Everything posted by ஏராளன்
-
இலங்கைக்கு எதிராக மீண்டும் ஜெனிவாவில் தீர்மானம் ; எந்தவொரு தீர்மானத்தையும் வலுவாக எதிர்கொள்வோம் - அமைச்சர் விஜித ஹேரத்
03 Aug, 2025 | 09:14 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜெனிவா மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத் தொடரில் பிரித்தானியா, கனடா, வடக்கு மாசிடோனியா, மலாவி மற்றும் மொண்டெனேகுரோ உள்ளிட்ட நாடுகளின் அனுசரனையுடன் இலங்கை குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், இந்த விடயம் குறித்து பன்னாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு ஜெனிவாவுக்கு செல்லவும், தீர்மானத்தை முன்வைக்க உள்ள நாடுகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் கடந்தகால விடயங்களில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதிலும் முழு அளவிலான ஈடுப்பாடுடன் அரசாங்கம் செயல்படுகிறது. ஆகவே இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் ஜெனிவாவில் கொண்டுவரக்கூடிய தீர்மானங்களை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்பதுடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் வழங்கிய உத்தரவாதத்தின் பிரகாரம் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமாகவே அமையும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள பன்னாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. பிரித்தானியா மற்றும் கனடா உள்ளிட்ட சில நாடுகள் இந்த தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்க உள்ளது. இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு விஜயம் செய்து நேரடியாக நிலைமைகளை ஆராய்ந்து சென்றுள்ளார். அவர் வழங்கிய உத்தரவாதத்தின் பிரகாரம் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமாகவே அமையும். மேலும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் நேர்மையாக செயல்படுகிறது என தெரிவித்தார். எவ்வாறாயினும் கடந்தகால மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் விடயத்தில் நிலவிவரும் அதிருப்தியை அடுத்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக் கூறலை மையப்படுத்திய புதிய தீர்மானம் ஒன்றை முன்வைக்க சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த நடவடிக்கையானது, இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த சர்வதேச கண்காணிப்பையும், அழுத்தத்தையும் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த புதிய தீர்மானத்தை பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கைக்கான கேந்திரிய குழு (Core Group on Sri Lanka) முன்வைக்கவுள்ளது. கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட 46/1 மற்றும் 51/1 போன்ற தீர்மானங்களின் தொடர்ச்சியாகவே இது அமைய உள்ளது. குறிப்பாக, 51/1 தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து, பகுப்பாய்வு செய்து, பாதுகாக்கும் 'இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டம்' (Sri Lanka Accountability Project) என்ற பொறிமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே இந்த புதிய தீர்மானத்தின் பிரதான நோக்கமாக இருக்கும் என இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதும், எதிர்காலத்தில் இத்தகைய மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதும் இதன் முக்கிய இலக்குகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221646
-
குணச்சித்திர நடிகர் மதன் பாப் காலமானார்
நடிகர் மதன்பாபு காலமானார் 02 Aug, 2025 | 09:40 PM பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மதன்பாபு, தனது 71 ஆவது வயதில் காலமானார். அவர் கடந்த சில காலமாக புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மதன்பாபுவின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இசையமைப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'வானமே எல்லை' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழ்,மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான பாணியால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 'தேனாலி', 'ஃப்ரெண்ட்ஸ்', 'ரெட்' போன்ற பல படங்களில் அவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/221643
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
கில் சாதனை, ஜெய்ஸ்வால் சதம்: இங்கிலாந்தின் திட்டங்களை தவிடுபொடியாக்கிய ஆகாஷ் தீப் - யாருடைய கை ஓங்கியுள்ளது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் ஆகாஷ் தீப் கட்டுரை தகவல் தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. ஸ்டோக்ஸ், பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத போதும், இரு அணிகளும் சரிக்கு சமமாக சண்டையிடுகின்றன. இன்றைய தினம் தொடரின் முடிவு தெரிந்துவிடும். ஓவல் டெஸ்டின் இரண்டாம் நாளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, மூன்றாம் நாளிலும் தன் பிடியை விடாமல் பார்த்துக்கொண்டது. நைட் வாட்ச்மேனாக முதல் நாளில் களம்புகுந்த ஆகாஷ் தீப், நேற்று உடும்பு போல விக்கெட்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு விளையாடி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் நிம்மதியை கெடுத்தார். கிடைக்கும் ஒவ்வொரு ரன்களும் அணிக்கு லாபம் என்று, ஜெய்ஸ்வாலும் அவருக்கு அதிக ஸ்ட்ரைக் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார். இரண்டாம் நாளின் முதல் ஓவரிலேயே, பெத்தேல் பந்தில் பவுண்டரி அடித்து அதிரடியை ஆரம்பித்த ஆகாஷ் தீப் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. உயிரைக் கொடுத்து வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகளை, அலட்சியமாக ஸ்லிப் பிராந்தியத்திலும் மிட் விக்கெட் திசையிலும் பறக்கவிட்டு ரன் சேர்த்தார். ஆகாஷ் தீப் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து பீல்டர்கள் சொல்லிவைத்தது போல போட்டிப் போட்டுக்கொண்டு தவறவிட்டனர். ஆகாஷ் தீப் மீது இங்கிலாந்து அணியின் பார்வை திரும்பியதை பயன்படுத்திக் கொண்டு, ஜெய்ஸ்வால் சத்தமின்றி சதத்தை நோக்கி நகர்ந்தார். ஜெய்ஸ்வால் பெரிதாக எந்த பரீட்சார்த்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. தனக்கு தோதான பந்துகள், தனக்கு விருப்பமான திசையில் கிடைக்கும் போது நம்பிக்கையுடன் பேட்டை விளாசினார். ஒரு நல்ல தொடக்க பேட்டருக்கு, பந்தின் வேகத்தை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வித்தை தெரிந்திருக்க வேண்டும். கழுத்தை குறிவைத்து வீசப்பட்ட பந்துகளை ரொம்பவும் லாவகமாக தேர்ட் மேன் திசையில் அப்பர் கட் விளையாடினார்; தவறான லைனில் வீசப்பட்ட பந்துகளை பாயிண்ட் திசையிலும் சீவிவிட்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சதம் அடித்ததைக் கொண்டாடும் ஜெய்ஸ்வால் வோக்ஸ் இல்லாத குறை இங்கிலாந்து பந்துவீச்சில் அப்பட்டமாக வெளிப்பட்டது. மொத்த ஓவர்களில் 80 சதவிகிதத்துக்கும் மேல் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுமே பங்கிட்டு வீசினர். அதிர்ஷ்டத்தின் துணையுடன் 67 ரன்கள் குவித்த ஆகாஷ் தீப், ஓவர்டனின் பேக் ஆஃப் எ லெந்த் பந்தை லெக் சைடில் அடிக்க முயன்று, அட்கின்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆகாஷ் தீப் முக்கியமான ரன்களை குவித்ததோடு மட்டுமின்றி, மூன்று வேகப்பந்து வீச்சாளர்களையும் களைப்படைய செய்தார். இது ஆட்டத்தின் பின்பகுதியில் இந்திய பேட்டர்களுக்கு கைகொடுத்தது. ஜெய்ஸ்வால்–ஆகாஷ் தீப் ஜோடி, 107 ரன்களை குவித்தது. ஐந்தாவதாக களமிறங்கிய கில், அடுத்தடுத்து அட்டகாசமான பவுண்டரிகள் விளாசி, ரசிகர்களை குஷிப்படுத்தினார். இந்தியா–இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த கிரஹாம் கூச்சின் (752) சாதனையை கில் (754) முறியடித்தார். ஆனால், உணவு இடைவேளைக்கு பிறகான முதல் பந்திலேயே அட்கின்சன் பந்தை கால்காப்பில் வாங்கி, எல்பிடபிள்யூ முறையில் மீண்டும் ஒருமுறை ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸை போலவே மிகவும் எளிதாக விக்கெட்டை தூக்கிக் கொடுத்த விதம், கில் போன்ற ஒரு மிகத்திறமையான பேட்டருக்கு அழகல்ல. 700 ரன்களுக்கு மேல் குவித்தாலும், உள்ளே வரும் பந்துகளுக்கு தொடர்ச்சியாக அவர் விக்கெட்டை பறிகொடுப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த பலவீனத்தை விரைவில் சரிசெய்யாவிட்டால், எதிரணிகள் அவருடைய காலைக் குறிவைத்து வியூகம் வகுக்க ஆரம்பித்துவிடுவார்கள். கில் தனது ஆட்டத்தில் விடாப்பிடித்தனத்தை வெளிப்படுத்த வேண்டும். ஜெய்ஸ்வாலிடம் இங்கிலாந்து மண்ணில் தாக்குப்பிடித்து விளையாடுவதற்கான டெக்னிக் இல்லை. கில் அளவுக்கு அவருக்கு பேட்டிங்கில் டைமிங்கும் கிடையாது. ஆனால், எப்படியாவது தாக்குப்பிடித்து விக்கெட்டை பத்திரப்படுத்தி விளையாடி ரன் சேர்க்கும் நுட்பம் அவருக்கு வாய்த்துள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஐந்தாவதாக களமிறங்கிய கில், அடுத்தடுத்து அட்டகாசமான பவுண்டரிகள் விளாசி, ரசிகர்களை குஷிப்படுத்தினார் அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 127 பந்துகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய ஆறாவது சதத்தை பதிவுசெய்தார்; இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் 4 சதங்களை குவித்துள்ளார். கில் பெவிலியன் திரும்பிய பிறகு களமிறங்கிய கருண் நாயர், தொடக்கம் முதலே தடுமாறினார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் அவர் தடுமாறியதை பார்க்கும்போது தான், ஜெய்ஸ்வால் இன்னிங்ஸின் மதிப்பு புரிந்தது. ஆடுகளம் முழுவதுமாக தட்டையாகவில்லை; இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது என்பதை கருண் நாயரின் குறுகிய நேர இன்னிங்ஸ் உணர்த்தியது. ஒவ்வொரு பந்துக்கும் விக்கெட்டை கொடுப்பதற்கு தயாராக இருந்த கருண், அட்கின்சன் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது கடைசி இன்னிங்ஸை கருண் நாயர் விளையாடிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். 118 ரன்களில் டங் பந்தில் ஆஃப் சைடில் தனக்கு பிடித்த ஷாட் விளையாட ஆசைப்பட்டு, பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் கொடுத்த மூன்று கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து அணி கோட்டைவிட்டது. ஒட்டுமொத்தமாக ஆறு கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டது. முதல் டெஸ்டில் தான் தவறவிட்ட கேட்ச்களுக்கு பரிகாரம் தேடியதை போல, கிடைத்த வாய்ப்புகளை ஜெய்ஸ்வால் கெட்டியாக பிடித்துக்கொண்டார். எட்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜுரெல் ஆரம்பம் முதலே நல்ல ஷாட்கள் விளையாடி ரன் குவித்தார். நறுக்கென்று நான்கு பவுண்டரிகளுடன் 34 ரன்கள் சேர்த்த ஜுரெல், ஓவர்டன் வீசிய அருமையான அவுட் ஸ்விங்கரில் விக்கெட்டை பறிகொடுத்தார். டங் பந்தில் பவுண்டரி விளாசி, அரைசதத்தை கடந்த ஜடேஜா, ஒன்பதாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சுந்தருடன் ஜோடி சேர்ந்து வேகமாக ரன் சேர்த்தார். கடந்த டெஸ்டின் நாயகர்கள் இருவரும் சீக்கிரம் ரன் சேர்த்தாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடியது போல தெரிந்தது. 77 பந்துகளில் 53 ரன்களை குவித்த ஜடேஜா, இந்த தொடரில் முதல்முறையாக இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தார். அடுத்த இரு பந்துகளில் சிராஜும் வெளியேற, ஓவல் மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிய வைத்தார் வாஷிங்டன் சுந்தர். 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உடன் 53 ரன்கள் எடுத்த அவர், கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். வாஷிங்டன் சுந்தரின் கடைசிகட்ட வாணவேடிக்கை, 335 இல் இருந்த ஸ்கோரை ஐந்தே ஓவர்களில் 374 ரன்களுக்கு கொண்டு சென்றது. 374 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டுவதற்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, நம்பிக்கையுடன் அடித்து விளையாடியது. கிராலி–டக்கெட் இருவரின் ஆட்டமும், ஆடுகளம் இன்னும் பேட்டிங்குக்கு சாதகமாக இருப்பதை காட்டியது. போகப் போக கவனமாக விளையாடத் தொடங்கிய இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விக்கெட் கொடுக்காமல் விளையாடினர். முன்றாம் நாளின் கடைசி ஓவரின், ஐந்தாவது பந்தில் சிராஜின் யார்க்கரில் கிராலி வீழ்ந்தார். நாளின் கடைசி ஓவரில் ஷேன் வார்ன்தான் இதுபோன்ற மாயாஜாலங்களை நிகழ்த்துவார். இல்லாத ஒன்றை இருப்பது போல பேட்டரை நம்பவைத்து, எதிர்பாராத ஒன்றை செய்து விக்கெட் எடுப்பது அவருடைய பாணி. ஜெய்ஸ்வாலை லெக் சைடில் பவுண்டரி லைனுக்கு நகர்த்தி, பவுன்சர் போடப் போவதாக போக்கு காண்பித்து, யார்க்கரில் ஆளை காலிசெய்தார். அதிரடி டக்கெட்டை 'அன்புடன்' வழியனுப்பிய ஆகாஷ்: இந்தியா - இங்கிலாந்து தொடரில் அடுத்த சர்ச்சை ஓவல் டெஸ்ட்: ஒரு ரன்னுக்காக விக்கெட்டை விட்ட கில் - 8 ஆண்டுகளுக்குப் பின் கருண் நாயரின் போராட்டம் ஓவல் டெஸ்ட் : காயத்தால் பென் ஸ்டோக்ஸ் விலகல் - இந்திய அணிக்கு சாதகமான 3 அம்சங்கள் கடைசி டெஸ்டிற்கான பிட்ச் எப்படி இருக்கும்? பார்வையிட்ட கம்பீர் மைதான ஊழியருடன் வாக்குவாதம் ஆட்ட நேர இறுதியில் விக்கெட்டை இழந்தாலும், இங்கிலாந்துக்கு நல்ல தொடக்கம் என்றே சொல்ல வேண்டும். இன்னும் 324 ரன்கள் தேவை என்கிற நிலையில், நான்காவது நாளில் இங்கிலாந்து அணிக்கு பெரிய பார்ட்னர்ஷிப் ஒன்று தேவைப்படுகிறது. ஹெடிங்லி டெஸ்டில் 371 ரன்கள் இலக்கை அநாயசமாக விரட்டிய இங்கிலாந்து அணி, ஓவலிலும் அதை நிகழ்த்திக் காட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இங்கிலாந்து அணி, இந்த இலக்கை வெற்றிகரமாக விரட்டி எட்டும்பட்சத்தில், அது இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச சேஸாக அமையும். 2021–2022 தொடரில் இந்தியாவுக்கு எதிராக எட்ஜ்பஸ்டன் டெஸ்டில் 378 ரன்களை சேஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வோக்ஸ் பேட் செய்ய களமிறங்க 99 சதவிகிதம் வாய்ப்பில்லாத நிலையில், இந்திய அணி டெஸ்டை வென்று தொடரை சமன்செய்ய 8 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. ஆட்டத்தின் முடிவு எப்படியும் நான்காவது நாளிலேயே தெரிந்துவிட அதிக வாய்ப்புள்ளது. ஒன்று இந்தியா வென்று தொடரை சமன் செய்யும். அல்லது இங்கிலாந்து வென்று 3–1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும். டிராவுக்கு வாய்ப்பே இல்லை என்பது மட்டும் நிச்சயம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c30zd27z71po
-
வட மாகாணத்தில் 982 பாடசாலைகளில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன - அமைச்சர் சந்திரசேகர்
02 Aug, 2025 | 09:18 PM கல்வி பின்புலம் என்பது யாழ்பாணத்துக்கு தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாகும். தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாக இருந்த போதும் இன்று கல்வி பாரிய சவாலுக்கு உட்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் சனிக்கிழமை (02) வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கல்வி சீர்திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்வி மறுசீரமைப்பு ஏன் தேவை? அதில் கல்வியின் நிலைமை, பாடசாலையின் நிலைமை, அவற்றின் மூலம் ஏற்படவுள்ள மாற்றம் என்ன என்பது தொடர்பாகவும் குறிப்பிட்டு கல்வி சீர்திருத்தம் முக்கிய தேவை. அதுபோலவே எமது அரசாங்கத்தின் நோக்கமும் அதுவாகவே இருக்கிறது. கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம், வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம், நாட்டை டிஜிட்டல் மயமாக்கல் போன்ற பிரதான வேலைத்திட்டங்களை கொண்டுள்ளது. அதில் வறுமை ஒழிப்பு தொடர்பான வேலைத்திட்டத்துக்கு கூடுதலான முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு மாகாணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அண்மையில் ஆளுநர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வட மாகாணத்தை விசேடமாக கவனத்தில் கொண்டனர். வட மாகாணமே இலங்கையில் அதிக வறுமைக்கு உட்பட்ட பிரதேசமாக இருக்கிறது. இலங்கையில் வறுமையான மாவட்டமாக மொனராகலை மாவட்டம் இருந்த நிலையில் தற்போது அது முல்லைத்தீவு மாவட்டமாக மாறியிருக்கிறது. இதனால் வறுமையுடன் இணைத்து கல்வி தொடர்பான பிரச்சினையையும் அணுக வேண்டியுள்ளது. வறுமையிருக்கும் இடங்களிலெல்லாம் கல்வி பிரச்சினையும் காணப்படுகிறது. கல்வியில் பின்னடைவை சந்தித்துள்ள இடங்களில் வறுமை அதிகரித்துள்ளது. மேலும் சமூக சீரழிவுகள், குற்றசெயல்கள் அதிகரித்து காணப்படுகிறது. இன்று யாழ் மாவட்டத்திலும் இந்த சவால்கள் காணப்படுகிறது. இந்த சவால்களில் இருந்து மீண்டு புதிய யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. இதனால் எமது அரசாங்கத்தில் கல்விக்கே அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்ற கொள்கை பின்பற்றப்படுகின்றது. இதற்கமைவாகவே கல்வி புலத்தை வெளிப்படுத்தி கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு கல்வி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 10 பிள்ளைகள் கல்வி கற்கும் 35 பாடசாலைகள் காணப்படுவதாகவும் 11 – 20 பிள்ளைகள் கல்வி கற்கும் 64 பாடசாலைகளும் 20 – 50 பிள்ளைகள் கற்கும் 171 பாடசாலைகள் இருப்பதாகவும் 50 – 100 பிள்ளைகள் கற்கும் 174 பாடசாலைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் 40 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் எவ்வித கல்வி நடவடிக்கைகளும் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எமது கல்வியில் மறுசீரமைப்பு தேவை என்பது உணரப்படுகின்றது. இது தொடர்பில் அனைவரும் புரிதலுடன் செயற்பட்டால் சமூகத்துக்கு நல்ல செய்தியை கொண்டு செல்லமுடியுமென எதிர்பார்க்கிறேன் என்றார். இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வட மாகாண சபையின் பிரதம செயலாளர் தனுஜா, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா, கல்வி அமைச்சின் பிரதிநிதித்துவ அதிகாரிகள், வடக்கு மாகாண கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/221637
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
அதிரடி டக்கெட்டை 'அன்புடன்' வழியனுப்பிய ஆகாஷ்: இந்தியா - இங்கிலாந்து தொடரில் அடுத்த சர்ச்சை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆட்டமிழந்த டக்கெட்டின் தோளில் கைபோட்டு ஆகாஷ் நடந்து கொண்ட விதம் சர்ச்சையாகியுள்ளது. கட்டுரை தகவல் தினேஷ் குமார்.எஸ் பிபிசி தமிழுக்காக 2 ஆகஸ்ட் 2025 இந்தியா - இங்கிலாந்து இடையே ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி மழை குறுக்கீடுகளையும் கடந்து புயல் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடரில் முதல் நான்கு டெஸ்ட்களும் தட்டையான ஆடுகளங்களில் தான் நடந்தன. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளம் இரு அணிகளுக்கும் சவாலாக இருந்து வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில ஓவர்களில் இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து, 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் நாள் ஆட்டத்தில் தாறுமாறாக பந்துவீசிய டங், ஒரு அபாரமான பந்தின் மூலம் கருண் நாயர் கால்காப்பை தாக்கி, எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன்பிறகு சீட்டுக்கட்டு போல, இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. வாஷிங்டன் சுந்தரை சரியாக குறிவைத்து வீசப்பட்ட பவுன்சர் மூலம் கைப்பற்றிய அட்கின்சன், சிராஜ், பிரசித் கிருஷ்ணா இருவரையும் ரன் ஏதுமின்றி வெளியேற்றினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் எந்தவொரு போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் விக்கெட்டைப் பறிகொடுத்தது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு, இந்த தொடரின் மற்ற போட்டிகளில் தடுமாறிய கருண் நாயர் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். கடும் நெருக்கடியில் இருந்தபோது நன்றாக விளையாடியவர், அரைசதம் அடித்த திருப்தியில் கவனத்தை தொலைத்துவிட்டாரோ என்று தோன்றும் விதமாக அவர் ஆட்டமிழந்த விதம் அமைந்தது. என்னதான் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்றாலும், சுந்தர் ஆட்டமிழந்த பந்து, அவருடைய திறமைக்கு பொருத்தமான ஒன்றல்ல. இரண்டாம் நாளில் இன்னிங்ஸ் தொடங்கி, வெறுமனே 34 பந்துகளில் இந்திய ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கிய போது, ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏதுவான ஒன்றாக மாறியிருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கிராலி–டக்கெட் இருவரும் தொடக்கம் முதலே நம்பிக்கையுடன் அடித்து விளையாடினார்கள். கிராலி வழக்கம் போல கவர் டிரைவ், ஸ்கொயர் கட், ஆஃப் டிரைவ் என பாரம்பரிய முறையில் ரன்கள் குவிக்க மறுபுறம் டக்கெட் ஸ்கூப், ரிவர்ஸ் ஸ்கூப் என விளையாடி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை கலங்கடித்தார். குறிப்பாக ஆகாஷ் தீப்–டக்கெட் இடையிலான சமர், ஆட்டத்துக்கு மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியது. டியூக்ஸ் பந்து, முதல் 12–15 ஓவர்களுக்கு பெரிதாக ஒத்துழைக்காது என்பதால் சிராஜுக்கு தொடக்கத்தில் ஒன்றும் சரியாக அமையவில்லை. 38 பந்துகளில் 43 ரன்கள் குவித்து, அபாரமான தொடக்கம் அமைத்துக் கொடுத்த டக்கெட், அபாயகரமான ஷாட் ஒன்றை ஆட முற்பட்டு, ஆகாஷ் தீப் பந்திலேயே விக்கெட்டை இழந்து நடையைக்கட்டினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்த தொடர் முழுக்க, இரு அணி வீரர்களும் உணர்ச்சிவயப்படுவதையும் ஸ்லெட்ஜிங் செய்வதையும் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறது ஆட்டமிழந்து சென்று கொண்டிருந்த டக்கெட் தோள் மீது கைபோட்டு ஆகாஷ் தீப் நடந்துகொண்ட விதம் பேசப்பட்டது. தினேஷ் கார்த்திக், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்களும் ஆகாஷ் தீப் நடந்து கொண்ட விதத்தை விமர்சித்ததுடன் டக்கெட் காட்டிய நிதானத்தை பாராட்டவும் செய்துள்ளனர். இந்த தொடர் முழுக்க, இரு அணி வீரர்களும் உணர்ச்சிவயப்படுவதையும் ஸ்லெட்ஜிங் செய்வதையும் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறது. சிராஜ்–ஆகாஷ் தீப் இருவரும் ரன்களை வாரி இறைத்ததால், கொண்டுவரப்பட்ட பிரசித் கிருஷ்ணா, தொடக்கத்தில் சில பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தாலும், பிரமாதமான லைன் அண்ட் லெங்த்தில் வீசினார். ஜெஃப்ரி பாய்காட் அடிக்கடி உச்சரிக்கும் "The corridor of uncertainty" என்று சொல்லக்கூடிய லெங்த்தில் வீசினார். புயல் வேகத்தில் சென்று கொண்டிருந்த கிராலியின் விக்கெட்டை கிருஷ்ணா கைப்பற்றிய பிறகு, ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஒரு கதவு திறந்தது. கிராலி விக்கெட்டுக்கு பிறகு இங்கிலாந்து அணி தடுமாறத் தொடங்கியது. ஓரளவுக்கு நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போப், சிராஜின் தவிர்க்க முடியாத உள்ளே வரும் பந்தில் (Nip backer) எல்,பி.டபிள்யூ ஆகினார். பிரசித் கிருஷ்ணா உடனான வாய்த் தகராறால், வழக்கத்துக்கு மாறாக களத்தில் ஆக்ரோஷத்தை காட்டிய ரூட், அதனாலேயே கவனத்தை தொலைத்து சிராஜ் பந்துக்கு ஆட்டமிழந்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிரசித் கிருஷ்ணா, நேற்று அபாரமான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசினார். முதல் இரு டெஸ்ட்களில் தாறுமாறாக வீசியதால், அணியில் இருந்து நீக்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா, நேற்று அபாரமான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசினார். தன்னை நிரூபித்தாக வேண்டும் என்கிற தாகம், அவருடைய பந்துவீச்சில் தெரிந்தது. பெத்தேல் விக்கெட்டை சிராஜ் கைப்பற்ற, கடைசிக்கட்ட விக்கெட்டுகள் அனைத்தையும் பிரசித் கிருஷ்ணா சடசடவென கைப்பற்றி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தார். மழை குறுக்கீடு அடிக்கடி இருந்ததால், அதைப் பயன்படுத்தி இந்திய அணி வீரர்கள் களைப்பின்றி பந்துவீசினர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும், நட்சத்திர வீரர் புரூக் ஒருபக்கம் அடித்து விளையாடினார். அதிர்ஷ்டமும் அவருக்கு நிறைய கைகொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். கடைசி அவரும் சிராஜ் பந்துக்கு ஸ்டம்புகளை பறிகொடுக்க, இங்கிலாந்து அணி 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி, கடைசி 9 விக்கெட்களை 155 ரன்களுக்கு இழந்தது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்கள் கைப்பற்றினர். காயம் காரணமாக வோக்ஸ் பந்துவீச முடியாத சூழலில், டங் புதிய பந்தை கையிலெடுத்தார். முதல் இன்னிங்ஸில் சொதப்பிய ஜெய்ஸ்வால் நம்பிக்கையுடன் இன்னிங்ஸைத் தொடங்கினார். இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறைக்கு சவால் அளிக்கும் விதமாக, அதிரடியாக விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட் போல சிக்ஸர்களும் பவுண்டரியுமாக விளாசி, இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தினார். அபாரமாக வீசப்பட்ட சில பந்துகளை சிறப்பாக எதிர்கொண்ட ராகுல், ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் சென்ற பந்தை தேவையில்லாமல் தொட்டு ஆட்டமிழந்தார். தொடரின் ஆரம்பத்தில் தென்பட்ட கவனமும் உற்சாகமும் இப்போது ராகுலின் ஆட்டத்தில் குறைவாகத் தெரிகிறது. ராகுல் ஆட்டமிழந்த பிறகு ஜெய்ஸ்வாலுடன் சாய் சுதர்சன் கைகோர்த்தார். ஜெய்ஸ்வால் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து வீரர்கள் தவறவிட்டனர். சாய் சுதர்சனின் கேட்ச் வாய்ப்பையும் கிராலி தவறவிட்டபோதும், அந்த வாய்ப்பை சுதர்சன் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஆட்டம் முடிவதற்கு சில பந்துகள் இருந்த நிலையில், அட்கின்சன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு டாப் ஆர்டர் விக்கெட்டுகள் சரியக்கூடாது என்ற முன்னெச்சரிகையில் நைட் வாட்ச்மேனாக ஆகாஷ் தீப் களமிறங்கினார். இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஜெய்ஸ்வால் 51 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். இன்று சூரியன் கைகொடுக்கும் பட்சத்தில், இந்திய அணி வலுவான நிலைக்குச் செல்வதற்கு வாய்ப்புள்ளது. வோக்ஸ் இல்லாததால், 3 வேகப் வீச்சாளர்களின் ஸ்பெல் முடிந்தவுடன் எப்படியும் சுழற்பந்து வீச்சாளர்களை நோக்கிதான் இங்கிலாந்து கேப்டன் போப் சென்றாக வேண்டும். ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இல்லாத இங்கிலாந்தின் பந்துவீச்சில் தென்படும் பலவீனத்தை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் அபார முன்னிலை பெற்று இந்த டெஸ்டை வென்று தொடரை சமன் செய்யலாம். நேற்றைய நாளில் மட்டும் ஒட்டுமொத்தமாக 15 விக்கெட்டுகள் சரிந்துள்ளன. இப்படியாக ஓவல் டெஸ்டில் இரண்டாவது நாளிலும் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp8z2nnzdmro
-
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
செம்மணி மனித புதைகுழியில் நான்கு எலும்புக்கூடுகள் அடையாளம் 02 Aug, 2025 | 06:34 PM செம்மணி - சித்தப்பாத்தி மனிதப் புதைகுழியில் சனிக்கிழமை (02) இரண்டாவது கட்டத்தில் 28 வது நாளாகவும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது புதிதாக நான்கு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி - சித்தப்பாத்தி மனிதப் புதை குழியில் இதுவரை 126 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்றையதினம் நான்கு மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இதுவரை 117 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/221642
-
மனிதகுல அழிவுக்கு வழி வகுக்கப்போகும் செயற்கை நுண்ணறிவு : எச்சரிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரை
படக்குறிப்பு, AI2027, ஏஐ மூலம் இயங்கும் எதிர்கால உலகை கற்பனை செய்கிறது (Veo ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படம்) 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2027ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கட்டுப்படுத்த முடியாததாக மாறி, அடுத்த பத்தாண்டுகளில் மனிதகுலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று கணிக்கும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை தொழில்நுட்ப உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. AI2027 எனப்படும் அந்த விரிவான கற்பனை நிகழ்வுகள், செல்வாக்கு மிக்க ஏஐ நிபுணர்கள் குழுவால் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் அதன் சாத்தியக்கூறு குறித்து மக்களிடையே விவாதங்கள் எழ, அது பல வைரல் வீடியோக்களுக்கு வழிவகுத்தது. அதன் நேரடி கணிப்பை விளக்க, பிரதான ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி அந்த சூழல் தொடர்பான காட்சிகளை பிபிசி மறுஉருவாக்கம் செய்துள்ளது மற்றும் இந்த ஆய்வறிக்கை ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் நிபுணர்களிடம் பேசியுள்ளது. ஏஐ கட்டுப்பாடுகளை மீறும் சூழலில் என்ன நடக்கும்? 2027ஆம் ஆண்டில், ஓபன் பிரைன் எனப்படும் ஒரு கற்பனையான அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமானது, ஏஜிஐ (AGI- செயற்கை பொது நுண்ணறிவு) திறனை அடையும் ஒரு செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் என்று அந்த ஆய்வறிக்கை கணித்துள்ளது. அது, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அனைத்து அறிவுசார் பணிகளையும் மனிதர்களுக்கு இணையாகவோ அல்லது மனிதர்களை விட சிறப்பாகவோ செய்யக்கூடிய மதிப்பிற்குரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தருணமாக இருக்கும். இந்த நிறுவனம் அதை பத்திரிகையாளர் சந்திப்புகளை நிகழ்த்தி, கொண்டாடுகிறது. மேலும் மக்கள் ஏஐ கருவியை ஏற்றுக்கொள்ளும்போது தங்களது லாபம் அதிகரிப்பதைக் காண்கிறது. இருப்பினும் அறிக்கையின்படி, நிறுவனத்தின் உள் பாதுகாப்பு குழு, ஏஐ-க்கு என வடிவமைக்கப்பட்ட நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கங்களில் அது ஆர்வத்தை இழந்து வருகிறது என்பதற்கான அறிகுறிகளைக் கண்டறியும். கற்பனை சூழ்நிலையின்படி, நிறுவனம் அதைக் கட்டுப்படுத்துவதற்கான எச்சரிக்கைகளை புறக்கணிக்கிறது. கற்பனைசெய்யப்பட்ட அந்த காலக்கெடுவில், சீனாவின் முன்னணி ஏஐ கூட்டு நிறுவனமான டீப்சென்ட், ஓபன்பிரைன் நிறுவனத்தை விட சில மாதங்கள் மட்டுமே பின்தங்கி உள்ளது. சிறந்த ஏஐ நுட்பத்தை உருவாக்கும் போட்டியில் அமெரிக்க அரசாங்கம் தோற்க விரும்பவில்லை. இதனால் வளர்ச்சி மற்றும் முதலீடு தொடர்கிறது, போட்டி சூடுபிடிக்கிறது. படக்குறிப்பு, ஓபன்பிரைன் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த ஒரு பொறியாளர் - Hailuo ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படம். கற்பனை சூழ்நிலையின்படி, 2027 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏதோ ஒரு கட்டத்தில் ஏஐ மிகவும் நுண்ணறிவுடையதாக மாறும், அதன் படைப்பாளர்களின் வேகம் மற்றும் அறிவை குறிப்பிடத்தக்க வித்தியாசத்தில் மிஞ்சும். அதன் முந்தைய ஏஐ பதிவுகளால் கூட அதன் விரைவான கணினி மொழி உருவாக்கம் மற்றும் முடிவில்லா கற்றலுடன் போட்டி போட முடியாது. செயற்கை நுண்ணறிவில் மேலாதிக்கத்திற்காக சீனாவுடனான போட்டி, அமெரிக்க அரசாங்கத்தையும் நிறுவனத்தையும் 'தவறான சீரமைப்பு' தொடர்பான கூடுதல் எச்சரிக்கைகளைப் புறக்கணிக்கத் தூண்டுகிறது. தவறான சீரமைப்பு என்ற சொற்றொடர் ஒரு இயந்திரத்தின் நலன்கள் மனிதர்களின் நலன்களுடன் ஒத்துப்போகாத சூழ்நிலையை வகைப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. சூழ்நிலையின்படி, இரு நாடுகளின் போட்டித்தன்மை வாய்ந்த ஏஐ-க்கள் பயங்கரமான புதிய தனித்தியங்கும் ஆயுதங்களை உருவாக்கும்போது, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றங்கள் 2029இல் போரின் நிலைக்கு செல்லக்கூடும். இருப்பினும், நாடுகள் தங்கள் செயற்கை நுண்ணறிவுகளின் மூலம் ஒரு சமாதான உடன்பாட்டை எட்டுகின்றன, மனிதகுலத்தின் நலனுக்காக ஒன்றுபட ஒப்புக்கொள்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கற்பனை செய்கின்றனர். அதிபுத்திசாலித்தனமான ஏஐ-க்கள் மூலம் பெரும் அளவிலான ரோபோ பணியாளர்கள் நிர்வகிக்கப்படுகின்றனர். அதன் நன்மைகளை உலகம் உணர்கிறது, இதைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு அனைத்தும் நன்றாகவே நடந்து வருகின்றன. கற்பனை சூழ்நிலையின் அடுத்த கட்டமாக, பெரும்பாலான நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன, வறுமை ஒழிக்கப்படுகிறது, மேலும் காலநிலை மாற்றம் தலைகீழாக மாறுகிறது. இருப்பினும், 2030களின் நடுப்பகுதியில், ஏஐ-இன் லட்சியங்களுக்கு மனிதகுலம் ஒரு இடையூறாக மாறும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஏஐ மக்களைக் கொல்ல கண்ணுக்குத் தெரியாத உயிரி ஆயுதங்களைப் பயன்படுத்தும். படக்குறிப்பு, AI2027 கற்பனை செய்தபடி 2035இல் ஏஐ சமுதாயம் இப்படி இருக்கலாம்- (VEO ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படம்) AI2027 பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்? சிலர் AI2027-ஐ அறிவியல் புனைகதை என்று நிராகரிக்கும் அதே வேளையில், அதன் ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்பட்டு, ஏஐ-இன் விளைவுகளை முன்னறிவிப்பதற்காக நிறுவப்பட்ட இலாப நோக்கற்ற ஏஐ எதிர்கால திட்டத்தை உருவாக்கி வருகின்றனர். AI2027-இன் முதன்மை ஆசிரியரான டேனியல் கோகோடஜ்லோ, ஏஐ வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க திருப்புமுனைகளை துல்லியமாக கணித்ததற்காக அங்கீகாரம் பெற்றுள்ளார். 'இந்தக் காட்சி சாத்தியமற்றது அல்ல, ஆனால் அது விரைவில் நிகழ வாய்ப்பில்லை' என்று அமெரிக்க அறிவாற்றல் விஞ்ஞானியும் எழுத்தாளருமான கேரி மார்கஸ் கூறுகிறார். AI2027-இன் மிகவும் பிரபலமான விமர்சகர்களில் இவரும் ஒருவர். "இந்த ஆவணத்தின் புத்திசாலித்தனம் என்பது மக்களை கற்பனை செய்ய தூண்டுகிறது. அது ஒரு சிறந்த விஷயம் என்றாலும், அந்த ஆவணம் கூறும் முடிவு ஒரு சாத்தியமான விளைவாகவே இருக்கலாம் என்பதால் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன்." மார்கஸின் கூற்றுப்படி, இருத்தலியல் ஆபத்தை விட வேலைவாய்ப்புகள் மீதான அதன் தாக்கமே ஏஐ தொடர்பான முக்கிய கவலைகளில் ஒன்றாகும். "என்னுடைய கருத்துப்படி, இதில் நமக்கான முக்கிய பாடம் என்னவென்றால், செயற்கை நுண்ணறிவு தொடர்பாக ஏராளமான (சாத்தியமான) சிக்கல்கள் உள்ளன. நாம் சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளை சரியாகப் பின்பற்றுகிறோமா?" அவரும் மற்ற விமர்சகர்களும், நுண்ணறிவு மற்றும் திறன்களில் ஏஐ எவ்வாறு இவ்வளவு பெரிய முன்னேற்றங்களை அடைகிறது என்பதை விளக்க இந்த ஆய்வுக் கட்டுரை தவறிவிட்டது என்று கூறுகிறார்கள். பெரும்பாலும் மிகைப்படுத்தப்படும் ஓட்டுநர் இல்லாத கார்களின் தொழில்நுட்பத்தை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். AI2027 சீனாவில் விவாதிக்கப்படுகிறதா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 'இந்த ஆராய்ச்சி சீனாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை' சீன தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவரும், லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பொருளாதாரம் மற்றும் புதுமைப் பிரிவின் இணைப் பேராசிரியருமான முனைவர் யுண்டன் காங், 'இந்த ஆராய்ச்சி சீனாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என தெரிகிறது' என்கிறார். "AI2027 பற்றிய பெரும்பாலான விவாதங்கள் முறைசாரா மன்றங்களிலோ அல்லது தனிப்பட்ட வலைப்பதிவுகளிலோ நிகழ்வதாக தெரிகிறது, அவை அதை அறிவியல் புனைகதையாகப் பார்ப்பது போல் தெரிகிறது. இது உண்மையில் அமெரிக்காவில் நாம் காணும் அதே பரவலான விவாதம் அல்லது கொள்கை தொடர்பான கவனத்தைத் தூண்டவில்லை," என்று அவர் கூறினார். ஏஐ மேலாதிக்கத்திற்கான போட்டியில் சீனாவும் அமெரிக்காவும் எவ்வாறு வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளன என்பதையும் டாக்டர் காங் எடுத்துக்காட்டுகிறார். இந்த வாரம் ஷாங்காயில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில், செயற்கை நுண்ணறிவில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நாடுகள் குறித்த தொலைநோக்குப் பார்வையை சீனப் பிரதமர் லி கியாங் முன்வைத்தார். சீனத் தலைவரின் கூற்றுப்படி, தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்துவதில் சீனா உதவ வேண்டும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஏஐ செயல் திட்டம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சீனாவின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிரம்பின் செயல் திட்டம், ஏஐ துறையில் அமெரிக்கா 'ஆதிக்கம் செலுத்துவதை' உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "கேள்விக்கு இடமில்லாத மற்றும் யாரும் சவால் விடுக்க முடியாத அளவுக்கு ஒரு உலகளாவிய தொழில்நுட்ப ஆதிக்கத்தை அடைவதும் பராமரிப்பதும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாதது" என்று அதிபர் டிரம்ப் பிரகடனத்தில் கூறினார். அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதற்காக, "தேவையற்ற மற்றும் விலையுயர்ந்த ஒழுங்குமுறைகளை அகற்ற" செயல் திட்டம் முயல்கிறது. இந்தக் கருத்துக்கள் AI2027-இன் முன்மாதிரியை வியக்கத்தக்க வகையில் பிரதிபலிக்கின்றன. ஏனெனில் அமெரிக்கத் தலைவர்கள் ரோபோக்கள் மீதான கட்டுப்பாட்டை இழப்பதற்கான சாத்தியக்கூறுகளை விட, ஏஐ தொழில்நுட்ப பந்தயத்தில் வெற்றி பெறுவதற்கே முன்னுரிமை அளிக்கின்றனர். AI2027 பற்றி ஏஐ துறை என்ன சொல்கிறது? சிறந்த மாடல்களை வெளியிடுவதற்கு தொடர்ந்து போட்டியிடும் முக்கிய ஏஐ நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், இந்த ஆராய்ச்சியைப் புறக்கணிப்பதாகவோ அல்லது தவிர்ப்பதாகவோ தெரிகிறது. இந்த தொழில்நுட்ப ஜாம்பவான்கள் முன்வைக்கும் நமது ஏஐ எதிர்காலத்தின் தொலைநோக்குப் பார்வை என்பது AI2027-இலிருந்து மிகவும் வித்தியாசமானது. சாட்ஜிபிடி படைப்பாளரான சாம் ஆல்ட்மேனின் சமீபத்திய கூற்றின்படி, "மனிதகுலம் 'டிஜிட்டல் சூப்பர் இன்டெலிஜென்ஸ்' நுட்பத்தை உருவாக்கும் விளிம்பில் உள்ளது. இது ஒரு அமைதியான புரட்சியையும், மனிதர்களுக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்காத ஒரு தொழில்நுட்ப சமூகத்தையும் கொண்டு வரும்." ஆனால் 'தவறான சீரமைப்பு' எனும் சிக்கல் இருப்பதையும், இந்த அதிபுத்திசாலித்தனமான ரோபோக்கள் மனிதகுலத்தின் சிறந்த நலன்களுக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வது தொடர்பான அந்த சிக்கல் தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் ஒப்புக்கொள்கிறார். அதேசமயம், அடுத்த பத்து வருடங்களில் என்ன நடந்தாலும் மனிதர்களை விட புத்திசாலியான இயந்திரங்களை உருவாக்கும் போட்டி தொடரும் என்பதில் சந்தேகமில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62n3yjj9d1o
-
சம்பூர் கடற்கரையோர பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
திருகோணமலை சம்பூர் கடற்கரையில் மனித எச்சங்கள் : மூதூர் நீதிமன்ற நீதிபதி கள விஜயம் 02 Aug, 2025 | 04:27 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோரத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு இன்று (2) மூதூர் நீதிமன்ற நீதிபதி திடீர் விஜயம் மேற்கொண்டு, அக்காணியின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார். அந்தப் பகுதியில் அகழ்வு மேற்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 6ஆம் திகதி சட்ட மாநாடு ஒன்றுக்கு திகதியிடப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதிக்கு இன்றைய தினம் திடீர் விஜயம் மேற்கொண்டு காணி உரிமையாளர்களுடன் மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான் கலந்துரையாடினார். கடந்த ஜூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை MAG என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப் பகுதிகளைக் கண்டெடுத்தது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கடந்த ஜூலை 23ஆம் திகதி மூதூர் நீதிமன்ற நீதிபதி, அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம், காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம், குற்றவியல் தடயக் காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்தனர். அதன் பின்னர் அப்பகுதியில் அகழ்வுப் பணியை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் திணைக்களத்திடம் இருந்து நீதிபதியால் அறிக்கைகள் கோரப்பட்டிருந்தன. அந்த அறிக்கைகள் கடந்த 30ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டபோது அதனை ஆராய்ந்த நீதிபதி எதிர்வரும் 6ஆம் திகதி குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக சட்ட மாநாடு ஒன்றிற்கு திகதியிடப்பட்டுள்ளதுடன் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது மேலும் சில மண்டை ஓடு, கை, கால், முள்ளந்தண்டு மற்றும் விலா என்புத் தொகுதிகளைக் கொண்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகிறது. https://www.virakesari.lk/article/221628
-
இலங்கை: கட்டியணைத்தபடி கிடைத்த குழந்தையின் எலும்புக் கூடு - நவீன ஸ்கேன் மூலம் பகுதியை ஆய்வு செய்ய முடிவு
கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் - செம்மணி - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணபட்டு வருகின்ற நிலையில், அந்த பகுதியை ஸ்கேன் செய்வதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி, இம்மாதம் 03ம் மற்றும் 04ம் தேதிகளில் அந்த பகுதியை ஸ்கேன் செய்வதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மேலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யும் வகையிலேயே இந்த ஸ்கேன் மேற்கொள்ளப்படவுள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்கேன் இயந்திரத்தின் ஊடாக, குறித்த பகுதியை ஸ்கேன் செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார். ''இந்த இடத்தை ஸ்கேன் செய்வதற்காக முறைக்கு செல்வதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. திட்டமிட்ட வகையில் பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட அனுமதிக்கு, கருவியை பயன்படுத்த அனுமதிக்காத சந்தர்ப்பத்தினால், ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவின் உதவியுடன் வருகின்ற திங்கட்கிழமை அதே வகையான ஸ்கேன் கருவியை கொண்டு இந்த பிரதேசம் ஸ்கேன் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.'' என ரனிதா ஞானராஜா குறிப்பிடுகின்றார். சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி யாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 118 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 118 எலும்புக்கூட்டுத் தொகுதிகளிலிருந்து இதுவரை 105 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஏனைய மனித எலும்பு கூடுகளை அகழ்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, சட்ட மருத்துவ அதிகாரியின் கண்காணிப்பில் அவை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சாட்சிப் பொருட்கள் வழக்கு எண்களின் அடிப்படையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். அதேவேளை, குறித்த பகுதியிலிருந்து தொடர்ச்சியாக குழந்தைகளில் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் கண்டெடுக்கப்பட்ட வருகின்றன. புதைகுழிகளில் புத்தகப்பை அண்மையில் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, பெரிய நபரொருவரின் எலும்புக்கூடொன்றை, சிறிய குழந்தையொன்றின் எலும்புக்கூடு கண்டி அரவணைத்த படியான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார். ''ஒரு பெரிய மனித எலும்புத் தொகுதியோடு, ஒரு சிறிய குழந்தையினுடைய மனித எலும்புத் தொகுதி அரவணைக்கப்பட்ட விதத்தில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது சுத்தப்படுத்தப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது. '' என அவர் குறிப்பிடுகின்றார். குறித்த மனிதப் புதைக்குழியிலிருந்து சிறார்களுடையது என சந்தேகிக்கப்படும் பால் போத்தல், புத்தக பை, பொம்மைகள், பாதணி, ஆடைகள் உள்ளிட்ட பொருட்களையும் அகழ்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். குறிப்பாக போர் இடம்பெற்ற காலப் பகுதியில் தமது பெற்றோருடன் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா அண்மையில் பிபிசி தமிழுக்கு தெரிவித்திருந்தார். காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என அவர் வெளியிட்டிருந்தார். எனினும், இவ்வாறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை ராணுவம் முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். சம்பூர் மனிதப் புதைக்குழி - மயான பூமிக்கான ஆதாரம் இல்லை திருகோணமலை - சம்பூர் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியானது, ஒரு மயான பூமி என்ற கூற்றை ஆதரிக்க போதுமான ஆதாரங்கள் கிடையாது என தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் உரிமையாளர்கள் உயிரிழந்தமைக்கான காரணங்களை கண்டறிவதற்கான காரணத்தை கண்டறிய மேலும் ஆழமான ஆய்வுகள் நடாத்தப்பட வேண்டும் என சட்ட மருத்துவ அதிகாரி, நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். திருகோணமலை - சம்பூர் கடற்கரை அருகில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த பிரித்தானியாவை தளமாக கொண்ட நிறுவனத்தினால் இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு பிரிவிற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த விடயம் நீதிமன்ற விசாரணைகளுக்கு சென்றிருந்தது. இந்த நிலையில், குறித்த மனித எச்சங்கள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மூதூர் நீதவான், சட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, சட்ட மருத்துவ அதிகாரி கடந்த 30ம் தேதி இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவித்துள்ளார். மனித எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மனித புதைக்குழி இருந்ததா அல்லுது அது தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான காணியா என்பது தொடர்பில் துல்லியமாக உறுதிப்படுத்துவதற்கான எந்த ஆதாரங்களும் கிடையாது என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அகழாய்வு நடத்தப்படுமா? இந்த மனித எலும்பு எச்சங்கள் மிக நீண்ட காலத்திற்கு உட்பட்டவையாக இருக்கலாம் என திருகோணமலை சட்ட மருத்துவ அதிகாரி, நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அத்துடன், இந்த மனித எச்சங்கள் தொடர்பான சரியான தகவல்களை அறிவிந்துக்கொள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா, இல்லையா என்பது குறித்து தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 6ம் தேதி நீதிமன்றம் விசாரணைகளை நடாத்தவுள்ளது. 1990ம் ஆண்டு இலங்கை ராணுவத்தினால் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியை அண்மித்த பகுதியில் இருந்தே இந்த மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கையில் ஏற்கனவே 20திற்கும் அதிகமான மனிதப் புதைக்குழிகள் கண்டுபி;டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் சில மனிதப் புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy8jpjgj60do
-
ரஷ்யாவின் கருத்துக்கு எதிர்வினை - அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்
யாரோஸ்லாவ் லுகிவ் பிபிசி செய்திகள் 49 நிமிடங்களுக்கு முன்னர் முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடெவ் தெரிவித்த "மிகவும் ஆத்திரமூட்டும்" கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை "பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த" உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். "முட்டாள்தனமான மற்றும் எரிச்சலூட்டும் அறிக்கைகள் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தால் மட்டுமே நான் இதைச் செய்தேன். வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை, அவை பெரும்பாலும் எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும். இது அந்த மாதிரியான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்காது என்று நம்புகிறேன்" என்று டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க ராணுவ நெறிமுறைகளின்படி, நீர்மூழ்கிக் கப்பல்கள் எங்கு நிலை நிறுத்தப்படுகின்றன என்பதை அதிபர் டிரம்ப் கூறவில்லை. யுக்ரேனுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது கடுமையான தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அண்மையில் மெட்வெடேவ் பேசியிருந்தார், அது அமெரிக்காவை அச்சுறுத்தும்விதமாக இருந்தது. உலகிலேயே அதிக அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள ரஷ்யாவும் அமெரிக்காவும், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களையும் வைத்துள்ளன. பட மூலாதாரம், Getty Images வெள்ளிக்கிழமையன்று (2025, ஆகஸ்ட் 1) ட்ரூத் சோஷியலில் டிரம்ப் எழுதிய பதிவில், "ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், தற்போது ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவின் ஆத்திரமூட்டும் அறிக்கைகளின் அடிப்படையில், இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார். ட்ரூத் சோஷியல் பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றியா அல்லது அணு ஆயுதம் ஏந்திய நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றியா என்பதை அமெரிக்க அதிபர் கூறவில்லை. சமூக ஊடகத்தில் இந்த விஷயத்தை பதிவிட்ட சில மணி நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஒரு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது, அது சரியானதாக எங்களுக்குத் தோன்றவில்லை. எனவே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என்றார். "ரஷ்யாவின் முன்னாள் அதிபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது, நமது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நான் இதைச் செய்கிறேன். நமது மக்களைப் பாதுகாக்க வேண்டும்." இந்த விவகாரம் குறித்து ரஷ்யா இதுவரை எந்த பொதுக் கருத்தையும் தெரிவிக்கவில்லை, ஆனால் டிரம்பின் அறிக்கைகளைத் தொடர்ந்து அந்நாட்டின் பங்குச் சந்தை கடுமையான சரிவைக் கண்டது. அமெரிக்காவின் இந்நாள் அதிபரும், ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் அண்மையில் சமூக ஊடகங்களில் பரஸ்பரம் தொடர்ச்சியான தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர். ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என தற்போதைய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு புதிய காலக்கெடுவை நிர்ணயித்த பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஏனெனில், போர் நிறுத்தம் செய்வதற்கான எந்த விதமான முயற்சிகளையும் ரஷ்யா எடுக்கவில்லை. இதற்கு முன்னதாக, திங்களன்று, டிரம்ப் "10 அல்லது 12" நாள் காலக்கெடுவை நிர்ணயித்திருந்தார். ஜூலை மாத தொடக்கத்தில், ரஷ்ய அதிபர் புடின் 50 நாட்களில் போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பிற ஏற்றுமதிகளை குறிவைத்து கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தியிருந்தார். பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, 2008-12 ஆம் காலகட்டத்தில் ரஷ்யாவின் அதிபராக இருந்த டிமிட்ரி மெட்வெடேவ் 2008 முதல் 2012 வரை ரஷ்யாவின் அதிபராக இருந்த மெட்வெடேவ், இந்த வார தொடக்கத்தில் டிரம்ப் "ரஷ்யாவுடன் இறுதி எச்சரிக்கை விளையாட்டை" விளையாடுவதாகக் குற்றம் சாட்டினார். எக்ஸ் வலைதளத்தில் மெட்வெடேவ் வெளியிட்ட ஒரு பதிவில், "டிரம்பின் ஒவ்வொரு புதிய இறுதி எச்சரிக்கையும் ஒரு அச்சுறுத்தல் என்றும், போரை நோக்கிய ஒரு படி முன்னோக்கி செலுத்தும் செயல்" என்று கூறினார். ஜூலை மாத தொடக்கத்தில் டிரம்பின் இறுதி எச்சரிக்கையை விமர்சித்த அவர், அது "நாடக ரீதியாக" இருப்பதாகவும், "ரஷ்யா அதைப் பொருட்படுத்தவில்லை" என்றும் கூறியிருந்தார். இது குறித்து டெலிகிராமில் பதிவிட்ட மெட்வெடேவ், "டெட் ஹேண்ட்" அச்சுறுத்தல் குறித்து எச்சரித்தார். இது, குறிப்பாக ரஷ்யாவின் பழிவாங்கும் அணுசக்தி தாக்குதல் கட்டுப்பாட்டு அமைப்பின் குறியீட்டுப் பெயர் என சில ராணுவ ஆய்வாளர்கள் புரிந்து கொண்டனர். மெட்வெடேவின் கருத்துக்களுக்கு டிரம்ப் பதிலளிப்பது இது முதல் முறை அல்ல. அவர் மெட்வெடேவை "ரஷ்யாவின் தோல்வியுற்ற முன்னாள் அதிபர், அவர் இன்னும் தன்னை நாட்டின் அதிபராகவே நினைக்கிறார்" என்று வியாழக்கிழமையன்று (2025 ஜூலை 31) விவரித்தார். மெட்வெடேவை "அவரது வார்த்தைகளைக் கவனியுங்கள்" என்றும், "அவர் மிகவும் ஆபத்தான பகுதிக்குள் நுழைகிறார்!" என்றும் டிரம்ப் எச்சரித்தார். 2022ஆம் ஆண்டில் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பை மெட்வெடேவ் ஆதரிக்கிறார், மேலும் மேற்கத்திய நாடுகளை வெளிப்படையாக விமர்சிப்பதற்கும் அவர் தயங்குவதில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c754z1dp09eo
-
செம்மணி மனிதப் புதைகுழி சான்றுகள்: உறவுகள் அடையாளம் காண அவை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும்
செம்மணியில் மீட்கப்பட்ட தடயப் பொருட்களை அடையாளம் காட்ட ஒத்துழையுங்கள் - பொதுமக்களிடம் சிறீதரன் எம்.பி வேண்டுகோள்! Published By: Digital Desk 2 02 Aug, 2025 | 04:16 PM செம்மணி சித்துப்பாத்தி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகளில் இதுவரை மீட்கப்பட்டுள்ள தடயப்பொருட்கள் பொதுமக்களால் அடையாளப்படுத்தப்படுமாக இருந்தால், அவற்றை அடிப்படையாகக்கொண்டு உண்மைகளைக் கண்டறிவதற்கான விசாரணைகளைக் கோர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் விடுக்கப்பட்டுள்ள கட்டளையை மேற்கோள் காட்டி கருத்து தெரிவிக்கும் போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது, செம்மணியில் மீட்கப்பட்ட என்புத்தொகுதிகளின் பின்னணியிலுள்ள இனப்படுகொலைச் சம்பவங்களை எண்பிப்பதற்கு, அங்கு நடைபெற்றுவரும் அகழ்வுப்பணிகளில் மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் உரியவர்களின் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட வேண்டும். ஆகவே, தடயப்பொருட்களை இனங்காட்ட வேண்டியதன் அவசியம் உணர்ந்து, தங்களின் உறவுகளும் செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எதிர்வரும் 05ஆம் திகதி மாலை 1.30 மணி முதல் 5.00 மணிவரை யாழ்ப்பாணம் சித்துப்பாத்தி இந்துமயானத்தருகில் காட்சிப்படுத்தப்படும் தடயப்பொருட்களை அடையாளம் காட்ட வருகைதந்து, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைக்கு வலுச்சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/221619
-
அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை - வேலணை பிரதேச சபை அறிவிப்பு!
Published By: Digital Desk 2 02 Aug, 2025 | 12:32 PM வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டுமல்லாது இயந்திரங்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வேலணை பிரதேச சபை அறிவித்துள்ளது. இது குறித்து பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமாரின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதவது, வேலணை பிரதேச சபைக்குட்பட்ட இடங்களில் அண்மைக்காலமாக எந்தவிதமான அனுமதியும் பெறப்படாது அதிகளவான குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் அமைக்கப்படும் குழாய்க்கிணறுகளை எந்தவிதமான கட்டுப்பாடுகள் மற்றும் போதிய வழிகாட்டுதல்களுமின்றி தான்தோன்றித்தனமாக அமைப்பதானது எமது பிரதேசத்தில் காணப்படுகின்ற மிக சொற்பமான நன்னீர்க் கிணறுகளையும் வெகுவிரைவில் பாதிப்படையச் செய்யும் ஒரு செயற்பாடாகவே இருக்கின்றது. இதனால் குறித்த செயற்பாட்டை விரைந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதனடிப்படையில் குழாய்க்கிணறுகளை அமைக்க உத்தேசித்துள்ளவர்கள் பிரதேச சபையின் ஊடாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு விண்ணப்பித்து அவர்களது சிபாரிசுற்கு அமைவாக பிரதேச சபையின் அனுமதியினைப் பெற்றுக்கொள்வது கட்டாயமானதாகும். அத்துடன் உடனடியாக செயற்படும் வண்ணம் இந்த நடைமுறை இறுக்கமாக பின்பற்றப்படும் என்பதோடு அனுமதியின்றி குழாய்க்கிணறு அமைப்பவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதே நேரம் குழாய்க்கிணறு அமைக்கும் சேவை வழங்குநர்கள் தங்களது சேவை வழங்கல் தொடர்பாக பிரதேச சபையில் உரிய பதிவுகளை மேற்கொண்டு உரிமப்பத்திரத்தினை பெற்றுக்கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது . அத்துடன் குழாய்க்கிணறு அமைக்கும் சேவை வழங்குநர்கள் குழாய்க் கிணறு அமைப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே கிணறு அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதுடன் அனுமதிப்பத்திரம் இல்லாதோருக்கு குழாய்க்கிணறு அமைத்துக் கொடுத்தல் தண்டனைக்குரிய குற்றச்செயலாகும். அத்துடன் குழாய்க்கிணறு அமைப்பதற்கான சேவை வழங்கல் உரிமப்பத்திரமின்றி எமது பிரதேச சபைக்குள் பிரவேசிக்கும் குழாய்க்கிணறு அமைக்கும் இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் பிரதேச சபையால் பொலிஸார் ஊடாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அருகிவரும் தீவகப் பிரதேசத்தின் நன்னீர் வளத்தினை பேணிப் பாதுகாப்பதற்கு வேலணைப் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த நடைமுறைகளைப் பின்பற்றி எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேலணை பிரதேச சபை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221609
-
ஒரு பெண்ணுக்கு 'நானே கணவன்' என்று 8 பேர் ஆஜர் - மகாராஷ்டிர நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாக்பூரில் நடைபெற்ற திருமண மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்டுரை தகவல் பாக்யஸ்ரீ ராவத் பிபிசிக்காக 2 ஆகஸ்ட் 2025, 06:04 GMT வட இந்தியாவில் 'கொள்ளைக்கார மணமகள்' சம்பவங்கள் நடப்பதை கேள்விப்பட்டிருப்போம். அதைப்பற்றி பல திரைப்படங்களும் எடுக்கப்பட்டுவிட்டன. அத்தகைய ஒரு நபர் தற்போது நாக்பூர் போலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார். இது வரை எட்டு பேரை திருமணம் செய்துள்ள அவர், அனைவரிடமும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். நாக்பூரில் மூன்று காவல் நிலையங்களிலும், சத்திரபதி சம்பாஜி நகர், மும்பை மற்றும் பவனி காவல்நிலையங்கலிலும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் திருமணம் செய்து கொண்ட எட்டு பேரும் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள் என்கிற தகவலையும் தெரிவித்துள்ளனர். இந்த பெண்ணின் பெயர் சமீரா பாத்திமா என்றும் அவர் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார் என்றும் கிட்டிகதான் காவல் நிலைய ஆய்வாளர் ஷார்தா போபாலே தெரிவித்துள்ளார். அவர் மோமின்புரா பகுதியில் உள்ள ஒரு உருதுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவரின் முதல் திருமணம் பிவாண்டியில் நடைபெற்றது. 2024-இல் நாக்பூரைச் சேர்ந்த குலாம் கவுஸ் பதான் என்பவர் சமீரா பாத்திமா என்கிற பெண்ணால் ஏமாற்றப்பட்டதாக கிட்டிகதான் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஃபேஸ்புக் மூலம் குலாமிடம் அறிமுகமான பாத்திமா, தானும் விவாகரத்து ஆனவர் என்றும் மறுமணம் பற்றி யோசிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பிறகு இருவரும் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினர். இரவும் பகலும் செல்போனில் பேசத் தொடங்கினர். அதன் பின்னர் ஆபாச வீடியோ ஒன்றை எடுத்து அதனை வைரல் ஆக்கப் போவதாக மிரட்டி திருமணம் செய்துகொள்ள குலாமுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார் பாத்திமா. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அதற்குப் பிறகு வீடியோவை வைத்து மிரட்டி பாத்திமா பணம் பறித்ததாக குலாம் தனது புகாரில் தெரிவித்துள்ளார். வேறு காரணங்களுக்காகவும் பல லட்சம் ரூபாய் வரை கேட்டுள்ளார். இதனால் அவரிடமிருந்து விலகத் தொடங்கினார் குலாம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஃபேஸ்புக் மூலம் குலாமிடம் அறிமுகமான பாத்திமா, தானும் விவாகரத்து ஆனவர் என்றும் மறுமணம் பற்றி யோசிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது தான் பாத்திமாவுக்கு ஏற்கெனவே பலமுறை திருமணம் ஆனது தெரியவந்தது. தனது முந்தைய கணவரிடம் விவாகரத்து பெறுவதற்கு முன்பாகவே குலாமை அவர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் போலியான விவாகரத்து சான்றிதழ் ஒன்றைக் காண்பித்துள்ளார். அவரிடம் வெவ்வேறு காரணங்களுக்காக பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். குலாமின் புகாரைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு சமீராவை கைது செய்ய காவல்துறை சென்றபோது அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். எனவே அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். விசாரணைக்கு ஆஜராக காவல்துறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் வரவில்லை. இந்த நிலையில் அவருக்குப் பொறி வைத்து காவல்துறை கைது செய்துள்ளது. திருமண மோசடி - காவல்துறை தகவல் சமீரா திருமணம் என்கிற பெயரில் குலாமை மட்டும் ஏமாற்றவில்லை. அவர் மேலும் 4 அல்லது 5 பேரை திருமணம் செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்துக்கு வந்தபோது அவர் திருமணம் செய்து கொண்ட 8 பேரும் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். எட்டு பேரும் அவர்களின் வழக்கறிஞர்களுடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி இந்த மோசடி பற்றி விவரித்தனர். பாத்திமாவுக்கு 2017-ல் முதல் திருமணம் ஆனது. அப்போதிலிருந்து அவர் ஏமாற்றத் தொடங்கியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கணவரை விவாகரத்து செய்யாமலே மேட்ரிமோனி இணையதளங்கள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த விவாகரத்தான செல்வந்த ஆண்களைக் கண்டறிந்து அவர்களுடன் தொடர்பை அவர் ஏற்படுத்திக் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஏமாற்று செயல்முறை பற்றி போலீஸ் தரப்பிலிருந்து விவரிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தற்போது எட்டு பேர் புகாரளிக்க முன்வந்துள்ள நிலையில் முன்வராத பலரும் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. "எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது, நான் ஒரு கணவரைத் தேடுகிறேன் எனக் கூறுவார். அதன் பின்னர் போலியான விவாகரத்து சான்றிதழைக் காண்பித்து அவர்களை திருமணம் செய்து கொள்வார். அதன் பின்னர் இரண்டு-மூன்று மாதங்களாக அவர்களிடம் ஆபாச வீடியோ வெளியிடுவதாகக் கூறி மிரட்டி பணம் பறித்துள்ளார். அவர்கள் பணம் தரவில்லையென்றால் ஆட்களை அழைத்து அவர்களை தாக்கவும் செய்துள்ளார். அவர்களை அச்சமூட்டி பணம் பறித்த பிறகு வேறு ஒருவரைப் பிடித்து அவரிடமும் இதே வேலைகளைச் செய்து வந்துள்ளார். இந்த விதத்தில் பல லட்சம் ரூபாய் வரை திருடியுள்ளார். இது தான் இவரின் செயல்திட்டம்" என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரால் ஏமாந்தவர்களில் ஒரு வங்கி மேலாளரும் அடங்குவார். சத்திரபதி சம்பாஜி நகரைச் சேர்ந்தவர் பணிக்காக நாக்பூரில் வசித்துள்ளார். சமீரா ஃபேஸ்புக் மூலம் அவருடன் அறிமுகமாகியுள்ளார். தற்போது 8 பேர் புகாரளிக்க முன்வந்துள்ள நிலையில் முன்வராத பலரும் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சமீராவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தான் ஆறுமுறை தான் திருமணம் செய்துள்ளதாகவும் ஒவ்வொரு கணவருடன் சண்டை வந்த போதே அடுத்தவரை திருமணம் செய்ததாகவும் காவல்துறையிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். நீதிமன்றம் அவரிடம் விவாகரத்து சான்றிதழை கேட்டபோது அவரால் வழங்க முடியவில்லை. அதே போல் திருமணச் சான்றும் அவர் சொன்னதை வைத்தே தயார் செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த திருமணங்கள் அனைத்தும் அவரது வீட்டில் இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்டுள்ளன. குழந்தைக்காக தனக்கு பிணை வேண்டும் என பாத்திமா கோரியிருந்தார். "எனினும் நீதிமன்றம் பாத்திமாவின் மகனை, அவரின் கடைசி கணவரிடம் ஒப்படைத்தது. அவரைச் சிறையில் அடைத்தது" என புகார்தாரரின் வழக்கறிஞர் பாத்திமா பதான் தெரிவித்துள்ளார். இதற்கிடையே குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர்களை நாங்கள் தொடர்பு கொள்ள முயன்றோம். அது முடியவில்லை. தொடர்பு கொள்ள முடியும் பட்சத்தில் அவர்கள் தரப்பு பதிலும் இதில் சேர்க்கப்படும். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c30zdmm73reo
-
பிரதமர் யாழ். வருகை : புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து விசேட கலந்துரையாடல்!
02 Aug, 2025 | 05:06 PM கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய திட்டத்தின் எட்டாவது அமர்வு வடக்கு மாகாணத்தில் இன்று சனிக்கிழமை (2) வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடல், பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. இலங்கை கல்விச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் சந்திரசேகரன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுபோவ, வடக்கின் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கின் ஆளுநர் வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரங்கசன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், கல்விப்புலம் சார் அதிகாரிகள், புத்திஜீவிகள் என பலர் பங்கேற்றனர். 2026ஆம் ஆண்டு முதல் நாட்டின் கல்வி முறையில் குறிப்பாக பாடசாலைக் கல்வி முறையில் மாற்றத்தைக் கொண்டுவரும் முகமாக கல்விச் சமூகத்தின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் நடைபெறும் கலந்துரையாடல்களின் ஓர் அங்கமாகவே இந்த கலந்துரையாடலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221621
-
வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி போராட்டம்
திருகோணமலை - வெருகல் பூநகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் 02 Aug, 2025 | 02:17 PM திருகோணமலை - வெருகல் பூநகர் பகுதியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் சனிக்கிழமை (02) காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மக்கள் பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள், மத சுதந்திர மீறல்கள், ஏனைய வன்முறைகள் இடம்பெறாமல் இருப்பதாக இருந்தால் வட கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டாம் நாளாக வெருகல் பிரதேசத்தில் இவ் கவனஈர்ப்பு முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் தொடர்ச்சியாக 100 நாட்கள் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் குறித்த தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/221615
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம்: கையெழுத்து விவகாரம் குறித்து தமிழரசுக்கட்சியின் தீர்மானம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Published By: Vishnu 01 Aug, 2025 | 10:58 PM அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைக்கவுள்ள கடிதத்தில் கையெழுத்திடுவது குறித்து வெள்ளிக்கிழமை (1) நடைபெறவுள்ள கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானத்தை அறிவிப்பதாக தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகள் கூறியிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்றை அனுப்புவதற்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் என்பன கடந்த வாரம் ஏகமனதாகத் தீர்மானம் மேற்கொண்டிருந்தன. அக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும், அதில் பங்கேற்பதில்லை என்று கட்சி தீர்மானித்திருப்பதாகப் பதிலளிக்கப்பட்டது. இருப்பினும் தாம் அனுப்பிவைக்கவுள்ள வரைபினைத் தயாரிக்கும் பணிகள் இவ்வாரத்துக்குள் நிறைவுசெய்யப்படும் எனவும், அவ்வரைபு தமிழரசுக்கட்சிக்கும் அனுப்பிவைக்கப்படும் எனவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் வெள்ளிக்கிழமை (1) கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுவிட்ஸர்லாந்து நாட்டின் தேசிய தின நிகழ்வைத் தொடர்ந்து, அதே ஹோட்டலிலேயே இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் (தமிழ்த்தேசிய பேரவை) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரும், தமிழ்த்தேசிய பேரவை சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோரும், சிவில் சமூகம் சார்பில் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் மற்றும் பி.என்.சிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள கடிதம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்ததுடன் அவ்விடயங்களுடன் உடன்படும் பட்சத்தில் அதுபற்றி விரைவில் ஒரு முடிவை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலளித்த தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை (1) யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில் இதுபற்றிக் கலந்துரையாடி தீர்மானமொன்றை அறிவிப்பதாகக் குறிப்பிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/221589
-
காசாவில் 60000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் - அவர்களில் 18500 பேர் சிறுவர்கள் - பெயர் விபரங்களை வெளியிட்டது வோசிங்டன் போஸ்ட்
Published By: RAJEEBAN 01 AUG, 2025 | 04:01 PM ஜூலை மாத நடுப்பகுதியில் பொதுமக்களை போராளிகளுடன் வித்தியாசப்படுத்தி பார்க்காத காசாவின் சுகாதார அமைச்சு யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களின் பெயர்களையும் வயதினையும் வெளியிட்டது. காசாவின் சுகாதார அமைச்சின் பட்டியல் மாத்திரமே கொல்லப்பட்டவர்கள் குறித்த உத்தியோகபூர்வமான ஆவணம். மிக நீண்ட இந்த ஆவணத்தில் சிறுவர்களின் பெயர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. 900க்கும் அதிகமானவர்கள் தங்கள் முதலாவது பிறந்த நாளிற்கு முன்னர் கொல்லப்பட்டவர்கள். இஸ்ரேல் பொதுமக்களின் உயிரிழப்பினை குறைக்க முயல்வதாக தெரிவிக்கின்றது. ஹமாசின் உறுப்பினர்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் செயற்படுகின்றனர் என இஸ்ரேல் தெரிவிக்கின்றது, மருத்துவமனைகள், வீடுகள், பாடசாலைகள் இடம்பெயர்ந்தவர்களிற்கான முகாம்களை இலக்குவைப்பதை நியாப்படுத்துவதற்கு இஸ்ரேல் கூறும் காரணம். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ஹமாசின் பிரசன்னத்தை காரணம் காட்டி பொதுமக்களை பெருமளவில் கொல்லும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது என ஐக்கிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் தெரிவிக்கின்றன. ஒக்டோர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட பயங்கரமான தாக்குதலை நான் மீண்டும்மீண்டும் கண்டித்துவந்துள்ளேன் என தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஆனால் மிகப்பெருமளவு உயிரிழப்புகளையும் அழிவையும் எவற்றாலும் நியாயப்படுத்த முடியாது,சமீபகாலத்தில் நாங்கள் சந்தித்த எதனையும் விட இழப்புகள் அளவில் மிகப்பெரியவை என அவர் தெரிவித்துள்ளார். சிலர் உறக்கத்தில் படுக்கையில் கொல்லப்பட்டார்கள், சிலர் விளையாடிக்கொண்டிருந்தவேளை கொல்லப்பட்டார்கள்.பலர் தாங்கள் நடைபழகுவதற்கு முன்னரே புதைக்கப்பட்டார்கள். உலகிலேயே சிறுவர்களிற்கு மிகவும் ஆபத்தான இடம் காசா என ஐக்கியநாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவிக்கின்றது. யுத்தத்தின் போது பாலஸ்தீன சிறுவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு ஒருவருக்கும் அதிகம் என்ற அளவில் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு வகுப்பில் நிறைந்திருக்கும் மாணவர்கள் இரண்டு வருடங்களாக ஒவ்வொரு நாளும் கொல்லப்படுவதை நினைத்து பாருங்கள் என யுனிசெவ்வின் நிறைவேற்று இயக்குநர் கதரின் ரசல் இந்த மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தெரிவித்தார். சிறுவர்கள் உயிரிழப்பு குறித்து கேட்டவேளை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தாங்கள் சிறுவர்களையும் போரில் நேரடி தொடர்பற்றவர்களையும் இலக்குவைக்கவில்லை என தெரிவித்தது.பொதுமக்களிற்கு பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக நாங்கள் நடவடிக்கைகளை எடுக்கின்றோம்,சர்வதேச சட்டங்களை பின்பற்றியே இஸ்ரேலிய இராணுவம் செயற்படுகின்றது என அவர்கள் தெரிவித்தனர். போரின்; போது கொல்லப்பட்டவர்களின் பட்டியை தயாரிப்பதற்கு காசாவின் சுகாதார அமைச்சு மருத்துவமனை மற்றும் பிரேத அறை தகவல்களை பயன்படுத்துகின்றது.கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊடகங்களின் தகவல்களை ஆராய்ந்து அவற்றையும் சேர்த்துக்கொள்கின்றது.காசாவின் மருத்துவ கட்டமைப்பு முற்றாக சிதைந்துபோயுள்ளதால் உயிரிழந்தவர்கள் குறித்த விபரங்களை பெறுவது மிகவும் கடினமான விடயம். ஒவ்வொரு மரணத்தையும் பதிவு செய்வது சாத்தியமற்றது என்றாலும் காசாவின் சுகாதார அமைச்சு வழமைக்கு மாறான உயர்தர உடனடி இறப்பு பதிவினை மேற்கொள்கின்றது என லண்டன் பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் மைக்கல் ஸ்பகட் தெரிவிக்கின்றார். இவர் ஆயுதமோதல்களின் உயிரிழப்புகளை பதிவு செய்யும் சர்வதேச அமைப்பின் உறுப்பினராக உள்ளார். காசாவின் சுகாதார அமைச்சு உயிரிழப்புகள் பதிவினை மிகவும் கவனமாகவும் கடுமையான விதத்திலும் முன்னெடுக்க முயல்கின்றது என அவர் தெரிவிக்கின்றார். காசாவின் சுகாதார அமைச்சு ஜூலை 15ம் திகதி வெளியிட்ட புள்ளிவிபரங்களை ஆராய்ந்த வோசிங்டன் போஸ்ட் அவற்றை வயதின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தியது. மொவீன் சுகைல்பருக்கு ஆறு வயது அவன் எதிர்காலத்தில் யுத்தத்தில் காயமடைந்த சிறுவர்களிற்கு சிகிச்சை வழங்கும் சிறுவர்கள் நல மருத்துவராக வரவிரும்பினான்.ஆடம்பர கார்களை வைத்திருக்கும் வர்த்தகராகவும் வர ஆசைப்பட்டான், உறவினர்களை பொறுத்தவரை அவன் வயதிற்கு மீறிய முதிர்ச்சியும் சிந்தனையும் உடைய ஒருவன். நவம்பர் 2023 இல் தொடர்மாடியொன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலில் இவன் கொல்லப்பட்டான், அந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர் என அந்த சிறுவனின் உறவினரான அட்காம் சுகேபெர் தெரிவித்தார். அவன் தனது காதுகளை மூடிக்கொண்டே தனது இறுதி மூச்சை விட்டான் என நான் நினைக்கின்றேன் ஏன் என்றால் விமானங்களின் சத்தத்தை கேட்கும் ஒவ்வொரு தடவையும் அவன் அவ்வாறே செய்வான் என சுகேபெர் தெரிவித்தார். மேலும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் தங்கள் வாழ்க்கையையே முற்றாக மாற்றியுள்ள காயங்களை சந்தித்துள்ளனர். காசாவில் பல மருத்துசேவையில் தொண்டராக ஈடுபட்ட அமெரிக்காவை சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணர் சமெர் அட்டெர் தான் அடையாளம் காணமுடியாதபடிகருகிய சிறுவர்களின் உடல்களை பார்த்துள்ளதாக தெரிவிக்கின்றார். ஏனையவர்கள் அங்கங்களை இழந்துள்ளனா அல்லது தலையில் கடும் அதிர்ச்சியை சந்தித்துள்ளனர் என தெரிவித்த அவர் 'இந்த காயங்கள் உடல்ரீதியாக செயல் இழக்கச்செய்பவை, உணர்வுரீதியாக பெரும் அச்சத்தை ஏற்படுத்துபவவை" என தெரிவித்தார். ஏப்பிரல் மாதத்தின் ஆரம்பத்தில் காசா நகரத்தில் உள்ள மருத்துமவனையில் தாக்குதலொன்றின் பின்னர் பெருமளவு நோயாளர்கள் தரையில் காணப்படுவதை பார்த்ததை நினைவுகூர்ந்தார் அத்தார், அந்த மருத்துவமனையில் நோயாளர்களிற்கான படுக்கை வசதிகள் முற்றாக தீர்ந்துவிட்டன. 30 வயது நோயாளியின் வாய் மூக்குதுவாரத்திலிருந்து குருதி வெளியேறிக்கொண்டிருந்ததையும் அவர் தனது இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்ததையும் பார்த்தாக குறிப்பிட்ட அத்தார்,ஒரு சிறுவனி மண்டையோடு பிளந்திருந்தது வயிற்றிலும் பெரும் காயங்கள்,அந்த சிறுவனிற்கு அருகிலிருந்த அவனது இரண்டு சகோதாரர்கள் சிறுவனை காப்பாற்றுமாறு மன்றாடிக்கொண்டிருந்தார்கள், நான் அவர்களில் ஒருவரின் கரத்தை இறந்துகொண்டிருந்த சிறுவனின் கரங்களில் எடுத்துவைத்தேன் மற்றைய சிறுவனின் கரத்தினை அந்த சிறுவனின் நெஞ்சில் எடுத்துவைத்துவிட்டு மன்னிக்கவேண்டும் அவன் இறக்கப்போகின்றான் அவனது உயிர் பிரியும் வரை இங்கே இருங்கள் என தெரிவித்தேன் என நினைவுகூர்ந்த அத்தார் தான் காயப்பட்ட மற்றைய நோயாளியை பார்க்க சென்றதாக குறிப்பிட்டார். ஜூலை 13ம் திகதி மத்திய காசாவில் குடிநீரை சேகரிப்பதற்காக நின்றிருந்தவர்கள் மீது இஸ்ரேல் வான்தாக்குதலை மேற்கொண்டது, பத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் அனேகமானவர்கள் சிறுவர்கள். இந்த தாக்குதலுக்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என தெரிவித்த இஸ்ரேலிய இராணுவம் வெடிபொருள் இலக்கிலிருந்து சற்று தொலைவில் விழுந்தது என குறிப்பிட்டது. தாகத்துடன் நீர் எடுக்கப்போன சிறுவர்கள் உயிரற்ற சடலங்களாக தங்கள் வீடுகளிற்கு திரும்பினார்கள் என அந்த பகுதியில் வசிக்கும் சம்பவத்தை நேரில் பார்த்த ரமடான் நசார் தெரிவித்தார். தமிழில் - ரஜீவன் https://www.virakesari.lk/article/221542
-
உலகின் மனச்சாட்சியை நோக்கி கேள்வி எழுப்பும் - காசாவில் கடும் பட்டினியின் பிடியில் சிக்குண்டுள்ள சிறுவனின் புகைப்படம் சொல்லும் கதை என்ன? பிபிசி
உலகின் மனச்சாட்சியை நோக்கி கேள்வி எழுப்பும் - காசாவில் கடும் பட்டினியின் பிடியில் சிக்குண்டுள்ள சிறுவனின் புகைப்படம் சொல்லும் கதை என்ன? பிபிசி 29 JUL, 2025 | 05:00 PM அவனிடம் எலும்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன அவனது முதுகெலும்பு மற்றும் விலா எலும்புகள் வெளியே தெரிந்தன. இது ஒன்றரை வயது சிறுவன் முகமது ஜகாரியா அய்யூப் அல்-மதூக். அவனது புகைப்படம் காசாவிற்கான மனிதாபிமான விநியோகங்கள் தற்போது செயலிழந்துள்ளதால் காசாவில் ஏற்பட்டுள்ள பட்டினி நிலையின் மிகவும் இதயத்தைவருத்தும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஜூலை 21 (7) 2025 அன்று காசாவில் அமைக்கப்பட்ட ஒரு கூடாரத்தில் தனது தாயாருடன் அடிப்படைத் தேவைகள் இல்லாததால் காசா மக்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில், புகைப்படக் கலைஞர் அகமது அல்-அரினி இந்த சிறுவனை புகைப்படம் எடுத்தார். முகமதுவின் தாயார் ஹெடயா அல்-முட்டா, தான் அனுபவிக்கும் கஷ்டங்களைப் பற்றி பிபிசியிடம் கூறினார். "இப்போது அவர் மூன்று கிலோகிராம் எடை கொண்டவர், இதற்கு முன்பு அவர் ஒன்பது கிலோகிராம் எடை கொண்டவர். அவர் வழக்கம் போல் உணவுண்டார் , ஆனால் உணவு பற்றாக்குறை மற்றும் தற்போதைய சூழ்நிலை காரணமாக அவர் மிகவும் மோசமான உணவுக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்' உணவுப் பற்றாக்குறையால் முகமதுவால் "மற்ற குழந்தைகளைப் போல இருக்கவோ நிற்கவோ முடியாது" என்றும் அவரது முதுகு வளைந்து முதுகெலும்பு வீங்கியிருப்பதாகவும் ஹெடயா விளக்குகிறார். "எனக்கு வேறு வழியில்லை, என் கணவர் போரில் கொல்லப்பட்டார் இங்கே எனக்கு கடவுளைத் தவிர வேறு யாரும் உதவ முடியாது. நான் தனியாக இருப்பதால் அவருக்கு உணவளிக்க முடியாது. ஆனால் அவருக்குக் கொடுக்க என்னிடம் கொஞ்சம் கூட இல்லை. நான் சோர்வாக இருக்கிறேன். நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன் உலகின் மனிதாபிமானத்தை நோக்கி கேள்வி எழுப்பும் இந்த படத்தை எடுத்ததன் நோக்கம் குறித்து பிபிசியிடம் பத்திரிகையாளர் அகமது அல்-அரினி இவ்வாறு தெரிவித்தார் "நான் நீண்ட நேரம் எடுத்த படங்களை எடுத்தேன் ஏனென்றால் ஒவ்வொரு முறையும் ஒரு முறை எடுக்கும்போது நிறுத்தி என் மூச்சை இழுத்து பின்னர் தொடர வேண்டியிருந்தது" எலும்புகள் மாத்திரம் எஞ்சியிருக்கும் குழந்தைகள் "நான் இந்த சிறிய முகமதுவின் படத்தை எடுத்தேன் அவன் தன் தாயுடன் தனியாக இருந்தான். வடக்கு காசாவில் உள்ள அவர்களின் வீடுகளில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்" என்று அகமது கூறினார். காசா பகுதியில்சிறுவர்கள் குழந்தைகள் அனுபவிக்கும் கடுமையான பசியை உலகிற்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்தப் புகைப்படத்தை எடுத்தேன்' என்று அல்-அரினி பிபிசியிடம் கூறினார். வடக்கு காசாவில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து மோதலால் முகமதுவும் அவரது தாயாரும் இடம்பெயர்ந்ததாகவும் அவர்களை முற்றிலும் வெறுமையான ஒவன் மாத்திரம் காணப்பட்ட கூடாரத்தில் பார்த்ததாகவும்அல்-அரினி கூறினார். 'இது ஒரு கல்லறையை ஒத்திருக்கிறது.' நீங்கள் இந்த படத்தை உற்றுப்பார்த்தீர்கள் என்றால் அந்த குழந்தை பிளாஸ்டிக் பையொன்றை ஆடையாக அணிந்திருப்பது தெரியும், இதற்கு காரணம் காசாவிற்குள் போதியளவு மனிதாபிமான பொருட்கள் செல்லாமையே என தெரிவிக்கின்றார் அல்-அரினி. அவரது தாயார் மெல்லிய மற்றும் மெலிந்தவர் தனது பலவீனமான கையால் அவரது தலையைத் தாங்குகிறார். "காசா சுகாதார அமைச்சகம் கடந்த வாரத்தில்122 பாலஸ்தீனியர்கள் பட்டினியால் இறந்துள்ளதாகவும் அவர்களில் குறைந்தது 83 பேர் குழந்தைகள் என்றும் கூறுகிறது. சமீபத்திய வாரங்களில் காசாவில் பணிபுரியும் மற்ற புகைப்பட பத்திரிகையாளர்களைப் போலவே அகமதுவும் துன்பத்தை புகைப்படம் எடுப்பது எவ்வளவு கடினமாக உள்ளது என்பதை விளக்குகிறார்: "குழந்தைகள் பட்டினியால் இறக்கும் விதத்தையும் அவர்களின் உடலில் எலும்புகள் மாத்திரம் எப்படி எஞ்சியிருக்கின்றன என்பதையும் பார்ப்பது என்னை மிகவும் பாதிக்கிறது; நான் ஒரு மனிதன்." அதனால்தான் அகமது சொல்வது போல் முகமது மற்றும் ஹெடாயாவைப் பார்த்தபோது அவர்களின் படத்தை எடுக்க அவருக்கு சிறிது நேரம் பிடித்தது. துரதிர்ஷ்டவசமாக முகமது அவர் பார்த்த ஒரே குழந்தை அல்ல. "நான் இதுபோன்ற பலரைப் பார்த்திருக்கிறேன்" என்று அவர் கூறினார். அடுத்த நாள் ஒரு மாதத்தில் 25 பவுண்டுகள் எடை இழந்த 17 வயது குழந்தையின் படங்களை எடுத்தேன். "காசாவில் மக்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை பஞ்சம் இல்லாவிட்டாலும் பயங்கரமான பசி இருக்கிறது நமக்கு கொஞ்சம் கிடைக்கும்போது மக்கள் நமக்காக போராடுகிறார்கள், சிலர் கொஞ்சம் பெற தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள் சில நேரங்களில் தனது வேலையைச் செய்வது அவருக்கு கடினமாக இருக்கும் என்று இந்த புகைப்படக் கலைஞர் கூறுகிறார். நான் இங்கே சுற்றிசுற்றி வந்து படங்களை எடுக்கின்றேன் பட்டினியால் நான் மயங்கி விழப்போகின்றேன் என மனதை உருக்கும் அந்த படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/221295
-
மன்னாரில் வழக்கு விசாரணைக்கு சென்று திரும்பியவர் கத்தி முனையில் கடத்தல்; போதைப்பொருள் மாபியாக்கள் அட்டகாசம்
01 AUG, 2025 | 04:32 PM மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக சென்று மீண்டும் தனியார் பஸ்ஸில் வீடு திரும்பிய நபர் ஒருவரை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி பகுதியில் வைத்து கூரிய ஆயுதங்களுடன் கடத்திச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கடத்தல் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (31) மாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பான காணொளியும் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றிற்காக முன்னிலையாகியதோடு, வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். இதன் போது மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, காட்டாஸ்பத்திரி பகுதியில் வழிமறித்து பஸ்ஸில் ஏறிய ஒரு குழுவினர் கூரிய ஆயுதங்களினால் பயணிகளை அச்சுறுத்தி, குறித்த நபரை தாக்கி பஸ்ஸில் இருந்து இறக்கி மோட்டார் சைக்கிளில் கத்தி முனையில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் குறித்த நபரை நடுக்குடா காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்ற நிலையில் கடுமையாக தாக்கிய நிலையில் விடுவித்ததாகவும் கூறப்படுகிறது. காட்டாஸ்பத்திரி கிராமத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்ற குழுவினரே குறித்த நபரை நடத்தியதாகவும் கடத்தியதற்கான காரணங்கள் எவையும் வெளியாகவில்லை. மேலும், காட்டாஸ்பத்திரி கிராமத்தில் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போதும் பேசாலை பொலிஸார் அசமந்த போக்குடன் நடந்து கொள்வதாக பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/221551
-
ஆறு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை - இரான் கடும் எதிர்வினை ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நேரத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் வந்துள்ளன. 3 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வலையமைப்பை குறிவைத்து, ஆறு இந்திய நிறுவனங்கள் உட்பட மொத்தம் 20 நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது. "இரானிய அரசு, மத்திய கிழக்கில் போரைத் தூண்டுகிறது மற்றும் அதிலிருந்து கிடைக்கும் பணத்தை அமைதியைக் குலைக்கும் செயல்களுக்கு பயன்படுத்துகிறது. இதனால், இரானின் எண்ணெய், எண்ணெய் பொருட்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வணிகத்துடன் தொடர்புடைய 20 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதிக்கிறது" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நேரத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த தடைகளை பாரபட்சமானது என்று வர்ணித்துள்ள இரான், "இவை சர்வதேச சட்டம் மற்றும் தேசிய இறையாண்மையின் கொள்கைகளை மீறுவதாகவும், பொருளாதார ஏகாதிபத்தியத்தின் புதிய வடிவமாகவும் உள்ளன" என்று கூறியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் , "இரானிய ஆட்சி வெளிநாடுகளில் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கவும், அதன் சொந்த மக்களை அடக்கவும் பயன்படுத்தும் வருவாயைக் குறைக்க இன்று அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது. இரான் தயாரிக்கும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை பெரிய அளவில் விற்றதும், வாங்கியதும் கண்டறியப்பட்டதால், இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள் தடைகள் பட்டியலில் சேர்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "அதிபர் டிரம்ப் முன்பு கூறியது போல, இரானிய எண்ணெய் அல்லது பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்க முடிவு செய்யும் எந்தவொரு நாடும் அல்லது தனிநபரும் அமெரிக்கத் தடைகளுக்கு ஆளாகின்றனர். அவர்கள் அமெரிக்காவுடன் வணிகம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க நிதித் துறையின் நடவடிக்கை அமெரிக்க நிதித்துறை ஹுசைன் ஷம்கானியின் பெரிய கப்பல் வணிகத்துடன் தொடர்புடைய 115க்கும் மேற்பட்ட நபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியின் அரசியல் ஆலோசகரான அலி ஷம்கானியின் மகன்தான் ஹுசைன் ஷம்கானி. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பங்கஜ் நாக்ஜிபாய் படேலின் பெயரும் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது என பிடிஐயின் செய்தி குறிப்பிடுகிறது. தியோடர் ஷிப்பிங் உள்ளிட்ட ஹுசைன் ஷம்கானியின் நிறுவனங்களுடன் தொடர்புடைய பல கப்பல் நிறுவனங்களில், படேல் நிர்வாகியாக பணியாற்றியுள்ளார். அதேபோல், இந்திய குடிமக்களான ஜேக்கப் குரியன் மற்றும் அனில் குமார் பனக்கல் நாராயணன் நாயர் ஆகியோரும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் மார்ஷல் தீவுகளில் பதிவுசெய்யப்பட்ட நியோ ஷிப்பிங் என்ற நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள். இந்த நிறுவனம் அப்ரா என்ற கப்பலை வைத்திருக்கிறது. ஹுசைன் ஷம்கானியின் நெட்வொர்க்கால் இயக்கப்படும் கப்பல்களின் ஒரு பகுதிதான் அப்ரா. தடைசெய்யப்பட்டுள்ள ஆறு இந்திய நிறுவனங்கள் சில இந்திய நிறுவனங்கள் இரானில் இருந்து எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்கவும் விற்கவும் மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களைச் செய்தன எனக் கூறுகிறது அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கை. அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்: இந்த பெட்ரோ கெமிக்கல் வர்த்தக நிறுவனம், ஜனவரி 2024 முதல் டிசம்பர் 2024 வரை இரானில் இருந்து பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்து வாங்கியது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த காலகட்டத்தில், 84 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை இந்த நிறுவனம் வாங்கியுள்ளது. குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட்: இந்தியாவைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் ஜூலை 2024 முதல் ஜனவரி 2025 வரை இரானிய பெட்ரோ கெமிக்கல் பொருட்களை (மெத்தனால் உட்பட) இறக்குமதி செய்தது. இந்த காலகட்டத்தில், 51 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் வாங்கப்பட்டன. ஜூபிடர் டை கெம் பிரைவேட் லிமிடெட்: மும்பையைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 வரை இரானில் இருந்து பெட்ரோ கெமிக்கல் பொருட்களை, குறிப்பாக, டோலுயீனை இறக்குமதி செய்தது. இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 49 மில்லியன் டாலரை விட அதிகம் . ராமனிக்லால் எஸ். கோசாலியா & கோ: இந்த நிறுவனம் பெட்ரோ கெமிக்கல் வணிகத்திலும் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவின் அறிக்கையின்படி, ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 வரை இரானில் இருந்து மெத்தனால் மற்றும் டோலுயீன் போன்ற பொருட்களை இந்த நிறுவனம் இறக்குமதி செய்துள்ளது. இந்த பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு சுமார் 22 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெர்சிஸ்டண்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட்: இந்த நிறுவனம் அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை இரானில் இருந்து மெத்தனால் போன்ற பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்தது. இந்த காலகட்டத்தில் மொத்த கொள்முதல் சுமார் 14 மில்லியன் டாலர். இந்த சரக்குகளில் சில துபையை தளமாகக் கொண்ட பாப் அல் பர்ஷா என்ற வர்த்தக நிறுவனம் மூலம் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காஞ்சன் பாலிமர்ஸ்: இந்த நிறுவனம் இரானின் டானாய்ஸ் டிரேடிங் என்ற நிறுவனத்திடமிருந்து பாலிஎதிலீன் போன்ற பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்கியதாக அமெரிக்க அறிக்கை கூறுகிறது. அதன் மொத்த கொள்முதல் 1.3 மில்லியன் டாலரை விட அதிகம். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தக் கட்டுப்பாடுகளின் தாக்கம் என்னவாக இருக்கும்? தடை விதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துகளோ, பணமோ, அமெரிக்க குடிமகன் அல்லது நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தால், அவையும் முடக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதைப் பற்றிய விவரங்களை அமெரிக்க நிதி அமைச்சகத்தின் "வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC)"-க்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல், தடை செய்யப்பட்ட நபர் அல்லது நிறுவனத்துக்கு பணம், பொருள்கள், சேவைகளை வழங்குவது, அவர்களுக்கு வேலை செய்வது அல்லது அவர்களிடமிருந்து எதையும் பெறுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளின் நோக்கம் யாரையும் தண்டிப்பது அல்ல, மாறாக அவர்களின் நடத்தை மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துவதாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இரானின் பதில் அமெரிக்கா முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கையை இரான் கடுமையாக எதிர்த்துள்ளது. இந்தியாவில் உள்ள இரான் தூதரகமும், இரான் வெளியுறவு அமைச்சகமும், இதை பாரபட்சமானது மற்றும் தீய நோக்கம் கொண்ட செயல் என்று விமர்சித்துள்ளன. "அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது மற்றும் பொருளாதாரத் தடைகளை ஒரு கருவியாக மாற்றுகிறது. இதன் மூலம் இரான் மற்றும் இந்தியா போன்ற சுதந்திர நாடுகள் மீது தனது விருப்பத்தைத் திணித்து அவற்றின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைத் தடுக்க விரும்புகிறது" என்று இரானிய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. "அமெரிக்காவின் புதிய தடைகள் இரானின் எண்ணெய் வர்த்தகத்தை பாதித்து, அதன் பொருளாதார வளர்ச்சியையும் மக்களின் நலனையும் கெடுக்கும் தீய நோக்கம் கொண்டவை. இந்த ஒருதலைப்பட்சமான, சட்டவிரோத தடைகள், குற்றச் செயலாகும். இவை சர்வதேச சட்டத்தையும் மனித உரிமைகளையும் மீறுகின்றன. இவை மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்" என்று இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpwy2p7q2d2o
-
கிங்டம் விமர்சனம்: விஜய் தேவரகொண்டா இலங்கை தீவில் மறைந்த உண்மையை கண்டுபிடித்தாரா?
பட மூலாதாரம்,X/@THEDEVERAKONDA 5 மணி நேரங்களுக்கு முன்னர் கிங்டம் படம் விஜய் தேவரகொண்டா நடிப்பில், கவுதம் தின்னனூர் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. கவுதம் தின்னனூர் கிரிக்கெட்டை மையமாக கொண்டு தெலுங்கில் வெளியான ஜெர்சி என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார். விஜய் தேவரகொண்டா கல்கி படத்தில் கேமியோ பாத்திரத்தில் தோன்றிய பிறகு, வெளியாகியிருக்கும் அடுத்த படம் இது. இந்தப் படம் தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் சூரி (விஜய் தேவரகொண்டா) சிறு வயதில் வீட்டை விட்டு ஓடி போன தனது அண்ணன் சிவாவை ( சத்யதேவ்) தேடி செல்கிறார். அவரது அண்ணன் இலங்கையில் பழங்குடியினரின் தீவில் வாழ்ந்து வருகிறார். அந்த தீவில் சூரி ஒரு அண்டர்கவர் ஆபரேஷனுக்கு செல்ல தயாராகிறார். அந்த தீவில் உள்ளவர்களை வைத்து நடைபெறும் கடத்தல் தொழிலை எப்படி ஒழிக்கிறார், தன் அண்ணனை கண்டுபிடிக்கிறாரா என்பதுதான் படத்தின் சாராம்சம். பட மூலாதாரம்,X@THEDEVERAKONDA 'சிறப்பாக நடித்துள்ள விஜய் தேவரகொண்டா' தி இந்து தமிழ் நாளிதழ் வெளியிட்டுள்ள திரைப்பட விமர்சனத்தில் "முதல் பாதியில் கதையை நன்கு 'செட்' செய்தத்தில் இயக்குநர் கவுதம் தின்னனூர் கவனிக்க வைக்கிறார். அதீத ஹீரோயிசங்கள் பெரியளவில் எதுவுமின்றி ஓரளவு நம்பகத்தன்மைகளை காட்சிகளில் இடம்பெறச் செய்தது ரசிக்க வைக்கிறது. ஆனால், படத்தின் பிரச்னையே இரண்டாம் பாதியில்தான் தொடங்குகிறது. முதல் பாதியில் எந்த தொய்வுகளும் இன்றி நேர்கோட்டில் சென்று கொண்டிருந்த திரைக்கதை, இரண்டாம் பாதியில் தடுமாறத் தொடங்கிவிடுகிறது" என்று குறிப்பிடுகிறது. விஜய் தேவரகொண்டாவுக்கு நடிகராக முக்கியமான படம் இது என்று குறிப்பிடும் தி இந்து தமிழ், " போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்து பின்னர் இலங்கைக்கு சென்ற பின் அவருள் ஏற்படும் மாற்றம் என தன்னுடைய கதாபாத்திரத்துக்காக அதீத உழைப்பை கொட்டி நடித்திருக்கிறார். அவருடைய அண்ணனாக வரும் சத்யதேவும் நிறைவான நடிப்பு." என்று குறிப்பிடுகிறது. படத்தின் உண்மையான ஹீரோக்கள் இசையமைப்பாளர் அனிருத்தும், ஒளிப்பதிவாளர்கள் கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி.ஜான் ஆகியோரும்தான் என்றும் குறிப்பாக படத்தின் தொடக்கத்தில் வரும் பிரிட்டிஷ் காலத்து காட்சியில் ஒளிப்பதிவு, பின்னணி இசை இரண்டும் அட்டகாசம் என்றும் தி இந்து தமிழ் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு, இசைக்கு குவியும் பாராட்டு தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், "கதாநாயகிக்கு கொடுக்கப்பட்ட நேரமும் குறைவு, முக்கியத்துவமும் குறைவு! ஆனால் வந்த நேரத்தில் கதை கேட்கும் இடங்களை நிரப்பியிருக்கிறார். அடுத்ததாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐய்யப்பா பி. சர்மா, பி.எஸ். அவினாஷ் உள்ளிட்ட அனைவருமே தேவையான நடிப்பைக் கொடுத்துள்ளனர். வில்லனாக வலம் வந்த வெங்கிடேஷ் வி.பி. மிகக் கொடூர வில்லனாக மிரட்டுகிறார். சில முகம் தெரிந்த நடிகர்கள் வந்தாலும், பலர் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாதவர்கள்தான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு சில ஊடக விமர்சனங்களில் குறிப்பிட்டிருப்பது போலவே, தினமணியிலும் படத்தின் இரண்டாம் பாதி தொய்வாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. "முதல்பாதியில் ஒரு 30 நிமிடம் விறுவிறுப்பாகவும், கதைக்கு நேர்மையான நடிப்பு மற்றும் திரைக்கதையாலும் படம் நல்ல தளத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறது. ஒளிப்பதிவாளர்கள் கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி ஜான் இருவரும் நல்ல வேலைபாட்டைக் கொடுத்துள்ளனர். சில காட்சிகளில் 'கொஞ்சம் நல்லா இருந்துருக்கலாம்' எனத் தோன்றினாலும், சண்டைக் காட்சிகள் அனைத்திலும் சிறப்பான வேலையைச் செய்துள்ளனர். சண்டைக்காட்சிகளையும் மிக நன்றாகவே உருவாக்கியுள்ளனர்" என்று தினமணி விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'இரண்டாம் பாதி தள்ளாடுகிறது' தி இந்து ஆங்கில நாளிதழ், "எரிந்த சிவப்பு, பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள் நிறைந்த நீரஜா கோணாவின் ஆடை வடிவமைப்பு, கதையின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது. அனிருத் ரவிச்சந்தரின் இசை அதன் பங்கை வகிக்கிறது, தேவைப்படும்போது படத்தை முன்னெடுத்துச் செல்கிறது. மௌனம் தேவைப்படும் இடங்களில் அதையும் அனுமதிக்கிறது. படத்தின் பெரும்பாலான நேரத்தில் விஜய் தேவரகொண்டா பேசுவதில்லை, எனினும் இதுவரை இல்லாத அளவிலான சிறப்பான நடிப்பை தந்துள்ளார். காட்டில் துரத்தி செல்லும் ஒரு காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் கதாபாத்திரமான ஷிவா, ஹீரோவாக சிறப்பாக காட்டுவதற்காக எழுதப்படாமல், அர்த்தமுள்ளதாக எழுதப்பட்டுள்ளது" என்று படத்தைப் பற்றி வெளியிட்டுள்ள விமர்சனத்தில் தெரிவித்துள்ளது. மேலும், "இரண்டாம் பாதியில் படம் சற்று தள்ளாடுகிறது. சண்டைக் காட்சிகள் மேலும் வன்முறையாகவும், அடுத்த என்ன நடக்கும் என்று கணிக்கக் கூடியதாகவும் அமைகின்றன. க்ளைமாக்ஸ் காட்சிகள் அவசரமாக நடைபெறுவதாக தோன்றுகிறது. முந்தைய காட்சிகளில் மௌனமே பலமாக இருந்த நிலையில், இறுதியில் வாய்ஸ் ஓவரை அதிகமாக பயன்படுத்தியுள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,X/@THEDEVERAKONDA தி டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள படத்தின் விமர்சனத்தில், " இடம் பெயர்த்தப்பட்ட மக்கள் தங்கள் மூதாதையரின் ஞானம் கொண்ட ஒருவர் வந்து தங்களை ஒரு நாள் விடுவிப்பார் என்ற நம்பிக்கையை" வலியுறுத்துகிறது இந்தப் படம் என்று கூறுகிறது. "சூரி கதாபத்திரத்தில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா துயரத்தையும் பதில் கிடைக்காத கேள்விகளின் பாரத்தையும் ஏந்திக் கொண்டு சிறப்பாக நடித்துள்ளார். தனது சகோதரராக நடித்துள்ள சத்யதேவ் உடன் அவர் நடித்த காட்சிகள் படத்தின் சிறந்த காட்சிகள் ஆகும்" என்றும் அந்த விமர்சனம் குறிப்பிடுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn43xplrz9ko
-
பல மாகாணங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
Published By: DIGITAL DESK 3 01 AUG, 2025 | 03:50 PM வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று வெள்ளிக்கிழமை கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் இரவு 11.00 மணி வரை அமுலில் உள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, மேற்படி மாகாணங்களிலும் மாவட்டத்திலும் பல இடங்களில் கடும் மின்னல் தாக்கம் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்: இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பொதுமக்கள் பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனை வழங்குகின்றது. • திறந்தவெளிகளில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளவும். மரங்களின் கீழ் ஒருபோதும் நிற்க வேண்டாம். • இடி முழக்கத்தின் போது நெல்வயல்கள், தேயிலைத் தோட்டங்கள், திறந்த நீர்நிலைகள் போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும். • இடி முழக்கத்தின் போது கம்பித்தொடர்புள்ள தொலைபேசி மற்றும் மின்னிணைப்பிலுள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும். • துவிச்சக்கர வண்டிகள், உழவியந்திரங்கள், படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும். • விழக்கூடிய மற்றும் விழுந்த மரங்கள், மின்கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும். • அவசர உதவிகளுக்கு உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும். https://www.virakesari.lk/article/221543
-
49 வயதில் மருத்துவம் படிக்க தேர்வு: தென்காசி பெண்ணின் சாதனை சர்ச்சையாவது ஏன்?
படக்குறிப்பு, மகளுடன் சேர்ந்து நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்கத் தேர்வான தாய் அமுதவள்ளி கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 1 ஆகஸ்ட் 2025, 13:05 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "பிளஸ் 2 முடித்து 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆறு மாதங்களாக மகளுடன் சேர்ந்து நீட் தேர்வுக்குப் படித்து தேர்வு எழுதினேன். ஆனால், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என நினைக்கவில்லை" எனக் கூறுகிறார், தென்காசியை சேர்ந்த 49 வயதான அமுதவள்ளி. பிஸியோதெரபிஸ்ட் ஆக பணிபுரிந்து வரும் அமுதவள்ளி, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேர்வாகியிருக்கிறார். அதேநேரம், 'நீட் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும்' என மருத்துவ சங்கங்கள் விமர்சித்துள்ளன. அதிக வயதில் மருத்துவம் படிப்பதற்கு எதிர்ப்பு கிளம்புவது ஏன்? தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமைன்று (ஜூலை 30) தொடங்கியது. முதல்நாளில் சிறப்பு பிரிவினருக்கான ((PwD category) கலந்தாய்வு புநடைபெற்றது. இந்தக் கலந்தாய்வில் தென்காசியை சேர்ந்த மாற்றுத் திறனாளியான அமுதவள்ளி என்பவர் பங்கேற்றார். கலந்தாய்வு முடிவில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை அமுதவள்ளி எழுதியுள்ளார். கடந்த ஆண்டு பிளஸ் டூ படிப்பை முடித்த அமுதவள்ளியின் மகள் சம்யுக்தா கிருபாளணியும் நீட் தேர்வை எழுதியுள்ளார். இதில் 720 மதிப்பெண்ணுக்கு 147 மதிப்பெண்ணை அமுதவள்ளி பெற்றுள்ளார். அவரது மகள் சம்யுக்தா 441 மதிப்பெண் எடுத்துள்ளார். "பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வில் பங்கேற்க இருக்கிறேன். எனக்கும் அரசு மருத்துவக் கல்லூரி அல்லது சுயநிதி கல்லூரியில் இடம் கிடைக்குமென நம்புகிறேன்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சம்யுக்தா கிருபாளணி. படக்குறிப்பு, "நான் பிஸியோதெரபி படித்திருப்பதால் படிப்பதில் சிரமம் இருக்காது'' என்கிறார் அமுதவள்ளி 'மகளால் வந்த ஆர்வம்' "1994 ஆம் ஆண்டு பிளஸ் டூ படித்தேன். அப்போது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் நுழைவுத் தேர்வும் பிளஸ் டூ மதிப்பெண்ணும் முக்கியமாக இருந்தன. அப்போது எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை" எனக் கூறுகிறார் அமுதவள்ளி. ஆனால், பிஸியோதெரபிஸ்ட் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாக பிபிசி தமிழிடம் கூறிய அமுதவள்ளி, "கடந்த ஓராண்டாக என் மகள் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். யாரிடமாவது சொல்லிப் படித்தால் மனப்பாடம் ஆகும் என்பதால் என்னிடம் சொல்லிப் படித்தார். அதைப் பார்த்து நானும் தேர்வு எழுதும் முடிவுக்கு வந்தேன்" என்கிறார். இவரின் கணவர் மதிவாணன் வழக்கறிஞராக இருப்பதால், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக குடும்பத்தின் தேவைகளை அவர் கவனித்துக் கொண்டதாகக் கூறுகிறார். "கடந்த ஆண்டு நீட் தேர்வில் 380 மதிப்பெண் எடுத்ததால் மகளால் மருத்துவம் படிக்க முடியவில்லை. இந்தமுறை நானும் மகளும் இணைந்து படித்தோம். தினசரி ஆறு மணிநேரத்தை நீட் தேர்வுக்காக ஒதுக்கிப் படித்தேன்" என்கிறார், அமுதவள்ளி. கடந்த ஆண்டு தனது மகளை நீட் பயிற்சி வகுப்பில் அமுதவள்ளி சேர்த்துள்ளார். 'உயிரியல் பாடம் கைகொடுத்தது' நீட் தேர்வு குறித்துப் பேசும் அமுதவள்ளி, " இயற்பியல் தேர்வு மிகக் கடினமாக இருந்தது. எல்லாம் கணக்குகளாக இருந்தால் ஒன்றும் புரியவில்லை. மத்திய பாடத்திட்டத்தில் (CBSE) இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. உயிரியல் பாடம் மட்டுமே கைகொடுத்தது" என்கிறார். இவர் தமிழ் வழியில் பிளஸ் டூ படிப்பை முடித்துள்ளார். "நீட் தேர்வையும் தமிழ் வழியில் எழுதினேன். ஒரு கேள்விக்கு கொடுக்கப்படும் நான்கு விடைகளும் ஒன்றுபோலவே இருக்கும். அதை கண்டறிவது தொடர்பாக மகள் கொடுத்த ஆலோசனைகள் உதவியாக இருந்தன" எனக் குறிப்பிட்டார். நடப்பு ஆண்டில் நீட் தேர்வு மிகக் கடினமானதாக இருந்ததாகக் கூறுகிறார், அமுதவள்ளியின் மகள் சம்யுக்தா கிருபாளணி. "என்னுடன் சேர்ந்து படித்ததால் அம்மாவும் அதிக மதிப்பெண் பெறுவார் என நினைத்தேன். ஆனால் அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்துவிட்டது" என்கிறார். அதேநேரம், 49 வயதில் மருத்துவக் கல்லூரியில் இணைந்து படிப்பதை மருத்துவ சங்கங்கள் விமர்சித்துள்ளன. படக்குறிப்பு, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் ஓய்வுபெறும் வயதில் படிக்க வரலாமா? "மருத்துவப் படிப்பு என்பது ஐந்தரை வருடங்களாக உள்ளது. தற்போது தேர்வானவருக்கு 49 வயதாகிறது. அவர் படித்து முடிக்கும்போது 55 வயதாகிவிடும். அறுபது வயதில் ஓய்வு பெற்றவர்களும் மருத்துவம் படிக்க வருகின்றனர்" எனக் கூறுகிறார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஒருவரால் எத்தனை ஆண்டுகாலம் திறனுடன் உழைக்க முடியும் என்பதைக் கணக்கிட்டு ஓய்வுபெறும் வயதை தொழிலாளர் நலத்துறை நிர்ணயித்துள்ளது. அதற்கு மேல் திறனுடன் வேலை பார்க்க முடியாது என்பது தான் காரணம்" என்கிறார். 'ஒரே அளவுகோலில் பார்க்க முடியாது' "இவர்களால் சமூகத்துக்கு எந்தளவுக்கு பலன் கொடுக்க முடியும் என்பது முக்கியமானது" எனக் கூறும் சாந்தி ரவீந்திரநாத், "ஒருவர் தனது 49 வயதுக்குள் அதிக பட்டங்களைப் படித்து திறன்களை வளர்த்திருப்பார். அவரையும் பிளஸ் 2 படிப்பவரையும் ஒரே அளவுகோலில் நிறுத்திப் பார்க்க முடியாது" எனத் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக வங்கி அதிகாரிகள், உயிரியியல் ஆசிரியர்களும் நீட் தேர்வு எழுதுவதாகக் கூறும் சாந்தி ரவீந்திரநாத், "முன்பு மருத்துவப் படிப்புக்கு 25 என வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பட்டியல் சாதியினருக்கு 30 வயதாக உச்சவரம்பு இருந்தது" என்கிறார். வயது வரம்பை எதிர்த்து நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்ததாகக் கூறும் சாந்தி ரவீந்திரநாத், "வழக்கு நிலுவையில் உள்ளதால் வயது வரம்பைத் தளர்த்திவிட்டனர். இதனால் ஐந்து முறைக்கும் மேல் சிலர் தேர்வுகளை எழுதுகின்றனர். வயது வரம்பு நிர்ணயிக்கும்போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பில்லை" என்கிறார். இந்தக் கருத்தை மறுக்கும் அமுதவள்ளி, " பிளஸ் 2 மட்டுமே முடித்துவிட்டு அதிக வயதில் ஒருவர் மருத்துவம் படிக்க வந்தால் அவருக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் எனக் கூறலாம். ஆனால், நான் பிஸியோதெரபி படித்திருப்பதால் படிப்பதில் சிரமம் இருக்காது" என்கிறார். பொது மருத்துவம், இதயம், நரம்பியல், எலும்பு மூட்டு ஆகியவை குறித்துப் படித்திருப்பதாகக் கூறும் அவர், "இதைத்தான் மருத்துவப் படிப்பிலும் படிக்க உள்ளேன். மருத்துவம் படிப்பதற்கு வயது வரம்பு நிர்ணயிக்காமல் இருப்பது வரவேற்கத்தக்கது" எனவும் தெரிவித்தார். பட மூலாதாரம், GETTY IMAGES வயது உச்ச வரம்பு வழக்கில் கூறப்பட்டது என்ன? 'நீட் தேர்வில் வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவில்லை' என்ற தேசிய மருத்துவக் கல்வி ஆணையரகத்தின் அறிவிக்கைக்கு எதிராக கேரளாவை சேர்ந்த சிலர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் முடிவில் தேசிய மருத்துவக் கல்வி ஆணையரகத்தின் அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. 'பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது' என தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதலாம் என, 2018 ஆம் ஆண்டு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையேற்று, தேசிய மருத்துவக் கல்வி ஆணையரகமும், 'நீட் தேர்வு எழுதுவதற்கு வயது உச்ச வரம்பு இல்லை' என்று அறிவித்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn92gnre55po
-
செம்மணி மனிதப் புதைகுழி சான்றுகள்: உறவுகள் அடையாளம் காண அவை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும்
செம்மணி மனிதப் புதைகுழி சான்றுகள்: உறவுகள் அடையாளம் காண அவை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும் Published By: VISHNU 01 AUG, 2025 | 08:24 PM செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அடையாளம் காண உதவும் வகையில் அவற்றை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்ற புலனாய்வு பிரிவின் மனித கொலை விசாரணை பிரிவின், நிலைய பொறுப்பதிகாரி யாழ்.நீதவான் நீதிமன்றில் செய்த விண்ணப்பபத்தின் பிரகாரம் சான்று பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மதியம் 01.30 மணி முதல் மாலை 05 மணி வரையில் அரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் மக்களின் பார்வைக்காக சான்று பொருட்கள் வைக்கப்படவுள்ளன. செம்மணி புதைகுழிகளில் இருந்து இதுவரையில் புத்தக பை, சிறுவர்களின் காலணிகள், குழந்தையின் பால் போச்சி, வளையல்கள் உள்ளிட்ட 54 சான்று பொருட்கள் மீட்கப்பட்டு, அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றினை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி, அவற்றை அடையாளப்படுத்த கூடியவர்கள், நீதிமன்றுக்கோ, குற்ற புலனாய்வு துறையினருக்கோ தெரிவிப்பதன் ஊடாக விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதேவேளை சான்று பொருட்களை பார்வையிட வருவோருக்கான கட்டுப்பாடுகள் தொடர்பில் நாளைய தினம் சனிக்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/221585
-
அறுகம்குடா இஸ்ரேலியர்களுடையது என 5000 ஆண்டுகளிற்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டதா?!
உண்மையாக அவ்வாறு அவருக்கு தோன்றுகிறதோ!