Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. 27 JUN, 2025 | 05:20 PM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கையின் இறையாண்மையை காட்டிக்கொடுக்கும் வகையில் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் எதிர்காலத்தில் சட்டத்துக்கு முன் இருக்கவேண்டிவரும் என கலாநிதி கயான் ஜயதிலக்க தெரிவித்தார். தனியார் தொக்காட்சி நிகழ்ச்சின்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் பாராளுமன்றத்துக்கோ மக்களுக்கோ தெரிவிக்காமல் வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதில்லை. ஆனால் அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து கைச்சாத்திடுவதற்கு முன்னர் நாட்டுக்கு தெரிவிக்கவும் இல்லை. கைச்சாத்திட்ட பின்னரும் அதனை தெரிவிக்க மறுத்து வருகிறது. கரம்போட் விநியோகித்த குற்றச்சாட்டுக்காக அண்மையில் நீதிமன்றம் 25 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அப்படியானால் இலங்கையின் இறையாண்மையை காட்டிக்கொடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தளவு காலம் சிறைத்தண்டனை வழங்கப்படும்? நாட்டு மக்களுக்கு தெரிவிக்காமல் வெறு நாடொன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது மாத்திரமல்லாமல், அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருக்கும் விடயங்களை வெளிப்படுத்துமாறு கேடடால், அதனையும் வழங்க முடியாது என தெரிவிப்பது பாரிய விடயமாகும். அதனால் இந்த விடயங்களை எப்போதாவது எங்களுக்கு நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல வேண்டி ஏற்படும். இந்தியாவுடன் இணைந்து ஆயுத உற்பத்திக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அரசாங்கத்துக்கு புதுமையான மன நிலையே இருக்கிறது. அத்துடன் இந்தியாவுடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருக்கும் விடயங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதாக இருந்தால், அதில் ஏதாவது ஒருவிடயம் இருக்க வேண்டும். அதனால் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கும்போது, இந்த அரசாங்கத்தை முற்போக்கான அரசாங்கம் என நான் ஒருபோதும் தெரிவிப்பதில்லை. ரணில் விக்ரமசிங்கவைவிட வலதுசாரி வெளிநாட்டுக்காெள்கை மற்றும் தொடர்புகளே இந்த அரசாங்கத்திடம் இருக்கிறது. இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது பல நாடுகள் இஸ்ரேலை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தன. ஆனால் இந்த அரசாங்கத்தினால் அவ்வாறான கண்ட அறிக்கை ஒன்றை வெளியிட முடியாமல் போயிருக்கிறது. இறையாண்மையுள்ள நாடொன்றுக்கு இவ்வாறு தாக்குதல் மேற்கொள்வது தவறு என்றாவது தெரிவித்திருக்க முடியும். ஈரான் எப்போதும் எங்களுக்கு உதவி செய்யும் நாடு. மேலும் இந்த நாட்களில் ஜெனிவா மனித உரிமை ஆணையாளர் எமது நாட்டுக்கு வந்து பலருடன் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார். எமது நாட்டில் யுத்தத்தின்போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவே கலந்துரையாடியுள்ளார். ஆணையாளர் அரசாங்கத்தில் இருக்கும் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வாவையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தார். ஆனால் காசாவில் உணவுக்காக வரிசையில் இருப்பவர்கள் மீது இஸ்ரேல் குண்டு தாக்குதல் நடத்துவதை காண்கிறோம். அங்கு பாரிய இனப்படுகொலை இடம்பெற்று வருகிறது. இது தொடர்பில் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு இஸ்ரேல் இராணுவத்துக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறதா? நீங்கள் இறுதியாக காசாவுக்கு எப்போது சென்றீர்கள் என ஆணையாளரிடம் இவர்கள் கேட்டிருக்கலாம். காசாவில் நாளாந்தம் பாரியளவில் மனித படுகொலைகள் இடம்பெறுவதை தொலைக்காட்சிகளில் காணும் நிலையில், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல், இலங்கையில் முடிவடைந்த யுத்தம் தொடர்பில் கதைத்து எமக்கு ஆலாேசனை வழங்கிச்செல்லும்போது வாய்மூடி இருக்கும் அளவுக்கு பலவீனமான அரசாங்கமா இந்த நாட்டில் இருக்கிறது என கேட்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/218640
  2. 27 JUN, 2025 | 07:21 PM யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு பரந்தளவில் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்தார். தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர், தென்னை பயிர்ச் செய்கை சபையின் பொதுமுகாமையாளர் விஜயசிங்க, தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27) கலந்துரையாடிய பொதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டத்துடனேயே வந்துள்ளதாகத் தெரிவித்த சபையின் தலைவர் ஜூலை மாதம் இரு வாரங்கள் யாழ்ப்பாணத்தில் வெள்ளை ஈ யைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் 5 பிரதேச செயலர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இதற்காக கொழும்பிலிருந்து 100 இயந்திரங்கள் (High power water gun) கொண்டு வரப்படவுள்ளன. அத்துடன் அதை இயக்குவதற்கான ஆட்களும் அழைத்து வரப்படவுள்ளனர். அவர்களுடன் நான் உட்பட உயர் அதிகாரிகளும் இங்கு வரவுள்ளோம். https://www.virakesari.lk/article/218655
  3. படக்குறிப்பு, காவல் உதவி ஆய்வாளர் மீரா கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 27 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் "நானா தெருவில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஒரு பெண் மிரட்டிக் கொண்டிருக்கிறார்." கடந்த 23ஆம் தேதியன்று, பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மீரா அந்த வழியாக வந்தபோது, அவரிடம் ஒருவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி பாதுகாப்புப் பணிக்காக மீரா செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இளம்பெண்ணைக் காப்பாற்றுவதற்காக அவர் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அடுத்த ஒரு மணிநேரத்தில் தற்கொலை எண்ணத்தில் இருந்த இளம்பெண் மீட்கப்பட்டார். அவரை தற்கொலை முயற்சியை மேற்கொள்ள விடாமல் மனதை மாற்றி மீட்பதற்கு, பெண் உதவி ஆய்வாளர் மீரா செய்தது என்ன? அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை மிரட்டல் சென்னை தியாகராய நகரில் உள்ள நானா தெருவில் வசித்து வரும் தம்பதியின் 27 வயது மகள், பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு "அவர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்படவே, தங்கள் மகளை அந்தத் தம்பதி அழைத்துக் கொண்டு சென்னை வந்துள்ளனர். ஆனால், இந்தப் பிரிவை அந்த இளம்பெண் ஏற்கவில்லை," என்று காவல்துறை நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. "அது மாம்பலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி. ஆனால், நான் பணிபுரியும் காவல் நிலையத்திற்கு மிக அருகில் அந்தத் தெரு இருந்தது. எனவே விவரம் அறிந்தவுடன் அவரைக் காப்பாற்றுவதற்காக ஓடினேன். அதற்குள் புகார் கூற வந்த நபரே தனது டூவீலரில் என்னை அழைத்துச் சென்றார்" என நடந்ததை விவரித்தார் உதவி ஆய்வாளர் மீரா. "நான்கு மாடிகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பின் வீட்டு ஜன்னல்களுக்கு தடுப்புக் கம்பிகள் எதுவும் அமைக்கப்படவில்லை" என்பதைக் குறிப்பிட்ட காவல் உதவி ஆய்வாளர் மீரா, பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசியபோது, "சம்பவ இடத்திற்குச் சென்றபோது பெண்ணின் தாய், பாட்டி ஆகியோர் பதற்றத்துடன் காணப்பட்டனர். அவரது தாய் தனது மகளை எப்படியாவது காப்பாற்றுமாறு கூறினார். பெண்ணின் படுக்கையறை கதவு உள்புறமாகத் தாழிடப்பட்டு இருந்தது," என்றார். போர்வைகளால் உருவாக்கப்பட்ட வலை படக்குறிப்பு, இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தகவலை மாம்பலம் மற்றும் சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய ஆய்வாளர்களைத் தொடர்பு கொண்டு மீரா தெரிவித்துள்ளார். தனது அறையில் இருந்து தற்கொலைக்கு முயலப் போவதாக அந்தப் பெண் சத்தம் போட்டுள்ளார். அதுகுறித்து விளக்கிய மீரா, "அவர் பேசுவது வீட்டின் ஹாலில் கேட்டது. யாரும் காப்பாற்ற உள்ளே வரக்கூடாது என மிரட்டினார். என்னால் எதுவும் செய்ய முடியாமல் தரைத் தளத்திற்கு வந்தேன்" என்றார். இதற்கிடையே இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள தகவலை மாம்பலம் மற்றும் சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய ஆய்வாளரைத் தொடர்பு கொண்டு மீரா தெரிவித்துள்ளார். தியாகராய நகரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கும் காவல் நிலையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணை மீட்பதற்கு வலை போன்று மீட்பு உபகரணங்கள் எதுவும் இல்லாததால், வீட்டில் இருந்த போர்வைகளைக் கட்டி அதன் மூலம் வலை போன்ற ஒன்றை உருவாக்கும் முயற்சியிலும் மீரா ஈடுபட்டார். ஆனால், அப்படியே அந்தப் பெண்ணை தாங்கிப் பிடிக்க நினைத்தாலும் எடை தாங்க முடியாமல் பலத்த காயம் அடைய வாய்ப்புள்ளதையும் அவர் கணித்தார். மீட்பு முயற்சிக்கு மாற்று வழிகள் இல்லாத சூழலில், அவரது கையில் செல்போன் இருந்ததை உதவி ஆய்வாளர் மீரா கவனித்துள்ளார். அதுகுறித்து விவரித்த அவர், "அவரை மீட்க அதுதான் ஒரே வழியாக இருந்தது. ஏனெனில், அவரை ஜன்னல் வழியாக மட்டுமே மீட்க முடியும். வேறு வழிகளும் இல்லை. எனவே, தீயணைப்பு வீரர் ஒருவரை அழைத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்குள் சென்றேன்" என்றார். சமாதானம் ஏற்பட்டது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES இளம்பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி அவரை மீரா தொடர்பு கொண்டுள்ளார். "யார் நீ?" எனக் கேட்டு ஒருமையில் உதவி ஆய்வாளரைத் திட்டியுள்ளார். அதற்குப் பதிலளித்த மீரா, "உன்னைக் காப்பாற்றவே வந்திருக்கிறேன். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நான் தீர்த்து வைக்கிறேன். என்னை நம்பி வெளியில் வா" எனக் கூறியுள்ளார். "எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை" எனக் கூறி அந்தப் பெண் தொடர்பைத் துண்டித்துவிட்டார். மீண்டும் தொடர்பு கொண்டபோது மீராவின் அழைப்பை அவர் ஏற்றுள்ளார். "சுமார் 8 நிமிடம் கடும் கோபத்துடன் அவர் பேசினார். ஒரு நபரின் பெயரைக் கூறி, 'அவன் என்னை விட்டுட்டுப் போய்விட்டான்' எனக் கூறினார். ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்" என்கிறார் மீரா. அவரைச் சமாதானப்படுத்திய மீரா, "அப்படியெல்லாம் உன்னை விட்டுவிட மாட்டேன். ஒரு தங்கையாக நினைத்து என்னிடம் பிரச்னையை கூறினால் சரி செய்து தருகிறேன். வேறு யாரையும் நம்ப வேண்டாம்" எனக் கூறியதாகத் தெரிவித்தார். இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டபோது தாயுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரது அம்மாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் உதவி ஆய்வாளர் மீரா தெரிவித்தார். "ஒரு கட்டத்தில், 'நீ மட்டும் உள்ளே வா' என அந்தப் பெண் கூறினார். இந்த வார்த்தையைக் கேட்ட மறு விநாடியே, தீயணைப்பு வீரர் மூலமாகக் கதவை உடைத்து உள்ளே சென்றேன். அந்தப் பெண்ணை உடனடியாக உள்ளே இழுத்துப் போட்டுவிட்டேன்" என்று விவரித்தார். 'நம்பிக்கை கொடுத்தால் மனநிலை மாறும்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தற்கொலைக்கு முயலும்போது பிரச்னையை உணர்ந்து நம்பிக்கையளித்தால் மனநிலை மாறும் என்கிறார் உதவி ஆய்வாளர் மீரா (சித்தரிப்புப் படம்) தற்போது தனியார் மருத்துவமனையில் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருகிறார். "பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோது காதல் விவகாரத்தில் அவருக்கு ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அறிந்தேன். அந்த நேரத்தில் அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று மட்டுமே யோசித்தேன்" என்கிறார் மீரா. "அவர் கையில் செல்போன் இருந்ததால் அவரை அமைதிப்படுத்த முடியும் எனத் தோன்றியது. மேலும், அவரது மனநிலை தெரியாமல் உள்ளே நுழைந்தால் விபரீதமாகிவிடுமோ என்ற அச்சமும் இருந்தது" எனவும் அவர் குறிப்பிட்டார். "ஒருவர் தற்கொலைக்கு முயலும்போது பிரச்னையை அறிந்து, உணர்ந்து அதில் நம்பிக்கை கொடுத்தால் மனநிலை மாறும் என நினைத்தேன். வேறு காவல் எல்லையாக இருந்தாலும் அந்தப் பெண்ணை மீண்டும் சந்தித்துப் பேசுமாறு உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்" என்கிறார் மீரா. தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகாவில் உள்ள செல்லம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மீரா. தமிழ்நாடு காவல் துறையில் காவலராகப் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராகத் தேர்வானார். தருமபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு பட்டப்படிப்பில் தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்து படித்துள்ளார். உதவி ஆய்வாளர் பணிக்கு மூன்றாம் முறையாக முயற்சி செய்து தேர்வானதாக அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். தொடரும் காவல்துறையின் மீட்பு சம்பவங்கள் மீராவை போலவே, கடந்த சில வாரங்களாக தற்கொலை முயற்சியில் ஈடுபடும் நபர்களைக் காவல்துறை மீட்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த மார்ச் 30 அன்று மெரினா கடற்கரையில் இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றதைப் பார்த்த, அப்போது பணியில் இருந்த மெரினா காவல் நிலைய தலைமைக் காவலர் குமரேசன், காவலர்கள் சங்கர் குமார், முருகன் ஆகியோர் மீட்டனர். பெற்றோர் உடனான கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்து அப்படியான முயற்சியில் ஈடுபட்டதாக, போலீஸ் விசாரணையில் சகோதரிகள் கூறியுள்ளனர். அவர்களை உறவினர்களிடம் காவல் துறை ஒப்படைத்தது. திருவொற்றியூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கோடம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஏப்ரல் 19ஆம் தேதியன்று உயிரை மாய்த்துக் கொள்வதாக மிரட்டினார். அவரிடம் சமாதானமாகப் பேசி சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு காவலர் தேவராஜ் மீட்டுள்ளார். தற்கொலையை தடுக்க உதவும் 4 முக்கிய வழிகள் தற்கொலை மற்றும் அதற்கான முயற்சிகளைத் தடுப்பதற்கு தனிநபர், சமூகம் மற்றும் தேசிய அளவில் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இதைத் தடுப்பதற்கு நான்கு முக்கிய வழிகளையும் பட்டியலிட்டுள்ளது. தற்கொலை செய்வதற்கான வழிமுறைகளை அணுகுவதைக் கட்டுப்படுத்துதல் தற்கொலை பற்றிய செய்திகளை வெளியிடும்போது அதற்கான பொறுப்புகள் குறித்து ஊடக நிறுவனங்களுக்குத் தெரிவித்தல் வளரிளம் பருவத்தினர் இடையே சமூகம் சார்ந்த திறன்களை (socio-emotional life skills) வளர்த்தல் தற்கொலை நடத்தைகளால் பாதிக்கப்பட்ட நபர்களை முன்கூட்டியே அடையாளம் காணுதல், மதிப்பீடு செய்தல், அவர்களைப் பின்தொடர்தல் தற்கொலை தடுப்பு முயற்சிகளுக்கு சுகாதாரம், கல்வி, தொழிலாளர், விவசாயம், வணிகம், நீதி, சட்டம், பாதுகாப்பு மற்றும் ஊடகங்கள் எனப் பல துறைகளின் ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,DR MALAIYAPPAN படக்குறிப்பு, மருத்துவர் மாலையப்பன் மேலும், தற்கொலைகளைத் தடுப்பதில் சமூகங்களுக்கு முக்கியப் பங்கு உள்ளதாகவும் கூறுகிறது. இதே கருத்தை முன்வைத்து பிபிசி தமிழிடம் பேசிய கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மாலையப்பன், "இந்திய சமூகத்தில் தற்கொலை எண்ணம் என்பது இயல்பாகவே உள்ளது. குடும்ப உறவுகள் இடையே வாக்குவாதம் ஏற்படும்போது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறுவது வழக்கம்" என்கிறார். "தேர்வு, காதல், வணிகம் ஆகியவற்றில் தோல்வி வரும்போது தற்கொலை எண்ணம் வரும். உளவியல்ரீதியாக பலவீனமாக உள்ளவர்கள், எந்தவித திட்டமிடலும் இல்லாமல் கோபத்தில் இந்த முடிவை எடுப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன," எனக் கூறுகிறார் மருத்துவர் மாலையப்பன். தொடர்ந்து பேசிய அவர், "மனச்சோர்வு (Depression) உள்ளவர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்படும். அதைச் செயல்படுத்தவும் திட்டமிடுவார்கள். இதைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் எளிதில் குணமாக்கிவிடலாம்" என்கிறார். அதோடு, மனச்சோர்வுக்கான அறிகுறிகளையும் மருத்துவர் மாலையப்பன் பட்டியலிட்டார். "போதிய உற்சாகம் இல்லாமல் இருப்பது, மெதுவாக நடப்பது, மெதுவாகப் பேசுவது போன்றவற்றின் மூலம் கண்டறியலாம். முன்பு போல வேகமாகச் செயல்பட மாட்டார்கள். உறக்கம் குறைந்துவிடும். எதிலும் ஈடுபாடு காட்ட மாட்டார்கள்" எனக் குறிப்பிட்டார். "பிரச்னைகள் வரும்போது மரணம் ஒரு தீர்வல்ல என்ற எண்ணம் வர வேண்டும். மானம் போனால் உயிர் வாழக்கூடாது என்ற எண்ணம் உள்ளது. மானத்தைவிட உயிர் மிக முக்கியம் என எண்ணும் அளவுக்கு கலாசார மாற்றம் ஏற்பட வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார். "உளவியல் ரீதியாக பலவீனமாக உள்ளவர்களுக்கு வாழ்வியல் பயிற்சிகளை அளிக்கலாம். நேரத்தைக் கடைபிடிப்பது, கோபத்தை எவ்வாறு வெளிக்காட்டக் கூடாது, உற்சாகமாக இருப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொடுத்தால், அவர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" எனக் கூறுகிறார் மாலையப்பன். உதவி எண்கள் நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019 - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq8z0k5d4zwo
  4. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025-27: பங்களாதேஷை வீழ்த்தி முதலாவது வெற்றிப் புள்ளிகளை இலங்கை சம்பாதித்தது 28 JUN, 2025 | 12:10 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது. இதன் மூலம் நான்காவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025-27 சுழற்சிக்கான அத்தியாயத்தில் இலங்கை தனது முதலாவது வெற்றியையும் முதலாவது வெற்றி புள்ளிகளையும் ஈட்டிக்கொண்டது. காலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இந்த இரண்டு போட்டிகளில் இலங்கை மொத்தமாக 16 ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெற்று 66.67 சதவீத புள்ளிகளுடன் அணிகள் நிலையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அபார சதம், தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் பெற்ற அரைச் சதங்கள், ப்ரபாத் ஜயசூரிய இரண்டாவது இன்னிங்ஸில் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல் என்பன இலங்கையை இலகுவாக வெற்றி அடையச் செய்தது. போட்டியின் நான்காம் நாளான இன்று சனிக்கிழமை (28) காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ், கடைசி 4 விக்கெட்களை 16 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷின் கடைசி 4 விக்கெட்களை வீழ்த்துவதற்கு இன்றைய தினம் இலங்கைக்கு 5.4 ஓவர்களும் 29 நிமிடங்களுமே தேவைப்பட்டது. இதற்கு அமைய எஸ்.எஸ்.சி. மைதானத்தில் தான் விளையாடிய 4 டெஸ்ட் போட்டிகளிலும் பங்களாதேஷ் தோல்விகளையே தழுவியுள்ளது. கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுததாடிய பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஷத்மான் இஸ்லாம், முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகிய நால்வரே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இரண்டு தினங்கள் துடுப்பெடுத்தாடி 458 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸன்க அபார சதம் குவித்ததுடன் தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து இலங்கை அணியை பலமான நிலையில் இட்டனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் தய்ஜுல் இஸ்லாம் கணிசமான ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார். மிகவும் நெருக்கடியான நிலையில் 211 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தவாறு தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பங்களாதேஷ் மோசமாகத் துடுப்பெடுத்தாடி 133 ஓட்டங்களுக்கு சுருண்டது. முஷ்பிக்குர் ரஹிம் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றார். பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்ததுடன் தனஞ்சய டி சில்வா, தரிந்து ரத்நாயக்க ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். இந்த வெற்றியின் பின்னர் தனது துடுப்பாட்டம் குறித்து விளக்கிய பெத்தும் நிஸ்ஸன்க, மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் பிரகாசிக்க கிடைப்பதையிட்டு மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார். அத்துடன் தனது துடுப்பாட்ட ஆற்றலை தொடர்ச்சியாக பேணும் வகையில் துடுப்பாட்ட பயிற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் கூறினார். 'இன்னும் ஒரு வருட காலத்திற்கு டெஸ்ட் போட்டிகள் எங்களுக்கு இல்லை. எனவே உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் திறமையாக விளையாடி எமது துடுப்பாட்ட ஆற்றலை தொடர்ந்து சிறப்பாக பேண வேண்டியது டெஸ்ட் விளையாடும் வீரர்களின் கடமை' எனவும் பெத்தும் நிஸ்ஸன்க தெரிவித்தார். எண்ணிக்கை சுருக்கம் பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 247 (ஷத்மான் இஸ்லாம் 46, முஷ்பிக்குர் ரஹிம் 35, லிட்டன் தாஸ் 34, தய்ஜுல் இஸ்லாம் 33, மெஹிதி ஹசன் மிராஸ் 31, நயீம் ஹசன் 25, சொனால் தினூஷ 22 - 3 விக்., அசித்த பெர்னாண்டோ 51 - 3 விக். விஷ்வா பெர்னாண்டோ 45 - 2 விக்.) இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 458 (பெத்தும் நிஸ்ஸன்க 158, தினேஷ் சந்திமால் 93, குசல் மெண்டிஸ் 84, லஹிரு உதார 40, கமிந்து மெண்டிஸ் 33, தய்ஜுல் இஸ்லாம் 131 - 5 விக்., நயீம் இஸ்லாம் 87 - 3 விக்.) பங்களாதேஷ் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 133 (முஷ்பிக்குர் ரஹிம் 26, அனாமுல் ஹக் 19, நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 19, ப்ரபாத் ஜயசூரிய 56 - 5 விக்., தனஞ்சய டி சில்வா 13 - 2 விக்., தரிந்து ரத்நாயக்க 19 - 2 விக்.) ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க. https://www.virakesari.lk/article/218685
  5. 27 JUN, 2025 | 01:32 PM bbc இஸ்ரேல் ஈரான் போருக்கு பின்னர் இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இணைந்து செயற்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானிய அதிகாரிகள் பலரை கைதுசெய்துள்ளதுடன் மரணதண்டனையையும் நிறைவேற்றியுள்ளனர். முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு ஈரானிய புலனாய்வு பிரிவிற்குள் இஸ்ரேலிய புலனாய்வாளர்கள் ஊருடுவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த கைதுகளும் மரணதண்டனை நிறைவேற்றங்களும் இடம்பெறுகின்றன. மோதலின் போது பல ஈரானிய உயர் அதிகாரிகள் கொல்லப்படுவதற்கு தகவல்களே முக்கிய காரணம் என ஈரானிய அதிகாரிகள் கருதுகின்றனர். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவத்தின் சிரேஸ்ட தளபதிகளும் அணுவிஞ்ஞானிகளும் இலக்குவைத்து கொல்லப்பட்டனர். ஈரானிற்குள் இஸ்ரேலின் மொசாட்டின் முகவர்களின் நடவடிக்கைகளே இதற்கு காரணம் என ஈரான் கருதுகின்றது. இந்த கொலைகளின் துல்லியத்தன்மை மற்றும் அளவு காரணமாக அதிர்ச்சியடைந்துள்ள ஈரான் அதிகாரிகள் வெளிநாட்டு புலனாய்வாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை இலக்குவைக்கின்றனர். நாட்டின் பாதூகாப்பிற்காக இந்த நடவடிக்கை என அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இது கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கும் மக்கள் தொகை கட்டுப்பாட்டை இறுக்குவதற்கும் ஒரு வழியாகும் என்று பலர் அஞ்சுகின்றனர். 12 நாள் மோதலின் போது இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு ஈரானிய அதிகாரிகள் மரண தண்டனை விதித்தனர். போர் நிறுத்தத்திற்கு ஒரு நாள் கழித்து புதன்கிழமை இதே போன்ற குற்றச்சாட்டில் மேலும் மூன்று நபர்கள் தூக்கிலிடப்பட்டனர். இதையடுத்து நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான சந்தேக நபர்கள் உளவு பார்த்ததாக பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இஸ்ரேலிய உளவுத்துறையுடன் ஒத்துழைத்ததாக கூறப்படும் பல கைதிகளிடமிருந்து வரும் வாக்குமூலங்களை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. மனித உரிமைகள் குழுக்களும் ஆர்வலர்களும் சமீபத்திய சம்பவங்கள் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஈரானின் நீண்டகால நடைமுறையான கட்டாய ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுதல் மற்றும் நியாயமற்ற விசாரணைகளை நடத்துதல் ஆகியவற்றை மேற்கோள் காட்டி. அதைத் தொடர்ந்து மேலும் மரணதண்டனைகள் நிறைவேற்றப்படலாம் என்ற கவலைகள் காணப்படுகின்றன. ஈரானின் புலனாய்வு அமைச்சகம் மேற்கத்திய மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை வலையமைப்புகள் - CIA மொசாட் மற்றும் MI6 எதிராக "இடைவிடாத போராட்டத்தில்" ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஜூன் 13 அன்று ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின்படி "இஸ்ரேலிய உளவு வலையமைப்பு நாட்டிற்குள் மிகவும் தீவிரமாகிவிட்டது". 12 நாட்களில் ஈரானிய உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் "இந்த வலையமைப்புடன் தொடர்புடைய 700 க்கும் மேற்பட்ட நபர்களை" கைது செய்ததாக ஃபார்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் தொடர்பான சமூக ஊடகப் பக்கங்களில் தங்கள் தொலைபேசி எண்கள் தோன்றியதாக ஈரானியர்கள் பிபிசி பாரசீகத்திடம் தெரிவித்தனர். இந்தப் பக்கங்களை விட்டு வெளியேற வேண்டும் அல்லது வழக்குத் தொடர வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பிபிசி பாரசீகம் லண்டனை தளமாகக் கொண்ட ஈரான் இன்டர்நேஷனல் மற்றும் மனோட்டோ டிவி உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பாரசீக மொழி ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மீது ஈரானிய அரசாங்கம் அழுத்தத்தை அதிகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/218621
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் பெ.சிவசுப்ரமணியம் பிபிசி தமிழுக்காக 27 ஜூன் 2025 தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களின் எல்லை பெரும்பாலும் காடுகள் சூழ்ந்த பகுதி. தமிழ்நாட்டின் 18வது, காட்டுயிர் சரணாலயமான தந்தை பெரியார் காட்டுயிர் காப்பகத்தை ஒட்டி, கர்நாடக மாநிலம், மலை மாதேஸ்வரா காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. இது பாலாறு, மாதேஸ்வரன் மலை, ஹூக்கியம், ராமாபுரம், பி.ஜி.பாளையம், அனூர், கொள்ளேகால் என ஏழு வனச் சரகங்களை உள்ளடக்கியது. தமிழ்நாட்டின் பர்கூர் வனச்சரக எல்லையை ஒட்டி அமைந்துள்ளது ஹூக்கியம் வனச்சரகம். இங்குள்ள மின்னியம் காட்டுப் பகுதியில், மாரி அணை கேம்ப் என்ற இடம் உள்ளது. இந்த இடத்திலுள்ள ஒரு மாட்டுப் பட்டியின் அருகில் இன்று காலை நான்கு புலிகள் உயிரிழந்து கிடப்பதாகக் கிடைத்த செய்தியைத் தொடர்ந்து, ஹூக்கியம் வனச் சரக அலுவலர் மாதேஷ், மலை மாதேஸ்வரா வனக் கோட்ட துணை வனப் பாதுகாவலர் சக்கரபாணி தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, இறந்து கிடந்த நான்கு புலிகளின் உடல்களைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். மூன்று வயது குட்டிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஹூக்கியம் வனச் சரக அலுவலர் மாதேஷ், "இறந்துபோன தாய்ப் புலிக்கு 15 வயது இருக்கலாம். அதன் குட்டிகளுக்கு இரண்டு முதல் மூன்று வயதுக்குள் இருக்கும். இன்னும் சில நாள்களில் தாய்ப் புலியை விட்டு குட்டிகள், தனித்து வாழும் நிலையை அடையும் வயதில் இருந்தன. நான்கு புலிகளும் 300 மீட்டர் சுற்றளவுக்குள் உயிரிழந்து கிடந்தன. அவை இறந்து இரண்டு நாள்கள் ஆகியிருக்கலாம். நான்கு புலிகளின் உடல்களிலும் காயங்கள் எதுவும் இல்லை. முதல் கட்ட விசாரணையில், விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. நாளை காலை கால்நடை மருத்துவர் குழுவைக் கொண்டு உடற்கூறாய்வு மேற்கொள்ள இருக்கிறோம். அதற்குப் பிறகுதான், புலிகள் உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் தெரிய வரும்" என்றார். இந்திய அளவில் காட்டுயிர் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை விரும்பிகள் மத்தியில், நான்கு புலிகள் உயிரிழந்த செய்தி மிகப்பெரிய வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கர்நாடக வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மலை மாதேஸ்வரா காட்டுயிர் சரணாலய வனப்பகுதியில் உள்ள ஹூக்கியம் வனச்சரக எல்லையில் ஒரு தாய்ப் புலி மற்றும் மூன்று குட்டிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்தது மிகவும் வேதனையான செய்தியாகும். கர்நாடக அரசு, இதை மிகவும் தீவிர இழப்பாகக் கருதியுள்ளது," என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திரா காந்தி தொடங்கி வைத்த புலிகள் பாதுகாப்பு திட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புலிகள் அதிகமாக வாழும் காடு வளம் கொண்டது என வல்லுநர்கள் கூறுகின்றனர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, புலிகள் பாதுகாப்புக்காக ப்ராஜெக்ட் டைகர் (Project Tiger) எனும் திட்டத்தை 1973இல் தொடங்கி வைத்தார். அதன் பிறகு, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் புலிகளைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில், கர்நாடக மாநிலம், 563 புலிகளுடன் நாட்டில் 2வது இடத்தில் உள்ளது. "புலிகள் பாதுகாப்பிற்குப் பெயர் பெற்ற மாநிலத்தில், ஒரே நாளில் நான்கு புலிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. கர்நாடக மாநில முதன்மை வனப்பாதுகாவலர் சுபாஷ் கே. மல்கேடே தலைமையில் உடனடியாக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என கர்நாடக வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், "வன ஊழியர்களின் அலட்சியம் அல்லது மின்சாரம் தாக்கியதாலோ, விஷம் கொடுத்தோ மரணம் ஏற்பட்டு இருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றும் கூறப்பட்டுள்ளது. 'புலிகள் - வன வளத்தின் குறியீடு' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அளவில், கர்நாடகா மாநிலம் 563 புலிகளுடன் 2வது இடத்தில் உள்ளது தமிழ்நாட்டில் காட்டுயிர்களின் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளைச் செய்து வரும் ஓசை அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ், "தாய்ப் புலியோடு சேர்ந்து மூன்று குட்டிகளும் உயிரிழந்ததைப் பார்க்கும்போது, இந்த நான்கு புலிகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது," என்று கூறுகிறார். தொடர்ந்து பேசிய காளிதாஸ், "புலிகள் அதிகமாக வாழும் காடு வளமானது எனப் புரிந்துகொள்ளலாம். ஒரு புலி வாழும் காடு என்றால், அங்கே 500 மான்கள் வரை வாழும். 500 மான்கள் வாழும் இடத்தில், அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப மற்ற விலங்குகள், பறவைகள் வாழும். மரங்கள், செடி, கொடி, புற்கள் செழிப்புடன் வளரும். ஒரு புலி, ஒரு மானை, ஒரே முயற்சியில் வேட்டையாடி உண்ண முடியாது. குறைந்தது 20 முறை முயற்சி செய்துதான், அது தன் இரையை வேட்டையாடி உண்ணும்" என்று விளக்கினார் காளிதாஸ். மேலும், "இந்தியாவில் சட்டவிரோத வேட்டையால் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கையை விடவும், விஷம் வைத்துக் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. காட்டின் எல்லையோரப் பகுதிகளில், கால்நடைகளை வளர்க்கும் எளிய மக்கள், தங்கள் மாடுகளைப் புலிகள், சிறுத்தைகள் அடித்துச் சாப்பிட்டு விடுவதால் ஏற்படும் இழப்புகள் மற்றும் ஆத்திரத்தின் விளைவாக, இறைச்சியில் விஷத்தைக் கலக்கும் செயலில் ஈடுபடுவது நடக்கிறது" என்று கூறுகிறார். ஒரு புலி, தான் அடித்துச் சாப்பிடும் உணவைக் குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிடும் வழக்கம் கொண்டது என்பதைச் சுட்டிக் காட்டும் காளிதாஸ், "இந்த நடைமுறையைத் தெரிந்துகொள்ளும் சிலர், தனது கால்நடையைக் கொன்ற புலியை அல்லது சிறுத்தையைப் பழிவாங்கும் எண்ணத்தில், அது மிச்சம் வைத்துள்ள இறைச்சியில் விஷம் கலந்து விடுகின்றனர். இந்தியாவில் நிகழும் இயற்கைக்கு மாறான புலிகள் இறப்புக்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது," என்று கூறினார். மேலும், காடுகளைப் பாதுகாப்பதில் வனத்துறை முற்று முழுதாகச் சுயமாகச் செயல்பட்டுவிட முடியாது எனக் கூறிய காளிதாஸ், காடுகளைச் சார்ந்து வாழும் பழங்குடி சமூகங்களுடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதே இதற்கான தீர்வாக இருக்கும் என்று குறிப்பிட்டார். அதோடு, "கால்நடைகளை வளர்க்கும் ஒருவருக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில், உடனடியாக இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். கால்நடைகளை விலங்குகள் வேட்டையாடி விட்டால், அதற்கு அரசு இழப்பீடு வழங்கும் என்ற புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" என்று விளக்கினார். புலிகள் வேட்டையாடிய கால்நடைகளுக்கான இழப்பீடு பட மூலாதாரம்,GETTY IMAGES புலிகள் மற்றும் சிறுத்தைகளால் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அந்தியூர் வனச்சரக அலுவலர் முருகேசன், "காடுகளில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளுக்கு ஆயிரம் முதல் 3,000 வரையும், எருமைகளுக்கு பத்தாயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையும், மாடுகளுக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையும் வனத்துறையால் இழப்பீடு வழங்கப்படுகிறது" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "காட்டுயிர்களால் வேட்டையாடப்பட்ட கால்நடைகள் குறித்த தகவல்கள் கிடைத்ததும், கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறாய்வு செய்யப்படும். அப்படித்தான் அதன் வயது முடிவு செய்யப்படும். பிறகு தேவையான ஆவணங்கள் அனைத்தையும் வைத்து, மாவட்ட வன அலுவலருக்கு அறிக்கை அனுப்பி வைத்து, நிதி கையிருப்பு இருந்தால் உடனடியாக கிளைம் வழங்கப்படும். நிதி இல்லையெனில், அடுத்த மூன்று மாதங்களில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கால்நடைக்கு இழப்பீடு வழங்கப்படும்" என்று இழப்பீடு வழங்கப்படும் செயல்முறையை விளக்கினார். ஓய்வு பெற்ற கர்நாடக மாநில உதவி வனக்கோட்ட அலுவலர் அங்குராஜ் பேசும்போது, "கர்நாடக மாநில காப்புக் காடுகளின் எல்லைக்குள் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு அரசு இழப்பீடு கொடுப்பது இல்லை. ஊர் எல்லையில் உள்ள காடுகளில், காட்டுயிர்களால் வேட்டையாடப்படும் கால்நடைகளுக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்குகிறது" என்றார். மேலும், "மாநில அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இதுபோன்ற இழப்புகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்து வைக்கும். அதில் போதிய நிதி இருந்தால் உடனடியாக இழப்பீடு வழங்கப்படும். நிதி இல்லையெனில், சீனியாரிட்டி அடிப்படையில், அடுத்த மூன்று மாதங்களிலோ அல்லது ஆறு மாதங்களிலோ இழப்பீடு வழங்கப்படும்" என்று கூறிய அவர், சில நேரங்களில், ஓர் ஆண்டு கடந்தும்கூட இழப்பீடு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த 2022ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 3,682 புலிகள் வாழ்கின்றன. இந்தியாவில் புலிகள் அதிகமுள்ள மாநிலம் மத்திய பிரதேசம். 2022ஆம் ஆண்டு, புள்ளி விவரங்களின்படி, மத்திய பிரதேசத்தில் 785 புலிகள் வாழ்வதாகத் தெரிய வந்துள்ளது. இரண்டாவது இடத்தில் கர்நாடகாவும், 560 புலிகளுடன் மூன்றாவது இடத்தில் சத்தீஸ்கரும் உள்ளன. தமிழ்நாட்டின் காடுகளில் 264 புலிகள் மட்டுமே வாழ்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce9x2870lv4o
  7. பங்களாதேஷை இரண்டாவது டெஸ்டில் வெற்றிகொள்ளும் நிலையில் இலங்கை; நான்காம் நாள் காலையுடன் போட்டி முடிவடையும் அறிகுறி 27 JUN, 2025 | 07:07 PM (நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றிபெறும் தருவாயில் இருக்கிறது. பெரும்பாலும் இந்தப் போட்டி சனிக்கிழமை (28) முதலாவது ஆட்டநேர பகுதியில் இலங்கைக்கு சாதகமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் லிட்டன் தாஸ், நயீம் ஹசன் ஆகிய இருவரும் இலங்கையின் வெற்றியைத் தாமதிக்க முயற்சிக்கலாம் எனவும் கருதப்படுகிறது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் முன்னாள் அணித் தலைவர் குசல் மெண்டிஸின் அதிரடி இலங்கைக்கு சாதகமாக அமைந்ததுடன் இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கையை விட 211 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த பங்களாதேஷ், இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை எதிர்கொண்ட வண்ணம் இருக்கிறது. இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் மேலும் 4 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க இலங்கையை விட 96 ஓட்டங்களால் பங்களாதேஷ் தொடர்ந்தும் பின்னிலையில் இருக்கிறது. இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 290 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, 448 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது. ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 305 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்த இலங்கை தனது கடைசி 8 விக்கெட்களை 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது. பெத்தும் நிஸ்ஸன்க தனது எண்ணிக்கைக்கு மேலும் 12 ஓட்டங்களை சேர்த்த நிலையில் 158 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா (07), ப்ரபாத் ஜயசூரிய (10) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் கமிந்து மெண்டிஸ் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிய மற்றைய பக்கத்தில் குசல் மெண்டிஸ் அதிரடி ஆட்டம் மூலம் இலகுவாக ஓட்டங்களைப் பெற்ற வண்ணம் இருந்தார். இதனிடையே சொனால் தினூஷ (11), தரிந்து ரத்நாயக்க (10) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தனர். குசல் மெண்டிஸ் உபாதைக்குள்ளானார் குசல் மெண்டிஸ் இல்லாத இரண்டாவது ஓட்டத்துக்கு ஆசைப்பட்டு தனது விக்கெட்டைத் தாரைவார்த்ததுடன் உபாதைக்கும் உள்ளானார். 87 பந்துகளை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 84 ஓட்டங்களைப் பெற்றார். ரன் அவுட்டைத் தவிர்ப்பதற்காக குசல் மெண்டிஸ் டைவ் செய்த போது அவரது வலது தோற்பட்டை நிலத்தில் பட்டதால் கடும் உபாதைக்குள்ளானார். இதனை அடுத்து அவர் இரண்டாவது இன்னிங்ஸில் களத்தடுப்பில் ஈடுபபடவில்லை. அவருக்குப் பதிலாக லஹிரு உதார விக்கெட் காப்பாளராக விளையாடினார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தேவைப்படின் MRI ஸ்கான் செய்ய நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சில் தய்ஜுல் இஸ்லாம் 131 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் நயீம் ஹசன் 87 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். தனது 55ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தய்ஜுல் இஸ்லாம் 17ஆவது தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதவுசெய்தார். இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ், 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்களை இழந்து மேலும் அழுத்தத்தை எதிர்கொண்டது. அனாமுல் ஹக் (19), ஷத்மான் இஸ்லாம் (12) ஆகிய இருவரும் நிதானத்தைக் கடைப்பிடித்த போதிலும் மொத்த எண்ணிக்கை 31 ஓட்டங்களாக இருந்தபோது இருவரும் ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து மொமினுள் ஹக் 15 ஓட்டங்களுடனும் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். அதன் பின்னர் முஷ்பிக்குர் ரஹிமும், லிட்டன் தாஸும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடினர். ஆனால், ப்ரபாத் ஜயசூரியவின் சுழற்சியில் சிக்கிய முஷ்பிக்குர் ரஹிம் 26 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார். (100 - 5 விக்.) மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 5 ஓட்டங்கள் சேர்ந்தபோது மெஹிதி ஹசன் மிராஸ் 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. லிட்டன் தாஸ் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தரிந்து ரத்நாயக்க 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் அசித்த பெர்னாண்டோ 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது. https://www.virakesari.lk/article/218665
  8. RESULT 1st Test, Bridgetown, June 25 - 27, 2025, Australia tour of West Indies Australia 180 & 310 West Indies (T:301) 190 & 141 Australia won by 159 runs PLAYER OF THE MATCH Travis Head, AUS 59 & 61
  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சட்டக் கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கு, 2024 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை நினைவுபடுத்துகிறது. கட்டுரை தகவல் பிரபாகர் மணி திவாரி பிபிசி ஹிந்திக்காக கொல்கத்தாவில் இருந்து 27 ஜூன் 2025 மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவரும் அடங்குவார். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட அந்த முன்னாள் மாணவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான திரிணாமூல் காங்கிரஸ் சத்ரா பரிஷத் (TMCP) உடன் தொடர்புடையவர் என்ற கூற்றுகளும் இந்த வழக்குக்கு அரசியல் சாயத்தைப் பூசியுள்ளன. இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் திரிணாமூல் காங்கிரஸையும் அதன் தலைமையிலான அரசையும் கடுமையாக விமர்சித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி பதவி விலக வேண்டுமென்று கோரியுள்ளன. இந்த விவகாரத்தில் பல அமைப்புகள் போராட்டங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்தக் கூற்றுகளை அக்கட்சியின் மாணவர் அமைப்பான டிஎம்சிபி நிராகரித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர், சட்டக் கல்லூரியின் டிஎம்சிபி பிரிவில் பல ஆண்டுகளாகச் செயல்படவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, மூன்று நாட்களுக்குள் கொல்கத்தா காவல் ஆணையர் விரிவான அறிக்கையைக் சமர்ப்பிக்க வேண்டுமெனக் கோரியுள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹத்கர், காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்தச் சம்பவம் குறித்த தனது கவலையைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். கூடுதலாக, பாதிக்கப்பட்ட மாணவிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார். மாணவியின் புகார் அடிப்படையில் மூவர் கைது மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், மூவரும் நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். இந்த வழக்கு, 2024ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. அந்த நேரத்தில், கல்வி வளாகங்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் எழுந்தன. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. "இந்தச் சம்பவம் ஜூன் 25ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் 10.50 மணி வரை தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்தில் நடந்தது" என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு போலீஸ் அதிகாரி பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி டவுன் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். அதன் பிறகு, பார்க் சர்க்கஸ் தேசிய மருத்துவக் கல்லூரியில் மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு, புதன்கிழமை மாலை இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், மூன்றாவது நபர் இரவு 12 மணியளவில் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட இருவரின் பெயர்கள் பிரமித் முகர்ஜி மற்றும் ஜே அகமது. இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். மூன்றாவதாக கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மனோஜித் மிஸ்ரா, அவர் சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவர். குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரின் மொபைல் போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2024ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டம் வெள்ளிக்கிழமை, காவல்துறையினரை தவிர, தடயவியல் குழுவும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டது. "திரிணாமூல் காங்கிரஸின் மாணவர் அமைப்பின் கல்லூரி சங்கத் தலைவராக ஆக்குவதாக வாக்குறுதி அளித்து வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்" என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். கடந்த புதன்கிழமை மனோஜித் தன்னை கல்லூரிக்கு அழைத்து அமைப்பின் தலைவராக ஆக்குவதாக உறுதியளித்ததாக மாணவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அந்த மாணவி மதியம் 12 மணிக்குப் பிறகு கல்லூரிக்கு வந்துள்ளார். பிறகு மனோஜித் மாணவியிடம் ஆபாசமான முறையில் காதலை முன்மொழிந்துள்ளார். ஆனால் அந்த மாணவி அதை ஏற்க மறுத்துவிட்டார். காவல்துறை அளித்த தகவல்களின்படி, "பின்னர் மனோஜித்தும் அவரது இரண்டு கூட்டாளிகளும் மாணவியை வலுக்கட்டாயமாக காவலாளியின் அறைக்கு இழுத்துச் சென்றனர். காவலாளியை அங்கிருந்து விரட்டியடித்த பிறகு இந்தக் குற்றம் நடந்துள்ளது." இந்த வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட முக்கிய நபரான மனோஜித் மிஸ்ராவின் ஃபேஸ்புக் சுயவிவரத்தின்படி, அவர் தெற்கு கொல்கத்தா மாவட்ட திரிணாமூல் காங்கிரஸ் மாணவர் அமைப்பின் அமைப்புச் செயலாளராக உள்ளார். அவர் முன்பு சட்டக் கல்லூரியின் டிஎம்சிபி பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார். ஆனால் திரிணாமூல் மாணவர் அமைப்பின் மாநிலத் தலைவர் திரினன்கூர் பட்டாச்சார்யா ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, "குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைப்பில் ஒரு சிறிய பதவி வழங்கப்பட்டது, ஆனால் தலைவர் பதவி அல்ல. அவர் பல ஆண்டுகளாக சட்டக் கல்லூரியின் டிஎம்சிபி பிரிவுக்கு எந்த வகையிலும் பங்களிக்கவில்லை" என்று கூறினார். தகவல் அறிந்த வட்டாரங்களின்படி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இரண்டு பேரும் டிஎம்சிபியுடன் தொடர்புடையவர்கள். ஆனால் இதை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதற்கிடையில், முக்கிய நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜித் மிஸ்ராவுடன் பல டிஎம்சிபி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்தத் தலைவர்களில் டிஎம்சிபி மாநிலத் தலைவர் திரினன்கூர் பட்டாச்சார்யாவும் ஒருவர். விசாரணைக் குழு அமைக்கப்படும் – கல்லூரி முதல்வர் பட மூலாதாரம்,SANJAY DAS படக்குறிப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் திரிணாமூல் காங்கிரஸின் மாணவர் அமைப்புடன் தீவிரமாகத் தொடர்புடையவர்கள் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமான நபர், அந்த அமைப்பின் அலுவலகப் பொறுப்பாளரும்கூட என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். தெற்கு கொல்கத்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் சர்தாக் பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, "குற்றம் சாட்டப்பட்டவர்கள் கட்சியுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கட்சியில் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்," என்று தெரிவித்தார். மறுபுறம், செய்தியாளர்களின் இதுகுறித்த கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காத திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திரினன்கூர் பட்டாச்சார்யா, "குற்றம் சாட்டப்பட்டவர்கள் திரிணாமூல் காங்கிரஸுடன் தொடர்புடையவர்களோ இல்லையோ, அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தில் முக்கிய நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் கல்லூரியின் தற்காலிக ஊழியர். அவருக்கு கட்சியின் மாணவர் அணியுடன் எந்தத் தொடர்பும் இல்லை," என்று கூறினார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் திரிணாமூல் காங்கிரஸின் மாணவர் அணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் முதல் நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞர் அக்கட்சியின் மாணவர் அமைப்பின் அலுவலகப் பொறுப்பாளரும்கூட என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். சட்டக் கல்லூரியின் முதல்வர் நயனா சாட்டர்ஜி, வெள்ளிக்கிழமை பேசியபோது, "இந்த விஷயம் எனக்குத் தெரியாது. கல்லூரியில் வகுப்புகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அதற்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது," என்றார். அதோடு, இந்தச் சம்பவத்தில் முக்கிய நபராகக் குற்றம் சாட்டப்பட்டவர் கல்லூரியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்தவர் என்றும் அவர் கூறினார். கல்லூரி நேரத்திற்குப் பிறகு அவர் வளாகத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். கொல்கத்தா பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்தா தத்தா டே, "இந்தச் சம்பவம் குறித்து சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த முழு அறிக்கை கல்லூரி முதல்வரிடம் கேட்கப்பட்டுள்ளது," என்றார். அதோடு, செவ்வாய்க்கிழமைக்குள் விசாரணைக் குழு அமைக்கப்படும் எனவும் அதன் பிறகு பல்கலைக்கழக நிர்வாகம் இதுகுறித்த எழுத்துப்பூர்வ தகவலை கல்லூரி முதல்வருக்கு வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார். மமதா பானர்ஜியை விமர்சிக்கும் பாஜக பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் இதற்கிடையில், மனோஜித்தின் தந்தை செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தனது மகனுடன் தனக்கு எந்த உறவும் இல்லை என்றும் அவர் வீட்டிற்குக்கூட வருவதில்லை எனவும் கூறியுள்ளார். அதோடு, தனது மகன் கல்லூரியின் உள் அரசியலால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தினார். "மனோஜித் சிறு வயதில் இருந்தே திரிணாமூல் காங்கிரஸால் ஈர்க்கப்பட்டு, கல்லூரியில் படிக்கும்போது தீவிர அரசியலில் இணைந்தார்," என்று அவரது தந்தை செய்தியாளர்களிடம் கூறினார். முதலமைச்சர் மமதா பானர்ஜி, ரத யாத்திரை தொடர்பாக தற்போது திகாவில் உள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுபேந்து அதிகாரி இதை விமர்சித்துப் பேசியுள்ளார். அவர், "முதலமைச்சரின் பாதுகாப்பில் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். அதனால்தான் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது," என்றார். செய்தியாளர்களிடம் பேசிய சுபேந்து அதிகாரி, "சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டது. இதற்குப் பொறுப்பேற்று மமதா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த நாற்காலியில் நீடிக்க அவருக்கு உரிமை இல்லை. மமதா பானர்ஜியுடைய அரசின் ஆட்சிக் காலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது," என்று கூறினார். இதற்கிடையில், பாஜக மாநில தலைவர் சுகந்தா மஜும்தார், "முதல்வர் முன்பு பாலியல் வன்கொடுமைகளை 'சிறிய சம்பவம்' என்று வர்ணித்த மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இயற்கையானவை. கல்வி வளாகங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. சட்டக் கல்லூரியிலேயே சட்டம் மீறப்படுகிறது," என்று விமர்சித்தார். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர் அமைப்புகள் பட மூலாதாரம்,SANJAY DAS படக்குறிப்பு, கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ததாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்தச் சம்பவத்திற்கு எதிராகப் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. மதியம் அந்தப் பகுதியில் உள்ள தபால் நிலையம் முன்பாக ஜனநாயக மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்.எஃப்.ஐ) மாநில செயலாளர் தேபாஞ்சன் டே இதுகுறித்துப் பேசியபோது, "தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் திரிணாமூல் மாணவர் அணி நீண்ட காலமாக கலவரத்தை நடத்தி வருகிறது. இந்த விஷயத்தில் காவல்துறையும் நிர்வாகமும் மௌனம் காத்து வருகின்றன. முதல் நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜித் மீது ஊழல், பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் போன்ற பல குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே உள்ளன," என்றார். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தலைவர் ஒருவர் முக்கிய நபராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் தெற்கு கொல்கத்தா திரிணாமூல் காங்கிரஸ் மாணவர் அமைப்பின் கிளைச் செயலாளர் என்று கூறினார். மற்ற இரண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களும் திரிணாமூல் காங்கிரஸின் மாணவர் அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். மற்றுமோர் அமைப்பான அபயா மன்ச், கஸ்பா காவல் நிலையம் முன்பாகப் போராட்டம் நடத்தியது. காங்கிரஸ் குழுவும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, மாணவியின் குடும்பத்தினரைச் சந்திப்பதாகத் தெரிவித்துள்ளது. காங்கிரஸின் மாநில தலைவர் சுபாங்கர் சர்க்கார், "இந்தச் சம்பவம் குறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். காவல் நிர்வாகம் தீவிரமாக இருந்தால் இத்தகைய சம்பவங்கள் மாநிலத்தில் நடக்காது," என்றார். எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்குப் பிறகு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கட்சி கூறியுள்ளது. ஒவ்வொரு திரிணாமூல் உறுப்பினரும் இதைக் கண்டித்துள்ளதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறியுள்ளார். திரிணாமூல் மாணவர் அமைப்பின் தலைவர் திரினன்கூர் பட்டாச்சார்யா கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு சில சிறிய பதவிகள் வழங்கப்பட்டு இருந்தாலும், அவர் மாணவர் அமைப்பின் தலைவர் அல்ல என்று தெரிவித்தார். தனிப்பட்ட உரையாடல்களில், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்தச் சம்பவத்திற்கும் ஆர்.ஜி. கர் சம்பவத்திற்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இது எதிர்காலத்தில் அரசுக்கும் கட்சிக்கும் சிக்கல்களை உருவாக்கக்கூடும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது, ஆளுங்கட்சி மற்றும் அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்றும், எதிர்க்கட்சிகள் இதை ஒரு பெரிய பிரச்னையாக மாற்ற முயலும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அரசியல் நிபுணர் ஷிகா முகர்ஜி, "குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் திரிணாமூல் காங்கிரஸுடன் தொடர்புடையவர்களோ இல்லையோ, தலைநகரில் இருக்கும் ஒரு கல்வி நிறுவனத்தின் வளாகத்திற்குள் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. இது மிகவும் தீவிரமான விஷயம். இது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் திரிணாமூல் காங்கிரஸுடன் தொடர்புடையவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டால், அது கட்சியின் நற்பெயருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்," என்று கூறினார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqx24zz181ro
  10. 28 JUN, 2025 | 11:20 AM கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித்த கமல் ஜினதாசவின் தலைமையில் உத்தியோகபூர்வ பிரான்ஸ் விஜயத்தை மேற்கொண்ட தூதுக்குழுவின் மூன்றாம் நாளில் சமுத்திரவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இரண்டு முக்கியமான நிறுவனங்களுடன் பயனுள்ள கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் கலந்துரையாடல்கள் தற்போதைய ஒத்துழைப்பு மற்றும் உறவுகளை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. Concarneau, Brest இல் அமைந்துள்ள பிரெஞ்சு தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்குச் சென்ற அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவினர், அங்கு நிலையத்தின் தலைவர் கலாநிதி Guillaume Massé யுடன் சுமுகமான மற்றும் பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டனர். இதன்போது, இலங்கையில் ஒரு விசேட அருங்காட்சியகக் கண்காட்சியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயப்பட்டதுடன் சமுத்திர மீன்வளப் பயிற்சியை மையமாகக் கொண்ட பரிமாற்றத் திட்டங்களை ஆரம்பித்தல், கடல் அட்டை மற்றும் கடல் குதிரைகள் போன்றவற்றை பெருக்கும்போது இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகள் உட்பட நிபுணத்துவ அறிவைப் பரிமாறிக்கொள்ளுதல், பல கலாசார ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்தல் போன்றவற்றில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டன. பின்னர், CLS (Collecte Localisation Satellites SA) நிறுவனத்தின் அதிகாரிகளைச் சந்தித்ததுடன், அவர்களின் செய்மதி தரவு பெறுதல் மற்றும் பகுப்பாய்வு வசதிகள் குறித்து அறிந்துகொள்ளப்பட்டது. இதன்போது பல நிறுவனப் பயன்பாட்டிற்காக (MEPA, NARA, DFAR, முதலியன) செய்மதி அடிப்படையிலான தொழில்நுட்ப மையத்தை நிறுவுதல், உயர் தெளிவுத்திறன் கொண்ட செய்மதி புகைப்படங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள், NEMO சிறிய படகு கண்காணிப்பு அமைப்பின் நடைமுறைப் பயன்பாடு போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. மேலும், Quiet Oceans நிறுவனத்தின் Maud Duma வுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இதன்போது கடல் பாலூட்டிகளின் சத்தங்களைக் கண்டறிதல் மற்றும் நடத்தை பகுப்பாய்வுக்கான அவர்களின் Smartpam போன்ற தனியுரிம கருவிகளின் பயன்பாடு குறித்து முக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இந்தக் கலந்துரையாடல்கள் எதிர்காலத்தில் இலங்கையின் கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் முகாமைத்துவத்திற்கு அர்த்தமுள்ள ஒத்துழைப்பையும், புதிய செயற்பாடுகளுக்கான வழிகளையும் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. https://www.virakesari.lk/article/218677
  11. 27 JUN, 2025 | 02:04 PM சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். வீட்டிலிருந்து சம்பாதிக்க முடியும் என கூறி Face book, Whatsapp, Telegram, Skype, We Chat போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாம் முறைப்படி; விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் சிறிய பணத்தொகையை முதலீடு செய்தால் அதன் ஊடாக இலாபம் பெறலாம் என சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தி, சிறிய பணத்தொகையை முதலீடு செய்த நபர்களுக்கு பெருமளவிலான பணத்தை வழங்கி அதிகளவிலான இலாபத்தை பெற்றுக்கொடுத்து அவர்களின் நம்பிக்கையை வென்ற பின்னர் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் பெரியளவிலான பணத்தொகையை முதலீடு செய்யுமாறு கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனை அறியாத மக்கள் சிறிய பணத்தொகையை முதலீடு செய்ததால் கிடைத்த அதிகளவிலான இலாபத்தை நம்பி பெரியளவிலான பணத்தொகையை முதலீடு செய்து ஏமாறுகின்றனர். இரண்டாம் முறைப்படி; வீட்டிலிருந்து சம்பாதிக்க முடியும் என கூறி விளம்பரங்களை பதிவிட்டு, அதன் ஊடாக அறிமுகமான நபர்களின் வங்கி கணக்குகளை பெற்றுக்கொண்டு அதில் பணத்தை வைப்புச் செய்து அந்த பணத்தை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்தால் பெரியளவிலான பணத்தொகை இலாபமாக கிடைக்கும் என கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனால் முதலாம் முறையில் குறிப்பிடப்பட்டுள்ள விளம்பரத்தின் அடிப்படையில் வங்கி கணக்குகளில் பணத்தொகையை முதலீடு செய்த நபர்களின் பணத்தை வேறு வங்கி கணக்குகளுக்கு இலகுவாக பணப்பரிமாற்றம் செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன் ஊடாக கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றம் நிதி மோசடிகள் இடம்பெறுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர். எனவே, சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/218623
  12. Published By: DIGITAL DESK 3 27 JUN, 2025 | 02:18 PM பொரளை பகுதியில் தனியார் பஸ்ஸில் பயணித்த இளம் பெண் ஒருவரின் கால்களை கையடக்கத் தொலைபேசி மூலம் காணொளி எடுத்தமை தொடர்பான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞனுக்கு 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு, கோட்டை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை ( 27) தீர்ப்பளித்தது. இதேவேளை, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1,500 ரூபாய் தண்டப்பணமும், பாதிக்கப்பட்டவருக்கு 50,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்ட தெமட்டகொடையைச் சேர்ந்தவருக்கு மேலதிமாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு இடம்பெற்றுள்ளது. இதேபோன்ற தண்டனை தொந்தரவு செய்யும் ஏனையவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என பொலிஸார் நீதிமன்றத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/218620
  13. திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டன் போர் விமானம் - இதுவரை கிடைத்த முக்கிய தகவல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, F-35B போர் விமானத்தைப் பழுது பார்க்க பிரிட்டனில் இருந்து பொறியாளர்கள் குழு வரவுள்ளது. (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தின் தார் சாலையில் நின்றுபோயிருக்கும் F-35B போர் விமானத்தைப் பழுதுபார்ப்பதற்காக ஹேங்கருக்கு மாற்றப்படும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் பொறியாளர்கள் குழு திருவனந்தபுரம் வந்து சேர்ந்த பிறகு விமானத்தின் பழுது நீக்கும் பணிகள் தொடங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸின் போர் விமானம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது. மோசமான வானிலை காரணமாக, ராயல் கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலுக்கு இந்தப் போர் விமானம் திரும்ப முடியவில்லை. பிபிசி ஹிந்தியின் கேள்விக்குப் பதிலளித்த பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர், "தரையில் இருக்கும் விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. அதனால்தான், விமானம் கப்பலுக்கு திரும்பவில்லை" என்று தெரிவித்தார். "HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸின் பொறியாளர்கள் விமானத்தை மதிப்பீடு செய்தனர். அதன் பிறகு, பிரிட்டனை தளமாகக் கொண்ட பொறியியல் குழுவின் உதவி தேவைப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. விமானத்தை சரிசெய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பதைத் தற்போது எங்களால் கூற முடியாது." மேலும், "சிறப்பு உபகரணங்கள் மற்றும் பிரிட்டனை சேர்ந்த பொறியியல் குழு வந்த பிறகு, விமான நிலைய நடவடிக்கைகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாதவாறு, பழுது பார்ப்பதற்காக விமானம் ஹேங்கருக்கு கொண்டு செல்லப்படும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, விதிகளின்படி F-35B போர் விமானங்கள் பார்க்கிங் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் பிரிட்டனை சேர்ந்த பொறியியல் குழு, போர் விமானத்தைப் பழுது பார்ப்பதற்காக ஹேங்கருக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தால், விமான நிலையத்தில் அமைந்துள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஹேங்கருக்கு போர் விமானம் கொண்டு செல்லப்படும். "பழுது பார்ப்பு பணிகளுக்கான இடம் தேடப்பட்டு வருகிறது. பிரிட்டனில் இருந்து வருகை தரும் பொறியியல் குழுவிற்கு விமான நிலையத்திலேயே தங்க வசதி செய்து தரப்படும்" என்று விமான நிலைய அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர், அவர்கள் தங்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை. "இந்தப் போர் விமானம் தொடர்பாக இந்திய விமானப் படை, இந்திய கடற்படை மற்றும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் என அனைத்து அமைப்புகளின் இந்திய அதிகாரிகளுடனும் நாங்கள் தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு வருகிறோம். அவர்கள் கொடுத்த, ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது. "இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதில் இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு, போர் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க உதவியது, தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும் ஆதரவு ஆகியவை பிரிட்டன் மற்றும் இந்திய ஆயுதப் படைகளுக்கு இடையிலான ஆழமான உறவை நிரூபிக்கின்றன" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் போர் விமானங்களை நிறுத்துவதற்கு பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போதைய விதிகளின்படி, விமான நிலையத்தில் ஒரு விமானம் நிறுத்தப்பட்டாலோ அல்லது பழுது பார்ப்பதற்காக ஹேங்கருக்கு கொண்டு வரப்பட்டாலோ, அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். விமானத்தின் அளவு மற்றும் விமான நிலையத்தின் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டே விமானத்திற்கான பார்க்கிங் மற்றும் ஹேங்கர் பயன்பாட்டு கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவது வழக்கம். உதாரணமாக, மும்பை அல்லது பெங்களூருவில் உள்ள ஒரு ஹேங்கரில் ஒரு விமானம் நிறுத்தப்பட்டாலோ அல்லது பழுது பார்க்கப்பட்டாலோ நிர்ணயிக்கப்படும் கட்டணம், திருவனந்தபுரம் போன்ற விமான நிலையத்தைவிட அதிகமாக இருக்கும். தரையிறக்கம் மற்றும் நிறுத்தும் இடத்திற்கான விதிகள் இந்திய அரசால் தீர்மானிக்கப்படுகின்றன. மூன்று பில்லியன் யூரோ மதிப்புள்ள ராயல் கடற்படையின் முதன்மைக் கப்பலான HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ், தனது நீண்ட நேர பயணங்களில் ஒன்றுக்காக ஏப்ரல் மாத இறுதியில் புறப்பட்டது. கடலில் இருந்து ஜெட் விமானங்களைத் துரிதமாக இயக்கவும், உலகின் மறுபக்கத்தில் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரிட்டனின் திறனை நிரூபிக்கும் பயிற்சிகளில் பங்கேற்கவும் விமானம் தாங்கி கப்பல் போர்ட்ஸ்மாவுத்தில் இருந்து புறப்பட்டது. மத்திய தரைக்கடல், மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள 40 நாடுகளுக்கு போர்க்கப்பல்களை வழிநடத்தும் இந்த விமானம் தாங்கிக் கப்பலில், 24 நவீன F-35B ஸ்டெல்த் ஜெட் விமானங்கள் உள்ளன. சுமார் 65 ஆயிரம் டன் எடையுள்ள இந்தப் போர்க் கப்பலில் 1,600 ராணுவ வீரர்கள் தங்க முடியும். F-35B விமானம் என்றால் என்ன? ராயல் விமானப்படை வலைதளத்தின்படி, F-35B என்பது பல பணிகளைச் செய்யும் திறன் கொண்ட விமானம். இது வான், தரை மற்றும் மின்னணு போரிலும் ஈடுபடும் திறன் கொண்டது. இந்த விமானம் மின்னணு போர், உளவுத் தகவல்களைச் சேகரிப்பது, வானில் இருந்து தரை மற்றும் வான் முதல் வான் வழிப் பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் திறன் கொண்டது. மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் செயல்படக்கூடிய மேம்பட்ட சென்சார்கள் F-35Bஇல் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த சென்சார்களை பயன்படுத்தி, சேகரிக்கப்பட்ட தகவல்களை பைலட் ஒரு பாதுகாப்பான தரவு இணைப்பு வழியாகப் பிற தளங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c98w55g3n39o
  14. ஈரான் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது - கமேனி 26 JUN, 2025 | 04:09 PM ஈரான் அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது என ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்தொல்லா கமேனி தெரிவித்துள்ளார் சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா தான் நேரடிப்போரில் இறங்காவிட்டால் சியோனிச ஆட்சி முழுமையாக அழிக்கப்பட்டுவிடும் என கருதியது அதன் காரணமாகவே அது நேரடி போரில் நுழைந்தது என அவர் தெரிவித்துள்ளார். இந்த யுத்தத்தின் மூலம் அமெரிக்கா எதனையும் சாதிக்கவில்லை, ஈரான் வெற்றிபெற்றது அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218536
  15. இஸ்ரேலிற்கு எதிரான போரில் வெற்றி - ஈரானின் ஆன்மீக தலைவர் 26 JUN, 2025 | 03:53 PM இஸ்ரேலிற்கு எதிரான போரில் ஈரான் வெற்றிபெற்றதாக தெரிவித்துள்ள அந்த நாட்டின் ஆன்மீகதலைவர் ஆயத்தொல்லா கமேனி அந்த வெற்றிக்காக ஈரான் மக்களிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த அளவுக்கு சத்தம் எழுப்பப்பட்ட போதிலும் அந்த கூற்றுக்கள் அனைத்திற்கும் மத்தியிலும் சியோனிச ஆட்சி கிட்டத்தட்ட சரிந்து "இஸ்லாமிய குடியரசின் தாக்குதல்களால் நசுக்கப்பட்டது" என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218531
  16. உறுப்பினர்களின் கருத்தை தட்டிக்தழித்த யாழ். முதல்வர்; தர்ஷானந்த் கண்டனம் 27 JUN, 2025 | 12:48 PM சபையில் மக்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு முற்பட்ட உறுப்பினர்களுக்கு பிரச்சினைகளை கதைப்பதற்கு நேரத்தை வழங்காமல் யாழ். முதல்வர் தட்டிக் கழித்து சென்றதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் தர்ஷானந்த் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மாநகர சபையில் குழுத் தெரிவிற்காக கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்ட கூட்டத்தின் தொடர்ச்சியான கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (27) யாழ்ப்பாணம் மாநகர சபையில் நடைபெற்றது. இதன் போது குழுக்களை தெரிவு செய்வதற்கு எங்களது சகல ஒத்துழைப்புகளையும் வழங்கி இருந்தோம். ஆனாலும் குழுக் கூட்டம் முடிவடைந்த பின்னர் உறுப்பினர்கள் பலரும் எழுந்து தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பத்தை கேட்ட போது, "எதை வேண்டுமானாலும் எழுத்தில் வழங்குங்கள். இந்த கூட்டத்தில் எதுவும் செய்ய முடியாது. அடுத்த கூட்டத்தில் பார்க்கலாம்" எனக் கூறிவிட்டு முதல்வர் சென்றபோது நாங்கள் முதல்வரை வழிமறித்து எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை தருமாறு கோரினோம். ஆனால் இதுவரை எந்த ஒரு முதல்வரும் செய்யாத விடயத்தை இந்த முதல்வர் செய்து இருக்கின்றார். இது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம். நாங்கள் நமது வட்டாரத்தில் வெற்றி பெற்று வந்தவர்கள். நமது மக்களின் பிரச்சினையை நாங்கள் தெருவில் இருந்து கதைக்க முடியாது, சபையில் தான் கதைக்க வேண்டும். அவர் வழமைக்கு மாறாக செயற்பட்டிருக்கின்றார். இவ்வாறான செயற்பாடானது தமக்கு மன வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றது. இது ஒரு தொங்கு சபை. பெரும்பான்மை சபையை நடத்துவது போல இந்த சபையை நடத்த நினைக்கின்றார்கள். 23 பேர்கள் இருக்க வேண்டிய இடத்தில் அவரது கட்சியில் 13 பேரே உள்ளனர். எப்போதும் தாங்கள் பெரும்பான்மையுடன் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் சபையை நடாத்த நினைப்பது நல்லதாக தோன்றவில்லை என்றார். https://www.virakesari.lk/article/218618
  17. பட மூலாதாரம்,FAMILY HANDOUT படக்குறிப்பு, மலையேற்றத்தின் போது எரிமலையில் தவறி விழுந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் ஜூலியானா மரின்ஸ். கட்டுரை தகவல் ஃப்ளோரா ட்ரூரி & ரேச்சல் ஹேகன் பிபிசி செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தோனீசியாவில் உள்ள எரிமலையின் பள்ளத்துக்கு அருகே மலையேற்றம் செய்தபோது தவறி விழுந்த பிரேசிலிய சுற்றுலாப் பயணி, உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினரும் மீட்புப் பணியாளர்களும் தெரிவித்துள்ளனர். அதிகாலை, ரிஞ்சானி மலையின் ஒரு செங்குத்தான பாதையில் குழுவாக மலையேற்றத்தில் ஈடுபட்டபோது, ஜூலியானா மரின்ஸ் என்பவர் ஒரு குன்றிலிருந்து தவறி விழுந்தார். குன்றில் இருந்து விழுந்தபோது உயிர் தப்பிய அவர், சனிக்கிழமையன்று உதவிக்காக அலறிய சத்தம் கேட்டதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அடுத்த நாட்களில், கடுமையான நிலப்பரப்பாலும் மூடுபனி வானிலையின் காரணமாகவும், 26 வயதான அவரைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு சிக்கலான மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமையன்று மீட்புக் குழு அவரது உடலை கண்டடைந்ததாக அவரது குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர். "மிகுந்த சோகத்துடன், அவர் உயிர் பிழைக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று மரின்ஸின் குடும்பத்தினர் கூறினர். "நீங்கள் எங்களுக்காக செய்த அனைத்து பிரார்த்தனைகளுக்கும், அன்பும் ஆதரவும் மிக்க செய்திகளுக்காகவும் நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்"என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்தோனீசியாவின் லோம்போக் தீவுக்கு வருவதற்கு முன்பு தாய்லாந்து மற்றும் வியட்நாமுக்குப் பயணம் செய்திருந்தார் மரின்ஸ். சனிக்கிழமை (உள்ளூர் நேரப்படி 06:30 மணி) ஐந்து நண்பர்கள் மற்றும் ஒரு வழிகாட்டியுடன் இந்தோனீசியாவின் இரண்டாவது உயரமான எரிமலையான ரிஞ்சானி மலையில் ஏறிக்கொண்டிருந்தபோது, "எரிமலையின் பள்ளத்திற்கு அருகிலுள்ள பாதையைச் சுற்றியுள்ள பாறையிலிருந்து" மரின்ஸ் தவறி விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலப்பரப்பு வழுக்கும் தன்மையுடனும், ஏறுவதற்கு "மிகவும் கடினமாகவும்", சுற்றியுள்ள பகுதியைப் பார்ப்பதற்கு சிரமமாகவும் இருந்தது என்று அந்தக் குழுவில் பயணித்த ஒருவர் பிரேசிலிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார். மலையேறுபவர்களால் படம்பிடிக்கப்பட்ட டிரோன் காட்சிகள் மற்றும் பிற வீடியோக்கள் இணையதளத்தில் பரவி, பிரேசிலிய ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில், சனிக்கிழமையன்று மரின்ஸ் கவலையுடன் காணப்பட்டாலும் உயிருடன் இருந்ததும், சாம்பல் நிற மண்ணில் உட்கார்ந்து நகர்ந்து கொண்டிருந்ததும் காணப்படுகிறது. அவர் இருந்த இடம் மலையேற்றப் பாதைக்குக் கீழே அமைந்திருந்தது. ஆனால் மீட்புப் பணியாளர்கள் 300 மீ (984 அடி) கீழே இறங்கிய போது, மரின்ஸ் இருப்பதாக நம்பிய இடத்திற்கு அருகே அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அவரை அழைத்தபோதும் மரின்ஸ் பதிலளிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை, அவர் அந்த இடத்தில் இல்லை என்பதை டிரோன் காட்சிகள் சுட்டிக்காட்டின. எனவே மீட்பு பணிகள் கடுமையான மூடுபனியால் பாதிக்கப்பட்டதாகவும், வெப்பமான இடங்களில் பயன்படுத்தப்படும் டிரோனின் பயன்பாட்டைக் குறைத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். திங்கட்கிழமையன்று, மீட்புப் பணியாளர்களால் மரின்ஸைக் மீண்டும் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் அவர் முன்பு இருந்த இடத்தில் இருந்து இன்னும் கீழே விழுந்து விட்டதாகத் தோன்றியது. ஆனால், 'பருவ நிலை'யின் காரணமாக மீட்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டியிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தோனீசியாவின் இரண்டாவது உயரமான எரிமலையான ரிஞ்சானி மலை (கோப்புப்படம்) அவரைத் தேடுவதற்கான மீட்புப் பணிகள் மீண்டும் செவ்வாய்க்கிழமையன்று தொடங்கியபின், மீட்புப் பணியாளர்கள் ஒரு பள்ளத்தாக்கில் 600 மீட்டர் கீழே இறங்கி, இறுதியாக அவரது உடலை அடைந்ததாக இந்தோனீசியாவின் தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், மோசமான வானிலை காரணமாக அவரது உடலை மீட்க முடியவில்லை. 3,726 மீட்டர் உயரமுள்ள இந்த எரிமலை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. இருப்பினும், கடந்த மாதம் ஒரு மலேசிய சுற்றுலாப் பயணி உட்பட, சமீபத்திய ஆண்டுகளில் அதில் ஏற முயன்ற பலர் இறந்துள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மரின்ஸ் விழுந்த பிறகு அந்தப் பாதை இன்னும் மூடப்படாதது குறித்து குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c994pn53xzeo
  18. 27 JUN, 2025 | 11:26 AM உயர்இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிற்கு இலங்கையில் உரியதரமான மருத்துவசிகிச்சைகள் இல்லை என்பதால் புகலிடக்கோரிக்கையாளர்கள் இருவருக்கு பிரிட்டனில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக டெலிகிராவ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் டெலிகிராவ் மேலும் தெரிவித்துள்ளதாவது, உயர் இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சை தங்கள் சொந்த நாட்டில் "போதுமானதாக இல்லை" என்று கூறி ஒரு வயதான இலங்கை தம்பதியினர் இங்கிலாந்தில் தங்குவதற்கான உரிமையை பெற்றுள்ளனர். 60 களின் பிற்பகுதியில் இருக்கும் பெயர் குறிப்பிடப்படாத கணவன் மற்றும் மனைவி 2022 இல் தங்கள் மகள் மற்றும் மருமகனைப் பார்க்க பிரிட்டனுக்கு வந்தனர் ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் புகலிடம் கோரினர் இது உள்துறை அலுவலகத்தால் மறுக்கப்பட்டபோது அவர்கள் வெற்றிகரமாக மேல்முறையீடு செய்தனர். கணவர் ஒரு குடியேற்ற தீர்ப்பாயத்தில் தான் மனச்சோர்வு கடுமையான பதட்டம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெற்காசிய நாட்டில் சிகிச்சை பெற "விருப்பமில்லை" என்றும் கூறினார். அவர்களைத் திருப்பி அனுப்புவது அவர்களின் மனித உரிமைகளை மீறும் என்று ஒரு புகலிட நீதிபதி ஒப்புக்கொண்டார். இலங்கையில் தரமற்ற மருத்துவ சிகிச்சை காரணமாக அவர்கள் தங்கலாம் என்ற தீர்ப்பை உள்துறை அலுவலகம்சவாலிற்கு உட்படுத்தியது. முதல் நீதிபதி கணவர் "தீவிரமாக நோய்வாய்ப்பட்டுள்ளார்" என்பதற்கான வலுவான ஆதாரங்களை முன்வைக்கவில்லை னஎன்று வாதிட்டது. ஆனால் குடிவரவு மற்றும் புகலிடக் குழுவின் உயர் தீர்ப்பாயம் இதை ஏற்கவில்லை இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் கூற்றை ஆதரித்து தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிட அனுமதி வழங்கப்பட்ட தம்பதியினர் மே 2022 இல் இங்கிலாந்துக்குள் நுழைந்ததாக விசாரணையில் கூறப்பட்டது. அந்த ஆண்டு ஜூலை மாதம் கணவர் மற்றொரு மருமகனின் குடும்பத்தினரால் செய்யப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக துன்புறுத்தப்படுவார்கள் என்ற அச்சம் இருப்பதாக தெரிவித்து தனது மனைவியுடன் இணைந்து புகலிடக்கோரிக்கையை முன்வைத்தார். பின்னர் அவர்கள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில் மேலும் கோரிக்கைகளை முன்வைத்தனர் அவை கடந்த ஆண்டு பிப்ரவரியில் உள்துறை அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டன. கணவர் முதல்-நிலை தீர்ப்பாயத்தில் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் அங்கு அவர்கள் பாதுகாப்பு அல்லது புகலிடம் முடிவுகளை சவால் செய்யவில்லை மனித உரிமைகள் கோரிக்கையை மட்டுமே சவால் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதஉரிமை சாசன பிரிவுகள் 3 மற்றும் 8 இன் கீழ் தனது வாதத்தை முன்வைத்தார். இது முறையே மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கான உரிமையை உள்ளடக்கியது. கணவர் தனது மன அழுத்தம் கடுமையான பதட்டம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கு இலங்கையில் போதுமான சிகிச்சை பெற முடியாது என்று மனு தாக்கல் செய்தார். தம்பதியினர் தங்கள் மனநிலை மற்றும் "அகநிலை பயம்" ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்தப்பட்டால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய "உண்மையான ஆபத்து" இருப்பதாகவும் கூறினர். புகலிட தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உள்துறை அலுவலகம் மேல்முறையீடு செய்யத் தீர்மானித்தது சிகிச்சையின் "போதாமை" என்பது சிகிச்சை பெறமுடியாது என்ற அர்த்தமல்ல என வாதிட்டது என்று வாதிட்டது. துணை உயர் தீர்ப்பாய நீதிபதி ஸ்டூவர்ட் நீல்சன் முதல்-நிலை தீர்ப்பாயத்தால் எந்த சட்டப் பிழையும் இல்லை என்று கண்டறிந்தார். நீதிபதி உள்துறை அலுவலகத்தின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தார் அதாவது முதல்-நிலை தீர்ப்பாயத்தின் முடிவு செல்லுபடியாகும் மேலும் தம்பதியினர் இங்கிலாந்தில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்களின் மேல்முறையீட்டை முதல்-நிலை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது. https://www.virakesari.lk/article/218604
  19. பட மூலாதாரம்,JORGE CALLE / BBC படக்குறிப்பு, தற்போது 20 வயதாகும் கெய்னி, தனது 17 வயதில் வெப்கேம் மாடலாக வேலை செய்யத் தொடங்கினார் கட்டுரை தகவல் எழுதியவர், சோபியா பெட்டிசா பதவி, பிபிசி 27 ஜூன் 2025, 04:23 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு நாள் இசபெல்லா பள்ளி முடிந்து வீட்டிற்குக் சென்றுக் கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் அவர் கையில் ஒரு துண்டுப்பிரசுரத்தை திணித்தார். "உன் அழகைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க விரும்புகிறாயா?" என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் கேட்கப்பட்டிருந்தது. கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவில் தனது பகுதியில் உள்ள டீனேஜ் மாணவிகளை குறிவைத்து ஒரு ஸ்டுடியோ செயல்படுவதாக இசபெல்லா கூறுகிறார். இந்த ஸ்டுடியோ, மாடல்களாக செயல்பட மாணவிகளை ஊக்குவிக்கிறது. இசபெல்லாவுக்கு அப்போது 17 வயதுதான். ஆனால், இரண்டு வயது மகனின் தாய். தனது குழந்தையை பராமரிக்க அவருக்கு பணம் தேவைப்பட்டதால், விசயத்தைத் தெரிந்துக் கொள்ள அவர் சென்றிருக்கிறார். அவர் சென்றடைந்த இடம், ஒரு பாழடைந்த பகுதியில் உள்ள வீடு. அந்த வீட்டில் இருந்த எட்டு அறைகளும், படுக்கையறைகள் போல அலங்கரிக்கப்பட்டிருந்தன, ஒரு தம்பதியினர் நடத்திவந்த செக்ஸ் கேம் ஸ்டுடியோ அது. சிறிய, குறைந்த பட்ஜெட்டில் செயல்படும் ஸ்டுடியோக்கள் முதல் பெரிய அளவிலான ஸ்டுடியோக்கள் என பல வகை உள்ளன. அவற்றில், விளக்குகள், கணினிகள், வெப்கேம்கள் மற்றும் இணைய இணைப்புடன் கூடிய தனி அறைகள் இருக்கும். பாலியல் செயல்களை மாடல்கள் செய்வது ஸ்ட்ரீம் செய்யப்படும். பார்வையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல, ஸ்டுடியோக்களில் இருந்து ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன. ஸ்டுடியோ நடத்துபவர்கள் அல்லது இடைத்தரகர்கள்/ கண்காணிப்பாளர்கள் மூலம் பார்வையாளர்கள் கோரிக்கைகளை வைக்கிறார்கள். கொலம்பியாவில் 18 வயதுக்குட்பட்ட வெப்கேம் மாடல்களை ஸ்டுடியோக்கள் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த நாள், இசபெல்லா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது வேலையைத் தொடங்கிவிட்டார். தனது சம்பளம் என்ன, உரிமைகள் என்ன என்பதை விவரிக்கும் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை என்று அவர் பிபிசி உலக சேவையிடம் கூறினார். "எனக்கு அவர்கள் எதையும் சொல்லிக் கொடுக்கவில்லை, அவர்கள் நேரடியாக என்னை ஸ்ட்ரீமிங் செய்ய வைத்தனர். 'இதோ கேமரா இருக்கிறது, லைவுக்கு போகலாம்' என்றார்கள்." இந்த வேலையில் சேர்ந்த சில நாட்களிலேயே, பள்ளியிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று இசபெல்லாவிடம் ஸ்டுடியோ கேட்டுக் கொண்டது. வகுப்பறையில் தன்னைச் சுற்றியிருந்த சக மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டிருந்த நிலையில், இசபெல்லா தொலைபேசியை தனது மேசையில் வைத்து, தன்னை காட்டத் தொடங்கினார். தன்னிடம் குறிப்பிட்ட பாலியல் செயல்களைச் செய்யச் சொல்லி பார்வையாளர்கள் கோரிக்கைகள் விடுத்ததைப் பற்றி இசபெல்லா விவரிக்கிறார். கழிப்பறைக்குச் செல்வதாக சொல்லி, ஆசிரியரிடம் அனுமதி கேட்டுவிட்டு வகுப்பறையில் இருந்து வெளியேறிய இசபெல்லா, ஒரு அறைக்குச் சென்று, வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றினார். ஆசிரியருக்கு என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. "அதனால் நான் அதை மற்ற வகுப்புகளிலும் செய்ய ஆரம்பித்தேன்" என்று இசபெல்லா கூறுகிறார். "நான், 'இதை என் குழந்தைக்காக செய்கிறேன், அவனுக்காகச் செய்கிறேன்' என்று நினைத்துக்கொள்வேன். அது எனக்கு பலத்தைத் தந்தது." பட மூலாதாரம்,JORGE CALLE / BBC படக்குறிப்பு,சில ஸ்டுடியோக்கள் 18 வயதுக்கும் குறைவானவர்களை ஸ்ட்ரீமிங் செய்ய போலி ஐடிகளைப் பயன்படுத்துவதாக மாடல்கள் பிபிசியிடம் தெரிவித்தனர் மீள்சுழற்சி செய்யப்படும் பழைய கணக்குகள் மற்றும் போலி ஐடிகள் சர்வதேச அளவில் செக்ஸ்கேம் தொழில் செழித்து வருகிறது. உலகளவில் வெப்கேம் தளங்களின் மாதாந்திர பார்வைகளின் எண்ணிக்கை 2017 முதல் மும்மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, ஏப்ரல் 2025 இல் கிட்டத்தட்ட 1.3 பில்லியனை எட்டியுள்ளது, என பகுப்பாய்வு நிறுவனமான செம்ரஷ் கூறுகிறது. இப்போது, உலகின் வேறு எந்தவொரு நாட்டையும் விட கொலம்பியாவில் தான் அதிகமான மாடல்கள் (400,000) மற்றும் 12,000 செக்ஸ் கேம் ஸ்டுடியோக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை, நாட்டின் 'வயது வந்தோர் வெப்கேம் துறை'யை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான ஃபெனல்வெப் தெரிவித்துள்ளது. இந்த ஸ்டுடியோக்கள், கலைஞர்களைப் படம் பிடித்து, உலகளாவிய வெப்கேம் தளங்களுக்கு உள்ளடக்கத்தை வழங்குகின்றன, அவை உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு ஒளிபரப்புவதன் மூலம் பணம் சம்பாதிக்கின்றன. மாடல்களிடம் கோரிக்கைகளை முன்வைக்கும் பார்வையாளர்கள், டிப்ஸ் மற்றும் பரிசுகளை கொடுக்கின்றனர். வீட்டில் தனிமை கிடைக்காதது, உபகரணங்கள் அல்லது நிலையான இணைய இணைப்பு இல்லாதது உட்பட பல காரணங்களால் மாடல்கள் ஸ்டுடியோக்களில் பணிபுரிகின்றனர். அதற்குக் காரணம், அவர்கள் ஏழைகளாகவோ அல்லது சிறார்களாகவோ இருப்பதும் பெற்றோருடன் இருப்பதாலும் என்று தெரிகிறது. மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வறுமையில் வாடும் ஒரு நாட்டில், பணம் சம்பாதிக்க சுலப வழி இது என்று ஸ்டுடியோக்கள் ஆசை காட்டியே மக்களை கவர முயற்சிப்பதாக பிபிசியிடம் பெண்கள் தெரிவித்தனர். சில ஸ்டுடியோக்கள் சிறப்பாக நடத்தப்படுவதாகவும், கலைஞர்களுக்கு தொழில்நுட்ப மற்றும் பிற ஆதரவை வழங்குவதாகவும் கூறும் மாடல்கள், நேர்மையற்றவர்கள் அதிகமாக துஷ்பிரயோகம் செய்வதாக கூறுகின்றனர். ஸ்டுடியோ உரிமையாளர்களை "அடிமைகளின் எஜமானர்கள்" என்று வர்ணிக்கும் கொலம்பியாஅதிபர் குஸ்டாவோ பெட்ரோ, அவர்கள் இசபெல்லாவைப் போல பெண்களையும் சிறுமிகளையும் ஏமாற்றி அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி நம்ப வைப்பதாக கூறுகிறார். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டுடியோக்களில் இருந்து உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யும் நான்கு பெரிய வெப்கேம் தளங்களான போங்காகேம்ஸ், சாட்டர்பேட், லைவ்ஜாஸ்மின், ஸ்ட்ரிப்சாட் ஆகியவை, 18 அல்லது அதைவிட அதிக வயதானவர்கள் தான் மாடல்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதுடன், அதனை உறுதிப்படுத்தும் சோதனைகளையும் மேற்கொள்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் சட்டங்கள், 18 வயதுக்கு குறைவானவர்கள் பங்களிக்கும் பாலியல் உள்ளடக்கங்களை விநியோகிப்பதைத் தடைசெய்கின்றன. ஆனால், 18 வயதுக்குட்பட்ட பெண்களைப் பணியமர்த்த ஒரு ஸ்டுடியோ விரும்பினால், இந்தச் சோதனைகளை சுலபமாக தவிர்த்துவிட முடியும் என்று மாடல்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். தற்போது நிகழ்ச்சிகள் நடத்தாத ஆனால், சட்டப்பூர்வ வயதுடைய மாடல்களின் பழைய கணக்குகளை சட்டத்துக்குப் புறம்பாக, "மீள்சுழற்சி" செய்து, அவற்றை 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்குக் கொடுப்பது சுலபமான வழி என்று அவர்கள் கூறுகிறார்கள். 17 வயதாக இருந்தபோது Chaturbate மற்றும் StripChat இரண்டிலும் மீள்சுழற்சி செய்த கணக்கை வைத்து வேலை செய்ததாக இசபெல்லா கூறுகிறார். "நான் 18 வயது ஆகாதவள் என்பதால் எந்த பிரச்னையும் இல்லை என்று ஸ்டுடியோ உரிமையாளர் கூறினார்," என்று சொல்லும் இசபெல்லாவுக்கு தற்போது 18 வயதாகிவிட்டது. "வேறொரு பெண்ணின் கணக்கைப் பயன்படுத்தி, அந்த அடையாளத்தின் கீழ் வேலை செய்யத் தொடங்கினேன்" என்று அவர் சொல்கிறார். பிபிசியிடம் பேசிய மற்ற மாடல்கள், தங்களுக்கு ஸ்டுடியோக்கள் போலி ஐடிகள் வழங்கியதாகக் கூறினார்கள். போலி ஐடியை பயன்படுத்தி 17 வயதிலேயே, தான் போங்கா கேம்ஸ் தளத்தில் தோன்றத் தொடங்கியதாக கெய்னி என்ற இளம்பெண் கூறுகிறார். படக்குறிப்பு,கொலம்பியாவில் உள்ள போங்கா கேம்ஸ் பிரதிநிதியான மில்லி அச்சின்டே, பணி நிலைமைகளை சரிபார்க்க ஸ்டுடியோக்களுக்குச் செல்வதாகக் கூறுகிறார் பிபிசியிடம் பேசிய கொலம்பியாவில் உள்ள போங்கா கேம்ஸ் பிரதிநிதியான மில்லி அச்சின்டே, 18 வயதுக்குட்பட்டவர்களை நிகழ்ச்சி நடத்த தாங்கள் அனுமதிப்பதில்லை என்றும், இதுபோன்ற விதிமுறைகளை மீறும் கணக்குகளை மூடுவதாகவும் கூறினார். இந்தத் தளம், ஐடிகளை சரிபார்க்கிறது என்று கூறுகிறார். மேலும், "ஒரு மாடல் எங்களைத் தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட ஸ்டுடியோவை விட்டு வெளியேறியதைத் தெரிவித்தால், அவர்களின் கணக்கை மூடுவதற்கான கடவுச்சொல்லை நாங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம்" என்றும் அவர் கூறினார். ஒரு அறிக்கையில், போலி ஐடிகளைப் பயன்படுத்துவதை "முற்றிலும்" நிறுத்தியுள்ளதாக தெரிவித்த Chaturbate, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட ஐடிகளுக்கு அருகில் மாடல்கள் நின்று புகைப்படங்களை அவ்வப்போது எடுத்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவை டிஜிட்டல் முறையிலும், வழக்கமான முறையிலும் சரிபார்க்கப்படும் என தெரிவித்துள்ளது. "அதிகபட்சம் பத்துக்கும் குறைவான ஒளிபரப்பாளர்களுக்கு ஒரு மதிப்பாய்வாளர்" என்ற அளவில் இருப்பதாகவும், கணக்குகளை மீள்சுழற்சி செய்யும் எந்தவொரு முயற்சியும் "தோல்வியடையும்" என்றும், "ஒவ்வொரு ஒளிபரப்பும் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்படுவதால்" வயது சரிபார்ப்பு செயல்முறை தொடர்கிறது என்றும் அது கூறியது. ஸ்ட்ரிப்சாட் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் "18 வயதுக்கும் குறைவான மாடல்கள் தொடர்பான விவகாரத்தில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை" கொண்டிருப்பதாகவும், கலைஞர்கள் "முழுமையான வயது சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும்" என்றும் கூறியுள்ளது. மேலும் "மாடல்களின் அடையாளங்களைச் சரிபார்க்க" அதன் உள்ளக மதிப்பீட்டுக் குழு, மூன்றாம் தரப்பு சரிபார்ப்பு சேவைகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் ஸ்ட்ரிப்சாட் கூறியது. மீள்சுழற்சி செய்யப்பட்ட கணக்குகளை அதன் தளத்தில் பயன்படுத்த முடியாது என்றும், அதன் விதிகளில் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அனைத்தும், கணக்கு வைத்திருப்பவரின் ஒவ்வொரு ஸ்ட்ரீமிலும் இருக்க வேண்டும் என்றும் அது கூறியது. "எனவே, ஒரு மாடல், சுயாதீனமாக வேலை செய்வதற்காக புதிய கணக்கிற்கு மாறினால், அவர்களுடன் இணைக்கப்பட்ட அசல் கணக்கு செயலற்றதாகவும், ஸ்டுடியோவால் பயன்படுத்த முடியாததாகவும் மாறும்" என்று ஸ்ட்ரிப்சாட் கூறுகிறது. இந்த விவகாரத்தில் லைவ்ஜாஸ்மின் தளத்தின் கருத்தை கேட்டறிய விரும்பிய பிபிசியின் கோரிக்கைகளுக்கு பதிலேதும் கிடைக்கவில்லை. படக்குறிப்பு,கொலம்பிய வெப்கேம் மாடல், கெய்னி ஸ்ட்ரீமிங்கைத் தொடங்கத் தயாராகிறார் இளமையாக தோன்றுபவர்களையே பார்வையாளர்களுக்குப் பிடிக்கும் 20 வயதாகும் கெய்னி, மெடலினில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் இருந்து வேலை செய்கிறார். இவர், பெரிய சர்வதேச தளங்களுக்குச் செல்லும் பாதையை வழங்கும் மற்றொரு ஸ்டுடியோ வழியாக ஸ்ட்ரீமிங் செய்கிறார். ரிங் லைட்டுகள், ஒரு கேமரா, ஒரு பெரிய திரை என உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லையென்றால், கெய்னியின் அறை, ஒரு குழந்தையின் அறையாகவே தோன்றக்கூடும். சுமார் ஒரு டஜன் ஸ்டஃப்டு விலங்குகள், இளஞ்சிவப்பு யூனிகார்ன்கள் மற்றும் டெடி பியர்ஸ் அவரது படுக்கையறையில் நிறைந்துள்ளன. "மாடல், மிகவும் இளமையாகத் தெரிந்தால் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடிக்கும்" என்று அவர் கூறுகிறார். "சில நேரங்களில் அதுவே பிரச்னையாகவும் மாறிவிடுகிறது என்று நினைக்கிறேன். சில வாடிக்கையாளர்கள் குழந்தையைப் போல நடிக்கச் சொல்கிறார்கள், ஆனால் அது சரியல்ல" என்கிறார் அவர். தனது பெற்றோர் விவாகரத்து செய்ய முடிவு செய்த பிறகு, குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்காகவே இந்தத் தொழிலில் தான் இறங்கியதாக அவர் கூறுகிறார். அவள் என்ன தொழில் செய்கிறார் என்பது தன்னுடைய தந்தைக்குத் தெரியும் என்று கூறும் கெய்னி, அவர் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறுகிறார். இந்தத் தொழிலில் மிகவும் இளம் வயதிலேயே (17 வயதில்) தான் ஈடுபடுத்தப்பட்டதாக கெய்னி கருதினாலும், அவர் தனது முன்னாள் முதலாளிகளை விமர்சிக்கவில்லை. தற்போது மாதத்திற்கு சுமார் $2,000 (£1,500) சம்பாதிக்கும் கெய்னி, தனது முன்னாள் முதலாளி, வேலையில் சேர தனக்கு உதவியதாகவே நினைக்கிறார். கொலம்பியாவில் குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் சுமார் $300 (£225) என்ற நிலையில், இந்தத் தொகை மிக அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. "இந்த வேலையின் மூலம், என்னுடைய அம்மா, அப்பா, சகோதரி என குடும்பம் முழுவதற்கும் உதவுகிறேன்," என்று அவர் கூறுகிறார். இதேக் கண்ணோட்டத்தையே ஸ்டுடியோக்களும் எதிரொலிக்கின்றன. அவற்றில் சில, தங்கள் கலைஞர்களை நன்றாக கவனித்துக்கொள்வதை நிரூபிக்க ஆர்வத்துடன் செயல்படுகின்றன. மிகப்பெரிய ஸ்டுடியோக்களில் ஒன்றான ஏ.ஜே. ஸ்டுடியோஸை நாங்கள் பார்வையிட்டோம், அங்கு மாடல்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக உளவியலாளர் ஒருவர் பணியமர்த்தப்பட்டிருந்தார். அங்கு ஒரு ஸ்பாவும் இருந்தது. அதில், பெடிக்யூர், மசாஜ், போடாக்ஸ் மற்றும் லிப் ஃபில்லர்கள் "தள்ளுபடி" விலையில் கொடுக்கப்பட்டன. அத்துடன் அதிக வருமான ஈட்டும் அல்லது சக மாடல்களை ஆதரிக்கும் பணியாளர்கள் மற்றும் நன்றாக ஒத்துழைப்பவர்களுக்கு "மாதத்தின் சிறந்த ஊழியர்கள்" என்ற பாராட்டு பெற்றவர்களுக்கும் இந்த ஸ்பாவில் உள்ள பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. கழிப்பறைக்கு சென்றால் அபராதம் ஆனால் நாட்டின் அதிபர் சுட்டிக்காட்டியுள்ளபடி, மாடல்கள் அனைவரும் சரியாக நடத்தப்படுவதில்லை அல்லது நல்ல வருமானம் ஈட்டுவதில்லை. மேலும், அவர் அறிமுகப்படுத்தும் புதிய தொழிலாளர் சட்டம் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துமா என்பதைப் பார்க்க தொழில்துறை காத்திருக்கிறது. ஸ்ட்ரீமிங் தளங்கள் பொதுவாக பார்வையாளர்கள் செலுத்தும் கட்டணத்தில் 50% எடுத்துக்கொள்கின்றன என்றும், ஸ்டுடியோக்கள் 20-30% எடுத்துக்கொள்கின்றன என்றும், எஞ்சியத் தொகையே மாடல்களுக்கு கிடைப்பதாக மாடல்களும் ஸ்டுடியோக்களும் பிபிசியிடம் தெரிவித்தனர். அதாவது ஒரு நிகழ்ச்சியில் 100 டாலர்கள் கிடைத்தால் மாடலுக்கு பொதுவாக 20 முதல் 30 டாலர் வரை கிடைக்கும். நேர்மையற்ற ஸ்டுடியோக்கள் பெரும்பாலும் அதிகமாக வருமானத்தை எடுத்துக்கொள்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எட்டு மணிநேரம் வரையிலான அமர்வுகளில் பணியாற்றி, வெறும் 5 டாலர் வரை மட்டுமே சம்பாதித்த அனுபவங்களும் இருப்பதாக சில மாடல்கள் கூறுகிறார்கள், ஒரு நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்கள் இல்லையென்றால் இதுபோல் நிகழலாம். இடைவேளை இல்லாமல் 18 மணி நேரம் வரை ஸ்ட்ரீமிங் செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டதாக சொல்லும் சில மாடல்கள், சாப்பிடவோ அல்லது கழிப்பறைக்குச் செல்வதற்காக ஸ்ட்ரீமிங் செய்வதை இடைநிறுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இந்தக் கூற்றுகளை, 2024 டிசம்பரில் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் கண்காணிப்பக பிரசாரக் குழுவின் அறிக்கை ஆமோதிக்கிறது. மூட்டைப் பூச்சிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் நிறைந்த, மிகவும் சிறிய மற்றும் அழுக்கான அறைகளில் ஸ்ட்ரீமிங் செய்யவும், பாலியல் செயல்களைச் செய்ய கட்டாயப்படுத்தப்படும் வேதனையான மற்றும் இழிவான நிலை இருப்பதைக் கண்டறிந்ததாக, பிபிசிக்காக இந்தக் கதை குறித்து கூடுதல் ஆராய்ச்சி செய்த எழுத்தாளர் எரின் கில்பிரைட் கூறுகிறார். பட மூலாதாரம்,JORGE CALLE / BBC படக்குறிப்பு,தான் வேலை செய்த ஒரு ஸ்டுடியோ, தான் விரும்பாத பாலியல் செயல்களைச் செய்ய அழுத்தம் கொடுத்ததாக சோஃபி கூறுகிறார் மெடலினைச் சேர்ந்த சோஃபி, இரண்டு குழந்தைகளுக்குத் தாய். 26 வயதான அவர், இரவு விடுதி ஒன்றில் பணியாற்றி வந்தார், ஆனால் வாடிக்கையாளர்களின் தொடர் அவமதிப்புகளால் சலித்துபோய், வெப்கேம் மாடலிங் துறையில் அவர் இறங்கிவிட்டார். தான் பணிபுரிந்த ஒரு ஸ்டுடியோ, வலிமிகுந்த மற்றும் இழிவான பாலியல் செயல்களைச் செய்யவும், அங்கு பணிபுரிந்த மூன்று பெண்களுடன் சேர்ந்து நடிக்கவும் அழுத்தம் கொடுத்தது என்று சொல்கிறார். வாடிக்கையாளர்களின் விருப்பக் கோரிக்கைகளை, மாடல்களிடம் கொண்டு செல்லும் இடைத்தரகர்களாகச் செயல்பட பணியமர்த்தப்பட்ட ஸ்டுடியோ கண்காணிப்பாளர்கள், தவறான கோரிக்கைகளுக்கும் ஒப்புக் கொண்டதாகவும் அவர் சொல்கிறார். தன்னால் அப்படி செய்யமுடியாது என்று ஸ்டுடியோவிடம் சொன்னாலும், "உனக்கு வேறு வழியில்லை என்று அவர்கள் சொன்னார்கள்" என சோஃபி கூறுகிறார். "இறுதியில், நான் அவர்கள் சொன்னதை செய்ய வேண்டியிருந்தது, இல்லையெனில் அவர்கள் என் கணக்கை முடக்கிவிடுவார்கள்," என்று சோஃபி சொல்கிறார். விருப்பம் இல்லாவிட்டாலும் வெப்கேம் ஸ்டுடியோக்களில் தொடர்ந்து வேலை செய்யும் சோஃபி, கொலம்பியாவில் கிடைக்கும் சாதாரண சம்பளம் தனக்கும் தனது இரண்டு குழந்தைக்கும் போதுமானதாக இருக்காது என்று கூறுகிறார். சட்டக் கல்வி பயில்வதற்காக சோஃபி பணத்தை சேமித்து வருகிறார். படக்குறிப்பு,செக்ஸ்கேம் துறையில் வேலை செய்து குழந்தைகளை வளர்ப்பதாகவும், படிப்புக்காக சேமிப்பதாகவும் சோஃபி கூறுகிறார் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்வது கொலம்பியா மட்டுமல்ல என்கிறார் எரின் கில்பிரைட். பல்கேரியா, கனடா, செக் குடியரசு, ஹங்கேரி, இந்தியா, ருமேனியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, உக்ரைன், அமெரிக்கா ஆகிய 10 நாடுகளில் இருக்கும் ஸ்டுடியோக்களிலிருந்து பெரிய நான்கு ஸ்ட்ரீமிங் தளங்கள் உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதை அவர் கண்டறிந்தார். மேலும், ஸ்ட்ரீமிங் தளங்களில் "மனித உரிமை துஷ்பிரயோகங்களை எளிதாக்கும் அல்லது அதிகப்படுத்தும் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளில் உள்ள இடைவெளிகளை" அடையாளம் கண்டதாகவும் அவர் கூறுகிறார். ஸ்ட்ரீம் செய்யப்படும் ஸ்டுடியோக்களின் நிலைமைகள் குறித்து நாங்கள் ஸ்ட்ரீமிங் தளங்களிடம் கேட்டோம். போங்கா கேம்ஸைச் சேர்ந்த மில்லி அச்சின்டே, "மாடல்களுக்கு பணம் வழங்கப்படுவதையும், அறைகள் சுத்தமாக இருப்பதையும், அத்துமீறப்படாமல் இருப்பதையும் உறுதி செய்யும்" எட்டு பெண்கள் குழுவில் தானும் இருப்பதாகக் கூறினார். இந்தக் குழு, கொலம்பியாவில் உள்ள சில ஸ்டுடியோக்களுக்குச் சென்று அங்கிருக்கும் நிலைமைகளை மதிப்பிடும். StripChat மற்றும் Chaturbate நிறுவனங்கள், அவர்கள் கலைஞர்களின் நேரடி முதலாளிகள் அல்ல என்பதால், ஸ்டுடியோக்களுக்கும் மாடல்களுக்கும் இடையிலான விதிமுறைகளில் தாங்கள் தலையிடுவதில்லை என்றும் கூறின. ஆனால் பாதுகாப்பான பணிச்சூழலுக்கு உறுதிபூண்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் பிபிசியிடம் கூறின. ஸ்டுடியோக்கள் "மரியாதைக்குரிய மற்றும் வசதியான பணி நிலைமைகளை" உறுதி செய்யும் என்று எதிர்பார்ப்பதாகவும் StripChat தெரிவித்துள்ளது. ஒரு செயலைச் செய்ய மாடல் கட்டாயப்படுத்தப்படுவதாகவோ அல்லது அச்சுறுத்தப்படுவதாகவோ நம்பினால், அதில் தலையிட குழுக்கள் இருப்பதாக போங்கா கேம்ஸ், StripChat மற்றும் Chaturbate ஆகிய நிறுவனங்கள் தெரிவித்தன. 'அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்' வெம்கேமிங், படிப்பு, குழந்தை பராமரிப்பு என அனைத்து வேலைகளுக்கும் ஈடுகொடுக்க, அதிகாலை 05:00 மணிக்கே கண் விழிக்க வேண்டியிருந்தது. இந்த வேலைக்கு வந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு முதல் சம்பளத்தைப் பெற இசபெல்லா ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கிடைத்தத் தொகையில் ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் ஸ்டுடியோ தங்கள் பங்கைக் கழித்துக் கொண்ட பிறகு, இசபெல்லாவுக்கு வெறும் 174,000 கொலம்பிய பெசோக்கள் (42 டாலர்கள்) மட்டுமே கொடுக்கப்பட்டதாக கூறுகிறார். இது தான் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவானது என்று சொல்லும் இசபெல்லா, ஒப்புக்கொண்டதை விட ஸ்டுடியோ தனக்கு மிகக் குறைந்த சதவீதத்தையே கொடுத்ததாகவும், தனது வருவாயில் பெரும்பகுதியை ஸ்டுடியோ திருடிவிட்டதாகவும் அவர் நம்புகிறார். அந்தப் பணம் மிகக் குறைவு என்று கூறும் அவர், கிடைத்த அந்தப் பணத்தில் பால் மற்றும் டயப்பர்கள் வாங்கியதாக சொல்கிறார். "அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்" என்று கூறுகிறார். தற்போதும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் இசபெல்லா, வெப்கேம் மாடலாக சில மாதங்கள் மட்டுமே பணியாற்றிய பிறகு, அதிலிருந்து விலகிவிட்டார். இளம் வயதில் தன்னை இப்படி நடத்தியதால் மன உளைச்சலுக்கு உள்ளான இசபெல்லா, அதிர்ந்துவிட்டார். தொடர்ந்து அழுது கொண்டே இருந்த மகளின் மனநிலையை சரிபடுத்த, அவருடைய அம்மா, ஒரு உளவியலாளரிடம் அழைத்துச் சென்றார். இசபெல்லாவும், அவர் பணியாற்றிய ஸ்டுடியோவின் வேறு ஆறு முன்னாள் ஊழியர்களும் சேர்ந்து அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். சிறார்களைச் சுரண்டுதல், தொழிலாளர் சுரண்டல் மற்றும் பொருளாதார துஷ்பிரயோகம் செய்ததாக ஸ்டுடியோ மீது அனைவரும் கூட்டாக குற்றம் சாட்டியுள்ளனர். "18க்கும் குறைவான வயதில் நான் இருந்தபோது எடுக்கப்பட்ட எனது வீடியோக்கள் தற்போதும் இணையத்தில் உள்ளன," என்று அவர் கூறுகிறார், அவற்றை அகற்ற மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடையும்போது மிகவும் சக்தியற்றவளாக உணர்வதாக அவர் கூறுகிறார். "இது என்னை மிகவும் பாதித்துள்ளது, இனி அதைப் பற்றி நினைக்கவே எனக்கு விருப்பமில்லை" என்று இசபெல்லா கூறுகிறார். வூடி மோரிஸின் கூடுதல் செய்தியுடன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr79288vlz1o
  20. பெருந்தோட்ட தொழிலாளர்களின் காணி, வீட்டுரிமையை உறுதிப்படுத்துங்கள் : முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் அவசியம் - ஐ.நா. உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு 27 JUN, 2025 | 10:36 AM (நா.தனுஜா) செம்மணியானது கடந்தகால காயங்கள் மக்கள் மத்தியில் இன்னமும் ஆறாமல் இருக்கிறது என்பதை உணர்த்தியதாகவும் கடந்தகால பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவது அரசுக்கு சவாலான விடயமாக அமையும் எனவும் தனது விஜயத்தின் நிறைவு நாளில் சுட்டிக்காட்டிய ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், பாதிப்பு இடம்பெற்றுள்ளது என்பதை ஏற்பதும், உண்மைகளை வெளிப்படுத்துவதுமே காயங்களை ஆற்றுவதற்கும், நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்குமான ஒரே வழி என தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்குங்கள் எனவும் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் விசாரணைகளில் முன்னேற்றம் தேவை எனவும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் காணி, வீட்டுரிமையை உறுதிப்படுத்துங்கள் எனவும் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் அவசியம் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், வலியுறுத்தியுள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை (24) நாட்டுக்கு வருகைதந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், விஜயத்தின் நிறைவு நாளான நேற்று வியாழக்கிழமை (26) மாலை ஐந்தரை மணியளவில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தனது சந்திப்புகள், ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் வலியுறுத்தல்கள் என்பன தொடர்பில் தெளிவுப்படுத்தினார். அதன்படி இலங்கை விஜயத்துக்கும், சகல தரப்புகளுடான சந்திப்புக்களுக்கும் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த உயர்ஸ்தானிகர், தனது இவ்விஜயம் இலங்கையின் சமகால மனித உரிமைகள் நிலைவரத்தையும், கையாள்வதற்கு கடினமான பிரச்சினைகளையும் புரிந்துக்கொள்வதற்கு உதவியதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக மிகமோசமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவற்றில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களின் கதைகள் தனக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மனிதப்புதைகுழியானது கடந்தகாலக் காயங்கள் இன்னமும் பலர் மத்தியில் ஆறாமல் இருப்பதை உணர்த்தியது என்றார். 'வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உண்மையைக் கோருகின்றனர். உதாரணமாக 1989 ஆம் ஆண்டு காணாமல்போன தனது கணவனைத்தேடி இன்றளவிலும் நகரத்துக்குச் சென்றுவரும் ஒரு பெண்ணின் கதையை குறிப்பிட முடியும். இவ்விடயத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் கண்ணீர் ஒன்றுதான்' எனவும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார். அதேவேளை தனது யாழ் விஜயத்தின்போது நினைவுக்கூரலுக்கான இடமளிக்கப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிந்ததுடன், அது வரவேற்கத்தக்க விடயமாகும் எனக் கூறிய உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இருப்பினும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான கண்காணிப்புகள் தொடர்வதாகவும் சமூகத்தின் முக்கிய பங்காளியான சிவில் செயற்பாட்;டாளர்கள் மீதான கண்காணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார். அதேபோன்று நாட்டின் சகல மக்களுக்கும் சம அங்கீகாரமளிப்போம் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது எனினும் கடந்தகால பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவது என்பது அரசுக்கு சவாலானதொரு விடயமாகவே இருக்கும் எனவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். 'பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை ஆற்றுவதற்கும், அவர்களை அதிலிருந்து மீட்பதற்கும் அவர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதும் உண்மைகளை வெளிப்படுத்துவதும் இன்றியமையாததாகும். அதனை முன்னிறுத்திய நடவடிக்கைகள் சர்வதேச ஆதரவுடனான உள்ளகப்பொறிமுறை ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும். 'உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் அடையப்பட வேண்டும்.அத்தகைய முன்னேற்றத்தின் ஊடாகவே பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும்' எனவும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் சுட்டிக்காட்டினார். அடுத்ததாக இலங்கையில் சித்திரவதைகளுக்கு உட்படுத்தல் சட்டவிரோதமானதே என்ற போதிலும் சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்து பதிவாகி வருவதாக விசனத்தை வெளிப்படுத்திய அவர், இதுகுறித்து பொலிஸார் கவனம் செலுத்த வேண்டும் என்றார். அத்தோடு பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்களை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது எனவும் உயர்ஸ்தானிகர் பாராட்டுத்தெரிவித்தார். மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், அச்சட்டம் நீக்கப்படும் வரை அதன் பிரயோகம் இடைநிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திய உயர்ஸ்தானிகர், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். 'கடந்த பொதுத்தேர்தலில் 22 பெண் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.இது கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றகரமானதும், வரவேற்கத்தக்கதுமான விடயமாகும்.இருப்பினும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.அதேபோன்று தொழில் வாய்ப்புகளில் பாலின சமத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்' என்று வலியுறுத்திய வோல்கர் டேர்க், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அதனை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்றார். 'பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி,வீடு, மற்றும் சம்பளம் உள்ளிட்ட உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார். 'மனித உரிமைகளை மேம்படுத்துவதில் சர்வமத தலைவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.அதன்படி மதத்தலைவர்களுடனான சந்திப்பின் போது இவ்விடயத்தில் அவர்கள் தமது ஆற்றலை பயன்படுத்த வேண்டும் எனவும் அது நம்பிக்கையையும், நல்லிணக்கத்தையும் கட்டியழுப்புவதற்கு அவசியமென எடுத்துரைத்தேன். உலகளாவிய ரீதியில் மனித உரிமை மீறல்கள் சகஜமாகிவரும் தற்போதைய சூழ்நிலையில் நம்பிக்கையை மிளிரச்செய்வதற்கான முன்னுதாரணமாக திகழக்கூடிய வாய்ப்பு இலங்கைக்கு உண்டு' எனவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/218575
  21. 27 JUN, 2025 | 10:28 AM இலங்கையில் காணாமல்போனவர்களிற்கான நீதி ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகின்றது என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களை செம்மணியில் உள்ள புதைகுழிகள் வேதனையுடன் நினைவூட்டுகின்றன. நாம் உண்மையிலிருந்து விலகிச் செல்ல முடியாது. காணாமல் போனவர்களுக்கான நீதி ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகிறது. https://www.virakesari.lk/article/218596
  22. சிறந்த முன்னுதாரணமான செயல் ஐயா. எனக்குள்ளும் இந்த ஆசை இருக்கிறது, இறந்தபின் எனது உடல் கற்றலுக்கு பயன்படுமா என மருத்துவர்களிடம் அறிந்தபின் உயிலை எழுதுவம்.
  23. Highlights | West Indies v Australia | 1st Test Day 1 14 Wickets Fall On Day 1 Watch highlights of the 1st Test Day 1 between West Indies and Australia at Kensington Oval, Bridgetown

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.