Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 11 Nov, 2025 | 02:20 PM (நெவில் அன்தனி) இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் மேகாலயா கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சௌதரி 8 பந்துகளில் 8 சிக்ஸ்களை தொடர்ச்சியாக விளாசியதுடன் 11 பந்துகளில் அரைச் சதம் குவித்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக அரைச் சதம் குவித்து சாதனை நிலைநாட்டினார். இதன் மூலம் அனைத்துக் கால கிரிக்கெட் ஜாம்வான்கள் இருவரின் மைல்கல் சாதனைகளை முறியடித்தவர் என்ற பெருமையை 25 வயதான ஆகாஷ் சௌதரி பெற்றுக்கொண்டார். ஒரே ஓவரில் 6 சிக்ஸ்களை விளாசிய அவர் அடுத்து அவர் எதிர்கொண்ட ஓவரின் முதல் 2 பந்துகளில் மேலும் 2 சிக்ஸ்களை விளாசி இந்த அரிய சாதனையை நிலைநாட்டினார. மேகாலயா அணிக்கும் அருணாச்சல் பிரதேஷ் அணிக்கும் இடையில் குஜராத் மாநிலத்தின் சுராத் விளையாட்டரங்கில் வார இறுதியில் நடைபெற்ற ரஞ்சி கிண்ண கோப்பை பிரிவு கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்திலேயே ஆகாஷ் இந்த இரண்டு சாதனைகளையும் நிலைநாட்டினார். மேகாலயா அணியின் முதல் இன்னிங்ஸில் 8ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக ஆடுகளம் நுழைந்த ஆகாஷ் சௌதரி, முதலாவது பந்தில் ஓட்டம் பெறாததுடன் அடுத்த 2 பந்துகளில் ஒற்றைகளைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து இடதுகை சுழல்பந்துவீச்சாளர் லிமார் தாபியின் ஓவரை எதிர்கொண்ட ஆகாஷ் சௌதரி தொடர்ச்சியாக 6 சிக்ஸ்களை விளாசினார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் 6 சிக்ஸ்களை விளாசியவர்கள் வரிசையில் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள் - 1968), ரவி ஷாஸ்திரி (இந்தியா - 1985) ஆகியோருடன் மூன்றாவது வீரராக ஆகாஷ் சௌதரி இணைந்துகொண்டார். அதன் பின்னர் மற்றொரு சுழல்பந்துவீச்சாளரான ரி.என்.ஆர். மோஹித்தின் ஓவரை எதிர்கொண்ட ஆகாஷ், முதல் இரண்டு பந்துகளை சிக்ஸ்களாக அடித்து 8 பந்துகளில் 8 சிக்ஸ்களை விளாசிய முதலாவது வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார். இசெக்ஸ் அணிக்கு எதிராக லெஸ்டர்ஷயர் வீரர் வெய்ன் வைட் 2012இல் 12 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ததே முந்தைய அதிவேக அரைச் சதமாக இருந்தது. ஆகாஷ் அரைச் சதம் பூர்த்திசெய்ததும் மேகாலய அணி தனது முதல் இன்னிங்ஸை 8 விக்கெட்கள் இழப்புக்கு 629 ஓட்டங்களுடன் நிறுத்திக்கொண்டது. அருணாச்சல பிரதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 73 ஓட்டங்களுக்கு சுரண்டதுடன் பலோ ஒன்னில் 109 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இன்னிங்ஸ் மற்றும் 446 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் சௌதரி முதல் இன்னிங்ஸில் 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் இரண்டாவது இன்னிங்ஸில் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார். பந்துவீச்சில் 31 போட்டிகளில் 90 விக்கெட்களைக் கைப்பற்றி ஒரு சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக ஆகாஷ் சௌதரி முன்னேறி வருகிறார். https://www.virakesari.lk/article/230081
  2. பட மூலாதாரம், Mauricio Hoyos படக்குறிப்பு, வெவ்வேறு சுறா இனங்கள் குறித்து கடந்த 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார் ஹோயோஸ் கட்டுரை தகவல் ரஃபேல் அபுசைடா பிபிசி நியூஸ் முண்டோ 12 நவம்பர் 2025, 08:40 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உங்களுக்கு சங்கடம் தரும் விவரிப்புகள் இருக்கலாம்.) தன்னுடைய மண்டை ஓட்டின் மீது சுமார் 3 மீட்டர் (10 அடி) நீளமுடைய பெண் கலாபகோஸ் சுறாவின் தாடை ஏற்படுத்திய அழுத்தத்தை மௌரிசியோ ஹோயோஸ் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். தனது கழுத்து நரம்பை காப்பாற்றிக் கொள்வதற்கான கடைசி முயற்சியில் தலையை சாய்க்கக் கூட நேரமில்லாத வகையில் அது அவரை நோக்கி திடுக்கிடும் வேகத்தில் வந்தது. "அது தன் தாடையை மூடிக் கொண்டபோது, சுறா கடித்த அழுத்தத்தை உணர்ந்தேன், பின் ஒரு நொடியில் மீண்டும் தாடையை திறந்து என்னை தப்பிச் செல்ல அனுமதித்தது," என மெக்ஸிகோவின் பாஜா கலிஃபோர்னியாவில் உள்ள தன் வீட்டிலிருந்து ஹோயோஸ் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். அச்சமயத்தில், சுறாவின் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்து ஒருமாதமே ஆகியிருந்தது. கடல் உயிரியலாளரான ஹோயோஸ், சுறாக்களை அதன் இயற்கை வாழ்விடங்களுக்கு சென்று ஆராய்வதில் சுமார் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். கடந்த செப்டம்பர் மாதம் கோஸ்டா ரிக்காவில் (Costa Rica) ஆராய்ச்சிக்காக பயணம் மேற்கொண்டிருந்த போது அவரை சுறா ஒன்று தாக்கியது. முகத்தில் ஏற்பட்ட காயத்தை இன்னும் தாங்கிக் கொண்டிருக்கும் அவர், தான் மீண்டு வந்தது "நம்ப முடியாததாக உள்ளது" என்றும், தன்னை தாக்கிய சுறாவை தான் மீண்டும் பார்ப்பேன் என நம்பிக்கையுடன் உள்ளதாகவும் கூறினார். படக்குறிப்பு, சுறா கடித்ததால் ஏற்பட்ட காயத்தை, "செவுள்கள் போன்று தோன்றும் விழுப்புண்" என கூறுகிறார் ஹோயோஸ் கொக்கோஸ் தீவில் (Cocos Island) ஹோயோஸுக்கு நடந்தது, ஆபத்து என தான் நினைக்கும் ஒன்றை எதிர்கொள்ளும்போது விலங்குகளின் இயல்பான நடத்தையின் விளைவு அது. "நாய் கடித்தது போன்று இருந்தது," என்கிறார் அவர். "ஒரு நாய் தனக்கு அருகில் வரும்போது மற்றொரு நாய் அதை விரைந்து கடிப்பதை பார்த்திருக்கிறீர்களா? அது அந்த நாய்க்கு வலிக்காது, ஆனால் நெருங்கி வரும் நாயை அமைதிப்படுத்தும்." ஹோயோஸ் சகாக்களுடன் இணைந்து தன் வேலையின் ஒரு பகுதியாக சுறாக்களின் இனச்சேர்க்கை மற்றும் முட்டையிடும் பகுதிகளை அடையாளம் காண்பதற்காக அவற்றுக்கு ஒலிப்புலன் சார்ந்த பட்டைகளை (acoustic tags) பொருத்திக் கொண்டிருந்தார். அப்போது, நீரில் சுறா இருப்பது குறித்து சுற்றுலாப் பயணிகள் அவருக்கு எச்சரித்தனர். அது 40 மீட்டர் ஆழத்தில் இருந்தது, தான் வந்த படகை செலுத்தியவரிடம் "தான் அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே அங்கு இருப்பேன்" என கூறியுள்ளார். பின்னர் நீருக்குள் மெல்ல மூழ்க ஆரம்பித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கலாபகோஸ் சுறாக்கள் 3 மீட்டர் நீளம் வரை வளரும் சுறாவை எதிர்கொண்டது குறித்து ஹோயோஸ் கூறினார்: "3-3.5 மீட்டர் (11.5 அடி) நீளமுடைய அந்த பெண் சுறா நீந்தி அடிப்பகுதியை நோக்கிச் சென்றது, நான் அதன் முதுகெலும்பு துடுப்பில் டேக்-ஐ பொருத்துவதற்கு ஏற்றபடி இருந்தேன்." ஆனால், தனது பல தசாப்த பணியில் பலவித சுறாக்களுக்கு டேக் பொருத்தியிருக்கும் ஹோயோஸ், இந்த சுறா மற்றவற்றைவிட வித்தியாசமாக நடந்துகொண்டதாக கூறுகிறார். "அந்த டேக்கின், ஆய்வுக்கருவியில் இணைக்கப்பட்டுள்ள கேபிளுடன் உள்ள உலோகத்தாலான கூர்முனையை உள்ளே செலுத்தியவுடன் மற்ற சுறாக்கள் உடனடியாக அங்கிருந்து சென்றுவிடும், மாறாக இந்த சுறா என்னை திரும்பி பார்த்தது," என அவர் நினைவுகூர்கிறார். "அதன் சிறிய கண்கள் என்னை பார்ப்பதை நான் கண்டேன், அது அமைதியாக திரும்பியதை நான் பார்த்தேன்." படக்குறிப்பு, ஹோயோஸும் அவருடைய சகாக்களும் இத்தகைய டேக்குகளை சுறாக்களுக்கு பொருத்துகின்றனர். சுறா நீந்திச் சென்றபோது அதன் கண்களை பார்த்ததாக கூறும் ஹோயோஸ், திடீரென அது தன்னை நோக்கி வந்ததாக கூறுகிறார். "நான் என் தலையை தாழ்த்திக்கொண்டேன், அதன்பின், அதன் கீழ் தாடை என் கன்னத்தையும் மேல் தாடை என் தலையையும் துளைப்பதை உணர்ந்தேன். அதன் தாடைக்குள் நான் இருப்பதாக நினைத்தேன், பின் மீண்டும் அது தன் தாடையை திறந்தது." "சுறா தன் தாடையை மூடியதும், அது கடித்ததன் அழுத்தத்தை உணர்ந்தேன். பின் அது என்னை அங்கிருந்து செல்ல அனுமதித்தது," என ஆச்சர்யப்படுகிறார். கலாபகோஸ் சுறாவின் ரம்பம் போன்ற 29 பற்கள், ஹோயோஸுக்கு அவரின் தலை மற்றும் முகத்தில் மட்டும் காயத்தை ஏற்படுத்தவில்லை, மாறாக அவருடைய டைவிங் கருவியின் ஆக்சிஜன் குழாயையும் துண்டித்தது. சுறாவின் தாக்குதலில் இருந்து அவர் உயிர் பிழைத்தாலும் அவர் மரண ஆபத்தில் தான் இருந்தார். நீச்சலின் போது அணியக்கூடிய கண் பாதுகாப்பு கண்ணாடியையும் கிழித்துவிட்டது, தவிர ஏற்கெனவே மங்கலான அவரின் பார்வை, ரத்தம் கலந்த நீரால் மேலும் மங்கலானது. "டைவிங் கருவியிலிருந்து ஆக்சிஜன் வரவில்லை என்பதை உணர்ந்ததும், எங்களிடம் இருந்த மற்றொரு கருவியை எடுத்துக்கொண்டேன், அதை நாங்கள் ஆக்டோபஸ் என அழைக்கிறோம், மூச்சுக்காற்று தேவைப்படுபவர்களுக்கு இது பயன்படுத்தப்படுகிறது," என அவர் பிபிசி முண்டோவிடம் கூறினார். "பின்னர்தான் அக்கருவியின் ரெகுலேட்டர் வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்தேன், காற்றை ஒழுங்குபடுத்துவதற்கு பதிலாக அதை வெளியேற்றிக் கொண்டிருந்தது, எனவே நான் என்னுடைய பயிற்சியை நினைவில் வைத்து, என் உதடுகள் மூலம் அதை ஒழுங்குபடுத்தினேன்." ஒருபுறம் ரத்தம், மங்கலான பார்வை, காற்று இல்லாத நிலை என, மேற்பரப்புக்கு வர ஒரு நிமிடத்திற்கும் குறைவாக இருப்பதை ஹோயோஸ் கணக்கிட்டார். "என்னால் எதையும் பார்க்க முடியாததால், வெளிச்சத்திற்காக மேற்பரப்புக்கு வர முயற்சித்தேன். எனவே, மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் மேல்நோக்கி நீந்தினேன், ஏனெனில் சுறாவை கவரும் வகையிலான ஒருங்கற்ற நகர்வுகளை நான் தவிர்க்க விரும்பினேன்." பட மூலாதாரம், Mauricio Hoyos படக்குறிப்பு, இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க இத்தனை ஆண்டுகால டைவிங் பயிற்சியில் கற்ற பாடங்களை ஹோயோஸ் பிரயோகிக்க வேண்டியிருந்தது. ஹோயோஸ் மேற்பரப்புக்கு வந்ததும் இளைஞர் ஒருவர் அவரை இழுத்து படகில் அமரவைத்தார், படகை செலுத்தியவர் அவரின் நிலைமையை பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சிறிது நேரத்திற்கு அந்த காயத்தின் வலியை தான் அவ்வளவாக உணரவில்லை என விவரிக்கிறார் ஹோயோஸ். "உண்மையில் நான் பதற்றத்தில் இருந்தேன், அந்த காயம் எனக்கு அவ்வளவாக வலிக்கவில்லை. அதன் தாக்கம் தான் என்னை அதிகமாக காயப்படுத்தியது. 3 மீட்டர் நீளம் கொண்ட ஒரு விலங்கு, அந்த வேகத்தில் என்னை கடித்தது, கார் என் மீது மோதியது போன்று இருந்தது. என் தாடை முழுக்க பெரிய காயம் இருந்தது, அது உடைந்துவிட்டது என்றே நினைத்தேன்." பின்னர், அவருக்கு மருத்துவ உதவியாளர்கள் அவசர சிகிச்சை செய்தனர். ஹோயோஸ் அதிர்ஷ்டக்காரர். சுறாவின் தாக்குதல் மற்றும் அதைத்தொடர்ந்து மேற்பரப்புக்கு நீந்தியபோதும் அவருடைய காயத்தில் தொற்று ஏற்படவில்லை, யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத குறைவான காலத்தில் காயம் குணமடைய தொடங்கியது. "இது அதிசயம் என மருத்துவர்கள் என்னிடம் கூறினர்: செப்டம்பர் 27-ஆம் தேதி சுறா என்னை தாக்கியது, அதன்பின், நான் 34 மணிநேரம் பயணம் செய்தேன், மருத்துவர்கள் எனக்கு சேதமடைந்த திசுக்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினர், இரு தினங்கள் கழித்து எனக்கு மறுசீரமைப்பு சிகிச்சை செய்யலாமா என்பது குறித்து அவர்கள் பரிசோதித்தனர்." இந்த தாக்குதல் ஹோயோஸுக்கு மிக மோசமான நிலையை ஏற்படுத்தியிருக்கும். மருத்துவர்களின் கூற்றின்படி, 2017-ஆம் ஆண்டில் அதே பகுதியில் கலாபகோஸ் சுறாவால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு ஏற்பட்ட காயங்கள் சரிவர ஆறவில்லை என்பதால், சுமார் ஒருமாத காலம் அவர் ஹைபர்பேரிக் சேம்பரில் (hyperbaric chamber - இது அழுத்தப்பட்ட சூழலில் 100% ஆக்ஸிஜனை சுவாசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பிரத்யேக கலன்) இருக்க வேண்டியிருந்ததாக கூறினர். "என் காயங்கள் ஆறிய விதம் நம்ப முடியாததாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் தொற்று குறித்து தாங்கள் எப்படி கவலையடைந்தோம் என மருத்துவர்கள் கூறினர், ஏனெனில் முகத்தில் காயம் இருந்ததால் அது மூளைக்கான நேரடி பாதையாக இருந்தது." பட மூலாதாரம், Mauricio Hoyos மீண்டும் அதே நீருக்குள் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக சிரித்துக்கொண்டே கூறிய ஹோயோஸ், நவம்பர் 14-ஆம் தேதி அங்கு டைவிங் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இத்தகைய தாக்குதலுக்கு ஆளான பின்பு, தான் ஆராய்ச்சி செய்யும் விலங்குகள் மீது தனக்கு மிகுந்த மதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார். "சுறாக்கள் இல்லாமல் கடல் சிறப்பாக இருக்கும் என பலரும் நினைக்கின்றனர், ஆனால் கடலின் சிக்கலான சமநிலையை பராமரிக்க சுறாக்கள் ஆற்றும் முக்கிய பங்கு குறித்து புரியாமல் அவர்கள் இதை கூறுகின்றனர்." தன் கன்னத்தில் உள்ள பெரிய காயத்தை சுட்டிக்காட்டிய அவர், "அந்த பெண் சுறா என் உயிரை காப்பாற்றியது என்பதற்கு இதுவே சான்று. இது, சுறாக்கள் குறித்து நன்றாக பேசுவதை தொடரவும் எதிர்காலத்தில் அதன் பாதுகாப்புக்கான பணிகளை மேற்கொள்வதற்கும் என்னை அனுமதிக்கும்." இதனிடையே, ஹோயோஸை தாக்கிய கலாபகோஸ் சுறா நீரின் ஆழத்தில் தன் வாழ்க்கையை தொடர்ந்து வருகிறது, அதை மீண்டும் சந்திப்பேன் என நம்பிக்கை கொள்கிறார் அவர். தன்னை தாக்குவதற்கு முன்பு அவர் சுறாவின் மீது டேக்-ஐ பொருத்திவிட்டதால் மீண்டும் அதை சந்திப்பதற்கான சாத்தியம் உள்ளது. "ஜனவரி மாதம் நான் கொக்கோஸ் தீவுக்கு செல்லவிருக்கிறேன். ஜன. 20 முல் 27 வரை நாங்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளோம், நிச்சயமாக (தாக்குதல் நடந்த) ரோகா சுசியாவுக்கு (Roca Sucia) சென்று ஆழ்கடலில் டைவ் செய்வேன்," என மன உறுதியுடன் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce3k75239j0o
  3. 12 Nov, 2025 | 04:06 PM அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யூடியூப், ஸ்னப்செட் போன்ற சமூக ஊடகங்களை சிறுவர்கள் பயன்படுத்துவதால், அவர்களின் உடல், உள நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குறிப்பிட்டுள்ளார். நிகழ்நிலையில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலேயே அவர்களின் சமூக ஊடக பாவனைக்கு தடை விதித்திருப்பதாக அந்தோணி அல்பனீஸ் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/230168
  4. அண்ணை, திருமணம் செய்தவர்கள் என்பது உண்மைதான்!! ஒரு சில ஆ சாமிகள்! உளர்...
  5. பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, செங்கோட்டை அருகே நடந்த வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த இடத்தில் பொதுமக்கள் நடமாட்டம் தடைசெய்யப்பட்டது. கட்டுரை தகவல் சையத் மொஸீஸ் இமாம் பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் நவம்பர் 10 ஆம் தேதி மாலை, டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு கார் வெடித்து, குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். கார் வெடிப்புக்கு முன்னர், ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஹரியாணா மற்றும் உத்தரபிரதேசத்தில் பலரை கைது செய்தது. மேலும் பலர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் மருத்துவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபரிதாபாத் காவல் ஆணையர் சதேந்திர குமார் குப்தா இதுகுறித்து கூறுகையில், "இது, கடந்த 15 நாட்களாக நடந்த கூட்டு நடவடிக்கையின் விளைவு. இந்த நடவடிக்கை இன்னும் தொடர்கிறது," என்றார். ஆனால், இந்த கைது நடவடிக்கைகள் டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையதா என்பது குறித்து போலீசார் இதுவரை எதுவும் கூறவில்லை. இந்நிலையில் டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்தின் விசாரணை தற்போது தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் விசாரணை செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது. தலைநகர் டெல்லிக்கு அருகிலுள்ள ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்டவரின் பணியிடத்தில் இருந்த சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். சஹரன்பூர் மற்றும் லக்னௌ பகுதிகளிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஃபரிதாபாத் காவல்துறையினர் அளித்த தகவலின்படி, அல் ஃபலா பல்கலைக்கழகம் மற்றும் ஃபரிதாபாத்தின் பல இடங்களில் சுமார் 800 போலீஸ் அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அல் ஃபலா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது. நவம்பர் 10-ஆம் தேதி டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்துக்கு முன்பாக, ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் ஏழு பேரை கைது செய்ததாக தெரிவித்தனர். அவர்கள் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் என காவல்துறையினர் கூறினர். ஆனால் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மருத்துவர் அதீல், மருத்துவர் முஸம்மில் ஷகீல் மற்றும் ஷாஹீன் சயீத் ஆகியோருக்கு இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறிய பாதுகாப்பு அமைப்புகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றன. பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, செங்கோட்டை அருகே கார் வெடிப்பு நடந்த இடத்தில் ஆதாரங்களை சேகரிக்கும் புலனாய்வுக் குழு. சந்தேகத்துக்குரிய நபர்களின் பட்டியலில் மருத்துவர் உமர் நபி தெற்கு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி, டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பு வழக்கில் சந்தேகத்துக்குரிய நபராகக் கருதப்படுகிறார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவர் உமர் குற்றமற்றவர் என்றும், கடந்த சில மாதங்களாக அவர் தனது பணியில் முழுமையாக ஈடுபட்டு வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். விசாரணை அமைப்புகளின்படி, செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் அருகே வெடித்த வெள்ளை ஹூண்டாய் ஐ20 காரை ஓட்டிச் சென்றவர் 34 வயதான மருத்துவர் உமர் நபி என்று கூறப்படுகிறது. இந்தத் தகவலை பிபிசி உறுதிப்படுத்தவில்லை. அந்த காருக்கும் ஹரியாணாவின் ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று விசாரணை அமைப்புகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ஃபரிதாபாத்தில் காவல்துறையினர் அதிக அளவிலான வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammed) மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (Ansar Ghazwat-ul-Hind) போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய வலையமைப்புடன் மருத்துவர் உமர் நபிக்கு தொடர்பு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. நபியின் உறவினர் முசம்மிலா, தான் வெள்ளிக்கிழமை நபியுடன் பேசினேன் என்றும், பின்னர் போலீசார் தனது கணவர், மாமியார் மற்றும் மைத்துனரை அழைத்துச் சென்றனர் என்றும், அதனைத் தொடர்ந்து நபியின் தந்தையையும் கைது செய்தனர் என்றும் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தின் சஹரன்பூரில் மருத்துவர் கைது மருத்துவர் அதீல் அகமது ராதர் நவம்பர் 7-ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் சஹரன்பூரில் கைது செய்யப்பட்டார் என ஜம்மு காஷ்மீர் காவல்துறை தகவல் வழங்கியுள்ளது. ராதரின் ஆதார் அட்டையில் அனந்த்நாக் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. சஹரன்பூரில் அம்பாலா சாலையில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்திற்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டியதாக மருத்துவர் அதீல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மருத்துவர் அதீல், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர், அனந்த்நாக் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமதுவை ஆதரிக்கும் சுவரொட்டிகளை ஒட்டியதாக போலீசார் கூறுகின்றனர். விசாரணையின் போது ஸ்ரீநகர் போலீசார் பெற்ற சிசிடிவி காட்சிகளில், அவர் சுவரொட்டிகளை ஒட்டுவது பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த காட்சிகளின் அடிப்படையில், அவர் சஹரன்பூரில் கைது செய்யப்பட்டார். மருத்துவர் அதீல் கடந்த மூன்று ஆண்டுகளாக சஹரன்பூரில் வசித்து வந்துள்ளார். மங்காமோவ் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்த அவர், அந்த இடத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணிபுரிந்தார் என காவல்துறையினர் கூறுகின்றனர். இதற்கு முன்பு, அவர் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் மூத்த மருத்துவராக பணியாற்றியுள்ளார். அக்டோபர் 24, 2024 வரை அவர் அங்கு பணியில் இருந்துள்ளார். உத்தரபிரதேச போலீசார் சஹரன்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று அவர் குறித்த தகவல்களை ஆய்வு செய்து, ஊழியர்களிடம் விசாரித்தனர். அதீலுக்கு அம்பாலா சாலையில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் கணக்கு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மருத்துவர் அதீல், அக்டோபர் 4, 2025 அன்று ஜம்மு காஷ்மீரில் திருமணம் செய்து கொண்டார். செப்டம்பர் 26-ஆம் தேதி விடுப்பில் சென்ற அவர், சில பணியாளர்களுக்கு திருமண அழைப்பிதழ்களையும் வழங்கியிருந்தார். இந்நிலையில் அவரது கைது செய்தி வெளிவந்ததையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் அவரது பெயர்ப் பலகையை அகற்றியது. மருத்துவமனை நிர்வாகம் என்ன சொல்கிறது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டெல்லியில் நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, தலைநகரிலும் பல மாநிலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரபல மருத்துவமனையின் மேலாளர் மனோஜ் மிஸ்ரா கூறுகையில், "ஜனவரி–பிப்ரவரி 2025 இல் மருத்துவமனையில் மருத்துவர் பதவி காலியாக இருந்தது. அப்பதவியில் மார்ச் மாதத்தில் அதீல் நியமிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனை அவரது சேவையை நிறுத்தியுள்ளது." என்றார். உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. சஹரன்பூர் நகர காவல் கண்காணிப்பாளர் வ்யோம் பிண்டால் ஊடகங்களிடம் பேசுகையில், "இது ஜம்மு–காஷ்மீர் காவல்துறையின் வழக்கு. உத்தரபிரதேச காவல்துறை ஒத்துழைப்பு மட்டுமே அளித்துள்ளது." என்றார். அதே சமயம், சஹரன்பூரில் மருத்துவர் அதீல் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவர் அதீல் அகமது ராதர் முன்பு சஹரன்பூரில் உள்ள வி பிரதர்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்தார். அதன் நிர்வாகியான மருத்துவர் மம்தா வர்மா கூறுகையில், "மருத்துவர் அதீல், மருத்துவ நிபுணராக இங்கு சுமார் நான்கு மாதங்கள் பணியாற்றினார்." என்றார். பின்னர், அவர் பிப்ரவரி 28-ஆம் தேதி விலகி பிரபல மருத்துவமனைக்கு மாறியுள்ளார். அவருடன் பணியாற்றிய சிலர், பெயர் வெளியிட விரும்பாத நிலையில் இதுகுறித்து பேசினர். அப்போது, 'அதீல் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், அவரது வருங்கால மனைவியும் ஜம்மு–காஷ்மீரைச் சேர்ந்த ஒரு மருத்துவர் என்றும் கூறியிருந்தார்' எனத் தெரிவித்தனர். அவருடன் பணியாற்றிய சக மருத்துவர் ஒருவர் கூறுகையில், 'அதீலுக்கு மருத்துவம் குறித்த அறிவு மிக நன்றாக இருந்தது. நாங்கள் அவ்வப்போது அதைப் பற்றி விவாதிப்போம். ஆனால், தனிப்பட்ட தொடர்பு மிகவும் குறைவாக இருந்தது' என்றார். அவர் எங்கு தங்கியிருந்தார் என்ற விவரம் தெளிவாக தெரியவில்லை. ஆனால், வழக்கமாக ஆட்டோவில் மருத்துவமனைக்கு வந்து, உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்வது வழக்கம் என்று அவரது சக ஊழியர்கள் தெரிவித்தனர். ஹரியாணாவின் ஃபரிதாபாத்தில் மருத்துவர் கைது ஹரியாணா மாநிலம் தௌஜில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த மருத்துவர் முசம்மில் ஷகீல், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கூட்டு நடவடிக்கையின் போது, மருத்துவர் முசம்மிலிடமிருந்து ஆட்சேபனைக்குரிய பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் கூறினர். மருத்துவர் முசம்மில் அக்டோபர் 30-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவரது வாடகை வீட்டில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஃபரிதாபாத் காவல் ஆணையர் சதேந்திர குப்தா கூறுகையில், "முசம்மில் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் கற்பித்து வந்தார். அவரிடமிருந்து ஒரு கலாஷ்னிகோவ் துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு டைமர் கைப்பற்றப்பட்டுள்ளன." என்றார். ஷாஹீன் சயீத் என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒரு கார் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் காவல்துறை தகவல் அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஷாஹீனும் காவலில் வைக்கப்பட்டுள்ளார். "360 கிலோ எடையுள்ள எளிதில் தீப்பிடிக்கும் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் அது ஆர்.டி.எக்ஸ் அல்ல," என்று சதேந்திர குப்தா குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், மருத்துவர் முசம்மிலின் தாயார் நசீமா, பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "அவர் கைது செய்யப்பட்டது குறித்து நாங்கள் மற்றவர்களிடமிருந்து தான் தெரிந்து கொண்டோம். அவரைச் சந்திக்க முயன்றோம், ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை," என்றார். முசம்மில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஃபரிதாபாத்தில் ஷாஹீன் சயீத் என்ற பெண் மருத்துவரும் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரின் கூற்றுப்படி, முசம்மிலுடன் கண்டுபிடிக்கப்பட்ட கார் ஷாஹீனுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நிலையில், புல்வாமாவில் உள்ள மருத்துவர் முசம்மிலின் சகோதரர் ஆசாத் ஷகீல், 'என் சகோதரர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்லியில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். அவரைச் சந்திக்க எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை' என்று பிடிஐக்கு தெரிவித்தார். அவர் வருடத்திற்கு இரண்டு முறை வீட்டிற்கு வருவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் வாகன சோதனை மேற்கொள்கின்றனர். லக்னௌவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை செவ்வாய்க்கிழமை, ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்ட மருத்துவர் ஷாஹீன் சயீத்தின் லக்னௌ வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர். மருத்துவர் ஷாஹீன் சயீத்தின் குடும்பம் லக்னௌவின் லால் பாக் பகுதியில் உள்ள கந்தாரி பஜாரில் வசிக்கிறது. அவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அவரது மூத்த சகோதரர் ஷோயிப் சயீத்தின் தந்தையுடன் வசிக்கிறார், இளையவர் பர்வேஸ் சயீத் ஐஐஎம் மதியான்வ் அருகே வசிக்கிறார். அவரது தந்தை சையத் அகமது அன்சாரி கூறுகையில், "எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஷாஹீன் சயீத் என் இரண்டாவது மகள். அவர் அலஹாபாத் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டி பட்டம் பெற்றுள்ளார்," என்றார். மேலும், "நீங்கள் சொல்வதை (சட்டவிரோத நடவடிக்கைகள்) என்னால் நம்ப முடியவில்லை. இதுவரை போலீசார் என்னைத் தொடர்புகொள்ளவில்லை," என்று சையத் அகமது அன்சாரி கூறினார். சஹரன்பூர் மற்றும் லக்னௌவிலுள்ள ஷாஹீன் சயீத்தின் சகோதரர் பர்வேஸ் அன்சாரியின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். நவம்பர் 11-ஆம் தேதி உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவும், ஜம்மு–காஷ்மீர் காவல்துறையினரும் ஷாஹீன் சயீத்தின் தந்தையின் வீட்டில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். சையத் அன்சாரி கூறுகையில், 'நான் பர்வேஸுடன் ஒவ்வொரு வாரமும் பேசுவேன். அவர் இன்டக்ரல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். ஷாஹீனுடன் நான் ஒரு மாதத்திற்கு முன்பு பேசினேன், அவரை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நேரில் சந்தித்தேன்' என்றும் தெரிவித்தார். பெயர் வெளியிட விரும்பாத அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கூறுகையில், "ஷாஹீன் சயீத் பல ஆண்டுகளாக இங்கு வசிக்கவில்லை. அவர் இங்கே வருவது மிகவும் அரிது," என்றார். பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, டெல்லியில் உள்ள லஜ்பத் நகர் சந்தையில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். முன்வைக்கப்படும் கேள்விகள் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, தாங்கள் ஒரு பெரிய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், இந்தக் கூட்டு நடவடிக்கை உத்தரபிரதேசம் மற்றும் ஹரியாணா காவல்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் கூற்றுப்படி, "இந்த நடவடிக்கை நீண்டகால கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது." இந்தக் குழு ஜம்மு-காஷ்மீருக்கு வெளியே தீவிரமாகச் செயல்பட்டு வந்தது என்றும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்து, இளைஞர்களைத் தூண்டியது என்றும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்தது என்றும் விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை கூறுகிறது. காஷ்மீர் காவல்துறை அளித்த தகவலின்படி, சோதனைகளின் போது பல டிஜிட்டல் சாதனங்கள், சுவரொட்டிகள் மற்றும் மின்னணு பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் சித்தாந்தத்தைப் பரப்பி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர். இந்த வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ், அதாவது UAPA வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பூடான் பயணத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோதி, டெல்லி வெடிப்புச் சம்பவம் குறித்து கூறுகையில், "இந்த வெடிப்புச் சம்பவத்துக்குப் பின்னால் சதி செய்தவர்கள் தப்ப முடியாது. இதில் தொடர்புடைய அனைவரும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள்," என்றார். மறுபுறம் இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், "தேசிய தலைநகர் டெல்லியில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டுமே ஃபரிதாபாத்தில் 360 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அது அங்கே எப்படி சென்றது? அது எவ்வளவு பெரிய பேரழிவாக மாறியிருக்கும்?" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "சுமார் ஏழு மாதங்களுக்கு முன்புதான் பஹல்காமில் ஒரு கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. இப்போது டெல்லியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு? உள்துறை அமைச்சர் எங்கே? பிரதமர் எங்கே?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c15pyyvpn0yo
  6. அண்மைக்கலாமாக வடமாகாணத்தில் காற்றின் தரம் குறைந்து வருகின்றது அதாவது யாழ்ப்பாணத்தில் காற்று அதிகளவில் மாசுபட்டு வருகின்றது. தற்பொழுது அது ஆபத்தான நிலைக்கு அண்மித்து உள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது காற்று சுவாசிக்க உகந்தது அல்ல என்று கூறப்படுகின்ற நிலையில் இவ்வாறு மாசுப்படல் பல்வேறு காரணங்களால் நடைபெறுகின்றது அது பற்றி இப்பதிவு விளக்குகின்றது. யாழ் மாவட்டத்தில் இவ்வாறு காற்று மாசு படுவதற்கான காரணங்கள் என்ன? முக்கியமாக அயல்நாடான இந்தியாவில் இருந்து குறிப்பாக டில்லி போன்ற நகரங்களில் இருந்து மாசுபட்ட காற்று யாழ் மாவட்டத்தினை நோக்கி நகர்வதாகும். குறிப்பாக வடகீழ் பருவ பெயர்ச்சி காற்று நிலவும் நவம்பர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இவ்வாறான மாசடைந்த காற்று யாழ் மாவட்டத்தினை வந்தடைகின்றது. மேலும் இக்காலப்பகுதியில் நிலவவும் அதிகரித்த ஈரப்பதன் காரணமாக வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் குப்பைகளினை எரிப்பதினால் வரும் புகை என்பன வளிமண்டலத்தில் மேல் நோக்கி செல்லாமல் தரை மட்டத்தில் தங்குவதினால் மனிதர்கள் அதிகளவு மாசடைந்த காற்றினை சுவாசிக்க நேரிடுகின்றது. 2. வேறு என்ன காரணங்களினால் காற்று மாசடைகின்றது? மேற்குறிய காரணங்கள் தவிர கட்டிட நிர்மாண பணிகளினாலும், வாகனங்கள் வீதியில் செல்லும் பொழுது வீதியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் படிந்த தூசுக்கள் வளி மண்டலத்திற்கு வெளிக்கிளம்புவதினால் காற்று மாசுபடுகின்றது 3. கொழும்பு போன்ற நகரங்களில் காற்று மாசுபடுவதற்கான பிரதான காரணங்கள் என்ன? பிரதானமாக வாகனம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையே காரணம் ஆகும் 4. யாழில் தற்போது நிலவவும் அதிக மாசுப்பட்ட காற்று எவ்வாறு குறைவடையும்? வட கீழ் பருவ காற்று முடிவடைந்து தென் மேல் பருவ காற்று (May to September) தொடங்கும் பொழுது இந்து சமுத்திரத்தில் இருந்து வரும் ஈரப்பதன் நிறைந்த காற்று இம்மாசுக்களை கழுவி செல்ல தற்பொழுது நிலவும் சூழ்நிலை மாறும். இடைப்பட்ட காலங்களில் உள்ளூரில் நிலவும் காற்று ஒட்டத்தினை பொறுத்து காற்று மாசுபடல் இருக்கும் 5. எவ்வாறான மாசுக்கள் இந்த மாசடைந்த காற்றில் இருக்கும்? வாகன மற்றும் தொழில் சாலைகளில் இருந்து வெளியேறும் புகைகளில் இருக்கும் கார்பன் துகள்கள், கார்பன் மோனோக்ஸ்சைடு, கந்தகம், நைட்ரோஜென் ஓட்ஸ்சைட், ஈயம், பிளாஸ்ட்டிக் துகள்கள் …. போன்ற பல்வேறு மாசுக்கள் இருக்கும். இவை தவிர பல்வேறு சிறு துணிக்கைகள் இருக்கும் இவை மிக மிக மெல்லிய துகள்களாக இருக்கும். முக்கியமாக 2.5 மைக்ரோ மீட்டர் அல்லது அதிலும் குறைவான மைக்ரோ மீட்டரில் இம்மாசுக்கள் இருக்கும் இதன் காரணமாக இந்த மாசுக்கள் நுரையீரலின் சுவாச சிற்றறை வரை சென்றடையும் இவை பொதுவாக PM 2.5 என்றழைக்கப்படும். பல சந்தர்ப்பங்களில் இவை நுரையீரலினை தாண்டி இரத்தத்தில் கலக்கும் PM 10 என்பது 10 மைக்ரோ மீட்டர் அல்லது அதிலும் குறைவான மைக்ரோ மீட்டரில் இருக்கும் மாசுக்கள். உதாரணமாக வீதியோர தூசுக்கள், மகரந்த மணிகள் போன்றன இதில் அடங்கும். இவை எமது நாசிக்குழியுடன் நின்று விடும். எனவே PM 2.5 என்பது PM 10 என்பதினை விட ஆபத்தானது. 6. ஏன் மாசடைந்த காற்று மணக்கவில்லை? சாதாரணமாக நாம் மாசடைந்த காற்றினை சுவாசிக்கும் பொழுது வித்தியாசமான மணமாக இருக்கும் ஆனால் தற்போதைய மாசடைந்த காற்று அதிகளவு ஈரப்பதன் மூலம் நிரம்பி இருப்பதினால் இவ்வாறான மணம் இருக்க மாட்டாது 7. மாசடைந்த காற்றினை சுவாசித்தினால் மனிதருக்கு எவ்வாறான சுகாதார சீர்கேடுகள் ஏற்படும்? ஏற்கனவே சுவாச நோய்கள் உள்ளவர்களுக்கு அந்த நோய்கள் அதிகரிக்கும் அதாவது தீவிரத் தன்மை அடையும். சிலருக்கு புதிதாக சுவாசம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அதாவது இருமல் மற்றும் சுவாசிப்பதில் கடின தன்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும் 8. எம்மை எவ்வாறு நாம் பாதுகாத்து கொள்ளலாம்? வீட்டினை விட்டு வெளியில் செல்லும் பொழுது பொதுவாக போக்குவரத்தில் ஈடுபடும் பொழுது முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் எமது சூழலில் குப்பைகளை இருக்கது தவிர்க்க வேண்டும். 9. எவ்வாறு காற்றின் தரத்தினை அறிந்து கொள்ளலாம்? IQAir, World’s Air Pollution, AirNow App, Accu weather போன்ற சர்வதேச வலைத்தளங்களில் இருந்தும் இலங்கையின் AQ.LK, https://www.nbro.gov.lk/ வலைத்தளங்களில் இருந்தும் realtime முறையில் நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு மாசுபட்டுள்ளது என்பதினை அறிந்து கொள்ளலாம் இவ்வாறு மாசடைவதன் காரணமாக பாதிப்பினை எதிர்கொண்ட வைத்தியர் ஒருவர் மேல்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு ஒன்றினை தாக்குதல் செய்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கையாள்வதை நோக்கமாகக் கொண்ட விரிவான திட்டத்தைத் தயாரிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் (CEA) மற்றும் யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஜனவரி 22, 2026 அன்று மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி https://tinyurl.com/3mynhy82
  7. குளிர்விட்டதால தொழில்வளர்ச்சியோ தெரியல அண்ணை!
  8. அண்ணை, அவையளும் லேசுப்பட்டவை இல்லை கண்டியளோ!
  9. 12 Nov, 2025 | 11:55 AM கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார், துணியால் கண்களை கட்டிக்கொண்டு வீதியில் நடந்துச் சென்று பார்வைக் குறைபாடுள்ளவர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டார். இந்த விழிப்புணர்வு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பார்வைக் குறைபாடுள்ள இலங்கையின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவும் கலந்துகொண்டார். இதன்போது, கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார், துணியால் கண்களை கட்டிக்கொண்டு வீதியில் நடந்துச் சென்றார். “நான் துணியால் கண்களை கட்டிக்கொண்டுள்ளேன், கண்பார்வை இல்லாமல் நடப்பது எப்படியிருக்கும் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன்," என கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/230151
  10. 12 Nov, 2025 | 04:18 PM (எம்.நியூட்டன்) தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடக்க விழாவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் கௌரவ விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார். தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் தம்பிராசா யுகேஸ் தலைமையில் நடைபெறவுள்ள இத்தொடக்க நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா கலந்துகொள்கிறார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தொடக்க உரையாற்ற, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சிறப்புரை ஆற்றவுள்ளார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் இக்கண்காட்சி இம்மாதம் 23ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி தொடக்கம் முன்னிரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. கண்காட்சியைப் பார்வையிட வருகைதரும் மாணவர்களுக்கு வழமை போன்று இம்முறையும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230177
  11. இந்தமுறை வெளியால வருவது கடினம் என நினைக்கிறேன் அண்ணை.
  12. Nov 12, 2025 - 10:35 AM விதை நெல் உற்பத்தி செய்யும் பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கைக்கு காப்புறுதித் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தக் காப்புறுதித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. விதை நெற்செய்கைக்கு வெள்ளம், வறட்சி, நோய்கள், பூச்சித் தாக்குதல்கள், இயற்கைப் பேரழிவுகள் மற்றும் காட்டு யானைகளினால் ஏற்படும் சேதங்களுக்கு இந்தத் திட்டம் காப்பீடு வழங்குகிறது. ஒரு ஏக்கர் செய்கைக்காக ஒரு போகத்திற்கு ரூ. 13,600/- தவணை செலுத்துவதன் ஊடாக ஒரு ஏக்கருக்கு ரூ. 180,000/- இழப்பீடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை கூறுகிறது. இந்த விதை நெல் பண்ணைகளுக்கு காப்புறுதிப் பாதுகாப்புப் பெற வேண்டுமானால், அவை விவசாயத் திணைக்களத்தின் விதைப் பதிவுச் சேவையில் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அச் சபை வலியுறுத்துகிறது. விதை நெல் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளைச் செய்கையில் தக்கவைத்துக்கொள்வதே இதன் பிரதான நோக்கம் என்றும் விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை மேலும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmhvjecxp01jjo29n1l4wopmk
  13. கனகரத்தினத்துக்கு எதிராக செல்வம் அடைக்கலநாதன் சட்ட நடவடிக்கை! Nov 12, 2025 - 07:35 AM எனது பெயருக்கும், கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடிய வகையிலும், அரசியலில் இருந்து ஒதுக்கக் கூடிய வகையிலும், இணைய ஊடகங்கள் ஊடாக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவருக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,, நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவருக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன்.அவரிடம் ஐந்து கோடி ரூபாய் (ஐம்பது மில்லியன்) நஷ்ட ஈடு கோரியுள்ளேன்.எனது அரசியல் நடவடிக்கையை ஆதாள பாதாளத்திற்குள் கொண்டு செல்லுகின்ற ஒரு சூழலை ஏற்படுத்துகின்ற வகையில் அவர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி இருக்கிறார்.அவரது கருத்துக்கள் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் இதற்கு ஆதாரத்துடன் பதில் கூற வேண்டும்.இதனை தொடர்ந்து நீதிமன்றத்தை நாட உள்ளேன். அவரது குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.அந்த வகையில் என் மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். மேலும் இதுவரை இலங்கையில் உள்ள நீதிமன்றங்கள் அல்லது பொலிஸ் நிலையங்களில் எனக்கு எதிராக எந்த முறைப்பாடுகளும் அல்லது விசாரணைகளும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களை நிரூபிக்க வேண்டும்.தவறும் பட்சத்தில் மன உளைச்சலையும்,கௌரவத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தியமைக்காக 5 கோடி ரூபாய் நஷ்ட ஈட்டை அவர் வழங்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார். -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmhvcy1em01jbo29n2vlnq8kd
  14. Nov 12, 2025 - 07:04 AM அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 150 ரூபாவுக்கும் அரசாங்கம் கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த நேற்று (11) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். இதன் விளைவாக, சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோகிராம் ரூபா 200 வரையிலும், உருளைக்கிழங்கின் விலை ஒரு கிலோகிராம் ரூபா 300 வரையிலும் உயரும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் பயிரிடும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைத்து அமைச்சர் இந்தக் கொள்வனவு விலைத் திட்டத்தை வெளியிட்டார். https://adaderanatamil.lk/news/cmhvbu92101jao29nt01w2uvl
  15. ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் கைது! Nov 12, 2025 - 11:15 AM ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராமம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது இருவரும் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmhvku4bc01jlo29n3kszllx7
  16. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,புவி வெப்பமடைதல் இருக்கும் போதிலும், துருக்கியின் இஸ்தான்புல்லில் இதுபோன்ற குளிர்காலங்களும் பனிப்பொழிவு நாட்களும் தொடர்ந்து ஏற்படும் கட்டுரை தகவல் எழுதியவர்,மார்க்கோ சில்வா பதவி,பிபிசி வெரிஃபை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பிரேசிலில் 30வது ஐநா காலநிலை உச்சிமாநாடு நடைபெறும் நிலையில், காலநிலை மாற்றம் குறித்த தவறான கூற்றுகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரவி வருகின்றன. அப்படிப்பட்ட ஐந்து தவறான தகவல்களையும் உண்மை என்ன என்பதையும் இங்கு விரிவாகத் தெரிந்துகொள்வோம். கூற்று 1: காலநிலை மாற்றம் மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல மனிதர்களால் காலநிலை மாறவில்லை எனும் வகையில் சமூக ஊடகங்களில் சிலரால் பதிவிடப்படுகின்றன. பூமியின் வரலாறு முழுவதும் வெப்பமாதல் மற்றும் குளிர்ச்சியடைதலின் சுழற்சிகளைக் கடந்து வந்துள்ளது என்பது உண்மைதான். அது பெரும்பாலும் எரிமலை செயல்பாடு அல்லது சூரிய செயல்பாட்டில் நிகழ்ந்த மாறுபாடுகள் போன்ற இயற்கைக் காரணிகளால் நடந்துள்ளன. ஆனால், இந்த மாற்றங்கள் நீண்டகால அளவில், அதாவது ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்தவை. உலக வானிலை அமைப்பின் தகவல்படி, கடந்த 150 ஆண்டுகளில் பூமி சுமார் 1.3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பமடைந்துள்ளது. இந்த வெப்பமயமாதல் விகிதம் முந்தைய ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காணப்படவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அமைப்பு (IPCC), இது "சந்தேகத்திற்கு இடமின்றி" மனித நடவடிக்கைகளால், முதன்மையாக நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படுவதாகக் கூறுகிறது. விளம்பரம் ஐபிசிசி என்பது காலநிலை ஆய்வை மதிப்பாய்வு செய்வதற்கும், பூமி மீது நடப்பது என்ன என்பது குறித்த சான்றுகள் சார்ந்த அறிக்கைகளை வழங்குவதற்கும் விஞ்ஞானிகளை ஒன்றிணைக்கும் ஓர் ஐ.நா. அமைப்பாகும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நிலக்கரி என்பது புதைபடிவ எரிபொருளாகும், இதை எரிக்கும்போது அதிக பசுங்குடில் வாயுக்கள் வெளியாகின்றன. புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்துவதால் பசுங்குடில் வாயுக்கள் வெளியாகின்றன. அவை பூமியைச் சுற்றி ஒரு போர்வையைப் போலச் செயல்படுகின்றன. வளிமண்டலத்தில் கூடுதல் ஆற்றலை கிரகித்து வைத்து வெப்பத்தை அதிகரிக்கின்றன. "காலநிலை மாற்றம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயமல்ல. அது ஆதாரங்களின் அடிப்படையிலானது," என்று லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த காலநிலை விஞ்ஞானி ஜாய்ஸ் கிமுட்டாய் கூறுகிறார். "புவியின் காலநிலை அமைப்பின் ஒவ்வொரு மூலையிலும் மனித நடவடிக்கைகளின் தடங்கள் தெளிவாகத் தெரிகின்றன" என்றும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார். கூற்று 2: உலகம் சூடாகவில்லை, குளிர்ச்சியடைந்து வருகிறது போலந்து அல்லது கனடா போன்ற இடங்களிலுள்ள சில சமூக ஊடக பயனர்கள், தங்கள் பகுதிகளில் வழக்கத்தைவிட குளிர்ச்சியான வானிலை நிலவுவதை, 'புவி வெப்பமாதல் குறித்து விஞ்ஞானிகள் பொய் சொல்கிறார்கள்' என்பதற்கான சான்றாகக் கருதுகின்றனர். இது தவறு. பட மூலாதாரம், EPA வானிலை என்பது பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் குறுகிய கால நிலைமைகளைக் குறிக்கும். ஆனால், காலநிலை என்பது நீண்டகாலம் நிலவும் சூழலைக் குறிக்கிறது. "சில பகுதிகள் குறுகிய கால அல்லது உள்ளூர் குளிர்ச்சியை அனுபவித்தாலும், நீண்டகால உலக வெப்பநிலை பதிவுகள், புவியின் மேற்பரப்பு ஒட்டுமொத்தமாக வெப்பமடைந்து வருவதைத் தெளிவாகக் காட்டுவதாக" பிலிப்பைன்ஸின் காலநிலை விஞ்ஞானி முனைவர் ஜோசப் பாஸ்கான்சிலோ கூறுகிறார். கடந்த 1980களில் இருந்து, ஒவ்வொரு தசாப்தமும் முந்தையதைவிட வெப்பமாக இருந்து வருகிறது, இது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உலக வானிலை ஆய்வு அமைப்பு கூறுகிறது. 2024ஆம் ஆண்டு மிக வெப்பமான ஆண்டாகப் பதிவானது. உலகளாவிய சராசரி வெப்பநிலை, 1800களின் பிற்பகுதியில் இருந்த அளவைவிட 1.55 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. கூற்று 3: கார்பன்-டை-ஆக்சைடு ஒரு மாசுபடுத்தி அல்ல மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தை மறுக்கும் சமூக ஊடக பயனர்கள் பெரும்பாலும் கரிம வாயுவை "மாசுபடுத்தும் காரணி அல்ல" என்றும் மாறாக அதுவொரு "தாவர உணவு" என்றும் கூறுகின்றனர். பிபிசி, போர்த்துகீசியன் மற்றும் குரோஷிய மொழிகளில் பார்த்த பதிவுகள், வளிமண்டலத்தில் அது அதிகமாக இருப்பது இயற்கைக்கு நல்லது என்றுகூடக் கூறுகின்றன. மாசுபடுத்திகள் அல்லது மாசுக் காரணிகள் என்பவை, சுற்றுச்சூழலில் சேரும் போது அந்த அமைப்புக்கோ அல்லது மனித ஆரோக்கியத்திற்கோ தீங்கு விளைவிக்கும் பொருட்களாகும். வளிமண்டலத்தில் சாதாரண மட்டங்களில், பூமியில் வாழ்வதற்கு கரிம வாயு அவசியம். கரிம வாயுவை போன்ற பசுங்குடில் வாயுக்கள் இல்லாமல் போனால், உயிர் வாழும் சூழலை உருவாக்க முடியாமல் பூமி குளிரானதாக இருக்கும் என்று நாசா கூறுகிறது. தாவரங்கள் கரிம வாயுவை, நீர் மற்றும் சூரிய ஒளியுடன் சேர்த்து, ஆக்சிஜன் மற்றும் கரிம பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்துகின்றன. அவை பூமியின் பெரும்பாலான உணவுச் சங்கிலிகளின் அடிப்படையாக உள்ளன. பட மூலாதாரம், DANIEL MUNOZ/AFP via Getty Images படக்குறிப்பு, வளிமண்டலத்தில் உள்ள கரிம வாயு தாவர வளர்ச்சிக்கும் உணவுச் சங்கிலிக்கும் அவசியம். ஆனால், வளிமண்டலத்தில் அதிகமாக கரிம வாயு சேரும்போது, விஞ்ஞானிகள் அதை "மாசுபடுத்தி அல்லது மாசுக் காரணி" என்று வகைப்படுத்துகிறார்கள். ஏனெனில், அது தீங்கு விளைவிக்கத் தொடங்குகிறது. 2024ஆம் ஆண்டில் கரிம வாயு சராசரியை விட அதிக அளவை எட்டியது. அதாவது காற்றில் உள்ள பத்து லட்சம் மூலக்கூறுகளில் 280 மூலக்கூறுகள் கரிம வாயுவினுடையவை என்ற அளவில் 1750களில் இருந்தன. அந்த நிலை மாறி, தற்போது பத்து லட்சம் காற்று மூலக்கூறுகளில் 423 கரிம வாயுக்களினுடையவை என்கிற அளவுக்கு கரிம வாயுவின் அளவு அதிகரித்துள்ளதாக உலக வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. மனிதனால் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு செறிவு அதிகரிப்பிற்கும் புவி வெப்பமாதலுக்கும் தொடர்பு இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்து நிரூபித்துள்ளனர். இது சுற்றுச்சூழல் அமைப்புகளில் பரந்த அளவிலான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். "காடுகள் அதிக தீ விபத்துகளுக்கு உள்ளாகி வருகின்றன. வறட்சி அல்லது வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைகின்றன. இயற்கையான சூழலியல் அமைப்புகளின் சமநிலை குலைவதால் காட்டுயிர்கள் வாழ்விடத்தை இழக்கின்றன," என்று கனடாவை சேர்ந்த சூழலியல் நிபுணர், பாதுகாப்பு விஞ்ஞானி மற்றும் ஆலோசகர் மிச்செல் கேலமண்டீன் கூறுகிறார். வளிமண்டலத்தில் கரிம வாயு அதிகரிப்பது, தாவர வளர்ச்சியை மேம்படுத்த முடியும். ஆனால் இது அதனால் ஏற்படும் வெப்ப அழுத்தம் மற்றும் நீர்ப் பற்றாக்குறை உள்ளிட்ட காலநிலை மாற்றத்தின் எதிர்மறை விளைவுகளை ஈடுசெய்யப் போதுமானதாக இருக்காது என்று ஐபிசிசி கூறுகிறது. கூற்று 4: காட்டுத்தீக்கு காலநிலை மாற்றம் காரணம் அல்ல இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா, தென் கொரியா, துருக்கியில் பெரிய காட்டுத்தீ ஏற்பட்டது. அதுபோன்ற சமயங்களில், சில சமூக ஊடக பயனர்கள், தீ வைக்கப்படுவதே இதற்கு காரணம் என்று கூறி, அதில் காலநிலை மாற்றம் போன்ற காரணிகளுக்கு இருக்கும் பங்கை நிராகரிக்கின்றனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்த ஆண்டு காட்டுத்தீயால் ஸ்பெயின் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தீ வைப்பவர்களைக் கைது செய்வது குறித்த வைரல் பதிவுகள், குறிப்பிட்ட தீயை காலநிலை மாற்றத்துடன் தொடர்புபடுத்தும் விஞ்ஞானிகள் மற்றும் அரசியல்வாதிகளை கேலி செய்யும் பதிவுகளால் பெரும்பாலும் நிரம்பியுள்ளன. ஆனால், பல தீ விபத்துகள் உண்மையில் மனிதர்களால் வேண்டுமென்றேவோ அல்லது தற்செயலாகவோ தொடங்கி இருந்தாலும், காட்டுத்தீயை அந்த ஒரு காரணத்துடன் குறைத்து மதிப்பிடுவது, "அடிப்படையில் தவறாக வழிநடத்தும் செயல்" என்று கொலம்பியா தேசிய பல்கலைக்கழகத்தில் தீ சூழலியல் குறித்து ஆய்வு செய்யும் முனைவர் டொலோர்ஸ் ஆர்மென்டெராஸ் கூறுகிறார். ஒருசில காட்டுத்தீ சம்பவங்களை காலநிலை மாற்றத்துடன் தொடர்புபடுத்துவது கடினம். ஏனெனில், காடுகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன, நிலப்பரப்பு உள்படப் பல காரணிகளும் ஓரளவுக்கு காட்டுத் தீக்கு காரணமாகின்றன. ஆனால், காலநிலை மாற்றம் காட்டுத்தீ ஏற்படுவதற்கும் பரவுவதற்கும் ஏற்ற நிலைமைகளை உருவாக்குவதை நாம் அறிவோம். வட அமெரிக்காவின் மேற்குப் குதி அல்லது தெற்கு ஐரோப்பா போன்ற பகுதிகளில், காலநிலை மாற்றம் 'தீ வானிலை' என்று அழைக்கப்படுவனவற்றின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாக ஐபிசிசி கூறுகிறது. அதாவது, நீண்டகால வறண்ட சூழல், தீவிர வெப்பம் மற்றும் அதீத காற்று ஆகியவற்றின் கலவையைக் கொண்ட வானிலை. அந்த நிலைமைகளில், காட்டுத்தீ ஏற்படுவது, மின்னல் போன்ற இயற்கையான காரணத்தால் ஏற்படுவதாக இருந்தாலும் சரி அல்லது தீ வைப்பு, விபத்து போன்ற மனிதர்களால் ஏற்படுத்தப்படுவதாக இருந்தாலும் சரி, ஏராளமான தாவரங்களை எரித்து தீவிர காட்டுத்தீ ஏற்பட வழிவகுக்கின்றன. "இப்போதைய கேள்வி தீ வைக்கப்படுவதா அல்லது காலநிலை மாற்றமா என்பதல்ல. அதிக தீவிரத்துடன் கூடிய வெப்பமான காலநிலை, எந்தவொரு காட்டுத்தீ சம்பவத்தின் விளைவுகளையும் எப்படி தீவிரப்படுத்துகிறது என்பதே. இந்த விளைவுதான், இப்போது நாம் பல இடங்களில் கவனிக்கும் பேரழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீ சம்பவங்களை ஏற்படுத்துகிறது," என்றும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், LUIS ACOSTA/AFP via Getty Image படக்குறிப்பு, ஐ.நா.வின் 30வது காலநிலை உச்சிமாநாட்டை நடத்தும் பிரேசில் மற்றும் அண்டை நாடுகள் 2024இல் கடுமையான வறட்சியை எதிர்கொண்டன. கூற்று 5: காலநிலை 'பொறியியல்' தீவிர வானிலைக்கு காரணமாகிறது வானிலையை மாற்றியமைத்தல் அல்லது புவி பொறியியல் (geoengineering) காரணமாகக் கடுமையான மழை, வெள்ளம் அல்லது சூறாவளி ஏற்படுவதாகச் சொல்லப்படும் கருத்துகள் தொடர்ந்து இணையத்தில் பரவி வருகின்றன. கடந்த ஆண்டு துபையில் அல்லது ஸ்பெயினின் வலென்சியாவில் திடீர் வெள்ளம் ஏற்பட்ட போது, பல சமூக ஊடக பயனர்கள் அத்தகைய நடைமுறைகளே காரணம் என்று கூறினர். ஆனால், வானிலையை மாற்றியமைத்துக் கையாளுதல் மற்றும் புவி பொறியியல், இரண்டுமே ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. உலகின் பல்வேறு பகுதிகள் அனுபவிக்கும் வானிலை உச்சநிலையை இவை குறிக்கவில்லை. வானிலையை மாற்றியமைப்பது சாத்தியம். அதில், மேக விதைப்பு என்பது மிகவும் பொதுவான நுட்பங்களில் ஒன்று. சமீபத்திய ஆண்டுகளில் சீனா, மெக்சிகோ, இந்தியா உள்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இது பயன்படுத்தப்பட்டு உள்ளதாக அமெரிக்க அரசாங்க அறிக்கை கூறுகிறது. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, 2024ஆம் ஆண்டில் துபையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை காலநிலை மாற்றம் மோசமாக்கி இருக்கலாம் என்று ஓர் அறிவியல் ஆய்வு முடிவு செய்துள்ளது நீராவி உறைந்து போவதை ஊக்குவிக்க, மழை அல்லது பனிக்கான வாய்ப்பை அதிகரிக்க, சிறிய துகள்களை (சில்வர் ஐயோடைட் போன்றவற்றை), ஏற்கெனவே இருக்கும் மேகங்களில் விதைப்பது இந்தச் செயல்முறையில் அடங்கும். "இத்தகைய வானிலை கையாளுதல் நுட்பங்கள் மிகக் குறுகிய காலத்திற்கு உள்ளூர் அளவில் செயல்படுத்தப்படுகின்றன. எனவே, கடந்த பல தசாப்தங்களாக இந்த பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் காலநிலையில் ஏற்படும் விரைவான மாற்றங்களை இந்த நுட்பங்களால் கணக்கிட முடியாது" என்கிறார் இந்திய அறிவியல் நிறுவனத்தின் வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் கோவிந்தசாமி பாலா. மேக விதைப்பு போன்ற வானிலையை மாற்றியமைக்கும் நுட்பங்களின் செயல்திறன் குறித்து சில விவாதங்கள் இருந்தாலும், அவை மட்டுமே பெரிய வெள்ளம் அல்லது பெரிய அளவிலான புயல்களை ஏற்படுத்த முடியாது என்று விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள். மறுபுறம், புவி பொறியியல் என்பது காலநிலையை மாற்றும் குறிக்கோளுடன் சுற்றுச்சூழலைக் கையாளும் முயற்சிகளைக் குறிக்கிறது. இதில் அடிக்கடி குறிப்பிடப்படும் ஒரு வடிவம், சூரிய கதிர்வீச்சு மாற்றம். அதாவது, சூரிய ஒளியை மீண்டும் விண்வெளியில் பிரதிபலிக்கச் செய்யவும், கோட்பாட்டளவில் பூமியை குளிர்விக்கவும், வளிமண்டலத்தில் சில பொருட்களின் நுண்துகள்களைத் தெளிப்பதே சூரிய கதிர்வீச்சு மாற்றமாகும். பிரிட்டன் உள்படப் பல நாடுகளில், சமீபத்திய ஆண்டுகளில் சூரிய பொறியியல் ஆராய்ச்சியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆபத்தான வெப்பமாதலைக் கட்டுப்படுத்த உதவுமா என்பதைப் புரிந்துகொள்ளும் முயற்சிகளாக இவை உள்ளன. உலகம் அனுபவித்து வரும் சில தீவிர வானிலைகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? காலநிலை மாற்றமே, வெப்ப அலைகள் அல்லது அதிக மழைப்பொழிவு போன்ற சில வகையான தீவிர வானிலைகள் உருவாவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாகவும், அந்த நிலைமைகளைத் தீவிரப்படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy7lx1jrv0o
  17. அததெரண கருத்துப்படம்.
  18. 11 Nov, 2025 | 02:52 PM ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஏழைகளுக்கு வரி விதித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் தான் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும், நாட்டு மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து சுமார் 4.30 மணித்தியால வரலாற்று சாதனையான உரையை நிகழ்த்தினார் என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுகின்றனர். இந்த வரவு - செலவுத் திட்டத்தில் வரலாற்று சாதனைமிக்க என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை ஆழமாக ஆராய வேண்டும். 2025 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் 50 சதவீதமேனும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த கால வரவு - செலவுத் திட்டங்களில் செல்வந்தர்களிடமிருந்து பெற்று, ஏழைகளுக்கு நிவாரணமளிக்கப்பட்டது, ஆனால் இந்த வரவு செலவுத் திட்டம் ஏமைகளிடமிருந்து பெற்று செல்வந்தர்களுக்கு வழங்கும் போக்கில் காணப்படுகிறது. பொருளாதார மீட்சிக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் நாங்கள் எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கு மக்கள் தான் எதிர்ப்பு தெரிவித்தது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் பேசிய விடயங்களை ஹன்சாட்டில் இருந்து தொகுத்து நூலாக வெளியிட வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும், நாட்டு மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். உங்களைப் போன்று வைராக்கியத்துடன் செயற்பட போவதில்லை .அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் என்றார். https://www.virakesari.lk/article/230087
  19. தமிழக இயக்குனர்களுக்கு செருப்படி நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக. நான் பிளாக் ஆரம்பித்த போது, என்னுடய தளத்தில் யாருடைய படைப்பினையும் களவாண்டு, பசை செய்து வெளியிட விரும்பவில்லை. அதே போல சினிமா சம்பந்தமான விசயங்களையும் வெளியிட விருப்பமில்லை. ஹிட்டுக்காக, பிட்டு படம் ஓட்டவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் இந்த நோக்கத்தினை, சற்று தளர்த்தி சினிமா சம்பந்தமான, ஆனந்த விகடனில் பிரசுகமான ஒரு விசயத்தினை எனது பிளாக்கில் வெளியிட முடிவெடுத்தேன். அது..... 'தி சைக்கிளிஸ்ட்' இயக்குனர் மஹ்சன் மக்மல்பஃப் - ஒளிப்பதிவாளர் செழியன் வாழ்க்கையில் ஒரு முறையாவது சந்தித்துவிட வேண்டும் என்று விரும்புபவர்களின் மனப்பட்டியல் நம் எல்லோரிடமும் இருக்கிறது. அதில் எத்தனை பேரை நம்மால் சந்திக்க முடிகிறது? எனது பட்டியலில் சிலர் கடல் கடந்து தொலைவில் இருக்கிறார்கள். சிலர் காலம் கடந்து நினைவில் இருக்கிறார்கள். சார்லி சாப்ளினையும் தார்க்கோவ்ஸ்கியையும் நேரில் சந்திக்கும் ஆசை இருக்கிறது. இந்த வரிசையில் இயக்குநர் தியோ ஆஞ்சலோபோலஸைச் சந்திக்க வேண்டும் என்கிற ஐந்து வருடக் கனவும் இந்த ஜனவரி மாதத்தின் விபத்தில் முடிந்தது. இந்த ஏமாற்றங்களுக்கு நடுவில், இளையராஜா, ஜெயகாந்தன், லா.ச.ரா., பாலுமகேந்திரா, மகேந்திரன் எனத் தொட ரும் இனிய சந்திப்புகளும் இருக்கின்றன. அந்த வரிசையில் என் மனப் பட்டியலில் இருந்த இன்னொரு மனிதரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பெயர் மஹ்சன் மக்மல்பஃப் (Mohsen Makmaulbuf). மக்மல்பஃப், இரானிய சினிமாவின் பிதாமகன்களில் ஒருவர். கலகக்காரர். 1960-களில் இரானில் நடந்த அரசியல் சூழலில் மன்னர் ஷா க்கு எதிராகத் தனது கிராமத்தில் கெரில்லாப் படையைத் தொடங்கியவர். பலால் ஹபாஷி எனப்படும் அந்த இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட இவர், தனது 17-வது வயதில் ஒரு போலீஸைத் தாக்கியதற்காகத் துப்பாக்கியால் சுடப்பட்டு, கைது செய்யப்பட்டார். நான்கு வருட சிறைவாசத்தில் இலக்கியம் மீதான ஆர்வம் ஏற்பட்டு, பிறகு அந்த ஆர்வம் சினிமா மீது திரும்பியது. அந்த வயதில் மக்மல்பஃப் பாட்டி வீட்டில் வளர்ந்தார். சினிமாவை சாத்தான் என்றும் ஹராம் என்றும் நம்பிய இஸ்லாமியக் குடும்பத்தில் வளர்ந்து, 24 வயது வரை சினிமாவே பார்க்காத அவர், இன்று உலகம் போற்றும் திரைப்பட இயக்குநர் ஆனார். இரானில் திரைப்படப் பள்ளியைத் தொடங்கினார். இவரது மனைவி மெர்ஷியா, மகள்கள் சமீரா, ஹானா மூவரும் இயக்குநர்கள். மகன் மெய்சம் ஒளிப்பதிவாளர். உலகத் திரைப்பட விழாக்களில் இந்தக் குடும்பம் வாங்கிய சர்வதேச விருதுகளின் எண்ணிக்கை 89. அரசுக்கு எதிராகப் படம் எடுத்ததால், இரானில் இருந்து குடும்பத்தோடு நாடு கடத்தப்பட்ட இவர், தனது அடுத்த படத்தைப் பிரதி எடுக்கும் வேலைகளுக்காக சென்னை வந்திருந்தார். அவரைச் சந்திக்க அந்த மதியப் பொழுதில் நான் பிரசாத் லேப்பில் இருக்கும் திரையரங்கின் வாசலில் காத்துக்கொண்டு இருந்தேன். வெள்ளை நிற அம்பாஸடர் கார் வந்து நிற்க... அதில் இருந்து மக்மல்பஃப் இறங்கினார். வெள்ளை நிறக் கதர் ஆடையில் கால்சட்டையும் மேலாடையும் அணிந்திருந்தார். ஒட்டக் கத்தரித்த தலைமுடியுடன் எளிய விவசாயிபோல உறுதியான உடல் அமைப்புடன் இருந்தார். அவருடன் ஒரு பெண்ணும் இறங்கினார். அவரைப் பார்த்ததும் வணக்கம் சொல்லி நெருங்கினேன். வணக்கம் சொல்லி புன்னகையுடன் அருகில் வந்தார். அவரிடம் விகடன் பிரசுரமான எனது 'உலக சினிமா’ நூலைக் கொடுத்து, அவரது 'தி சைக்கிளிஸ்ட்’ (The cyclist) படம் குறித்து அதில் எழுதி யிருப்பதைச் சொன்னேன். ஆர்வமாக அதில் இருக்கும் சர்வதேச இயக்குநர்களின் குறிப்புகளையும் படங்களையும் பார்த்துக்கொண்டே வந்த அவர், 'தி சைக்கிளிஸ்ட்’ படம் இருக்கும் பக்கம் வந்ததும் புன்னகை மலர என்னை நிமிர்ந்து பார்த்தார். அருகில் இருக்கும் பெண்ணிடம் அந்தப் பக்கத்தைக் காட்டினார். மேலும், பக்கங்களைத் திருப்ப... அந்த நூலிலேயே அவரது மனைவி மெர்ஷியாவின் 'தி டே ஐ பிகேம் எ உமன்’ (The day i became a woman) படமும் இருந்தது. இருவர் முகங்களிலும் புன்னகை மலர... ''இது மெர்ஷியா'' என்று அருகில் இருந்த பெண்ணை அறிமுகம் செய்துவைத்தார். தெரியாத மொழியில் இருவரின் படங்களும் இருப்பது அவர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கலாம். புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே இருந்தார். ''நான் ஒளிப்பதிவாளராக இருக்கிறேன்!'' என்றதும் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். மெர்ஷியா மொழி தெரியாத பாவனை முகத்தில் இருக்க... புன்னகையுடன் தலையசைத்தார். படத்தின் பிரதி தயாராக இருப்பதாக அழைப்பு வந்தது. வாருங்கள் என்று படம் பார்க்க என்னை யும் அழைத்தார். 'தி மேன் ஹூ கேம் வித் தி ஸ்நோ’ (The man who came with the snow) என்ற அவரது படம் திரையில் ஓடத் தொடங்கியது. அவர் முன் இருக்கையில் இருக்க... நான் பின்னால் இருந்தேன். படத்தில் சப்-டைட்டில் இல்லாததால், ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் திரும்பி என்னிடம் விளக்கம் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரது ஆங்கிலம் தெளிவாக, நிதானமாக இருந்தது. படம் முடிந்து வெளியில் வந்ததும் படத்தின் வண்ணம் குறித்தும் தரம் குறித்தும் என்னிடம் பேசினார். தான் நாடு கடத்தப்பட்டதால் இந்தப் படத்தை கஜகஸ்தானில் எடுத்ததாகவும் பிரதி எடுக்க இந்தியா வந்ததாகவும் சொன்னார். சில நிமிடங்களில் அவர் விடைபெறுவதாகச் சொல்ல... ''திரும்பவும் உங்களைச் சந்திக்க வேண்டுமே'' என்றேன். ''நாளை அறைக்கு வாருங்கள்'' என்றார். ஒரு சர்வதேச இயக்குநர் அவ்வளவு எளிமையாகவும் அன்பாகவும் இருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மறு நாள் காலை 10 மணிக்கு வடபழனி கமலா தியேட்டரை ஒட்டிய சந்தில் இருக்கும் அந்த எளிய விருந்தினர் விடுதியின் கதவைத் தட்டினேன். நண்பர்கள் அருள் எழிலனும் எழுத்தாளர் விஸ்வாமித்திரனும் உடன் இருந்தார்கள். கதவு திறக்க, நேற்று பார்த்த அதே கதர் உடையில் மக்மல்பஃப் இருந்தார். புன்னகையுடன் வரவேற்று அங்கு இருந்த இருக்கைகளில் அமரச் சொன்னார். சில நிமிடங்களில் மெர்ஷியா அதே புன்னகையுடன் உலர்ந்த பழங்களை யும் ஸ்டிக்கர் ஒட்டிய ஆரஞ்சுப் பழங்களை யும் கொண்டுவந்தார். மக்மல்பஃப் மெர்ஷியாவையும் அங்கேயே அமரச் சொன்னார். நானும் விஸ்வாமித்திரனும் எழிலும் பேசத் தொடங்க... அங்கிருந்த ஆரஞ்சுப் பழங்களை உரித்து எங்களுக்குத் தந்துகொண்டே... மக்மல்பஃப் தனது வாழ்க்கை மற்றும் சினிமா குறித்து இயல்பாகப் பேசத் தொடங்கினார். உரையாடல் அவரது திரைப்படப் பள்ளி குறித்து திரும்பியது. ''என் மகள் சமீராவுக்கு எட்டு வயது இருக்கும்போது நான் படம் பிடிக்கும் இடத்துக்கு வருவாள். என் கால்களைச் சுற்றிக்கொண்டே திரிவாள். ஒருநாள் பள்ளியில் இருந்து வந்த அவள், 'அப்பா! எனக்கு பள்ளிக்குப் போகவே பிடிக்கவில்லை’ என்றாள். எனக்கும் இரானின் பாடத்திட்டம் மேல் உடன்பாடு இல்லை என்பதால், அன்றே அவளைப் பள்ளியில் இருந்து நிறுத்தி என்னுடன் வைத்துக்கொண்டேன். அவளுக்கு சினிமா பிடித்திருந்ததால் அதனை நான் கற்றுக்கொடுத்தேன்!'' ''உங்கள் திரைப்படப் பள்ளியில் அப்படி என்ன கற்றுக்கொடுத்தீர்கள்... அதன் பாடத்திட்டம் என்ன?'' என்று கேட்டேன். ''பாடத்திட்டம் என்று எதுவும் கிடையாது. எனது பள்ளி சமீரா, ஹானா மற்றும் மெர்ஷியாவுக்காக உருவானதுதான். இங்கு இருக்கும் திரைப்படக் கல்லூரிகளில் பாடத்திட்டம் என்று என்ன வைத்திருக்கிறார்கள்? உலகின் சிறந்த படங்களைப் பார்க்கச் சொல்கிறார்கள். உதாரணத்துக்கு, 'சிட்டிசன் கேன்’ என்றால், அந்தப் படத்தைப் போட்டு, அதை எப்படி எடுத்தார்கள், அதன் நுட்பங்கள் என்ன என்று கற்றுத்தருகிறார்கள். அது ஆர்சன் வெல்ஸின் சினிமா. அதன் நுட்பம் என்பது அவர் சார்ந்த கலாசாரம், அரசியல் மேலும் அவர் வளர்ந்த விதத்தைப் பொறுத்து இருக்கிறது. அதை நாம் தெரிந்துகொள்ள லாம். ஆனால், பின்பற்ற வேண்டும்என்பது அவசியம் இல்லையே? இப்போது இருக்கிற கல்லூரிகள் பணம் சம்பாதிப்பதற்காக சினிமாவை ஒரு தொழிலாகக் கற்றுக் கொடுக்கின்றன. அரசுப் பணியாளர்போல ஒரு சினிமாக்காரரை உருவாக்குகின்றன. என் வேலை அதுவல்ல!'' ''பிறகு எப்படித்தான் கற்றுக்கொடுப்பீர்கள்?'' ''தினமும் 50 கி.மீ. சைக்கிள் ஓட்ட வேண்டும். இரண்டு மணி நேரம் நீச்சல் அடிக்க வேண்டும். இதெல்லாம் எதற்கு என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சினிமா படைப்பாளிக்கு முதலில் உடல் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில், எங்கள் நாட்டில் படம் எடுப்பது பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வகையான போர் முறை. நான் 'கந்தகார்’ எடுத்தபோது, நாங்கள் படம் எடுத்த இடத்தில் இருந்து 10 மீட்டர் தொலைவில் குண்டு வெடித்தது. கேமரா, தொழில் நுட்பச் சாதனங்கள் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு ஓடினோம். அந்த உடல் உறுதி ஒரு திரைப்படப் படைப்பாளிக்கு அவசியம். எந்த நாடாக இருந்தாலும் படம் எடுப்பவர் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில், உங்கள் பலம்... பலவீனம் இரண்டும் உங்கள் படைப்பில் வெளிப்படும்... இல்லையா'' என்று சிரித்தார். ''எங்கள் திரைப்படப் பள்ளியில் இலக்கியம் படிக்க வேண்டும். ஒரு கவிஞரின் கவிதையை எடுத்துக்கொண்டு ஒரு வாரம் முழுக்க அவரது கவிதைகளை மட்டுமே படிப்போம். வாசிக்கச் சொல்வோம். அதுபற்றிக் கலந்து பேசுவோம். விவாதிப்போம். பிறகு, படம் பார்ப்போம். ஓவியங் கள் பார்ப்போம். ஒரு வாரம் முழுக்க ஒரே படம். ஒரே இயக்குநரின் படம். திரும்பத் திரும்பப் பார்ப்போம். விவாதிப்போம். இதுதான் எனது பாடத்திட்டம். இந்தச் சூழலில் வளர்கிற சமீரா, 17 வயதில் ஒரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறாள். ஒருநாள் தொலைக்காட்சி செய்தி பார்க்கிறாள். ஒரு அப்பா தனது மகள்கள் இருவரையும் பல வருடங்கள் வெளி உலகமே தெரியாமல் அடைத்துவைத்திருக்கிறார் என்ற செய்தி அவளைப் பாதிக்கிறது. 'இதைப் படமாக எடுக்கலாமா?’ என்று கேட்கிறாள். 'எடு’ என்கிறேன். அவளே கேமராவை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து, பதினோரு நாளில் 'ஆப்பிள்’ படத்தை எடுக்கிறாள். அப்போது சமீராவுக்கு 19 வயது. இப்படித் தன்னைச் சுற்றி நடக்கிற விஷயங்களைக் கவனிப்பவர்களாக, அதனைத் திரைப்படமாக மாற்ற முடிகிறவர்களாக எனது பயிற்சி அவர்களை உருவாக்குகிறது. இதுதான் நீங்கள் கேட்கிற பாடத்திட்டம்!'' என்று சிரிக்கிறார். ''உங்கள் படங்கள் அனைத்திலும் தொழில்முறை அல்லாத சாதாரண மனிதர் களையே நடிக்கவைக்கிறீர்கள். அவர்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?'' ''என்னிடம் வாய்ப்பு கேட்டு வருபவர் களை அல்லது நான் நடிகர்களாகத் தேர்ந்து எடுக்கிறவர்களைப் பிச்சை எடுக்கத் தெருவுக்கு அனுப்புவேன். யார் அதிகமாகப் பிச்சை எடுத்துவருகிறார்களோ அவர்தான் நடிகர். எந்தக் கூச்சமும் இல்லாமல் மக்களிடம் சென்று தன்னை ஒரு பிச்சைக்காரராக நம்பவைக்க முடிகிறது என்றால், அவர்தானே சிறந்த நடிகர்!'' ''நடிகர்களுக்கான ஊதியம் என்று என்ன தருவீர்கள்?'' என்று நான் கேட்டதும், உடனே ''இங்கு புகழ்மிக்க நடிகருக்கு எவ்வளவு ஊதியம் கொடுக்கிறீர்கள்?'' என்று கேட்டார். நான் சொன்னதும் அவர் அதை அமெரிக்க டாலர் மதிப்பில் மாற்றிப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ''ஏன் நடிகருக்கு இவ்வளவு தருகிறீர்கள்?'' அவரது ஆச்சர்யம் அடங்கவில்லை. பிறகு, இயக்குநரில் தொடங்கி ஒவ்வொருவருக்கும் எவ்வளவு ஊதியம் என்று கேட்டார். அவருக்குத் தொடர்ந்த அதிர்ச்சிகள் காத்திருந்தன. ''சரி... உங்கள் படங்களின் பட்ஜெட் என்ன?'' என்று கேட்டார். ''அதுவும் சில கோடிகள்... வருடத்துக்கு இதுபோல தமிழில் மட்டும் 150 படங்கள் எடுக்கிறோம்!'' என்று சொன்னதும் கன்னத்தில் கைவைத்துவிட்டார். ''சரி... உங்கள் படப்பிடிப்புத் தளத்தில் எத்தனை பேர் இருப்பீர்கள்?'' என்று கேட்டார். ''குறைந்தது 100 பேர்!'' என்று சொன்னேன். ''100 பேரை வைத்துக்கொண்டு எப்படிப் படம் எடுக்க முடியும்? உதாரணத்துக்கு, வறுமையைப் பற்றிய படம் எடுக்கிறீர்கள் என்றால், ஷாட் முடிந்தததும் 100 பேர் அதே இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பீர்களா? எங்கள் படங்களின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? உங்கள் ரூபாய் மதிப்பில் வெறும் 15 லட்சம். அதற்கு மேல் நாங்கள் எந்தப் படமும் எடுத்தது இல்லை. எனது படப்பிடிப்பில் நான், டிரைவர், சமையற்காரர், நடிகர் எல்லாம் சேர்த்து படப்பிடிப்புக் குழு மொத்தமே 8 பேர்தான் இருப்போம்!'' என்று சொல்லிச் சிரித்தார். ''இயக்குநரே க்ளாப் அடிக்க வேண்டும். ஒலிப்பதிவு செய்ய வேண்டும். ஒளிப்பதிவாளர் தனக்கான எல்லா வேலைகளையும் தானே செய்துகொள்ள வேண்டும். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கிளம்பும்போது, நாங்களே எல்லாவற்றையும் தூக்கிச்செல்வோம். நாங்கள் அனைவரும் ஒரு காரில்தான் பயணம் செய்வோம். அந்த ஒரு கார்தான் எங்கள் படப்பிடிப்புக் குழு. எங்களது நடிகருக்கு ஊதியம் எவ்வளவு தெரியுமா? பணமாக ஒன்றும் இல்லை. நான் எனது 'சைக்கிளிஸ்ட்’ படத்தில் நடித்தவருக்கு ஒரு சிறிய வீடு கட்டிக்கொடுத்தேன். அதுதான் எங்களால் கொடுக்க முடிந்த ஊதியம். நீங்கள் சொல்வதை எல்லாம் பார்த்தால், சினிமா இங்கு மிகவும் கெட்டுப்போன நிலையில் இருக்கிறது. ஒரு தொழிலாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும், நிறையப் பணம் முதலீடு செய்யப்படுகிறது என்றால், அதைவைத்து லாபம் பார்க்கவே எல்லோரும் நினைப்பார்கள். நல்ல படம் எடுக்க யார் நினைப்பார்கள்? செலவைக் குறைக்க வேண்டும். என் மகள் ஹானா, 'புத்தா கொலாப்ஸ்டு அவுட் ஆஃப் ஷேம்’ (Buddha Collapsed Out of Shame) என்றொரு படம் எடுத்தாள். இது வீடுகளில் நாம் பயன்படுத்தும் கையளவு டிஜிட்டல் கேமராவினால் எடுக்கப்பட்டது. செலவு உங்கள் பணத்தில் வெறும் 8 லட்ச ரூபாய். திரைப்பட விழாக்களின் மூலம் அது ஈட்டிய பணம் 15 லட்சம். அதுதான் அடுத்த படத்துக்கான மூலதனம். இந்தியாவில் கதைக்கா பஞ்சம்? சாலையில்தான் எத்தனை கதைகள்? நேற்று நானும் மெர்ஷியாவும் லேப்பில் இருந்து வரும்போது ஒரு கடையில் நின்றோம். அந்தக் கடையில் நான் ஒரு பழச்சாறு வாங்கிக் குடிக்க முயன்றபோது, என் கால்களை யாரோ சுரண்டினார்கள். திரும்பிப் பார்த்தேன். அழுக்கான ஒரு சிறுவன் நின்றுகொண்டு இருந்தான். அவன் என்னைப் பார்த்து, என் கையில் இருந்த பழச்சாறைக் கேட்டான். நானும் மறுக்காமல் அவனிடம் கொடுத்துவிட்டு, அவன் என்ன செய்கிறான் என்று கவனித்தேன். அது வரைக்கும் அவன் செய்ததில் எதுவும் இல்லை. அதற்கு மேல் அவன் செய்ததுதான் எனக்குத் தீராத ஆச்சர்யமாக இருந்தது. என்னிடம் இருந்த பழச்சாறுக் குவளையை வாங்கியதும் அவன் உடனே குடிக்கவில்லை. அதை எடுத்துக்கொண்டு நடந்து சென்றான். அவனது உடைகள் அவ்வளவு அழுக்காக இருந்தன. என்றாலும், சாலையைக் கடந்த அவன் அங்கு இருந்த திண்டில் ஒரு செய்தித்தாளை விரித்து உட்கார்ந்தான். அதில் ஒரு ராஜாவைப்போல கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துகொண்டு, போகும் வரும் வாகனங்களையும் மனிதர்களையும் ஏளனமாகப் பார்த்துக்கொண்டே அந்த பழச்சாறைப் பருகினான். நான் அசந்துவிட்டேன். அந்தச் சிறுவனைப் பின்தொடருங்கள். அங்கு ஒரு கதை நிச்சய மாக இருக்கிறது. அதுதான் சினிமா. உலகில் எங்கும் இல்லாத அளவுக்குத் தணிக்கை விதிகள் இருந்தபோதும் இரானிய சினிமா ஒளிர்கிறது என்றால், அதன் காரணம் என்ன? அதில் குழந்தைகளும் சிறுவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள்தானே நமது உண்மையான ஆன்மா. இதுபோன்ற மனிதர்களைப் படம் எடுங்கள். வருடத்துக்குத் தமிழில் மட்டும் 150 படங்கள் எடுக்கிறீர்கள். இந்தியாவில் மொத்தம் எத்தனை படங்கள் இருக்கும்? 100 கோடிப் பேருக்கும் அதிகமாக இருக்கிற இந்தியாவில், சிறந்த இயக்குநர்கள் எத்தனை பேர்? ஒரு 10 பேரைச் சொல்ல முடியுமா? இந்தியா சினிமாவில் கடக்க வேண்டிய தூரம் வெகு தொலைவில் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்!'' ''ஒரு நல்ல சினிமா எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டோம். ''மக்களைப் பேசுகிற எந்தப் படமும் நல்ல படம்தான். சமீரா எடுத்த 'ஆப்பிள்’ சர்வதேச அளவில் எல்லா விருதுகளையும் குவித்தது. அத்துடன் நிற்காமல் சமீரா அந்தச் சிறுமிகளுக்கு அந்த வீட்டின் மேலேயே ஒரு மாடியைக் கட்டிக்கொடுத் தாள். ஆனால், அந்தக் குழந்தைகளை அவர்களின் தகப்பன் திரும்பவும் பூட்டி வைத்தான். சமீரா அந்தக் குழந்தைகளுக் காகத் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறாள். திரைப்படம் என்பது சில விருதுகளோடு முடிந்துபோகிற ஒன்று அல்ல. அது காலம் காலமாக மக்களின் நினைவுகளிலும் வாழ்க்கையோடும் இணைந்திருக்க வேண்டும். அப்படியான சினிமா இயக்கத்தை தமிழில் நீங்கள் தொடங்குங்கள்'' என்று எங்கள் மூவரையும் பார்த்துச் சொன்னார். விருதுகள் பற்றிப் பேச்சு வந்தது. ''விருதுகள் பெறுகிற மகிழ்ச்சி ஒரு நிமிடம்தான். பிறகு, அது மறந்துவிடும். ஆப்கனில் யுத்தம் நடந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள். அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. ஏனெனில், இரானின் சட்டப்படி அகதிகள் கல்வி கற்க முடியாது. நான் ஏதாவது செய்ய வேண்டுமே என்று அவர்களைப் பற்றி ஓர் ஆவணப்படம் எடுத்து அரசுக்கு அனுப்பினேன். அவர்கள் அதைப் பார்த்ததும் சட்டத்தைத் தளர்த்தி அத்தனை குழந்தை களையும் பள்ளியில் சேர்த்துக்கொண்டார் கள். ஒரு சின்ன டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட படத்துக்குக் கிடைத்த மரியாதை இது. சமூகத்தில் சினிமாவின் பங்கு என்ன என்று கேட்டால், இதுதான் என்று நான் சொல்வேன். மற்றபடி இந்த விருதுகளை நான் அதிகம் பொருட்படுத் துவது இல்லை. இப்போது எப்படிப் படம் எடுத்தால் விருதுகள் கிடைக்கும் என்று தெரிந்துவைத்துக்கொண்டு படம் எடுக் கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் அது சினிமாவே அல்ல. நான் மக்களோடு இருக்கிறேன். அவர்களுக்கான சினிமாவையே நான் உருவாக்க விரும்புகிறேன்!'' வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். புகைப்படங்கள் எடுத்தோம். இடையிடையே மெர்ஷியா பதப்படுத்தப்பட்ட பழச்சாறைக் கொண்டுவந்து தந்து அதே மாறாத புன்னகையுடன் அமர்ந்திருந்தார். மக்மல்பஃப் சில விஷயங்களை குர்தீஷ் மொழியில் கேட்டபோது மெர்ஷியா சொன்ன பதில்களை எங்களிடம் ஆங்கிலத்தில் பகிர்ந்துகொண்டார். நாங்கள் விடைபெறும் நேரம் வந்தபோது எங்களுக் கான உபசரிப்பு குறித்து போதிய கவனிப் பினைச் செய்ய முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். அவர் நாளையும் இருக்கிற செய்தியைச் சொல்லி, முடிந்தால் நாளையும் சந்திக்கலாம் என்று சொன்னார். மறுநாள் இயக்குநர் பாலாஜி சக்திவேலை அழைத்துச் சென்றேன். உடன் விஸ்வாமித்திரனும் இருந்தார். அழைப்பு மணி அடித்ததும் மக்மல்பஃப் அதே வெள்ளை கதர் உடையில் கதவைத் திறந்தார். பாலாஜி சக்திவேல் அவருக்கு சால்வை அணிவித்து வணங்கினார். மக்மல்பஃப் நெகிழ்ந்துபோய் அவர் அணிவித்த சால்வையுடன் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தார். தங்கள் உடைமைகளைத் தவறவிட்டதால் இந்த கதர் உடையை இரவுகளில் துவைத்துப்போட்டு மூன்று நாட்களாக ஒரே உடையை அணிந்திருப்பதைப் புன்னகையுடன் சொன்னார். ''தமிழ்ப் படம் எதுவும் பார்த்திருக்கிறீர்களா?'' ''ஒன்றுகூடப் பார்த்ததில்லை. ஆனால் பார்க்க விரும்புகிறேன். இந்திப் படங்கள் போல உங்கள் படங்களிலும் நடனமும் பாட்டும் இருக்குமா?'' என்று கேட்டுப் புன்னகைத்தார். ''இந்தியப் படங்களில் நான் பார்த்த ஒரே படம் 'பதேர் பாஞ்சாலி’. மனம் சோர்வடையும்போது ரேயின் 'பதேர் பாஞ்சாலி’, ஃபெலினியின் 'லாஸ்ட்ரடா’ இரண்டு படங்களையும் பார்ப்பேன்'' என்று சொன்னார். நேற்று பர்மா பஜார் போகும்போது அவரது படங்கள், மெர்ஷியாவின் படங்கள் உள்ளிட்ட உலகப் படங்களின் குறுந்தகடு கள் குறைந்த விலையில் கிடைப்பது குறித்து ஆச்சர்யமாகச் சொன்னார். ''என்னைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று என்னிடமே பிரதி இல்லை. ஆனால், உங்கள் ஊரில் கிடைக்கிறது. இரண்டு பிரதிகள் வாங்கினேன்!'' என்று சொல்லி அதில் ஒரு பிரதியை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். நாளை அதிகாலை விமானம் என்பதால் இன்று மாலை படப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டு கிளம்ப வேண்டும் என்று சொன்னார். வாய்ப்பு இருந்தால் திரும்பவும் விரைவில் இந்தியா வருவதாகவும் தமிழில் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு படம் எடுக்கலாம் என்றும் சொன்னார். விடைபெறும் தருணம். எல்லோரும் இணைந்து நிழற்படம் எடுக்க வேண்டும் என்பதால், கேமராவை மேசையில் சாயாமல் வைத்து, அதன் தானியங்கியை இயக்கி ஓடிவந்து அவர்களுடன் நின்று கொண்டேன். ர்ஞ்ஞென்று சத்தம் கேட்க... நாங்கள் அனைவரும் மேசையில் இருக்கும் கேமராவைப் பார்த்து நின்றிருந்த கணம் அற்புதமானது. விடைபெற்று வெளியில் வந்தோம். அந்த எளிமையும் கனிவும் வழிகாட்டுதலும் முழுப் பயணத்துக்குமான ஒரு சுடரைக் கையில் தந்ததுபோல் இருந்தது. இடுகையிட்டது யாஸிர் அசனப்பா. இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் 4 கருத்துகள்: Kumaran3 ஏப்ரல், 2012 அன்று 7:53 AM என்னை ஆழமாக சிந்திக்க வைக்க மெய்சிலிர்க்க வைத்துவிட்டது தங்களது பகிர்வு..ஒரு உலகத்தர கலைஞனை பற்றியும் உண்மையான சினிமா மீதான அவரது பார்வையையும் தெரிந்துக்கொள்ள வழிவகுத்தது..தங்களை எத்தனை பாராட்டியும் தகும்.மிக்க நன்றி சகோ. பதிலளி பதில்கள் யாஸிர் அசனப்பா.3 ஏப்ரல், 2012 அன்று 3:57 PM @குமரன், மறுமொழியிட்டமைக்கு மிக்க நன்றி. நடிகனாக வேண்டும் என்றால் பிச்சை எடுத்துக் கொண்டுவர வேண்டும் என்று ஒரு இயக்குனர், நம் தமிழ் சினிமாவில் வந்தால் எந்த நடிகரின் மகனும், இயக்குனரின் மகனும், தயாரிப்பாளரின் மகனும் சினிமாவிற்கு வந்திருக்க முடியாது. அது மாதிரியான ஒரு இயக்குனருக்காக காத்திருக்கும் ஒரு சினிமா ரசிகன். பதிலளி aravintraj3 ஏப்ரல், 2012 அன்று 10:28 AM இந்த பதிவினை நமது தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். பொறியியல் கல்லுரிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் போன்றவை எப்படி வணிகமயமாகி விட்டதோ அதைவிட அதிகமாக நமது திரைப்படத்துறை வணிகமயமாகியுள்ளதை இப்பதிவை படித்தபோது தான் புரிகிறது. இவரை போன்றவர்களைத் தான் திரைப்பட கலைஞர்கள் என கூற வேண்டும். நம் கோலிவுட், பாலிவுட் அனைத்தும் கூத்தாடிகள் என்று தான் கூற வேண்டும். பதிலளி பதில்கள் யாஸிர் அசனப்பா.3 ஏப்ரல், 2012 அன்று 3:59 PM @ அரவிந்த் ராஜ், மறுமொழியிட்டமைக்கு நன்றி, கோடி, கோடியாக பணம் சொரிக்கும் நடிகர்களுக்கு மத்தியில், என் நடிகனுக்கு நான் ஒரு சிறியதாக வீடு கட்டிக் கொடுத்தேன், அது தான் நான் அவனுக்கு கொடுத்த ஊதியம் என்று சொல்லும் இந்த இயக்குனர் எனக்கு வித்தியாசமாக தெரிகின்றார். https://civilyasir.blogspot.com/2012/04/blog-post.html
  20. 10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை; பிமல் ரத்னாயக்க 11 Nov, 2025 | 02:38 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரச துறை மற்றும் கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிலுள்ள சுமார் 10,000 நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) தமிழரசுக் கட்சி எம்.பி பத்மநாதன் சத்தியலிங்கம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சத்தியலிங்கம் எம்பி தமது கேள்வியின் போது, சுமார் பத்தாயிரம் தற்காலிக, அமைய அடிப்படையிலான ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் ரயில் கடவை காப்பாளர்களும் உள்ளடக்கப்படுகின்றனரா என வினவினார். அதற்கு அமைச்சர் தொடர்ந்து பதவளிக்கையில், ரயில் கடவை காப்பாளர்களுக்கு அவர்கள் இதுவரை பெற்று வந்த 7500 ரூபா கொடுப்பனவை பதினையாயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது . எனினும் அதன் மூலம் ரயில்வே கடவைகளில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமை முழுமையாக நிவர்த்தியடையும் என நாம் கூற முடியாது. அதற்கு நீண்ட கால வேலைத் திட்டம் ஒன்றை நாம் முன்னெடுக்க வேண்டியது அவசியம். அரசாங்கமானது நிரந்தரமற்ற சேவை நிலையில் உள்ளவர்களை ஒவ்வொரு மட்டத்தில் சேவைகளுக்காக நியமித்துள்ளது. அந்த வகையில் சுமார் 9,800 பேரை நிரந்தரமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் சில தொழில்துறைக்காக இணைத்துக் கொள்ளும் போது அவர்கள் தேவையான கல்வித் தகைமையைக் கொண்டிருக்க வேண்டும். அந்த வகையில் ரயில் கடவைக் காப்பாளர்கள் மட்டுமன்றி வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களைக் குறிப்பிடும்போது அவர்களில் 700 பேருக்கு நாம் நியமனங்களை வழங்கினோம் மேலும் 300 பேர் உள்ளனர். அவர்கள் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றியிருக்க வேண்டும். சித்தியடைந்தமை தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படவில்லை. அதன் பிரகாரம் ரயில் கடவை காப்பாளர்களுக்கும் அவ்வாறான தகைமை கோரப்படுகிறது. அந்த வகையில் அனைவரையும் அரசாங்கம் நிரந்தரமாக்கும் என்பதை என்னால் கூற முடியாது. எனினும் பொதுவாக சுமார் 10,000 நிரந்தரமற்ற ஊழியர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரச துறை மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிலுள்ள தற்காலிக மற்றும் அமைய என நிரந்தரமற்ற நிலையிலுள்ள ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/230062
  21. பாகிஸ்தான் குண்டு வெடிப்பை 'இந்தியா ஆதரிக்கும் குழு நடத்தியது' - ஷெபாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு பட மூலாதாரம், Getty Images 11 நவம்பர் 2025, 13:08 GMT புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 27 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்கொலை குண்டுதாரர் மாவட்ட நீதிமன்றத்தின் உள்ளே நுழையத் திட்டமிட்டதாகவும், ஆனால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை என்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறினார். "நீதிமன்றத்தில் மதியம் 12:39 மணிக்கு தற்கொலை தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்க வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்." என்றார் மொஹ்சின் நக்வி. வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவரை அடையாளம் காண்பதற்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிப்பார்கள் என்றும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் நக்வி தெரிவித்தார். இஸ்லாமாபாத்தில் அண்மைய ஆண்டுகளில் தற்கொலைத் தாக்குதல்கள் அரிதாகவே நிகழ்ந்துள்ளன. செவ்வாய்க்கிழமை தற்கொலை தாக்குதல் நடந்த சம்பவ இடத்தில் இருந்து வெளியான காட்சிகளில் எரிந்த காரின் எச்சங்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வளையம் போடப்பட்டிருந்ததைக் காட்டின. காயமடைந்த 27 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நக்வி கூறினார். பட மூலாதாரம், Getty Images '15 நிமிடங்கள் காத்திருந்து' தாக்குதல் நடத்தியவர் சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்து, ஒரு போலீஸ் காருக்கு அருகில் குண்டை வெடிக்கச் செய்ததாகவும் நக்வி மேலும் தெரிவித்தார். சம்பவத்திற்குப் பிந்தைய காட்சிகளில், பாதுகாப்புத் தடுப்புக்குப் பின்னால் கருகிய வாகனத்திலிருந்து புகை மண்டலம் எழுவதைக் காண முடிந்தது. பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இந்தத் தற்கொலைத் தாக்குதலை "வன்மையாக கண்டிப்பதாக" கூறினார். சம்பவம் நடந்தபோது நீதிமன்றத்திற்கு வெளியே தனது காரை நிறுத்தியதாகக் கூறிய ஒரு வழக்கறிஞர், "பெரிய சத்தம்" கேட்டதாக விவரித்தார். ருஸ்டம் மாலிக் என்பவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "அங்கு முழுமையான குழப்பம் நிலவியது," என்றார். மேலும் அவர், "வழக்கறிஞர்களும் மக்களும் வளாகத்திற்குள் ஓடினார்கள். கேட் மீது இரண்டு சடலங்கள் கிடப்பதையும், பல கார்கள் தீப்பிடித்து எரிவதையும் நான் கண்டேன்." என்றார். பிரதமர் அலுவலகம் கூறியது என்ன? செவ்வாய்க்கிழமை நடந்த இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. "இந்தியா தீவிரமாக ஆதரிக்கும்" தீவிரவாதக் குழுக்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அலுவலகம் குற்றம்சாட்டியுள்ளது. "இந்தியாவின் பயங்கரவாத பினாமிகளால் நிராயுதபாணியான பாகிஸ்தான் குடிமக்கள் மீது நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டிக்கிறேன்." என்று அவர் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை இந்தியா முன்னதாக மறுத்துள்ளது. பாகிஸ்தான் தலைநகரை கடைசியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் குறி வைத்தது. அப்போது ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர். அதன் பிறகு நாட்டின் மற்ற பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்கள் நடந்தாலும், இஸ்லாமாபாத்தில் நடைபெறவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clykrl7z295o
  22. படக்குறிப்பு, கடத்தப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரின் புகைப்படங்கள் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன்முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 10 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பணியாற்றிவந்த ஐந்து தமிழர்கள் அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் கூறுகின்றனர். கடத்தப்பட்டவர்களில் இரண்டு பேர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் 27 வயதான தளபதி சுரேஷ். இவர் கடையநல்லூர் அருகேயுள்ள கண்மணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர், 36 வயதான இசக்கிராஜா. இவர் முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர். மற்ற மூன்று பேரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஓட்டப்பிடாரம் நாரைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த பொன்னுதுரை, கொடியன்குளம் கிராமத்தைச் சேர்ந்த புதியவன், கலப்பை பட்டி கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து ஆகியோர் அந்த மூவர். இவர்கள் அனைவருமே மாலியில் உள்ள கோப்ரி என்ற இடத்தில் செயல்படுத்தப்பட்டுவந்த மின்சாரத் திட்டம் ஒன்றில் பணியாற்றிவந்தனர். இவர்கள் ஐந்து பேரும் வியாழக்கிழமையன்று கடத்தப்பட்டனர். ஏற்கனவே மாலியில் பணியாற்றிவிட்டு தற்போது ஊருக்குத் திரும்பியுள்ள ஜோசப், தனக்கு முதலில் தகவல் வந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார். "அங்கு என் மாமா பணியாற்றி வருகிறார். அவர் வியாழக்கிழமையன்று இரவில் எனக்கு போன் செய்தார். இதுபோல ஆட்களைப் பிடித்துச் சென்றுவிட்டதாக அவர் சொன்னார். இந்தத் தகவல் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் தெரிந்திருக்கும் என்ற காரணத்தால் நான் அவர்களிடம் சொல்லவில்லை. நாளிதழ்களில் செய்தி வந்ததைப் பார்த்ததும்தான் அவர்களுக்கு இது குறித்துத் தெரியவில்லை என்பது எனக்குப் புரிந்தது. இப்போது மொத்தம் ஐந்து பேர் கடத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கடத்தியவர்கள் யார், அவர்கள் கோரிக்கை என்ன என்பதெல்லாம் தெரியவில்லை" என்று ஜோசப் பிபிசியிடம் தெரிவித்தார். இவர், மாலியின் கோப்ரியில் சர்வேயராகப் பணியாற்றிவிட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் ஊர் திரும்பியிருக்கிறார். பட மூலாதாரம், UGC படக்குறிப்பு, மாலியிலிருந்து பிபிசியிடம் பேசிய மோகன்ராஜ் இந்தக் கடத்தல் எப்படி நடந்தது? கடத்தல் தொடர்பாக மாலியில் இருந்து ஜோசப்பிற்குத் தகவல் தெரிவித்த மோகன்ராஜிடம் கேட்டபோது, அவர் அன்று இரவு நடந்த நிகழ்வுகளை விவரித்தார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது எஸ்ஐஆர் படிவத்தில் வாக்காளர் நிரப்ப வேண்டியது என்ன? சந்தேகங்களும் பதில்களும் பாகிஸ்தானுடன் இணையும் நவாப் விருப்பத்திற்கு மாறாக 'ஜூனாகத்' இந்தியாவுடன் இணைந்த கதை காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று வீட்டிலேயே புதைத்த பெண் - ஓர் ஆண்டுக்கு பின் சிக்கியது எப்படி? 'சதிகாரர்கள் தப்பமாட்டார்கள்' - டெல்லி வெடிப்பு குறித்து பிரதமர் மோதி கூறியது என்ன? End of அதிகம் படிக்கப்பட்டது "கோப்ரி என்ற கிராமத்தில் மின் தொடரமைப்புப் பணிகளைச் செய்துவந்தோம். மொத்தம் 18 தமிழர்கள் அந்த முகாமில் இருந்தோம். வியாழக்கிழமையன்று இரவு ஒன்பது மணி இருக்கும். இசக்கிராஜாவும் சிவபாலனும் ஒரே வீட்டில் இருந்தார்கள். இசக்கிராஜா வெளியில் உட்கார்ந்திருந்தார். அப்போது துப்பாக்கியுடன் சிலர் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்து இறங்கினார்கள். இசக்கிராஜாவைப் பிடித்து 'உங்கள் தலைவர் யார்' எனக் கேட்டிருக்கிறார்கள். அவர் மேல் அறைக்கு அழைத்துச் சென்று சிவபாலனைக் காட்டியிருக்கிறார். அவரையும் பிடித்துக்கொண்டார்கள். அதற்குப் பிறகு விளக்குகள் எரிந்த அடுத்த அறைக்குச் சென்றவர்கள் அங்கிருந்த சுரேஷ், பேச்சிமுத்து, பொன்னுத்துரை, புதியவன் ஆகியோரைப் பிடித்தனர். எல்லோரையும் பிடித்துக்கொண்டு வெளியில் வந்தபோது, ஒரு வாகனம் குறுக்காக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வாகனத்தின் சாவி என்னிடம் இருந்தது. சிவபாலனிடம் அந்தச் சாவியை வாங்கிவரும்படி சொன்னார்கள். என்னுடைய வீடு அங்கிருந்து ஐம்பது மீட்டர் தூரத்தில் இருந்தது. அவர் வந்து கதவைத் தட்டி விஷயத்தைச் சொன்னதும், அந்த வீட்டிலிருந்த நான், சிவபாலன், மேலும் நான்கு பேரும் பின்னால் இருந்த வேலி வழியாக வெளியேறிவிட்டோம். அருகிலிருந்த வீடுகளில் இருந்தவர்களையும் எச்சரித்து வெளியேற்றிவிட்டோம்.'' என்றார் மோகன்ராஜ். படக்குறிப்பு, கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கினர் சிவபாலன் திரும்ப வராத நிலையில், மீதமிருந்த ஐந்து பேரின் சட்டையையும் கழற்றி, அவர்களது கைகளைக் கட்டி இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார்கள். எல்லாம் 15 நிமிடத்திற்குள் நடந்துவிட்டது என்கிறார் மோகன்ராஜ். ''அவர்களில் ஒருவர் மட்டும் எந்திரத் துப்பாக்கி வைத்திருந்தார். மற்றவர்கள் கைத்துப்பாக்கிதான் வைத்திருந்தார்கள். அந்த நேரத்தில் போனில் சிக்னல் இல்லை என்பதால் உடனடியாக யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்கள் அரபியும் ஆங்கிலமும் கலந்து பேசினார்கள். எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்கள் கோரிக்கை என்ன என்பதெல்லாம் தெரியவில்லை" என்கிறார் மோகன்ராஜ். இந்த மின் தொடரமைப்புப் பணிகளை மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் செய்துவருகிறது. அந்த நிறுவனத்தின் சார்பில் கோப்ரியில் கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் ஒப்பந்ததாரராக பணியாற்றிவந்தார். அவர் மூலமாக தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எட்டு மாதங்களுக்கு முன்பாக அங்கு வேலைக்குச் சென்றனர். 'ஊருக்குத் திரும்புவதாக இருந்தது' "இங்கே இந்தியாவின் பல மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் வேலைபார்த்துவந்தோம். வேலை முடியும் கட்டத்தை நெருங்கிவிட்டதால் எல்லோரும் நாடு திரும்பிவிட்டார்கள். நாங்களும் இந்த மாத இறுதியில் ஊருக்குத் திரும்புவதாக இருந்தது. அதற்குள் இப்படி நடந்துவிட்டது" என்கிறார் மோகன்ராஜ். கடத்தியவர்கள் யார், அவர்கள் கோரிக்கை என்ன என்பது இதுவரை தெரியவில்லை என்கிறார் மோகன்ராஜ். தலைநகர் பமாகோவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார். கடத்தப்பட்டவர்கள் தவிர்த்த மீதமுள்ளவர்கள் பமாகோவில் ஒரு முகாமில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடத்தப்பட்ட தகவல்கள் இப்போதுதான் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர்களை மீட்டுத்தர வேண்டுமென கோரியுள்ளனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, (சித்தரிப்புப்படம்) 2012ஆம் ஆண்டிலிருந்தே மாலி, நைஜர் உள்ளிட்ட நாடுகள் அல் - காய்தா மற்றும் ஐ.எஸ் குழுவுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களை எதிர்கொண்டுவருகின்றன. இந்த ஆயுதக் குழுக்களின் நடவடிக்கையால் நாட்டின் பல இடங்களில் எரிபொருள் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த வெளிநாட்டுப் பணியாளர்களை வைத்து மின்சாரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பணிகளில் ஈடுபடும் வெளிநாட்டவர் கடத்தப்படுவது அங்கு இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளது. தற்போதைய சம்பவத்தில் கடத்தப்பட்டவர்களை மீட்டுத்தரும்படி இந்திய வெளியுறவுத் துறையிடம் கேட்டிருப்பதாக தமிழ்நாடு அயலக தமிழர்கள் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்திருக்கிறார். இது குறித்து பிபிசியிடம் பேசிய அவர், "மாலியில் கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் தமிழர்களை உடனடியாக மீட்டுத்தர ராஜ்ஜிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். வெளியுறவுத் துறையின் செயலருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பமாகோவில் உள்ள இந்தியத் தூதரகம், பிற சர்வதேச ஏஜென்சிகளுடன் சேர்ந்து இவர்களை பத்திரமாக மீட்பதற்கான உதவிகளைச் செய்ய வேண்டுமெனக் கேட்டிருக்கிறேன்" என்று தெரிவித்தார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gp4yzkqw9o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.