Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்பை பங்குச் சந்தையின் மூலதன மதிப்பு ஜனவரி 21ஆம் தேதியன்று ரூ.7 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்தது. (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் இந்திய பங்குச் சந்தையில், கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பங்குகளை வாங்குவோரைவிட விற்பவர்களின் அளவு மிக அதிகமாக இருந்துள்ளது. இதை முன்னிட்டு, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டுமே கடும் சரிவைக் கண்டுள்ளது. இதன் விளைவாக மும்பை பங்குச் சந்தையின் மூலதன மதிப்பு ஜனவரி 21-ஆம் தேதியன்று ரூ.7 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நேரத்தில் நிகழ்ந்துள்ள இந்த வீழ்ச்சி முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு இந்திய பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? தனிநபர் முதலீட்டாளர்கள் இதை எப்படிப் பார்ப்பது? இப்போதைய சூழ்நிலையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா? இதுகுறித்து விரிவாகப் புரிந்துகொள்ள பொருளாதார நிபுணர்களிடம் பேசினோம். அவர்கள் அளித்த விளக்கங்களை இனி பார்ப்போம். வங்கியில் சேமிப்பதை விட்டு பங்குச் சந்தை முதலீட்டிற்கு மாறும் இந்தியர்கள் - லாபமும் அபாயமும் ரூ.50 லட்சம் கோடி இழப்பு: இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு 5 முக்கிய காரணங்கள் - இப்போது முதலீடு செய்யலாமா? பங்குச்சந்தையில் சில நிமிடங்களில் பல கோடிகளை குவித்த 'கேதன் பரேக்' சிக்கியது எப்படி? பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு டிரம்ப் காரணமா? பங்குச் சந்தையில் காணப்படும் இந்த வீழ்ச்சி கடந்த செப்டம்பர் முதலே காணப்படுவதாகக் கூறுகிறார் பொருளாதார நிபுணர் வ.நாகப்பன். அவரது கூற்றுப்படி, உச்சத்தில் இருந்த பங்குச் சந்தை கடந்த இரண்டு மாதங்களாக இதேபோன்ற வீழ்ச்சியைக் கண்டுள்ளது. அதோடு, நான்கு ஆண்டுகளாக சந்தை உயர்ந்துகொண்டே இருந்ததாகவும், அது மீண்டும் குறையும் என்பது கணிக்கப்பட்டதே என்றும் அவர் கூறுகிறார். "நிறுவனங்களின் செயல்பாடு ஆரோக்கியமாக உள்ளது. ஆனால், அதீதமாக உயர்ந்துகொண்டிருந்த மதிப்புக்கு ஈடாக இருக்கவில்லை. அதன் விளைவாக சந்தையில் ஒரு திருத்தம் தேவைப்பட்டது. அந்தத் திருத்தம்தான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. உதாரணமாக, 100 ரூபாய் மதிப்புள்ள ஒரு பங்கின் விலை 200 ரூபாய் வரைக்கும் உயர்ந்திருந்தது. அது இப்போது, அதற்குரிய விலையை நோக்கி வருகிறது. அதற்கும் கீழாக, அதாவது 100 ரூபாய் பங்கு 50 ரூபாய்க்கு வீழ்ந்தால்தான் கவலைப்பட வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை," என்கிறார் நாகப்பன். மேலும், செப்டம்பரில் சந்தையின் வீழ்ச்சி தொடங்கியது முதல், அமெரிக்காவில் அதிபர் தேர்தல், இப்போது டிரம்பின் பதவியேற்பு என அனைத்தும் தற்செயலாக ஒரே நேரத்தில் நடப்பதாகவும், நேரடியாக அதற்கும் இந்திய பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கும் தொடர்பில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார். சீனா தொடர்பான பார்வையை இலங்கை ஜனாதிபதி மாற்றிக் கொண்டுள்ளாரா? என்ன நடக்கிறது?22 ஜனவரி 2025 ஏமன்: கேரள செவிலியரை இரான் அல்லது சௌதி அரேபியாவால் காப்பாற்ற முடியுமா?19 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இப்போதைய நிலவரப்படி, "ஐபிஓ பங்குகள் வாங்கப்படுவது குறையவில்லை" என்கிறார் பொருளாதார நிபுணர் நாகப்பன். (கோப்புப் படம்) அதேவேளையில், இரண்டுக்கும் இடையே மொத்தமாக சம்பந்தமே இல்லை எனப் புறந்தள்ளிவிடவும் முடியாது என்பதையும் குறிப்பிட்டார் நாகப்பன். "டாலருக்கு மாற்று நாணயத்தைப் பயன்படுத்தினால், 100% வரி விதிப்பதாக டிரம்ப் மிரட்டியுள்ளார். ஒருவேளை செய்துவிடுவாரோ என்ற அச்சத்தின் தாக்கமும் இருப்பதால் சந்தை வீழ்ச்சியின் விகிதம் சற்று கூடுதலாக இருக்கிறது," என்று குறிப்பிட்டார். இருப்பினும், இந்த வீழ்ச்சியை பங்குச் சந்தை அதன் நிலைமையைச் சரிசெய்துகொள்ளும் ஒரு நிலை எனக் குறிப்பிடும் அவர், அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு இது தொடரும் என்றாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றார். "இப்போதைய நிலவரப்படி, ஐபிஓ பங்குகள் அதிகமாக வாங்கப்படுவது குறையவில்லை. ஆகவே கவலைப்படும் அளவுக்கு இதனால் எந்த அபாயமும் இல்லை. ஒருவேளை இந்த நிலைமை ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டிருந்தால் அச்சப்பட்டிருக்க வேண்டும். சந்தையே ஸ்தம்பித்து போயிருக்கும். ஏனெனில், அப்போது சுமார் நான்கு கோடி டி-மாட் கணக்குகளே இருந்தன. ஆனால் இப்போது சுமார் 18 கோடி டி-மாட் கணக்குகள் இருக்கின்றன," என்று கூறுகிறார் நாகப்பன். இப்போது, மியூச்சுவல் ஃபண்ட், எஸ்.ஐ.பி போன்றவற்றில் முதலீடு செய்யும் மக்களின் அளவு அதிகரித்துள்ளதால், இதுவோர் ஆரோக்கியமான சந்தைத் திருத்தம் மட்டுமே என்கிறார் அவர். ''அதீதமாக மதிப்பளிக்கப்பட்ட பங்குகள் அவற்றின் உண்மை மதிப்பை நோக்கி இறங்கும் நேரம். இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது," என்று குறிப்பிட்டார். எரிமலை வெடிப்பால் நகரமே அழிந்த போது இந்த ஆண், பெண் கைகளில் பற்றி இருந்தது என்ன? 2,000 ஆண்டுக்கு முந்தைய அற்புத வாழ்க்கை3 மணி நேரங்களுக்கு முன்னர் புதுக்கோட்டை: கல்குவாரிக்கு எதிராக புகார் அளித்தவர் லாரி ஏற்றி கொலையா? என்ன நடந்தது?22 ஜனவரி 2025 மத்திய பட்ஜெட் நெருங்கி வருவது காரணமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சந்தையின் வளர்ச்சி சீராக இருக்க, உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் நுகரப்பட வேண்டும் என்கிறார் ராஜேஷ். (கோப்புப் படம்) பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு டொனால்ட் டிரம்ப் அதிபரானது காரணமில்லை என்ற நாகப்பனின் கூற்றை ஆமோதிக்கிறார் பொருளாதார நிபுணர் கே.ராஜேஷ். அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய ஐந்து மாதங்களில் எப்போதுமே சந்தை வளர்ச்சி குறைவாக இருப்பது இயல்புதான் என்கிறார் அவர். அதோடு, இப்போதைய சூழலில் மத்திய பட்ஜெட்டுக்காக முதலீட்டாளர்கள் காத்திருப்பதாகவும் ராஜேஷ் குறிப்பிட்டார். "பட்ஜெட்டில் வரி விதிப்பு குறித்த அறிவிப்புகளைப் பொருத்தே முதலீட்டாளர்களின் முடிவும் இருக்கும். இந்திய அரசு அதிகமாக வரிகளை விதித்துக்கொண்டே இருந்தால் அதன் தாக்கம் சந்தையில் தெரியும். சந்தையின் வளர்ச்சி சீராக இருப்பதற்கு, நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் நுகரப்பட வேண்டும். அதற்கு மக்கள் கைகளில் பணம் புழங்க வேண்டும். மக்கள் கைகளில் அதிக பணம் புழங்க வேண்டுமெனில், விலைவாசி குறைவாக இருக்கவேண்டும் அல்லது வருமானம் அதிகமாக இருக்க வேண்டும் அல்லது வரி குறைவாக இருக்க வேண்டும்," என்று விளக்கினார் ராஜேஷ். ஆனால், இந்த மூன்றிலுமே பயன் தரும் சூழல் இல்லாத காரணத்தால், வரக் கூடிய பட்ஜெட்டில் என்ன மாற்றம் நிகழப் போகிறது என்ற கேள்வியுடன், சந்தையில் முதலீடு செய்வது குறித்த தயக்கத்துடன் முதலீட்டாளர்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார் ராஜேஷ். ஒருவேளை பட்ஜெட் மாற்றங்கள் முதலீடு செய்யும் பணத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளினால், தங்கள் பணத்தை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் மக்கள் இப்போது தயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். பெண்ணை மகிழ்விக்க பரிசு மட்டுமின்றி, உயிரையே தரும் ஆண் - பூச்சி, பறவைகளில் என்ன நடக்கிறது?21 ஜனவரி 2025 ஒரே இரவில் 7 கோள்கள் வானில் தெரியும் அதிசயம் - எப்போது, எப்படி பார்ப்பது? பூமியில் என்ன நடக்கும்?3 மணி நேரங்களுக்கு முன்னர் தனிநபர் முதலீட்டாளர்களுக்கு பயன் தருமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள முதலீடுகளின் நிலை லாபகரமாக இருந்தால், அவற்றை இப்போதைக்கு விற்றுவிடுவது நல்லது, இல்லையெனில் மார்ச் மாதம் வரை பொறுத்திருக்கலாம் என்கிறார் ராஜேஷ். "ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள், லாபகரமாக இருக்கும் சூழலில் அவற்றை விற்றுவிட்டு, பட்ஜெட் முடிந்து, சந்தை நிலை சீராகும்போது மீண்டும் முதலீடு செய்யலாம். இதற்கு இடைப்பட்ட காலத்தில், சந்தை நிலை சீராகும் வரை பேப்பர் கோல்டில் முதலீடு செய்வது பயனுள்ளதாக இருக்கும்" என்றும் அவர் பரிந்துரைக்கிறார். ராஜேஷின் கூற்றுப்படி, சந்தை நிலை சீராக இல்லாதபோது தங்கத்தில் முதலீடு செய்வது பயனுள்ளதாக இருக்கும். அதேவேளையில் நீண்ட கால நோக்குடன் முதலீடு செய்ய நினைப்பவர்கள், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகமாக இருக்கவில்லை என்றாலும்கூட, சீராக ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிச்சயம் இருக்கும் என்பதால், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் முதலீடு செய்யலாம் என்கிறார் நாகப்பன். ரூ.1.73 கோடி கட்டணம்: இறந்த பிறகு மீண்டும் உயிர்த்தெழ முடியுமா? அமெரிக்கா, ஜெர்மனியில் என்ன நடக்கிறது?18 ஜனவரி 2025 டைனோசர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? பிரிட்டனில் கிடைத்த பிரமாண்ட கால்தடங்கள் சொல்வது என்ன?18 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் "அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு சந்தையில் மந்த நிலை நீடிக்கும். இந்தியாவிலுள்ள நிறுவனங்கள் நன்றாகச் செயல்படுகின்றன. ஆனால், இதுவரை இருந்த அதீத மதிப்புக்கு நிகராகச் செயல்படவில்லை. இந்த நிலையில், ஒன்று நிறுவனத்தின் செயல்பாடு அதற்கு அளிக்கப்பட்ட அதிகப்படியான மதிப்புக்கு நிகராகச் செயல்பட வேண்டும் அல்லது அதன் செயல்பாட்டுக்கு நிகராக சந்தையின் மதிப்பு குறைய வேண்டும். இந்தச் சமநிலை திரும்புவதற்குச் சில காலம் எடுக்கும். அதற்குத் தேவையான இரு காலாண்டுகளில், சந்தை இறங்குமுகமாகவோ அல்லது எந்த மாற்றமும் இல்லாமலோதான் இருக்கும். சந்தை மதிப்பு உயர்வதன் அளவு மிகக் குறைவாகவே இருக்கும்," என்று குறிப்பிடுகிறார் நாகப்பன். ஆனால், "நீண்டகால முதலீடுகளை மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு, இந்திய பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகள் முதலீடு செய்யச் சரியான காலமாக இருக்கும் என்றே கருதுகிறேன். ஏனெனில், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், பங்குகளின் விலை குறையும்போது அதிகமாக வாங்க முடியும். பிறகு விலை உயரும்போது அதை மீண்டும் விற்றுப் பயனடையலாம்," என்று குறிப்பிட்டார் நாகப்பன். பின்குறிப்பு: முதலீடு குறித்த பரிந்துரைகள் யாவும் பொருளாதார வல்லுநர்களின் சொந்தக் கருத்துகளே. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cx2meerwxlko
  2. Published By: DIGITAL DESK 3 23 JAN, 2025 | 04:15 PM பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற குழு உறுப்பினர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதனை அவர் இன்று வியாழக்கிழமை (23) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களின் விருத்தினருக்கு மேலதிகமாக அறவிடப்படும் 275 ரூபாய் கட்டணத்தில் மாற்றமில்லை. அது அவ்வாறே பேணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/204685
  3. 23 JAN, 2025 | 02:17 PM சென்னை: 2014ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்தி பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்போம் என சொன்னவர்கள். இப்போது மோடி மூன்றாவது முறையாக பிரதமரான பிறகும் மீட்காமல் இருப்பது ஏன் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”2014ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்தி பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்போம், நரேந்திர மோடி பிரதமரானால் ஒரு தமிழக மீனவர் கூட தாக்குதலுக்கு உள்ளாகமாட்டார்கள், மீனவர் நலன்களைப் பாதுகாக்க மீனவர்களுக்கு என்று தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று வகைவகையான வாக்குறுதிகளைக் கொடுத்து தேர்தலோடு காணாமல் போன கச்சத்தீவின் மீது கரிசனம் கொண்ட பிரதமரை 10 ஆண்டுகளில் எதையும் செய்யாத நிலையில் மீண்டும் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் ரகசியத்தைப் பெற்றதாக ஒரு அறிக்கையைத் தூக்கிக்கொண்டு வந்தபோது அதையும் நம்பி கச்சத்தீவை காங்கிரஸ் - திமுக தாரைவார்த்தது என்று சொன்னபோதுதான் பார்க்க முடிந்தது. அதுவும் கூட 400 தொகுதிகளில் வெல்வோம் என்றுச் சொன்ன பிரதமருக்கு தமிழ்நாட்டில் 40ல் ஒன்று கூட கிடையாது என்று மக்கள் தந்த முடிவுக்குப் பின்னால் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அன்றோடு கச்சத்தீவு கதைக்கு போதிய வரவேற்பு இல்லை என்பதைத் தெரிந்துக்கொண்டு தலைமறைவானவர் இப்போது மீண்டும் தலையெட்டிப் பார்க்கிறார். கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுடன் சேர்க்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அண்ணாமலை கூறியபோது இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கேவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “இலங்கையைப் பொறுத்தவரையில் கச்சத்தீவு இலங்கை எல்லைக்குள் உள்ளது. நரேந்திர மோதி அரசு இலங்கையுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது. கச்சத்தீவு தொடர்பாக இந்தியாவிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. அப்படி ஏதேனும் கூறப்பட்டால் அதற்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கும்” என்று கூறியுள்ளாரே. ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் எதையுமே தமிழ்நாட்டுக்குச் செய்யாமல் வஞ்சித்த பாஜகவை மக்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்று தெரிந்து கச்சத்தீவு பிரச்சனையை எழுப்பியவர் மீண்டும் மோடி மூன்றாவது முறையாக பிரதமரான பிறகும் மீட்கச்சொல்லாமல் இருப்பது ஏன் ? கச்சத்தீவுக்குள்ளோ இலங்கை எல்லையிலோ தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை ஏற்க முடியாது அவர்களை கைது செய்வோம் சிறையில் அடைப்போம் என்று இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கா சொன்னபோதும் கூட அவரை வரவழைத்து கைகுலுக்கியதைத்தவிர பிரதமர் மோடியோ பாஜகவோ எதிர்வினையென்று இதுவரை செய்து என்ன ? கச்சத்தீவைப் பற்றி கவலைப்படும் பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தியாவிற்குள் ஆக்கிரமிப்புகளை துணிந்து மேற்கொள்ளும் சீனாவிடம் நம் நிலங்களை தாரைவார்த்து அமைதி காப்பது பற்றி 56" மார்புகொண்ட கடவுளின் அவதாரம் பிரதமர் மோடி அவர்கள் மௌனம் சாதிப்பது ஏன் ? என்றாவது கேட்டதுண்டா? அன்னை இந்திராகாந்தி அவர்களின் ராஜ தந்திரம் என்று சொன்னதற்கு இவ்வளவு கொந்தளிப்பா!) மேலும் தந்தி டிவிக்கு ரணில் விக்கிரம சிங்கே அளித்த சிறப்பு நேர்காணலிலும் கச்சத்தீவு விவகாரம் குறித்த விளக்கம் மக்களின் பார்வைக்கு” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/204666
  4. வருண் மாயஜாலம், அபிஷேக் அதிரடி: முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்தின் பேஸ்பால் வியூகத்தை நொறுக்கிய இந்திய அணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் (வலது) உடன் வருண் சக்ரவர்த்தி (இடது) கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியின் மாயஜாலப் பந்துவீச்சு, அபிஷேக் சர்மாவின் அதிரடியான பேட்டிங் ஆகியவற்றால் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (ஜன. 22) நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. பேஸ் பால் வியூகத்துக்கும், ஸ்கைபால் வியூகத்துக்கும் இடையிலான ஆட்டமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போட்டி ஒருதரப்பாகவே முடிந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 133 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் சேர்த்து வென்றது. இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிகமான பந்துகளை மீதம் வைத்து இந்திய அணி சேஸ் செய்துள்ளது. இதற்கு முன் 2012ம் ஆண்டு புனேயில் நடைபெற்ற டி20 போட்டியில் 13 பந்துகள் மீதமிருக்கையில், இந்திய அணி சேஸ் செய்திருந்தது, இந்த ஆட்டத்தில் 43 பந்துகள் மீதமிருக்கையில் சேஸ் செய்துள்ளது. இந்திய அணியில் அதிரடியாக பேட் செய்த தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் அரைசதத்தையும் 34 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி, 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். இவர்கள் இருவரின் ஆட்டமும் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக இருந்தன. ஆட்டத்தின் நடுப்பகுதியில் கேப்டன் ஜாஸ் பட்லர், லிவிங்ஸ்டன், ஹேரி ப்ரூக் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, வருண் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதிலும், வருண் வீசிய 8-வது ஓவரில் ஹேரி ப்ரூக், லிவிங்ஸ்டன் இருவருமே ஆட்டமிழந்தனர். இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்திய பங்குச் சந்தையில் ரூ.7 லட்சம் கோடி சரிவு - டிரம்ப் காரணமா? முதலீடு செய்யலாமா, கூடாதா? ஜெர்மனிக்கு படிக்கச் சென்ற இடத்தில் ஹிட்லரின் இனவெறி கொள்கைகளை எதிர்த்து நின்ற இந்திய பெண் - என்ன செய்தார்? ஏமன்: கேரள செவிலியரை இரான் அல்லது சௌதி அரேபியாவால் காப்பாற்ற முடியுமா? பெரியாருடன் முரண்பட்ட திமுக அவரது சித்தாத்தங்களை ஆதரிப்பது ஏன்? 1967 தேர்தலுக்குப் பிறகு என்ன நடந்தது? டாஸ் வென்றது உத்வேகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதிரடியாக பேட் செய்த தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் அரைசதத்தையும் 34 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார் வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் "டாஸ் வென்றபின் எங்களுக்குக் கிடைத்த உத்வேகம் தளத்தை அமைத்துக் கொடுத்தது. பந்துவீச்சாளர்களுக்கென தனித்திட்டம் இருந்தது, அதை சிறப்பாகச் செயல்படுத்தினார்கள். அதேபோல, பேட்டர்களும் அவர்களுக்குரிய திட்டத்தின்படி ஆடினர். தென் ஆப்பிரிக்காவில் நாங்கள் செய்த அதே விஷயங்களை இங்கும் மாற்றவில்லை" என்றார். மேலும் பேசிய அவர், "புதிய பந்தில் பொறுப்பெடுத்து ஹர்திக் பாண்டியா பந்துவீசினார், அதனால் கூடுதல் சுழற்பந்துவீச்சாளருடன் ஆடமுடிந்தது. வருண் சக்ரவர்த்தி சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்துள்ளார், அர்ஷ்தீப் வெற்றிக்கான தளத்தை அமைத்துக் கொடுத்தார். அதிகமான சுதந்திரத்தை வீரர்களுக்குக் கொடுத்திருந்தோம், அதை சிறப்பாக வித்தியாசமாக வெளிப்படுத்தினர். ஃபீல்டிங்கில் மட்டும் அதிக கவனம் செலுத்தவேண்டும்" எனத் தெரிவித்தார் அர்ஷ்தீப் சிங் மைல்கல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அர்ஷ்தீப் சிங் பவர்ப்ளே ஓவருக்குள்ளாகவே 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியை சிக்கலில் தள்ளினார் கொல்கத்தா மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால், முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும், அர்ஷ்தீப் சிங் பவர்ப்ளே ஓவருக்குள்ளாகவே 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியை சிக்கலில் தள்ளினார். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே லென்த்தில் வீசிய பந்து பில் சால்ட் பேட்டில் எட்ஜ் எடுத்து விக்கெட் கீப்பர் சாம்ஸனிடம் கேட்ச்சானது. 3வது ஓவரில் பென் டக்கெட் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தி சிக்கலை ஏற்படுத்தினார். இந்த விக்கெட்டை அர்ஷ்தீப் வீழ்த்தியபோது டி20 போட்டிகளில் 97 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்று யஜூவேந்திர சஹல் சாதனையான 96 விக்கெட்டுகளை முறியடித்தார். அஜித் குமார்: துபாய் ஹெச்24 கார் பந்தயத்தில் பெற்ற வெற்றி என்ன? பிரபலங்கள் கூறுவது என்ன?12 ஜனவரி 2025 குளிர்ந்த நீரில் நீச்சல்: யுக்ரேன் போரிலிருந்து தப்பித்த பெண்ணின் மனநலனை மேம்படுத்தியது எப்படி?9 ஜனவரி 2025 வருண் சக்ரவர்த்தி மாயஜாலம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வருண் சக்ரவர்த்தி தனது மிகத்துல்லியமான லைன், லென்த்தில் பந்துவீசி இங்கிலாந்து பேட்டர்களை கட்டிப்போட்டார் நடுப்பகுதி ஓவர்களில் வருண் சக்ரவர்த்தி, அக்ஸர் படேல், ரவி பிஸ்னாய் ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து ஆட்டத்தைத் தங்கள் கைக்குள் கொண்டு வந்தனர். அதிலும், வருண் சக்ரவர்த்தி தனது மிகத்துல்லியமான லைனால், லென்த்தில் பந்துவீசி இங்கிலாந்து பேட்டர்களை கட்டிப்போட்டார். வருணின் பந்துவீச்சு ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் என்ற ரீதியில் இருந்ததால், இங்கிலாந்து பேட்டர்கள் சிறிய தவறு செய்தாலும் விக்கெட்டை இழக்க நேரிடும் என்ற நிலை இருந்தது. ப்ரூக், லவிங்ஸ்டோன் இருவருக்கும் வருண் வீசிய பந்து நிச்சயமாக ஆடுவதற்கு மிகக்கடினமானது, என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் விக்கெட்டை இழந்தனர். சுழற்பந்துவீச்சில் அதிலும் கைமணிக்கட்டில் வீசப்படும் பந்துகளை ஆடுவதற்கு இங்கிலாந்து பேட்டர்கள் திணறுவார்கள் எனக் கூறப்பட்டது உண்மையானது. வருணின் பந்துவீச்சை எவ்வாறு விளையாடுவது, சரியான லென்த்தில் பந்தை பிக் செய்து ஷாட் அடிப்பது எனத் தெரியாமல் லிவிங்ஸ்டன், ப்ரூக் இருவரும் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்தனர். ஜாஸ் பட்லர் ஐபிஎல் ஆடிய அனுபவம் என்பதால், வருண் பந்துவீச்சை ஓரளவுக்கு கணித்து ஆடினார், ஆனாலும், அவரால் துல்லியமான பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் கேட்ச் கொடுத்து பட்லர் வெளியேறினார். 24 பந்துகளை வீசியவரும் சக்ரவர்த்தி 14 டாட் பந்துகளை வீசினார், 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கோலி, ரோஹித் பேட்டிங்கில் என்ன பிரச்னை? ரஞ்சி போட்டியில் ஆடுவது மட்டுமே தீர்வாகுமா?18 ஜனவரி 2025 பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: பரிந்துரைக்கப்பட்ட 5 பேர் யார்?16 ஜனவரி 2025 அபிஷேக் அதிரடி தொடக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரை நிதானமாக ஆடிய சஞ்சு சாம்ஸன், அட்கின்சன் வீசிய 2வது ஓவரை வெளுத்து வாங்கினார் சாம்ஸன், அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரை நிதானமாக ஆடிய சாம்ஸன், அட்கின்சன் வீசிய 2வது ஓவரை வெளுத்து வாங்கினார். அட்கின்சன் வீசிய 2வது ஓவரில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 22 ரன்களை விளாசினார். ஆர்ச்சர் வீசிய 3வது ஓவரில் அபிஷேக் ஒரு சிக்ஸர், பவுண்டரி என 10 ரன்கள் சேர்த்தார். ஆர்ச்சர் வீசிய 5வது ஓவரில் ஸ்லோ பாலில் கேட்ச் கொடுத்து சாம்ஸன் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், வந்தவேகத்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட் கீப்பர் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். பட்லர் வீசிய 5வது ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தன. மார்க் உட் வீசிய 6வது ஓவரை வெளுத்து வாங்கிய அபிஷேக் சர்மா 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 18 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் சேர்த்திருந்தது. அதில், ரஷித் வீசிய 8-வது ஓவரை அபிஷேக் சர்மா, 2 சிக்ஸர்கள், பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்தார். ஓவர்டன் வீசிய 9-வது ஓவரில் சிக்ஸர் விளாசி 20 பந்துகளில் அரைசதத்தை அபிஷேக் எட்டினார். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. அட்கின் வீசிய 11-வது ஓவரை குறிவைத்த அபிஷேக் சர்மா ஒரு சிக்ஸர் பவுண்டரியும், திலக் வர்மா ஒரு பவுண்டரியும் என 16 ரன்கள் விளாசினர். ரஷித் வீசிய 12 ஓவரில் சிக்ஸர் விளாசிய அபிஷேக் அதே ஓவரில் ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து 79 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 4 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் அடங்கும். இரு கேட்ச் வாய்ப்புகள் அபிஷேக் சர்மாவுக்கு நேற்றைய ஆட்டத்தில் மட்டும் இரு கேட்சுகளை இங்கிலாந்து வீரர்கள் தவறவிட்டனர். பெத்தல் ஒரு கேட்சையும், அதில் ரஷித் ஒரு கேட்ச் என இரு கேட்சுகளை அபிஷேக்குக்கு தவறவிட்டதை அவர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். அதன்பின், ஹர்திக் பாண்டியா(3), திலக் வர்மா(19) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 12.5 ஓவர்களில் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பும்ரா சந்தேகம், தடுமாறும் கோலி, ரோஹித் - சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா சாதிக்குமா? ஓர் அலசல்19 ஜனவரி 2025 ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் - யார் இவர்?21 ஜனவரி 2025 மோசமான இங்கிலாந்து பேட்டிங் பயிற்சியாளர் மெக்கலத்தின் பேஸ்பால் வியூகத்தால் இங்கிலாந்து பல அணிகளையும் மிரட்டி வந்ததால், இந்திய அணிக்கு எதிராகவும் அதிரடியாக பேட் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சுக்கு பயந்து தோல்வியை தழுவினர். பில் சால்ட், டக்கெட், ஹேரி ப்ரூக், லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தெல் என பெரிய பேட்டிங் பட்டாளமே இருந்தும் ஒருவரும் ஜொலிக்கவில்லை. கேப்டன் பட்லருக்கு ஐபிஎல் விளையாடிய அனுபவம் இருந்ததால் எளிதாக இந்தியப் பந்துவீச்சை கையாண்டு அரைசதம் அடித்து 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமே பட்லர் அடித்த 68 ரன்களும், ப்ரூக் 17, ஆர்ச்சர் 12 ஆகியவைதான், இந்த 3 வீரர்களும்தான் இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் சொற்பமாக ஆட்டமிழந்தனர். இதே ஈடன் கார்டன் மைதானத்தில்தான் கடந்த 2016ம்ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியிடம் ஃபைனலில் இங்கிலாந்து அணி கோப்பையை இழந்தது. அதன்பின், 2024 டி20 உலகக் கோப்பையில் கயானாவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோற்று இங்கிலாந்து வெளியேறியது. குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா 3 பேரும் சேர்ந்து 11 ஓவர்கள் வீசி 58 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வீழ்ச்சிக்குக் காரணமாகினர். அப்போதிருந்து, சுழற்பந்துவீச்சை கண்டு பயப்படும் இங்கிலாந்து பேட்டர்கள் அதற்கு ஏற்றார்போல் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை. இந்த ஆட்டத்திலும் 12 ஓவர்கள் சுழற்பந்து வீசப்பட்ட நிலையில், 5 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள்தான் இங்கிலாந்து அணி சேர்த்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0e4q2r2yqjo
  5. லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே மீண்டும் காட்டுத்தீ; 9,400 ஏக்கருக்கு பரவியது Published By: DIGITAL DESK 3 23 JAN, 2025 | 11:37 AM அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் லொஸ்ஏஞ்சல்ஸின் வடப்பகுதியில் புதன்கிழமை (23) புதிதாக காட்டுத்தீ பரவியுள்ளது. காட்டுத் தீ பலத்த காற்றினால் பற்றைக் காடுகளில் 9,400 ஏக்கர் நிலப்பரப்புக்கு (32 சதுர கிமீ) வேகமாக பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் 19,000 க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கட்டாயமாக வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. லொஸ்ஏஞ்சல்ஸின் பெருநகரப் பகுதியில் ஏற்பட்ட இரண்டு பாரிய காட்டுத்தீகளை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு வீரர்களை மீண்டும் வடக்கே சுமார் 50 மைல் (80 கிமீ) தொலைவில் உள்ள பாரிய காட்டுத்தீயை அணைக்க வரவழைக்கப்பட்டுள்ளனர். லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சூறையாடிய இரண்டு பாரிய காட்டுத்தீகளில் ஒன்றான ஈடன் தீ மண்டலத்தின் அரைவாசி அளவுக்கு புதனன்று ஒரு சில மணிநேரங்களில் காட்டுத் தீ பரவியுள்ளது. காஸ்டிக் பகுதியில் மொத்த சனத்தொகையில் சுமார் 19,000 பேரை கட்டாயம் வெளியேற்ற வேண்டும் என்கின்ற உத்தரவுகளின் கீழ் இருப்பதாக லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் 16,000 பேர் வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, சான் கேப்ரியல் மலையில் உள்ள 700,000 ஏக்கர் (2,800-ச.கி.மீ) தேசிய பூங்கா மூடப்பட்டுள்ளது. வேகமாக பரவும் தீயினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தெற்கு கலிபோர்னியாவைச் சுற்றி சுமார் 1,100 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக வள வள மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு திணைக்களங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/204640
  6. Published By: RAJEEBAN 23 JAN, 2025 | 03:40 PM இஸ்ரேல் மேற்குகரையை தன்னுடன் இணைத்துக்கொள்ளலாம் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார். டாவோஸில் இடம்பெறும் உலக பொருளாதார போரத்தின் உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேற்குகரையை தன்னுடன் இணைத்துக்கொள்வதற்கான தருணம் இது என இஸ்ரேல் கருதும் ஆபத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். காசா குறித்து இஸ்ரேல் ஆர்வமாக உள்ளதா என்பது தெரியவில்லை, ஆனால் மேற்குகரை குறித்து இஸ்ரேல் ஆர்வம் கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த உதவியமைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவரால் அந்த நேரத்தில் வலுவான பங்களிப்பு வழங்கப்பட்டது என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேற்குகரையில் உள்ள ஜெனினில் தீவிரவாத அமைப்புகளிற்கு எதிரான நடவடிக்கையில் இஸ்ரேலிய படையினர் ஈடுபட்டுள்ள நிலையிலேயே ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இஸ்ரேலின் இந்த நடவடிக்கை காரணமாக நால்வர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீனிய அதிகாரசபை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் இரும்புசுவர் என்ற நடவடிக்கையை செவ்வாய்கிழமை ஆரம்பித்துள்ளது. https://www.virakesari.lk/article/204678
  7. பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், சாரா ரெயின்ஸ்ஃபோர்ட், ராபர்ட் கிரீனால் பதவி, பிபிசி நியூஸ் யுக்ரேனில் போரை நிறுத்தவில்லை என்றால் ரஷ்யா மீது பல்வேறு வரிகள் விதிக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோசியலில் கருத்து பதிவிட்டிருந்த டிரம்ப், போரை நிறுத்துவதற்கான அழுத்தம் கொடுப்பதால் ரஷ்யாவுக்கும் அதன் அதிபருக்கும் தான் "ஒரு பெரிய உதவி" செய்வதாக தெரிவித்திருந்தார். 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தொடங்கிய முழு வீச்சிலான போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையை ஒரே நாளில் எடுப்பேன் என டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். அதற்கு ரஷ்யா எந்த பதிலையும் அளிக்கவில்லை. எனினும் புதிய அமெரிக்க நிர்வாகத்துடன் ஒத்துழைக்க ஒரு சிறிய வாய்ப்பு இருப்பதாக ரஷ்யாவின் மூத்த அதிகாரிகள் சமீப நாட்களில் தெரிவித்துள்ளனர். 2014ம் ஆண்டு முதலில் தொடங்கிய போரை நிறுத்தும் நோக்கிலான பேச்சுவார்த்தைக்கு தான் தயாராக இருப்பதாக புதின் பல முறை தெரிவித்துள்ளார். ஆனால் யுக்ரேனின் நிலபரப்பில் ரஷ்யா கைப்பற்றிய 20% நிலத்தை விட்டு கொடுத்து தான் ஆக வேண்டும் என்று உண்மை நிலவரத்தை யுக்ரேன் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். மேலும் யுக்ரேன், நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் சேர்வதையும் அவர் எதிர்க்கிறார். யுக்ரேன் தனது நிலங்களை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. எனினும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் சிலவற்றை தற்காலிகமாக விட்டு கொடுக்க வேண்டியிருக்கும் என்று யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிசய மீன்: வயதாக ஆக ஆரோக்கியம் கூடும்; 100 ஆண்டுகளை கடந்து வாழும் - இதற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து என்ன? சீன அதிபரை அழைத்த டிரம்ப், தனது 'நண்பர்' மோதியை அழைக்காதது ஏன்? டிரம்பின் முதல் நாள் உத்தரவுகள் இவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துமா? 'புலியை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்க்க விருப்பமா?' - நேபாளத்தில் வெற்றிக்கதையே ஆபத்தாக மாறியது எப்படி? "நான் அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா யுக்ரேன் போர் உருவாகியிருக்காது" - டிரம்ப் செவ்வாய்கிழமை அமெரிக்க அதிபர் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, "மிக விரைவில்" ரஷ்ய அதிபரை சந்திக்க போவதாக தெரிவித்தார். மேலும் புதின் பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்கவில்லை என்றால், ரஷ்யா மீது பொருளாதார கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு "வாய்ப்புகள் அதிகம்" என்று தெரிவித்தார். தனது ட்ரூத் சோசியலில் பதிவில் அவர் மேலும் சிலவற்றை கூறினார். "பொருளாதாரத்தில் மங்கி கிடக்கும் ரஷ்யா மற்றும் அதன் அதிபர் புதினுக்கு நான் மிகப்பெரிய உதவியை செய்யப் போகிறேன்" என்று பதிவிட்டிருந்தார். "இப்போதே இந்த அபத்தனமான போரை நிறுத்துங்கள். இது இன்னும் மோசமடைய தான் போகிறது. விரைவில் ஒரு 'ஒப்பந்தம்' போட வேண்டும். இல்லை என்றால் அமெரிக்காவில் ரஷ்யாவால் விற்கப்படும் எல்லாவற்றுக்கு அதிகபடியான வரி, கட்டணம், பொருளாதார தடைகள் விதிப்பதை தவிர எனக்கு வேறு வழி இல்லை" என்றும் தெரிவித்திருந்தார். "நான் அதிபராக இருந்திருந்தால் உருவாகிருக்காத இந்த போரை உடனே நிறுத்துவோம். நாம் இதை எளிதாகவும் முடிக்கலாம், கடுமையான வழிகளாலும் முடிக்கலாம். எளிமையான வழியில் முடிப்பதே எப்போதும் நல்லது. ஒரு ஒப்பந்தத்தை போடுவதற்கான நேரம் இது" என்றும் தனது சமூக ஊடகப் பதிவின் மூலம் தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, போர் முனையில் யுக்ரேன் வீரர்கள் வலியுறுத்தும் அமெரிக்கா ஒப்பந்தத்தை போடுவதற்கு முன்பாக, அந்த ஒப்பந்தம் குறித்த டிரம்பின் எதிர்ப்பார்ப்புகள் என்னவென்று அறிந்து கொள்ள ரஷ்யா விரும்புகிறது என ரஷ்யாவின் ஐக்கிய நாடுகள் துணை தூதர் திமித்ரி பொல்யான்ஸ்கி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்திருந்தார் எப்படியான ஒப்பந்தமாக இருந்தாலும், குறைந்தது இரண்டு லட்சம் அமைதி காவலர்கள் தேவைப்படுவார்கள் என யுக்ரேன் அதிபர், உலக பொருளாதார மன்றத்தின் முன்பு செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தார். அமைதி காவல் படையில் அமெரிக்க துருப்புகளை கண்டிப்பாக இருந்தால் தான் ரஷ்யாவை தடுத்து நிறுத்த முடியும் என்று அவர் ப்ளூம்பர்க் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார். "அமெரிக்கா இல்லாமல் இருக்க முடியாது. சில ஐரோப்பிய நண்பர்கள் அமெரிக்கா இல்லாமலும் சாத்தியம் என்று நினைக்கலாம். ஆனால் அது முடியாது" என்று கூறிய அவர், ''அமெரிக்கா இல்லாமல் வேறு எவரும் இத்தகைய நடவடிக்கையில் இறங்க தயாராக இருக்க மாட்டார்கள்'' என்றும் குறிப்பிட்டார். இப்படி கடுமையாக பேசும் டிரம்பை யுக்ரேன் தலைவர்கள் பாராட்டலாம். ஆனால் ரஷ்யாவுக்கு எதிராக வலுவான செயல்கள் வேண்டும், வார்த்தைகள் போதாது என்பதே யுக்ரேனின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. டிரம்ப் கூறும் பொருளாதார தடைகள், அதிகபடியான வரி எப்போது எங்கே விதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டு கூறவில்லை. அமெரிக்காவுக்கான ரஷ்ய ஏற்றுமதிகள் 2022ம் ஆண்டு முதல் சரிய தொடங்கின. ஏற்கெனவே பல வித கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. தற்போது பாஸ்பேட் கொண்ட உரங்களும் பிளாடினமும்தான் அமெரிக்காவுக்கு ரஷ்யாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்கள் ஆகும். பட மூலாதாரம்,JOSE COLON/ANADOLU VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஜனவரி 21ம் தேதி, யுக்ரேன் ராணுவ வீரர்கள் யுக்ரேன் எல்லைக்குள் பயிற்சி மேற்கொண்டனர். சமூக வலைதளங்களில் யுக்ரேனியர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதிகபடியான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று கூறுவது, ரஷ்யாவுக்கு எதிரான மிக பலவீனமான எதிர்வினை என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். பெரும்பாலான யுக்ரேனியர்களுக்கு இருக்கும் கேள்வி என்னவென்றால், அமைதி பேச்சுவார்த்தைகளின் போது புதின் என்னென்ன விசயங்களை விவாதிக்க தயாராக இருக்கிறார் என்பதே. யுக்ரேனின் தெற்கு எல்லையில் இருக்கும் நகரான ஒடெஸா வரை ரஷ்யா டாங்கிகள் ஓடி செல்லும், அப்படி ஒரு வெற்றி ரஷ்யாவுக்கு கிடைக்கும் என்பது எதிர்ப்பார்ப்பாக இருந்தது. ஆனால் எதிர்ப்பார்த்த வெற்றியைவிட சற்று குறைவானதே கிடைக்கப் போகிறது என்று ரஷ்யர்களை அந்நாட்டு அரசு தயார்படுத்தி வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. புதினின் தீவிர ஆதரவாளரான தொலைக்காட்சி ஆசிரியர் மார்கரிடா சிமோன்யன், போரை நிறுத்துவதற்கான யதார்த்தமான நிலைமைகள் குறித்து பேச ஆரம்பித்துள்ளார். தற்போது உள்ள போர்முனையில் போரை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யுக்ரேனின் நான்கு பகுதிகளை ரஷ்யாவுக்கு உட்பட்டது என்று சட்டவிரோதமாக புதின் அறிவித்தார். அந்த பகுதிகளின் மீது யுக்ரேன் ஓரளவு கட்டுப்பாடு கொண்டுள்ளது. போரை நிறுத்துவது என்றால், இதே நிலை தொடரும் என்று அர்த்தம். பட மூலாதாரம்,TETIANA DZHAFAROVA/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஜனவரி 22ம் தேதி யுக்ரேன் தலைநகரில் கிவ்-ல் வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்கள் பதுங்கி உள்ளனர். பெண்ணை மகிழ்விக்க பரிசு மட்டுமின்றி, உயிரையே தரும் ஆண் - பூச்சி, பறவைகளில் என்ன நடக்கிறது?21 ஜனவரி 2025 ஒரே இரவில் 7 கோள்கள் வானில் தெரியும் அதிசயம் - எப்போது, எப்படி பார்ப்பது? பூமியில் என்ன நடக்கும்?3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆனால் ரஷ்யாவில் உள்ள தீவிர எண்ணம் கொண்டவர்கள் "இந்த தோல்வியை" ஏற்க மறுக்கின்றனர். தனது சமூக ஊடகப் பதிவில், டிரம்ப் ரஷ்யாவுக்கு எதிராக விடுத்த எச்சரிக்கைகளை 'அன்பு' கலந்த வார்த்தைகளால் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் சோவியத் சந்தித்த இழப்புகளுக்கு தனது மரியாதையை வெளிப்படுத்தினார். புதினுக்கு மிகவும் புனிதமான விவகாரம் இது. எனினும் சோவியத் ரஷ்யா என்பது ரஷ்யா மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டு போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகைப்படுத்தி கூறியிருந்தார் டிரம்ப். உண்மையில் லட்சக்கணக்கான யுக்ரேனியர்கள் மற்றும் பிற சோவியத் குடிமக்கள் தங்கள் உயிர்களை இழந்திருந்தனர். எனினும், யுக்ரேன் நேட்டோ அமைப்பில் சேரக் கூடாது என்று ரஷ்யா கூறிய போது அதை புரிந்து கொள்வதாக கூறிய டிரம்ப், தற்போது தனது நிலைபாட்டை மாற்றுவதாக தெரிகிறது. டிரம்பின் நிலைபாடு முக்கியமானது. ஆனால் 11 ஆண்டுகளாக ரஷ்யாவுடனான போர், அமைதி பேச்சுவார்த்தைகளின் தோல்வி, ஆகிய காரணங்களால் யுக்ரேனியர்கள் தங்கள் நிலைமை மாறும் என்று நம்பிக்கை கொள்ளவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62691ly61po
  8. 19இன் கீழ் மகளிர் ரி20 உலக் கிண்ண லீக் சுற்றில் 2 போட்டிகள் மீதம் இருக்க சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு 11 அணிகள் தகுதி Published By: VISHNU 22 JAN, 2025 | 07:40 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கட் அத்தியாயத்தின் 5ஆம் நாள் போட்டிகள் முடிவில் சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட 11 அணிகள் தகுதிபெற்றுள்ளன. ஏ குழுவில் இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்கின்ற போதிலும் நடப்பு சம்பியன் இந்தியாவும் இலங்கையும் சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட தகுதிபெற்றுகொண்டுள்ளன. மேற்கிந்தியத் தீவுகளுக்கும் மலேசியாவுக்கும் இடையில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெறும் அணி இக் குழுவிலிருந்து 3ஆவது அணியாக சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட தகுதிபெறும். பி குழுவிலிருந்து இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளும் சி குழுவிலிருந்து தென் ஆபிரிக்கா, நைஜீரியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளும் டி குழுவிலிருந்து அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளும் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்றைய போட்டி முடிவுகள் குழு பி இங்கிலாந்துக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் ஜோஹோர் கிரிக்கெட் பயிற்சியக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்களால் வெற்றிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஐக்கிய அமெரிக்க மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மகளிர் அணி 14.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. டாவினா சரா பெரின் 74 ஓட்டங்களைப் பெற்று இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் தனிநபருக்கான அதிகூடிய மொத்த எண்ணிக்கையைப் பதிவுசெய்தார். அயர்லாந்து வெற்றி அயர்லாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் அயர்லாந்து 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. சீரற்ற காலநிலை காரணமாக ஜோஹோர் கிரிக்கெட் பயிற்சியக ஓவல் மைதானத்தில் தடைப்பட்ட இப் போட்டி அணிக்கு 9 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட அயர்லாந்து மகளிர் அணி 9 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்றது. 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் மகளிர் அணிக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் 9 ஓவர்களில் வெற்றி இலக்கு 73 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் 9 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 59 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. சி குழு சரவாக், போர்னியோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற சி குழு போட்டியில் நைஜீரியாவை டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் 41 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா வெற்றிகொண்டது. சீரற்ற காலநிலையால் தடைப்பட்ட ஆட்டம் 8 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட தென் ஆபிரிக்க மகளிர் அணி 8 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 49 ஓட்டங்களைப் பெற்றது. 8 ஓவர்களில் 66 ஓட்டங்கள் என்ற திருத்தப்பட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட நைஜீரிய மகளிர் அணி 8 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 24 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. நியூஸிலாந்து வெற்றி சராவக், போர்னியோ கிரிக்கெட் மைதானத்தில் அணிக்கு 17 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டு நடத்தப்பட்ட போட்டியில் சமோஆ அணியை எதிர்த்தாடிய நியூஸிலாந்து 67 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட நியூஸிலாந்து மகளிர் அணி 17 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட சமோஆ மகளிர் அணி 14.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 40 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. டி குழு அவுஸ்திரேலியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையில் பாங்கி YSD-UKM கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா 83 ஒட்டங்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்பத்தில் தடுமாறிய அவுஸ்திரேலியா 4ஆவது விக்கெட்டில் கோய்மி ப்றே, எலினோர் லரோசா ஆகிய இருவரும் பகிர்ந்த 72 ஓட்டங்களின் உதவியுடன் கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட சமோஆ மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 56 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் வெற்றி பாங்கி YSD-UKM கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு டி குழு போட்டியில் ஸ்கொட்லாந்திடம் சவாலை எதிர்கொண்ட பங்களாதேஷ் 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஸ்கொட்லாந்து மகளிர் அணி 8 விக்கெட்களை இழந்து 103 ஓட்டங்ளைப் பெற்றது. https://www.virakesari.lk/article/204603
  9. பட மூலாதாரம்,MK STALIN / DIPR இந்தியா மட்டுமல்லாமல் உலகளவிலேயே தமிழகத்தில் இருந்துதான் இரும்பு காலம் தொடங்கியது என்றும், 5300 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பு உருக்கு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கீழடி - கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கு இன்று (ஜன. 23) முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், 'இரும்பின்' தொன்மை என்ற நூலை வெளியிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர், தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் இரும்பு காலம் தொடங்கியது என கூறினார். அவருடைய உரையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: இந்தியா மட்டுமல்லாமல் உலகளவிலேயே தமிழகத்தில் இருந்துதான் இரும்பு காலம் தொடங்கியது. 5300 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பு உருக்கு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அண்மையில் நடைபெற்ற அகழாய்வுகள், காலக் கணக்கீடுகள் இரும்பின் காலத்தை 4,000 ஆண்டுகளின் முற்பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், உலகத்தின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புனே, ஆமதாபாத் ஆகிய இடங்களிலும் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற பீட்டா ஆய்வகத்துக்கும் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆய்வகங்களிலிருந்து ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த முடிவுகளை கூர்ந்து ஒப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியான முடிவுகள் கிடைத்துள்ளன. அதன்படி, கதிரியக்கக் காலக்கணக்கீடு அடிப்படையில், கி.மு. 3345ல் தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகி உள்ளது எனத் தெரிகிறது. இந்த முடிவுகள் எல்லாவற்றையும் தொகுத்துதான் இன்று 'இரும்பின் தொன்மை' எனும் நூல் வெளியிடப்படுகிறது. தொல்லியல் அறிஞர்களின் கருத்துகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. எதிர்காலத்தில் நடைபெறும் ஆய்வுகளுக்கு இந்த முடிவுகள் சான்றாக இருக்கும். கொடையாக இந்த முடிவுகளால் தமிழகத்துக்கும் தமிழ் நிலத்துக்கும் பெருமை. மானுட இனத்துக்கு தமிழகம் வழங்கும் மாபெரும் இதை கம்பீரமாக கூறலாம். இந்தியாவின் வரலாறு தமிழ் நிலத்திலிருந்துதான் எழுதப்பட வேண்டும் என நான் தொடர்ந்து சொல்லிவருகிறேன். அதை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு முடிவுகள் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgxq40jvzlo
  10. Published By: VISHNU 23 JAN, 2025 | 05:13 AM (நா.தனுஜா) தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்ததை அடுத்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி சந்தித்து தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆராயவுள்ளன. புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் அடுத்தகட்டமாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இம்மாதத்தொடக்கத்தில் பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவானதொரு தீர்வுத்திட்டத்தை முன்மொழிவது குறித்து நாளை மறுதினம் சனிக்கிழமை (25) இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தின்போது, தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து ஆராய்வதற்கும், அதனைத்தொடர்ந்து தமிழ்த்தேசியப்பரப்பில் உள்ள ஏனைய கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்குமென கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் புதன்கிழமை (22) பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சந்தித்து உரையாடிய சிறிதரன், தமது கட்சியின் உள்ளகத் தீர்மானத்துக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட சந்திப்பில் தம்மால் கலந்துகொள்ளமுடியாது என அறிவித்தார். அதனையடுத்து ஏற்கனவே ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் கோரப்பட்டிருந்ததற்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி நடாத்த உத்தேசிக்கப்பட்டிருந்த சந்திப்பு 27 ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டிருப்பதாகவும், அன்றைய தினம் மாலை 4.00 மணிக்கு தமது கட்சியும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளும் யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடவிருப்பதாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/204615
  11. வட்டுவாகல் பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு உறுதியானது - ரவிகரன் எம்.பி Published By: VISHNU 23 JAN, 2025 | 05:06 AM முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலம் அமைப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவுத்திட்டத்தில் நிதிஒதுக்கீடுசெய்யப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) சந்தித்துக்கலந்துரையாடியபோதே அமைச்சர் விமல் ரத்நாயக்க இவ்விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமது தொடர் முயற்சிக்கு பலன்கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், ஜனாதிபதிக்கும், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிற்கும், பிரதிஅமைச்சர் உபாலி சமரசிங்கவிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், குறிப்பாக முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் அமைக்கப்படவேண்டுமென தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். அந்தவகையில் கடந்த வருடம் நவம்பர்மாதம் 29ஆம்திகதி முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற வெள்ளஅனர்த்தம் தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த வட்டுவாகல் பாலம் அமைக்கப்படவேண்டுமென கூட்டுறவுப் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் வலியுறுத்தியதுடன், குறித்த கூட்டத்தின் பின்னர் பிரதிஅமைச்சர் மற்றும், சகபாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், அனைவரையும் நேரடியாக வட்டுவாகல் பாலம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச்சென்று மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து இடர்பாடுகள் குறித்தும் நேரடியாகக் காண்பித்திருந்தார். அதன்பின்னர் கடந்தவருடம் டிசம்பர்மாதம் 04ஆம் திகதி நாடாறுமன்றஉறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது பாராளுமன்ற முதல் உரையில் வட்டுவாகல் பாலம் அமைக்கப்படவேண்டும் என வலியுறுத்தியதுடன், அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பிலும் இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். இதன்போது வட்டுவாகல் பாலம் அமைப்பதுதொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படுமென ஜனாதிபதியும் தெரிவித்திருந்தார். இந் நிலையிலேயே ஜனவரி.22 இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் விமல்ரத்நாயக்க மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர் விமல் ரத்நாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் வட்டுவாகல்பாலம் அமைப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் நிதிஒதுக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார். இவ்வாறான சூழலில் தமது தொடர்ச்சியான கடும் பிரயர்தனத்திற்கு பலன் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிற்கும், அமைச்சர் விமல் ரத்நாயக்கவிற்கும், கூட்டுறவுப் பிரதிஅமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்கவிற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/204614
  12. பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் ஜனாதிபதி மீண்டும் உறுதி - பிரதி அமைச்சர் சுனில் வடகல Published By: VISHNU 23 JAN, 2025 | 05:02 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் என்று ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சட்டத்தை இரத்து செய்வது தொடர்பிலும், மாற்றீடு சட்டம் உருவாக்கம் தொடர்பிலும் ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. உப குழுவின் பரிந்துரைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இச்சட்டத்தின் பாரதூரத்தை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே சட்டத்தை நிச்சயம் இரத்துச் செய்வோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோல் அரசாங்கத்தின் விருப்பத்துக்கு அமைய இந்த சட்டத்தை அமுல்படுத்த முடியாது. பொலிஸார் இந்த சட்டத்தை தவறாகவே பயன்படுத்துகின்றனர் என குறிப்பிட்டார். இதற்கு எழுந்து பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் முக்கியமான விடயங்களை குறிப்பிட்டார். இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்படுகின்றது. அது தயாரிக்கப்பட்டதும் குழுவில் ஆராய்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்படும். அது தொடர்பான விபரங்களை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் உறுதிப்படுத்துவோம். இதற்கமைய பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என்பதுடன் பயங்காரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கொண்டுவரப்படும் என்றார். பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் தனது உரையில் சுட்டிக்காட்டிய பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல,பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி பேசப்படுகிறது. ஏனைய கட்சிகளை காட்டிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தால் நாங்கள் தான் பாரதூரமாக பாதிக்கப்பட்டோம். ஆகவே இதன் பாரதூரம் எமக்கு நன்கு தெரியும். பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டத்தை இரத்து செய்வது தொடர்பிலும், மாற்றீடு சட்டம் உருவாக்கம் தொடர்பிலும் ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. உப குழுவின் பரிந்துரைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.ஆகவே பயங்கரவாத தடைச்சட்டத்தின் பாரதூரத்தை நாங்கள் நன்கு அறிவோம். தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இச்சட்டத்தை நீக்குவோம் என்றார். https://www.virakesari.lk/article/204613
  13. Published By: VISHNU 23 JAN, 2025 | 04:56 AM (நா.தனுஜா) ஒற்றையாட்சி முறைமையே இனப்பிரச்சினையாக அடிப்படைக்காரணமாக விளங்குவதாகவும், எனவே தம்மால் ஒருபோதும் ஒற்றையாட்சி முறைமையை ஏற்றுக்கொள்ளவியலாது எனவும் கனேடிய உயர்மட்டப்பிரதிநிதி மேரி-லூயிஸ் ஹனனிடம் கூட்டாக சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தாம் கோரிநிற்கும் சமஷ்டித்தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான வலுவான அழுத்தங்களை கனடா பிரயோகிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். அதுமாத்திரமன்றி சமஷ்டி முறைமை தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அவசியமான நிதியளிப்பை மேற்கொள்வதற்கு கனடா முன்வரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதன்கிழமை (22) நாட்டுக்கு வருகைதந்த கனடாவின் உலகளாவிய விவகாரங்கள் பிரிவின் தெற்காசியத் தொடர்புகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் மேரி-லூயிஸ் ஹனனுக்கும், வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் மாலை 5.30 மணிக்கு கொழும்பிலுள்ள கனேடிய இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கனேடிய உயர்மட்டப்பிரதிநிதி மேரி-லூயிஸ் ஹனனுடன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவு அதிகாரி சாகித்தியனன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். அதேபோன்று தமிழ்த்தேசியக்கட்சிகளின் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகதாசன் குகதாசன், சாணயக்கியன் இராசமாணிக்கம், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், இளையதம்பி ஸ்ரீநாத் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது குறிப்பாக வட, கிழக்கு தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் விவகாரத்தில் தமிழர்களின் எதிர்பார்ப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் மேரி-லூயிஸ் ஹனனிடமும், கனேடிய உயர்ஸ்தானிகரிடமும் எடுத்துரைத்தனர். புதிய அரசாங்கத்தின் மீதான அதிருப்தி அண்மையில் ஆட்சிபீடமேறியிருக்கும் புதிய அரசாங்கத்துக்கும், கடந்த காலங்களில் ஆட்சிசெய்த முன்னைய அரசாங்கங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் எவையுமில்லை எனச் சுட்டிக்காட்டிய தமிழ்ப்பிரதிநிதிகள், 'முன்னைய அரசாங்கங்கள் கூட இனப்பிரச்சினை குறித்து வார்த்தையளவில் பேசி வந்தன. இருப்பினும் தற்போதைய அரசாங்கம் இனப்பிரச்சினை நிலவுகிறது என்பதை ஏற்றுக்கொள்வதற்கே தயாராக இல்லை. குறைந்தபட்சம் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் கூடத் தேவையில்லை என்றவாறான நிலைப்பாட்டியே இவ்வரசாங்கம் இருக்கின்றது' என விசனம் வெளியிட்டனர். அரசியல் தீர்வு இச்சந்திப்பின்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து கூட்டாகக் கருத்து வெளியிட்ட தமிழ்ப்பிரதிநிதிகள், தம்மால் ஒற்றையாட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவியலாது எனவும், மாறாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே தாம் கோருவதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக ஒற்றையாட்சி தான் இனப்பிரச்சினைக்கான அடிப்படைக்காரணம் எனச் சுட்டிக்காட்டி அதுபற்றி விளக்கமளித்த அவர்கள், தற்போது ஒற்றையாட்சியின் ஊடாக தமிழர்கள் செறிந்துவாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் சிங்களமயமாக்கப்பட்டுவருவதாக விசனம் வெளியிட்டனர். அதேபோன்று அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டிருப்பினும், அதன் பெருமளவான அதிகாரங்களைத் தன்வசம் வைத்திருக்கும் ஆளுநரால் நிர்வாக செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதாகவும், எனவே இவையனைத்தையும் புறந்தள்ளி தாம் சமஷ்டி முறையிலான தீர்வையே கோரிநிற்பதாகக் குறிப்பிட்டனர். பொறுப்புக்கூறல் அதேவேளை கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான மிகைய அழுத்தங்களை வழங்கி, அச்செயன்முறையை அதிதீவிரமாக முன்னெடுப்பதற்கு கனடா உதவவேண்டும் என வலியுறுத்திய தமிழர் பிரதிநிதிகள், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சர்வதேச பொறிமுறையொன்றின் ஊடாகவே முன்னெடுக்கப்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். 'தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் கடந்தகால மீறல்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணையையே கோருகின்றனர். இருப்பினும் அரசாங்கம் அதுகுறித்து அக்கறை காண்பிக்கவில்லை. மாறாக உள்ளகப்பொறிமுறைகள் எனக்கூறி அரசாங்கத்தினால் நிறுவப்பட்டிருக்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் போன்றன எவ்வித முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை. ஆகவே இவ்விடயத்தில் சர்வதேச பொறிமுறையொன்றை நோக்கி நகர்வதற்கு கனடா முன்னின்று வலுவாகச் செயற்படவேண்டும்' எனவும் அவர்கள் வலியுறுத்தினர். சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டல் மேலும் சமாதானப்பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலப்பகுதியில் 'சமஷ்டி' குறித்து மக்கள் மத்தியில் தெளிவூட்டுவதற்கு அவசியமான நிதியளிப்புக்களை கனடா மேற்கொண்டிருந்ததாகச் சுட்டிக்காட்டிய அவர்கள், தற்போது சிங்கள மக்கள் மத்தியில் 'சமஷ்டி முறைமை' தொடர்பில் விழிப்புணர்வூட்டுவதற்கு நிதியளிக்க முன்வரவேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர். அந்த யோசனையை வரவேற்ற மேரி-லூயிஸ், அதற்கு நிதியளிப்பது குறித்து தாம் அவதானம் செலுத்துவதாக உறுதியளித்தார். அதுமாத்திரமன்றி தாம் (உயர்ஸ்தானிகராலயம்) பெரும்பாலும் கொழும்பை மையப்படுத்தி இயங்கிவருவதன் காரணமாக இவ்வாறான கருத்துக்களை மிகக்குறைந்த அளவிலேயே அறிந்துகொள்ளமுடிவதாகக் குறிப்பிட்டார். அத்தோடு இச்சந்திப்பு வித்தியாசமானதாகவும், விழிப்பூட்டக்கூடியவகையிலும் அமைந்திருந்ததாகவும் அவர் தமிழர் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். மேலும் தாம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நிகழ்வொன்றை ஒழுங்கு செய்வதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும், அதன்போது தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடன் விரிவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இச்சந்திப்பின்போது வட, கிழக்கில் நிகழும் காணி அபகரிப்புக்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள், பௌத்த சிங்கள மயமாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி தமிழ்ப்பிரதிநிதிகளால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/204612
  14. 23 JAN, 2025 | 11:03 AM பாடசாலை மாணவிகள் மத்தியில் மனநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் பாலித பண்டார சுபசிங்க தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், ஓரினச்சேர்க்கை உறவுகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி பாவனைகள் அதிகரித்தல் உள்ளிட்ட காரணங்களினால் அதிகளவான பாடசாலை மாணவிகள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான மாணவிகள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகுதல் மற்றும் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் போன்ற தவறான வழிகளுக்கு உள்ளாகுகின்றனர். இதனால் பாடசாலை மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது. ஆண்கள் பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் மகளிர் பாடசாலைகளிலேயே ஓரினச்சேர்க்கை உறவுகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, இவ்வாறான விடயங்களால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்துவது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/204632
  15. பரந்தூர்:'முப்பாட்டன் வாழ்ந்த இடத்தை விட்டுப் போக முடியாது' - 900 நாட்களைக் கடந்து போராடும் மக்கள் - கள நிலவரம் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக தங்களது விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் நடத்தும் போராட்டம் 900 நாட்களைக் கடந்திருக்கிறது. அங்கே கள நிலவரம் என்ன? சென்னையிலிருந்து 70 கி.மீ. தூரத்தில் காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள பரந்தூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களில் புதிய விமான நிலையத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்த்து நடந்துவரும் போராட்டம் 900 நாட்களைக் கடந்திருக்கிறது. இந்த நிலையில்தான் திங்கட்கிழமையன்று (ஜன. 20) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், இந்தப் பகுதிக்கு வருகை தந்து, தங்களைச் சந்தித்து ஆதரவளித்தது புதிய உத்வேகத்தைத் தந்திருப்பதாக போராட்டக்காரர்கள் கருதுகிறார்கள். "இந்தப் போராட்டத்துக்கு உறுதியாக துணை நிற்பேன் என்று சொல்லிச் சென்றிருக்கிறார் விஜய். அவர் இங்கே வந்திருப்பது நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். விஜய் இங்கே வருவதாக தகவல் வெளியானதிலிருந்து இந்த விவகாரம் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்தது. விவாதங்கள் நடைபெற்றன. ஆகவே, அவருடைய வருகையும் ஆதரவும் இந்தப் போராட்டத்துக்கு நிச்சயம் வலு சேர்க்கும்" என நம்பிக்கையுடன் பேசுகிறார், ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் மற்றும் விவசாயிகள் நலக் கூட்டமைப்பின் செயலாளரான க. சுப்பிரமணியன். 'ஏதோ ஒரு லாபம் இருக்கிறது' - பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விஜய் பேசியது என்ன? புதுக்கோட்டை: கல்குவாரிக்கு எதிராக புகார் அளித்தவர் லாரி ஏற்றி கொலையா? என்ன நடந்தது? பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மையா? சமூக வலைதளங்களில் மீண்டும் சர்ச்சை ஒரே ஆண்டில் 8 மடங்கு அதிகம்: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வைரஸ் பரவலுக்கு அரசு தடுப்பூசி வழங்காதது ஏன்? தங்கள் பகுதியில் நிலமெடுப்பதை எதிர்த்து, 2022ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக தொடர் போராட்டத்தை இப்பகுதி மக்கள் நடத்திவருகின்றனர். ஏகனாபுரத்தில் உள்ள நாகாத்தம்மன் கோவிலுக்கு முன்பாக, தினமும் மாலையில் அமர்ந்து இந்தப் போராட்டத்தில் இவர்கள் ஈடுபடுகின்றனர். தற்போது 910 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில்தான் விஜய் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். சென்னைக்கு என இன்னொரு விமான நிலையத்தை உருவாக்கும் திட்டம் என்பது சுமார் முப்பது ஆண்டுகளாகவே விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம்தான். 1998ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னைக்கு என புதிதாக ஒரு விமான நிலையத்தைக் கட்டுவது குறித்து ஆலோசித்து வருவதாக, அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் அறிவித்தார். ஆரம்பத்தில் இந்த விமான நிலையம் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு மேற்கே பத்து கி.மீ. தூரத்தில் போரூருக்கு அருகில் திட்டமிடப்பட்டது. ஆனால், முன்னேற்றமேதும் இல்லை. பிறகு, 2007ஆம் ஆண்டில் சென்னைக்கென புதியதொரு விமான நிலையத்தை ஸ்ரீ பெரும்புதூருக்கு அருகில் சுமார் 4,820 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக, அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தார். 2011வாக்கில் இது தொடர்பாக சாத்தியக்கூறு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இது தொடர்பாக பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதற்குள் ஸ்ரீ பெரும்புதூரில் தொழிற்சாலைகள் பெருக ஆரம்பிக்க, புதிய விமான நிலையம் தொடர்பாக பணிகள் ஏதும் நடக்கவில்லை. இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இரண்டாவது விமான நிலையம் தொடர்பான பேச்சுகள் அடிபட ஆரம்பித்தன. திருப்போரூர், பண்ணூர், பரந்தூர், படாளம் ஆகிய பகுதிகள் ஆராயப்பட்டு, புதிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் என இறுதிசெய்யப்பட்டது. இந்தப் புதிய விமான நிலையம் 4,970 ஏக்கர் நிலத்தில் அமையும் என அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் ரயில் விபத்து- குறைந்தது 7 பேர் பலி22 ஜனவரி 2025 இந்திய பங்குச் சந்தையில் ரூ.7 லட்சம் கோடி சரிவு - டிரம்ப் காரணமா? முதலீடு செய்யலாமா, கூடாதா?22 ஜனவரி 2025 படக்குறிப்பு, ஏகனாபுரத்தில் உள்ள நாகாத்தம்மன் கோவிலுக்கு முன்பாக, தினமும் மாலையில் அமர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் இந்த நிலம், பரந்தூர், வளத்தூர், பொடவூர், நெல்வாய், தண்டலம், மடப்புரம், தொடூர், சிங்கிலிபாடி, குணகரம்பாக்கம், எடையார்பாக்கம், அக்கமாபுரம், ஏகனாபுரம், மகாதேவிமங்கலம் ஆகிய 13 கிராமங்களில் இருந்து கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்ப் பிறகுதான், இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் இறங்கினர். சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்துக்கு அருகில் சாலையிலிருந்து உள்ளடங்கி அமைந்துள்ளன இந்த கிராமங்கள் அனைத்தும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமங்கள். ஏரி, ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவற்றின் மூலமும் மழையை ஆதாரமாக வைத்தும் இப்பகுதியில் விவசாயம் நடைபெறுகிறது. "எனக்கு இந்த ஊரில் 27 சென்ட் நிலம்தான் இருக்கிறது. அதில் விவசாயம் செய்தும் ஆடு, மாடுகளை வைத்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். விவசாயத்தைத் தவிர வேறு எந்த வேலையும் எனக்குத் தெரியாது. என்ன நடந்தாலும் இந்த இடத்தை கொடுப்பதாக இல்லை. இந்த நிலத்தை எடுப்பதற்கு பதிலாக எங்களுக்கு விஷத்தைக் கொடுத்து சாகடித்துவிடலாம். அல்லது ராணுவத்தை வைத்து சுட்டுவிடலாம். எங்களுடைய தந்தை, பாட்டன், முப்பாட்டன் வாழ்ந்த இடம். அதைவிட்டுப் போக முடியாது. எங்களுக்கு இந்த மண்தான் வேண்டும்" என ஆவேசமாகப் பேசுகிறார் ஏகனாபுரத்தைச் சேர்ந்த குமார். படக்குறிப்பு, இந்த போராட்டம் 1,000 நாட்களை நெருங்கிவருகிறது ஏகனாபுரத்தில்தான் தொடர் போராட்டம் நடக்கிறது என்றாலும், பாதிக்கப்படக்கூடிய மற்ற ஊர்களைச் சேர்ந்தவர்களும் அவ்வப்போது இந்தப் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். ஏகனாபுரத்திற்கு அருகில் உள்ள நாகப்பட்டைச் சேர்ந்த கே. முருகன், இதுவரை யாரையும் சாராமல் வாழ்ந்துவிட்ட தங்களை வேறொரு இடத்திற்கு மாற்றினால், இதே போன்ற வாழ்க்கை கிடைக்குமா எனக் கேள்வியெழுப்புகிறார். மேலும், இவரைப் போன்ற நிலமற்ற விவசாயிகளுக்கு வேறு பிரச்னைகள் இருக்கின்றன. "இந்த ஊரில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 350 பேர் இருக்கிறோம். விவசாயத்தைத் தவிர வேறு எந்தத் தொழிலும் எங்களுக்குத் தெரியாது. தலைமுறை தலைமுறையாக இதே ஊரில் வாழ்கிறோம். எனக்குச் சொந்தமாக மிகக் குறைவான நிலமே இருந்தாலும், 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் மூன்று போகம் பயிர் செய்து வாழ்கிறேன். இழப்பீடு தருவதாகச் சொல்பவர்கள், என்னைப் போல நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்களின் நிலையை யோசித்துப் பார்த்தார்களா?" எனக் கேள்வியெழுப்புகிறார் கே. முருகன். குஜராத்: வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய அரசு - 'சட்டவிரோத வீடுகள் என்றால் ஏன் மின்சார, தண்ணீர் இணைப்பு கொடுத்தீர்கள்?' என கேட்கும் மக்கள்22 ஜனவரி 2025 'திரும்பிச் செல்வதை தவிர வேறு வழியில்லை' – டிரம்பின் எல்லைக் கட்டுப்பாடுகளால் புலம்பெயர்வோர் வேதனை22 ஜனவரி 2025 படக்குறிப்பு, கடந்த திங்கட்கிழமை தவெக தலைவர் விஜய் போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் பொதுவாக இதுபோன்ற வளர்ச்சிப் பணிகளுக்காக நிலம் எடுக்கப்படும்போது, நிலத்தின் மதிப்பைப் போல மூன்று மடங்குவரை இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும், தங்கள் நிலத்தைவிட்டுப் போக முடியாது என்கிறார் சுப்பிரமணியன். "எவ்வளவு கூடுதல் இழப்பீடு வழங்கிவிட முடியும்? பத்திரப் பதிவு ஏதும் செய்ய முடியாது என்பதால் ஒரு அவசரத்துக்கு நிலத்தை விற்கக்கூட முடியவில்லை. இதனால், 2019ல் இருந்து பொருளாதார நெருக்கடியிலும் மன உளைச்சலில் இருக்கிறோம். இப்போது இங்கே (ஏகனாபுரத்தில்) ஒரு சென்ட் நிலம் சுமார் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. அரசு நாற்பதாயிரம் ரூபாய் தருவதாக வைத்துக்கொள்வோம். சற்று தள்ளியிருக்கும் பரந்தூர் பகுதியில் ஒரு சென்ட் நிலம் மூன்று லட்ச ரூபாய்க்கு விற்கிறது. நாங்கள் இங்கே ஒரு ஏக்கரை அரசுக்குக் கொடுத்துவிட்டு, அங்கே எவ்வளவு நிலத்தை வாங்க முடியும்? இங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு சதுர அடி நிலம் மூவாயிரத்து ஐநூறு ரூபாய். அங்கே எவ்வளவு நிலத்தை வாங்க முடியும்?" என கேள்வி எழுப்புகிறார். படக்குறிப்பு, எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும், தங்கள் நிலத்தைவிட்டுப் போக முடியாது என, இங்குள்ள மக்கள் கூறுகின்றனர் பரந்தூர் பகுதி கற்கால கிராமங்கள் இருந்த பகுதியாக தொல்லியல் துறை சொல்கிறது எனக்கூறும் சுப்பிரமணியன், இப்படிப்பட்ட இடத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் தங்களை இங்கிருந்து அகற்றி, தங்களின் அடையாளங்களை அழிப்பது சரியா எனக் கேள்வி எழுப்புகிறார். கடந்த ஆண்டு இந்த விமான நிலையத்துக்கு என எந்தெந்த நிலங்கள் கையகப்படுத்தப்படவிருக்கின்றன என்ற அறிவிப்பை வெளியிட்டது அரசு. அதற்குப் பிறகு, ஆகஸட் மாத வாக்கில் அந்த நிலங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டது. போராட்டக் குழுவினர் திரண்டு சென்று தங்கள் ஆட்சேபங்களைப் பதிவு செய்தனர். நிலமெடுப்பு முயற்சிகள் அதற்குப் பிறகு நகரவில்லை. அமெரிக்காவில் டிரம்ப் நினைத்ததை எல்லாம் செய்துவிட முடியுமா? கட்டுப்படுத்தும் 6 வழிகள்22 ஜனவரி 2025 எரிமலை வெடிப்பால் நகரமே அழிந்த போது இந்த ஆண், பெண் கைகளில் பற்றி இருந்தது என்ன? 2,000 ஆண்டுக்கு முந்தைய அற்புத வாழ்க்கை22 ஜனவரி 2025 இப்போது விஜய் இப்பகுதிக்கு வந்துசென்ற பிறகு, இந்தத் திட்டம் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. பண்ணூருக்குப் பதிலாக பரந்தூர் ஏன் தேர்வு செய்ப்பட்டது என்பது குறித்தும், சென்னைக்கு அருகில் புதிய விமான நிலையத்திற்கான தேவை குறித்தும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. "பண்ணூரில் உள்ள உத்தேசப் பகுதியில் 1,546 குடும்பங்கள் வசிக்கும் நிலையில், பரந்தூரில் 1005 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. பண்ணூருடன் ஒப்பிடும்போது இப்பகுதியில் விமானச் செயல்பாடுகளுக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட தடைகள் குறைவாகவே உள்ளன" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரந்தூரில் உள்ள உத்தேசத் தளத்தில் போதுமான கட்டமைப்புகள் இல்லை என்றும் பண்ணூர் அருகே உள்ள நிலங்கள், குடியிருப்புகள், தொழிற்சாலைகள் என வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. "பரந்தூரைச் சுற்றி காலி இடங்கள் உள்ளதால், எதிர்கால மேம்பாடுகளுக்குத் திட்டமிட முடியும். பண்ணூரில் முன்மொழியப்பட்ட திட்டப்பகுதி, ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ளது. பண்ணூர் திட்டப் பகுதியின் வளர்ச்சியடைந்த தன்மை, கையகப்படுத்தும் செலவை கணிசமான அளவுக்கு அதிகரிக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடம் 2020ஆம் ஆண்டிலேயே தேர்வுசெய்யப்பட்டுவிட்டது என்றும் டெல்லி விமான நிலையம் 5,106 ஏக்கரிலும் மும்பை விமான நிலையம் 1,105 ஏக்கரிலும் ஹைதராபாத் விமான நிலையம் 5,500 ஏக்கரிலும் பெங்களூரு விமான நிலையம் 4,000 ஏக்கரிலும் அமைந்துள்ளன என்றும் சென்னை விமான நிலையம் 1,000 ஏக்கரில்தான் அமைந்துள்ளது, அளவில் சிறியதாக இருந்தாலும் ஆண்டுக்கு 2 கோடி மக்கள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகிறார்கள் என்கிறது எந்த அறிக்கை. மேலும், அடுத்த பத்தாண்டுகளில் 8 கோடி பேர் சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. "அரசியல் கட்சித் தலைவர்கள் யார் வேண்டுமானாலும் பரந்தூர் மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டு அரசின் கவனத்துக்குக் கொண்டுவரும் பட்சத்தில் தமிழக அரசு அந்தக் குறைகளை பரிவுடன் ஆராயும்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், பரந்தூர் பகுதி மக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை. அறவழிப் போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqjv7ylenk2o
  16. 'எனது பிள்ளைகள் இன்னமும் இடிபாடுகளிற்குள்ளேயே உள்ளனர்' துயரத்தில் சிக்கியுள்ள காசா மக்கள் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்குண்டுள்ள உடல்களை அகற்ற முயல்கின்றனர் Published By: RAJEEBAN 23 JAN, 2025 | 10:45 AM ரொய்ட்டர்ஸ் காசாவில் துப்பாக்கிகள் மரணித்திருக்கலாம், ஆனால் மஹ்மூட் அபு டல்பாவிற்கு அவர் எதிர்கொண்டுள்ள துயரம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை. யுத்தத்தின் ஆரம்பநாட்கள் முதல் கட்டிட இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள தனது மனைவியினதும் ஐந்து பிள்ளைகளினதும் உடல்களை அவர் தேடிவருகின்றார். டிசம்பர் 2023 இல் காசாநகரின் செஜய்யா புறநகரில் உள்ள கட்டிடமொன்றில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அவரது மனைவி பிள்ளைகள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர். குண்டுகள் தொடர்ந்து விழுந்து கொண்டிருந்ததால் 3 உடல்கனை மாத்திரம் மீட்க முடிந்தது. 'எனது பிள்ளைகள் இன்னமும் இடிபாடுகளிற்குள்ளேயே இருக்கின்றனர். அவர்களை மீட்க சிவில் பாதுகாப்பு படையினர் முயன்றனர், ஆனால் அழிவு அளவு காரணமாக அவர்களால் மீட்க முடியவில்லை, தியாகிகளின் உடல்களை வெளியே எடுப்பதற்கான சாதனங்கள் எங்களிடம் இல்லை. மஹ்மூட் அபு டல்பாவிற எக்ஸ்கவேட்டர்களும் தொழில்நுட்ப சாதனங்களும் அவசியம் என மஹ்மூட் அபு டல்பா தெரிவித்தார். 'எனது மனைவி ஐந்து பிள்ளைகளுடன் கொல்லப்பட்டார் -மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் -மூவர் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள்" என அவர் தெரிவித்தார். முஸ்லீம் அராபிய நாடுகளில் உயிரிழந்து ஒரு சில மணிநேரங்களில் உடல்களை புதைப்பார்கள், உடல்களை மீட்க முடியாவிட்டால் கௌரவமான விதத்தில் இறுதிக்கிரியைகளை நடத்த முடியாவிட்டால் அது குடும்பங்களிற்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தும். அவர்களை வெளியே கொண்டுவந்து கல்லறையொன்றை ஏற்படுத்த முடியும் என நான் நினைக்கின்றேன், இந்த உலகத்தில் நான் எதிர்பார்ப்பது அதனைதான், இந்த உலகம் எனக்கு வீடு கட்டித்தரவேண்டும் என்றோ அல்லது வேறு எதனையுமோ நான் எதிர்பார்க்கவில்லை, அவர்களை வெளியில் எடுத்து கல்லறையொன்றை உருவாக்கவேண்டும் அவ்வளவுதான் என்கின்றார் அபுடல்பா . ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது முதல் 200 உடல்களை மீட்டுள்ளதாக பாலஸ்தீன சிவில் அவசரசேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த யுத்த நிறுத்தம் 45000க்கும் அதிகமானவர்களை பலிகொண்ட 15 மாத யுத்தத்தை நிறுத்தியுள்ளது. 2023 ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் தென்பகுதி மீது தாக்குதலை மேற்கொண்டு 1200 பேரை கொலை செய்து 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்துசென்றதை தொடர்ந்தே இந்த யுத்தம் ஆரம்பமானது. இது இஸ்ரேலின் புள்ளிவிபரமாகும். 94 பணயக்கைதிகள் இன்னமும் ஹமாசின் பிடியிலேயே உள்ளனர். கற்குவியல்களை இடிபாடுகளை அகற்றுவதற்கான பாரிய இயந்திரங்கள் இன்மை, அவற்றை அகற்றுவதற்கு பெரும் தடையாக உள்ளது என்கின்றார் பாலஸ்தீன சிவில் அவசரசேவை பிரிவின் தலைவர் மஹ்மூட் பாசல். தங்களின் பல வாகனங்களை இஸ்ரேல் அழித்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொலை செய்துள்ளது என அவர் குறிப்பிடுகின்றார். கொல்லப்பட்ட பத்தாயிரம் பாலஸ்தீனியர்களின் உடல்கள் இன்னமும் மீட்கப்படாமலிருப்பதாக அவர் மதிப்பிடுகின்றார். இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக 50 மில்லியன் தொன் இடிபாடுகள் காணப்படுவதாக மதிப்பிட்டுள்ள ஐநா, அவற்றை அகற்ற 21 வருடங்கள் எடுக்கும், 1.2 பில்லியன் டொலர்கள் தேவை என தெரிவித்துள்ளது. அபு டல்பாலை போல காசாவில் 2.3 மில்லியன் சனத்தொகையில் ஆயிரக்கணக்கானவர்கள் பாரிய இடிபாடுகளிற்கு இடையில் சிக்குண்டுள்ள அல்லது இஸ்ரேலின் தரை தாக்குதல்களின் போது பாரியமனித புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ள தங்கள் உறவுகளை தேடிவருகின்றனர். 68 வயது ரபா அபுலியாஸ் இஸ்ரேலின் தாக்குதலில் தனது மகனை இழந்தவர், தனது மகனிற்கு உரிய கல்லறையை வழங்க விரும்புகின்றார். அஷ்ரபினை எங்கு புதைத்துள்ளார்கள் என்பது எனக்குதெரியும், ஆனால் அவரது உடல் ஏனைய பலருரின் உடலுடன் காணப்படுகின்றது, அவருக்கு கல்லறை இல்லை அவரது பெயர் பொறிக்கப்பட்ட கல்லறை இல்லை என்கின்றார் அவர். நான் அடிக்கடி அவருடன் பேசுவதற்கு ஏற்ற விதத்தில் அவருக்கு கல்லறையொன்றை உருவாக்க விரும்புகின்றேன் என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/204631
  17. தொடர்ச்சியாக செல்போன் பாவிப்பதால் மூளை செயலற்றதாக மாறுவதாக காணொளியில் கூறுகிறார்கள்.
  18. அமெரிக்காவில் பிறந்தால் இனி குடியுரிமை கிடையாது: ட்ரம்பின் அறிவிப்பினால் ஏற்படவுள்ள விளைவு பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக அமெரிக்க குடியுரிமையை கோரமுடியாது என புதிய அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட டொனால்டு டிரம்ப் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி வேலை செய்யும் இந்தியர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டிரம்ப், எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என பல்வேறு தடாலடியான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கியமாக, பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக குடியுரிமை பெறும் நடைமுறையை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்தார். இது, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. டிரம்ப்பின் இந்த முடிவு இந்தியர்களிடையே பெரிதும் பாதிப்பை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், லட்சக்கணக்கான இந்தியர்கள் தற்காலிக விசா அடிப்படையில் அமெரிக்காவில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அங்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையில், பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலை ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் அந்த குழந்தைகளுக்கு தானாக அமெரிக்க குடியுரிமை வழங்கும் சட்ட நடைமுறை இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அந்த கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இனி அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் எவரும் அமெரிக்க குடியுரிமையை கோரமுடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்த புதிய உத்தரவு 30 நாட்களில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குடியேற்ற கொள்கை தொடர்பான அதிபர் டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு எதிராக சட்டப்போராட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை கோருவதை முடிவுக்கு கொண்டு வரும் நிர்வாக ரீதியிலான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்ட சில மணி நேரங்களுக்குள்ளாகவே அதனை எதிர்த்து நியூ ஹாம்சையரில் உள்ள குடியேற்ற வழக்கறிஞர்கள் வழக்கை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/314762
  19. 19இன் கீழ் மகளிர் டி20 உலகக் கிண்ணம்: அறிமுக போட்டியிலேயே வைஷ்ணவி ஹெட்-ட்ரிக்; மலேசியாவை வென்றது இந்தியா Published By: VISHNU 21 JAN, 2025 | 07:42 PM (நெவினல் அன்தனி) கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற மலேசியாவுக்கு எதிரான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் இந்தியாவின் அறிமுக வீராங்கனை வைஷ்ணவி ஷர்மா ஹெட்-ட்ரிக்குடன் 5 விக்கெட்களைக் கைப்பற்ற இந்தியா 10 விக்கெட்களால் வெற்றிபெற்றது. இடது கை சுழற்பந்து வீச்சாளரான வைஷ்ணவி ஷர்மா இந்த வருட 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் முதலாவது ஹெட்-ட்ரிக்கை பதிவு செய்து வரலாறு படைத்தார். 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் பதிவான இரண்டாவது ஹெட்-ட்ரிக் இதுவாகும். தென் ஆபிரிக்காவில் 2023இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆபிரிக்காவின் மெடிசன் லாண்ட்ஸ்மன் முதலாவது ஹெட் - ட்ரிக்கை பதிவு செய்து சாதனை நிலைநாட்டியிருந்தார். மலேசியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்திய வைஷ்ணவி ஷர்மா, ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 5 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டி வரலாற்றில் இதுவே மிகச் சிறந்த பந்துவீச்சு பெறுதியாகும். சோனம் யாதவ்வுக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடித்த அறிமுக வீராங்கனை வைஷ்ணவி, மலேசியாவை 14.3 ஓவர்களில் 31 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க உதவினார். அவர் தனது முதலாம் கட்ட பந்துவீச்சில் மலேசிய அணித் தலைவி நூர் டானியா சியூஹடாவையும் நுரிமன் ஹியாதாவை யும் ஆட்டம் இழக்கச் செய்ததுடன் இரண்டாம் கட்ட பந்துவீச்சில் நூர் ஐன் பின்தி ரோஸ்லான், நூர் இஸ்மா டானியா, சித்தி நஸ்வா ஆகியோரை ஹெட் - ட்ரிக் முறையில் வெளியேற்றினார். வைஷ்ணவிக்கு பக்கபலமாக பந்துவீசிய ஆயுஷி ஷுக்லா ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3.3 ஓவர்களில் 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். மலேசியா பெற்ற 31 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய இந்தியா 2.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 32 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ட்ரிஷா கொங்காடி 27 ஓட்டங்களுடனும் இந்த வருட மகளிர் பிறீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் மும்பை இண்டியன்ஸினால் 1.60 கோடி ருபாவுக்கு வாங்கப்பட்ட ஜீ. கமலினி 4 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். ஆட்டநாயகி: வைஷ்ணவி ஷர்மா https://www.virakesari.lk/article/204484
  20. Published By: RAJEEBAN 22 JAN, 2025 | 04:57 PM லசந்த விக்கிரமதுங்க, வாசிம் தாஜூதீன், பிரகீத்எக்னலிகொட விவகாரங்களிற்கு நீதி வழங்குவேன் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க உறுதியளித்துள்ளார். தொலைக்காட்சி பேட்டியொன்றின் போது இதனை தெரிவித்துள்ள அவர் கடந்தகால குற்றங்கள் காலவோட்டத்தில் மறக்கப்படாமலிருப்பதை உறுதி செய்வது குறித்த தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். விசாரணைனகளை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், நீதித்துறை போன்ற நிறுவப்பட்ட கட்டமைப்புகள் உள்ளதை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விசாரணைகளிற்கு மிகவும் அவசியமான விசாரணையாளர்கள் பலர் கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்றதும் இடமாற்றம் செய்யப்பட்டனர், 650 விசாரணையாளர்கள் தங்கள் பதவியை இராஜினாமா செய்தனர், அவர்கள் வெளிநாட்டிற்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தற்போயை அரசாங்கம் இவர்களை மீண்டும் பணிக்கு அமர்த்துவது தொடர்பிலும் புதியவர்களை நியமிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றது. 2009 ஜனவரியில் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகள் பற்றி கருத்துதெரிவித்துள்ள ஜனாதிபதி 16 வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதில் சவால்கள் உள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை எவ்வளவு சவால்கள் இருந்தாலும் விசாரணை கைவிடப்படாது என தெரிவித்துள்ளார். வாசிம் தாஜூதீன் படுகொலை போன்ற நன்கறியப்பட்ட படுகொலைகளை விசாரணை செய்வதில் சவால்கள் உள்ளன. முக்கிய சாட்சியாள பிரதான சட்டவைத்திய அதிகாரி உயிரிழந்துள்ளார். இதேபோன்று போத்தல ஜயந்த தாக்கப்பட்டமை குறித்த முக்கிய ஆவணங்கள் காணாமல்போயுள்ளன, இந்த தடைகள் இருந்தாலும் நீதி நிலைநாட்டப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/204569
  21. இரணைமடு குளத்தின் சகல வான்கதவுகள் திறக்கப்பட்டன கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் மக்கள் இருப்பிடங்களிற்குள் வெள்ளநீர் உட்புகுந்ததுடன் உள்ளக போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டது. அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதே வேளை இரணைமடு குளம் வான்பாய்ந்து வருவதுடன், குளத்தின் சகல வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. கனகாம்பிகைக்குளம், கல்மடுக்குளம் உள்ளிட்ட நீர்பாசனக் குளங்களும் வான்பாய்ந்து வருகிறது. இதனால் வெளியேறும் வெள்ள நீரும் மக்கள் குடியிருப்புக்கள், உள்ளக வீதிகளை கடந்து செல்கின்றது. வெள்ளம் வடிந்தோடும் நிலையில் கண்டாவளை, கோரக்கன்கட்டு, முரசுமோட்டை, ஊரியான் உள்ளிட்ட தாழ்நிலப்பகுதியில் உள்ள மக்களை அவதானமாக செயற்படுமாறும், குளங்களை பார்வையிடும் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் இடர் முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தி வருகின்றது. https://thinakkural.lk/article/314792
  22. Published By: VISHNU 22 JAN, 2025 | 06:25 PM (நா.தனுஜா) அடுத்துவரும் மூன்று மாதகாலத்தில் 3 பிரதான செயற்திட்டங்களுக்கென மொத்தமாக 200 மில்லியன் டொலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு உத்தேசித்திருப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத் தலைவர் மார்ட்டின் ரெய்ஸர் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் நாட்டுக்கு வருகை தந்திருந்த உலக வங்கியின் தெற்காசியப் பிராந்திய பிரதித்தலைவர் மார்ட்டின் ரெய்ஸர், இலங்கையில் தங்கியிருந்த இருநாட்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்கள், தனியார்துறை முதலீட்டாளர்கள், அபிவிருத்திப்பங்காளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து, பொருளாதார மீட்சி மற்றும் நீண்கால அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சி என்பவற்றை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினார். அதன்படி புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு குறித்தும், அவர்களால் முன்னுரிமையளிக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் பற்றிக் கலந்துரையாடியமை குறித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் மார்ட்டின் ரெய்ஸர், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கல் என்பவற்றுக்கான சாத்தியமான வாய்ப்புகள் தொடர்பில் தனியார்துறையினருடன் நடாத்திய கலந்துரையாடல் குறித்து திருப்தி வெளியிட்டுள்ளார். அதேபோன்று இவ்விஜயத்தின்போது வறுமையைத் தணிப்பதற்கான அரசாங்கத்தின் கடப்பாடு, டிஜிட்டல் அபிவிருத்தி மற்றும் 'க்ளீன் ஸ்ரீலங்கா' செயற்திட்டம் என்பன தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது. இவற்றுக்கு அவசியமான ஒத்துழைப்பை உலக வங்கி தொடர்ந்து வழங்கும் என உத்தரவாதமளித்த மார்ட்டின் ரெய்ஸர், அடுத்துவரும் மூன்று மாதகாலத்தில் 3 பிரதான செயற்திட்டங்களுக்கென மொத்தமாக 200 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு உலக வங்கி உத்தேசித்திருப்பதாகத் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி இச்செயற்திட்டங்கள் கிராமிய அபிவிருத்தி மற்றும் கல்வி மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் 'வறுமையைக் குறைத்தல், டிஜிட்டல் நிலைமாற்றம் மற்றும் நிலைபேறான வளர்ச்சி ஆகிய துறைகள் உள்ளடங்கலாக இலங்கையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டத்துக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவதற்கு உலக வங்கி தயாராக இருக்கின்றது. எதிர்வருங்காலங்களில் இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நேரடியாகப் பங்களிப்புச்செய்யக்கூடிய திட்டங்களுக்கு நிதி அளிப்பதற்கு எதிர்பார்த்திருக்கிறோம்' எனவும் உலக வங்கியின் தெற்காசியப்பிராந்தியத் தலைவர் மார்ட்டின் ரெய்ஸர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/204602
  23. 22 JAN, 2025 | 01:08 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஒருவாரகாலப்பகுதியில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளோம் அவை முழு வீச்சில் இடம்பெறுகின்றன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி குறித்த விசாரணைகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதிஅர்ஜூனமகேந்திரன் சிங்கப்பூர் பிரஜைஎன்பதால் அவரை இலங்கைக்கு கொண்டுவருவது கடினமாக உள்ளது என தெரிவித்துள்ளார். எனினும் இந்த விவகாரத்தின் பாரதூரதன்மையை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தி,அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண:டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/204531
  24. நாம் கூறும் வரை காத்திருக்காமல் மஹிந்த உடனடியாக வெளியேறுவதே உசிதமானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாம் கூறும் வரை காத்திருக்காமல் உடனடியாக வெளியேறுவதே உசிதமானது. அவருக்கு மாத்திரமின்றி ஏனைய சகல முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இது பொறுந்தும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், விரைவில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட சகல முன்னாள் ஜனாதிபதிகளதும் உத்தியோகபூர்வ இல்லங்கள் குறித்த மதிப்பாய்வு முன்னெடுக்கப்படும். 1986ஆம் ஆண்டு 4ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரிமைகள் குறித்த சட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது புதல்வன் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது அவர் திருமணம் செய்து கொண்டவருக்கு உத்தியோகபூர்வமாக இல்லமொன்று வழங்கப்படாத சந்தர்ப்பத்தில் அவர்கள் வசிக்கும் அரசாங்கத்துக்கு சொந்தமான இல்லத்துக்கு அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையில் மூன்றில் ஒரு பங்கினை செலுத்த வேண்டும் என்று குறித்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நாம் கூறும் வரை காத்திருக்காமல் அவர் வெளியேறத்தான் வேண்டும். அவ்வாறில்லை என்றால் குறித்த இல்லத்துக்கான வாடகையை செலுத்தி அங்கு வசிக்கவும் முடியும். அதனை விட அவருக்கு வளர்ந்த புதல்வர்கள் மூவர் இருப்பதால் அவர்கள் அவரைப் பார்த்துக் கொள்வார்கள் என்று எண்ணுகின்றோம். இந்த சட்டம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரமின்றி சகல முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பொறுந்தும். அரசியல்வாதிகளின் சிறப்புரிமைகளை நீக்கி, அவர்களால் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையை குறைப்பதற்கான ஆணையே எமக்கு கிடைத்திருக்கின்றது என்றார். https://thinakkural.lk/article/314755
  25. இலங்கையில் அண்மையில் பதிவான குற்றங்கள் தொடர்பாக ஒரு இராணுவ மேஜர், ஆறு அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 15 பேர் கைது செய்யப்பட்டதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றின் நேற்றைய(21.01.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “2024 செப்டம்பர் 23 முதல் நடந்த குற்றங்களை ஆராயும் போது, கடமைகளில் இருந்த சில இராணுவ வீரர்கள் இந்த சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆயுதங்கள் மீட்பு கடந்த இரண்டு நாட்களில், ஒரு இராணுவ மேஜர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இராணுவத்தைச் சேர்ந்த மேலும் ஆறு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதோடு ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, இந்தக் கைதுகளுக்கு மேலதிகமாக, தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/army-major-and-other-officers-arrested-1737502519

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.