Everything posted by ஏராளன்
-
சிறுவர், இளைஞர்களின் உள ஆரோக்கியம் மற்றும் சமூக நலன்களுக்கு ஆதரவு : ஜனாதிபதியிடம் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர் தெரிவிப்பு
Published By: DIGITAL DESK 2 26 MAY, 2025 | 03:31 PM இலங்கையிலுள்ள சிறுவர் மற்றும் இளைஞர் சமூகத்தினரின் உள ஆரோக்கியம் மற்றும் சமூக நலன்களுக்கு, சர்வதேச லயன்ஸ் கழகம் ஆதரவு வழங்கும் என சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர் பெப்ரிசியோ ஒலிவேரா ( Fabrício Oliveira) தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் திங்கட்கிழமை (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பெப்ரிசியோ ஒலிவேரா மேற்கண்டவாறு இவ்வாறு தெரிவித்தார். சர்வதேச லயன்ஸ் கழகத்தினால் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள், பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயல்படுத்தப்படும் நிவாரணத் திட்டங்கள் மற்றும் கல்வித் திட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாகத் தலைவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் உறுதியளித்தார். சர்வதேச லயன்ஸ் கழகத்தினால் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை ஜனாதிபதி பாராட்டியதோடு, அவற்றுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார். தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் பிரதிநிதிகள் குழு ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/215727
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இந்திய டெஸ்ட் அணியின் புதிய தலைவர் கில்; அறிமுகமாகிறார் தமிழக வீரர் சாய் சுதர்சன் Published By: DIGITAL DESK 2 26 MAY, 2025 | 01:40 PM (நெவில் அன்தனி) இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளதுடன் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இந்தியாவின் புதிய சகாப்தம் ஆரம்பமாகவுள்ளது. ரவிச்சந்திரன் அஷ்வின், முன்னாள் தலைவர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராத் கோஹ்லி ஆகிய மூவரும் ஓய்வுபெற்றதை அடுத்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முழுநேர தலைவராக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 'இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவராக நியமிக்கப்பட்டதை மிகப் பெரிய கௌரவமாகவம் பாக்கியமாகவும் கருதுகிறேன். ஆடுகளத்தில் சிறந்த ஆற்றல்கள், ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றுக்கு முன்னுதாரணமாக இருந்து அணியை வழிநடத்துவேன்' என ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக ஜூன் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் தனது தலைமைப் பதவியை 25 வயதான ஷுப்மான் கில் தொடங்கவுள்ளார். வலதுகை துடுப்பாட்ட வீரரான ஷுப்மான் கில், இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்களுடன் 1893 ஓட்டங்களை மொத்தமாக பெற்று 35.05 என்ற சராசரியைக் கொண்டுள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் உதவித் தலைவராக ரிஷாப் பான்ட் நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியை இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடருடன் இந்தியா ஆரம்பிக்கவுள்ளது. சாய் சுதர்சன் அறிமுக வீரர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முன்னிட்டு அஜித் அகார்கரின் தலைமையிலான தெரிவுக் குழுவினர் பெயரிட்டுள்ள 18 வீரர்களைக் கொண்ட இந்திய குழாத்தில் சென்னையைப் பிறப்பிடகமாகக் கொண்ட தமிழக துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சன் அறிமுக வீரராக இடம்பெறுகிறார். சாய் சுதர்சன் 3 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 29 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சாய் சுதர்சன் 7 சதங்கள் உட்பட 1957 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அவரது அதிகூடிய இன்னிங்ஸ் எண்ணிக்கை 213 ஓட்டங்களாகும். அவர் பெரும்பாலும் யஷஸ்வி ஜய்ஸ்வாலுடன் ஆரம்ப வீரராக களம் இறங்குவார் எனவும் விராத் கோஹ்லியின் 4ஆம் இலக்கத்தை வழமையான ஆரம்ப வீரர்களில் ஒருவரான கே.எல். ராகுல் நிரப்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கில் மற்றும் ரிஷாப் பான்ட் ஆகியோருடன் சிரேஷ்ட வீரர்களான கே.எல். ராகுல், ஜஸ்ப்ரிட் பும்ரா, ரவிந்த்ர ஜடேஜா, மொஹமத் சிராஜ் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர். கடந்த ஓரிரு வருடங்களாக இந்திய அணியில் இடம்பெற்றுவந்த த்ருவ் ஜுரெல், ஆகாஷ் தீப் ஆகியோருக்கும் இந்திய குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குழாம்: ஷுப்மான் கில் (தலைவர்), ரிஷாப் பான்ட் (உதவித் தலைவர்), யஷஸ்வி ஜய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிட்டிஷ் குமார் ரெட்டி, ரவிந்த்ர ஜடேஜா, த்ருவ் ஜுரெல், வொஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரிட் பும்ரா, மொஹமத் சிராஜ், ப்ராசித் கிரிஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ். https://www.virakesari.lk/article/215714
-
ACTC – ITAK பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக்கட்சிகளுக்கு DTNA ஆதரவு!
உள்ளூராட்சி தேர்தலில் கூடிய ஆசனங்களை பெற்ற தமிழ்தேசிய கட்சிகளிற்கு முதல்வர் தவிசாளர் தெரிவுகளில் ஆதரவு - தமிழ்தேசிய பேரவை 26 MAY, 2025 | 03:21 PM தமிழர் தாயகத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்றிருப்பின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மாநகர முதல்வர், மற்றும் தவிசாளர் தெரிவுகள் தொடர்பில் தமிழ் தேசிய பேரவை ஆதரவு வழங்கும் என தமிழ்தேசிய பேரவையின் தலைவரும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம தெரிவித்துள்ளார். அதேபோன்று உள்ளூராட்சி மன்றங்களில் இரண்டாவது நிலையில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்றிருப்பின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு பிரதி முதல்வர், மற்றும் உப தவிசாளர் தெரிவுகள் தொடர்பில் தமிழ் தேசிய பேரவை ஆதரவு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (25) பிற்பகல் யாழ். கச்சேரி அருகாமையிலுள்ள வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் தமிழ்த் தேசிய பேரவைத் தலைவர்கள் மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் சார்பில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெயரிலும் அதன் சைக்கிள் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மேலதிக ஆசனங்கள் மூலம் கட்சியினால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் கூடிக் கலந்துரையாடி கொள்கை அடிப்படையில் ஒருமனதாக மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வெளிப்பாடு, சபைகளின் ஆட்சி நிர்வாகத்தை அமைப்பதில் மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு பேரவை இத்தீர்மானத்தை எடுத்துள்ளது. இத் தீர்மானத்துக்கமைய பின்வரும் முடிவுகள் தமிழ்த் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் அறிவிக்கப்பட்டன. தீர்மானத்திற்கு அமைய எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு, மாநகர சபைகள் உட்பட தமிழர் தாயகத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு நடந்து முடிந்த தேர்தலில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்ற சபைகளில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு தவிசாளர் தெரிவில் ஆதரவு வழங்குவதுடன் அவ்வாறான சபைகளுக்கான தவிசாளர் தெரிவில் தமிழ்த் தேசியப் பேரவை போட்டியிடமாட்டாது. அதேபோன்று தமிழ்த் தேசியப் பேரவை அதிகூடிய வாக்குகளைப் பெற்ற சபைகளில் தவிசாளர் தெரிவுக்குப் போட்டியிடும். அதன்போது மக்கள் தேர்தலில் வழங்கிய ஆணைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகள் ஆதரவு வழங்கவேண்டுமென எதிர்பார்க்கிறது. பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையில் தமிழ்த் தேசியப் பேரவை இரண்டாவது நிலையில் இருக்கும் சபைகளில் துணைத் தவிசாளர் பதவிக்குப் போட்டியிடும். பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையில் இரண்டாவது நிலையில் இருக்கும் தமிழ்த் தேசிய கட்சிக்கு துணைத் தவிசாளர் தெரிவுக்கு ஆதரவு வழங்கும். எந்தவொரு நிலையிலும் சிங்கள பௌத்த பேரினவாத கட்சிகளுக்கும் அவற்றுக்கு ஆதரவான கட்சிகளுக்கும் இவ்வாறான பதவிகளுக்கான தெரிவுகளுக்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது. இவற்றின் மூலம் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி நிர்வாகத்தை தமிழ்த் தேசியக் கட்சிகளின் கைகளில் வைத்திருப்பதுடன் எதிர்காலத்தில் எவ்வித இடையூறுகளுமில்லாது மக்களுக்கான பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியுமென்று பேரவை எதிர்பார்ப்பதுடன் இதன்மூலம் கட்சிகளுக்கிடையே புரிந்துணர்வை வளர்க்க முடியுமென்றும் தமிழ்த் தேசியப் பேரவை நம்புகிறது. https://www.virakesari.lk/article/215726
-
ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா புதிய திட்டம்!
கோல்டன் டோம்: ஆகாயத்தில் இருந்து வரும் ஏவுகணைகளை கூட முறியடிக்கும் கனவு சாத்தியமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோல்டன் டோம் திட்டத்தை அறிவித்தார் டிரம்ப் கட்டுரை தகவல் எழுதியவர், பெர்ன்ட் டெபஸ்மேன் ஜேஆர் பதவி, பிபிசி நியூஸ் இருந்துவெள்ளை மாளிகை 3 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு கோல்டன் டோம் என்கிற பாதுகாப்பு கவசத்தை உருவாக்கப் போவதாக சமீபத்தில் டிரம்ப் அறிவித்திருந்தார். அமெரிக்காவுக்கு மேல் ஒரு சிறிய அணுகுண்டு வெடித்தால் கூட அது பேரழிவான முடிவுகளைக் கொண்ட ஒரு மின்காந்த துடிப்பை (electromagnetic pulse) உருவாக்கும். விமானங்கள் வானத்தில் இருந்து கீழே விழும். கையில் இருக்கும் மின்சாதனங்கள் தொடங்கி மருத்துவ உபகரணங்கள், நீரியல் அமைப்புகள் என அனைத்தும் பயனற்றதாகிப் போகும். அப்படி ஒன்று நிகழ்ந்தால் அமெரிக்கா 1,000 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் என்கிறார் வடக்கு கரோலினா மாகாணத்தின் மான்ட்ரீட் கல்லூரியில் உள்ள எழுத்தாளரும் ஆயுத ஆராய்ச்சியாளருமான வில்லியம் ஃபோர்ட்ஸ்சென். "நாம் 100 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல மாட்டோம். நாம் அனைத்தையும் இழந்து விடுவோம், அதனை எவ்வாறு மறுகட்டுமானம் செய்வது என நமக்குத் தெரியாது. இது நாம் 1,000 ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வதற்கு சமமாகும். நாம் அனைத்தையும் ஆரம்பத்தில் இருந்து தொடங்க நேரிடும்" என்றார் அவர். இந்த அனுமானமான, அதே நேரம் சாத்தியமான அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த தலைமுறை ஏவுகணை பாதுகாப்பு கவசமான "கோல்டன் டோம்" என்பதை முன்னிறுத்தியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா கோல்டன் டோம் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இத்தகைய கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் எனப் பல வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிற நிலையில், அதற்கான அதிக செலவினம் மற்றும் தளவாட சிக்கல்கள் ஆகியவை டிரம்பின் திட்டத்திற்குச் சவாலாக இருக்கும். "அமெரிக்காவுக்கான அயர்ன் டோம்" என முதலில் பெயரிடப்பட்டிருந்த இந்தத் திட்டம் தொடர்பான அரசாணை, அடுத்த தலைமுறை ஆயுதங்களின் அச்சுறுத்தல் என்பது அமெரிக்காவிற்கு மிகவும் தீவிரமான, சிக்கல் நிறைந்த, காலப்போக்கில் பேரழிவை உருவாக்கக் கூடியதாக மாறியுள்ளது என விவரித்துள்ளது. வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்ட மூலோபாய மற்றும் சர்வதேச கல்வி மையத்தைச் சேர்ந்த ஏவுகணை பாதுகாப்பு வல்லுநரான பாட்ரிக்ஜா பாசில்சிக், ஏற்கெனவே உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் வட கொரியா போன்ற நாடுகள் பயன்படுத்தும் கண்டங்களுக்கு இடையேயான பாலிஸ்டிக் ஏவுகணைகளை (ஐசிபிஎம்) எதிர்கொள்ள தயாரிக்கப்பட்டவை என்று பிபிசியிடம் தெரிவித்தார். சக்தி வாய்ந்த நாடுகளான ரஷ்யாவும், சீனாவும் கடல் கடந்துள்ள எதிரிகளையும் தாக்கும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் அதிக முதலீடு செய்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ள அச்சுறுத்தல்களில் ஹைபர்சோனிக் ஆயுதங்கள் ஒலியின் வேகத்தை விடவும் வேகமாக சென்று தாக்குதல் நடத்தும திறன் படைத்தது. இவை அளவில் சிறிதாக இருந்தாலும் பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடியவை. "நம்முடைய எதிரிகள் நீண்ட தூரம் தாக்கும் திறன்களில் முதலீடு செய்து வருகின்றனர். அவை நாம் இத்தனை வருடங்களாக எதிர்கொண்டு வரும் நம்முடைய சாதாரண ஏவுகணைகள் போன்றவை அல்ல" என்றார் பாசில்சிக். கோல்டன் டோம் எவ்வாறு இருக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோல்டன் டோம் தற்போது ஆரம்ப கட்டத்தில் இருக்கும் கோல்டன் டோம் எவ்வாறு இருக்கும் என வெள்ளை மாளிகை மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சில தகவல்களை வழங்கியுள்ளனர். கடந்த மே 20, டிரம்பைத் தொடர்ந்து பேசிய பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் இந்த அமைப்பு "விண்வெளி சார்ந்த சென்சார்கள் மற்றும் இண்டர்செப்டர்கள் போன்றவற்றையும் உள்ளடக்கி நிலம், கடல் மற்றும் விண்வெளியைக் கடந்து" பல அடுக்குகள் கொண்டிருக்கும் என்று மட்டும் தெரிவித்தார். இந்த அமைப்பு பூமி மட்டுமல்லாது, விண்வெளியில் இருந்தும் கூட ஏவப்படும் ஏவுகணைகளை தடுத்து நிறுத்தும் திறன் கொண்டிருக்கும் என்றார் டிரம்ப். இந்தத் திட்டத்தின் பல அம்சங்கள் புளோரிடா, இண்டியானா மற்றும் அலாஸ்கா எனத் தொலைதூர பிரதேசங்களில் அமைந்திருக்கும். கோல்டன் டோம் என்பது ஏற்கெனவே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் குறிவைத்து அமைக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பின் மீதே உருவாக்கப்படும் என விண்வெளிப் படை ஜெனரலும் இந்தத் திட்டத்தின் மேற்பார்வையாளருமான மைக்கேல் குட்லின், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இந்த புதிய அமைப்பு கப்பல்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் இதர அச்சுறுத்தல்களை கண்டறிந்து தடுக்கும் பல அடுக்குகளைச் கொண்டிருக்கும். இதன்மூலம் ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன்பாக அல்லது ஏவப்பட்ட பிறகும் அதனை எந்த நிலையிலும் தடுத்து நிறுத்த முடியும். தற்போது அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு மையம் அலாஸ்கா மற்றும் கலிபோர்னியாவில் உள்ள குறுகிய தூர ஏவுகணை தாக்குதல்களை தடுக்க வடிவமைக்கப்பட்ட 44 தரை சார்ந்த இண்டர்செப்டர்களைச் (interceptors - ஏவுகணைகளை இடைமறித்து நிறுத்தும் அமைப்பு) சார்ந்தே உள்ளது. அமெரிக்க நிலப்பரப்பை ரஷ்யா அல்லது சீனா தாக்கினால் அதனைத் தடுப்பதற்கு தற்போது உள்ள அமைப்பு போதுமானதாக இருக்காது என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இரு நாடுகளும் நூற்றுக்கணக்கான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் கப்பல்களில் ஏவப்படும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளைச் சேர்த்து தங்களின் ஆயுதங்களை விரிவுபடுத்தியுள்ளன. "தற்போதைய வான் பாதுகாப்பு அமைப்பு வட கொரியாவுக்காக உருவாக்கப்பட்டுள்ளது என நியூ அமெரிக்க பாதுகாப்பு மையத்தின் பாதுகாப்பு வல்லுநரான முனைவர் ஸ்டேசி பெட்டிஜான் தெரிவித்துள்ளார். "இவற்றால் ரஷ்யா அல்லது சீனாவிடம் உள்ள ஆயுதங்களை இடைமறிக்க முடியாது" என்றார். நம்மை நோக்கி வருகின்ற ஏவுகணைகளுக்கு எதிராக குறைந்தபட்ச பாதுகாப்பை வழங்கக்கூடிய நூற்றுக்கணகான அல்லது ஆயிரக்கணக்கான விண்வெளி சார்ந்த தளங்கள் தேவைப்படும் என அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு அலுவலகம் (சிபிஓ) தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் அயர்ன் டோம் ஒரு உதாரணமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேல் பயன்படுத்தி வரும் அயர்ன் டோம் அமைப்பைத் தான் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். டிரம்ப் கோல்டன் டோம் பற்றிய தன்னுடைய திட்டத்தை மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டு நாடாளுமன்ற கூட்டத்தில் வெளிப்படுத்தினார். அதைப்பற்றி குறிப்பிடுகிற போது, "இஸ்ரேல் அதை வைத்துள்ளது, மற்ற இடங்களிலும் அது உள்ளது, அமெரிக்காவும் அதை வைத்திருக்க வேண்டும்" என்றார். 2011-ல் இருந்து ஏவுகணைகள் மற்றும் எறிகணைகளை இடைநிறுத்த இஸ்ரேல் பயன்படுத்தி வரும் அயர்ன் டோம் அமைப்பைத் தான் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இஸ்ரேலின் அயர்ன் டோம் குறுகிய தூர அச்சுறுத்தல்களைத் தடுக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. டேவிட்ஸ் ஸ்லிங் மற்றும் அரோ என்கிற இதர அமைப்புகள், இரான் மற்றும் ஏமனில் இருந்து ஹூதிக்கள் செலுத்தும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தடுக்கின்றன. அயர்ன் டோம் என்பது காஸா அல்லது தெற்கு லெபனானில் இருந்து வரும் எறிகணைகளை எதிர்கொள்ள உருவாக்கப்பட்டது என்கிறார் பாசில்சிக். கோல்டன் டோம் என்பது அதையும் கடந்து தொலைதூர ஏவுகணைகளையும் கண்டறியும் என்றார் அவர். அதனைச் சாத்தியமாக்க வெவ்வேறு திறன்களை ஒருங்கே சேர்க்க வேண்டிய தேவை உள்ளது என்றார். மேலும் அவர், "இவை அனைத்தையும் சேர்த்து கையாளும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பைப் பார்ப்பதற்கு நான் ஆவலாக இருக்கிறேன்" தெரிவித்த அவர், தற்போது அதுபோன்ற எதுவும் இல்லை என்றும் கூறினார். கோல்டன் டோமை உருவாக்க முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோல்டன் டோமை விளக்கும் சந்திப்பில் டிரம்ப் உடன் அதிகாரிகள் அந்த அமைப்பை உருவாக்குவது சிக்கலானது மற்றும் அதிக செலவு பிடிக்கக் கூடியதும் கூட. கோல்டன் டோம் தன்னுடைய பதவிக் காலத்திற்குள் முடிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார். அதற்கு மொத்தமாக 175 பில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் முதல்கட்ட முதலீடாக 25 பில்லியன் டாலர்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் டிரம்பின் மதிப்பீடு சிபிஓவின் மதிப்பீட்டுடன் தொடர்பில்லாமல் இருக்கிறது. அவர்களின் மதிப்பீட்டின்படி 20 ஆண்டுகளில் விண்வெளி சார்ந்த அமைப்புகளுக்கு மட்டுமே 542 பில்லியன் டாலர்கள் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மொத்த செலவு அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட்டின் பெரும்பகுதியாகும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர். முனைவர் பெட்டிஜான் இதனைச் சாத்தியமற்றது என்கிறார். மேலும் அவர், "இது மிகவும் சிக்கலானது, இதில் பல அமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை உள்ளது. இதன் ஒவ்வொரு கட்டமும் அதன் ஆபத்துகள், செலவுகள் மற்றும் கால அளவைக் கொண்டுள்ளன" "மேலும் அவசரம் காட்டுவதால் கூடுதல் செலவாவதுடன் ஆபத்துகளையும் சேர்க்கும். நீங்கள் நன்றாக மதிப்பீடு செய்யப்படாத ஒன்றை உற்பத்தி செய்யப் போகிறீர்கள். அதில் தோல்விகள் ஏற்படும், நீங்கள் உற்பத்தி செய்யும் எதுவானாலும் அதில் பெரிய மாறுதல்கள் தேவைப்படும்" என்றார் அவர். கோல்டன் டோம் உருவாக்கம் என்பது புதிய ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என்கிற அச்சமும் எழுந்துள்ளது. அமெரிக்காவின் எதிரிகள் அதனை தகர்ப்பதற்கான வழிகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளை அதிகப்படுத்தி வருகின்றனர். இந்தத் திட்டம், விண்வெளியை ஒரு போர்க்களமாக மாற்றும் ஆபத்துகளை அதிகரித்துள்ளது என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்க பாதுகாப்பு கொள்கையை ஆய்வு செய்பவர்கள் இந்தக் கவலைகளை பெரிதாக்க வேண்டாம் என்கின்றனர். சாத்தியமான எதிரிகள் தங்களுடைய தாக்கும் திறன்களில் ஏற்கெனவே அதிகம் முதலீடு செய்து வருவதாக அவர்கள் வாதிடுகின்றனர். கோல்டன் டோம் என்பது நம்முடைய எதிரிகள் போடும் கணக்குகளை மாற்ற முயற்சிக்கிறது என்கிறார் பாசில்சிக். மேலும் அவர், "உள்நாட்டு வான் மற்றும் ஏவுகணைப் பாதுகாப்பை மேம்படுத்துவது நம்மை எந்தக் காரணத்திற்காகவும் தாக்க நினைப்பவர்களின் நம்பிக்கையை குறைக்கும்" என்கிறார். பகுதியளவு முடிக்கப்பட்ட கோல்டன் டோம் கூட அச்சமூட்டும் காட்சிகள் நிகழாமல் தடுக்கும் என்கிறார் ஃபோர்ட்ஸ்சென். மேலும் அவர், "நான் பெருமூச்சு விடுவேன். நமக்கு அத்தகைய அமைப்பு தேவை. அதற்கு கோல்டன் டோம் தான் பதில்" என்றார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdj9zy94dj7o
-
வெற்றிலைக்கேணியில் இலவச சட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று : காணி உரிமைகோரல் தொடர்பில் சட்ட ஆலோசனை பெறுமாறு சுமந்திரன் அழைப்பு
வடக்கு மாகாண காணி சுவீகரிப்பு; உரிமையாளர்களுக்கான இலவச சட்ட ஆலோசனை கூட்டம் 26 MAY, 2025 | 11:06 AM வடக்கு மாகாணத்தில் 5,940 ஏக்கர் காணிகளை சுவிகரிப்பதற்கு அரசாங்கம் வர்த்தமானி வெளியிட்டுள்ள நிலையில் காணி உரிமையாளர்கள் அவற்றுக்கு உரிமை கோருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான இலவச சட்ட ஆலோசனை வழங்கும் கூட்டம் இடம்பெற்றுள்ளது. மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி றம்போ விளையாட்டுக்க மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) காலை ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தலைமையில் இக் கூட்டம் இடம் பெற்றது. அரசாங்கத்தினால் காணி நிர்ணய கட்டளை சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் 28. 03 .2025யில் 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டு இருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கிலே மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை, மூன்று மாத காலத்துககுள் எவரும் உரிமை கோரதவிடத்து அவை அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிவித்தல் தொடர்பில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்ததுடன் அதனை உடனடியாக மீளப்பெறுமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வெற்றிலைக் கேணியில் உள்ள பொது மண்டத்தில் கடந்த மாதமும் இலவச சட்ட ஆலோசனை வழங்கும் கூட்டம் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது. அதன் போது பத்துக்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் கலந்து கொண்டு சட்ட ஆலோசனைகளை வழங்கினர். தற்போது மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (25) வெற்றிலைக் கேணியில் உள்ள றம்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் சட்ட உதவி வழங்கும் கூட்டம் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் கலந்து கொண்டு சட்ட உதவி வழங்கியதுடன் யாழ். பல்கலைக்கழக சட்டபீட மாணவர்களும் இதில் இணைந்து கொண்டிருந்தனர். மேலும் பெருமளவான காணி உரிமையாளர்களும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன் பெற்றனர். மேலும் இவ் இலவச சட்ட உதவி வழங்கும் கூட்டமானது கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைதீவுகளிலும் காணி சுவீகரிக்கப்படும் இடங்களில் இடம்பெறும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/215695
-
தமிழ்நாட்டில் கனமழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் இருந்த 3 பேர் மீட்கப்பட்டது எப்படி?
படக்குறிப்பு,கனமழை பாதிப்பு 26 மே 2025, 08:45 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் திங்கள் காலை வரை அதிகபட்சமான நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சியில் 35 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் சின்னக்கல்லாரில் 21 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக கோவை மாவட்டத்தின் வால்பாறையில் 29.5 செ.மீ மழையும், கோவை மாநகரில் 22 செ.மீ மழையும் பதிவாகியிருந்தது. அதே போல் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் கனமழை செய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. தமிழ்நாட்டிக்கு வருகிற மே 29ம் தேதி வரை கணமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் மழை பெய்வதன் மூலம் தனது வருகையை அறிவிக்கும் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே 27-ம் தேதியே தொடங்கிவிடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளாவில் முதல் முறையாக பருவ மழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் மே 24-ம் தேதியே தென் மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று தினங்களில் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு தென் மாநிலங்களில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே நீலகிரி, கோவை மாவட்டங்களில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று மற்ற இடங்களுக்கும் இது பரவும் என வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும், மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிராவின் சில பகுதிகளிலும், பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவின் சில பகுதிகளிலும், ஆந்திர மற்றும் தெலங்கானாவில் பல இடங்களிலும் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிலை என்ன? படக்குறிப்பு,நீலகிரியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. குறிப்பாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் மழையின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. குறிப்பாக உதகை அருகே உள்ள அவலாஞ்சியில் அதிகபட்சமாக 35 சென்டிமீட்டர் மழையும் அப்பர் பவானி பகுதியில் 30 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது இந்த கன மழையின் காரணமாக உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், தேயிலை பூங்கா, அவலாஞ்சி சூழல் சுற்றுலா, உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், குன்னூர் லேம்ஸ் ராக், பைகாரா நீர்வீழ்ச்சி ஆகிய சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். மரம் விழுந்ததில் உயிரிழந்த சிறுவன் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று கேரளா மாநிலம் கள்ளிக்கோட்டை வடகரை தாலுகாவைச் சேர்ந்த பிரசித் என்பவரது குடும்பம் உதகையிலிருந்து கூடலூர் செல்லும் சாலையில் சாலையோரம் உள்ள பைன் ஃபாரஸ்ட் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அப்போது அங்கு மரம் விழுந்ததில் பிரசித்தின் மகனான 15 வயது நிரம்பிய ஆதிதேவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அண்டை மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை படக்குறிப்பு,மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலங்களான கேரள மாநிலம் வயநாடு மற்றும் மலப்புறம் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அந்தப் பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் அவர்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுக்க கோரிக்கை விடுத்ததாகவும், மேலும் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட ஆட்சியருக்கும் நீலகிரி மாவட்டத்தின் மழை எச்சரிக்கை கொடுத்து தங்களது மாவட்ட மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் கேரளாவைச் சேர்ந்த 4 பேர் பயணித்த கார் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. காருக்குள் மூன்று பேர் சிக்கிக் கொண்டனர். அவர்கள் கூச்சலிட்டதை அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரம் போராடி அவர்களை மீட்டனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் கூடலுார் அருகேயுள்ள வடவயல் என்ற கிராமத்தில் கனமழை காரணமாக, வீடுகள் மிகவும் சேதம் அடைந்திருப்பதால் அரசு பள்ளி ஒன்றில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கூடலூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தொரப்பள்ளி அருகே உள்ள தேன்வையில் கிராமத்தை ஆற்று வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்து குளம் போல காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர். வால்பாறையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு படக்குறிப்பு,வால்பாறையில் சரிந்து விழுந்த மரம் கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதனை ஒட்டியுள்ள எஸ்டேட் பகுதிகளில் சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வால்பாறையை அடுத்த பாலாஜி கோயில் செல்லும் பிரதான சாலையான கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் சாலைகளில் விழுந்து அக்கா மலையிலிருந்து வால்பாறை நோக்கி வரும் பேருந்து லாரி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சாலையில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்தி சாலையை சீர் செய்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. முழு கொள்ளளை எட்டிய பில்லூர் அணை படக்குறிப்பு,பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவான 97 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளாவின் அட்டப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக பருவ மழை பெய்து வருவதால் அனைக்கான நீர்வரத்து வினாடிக்கு 18000 கன அடியாக இருந்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 18,000 கன அடி தண்ணீர் நான்கு மதகுகள் மூலம் உபரியாக பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது பவானி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பாக நெல்லித்துறை மேட்டுப்பாளையம், ஸ்ரீரங்க ராயன் ஓடை, சிறுமுகை, ஆலங்கொம்பு, வச்சினம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து வருகின்றனர். கோவையில் பழமையான மரங்கள் அகற்றம் படக்குறிப்பு,கோவையில் வேப்ப மரம் வீட்டின் சுவரின் மீது சாய்ந்தது கோவையில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் மாநகராட்சியால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் காணப்படும் பழமையான மரங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன. நேற்று மாலை உக்கடம் கோட்டைமேடு வின்சென்ட் ரோட்டில் உள்ள 35 ஆண்டு கால பழமையான மே பிளவர் மரத்தை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணத்திற்ளாக வின்சென்ட் ரோடு சாலை மூடப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. குனியமுத்தூர் பகுதியில் மின் நகரில் கனமழையின் காரணமாக வேப்ப மரம் வீட்டின் சுவரின் மீது சாய்ந்தது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். ராமநாதபுரத்தில் சூறைக்காற்று தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் சாலைகளில் புழுதி காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தென் தமிழக கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 55 வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தின் சுற்றுவட்டார பகுதிகளான பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், உச்சிப்புளி ஆகிய கடலோர பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்று வீசி வருகின்றன. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள், ஆங்காங்கே போடப்பட்டிருந்த பந்தல்கள் காற்றில் பறக்கின்றன. தென்னை மரங்கள், வாழை மரங்கள் இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வளைந்து அங்கும், இங்குமாக அசைந்து ஆடுகிறது. சாலைகளில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு காற்றின் வேகம் உள்ளதால் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீசி வரும் சூறைக்காற்று ஏற்பட்ட புழுதியால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடலுக்குச் செல்லாத நாட்டுப்படகு மீனவர்கள் படக்குறிப்பு,நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. அரபிக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 600 நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கூடங்குளம், உவரி, கூத்தங்குழி, கூட்டப்புளி, பெருமணல், தோமையார்புரம், பஞ்சல், இடிந்தகரை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 6000 நாட்டு படகு மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதிகளில், இன்று தொடங்கி வருகிற 29 வரை சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை வீச கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது அதே போன்று சுற்றுலா பயணிகளும் கடற்கரை, நீர் நிலைகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர் வீழ்ச்சிகளுக்குச் செல்லத் தடை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர் வீழ்ச்சிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சிறுவாணி அருகே அமைந்துள்ள கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சிக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு மேல் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அங்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென்காசி மாவட்டம் குற்றால நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு படக்குறிப்பு,முல்லைப் பெரியாறு அணை தமிழக - கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கன அடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 115.65 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 1,648.03 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 100 கன அடியாகவும், அணையின் மொத்த நீர் இருப்பு 1844.00 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் 55.08 மில்லி மீட்டரும் அளவும் தேக்கடி பகுதியில் 36.2 மில்லி மீட்டர் அளவும் மழை பதிவாகியிருந்தது. இங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படை கேரளா விரைவு கேரளாவிற்கு அடுத்த மூன்று நாட்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கக் கூடிய நிலையில் தமிழ்நாட்டில் இருந்து பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்துள்ளனர். அரக்கோணத்தை மையமாகக் கொண்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரள மாநிலம் விரைகின்றனர். கேரளாவின் காசர்கோடு, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு 30 பேர் கொண்ட மூன்று குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் மோப்ப நாய்கள் பிரின்ஸ் மற்றும் மிக்கி ஆகியோர் கொண்ட குழுவினர் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள விரைவதாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crk2j7ye5z8o
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
கிளாசன் மின்னல் வேக சதம்! வரலாற்றில் அழுத்தமாக தடம் பதித்து விடைபெற்றது சன்ரைசர்ஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹென்ரிச் கிளாசன் அதிவேக சதம். கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஹென்ரிச் கிளாசனின் அதிவேக சததத்தால் 2025 ஐபிஎல் சீசனை வெற்றியுடன் முடித்து, 6வது இடத்தோடு விடைபெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 68-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்லத்தா நைட் ரைடர்ஸ் அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் சேர்த்தது. 279 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 18.4 ஓவர்களில் 168 ரன்களுக்கு ஆட்டமிழந்து 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ருத்ரதாண்டவம் ஆடிய கிளாசன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அரைசதம் அடித்த கிளாசன் 300 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்கு கடந்த பல சீசன்களாகவே பெரிய ஸ்கோர்களையும், அதிரடி வெற்றிகளையும் கிளாசன் பெற்றுக் கொடுத்துள்ளார். அந்த வரிசையில் நேற்றைய ஆட்டமும் முக்கிய மைல்கல்லாகும். 39 பந்துகளில் 105 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த கிளாசன் கணக்கில் 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். 17 பந்துகளில் அரைசதம் அடித்த கிளாசன் 300 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்தார், இறுதியாக முடிக்கும்போது 269 ஸ்ட்ரைக் ரேட்டில் கிளாசன் இருந்தார். 3வது விக்கெட்டுக்கு இஷான் கிஷனுடன் பேட் செய்த கிளாசன் 20 பந்துகளில் அரைசதம் அடித்தனர். 19வது ஓவரில்தான் கிளாசன் 37 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். இஷான் கிஷன் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷனுடன் 3வது விக்கெட்டுக்கு கிளாசன் 83 ரன்கள் சேர்த்தார். கிளாசன் அதிரடி ஆட்டத்தை நிகழ்த்துவதற்கு முன் டிராவிஸ் ஹெட் தனது வானவேடிக்கையை முடித்துவிட்டு சென்றார். 6 சிக்ஸர்கள், 6பவுண்டரிகள் உள்பட 40 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஹெட் ஆட்டமிழந்தார். கடந்த பல போட்டிகளாக ஃபார்மின்றி தவித்த டிராவிஸ் ஹெட் கடைசி லீக்கில் சிறப்பாக ஆட்டத்தை முடித்திருப்பது, டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு செல்லும்போது நம்பிக்கையளிக்கும். 26 பந்துகளில் அரைசதம் அடித்த ஹெட்டின் ஆட்டத்தால், சன்ரைசர்ஸ் அணி பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 79ரன்கள் சேர்த்தது. அபிஷேக் சர்மா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு அபிஷேக், ஹெட் 92 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 2வது விக்கெட்டுக்கு ஹெட், கிளாசன் ஜோடி 83 ரன்கள் சேர்த்தனர். இந்த 3 பார்ட்னர்ஷிப்புகளும் தான் சன்ரைசர்ஸ் அணி பெரிய ஸ்கோரை அடைய காரணமாகும். பாவப்பட்ட கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொல்கத்தா பந்துவீச்சாளர்களில் வைபவ் அரோரா மட்டுமே ஓவருக்கு 9 ரன்கள் வீதத்தில் வாரி வழங்கினார். கொல்கத்தா பந்துவீச்சாளர்களில் வைபவ் அரோரா மட்டுமே ஓவருக்கு 9 ரன்கள் வீதத்தில் வாரி வழங்கினார். மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 13 ரன்களுக்கும் மேலாக கொடை வள்ளலாக மாறி ரன்களை வாரிக் கொடுத்தனர். வேகப்பந்துவீச்சாளர்கள் நோர்க்கியா, அரோரா, ராணா ஆகியோர் மட்டும் 11 ஓவர்கள் வீசி 139 ரன்களை வழங்கி ஒரு விக்கெட் வீழ்த்தினர். சுழற்பந்துவீச்சாளர்கள் நரேன், வருண் இருவரும் 7 ஓவர்கள் வீசி 96 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரஸல் 2 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்தார். ஆன்ரிச் நோர்க்கியா 4 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதுமின்றி 60 ரன்களை வழங்கினார், வருண் 54 ரன்கள் என மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். டெல்லி மைதானம் சிறியது, இதில் அதிகவேகமாக பந்துவீசும்போது, பேட்டர்கள் வேகமாக டிபெண்ட் செய்தாலே பந்து பவுண்டரிக்கு பறந்துவிடும், சிக்ஸருக்கு லேசாக முயற்சித்து சரியான ஷாட்களை ஆடினால் எளிதாக சிக்ஸருக்கு பறந்துவிடக்கூடிய மைதானம். இதில் ராணா, நோர்க்கியா ஆகியோர் மணிக்கு 145 கி.மீ வேகத்துக்கு மேல் பந்துவீசியது பெரிய தவறாகும். அதேபோல வருண், நரேன் பந்துவீச்சில் வழக்கமான லைன் லென்த் கிடைக்காமல் திணறினர். இதனால் இருவரும் சிறிய தவறு செய்து பந்தை ஸ்லாட்டில் போட்டவுடன் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பந்து பறந்தது. குறிப்பாக கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற இன்டென்ட் இல்லாமல் சில நேரங்களில் செயல்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. சுனில் நரேனால் பவுண்டரி கொடுக்காமலும் ஒரு ஓவரை வீச முடிந்தது, இருப்பினும் அதைத் தொடர்ந்து செயல்படுத்த அவரால் முடியவில்லை. ஆடுகளமும் பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக மாற்றப்பட்டிருந்ததால், பந்துவீச்சாளர்களின் நிலைமை பரிதாபமாக இருந்தது. 3-வது அதிகபட்ச ஸ்கோர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் 3வது அதிகபட்ச ஸ்கோரை நேற்று பதிவு செய்தது. ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அணி 3வது அதிகபட்ச ஸ்கோரை நேற்று பதிவு செய்தது. இதற்கு முன்பாக, 2024ம் ஆண்டு ஆர்சிபிக்கு எதிராக 284 ரன்களையும், இந்த சீசனில் ராஜஸ்தானுக்கு எதிராக 286 ரன்களை பதிவு செய்ததும் சன்ரைசர்ஸ் அணிதான். இப்போது 3வது அதிகபட்சமாக ஸ்கோராக நேற்று டெல்லியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 278 ரன்களையும் பதிவு செய்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் வரிசையில் முதல் 6 இடங்களில் ஐந்தில் சன்ரைசர்ஸ் அணியே இருக்கிறது. 3வது அதிவேக சதம் 3வது இடத்தில் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசன் கொல்கத்தா பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 17 பந்துகளில் அரைசதம் அடித்த கிளாசன் அடுத்த 20 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து 37 பந்துகளில் சதத்தை நிறைவு செய்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த 3வது வீரர் என்ற பெருமையை கிளாசன் பெற்றார். சுனில் நரேன் பந்துவீச்சில் 10 பந்துகளில் 24 ரன்கள், வருண் பந்துவீச்சில் 12 பந்துகளில் 36 ரன்கள் என கிளாசன் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார். இதற்கு முன் கிறிஸ் கெயில் 30 பந்துகளிலும், வைபவ் சூர்யவம்சி 35 பந்துகளிலும் அதிவேகமாக சதம் அடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எந்த பேட்டரும் பொறுப்பாக சேஸ் செய்யும் நோக்கில், நிதானமாக பேட் செய்யவில்லை. இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 37 ரன்களும், ஹர்சித் ராணா 34, சுனில் நரேன் 31 ரன்களும் சேர்த்தனர். மற்ற அனைத்து பேட்டர்களும் 20 ரன்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்தனர். மிகப்பெரிய இலக்கு, ஏற்கெனவே தொடரிலிருந்து வெளியேறிவிட்டோம், இதில் வென்றாலும் பலன் இல்லை என்ற வெறுமை ஆகியவை நேற்று கொல்கத்தா பேட்டர்களிடம் தெளிவாகத் தெரிந்தது. இதனால் எந்த பேட்டரும் பொறுப்பாக சேஸ் செய்யும் நோக்கில், நிதானமாக பேட் செய்யவில்லை. களத்துக்கு வருவதும், போவதுமாக பேட்டர்கள் இருந்தனர், ஹர்சித் ராணா, மணிஷ் பாண்டே தவிர மற்ற அனைத்து பேட்டர்களும் 20 பந்துகளுக்கும் குறைவாகவே சந்தித்து ஆட்டமிழந்தனர். சன்ரைசர்ஸ் தரப்பில் உனத்கட், மலிங்கா, ஹர்ஸ் துபே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். "அற்புதமாக முடித்துள்ளோம்" பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறுகையில், "அற்புதமாக தொடரை முடித்துள்ளோம். இந்த சீசனில் கடந்த சில போட்டிகளில் சில விஷயங்கள் சிறப்பாக நடந்தன. எங்களுக்கு தகுதி இருக்கிறது. ஆனால், சில போட்டிகளில் தவறுகளை சரி செய்து விளையாடவில்லை. பலமுறை பைனல் சென்றிருக்கிறோம், ஆனால் இந்த ஆண்டு எங்களால் முடியவில்லை. போட்டிகளிலும் எதிர்பார்த்த அளவு விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. அணியில் உள்ள சில வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது, அதை அவர்கள் சரியாக பயன்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டபோதிலும், 20 வீரர்களையும் பயன்படுத்தி, வாய்ப்பு வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது" எனத் தெரிவித்தார். சன்ரைசர்ஸ் 6-வது இடம் இந்த வெற்றியால் சன்ரைசர்ஸ் அணி 2025 ஐபிஎல் சீசனில் 6 வெற்றிகள், ஒரு போட்டி ரத்து என மொத்தம் 13 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் முடித்தது. இருப்பினும் சன்ரைசர்ஸ் அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 0.241 என்ற அளவே இருந்தது. கடைசி இரு போட்டிகளில் பெற்ற வெற்றியால் சன்ரைசர்ஸ் அணிக்கு எந்தப் பலனும் இல்லாவிட்டாலும் 2 வெற்றிகளும் முன்பே கிடைத்திருந்தால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றிருக்கலாம். நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 14 போட்டிகளில் 5 வெற்றிகள், 2 போட்டிகள் மழையால் ரத்தால் 12 புள்ளிகளுடன் -0.305 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் முடித்துள்ளது. ரஹானே தலைமையில் களமிறங்கிய நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி பெரிய எதிர்பார்ப்புடன் சீசனுக்குள் வந்து, 8வது இடத்தோடு முடித்தது. எதிர்வரும் முக்கிய ஆட்டங்கள் இன்றைய ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் இடம்: ஜெய்பூர் நேரம்: இரவு 7.30 ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs லக்னெள நாள் – மே 27 இடம் – லக்னெள நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-638 ரன்கள்(13 போட்டிகள்) சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-636 ரன்கள்(13 போட்டிகள்) சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 583 (13 போட்டிகள்) நீலத் தொப்பி யாருக்கு? நூர் அகமது(சிஎஸ்கே) 24 விக்கெட்டுகள்(14போட்டிகள்) பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 23 விக்கெட்டுகள்(14 போட்டிகள்) டிரன்ட் போல்ட் (மும்பை) 19 விக்கெட்டுகள்(13 போட்டிகள்) - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg9447x789o
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் பிறந்த 5 குழந்தைகள்..!
Published By: DIGITAL DESK 3 26 MAY, 2025 | 11:04 AM யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகளை தாயார் ஒருவர் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது. சனிக்கிழமை (24) யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினருக்கே ஒரே சூழில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன. 3 ஆண்குழந்தைகளையும் 2 பெண் குழந்தைகளையும் குறித்த தாயார் பிரசவித்துள்ளார். தாயும் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளார்களென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/215702
-
ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவிட்டால் 25% வரி விதிக்கப்படும் ! ட்ரம்ப் எச்சரிக்கை!
ஐபோன் உற்பத்தி: டிரம்ப் அறிவிப்பால் தமிழ்நாட்டில் 'ஆப்பிள்' திட்டங்களுக்கு பாதிப்பு வருமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தீபக் மண்டேல் பதவி, பிபிசி செய்தியாளர் 25 மே 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் விரும்பினால் அதை அவ்வாறே செய்து கொள்ளலாம். ஆனால் அந்த நிறுவனத்தின் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை அமெரிக்காவில், சுங்க வரி இல்லாமல் விற்பனை செய்ய இயலாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை அதிபர் மாளிகையில் சில நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டப் பிறகு இதனை அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தம் ஆரம்பமாவதற்கு முன்பாக, வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்க இருப்பதாக அவர் அறிவித்தார். சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு டொனால்ட் டிரம்ப் வரியை அதிகரித்த நிலையில், இந்தியாவை உற்பத்தி மையமாக மேம்படுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்தது. ஆனால் டிரம்பிடம் இருந்து அடுத்தடுத்து வெளியான இந்த இரண்டு கருத்துக்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு கவலை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த அறிவிப்பு இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏன் என்றால் ஆப்பிளின் மொத்த ஐபோன் உற்பத்தியில் 15% உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்கிறது. தற்போது இந்த உற்பத்தித் திறனை 25% ஆக அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இதனால் ஆப்பிளுக்கு என்ன ஆபத்து? டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில வாரங்களுக்கு முன்பு தான், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் பெரும்பான்மையான ஐபோன்கள் இந்தியாவில் இருந்து உருவாக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 1.49 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான உற்பத்தி மையத்தை அமைப்பதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியது, ஆப்பிள் பொருட்களை ஒப்பந்த முறையில் உற்பத்தி செய்து தரும் ஃபாக்ஸ்கான். இந்தியாவில் செயல்பட்டு வரும் ஃபாக்ஸானின் யுஸான் டெக்னாலஜீஸ் ப்ரைவேட் லிமிட்டட் நிறுவனத்தில் இந்த முதலீட்டை செலுத்த இருப்பதாக லண்டன் பங்கு சந்தையில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்திருந்தது. சென்னையில் இதன் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரத்தில் ரூ. 13,180 கோடி மதிப்பில் இந்த தொழிற்சாலையை நிறுவ கடந்த அக்டோபர் மாதம், தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பை பி.கே.சி. ஆப்பிள் விற்பனை மையத்தில் வாடிக்கையாளருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் டிம் குக் டிரம்ப் விடுத்த எச்சரிக்கை என்ன? ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே, அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களை அமெரிக்காவில் தான் உற்பத்தி செய்ய வேண்டும். இந்தியாவிலோ வேறெந்த நாட்டிலோ உற்பத்தி செய்யக் கூடாது என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்த டொனால்ட் டிரம்ப், "அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என நான் டிம் குக்கிடம் கூறியிருந்தேன். ஆனால் அவர் இந்தியாவில் ஆலை அமைக்க உள்ளார். எனக்கு அதில் ஒன்றும் பிரச்னை இல்லை என்று கூறிவிட்டேன். ஆனால் அமெரிக்காவில் வரி ஏதுமின்றி ஐபோன்களை விற்பனை செய்ய இயலாது," என்று எழுதியிருந்தார். டிரம்பின் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனத்தால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களை அமெரிக்காவில் விற்பனை செய்ய இயலுமா? மேலும் இந்த நடவடிக்கையால் ஆப்பிள் நிறுவனம் மற்றும் இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பு எத்தகையது? ஐபோன்களை அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யும் போது அங்கே வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் அதன் மூலமாக ஆப்பிள் நிறுவனத்தால் லாபம் ஈட்ட இயலுமா? இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள நாம் க்ளோபல் டிரேட் ரிசர்ச் இனிசியேடிவ் (ஜி.டி.ஆர்.ஐ) அமைப்பின் நிறுவர் அஜய் ஶ்ரீவஸ்தாவிடம் பேசினோம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐபோன்களை அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யும் போது அங்கே வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்வது எவ்வளவு மலிவானது? பிபிசியிடம் பேசிய அவர், "ஒரு ஆப்பிள் போனின் விலை 1000 டாலர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனை உற்பத்தி (அசெம்பிள்) செய்து தரும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒரு போனுக்கு 30 டாலர்கள் மட்டுமே கிடைக்கின்றன. ஐபோன்களின் முக்கியமான உற்பத்தி மையமாக இவ்விரு நாடுகள் இருக்கும் போதிலும், ஐபோன்களின் சில்லறை விலையில் 3 சதவீதத்தை மட்டுமே இவ்விரு நாடுகளும் பெறுகின்றன," என்றார். இதுமட்டுமின்றி, இந்தியாவில் ஐபோன்கள் மிகவும் குறைந்த விலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏன் என்றால் இங்கே உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களின் சம்பளம் மிகவும் குறைவு என்று அவர் கூறுகிறார். ஐபோன்களின் உதிரி பாகங்களை ஒன்றிணைத்து உற்பத்தி மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு இங்கே சராசரியாக மாதத்திற்கு ரூ. 17 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. அதாவது அமெரிக்க டாலர்களில் அதன் மதிப்பு 230 டாலர்கள் மட்டுமே. ஆனால் அமெரிக்காவில் பின்பற்றப்படும் கடுமையான குறைந்தபட்ச ஊதிய சட்டம் காரணமாக அங்கே ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 2900 டாலர்களை சம்பளமாக வழங்க வேண்டும். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஒருவருக்கு அளிக்கும் சம்பளத்தைக் காட்டிலும் 13 மடங்கு அதிக சம்பளத்தை ஊழியர்களுக்கு அமெரிக்காவில் வழங்க நேரிடும். ஜி.டி.ஆர்.ஐயின் மதிப்பாய்வின் படி, இந்தியாவில் ஒரு ஐபோனை அசெம்பிள் செய்வதற்கு 30 டாலர்கள் செலவாகின்றது. அமெரிக்காவில் இந்த செலவு 390 அமெரிக்க டாலர்கள். இதுமட்டுமின்றி இந்திய அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட பி.எல்.ஐ. திட்டத்தின் (Production Linked Incentive) மூலமாகவும் ஆப்பிள் நிறுவனம் பயனடைகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின் படி, இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆப்பிளின் மூன்று பெரிய உற்பத்தி ஆலைகளான ஃபாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பெகட்ரான் (தற்போது இது ஒரு டாடா நிறுவனம்), இந்த திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் ரூ. 6600 கோடியை பெற்றுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவில் ஒரு ஐபோனை அசெம்பிள் செய்வதற்கு 30 டாலர்கள் செலவாகின்றது. அமெரிக்காவில் இந்த செலவு 390 டாலர்கள். தமிழ்நாட்டில் 'ஆப்பிள்' திட்டங்களுக்கு பாதிப்பு வருமா? இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி அதிகரித்த போது புதிய வேலை வாய்ப்புகளும் அதிகரித்தன. ஒரு அறிக்கையின் படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 1,64,000 பேருக்கும் மேற்பட்டோர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆப்பிளின் ஐபோன் உற்பத்தி ஆலைகள் மூலமாக வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இந்தியாவில் செயல்பட்டு வரும் உற்பத்தி ஆலைகளில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஶ்ரீபெரும்புதூர் ஆலை மிகவும் பெரியது. சென்னையில் இருந்து 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த உற்பத்தி ஆலையில் 40 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளியூர்களில் இருந்து வரும் பெண்கள் தான். ஆப்பிள் உற்பத்தி மையம் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டால் இங்குள்ள மக்கள் வேலைகளை இழக்க நேரிடும். ஆனால் இந்த குறைந்த ஊழியத்தில், அமெரிக்காவில் ஐபோன்களை அசெம்பிள் செய்வது இயலாத காரியம் என்பதால் ஆப்பிள் இத்தகைய முடிவை எடுக்காது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களுக்கு கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் கூறியிருந்தாலும் இது ஆப்பிளுக்கு தான் நன்மையளிக்கும் என்று அஜய் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆப்பிள் உற்பத்தி மையம் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டால் இங்குள்ள மக்கள் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும். (சித்தரிப்புப் படம்) இந்தியாவுக்கு அழுத்தம் தருவதற்காக பின்பற்றப்படும் உத்தியா இது? டிரம்பின் எச்சரிக்கை குறித்து பிபிசியிடம் சமீபத்தில் பேசிய, டெலிகாம் எக்யூப்மெண்ட் மெனுஃபேக்சரிங் அசோசியேசன் அமைப்பின் முன்னாள் தலைவரும், பேராசிரியருமான என்.கே. கோயல், "உற்பத்தியாளருக்கு சாதகமான சூழல் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது," என்று கூறினார். "நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. விநியோகச் சங்கிலி மேம்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தியை மேம்படுத்த கொள்கைகளில் அரசாங்கம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவைக் காட்டிலும் சீனாவில் உற்பத்தி செய்வது மிகவும் மலிவானது. ஆனால் நிறுவனங்கள் பி.எல்.ஐ போன்ற திட்டங்களால் பயனடைந்தன. மேலும் இந்தியா ஒரு போட்டியாளராக உருவெடுத்தது." டிரம்பின் அறிவிப்பை தீவிரமாக எடுத்துக் கொள்வதற்கு முன்பு பொறுமையாக சிந்திக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "டிரம்பின் பார்வை மாறிக் கொண்டே இருப்பதால், இன்று இந்தியாவும் இதர உலக நாடுகளும் அவர் கூறும் அறிக்கையை பொறுமையாக கவனிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டுள்ளன. இந்த விவகாரத்தில் ஆப்பிள் என்ன முடிவெடுத்தாலும், அதனை தீவிர சிந்தனைக்குப் பிறகே மேற்கொள்ளும்," என்று கோயல் தெரிவிக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டிரம்பின் அறிவிப்பை தீவிரமாக எடுத்துக் கொள்வதற்கு முன்பு பொறுமையாக சிந்திக்க வேண்டும் "லாபம் மற்றும் நஷ்டங்களை கருத்தில் கொண்டே அந்த நிறுவனம் ஒவ்வொரு முடிவையும் மதிப்பிடும். ஆப்பிளைப் பொறுத்தமட்டில், உற்பத்தி மையத்தை இந்தியாவுக்கு நகர்த்துவது என்பது வர்த்தக அடிப்படையிலானது. ஏன் என்றால் சீனாவை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் சீனாவில் இருந்து வெளியேறவும் அந்த நிறுவனம் விரும்பியது. இந்தியாவில் வாய்ப்புகளும் வளங்களும் இருக்கும் போது ஆப்பிள் நிறுவனம் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டது. இங்கே உற்பத்தி மையங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் உற்பத்திக்குத் தேவையான சுற்றுச்சூழல் உருவாக்கப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக இங்கே உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இங்கிருந்து வெளியேறுவது என்பது எளிதான முடிவல்ல," என்று கோயல் கூறுகிறார். அஜய் ஶ்ரீவதஸ்தாவும் கோயலின் கருத்துகளை ஆமோதிக்கிறார். இந்தியாவில் உருவாக்கப்படும் ஆப்பிள் போன்கள் குறித்து டிரம்ப் வெளியிட்ட அறிக்கையானது மிகவும் யோசித்து மேற்கொள்ளப்பட்ட உத்தியாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். இந்த விவகாரத்தின் மூலம் இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்ததில் அழுத்தம் தர அவர்கள் முயற்சிக்கலாம். இந்தியாவில் இருந்து மேலும சில சலுகைகளைப் பெறுவதை அவர்கள் நோக்கமாக கொண்டிருக்கலாம். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2016x05rdro
-
வவுனியாவில் விபத்து; கணவன் பலி; மனைவி, மகன், மாமனார் படுகாயம்
26 MAY, 2025 | 10:44 AM வவுனியா ஓமந்தை பகுதியில் திங்கட்கிழமை (26) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மாவே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். தனது தனிப்பட்ட விஜயமாக வட இந்தியா இமயமலை சாரலுக்கு வழிபாட்டிற்காக சென்று கட்டுநாயக்கா ஊடாக வருகை தந்து யாழ்ப்பாணத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்த வேளை டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தின் போது காரில் பயணித்த கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/215689
-
ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவு!
Published By: VISHNU 25 MAY, 2025 | 11:28 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் சஞ்சிகை இன் ‘ஆசிய விஞ்ஞானி; - 100 பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியல், ஆசியாவிலுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளின் விசேட சாதனைகளை அங்கீகரிக்கிறது. பொதுவாக, இந்த பட்டியலில் தேர்வு செய்யப்படும் தலைசிறந்த விஞ்ஞானிகள், அவர்களின் தரமான ஆய்வு வெளியீட்டுக்கப்பால் தேசிய அல்லது சர்வதேச விருதை பெற்றிருக்க வேண்டும். பதிலாக முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது கல்விசார் அல்லது தொழில்சார் தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டும். விஞ்ஞானப் பீடாதிபதியாக கடந்த ஜந்து ஆண்டுகள் பணியாற்றிவரும் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் அவர்கள் பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவற்றில், துணைவேந்தர்கள் இயக்குனர்கள் சபையினரால் வழங்கப்பட்ட பௌதிக விஞ்ஞானத்திற்கான அதி சிறந்த இள ஆராய்ச்சியாளர் விருது, தேசிய விஞ்ஞான மன்றத்தினால் வழங்கப்பட்ட இள விஞ்ஞானி விருது, மற்றும் தேசிய ஆராய்ச்சி பேரவை பல தடவைகள் வழங்கிய சிறந்த ஆராய்ச்சி வெளியீட்டுகளுக்கான ஜனாதிபதி விருதுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவரின் ஆய்வுக் கட்டுரைகள் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளால் அதிகளவு மேற்கோளிடப்பட்டு வருகின்றன. சர்வதேசத்தரத்திலான இவரது ஆய்வுச் செயற்பாடுகளினால் ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவாகியுள்ள சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்லாது யாழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார். https://www.virakesari.lk/article/215676
-
உகந்தமலை சூழலில் புதிதாக முளைத்த புத்தர் சிலையும் பௌத்த கொடியும்!
Published By: DIGITAL DESK 3 26 MAY, 2025 | 10:30 AM வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச் சூழலில் உள்ள மலையொன்றில் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளதுடன் அதனோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது. வருடாந்தம் முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற கடற்கரைச் சூழலில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள மலையில் குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேலாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது. உகந்தை மலையில் நாங்கள் முருகன் சிலையொன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதே சூழலில் இந்த புத்தர் சிலை எவ்வாறு நிறுவப்பட்டது என்று மக்கள் கவலை தெரிவித்தததுடன் கதிர்காமம் போல் உகந்தையையும் மாற்றத் திட்டமிட்ட சதி நடக்கிறதா என்றும் அவர்கள் அஞ்சுகின்றார்கள். இந்த விடயம் தொடர்பாக இந்து மக்கள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். பிரபல சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித்திடமும் மக்கள் முறையிட்டுள்ளனர். உகந்தைமலை வள்ளியம்மன் மலையில் கடந்த காலத்தில் முருகன் சிலை அமைப்பதற்கு கிழக்கு முன்னாள் ஆளுநர், அமைச்சர்கள், ஆலய நிர்வாகத்தினர் முயற்சி செய்த போது அதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தடை செய்ததாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில், அதே சூழலில் உள்ள மற்றுமொரு மலையில் புத்தர் சலை வைக்கப்பட்டிருப்பது இந்துக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து உரிய, நீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/215694
-
நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களை அண்மித்த 'நீரில் 115 மடங்கு அதிக பாதரசம்' - பிபிசி தமிழ் கள ஆய்வு
'நீரில் 115 மடங்கு அதிக பாதரசம்' - என்எல்சியை ஒட்டிய கிராமங்களில் என்ன நடக்கிறது? பிபிசி தமிழ் கள ஆய்வு பட மூலாதாரம்,NLC படக்குறிப்பு,என்.எல்.சி கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "வேலைக்குப் போனால் 200 ரூபாய் சம்பளம் வரும். மாதம் மருந்து செலவுக்கே மூன்றாயிரம் தேவைப்படுகிறது. தனியார் மருத்துவரிடம் தான் சிகிச்சை பெறுகிறேன். எங்கள் கிராமத்தில் மருத்துவ வசதிகள் இல்லை" நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களை ஒட்டியுள்ள சிறிய கிராமமான அம்மேரியைச் சேர்ந்த மணி என்பவரின் கூற்று இது. விவசாய கூலியாக இருக்கும் அவரது 2 சிறுநீரகங்களுமே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (NLC) நிறுவனத்தை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு அனல்மின் நிலையம் மற்றும் சுரங்கத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் காற்று மாசு ஆகியவையே காரணம் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நெய்வேலியில் நடத்திய ஆய்வில், நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு பாதரசம் இருப்பதைக் கண்டறியப்பட்டிருப்பதாக, பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆனால், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என என்எல்சி நிர்வாகம் கூறுகிறது. அப்படியானால் நிலக்கரி சுரங்கங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் என்ன பிரச்னை? பிபிசி தமிழின் கள ஆய்வில் தெரியவந்தது என்ன? படக்குறிப்பு,நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு பாதரசம் இருப்பது தெரியவந்துள்ளது 64 ஆயிரம் ஏக்கர் திறந்தவெளி சுரங்கம் கடலூர் மாவட்டத்தில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் இந்தியா லிமிடெட் இயங்கி வருகிறது. சுமார் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வெட்டியெடுக்கப்படும் நிலக்கரி, நான்கு அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அனல் மின் நிலையத்தில் 3390 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் உள்ளதாக என்எல்சியின் இணையதளம் கூறுகிறது. நிலக்கரி சுரங்கத்துக்காக 1956-ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ள இடத்துக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அம்மேரி, ஆதண்டார் கொல்லை, கரிவெட்டி, கூரைப்பேட்டை, மூலப்பட்டு ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. நீர் நிலைகளில் பாதரசம் படக்குறிப்பு,கிராமங்களில் உள்ள நீர் ஆதாரங்களில் காட்மியம், துத்தநாகம், போரான் (Boron), செலினியம் போன்ற உலோகங்கள் இருப்பது தெரியவந்ததாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு நெய்வேலி, பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளில் மக்கள் பயன்பாட்டில் உள்ள குடிநீர், நிலத்தடி நீர், நீர்நிலை, விவசாய நிலம் ஆகியவற்றில் 'பூவுலகின் நண்பர்கள்' என்ற சுற்றுச்சூழல் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இங்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பி சோதனை செய்தபோது, வடக்கு வெள்ளூரில் உள்ள குடிநீர்த் தொட்டியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு பாதரசம் இருப்பது தெரியவந்தது என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இதுதவிர, கிராமங்களில் உள்ள நீர் ஆதாரங்களில் காட்மியம், துத்தநாகம், போரான் (Boron), செலினியம் போன்ற கன உலோகங்கள் இருப்பது தெரியவந்ததாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாயின. இதனைக் கண்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம். மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்கள், கடலூர் மாவட்ட ஆட்சியர், மெட்ரோ குடிநீர் வாரியம் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக வழக்கில் சேர்க்கப்பட்டனர். களநிலவரம் என்ன? படக்குறிப்பு,நெய்வேலி முதல் சுரங்கத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஆதாண்டார் கொல்லை, மூலப்பட்டு, அம்மேரி உள்பட சுமார் 65 கிராமங்கள் உள்ளன. நெய்வேலி முதல் சுரங்கத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஆதாண்டார் கொல்லை, மூலப்பட்டு, அம்மேரி உள்பட சுமார் 65 கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களின் அருகில் சுரங்கத்தில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் நடந்து வருவதை பிபிசி தமிழ் கள ஆய்வின் போது பார்க்க முடிந்தது. பல இடங்களில் மிகப் பெரிய அளவில் குழிகள் தோண்டப்பட்டிருந்தன. சுரங்கம் செயல்படும் இடங்களுக்குச் சென்றபோது, முழுதாக கம்பி வேலி அமைக்கப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (CISF) தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு நம்மிடம் பேசிய சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி ஒருவர், "எந்தப் பகுதியில் இருந்து வருகிறீர்கள்?" என விசாரித்தார். அந்த வழியாக செல்லும் ஒவ்வொருவரையும் அவர் தீவிரமாக கண்காணிப்பதைப் பார்க்க முடிந்தது. நிலத்தடி நீரால் சிறுநீரக பாதிப்பா? படக்குறிப்பு,சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்கான மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வருகிறார் தனசேகரன். அங்கிருந்து ஆதண்டார் கொல்லை கிராமத்துக்கு பிபிசி தமிழ் குழுவினர் சென்றோம். ''இங்கு குடியேறி 45 ஆண்டுகள் ஆகிவிட்டd. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கை, கால்களில் வலி, வீக்கம் இருந்ததால் ஆஸ்பத்திரிக்குப் போனேன். உப்பு அதிகமானதாக கூறி பரிசோதனைகளை எடுத்தார்கள்' எனக் கூறுகிறார், தனசேகரன். இவருக்கு சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்கான மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வருகிறார். 'எனக்கு மது, சிகரெட் என எந்தப் பழக்கமும் இல்லை. நிலத்தடி நீரைத் தான் குடிப்பதற்கு பயன்படுத்தி வருகிறேன்.' எனக் கூறினார். தனது வீட்டில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் நிலக்கரிச் சுரங்கம் இருப்பதாக கூறுகிறார் தனசேகரனின் மகன் சத்தியமூர்த்தி. "என் அப்பாவுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் மருத்துவ செலவுக்கு தேவைப்படுகிறது. ஒருநாள் மருந்து சாப்பிடாவிட்டால் கால் வீக்கம் அதிகமாகிவிடும். இதைக் கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் டயாலிஸில் வரை சென்றிருக்கும்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சத்தியமூர்த்தி. மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் சொன்னது என்ன? படக்குறிப்பு,கடலூரில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 115 மடங்கு பாதரசம் உள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூடுதல் முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயலட்சுமி கூடுதல் அறிக்கை ஒன்றை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தார். அதில், நீர்நிலைகள் (Surface water), நிலத்தடி நீர், மண், சாம்பல் துகள் என 22 மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஆய்வில் 17 நீர்நிலைகளில் 15 இடங்களில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் பாதரசம் (0.0012 mg/l to 0.115 mg/l) உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடலூரில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 115 மடங்கு பாதரசம் உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. இவை குடிநீர் மற்றும் பாசனத்துக்கு ஏற்றதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,NLC படக்குறிப்பு,வானதி ராயபுரம் பகுதிகளில் நிலத்தடி நீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 62 மடங்கு அதிகம் பாதரசம் இருப்பது அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார் "வளையமாதேவி கூட்டுக் குடிநீர்த் திட்டம், வாலஜா ஏரி, அய்யன் ஏரி, பரவனாறு ஆகியவை குடிநீர் ஆதாரமாக இருந்துள்ளன. நீர்நிலைகளில் இயற்கையாக பாதரசம் உருவாகாது. இவற்றில் எப்படி உருவானது" என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் வீரஅரசு கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சோதனையில் 9 நிலத்தடி நீர் மாதிரிகளில் ஆறு இடங்களில் பாதரசம் இருந்துள்ளது. அதன் அனுமதிக்கப்பட்ட அளவு என்பது 0.001 Mg/1 என, இந்திய அரசின் குடிநீர் தரக்கட்டுப்பாடு வரையறுத்துள்ளது. குடிநீரில் 0.006 mg/L என்ற அளவில் பாதரசம் இருக்கலாம் எனவும் செலினியத்தில் 0.01 என்ற அளவிலும் இருக்கலாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அப்படியிருக்கும்போது, இங்கு 0.0025 Mg/l முதல் 0.0626 வரை பாதரசம் காணப்பட்டுள்ளது. "இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட 2.5 முதல் 62 மடங்கு வரை அதிகம்" எனக் கூறுகிறார், பிரபாகரன் வீர அரசு. அதிலும், வானதி ராயபுரம் பகுதிகளில் நிலத்தடி நீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 62 மடங்கு அதிகம் பாதரசம் இருப்பது அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். "நிலக்கரி சுரங்கங்களை ஒட்டி வாழும் மக்கள் இந்த நிலத்தடி நீரைத் தான் பயன்படுத்துகின்றனர்" எனவும் அவர் கூறினார். "இது வெறும் வாழ்வாதார பிரச்னை மட்டும் அல்ல. மக்களின் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏராளமானோர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் டயாலிஸிஸ் செய்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான சிகிச்சை வசதிகள் கிடைப்பதில்லை" என்கிறார், பிரபாகரன் வீர அரசு. "நிலத்தடி நீரைத் தவிர வேறு ஆதாரம் இல்லை" படக்குறிப்பு,அம்மேரி கிராமத்தில் சுமார் 25 வருடங்களாக வசிக்கும் மணி என்பவருக்கும் இதே பிரச்னை தான். அம்மேரி கிராமத்தில் சுமார் 25 வருடங்களாக வசிக்கும் மணி என்பவருக்கும் இதே பிரச்னை தான். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் உடல் வீக்கம் அதிகமானதால், தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். "இரண்டு சிறுநீரகமும் சுருங்கிப் போய்விட்டதாக மருத்துவர் கூறினார். ஒவ்வொரு முறையும் சிகிச்சைக்குச் செல்லும்போது 3 ஆயிரம் செலவாகிறது." என்கிறார் மணி. "மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்றால் கடலூர் அல்லது புதுச்சேரி போக வேண்டும். எங்கள் கிராமத்துக்கு ஒரு செவிலியர் கூட வந்ததில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார். "நிலத்தடி நீரைத் தவிர வேறு எந்தத் தண்ணீரும் எங்களுக்கு வருவதில்லை." என்கிறார் மணி. அரசு மருத்துவமனை உள்ளது.. ஆனால்? படக்குறிப்பு,இக்கிராமத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் என்எல்சி அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அம்மேரி கிராமத்தில் மட்டும் சுமார் 700 குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் என்எல்சி மருத்துவமனை அமைந்துள்ளது. "இங்கு பொதுமக்கள் சென்றால் முதலுதவி சிகிச்சை மட்டும் செய்வார்கள். என்எல்சி ஊழியர்களுக்கு மட்டுமே அங்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கிராமத்தில் எந்த மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டதில்லை" என்கிறார், ஆதண்டார் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த மணி. நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெளியே வரும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து என்எல்சி டவுன்ஷிப்புக்கு (TownShip) கொடுப்பதாகக் கூறும் மணி, "கிராமங்களுக்கு அந்த நீர் வருவதில்லை. சுரங்கத்தில் மண்ணை இலகுவாக்குவதற்கு வெடி வைக்கின்றனர். அதன் கழிவுகள் ஓடை வழியாக செல்கிறது" எனக் குறிப்பிட்டார். படக்குறிப்பு,சுரங்கத்தின் பரப்பளவு அதிகரிப்பதால் கிராமத்துக்கு பிரச்னை அதிகரிப்பதாகக் கூறும் ரவி சுரங்கத்தின் பரப்பளவு அதிகரிப்பதால் கிராமத்துக்கு பிரச்னை அதிகரிப்பதாகக் கூறும் ரவி, "கீழே படியும் கரி உள்பட அனைத்துக் கழிவுகளையும் வெளியேற்றுகின்றனர். அது இங்குள்ள ஓடை வழியாக செல்கிறது" என்கிறார். அனல்மின் நிலையத்தின் கழிவுகள், வாலஜா ஏரியில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாய் சென்று அங்கிருந்து பெருமாள் ஏரி மூலமாக கடலில் சென்று கலப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆதண்டார் கொல்லையைச் சுற்றி வந்தபோது, ஊருக்குள் நீரோடை போல தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. "அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இது" எனக் கூறினார் ரவி. அந்த நீர் கருப்பு நிறத்தில் இருந்தது. படக்குறிப்பு,"அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இது" எனக் கூறினார் ரவி. அந்த நீர் கருப்பு நிறத்தில் இருந்தது." என்னென்ன பாதிப்புகள் வரும்? "பாதரசம் உள்ளிட்ட கன உலோகங்களால் மனித உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும்?" என, சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த புகழேந்தியிடம் பிபிசி தமிழ் கேட்டது. "சிறுநீரகங்களால் கன உலோகங்கள் வடிகட்டப்படும்போது அவை அதில் தங்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவை மோசமான புற்றுநோய் பாதிப்பையும் ஏற்படுத்தும்" என்று அவர் கூறுகிறார். தொழிற்சாலைக் கழிவுகளில் இருந்து ஆற்றில் கலக்கும் கன உலோகங்களால் புற்றுநோய், சிறுநீரக பாதிப்புகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். படக்குறிப்பு,என்.எல்.சி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் பதில் நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்ரீதியான பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் பிபிசி தமிழ் கேட்டது. "இதுவரை என் கவனத்துக்கு வரவில்லை. அங்குள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார். என்எல்சியின் விளக்கம் என்ன? என்எல்சியின் மக்கள் தொடர்புத் துறையின் துணைப் பொது மேலாளர் கல்பனா தேவியிடம் பிபிசி தமிழ் பேசியது. "உடல்நலப் பிரச்னைக்கு பாதரசம் உள்ளிட்டவை காரணம் எனக் கூறுகின்றனர். அதற்கான காரணம் குறித்து எந்த ஆவணங்களும் (Records) இல்லை" எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள அறிக்கைக்கு நீதிமன்றத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்த விவகாரத்தை சட்டரீதியாகவே நாங்கள் கையாண்டு வருகிறோம்" எனக் கூறினார். மக்களுக்கு மருத்துவ முகாம்களை நடத்தாமல் இருப்பது குறித்துக் கேட்டபோது, "ஏராளமான மருத்துவ முகாம்கள் நடந்து வருகின்றன. சில விஷயங்கள் மக்களிடையே தவறாக கொண்டு செல்லப்படுகிறது. இதை சட்டரீதியாக என்எல்சி நிர்வாகம் கையாள உள்ளது" என்கிறார் கல்பனா தேவி. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyg6npd68po
-
கேரளாவில் சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து!
அபாயகரமான இரசாயனங்களுடன் உடன் சரக்கு கப்பல் கேரள கடல் பகுதியில் மூழ்கியது - 24 ஊழியர்கள் மீட்பு 26 MAY, 2025 | 10:27 AM திருவனந்தபுரம்: அபாயகரமான இரசாயனங்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் கேரள கடல் பகுதியில் மூழ்கியது. அந்த கப்பலை இயக்கிய மாலுமிகள் உட்பட 24 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து லைபீரியாவை சேர்ந்த சரக்கு கப்பல் கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டது. இந்த கப்பலில் 100 கன்டெய்னர்கள் இருந்தன. இதில் 13 கன்டெய்னர்களில் அபாயகரமான ரசாயனங்களும் 12 கன்டெய்னர்களில் கால்சியம் கார்பைடும் இருந்தது. மேலும் 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் பர்னஸ் ஆயிலும் சரக்கு கப்பலில் கொண்டு செல்லப்பட்டது. இந்த சரக்கு கப்பல் நேற்று முன்தினம் கொச்சியில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் இருந்தது. அப்போது கப்பல் ஒருபக்கமாக சாயத் தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் இந்திய கடலோர காவல் படை மற்றும் கடற்படையை சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கப்பலில் பணியாற்றிய 21 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 3 பேர் சரக்கு கப்பலில் தொடர்ந்து தங்கியிருந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கப்பல் கடலில் மூழ்காமல் இருக்க 3 பேரும் அதிதீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து கடற்படையின் ஐஎன்எஸ் சுஜாதா கப்பலை சேர்ந்த வீரர்கள் நேற்று மீதமிருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதன்பிறகு சரக்கு கப்பல் முழுமையாக கடலில் மூழ்கியது. சரக்கு கப்பலில் அபாயகரமான ரசாயனங்கள் இருப்பதால் சுமார் 20 கடல் மைல் தொலைவுக்குள் மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ரசாயனங்கள், டீசல், பர்னஸ் ஆயில் ஆகியவை கேரள கடல் பகுதியில் கலந்து வருகின்றன. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறிய ரக விமானம் மூலம் கடலில் தடுப்பு ரசாயனங்கள் தெளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கேரள அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ரஷ்யா, உக்ரைன், ஜார்ஜியா, பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த 24 பேர் லைபீரிய சரக்கு கப்பலில் பணியாற்றினர். அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். என்ன காரணத்துக்காக சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக கப்பலின் மாலுமிகள், பொறியாளர்களிடம் விசாரித்து வருகிறோம். கேரள கடல் பகுதியில் அபாயகரமான ரசாயனங்கள், டீசல், பர்னஸ் ஆயில் கலந்து வருகிறது. இதனால் எர்ணாகுளம், ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளின் கடல் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பகுதிகளில் கன்டெய்னர்கள் கரை ஒதுங்கும் அபாயமும் இருக்கிறது. எனவே மீனவர்கள், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கேரள தலைமைச் செயலாளர் ஜெயதிலக் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். கேரள கடல் பகுதியில் கலந்திருக்கும் அபாயகரமான ரசாயனங்கள், எண்ணெயை அகற்றுவது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. கடலோர காவல் படையை சேர்ந்த சாக்சம் என்ற கப்பல், எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கடற்படையின் கண்காணிப்பு விமானம் மூலம் கடலில் தடுப்பு ரசாயனம் தெளிக்கப்படுகிறது. எர்ணாகுளம், ஆலப்புழா கடல் பகுதிகள், கடற்கரைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. இவ்வாறு கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. https://www.virakesari.lk/article/215691
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
இளம் வீரர்களால் சிஎஸ்கே பிரமாண்ட வெற்றி - ஓய்வு பற்றி தோனி கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 25 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆமதாபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 67-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியிடம் 83 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால், குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றில் முதலிடத்தைப் பெறுவதை தவறவிட்டுள்ளது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி, 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்தது. 231 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 18.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்து 83 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் குஜராத் அணி 14 போட்டிகளில் 9 வெற்றிகள் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் மாறாமல் இருந்தாலும், பஞ்சாப் அணியின் நிகர ரன்ரேட்டைவிட மோசமாக 0.254 எனச் சரிந்துள்ளது. சிஎஸ்கே அணி ஏற்கெனவே தொடரை விட்டு வெளியேறிவிட்டதால், வெற்றியுடன் சீசனை முடித்துள்ளது. மும்பை, ஆர்சிபி முதலிடம் பிடிக்க வாய்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES குஜராத் அணியின் தோல்வியால் ப்ளே ஆஃப் சுற்றில் 3 அணிகளில் முதலிடத்தைப் பிடிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மும்பை அணி பஞ்சாப்பை வீழ்த்திவிட்டால் 18 புள்ளிகளுடன் வலுவான நிகரரன்ரேட்டில் முதலிடத்தைப் பிடிக்கும். அதேசமயம், பஞ்சாப் அணி மும்பையிடம் தோற்கும்பட்சத்தில் 17 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடிக்கும். கடைசி லீக்கில் லக்னெள வென்றுவிட்டால் தற்போது 17 புள்ளிகளுடன் இருக்கும் ஆர்சிபி 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. 17 புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாப் அணி மும்பையை வீழ்த்திவிட்டால் 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும், ஆர்சிபியும் கடைசி லீக்கில் வென்றுவிட்டால் 19 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் யாருக்கு முதலிடம் என்பது தெரியவரும். இவ்வாறு நடந்தால், மும்பை அணி கடைசி இடத்திலும், குஜராத் அணி 3வது இடத்தைப் பிடிக்கும். ஆக, தற்போது ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை முதலிடம் பிடிக்க ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் தோற்க வேண்டும், ஆர்சிபி முதலிடம் பிடிக்க பஞ்சாப் தோற்று, ஆர்சிபி கடைசி லீக்கில் வெல்ல வேண்டும். ஆனால், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த குஜராத் அணி இனிமேல் முதலிடம் பிடிக்க வாய்ப்பில்லை. இளம் வீரர்களின் காட்டாற்று ஆட்டம் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் உயர்வுக்கு அடித்தளமிட்டது தொடக்க வீரர் மாத்ரே(34), உர்வில் படேல்(37), பிரெவிஸ் (57) ஆகியோர்தான். கான்வே அரைசதம் அடித்தாலும் மிகவும் மெதுவாக ஆடினார். இளம் வீரர்கள் அதிரடியாக பேட் செய்து ரன்களைக் குவித்துவரும்போது அனுபவ வீரர் கான்வே படுமந்தாக பேட் செய்தது ரசிகர்களுக்கு எரிச்சலூட்டியது. ஜடேஜா கடைசி நேரத்தில் கேமியோ ஆடி ஆட்டமிழந்திருந்தால் கூடுதலாக ரன்கள் கிடைத்திருக்கும் ஆனால் டி20 ஆடுகிறோம் என மறந்து டெஸ்ட் போட்டியைப் போன்று ஜடேஜா பேட் செய்தார். சீனியர் வீரர்கள் இருவருமே பேட்டிங்கின் ஸ்வாரஸ்யத்தையும், ரன் வேகத்தையும் மட்டுப்படுத்தினர். இதில் உர்வில் படேல், மாத்ரே இருவருமே சிஎஸ்கே அணியின் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்படவில்லை. காயத்தால் மாற்றுவீரர்களாக அணிக்குள் வந்த இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரெவிஸ் 57 ரன்கள் அடித்தார் அம்பலமான குஜராத்தின் பலவீனம் ஏற்கெனவே லக்னெள அணியிடம் 230 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ய முடியாமல் தோற்ற குஜராத்தின் பலவீனத்தை அறிந்து சிஎஸ்கே பெரிய ஸ்கோரை இலக்காக வைத்தது. சிஎஸ்கே விரித்த வலையில் குஜராத் பேட்டர்கள் கச்சிதமாக விழுந்தனர். இந்த ஆட்டத்தில் குஜராத் வென்றிருந்தால், அனைத்துமே தலைகீழாக மாறியிருக்கும். ஆனால் குஜராத் தோல்வியால், லீக் சுற்றில் போட்ட வெற்றி நடை வீணாகிப்போனது. லீக் சுற்றில் குஜராத் அணியின் 9 வெற்றிகளுமே பெரும்பாலும் டாப்-3 பேட்டர்களால் பெறப்பட்டவை. அது சேஸிங்காக இருந்தாலும், முதலில் பேட்டிங்காக இருந்தாலும் சுதர்சன், கில், பட்லர் ஆகிய 3 பேருமே ஆதிக்கம் செய்தனர். இதனால் நடுவரிசையை குஜராத் அணியால் பரிசோதித்து பார்க்க முடியவில்லை. ஆனால், பின்பகுதி லீக் போட்டிகளில் நடுவரிசை பேட்டர்கள் அணியை வழிநடத்திச் செல்ல வாய்ப்புக் கிடைத்தபோது,அணியின் உண்மையான நிலைமை என்னவென்று அம்பலமானது. குஜராத் அணியைப் பொருத்தவரை டாப்ஆர்டர் சுதர்சன், கில் இருவரின் விக்கெட்டை எடுத்துவிட்டாலே அணி ஆட்டம் கண்டுவிடும், ப்ளே ஆஃப் சுற்றில் பட்லர் இல்லாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக மாறும். குஜராத் அணியின் பலவீனம் அம்பலப்பட்டுவிட்டது ப்ளே ஆஃப் சுற்றில் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது கேள்விக்குறிதான். மாத்ரே அதிரடி தொடக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட் செய்ய முடிவு செய்தார். மாத்ரே, கான்வே ஆட்டத்தைத் தொடங்கினர். கான்வே தொடக்கத்திலிருந்தே பேட்டிங் ரிதத்துக்கு வரவில்லை, மிகவும் மந்தமாக செயல்பட்டார். ஆனால், அர்ஷத் கான் வீசிய 2வது ஓவரிலே மாத்ரே 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 28 ரன்கள் விளாசி அருமையான தொடக்கத்தை அளித்தார். உடனடியாக பிரசித் கிருஷ்ணா பந்துவீச வரவழைக்கப்பட்டார். பிரசித் ஓவரில் வீசப்பட்ட பவுன்ஸர், கூடுதல் வேகத்துக்கு திணறிய மாத்ரே, அதே ஓவரில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து 17 பந்துகளில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். உர்வில் படேல் விளாசல் அடுத்துவந்த உர்வில் படேல், கான்வேயுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடவே பவர்ப்ளே ஓவரில் சிஎஸ்கே ஒரு விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் சேர்த்தது. உர்வில் படேலும் பந்துகளை வீணாக்காமல் ஆடியதால் ஸ்கோர் வேகமாக உயரந்தது, கோட்ஸி ஓவரில் 3 பவுண்டரிகளை உர்வில் படேல் விளாசினர். கான்வேுவும் மெல்ல ஃபார்முக்குத் திரும்பி ரன்களைச் சேர்க்கத் தொடங்கினார். ரஷித்கான் வீசிய ஓவரில் லாங்ஆன் திசையில் உர்வில்படேல் அடித்த ஷாட்டை ஷாருக்கான் கேட்ச் பிடிக்கத் தவறினார். இந்த கேட்சைபிடித்திருந்தால், உர்வில் படேல் 25 ரன்களில் ஆட்டமிழந்திருப்பார். சாய் கிஷோர் வீசிய 10-வது ஓவரில் மிட்விக்கெட்டில் சிக்ஸர் விளாசிய உர்வில் படேல், அடுத்தபந்தையும் சிக்ஸருக்கு விளாச முயன்றார். ஆனால், சுப்மான் கில்லிடம் கேட்ச் கொடுத்து 19 பந்துகளில் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஷிவம் துபே வந்தவுடனே கிஷோர் ஓவரில் சிக்ஸர் விளாசினார். 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 115 ரன்கள் சேர்த்தது. ரஷித் கான் வீசிய 12-வது ஓவரில் கான்வே சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்தார். ஷாருக்கான் வீசிய ஓவரில் சிக்ஸர் விளாசிய துபே, அதே ஓவரில் கோட்ஸிடம் கேட்ச் கொடுத்து 17 ரன்னில் வெளியேறினார். 13 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 150 ரன்களை எட்டியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஷித் கான் வீசிய 12-வது ஓவரில் கான்வே சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்தார். பிரெவிஸ் மின்னல்வேக அரைசதம் அடுத்துவந்த பிரெவிஸ், கான்வேயுடன் சேர்ந்தார். அரைசதத்தை நோக்கி நகர்ந்த கான்வே, ரஷித்கான் வீசிய 14-வது ஓவரில் சிக்ஸர் அடித்து 34 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இந்த சீசனில் கான்வே படுமந்தமாக பேட் செய்து இந்த அரைசதத்தை அடித்தார். அரைசதம் அடித்தவுடன் அடுத்த பந்தில் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்று போல்டாகி 52 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா, பிரெவிஸ் களத்தில் இருந்தனர். 15 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களுடன் இருந்தது. கடைசி 5 ஓவர்களில் பிரெவிஸ் அதிரடியாக 57 ரன்களை சிஎஸ்கே அணி சேர்த்தது. கோட்ஸீ வீசிய 17வது ஓவரில் பிரெவிஸ் சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்களும், அர்ஷத் கான் வீசிய 18-வது ஓவரில் ஜடேஜா சிக்ஸரும், பிரேவிஸ் பவுண்டரி என 14 ரன்களும் சேர்க்கவே சிஎஸ்கே ஸ்கோர் உயர்ந்தது. சிராஜ் வீசிய 19-வது ஓவரை குறிவைத்த பிரெவிஸ் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 17 ரன்கள் சேர்த்து, 19 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். பிரசித் வீசிய கடைசி ஓவரிலும் பிரெவிஸ் சிக்ஸர் அடித்து அடுத்த பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து 23 பந்துகளில் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 18 பந்துகளில் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்தது. இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிஎஸ்கே பேட்டர்களுக்கு குஜராத் அணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு எந்தவிதத்திலும் சிரமத்தையோ, ரன்சேர்ப்பதில் சவால்களையோ வழங்கவில்லை குஜராத்தின் பொறுப்பற்ற பந்துவீச்சு ப்ளேஆஃப் சுற்றுக்குள் சென்றுவிட்டோமே எதற்காக மெனக்கெட வேண்டும் என்ற ரீதியில்தான் குஜராத் அணி பந்துவீச்சு இருந்தது. 7 பந்துவீச்சாளர்களை குஜராத் அணி பயன்படுத்தியும் சிஎஸ்கே பேட்டர்களின் ரன்குவிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த 7 பந்துவீச்சாளர்களில் பிரசித் கிருஷ்ணா மட்டுமே ஓவருக்கு 5 ரன்களை வழங்கினார். மற்றவர்கள் அனைவரும் ஓவருக்கு 12 ரன்கள் வீதமும் அர்ஷத் கான் 2 ஓவர்களில் 42 ரன்களை வாரி வழங்கினார். சிஎஸ்கே பேட்டர்களுக்கு குஜராத் அணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு எந்தவிதத்திலும் சிரமத்தையோ, ரன்சேர்ப்பதில் சவால்களையோ வழங்கவில்லை. குஜராத் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் நிலையில் இப்படி மோசமான பந்துவீச்சை வைத்து எவ்வாறு டிபெண்ட் செய்யப் போகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. 231 சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. ஏற்கெனவே லக்னெள அணியும் இதேபோன்று 230 ரன்களுக்கு மேல் சேர்த்த ஸ்கோரை சேஸ் செய்ய முடியாமல் குஜராத் அணி தோற்றிருந்தது. அதை மனதில் வைத்து சுதர்சன், கில் நிதானமாகத் தொடங்கினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சாய் சுதர்சன் நிதானமாகத் தொடங்கினர் எப்போதும் இல்லாதவகையில் புதிய பந்தில் ஜடேஜாவை பந்துவீச தோனி அழைத்தார். கடந்த 10 ஆண்டுகளில் புதிய பந்தில் முதல் ஓவரை ஜடேஜா வீசுவது இதுதான் முதல்முறையாக இருந்தது. கம்போஜ் கடினமான லெனத்தில் வீசியதால் சுப்மான் கில் சற்று சிரமப்பட்டு ரன்களைச் சேர்த்து சிக்ஸர் விளாசினார். ஆனால் மீண்டும் கடினமான லென்த்தில் கம்போஜ் பந்துவீச பெரிய ஷாட்டுக்கு கில் முயன்றபோது பேட்டில் எட்ஜ் எடுத்து 13 ரன்னில் கில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஜாஸ் பட்லர் 5 ரன்னில் கலீல் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கம்போஜ் வீசிய 5வது ஓவரில் ருதர்போர்ட் ரன் ஏதும் சேர்க்காமல் மாத்ரேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பவர்ப்ளே ஓவருக்குள் குஜராத் அணி 30 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணி தோல்வியின் பிடிக்குள் வந்துவிட்டதை அறிந்த தோனி, பந்துவீச்சாளர்களை ரொட்டேட் செய்து அருமையாகப் பயன்படுத்தினார். ஜடேஜா, துபே, நூர்அகமது என பந்துவீச்சாளர்களை பந்துவீசச் செய்து குஜராத் பேட்டர்களை திணறவைத்தார் தோனி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜாஸ் பட்லர் 5 ரன்னில் கலீல் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். சுதர்சன், ஷாருக்கான் இணைந்து அணியை மீட்கும் பணியைத் தொடங்கினர். துபே வீசிய 10-வது ஓவரில் சுதர்சன் சிக்ஸர், பவுண்டரியும், ஷாருக்கான் சிக்ஸரும் விளாசி 18 ரன்கள் சேர்த்தனர். ஜடேஜா வீசிய 11வது ஓவரின் முதல் பந்தில் ஷாருக்கான் 19 ரன்னில் பதீரனாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரிலேயே சுதர்சனும் 41ரன்களில் துபேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியதால் குஜராத் தோல்வியை நோக்கி நகர்ந்தது. ரஷித்கான், திவேட்டியா தோல்வியிலிருந்து தப்பிக்க வைக்க முயன்றனர். ஆனால் இருவராலும் பெரிய பங்களிப்பு செய்ய முடியவில்லை. நூர் அகமது பந்துவீச்சில் ரஷித்கான்(12), திவேட்டியா(14) ரன்களில் விக்கெட்டை இழந்தனர். கோட்ஸி 5 ரன்னில் பதீரனா பந்துவீச்சில் போல்டாகினார். அர்ஷத் கான் 20 ரன்களில் நூர் அகமது பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த குஜராத் அணி, அடுத்த 40 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் அடுத்த 20 ரன்களுக்குள் மீதமிருந்த 2 விக்கெட்டுகளை இழந்தது. 18.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆட்டமிழந்து, 83 ரன்களில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே தரப்பில் கம்போஜ், நூர் அகமதுதலா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். எப்போது ஓய்வு - தோனி பதில் பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றிக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில் " இறுதியில் நல்லவெற்றி. அரங்கம் நிறைந்திருந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் ஓரளவு ரசிகர்கள் வந்திருந்தனர். வெற்றியுடன் முடித்துள்ளோம், அனைவரின் சிறப்பான பங்களிப்பாக இருந்தது. என் ஓய்வு குறித்து முடிவு செய்ய 3 அல்லது 4 மாதங்கள் தேவைப்படும். இது தொழில்முறை கிரிக்கெட் என்பதால், முடிந்த அளவு சிறந்த பங்களிப்பை வழங்கிட வேண்டும். எந்த அளவு கிரிக்கெட் மீது தீராத பசி, ஆர்வத்தைப் பொருத்துதான் முடிவு செய்வேன். என் ஓய்வு குறித்து முடிவு செய்ய போதுமான நேரம் இருக்கிறது. நான் ராஞ்சிக்கு சென்று முடிவு செய்வேன். நான் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டேன் என்று சொல்லவும் இல்லை, திரும்பவும் வருவேன் என்றும் கூறவில்லை. எனக்கு முடிவெடுக்க போதுமான நேரம் இருக்கிறது. இந்த சீசன் தொடங்கும்போது 6 போட்டிகளில் 4 சென்னையில் நடந்தது. சேஸிங்கின்போது 2வது இன்னிங்ஸில் நாங்கள் மிகுந்த அழுத்தத்துக்கு ஆளாகினோம். பேட்டிங் எங்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருந்தது. இப்போது அனைவரும் பங்களிப்பு செய்துள்ளனர், ருதுராஜ் அடுத்த ஆண்டு வருவார், அவர் அதிகமாக எதைப்பற்றியும் கவலைப்படவில்லை" எனத் தெரிவித்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly37nwe32do
-
1958ம் ஆண்டு தமிழர் இனக்கலவரத்தை நினைவுகூருதல்
Published By: RAJEEBAN 23 MAY, 2025 | 02:39 PM tamilguardian 67 ஆண்டுகளிற்கு முன்னர் இந்த நாளில் இலங்கையில் சிங்கள காடையர்கள் தமிழர்களை தாக்கதொடங்கினார்கள், பாலியல்வன்முறைகளில் ஈடுபட்டார்கள், கொலை செய்தார்கள். தமிழ் மக்களிற்கு எதிரான தொடர்ச்சியான பயங்கரமான இனவன்முறைகளில் ஒன்றாக இந்த வன்முறை வரலாற்றில் பதிவாகயிருந்து. தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் அன்றைய நாட்களில் 300 முதல் 1500 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்படுகின்றது. பலர் காயமடைந்தனர், சூறையாடல்கள் தமிழர்களின் வீடுகளை வர்த்தக நிலையங்களை அழித்தல் போன்றனவும் இடம்பெற்றன. 1958ம் ஆண்டு மே மாதம் 27 திகதி இலங்கை அரசாங்கம் அவசரகாலநிலையை பிரகடனம் செய்தது. 1956ம் ஆண்டில் சுதந்திர இலங்கையில் முதலாவது இன அடிப்படையிலான கலவரம் இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் இந்த வன்முறைகள் இடம்பெற்றன. முதலில் 22ம் திகதி பொலனறுவையிலேயே வன்முறைகள் ஆரம்பமாகின. வவுனியாவில் இடம்பெறவிருந்த சமஸ்டி கட்சிக்கு சென்றுகொண்டிருந்த தமிழர்களை சிங்கள காடையர்கள் தாக்கியதை தொடர்ந்தே இந்த வன்முறைகள் வெடித்தன.. அதன் பின்னர் வன்முறைகள் நாட்டின் ஏனைய பகுதிகளிற்கு பரவின. கொழும்பில் இந்து மதகுரு ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார். கொழும்பு வீதிகளில் அலைந்து திரிந்த சிங்கள காடையர்கள் தங்களை கடந்து செல்பவர்களால் சிங்கள செய்தித்தாள்களை வாசிக்க முடியுமா என பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சிங்கள செய்தித்தாள்களை வாசிக்க முடியாதவர்கள் தாக்கப்பட்டனர்/கொல்லப்பட்டனர். அரசாங்கம் ஐந்து நாட்கள் காத்திருந்துவிட்டு அவசரகாலநிலையை பிரகடனம் செய்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது அரசியல் வாழ்க்கையை தீர்மானித்தது 1958ம் ஆண்டு இனக்கலவரம் என ஒருமுறை தெரிவித்திருந்தார். மார்ச் 1984 இல் பேட்டியொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். 'நான் பாடசாலை மாணவனாகயிருந்தவேளை இடம்பெற்ற 1958ம் ஆண்டு இனக்கலவரம் என் மீது கடும் தாக்கத்தை செலுத்தியது. சிங்கள இனவாதிகளால் எங்கள் மக்கள் எப்படி ஈவிரக்கமற்ற விதத்தில் கொல்லப்பட்டார்கள் என்பதை நான் கேள்விப்பட்டேன். "எனது நண்பரின் குடும்பத்தை சேர்ந்த விதவைபெண் ஒருவரை ஒருமுறை நான் சந்தித்தேன், அவர் இனவெறியர்களின் படுகொலை குறித்து விபரித்தார். இனக்கலவரத்தின் போது சிங்கள காடையர்கள் கொழும்பில் உள்ள அவரது வீட்டை தாக்கினார்கள். அவர்கள் கணவனை கொலை செய்தார்கள், வீட்டிற்கு தீ வைத்தார்கள். அவரும் அவருடைய பிள்ளைகளும் கடும் காயங்களுடன் தப்பினார்கள், அவரது உடலில் காணப்பட்ட காயங்களை பார்த்தவேளை நான் கடும் அதிர்ச்சியடைந்தேன்." "சுடுதாரில் குழந்தைகளை வீசியது குறித்து நான் கேள்விப்பட்டேன். அவ்வாறான ஈவிரக்கமற்ற இதுபோன்ற கொடுமையான கதைகளைக் கேட்டபோது என் மக்கள் மீது எனக்கு ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்த இனவெறி அமைப்பிலிருந்து என் மக்களை மீட்க வேண்டும் என்ற மிகுந்த ஆர்வம் என்னை ஆட்கொண்டது. நிராயுதபாணிகளான அப்பாவி மக்களுக்கு எதிராக ஆயுத பலத்தைப் பயன்படுத்தும் ஒரு அமைப்பை எதிர்கொள்ள ஆயுதப் போராட்டம் மட்டுமே ஒரே வழி என்பதை நான் உறுதியாக உணர்ந்தேன்" என விடுதலைப்புலிகளின் தலைவர் தெரிவித்திருந்தார். எமர்ஜென்சி '58: சிலோன் இனக் கலவரங்களின் கதையில் படுகொலை பற்றி எழுதுகையில் டார்சி விட்டாச்சி இவ்வாறு குறிப்பிட்டார். கலவரங்கள் தன்னிச்சையாக நடக்கவில்லை என்று கவர்னர் ஜெனரல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்தார் என குயின்ஸ் மாளிகையிலிருந்து செய்தி கசிந்தது. அவர் கூறியது: ‘ஜென்டில்மேன் இது தன்னிச்சையாக வகுப்புவாதத்தின் வெடிப்பு என்று உங்களில் யாருக்காவது தெரிந்தால் அதை உங்கள் மனதில் இருந்து நீக்கிவிடலாம். இதை கவனமாகத் திட்டமிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை சரியாக அறிந்தவர்களின் பின்னால் இருந்த ஒரு சூத்திரதாரியின் வேலை இது. இது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட ஒரு டைம்- பொம், இப்போது வெடித்துவிட்டது. 1958 மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கை மக்கள் அனுபவித்த பயங்கரமும் வெறுப்பும் அந்த அடிப்படைத் தவறின் விளைவாகும். நம்மிடம் என்ன மிச்சம்? இடிந்து விழுந்த ஒரு தேசம் நாம் மறக்க முடியாத சில கொடூரமான பாடங்கள் மற்றும் ஒரு முக்கியமான கேள்வி: சிங்களவர்களும் தமிழர்களும் பிரியும் நிலையை அடைந்துவிட்டார்களா? https://www.virakesari.lk/article/215500
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
INNINGS BREAK 68th Match (N), Delhi, May 25, 2025, Indian Premier League SRH chose to bat. Sunrisers Hyderabad (20 ov) 278/3 Current RR: 13.90 • Last 5 ov (RR): 74/1 (14.80) Kolkata Knight Riders Win Probability: SRH 91.15% • KKR 8.85%
-
தோனி ஐபிஎல் ஓய்வை அறிவிக்க தடையாக இருப்பது என்ன? - 2 முக்கிய காரணங்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தினேஷ் அகிரா பதவி, கிரிக்கெட் நிபுணர் 25 மே 2025, 12:03 GMT தோனி ஓய்வுபெற வலியுறுத்தும் ரசிகர்களின் கருத்துக்கள் உண்மையில் ஆச்சர்யத்தையே ஏற்படுத்துகின்றன. தோனியை நன்றாக அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல, வழக்கமான தோனி நகர்வுதான் என்பது எளிதாக புரிந்துவிடும். தோனியின் ஓய்வறிவிப்புகளுக்கு என்று ஒரு தனித்த பாணி உண்டு. திடீர் முடிவுகள் போல தோற்றம் அளித்தாலும், ஒரு ஃபார்முலாவின் படிதான் அவை எப்போதும் அமைந்துள்ளன. அது என்ன ஃபார்முலா? தனது தலைமைத்துவமோ ஆட்டத்திறனோ கேள்விக்குள்ளாக்கப்படும் போது தோனி முதலில் அமைதிகாப்பார், விமர்சனங்களை சிரித்த முகத்துடன் எதிர்கொள்வார்; சமயங்களில் சற்று ஆக்ரோஷத்துடன். அடுத்ததாக தனது செயல்பாடுகளின் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க முயற்சிப்பார். தன்னுடைய பங்களிப்பு இனியும் அணிக்கு தேவைப்படாது என உணர்ந்த பிறகு, கடைசியாகத்தான் ஓய்வை அறிவிப்பார். அதுவும் யாரும் எதிர்பார்க்காத வகையில், யாரும் எதிர்பார்க்காத சமயத்தில். இந்த முடிவுக்கு வந்து சேர்வதற்கு வழக்கமாக தோனி எடுத்துக்கொள்ளும் காலம் 3–4 ஆண்டுகள். 2011 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அயல் மண்ணில் தொடர்ச்சியாக மண்ணைக் கவ்வியது. ஆனால், தோனி அவசரப்படவில்லை. 3 ஆண்டுகளுக்கு பிறகு 2015–ல், ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் யாரும் எதிர்பாராத சமயத்தில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தன்னுடைய பங்களிப்பு இனியும் அணிக்கு தேவைப்படாது என உணர்ந்த பிறகு, கடைசியாகத்தான் ஓய்வை அறிவிப்பார் தோனி 'ஓய்வுக்கு பின்னான கவலை' 2015 உலகக் கோப்பையின் போதே தோனியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணுகுமுறை மீதான விமர்சனங்கள் எழத் தொடங்கிவிட்டன. ஆனால் 2019 உலகக் கோப்பை முடிந்த பின்னர் சாவகாசமாக சில மாதம் கழித்து ஒரு சமூக வலைதள பதிவின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் முடிவை அவர் அறிவித்தார். தோனியின் முந்தைய ஓய்வறிப்புகளின் போது இப்போது போல ரசிகர்கள் காத்துக்கிடக்கவில்லை. களத்தை விட்டு விலக அவர் முடிவெடுக்கும் போதெல்லாம், அது எதிர்பார்த்த ஒன்றாக இருந்தபோதும், அவர்கள் உண்மையில் வருத்தத்தை வெளிப்படுத்தினர். ஆனால், இந்தமுறையோ தோனி எப்போதுதான் ஓய்வுபெறுவாரோ என்று கேட்டு கேட்டு சிஎஸ்கே ரசிகர்கள் சோர்ந்து போயுள்ளனர். ஏன் தோனி களத்தை காலிசெய்ய மறுக்கிறார்? கோபத்தில், விரக்தியில் ரசிகர்கள் சிலர் விமர்சிப்பதை போல, இதை வெறுமனே சுயநலம் என்று மட்டும் சுருக்கிட முடியாது. தோனி மட்டுமல்ல தான் விரும்பிய துறையில் உச்சத்தை தொட்ட எவர் ஒருவரும் அந்த களத்தை விட்டு அவ்வளவு எளிதாக விலக மாட்டார்கள். தன்னுடைய ஆளுமையை செதுக்கிய கிரிக்கெட்டை விட்டு முற்றும் முழுவதுமாக விலகுவது என்பது தோனிக்கு கடினமான முடிவாக இருக்கக் கூடும். ஓய்வுக்குப் பிறகு என்ன செய்யப் போகிறோம் என்கிற கவலையே, பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களை மன உளைச்சலுக்கு தள்ளுகிறது என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் டேவிட் ஃபிரித். சைலன்ஸ் ஆஃப் தி ஹார்ட் : கிரிக்கெட் சூசைட்ஸ் (Silence Of The Heart: Cricket Suicides) என்ற புத்தகத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தோனியே ஆகச்சிறந்த கேப்டன். ஒரு கேப்டனாக அவருடைய சாதனைகளும் சாகசங்களும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவை வணிக நோக்கமா? தோனி தொடர்ந்து விளையாடுவதற்கு அவருடைய பெருவிருப்பத்துடன் சேர்ந்து சிஎஸ்கே நிர்வாகத்தின் ஆதரவும் அதற்கு பின்னால் ஒரு பெரும் வணிக நோக்கம் இருப்பதும் உண்மைதான். ஆனால் இதை வெறுமனே கருப்பு வெள்ளையாக மட்டும் புரிந்துகொண்டு விட முடியாது. ரசிகர்களின் ஆதரவும் அபிமானமும் இருந்ததால் தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் இத்தனை ஆண்டுகள் தோனியால் விளையாட முடிந்தது. பிறகு இப்போது ஏன் ரசிகர்கள் தோனியை ஓய்வுபெற சொல்கிறார்கள்? கிரிக்கெட்டில் 15 வருடங்களுக்கு ஒருமுறை தலைமுறை மாற்றம் ஏற்படுகிறது என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். கிரிக்கெட்டின் பாணி, கிரிக்கெட் வீரர்களின் சிந்தனை முறைகளில் நிகழும் மாற்றம் என இதனை புரிந்துகொள்ளலாம். தலைமுறை மாற்றம் என்பது மிகவும் நுட்பமாக நிகழும். ரஹ்மான் யுகம் முடிந்து அனிருத் யுகம் தொடங்கியதை போல. சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் திடீரென சரிவை சந்திப்பதை பார்க்கிறோம். தொடர்ச்சியாக அவர்களுடைய படங்கள் தோல்வியை சந்திக்க தொடங்கும். இதற்கும், அவர்களுடைய பாணியில் இருந்து அந்த படங்கள் பெரிதாக விலகியிருக்காது. அதே பாணி திரைப்படங்கள் தான், அதே ரசிகர்கள் தான். ஆனால், அப்போது ரசித்தவர்கள் ஏன் இப்போது ரசிக்கவில்லை? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கிரிக்கெட்டில் 15 வருடங்களுக்கு ஒருமுறை தலைமுறை மாற்றம் ஏற்படுகிறது என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். ஆகச்சிறந்த ஐபிஎல் கேப்டன் 2007–ல் தோனி முதல்முறையாக கேப்டன் பொறுப்பு ஏற்றது முதல் 2020களின் தொடக்கம் வரை தோனியின் யுகம் என வரையறுக்கலாம். இப்போது நவீன கிரிக்கெட், குறிப்பாக T20 கிரிக்கெட் விளையாடப்படும் விதத்தில் பாரதூரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொடக்கத்தில் நிதானித்து விளையாடி, பிறகு மிடில் ஓவர்களில் வேகத்தை கூட்டி, இறுதிக்கட்டத்தில் மின்னல் வேகத்தில் முடிப்பது தோனியின் யுகம். ஆனால், இன்று மின்னல் வேகத்தில் தொடங்கி வேகத்தை மட்டுப்படுத்தாமல் அதே வேகத்தில் முடிப்பதாக புதுயுக கிரிக்கெட் உருவெடுத்துள்ளது. தோனியின் கேப்டன்சி குறித்து கிரிக்கெட் எழுத்தாளர் சித்தார்த் மோங்காவின் அவதானிப்பு கவனிக்கத்தக்கது. ''தோனி ரிஸ்க் எடுப்பவர் அல்ல. ரிஸ்க்கள் குறித்து மதிப்பிடுபவர். ஆனால், இன்று மதிப்பீடு செய்வதற்கு எல்லாம் நேரமில்லை. ரிஸ்க் எடுக்காமல் விளையாடுவதுதான், இன்று ரிஸ்க் என்பதாக மாறிவிட்டது'' என்கிறார் சித்தார்த் மோங்கா. இந்த தலைமுறை இடைவெளிக்கு சரியான உதாரணமாக சிஎஸ்கேவுக்கும் மற்ற அணிகளுக்கும் ஆட்டத்தை அணுகுவதில் உள்ள வித்தியாசத்தை சொல்லலாம். தோனியையும் சிஎஸ்கேவையும் பிரிந்துப் பார்க்க முடியாது. சிஎஸ்கேவின் ஆட்ட பாணி இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை ஆரம்ப காலத்தில் ஸ்டீபன் ஃபிளமிங் உடன் சேர்ந்து தோனி தான் வரையறுத்தார். அந்தப் பாணி காலாவதி ஆனதை உணராததால் தான் சிஎஸ்கே நிர்வாகம் ஏலத்தில் அனுபவம் என்ற பெயரில் வயதான வீரர்களை எடுத்து சொதப்பியது. பாதி போட்டித் தொடர் முடிந்த பிறகுதான், தனது தவறை உணர்ந்து ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், டெவால்ட் பிரவிஸ் என இளம் வீரர்கள் மீது தன் பார்வையை திருப்பியுள்ளது. சிஎஸ்கேவின் அணுகுமுறையில் மாற்றம் தேவை என்பதை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்கும் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுவிட்டார். தோனியின் ஓய்வு குறித்து வைக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமானது முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கரின் விமர்சனம். அணியில் தோனியின் இருப்பே சிஎஸ்கே அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்கிறார் பாங்கர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2007–ல் தோனி முதல்முறையாக கேப்டன் பொறுப்பு ஏற்றது முதல் 2020களின் தொடக்கம் வரை தோனியின் யுகம் என வரையறுக்கலாம். களத்தில் தோனிதான் தலைவன் தோனி கேப்டனாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, களத்தில் அவர் இருக்கும்போது அவர்தான் தலைவன். அவர் கண்ணசைவில் தான் எல்லாம் நடக்கும். அப்படி இருக்கையில், எப்படி ஒரு கேப்டனால் தனக்கான அணியை கட்டமைக்க முடியும், தனக்கான ஒரு பாணியை புதிதாக வரித்துக்கொள்ள முடியும்? தோனியின் நிழலில் இருந்ததால்தான் ருதுராஜ் கெய்க்வாட்டால் கேப்டனாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால், தோனியோ அணியின் நலனை கருத்தில் கொண்டுதான் தான் தொடர்ந்து விளையாடி வருகிறேன் என நம்புகிறார். சரியான நேரத்தில் மாற்றம் (Transition) நிகழ வேண்டும், அப்போதுதான் தான் இல்லாத போதும் அணி வருங்காலத்திலும் ஆதிக்கத்தை தக்கவைக்க முடியும் என்பது அவருடைய நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால், இந்த சிந்தனையும் கூட இப்போது எல்லாம் காலாவதியாகி வருவதை பார்க்கலாம். இந்த சீசனில் புதிய தலைமையின் கீழ் களமிறங்கிய பஞ்சாப் அணி, கடந்த காலத்தின் எந்தவொரு சுவடும் இன்றி புதிய பாணியில் விளையாடி அசத்துவதை என்ன சொல்வது? ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தோனியே ஆகச்சிறந்த கேப்டன். ஒரு கேப்டனாக அவருடைய சாதனைகளும் சாகசங்களும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவை. சிஎஸ்கேவுக்காக களமிறங்கிதான் அவர் அணியின் முகமாக இருக்க வேண்டும் என்பதில்லை. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crk2jdzld7po
-
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி - குழந்தை மருத்துவராக பல வருடங்களாக மருத்துவசேவையாற்றியவர் தனது அனைத்து சொந்தங்களையும் இழக்க நேரிட்ட தாங்க முடியாத கொடூரம் Published By: RAJEEBAN 25 MAY, 2025 | 11:00 AM காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் மருத்துவர் ஒருவரின் பத்து பிள்ளைகளில் 9 பிள்ளைகள் கொல்லப்பட்டனர். வைத்தியர் அலா அல் நஜார் என்பவரின் வீட்டை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் அவரது கணவரும் பிள்ளையொன்றும் காயமடைந்துள்ளனர் என நாசெர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவரின் உயிர்பிழைத்த 11 வயது மகனிற்கு சத்திரசிகிச்சையை மேற்கொண்ட பிரிட்டிஸ் மருத்துவர் கிரேஸ் குரூம் குழந்தை மருத்துவராக குழந்தைகள் சிறுவர்களிற்கு பல வருடங்களாக மருத்துவசேவையாற்றிய தாயார் ஒருவர் தனது அனைத்து சொந்தங்களையும் இழக்க நேரிட்டது தாங்க முடியாத கொடுரம் என பிபிசியிடம் தெரிவித்துள்ளார். வைத்தியரின் கணவர் கடும்காயங்களிற்குள்ளாகியுள்ளார், தலையை குண்டுசிதறல்கள் தாக்கியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். தந்தையும் மருத்துவர் நான் அவரிடம் கேட்டதற்கு அவர் தனக்கு அரசியல் இராணுவ தொடர்புகள் இல்லை, சமூக ஊடகங்களில் நான் பிரபலமாகயில்லை என தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். வைத்தியர் அலால அல் நஜாரின் குடும்பத்தினை பொறுத்தவரை இது நினைத்து பார்க்க முடியாத நிலைமை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹமாசின் மருத்துவ பிரிவினரால் வெளியிடப்பட்ட பிபிசியினால் உறுதி செய்யப்பட்ட வீடியோக்களில் ஹான்யூனிசின் இடிபாடுகளிற்கு இடையிலிருந்து சிறிய எரியுண்ட உடல்கள் மீட்கப்படுவதை காண்பித்துள்ளன. வைத்தியரின் கணவர் தனது மனைவியை மருத்துவமனையில்விட்டுவிட்டு வீட்டிற்கு வந்த ஒரிருநிமிடங்களில் அந்த வீடு தாக்குதலிற்குள்ளானது என ஹமாசின் சுகாதார அமைச்சின் இயக்குநர் வைத்தியர் முனீர் அல்போர்ஸ் தெரிவித்துள்ளார். மூத்த மகனிற்கு 12 வயது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215619
-
இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 5 பேர் உயிரிழப்பு; 14,678 பேர் பாதிப்பு
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தக் கடந்தது Published By: VISHNU 25 MAY, 2025 | 07:03 PM (செ.சுபதர்ஷனி) டெங்கு பரவலின் அதிகரிப்போடு 42 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாலப்படுத்தப்பட்டுள்ளதுடன் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 22 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 22,248 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இம்மாதத்தில் கடந்த சனிக்கிழமை (24) வரை சுமார் 4702 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஜனவரி மாதம் 4936 நோயாளர்களும், பெப்ரவரி மாதம் 3665 நோயாளர்களும், மார்ச் மாதம் 3770 நோயாளர்களும், ஏப்ரல் மாதம் 5175 டெங்கு நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர். தொடரும் மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு, கொழும்பு மாநகர சபை, கம்பஹா, இரத்தினபுரி, கண்டி, , மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. டெங்கு பரவலை கருத்தில் கொண்டு 42 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் (MOH) அதி உயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 11 ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 45.4 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். இரண்டு நாட்களுக்கு மேல் கடுமையான காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் வைத்தியசாலையை நாடுவது நல்லது. கர்ப்பிணித் தாய்மார், சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் காய்ச்சல் நிலவுமாயின் உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். முறையான கட்டுப்பாட்டு முறைகளால் மாத்திரமே டெங்கு பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இது தொடர்பில் அதிகாரிகள் மாத்திரமல்லாது பொதுமக்களும் அவதானத்துடனும் கரிசனையுடனும் செயற்படுவது அவசியம். நுளம்பு மற்றும் நுளம்பு குடம்பிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சின் கீழ் மே 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை 15 மாவட்டங்களில் உள்ள 95 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளை பிரதான கேந்திர நிலையமாக கொண்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. எதிர்வரும் தினங்களில் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதம் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. ஆகையால் பொதுமக்கள் டெங்கு அபாயத்தைக் கருத்தில் கொண்டு தாம் வாழும் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருக்கக் கூடிய பகுதிகளை இனங்கண்டு அவற்றை இல்லாதொழித்து தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/215670
-
'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' - டி.எம்.எஸ். பாடிய காலத்தால் அழியாத 10 பாடல்கள்
பட மூலாதாரம்,T.M.SOUDARARAJAN படக்குறிப்பு,'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்' என்கிற வரியில் தெரியும் ஆதங்கத்தை மிக அழகாகத் தனது குரலில் கடத்தியிருப்பார் டி.எம்.எஸ் கட்டுரை தகவல் எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணா பதவி, பிபிசி தமிழுக்காக 25 மே 2025, 02:01 GMT தமிழ் திரைப்பட இசையை ஒரு மணி மகுடமாக உருவகப்படுத்தினால் அதில் ஒரு நிலையான இடம் பெற்றிருக்கும் மாணிக்கம் தான் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன். டி.எம்.எஸ் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். திரை நாயகர்களுக்கே உரிய கம்பீரத்தை இவரை விட சிறப்பாக யாராலும் பாடல்களில் வெளிப்படுத்திவிட முடியாது. அதனாலேயே அவரது காலகட்டத்தில் முன்னணியில் இருந்த அத்தனை நட்சத்திரங்களுக்காகவும் பாடல்கள் பாடியுள்ளார். இன்று (மே 15) காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடிய டி.எம்.சௌந்தரராஜனின் நினைவு நாள் ஆகும். அதை முன்னிட்டு அவரது குரலில் ஒலித்த, 10 சிறந்த பாடல்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. கண் போன போக்கிலே கால் போகலாமா (பணம் படைத்தவன்) எம்.ஜி.ஆர் நாயகனாக நடிக்க, 1965-ஆம் ஆண்டு டி.ஆர்.ராமண்ணா தயாரித்து இயக்கிய பணம் படைத்தவன் படத்தில் இடம்பெற்ற பாடல். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணையின் இசையில் உருவான இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதியவர் கவிஞர் வாலி. மேற்கத்திய செவ்வியல் இசை வடிவத்தில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலில் இருக்கும் வரிகள் அறிவுரை கூறும் தொனியிலேயே இருக்கும். முழுக்க தத்துவ வார்த்தைகள் நிறைந்திருக்கும் இந்தப் பாடலுக்கு டி.எம்.எஸ்ஸின் குரல் ஒரு நல் ஆசிரியர் பேசுவதைப் போன்ற தன்மையைத் தந்திருக்கும். 'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்' என்கிற வரியில் தெரியும் ஆதங்கத்தை மிக அழகாகத் தனது குரலில் கடத்தியிருப்பார் டி.எம்.எஸ். பட மூலாதாரம்,T.M.SOUDARARAJAN அம்மம்மா தம்பி என்று நம்பி (ராஜபார்ட் ரங்கதுரை) நடிகர் சிவாஜி கணேசனுக்காக டி.எம்.சௌந்தரராஜன் பாடிய சில பாடல்களில் சிவாஜி பாடுகிறாரா அல்லது டி.எம்.எஸ் தனது குரல் மூலம் நடிகராகத் தெரிகிறாரா என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருவரது திறமையும் கலந்து போயிருக்கும். அப்படி ஒருப் பாடலே 1973-ஆம் ஆண்டு வெளியான ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் வரும் அம்மம்மா தம்பி என்று நம்பி என்கிற பாடல். பி. மாதவன் இயக்கத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசனின் வரிகள். தனியாளாக தம்பியையும், தங்கையும் தோளில் சுமந்து, ரயிலில் பாடல்கள் பாடி, கையேந்தி அவர்களுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுத்த அண்ணனின் கையறு நிலையை, பாட்டும் பேச்சுமாக, உணர்ச்சிகரமான பாணியில் வெளிப்படுத்தியிருப்பார் டி.எம்.எஸ். உட்கார்ந்த இடத்திலிருந்து சிவாஜி கணேசன் இந்தப் பாடலுக்காக வெளிப்படுத்திய நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. இசை கேட்டால் புவி அசைந்தாடும் (தவப்புதல்வன் ) தவப்புதல்வன் (1972) என்கிற சமூகப் படத்தில் நாயகியின் பார்வையில் ஒரு கதை சொல்லப்படும். அதில் அக்பர் அரசவைக் கவிஞராக இருந்த தான்சேன், ஆரோக்கியம் குன்றிய அக்பருடைய மகளுக்கு பாடல் மூலம் சிகிச்சை அளிப்பதாக ஒரு கற்பனைச் சூழல். இதற்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான பாடல் தான், இசை கேட்டால் புவி அசைந்தாடும். இந்தப் பாடலின் அடிப்படை கர்நாடக இசையின் ராகத்தை ஒட்டி இருந்தாலும், பாடலின் ஆரம்பத்தில் இந்துஸ்தானி பாணியில் ஒரு ஆலாபனையுடன் நுழைவார் டி.எம்.எஸ். இந்தப் பாடலுக்கான சூழலிலும், வரிகளிலும் இருக்கும் கனிவு, கோபம் உள்ளிட்ட இரண்டு வித்தியாசமான உணர்வுகளையும் டி.எம்.எஸ் அசாதாரணமாகக் கையாண்டிருப்பார். கண்ணதாசன் ஏற்கனவே எழுதிய கவிதையே இந்தப் பாடலுக்கு வரிகளாகவும் பொருந்திப் போனது கூடுதல் சிறப்பு. யார் அந்த நிலவு (சாந்தி ) பிரபல மேற்கத்திய செவ்வியல் இசைக் கலைஞர்கள் சிலரின் பாணிக்கு இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி, நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் பீம் சிங் உள்ளிட்டவர்கள் ரசிகர்கள். அப்படி ஒரு பாணியில் நாம் ஏன் ஒரு பாடலை உருவாகக்கூடாது என்று யோசித்ததில் உருவானதே 1965-ஆம் ஆண்டு வெளியான சாந்தி என்கிற திரைப்படத்தில் இடம்பெற்ற 'யார் அந்த நிலவு' என்கிற பாடல். அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களுக்கு முற்றிலுமாக புதிய அனுபவத்தைக் கொடுத்த இந்தப் பாடல், உருவாக்கத்தின் போதே பாடகர் டி.எம்.சௌந்தரராஜனை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இதை எப்படிப் பாடப் போகிறோம், நன்றாக இருக்குமா என்கிற சந்தேகத்துடன் பின்வாங்கியிருக்கிறார் டி.எம்.எஸ். அதன் பின் இசையமைப்பாளர் தந்த ஊக்கத்தில் மிகச்சிறப்பாக, மேற்கத்திய இசையின் பாணியை உள்வாங்கிக் கொண்டு தனது பாணியில் மிகச் சிறப்பாக இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ். பாடலைக் கேட்ட சிவாஜி கணேசன், இந்தப் பாடலுக்கேற்றவாரு நடிக்க வேண்டும் என்றே 3 நாட்கள் படப்பிடிப்பைத் தள்ளிப்போட்டு, தன்னை தயார்படுத்தியிருக்கிறார். பட மூலாதாரம்,T.M.SOUDARARAJAN படக்குறிப்பு,பாடலின் இசையும், பாரதியின் வரிகளில் இருக்கும் புரட்சிகரமான சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் டி.எம்.எஸ்ஸின் குரலும் கேட்பவர்களை ஆட்கொள்ளும் சிந்து நதியின் மிசை நிலவினிலே (கை கொடுத்த தெய்வம்) சிவாஜி கணேசன், சாவித்திரி, எஸ்.எஸ்.ஆர் மற்றும் கே.ஆர்.விஜயா எனப் பல நட்சத்திரங்கள் நடித்திருந்த படம் கை கொடுத்த தெய்வம் (1964). கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் உருவான இந்தப் படத்தின் கதை, இரண்டு நண்பர்களைப் பற்றியது. ஆனால் இதில் தனக்குப் பிடித்த ஒரு பாரதியார் பாடலை கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று விரும்பினார் இயக்குநர். பாரதியாரின் புத்தகத்தை நாயகன் படித்து, அவர் கற்பனையில் வருவதாக இந்தப் பாடலையும் வைத்தார். இதைப் படிக்கும்போது, படத்துக்குப் பொருந்தாத சூழலாகத் தெரிந்தாலும், பாடலின் இசையும், பாரதியின் வரிகளில் இருக்கும் புரட்சிகரமான சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் டி.எம்.எஸ்ஸின் குரலும் கேட்பவர்களை ஆட்கொள்ளும். பாரதி பாடியிருந்தால் இப்படித்தான் இருக்குமோ என்று யோசிக்க வைப்பார் டி.எம்.எஸ். வரிகளுக்கு ஏற்றவாறு கேரளா, கர்நாடகா எனப் பல்வேறு இடங்களில் படமாக்கிய விதத்திலும் தேசிய ஒருமைப்பாட்டை பேசியிருப்பார் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். மாதவிப் பொன்மயிலாள் (இரு மலர்கள்) தமிழ் திரையில் சிவாஜி கணேசன் - பத்மினி இருவரும் சேர்ந்து நடித்த படங்களுக்கென்றே தனியிடம் உண்டு. 1967-ஆம் ஆண்டு வெளியான இரு மலர்கள் திரைப்படத்தில், படம் ஆரம்பித்த சில நிமிடங்களில், ஒரு போட்டியில் நாயகன் பாட, நாயகி நடனமாடும் பாடலாக இந்த மாதவிப் பொன்மயிலாள் வரும். வழக்கமாக இப்படி உருவாகும் ஒரு பாடலில் ஸ்வரங்கள் இருக்கும், ஜதிகள் இருக்கும், ஆனால் இரண்டும் கலந்து, சிக்கலான ஒரு அமைப்பில் உருவான இந்தப் பாடலை காதலும், குறும்பும் நிறைந்த குரலில் பாடி அசத்தியிருப்பார் டி.எம்.சௌந்தரராஜன். இன்றளவும் பாட்டுப் போட்டிகளில், பாடகர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க கரகரப்பிரியா ராகத்தில் உருவான இந்தப் பாடலைப் பாடினால் போதும். ஆனால் அப்படி யாராலும் மிக எளிதாகப் பாட முடியாத கனமான பாடல். இதுவே டி.எம்.எஸ்ஸின் குரல் வளம் எத்தகையது என்பதையும் காட்டும். கவிஞர் வாலி, தான் எழுதிய பாடல்களில் மிகப் பிடித்தமான பாடல்களில் இதுவும் ஒன்று என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். மன்னிக்க வேண்டுகிறேன், மகாராஜா ஒரு மகாராணி என டி.எம்.சௌந்தரராஜன் குரலில் இரண்டு டூயட் பாடல்களும் இந்தப் படத்தில் பிரபலம். ஏ.சி.திருலோகச்சந்தர் இந்தப் படத்தின் இயக்குநர். பொன்மகள் வந்தாள் (சொர்க்கம் ) எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் இருக்கும் ஒரு கதாபாத்திரம் கனவு கண்டால் என்ன ஆகும்? பொன்னும் பொருளும் நிறைந்த கனவாகத்தானே அது இருக்கும். இதை வெறும் காட்சியாக சொன்னால் மட்டும் போதாது, பாடலாகவும் வேண்டுமென்று முடிவு செய்தார் இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா. உருவானது பொன்மகள் வந்தாள் பாடல். 1970-ஆம் ஆண்டு வெளியான சொர்க்கம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கியக் காரணம் இந்தப் பாடல். படத்தின் கதாபாத்திரம் காணும் கனவாக மட்டுமல்ல, கண்ணை மூடிக் கேட்டால் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையிலும், டி.எம்.சௌந்தரராஜனின் குரலிலும் கூட பொன்னையும் பொருளையும் நம்மால் உணர முடியும். ஆலங்குடி சோமுவின் வரிகளில் இருக்கும் நாயகன் கதாபாத்திரத்தின் கனவு, ஆசை, லட்சியம் என் அனைத்தையும் தனது குரலிலும் கொண்டு வந்திருப்பார் டி.எம்.எஸ். பல வருடங்கள் கழித்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ரீமிக்ஸை வேறொரு பாடகர் பாடினாலும், கடினமான அந்த ஒரு வரியை மட்டும் டி.எம்.எஸ்ஸின் குரலிலேயே தக்க வைத்திருப்பார்கள். கேட்க எளிமையான பாடலாக இருந்தாலும், பாட, மிகக் கடினமான ஒரு பாடல். அதை டி.எம்.எஸ் தவிர வேறு யாராலும் அதே சிறப்புடன் மீண்டும் பாட முடியாது. அந்த நாள் ஞாபகம் (உயர்ந்த மனிதன்) மை ஃபேர் லேடி என்கிற ஆங்கிலப் படத்தின் ஒரு காட்சியமைப்பு தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனுக்கு மிகவும் பிடித்துப் போனது. இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடமும் அந்தக் காட்சிகளைக் காட்டி, இந்த பாணிக்கு ஏற்றவாரு ஒரு பாடல் வேண்டும் என்று விரும்பினார். அதில் பிறந்தது தான் உயர்ந்த மனிதன் (1968) படத்தில் வரும் அந்த நாள் ஞாபகம் என்கிற பாடல். உத்தர் புருஷ் என்கிற வங்கமொழிப் படத்தின் மறு உருவாக்கமான இதை கிருஷ்ணன் - பஞ்சு இயக்கியிருந்தனர். சிவாஜி கணேசன், மேஜர் சுந்தர்ராஜன், அசோகன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நாளை இந்த வேளை பார்த்து, வெள்ளிக் கிண்ணம் தான் என இந்தப் படத்தின் மற்ற பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், அந்த நாள் ஞாபகம் பாடலுக்கென்று தனிச்சிறப்பு உள்ளது. அன்று வரை தமிழ் சினிமாவில் உருவான பாடல்களிலேயே மிகப் புதுமையான வடிவம் கொண்டது இந்தப் பாடல். தொழில்நுட்பம் முன்னேறாத அந்த காலகட்டத்தில், சிவாஜி, மேஜர் சுந்தர் ராஜன், டி.எம்.எஸ் என அனைவரும் சேர்ந்து, வசனம், பாடல் என இந்தப் பாடலுக்குப் பங்காற்றியிருப்பார்கள். ஆடம்பரமான மேற்கத்திய செவ்வியல் இசையோட ஆரம்பமாகும் இந்தப் பாடல், கதாபாத்திரத்தின் ஏக்க உணர்வைப் பேசும். அதற்குத் தன் குரல் நடிப்பால் மிக அழகாக வடிவம் கொடுத்திருப்பார் டி.எம்.எஸ். பட மூலாதாரம்,T.M.SOUDARARAJAN படக்குறிப்பு,காலத்தால் அழியாத பல பாடல்களுக்கு சொந்தக்காரராய் இருந்த டி.எம்.எஸ் சௌந்தரராஜன் நீயே உனக்கு என்றும் நிகரானவன் (பலே பாண்டியா ) பாடல்களை வர்ணிக்கும் போது மிக அழகான பாடல், உணர்ச்சிகரமான பாடல், கவித்துவமான பாடல் என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆனால் மிக நகைச்சுவையான பாடல் என்ற பாராட்டை உண்மையாகப் பெறும் பாடல்கள் வெகு சில. அதில் என்றும் முதன்மையாக இருக்கும் பாடல், பலே பாண்டியா (1962) திரைப்படத்தில் வரும் நீயே உனக்கு என்றும் நிகரானவன். ஒரு பக்கம் கர்நாடக சங்கீதத்தில் தேர்ந்த ஒருவர் பாடுவது போல இருக்க வேண்டும், அதே நேரம் படத்தின், அந்தச் சூழலின் நகைச்சுவைத் தன்மை இழையோட வேண்டும். இவ்விரண்டையும் சரி விகிதத்தில் கலந்து கட்டி, தன் குரலில் குழைத்துத் தந்திருப்பார் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன். மாதவிப் பொன்மயிலாள் பாடலைப் போலவே, இதுவும் பாட மிகக் கடினமான பாடல். ஆனால் டி.எம்.எஸ்ஸுக்கு அப்படி அல்ல. திரையில் சிவாஜி கணேசனின் அப்பாவித்தனம், கேலி ஒரு பக்கம், கே பாலாஜியின் கடம் வாசிப்பு ஒரு பக்கம், எம்.ஆர்.ராதாவின் அதிரடியான கலாட்டா உடல்மொழி ஒரு பக்கம் என இன்றளவும் பார்ப்பவர்களை சிரிக்க வைக்கும், ரசிக்க வைக்கும் இந்தப் பாடலை வெறும் 7 மணி நேரத்தில் படம் பிடித்திருக்கிறார் இயக்குநர் பி.ஆர்.பந்துலு. இந்தப் பாடலில் எம்.ஆர்.ராதா கதாபாத்திரம் பாடும் கொன்னக்கோல் பகுதிகளைப் பாடியவர் எம். ராஜு. மாசிலா நிலவே நம் (அம்பிகாபதி) ஓர் அமர காதல் கதையைச் சொல்லும் படம், மொத்தம் 27 பாடல்கள். இன்றைய சூழலில் விளையாட்டுக்காகக் கூட நினைத்து பார்க்க முடியாதவை இவ்விரண்டு விஷயங்களும். ஆனால் 1957-ஆம் ஆண்டு, பி.நீலகண்டன் இயக்கத்தில் உருவான அம்பிகாபதி திரைப்படத்தில் இது சாத்தியப்பட்டது. ஜி.ராமநாதன் இசையில் உருவான இப்படத்தின் பாடல்களுக்கு கண்ணதாசன், கே.டி.சந்தானம், பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் உட்பட பல கவிஞர்கள் வரிகள் எழுதியுள்ளனர். இதில் மாசிலா நிலவே என்று ஆரம்பிக்கும் காதல் பாடலுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. இது ராகமாலிகை என்கிற இசை வடிவத்தில் உருவான பாடல். ஒரு பக்கம், புன்னாகவராளி, மாண்ட் என ராகங்களின் அடிப்படையில் வளரும் பாடல், சட்டென ஒரு இடையிசையுடன் மேற்கத்திய வால்ட்ஸ் பாணிக்கு மாறும். இசையமைப்பாளரின் இந்த புது முயற்சிக்கு ஈடு கொடுத்திருப்பது டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் பானுமதி ஆகியவர்களின் குரல்கள். அந்தந்த மாறுதலுக்கு ஏற்றார்போல டி.எம்.சௌந்தரராஜன் இந்தப் பாடலைப் பாடியிருக்கும் அழகு, இதை காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்றாக நிலைபெற்றிருக்கச் செய்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy8n5z27kreo
-
பூநகரியில் அரச காணிகளில் அத்துமீறல் : தடுக்க சென்ற அரச உத்தியோகஸ்தர்களுக்கு மிரட்டல்
காணிகளை பந்தாடுவதற்கும் உத்தியோகத்தர்களை அச்சுறுத்தவும் ஆளும் கட்சி அரசியல் அதிகாரம் பிரயோகிக்கப்படக்கூடாது - பூநகரி சம்பவம் குறித்து நிரோஷ் Published By: DIGITAL DESK 2 25 MAY, 2025 | 07:31 PM உள்ளூராட்சி மன்றங்களில் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்படும் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை திட்டமிட்டு திரிவுபடுத்தும் வகையில் செயற்பட்டு மக்களை பிழையாக வழிநடத்தி அரச உத்தியோகத்தரின் தொழில் சுதந்திரத்திலும் செயற்பாடுகளிலும் தடை ஏற்படுத்தவதை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில், அப் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் உள்ளூராட்சி மன்ற நடைமுறைகளுக்கும் சட்டத்திற்கும் அமைவாக செயற்பட்டதனை திசை திருப்பும் வகையில் ஆளுங்கட்சி பிரதேச அரசியல்வாதிகள் கத்தரிக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்றை தயாரித்துள்ளனர். அதனை யாழ் - கிளிநொச்சி மாவட்ட ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். இது பொறுப்புமிக்க பதவியில் இருந்து கொண்டு அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்தும் அடாவடித்தனமாகும். அடிப்படையில் இவ்விடயம் குறித்து ஆராய்கையில், ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரின் அனுசரணையில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட அரசியல் பிரமுகர் ஒருவர் சட்ட திட்டங்களுக்கு முரணாக, பெறுமதியான வீதியோரக் காணிகளை தனக்கு தேவையானவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதற்கு அரசாங்க ஒத்துழைப்பு காணப்பட்டுள்ளது. இங்கு மீறப்படும் உள்ளுராட்சி சட்டவிதிகள் தொடர்பில் உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை புறந்தள்ளி அரசியல் அதிகார மமதையில் குறித்த எதிர்த்தரப்பினர் உத்தியோகத்தர்கள் மற்றும் அச் சபையின் பொறுப்பதிகாரி, சபையின் தீர்மானங்களை தற்போது மேற்கொள்ளத்தக்க செயலாளர் மீது பலவந்தத்தை பிரயோகித்துள்ளனர். பலவந்தத்திற்கு இடமளிக்காத உத்தியோகத்தர்கள் உள்ளூராட்சி சட்டங்களின் அடிப்படையில் சட்டவிரோத கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். தமது காணி அபகரிப்பு நோக்கம் நிறைவேறுவதற்கு உள்ளூராட்சி மன்றம் தடையாகவுள்ள நிலையில் அங்கு பிரசன்னமாகியிருந்த உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் மீது அவதூறு மற்றும் அச்சுறுத்தல் பிரயோகிப்புக்கள் நடைபெற்றுள்ளன. மேலும் தாக்குதல் மேற்கொள்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றினை எல்லாம் மேற்கொண்டுவிட்டு தமது வசதிக்கு ஏற்றால் போல் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவர்கள் கத்தரிக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது முகநூலில் வெளியிட்டுள்ளார். இதனால் உள்ளூராட்சி மன்ற பணியாளர்களின் கௌரவம் மற்றும் தொழிற்சுதந்திரம் அரசாங்க அதிகாரத்தினால் மீறப்பட்டுள்ளது. இப்படியான அரசாங்கத்தின் அரசியல் அணுகுமுறைகள் ஜனநாயக விரோதமானவை என்பதுடன் சட்டம் ஒழுங்கிற்கும் அப்பாற்பட்டவை. பிரதேச சபைகளின் உத்தியோகத்தர்களின் தொழிற்சுதந்திரத்தினையும் அவர்களது உரிமைகளையும் மீறுவனவாகும். அரசியல் தலையீடுகள் இன்றி நீதியான முறையில் உத்தியோகத்தர்கள் சேவையாற்றுவதற்கான அகப் புறச் சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பள்ள அரசாங்கத் தரப்பு சற்றேனும் அரசியல் தர்மத்திற்கு இடமளிக்காது மக்கள் விரோத நடவடிக்கைளில் ஈடுபடுவதையே இது காட்டுகின்றது. நல்லாட்சிக்கான தத்துவம் தொடர்பாக ஆளுங்கட்சி கவனம் செலுத்த வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களின் சுயாதீனம் அரச அதிகாரங்களால் பாதிக்கப்படும் போது அவற்றினை நாம் பார்த்திருக்க முடியாது என்றார். https://www.virakesari.lk/article/215666
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நம்பர் வன்னை அடித்து நாங்க இப்பவும் டான் தான் என்று சென்னை ரசிகர்களுக்கு பால் வார்க்கப்போகினமோ?! LIVE 67th Match (D/N), Ahmedabad, May 25, 2025, Indian Premier League CSK chose to bat. Chennai Super Kings (18/20 ov) 201/4 Current RR: 11.16 • Last 5 ov (RR): 51/1 (10.20) Live Forecast: CSK 225 Gujarat Titans
-
மஹிந்தவுடன் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சந்திப்பு
Published By: DIGITAL DESK 2 25 MAY, 2025 | 09:57 AM (இராஜதுரை ஹஷான்) இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மதம், அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளிலான இருதரப்பு தொடர்புகள் மேலும் பலமடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன். பழைய நண்பரின் வருகை கடந்த காலங்களை நினைவுபடுத்தியுள்ளமை மகிழ்ச்சிக்குரியது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரால் (ஓய்வுநிலை)பஹீம் உல் அசீஸிடம் நன்றி தெரிவித்தார். இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரால் (ஓய்வுநிலை)பஹீம் உல் அசீஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு அண்மையில் கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தை உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இச்சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை நெருக்கடியான நிலையை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் நெருக்கமான நண்பன் என்ற அடிப்படையில் பாகிஸ்தான் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. யுத்தகாலத்தில் பாகிஸ்தான் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியதால் விடுதலை புலிகள் அமைப்பு கொழும்பில் இருந்த அப்போதைய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகளை கொலை செய்ய முயற்சித்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் அயல் நட்பு நாடு என்ற அடிப்படையில் பாகிஸ்தான் இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கியது. ஆகவே இவற்றுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிப்பதற்கு கடமைப்பட்டுள்ளேன். இரு நாடுகளுக்கும் இடையிலான மதம், அரசியல்,பொருளாதாரம் மற்றும் சமூக தொடர்பு உள்ளிட்ட நிலைகளிலான இருதரப்பு தொடர்புகள் மேலும் பலமடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன். பழைய நண்பரின் வருகை கடந்த காலங்களை நினைவுப்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரிடம் நன்றி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/215607
-
'உலகில் 8 பேரில் ஒருவரை பாதித்துள்ள இதய நோய் வர பிளாஸ்டிக்கே முக்கிய காரணம்'
'உலகில் 8 பேரில் ஒருவரை பாதித்துள்ள இதய நோய் வர பிளாஸ்டிக்கே முக்கிய காரணம்' - இந்தியாவின் நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிளாஸ்டிக் மாசுபாடு கட்டுரை தகவல் எழுதியவர், மோகன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், நம் கண்ணுக்குத் தெரியாத வில்லனாக இருக்கிறது என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டோம். ஆழ்கடல் தொடங்கி மனிதர்களின் ரத்தம், தாய்ப்பால் வரை நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கான பிளாஸ்டிக்கிற்கு எதிரான விழிப்புணர்வும் அதற்கு மாற்று கண்டுபிடிக்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உணவுடன் சேர்த்து பிளாஸ்டிக் பாத்திரங்கள், சாதனங்களில் உள்ள ரசாயனப் பொருட்களையும் நமக்கே தெரியாமல் நாம் உட்கொள்வதற்கும் இதய நோய் இறப்புகளுக்கும் தொடர்பு உள்ளது என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. புகழ் பெற்ற மருத்துவ இதழான 'தி லேன்சட்'-ன் ஒரு அங்கமான இபயோமெடிசின் மின்னிதழலில் வெளிவந்த ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 356,238 பேர் இதனால் உயிரிழந்த நிலையில், உலகிலேயே அதிக அளவாக இந்தியாவில் மட்டும் 103,587 பேர் உயிரிழந்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. ஆய்வு என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இதய நோய் இறப்புகள் என்ன காரணத்தால் நிகழ்ந்தன என்பதை அறிவதே இந்த ஆய்வின் முதன்மை நோக்கமாக இருந்தது. (கோப்புப்படம்) 2011-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள், இதய நோயை முக்கியமான சுகாதாரப் பிரச்னையாக அங்கீகரித்தது. உலகம் முழுவதும் 100 கோடி பேர் (கிட்டத்தட்ட 8 பேரில் ஒருவர்) இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு மட்டும் 1.7 கோடி பேர் இதய நோயால் உயிரிழந்துள்ளனர். இது அந்த ஆண்டு உலகம் முழுவதும் பதிவான இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். உலகம் முழுவதும் ஏற்பட்ட இதய நோய் இறப்புகள் என்ன காரணத்தால் நிகழ்ந்தன என்பதை அறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிளாஸ்டிக் பாலிமர்கள் மற்றும் ரசாயன சேர்க்கைப் பொருட்கள், குறிப்பாக டை எத்தில்ஹெக்ஸைல் தாலேட் (Di(2-ethylhexyl)phthalate) என்கிற ரசாயனம் தான் இதய நோய் இறப்புகளுக்கு முக்கிய காரணியாக இருப்பது தெரியவந்துள்ளது. தாலேட் (phthalate) ரசாயனம் பாலிவினைல்குளோரைட் (பிவிசி) பிளாஸ்டிக்குகளை மென்மையாக்கப் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் உற்பத்தி அதிகமாக நடைபெறும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதன் பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. பிளாஸ்டிக் சார்ந்த ரசாயனங்கள் 55-64 வயது பிரிவில் உள்ளவர்களில் இதயநோய் இறப்புக்கு முக்கிய காரணியாக உள்ளது. இது அங்கீகரிக்கப்படாத முக்கியமான சுற்றுச்சூழல், சுகாதாரப் பிரச்னை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பேக்கேஜிங் செய்ய பயன்படும் பிளாஸ்டிக் பொருட்கள் 2018-ம் ஆண்டு உலகம் முழுவதும் 356,238 இறப்புகள் தாலேட் நுகர்வுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. 55-64 வயதுக்குட்பட்ட பிரிவில் 14% மரணங்கள் இதனால் தான் நிகழ்ந்துள்ளன. இந்த இறப்புகளில் 16.8 சதவிகிதம் தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பதிவாகியுள்ளன. உலகின் வெவ்வேறு நாடுகளிலும் உள்ள தாலேட் பயன்பாடு அளவைப் பொருத்து இதய நோய் சுமை என்பது வேறுபடுகிறது. அதிக வருமான கொண்ட நாடுகளைவிடவும் குறைவான மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் இதன் பாதிப்பும், இதனால் ஏற்படும் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் ஆய்வு ஒன்றின்படி, உணவுப் பொருட்கள் மற்றும் தாலேட் பயன்படுத்தி செய்யப்பட்ட பாத்திரங்களில் வைத்து சாப்பிடும் உணவுகளில் இருந்து மனித உடலுக்கு அதிக அளவிலான தாலேட் வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அபாயகரமான கழிவுகள் கொட்டப்படும் இடங்கள் மற்றும் குப்பைக் கிடங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளது என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ரசாயனப் பொருட்கள் பரவலாக எதில் எல்லாம் பயன்படுத்தப்பட்டன? பொம்மைகள். பேக்கேஜிங் செய்ய பயன்படும் பிளாஸ்டிக் பொருட்கள். அழகு சாதனப் பொருட்கள். பெயிண்ட். மருத்துவ மற்றும் ஆய்வக உபகரணங்கள். ஆனால் தற்போது பெரும்பாலான பொருட்களில் தாலேட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவில் ஏற்பட்ட இறப்புகள் சீனாவில் ஏற்பட்டதைவிட 70 சதவிகிதம் அதிகமாக உள்ளது. அதிக அளவில் வயதான மக்கள் தொகை கொண்ட நாடுகளான இந்தியா, சீனா மற்றும் இந்தோனீசியாவில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இந்த நாடுகளில் தாலேட் தாக்கத்தால் ஏற்படும் இதய நோய் மரணங்கள் பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய சுமையாக இருக்கும் என ஆய்வறிக்கை கூறுகிறது. 2018-ம் ஆண்டின் தரவுபடி நாடு வாரியாக இறப்புகள் இந்தியா (103,587) சீனா (60,937) இந்தோனீசியா (19,761) சீனாவில் 2018-ம் ஆண்டு 55-64 வயதுக்குட்பட்ட பிரிவில் 15.72 கோடி மக்கள் வாழ்ந்த நிலையில் 60,937 பேர் இதன் தாக்கத்தால் ஏற்பட்ட இதய நோய்க்கு உயிரிழந்துள்ளனர். அதே சமயம் இந்தியாவில் அதே வருடம் 55-64 வயதுக்குட்பட்ட பிரிவில் 10.38 கோடி மக்கள் வாழ்ந்த நிலையில் 103,587 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில் குறிப்பிடப்பட்ட வயதுப் பிரிவில் இந்தியாவின் மக்கள் தொகை, சீனாவின் மக்கள் தொகையில் 66 சதவிகிதம் என்கிற அளவில் தான் இருந்துள்ளது. ஆனால் இந்தியாவில் ஏற்பட்ட இறப்புகள் சீனாவைக் காட்டிலும் 70 சதவிகிதம் அதிகமாக உள்ளது. உயிரிழப்பு மற்றும் வாழ்நாள் இழப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உயிரிழப்புகளுடன் சேர்த்து வாழ்நாள் இழப்பு (Years of Lives Lost) என்கிற ஒரு கணக்கீடும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் உயிரிழப்புகளுடன் சேர்த்து வாழ்நாள் இழப்பு (Years of Lives Lost) என்கிற ஒரு கணக்கீடும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது உயிரிழப்புகளின் எண்ணிக்கை, அவர்களின் வயது மற்றும் ஒரு நாட்டில் உள்ள சராசரி ஆயுட்காலம் ஆகியவை கணக்கிடப்பட்டு இந்த அளவு நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி இந்தியா, சீனா மற்றும் இந்தோனீசியாவில் இந்த வயதினர் முறையே 29,04,389, 1,935,961 மற்றும் 587,073 வருட ஆயுட்காலத்தை இழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 55-64 வயதுக்குட்பட்ட பிரிவில் 356,000 பேர் பிளாஸ்டிக் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இது அந்த வருடத்தில் உலகம் முழுவதும் ஏற்பட்ட இதய நோய் இறப்புகளில் 13.5 சதவிகிதம் ஆகும். வாழ்நாள் இழப்புக்கான விலை என்ன? இந்த ஆய்வில் வாழ்நாள் இழப்புக்கான விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடத்திற்கும் தோராயமாக 1000 டாலர்கள் என வைத்துக் கொண்டாலும், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்பட்ட இறப்புகளின் சமூக செலவு 10.2 பில்லியன் டாலர்களாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது ஒரு தனிநபரின் வாழ்வை மதிப்பிடும் அளவு இல்லையென்றும் இத்தகைய இறப்புகளால் ஏற்படும் பாதிப்புகளை வெளிப்படுத்தும் ஒரு கணக்கீடு என்றும் ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக பிளாஸ்டிக் தொழில்துறை உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளால் வரும் தாலேட் தாக்கங்கள் மற்றும் வணிக பொருட்களின் உற்பத்தியில் பயன்படும் பிவிசி போன்றவற்றில் தாலேட் பரவலாகப் பயன்படுத்தப்படுவதும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் சீனா, பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்யும் முக்கியமான நாடாக இருந்தது. அவ்வருடத்தில் மட்டும் உலகில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் 29% சீனாவில் தான் இருந்துள்ளது. 2024-ம் ஆண்டு வெளியான ஆய்வின்படி இந்தியாவில் தான் பிளாஸ்டிக் உமிழ்வு (ஒவ்வொரு வருடமும் 9.3 மில்லியன் மெட்ரிக் டன்கள் என்கிற அளவில்) அதிகம். பிளாஸ்டிக் மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள் உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வேறுபடுவதாக ஆய்வு கூறுகிறது. பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் நுகர்வு அதிகரித்து வரும் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் தான் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளதாக லேன்சட் ஆய்வு கூறுகிறது. கட்டுப்படுத்துவது எப்படி? 2008-ம் ஆண்டுக்கு முன்பாக இதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பெரிய அளவிலான விதிமுறைகள் இல்லை. ஆனால் ஜப்பான், கனடா போன்ற நாடுகளில் இதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் 2003-ம் ஆண்டு உணவு பேக்கேஜிங் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த பொருட்களின் தாலேட் உள்ளடக்கிய பொருட்களைப் பயன்படுத்த தடை கொண்டு வரப்பட்டது. 2006-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியமும் குழந்தைநலன் மற்றும் உணவுத் துறையில் தாலேட் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதித்தது. 2008-2018க்கு இடைப்பட்ட காலத்தில் கனடா குழந்தை பொம்மைகள் மற்றும் தயாரிப்புகளில் தாலேட் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதித்தது. இதே போல் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் குழந்தை பொருட்களில் தாலேட் பயன்படுத்த கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. 2018-ம் ஆண்டு சீனா பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட 24 வகையான வெளிநாட்டு கழிவுகளுக்குத் தடை விதித்துள்ளது. இந்தியாவும் சமீபத்தில் உணவு பேக்கேஜிங் துறையில் தாலேட் பயன்பாட்டிற்குக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வளரும் நாடுகள் சந்திக்கும் சவால்கள் என்ன? பல நாடுகளில் தாலேட் பயன்பாட்டை ஒழுங்குபடுத்த விதிமுறைகள் இல்லை என இந்த ஆய்வில் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது. வளரும் நாடுகள் இருவிதமான சுமைகளைச் சந்திப்பதாக லேன்சட் ஆய்வறிக்கை கூறுகிறது. ஒன்று அவர்கள் தங்கள் நாடுகளின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியை பெருக்க வேண்டும். மறுபுறம் தொழில் வளர்ச்சி கண்ட நாடுகளில் இருந்து வரும் கழிவுகளையும் சமாளிக்க வேண்டும். தொழில்துறையில் வளர்ந்த நாடுகளில் உருவாக்கப்படும் கழிவுகள் வளரும் நாடுகளில் கொட்டப்படுவதும் அந்த நாடுகள் மீதான சுமையை அதிகரித்துள்ளது. பாதிப்புகளைத் தவிர்க்க என்ன செய்வது? பட மூலாதாரம்,KUZHANDHAISAMY படக்குறிப்பு,மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு இந்தத் தகவல் புதிதல்ல என்கிறார் ஓய்வு பெற்ற பொது சுகாதாரத் துறை இயக்குநரான குழந்தைசாமி மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு இந்தத் தகவல் புதிது அல்ல என்கிறார் ஓய்வு பெற்ற பொது சுகாதாரத் துறை இயக்குநரான குழந்தைசாமி. "இந்தியாவில் பிளாஸ்டிக் மற்றும் ரசாயன கழிவுகளால் இதயநோய், நீரழிவு நோய், கருவுறாத்தன்மை மற்றும் புற்றுநோய் என நான்கு நோய்கள் பிரதானமாக வருகின்றன. லேன்சட் ஆய்வறிக்கை இதற்கான தீர்வை நோக்கி நகர்த்தும் என நம்புகிறேன்" என்றார். பிளாஸ்டிக் கழிவுகள் மூன்று வழிகளில் மனித உடலில் கலக்கின்றன என்று அவர் விவரித்தார். "முதலாவது பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதன் மூலம் வரும் புகையினால் வருகிறது. இரண்டாவது மாசடைந்த குடிநீரைப் பருகுவதன் மூலமும் உடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலக்கின்றன. மூன்றாவதாக உணவுப் பொருட்கள் மூலம் வருகின்றது" என்றார். இந்த பாதிப்பை தவிர்ப்பதற்கான வழிகளையும் முன்வைக்கிறார் குழந்தைசாமி. அதைப்பற்றி பேசியவர், "அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தவே கூடாது. ஒருமுறை பயன்படுத்த வேண்டிய பாட்டில் போன்ற பொருட்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர் மற்றும் பாத்திரங்களில் எடுத்துச் செல்லக்கூடாது." என்றார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyn71r4x1do