Everything posted by ஏராளன்
-
அரை மணிநேரத்திற்கு இடைநிறுத்தப்பட்ட கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள்
Published By: DIGITAL DESK 3 07 APR, 2025 | 02:51 PM கொழும்பு பங்குச் சந்தையில் S&P SL20 குறியீடு 5 சதவீதத்திற்கும் மேலாக சரிந்ததால் வழக்கமான வர்த்தக நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை (07) காலை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. வர்த்தக நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. அதன்படி, பங்குச் சந்தை நடவடிக்கைகள் காலை 9.51 மணி முதல் காலை 10.07 மணி வரை பதினாறு நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது. மேலும் காலை 10.07 மணி முதல் காலை 10.21 மணி வரை பதினான்கு நிமிடங்கள் ஏல விற்பனையை நடத்தியது. அதன்பிறகு, வழக்கமான வர்த்தக நடவடிக்கைகள் காலை 10.21 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகியது. S&P SL20 குறியீடு 240.45 புள்ளிகள் அல்லது 5.3 சதவீதம் சரிந்து 4,292.90 ஆகவும், அனைத்து பங்கு விலைச் சுட்டிகள் (ASPI) ஆரம்ப வர்த்தகத்தில் 4.16 சதவீதம் அல்லது 639.01 புள்ளிகள் சரிந்து 14,734.34 ஆகவும் சரிந்தது என கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்தள்ளது. பங்குகள் முந்தைய நாட்களுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்தால் கொழும்பு பங்குச் சந்தையில் வர்த்தகம் இடைநிறுத்தப்படும். அதேவேளை, ஆசிய சந்தைகள் சரிந்துள்ளன, இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போரால் தூண்டப்பட்ட உலகளாவிய பங்குச் சந்தை வீழ்ச்சியை ஆழப்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/211375
-
காசாவில் ஊடகவியலாளர்களின் கூடாரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - இருவர் பலி
Published By: RAJEEBAN 07 APR, 2025 | 03:26 PM காசாவில் இரண்டு மருத்துவமனைகளிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் செய்தியாளர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள மருத்துவர்கள் ஆறு செய்தியாளர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த கூடாரங்களை இலக்குவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. காசாவின் தென்பகுதியில் உள்ள கான்யூனிசின் நாசெர் மருத்துவமனைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக அந்த கூடாரங்கள் தீப்பற்றி எரிந்தன. இதன் போது பாலஸ்தீன் டுடே தொலைக்காட்சியின் உள்ளுர் செய்தியாளரான யூசெவ் அல் பஹாவி கொல்லப்பட்டார் . விமானதாக்குதலில் காயமடைந்த ஆறு ஊடகவியலாளர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதில் ஒருவர் கடும் எரிகாயங்களால் பாதிக்கப்பட்டுள்ளார். மற்றுமொருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சட்டங்களின் கீழ் பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்பட்டவர்கள் மோதலில் ஈடுபடும் தரப்பினர் அவர்களை பாதுகாக்கவேண்டும். எனினும் ஒக்டோபர் 2023 இல் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்த பின்னர் 200 ஊடகவியலாளர்களும் ஊடக பணியாளர்களும் இஸ்ரேலின் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/211396
-
மஹிந்தவின் உடல் நிலை குறித்து நாமலின் பதில்!
மஹிந்தவின் நிலை தொடர்பில் நாமல் வௌியிட்ட தகவல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அவரது மகன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய நாட்களில் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வந்தன. இது குறித்து கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, “சமூக ஊடகங்களில் என்ன பேசப்பட்டாலும், நான் வீட்டிற்குச் சென்றபோது தந்தை நலமுடன் இருந்தார்” என்றார். https://thinakkural.lk/article/316894
-
சிட்னியிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவினை திறக்க முயன்ற ஜோர்தான் பயணி - எயர்ஏசியா விமானத்தில் சம்பவம்
07 APR, 2025 | 10:39 AM சிட்னிக்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவினை ஜோர்தானிய பிரஜையொருவர் திறக்கமுயன்றதால் விமானத்தில் குழப்பநிலை ஏற்பட்டமை குறித்து ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. ஏஎவ்பி இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது. சனிக்கிழமை சிட்னியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவை ஜோர்தானிய பிரஜையொருவர் திறக்க முயன்றார், ஏனைய பயணிகள் அவரை கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்தினர். விமானம் தரையிறங்கியதும் விமான பணியாளர்கள் பொலிஸாரின் உதவியை நாடினர். ஜோர்தானை சேர்ந்த 45 வயதுடைய நபர் விமானத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியமை, விமான பணியாளரை தாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கின்றார். எயர்ஏசியா விமானத்தின் பின்பக்கத்தில் உள்ள அவசர சூழ்நிலையில் வெளியேறுவதற்கான கதவை ஏன் இந்த நபர் திறக்க முயன்றார் என பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். குறிப்பிட்ட விமானம் மலேசிய தலைநகரிலிருந்து பயணித்துக்கொண்டிருந்ததாகவும், இந்த நபர் விமானத்தின் கதவுகளை திறக்க முயன்றதை தொடர்ந்து விமானபணியாளர்கள் அவரை விமானத்தின் நடுப்பகுதிக்கு கொண்டு சென்றனர் . இதன் போது அந்த நபர் விமான பணியாளர் ஒருவரை தாக்கினார் என குறிப்பிட்டுள்ளது. சிட்னியில் விமானம் இறங்கியதும் அவுஸ்திரேலிய பொலிஸார் உடனடியாக விமானத்திற்குள் ஏறியுள்ளனர். ஜோர்தான் நபர் இழைத்த குற்றங்களிற்காக பத்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நபரின் செயலால் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும், விமானப்பயணங்களின் போது பயணிகளும் விமானபணியாளர்களும் இவ்வாறான ஆபத்தான செயற்பாடுகளை எதிர்கொள்ளக்கூடாது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். எங்கள் பயணிகள் அல்லது பணியாளர்களின் பாதுகாப்பினை எந்த காரணத்திற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என தெரிவித்துள்ள எயர்ஏசியா பணியாளர்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுத்தனர், எந்த விதமான பொருத்தமற்ற செயற்பாடுகளையும் சகித்துக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/211363
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
சன்ரைசர்ஸ் 4-வது தோல்வி: குஜராத் அணிக்காக பேட்டிங், பவுலிங்கில் ஜொலித்த தமிழக வீரர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 7 ஏப்ரல் 2025, 02:06 GMT ஹைதராபாத்தில் நேற்று (ஏப்ரல் 6) நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 19-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. முதலில் பேட்செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை சேர்த்தது. 153 ரன்கள் என்னும் இலக்கைத் துரத்திய குஜராத் அணி 16.4 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் குஜராத் அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது. சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் 4 தோல்விகளுடன், ஒரு வெற்றியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. ஒருதரப்பாக மாறிய ஆட்டம் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருதரப்பாகவே அமைந்தது. கடந்த சீசனில் இருந்து அதிரடி ஃபார்முலாவை கையில் எடுத்து ஆடிவரும் சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசனில் அந்த ஃபார்முலா வெற்றியைத் தரவில்லை. பந்துவீ்ச்சிலும், பேட்டிங்கிலும் சன்ரைசர்ஸ் அணியினர் சராசரிக்கும் குறைவாகவே செயல்பட்டனர். சன்ரைசர்ஸ் அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்கவில்லை. அந்த அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி (31), கிளாசன்(27), கம்மின்ஸ் (22) ஆகியோர் மட்டுமே ரன்கள் சேர்த்தனர். ஆனால் குஜராத் அணியினர் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அற்புதமாகச் செயல்பட்டனர். பவர்ப்ளேயில் விக்கெட் வீழ்த்தி நெருக்கடியளித்தது, நடுப்பகுதியில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசியது, டெத் ஓவர்களை சிறப்பாக வீசியது, பேட்டிங்கிலும் 2வது விக்கெட்டுக்கு பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தது என குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிக்கு உரியதாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES தலை நிமிர வைத்த தமிழக வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் அதிக எண்ணிக்கையில் தமிழக வீரர்கள் இருக்கும் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணிதான். இந்த அணியில் தமிழக வீரர்கள் சாய் கிஷோர், சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான் ஆகியோர் உள்ளனர். ஒவ்வொரு போட்டியிலும் தமிழக வீரர்கள் தங்கள் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் குஜராத் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை. கடந்த சில போட்டிகளாக பேட்டிங்கில் சாய் சுதர்சன் ஆதிக்கம் செலுத்திய நிலையில் இந்த ஆட்டத்தில் பந்துவீச்சில் சாய் கிஷோரும், பேட்டிங்கில் வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக செயல்பட்டனர். வாஷிங்டன் சுந்தர் 29 பந்துகளில் 49 ரன்கள் (2சிக்ஸர், 5பவுண்டரி) விளாசி வெற்றிக்கு துணையாகினார். இதுநாள்வரை ஐபிஎல் தொடர்களில் கடைசிவரிசையில் களமிறங்கி வந்த வாஷிங்டன் சுந்தரை குஜராத் அணி நேற்றைய ஆட்டத்தில் 4வது வீரராகக் களமிறக்கியது. சிறந்த ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். சிமர்ஜித் சிங் ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என சுந்தர் விளாசவே, அத்தோடு சிமர்ஜித்துக்கு ஓவர் நிறுத்தப்பட்டது. கம்மின்ஸ் பந்துவீச்சில் பவுண்டரி, ஷமி பந்துவீச்சில் பவுண்டரி என சுந்தர் விளாசினார். 168 ஸ்ட்ரைக் ரேட்டில் சுந்தர் அதிரடியாக பேட் செய்து வியக்க வைத்தார். பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தருக்கு குஜராத் அணி வாய்ப்புக் கொடுக்காவிட்டாலும் பேட்டிங்கில் தன்னால் சிறப்பாக 4வது வரிசையில் விளையாட முடியும் என்பதை சுந்தர் நிரூபித்துவிட்டார். சுப்மன் கில்லுடன் 3வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த வாஷிங்டன் சுந்தர் 90 ரன்கள் சேர்த்தார். குஜராத் அணியில் 3வது விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும். பந்துவீச்சில் சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசிய 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். தமிழக வீரர்கள் 4 பேரில் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே கேப்டு (capped) வீரர், சர்வதேச அனுபவம் கொண்டவர். ஆனால் மற்ற 3 வீரர்களும் அன்கேப்டு (uncapped) வீரர்கள், சர்வதேச அனுபவம் இல்லாத நிலையிலும் இவர்களின் ஆட்டம் தமிழகத்தை தலைநிமிர வைக்கிறது. இன்னும் இந்திய அணியின் கதவுகள் சாய் சுதர்சனுக்கும், கிஷோருக்கும் ஏன் திறக்கப்படவில்லை என்ற கேள்வியை இந்த ஆட்டம் விட்டுச் செல்கிறது. மின்சாரம், கார் எதுவுமே வேண்டாம் என இந்த தீவு மக்கள் தவிர்ப்பது ஏன்?6 ஏப்ரல் 2025 டிஎன்ஏ பரிசோதனையால் பெற்றோர் குறித்து பெண்ணுக்கு தெரியவந்த அதிர்ச்சி தரும் உண்மை6 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES யார் வெற்றியாளர்கள்? வெற்றிக்குப்பின் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசுகையில் "பந்துவீச்சாளர்கள்தான் ஆட்டத்தை மாற்றியவர்கள். ஏராளமானோர் டி20 குறித்தும், பேட்டிங், பந்துவீச்சு குறித்துப் பேசுகிறார்கள். எங்களைப் பொருத்தவரை போட்டியில் வெற்றி பெற செய்வது பந்துவீச்சாளர்கள்தான். அதனால்தான் எங்கள் அணியில் பந்துவீ்ச்சுக்கு முக்கியத்துவம் அளிப்போம். பவர்ப்ளேயில் டெஸ்ட் போட்டி நுட்பத்தை பயன்படுத்தினோம். பேட்டிங் செய்யும் வாஷிங்டனும், நான் பேசிக்கொண்டு பேட் செய்தோம், சுந்தர் அடித்த பல ஷாட்களும் அற்புதமானவை. முன்பு மும்பைக்கு எதிரான போட்டி கடும் நெருக்கடியானதாக இருந்தது, வாஷிங்டன் கால்காப்பு கட்டி தயாராகஇருந்தாலும் இம்பாக்ட் விதியால் அவரால் களமிறங்க முடியவில்லை. இந்த ஆட்டத்தில் கூடுதல் சுழற்பந்துவீச்சாளராகவும், பேட்டராகவும் சுந்தரைக் காண முடிந்தது. இருவருக்கும் இடையே நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது இதனால், அணியை வெற்றிக்கு கொண்டு சேர்க்க முடிந்தது. சிராஜ் பந்துவீச்சு அருமையாக இருந்தது, அவரின் பந்துவீ்ச்சில் புதிய உத்வேகம், காணப்படுகிறது" எனத் தெரிவித்தார். ரஷித்கானை ஓரங்கட்டிய சாய் கிஷோர் குஜராத் அணியில் இருக்கும் ரஷித் கான் இந்த சீசன் தொடங்கியதிலிருந்தே மோசமாகப் பந்துவீசி வருகிறார். இந்த ஆட்டத்தில் கூட 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்தவில்லை. சிறப்பாக தொடங்கினாலும் ரஷித்தான் 3வது போட்டியாக விக்கெட் வீழ்த்தாமல் ஃபார்மின்றி இருக்கிறார். ஆனால், தமிழகத்தன் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர், ரஷித்கான் பந்துவீச்சைவிட குறைந்த வேகத்தில் பந்துவீசியதால், பந்து நன்றாக டர்ன் ஆகியது, பந்துவீச்சிலும் பல்வேறு வேரியேஷன்களை கிஷோர் வெளிப்படுத்தினார். இதனால் மிகப்பெரிய விக்கெட்டான கிளாசனையும்(27), நிதிஷ் குமார் (31)விக்கெட்டையும் சாய் கிஷோர் எளிதாக வீழ்த்தினார். ரஷித் கான் பந்துவீச்சை கையாள்வதில் சன்ரைசர்ஸ் பேட்டர்கள் சிரமப்பட்டதைவிட, சாய் கிஷோர் பந்துவீச்சை ஊகித்து ஆடுவதில்தான் பெரும் சிரமப்பட்டனர். காத்தவராயன் வரலாறு: நாட்டார் தெய்வங்கள் சாதி ஆணவக் கொலையால் உதித்தவையா? ஓர் ஆய்வு6 ஏப்ரல் 2025 சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா?5 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES வியக்க வைத்த 'வாஷி' குஜராத் அணியால் வாங்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் முதல்முறையாக இந்த ஆட்டத்தில் களமிறங்கினார். தன்னுடைய சிறுவயது பள்ளி தோழன் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தபின் வாஷிங்டன் சுந்தர் 4வது வீரராக களமிறங்கினார். இதற்கு முன் ஐபிஎல் தொடரில் எந்த அணியும் வாஷிங்டனை 4வது இடத்தில் களமிறக்கியதில்லை என்ற நிலையில் அவரை துணிந்து குஜராத் அணி களமிறக்கியது. பவர்ப்ளேயின் கடைசி ஓவரைச் சந்தித்த வாஷிங்டன் சுந்தர், சிமர்ஜித் சிங் ஓவரில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசினா். 2016 ஆம் ஆண்டு டிஎன்பிஎல் தொடரில் அபினவ் முகுந்துடன் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரராக வாஷிங்டன் சுந்தர் களமிறங்கி வெளுத்து வாங்கிய அதே நினைவுகளை சுந்தர் கண்முன் நிறுத்தினார். அதிரடியாக பேட்செய்த வாஷிங்டன் 168 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார். ஆனால், அரைசதத்தை தவறவிட்டாலும் வாஷிங்டன் பேட்டிங் அரைசதத்துக்கும் மேலானது என்று வர்ணனையாளர்கள் தெரிவித்தனர். தொடக்கத்திலேயே குஜராத் அணி சாய் சுதர்சன், பட்லர் இருவரின் விக்கெட்டை இழந்து தடுமாறினாலும், கேப்டன் கில், வாஷிங்டன் கூட்டணி அணியைதூக்கி நிறுத்தியது. பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள்ச சேர்த்தது. கேப்டனுக்குரிய பொறுப்புடன் பேட் செய்த சுப்ம ன் கில் 36 பந்துகளில் அரைசதம் அடித்து 61 ரன்களிலும், ரூதர்போர்ட் கேமியோ ஆடி 35 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் அணியின் சறுக்கல் ஹைதராபாத்தில் வழக்கமான பேட்டிங் பிட்சாக இருந்திருந்தால் ஆட்டம் இன்னும் ஸ்வரஸ்யமாக இருந்திருக்கும். ஆனால், நிதானமாக பேட் செய்யக்கூடிய, சற்று மந்தமான ஆடுகளத்தை, பொறுமையாக ஆடக்கூடிய ஆடுகளத்தை அமைத்தது. இதனால் பேட்டர்களை நோக்கி பந்து வேகமாக வருவதுபோல் தெரிந்தாலும் பிட்சில் பந்துபட்டவுடன் நின்று மெதுவாகவே பேட்டரை நோக்கி வரும்போது எதிர்பார்த்த ஷாட்ளை பேட்டர்களால் ஆட முடியவில்லை. இதனால் டிராவிஸ் ஹெட், அபிஷேக், இஷான் கிஷன் ஆகிய 3 அதிரடி பேட்டர்களும் சொற்பரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். கடந்த 5 போட்டிகளாக சன்ரைசர்ஸ் அணி பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை இழந்ததுதான் தோல்விக்கு முக்கியக் காரணமாகும். இந்த 5 போட்டிகளில் மட்டும் பவர்ப்ளேயில் மட்டும் சன்ரைசர்ஸ் அணி 12 விக்கெட்டுகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பவர்ப்ளே ஓவர்களை பந்துவீச்சிலும்,பேட்டிங்கிலும் பயன்படுத்திக்கொண்ட அணி, சிறப்பான வெற்றியைப் பெறுகிறது என்பது புள்ளிவிவரங்கள் மூலம் அறியலாம். டிராவிஸ் ஹெட், அபிஷேக் இருவருமே கடந்த சீசன்களில் அதிரடியான தொடக்கத்தை அளித்து எதிரணிகளை கதிகலங்க வைத்தவர்கள். ஆனால் இருவரும் இந்த ஆட்டத்தில் பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர். முதல் சிக்ஸரை சன்ரைசர்ஸ் அணி 13வது ஓவரில்தான் அடித்தது. சன்ரைசர்ஸ் அணியில் டாப்ஆர்டர் 3 பேட்டர்களைத் தவிர்த்து கிளாசன், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகேத் வர்மா, மெண்டிஸ், கம்மின்ஸ் என வீரர்கள் இருந்தும், ஒரு வீரர்கூட அரைதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கம்மின்ஸ் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 22 ரன்களைச் சேர்த்ததால் ஸ்கோர் 150 ரன்களைக் கடந்தது இல்லாவிட்டால் மோசமாகியிருக்கும். இங்கிலாந்து அணி கடைபிடிக்கும் பாஸ்பால் ஃபார்மெட்டையே சன்ரைசர்ஸ் அணியும் கையில் எடுத்துள்ளது. அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்குவது, எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்து மனரீதியாக குழப்பி அவர்களை வெல்வது, பெரிய ஸ்கோரை அடித்து, எதிரணிகளை எளிதாக வீழ்த்துவது என்ற அதிரடி ஃபார்முலாவை சன்ரைசர்ஸ் கையாண்டது. ஆனால், கடந்த சீசனில் அந்த அணிக்கு சிறப்பாக செயல்பட்ட இந்த அதிரடி ஃபார்முலா இந்த சீசனுக்கு எடுபடவில்லை, 5 போட்டிகளிலும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் சன்ரைசர்ஸ் அணி 4 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது. பந்துவீச்சில் 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் குஜராத் அணியில் பெரிதாக விக்கெட் வீழ்த்தவில்லை. மென்டிஸ், அபிஷேக், சிமர்ஜித் சிங் ஆகியோர் தலா ஒரு ஓவர் வீசிய 20ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஷமி, கம்மின்ஸ், ஜீசன் அன்சாரி ஆகிய 3 பந்துவீச்சாளர்கள் மட்டுமே கட்டுக்கோப்புடன் பந்துவீசினர். ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவர்களின் விரல்களை முடக்கும் 'ரைட்டர்ஸ் கிராம்ப்' - தீர்வு தரும் நிபுணர்கள்4 ஏப்ரல் 2025 அழகுசாதனப் பொருட்களால் தோல் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் - தவிர்க்கும் வழிகள்4 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES மிரள வைத்த முகமது சிராஜ் சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணியில் தேர்ந்தெடுக்காதது, ஆர்சிபி அணி ஏலத்தில் சிராஜை கழற்றிவிட்டது ஆகியவற்றால் விரக்தியில் இருந்த முகமது சிராஜ் தனது பந்துவீச்சால் பதில் அளித்தார். தன்னை தவறவிட்டது தவறு என்பதை பிசிசிஐக்கும், ஆர்சிபி அணிக்கும் பந்துவீச்சு மூலம் சிராஜ் உணர்த்தினார். கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிராஜ்-ஹெட் உரசிக்கொண்ட நிலையில் இந்த ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார். அதன்பின் அபிஷேக் சர்மா(18), அனிகேத் வர்மா(18), சிமர்ஜித் சிங் ஆகியோரின் விக்கெட்டுகளை சிராஜ் வீழத்தினார். சிராஜின பந்துவீச்சு நேற்று சன்ரைரசர்ஸ் பேட்டர்களுக்கு உண்மையில் சிம்மசொப்னமாகத்தான் இருந்தது, ஒரு சிக்ஸர் கூட அடிக்கவிடாத சிராஜ், 3 பவுண்டரிகள் உள்பட 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். சிராஜ் வீசிய 4 ஓவர்களில் 17 டாட் பந்துகள் அடங்கும். பிரசித் கிருஷ்ணா தனக்குரிய பங்களிப்பை சரியாகச் செய்து 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் இஷாந்த் சர்மா மட்டுமே விக்கெட் இன்றி 54 ரன்களை வாரிவழங்கினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cyvq4znvq98o
-
நோயாளர்களின் நலன் கருதி நாட்டில் உள்ள அரச மருத்துவமனைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் - சுகாதார அமைச்சர்
Published By: VISHNU 07 APR, 2025 | 02:33 AM நாட்டில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதுடன் குறுகிய காலத்தில் மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை சேவைகள் மற்றும் உயர்ந்த பராமரிப்பை வழங்குவதே சுகாதார அமைச்சு மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சுகாதார தகவல் தொழில்நுட்ப அமைப்பு உத்தியோகபூர்வ திறப்பு மற்றும் மருத்துவமனையின் ஆய்வகத்தின் திசு அறிவியல் துறையின் தரப்படுத்தலை பெறுவதற்காக இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை பிரிவு, மாதாந்த சிகிச்சை பிரிவு, ஆய்வகங்கள், கதிரியல் பிரிவு, உள் நோயாளர் பிரிவு மற்றும் வெளிநோயாளர் பிரிவு என அனைத்து பிரிவுகளும் தற்போது நவீனமயப்படுத்தப்பட்டு முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு தரப்படுத்தப்பட்ட ஆய்வக சேவையை வழங்கும் நோக்குடன் கொழும்பு சிறுவர் வைத்தியசாலை ஆய்வகத்தின் திசு அறிவியல் பிரிவு, இலங்கை அங்கீகார வாரியத்தால் (SLAB) ஆய்வகங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரத்திற்காக சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் விண்ணப்பித்தது. அதற்கமைய அரச மருத்துவமனையில் உள்ள ஆய்வகம் தரப்படுத்தலுக்கு உட்படுவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும். சகல பொது சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கி பொதுமக்களுக்கு மிகவும் வசதியான மற்றும் திறமையான சேவையாக மாற்றுவதே தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோளாகும். கடமையில் உள்ள ஒன்றரை இலட்சம் சுகாதார ஊழியர்களின் தகவல்கள் உட்பட மனித வளங்களை நிர்வகிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முழு கவனமும் செலுத்தப்பட்டுள்ளதுடன் அதை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முயற்சிகள் விரைவில் முன்னெடுக்கப்பட உள்ளது. அத்தோடு டிஜிட்டல் மயமாக்கல் மூலம் சுகாதார பதிவுகளை ஒன்றிணைப்பதுடன், மருந்து விநியோக வலையமைப்பை எதிர்வரும் காலங்களில் தொழில்நுட்பத்துடன் நெறிப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நோயாளர்களுக்கு பராமரிப்பு மற்றும் உயர்தர சிகிச்சை சேவைகளை வழங்குவது சுகாதார ஊழியர்களின் பொறுப்பாகும். இதற்காக, சுகாதார அமைச்சு அதன் கீழ் பணிபுரியும் அனைவருக்கும் பணிபுரிவதற்கு அவசியமான சூழலை அமைத்துத் தருவதுடன், தொழில்சார் ஏனைய உரிமைகளையும் வழங்க தயாராக உள்ளது. நாட்டில் உள்ள அரச மருத்துவமனை வளாகத்தை பொறியியல் மற்றும் கட்டிட வடிவமைப்பைப் பயன்படுத்தி, ஆக்கப்பூர்வமான மற்றும் கவர்ச்சியான இடமாக மாற்ற அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மிகவும் கொந்தளிப்பான காலத்திற்குப் பிறகு அமைதியாக பயணித்து வரும் நாட்டின் சுகாதார சேவையை இன்றைய நிலைக்குக் கொண்டுவருவதில் மருத்துவமனை நிர்வாகம், விசேட மருத்துவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் வழங்கிய பங்களிப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் எனது பாராட்டை இத்தருனத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். நெருக்கடியான சூழலில் சுகாதாரத் துறையை சரியான திசையில் வழிநடத்த பங்களித்தவர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றார். https://www.virakesari.lk/article/211352
-
முப்படைகளிலிருந்து தப்பிச்சென்ற 1,700 பேர் கைது; பாதாள உலகக்குழுவுக்கு துணைபோகும் முப்படையினர் பணிநீக்கம் - அமைச்சர் ஆனந்த விஜேபால
Published By: VISHNU 07 APR, 2025 | 02:29 AM (செ.சுபதர்ஷனி) முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 1,700 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கடமையில் இருக்கும் பொலிஸார் மற்றும் முப்படையில் உள்ள ஒரு சிலர் முழு பாதுகாப்புப் பிரிவுக்கும் இழுக்கினை ஏற்படுத்தும் வகையில் பாதாள உலகக் குழுவின் குற்றச் செயலுக்கு துணைப்போயுள்ளனர். ஆகையால் அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் பணிநீக்கம் செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். கண்டியில் மல்வத்து அஸ்கிரி மகாநாயக்க தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாதாள உலகக்குழுவின் குற்றச் செயல்கள் மற்றும் ஆங்காங்கே இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் என்பன நாட்டில் வெகுகாலமாக இடம்பெறும் நிகழ்வுகளாக உள்ளன. நாம் இவ்வாறான குற்றச்செயல்களை ஒருபோதும் நியாயப்படுத்த விரும்பவில்லை. அவ்வாறே போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பாதாள உலகக்குழுக்களை இந்நாட்டில் ஸ்தாபிப்பதற்கு பல அரசியல் தலைமைகள் முயற்சித்துள்ளன. இது யாரும் அறியாத இரகசியம் அல்ல. நாட்டில் இத்தகையோரை நிலைநிறுத்தி குற்றச்செயல்களின் மூலம் வெகுகாலமாக ஆட்சியை கைப்பற்றி ஆட்சி செய்துள்ளனர். ஆகையால் இத்தகைய செயற்பாடுகளை நான்கு மாதங்களில் இல்லாமல் ஒழிப்பதென்பது முடியாத காரியம். எனினும் நிச்சயமாக பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். பொதுமக்களுக்கு அச்சமின்றி, சந்தேகமற்ற வகையில் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். பாதாள உலகக்குழுவை ஒழிப்பதற்கான விசேட திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளும், ஆயுதங்களும் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன. அவ்வாறே பாதாள உலகக்குழுவைச் சேர்ந்த தலைவர்களும், உறுப்பினர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முப்படைகளில் இருந்து தப்பிச் சென்றவர்களே கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. தற்போது இவ்வாறு மூப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற சுமார் 1,700 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்தோடு பயிற்சிகளை நிறைவு செய்துள்ள 500 பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவு அதிகாரிகள் கடமை நிமித்தம் கலைந்து செல்ல உள்ளனர். அவர்களையும் மேற்படி ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களை கைது செய்வதற்கான சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச நாடுகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தற்போது கடமையில் இருக்கும் பொலிஸார் மற்றும் முப்படையில் உள்ள ஒரு சிலர் முழு பாதுகாப்புப் பிரிவுக்கும் இழுக்கை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு துணைப்போயுள்ளனர். ஆகையால் அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் பணிக்கம் செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கமைய ஒரு சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாதாள உலகக்குழுவை ஒழிக்கும் நடவடிக்கை முப்படையில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/211351
-
இலங்கை இராணுவத்தோடு பிரதமர் நரேந்திர மோடி இராணுவ ஒப்பந்தம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமின்றி தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் கொடும் துரோகம் - வைகோ கடும் கண்டனம்
07 APR, 2025 | 10:56 AM இலங்கை இராணுவத்தோடு இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு ஜனாதிபதி அனுரா திசநாயகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். மேலும் இந்தியா - இலங்கை இடையே ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அதில் முக்கியமானது இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும். இதன் அடிப்படையில் இந்திய ராணுவம் மற்றும் இலங்கை ராணுவத்திற்குமிடையே கூட்டு நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பும் உதவியும் வழங்கும். இது இலங்கை அரசுடன் போடப்பட்டிருக்கும் முதல் இராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேரை கொன்று குவித்தது இலங்கை இராணுவம்தான். ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிங்கள இராணுவம் கொன்றது. தங்கள் மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான வீரர்களை பலி கொடுத்து தாயகத்தை மீட்பதற்குப் போராடிய விடுதலை இயக்கத்தைக் கருவறுத்தது சிங்கள ராணுவம். யுத்தக் களத்தில் போராடிய தமிழ் வாலிபர்கள் எட்டு பேரை நிர்வாணப்படுத்தி கைகளைக் கட்டி பின்னந்தலையில் சிங்கள ராணுவ வெறியர்கள் சுட்டுக் கொன்றதையும் புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்ரியாவை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி சிதைத்து சின்னாபின்னமாக்கி சுட்டுக் கொன்றதையும் இங்கிலாந்தின் சேனல் -4 தொலைக்காட்சி வெளியிட்டு உலகின் மனசாட்சியை உலுக்கியது. இந்தக் கொடூர காட்சிகளைக் கண்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்ணீர் விட்டுக் கதறினர். இனப்படுகொலை நடத்திய சிங்கள ராணுவத்தை ஹேக் நகரில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரித்து தண்டிக்க வேண்டும் என்று தமிழ் இனம் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இலங்கை இராணுவத்தோடு பிரதமர் நரேந்திர மோடி இராணுவ ஒப்பந்தம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமின்றி தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் கொடும் துரோகம் ஆகும். தமிழ் இனத்தை வஞ்சித்திருக்கும் பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய ‘ஸ்ரீலங்கா மித்ர விபூஷன்’ விருது வழங்கப்பட்டிருப்பதும் பொருத்தமானது என்றுதான் தமிழ் மக்கள் கருதுவார்கள். https://www.virakesari.lk/article/211367
-
இலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
உத்தியோகபூர்வ விஜயம் வெற்றிகரமாக நிறைவு; இலங்கையிலிருந்து புறப்பட்டார் இந்திய பிரதமர் மோடி Published By: DIGITAL DESK 3 06 APR, 2025 | 02:42 PM ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை (06) முற்பகல் அநுராதபுரம் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்தியாவிற்குப் புறப்பட்டுச் சென்றார். இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்த நான்காவது தடவை இதுவாகும் என்பதுடன், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தினால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார, கலாசார மற்றும் வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கிடையிலான பன்முக ஒத்துழைப்புகளும் பலப்படுத்திக்கொள்ளப்பட்டன. அத்துடன், அயலவருக்கு முதலிடம் என்ற இந்திய வெளிவிவகாரக் கொள்கை மற்றும் மஹாசாகர் நோக்குக்கு அமைவாக, இராஜதந்திர விவகாரங்களில் இலங்கைக்கு சிறப்பிடம் உண்டு என்பதையும் இந்தியப் பிரதமரின் விஜயத்தினால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த விஜயம் பல முக்கியமான பல்வேறு எதிர்கால ஒத்துழைப்புகளுக்கு உடன்பாடுகளை எட்டக்கூடியதாக அமைந்ததுடன், இந்த ஒத்துழைப்புகளின் வெற்றிகரமான பலன்களை இலங்கை மக்கள் விரைவில் அனுபவிக்க முடியும். மேலும், மக்களுக்கான நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் அரசாங்கத்தின் பயணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் முக்கிய மைல்கல்லாக அமையும். https://www.virakesari.lk/article/211312
-
மோதி வழிபாடு செய்த அநுராதபுரம் புத்த விகாரைக்கும் அசோக பேரரசுக்கும் என்ன தொடர்பு?
பட மூலாதாரம்,X/NARENDRAMODI கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை வருகைத் தந்த பிரதமர் நரேந்திர மோதி, இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு சந்திப்புக்களில் கலந்துக்கொண்டதுடன், உடன்படிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார். தனது இலங்கை விஜயத்தின் இறுதி நாளான இன்று (ஏப்ரல் 6) அநுராதபுரம் நோக்கி பயணித்து, அங்கிருந்து இந்தியா நோக்கி புறப்பட்டார். அநுராதபுரம் விமானப்படை தளத்திலிருந்து, இந்திய விமானப்படைக்கு சொந்தமான விசேட ஹெலிகொப்டர் மூலம் இராமேஸ்வரம் நோக்கி பிரதமர் நரேந்திர மோதி பயணித்தார். அநுராதபுரம் ஏன் சென்றார்? படக்குறிப்பு,புத்த விகாரையின் வருகைப் பதிவேட்டில் மோதி கையெழுத்திடுகிறார் வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதி விகாரைக்கு சென்ற மோதி வழிபாடுகளில் ஈடுபட்டார். மோதியுடன் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் கலந்துக்கொண்டிருந்தார். விகாரைக்கு வருகைத் தந்த பிரதமர், அட்டமஸ்தானாதிபதி நுவரகலாவியே பிரதான சங்கநாயக்க தேரர் பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரரை சந்தித்து ஆசிப் பெற்றதுடன், அவருடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார். தான் பிறந்த குஜராத் மாநிலத்தில் 1960ம் ஆண்டு காலப் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது புத்தரின் புனித சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோதி, இதன்போது நாயக்க தேரரிடம் தெரிவித்துள்ளார். படக்குறிப்பு,புத்த கயா தொடர்பான கோரிக்கைகளை வழங்கிய தேரர் இந்த புனித சின்னங்களை இலங்கையில் காட்சிப்படுத்துகின்றமை தொடர்பில் தான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை நடத்துவதாகவும் பிரதமர் கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. மேலும், இந்தியாவின் புத்த கயாவை ஆன்மீக நகரமாக பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அட்டமஸ்தானாதிபதி, பிரதமர் நரேந்திர மோதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கை குறித்து, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் எதிர்காலத்தில் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் மோதி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பை அடுத்து, ஜயஸ்ரீ மகா போதி விகாரை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த நுழைவாயிலை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்துள்ளார். வடக்குக்கான ரயில் மார்க்கம் திறப்பு படக்குறிப்பு,இலங்கையில் இந்திய உதவியுடன் புதிய ரயில் திட்டங்கள் தொடக்கம் இந்திய நிதியுதவித் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட மஹவ - ஓமந்தை ரயில் தண்டவாளம் மற்றும் அநுராதபுரம் - மஹவ ரயில் சமிக்ஞை கட்டமைப்பு ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோதி இன்று திறந்து வைத்துள்ளார். அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோர், அந்த ரயில் மார்க்கத்தின் ஊடாக ரயில் சேவையை பச்சை கொடியை அசைத்து தொடக்கி வைத்திருந்தனர். சுமார் 91.27 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் மஹவ - ஓமந்தை ரயில் தண்டவாளம் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அத்துடன், 14.89 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மஹவ - அநுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு, இந்திய நிதியுதவியில் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் வடக்குக்கான ரயில் மார்க்கத்தின் பணிகளை இந்தியா முன்னெடுத்திருந்ததுடன், அநுராதபுரம் தொடக்கம் ஒமந்தை வரையான ரயில் தண்டவாள பணிகளை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகளையும் இந்தியா முன்னெடுத்திருந்தது. இவ்வாறான நவீனமயப்படுத்தப்பட்ட ரயில் மார்க்கத்தின் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் ரயில் தண்டவாளம் ஆகியனவே இன்று (ஏப்ரல் 6) திறந்து வைக்கப்பட்டன. படக்குறிப்பு,ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் நோக்கி பயணித்தார் நரேந்திர மோதி ஜயஸ்ரீ மகா போதி விகாரையின் சிறப்பு என்ன? படக்குறிப்பு,புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு கிளையிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள மரம் அநுராதபுரம் விகாரையில் உள்ளது இந்திய பிரதமர் நரேந்திர மோதி அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதி விகாரைக்கு இன்று வழிபாடுகளுக்காக சென்ற நிலையில், அந்த விகாரையின் தொடர்பில் அதிகம் பேசப்படுகின்றது. புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையிலிருந்து வளர்க்கப்பட்டதாக கூறப்படும் வெள்ளரசு மரத்துடன் அமையப் பெற்ற விகாரையாக அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதி விகாரை கருதப்படுகின்றது. இந்த வெள்ளரசு மரமானது கி.மு 288ம் ஆண்டில் நடப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இலங்கை மாத்திரமன்றி உலக வாழ் பௌத்த மக்களினால் புனித பூமியாக இந்த இடம் கருதப்படுகின்றது. பௌத்தர்களின் புனித சின்னமாக கருதப்படுகின்ற வெள்ளரசு மரத்தின் கிளையை, தற்போது இந்தியாவில் உள்ள பகுதியை ஆண்ட அசோக பேரரசரின் மகளும், பௌத்த பிக்குணியுமான சங்கமித்தையினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அநுராதபுரத்தை ஆட்சி செய்த அரசரான தேவநம்பியதீசனால் இந்த மரம் நடப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்தியாவின் புத்த கயாவிற்கும், அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதிக்கும் இடையில் நேரடி தொடர்பு காணப்படுவதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கைக்கு தனது முதலாவது விஜயத்தில் ஈடுபட்ட 2015ம் ஆண்டு, அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதி விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c078kvrjl0go
-
காத்தவராயன் வரலாறு: நாட்டார் தெய்வங்கள் சாதி ஆணவக் கொலையால் உதித்தவையா? ஓர் ஆய்வு
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காத்தவராயன் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நபர் ஆணவக்கொலை செய்யப்பட்ட பிறகு தெய்வமாக்கப்பட்டதாக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர் கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் & ரக்ஷனா. ரா பதவி, பிபிசி தமிழ் 6 ஏப்ரல் 2025, 02:07 GMT காத்தவராயன் என்ற நாட்டார் தெய்வம் குறித்து கிட்டத்தட்ட அனைவருக்குமே நன்கு தெரியும். ஆனால், இந்தக் காத்தவராயன் என்ற தெய்வமும் அதற்கான வழிபாட்டு முறையும் தொடங்கியதன் பின்னணியில் ஓர் ஆணவக்கொலை சம்பவம் இருக்கலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். காத்தவராயன் மட்டுமில்லை, தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும் நாட்டார் தெய்வங்கள் பலவற்றின் தோற்றுவாயாக ஆணவக்கொலை இருப்பதாக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரான ஆ.சிவசுப்பிரமணியன் கூறுகிறார். நாட்டார் தெய்வ வழிபாடுகளுக்கும் சாதி ஆணவக்கொலைகளுக்கும் இருக்கும் தொடர்பு குறித்து எழுதியுள்ள அவர், "ஆணவக்கொலை மட்டுமல்ல, போர், குடும்பப் பெருமை, குற்றத்தைத் தடுத்தல் எனப் பல்வேறு காரணங்களின் விளைவாகக் கொல்லப்பட்டவர்களும் தெய்வங்களாக தமிழ்ப் பண்பாட்டில் வணங்கப்பட்டு வருகின்றனர்" என்று குறிப்பிடுகிறார். ஆனால், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையின் தலைவரும் பேராசிரியருமான ஆறு.ராமநாதன், "நாட்டார் தெய்வங்களின் பின்னணிக் கதைகள் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அவற்றை நூறு சதவிகிதம் வரலாறாகக் கருத முடியாது. ஏனெனில், அவை அறிவியல்பூர்வமாக ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை," என்கிறார். நாட்டார் தெய்வங்கள் என்றால் என்ன? தமிழ்ப் பண்பாட்டில் கருப்பசாமி, காத்தவராயன், புலைமாடன், மதுரை வீரன் என மக்கள் பல தலைமுறைகளாக வணங்கி வரும் தெய்வங்களுக்கும் சாதி ஆணவக் கொலைக்கும் என்ன தொடர்பு? இணையை கவர 'மது' குடிக்கும் ஆண் ஈக்கள் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு5 ஏப்ரல் 2025 தமிழர் மரபில் தண்ணீர் பந்தல்கள் - பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தாகம் தீர்த்த வரலாறு3 ஏப்ரல் 2025 நாட்டார் தெய்வங்களின் தோற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் நாட்டார் தெய்வங்கள் தனித்துத் தெரியக் காரணம், அவற்றில் பெரும்பாலான தெய்வங்கள் முன்பு வாழ்ந்து மறைந்தவர்களாகவே இருப்பதுதான் என்கிறார், நாட்டார் வழக்காற்றியல் பேராசிரியர் சி. ஜ. செல்வராஜ். அவரது கூற்றுப்படி, தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளாக வழிபடப்படும் பல நாட்டுப்புற தெய்வங்கள் தொன்மங்களில் சொல்லப்படும் கடவுள்களாக இல்லாமல் தமிழ்ச் சமூக மக்களிடையே வாழ்ந்து, மறைந்தவர்களாகவே உள்ளனர். "இவர்களில் கன்னியாகவே வாழ்ந்து மறைந்தவர்கள், கர்ப்பிணியாக இருக்கும்போது இறந்தவர்கள், சிறு வயதிலேயே இறந்தவர்கள் ஆகியோர் தெய்வமாக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான நாட்டுப்புற தெய்வங்கள், கொலையில் உதித்த தெய்வமாக மாறிய கதைகளும் உண்டு. அத்தகைய கொலைகளில் சாதிய அடக்குமுறை, சாதி மறுப்புக் காதல் போன்ற காரணங்களால் செய்யப்பட்ட நடந்தவற்றையும் குறிப்பிடலாம்" என்கிறார் சி. ஜ. செல்வராஜ். அப்படி ஆணவக்கொலைகளால் பலியானோர் எப்படி தெய்வமாக்கப்பட்டார்கள் என்பது குறித்து "ஆணவக் கொலை சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்" என்று நூலில் ஆ.சிவசுப்பிரமணியன் விரிவாகப் பதிவு செய்துள்ளார். பட மூலாதாரம்,EZHUMALAI படக்குறிப்பு,திண்டிவனத்தில் இன்றளவும் காத்தவராயன் வழிபாட்டில் கழுவேற்றும் சடங்கு பின்பற்றப்படுவதாகக் கூறுகிறார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் முனைவர் ஏழுமலை அவர் தனது நூலில், "சமூகத்தில் இருக்கும் பல்வேறு அடக்குமுறைகளின் காரணமாக ஆணவக் கொலை செய்யப்பட்டவர்களில் பலர், பிற்காலத்தில் நாட்டார் தெய்வங்களாக உருவெடுத்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார். அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆ.சிவசுப்பிரமணியன், "பெரும்பாலும் நாட்டார் தெய்வங்களின் கதைகளுக்குப் பல்வேறு வடிவங்கள் இருக்கும். ஒன்று கொலை செய்தவர்கள் தரப்பின் வரலாறு, இரண்டாவது கொலை செய்யப்பட்டவர்கள் தரப்பின் வரலாறு மற்றும் மூன்றாவதாக தங்களது சுயநினைவின்றி கொலைக்குத் துணை நின்றவர்கள் தரப்பின் வரலாறு," என்று விளக்கினார். இதில், "கொலையுண்டவர்களைச் சார்ந்தவர்கள் அவர்களை தெய்வமாக்கி, கோவில் எழுப்பி வழிபடுவது மட்டுமின்றி, கொலை செய்தவர்களும் தாங்கள் கொன்றவர்களை வழிபடுவார்கள்" என்கிறார் அவர். "கொலை செய்தவர்கள், தாங்கள் செய்த கொலையால் தம் எதிர்காலச் சந்ததிகளுக்கு எந்தவிதப் பாவமும் சேர்ந்துவிடக் கூடாதே என்ற அச்சத்தில் இப்படியான பழக்கத்தைக் கடைபிடிக்கத் தொடங்கினர்," என்று அதுகுறித்து விளக்கினார் நாட்டுப்புறவியல் ஆய்வாளரான சி. ஜ. செல்வராஜ். பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை1 ஏப்ரல் 2025 விண்வெளியில் குழந்தை பிறக்குமா? எலி, பன்றி மீதான சோதனைகள் சொல்வது என்ன?2 ஏப்ரல் 2025 காத்தவராயன் தெய்வமானது எப்படி? படக்குறிப்பு,காத்தவராயன் என்ற நாட்டார் தெய்வத்தின் தோற்றத்துக்கு ஆணவக்கொலை காரணமாக இருக்கலாம் என்கிறார் முனைவர் ஆறு.ராமநாதன் "சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு காத்தவராயன் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்தார். அவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு வெளியேறிவிட்டனர். இதுதொடர்பாக பெண்ணின் தந்தை அரசனிடம் முறையிடவே, அரசன் காவலர் படையின் தலைவனாக இருக்கும் காத்தவராயனின் தந்தையிடமே அவரைத் தேடிப் பிடித்துக் கொண்டு வரும்படி ஆணையிடுகிறார். அதைத் தொடர்ந்து தனது தந்தையாலேயே பிடித்து வரப்பட்ட காத்தவராயனை அரசன் கழுவிலேற்றுகிறான்," என்றார் பேராசிரியர் ராமநாதன். நாட்டார் தெய்வமான காத்தவராயனின் பின்னணிக் கதையை விவரித்த அவர் , "இங்கு காத்தவராயன் என்று ஒருவர் வாழ்ந்து வந்ததும், அவர் கதைகளில் குறிப்பிடப்படுவது போல சாதியின் பெயரால்தான் கொல்லப்பட்டார் என்பதும் உறுதி செய்யப்பட்டது. ஆனால், அவர் குறித்துச் சொல்லப்படும் கதைகளில் முற்றிலுமாக உண்மை உள்ளதாக நூறு சதவிகிதம் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. காத்தவராயன் பெயரிலேயே பற்பல கதைகள் இருப்பதே அதற்குக் காரணம்," என்கிறார். இப்படியாக ஒரே தெய்வம் குறித்துப் பற்பல கதைகள் தோன்றுவதன் பின்னணியை விளக்கிய போது, அதில் எப்படி குழுவின் பங்கு கலந்திருக்கிறது என்பதை விளக்கினார் செல்வராஜ். "ஒருவர் கொலை செய்யப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இந்திய சமூகத்தில், சாதியும் அதற்கொரு காரணமாக இருக்கிறது. அப்படிக் கொலை செய்த பிறகு, கொலையுண்டவரை தெய்வமாக வணங்கும் மக்களின் அடுத்த தலைமுறைகள், அந்தக் கதைகளைப் பின்னாட்களில் தங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்வதும் உண்டு". மேலும் அதுகுறித்து விரிவாகப் பேசியபோது, "பொதுவாக, கொலையுண்ட ஒருவரை, அக்கொலையைச் செய்த குழுவினர் தெய்வமாக வணங்கத் தொடங்குகின்றனர். ஆனால், தலைமுறைகள் காலப்போக்கில் தங்கள் சமூகத்தின் அடையாளத்தை அந்த தெய்வத்துடன் சேர்த்து, கதையின் உள்ளடக்கத்தை மாற்றுவதும் இயல்பே. இதன்மூலம் எப்படியாவது, தாங்கள் வணங்கும் தெய்வத்துக்கு, தாம் விரும்புவது போன்ற புனிதத்தைத் தந்துவிட முடியும்," என்றார் அவர். இதோடு, காத்தவராயனை ஒப்பிட்டு விளக்கிய பேராசிரியர் ஆறு.ராமநாதன், "அடிப்படையில் தாழ்த்தப்பட்டவரான காத்தவராயன், வேறு சாதிப் பெண்ணைக் காதலித்ததால் கொல்லப்படுகிறார். ஆனால், பின்னாளில் அவர் தேவலோகத்தைச் சேர்ந்தவர் எனவும், ஏதோவொரு காரணத்தால் தாழ்த்தப்பட்ட ஒருவரின் குடும்பத்தால் எடுத்து வளர்க்கப்பட்டதாகவும் திரிக்கப்பட்ட கதைகளும் சொல்லப்படுகின்றன. மேலும், தான் வேறு சாதிப் பெண்ணைக் காதலித்தது குற்றம் என்பதை உணர்ந்துகொண்டு, கடைசி நேரத்தில் காத்தவராயனே தன்னைக் கழுவேற்றச் சொன்னதாகவும் கதை சொல்லப்படுகிறது. இப்படியாகப் பல்வேறு திரிபுகள் நாட்டார் தெய்வங்களின் பின்னணியாக இன்று சொல்லப்படுகின்றன," என்று கூறினார். மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக கூறி கேலிக்கு ஆளான விஞ்ஞானி அதை நிரூபித்த கதை1 ஏப்ரல் 2025 இந்திரா - ஃபெரோஸ் காந்தி திருமணத்தை நேரு எதிர்த்தது ஏன்? ஆதரித்த காந்தி அதில் கலந்து கொள்ளாதது ஏன்?30 மார்ச் 2025 நாட்டார் தெய்வமானோரின் கொலைக்கான காரணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் மனிதர்கள் பல காரணங்களால் சக மனிதர்களால் கொல்லப்படுகின்றனர். 'பூச்சியம்மன் வில்லுப்பாட்டு' என்ற நூலின் முன்னுரையில், நாட்டார் தெய்வங்கள் மனிதர்களாக வாழ்ந்தபோது என்னென்ன காரணங்களுக்காகக் கொலை செய்யப்பட்டார்கள் என்பதை ஒன்பது விதமாக வகைப்படுத்தியுள்ளார் ஆ. சிவசுப்பிரமணியன். இந்தக் கொலைகளுக்கான காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இவை அனைத்தையும் இணைக்கும் ஒரு கயிறாக இருப்பது ஆணவமும் அதிகார துஷ்பிரயோகமும்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வரையறுத்துள்ள கொலைகள், நில உரிமையாளர்கள் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுடனான பகையால் நடந்த கொலைகள் பொறாமை உணர்வால் நடந்த கொலைகள் நரபலி போன்ற மூடநம்பிக்கையால் நடந்த கொலைகள் குடும்ப பிரச்னைகளால் கொலைகள் நேரடியான போரில் கொலையுண்டவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, சில தவறுகளைச் செய்ததால் நடந்த கொலைகள் குற்றச் செயலில் ஈடுபடுபவர்களிடம் இருந்து மற்றவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் கொலையுண்டவர்கள் சாதி மீறிய காதல் மற்றும் திருமணத்தால் நடந்த கொலைகள் குடும்பத்தின் மானத்தைக் காப்பதாகக் கூறி நடத்தப்பட்ட கொலைகள் பல மாதங்கள் காய்ந்து கிடக்கும் 'ஜாம்பி' தாவரம் சில மணி நேரத்தில் உயிர்த்தெழுவது எப்படி?30 மார்ச் 2025 ஔரங்கசீப்புக்கு பதிலாக அவரது சகோதரரை முன்னிலைப்படுத்த ஆர்எஸ்எஸ் விரும்புவது ஏன்?25 மார்ச் 2025 ஆணவக்கொலையால் உதித்த சாமிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 'நாட்டார் பெண் தெய்வ வழிபாட்டில் அரசியல் பொருளாதாரம்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கோண்ட நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரான முனைவர் ஏழுமலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் தீப்பாஞ்சம்மன் (தீ பாய்ந்த அம்மன்) என்ற தெய்வ வழிபாடு குறித்து விளக்கினார். ராணிப்பேட்டையில் இருக்கும் கரிக்கல் என்ற கிராமத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலில், கரிக்கல், வீராமுத்தூர் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த இருவேறு சமூகத்தினர் வழிபடுகின்றனர். "இங்குள்ள வழிபாட்டு முறைகளை ஆய்வு செய்து பார்த்தபோது, வீராமுத்தூர் பகுதியில் வாழ்ந்த பெண், கரிக்கல் கிராமத்தைச் சேர்ந்த பிற சாதி ஆண் ஒருவரைக் காதலித்துள்ளார். இதனால் அவர் தீயிட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதன் விளைவாகவே, அவருக்கு தீ பாய்ந்த அம்மன் எனப் பெயரிட்டு இரு சமூகங்களும் அவரை வழிபடத் தொடங்கினர். அதாவது, பெண்ணின் சொந்த சமூகம், அவர் காதலித்த ஆணின் சமூகம் என இரு தரப்பும் அந்தப் பெண்ணைத் தெய்வமாக வழிபடுகின்றனர். வழிபாட்டு முறைகள் மற்றும் சடங்குகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்," என்று விளக்கினார் ஏழுமலை. சாதிகளை கடந்து காதலிப்பவர்களும் சாதி மறுப்புத் திருமணங்களைச் செய்பவர்களும் கொலை செய்யப்படும் நிகழ்வுகள் இப்போதும் நடக்கின்றன. இதுபோன்ற கொலைகள் பல நூறு ஆண்டுகளாக நடந்து வந்திருக்கின்றன என்பதற்கான சாட்சியாக இத்தகைய நாட்டார் தெய்வங்கள் திகழ்வதாகக் கூறுகிறார் முனைவர் பகத் சிங். உடையாண்டியம்மா-சங்கரக்குட்டி, அழகம்மை-அழகப்பன், சாத்தான்-சாம்பான், ஒண்டி வீரன்-எர்ரம்மா என்பன போன்ற பல்வேறு பகுதிகளில் இருக்கும் நாட்டார் தெய்வங்கள் தோன்றக் காரணமாக இருந்தது சாதி மறுப்புக் காதல் மற்றும் அதன் விளைவாக நிகழ்த்தப்பட்ட ஆணவக் கொலைகள்தான் என்று தனது 'ஆணவக்கொலை சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்' நூலில் விவரிக்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன். இதுபோல நடந்த சில கொலைகளை அந்த நூலில் அவர் பட்டியலிட்டுள்ளார். அதற்கொரு சான்றாக இருப்பது பாப்பாத்தி – ஈனமுத்து என்ற நாட்டார் தெய்வங்கள். "சாதி மீறிய அவர்களது காதலை ஏற்க மறுத்த சமூகத்தினர் ஈனமுத்துவை கொலை செய்தனர். இதற்குப் பிறகு ஈனமுத்துவும் அவரின் காதலியும் தெய்வமாக வழிபடப்படுகின்றனர். அந்தப் பெண்ணின் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு அவரை பாப்பாத்தி அம்மன் என்று அழைப்பதுடன் அவருக்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற சைவ உணவையே படையலாகப் படைக்கின்றனர். ஆனால், ஈனமுத்துவுக்கு உயிர் பலி கொடுக்கும் பழக்கம் உள்ளது. இதுபோக, புலைமாடன் சாமி, குட்டிக் குலையறுத்தான், மங்களவடிவு என மேலும் பல்வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டவர்களும் தெய்வமாக வணங்கப்படும் வழக்கம் தமிழ்நாட்டில் காணப்படுகிறது" என்று தனது நூலில் ஆ.சிவசுப்பிரமணியன் விளக்கியுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்கள் போடும் குப்பைகள் என்ன ஆகும்?23 மார்ச் 2025 சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா?5 ஏப்ரல் 2025 கொல்லப்பட்ட மனிதர்கள் தெய்வமாவது எப்படி? பட மூலாதாரம்,EZHUMALAI "உண்மையில் இவை மதத்தைத் தாண்டி வரலாற்றை எடுத்துரைக்கும் கதைகளாக உள்ளன," என்கிறார் ஆ. சிவசுப்பிரமணியன். "ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, மனிதர்களாக வாழ்ந்த நாட்டார் தெய்வங்களை சமயக் கடவுள்களோடு இணைத்து அவதார புருஷர்கள் ஆக்கிவிட்டனர். பெரும்பான்மையாக இந்தக் கோவில்களில் இருக்கும் வழிபாட்டு முறை எல்லாம், அவர்கள் கொலை செய்யப்பட்ட முறையுடன் தொடர்புடையதாக இருக்கும். நாட்டார் தெய்வங்கள் இறக்கும்போது அவர்கள் செய்த செயல்களை மீண்டும் வழிபாடுகள், சடங்குகளின் வாயிலாக நிகழ்த்திக் காட்டுவார்கள். படையலைப் பொறுத்தவரை கொல்லப்பட்டவர்கள் விரும்பி உண்டதைப் படையலாகப் போடுவர்" என்கிறார் அவர். 'நாட்டார் கதைகளும் வரலாறும் ஒன்றல்ல' தமிழ்ச் சமூகத்தில் இப்படியாகப் பல்வேறு நாட்டுப்புறப் பாடல்கள் வாயிலாகவும் கதைகளின் ஊடாகவும் சொல்லப்படும் விஷயங்களை வரலாறாகக் கருத முடியுமா? நாட்டார் தெய்வங்களின் கதைகளை வரலாறாக ஏற்றுக்கொள்ளலாமா? இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன என்கிறார் பேராசிரியர் ஆறு.ராமநாதன். இப்படியாக நாட்டார் தெய்வங்களின் தோற்றத்துக்கான வரலாறாகப் பல கதைகள் சொல்லப்பட்டாலும், அவற்றில் நூறு சதவிகிதம் வரலாறு இல்லை என்கிறார் அவர். "அந்தக் கதைகளில் புனைவும் கலந்திருக்கும். அந்த மனிதர்கள் வாழ்ந்தது உண்மை, ஆணவக் கொலை செய்யப்பட்டது உண்மை. ஆனால், சில நேரங்களில் இந்தக் கதைகள் ஒரே மாதிரியான கதைப் போக்கைக் கொண்டிருக்கும். ஆகவே இவற்றின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும்" என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் ஆறு. இராமநாதனின் கூற்றை ஆமோதிக்கும் வகையில் பேசிய சி. ஜ. செல்வராஜ், "நாட்டுப்புற வழக்காறுகளில் வாய்மொழியாகச் சொல்லப்படும் கதைகளில், காலப்போக்கில் அவரவர்களுக்கு ஏற்பப் பல துணைக் கதைகளை இணைத்துக் கொள்வதும் நடக்கும். ஆகையால் ஒரே தெய்வத்துக்குப் பல வட்டாரங்களில், பல வகையாகக் கதைகள் சொல்லப்படுவதும் உண்டு. இந்தச் சூழலில் ஒரு குறிப்பிட்ட தெய்வம் குறித்துச் சொல்லப்படும் அனைத்து பழமரபுக் கதைகளையும், நாட்டுபுறக் கதைகளையும் தொகுத்து, அவற்றைப் பகுப்பாய்ந்து, அதிலுள்ள துணைக் கதைகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, திரிபுகளையும் கற்பனைகளையும் தனியாகப் பிரித்து ஆய்வு செய்யும்போது ஓரளவுக்கு உண்மையில் என்ன நடந்திருக்கலாம் என்பதைக் கண்டுபிடிக்க முடியும்" என்று விளக்கினார். இருப்பினும் அதை நூறு சதவிகிதம் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் ஆறு.ராமநாதன். அதாவது, "காத்தவராயனின் கதை உண்மையானது. ஆனால், நாட்டார் கதைகளில் சொல்லப்படுவது போலத் துல்லியமாக அப்படித்தான் நடந்திருக்கும் என உறுதியாகச் சொல்லிவிட முடியாது." ஆறு.ராமநாதனின் கூற்றுப்படி, இங்குதான் வரலாற்றில் இருந்து நாட்டார் கதைகள் வேறுபடுகின்றன. "வரலாற்றை உண்மையென ஏற்றுக்கொள்ள, அதற்கான ஆதாரங்களும் ஆவணங்களும் இருக்கின்றன. கல்வெட்டுகள், நாணயங்கள், பண்டங்கள், கட்டுமானங்கள் எனக் கிடைப்பவற்றை அறிவியல் உதவியுடன் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருகிறோம். நாட்டார் கதைகளைப் பொறுத்தவரை அப்படிச் செய்வதற்கான வாய்ப்புகள் அனைத்து சூழல்களிலும் இருப்பதில்லை. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நபர் தெய்வமாக்கப்பட்டதன் பின்னணியில் இருக்கும் காரணத்தைத் தோராயமாக, ஓரளவுக்கு உறுதிப்படுத்த முடியும்," என்று விளக்கினார் ஆறு.ராமநாதன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ckg5xg9k28no
-
அமெரிக்காவின் கதவுகள் அடைக்கப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தின் கதவுகள் திறக்கப்படும் என நம்பாதீர் ஜி.எஸ்.பி. பிளசும் இல்லாமல் போகும் - கலாநிதி ஹர்ஷ எச்சரிக்கை
Published By: VISHNU 06 APR, 2025 | 07:48 PM (எம்.மனோசித்ரா) அமெரிக்காவினால் கதவுகள் அடைக்கப்படும் போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவுகள் திறக்கப்படும் என்று எவராவது எண்ணினால் அது முற்றிலும் தவறாகும். ஐரோப்பிய பாராளுமன்றத்தினால் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டத்துடன் புதிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரவுள்ளது. அதற்கமைய தற்போது ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைக்கப் பெறும் சுமார் 6 நாடுகள் அதனை இழக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் மற்றும் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் அடுத்த பாராளுமன்ற அமர்வுகளில் கேள்வியெழுப்ப எதிர்பார்க்கின்றோம். கைசாத்திடப்பட்டப்பந்தங்கள் தொடர்பில் தெரிந்து கொள்வதற்கான உரிமை சகலருக்குமுள்ளது. இந்திய பரவாலக்கத்தை கடுமையாக எதிர்த்த குழுவொன்று இன்று இந்திய பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பளித்து அவருக்கு இலங்கையில் வழங்கப்படும் அதியுயர் கௌரவ நாமத்தையும் வழங்கியிருக்கின்றமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கைக்கு மிக அருகிலுள்ள பாரிய பொருளாதார சக்தி இந்தியாவாகும். தென்னிந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்ரா ஆகிய மாநிலங்கள் அடுத்த தசாப்தத்தில் உலகில் மிக வேகமாக அபிவிருத்தியடையும் வலயமாக அமையும். இவற்றின் இந்த துரித அபிவிருத்தியில் பயன்பெறுவதற்கு எமக்கு சிறந்த வாய்ப்பிருக்கிறது. எவ்வாறிருப்பினும் அதற்கான முன்னெடுப்புக்களுக்கு தமது சிந்தனையை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த அரசாங்கம் ஆட்சியமைத்த்திலிருந்து சுவர்களை உடைத்து, பாலங்களை அமைக்குமாறு நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன். அவ்வாறு சுவர்களை உடைத்து, பாலங்களை அமைத்தவர்களுக்கு அமெரிக்காவால் தடை விதிக்கப்படவில்லை. மாறாக பாலங்களை உடைத்து சுவர்களை அமைத்தவர்களுக்கு தடையிருக்கிறது. இதன் மூலம் நாம் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். வருடாந்தம் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு அரச குழுவொன்று செல்வது வழமையாகும். இதன் போது அமெரிக்காவின் வரி குறித்து பேசப்படப் போகிறதா என்பது எமக்குத் தெரியாது. நாணய நிதியத்திலிருப்பதால் எமக்கு நிவாரணம் வழங்குமாறு கோரினால் அதனை ஏற்கக் கூடியவரல்ல ட்ரம்ப். வியட்நாம் ட்ரம்பிடம் முன்மொழிந்துள்ளதைப் போன்று அசாதாரணமான வாய்ப்பொன்றை வழங்கினால் வரி குறைப்பு குறித்து சிந்திக்க முடியும் என்று அமெரிக்கா கூறுகிறது. அவ்வாறெனில் அந்த அசாதாரணமான வாய்ப்பு என்ன என்பது குறித்து அரசாங்கமும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் தீர்மானிக்க வேண்டும். பிராந்திய பொருளாதார ஒப்பந்தங்களுக்குச் செல்லாமல் நாட்டுக்கு தேவையான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது. சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் எம்மால் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது. ஐக்கிய மக்கள் சக்தியின் ப்ளு பிரின்ட் வெளியீட்டில் இது தொடர்பில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றோம். இந்திய பிரதமருடன் தற்போது பேச வேண்டிய மிக முக்கிய காரணி எக்டாவாகும். பொருளாதார ரீதியில் எவ்வாறு இணைந்து செயற்படுவது, தென்னிந்திய 5 மாநிலங்களின் தீவிர அபிவிருத்தியிலிருந்து எவ்வாறு பயன் பெறுவது என்பது குறித்து கலந்தாலோசிக்க வேண்டும். ஜி.எஸ்.பி. பிளஸ் இருப்பதால் அமெரிக்க வரி அதிகரிப்பினால் சிக்கல் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். இவ்வாண்டுடன் ஜி.எஸ்.பி. பிளஸ் நிறைவடையப் போகிறது. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஜி.எஸ்.பி. பிளஸ் தொடர்பான புதிய முன்மொழிவுகள் முன்வைக்கப்படவுள்ளன. எனவே புதிய சட்டத்துடன் புதிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரவுள்ளது. அதற்கமைய தற்போது ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைக்கப் பெறும் சுமார் 6 நாடுகள் அதனை இழக்க நேரிடும். பயங்கரவார தடைச்சட்டம், நல்லிணக்கம் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பில் இலங்கை என்ன செய்திருக்கிறது என்பதையும் ஐரோப்பிய ஒன்றியம் ஆராயும். இன்னும் இரு வாரங்களில் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு இலங்கை வரவுள்ளது. வந்ததன் பின்னர் நிச்சயம் இவை தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். அமெரிக்காவினால் கதவுகள் அடைக்கப்படும் போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவுகள் திறக்கப்படும் என்று எவராவது எண்ணினால் அது முற்றிலும் தவறாகும். ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்கு எந்தளவுக்கு இலங்கை போராடியது என்பதை என்னைத் தவிர இந்த பாராளுமன்றத்தில் யாருக்கும் தெரியாது. எனவே இவை தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமாக சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/211341
-
சுழிபுரத்தில் இறந்தவர்களை புதைக்கும் காணியை தனியார் வாங்கியதால் எழுந்துள்ள சர்ச்சை
யாழில் இடுகாட்டை வாங்கிய தனியார்; தமது உறவுகளின் கல்லறைகளை பாதுகாக்க கோரும் உறவுகள் 06 APR, 2025 | 04:58 PM யாழ்ப்பாணத்தில் இடுகாடு ஒன்றினை தனியார் ஒருவர் கொள்வனவு செய்து, அதில் கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சுழிபுரம் பகுதியில் உள்ள காணி ஒன்றை நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் இடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். அங்கு சுமார் 150 க்கும் மேற்பட்ட உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல கல்லறைகளும் கட்டப்பட்டுள்ளன. அத்துடன் அப்பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், சிறுமியின் உடலம் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த இடுகாட்டிலையே புதைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது இந்நிலையில் குறித்த இடுகாடு அமைந்துள்ள காணியை அண்மையில் தான் பணம் கொடுத்து வாங்கியுள்ளதாகவும் அது தனக்கு சொந்தமானது என கூறி, கல்லறைகளை அகற்றி விட்டு, அதில் சுற்றுலா மையம் ஒன்றினை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தனியார் ஒருவர் அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளார். இது தொடர்பில் பிரதேச செயலரிடம் தெரிவித்த நிலையில், குறித்த காணி தனியாருக்கு சொந்தமானது எனவும், இடுகாட்டுக்காக இனிவரும் மூளாய் பகுதியில் 2 ஏக்கர் காணியை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எமது உறவுகளின் கல்லறைகள் இந்த இடுகாட்டில் உள்ளது அதனை ஒருவர் அழித்து அதன் மீது சுற்றுலா தளம் ஒன்றினை அமைப்பதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. எனவே எமது இடுகாட்டையும் எம் உறவுகளின் கல்லறைகளையும் பாதுகாத்து தாருங்கள் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/211323
-
காசாவில் எட்டு மருத்துவர்களின் உயிரிழப்புக்கு செஞ்சிலுவைச் சங்கம் கண்டனம்!
கொன்று புதைக்கப்பட்ட அவசரகால ஊழியர்கள் - தவறிழைத்ததாக ஒப்புக் கொண்ட இஸ்ரேல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தெற்கு காஸாவில் மார்ச் 23 அன்று 15 அவசர கால ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், அந்த விஷயத்தில் தங்களது ராணுவ வீரர்கள் தவறு செய்ததாக இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. ரஃபாவில் கடந்த மாதம் 23ஆம் தேதி, பாலத்தீன செம்பிறை சங்கத்துக்குச் சொந்தமான ஒரு வாகனம், ஐநாவின் கார் மற்றும் காஸாவின் சிவில் பாதுகாப்புக்குச் சொந்தமான ஒரு தீயணைப்பு வண்டி தாக்குதலுக்கு உள்ளானது. ஹெட்லைட் அல்லது ஒளிரும் விளக்குகள் இல்லாமல் இருட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனங்கள் நெருங்கி வந்ததால் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் முன்னர் தெரிவித்திருந்தது. ஆனால், கொல்லப்பட்ட ஒரு அவசர கால ஊழியரால் படம்பிடிக்கப்பட்ட காணொளி தற்போது வெளியாகி உள்ளது. அதில் வாகனங்கள் ஒளிரும் விளக்குகளை எரியவிட்டிருப்பதை காண முடிகிறது. இதில் குறைந்தது 6 பேர் ஹமாஸுடன் தொடர்புடையவர்கள் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறுகிறது. ஆனால், இதுவரை எந்த ஆதாரத்தையும் இஸ்ரேல் வழங்கவில்லை. அதே நேரம், துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அவர்கள் நிராயுதபாணிகளாக இருந்ததாக இஸ்ரேல் ஒப்புக்கொள்கிறது. சனிக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசிய ஐடிஎஃப் அதிகாரி, ராணுவம் முன்னதாக மூன்று ஹமாஸ் உறுப்பினர்கள் இருந்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறினார். ஆம்புலன்ஸ்கள் அந்தப் பகுதியை நெருங்கியபோது, வான்வழி கண்காணிப்பாளர்கள், வாகனம் சந்தேகத்திற்கிடமான முறையில் முன்னேறிச் செல்வதாக தெரிவித்ததாகவும், ஹமாஸ் காரின் அருகே ஆம்புலன்ஸ்கள் நின்றபோது வீரர்கள் தாங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகக் கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cly1nw70xx6o
-
நாளை திறப்பு: பாம்பன் புதிய ரயில் பாலத்தின் சிறப்புகள் என்ன? கப்பலுக்கு எவ்வாறு வழிவிடும்?
இராமேஸ்வரத்தில் 700 கோடி ரூபா மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார் மோடி Published By: VISHNU 06 APR, 2025 | 08:26 PM இந்தியாவின் தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலமான புதிய பாம்பன் பாலம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்- இராமேஸ்வரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் 2.2 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாலம் கடந்த 1914-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் 106 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் உறுதித்தன்மை குறைந்ததால், ரூ. 550 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2019 - ஆம் ஆண்டு தொடங்கி 2024 இறுதியில் நிறைவுபெற்றது. கடல் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் 72.5 மீட்டர் நீளமுள்ள பகுதியை தூக்கி, அதன் கீழ் கப்பல்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி 17 மீற்றர் உயரத்திற்கு தூக்கப்படும் வகையில் கட்டப்பட்டுள்ளது. பாரம்பரிய உடையான பட்டு வேட்டி - சட்டையுடன் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டதுடன், இராமேஸ்வரம் - தாம்பரம் ரயில் போக்குவரத்தையும் கொடியசைத்து தொடக்கி வைத்தார். மேலும் புதிய பாம்பன் பாலத்தின் சிறப்பம்சங்கள் ❤ புதிய ரயில் பாலத்தை கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடந்து செல்ல பாலம் நடுவில் 240 அடி நீளம் 570 டன்னில் வடிவமைத்த செங்குத்து துாக்கு பாலம் பொருத்தப்பட்டுள்ளது. ❤ இந்த துாக்கு பாலத்தின் இருமுனையிலும் 34 மீ., உயரத்தில் இரு இரும்பு கோபுரங்கள் உள்ளன. இதன் மேல் தளத்தில் இரு ராட்சத இரும்பு வீல்கள் உள்ளன. ❤இந்த வீலில் துாக்கு பாலத்தை திறந்து மூட கம்பி வடங்கள் சுற்றி உள்ளனர். இந்த பாலத்தை 'லிப்ட்' முறையில் திறந்து மூடும் வகையில் வடிவமைத்துள்ளனர். ❤இதனை ஹைட்ராலிக் இயந்திரத்தில் பொருத்தி உள்ளதால் ஒருமுறை திறக்க 5 நிமிடம் 30 வினாடிகள் ஆகும். ❤இதை 17 மீ., உயரம் வரை திறந்து வைத்திருக்க முடியும் என்பதால் கனரக சரக்கு கப்பல்கள், கடற்படை கப்பல்கள், எவ்வித சிரமம் இன்றி கடந்து செல்லலாம். ❤துாக்கு பாலம் மூடப்பட்டு இருக்கும் சமயத்தில் கடல் மட்டத்தில் இருந்து 11 மீ., உயரத்தில் இருக்கும். இதனால் துாக்கு பாலத்தை திறக்காமலே பாம்பன், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள படகுகள் பாலத்தை கடந்து செல்ல முடியும். ❤ ஸ்பெயின் நிறுவன பொறியாளர்களின் டிசைனில் வடிவமைக்கப்பட்டது. இதுபோன்ற துாக்கு பாலம் அமெரிக்கா, பிரான்சில் மட்டுமே உள்ளது. ❤ புதிய ரயில் பாலம் மற்றும் துாக்கு பாலத்தில் மின்சார ரயில்கள் அதுவும் இரு ரயில்கள் செல்லும் வகையிலும் வடிவமைத்துள்ளனர். ❤ புதிய பாலத்தில் ஒரு வாரத்திற்கு 134 ரயில்கள், அதுவும் அதிகபட்சமாக 75 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும். ❤துாக்கு பாலத்தின் இரு முனைகளில் உள்ள 34 மீ., உயர இரும்பு கோபுரத்தின் மேல் தளத்திற்கு செல்ல லிப்ட் வசதி உள்ளது. ❤ உப்புக்காற்றில் துருப்பிடிக்காத வகையில் துாக்கு பாலத்தில் 'ஜிங்மெட்டாலைசிங்' மற்றும் 'பாலிசிலோசின் பெயின்ட்' பூசி உள்ளனர். ❤35 ஆண்டிற்கு துருப்பிடிக்காத வகையில் இந்த ரசாயனம் கலந்த பெயின்ட் பூசியதற்கு செலவு ஒரு கோடி ரூபாயை தாண்டியது. இந்த உயர் ரக பெயின்ட் இந்தியாவில் வேறு எந்த ரயில் பாலத்திற்கும் பூசப்படவில்லை. https://www.virakesari.lk/article/211342
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
'குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்து போடுங்கள்' - ராமேஸ்வரத்தில் தமிழ்நாட்டு தலைவர்களை விமர்சித்த மோதி பட மூலாதாரம்,ANI கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலான புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார். மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து, ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இன்று இலங்கை பயணத்தை நிறைவு செய்து விட்டு மண்டபம் ஹெலிபேட் தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி வருகை தந்தார். அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலை பாலத்திற்கு வந்த மோதி ரூ.550 கோடி செலவில் பாம்பன் - மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மண்டபத்திலிருந்து புறப்பட்டு வந்த சிறப்பு ரயில் ராமேசுவரத்திற்கு சென்றது. அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோதி வந்தார். பின்னர் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழாவில் ராமேஸ்வரம்-தாம்பரம் தினசரி விரைவு ரயிலை தொடங்கி வைத்தார். மேலும், இத்துடன் 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது, தொடங்கி வைக்கப்பட்டது. விழாவில் பிரதமர் நரேந்திர மோதி பேசுகையில், "பாம்பன் புதிய பாலத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ரயில் பாலம் தான், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலம். இந்த பாலத்தினடியில் பெரிய கப்பல்களும் பயணத்தை மேற்கொள்ள முடியும். ராமேஸ்வரத்திலிருந்து பிற பகுதிகளுக்கு இடையிலான இணைப்பினை இந்த பாலம் ஏற்படுத்துவதுடன், தமிழ்நாட்டின் சுற்றுலா மற்றும் வணிகங்களுக்கு பயனுள்ளதாக அமையும்'' என்றார் "வளர்ச்சிப் பயணத்தில் தமிழ்நாட்டுக்கு பங்கு" "முன்பிருந்த அரசை விட கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது, தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சிக்கு அதிக அளவில் உதவி புரிந்துள்ளது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசை விட தமிழ்நாட்டுக்கு அதிக நிதி தந்துள்ளோம் கடந்த 10 ஆண்டுகளிலே, தமிழ்நாட்டின் ரயில்வே துறை பட்ஜெட்டில் 7 மடங்குக்கும் அதிகமாக அளிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் செய்த பின்னரும் சிலர் அழுதுகொண்டே இருக்கின்றனர். அவர்களால் அழ மட்டுமே முடியும்; அவர்கள் அழுது விட்டு போகட்டும்." என்றார் மோதி தமிழ்நாடு மீனவர்கள் கைது சம்பவங்களை குறிப்பிட்டு பேசிய பிரதமர், "மீனவர்களின் ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் மத்திய அரசு துணை நிற்கிறது. மத்திய அரசின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில் 3,700 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.கடந்த ஒரு வடத்தில் 600 மீனவர்கள் இலங்கையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்." என்றார். "தமிழ்நாட்டு தலைவர்களிடம் இருந்து எனக்கு வரும் கடிதங்களில் அவர்கள் யாருமே தமிழில் கையெழுத்து போடுவதில்லை. தமிழ் குறித்து நீங்கள் பெருமையாக உணர்ந்தால், குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்து போடுங்கள்" என்றார் மோதி. மேலும், தமிழில் மருத்துவப் படிப்புகளை தொடங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திய மோதி, இதனால், ''ஏழை குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவ கனவு நனவாகும்" என்றார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் முருகன், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், எம்.பி நவாஸ்கனி. எம்.பி, தர்மர், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1me58kzvp0o
-
வோசிங்டனில் ஐந்து இலட்சம் பேர் - அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் டிரம்பிற்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டங்கள்
Published By: RAJEEBAN 06 APR, 2025 | 11:48 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் சனிக்கிழமை பெருமளவு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். டிரம்ப் நாட்டை நிர்வகிக்கும் முறை குறித்து சீற்றமடைந்துள்ள மக்களே இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் இவை என கார்டியன் தெரிவித்துள்ளது. தலையிடவேண்டாம் என்ற இந்த ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள கார்டியன் 1200 இடங்களில் டிரம்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன சிவில் உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட குழுக்கள் இதில் கலந்துகொண்டன என தெரிவித்துள்ளது. அரசாங்க ஊழியர்களை வேலையிலிருந்து நீக்குவது,சமூக பாதுகாப்பு நிர்வாக அலுவலகங்களை மூடுவது,குடியேற்றவாசிகளை நாடுகடத்துவது,திருநங்கைகளிற்கான பாதுகாப்பை அகற்றுவது,சுகாதார பாதுகாப்பு திட்டங்களை குறைப்பதுபோன்ற டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சீற்றம் வெளியிட்டுள்ளனர். வோசிங்டனிலும் புளோரிடாவிலும் சுமார் 500,00 மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு விதமான பதாகைகளையும், உக்ரைனின் கொடியையும் ஏந்தியிருந்தனர் என தெரிவித்துள்ள கார்டியன், உக்ரைன் மீது போர் தொடுத்த ரஸ்யாவுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கு டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே உக்ரைன் கொடிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர் என தெரிவித்துள்ளது. தாங்களுடைய இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏனையவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உந்துதலை வெளிப்படுத்தும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மக்களை எழுச்சியடைய செய்வதே இதன் நோக்கம் என 63 வயது டயனே கொலிபிராத் தெரிவித்துள்ளார். டிரம்ப் தன்னை எதிர்ப்பவர்களிற்கு எதிராக ஆக்ரோசமாகவும்,வன்முறைபோக்குடனும் நடந்துகொண்டுள்ளதால் பலர் தங்கள் எதிர்ப்புகளை வெளியிட தயங்குகின்றனர் என தெரிவித்துள்ள டயனே கொலிபிராத் நாங்கள் டிரம்பிற்கு எதிராக குரல்கொடுக்கின்றோம் என்பதை மௌனமாக உள்ள அமெரிக்கர்கள் பார்க்கவேண்டும் என்பதே இந்த ஆர்ப்பாட்டங்களின் நோக்கம் என தெரிவித்துள்ளார். எங்கள் துணிச்சலை அவர்கள் பார்க்கும்போது டிரம்பை எதிர்ப்பதற்கு அவர்களும் துணிவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த மூவ்ஒன் அமைப்பினை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். டிரம்பின் முன்னால் மண்டியிட தயாராகவுள்ள மக்களிற்கும் ஸ்தாபனங்களிற்கும் அதனை எதிர்ப்பதற்கான மக்கள் இயக்கம் உள்ளது என்ற செய்தியை தெரிவிக்க விரும்புகின்றோம் என ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார். நமது அரசியல் தலைவர்களிற்கு டிரம்பின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான துணிச்சல் உள்ளது என்றால் அவர்கள் அதற்கு தயாராகயிருந்தால்,நாங்கள் அவர்களின் பின்னால் நிற்போம்,என தெரிவித்துள்ள அவர் அரசியல் தலைவர்கள் ஜனநாயகத்தினை பாதுகாக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/211298
-
இலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
அநுராதபுரத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி .... Published By: DIGITAL DESK 3 06 APR, 2025 | 10:30 AM நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) அநுராதபுரத்திற்கு சென்றுள்ளார். https://www.virakesari.lk/article/211284
-
சந்திரிக்கா, மஹிந்த, ரணில், மைத்திரி நாளை கொழும்பில் விசேட சந்திப்பு
06 APR, 2025 | 09:39 AM (லியோ நிரோஷ தர்ஷன்) முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்கேற்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை திங்கட்கிழமை (07) கொழும்பில் இடம்பெறவுள்ளது. இலங்கை எதிர்கொள்கின்ற பொருளாதார மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இடம்பெறும் இந்த சந்திப்பை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்பாடு செய்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பு உள்ளிட்ட உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இலங்கைக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக மாறியுள்ளது. இந்த சவால்களை முறையாக எதிர்கொள்ளா விடின் தேசிய பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்பு என்பன சீர்குலைந்து விடும். எனவே முன்னாள் ஜனாதிபதிகள் என்ற வகையில், நாடு எதிர்கொள்கின்ற புதிய சவால்களுக்கு ஏற்ப முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட உள்ளது. அத்துடன், இலங்கையின் பாதுகாப்பு படைகளின் முன்னாள் தளபதிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடையை தொடர்ந்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாடு என்ற வகையில் இதனை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற விடயங்களும் முன்னாள் ஜனாதிபதிகளின் சந்திப்பில் கவனத்தில் கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211274
-
பபுவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பபுவா நியூகினியாவின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் உள்ள கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கே சாலமன் கடலுக்கு அருகில், இன்று அதிகாலை 6:04 மணியளவில் 6.9 ரிக்டர் அளவு கொண்ட பயங்கர நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 33 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்க விபரங்கள்: நிலநடுக்க அளவு: 6.9 ரிக்டர் (USGS அறிக்கையின்படி 7.2 ரிக்டர் அளவு என்றும் பதிவாகியுள்ளது). நேரம்: ஏப்ரல் 5, 2025, அதிகாலை 6:04 மணி (உள்ளூர் நேரம்). இடம்: கிம்பேயிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கு தொலைவில், சாலமன் கடல் பகுதியில். ஆழம்: 33 கி.மீ (ஆழமற்ற நிலநடுக்கம்). பிற அறிக்கைகள்: பிரான்ஸின் ரெனாஸ் (RéNaSS) அமைப்பு இதை 6.6 ரிக்டர் அளவு என்றும், ஜெர்மனியின் புவியியல் ஆய்வு மையம் (GFZ) 6.7 ரிக்டர் அளவு என்றும் பதிவு செய்துள்ளன. இந்த நிலநடுக்கம் ஆழமற்ற நிலையில் ஏற்பட்டதால், அருகிலுள்ள பகுதிகளில் பலரும் அதிர்வை உணர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிம்பேயில் (19,000 மக்கள் தொகை கொண்ட நகரம்) மிதமான அளவு அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது. முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, ஏனெனில் ஆழமற்ற நிலநடுக்கங்கள் கடலுக்கு அருகில் ஏற்படும் போது சுனாமி அலைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பபுவா நியூகினியா, பசிபிக் பெருங்கடலில் உள்ள “ரிங் ஆஃப் ஃபயர்” (Ring of Fire) என்ற பகுதியில் அமைந்துள்ளது. இது பூமியின் மிகவும் நிலநடுக்கம் மற்றும் எரிமலை செயல்பாடுகள் நிறைந்த பகுதியாகும். பசிபிக் தட்டு மற்றும் அவுஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் மோதல் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்களை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, பபுவா நியூகினியாவில் நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இன்று அதிகாலை ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் கிம்பே பகுதியில் மிதமான அளவு அதிர்வை ஏற்படுத்தியிருக்கலாம் என்றாலும், பெரிய அளவு பாதிப்பு அல்லது சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு பபுவா நியூகினியாவின் புவியியல் அமைப்பு காரணமாக, இதுபோன்ற நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவது இயல்பு. உள்ளூர் மக்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/316875
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
தோனியும் காலாவதி ஃபார்முலாவும்: சிஎஸ்கே அணியை ஆட்டிப் படைக்கும் பிரச்னைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 6 ஏப்ரல் 2025, 03:29 GMT "சேப்பாக்கத்துக்கு டி20 மேட்ச் பார்க்க வந்தோமா இல்லை, டெஸ்ட் மேட்ச் பார்க்க வந்தோமானு சந்தேகம் வந்துவிட்டது. ஹைலைட்ஸ் போட முடியாத அளவுக்கு சிஎஸ்கே மோசமாக பேட் செய்தார்கள், வெற்றிக்காக முயற்சிக்கவில்லை. தோனி ஓய்வு அறிவித்துவிட்டு இளம் வீரருக்கு வாய்ப்புத் தரலாம்" சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே-டெல்லி கேபிடல்ஸ் ஆட்டம் நேற்று முடிந்த பின் ரசிகர் ஒருவர் இவ்வாறு பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்த விதம் அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. சேப்பாக்கத்திலிருந்து போட்டி முடிந்து சென்ற ரசிகர்கள் அனைவரும் இந்த ஆட்டத்தைப் பார்க்கவா இவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினேன் என்று கடுமையான விமர்சனங்களை சாலையெங்கும் விதைத்துவிட்டு சென்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சொந்த மண்ணில் கோட்டை விட்ட சிஎஸ்கே சேப்பாக்கம் என்பது சிஎஸ்கே அணியின் கோட்டையாக ஐபிஎல் தொடரில் கருதப்பட்டது, இங்கு வந்து சிஎஸ்கே அணியை சாய்ப்பது என்பது அரிதாக இருந்தது. ஆனால், இந்த சீசனின் தொடக்கத்திலேயே 17 ஆண்டுகளுக்குப் பின் சிஎஸ்கேவை புரட்டி எடுத்து ஆர்சிபி வென்றது. நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 15 ஆண்டுகளுக்குப் பின் டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றுள்ளது. இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்ற சிஎஸ்கே அணி அதன் பின்னர் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது. ஐபிஎல் தொடக்க சீசன்களில் "சேஸிங் கிங்" என்று வர்ணிக்கப்பட்ட சிஎஸ்கே அணி, கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பின் 180 ரன்களை சேஸ் செய்ததே கிடையாது என்ற மோசமான வரலாற்றை கொண்டுள்ளது. அதாவது, இலக்கைத் துரத்துகையில் அழுத்தத்தை சமாளித்துக் கொண்டு களத்தில் திறம்பட செயல்படும் பேட்டர்கள் மற்றும் பிக் ஹிட்டர்கள் யாரும் அணியில் இல்லை என்பதையே இது மறைமுகமாக உணர்த்துகிறது. 180 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டால் சிஎஸ்கே அணியை வென்றுவிடலாம் என்ற தார்மீக நம்பிக்கையை எதிரணிக்கும் சிஎஸ்கே வழங்கியிருக்கிறது. ஒரு காலத்தில் அழுத்தம், நெருக்கடி மிகுந்த நேரத்தில் அமைதியாக செயல்படுவது, திடீரென மீண்டுவருவது, திட்டங்களை சரியாகச் செயல்படுத்துவது, சேஸிங்கில் மாஸ்டர்ஸ் என்றெல்லாம் சிஎஸ்கே புகழப்பட்டது. ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தைப் பார்த்த பின் சிஎஸ்கே அணி வெற்றிக்காக சிறிதுகூட முயற்சிக்கவில்லை என்று ரசிகர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். சிஎஸ்கே அணியின் எந்த பேட்டரிடமும் "இன்டென்ட்" என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய "வெற்றிக்கான திண்ணிய எண்ணம்" இல்லை என்பது நேற்றைய ஆட்டத்தில் புலப்பட்டது. பாம்பன் புதிய ரயில் பாலம் இன்று திறப்பு - அதன் சிறப்புகள் என்ன? கப்பலுக்கு எவ்வாறு வழிவிடும்?6 மணி நேரங்களுக்கு முன்னர் சரிந்த அமெரிக்க பங்குச் சந்தை – 'இப்போதே பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள்' எச்சரிக்கும் சிறு வணிகங்கள்5 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES தோனியும் காலாவதி ஃபார்முலாவும் சிஎஸ்கே அணி, இந்த ஐபிஎல் சீசனுக்காக வீரர்களைத் தேர்வு செய்தது என்பது புதிய பாட்டிலில் பழைய மது என்ற ரீதியில்தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த 2011-ஆம் ஆண்டு கடைபிடித்த அதே ஃபார்முலாவை இன்னும் கடைபிடிப்பது இன்றைய சூழலுக்கு சரிவராது. எந்த ஸ்கோராக இருந்தாலும் கடைசிவரை இழுத்தடிப்பது, மெதுவாக சேஸிங்கை நகர்த்துவது ஆகியவை காலாவதியான ஃபார்முலாக்கள். கடந்த இரு சீசன்களாக பல்வேறு அணிகளும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து புதிய அணியை உருவாக்கி வரும் போது, கண்ணை மூடிக் கொண்டு இந்த குறிப்பிட்ட சிலவீரர்கள் சிஎஸ்கே அணியில் இருப்பார்கள் என்று சொல்லிவிடும் அளவிலான அணியாகவே சிஎஸ்கே உள்ளது. சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் உள்ள பேட்டர்களிடம் அச்சப்படாமல் ஆடக்கூடிய மனப்போக்கு இல்லை. ஒரு ரன், 2 ரன்கள் சேர்ப்பது, சாஃப்ட் டிஸ்மிஸல் ஆவது என பழைய பாணியிலேயே இன்னும் ஆட்டம் நகர்கிறது. இந்தியா - இலங்கை இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழ்நாடு மீனவர்கள் பற்றி மோதி கூறியது என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை: முட்டை கேட்ட பள்ளி மாணவர் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்தது யார்? முழு பின்னணி5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "ஆங்கர் ரோல்" செய்ய பேட்டர்கள் இல்லை சிஎஸ்கே அணியின் நடுவரிசை பார்ப்பதற்கு வேண்டுமானால் 9வது வரிசை வரை பேட்டர்கள் இருப்பதாக தெரியலாம். ஆனால் அணி சிக்கலான நேரத்தில் இருக்கும் போது ஆங்கர் ரோல் எடுத்து விளையாட ஒரு சிறந்த பேட்டர், பிக் ஹிட்டர் யாருமில்லை. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் விஜய் சங்கர் ஆங்கர் ரோல் எடுக்க முயற்சி செய்து, ஒட்டுமொத்த கப்பலையும் கடலில் மூழ்கடித்துவிட்டார். விஜய் சங்கர் நேற்று அடித்த 54 பந்துகளில் 69 ரன்கள் என்பது காகிதத்தில் வேண்டுமென்றால் கவுரவமாக இருக்கலாம் ஆனால், ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்கிறேன் என டி20 ஆட்டத்தை டெஸ்ட் போட்டியாக மாற்றிவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES பிக் ஹிட்டர்கள் இருக்கிறார்களா? சிஎஸ்கே அணியில் இக்கட்டான சூழலில் பெரிய ஷாட்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்யும் பிக் ஹிட்டர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்றால் ஷிவம் துபே பெயரை மட்டும்தான் ரசிகர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சிஎஸ்கே அணியால், இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்பட்ட பின்புதான் ஷிவம் துபே பிக் ஹிட்டராக அறியப்பட்டார். ஷிவம் துபே பிக் ஹிட்டராக அறியப்படுகிறாரே தவிர, இன்னும் முழுமையாக அவர் அந்த ரோலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. பிக் ஹிட்டர்கள் என்பவர்கள் ஆட்டத்தை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய ஸ்கோரை அடித்து, திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடியவர்கள். அவ்வாறு, தடாலடியாக சிக்ஸர், பவுண்டரிகளை விளாசும் வீரர்களை சிஎஸ்கே இன்னும் அணியில் அடையாளப்படுத்தவில்லை. நடுவரிசையில் ஜடேஜா, ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகியோர் இந்த சீசனில் கைகொடுக்கத் தவறிவிட்டனர். இலங்கையில் இந்திய பிரதமர் மோதி - இன்று என்ன நடந்தது?5 ஏப்ரல் 2025 இணையை கவர 'மது' குடிக்கும் ஆண் ஈக்கள் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு5 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இளைஞர்களுக்கு மறுக்கப்படும் வாய்ப்பு சர்வதேச கிரிக்கெட்டில், இந்திய அணிக்கு கேப்டனாக பல இளம் வீரர்களை வளர்த்துவிட்ட தோனி, இன்று சிஎஸ்கே அணியில் அதனைச் செய்ய தவறிவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒவ்வொரு ஐபிஎல் சீசன் ஏலத்திலும் இளம் வீரர்கள், அன்கேப்டு வீரர்கள் பலரையும் வாங்கும் சிஎஸ்கே அணி அவர்களில் பலரை வாய்ப்பே வழங்காமல் வெளியேற்றியுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் தமிழக வீரர் ஆந்த்ரே சித்தார்த், விக்கெட் கீப்பர் வனிஷ் பேடி, ஆல்ரவுண்டர்களாக அன்சுல் கம்போஜ், ராமகிருஷ்ணா, வேகப்பந்துவீச்சில் குர்ஜப்நீத் சிங், ஷேக் ரஷீத் என இளம் வீரர்கள் இருந்தும் இதுவரை யாருக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு தரப்படவில்லை. ஓர் அணியில் இளம் வீரர்கள்தான் வெளிச்சம் பாய்ச்சக் கூடியவர்கள், பயமில்லாதவர்கள், பாதுகாப்பானவர்கள். ஆனால், இந்த வெற்றி ஃபார்முலா தெரிந்திருந்தும் சிஎஸ்கே இந்த விஷயத்தை வெளிப்படையாக கையாள்வதில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் உள்ள சன்ரைசர்ஸ், மும்பை, கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி, குஜராத் அணிகள் அன்கேப்டு வீரர்கள் பலருக்கும் வாய்ப்பளித்து அவர்களின் திறமையை பயன்படுத்திக் கொண்டன. ஆனால், சிஎஸ்கே அணி வழக்கமான ஃபார்முலாவுடன் அனுபவமான சர்வதேச வீரர்களைத் தேர்வு செய்கிறேன் என்ற ரீதியில் வீரர்களை தேர்வு செய்வதும், குறிப்பிட்ட வீரர்களை தக்க வைப்பதும் தோல்விக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லை ருதுராஜ், கான்வே ஜோடி சிறப்பான தொடக்கத்தை கடந்த சீசனில் வழங்கி 849 ரன்கள் குவித்து சிறந்த தொடக்க ஜோடியாக பெயரெடுத்தது. இவர்கள் இருவரும் பவர்ப்ளேயில் மட்டும் 619 ரன்களை சிஎஸ்கேவுக்கு சேர்த்துள்ளனர். ஆனால் இந்த சீசனில் நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கிறது. இந்த சீசனில் சிஎஸ்கேயின் பவர்ப்ளே ரன்ரேட் 10 அணிகளின் ரன்ரேட்டில் கடைசி இடத்தில் ஓவருக்கு 7 ரன் ரேட்டில் இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரராக ரவீந்திராவையும், திரிபாதியையும் களமிறக்கியது பலனளிக்கவில்லை. இந்த சீசனில் நேற்றைய ஆட்டத்தில் முதன் முறையாக ஆடும் லெவனில் வாய்ப்புப் பெற்ற கான்வே தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். அவருடன், முந்தைய சீசனில் கலக்கிய கேப்டன் ருதுராஜ் அல்லாமல் ரச்சின் ரவீந்திராவே தொடக்க வீரராக தொடர்ந்தார். சிஎஸ்கே அணியின் இந்த முயற்சி எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. பிரபாகரன் உடல் எங்கே? புலிகள் இயக்கத்தில் என்ன நடந்தது? பிபிசி தமிழுக்கு கருணா அம்மான், பிள்ளையான் பேட்டி5 ஏப்ரல் 2025 திலக் வர்மா 'ரிட்டயர்ட் அவுட்' : புதிய சாதனை படைத்தும் சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் பாண்டியா5 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஃபார்மில் இல்லாத வீரர்கள் சிஎஸ்கே அணி இந்த ஐபிஎல் ஏலத்தில் 5 வீரர்களைத் தக்க வைத்து 10 அன்கேப்டு வீரர்கள், 6 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 20 பேரை வாங்கியது. புதிதாக சிஎஸ்கே அணிக்குள் வந்தவர்களில் பல வீரர்கள் கடந்த சீசன்களாகவே ஃபார்மில் இல்லாதவர்கள், உள்நாட்டுப் போட்டிகளிலும் பெரிதாக ரன் சேர்க்காதவர்கள். சாம் கரன், நேதன் எல்லீஸ், ஓவர்டன், திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், முகேஷ் சவுத்ரி ஆகியோரின் கடந்த சீசன்களின் ஃபார்மை ஆய்வு செய்தால் ஏன் இப்படிப்பட்ட வீர்ரகளை தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்வி எழும். சாம்கரனுக்கு இங்கிலாந்து அணியிலேயே வாய்ப்பு இல்லை, நேதன் எல்லீஸ் ஆஸ்திரேலிய அணியின் பேக்அப் பந்துவீச்சாளர், ஓவர்டன் இங்கிலாந்து அணியில் சமீபத்தில்தான் அறிமுகமாகியுள்ளார். திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், முகேஷ் சவுத்ரி ஆகியோரின் உள்நாட்டுப் போட்டியில் ஆடிய விதம், ஃபார்ம் ஆகியவற்றை ஆய்வு செய்தால் படுமோசமாக இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES கோட்டையில் அடிவாங்குவது சரியல்ல சிஎஸ்கேயின் கோட்டையாக இருந்தது சேப்பாக்கம் மைதானம். இங்கு சிஎஸ்கே அணியை வெளியில் இருந்து ஓர் அணி வந்து தோற்கடிப்பது சுலபமல்ல. ஆனால், இந்த முறை 2008க்குப் பின் ஆர்சிபி வென்றுவிட்டது, 2010க்குப் பின் டெல்லி அணியும் சிஎஸ்கேவைபுரட்டி எடுத்துவிட்டது. இந்தத் தோல்விகள் அனைத்தும், சிஎஸ்கே அணியில் ஏதோ தீவிரமான தவறு இருக்கிறது என்பதையும், அணியில் ஒட்டுமொத்த மாற்றம் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கிறது. பழைய ஃபார்முலா இனியும் கைகொடுக்காது சிஎஸ்கே அணியின் கடந்த கால ஃபார்முலா என்பது, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் 6 அல்லது 7 லீக் ஆட்டங்களை வென்றுவிடலாம். அதன்பின் வெளி மைதானங்களில் ஏதேனும் சில போட்டிகளில் வென்று ப்ளே ஆஃப் சென்றுவிடலாம். அதன்பின் அரையிறுதி, இறுதிப்போட்டிக்குள் நுழையும் ஃபார்முலாவையே சிஎஸ்கே பின்பற்றி வந்தது. ஆனால், இந்த பழைய ஃபார்முலா இனிமேல் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்காது, அதற்குரிய சூழலையையும் எதிரணிகள் வழங்காது என்பதுதான் நிதர்சனம். சேப்பாக்கம் மைதானத்தில் ஆடுகளங்கள் மாற்றப்பட்டு, தன்மை மாறியுள்ளதால், எந்த நேரத்தில் ஆடுகளம் எப்படி செயல்படும் என்பது கணிக்க முடியாததாகியுள்ளது. ஆனால், இன்னும் சிஎஸ்கே அணி பழைய ஃபார்முலாவை கையில் வைத்திருப்பது வெற்றிக்கு உதவாது. அது மட்டுமல்லாமல், சிஎஸ்கேஅணியில் எந்தெந்த வீரர்கள் வழக்கமாக களமிறங்குவார்கள் எனத் தெரிந்து அதற்கேற்றபடி தனித்தனியாக திட்டத்துடன் எதிரணியினர் களமிறங்கி விக்கெட்டை வீழ்த்துகிறார்கள். ஆதலால், சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றிகளை அள்ளிவிடலாம் என்று சிஎஸ்கே நினைப்பது கடந்த காலம். சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா?5 ஏப்ரல் 2025 வளரிளம் ஆண் குழந்தைகளை சரியாக வளர்க்கிறோமா? 'அடோலசென்ஸ்' வெப் சீரிஸ் கூறும் செய்தி என்ன?4 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES தோனி பற்றி ரசிகர்கள் கருத்து சிஎஸ்கே அணிக்காக 5 கோப்பைகளைப் பெற்றுக் கொடுத்தவர், ஜாம்பவான் என்பதை ஒப்புக்கொண்டாலும், வயது மூப்பு என்பது அவரையும் அறியாமல் பேட்டிங்கில் ஒருவிதமான மந்தத்தன்மையை ஏற்படுத்துகிறது. பரபரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனியை பார்த்த ரசிகர்கள் நேற்று ஆடிய தோனியின் பேட்டிங்கை கண்கொண்டு பார்க்க முடியாமல் மனம் குமுறினர். இதனால் போட்டி முடிந்தவுடன் "தோனி ரிட்டயர்மென்ட்" என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரண்டாகியது. தோனி நேற்றைய ஆட்டத்தில் 19 பந்துகளைச் சந்தித்த பின்புதான் முதல் பவுண்டரியே அடித்தார். ஆட்டத்தின் சூழல் தெரிந்தும், தன்மை அறிந்தும் பிஞ்ச் ஹிட்டர் போல் அதிரடியாக ஆட முயலாமல் ஆமை வேகத்தில் பேட் செய்து தோல்வி கிட்டத்தட்ட உறுதியான பிறகே கடைசி ஓவரில் சிக்ஸ, பவுண்டரி அடித்து ரசிகர்களை தோனி வெறுப்பேற்றினார். தோனி ஓய்வு பற்றி ஃபிளமிங் கூறியது என்ன? தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் "தோனியிடம் ஓய்வு குறித்து பேசுவது என் வேலையல்ல. எனக்கு அது குறித்து ஏதும் தெரியாது. அவர் அணியில் இருக்கும்வரை அவருடன் சேர்ந்து பணியாற்றுவதை விரும்புகிறேன். தோனி இன்னும் வலிமையாக இருக்கிறார், நான் கூட இதுவரை தோனியிடம் ஓய்வு குறித்து கேட்டதில்லை, நீங்கள்தான் (ஊடகங்கள்) கேட்கிறீர்கள்" எனத் தெரிவித்தார். ஏமாற்றம் தந்த தோனி: சிஎஸ்கே அணியின் 'ஹாட்ரிக்' தோல்வி உணர்த்துவது என்ன? போராட்டமின்றி சரணடைவதா? சிஎஸ்கே தோல்வியால் கொந்தளிக்கும் ரசிகர்கள் சிஎஸ்கே-வில் தோனி நீடிப்பது அணிக்கு பலமா? பலவீனமா? சிஎஸ்கே மீண்டும் தோல்வி: பேட்டிங்கில் தோனி எப்போதும் தாமதமாக களமிறங்குவது ஏன்? பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கேவுக்கு எச்சரிக்கை மணி கிரிக்இன்போ தளத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் அளித்த பேட்டியில் " டாப் ஆர்டர் ஃபயர் ஆகாமல் துபேயும் விரைவாக ஆட்டமிழந்துவிட்டால் சிஎஸ்கே அணி அவ்வளவுதான். சிஎஸ்கே அணியில் உள்ள பேட்டர்கள் வெற்றிக்காக முயற்சி கூட செய்வதில்லை, இதுபோன்ற அணுகுமுறை எனக்கு வியப்பாக இருக்கிறது. ஒருமுறை அல்ல இருமுறை சிஎஸ்கே இந்த சீசனில் மோசமாக ஆடி விரைவாக விக்கெட்டுகளை இழந்துள்ளது நல்ல அறிகுறியல்ல. சிஎஸ்கே அணி இந்த சீசனில் இதுவரை 17 வீரர்களை மாற்றிப் பயன்படுத்தியும் எந்த பலனும் இல்லை. இதற்கு முன் 2015ல் 14 வீரர்கள், 2021-ல் 16 வீரர்களை மாற்றியது" எனத் தெரிவித்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c89g7gejv2lo
-
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே பரிமாறப்பட்ட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இவை தான்!
இலங்கையின் நிலப்பரப்பும், கடற்பரப்பும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படாது என உத்தரவாதமுள்ளதாக வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவிப்பு Published By: VISHNU 06 APR, 2025 | 04:38 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் நிலப்பரப்பை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க போவதில்லை என்ற உத்திரவாதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ள விடயம் இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது முக்கியத்துவம் பெற்றிருந்தது. இலங்கையின் நிலப்பரப்பு மாத்திரமல்ல கடல் பரப்பையும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என்ற அடிப்படையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தாக இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஊடாக இருநாட்டு படைகளும் விஸ்தரிக்கப்பட்ட கூட்டுப் பயிற்சிகள், செயலமர்வுகள், தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றம் என பரந்துப்பட்ட விடயங்களுடன் கூட்டு நடவடிக்கைளில் திறன்பட செயற்படவும் வலுவாக கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது. இருநாட்டு தலைவர்களின் பரஸ்பர பாதுகாப்பு கரிசனைகளின் அடிப்படையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து சனிக்கிழமை (5) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின்போது பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இணக்கம் காணப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இருநாட்டு படைகளும் விஸ்தரிக்கப்பட்ட கூட்டுப் பயிற்சிகள், செயலமர்வுகள், தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றமென பரந்துப்பட்ட விடயங்களுடன் கூட்டு நடவடிக்கைளில் திறன்பட செயல்பட முடிகிறது. எனவே இருநாட்டு தலைவர்களின் பாதுகாப்பு கரிசனைகளின் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இலங்கையின் நிலப்பரப்பை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க போவதில்லை என்ற உத்திரவாதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ளார். இருதலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது இந்த விடயம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இலங்கையின் நிலப்பரப்பு மாத்திரம் அல்ல கடல் பரப்பையும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த இடமளிக்கப்படமாது என்ற அடிப்படையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன. இவ்வாறான விடயங்களை உள்ளடக்கியதாகவே கூட்டு இணக்கப்பாடுகளுடன் ஒரு குடைக்கு கீழான பாதுகாப்பு ஒப்பந்த வரைபு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஒரு நிலையானதும் ஸ்தீரமானதுமான புரிந்துணர்வு ஒப்பந்தமாகவே இது உள்ளது. இருநாட்டு தலைவர்களின் பரஸ்பர விஜயங்கள் மூலம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளின் பாதுகாப்பு படைகளின் செயற்திறன் மேம்படுத்தல் மற்றும் கூட்டு பயிற்சி நடவடிக்கள், பரிமாற்றங்கள் என்று இருதரப்ப பாதுகாப்பு ஒத்துழைப்புகள் புதிய வடிவில் வலுசேர்க்கப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. மீனவர் பிரச்சினை இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை - இந்திய தலைவர்கள் முன்னுரிமையுடன் செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் மீனவர்களின் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் கையாளவும் தீர்வு காணவும் வேண்டும் என்ற விடயத்தை பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தரிப்பிடம் வலியுறுத்தியிருந்தார். இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்து விடாமல் தீர்வை நோக்கி நகர வேண்டும் என்பது நிலைப்பாடாக உள்ளது. இருப்பினும் மீனவர் பிரச்சினையில் அண்மைய நடவடிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று மீனவர்களை இலங்கை விடுவித்திருந்தது. எனவே சிறந்த ஒத்துழைப்புகளுடன் இருதரப்பினராலும் மீனவர் பிரச்சினை கையாளப்படுகின்றது. கடந்த வருடம் ஓக்டோபர் மாதம் ஆகுகையில் 6 சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. ஏற்படக்கூடிய நெருக்கடியான நிலைமைகளை தவிர்த்து மீனவர் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை காண தொடர்ந்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது என்றார். https://www.virakesari.lk/article/211264
-
ராஜீவ்காந்தி மீது தாக்குதலை மேற்கொண்டதற்காக நான் வருத்தப்படவில்லை - விஜிதரோஹன விஜேமுனி
Published By: RAJEEBAN 06 APR, 2025 | 10:24 AM சண்டேடைம்ஸ் 1987ம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மீது தாக்குதலை மேற்கொண்டமை குறித்து தான் வருத்தப்படவில்லை என முன்னாள் கடற்படைவீரர் விஜிதரோஹன விஜேமுனி தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கையில் காணப்பட்ட இரகசிய தன்மை ஜேவிபி அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையிலும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி மீது தனது துப்பாக்கியின் பிடியினால் தாக்குதலை மேற்கொண்ட விஜிதரோஹன விஜேமுனி இலங்கை குறித்த இந்தியாவின் நோக்கங்கள் குறித்து தொடர்ந்தும் சந்தேகம் கொண்டவராக காணப்படுகின்றார். இந்தியாவுடனான உடன்படிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் என அவர் தெரிவிக்கின்றார். 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டவேளை அது குறித்து இரகசிய தன்மை காணப்பட்டது, இலங்கை அரசாங்கம் தற்போது இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்திடவுள்ள உடன்படிக்கைகள் குறித்து பொதுமக்களிற்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்தார். இந்திய இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர் கொழும்பிலிருந்து புறப்படவிருந்த ராஜீவ்காந்திக்கு இராணுவஅணிவகுப்பு மரியாதையை வழங்குவதற்காக 21 வயது விஜித ரோகன விஜயமுனி தெரிவு செய்யப்பட்டவேளை அவர் இலங்கை கடற்படையில் கனிஷ்ட தரத்தில் காணப்பட்டார். இந்திய பிரதமர் தன்னை கடந்து சென்றதும் விஜயமுனி அவரை தனது துப்பாக்கி பிடியினால் தாக்கினார். ஆனால் ராஜீவ்காந்தி தனது எச்சரிக்கை உணர்வினால் அந்த தாக்குதலில் இருந்த தப்பினார், அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. தாக்குதலை மேற்கொண்டவரை ஏனைய கடற்படை வீரர்கள் உடனடியாக மடக்கிபிடித்து தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், பின்னர் அவர் இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார், ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடற்படையிலிருந்து நீக்கப்பட்டார். இந்த சம்பவம் இடம்பெற்று 38 வருடங்களாகிவிட்ட போதிலும், இலங்கையின் அரசமைப்பின் 13வது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு காரணமாகயிருந்த இந்திய இலங்கை உடன்படிக்கையை விஜேமுனி தொடர்ந்தும் எதிர்க்கின்றார். மாகாணசபை முறை தோல்வியடைந்து விட்டது, மாகாணசபைகள் கடந்த மூன்று வருடங்களாக இயங்கவில்லை, அவை இல்லாமலே அரசசேவைகள் சிறப்பாக இயங்குவதை நாங்கள் பார்க்கின்றோம் என அவர் தெரிவிக்கின்றார். இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு அதிகாரங்களை மாவட்ட மட்டத்தில் அல்லது உள்ளுராட்சி அளவிலேயே பகிரவேண்டும், தமிழ் நாடு மாத்திரமே இலங்கையை விட இரண்டரை மடங்கு பெரியது என அவர் தெரிவித்துள்ளார். விஜேமுனிக்கு ஆறுவருட சிறைத்தண்டனை வழங்கப்பட்ட போதிலும், அவர் இரண்டரை வருட கால தண்டனயை பூர்த்தி செய்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்தார். அதன் பின்னர் அவர் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார், அரசியலில் ஈடுபட்டார், ஜோதிடத்தையும் கற்றார். தற்போது அதில் ஈடுபாடு கொண்டவராக காணப்படுகின்றார். விஜேமுனி தான் இந்திய இலங்கை உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைசாத்திடுவதற்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்த ஜேவிபியின் உறுப்பினரில்லை என்கின்றார். இந்தியாவுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன் மூலம் நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் குறித்து தான் கடும் சீற்றம் கொண்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே ராஜீவ்காந்தி மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார். நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினர் சிந்தனை அந்த நாட்களின் எவ்வாறானதாக காணப்பட்டதோ அதனை எனது நடவடிக்கை வெளிப்படுத்தியது என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/211282
-
இலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரத்திற்கு சென்றார் இந்தியப் பிரதமர் Published By: DIGITAL DESK 3 06 APR, 2025 | 11:30 AM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஞாயிற்றுக்கிழமை (06) முற்பகல் அநுராதபுரத்திற்கு சென்றுள்ளார். வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் இந்தியப் பிரதமருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இலங்கை விமானப் படையின் மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/211291
-
சரிந்த அமெரிக்க பங்குச் சந்தை – 'இப்போதே பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள்' எச்சரிக்கும் சிறு வணிகங்கள்
ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு | 500 பில்லினியர்களின் சொத்து மதிப்பு சரிவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரஸ்பர வரிகளை அறிவித்த பிறகு, உலகின் 500 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 208 பில்லியன் டொலர் அளவுக்கு சரிந்துள்ளது. அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப், சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் முடிவை அமுல்படுத்தினார். இதன்படி இந்தியப் பொருள்களுக்கும் 26% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் 10% வரி ஏப்ரல் 5 முதல் நடைமுறைக்கு வரும், மீதமுள்ள 16% ஏப்ரல் 10 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தவிர சீனா, கம்போடியா, வியட்நாம், மியான்மர், இலங்கை, வங்கதேசம், செர்பியா, தாய்லாந்து, சீனா, தைவான், பாகிஸ்தான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு 10% வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரிகளை அறிவித்த பிறகு, உலகின் 500 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 208 பில்லியன் டொலர் அளவுக்கு சரிந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சரிவு, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் 13 ஆண்டு வரலாற்றில் நான்காவது பெரிய சரிவாகும். மேலும் கொவிட்-19 தொற்றுநோயின் ஊரடங்கிற்குப் பிறகு இதுவே மிகப்பெரிய சரிவாகும். மேலும், கட்டணங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, பில்லியனர்கள் பட்டியலில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அந்த வகையில், மிகவும் பாதிக்கப்பட்டவர்களில் ஃபேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 17.9 பில்லியன் டாலர்கள் குறைந்து, ஒன்பது சதவீத சொத்து சரிவை சந்தித்துள்ளது. அடுத்ததாக, டெஸ்லா பங்குகளும் 5.5 சதவீதம் சரிந்துள்ளதால், ட்ரம்பின் நெருங்கிய நண்பரும் அரசாங்க ஆலோசகருமான எலான் மஸ்கும் 11 பில்லியன் டாலரை இழந்துள்ளார். இவர்களைத் தவிர மைக்கேல் டெல் (9.53 பில்லியன் டாலர்), லாரி எலிசன் (8.1 பில்லியன் டாலர்), ஜென்சன் ஹுவாங் (7.36 பில்லியன் டாலர்), லாரி பேஜ் (4.79 பில்லியன் டாலர்), செர்ஜி பிரின் (4.46 பில்லியன் டாலர்) மற்றும் தாமஸ் பீட்டர்ஃபி (4.06 பில்லியன் டாலர்) ஆகியோரின் சொத்துகளும் சரிந்துள்ளன. அமெரிக்காவிற்கு வெளியே பிரான்சின் பெர்னார்ட் அர்னால்டும் சொத்துகளில் சரிவைச் சந்தித்துள்ளார். அர்னால்ட்டின் LVMH பங்குகள் பாரிஸில் சரிவைச் சந்திததன, இதனால் ஐரோப்பாவின் மிகப் பெரிய பணக்காரரின் நிகர மதிப்பில் 6 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/316882