Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு விவகாரத்தில் பொய்யுரைத்த இராணுவம்; ஜனாதிபதி முன்னிலையில் உண்மையை உடைத்தார் - ரவிகரன் எம்.பி Published By: Vishnu 08 Jan, 2026 | 02:13 AM முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், விடுவிக்கப்படாத காணிகளுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இராணுவத்தின் குறித்த பொய்யான தகவலுக்கு எதிர்ப்புத்தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேப்பாப்புலவில் 55பேருக்குரிய 59.5ஏக்கர் காணிகளும் 4பேருக்குரிய 100ஏக்கர் மத்தியவகுப்புக்காணிகளுமாக மொத்தம் 59பேருக்குரிய 159.5ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கேப்பாப்புலவில் விடுவிக்கப்படவேண்டியுள்ளதாக ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் புதன்கிழமை (07) பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், பாராளுமன்றில் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் பிற்பகல் புதன்கிழமை (07) 04.00மணியளவில் பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. அந்தவகையில் இக்கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அனுர குமாரதிசாநாயக்க, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் வருகைதந்திருந்தனர். அத்தோடு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், அதிகாரிகளும் வருகைதந்திருந்தனர். அந்தவகையில் முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணி விடுவிப்புத் தொடர்பில் பேசப்பட்டது. குறித்த கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விடயத்தில் 44பேருக்குத்தான் காணிகள் விடுவிக்கவேண்டியிருந்ததாகவும், அதில் பெரும்பாலானவர்களின் காணிகள் விடுவிப்புச் செய்யப்பட்டுவிட்டதாகவும், இன்னும் குறிப்பிட்டளவானவர்களுக்கே கணிகள் விடுவிக்கவேண்டியுள்ளதாகவும் இதன்போது குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த சில அதிகாரிகளால் உண்மைக்குப்புறம்பான தகவல்கள் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன. இந்நிலையில் குறுக்கீடு செய்து அதிகாலிகளால் வழங்கப்படுகின்ற்தகவல்கள் தவறானவை என்பதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன். கேப்பாப்பிலவில் ஏற்கனவே இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டிலுக்கின்றன. எனினும் 55பேருக்குரிய 59.5ஏக்கர் காணிகளும், 4பேருக்குரிய 100ஏக்கர் மத்தியவகுப்புக் காணிகளும் இராணுவத்தினரால் இன்னும் விடுவிக்கப்படவேண்டியுள்ளது என்பதை இதன்போது சுட்டிக்காட்டினேன். இதன்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளுக்கு பதிலாக பதிலீட்டுக்காணிகள் மக்களுக்கு வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்துந்தும் இராணுவத்தினரால் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் பிழையான தகவல்களை வழங்கிக்கொண்டிருக்கின்றனர் என்பதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தேன். அத்தோடு மக்களுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்படவில்லை. சீனியாமோட்டை என்னுமிடத்தில் சிறிய காணித் துண்டுகளில் தற்காலிகமாக வீடுகள் அமைத்து கேப்பாப்புலவு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்ற விடயத்தினையும் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தினேன். அதேவேளை முறையற்ற விதத்திலேயே மக்களுக்கு அங்கு வீடுகள் அமைக்கப்பட்டு கேப்பாப்புலவு மக்கள் தற்காலிகமாக அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்ற விடயத்தினையும் இதன்போது சுட்டிக்காட்டினேன். எதிர்காலத்தில் இராணுவத்தினர் காணிகளை விடுவித்த பிற்பாடு சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவீர்கள், அதுவரை சீனியாமோட்டைப்பகுதியில் தற்காலிகமாகவே குடியேற்றப்படுகின்றீர்கள் என்ற அரச அதிகாரிகளின் வாக்குறுதிக்கமையவே மக்கள் அங்கு தற்காலிகமாக குடியேறித் தங்கியுள்ளனர் என்ற விடயத்தினையும் இதன்போது வெளிப்படுத்தியிருந்தேன். இந்நிலையில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்படுமென்ற நம்பிக்கையுடனேயே கேப்பாப்புலவு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்ற விடயத்தினையும் இதன்போது ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியிருந்தேன். இந்த கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு தொடர்பான உண்மையான விபரங்களை முல்லைத்தீவு மாவட்ட செயலரிடமிருந்தும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலரிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில் இராணுவத்தளபதியிடம் குறித்த கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு விடயம் தொடர்பான ஒரு அறிக்கையினை தமக்கு தருமாறு ஜனாதிபதி கோரியிருந்தார். இதுதொடர்பில் நானும்முல்லைத்தீவு மாவட்டசெயலாளருடனும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலருடனும் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் - என்றார். https://www.virakesari.lk/article/235483
  2. அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு மற்றும் புதிய வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 09 முதல் – ஜனாதிபதி Published By: Vishnu 08 Jan, 2026 | 01:58 AM அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு வழங்கும் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 10 ஆவது பாராளுமன்றத்தின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் புதன்கிழமை (07) பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசின் செயற்திட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் பயிற்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்கும் செயற்பாடு குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டது. துல்லியமான தரவுகள் மற்றும் உண்மையான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் என்பவற்றுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்காக செயல்படுத்தப்படும் கடன் திட்டம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. வங்கிகளுடன் கலந்தாலோசித்து அந்தக் கடனைப் பெறுவது குறித்து வர்த்தக சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தின் அவசியம் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அத்தோடு, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் ஒவ்வொரு வர்த்தகத்தையும் பதிவு செய்வதற்கான ஒரு பொறிமுறையின் அவசியத்தையும், அதன் நன்மைகள் குறித்து வர்த்தக சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். மேலும், அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பதிவு செய்யப்படாத சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும், இது தொடர்பாக அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செயற்திறனுடன் செலவிட வேண்டியதன் அவசியத்தையும், இல்லையெனில் உரிய காலப்பகுதிக்குள் எதிர்பார்க்கும் அபிவிருத்தி நோக்கங்களை அடைய முடியாது போகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் அன்றாட வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புகையில் முன்பிருந்த நிலையை விட, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் , நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம், பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/235482
  3. ஆரோக்கியமான மனநிலை மற்றும் ஆரோக்கியமான உடலைக் கொண்ட ஒரு பிள்ளையை வளர்ப்பதே எமது தேசிய இலக்காகும் - சரோஜா சாவித்ரி போல்ராஜ் Published By: Vishnu 08 Jan, 2026 | 01:53 AM “தேசிய ரீதியில் தரப்படுத்தப்பட்ட ஒரு சட்டகத்தின் வழிகாட்டலில், இலங்கையிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தித் திட்டத்தை (Early Childhood Development programme) நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.” முன்பிள்ளைப்பருவ சிறுவர்களிடையே சமூக மற்றும் நடத்தை ரீதியான வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிறுவர் சுகாதார மேம்பாட்டுத் தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, புதன்கிழமை (07) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இத்திட்டம் 'தூய்மையான இலங்கை' (Clean Sri Lanka) நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ், தேசிய முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் தலைமையின் கீழ், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளிட்ட 12 அமைச்சுகளின் கூட்டுப் பங்களிப்புடன் இது முன்னெடுக்கப்படுகிறது. இத்திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழா கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில், ஜனவரி 10ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, செயற்பாடுசார் கற்றல் அணுகுமுறை (Activity-based learning) மற்றும் கற்றலுக்கு அத்தியாவசியமான கருவிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் சிறுவர்களிடையே ஒத்துணர்வு (Empathy) மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல், ஒழுக்க மேம்பாடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், தகவல் தொடர்புத் திறன்களை மேம்படுத்துதல் போன்ற பண்புகளை வளர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷண, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (தூய்மையான இலங்கை) பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஷ்வர, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (பாடவிதான ஒருங்கிணைப்பு மற்றும் ஆரம்பக் கல்வி அபிவிருத்தி) திருமதி உதார திக்கும்புர மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பத்துவந்துடாவ ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/235481
  4. 5ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 119 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை Published By: Vishnu 07 Jan, 2026 | 10:04 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 5ஆவதும் இறுதியுமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க இங்கிலாந்து 119 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. ஜேக்கப் பெத்தெல் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி குவித்த கன்னி சதத்தின் பலனாக இங்கிலாந்து நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. போட்டியின் நான்காம் நாளான புதன்கிழமை (7) காலை தனது முதலாவது இன்னிங்ஸை 7 விக்கெட்கள் இழப்புக்கு 518 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா 567 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது கடைசி விக்கெட்டை இழந்தது. 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 128 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்த ஸ்டீவன் ஸ்மித் நான்காம் நாள் மேலும் 10 ஓட்டங்களைப் பெற்று 138 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதேவேளை 42 ஓட்டங்களிலிருந்து தனது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த போ வெப்ஸ்டர் 71 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவர்கள் இருவரும் 8ஆவது விக்கெட்டில் 107 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் ஜொஷ் டங் 97 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றைடன் கார்ஸ் 130 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பென் ஸ்டோக்ஸ் 95 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 183 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பொறுமையுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடிய ஜேக்கப் பெத்தல் 2ஆவது விக்கெட்டில் பென் டக்கெட்டுடன் 81 ஓட்டங்களையும் 4 விக்கெட்டில் ஹெரி ப்றூக்குடன் 102 ஓட்டங்களையும் 6ஆவது விக்கெட்டில் ஜெமி ஸ்மித்துடன் 45 ஓட்டங்களையும் பகிர்ந்து இங்கிலாந்துக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தார். பென் டக்கெட், ஹெரி ப்றூக் ஆகிய இருவரும் தலா 42 ஓட்டங்களையும் ஜெமி ஸ்மித் 26 ஓட்டங்களையும் பெற்றனர். ஜேக்கப் பெத்தல் 232 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள் உட்பட 142 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் போ வெப்ஸ்டர் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஸ்கொட் போலண்ட் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். நாளை போட்டியின் கடைசி நாளாகும். https://www.virakesari.lk/article/235479
  5. ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இலங்கைக்கு 8 மில்லியன் யூரோ மானியம் - பசுமை பொருளாதார வளர்ச்சி செயற்திட்டத்துக்கான இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து 07 Jan, 2026 | 06:41 PM (நா.தனுஜா) 'நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி' எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு 8 மில்லியன் யூரோ மானியத்தை வழங்கும் ஒப்பந்தத்தில் அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் கைச்சாத்திட்டுள்ளன. மேற்படி ஒப்பந்தத்தின் பிரகாரம் தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்ச, இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் என்பன கூட்டிணைந்து உருவாக்கிய இத்திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் 8 மில்லியன் யூரோ மானியத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நிலையான உற்பத்தி மற்றும் நுகர்வு நடைமுறைகளையும், உணவுப்பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் மாற்றத்தையும் ஊக்குவிப்பதே இம்முயற்சியின் பிரதான நோக்கமாகும். அத்தோடு இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீது விசேட கவனம் செலுத்தி, இறப்பர் பயிர்ச்செய்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி வகைகளில் நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு நேயமான விவசாய நடைமுறைகளுக்கு மாறுவதும் இதன் இலக்காகும். அதன்படி இந்த இருதரப்பு ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ஜோஹன் எச்.ஹெஸ்ஸும் புதன்கிழமை (07) கைச்சாத்திட்டனர். இதுபற்றிக் கருத்து வெளியிட்ட நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, இச்செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியிருக்கும் ஆதரவுக்கு அரசாங்கத்தின் சார்பில் நன்றியை வெளிப்படுத்தினார். அதுமாத்திரமன்றி இச்செயற்திட்டமானது இலங்கையின் நிலையான வளர்ச்சி தொடர்பான நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்புடையவாறு அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 'இந்த ஒப்பந்தம் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகாலக் கூட்டாண்மைக்கு ஒரு சான்றாகும். பசுமை பொருளாதார வளர்ச்சி, நிலையான நுகர்வு, உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப்பாதுகாப்புக்கான நமது பரஸ்பர உறுதிப்பாட்டில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்' எனவும் அவர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/235473
  6. லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்! 08 Jan, 2026 | 08:39 AM 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதமும் லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/235492
  7. SIVARANCHAN THEVAKUMARAN A/C:- 300131108781 National Savings Bank Chankanai Branch Swift Code:- NSBALKLX உறவுகளே, மேலே உள்ளது "முன்னோடி - அடிப்படை சுகாதார வசதித்திட்டம் 2026" மட்டும் பயன்படுத்தும் வங்கிக் கணக்கு. உங்களிடம் (யாழில்) தகவல் தெரிவிக்காமல் ஒரு ரூபா பணமும் செலவளிக்கப்படமாட்டாது. பணம் அனுப்பினால் தகவல் தாருங்கள். நீங்கள் விரும்புகின்ற வகையில் யாழ் புனைபெயர்/ பெயர் குறிப்பிட விருப்பமில்லை/ சொந்தப்பெயர் தகவலைப் பகிர்வோம். என்னுடைய தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் +94 77 959 1047, பொதுவானது +94 77 777 5448.(வட்சப், வைபர்)
  8. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சாரா ஜெஸ்மின் உயிரிழக்கவில்லை ; அவர் இந்தியாவில் இருப்பதாகவும் தகவல் இல்லை - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் 07 Jan, 2026 | 03:21 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பான சாரா ஜெஸ்மின் உயிரிழக்கவில்லை என இடம்பெறும் விசாரணைகளில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதேநேரம் அவர் இந்தியாவில் இருப்பதாக எமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய இடையீட்டு கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். முஜிபுர் ரஹ்மான் தனது கேள்வியின்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் நேரடி தொடர்பான சாரா ஜெஸ்மின் தொடர்பில் 2020க்கு பின்னர் கோட்டாப ராஜபக்ஷ் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசாரணைக்குழுவின் 3ஆவது விசாரணையிலேயே சாரா ஜெஸ்மின் உயிரிழந்ததாக தெரிவிப்பதற்கு முயற்சித்தார்கள். என்றாலும் சாரா ஜெஸ்மின் உயிரிழந்ததாக நாங்கள் யாரும் நம்புவதில்லை. அவர் தப்பிச்சென்றுள்ளார் அல்லது தப்பிச்செல்ல சிலர் அவருக்கு உதவி செய்திருக்கிறார்கள். சாரா ஜெஸ்மின் இந்தியாவில் இருப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எதிர்க்கட்சியில் இருக்கும்போது தெரிவித்து வந்தார். அதேநேரம் பாதுகாப்பு பிரதி அமைச்சரான அருன ஜயசேகர, குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்டு வந்தார். அத்துடன் சாரா ஜெஸ்மின் தப்பிச்சென்றதும் இந்த காலப்பகுதியிலாகும். அரசாங்கம் பாதாள குழுக்களை கைதுசெய்ய திறந்த பிடியாணைகளை பெற்று செயற்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடமாகியும் சாரா ஜெஸ்மினை கைது செய்ய ஏன் பிடியாணை பிறப்பிக்காமல் இருக்கிறது. அத்துடன் இந்த அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர், நாட்டுக்கு வந்து சென்றார். ஜனாதிபதி இந்திய பிரதமரை சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இவ்வாறான கலந்துரையாடல்களின்போது, சாரா ஜெஸ்மின் இந்தியாவில் இருந்தால், அவரை நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் கலந்துரையாடி இருந்தீர்களா? அதேநேரம் சாரா ஜெஸ்மினை கண்டுபிடிக்க ஏன் திறந்த பிடியாணையை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறது என கேட்கிறேன் என்றார். அதற்கு அமைச்ர் தொடர்ந்து பதிலளிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இடம்பெற்றுவரும் விசாரணைகளில் இருந்து ஒருசில தகவல்கள் வெளிப்பட்டிருக்கின்றன. குறிப்பாக குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சாரா ஜெஸ்மின் உயிரிழக்கவில்லை எனவும் விசாணைகளில் இருந்து தகவல்கள் வெளிப்பட்டிருக்கின்றன.. அதேபோன்று சாரா ஜெஸ்மின் இந்தியாவில் இருப்பதாக எமக்கு எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. என்றாலும் அது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முன்னைய தகவல்களின் பிரகாரம் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஏதாவது சதித்திட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றதா என்ற விசாரணையே புதிய அரசாங்கத்தின் கீழ் இடம்பெறுகிறது. அதனால் இதுதொடர்பான விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவை ஏற்படும் பட்சத்தில் சாரா ஜெஸ்மினை கைதுசெய்ய பிடியாணை பெற்றுக்கொள்வோம் என்றார். https://www.virakesari.lk/article/235443
  9. புதிய வங்கிக் கணக்கு ஒன்றை இன்றைய தினம் சங்கானை தேசிய சேமிப்பு வங்கிக்கு நேரடியாகச் சென்று 1000 ரூபா வைப்பிட்டு ஆரம்பித்துவிட்டேன். வங்கிக் கணக்கு விபரங்களை இங்கே பகிரவா? தனிமடலில் போடவா? என்பதை கள உறவுகள் தெரியப்படுத்துங்கோ.
  10. சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் - ஹர்ஷ டி சில்வா 07 Jan, 2026 | 05:22 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட சேதத்தை புனரமைக்க 1200 பில்லியன் ரூபா வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இலங்கையை கட்டியெழுப்பும் நிதியத்துக்கு இதுவரையில் 7 பில்லியன் ரூபா வரையான நிதியே கிடைக்கப்பெற்றுள்ளது. காலம் தாழ்த்தாது சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து விரைவாக மீட்சியடைவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.தேசிய நிதியை மாத்திரம் கொண்டு ஏற்பட்ட விளைவுகளில் இருந்து மீள முடியாது. ஆகவே சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்த வேண்டும் என்று வலியுத்தினோம். சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் அது எப்போது என்று குறிப்பிடவில்லை. உலகில் பிறிதொரு நாட்டில் இயற்கை அனர்த்தங்கள் ஏதும் ஏற்பட்டால் இலங்கை மீதான கவனம் குறைவடையும். ஆகவே இவ்விடயத்தில் விரைவாக செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். சட்டத்தின் பிரகாரம் இலங்கையை மீள்கட்டியெழுப்பும் நிதியம் ஸ்தாபிக்கப்படவில்லை. இயற்கை அனர்த்தங்களால் சுமார் 4 பில்லியன் டொலர் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஏற்பட்ட சேதத்தை புனரமைக்க 1200 பில்லியன் ரூபா வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இலங்கையை கட்டியெழுப்பும் நிதியத்துக்கு இதுவரையில் 7 பில்லியன் ரூபா வரையான நிதியே கிடைக்கப்பெற்றுள்ளது. இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் நிதியம் இன்றளவில் சட்டத்தால் நிறுவப்படவில்லை. பல கோடி ரூபா நிதி பரிமாற்றப்படுகிறது. எதிர்காலத்தில் இது பிரச்சினைக்குரியதாக மாறலாம். ஆகவே இந்த நிதியத்தை சட்டத்தால் நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் அனர்த்த நிவாரண நிதியத்தை ஸ்தாபிக்குமாறும் வலியுறுத்துகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/235467
  11. மனிதன் தன் விருப்பத்துக்காக/சுயநலத்திற்காக யாரையும் பாதுகாப்பு உணர்வு தந்து கட்டுபடுத்தி அடிமையாக்கி முதலாளியாக வலம் வருவதை உணர்ந்தோரும், மற்றவர்களை அடிமையாக்க தவறுவதில்லை.
  12. 'பூமியின் நரகம்': அமெரிக்காவில் மதுரோ அடைக்கப்பட்டுள்ள தடுப்பு மையத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,XNY/Star Max/GC Images கட்டுரை தகவல் ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ பிபிசி நியூஸ் முண்டோ 7 ஜனவரி 2026, 03:19 GMT புதுப்பிக்கப்பட்டது 7 ஜனவரி 2026, 03:44 GMT நியூயார்க்கில் விசாரணையை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு திடீரென அழைத்து வரப்பட்ட ஒரு பதவி நீக்கப்பட்ட அதிபரை எங்கு அடைத்து வைப்பார்கள்? வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ அடைக்கப்பட்டுள்ள புரூக்ளின் தடுப்புக்காவல் மையத்தை, அமெரிக்காவிலுள்ள ஒரு வழக்கறிஞர் "பூமியின் நரகம்" என்று விவரித்துள்ளார். அந்த இடத்திற்கு குற்றவாளிகளை அனுப்புவதற்கு கூட சில நீதிபதிகள் மறுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கைவிலங்கு இடப்பட்டு, இரண்டு போதைப்பொருள் தடுப்பு முகவர்களால் அழைத்து வரப்பட்ட மதுரோ, நியூயார்க் வந்தடைந்தவுடன் நகைச்சுவையாகப் பேசினார். குட் நைட் என்பதை பியூனாஸ் நோச்சஸ் என்று நீங்கள் சொல்வது சரியா? குட் நைட்! புத்தாண்டு வாழ்த்துகள்!"என்று அவர் கூறினார். அவர் உடனடியாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் (டிஈஏ) தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பிறகு, புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்புக்காவல் மையத்தில் (எம்டிசி) உள்ள ஒரு அறையில் அடைக்கப்பட்டார். போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் வரை, மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் அங்கேயே இருப்பார்கள் (அக்குற்றச்சாட்டுகளை அவர்கள் இருவரும் மறுக்கிறார்கள்) என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,Adam Gray/Getty Images படக்குறிப்பு,வழக்கறிஞர்கள் "பூமியின் நரகம்" என்று விவரிக்கும் ஒரு தடுப்புக் காவல் மையத்தில் நிக்கோலஸ் மதுரோ அடைக்கப்பட்டுள்ளார். எஃகு தடுப்புகள் மற்றும் கேமராக்கள் புரூக்ளின் மாவட்டத்தில் அமைந்துள்ள எம்.டி.சி என்பது பல அடுக்கு மாடிகளைக் கொண்ட கான்கிரீட் மற்றும் எஃகு சிறையாகும். இது துறைமுகத்திலிருந்து சில மீட்டர் தொலைவிலும், ஐந்தாவது அவென்யூ, சென்ட்ரல் பார்க் மற்றும் பிற பிரபலமான சுற்றுலா மையங்களில் இருந்து சுமார் 5 கி.மீ (3 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நகரச் சிறைச்சாலைகளில் நிலவிய அதிகப்படியான கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக 1990-களின் தொடக்கத்தில் இந்த மையம் திறக்கப்பட்டது. துறைமுகத்தில் வந்து இறங்கும் அல்லது கப்பல்களில் ஏற்றி அனுப்பப்படும் பொருட்களைச் சேமித்து விநியோகிக்கும் கிடங்குகள் இருந்த இடத்தில் தான் இந்த மையம் தற்போது அமைந்துள்ளது. மன்ஹாட்டன் மற்றும் புரூக்ளின் நீதிமன்றங்களில் விசாரணைக்காகக் காத்திருக்கும் ஆண் மற்றும் பெண் கைதிகளை அடைப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றாலும், குறுகிய கால தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளை அடைக்கவும் இந்த தடுப்புக்காவல் மையம் பயன்படுத்தப்படுகிறது என்று ஃபெடரல் பீரோ ஆஃப் பிரிசன்ஸ் (பிஓபி) வலைத்தளம் தெரிவித்துள்ளது. நியூயார்க்கில் ஃபெடரல் பீரோ ஆஃப் பிரிசன்ஸால் இயக்கப்படும் ஒரே ஒரு தடுப்புக் காவல் மையம் இதுதான். 2021-ஆம் ஆண்டில் மன்ஹாட்டனில் இருந்த இதுபோன்றதொரு மையத்தை ஃபெடரல் பீரோ ஆஃப் பிரிசன்ஸ் மூடிவிட்டது. பாலியல் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்ட அமெரிக்க நிதியாளர் ஜெப்ரி எப்ஸ்டீன், 2019-இல் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து அந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தடுப்புக்காவல் மையம் அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் இரண்டு ஃபெடரல் நீதிமன்றங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இது எஃகு தடுப்புகளாலும், நீண்ட தூரத்திலிருந்தே படம்பிடிக்கும் திறன் கொண்ட கேமராக்களாலும் சூழப்பட்டுள்ளது. மதுரோ வருகைக்குப் பிறகு, வெளிப்புறப் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பலத்து பாதுகாப்பு கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அங்கு விளையாடுவதற்கான வசதி, மருத்துவப் பிரிவுகள் மற்றும் நூலகம் போன்றவை உள்ளன என, பொது ஒளிபரப்பு சேவை (பிபிஎஸ்) செய்தி தெரிவித்துள்ளது. அங்குள்ள கைதிகள் நாளின் பெரும் பகுதியை மிகக் குறுகிய அறையிலேயே கழிக்கிறார்கள் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலோ அல்லது விளக்கமோ இதுவரை வழங்கப்படவில்லை. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,நியூயார்க் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது, சிலியா ஃபுளோரஸ் மற்றும் நிக்கோலஸ் மதுரோ ஆகியோர் அமெரிக்க முகவர்களால் பாதுகாப்புடன் அழைத்து வரப்படுகிறார்கள். 'மனிதாபிமானமற்ற சூழல்' ஊடக அறிக்கைகளின் படி, 1,000 பேரை அடைப்பதற்காகக் கட்டப்பட்ட இந்த மையத்தில், 2019-ஆம் ஆண்டில் 1,600 பேர் இருந்தனர். பிஓபி இணையதளத்தின்படி, தற்போது அங்கு 1,330-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். நவம்பர் 2024-இல் நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள் காட்டி ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த மையமானது, பரிந்துரைக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கையில் பாதியைக் கொண்டு மட்டுமே இயங்கி வருகிறது எனத் தெரிய வருகிறது. அதிகப்படியான கூட்ட நெரிசல் மற்றும் பணியாளர் பற்றாக்குறை ஆகிய இரண்டும் தான், எம்.டி.சியில் அடிக்கடி நடக்கும் வன்முறைகளுக்கு முக்கியக் காரணங்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கட்டடத்தின் உள்கட்டமைப்பும் கவலைக்குரியதாக உள்ளது. 2019-ஆம் ஆண்டில் ஏற்பட்ட மின் தடையின் போது, கடுங்குளிரில் வெப்பமூட்டும் வசதி இன்றி அங்கிருந்தவர்கள் பல நாட்களாக தவித்தபோது அது குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. "எம்.டி.சியின் சூழல் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மனிதாபிமானமற்றது," என்று அப்போதைய நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிட்டியா ஜேம்ஸ் அறிவித்தார். தடுப்புக்காவல் மையத்தின் மோசமான நிலை குறித்து அவர் அரசாங்கத்தின் மீது வழக்கும் தொடர்ந்தார். "சிறையில் அடைக்கப்படுவதால் மனித உரிமைகள் மறுக்கப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல," என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,BBC NEWS படக்குறிப்பு,மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் அடைக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் மையம் பல அடுக்கு மாடிகளைக் கொண்டதோடு, சுவர்களாலும் கேமராக்களாலும் சூழப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஆண்ட்ரூ டாலக் போன்றவர்கள் நியூயார்க் டைம்ஸிடம் பேசுகையில், இந்தச் சிறை "பூமியின் நரகம்" என்று குறிப்பிட்டனர். 2024-ஆம் ஆண்டில், எட்வின் கார்டெரோ என்பவர் சக கைதிகளால் குத்திக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவருக்காக வாதாடிய டாலக் இவ்வாறு கூறினார். 2021 முதல் 2024 வரை பல கைதிகள் அங்கு தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மையத்தின் மோசமான சூழலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், அங்கு கைதிகளை அனுப்பவே தயங்குகின்றனர். மாவட்ட நீதிபதி கேரி பிரவுன் ஆகஸ்ட் 2024-இல், வரி ஏய்ப்பு செய்த 75 வயது முதியவருக்கு தான் விதித்த ஒன்பது மாத சிறைத்தண்டனையை ரத்து செய்வதாகவும், பிஓபி அவரை புரூக்ளின் பெருநகர தடுப்புக்காவல் மையத்திற்கு அனுப்பினால், அதற்குப் பதிலாக அவரை வீட்டுக் காவலில் வைப்பதாகவும் கூறினார். "இங்கு நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் மேற்பார்வை குறைபாட்டையும், அமைதி சீர்குலைந்திருப்பதையும், ஏற்றுக்கொள்ள முடியாத, கண்டிக்கத்தக்க மற்றும் உயிருக்கு ஆபத்தான நிர்வாகத்தை கொண்டுள்ள ஒரு குழப்பமான சூழலையும் வெளிப்படுத்துகின்றன" என்று பிரவுன் கூறியதாக தி இன்டிபென்டன்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளும் இதனை செய்திகளில் இடம்பிடிக்கச் செய்துள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம், அமெரிக்க நீதித்துறை 25 பேர் மீது (கைதிகள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் உட்பட) வன்முறை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்தது தொடர்பான 12 வெவ்வேறு வழக்குகளில் விசாரணை அறிவித்தது. பி.ஓ.பி முன்பு வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்ட நபர்களைப் பாதுகாப்பதையும், சிறைப் பணியாளர்கள் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பைப் பேணுவதையும் நாங்கள் ஒரு கடமையாகக் கருதுகிறோம்," என்று தெரிவித்தது. எம்.டி.சி.யில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க ஒரு அவசர நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், நிலுவையில் உள்ள பராமரிப்புப் பணிகளை முடிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கார்டெரோ மற்றும் பிறரின் மரணங்களைத் தொடர்ந்து சில கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,Hollywood To You/Star Max/GC Images படக்குறிப்பு,ராப் பாடகரும் இசை அமைப்பாளருமான சீன் "டிடி" கோம்ப்ஸ், தனக்கு தண்டனை விதிக்கப்படும் வரை இந்த மையத்தில் சில மாதங்களை கழித்தார். இந்த மையத்தில் அடைக்கப்பட்டிருந்த மற்ற முக்கிய நபர்கள் புரூக்ளின் பெருநகர தடுப்புக்காவல் மையத்தில் உள்ள மோசமான சூழலுக்கு மத்தியிலும், அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து முக்கியமான நபர்களை அங்கு அனுப்பி வருகின்றனர். உதாரணமாக, அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள முதல் லத்தீன் அமெரிக்க அரசியல் தலைவர் மதுரோ அல்ல. ஹோண்டுராஸின் முன்னாள் அதிபர் ஜுவான் ஓர்லாண்டோ ஹெர்னாண்டஸ் கடந்த ஜூன் மாதம் வரை இந்த மையத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்தார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அவருக்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, அவர் வேறொரு சிறை வளாகத்திற்கு மாற்றப்பட்டார். ஆனால், கடந்த டிசம்பரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவருக்கு மன்னிப்பு வழங்கினார். மெக்சிகோவின் முன்னாள் பொதுப் பாதுகாப்புச் செயலர் ஜெனாரோ கார்சியா லூனா என்பவரும் இந்த தடுப்புக் காவல் மையத்தின் ஓர் அறையில் அடைபட்டுள்ளார். மிகவும் பிரபலமான மெக்சிகன் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஜோவாக்வின் "எல் சாப்போ" குஸ்மான் இங்கு அடைக்கப்பட்டிருந்தார். சினலோவா கார்டெல் தலைவர்களில் ஒருவரான மெக்சிகோவைச் சேர்ந்த இஸ்மாயில் "எல் மாயோ" சம்பாடா, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைக்காக இப்போதும் அதே கட்டடத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட அல் கொய்தா உறுப்பினர்களும் இங்குதான் சிறைவைக்கப்பட்டிருந்தனர். பிரபல ராப் பாடகரும் இசையமைப்பாளருமான சீன் "டிடி" கோம்ப்ஸ் சில மாதங்கள் இந்த தடுப்புக்காவல் மையத்தில் அடைக்கப்பட்டிருந்தார். பெண்களை பத்தாண்டுகளுக்கும் மேலாக துன்புறுத்தியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நியூ ஜெர்ஸியில் உள்ள மற்றொரு சிறைக்கு மாற்றப்பட்டார். எப்ஸ்டீனின் கூட்டாளியும், முன்னாள் துணைவருமான கிஸ்லேன் மேக்ஸ்வெல், திவாலான எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ தளத்தின் நிறுவனர் சாம் பேங்க்மேன்-ஃபிரைட் மற்றும் நிதி மோசடிகளுக்காக மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட டிரம்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் ஆகியோரும் புரூக்ளின் தடுப்புக்காவல் மையத்தில் அடைபட்டிருந்த முன்னாள் கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c04170dd9x5o
  13. இலங்கை அரசாங்கம் - ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து! 07 Jan, 2026 | 02:38 PM "அக்ரிகிரீன் முன்முயற்சி - நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி" திட்டத்தின் கீழ் ஒரு புதிய திட்டத்தை தொடங்க இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) ஒரு மானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தோட்ட மற்றும் சமூக உற்கட்டமைப்பு அமைச்சு, இறப்பர் அபிவிருத்தி திணைக்களம், மற்றும் இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்ட இத்திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் 8 மில்லியன் யூரோ மானியத்தால் செயல்படவுள்ளது நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் பசுமைவாயிந்த பொருளாதார வளர்ச்சிக்கான இலங்கையின் மாற்றத்தை இந்த முயற்சி ஆதரிக்கும். மேலும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, இறப்பர் துறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி வகைகளில் மிகவும் நிலையான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக பொறுப்பான விவசாய நடைமுறைகளுக்கு மாறுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் ஒத்துழைப்புத் தலைவர் டாக்டர் ஜோஹன் எச். ஹெஸ்ஸே ( Johann.H.Hess ) ஆகியோர் கையொப்பமிடப்பட்ட மானிய ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர், ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்புமிக்க ஆதரவிற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துதோடு, இந்தத் திட்டம் சந்தை சார்ந்த மதிப்பு கூட்டல் மற்றும் ஏற்றுமதி சந்தைகளுடன் மேம்பட்ட ஒருங்கிணைப்பு உள்ளிட்ட இலங்கையின் நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது என்பதைக் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தம் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த கூட்டாண்மைக்கு ஒரு சான்றாக நிற்கிறது. பசுமை பொருளாதார வளர்ச்சி, நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் இது ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. https://www.virakesari.lk/article/235438
  14. உதகை: காயமடைந்து 2 நாட்களாக ஒரே இடத்தில் இருந்த புலி இறப்பு - சிகிச்சை அளிக்காதது ஏன்? கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 7 ஜனவரி 2026, 13:36 GMT புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் உதகை அருகில் காயத்துடன் தேயிலைத் தோட்டத்தில் இருந்த புலி, சிகிச்சை தரப்படாததால் உயிரிழந்தது. இயற்கையான நிகழ்வு என்பதன் அடிப்படையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, புலிக்கு சிகிச்சை அளிக்காமல் கண்காணித்து வந்ததாக வனத்துறை சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. புலிக்கு சிகிச்சை அளிக்காதது குறித்து, சமூக ஊடகங்களில் பலவிதமான விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இரு புலிகளுக்கு இடையில் நடந்த 'ஏரியா' சண்டை! உதகை அருகேயுள்ள போர்த்தி ஆடா என்ற கிராமத்தையொட்டியுள்ள தேயிலைத் தோட்டப் பகுதியில் கடந்த ஜனவரி 2-ஆம் தேதியன்று ஒரு புலி படுத்துக்கிடப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். மிகவும் சோர்வுடன் காணப்பட்ட அந்த புலி, வேறெங்கும் நகராமல் ஒரே இடத்தில் இருந்துள்ளது. தகவல் கேள்விப்பட்டு, வனத்துறையினர் அங்கு வந்தனர். டிரோன் மூலமாக புலியின் நடமாட்டத்தைப் பார்த்தபோது, அதன் முன்னங்கால் ஒன்றில் பலத்த காயமடைந்திருப்பதால் நடக்க முடியாமலிருப்பதைக் கண்டறிந்தனர். அந்தத் தேயிலைத் தோட்டத்துக்கு மக்கள் வந்து செல்லும் நிலையில், அந்தப் புலியைப் பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வனத்துறை அதிகாரிகள் அந்த புலியைப் பிடிப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் குழப்பமடைந்தனர். கோபமடைந்த சிலர், 'அந்தப் புலியைப் பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும், அதுவரை அதற்கு உணவாக இறைச்சி வழங்கவேண்டுமென்றும்' ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவித்தனர். புலியைப் பிடிப்பதற்கு வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே பகுதியில் முகாமிட்டிருந்த வனத்துறையினர், நேரடியாகவும், டிரோன் மூலமாகவும் புலியின் நிலையை கண்காணித்து வந்தனர். அங்கிருந்து வேறெங்கும் நகராமலிருந்த புலி, கடந்த 5 ஆம் தேதியன்று உயிரிழந்தது. அதே இடத்தில் அந்த புலிக்கு உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு அதன்பின்பு புதைக்கப்பட்டது. புலிக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்ததற்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய நீலகிரி மாவட்ட வன அலுவலர் கெளதம், ''அந்த புலி மற்றொரு புலியுடன் சண்டையிட்டபோதுதான் காயமடைந்திருந்தது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.டி.சி.ஏ.) வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, இதுவொரு இயற்கையான நிகழ்வு என்பதால் அந்த புலிக்கு சிகிச்சை அளிக்காமல் கண்காணித்து வந்தோம்.'' என்றார். வனத்துறையினரின் இந்த விளக்கம், காட்டுயிர் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பலவிதமான கேள்விகளை எழுப்பியுள்ளது. காயமடைந்துள்ள ஒரு புலிக்கு சிகிச்சை அளிக்காமலிருக்க தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல் நெறிமுறை அறிவுறுத்துகிறது என்றால், புலிகளை கையாள்வது தொடர்பாக வேறு என்னென்ன வழிகாட்டுதல்கள் உள்ளன என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அளித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் 248 பக்கங்களுக்கு மிக விரிவாகவுள்ளது. புலிகளைக் கையாள்வது குறித்து அதிலுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து நீலகிரி மாவட்ட வன அலுவலர் கெளதம், வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் வன அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் மூத்த ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் சிலர் பிபிசி தமிழிடம் விளக்கினர். வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் அதிகாரிகள் அளித்துள்ள விளக்கங்களின் அடிப்படையில் இந்த கேள்வி–பதில் தொகுக்கப்பட்டுள்ளது. சிகிச்சை அளிக்காமல் இறக்கும் வரை கண்காணித்தது ஏன்? கேள்வி: உதகை அருகே காயம்பட்டிருந்த புலியை பிடித்து சிகிச்சை அளிக்காமல் இறக்கும் வரை கண்காணித்ததற்கு காரணமென்ன...இயற்கையாக நடந்த சண்டையில்தான் இந்த புலி காயமடைந்தது என்பது எப்படி உறுதிப்படுத்தப்பட்டது? ''அந்த புலிக்கும் மற்றொரு புலிக்கும் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியன்று சண்டை நடந்துள்ளது. அந்த சண்டையில் படுகாயமடைந்த பின்பே அந்த புலி, தேயிலைத் தோட்டப்பகுதிக்கு வந்துள்ளது. இது இயற்கையான நிகழ்வு என்பதால், அதற்கு சிகிச்சை அளிக்காமல் அதனால் மக்களுக்கு வேறு எந்த பாதிப்பும் ஏற்படாதவகையில் கண்காணிக்க வேண்டுமென்பதே என்.டி.சி.ஏ. வழிகாட்டுதல் நெறிமுறை'' என்கின்றனர் வனத்துறையினர். இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய நீலகிரி மாவட்ட வன அலுவலர் கெளதம், ''அந்த புலிக்கும் மற்றொரு புலிக்கும் எல்லையை வரையறுப்பதில் சண்டை நடந்துள்ளது. நாங்கள் அந்த சூழல் காரணிகளை ஆய்வு செய்து மாதிரிகளைச் சேகரித்து இரு புலிகளுக்கும் இடையில் சண்டை நடந்துள்ளதை உறுதிசெய்துள்ளோம். அதில் புலியின் 2 முன்னங்கால்களும் மிகக்கடுமையாக பாதிப்படைந்திருந்தன. இறந்த ஆண் புலிக்கு 7 முதல் 8 வயது இருக்கும். அதை விட வயது முதிர்ந்த ஒரு புலி இதைத் தாக்கியிருக்கலாம். '' என்றார். ''அதன் உடலில் வேறு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை என்பது உடற்கூராய்வில் தெரியவந்தது. இயற்கையாக நடந்த சண்டையில்தான் காயம் ஏற்பட்டது என்பதால்தான் சிகிச்சை தரவில்லை. என்.டி.சி.ஏ. கூறியுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையின்படி அதைக் கண்காணித்தோம். வேறு ஏதாவது விபத்து போன்ற மனித செயல்களால் காயம் ஏற்பட்டிருந்ததாகத் தெரிந்திருந்தால் நிச்சயம் சிகிச்சை அளித்திருப்போம்.'' என்றார். இறந்து போன புலிக்கு, சண்டைக்குப் பின் நிறைய ரத்தம் வெளியேறியதுடன் 3–4 நாட்களாக எதுவும் உண்ணவில்லை என்று உடற்கூராய்வில் தெரியவந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். அந்த புலி இரையை அடிப்பதற்கு உதவும் முன்னங்கால்கள் இரண்டும் முற்றிலும் சேதமடைந்திருந்ததாகக் கூறிய வனத்துறையினர், அதற்கு மேல் அந்த புலியால் வேட்டையாடவும் முடியாது என்ற தகவலையும் பிபிசியிடம் பகிர்ந்தனர். புலி பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியல் ஒன்றில் (schedule 1 animals) இருக்கும் உயிரினம் என்பது போலவே, கடமானும் அதே பட்டியலில் உள்ள உயிரினம்தான் என்று கூறிய மாவட்ட வன அலுவலர், ஒரு புலி அடித்து கடமான் காயப்பட்டிருந்தாலும் அதற்கு சிகிச்சை தரமுடியாது என்றார். அப்படிச் செய்வது காடு மற்றும் காட்டுயிர்களின் உணவுச் சங்கிலியை அறுக்கின்ற ஒரு செயலாக இருக்குமென்கிறார் அவர். படக்குறிப்பு,நீலகிரி மாவட்ட வன அலுவலர் கெளதம் 'தலைமை வன உயிரினக் காப்பாளருக்கு மட்டுமே அதிகாரம்' கேள்வி: இதுபோன்று காயமடைந்த ஒரு புலிக்கு சிகிச்சையளித்து, வன உயிரினப் பூங்காவில் வைத்து பாதுகாத்திருக்க முடியாதா? இதற்கு பதிலளித்த கெளதம், ''அதற்கான தேவையும், அவசியமும் எழவில்லை'' என்றார். ''புலிகளைப் பிடித்து காட்டுக்குள் விடுவதற்கும் தலைமை வன உயிரினக் காப்பாளரின் அனுமதி பெற வேண்டுமென்பதே என்.டி.சி.ஏ. தரும் வழிகாட்டுதல். அதேபோன்று பிடித்து வன உயிரினப் பூங்காவுக்குக் கொண்டு செல்லவும் அவரின் அனுமதி பெறவேண்டும்.'' என்றார் கெளதம். 'சட்டமே சொல்கிறது' கேள்வி: இதே புலி ஓர் ஊருக்குள் நுழைந்திருந்தால் அதைப் பிடிக்காமல் கண்காணிக்க முடியாது என்பதால், அப்போது வனத்துறை என்ன செய்திருக்கும்? இதுகுறித்து என்.டி.சி.ஏ. கூறும் வழிகாட்டுதல் என்ன? ''என்.டி.சி.ஏ. வழிகாட்டுதல் என்பது எல்லாப்பகுதிகளுக்கும் ஒரே மாதிரியானதுதான். அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் முதலில் புலியை காட்டுக்குள் துரத்துவதற்கு முயற்சி எடுக்கப்படும். முடியாதபட்சத்தில் மாநிலத்தின் தலைமை வனஉயிரினக் காப்பாளருக்கு (Chief Wildlife Warden) முறைப்படி விண்ணப்பித்து, அதை கூண்டு வைத்து அல்லது மயக்க மருந்து செலுத்திப்பிடிப்பதற்கு அனுமதி பெற்று பிடிக்கப்படும்.'' என்றார் கெளதம். கேள்வி: ஒரு புலியால் மனிதர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தாலும் அந்த நேரத்திலும் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெறவேண்டியது அவசியமா? இதுகுறித்து விளக்கிய பெயர் கூற விரும்பாத மூத்த ஐ.எஃப்.எஸ். அதிகாரி, ''வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்கள் பட்டியலில் உள்ள புலி உள்ளிட்ட வனவிலங்குகளைப் பிடிப்பது அல்லது சுட்டுக்கொல்வதற்கு அனுமதியளிக்கும் அதிகாரம், தலைமை வனஉயிரினக் காப்பாளருக்கு மட்டுமே உள்ளது. '' என்றார். ''ஒரு புலி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதிக்கே வந்துவிட்டாலும் தலைமை வன உயிரினக் காப்பாளரின் எழுத்துப்பூர்வ அனுமதி பெறாமல் அதைப் பிடிக்கவோ, சுடவோ கூடாது என்பதே என்.டி.சி.ஏ. வழிகாட்டுதல் நெறிமுறை. எந்த சூழ்நிலையாக இருந்தால் வன உயிரினக் காப்பாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியுடன் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டியதும் கட்டாயம். இதை வழிகாட்டுதல் விதிகளில்லை; வன உயிரினப் பாதுகாப்புச் சட்டமே சொல்கிறது. '' என்றார் அவர். படக்குறிப்பு,கூண்டு வைக்கப்பட்டு பிடிக்கப்பட்ட ஒரு புலி கேள்வி: ஒரு புலியைப் பிடிப்பதற்கு எந்தெந்த சூழ்நிலைகளில் அனுமதியளிக்கும் அதிகாரம், தலைமை வன உயிரினக் காப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது? ''வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஒரு புலியால் மனித உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாகக் கருதினால் அதைப் பிடிக்கவும், பிடித்து இடமாற்றம் செய்யவும் அல்லது சுடவும் தலைமை வன உயிரினக்காப்பாளரால் அனுமதியளிக்க முடியும். அதேபோன்று அறிவியல்பூர்வமான காரணங்களுக்காக ஒரு புலியைப் பிடிப்பதாக இருந்தாலும் அனுமதியளிக்கும் அதிகாரம், தலைமை வனஉயிரினக் காப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அதிகாரத்தை அவர் வேறு யாருக்கும் பகிர்ந்தளிக்க முடியாது. மாவட்டம் அல்லது மண்டல அளவிலான அதிகாரிகளுக்கு இந்த அதிகாரம் தரப்பட்டிருந்தால், சூழ்நிலை அல்லது நிர்பந்தத்துக்கேற்ப புலிகளைப் பிடிக்கவும் கொல்லவும் அனுமதியளிக்கும் அபாயம் இருப்பதால்தான் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இத்தகைய வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது என கூறினார் ஐ.எஃப்.எஸ். அதிகாரி ஒருவர். இயற்கையாக இறக்கும் காட்டுயிர்களை காப்பாற்றினால் என்னவாகும்? கேள்வி: காயமடைந்த புலியை சிகிச்சையளித்து மீண்டும் காட்டுக்குள் விட வேண்டியதில்லை என்ற முடிவை எதன் அடிப்படையில் தலைமை வன உயிரினக்காப்பாளர் எடுக்கிறார்? ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வன விலங்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே, ஒரு குறிப்பிட்ட விலங்கைப் பாதுகாப்பது குறித்த முடிவை தலைமை வன உயிரினக் காப்பாளர் எடுக்கிறார் என்று வனத்துறையினர் விளக்குகின்றனர். ''நீலகிரி மாவட்டத்தில் புலிகளின் எண்ணிக்கை நன்றாகவுள்ளது. மாவட்டம் முழுவதும் 250–300 எண்ணிக்கையிலான புலிகள் இருப்பதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அப்படியிருக்கும்போது, இதுபோன்று இயற்கை நிகழ்வில் காயம் ஏற்படும் புலிகளையும் காப்பாற்றினால் இயற்கையாக நடக்கும் புலிகளின் பிறப்புக்கும், இறப்புக்குமான விகிதாச்சாரம் மாறுபட்டு, புலிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகிவிடும். அதனால் இது தேவையற்றது.'' என்றார் கெளதம் கேள்வி: யானை, புலி போன்ற காட்டுயிர்கள் பெருமளவில் நோய் அல்லது காட்டுக்குள் உள்ள சூழல் பாதிப்பில் இறக்க நேரிட்டால் அப்போதும் இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் கையாளப்பட வேண்டுமா? இதற்கு பதிலளித்த வன கால்நடை மருத்துவர் கலைவாணன், ''சாலை விபத்து, வேட்டை, மின்சார வேலி, வெடி போன்ற மனித செயல்பாடுகளால் காட்டுயிர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் அது நிச்சயம் கவனிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில் காட்டுக்குள் இயற்கையாக நிகழும் காட்டுயிர்களின் மரணங்களைத் தடுக்கக்கூடாது. '' என்றார். உதாரணமாக 300 யானைகள் வாழும் ஒரு காட்டில் ஆண்டுக்கு 10 சதவீதம் யானைகள் இயற்கையாக இறக்கும் எனும்போது, அவற்றுக்கு சிகிச்சையளித்து காப்பாற்றப்படும்பட்சத்தில் 10 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகிவிடும் என்பதை விளக்கும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள், அப்படி அதிகரித்தால் காடு அழியும் ஆபத்து இருப்பதாக கூறினர். ஜிம்பாப்வே போன்ற தென் ஆப்ரிக்கா நாடுகளில் காடுகளின் வளம் பெருமளவில் குறைந்துவிட்ட நிலையில், காட்டுயிர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றை அழிக்கும் முறை இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பெயர் கூற விரும்பாத ஐ.எஃப்.எஸ். அதிகாரி ஒருவர், ''காட்டைக் காப்பதா, காட்டுயிர்களைக் காப்பதா என்றால் காட்டைக் காப்பதுதான் வனத்துறையின் முதல் பணி. காட்டுயிர்களைக் காக்க வேண்டுமென்று, இயற்கையாக, நோய் வாய்ப்பட்ட காட்டுயிர்களுக்கு எல்லாம் காட்டுக்குள் சென்று சிகிச்சை அளிக்க வனத்துறை முயற்சி எடுத்தால் அவற்றின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகி காடே காலியாகிவிடும். காடழிந்தால் அதன்பின் காட்டுயிர்களும் அழிந்துவிடும். அதனால் காட்டுயிர்கள் குறித்த புரிதல் மக்களுக்கு வேண்டும்.'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1evz9dvze9o
  15. அமெரிக்காவின் வரி விதிப்புகளால் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார் - ட்ரம்ப் 07 Jan, 2026 | 04:29 PM “அமெரிக்காவின் வரி விதிப்புகளால் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார்” என்று கூறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “இந்தியப் பிரதமர் மோடி ஒரு மிகச் சிறந்த மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம்” என்றும் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தொடர்ச்சியான எதிர்ப்பினை வெளிப்படுத்தி வரும் அமெரிக்கா இந்திய பொருட்கள் மீதான வரியை 50 வீதமாக உயர்த்தியது. இதை இந்தியா மிகக் கடுமையாக எதிர்த்தது. இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையே அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரத்தில் இந்தியா மீது அதிக வரியை அறவிட என்னால் முடியும் என்று ட்ரம்ப், குடியரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திங்கட்கிழமை (5) தெரிவித்துள்ளார். மேலும் அவர், நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது மோடிக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளார். எனக்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கும் இடையே மிகச் சிறந்த நட்புறவு உள்ளது. ஆனால், இந்தியா அதிக வரி செலுத்துவதால் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார். ஆனால், இப்போது இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது கனிசமாகக் குறைந்துள்ளது. அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் காரணமாக நாம் பணக்காரர்களாகி வருகிறோம். இதை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். இந்த வரி விதிப்புகளால் அமெரிக்கா முன்பை விட பொருளாதார ரீதியாகவும் தேசிய பாதுகாப்பு ரீதியாகவும் வலிமையானதாகவும் மரியாதைக்குரிய நாடாகவும் விளங்குகிறது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/235450
  16. அச்சுறுத்தலாக மாறியுள்ளது 'க்ரோக்' ஏஐ தொழில்நுட்பம் ; பெண்களே விழிப்புடன் இருங்கள் Published By: Digital Desk 3 07 Jan, 2026 | 04:25 PM எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட க்ரோக் (Grok) செயற்கை நுண்ணறிவுத் தளம், பெண்கள் மற்றும் பொதுப் பிராலங்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக கலாநிதி சஞ்சன அத்தொட்டுவ தெரிவித்துள்ளார். அவர் இந்த விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தளம் மூலம் அனுமதியின்றி ஏனையவர்களின் படங்களைப் பயன்படுத்தி ஆபாசமான மற்றும் வன்முறையான உள்ளடக்கங்களை மிக இலகுவாக உருவாக்க முடியும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இலங்கையின் பெண் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து இதுபோன்ற போலிப் படங்கள் உருவாக்கப்படும் அபாயம் உள்ளது. சர்வதேச அளவில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இது குறித்து சட்டரீதியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. எனவே தனிநபர்கள் தங்களின் டிஜிட்டல் தடயங்களைக் குறைத்துக்கொள்ளவும், சமூக வலைதளப் பாதுகாப்பை பலப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப நிறுவனங்கள் இலாபத்தை விட பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட வேண்டிய விடயம் ஒன்றாகும். எலோன் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட குரோக் (Grok) ஏஐ தொழில்நுட்பம், பெண்களின் பொதுவெளிப் படங்களைப் பயன்படுத்தி பல்வேறு அச்சுறுத்தலான மற்றும் தரக் குறைவான உள்ளடக்கங்களை உருவாக்குகிறது. • படங்களை ஆயுதமாக்குதல்: இணையத்தில் பொதுவெளியில் கிடைக்கும் பெண்களின் படங்களை குரோக் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. கூகுள் தேடல், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், பிளிக்கர் (Flickr) போன்ற சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் உள்ள படங்களை இது தரக் குறைவான செயற்கை உள்ளடக்கங்களாக மாற்றுகிறது. • ஆடைகளை நீக்குதல் (Nudification): குரோக்கில் ஒரு பெண்ணின் புகைப்படத்தில் உள்ள ஆடைகளை டிஜிட்டல் முறையில் நீக்க முடியும். ஒரு பெண் புடவை, டி-சர்ட் அல்லது முறையான அலுவலக உடை அணிந்திருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் அவரை உள்ளாடைகளுடனோ அல்லது நிர்வாணமாகவோ குரோக் சித்தரிக்கிறது. • உடல் மாற்றங்கள் மற்றும் போலி வீடியோக்கள்: புகைப்படத்தில் உள்ளவர்களின் உடல் அமைப்பை மாற்றுதல் (குண்டாக அல்லது மெலிதாகக் காட்டுதல்) மற்றும் மார்பக அளவை மாற்றியமைத்தல் போன்ற அச்சுறுத்தலான செயல்களை இது செய்கிறது. மேலும், அந்தப் பெண்கள் செய்யாத செயல்களைச் செய்வது போன்ற குறுகிய போலி வீடியோக்களையும் இது உருவாக்குகிறது. • தனிப்பட்ட முறையில் உருவாக்கப்படும் அச்சுறுத்தல்: இந்தத் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால், இந்த ஆபாசமான அல்லது தரக் குறைவான உள்ளடக்கங்களை எக்ஸ் (X) தளத்தில் பொதுவெளியில் பகிராமலேயே, தனிப்பட்ட முறையில் உருவாக்கித் தரவிறக்கம் செய்ய முடியும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியாமலேயே இத்தகைய படங்கள் உருவாக்கப்பட்டு, வட்ஸ்அப் அல்லது டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் பரப்பப்படலாம். • மிரட்டல் மற்றும் ஒடுக்குமுறை: இத்தகைய போலிப் படங்கள் பெண்களைப் பழிவாங்கவும், மிரட்டிப் பணம் பறிக்கவும் (blackmail/extortion) பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாகப் பெண் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்களைக் குறிவைத்து, அவர்களைப் பொதுவெளியில் பேசவிடாமல் முடக்குவதற்கும் அல்லது அவர்களின் நற்பெயரைக் கெடுப்பதற்கும் இந்த ஏஐ தொழில்நுட்பம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இலகுவான விளக்கம்: குரோக் ஏஐ தொழில்நுட்பம் என்பது ஒரு டிஜிட்டல் மாயாஜாலக் கண்ணாடி போன்றது. ஆனால் இது உண்மையை மறைத்து, ஒருவரின் முறையான படத்தை எடுத்து, அவருக்குத் தெரியாமலேயே அவரை அவமானப்படுத்தும் வகையில் சிதைத்துக் காட்டுகிறது. ஒரு பாதுகாப்பான கேமராவாக இருக்க வேண்டிய தொழில்நுட்பம், இங்கு ஒருவரின் அனுமதியின்றி அவரது உருவத்தை மாற்றியமைக்கும் ஆபத்தான கருவியாக மாறியுள்ளது. குரோக் (Grok) போன்ற ஏஐ தொழில்நுட்பங்களால் பொதுவெளிப் படங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், தற்காத்துக் கொள்ளவும் முக்கிய பரிந்துரைகள் • டிஜிட்டல் தணிக்கை (Audit): உங்கள் சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் பொது டிஜிட்டல் தடயங்களை (digital footprint) உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். இணையத்தில் பொதுவெளியில் உங்களைப் பற்றிய என்னென்ன படங்கள் கிடைக்கின்றன என்பதைச் சரிபார்த்து, உங்கள் தொழில்முறை கடமைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முடிந்தவரை அவற்றை நீக்க வேண்டும் அல்லது அணுகுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். • கணக்குகளைத் தனிப்பட்டதாக்குதல் (Private Accounts): அங்கீகரிக்கப்படாத படப் பயன்பாடு மற்றும் துஷ்பிரயோகத்தைத் தவிர்க்க, சமூக ஊடகக் கணக்குகளை 'பிரைவேட்' (Private) பயன்முறைக்கு மாற்ற வேண்டும்.. • விழிப்புணர்வுடன் இருத்தல்: கூகுள் தேடல் முடிவுகள், பொது பேஸ்புக் ஆல்பங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் கிடைக்கும் எந்தவொரு புகைப்படத்தையும் குரோக் போன்ற தளங்கள் தவறான சித்திரங்களை உருவாக்கப் பயன்படுத்த முடியும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இணையத்தில் இருக்கும் அனைத்து உள்ளடக்கங்களையும் அவை முறையாகச் சரிபார்க்கப்படும் வரை 'செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டிருக்கலாம்' என்ற சந்தேகத்துடனேயே அணுக வேண்டும். • ஆதாரங்களை ஆவணப்படுத்துதல் (Documenting Evidence): உங்களைப் பற்றிய போலி அல்லது ஆபாசமான ஏஐ படங்கள் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அவற்றை முறைப்பாடு அளித்து நீக்க முயற்சிக்கும் முன்பே, ஸ்கிரீன்ஷாட்களை எடுத்து ஆதாரமாகப் பாதுகாத்து வைக்க வேண்டும். • நிறுவனக் கொள்கைகள்: சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் தங்கள் பெண் ஊழியர்களின் புகைப்படங்களை எக்ஸ் (X) போன்ற தளங்களில் பதிவேற்றுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், அத்தகைய பாதிப்புகள் ஏற்படும்போது ஊழியர்களைப் பாதுகாக்கத் தெளிவான நடைமுறைகளை உருவாக்க வேண்டும். எளிமையான விளக்கம்: உங்கள் படங்களை இணையத்தில் பொதுவெளியில் வைப்பது என்பது, உங்கள் வீட்டின் கதவைத் திறந்து வைத்துவிட்டு வெளியே செல்வது போன்றது. யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து எதை வேண்டுமானாலும் மாற்ற முடியும் என்ற நிலை இருக்கும்போது, கதவைப் பூட்டி வைப்பதும் (Accounts private), உள்ளே இருப்பவற்றைச் சரிபார்ப்பதும் (Audit) மிக அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகளாகும். குரோக் ஏஐ 'மன்னிப்பு கேட்டது' என்று பரவிய தகவல்கள் தவறானவை மற்றும் திசைதிருப்பக்கூடியவை என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் உண்மைத்தன்மை குறித்த முக்கிய விவரங்கள் இதோ: • AI-ஆல் உருவாக்கப்பட்ட போலி மன்னிப்பு: குரோக் தளம் எவ்விதமான அதிகாரப்பூர்வ மன்னிப்பையும் கோரவில்லை. இணையத்தில் வைரலான அந்த 'மன்னிப்புக் கடிதம்' ஒரு பயனர் குரோக்கிடம், "நடந்தவற்றை விளக்கி ஒரு உருக்கமான மன்னிப்புக் கடிதத்தை எழுது" (Write a heartfelt apology note...) என்று கட்டளையிட்டதால், அந்த AI தானாக உருவாக்கிய ஒரு பதிலாகும். • நிறுவனத்தின் மௌனம்: ஈலோன் மஸ்க்கோ அல்லது அவரது xAI நிறுவனமோ, இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்பட்ட பாதுகாப்புத் தோல்விகள் அல்லது பெண்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகள் குறித்து எந்தவொரு உண்மையான நிறுவன ரீதியான அங்கீகாரத்தையோ அல்லது மன்னிப்பையோ வழங்கவில்லை. • தவறான வாக்குறுதிகள்: பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்துள்ளதாகவும், அவற்றைச் சரிசெய்து வருவதாகவும் குரோக் வெளியிட்ட முந்தைய அறிக்கைகள் கூட செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. • சட்ட ரீதியான முரண்: சிறுமிகளின் ஆபாசப் படங்களை உருவாக்கியது ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு எதிரானது என குரோக் அந்த ஏஐ கடிதத்தில் ஒப்புக்கொண்டாலும், அது ஒரு இயந்திரத்தின் பதில் மட்டுமே தவிர, நிறுவனத்தின் பொறுப்புணர்வு அல்ல. சுருக்கமாகச் சொன்னால், குரோக் வழங்கியதாகக் கூறப்படும் மன்னிப்பு என்பது ஒரு மென்பொருள் தனக்கு இடப்பட்ட கட்டளைக்காக உருவாக்கிய ஒரு உரை மட்டுமே. இது ஒரு தவறு செய்த நபர் மன்னிப்பு கேட்பது போன்றது அல்ல, மாறாக ஒரு கிளி தான் செய்த தவறுக்காக "மன்னிக்கவும்" என்று சொல்லக் கற்றுக்கொடுக்கப்பட்டுச் சொல்வதைப் போன்றது. அந்தச் சொல்லில் உண்மையான வருத்தமோ அல்லது பொறுப்பேற்போ இல்லை. இந்த அலட்சியம் இலங்கைக்கு மிகவும் ஆபத்தானது. நமது டிஜிட்டல் கல்வியறிவு போதியளவு இல்லாததால் தவறான தகவல்கள் பேஸ்புக், டிக்டொக் மற்றும் வட்ஸ் அப் போன்ற தளங்கள் ஊடாக வேகமாகப் பரவுகின்றன. ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட "நிர்வாண" படங்கள் பரவும்போது, அவை போலியானவை என்பதை நிரூபிக்க எந்த உட்பொதிக்கப்பட்ட டிஜிட்டல் மார்க்கமும் இல்லை, மேலும் சராசரி பார்வையாளருக்கு அவை உண்மையானதாகத் தோன்றும். நற்பெயர் மிகப்பெரிய எடையைக் கொண்ட ஒரு பழமைவாத சமூகத்தில், பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் இருப்பதை அறியும் முன்பே, அத்தகைய படங்கள் வாழ்க்கையை அழித்து குடும்பங்களை அவமானப்படுத்தக்கூடும். எனவே இது தொடர்பில் இலங்கை சட்ட நடவடிக்கை எடுப்பதே சிறந்ததாகும். https://www.virakesari.lk/article/235444
  17. அத தெரண கருத்துப்படங்கள்.
  18. நாட்டின் பல பகுதிகளில் 100 மிமீ பலத்த மழை! Jan 7, 2026 - 04:16 PM கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் நாளை (08) சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பகுதிகளில் விரித்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பொத்துவிலுக்கு தென்கிழக்காக சுமார் 700 கிலோமீற்ற தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமேற்கு திசையில் நாட்டின் கிழக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை நாளை (8) முதல் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் இன்று (7) முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்வதையும் மீன்படி நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://docs.google.com/viewerng/viewer?url=https://ada-derana-tamil.s3.amazonaws.com/news-articles/cmk3w7ugo03neo29nmzwz46ao/documents/WEatger.pdf https://adaderanatamil.lk/news/cmk3w7ugo03neo29nmzwz46ao
  19. இஞ்சியின் முழு பலன்களை பெற அதை நம் உணவில் எவ்வாறு சேர்க்க வேண்டும்? பட மூலாதாரம்,Getty Images 9 மணி நேரங்களுக்கு முன்னர் கர்ப்பம், பதற்றம், வயிற்றுப் புழு தொற்றுகள், பயணத்தின்போது ஏற்படும் வாந்தி எனப் பல விஷயங்கள் அவ்வப்போது நமக்கு பிரச்னை தரலாம். ஆனால், உணவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சில பொருட்கள் அவற்றைச் சரிசெய்ய உதவுமா? அவற்றுக்கு வேறு ஏதேனும் ஆரோக்கியம் தொடர்பான பலன்கள் உண்டா? அப்படிப்பட்ட ஒரு பொருள்தான் இஞ்சி. இது குமட்டல் உள்படப் பல நோய்களை எதிர்த்துப் போராடும் ஒரு காரமான பொருளாக உள்ளது. இது உண்மையிலேயே உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமா? நிபுணர்கள் கூறுவது என்ன? இஞ்சியால் குமட்டலை நிறுத்த முடியுமா? இதன் பின்னுள்ள அறிவியல் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பல ஆய்வுகள் இஞ்சி பலருக்கு குமட்டல் அறிகுறிகளைக் குறைப்பதாக கூறுகின்றன. பிரிட்டன் தேசிய சுகாதார சேவையும் குமட்டலுக்கு இஞ்சி கலந்த தேநீரைக் குடிக்குமாறு பரிந்துரைக்கிறது. ஆனால் இஞ்சி எப்படி இதைச் செய்கிறது? "இதற்குக் காரணம் அதன் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்புப் பண்புகள்தான். இது செரிமான மண்டலத்தில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது. அதன் மூலம் அசௌகரியத்தை போக்கி, வயிற்று உபாதைகளைச் சரிசெய்கிறது" என்று உணவியல் நிபுணரும் பிரிட்டிஷ் உணவியல் சங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான ஆன்னா டேனியல்ஸ் விளக்குகிறார். பல ஆய்வுகள் இஞ்சி மாத்திரைகளில் கவனம் செலுத்தி இருந்தாலும், இஞ்சி பிஸ்கட், இஞ்சி சிரப், இஞ்சி தேநீர் ஆகியவற்றின் செயல்திறனை ஆராயும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இஞ்சி குமட்டல் அறிகுறிகளைக் குறைத்துள்ளதைக் காட்டியுள்ளன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தன்னிடம் வரும் நோயாளிகளில் பலர் இஞ்சி சப்ளிமென்ட்ஸ் எடுத்துக் கொள்வதாகக் கூறுகிறார் பேராசிரியர் கிறிஸ்டன் டெமோருயல் இஞ்சியால் ஏற்படும் நன்மைகள் இஞ்சி குமட்டலுக்கு உதவுவது மட்டுமின்றி, பிற உடல்நலப் பிரச்னைகளிலும் பயனளிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையா? உதாரணமாக, அழற்சியைப் போக்குவது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது போன்றவற்றை அது செய்கிறதா? உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை 'வலுப்படுத்தும்' ஓர் அதிசயப் பொருள் என்று எதுவும் இல்லை. உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்கள், தாதுக்கள் அடங்கிய ஆரோக்கியமான, சமச்சீர் உணவைப் பின்பற்றுவது முக்கியமென வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும், சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களை கொண்டிருப்பதால், சில பொருட்கள் அதற்கு உதவக்கூடும். இஞ்சி அத்தகைய பொருட்களில் ஒன்று என டேனியல்ஸ் நம்புகிறார். "இஞ்சியில் ஜிஞ்சரால் போன்ற உயிரியல் ரீதியாகச் செயல்படும் சேர்மங்கள் உள்ளன. இது சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. சிறிய அளவு, அதாவது ஒரு தேக்கரண்டி அல்லது ஒரு பூண்டுப் பல் அளவு, உங்களுக்குப் பல நன்மைகளை வழங்கும்," என்கிறார் அவர். "அதிலுள்ள அதிகளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற உயிரியல் ரீதியாகச் செயல்படும் சேர்மங்களால், இஞ்சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், நோய்த் தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்," என்று அவர் விளக்கினார். அதன் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளை எடுத்துக்காட்டும் ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஒருவேளை தன்னுடல் தாக்க நோய்கள் (நோயெதிர்ப்பு மண்டலம் உடலைப் பாதுகாப்பதற்குப் பதிலாக ஆரோக்கியமான செல்களை தவறாகத் தாக்கும் நிலை) உள்ளவர்களுக்கு இது மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கலாம். கொலராடோ பல்கலைக் கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வு, இது உடலில் ஏற்படும் அழற்சியில் இருந்து பாதுகாக்க உதவும் என்று பரிந்துரைக்கிறது. பட மூலாதாரம்,Getty Images இத்தகைய அறிகுறிகளுக்கு ஒரு நிவாரணியாக மக்கள் ஏற்கெனவே இஞ்சியை எடுத்துக் கொண்டிருப்பதே, பேராசிரியர் கிறிஸ்டன் டெமோருயல் இந்த ஆய்வை மேற்கொள்ள முடிவு செய்ததற்கான காரணம். "தன்னுடல் தாக்க நோய்களால் பாதிக்கப்பட்ட எனது நோயாளிகளில் பலர் இஞ்சி சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள். இஞ்சி உடலில் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை எப்படி ஏற்படுத்துகிறது என்பதை ஆராயும் ஆய்வுகள் அதிகம் இல்லை." "எனவே, நியூட்ரோபில்ஸ் எனப்படும் ஒரு குறிப்பிட்ட வகை அழற்சி செல்களில் அதன் விளைவைப் பார்ப்பதன் மூலம் இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை நாங்கள் ஆராய விரும்பினோம். முடக்கு வாதம், லூபஸ், ஆன்டிபாஸ்போலிப்பிட் சிண்ட்ரோம் போன்ற பல தன்னுடல் தாக்க நோய்களில் நியூட்ரோபில் செல்கள் அதிகப்படியாகச் செயல்படக்கூடும்." மனித உடலில் அதிகப்படியான நியூட்ரோபில்களை இஞ்சியால் கட்டுப்படுத்த முடியும் என்பதை உறுதி செய்யும் முதல் ஆய்வு எங்களுடையதுதான். இஞ்சியால் கட்டுப்படுத்தப்படக்கூடிய ஒரு குறிப்பிட்ட அழற்சி செல்லை எங்களால் நிரூபிக்க முடிந்ததால், இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு விளைவுகளால் எந்தெந்த மக்கள் அதிகம் பயனடைவார்கள் என்பதைத் துல்லியமாகக் கண்டறிய எங்கள் கண்டுபிடிப்புகள் உதவும். இதன்மூலம், சில தன்னுடல் தாக்க நோய்களின் அறிகுறிகளைக் குறைக்க இஞ்சி உதவக்கூடும் என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும், "எங்கள் ஆய்வில் இஞ்சி சத்து மாத்திரை பயன்படுத்தப்பட்டது. அதே மாதிரியான விளைவை, இஞ்சி தேநீர் அல்லது வெறும் இஞ்சி கொண்டிருக்குமா என்பதை அறிவது கடினம். ஏனெனில் பொதுவாக சத்து மாத்திரைகளுடன் ஒப்பிடும்போது இந்த வகைகளிலான இஞ்சி நுகர்வுகள் மூலம் உடலில் அதன் செறிவு குறைவாக உள்ளது," என்று டெமோரூயல் விளக்குகிறார். "எதிர்கால ஆய்வுகளில் தேநீர் மற்றும் உணவுகளில் உள்ள இஞ்சியின் விளைவையும் ஆராய்வது முக்கியம். ஏனெனில் இது முக்கியமானதாக இருக்கலாம். எங்கள் ஆய்வில் தன்னுடல் தாக்க நோய் இல்லாதவர்களும் சேர்க்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது." "தன்னுடல் தாக்க நோய்கள் உள்ளவர்களிடமும், குறிப்பாக முடக்கு வாதம், லூபஸ், வாஸ்குலிடிஸ், ஆன்டிபாஸ்போலிப்பிட் சிண்ட்ரோம் போன்ற அதிகப்படியான நியூட்ரோபில்கள் இருப்பதை வைத்து வகைப்படுத்தப்படும் தன்னுடல் தாக்க நோய்கள் உள்ளவர்களிடமும் இதேபோன்ற விளைவுகளைக் காண்போம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் அந்த ஆய்வுகளை நாங்கள் இன்னும் விரிவாகச் செய்ய வேண்டியுள்ளது." பட மூலாதாரம்,Getty Images இஞ்சி வலி நிவாரணியாக செயல்படுமா? "இஞ்சிக்கு வலி நிவாரணிப் பண்புகளும் உள்ளன. அது தசை வலி, புண் ஆகியவற்றைத் தணிக்க உதவும்" என்கிறார் டேனியல்ஸ். உடற்பயிற்சியால் ஏற்படும் தசை வலியில் கவனம் செலுத்தும் ஆய்வுகளால் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓர் ஆய்வின்படி, இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு விளைவு தீவிர உடல் செயல்பாடுகளுக்குப் பிறகு ஏற்படும் தசை வலியைக் குறைக்கும். மற்றோர் ஆய்வில், உடல் வலிமைப் பயிற்சி(Strength training) செய்தவர்கள் பச்சை இஞ்சி அல்லது சூடுபடுத்தப்பட்ட இஞ்சியை எடுத்துக் கொள்வது தசை வலியைக் குறைக்கிறதா என்று ஆராயப்பட்டது. இஞ்சியால் கிடைக்கும் பிற நன்மைகள் "இஞ்சி கொழுப்பு அளவையும் ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுவதாகவும் அறியப்படுகிறது. இதற்கு இதயத்தைப் பாதுகாக்கும் பண்புகள் உள்ளன. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்" என்கிறார் டேனியல்ஸ். இத்தாலியில் உள்ள கட்டானியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பயாஜியோ ஃபாலிகோ இந்தக் கூற்றுகளை ஆராய்ந்துள்ளார். "ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தெற்காசியாவின் அன்றாட சமையலிலும் பாரம்பரிய சீன மருத்துவத்திலும் இஞ்சி முக்கியமானதாக இருந்து வருகிறது. உணவுக்கு சுவையையும் நறுமணத்தையும் சேர்ப்பதுடன், ஆஸ்துமா, காய்ச்சல், அஜீரணம், இரைப்பைக் குடல் அசௌகரியம் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க இது வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆஸ்துமா, அஜீரணம் உள்படப் பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க இஞ்சி வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறுகிறார் பேராசிரியர் பயாஜியோ ஃபாலிகோ ஃபாலிகோவின் ஆய்வு விரிவானதாக இருந்தது. இஞ்சியின் 'உயிரியல் ரீதியாகச் செயல்படும் கூறுகளை' ஆராய்ந்து, அவை உண்மையில் உடல்நலப் பிரச்னைகளை எதிர்த்துப் போராட உதவுகின்றனவா என்பதை அவர் அறிய விரும்பினர். "ஜிஞ்சரால் என்பது இஞ்சியில் உள்ள ஒரு சேர்மமாகும். இது அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது," என்று அவர் விளக்குகிறார். "உயிரியல் ரீதியாகச் செயல்படும் மற்றுமொரு சேர்மம் '6-ஷோகோல்'. இதுவும் அழற்சி எதிர்ப்பு, புண் எதிர்ப்பு, புரோஸ்டாக்லாண்டின் எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, ஊடுருவல் எதிர்ப்பு போன்ற பல மருந்தியல் மற்றும் சுகாதாரப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு, இதுவொரு சக்தி வாய்ந்த சளி நீக்கி அல்லது திசு எதிர்ப்பு விளைவைக் கொண்டுள்ளது. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்." இது தொடர்பாக மனிதர்களிடையே பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஒருபுறம் இருக்க, மறுபுறம் இஞ்சி உங்கள் அனைத்து மருத்துவப் பிரச்னைகளையும் தீர்த்துவிடும் என்று நினைத்துவிட வேண்டாமென ஃபாலிகோ எச்சரிக்கை விடுக்கிறார். "இஞ்சி தொடர்பாக இரண்டு விஷயங்களில் நான் உறுதியாக உள்ளேன். முதலாவதாக, ஓர் உணவுப் பொருளின் லேபிளில் இஞ்சியின் படம் இருப்பதாலேயே அந்தப் பொருளால் பயன் கிடைக்கும் என்று அர்த்தமல்ல. இரண்டாவதாக, நீங்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்துவிட்டு, அதை இஞ்சியைக் கொண்டு ஈடுசெய்ய முடியாது." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இஞ்சியின் நன்மைகளை முழுமையாகப் பெற விரும்பினால் அதைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுமாறு டேனியல்ஸ் பரிந்துரைக்கிறார் இஞ்சியின் முழு பலன்களை பெற அதை நம் உணவில் எவ்வாறு சேர்க்க வேண்டும்? "இஞ்சியை உரிக்க வேண்டிய அவசியமில்லை" என்கிறார் தி குட்னஸ் ஆஃப் ஜிஞ்சர் அண்ட் டர்மரிக் என்ற சமையல் புத்தகத்தின் ஆசிரியரான எமிலி ஜோன்சென். "அதன் தோலை நன்றாகத் தேய்த்து சுத்தம் செய்து, உங்கள் விருப்பப்படி நறுக்கிக் கொள்ளலாம் அல்லது துருவிக் கொள்ளலாம்" என்றும் அவர் குறிப்பிட்டார். உணவில் புதிதாக இஞ்சியை சேர்த்துக் கொள்பவர்களாக இருந்தால், "அதற்கு வலுவான சுவையும் காரத்தன்மையும் உள்ளது. எனவே அதை உங்கள் சமையலில் சிறிது சிறிதாகச் சேர்க்கத் தொடங்குங்கள்" என்று ஜோன்சென் அறிவுறுத்துகிறார். "முதலில் அதை ஒரு பானத்தில் முயன்று பாருங்கள்; ஒரு குவளையில் சிறிது இஞ்சியைத் துருவி, ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து, அதன் மீது சூடான நீரை ஊற்றினால், ஒரு சுவையான, இதமான பானம் தயார்." அதன் பிறகு, அதை வதக்கிய காய்கறிகள், சாப்பாடு வகைகள் போன்ற பிற உணவுகளில் சேர்க்கத் தொடங்கலாம். இஞ்சியைப் பயன்படுத்தி சமைக்கும்போது அதன் மருத்துவ பலன்களை முழுமையாகப் பெற விரும்பினால், அதைச் சிறிய துண்டுகளாக நறுக்குமாறு டேனியல்ஸ் பரிந்துரைக்கிறார். "இது செல் சுவர்களை உடைத்து, அதன் சத்துகளை எளிதில் உடல் உறிஞ்சிக்கொள்ள உதவுகிறது. எனவே, துருவிய அல்லது பொடியாக நறுக்கிய இஞ்சியை தேநீரில் சேர்ப்பது நல்லது." இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வதற்கான மற்றும் சில வழிகளையும் அவர் பரிந்துரைக்கிறார்: "துருவிய இஞ்சி, ஆலிவ் எண்ணெய், வினிகர், தேன், ஒரு சிட்டிகை சோயா சாஸ் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சாலட் டிரஸ்ஸிங் தயாரிக்கலாம் அல்லது பொடியாக நறுக்கிய அல்லது துருவிய இஞ்சியை நிறைய காய்கறிகள் மற்றும் கடல் உணவு, மீன், கோழி அல்லது டோஃபு போன்ற கொழுப்பற்ற புரதங்களுடன் சேர்த்து வதக்கிய உணவுகளில் சேர்க்கலாம்." "கருப்பு மிளகு மற்றும் மஞ்சளில் முறையே பைபரின் மற்றும் குர்குமின் எனப்படும் இயற்கைச் சேர்மங்கள் உள்ளன. இந்தச் சேர்மங்கள் இஞ்சியின் சத்துகளை உடல் சிறப்பாக உறிஞ்சிக்கொள்ள உதவுகின்றன. இதன்மூலம் உடலுக்கு இஞ்சியில் இருந்து அதிகப் பலன் கிடைக்கிறது. எனவே இந்த மூன்றையும் ஒரு சூடான பானத்தில் சேர்ப்பது, இஞ்சியின் பயன் திறம்படக் கிடைப்பதற்கு உதவும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjw143gd5djo
  20. கிரீன்லாந்தை கையகப்படுத்த இராணுவத்தை பயன்படுத்த அமெரிக்கா கலந்துரையாடல் Published By: Digital Desk 3 07 Jan, 2026 | 04:26 PM கிரீன்லாந்து நாட்டை கையகப்படுத்த இராணுவத்தை பயன்படுத்த அமெரிக்கா கலந்துரையாடி வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. நேட்டோ உறுப்பு நாடான டென்மார்க்கின் அரை தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை கையகப்படுத்துவது "தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் " என வெள்ளை மாளிகை பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை எதிர்ப்பு தெரிவிக்கும் டென்மார்க்கிற்கு ஆதரவாக ஐரோப்பியத் தலைவர்கள் ஒரு கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்தநிலையில் "அமெரிக்கா தனது நட்பு நாடான டென்மார்க் மீது இராணுவத் தாக்குதலை நடத்தினால், நேட்டோ கூட்டமைப்பு அங்கேயே முடிவுக்கு வரும்" என டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகளாவிய பாதுகாப்பை சீர்குலைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதேநேரம், கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பிரடெரிக் நீல்சன் (Jens-Frederik Nielsen) கருத்து தெரிவிக்கையில், "கிரீன்லாந்து ஒன்றும் விற்பனைக்குரிய பொருள் அல்ல; இது எமது தாயகம். ஆக்கிரமிப்பு என்ற கற்பனைகளை அமெரிக்கா கைவிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 57,000 பேரை கொண்ட கிரீன்லாந்தில் 1979 ஆம் ஆண்டு முதல் விரிவான சுயாட்சியைக் கொண்டுள்ளது. எனினும், பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார கொள்கை டென்மார்க் கைகளிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235449
  21. இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் மீண்டும் விளக்கமறியலில் Jan 7, 2026 - 05:16 PM இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 23 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 27, ஜனவரி 2 மற்றும் ஜனவரி 3 ஆம் திகதிகளில் கடற்படையினால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சந்தேகநபர்கள் இன்று (7) காலை சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து, அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmk3ydurf03nho29ns77o2ssd
  22. கடன் மறுசீரமைப்பு: இன்று கைச்சாத்தான முக்கிய ஒப்பந்தம்! Jan 7, 2026 - 01:53 PM வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் ஒரு பகுதியாக, ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், அதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் இந்தச் செயன்முறையை விரைவாக நிறைவுசெய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது. உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்ததன் பின்னரும், இருதரப்பு கலந்துரையாடல்கள் மூலமாகவும், நிலுவையிலுள்ள கடன்களை மறுசீரமைப்பதன் ஊடாக இலங்கைக்கு கடன் நிவாரண நடவடிக்கையொன்றை வழங்க ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசு இணக்கம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில், இந்த இருதரப்பு ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும், ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசின் சார்பில் சாரா ஹெசல்பாத் (Sarah Hasselbarth) அவர்களும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ் மறுசீரமைக்கப்படவுள்ள மதிப்பிடப்பட்ட கடன் தொகை சுமார் 188 மில்லியன் யூரோக்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் ஊடாக ஜேர்மனிக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் வலுவான மற்றும் நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வளர்த்துக்கொள்ள முடிவதுடன், ஜேர்மன் அரசாங்கம் நீண்ட காலமாக வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு இலங்கை அரசாங்கம் தனது நன்றியையும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmk3r45o903n6o29nn4elbpql
  23. ஹெட், ஸ்மித் குவித்த சதங்களின் உதவியுடன் பலமான நிலையில் அவுஸ்திரேலியா Published By: Vishnu 06 Jan, 2026 | 09:53 PM (நெவில் அன்தனி) சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ஐந்தாவதும் கடைசியுமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ட்ரவிஸ் ஹெட், பதில் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் குவித்த அபார சதங்களின் உதவியுடன் அவுஸ்திரேலியா பலமான நிலையை அடைந்துள்ளது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (06) காலை தனது முதலாவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்களை இழந்து 518 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் மீதம் இருக்க 134 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது. மூன்றாம் நாள் காலை மொத்த எண்ணிக்கை 234 ஓட்டங்களாக இருந்தபோது இராக்காப்பாளன் மைக்கல் நேசர் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவர் 3ஆவது விக்கெட்டில் ட்ரவிஸ் ஹெட்டுடன் 72 ஓட்டங்களைப் பகிர்ந்தார். தொடர்ந்து ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்ளைப் பகிர்ந்திருந்தபோது ட்ரவிஸ் ஹெட் ஆட்டம் இழந்தார். 166 பந்துகளை எதிர்கொண்ட ட்ரவிஸ் ஹெட் 24 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 163 ஓட்டங்களைக் குவித்தார். அவரது ஆட்டம் இழப்புடன் சீரான இடைவெளியில் 3 விக்கெட்களை அவுஸ்திரேலியா இழந்தது. உஸ்மான் கவாஜா (17), அலெக்ஸ் கேரி (16), கெமரன் க்றீன் (37) ஆகியோர் ஆட்டம் இழந்தனர். உஸ்மான் கவாஜாவுடன் 5ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களையும் கெமரன் க்றீனுடன் 7ஆவது விக்கெட்டில் 71 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் பகிர்ந்தார். தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித், போ வெப்ஸ்டர் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஸ்டீவன் ஸ்மித் மிகவும் நிதானத்துடன் 205 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 129 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். போ வெப்ஸ்டர் ஆட்டம் இழக்காமல் 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். பந்துவீச்சில் ப்றைடன் கார்ஸ் 108 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பென் ஸ்டோக்ஸ் 87 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். மனித நேயத்தை எடுத்தியம்பும் இளஞ்சிவப்பு டெஸ்ட் கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா, சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கம், மெக்ரா அறக்கட்டளை ஆகியன இணைந்து 2009இலிருந்து இளஞ்சிவப்பு டெஸ்ட் போட்டியை உலக விளையாட்டரங்கில் மிகப் பெரிய காருண்ய பணிக்காக பயன்படுத்தி வருகின்றன. கிரிக்கெட் சமூகம் மற்றும் அவுஸ்திரேலியா தேசத்தின் தாராள மனப்பான்மையின் மூலம் அவுஸ்திரேலியா முழுவதிலிருந்தும் இந்த இளஞ்சிவப்பு டெஸ்ட் போட்டி ஊடாக உலகின் முன்னணி புற்றுநோய் மருத்துவமனைக்கு உதவிகள் குவிந்து வருகிறது. இந்த மனித நேயத்துக்காக மெக்ரா தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டதுடன் பெருமளவிலான இரசிகர்கள் இளஞ்சிவப்பு நிற உடைகளை அணிந்திருந்தனர். கிரிக்கெட் வீரர்களின் இலக்கங்களும் விக்கெட்களும் இளஞ் சிவப்பு நிறத்தில் இருக்கின்றமையும் இந்த டெஸ்ட் போட்டியின் சிறப்பம்சமாகும். https://www.virakesari.lk/article/235401
  24. தரையிறங்கும் போது விபரீதம்; நுவரெலியா ஏரியில் வீழ்ந்த விமானம் Jan 7, 2026 - 12:45 PM நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) ஒன்று இன்று (07) பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளையும், ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தவர்கள் மீட்டுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmk3ooy5e03n3o29not8sacku

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.