Everything posted by ஏராளன்
-
காத்தவராயன் வரலாறு: நாட்டார் தெய்வங்கள் சாதி ஆணவக் கொலையால் உதித்தவையா? ஓர் ஆய்வு
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காத்தவராயன் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நபர் ஆணவக்கொலை செய்யப்பட்ட பிறகு தெய்வமாக்கப்பட்டதாக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர் கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் & ரக்ஷனா. ரா பதவி, பிபிசி தமிழ் 6 ஏப்ரல் 2025, 02:07 GMT காத்தவராயன் என்ற நாட்டார் தெய்வம் குறித்து கிட்டத்தட்ட அனைவருக்குமே நன்கு தெரியும். ஆனால், இந்தக் காத்தவராயன் என்ற தெய்வமும் அதற்கான வழிபாட்டு முறையும் தொடங்கியதன் பின்னணியில் ஓர் ஆணவக்கொலை சம்பவம் இருக்கலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். காத்தவராயன் மட்டுமில்லை, தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும் நாட்டார் தெய்வங்கள் பலவற்றின் தோற்றுவாயாக ஆணவக்கொலை இருப்பதாக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரான ஆ.சிவசுப்பிரமணியன் கூறுகிறார். நாட்டார் தெய்வ வழிபாடுகளுக்கும் சாதி ஆணவக்கொலைகளுக்கும் இருக்கும் தொடர்பு குறித்து எழுதியுள்ள அவர், "ஆணவக்கொலை மட்டுமல்ல, போர், குடும்பப் பெருமை, குற்றத்தைத் தடுத்தல் எனப் பல்வேறு காரணங்களின் விளைவாகக் கொல்லப்பட்டவர்களும் தெய்வங்களாக தமிழ்ப் பண்பாட்டில் வணங்கப்பட்டு வருகின்றனர்" என்று குறிப்பிடுகிறார். ஆனால், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையின் தலைவரும் பேராசிரியருமான ஆறு.ராமநாதன், "நாட்டார் தெய்வங்களின் பின்னணிக் கதைகள் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அவற்றை நூறு சதவிகிதம் வரலாறாகக் கருத முடியாது. ஏனெனில், அவை அறிவியல்பூர்வமாக ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை," என்கிறார். நாட்டார் தெய்வங்கள் என்றால் என்ன? தமிழ்ப் பண்பாட்டில் கருப்பசாமி, காத்தவராயன், புலைமாடன், மதுரை வீரன் என மக்கள் பல தலைமுறைகளாக வணங்கி வரும் தெய்வங்களுக்கும் சாதி ஆணவக் கொலைக்கும் என்ன தொடர்பு? இணையை கவர 'மது' குடிக்கும் ஆண் ஈக்கள் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு5 ஏப்ரல் 2025 தமிழர் மரபில் தண்ணீர் பந்தல்கள் - பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தாகம் தீர்த்த வரலாறு3 ஏப்ரல் 2025 நாட்டார் தெய்வங்களின் தோற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் நாட்டார் தெய்வங்கள் தனித்துத் தெரியக் காரணம், அவற்றில் பெரும்பாலான தெய்வங்கள் முன்பு வாழ்ந்து மறைந்தவர்களாகவே இருப்பதுதான் என்கிறார், நாட்டார் வழக்காற்றியல் பேராசிரியர் சி. ஜ. செல்வராஜ். அவரது கூற்றுப்படி, தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளாக வழிபடப்படும் பல நாட்டுப்புற தெய்வங்கள் தொன்மங்களில் சொல்லப்படும் கடவுள்களாக இல்லாமல் தமிழ்ச் சமூக மக்களிடையே வாழ்ந்து, மறைந்தவர்களாகவே உள்ளனர். "இவர்களில் கன்னியாகவே வாழ்ந்து மறைந்தவர்கள், கர்ப்பிணியாக இருக்கும்போது இறந்தவர்கள், சிறு வயதிலேயே இறந்தவர்கள் ஆகியோர் தெய்வமாக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான நாட்டுப்புற தெய்வங்கள், கொலையில் உதித்த தெய்வமாக மாறிய கதைகளும் உண்டு. அத்தகைய கொலைகளில் சாதிய அடக்குமுறை, சாதி மறுப்புக் காதல் போன்ற காரணங்களால் செய்யப்பட்ட நடந்தவற்றையும் குறிப்பிடலாம்" என்கிறார் சி. ஜ. செல்வராஜ். அப்படி ஆணவக்கொலைகளால் பலியானோர் எப்படி தெய்வமாக்கப்பட்டார்கள் என்பது குறித்து "ஆணவக் கொலை சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்" என்று நூலில் ஆ.சிவசுப்பிரமணியன் விரிவாகப் பதிவு செய்துள்ளார். பட மூலாதாரம்,EZHUMALAI படக்குறிப்பு,திண்டிவனத்தில் இன்றளவும் காத்தவராயன் வழிபாட்டில் கழுவேற்றும் சடங்கு பின்பற்றப்படுவதாகக் கூறுகிறார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் முனைவர் ஏழுமலை அவர் தனது நூலில், "சமூகத்தில் இருக்கும் பல்வேறு அடக்குமுறைகளின் காரணமாக ஆணவக் கொலை செய்யப்பட்டவர்களில் பலர், பிற்காலத்தில் நாட்டார் தெய்வங்களாக உருவெடுத்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார். அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆ.சிவசுப்பிரமணியன், "பெரும்பாலும் நாட்டார் தெய்வங்களின் கதைகளுக்குப் பல்வேறு வடிவங்கள் இருக்கும். ஒன்று கொலை செய்தவர்கள் தரப்பின் வரலாறு, இரண்டாவது கொலை செய்யப்பட்டவர்கள் தரப்பின் வரலாறு மற்றும் மூன்றாவதாக தங்களது சுயநினைவின்றி கொலைக்குத் துணை நின்றவர்கள் தரப்பின் வரலாறு," என்று விளக்கினார். இதில், "கொலையுண்டவர்களைச் சார்ந்தவர்கள் அவர்களை தெய்வமாக்கி, கோவில் எழுப்பி வழிபடுவது மட்டுமின்றி, கொலை செய்தவர்களும் தாங்கள் கொன்றவர்களை வழிபடுவார்கள்" என்கிறார் அவர். "கொலை செய்தவர்கள், தாங்கள் செய்த கொலையால் தம் எதிர்காலச் சந்ததிகளுக்கு எந்தவிதப் பாவமும் சேர்ந்துவிடக் கூடாதே என்ற அச்சத்தில் இப்படியான பழக்கத்தைக் கடைபிடிக்கத் தொடங்கினர்," என்று அதுகுறித்து விளக்கினார் நாட்டுப்புறவியல் ஆய்வாளரான சி. ஜ. செல்வராஜ். பி.கே.ரோஸி: 100 ஆண்டுகளுக்கு முன் சாதி கொடுமையால் நாகர்கோவிலில் தஞ்சமடைந்த தலித் நடிகை1 ஏப்ரல் 2025 விண்வெளியில் குழந்தை பிறக்குமா? எலி, பன்றி மீதான சோதனைகள் சொல்வது என்ன?2 ஏப்ரல் 2025 காத்தவராயன் தெய்வமானது எப்படி? படக்குறிப்பு,காத்தவராயன் என்ற நாட்டார் தெய்வத்தின் தோற்றத்துக்கு ஆணவக்கொலை காரணமாக இருக்கலாம் என்கிறார் முனைவர் ஆறு.ராமநாதன் "சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு காத்தவராயன் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்தார். அவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு வெளியேறிவிட்டனர். இதுதொடர்பாக பெண்ணின் தந்தை அரசனிடம் முறையிடவே, அரசன் காவலர் படையின் தலைவனாக இருக்கும் காத்தவராயனின் தந்தையிடமே அவரைத் தேடிப் பிடித்துக் கொண்டு வரும்படி ஆணையிடுகிறார். அதைத் தொடர்ந்து தனது தந்தையாலேயே பிடித்து வரப்பட்ட காத்தவராயனை அரசன் கழுவிலேற்றுகிறான்," என்றார் பேராசிரியர் ராமநாதன். நாட்டார் தெய்வமான காத்தவராயனின் பின்னணிக் கதையை விவரித்த அவர் , "இங்கு காத்தவராயன் என்று ஒருவர் வாழ்ந்து வந்ததும், அவர் கதைகளில் குறிப்பிடப்படுவது போல சாதியின் பெயரால்தான் கொல்லப்பட்டார் என்பதும் உறுதி செய்யப்பட்டது. ஆனால், அவர் குறித்துச் சொல்லப்படும் கதைகளில் முற்றிலுமாக உண்மை உள்ளதாக நூறு சதவிகிதம் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. காத்தவராயன் பெயரிலேயே பற்பல கதைகள் இருப்பதே அதற்குக் காரணம்," என்கிறார். இப்படியாக ஒரே தெய்வம் குறித்துப் பற்பல கதைகள் தோன்றுவதன் பின்னணியை விளக்கிய போது, அதில் எப்படி குழுவின் பங்கு கலந்திருக்கிறது என்பதை விளக்கினார் செல்வராஜ். "ஒருவர் கொலை செய்யப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இந்திய சமூகத்தில், சாதியும் அதற்கொரு காரணமாக இருக்கிறது. அப்படிக் கொலை செய்த பிறகு, கொலையுண்டவரை தெய்வமாக வணங்கும் மக்களின் அடுத்த தலைமுறைகள், அந்தக் கதைகளைப் பின்னாட்களில் தங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்வதும் உண்டு". மேலும் அதுகுறித்து விரிவாகப் பேசியபோது, "பொதுவாக, கொலையுண்ட ஒருவரை, அக்கொலையைச் செய்த குழுவினர் தெய்வமாக வணங்கத் தொடங்குகின்றனர். ஆனால், தலைமுறைகள் காலப்போக்கில் தங்கள் சமூகத்தின் அடையாளத்தை அந்த தெய்வத்துடன் சேர்த்து, கதையின் உள்ளடக்கத்தை மாற்றுவதும் இயல்பே. இதன்மூலம் எப்படியாவது, தாங்கள் வணங்கும் தெய்வத்துக்கு, தாம் விரும்புவது போன்ற புனிதத்தைத் தந்துவிட முடியும்," என்றார் அவர். இதோடு, காத்தவராயனை ஒப்பிட்டு விளக்கிய பேராசிரியர் ஆறு.ராமநாதன், "அடிப்படையில் தாழ்த்தப்பட்டவரான காத்தவராயன், வேறு சாதிப் பெண்ணைக் காதலித்ததால் கொல்லப்படுகிறார். ஆனால், பின்னாளில் அவர் தேவலோகத்தைச் சேர்ந்தவர் எனவும், ஏதோவொரு காரணத்தால் தாழ்த்தப்பட்ட ஒருவரின் குடும்பத்தால் எடுத்து வளர்க்கப்பட்டதாகவும் திரிக்கப்பட்ட கதைகளும் சொல்லப்படுகின்றன. மேலும், தான் வேறு சாதிப் பெண்ணைக் காதலித்தது குற்றம் என்பதை உணர்ந்துகொண்டு, கடைசி நேரத்தில் காத்தவராயனே தன்னைக் கழுவேற்றச் சொன்னதாகவும் கதை சொல்லப்படுகிறது. இப்படியாகப் பல்வேறு திரிபுகள் நாட்டார் தெய்வங்களின் பின்னணியாக இன்று சொல்லப்படுகின்றன," என்று கூறினார். மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக கூறி கேலிக்கு ஆளான விஞ்ஞானி அதை நிரூபித்த கதை1 ஏப்ரல் 2025 இந்திரா - ஃபெரோஸ் காந்தி திருமணத்தை நேரு எதிர்த்தது ஏன்? ஆதரித்த காந்தி அதில் கலந்து கொள்ளாதது ஏன்?30 மார்ச் 2025 நாட்டார் தெய்வமானோரின் கொலைக்கான காரணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் மனிதர்கள் பல காரணங்களால் சக மனிதர்களால் கொல்லப்படுகின்றனர். 'பூச்சியம்மன் வில்லுப்பாட்டு' என்ற நூலின் முன்னுரையில், நாட்டார் தெய்வங்கள் மனிதர்களாக வாழ்ந்தபோது என்னென்ன காரணங்களுக்காகக் கொலை செய்யப்பட்டார்கள் என்பதை ஒன்பது விதமாக வகைப்படுத்தியுள்ளார் ஆ. சிவசுப்பிரமணியன். இந்தக் கொலைகளுக்கான காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இவை அனைத்தையும் இணைக்கும் ஒரு கயிறாக இருப்பது ஆணவமும் அதிகார துஷ்பிரயோகமும்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வரையறுத்துள்ள கொலைகள், நில உரிமையாளர்கள் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுடனான பகையால் நடந்த கொலைகள் பொறாமை உணர்வால் நடந்த கொலைகள் நரபலி போன்ற மூடநம்பிக்கையால் நடந்த கொலைகள் குடும்ப பிரச்னைகளால் கொலைகள் நேரடியான போரில் கொலையுண்டவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, சில தவறுகளைச் செய்ததால் நடந்த கொலைகள் குற்றச் செயலில் ஈடுபடுபவர்களிடம் இருந்து மற்றவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் கொலையுண்டவர்கள் சாதி மீறிய காதல் மற்றும் திருமணத்தால் நடந்த கொலைகள் குடும்பத்தின் மானத்தைக் காப்பதாகக் கூறி நடத்தப்பட்ட கொலைகள் பல மாதங்கள் காய்ந்து கிடக்கும் 'ஜாம்பி' தாவரம் சில மணி நேரத்தில் உயிர்த்தெழுவது எப்படி?30 மார்ச் 2025 ஔரங்கசீப்புக்கு பதிலாக அவரது சகோதரரை முன்னிலைப்படுத்த ஆர்எஸ்எஸ் விரும்புவது ஏன்?25 மார்ச் 2025 ஆணவக்கொலையால் உதித்த சாமிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 'நாட்டார் பெண் தெய்வ வழிபாட்டில் அரசியல் பொருளாதாரம்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கோண்ட நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரான முனைவர் ஏழுமலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் தீப்பாஞ்சம்மன் (தீ பாய்ந்த அம்மன்) என்ற தெய்வ வழிபாடு குறித்து விளக்கினார். ராணிப்பேட்டையில் இருக்கும் கரிக்கல் என்ற கிராமத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலில், கரிக்கல், வீராமுத்தூர் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த இருவேறு சமூகத்தினர் வழிபடுகின்றனர். "இங்குள்ள வழிபாட்டு முறைகளை ஆய்வு செய்து பார்த்தபோது, வீராமுத்தூர் பகுதியில் வாழ்ந்த பெண், கரிக்கல் கிராமத்தைச் சேர்ந்த பிற சாதி ஆண் ஒருவரைக் காதலித்துள்ளார். இதனால் அவர் தீயிட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதன் விளைவாகவே, அவருக்கு தீ பாய்ந்த அம்மன் எனப் பெயரிட்டு இரு சமூகங்களும் அவரை வழிபடத் தொடங்கினர். அதாவது, பெண்ணின் சொந்த சமூகம், அவர் காதலித்த ஆணின் சமூகம் என இரு தரப்பும் அந்தப் பெண்ணைத் தெய்வமாக வழிபடுகின்றனர். வழிபாட்டு முறைகள் மற்றும் சடங்குகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்," என்று விளக்கினார் ஏழுமலை. சாதிகளை கடந்து காதலிப்பவர்களும் சாதி மறுப்புத் திருமணங்களைச் செய்பவர்களும் கொலை செய்யப்படும் நிகழ்வுகள் இப்போதும் நடக்கின்றன. இதுபோன்ற கொலைகள் பல நூறு ஆண்டுகளாக நடந்து வந்திருக்கின்றன என்பதற்கான சாட்சியாக இத்தகைய நாட்டார் தெய்வங்கள் திகழ்வதாகக் கூறுகிறார் முனைவர் பகத் சிங். உடையாண்டியம்மா-சங்கரக்குட்டி, அழகம்மை-அழகப்பன், சாத்தான்-சாம்பான், ஒண்டி வீரன்-எர்ரம்மா என்பன போன்ற பல்வேறு பகுதிகளில் இருக்கும் நாட்டார் தெய்வங்கள் தோன்றக் காரணமாக இருந்தது சாதி மறுப்புக் காதல் மற்றும் அதன் விளைவாக நிகழ்த்தப்பட்ட ஆணவக் கொலைகள்தான் என்று தனது 'ஆணவக்கொலை சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்' நூலில் விவரிக்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன். இதுபோல நடந்த சில கொலைகளை அந்த நூலில் அவர் பட்டியலிட்டுள்ளார். அதற்கொரு சான்றாக இருப்பது பாப்பாத்தி – ஈனமுத்து என்ற நாட்டார் தெய்வங்கள். "சாதி மீறிய அவர்களது காதலை ஏற்க மறுத்த சமூகத்தினர் ஈனமுத்துவை கொலை செய்தனர். இதற்குப் பிறகு ஈனமுத்துவும் அவரின் காதலியும் தெய்வமாக வழிபடப்படுகின்றனர். அந்தப் பெண்ணின் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு அவரை பாப்பாத்தி அம்மன் என்று அழைப்பதுடன் அவருக்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற சைவ உணவையே படையலாகப் படைக்கின்றனர். ஆனால், ஈனமுத்துவுக்கு உயிர் பலி கொடுக்கும் பழக்கம் உள்ளது. இதுபோக, புலைமாடன் சாமி, குட்டிக் குலையறுத்தான், மங்களவடிவு என மேலும் பல்வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டவர்களும் தெய்வமாக வணங்கப்படும் வழக்கம் தமிழ்நாட்டில் காணப்படுகிறது" என்று தனது நூலில் ஆ.சிவசுப்பிரமணியன் விளக்கியுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்கள் போடும் குப்பைகள் என்ன ஆகும்?23 மார்ச் 2025 சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா?5 ஏப்ரல் 2025 கொல்லப்பட்ட மனிதர்கள் தெய்வமாவது எப்படி? பட மூலாதாரம்,EZHUMALAI "உண்மையில் இவை மதத்தைத் தாண்டி வரலாற்றை எடுத்துரைக்கும் கதைகளாக உள்ளன," என்கிறார் ஆ. சிவசுப்பிரமணியன். "ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, மனிதர்களாக வாழ்ந்த நாட்டார் தெய்வங்களை சமயக் கடவுள்களோடு இணைத்து அவதார புருஷர்கள் ஆக்கிவிட்டனர். பெரும்பான்மையாக இந்தக் கோவில்களில் இருக்கும் வழிபாட்டு முறை எல்லாம், அவர்கள் கொலை செய்யப்பட்ட முறையுடன் தொடர்புடையதாக இருக்கும். நாட்டார் தெய்வங்கள் இறக்கும்போது அவர்கள் செய்த செயல்களை மீண்டும் வழிபாடுகள், சடங்குகளின் வாயிலாக நிகழ்த்திக் காட்டுவார்கள். படையலைப் பொறுத்தவரை கொல்லப்பட்டவர்கள் விரும்பி உண்டதைப் படையலாகப் போடுவர்" என்கிறார் அவர். 'நாட்டார் கதைகளும் வரலாறும் ஒன்றல்ல' தமிழ்ச் சமூகத்தில் இப்படியாகப் பல்வேறு நாட்டுப்புறப் பாடல்கள் வாயிலாகவும் கதைகளின் ஊடாகவும் சொல்லப்படும் விஷயங்களை வரலாறாகக் கருத முடியுமா? நாட்டார் தெய்வங்களின் கதைகளை வரலாறாக ஏற்றுக்கொள்ளலாமா? இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன என்கிறார் பேராசிரியர் ஆறு.ராமநாதன். இப்படியாக நாட்டார் தெய்வங்களின் தோற்றத்துக்கான வரலாறாகப் பல கதைகள் சொல்லப்பட்டாலும், அவற்றில் நூறு சதவிகிதம் வரலாறு இல்லை என்கிறார் அவர். "அந்தக் கதைகளில் புனைவும் கலந்திருக்கும். அந்த மனிதர்கள் வாழ்ந்தது உண்மை, ஆணவக் கொலை செய்யப்பட்டது உண்மை. ஆனால், சில நேரங்களில் இந்தக் கதைகள் ஒரே மாதிரியான கதைப் போக்கைக் கொண்டிருக்கும். ஆகவே இவற்றின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும்" என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் ஆறு. இராமநாதனின் கூற்றை ஆமோதிக்கும் வகையில் பேசிய சி. ஜ. செல்வராஜ், "நாட்டுப்புற வழக்காறுகளில் வாய்மொழியாகச் சொல்லப்படும் கதைகளில், காலப்போக்கில் அவரவர்களுக்கு ஏற்பப் பல துணைக் கதைகளை இணைத்துக் கொள்வதும் நடக்கும். ஆகையால் ஒரே தெய்வத்துக்குப் பல வட்டாரங்களில், பல வகையாகக் கதைகள் சொல்லப்படுவதும் உண்டு. இந்தச் சூழலில் ஒரு குறிப்பிட்ட தெய்வம் குறித்துச் சொல்லப்படும் அனைத்து பழமரபுக் கதைகளையும், நாட்டுபுறக் கதைகளையும் தொகுத்து, அவற்றைப் பகுப்பாய்ந்து, அதிலுள்ள துணைக் கதைகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, திரிபுகளையும் கற்பனைகளையும் தனியாகப் பிரித்து ஆய்வு செய்யும்போது ஓரளவுக்கு உண்மையில் என்ன நடந்திருக்கலாம் என்பதைக் கண்டுபிடிக்க முடியும்" என்று விளக்கினார். இருப்பினும் அதை நூறு சதவிகிதம் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் ஆறு.ராமநாதன். அதாவது, "காத்தவராயனின் கதை உண்மையானது. ஆனால், நாட்டார் கதைகளில் சொல்லப்படுவது போலத் துல்லியமாக அப்படித்தான் நடந்திருக்கும் என உறுதியாகச் சொல்லிவிட முடியாது." ஆறு.ராமநாதனின் கூற்றுப்படி, இங்குதான் வரலாற்றில் இருந்து நாட்டார் கதைகள் வேறுபடுகின்றன. "வரலாற்றை உண்மையென ஏற்றுக்கொள்ள, அதற்கான ஆதாரங்களும் ஆவணங்களும் இருக்கின்றன. கல்வெட்டுகள், நாணயங்கள், பண்டங்கள், கட்டுமானங்கள் எனக் கிடைப்பவற்றை அறிவியல் உதவியுடன் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருகிறோம். நாட்டார் கதைகளைப் பொறுத்தவரை அப்படிச் செய்வதற்கான வாய்ப்புகள் அனைத்து சூழல்களிலும் இருப்பதில்லை. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நபர் தெய்வமாக்கப்பட்டதன் பின்னணியில் இருக்கும் காரணத்தைத் தோராயமாக, ஓரளவுக்கு உறுதிப்படுத்த முடியும்," என்று விளக்கினார் ஆறு.ராமநாதன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ckg5xg9k28no
-
அமெரிக்காவின் கதவுகள் அடைக்கப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தின் கதவுகள் திறக்கப்படும் என நம்பாதீர் ஜி.எஸ்.பி. பிளசும் இல்லாமல் போகும் - கலாநிதி ஹர்ஷ எச்சரிக்கை
Published By: VISHNU 06 APR, 2025 | 07:48 PM (எம்.மனோசித்ரா) அமெரிக்காவினால் கதவுகள் அடைக்கப்படும் போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவுகள் திறக்கப்படும் என்று எவராவது எண்ணினால் அது முற்றிலும் தவறாகும். ஐரோப்பிய பாராளுமன்றத்தினால் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டத்துடன் புதிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரவுள்ளது. அதற்கமைய தற்போது ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைக்கப் பெறும் சுமார் 6 நாடுகள் அதனை இழக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் மற்றும் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் அடுத்த பாராளுமன்ற அமர்வுகளில் கேள்வியெழுப்ப எதிர்பார்க்கின்றோம். கைசாத்திடப்பட்டப்பந்தங்கள் தொடர்பில் தெரிந்து கொள்வதற்கான உரிமை சகலருக்குமுள்ளது. இந்திய பரவாலக்கத்தை கடுமையாக எதிர்த்த குழுவொன்று இன்று இந்திய பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பளித்து அவருக்கு இலங்கையில் வழங்கப்படும் அதியுயர் கௌரவ நாமத்தையும் வழங்கியிருக்கின்றமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கைக்கு மிக அருகிலுள்ள பாரிய பொருளாதார சக்தி இந்தியாவாகும். தென்னிந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்ரா ஆகிய மாநிலங்கள் அடுத்த தசாப்தத்தில் உலகில் மிக வேகமாக அபிவிருத்தியடையும் வலயமாக அமையும். இவற்றின் இந்த துரித அபிவிருத்தியில் பயன்பெறுவதற்கு எமக்கு சிறந்த வாய்ப்பிருக்கிறது. எவ்வாறிருப்பினும் அதற்கான முன்னெடுப்புக்களுக்கு தமது சிந்தனையை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த அரசாங்கம் ஆட்சியமைத்த்திலிருந்து சுவர்களை உடைத்து, பாலங்களை அமைக்குமாறு நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன். அவ்வாறு சுவர்களை உடைத்து, பாலங்களை அமைத்தவர்களுக்கு அமெரிக்காவால் தடை விதிக்கப்படவில்லை. மாறாக பாலங்களை உடைத்து சுவர்களை அமைத்தவர்களுக்கு தடையிருக்கிறது. இதன் மூலம் நாம் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். வருடாந்தம் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு அரச குழுவொன்று செல்வது வழமையாகும். இதன் போது அமெரிக்காவின் வரி குறித்து பேசப்படப் போகிறதா என்பது எமக்குத் தெரியாது. நாணய நிதியத்திலிருப்பதால் எமக்கு நிவாரணம் வழங்குமாறு கோரினால் அதனை ஏற்கக் கூடியவரல்ல ட்ரம்ப். வியட்நாம் ட்ரம்பிடம் முன்மொழிந்துள்ளதைப் போன்று அசாதாரணமான வாய்ப்பொன்றை வழங்கினால் வரி குறைப்பு குறித்து சிந்திக்க முடியும் என்று அமெரிக்கா கூறுகிறது. அவ்வாறெனில் அந்த அசாதாரணமான வாய்ப்பு என்ன என்பது குறித்து அரசாங்கமும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் தீர்மானிக்க வேண்டும். பிராந்திய பொருளாதார ஒப்பந்தங்களுக்குச் செல்லாமல் நாட்டுக்கு தேவையான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது. சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் எம்மால் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது. ஐக்கிய மக்கள் சக்தியின் ப்ளு பிரின்ட் வெளியீட்டில் இது தொடர்பில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றோம். இந்திய பிரதமருடன் தற்போது பேச வேண்டிய மிக முக்கிய காரணி எக்டாவாகும். பொருளாதார ரீதியில் எவ்வாறு இணைந்து செயற்படுவது, தென்னிந்திய 5 மாநிலங்களின் தீவிர அபிவிருத்தியிலிருந்து எவ்வாறு பயன் பெறுவது என்பது குறித்து கலந்தாலோசிக்க வேண்டும். ஜி.எஸ்.பி. பிளஸ் இருப்பதால் அமெரிக்க வரி அதிகரிப்பினால் சிக்கல் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். இவ்வாண்டுடன் ஜி.எஸ்.பி. பிளஸ் நிறைவடையப் போகிறது. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஜி.எஸ்.பி. பிளஸ் தொடர்பான புதிய முன்மொழிவுகள் முன்வைக்கப்படவுள்ளன. எனவே புதிய சட்டத்துடன் புதிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரவுள்ளது. அதற்கமைய தற்போது ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைக்கப் பெறும் சுமார் 6 நாடுகள் அதனை இழக்க நேரிடும். பயங்கரவார தடைச்சட்டம், நல்லிணக்கம் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பில் இலங்கை என்ன செய்திருக்கிறது என்பதையும் ஐரோப்பிய ஒன்றியம் ஆராயும். இன்னும் இரு வாரங்களில் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு இலங்கை வரவுள்ளது. வந்ததன் பின்னர் நிச்சயம் இவை தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். அமெரிக்காவினால் கதவுகள் அடைக்கப்படும் போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவுகள் திறக்கப்படும் என்று எவராவது எண்ணினால் அது முற்றிலும் தவறாகும். ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்கு எந்தளவுக்கு இலங்கை போராடியது என்பதை என்னைத் தவிர இந்த பாராளுமன்றத்தில் யாருக்கும் தெரியாது. எனவே இவை தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமாக சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/211341
-
சுழிபுரத்தில் இறந்தவர்களை புதைக்கும் காணியை தனியார் வாங்கியதால் எழுந்துள்ள சர்ச்சை
யாழில் இடுகாட்டை வாங்கிய தனியார்; தமது உறவுகளின் கல்லறைகளை பாதுகாக்க கோரும் உறவுகள் 06 APR, 2025 | 04:58 PM யாழ்ப்பாணத்தில் இடுகாடு ஒன்றினை தனியார் ஒருவர் கொள்வனவு செய்து, அதில் கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சுழிபுரம் பகுதியில் உள்ள காணி ஒன்றை நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் இடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். அங்கு சுமார் 150 க்கும் மேற்பட்ட உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல கல்லறைகளும் கட்டப்பட்டுள்ளன. அத்துடன் அப்பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், சிறுமியின் உடலம் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த இடுகாட்டிலையே புதைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது இந்நிலையில் குறித்த இடுகாடு அமைந்துள்ள காணியை அண்மையில் தான் பணம் கொடுத்து வாங்கியுள்ளதாகவும் அது தனக்கு சொந்தமானது என கூறி, கல்லறைகளை அகற்றி விட்டு, அதில் சுற்றுலா மையம் ஒன்றினை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தனியார் ஒருவர் அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளார். இது தொடர்பில் பிரதேச செயலரிடம் தெரிவித்த நிலையில், குறித்த காணி தனியாருக்கு சொந்தமானது எனவும், இடுகாட்டுக்காக இனிவரும் மூளாய் பகுதியில் 2 ஏக்கர் காணியை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எமது உறவுகளின் கல்லறைகள் இந்த இடுகாட்டில் உள்ளது அதனை ஒருவர் அழித்து அதன் மீது சுற்றுலா தளம் ஒன்றினை அமைப்பதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. எனவே எமது இடுகாட்டையும் எம் உறவுகளின் கல்லறைகளையும் பாதுகாத்து தாருங்கள் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/211323
-
காசாவில் எட்டு மருத்துவர்களின் உயிரிழப்புக்கு செஞ்சிலுவைச் சங்கம் கண்டனம்!
கொன்று புதைக்கப்பட்ட அவசரகால ஊழியர்கள் - தவறிழைத்ததாக ஒப்புக் கொண்ட இஸ்ரேல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தெற்கு காஸாவில் மார்ச் 23 அன்று 15 அவசர கால ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், அந்த விஷயத்தில் தங்களது ராணுவ வீரர்கள் தவறு செய்ததாக இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. ரஃபாவில் கடந்த மாதம் 23ஆம் தேதி, பாலத்தீன செம்பிறை சங்கத்துக்குச் சொந்தமான ஒரு வாகனம், ஐநாவின் கார் மற்றும் காஸாவின் சிவில் பாதுகாப்புக்குச் சொந்தமான ஒரு தீயணைப்பு வண்டி தாக்குதலுக்கு உள்ளானது. ஹெட்லைட் அல்லது ஒளிரும் விளக்குகள் இல்லாமல் இருட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனங்கள் நெருங்கி வந்ததால் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் முன்னர் தெரிவித்திருந்தது. ஆனால், கொல்லப்பட்ட ஒரு அவசர கால ஊழியரால் படம்பிடிக்கப்பட்ட காணொளி தற்போது வெளியாகி உள்ளது. அதில் வாகனங்கள் ஒளிரும் விளக்குகளை எரியவிட்டிருப்பதை காண முடிகிறது. இதில் குறைந்தது 6 பேர் ஹமாஸுடன் தொடர்புடையவர்கள் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறுகிறது. ஆனால், இதுவரை எந்த ஆதாரத்தையும் இஸ்ரேல் வழங்கவில்லை. அதே நேரம், துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அவர்கள் நிராயுதபாணிகளாக இருந்ததாக இஸ்ரேல் ஒப்புக்கொள்கிறது. சனிக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசிய ஐடிஎஃப் அதிகாரி, ராணுவம் முன்னதாக மூன்று ஹமாஸ் உறுப்பினர்கள் இருந்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறினார். ஆம்புலன்ஸ்கள் அந்தப் பகுதியை நெருங்கியபோது, வான்வழி கண்காணிப்பாளர்கள், வாகனம் சந்தேகத்திற்கிடமான முறையில் முன்னேறிச் செல்வதாக தெரிவித்ததாகவும், ஹமாஸ் காரின் அருகே ஆம்புலன்ஸ்கள் நின்றபோது வீரர்கள் தாங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகக் கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cly1nw70xx6o
-
நாளை திறப்பு: பாம்பன் புதிய ரயில் பாலத்தின் சிறப்புகள் என்ன? கப்பலுக்கு எவ்வாறு வழிவிடும்?
இராமேஸ்வரத்தில் 700 கோடி ரூபா மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார் மோடி Published By: VISHNU 06 APR, 2025 | 08:26 PM இந்தியாவின் தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலமான புதிய பாம்பன் பாலம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்- இராமேஸ்வரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் 2.2 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாலம் கடந்த 1914-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் 106 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் உறுதித்தன்மை குறைந்ததால், ரூ. 550 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2019 - ஆம் ஆண்டு தொடங்கி 2024 இறுதியில் நிறைவுபெற்றது. கடல் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் 72.5 மீட்டர் நீளமுள்ள பகுதியை தூக்கி, அதன் கீழ் கப்பல்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி 17 மீற்றர் உயரத்திற்கு தூக்கப்படும் வகையில் கட்டப்பட்டுள்ளது. பாரம்பரிய உடையான பட்டு வேட்டி - சட்டையுடன் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டதுடன், இராமேஸ்வரம் - தாம்பரம் ரயில் போக்குவரத்தையும் கொடியசைத்து தொடக்கி வைத்தார். மேலும் புதிய பாம்பன் பாலத்தின் சிறப்பம்சங்கள் ❤ புதிய ரயில் பாலத்தை கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடந்து செல்ல பாலம் நடுவில் 240 அடி நீளம் 570 டன்னில் வடிவமைத்த செங்குத்து துாக்கு பாலம் பொருத்தப்பட்டுள்ளது. ❤ இந்த துாக்கு பாலத்தின் இருமுனையிலும் 34 மீ., உயரத்தில் இரு இரும்பு கோபுரங்கள் உள்ளன. இதன் மேல் தளத்தில் இரு ராட்சத இரும்பு வீல்கள் உள்ளன. ❤இந்த வீலில் துாக்கு பாலத்தை திறந்து மூட கம்பி வடங்கள் சுற்றி உள்ளனர். இந்த பாலத்தை 'லிப்ட்' முறையில் திறந்து மூடும் வகையில் வடிவமைத்துள்ளனர். ❤இதனை ஹைட்ராலிக் இயந்திரத்தில் பொருத்தி உள்ளதால் ஒருமுறை திறக்க 5 நிமிடம் 30 வினாடிகள் ஆகும். ❤இதை 17 மீ., உயரம் வரை திறந்து வைத்திருக்க முடியும் என்பதால் கனரக சரக்கு கப்பல்கள், கடற்படை கப்பல்கள், எவ்வித சிரமம் இன்றி கடந்து செல்லலாம். ❤துாக்கு பாலம் மூடப்பட்டு இருக்கும் சமயத்தில் கடல் மட்டத்தில் இருந்து 11 மீ., உயரத்தில் இருக்கும். இதனால் துாக்கு பாலத்தை திறக்காமலே பாம்பன், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள படகுகள் பாலத்தை கடந்து செல்ல முடியும். ❤ ஸ்பெயின் நிறுவன பொறியாளர்களின் டிசைனில் வடிவமைக்கப்பட்டது. இதுபோன்ற துாக்கு பாலம் அமெரிக்கா, பிரான்சில் மட்டுமே உள்ளது. ❤ புதிய ரயில் பாலம் மற்றும் துாக்கு பாலத்தில் மின்சார ரயில்கள் அதுவும் இரு ரயில்கள் செல்லும் வகையிலும் வடிவமைத்துள்ளனர். ❤ புதிய பாலத்தில் ஒரு வாரத்திற்கு 134 ரயில்கள், அதுவும் அதிகபட்சமாக 75 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும். ❤துாக்கு பாலத்தின் இரு முனைகளில் உள்ள 34 மீ., உயர இரும்பு கோபுரத்தின் மேல் தளத்திற்கு செல்ல லிப்ட் வசதி உள்ளது. ❤ உப்புக்காற்றில் துருப்பிடிக்காத வகையில் துாக்கு பாலத்தில் 'ஜிங்மெட்டாலைசிங்' மற்றும் 'பாலிசிலோசின் பெயின்ட்' பூசி உள்ளனர். ❤35 ஆண்டிற்கு துருப்பிடிக்காத வகையில் இந்த ரசாயனம் கலந்த பெயின்ட் பூசியதற்கு செலவு ஒரு கோடி ரூபாயை தாண்டியது. இந்த உயர் ரக பெயின்ட் இந்தியாவில் வேறு எந்த ரயில் பாலத்திற்கும் பூசப்படவில்லை. https://www.virakesari.lk/article/211342
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
'குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்து போடுங்கள்' - ராமேஸ்வரத்தில் தமிழ்நாட்டு தலைவர்களை விமர்சித்த மோதி பட மூலாதாரம்,ANI கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலான புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார். மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து, ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இன்று இலங்கை பயணத்தை நிறைவு செய்து விட்டு மண்டபம் ஹெலிபேட் தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி வருகை தந்தார். அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலை பாலத்திற்கு வந்த மோதி ரூ.550 கோடி செலவில் பாம்பன் - மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மண்டபத்திலிருந்து புறப்பட்டு வந்த சிறப்பு ரயில் ராமேசுவரத்திற்கு சென்றது. அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோதி வந்தார். பின்னர் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழாவில் ராமேஸ்வரம்-தாம்பரம் தினசரி விரைவு ரயிலை தொடங்கி வைத்தார். மேலும், இத்துடன் 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது, தொடங்கி வைக்கப்பட்டது. விழாவில் பிரதமர் நரேந்திர மோதி பேசுகையில், "பாம்பன் புதிய பாலத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ரயில் பாலம் தான், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலம். இந்த பாலத்தினடியில் பெரிய கப்பல்களும் பயணத்தை மேற்கொள்ள முடியும். ராமேஸ்வரத்திலிருந்து பிற பகுதிகளுக்கு இடையிலான இணைப்பினை இந்த பாலம் ஏற்படுத்துவதுடன், தமிழ்நாட்டின் சுற்றுலா மற்றும் வணிகங்களுக்கு பயனுள்ளதாக அமையும்'' என்றார் "வளர்ச்சிப் பயணத்தில் தமிழ்நாட்டுக்கு பங்கு" "முன்பிருந்த அரசை விட கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது, தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சிக்கு அதிக அளவில் உதவி புரிந்துள்ளது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசை விட தமிழ்நாட்டுக்கு அதிக நிதி தந்துள்ளோம் கடந்த 10 ஆண்டுகளிலே, தமிழ்நாட்டின் ரயில்வே துறை பட்ஜெட்டில் 7 மடங்குக்கும் அதிகமாக அளிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் செய்த பின்னரும் சிலர் அழுதுகொண்டே இருக்கின்றனர். அவர்களால் அழ மட்டுமே முடியும்; அவர்கள் அழுது விட்டு போகட்டும்." என்றார் மோதி தமிழ்நாடு மீனவர்கள் கைது சம்பவங்களை குறிப்பிட்டு பேசிய பிரதமர், "மீனவர்களின் ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் மத்திய அரசு துணை நிற்கிறது. மத்திய அரசின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில் 3,700 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.கடந்த ஒரு வடத்தில் 600 மீனவர்கள் இலங்கையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்." என்றார். "தமிழ்நாட்டு தலைவர்களிடம் இருந்து எனக்கு வரும் கடிதங்களில் அவர்கள் யாருமே தமிழில் கையெழுத்து போடுவதில்லை. தமிழ் குறித்து நீங்கள் பெருமையாக உணர்ந்தால், குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்து போடுங்கள்" என்றார் மோதி. மேலும், தமிழில் மருத்துவப் படிப்புகளை தொடங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திய மோதி, இதனால், ''ஏழை குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவ கனவு நனவாகும்" என்றார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் முருகன், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், எம்.பி நவாஸ்கனி. எம்.பி, தர்மர், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1me58kzvp0o
-
வோசிங்டனில் ஐந்து இலட்சம் பேர் - அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் டிரம்பிற்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டங்கள்
Published By: RAJEEBAN 06 APR, 2025 | 11:48 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் சனிக்கிழமை பெருமளவு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். டிரம்ப் நாட்டை நிர்வகிக்கும் முறை குறித்து சீற்றமடைந்துள்ள மக்களே இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் இவை என கார்டியன் தெரிவித்துள்ளது. தலையிடவேண்டாம் என்ற இந்த ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள கார்டியன் 1200 இடங்களில் டிரம்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன சிவில் உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட குழுக்கள் இதில் கலந்துகொண்டன என தெரிவித்துள்ளது. அரசாங்க ஊழியர்களை வேலையிலிருந்து நீக்குவது,சமூக பாதுகாப்பு நிர்வாக அலுவலகங்களை மூடுவது,குடியேற்றவாசிகளை நாடுகடத்துவது,திருநங்கைகளிற்கான பாதுகாப்பை அகற்றுவது,சுகாதார பாதுகாப்பு திட்டங்களை குறைப்பதுபோன்ற டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சீற்றம் வெளியிட்டுள்ளனர். வோசிங்டனிலும் புளோரிடாவிலும் சுமார் 500,00 மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு விதமான பதாகைகளையும், உக்ரைனின் கொடியையும் ஏந்தியிருந்தனர் என தெரிவித்துள்ள கார்டியன், உக்ரைன் மீது போர் தொடுத்த ரஸ்யாவுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கு டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே உக்ரைன் கொடிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர் என தெரிவித்துள்ளது. தாங்களுடைய இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏனையவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உந்துதலை வெளிப்படுத்தும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மக்களை எழுச்சியடைய செய்வதே இதன் நோக்கம் என 63 வயது டயனே கொலிபிராத் தெரிவித்துள்ளார். டிரம்ப் தன்னை எதிர்ப்பவர்களிற்கு எதிராக ஆக்ரோசமாகவும்,வன்முறைபோக்குடனும் நடந்துகொண்டுள்ளதால் பலர் தங்கள் எதிர்ப்புகளை வெளியிட தயங்குகின்றனர் என தெரிவித்துள்ள டயனே கொலிபிராத் நாங்கள் டிரம்பிற்கு எதிராக குரல்கொடுக்கின்றோம் என்பதை மௌனமாக உள்ள அமெரிக்கர்கள் பார்க்கவேண்டும் என்பதே இந்த ஆர்ப்பாட்டங்களின் நோக்கம் என தெரிவித்துள்ளார். எங்கள் துணிச்சலை அவர்கள் பார்க்கும்போது டிரம்பை எதிர்ப்பதற்கு அவர்களும் துணிவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த மூவ்ஒன் அமைப்பினை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். டிரம்பின் முன்னால் மண்டியிட தயாராகவுள்ள மக்களிற்கும் ஸ்தாபனங்களிற்கும் அதனை எதிர்ப்பதற்கான மக்கள் இயக்கம் உள்ளது என்ற செய்தியை தெரிவிக்க விரும்புகின்றோம் என ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார். நமது அரசியல் தலைவர்களிற்கு டிரம்பின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான துணிச்சல் உள்ளது என்றால் அவர்கள் அதற்கு தயாராகயிருந்தால்,நாங்கள் அவர்களின் பின்னால் நிற்போம்,என தெரிவித்துள்ள அவர் அரசியல் தலைவர்கள் ஜனநாயகத்தினை பாதுகாக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/211298
-
இலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
அநுராதபுரத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி .... Published By: DIGITAL DESK 3 06 APR, 2025 | 10:30 AM நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) அநுராதபுரத்திற்கு சென்றுள்ளார். https://www.virakesari.lk/article/211284
-
சந்திரிக்கா, மஹிந்த, ரணில், மைத்திரி நாளை கொழும்பில் விசேட சந்திப்பு
06 APR, 2025 | 09:39 AM (லியோ நிரோஷ தர்ஷன்) முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்கேற்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை திங்கட்கிழமை (07) கொழும்பில் இடம்பெறவுள்ளது. இலங்கை எதிர்கொள்கின்ற பொருளாதார மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இடம்பெறும் இந்த சந்திப்பை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்பாடு செய்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பு உள்ளிட்ட உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இலங்கைக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக மாறியுள்ளது. இந்த சவால்களை முறையாக எதிர்கொள்ளா விடின் தேசிய பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்பு என்பன சீர்குலைந்து விடும். எனவே முன்னாள் ஜனாதிபதிகள் என்ற வகையில், நாடு எதிர்கொள்கின்ற புதிய சவால்களுக்கு ஏற்ப முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட உள்ளது. அத்துடன், இலங்கையின் பாதுகாப்பு படைகளின் முன்னாள் தளபதிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடையை தொடர்ந்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாடு என்ற வகையில் இதனை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற விடயங்களும் முன்னாள் ஜனாதிபதிகளின் சந்திப்பில் கவனத்தில் கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/211274
-
பபுவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பபுவா நியூகினியாவின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் உள்ள கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கே சாலமன் கடலுக்கு அருகில், இன்று அதிகாலை 6:04 மணியளவில் 6.9 ரிக்டர் அளவு கொண்ட பயங்கர நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 33 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்க விபரங்கள்: நிலநடுக்க அளவு: 6.9 ரிக்டர் (USGS அறிக்கையின்படி 7.2 ரிக்டர் அளவு என்றும் பதிவாகியுள்ளது). நேரம்: ஏப்ரல் 5, 2025, அதிகாலை 6:04 மணி (உள்ளூர் நேரம்). இடம்: கிம்பேயிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கு தொலைவில், சாலமன் கடல் பகுதியில். ஆழம்: 33 கி.மீ (ஆழமற்ற நிலநடுக்கம்). பிற அறிக்கைகள்: பிரான்ஸின் ரெனாஸ் (RéNaSS) அமைப்பு இதை 6.6 ரிக்டர் அளவு என்றும், ஜெர்மனியின் புவியியல் ஆய்வு மையம் (GFZ) 6.7 ரிக்டர் அளவு என்றும் பதிவு செய்துள்ளன. இந்த நிலநடுக்கம் ஆழமற்ற நிலையில் ஏற்பட்டதால், அருகிலுள்ள பகுதிகளில் பலரும் அதிர்வை உணர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிம்பேயில் (19,000 மக்கள் தொகை கொண்ட நகரம்) மிதமான அளவு அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது. முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, ஏனெனில் ஆழமற்ற நிலநடுக்கங்கள் கடலுக்கு அருகில் ஏற்படும் போது சுனாமி அலைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பபுவா நியூகினியா, பசிபிக் பெருங்கடலில் உள்ள “ரிங் ஆஃப் ஃபயர்” (Ring of Fire) என்ற பகுதியில் அமைந்துள்ளது. இது பூமியின் மிகவும் நிலநடுக்கம் மற்றும் எரிமலை செயல்பாடுகள் நிறைந்த பகுதியாகும். பசிபிக் தட்டு மற்றும் அவுஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் மோதல் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்களை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, பபுவா நியூகினியாவில் நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இன்று அதிகாலை ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் கிம்பே பகுதியில் மிதமான அளவு அதிர்வை ஏற்படுத்தியிருக்கலாம் என்றாலும், பெரிய அளவு பாதிப்பு அல்லது சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு பபுவா நியூகினியாவின் புவியியல் அமைப்பு காரணமாக, இதுபோன்ற நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவது இயல்பு. உள்ளூர் மக்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/316875
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
தோனியும் காலாவதி ஃபார்முலாவும்: சிஎஸ்கே அணியை ஆட்டிப் படைக்கும் பிரச்னைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 6 ஏப்ரல் 2025, 03:29 GMT "சேப்பாக்கத்துக்கு டி20 மேட்ச் பார்க்க வந்தோமா இல்லை, டெஸ்ட் மேட்ச் பார்க்க வந்தோமானு சந்தேகம் வந்துவிட்டது. ஹைலைட்ஸ் போட முடியாத அளவுக்கு சிஎஸ்கே மோசமாக பேட் செய்தார்கள், வெற்றிக்காக முயற்சிக்கவில்லை. தோனி ஓய்வு அறிவித்துவிட்டு இளம் வீரருக்கு வாய்ப்புத் தரலாம்" சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே-டெல்லி கேபிடல்ஸ் ஆட்டம் நேற்று முடிந்த பின் ரசிகர் ஒருவர் இவ்வாறு பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்த விதம் அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. சேப்பாக்கத்திலிருந்து போட்டி முடிந்து சென்ற ரசிகர்கள் அனைவரும் இந்த ஆட்டத்தைப் பார்க்கவா இவ்வளவு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினேன் என்று கடுமையான விமர்சனங்களை சாலையெங்கும் விதைத்துவிட்டு சென்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சொந்த மண்ணில் கோட்டை விட்ட சிஎஸ்கே சேப்பாக்கம் என்பது சிஎஸ்கே அணியின் கோட்டையாக ஐபிஎல் தொடரில் கருதப்பட்டது, இங்கு வந்து சிஎஸ்கே அணியை சாய்ப்பது என்பது அரிதாக இருந்தது. ஆனால், இந்த சீசனின் தொடக்கத்திலேயே 17 ஆண்டுகளுக்குப் பின் சிஎஸ்கேவை புரட்டி எடுத்து ஆர்சிபி வென்றது. நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 15 ஆண்டுகளுக்குப் பின் டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றுள்ளது. இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்ற சிஎஸ்கே அணி அதன் பின்னர் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது. ஐபிஎல் தொடக்க சீசன்களில் "சேஸிங் கிங்" என்று வர்ணிக்கப்பட்ட சிஎஸ்கே அணி, கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பின் 180 ரன்களை சேஸ் செய்ததே கிடையாது என்ற மோசமான வரலாற்றை கொண்டுள்ளது. அதாவது, இலக்கைத் துரத்துகையில் அழுத்தத்தை சமாளித்துக் கொண்டு களத்தில் திறம்பட செயல்படும் பேட்டர்கள் மற்றும் பிக் ஹிட்டர்கள் யாரும் அணியில் இல்லை என்பதையே இது மறைமுகமாக உணர்த்துகிறது. 180 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டால் சிஎஸ்கே அணியை வென்றுவிடலாம் என்ற தார்மீக நம்பிக்கையை எதிரணிக்கும் சிஎஸ்கே வழங்கியிருக்கிறது. ஒரு காலத்தில் அழுத்தம், நெருக்கடி மிகுந்த நேரத்தில் அமைதியாக செயல்படுவது, திடீரென மீண்டுவருவது, திட்டங்களை சரியாகச் செயல்படுத்துவது, சேஸிங்கில் மாஸ்டர்ஸ் என்றெல்லாம் சிஎஸ்கே புகழப்பட்டது. ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தைப் பார்த்த பின் சிஎஸ்கே அணி வெற்றிக்காக சிறிதுகூட முயற்சிக்கவில்லை என்று ரசிகர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். சிஎஸ்கே அணியின் எந்த பேட்டரிடமும் "இன்டென்ட்" என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய "வெற்றிக்கான திண்ணிய எண்ணம்" இல்லை என்பது நேற்றைய ஆட்டத்தில் புலப்பட்டது. பாம்பன் புதிய ரயில் பாலம் இன்று திறப்பு - அதன் சிறப்புகள் என்ன? கப்பலுக்கு எவ்வாறு வழிவிடும்?6 மணி நேரங்களுக்கு முன்னர் சரிந்த அமெரிக்க பங்குச் சந்தை – 'இப்போதே பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள்' எச்சரிக்கும் சிறு வணிகங்கள்5 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES தோனியும் காலாவதி ஃபார்முலாவும் சிஎஸ்கே அணி, இந்த ஐபிஎல் சீசனுக்காக வீரர்களைத் தேர்வு செய்தது என்பது புதிய பாட்டிலில் பழைய மது என்ற ரீதியில்தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த 2011-ஆம் ஆண்டு கடைபிடித்த அதே ஃபார்முலாவை இன்னும் கடைபிடிப்பது இன்றைய சூழலுக்கு சரிவராது. எந்த ஸ்கோராக இருந்தாலும் கடைசிவரை இழுத்தடிப்பது, மெதுவாக சேஸிங்கை நகர்த்துவது ஆகியவை காலாவதியான ஃபார்முலாக்கள். கடந்த இரு சீசன்களாக பல்வேறு அணிகளும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து புதிய அணியை உருவாக்கி வரும் போது, கண்ணை மூடிக் கொண்டு இந்த குறிப்பிட்ட சிலவீரர்கள் சிஎஸ்கே அணியில் இருப்பார்கள் என்று சொல்லிவிடும் அளவிலான அணியாகவே சிஎஸ்கே உள்ளது. சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் உள்ள பேட்டர்களிடம் அச்சப்படாமல் ஆடக்கூடிய மனப்போக்கு இல்லை. ஒரு ரன், 2 ரன்கள் சேர்ப்பது, சாஃப்ட் டிஸ்மிஸல் ஆவது என பழைய பாணியிலேயே இன்னும் ஆட்டம் நகர்கிறது. இந்தியா - இலங்கை இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழ்நாடு மீனவர்கள் பற்றி மோதி கூறியது என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை: முட்டை கேட்ட பள்ளி மாணவர் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்தது யார்? முழு பின்னணி5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "ஆங்கர் ரோல்" செய்ய பேட்டர்கள் இல்லை சிஎஸ்கே அணியின் நடுவரிசை பார்ப்பதற்கு வேண்டுமானால் 9வது வரிசை வரை பேட்டர்கள் இருப்பதாக தெரியலாம். ஆனால் அணி சிக்கலான நேரத்தில் இருக்கும் போது ஆங்கர் ரோல் எடுத்து விளையாட ஒரு சிறந்த பேட்டர், பிக் ஹிட்டர் யாருமில்லை. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் விஜய் சங்கர் ஆங்கர் ரோல் எடுக்க முயற்சி செய்து, ஒட்டுமொத்த கப்பலையும் கடலில் மூழ்கடித்துவிட்டார். விஜய் சங்கர் நேற்று அடித்த 54 பந்துகளில் 69 ரன்கள் என்பது காகிதத்தில் வேண்டுமென்றால் கவுரவமாக இருக்கலாம் ஆனால், ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்கிறேன் என டி20 ஆட்டத்தை டெஸ்ட் போட்டியாக மாற்றிவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES பிக் ஹிட்டர்கள் இருக்கிறார்களா? சிஎஸ்கே அணியில் இக்கட்டான சூழலில் பெரிய ஷாட்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்யும் பிக் ஹிட்டர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்றால் ஷிவம் துபே பெயரை மட்டும்தான் ரசிகர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சிஎஸ்கே அணியால், இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்பட்ட பின்புதான் ஷிவம் துபே பிக் ஹிட்டராக அறியப்பட்டார். ஷிவம் துபே பிக் ஹிட்டராக அறியப்படுகிறாரே தவிர, இன்னும் முழுமையாக அவர் அந்த ரோலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. பிக் ஹிட்டர்கள் என்பவர்கள் ஆட்டத்தை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய ஸ்கோரை அடித்து, திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடியவர்கள். அவ்வாறு, தடாலடியாக சிக்ஸர், பவுண்டரிகளை விளாசும் வீரர்களை சிஎஸ்கே இன்னும் அணியில் அடையாளப்படுத்தவில்லை. நடுவரிசையில் ஜடேஜா, ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகியோர் இந்த சீசனில் கைகொடுக்கத் தவறிவிட்டனர். இலங்கையில் இந்திய பிரதமர் மோதி - இன்று என்ன நடந்தது?5 ஏப்ரல் 2025 இணையை கவர 'மது' குடிக்கும் ஆண் ஈக்கள் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு5 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES இளைஞர்களுக்கு மறுக்கப்படும் வாய்ப்பு சர்வதேச கிரிக்கெட்டில், இந்திய அணிக்கு கேப்டனாக பல இளம் வீரர்களை வளர்த்துவிட்ட தோனி, இன்று சிஎஸ்கே அணியில் அதனைச் செய்ய தவறிவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒவ்வொரு ஐபிஎல் சீசன் ஏலத்திலும் இளம் வீரர்கள், அன்கேப்டு வீரர்கள் பலரையும் வாங்கும் சிஎஸ்கே அணி அவர்களில் பலரை வாய்ப்பே வழங்காமல் வெளியேற்றியுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் தமிழக வீரர் ஆந்த்ரே சித்தார்த், விக்கெட் கீப்பர் வனிஷ் பேடி, ஆல்ரவுண்டர்களாக அன்சுல் கம்போஜ், ராமகிருஷ்ணா, வேகப்பந்துவீச்சில் குர்ஜப்நீத் சிங், ஷேக் ரஷீத் என இளம் வீரர்கள் இருந்தும் இதுவரை யாருக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு தரப்படவில்லை. ஓர் அணியில் இளம் வீரர்கள்தான் வெளிச்சம் பாய்ச்சக் கூடியவர்கள், பயமில்லாதவர்கள், பாதுகாப்பானவர்கள். ஆனால், இந்த வெற்றி ஃபார்முலா தெரிந்திருந்தும் சிஎஸ்கே இந்த விஷயத்தை வெளிப்படையாக கையாள்வதில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் உள்ள சன்ரைசர்ஸ், மும்பை, கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி, குஜராத் அணிகள் அன்கேப்டு வீரர்கள் பலருக்கும் வாய்ப்பளித்து அவர்களின் திறமையை பயன்படுத்திக் கொண்டன. ஆனால், சிஎஸ்கே அணி வழக்கமான ஃபார்முலாவுடன் அனுபவமான சர்வதேச வீரர்களைத் தேர்வு செய்கிறேன் என்ற ரீதியில் வீரர்களை தேர்வு செய்வதும், குறிப்பிட்ட வீரர்களை தக்க வைப்பதும் தோல்விக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லை ருதுராஜ், கான்வே ஜோடி சிறப்பான தொடக்கத்தை கடந்த சீசனில் வழங்கி 849 ரன்கள் குவித்து சிறந்த தொடக்க ஜோடியாக பெயரெடுத்தது. இவர்கள் இருவரும் பவர்ப்ளேயில் மட்டும் 619 ரன்களை சிஎஸ்கேவுக்கு சேர்த்துள்ளனர். ஆனால் இந்த சீசனில் நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கிறது. இந்த சீசனில் சிஎஸ்கேயின் பவர்ப்ளே ரன்ரேட் 10 அணிகளின் ரன்ரேட்டில் கடைசி இடத்தில் ஓவருக்கு 7 ரன் ரேட்டில் இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரராக ரவீந்திராவையும், திரிபாதியையும் களமிறக்கியது பலனளிக்கவில்லை. இந்த சீசனில் நேற்றைய ஆட்டத்தில் முதன் முறையாக ஆடும் லெவனில் வாய்ப்புப் பெற்ற கான்வே தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். அவருடன், முந்தைய சீசனில் கலக்கிய கேப்டன் ருதுராஜ் அல்லாமல் ரச்சின் ரவீந்திராவே தொடக்க வீரராக தொடர்ந்தார். சிஎஸ்கே அணியின் இந்த முயற்சி எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. பிரபாகரன் உடல் எங்கே? புலிகள் இயக்கத்தில் என்ன நடந்தது? பிபிசி தமிழுக்கு கருணா அம்மான், பிள்ளையான் பேட்டி5 ஏப்ரல் 2025 திலக் வர்மா 'ரிட்டயர்ட் அவுட்' : புதிய சாதனை படைத்தும் சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் பாண்டியா5 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES ஃபார்மில் இல்லாத வீரர்கள் சிஎஸ்கே அணி இந்த ஐபிஎல் ஏலத்தில் 5 வீரர்களைத் தக்க வைத்து 10 அன்கேப்டு வீரர்கள், 6 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 20 பேரை வாங்கியது. புதிதாக சிஎஸ்கே அணிக்குள் வந்தவர்களில் பல வீரர்கள் கடந்த சீசன்களாகவே ஃபார்மில் இல்லாதவர்கள், உள்நாட்டுப் போட்டிகளிலும் பெரிதாக ரன் சேர்க்காதவர்கள். சாம் கரன், நேதன் எல்லீஸ், ஓவர்டன், திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், முகேஷ் சவுத்ரி ஆகியோரின் கடந்த சீசன்களின் ஃபார்மை ஆய்வு செய்தால் ஏன் இப்படிப்பட்ட வீர்ரகளை தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்வி எழும். சாம்கரனுக்கு இங்கிலாந்து அணியிலேயே வாய்ப்பு இல்லை, நேதன் எல்லீஸ் ஆஸ்திரேலிய அணியின் பேக்அப் பந்துவீச்சாளர், ஓவர்டன் இங்கிலாந்து அணியில் சமீபத்தில்தான் அறிமுகமாகியுள்ளார். திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், முகேஷ் சவுத்ரி ஆகியோரின் உள்நாட்டுப் போட்டியில் ஆடிய விதம், ஃபார்ம் ஆகியவற்றை ஆய்வு செய்தால் படுமோசமாக இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES கோட்டையில் அடிவாங்குவது சரியல்ல சிஎஸ்கேயின் கோட்டையாக இருந்தது சேப்பாக்கம் மைதானம். இங்கு சிஎஸ்கே அணியை வெளியில் இருந்து ஓர் அணி வந்து தோற்கடிப்பது சுலபமல்ல. ஆனால், இந்த முறை 2008க்குப் பின் ஆர்சிபி வென்றுவிட்டது, 2010க்குப் பின் டெல்லி அணியும் சிஎஸ்கேவைபுரட்டி எடுத்துவிட்டது. இந்தத் தோல்விகள் அனைத்தும், சிஎஸ்கே அணியில் ஏதோ தீவிரமான தவறு இருக்கிறது என்பதையும், அணியில் ஒட்டுமொத்த மாற்றம் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கிறது. பழைய ஃபார்முலா இனியும் கைகொடுக்காது சிஎஸ்கே அணியின் கடந்த கால ஃபார்முலா என்பது, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் 6 அல்லது 7 லீக் ஆட்டங்களை வென்றுவிடலாம். அதன்பின் வெளி மைதானங்களில் ஏதேனும் சில போட்டிகளில் வென்று ப்ளே ஆஃப் சென்றுவிடலாம். அதன்பின் அரையிறுதி, இறுதிப்போட்டிக்குள் நுழையும் ஃபார்முலாவையே சிஎஸ்கே பின்பற்றி வந்தது. ஆனால், இந்த பழைய ஃபார்முலா இனிமேல் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்காது, அதற்குரிய சூழலையையும் எதிரணிகள் வழங்காது என்பதுதான் நிதர்சனம். சேப்பாக்கம் மைதானத்தில் ஆடுகளங்கள் மாற்றப்பட்டு, தன்மை மாறியுள்ளதால், எந்த நேரத்தில் ஆடுகளம் எப்படி செயல்படும் என்பது கணிக்க முடியாததாகியுள்ளது. ஆனால், இன்னும் சிஎஸ்கே அணி பழைய ஃபார்முலாவை கையில் வைத்திருப்பது வெற்றிக்கு உதவாது. அது மட்டுமல்லாமல், சிஎஸ்கேஅணியில் எந்தெந்த வீரர்கள் வழக்கமாக களமிறங்குவார்கள் எனத் தெரிந்து அதற்கேற்றபடி தனித்தனியாக திட்டத்துடன் எதிரணியினர் களமிறங்கி விக்கெட்டை வீழ்த்துகிறார்கள். ஆதலால், சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றிகளை அள்ளிவிடலாம் என்று சிஎஸ்கே நினைப்பது கடந்த காலம். சென்னை அருகே விநோதமான எலும்புக்கூடு சிலைகள் உள்ள இந்த கல்லறை யாருடையது தெரியுமா?5 ஏப்ரல் 2025 வளரிளம் ஆண் குழந்தைகளை சரியாக வளர்க்கிறோமா? 'அடோலசென்ஸ்' வெப் சீரிஸ் கூறும் செய்தி என்ன?4 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES தோனி பற்றி ரசிகர்கள் கருத்து சிஎஸ்கே அணிக்காக 5 கோப்பைகளைப் பெற்றுக் கொடுத்தவர், ஜாம்பவான் என்பதை ஒப்புக்கொண்டாலும், வயது மூப்பு என்பது அவரையும் அறியாமல் பேட்டிங்கில் ஒருவிதமான மந்தத்தன்மையை ஏற்படுத்துகிறது. பரபரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனியை பார்த்த ரசிகர்கள் நேற்று ஆடிய தோனியின் பேட்டிங்கை கண்கொண்டு பார்க்க முடியாமல் மனம் குமுறினர். இதனால் போட்டி முடிந்தவுடன் "தோனி ரிட்டயர்மென்ட்" என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரண்டாகியது. தோனி நேற்றைய ஆட்டத்தில் 19 பந்துகளைச் சந்தித்த பின்புதான் முதல் பவுண்டரியே அடித்தார். ஆட்டத்தின் சூழல் தெரிந்தும், தன்மை அறிந்தும் பிஞ்ச் ஹிட்டர் போல் அதிரடியாக ஆட முயலாமல் ஆமை வேகத்தில் பேட் செய்து தோல்வி கிட்டத்தட்ட உறுதியான பிறகே கடைசி ஓவரில் சிக்ஸ, பவுண்டரி அடித்து ரசிகர்களை தோனி வெறுப்பேற்றினார். தோனி ஓய்வு பற்றி ஃபிளமிங் கூறியது என்ன? தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் "தோனியிடம் ஓய்வு குறித்து பேசுவது என் வேலையல்ல. எனக்கு அது குறித்து ஏதும் தெரியாது. அவர் அணியில் இருக்கும்வரை அவருடன் சேர்ந்து பணியாற்றுவதை விரும்புகிறேன். தோனி இன்னும் வலிமையாக இருக்கிறார், நான் கூட இதுவரை தோனியிடம் ஓய்வு குறித்து கேட்டதில்லை, நீங்கள்தான் (ஊடகங்கள்) கேட்கிறீர்கள்" எனத் தெரிவித்தார். ஏமாற்றம் தந்த தோனி: சிஎஸ்கே அணியின் 'ஹாட்ரிக்' தோல்வி உணர்த்துவது என்ன? போராட்டமின்றி சரணடைவதா? சிஎஸ்கே தோல்வியால் கொந்தளிக்கும் ரசிகர்கள் சிஎஸ்கே-வில் தோனி நீடிப்பது அணிக்கு பலமா? பலவீனமா? சிஎஸ்கே மீண்டும் தோல்வி: பேட்டிங்கில் தோனி எப்போதும் தாமதமாக களமிறங்குவது ஏன்? பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கேவுக்கு எச்சரிக்கை மணி கிரிக்இன்போ தளத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் அளித்த பேட்டியில் " டாப் ஆர்டர் ஃபயர் ஆகாமல் துபேயும் விரைவாக ஆட்டமிழந்துவிட்டால் சிஎஸ்கே அணி அவ்வளவுதான். சிஎஸ்கே அணியில் உள்ள பேட்டர்கள் வெற்றிக்காக முயற்சி கூட செய்வதில்லை, இதுபோன்ற அணுகுமுறை எனக்கு வியப்பாக இருக்கிறது. ஒருமுறை அல்ல இருமுறை சிஎஸ்கே இந்த சீசனில் மோசமாக ஆடி விரைவாக விக்கெட்டுகளை இழந்துள்ளது நல்ல அறிகுறியல்ல. சிஎஸ்கே அணி இந்த சீசனில் இதுவரை 17 வீரர்களை மாற்றிப் பயன்படுத்தியும் எந்த பலனும் இல்லை. இதற்கு முன் 2015ல் 14 வீரர்கள், 2021-ல் 16 வீரர்களை மாற்றியது" எனத் தெரிவித்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c89g7gejv2lo
-
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே பரிமாறப்பட்ட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இவை தான்!
இலங்கையின் நிலப்பரப்பும், கடற்பரப்பும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படாது என உத்தரவாதமுள்ளதாக வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவிப்பு Published By: VISHNU 06 APR, 2025 | 04:38 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் நிலப்பரப்பை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க போவதில்லை என்ற உத்திரவாதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ள விடயம் இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது முக்கியத்துவம் பெற்றிருந்தது. இலங்கையின் நிலப்பரப்பு மாத்திரமல்ல கடல் பரப்பையும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என்ற அடிப்படையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தாக இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஊடாக இருநாட்டு படைகளும் விஸ்தரிக்கப்பட்ட கூட்டுப் பயிற்சிகள், செயலமர்வுகள், தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றம் என பரந்துப்பட்ட விடயங்களுடன் கூட்டு நடவடிக்கைளில் திறன்பட செயற்படவும் வலுவாக கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது. இருநாட்டு தலைவர்களின் பரஸ்பர பாதுகாப்பு கரிசனைகளின் அடிப்படையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து சனிக்கிழமை (5) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின்போது பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இணக்கம் காணப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இருநாட்டு படைகளும் விஸ்தரிக்கப்பட்ட கூட்டுப் பயிற்சிகள், செயலமர்வுகள், தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றமென பரந்துப்பட்ட விடயங்களுடன் கூட்டு நடவடிக்கைளில் திறன்பட செயல்பட முடிகிறது. எனவே இருநாட்டு தலைவர்களின் பாதுகாப்பு கரிசனைகளின் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இலங்கையின் நிலப்பரப்பை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க போவதில்லை என்ற உத்திரவாதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ளார். இருதலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது இந்த விடயம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இலங்கையின் நிலப்பரப்பு மாத்திரம் அல்ல கடல் பரப்பையும் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த இடமளிக்கப்படமாது என்ற அடிப்படையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன. இவ்வாறான விடயங்களை உள்ளடக்கியதாகவே கூட்டு இணக்கப்பாடுகளுடன் ஒரு குடைக்கு கீழான பாதுகாப்பு ஒப்பந்த வரைபு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஒரு நிலையானதும் ஸ்தீரமானதுமான புரிந்துணர்வு ஒப்பந்தமாகவே இது உள்ளது. இருநாட்டு தலைவர்களின் பரஸ்பர விஜயங்கள் மூலம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளின் பாதுகாப்பு படைகளின் செயற்திறன் மேம்படுத்தல் மற்றும் கூட்டு பயிற்சி நடவடிக்கள், பரிமாற்றங்கள் என்று இருதரப்ப பாதுகாப்பு ஒத்துழைப்புகள் புதிய வடிவில் வலுசேர்க்கப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. மீனவர் பிரச்சினை இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை - இந்திய தலைவர்கள் முன்னுரிமையுடன் செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் மீனவர்களின் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் கையாளவும் தீர்வு காணவும் வேண்டும் என்ற விடயத்தை பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தரிப்பிடம் வலியுறுத்தியிருந்தார். இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்து விடாமல் தீர்வை நோக்கி நகர வேண்டும் என்பது நிலைப்பாடாக உள்ளது. இருப்பினும் மீனவர் பிரச்சினையில் அண்மைய நடவடிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று மீனவர்களை இலங்கை விடுவித்திருந்தது. எனவே சிறந்த ஒத்துழைப்புகளுடன் இருதரப்பினராலும் மீனவர் பிரச்சினை கையாளப்படுகின்றது. கடந்த வருடம் ஓக்டோபர் மாதம் ஆகுகையில் 6 சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. ஏற்படக்கூடிய நெருக்கடியான நிலைமைகளை தவிர்த்து மீனவர் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை காண தொடர்ந்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது என்றார். https://www.virakesari.lk/article/211264
-
ராஜீவ்காந்தி மீது தாக்குதலை மேற்கொண்டதற்காக நான் வருத்தப்படவில்லை - விஜிதரோஹன விஜேமுனி
Published By: RAJEEBAN 06 APR, 2025 | 10:24 AM சண்டேடைம்ஸ் 1987ம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மீது தாக்குதலை மேற்கொண்டமை குறித்து தான் வருத்தப்படவில்லை என முன்னாள் கடற்படைவீரர் விஜிதரோஹன விஜேமுனி தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கையில் காணப்பட்ட இரகசிய தன்மை ஜேவிபி அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையிலும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி மீது தனது துப்பாக்கியின் பிடியினால் தாக்குதலை மேற்கொண்ட விஜிதரோஹன விஜேமுனி இலங்கை குறித்த இந்தியாவின் நோக்கங்கள் குறித்து தொடர்ந்தும் சந்தேகம் கொண்டவராக காணப்படுகின்றார். இந்தியாவுடனான உடன்படிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் என அவர் தெரிவிக்கின்றார். 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டவேளை அது குறித்து இரகசிய தன்மை காணப்பட்டது, இலங்கை அரசாங்கம் தற்போது இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்திடவுள்ள உடன்படிக்கைகள் குறித்து பொதுமக்களிற்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்தார். இந்திய இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர் கொழும்பிலிருந்து புறப்படவிருந்த ராஜீவ்காந்திக்கு இராணுவஅணிவகுப்பு மரியாதையை வழங்குவதற்காக 21 வயது விஜித ரோகன விஜயமுனி தெரிவு செய்யப்பட்டவேளை அவர் இலங்கை கடற்படையில் கனிஷ்ட தரத்தில் காணப்பட்டார். இந்திய பிரதமர் தன்னை கடந்து சென்றதும் விஜயமுனி அவரை தனது துப்பாக்கி பிடியினால் தாக்கினார். ஆனால் ராஜீவ்காந்தி தனது எச்சரிக்கை உணர்வினால் அந்த தாக்குதலில் இருந்த தப்பினார், அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. தாக்குதலை மேற்கொண்டவரை ஏனைய கடற்படை வீரர்கள் உடனடியாக மடக்கிபிடித்து தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், பின்னர் அவர் இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார், ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடற்படையிலிருந்து நீக்கப்பட்டார். இந்த சம்பவம் இடம்பெற்று 38 வருடங்களாகிவிட்ட போதிலும், இலங்கையின் அரசமைப்பின் 13வது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு காரணமாகயிருந்த இந்திய இலங்கை உடன்படிக்கையை விஜேமுனி தொடர்ந்தும் எதிர்க்கின்றார். மாகாணசபை முறை தோல்வியடைந்து விட்டது, மாகாணசபைகள் கடந்த மூன்று வருடங்களாக இயங்கவில்லை, அவை இல்லாமலே அரசசேவைகள் சிறப்பாக இயங்குவதை நாங்கள் பார்க்கின்றோம் என அவர் தெரிவிக்கின்றார். இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு அதிகாரங்களை மாவட்ட மட்டத்தில் அல்லது உள்ளுராட்சி அளவிலேயே பகிரவேண்டும், தமிழ் நாடு மாத்திரமே இலங்கையை விட இரண்டரை மடங்கு பெரியது என அவர் தெரிவித்துள்ளார். விஜேமுனிக்கு ஆறுவருட சிறைத்தண்டனை வழங்கப்பட்ட போதிலும், அவர் இரண்டரை வருட கால தண்டனயை பூர்த்தி செய்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்தார். அதன் பின்னர் அவர் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார், அரசியலில் ஈடுபட்டார், ஜோதிடத்தையும் கற்றார். தற்போது அதில் ஈடுபாடு கொண்டவராக காணப்படுகின்றார். விஜேமுனி தான் இந்திய இலங்கை உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைசாத்திடுவதற்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்த ஜேவிபியின் உறுப்பினரில்லை என்கின்றார். இந்தியாவுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன் மூலம் நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் குறித்து தான் கடும் சீற்றம் கொண்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே ராஜீவ்காந்தி மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார். நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினர் சிந்தனை அந்த நாட்களின் எவ்வாறானதாக காணப்பட்டதோ அதனை எனது நடவடிக்கை வெளிப்படுத்தியது என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/211282
-
இலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரத்திற்கு சென்றார் இந்தியப் பிரதமர் Published By: DIGITAL DESK 3 06 APR, 2025 | 11:30 AM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஞாயிற்றுக்கிழமை (06) முற்பகல் அநுராதபுரத்திற்கு சென்றுள்ளார். வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் இந்தியப் பிரதமருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இலங்கை விமானப் படையின் மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/211291
-
சரிந்த அமெரிக்க பங்குச் சந்தை – 'இப்போதே பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள்' எச்சரிக்கும் சிறு வணிகங்கள்
ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு | 500 பில்லினியர்களின் சொத்து மதிப்பு சரிவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரஸ்பர வரிகளை அறிவித்த பிறகு, உலகின் 500 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 208 பில்லியன் டொலர் அளவுக்கு சரிந்துள்ளது. அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப், சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் முடிவை அமுல்படுத்தினார். இதன்படி இந்தியப் பொருள்களுக்கும் 26% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் 10% வரி ஏப்ரல் 5 முதல் நடைமுறைக்கு வரும், மீதமுள்ள 16% ஏப்ரல் 10 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தவிர சீனா, கம்போடியா, வியட்நாம், மியான்மர், இலங்கை, வங்கதேசம், செர்பியா, தாய்லாந்து, சீனா, தைவான், பாகிஸ்தான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு 10% வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரிகளை அறிவித்த பிறகு, உலகின் 500 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 208 பில்லியன் டொலர் அளவுக்கு சரிந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சரிவு, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் 13 ஆண்டு வரலாற்றில் நான்காவது பெரிய சரிவாகும். மேலும் கொவிட்-19 தொற்றுநோயின் ஊரடங்கிற்குப் பிறகு இதுவே மிகப்பெரிய சரிவாகும். மேலும், கட்டணங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, பில்லியனர்கள் பட்டியலில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அந்த வகையில், மிகவும் பாதிக்கப்பட்டவர்களில் ஃபேஸ்புக் மற்றும் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 17.9 பில்லியன் டாலர்கள் குறைந்து, ஒன்பது சதவீத சொத்து சரிவை சந்தித்துள்ளது. அடுத்ததாக, டெஸ்லா பங்குகளும் 5.5 சதவீதம் சரிந்துள்ளதால், ட்ரம்பின் நெருங்கிய நண்பரும் அரசாங்க ஆலோசகருமான எலான் மஸ்கும் 11 பில்லியன் டாலரை இழந்துள்ளார். இவர்களைத் தவிர மைக்கேல் டெல் (9.53 பில்லியன் டாலர்), லாரி எலிசன் (8.1 பில்லியன் டாலர்), ஜென்சன் ஹுவாங் (7.36 பில்லியன் டாலர்), லாரி பேஜ் (4.79 பில்லியன் டாலர்), செர்ஜி பிரின் (4.46 பில்லியன் டாலர்) மற்றும் தாமஸ் பீட்டர்ஃபி (4.06 பில்லியன் டாலர்) ஆகியோரின் சொத்துகளும் சரிந்துள்ளன. அமெரிக்காவிற்கு வெளியே பிரான்சின் பெர்னார்ட் அர்னால்டும் சொத்துகளில் சரிவைச் சந்தித்துள்ளார். அர்னால்ட்டின் LVMH பங்குகள் பாரிஸில் சரிவைச் சந்திததன, இதனால் ஐரோப்பாவின் மிகப் பெரிய பணக்காரரின் நிகர மதிப்பில் 6 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/316882
-
திரியாய் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு : சொந்த நிலங்களில் விவசாயம் செய்ய முடியவில்லையென காணி உரிமையாளர்கள் ஆதங்கம்!
01 APR, 2025 | 01:07 PM துரைநாயகம் சஞ்சீவன் திரியாய் கிராமமானது திரியாய், மரவடிச்சோலை, கல்லறாவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. இங்கு தமிழர்கள் 531 பேர், சிங்களவர்கள் 274 பேர், முஸ்லிம் ஒருவர் என 806 பேர் வசித்து வருகின்றார்கள். வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் திரியாய் வட்டாரத்தில் 3000 ஏக்கருக்கு மேற்பட்ட மக்கள் விவசாயம் செய்த நிலங்கள் 1987 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் பின்வரும் கிராம சேவகர் பிரிவுகளில் கையகப்படுத்தப்பட்டுள்ள, மக்கள் காலாகாலமாக பயன்படுத்திவந்த 2712 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றபோதும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை. செந்தூர் கிராம சேவகர் பிரிவில் 474 ஏக்கரும் கல்லம்பத்தை கிராம சேவகர் பிரிவில் 636 ஏக்கரும் கட்டுக்குளம் கிராம சேவகர் பிரிவில் 1080 ஏக்கரும் திரியாய் கிராம சேவகர் பிரிவில் 522 ஏக்கருமான காணிகளை விடுவிக்குமாறு கோரி விண்ணப்பிக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள 4 இராணுவ முகாம்களுக்காகவும் 3 கடற்படை முகாம்களுக்காகவும் 55 ஏக்கருக்கு மேற்பட்ட மக்களுடைய காணிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் திரியாய் மக்கள் நீண்டகாலமாக சுடுகாடாக பயன்படுத்தி வந்த 80 ஏக்கர் காணியும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களத்தினால் 466 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன். திரியாய் கிராமத்தில் உள்ள 2020.08.20 அன்று பதிவு செய்யப்பட்ட பத்மராஜ பபத புராண ரஜமகா விகாரைக்கு பூஜாபூமி மற்றும் அளிப்பு மூலமாக 44.325 ஹெக்டேயர் காணியும், திரியாய் கிராமத்தில் உள்ள 2018.05.30 அன்று பதிவு செய்யப்பட்ட சப்தநாக பபத வன செனசுந்த விகாரைக்கு 2019.07.06 அன்று அளவையிடப்பட்டு அளிப்பு மூலமாக 20.2343 ஹெக்டேயர் காணியும், கல்லறாவ கிராமத்தில் உள்ள 2022.08.20 அன்று பதிவு செய்யப்பட்ட தபசு பல்லுக வனசெனசுன விகாரைக்கு அளிப்பு மூலமாக 2020.12.30 அன்று 2.4598 ஹெக்டேயர் காணியும் ஒதுக்கப்பட்டு அளிக்கப்பட்டது. (2020.10.02 வர்த்தமானி) எனினும் இவற்றை விட மேலதிகமான காணிகளையும் கையகப்படுத்தியுள்ளனர். வனவள பாதுகாப்புத் திணைக்களத்தினர் திரியாய் பகுதியில் ஏறத்தாழ 2000 ஏக்கரில் எல்லைக் கற்களை போட்டு, அதற்குள் மக்களை செல்ல விடாத ஒரு சூழ்நிலையில், ஆத்திக்காடு பகுதியில் 349 ஏக்கரையும், திரியாய் குள வயலில் 107 ஏக்கரையும், குறுப்பிட்டி கண்டலில் 400 ஏக்கரையும், வேடன்குளத்தில் 310 ஏக்கர் நிலத்தையும் விடுவிப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதியான பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் ஆத்திக்காட்டு வெளிப் பகுதியில் உள்ள தமிழ் மக்கள் காலாகாலமாக விவசாயம் செய்துவந்த 64 ஏக்கரை தனியாகவும், 18 ஏக்கரை தனியாகவும் குச்சவெளி கமநல சேவை நிலையத்தில் தற்காலிகமாக பதிவு செய்துகொண்டு, மொத்தமாக 82 ஏக்கர் காணியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார். இதில் வைத்தியநாதன் தமயந்திதேவி என்பவருக்கு 5 ஏக்கர் பிரித்தானியர் காலத்து உறுதிக் காணியும் காணப்படுகிறது. நீண்டகாலமாக பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு செய்கையிடப்பட்டு வருகின்ற விவசாய காணிகளை விடுவிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மக்கள் முறையிட்டதையடுத்து 07.10.2024 அன்று அரசாங்க அதிபரின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஆவணங்கள் உள்ள காணிகளில் விவசாயம் மேற்கொள்ளுமாறு அரச அதிபர் பணிப்புரை வழங்கியிருந்தார். இக்கலந்துரையாடலில் அரச அதிகாரிகள், அரிசிமலை விகாரையின் விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் உட்பட பௌத்த மதகுருமார்கள், தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள விவசாயிகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர். மறுநாள் அப்பகுதியில் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடச் சென்றபோது அந்த விகாராதிபதி விவசாயப் பணிகளுக்கு தடை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் கிழக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் 15.10.2024 அன்று குச்சவெளி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கலந்துரையாடலில் ஆளுநரின் பிரத்தியேக செயலாளரும் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளருமான ராஜசேகர், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் உயர் அதிகாரிகள், அரிசி மலை விகாரையின் விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த பொதுமக்கள், தங்களுடைய உறுதி காணிகளை பௌத்த மதகுரு ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகவும் அதனை மீட்டுத் தருமாறும் கோரினர். அதனையடுத்து, கருத்து தெரிவித்த பௌத்த மதகுரு, தன்னிடம் 18 ஏக்கர் உறுதி காணியும் 50 ஏக்கர் பூஜா பூமிக்குரிய காணியும் இருப்பதாக கூறியதோடு, அதற்கு மேலதிகமாக இருக்கிற காணியில் பொதுமக்கள் விவசாயம் செய்வதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனவும் தெரிவித்தார். அதன் பின்னர், காணி அளக்கும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு சபையில் தெரிவிக்கப்பட்டது. வனவள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர், தொல்லியல் துறையினர், கிராம உத்தியோகத்தர் உட்பட ஏனைய அரச அதிகாரிகள் முன்னிலையில் காணி அளவீடு செய்து பௌத்த பிக்குவுக்குரிய பகுதியை வழங்கி ஏனைய பகுதிகளில் மக்களை விவசாயம் செய்யுமாறு சபையில் முடிவு எட்டப்பட்டது. அந்த வகையில் மறுநாள் 16.10.2024 அன்று நில அங்கீகாரம் பெற்ற நில அளவையாளரான கணபதிப்பிள்ளை சிவானந்தன் என்பவரினால் நில அளவை செய்யப்பட்டு பௌத்த மதகுருவுக்கு சொந்தமான காணி என கூறப்படுகின்ற 18 ஏக்கர் காணியும், பூஜா பூமி எனும் பெயரில் வழங்கப்பட்ட 50 ஏக்கர் காணியும் அளவீடு செய்து வழங்கப்பட்டு, ஏனைய பகுதிகள் மக்களுடைய விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டன. எனினும், அக்காணிகளில் மீண்டும் விவசாயப் பணிகளில் ஈடுபட பௌத்த மதகுரு தடையாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமன்றி, காலாகாலமாக வழிபட்டு வந்த நாகதம்பிரான் ஆலயத்துக்கு சென்று வழிபடவும் இந்த மதகுரு தடையாக இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். திரியாய் பகுதியைச் சேர்ந்த விவசாயி நடராஜபிள்ளை மாணிக்கநடராசா இது தொடர்பாக கூறுகையில், “திரியாய் கிராமத்தில் நாங்கள் பரம்பரை பரம்பரையாக வசித்து வருகின்றோம். எங்களுடைய வாழ்வாதார தொழில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் ஆகும். எங்களுக்கு வளத்தாமலைப் பகுதியில் 28 ஏக்கர் உறுதிக் காணி இருக்கின்றது. இதனை அப்பா, அப்பாவின் அப்பா காலத்தில் இருந்து நாங்கள் செய்து வருகின்றோம். 1965ஆம் ஆண்டில் இருந்து அந்தக் காணியில் நான் விவசாயம் செய்து வருகின்றேன். நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து வன்னி பகுதிக்கும் இந்தியாவுக்கும் சென்றோம். 2002ஆம் ஆண்டு திரியாய் மீள்குடியேற்றப்பட்டபோது நான் இந்தியாவில் இருந்ததால் வர முடியாமல் போனது. பின்னர் 2010ஆம் ஆண்டளவில் நான் எமது கிராமத்துக்கு வந்து எமது காணிகளில் விவசாயம் செய்வதற்காக சென்றபோது வனவளத்துறையினர் எங்களை அப்பகுதிக்குள் செல்ல விடாது தடுத்தனர். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு அரிசிமலைப் பிக்கு வந்து எமது உறுதிக் காணிகளில் விவசாயம் செய்து வருகிறார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எவ்வித பலனும் இல்லை. எங்களுடைய உறுதிக் காணிகளில் விவசாயம் செய்யச் செல்லும் எம்மை தடுத்துக்கொண்டு பௌத்த பிக்கு காட்டைத் தள்ளி, விவசாயம் செய்ய ஆதரவாக வனவளத்துறையினர் செயற்படுகின்றார்கள். 2020ஆம் ஆண்டில் இருந்து இற்றை வரைக்கும் எமது காணிகளை தனக்கு வேண்டிய சிங்கள மக்களுக்கு குத்தகைக்கு வழங்கி குத்தகை பெற்று வருகிறார். இன்னும் எமது காணியில் எம்மால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையே காணப்படுகிறது. ஊழல் அற்ற புதிய அரசாங்கம் வந்திருக்கிறது என்கிறார்கள். ஆனால் எம்மைப் போன்ற ஏழை மக்களுக்கு நீதி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் காலாகாலமாக எமது மக்கள் வழிபட்டு வந்த “வளத்தாமலையான்” என்று அழைக்கப்படுகின்ற நாகதம்பிரான் ஆலயத்தையும் அரிசிமலைப் பிக்கு தங்களுடைய நாக விகாரை என்று சொல்லிக்கொண்டு எமது மக்களை வழிபட விடாமல் தடுத்து வருகின்றார். இந்த ஆலயத்தில் எமது பரம்பரையினரே பூசை செய்து வருகின்றனர். எனது அப்பாவுக்குப் பிறகு நான்தான் பூசாரியாக கடமையாற்றி வருகின்றேன். அருகில் உள்ள புல்மோட்டையைச் சேர்ந்த முஸ்லிம் மக்களும் வளத்தாமலையானுக்கு நேர்த்திக்கடன் வைத்து, நூல் கட்டுவதற்கும் திருநீறு இடுவதற்கும் வருவார்கள். ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் வளத்தாமலையானுக்கு பொங்கிப் படைத்துதான் எமது விவசாய நடவடிக்கைகளை தொடங்குவோம். மாடு கன்று போட்டால் முதல் கறக்கின்ற பாலை வளத்தாமலையானுக்கு பொங்கித்தான் நாங்கள் பாவனைக்கு எடுப்போம். இதை எமது மக்கள் எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்தே செய்து வருகின்றார்கள். எமது ஆலயத்தையும் சப்த நாக பபத விகாரை என சொல்லிக்கொண்டு அதையும் ஆக்கிரமித்து அதைச் சுற்றியுள்ள தமிழ் மக்களுடைய காணிகளையும் ஆக்கிரமித்து வைத்துக்கொண்டிருக்கின்றார்கள். எமக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் எமது வளத்தாமலையானுக்கு நேர்த்தி வைப்போம். ஆனால், எமது நேர்த்திக்கடனைக் கூட செலுத்த முடியாமல் பல வருடகாலமாக எமது மக்கள் தவித்து வருகின்றார்கள். சிலர் 2 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பிரதான வீதியில் இருந்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். எமது வளத்தாமலையானை வழிபடுவதற்கு எமது அனுமதி வழங்கப்பட வேண்டும். தற்போது இந்த பகுதியில் புதையல் தோண்டியிருப்பதாகவும் அறிகின்றோம்” என தெரிவித்தார். மேலும், காணி பிரச்சினை தொடர்பாக திரியாய் விவசாய சம்மேளனத்தின் பொருளாளரும் விவசாயியும் ஆலய பூசகருமான மகாதேவஐயர் சாரங்கன் கூறுகையில், “திரியாய் கிராமத்தில் நாங்கள் பரம்பரை பரம்பரையாக வசித்து வருகின்றோம். எமக்கு வளத்தாமலை கண்டப்பன் வயல் பகுதியில் எமது பாட்டனார் காலத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்து 15 ஏக்கர் வயற்காணி இருக்கிறது. நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இறுதியாக 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்து 2009ஆம் ஆண்டில் மீள குடியமர்த்தப்பட்டோம். பின்னர் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து எமது காணியை துப்புரவு செய்து விவசாயத்தில் ஈடுபட முயற்சி செய்தபோதும் வனவள பாதுகாப்புத் துறையினர், தொல்லியல் துறையினர் உட்பட அரச துறையினர் எமக்கு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் எமது காணிகளை பௌத்த பிக்கு ஒருவர் அடாத்தாக பிடித்து அதை சிங்கள மக்களுக்கு குத்தகைக்கு கொடுத்து, அவர்கள் அங்கு விவசாயம் செய்து வருகின்றனர். இது தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையே சமூகப் பிரிவினையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. குறிப்பாக 80 தொடக்கம் 100 ஏக்கர் வரையான தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை பௌத்த பிக்குகள் அடாத்தாக பிடித்து விவசாயம் செய்து வருவதால் எமது மக்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே இந்த கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவர்களுடைய உறுதிக்காணிகளை பௌத்த பிக்குகளிடம் இருந்து மீட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார். ஓய்வுபெற்ற அதிபர் கனகசுந்தரம் சௌந்தராசா கருத்து தெரிவிக்கையில், “1985ஆம் ஆண்டுக்கு முன்னர் அதாவது திரியாயில் யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர் எமது திரியாய் கிராமம் செல்வம் கொளிக்கும் ஊராக இருந்தது. எமது மக்கள் தன்னிறைவடைந்திருந்தனர். இதற்கு காரணம் விவசாயமும் கால்நடை வளர்ப்பும்தான். இதனால் அயல் கிராமங்களில் இருந்து குறிப்பாக திருகோணமலை நகரத்தில் இருந்து நிதி சேகரிக்க எமது கிராமத்துக்குத்தான் வருவார்கள். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று மீண்டும் 2002ஆம் ஆண்டு மீள குடியமர்த்தப்பட்டார்கள். நீண்டகாலமாக எமது மக்கள் கிராமத்தில் இல்லாததன் காரணமாக அவர்களுடைய பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில் அவர்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முகமாக தமது ஜீவனோபாயத் தொழிலான விவசாயத்தை மேற்கொள்வதற்கு வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் எல்லைக் கற்களை போட்டு அப்பகுதிக்குள் செல்ல விடாமல் தடுத்து வருகின்றனர். தொடர்ச்சியாக விவசாயம் செய்யாததன் காரணமாக பற்றைக் காடுகள் வளர்ந்துள்ளன. எனினும் அப்பகுதியில் இன்னமும் வயல் வரம்புகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஆத்திக்காடு, கொம்பெடுத்தான்மடு, கல்லம்பத்தை உட்பட பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆத்திக்காடு வளத்தாமலை பகுதியில் ஒரு மலை இருக்கிறது. இதில் நாகதம்பிரான் ஆலயம் ஒன்று இருக்கிறது. இதில் மாதாந்தம் மற்றும் வருடாந்தம் பொங்கல் மற்றும் பூசை நிகழ்வுகளை எமது மக்கள் செய்து வந்தார்கள். ஆனால், அது தற்போது பௌத்த பிக்குவால் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதனைச் சுற்றியுள்ள தமிழ் மக்களுடைய பிரித்தானிய உறுதிக் காணிகளையும் அத்துமீறி பிடித்து குத்தகைக்கு வழங்கி வருமானம் ஈட்டி வருகின்றார். எமது மக்கள் அங்கு சென்றால் அச்சுறுத்தப்பட்டு விரட்டியடிக்கப்படுகின்றார்கள். அத்துடன் நீலப்பனிக்கனுக்கு அப்பால் இருக்கின்ற கொம்பெடுத்தமடு பிரதேசத்தில் 1985ஆம் ஆண்டுக்கு முன்னர் விவசாயம் செய்த தமிழ் மக்களுடைய எல்லைக் காணிகளை தமது எல்லைகள் என கூறிக்கொண்டு சுமார் 700 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை ஆக்கிரமித்து, சகோதர இன மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தற்போது விவசாயம் செய்யப்படுகின்ற பகுதிகளுக்கு அருகில் உள்ள பற்றைக்காடுகளை எமது மக்கள் துப்புரவு செய்தாலும், அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். எனவே மக்கள் பயிர்ச்செய்கையிட்ட காணிகளுக்கு அதிகாரிகள் வந்து ஆராய்ந்து அவற்றை மீள பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்” என குறிப்பிட்டார். ஆத்திக்காட்டு விவசாயி கிருஸ்ணபிள்ளை சதீஸ்வரன் தனது எண்ணக்கருத்தை வெளிப்படுத்துகையில், “எங்களுக்கு ஆத்திக்காட்டு வெளியில் வயல்காணி இருக்கின்றது. இது என்னுடைய அப்பப்பா, அப்பா என பரம்பரையாக விவசாயம் செய்து வருகின்ற காணி. 10 ஏக்கர் அளவில் இந்த காணி காணப்படுகிறது. நாங்கள் 1985ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து மீண்டும் 1990ஆம் ஆண்டு வந்து இந்த வயற்காணியில் விவசாயம் செய்தோம். பின்னர், 1990ஆம் ஆண்டில் மீண்டும் இடம்பெயர்ந்து 2002ஆம் ஆண்டில் மீள்குடியேறி எங்கள் கிராமத்துக்கு வந்தோம். அந்த யுத்த காலத்தில் காணியை துப்புரவாக்கி வயல் நிலமாக்க உரிய அனுமதி தரப்படவில்லை. நாங்கள் அனுமதி பெற்று இந்த காணிகளை சீரமைக்க முற்பட்டபோது வளத்தாமலை பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் வந்திருந்து, இங்கு எவரையும் விவசாயம் செய்ய விடவில்லை. இதனால் நீதிமன்றத்துக்கு சென்றதையடுத்து, தீர்ப்பு எமக்கு சார்பாக வந்தது. அதன் பின்னரும் அந்த பிக்கு எம்மை விவசாயம் செய்ய விடவில்லை. அதன் பின்னரும் இந்த விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர், பிரதேச செயலாளர் உட்பட பலருக்கு தெரியப்படுத்தினோம். ஆனால், எந்த தீர்வும் எமக்கு கிடைக்கவில்லை. தற்போது வந்திருக்கின்ற புதிய அரசாங்கத்தில் எமக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாவட்ட செயலகத்தில் வைத்து காணி பிரச்சினை தொடர்பாக முறையிட்டோம். அப்போது, ஆவணங்கள் இருப்பவர்கள் காணிகளில் விவசாயம் செய்யுங்கள் என கூட்டத்தில் கூறப்பட்டது. அதை நம்பி விவசாயம் செய்ய வந்தபோது மீண்டும் பிக்கு பொலிஸ் அதிகாரிகளை அழைத்து வந்து தடை விதித்தார். பின்னர் ஆளுநரின் தலைமையில் குச்சவெளி பிரதேச செயலகத்தில் கூட்டமொன்று ஒழுங்குபடுத்தப்பட்டது. அதன் ஊடாக, பிக்குவுக்கு உரிய காணியை அளந்து கொடுத்துவிட்டு, எமது காணிகள் அளிக்கப்பட்டதையடுத்து, அங்கு விவசாயம் செய்ய முற்படுகின்றவேளையிலும் பௌத்த பிக்கு மீண்டும் தடைவிதித்து வருகிறார். சொந்த வயற்காணிகளை வைத்துக்கொண்டு அரிசியை விலைக்கு வாங்கி சாப்பிடும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். எனவே, திரியாய் விவசாயிகளான நாங்கள் தற்போது பதவி வகித்திருக்கும் ஜனாதிபதியை நம்புகின்றோம். இந்த அரசாங்கத்தில் எமது மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என நம்புகின்றோம்” என தெரிவித்தார். திரியாய் விவசாய சம்மேளனத்தின் தலைவர் அற்புதராஜன் டனுர்சன் கூறுகையில், “எமது திரியாய் மக்களுக்கு ஆத்திக்காடு – வளத்தாமலை பகுதியில் 125 வருட பழமை வாய்ந்த, பிரித்தானியரால் வழங்கப்பட்ட உறுதியுடைய காணி இருக்கிறது. எனினும், அந்த காணிகளை அரிசிமலை விகாரையின் விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் 2020ஆம் ஆண்டில் இருந்து இற்றை வரை அடாத்தாக பிடித்து ஆக்கிரமித்து வருகிறார். இந்நிலையில், புதிய அரசாங்கம் வந்த பின்னர் கிழக்கு ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய, 07.10.2024 அன்று மாவட்ட செயலகத்துக்கு எம்மையும் பௌத்த பிக்குவையும் மாவட்ட செயலாளர் அழைத்து, எங்களது ஆவணங்களை பரிசீலனை செய்து ஆவணங்கள் இருப்பவர்கள் விவசாயம் செய்யலாம் என தெரிவித்திருந்தார். ஆனால், மறுநாள் வயலுக்குச் சென்றபோது பௌத்த பிக்கு விவசாயிகளை விரட்டியடித்தார். பின்னர் 15.10.2024 அன்று குச்சவெளி பிரதேச சபையில் கூட்டம் நடைபெற்று, அதன் ஊடாக பௌத்த பிக்குவுக்குரிய காணி அளந்து கொடுக்கப்பட்டதோடு, மக்களுடைய காணிகளில் மக்கள் விவசாயம் செய்யலாம் என்றும் கூறப்பட்டது. எனினும் தொடர்ந்து அந்த பௌத்த பிக்கு எமது மக்களுடைய காணிகளில் விவசாயம் செய்வதற்கு தடையாக இருந்து வருகின்றார். பௌத்த பிக்கு எமது உறுதிக்காணிகளை அடாத்தாக பிடித்து குத்தகைக்கு கொடுத்து வருடாவருடம் இலட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றார். அத்துடன் மாடி வீடு கட்டி வசித்து வருகின்றார். ஆனால் எமது மக்கள் வாழ்வாதாரம் இன்றி வறுமையில் வாடி வருகின்றார்கள். எனவே எமது மக்களுக்கு புதிய அரசாங்கத்திலாவது நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். விவசாயி அற்புதராஜன் கௌசலா கூறுகையில், “எமது திரியாய் கிராமத்தில் ஆத்திக்காடு எனப்படுகின்ற வயல்பகுதி 880 ஏக்கர்களை கொண்டதாக காணப்படுகின்றது. இது எமது மூதாதையர் காலத்தில் இருந்து அதாவது 1900 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. எனக்கு இங்கு பரம்பரைக் காணி 10 ஏக்கர் இருக்கிறது. இந்த காணிகளில் 1990ஆம் ஆண்டு வரை விவசாயம் செய்து வந்தோம். பின்னர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களுக்கு சென்றதால் இந்தக் காணிகளில் செய்கையிட முடியாமல் போனது. 2002ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தில் மீள்குடியேற்றம் நடந்தது. தொடர்ந்தும் 2009ஆம் ஆண்டும் மீள்குடியேற்றம் நடந்தது. அதன் பின்னர், எமது ஜீவனோபாய தொழிலான விவசாயத்தை நம்பித்தான் நாங்கள் இந்த கிராமத்தில் மீள குடியேறி இருக்கிறோம். நீண்டகாலமாக பயிர் செய்யாமல் பற்றை வளர்ந்து கிடக்கும் காணிகளை துப்புரவு செய்வதற்காக எம்மிடம் இருக்கின்ற உறுதி மற்றும் அனுமதிப்பத்திரங்களை காணிபித்தும் வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் எம்மை விடவில்லை. ஆனால், பௌத்த பிக்கு எமது காணிகளை துப்புரவு செய்து விவசாயம் செய்வதற்கு திணைக்கள அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகின்றார்கள். அரிசிமலை பிக்கு மக்களுடைய பெருமளவான காணிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றார். அதில் 82 ஏக்கர் காணியை குச்சவெளி கமநல சேவை நிலையத்தின் கீழ் பதிவு செய்து பசளை பெற்றுக்கொண்டும் இழப்பீடுகள் பெற்றுக்கொண்டும் விவசாயம் செய்து வருகின்றார். திரியாயின் ஏனைய பகுதிகளை விட இந்த பகுதியில் மாத்திரம் உறுதி மற்றும் அனுமதிப்பத்திரங்கள் கொண்ட 800 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இருக்கின்றன. இவற்றை வனவள பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்கள் எம்மை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருகின்றன. இந்நிலையில் பௌத்த பிக்கு எமது காணிகளில் விவசாயம் செய்து வருகின்றார். ஆனால், நாங்கள் ஒரு நேரம் கூட ஒழுங்காக சாப்பிட முடியாமல் பட்டிணியால் வாடி வருகின்றோம்” என்றார். இவ்வாறாக, அப்பகுதி மக்கள் தமது காணிகளில் தமக்கு உரித்து இருந்தும், விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலையை வேதனையுடன் பகிர்ந்துகொண்டனர். திரியாய் கிராமமும் அதன் வரலாறும் திரியாய் கிராம சேவகர் பிரிவானது 11.26 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு 300 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் வசித்து வருகின்றார்கள். இதில் ஆண்கள் 442 பேர், பெண்கள் 364 பேர். திரியாய் கிராம சேவகர் பிரிவானது திரியாய், மரவடிச்சோலை, கல்லறாவ ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. திரியாய் கிராமம், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பழம்பெரும் கிராமமாகும். திருக்கோணேஸ்வரர் ஆலயத் திருப்பணிக்காக குளக்கோட்டு மன்னனால் திரியாயில் மக்கள் குடியேற்றப்பட்டு, 7 குளங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டதோடு கால்நடைகளும் கொடுக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்த வரலாற்றுப் பின்னணியை நோக்குகையில், திரியாயில் இருந்து திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு திரி, நெய் வழங்கப்பட்டு வந்ததால் “திரி - ஆய் - திரியாய்” ஆகிய சொற்கள் இணைந்து “திரியாய்” எனும் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, தாமரைத் தண்டில் இருந்து தயாரிக்கப்பட்ட திரியும், பசு நெய்யும் ஆலயத்துக்கு வழங்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது. இங்கு 1825ஆம் ஆண்டு பாடசாலையொன்று கட்டப்பட்டதாகவும், 1875ஆம் ஆண்டு பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாகவும் வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. 1985ஆம் ஆண்டு திரியாய் கிராமம் எரியூட்டப்பட்டது. அந்த சம்பவத்தில் 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவ்வேளை, கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு திரியாய் மக்கள் இடம்பெயர்ந்தனர். அந்த சூழ்நிலையில் தங்கள் காணிகளுக்கான ஆவணங்களை இழந்த மக்கள் இன்று தங்கள் காணிகளை உரிமை கோர முடியாமலும், காணிகளில் விவசாயம் செய்ய முடியாமலும் தவிக்கின்றார்கள். எனவே, அரசாங்கம் திரியாய் மக்களுடைய காணிகளுக்கான ஆவணங்களை வழங்கி அவர்களுடைய நிலங்களை விடுவித்து, அந்த நிலங்களில் அவர்கள் விவசாயம் செய்ய உதவ வேண்டும். நல்லிணக்கம், சகவாழ்வை ஏற்படுத்த வேண்டுமாயின், இன மற்றும் மதங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளையும் அரசு தடுக்க வேண்டும். https://www.virakesari.lk/article/210824
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
STRATEGIC TIMEOUT 18th Match (N), Mullanpur, April 05, 2025, Indian Premier League Rajasthan Royals 205/4 Punjab Kings (9/20 ov, T:206) 59/4 PBKS need 147 runs in 66 balls. Current RR: 6.55 • Required RR: 13.36 • Last 5 ov (RR): 28/1 (5.60) Win Probability:PBKS 2.75% • RR 97.25%
-
உலக நாடுகளை நடுங்கச் செய்யும் ட்ரம்பின் புதிய வரி; இலங்கை பொருட்களுக்கு 44% வரி!
அமெரிக்காவிற்கு மிகச்சிறந்த எதையாவது வழங்க முன்வரும் நாட்டுடன் வரி குறித்து பேச்சுவார்த்தை - டிரம்ப் 04 APR, 2025 | 12:35 PM புதிய வரிகள் குறித்து உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயார் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆனால் அந்த நாடுகள் பதிலுக்கு அற்புதமான தனிச்சிறப்பு வாய்ந்த எதையாவது வழங்க முன்வந்தால் மாத்திரமே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயார் என குறிப்பிட்டுள்ளார். உலகநாடுகள் அமெரிக்காவை தங்கள் நலன்களிற்காக பயன்படுத்துகின்றன என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் தான் அதனை தடுத்து நிறுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார். வரிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான பெரும்பலத்தை எங்களிற்கு தருகின்றன என அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாடும் எங்களை தொடர்புகொண்டுள்ளது. எவராவது அற்புதமான அல்லது மிகச்சிறந்த விடயத்தை அமெரிக்காவிற்கு வழங்குவதாக தெரிவித்தால் நாங்கள் பேச்சுவார்த்தைகளிற்கு தயார் என டிரம்ப் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/211119
-
ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் இணைந்து 3 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்
05 APR, 2025 | 05:40 PM ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து 3 அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர். அந்தவகையில், தேசிய மின் கட்டமைப்பில் 50 மெகாவாட் மின்சாரத்தை இணைக்கும் சம்பூர் சூரிய மின்சக்தித் திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய தம்புள்ளை விவசாயக் களஞ்சிய கட்டிடத்தொகுதி மற்றும் 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின் கலங்களை நிறுவும் திட்டம் திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்நாட்டிற்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் விஜயத்துடன் இணைந்து, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் நாட்டில் செயல்படுத்தப்படும் மூன்று அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு மற்றும் திறப்பு விழா இன்று சனிக்கிழமை (05) நடைபெற்றது. தேசிய மின் கட்டமைப்பில் 50 மெகாவாட் மின்சாரத்தை இணைக்கும் சம்பூர் சூரிய மின்நிலையத்தின் பணிகள் ஆரம்பித்தல், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய தம்புள்ளை விவசாய களஞ்சி கட்டிடத் தொகுதி மற்றும் இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின் கலங்களை நிறுவும் திட்டம் ஆகியவை இணையவழி (online) தொழில்நுட்பம் மூலம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டன. இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பிற்குப் பிறகு இரு தலைவர்களும் இதில் இணைந்துகொண்டனர். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது. இந்தியாவின் என்டீபீசீ(NTPC) லிமிடெட் மற்றும் இலங்கை மின்சார சபை (CEB) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான திருகோணமலை மின்சார நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படவுள்ள சம்பூர் சூரிய மின் நிலையம், நீண்டகால மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டத்தின் (LTGEP) கீழ் நிறுவப்படவுள்ள வடகிழக்கு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வலயத்தின் ஒரு பகுதியாகும். சம்பூர் சூரிய மின் நிலையத் திட்டம் இரண்டு கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இரண்டாம் கட்டம் 2027 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 500 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 50 மெகாவாட் மின்சாரம் நாட்டின் தேசிய மின்சார விநியோகத்தில் இணைக்கப்படும். N-type TOPCon solar cells என்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறுவப்படும் இந்த திட்டம், வலுசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் என்றும், நாட்டின் வலுசக்தி அமைப்பை புதைபடிவ எரிபொருட்களை நம்புவதற்குப் பதிலாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை நோக்கி மாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, சம்பூர் சூரிய மின்நிலையத் திட்டம் ஆண்டுதோறும் வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்படும் காபனீரொக்சைட் அளவை சுமார் 02 மில்லியன் டொன்கள் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம், பசுமையான எதிர்காலத்தை நோக்கிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கிறது. அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளை சுமார் 40% குறைத்தல், விவசாயப் பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்துதல், நுகர்வோருக்கு தரமான உணவை வழங்குதல் மற்றும் விவசாய நிலைபேற்றுத்தன்மையை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன், 5,000 மெட்ரிக் டொன் கொள்ளளவும், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ள தம்புள்ளை விவசாய களஞ்சிய கட்டிடத்தொகுதி (குளிர் கிடங்கு) இன்று திறந்து வைக்கப்பட்டது. பல்வேறு பயிர்களுக்கான உகந்த சேமிப்பு முறைகள் குறித்த ஆராய்ச்சியை எளிதாக்குவதற்காக இந்த களஞ்சியத் தொகுதியில் ஆறு அறைகள் நிறுவப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு அறையும் வெவ்வேறு காலநிலை நிலைமைகளை உருவகப்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முதலில் நிறுவப்படும் இந்தக் களஞ்சிய கட்டிடத் தொகுதியின் மொத்தச் செலவு 524 மில்லியன் ரூபாவாகும். இதில், 300 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்தின் நன்கொடையாவதோடு, இதற்காக இலங்கை அரசாங்கம் 224 மில்லியன் ரூபாய்களை செலவிடுகிறது. 5,000 மதஸ்த் தலங்களின் கூரைகளில் சூரிய மின் கலங்களை நிறுவும் திட்டம், நாடு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாகவும், அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட 5,000 மதஸ்த் தலங்களில் சூரிய மின் கலங்களை நிறுவும் திட்டமாகும். இந்த திட்டத்தில் இந்திய அரசாங்கம் 17 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது, மேலும் இலங்கை மின்சார சபை, இலங்கை நிலைபெறுதகு வலு சக்தி அதிகாரசபை மற்றும் இலங்கை மின்சார நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன. அதன்படி, பௌத்த, இந்து, முஸ்லிம், கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களின் கூரைகளில் 5 kW கொள்ளளவைக் கொண்ட 5,000 சூரிய மின் கலங்கள் நிறுவப்படும். இது நாட்டின் வலுசக்திக் கட்டமைப்பில் 25 மெகாவாட் சூரிய மின்சக்தி திறனை இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் செலவு குறைந்த, நிலைபேறான மற்றும் நம்பகமான வலுசக்தி அமைப்பை நோக்கிய அரசாங்கத்தின் நோக்கத்தை வலியுறுத்துகிறது. https://www.virakesari.lk/article/211248
-
சரிந்த அமெரிக்க பங்குச் சந்தை – 'இப்போதே பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள்' எச்சரிக்கும் சிறு வணிகங்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீனா வரி விதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ள அமெரிக்கப் பங்குச் சந்தைகள் கட்டுரை தகவல் எழுதியவர், நடாலி ஷெர்மன் பதவி, பிபிசி, நியூயார்க் 5 ஏப்ரல் 2025, 12:46 GMT அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு சீனா பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தை தீவிரமாக சரிந்தது. இது நீடித்த வர்த்தகப் போர் நடைபெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி, உலக பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயத்தையும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் மூன்று முக்கிய பங்குச்சந்தை குறியீடுகளும் 5 சதவிகிதத்துக்கும் மேலாக சரிந்தன. இதில் எஸ்&பி 500 கிட்டத்தட்ட 6 சதவிகிதம் சரிந்தது. இது 2020 க்குப் பிறகு அமெரிக்க பங்குச் சந்தை சந்தித்துள்ள மிக மோசமான வாரமாகும். பிரிட்டனில், ஃஎப்டிஎஸ்ஈ 100 (FTSE) கிட்டத்தட்ட 5 சதவிகிதம் சரிந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக இது பார்க்கப்படுகின்றது. அதே நேரத்தில், ஆசிய சந்தைகளும் சரிவைச் சந்தித்துள்ளன. மேலும், ஜெர்மனி மற்றும் பிரான்சில் உள்ள பங்குச் சந்தைகளும் இதேபோன்ற கடுமையான சரிவை எதிர்கொண்டன . பங்குச் சந்தை வீழ்ச்சி குறித்து எழுந்துள்ள கவலைகளை நிராகரித்த டிரம்ப், அமெரிக்க தொழிலாளர் சந்தை வலுவாக இருக்கிறது என்றார். மேலும், "துணிவுடன் இருங்கள்," என்றும், "நாம் தோற்க முடியாது" என்றும் சமூக ஊடகத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து நாடுகளின் பொருட்களுக்கும் 10% புதிய வரியை டிரம்ப் விதித்துள்ளார். அத்துடன் அமெரிக்காவின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளாக சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் இன்னும் அதிக அளவிலான வரியை எதிர்கொள்கின்றன. இதனால் உலக பங்குச்சந்தை பெரும் இழப்பை சந்தித்துள்ளது. இந்த வரி விதிப்பு நடவடிக்கைகளில் சில சனிக்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், 1968க்குப் பிறகு அமெரிக்காவில் நடைமுறைக்கு வரவுள்ள மிகப்பெரிய வரி உயர்வு இது என்றும் கூறுகின்றனர் . இந்த நடவடிக்கைகள் வர்த்தகத்தை குறைக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் அவை பல்வேறு நாடுகளை பொருளாதார மந்தநிலைக்குள் தள்ளக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர். டிரம்பின் வரி விதிப்பு இந்திய ஐடி துறையை பாதிக்குமா? ஆனந்த் ஸ்ரீநிவாசன் விளக்கம்5 ஏப்ரல் 2025 மனிதர்களே இல்லை: பென்குயின்கள் மட்டும் வசிக்கும் தீவுகளுக்கும் வரி விதித்த டிரம்ப்4 ஏப்ரல் 2025 டிரம்பின் வரிப் போர் இந்தியாவில் உற்பத்தித் துறைக்கு வழங்கியுள்ள புதிய வாய்ப்புகள்4 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளிக்கிழமையன்று சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு 34 சதவிகித இறக்குமதி வரி விதித்ததுடன், முக்கியமான கனிமங்களின் ஏற்றுமதியையும் கட்டுப்படுத்தியது. சில அமெரிக்க நிறுவனங்களை தனது வணிகத் தடை பட்டியலில் சேர்த்து, டிரம்பின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்தது. மேலும் டிரம்பின் நடவடிக்கைகள், "அழுத்தம் கொடுப்பதாகவும்", சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாகவும் சீனா விவரித்தது. அதனையடுத்து, பேச்சுவார்த்தைக்கான ஆர்வம் குறித்து அமெரிக்க அரசு முரண்பட்ட சமிக்ஞைகளை வழங்கியிருந்தாலும், மற்ற நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு உடன்பாடுக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதற்காக நம்பிக்கையுடன் இருக்கின்றன. பதிலடி வழங்க திட்டமிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் மரோஷ் செஃப்கோவிச், வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிகாரிகளுடன் இரண்டு மணி நேரம் "வெளிப்படையான" பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார். "ஐரோப்பிய ஒன்றியம் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் நடத்த உறுதியாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் எங்களது நலன்களை பாதுகாக்கவும் தயாராக உள்ளது, நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்'' என அவர் தெரிவித்துள்ளார். டிரம்பின் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு அவர் தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளுடன் ஒத்துப்போகின்றன. ஆனால் அவை சில ஆய்வாளர்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் பரவலான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு பிறகு பங்குச் சந்தைக்கு ஏற்பட்ட மிக மோசமான வாரமாக இது அமைந்துள்ளது. ஆசியாவில் உள்ள விநியோகஸ்தர்களை பெரிதும் நம்பியிருந்த ஆப்பிள் மற்றும் நைக் போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. ஆனால், பொதுவாக இறக்குமதி வரிகளின் நேரடி தாக்கத்தை எதிர்கொள்ளாத துறைகளாகக் கருதப்படும், நுகர்வோர் அத்தியாவசியப் பொருட்கள், சுகாதார சேவைகள் மற்றும் மின்சாரம், தண்ணீர், எரிவாயு, இணையம் போன்ற துறைகளும் வெள்ளிக்கிழமையன்று சரிவை எதிர்கொண்டன. 100 ஆண்டுகளில் இல்லாத அளவு வரி விதித்த அமெரிக்கா – 7 கேள்விகளும் பதில்களும்3 ஏப்ரல் 2025 இந்திய ஆடை உற்பத்தி துறை டிரம்பின் வரி விதிப்பால் லாபம் அடைவதற்கான வழிகள்4 ஏப்ரல் 2025 டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் உலகளவில் ஏற்படப் போகும் பாதிப்புகள்3 ஏப்ரல் 2025 டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளின் பாதிப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள சில வாரங்கள் ஆகலாம் என்று எச்சரித்த அமெரிக்காவின் ஹாரிசன் இன்வெஸ்ட்மென்ட்ஸில் ஆராய்ச்சி மற்றும் அளவியல் உத்திகள் பிரிவின் தலைவராக உள்ள மைக் டிக்சன், "வெளிப்படையாகக் கூறினால், வர்த்தகர்களின் தற்போதைய மனநிலை மிகவும் மோசமாக உள்ளது" என்று கூறினார். "நாங்கள் இப்போது உண்மையிலேயே கவலைப்படுவது காலை 6 மணியளவில் [சீனா பதிலடி கொடுத்தபோது] நடந்ததைக் குறித்துதான். அப்படிப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகள் இன்னும் எத்தனை உள்ளன? என்பதே கேள்வியாக உள்ளது" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐரோப்பிய ஒன்றிய தயாரிப்புகள் 20% வரியை எதிர்கொள்கின்றன ஜேபி மோர்கன் முதலீட்டாளர்களுக்காக வெளியிட்ட குறிப்பில், இந்த ஆண்டில் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு 40 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சில முதலீட்டாளர்கள் இழப்புகளைக் குறைத்து மதிப்பிட்டனர். கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்க பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்ததைத் தொடர்ந்து இப்போதைய சரிவுகள் ஏற்பட்டுள்ளன என்று அவர்கள் குறிப்பிட்டனர். "சந்தையில் நாம் காணும் இந்த மாற்றங்கள் கடுமையானவை. ஏனென்றால் ஒரு விஷயம் மேலே செல்லும் வேகத்தைவிட, அது கீழே சரிவது மிக விரைவாக நடக்கிறது," என்று கேப்வெல்த் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் பக்லியாரா கூறினார். உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்கா ஒரு "பெரிய மறுசீரமைப்பு" நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிப்பதாகவும், ஆனால் அந்த முயற்சி அவசியமானது என்றும் அவர் கூறினார். வெள்ளிக்கிழமை பேசிய அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பவல், மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் வலுவான வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதை பிரதிபலிக்கும் சமீபத்திய தரவுகளை மேற்கோள்காட்டி, பொருளாதாரம் "உறுதியாக" இருப்பதாக தான் கருதுவதாகக் கூறினார். ஆனால் அதிக அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதையும் அவர் ஒப்புக்கொண்டார். "எதிர்பார்த்ததை விட வரிகள் அதிகமாக உள்ளன, கிட்டத்தட்ட அனைத்து முன்னறிவிப்பாளர்களும் கணித்ததை விட அதிகமாக உள்ளன என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்," என்று பவல் கூறினார். வளர்ச்சி மெதுவாக நடைபெறும், மறுபுறம் விலைகள் உயரும் வாய்ப்புகள் அதிகம் என்று அவர் எச்சரித்தார். படக்குறிப்பு,பாட் மஸ்கரிடோலோ நியூ ஜெர்சியில் உள்ள ஒரு சிறிய கடையின் உரிமையாளராக உள்ள பாட் மஸ்கரிடோலோ, இந்த வரி விதிப்பு நடவடிக்கைகள் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனது விட்டு உபயோக பொருட்களின் கடையான ஜேக்கப்சன் அப்ளையன்ஸை மூட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறினார். தேவையான பொருட்களை இப்போது வாங்கிக் கொள்ளுமாறு அவர் வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும், "மாத இறுதியில் விலை என்னவாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது," என்றும் அவர் கூறினார். குளிர்சாதன பெட்டிகள் போன்ற பொருட்களின் விலைகள் 30 சதவிகிதம் அல்லது 40 சதவிகிதம் அதிகரிக்கலாம் என்று அவர் எதிர்பார்க்கிறார். வியாழக்கிழமை கடுமையான சரிவைச் சந்தித்த நைக் மற்றும் பிற சில்லறை ஆடை விற்பனையாளர்களின் பங்குகள் வெள்ளிக்கிழமையன்று ஓரளவு மீண்டன. வியட்நாம் அதிபருடம் "மிகவும் பயனுள்ள தொலைபேசி அழைப்பு" நடந்ததாக டிரம்ப் கூறியதையடுத்து, உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கை இந்த பங்குகளுக்கு ஊக்கமளித்தது. ஆனால் சந்தையின் பிற பகுதிகள் தொடர்ந்து மந்தமாக இருந்தன. உற்பத்திக்காக சீனாவைப் பெரிதும் சார்ந்திருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமையன்று 7 சதவிகிதத்துக்கும் மேல் சரிந்தன. புதன்கிழமையிலிருந்து இதுவரை, ஐபோன் தயாரிப்பாளர்களின் சந்தை மதிப்பு சுமார் 15 சதவிகிதம் குறைந்துள்ளது. இழப்புகள் தொடர்ந்த நிலையில், சில வெள்ளை மாளிகை ஆதரவாளர்கள் கூட இந்த நடவடிக்கைகளை விமர்சிக்கத் தொடங்கினர். வரிகள் தொடர்பான ஒரு பாட்காஸ்டில், குடியரசுக் கட்சி செனட்டர் டெட் குரூஸ், டிரம்பின் நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு நன்மை கிடைக்க வழிவகுத்தாலும், அதே நேரத்தில் "மிகுந்த அபாயங்கள்" உள்ளதாகவும் எச்சரித்தார். -இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgq6yv7774o
-
இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் சீனா அதிருப்தியடையும் - அரசாங்கத்துக்கு வீரசேகர எச்சரிக்கை
இலங்கை - இந்தியவுக்கு இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தால் இறையாண்மைக்கு பாதிப்பில்லை; பாதுகாப்பு செயலாளர் 05 APR, 2025 | 02:17 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கை - இந்தியவுக்கு இடையிலான புதிய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளால் இருநாடுகளின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்று பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புதிய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து தெளிவுப்படுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை - இந்திய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊடாக இரு நாடுகளினதும் பாதுகாப்பு உறவுகள் வலுப்பெறும் என்பதுடன், பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்புகள், அறிவியல் மற்றும் தகவல் பரிமாற்றம் மேலும் விஸ்தரிக்கப்படும். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு துறைசார்ந்த ஒத்துழைப்புகள் இராணுவ மற்றும் கடற்படை கூட்டுப்பயிற்சிகள், செயலமர்வுகள் போன்ற திட்டங்கள் ஊடாக வலுப்பெற்றுள்ளன. இதனை தவிர வருடத்திற்கு இலங்கை பாதுகாப்பு படைகளின் 750பேருக்கு சிறப்பு பயிற்சிகளை இந்தியா வழங்குகின்றது. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகள் ஊடாக பல்வேறு நன்மைகள் இலங்கைக்கு கிடைக்கின்றன. இருநாடுகளுக்குமிடையில் 2023ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாதுகாப்பு கலந்துரையாடலில், இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேலும் விரிவுப்படுத்தல் மற்றும் செயற்றிறன் மிக்கதாக்குவது போன்ற விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. இதன்போதே புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. இதன்பிரகாரம் ஏனைய நாடுகளுடன் இலங்கையின் இராஜதந்திர உறவுகள் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் கடந்த ஜனவரி மாதத்தில் சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் குறிப்பிடப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைய இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆழமாக மீளாய்வு செய்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதியும் எடுக்கப்பட்டது. எவ்வாறாயினும் இந்தியாவுடன் மேற்கொள்ளப்படுகின்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தினால் இருநாடுகளின் தேசிய கொள்கைகளுக்கோ அல்லது சட்ட கட்டமைப்பிற்கோ எவ்விதமான அழுத்தங்களும் ஏற்படாது. இலங்கை - இந்திய புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளின்போது, இருதரப்பு தேசிய மற்றும் இராணுவ சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடணம் என்பவற்றை பாதுகாப்பதில் இருநாடுகளும் உறுதியுடன் உள்ளன. எனவே இருநாடுகளின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தாது, உள்ளக விடயங்களில் தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் ஏற்படுத்தப்படாதவாறு ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களை பாதுகாப்பதற்கு இருநாடுகளும் ஒப்பந்தத்தின் ஊடாக ஒப்புதல் அளித்துள்ளன. எனவே இலங்கை - இந்திய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊடாக இரு நாடுகளினதும் பாதுகாப்பு உறவுகள் வலுப்பெறும் என்பதுடன், பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்புகள், அறிவியல் மற்றும் தகவல் பரிமாற்றம் மேலும் விஸ்தரிக்கப்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்குமென முன்மொழியப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினர் மூன்று மாத முன் அறிவிப்பு மூலம் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளும் உரிமையும் உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/211221
-
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே பரிமாறப்பட்ட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இவை தான்!
05 APR, 2025 | 05:28 PM இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கைச்சாத்திடப்பட்ட 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பரிமாற்றம் இன்று சனிக்கிழமை (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்றது. இந்திய - இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் வலுசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய துறைகள் மற்றும் நன்கொடை உதவிகள் தொடர்பில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றப்பட்டன. அதன்படி, 01- மின்சார இறக்குமதி/ஏற்றுமதிக்கான உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்ட (HDVC) இடை இணைப்பை செயல்படுத்துவதற்கான இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது. 02- டிஜிட்டல் பரிமாற்றத்திற்காக மக்கள் மட்டத்தில் செயல்படுத்தப்படும் வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது. 03- திருகோணமலையை வலுசக்தி மையமாக மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்காக இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால, இந்தியவெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத் தூதுவர் காலித் நசார் அலமேரி ஆகியோர் இந்தப் பரிமாற்றத்தை மேற்கொண்டனர். 04- - பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். சம்பத் துய்யகொந்த மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது. 05- இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சிற்கும் இலங்கை சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சிற்கும் இடையிலான சுகாதாரம் மற்றும் மருந்துத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது. 06- மருந்து விதிமுறைகள் ஒத்துழைப்புக்காக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சின் மருந்து விதிமுறைகள் ஆணைக்குழுவிற்கும் இலங்கையின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது. 07- கிழக்கு மாகாணத்தில் பல்துறை நன்கொடை உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட இந்தியக் தூதுக்குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/211247
-
பொது வாக்கெடுப்பு நடத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்-விஜய்!
எவ்வித சமரசமும் இன்றி கச்சதீவை 99 வருட குத்தகைக்கு பெற வேண்டும்; விஜய் வலியுறுத்தல் “கச்சதீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இலங்கை செல்லவுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் இடைக்காலத் தீர்வு பெற பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு- “கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு. ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும். மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை. மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம், தமிழ்நாடு அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது. 1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், ஆட்சி அதிகாரப் பசி கொண்ட அன்றைய ஆளும்கட்சியான தி.மு.க.தான். 1999 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசுகள் இயங்கியதே தி.மு.க.வின் தயவினால்தான். அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது. அன்று முதல் இன்றுவரை ஒன்றிய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மாயாஜால வித்தை. அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் தி.மு.க. அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது. இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன. குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்? கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது. எப்போதும் மீனவ நண்பனாகவே, உண்மையான உறுதியுடனும் உணர்வுடனும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம், ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்தப் போக்கைத் தீர்க்கமாகக் கண்டிக்கிறது. கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு. நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும். மாண்புமிகு ஒன்றிய பிரதமர் திரு.மோடி அவர்கள், கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும். இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் அமைதியும் நிம்மதியும் நிரந்தரமானதாக இருக்க பொது வாக்கெடுப்பு மட்டுமே ஒரே தீர்வு. நம் கழகத்தின் பொதுக்குழுத் தீர்மானமும். தீர்க்கமான நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பே. இந்நிலையை நோக்கி நகர, சர்வதேசச் சமூகத்தை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும். போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த, இலங்கை அரசுக்கு ஒன்றிய பிரதமர் அவர்கள், நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.இலங்கை செல்லும் நம் மாண்புமிகு ஒன்றிய பிரதமர் அவர்கள், ‘கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்’ என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும். நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒன்றிய பிரதமரின் இந்த இலங்கைப் பயணம் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் வலியுறுத்துகிறேன். சார்பாக, சமரசமின்றி இவை அனைத்தையும் வலியுறுத்துகிறேன்” என தவெக தலைவர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/316878
-
இலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
'இலங்கை மித்ர விபூஷண' விருது எனக்கு வழங்கப்பட்டமை பெருமைக்குரிய விடயம் - இந்திய பிரதமர் மோடி 05 APR, 2025 | 07:02 PM இலங்கை மக்களுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் மித்ர விபூஷண விருது தனக்கு வழங்கப்பட்டமை தனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாகும் என்றும், இது தனக்கு மாத்திரமன்றி, இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் கிடைத்த விருது என்றும் அது குறித்து ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும், இலங்கை மக்களுக்கும் தனது நன்றியை தெரிவிப்பதாகவும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கருத்தை வெளியிட்டார். இந்தியாவும் இலங்கையும் வரலாற்றுச் சிறப்புமிக்க உறவையும் ஆழமான நட்பையும் கொண்டிருப்பதாகவும், 2019 ஆம் ஆண்டில் மேற்கொண்ட விஜயம் மிகவும் உணர்ச்சிகரமான நேரத்தில் இடம்பெற்றது என்றும் சுட்டிக்காட்டிய பிரதமர், பிரதமராகப் பதவியேற்ற பிறகு இது இலங்கைக்கு தாம் மேற்கொண்ட 04 வது பயணம் என்றும் தெரிவித்தார். மக்களின் துணிச்சல் மற்றும் தைரியம் பற்றி தாம் அறிந்திருப்பதால், இலங்கை வலுவாக மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்று தான் நம்புவதாகவும் இதன்போது இந்தியப் பிரதமர் தெரிவித்தார். இலங்கை முன்னேற்றப் பாதைக்குத் திரும்புவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். கொளரவமான நண்பராக இந்தியா தனது கடமையை நிறைவேற்றுவது பெருமைக்குரிய விடயம் என்றும், 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல், கொவிட் நோய்த்தொற்று மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அனைத்து சூழ்நிலைகளிலும் தனது அரசாங்கம் இலங்கை மக்களுடன் இணைந்து நின்றுள்ளதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார். “திருவள்ளுவரின்” திருக்குறளை மேற்கோள் காட்டி, பிரதமர் நரேந்திர மோடி, உண்மையான நண்பனையும் அவனது நட்பையும் தவிர வேறு எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று சுட்டிக்காட்டினார். அதன்படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்பின் பிரதிபலிப்பாகும் என்றும், இலங்கை ஜனாதிபதியை தனது முதல் வெளிநாட்டு நண்பராகப் பெறும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையிலும், மஹாசாகர் நோக்கிலும் இலங்கைக்கு சிறப்பு இடம் உள்ளதாகவும் கூறிய பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சம்பூர் சூரிய மின்சக்தி திட்டம் முதல் திருகோணமலையை வலுசக்தி மையமாக நிறுவுவது வரை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் நன்மைகள் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் என்றும் இந்தியப் பிரதமர் மேலும் தெரிவித்தார். உயர் மின்னழுத்த மின் இணைப்பு தொடர்பான ஒத்துழைப்பு இலங்கைக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் என்றும், இலங்கையில் உள்ள மதத் தலங்களில் 5,000 சூரிய மின் கலங்களை நிறுவுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றும், மக்களின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்காக இலங்கைக்கு 2.4 பில்லியன் ரூபாய் அன்பளிப்பு வழங்கயிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் நன்மைக்காக இலங்கையின் மிகப்பெரிய விவசாய களஞ்சியக் கட்டிடத்தொகுதியை நிர்மாணிக்க இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியதையும் சுட்டிக்காட்டினார். நாளைய தினம் நவீனமயமாக்கப்பட்ட மஹவ - ஓமந்தை ரயில் பாதை மற்றும் மஹவ - அநுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாகவும், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கும், இலங்கையின் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 700 இளம் தலைவர்களுக்கு நல்லாட்சி பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சிகளுக்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் “சப்கா சாத் சப்கா விகாஸ்" நோக்குக்கு அமைய, அயல் நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அதன்படி, இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பின் போது வட்டி விகிதங்களைக் குறைக்க தீர்மானித்திருப்பதாகவும், அதனூடாக இலங்கை மக்களுக்கு சலுகை மற்றும் வழி கிடைக்கும் என்றும் இந்தியப் பிரதமர் கூறினார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பல நூற்றாண்டுகளாக ஆன்மிக மற்றும் உணர்வுபூர்வமான உறவு இருப்பதாகவும், அதை உறுதிப்படுத்தும் வகையில், 1960ஆம் ஆண்டு குஜராத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தரின் நினைவுச் சின்னங்களை தரிசிக்க எதிர்பார்ப்பதோடு அதனை இலங்கைக்கு வழிபாட்டுக்காக கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார். அத்துடன், திருகோணமலை திருக்கோணேஸ்வரம், அனுராதபுரம் புனித நகரம், சீதாஎலிய கோவில் போன்ற சமய வழிபாட்டுத் தலங்களின் மறுசீரமைப்பிற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். இலங்கைக்கான தனது அரச விஜயத்தின் போது உயர் அரச கௌரவத்துடன் வரவேற்றமைக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/211214
-
இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் : பிரதமர் மோடி
05 APR, 2025 | 01:36 PM இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (05) கைச்சாத்திடப்பட்டதையடுத்து பிரதமர் மோடிக்கு 'இலங்கை மித்ர விபூஷண' விருது வழங்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார். இந்திய பிரதமர் மோடி மேலும் தெரிவிக்கையில், மீனவர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் நாம் முன்னேற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அந்த வகையில் இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். 2019 பயங்கரவாதத் தாக்குதல், கொவிட் தொற்று, சமீபத்திய பொருளாதார நெருக்கடி என ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் இலங்கை மக்களுடன் நாம் நின்றுள்ளோம். எமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையிலும், தொலைநோக்குப் பார்வையான 'மகாசாகர்' ஆகிய இரண்டிலும் இலங்கைக்கு சிறப்பு இடம் உண்டு என பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/211213