Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வி: டெஸ்ட் சாம்பியன் புள்ளிப் பட்டியல் எவ்வாறு மாறியுள்ளது? பட மூலாதாரம், Getty Images 16 நவம்பர் 2025, 11:06 GMT தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி வென்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கொல்கத்தா டெஸ்ட் போட்டி பவுலர்களுக்கு சாதகமாகவும் பேட்டர்களுக்கு சவாலாகவும் அமைந்தது. போட்டி தொடங்கிய மூன்றாவது நாளிலேயே முடிவுற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் வெற்றிக்கு தென் ஆப்ரிக்க அணி 124 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் 35 ஓவர்களுக்குள்ளாகவே இந்திய அணி சுருண்டுவிட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த தென் ஆப்ரிக்க அணியின் தெம்பா பவுமாவும், அந்த அணியின் பவுலர் சைமன் ஹார்மரும் தான் இந்த வெற்றிக்கு அடித்தளமிட்டனர். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சார்பாக வாஷிங்டன் சுந்தர் மட்டுமே அதிகபட்சமாக 29 ரன்கள் அடித்திருந்தார். முன்னதாக சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் பவுலர்கள் தென் ஆப்ரிக்க அணியை 153 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். ஆட்டத்தை மாற்றிய பவுமாவின் அரைசதம் இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்க பேட்டர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது. ஒருபுறம் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தாலும் மறுமுனையில் பவுமா நிலைத்து ஆடினார். நிதானமாக ஆடி அவர் அரைசதம் அடித்த நிலையில் தென் ஆப்ரிக்க அணியின் ஸ்கோர் 150-ஐ தாண்டியது. அந்த அணியில் பவுமா அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்திருந்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய கோர்பின் போஷ் 25 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்க அணி 153 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 124 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மூன்று நாட்களில் 28 விக்கெட்டுகள் கொல்கத்தா டெஸ்ட் போட்டி பேட்டர்களுக்கான சோதனைக் களமாக இருந்தது என்றே சொல்லலாம். ஏனென்றால் இரண்டரை நாட்களில் இந்தப் போட்டி முடிவுக்கு வந்துள்ளது. 38 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன. (முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கின் போது காயமடைந்து வெளியேறிய இந்திய கேப்டன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் ஆட வரவில்லை) இந்தப் போட்டி முழுவதிலும் 220 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டுள்ளன. இரண்டு அணிகளுமே ஒரு நாள் முழுக்க பேட்டிங்கில் நிலைத்து ஆடவில்லை. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்க அணி முதல் நாளிலேயே 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாளில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கொல்கத்தா டெஸ்ட் போட்டி பேட்டர்களுக்கான சோதனைக் களமாக இருந்தது என்றே சொல்லலாம். இந்திய அணியாலும் ஒரு நாள் முழுக்க களத்தில் நிலைக்க முடியவில்லை. இரண்டாவது நாளில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அன்றே இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட்டுகள இழந்தது. மூன்றாவது நாளில் தென் ஆப்ரிக்க அணி மீதமுள்ள 3 விக்கெட்டுகளையும் இழந்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து 9 விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து 9 விக்கெட்டுகளை இழந்தது. முதல் இன்னிங்ஸில் 4 ரன் எடுத்திருந்த போது காயத்தால் வெளியேறிய அணியின் கேப்டன் சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடவில்லை. அவர் பேட்டிங் ஆட முடியாத நிலை ஏற்பட்டது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக அமைந்தது. இந்திய சுற்றுப்பயணத்தில் தென் ஆப்ரிக்க 2 டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22-ஆம் தேதி கௌகாத்தியில் நடைபெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல் இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா நான்காவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இந்திய அணி 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்விகளைப் பெற்றுள்ளது, ஒரு போட்டியை டிரா செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. நடப்புச் சாம்பியனான தென் ஆப்ரிக்கா இரண்டாவது இடத்திலும் இலங்கை அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 என்கிற கணக்கில் தென் ஆப்ரிக்க அணியை தோற்கடித்திருந்தால் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களுக்குள் முன்னேறும் வாய்ப்பு இருந்தது. அதற்கு இனிமேல் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5ypn7yvl5do
  2. சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை Nov 16, 2025 - 03:40 PM சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணம் அடைந்துள்ளமையை கருத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பருவம் நாளை (17)தொடங்கி ஜனவரி மாதம் 20ஆம் திகதி வரை 65 நாட்கள் நடக்கிறது. இதனை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் போர்டு வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கேரள மாநில சுகாதாரத்துறை பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேங்கிய நீரில் வாழும் அமீபாவால் மூளை காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதால், ஐயப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும் என்றும், குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பக்தர்கள் கண்டிப்பாக கொதிக்க வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும் என்றும், சபரிமலை உள்ளிட்ட இடங்களில் திறந்த வெளிகளில் மலம் கழிக்க தடை இருப்பதால், சுகாதாரமான கழிப்பறைகளை பக்தர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து சபரிமலைக்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmi1k1beg01nro29n4srza1bj
  3. 16 Nov, 2025 | 05:05 PM (இராஜதுரை ஹஷான) கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக் கற்க மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி, 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தக் கடன் திட்டத்தின் கீழ், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டமளிப்பு நிறுவனங்கள் வழங்கும் 131 பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை 2025.11.30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. https://www.virakesari.lk/article/230502
  4. அசலங்க, வனிந்து வெளியேற்றம்; குசல் மெந்திஸ் இன்று தலைவர்! Nov 16, 2025 - 12:59 PM இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதியான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. காய்ச்சல் காரணமாக அணித் தலைவர் சரித் அசலங்க இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக குசல் மெந்திஸ் இன்றைய போட்டியில் தலைவராகக் கடமையாற்றுவார். மேலும், வனிந்து ஹசரங்க காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. இளம் வீரர் பவன் ரத்நாயக்க இன்று ஒருநாள் போட்டியில் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmi1eajl801nlo29no5yibreb
  5. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஒரே நாளில் 1,115 பேர் கைது Nov 16, 2025 - 11:20 AM போதைப்பொருள் ஒழிப்புக்கான "முழு நாடுமே ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் 1,131 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் 1,115 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பின்வரும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன: ஹெரோயின்: 531 கிராம், ஐஸ் : 754 கிராம், கஞ்சா: 8 கிலோ 953 கிராம், போதை மாத்திரைகள்: 249 மாத்திரைகள் உட்பட பல போதைப்பொருட்கள். மேலும், 31 சந்தேகநபர்களுக்குத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 63 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். https://adaderanatamil.lk/news/cmi1argth01nio29n2zjtv146
  6. கடும் மழை குறித்து எச்சரிக்கை அறிவிப்பு Nov 16, 2025 - 01:56 PM கடும் மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (16) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு அருகில் நிலவும் குறைந்த அழுத்தப் பகுதி காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். அந்தப் பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிக கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடும் மழை, பலத்த காற்று மற்றும் பலத்த இடி மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmi1gbffs01nno29n8exj51qq
  7. இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா 30 ஓட்டங்களால் அபார வெற்றி; இந்தியாவுக்கு எதிராக கடந்த 15 வருடங்களில் தென் ஆபிரிக்கா ஈட்டிய முதல் வெற்றி Published By: Digital Desk 3 16 Nov, 2025 | 04:03 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்று நாட்களுக்குள் முடிவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா 30 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இந்தியாவுக்கு எதிராக கடந்த 15 வருடங்களில் தென் ஆபிரிக்கா ஈட்டிய முதலாவது டெஸ்ட் வெற்றி இதுவாகும். பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவால் முதல் இன்னிங்ஸில் பெற்ற 189 ஓட்டங்களே அதிகபட்ச மொத்த எண்ணிக்கையாக இருந்தது. எவ்வாறாயினும், 124 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 93 ஓட்டங்களுக்கு சுருண்டு மிக மோசமான தோல்வியைத் தழுவியது. கழுத்துப் பகுதியில் உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய அணித் தலைவர் ஷுப்மான் கில் இந்தப் போட்டியில் நேற்றிலிருந்து விளையாடவில்லை. இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட சுதந்திரக் கிண்ண இருதரப்பு தொடர் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் ஆகியவற்றில் தென் ஆபிரிக்கா 1 - 0 என்ற ஆட்ட வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. முதல் இரண்டு நாட்களில் தடுமாற்றத்தை எதிர்கொண்டு பரிதாபகரமான நிலையில் தென் ஆபிரிக்கா இருந்ததால் இந்தியா அதன் சொந்த மண்ணில் சாதித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா முன்னிலையில் இருந்ததால் அணி வீரர்களும் இரசிகர்களும் வெற்றிபெற்று விடலாம் என எண்ணினர். ஆனால், அணித் தலைவர் டெம்பா பவுமா 3 மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி பெற்ற ஆட்டம் இழக்காத அரைச் சதமும் சுழல்பந்து வீச்சாளர் சைமன் ஹாமன் இரண்டாவது தடவையாக பதிவுசெய்த 4 விக்கெட் குவியலும் தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு வழிவகுத்தன. போட்டியின் மூன்றாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 93 ஓட்டங்கள் என்ற இக்கட்டான நிலையிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா சகல விக்கெட்களையும் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. கடைசி 3 விக்கெட்களில் தென் ஆபிரிக்கா பெற்ற 60 ஓட்டங்கள் அதன் வெற்றிக்கான திருப்புமுனையாக அமைந்தது. 29 ஓட்டங்களிலிருந்து தனது இன்னிங்ஸைத் தொடர்ந்த டெம்பா பவுமா மிகவும் நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் மொத்தமாக 183 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடி 136 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகளை மாத்திரம் அடித்து 55 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவர் கோபின் பொஷ்ஷுடன் 8ஆவது விக்கெட்டில் பெறமதிமிக்க 44 ஓட்டங்களைப் பகிர்ந்தார். கோபின் பொஷ் 25 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரைவிட வேறு எவரும் 15 ஓட்டங்களைத் தொடவில்லை. பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் 2 ஓவர்கள் மாத்திரம் வீசிய மொஹம்மத் சிராஜ் 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 124 ஓட்டங்கள் என்ற மிக இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி இந்தியா 34.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 93 ஓட்டங்களைப் பெற்று தொல்வி அடைந்தது. இந்திய துடுப்பாட்டத்தில் வொஷிங்டன் சுந்தர் 31 ஓட்டங்களையும் அக்சார் பட்டேல் 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். பந்துவீச்சில் சைமன் ஹாமர் 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 14 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். மாக்கோ ஜென்சன் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கேஷவ் மஹாராஜ் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 159 ஓட்டங்களையும் இந்தியா முதல் இன்னிங்ஸில் 189 ஓட்டங்களையும் பெற்றன. இப் போட்டியில் 51 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை வீழ்த்திய சைமன் ஹாமர் ஆட்டநாயகனாகத் தெரிவானார். https://www.virakesari.lk/article/230500 RESULT 1st Test, Eden Gardens, November 14 - 16, 2025, South Africa tour of India South Africa 159 & 153 India (T:124) 189 & 93 South Africa won by 30 runs Player Of The Match Simon Harmer, SA 4/30 & 4/21
  8. வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - பொதுமக்களிடம் உதவி கோரல் Nov 16, 2025 - 08:07 AM வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தொடர்பில் இந்தச் சந்தேகநபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது சம்பந்தமாக ஏதேனும் தகவல் தெரிந்தால், பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். பொத்துவில் பொலிஸ் நிலையம்: 063 2248022 பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி: 071 8591168 https://adaderanatamil.lk/news/cmi13v8p801ndo29nh6xj9vbz
  9. இன்றைய வானிலை Nov 16, 2025 - 06:49 AM நாட்டிற்கு கிழக்காக விருத்தியடைந்த ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். https://adaderanatamil.lk/news/cmi112n8x01nao29n1wz9zw5s
  10. கடற்கரைக்கு முதல் முறையாக கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்! Nov 16, 2025 - 12:01 PM மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரைப் பகுதியை நோக்கி நேற்றைய தினம் (16) மதியம் ஒரு தொகுதி டொல்பின் மீன்கள் (Dolphins) கூட்டமாக வந்து சேர்ந்தன. இந்தச் சம்பவத்தை அறிந்த அப்பகுதி மீனவர்கள், பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் அங்கு சென்று பார்வையிட்டதோடு, சிறுவர்களுடன் டொல்பின்கள் விளையாடியதை அவதானிக்க முடிந்தது. மன்னார் மாவட்டத்தில் கரையோரப் பகுதிக்கு இந்த டொல்பின் மீன் இனம் கூட்டமாக வருகை தந்தமை இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நேரம் இலுப்பைக்கடவை கடற்கரையோரங்களில் கூட்டமாகச் சுற்றித் திரிந்த குறித்த டொல்பின் மீன்கள் தமது இருப்பிடம் நோக்கிச் செல்ல சில மீனவர்கள் உதவி செய்தனர். இந்த நிலையில் குறித்த டொல்பின் மீன்கள் மீண்டும் கூட்டமாக தமது இருப்பிடத்தை நோக்கிச் சென்றன. இந்த அரிய காட்சியை மீனவர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளில் காணொளியாகப் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmi1c8otj01njo29nek042g41
  11. Published By: Vishnu 16 Nov, 2025 | 01:41 AM (நெவில் அன்தனி) கத்தார், தோஹா வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (15) நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகள் ரி20 கிரிக்கெட்டின் ஏ குழு போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியிடம் 3 விக்கெட்களால் இலங்கை ஏ அணி தோல்வி அடைந்து ஏமாற்றம் அடைந்தது. யாழ். மைந்தன், மத்திய கல்லூரியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பந்துவீச்சில் 3 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து பிரகாசித்தபோதிலும் அது பலனற்றுப் போனது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. மிலன் ரத்நாயக்க (41), நுவனிது பெர்னாண்டோ (39), அணித் தலைவர் துனித் வெல்லாலகே (33), விஷேன் ஹலம்பகே (28) ஆகிய நால்வரே துடுப்பாட்டத்தில் அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர். ஆப்கான் பந்துவீச்சில் பிலால் சமி 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஏ.எம். கஸன்பார் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் ஏ அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இதில் சிதிக்குல்லா அத்தல் 54 ஓட்டங்களையும் இம்ரான் 34 ஓட்டங்களையும் அணித் தலைவர் தார்விஷ் ரசூலி 32 ஓட்டங்களையும் காய்ஸ் அஹ்மத் ஆட்டம் இழக்காமல் 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 4 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: பிலால் சமி https://www.virakesari.lk/article/230450
  12. கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 15 நவம்பர் 2025 கோவை நகரில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மற்றும் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தி வந்த 10 ஏக்கர் காலியிடத்தை ரூ.76 கோடிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஏலத்தில் விட அறிவிப்பு வெளியிட்டது, அரசியல் ரீதியான வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஆட்சியாளர்கள் யார் வந்தாலும், ஏழைக்குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலான விளையாட்டு மைதானங்கள் புதிதாக உருவாக்கப்படாமல் இருப்பதாக விளையாட்டு அமைப்பினர் மற்றும் பொது ஒதுக்கீட்டு இடங்கள் பாதுகாப்பு அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக கோவையில் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தும் காலியிடத்தை ஏலம் விடும் நடவடிக்கையை வீட்டு வசதி வாரியம் நிறுத்திவைத்துள்ளது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட கோவைப்புதுார் பகுதியின் மையப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவிலான காலி மைதானம் உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இந்த இடம், பல ஆண்டுகளாக காலியாக இருப்பதால் அந்த இடத்தில் காலையிலும், மாலையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். இதற்காக கோவை மாநகராட்சி சார்பில், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன. விளையாட்டு மைதானத்திற்காக அரசியல் மோதல்! அதேபோன்று சுற்றுவட்டாரத்திலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் பல்வேறு குடியிருப்புகளைச் சேர்ந்த ஏராளமான சிறுவர்கள், இளைஞர்கள் இந்த இடத்தில் கிரிக்கெட், கால்பந்து, பேட் மிண்டன், விளையாடுகிறார்கள். விடுமுறை நாட்களில் இங்கே குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்களால் இந்த மைதானம் நிரம்பி வழியும். மாநகராட்சியுடன் இணைந்து குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டுச் சங்கங்களும் பராமரித்து வந்த இந்த மைதானத்தில் நிறைய விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் நடப்பது வழக்கமாகவுள்ளது. இந்நிலையில் இந்த காலியிடத்தை ரூ.76 கோடிக்கு ஏலம் விடுவதாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கடந்த அக்டோபர் 9 ஆம் தேதியன்று டெண்டர் நோட்டீஸ் விட்டது. இதன்படி நவம்பர் 12 அன்று ஏலம் நடப்பதாக இருந்தது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது ஒரு வீரரை கூட இழக்காமல் முகலாயர்களை வீழ்த்தி இந்தியாவை வென்ற 'ஷேர்ஷா சூரி' ஒருவர் கூறுவது உண்மையா பொய்யா என்று கண்டுபிடிக்க அறிவியல் கூறும் வழி "பாலில்லாமல் தயாரான ரசாயன நெய்" - திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரத்தில் கசிந்த ஆவணங்கள் 36 வயது தேஜஸ்வி, 74 வயது நிதிஷ் குமாரிடம் தோற்க காரணம் என்ன? End of அதிகம் படிக்கப்பட்டது பல ஆண்டுகளாக பொதுமக்கள் மைதானமாகப் பயன்படுத்தி வந்த இந்த இடத்தை விளையாட்டு மைதானமாக மேம்படுத்தித்தர வேண்டுமென்று பல தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த நோட்டீஸ் அறிவிப்பு, கோவை தெற்கு பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மைதானமாகப் பயன்படுத்தும் அந்த இடம் மொத்தம் 10.79 ஏக்கர் என்பதும், அவற்றில் 4.54 ஏக்கர் இடம் (1,97,916 சதுரஅடி பரப்பு) மருத்துவமனை உபயோகத்துக்காகவும், 6.25 ஏக்கர் இடம் (2,72,403 சதுரஅடி பரப்பு) பள்ளிக்கூடம் கட்டுவதற்கான உபயோகத்துக்காகவும் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த ஏல அறிவிப்பில் தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஏலத்தை நிறுத்த வேண்டுமென்று கோவைப்புதுார் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் அந்த வழக்கில், இந்த மனைப்பிரிவை உருவாக்கியதன் அடிப்படையில், இந்த நிலத்தின் உரிமையாளர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்பதால், வாரியமே அதை முடிவு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. ஆனாலும் பல ஆண்டுகளாக இந்த இடத்தை ஏலம் விடாமல் வாரியம் தவிர்த்துவந்தது. கடந்த ஆண்டில் தமிழகம் முழுவதும் வீட்டு வசதி வாரியத்தால் குடியிருப்புத் திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படாத 7 ஆயிரம் ஏக்கர் நிலங்களை, மீண்டும் நில உரிமையாளர்கள் வசமே ஒப்படைக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இதே போன்று அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் உள்ள விற்பனை செய்யப்படாத இடங்களை விற்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் காலியிடங்களை ஏலம் விடும் பணியை வாரியம் துவங்கியது. நவம்பர் 12 அன்று ஏலம் விடுவதாக இருந்த நிலையில், அதற்கு 3 நாட்களுக்கு முன்பே, திமுகவினர் இதுபற்றி துறை அமைச்சர் முத்துசாமியிடம் பேசி, ஏலத்தைத் தடுத்து நிறுத்திவிட்டதாக மக்களிடம் தெரிவித்தனர். கோவைப்புதுார் பகுதிகளில் மக்களுக்கு இனிப்புகளை வழங்கி, பல இடங்களில் பிளக்ஸ் பேனர்களை வைத்து, பட்டாசு வெடித்தனர். ஆனால் ஏலம் கைவிடப்பட்டதாகவோ, மைதானம் அதே நிலையில் நீடிக்குமென்றோ அரசு அல்லது வீட்டுவசதி வாரியம் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. படக்குறிப்பு, மைதானத்தை மீட்டு விட்டதாக அறிவித்து பட்டாசு வெடித்த திமுகவினர் இதனால் ஏலத்துக்கு முந்தைய நாளான நவம்பர் 11 ஆம் தேதியன்று, அதிமுக சார்பில் 'இந்த மைதானத்தை ஏலம் விடும் திட்டத்தைக் கைவிடவேண்டும்' என்ற கோரிக்கையுடன், குனியமுத்துார் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேசிய போது, ''தமிழக அரசே இந்த மைதானத்தை ஏலம் விடுவதற்கு டெண்டர் விட்டநிலையில், அதை திமுகவினரே மீட்டு விட்டதாக பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது மக்களை ஏமாற்றும் நாடகம். இந்த மைதானத்தை முழுமையாக மீட்கும் வரையிலும் அதிமுகவின் போராட்டம் தொடரும்" என்றார். படக்குறிப்பு, மைதானம் ஏலம் விடப்படுவதை எதிர்த்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ''மைதானமல்ல; மருத்துவமனை, பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடம்!'' ஆனால் ஏலம் ரத்து செய்யப்பட்டது தெரிந்தபின்பே, அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகச் சொல்கிறார் கோவைப்புதுார் பகுதி முன்னாள் திமுக கவுன்சிலர் முரளி. இவர் அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தின் நிர்வாகியாகவும் இருக்கிறார். பிபிசி தமிழிடம் பேசிய முரளி, ''கடந்த மாதத்தில் மைதானத்தை ஏலம் விட டெண்டர் விட்டதுமே, மாவட்டச் செயலாளர் ரவியிடம் தெரிவித்தோம். அவரும் துணை மேயர் வெற்றிச்செல்வனும் இணைந்து அமைச்சர் முத்துசாமியிடம் பேசிவிட்டனர். அவரும் உரிய அதிகாரிகளிடம் பேசி, ஏலம் விடும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறிவிட்டார். அது உறுதியானபின்புதான் நாங்கள் இனிப்பு வழங்கி பட்டாசுகளை வெடித்தோம். ஆனால் இதுதெரிந்ததும் அதிமுகவினர் அவசர அவசரமாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.'' என்றார். அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில், வேலுமணி தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும், இந்த மைதானத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். அதேபோன்று அதிமுக ஆட்சியில்தான் விளையாட்டு மைதானம், பூங்கா உள்ளிட்ட பொது ஒதுக்கீட்டு இடங்கள் அதிகளவில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது என்று ஒரு பட்டியலையும் கொடுத்தார். இந்த மைதானத்தை ஏலம் விடுவது தொடர்பாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கோவைப்பிரிவு நிர்வாகப் பொறியாளர் ஜேக்கப்பிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''அந்த இடம் வீட்டு வசதி வாரிய மனைப்பிரிவில் மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடம். பல ஆண்டுகளாக காலியாக இருந்ததால் பொதுமக்கள் மைதானமாகப் பயன்படுத்திவந்தனர். இப்போது வாரியத்தின் இடங்களை மீட்டு விற்பனை செய்யும் நடவடிக்கையில் இந்த ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசின் அறிவுறுத்தலின்படி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் இந்த விளையாட்டு மைதானம் குறித்து அரசின் முடிவை தெரிந்து கொள்ள , துறையின் அமைச்சர் முத்துசாமியை பலமுறை தொடர்பு கொண்டபோதும் அவரிடம் பதில் பெறமுடியவில்லை. வணிக வளாகமாக மாறிய மைதானம்! சமீபத்திய ஆண்டுகளாக தமிழகத்தில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பொது ஒதுக்கீட்டு இடங்கள், வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது என்பது சர்வசாதாரணமாக நடப்பதாகக் குற்றம்சாட்டுகிறது தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கம். இவ்வமைப்பின் தலைவரான தியாகராஜன், இதுதொடர்பாக ஏராளமான ஆதாரங்களுடன் பெரும் பட்டியலை பிபிசி தமிழிடம் பகிர்ந்தார். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், மாநகராட்சிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விடப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை அவர் காண்பித்தார். அதேபோன்று கோவை ராமநாதபுரம் பகுதியில் மாஸ்டர் பிளானில் 60 சென்ட் இடம் விளையாட்டு மைதானமாகவும், 100 அடி ரோடாகவும் இருந்த இடத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற நடந்த முயற்சிகள், வழக்கு விபரங்களையும் வீரப்பத்தேவர் காலனி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் பகிர்ந்தனர். படக்குறிப்பு, தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கத் தலைவர் தியாகராஜன் அங்குள்ள நுாறடி ரோட்டை 60 அடியாகக் குறைக்கவும், விளையாட்டு மைதானத்தை மனையிடமாக மாற்றவும் கோவை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு நகர ஊரமைப்புத்துறையும் கடந்த 2010 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. அதற்கு எதிராக குடியிருப்போர் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கில், நுாறடி ரோடு, விளையாட்டு மைதானத்துக்கான ஒதுக்கீட்டை மாற்றக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை அந்த இடம் விளையாட்டு மைதானமாக மேம்படுத்தப்படவில்லை. ''ஒரு மனைப்பிரிவு உருவாக்கப்படும்போது அந்த மனைப்பிரிவில் பூங்கா, குழந்தைகள் விளையாடும் இடம், விளையாட்டு மைதானம் ஆகிய பொது ஒதுக்கீட்டு இடங்களைக் காண்பித்து, அதன்படியே தொழில்நுட்ப அனுமதி வழங்கப்படுகிறது. அந்த இடங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது என்பதுடன், ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒரு முறை அதற்கான அறிவிக்கையை வெளியிட்டு அந்த இடங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல்கள் சட்டத்தில் (TAMIL NADU PARKS, PLAY-FIELDS AND OPEN SPACES (PRESERVATION AND REGULATION) ACT, 1959) உள்ளது.'' என்றார் தியாகராஜன். ஆனால் அதை அரசும், உள்ளாட்சி நிர்வாகங்களும் செய்வதில்லை என்பதுதான் இவர் உட்பட பலருடைய குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளின் ஒருமித்த குற்றச்சாட்டாகவுள்ளது. மதுரை மாநகராட்சி ஹார்வி நகரில் மதுரை மில் தொழிலாளர்கள் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் தனியாருக்கு ஒரு ஏக்கர் விளையாட்டுத் திடலை மோசடியாக விற்பனை செய்ததாக குற்றம் சாட்டுகிறார் ஜெகன். ஹார்வி நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் ஜெகன், ''நகருக்குள் இருந்த ஒரு ஏக்கர் பரப்பளவு விளையாட்டு மைதானத்தை மோசடியாக விற்பனை செய்துவிட்டனர். பட்டா ஆக்கிரமிப்பாளர் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போது அந்த இடத்தை மருத்துவமனையாகப் பயன்படுத்தி வருகின்றனர். நாங்கள் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.'' என்கிறார். 'ஏழை குழந்தைகளுக்கு மைதானம் இல்லை' இதேபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்களும், பொது ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பாக ஏராளமான வழக்குகளை நடத்தி வருகின்றன. பொது ஒதுக்கீட்டு இடங்களில் விளையாட்டு மைதானத்துக்கு ஒதுக்குவதே குறைவு என்ற நிலையில், அப்படி ஒதுக்கப்படும் இடங்களையும் வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதால் ஏழைக்குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்களே இல்லாத நிலை ஏற்பட்டு வருவதாக விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஓய்வு பெற்ற விளையாட்டு ஆசிரியர் ரஞ்சித், ''முன்பெல்லாம் நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் ஆங்காங்கே விளையாட்டு மைதானங்கள் இருக்கும். சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இப்போது நகரங்களில் பெரிய பெரிய ஸ்டேடியங்களை அரசு கட்டுகிறது. தனியாரால் நிறைய 'டர்ஃப்' போன்ற மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் ஏழைக் குழந்தைகள் விளையாடுவதற்கான மைதானங்கள் மாயமாகிவருகின்றன. அரசு உடனே கவனிக்க வேண்டிய விஷயம் இது.'' என்கிறார். தமிழகத்தில் பொது ஒதுக்கீடு செய்யும் இடங்களைப் பராமரிக்க வேண்டியது அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாகும். ஆனால் நகர ஊரமைப்புத்துறையின் ஒப்புதலுடனே இந்த இடங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படுவதாகச் சொல்கிறார்கள் ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கத்தினர். இதுகுறித்து கருத்து கேட்க அமைச்சர் முத்துசாமி, நகர ஊரமைப்பு இயக்குநர் ஆகியோரை தொடர்பு கொண்டபோது அவர்களிடம் பதில் பெறவே முடியவில்லை. படக்குறிப்பு, தமிழ்நாடு ஆர்டிஐ ஆர்வலர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஹக்கீம் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக, தங்கள் அமைப்பினர் வாங்கிய தகவல்களில் மாநிலம் முழுவதும் ஏராளமான பொது ஒதுக்கீட்டு இடங்கள், வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன என்று கூறும் தமிழ்நாடு ஆர்டிஐ ஆர்வலர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஹக்கீம், ''வசதி படைத்தவர்கள் பொழுதுபோக்குக்கும், உடற்பயிற்சிக்கும் எங்கேயும் செல்வார்கள். ஏழைகளுக்கு பூங்காக்களை விட்டால் வேறிடமில்லை. இந்த மைதானங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதை எந்த வகையிலும் ஏற்கவே முடியாது.'' என்கிறார். மேலும் பிபிசி தமிழிடம் பேசிய அவர், கோவையில் மட்டும் பொது ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பாக 70க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்று குறிப்பிட்டார். இந்த வழக்குகள் சார்பு நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரையிலும் விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இதே போன்று தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3epkqwj8w9o
  13. Published By: Digital Desk 1 16 Nov, 2025 | 07:46 AM மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது டெல்லியில் உயர்மட்ட அரசியல் சந்திப்புகளில் டில்வின் சில்வா தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி குழு பங்கேற்கவுள்ளது. இலங்கை அரசியலிலும், பிராந்திய இராஜதந்திரத்திலும் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா விஜயத்தை பார்க்கப்படுகிறது. ஜே.வி.பி.யின் ஆரம்ப கொள்கைப் பிடிப்புகளில், 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடியதில் டில்வின் சில்வா முக்கியப் பங்காற்றினார். இந்தியாவின் பிராந்தியத் தலையீட்டை அன்றும் கடுமையாக எதிர்த்த ஜே.வி.பி., தற்போது அதன் பொதுச் செயலாளரை இந்தியாவுக்கு அனுப்புவது, கட்சியின் நீண்டகால வெளிநாட்டுக் கொள்கையில் ஒரு பாரிய இராஜதந்திர மாற்றம் நிகழ்வதைச் சுட்டிக்காட்டுகிறது. அவர் இந்திய ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரில் செல்கிறார். இந்த விஜயம் ஜே.வி.பி.யானது பிராந்திய சக்தியாகிய இந்தியாவுடன் நேரடி உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளத் தயாராகிவிட்டதைக் காட்டுகிறது. ஜனாதிபதி சீனாவிற்குப் பயணம் செய்து ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது அனைவரும் அறிந்ததே. ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளரான டில்வின் சில்வாவும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்குப் பிறகு சீனாவில் நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயங்களின் போது ஜே.வி.பி.யின் தலைவர்கள் சீனாவுடன் முதலீட்டு உறவுகளை மேலும் வலுவாக முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்களை எடுத்தததாக செய்திகள் வெளியாகின. சீனாவுடனான உறவுகளைப் பலப்படுத்தியதன் பின்னணியில், இந்திய விஜயம் என்பது, இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்த விரும்பும் ஒரு கட்சி, பிராந்திய வல்லரசுகளான இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர சமநிலையை நிலைநாட்ட முற்படுவதைக் காட்டுகிறது. ஒரு நாடு சார்ந்து சாய்ந்துவிடாமல், இரு நாடுகளிடமிருந்தும் ஆதரவைப் பெற அல்லது அவர்களின் கவலைகளைத் தணிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இது அமைகிறது. இந்தச் சூழ்நிலையில், டில்வின் சில்வாவின் டெல்லி விஜயம், ஜே.வி.பி.யின் தலைவர்கள் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கான ஒரு முயற்சியாக பிரதிப்பலிக்கிறது. உயர் மட்ட அரசியல் சந்திப்புகளில் அவர் பங்கேற்பது, எதிர்காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றினால், இந்தியாவுடனான பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளைப் பேணுவதில் ஜே.வி.பி. உறுதியாக உள்ளது என்பதற்கான சமிக்ஞையாகும். மறுபுறம் இந்தியாவுடனான கடந்தகால முரண்பாடுகள் மற்றும் கடுமையான விமர்சனங்கள் தொடர்பில், இந்தியத் தலைமைக்கு நேரடியாக இராஜதந்திர விளக்கமளித்து, புதிய உறவுப் பாதையைத் தொடங்குவதற்கு இந்த விஜயம் ஒரு வாய்ப்பை வழங்கலாம். டில்வின் சில்வாவின் இந்திய விஜயம் என்பது ஜே.வி.பி.யின் இராஜதந்திரக் கொள்கையில் ஒரு வியத்தகு மாற்றத்தையும், எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் பிராந்திய வல்லரசுகளுடன் முரண்படாமல் சமநிலை உறவைப் பேணுவதற்கான விருப்பத்தையும் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230454
  14. Published By: Vishnu 16 Nov, 2025 | 02:40 AM இலங்கை பொருளாதாரத்தில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படும் போது, இதனை இந்தியா சாதகமாக பயன்படுத்தி, ஈழதமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிரந்தர தீர்வினை பெற்று தர வேண்டும். அதற்கு தமிழக அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுங்கள் என தொல் திருமாளவனிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேரில் வலியுறுத்தியுள்ளனர் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் 'கார்த்திகை வாசம்' மலர்க்கண்காட்சியை திறந்து வைக்க யாழ்ப்பாணம் வந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியினர் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் , இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 39 வருடங்களாக முடக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் இலங்கை அரசு ஏற்றுக்கொண்ட விடயங்களை அமுல் படுத்தாமல் , ஒற்றையாட்சியின் கீழான 13ஆம் திருத்தம் என்கிற விடயத்தோடு நிற்கிறது. இதனால் தமிழ் மக்களின் அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாத நிலைமைக்கு சிக்கு பட்டு இருக்கிறோம். ஆகவே இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனில் இந்திய மத்தியஅரசு தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். இலங்கை பொருளாதாரத்தை கட்டி எழுப்ப இந்தியாவின் உதவி தேவை தெற்கில் இந்தியாவை எதிர்த்தவர்கள் கூட பொருளாதார காரணிகளுக்காக இந்தியாவுடன் ஒத்து போகும் நிலைமைக்கு வந்துள்ளனர். அதனால் இந்திய மத்திய அரசு இலங்கையுடனான பேரம் பேசும் தன்மை வலுப்பெற்று உள்ளது இந்த நிலையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை சந்தித்த ஈழ தமிழர்கள் இந்த சந்தர்ப்பை பயன்படுத்த வேண்டும். அதனால் தொல். திருமாவளவனை சந்தித்து இந்த விடயங்களை தெளிவு படுத்தியுள்ளோம் தமிழகத்தின் ஆட்சியின் பங்காளி அவர். ஈழ தமிழர்களின் விடயம் தொடர்பிலும் , இன்றைக்கு இருக்க கூடிய 13ஆம் திருத்தம் தொடர்பிலும் அதில் உள்ள பிரச்சனைகள் தொடர்பிலும் மிக தெளிவாக எடுத்து கூறியுள்ளோம். அதேபோன்று இலங்கையில் உள்ள சட்டங்கள் தொடர்பிலும் தெளிவாக எடுத்து கூறியுள்ளோம். தமிழக அரசு , ஈழ தமிழர்கள் விடயங்கள் தொடர்பில் ஆணித்தரமான நிலைப்பாட்டை எடுக்க அவரின் ஒத்துழைப்பை மிக அவசியம். அதனை அவர் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என அவரிடம் வலியுறுத்தியுள்ளோம். விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும் இனவழிப்புக்கு தொடர்ச்சியாக முகம் கொடுத்து வருகிறது இன்றைக்கு உயிர்கள் பறிக்கப்படாது விடினும் எங்களுடைய இருப்பு இல்லாமல் போகிறது பொருளாதார ரீதியாக தமிழ் தேசம் பலவீனம் அடைந்துள்ளது. தமிழ் மக்களின் பொருளாதார இருப்பு , திட்டமிட்டு வேறு தரப்பினருக்கு மாற்றப்படுகிறது தமிழ் சிங்களம் முஸ்லீம் என்ற வேறுபாடு பேசாது நாம் இலங்கையர் என இந்த அரசாங்கம் கூறிக்கொண்டு தமிழர்களின் இருப்பை அழித்து வருகின்றனர். திட்டமிட்டு தமிழர்களை பலவீனப்படுத்தி வருகின்றனர். இதனை உலகத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதேவேளை ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழகம் ஈழ தமிழர்கள் விடயத்தில் தொடர்ச்சியாக மௌனம் காத்து வருவதும் தமிழ் மக்களுக்கு பலவீனமாக உள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஈழ தமிழர்கள் விடயத்தில் ஆக்கப்பூர்வமான விடயங்களை முன்னெடுத்து, அனைத்து தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வினை இலங்கை அரசாங்கம் வழங்க இந்தியவை அழுத்தம் கொடுக்க வைக்க வேண்டும் என அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இன்றைய சந்திப்பில் தொல் திருமாளவனிடம் நாம் வலியுறுத்தியுள்ளோம். https://www.virakesari.lk/article/230452
  15. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அடால்ஃப் ஹிட்லர் கட்டுரை தகவல் டிஃப்பனி வெர்தைமர்‎ 3 மணி நேரங்களுக்கு முன்னர் அடால்ஃப் ஹிட்லரின் ரத்த மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ ஆய்வு, அவரது வம்சாவளி மற்றும் உடல்நிலை பற்றிய சில ஆச்சர்யமூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச நிபுணர்கள் குழு, அவரது ரத்தக் கறை படிந்த பழைய துணியைப் பயன்படுத்தி கடினமான விஞ்ஞான பரிசோதனைகளை மேற்கொண்டது. இதில், ஹிட்லருக்கு யூத வம்சாவளி இருந்ததாகப் பரவிய வதந்தி உண்மையில்லை என நிரூபிக்கப்பட்டது. அதோடு அவருக்கு பாலியல் உறுப்புகளின் வளர்ச்சியை பாதிக்கும் ஒரு மரபணுக் கோளாறு இருந்திருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஹிட்லருக்கு சிறிய ஆணுறுப்பு இருந்ததா அல்லது ஒரே ஒரு விதைப்பை மட்டுமே இருந்ததா என்பன போன்ற பரபரப்பூட்டும் தலைப்புகளில் ஒருபுறம் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால், ஹிட்லரின் டிஎன்ஏ-வில் ஆட்டிசம், ஸ்கிசோஃப்ரினியா, பைபோலார் டிஸ்ஆர்டர் போன்றவை மரபணு மூலம் ஏற்படுவதற்கான சாத்தியம் மிக உயர்ந்த அளவில் இருந்தது என்பதுதான் இதில் மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு. அப்படியென்றால் அவருக்கு இந்த நரம்பியல் பிரச்னைகள் இருந்ததாகக் கூற முடியுமா என்று கேள்வி எழுப்பினால், இல்லை, அவருக்கு இந்த நோய்கள் இருந்தன என்று அர்த்தமல்ல என்று நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர். அதே நேரம், இந்த ஆராய்ச்சி எதிர்மறையான பார்வைக்கு வழிவகுக்குமா, அது நெறிமுறை ரீதியாக சரியானதா என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. இதனால், இதுகுறித்த ஆய்வு செய்யப்பட்டிருக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. "இந்த ஆய்வை செய்ய வேண்டுமா என்று நிறைய யோசித்தேன்"என சேனல் 4இன் 'ஹிட்லரின் டிஎன்ஏ: ஒரு சர்வாதிகாரியின் ப்ளூபிரின்ட் (Hitler's DNA: Blueprint of a Dictator)' என்னும் ஆவணப்படத்தின் தொடக்கத்தில் பேராசிரியர் துரி கிங் கூறுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தில் பங்கேற்க அவரை அணுகியபோது, ஹிட்லர் போன்ற சர்ச்சைக்குரிய நபரை ஆய்வு செய்வதில் ஏற்படும் விளைவுகளை அவர் நன்கு அறிந்திருந்தார். "பரபரப்பை உருவாக்குவதில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை," என்று அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார். ஆனால், இந்த ஆய்வு ஒருநாள் யாராவது ஒரு நபரால் செய்யப்படும். குறைந்தது தனது கண்காணிப்பின் கீழ் நடந்தால், அறிவியல் தரநிலைகளுடனும், "முழு எச்சரிக்கைகளுடனும்" நடைபெறும் என்பதை உறுதிசெய்ய முடியும் என்பதால் இதைச் செய்ய விரும்பினேன் என்கிறார். பேராசிரியர் கிங் இத்தகைய முக்கியமான மற்றும் கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுகளில் அனுபவம் வாய்ந்தவர். இவர் 2012இல் லெஸ்டரில் கார் நிறுத்துமிடத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது ரிச்சர்டின் எலும்புக்கூட்டினுடைய அடையாளத்தை உறுதிப்படுத்திய மரபணு ஆய்வை வழிநடத்தியவர். பட மூலாதாரம், Gettysburg Museum of History படக்குறிப்பு, ஹிட்லரின் பதுங்கும் இடத்தில் இருந்த சோபாவில் இருந்து வெட்டப்பட்ட துணி. ரத்தக் கறையை கீழ்-இடது புறத்தில் தெளிவாகக் காணலாம். ஹிட்லரின் ரத்தக் கறை படிந்த துணி ரத்தக் கறை படிந்த அந்தத் துணி, 80 ஆண்டுகள் பழமையானது. அது இரண்டாம் உலகப் போரின் முடிவில், நேச நாட்டுப் படைகள் பெர்லினை நோக்கி முன்னேறியபோது, ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட அவரது நிலத்தடி மறைவிடத்தில் இருந்த சோபாவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது. அந்தப் மறைவிடத்தை ஆய்வு செய்த அமெரிக்க ராணுவ கர்னல் ரோஸ்வெல் பி. ரோஸென்கிரென், இந்தத் துணியை ஓர் அபூர்வமான போர் நினைவுச் சின்னமாகக் கருதி எடுத்துச் சென்றார். இப்போது அந்தத் துணி அமெரிக்காவின் கெட்டிஸ்பர்க் வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தத் துணியில் உள்ள ரத்தம் உண்மையாகவே ஹிட்லருடையதுதான் என்று விஞ்ஞானிகள் உறுதியாகக் கருதுகிறார்கள். ஏனெனில், பத்து ஆண்டுகளுக்கு முன் ஹிட்லரின் ஆண் உறவினரிடம் இருந்து எடுத்த டிஎன்ஏ மாதிரியுடன் Y-குரோமோசோம் சரியாகப் பொருந்தியதால், இது ஹிட்லரின் ரத்தம் என்பதை விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகிறார்கள். தற்போது சக மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்த ஆய்வின் முடிவுகள், ஆச்சர்யம் அளிக்கக் கூடியவை. வரலாற்றில் முதல் முறையாக ஹிட்லரின் டிஎன்ஏ அடையாளம் காணப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் ஆய்வில், மிக மோசமான சர்வாதிகாரிகளில் ஒருவருடைய மரபணு அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில், ஹிட்லர் யூத வம்சாவளியைச் சேர்ந்தவர் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த ஆய்வு முடிவு முக்கியமானது. ஏனென்றால், 1920களில் இருந்து அவர் யூத மரபுகளின் வேர்களைக் கொண்டிருக்கலாம் என்று ஒரு வதந்தி பரவியிருந்தது. பட மூலாதாரம், Hulton Archive/Getty Images மேலும், அவருக்கு கால்மன் சிண்ட்ரோம் (Kallmann syndrome) எனப்படும் மரபணுக் கோளாறு இருந்திருக்கலாம் என்றும் ஆய்வு கூறுகிறது. இதனால் பருவமடைதல் மற்றும் பாலியல் உறுப்புகள் உருவாகும் முறை பாதிக்கப்படலாம். குறிப்பாக, சிறிய ஆணுறுப்பு மற்றும் விதைப்பை இறங்காமல் இருப்பது போன்ற நிலைகளுக்கு இது காரணமாக இருக்கலாம். இதுகுறித்து போர்க்கால பிரிட்டிஷ் பாடல்களில் கூறப்பட்ட வதந்திகளும் இருந்தன. கால்மன் சிண்ட்ரோம் பாலியல் உணர்வையும் பாதிக்கக்கூடும். இது மிகவும் சுவாரஸ்யமான கோணமாக இருப்பதாக, ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ள வரலாற்று ஆசிரியரும் போட்ஸ்டாம் பல்கலைக்கழக விரிவுரையாளருமான அலெக்ஸ் கே குறிப்பிடுகிறார். "இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நிறைய சொல்கிறது. சரியாகச் சொன்னால், அவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் இல்லையென்பதை வெளிப்படுத்துகிறது," என்று அவர் விளக்குகிறார். ஹிட்லர் வாழ்நாள் முழுவதும் அரசியலுக்காகத் தன்னை அர்ப்பணித்தது ஏன் என்பது குறித்தும், "அவருக்கு ஏன் தனிப்பட்ட வாழ்க்கை இல்லை" என்பது குறித்தும் வரலாற்றாசிரியர்கள் பல ஆண்டுகளாக விவாதித்து வருகிறார்கள். மரபணு சார்ந்த இந்தக் கண்டுபிடிப்புகள் அதற்கான விளக்கத்தை வழங்கக்கூடும். இத்தகைய கண்டுபிடிப்புகளே இந்த ஆய்வை சுவாரஸ்யமானதாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். பேராசிரியர் துரி கிங் சொல்வது போல, இது "வரலாற்றையும் மரபியலையும் பிணைக்கும்" முயற்சி. பட மூலாதாரம், Tom Barnes/Channel 4 படக்குறிப்பு, மரபியல் நிபுணர் பேராசிரியர் துரி கிங் மற்றும் வரலாற்றாசிரியர் அலெக்ஸ் கே கவலை தெரிவிக்கும் மரபணு நிபுணர்கள் ஹிட்லருக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்பியல் அல்லது மனநலக் குறைபாடுகள் இருந்திருக்கலாம் என்று கூறும் முடிவுகள் மேலும் சிக்கலானவையாக, சர்ச்சைக்குரியவையாக உள்ளன. அவருடைய மரபணுவைப் பரிசோதித்து, பாலிஜெனிக் மதிப்பெண்களுடன் ஒப்பிட்டபோது, ஹிட்லருக்கு ஆட்டிசம், ஏடிஹெச்டி, ஸ்கிசோஃப்ரினியா, பைபோலார் டிஸ்ஆர்டர் போன்றவை இருப்பதற்கான சாத்தியம் அதிகம் இருந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இங்குதான் அறிவியல் ரீதியான சிக்கல் ஏற்படுகிறது. பாலிஜெனிக் மதிப்பெண் என்பது ஒருவரின் டிஎன்ஏ-வை ஆராய்ந்து, அவருக்கு ஒரு நோய் உருவாகும் சாத்தியம் என்ன என்பதை மதிப்பிடும் முறை. இதய நோய் அல்லது பொதுவான புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கான முன்கணிப்பை அறிய இது உதவுகிறது. ஆனால் இது ஒரு பெரிய மக்கள் தொகையின் தரவுகளுடன் ஒப்பிட்டு மதிப்பிடப்படுவதால், ஒரு தனிநபருக்கான முடிவுகளை வழங்கும்போது அது எப்போதும் துல்லியமானதாக இருக்காது. பிபிசி பார்த்த இந்த ஆவணப்படம் முழுக்க தொடர்ச்சியாக, இந்த டிஎன்ஏ ஆய்வு ஒரு நோயறிதல் அல்ல, மாறாக முன்கூட்டியே இருந்த சாத்தியத்தை வெளிப்படுத்தும் ஓர் அறிகுறி மட்டுமே என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அதாவது, ஹிட்லருக்கு இந்தப் பிரச்னைகள் அனைத்தும் இருந்தன என்று அர்த்தமில்லை, இருந்திருக்க வாய்ப்புள்ளது என்பதை மட்டுமே ஆய்வு முடிவு காட்டியுள்ளது. ஆனால் சில மரபணு நிபுணர்கள் இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம், Haacker/Hulton Archive/Getty Images படக்குறிப்பு, ஹிட்லர் மற்றும் அவரது மனைவி ஈவா பிரௌன் தற்கொலை செய்துகொண்டதாக கருதப்படும் பங்கர் கடந்த 2018இல் இதே ரத்த மாதிரியை ஆய்வு செய்த லண்டன் கிங்ஸ் கல்லூரியின் தடயவியல் மரபியல் பேராசிரியர் டெனிஸ் சின்டர்கோம்ப் கோர்ட், இந்த முடிவுகள் "மிகைப்படுத்தப்பட்டவை" என்று கருதுகிறார். "ஒருவரின் குணநலன்கள் அல்லது நடத்தையை இதன் மூலம் தீர்மானிப்பது பயனற்றது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "மரபணுவில் சாத்தியம் இருந்தாலும், அது எல்லோரிடமும் நோயாக வெளிப்படாது (incomplete penetrance). அதனால், இந்த ஆய்வு முடிவுகளை வைத்து ஒருவருக்கு நோய் இருக்கிறதா என்று நான் கணிக்க விரும்பவில்லை" என்று அவர் விளக்கினார். இதையே மரபணு விஞ்ஞானி சுந்தியா ராமன் எளிமையாகச் சொல்கிறார். அதாவது, "உங்கள் டிஎன்ஏவில் குறிப்பிடப்பட்டு இருப்பதாலேயே, அது உங்கள் உடலில் வெளிப்பட்டுவிடும் என்று அர்த்தமில்லை." ஆவணப் படத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆட்டிசம் ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராசிரியர் சைமன் பாரன்-கோஹனும் இதே கருத்தை முன்வைக்கிறார். "உடலியல் (மரபணு) தகவல்களில் இருந்து ஒருவரின் நடத்தை பற்றிய நேரடி முடிவுக்கு வருவது சரியானதாக இருக்காது" என்கிறார் அவர். "இவ்வாறான மரபணு முடிவுகளை வெளியிடும்போது எதிர்மறை கருத்து உருவாக வாய்ப்புண்டு. 'எனக்கு இருக்கும் மருத்துவ நிலை, இத்தகைய கொடூர செயல்களைச் செய்த ஒருவருடன் இணைக்கப்படுகிறதா?' என்று மக்கள் தவறாக நினைக்கக்கூடும்" என்று குறிப்பிடுகிறார். அதேபோல்,"எல்லாவற்றையும் மரபணுவோடு மட்டும் சுருக்கிப் பார்க்கும் மனப்பான்மை இதிலுள்ள ஒரு பெரிய ஆபத்து" எனக் கூறும் அவர், ஏனென்றால் பரிசீலிக்க வேண்டிய பல்வேறு காரணிகள் இன்னும் உள்ளன என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த 1889ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் அடால்ஃப் ஹிட்லரின் குழந்தைப் பருவ புகைப்படம் 'இதுவொரு மலிவான செயல்' இந்தக் கண்டுபிடிப்புகளை "ஒரு மலிவான செயல்" என்று கூறி, பிரிட்டனின் தேசிய ஆட்டிசம் சங்கம் இந்த ஆய்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. "மேலும், தரமற்ற அறிவியல் ஆய்வைவிட, இந்த ஆவணப்படம் ஆட்டிசம் உள்ளவர்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத விதம்தான் எங்களை அதிர்ச்சியடையச் செய்தது," என்று ஆராய்ச்சி உதவி இயக்குநர் டிம் நிக்கல்ஸ் அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், "ஆட்டிசம் உள்ளவர்கள் இதைவிடச் சிறந்த அணுகுமுறைக்குத் தகுதியானவர்கள்," என்றும் அவர் வலியுறுத்தினார். பிபிசி இந்த விமர்சனங்களை சேனல் 4 மற்றும் ஆவணப்படத்தை தயாரித்த ப்ளிங்க் பிலிம்ஸ் நிறுவனத்திடம் முன்வைத்தது. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், பேராசிரியர் சைமன் பாரன்-கோஹன் உள்ளிட்ட நிபுணர்கள் இது குறித்து தெளிவாக விளக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். "ஒருவரின் நடத்தை பல காரணிகளின் விளைவாக உருவாகிறது. அது மரபணுவால் மட்டுமே உருவாவதில்லை. மாறாக, குழந்தைப் பருவம், வாழ்க்கை அனுபவங்கள், வளர்ப்பு, கல்வி, கிடைக்கும் வாய்ப்புகள், சமூகம், கலாசாரம் உள்ளிட்ட பல அம்சங்களால் உருவாகிறது." "இந்த ஆவணப்படம் ஹிட்லரை பற்றி சில மரபணு சார்ந்த தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாலும், அவர் ஒரு குறிப்பிட்ட முறையில் நடந்து கொள்வது 'முன்பே உயிரியல் ரீதியாக நிர்ணயிக்கப்பட்டது' என்று சொல்லவில்லை." பட மூலாதாரம், Stephanie Bonnas படக்குறிப்பு, "ஆராய்ச்சி முடிவுகளைப் பார்த்தபோது, நான் ஒரே நேரத்தில் உற்சாகத்துடனும் கவலையுடனும் இருந்தேன்," என்று பேராசிரியர் தாமஸ் வெபர் கூறினார். ஆவணப்படத்தின் பெயரே, குறிப்பாக "Blueprint of a Dictator" என்ற இரண்டாம் பகுதி பலரின் கவனத்தையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது. இந்தப் பெயரை "நான் தேர்ந்தெடுத்திருக்க மாட்டேன்" என்று பேராசிரியர் துரி கிங் கூறுகிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ள வரலாற்றாசிரியர் பேராசிரியர் தாமஸ் வெபர், "சர்வாதிகாரி மரபணு என்ற ஒன்றே இல்லை" என்று தாங்கள் வலியுறுத்தி இருந்தபோது, இப்படிப்பட்ட தலைப்பு பயன்படுத்தப்பட்டதைப் பார்த்து ஆச்சரியப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்தார். பிபிசியிடம் பேசுவதற்கு முன்பு வரை, அந்த ஆவணப்படத்தைப் பார்க்காத பேராசிரியர், டிஎன்ஏ பகுப்பாய்வு உற்சாகமூட்டுவதாகவும் கவலையளிப்பதாகவும் இருப்பதாகக் கூறினார். "ஹிட்லரை பற்றி நான் முன்பே சந்தேகித்த பல விஷயங்களை இந்த மரபணு ஆய்வு உறுதிப்படுத்தியதால், உற்சாகமாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், ஒருவரை தவறான பண்பு கொண்டவராக மாற்றும் ஒரு 'தீய மரபணு' இருப்பதாக நினைத்து, மக்கள் மரபியலை தவறாக அல்லது மிகையாகப் புரிந்துகொள்வார்களோ" என்று அவர் கவலை தெரிவித்தார். குறிப்பாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்டிசம் மற்றும் பிற சிக்கல்களுடன் வாழும் நபர்களால் இது எவ்வாறு புரிந்துகொள்ளப்படும் என்பது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். பொது மக்களுக்கு சிக்கலான அறிவியலை விளக்கும் ஒரு துல்லியமான ஆவணப்படத்தை உருவாக்குவதில் பல சிரமங்களும் ஆபத்துகளும் உள்ளன. "இது தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதால், சில நேரங்களில் விஷயங்களை எளிமைப்படுத்த வேண்டியிருக்கும்," என்று பேராசிரியர் கிங் கூறுகிறார். ஒரு விஞ்ஞானியாகத் தனது பொறுப்புகளையும் ஊடக உலகின் எதார்த்தங்களையும் சமநிலைப்படுத்துவதில் அவர் அனுபவம் வாய்ந்தவர். "ஆவணப்படத்தை தயாரிப்பவர்கள் வேறொரு வழியில் எடுத்திருந்தால், இது மிகப் பரபரப்பானதாக மாறியிருக்கும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. சில நுணுக்கங்களைப் பாதுகாக்க முயன்றுள்ளனர். மேலும் நாங்களும் தேவையான பாதுகாப்பு வரம்புகளைச் சேர்த்துள்ளோம்" என்று அவர் கூறினார். சேனல் 4, இந்த ஆவணப் படத்தின் பெயரைப் பாதுகாத்து, "டிஎன்ஏ-வை பொதுவாக 'வாழ்க்கையின் வரைபடம்' (blueprint of life) என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள்" என விளக்கியது. மேலும், தங்களின் பணி "பெரிய பார்வையாளர் வட்டத்தைச் சென்றடையும் நிகழ்ச்சிகளை உருவாக்குவதுதான். இந்த ஆவணப்படம் சிக்கலான அறிவியல் கருத்துகளையும் வரலாற்று ஆய்வுகளையும் அனைவருக்கும் எளிதாகக் கொண்டு சேர்க்க முயல்கிறது" எனவும் தெரிவித்தது. பட மூலாதாரம், Alamy படக்குறிப்பு, கடந்த 1945இல் நேச நாட்டுப் படைகளின் செய்தியாளர்கள் ஹிட்லரின் பதுங்கும் மறைவிடத்தில் சோபாவை ஆய்வு செய்கிறார்கள். நாற்காலியின் கைப்பிடியில் காணப்படும் கறை ரத்தக்கறை என்று கூறப்படுகிறது. நெறிமுறைகள் குறித்து எழும் கேள்விகள் இந்தத் திட்டத்தின் நெறிமுறைகள் குறித்தும் பல கேள்விகள் உள்ளன. 'ஹிட்லரின் அனுமதியையோ அல்லது அவரது நேரடி வாரிசின் அனுமதியையோ பெற முடியாத நிலையில், அவரது டிஎன்ஏ-வை ஆய்வு செய்ய வேண்டுமா? அவர் வரலாற்றின் மிகக் கொடூரமான குற்றங்களுக்குக் காரணமானவர் என்பதால், அது அவருக்கு தனியுரிமை என்ற ஒன்று இல்லாமல் போகிறதா?' என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. "இவர் ஹிட்லர். யாராலும் அணுக முடியாத மாய மனிதர் அல்ல. அவரின் டிஎன்ஏ-வை ஆய்வு செய்யக்கூடாது என்று யார் முடிவெடுக்கிறார்கள்?" என்று பேராசிரியர் கிங் கேட்கிறார். "விஞ்ஞானிகள் இதைத்தான் செய்கிறார்கள். இறந்த நூற்றுக்கணக்கான மனிதர்களின் டிஎன்ஏ ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொல்பொருள் துறையில் இது சாதாரண நடைமுறைதான். அதை நாம் எவ்வாறு விளக்குகிறோம் என்பதில்தான் சிக்கல் உருவாகிறது" என்று வரலாற்றாசிரியர் சுபத்ரா தாஸ் குறிப்பிடுகிறார். "உண்மைகள் சரியாக இருக்க வேண்டும், அனைத்தும் இருமுறை சரிபார்க்கப்பட வேண்டும்" என்றும் நெறிமுறை கோணத்தைப் பற்றித் தனக்கு கவலை இல்லை என்றும் கூறுகிறார் வரலாற்றாசிரியர் முனைவர் கே (Kay). ஹிட்லரின் டிஎன்ஏ ஆய்வு செய்யப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "ஹிட்லர் இறந்து 80 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவருக்கு நேரடி வாரிசுகளும், குழந்தைகளும் இல்லை. அவர் அளித்த துன்பம் அளவிட முடியாதது. அதை, அவரது டிஎன்ஏ ஆய்வில் உள்ள நெறிமுறை சிக்கலோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்" என்கிறார். சுவாரஸ்யமான விஷயமாக, ஐரோப்பாவின் பல ஆய்வகங்கள் இந்தத் திட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டன. இறுதியில் அமெரிக்காவில் உள்ள ஓர் ஆய்வகம்தான் சோதனையை மேற்கொண்டது. இந்த ஆய்வு "கல்வித்துறையில் தேவையான அனைத்து நெறிமுறை மதிப்பாய்வு செயல்முறைகளையும் கடந்து முடிக்கப்பட்டது. மேலும் இது இரண்டு நாடுகளில் நடந்த மதிப்பாய்வுகளையும் உள்ளடக்கியது" என்று ஆவணப்பட தயாரிப்பாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். பட மூலாதாரம், General Photographic Agency/Hulton Archive/Getty Images படக்குறிப்பு, 1933ஆம் ஆண்டில் ஹிட்லர்... இந்த ஆய்வு அவசியமா? இந்த ஆய்வு நடத்தப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு ஒரே மாதிரியான பதில் இல்லை. பிபிசி பல மரபணு விஞ்ஞானிகளிடமும் வரலாற்றாளர்களிடமும் பேசியது. இந்தக் கேள்விக்கான பதில், நீங்கள் யாரிடம் கேட்கிறீர்கள் என்பதையே சார்ந்துள்ளது. ஆவணப் படத்தில் இடம்பெற்ற நிபுணர்கள், ஆம், இந்த ஆய்வு அவசியம் என்று சொல்வார்கள். "இந்த ஆய்வு ஹிட்லரின் தன்மையை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது, அவர் இன்னமும் நம்மை ஈர்ப்பவராகவும், பயமுறுத்தும் ஒரு நபராகவும் உள்ளார்" என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. "கடந்த காலத்தின் பயங்கரவாதத்தைப் புரிந்துகொள்ள நம்மால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்," என்கிறார் பேராசிரியர் வெபர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹிட்லர், பதுங்குமிடத்தில் தற்கொலை செய்து கொள்வதற்கு சற்று முன்பு ஈவா பிரௌனை மணந்தார். "நேர்மையாகச் சொல்ல வேண்டுமெனில், இந்த விவாதங்கள் புதியவை அல்ல. நாம் திடீரென்று இந்தக் கருத்தை மக்களின் மனதில் விதைக்கவில்லை. ஹிட்லருக்கு சில மனநலக் கோளாறுகள் இருந்ததா என்பது குறித்து மக்கள் பல தசாப்தங்களாகப் பேசி வந்துள்ளனர்"என்கிறார் முனைவர் கே. ஆனால் எல்லா வரலாற்றாசிரியர்களும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. "ஹிட்லரின் செயல்களைத் தூண்டியது எது என்பதை விளக்க இதுவொரு சந்தேகத்திற்குரிய வழி என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் உட்ரெக்ட் பல்கலைக்கழக சர்வதேச வரலாற்று உதவிப் பேராசிரியர் இவா வுகுசிக். வெகுஜன வன்முறை எவ்வாறு நிகழ்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யும் வுகுசிக், மக்கள் ஏன் இதில் ஆர்வம் கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார். ஆனால் "நாம் தேடும் பதில்கள் டிஎன்ஏ சோதனையிலிருந்து கிடைக்கப் போவதில்லை"என்று அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார். மேலும், இந்த ஆய்வு சுவாரஸ்யமானது என்றாலும், இது வரலாற்றின் உண்மையான பாடங்களை மறைக்கும் அபாயம் இருப்பதாக வரலாற்றாசிரியர் ஆன் வான் மௌரிக் குறிப்பிடுகிறார். அதாவது, "சில சூழ்நிலைகளில் சாதாரண மனிதர்களே கொடூரமான வன்முறைகளில் ஈடுபடலாம், அதைத் தூண்டலாம் அல்லது அதைப் பொறுத்துக் கொள்ளலாம்" என்பதுதான் அந்தப் பாடம். ஹிட்லரின் (சாத்தியமுள்ள) சிறிய ஆணுறுப்பு போன்ற விவரங்களில் கவனம் செலுத்துவது, இனப்படுகொலை, வெகுஜன வன்முறை எப்படி செயல்படுகிறது, ஏன் நிகழ்கிறது என்பதைப் பற்றிய எந்தப் புரிதலையும் நமக்குக் கொடுக்காது என அவர் கூறுகிறார். இந்த ஆய்வு முடிந்து, தற்போது சக நிபுணர்கள் மதிப்பாய்வு செய்து வரும் நிலையில், ஒரு கட்டத்தில் இந்தக் கண்டுபிடிப்புகள் முழுமையாக வெளியே வரும். பேராசிரியர் வெபர் கூறுகையில், இந்த முடிவுகளை "மிகவும் கவனத்துடனும் நிதானத்துடனும்" பயன்படுத்த வேண்டும். ஆனால், இவை ஏதாவது ஒரு வகையில் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என அவர் நம்புகிறார். "ஆராய்ச்சி முடிவுகளின் சிறப்பு அதுதான். அதன் மதிப்பு 5 ஆண்டுகளுக்குப் பிறகோ, 150 ஆண்டுகளுக்குப் பிறகோ, 500 ஆண்டுகளுக்குப் பிறகோ தெரியலாம். இந்த ஆய்வு எதிர்காலத்திற்காக பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறுகிறார். ஆனால் இந்த முடிவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதில் நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. "அறிவியலைப் பின்பற்ற வேண்டும். நமக்கு என்ன தெரியும், என்ன தெரியாது என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்" என்று முனைவர் கே கூறுகிறார். இது ஊடகங்களுக்கும் பொருந்தும். இந்த ஆய்வு எப்படி வெளியிடப்படுகிறது என்பதும் அதில் அடங்கும். "இந்த ஆவணப்படத்தைப் பார்ப்பவர்கள் துல்லியமாக எழுத வேண்டும். அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளும் சூழல் உருவாவதற்கோ அல்லது எதிர்மறை கருத்து உருவாவதற்கோ பங்களிக்கக்கூடாது" என்றும் அவர் குறிப்பிடுகிறார். "இதுபோன்ற ஆவணப்படங்கள் சமூகத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாதவை. மக்களையும் நிகழ்வுகளையும் பாதிக்கக் கூடியது" என்று முனைவர் கே வலியுறுத்துகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3dn7zm733vo
  16. 15 நவம்பர் 2025, 04:21 GMT பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, ஃபீல்ட் மார்ஷல் முனீர், இனி கடற்படை மற்றும் விமானப்படை செயல்பாடுகளையும் மேற்பார்வை செய்வார். பாகிஸ்தான் ராணுவ தளபதியான ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு புதிய அதிகாரம் கொடுத்தும், கைது மற்றும் வழக்குகளிலிருந்து வாழ்நாள் விலக்கு அளித்தும் அந்நாட்டு நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த முடிவு சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். வியாழக்கிழமை சட்டமாக ஆக்கப்பட்ட 27-வது அரசியலமைப்பு திருத்தம், நாட்டின் உயரிய நீதிமன்றங்கள் செயல்படும் முறையிலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த முடிவை ஆதரிப்பவர்கள், இது ஆயுதப் படைகளின் நிர்வாகக் கட்டமைப்பில் ஒரு தெளிவைக் கொடுக்கும் என்றும், நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகளைக் குறைக்க உதவும் என்றும் கூறுகிறார்கள். அணு ஆயுதம் கொண்ட பாகிஸ்தானின் அரசியலில் ராணுவம் நீண்ட காலமாக முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது. சில நேரங்களில் அரசை கவிழ்த்து ஆட்சியையும் பிடித்திருக்கிறது, பல நேரங்களில் பின்னால் இருந்து கட்டுப்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் தனது வரலாறு முழுவதுமே, மக்களாட்சிக்கும் (civilian autonomy) ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் மற்றும் ஜெனரல் ஜியா-உல்-ஹக் போன்ற ராணுவ அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்கும் இடையே ஊசலாடி வந்திருக்கிறது. சிவில் மற்றும் ராணுவம் என இந்த இரு ஆட்சி முறைக்குமான சமநிலையை ஆய்வாளர்கள் 'கலப்பு ஆட்சி' (Hybrid Rule) என்கிறார்கள். இந்த அரசியலமைப்பு திருத்தம் அந்த சமநிலையை குலைத்து ராணுவத்திற்கு சாதகமான சூழலை உருவாக்குவதை நோக்கி நகர்வதாக ஒருசிலர் கருதுகிறார்கள். "என்னைப் பொறுத்தவரை இந்தத் திருத்தம், பாகிஸ்தான் கலப்பு ஆட்சி இல்லாமல், அதற்குப் பிந்தைய ஒரு ஆட்சிமுறையில் இருக்கிறது என்பதற்கான சமீபத்திய, பலமான அறிகுறி" என்கிறார் வாஷிங்டனில் உள்ள வில்சன் சென்டரின் தெற்காசிய நிறுவனத்தின் இயக்குநர் மைக்கேல் குகல்மேன். "சிவில்-ராணுவ சமநிலை, எந்த அளவுக்கு அந்த சமநிலையைத் தவற முடியும் என்பதை இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் அவர். நவம்பர் 2022 முதல் ராணுவ தளபதியாக இருக்கும் முனீர் இந்த சமீபத்திய திருத்தத்தின் மூலம் ஃபீல்டு மார்ஷலாகியுள்ளார். அவர் இனி கடற்படை மற்றும் விமானப்படை செயல்பாடுகளையும் மேற்பார்வை செய்வார். அவருடைய ஃபீல்ட் மார்ஷல் பட்டமும் சீருடையும் வாழ்நாளுக்குமானது. அதுமட்டுமல்லாமல், முனீர் ஓய்வு பெற்றபின்னரும் கூட பிரதமர் அறிவுரையின் பேரில் அந்நாட்டு அதிபர் அவருக்கு சில பொறுப்புகளையும் கடமைகளையும் வழங்குவார். அதனால் அவர் உயிரோடு இருக்கும்போது பொது வாழ்க்கையில் அவருக்கு ஒரு பிரதான பங்கு இருந்துகொண்டே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவை ஆதரித்தவர்கள், அது பாகிஸ்தான் ராணுவத்தின் நிர்வாக கட்டமைப்பில் ஒரு தெளிவை கொடுப்பதாக வாதிடுகிறார்கள். இந்த மாற்றங்கள், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பு நவீன போர் தேவைகளுக்கு ஏற்ப செயல்படுவதற்கான 'விரிவான சீர்திருத்த திட்டத்தின் ஒரு பகுதி' என்று பிரதமர் ஷாபாஸ் ஷரிஃப் கூறியதாக பாகிஸ்தான் அரசு நடத்தும் செய்தி முகமையான அசோசியேடட் பிரஸ் ஆஃப் பாகிஸ்தான் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், மற்றவர்கள் இதை ராணுவத்துக்கு அதிகாரத்தைக் கொடுக்கும் ஒரு நகர்வாகவே பார்க்கிறார்கள். "மக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே ஒரு சமநிலையே இல்லை" என்கிறார் பத்திரிகையாளரும் பாகிஸ்தான் மனித உரிமை ஆணையத்தின் இணைத் தலைவருமான முனிசே ஜஹாங்கிர். "ராணுவத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய சமயத்தில் அதற்குக் கூடுதல் பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள்" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முனீர் ஓய்வு பெற்றபின்னரும் கூட அந்நாட்டு அதிபர் அவருக்கு சில பொறுப்புகளையும் கடமைகளையும் வழங்குவார். 'நீதித்துறை சுதந்திரமாக இயங்குவற்கான இடம் இல்லை' இந்த சர்ச்சைக்குரிய மாற்றங்களின் இரண்டாவது பகுதி நீதிமன்றங்களையும் நீதித்துறையயும் சார்ந்தது. இந்தத் திருத்தத்தின்படி, அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான கேள்விகளைத் தீர்மானிக்கும் புதிய 'மத்திய அரசியலமைப்பு நீதிமன்றம்' (Federal Constitutional Court – FCC) உருவாக்கப்படும். அதன் முதல் தலைமை நீதிபதி மற்றும் அதில் பணியாற்றும் நீதிபதிகளை பாகிஸ்தான் அதிபர் நியமிப்பார். "இது நியாயமான விசாரணை பெறும் உரிமையின் இயல்பையும் முறையையும் நிரந்தரமாக மாற்றுகிறது," என்று ஜஹாங்கீர் கூறுகிறார். "நீதிபதிகளை நியமிப்பதில் மட்டுமல்லாமல், அரசியலமைப்பு அமர்வுகளை அமைப்பதிலும் நிர்வாகத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஒரு வழக்குதாரராக நான் நியாயமான விசாரணை கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்?" என்று கேள்வி எழுப்புகிறார் அவர். பத்திரிகையாளரும் வர்ணனையாளருமான ஆரிஃபா நூர், "நீதித்துறை இப்போது நிர்வாகத்திற்கு கீழ்ப்படிந்ததாக மாறியுள்ளது" என்கிறார். மேலும், "தற்போது நீதித்துறை சுதந்திரமாக இயங்குவற்கான இடம் இல்லை என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது" என்றும் அவர் கூறினார். இந்தத் திருத்தம் நிறைவேற்றப்படும் முன், அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றமே விசாரித்து வந்தது. இதனால், நீதிபதிகள் அரசியலமைப்பு தொடர்பான விவாதங்களையும் கேட்க வேண்டியிருந்ததால், குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகள் விசாரணைக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் நிலுவை வழக்குகள் அதிகரித்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். இந்நிலையில், இவ்விரு வகையான வழக்குகளையும் பிரித்தது நீதிமன்ற செயல்முறையை ஒழுங்குபடுத்த உதவியுள்ளதாக அவர்கள் வாதிடுகின்றனர். இதற்கு சில வழக்கறிஞர்களிடம் ஓரளவு ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆனால் கராச்சியைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சலாஹுதீன் அஹமது, அந்த வாதத்தை நேர்மையற்றையதாகப் பார்க்கிறார். பாகிஸ்தானில் நிலுவையில் உள்ள வழக்குகளில் பெரும்பாலானவை உச்சநீதிமன்றத்தைச் சார்ந்தவையே அல்ல என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். "புள்ளிவிவர ரீதியாகப் பார்க்கும்போது, வழக்குகள் விரைவாக முடிவடைய வேண்டும் என்பதில் உண்மையாகக் கவலைப்பட்டிருந்தால், நீங்கள் அந்த வழக்குகளுக்கான சீர்திருத்தங்களில்தான் கவனம் செலுத்தியிருப்பீர்கள்." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் இந்தத் திருத்தம் சட்டமாக கையெழுத்தான அடுத்த சில மணி நேரத்தில், இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராஜிநாமா செய்தனர். தலைமை நீதிபதி பதவியை ராஜிநாமா செய்த பின் பேசிய அதர் மினல்லா, "நான் நிலைநிறுத்துவதாகவும் பாதுகாப்பதாகவும் சொல்லி சத்தியம் செய்த அந்த அரசியலமைப்பு இப்போது இல்லை" என்று கூறினார். நீதித்துறை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகக் கூறிய நீதிபதி மன்சூர் அலி ஷா, 27வது சட்டத் திருத்தம் உச்ச நீதிமன்றத்தை துண்டாடிவிட்டதாகவும் கூறினார். இந்த ராஜிநாமாக்கள் பற்றிப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், "உச்சநீதிமன்றத்தில் அவர்களின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டதால் அவர்களின் மனசாட்சி விழித்தெழுந்திருக்கிறது. அரசியலமைப்பின் உயர் அதிகாரத்தை நிரூபிக்க நாடாளுமன்றம் முயற்சி செய்துள்ளது" என்று கூறினார். இப்போது நீதிபதிகள் அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே எந்த நீதிமன்றங்களும் மாற்றப்படலாம். ஒருவேளை அதில் நீதிபதிகளுக்கு உடன்பாடு இல்லையென்றால், அவர்கள் நீதி ஆணையத்திடம் முறையிடலாம். ஒருவேளை அவர்கள் முறையிடுவதற்கான காரணம் செல்லாவிட்டால், அந்த நீதிபதிகள் ஓய்வு பெற்றுவிடவேண்டும். இந்த மசோதாவை ஆதரித்தவர்கள், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் நீதிமன்றங்களும் சரியாக நிரப்பப்படும் என்கிறார்கள். அதேசமயம் ஒருசிலர் இது மிரட்டலாகப் பயன்படுத்தப்படும் என்றும் வருத்தம் தெரிவிக்கிறார்கள். "ஒரு நீதிபதியை அவர் பணியாற்றும் மாகாணத்திலிருந்து வேறொரு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவது, அரசின் விதியைப் பின்பற்ற அவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்" என்கிறார் அஹமது. இது பாகிஸ்தானின் சமநிலையை பாதிக்கும் என்றும் அவர் கூறுகிறார். "நம் நீதித்துறை கடந்த காலத்தில் சர்வாதிகாரிகளுக்கு ஒத்துழைத்துள்ளது. ஆனால் சில நேரங்களில் நிர்வாகத்தைத் தட்டிக் கேட்கவும் செய்துள்ளது. அந்த நம்பிக்கையை மக்கள் முழுமையாக இழக்கும் வகையில் நீங்கள் அதைப் பறித்துவிட்டால், அவர்கள் வேறு மோசமான பாதையில் செல்லும் நிலை ஏற்படும்" என்றும் அவர் கூறினார். அதை ஏற்றுக்கொள்ளும் குகல்மேன், "அடக்கி வைக்கப்படும் குறைகள் சமூக நிலைத்தன்மைக்கு நல்லதல்ல" என்றும் கூறினார். "இது சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதைக் குறிக்கிறது" என்று சொல்கிறார் நூர். கடந்த ஆண்டு செய்யப்பட்டிருந்த 26வது திருத்தம், பாகிஸ்தானின் தலைமை நீதிபதியை தேர்ந்தெடுக்கும் அதிகாரித்ததை சட்டத்தை இயற்றுபவர்களின் கையில் கொடுக்கும் வகையில் இயற்றப்பட்டதாகவும், சமீபத்திய திருத்தம் அதன் மீது புதிதாக கட்டியெழுப்பப்படுவதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல் 28வது திருத்தம் குறித்த ஊகங்களும் தற்போது எழுந்திருக்கின்றன. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd7r9yjpgw7o
  17. உண்மையில் இதன் அர்த்தம் யாழில் உறுப்பினராக இணைந்து பதிவு எதனையும் இணைக்காமலும் சுய ஆக்கங்கங்கள் இடாதவர்கள் இத்திரியில் வந்து வருகையை பதிவு செய்யவேண்டும் என்பதா அண்ணை?! டாப்பு கூப்பிடும்போது பிரசன்ஸ் சேர் என்பது போல இங்க யாரும் கூப்பிடாது விட்டாலும் நாமாக{பதிவு எதனையும் இணைக்காமலும் சுய ஆக்கங்கங்கள் இடாதவர்கள்} வந்து வருகையை அறிவிக்கவேண்டும் அப்படியா?!.
  18. 'எல்லா புகழும் என் தந்தைக்கே, அவர் இல்லாமல் இந்தளவு உயர்ந்திருக்கமாட்டேன்' - 14 வயது இந்திய வீரர் சூரியவன்ஷி Published By: Vishnu 15 Nov, 2025 | 07:29 PM (நெவில் அன்தனி) எல்லா புகழும் என் தந்தைக்கே, அவர் என்னை கண்டிப்புடன் வளர்திராவிட்டால் நான் கிரிக்கெட்டில் இந்தளவு உயர்ந்திருக்கமாட்டேன்' என இந்தியாவின் 14 வயதுடைய இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி தெரிவித்துள்ளார். கத்தாரின் தோஹாவில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண உதய தாரகைகள் (Rising Stars) கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக இந்தியா சார்பாக இரண்டாவது அதிவேக ரி20 கிரிக்கெட் சதத்திற்கான இணை சாதனையை ஏற்படுத்திய பின்னர் வைபவ் சூரியவன்ஷி இதனைத் தெரிவித்தார். அப் போட்டியில் 32 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பூர்த்தி செய்து இந்தியா சார்பாக ரி20 போட்டிகளில் இரண்டாவது அதிவேக சதத்தைக் குவித்த ரிஷாப் பான்டின் சாதனையை சமப்படுத்தினார். இந்தியாவில் நடைபெற்றுவரும் முஷ்தாக் அலி கிண்ணத்துக்கான ரி20 கிரிக்கெட் போட்டியில் கடந்த வருடம் குஜராத் அணிக்காக உர்வில் பட்டேலும் பஞ்சாப் அணிக்காக அபிஷேக் ஷர்மாவும் 28 பந்துகளில் சதங்களைப் பூர்த்தி செய்து இந்தியாவுக்கான அதிவேக சதங்களைப் பெற்ற சம சாதனையாளர்களாக இருக்கின்றனர். ரிஷாப் பான்ட் 2018இல் டெல்ஹி அணிக்காக 32 பந்துகளில் ரி20 சதத்தைப் பூர்த்திசெய்திருந்தார். ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகள் ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணி சார்பாக சூரியவன்ஷி 42 பந்துகளில் 11 பவுண்டறிகள், 15 சிக்ஸ்களுடன் 142 ஓட்டங்களைக் குவித்து 13ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் 14 வயது 232 நாட்களில் இந்திய தேசிய பிரதிநிதித்துவ அணிக்காக சதம் குவித்த மிகவும் இளைய வீரர் என்ற சாதனையைப் படைத்து சூரியவன்ஷி பெருமை பெற்றார். இதற்கு முன்னர் மிக இளம் வயதில் சதம் குவித்த வீரர் என்ற சாதனையை 2005இல் ஸிம்பாப்வே ஏ அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் ஏ அணி வீரர் முஷ்பிக்குர் ரஹிம் (ஆட்டம் இழக்காமல் 111) நிலைநாட்டி இருந்தார். அப்போது அவருக்கு 16 வயது 171 நாட்கள் ஆகும். ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டியில் சூரியவன்ஷி முதலாவது பந்தில் கொடுத்த பிடி தவறவிடப்பட்டது. அதனை சாதகமாக்கிக்கொண்ட சூரியவன்ஷி அதன் பின்னர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 342.85 ஆக இருந்தது. ரி20 போட்டிகளில் சதம் அடித்தவர்களில் நான்காவது அதி கூடிய ஸ்ட்ரைக் ரேட் இதுவாகும். இந்த வருடம் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் சார்பாக 35 பந்துகளில் சதம் குவித்து மிக இளைய வயதில் (14 வயது, 32 நாட்கள்) ரி20 சதம் குவித்தவர் என்ற சாதனைக்கு சூரியவன்ஷி சொந்தக்காரரானார். இது ஐபிஎல் இல் பெறப்பட்ட இரண்டாவது அதிவேக சதமாகும். பூனே வொரியர்ஸ் அணிக்கு எதிராக றோயால் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பாக கிறிஸ் கேல் 2013இல் 30 பந்துகளில் குவித்த சதமே ஐபிஎல் இல் பதிவான அதிவேக சதமாகும். 'இது எனது இயல்பான துடுப்பாட்ட பாணியாகும். இது ரி20 வடிவ கிரிக்கெட் ஆகும். எனவே எனது சொந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினேன். முதலாவது பந்தில் எனது பிடி தவறவிடப்பட்டது. ஆனால், எனது எண்ணத்தை நான் மாற்ற விரும்பவில்லை. இந்த மைதானத்தில் எங்களுக்கு கணிசமான மொத்த எண்ணிக்கை தேவைப்பட்டது. ஆடுகளம் துடுப்பாட்டத்திற் கு சிறப்பாக இருந்தது. அத்துடன் பவுண்டறி எல்லைகள் குறைந்த தூரங்களைக் கொண்டிருந்தது. எனவே நான் விளாசி அடித்தேன்' என போட்டியின் பின்னர் வைபவ் சூரியவன்ஷி கூறினார். அப் போட்டியில் இந்திய ஏ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்களைக் குவித்தது. ஐக்கிய அரபு இராச்சியம் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. 'எனது இந்த ஆற்றல் வெளிப்பாடுகளுக்கு எல்லா புகழும் எனது தந்தைக்கே உரித்தாகும்' என அவர் மேலும் கூறினார். 'சிறு பராயத்திலிருந்தே எனது தந்தை என்னைக் கண்டிப்புடன் வளர்த்தார். அப்போதெல்லாம் அவர் ஏன் இவ்வளவு கண்டிப்பாக இருக்கிறார் என நான் சிந்திப்பேன். ஆனால், அதன் பலாபலன்களை மைதானத்தில் இப்போது நான் உணர்கிறேன். எனது கவனத்தை சிதறடிக்கவிடாமல் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வைத்தார். அத்துடன் நான் கடினமாக உழைக்க வேண்டும் என்பதிலும் குறியாக இருந்தார். எனவே எனக்கு கிடைக்கும் எல்லா விடயங்களுக்கும் எனது தந்தைக்கே நன்றி கூறுவேன். ஏனேனில் அவர் இல்லாமல் நான் இந்தளவு உயர்ந்திருக்க மாட்டேன்' என்றார் சூரியவன்ஷி. https://www.virakesari.lk/article/230448
  19. பொலித்தீன் பைகளுக்குப் பதிலாக காகிதப் பைகள்? Nov 15, 2025 - 06:36 PM பொலித்தீன் பைகளுக்கு பதிலாக மாற்றீடாகப் பயன்படுத்தக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை உற்பத்தி செய்யுமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பொருட்களை வாங்கும் போது பொலித்தீன் பைகளுக்கு ஒரு தொகையை அறவிடும் முடிவு குறித்து கவனம் செலுத்தி, குறித்த மேற்பார்வைக் குழு இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, இந்த நடவடிக்கையின் மூலம் பொலித்தீன் பயன்பாடு குறைகிறதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும், பொலித்தீன் பைகளுக்காகச் செலுத்த வேண்டிய தொகையை எந்தத் தரப்பினர் தீர்மானித்தனர் என்றும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். அதற்கு பதிலளித்த அதிகாரிகள், பொலித்தீன் பைகளுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்று வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டினர். https://adaderanatamil.lk/news/cmi0aw09701n3o29nk1tts4aa
  20. மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு Nov 15, 2025 - 06:22 PM மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றைய தினம் (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் இன்றைய தினம் (15) மாலை போராட்டக் களத்தில் விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தார். இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு எஸ்.ஞானப்பிரகாசம் ஆண்டகை கலந்து கொண்டதோடு, போராட்டக் களத்தில் அங்கம் வகித்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர். அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கருத்து தெரிவிக்கையில், "மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும், இருப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வரும் காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் இன்றைய தினம் 105ஆவது நாளைக் கடக்கின்றது." "ஜனாதிபதி அவர்களின் அமைச்சரவை அறிவிப்பை நாங்கள் சற்று பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அதற்கமைவாக 105ஆவது நாளான இன்றைய தினம் சனிக்கிழமை (15) மாலை எமது போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுகின்றோம். எமது போராட்டம் என்ன கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டதோ, அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு." "எங்களுடைய முக்கியமான கோரிக்கை என்னவென்றால், மன்னார் மண்ணிலே கனிம மணல் அகழ்வுக்கான அனைத்து வித அனுமதிகளும் நிறுத்தப்பட வேண்டும். மேலும், மன்னார் தீவில் அகழ்வு செய்யப்படுகின்ற மணல், மண் தீவை விட்டு வெளியில் கொண்டு செல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்." "கொண்டு செல்லப்படும் மண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். எனவே, அரசாங்கம் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்காது என்ற நம்பிக்கையுடனே இந்தப் போராட்டத்தை நிறுத்துகிறோம். வெகு விரைவில் அரசாங்கம் கனிம மணல் தொடர்பாக அமைச்சரவை அனுமதியைப் பெற்று தேசிய கொள்கையாக அதனை அறிவிப்பார்கள் என்பதை நம்புகின்றோம்." "எதிர்வரும் காலத்தில் எல்லா நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொள்ளுவதற்காக எல்லா மக்களையும் உள்ளடக்கிய ஒரு கண்காணிப்புக் குழுவை அரச அதிபர் தலைமையில் உடனடியாக அமைத்து, குறித்த குழுவினுடைய கண்காணிப்பின் கீழ் எல்லா விதமான செயல்பாடுகளையும் முன்னெடுப்பது சிறந்ததாக அமையும் என்பதை இப்போராட்ட குழு சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்." இதைத் தொடர்ந்து அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தலைமையிலான குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்திற்குச் சென்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரனிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர். -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmi0adulf01n2o29nq7bk4k1r
  21. எதிர்க்கட்சிகளின் பேரணி குறித்து சுமந்திரனுடன் நாமல் சந்திப்பு Nov 15, 2025 - 04:33 PM தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் பேரணி குறித்து அறிவிப்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்துள்ளார். இன்று (15) காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கருத்துத் தெரிவித்த எம்.ஏ. சுமந்திரன், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது அத்தியாவசியமான விடயம் என்று கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றங்களை வலுப்படுத்துவதற்காக, அரசியலமைப்புக்கு அமைய இந்தத் தேர்தல்களை நடத்துவது அத்தியாவசியம் என்றும் அவர் அங்கு வலியுறுத்தியுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சியின் பிரதான கட்சிகளில் ஒன்றான இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இந்தப் பேரணி குறித்து அறிவிப்பது அத்தியாவசியமான விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmi06hda901mzo29ne087a0bk
  22. மனைவியை மிரட்ட சுருக்கு மாட்டிக்கொண்டவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு Nov 15, 2025 - 03:17 PM தற்கொலை செய்துகொள்வதாக மனைவியை மிரட்டுவதற்காக கழுத்தில் மாட்டப்பட்டிருந்த சுருக்கு இறுக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று (15) அதிகாலை உயிரிழந்தார். உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஜெ. சுரேந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த எட்டாம் திகதி இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த சுரேந்தன், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் முரண்பட்டதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அவர் ஒரு கதிரையில் அமர்ந்துகொண்டு, கழுத்தில் சுருக்கிட்டவாறு தான் தற்கொலை செய்யப்போவதாக மனைவியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். கைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போதே மதுபோதையில் அவர் உறங்கிவிட்டார். பின்னர் அவரது சகோதரன் அங்கு சென்று பார்த்தபோது, அவர் கழுத்தில் சுருக்குடன் குறட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருந்தார். உடனடியாக சகோதரன் அவரது கழுத்தில் இருந்த கயிற்றை அகற்றிவிட்டு, அவரைத் தரையில் படுக்க வைத்துள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmi03sbk301mwo29np80sl4we
  23. Nov 15, 2025 - 01:25 PM இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி 425 கிராம் நிறையுடைய டூனா (Tuna) டின் மீனின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 425 கிராம் நிறையுடைய மெக்கரல் டின் மீன் 480 ரூபாவாகவும், 425 கிராம் நிறையுடைய ஜெக் மெக்கரல் டின் மீனின் 560 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmhzzsexu01mto29nhqcrpdc3
  24. 15 Nov, 2025 | 03:14 PM யாழில் உணவக கழிவு நீரினை வீதிக்கு வெளியேற்றிய உணவக உரிமையாளருக்கும், காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்திய உரிமையாளர்களிற்கும் ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் சுகாதார பரிசோதகரினால், மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரு வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியிருந்தமை, உணவகம் ஒன்றின் கழிவு நீரினை வீதிக்கு அப்புறப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் மூவருக்கும் எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது மூவரும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர்களை கடுமையாக எச்சரித்த நீதிமன்று, அவர்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதித்தது. https://www.virakesari.lk/article/230426
  25. 2026 IPL : மதீஷ பத்திரனவை விடுவித்தது CSK! Nov 15, 2025 - 05:42 PM 2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதன்படி, அண்மைக்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக மாறியிருந்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவை, வரவிருக்கும் தொடருக்காக அணியின் நிர்வாகம் விடுவிக்க முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இவரை இந்திய ரூபா 13 கோடிக்கு சென்னை அணி தக்கவைத்திருந்தது. 2023 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக தனது முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற மதீஷ பத்திரன, தான் விளையாடிய முதல் தொடரிலேயே வெற்றி பெற்ற அணியில் ஒரு அங்கமானார். அந்தத் தொடரில் அவர் தனது அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவரை அவர் 32 போட்டிகளில் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மதீஷ பத்திரன மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அப்போதைய தலைவர் மகேந்திர சிங் தோனி கூட, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் மதீஷ பத்திரன கவனத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அவ்வாறு செய்தால், அவரால் நீண்டகால தொழில்முறை பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், சென்னை அணிக்கு மதீஷ பத்திரன தேவைப்பட்டால், எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ள வீரர்களின் ஏலத்தில் அவரை மீண்டும் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது. ஏலத் திகதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படவுள்ள வீரர்களின் பட்டியலை இந்திய நேரப்படி இன்று மாலை 3.00 மணிக்கு முன் வெளியிட வேண்டியிருந்தது. அதன்படி, மதீஷ பத்திரனவைத் தவிர, நியூசிலாந்து வீரர்கள் டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா உட்பட பல வீரர்களை விடுவிக்கவும் சென்னை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmi08z6ia01n1o29ng29mia8a

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.