுதான் சிராஜின் பிரதான வேலை. அதுவே பும்ரா இல்லாத போது, தனக்காக சுதந்திரத்துடன் பந்துவீச முடிகிறது. வேகப்பந்து படையை முன்னின்று வழிநடத்துகிறோம் என்கிற பெருமிதமே, அவருடய முழுத் திறமைமையும் வெளிக்கொணர்கிறது. கிரிக்கெட் வெறுமனே திறமை, உடற்தகுதி அடிப்படையில் மட்டுமே இயங்கின்ற விளையாட்டு அல்ல. உளவியலும் தனிநபர் ஆளுமையும் பெரியளவில் தாக்கம் செலுத்தும் விளையாட்டு இது. ஓவல் டெஸ்டில் இந்தியா ஒருவேளை தோற்றிருக்குமானால், புரூக் கேட்ச்சை சிராஜ் தவறவிட்டது பேசுபொருளாகியிருக்கும். தான் தவறவிட்ட கேட்ச்சால் தப்பிப் பிழைத்தவர், சதமடிப்பதை பார்ப்பதை விட வலி மிகுந்த தருணம், வேறு ஒன்று ஒரு கிரிக்கெட் வீரருக்கு இருக்காது. அழுத்தம் மிகுந்த தருணங்களை கடந்து வருவது சிராஜுக்கு ஒன்றும் புதிதல்ல. 2020-2021 ஆஸ்திரெலிய சுற்றுப்பயணத்தின் போது, டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவதற்கு சில நாள்கள் முன்பாக, தனது தந்தையின் மரண செய்தியை எதிர்கொண்ட துயரத்தில் இருந்தே அவர் மீண்டு வந்திருக்கிறார். மகனின் (சிராஜ்) கிரிக்கெட் கனவுகளை மனதில் சுமந்துகொண்டு ஹைதராபாத்தின் மூலை முடுக்குகளில் ஆட்டோ ஓட்டியவர், சிராஜின் தந்தை மிர்ஸா முகமது கவுஸ். கரோனா காலம் என்பதால் தந்தையின் இறுதிசடங்கில் கூட சிராஜால் பங்கேற்க முடியவில்லை. எப்படிப்பட்ட இழப்பு அது! ஆனால் சிராஜ் சோர்ந்து போய்விடவில்லை. இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவுசெய்த அந்த தொடரில், இந்திய அணி சார்பில் அதிக விக்கெட்களை சிராஜ்தான் கைப்பற்றினார். ஒவ்வொரு தொடருக்கும் முன்பாக தந்தையின் கல்லறைக்கு சென்று பிரார்த்தனை செய்வதை சிராஜ் வழக்கமாக வைத்துள்ளார். சிராஜூக்கு கோலி தந்த ஆதரவு சிராஜின் கிரிக்கெட் வரலாற்றில் 2018 ஐபிஎல் தொடர் மிக மோசமான அனுபவம் என்றே சொல்ல வேண்டும். மோசமான பந்துவீச்சு காரணமாக, சொந்த அணி ரசிகர்களாலேயே ஆன்லைனில் கடுமையாக வசைபாடப்பட்டார். கேப்டன் விராட் கோலி தொடர்ச்சியாக கொடுத்த வாய்ப்புகளாலும் ஆதரவினாலும் அதையும் வெற்றிகரமாக சிராஜ் கடந்துவந்தார். கடந்த ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு அணி தக்கவைக்காதது சிராஜுக்கு கடுமையான மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்ககூடும். சமீபத்தில் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய சிராஜ், பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தின் போது, பந்துவீச முடியாமல் தவித்ததை பார்த்திருப்போம். பணம் மட்டுமே பிரதானம் என்றாகிவிட்ட லீக் கிரிக்கெட்டில், தன்னை ஆளாக்கி வளர்த்த அணிக்கு எதிராக பந்துவீசுவதற்கு தயங்கிய சிராஜின் அர்ப்பணிப்பும் விஸ்வாசமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஒருநாள் போட்டிகளில் 24.04 என்ற சிறப்பான சராசரி வைத்திருந்தும், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இடம் மறுக்கப்பட்டதால் சிராஜ் கலங்கிப் போனார். ஆனால், 2025 ஐபிஎல் தொடரில் நன்றாக பந்துவீசி, வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியில் தன்னை புறக்கணிக்க முடியாது என்று நிரூபித்துக்காட்டினார். சமீபத்தில் லார்ட்ஸ் டெஸ்டில் ஜடேஜாவுக்கு தோள் கொடுத்து, ஒவ்வொரு ரன்னாக குருவி சேர்ப்பது போல சேர்த்து, வெற்றிக் கோட்டை நெருங்கிக் கொண்டிருந்த போது, பஷீர் பந்தில் துரதிர்ஷ்டவசமாக பவுல்டானார். அப்போது வேதனையின் உச்சத்துக்கே சென்ற சிராஜை, வெற்றிக் கொண்டாட்டத்தை கூட ஒத்திவைத்துவிட்டு இங்கிலாந்து வீரர்கள் ஆற்றுப்படுத்தினார்கள். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சிராஜூக்கு ஆறுதல் கூறும் இங்கிலாந்து வீரர்கள் கிராலி, ஜோ ரூட் பட மூலாதாரம், GETTY IMAGES தவறையே சாதிப்பதற்கான தூண்டுகோலாக மாற்றிய சிராஜ் உணர்ச்சிகரமான வீரராக இருப்பதில் இருக்கும் சாதகமான அம்சம் என்னவெனில், களத்திலும் சரி, களத்துக்கு அப்பாலும் சரி, உங்களுக்கு கிரிக்கெட்டை தவிர வேறெதுவும் மனதை ஆக்கிரமிக்காது. ஓவல் டெஸ்டின் நான்காம் நாளில் புரூக் கேட்ச்சை தவறவிட்ட நிகழ்வு, சிராஜுக்கு ஒரு கிரியா ஊக்கியாக செயல்பட்டுள்ளது. ஐந்தாம் நாளில் வழக்கத்தை விட இரண்டு மணி நேரம் முன்னதாக எழுந்துகொண்ட சிராஜ், 'believe' என்ற வார்த்தையை பொறித்த தனக்கு பிடித்த ரொனால்டோவின் படத்தை போன் வால்பேப்பராக வைத்துள்ளார். இதை உளவியலாளர்கள் விசுவலைசேசன் (visuvalaization) என்று அழைக்கிறார்கள். அதாவது நடக்கப் போவதை முன்னரே மனதில் ஒத்திகை பார்ப்பது. உலகப் புகழ்பெற்ற 153* இன்னிங்ஸை லாரா இப்படித்தான் விசுவலைசேசன் செய்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்படாஸ் டெஸ்டில் நிகழ்த்திக் காட்டினார். சிராஜுக்கு விசுவலைசேசன் குறித்து தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், அதை வெற்றிகரமாக ஓவல் மைதானத்தின் கடைசி நாளின் முதல் ஒரு மணி நேரத்தில் நிகழ்த்தி காட்டினார். கடினமான பின்னணியில் இருந்து வந்த கிரிக்கெட் வீரர்கள் சாதிப்பதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆல்ரவுண்டர் கீத் மில்லரிடம், 'நீங்கள் எப்போதாவது ஆட்டத்தில் அழுத்தத்தை எதிர்கொண்டது உண்டா?' என்று கேட்ட போது, 'ஜெர்மனி போர் விமானம் முதுக்குக்கு பின்னால் பறப்பதை பார்த்தவனுக்கு கிரிக்கெட்டின் அழுத்தம் எம்மாத்திரம்' என்கிற தொனியில் பதிலளித்தார். கீத் மில்லர் உலகப் போரின் போது பிரிட்டனுக்காக போர் விமானியாக பணியாற்றியவர். கடினமான சூழல்களில் சிராஜ், தனது முழுத் திறமையை வெளிக்கொணர்வதற்கு அவருடைய கடினமான கடந்த காலம் ஒரு முக்கிய காரணியாக இருந்துவருகிறது. அணிக்காக எவ்வளவோ தியாகங்கள் செய்தும், சிராஜின் பங்களிப்புகள் பெரிதாக பேசப்படாததற்கு அவருடைய பந்துவீச்சு பாணியும் ஒரு முக்கிய காரணம். தையலை பயன்படுத்தி பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் (seam) வரலாற்றில் பெரிதாக கொண்டாடப்பட்டதில்லை. வால்ஷ், ஆம்புரோஸ், மெக்ராத் என சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையினர் சிராஜை போல வசீகரம் குறைந்தவர்கள். சிராஜை இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடுடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 604 விக்கெட்கள் கைப்பற்றினாலும், அவருக்கு எந்நாளும் ஆண்டர்சனுக்கு கிடைத்த புகழ் வெளிச்சம் கிடைத்ததில்லை. ஸ்விங் பந்துவீச்சாளர்கள் காற்றில் நிகழ்த்தும் ஆச்சர்யங்கள் கண்ணுக்கு இதமானவை. ஆனால் பிராட், சிராஜ் போன்றவர்கள் ஸ்விங் செய்ய முடிந்தும் அணியின் நலனுக்காக அதை தியாகம் செய்து, கடினமான பணியை தங்களின் முத்திரையாக வரித்துக்கொண்டவர்கள். சிராஜ் பிரமாதமான அவுட் ஸ்விங் பந்துகளை வீசத் தெரிந்தவர். அவுட் ஸ்விங் பந்துகளுக்கு செட் செய்துதான், ஓவல் டெஸ்டின் கடைசி நாளில் ஸ்மித் விக்கெட்டை அவர் கைப்பற்றினார். ஆனால் அவருடைய ஆதார பந்து (stock ball) என்பது தளர்வாக தையலைப் பிடித்து வீசும் வாபில் சீம்தான் (wobble seam) வழக்கமாக வாபில் சீமில் வீசும்போது, பந்தின் போக்கை பந்து வீச்சாளரால் கூட தீர்மானிக்க முடியாது. ஆனால் சிராஜ் தன்னுடைய மணிக்கட்டை நுட்பமாக பயன்படுத்துவதன் மூலம் பந்து உள்ளே செல்ல வேண்டுமா வெளியே செல்ல வேண்டுமா என்பதையும் அவரே முடிவு செய்கிறார். ரூட், போப் உள்பட இங்கிலாந்தின் முன்னணி பேட்டர்கள், சிராஜின் உள்ளே வரும் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தொப் தொப்பென்று கால்காப்பில் வாங்கி எல்பிடபிள்யூ முறையில் வெளியேறியதைப் பார்த்தோம். பட மூலாதாரம், GETTY IMAGES சிராஜ் இனி தளபதி அல்லர்; தலைவன்! பந்து உள்ளேதான் வரப் போகிறது என்று பேட்டருக்கும் தெரியும். ஆனால், அதை அத்தனை எளிதாக எதிர்கொண்டு விட முடியாது. சிராஜின் நூல் பிடித்தது மாதிரியான லெங்த்தும் தொய்வற்ற வேகமுமே காரணம். ஐந்து டெஸ்ட் விளையாடிய பிறகும் கடைசி நாளில் மணிக்கு 145 கிமீ வேகத்துக்கு மேல் வீசி, பாஸ்பால் கோட்பாட்டின் பிதாமகனான மெக்கலத்தை ஆச்சர்யப்பட வைத்தவர் சிராஜ். ஒரு பந்துவீச்சாளர்களுக்கு லைன் முக்கியமல்ல; லெங்த்தான் முக்கியம் என்பார்கள். ஆனால் சிராஜின் லைனும் கூட சோடை போவதில்லை. இப்படி, எல்லாமே கச்சிதமாக செய்வதாலேயே, சிராஜின் பந்துவீச்சு வசீகரத்தை இழந்துவிடுகிறதோ என்று தோன்றுகிறது. பும்ராவின் உடற்தகுதி இன்னும் எத்தனை ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட அவரை அனுமதிக்கும் என்று தெரியவில்லை. அப்படியே அவர் தொடர்ச்சியாக விளையாடினாலும், உடற்தகுதியை கருத்தில் கொண்டு அவர் எல்லா டெஸ்ட்களிலும் விளையாட முடியாது. ஓவல் டெஸ்ட், இந்திய வேகப்பந்து வீச்சுக்கு யார் தலைமையேற்பது என்பதையும் வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டது. ஹைதராபாத்தில் தொடங்கி, ஆஸ்திரேலிய மண்ணில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த சிராஜ், இங்கிலாந்து மண்ணில் வைத்து, இந்திய வேகப்பந்து வீச்சின் தலைவன் தான்தான் என நிரூபித்துள்ளார். ஆம், இனி சிராஜ், இந்திய வேகப்படையின் தளபதி அல்லர்; தலைவன்! - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c30zq6z1v4yo
-
சோமரத்னவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால், அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு
சோமரத்ன ராஜபக்ஷவின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ரோஹினி ராஜபக்ஷ வலியுறுத்தல் Published By: VISHNU 06 AUG, 2025 | 02:54 AM செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாக மனைவியின் கடிதத்தின் ஊடாக தனது சகோதரரான சோமரத்ன ராஜபக்ஷ கூறியிருப்பதன் விளைவாக அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், அவருக்குரிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சோமரத்ன ராஜபக்ஷவின் சகோதரி ரோஹினி ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். யாழ். செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அத்தோடு யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் நடாத்தப்பட்டுவந்த சித்திரவதைக்கூடங்கள் என்பன பற்றிய விபரங்களை வெளியிடுவதற்குத் தனது கணவர் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போது இவ்விவகாரம் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கும் தனது சகோதரரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனவும், அவரது பாதுகாப்பைப் பலப்படுத்துவற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள அவரது சகோதரி ரோஹினி ராஜபக்ஷ, இதுகுறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அதுமாத்திரமன்றி மரணதண்டனை விதிக்கப்பட்டு 29 வருடகாலமாக சிறைவாசம் அனுபவித்துவரும் தனது சகோதரர் சோமரத்ன ராஜபக்ஷவுக்கு கடந்த காலங்களில் சிறைக்கு உள்ளிருந்தும், வெளியே இருந்தும் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும், அத்தோடு சில சந்தர்ப்பங்களில் அவரது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது சோமரத்ன ராஜபக்ஷவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அவரது சகோதரி வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/221927
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
ஓவல் டெஸ்டில் ரசிகர்கள் கண்ணிமைக்க மறந்த கடைசி 57 நிமிடங்கள் பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் ஸ்டீபன் ஷெமில்ட் தலைமை கிரிக்கெட் நிருபர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஓவல் மைதானத்தில் உள்ள ஜேஎம் ஃபின் ஸ்டாண்டின் உள்ளே, பெவிலியனுக்கு எதிரே, டெஸ்ட் போட்டி சிறப்பு கமெண்ட்ரி அறைக்கு செல்லும் ஒரு படிக்கட்டு உள்ளது. இது ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பரபரப்பான ஐந்தாவது டெஸ்ட் போட்டி முடிந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, மைதானம் காலியாகிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த படிக்கட்டில் ஒரு இடது கால் ஷூ, உள்ளாடை, வலது கால் ஷூ ஒன்றும் இருந்தன. அவற்றின் அளவை வைத்து பார்க்கும்போது அவை ஒரு ஆணுடையதாக இருக்கலாம் எனத் தெரிகிறது. தங்கள் உடைமைகளை அவர் எவ்வாறு தவறவிட்டார், அவற்றை இழந்ததை எப்போது உணர்ந்தார் என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், யாரோ ஒருவர் இந்த புகழ்பெற்ற மைதானத்தில் இருந்து செல்லும்போது, காலணிகள் மற்றும் உள்ளாடைகள் இல்லாமல் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. இது, திங்கட்கிழமை காலை ஏற்கனவே நிகழ்ந்த உற்சாகமான களேபரத்துடன் முற்றிலும் பொருந்தியிருக்கும். அங்கு, நீங்கள் பார்க்க விரும்பும் மிக தீவிரமான, பரபரப்பான உணர்ச்சிகரமான விளையாட்டு 57 நிமிடங்கள் அரங்கேறியிருந்தது. இருபத்தைந்து நாட்கள் தொடர்ந்த பரபரப்பான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதி நாளன்று, ஒரு ஒற்றைக் கை மனிதன் தெற்கு லண்டனின் 22 யார்டு புல்வெளியில் வலியுடன் ஓடுவதை பார்க்க முடிந்தது. வாரத்தின் முதல் பணிநாளில் இங்கிலாந்தின் உற்பத்தித்திறன் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கும், அல்லது மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூருவில் எத்தனை அலுவலகங்கள் முன்கூட்டியே மூடப்பட்டன என நினைத்துப் பார்க்க தோன்றுகிறது. ஆனால் நான்காம் நாள் ஆட்டத்தின் மாலையில் ஆட்டம் ஒரு முக்கியமான தருணத்தில் இருக்கும்போது, நிலைமை வித்தியாசமாக இருந்தது. மழை மற்றும் மங்கலான வெளிச்சம் காரணமாக வீரர்கள் டிரெசிங் ரூமிற்கு சென்றனர். பின்னர், மங்கலான மாலைப் பொழுது பளிச்சென மாறியபோதும், போட்டி மீண்டும் தொடரவில்லை. ஞாயிறு மாலை நிகழ்வுகள் ஏற்படுத்திய எரிச்சல், திங்கள்கிழமை என்ன நடக்கும் என்ற ஆவலாக உருமாறியது. முப்பத்தைந்து ரன்கள் அல்லது நான்கு விக்கெட்டுகள். ஓவல் மைதானத்தின் டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்திருந்தது, ஆனால் போட்டியை காண வருவதற்கு யாரேனும் அக்கறை காட்டுவார்களா? என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால் ரசிகர்கள் வந்தார்கள், வந்து வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தை தொடர்ந்து சத்தத்தாலும், பரபரப்பான உற்சாகத்தாலும் நிரப்பினார்கள். 2005 ஆஷஸ் கிளாசிக் போட்டியில் இரண்டே பந்துகளுக்காக எட்ஜ்பாஸ்டன் மைதானம் நிரம்பியிருந்ததை இது நினைவூட்டியது. பட மூலாதாரம், GETTY IMAGES அன்று போலவே, இங்கு வந்தவர்களுக்கும் அற்புதமான விருந்து காத்திருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவை இரண்டு ரன்களில் இங்கிலாந்து வீழ்த்தியதற்குப் பிறகு, இந்தியாவின் இந்த ஆறு ரன்கள் வெற்றிதான் இந்த நாட்டில் இவ்வளவு நெருக்கமான வெற்றியாகும். போட்டித்தொடரின் இறுதி நாளன்று ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் இந்திய அணி விளையாடத் தொடங்கியது, அங்கு, பாதுகாவலர்கள், சமையல்காரர், பேருந்து ஓட்டுநர் உட்பட அனைவருமே அந்தக் கூட்டத்தில் இருந்ததாகத் தோன்றியது. பொருத்தமாக, இது சர்ரே அணிக்கு எதிராக எதிராக இங்கிலாந்து விளையாடுவது போல இருந்தது. ஜேமி ஓவர்டன் முதல் இரண்டு பந்துகளிலும் நான்கு ரன்கள் எடுத்தபோது, இங்கிலாந்துக்கு தேவையான ரன்களில் கால் பகுதியை கிட்டத்தட்ட எட்டியது. அதுதான் அன்று அவர்களுக்கு கிடைத்த சிறந்த தருணம். தனது முதல் ஐந்து டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக இருந்த ஜேமி ஸ்மித், சற்று சோர்வாக தெரிந்தார். அவர் இரண்டு பந்துகளை வீணாக்கினார், மூன்றாவது பந்து பேட்டின் விளிம்பில் பட்டு ஆட்டமிழந்தார். பாரத் ஆர்மியின் மேளம் "வி வில் ராக் யூ" இசையின் தாளத்தை அடித்து, அதிர வைத்தது. ஓவர்டன் காலில் பந்து பட்டபோது, நடுவர் குமார் தர்மசேனா, 2005-ல் ரூடி கோர்ட்ஸனின் மெதுவான விரல் அசைவை நினைவூட்டும் வகையில் தனது முடிவை அறிவித்தார். ஞாயிறு மாலை, வோக்ஸ் தனது முறிந்த தோள்பட்டையை கிரிக்கெட் வெள்ளை உடைகளுக்குள் திணித்துக்கொண்டு அரங்கிற்குள் வந்தார், இது நினைப்பதற்கே வலியைத் தருகிறது. டங்கின் ஸ்டம்புகள் பிரசித் கிருஷ்ணாவால் சிதறடிக்கப்பட்டபோது, பாதுகாப்பு பணியாளர்கள் ஆட்டம் முடிந்துவிட்டதாக நினைத்து மைதானத்திற்கு விரைந்தனர். ஆனால், கிரிக்கெட்டில் மிகவும் நல்ல மனிதரான வோக்ஸ்தான் மிகவும் தைரியமானவர் என்பது அவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்வெட்டருக்குள் வோக்ஸின் காயமடைந்த இடது கை கட்டப்பட்டிருந்தது வோக்ஸ் தனது இடது கையில், கடந்த ஆண்டு காலமான தனது தந்தை ரோஜரின் நினைவாக பச்சை குத்தியிருந்தார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஸ்வெட்டருக்குள் வோக்ஸின் காயமடைந்த இடது கை கட்டப்பட்டிருந்தது. கிரிக்கெட்டின் இரண்டு வடிவங்களிலும் உலகக் கோப்பை வென்றவராகவும், ஆஷஸ் கோப்பையை வென்றவராகவும், இங்கிலாந்தின் மைதானங்களில் சிறந்த 'சீமர்'களில் ஒருவர் என்றும் கிரிக்கெட் சரித்திரத்தில் வோக்ஸ்க்கு சிறப்பான இடம் உண்டு. அதிலும், தோள்பட்டை காயத்தால், ஒரு கையில் கட்டுப்போட்டிருந்த நிலையில், தனது அணியை காப்பாற்ற ஒற்றைக் கையால் பேட்டிங் செய்ய களமிறங்கிய மந்திரவாதி என்று கிரிக்கெட்டர் கிறிஸ் வோக்ஸ் போற்றப்படுவார். அடிபட்ட கையுடன் விக்கெட்டுகளுக்கு இடையில் நான்கு முறை ஓடுவது வோக்ஸுக்கு மிகவும் வேதனையாக இருந்திருக்கும் என்பதை அவர் ஓடும்போது, எடுத்துவைத்த ஒவ்வொரு அடியிலும் அவர் தோள்பட்டை நடுங்கியதை வைத்து உணரமுடிகிறது. நல்லவேளையாக, ஒற்றை கையுடன் பந்துவீச்சை எதிர்கொள்ளும் நிலைமை அவருக்கு வரவில்லை. ஸ்கோரை சமன் செய்து தொடரை வெல்லக்கூடிய சிக்ஸரை அடிக்க முயன்ற அட்கின்சன் லெக் சைடில் பெரிய ஷாட் ஒன்றை விளையாட முற்பட்டார். அந்த முயற்சி தோல்வியடைந்து, ஆஃப் ஸ்டம்பை பந்து பதம்பார்த்துவிட்டது. பட மூலாதாரம், GETTY IMAGES இளம் இந்திய அணியில் தளராத மனம் கொண்ட முகமது சிராஜ், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டாலும், அவரது உத்வேகமான போர் குணத்தை எடுத்துச் செல்லும் திறன் சிராஜுக்கு இருந்தது. இந்த டெஸ்டில் சிராஜ் பந்து வீசாமல் பெவிலியனில் இருந்த சந்தர்ப்பமே இருக்கவில்லை. ஜஸ்பிரித் பும்ராவின் நிழலில் விளையாடாதபோது, பொறுப்பை உணர்ந்து சிறப்பாகச் செயல்படும் சிராஜின் சராசரி மற்றும் ஸ்ட்ரைக்-ரேட் இரண்டும் சிறப்பாக இருக்கும். இந்தத் தொடரில் இந்தியாவிற்கு கிடைத்த இரு வெற்றிகளும் பும்ரா விளையாடாத போட்டிகளில் இருந்தே வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது வருத்தத்தை அளித்தாலும், தொடர் 2-2 என சமநிலையில் முடிவடைந்தது நியாயமான முடிவாகும். அந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவையோ அல்லது இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் அடித்த சிக்ஸர்களில் ஏதேனும் ஒன்றையோ இங்கிலாந்து அணியினர் கேட்ச் செய்திருந்தால், நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது தொலைக்காட்சி தயாரிப்பு குழுவினரை பாடல் மூலம் வழிநடத்திய காட்சி, எந்த அணி இந்த முடிவில் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை வெளிப்படையாகச் சொன்னது. 374 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி, வெற்றிக்கு மிக நெருக்கமாக சென்றது மிகவும் பாராட்டத்தக்கது. இருந்தபோதிலும் ஒரு கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இங்கிலாந்து அணி தவறவிட்டது துரதிருஷ்டவசமானது. தற்போதைய இங்கிலாந்து அணிக்கு இது இறுதி உள்நாட்டு டெஸ்ட் போட்டியாக இருக்கும் வாய்ப்புகளும் தென்படுகிறது. பட மூலாதாரம், GETTY IMAGES மோசமான ஆஷஸ், கேப்டன் ஸ்டோக்ஸ் அல்லது பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் அணியில் இருந்து விலகிச் செல்ல வழிவகுக்கலாம். வோக்ஸின் வீரம் அனைவராலும் பாராட்டப்பட்டாலும், இது, அவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடிய கடைசி போட்டியாக இருக்கலாம். மார்க் வுட்டுக்கு ஜனவரியில் 36 வயது. இங்கிலாந்தின் அடுத்த உள்நாட்டு டெஸ்ட் ஜூன் மாதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் போட்டியின்போது சனிக்கிழமை காலை, இங்கிலாந்து பீல்டிங் செய்து, DRS மதிப்பாய்வைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த தருணமும் இருந்தது. உரையாடலில் ஸ்மித், அட்கின்சன், சாக் கிராலி, ஜேக்கப் பெத்தேல், ஓலி போப் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் இருந்தனர். அடுத்த முறை இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது இங்கிலாந்தின் மூத்த வீரர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கான ஒரு காட்சியாக இதைப் பார்க்கலாம். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgkrgjl4754o
-
செம்மணி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகள்: 200 பேர் பார்த்தும் எதுவும் அடையாளம் காட்டப்படவில்லை – சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா
மனிதப்புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு: உண்மை, நீதியை நோக்கிய நடவடிக்கை என ஐ.நா பாராட்டு Published By: VISHNU 05 AUG, 2025 | 10:10 PM செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொதுமக்களின் உதவியை நாடுவதற்கான தீர்மானம் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டதோர் நடவடிக்கை ஆகும் என இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: செம்மணி சித்துபாத்தி மற்றும் கொக்குத்தொடுவாய் கூட்டுப்புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொதுமக்களின் உதவியை நாடும் தீர்மானம், இலங்கையில் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டதோர் நடவடிக்கையாகும். பல தசாப்தகாலமாக தமது அன்புக்குரியவர்களின் நிலை குறித்து அயராது, திடமாக பதில்களைத் தேடிவரும் காணாமல்போனோரின் குடும்பங்களுடன் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் உறுதியாக நிற்கிறது. உண்மை மற்றும் நீதியைப் பின்தொடர்வதில் அவர்களது தாங்கும் வல்லமை ஒரு தார்மீக வழிகாட்டியாகத் தொடர்கிறது. இலங்கை அரசாங்கம், குறிப்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தமது பணியை வெளிப்படைத்தன்மையுடனும், விரைவாகவும், காணாமல்போனோரின் குடும்பங்களுடனான அர்த்தமுள்ள ஆலோசனைகளுடனும் நிறைவேற்றவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/221921
-
50 மாணவர்களுக்கு குறைவாகவுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய தீர்மானம் - கல்வி, உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன
05 AUG, 2025 | 10:08 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) அரசாங்க பாடசாலைகள் மூடப்பட மாட்டாது என்றும் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) வாய்மூல விடை க்கான கேள்வி நேரத்தில், ரவி கருணாநாயக்க எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது மக்கள் பிரதிநிதிகள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு, பிரதேச செயலாளர், கிராம சேவை உத்தியோகத்தர்கள் என அனைவரும் ஒன்றிணைந்தே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறு தீர்மானங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் சில வேளைகளில் 50 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கை உள்ள பாடசாலைகளை நடத்திச் செல்வது தொடர்பிலும் ஆராயப்படும். தற்போதைய அரசாங்கம் கல்விக்கான சந்தர்ப்பங்களை விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயற்படுகிறது. பாடசாலைகளை மூடி விடுவது நோக்கம் அல்ல. அத்துடன் பாடசாலைகளை நடத்திச் செல்லும் நடவடிக்கைகளை கல்விய மைச்சினால் மட்டும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றார். https://www.virakesari.lk/article/221910 ஆரம்பக்கல்வியை 1 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்திற்குள் உள்ள பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை 3 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பாடசாலையிலும் உயர்கல்வியை 5 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பாடசாலையிலும் தான் கற்க முடியும் என சட்டம் கொண்டு வந்தால் தேசியப் பாடசாலை அல்லது முன்னணிப் பாடசாலை என்ற கற்பிதம் மாறும்!
-
செம்மணி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகள்: 200 பேர் பார்த்தும் எதுவும் அடையாளம் காட்டப்படவில்லை – சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா
Published By: VISHNU 05 AUG, 2025 | 09:56 PM செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர் என தெரிவித்த சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா எவரும் எதனையும் அடையாளம் காட்டவில்லை என்றார். செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 31 ஆவது நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் செவ்வாயக்கிழமை (5) முன்னெடுக்கப்பட்டது. அகழ்வு பணிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், புதிதாக ஆறு மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளது. நான்கு மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது. 141 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டதுடன் 130 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளது. வழமையைப் போல அகழ்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெறும். இதேவேளை செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர். புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணி முதல் மாலை 05 மணி வரையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.அவற்றை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர். எவரும் அவற்றை அடையாளம் காட்டவில்லை. தனிமனிதனோடு தொடர்புடைய சான்று பொருட்களை காட்சிப்படுத்தப்பட்டது. இனிவரும் காலங்களிலும் தனிமனிதனோடு தொடர்புடைய சான்று பொருட்கள் மீட்கப்பட்டால் அவற்றையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதேவேளை செம்மணி மனித புதைகுழி அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நடைபெற்ற ஸ்கான் பரிசோதனை தொடர்பான இறுதி அறிக்கை எதிர்வரும் மூன்று வாரத்தில் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் - என்றார். https://www.virakesari.lk/article/221920
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி மனிதப் புதைகுழி: மேலும் 6 எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டுபிடிப்பு Published By: VISHNU 05 AUG, 2025 | 09:28 PM யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்தும் செவ்வாயக்கிழமை (5) புதிதாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 04 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில், 65 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 31 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் வரையில் 65 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 40 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 04 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 130 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 141 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை இன்றைய தினம் செவ்வாய்கிழமையும் செம்மணியில் தற்போதுள்ள மனித புதைகுழிகளை விட அயலில் மேலும் மனித புதைகுழிகள் உள்ளனவா என்பதனை ஆராயும் நோக்கில், ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/221919
-
தனியறையில் சட்டக்கல்லூரி இறுதி பரீட்சையை எழுதிய நாமல் முதலில் சட்ட ஏற்பாடுகளை தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டும் - அமைச்சர் சுனில் வட்டகல
05 AUG, 2025 | 05:00 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தந்தைக்கும், சித்தப்பாவுக்கும் ஏற்றாட்போல் தீர்ப்பளிக்காத காரணத்தால் முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க சட்டவிரோதமான முறையில் பதவி நீக்கப்பட்டதை நாமல் ராஜபக்ஷ அறியாமல் இருப்பது வேடிக்கையாகவுள்ளது. தனியறையில் இருந்து சட்டக்கல்லூரி இறுதி பரீட்சையை எழுதிய நாமல் ராஜபக்ஷ முதலில் சட்ட ஏற்பாடுகளை தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டும் அதன் பின்னர் சட்ட ரீதியிலான தர்க்கங்களை முன்வைக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்ற பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, துர்நடத்தை குற்றவாளியான பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்குவதற்கு 2002 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க அலுவலர்களை அகற்றும் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அது சட்டவிரோதமானது, பாராளுமன்ற நிலையியல் கட்டளை மீறப்பட்டுள்ளது என்று நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார். தந்தை மற்றும் சித்தப்பாவுக்கு ஏற்றாட் போல் தீர்ப்பளிக்காத காரணத்தால் முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க சட்டவிரோதமான முறையில் பதவி நீக்கப்பட்டதை நாமல் ராஜபக்ஷ அறியாமலிருப்பது வேடிக்கையாகவுள்ளது. ராஜபக்ஷர்கள் எவ்வாறு சட்டத்தை செயற்படுத்தினார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். சட்டவிரோதமான முறையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தொடர்பான விவாதம் நடத்தப்படுவதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார். தேசபந்து தென்னக்கோனின் துர்நடத்தை தொடர்பில் தான் 2002 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க அலுவலர்களை அகற்றும் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் விவாதிப்பதால் நீதிமன்ற விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று சிறப்புக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தனியறையில் இருந்து சட்டக் கல்லூரி இறுதி பரீட்சையை எழுதிய நாமல் ராஜபக்ஷ முதலில் சட்ட ஏற்பாடுகளை தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டும், அதன் பின்னர் சட்ட ரீதியிலான தர்க்கங்களை முன்வைக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/221901
-
செம்மணி மனிதப் புதைகுழியின் சர்வதேச விசாரணைக்கு சோமரத்ன ராஜபக்ச தயார் : அநுரவிற்கு பறந்த கடிதம்
சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலம் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது - சபா குகதாஸ் 05 AUG, 2025 | 07:52 PM செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சிறைக்கைதியாக இருக்கும் இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்ஷ தனது மனைவிக்கு கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பல உண்மைகள் வெளிவந்தாக மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முதலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளக நீதிப் பொறிமுறையில் நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்பதை ஆதாரபூர்வமாக சுட்டிக் காட்டியுள்ளார். உதாரணமாக செம்மணியில் நிர்வாணமாக கொல்லப்பட்ட தமிழர்களின் கொலைக்கு பொறுப்பான இராணுவ உயர் அதிகாரிகள் சுதந்திரமாக வெளியில் இருப்பதாகவும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடலங்களை மண்ணில் புதைத்தவர்கள் தண்டனை அனுபவிப்பதாகவும் வெளிப்படுத்திய விடயம் உள் நாட்டு நீதி என்பது ஏமாற்று நாடகம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியான தமிழ் இனப்படுகொலையை அரங்கேற்றியது இலங்கை அரசின் உயர்மட்டஇராணுவ அதிகாரிகளும் அவர்களை வழிநடத்திய ஆட்சியாளர்களும் என்பதை சோமரத்னவின் செம்மணி தொடர்பான வாக்குமூலம் உறுதி செய்கின்றது. யுத்த காலத்தில் தொடர்ச்சியாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் இலங்கை அரசபடைகளினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. யுத்தகால இராணுவ முகாம்கள் மற்றும் இறுதிப் போரின் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிரந்தரமாக அமைக்கப்பட்ட இராணுவ முகாம்கள் யாவும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகளாக இருக்கும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. உள்நாட்டு விசாரணைகள் மற்றும் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் நீதிமன்ற விசாரணைகள் என்பன பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான நீதியை வழங்கமாட்டாது என்பதுடன் பாதிப்புக்கள் யாவற்றுக்கும் சோமரத்ன ராஐபக்சவின் மனைவியின் கடிதத்தில் சுட்டிக் காட்டிய சர்வதேச நீதிப் பொறிமுறையே தீர்வாகும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/221916
-
செம்மணி மனிதப் புதைகுழி: நீதி அமைச்சின் அரசியல் தலையீடும் அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
செம்மணி மனிதப் புதைகுழி: நீதி அமைச்சின் அரசியல் தலையீடும் அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Published By: VISHNU 05 AUG, 2025 | 06:48 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் நீதி அமைச்சு கடுமையான முறையில் அரசியல் ரீதியாக தலையீடு செய்கின்றது. நீதி அமைச்சின் செயலாளர் அகழ்வில் ஈடுபடுவோருடன் நேரடித்தொடர்பில் இருக்கின்றார். தடயப்பொருட்கள் அடையாளப்படுத்தப்படும் இடத்தின் வாசலில் சி.ஐ.டி.யினர் அமர்ந்திருந்த மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுகின்றனர். இந்த அரசாங்கத்திற்கும் மற்றவர்களுக்குமிடையில் இனம் சார்ந்த விடயங்களில் ஒரு வித்தியாசமும் கிடையாது. இது தமிழனுக்கு நடக்கின்றது, அதனால் இது அரசியல் தலையீடு அல்ல. என்பதே இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) நடைபெற்ற பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நான் இந்த விவாதத்தில் உரையாற்ற தனது நேரத்தை தந்த இ.தொ.க. செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானுக்கு நன்றி. அவரது அம்மம்மாவின் இறுதிக்கிரியைக்காக வெளிநாடு சென்றுள்ளார். தென்னக்கோன் விடயத்தில் அவரினதும் எமது நிலைப்பாடு ஒன்றாகவே இருக்கின்றது நாம் இந்த தீர்மானத்துக்கு பூரண ஆதரவு வழங்குகின்றோம். தேசபந்து தென்னக்கோன் ஒரு அரசியல் முகவர், அவருடைய காலம் முழுவதும் அரசியல் வாதிகளுக்கு முகவராக செயற்பட்ட வரலாறு கொண்ட ஒருவர். அந்த வகையில் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே ஒரு அரசியல் பின்னோக்கத்தோடு அணுகப்பட வேண்டும் என்பதில் இந்த பாராளுமன்றத்தில் இருக்கக்கூடிய அவரை தங்களின் முகவராக பயன்படுத்திய தரப்பை தவிர அனைத்து தரப்புக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேவேளை இந்த தேசபந்து தென்னக்கோன் என்ற நபர் மட்டும்தான் அவ்வகையான அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு கலாசாரத்தில் மாட்டுப்பட்டவர் என்று எவரும் சொல்ல முடியாது. இந்த அரசாங்கம் முன்வைக்கின்ற பிரதானமான குற்றச்சாட்டு தங்களின் ஆட்சி கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆரம்பிக்க முன்னர் அதாவது கிட்டத்த்தர்ற 76 அவருடங்களாக, பிரித்தானியர் இந்த தீவை விட்டு வெளியேறிய நாளிலிருந்து ஆட்சியில் இருந்த அனைத்து தரப்புக்களும் தங்களின் அதிகாரங்களை பயன்படுத்தி அரசு உத்தியோகஸ்தர்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்து அவர்களை தங்களின் அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்தி ஒட்டுமொத்த அரச இயந்திரமே அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு நிலையில் இருப்பதாக் இந்த அரசாங்கம் ஒவ்வொரு தடவையும் குற்றம்சாட்டுகின்றது. அது உண்மை. ஆனால் இந்த அரசாங்கம் இன்று தேசபந்து தென்னகோனுக்கு எதிராக எடுக்கின்ற நிலைப்பாட்டுக்கு காரணம் என்னவெனில் அவர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அல்லது தேசபந்து தென்னகோனினால் எந்த வித நன்மையும் பெறமுடியாது போயிருக்கும். நான் ஏன் இதனைக்கூறுகின்றேன் என்றால் இந்த அரசாங்கமும் உண்மையில் அரசு உத்தியோகஸ்தர்கள் அரசியல் மயப்படுத்தப்பட்ட நிலையில் சேவை செய்யக்கூடிய நிலையில் இருக்ககூடாது என்ற நிலைப்பாட்டில் இல்லை என்பதனை சுட்டிக்காட்டுவதற்கும் நிரூபிப்பதற்குமாகவே நான் இந்த விடயத்தை எடுத்துக்காட்டுகின்றேன். அரசாங்கங்கள் அரச உத்தியோகஸ்தர்களை தங்களின் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றபோது அந்த அரசாங்கம் மாறுகின்றபோது மாறிய அரசாங்கம் அந்த நபர்களை குறிவைத்து அவர்களை அகற்றுவதற்கு எடுக்கும் செயற்பாடுகளை இந்த சபையில் உள்ள அனைவரும் வரவேற்பார்கள். நாமும் வரவேற்போம். ஆனால் ஒரு அரசு அதாவது அரசாங்கங்கள் அல்ல ஆட்சிக்கு வரக்கூடிய அனைத்து அரசாங்கங்களும் ஒரு அரசின் கொள்கையாக குறிப்பிட்ட ஒரு தரப்பை குறிவைக்கின்றபோது அது ஒரு அரசின் கொள்கையாகும். இந்த நாட்டில் வாழும் ஒரு இனத்தை குறிவைத்து அவர்களுக்கு எதிராக வேலை செய்கின்றபோது அதற்கு என்ன பரிகாரம்? அதற்கு என்ன பதில்? தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பொலிஸ் சேவையில் இருக்கின்றவர்களும் இராணுவத்தில் இருக்கின்றவர்களும் படுமோசமாக குறிவைக்கப்படுகின்றார்கள். இதுதான் எமது வரலாறு.தேசபந்து தென்னகோன் தெற்கு அரசியலில் இருப்பதால் இன்று உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதால் நீங்கள் அவரை குறி வைக்கின்கிறீர்கள். ஆனால் அவரை மட்டும் குறிவைப்பதால் நீங்கள் இந்த நாட்டினுடையை அடிப்படை புற்றுநோயாக இருக்கின்ற அனைத்து விடயங்களிலும் தலையீடு செய்கின்ற அரசியல் புற்றுநோயை நீங்கள் நீக்கப்போவதில்லை. அப்படி நீங்கள் நீக்குவதற்கு முயற்சித்தாலும் கூட தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சனைகள் தமிழ் மக்கள் இன்று சந்திக்கின்ற அநீதிகளுக்கு நீங்கள் ஒருபோதும் நீதியை வழங்கப்போவதில்லை. ஏனெனில் நீங்களும் தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு செயற்படுகின்ற ஒரு தரப்பாகவே இருக்கின்றீர்கள். செம்மணியை எடுத்துக்கொண்டால் மனித புதைகுழி அகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 130 எலும்புக்கூடுகளுக்கு மேலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நீதிவான் ஒரு கட்டளையிட்டுள்ளார். அதாவது அங்கு கண்டுபிடிக்கப்பட்ட தடயப் பொருட்களை பொதுமக்களுக்கு முன்பாக வைத்து அவர்கள் அதனை அடையாளப்படுத்துவதற்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார்.. செவ்வாய்க்கிழமை (5) இந்த விவாதம் நடக்கின்றநிலையில் செம்மணியில் பொது மக்களை அழைத்து அந்த தடயப்பொருட்களை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த நிமிடத்தில் நீதி அமைச்சின் செயலாளர் அங்கு வேலை செய்து கொண்டிருக்கின்ற, இந்த எலும்புக்கூட்டு அகழ்வு செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கின்றார். இதனை நான் பொறுப்புடன் கூறுகின்றேன். இது அரசியல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் அல்லவா? இது அரசியல் தலையீடு இல்லையா? இது ஒரு அழுத்தத்தை கொடுக்கும் விடயம் அல்லவா? நீதிமன்றம் நடத்துகின்ற ஒரு செயற்பாட்டில் உங்களுக்கு தகவல் வேண்டும் என்றால் நீங்கள் நீதிமன்றத்திற்குத்தான் போக வேண்டும். நீதி அமைச்சு அங்கு வேலை செய்து கொண்டிருப்பவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வது அரசியல் தலையீடு. அதை நீங்கள் செய்யலாமா? நான் பொறுப்புடன்தான் கூறுகின்றேன். நீதி அமைச்சு செயலாளர்தான் இவ்வாறு செயற்படுகின்றார். நான் மிகவும் மதிக்கும் அம்மணி அவர். இப்படி அவர் செயற்படுவார் என நான் ஒரு போதும் நினைக்கவில்லை. ஆனால் அது நடக்கின்றது. இன்று யாழ்ப்பாணத்தில் செம்மணி தடயப்பொருட்களை அடையாளம் காண வைக்கப்பட்டுள்ள இடத்தின் வாசலில் ஏ. எப்.டி.சி.ஐ.டி. யினர் இருக்கின்றார்கள். இது மக்களை மிரட்டும் விளையாட்டல்லவா? மக்கள் ஏற்கனவே பீதியில் இருக்கின்ற நிலையில் அம்மக்கள் அந்த இடத்திற்கு போகின்றபோது அவர்களை மிரட்டுகின்ற திட்டமிட்ட செயற்பாடல்லவா இது? ஆனால் இதனை நீங்கள் செய்யலாம். ஏனெனில் இது தமிழனுக்கு நடக்கின்றது. அதனால் இது அரசியல் தலையீடு அல்ல. இது என்ன நியாயம்? அரசியல் தலையீடு என்ற புற்றுநோயை நீக்க அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைக்கு எமது ஆதரவுண்டு. ஆனால் இந்த ''அரசு''தமிழ மக்களுக்கு செய்கின்ற அநியாயம் இனறைக்கும் தமிழ் மக்கள் பொறுப்புக்கூறுவதற்கு ஒரு தாகத்தோடு இருக்கின்ற நிலையில் நீங்கள் இன்றும் எமது மக்களு செய்கின்ற அநியாயத்தை மன்னிக்கவே முடியாது. இதனால்தான் நாம் திரும்பவும் கூறுகின்றோம் உங்களுக்கும் மற்றவர்களுக்குமிடையில் இனம் சார்ந்த விடயங்களில் ஒரு வித்தியாசமும் கிடையாது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாணம் சென்றிருந்தது. அகழ்வு இடங்களை கண்காணித்தது. தங்களின் கருத்துக்களை தெரிவித்தது. இவர்கள் உண்மையில் ஒரு சுயாதீனமான அமைப்பாக இருந்தால் அவர்கள் இந்த நாட்டினுடைய அரசாங்கத்துக்கு சொல்ல வேண்டிய விடயம் என்னவென்றால். நீங்கள் ரோம் சாசனத்தில் கைச்சாத்திடவில்லை. ரோம் சாசனம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றங்கள் இந்த செம்மணியில் நடந்துள்ள அநியாயம் ரோம் சாசனத்தில் இருக்கக் கூ டிய குற்றங்கள். இந்த நாட்டில் இவை குற்றங்களைக் அறிவிக்கப்படாத நிலையில் சர்வதேச குற்றவியல் விசாரணை மட்டும்தான் ஒரு இந்த அநியாயங்களுக்கு நீதியக்கொடுக்கும் என்ற அறிக்கையைத்தான் முன்வைக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனை சொல்லாமல் ஊடகங்களுக்கு தயவு செய்து உணர்வு பூர்வமாக இந்த விடயங்களை வெளிக்கொண்டு வராதீர்கள் என புத்திமதி கூறுகின்றார்கள். அதனால்தான் நான் கூறுகின்றேன் ஒரு அரசே ஒரு இனத்துக்கு எதிராக இருக்கின்றபோது அந்த இனத்துக்கு நீதி இந்த அரசு கட்டுமானங்கள் ஊடாக கிடைக்காது என்பதை இன்றாவது 130 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையிலாவது ஏற்றுக்கொண்டு நடந்து கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/221912
-
அதிகரிக்கும் குடும்பக்கடன்கள் : ‘கிராம மட்டத்திலிருந்தான நிதிக் கல்வி மீட்சிக்கு வழிசமைக்கும்’
05 AUG, 2025 | 10:09 AM ஆர்.ராம் 2022இல் இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக தானே அறிவித்ததன் பின்னரான சூழலில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் உள்ள மக்கள் கூட்டத்தினர் ஏதோவொரு வகையில் நெருக்கடிக்குள் வாழுகின்ற நிலைமைகள் தோற்றம் பெற்றிருந்தன. குறித்த அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டுகளாகின்றபோதும் சாதாரண மக்கள் மத்தியில் மீளெழுச்சி அடைந்த நிலைமைகள் இன்னமும் தோற்றம் பெற்றிருக்கவில்லை என்பதே கள யதார்த்தமாக உள்ளது. கள ஆய்வுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் உள்ள குடும்பங்கள் ஏதோவொரு வகையில் தமது செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்காக போராடிக்கொண்டிருக்கும் நிலைமைகள் தொடர்கின்றன. குறிப்பாக, வாழ்வாதாரத்துக்கான போராட்டம் நீண்டதாக இருப்பது முக்கியமான விடயமாகின்றது. நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் குடும்பக் கடனும், அதன் மூலமான வறுமை மட்டமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த ஆண்டில் உள்நாட்டு வறுமை வீதம் 23-26 சதவீதம் வரையில் காணப்பட்டதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. குறிப்பாக கிராமப்புற மற்றும் சிறுபான்மை மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் இந்த தாக்கம் மேலும் தீவிரமாக உள்ளதாக உலக வங்கியின் அறிக்கையிலும், தனியார் ஆய்வு அறிக்கைகளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்த நிலைமையில் இருந்து மீண்டெழ முடியாமைக்கான பிரதான காரணமாக ‘நிதிக்கல்வி’ கிராமிய மட்டங்களுக்கு அவசியம் என்ற விடயம் வெகுவாக உணர்த்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவை குடும்பக் கடன்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக ‘நிதி கல்வி’ போதியளவில் காணப்படாதுள்ளமை அடையாளப்படுத்தியுள்ளன. குறிப்பாக, பெண்கள் மற்றும் கிராமப்புற மக்கள் உத்தியோகபூர்வமான வங்கி சேவைகளை பயன்படுத்துவதில் பின்தங்கி இருப்பதோடு அதிக வட்டிவீதத்தை வசூலிக்கும் தனியார் கடன் தருநர்களிடம் சிக்கிக்கொள்கின்ற நிலைமைகளையும் அவதானிக்க முடிகின்றது. இதனை வலுப்படுத்தும் வகையில், குடும்பப் பாதிப்புகளுக்கு நிதி கல்வியறிவின்மை ஒரு முக்கிய காரணியாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா குறிப்பிட்டுள்ளதோடு வீட்டுக்கடன் பல பரிமாண பாதிப்புகளுக்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக இருப்பதால், கடன் வாங்குபவர்களிடையே, குறிப்பாக பெண்களிடையே நிதி கல்வியறிவு இல்லாதது ஒரு முக்கிய கவலையாக உள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் குடும்பத்தை மையப்படுத்தி பெண்கள் பெற்றுக்கொள்கின்ற கடன்கள் பெண்களின் நிலையற்ற சூழல்களை ஏற்படுத்தி தொடர்ச்சியாக நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதற்கான மூலகாரணியாக இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் 2023ஆம் ஆண்டுக்கான பல பரிமாண பாதிப்புக் குறியீட்டு அறிக்கையின் தரவுகள், இலங்கையில் 33.4 சதவீதமான மக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் 2024ஆம் ஆண்டுக்கான பல பரிமாண பாதிப்புக் குறியீட்டு அறிக்கையின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் 57 சதவீதம், வடக்கு மாகாணத்தில் 41 சதவீதம் மற்றும் வட மத்திய மாகாணத்தில் 40 சதவீதம் மக்கள் கடன் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமையானது, அப்பகுதி மக்கள் வறுமை வட்டத்திலிருந்து வெளியே வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளமையை வெளிப்படுத்தி நிற்பதோடு அவர்களுக்கு கடனில் இருந்து மீள்வதற்கான வழிகட்டலின் அவசியத்தை வெளிப்படுத்துகிறது. களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானத்துறையின் பேராசிரியர் நவரத்ன பண்டா கருத்து வெளியிடும்போது, “உள்நாட்டில் குடும்பக்கடன் நிலையும், வறுமைக் கோட்டுக்குள் வாழும் மக்களின் நிலைமையும் உயர்வாகவே காணப்படுகின்றது. இதற்கு நிதிக் கல்வி நிலை மிகவும் குறைவாக இருக்கின்றமையே பிரதான காரணமாக உள்ளது” என்று குறிப்பிட்டார். அத்துடன், அவர் “கிராமப்புறங்களில் வங்கி சேவைகளைப் பற்றிய அறிவின்மை காரணமாக மக்கள் தனியார் கடனாளிகளிடம் கடன் வாங்கும் சூழல் உருவாகியுள்ளது. பல விவசாயிகள் விதை, உரம் முதலியவற்றிற்காக கிராமிய தனியார் நிறுவனங்களில் அதிக வட்டியில் கடன் வாங்குகிறார்கள். வங்கிகளில் கடன் பெறுவதற்கு ஆவண நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள் கடினமாக இருப்பதாலேயே அவர்கள் உத்தியோக பூர்வமான அமைப்புகளை தவிர்க்கின்றனர்” என்றும் சுட்டிக்காட்டினார். இலங்கை அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் வறுமைக்கோட்டுக்குள் உள்ள பொதுமக்களை பாதுகாப்பதற்காக ‘அஸ்வெசும’ திட்டத்தை முன்னெடுகின்றது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மாதாந்த நிதி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த ஆண்டின் நடுப்பகுதி வரையில் 622,495 பேர் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கையானது தற்போது 1.7மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரச தரவுகள் குறிப்பிடுகின்றன. குறித்த சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் பயனாளிகள் தெரிவில் இன்னமும் சிக்கல்கள் தீர்க்கப்படாத நிலைமைக்ள நீடிக்கின்றன. இதற்கு அரசியல், அரச அதிகாரிகளின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக அமைந்திருக்கின்றது. இதேநேரம், ‘அஸ்வெசும’ பயனாளிகளின் உதவித்தொகை பயன்பாடு தொடர்பான அண்மைய ஆய்வுகளின்படி, குறித்த தொகையானது பெரும்பாலான நேரங்களில் அன்றாடச் செலவுகளுக்கே பயன்படுத்தப்படுகிறமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இத்தொகையைப் பெறுகின்ற பயனாளிகளில் 78 சதவீதமானவர்கள் அதனை உணவுக்கே செலவிடுகிறார்கள் என்பதோடு இதுவொரு நீண்டகால தீர்வுத்திட்டம் அல்ல என்பதும் உறுதியாகின்றது. மறுபக்கத்தில் இலங்கை மத்திய வங்கியானது, 2024-2028 காலப்பகுதிக்கான நிதிக்கல்வி வழி வரைபடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘வங்கியோடு நட்பு’ திட்டம் என்ற தொனிப்பொருளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டமானது, கிராமப்புற மக்களுக்கு வங்கி சேவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்காக கொண்டுள்ளது. விசேடமாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியன இணைந்து பெண்கள் தலைமையிலான தொழில் முயற்சிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதி கல்வியை ஊக்குவிக்கும் செயற்றிட்டங்களையும் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளன. வடக்கு மாகாணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட நிதி கல்வி பயிற்சியின் பின், 74சதவீதம் பேர் குறைந்த வட்டி வங்கிக் கடன்களை பயன்படுத்தி அன்றாட வாழ்க்கையையும், தொழில் முயற்சிகனையும் ஆரம்பித்துள்ளனர். இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, உள்நாட்டில் நிதி அறிவு இருந்தாலும் நிதிப் பழக்கவழக்கங்களில் குறைபாடுகள் இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளதோடு மோசமான செலவழிப்பு பழக்கம், குறைவான சேமிப்பு மற்றும் நிதி மோசடிக்கு ஆளாகும் நிலைமைகள் தொடர்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டுள்ளார். இதேநேரம், சமூக பாதுகாப்பு அமைச்சர் உபாலி பன்னிலகே, தற்போது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சிகள் செயல்படுத்தப்பட்டாலும், நிதிக் கல்வி குறித்த தனித்துவமான திட்டங்கள் எதுவும் உள்நாட்டில் இல்லை என்பதே முக்கிய குறைபாடாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். விசேடமாக, அமைச்சர் உபாலி பன்னிலகே இளைஞர், யுவதிகளின் பாதுகாப்பு சமூக மீட்சிக்கு வழிசமைக்கும் என்பதையும் வறுமையிலிருந்து பெண்களின் மீட்சி சமூக மேம்பாட்டின் அடித்தளமாக அமையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அண்டை நாடான இந்தியாவில் ‘மகிளா சக்தி மிஷன்’, வங்கிக் கணக்குகளை திறப்பதன் மூலமும் குறைந்த வட்டி தொழில் முனைவு கடன்களை வழங்குவதன் மூலமும் கிராமப்புறங்களில் கடன் பெறும் நிலைமையானது 22 சதவீதமாக குறைந்திருக்கின்றது. பங்களாதேஷில் கிராம வங்கிகளில் சிறப்பு திட்டங்கள் ஊடாக பெண்களின் வருமானத்தை ஆண்டு 37 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டது. வியட்நாமில் கடன் கடன்பெறும் நிலைமையானது 40 சதவீதமாக குறைந்ததோடு 5 ஆண்டுகளில் வங்கி கணக்குகள் 35 சதவீதமாக அதிகரித்தன. அந்தவகையில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், இலங்கை மத்திய வங்கயின் தரவுகளும் இந்தியா உள்ளிட்ட முன்னுதாரணங்களும் ஒருங்கிணையும் போது, உள்நாட்டில் குடும்பங்கள் கடன்பொறியில் சிக்கும் நிலைமைகளை ஒழிக்க முடியும் என்பதோடு நிலையான நிதி கல்வி மற்றும் விரிவான நிதி விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலமாக சமூகப் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முடியும். https://www.virakesari.lk/article/221841 கிராம அபிவிருத்தி சங்கங்களூடாக சுழற்சிமுறைக் கடன் திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. எமது கிராமத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் பெற்றால் மாதாந்தம் 5250 ரூபா வீதம் பத்து மாதத்தில் 52500 ரூபாய் கட்டி முடித்தால் மீள ஒரு லட்சம் ரூபா கடன் எடுக்கலாம், மாதாந்தம் 10500 ரூபா வீதம் பத்து மாதத்தில் 105000 ரூபா கட்டி முடியும். தேவை ஏற்பட்டால் மீளவும் பெற விண்ணப்பிக்கலாம்.
-
போரால் உருக்குலைந்த எமது சமூகக் கட்டமைப்பின் காரணமாக முதியோர் காப்பங்கள் தேவையாகவுள்ளன - வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு!
Published By: DIGITAL DESK 2 05 AUG, 2025 | 04:59 PM போரால் உருக்குலைந்த எமது சமூகக் கட்டமைப்பின் காரணமாக முதியோர் நலக் காப்பங்கள் காலத்தின் தேவையாகவுள்ளன. உயிர் தந்த பெற்றோரை பராமரிப்பது பிள்ளைகளின் பொறுப்பாகவுள்ளபோதும் அது இன்றைய சூழலில் சாத்தியம் குறைந்த ஒன்றாக மாறிச் செல்கின்றது. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். பூந்தோட்டம், கோவிற்கடவை, துன்னாலை மத்தியில் 'கரவை நலவாழ்வு காப்பகம்' வடக்கு மாகாண ஆளுநரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை (05) திறந்து வைக்கப்பட்டது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர், புலம்பெயர் தமிழர்களில் பலர் இங்கு முதலிடுகின்றார்கள். அவர்களில் சிலர் முதலீடு செய்வதன் ஊடாக உழைத்துச் செல்ல விரும்புகின்றார்கள். பலர் அந்த முதலீடுகள் ஊடாக கிடைக்கும் உழைப்பையும் இங்கேயே திரும்பவும் முதலீடு செய்கின்றார்கள். இவ்வாறான சமூகத்துக்குத் தேவையான காப்பகங்களுக்கு முதலீடு செய்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இதைச் செய்த கதிரவேலு மனோகரன் அவர்களுக்கு வடக்கு மக்கள் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேநேரம், புலம்பெயர் தேசங்களிலிருந்து உதவிகளைச் செய்த பலர் இங்குள்ளவர்களால் ஏமாற்றப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அன்றிருந்த அரசாங்களும் அப்படியிருந்தததால் மக்களும் அப்படியிருந்தார்களோ தெரியவில்லை. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்று சொன்னது சரியாகத்தான் கடந்த காலங்களில் இருந்தது. இன்று கணவன், மனைவி இருவரும் பணிக்குச் செல்கின்றார்கள். அவர்களின் பிள்ளைகளை பராமரிப்பதற்கு பெற்றோர் தேவையாக இருக்கின்றனர். பெற்றோர்கள் இயங்கு நிலையில் இருக்கும் வரையில் வீட்டில் வைத்திருக்கும் பிள்ளைகள், அவர்களது இயங்குதிறன் குறைந்ததும் வெளியில் விடுகின்றனர். அப்படியான பெற்றோருக்கு இப்படியான காப்பகங்கள் அரணாக அமையும். இப்போது நன்றி மறந்தவர்களாகி வருகின்றோம். எங்களை ஆளாக்கிய பெற்றோர்களை நாங்கள் இலகுவாக பராமரிக்க மறந்து விடுகின்றோம். பெற்றோர் அதாவது எமது மூத்தோர் மிகப்பெரிய சொத்து. அனுபவத்தைப்போன்ற சிறந்ததொரு ஆசான் உலகில் எதுவுமில்லை. அத்தகைய அனுபவசாலிகள் எங்கள் மூத்தோர் - பெற்றோர்தான். அவர்களை இன்று எமது இளம் சமூகம் இழந்து வருகின்றது. அதேநேரம், முதியவர்களுக்கு மரியாதை வழங்கத் தெரியாதவர்களாகவும் நாங்கள் மாறிவருகின்றோம். இன்றைய இளம் பராயத்தினருக்கு சமூகம் என்றால் என்னவென்று தெரியாத சூழல்தான் இருக்கின்றது. அவர்களது வீடுகளுக்கு அருகில் இருக்கும் சுற்றத்தினர் யார் என்பதே தெரியாது. இந்தப் பிள்ளைகள் புத்தகப்பூச்சிகளாகக் கூட வளரவில்லை. 'ரியூசன்' பூச்சிகளாகவே வளர்க்கப்படுகின்றார்கள். மற்றையவர்களுக்கு உதவத் தெரியாதவர்களாக வளர்கின்றார்கள். அதனால்தான் இவ்வாறான காப்பகங்கள் எமது சமூகத்துக்குக் கூட அத்தியவசிய தேவையாக மாறி வருகின்றது என்றார். https://www.virakesari.lk/article/221900
-
ஈகை பற்றிய புது விளக்கம்
கோவை புத்தக திருவிழா - தாத்தா - ஈகை பற்றிய புது விளக்கம் வருடா வருடம் மகனுக்கும் மகளுக்கும் புத்தகத் திருவிழாவில் சுமார் 5000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கும் வழக்கம் உண்டு. இந்த வருடம் மகன் படிக்கச் சென்றிருப்பதால், மகள் கோவை கொடிசீயாவில் நடந்து கொண்டிருந்த புத்தகத் திருவிழா 2025க்கு போக வேண்டுமென்று சொல்லி இருந்தார். ஞாயிற்றுக் கிழமை ஹாஸ்டலுக்குச் சென்று, அவரை அழைத்துக் கொண்டு நேரடியாக புத்தகத் திருவிழாவுக்குச் சென்று விட்டோம். இந்த வருடம் புத்தக விற்பனை மந்தமாக இருக்கிறது எனச் சொன்னார்கள். அரங்குகளில் கூட்டம் இல்லை. பள்ளி மாணவர்களை அழைத்து வந்திருந்தார்கள். ஆளுக்கொரு தின்பண்டப் பையைக் கொடுத்து அதைக் கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு புத்தக கடைக்குள்ளும் சென்று வந்து கொண்டிருந்தார்கள். மகள் படிப்பதற்கு நல்ல நாவல் பரிந்துரைக்கவும் எனக் கேட்டார். கி.ராஜநாராயணனின் நாவல், சிறுகதை தொகுப்பு ஒன்றினைப் பார்த்தேன். வாங்கிக் கொடுத்தேன். முதலில் அகிலனின் சித்திரப்பாவையை எடுத்தேன். அதை விட மண்ணின் வாழ்வியல் தடத்தைப் பதித்த எழுத்துகள் மகளுக்கு தெரிய வேண்டுமென்ற ஆவலில், வாங்கிக் கொடுத்தேன். அடுத்து பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மடத்தின் புத்தக் கடைக்குச் சென்று நிவேதிதா பற்றிய புத்தகங்களை வாங்கிக் கொடுத்தேன். பின்னர் மகள் பல ஆங்கில புத்தகங்களை வாங்கினார். இறுதியில் முத்து காமிக்ஸ் சென்றோம். வழமை போல பல புத்தகங்களை வாங்கினார். நான் வீல்சேரில் அமர்ந்திருந்தேன். அப்போது அரசுப் பள்ளி மாணவன் ஒருவன் ஒரு சிறு காமிக்ஸ் புத்தகத்தை வாங்கினான். 20 ரூபாய் இருக்கும். அவனிடம் அது என்ன காமிக்ஸ் என்று காட்டச் சொன்னேன். ”தாத்தா, அப்பாகிட்டே 200 ரூபாய் கேட்டேன். அவர் 100 ரூபாய் தான் கொடுத்தார். காமராஜர் வாழ்க்கை வரலாறு வாங்கலாம்னு வந்தேன். ஆனால் அது விலை அதிகமாக இருக்கு, அதனால இதை வாங்கினேன்” என்றான். மகளுக்கு அவன் என்னை தாத்தா என்று சொல்லுகிறானே என ஒரே சந்தோஷம். அவனிடம் இங்கே இருக்கும் காமிக்ஸ் புத்தகத்தில் உனக்குப் பிடித்ததை வாங்கிக் கொள் என்றேன். மறுத்தான். மகள் அவனை வற்புறுத்தி ஒரு காமிக்ஸ் புத்தகத்தை வாங்கிக் கொடுத்தாள். அவனை அழைத்துக் கொண்டு மீனாட்சி புத்தகக் கடைக்குச் சென்று, காமராஜரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எடுத்து அவனிடம் கொடுத்த போது வாங்கவே மாட்டேன் என சொல்லி விட்டான். விலை அதிகமாம். அந்த புத்தகத்தின் விலை 400 ரூபாய். ”ஏற்கனவே காமிக்ஸ் வாங்கிக் கொடுத்திட்டீங்க, இது வேணாம்” என்று மறுத்தான். அவனை சரி செய்து புத்தகத்தை வாங்கி அவன் கையில் கொடுத்து விட்டு, ”நல்லா படி” எனச் சொல்லி விட்டு வந்தேன். அவன் மீண்டும் ”நன்றி தாத்தா” என்றான். மகளுக்கும், மனைவிக்கும் ஒரே சிரிப்பு. அப்படியே ஒவ்வொரு புத்தக கடையாக வலம் வந்து கொண்டிருந்த போது, சுப அறவாணனின் மனைவி, அவரின் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள் எனச் சொல்லி கேட்டார். அவர் கொடுத்த புத்தகத்தை வாங்கி புரட்டிக் கொண்டிருந்த போது, அருகில் ஒரு பெரியவரும், அவரின் பேத்தியும் கையில் நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தனர். அந்த அம்மா என்னிடம் ”அய்யா, இவரைப் பாருங்கள், இந்த புத்தகங்களை சிறைச்சாலை வாசிகளுக்கு படிக்க வாங்கிக் கொண்டிருக்கிறார்” என்றார். குள்ள உருவம், நரைத்த தலைமுடி, கனத்த கண்ணாடி, அருகில் அவரின் பேத்தி, அவர்கள் இருவரையும் பார்த்தேன். மனம் நெகிழ்ந்தது. நுழைவாயிலின் ஒரம் சிறைச்சாலை வாசிகளுக்கு புத்தகங்கள் தானம் செய்ய கேட்டு, ஒரு பாக்ஸ் இருந்ததைப் பார்த்தேன். நல்ல இதயங்களும், நான்கு பேருக்கு உதவ வேண்டுமென்ற நல்லவர்களும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தனக்குத் தேவையான புத்தகங்கள் கிடைத்ததில் மகளுக்கு நிரம்பவும் சந்தோஷம். நான் கலீல் ஜிப்ரானின் புத்தகங்கள் சிலவும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் ஒரு புத்தகமும், தினவு இதழ் ஒன்றையும் வாங்கிக் கொண்டு வீடு வந்து விட்டேன். அந்த அரசுப் பள்ளி மாணவனைப் பற்றிய நினைவு வந்தது. பசங்க வேலைக்குச் சென்றதும், வருடம் தோறும் கொஞ்சம் பணத்துடன் புத்தக விழாவுக்குச் சென்று பசங்களுக்கு புத்தகங்கள் வாங்கித் தர வேண்டுமெனெ நினைத்துக் கொண்டிருந்த போது, கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும் புத்தகத்தைப் பிரித்துப் படித்தேன். ”உன்னைக் காட்டிலும் எனக்கு மிகவும் தேவையானதை எனக்கு கொடுப்பது அல்ல ஈகை, என்னைக் காட்டிலும் உனக்கு மிகவும் தேவையானதை எனக்குத் தருகிறாயே அது தான் ஈகை.” மண்டையில் சுத்தியலால் தட்டியது போல வலித்தது. அடச்சே, இது என்ன இப்படி சொல்லி இருக்கிறாரே என்ற எண்ணமும், தொடர்ந்து பல நினைவுகளும் ஊடாடின. தமிழர் வரலாற்றில் தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்று சொல்லி இருக்கிறார்கள். பாத்திரம் அறிந்து தானம் செய் என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதை ஏன் சொன்னார்கள் என்பதற்கான காரணங்கள் இருக்கலாம். இவை எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விடும் வார்த்தைகள் கலீல் ஜிப்ரான் சொன்னது. மகாபாரதத்திலே கர்ணன் தான் செய்த புண்ணியங்களை கூட தானம் செய்திருந்தாலும், அன்னதானம் செய்யாத காரணத்தினாலே, அவனுக்கு சிவலோகத்தில் அனுமதி கிடைக்காமல், வைகுண்டத்திலே அனுமதி கிடைத்தது என்றுச் சொல்வார்கள். தர்மத்தையே பெயராக கொண்ட தர்மத்தில் சிறந்தவன் தர்மன் என்றெல்லாம் படித்திருக்கிறோம். இப்படி ஈகையிலும் கூட வகைகள் உள்ளன. ஆனால் தமிழர்கள் இவை எல்லாவற்றிலும் முன்னுதாரணமாக இருப்பதும், கலீல் ஜிப்ரான் என்ற மேலை நாட்டுக்கார எழுத்தாளரின் வார்த்தைகள் எழுதப்படும் முன்பே, அவர்கள் செயல்படுத்தியதும் நினைவிலாடியது. தனக்குத் தேவையான தேரை, படர வழியின்றி காற்றில் அலைந்து கொண்டிருந்த முல்லைக் கொடி படர்ந்து தழைக்கக் கொடுத்து விட்டு, நடந்து வந்தவர் பாரி வள்ளல் என்ற தமிழ் மன்னன். கர்ணன் என்ற புராண கதைப் பாத்திரம் கூட தமிழ் மன்னனிடம் தோற்று விட்டது அல்லவா? பாரி வள்ளல் தன்மைக்கு முன்னால் நாமெல்லாம் செய்யும் ஈகை ஈகையா? தனக்குத் தேவையானதை செடிக்கு தானமளித்து விட்டு வரும் அரசனின் அப்போதைய மனநிலை நமக்கு வராது. கணக்கு வழக்குகள் பார்த்துதான் ஈகை செய்வோம். அரசன் செய்வான், நம்மால் முடியுமா? என்று தோன்றும். அதுவல்ல இங்கே காரணம் - அந்த நொடியின் மனநிலை. அவ்வளவுதான். * * * உலகில் சொல்லப்பட்ட எல்லா நாகரீகத்தினையும் விட, உயர்ந்த நாகரீகத்தையும், பண்பாட்டையும் கொண்ட தமிழர்கள் கீழடி நாகரீகத்தை வெளியிட மறுத்து விட்டார்கள் இந்திய ஒன்றிய மோடி அரசு. அதிகாரங்கள் மாறும் போது, தடை செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற அறம் எப்போதும் விழித்திருக்கும். யாரும் இங்கே தப்பவே முடியாது. செய்யும் செயலின் பலன்கள் அவரவரைச் சார்ந்தது. வளமுடன் வாழ்க. 29.07.2025 https://thangavelmanickadevar.blogspot.com/2025/07/blog-post_29.html
-
ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிடுவதை நிறுத்தாவிட்டால் திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் - சீமான்
மேலுள்ள திரை விமர்சனத்திரியில் மேலும் தகவல்கள் இருக்கலாம் அண்ணை.
-
தமிழ்நாட்டில் குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ய காரணம் என்ன?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று (ஆக.05) பரவலாக மழை பெய்துள்ளது (கோப்புப் படம்) 59 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் குறைந்த நேர இடைவெளியில் அதிக மழை பதிவாவதை கடந்த சில நாட்களில் காணமுடிந்தது. இதற்கான காரணம் என்ன? தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 4) பரவலாக மழை பெய்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்திருந்தது. இதனை அடுத்து குறிப்பாக சென்னையில் தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, கிண்டி பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. கோவை மாவட்டத்திலும் நேற்று சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்துள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கோவையில் பெய்த கனமழையால் எம்.ஜி.ஆர் மார்க்கெட் பகுதியில் மழைநீர் தேங்கி, வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். விற்பனைக்காக கொண்டு வரப்படும் காய்கறிகள் மழை நீரில் மூழ்கி வீணாவதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். முழு வீச்சில் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்த மாநகராட்சி, அடுத்த முறை மழை வந்தால் வெள்ளநீர் தேங்காத அளவிற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது. நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று (ஆகஸ்ட் 5) ஒருநாள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. (கோப்புப் படம்) இதற்கிடையில் இன்று (ஆகஸ்ட் 5) நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இதனால் 20 செ.மீ அளவிற்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று ஒருநாள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க உதவி எண்களையும் அறிவித்துள்ளது. தொலைபேசி: 1077 | 0423 - 2450034/35 வாட்ஸ்ஆப்: 9488700588 கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கோவை குற்றாலம் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் பாதிப்பு எப்படி இருக்கும்? பட மூலாதாரம், Getty Images இன்று தென்தமிழக கடேலாரப் பகுதிகள், மன்னார் வைளகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் பீச்சில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டது. அலைகள் கரையை கடந்து கடைகள் மற்றும் அருகே உள்ள கோவிலையும் சூழ்ந்தன. கடல் சீற்றம் அதிகம் காணப்படுவதால் மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் யாரும் இந்த கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காரணம் என்ன? குறைந்த நேர இடைவெளியில் அதிக மழை பதிவாவதை சமீப காலங்களில் அதிகமாக காணமுடிகிறது. இதுகுறித்து தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜானிடம் கேட்டபோது, பொதுவாக குறைந்த நேர இடைவெளியில் அதிக மழை பதிவாவதற்கு மேகங்கள்தான் (Thunderstorms) காரணம் என்கிறார். "இவை எங்கெல்லாம் நகர்கிறதோ, அந்தந்த இடங்களில் மழை பொழிவு இருக்கும். இதில் 3 நிலைகள் உள்ளது. தொடக்கம் (Starting stage), முதிர்ச்சியடைதல் (Maturing Stage), வலுவிழப்பது (Weakening Stage) எனப்படும். சில சமயங்களில் காற்றின் வேகம் குறைவாக இருப்பதால், இந்த மேகங்கள் நகராமல் ஒரே இடத்தில் நின்றுவிடும். அதுதான் ஒரே இடத்தில் அதிக மழையை பெய்விக்கிறது" என விளக்கினார். படக்குறிப்பு, தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் "உதாரணமாக 2 நாட்களுக்கு முன் புதுக்கோட்டையில் 140 மி.மீ மழையும், தாம்பரத்தில் நேற்று முன்தினம் 75 மி.மீ மழையும், புதுச்சேரியில் நேற்று 100 மி.மீ மழையும் பெய்ததற்கு இதுவே காரணம்" என்றார் பிரதீப் ஜான். இதுபோன்ற மேகங்கள் பெரும்பாலும் பரவலான இடங்களில் இருக்காது எனக்கூறும் இவர், ''இது மிகவும் சாதாரணமான நிகழ்வுதான். மாதத்திற்கு இருமுறை இதுபோல் நடக்கிறது'' எனத் தெரிவித்தார். "இது பெரும்பாலும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நிகழும். இந்த மழையால் குறிப்பிட்ட நேரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்குமே தவிர இது வெள்ளமாக மாறாது" எனக் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c79l3znng2vo
-
மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
மன்னாரில் காற்றாலை கோபுரங்களுக்கு எதிர்ப்பு : இரண்டாவது நாளாக தொடரும் கடையடைப்பு போராட்டம் Published By: Digital Desk 2 05 Aug, 2025 | 01:57 PM மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக நிறுவப்படவுள்ள இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று செவ்வாய்க்கிழமை (05) இரண்டாவது நாளாக முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மன்னார் - மதவாச்சி பிரதான வீதியூடாக காற்றாலை கோபுரங்களுக்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வருவதற்கும், இரண்டாம் கட்ட காற்றாலை திட்டங்களை மன்னாரில் நிறுவுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனவும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளாரின் தலைமையில் இந்த அமைதியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மன்னார் நகரில் உள்ள ஒரு சில உணவகங்களைத் தவிர அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. மீனவர்களும் கடலுக்குச் செல்லாமல் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இரண்டாவது நாளாக நடைபெறும் இந்தப் போராட்டத்தில் அருட்தந்தையர்கள், பொது அமைப்புகள், சிவில் அமைப்புகள், மீனவ அமைப்புகள், வர்த்தகர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். நேற்று திங்கட்கிழமை ( 04) இரவு, காற்றாலை கோபுரங்களைக் கொண்டுவருவதற்காக மன்னார் சௌத்பார் பகுதியில் உள்ள வீதிகள் திடீரென புனரமைக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால், மக்களின் கடுமையான எதிர்ப்புக் காரணமாக அந்தப் பணிகள் உடனடியாக இடை நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221874
-
ஏமனில் பணம் கொடுத்தால் மரண தண்டனையிலிருந்து தப்பி விடலாமா? நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி என்ன?
'நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு இல்லை' - இந்தியர்களின் கருத்தால் மஹ்தி குடும்பத்தின் கோபம் அதிகரித்துள்ளதா? கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்று, ஏமனின் சனா நகரின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிமிஷாவிற்கு 'மன்னிப்பு' வழங்க முடியாது என மஹ்தியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். "இந்த விவகாரத்தில், சமரசம் அல்லது மத்தியஸ்தத்திற்கான எந்தவொரு முயற்சியையும் நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்" என்று ஏமனின் அட்டர்னி ஜெனரலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி குறிப்பிட்டுள்ளார். நிமிஷா பிரியாவுக்கு, கடந்த ஜூலை 16-ஆம் தேதி நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை இறுதி நேரத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதைக் குறிப்பிட்டு, "மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை விரைவாக நிர்ணயிக்க உத்தரவிட வேண்டுமென" அப்துல் ஃபத்தா கோரிக்கை வைத்துள்ளார். ஏமன் நாட்டின் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட குடும்பம் மன்னிப்பு வழங்குவது மட்டுமே நிமிஷாவை மரண தண்டனையில் இருந்து காப்பற்றுவதற்கான ஒரே வழி என அவரை மீட்க முயற்சித்து வருபவர்கள் கூறிவந்த நிலையில், 'சமரசத்திற்கு இடமில்லை' என்ற மஹ்தி குடும்பத்தினரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏமனின் அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பப்பட்ட கடிதம் அப்துல் ஃபத்தா மஹ்தி நேற்று (ஆகஸ்ட் 4) தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நீதிக்கான பாதையை நாங்கள் நன்கு அறிவோம். நாங்கள் இந்தப் பாதையை யாருடைய பாதுகாப்பின் கீழோ அல்லது அனுமதிக்காகக் காத்திருக்காமலோ, எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் அடிப்படையில்தான் தேர்ந்தெடுத்தோம். எவ்வளவு காலம் எடுத்தாலும் அல்லது எத்தனை தடைகள் இருந்தாலும், எங்கள் முடிவில் மாற்றமில்லை. இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாடு உறுதியானது. பழிவாங்கல் (Qisas- கண்ணுக்கு கண் என்ற ரீதியிலான தண்டனை) என்பதுதான் எங்கள் கோரிக்கை. வேறு எதுவும் இல்லை." என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தப் பதிவுடன் '3-08-2025' தேதியிடப்பட்ட ஒரு கடிதத்தையும் அவர் இணைத்துள்ளார். ஏமனின் அட்டர்னி ஜெனரலுக்கு எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், "குற்றவாளி நிமிஷா பிரியா மீதான கிசாஸ் (பழிவாங்கும்) மரண தண்டனையை விரைவாக அமல்படுத்துமாறு, பாதிக்கப்பட்ட தலால் அப்துல் மஹ்தியின் குடும்பத்தினர் கோரிக்கை வைக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. "ஜூலை 16ஆம் தேதி நிமிஷாவுக்கு நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரான நாங்கள், கிசாஸ் தண்டனையை சட்டப்பூர்வமாக செயல்படுத்துவதற்கான எங்கள் முழு உரிமையையும் உறுதிப்படுத்துகிறோம். சமரசம் அல்லது மத்தியஸ்தத்திற்கான எந்தவொரு முயற்சியையும் நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்." என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏமன் நாட்டு சட்டத்தின்படி, மரண தண்டனைக்கு ஒரு புதிய தேதியை விரைவாக நிர்ணயிக்க உத்தரவிட வேண்டுமென, கொல்லப்பட்ட தலால் அப்துல் மஹ்தியின் வாரிசுகள் மற்றும் அப்துல் ஃபத்தா மஹ்தி சார்பில் கோரிக்கை வைக்கப்படுவதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Abdul Fattah Mahdi/Facebook படக்குறிப்பு, தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ளார் நிமிஷா. இது தொடர்பாக பேசிய 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சிலின்' உறுப்பினர் பாபு ஜான், "மஹ்தி குடும்பத்தின் இந்தக் கடிதமும் கோரிக்கையும் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. சில நாட்களுக்கு முன்பாகவே இதே போன்ற ஒரு கடிதத்தை அவர்கள் மின்னஞ்சல் மூலம் ஏமனின் அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பிவிட்டார்கள். இப்போது நேரடியாக அதைச் சமர்ப்பித்துள்ளார்கள்." என்று கூறுகிறார். இதில், "சமரசம் அல்லது மத்தியஸ்தத்திற்கான எந்தவொரு முயற்சியையும் நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்" என அப்துல் ஃபத்தா கூறியிருப்பது, நிமிஷாவின் வழக்கை கையாள அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோம் மற்றும் இந்திய தூதரகத்தின் சார்பாக எடுக்கப்படும் முயற்சிகளை அல்ல என்று கூறுகிறார் பாபு ஜான். "சாமுவேல் ஜெரோமும் இந்திய தூதரகமும், மஹ்தி குடும்பத்தின் மன்னிப்பைப் பெறுவதற்கான முயற்சியில் பல நாட்களாக ஈடுபட்டுள்ளனர். அப்படியிருக்க அப்துல் ஃபத்தா திடீரென இத்தகைய கடிதம் அனுப்ப காரணம், சில தனிநபர்கள் 'நாங்கள் நினைத்தால் மஹ்தி குடும்பம் நிமிஷாவை மன்னித்துவிடும்' என்ற ரீதியில் இந்த விவகாரத்தை அணுகுவதுதான். அவர்களைக் குறிப்பிட்டே அப்துல் ஃபத்தா இதைத் தெரிவித்துள்ளார்" என்கிறார் பாபு ஜான். பட மூலாதாரம், Abdul Fattah Mahdi/Facebook படக்குறிப்பு, நிமிஷாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை விரைவாக நிர்ணயிக்க உத்தரவிட வேண்டுமென அப்துல் ஃபத்தா கோரிக்கை வைத்துள்ளார். 'மஹ்தி குடும்பத்தின் கோபம்' "மஹ்தி குடும்பத்தின் மன்னிப்பைப் பெறுவதற்கான செயல்முறையில், நாங்கள் இத்தனை மாதங்கள் கஷ்டப்பட்டு கொண்டு வந்த முன்னேற்றங்கள், சிலரின் பொய்களால் வீணாகின்றன." என்கிறார் சாமுவேல் ஜெரோம். "ஏமனில், இதுவரை 2 முறை அப்துல் ஃபத்தாவையும், ஒருமுறை மஹ்தியின் தந்தையையும் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவர்களுடனான பேச்சுவார்த்தை என்பது, 'உங்கள் பையன் இறப்புக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ தருகிறோம், மன்னிப்பு கொடுத்துவிடுங்கள்' என்ற ரீதியில் இருக்காது. நிமிஷா செய்திருப்பது ஒரு கொடூரமான கொலை, ஷரியா சட்டப்படி மீட்கலாம் என்றாலும் கூட பாதிக்கப்பட்ட குடும்பம் கருணை அடிப்படையில் மன்னித்தால் மட்டுமே முடியும். அப்படியிருக்க, இந்தியாவில் சிலர் சுயலாபத்துக்காக தொடர்ந்து பொய்களை சொல்லிக்கொண்டிருப்பதால், அந்தக் கோபத்தில்தான் அவர்கள் நேரடியாக ஒரு கடிதத்தை ஏமனி அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பிவைத்துள்ளார்கள்." என்கிறார் சாமுவேல். கடந்த ஜூலை 22-ஆம் தேதி, அப்துல் ஃபத்தா மஹ்தி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். "மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மதத்தலைவர் காந்தபுரம் (கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார்) உடன் நிமிஷா விடுதலை குறித்து பேசியதாக கூறுபவர்களுக்கு எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அவர்களை எந்த நேரத்திலும் அல்லது இடத்திலும் தொடர்பு கொள்ளவோ அல்லது சந்திக்கவோ இல்லை என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்." என்று கூறியிருந்தார். படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று ஏமன் சென்ற நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, சாமுவேல் ஜெரோமின் குடும்பத்துடன் ஏமனில் தங்கியுள்ளார். அதேபோல, ஆந்திராவைச் சேர்ந்த கிறிஸ்தவ சுவிசேஷகர் கே.ஏ.பால் என்பவர் கடந்த ஜூலை 22 தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். அதில், 'நிமிஷா விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்றும் அதற்கான முயற்சிகளை தான் எடுத்து வருவதாகவும்' அவர் கூறியிருந்தார். இந்தக் காணொளியை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த அப்துல் ஃபத்தா மஹ்தி, "இப்படி பரப்பப்படும் அனைத்து பொய்யான செய்திகளும் உண்மையை மாற்றிவிடாது. எங்களின் ஒரே கோரிக்கை பழிவாங்கலை அமல்படுத்துவதாகும்" என்று பதிவிட்டிருந்தார். 'நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவரது விடுதலைக்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகக் கூறும் அறிக்கைகள் பொய்யானவை' என இந்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் கடந்த வாரம் தெரிவித்திருந்தன. மேலும், 'இந்த வழக்கில் இந்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. எங்கள் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, ஏமனில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் அவரது தண்டனையை நிறைவேற்றுவதை ஒத்திவைத்தனர். இந்த விஷயத்தை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.' என்றும் வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 'ஏமனின் மக்கள் நினைத்தால் தண்டனை உடனே நிறைவேற்றப்படும்' பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஏமன் மக்கள் தலைநகரில் ஒரு போராட்டம் நடத்தினால் போதும். உடனடியாக நிமிஷாவின் தண்டனை நிறைவேற்றப்படும் என்கிறார் சாமுவேல். ஏமன் மக்கள் இந்த விஷயத்தில் கொதித்துப் போய் இருப்பதாகவும், 'நிமிஷாவின் மரண தண்டனையை உடனே நிறைவேற்றுங்கள்' என அவர்கள் போராட்டம் ஏதும் முன்னெடுத்தால் நிலைமை தலைகீழாக மாறிவிடும் என்கிறார் சாமுவேல். "ஏமன் மக்கள் தலைநகரில் ஒரு போராட்டம் நடத்தினால் போதும். உடனடியாக நிமிஷாவின் தண்டனை நிறைவேற்றப்படும். இதேபோல வேறு சில வழக்குகளிலும் மக்கள் போராட்டம் நடத்தி, நிறுத்திவைக்கப்ட்ட தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அவர்களும் மஹ்தி குடும்பத்தினரும் முடிந்தளவு பொறுமையாக இருக்கிறார்கள். நிமிஷா வழக்கு இப்போது சர்வதேச கவனம் பெற்றுவிட்டதால், இதில் லாபம் பெற இந்தியாவிலிருந்து சிலர் விரும்புகிறார்கள். அது நிமிஷாவை மரண தண்டனைக்கு இன்னும் அருகில் கொண்டுசெல்கிறது" என்று அவர் கூறுகிறார். நிமிஷாவின் மரண தண்டனையை நிறுத்திவைப்பது மட்டுமே ஏமன் அரசு எடுக்கக்கூடிய அதிகபட்ச நடவடிக்கை என்று கூறும் சாமுவேல், "மஹ்தி குடும்பம் மன்னிப்பு அளிக்காவிட்டால், ஒருபோதும் தண்டனையை ரத்து செய்யமுடியாது. இந்திய அரசின் உதவியுடன் அதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்துவருகிறோம். ஆனால், நிலைமை சற்று மோசமாகியுள்ளது. இனி மஹ்தி குடும்பத்திடம் பேசுவது இன்னும் கடினமாக இருக்கும்" என்று கூறினார். வழக்கின் பின்னணி என்ன? கேரளாவின் பாலக்காடைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார். அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர். நிமிஷா, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு, ஏமனின் அல்-பைதா நகரில், ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து ஏமனின் மாரிப் எனும் நகரில் நிமிஷா கைது செய்யப்பட்டார். மஹ்திக்கு 'அதிகப்படியான மயக்க மருந்து' கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது. மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார். இந்தக் கூற்றுகளை தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா பிபிசியிடம் மறுத்திருந்தார். தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. 2023இல் ஏமன் உச்ச நீதிமன்றத்தால் அது உறுதி செய்யப்பட்டது. நிமிஷா பிரியா, தற்போது சனா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg38x4yy34o
-
சோமரத்னவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால், அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு
சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது அநுரவின் ஆட்சிக்கு ஆகப்பெரும் கறை - தென்னிந்திய இயக்குநர் வ.கௌதமன் தெரிவிப்பு! 05 Aug, 2025 | 01:43 PM கிருசாந்தி படுகொலை வழக்கின் குற்றவாளியாக தற்பொழுது சிறையிலிருக்கும் இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது அநுர அரசாங்கத்திற்கு ஆகப்பெரும் ஒரு கறையாகவே அமையும் என தென்னிந்திய பிரபல இயக்குநரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ.கெளதமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக தேவை ஏற்படும் சூழலில் சர்வதேச விசாரணைக்கு தயாராக இருப்பதாக கிருசாந்தி கொலை வழக்கின் குற்றவாளியான இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச தனது மனைவி ஊடாக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் தெரியப்படுத்தியதன் மூலம் சிறையிலிருக்கும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சோமரத்ன ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் ஜனாதிபதி சட்டத்தரணியான குமார் பொன்னம்பலம் போகம்பரை சிறைச்சாலையில் சோமரத்ன ராஜபக்சவை சந்தித்து அவரிடம் பல விடயங்களை கேட்டறிந்த பின்னர், ஐக்கிய நாடுகள் சபைக்கு குறித்த விடயத்தை கொண்டு சென்று அது தொடர்பான நகர்வுகள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் குமார் பொன்னம்பலம் சுட்டுக் கொல்லப்பட்டார். இது இவ்வாறு இருக்கையில் சோமரத்ன ராஜபக்சவின் உயிரை பாதுகாக்க வேண்டிய தேவை தற்பொழுது அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் செம்மணியில் 135க்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னமும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை வெளியில் தெரியப்படுத்தக்கூடிய ஒரே ஒரு முக்கிய சாட்சியமாக சோமரத்ன ராஜபக்ச மட்டுமே உள்ளார். செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் சிங்களவர்களாக இருக்கலாம் என தென்பகுதி அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என காணாமல் ஆக்கப்பட்டோரது, உறவுகளும் தமிழ்த் தேசியம் சார்ந்த அரசியல் பிரமுகர்களும், சிவில் சமூக அமைப்பினரும், சர்வதேச நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களும் கூறுகின்றனர். எனது கருத்தும் காணாமல் ஆக்கப்பட்டோடரது உறவினர்களின் கருத்துகளோடு இணங்குகின்றது. பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துகளை கூறிக் கொண்டிருக்கின்ற நிலையில் அதன் உண்மை நிலைப்பாட்டை, உண்மைத் தன்மையை வெளிப்படுத்தக் கூடிய உரிமை நேரில் அல்லது சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்தவர்களுக்கே உண்டு. அந்தவகையில் சோமரத்ன ராஜபக்ச ஒரு முக்கிய சாட்சியாக காணப்படுகின்றார். சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலத்திலேயே பல மர்ம முடிச்சுகள் அவிழக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. செம்மணி புதைகுழி குறித்து நீதியோடும், நியாயத்தோடும் செயல்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களின் எதிர்பார்ப்பாகவும் செம்மணி விவகாரம் காணப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் அதன் உண்மை நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த முன்வரும் சோமரத்ன ராஜபக்சவை காப்பாற்ற வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உள்ளது. சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஒரு ஆபத்து ஏற்பட்டால் அது முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு ஒப்பானதாகவே கருதப்படும். அது அநுர அரசாங்கத்தின் ஆட்சிக்கு ஆகப்பெரும் கறையை கட்டாயம் ஏற்படுத்தும். எனவே சர்வதேச விசாரணைகளுக்கான வாக்குமூலத்தை வழங்குவதற்கு குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ச அனுமதிக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதிகள் விரைந்து சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலங்களை ஆவணப்படுத்த வேண்டும். யுத்தத்தின் போது இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாக ஈழத்தில் வசிக்கின்ற தமிழ் மக்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வந்தனர். ஆனால் அவற்றினை தென்னிலங்கை தரப்புகள் தொடர்ச்சியாக மறுத்து வந்ததே வரலாறு. இன்று அவர்களது பகுதியில் இருந்தே ஒருவர் வாக்குமூலம் அளிக்க முன்வருகின்றார். அவர் தன் சார்ந்த முக்கிய விடயங்கள் வெளிப்படுத்தப்படும் சூழலில், வடக்கில் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதனை தென் இலங்கை சமூகமும் அறிந்துகொள்ள முடியும். காலம் கனிந்து வந்திருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு நடைபெற இருப்பதால் தமிழர் தரப்பு அரசியல் தலைவர்கள் அனைவரும் இப்போதாவது ஓரணியில் திரளுங்கள். கருத்து முரண் இல்லாமலும் தனி நபர் காழ்ப்புணர்ச்சியற்றும் ஒருமித்த குரலில் எம் மக்களது பேரிழப்பை, பெரும் வலியினை சர்வதேச அரங்கில் எடுத்துரையுங்கள். படுகொலைகளை மேற்கொண்ட இராணுவ தரப்பில் இருந்தே அதற்கான சாட்சியும் தற்போது கிடைத்திருக்கின்றது. எனவே இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் அது ஒரு வரலாற்று தவறு மட்டுமல்லாது விடிவுக்காக போராடும் தமிழ் இனத்துக்கே நீங்கள் செய்யும் ஆகப்பெரும் துரோகமாக பார்க்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/221873
-
மேலதிகாரிகளால் பழிவாங்கப்படும் மனைவியான கிராம அலுவலர் - நீதியை பெற்று தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
மேல் நிலை அதிகாரிகளால் பழிவாங்கப்படும் மனைவியான கிராம அலுவலர்; நீதியை பெற்று தருமாறு கணவன் கோரிக்கை! Published By: Digital Desk 3 05 Aug, 2025 | 02:54 PM கிராம அலுவலராக கடமையாற்றி வரும் தனது மனைவி பழிவாங்கப்பட்டு கட்டாய பணியிடம் மாற்றப்பட்ட நிலையில் குறித்த பணியிட மாற்றமானது நீதி அற்ற நியாயமற்ற முறையில் வழங்கப்பட்டுள்ளதாக கிராம அலுவலரின் கணவரான செல்வரத்தினம் கிருஸ்ணரூபன் தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வரட்சி நிவாரண தெரிவு பட்டியிலில் இடம்பெற்ற முறைகேடான தெரிவு எனும் அடிப்படையிலேயே குறித்த பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தனது மனைவியான கிராம அலுவலர் சுற்றுநிருப விதி முறைகளுக்கு அமைவாகவே குறித்த தெரிவு பட்டியலை வழங்கியுள்ளார் என்றும் ஆனால் ஒருசில அதிகாரிகளை திருப்தி படுத்துவதற்காக தனது மனைவிக்கு கட்டாய பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட ஆலங்குளம் கிராம சேவகராக கடமையாற்றி வந்த கிராம அலுவலரே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த சம்பவம் கடந்த 2019ல் இடம்பெற்றுள்ளதாகவும் அவரது கணவரான செல்வரத்தினம் கிருஸ்ணரூபன் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 2017ஆம் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட ஆலங்குளம் பகுதியில் குறித்த கிராம அலுவலர் கடமையாற்றி வந்துள்ளார், அந்த காலப்பகுதியில் வரட்சி நிவாரண பட்டியல் வழங்கப்பட்டிருந்தன. இதேவேளை குறித்த கிராம அலுவலர் பிரிவில் உள்ள குடும்பஸ்தர் நிறுவனமொன்றில் குறித்த காலப்பகுதியில் பணியாற்றி வந்துள்ளார், குறித்த குடும்பஸ்தரும் வரட்சி நிவாரணம் பெற்று கொள்ளும் முகமாக விண்ணப்பித்திருக்கின்றார், நிறுவன ஊழியராக கடமையாற்றுகின்றார் எனும் ரீதியில் குறித்த குடும்பஸ்தருக்கான வரட்சி நிவாரண வேண்டுகை கிராம அலுவலரால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த நிராகரிப்பு தொடர்பில் அப்போதைய பிரதேச செயலாளர் கிராம அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டிருந்த நிலையில் குறித்த கிராம அலுவலர்க்கு தெரியாமல் வரட்சி நிவாரணம் மேற்கூறிய நிறுவன ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தனக்கு நிவாரண உதவி மறுக்கப்பட்டதன் காரணத்தை கண்டறிய பல்வேறு முயற்சிகள் நிறுவன ஊழியராலும் எடுக்கப்பட்டிருந்தன. இதனடிப்படையில் அப்போதைய முல்லைத்தீவு மாவட்ட செயலாளரினால் மூவர் அடங்கிய விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்ததுடன், முடிவில் குறித்த ஆலங்குளம் கிராம அலுவலர் தெரிவு பட்டியலினை முறைகேடாக தெரிவு செய்ததாக அறிக்கை சமர்ப்பித்திருந்தது. குறித்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட செயலகத்தினரால் ஆலங்குளம் கிராம அலுவலர்க்கு பணியிட மாற்றம் வழங்கப்படிருந்தது. குறித்த கட்டாய பணியிட மாற்றத்தை எதிர்த்து கிராம அலுவலர் மேன்முறையீடு செய்தும், தெரிவு பட்டியல் தவறு என்ற காரணத்தை கூறி குறிப்பிட்ட நாட்களுக்குள் மாறப்பட்ட இடத்தில் கடமையை பொறுப்பேற்குமாறும் கூறப்பட்டிருந்தது. இதேவேளை துணுக்காய் பிரதேச செயலக வேறு கிராம சேவகர் பகுதிகளில், யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவரின் பெயரும் வரட்சி நிவாரண தெரிவு பட்டியலில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தனது மனைவி மேலதிகாரிகளால் பழிவாங்கப்படுவதாக அவரது கணவர் தெரிவித்திருந்தார். கிராம அலுவலரான தனது மனைவி பழிவாங்கப்பட்டதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் தன்னால் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் குறித்த பிரச்சனைக்கான தீர்வினை ஜனாதிபதி பெற்றுத்தரவேண்டும் என்றும் கூறியிருந்தார். https://www.virakesari.lk/article/221871
-
ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிடுவதை நிறுத்தாவிட்டால் திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் - சீமான்
ஈழத் தமிழர்களை ‘கிங்டம்’ தெலுங்கு திரைப்படம் மோசமாக சித்தரிக்கிறது ; தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் - வைகோ 05 Aug, 2025 | 01:06 PM ஈழத் தமிழர்களை ‘கிங்டம்’ தெலுங்கு திரைப்படம் மோசமாக சித்தரிக்கிறது. தமிழகத்தில் ‘கிங்டம்’ தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வௌியான தெலுங்கு திரைப்படமான கிங்டம், ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தங்கள் தாயகத்தின் இறையாண்மையை மீட்டெடுக்க 30 ஆண்டு காலம் மறப் போராட்டத்தை நடத்திய ஈழத் தமிழ் மக்கள் அதற்காக கொடுத்த விலை அதிகம். லட்சக்கணக்கான மக்கள் சிங்கள இன வெறி அரசால் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து இருக்கிறார்கள். இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் துணையோடு சிங்கள அரசு தமிழ் இனப்படுகொலையை நடத்தியது. பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றக்கூண்டில் கொடியவன் ராஜபக்சே உள்ளிட்ட கும்பலை நிறுத்தி தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசிய இனம் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வீரம் செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும், ஈழத் தமிழர்களையும் தவறாக சித்தரித்து திரைப்படங்கள் வெளியிட்டு வரலாற்றை சிதைக்கின்ற முயற்சி கடும் கண்டனத்திற்குரியதாகும். எனவே தமிழகத்தில் ‘கிங்டம்’ தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/221870
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
போட்டிக்கு போட்டி மாறிய கணிப்புகள்: சமத்துவமில்லாத தொடரில் சாதித்துக் காட்டிய இந்திய இளம்படை பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் தினேஷ் குமார் எஸ் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் நவீன இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 2000-2001 ஆஸ்திரேலிய தொடருக்கும் 2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கும் முக்கிய இடமுண்டு. இந்தியாவின் தலைசிறந்த டெஸ்ட் தொடர் வெற்றிகளில் ஒன்றாக மதிப்பிடப்படும் அவை இரண்டுக்கும் ஒரு பொதுவான அம்சம் உண்டு. மோசமான தோல்விக்குப் பிறகு ஓர் அணியாக ஒன்றுதிரண்டு, அசாத்தியத்தை களத்தில் நிகழ்த்தி, கடுமையாக போராடி வெற்றியை ஈட்டியிருப்பார்கள். 2000-2001 தொடரில் லக்ஷ்மணின் இன்னிங்ஸ், 2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அஸ்வின் - விஹாரி போராட்டம் போன்றவை உடனடியாக நினைவுக்கு வருகின்றன. ஆனால், அவ்விரு தொடர்களுக்கும் ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அவை இரண்டும் பலவீனமான நிலையில் இருந்து, கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணி மீண்டெழுந்து வந்த கதைகள். ஆனால், இந்த தொடரில் ஒவ்வொரு கட்டத்திலும் இந்திய அணி மீதான எதிர்பார்ப்புகளும் கணிப்புகளும் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருந்தன. பட மூலாதாரம், Getty Images மாறிய கணிப்புகள் முதலில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில், கோலி, ரோஹித் இல்லாத கில் தலைமையிலான இளம் இந்திய அணியால் எதிர்கொள்ள முடியுமா என்று நிறைய சந்தேகங்கள் இருந்தன. பும்ராவின் உடற்தகுதி குறித்த தகவல்களும், 3 டெஸ்ட்களில் மட்டுமே அவர் விளையாடுவார் என்ற அறிவிப்பும், இந்திய அணி மீது பெரிதாக நம்பிக்கை வைத்துவிட வேண்டாம் என்பதையே ரசிகர்களுக்கு சொல்லாமல் சொல்லின. பழைய பலத்துடன் இல்லாவிட்டாலும், ஸ்டோக்ஸின் தலைமைத்துவமும் போராட்ட குணமும் இங்கிலாந்தை எளிதாக வெற்றிக் கோட்டை தாண்ட வைக்கும் என்றே பெரும்பாலான கணிப்புகள் இருந்தன. தினேஷ் கார்த்திக்கையும் (2-2) மைக்கேல் கிளார்க்கையும் (2-3) தவிர எந்தவொரு கிரிக்கெட் நிருபணரும் இந்தியா வெல்லும் என்று ஆரூடம் சொல்லவில்லை. டேவிட் லாய்ட், கிராம் ஸ்வான், ஜாஸ் பட்லர் போன்றவர்கள் இந்திய அணி ஸ்டோக்ஸின் இங்கிலாந்திடம் எவ்வித எதிர்ப்பும் இன்றி சரணடையும் என்றே கணித்தனர். பட மூலாதாரம், Getty Images ஆனால் பர்மிங்காம் டெஸ்ட் வெற்றிக்கு பிறகு இந்திய அணி தொடர்பான கதையாடல்கள் வேறொரு தொனிக்கு மாறின. இந்திய அணியின் தற்காப்பான அணித் தேர்வுகள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டன. உலகின் தலைசிறந்த 'சைனாமேன்' சுழற்பந்து வீச்சாளராக மதிப்பிடப்படும் குல்தீப் யாதவை பயன்படுத்தாதது சரியல்ல; 10-20 ரன்களுக்கு ஆசைப்பட்டு, மேட்ச் வின்னர்களை புறக்கணிப்பது நல்லதல்ல என விமர்சன கணைகள் பறந்தன. இந்திய அணி தொடரை வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்றவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்கே தெரியாமல், இந்திய அணியின் வலிமையை ஏற்றுக்கொள்ள தொடங்கினர். இந்திய அணி வலிமையான அணிதான்; அதன் வியூக வகுப்பில்தான் பிரச்னை என்பதாக ஒரு பிம்பம் உருவானது. லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி ஸ்டோக்ஸின் படையிடம் மண்டியிடாமல், கடைசி வரை உயிரைக் கொடுத்து விளையாடியும், துரதிருஷ்டவசமாக தோற்ற பிறகு புதுவிதமான யோசனைகளும் ஆலோசனைகளும் இந்திய அணிக்கு வழங்கப்பட்டன. கடைசி விக்கெட்டான சிராஜ் களமிறங்கியவுடனே, ஜடேஜா அடித்து விளையாடி இருக்க வேண்டும். 2019 ஹெடிங்லி டெஸ்டில் ஜேக் லீச்சை வைத்துகொண்டு ஸ்டோக்ஸ் நிகழ்த்தியதை சுட்டிக்காட்டி, ஜடேஜாவின் உத்திகள் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டன. அனில் கும்ப்ளே உள்ளிட்ட இந்திய ஜாம்பவான்களே, ஜடேஜா மீது மென்மையான கண்டிப்பை வெளிப்படுத்தினர். இன்னும் ஒருசிலர், இந்திய அணி மனத்திட்ப ரீதியில் (Temperament) மிகவும் பலவீனமாக உள்ளது. இது காலங்காலமாக தொடர்ந்து வரும் பிரச்னை, இதை நிவர்த்தி செய்வதற்கு தகுதியான விளையாட்டு உளவியலாளர்களை இந்திய அணி நிர்வாகம் பணிக்கு அமர்த்த வேண்டும் என்று தீர்ப்பு எழுதின. பட மூலாதாரம், Getty Images 'எதிரிக்கு எதிரி நண்பன்' இந்திய அணியின் மீதான விமர்சனங்களின் பரிணாம வளர்ச்சியை கவனியுங்கள். முதலில் இந்திய அணி தாக்குப்பிடிக்காது என்றார்கள்; அடுத்ததாக, கம்பீர் தலைமையிலான வியூக வகுப்பாளர்கள் சரியாக செயல்படவில்லை என்றனர். அடுத்த கட்டமாக, மனத்திட்பத்தில் உள்ள பிரச்னைதான் காரணம் என்றனர். மான்செஸ்டர் டெஸ்டுக்கு பிறகுதான் இந்திய அணி மீதான கதையாடல்களில் ஒரு மாற்றம் தென்பட்டது. சொல்லப் போனால், இங்கிலாந்து vs இந்தியா என்று ஆங்கில ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட தொடர், அபோதுதான் இந்தியா vs இங்கிலாந்து தொடராக நியாயமான அங்கீகாரத்தை பெற்றது. கைகொடுக்காத விவகாரம் (Handshake scandal) இங்கிலாந்து கிரிக்கெட்டின் இரட்டை நிலைப்பாட்டையும் போலித்தனத்தையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியது. 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற கோதாவில், ஆஸ்திரேலிய ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் ஜடேஜா – சுந்தர் வீரதிர இன்னிங்ஸுக்கு புகழாரம் சூட்டியதோடு, ஹாரி புரூக்கை வைத்து பந்துவீச செய்து இந்திய அணியை கொச்சைப்படுத்திய ஸ்டொக்ஸுக்கு கண்டனமும் தெரிவித்தன. ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரில் உண்மையில் இந்த இடத்திலேயே இங்கிலாந்தின் தோல்வி உறுதிசெய்யப்பட்டுவிட்டது. கிரிக்கெட் மைதானத்தில் தோற்பதற்கு முன்பாகவே தார்மீக ரீதியாக (Moral ground) ஸ்டோக்ஸ் அணி தோல்வியடைந்துவிட்டது. பட மூலாதாரம், Getty Images சமத்துவமில்லாத தொடர் எப்படி இங்கிலாந்து vs இந்தியா என்று வர்ணிக்கப்பட்ட தொடர் பிறகு இந்தியா vs இங்கிலாந்து என்று மாறியதோ, அதேபோல பேட்டிங் தொடர் என்று வர்ணிக்கும் அளவுக்கு, எக்கச்சக்கமான ரன்களும் சதங்களும் குவிக்கப்பட்ட தொடர். கடைசி ஒரு மணி நேரத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் விடாப்பிடித்தனமான போராட்டத்தால் பந்துவீச்சு தொடராக உருமாற்றம் அடைந்தது. பிபிசி ஸ்போர்ட்ஸில் பிரசுரித்திருந்த ஒரு புள்ளிவிவரம் இந்த தொடரில் பேட்டர்கள் எப்படி ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பதையும் கிரிக்கெட் ஏன் இன்னும் சமத்துவம் இல்லாத (பேட்டர் vs பவுலர்) இடமாகவே தொடர்கிறது என்பதையும் வெளிக்காட்டியது. ஒட்டுமொத்தமாக 5 டெஸ்ட்களிலும் சேர்த்து 7187 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இத்தனை ரன்கள் எடுக்கப்படுவது இதுதான் முதல்முறை. 21 சதங்கள் விளாசப்பட்டு, 50 அரைசதங்கள் எடுக்கப்பட்டு இதற்கு முந்தைய சாதனை சமன் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியில் கேப்டன் கில் உள்பட 3 வீரர்கள் ஐநூறு ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். பட மூலாதாரம், Getty Images சிகரம் தொட்ட சிராஜ் கடைசி விக்கெட்டாக அட்கின்சன் ஆஃப் ஸ்டம்பை சிராஜ் தகர்த்ததோடு சேர்த்து, 45 முறை பவுல்டு முறையில் விக்கெட் கிடைத்துள்ளன. பும்ரா 3 டெஸ்ட்கள் மட்டுமே விளையாடிய இந்த தொடரில், அனுபவமற்ற வேகப்பந்து வீச்சுப் படையை வழிநடத்திய சிராஜ், 5 டெஸ்ட்களிலும் ஓய்வின்றி விளையாடி 1,113 பந்துகள் வீசி, 23 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 1981 ஆஷஸ் தொடரை இங்கிலாந்து ஆல்ரவுண்டர் இயான் போத்தமின் பங்களிப்புக்கு மதிப்பளிக்கும் விதமாக 'போத்தம் ஆஷஸ்' என்பார்கள். அதுபோல, 2025 ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடர் வரலாற்றில் 'சிராஜ் தொடர்' என்றே எழுதப்படும். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg7j07mp89zo
-
இலங்கையில் நிலத்துக்கீழ் தான் பல உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன – செம்மணி அகழ்விடம் குறித்து எம்.ஏ. சுமந்திரன் கருத்து!
Published By: Digital Desk 2 05 Aug, 2025 | 12:53 PM இலங்கையிலே நிலத்திற்கு கீழ் தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வு இடம்பெறுவதை திங்கட்கிழமை (04) நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி ஆய்வு நடைபெறுகிற இடத்திலே ஸ்கேனர் கருவி இன்றைக்கு பாவிக்கப்பட்டிருக்கிறது. அதனை பாவிப்பதன் மூலமாக நிலத்திற்கு அடியிலே ஏதாவது அசாதாரணமான விடயங்கள் காணப்பட்டால் அல்லது அசைவுகள் இருந்தால் இந்த இயந்திரம் அதனை வெளிக்கொண்டு வரும் எனச் சொல்கிறார்கள். இந்த மனிதப் புதைகுழியில் இப்பொழுது 130 இற்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு ஒவ்வொருநாளும் இங்கு எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்படுகின்றன. இதனுடைய பின்னணியை நாங்கள் பார்ப்போமாக இருந்தால் 1999 ஆம் ஆண்டு சோமரட்ன ராஜபக்ஷ நீதிமன்றத்தில் சொன்ன கூற்றின் பிரகாரம் அக்கால பகுதியில் 15 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போது தற்செயலாக கண்டெடுக்கப்பட்ட எலும்புகூட்டினால் தொடரும் அகழ்வு பணியில் நூற்றுக்கணக்கான எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இப்போது கண்டெடுக்கப்படுகின்றவை அந்த வேளையில் சோமரட்ன ராஜபக்ஷ சொன்ன கருத்துக்களுடன் ஒத்துப் போகிறது. அவர் 300 தொடக்கம் 400 வரையான உடல்கள் புதைக்கப்பட்டன என்றும் அதிலே இராணுவ மிக உயர் அதிகாரிகள் பங்காளர்களாக இருந்திருக்கிறார்கள் என்றும் நீதிமன்றத்தில் அப்போது சொன்ன விடயம் கால் நூற்றாண்டுக்கு மேலாக அதாவது, 25 வருடங்களுக்கு பின்னர் இப்போது அதனுடைய உண்மைத்தன்மை வெளிப்படுகிறது. நான் பல தடவைகள் முன்னரே சொல்லி இருந்ததைப் போல உண்மை கண்டறியப்படுகிற பொறிமுறைமை குறித்து நாங்கள் பேசுகின்ற போது, இலங்கையிலே நிலத்திற்கு கீழ் தான் இந்த உண்மைகள் பல புதைக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே இந்த மனிதப் புதைகுழிகள் தோண்டப்படுகிற விடயம், உண்மை கண்டறியப்படுகிற செயன்முறையிலே மிகவும் முக்கியமான ஒரு பங்களிப்பைச் செலுத்துகிறது. பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் இருக்கின்றன. இது மூடி மறைக்கப்படும் அல்லது அப்பொழுது செம்மணியிலே செய்துவிட்டு கைவிட்டது போல அப்படியே இதுவும் கைவிடப்படுமா அல்லது மன்னாரில், கொக்குத்தொடுவாய் மற்றும் மாத்தறையில் நடந்ததை போல இருக்குமா என்று பலவிதமான சந்தேகங்கள், கேள்விகள் பலருக்கு இருக்கிறது. வேண்டுமென்றே தமிழ் மக்கள் ஒரு இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு தற்கால சான்றுகள் இங்கே இருந்து ஆரம்பமாகிறது போலவும் தோன்றுகிறது. ஆகவே இதற்கான சான்றுகளை சேகரிக்கிற பொறிமுறைகள் விசேடமாக ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலே தற்பொழுது ஒஸ்லெப் என்ற பொறிமுறை இருக்கிறது. அதாவது சான்று பதிவு செய்வதும் பாதுகாப்பதுமான பொறிமுறை. அவை எல்லாம் வரவழைக்கப்பட்டு இங்கே நடந்த விடயங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும். ஆகவே அரசாங்கத்திற்கு நாங்கள் சொல்வது இதிலே முழுமையான வெளிப்படைத் தன்மையோடும் சர்வதேச மேற்பார்வையோடும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். ஆகையினாலே திரும்பவும் ஒரு சர்வதேச பொறிமுறை இதற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திலே நிலுவையில் இருக்கும் செம்மணி வழக்கை இங்கே இடமாற்ற வேண்டும். இங்கே இருந்த வழக்கை அப்பொழுது சந்தேக நபர்களாக இருந்த இராணுவத்தினர் இங்கே பாதுகாப்பு போதாதென்று கூறி அனுராதபுரத்திற்கு மாற்றி பின்னர் கொழும்பிற்கு மாற்றப்பட்டு அங்கே வழக்கு நடைபெற்று வருகிறது. ஆகையினாலே அந்த வழக்கு இங்கே திரும்பவும் கொண்டுவரப்பட்டு இந்த வழக்கோடு சேர்ந்து விசாரிக்கப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/221867
-
காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு பெஞ்சமின் நெட்டன்யாகு இஸ்ரேலிய படையினருக்கு உத்தரவிடவுள்ளார் - சிஎன்என்
Published By: Rajeeban 05 Aug, 2025 | 11:15 AM காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தனது படையினருக்கு உத்தரவிடவுள்ளார் என சிஎன்என் தெரிவித்துள்ளது. இது குறித்து சிஎன்என் மேலும் தெரிவித்துள்ளதாவது- இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு இராணுவநடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்து தீவிர ஆர்வத்துடன் உள்ளதாலும்,பேச்சுவார்த்தைகளிற்கு முன்னர் மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வை காணவேண்டும் என ஹமாஸ் வேண்டுகோள் விடுத்துவருவதாலும்,காசாவில் யுத்த நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் முட்டுகட்டைநிலைக்குள் சிக்குண்டுள்ளன. இன்று செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ள பாதுகாப்பு அமைச்சரவையின் கூட்டத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு உத்தரவிடுவார் என இந்த விடயம் குறித்து நன்கறிந்த தரப்புகள் தெரிவித்துள்ளன. தீர்மாமொன்றை எடுத்துள்ளேன், அதிலிருந்து பின்வாங்க முடியாது,காசாவை முழுமையாக கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் நாங்கள் இறங்கப்போகின்றோம்,முப்படைகளின் பிரதானி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர் பதவி விலகவேண்டும் என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்தார் என அவருக்கு நெருக்கமான சிரேஸ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என இஸ்ரேலின் வைநெட் செய்தி வெளியிட்டுள்ளது.. இஸ்ரேலின் இராணுவஅதிகாரிகள் தரைநடவடிக்கையை விஸ்தரிப்பதை விரும்பவில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்தன. ஹமாஸ் பணயக்கைதிகளை வைத்திருக்கும் பகுதியை நோக்கி தரை நடவடிக்கையில் ஈடுபடுவது பணயக்கைதிகளிற்கும் படையினருக்கும் உயிராபத்தை ஏற்படுத்தலாம் என இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர். பெஞ்சமின் நெட்டன்யாகு இராணுவ நடவடிக்கையை விஸ்தரிக்கவிரும்புகின்றார் என வெளியான தகவல்களை இஸ்ரேலிய படையினரின் தாய்மார் கண்டித்துள்ளனர். https://www.virakesari.lk/article/221853
-
சிங்கப்பூர் தமிழ் மக்களின் 200 ஆண்டு கால வரலாற்று ஆவணம் வெளியிடப்பட்டது
05 Aug, 2025 | 10:31 AM காலத்தை வென்ற சிங்கப்பூர் தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமான ‘சிங்கப்பூர் தமிழர்’ கலைக்களஞ்சியத்தை சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரில் தேசிய நூலக சபை கட்டிடத்தில் உள்ள டிராமா சென்டரில் சனிக்கிழமை (02) நடைபெற்ற விழாவில், 'சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை அந்நாட்டு ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் வெளியிட்டுள்ளார். 200 ஆண்டு கால வரலாற்று ஆவணமான ‘சிங்கப்பூர் தமிழர்’, சமூகம், கலை, பண்பாடு, கல்வி, அரசியல் என சிங்கப்பூர் தமிழ் மக்களின் வாழ்வியல் களம் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் தமிழர்க் கலைக் களஞ்சியம் எடுத்துரைக்கும் பல தகவல்களில் தமிழ்ச் சமூகம் கண்டுவந்த சமூகச் சீர்திருத்தங்கள் குறித்த தகவல்களைத் தனது உரையில் சிங்கப்பூரின் ஜனாதிபதி மேற்கோள் காட்டியுள்ளார். இவ்விழாவில் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் உரையாற்றுகையில், ‘‘பண்பாட்டை பேணும் உறைவிடமாக சிங்கப்பூர் தொடர்ந்து திகழ வேண்டும். எந்த வகையிலான பாகுபாட்டையும் பொறுத்துக்கொள்ளாத சமூக முன்னேற்றம் தொடர்ந்து நிலவ வேண்டியது மிகவும் அவசியம். பல துணை இனக் கலாச்சாரங்கள் உட்பட பண்பாடுகளைப் பாதுகாக்கக்கூடிய இடமாக நமது நாடு இருக்க வேண்டும். இதுவே உலகளாவிய இந்திய சமூகத்துக்கு மத்தியில் சிங்கப்பூர் தமிழர்களையும் சிங்கப்பூர் இந்தியர்களையும் தனித்துவமிக்கவர்களாகத் திகழச் செய்யும்’’ எனத் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையமும் தேசிய நூலக சபையும் இணைந்து உருவாக்கி உள்ள ‘சிங்கப்பூர் தமிழர்க் கலைக்களஞ்சியம்’ மின் நூல், சிங்கப்பூரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உருவான முதல் கலைக்களஞ்சியம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இதன் அங்கமாக, தமிழ்ச் சமூகத்தின் கதைகள், வரலாற்றைத் தலைமுறை கடந்தும் கடத்தும் நோக்கில் ஏறத்தாழ 375 பகுதிகளில் பல்வேறு தகவல்களை விவரிக்கும் துல்லியமான பதிவுகள் தகுந்த ஆதாரத்துடனும் புகைப்படங்களுடனும் தேசிய நூலக சபையின் மின்தளத்தில் இடம்பெற்றுள்ளன. கலைக்களஞ்சியத்தை இணையவெளியில் படிப்பதற்கான வழிமுறை, இருமொழிகளிலும் ஒருசேரப் படிக்க உதவும் தொழில்நுட்பம், வாழும் கலைக்களஞ்சியத்தில் புதிய தலைப்புகளை இணைக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி, சிங்கப்பூர் தமிழர்க் கலைக்களஞ்சியம் தொகுப்பின் துணை ஆசிரியர்கள் அழகிய பாண்டியன், சிவானந்தம் நீலகண்டன் ஆகிய இருவரும் விளக்கியுள்ளனர். விழாவில் சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாகியும் தொகுப்பின் ஆசிரியருமான அருண் மகிழ்நன் உரையாற்றுகையில், ‘‘இந்த மின் நூல் மக்களைப் பற்றி மக்களால் உருவாக்கப்பட்ட தேர். இந்த அருஞ்செல்வம் உருப்பெற உதவி புரிந்தோருக்கு நன்றி. இதனை வாழும் களஞ்சியமாக நிலைக்கச் செய்ய, சமூகத்தைத் தொடர்ந்து ஈடுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார். தேசிய நூலக சபையின் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவின் துணை இயக்குநருமான அழகிய பாண்டியன் மேலும் கூறும்போது, ‘‘இந்தக் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதற்கான மூன்று ஆண்டுப் பயணம் சுவாரசியமானது. எதிர்காலச் சந்ததியினருக்கான ஒரு கருவூலத்தை உருவாக்குவதில் பங்காற்ற கிடைத்த வாய்ப்பைப் பெரும் பேறாகக் கருதுகிறேன். தேசிய நூலக சபை இருக்கும் வரை சிங்கப்பூர் தமிழர்க் கலைக்களஞ்சியம் வாழும்’’ எனத் தெரிவித்துள்ளார். விழாவில் அதிபர் தர்மனின் மனைவி ஜேன் இத்தோகி, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, மனிதவள மற்றும் கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், பங்காளித்துவ அமைப்பினர், தொண்டூழியர்கள் உட்பட ஏறத்தாழ 600 பேர் கலந்துகொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/221839
-
ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிடுவதை நிறுத்தாவிட்டால் திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் - சீமான்
05 Aug, 2025 | 11:26 AM ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் தமிழ்நாட்டின் திரையிடுவதை நிறுத்தாவிட்டால் திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம்! என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அண்மையில் வெளியாகியிருக்கும் கிங்டம் திரைப்படத்தில் ஈழச்சொந்தங்களைக் குற்றப்பரம்பரை போல மிகத் தவறாகச் சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள் இடம்பெற்றிருக்கிற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். கருத்துச்சுதந்திரம் எனும் பெயரில் தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் திரித்து தவறாகச் சித்தரிக்கலாம் என எண்ணுவதை ஒருநாளும் அனுமதிக்க முடியாது. ஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களை ஒடுக்கினார்களென அத்திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத்திரிபு; மிகப்பெரும் மோசடித்தனம். வரலாற்றில் ஒருநாளும் நடந்திராத ஒன்றை நடந்ததாகக் காட்டி ஈழச்சொந்தங்களை மிக மோசமாகச் சித்தரிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்த்தேசிய இனத்தின் ஆன்ம விருப்பமான தமிழீழச் சோசலிசக் குடியரசை அடைவதற்கு இரத்தம் சிந்தி உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்து உயிரை விலையாகக் கொடுத்து உயிரீந்த மாவீரர்களின் ஒப்பற்ற வீரவரலாறே தமிழீழ விடுதலைப் போராட்டமாகும். உலகின் எந்த இயக்கத்தினுடைய விடுதலைப் போராட்டத்திலும் இல்லாத வகையில் கண்ணியத்தையும் ஒழுக்கத்தையும் அறநெறியையும் பின்பற்றி போரியல் விதிகளையும் மாண்புகளையும் கடைப்பிடித்து மரபுப்போர் புரிந்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். போர் முடியும் கடைசித் தருவாயில்கூட பழிவாங்கும் நோக்கோடு சிங்கள மக்களை அழிக்க முற்படாது அவர்களது குடியிருப்புகள் மீது தாக்குதல் நிகழ்த்த முனையாது இறுதிவரை அறம்சார்ந்து நின்ற வீரமறவர்கள் விடுதலைப்புலிகள். சிங்கள இராணுவமானது தமிழர்களது குடியிருப்புகள் வழிபாட்டுத்தலங்கள் மருத்துவமனைகள் பள்ளிக்கூடங்கள் என தமிழ் மக்கள் வாழ்விடங்களின் மீது வான்வழித்தாக்குதல் தொடுத்தது; தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளையும் கொத்துக் குண்டுகளையும் வீசி தமிழின மக்களைப் பச்சைப்படுகொலை செய்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ்ப்பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி தமிழர் நிலங்களை அபகரித்து தமிழர் தேசத்தை சுடுகாடாக்கி இனவெறியின் கோரத்தாண்டவத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு. எவ்விதப் போர் நெறிமுறையையும் பின்பற்றாது இனஅழிப்பு நோக்கில் செய்யப்பட்ட அத்தாக்குதல்களின் மூலம் ஏறக்குறைய 2 இலட்சம் மக்களை மொத்தமாய் கொன்றுகுவித்தது சிங்கள இனவாத அரசும் அதன் இராணுவமும். ஈழப்போர் முடிந்து 15 ஆண்டுகளைக் கடந்தும் தமிழினத்தின் கோர இனப்படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. ஐ.நா. மன்றமும் சர்வதேச அரங்கும் தமிழர்களுக்கு எவ்விதத் தீர்வையும் பெற்றுத் தர முன்வரவில்லை. இனப்படுகொலை செய்திட்ட சிங்கள ஆட்சியாளர்கள் மீது தலையீடற்ற பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரியும் ஈழச்சொந்தங்களிடம் தனிநாடாகப் பிரிந்து செல்வதற்கான ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்தக் கோரியுமாக பன்னாட்டு மன்றத்தில் நீதிகேட்டு தமிழின மக்கள் இன்றளவும் போராடிக் கொண்டிருக்கிறோம். எம்மினத்துக்கு இழைக்கப்பட்ட கொடும் அநீதியை எம்மினத்தின் இனப்படுகொலையை உலகரங்கில் எடுத்துரைத்து எமது தரப்பு நியாயங்களை மற்ற தேசிய இனங்களுக்கு மெல்ல மெல்லக் கடத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் எம்மினத்தின் மாண்பையும் ஈழச்சொந்தங்களின் வலியையும் இழிவுப்படுத்தும் வகையிலான காட்சிகளைக் கொண்டுள்ள கிங்டம் திரைப்படத்தை தமிழ் மண்ணில் ஒருபோதும் ஏற்க முடியாது. தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும்இமாவீரர் தெய்வங்களான விடுதலைப்புலிகளையும் எம்மினத்தின் வீரம்செறிந்த விடுதலைப்போராட்டத்தையும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழச்சொந்தங்களையும் கொச்சைப்படுத்தும் எதுவொன்றையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. ஆகவே ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கிங்டம் திரைப்படத்தை தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்வகையில் தமிழ்நாட்டின் திரையரங்குகளில் திரையிடுவதை முற்றாக நிறுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில் திரையரங்குகளை முற்றுகையிட்டுஇ அத்திரைப்படத்தைத் தடுத்து நிறுத்துவோமென எச்சரிக்கிறேன். https://www.virakesari.lk/article/221855