Everything posted by ஏராளன்
-
அமெரிக்கா இரானை தாக்கினால் ரஷ்யா, சீனா பதிலடி கொடுக்குமா? அரபு நாடுகளின் பதற்றம் என்ன?
அமெரிக்கா இரானை தாக்கினால் ரஷ்யா, சீனா பதிலடி கொடுக்குமா? அரபு நாடுகளின் பதற்றம் என்ன? பட மூலாதாரம்,Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் இரானில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கா அங்கு ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற பேச்சு நிலவி வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை இது குறித்துப் பேசியுள்ளார். இரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது அமெரிக்காவிற்குள் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு கருத்தாக உள்ளது. அமெரிக்கா ஏற்கனவே 1953-ஆம் ஆண்டில் இரானில் அரசாங்கத்தை மாற்றியிருந்தது. ஆனால் 1979-இல் நடந்த இஸ்லாமியப் புரட்சி, அமெரிக்காவுக்கு ஆதரவான அந்த அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்றியது. 1953-இல் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து, இரானில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் முகமது மொசாடெக்கை பதவியிலிருந்து அகற்றி, அதிகாரத்தை பஹ்லவியிடம் ஒப்படைத்தன. முகமது மொசாடெக் இரானின் எண்ணெய் துறையைத் தேசியமயமாக்கியவர். மேலும் மன்னரின் (ஷா) அதிகாரத்தைக் குறைக்க விரும்பினார். போர் நடக்காத காலத்தில் வெளிநாட்டுத் தலைவர் ஒருவரைப் பதவியிலிருந்து இறக்க அமெரிக்கா மேற்கொண்ட முதல் முயற்சி இதுவாகும். ஆனால் இதுவே கடைசியாக இருக்கவில்லை. அதன் பிறகு, இது அமெரிக்க வெளியுறவுத் திட்டத்தின் ஒரு அங்கமாகவே மாறியது. 1953-இல் அமெரிக்கா நடத்திய இந்த ஆட்சி கவிழ்ப்பு, 1979-ஆம் ஆண்டின் இரான் புரட்சிக்கு வழிவகுத்தது. இத்தனை ஆண்டுகாலம் கடந்த பின்னரும், இரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான கசப்பான உணர்வுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷ்யா நிலைப்பாடு என்னவாக இருக்கும்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1979 இஸ்லாமியப் புரட்சியின் போது தற்போது இரானில் ஆயதுல்லா அலி காமனெயியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி அமெரிக்கா பேசி வருகிறது. இத்தகைய சூழலில், அமெரிக்கா இரான் மீது தாக்குதல் நடத்தினால், யார் அதனுடன் நிற்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. இரானின் முக்கிய கூட்டாளிகளான ரஷ்யாவும் சீனாவும், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையை வெளிப்படையாக எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இரு நாடுகளும் வாய்மொழியாக மட்டுமே தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் என கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது கூட, ரஷ்யாவும் சீனாவும் வாய்மொழி கண்டனங்களை மட்டுமே தெரிவித்திருந்தன. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு, ரஷ்யாவிற்கும் இரானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு ஆழமடைந்துள்ளது என்பது தெளிவாகிறது. இரான் டிரோன்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கியுள்ளது. பதிலுக்கு ரஷ்யா பொருளாதார மற்றும் ராணுவ உறவுகளை விரிவுபடுத்தி, இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர சார்புநிலையை அதிகரித்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த ரஷ்யாவிற்கு இரான் ஒரு முக்கிய கூட்டாளியாக இருந்தாலும், அமெரிக்காவுடன் நேரடி மோதலில் ஈடுபடும் அளவுக்கு ரஷ்யா அதற்கு நட்பு நாடு அல்ல. கடந்த ஆண்டு தாக்குதலின் போது கூட ரஷ்யா அவ்வாறு செய்யவில்லை. ஜனவரி 13 அன்று, ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, "மேற்கத்திய நாடுகள் இரான் மீது விதித்துள்ள சட்டவிரோதத் தடைகள், அங்கு பொருளாதார மற்றும் சமூக சவால்களை உருவாக்கியுள்ளன. இதனால் சாதாரண இரான் குடிமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.'' என்றார் ''மக்களின் அதிருப்தியைப் பயன்படுத்தி, இரானிய அரசை நிலைகுலையச் செய்யவும் பலவீனப்படுத்தவும் வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன. இரானின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் இத்தகைய வெளிநாட்டுத் தலையீடுகளை நாங்கள் கண்டிக்கிறோம்" என்றார். மேலும், "2025 ஜூன் மாதத்தில் நடந்தது போன்ற மற்றொரு தாக்குதலை இரான் மீது நடத்த காரணங்களைத் தேடுபவர்கள், இத்தகைய நடவடிக்கைகள் மத்திய கிழக்கு மற்றும் உலகளாவிய சர்வதேச பாதுகாப்பில் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்," என குறிப்பிட்டார். சீனா அமெரிக்காவை எதிர்த்துப் போரிடுமா? பட மூலாதாரம்,Getty Images உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியான சீனா, இரான் மீதான அமெரிக்காவின் அச்சுறுத்தல்களைக் கண்டித்து வருகிறது. ஆனால், அது அமெரிக்காவை நேரடியாக எதிர்த்துப் போரிடுமா? சீனாவிற்கும் இரானுக்கும் இடையே "விரிவான உத்தி சார்ந்த கூட்டாண்மை" உள்ளது. இருப்பினும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதைப் போல, சீனா தனது கூட்டாளிகளுக்குப் போர்க்களத்தில் நேரடியாக ஆதரவு அளிப்பதில்லை. பொருளாதார ரீதியாக நிலைத்திருக்க (எண்ணெய் விற்பனை) மற்றும் ராணுவத் தொழில்நுட்பத்திற்காக சீனாவைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இரான் சிக்கியுள்ளது. அதே நேரத்தில், இரானுக்கு எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதங்களையும் வழங்கத் தான் தயாராக இல்லை என்பதை சீனா தெளிவுபடுத்தியுள்ளது. "இரான் விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம். இரானிய அரசாங்கமும் மக்களும் தற்போதைய சிரமங்களை முறியடித்து, நாட்டில் நிலைத்தன்மையைப் பேணுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.'' என சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியது. ''சர்வதேச உறவுகளில் பலத்தைப் பயன்படுத்துவதையோ அல்லது அச்சுறுத்துவதையோ நாங்கள் எதிர்க்கிறோம். மத்திய கிழக்கில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு உகந்த நடவடிக்கைகளை அனைத்துத் தரப்பினரும் எடுப்பார்கள் என்று நம்புகிறோம்" என கூறியுள்ளது. இரான் தொடர்பான சீனாவின் நிலைப்பாடு அமெரிக்காவிற்கு எதிராக ஆக்ரோஷமாக இல்லை. ஏனெனில், அமெரிக்காதான் சீனாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி. இரு நாடுகளுக்கும் இடையே விரோதப் போக்கு இருந்தபோதிலும், சீனா அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளைத் தொடர்ந்து பராமரிக்கவே விரும்புகிறது. ஜி-7 நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,Getty Images இரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் அங்குள்ள அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஜி-7 நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன. "கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர்களுடன் இணைந்து, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளாகிய நாங்கள், இரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பான நிகழ்வுகள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது. "மக்களுக்கு எதிராக இரான் அதிகாரிகள் மேற்கொண்டு வரும் கொடூரமான அடக்குமுறை நடவடிக்கைகளை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இரானிய அதிகாரிகள் மிகுந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், வன்முறையைத் தவிர்க்கவும், இரானிய குடிமக்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பாதுகாக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்'' என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images துருக்கி கூறுவது என்ன? துருக்கி இஸ்ரேலுக்கு எதிராக வெளிப்படையாகப் பேசினாலும், அமெரிக்காவைப் பொறுத்தவரை அதன் அணுகுமுறை மாறுகிறது. ஜனவரி 13 அன்று, துருக்கிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஓமர் செலிக், ''இரானின் உள்நாட்டு விவகாரங்களில் உலகம் தலையிடக்கூடாது. அந்தப் பிரச்னைகளை எப்படித் தீர்ப்பது என்பதை இரான் மக்களே தீர்மானிக்க வேண்டும்.'' என்றார். குறிப்பாக இஸ்ரேலை விமர்சித்த அவர், போராட்டங்களை இஸ்ரேல் தனது சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். மேலும் எந்தவொரு வெளிநாட்டு தலையீடும் "இன்னும் மோசமான விளைவுகளுக்கு" வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார். "எங்கள் அண்டை நாடான இரானில் எந்த குழப்பத்தையும் நாங்கள் காண விரும்பவில்லை. இந்தப் பிரச்னைகள் இரானின் சொந்த உள்நாட்டுச் செயல்முறைகள் மற்றும் தேசிய விருப்பத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். இஸ்ரேலிய அதிகாரிகள் பொறுப்பற்ற நிலைப்பாட்டை எடுக்க முயற்சிக்கின்றனர். இது பிராந்தியம் முழுவதும் இன்னும் பெரிய பிரச்னைகளை உருவாக்கும்" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,Getty Images கடந்த ஆண்டு இரான் 12 நாட்கள் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க குண்டுவீச்சை எதிர்கொண்டது. இந்த நிகழ்வுகள் பிராந்தியத்தில் இரானின் பலவீனத்தை தெளிவாக படமிட்டுக் காட்டின. இரான் அதிகாரிகள் தங்களின் வளைகுடா அண்டை நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீண்டும் தாங்கள் தாக்கப்பட்டால் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்குவோம் என கூறியுள்ளனர். வளைகுடா பிராந்தியத்தில் இரான் நடத்தும் எந்தவொரு தாக்குதலும் அமெரிக்காவிடமிருந்து மிகக் கடுமையான எதிர்வினையைத் தூண்டும். அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பைத் தொடர்ந்து இராக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நீண்ட உள்நாட்டுப் போரின் போது சிரியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அண்டை நாடான ஏமனில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் மற்றும் செங்கடலுக்கு அப்பால் சூடானில் நடக்கும் மோதல்கள் குறித்தும் செளதி அரேபியா கவலை கொண்டுள்ளது. அரபு ஆட்சியாளர்களுக்கும் இரானுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் சுமுகமானவை அல்ல. இரானின் அணுத் திட்டத்தையும் அந்த நாடு அரபு ஆயுதக்குழுவுக்கும் வழங்கும் ஆதரவையும் கட்டுப்படுத்தும் புதிய இரானிய ஆட்சி அமைந்தால், அதனை அரபு நாடுகள் வரவேற்கும் என கூறப்படுகிறது. ஆனால் இரண்டு ஆண்டாக பிராந்தியத்தில் நடந்த போருக்கு பிறகு மத்திய கிழக்கில் உள்ள பல அரசாங்கங்கள் இப்போது இரானில் ஏற்படும் அமைதியின்மை நிலைத்தன்மையை விட அதிக குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், அதன் தாக்கம் தங்கள் சொந்த நாடுகளை அடையக்கூடும் என்றும் அஞ்சுகின்றன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அரபு நாடுகளின் அச்சம் இரான் மீதான எந்தவொரு தாக்குதலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய் டாங்கர்களின் போக்குவரத்தைப் பாதிக்கும் என்று அரபு நாடுகள் அஞ்சுவதாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' தெரிவித்துள்ளது. பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள இந்த குறுகிய கடல் பகுதி, இரானை அதன் அரபு அண்டை நாடுகளிடமிருந்து பிரிக்கிறது. உலகின் மொத்த எண்ணெய் போக்குவரத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகவே நடைபெறுகிறது. எந்தவொரு சாத்தியமான தாக்குதலிலும் தாங்கள் ஈடுபடமாட்டோம் என்றும், இரானை தாக்க அமெரிக்கா தங்களின் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்றும் இரானுக்கு செளதி உறுதி அளித்துள்ளது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டுள்ளது. கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி செவ்வாயன்று செய்தியாளர்களிடம், கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க உதவுவதற்காக தனது நாடு அமெரிக்கா மற்றும் இரானுடன் தொடர்பில் உள்ளது என்றார். இரானுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கை குறித்தும் டிரம்ப் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை, மேலும் அவரது ஆலோசகர்களுடன் இந்த உத்தி குறித்து விவாதித்து வருகிறார் என்று அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். "செளதி அரேபியா இரானின் போட்டியாளராகக் கருதப்படுகிறது. ஆனால் திரைக்குப் பின்னால், செளதி அரேபியா, ஓமன் மற்றும் கத்தார் ஆகியவை இரானிய ஆட்சியைக் கவிழ்க்கும் எந்தவொரு முயற்சியும் உலகளாவிய எண்ணெய் சந்தைகளுக்கு பெரிய இடையூறுகளை ஏற்படுத்தி இறுதியில் அமெரிக்க பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று அமெரிக்காவை நம்ப வைக்க முயற்சிக்கின்றன" என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இந்த நாடுகள் தங்கள் சொந்த நாடுகளில் ஏற்படக்கூடிய எதிர்வினை மற்றும் உறுதியற்ற தன்மை குறித்து மிகவும் கவலை கொண்டுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgyjxv23kjo
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
பணப்பரிமாற்ற ரசீது. வட்டு.தெற்கு வட்டுக்கோட்டை பரராஜசிங்கம் ஐயாவின் மலசல கூடத்தை பூரணப்படுத்த குழிவெட்டும் படங்கள்.
-
நேர்மறையான மாற்றங்களைச் செய்யும்போது எதிர்ப்புகள் வருவது இயல்பு - பிரதமர்
நேர்மறையான மாற்றங்களைச் செய்யும்போது எதிர்ப்புகள் வருவது இயல்பு - பிரதமர் 16 Jan, 2026 | 05:36 PM நேர்மறையான மாற்றங்களைச் செய்யும்போது எதிர்ப்புகள் வருவது இயல்பு. நாட்டிற்குத் தேவையான சிறந்த குடிமகனை உருவாக்கும் நோக்கில் நாம் ஆரம்பித்துள்ள நவீன கல்வி முறையை எக்காரணம் கொண்டும் நிறுத்தப் போவதில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்பு குறித்துத் தெளிவுபடுத்துவதற்காகச் சிலாபம் கல்வி வலயத்தின் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுடன் இன்று வெள்ளிக்கிழமை (16) மாதம்பை செடெக் (SEDEC) நிறுவன மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். பிரதமர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்றபோது, ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பிரதான துறையாகக் கல்வித்துறை இனங்காணப்பட்டிருந்தது எனவும், இவ்வாறான சமூக மாற்றங்களை முன்னெடுக்கும்போது ஒரு சிறிய தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பக்கூடும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். எவ்வாறாயினும், சிறுவர் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்பிற்குள் புதிய கல்வி மறுசீரமைப்பு முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வின்போது, 176 பாடசாலைகளையும் சுமார் 76,000 மாணவர்களையும் கொண்ட சிலாபம் கல்வி வலயம் குறித்த சுருக்கமான அறிமுகத்தைச் சிலாபம் வலயக் கல்விப் பணிப்பாளர் முன்வைத்தார். கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்துவதற்காக வடமேல் மாகாணக் கல்வி அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் பிரதமருக்குச் சமர்ப்பிக்கப்பட்டன. அத்தோடு, கலந்துகொண்ட கல்வி அதிகாரிகள் தமது கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைக்க வாய்ப்பளிக்கப்பட்டதோடு, கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் அதற்கான தயார்நிலை குறித்துப் பிரதமரின் கவனம் ஈர்க்கப்பட்டது. அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், தவறுகளை இனங்கண்டு அவற்றைச் சரிசெய்து முன்னெடுக்கப்படுகின்ற புதிய கல்வி முறையின் கீழ், பிள்ளைகளுக்குத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது, சிறுவர் பாதுகாப்புக் கொள்கைகள் பேணப்படும் வகையில் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தக் கல்வி மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதில் புத்தளம் மாவட்டக் கல்வி அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பானது, கல்வி மறுசீரமைப்பைக் குழப்ப முயற்சிக்கும் தரப்பினரின் நோக்கங்களை முறியடிக்கும் அளவிற்குப் பலமானதாக இருக்கின்றது என்பதை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். தொழிற்கல்விக்காக ஒதுக்கப்பட்ட ஆகக்கூடிய வரவுசெலவுத் திட்ட நிதி, இக்கல்வி மறுசீரமைப்பின் ஊடாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கிடையிலான டிஜிட்டல் வளங்களின் சமத்துவமின்மை மற்றும் உட்கட்டமைப்பு வசதிப் பிரச்சினைகளை நீக்குவதற்காகத் தற்போது உரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 6ஆம் தரக் கல்வி மறுசீரமைப்பைத் தற்காலிகமாக நிறுத்தியதன் மூலம் அநீதி இழைக்கப்பட்ட மாணவர்களுக்கு விரைவில் நீதியைப் பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கை எடுப்போம். கல்வியை ஒரு பாரிய மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்லும் இந்தப் பயணத்தில் மக்களின் அங்கீகாரம் மிகவும் முக்கியமானதாகும்" எனப் பிரதமர் தெரிவித்தார். இந்நிகழ்வில் வடமேல் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் பி.எம்.சி.கே. வன்னிநாயக்க, உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி, பாடசாலை அதிபர்கள், மகா சங்கத்தினர் மற்றும் கத்தோலிக்க மதகுருமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/236214
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக பூமிக்குத் திரும்பிய வீரர்கள்! - காரணம் இதுதான்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக பூமிக்குத் திரும்பிய வீரர்கள்! - காரணம் இதுதான் 16 Jan, 2026 | 02:32 PM சர்வதே விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் 4 விண்வெளி வீரர்களும் நேற்று வியாழக்கிழமை (15) அதிகாலை அவசர அழைப்பின் பேரில் பூமிக்குத் திரும்பியதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதே விண்வெளி நிலையத்தில் தங்கி, ஆய்வுகளை மேற்கொண்ட விண்வெளி வீரர்களில் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவருக்கு அவசர சிகிச்சை வழங்கவேண்டிய தேவை காணப்படுவதால் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. க்ரூ -11 (Crew-11) என்ற விண்வெளிப் பயணத் திட்டத்தின் கீழ் ஜெனா கார்ட்மேன் (Zena Cardman), மைக் பின்கே (Mike Fincke) ஆகிய இரண்டு அமெரிக்க வீரர்கள், ஜப்பான் வீரர் கிமியா யூயி (Kimiya Yui), ரஷ்ய வீரர் ஒலெக் ப்ளாட்டோனோவ் (Oleg Platonov) ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் கடந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் 1ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பூமியிலிருந்து அனுப்பப்பட்டனர். இந்த வீரர்கள் “ஸ்பேஸ் எக்ஸ்” (SpaceX) நிறுவனத்தின் “ட்ராகன்” (Dragon) விண்கலத்தில் சென்றுள்ளனர். இவர்களது விண்வெளி ஆய்வுப் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை மேற்கொள்ளப்படும் என திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆய்வில் ஈடுபட்டிருந்த குறித்த நான்கு வீரர்களில் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டதால் வீரர்கள் குழுவை அவசரமாக பூமிக்கு திரும்ப அழைக்க நாசா தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதனையடுத்து, கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை மாலை ட்ராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு 10 மணிநேர பயணத்தை மேற்கொண்டு படிப்படியாக உயரத்தை குறைத்து பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையத் தொடங்கியது. பின்னர், விண்வெளி வீரர்கள் சான் டியாகோ அருகே பசுபிக் கடற்பரப்பில் நேற்று அதிகாலை பாதுகாப்பாக தரையிறங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவ்வேளை, கடலில் நீந்திய டொல்பின்களை கண்டு ரசித்ததாக வீரர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், அவர்கள் கடற்படை கப்பலின் மூலம் மீட்கப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தின் 25 ஆண்டுகால வரலாற்றில், விண்வெளியிலிருந்து இதுபோன்று அவசர தேவை கருதி வீரர்களை பூமிக்கு திருப்பி அழைத்த முதல் நிகழ்வு இதுவே என தெரிவிக்கப்படும் அதேவேளை தனியுரிமை கருதி, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட வீரர் யார் என நாசா வெளியிட மறுத்து வருகிறது. https://www.virakesari.lk/article/236181
-
ஜல்லிக்கட்டு செய்திகள் 2026
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு - 37 பேர் காயம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2025 பாலமேடு ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயற்சி செய்யும் மாடுபிடி வீரர்கள் 16 ஜனவரி 2026, 01:56 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உட்பட 37 பேர் காயமடைந்தனர். இதில் 8 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 16) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. போட்டியை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கி வைத்தார். போட்டியில் பங்கேற்பதற்காக 600-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலமாக பதிவு செய்திருந்த நிலையில் 489 பேர் பங்கேற்க வந்திருந்தனர். இதில் உடல் தகுதியின்மை மற்றும் மது அருந்தி வந்தது என 24 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 465 வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். பாலமேடு ஜல்லிக்கட்டைப் பார்க்க நடிகர் சூரி வந்திருந்தார். ஜல்லிக்கட்டில் பங்கேற்றிருந்த அவருடைய காளை வெற்றி பெற்றது. இறுதிச்சுற்று உட்பட மொத்தம் 10 சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இன்று நடைபெற்ற போட்டியில் மொத்தம் 37 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த 8 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு கார், டிராக்டர், பைக் மற்றும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. ஒன்பதாவது சுற்று நிலவரம் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஒன்பது சுற்றுகள் முடிவுற்ற நிலையில், இதுவரை மாடுபிடி வீரர்கள் 8 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 11 பேர், பார்வையாளர்கள் 11 பேர், அரசு ஆரம்ப சுகாதார ஊழியர் ஒருவர் என மொத்தம் 31 பேர் காயமடைந்துள்ளனர். ஒன்பதாவது சுற்றில், களம் கண்ட 817 மாடுகளில், 135 மாடுகள் பிடிபட்டுள்ளன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: அஜித், பொந்துகம்பட்டி - 12 பிரபாகரன், பொதும்பு - 11 கார்த்தி, நாமக்கல் - 11 பார்த்திபன், திருமணப்பதி - 8 பார்த்திபன், நத்தம் - 8 ஏழாவது சுற்று நிலவரம் ஏழாவது சுற்றில், களம் கண்ட 678 மாடுகளில், 122 மாடுகள் பிடிபட்டுள்ளன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: அஜித், பொந்துகம்பட்டி - 12 பிரபாகரன், பொதும்பு - 11 கார்த்தி, நாமக்கல் - 11 ஏழாவது சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: நவீன்குமார், ஆண்டார்கொட்டாரம் - 2 ஆறாம் சுற்று நிலவரம் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில், ஆறாம் சுற்றில் களம் கண்ட 601 மாடுகளில் 112 மாடுகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: அஜித், பொந்துகம்பட்டி - 12 பிரபாகரன், பொதும்பு - 11 கார்த்தி, நாமக்கல் - 11 ஆறாம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: கார்த்தி, நாமக்கல் - 11 பார்த்திபன், திருமணப்பதி - 8 கௌதம், ராஜக்காள்பட்டி - 4 மணிகண்டராஜா, சின்னாளபட்டி - 2 மூன்றாவது சுற்று நிலவரம் பாலமேடு ஜல்லிக்கட்டு மூன்றாம் சுற்றில் களம் கண்ட 295 காளைகளில் 45 காளைகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: பிரபாகரன், பொதும்பு - 11 தமிழரசன், சின்னப்பட்டி - 6 துளசிராம், மஞ்சம்பட்டி - 4 மூன்றாம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: பிரபாகரன், பொதும்பு - 11 ஶ்ரீநாத், விக்கிரமங்கலம் - 2 இரண்டாவது சுற்றின் முடிவில் காலை 12.00 மணி நிலவரப்படி பரிசோதனைக்கு வந்த 239 காளைகளில், 238 காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிக்கப்பட்டன. ஒரு காளை மட்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இரண்டாவது சுற்று முடிவில், 3 மாடுபிடி வீரர்கள், 2 உரிமையாளர்கள் மற்றும் ஒரு பார்வையாளர் என மொத்தம் 6 பேர் காயமடைந்தனர். வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் பாலமேடு மஞ்சமலை ஆற்று திடலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு நிசான் கார், டிராக்டர், மோட்டார் பைக் மற்றும் தங்க நாணயம் ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன. அதேபோன்று ஒவ்வொரு சுற்றிலும் காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், மெத்தை, சைக்கிள், அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த போட்டியில் சுமார் ஆயிரம் காளைகளும் 800 மாடுபிடி வீரர்களும் களம் இறங்க உள்ளனர். 12 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறும். பாதுகாப்பு ஏற்பாடுகள் மதுரை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல்துறை ஆகியவை சார்பாக போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறை சார்பாக ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க 12 ஆம்புலன்ஸ்கள் , 2 பைக் ஆம்புலன்ஸ்கள் , ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 40 பேர் என தயார் நிலையில் உள்ளனர். வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு போதிய முதலுதவிகள் அளிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சை தேவைப்படும்பட்சத்தில் அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்படுவர் என 108 ஆம்புலன்ஸ் சேவை மண்டல மேலாளர் பிரசாத் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0mklgz32j2o
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
ஐசிசி 19இன் கீழ் உலகக் கிண்ணம்: ஐக்கிய அமெரிக்காவை DLS முறைமையில் வென்றது இந்தியா 15 Jan, 2026 | 09:38 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிராக புலாவாயோ குவின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று வியாழக்கிழமை (15) நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை (DLS) பிரகாரம் இந்தியா 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது. ஐக்கிய அமெரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 107 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 4 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 21 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. பிற்பகல் 5.10 மணியளவில் தடைப்பட்ட இப் போட்டி 2 மணித்தியாலங்களுக்குப் பின்னர் தொடர்ந்தபோது இந்தியாவுக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் வெற்றி இலக்கு 34 ஓவர்களில் 96 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது. இந்தியா 17.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இந்த வெற்றி இலக்கை அடைவதற்கு முன்னர் இந்தியா தனது இளம் அதிரடி வீரர் வைபவ் சூரியவன்ஷி உட்பட நால்வரை 70 ஓட்டங்களுக்கு இழந்தது. அபிக்யான் குண்டு அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் 42 ஓட்டங்களைப் பெற்று இந்தியாவை வெற்றி பெறச்செய்தார். அவரை விட அணித் தலைவர் அயுஷ் மஹாத்ரே 19 ஓட்டங்களையும் விஹான் மல்ஹோத்ரா 18 ஓட்டங்களையும் கனிஷ்க் சௌஹான் ஆட்டம் இழக்காமல் 10 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரிட்விக் அப்பிடி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கா 35.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஹெனில் பட்டேலின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் 9 அறிமுக வீரர்களைக் கொண்ட ஐக்கிய அமெரிக்க இளையோர் அணி பெரும் சிரமம் அடைந்தது. அறிமுக வீரர்களில் ஒருவரான நிட்டிஷ் சுதினி திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4 பவுண்டறிகளுடன் 36 ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் அத்னித் ஜாம்ப் (18), சஹில் கார்க் (16), அர்ஜுன் மஹேஷ் (16) ஆகிய மூவர் 15 ஓட்டங்களுக்கு மெல் பெற்றனர். பந்துவீச்சில் ஹெனில் பட்டேல் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 7 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: ஹெனில் பட்டேல். https://www.virakesari.lk/article/236131
-
அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் Jan 16, 2026 - 04:14 PM அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகளோ அல்லது சொத்து சேதங்களோ ஏற்படவில்லை என்பதுடன், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkgr42z403zvo29n76m2khx4
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீடு வசதி இல்லாமல் வாழும் அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதியை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும் - ஜனாதிபதி
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீடு வசதி இல்லாமல் வாழும் அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதியை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும் - ஜனாதிபதி Published By: Vishnu 16 Jan, 2026 | 08:49 PM பு.கஜிந்தன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீடு வசதி இல்லாமல் வாழும் அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதியை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க யாழில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், சாவகச்சேரி மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் வெள்ளிக்கிழமை (16) வீட்டுத் திட்ட மானியத்திற்கான காசோலைகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரையாற்றுகையில் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து பல காலங்கள் கடந்தாலும் இன்னும் பூர்த்தியடையாத வீட்டு திட்டங்களை பூர்த்தி செய்யும் முகமாக இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எனவும், வட மாகாண மக்கள் யுத்த காலத்திலும் மற்றும் யுத்த காலத்திற்குப் பிறகும் பல இடப் பெயர்களை சந்தித்துள்ளனர் எனவும், நீண்ட காலமாக சொந்த வீடு இல்லாமல் வாழ்வது இலகுவான விடயம் அல்ல எனவும் தெரிவித்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதியை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டும் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், நாட்டில் முதல் முறையாக வட மாகாண மக்கள் நம்பிக்கை செலுத்தக்கூடிய வகையில் ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது எனவும், முதலாவதாக மிகவும் கீழ் மட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எமது அரசாங்கம் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் நிவர்த்தி செய்யும் எனவும் தெரிவித்தார். மேலும், வரவு செலவு திட்டத்தின் ஊடாக கல்விக்காக அதிக நிதியை இம்முறை ஒதுக்கியுள்ளதாகவும், மக்களுக்கு ஒரு சிறந்த வருமான வழியை ஏற்படுத்த வேண்டும் எனவும், விசேடமாக யாழ்ப்பாணத்தில் விவசாயத்துறை, சுற்றுலாத்துறை , கடற்றொழிற்துறை மற்றும் சிறு கைத்தொழில் துறை போன்றன இப் பகுதி மக்களுடைய வாழ்வாதாரமாக இருக்கின்றன எனவும், இவ் அனைத்து துறையையும் மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், யுத்த காலத்தில் முரண்பாடுகளுக்கு மத்தியில் மக்கள் இனவாதத்துடன் வாழ்ந்தனர் எனவும், இந்த முரண்பாட்டின் ஊடாக எவருமே நன்மை அடையவில்லை எனவும், மாறாக பாதிப்புக்கள் மட்டுமே மிஞ்சின எனவும் குறிப்பிட்டார். மேலும் அதிமேதகு சனாதிபதி தெரிவிக்கையில், மீண்டும் எமது நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் எந்த ஒரு இனவாதத்திற்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும், நாம் அனைவரும் அமைதியாக ஒற்றுமையாக சகோதரத்துடன் வாழும் ஒரு நாடு எமக்கு தேவை எனவும், இத்தோடு சிறப்பான பொருளாதாரத்துடனும் சிறந்த பொழுதுபோக்குடனும் மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கை எமக்கு தேவை என்றும் குறிப்பிட்டதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பான உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், அது தற்போது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளது என தெரித்த அதிமேதகு சனாதிபதி அவர்கள், மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து, இத் திட்டங்கள் தொடர்பாக அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியதாகவும் இத் திட்டம் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும், எமது பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நன்மை அளிக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை நாங்கள் இத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இந்த உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் எமது இளம் சமுதாயத்திற்கு மிக முக்கியமானது எனவும் தெரிவித்தார். இதே போன்று சுற்றுலாத்துறையை எடுத்துக் கொண்டால் எமது நாட்டிற்கு பெரிய பங்களிப்பை இந்த சுற்றுலாத்துறை வழங்குகின்றது எனவும், வடக்கில் அழகிய கடற்கரைகள் மக்களை கவரக்கூடிய பல இடங்கள் இருந்தாலும் சக்தி வாய்ந்த சுற்றுலாத்தலம் ஒன்று இங்கு இல்லை எனவும், இதன் குறைபாடுகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், இங்குள்ள விமான நிலையத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எம்மால் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மிக வேகமாக காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், வட மாகாணத்தில் சிறந்த சுற்றுலாத் தலம் ஒன்றை அமைப்பது எமது தேவையாக உள்ளது எனவும், இளைஞர் யுவதிகளுக்குசிறப்பான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும், நல்ல ஒரு பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறான பொருளாதாரத்தை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பாக எமது அரசாங்கம் செயற்பட உள்ளதாகவும்தெரிவித்ததுடன், மேலும், இதற்கு மேலாக எனது நோக்கம் சிதறடிக்கப்பட்ட மனங்கள் மற்றும் உள்ளங்களை ஒன்று சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், நான் ஒருபோதும் மக்களை கைவிடமாட்டேன் என்று குறிப்பிட்ட சனாதிபதி அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/236228
-
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு அரசியல் பாதுகாப்பு கிடையாது
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு அரசியல் பாதுகாப்பு கிடையாது Jan 16, 2026 - 05:34 PM - 0 அன்று யுத்தம் காரணமாக தமது பிள்ளைகள் பற்றி பயந்து வாழ்ந்த வடக்கின் பெற்றோர்கள், இன்று போதைப்பொருள் காரணமாக அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது என்றும், எந்தப் பிரஜை, நகரம், கிராமம், ஏழை, பணக்காரன், சிங்களவர், தமிழர் என்ற வேறுபாடு இல்லாமல் பரவும் இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களை பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு பலமாக செயல்படுத்தப்படும் என்றும், அது ஒருபோதும் பின்வாங்கப்படும் ஒரு செயற்பாடாக இருக்காது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். மேலும், ஒரு சமூகமாக மக்கள் தமது பொறுப்பை நிறைவேற்றவும், அதற்காக ஒரு பாரிய பாதுகாப்பு அரணாக ஒன்றிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி மக்களுக்கு அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (16) பிற்பகல் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டின் வட மாகாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். போதைப் பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு தீவிர பங்களிப்பை வழங்கிய வட மாகாண முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, "முழு நாடுமே ஒன்றாக" தேசிய வேலைத்திட்டம் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ஒரு வேலைத்திட்டம் மாத்திரமன்றி, அதற்கு ஆளான பிள்ளைகளுக்கு புனர்வாழ்வளித்து, அவர்களுக்கு சிறந்த தொழிற்பயிற்சி வழங்கி, கிராமத்திற்கும் நாட்டிற்கும் பயன்மிக்க பிரஜைகளாக மாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டமாகும் என்றும் தெரிவித்தார். நாட்டில் முதல் முறையாக, தெற்கு மற்றும் வடக்கு மக்களால் சமமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நம்பகமான அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அதிகாரத்தை இழந்த இனவாத குழுக்கள் சிறிய, சிறிய இடங்களில் இனவாதத்தை மீண்டும் தூண்ட முயற்சித்தாலும், நாட்டில் மீண்டும் எந்த இனவாத போக்கும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தினார். மேலும், வட மாகாணத்தில் கிராமப்புற வீதிகளின் அபிவிருத்திக்காக கடந்த ஆண்டு 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டும் அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அந்தப் பணத்தை முறையாகப் பயன்படுத்தி மக்கள் அந்த அபிவிருத்திப் பலன்களைப் பெறுவதை உறுதி செய்ய அரசியல் வாதிகளும், அரச அதிகாரிகளும் பங்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எமது நாடு எமது இளைஞர்கள் எமது அரச பொறிமுறையை முழுமையாக ஆக்கிரமித்துள்ள போதைப் பொருளை ஒழிப்பதற்காகவே நாம் உங்களை சந்திக்கிறோம்.நாடென்ற வகையில் எமக்கு பெருமளவு எதிர்பார்ப்புகள் உள்ளன. எமது நாட்டை உலகில் வளமான நாடாக முன்னேற்ற வேண்டும்.எமது நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும். எமது நாட்டில் பலமான பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும். எமது நாட்டில் அமைதி , சகோதரத்துவம் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். எமது நாட்டின் பிள்ளைகளுக்கு அவை மிகவும் அவசியமான விடயங்களாகும். ஆனால் இந்த அனைத்து எதிர்பார்ப்புகளும் ஒரு சவாலின் காரணமாக சாத்தியமாக்குவதில் தடையை எதிர்கொண்டுள்ளது. அது தான் இந்தப் போதைப் பொருள் அச்சுறுத்தல். எந்தவொரு இடத்தையும் எந்தவொரு பிரஜையையும் எந்தவொரு நகரம் அல்லது கிராமம் என்ற பேதமின்றி இந்த அச்சுறுத்தல் பரவியுள்ளது. இந்த அச்சுறுத்தலை தோற்கடிக்க வேண்டும். எமது பெற்றோர், தமது பிள்ளைகள் குறித்து பாரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர். அவர்களை வளர்த்து பாரிய எதிர்பார்ப்புடன் கல்வி புகட்டுகின்றனர். ஆனால் அவர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் பிள்ளைகளை அடிமையாக்கும் போதைப் பொருள் அச்சுறுத்தலினால் வீணாகிறது. வறியவர்கள், செல்வந்தர்கள் மற்றும் தமிழ்,சிங்களம், முஸ்லிம்கள் என்ற பாகுபாடின்றி இந்த அச்சுறுத்தல் பரவியுள்ளது. இந்த போதைப் பொருளின் ஊடாக பெறப்படும் பெருந்தொகையான பணம் எமது அரச பொறிமுறையை ஆக்கிரமித்துள்ளது. சிறைச்சாலைகளுக்குள் கைதானவர்கள் இந்த வர்த்தகத்தை செய்கின்றனர். பொலிஸார் சிறந்த சேவையை செய்யும் நிலையில் ஒரு சிலர் இதில் சிக்கியுள்ளனர். சுங்கத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ,குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் என்பவற்றில் பணியாற்றும் ஒரு சில அதிகாரிகள் இதற்குள் அகப்பட்டுள்ளனர். அது மாத்திரமன்றி அரச சேவையிலுள்ள முக்கிய இடங்களில் இந்த அச்சுறுத்தலில் சிக்கியுள்ள அதிகாரிகள் உள்ளனர். பிள்ளைகள் இதற்கு இறையாகியிருந்தால் அரச சேவை போதைப் பொருள் வர்த்தகர்களின் இறையாக மாறியிருந்தால் நாம் நாடென்ற வகையில் எங்கு செல்கிறோம்? அதனால் கட்டாயம் இந்த அச்சுறுத்தலை தோற்கடிக்க வேண்டும். இந்த போதைப் பொருள் வர்த்தகத்திற்கு அரசியல் பாதுகாப்பு பிரதானமான காரணமாக இருந்தது. சில பிரதேசங்களில் உள்ள அரசியல்வாதிகள் போதைப் பொருளை அடையாளப்படுத்தி அழைக்கப்பட்டனர். ஆனால் தற்போது அரசியில் வாதிகளுக்கு ஆதரவு வழங்காத அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம். சில சமயங்களில் இதனை தடுப்பதற்காக உள்ள நிறுவனங்களின் பிரதானிகள் கூட இத்தகையோருடன் தொடர்பு வைத்திருந்தனர். கைது செய்யப்பட வேண்டிய நபரை விடுதலை செய்யும் வகையில் சாட்சியங்கள் தயார்படுத்தப்பட்டன. சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய நிறுவனங்களின் பிரதான கதிரைகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த வரலாறு உள்ளது. ஒரு காலத்தில் இவ்வாறான அதிகாரிகளை பணம் கொடுத்து தம் பக்கம் திருப்பினார்கள். சில காலம் அதிகாரிகள் அவர்களுக்கு அடிபணிந்து செயற்பட்டார்கள்.இன்று அந்த நிலைமை முற்றாக மாறியுள்ளது. கைது செய்வதற்கான பொறிமுறை தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் ஆங்காங்கே சில விடயங்கள் நடப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தயவு செய்து அவர்களுடனான தொடர்பை கைவிடுமாறு அந்த அனைத்து அதிகாரிகளிடமும் கோருகிறேன்.தெரிவு செய்வதற்கு இரண்டு பாதைகள் உள்ளன. அவர்களுடனான தொடர்பை கைவிட வேண்டும் அல்லது தொழிலை விட்டு விலகிச் செல்ல வேண்டும். போதைப் பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலகத்தினருடன் தொடர்பு வைத்துக் கொண்டு பணிபுரிய ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். பொலிஸாரும் பாதுகாப்புப் படையும் இதனை ஒழிக்க பெரும் பங்காற்றுகின்றனர். போதைப் பொருளுடன் தொடர்புள்ள அதிகாரிகளினால் நேர்மையான அதிகாரிகளுக்கும் அவமரியாதையே ஏற்படுகிறது. போதைப் பொருள் சுற்றிவளைப்பிற்கான பொறிமுறையை பலப்படுத்த பின்வாங்க மாட்டோம். பொலிஸ் அதிகாரிக்கு தகவல் வழங்கப் பயப்படுவதாக ஒரு காலத்தில் கூறப்பட்டது. தகவலை வழங்கிய பின்னர் யார் அந்த தகவலை வழங்கினார் என்பது போதை வியாபாரிக்கு சென்றுவிடும். இவை ஆங்காங்கே நடைபெற்ற சிறு சம்பவங்களாகும்.இது ஒட்டுமொத்த பொலிஸாருக்கும் அவமானமாகும்.எனவே அதனை மாற்ற வேண்டும். எமது நாட்டு பொதுமக்களும் போதைப்பொருளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும். உங்கள் பிள்ளை இந்த போதைக்கு அடிமையானால் என்ன நடக்கும். அந்தப் பிள்ளையின் முழு வாழ்க்கையும் நாசமாகும். பாரிய எதிர்பார்ப்புடனே அந்தப் பிள்ளைகளை வளர்த்திருப்பார்கள். அந்த எதிர்பார்ப்பு முழுமையாக வீழ்ச்சி அடையும். பொருமளவான இளைஞர்கள் இதற்கு அடிமையாகியுள்ளனர். ஏனைய பெற்றோர்களைப் போலவே அவர்கள் மீதும் பெற்றோர் அன்பு செலுத்தினார்கள். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த அச்சுறுத்தலை தோற்கடிக்க வேண்டும். இது எந்த வகையிலும் பின்வாங்கும் முன்னெடுப்பல்ல. வடக்கு இளைஞர்கள் ஒரு காலத்தில் யுத்தத்தில் சிக்கி பெரும் அழிவைச் சந்தித்தனர். பெற்றோர் தமது பிள்ளை குறித்து சந்தேகத்துடன் வாழும் நிலை ஏற்பட்டது. யுத்தம் நிறைவடைந்து குறுகிய காலத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டது. இதனை தோற்கடிப்பதில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையும் உறுதியாக உள்ளனர். எமக்கு மக்களின் உதவி தேவை. போதைக்கு அடிமையானவர் யார் என ஊர்மக்களுக்குத் தெரியும். ஆனால் ஊர்மக்கள் அவருடன் மோதுவதற்குப் பயப்படுகின்றனர். போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு நாம் பயப்பட வேண்டுமா? அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் இந்த விடயத்தை ஆராய்வோம் நாடுமுழுவதும் ஒரு பாதுகாப்பு அரணாக ஒன்றாக பிணைந்து இந்த அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக திடஉறுதிக்கு வருவோமானால் இதனை தோற்கடிக்கலாம். போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க வேண்டும். அவர்களும் எமது பிள்ளைதான். அவர்களை மீட்டெடுக்கத் தவறியுள்ளோம். மாணவர்கள் கூட இதற்கு இறையாகியுள்ளனர். எமது பொறுப்பை தவறவிட்டுள்ளோம். முன்னர் சில நகரங்களில் தான் இந்த அச்சுறுத்தல் இருந்தது. தற்பொழுது சகல இடங்களிலும் பரவியுள்ளது. இதனுடன் இணைந்து குற்றச் செயல்களுடன் தொடர்புள்ள கும்பல்களும் உருவாகின. ஆயுதங்கள் அவர்களின் கைகளுக்குச் சென்றன.இந்த நிலை சில தசாப்தங்களாக வளர்ந்தன. அரச அதிகாரிகள்அவர்களுடன் கைகோர்த்திருந்தனர். போதைப் பொருள் பயன்படுத்துவோரை மாத்திரம் கைது செய்வதால் பயனில்லை.இதனை மேல் மட்டத்தில் இருந்து ஒழிக்க வேண்டும். இளம் வயதினர் சிறைகளில் உள்ளனர். போதைப் பொருளை ஒழிப்பது மாத்திரமன்றி அடிமையானவர்களுக்கு எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டும். புனர்வாழ்வு நிலையங்களுக்கு அடிமையானவர்களை ஒப்படையுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் பிள்ளையை மீள ஒப்படைப்போம். உங்கள் பிள்ளை இறையாகும் வரை காத்திருக்க வேண்டாம். அச்சுறுத்தல் உங்கள் வீட்டின் கதவு வரை வந்துள்ளது. கதவை மூடிவைப்பதால் எந்தப் பயனுமில்லை. அது கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து விடும். பிள்ளையை எந்தளவு பாதுகாத்தாலும் சமூகத்தில் அந்த அச்சுறுத்தல் இருந்தால் உங்கள் முயற்சியால் பயன் ஏற்படாது. எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் இந்த போதைப் பொருளை முற்றாக ஒழிப்போம். அதற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள். மக்கள் ஒன்றாக வாழும் நாடு தேவை. பல ஆண்டுகள் பிரிந்து சந்தேகத்துடன் வாழ்ந்ததால் என்ன பயன் கிடைத்தது.?எமது நாட்டில் ஒருபோதும் இனவாதம் ஏற்படாத ஒற்றுமையாக வாழும் நாட்டை உருவாக்க வேண்டும். இனவாதம் எந்தவொரு இடத்திலும் தலைதூக்க இடமளியோம். போயா தினத்தில் 'சில்' எடுப்பதற்காக சிரிமகா போதியை தாண்டி யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்கள். அங்கு இருப்பது குரோதம் தான். பல விகாரைகளை தாண்டி யாழ்ப்பாணத்திற்கு வழிபட வருகிறார்கள். அதே போன்று சிலர் ஒவ்வொரு போயா தினத்திலும் காணிக்காக, அன்றி விகாரைக்கு எதிராக ஒன்று திரள்கிறார்கள். அவர்களின் யாருடைய காணியாவது அங்கு உள்ளதா என ஆராயுமாறு புலனாய்வு பிரிவிற்கு அறிவித்துள்ளேன். அதிகாரம் இழந்த இனவாத குழுக்கள் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயல்கிறார்கள். எந்த இனவாதத்திற்கும் இடமளிக்க மாட்டோம். மக்கள் மோதிக்கொள்ளும் நாடன்றி நல்லிணக்கத்துடன் வாழும் நாடே எமக்குத் தேவை. இலக்கியம்,கலை,இசை மற்றும் திரைப்படத்துறையில் புதிய நிலைமைகளை இங்கு ஏற்படுத்த வேண்டும். மற்றவர்கள் குறித்து குரோதத்துடன் பார்க்கும் நிலைமையை மாற்ற வேண்டும். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை சிறிதளவேனும் மீற மாட்டேன். தெற்கில் சிங்கள அரசாங்கம் உள்ளது. வடக்கிற்கு தமிழ் அரசாங்கம் தேவை என முன்னர் கோரப்பட்டது. தெற்கில் இருக்கும் அரசாங்கம் தமது அரசாங்கமாக மக்கள் கருதவில்லை. ஒரு சிலரது குடும்பங்கள்,உறவினர்களுக்காக அமைக்கப்பட்ட அரசாங்கங்களே இருந்தன. மக்களின் அரசாங்கம் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள மக்களும் தெற்கில் உள்ள மக்களும் தமக்கான அரசாங்கம் உருவாகியுள்ளதாக கருதுகின்றனர். 2025 பல துறைகளில் வெற்றிகளை அடைந்த வருடமாகும். இந்த வருடம் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க இருக்கிறோம். அரச துறைக்கு 75 ஆயிரம் பேரை இணைக்கவும் பொலிஸிற்கு 10 ஆயிரம் பேரை இணைக்கவும் இருக்கிறோம். தமிழ்மொழியில் பேசும் பொலிஸார் எமக்குத் தேவை. பொலிஸிற்கு சென்று தமது மொழியில் முறையிடக் கூடியதாக இருக்க வேண்டும். இராணுவத்திற்கும் ஆட்சேர்க்க இருக்கிறோம். அவற்றுக்கு உங்கள் பிள்ளைகளை அனுப்புமாறு யாழ்ப்பாண பெற்றோர்களை கோருகிறோம். சகல மொழிகளிலும் பேசும் பொலிஸ் மற்றும் சகல மொழிகளிலும் செயலாற்றும் இராணுவமும் அவசியம். வறுமையை முற்றாக ஒழிக்கும் அரசாங்கமாக எமது அரசாங்கம் திகழும். வீடு, வருமானம், பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி, ஆரோக்கியமான வாழ்வு, மற்றும் உளரீதியான நிம்மதியுடன் எமது நாட்டு மக்கள் வாழும் நிலைமையை உருவாக்க வேண்டும். அதற்கு சில காலம் செல்லும். நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டை உறுதியாக முன்னெடுப்போம். வடமாகாண பாதைகளை நிர்மாணிக்க 5000 மில்லியன் ரூபா ஒதுக்கியிருந்தோம்.இந்த வருடமும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளுக்கு மத்தியிலும் போதைப் பொருளை ஒழிப்பது பிரதானமானது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு கொழும்பில் நாம் தொடங்கினோம். இன்று, அதன் வட மாகாண நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. போதைப்பொருள் அரக்கன் மக்களைச் சூழ்ந்துள்ள நிலையில், போதைப்பொருள் அரக்கனைச் சுற்றி வேறு அரக்கர்கள் உள்ளனர். வறுமையும் போதைப்பொருளும் ஒன்றோடொன்று இணைந்த இரண்டு தலைப்புகள். எனவே, வறுமை ஒழிப்பும் இந்தத் திட்டத்துடன் இணைந்திருக்க வேண்டும். அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி, Clean Sri Lanka திட்டமும், வறுமையை ஒழிப்பதற்கான சமூகசக்தி திட்டமும் அந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் அனைத்து வகையான அபிவிருத்தித் திட்டங்களையும் எதிர்க்கும் அரசியல்வாதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ளனர். அழைக்கப்பட்ட போதிலும், சில அரசியல் கட்சிகள் இன்று இந்த இடத்திற்கு வரவில்லை. இருப்பினும், அனைத்து அரச அதிகாரிகளும் இன்று இங்கே உள்ளனர். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார். https://adaderanatamil.lk/news/cmkgtzm6g0403o29nccuu9mp9
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஓம் அக்கா. என்னால் வீட்டினுள் செல்ல முடியாது. இந்த படங்கள் பிளம்பிங் செய்யும் தம்பி எடுத்து அனுப்பி உள்ளார். இந்த நிலையில் உள்ள மலசலகூடத்தை தான் 3 சகோதரர்களும் பாவித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்க கவலையாக உள்ளது. நாளை தான் மணல், சல்லி, சீமந்து, கம்பி என்பன வழங்குவார்களாம். உடனடியாக வேலையை தொடங்க கேட்டுள்ளேன். மலசலகூடத்தையும் தூய்மைப்படுத்த கேட்டுள்ளேன். இவர்கள் டிசம்பர் 3ஆம் திகதி நிகழ்விற்கு சகோதரியுடன் வந்தவர்கள், பிந்தியபடியால் தூக்கி இறக்குவதும் ஏற்றுவதிலும் உள்ள சிரமம் காரணமாக ஆட்டோவில் இருந்தவர்கள். அப்போதே மலசலகூடம் திருத்தும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன் பின்னர் நடந்ததெல்லாம் விந்தைதான்!
-
முன்னாள் காதலரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த பெண் கணினி பொறியலாளர் கைது
முன்னாள் காதலரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த பெண் கணினி பொறியலாளர் கைது 16 Jan, 2026 | 11:11 AM முன்னாள் காதலரின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் பெண் கணினி பொறியியலாளரை கைது செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் பிரிவினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் வசிக்கும் 25 வயதுடைய கணினி பொறியாளர் என குற்றப் புலனாய்வுத் பிரிவினர் மேலும் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், தனது நிர்வாண புகைப்படங்களை தனது முன்னாள் காதலி வாட்ஸ்அப் குழு மூலம் பகிர்ந்து கொண்டதாகக் கூறி, குற்றப் புலனாய்வுத் பிரிவினரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். இந்த முறைப்பாட்டடின் அடிப்படையில் வடக்கு மாகாண குற்றப் புலனாய்வுத் பிரிவினர் விசாரணை தொடங்கியபோது சந்தேகநபரான பெண் முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை வாட்ஸ்அப் குழுவிற்கு பகிரந்துள்ளமை தெரியவந்ததுள்ளது. பின்னர் குற்றப் புலனாய்வுத் பிரிவினர் குறித்த பெண் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது இந்த பெண் அவர் சுமார் ஐந்து ஆண்டுகளாக முன்பு முன்னால் காதலடன் உறவை பேணிவந்துள்ளார். அவர்களின் காதல் முறிவை தொடர்ந்து, அந்த பெண் உணர்ச்சி ரீதியான துயரத்தையும் மனக்கசப்பையும் அனுபவித்ததால் முன்னால் காதலனை பழிவாங்கும் நோக்குடன் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பெண் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236148 காதலர்கள் ஜாக்கிரதை!
-
யாழில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி : மக்களுடன் உரையாடினார் !
யாழில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி : மக்களுடன் உரையாடினார் ! 16 Jan, 2026 | 12:25 PM யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று வெள்ளிக்கிழமை (16 ) காலை பலாலி–அன்ரனிபுரம் வீதி வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்டார். காலை நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடைப்பயிற்சியின் போது, வீதியோரங்களில் இருந்த பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் இளைஞர்களுடன் ஜனாதிபதி சுருக்கமாக உரையாடியதுடன், அவர்களின் தினசரி வாழ்வாதார நிலவரங்கள், அடிப்படை தேவைகள் மற்றும் பிரதேசத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும், குறித்த பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், வீதி அபிவிருத்தி மற்றும் பொது சேவைகள் தொடர்பான விடயங்களிலும் அவர் கவனம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்த திடீர் நடைப்பயிற்சி பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்ததுடன், அவரை நேரில் காண பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய இந்த நடைப்பயிற்சி எந்தவித இடையூறும் இன்றி நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/236163
-
தாய்லாந்தில் மீண்டுமொரு கிரேன் சரிந்து கார்களின் மீது விழுந்ததில் 2 பேர் பலி! ; “மரண வீதி”யானது நெடுஞ்சாலை!
தாய்லாந்தில் மீண்டுமொரு கிரேன் சரிந்து கார்களின் மீது விழுந்ததில் 2 பேர் பலி! ; “மரண வீதி”யானது நெடுஞ்சாலை! 16 Jan, 2026 | 11:36 AM தாய்லாந்து நாட்டில் நேற்றும் (15) மற்றுமொரு கிரேன் சரிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் நொறுங்கி, சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்து இடம்பெற்றதற்கு முதல்நாள் (14) நகோன் ரச்சசீமா மாகாணத்திலிருந்து சிகியோ மாவட்டத்தில் பயணித்துக்கொண்டிருந்த ரயில் மீதும் கிரேன் ஒன்று விழுந்ததில் இதுவரை 32 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மற்றுமொரு கிரேன் விழுந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பெங்கொக்கிலிருந்து சமுதத் சகோன் மாகாணத்தின் பாங்குன் தியான் வரை ரமா 2 என்ற நெடுஞ்சாலையில் அபிவிருத்திப் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று அப்பகுதியில் மேம்பால வீதி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோதே அங்கிருந்த கிரேன் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளன. அவ்வேளை அவ்வாகனங்களுக்குள் இருந்த இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் மீட்புக்குழுவினர் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடுவதில் பெரும் சிரமங்கள் இருப்பதாக கூறப்படும் அதேவேளை அங்கு வேறு வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனவா என்பதை அறியவும் கடினமான நிலை ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அப்பகுதியில் இரும்புத்தகடுகள் தொங்கிக்கொண்டிருப்பதால் மேலும் இடிபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மீட்புக்குழுவினர் அச்சம் தெரிவித்துள்ளனர். அந்த நெடுஞ்சாலையில் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 150 பேர் உயிரிழந்த காரணத்தினால் நேற்றைய விபத்துக்குப் பின்னர், குறித்த அவ்வீதி “மரண வீதி” என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/236157
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
16ஆவது ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் ஆரம்பம் – மேற்கிந்தியத் தீவுகள் வெற்றியுடன் தொடக்கம் 15 Jan, 2026 | 09:28 PM (நெவில் அன்தனி) 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் முதலாவது வெற்றியை மேற்கிந்தியத் தீவுகள் பதிவுசெய்தது. ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக நடத்தப்படும் இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தைப்பொங்கல் தினமான இன்று வியாழக்கிழமை (15) ஆரம்பமானது. ஸிம்பாப்வேக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் ஹராரே டக்காஷிங்க விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த சி குழுவுக்கான போட்டி சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது. இதன் காரணமாக இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுக்கொண்டன. விண்ட்ஹோக், ஹை பேர்ஃபோமன்ஸ் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற தன்ஸானியாவுக்கு எதிரான டி குழு போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட தன்ஸானியா 34 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. தன்ஸானியாவின் மொத்த எண்ணிக்கையில் 27 உதிரிகளே அதிகூடிய எண்ணிக்கையாக பதிவானது. துடுப்பாட்டத்தில் டிலான் தக்கார் (36), தர்பன் ஜோபன்புத்ரா (19), காலிதி ஜுமா (12), அக்ரி ஹியூகோ (10) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் விட்டெல் லோஸ் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிக்கா மெக்கென்ஸி 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷக்குவான் பெலே 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 29 ஓவர்கள் மீதம் இருக்க 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது. மெற்கிந்தியத் தீவுகள் 21 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 124 ஓட்டஙகளைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது. மொத்த எண்ணிக்கை 20 ஓட்டங்களாக இருந்தபோது ஸக்கரி கார்ட்டர் (8) ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து தனேஸ் பிரான்சிஸ் 52 ஓட்டங்களையும் ஜுவெல் அண்ட்றூ 44 ஓட்டங்களையும் பெற்றதுடன் இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர். எவ்வாறாயினும் அவர்கள் இருவர் உட்பட நால்வர் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (114 - 4 விக்.) ஷமார் அப்ள் (4 ஆ.இ.), ஷக்குவான் பெலே (6 ஆ.இ.) ஆகிய இருவரும் வெற்றி இலக்கை அடைய உதவினர். பந்துவீச்சில் அகஸ்டினோ முவாமெலே 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரேமண்ட் பிரான்சிஸ் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்:ஷக்குவான் பெலே https://www.virakesari.lk/article/236130
-
ஜல்லிக்கட்டு செய்திகள் 2026
பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2025 பாலமேடு ஜல்லிக்கட்டில் காளையை அடைக்க முயற்சி செய்யும் மாடுபிடி வீரர்கள் 16 ஜனவரி 2026, 01:56 GMT புதுப்பிக்கப்பட்டது 58 நிமிடங்களுக்கு முன்னர் மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு கார் டிராக்டர் பைக் மற்றும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் நிகழ்ச்சி தொடங்குகியது. ஊர் கோவில் காளைகள் வாடிவாசல் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. படக்குறிப்பு,பாலமேடு ஜல்லிக்கட்டை காணவந்த நடிகர் சூரி துணை முதல்வர் வருவதற்குத் தொடர்ந்து தாமதம் ஆனதால், ஆட்சியர் பிரவீன் குமார் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர். அதைத் தொடர்ந்து , கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் பாலமேடு கிழக்குத் தெரு மஞ்சமலை கோவிலை சேர்ந்த காளை வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது. 2 மணி நேரம் தாமதம் பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கும் என ஜல்லிக்கட்டு குழுவினர் மற்றும் அரசு தரப்பு அறிவித்திருந்தனர். இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேட்டுக்கு வர தாமதமான நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 2 மணி நேரம் தாமதமாக காலை 9 மணியளவில் போட்டி தொடங்கியது. வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் பாலமேடு மஞ்சமலை ஆற்று திடலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு நிசான் கார், டிராக்டர், மோட்டார் பைக் மற்றும் தங்க நாணயம் ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன. அதேபோன்று ஒவ்வொரு சுற்றிலும் காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், மெத்தை, சைக்கிள், அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த போட்டியில் சுமார் ஆயிரம் காளைகளும் 800 மாடுபிடி வீரர்களும் களம் இறங்க உள்ளனர். 12 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறும். பாதுகாப்பு ஏற்பாடுகள் மதுரை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல்துறை ஆகியவை சார்பாக போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறை சார்பாக ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடையும் வீரர்களை காப்பாற்றுவதற்காக 108 ஆம்புலன்ஸ்கள் 12, பைக் ஆம்புலன்ஸ்கள் 2, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 40 பேர் என தயார் நிலையில் உள்ளனர். வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு போதிய முதலுதவிகள் அளிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அங்கிருந்து மேல் சிகிச்சை தேவைப்படும்பட்சத்தில் அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்படுவர் என 108 ஆம்புலன்ஸ் சேவை மண்டல மேலாளர் பிரசாத் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0mklgz32j2o
-
நாவற்குழியில் கோர விபத்து; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு
யாழ் - மன்னார் வீதியில் சோகம்: இருவர் உயிரிழப்பு! Published By: Digital Desk 1 16 Jan, 2026 | 09:52 AM யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் நாவக்குளி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, சுவர் மற்றும் தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் காயமடைந்து, யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று வியாழக்கிழமை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 23 வயதுடைய கிளிநொச்சி மற்றும் அச்சுவேலி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். சாவகச்சேரி பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/236147
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
பொன்னாலை மலசலகூடம் புனரமைப்பதற்கு முன் சில படங்கள்.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
பொன்னாலை ஏரம்பு ஐயாவின் 3 பிள்ளைகளின் மலசலகூடம் (பிளாற்) திருத்தப்பணிகளுக்காக 80000 ரூபா மூளாய் கணேஷா ஹாட்வெயர்ஸ் அன் எலக்ரிக்கல்ஸ் கடை உரிமையாளர் முருகசோதி அவர்களின் வங்கிக்கணக்கில் வைப்புச் செய்துள்ளேன். பணம் செலுத்தினால் தான் மணல், சல்லி, சீமந்து, கம்பி என்பவற்றை பறிப்பதாக கூறியதால் பணத்தை செலுத்திவிட்டேன். இருப்பு 380,420.67-80025=ரூ 300,395.67 சதம் இன்று 16/01/2026 80000 ரூபா வைப்புச் செய்த பின் வங்கி மீதி. 25 ரூபா இலங்கை வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் எடுத்துள்ளார்கள்.
-
இருதய சத்திரசிகிச்சைக்காக வரும் 25 - 30 வயதுக்குட்பட்ட இளையவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
இருதய சத்திரசிகிச்சைக்காக வரும் 25 - 30 வயதுக்குட்பட்ட இளையவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு Published By: Vishnu 15 Jan, 2026 | 06:47 PM (செ. சுபதர்ஷனி) அண்மைய நாட்களில் இருந்து இருதய சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 60 தொடக்கம் 70 வயதுக்குட்பட்டவர்களே இருதய சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு வருகை தருவது வழக்கமானதாக இருந்தபோதிலும், சமீபகாலமாக 25 தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட இளையவர்களும் இந்த சத்திரசிகிச்சைக்காக வருகை தருவதாக விசேட வைத்திய நிபுணர் நாலக்க திஸாநாயக்க தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (14) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் மேற்கொள்ளப்படும் இருதய சத்திர சிகிச்சையில் 65 தொடக்கம் 67 சதவீதமானவை பைபாஸ் சத்திர சிகிச்சையாகும். அண்மைய நாட்களில் இருந்து இருதய சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இளம் வயதில் பைபாஸ் சிகிச்சைக்காக வருகை தருபவர்களின் எண்ணிக்கையும், வீதமும் சடுதியாக அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. அத்தோடு தொற்றா நோய்களும் சமூகத்தில் அதிகரித்துள்ளன. நோய் தொடர்பான தெளிவும் அவதானமும் இல்லாமையே நோயாளர் அதிகரிப்புக்குப் பிரதான காரணமாக உள்ளது. ஆரம்ப காலத்தில் விலா எலும்புகளை அகற்றி இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் தற்போது நவீன சிகிச்சை முறைகளைப் பின்பற்றி எலும்புகளை அகற்றாது இடது பக்கமாக இந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வயது வந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். இதய வால்வுகளில் ஏற்படும் அடைப்பால் மாரடைப்பு ஏற்படுகிறது. 60 தொடக்கம் 70 வயதுக்குட்பட்டவர்களே இருதய சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு வருகை தருவது வழக்கமானதாக இருந்தபோதிலும், சமீபகாலமாக 25 தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட இளையவர்களும் இந்த சத்திரசிகிச்சைக்காக வருகை தருகின்றனர். இலங்கையில் கொழும்பு, கண்டி, காலி கராபிட்டிய ஆகிய தேசிய வைத்தியசாலைகளிலும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஒரு சில வைத்தியசாலைகளில் மாத்திரமே இருதய சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சிகிச்சைகள் வழங்கப்படுவதால், சத்திரசிகிச்சைக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ள நோயாளர் காத்திருப்புப் பட்டியலில் ஒரு வருடத்துக்கும் அதிக காலத்துக்கு நீண்டுள்ளது. ஆகையால் இலங்கை போன்ற நாடுகளில் இவ்வாறான நோய்களில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதே சிறந்த தீர்வு. பொதுமக்கள் நோய்த் தடுப்புக் குறித்து அவதானம் செலுத்த வேண்டும். முறையான உடற்பயிற்சி, உணவுப் பழக்கம், மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ளுதல் மற்றும் இரத்த கொலஸ்ட்ரோலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெறலாம் என்றார். https://www.virakesari.lk/article/236125
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
ஐக்கிய இராச்சிய பிரஜை ஒருவரினால் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு விசேட நிதி நன்கொடை 15 Jan, 2026 | 12:31 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு அருகில் வசிக்கும் ரிச்சர்ட் வுட் தம்பதியினர் (Mr and Mrs Richard Wood) 2,000 ஸ்டேர்லிங் பவுண் நன்கொடை வழங்கியுள்ளனர். இந்த நன்கொடை பற்றித் தெரிவித்து, ரிச்சர்ட் வுட் தம்பதியினர், ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் நிமல் சேனாதீரவிடம், அதற்கான பற்றுச்சீட்டுடன் கூடிய கடிதத்தை ஒப்படைத்துள்ளனர். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில் இந்த நிதி நன்கொடை வழங்கப்பட்டதாகவும், கடந்த நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் மூன்று வாரங்கள் இலங்கையில் பயணம் செய்த தமக்கு, நாட்டின் இயற்கை அழகு, சுவையான உணவுகள் மற்றும் மக்களின் உயர்ந்த மனித குணங்கள் குறித்து நல்லெண்ணம் ஏற்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களுக்கு மத்தியிலும், நாடு வலுவாக மீண்டெழுந்து வருவதை காண முடிந்ததாகவும், எதிர்காலத்தில் தமக்கு மிக அண்மையில் உள்ள ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயத்துடன் நல்லுறவைப் பேண எதிர்பார்த்துள்ளதோடு, இலங்கையின் தேசிய தினத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/236081
-
மன்னாரில் ஜனாதிபதியால் காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.!
ஜனாதிபதி தலைமையில் மன்னார், Hayleys Fentons Limited 50 மெகாவோட் காற்றாலை மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம் 15 Jan, 2026 | 05:08 PM 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, மன்னாரில் Hayleys Fentons Limited நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படும் 50 மெகாவோட் காற்றாலை மின் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று வியாழக்கிழமை (15) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. மன்னாரின் இயற்கை காற்று சக்தியைப் பயன்படுத்தி, 10 காற்றாலை விசையாழிகளைக் கொண்ட இந்த அதிநவீன காற்றாலை, ஆண்டுக்கு 207,000,000 கிலோ வோட் மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. ஒரு அலகு மின்சாரம் 0.0465 அமெரிக்க டொலர் அல்லது 14.37 இலங்கை ரூபாயில் வழங்கப்படுவதோடு, இந்த திட்டம் மார்ச் 2027 இல் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஓலைத்தொடுவாய் ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலைக்கு நவீன கல்வி வசதிகளுடன் கூடிய முழுமையான Smart வகுப்பறையை வழங்கும் ஆவணங்களை கையளித்தல், தேசிய நீர் வழங்கல் சபையுடன் இணைந்து 200 வீடுகளுக்கு குடிநீர் வசதிகளை வழங்குதல், இலங்கை மின்சார சபையுடன் இணைந்து மன்னார் பாலம் வழியாக தள்ளாடி நகரம் வரை நடைப்பாதைக்காக புதிய மின்விளக்குகள் பொருத்துதல், அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து, சுமார் 10 மில்லியன் ரூபா செலவில் இலகுவாக நீர் வழிந்தோடும் வகையில் புதிய நீர்வழிகளை உருவாக்கி, வெள்ளத்தைத் தடுக்க கால்வாய்களைத் தோண்டுதல், போன்ற பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வும் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது. இன்று ஆரம்பிக்கப்படும் இந்த திட்டம், நாட்டை புதுப்பிக்கத்தக்க வலுசக்தியால் பலப்படுத்துவதோடு, பிரதேச மக்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் நன்மைகளை வழங்கும் திட்டமாகும் என்று நிகழ்வில் உரையாற்றிய வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் என்ற வகையில், மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இந்தத் திட்டத்தின் பின்னணியில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும், மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதே உண்மையில் எமது தேவை என்றும் குறிப்பிட்டார். மன்னாரை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில், அந்தப் பகுதியில் உள்ள மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் உட்பட அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, மன்னார் பகுதி நாட்டிலேயே அதிக காற்று மின் உற்பத்தி திறன் கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். நாட்டின் அபிவிருத்திக்கு அந்த உயர் இயலுமையைப் பயன்படுத்த அரசாங்கத்தின் வலுவான தேவையை நிரூபிக்கும் நாளாக இன்றைய நாளை குறிப்பிடலாம். இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தி வரலாற்றில் மிகக் குறைந்த விலையில் ஒரு அலகு மின்சாரத்தை கொள்வனவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்ட முதல் திட்டமும் இதுவாகும். அதன்படி, 0.0465 அமெரிக்க டொலர் விலையில் இந்த கொள்வனவு செய்யப்படுகிறது. மன்னார் பகுதியில் வேறு பல திட்டங்களும் நடைபெற்று வருகின்றன. கடந்த 2025 ஆம் ஆண்டு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் ஊடாக 1848 மெகாவோட் மின்சக்தியைப் பெறுவது எமது இலக்காக இருந்தது. இருப்பினும், அந்த இலக்கைத் தாண்டி 2,695 மெகாவோட் திறனைச் சேர்க்க எம்மால் முடிந்துள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டிற்கான இலக்கு 2078 மெகாவோட் ஆகும். தற்போது, இது 3,089.5 மெகாவோட் பெறுவதற்காக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. மேலும், 2027, 2028 மற்றும் 2029 ஆம் ஆண்டுகளுக்கான இலக்குகள் முறையே 2563, 3253 மற்றும் 3943 மெகாவோட்களாக இருந்தபோதிலும், நாம் ஏற்கனவே அந்த இலக்குகளை தாண்டி முறையே 3,822.5 மெகாவோட், 4332.5 மெகாவோட் மற்றும் 4,634.5 மெகாவோட் மின்சாரத்திற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதன்படி, 2025-2029 ஆம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட மொத்த திறனான 9,759 மெகாவோட் மின் உற்பத்திக்கு பதிலாக 12,789.5 மெகாவோட் மின்சாரத்திற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட முடிந்தது. புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இலக்குகளை அடைய மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை இது எடுத்துக்காட்டுகிறது. இப்பிரதேசத்தின் காற்று மின் உற்பத்தித் திறன் மற்றும் இப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பிரதேசத்திற்கு உரித்தான புவியியல் ரீதியான காரணிகள் குறித்து நாம் ஆராய்ந்தோம். குறிப்பாக, இப்பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளில் அரசாங்கத்தின் தலையீடு மிக அவசியமானது என்பதே இங்குள்ள மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, மன்னார் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக நாம் விசேட செயற்பாட்டுக் குழுவொன்றை நியமித்துள்ளோம். அதன் ஊடாக இப்பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, இங்குள்ள புவியியல் ரீதியான அமைவிடம் காரணமாக நீர் வழிந்தோடாமையினால் ஏற்படும் பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது அதற்கான நில அளவீட்டுப் பணிகள் இடம்பெற்று வருவதுடன், அதன் முன்னேற்றம் குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டங்களை வகுத்து, மக்களுக்குத் தேவையான வசதிகளை விரைவாகச் செய்துகொடுக்க மாவட்டச் செயலாளரின் தலையீட்டுடன், அரசியல் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. நாம் இந்த நடவடிக்கைகளை மின்சார உற்பத்தியுடன் மாத்திரம் மட்டுப்படுத்தவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்ற வகையில், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் நிவாரணங்களை வழங்கி அதன் நன்மைகளை மக்களுக்கு ஈட்டிக்கொடுக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். நாம் எக்காலத்திலும் மக்களை மறந்துவிடவில்லை என்பதுடன், அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க அரசாங்கம் என்ற ரீதியில் கடமைப்பட்டுள்ளோம். எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கட்சிபேதமின்றி இதற்கு ஆதரவளிப்பார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம். இவை எமது அரசியல் நோக்கங்களுக்காகச் செய்யப்படும் விடயங்கள் அல்ல. எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்கி இப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வோம் என கேட்டுக்கொள்கிறேன். என்றும் தெரிவித்தார். இலங்கை நிலைபெறு சக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் விஜேந்திர பண்டார, இலங்கை மின்சார சபை பொதுமுகாமையாளர் பொறியியலாளர் கே.எஸ்.ஐ. குமார, Hayleys PLC நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டிதகே மற்றும் Hayleys Fentons Limited நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக்க ஆகியோரும் இங்கு கருத்துத் தெரிவித்தனர். வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோருடன் பிரதேச மக்கள் பிரதிநிதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உட்பட பாதுகாப்பு பிரிவு பிரதானிகள், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை நிலைபெறுசக்தி அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகள், Hayleys PLC நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சரத் கணேகொட, Hayleys Advantis Ltd நிறுவனத்தின் பொது முகாமையாளர் ருவன் வித்யாரத்ன உள்ளிட்ட அதன் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/236114
-
ஜல்லிக்கட்டு செய்திகள் 2026
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 22 காளைகளை பிடித்தவருக்கு கார் பரிசு - முழு விவரம் 15 ஜனவரி 2026, 03:11 GMT புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 15) காலை தொடங்கி, 12 சுற்றுகளுடன் மாலையில் நிறைவடைந்தது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளை பிடித்த வலையங்குளம் பாலமுருகன் முதல் இடத்தை பிடித்தார். 17 காளைகளை பிடித்த கார்த்திக் இரண்டாவது இடத்தை பிடித்தார். ரஞ்சித் என்பவர் 16 மாடுகள் பிடித்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உள்பட 57 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 11 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக, திருப்பரங்குன்றம் அவனியாபுரம் சாலையில் குருநாத சுவாமி அங்காள ஈஸ்வரி கோவில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டது. காலை 7.30 மணிக்கு, தமிழ்நாட்டின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாடுபிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்ற பின்னர் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தார். போட்டியில் பங்கேற்பதற்காக 600 வீரர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்திருந்த நிலையில் 573 பேர் பங்கேற்க வந்திருந்தனர். இதில் 12 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 561 பேர் போட்டியில் பங்கேற்றனர். மொத்தம் இறுதிச் சுற்றோடு சேர்த்து 12 சுற்றுகள் நடைபெற்றன. மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜல்லிக்கட்டுக் காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். முதல் பரிசாக கார் படக்குறிப்பு,அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகளை வழங்கினார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளைப் பிடித்து, முதல் இடத்தைப் பிடித்த மதுரை மாவட்டம், வலையங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தில், 17 காளைகளை பிடித்த கார்த்திக் என்பவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல, சிறந்த மாடுகளுக்கான பரிசுகளில் முதல் இடத்தைப் பிடித்த விருமாண்டி சகோதரர்கள் காளைக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தைப் பிடித்த ஜி.ஆர் கார்த்திக் என்பவரின் காளைக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகளை வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். பதினோராவது சுற்று நிலவரம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 11ஆம் சுற்று முடிவில், களம் கண்ட 870 மாடுகளில் 219 மாடுகள் பிடிபட்டன. இதில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற மொத்த வீரர்கள் - 36 வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: பாலமுருகன், வலையங்குளம் - 18 கார்த்தி, அவனியாபுரம் - 16 கார்த்திக், திருப்பரங்குன்றம் - 10 11ஆம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: அமரன், சிவகங்கை - 4 ஒன்பதாம் சுற்று நிலவரம் ஒன்பதாம் சுற்றின் முடிவில், களம் கண்ட 764 மாடுகளில் 190 மாடுகள் பிடிபட்டன. வீரர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: பாலமுருகன், வலையங்குளம் - 18 கார்த்தி, அவனியாபுரம் - 16 ரஞ்சித், அவனியாபுரம் - 9 9ஆம் சுற்றில் தகுதி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பிடித்த மாடுகளின் எண்ணிக்கை: பாலமுருகன், வலையங்குளம் - 18 ராபின், செக்கானூரணி - 3 ராஜு, செக்கானூரணி - 2 https://www.bbc.com/tamil/articles/c5y5l9l2y31o
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் இன்று ஆரம்பம்; இலங்கை உட்பட 16 அணிகள் பங்கேற்பு 15 Jan, 2026 | 12:01 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அடுத்த கிரிக்கெட் நட்சத்திர தலைமுறையினரின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர், தைப்பொங்கல் தினமான இன்று ஆரம்பமாகிறது. ஸிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெறும் 16ஆவது 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அத்தியாயம் இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய இளையோர் அணிகளுக்கு இடையில் ஸிம்பாப்வே, புலாவாயோவில் இன்று நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகும். சி குழுவில் இடம்பெறும் ஸிம்பாப்வேக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையிலான போட்டி ஹராரேயிலும் டி குழுவில் இடம்பெறும் அறிமுக அணி தன்ஸானியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான போட்டி விண்ட்ஹோக்கிலும் இன்று நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் யாவும் பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகும். ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஜப்பானை விண்ட்ஹோக்கில் 18ஆம் திகதி சந்திக்கும். இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் 16 நாடுகளைச் சேர்ந்த 240 இளம் வீரர்கள் தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் முதன் முதலில் அவுஸ்திரேலியாவில் அந்நாட்டின் 200 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் முகமாக நடத்தப்பட்டது. இதற்கு அமைய அங்குரார்ப்பண அத்தியாயம் 1988ஆம் ஆண்டு மெக்டொனல்ட்ஸ் பைசென்டினியல் இளையோர் உலகக் கிண்ணம் என பெயரிடப்பட்டிருந்தது. பத்து வருடங்கள் கழித்து ஐசிசி 19 வயதுக்குட்ட உலகக் கிண்ணம் (ஆண்கள்) என பெயரிடப்பட்டு 1998 இல் இருந்து இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அங்குரார்ப்பண அத்தியாயத்தில் விளையாடிய சனத் ஜயசூரிய, ரொமேஷ் களுவித்தாரண, சஞ்சீவ ரணதுங்க, சந்திக்க ஹத்துருசிங்க போன்றவர்கள் இலங்கை தேசிய அணியில் இடம்பெற்றனர். அவர்களில் சனத் ஜயசூரிய, ரொமேஷ் களுவித்தாரன ஆகிய இருவரும் 1996 உலக சம்பியன் அணியில் இடம்பெற்றதுடன் உலகக் கிண்ண வரலாற்றில் முதலாவது பெறுமதி வாய்ந்த வீரர் விருதை வென்ற பெருமை சனத் ஜயசூரியவை சாருகிறது. இந்த வருட ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் நடப்பு சம்பியனும் நான்கு தடவைகள் சம்பியனுமான அவுஸ்திரேலியா (1988, 2002, 2010, 2024), ஐந்து தடவைகள் சம்பியனான இந்தியா (2000, 2008, 2012, 2018, 2022), இரண்டு தடவைகள் சம்பியனான பாகிஸ்தான் (2004, 2006), தலா ஒரு தடவை சம்பியனான இங்கிலாந்து (1998), தென் ஆபிரிக்கா (2014), மேற்கிந்தியத் தீவுகள் (2016), பங்களாதேஷ் (2020) ஆகிய நாடுகளில் ஒன்று மீண்டும் சம்பியனாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏழு நாடுகள் உட்பட 16 நாடுகள் நான்கு குழுக்களில் மோதுகின்றன. ஏ குழுவில் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் ஆகிய அணிகளுடன் இலங்கை இடம்பெறுகிறது. பி குழுவில் பங்களாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகியன இடம்பெறுகின்றன. சி குழுவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ஸ்கொட்லாந்து, ஸிம்பாப்வே ஆகியன பங்குபற்றுகின்றன. டி குழுவில் ஆப்கானிஸ்தான், தென் ஆபிரிக்கா, தன்ஸானியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன போட்டியிடுகின்றன. இந்த நான்கு குழுக்களிலும் முதல் சுற்று போட்டிகள் இன்று ஜனவரி 15 முதல் 24 வரை லீக் அடிப்படையில் நடத்தப்படும். ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களைப் பெறும் 12 அணிகள் இரண்டு குழுக்களில் தலா 6 அணிகள் வீதம் சுப்பர் 6 சுற்றில் விளையாட தகுதிபெறும். இந்த சுற்று ஜனவரி 25 முதல் பெப்ரவரி 1 வரை நடைபெறும். லீக் சுற்றில் கடைசி இடங்களைப் பெறும் 4 அணிகள் நிரல்படுத்தல் போட்டியில் விளையாடும். சுப்பர் 6 சுற்று முடிவில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாடுவதுடன் அவற்றில் வெற்றிபெறும் அணிகள் 19 வயதுக்குட்பட்ட உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும். அரை இறுதிப் போட்டிகள் பெப்ரவரி 3, 4ஆம் திகதிகளிலும் இறுதிப் போட்டி பெப்ரவரி 6ஆம் திகதியும் நடைபெறும். https://www.virakesari.lk/article/236080
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
பயனாளியின் முகம் மறைக்கப்பட்ட படம். வங்கிப்பரிமாற்ற பிரதி.
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணம் டி குழு: ஆப்கானிஸ்தான், தென் ஆபிரிக்கா, தன்ஸானியா, மெற்கிந்தியத் தீவுகள் Published By: Vishnu 14 Jan, 2026 | 08:49 PM (நெவில் அன்தனி) ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 16ஆவது அத்தியாயத்தில் டி குழுவில் மீண்டும் சம்பியனாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இரண்டு முன்னாள் சம்பியன்களான தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றுடன் ஆப்கானிஸ்தான், அறிமுக அணி தான்சானியா ஆகியன போட்டியிடுகின்றன. தென் ஆபிரிக்கா 2014இல் சம்பியனானதுடன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரவேற்பு நாடாக அரை இறுதிவரை முன்னேறி இருந்தது. 2016இல் சம்பியனான மேற்கிந்திய தீவுகள் எட்டு வருடங்களின் பின்னர் கிண்ணத்தை மீண்டும் வெல்வதற்கான முயற்சியில் இறங்கவுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் மிகக் குறுகிய வித்தியாசத்தில் அரை இறுதி வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகள் தவற விட்டிருந்தது. ஆப்கானிஸ்தான் இரண்டு தடவைகள் (2018, 2022) அரை இறுதிவரை வீறுநடை போட்டிருந்தது. ஆனால், 2024இல் முதல் சுற்றுடன் வெளியேறியது. தன்சானியா தனது அறிமுக உலகக் கிண்ணத்தில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கவுள்ளது. ஆப்கானிஸ்தான் 2024 இளையோர் உலகக் கிண்ணப் போட்டியில் முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அடைந்த ஆப்கானிஸ்தான், அதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அரை இறுதிவரை முன்னேறியது. இம் முறை அரை இறுதி அல்லது அதற்கும் அப்பால் முன்னேற ஆப்கானிஸ்தான் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆபிரிக்காவில் 2024இல் நடைபெற்ற உலகக் கிண்ண அத்தியாயத்தில் 3 நேரடி தோல்விகளுடன் முதல் சுற்றில் இருந்து ஆப்கானிஸ்தான் வெளியேறியது. எதிர்நீச்சல் போடக்கூடிய தன்மை கொண்ட ஆப்கானிஸ்தான், இம் முறை எதிரணிகளுக்கு சவாலாக விளங்கி எதையாவது சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் 2010ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் ஆப்கானிஸ்தான் தொடர்ச்சியாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் விளையாடி வருகிறது. அத்துடன் நான்கு தடவைகள் நொக் - அவுட் சுற்று வரை முன்னேறி இருந்தது. உசைருல்லா நியாஸாய், பங்களாதேஷுக்கு எதிராக 103 ஓட்டங்களைப் பெற்ற பைசால் கான் ஆகிய இருவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த போதிலும் குழு நிலை போட்டிகளுக்கு அப்பால் ஆப்கானிஸ்தான் முன்னேறவில்லை. 19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணித் தலைவராக விக்கெட் காப்பாளர் மஹ்பூப் கான் நியமிக்கப்பட்டுள்ளார். நூரிஸ்தானி ஓமர்ஸாய் மற்றும் ஸய்த்துல்லா ஷஹீன் ஆகிய இருவரும் அணியில் இடம்பெறும் சிறந்த பந்துவீச்சாளர்களாவர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் விளையாடிய எவரும் இந்த வருட அணியில் இடம்பெறவில்லை. தென் ஆபிரிக்கா இரண்டு வருடங்களுக்கு முன்னர் சொந்த மண்ணில் இறுதிப் போட்டி வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்ட தென் ஆபிரிக்கா, இம்முறை அதனைவிட சிறப்பாக செயல்படும் குறிக்கோளுடன் விளையாடவுள்ளது. இந்த வருடப் போட்டி ஆபிரிக்க கண்டத்தில் நடைபெறுவதால் ஸிம்பாப்வே, நமிபியா ஆடுகளங்களின் தன்மையை நன்கு அறிந்தவர்களாக தென் ஆபிரிக்க வீரர்கள் இலகு மனதுடன் ஆற்றல்களை வெளிப்படுத்தி தமது அணியை இரண்டாவது தடவையாக சம்பியனாக்க முயற்சிக்கவுள்ளனர். இந்தியாவுக்கு எதிராக 2024இல் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்து வெளியேறியது. அப்போது விளையாடிய வீரர்கள் எவரும் இந்த வருட அணியில் இடம்பெறவில்லை. தென் ஆபிரிக்க அணியின் தலைவராக முஹம்மத் புல்புலியா நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் புல்புலியா தலைமையிலான தென் ஆபிரிக்கா இரண்டாம் இடத்தைப் பெற்றது. அந்தத் தொடரில் விளையாடிய பெரும்பாலானவர்கள் உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெறுவதுடன் ஜோரிச் வென் ஷோக்வைக், அத்னான் லகாடியென் ஆகியோர் துடுப்பாட்டத்தில் அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் நிட்டண்டோயென்கோசி சோனி, பயண்டா மஜோலா முக்கிய வீரர்களாக இடம்பெறுகின்றனர். தன்ஸானியா ஆபிரிக்க பிராந்தியத்தில் வளர்முக கிரிக்கெட் நாடுகளுக்கான உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் 13 நாடுகள் போட்டியிட்ட போதிலும் அவற்றை எல்லாம் பின்தள்ளி முதல் முறையாக ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தன்ஸானியா தகுதிபெற்றுள்ளது. முதலில் முன்னோடி தகுதிகாண் சுற்றில் விளையாடிய தன்ஸானியா அதில் வெற்றி பெற்று பிரதான ஆபிரிக்க தகுதிகாண் சுற்றில் விளையாட தகுதிபெற்றது. அங்கு ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற தன்ஸானியா தொடர்ந்து இறுதிப் போட்டியிலும் வெற்றியீட்டி 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது. தகுதிகாண் போட்டிகளில் ஈட்டிய வெற்றிகள் தன்ஸானியாவை உற்சாகம் அடையச் செய்துள்ளதுடன் முதல் தடவையாக ஆபிரிக்காவுக்கு வெளியே உள்ள அணிகளை எதிர்த்தாடவுள்ளது. ஆபிரிக்க தகுதிகாண் சுற்றில் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய லக்ஷ் பக்ரானியா அணித் தலைவராக விளையாடுகிறார். சகலதுறை ஆட்டக்காரரான லக்ஷ் பக்ரானியா துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்ததுடன் பந்துவீச்சில் சிரான இடைவெளியில் விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 18 வயதான இடதுகை துடுப்பாட்ட வீரரான பக்ரானியா, தன்ஸானியாவின் சிரேஷ்ட அணியில் இடம்பெற்றதுடன் நமிபியாவுக்கு எதிரான போட்டி ஒன்றில் 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தி ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். ஹம்சா அலி மற்றும் ரேமண்ட் பிரான்சிஸ் ஆகியோருடன் இணைந்து வேகப்பந்துவீச்சில் காலிதி அமிரி பந்துவீச்சை வழிநடத்துவார். அக்ரே பஸ்கல் மற்றும் அகஸ்டினோ மவாமெலே ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரதான பங்களிப்பு செய்யவுள்ளனர். மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண வரலாற்றில் அற்புதமான சாதனைகளைப் பதிவுசெய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் 2016இல் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. ஆனால், அதன் பின்னர் கடந்த 10 வருடங்களில் நொக் அவுட் சுற்றை மேற்கிந்தியத் தீவுகள் நெருங்கவில்லை. 2016இல் இந்தியாவை இறுதிப் போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றிகொண்டு மேற்கிந்தியத் தீவுகள் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இம்முறை டி குழுவில் அதேபோன்ற ஆற்றல்களை வெளிப்படுத்தினால் மேற்கிந்தியத் தீவுகள் குறைந்த பட்சம் சுப்பர் 6 சிக்ஸ் விளையாடுவதை உறுதிசெய்துகொள்ளும். மேற்கிந்தியத் தீவுகள் அணியில் 2024இல் விளையாடிய ஜோசுவா டோர்ன் இம்முறை அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இரண்டாவது உலகக் கிண்ணத்தில் ஜுவெல் அண்ட்றூ விளையாடவுள்ளார். இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் துடுப்பாட்டத்தில் டோர்ன மிகத் திறமையாக செயல்பட்டிருந்தார். அந்தத் தொடரில் ஜக்கீன் பொல்லார்ட், ஷக்வான் பெலே ஆகிய இருவரும் பந்துவீச்சில் திறமையாக செயல்பட்டதுடன் உப அணித் தலைவர் ஜொநதன் வென் லங்கே அதிரடிக்கு பெயர் பெற்றவராவார். போட்டி விபரங்கள் ஜனவரி 15 – தன்ஸானியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ஜனவரி 16 – ஆப்கானிஸ்தான் எதிர் தென் ஆபிரிக்கா ஜனவரி 18 – ஆப்கானிஸ்தான் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ஜனவரி 19 – தென் ஆபிரிக்கா எதிர் தன்ஸானியா ஜனவரி 21 – ஆப்கானிஸ்தான் எதிர் தன்ஸானியா ஜனவரி 22 – தென் ஆபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் https://www.virakesari.lk/article/236055