Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஜப்பானை விஞ்சியதா இந்திய பொருளாதாரம்? நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரியின் கூற்று சரியா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சந்தீப் சாய் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வாரம் சனிக்கிழமையன்று, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர் சுப்பிரமணியம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, இந்தியா ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது என்று கூறினார். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, திங்களன்று, நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கூறினார். நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறுவது குறித்த கூற்றுகளுக்கு மத்தியில், இந்தியா ஒரு பெரிய மக்கள்தொகையுடன் பொருளாதார ரீதியாக சரியான திசையில் முன்னேறி வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். அதே நேரத்தில் சில பொருளாதார வல்லுநர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பற்றிய கூற்றுகளில் உள்ள அவசரத்தை சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம், சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது உலக பொருளாதார கண்ணோட்டம் என்ற அறிக்கையில், 2025 ஆம் ஆண்டில், இந்தியா 4.187 டிரில்லியன் டாலருடன் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறக்கூடும் என்று மதிப்பிட்டிருந்தது. நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி என்ன கூறினார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர் சுப்பிரமணியம் சனிக்கிழமை ஒரு பொது நிகழ்ச்சியில் சுப்பிரமணியம் பேசுகையில், "நாம் இப்போது நான்காவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறோம், நாம் 4 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரம், இது எனது தரவு அல்ல. இது சர்வதேச நிதியத்தின் தரவுகள். இன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) அடிப்படையில் ஜப்பானை விட இந்தியா பெரியது" என்று பேசினார். இருப்பினும், இந்தக் கூற்று சற்று முன்னதாகவே கூறப்பட்டுள்ளது என்பதை சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகள் காட்டுகின்றன. 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாமினல் ஜிடிபி (nominal GDP) அடிப்படையில் ஜப்பானை முந்திக்கொண்டு நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாற உள்ளது என்று தான் சர்வதேச நாணய நிதியம் மதிப்பிடுகிறது. நாமினல் ஜிடிபி உண்மையில் பணவீக்க விகிதத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு மதிப்பிடப்படுகிறது, அதே நேரத்தில் அது இல்லாமல் செய்யப்படும் கணக்கீடு உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி என்று அழைக்கப்படுகிறது. நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "இந்தியா நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் முயற்சியில் உள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நடக்கும் என்று நான் நம்புகிறேன், ஏனெனில் நிதியாண்டின் அனைத்து 12 மாதங்களுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவு தேவைப்படுகிறது. எனவே அதுவரை இது ஒரு முன்னறிவிப்பாகவே இருக்கும்" என்றார். பட மூலாதாரம்,@NITIAAYOG படக்குறிப்பு, இந்தியா நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் முயற்சியில் உள்ளது என்று நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி கூறுகிறார். சுப்பிரமணியனின் பேச்சு குறித்து, "இது ஒரு சிக்கலான கேள்வி, அவர் குறிப்பாக என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது. சில வார்த்தைகள் விடுபட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதாவதாக இருந்திருக்கலாம்" என்று விர்மானி தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்தியா விரைவில் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். "இந்தியா சரியான பாதையில் நகர்கிறது" பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவின் பங்குச் சந்தைகள் சமீப காலமாக சிறப்பாக இயங்கி வருகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானம் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை விட வேகமாக (சதவீத அடிப்படையில்) வளர்ந்துள்ளது என்று கொள்கை மற்றும் புவிசார் அரசியல் நிபுணர் சித்தார்த் கூறுகிறார். "ஒவ்வொரு முறையும் இந்தியாவின் பொருளாதாரம் வளரும்போது, 'ஆனால் தனிநபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Per Capita GDP) குறைவாக உள்ளது' என்று கூறப்படும். இந்தியா மொனாக்கோ அல்ல (மேற்கு ஐரோப்பாவில் உள்ள மிகச் சிறிய ஆனால் பணக்கார நாடு). இது வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகை கொண்டுள்ளது, 1.4 பில்லியன் மக்களைக் கொண்டுள்ளது" என்றார். மேலும், "2023ஆம் ஆண்டில் தனிநபர் வருமானம் 9.2% அதிகரித்துள்ளது, இது ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளை விட அதிகம். சிறிய அளவீடுகளுடன் ஒரு பெரிய நாட்டை அளவிடக் கூடாது. நீங்கள் அதை வேகம், அளவு மற்றும் மூலோபாய தாக்கத்தால் அளவிட வேண்டும். இந்தியா நகர்ந்து கொண்டு மட்டுமில்லை, முன்னேறியும் வருகிறது. இதைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார். மற்றொரு பதிவுக்கு பதிலளித்த சித்தார்த், "இந்தியா சரியான பாதையில் செல்கிறது, அதன் தனிநபர் வருமானம் இன்னும் வளர்ந்து வருகிறது, தேக்கமடையவில்லை. ஒரு பெரிய மக்கள்தொகை இருப்பதை நிச்சயமாக கருத்தில் கொள்ள வேண்டும்." என்றார். இருப்பினும், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழக முன்னாள் பொருளாதார பேராசிரியர் அருண் குமார், பிபிசியிடம் பேசுகையில், நாமினல் ஜிடிபி ஜப்பானை விஞ்சும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு என்றும், இந்த கூற்றை வெளியே சொல்வதில் அவசரம் காட்டப்பட்டதாகவும் கூறினார். பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தை அளவிடுவதற்கான ஒரு பொதுவான வழி, மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுவதாகும். இது பொதுவாக டாலர்களில் கணக்கிடப்படும். அதே நேரத்தில் சர்வதேச நாணய சந்தைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருக்கும். பேராசிரியர் அருண் குமார் கூறுகையில், "2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.19 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் ஜப்பானின் பொருளாதாரம் 4.186 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடுகள் டாலர்களில் உள்ளன மற்றும் வேறுபாடு மிகவும் சிறியது. ஆனால் ஜப்பானிய நாணயமான யென்னுக்கு எதிராக ரூபாய் ஏற்ற இறக்கம் அடைந்தால், இந்த வேறுபாடும் போய்விடும்." என்று விளக்குகிறார். இது தவிர, 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.2 சதவீதமாகவும், பணவீக்க விகிதம் 4.2 சதவீதமாகவும் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த புள்ளிவிவரங்கள் நிலையானதாக இல்லாவிட்டால், நிலைமை அப்படியே மாறும். நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்பிரமணியம் கூறுகையில், இந்தியா அதன் திட்டமிடல் மற்றும் சிந்தனைக்கு ஏற்ப செயல்பட்டால், மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற 2-3 ஆண்டுகள் மட்டுமே ஆகும். சர்வதேச நாணய நிதியத்தின் ஏப்ரல் மாத அறிக்கையின்படி, தற்போதைய வளர்ச்சி விகிதத்தில், 2028 ஆம் ஆண்டில் நாமினல் ஜிடிபி அடிப்படையில் ஜெர்மனியை விஞ்சி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாற முடியும். அமெரிக்காவும் சீனாவும் உலகின் இரண்டு சிறந்த பொருளாதாரங்களாக இருக்கப் போகின்றன. ஈயத்தை இனி தங்கமாக மாற்றலாம் - விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு25 மே 2025 அடிக்கடி டீ, காபி குடிப்பது உள்பட இந்த 7 பழக்கங்கள் உங்கள் பற்களை பாதிக்கலாம்?24 மே 2025 பேராசிரியர் அருண் குமார், சர்வதேச நாணய நிதியம் ஒரு தரவு சேகரிக்கும் அமைப்பு அல்ல, அந்த நாடுகள் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் அது கணிப்புகளை உருவாக்குகிறது என்று சுட்டிக்காட்டுகிறார். அவர், "மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் சரி செய்யப்படுகின்றன. இது தவிர, முழுமையான புள்ளிவிவரங்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்றன. சரியான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்கள் காலாண்டு தரவுகளில் கிடைக்கவில்லை, மேலும் புள்ளிவிவரங்களில், ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் என்ன நடக்கிறதோ, அது அமைப்புசாரா துறையிலும் நடக்கிறது என்று கருதப்படுகிறது" என்கிறார். மேலும் "ஆனால் பணமதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு, வீழ்ச்சியடைந்த துறை வளர்ந்து வருகிறது என்று நாம் கருதுகிறோம். இது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது, இதுதான் தரவுகளின் சிக்கல்" என்கிறார். பேராசிரியர் அருண் குமார் கூறுகையில், "டிரம்பின் வரிவிதிப்பு போர் உலகப் பொருளாதாரத்திற்கு எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தும் என்பது மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவையும் பாதிக்கும். சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு ஏப்ரல் 2025-க்கானதாகும். அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார். ஜிடிபியில் சமத்துவமின்மை பட மூலாதாரம்,GETTY IMAGES மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் நாட்டின் செழிப்பிலும் அதிகரித்து வரும் சமத்துவமின்மை குறித்து சமூக ஊடகங்களில் ஒரு விவாதம் தொடங்கியுள்ளது. எக்ஸ் தளத்தில் துஃபைல் நௌஷத் என்பவர் தனது பதிவில், "பொருளாதாரத்தில் முதல் 1%, 5% மற்றும் 10% ஐ விலக்கினால் இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Per Capita GDP) என்னவாக இருக்கும். பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் உள்ள 50% மக்களின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்னவாக இருக்கும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். பல பொருளாதார வல்லுநர்கள் ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது தனிநபர் வருமானம் சரியான அளவீடாக இருக்கும் என்று கருதுகின்றனர், மேலும் இந்தியா இந்த விஷயத்தில் உலகில் 140வது இடத்தில் உள்ளது. பேராசிரியர் அருண் குமார் கூறுகையில், "சில நேரங்களில் ஈலோன் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஒரு மைதானத்திற்குச் சென்றால், அங்குள்ளவர்களின் தனிநபர் வருமானம் திடீரென 1 மில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று நகைச்சுவையாக கூறப்படுகிறது. ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் $100 மில்லியனுக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார்கள். ஒருபுறம், தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் இந்தியா 140வது இடத்தில் உள்ளது. மறுபுறம், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி வருகிறார்கள் என்பதையும், ஏழைகளின் நிலை பெரிதாக மாறவில்லை அல்லது குறைந்து வருகிறது என்பதையும் இது காட்டுகிறது." என்று கூறுகிறார். "தனிநபர் வருமானமும் உண்மையான நிலைமைகளை காட்டவில்லை, ஏனெனில் சராசரி புள்ளிவிவரங்கள் சமத்துவமின்மையை மறைக்கின்றன" என்றும் அவர் கூறுகிறார். ஜிடிபி குறித்த கூற்றில் ஏன் அவசரம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதில் இந்தியா பலன் அடைந்துள்ளது. சனிக்கிழமை, நிதி ஆயோக்கின் கூட்டம் நடைபெற்றது, அதில் மாநில முதல்வர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோதி, 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். பேராசிரியர் அருண்குமார் கூறுகையில், பாகிஸ்தானுடனான சமீபத்திய பதற்றத்தின் போது திடீரென போர் நிறுத்தத்திற்குப் பிறகு, ஒரு வலுவான பொருளாதார சக்தி என்ற பிம்பத்தை உருவாக்கவும், தன்னைப் பற்றி விவாதிக்கப்படவும் அரசு விரும்புகிறது என்று கருத்து தெரிவிக்கிறார். ஜிடிபி கூற்று குறித்து அவர் கூறுகையில், "இது முற்றிலும் அரசியலாகத் தெரிகிறது. பாகிஸ்தானுடனான சமீபத்திய மோதல் மற்றும் போர் நிறுத்தத்திற்குப் பிறகு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இது இருக்கலாம். அதேசமயம் இந்தியாவின் தனிநபர் வருமானம் ஜப்பானின் தனிநபர் வருமானத்தில் பதினைந்தில் ஒரு பங்கு மட்டுமே" என்று சுட்டிக் காட்டுகிறார். ஜப்பானின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 2010 ஆம் ஆண்டில், இது 6 டிரில்லியன் டாலர்களாக இருந்தது, ஆனால் வயதான மக்கள் தொகை, உற்பத்தியில் தேக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக இது சுருங்கிவிட்டது. அதே நேரத்தில், இந்தியா அதன் நாமினல் ஜிடிபியை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியுள்ளது. இது உலக தரவரிசையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. Worldometers வலைத்தளத்தின்படி, ஜப்பானின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 33,806 டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 2,400 டாலராக இருக்கும், இது கென்யா, மொராக்கோ, லிபியா, மொரீஷியஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளை விட குறைவு. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn4q03327kko
  2. 28 MAY, 2025 | 08:45 PM தன்னை பற்றி மட்டும் சிந்திக்கும் வாழ்க்கை பயணத்துக்கு மாறாக, பொது மக்களின் நலனுக்கான பயணத்தை அனைத்து பிரஜைகளும் தொடர வேண்டுமெனவும், கலாநிதி ஓமல்பே சோபித தேரரின் 75 வருட வாழ்க்கை மற்றும் 64 வருட துறவு வாழ்க்கை அதற்கு தகுந்த எடுத்துக்காட்டாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை ருஹூனு மாகம்புர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (28) நடைபெற்ற "கலாநிதி ஓமல்பே சோபித தேரரின் 75 ஆவது ஜனன தின" நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒழுக்கயீனத்தின் எல்லை வரை சென்றுகொண்டிருந்த நாட்டை மீண்டும் ஒழுக்க நிலைக்கு கொண்டுச் செல்லவதற்கான வேலைத்திட்டத்தில், மகா சங்கத்தினருக்கு பெரும் பொறுப்பு உள்ளதாகவும், அரசாங்கம் என்ற வகையில் அதற்காக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் உரிய வகையில் முன்னெடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டிற்குள் எதிர்பார்க்கப்படும் ஒழுக்கத்தின் புதிய திருப்பத்தை அரசியல் முறையின் மாற்றத்தில் மாத்திரம் செய்ய முடியாதெனவும், பெறுமதி மிகுந்த ஒழுக்க கட்டமைப்பு மற்றும் பெறுமதியின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட சமூக பிணைப்புக்களுக்கும் அந்த பணி சார்ந்துள்ளதெனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். அதேபோல் தான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது தொடர்பிலான கலாநிதி ஓமல்பே சோபித தேரரின் குணத்தை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, 75 வருட பிக்கு வாழ்வில் அவர் பெற்றுக்கொண்ட அறிவுபூர்மான விடயங்களை வாழ்வில் இணைத்துக்கொள்வதே அவருக்கு செய்யக்கூடிய மிக உயர்வான கௌரவமாகும் என்றும் தெரிவித்தார். இலங்கை ராமண்ய மகா நிகாயவின் தென்னிலங்கை பிரதான சங்கநாயக எம்பிலிபிட்டியே ஸ்ரீ போதிராஜ அறக்கட்டளையின் ஸ்தாபகருமான கலாநிதி வண.ஓமல்பே சோபித நாயக்க தேரர், தேசிய நெருக்கடி காலங்களில் அச்சமின்றி முன் நின்று நாட்டுக்காகவும், பௌத்த சாசனம் மற்றும் தேசத்திற்காகப் போராடிய ஒரு தேரர் ஆவார். அவர் ஆற்றிவரும் தேசிய, சமூக, சமயப் பணியைப் பாராட்டி, அவர் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்தி, இந்தப் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலாநிதி வண.ஓமல்பே சோபித நாயக்க தேரரால் இதன்போது ஜனாதிபதிக்கு நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன. கம்போடிய சங்கராஜ தேரர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நினைவுப் பரிசை வழங்கியதுடன், போதிராஜ வித்தியாலயம் மற்றும் ஸ்ரீ போதிராஜா தர்ம நிலைய அறநெறிப் பாடசாலையின் மாணவன் துலித மேனுஜ பாடிய “கலாநிதி வண.ஓமல்பே சோபித தேரர்” பாடல் அடங்கிய இறுவட்டும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை ராமன்ய மகா நிகாயவின் மகாநாயக்க வண.மகுலேவே விமல தேரரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க வண.கரகொட உயங்கொட மைத்திரிமூர்த்தி தேரர், மகாவிஹார வாங்சிக ஷியாமோபாலி மகா நிகாயவின் சப்ரகமுவ மாகாணத்தின் பிரதம சங்கநாயக ஸ்ரீபாதானாதிபதி, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தர் வண.பெங்கமுவே தம்மதின்ன நாயக்க தேரர் உட்பட மகாசங்கத்தினர், கொரியாவின் ஜொகே மஹா நிகாயவின் பிரதான சங்கநாயக்க மற்றும் சங்கெசா பௌத்த விகாரையின் விகாராதிபதி யொந்தம் தேரர் உட்பட வெளிநாட்டு அதிதிகள் குழு மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ராமன்ய மகா நிகாய பரிபாலன சபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/215940
  3. பட மூலாதாரம்,@RKFI 28 மே 2025, 09:29 GMT புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியிருந்த நடிகர் கமல் ஹாசன், தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசன் கன்னட மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கோருகின்றனர். இந்நிலையில், இன்று (மே 28) இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் கமல் ஹாசன், "அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது" என தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, "கன்னட மொழிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. அது அவருக்கு (கமல் ஹாசன்) தெரியாது." என்று தெரிவித்துள்ளார். கமல் பேசியது என்ன? பட மூலாதாரம்,@RKFI மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்றிருந்தார். மேடையில் பேசிய கமல்ஹாசன், "ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது 'உயிரே உறவே தமிழே' என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்" என்று பேசியிருந்தார். கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன? பட மூலாதாரம்,KAMALHAASAN/X கமல் ஹாசனின் பேச்சு சர்ச்சையான நிலையில், இன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த தக் லைஃப் திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்த விஷயத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். நான் அன்பினால் தான் அப்படி சொன்னேன்." என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "பல வரலாற்று ஆசிரியர்கள் எனக்கு மொழியின் வரலாற்றை பற்றி கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். நான் எதையும் குறிப்பாக அர்த்தப்படுத்த விரும்பவில்லை. தமிழ்நாடு அடிப்படையில் தனி சிறப்பு கொண்டது. இங்கு ஒரு மேனன், ஒரு ரெட்டி, மாண்டியாவிலிருந்து வந்த ஒரு கன்னட ஐயங்கார் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ஒரு முதலமைச்சரால் எனக்கு ஒருமுறை சென்னையில் பிரச்னை வந்தபோது, கர்நாடக மக்கள் எனக்கு ஆதரவளித்தார்கள். எனவே தக் லைஃப் படத்தையும், எனக்கு எதிரான மொழி பிரச்னையையும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அரசியல்வாதிகளுக்கு மொழியைப் பற்றி பேச தகுதியில்லை, நான் உள்பட. இத்தகைய மிக ஆழமான விவாதங்கள் அனைத்தையும் வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொழி நிபுணர்களிடம் விட்டுவிடுவோம்." என கூறினார். மேலும், "நான் அளிப்பது விளக்கம், பதில் அல்ல. அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது" என்றும் கூறினார். கர்நாடக பாஜக என்ன கூறுகிறது? பட மூலாதாரம்,VIJAYENDRA YEDIYURAPPA படக்குறிப்பு, கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல் ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியதற்கு கர்நாடகாவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், "ஒருவர் தனது தாய்மொழியை நேசிக்க வேண்டும், ஆனால் அதன் பெயரில் ஆணவம் காட்டுவது நாகரிகமற்ற நடத்தை. குறிப்பாக கலைஞர்கள் ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்த நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவராஜ்குமாரை தனது தமிழ் மொழியைப் புகழ்வதில் இணைத்து கன்னடத்தை அவமதித்திருப்பது ஆணவத்தின் உச்சம். இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் கன்னடம் பல நூற்றாண்டுகளாக ஒரு முக்கிய மொழியாக இருந்து வருகிறது. மேலும், "எந்த மொழி எந்த மொழியிலிருந்து தோன்றியது என்பதை வரையறுத்து கூற கமல்ஹாசன் வரலாற்றாசிரியர் அல்ல. ஆனால் இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட கன்னட மொழி, இந்திய வரைபடத்தில் செழிப்பையும் நல்லிணக்கத்தையும் குறிக்கிறது. கன்னடர்கள் மொழியை வெறுப்பவர்கள் அல்ல, ஆனால் கன்னட நிலம், மொழி, மக்கள், நீர் மற்றும் கருத்துக்களைப் பொறுத்தவரை ஒருபோதும் சுயமரியாதையை தியாகம் செய்ததில்லை என்பதை ஒரு உண்மையான ஞானியைப் போலப் பேசிய கமல்ஹாசன் நினைவில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். திரைப்படத்தை வெளியிட விட மாட்டோம் என எச்சரிக்கை பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி (கோப்புப் படம்) கன்னட அமைப்புகள் சிலவும் கமல்ஹாசனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி கமலை எச்சரித்து வெளியிட்டுள்ள வீடியோவில், "தமிழ் பிறந்த பிறகுதான் கன்னடம் பிறந்தது என்றும் கன்னடத்தை விட தமிழ்தான் சிறந்தது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். நாங்கள் கமலை எச்சரிக்கிறோம். உங்களுக்கு கர்நாடகாவில் வியாபாரம் வேண்டும். ஆனாலும் கன்னடத்தை அவமதிக்கிறீர்களா? இன்று நீங்கள் எங்கள் மாநிலத்தில் இருந்திருந்தால், உங்கள் மீது நாங்கள் கருப்பு மை பூசி இருப்போம். நீங்கள் தப்பிவிட்டீர்கள். கர்நாடகாவுக்கும் அதன் மக்களுக்கும் எதிராகப் பேசினால், உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்று நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம். உங்கள் படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என்றும் நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார். செவ்வாய்கிழமை பெங்களூருவில் கமல் ஹாசன் ஒரு நிகழ்வில் கலந்துகொள்வதாக இருந்தது. அந்த இடத்தில் கன்னட அமைப்பினர் சிலர் கூடி கன்னடத்தில் கோஷங்கள் எழுப்பினர். தக் லைஃப் படத்தின் போஸ்டர்களை கன்னட அமைப்பினர் கிழிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இவை மட்டுமல்லாமல் கன்னட அமைப்பினர் பலர் சமூக ஊடகங்களில் கமல் ஹாசனுக்கு கருத்துக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyr17pd5rpo
  4. Published By: RAJEEBAN 28 MAY, 2025 | 11:29 AM பட்டினியின் பிடியில் வாடும் பாலஸ்தீனியர்கள் உணவு விநியோகிக்கப்படும் நிலையத்தில் பெருமளவில் திரண்டதையடுத்து காசாவில் அமெரிக்கா ஆதரவுடனான புதிய குழுவின் மனிதாபிமான உதவி வழங்கும் நடவடிக்கைகள் பெரும் குழப்பத்திற்குள் சிக்கியுள்ளதாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது. உணவு விநியோகிக்கப்படும் பகுதியை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலிகளை உடைத்துக்கொண்டு பெருமளவு பாலஸ்தீனியர்கள் நுழைந்ததை தொடர்ந்து இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என ஏபி தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய டாங்கிகளின் துப்பாக்கி பிரயோகத்தையும் துப்பாக்கி சூட்டு சத்தத்தையும் கேட்க முடிந்ததாக தெரிவித்துள்ள ஏபி செய்தியாளர் ஹெலிக்கொப்டரில் இருந்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார். மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதியில் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்ததாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய படையினர் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளனர். மூன்று பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர் ஒருவரின் காலில் இருந்து குருதி வெளியேறுகின்றது என ஏபி செய்தியாளர் தெரிவித்துள்ளார். காசாவின் தென்பகுதயில் உள்ள ரபாவில் காசா மனிதாபிமான மன்றம் என்ற அமைப்பு மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் இந்த அமைப்பிற்கு அனுமதி வழங்கியுள்ளது. எனினும் இந்த முறை மூலம் காசாவில் உள்ள 2.3 மில்லியன் மக்களின் மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என தெரிவித்து ஐநாவும் ஏனைய சர்வதேச அமைப்புகளும் இதனை ஏற்க மறுத்துள்ளன. பொதுமக்களிற்கான உணவை இஸ்ரேல் ஆயுதமாக பயன்படுத்துவதற்கு இது அனுமதிக்கின்றது என ஐநாவும் சர்வதேச அமைப்புகளும் தெரிவித்துள்ளன. மனிதாபிமான பொருட்களை எதிர்பாத்திருக்கும் மக்களிற்கும் இஸ்ரேலிய துருப்பினருக்கும் இடையில் மோதல் வெடிக்கலாம் என சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன. மூன்று மாதகால இஸ்ரேலின் தடை காரணமாக பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள காசா மக்கள் உணவிற்காக காத்திருக்கின்றனர். பெருமளவானவர்கள் மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்கு செவ்வாய்கிழமை சென்று உணவுப்பெட்டிகளை பெற்றுக்கொண்டனர் என பாலஸ்தீனியர்கள் ஏபிக்கு தெரிவித்துள்ளனர். தகவல் பரவியதும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் தங்களின் அகதிமுகாமிலிருந்து பல மைல் நடந்து மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதியை நோக்கி சென்றனர். அவர்கள் இஸ்ரேலின் இராணுவநிலைகள் ஊடாகவே அந்த இடத்தை சென்றடையவேண்டும். மதியமளவில் அந்த பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் காணப்பட்டனர். நீண்ட சங்கிலிதொடர் வேலிப்பாதைகளில் பெருமளவில் மக்கள் குவிந்திருப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொருவரும் சோதனை செய்யப்பட்டு முக அடையாளங்கள் ஸ்கான் செய்யப்பட்ட பின்னர் உணவுபெட்டிகளை பெற அனுமதிக்கின்றனர் என ஏபிக்குதெரிவித்துள்ள இருவர்,கூட்டம் அதிகரித்ததும்,மக்கள் வேலிகளை இழுத்துவிழுத்திவிட்டு உணவுப்பெட்டிகளை எடுத்தனர்,அங்கிருந்த பணியாளர்கள் தப்பியோட வேண்டிய நிலையேற்பட்டது என குறிப்பிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/215882
  5. 28 MAY, 2025 | 10:50 AM மிகவும் இயற்கையான நிகழ்வான பெண்களின் மாதவிடாய் சுழற்சி தொடர்பில் சமூகத்தில் இருந்து எழும் களங்கம் காரணமாக பெண்கள் பாதிக்கப்படுவதாகவும், அதிலிருந்து அவர்களை விடுவிப்பது அவசியம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். "மாதவிடாய் வறுமைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்கான திட்டம்" என்ற தலைப்பில் மே 27 அன்று கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற 'Period Pride 2025' மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பெண்களின் மாதவிடாய் என்பது அவமதிக்கப்படக்கூடிய ஒரு விடயமல்ல, இது ஒரு இயற்கையான நிகழ்வு. மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் மாதவிடாய் வறுமை ஆகியவை வெறும் சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்லாது, கண்ணியம், சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயமாகும். திருகோணமலை, கண்டி மற்றும் கொழும்பு பிரதேசங்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட அண்மைய ஆராய்ச்சியின்படி, பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்கள் இல்லாததால் பல பாடசாலை மாணவிகள் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. பல பெண்கள் பாதுகாப்பற்ற தெரிவுகளை நாடுகின்றனர். இது மிகவும் ஆபத்தானதாகும். பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியம் தொடர்பில் சமூகத்திலிருந்து எழும் களங்கம் காரணமாக பல பெண்கள் அமைதியாக அவதிப்படுகிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும் என்றும் மாதவிடாய் எவருடைய உடல்நலம், கல்வி அல்லது கண்ணியத்திற்கும் இடையூறாக அமையக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கு விரைவான மற்றும் முறையான திட்டம் ஒன்று தேவை. 13 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவிகளுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கும் திட்டத்தை கல்வி அமைச்சு ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளது. குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மாதவிடாய் காரணமாக எந்த ஒரு பெண் பிள்ளையும் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்க்கக்கூடாது என்பது தனது தனிப்பட்ட கருத்து. அடுத்த ஆண்டு முதல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சுகாதார நப்கின்களை வழங்கும் திட்டத்தை செயற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளன. பெண்களுக்கான சுகாதார நாப்கின் மீதான அனைத்து வரிகளையும் நீக்க கோரிக்கைகள் கிடைத்துள்ளன. இந்த விடயத்தில் சில சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அதை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு விரிவான கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் அவசியம். இந்த விடயம் தொடர்பாக நிதியமைச்சுடன் கலந்துரையாடி வரியினை நீக்கும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல எதிர்ப்பார்த்துள்ளோம். இதற்காக சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையின் ஆதரவை எதிர்பார்ப்போம் என்றார். இந்த நிகழ்வில் பிரான்ஸ் நாட்டின் தூதுவர் ரெமி லம்பேர்ட், இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/215872
  6. 28 MAY, 2025 | 10:45 AM மன்னார் - நானாட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, வங்காலைப் பகுதியிலுள்ள கடலரிப்பு நிலமைகளை அப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் செவ்வாய்க்கிழமை (27) நேரடியாகச்சென்று பார்வையிட்டார். இந்நிலையில் அப்பகுதி மக்களின் இடர்பாடுகளை கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், கடலரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுதொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறிப்பாக வங்காலை பகுதியில் கடலரிப்பு நிலமைகள் அதிகரித்துள்ளதால் கடல்நீர் கடற்கரையோர கிராமங்களுக்குள் உட்புகும் நிலை காணப்படுகின்றது. இதனால் அப்பகுதிமக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். இந்நிலையிலேயே இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு இவ்விடயம் அப்பகுதி மக்களால் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் இவ்வாறு நிலமைகளை நேரடியாகச்சென்று பார்வையிட்டதுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டார். ஏற்கனவே, கடலரிப்பைத் தடுப்பதற்கு வங்காலைப்பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டதைப்போன்று, ஆறு இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்படவேண்டுமெனவும், இதன்மூலமே கடல் நீர் கிராமத்திற்குள் உட்புகுவதைத் தடுக்கமுடிவதுடன், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் தடுக்கமுடியமென மக்களால் இதன்போது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. கடலரிப்பால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டும் எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்த சிக்கல் நிலமை தொடர்பில் உரிய தரப்பினரது கவனத்திற்கு கொண்டுசென்று, தடுப்பணை அமைப்பதுதொடர்பில் கவனம் செலுத்தப்படுமெனதெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215870
  7. 28 MAY, 2025 | 10:39 AM தெற்கு கடற்பகுதியில், ஆழ்கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களை கடத்திய இரண்டு மீன்பிடி படகுகளுடன் 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மாத்தறை தெவுந்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சந்தேக நபர்களிடமிருந்து 450 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த இரண்டு மீன்பிடி படகுகளும் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215871
  8. கேரளாவில் ரசாயனங்களுடன் கவிழ்ந்த கப்பல் - அரபிக்கடல் ஆபத்து தமிழ்நாட்டை நெருங்குமா? பட மூலாதாரம்,X/@INDIACOASTGUARD படக்குறிப்பு,கடலில் கவிழ்ந்த MSC_ELSA3 கப்பல் கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 26 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 27 மே 2025 அரபிக் கடலில் கேரள கரையருகே 640 கண்டெய்னர்களை கொண்ட சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கப்பலிலிருந்து 24 பேரும் மீட்கப்பட்டனர் என்றாலும், அதிலிருந்த ஆபத்தான சரக்குகள், ரசாயனங்கள், 84 டன் எண்ணெய் ஆகியவை கசிந்து பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அச்சம் எழுந்துள்ளது. கசியும் எண்ணெய் அளவு அதிகமாக இருந்தால் அதன் பாதிப்பு தமிழக கரையை எட்டக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். என்ன நடந்தது? மே 23, 2025- கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து வழக்கம் போல் தனது பயணத்தை தொடங்கியது MSC ELSA 3 சரக்குக் கப்பல் . லைபீரிய நாட்டுக் கொடியுடன் ரஷ்யா, ஜார்ஜியா, யுக்ரேன், பிலிபினோ என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 24 பேர் கொண்ட குழுவுடன் கொச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. விழிஞ்சம் துறைமுகம் பெரும் சரக்குக் கப்பல்களை கையாள சமீபத்தில் தொடங்கப்பட்டதாகும். இது ஒரு ஆழ்கடல் கொள்கலன் சரக்கு ஏற்றும் துறைமுகமாகும். அங்கிருந்து புறப்பட்ட MSC ELSA 3 மே 24ம் தேதி கொச்சி துறைமுகத்தை வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால் மே 24ம் தேதி அதிகாலை 12:15 மணிக்கு இந்திய கடலோர காவல்படைக்கு கப்பலிலிருந்து ஒரு அபாய அழைப்பு வந்தது. பட மூலாதாரம்,X/@INDIACOASTGUARD படக்குறிப்பு, மே 24ம் தேதி அதிகாலை 12:15 மணிக்கு இந்திய கடலோர காவல்படைக்கு அபாய அழைப்பு 640 கண்டெய்னர்களை ஏந்திக் கொண்டு கொச்சி நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது, 184 மீட்டர் நீள கப்பலான MSC ELSA 3 சாயத் தொடங்கியது. கொச்சியிலிருந்து தென்மேற்கு திசையில் 38 நாடிக்கல் மைல் தூரத்தில் இருந்த போது தோராயமாக 26 டிகிரி அளவில் சாய தொடங்கியது சரக்குக் கப்பல். உடனடியாக இந்திய கடலோர காவல்படை அருகில் இருந்த கப்பல்களை மீட்புப் பணிகளுக்கு திருப்பிவிட்டது. நிலைமைகளை கண்காணிக்க வானில் விமானமும் வந்தது. கப்பல் தொடர்ந்து சாய்ந்துக் கொண்டே இருந்தது, சில கண்டெய்னர்கள் கடலில் விழத் தொடங்கின. மே 24ம் தேதி மாலையில் இந்திய கப்பற்படை மீட்புப் பணியில் இறங்கியது. கப்பலில் உள்ள 24 பேரை மீட்க INS Satpura, INS Sujata என இரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்டன. INS Sujata இரவு 7 மணிக்கு வந்தது, INS Satpura எட்டு மணிக்கு வந்தடைந்தது. வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே 24ம் தேதி தொடங்கியிருந்தது. எனவே கடலில் வானிலை மோசமாக இருந்தது. "நாங்கள் மோசமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. காற்று மணிக்கு 74.08 கி.மீ (40 நாட்ஸ்) வேகத்தில் வீசியது. கடலில் கழிவுகளும் கண்டெய்னர்களும் மிதந்தன. இதனால் இரவு நேரத்தில் கப்பலை நெருங்கிச் செல்வது கடினமாக இருந்தது" என்று INS Sujata கப்பலின் கேப்டன் அர்ஜூன் ஷேகர் ஏ என் ஐ செய்தி முகமைக்கு தெரிவித்தார். பட மூலாதாரம்,X/@INDIACOASTGUARD படக்குறிப்பு, கவிழ்ந்த கப்பலிலிருந்து மீட்கப்பட்ட ஊழியர்கள் கப்பலிலிருந்த 24 பேரில் 21 பேர் உயிருக்கு ஆபத்தில்லாமல் அன்று இரவு மீட்கப்பட்டனர். கப்பலில் இன்னும் கண்டெய்னர்கள் இருந்ததாலும், கப்பல் முழுமையாக கவிழாததாலும், அதில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, நிலைமைகளை கண்காணிக்க கப்பலின் மாஸ்டர், தலைமை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் கப்பலிலேயே இருந்தனர். இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பற்படையினரின் கண்காணிப்புகளுக்கு இடையே அன்றிரவை மூவரும் கப்பலிலேயே கழித்தனர். மே 25ம் தேதி அதிகாலை சரக்குகள் வைக்கப்படும் பகுதி ஒன்றில் கடல்நீர் வெள்ளம் போல் உள்ளே நுழைந்தது. கப்பல் "வேகமாக" ஒரு புறம் கவிழத் தொடங்கியது. "அவர்கள் மூவரும் மேலும் அந்த கப்பலில் இருந்தால் அவர்களுக்கு ஆபத்தாகும் என்று கருதப்பட்டது" என்று இந்திய கப்பற்படை செய்தி தொடர்பாளர் அதுல் பிள்ளை தெரிவித்தார். ரஷ்யாவை சேர்ந்த கப்பலின் மாஸ்டர் உட்பட மூன்று பேரும் கப்பலை விட்டு வெளியேறினர். INS Sujata கப்பலில் அவர்கள் மீட்கப்பட்டனர். பட மூலாதாரம்,X/@INDIACOASTGUARD படக்குறிப்பு, INS Sujata கப்பல் மீட்புப் பணியில் ஈடுபட்டது கப்பலில் என்ன இருக்கிறது? MSC ELSA 3-ல் "640 கண்டெய்னர்கள் இருந்தன. அவற்றில் 13 கண்டெய்னர்களில் ஆபத்தான சரக்கு இருக்கிறது, 12 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைட் உள்ளது. மேலும் கப்பலில் 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் ஃபர்னஸ் எண்ணெய் இருந்துள்ளது" என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த விபத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் ஆபத்தை தவிர்க்க, கடலோர காவல்படையின் இரண்டு கப்பல்கள் 'சக்‌ஷம்' மற்றும் 'சமர்த்' மாசு கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒரு டார்னியர் விமானமும் இந்தப் பணியில் இறங்கியுள்ளது. இதையடுத்து, கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளா கடற்கரை பகுதி முழுவதுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. "எண்ணெய் கசிவு கேரள கரையில் எங்கு வேண்டுமானாலும் சென்று சேரலாம். கண்டெய்னர்கள் கடலில் மணிக்கு 3 கி.மீ என்ற வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருக்கின்றன. கண்டெய்னர்களில் இருக்கும் எண்ணெய் தவிர, கப்பலில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளும் கசியத் தொடங்கியுள்ளது" என்று உயர்மட்டக் கூட்டத்தின் முடிவில் கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 26ம் தேதி கொல்லம் மற்றும் ஆலப்புழா கரை அருகே கடலில் விழுந்த கண்டெய்னர்கள் கரை ஒதுங்க தொடங்கியுள்ளன. கண்டெய்னர்களில் ஆபத்தான சரக்குகள் இருக்கலாம் என்பதால் அவற்றை பொது மக்கள் தொட வேண்டாம் என்று கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது. படக்குறிப்பு,MSC_ELSA3 கப்பல் கவிழ்ந்த இடம் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் எந்த திசையில் செல்லும்? கடலில் காற்றின் திசை தெற்கு நோக்கியே வீசுவதால் கண்டெய்னர்கள் தெற்குப் பக்கமாகவே நகரக்கூடும் என்று மூத்த கடல்வள ஆராய்ச்சியாளரும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் விஞ்ஞானியுமான டாக்டர் சுனில்குமார் முகமது கூறுகிறார். "கொச்சி நோக்கி வந்துக் கொண்டிருந்த கப்பல் 30 கி.மீ வரை தெற்கு நோக்கிச் சென்ற பின்பே கவிழ்ந்துள்ளது. கப்பல் கவிழ்ந்த இடத்திலிருந்து 60 கி.மீ தெற்கு திசையில் கொல்லத்தில் கண்டெய்னர் கரை ஒதுங்கியுள்ளது. எனவே வடக்கு திசையில் இது நகர்வதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு" என்கிறார். இது குறித்து INCOIS (கடல்சார் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம்) தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன் படி, "மே 25ம் தேதி இரவு 11 மணி நிலவரப்படி எண்ணெய் தென்கிழக்கு திசையில் நகர்கிறது. மே 26ம் தேதி காலை 11 மணியளவில் கிழக்கு-தென் கிழக்கு திசையில் எண்ணெய் கசிவு தொடர்ந்து கரையை நோக்கி நகரும். சுமார் 12 மணி நேரங்களுக்குப் பிறகு மே 26ம் தேதி இரவு 11 மணிக்கு ஆலப்புழாவுக்கு அருகில் கரையை அடைந்து, 11.4 நாடிக்கல் மைல் அளவுக்கு கரையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மறு நாள் மே 27ம் தேதி பாதிப்புக்குள்ளான கரையின் நீளம் 23 நாடிக்கல் மைல்லாக அதிகரிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு ஏற்படுவதற்கு 80% வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்பட்டுளது. INCOIS இயக்குநர் பாலகிருஷ்ணன் டி எம் பிபிசி தமிழிடம் பேசுகையில், "எண்ணெய் கசிவு கொல்லம், ஆழப்புழா தாண்டி திருவனந்தபுரம் வரை செல்லும் என்று கணிக்கிறோம். இப்போது வரை எண்ணெய் அளவு அதிகமாக இருப்பதாக தெரியவில்லை. எனவே தமிழ்நாடு கரை வரை செல்லாது என்று நினைக்கிறோம்" என்றார். எனினும் கண்டெய்னர் மற்றும் கப்பலின் பாகங்கள் கன்னியாகுமரி வரை செல்லக்கூடும்" என்றார். ஆனால் உண்மையில் எவ்வளவு எண்ணெய் கசிந்துள்ளது என்பது யாருக்கும் தெரியாது என்பதே இதில் இருக்கும் மிகப்பெரிய சவால் என்றார். "அதிக அளவிலான எண்ணெய் கசிந்திருந்தால் அது அதிக தூரம் செல்லக்கூடும். சென்னை எண்ணூரில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட போது 100 கி.மீ வரை தெற்கு நோக்கி நகர்ந்தது. அதே போன்று இதிலும் அதிக அளவிலான எண்ணெய் இருந்தால், அது தமிழ்நாடு கரையை தொடக்கூடும். இரண்டு மூன்று நாட்களில் கன்னியாகுமரி வந்தடையும் அங்கிருந்து இலங்கை வரை கூட செல்லும், இது தான் எண்ணெய் கசிவின் கணிக்கப்பட்ட பாதையாக இருக்கும்" என்றார். என்ன ஆபத்து ஏற்படலாம்? பட மூலாதாரம்,DR.BALAKRISHNAN படக்குறிப்பு,பாலகிருஷ்ணன் டி எம், INCOIS இயக்குநர் இந்தக் கப்பலில் 12 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைட் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்சியம் கார்பைட் மாம்பழம் உள்ளிட்ட பழங்களை துரிதமாக பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் ரசாயனம், இது மனித உட்கொள்ளுதலுக்கு உகந்தது அல்ல. இந்த விபத்தின் மூலம் கால்சியம் கார்பைட் கடலில் கசியலாம் என்று அஞ்சப்படுகிறது. "கால்சியம் கார்பைட் கடல்நீருடன் கலக்கும் போது, அது அசிடிலின் வாயுவாக மாறும். அது வாயுவாக மாறும் போது, ஆவியாக வெளியேறிவிடும் என்பதால் பெரும் பாதிப்புகள் எதுவும் இருக்காது" என்று கூறும் சுனில் முகமது இது குறுகிய கால பாதிப்பே, நாம் கவலைப்பட வேண்டிய நீண்ட கால பாதிப்புகள் பல இருக்கின்றன என்கிறார் சுனில்குமார் முகமது. எண்ணெய் கசிவால் நீண்ட கால பாதிப்புகளின் தாக்கமே அதிகமாக இருக்கும். "இப்போது ஆலப்புழா கரைப்பகுதிகளில் காற்று மற்றும் அலைகள் காரணமாக கடலுக்கு அடியில் மண் திட்டுகள் (mud banks) உருவாகும் காலம். இந்நேரத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், நீர், மற்றும் மண்ணுடன் சேர்ந்து அது கலந்து கருப்பு உருண்டைகள் (tar balls) உருவாகும். அவை கடலில் மிதந்து கரையை வந்து சேரும். 80 டன் எரிபொருள் உள்ளது. அது எந்த அளவுக்கு பாதுகாப்பாக உள்ளது என்று தெரியாது" என்கிறார். இவை மட்டுமல்லாமல், "கப்பலில் 'ஆபத்தான சரக்கு' கள் உள்ளன என்று மட்டும் தான் கூறப்பட்டுள்ளது, அதில் என்னவுள்ளன என்று தெரிவிக்கப்படவில்லை. ரசாயனங்கள் இருக்கலாம், கதிரியக்கப் பொருட்கள் இருக்கலாம்"என்றார். பட மூலாதாரம்,DR.SUNILKUMAR MOHAMED படக்குறிப்பு, Dr. சுனில்குமார் முகமது, கடல்வள ஆராய்ச்சியாளர் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு கேரள கடற்கரை கடல்வளங்கள் அதிகமாக இருக்கும் வளமான பகுதியாகும். எனவே அப்பகுதியில் உள்ள தாவரங்கள் மற்றும் மீன்வளங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர். "ஒரு மதிப்பீட்டின் படி பத்து ஆண்டு காலத்தில் இங்குள்ள மீனவர்கள் 1000 வகையான உயிரினங்களை பிடித்துள்ளனர். இந்த இடத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அது உணவு சங்கிலியை வெகுவாக பாதிக்கும். எண்ணெய் கசிவினால் ஹைட்ரோ கார்பன்ஸ் வெளியாகும். இதனால் மீன்வளம் பாதிக்கப்படும், அதை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்" என்று சுனில் முகமது கூறுகிறார். "கேரள கரைப் பகுதியில் 'upwelling' ஆழத்தில் உள்ள சத்துகள் நிறைந்த நீர் கடற்பரப்பை நோக்கி மேல் எழும்புவது தீவிரமாக நடைபெறும். இதனால் அந்தப் பகுதியில் கடல் வாழ் உயிரினங்களின் உணவுச் சங்கிலியில் மிக முக்கிய பங்காற்றும் phytoplankton எனும் கடல் தாவர வகைகள் அதிகம் உள்ளன" என்று பாலகிருஷ்ணன் கூறுகிறார். எண்ணெய் கசிவின் தீவிரத்தைப் பொருத்து இவை எல்லாம் பாதிப்புக்குள்ளாகும் என்கிறார் அவர். பட மூலாதாரம்,X/@INDIACOASTGUARD படக்குறிப்பு, கவிழ்ந்த கப்பலிலிருந்து விழுந்த கண்டெய்னர்கள் மீனவர்களுக்கு பாதிப்பு மீன்பிடிக்க ஏதுவான இடம் குறித்த தகவல்களை INCOIS தினசரி மீனவர்களுக்கு அனுப்பி வருகிறது. இந்த விபத்து ஏற்பட்டது முதல் எண்ணெய் கசிவு அபாயம் இருப்பதால் தெற்கு கேரள கரையோரம் இருக்கும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மீனவர்களை வெகுவாக பாதித்துள்ளது என்கிறார் சுனில் முகமது, "தென்மேற்கு பருவமழை தொடங்கிய நேரத்தில், கடல் அமைதியாக இருக்கும். அலைகள் பெரிதாக இல்லாத இந்த காலத்தை மலையாளத்தில் 'சாகரா' (இறந்த கரை) என்று அழைப்பார்கள், இது மீன்பிடிக்க மிகவும் உகந்த நேரமாகும்" என்கிறார். மீட்புப் பணிகளுக்கு சவாலாக இருக்கும் பருவமழைக் காலம் எண்ணெய் கசிவின் தீவிரத்தையும், வெளியே தெரிவிக்கப்படாத 'ஆபத்தான' சரக்குகளையும் கட்டுப்படுத்துவதே மீட்புப் பணிகளின் முக்கிய நோக்கமாகும். பருவமழை தொடங்கியுள்ளதால் கடலில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. கடல் அலைகள் 3 முதல் 4 மீட்டர் உயரம் வரை எழும்புகின்றன. இதனால் எண்ணெய் கசிவு ஒரு இடத்தில் இல்லாமல் மற்ற இடங்களுக்கு எளிதாக பரவும் வாய்ப்புள்ளது. "MSC ELSA 3 பழைய கப்பல் என்பதால் கண்டெய்னர்களுக்கு ஒரு அடுக்கு பாதுகாப்பு (single hull) மட்டுமே இருந்துள்ளது. எனவே எண்ணெய் கசிவு எளிதாக ஏற்படலாம்" என்று இந்த விவகாரங்கள் குறித்து அறிந்திருந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். காற்று தெற்கு திசையில் வீசிக் கொண்டிருப்பதால் இந்த கசிவுகள் கரையை நோக்கியே வரும் என்றும் கடலுக்குள் செல்ல வாய்ப்பில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கரையை நோக்கி வரும் போது, அதன் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். எண்ணெய்க் கசிவை கட்டுப்படுத்துவது எப்படி? எண்ணெய்க் கசிவை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பங்கள் உள்ளன. கடலோர காவல்படையின் விமானம் கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் மூலம் எண்ணெய் கசிவு எங்கு உள்ளது, எவ்வளவு தூரம் உள்ளது என்று கணிக்க முடியும். அதை பரவவிடாமல் ஒரே இடத்தில் கட்டுப்படுத்தி வைக்கும் தொழில்நுட்பம் உள்ளது. பிறகு எண்ணெய்யை இலகுவாக்கும் ரசாயனங்கள் கலந்து அவை கரையை வந்து அடையாமல் தவிர்க்கப்படும். அல்லது, எண்ணெய்யை பம்ப் செய்து வெளியேற்றவும் முடியும். கடலோர காவல்படையின் கப்பல் ஒன்று மாசு கட்டுப்படுத்தும் பணிகளுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டு, பணியில் உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2ejdvr7gwo
  9. LSG vs RCB: சேஸிங்கில் அதிரடி காட்டிய கோலி, ஜிதேஷ் - வீணான ரிஷப் பந்தின் சதம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்சிபி அணியின் கேப்டன் ஜிதேஷ் ஷர்மா (வலது), லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியின் ரிஷப் பந்த்( இடது) கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் 2025 ஐபிஎல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. கடைசியாக ப்ளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள் எந்த இடங்களைப் பிடித்துள்ளன என்பது தெரிந்து, முதல் தகுதிச்சுற்றில் யார் விளையாடுவது என்பது முடிவாகியுள்ளது. இதன்படி, லக்னெள அணியை ஆர்சிபி வென்றதையடுத்து, முதல் தகுதிச் சுற்றில் விளையாட ஆர்சிபி அணி தகுதி பெற்று, பஞ்சாப் அணியுடன் நாளை (29ஆம்தேதி) மோதுகிறது. எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது. இதில் முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். அதில் தோற்கும் அணிக்கு 2வது வாய்ப்பாக, எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணியுடன் மோதி அதில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் விளையாடும். மூன்றாவது அதிகபட்ச சேஸிங் லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த லக்னெள அணி 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்தது. 228 ரன்கள் எனும் கடின இலக்கைத் துரத்திய ஆர்சிபி அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இது ஐபிஎல் வரலாற்றில் 3வது அதிகபட்ச சேஸிங்காகும். 2024இல் பஞ்சாப் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை சேஸ் செய்துள்ளது. அதற்கு முன் பஞ்சாப் அணிக்கு எதிராக 2010ஆம் ஆண்டு 204 ரன்களை ஆர்சிபி சேஸ் செய்திருக்கிறது. இந்நிலையில், 228 ரன்கள் என்பது ஆர்சிபியின் 3வது அதிகபட்ச சேஸிங்காகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்டத்தின் முடிவில் தங்கள் வெற்றியைக் கொண்டாடும் ஆர்சிபி அணியினர் ஆட்டநாயகன் ஜிதேஷ் ஷர்மா ஐபிஎல் சீசனில் லீக் போட்டிகளில் சொந்த மைதானம் தவிர்த்து வெளி மைதானங்களில் நடந்த அனைத்துப் போட்டிகளிலும் வென்ற ஒரே அணி என்ற பெருமையை ஆர்சிபி பெற்றது. ஆர்சிபிக்கு இந்த சீசனில் 7 போட்டிகள் வெளி மைதானங்களில் நடந்தன. அவை அனைத்திலும் வென்றது. ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் விராட் கோலியின் 54 ரன்களும், கேப்டன் ஜிதேஷ் ஷர்மா ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் சேர்த்த 85 ரன்களும்தான். ஜிதேஷ் ஷர்மா 6வது வரிசைக்கும் கீழாகக் களமிறங்கி 3வது அதிகபட்ச ஸ்கோரை நேற்று பதிவு செய்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். கடந்த 2019இல் ஹர்திக் பாண்டியா எடுத்த 91 ரன்களையும், 2018இல் ரஸல் எடுத்த 88 ரன்களையும் 6வது வரிசைக்கு கீழாகக் களமிறங்கி அடித்துள்ளனர். கோலியின் மைல்கல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட் கோலி இந்த ஐபிஎல் சீசனில் விராட் கோலி அடித்த 8வது அரைசதம் இது. கோலி அரைசதம் அடித்த அனைத்துப் போட்டிகளிலும் ஆர்சிபி அணி வென்றுள்ளது. அது மட்டுமின்றி 5வது சீசனாக கோலி 600 ரன்களுக்கும் மேலாகச் சேர்த்துள்ளார். கே.எல்.ராகுல் 4 முறை மட்டுமே 600 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார். ஆர்சிபி அணிக்காக விராட் கோலி இதுவரை 9030 ரன்கள் சேர்த்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக முதல்முறையாக 9 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்த முதல் வீரராக கோலி இருக்கிறார். அடுத்ததாக மும்பை அணிக்காக ரோஹித் ஷர்மா 6 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார். ரிஷப் பந்த் லக்னெள அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று இந்தப் போட்டி தவிர்த்து ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருந்தார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் 61 பந்துகளில் 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து லக்னெள ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தார். ஆனால், ரிஷப் பந்தின் சதம் நேற்று வெற்றியாக மாறியிருந்தால் ஏதேனும் பலன் இருந்திருக்கும். ஜிதேஷ் அதிரடி ஆட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா ஜிதேஷ் ஷர்மா களமிறங்கும்போது ஆர்சிபி அணி வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் கோலியை இழந்திருந்தது. அணி 123 ரன்களை எடுத்திருந்தது. 9 ஓவர்களில் வெற்றிக்கு 105 ரன்கள் சேர்க்க வேண்டியிருந்தது. கோலி ஆட்டமிழந்த பின் மதில் மேல் பூனையாக ஆர்சிபி அணி இருந்தது. ஆனால் ஜிதேஷ் ஷர்மா களமிறங்கியவுடன் பவுண்டரியுடன் தனது ஆட்டத்தைத் தொடங்கினார். கடைசி 7 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 89 ரன்கள் தேவைப்பட்டன. மயங்க் அகர்வாலும் அவ்வப்போது பவுண்டரி அடித்து சுறுசுறுப்பாக பேட் செய்து ரன்ரேட்டை உயர்த்தினார். ரூர்கே வீசிய ஓவரில் ஜிதேஷ் சிக்ஸர், பவுண்டரி என 17 ரன்கள் சேர்த்து நம்பிக்கை பெற்றார். ஷாபாஸ் அகமது வீசிய 15வது ஓவரில் ஜிதேஷ் 2 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடித்தார். மயங்க் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடித்து ஆர்சிபியின் ரன்ரேட்டை உயர்த்தினர். கடைசி 5 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்டன. ஆவேஷ் கான் வீசிய 16வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசி அதிரடியாக 22 பந்துகளில் ஜிதேஷ் அரைதம் விளாசினார். கடைசி 3 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டன. ரூர்கே ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி வெற்றியை நெருங்க வைத்தார் ஜிதேஷ் ஷர்மா. ஆயுஷ் பதோனி வீசிய 19வது ஓவரில் ஜிதேஷ் சிக்ஸர் விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மன்கட் அவுட் - ரிஷப் பந்தின் ஸ்போர்ட்மேன்ஷிப் பட மூலாதாரம்,GETTY IMAGES திக்வேஷ் ராதி வீசிய ஓவரில் அவர் பந்துவீசும் முன்பே நான்-ஸ்ட்ரைக்கர் பகுதியில் இருந்த ஜித்தேஷ் ஷர்மா கிரீஸை விட்டு வெளியே சென்றார். இதைப் பார்த்த திக்வேஷ் ராதி மன்கட் ரன்அவுட் செய்து நடுவரிடம் அப்பீல் செய்தார். கள நடுவரும் 3வது நடுவருக்கு பரிந்துரைக்க டிவி ரீப்ளேவில் ஜிதேஷ் ஷர்மா மன்கட் அவுட்டில் ஆட்டமிழந்தார் என்பது தெரிந்தது. ஜிதேஷ் ஷர்மா ஆட்டமிழந்து விடுவார் என்று எண்ணப்பட்டது. ஆனால் திடீரென நாட்-அவுட் என்று வந்தது. கேப்டன் ரிஷப் பந்த் அவுட் வழங்க வேண்டாம், மன்கட் அவுட்டில் கிடைக்கும் அவுட் வேண்டாம் என்று நடுவரிடம் கூறியது அதன் பிறகே தெரிய வந்தது. இதை அறிந்ததும், ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா ரிஷப் பந்தை கட்டி அணைத்து தோளில் தட்டிக்கொடுத்துச் சென்றார். ஒருவேளை ஜிதேஷ் ஷர்மா ஆட்டமிழந்திருந்தால் ஆர்சிபி நிச்சயமாகத் தோல்வியைத் தழுவியிருக்கும். ஆனால், ரிஷப் பந்த் தனது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்தி, கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு என்ற அணுகுமுறையை வெளிப்படுத்தினார். கோலி, சால்ட் வலுவான தொடக்கம் விராட் கோலி, பில் சால்ட் வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்து 5.4 ஓவர்களில் 61 ரன்கள் சேர்த்துப் பிரிந்தார். விராட் கோலி 2வது ஓவரிலேயே 4 பவுண்டரிகளை விளாசியதால் ரன்ரேட் எகிறியது. 4 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 50 ரன்களை எட்டியது. ஆகாஷ் சிங் ஓவரில் சால்ட் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி தனது அதிரடியைத் தொடர்ந்து 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். சேஸிங் மாஸ்டராக விளங்கிய கோலி களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரன்ரேட் 11க்கு குறையாத வகையில் கொண்டு சென்றார். தேவைப்படும் நேரத்தில் பவுண்டரிகளை விளாசியும், ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தும் கோலியின் ஆட்டம் உற்சாகமாக இருந்தது. ஆனால், பட்டிதார் 14 ரன்னில் ரூர்கே ஓவரில் ஆட்டமிழந்ததும் அடுத்த பந்தில் லிவிங்ஸ்டோன் கால்காப்பில் வாங்கி வெளியேறியது ஆர்சிபி அணிக்கு சற்று அதிர்ச்சியளித்தது. மயங்க் அகர்வால், கோலி கூட்டணி அணியை அந்தச் சரிவிலிருந்து மீட்டு மீண்டும் வெற்றியை நோக்கி நகர்த்தினர். கோலி 54 ரன்களில் ஆவேஷ் கானின் ஸ்லோ பாலில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த், மார்ஷ் பார்ட்னர்ஷிப் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆர்சிபி அணியின் பில் சால்ட் ஐபிஎல் சீசன் முழுவதும் 4வது அல்லது 5வது வீரராகக் களமிறங்கிய ரிஷப் பந்த் நேற்று 3வது வீரராகக் களமிறங்கி சதம் அடித்து 118 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களும் அடங்கும். அதிலும் ரிஷப் பந்த் சதம் அடித்தவுடன் மைதானத்தில் தலை குப்புற "பிரண்ட்ஃபிளிப் ஷாட்" அடித்துக் கொண்டாடினார். ரிஷப் பந்த் நேற்று தீர்மானத்துடன்தான் களமிறங்கினார், யஷ் தயால் முதல் ஓவரிலேயே சிக்ஸர், 2 பவுண்டரி என 18 ரன்கள் சேர்த்தார். புவனேஷ்வர் ஓவரில் சிக்ஸர், லிவிங்ஸ்டோன் ஓவரில் சிக்ஸர், பவுண்டரி அடித்து 29 பந்துகளில் ரிஷப்பந்த் அரைசதம் அடித்தார். நிதானமாக ஆடிய மார்ஷ், 23 பந்துகளில் 33 ரன்களுடன் இருந்தவர், ரிஷப் பந்தின் அதிரடியைப் பார்த்து அடுத்த 8 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து அரைசதம் அடித்தார். ரிஷப் பந்த், மார்ஷ் ஜோடி 152 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். மார்ஷ் 67 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் ரிஷப் பந்த் காட்டிய அதிரடி தொடர்ந்தது. 54 பந்துகளில் சதம் அடித்த அவர் மைதானத்தில் தலைகுப்புற பல்டி அடித்து தனது சதத்தைக் கொண்டாடினார். 'என்னால் நம்ப முடியவில்லை' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சதம் அடித்ததைக் கொண்டாடும் லக்னௌ அணியின் ரிஷப் பந்த் ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா பேசுகையில், "என் கருத்துகளை வெளிப்படுத்த முடியவில்லை. நான் இப்படி ஒர் ஆட்டம் ஆடுவேனா என்பதை என்னால் நம்ப முடியவில்லை. விராட் ஆட்டமிழந்த பிறகு ஆட்டத்தைக் கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தேன். என் குருநாதர் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தில் கடைசி வரை இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அனைத்து சுமைகளும் என் மீது இருந்தன. விராட், குர்னால், புவி ஆகியோருடன் ஒரு கேப்டனாக ஆடும் ஆட்டம் எனக்கு உற்சாகம் அளித்தது. இந்த தருணத்தை மகிழ்ச்சியாக்க விரும்பினேன்," என்று தெரிவித்தார். மேலும், "சரிவிலிருந்து அணியை மீட்கும் பணியைத் தொடங்கினேன். இதே ஆட்டம் அடுத்து வரும் போட்டிகளிலும் தொடரும், எனக்கு கேப்டன் வாய்ப்பளித்த பட்டிதாருக்கு நன்றி. நாக்-அவுட் சுற்றில் ஹேசல்வுட் விளையாடுவார், நாங்கள் மேட்ச் வின்னர்களாக உருவாகியுள்ளோம்," எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y84jvvxyko
  10. Published By: DIGITAL DESK 3 28 MAY, 2025 | 01:51 PM திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் அரசுக் கட்சி அறிவித்துள்ளது. திருகோணமலை தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த முடிவை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட குழு தலைவருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். சபைக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு குறித்த தெரிவானது ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். திருகோணமலை முதலாவது மாநகர சபைக்காக தமிழ் அரசுக் கட்சி சார்பில் 9 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 6 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பாக 4 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் சார்பாக தலா 1 உறுப்பினர்களுமாக மொத்தமாக 25 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இங்கு ஆட்சியமைப்பதற்கு 13 உறுப்பினர்கள் தேவைப்படுகின்ற நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கவுள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை (27) தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் ஆதரவளிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/215899
  11. Published By: VISHNU 28 MAY, 2025 | 03:19 AM (எம்.ஆர்.எம்.வசீம்) கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 40பேரை கைதுசெய்து சிறையில் அடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது சிறையில் இருப்பவர்கள் சிலரும் அந்த பட்டியலில் இருக்கின்றனர் என தேசிய சுதந்தி முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றின் பாேதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரச நிறுவனங்களின் அதிகாரிகளை கைதுசெய்து சிறைக்கு அனுப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. நல்லாட்சி அரசாங்க காலத்திலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போதும் அந்த அரசாங்கத்தில் இந்த நடவடிக்கையை அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவருடன் இருந்தவர்களே மேற்கொண்டுவந்தனர். உர கப்பல் ஒன்றுக்கு பணம் செலுத்தியதாக தெரிவித்து அரச அதிகாரிகள் சிலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவை கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். இவ்வாறு செயற்பட்டால் அரச இயந்திரம் செயலிழந்துவிடும். அரச அதிகாரிகள் எந்த தீர்மானங்களையும் எடுக்காமல்போகும் நிலை ஏற்படும். தீர்மானம் எடுத்தால் சிறைக்கு செல்ல நேரிடும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்படும். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு 29ஆம் திகதி வருமாறு எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது. வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில், வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகள், மாலிகாவத்தையில் இடிந்துவிழும் நிலையில் இருந்த கடைத்தொகுதி ஒன்றை அதிகாரசபையின் நிதி மூலம் அதனை செப்பனிட்டு, அதனை வாடகைக்கு வழங்க கேள்விகோரல் விடுத்திருக்கின்றனர். யாரும் வராதநிலையில் அதில் விலை குறைப்பு மேற்கொண்டு மீண்டும் கேள்விகோரலுக்கு விட்டபோது ஒருவர் அதனை வாங்கி இருக்கிறார். இதற்கான அனுமதி அப்போது இருந்த குழுக்களின் அனுமதியை பெற்றுக்கொண்டு, இறுதியாக பணிப்பாளர் சபை, அதற்கு அனுமதி வழங்கி இருக்கிறது. இதற்கும் அமைச்சருக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் வீடமைப்பு அதிகாரசபையின் நடவடிக்கையால் அரசாங்கத்துக்கு நட்டமடைந்துள்ளதாகவும். அப்போது இந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில் இதுதொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்காெள்ள வருமாறு அழைப்பு வந்திருக்கிறது. எப்படியாவது எம்மை சிக்க வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பழைய விடயங்களை அரசாங்கம் கிழறிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு கைதுசெய்வதற்கு 40பேரின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதில் தற்போது செயற்பாட்டு அரசியலில் இருப்பவர்களும் இ்ல்லாதவர்களும் அடங்குகின்றனர். அந்த பட்டியலில் தற்பாேது கைதுசெய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் சிலரும் அடங்குகின்றனர். அதேபோன்று முன்னாள் அமைச்சர்களான காஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரண ஆகியோரின் பெயர்களும் உள்ளடங்குகின்றன. நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் நாயகம் அடிக்கடி ஜனாதிபதி செயலகத்துக்கு சென்று அதுதொடர்பில் ஆலாேசனை கேட்டுவருகிறார். ஜனாதிபதி செயலகத்திலே இந்த பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கத்துக்கு வாக்குகள் குறைவடைய காரணம் திருடர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறியமையாகும் என்றே இவர்கள் நினைக்கின்றனர். அதனடிப்படடையிலே தற்போது 40பேரை கைதுசெய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/215862
  12. Published By: VISHNU 28 MAY, 2025 | 03:01 AM ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, ஆஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும், இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர் நலன்சார்ந்து வலுப்பெற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் செவ்வாய்க்கிழமை (27) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது, பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், அரசாங்க மாற்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரையிலான தற்போதைய தமிழ் அரசியல் குறித்து உயர்ஸ்தானிகரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். வடக்கு மற்றும் கிழக்கு தொடர்பான நிலப் பிரச்சினைகள், வடக்கு மாகாணத்தில் சுமார் 6000 ஏக்கர் கடலோர நிலங்களை அரசு நிலங்களாக அறிவிக்கும் சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவிப்பு குறித்தும், தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வாக வடக்கு மற்றும் கிழக்கில் நிலங்கள், காவல்துறை மற்றும் நிதி ஆகியவற்றில் மீளமுடியாத அதிகாரங்களைக் கொண்ட சமஸ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு நிறுவப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், அவரது துணைவியார் கிரிட்டினா ஸ்டீபன்ஸ், திட்ட ஒத்துழைப்புக்கான முதல் செயலாளர், திருமதி ஜோ கிட், அரசியல் துறைக்கான இரண்டாவது செயலாளர் திரு. மேத்யூ லார்ட் மற்றும் மூத்த ஆராய்ச்சி அதிகாரி திரு. சில்வெஸ்டர் வொர்திங்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/215859
  13. பட மூலாதாரம்,TAMIL NADU POLICE படக்குறிப்பு, ஏடிஎம் கொள்ளையில் கைது செய்யப்பட்ட மூவர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 27 மே 2025 "எந்த ஊருக்குச் சென்றாலும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே தங்குகின்றனர். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். விடுமுறை தினம் என்பதால் ஏடிஎம் சேவையில் குறைபாடு ஏற்பட்டு அதை வங்கிகள் கவனிப்பதற்குள் தப்பிவிடுகின்றனர்" என்கிறார் சென்னை, திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் முகமது புகாரி. மே 26 அன்று ஏடிஎம் இயந்திரத்தின் பெட்டியை உடைக்காமல் கொள்ளையடித்ததாக உ.பி-யை சேர்ந்த மூன்று பேர் கைதான விவகாரத்தில் அவர்களின் பின்னணி குறித்து பிபிசி தமிழிடம் இவ்வாறு அவர் தெரிவித்தார். ஏடிஎம் மைய கொள்ளைச் சம்பவத்தில் என்ன நடந்தது? பணம் திருடு போனால் பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன? சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வரும் நரேன்குமார், ஹிட்டாச்சி ஏடிஎம் சர்வீஸ் (Hitachi ATM Service) நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஞாயிறு அன்று தங்களின் மும்பை அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாக, திருவான்மியூர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளார். திருவான்மியூர், திருவள்ளூவர் நகரில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கிக் கிளையின் ஏடிஎம் மையத்தில் ஏதோ தவறு நடந்துள்ளதாகவும் அதை உடனே சென்று சோதனை செய்யுமாறு தங்கள் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியதாக புகார் மனுவில் நரேன்குமார் குறிப்பிட்டுள்ளார். ஏடிஎம் மையத்தில் சோதனை செய்தபோது, பணம் வெளியில் வரக் கூடிய இடத்தின் உள்புறத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து பணம் வெளியில் வராமல் சிலர் தடுத்துள்ளதாக அவர் மனுவில் கூறியுள்ளார். அதிகாலை கொடுத்த அதிர்ச்சி பட மூலாதாரம்,TAMIL NADU POLICE படக்குறிப்பு, கொள்ளை சம்பவம் நிகழ்ந்த ஏடிஎம் 'வங்கிக் கிளையின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, ஞாயிற்றுக்கிழமை (மே 25) அதிகாலை சுமார் 4.30 மணியளவில் ஏடிஎம் இயந்திரத்தின் முதல் கதவை இரண்டு பேர் திறந்துள்ளனர். பணம் வரக்கூடிய இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்' என புகார் மனுவில் நரேன்குமார் கூறியுள்ளார். அதன்பிறகு வாடிக்கையாளர் ஒருவர் 1500 ரூபாயை எடுக்க முயன்றும் வராததால் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் அதைச் சோதிக்க சென்றபோது குற்றச் சம்பவம் நடந்திருப்பதை தான் உறுதி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ". இதனால் பணம் வெளியில் வராமல் உள்ளேயே நின்றுவிடும். பிறகு போலி சாவி மூலம் லாக்கரை திறந்து அங்கு கிடக்கும் பணத்தை எடுத்துள்ளனர்" எனக் கூறுகிறார், திருவான்மியூர் காவல்நிலைய ஆய்வாளர் முகமது புகாரி. "இரண்டாவது லாக்கர் என்பது பணம் வைக்கப்படும் இடம் என்பதால், அதை உடைத்தால் அலாரம் சத்தத்தை எழுப்பும் என்பதால் அதை கைதான நபர்கள் தொடவில்லை" எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். முதல் லாக்கரைத் திறப்பதற்கு பயன்படுத்திய சாவி என்பது அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் பொருந்தக் கூடிய தோற்றத்தில் இருந்ததாகக் கூறும் முகமது புகாரி, "ஏடிஎம் இயந்திரத்தில் எந்தெந்த வகைகளில் கொள்ளையடிக்கலாம் என்பதை சமூக வலைதளங்களின் மூலமாக கைதான நபர்கள் கற்றுக் கொண்டு திருடியுள்ளனர்" எனக் கூறினார். "தமிழ்நாட்டில் 3 மாதங்கள்" பட மூலாதாரம்,முகமது புகாரி படக்குறிப்பு, காவல் ஆய்வாளர் முகமது புகாரி. ஏடிஎம் இயந்திரத்தில் பணம் திருடு போன சம்பவத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் சிங், பிரிஜ்பான், ஸ்மித் யாதவ் ஆகியோரை, திங்கள் கிழமையன்று திருவான்மியூர் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் குல்தீப் சிங் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். மற்ற இருவரும் விவசாய வேலை பார்த்து வந்துள்ளனர். "மூவரும் உ.பி-யில் உள்ள கான்பூரில் ஒரே ஊரில் வசிப்பவர்கள். தமிழ்நாட்டுக்கு மார்ச், ஏப்ரல், மே என மூன்று மாதங்கள் மட்டும் தங்கி ஏடிஎம் மையங்களில் திருட வந்துள்ளனர். முதலில் செங்குன்றம், அடுத்து மாதவரம், மூன்றாவதாக திருவான்மியூரில் அறை எடுத்து தங்கியுள்ளனர்" எனக் கூறுகிறார் காவல் ஆய்வாளர் முகமது புகாரி. "சனி, ஞாயிறு தான் டார்கெட்" ஒவ்வோர் இடத்திலும் வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டும் மூவரும் தங்குவதாகக் கூறும் முகமது புகாரி, "சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அன்று வங்கிகள் விடுமுறை என்பதால் புகார் பதிவாகி கவனிப்பதற்குள் ஞாயிறு இரவு விமானம் அல்லது ரயிலில் ஏறி சொந்த ஊர் சென்று விடுகின்றனர்" என்றார். தொடர்ந்து பேசிய முகமது புகாரி, "ஒவ்வொரு இடத்திலும் கிடைக்கும் பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். 20 ஆயிரம் முதல் ஆயிரம் வரையில் கூட கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். பணம் வராதால் வாடிக்கையாளர் சேவை மையத்துக்குப் பொதுமக்களில் சிலர் தொடர்பு கொண்டு கூறியுள்ளனர்" எனக் கூறினார். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் ஏதோ பிரச்னை எனக் கூறி வங்கி ஊழியர்கள் அமைதியாக இருந்துவிட்டதாகக் கூறிய அவர், "மும்பையில் ஹிட்டாச்சி நிறுவனத்தில் உள்ள பணியாளர் ஒருவர் சிசிடிவி காட்சிகளைப் பார்த்து சென்னை கிளைக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்" என்கிறார். காட்டிக் கொடுத்த 40 கேமராக்கள் பட மூலாதாரம்,TAMIL NADU POLICE படக்குறிப்பு, ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள முதல் லாக்கரில் பணம் வரும் இடத்தின் உட்புறத்தில் ஸ்டிக்கர் ஒட்டி வைத்துள்ளனர் இதன்பிறகு, சுமார் 40 கண்காணிப்பு கேமராக்களை காவல்துறை ஆய்வு செய்துள்ளது. "முதல் சிசிடிவி காட்சிலேயே அவர்களின் முகம் தெரிந்துவிட்டது. சாலையின் வெளிப்புற கேமரா காட்சிகள், அவர்கள் சென்ற வாகனம் ஆகியவற்றை ஆய்வு செய்தோம். அவர்களின் செல்போன் எண்ணும் கிடைத்துவிட்டதால் கைது செய்ய முடிந்தது" என்கிறார் முகமது புகாரி. எந்த ஊருக்குச் சென்றாலும் ஓட்டலில் அறை எடுத்து தங்குவதை கைதான நபர்கள் வாடிக்கையாக வைத்துள்ளதாகக் கூறும் முகமது புகாரி, "திருட்டில் ஈடுபடும்போது மட்டும் கால் டாக்ஸியை வாடகைக்கு எடுத்துள்ளனர். அப்போது தான் யாருக்கும் சந்தேகம் வராது என நினைத்துள்ளனர்" எனக் கூறுகிறார். கைதான மூவர் மீதும் பொதுச்சொத்தை சேதப்படுத்தியது, திருட்டில் ஈடுபட்டது உள்பட மூன்று பிரிவுகளில் (305(a),62 BNS Act r/w 3 of TNPPDL Act) வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறும் முகமது புகாரி, "ஞாயிறு மாலை சுமார் 4 மணிக்குக் காவல்துறையில் புகார் கொடுத்தனர். மறுநாள் காலை 9 மணிக்குள் கைது செய்துவிட்டோம். அவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம்" என்றார். வங்கி அதிகாரி கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏடிஎம் இயந்திரம் (கோப்புப்படம்) "ஏடிஎம் இயந்திரத்தின் முதல் கதவைத் திறந்து இவ்வாறு மோசடி செய்ய வாய்ப்புள்ளதா?" என, பொதுத்துறை வங்கி ஒன்றின் கிளை மேலாளரிடம் பிபிசி தமிழ் பேசியது. பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், "முதல் கதவு என்பது சாதாரண லாக்கராக வடிவமைக்கப்பட்டிருக்கும். போலி சாவி மூலம் இதன் கதவைத் திறந்துள்ளனர்" எனக் கூறுகிறார். கடந்த நான்கைந்து ஆண்டுகளாக இதுபோன்ற மோசடிகள் தொடர்வதாகக் கூறிய அந்த அதிகாரி, "ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வராமல் தடுத்து, வாடிக்கையாளர் சென்ற பிறகு எடுக்கும் சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளன. பாஸ்வேர்டை கண்டறிந்து பணம் எடுப்பது என தவறுகள் தொடர்கின்றன" என்கிறார். தொழில்நுட்பரீதியாக இதுபோன்ற குறைகளைக் களைவதற்கு போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அந்த அதிகாரி, "ஏ.டி.எம்மை அந்தந்த வங்கிக் கிளைகள் தான் பாதுகாக்க வேண்டும். இயந்திரத்தில் யாரும் சேதம் ஏற்படுத்தினால் காவல் நிலையம், வங்கி மேலாளர் ஆகியோருக்குத் தகவல் சென்றுவிடும் வகையில் அலாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் வங்கி சேவைகளுக்கு ஏடிஎம் இயந்தித்தைத் தயாரித்துக் கொடுப்பதில் நான்குக்கும் அதிகமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறும் வங்கி மேலாளர், "பணம் சிக்கிக் கொண்டால் எடுத்துக் கொடுப்பது, தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்வது போன்ற பணிகளை இவர்கள் செய்கின்றனர். அப்போது வங்கி ஊழியரும் உடன் இருப்பார்" எனக் கூறுகிறார். "ஒரு நபர் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரையில் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்க முடியும். பணம் வராவிட்டால் புகார் வந்து நடவடிக்கை எடுப்பதற்குள் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுவிடுகின்றனர்" எனவும் அவர் தெரிவித்தார். "பணத்தைத் திரும்பப் பெறலாம்" - வழக்கறிஞர் கார்த்திகேயன் பட மூலாதாரம், வழக்கறிஞர் கார்த்திகேயன் படக்குறிப்பு,"ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வராமல் போனால் மக்கள் பயப்படத் தேவையில்லை எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன். "ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வராமல் போனால் மக்கள் பயப்படத் தேவையில்லை. அது மக்களின் பணம் கிடையாது. வங்கியின் பணம்" எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பணம் எடுக்கப்படாமல் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தால் அதற்கு வங்கி தான் முழுப் பொறுப்பு. 2017 ஆம் ஆண்டு இதுதொடர்பான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது" எனவும் குறிப்பிட்டார். ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் இதுதொடர்பான தகவல்கள் இருப்பதைக் காண முடிந்தது. உங்களின் பங்களிப்பு இல்லாமல் பணம் திருடு போயிருந்தால் அதற்கு நீங்கள் பொறுப்பு அல்ல. ஏடிஎம் இயந்திரம் என்பது வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கு வாடிக்கையாளர் பொறுப்பேற்க முடியாது என ரிசர்வ் வங்கியின் விதிகள் கூறுவதாக கார்த்திகேயன் குறிப்பிட்டார். பணத்தைத் திரும்பப் பெற வழிமுறைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான வழிமுறைகளையும் பட்டியலிட்டார் வழக்கறிஞர் கார்த்திகேயன். பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான வழிமுறைகளையும் அவர் பட்டியலிட்டார். * ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளியில் வராவிட்டால் வங்கியிடம் 3 நாள்களில் முறையிட வேண்டும். அவ்வாறு முறையிட்டால் 10 நாள்களுக்குள் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். * மூன்று நாட்கள் கடந்துவிட்டால் 4 முதல் 5 நாட்கள் வரை கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குரிய சேவைக் கட்டணத்தை மட்டும் வங்கி பிடித்தம் செய்து கொள்ளும். * பணம் எடுக்கப்பட்டதாக (debit) செல்போனுக்கு அழைப்பு வந்தும் பணம் வராவிட்டால் காவல்துறையில் புகார் தெரிவிக்குமாறு வங்கி நிர்வாகம் கூறும். ஆனால், அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை. * குற்றத்தில் ஈடுபட்ட நபரைக் கண்டுபிடித்து அவரிடம் இருந்து பணத்தைப் பறிமுதல் செய்யும் வரை வாடிக்கையாளர் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. * வாடிக்கையாளர் வெளியூரில் இருந்தால் பதிவு செய்யப்பட்ட இமெயில் முகவரி மூலம் புகார் மனுவை அனுப்பலாம். * இமெயில் முகவரி இல்லாவிட்டால் வங்கியின் இணையதளத்தில் ரிசர்வ் வங்கி விதியின்படி புகார் பக்கம் அமைக்கப்பட்டிருக்கும். அதில், வங்கியின் ஏடிஎம் கிளை, பணம் வராமல் போன நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு புகார் கொடுத்தால் போதும். காவல்நிலையம் செல்ல வேண்டியதில்லை. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c36545xejldo
  14. நீண்ட காலம் முதல்வர் பதவியில் வீற்றிருக்கும் நந்தன் அண்ணைக்கு வாழ்த்துகள்.
  15. LIVE 70th Match (N), Lucknow, May 27, 2025, Indian Premier League RCB chose to field. Lucknow Super Giants (14/20 ov) 149/1 Current RR: 10.64 • Last 5 ov (RR): 65/0 (13.00) Live Forecast: LSG 224 Royal Challengers Bengaluru
  16. 27 MAY, 2025 | 03:10 PM யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறை, கழிவகற்றல் முகாமைத்துவம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக உலக வங்கி குழுவினருடனான விரிவான கலந்துரையாடலொன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை (26) பிற்பகல் 3 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார அபிவிருத்தி உட்கட்டுமானம் மற்றும் சுற்றுலாத்துறைகளை விருத்தி செய்வது தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் உலக வங்கி கடந்த இரண்டு மாதங்களாக பொருத்தமான திட்டங்கள் தொடர்பில் களத்தரிசிப்புக்கள் செய்து ஆராய்ந்து அடிப்படைத் தரவுகளை பெற்றிருந்தது. இதன் இறுதி அங்கமாக துறை சார்ந்து காணப்படும் அபிவிருத்தி தேவைப்பாடுகள், தடைகள், அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் மற்றும் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து திட்டங்களை நிச்சயப்படுத்தும் வகையில் கடந்த மூன்று தினங்களாக வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்ட செயலாளர்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர் அபிட் கலி, செயற்றிட்ட தலைவர் காயத்திரி சிங் மற்றும் உலக வங்கியின் ஏனைய பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆறு பேர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியதுடன், தொடர்ந்து துறைசார் திணைக்களங்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். இக்கலந்துரையாடலில் அரசாங்க அதிபரால் மாவட்டத்தின் விவசாயம், மீன்பிடி அபிவிருத்திக்கான தேவைகள், அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை கைத்தொழில் வலயத்துக்கான புதிய முதலீடுகள், யாழ்ப்பாண கோட்டை மற்றும் யாழ்ப்பாண பழைய கச்சேரி போன்றவற்றை மரபுசார் சுற்றுலா நோக்கில் விருத்தி செய்தல், சரசாலை மற்றும் மண்டைதீவு சிறுதீவுப் பகுதிகளை சூழல்சார் சுற்றுலா மையங்களாக மாற்றுதல், நெடுந்தீவினை சுற்றுலா நோக்கில் முழுமையான அபிவிருத்தி கொண்ட தீவாக மாற்றுதல் போன்ற விடயங்களுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதேச ரீதியாக டிஜிட்டல் அடிப்படையிலான வானிலை அவதானிப்பு நிலையங்களை நிறுவுதல் போன்றவற்றுக்கான நிதி தேவைப்பாடு குறித்து எடுத்துக்கூறப்பட்டது. மேலும், மீன்பிடி படகுத்தள அபிவிருத்தி, போதைவஸ்து பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாகாண ரீதியான புனர்வாழ்வு நிலையம், உளநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாகாண ரீதியான காப்பகம் மற்றும் யாழ்ப்பாண நகர அபிவிருத்தி வெள்ள வடிகாலமைப்பு அபிவிருத்தி, கழிவு நீர் சுத்திகரிக்கும் செயற்றிட்டம், கழிவகற்றல் முகாமைத்துவம் போன்ற விடயங்களுக்கான அவசியப்பாடு பற்றி உலக வங்கி பிரதிநிதிகளிடம் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இக்கலந்துரையாடலின் இறுதியில் பின்வரும் செயற்றிட்டங்கள் முன்னுரிமையாகவுள்ளதாக உலக வங்கி குழுவினரிடம் முன்வைக்கப்பட்டது. 1. யாழ்ப்பாண நகர வெள்ள வடிகாலமைப்பு அபிவிருத்தி 2. கழிவு நீர் சுத்திகரிக்கும் செயற்றிட்டம் 3. மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைக்கும் செயற்றிட்டம் 4. யாழ் நகர திண்மக்கழிவு முகாமைத்துவம் 5. யாழ்ப்பாண கோட்டை மற்றும் யாழ்ப்பாண பழைய கச்சேரி போன்றவற்றை மரபுசார் சுற்றுலா நோக்கில் விருத்தி செய்தல் 6. யாழ்ப்பாண மாவட்டத்தில் மீன்பிடி படகுத்தளம் மற்றும் மீன்பிடி துறைமுக அபிவிருத்தி 7. அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கான புதிய முதலீடுகள் 8. உள்ளூராட்சி சபைகளின் திண்மக்கழிவு முகாமைத்துவம் இக்கலந்துரையாடலின்போது, உலக வங்கியின் செயற்பாட்டு முகாமையாளர் மற்றும் செயற்றிட்ட தலைவர் ஆகியோர் அரசாங்க அதிபரால் முன்னுரிமைப்படுத்தி முன்வைக்கப்பட்ட செயற்றிட்டங்களை கருத்தில் கொள்வதாகவும், இச்செயற்றிட்டங்கள் தொடர்பான திட்டங்கள், செயற்றிட்ட முன்மொழிவுகள் மற்றும் சாத்தியப்பாட்டு அறிக்கைகள் போன்றவற்றை விரைவில் சமர்ப்பிக்குமாறும் கோரியிருந்தனர். இந்த கலந்துரையாடலின் இறுதியில் யாழ்ப்பாண பழைய கச்சேரி வளாகத்துக்கு உலக வங்கிக் குழுவினரை அரசாங்க அதிபர் அழைத்துச் சென்றதையடுத்து, புனரமைப்பின் அவசியம் தொடர்பில் நேரடியாக குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், யாழ்ப்பாண மாநகர ஆணையாளர், மாநகர சபை பிரதம பொறியியலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி மற்றும் உதவிப் பணிப்பாளர்கள், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், கைத்தொழில் அதிகார சபையின் மாகாண பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் சுற்றுலா துறைசார் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/215817
  17. விந்தணுவில் புற்றுநோய்; ஒரே குடும்பத்தில் 10 குழந்தைகள் பாதிப்பு;ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி ஐரோப்பாவில் ஒரே நபரின் விந்தணுவில் கருத்தரித்த 67 குழந்தைகளில் 10 பேருக்கு புற்றுநோய் அபாயம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவில் செய்யப்பட்ட ஒரு பரிசோதனையில் மிகப்பெரிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த பரிசோதனையில் 8 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 46 குடும்பங்களைச் சேர்ந்த 67 குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் ஒரே நபரின் விந்தணு மூலம் 67 பேர் கருத்தரித்துள்ளனர். அவர்களை பரிசோதனை செய்ததில் அந்த நபரின் விந்தணுவில் கருத்தரித்த குழந்தைகளில் 10 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் கேன்சர் செல்களான ”லுகேமியா மற்றும் ஹாட்ஜ்கின்” அல்லாத ”லிம்போமா” பாதிப்பு வழக்குகளும் அடங்கும். அதாவது, கடந்த 2008 ஆம் ஆண்டு விந்தணு தானத்தின் போது இந்த பிறழ்வு நிகழ்ந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “நன்கொடை அளிக்கப்பட்டபோது இந்த அரிய மாறுபாடு புற்றுநோயுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை. ஆனால் தானம் செய்தவரின் விந்தணுக்களில் சிலவற்றில் TP53 எனப்படும் மரபணு மாறுபாடு உள்ளது” என விந்தணுவை வழங்கிய ஐரோப்பிய விந்து வங்கி உறுதிப்படுத்தியது. ஒரு டோனாரின் விந்தணுவை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளை உருவாக்க மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற விந்து வங்கியின் விதி மீறப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட டோனாரின் விந்தணுக்களைப் பெற்ற அனைத்து மருத்துவமனைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார வல்லுநர்கள், TP53 மாறுபாட்டைக் கொண்ட குழந்தைகள் தீவிரமான, நீண்டகால மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். https://thinakkural.lk/article/318407
  18. 'விண்வெளியில் அணு ஆயுதப் போர்' - அமெரிக்காவை எச்சரிக்கும் வட கொரியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "கோல்டன் டோம்" ஏவுகணை கேடயத்திற்கான திட்டத்தை வட கொரியா விமர்சித்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், கீலீ ங் பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் எதிர்கால "கோல்டன் டோம்" ஏவுகணை கேடயத்திற்கான திட்டத்தை வட கொரியா விமர்சித்துள்ளது. இந்த முயற்சி "விண்வெளியை அணு ஆயுதப் போர் களமாக மாற்றும் சாத்தியங்கள் உள்ளதாக" வட கொரியா கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஆட்சிக்காலத்தின் இறுதியில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள பாதுகாப்பு அமைப்பு, அமெரிக்காவிற்கு "அடுத்த தலைமுறை" வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் பாலிஸ்டிக் மற்றும் சீர்வேக (cruise missiles - தானாகவே வழிநடத்தி செல்லக் கூடியவை) ஏவுகணைகளும் அடங்கும். வட கொரிய வெளியுறவு அமைச்சகம் இந்தத் திட்டத்தை "சுயநீதி மற்றும் ஆணவத்தின் உச்சம்" என்று சாடியதாக வட கொரியாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. "விண்வெளியை ராணுவமயமாக்க... எதுவும் செய்யத் தயாராக" இருப்பதாக அமெரிக்காவை வட கொரியா குற்றம் சாட்டியது, மேலும் இந்தத் திட்டம் "உலகளாவிய அணு ஆயுத மற்றும் விண்வெளி ஆயுதப் போட்டியை" தூண்டக்கூடும் என்றும் எச்சரித்தது. வட கொரியா, அமெரிக்காவை எதிரியாகக் கருதுகிறது, அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சிகளை கண்டித்து வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா கோல்டன் டோம் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் கோல்டன் டோம், வட கொரியாவின் அணு ஆயுதக் கிடங்கை "கணிசமாக பலவீனப்படுத்தக்கூடிய" ஒரு அச்சுறுத்தலாக வட கொரியா கருதுகிறது என்று கொரியா தேசிய ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் ஹாங் மின், AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். "அமெரிக்கா தனது புதிய ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தை நிறைவு செய்தால், அதை எதிர்க்க அல்லது ஊடுருவுவதற்கு வட கொரியா மாற்று வழிகளை உருவாக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும்," என்று அவர் கூறினார். 2022ஆம் ஆண்டில், தன்னை ஒரு அணு ஆயுத நாடாக அறிவிக்கும் சட்டத்தை வட கொரியா இயற்றியது, மேலும் அது அண்மை ஆண்டுகளில் பல்வேறு பாலிஸ்டிக் மற்றும் சீர்வேக ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹைப்பர்சோனிக் (ஒலியை விட 5 மடங்கு வேகமாக பயணிக்கும் ) திறனுடன் கூடிய புதிய இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக வட கொரியா கூறியது, இது "பசிபிக் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு போட்டியாளர்களையும் நம்பத்தகுந்த முறையில் கட்டுப்படுத்தும்" என்றும் அந்நாடு கூறியது. அமெரிக்காவின் கோல்டன் டோம் திட்டத்தை விமர்சிக்கும் சீனாவுடன் வட கொரியாவும் இணைகிறது. கடந்த வாரம் கோல்டன் டோம் பற்றி "தீவிரமாக கவலை கொண்டுள்ளது" என்று சீனா கூறியது, இது "வலுவான தாக்குதல் விளைவுகளைக்" கொண்டுள்ளது என்று கூறியது. "அமெரிக்கா முதலில்" என்ற கொள்கையைப் பின்பற்றும் அமெரிக்கா, தனக்கான முழுமையான பாதுகாப்பைத் தேடுவதில் வெறித்தனமாக உள்ளது" என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது. "இது அனைத்து நாடுகளின் பாதுகாப்பையும் சமரசம் செய்யக்கூடாது என்ற கொள்கையை மீறுகிறது மற்றும் உலகளாவிய மூலோபாய சமநிலை மற்றும் நிலைத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது." அமெரிக்காவின் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துவது அவசியம் என்று பல ஆய்வாளர்கள் நம்புகிறார்கள், ஆனால் சிலர் கோல்டன் டோமை உருவாக்கும் செயல்முறை தொழில்நுட்ப ரீதியிலான சவால்களுடன் அரசியல் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடும் என்று எச்சரிக்கின்றனர். அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் கோல்டன் டோம் தயாரிப்பு மொத்த செலவு, அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட்டின் பெரும் பகுதியை எடுத்துக் கொள்ளும். புதிய பட்ஜெட் மசோதாவில் முதல்கட்டமாக $25 பில்லியன் (£18.7 பில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது. இது, பல தசாப்தங்களாக செலவிடப்பட்ட தொகையைவிட 20 மடங்கு செலவாகும் என்று அமெரிக்க அரசு மதிப்பிட்டுள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly3l270we3o
  19. 27 MAY, 2025 | 02:33 PM (எம்.மனோசித்ரா) அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் ஊடாக 18 நிரல் அமைச்சுக்கள், 4 மாகாண சபைகள் மற்றும் 2 விசேட செலவு அலகுகளில் நிலவும் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விதந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த அறிக்கை மூலம் விதந்துரை செய்யப்பட்ட ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சிற்காக ஆசிரியர் பற்றாக்குறைக்காக 199 நியமனங்கள், சப்ரகமுவ மாகாணத்துக்கு ஆசிரியர் பற்றாக்குறைக்காக 3661 நியமனங்கள் உட்பட சுமார் 6000 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. மேலும் பொது நிர்வாக அமைச்சின் கீழ் 1658 நியமனங்களும், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு மற்றும் தபால் சேவை என்பவற்றுக்கு சுமார் 300 நியமனங்களும் வழங்கப்படவுள்ளன. இவற்றை உள்ளடக்கி 15,073 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். https://www.virakesari.lk/article/215809
  20. வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட தனுஜா முருகேசன் வட மாகாண ஆளுநரை சந்தித்தார் Published By: VISHNU 27 MAY, 2025 | 07:44 PM வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட தனுஜா முருகேசன் இன்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) மரியாதை நிமித்தமாக ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். வடக்கு மாகாண பிரதம செயலாளராக கடந்த செவ்வாய்க்கிழமை (20.05.2027) ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து நியமனம் பெற்ற திருமதி தனுஜா முருகேசன், கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (27) காலை கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215848
  21. மன்னார் மாவட்டத்தில் இந்திய நன்கொடை ஆதரவுடன் நிர்மாணிக்கப்பட்ட ஜிம் பிறவுண் நகர் மாதிரி கிராமம் பயனாளிகளிடம் கையளிப்பு Digital News Team 27 மே, 2025 மன்னார் ஜிம் பிறவுண் நகர் மாதிரி கிராமத்தினை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் டிபி சரத் ஆகியோர் கூட்டாக அங்குரார்ப்பணம் செய்து 24 பயனாளி குடும்பங்களிடம் கையளித்தனர். இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் திரு ரஞ்சித் ஆரியரத்ன, மன்னார் மாவட்ட செயலாளர், தேசிய வீடமைப்பு அதிகாரசபை தலைவர் மற்றும் ஏனைய சிரேஸ்ட அதிகாரிகள், நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், வடக்கு மாகாண சபை மற்றும் மன்னர் மாவட்ட நிர்வாகத் துறை ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இந்திய அரசாங்கத்தின் நன்கொடை மூலமாக இலங்கை அரசின் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சுடன் இணைந்து கூட்டாக முன்னெடுக்கப்படும் குறித்த மாதிரி கிராம வீடமைப்பு திட்டம் நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டங்களுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையானது 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டிருந்தது. மாவட்ட வீடமைப்பு குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகளுக்கு அமைவாக இலங்கை முழுவதிலும் குறைந்த வருமானம் பெறும் 600 குடும்பங்கள் இத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டு மாவட்ட வீடமைப்பு சபைகளால் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் 24 வீடுகள் இம்மாதிரிக் கிராம வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்றன. https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/318469
  22. 25 MAY, 2025 | 10:01 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ தலைமையிலான 115 பேர் கொண்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு புதன்கிழமை (28) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறது. இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தவும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புதிய பொருளாதார முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயும் வகையிலேயே உயர்மட்ட பிரதிநிதிகள் குழு கொழும்புக்கு விஜயம் செய்வதாக தெரிவித்தள்ள சீன தரப்பு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசாங்கத்தின் பொருளாதார வர்த்தக துறைசார்ந்த பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இலங்கை - சீன வர்த்தக மற்றும் முதலீட்டு மன்றத்தின் மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்ப விருந்தினராக பங்கேற்கும் சீன வர்த்தக அமைச்சருடன், 77 சீன நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் 115 வர்த்தக பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டின் ஊடாக இருதரப்பு வணிக உறவுகளை வலுப்படுத்தவும், வணிகப் தொடர்புகளை எளிதாக்கவும், மேலும் பல்வேறு துறைகளில் புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வழிகளை அடையாளம் காணவும் முடியும் என குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும் இந்த விஜயத்தில் இரு நாடுகளுக்க இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முக்கியத்தவம் பெறுகிறது. ஏனெனில் இலங்கையுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைச்சாத்திட வேண்டும் என்பது சீனாவின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் பிராந்தியத்தின் வணிக இராஜதந்திரம் சீன - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு தொடர்ந்தும் சவால்களை ஏற்படுத்துவதாக உள்ளது. வரி கட்டண அளவீடுகள் மற்றும் வர்த்தக தாராளமயமாக்கலின் அளவு குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக ஆறு சுற்றுகளுக்குப் பிறகு 2018 ஆம் ஆண்டில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முடங்கின. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின் போது முன்னெடுக்கப்பட்ட உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்ய ஒப்புக்கொண்டாலும், இந்த விடயத்தில் அரசாங்கம் இறுதி முடிவை எடுக்க வில்லை. இவ்வாறானதொரு நிலையிலேயே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் உத்தேசிக்கப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான பெய்ஜிங்கின் முக்கிய செய்தியுடனேயே சீன அமைச்சர் இலங்கை வருகிறார். https://www.virakesari.lk/article/215610
  23. இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரில் அனுபவிக்கக்கூடிய உல்லாச அனுபவங்களை அதிகரிப்பதற்கும் கட்டமைப்பு ரீதியான அணுகலுக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, ‘கடலோர இரவுப் பொழுது : உறங்காத கொழும்பு’ தொனிப்பொருளின் கீழ் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திலிருந்து தெஹிவல வரைக்குமான 7.4 கிலோமீற்றர் தூரம் கொண்ட கொழும்பு கடலோர வீதியை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் காலி முகத்திடல் தொடக்கம் புனித தோமஸ் ஆரம்ப பாடசாலை வரைக்கும் 400 மீற்றர் தூரமான வலயத்தில் அதிக கவனம் செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/318449
  24. ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஈழத் தமிழர்கள் இருவர் தெரிவு ஆசியாவின் சிறந்த விஞ்ஞானிகள் 100 பேரில், யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மூத்த பேராசி ரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஷ் ஆகியோர் தெரிவாகியுள்ளனர். சிங்கப்பூரை தளமாகக் கொண்டு வெளியாகும் ‘ஆசிய விஞ்ஞானி’ என்ற சஞ்சிகை ஆசியாவின் சிறந்த விஞ்ஞானிகள் -100 பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியல், ஆசியாவிலுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளின் விசேட சாதனைகளை அங்கீகரிக்கிறது. பொதுவாக, இந்த பட்டியலில் தேர்வு செய்யப்படும் தலைசிறந்த விஞ்ஞானிகள், அவர்களின் தரமான ஆய்வு வெளியீட்டுக்கப்பால் தேசிய அல்லது சர்வதேச விருதை பெற்றிருக்க வேண்டும். பதிலாக முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது கல்விசார் அல்லது தொழில்சார் தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டும். அதன்படி விஞ்ஞானப் பீடாதிபதியாக கடந்த ஜந்து ஆண்டுகள் பணியாற்றிவரும் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவற்றில், துணைவேந்தர்கள் இயக்குனர்கள் சபையினரால் வழங்கப்பட்ட பௌதிக விஞ்ஞானத்திற்கான அதி சிறந்த இள ஆராய்ச்சியாளர் விருது, தேசிய விஞ்ஞான மன்றத்தினால் வழங்கப்பட்ட இள விஞ்ஞானி விருது, மற்றும் தேசிய ஆராய்ச்சி பேரவை பல தடவைகள் வழங்கிய சிறந்த ஆராய்ச்சி வெளியீட்டுகளுக்கான ஜனாதிபதி விருதுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவரின் ஆய்வுக் கட்டுரைகள் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளால் அதிகளவு மேற்கோளிடப்பட்டு வருகின்றன. சர்வதேசத்தரத்திலான இவரது ஆய்வுச் செயற்பாடுகளினால் ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவாகியுள்ள சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்லாது யாழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இதேவேளை ஆசிய பிராந்தியத்தின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் பெருமையுடன் பட்டியலிடப்பட்டுள்ள கணிதத் துறையின் மூத்த பேராசிரியர் எஸ்.திருக்கணேஷின் குறிப்பிடத்தக்க சர்வதேச சாதனையை இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த மதிப்புமிக்க அங்கீகாரம், கணிதத் துறையில் மூத்த பேராசிரியர் திருக்கணேஷ் ஆற்றிய விதிவிலக்கான ஆராய்ச்சிப் பங்களிப்புகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் ஆசியாவின் முன்னணி அறிவியல் சிந்தனையாளர்களில் ஒருவராக அவரது அந்தஸ்தை அங்கீகரிக்கிறது. https://thinakkural.lk/article/318413

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.