Everything posted by ஏராளன்
-
யாழில் நவீன வசதிகளைக்கொண்ட உள்ளக விளையாட்டரங்கம் நிர்மாணிக்கப்படும் என்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சர்
30 JUL, 2025 | 10:46 PM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணம் பிரதேசத்தை மையமாகக் கொண்டு நவீன வசதிகளைக் கொண்ட உள்ளக விளையாட்டரங்கம் ஒன்றை நிருமாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார். இதுவரை உள்ளக விளையாட்டரங்குகள் நிர்மானிக்கப்படாத பகுதிகளில் தரமான உள்ளக விளையாட்டரங்குகளை அமைப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். 'யாழ்ப்பாணம் பிரதேசத்தில் உள்ளக அரங்கு இல்லை என்பதை யாரும் நம்பப்போவதில்லை. ஆனால் அதுதான் உண்மை. எனவே, இந்த வருடம் யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் உள்ளக விளையாட்டு அரங்குகளை நிருமானிப்பது குறித்து நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கை இந்த வருடம் நிருமாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றார் அவர். நாடு முழுவதும் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த வருடம் 100 விளையாட்டரங்குகளின் மேம்பாட்டுப் பணிகளை ஆரம்பிக்க விளையாட்டுத்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த வருடம் சமர்ப்பிக்கப்படவுள்ள பட்ஜெட்டில் இருந்து நிதி ஒதுக்கி 2 உயர்தர செயற்கை ஓடு பாதைகளை நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கண்டியில் ஒரு செயற்கை ஓடுபாதை மைதானத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது, மற்றொன்று கிளிநொச்சி அல்லது அனுராதபுரத்தில் நிருமாணிக்கப்படும். பாடசாலைகளில் விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அதன் கீழ் விளையாட்டுத்துறை உபகரணங்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தரமான மைதானங்களை நிர்மாணிப்பது அத்தியாவசியமாகும். அதன் மூலம் இளம் சமுதாயத்தினரின் ஆற்றல்களை அதிகரிக்கச் செய்து சர்வதேச அரங்கில் பிரகாசிக்க செய்யமுடியும் எனவும் அமைச்சர் கூறினார். https://www.virakesari.lk/article/221407
-
பாலஸ்தீன அதிகாரிகளிற்கு வீசா வழங்கப்போவதில்லை - தடைகளையும் விதிப்போம் - அமெரிக்கா
01 AUG, 2025 | 01:37 PM பாலஸ்தீன அதிகாரிகளிற்கு விசா வழங்கப்போவதில்லை தெரிவித்துள்ள அமெரிக்கா அவர்களிற்கு எதிராக தடைகளை விதிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. ஒஸ்லோ சமாதான உடன்படிக்கை மூலம் உருவாக்கப்பட்ட பாலஸ்தீன அதிகார சபை மற்றும் இந்த பேச்சுவார்த்தைகளின் போது பாலஸ்தீன மக்களின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஆகியவற்றிற்கு எதிராகவே இந்த நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த அமைப்புகள் தொடர்ந்தும் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதால் அவற்றிற்கு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான வீசாவை வழங்கப்போவதில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் பல நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவுள்ள நிலையிலேயே அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/221533
-
செம்மணி புதைகுழியிலிருந்தாவது தமிழினத்திற்கு இடம்பெற்ற கொடுமைகளுக்கு முடிவு கிடைக்க சர்வதேச நீதி விசாரணை நடைபெறவேண்டும் - ஆறு திருமுருகன் வேண்டுகோள்
01 AUG, 2025 | 12:48 PM (எம்.நியூட்டன்) செம்மணி புதைகுழியிலிருந்தாவது தமிழினத்திற்கு இடம்பெற்ற கொடுமைகளுக்கு முடிவு கிடைக்க சர்வதேச நீதி விசாரணை நடைபெறவேண்டும் இலங்கையில் வாழுகின்ற ஈரநெஞ்சுடைய மனிதநேய அமைப்புக்களும், சமய பண்பு மிக்க பெரியோர்களும் இந்த விடையத்தில் நேர்மையாக குரல் கொடுத்து சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் உப தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனித எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்படும் சோகமான சூழ்நிலையில் திகைத்துப்போய் இருக்கின்ற சமூகம் எத்தனை பேரை இழந்து, எத்தனை பேர் காணாமல் போய் கவலையுடன் இருக்கும் போது செம்மணி மனித புதைகுழி சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் தந்துள்ளது. எனவே செம்மணிப் புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் சர்வதேச ரீதியான விசாரணை இடம்பெறவேண்டும் உண்மையான தீர்வு இந்த விடையத்தின் ஊடாக ஏற்படுத்தப்படவேண்டும். எனவே இன்று இந்த முயற்சியில் ஈடுபடுகின்ற நீதித்துறை சார்ந்தவர்களை நாம் நன்றியோடு போற்றுகின்ற அதேவேளை இந்த விசாரணை தொடரவேண்டும் இந்த விசாரணையின் ஊடாக தமிழ் இனத்திற்கு நடைபெற்ற கொடுமைகள் முடிவுக்கு வரவேண்டும் என்று இந்த வேளையில் வேண்டி செம்மணிப் புதைகுழி தொடர்பாக பச்சிளம் பாலகரில் இருந்து ஆண்கள் பெண்கள் என்று வேறு பாடின்றி இவ்வளவு கொடூரமாக புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்கின்ற செய்தி உலகத்தை உலுக்கிக்கொண்டு இருக்கின்றது. தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாகி வியப்புக்குள்ளாகியுள்ளது. எனவே இரக்கம் இல்லாமல் நடைபெற்ற யாராலும் மன்னிக்கமுடியாத துயரமான சம்பவத்திற்கு இலங்கையில் வாழுகின்ற ஈரநெஞ்சுடைய மனிதநேய அமைப்புக்களும் ,சமய பண்பு மிக்க பெரியோர்களும் இந்த விடையத்தில் நேர்மையாக குரல் கொடுத்து சரியான ஒரு தீர்வை செம்மணி விவகாரம் பெற்றுத்தரவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/221520
-
இலங்கையின் அரச வைத்தியத்துறையில் IVF முறையில் முதலாவது குழந்தை பிறந்தது
Published By: DIGITAL DESK 3 01 AUG, 2025 | 11:35 AM இலங்கையின் அரச வைத்தியத்துறையில் செயற்கை கருத்தரிப்பு முறையில் (IVF) வெற்றிகரமாக முதலாவது குழந்தை வியாழக்கிழமை (31) ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது. இந்த குழந்தை சிசேரியன் மூலம் பிறந்துள்ளது. இது களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் IVF நிலையத்தின் ஒரு வருட கால முயற்சியின் விளைவாக இடம்பெற்றுள்ளது. பிரசவத்தின் பின்னர் 31 வயதுடைய தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த IVF செயற்கை கருத்தரிப்பு முறை முதன் முதலில் பல்கலைக்கழகத்தின் கருத்தரித்தல் மையத்தில் மேற்கொள்ளப்பட்டது. அரசாங்கம் நடத்தும் IVF திட்டத்திற்குப் பின்னர் அரசாங்க வைத்தியசாலையில் குழந்தை ஒன்று பிறப்பது இதுவே முதல் முறை ஆகும். களனி பல்கலைக்கழகத்தின் ஆலோசகர் மகப்பேறியல் மற்றும் மகளிர் வைத்திய நிபுணர் பேராசிரியர் ரசிக்கா ஹேரத் தலைமையிலான மருத்துவக் குழுவால் சிசேரியன் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனை, அதே பீடத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளரும் கருத்தரித்தல் வைத்தியர் நிபுணர் சுரங்க ஹெட்டிபத்திரண தலைமையிலான மருத்துவக் குழுவால் நடத்தப்பட்ட அரசாங்க கருத்தரித்தல் மையத்தில் நடத்தப்பட்ட முதலாவது வெற்றிகரமான IVF கருத்தரிப்பு என்பதிலும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221515
-
நெல்லை பாளையங்கோட்டையில் மென்பொறியாளர் ஆணவக்கொலை
நெல்லை பொறியாளர் கவின் உடல் ஒப்படைப்பு - 5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது எப்படி? படக்குறிப்பு, கவினின் உடலுக்கு அமைச்சர் கேஎன் நேரு மாலை அணிவிக்கிறார் கட்டுரை தகவல் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 30 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் தலித் சமூகத்தை சேர்ந்த கவின் செல்வ கணேஷ் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட சுர்ஜித் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரது பெற்றோர் இருவரும் காவல்துறையில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுர்ஜித்தின் தந்தையான உதவி ஆய்வாளர் சரவணன் புதன் கிழமை இரவு கைது செய்யப்பட்டார். இனையடுத்து 5 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த கவினின் உறவினர்கள், அவரது உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். அதன்படி கவினின் தந்தை சந்திரசேகர், சகோதரர் பிரவீன், தாய்மாமா இசக்கிமுத்து மற்றும் உறவினர்கள் பாளையங்கோட்டையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு இன்று காலையில் வந்தனர். அங்கு உடலை ஒப்படைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்நிலையில் காலை 10:30 மணி அளவில் அமைச்சர் நேரு, மாவட்ட ஆட்சியர் சுகுமார், பாளையங்கோட்டை தாசில்தார் முன்னிலையில் கவின் உடலை அவர்களது உறவினிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அவரது உடலுக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து வாகனம் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பிபிசி தமிழிடம் பேசிய கவினின் தாய் மாமா இசக்கி முத்து,"சுர்ஜித்தின் மீது குண்டர் சட்டம் போட்டப்பட்டுள்ளது, அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிபிசிஐடி வழக்கை முன்னெடுக்கிறது. இது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. எனவே தான் உடலைப் பெற்றுக் கொள்ள சம்மதித்தோம் " என்றார். இதனிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சரிபார்ப்பு, ஆவணங்கள் எழுதும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும், கவின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் முடிவடைந்த பின்னர் மேற்கொண்டு விசாரணைகள் தொடங்கும் எனவும் சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன. வழக்கில் இதுவரை நடந்தது என்ன? தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின் செல்வகணேஷ். இவர் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தில் இளம்பெண்ணின் பெற்றோர், சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் சரவணனுக்கும், கிருஷ்ணகுமாரிக்கும் தொடர்பு இருப்பதாக உயிரிழந்த கவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர் சார்பு ஆய்வாளர்கள் சரவணன், மற்றும் கிருஷ்ணகுமாரி மீது காவல்துறையினர் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து சரவணன், மற்றும் கிருஷ்ணகுமாரியை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல்படை டிஐஜி விஜயலட்சுமி உத்தரவிட்டார். ஆனால், இருவரையும் கைது செய்தால் மட்டுமே, கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டடனர். படக்குறிப்பு, கவின் செல்வ கணேஷ் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை பார்த்துவந்தார் இதையடுத்து, நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி முன்னிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணி வரை கவினின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சுர்ஜித் பெற்றோர் இருவரையும் கைது செய்தால் மட்டுமே, கவினின் உடலை பெறுவோம் என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்ததால் போலீசார் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மேலும், நேற்று 5வது நாளாக கவின் சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டங்களுக்கு நடுவே அமைச்சர்கள் கேஎன் நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் மற்றும் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் நெல்லை சரக டிஐஜி சந்தோஷ் ஆகியோர் கவினின் பெற்றோரை சந்தித்து பேசினர். படக்குறிப்பு,கவினின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறை இதனிடையே சுர்ஜித்தை போலீசார் கைது செய்து, அவர் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில், சுர்ஜித்தை திருநெல்வேலியில் உள்ள இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி ஹேமா, சுர்ஜித்தை 14 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கவினின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் செல்வம், "காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் சுர்ஜித்தின் பெற்றோராரான உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் இதுவரை காவல்துறையினர் அவர்களை கைது செய்யவில்லை, இருவரும் போலீசார் என்பதால் காவல்துறை கைது செய்யாமல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது." என தெரிவித்தார். "இருவரையும் உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என்பது எங்களது ஒரே கோரிக்கை. ஆனால், கொலையில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இருந்தால்தான் கைது செய்ய முடியும் என போலீசார் தரப்பில் சொல்கிறார்கள். ஆதாரத்தை நாங்கள் எப்படி உருவாக்க முடியும்? சட்டப்படி முதல் தகவல் அறிக்கையில் பெயர் சேர்த்தால் கைது செய்யலாம். ஆனால், பெயர்கள் சேர்க்கப்பட்டும், கைது செய்ய மறுக்கிறார்கள். இதனால் பேச்சுவார்த்தையில் எங்களுக்கு திருப்தி இல்லை", என வழக்கறிஞர் செல்வம் தெரிவித்தார். படக்குறிப்பு,குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் சுர்ஜித் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது இந்நிலையில், சுர்ஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இது தொடர்பாக நெல்லை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''கடந்த 27ம் தேதி கவின் செல்வகணேஷ் (27) என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் தொடர்புடைய பாளையங்கோட்டை, கே.டி.சி.நகர், மங்கம்மாள் சாலையைச் சேர்ந்த சுர்ஜித்(23) கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிலையில் மேற்சொன்ன வழக்கில் சம்பந்தப்பட்ட, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட சுர்ஜித்தை, திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்'' என குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரின் தந்தை மற்றும் தாய் சார்பு ஆய்வாளர் என்பதால் விசாரணை பாரபட்சமின்றி நடக்க இருவரும் பணி இடை நீக்கச் செய்யப்பட்டுள்ளனர் என்றும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு விசாரணைக்கு மாற்றப்படுவதாகவும் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அலுவலகத்திலிருந்து வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு,கவினின் வீட்டின் முன்பு உறவினர்கள் திரைப் பிரபலங்கள் கண்டனம் இதனிடையே திரைப் பிரபலங்கள் கண்டனங்கள் தெரிவிக்க தொடங்கியுள்ளனர். கமல்ஹாசன், இயக்குனர் மாரி செல்வராஜ், ஜி.வி.பிரகாஷ் தங்களது எக்ஸ் சமூக வலைதள பக்கம் வாயிலாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், பாளையங்கோட்டையில் கவின் செல்வ கணேஷ் எனும் 27 வயது ஐடி ஊழியர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டு உள்ளார். ''இந்தக் குற்றத்தைச் செய்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். கவினை இழந்து வாடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சாதிய வன்கொடுமை எனும் சமூக இழிவிற்கு எதிராக அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று திரள வேண்டும். சாதி தான் நம்முடைய முதல் எதிரி என்பதை உணர வேண்டும். முற்றுப்புள்ளி எட்டும் வரை போராட வேண்டும்'' என அறிக்கையில் கமல்ஹாசன் கூறியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித், அவர் நடத்தி வரும் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ''சுர்ஜித்தின் பெற்றோர்கள் குற்றவாளியாகத் சேர்க்கப்பட்டிருந்தாலும், இன்னும் கைது செய்யப்படவில்லை. வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின் படி, வன்கொடுமை சம்பவம் நடந்த உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பந்தப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என்கிறது. இதுவரை ஆட்சித் தலைவர் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை. உடனடி ஊடக வெளிச்சம் கிடைக்கும் நவீன காலத்திலும் ஒவ்வொரு முறை இத்தகைய சம்பவங்கள் நிகழும் போது, பட்டியலின மக்கள் போராடித்தான் குறைந்தபட்ச நீதியை பெற வேண்டியிருக்கிறது, அப்படித்தான் கவினின் பெற்றோர்கள் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.'' என தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், ''தீண்டாமை ஒரு பாவச்செயல் தீண்டாமை ஒரு பெருங்குற்றம் தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்'' என குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ''நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம். சாதிய பெருமை வாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார். திருமாவளவன் கண்டனம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'' தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆதிக்க சாதி கொலைகள், சாதி வெறி தாக்குதல்கள் தொடர்ந்து நிகழ்வது வேதனையளிக்கிறது. கெளரவம் என்ற பெயரில் நடக்கும் கொலைகளை தடுப்பதற்கான சட்டத்தை இந்திய சட்ட ஆணையம் வடிவமைத்து பல ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதுபோன்ற கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும்'' என தெரிவித்திருந்தார். மேலும் உயிரிழந்த கவின் குடும்பத்தினரை திருமாவளவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார், ''கவின் படுகொலை வழக்கை முதல்வரின் நேரடி பார்வையில் நடத்தினால் மட்டுமே நீதி கிடைக்கும். தென் மாவட்டங்களில் தொடரும் இதுபோன்ற படுகொலைகளை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று அறிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1w8j50epgjo
-
அறுகம்குடா இஸ்ரேலியர்களுடையது என 5000 ஆண்டுகளிற்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டதா?!
"அறுகம் குடா இலங்கையில் இருக்கின்றதென நான் நினைத்தேன் ஆனால் அது இஸ்ரேலின் டெல் அவிவ் போல காணப்படுகின்றது" : சமூக ஊடகத்தில் அவுஸ்திரேலிய டிஜே அதிர்ச்சி 01 AUG, 2025 | 11:29 AM இலங்கையின் அறுகம்குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னமும் அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளும் அதிகரித்து வருவது குறித்து சர்வதேச டிஜே டொம் மொனாக்லே கரிசனை வெளியிட்டுள்ளார். நான் அறுகம் குடா இலங்கையில் இருக்கின்றது என நினைத்தேன், ஆனால் அது இஸ்ரேலின் டெல்அவிவ் போல காணப்படுகின்றது என இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள வீடியோவொன்றில் அவர் தெரிவித்துள்ளார். அறுகம்குடா இஸ்ரேலியர்களுடையது என 5000 ஆண்டுகளிற்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அறுகம்குடாவில் காணப்படும் பல உணவகங்களின் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ள அவர் அந்த உணவகங்களின் பெயர்கள் ஹீப்ருவில் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார். சில கட்டிடங்களில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு ஆதரவான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதையும் அவர் காண்பித்துள்ளார். இஸ்ரேலியர்கள் அறுகம்குடாவில் நிகழ்வுகளை நடத்துகின்றனர், அதில் கலந்துகொள்வதற்கு உள்ளுர் மக்களிற்கு இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் இந்த நிலைமை குறித்து கவனம் செலுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/221511
-
20% அமெரிக்க வரி குறைப்பை பாராட்டும் ஹர்ஷ டி சில்வா!
இலங்கைக்கான வரியை குறைத்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விசேட அறிவிப்பு Published By: PRIYATHARSHAN 01 AUG, 2025 | 07:59 AM இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 20 சதவீதமாக குறைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாபதி டொனால்ட் டிரம்ப் பல உலகநாடுகளை இலக்குவைத்து புதிய வர்த்தக வரிகளை கடந்த மாதங்களாக அறிவித்து வந்துள்ள நிலையில், அந்த வரிகள் இன்று ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் நிலையில், சில நாடுகளுக்கு புதிய வர்த்தக வரி விதிப்புக்களை அறிவித்துள்ளார். அதன்படி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 வீத வர்த்தக வரி விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போது அந்த வரி 20 வீதமாக சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பால் இலங்கையின் ஆடைத் தொழில் துறை பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, கனடாவின் மீதான வரிகள் 25 வீதத்திலிருந்து 35 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளன. கனடா, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரி விதித்ததால், இதற்குப் பதிலடியாக இந்த வரி உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாததால், இந்திய இறக்குமதிகளுக்கு 25 வீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லாத ஏனைய நாடுகளுக்கு 10 வீதம் என்ற அடிப்படை வரியைச் சந்திக்கும். இந்த புதிய வரி விதிப்புகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமித்துள்ள போதிலும், இன்று ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் ஏற்கனவே அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வர்த்தக வரி விதிப்புக்கள் அமுல்படுத்தப்படுகின்ற நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய வர்த்தக வரிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221503
-
அதிவேக நெடுஞ்சாலைகளில் பின் இருக்கை சீட் பெல்ட் கட்டாயம் – போக்குவரத்து அமைச்சகம்
Published By: VISHNU 01 AUG, 2025 | 02:28 AM 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது. சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த புதிய சட்டம் செயல்படுத்தப்படுகிறது, மேலும் இது தெற்கு, கொழும்பு-கட்டுநாயக்க மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட தீவின் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் பயனுள்ளதாக இருக்கும். இந்த விதியை பின்பற்றாத ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் மீது சட்டம் அமல்படுத்தப்படும் என்றும், இது தொடர்பாக காவல்துறை மற்றும் அதிவேக நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/221500
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
ஓவல் டெஸ்ட்: ஒரு ரன்னுக்காக விக்கெட்டை விட்ட கில் - 8 ஆண்டுகளுக்குப் பின் கருண் நாயரின் போராட்டம் பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் தினேஷ் குமார். எஸ் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஆண்டர்சன்–டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் சிறப்பம்சமே யார் எந்த செஷனை வெல்வார்கள் என்ற எதிர்பாராத தன்மைதான். பும்ரா, பந்த், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் அந்த பரபரப்பு இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், ஓவல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம், அந்த சந்தேகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. மழை குறுக்கீடுகள் இருந்தபோதும் விறுவிறுப்பு குறையாத நாளாக நேற்று அமைந்தது. வழக்கம்போல இந்த டெஸ்டிலும் இந்திய அணி டாஸை பறிகொடுத்ததால், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஓவல் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. இந்த தொடரின் அனைத்து டெஸ்ட்களிலும் கில் டாஸை துரதிர்ஷ்டவசமாக கோட்டைவிட்டுள்ளார். கடைசி 15 போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக டாஸை இழந்துள்ளதை என்னவென்று சொல்வது? இந்திய அணியில் ஷார்துல் நீக்கப்பட்டு, பேட்டிங் வரிசையை பலப்படுத்தும் விதமாக கருண் நாயருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டதால், ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டார். கம்போஜ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா உள்ளே கொண்டுவரப்பட்டார். பட மூலாதாரம், GETTY IMAGES பேட்டிங்குக்கு சவால் விடுத்த மழை மழை காரணமாக ஆடுகளம் பேட்டிங்கிற்கு சிம்ம சொப்பனமாக மாறியிருந்ததால், தொடக்க ஆட்டக்காரர்கள் சிரமத்துடன் இன்னிங்ஸை தொடங்கினார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் நட்சத்திரம் ஜெய்ஸ்வால், 2 ரன்னில் அட்கின்சன் பந்தில் LBW முறையில் ஆட்டமிழந்தார். நடுவர் அவுட் கொடுக்காத நிலையில், சக வீரர்களின் ஆதரவின்றி தனி ஒருவனாக மேல்முறையீடு செய்து விக்கெட்டை கேப்டன் போப் உறுதிசெய்தார். வழக்கமாக DRS எடுக்கும் போது, சொதப்பும் போப் நேற்று சரியாக செயல்பட்டது, ஸ்டோக்ஸ் உள்ளிட்ட இங்கிலாந்து அணி நிர்வாகத்துக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் இல்லாத நிலையில் அனுபவமற்ற இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சரியான லைன் அண்ட் லெங்க்த் பிடிக்காமல் தாறுமாறாக வீசினார்கள். குறிப்பாக டங் முதல் ஓவரிலேயே அகலப்பந்துகளுக்கு 11 ரன்களை வாரிக்கொடுத்தார். ஒற்றை ரன்னுக்காக பறிபோன விக்கெட் இந்த தொடரில் தொடர்ச்சியாக ஐந்தாவது டெஸ்டில் களமிறங்கிய வோக்ஸ், இந்திய அணியின் தூணாக விளங்கும் கேஎல் ராகுல் விக்கெட்டை கைப்பற்றினார். இல்லாத ஒரு கட் ஷாட்டுக்கு ஆசைப்பட்டு, ஸ்டம்புகளை பறிகொடுத்து ஏமாற்றத்துடன் ராகுல் வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் ராகுல் ஏன் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இடம்பெற முடியவில்லை என்பதற்கு இதுபோன்ற ஷாட்கள் தான் காரணம். தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறிய நிலையில், சுதர்சன், கில் இருவரும் நல்ல பார்ட்னஷிப் அமைத்து நம்பிக்கையளித்தனர். டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற கவாஸ்கரின்(732) சாதனையை முறியடித்தார். ஆனால், தொடக்கம் முதலே ரன் ஓடுவதில் இருவருக்கும் இடையில் சரியான ஒத்திசைவு தென்படவில்லை. கடைசியில் அட்கின்சன் பந்துவீச்சில் அவசரப்பட்டு ரன் ஓட முயன்று, அவரது கையாலேயே ரன் அவுட்டாகி கில் வெளியேறினார். பட மூலாதாரம், GETTY IMAGES நம்பிக்கை அளித்த சுதர்சன் கில் இருந்த ஃபார்முக்கு கொஞ்சம் பொறுமையாக நின்றிருந்தால் நிச்சயம் பெரிய இன்னிங்ஸ் ஒன்றை விளையாடியிருப்பார். கடந்த டெஸ்டில் நம்பிக்கையளித்த சுதர்சன், நேற்று பிரமாதமாக பேட்டிங் செய்தார். கடினமான பந்துகளை லாவகமாக கணித்து தவிர்த்து, அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து ரன் சேர்த்தார். அவருடைய ஸ்ட்ரைட் டிரைவ் ஒன்று கோடு போட்டது போல நேர்க்கோட்டில் சென்று, மைதானத்தை ஆர்ப்பரிக்க வைத்தது. மோசமாக பந்துவீசிக் கொண்டிருந்த டங், யாரும் எதிர்பார்க்காத படி இரண்டு அட்டகாசமான பந்துகளை வீசி சுதர்சனையும் ஜடேஜாவையும் பெவிலியனுக்கு அனுப்பினார். 108 பந்துகளை எதிர்கொண்ட சுதர்சன், 38 ரன்கள் எடுத்தார்; கடந்த டெஸ்டில் சதம் விளாசிய ஜடேஜா 9 ரன்னில் வீழ்ந்தார். உண்மையில், எவ்வளவு பெரிய பேட்டர் என்றாலும், அந்தப் பந்தில் தாக்குப்பிடித்திருக்க முடியாது. அப்படிப்பட்ட பந்துகள் அவை. அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்து, ஆட்டம் கைவிட்டு போய்விட்டது என்ற நினைத்த போது, கருண் நாயர் நம்பிக்கையுடன் விளையாடி அணியை மீட்டார். 8 ஆண்டுகளுக்குப் பின் கருண் நாயரின் போராட்டம் தொடக்கத்தில் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்துகளுக்கு கொஞ்சம் தடுமாறினாலும், போகப்போக சுதாரித்து விளையாடத் தொடங்கினார். குறிப்பாக அவருடைய சில டிரைவ்கள் கண்ணைக் கவரும் வண்ணம் இருந்தன. கருண்–ஜுரெல் பார்ட்னர்ஷிப் மழை குறுக்கீடுகளையும் மீறி, அணியை சரிவிலிருந்து மீட்டது. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஜுரெல், அவசரப்பட்டு விளையாடி அட்கின்சன் பந்தில் ஸ்லிப்பில் புரூக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்ட இந்திய அணிக்கு, மீண்டும் ஒருமுறை வாஷிங்டன் சுந்தர் கைகொடுத்தார். கட்டுக்கோப்பாக விளையாடிய அவர், கருண் நாயருக்கு உறுதுணையாக நின்று அணியை மீட்டெடுத்தார். இங்கிலாந்து அணி இலக்கில்லாமல் பந்துவீசியதால், 30 எக்ஸ்ட்ரா ரன்களை விட்டுக்கொடுத்தது. பதற்றத்தை கட்டுக்குள் கொண்டுவந்து அபாரமாக விளையாடிய கருண் நாயர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது முறை 50 ரன்களை கடந்தார். 3149 நாட்களுக்கு பிறகு அவர் அடித்த அரைசதம் இது. கடைசியாக இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக முச்சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம், GETTY IMAGES தொடர்ந்து கை கொடுப்பாரா கருண் நாயர்? இங்கிலாந்தில் அட்கின்சன் தவிர வேறு யாரும் சரியாக பந்துவீசவில்லை. இந்திய அணி, இங்கிலாந்து பந்துவீச்சின் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டது என்றுதான் சொல்லவேண்டும். ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இருந்திருந்தால், நிச்சயம் இந்தியாவால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இதுபோன்ற ஆடுகளத்தில், மழை குறிக்கீடுகளை கடந்து 64 ஓவர்களில் 204 ரன்களை எடுத்திருக்க முடியாது. இந்திய அணி இரண்டாம் நாளில், கிடைத்த அடித்தளத்தை நன்றாக பயன்படுத்தி பெரிய ஸ்கோர் ஒன்றை பதிவு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சூரியன் துலக்கமாக வெளிப்பட்டு இந்தியாவுக்கு கைகொடுக்கும்பட்சத்தில் இந்திய அணி 350 ரன்களை கடக்க வாய்ப்புள்ளது. அதேசமயம், நேற்றைய நாளின் தவறுகளை சரிசெய்துகொண்டு, இரண்டாம் நாளின் தொடக்கத்திலேயே இந்திய அணியின் விக்கெட்களை கைப்பற்ற இங்கிலாந்து நிச்சயம் வியூகம் வகுக்கும். 50 ரன்களை கடந்து விளையாடி வரும் கருண் நாயர், பெரிய இன்னிங்ஸ் விளையாடி, அணியில் தன் இடத்தை உறுதிபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பட மூலாதாரம், GETTY IMAGES முதல் நாள் ஆட்டம் முடிவடைய சில ஓவர்கள் மட்டுமே இருந்த நிலையில், பீல்டிங்கின் போது வோக்ஸ் காயமடைந்துள்ளது, இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த டெஸ்டில் வோக்ஸ் மீண்டும் பந்துவீசுவதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அனுபவ வீரர் வோக்ஸ் பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டால், அனுபவமற்ற பந்துவீச்சாளர்களை கொண்டு பந்துவீசியாக வேண்டிய கட்டாயத்துக்கு இங்கிலாந்து அணி கேப்டன் போப் தள்ளப்படுவார். அட்கின்சன், டங், ஓவர்டன் ஆகிய மூவரும் மொத்தமாக 18 டெஸ்ட்கள் மட்டுமே விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இந்தியா இரண்டாம் நாளில் ரன் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கலாம். கிரிக்கெட்டில் பேட்டர்களுக்கு இருக்கும் மனநெருக்கடி கற்பனைக்கு எட்டமுடியாதது. ' கிரிக்கெட்டைத் தவிர எந்தவொரு விளையாட்டிலும் தோல்வி அடைந்த ஒரு வீரன் களத்தை விட்டு உடனடியாக வெளியேற்றப்படுவதில்லை. இது பட்டத்தை பறிகொடுத்த மன்னனின் சோகத்திற்கு நிகரானது.' என்கிறார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் பிரயர்லி. 8 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியாமல், கருண் நாயரின் கரியர் முடிந்திருந்தால் எவ்வளவு சோகமாக இருந்திருக்கும்? முதல் 3 டெஸ்ட்களில் சரியான தொடக்கம் கிடைத்தும் பெரிய இன்னிங்ஸ் ஆடமுடியாத அவருக்கு, காலம் இன்னொரு வாய்ப்பை வழங்கியுள்ளது. இரு அணிகளும் தங்களுடைய மேட்ச் வின்னர் வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய ஓவல் டெஸ்டில், முதல் நாளில் இந்தியாவின் கை ஓங்கியுள்ளது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2djxz2ne6ko
-
கிளிநொச்சியில் புலிகளின் ஆயுதங்களை தேடி மேற்கொள்ளப்பட்ட அகழ்வு இடைநிறுத்தம்!
Published By: DIGITAL DESK 2 31 JUL, 2025 | 04:13 PM விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியானது எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவு ஏ-35 பிரதான வீதியின் அருகே தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதம் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக பொலிஸார் வியாழக்கிழமை (31) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது. பொலிஸார், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்ட போது எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் குறித்த அகழ்வுப்பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/221464 கிணறு வெட்டும் தேவை உள்ளவர்கள் யாரோ விளையாட்டு காட்டிட்டாங்க!
-
சம்பூர் கடற்கரையோர பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் 'ஒரு மயான பூமி' அல்ல Published By: VISHNU 31 JUL, 2025 | 09:56 PM கிழக்கு மாகாணத்தில் அரசாங்கப் படைகளால் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திற்கு அருகில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் 'ஒரு மயான பூமி' என்ற கூற்றை ஆதரிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது. அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் உரிமையாளர்களின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய மேலும் ஆழமான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமென சட்ட வைத்திய அதிகாரி நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூர் கடற்கரையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம் ஜூலை 20 அன்று மண்டை ஓடு உள்ளிட்ட எலும்புகளைக் கண்டுபிடித்தது. ஜூலை 30 ஆம் திகதிக்குள் அந்த இடத்தின் வரலாறு குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க தொல்பொருள் திணைக்களத்திற்கு உத்தரவிட்ட மூதூர் நீதிபதி, அகழ்வாய்வு குறித்த அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டார். புதன்கிழமை (ஜூலை 30) வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மனித புதைகுழி இருந்ததா அல்லது அது தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான காணியா என்பதை துல்லியமாக உறுதிப்படுத்தக்கூடிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். மனித எலும்புகள் நீண்டகாலத்திற்கு உட்பட்டவையாக இருப்பதாக திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரி நிர்மால் பொறுக்கம தனது அறிக்கையில் மூதூர் நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார். அந்த எச்சங்களுக்குரிய நபர்களின் மரணம், காயங்களினூடாக ஏற்பட்டதா அல்லது இயற்கை மரணமா அல்லது ஏதாவது குற்றவியல் சம்பவத்துடன் தொடர்புபட்டவையா? என்பதை தீர்மானிக்க மேலும் ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார். சம்பூர் கடற்கரையில் கண்ணிவெடி அகற்றும் பணியை மேற்கொள்ளும் பிரித்தானியாவைச் சேர்ந்த MAG நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நீதிமன்றத்திற்கு நிபுணர் அறிக்கையை வழங்குவதற்காக சட்ட வைத்திய அதிகாரி கள ஆய்வு நடத்தியுள்ளதாகவும், அந்த இடத்தில் பல மண்டை ஓடுகள் மற்றும் எலும்புத் துண்டுகளை கண்டுள்ளதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இரண்டு நிபுணர் அறிக்கைகளின் அடிப்படையில், அரச பகுப்பாய்வுத் திணைக்களம், திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரி, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம், தொல்பொருள் திணைக்களம், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) மற்றும் பொலிஸார் உள்ளிட்டோரை, அந்த இடத்தில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமா இல்லையா என்பதைப் பற்றி விவாதிக்க எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் திகதி நீதிமன்றத்தில் கூடுமாறு நீதவான எச். எம். தஸ்னீம் பௌசான் உத்தரவிட்டதாக எமது நீதிமன்ற ஊடகவியலாளர் குறிப்பிடுகின்றார். 57 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரியூட்டியும் கொலை செய்யப்பட்ட, இலங்கை இராணுவத்தின் மீது குற்றம் சாட்டப்படும், ஜூலை 7, 1990 சம்பூர் படுகொலையின் நினைவாக பாதிக்கப்பட்ட கிராம மக்களால் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/221496
-
கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கைது
இனியபாரதி தலைமையிலான கடத்தல் வழக்கு: தம்பிலுவில் மயானத்தில் தோண்டும் நடவடிக்கை Published By: VISHNU 31 JUL, 2025 | 06:05 PM இனியபாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போன 18 வயது மாணவன் பார்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில் தோண்டும் நடவடிக்கை வியாழக்கிழமை (31) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சிஐடியினர் முன்னெடுத்துள்ளனர். கருணா கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதிகளில் வைத்து சிஐடியினர் கைது செய்தனர். இவர்களுடன் இனிய பாரதியின் சகாக்களான முன்னாள் சாரதி செந்தூரன், திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன், வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த யூட் என அழைக்கப்படும் ரமேஸ்கண்ணா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் அடிப்படையில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலையில் திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவன் பார்தீபன், 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற கிழக்கு பல்கலைக்ழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், 2010- ஜனவரி 26ம் திகதி ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகொட ஆகியோர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிஐடி யினர் கைது செய்யப்பட்டவர்களை குறித்த மயானத்துக்கு கடந்த இரு தினங்களாக அழைத்துச் சென்று புதைக்கப்பட்ட இடங்களை அடையாப்படுத்தினர். இதற்கமைய குறித்த மயான இடத்தை தோண்டி சோதனை செய்வதற்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் சி.ஐ.டி. யினர் அனுமதி கோரியதையடுத்து நீதவான் ஏ.எல்.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த யூட் என அழைக்கப்படும் ரமேஸ்கண்ணா அடையானம் காண்பிக்கும் இடத்தை பெக்கோ இயந்திரம் கொண்டு இன்று பிற்பல் 2.00 மணிக்கு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போது அங்கு இதுவரை எந்தவிதமான உடற்பாகங்களும் மீட்கப்படவில்லை என்பதுடன் குறித்த பகுதியில் மக்கள் திரண்டு நிற்பதை காணக்கூடியதாக இருந்தது. https://www.virakesari.lk/article/221486
-
தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் விடுதலை கோரிக்கை ; நீதி அமைச்சருடன் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் நேரடி சந்திப்பு
Published By: DIGITAL DESK 2 31 JUL, 2025 | 04:19 PM ஜேவிபியினருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது போன்று தமிழ் அரசியல் கைதிகளையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு நீதி அமைச்சரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தை தான் காதுகளால் கேட்கவில்லை, இதயத்தால் கேட்பதாகவும் தெரிவித்த நீதி அமைச்சர் சட்ட கட்டமைப்பிற்குள் இருந்து இந்த பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில், நீதி அமைச்சருடனான சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு நீதி அமைச்சின் அலுவலகத்தில், நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் பிரதிநிதிகள், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில், 15 முதல் 30 வருடங்கள் ஸ்ரீலங்கா சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் உறவினர்களின் நீண்டகால சிறைவாசம் காரணமாக தாங்கள் எதிர்கொண்ட உளவியல், சமூக மற்றும் பொருளாதார சவால்களை கண்ணீருடன் எடுத்துரைத்தனர். தங்களின் அன்புக்குரியவர்களை விரைவாக விடுதலை செய்யுமாறு அமைச்சரிடம் கூட்டாக கோரிக்கை விடுத்தனர். இலங்கையின் இன முரண்பாடுகளால் உருவான போரின் விளைவுகளான தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில், மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண்பது அவசியமாகும். கடந்த காலத்தில், இலங்கை - இந்திய ஒப்பந்தம், விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுக்கள், ஜே.வி.பி.க்கு பொது மன்னிப்பு, மற்றும் போருக்கு பின்னர் 12,000 விடுதலைப் புலிகள் விடுவிக்கப்பட்டமை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டது . இந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, பல வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலையினை மனிதாபிமான ரீதியில் முன்னெடுக்குமாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை முன்வைத்தது. மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் ஊடாக கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. நீதி அமைச்சர் ஹர்ஷ நானயக்கார கோரிக்கைகளை, தான் "காதுகளால் கேட்கவில்லை, இதயத்தால் கேட்கிறேன்" என்று குறிப்பிட்டு, சட்ட கட்டமைப்பிற்குள் இருந்து இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அரசியல் கைதிகளின் பொது மன்னிப்பு சார்ந்த விடயங்கள் ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் வருகின்றமையால், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தொடர்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் உறுதியளித்தார். இந்த சந்திப்பானது கடந்த ஜனவரி 2025 முதல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனான எழுத்துமூல கோரிக்கைக்கு அமைவாக இடம்பெற்றது என்றார். https://www.virakesari.lk/article/221462
-
சம்பூர் கடற்கரையோர பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு: சட்டத்தரணிகள் குழு நேரில் ஆய்வு Published By: DIGITAL DESK 2 31 JUL, 2025 | 09:25 PM திருகோணமலை சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோரப் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில், சட்டத்தரணிகள் குழுவினர் வியாழக்கிழமை (31) நேரில் விஜயம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) MAG என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப் பகுதிகளைக் கண்டெடுத்தது.இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கடந்த ஜூலை 23ஆம் திகதி மூதூர் நீதிமன்ற நீதிபதி, அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம், காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்தனர். புதன்கிழமை (30)மூதூர் நீதிமன்ற நீதிபதி ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தார். அதன்படி, சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் திணைக்களத்திடம் இருந்து அப்பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான அறிக்கையைப் பெற்று, எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி குறித்த இடத்தில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பாக ஆராய்வதற்காக சட்ட மாநாடு ஒன்றை நடத்த அவர் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் (ஜூலை 31) சம்பூர் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட சட்டத்தரணிகள் குழுவினர், குறித்த பகுதியை நேரடியாகப் பார்வையிட்டதுடன், அப்பகுதி கிராம மக்களுடனும் விரிவாக உரையாடி தகவல்களைப் பெற்றுக்கொண்டனர். https://www.virakesari.lk/article/221454
-
இந்தியாவுக்கு வரி விதித்த பிறகு பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் - டிரம்பின் முடிவு உணர்த்துவது என்ன?
பட மூலாதாரம், GETTY IMAGES 31 ஜூலை 2025, 10:25 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் மீது 25 சதவீத வரியை அறிவித்த சில மணி நேரங்களுக்குள், பாகிஸ்தானுடன் அந்நாட்டில் 'எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதற்கு ஒரு ஒப்பந்தத்தையும் செய்துகொண்டார். அமெரிக்கா பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டிருப்பதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் எழுதினார். இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளும் இணைந்து பாகிஸ்தானின் 'அதிக எண்ணெய் வளங்களை மேம்படுத்தும். புதன்கிழமை, இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் போது, டிரம்ப் இந்தியாவின் மீது 25 சதவீத வரிகளை அறிவித்தார். மேலும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவின் மீது அபராதம் விதிப்பது பற்றியும் அவர் பேசினார். இதைத் தொடர்ந்து, இரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் சில இந்திய நிறுவனங்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டன. இந்தியாவின் மீதான வரிகள் மற்றும் பாகிஸ்தானுடனான ஒப்பந்தம் ஆகியவை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் தனக்குத் தானே தோல்வியை தேடிக்கொள்ளும் நடவடிக்கையாக இருக்கலாம் என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தின் ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடீஸின் பேராசிரியர் ஹேப்பிமோன் ஜேக்கப் கூறுகிறார். மறுபுறம் தற்போது டிரம்பின் முன்னுரிமை வர்த்தகமே தவிர பாரம்பரிய பாதுகாப்பு கூட்டாண்மை அல்ல என கேட்வே ஹவுஸ் ஆஃப் இந்தியா எனும் சிந்தனை குழுவின் ஆய்வாளர் நயனிமா பாசு, நம்புகிறார். பட மூலாதாரம், ANDREW HARNIK/GETTY IMAGES இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை - டிரம்ப் இதற்கிடையே இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழன் அன்று கூறியுள்ளார். முன்னதாக புதன்கிழமையன்று, ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார். ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா மீது கூடுதல் இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். "இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்கிறது என்பது குறித்து எனக்கு கவலையில்லை. அவர்கள் இருவரும் சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரங்களை ஒன்றாக மூழ்கடிக்க விரும்பினால், செய்யட்டும். எனக்கு அதைப் பற்றிய கவலை இல்லை" என வியாழனன்று, டிரம்ப் சமூக ஊடக தளமான ட்ரூத் சோசியலில் பதிவிட்டார். "இந்தியாவுடன் நாங்கள் மிகக் குறைந்த அளவில் மட்டுமே வர்த்தகம் செய்துள்ளோம். ஏனெனில் உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக அது உள்ளது. அதேபோல், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தகம் இல்லை. " என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "நாங்கள் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த விஷயமும் பிரிக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது அடிப்படையில் அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்தியா அந்த குழுவில் இருக்கிறது. இது டாலரின் மீதான தாக்குதல். டாலரை யாரும் தாக்க அனுமதிக்க மாட்டோம்."என்று கூறினார். "இது பகுதி பிரிக்ஸ் குழுவையும், வர்த்தக பற்றாக்குறையையும் பற்றியது. அமெரிக்காவுக்கு இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறை உள்ளது" என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "பிரதமர் மோதி எனது நண்பர். ஆனால் இந்தியா எங்களுடன் அதிக வர்த்தகம் செய்யவில்லை. அவர்கள் எங்களிடம் நிறைய பொருட்கள் விற்கிறார்கள். ஆனால், அவர்கள் விதிக்கும் வரிகள் (அமெரிக்க பொருட்கள் இந்திய இறக்குமதிக்கு) மிக அதிகளவில் உள்ளன. இப்போது இந்தியா இந்த வரிகளை பெரிதும் குறைக்க தயாராக இருக்கிறது. ஆனால் அடுத்து என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்" என்றும் கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES 'ஒரு நாள் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எண்ணெய் விற்கலாம்' இந்நிலையில், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார். "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க-பாகிஸ்தான் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தலைமைப் பாத்திரத்தை வகித்ததற்காக அதிபர் டிரம்ப்க்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்"என எக்ஸ் தளத்தில் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பதிவிட்டார். ஷாபாஸ் ஷெரீப்பின் கூற்றுப்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் நேற்றிரவு (புதன்கிழமை) வாஷிங்டனில் எட்டப்பட்டது. "இந்த வரலாற்று ஒப்பந்தம் நமது வளர்ந்து வரும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும், இதனால் எங்கள் நீடித்த கூட்டுறவின் நோக்கம் வரவிருக்கும் நாட்களில் மேலும் விரிவாக்கப்படும்"என அவரது பதிவு குறிப்பிடுகிறது. முன்னதாக, பாகிஸ்தானுடனான ஒப்பந்தம் குறித்த தகவல்களை அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். "நாங்கள் பாகிஸ்தானுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இதன் கீழ் அமெரிக்காவும் பாகிஸ்தானும் இணைந்து அங்குள்ள மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களை மேம்படுத்தும்"என ட்ரூத் சோசியலில் அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இந்த கூட்டாண்மைக்கு தலைமை தாங்கும் எண்ணெய் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். யாருக்குத் தெரியும், ஒருவேளை ஒரு நாள் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எண்ணெய் விற்கலாம்" என்றும் அவரது பதிவு கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் (இடது) வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவை சந்தித்தார். 'ஆபரேஷன் சிந்தூரை' நிறுத்த சொன்னது யார்? வேறுபடும் மோதி - டிரம்ப்! வைட்டமின் டி அதிகரிக்க வெயிலில் நிற்க வேண்டிய சிறந்த 3 மணி நேரம் எது? வெள்ளை - பழுப்பு ஆகிய இரு நிற முட்டைகளில் எது சிறந்தது? டிஜிட்டல் டீடாக்ஸ்: போன் ஸ்கிரீனில் இருந்து விலகி இருப்பது எப்படி? நிபுணர்கள் கூறுவது என்ன? டிரம்ப் பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தை அறிவித்திருந்தாலும், வெளியுறவுக் கொள்கை நிபுணர்களின் பார்வையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பொருத்தமானதாக இல்லை. "அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா ரஷ்யாவுடன் நெருக்கமாக இருப்பதை காரணம் காட்டி அதன் மீது வரிகளை விதித்துவிட்டு, பின்னர் தெற்காசியாவில் பாகிஸ்தானுக்கு கைகொடுப்பது ஒரு 'தனக்குத் தானே தோல்வியை ஏற்படுத்திக்கொள்ளும்' நடவடிக்கையாகும். வரும் காலங்களில், அமெரிக்க இராஜதந்திரம் இதைத் தானாகவே உணரலாம்," என டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடடீஸில் பேராசிரியராக இருக்கும் ஹேப்பிமோன் ஜேக்கப் கூறுகிறார். பாகிஸ்தானுடன் அமெரிக்கா செய்துகொண்ட இந்த எண்ணெய் ஒப்பந்தம் இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்திருக்கலாம், ஆனால் இது திடீரென நடந்துவிடவில்லை என சில நிபுணர்கள் கருதுகின்றனர். அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கு நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர் டிரம்பை சந்தித்தபோது, அந்த சந்திப்பு ஆபரேஷன் சிந்தூரை பற்றியதாக இருக்கக்கூடும் என இந்தியா கருதியது என சிந்தனைக் குழுவான கேட்வே ஹவுஸின் ஆய்வாளர் நயனிமா பாசு சொல்கிறார். "உண்மையில் இது பாகிஸ்தானின் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு விவாதமாக இருந்தது. அமெரிக்காவுக்கு தலைவலியாக இருந்த பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பிடிக்கிறது என்பதால் ஆப்கானிஸ்தான் எல்லையில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது, உண்மையில், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான உறவுகள் ஊடகங்களில் காட்டப்பட்ட அளவுக்கு மோசமாக இல்லை." இந்தியா-அமெரிக்க உறவுகளில் நெருக்கம் இருந்தபோதிலும், பாகிஸ்தானுடனான இந்த ஒப்பந்தம் குறித்து கேட்கப்பட்டபோது, டிரம்பின் தலைமையில் அமெரிக்கா இப்போது வர்த்தகத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது என நயனிமா பாசு கூறினார். அவரைப் பொறுத்தவரை, டிரம்ப் 'போர்' செய்வதற்குப் பதிலாக 'வர்த்தகப் போரை' விரும்புகிறார் மற்றும் தனது சொந்த விதிமுறைகளின்படி எவ்வளவு நாடுகளுடன் முடியுமோ அவ்வளவு நாடுகளுடன் வணிகம் செய்ய விரும்புகிறார். பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பெரும் எண்ணெய் வளங்கள் உள்ளன, அமெரிக்கா இதை பாகிஸ்தானுடன் இணைந்து பயன்படுத்த விரும்புகிறது என்கிறார் பாசு. அவரைப் பொறுத்தவரை, இந்தியா தற்போது அமெரிக்காவுடன் ஒரு மினி ஒப்பந்தத்தை செய்திருக்க வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0ql001y0g8o
-
புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
31 ஆம் நாள் நினைவாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது 31/07/2025 சுழிபுரம் கிழக்கை பிறப்பிடமாகவும் சுதுமலை மற்றும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி இராசாத்தி மகாதேவா (மாம்பழம்) அம்மையாரின் 31 ஆம் நாள் 30/07/2025 ஞாபகார்த்தமாக விசேடதேவையுடைய 10 பிள்ளைகளுக்கு அங்கர், நெஸ்ரமோல்ட் என்பவற்றை பிரான்சில் வசிக்கும் திரு திருமதி சங்கரவேல் இராசாராணி(மகள்) குடும்பபம் வழங்கி உதவியுள்ளனர். திரு திருமதி சங்கரவேல் இராசாராணி(மகள்) குடும்பத்தினருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம். மேலும் இது போல உதவ விரும்புவோர் எமது +94 77 777 5448 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்பு கொள்ளலாம். 9 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேருக்கு பகிர்ந்து வழக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து பொருட்களை வழங்கி உதவிய நிர்வாகி அதிபர் திருமதி அபிராமி சிவபவன் அவர்களுக்கும் நிர்வாகி சிறைச்சாலை அத்தியட்சகர் திரு சீ.இந்திரகுமார் அவர்களுக்கும் செயலாளர் பொதுச் சுகாதார பரிசோதகர் திரு த.மோகனறூபன் அவர்களுக்கும் நிர்வாகி கிராமசேவகர் திரு ந.சிவறூபன் அவர்களுக்கும் அங்கர், நெஸ்ரமோல்ற் என்பவற்றை கொள்வனவு செய்து உதவிய திரு ப.மதிகிருஸ்ணா அவர்களுக்கும் எமது உளப்பூர்வமான நன்றிகள். ஒளிப்பதிவு திரு த.மோகனறூபன்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நீங்க சொல்வது சரி தான் @suvy அண்ணை. 6 போக வழியில்லை, குழாயை அடைத்துவிட்டார்கள்.
-
கனடாவும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தீர்மானம் - பிரதமர் அறிவிப்பு
31 JUL, 2025 | 06:56 AM பிரான்ஸ் பிரிட்டனை தொடர்ந்து கனடாவும் எதிர்வரும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தின் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. எனினும் இந்த நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்களிலேயே தங்கியுள்ளது என தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி ஹமாஸ் இல்லாமல் அடுத்தவருடம் பாலஸ்தீன அதிகாரசபைக்கு தேர்தலை நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் கனடா உத்தியோகபூர்வமாக பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றங்கள் விஸ்தரிப்பு, காசாவில் மோசமடைந்துவரும் நிலைமை ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். காசாவில் காணப்படும் மனித துயரம் சகிக்க முடியாததாக காணப்படுகின்றது மிக வேகமாக மோசமடைகின்றது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/221410
-
வட மாகாண உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகள் உருவாக்கப்படவேண்டும் - ஆளுநர் வேதநாயகன்
31 JUL, 2025 | 01:00 PM ஏற்றுமதியை அதிகரிக்காமல் வருமானத்தை உயர்த்த முடியாது ஏற்றுமதியை அதிகரிக்கவேண்டுமானால், வடக்கு மாகாணத்தின் மிகச்சிறந்த வளமாக உள்ள விவசாயம் மற்றும் கடற்றொழிலின் உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகள் உருவாக்கப்படவேண்டும். தொழிற்சாலைகள் உருவாக்கப்படுவதன் ஊடாக எமது வேலைவாய்ப்பு பிரச்சினையையும் தீர்க்கக் கூடியதாக இருக்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சங்கம், றொட்டரி – யாழ்ப்பாணத்துடன் இணைந்து வட மாகாணத்தில் ஏற்றுமதிக்குத் தயாரான உற்பத்தியாளர்களை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் அரியாலை விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (30) காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், எமது பிராந்தியத்தின் ஏற்றுமதி சுற்றுச்சூழலை வலுப்படுத்த ஒரு பகிரப்பட்ட தொலைநோக்கு பார்வையுடன் ஒன்றிணைந்த இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சங்கம், யாழ்ப்பாண மேலாளர்கள் மன்றம், வடக்கு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வட மாகாணம், மனிதத் திறமை, விவசாய பன்முகத்தன்மை, பாரம்பரிய கைவினைத்திறன் மற்றும் வளர்ந்து வரும் தொழில்முனைவோர் தளத்தால் நிறைந்துள்ளது. இருப்பினும், சந்தை அணுகல், தரச் சான்றிதழ் மற்றும் சிறு உற்பத்தியாளர்களை வெற்றிகரமான ஏற்றுமதியாளர்களாக மாற்றக்கூடிய வெளிப்பாடு ஆகியவற்றில் நாங்கள் நீண்ட காலமாக சவால்களை எதிர்கொண்டுள்ளோம். இந்த முயற்சி ஒரு மாற்றத்தக்க வாய்ப்பைக் குறிக்கிறது. இந்த வியாபாரத்திலிருந்து வியாபாரம் (Business 2 Business (B2B) மூலம் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், ஆதரவு நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்களை ஒன்றிணைப்பதன் மூலம், நாங்கள் பின்வரும் அடிப்படைகளை அமைத்துக்கொடுக்க முயல்கின்றோம். நேரடி வணிக இணைப்புகள், அறிவுப் பகிர்வு மற்றும் நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஏற்றுமதி - தயார்நிலை ஆதரவு. இத்தகைய இலக்கு தலையீடுகள் தற்போதுள்ள இடைவெளிகளைக் குறைக்கும் மற்றும் வடக்கில் உற்பத்தியாளர்கள் சர்வதேச தரங்களை பூர்த்தி செய்ய, செயற்பாடுகளை அதிகரிக்க மற்றும் அவர்களின் சந்தைகளை பல்வகைப்படுத்த உதவும். இது பொருட்களை ஏற்றுமதி செய்வது மட்டுமல்ல - இது மீண்டும் கட்டியெழுப்பவும் செழிக்கவும் உறுதிபூண்டுள்ள ஒரு பிராந்தியத்திலிருந்து நம்பிக்கை, புதுமை மற்றும் மீள்தன்மையை ஏற்றுமதி செய்வது பற்றியதாகவும் அமைகின்றது. விவசாய வணிகம் முதல் கடல்வளம் வரை, பாரம்பரிய கைவினைப்பொருட்கள் முதல் தொழில்நுட்ப சேவைகள் வரை, நமது உள்ளூர் தொழில்களின் வலிமையை பயன்படுத்திக்கொள்ளுமாறு வருகைதரும் அனைத்து ஏற்றுமதியாளர்களையும் முதலீட்டாளர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வழிகாட்டுதல், நிபுணத்துவம் மற்றும் தொடர்பாடல்கள் மூலம், வடக்கில் ஒரு துடிப்பான ஏற்றுமதி சமூகத்தை உருவாக்க முடியும். இந்தச் செயற்பாட்டுக்கு எமது மாகாணசபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என உறுதிப்பட இங்கு நான் தெரிவிக்கின்றேன். தடைகளை நீக்கவும், உள்கட்டமைப்பை வழங்கவும், ஒரு உகந்த கொள்கை சூழலை உருவாக்கவும் தேசிய ஏற்றுமதியாளர் சங்கம், மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் நாங்கள் கைகோர்த்து செயற்படுவோம். நிகழ்வின் ஆரம்பத்தைத் தொடர்ந்து ஏற்றுமதியாளர்களுக்கான நூல் ஒன்றும் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், தேசிய ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் றொட்டரி கழகத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஆளுநரும் ஆகியோரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/221441
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அண்ணை முழுதும் நிரம்ப என்றால் 6 தான்! 3 முக்கால்வாசி தான் நிரம்பும்.
-
மண் கொள்ளையின் காயங்களை சுமந்து நிற்கும் கோவை : புகைப்படங்கள் சொல்லும் உண்மை!
பட மூலாதாரம்,GANESH படக்குறிப்பு,கோவை மாவட்டத்தில் மண் கொள்ளை பாதிப்பு கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதிகளை உள்ளடக்கிய கோவை மாவட்டத்தில் 300 கி.மீ. துாரத்துக்கு மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியிலும், அடிவாரப்பகுதிகளிலும் வனத்துறை, அரசு நிலங்கள் தவிர்த்து, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பிலான பட்டா நிலங்களும் உள்ளன. பல்வேறு காட்டுயிர்களின் வாழ்விடமாக உள்ள இங்குதான் கடந்த 20 ஆண்டுகளில் அபரிமிதமான அளவுக்கு மண் கொள்ளை நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மண் கொள்ளையில் அதிகமான சூழலியல் பாதிப்புக்குள்ளானது, தடாகம் பள்ளத்தாக்கு. இதில் அமைந்துள்ள சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம், 24 வீரபாண்டி, சோமையம்பாளையம் மற்றும் பன்னிமடை ஆகிய 5 கிராம ஊராட்சிகளில் எவ்வித அனுமதியுமின்றி 197 செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. இந்த சூளைகளுக்காகவே வரன்முறையின்றி பட்டா மற்றும் அரசு நிலங்களில் மண் கொள்ளை நடந்தது. படக்குறிப்பு,கோவை உயர்நீதிமன்ற உத்தரவால் அதிகாரிகளைக் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு, மண் கொள்ளை மற்றும் சூழலியல் பாதிப்புகள் குறித்து குழு அமைக்கப்பட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பட்டா நிலங்களில் மட்டுமின்றி, வனத்துறை, பூமி தான நிலம், பஞ்சமி நிலம், அறநிலையத்துறை, மின் வாரிய நிலம், பாரதியார் பல்கலைக்கழக நிலம் நீர்நிலை உள்ளிட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் 5 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை மண் கொள்ளை நடந்திருப்பதாக சர்வே எண்களுடன் 129 பக்க அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.379 கோடி மதிப்பில் மண் கொள்ளை நடந்துள்ளதாகவும், ரூ.59.74 கோடி மதிப்பிற்கு சூழலியல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது. ஆனால் மண் கொள்ளையில் மதிப்பிடப்பட வேண்டிய 808 களங்களில் (Field) 565 இடங்களில் மட்டுமே ஆய்வு நடந்தது. விடுபட்ட 241 இடங்களிலும் சேர்த்து மொத்தம் 9500 ஏக்கர் பரப்பளவில் 5 மீட்டரிலிருந்து 45 மீட்டர் (ஏறத்தாழ 120 அடி) வரை மண் கொள்ளை நடந்துள்ளதாகவும், விடுபட்ட பரப்பளவு, மண்ணுக்கான தற்போதைய சந்தை மதிப்பு ஆகியவற்றின்படி, ரூ.40 ஆயிரம் கோடிக்கு மண் கொள்ளை நடந்துள்ளதாக தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்புக்குழு தெரிவித்தது. படக்குறிப்பு,கோவை அபராதத்தொகையை எதிர்த்து செங்கல் சூளை உரிமையாளர்கள் சங்கம் முறையீடு செய்தது. அதன்படி, கனிம வளத்துறை ஆணையரால் மறுமதிப்பீடு செய்யப்பட்டு பட்டா நிலங்களில் மட்டுமே மண் எடுக்கப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அபராதத்தொகை ரூ. 13.10 கோடியாகக் குறைக்கப்பட்டது. சூளை உரிமையாளர்கள் பலரும் சேர்ந்து ரூ.9 கோடி வரை உடனே செலுத்திவிட்டனர். மண் கொள்ளை தொடர்பான வழக்கின் காரணமாக, 3 ஆண்டுகளுக்கு முன்பு, 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டு மின் இணைப்பும் கூட துண்டிக்கப்பட்டது. அதனால் இந்தப் பகுதியில் மண் கொள்ளை தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கிருந்த சூளைகள் இதே மேற்குத் தொடர்ச்சி மலையில் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் கடுமையான பல உத்தரவுகளை வழங்கினாலும், இங்கே அதை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர் என்பதே வழக்கின் மனுதாரர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் அனைவருடைய ஒருமித்த குற்றச்சாட்டாகவுள்ளது. இதுவரை நடந்த, நடந்து கொண்டிருக்கும் மண் கொள்ளை, சூழல் பாதிப்புகளை விளக்கும் புகைப்படத்தொகுப்பு: பட மூலாதாரம்,GANESH படக்குறிப்பு,மண் கொள்ளையின் தீவிரத்தை இந்த இரு படங்கள் உணர்த்துகின்றன கோவையில் தடாகம் பள்ளத்தாக்கில் நடந்த மண் கொள்ளையின் தீவிரத்தை இந்த இரு படங்கள் உணர்த்துகின்றன. தடாகம் அருகே மலையடிவாரத்திலுள்ள மூலக்காடு என்ற மருதங்கரை கீழ்பதி என்ற பழங்குடியின மக்களின் கிராமத்தில் மக்களுக்காக போடப்பட்டிருந்த குடிநீர் குழாய் இது. அரசு நிலத்தில்தான் பொது குழாய் போடப்படுமென்ற நிலையில், இந்த குழாயைச் சுற்றிலும் மண் எடுக்கப்பட்டு, குழாய் மட்டும் விடப்பட்டிருந்தது. புகைப்படம் எடுத்த பின்னர் இப்போது இந்த குழாய் மட்டும் அகற்றப்பட்டு விட்டது. மேடு மேடாகவே இருக்கிறது. இதேபோலவே, மின் கம்பங்கள் உள்ள பகுதிகளிலும் சுற்றிலும் மண் எடுக்கப்பட்டு கம்பங்கள் தனியாக நிற்கின்றன. பட மூலாதாரம்,GANESH படக்குறிப்பு,தடாகம் பள்ளத்தாக்கு கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் தடாகம் பள்ளத்தாக்குக்கு உட்பட்ட 5 கிராம ஊராட்சிப் பகுதிகளில் பட்டா நிலங்கள் மற்றும் அரசு நிலங்களில் நடந்த மண் கொள்ளையின் மாறாத சாட்சிகள். மண் எடுக்கப்பட்ட இடங்கள் சரி செய்யப்படாமல் அந்த இடங்களில் சீமைக்கருவேலங்கள் மறைத்து நிற்கின்றன. பட மூலாதாரம்,GANESH படக்குறிப்பு,தடாகம் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வந்த செங்கல்சூளைகளின் புகைபோக்கிகளின் கழுகுப்பார்வை காட்சி (இவை தற்போது செயல்பாட்டில் இல்லை) பட மூலாதாரம்,GANESH படக்குறிப்பு,கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் வருவாய் கிராமத்தில் மண் அகழப்பட்ட இடம் உயர்நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளால் 209 செங்கல் சூளைகள் மூடப்பட்டன. மண் எடுத்த லாரிகள், இயந்திரங்கள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன. மண் கொள்ளைக்கும், சூழலியல் இழப்பிற்கும் சேர்த்து அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் மண் கொள்ளை நடந்த இடங்கள் சரி செய்யப்படவில்லை. பட மூலாதாரம்,GANESH படக்குறிப்பு,நீதிமன்ற உத்தரவுகளைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் (கோப்புப்படம்) பட மூலாதாரம்,GANESH படக்குறிப்பு,2022 ஆம் ஆண்டு மண் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்கள் காவல்துறையால் பறிமுதல் பிடிக்கப்பட்டன மண் கொள்ளை குறித்து அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்த வேண்டுமென்று சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அந்தப் பகுதிகளை மறைப்பதற்காக சீமைக்கருவேலம் மரங்களை அங்கே வளர்த்து விட்டிருப்பதாக குற்றச்சாட்டுகயும் முன்வைக்கின்றனர். இதுவரை அந்தப் பகுதிகளில் சீமைக்கருவேலம் மரங்கள் எங்கெங்கு காணினும் நிறைந்து வளர்ந்து நிற்கின்றன. படக்குறிப்பு,2023 ஆம் ஆண்டு பதிவான காணொளியில் மணல் அகழப்பட்ட இடம் அருகே யானை நடந்து செல்கின்றது. மண் கொள்ளைக்கு எதிரான வழக்குகளில், அந்தப் பகுதியில் யானை வழித்தடமே இல்லை என்று செங்கல்சூளை உரிமையாளர்கள் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. ஆனால் வனத்துறை அறிவித்துள்ள 39 வழித்தடங்களில் 2 வழித்தடங்கள் இந்த மலைப்பகுதியில் இடம் பெற்றுள்ளன. படக்குறிப்பு,இயற்கை நீரோடைகள் மூடப்பட்டுள்ளன - தடாகம் பள்ளத்தாக்கு தடாகம் பகுதியில் நடந்த மண் கொள்ளையால் 112 இயற்கை சிற்றோடைகளில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டதாக தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்புக் குழுவினர் குற்றம்சாட்டினர். தற்போது செங்கல் சூளை, மண் கொள்ளை நடக்கவில்லை. மாறாக மலையடிவாரத்தில் யானை வழித்தடங்களில் மனைப்பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. தடாகம் வடக்கு காப்புக்காடுக்கு அருகில், மலையடிவாரத்தில் இயற்கையான நீரோடை துவங்குமிடத்திலேயே முற்றிலும் மண்ணால் மூடப்பட்டுள்ளது. அத்துடன் யானைகளின் பாதையைத் தடுக்கும் வகையில், மலையடிவாரத்தில் நீளமாக சுற்றுச்சுவரும் எழுப்பப்பட்டுள்ளது. மலையிட பாதுகாப்புக்குழுமம் (HACA–Hill Area Conservation Authority) மற்றும் சூழல் முக்கியத்துவமுள்ள பகுதி (Eco Sensitive Zone) மற்றும் யானை வழித்தடம் என எதையும் கண்டு கொள்ளாமல் இங்கே அனுமதியில்லாமல் மணல் அகழப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,மூலக்காடு கிராமம் அருகில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. நீதிமன்ற உத்தரவுகளால் மணல் அள்ளும் லாரிகள், இயந்திரங்கள் அவ்வப்போது காவல்துறையால் பிடிக்கப்படுகின்றன. ஆனால் இப்போதும் ஆங்காங்கே மண் அள்ளுவது பகலில் பகிரங்கமாகவே நடந்து வருகிறது. மூலக்காடு கிராமம் அருகில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. படக்குறிப்பு,கோவை மாவட்டம் நரசிபுரம் கிராமம் படக்குறிப்பு, மாதம்பட்டி கிராமம், கோவை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக தடாகம் பள்ளத்தாக்கு மற்றும் ஆனைகட்டி மலையடிவாரப் பகுதிகளில் நடந்துவந்த மண்கொள்ளை இப்போது இடம் பெயர்ந்து மாதம்பட்டி, நரசிபுரம், தொண்டாமுத்துார், கோவனுார், தோலம்பாளையம் என வேறு சில பகுதிகளில் நடந்து வருவதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gezpp6vldo
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
6
-
செம்மணி மனித புதைகுழிகளை அடையாளம் காண நவீன கருவிகள்!
செம்மணி மனித புதைகுழி : ஸ்கேன் பரிசோதனைக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையில்லை – சட்டத்தரணி ரணிதா ஞானராஜா Published By: DIGITAL DESK 2 31 JUL, 2025 | 11:42 AM போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கில், செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வாய்வில் இருந்து, இதுவரை 115 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்தார். இந்த அகழ்வில் சிறுவர்கள் உட்பட 102 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்தோடு, இந்த புதைகுழி, நாட்டின் மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக மாறியுள்ளது. தடயவியல் தளம் 1-ல், ஒரு பெரிய எலும்புக்கூட்டின் அருகில், ஒரு குழந்தையின் எலும்புக்கூடு அரவணைக்கப்பட்டபடி காணப்பட்டதாகவும், அது முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மனித எலும்புகளுடன், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களில் குழந்தை பால் போத்தல், குழந்தைகள் விளையாடும் பொம்மை, காலணிகள் மற்றும் பாடசாலை பைகள் ஆகியவை அடங்கும். மேலும் எலும்புக்கூடுகள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்கேன் இயந்திரத்தின் மூலம் ஆகஸ்ட் 4ஆம் திகதி பரிசோதனை நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஜூலை 25 அன்று பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்ட போதிலும், புதிய அனுமதி தேவையில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இல்லாமல் ஸ்கேன் செய்யலாம் எனவும் ரணிதா ஞானராஜா கூறியுள்ளார். இந்த அகழ்வுகளை, தொல்பொருள் மற்றும் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா, யாழ் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோர் இணைந்து வழிகாட்டி நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221421
-
கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைக்க முயற்சி ?
யாழ்.கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் - தவிசாளர் திராகராஜா பிரகாஸ் 31 JUL, 2025 | 12:08 PM யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. குறித்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கும் தயாராக இருப்பதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தெரிவித்துள்ளார். யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று புதன்கிழமை (30) சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தவிசாளர் அவர் மேலும் தெரிவிக்கையால், யாழ்.வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கந்தரோடை பகுதியில் அமைந்திருக்கும் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடத்தில் பௌத்த மக்கள் தொடர்ச்சியாக பார்வையிடுவதற்காக வந்து கொண்டிருக்கிறார்கள். குறித்த பகுதியில் பிக்கு ஒருவர் காணி ஒன்றை கொள்வனவு செய்து பௌத்த மத்திய நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக பொதுமக்களிடமிருந்து நிதி வசூலிப்பு செய்கின்ற ஒரு பெயர் பலகையும் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. சட்டவிரோத கட்டடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் முதற்கட்டமாக அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருக்கின்றது, குறித்த பகுதியில் கட்டிட நிர்மாணத்தை நிறுத்துமாறு என்னால் பிரசுரம் ஒட்ப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அங்கு வரும் மக்களுக்கு தமிழ் பௌத்தம் இருந்த வரலாற்றை அத்தோடு இந்துமத, சைவமத வரலாற்றை மறைக்கும் முகமாக அங்கே வருகின்ற கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது. இது ஒரு தவறான செயல் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று அகழ்வாராய்ச்சியை செய்து வருகின்றது. அருகில் இருக்கும் காணிகளில் இந்த அகழ்வாராட்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் நான் அறிந்தேதேன் ஆய்வுகளின் போது மூன்று அடி உயரமான ஒரு கிருஷ்ணர் சிலை அங்கே கிடைக்கப் பெற்றிருக்கின்றது. அதனை மூடி மறைத்து குறித்த பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த பௌத்த மயமாக்கல் என்பது எங்களுடைய பிரதேசத்தில் அதாவது தயிட்டியை போல், மீண்டும் கந்தரோடையிலும் தொல்லியல் திணைக்களத்தின் அனுசரணையுடன் தற்போதைய அரசாங்கமும் பௌத்த மாயமாக்கலை எமது பிரதேசத்தில் அமூல்ப்படுத்த நினைக்கின்றது. இந்த நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/221429
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
ஓவல் டெஸ்ட் : காயத்தால் பென் ஸ்டோக்ஸ் விலகல் - இந்திய அணிக்கு சாதகமான 3 அம்சங்கள் பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் தினேஷ் குமார். எஸ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் கம்பீர்–ஓவல் மைதான பராமரிப்பாளர் மோதல், ஸ்டோக்ஸ் விலகல் என ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று கடைசி டெஸ்ட் தொடங்குகிறது. பெரும்பான்மை வீரர்கள் ஃபார்மில் இல்லாத போதும், இங்கிலாந்து அணி 2–1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதல் 5 இடங்களில், 4 இந்திய வீரர்கள் உள்ளனர். அதிக விக்கெட்கள் கைப்பற்றவர்கள் பட்டியலில், முதல் 5 இடங்களில் 3 இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்திய அணி சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தியும், சில தவறான முடிவுகள், விவாதத்துக்குரிய அணித் தேர்வுகள் காரணமாக தொடரில் பின்தங்கியுள்ளது. 304 ரன்கள், 17 விக்கெட்கள் உடன் இருமுறை ஆட்ட நாயகன் விருதை வென்ற கேப்டன் ஸ்டோக்ஸ், தோள்பட்டை காயம் காரணமாக விலகியிருப்பது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. வேலைப்பளு மேலாண்மையை கருத்தில்கொண்டு, அணி நிர்வாகம் பும்ராவுக்கு ஓய்வளித்திருப்பது, இந்திய அணியின் அனுபவமற்ற வேகப்பந்து வீச்சுப் படைக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜாவுடன் கை குலுக்குகிறார். பென் ஸ்டோக்ஸ் காயம் மான்செஸ்டர் டெஸ்டில் வலியை பொருட்படுத்தாமல் ஸ்டோக்ஸ் உயிரைக் கொடுத்து பந்துவீசியதே, காயத்தின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது. கடந்த இரு டெஸ்ட்களில் 531 பந்துகளை வீசி, சோர்ந்துபோயிருக்கும் ஆர்ச்சருக்கும் சரியான லெங்த்தில் பந்தை தொடர்ச்சியாக வீசமுடியாமல் தடுமாறிய கார்ஸுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது; மாற்று வீரர்களாக வேகப்பந்து வீச்சாளர்கள் டங், ஓவர்டன், அட்கின்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் மொத்தமாக 18 டெஸ்ட்கள் மட்டும் விளையாடியுள்ளனர். ஓவல் மைதானம், சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்காது என்பதால் டாசன் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பெத்தேல் அணியில் இணைந்துள்ளார். ரூட்டுடன் சேர்ந்து பெத்தேல் பகுதிநேர சுழற்பந்து வீசுவார் என எதிர்பார்க்கலாம். பும்ரா இல்லாத நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுப் படையை வழிநடத்த வேண்டிய பொறுப்பு முகமது சிராஜின் தோள்களில் இறங்கியுள்ளது. இந்த தொடரில் ஓய்வின்றி 4 டெஸ்ட்கள் விளையாடி, ஒட்டுமொத்தமாக 834 பந்துகள் வீசி, 14 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார் அவர். காயத்தில் இருந்து மீண்டுவந்துள்ள ஆகாஷ் தீப், நல்ல பவுன்ஸ் கொண்ட ஓவல் மைதானத்தில் சாதிப்பார் என நம்பலாம். அறிமுக டெஸ்டில் திணறிய கம்போஜ் நீக்கப்பட்டு, ரன்களை வாரி இறைத்ததால் நீக்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா மீண்டும் சேர்க்கப்படலாம். ஆல்ரவுண்டர் போர்வையில், கடந்த டெஸ்டில் அணியில் இடம்பெற்று 11 ஓவர்கள் மட்டுமே வீசிய, ஷார்துல் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு வழிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒருவேளை கம்பீர்–கில் கூட்டணி வழக்கம் போல, நீண்ட பேட்டிங் வரிசைக்கு முன்னுரிமை கொடுக்குமானால், ஷார்துல் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்வார். கடந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 41 முக்கிய ரன்களை ஷார்துல் குவித்தது குறிப்பிடத்தக்கது. கடைசி டெஸ்டிற்கான பிட்ச் எப்படி இருக்கும்? பார்வையிட்ட கம்பீர் மைதான ஊழியருடன் வாக்குவாதம் சதத்தை நெருங்கிய போது டிரா கேட்ட ஸ்டோக்ஸ் - ஜடேஜா அளித்த பதில் என்ன? தமிழக வீரர் ஜெகதீசன் அனுபவமுள்ள இஷான் கிஷனை தாண்டி இந்திய அணியில் இடம்பிடித்தது எப்படி? மான்செஸ்டரில் வெற்றியே இல்லை – இந்தியா வரலாற்றை மாற்றி எழுதுமா? இந்திய அணியின் வலுவான பேட்டிங் வரிசை இந்தமுறையும் 'சைனாமேன்' குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. ரிஷப் பந்த் விலகியதால், ஐந்தாவதாக இடத்தில் பேட் செய்யும் வாய்ப்பு மீண்டும் ஒருமுறை சுந்தருக்கு கிடைக்கவுள்ளது. இங்கிலாந்து அணியில் வோக்ஸ் தவிர மற்ற மூவரும் அனுபவமற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதால் இந்திய பேட்டர்களுக்கு பெரியளவுக்கு நெருக்கடி இருக்காது. காயத்தில் இருந்து மீண்டுவந்துள்ள வோக்ஸும் இந்த டெஸ்ட் தொடரில், எதிர்பார்த்தளவுக்கு இங்கிலாந்து அணிக்கு பங்களிக்கவில்லை. 4 டெஸ்ட்களில் 52.80 என்ற மோசமான சராசரியில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றுள்ளார். இடைக்கால கேப்டன் ஆலி போப், ஒரு முக்கியமான கட்டத்தில் அணிக்கு தலைமையேற்கவுள்ளார் . கிராலி–டக்கெட் இருவரும் ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில், நட்சத்திர வீரர் புரூக் பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார். இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. கேஎல் ராகுல் தொடங்கி ஜடேஜா வரை பிரமாதமான ஃபார்மில் உள்ளனர். 4 சதங்களுடன் 722 ரன்கள் குவித்துள்ள கேப்டன் கில்லுக்கு, டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் (974) குவித்த பிராட்மேனின் சாதனையை முறியடிக்க 252 ரன்கள் தேவைப்படுகிறது. ஓல்ட் டிராஃபோர்ட் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் அசத்திய சாய் சுதர்சன், மீண்டும் ஒருமுறை டாப் ஆர்டரில் கைகொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஒருவேளை பேட்டிங் வரிசையை பலப்படுத்த அணி நிர்வாகம் திட்டமிட்டால், ஷார்துல் நீக்கப்பட்டு அவரிடத்தில் கருண் நாயர் சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் உளவியல் ரீதியாக உற்சாகம் இன்றும் கடைசி இரண்டு நாள்களிலும் ஓவல் மைதானத்தில் மழை பெய்யும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் இந்திய அணி, மழையையும் மனதில் வைத்து வியூகம் வகுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஓவல் மைதானத்தில் 15 டெஸ்ட்களில் விளையாடியுள்ள இந்தியா, 2 இல் மட்டுமே வென்றுள்ளது. கடைசியாக 2021 சுற்றுப்பயணத்தில் இதே மைதானத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா, 2023 WTC ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. ஓவல் மைதானம் பேட்டிங்கிற்கு சிம்ம சொப்பனமாக திகழும் என்பதால் டாஸ் வெல்லும் அணி, பந்துவீச்சை தேர்வு செய்யவே வாய்ப்பதிகம். தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டெழுந்து, தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ள இந்திய அணி, கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. வெற்றி பெறுவோம் என்ற மமதையில் களத்தில் லட்சுமண ரேகையை தாண்டிய இங்கிலாந்து அணி, தலைவன் இல்லாத நிலையில் உத்வேகத்தை தொலைத்துவிட்டு நிற்கிறது. பாய்காட் உள்ளிட்ட இங்கிலாந்து முன்னாள் ஜாம்பவான்களே ஸ்டோக்ஸ் தலைமையிலான அணியின் போலித்தனத்தை விமர்சித்துள்ள நிலையில், உளவியல்ரீதியாக இந்தியாவின் கை ஓங்கியுள்ளது. ஓல்ட் டிராஃபோர்ட் டெஸ்டில் கைகுலுக்க மறுத்த ஜடேஜா, சுந்தரை இங்கிலாந்து அணி நடத்திய விதம், உலகம் முழுக்க இந்திய அணிக்கு ஆதரவு வட்டத்தை அதிகரித்துள்ளது. எரிகிற அடுப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, கம்பீர்–மைதான பராமரிப்பாளர் இடையிலான வாய்த்தகராறு, டெஸ்ட் தொடரின் முடிவு மீது பலத்த எதிர்பார்ப்பை ஏற்றியுள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா, ஜூலை 27ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த போது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தருணம். இந்த தொடரின் முடிவு எப்படி அமைந்தாலும், இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான சிறந்த டெஸ்ட் தொடர்களில் ஒன்றாக வரலாற்றில் நிலைத்திருக்கும். அணித் தேர்வு, ஆட்ட வியூகம் தொடர்பில் விமர்சனங்கள் உள்ள போதும், கடினமான சூழல்களில் அணியை முன்னின்று வழிநடத்திய விதம், இளம் கேப்டன் கில்லின் தலைமைத்துவத்தை பறைசாற்றுகிறது. ஒன்றுக்கொன்று விஞ்சும் விதமாக ஒவ்வொரு டெஸ்டும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த தொடரின் கிளைமாக்ஸ் டெஸ்ட் அட்டகாசமான ஒன்றாக அமைந்து, ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடரை முழுமை பெற வைக்குமா? அதற்கு வானிலை ஒத்துழைக்குமா? இங்கிலாந்தின் தடித்தனத்துக்கு இந்திய இளம் படை சரியான பாடம் புகட்டுமா? பொறுத்திருந்து பார்ப்போம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce839788r9wo