Everything posted by ஏராளன்
-
வீதி புனரமைப்புக்கு சவுதி நிதியத்திலிருந்து 06 மில்லியன் டொலர் நிதியுதவி - போக்குவரத்து அமைச்சு!
வீதி புனரமைப்புக்கு சவுதி நிதியத்திலிருந்து 06 மில்லியன் டொலர் நிதியுதவி - போக்குவரத்து அமைச்சு! Published By: Digital Desk 1 10 Jan, 2026 | 03:43 PM டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை மறுசீரமைப்பதற்காக சவுதி மேம்பாட்டு நிதியத்திலிருந்து மேலதிகமாக 06 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் சவுதி மேம்பாட்டு நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இடையே கலந்துரையாடல் இடம்பெற்றது. சவுதி பிரதிநிதிகள் குழுவில் சிரேஷ்ட நிபுணர் முஹமட் அல்-மசூத், சிரேஷ்ட கடன் நிபுணர் அப்துல்ரஹ்மான் எம். அல்-சோகெய்ர் மற்றும் திட்ட ஆய்வாளர் பைசல் அல்-முலித் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சின் செயலாளர் கபில பெரேராவும் இந்த கலந்துரையாடல்களில் கலந்துகொண்டுள்ளார். இந்த சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய வளர்ச்சிப் பாதை, டித்வா புயலின் தாக்கம் மற்றும் பேரழிவை எதிர்கொள்ள அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து சவுதி அதிகாரிகளுக்கு அமைச்சர் விளக்கமளித்துள்ளார். நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அண்மைய பொருளாதார முன்னேற்றம் குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டது. சவுதி மேம்பாட்டு நிதியம் ஏற்கனவே இலங்கை முழுவதும் வளர்ச்சித் திட்டங்களில் சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாக இதன்போது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலதிகமாக, டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதி உட்கட்டமைப்பை பழுதுபார்ப்பதற்கும் மறுசீரமைப்பதற்கும் குறிப்பாக 06 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிக்கவும் சவுதி பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது. திட்ட செயல்படுத்தல் மற்றும் காலக்கெடு குறித்த மேலதிக விபரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/235669
-
வடக்கு, கிழக்கு வானிலை குறித்த விசேட எச்சரிக்கை அறிவிப்பு
வடக்கு மாகாணத்தை ஊடறுக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபராஜா எச்சரிக்கை! 10 Jan, 2026 | 03:37 PM வங்காள விரிகுடாவில் காணப்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வடக்கு மாகாணத்தின் மையத்தில் உள்ளது என என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது இன்று சனிக்கிழமை முற்பகல் 11.40 மணியளவில் முல்லைத்தீவுக்கும் சுண்டிக்குளத்திற்கும் இடையில் சாளை ஊடாக நிலப்பகுதிக்குள் நுழைந்து தற்போது இரணைமடுக் குளப்பகுதியை மையம் கொண்டுள்ளது. இந்த சாளைப் பகுதி புவியியல் ரீதியாகவும் காலநிலையியல் ரீதியாகவும் கூர்ந்து அவதானிக்க வேண்டிய பகுதி. அண்மித்த காலங்களில் குறிப்பாக கடந்த 2000ம் ஆண்டு முதல் வங்காள விரிகுடாவில் உருவாகிய பல காற்றுச் சுழற்சிகள்( தாழமுக்கம்,/ காற்றழுத்த தாழ்வு நிலை/ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்/ புயல்) இந்த பகுதியினூடகவே வட மாகாணத்தினுள் பிரவேசித்துள்ளன. இது இன்று மாலை அல்லது இரவு வலைப்பாட்டுக்கும் அந்தோனியார்புரத்துக்கும் இடையில் மீண்டும் கடற்பகுதிக்குள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மிதமான மழை நாளை காலை வரை தொடரும் வாய்ப்புள்ளது. மிதமான மழை கிடைத்தாலும் தொடர்ச்சியாக மழை கிடைத்து வருகின்றது. இது ஒரு சில தாழ்நிலப் பகுதிகளில் நீர் தேங்க காரணமாக அமையக்கூடும். வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகள் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். வடக்கு மாகாணத்தின் உள்நிலப்பகுதிகளில் காற்றின் வேகம் சற்று அதிகமாக காணப்படும். அதே வேளை இந்தக் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மீண்டும் கடற்பகுதிக்குள் செல்லும் போது கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்கு கரையோரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/235686 தற்போது மேற்கு கரையை கடந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
-
உலகில் அதிக எண்ணெய் உற்பத்தி செய்தும் அமெரிக்காவுக்கு ஏன் இன்னும் எண்ணெய் தேவை?
உலகில் அதிக எண்ணெய் உற்பத்தி செய்தும் அமெரிக்காவுக்கு ஏன் இன்னும் எண்ணெய் தேவை? பட மூலாதாரம்,Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகின் மற்ற எந்த நாட்டை விடவும் அதிக அளவிலான கச்சா எண்ணெயை உற்பத்தி செய்வது அமெரிக்காதான். அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் கூற்றுப்படி, 2025-ஆம் ஆண்டில் அமெரிக்கா ஒரு நாளைக்கு 13.4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை விற்பனை செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி எண்ணெயைப் பற்றி பேசுகிறார். ஆனால் அவர் அமெரிக்க எண்ணெயைப் பற்றி மட்டும் பேசுவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்காவே இவ்வளவு பெரிய அளவில் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் போது, அதற்கு ஏன் இன்னும் கூடுதல் எண்ணெய் தேவைப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க கச்சா எண்ணெயில் 80% இலகுரக எண்ணெயாகும். அமெரிக்காவிற்கு அதிக எண்ணெய் தேவைப்படுவது ஏன்? அமெரிக்கா தனது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெயை நம்பி செயல்பட முடியாதா? எண்ணெய் வணிகத்துடன் வெனிசுவேலா எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது? உண்மையில் இதற்கான காரணம் கச்சா எண்ணெயின் வகையை அடிப்படையாகக் கொண்டது. பூமியிலிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் அதன் அடர்த்தி, சல்பர் அளவு மற்றும் பாயும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு தரங்களாகப் பிரிக்கப்படுகிறது. பரந்த அளவில் பார்த்தால், கச்சா எண்ணெய் இரண்டு வகைப்படும்: 1. இலகுரக கச்சா எண்ணெய் 2. கனரக கச்சா எண்ணெய் "உலகில் 160-க்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய் வகைகள் உள்ளன. உலகெங்கிலும் உள்ள வெவ்வேறு சுத்திகரிப்பு நிலையங்கள் வெவ்வேறு தரத்திலான கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கின்றன," என்று எரிசக்தி ஆய்வாளர் கௌரவ் சர்மா விளக்குகிறார். கனரக எண்ணெயை விட இலகுரக கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பது எளிது. சுத்திகரிப்புக்குப் பிறகு, இது பெரும்பாலும் பெட்ரோல் மற்றும் ஜெட் எரிபொருள் (விமான எரிபொருள்) தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கனரக எண்ணெய் கப்பல்களுக்கான எரிபொருள், சாலை அமைக்கும் பொருட்கள் மற்றும் லிப் பாம் போன்ற பல பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. இலகுரக கச்சா எண்ணெய் கனரக எண்ணெயை விட அதிக மதிப்புடையது, எனவே அதன் விலையும் அதிகம். 2025-ல், அமெரிக்கா ஒரு நாளைக்கு 13.4 மில்லியன் பேரல் எண்ணெயை விற்பனை செய்தது. அதே சமயம், பிற நாடுகளிலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 2 மில்லியன் பேரல் எண்ணெயை வாங்கியது. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்கா தான் உற்பத்தி செய்யும் எண்ணெயை ஏன் தனக்காக வைத்துக் கொள்வதில்லை என்ற கேள்வி இங்கே எழுகிறது. இதற்கெல்லாம் காரணம் இலகுரக மற்றும் கனரக எண்ணெய் விவகாரம்தான். அமெரிக்க பெட்ரோலிய இன்ஸ்டிடியூட்டின் தகவல்படி, அமெரிக்காவின் எண்ணெய் 80 சதவீதம் இலகுரக வகையைச் சேர்ந்தது. ஆனால், அமெரிக்காவின் பெரும்பாலான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் கனரக எண்ணெயைச் சுத்திகரிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. 20-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான எண்ணெய் லத்தீன் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கனரக கச்சா எண்ணெய் ஆகும். பின்னர் 2000-களின் முற்பகுதியில், அமெரிக்க எண்ணெய் உற்பத்தியில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததால், 'ஷேல்' பாறைகளிலிருந்து இலகுரக கச்சா எண்ணெயை அதிக அளவில் பிரித்தெடுப்பது சாத்தியமானது. இப்போது அமெரிக்கா எடுக்கும் கச்சா எண்ணெய் வகைக்கும், அதன் சுத்திகரிப்பு நிலையங்கள் கையாளும் கச்சா எண்ணெய் வகைக்கும் இடையே ஒரு பொருத்தமின்மை உள்ளது. அதாவது, அமெரிக்கா பெரும்பாலும் இலகுரக எண்ணெயை எடுக்கிறது, ஆனால் கனரக எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறனை கொண்டுள்ளது. "ஒருமுறை ஒரு சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுவிட்டால், அதை மாற்றுவது மிகவும் கடினம். அதற்கு கோடிக்கணக்கான டாலர்கள் முதலீடு தேவைப்படும்," என்று கௌரவ் சர்மா கூறுகிறார். அதே நேரத்தில், கனரக எண்ணெயை விட இலகுரக எண்ணெயின் விலை அதிகம் என்பதால், அமெரிக்கா தனது இலகுரக எண்ணெயை அதிக விலைக்கு விற்றுவிட்டு, கனரக எண்ணெயை மலிவான விலைக்கு வாங்குகிறது. பட மூலாதாரம்,Getty Images எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்க-வெனிசுவேலா உறவுகள் வெனிசுவேலா, செளதி அரேபியா, இரான், கனடா, இராக், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் லிபியா ஆகிய நாடுகள் உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ளன. இதில் பல நாடுகள் கனரக கச்சா எண்ணெயை எடுப்பதில் பெயர் பெற்றவை. இந்த பட்டியலில் உள்ள மூன்று நாடுகளான வெனிசுவேலா, இரான் மற்றும் ரஷ்யா ஆகியவை தற்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகியுள்ளன. இருப்பினும், வெனிசுவேலாவிலிருந்து சில எண்ணெய் விநியோகங்கள் தொடர்ந்து அமெரிக்காவை சென்றடைகின்றன. ஏனெனில், வெனிசுவேலாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அந்நாட்டின் எண்ணெய் தொழில்துறையை கட்டமைப்பதில் அமெரிக்க நிறுவனங்கள் பெரும் பங்கு வகித்தன. 20-ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதி வரை, அமெரிக்கா அங்கிருந்து கனரக கச்சா எண்ணெயை எடுத்து வந்தது. நவர்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் கார்மென் பீட்ரிஸ் பெர்னாண்டஸ் இதுகுறித்துக் கூறுகையில், "மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளைப் போலன்றி, வெனிசுவேலா 1976-ல் எண்ணெய் தொழிலை தேசியமயமாக்கிய போதும் அமெரிக்காவுடன் நல்ல உறவைப் பேணி வந்தது. ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், அந்த உறவு எப்போதும் சீராக இருந்தது," என்கிறார். 1999-ஆம் ஆண்டு சோசலிசத் தலைவர் ஹியூகோ சாவேஸ் ஆட்சிக்கு வந்தபோது இந்த உறவில் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, எண்ணெய் துறையின் மீதான அரசாங்க கட்டுப்பாட்டை அவர் வலுப்படுத்தினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் லத்தீன் அமெரிக்க ஆய்வக மையத்தைச் சேர்ந்த முனைவர் கிரேஸ் லிவிங்ஸ்டோன் இதுகுறித்துக் கூறுகையில், "வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் மீது அவர் கடுமையான நிபந்தனைகளை விதித்தார். இது அமெரிக்க அரசுக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கும் பிடிக்கவில்லை," என்கிறார். 2013-ல் ஹியூகோ சாவேஸ் மறைந்த பிறகு, நிக்கோலஸ் மதுரோ வெனிசுவேலாவின் அதிபரானார். அவர் சாவேஸின் கொள்கைகளையே தொடர்ந்து பின்பற்றினார். 2019-ஆம் ஆண்டில், உலக வங்கி தீர்ப்பாயம் வெனிசுவேலா அரசாங்கத்தை அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அந்தத் தொகை வழங்கப்படவில்லை. இதைக் குறிப்பிட்டு, அமெரிக்காவின் எண்ணெயை வெனிசுவேலா திருடிவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டுகிறார். எனினும், வெனிசுலா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது. 2025-ன் பிற்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான நிலைமை மேலும் மோசமடைந்தது. அமெரிக்க ராணுவம் எண்ணெய் டேங்கர்களைக் கைப்பற்றியதுடன், வெனிசுவேலா துறைமுகங்களையும் முற்றுகையிட்டது. போதைப்பொருள் கடத்தப்படுவதை ஒடுக்குவதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images அமெரிக்கா வெனிசுவேலாவின் எண்ணெய் விவகாரத்தில் தலையிடுமா? ஜனவரி 3, 2026 அன்று, அமெரிக்க ராணுவம் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்தது. போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்பான விசாரணையை எதிர்கொள்வதற்காக அவர்கள் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நடவடிக்கைக்குப் பிறகு டிரம்ப் கூறுகையில், "உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களை அங்கு பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்ய நாங்கள் அனுப்புவோம். அங்கிருந்து ஈட்டப்படும் பணம் அங்கேயே பயன்படுத்தப்படும், அதன் மூலம் வெனிசுவேலா மக்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவார்கள்," என்றார். கடந்த பல ஆண்டுகாலமாக, வெனிசுவேலா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகள் ரஷ்யா, இரான் மற்றும் முக்கியமாக சீனா ஆகிய நாடுகளுக்கு அங்கு இடமளித்தன. கிரேஸ் லிவிங்ஸ்டோன் கூறுகையில், "வெனிசுவேலாவுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான தென் அமெரிக்க நாடுகளுக்கும் சீனா ஒரு மிக முக்கியமான வர்த்தகக் கூட்டாளியாக மாறியுள்ளது. குறிப்பாக, அது எண்ணெய் மற்றும் பிற இயற்கை வளங்களை பெரிய அளவில் வாங்குகிறது" என்கிறார். வெனிசுவேலாவின் எண்ணெயில் சுமார் 90 சதவீதத்தை சீனா வாங்கி வந்தது. இதைத் தடுப்பதே டிரம்ப் நிர்வாகத்தின் நோக்கமாக இருந்தது. "நாங்கள் அங்கு பாதுகாப்பை விரும்புகிறோம். உலகெங்கிலும் உள்ள நமது எதிரிகளுக்கு அடைக்கலம் தராத அண்டை நாடுகளையே நாம் விரும்புகிறோம்" என்று அவர் கூறியிருந்தார். வெனிசுவேலாவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு (சுமார் 303 பில்லியன் பேரல்கள்) உள்ளது. இருப்பினும், வெனிசுவேலா ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பேரல்களுக்கும் குறைவான எண்ணெயையே ஏற்றுமதி செய்கிறது. இதற்குக் காரணம் பொருளாதாரத் தடைகள், பல ஆண்டுகாலமாக நிலவும் நிதிப்பற்றாக்குறை மற்றும் மோசமான நிர்வாகம் ஆகும். கௌரவ் சர்மா கூறுகையில், "பல இடங்களில் உள்கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்க வேண்டியிருக்கும். வெனிசுவேலா கச்சா எண்ணெய் விநியோகம் போதுமான அளவில் தொடங்க மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகலாம்" என்கிறார். "கடந்த நூற்றாண்டில், எண்ணெய் தொழில் பல நாடுகளுக்கு மகத்தான செல்வத்தை ஈட்டித் தந்துள்ளது. இது பல நாடுகளின் தலையெழுத்தையே ஒரே இரவில் மாற்றியமைத்த பல டிரில்லியன் டாலர் மதிப்பிலான தொழில்துறையாகும்"என்கிறார் கௌரவ் சர்மா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxjgnnjz9lo
-
கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர்
ரஷ்யா - சீனா ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா கிரீன்லாந்தை “சொந்தமாக்க வேண்டும்” - டிரம்ப் 10 Jan, 2026 | 12:19 PM ரஷ்யா மற்றும் சீனா கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதைத் தடுக்க, அமெரிக்கா அந்தத் தீவை “சொந்தமாக்க வேண்டும்”** என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். “நாடுகள் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும், நீங்கள் உரிமையைத்தான் பாதுகாக்க முடியும்; குத்தகை ஒப்பந்தங்கள் போதுமானவை அல்ல. நாம் கிரீன்லாந்தைப் பாதுகாக்க வேண்டியிருக்கும்,” என்றும் டிரம்ப் கூறினார். மேலும், இதை “எளிதான வழியிலும், கடினமான வழியிலும்” முன்னெடுக்கும் எண்ணம் இருப்பதாக தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை அண்மையில், டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை வாங்குவது குறித்து தனது நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தது. ஆனால், தேவையானால் பலப்பிரயோகத்தைப் பயன்படுத்தும் விருப்பத்தையும் அது நிராகரிக்கவில்லை. இருப்பினும், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அதிகாரிகள் தெளிவாக, “கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை” எனக் கூறி இருக்கின்றனர். டென்மார்க் எச்சரித்தது, இதுபோன்ற இராணுவ நடவடிக்கை அட்லாண்டிக் பாதுகாப்புக் கூட்டணிக்கு (NATO) விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உலகின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதியாக இருந்தாலும், வட அமெரிக்கா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளுக்கிடையேயுள்ள கிரீன்லாந்து மூலோபாய ரீதியாக மிகவும் முக்கியமாகும். ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து முன்னெச்சரிக்கை அமைப்புகளை நிறுவவும், அந்தப் பிராந்தியத்தில் செல்லும் கப்பல்களை கண்காணிக்கவும் இது சிறந்த இடமாகும். டிரம்ப் மீண்டும் மீண்டும் “கிரீன்லாந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு மிக முக்கியம்” என்று கூறி வருகிறார். ஆதாரங்களை வழங்காமல், கிரீன்லாந்தில் “ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்கள் நிரம்பியுள்ளன” என்று குற்றச்சாட்டும் அவர் முன்வைத்துள்ளார். இரண்டாம் உலகப் போரிலிருந்து அமெரிக்கா இயக்கி வரும் பிட்டுஃபிக் (Pituffik) தளத்தில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவ வீரர்கள் நிரந்தரமாக நிலைகொண்டுள்ளனர். தற்போதைய ஒப்பந்தங்கள் அமெரிக்காவிற்கு தேவையானளவு வீரர்களை கிரீன்லாந்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கின்றன. ஆனால் டிரம்ப், “குத்தகை ஒப்பந்தங்கள் போதுமானவை அல்ல; உரிமை (Ownership) வேண்டும்” என்றும் கூறினார். டிரம்ப், “நான் சீன மக்களையும் ரஷ்ய மக்களையும் விரும்புகிறேன். ஆனால் அவர்கள் கிரீன்லாந்தில் என் அண்டை வீட்டாராக இருப்பதை நான் விரும்பவில்லை. அது நடக்கப்போவதில்லை,” என்று கூறினார். மேலும், “நேட்டோ இதை புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார். டென்மார்க் நாட்டின் நேட்டோ நட்பு நாடுகளான முக்கிய ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா, இந்த வாரம் டென்மார்கிற்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். அவை, “டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மட்டுமே தங்கள் உறவுகள் தொடர்பான விஷயங்களில் முடிவெடுக்க முடியும்” எனக் கூறியுள்ளன. மேலும், ஆர்க்டிக் பாதுகாப்பில் அமெரிக்காவைப் போலவே ஆர்வம் கொண்டுள்ள நாடுகள், இதை அனைத்து நட்பு நாடுகளும் ஒன்றாகச் சேர்ந்து சமாளிக்க வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் ஈர்க்கூடல், பிராந்திய ஒருமை, எல்லைகளை மீறாமை ஆகிய கொள்கைகளையும் நிலைநிறுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளன. பிபிசி (BBC) செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235670
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைனில் ரஷ்யாவின் ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்: 4 பேர் பலி, 23 க்கு மேற்பட்டோர் காயம் 10 Jan, 2026 | 11:48 AM ரஷ்யா-உக்ரைன் இடையிலான போராட்டத்தை முடிக்க முயற்சிகள் நடைபெற்று வந்தபோது, ரஷ்யா புதிய ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான டிரோன்கள் மற்றும் 20 க்கு மேற்பட்ட ஏவுகணைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்து, 23-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக நடந்த தாக்குதலில், கீவ் நகரில் உள்ள கத்தார் தூதரகம் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார். கத்தார், ரஷ்யா-உக்ரைன் சிறைக்கைதிகள் பரிமாற்றத்தில் முக்கிய பங்காற்றிய நாடாகும். குறிப்பாக, ஒரேஷ்னிக் ஏவுகணை கடந்த ஆண்டு இறுதியில் உக்ரைன் பகுதியில் பரிசோதிக்கப்பட்டு, கடந்த வாரம் செயல்பாட்டுக்கு வந்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதன்போது நடத்தப்பட்ட தாக்குதல் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/235667
-
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்
ஈரானில் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு : இணைய சேவை முடக்கம் ! 10 Jan, 2026 | 11:37 AM ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து வெடித்துள்ள மக்கள் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டொலருக்கு நிகராக வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி, ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக சரிந்தது. இந்த நாணய வீழ்ச்சி, பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனை எதிர்த்து, தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமக்களும் வியாபாரிகளும் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தினர். பல இடங்களில் ஏற்பட்ட மோதல்கள் வன்முறையாக மாறி நிலைமை மேலும் தீவிரமடைந்தது. நிலைமை கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து, மத்திய வங்கி ஆளுநர் முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள், தொடர்ச்சியான பணவீக்கம் மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. தொடர்ந்து இடம்பெறும் போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் இதுவரை பலனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, ஈரான் முழுவதும் இணைய சேவைகள் மற்றும் செல்போன் தொடர்பாடல்கள் முடக்கப்பட்டுள்ளன. ஈரானில் நிலவும் இந்த அரசியல் மற்றும் பொருளாதார பதற்றம், அடுத்தகட்டமாக எத்தகைய திருப்பத்தை எடுக்கும் என்பது குறித்து சர்வதேச சமூகம் கூர்ந்து கவனித்து வருகின்றது. https://www.virakesari.lk/article/235666
-
இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் புயல் உருவாகுமா? நிலவரம் என்ன?
அது புயலாக வலுப்பெறுவதற்கான அறிகுறிகளும் இல்லை - இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் Published By: Vishnu 10 Jan, 2026 | 04:47 AM (எம்.மனோசித்ரா) தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழமுக்கம் நேற்று நாட்டுக்குள் பிரவேசிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் நகர்வு பாதையில் மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அது புயலாக வலுப்பெறுவதற்கான அறிகுறிகளும் இல்லை. எனவே பெரும்பாலான பிரதேசங்களில் எதிர்பார்க்கப்பட்ட கன மழை வீழ்ச்சி குறைவாகவே காணப்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழமுக்கமானது நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்புக்கு கிழக்காக சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது. இந்த தாழமுக்கம் நேற்று மாலை 5.30 - 11.30க்கு இடையில் நாட்டுக்குள் பிரவேசிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அது பயணிக்கும் பாதையில் மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய திருகோணமலை கரையோரத்தின் ஊடாக இப்பகுதி நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடும். எனவே எதிர்பார்க்கப்பட்டளவு கடும் மழை வீழ்ச்சி பதிவாகாது. இத்தாழமுக்கம் புயலாக வலுப்பெறுவதற்கான அறிகுறிகள் இல்லை. எனவே வடக்கு, வடமத்திய, வடமேல் உள்ளிட்ட மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யும். இந்த மாகாணங்களிலுள்ள சில மாவட்டங்களில் 100 மில்லி மீற்றரை அண்மித்தளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். இவை தவிர ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இம்மாகாணங்களில் 50 - 75 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். ஏனைய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யும். எவ்வாறிருப்பினும் காற்றின் வேகமானது அவ்வாறே காணப்படுகிறது. குறிப்பாக மத்திய மழை நாட்டை அண்மித்த பகுதிகளிலும், தென் மாகாணத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் போக்கு குறைவடைந்துள்ள போதிலும், ஏனைய மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோ மீற்றர் வரை காணப்படும். மீன்பிடி மற்றும் கடற்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து அம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளிலும் கடற்றொழில் நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு தொடர்ந்தும் அறிவுறுத்தப்படுகிறது. இங்கு மாத்திரமின்றி ஏனைய கடற்பகுதிகளிலும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொறுத்தமற்றது. இன்று சனிக்கிழமையுடன் மழை வீழ்ச்சி படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் படிப்படியாக பலவீனமடைந்து நாட்டைக் கடந்து செல்லும் என்றார். https://www.virakesari.lk/article/235641
-
தரையிறங்கும் போது விபரீதம்; நுவரெலியா ஏரியில் வீழ்ந்த விமானம்
நுவரெலியா கிரகரி வாவியில் விழுந்த விமானம் இரண்டு நாள் போராட்டத்தின் பின் மீட்பு! 10 Jan, 2026 | 10:16 AM நுவரெலியா, கிரகரி வாவியில் விபத்திற்குள்ளான நீர் விமானம் (sea plane) பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (09) மாலை 6 மணியளவில் மீட்டெடுக்கப்பட்டது. இலங்கை விமாப்படைக்குச் சொந்தமான அதி உயர் தொழில்நுட்பம் கூடிய பாரந்தூக்கி வாகனங்கள் மூலம் கரைக்கு இழுத்துச் தூக்கி எடுக்கப்பட்டது. எனினும் மீட்பு பணியின் போதும் விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்திலும் குறித்த விமானம் கடுமையாக சேதம் ஏற்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் நுவரெலியா பொலிஸ் உயிர்காப்பாளர்கள், விமானப்படை அதிகாரிகள் , இராணுவ அதிகாரிகள் மற்றும் கிரகரி வாவி படகு சவாரி வீரர்கள் ஆகியோர் இணைந்து வாவியில் விபத்திற்குள்ளான விமானத்தை பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் மீட்டனர். நுவரெலியாவில் தற்போது நிலவி வரும் பனி மற்றும் மோசமான வானிலை காரணமாகவும் , கிரகரி வாவியில் சேறும் சகதியும் தேங்கி உள்ளதால் மீட்பு பணியை மேற்கொள்வதில் (08) வியாழக்கிழமை சற்று தாமதம் ஏற்பட்டிருந்தது. விமானம் விபத்திற்குள்ளானதற்கான உரிய காரணம் இதுவரை தெரிய வரவில்லை இதுபற்றி விசாரணை செய்வதற்கு தனிப்பட்ட குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா, கிரகரி வாவியில் நீர் விமானம் (sea plane) ஒன்று புதன்கிழமை (07) ஆம் பிற்பகல் 12.30 மணியளவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிலிருந்த 2 விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக கட்டுநாயக்க பண்டார நாயக்கர், சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வந்தபோதே விமானம் வேகமாக தரையிறங்கும் போதோ விமானிகளின் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளையும், ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தவர்கள் உடனடியாக மீட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/235654
-
வவுனியாவில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு கடூழிய சிறை
சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு கடூழிய சிறை Jan 10, 2026 - 11:07 AM வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு யூன் மாதம் 18 ஆம் திகதி வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த 33 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்து பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து 2023 டிசம்பர் 22 ஆம் திகதி, பாலியல் வன்புணர்வு புரிந்ததாக சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைககளத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு அரச சட்டவாதி ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் சந்தேக நபரான வவுனியா விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த 33 வயது நபர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டது. குறித்த வழக்கு தீர்ப்புக்காக நேற்றைய தினம் (09) திகதிடப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பினை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியது. இதன்போது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் திறந்த நீதிமன்றில் தீர்ப்பினை வாசித்துக் காட்டினார். குறித்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன், 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், தவறின் 2 மாதகால சாதாரண சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தவறின், ஒரு வருட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது. -வவுனியா தீபன்- https://adaderanatamil.lk/news/cmk7vicnv03qwo29nud96yvrj
-
இங்கிலாந்து முழுவதும் கடும் பனி; 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மின்தடை
இங்கிலாந்து முழுவதும் கடும் பனி ; 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மின்தடை 10 Jan, 2026 | 10:17 AM இங்கிலாந்து உட்பட மேலும் பல நாடுகளில் பனி மழை மற்றும் கடும் குளிர் காரணமாக மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், பத்தாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கிலாந்து முழுவதும் கனமான பனி, மற்றும் பலத்த காற்று வீசியுள்ள நிலையில், மேலும் கடுமையான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஸ்கொட்லாந்து மற்றும் வட இங்கிலாந்திலுள்ள பகுதிக்கு பனி மற்றும் கடும் குளிர் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை (11) வரை தொடரும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு இங்கிலாந்தில் மட்டும் 34,000க்கும் மேற்பட்ட இடங்களில் இன்னும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மிட்லாண்ட்ஸ் மற்றும் வேல்ஸிலும் ஆயிரக்கணக்கான இடங்களில் மின்தடை தொடர்கிறது. மேற்கு மிட்லாண்ட்ஸில் சுமார் 2,000 இடங்களிலும், கிழக்கு மிட்லாண்ட்ஸில் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களிலும், வேல்ஸில் 130 இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை (09) காலை ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. பெரும்பாலானவை குறுகிய தூரப் பயண விமானங்களாகும். தேசிய ரயில்வே நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை (11) வரை ரயில் சேவைகள் பாதிக்கப்படலாம் என எச்சரித்து, பயணிகள் முன்கூட்டியே பயண விவரங்களை சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்காட்லாந்து மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தின் மலைப்பகுதிகளில் பனியுடன் கூடிய மழை தொடரும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஞாயிறு பிற்பகலில் தென் மேற்கு பகுதிகளில் வெப்பநிலை 12°C வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமைக்குள் மிதமான வானிலை நாடு முழுவதும் பரவும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/235653
-
எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்.. டக்ளஸ் தேவானந்தா
எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்.. Jan 10, 2026 - 07:00 AM தன்னை திடீரெனக் கைது செய்ததன் காரணமாக எனது மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் கவலையையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிவதாக முன்னாள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கணொளி ஒன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று நான் விடுவிக்கப்பட்டிருக்கின்றேன். அந்த வகையில் எனது விடுதலையையிட்டு மகிழ்ச்சியடைந்த மக்கள், பல்வேறு வழிகளிலும் தமது உணர்வுகளை எனக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு எனது நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் பல காரணங்களுக்காக. அதேபோன்று, எனது தரப்பு நியாயங்களை நீதிமன்றில் எடுத்துரைத்த சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன், அந்த நியாயங்களை உணர்ந்து தீர்ப்பளித்த கம்பஹா மாவட்ட நீதவான் அவர்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகின்றேன்." என்றார். 2001ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் நேற்றைய தினம் அவர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmk7moi8a03qmo29nsw0hd480
-
இந்திய இராணுவத் தளபதி உபேந்திர திவேதி இலங்கை வருகிறார்
இந்திய இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு Jan 9, 2026 - 11:35 PM இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, தனது விஜயத்தை நிறைவு செய்து இன்று (09) நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த விஜயத்தின் போது, ஜெனரல் திவேதி இலங்கையின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் பயிற்சி, தொழில்முறை இராணுவக் கல்வி மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தினார். இதன்போது இந்திய இராணுவத் தளபதி, இலங்கை இராணுவத்தின் முக்கிய நிறுவனங்கள் சிலவற்றிற்கு விஜயம் செய்ததுடன், இலங்கை இராணுவத்திற்கு 20 நவீன கெப் ரக வாகனங்கள், நான்கு நோயாளர் காவு வண்டிகள் மற்றும் சில பயிற்சி உருவகப்படுத்திகளை நன்கொடையாக வழங்கினார். அத்துடன், புத்தல இலங்கை இராணுவ போர் கல்லூரியின் பயன்பாட்டிற்காக இந்திய உதவியின் கீழ் முழுமையான விளையாட்டு வளாகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லும் இதன்போது நட்டி வைக்கப்பட்டது. இது இந்திய - இலங்கை இராணுவ நட்புறவின் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்ததுடன், இலங்கை இராணுவத் தளபதி மற்றும் இந்திய இராணுவத் தளபதி ஆகியோருக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாகவும் பதிவாகியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmk76t3r603qjo29nvfspwfk2
-
மத்திய பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி, ஏழு பேர் காயம், 27 பேர் மாயம்
மத்திய பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி, ஏழு பேர் காயம், 27 பேர் மாயம் 10 Jan, 2026 | 09:09 AM மத்திய பிலிப்பைன்ஸின் செபு நகரின் பினாலிவ் பகுதியில் கழிவு பிரிப்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட குப்பைச் சரிவில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததுடன், ஏழு தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் தொழிலாளர்கள் 27 காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்றுள்ளதுடன், அந்த பகுதியில் பெரும் அளவிலான குப்பை மற்றும் இடிபாடுகள் சரிந்து விழுந்ததாகவும், அதில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதுவரை எட்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குப்பை மேடையில் பணியாற்றிய தொழிலாளர்களே எனத் தெரிவிக்கப்பட்டாலும், தொழிலாளர்கள் அல்லாதவர்கள் உள்ளனரா என்பது தெளிவாக தெரியவரவில்லை என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்டவர்களில் பெண் தொழிலாளி ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் மற்றவர்கள் அனைவரும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பிலிப்பைன் வரலாற்றில் இதுவரை நடந்த மிக மோசமான இத்தகைய விபத்து, திறந்த குப்பை மேடைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/235651
-
வடக்கு, கிழக்கு வானிலை குறித்த விசேட எச்சரிக்கை அறிவிப்பு
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திருகோணமலைக்கு அருகில் Jan 9, 2026 - 11:10 PM தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று (09) இரவு 10.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு-தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது. இது நாளை (10) மாலை வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய நாளை (10) வட மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmk75w0jp03qio29n4dni5s5x
-
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025
சிட்னி டெஸ்டில் வெற்றியீட்டி ஆஷஸ் தொடரை 4 - 1 என கைப்பற்றியது அவுஸ்திரேலியா; வெற்றியுடன் விடைபெற்றார் உஸ்மான் கவாஜா Published By: Vishnu 08 Jan, 2026 | 11:26 PM (நெவில் அன்தனி) சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது. 160 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 5 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது. போட்டியின் கடைசி நாளான வியாழக்கிழமை தனது 2ஆவது இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றது. 142 ஓட்டங்களிலிருந்து தனது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஜேக்கப் பெத்தல் மேலும் 12 ஓட்டங்களைப் பெற்று 154 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். பின்வரிசையில் ப்றைடன் கார்ஸ் 16 ஓட்டங்களையும் மெத்யூ பொட்ஸ் ஆட்டம் இழக்காமல் 18 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக், போ வெப்ஸ்டர் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். இலகுவான 160 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 5 விக்கெட்களை இழந்த பின்னரே வெற்றி இலக்கை கடந்தது. ஜேக் வெதரோல்ட், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் 30க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். இதேவேளை இந்த டெஸ்ட் போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் உஸ்மான் கவாஜா தனது 39ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வுபெற்றார். 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கவாஜா 16 சதங்கள், 28 அரைச் சதங்களுடன் 6229 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார். எண்ணிக்கை சுருக்கம் இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 384 (ஜோ ரூட் 160, ஹெரி ப்நூக் 84, ஜெமி ஸ்மித் 46, மைக்கல் நேசர் 60 - 4 விக்., ஸ்கொட் போலண்ட் 85 - 2 விக்., மிச்செல் ஸ்டாக் 93 - 2 விக்.) அவுஸ்திரேலியா 1ஆவத இன்: சகலரும் ஆட்டம் இழந்து 567 (ட்ரவிஸ் ஹெட் 163, ஸ்டீவன் ஸ்மித் 138, போ வெப்ஸ்டர் 71 ஆ.இ., மானுஸ் லபுஸ்ஷேன் 48, கெமரன் க்றீன் 37, ஜொஷ் டங் 95 - 2 விக்., ப்றைடன் கார்ஸ் 130 - 3 விக்., பென் ஸ்டோக்ஸ் 95 - 2 விக்.) இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 342 (ஜேக்கப் பெத்தெல் 154, பென் டெக்கட் 42, ஹெரி ப்றூக் 42, ஜெமி ஸ்மித் 26, போ வெப்ஸ்டர் 64 - 3 விக்., மிச்செல் ஸ்டாக் 72 - 3 விக்., ஸ்கொட் போலண்ட் 46 - 2 விக்.) அவுஸ்திரேலியா 2ஆவது இன்: - வெற்றி இலக்கு 160 ஓட்டங்கள் - 165 - 5 விக். (மானுஸ் லபுஸ்ஷேன் 37, ஜேக் வெதரோல்ட் 34, ட்ரவிஸ் ஹெட் 29, ஜொஷ் இங்லிஸ் 42 - 3 விக்.) ஆட்டநாயகன்: ட்ரவிஸ் ஹெட். தொடர்நாயகன்: மிக்செல் ஸ்டாக். https://www.virakesari.lk/article/235561
-
இந்தியாவுக்கு அமெரிக்கா 500% வரி விதித்தால் என்ன ஆகும்? நிபுணர்கள் அலசல்
இந்தியாவுக்கு அமெரிக்கா 500% வரி விதித்தால் என்ன ஆகும்? நிபுணர்கள் அலசல் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் 9 ஜனவரி 2026, 12:44 GMT புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரை வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய மசோதா குறித்த விவாதங்கள் தற்போது சர்வதேச அளவில் அதிகரித்துள்ளன 'ரஷ்ய தடைகள் மசோதா' என்று அழைக்கப்படும் இந்த மசோதா, அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டால், 'லிண்ட்சே கிரஹாம் மசோதா' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ரஷ்யாவிலிருந்து மலிவு விலையில் எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த சூழலில், இந்தியாவின் முன் இரண்டு விருப்பத் தெரிவுகள் மட்டுமே இருக்கக்கூடும். இந்தியா 500 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டும் அல்லது ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும். டொனால்ட் டிரம்பின் இத்தகைய தொடர்ச்சியான முடிவுகளைப் பார்க்கும்போது, அமெரிக்க அதிபரின் அதிகாரத்திற்கு ஏதேனும் எல்லை உள்ளதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அமெரிக்க செனட்டர் கிரஹாம் புதன்கிழமை அன்று எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், செனட்டர் ப்ளூமெந்தல் மற்றும் பலருடன் இணைந்து தான் பல மாதங்களாகத் தயாரித்து வந்த 'ரஷ்ய தடைகள் மசோதாவிற்கு' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மலிவான விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகள் ரஷ்ய அதிபர் புதினின் 'போர் இயந்திரத்திற்கு' ஊக்கமளிப்பதாகவும், அந்த நாடுகளைத் தண்டிப்பதற்கான அதிகாரத்தை அமெரிக்க அதிபருக்கு இந்த மசோதா வழங்கும் என்றும் கிரஹாம் குறிப்பிட்டிருந்தார். ரஷ்யாவிடமிருந்து பெருமளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கியமானது. ஆனால், அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகளுக்குப் பிறகு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவை கணிசமாகக் குறைந்திருப்பதைப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஒருவேளை ரஷ்ய தடைகள் மசோதா நிறைவேற்றப்பட்டு, இந்தியா மீது 500 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டால், அது இந்தியாவுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்? என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து பேசும் 'உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முயற்சி' நிறுவனத்தின் நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா, "இப்படியொரு சூழல் ஏற்பட்டால் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி முழுமையாக நின்றுவிடும். அதாவது, அமெரிக்காவிற்கு இந்தியா செய்யும் 87.4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி சிக்கலுக்கு உள்ளாகும்," என்கிறார். "இதுவரை டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக வரிகளை விதித்தார். ஆனால் தற்போதைய மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மசோதா நிறைவேறும் என்று நான் நினைக்கவில்லை. இருப்பினும், இந்தியா தனது கொள்கையை தெளிவுபடுத்த வேண்டும். இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க விரும்பினால், அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். வாங்க விரும்பவில்லை என்றால், அதையும் தெளிவாக கூற வேண்டும். ஒரே நேரத்தில் அமெரிக்க வரிகளால் ஏற்படும் இழப்புகளை அனுபவித்துக்கொண்டே, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியையும் குறைப்பது சாத்தியமில்லை." என்றார் அஜய் ஸ்ரீவாஸ்தவா. பட மூலாதாரம்,Reuters "டிசம்பர் மாதத்தில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்த எண்ணெயானது, ஜூன் மாதத்தில் இருந்த தினசரி 21 லட்சம் பேரல் என்ற உச்ச அளவை விட 40% குறைந்துள்ளது. விளாடிமிர் புதினின் போர் இயந்திரத்திற்கான பணம் கிடைப்பதைத் தடுப்பதற்கும், யுக்ரேன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகளுக்குக் கிடைத்த ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாக இந்த மசோதா கருதப்படுகிறது. 2024-ஆம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவிற்கு 87.4 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்தது, இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் சுமார் ஐந்தில் ஒரு பங்காகும்." என்று அமெரிக்க ஊடக நிறுவனம் ப்ளூம்பெர்க் கூறியுள்ளது வரி விதிப்பை அமெரிக்க அதிபர் எதேனும் ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொள்வாரா? 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை, டிரம்பிடம் கண்ட ஓர் நேர்காணலில், அவரது உலகளாவிய அதிகாரங்களுக்கு ஏதேனும் எல்லை உண்டா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த டிரம்ப், "ஆம், ஒன்று இருக்கிறது. அது என்னுடைய தார்மீக நெறி, எனது சொந்த அறிவு. அது ஒன்றுதான் என்னை தடுக்கக்கூடிய ஒன்று" என தெரிவித்தார். மேலும், "எனக்கு சர்வதேச சட்டங்கள் தேவையில்லை. நான் மக்களுக்கு தீங்கு செய்ய முயற்சிக்கவில்லை," என்றும் கூறினார். "டிரம்ப் நிர்வாகம் சர்வதேசச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டுமா?" என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "ஆம், நான் பின்பற்றுகிறேன். ஆனால் அதை நான்தான் தீர்மானிப்பேன். சர்வதேசச் சட்டம் குறித்த உங்கள் வரையறை என்ன என்பதைப் பொறுத்தே அது அமையும்." அமெரிக்கா மீண்டும் அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்று இந்தியா தலைமையிலான சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (ஐஎஸ்ஏ) உட்பட சுமார் ஒரு டஜன் சர்வதேச அமைப்புகளிடமிருந்தும் அமெரிக்கா விலகியுள்ளது. ஐஎஸ்ஏவிலிருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் முடிவு தொடர்பாக இதுவரை இந்திய அரசாங்கம் இன்னும் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்தியாவும் பிரான்சும் இணைந்து நிறுவிய இந்த அமைப்பில் 90க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகள் உள்ளன. சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் தலைமையகம் டெல்லியில் உள்ளது. இந்தியாவிற்கான அமெரிக்க தூதராகவும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்புத் தூதராகவும் நியமிக்கப்பட்டிருக்கும் செர்ஜியோ கோர் இந்த வாரம் டெல்லிக்கு வரவிருக்கிறார். ஜனவரி 12 அன்று அவர் இந்தியத் தூதராக பதவியேற்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க முடிவுகள் குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள தி இந்துவின் சர்வதேச ஆசிரியர் ஸ்டான்லி ஜோனி, ''இந்த மிகவும் கடுமையான 500 சதவீத வரி சட்டம் அமல்படுத்தப்பட்டால், அமெரிக்காவுடன் இந்தியா கொண்டுள்ள 'முழுமையான உத்தி ரீதியிலான கூட்டாண்மை' என்ற அடிப்படை கருத்தையே இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.'' என தெரிவித்துள்ளார். இதை உணர்த்தும் விதமாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, அரசு ஒப்பந்தங்களுக்கு சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஐந்து ஆண்டு கட்டுப்பாடுகளை நீக்க இந்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு வருகிறது என தெரிவித்துள்ளது. 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளின் படைகளுக்கும் இடையே நடந்த தீவிரமான மோதலுக்குப் பிறகு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பட மூலாதாரம்,Reuters இந்தியாவால் 500% வரியை எதிர்கொள்ள முடியுமா? வெளியுறவுக் கொள்கை குறித்த ஆய்வு மையமான அனந்தா மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திராணி பாக்சி, அமெரிக்காவின் இந்த உத்தி மற்றும் புதிய மசோதா குறித்து எக்ஸ் வலைதளத்தில் விரிவாக பதிவிட்டுள்ளார். "லிண்ட்சே கிரஹாமின் இந்த மசோதா கடந்த ஒன்பது மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. யுக்ரேனின் எதிர்காலம் குறித்து அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே ஏற்பட்ட ஓர் ஒப்பந்தத்தின் பகுதியாக இது தற்போது மீண்டும் பரிசீலிக்கப்படுகிறது. தங்களுடைய இறுதித் திட்டத்தை ரஷ்யாவிடம் முன்வைக்க அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தயாராகி வருகின்றன." "இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கும் பாதிப்பு உண்டு என்றாலும் அமெரிக்காவின் உண்மையான இலக்கு சீனாதான். இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளின் மீது அமெரிக்கா தடைகளை விதித்தால், அதற்குப் பதிலாக யுக்ரேன் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ஓர் உடன்பாட்டிற்கு வரக்கூடும். அந்த ஒப்பந்தத்தின்படி, யுக்ரேன் தனது சில பகுதிகளை ரஷ்யாவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கலாம்." "இந்தியாவின் கொள்கை எப்போதுமே யதார்த்தம் மற்றும் நடைமுறைச் சிந்தனையின் அடிப்படையிலேயே இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால், இந்தியா விரைவில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டு வரும் என்று நம்புகிறேன். இந்தியா ஏற்கனவே 50 சதவீத வரி விதிப்பால் திணறி வரும் நிலையில், 500 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்வது சாத்தியமற்றது." என தெரிவித்துள்ளார் அத்துடன், ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார். ரஷ்ய எண்ணெய் இல்லாமலும் இந்தியாவால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றும், தனது வாடிக்கையாளரான இந்தியாவை இழந்தாலும் ரஷ்யாவால் தன்னைச் சமாளித்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறுகிறார். கடந்த ஓராண்டில் இந்திய-அமெரிக்க உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் இந்த உறவு 'தீவிர சிகிச்சைப் பிரிவில்' (ICU) நீடிக்கவே வாய்ப்புள்ளதாகவும் இந்திராணி பாக்சி எச்சரிக்கிறார். அமெரிக்காவின் 500 சதவீத வரி மசோதா குறித்து பேசும் இந்திராணி பாக்சி, '' இதிலிருந்து சில நாடுகளுக்கு விலக்கு அளிக்கும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கும். தகவல்களின்படி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சில சிறப்பு விலக்குகள் அளிக்கப்படும். அதாவது, ஐரோப்பா எந்தத் தடையுமின்றி ரஷ்ய எரிசக்தியைத் தொடர்ந்து கொள்முதல் செய்யும். அமெரிக்கா இப்போதும் ரஷ்யாவிடமிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாங்குகிறது. 2028 வரை அமெரிக்கா தனக்குத்தானே இந்த விலக்கைத் தொடருமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை." "தற்போதைய சூழலில் இந்த உண்மைகள் புறக்கணிக்கப்பட்டு, இந்தியா மற்றும் சீனாவை வில்லன்களாகக் காட்டும் முயற்சிகளே அதிகம் நடக்கும். அண்மையில் லத்தீன் அமெரிக்காவில் வெனிசுவேலா விவகாரத்தில் சீனாவிற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய எண்ணெய் மீதான வரி விதிப்பால் சீனாவும் பெரும் நட்டத்தை சந்திக்க நேரிடும். இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் இலக்காக இரான் மாறக்கூடும்." என்கிறார் இந்திராணி பாக்சி. இதற்கிடையில், இந்த அமெரிக்காவின் புதிய மசோதா குறிப்பாக இந்தியாவைக் குறிவைக்கக்கூடும் என்றும், அதே சமயம் சீனா ஓரளவிற்குப் பாதுகாப்பாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் 'தி எகனாமிக் டைம்ஸ்' நாளிதழ் வெளியிட்ட செய்தி கூறுகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யாவின் எண்ணெயை அதிகமாக வாங்கும் நாடு சீனா சீனாவுக்கு பாதிப்பு இருக்குமா? ரஷ்ய எண்ணெயை அதிகளவில் வாங்கும் நாடுகளில் சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகளுமே முக்கியமானவை. அமெரிக்கா, புதிய மசோதாவின் மூலம் இந்த மூன்று நாடுகளையுமே குறிவைப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இதுவரை இந்தியா மீது மட்டுமே 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், சீனாவிற்கு எதிராக எவ்வித தண்டனை நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையிடம் பேசிய வர்த்தக நிபுணர் அஜய் ஸ்ரீவாஸ்தவா, "இந்த மசோதா செனட்டில் நிறைவேற்றப்பட்டாலும், நடைமுறையில் இது சாத்தியமில்லை. இது இந்தியாவை மட்டுமே குறிவைக்கும். சீனா அதற்கு அப்பாற்பட்டதாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார். 'ஆர்டி இந்தியா செய்தியிடம் பேசிய முன்னாள் இந்திய வர்த்தகச் செயலாளர் அஜய் துவா , "500% வரி என்பது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியைத் தடுப்பதற்கான வழிமுறையே தவிர வேறில்லை. இது வர்த்தகத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதற்குச் சமம்," என்றார். "நாம் தற்போது 25 சதவீத வரியைச் செலுத்தி வருகிறோம். ஒருவேளை 500 சதவீத வரி விதிக்கப்பட்டால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை அமெரிக்காவில் யாரும் வாங்க முடியாது. எனவே, கூடிய விரைவில் இந்தியா மாற்றுச் சந்தைகளைக் கண்டறிய வேண்டும்," என்றும் அவர் எச்சரிக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyw2ze65xeo
-
செங்கலடியில் பாரிய கொள்ளை
செங்கலடியில் பாரிய கொள்ளை Jan 9, 2026 - 07:22 PM மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள பிரபல சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றில், இன்று (09) வெள்ளிக்கிழமை அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மிகவும் திட்டமிட்ட முறையில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பெறுமதியான சொத்துக்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். வர்த்தக நிலைய உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில், சுமார் 45 இலட்சம் ரூபா பணம், 5 பவுன் தங்க நகைகள், கடையில் இருந்த பெறுமதியான விற்பனைப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொள்ளையர்கள் தாங்கள் அடையாளம் காணப்படுவதைத் தவிர்ப்பதற்காக மிகவும் சாதுர்யமாகச் செயற்பட்டுள்ளனர். கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராக்களைச் சேதப்படுத்தியதுடன், காட்சிகளைப் பதிவு செய்யும் கருவிகளையும் (DVR) கையோடு எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நேரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடையிலிருந்த கண்காணிப்புப் பதிவுக்கருவி திருடப்பட்ட போதிலும், அந்தச் சந்தியில் அமைந்துள்ள ஏனைய வர்த்தக நிலையங்கள் மற்றும் வீதிகளில் உள்ள பொதுவான CCTV கெமரா காட்சிகளைப் பயன்படுத்தி கொள்ளையர்களை அடையாளம் காண பொலிஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://adaderanatamil.lk/news/cmk6xr19803qao29noxw128gf
-
ஈரான் ஒருபோதும் பின்வாங்காது : டிரம்ப் தனது நாட்டை நடத்துவதில் கவனம் செலுத்தட்டும் - ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லாஹ் அலி கொமெய்னி கடும் பதில்
ஈரான் ஒருபோதும் பின்வாங்காது : டிரம்ப் தனது நாட்டை நடத்துவதில் கவனம் செலுத்தட்டும் - ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லாஹ் அலி கொமெய்னி கடும் பதில் 09 Jan, 2026 | 03:47 PM ஈரான் எந்தவித அழுத்தங்களுக்கும் ஒருபோதும் பின்வாங்காது என ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லாஹ் அலி கொமெய்னி உறுதியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானை நோக்கி வெளியிட்ட கடும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். “ஈரான் ஒரு சுயாதீன நாடு. எங்களின் இறையாண்மையும், தேசிய மரியாதையும் கேள்விக்குள்ளாக்கப்படும் எந்த முயற்சிக்கும் நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். ஈரான் பின்வாங்கும் நாடல்ல,” என அயத்துல்லாஹ் கொமெய்னி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உள்நாட்டு பிரச்சினைகளை முதலில் கவனிக்க வேண்டிய நிலையில் டொனால்ட் டிரம்ப் பிற நாடுகளுக்கு அறிவுரை வழங்குவதாகவும், “டிரம்ப் தனது சொந்த நாட்டை எவ்வாறு நடத்துவது என்பதிலேயே கவனம் செலுத்துவது நல்லது” என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். அண்மைக்காலமாக அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிராக டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்துகள் மத்திய கிழக்கு அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்குப் பதிலளித்துள்ள ஈரான், தனது தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய நலன்களை பாதுகாப்பதில் எந்த சமரசத்திற்கும் இடமளிக்காது எனத் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், வெளிநாட்டு அழுத்தங்கள், பொருளாதார தடைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஈரானின் நிலைப்பாட்டை பலவீனப்படுத்த முடியாது என்றும், மக்கள் ஆதரவுடன் ஈரான் தனது பாதையில் முன்னேறும் என்றும் அயத்துல்லாஹ் கொமெய்னி வலியுறுத்தினார். இந்தக் கருத்துக்கள், மத்திய கிழக்கில் நிலவி வரும் அரசியல் பதற்றத்தின் பின்னணியில் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235596
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
25,000 புதிய வீடுகளை மேலதிகமாக அமைக்க வேண்டும் - ஜனாதிபதி
25,000 புதிய வீடுகளை மேலதிகமாக அமைக்க வேண்டும் - ஜனாதிபதி Jan 9, 2026 - 01:32 PM 'டித்வா' புயலினால் அனர்த்தத்திற்குள்ளான வீடுகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளின் போது, சுமார் 20,000 முதல் 25,000 வீடுகள் வரை புதிதாகக் கட்டப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (09) முற்பகல் கல்நேவ, ஹந்துன்கம, அலுபெத்த பகுதியில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை அமைப்பதற்கும், வீடு ஒன்றைக் கட்டுவதற்கு 50 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் ஜனாதிபதி கருத்து வௌியிடுகையில், தற்போதைய அறிக்கைகளின்படி சுமார் 6,000 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் 17,000 - 18,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தும் அல்லது வசிக்க முடியாத அபாய நிலையிலும் உள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக 20,000 முதல் 25,000 வீடுகள் வரை கட்ட வேண்டியுள்ளது. 2026 வரவுசெலவுத் திட்டத்தில் மேலும் 31,000 வீடுகளைக் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 'எமக்கு ஒரு வீடு' திட்டத்தின் கீழ் கிராமங்களில் உள்ள வறிய மக்களுக்காக 10,000 வீடுகளும், தேசிய வீடமைப்பு அதிகார சபையூடாக மேலும் 10,000 வீடுகளும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. யுத்தம் 2009 ஆம் ஆண்டில் நிறைவுக்கு வந்த போதிலும், இன்னும் பலர் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்காக 2,500 வீடுகளுக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வீதமும், தோட்டப்புற மக்களுக்காக இந்திய உதவியுடன் வீடுகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறான சூழலிலேயே மேலதிகமாக இந்த 25,000 வீடுகளைக் கட்டும் பொறுப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். முழுமையாகப் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முன்பிருந்ததை விடச் சிறந்த வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க 50 இலட்சம் ரூபாய் வழங்க தீர்மானித்துள்ளோம். அதற்கு 20 + 15 + 15 இலட்சம் வீதம் கட்டம் கட்டமாக வழங்கப்படும். நிதியில் ஒருபோதும் தாமதம் ஏற்படாது, 2-3 மாதங்களுக்குள் விரைவாக வீடுகளைக் கட்டி முடிக்க வேண்டும். அதேநேரம் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும். எமது தற்போதைய வாழ்க்கை தரத்திலேயே இறக்கக் கூடாது. தற்போதைய நிலையில் இருந்து மேம்பட்ட வாழ்க்கை முறைக்கு செல்ல முற்பட வேண்டும். இன்று 26 பேருக்கு 50 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகிறது. ஒரு மனிதனுக்குத் தேவையான பல அடிப்படை உரிமைகள் உள்ளன. சிறந்த வருமான வழி, பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி, ஆரோக்கியமான வாழ்வு, நல்லதொரு இல்லம் மற்றும் மன அமைதி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmk6l91pm03pto29n1m1hqmrb
-
ஜப்பானுக்கான தொழில்நுட்பப் பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை - சீனா
ஜப்பானுக்கான தொழில்நுட்பப் பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை - சீனா 08 Jan, 2026 | 03:31 PM சீனாவிலிருந்து ஜப்பானுக்கு தொழில்நுட்பப் பொருட்களை ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் இராணுவ தொழில்நுட்பங்களான அணுசக்தி உபகரணங்கள், மின்னனு பொருட்கள், கணினிகள், விமான பொருட்கள் உட்பட தொழில்நுட்ப பொருட்களின் ஏற்றுமதிக்கு சீனா தடை விதித்துள்ளது. ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்றமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துடன் டோக்கியோவுக்கு நேரில் சென்று அவரை சந்தித்தார். இருபெரும் தலைவர்களும் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக இணைவோம் என்று அறிக்கையை வெளியிட்டனர். பின்னர், தமது நாட்டுக்கு எதிராக செயற்பட்டால் போர் நடவடிக்கை எடுக்கப்படும் என சனே தகைச்சி சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனால் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு படிப்படியாக நீங்கி, வர்த்தகத் தொடர்புகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாகவே, ஜப்பான் நாட்டுக்கான தொழில்நுட்பப் பொருட்கள் ஏற்றுமதியை சீனா இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/235521
-
கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் சட்டவிரோத மீன்பிடியில் இந்திய மீனவர்கள்!
கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் சட்டவிரோத மீன்பிடியில் இந்திய மீனவர்கள்! Jan 9, 2026 - 10:37 AM தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடலுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சூழலில் பல இழுவைப் படகுகளில் இலங்கையின் வடக்கு கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ள இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றமையை அவதானிக்க முடிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. கடல் கொந்தளிப்பு காரணமாக ஏற்கனவே வாழ்வாதாரத்தை வட பகுதி மீனவர்கள் இழந்துள்ள நிலையில், இந்திய மீனவர்கள் இந்த நடவடிக்கை மேலும் மோசமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/news/cmk6ezwoc03pmo29n070u1n1n
-
இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் புயல் உருவாகுமா? நிலவரம் என்ன?
தென்கிழக்கு கடலில் நிலைகொண்டுள்ள சக்தி மிக்க தாழமுக்கம் : இன்று மாலை இலங்கையின் கரையை நோக்கி நகரும் சாத்தியம்! 09 Jan, 2026 | 07:06 AM இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் மட்டக்களப்புக்கு தென்கிழக்காக சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் சக்தி மிக்க தாழ் அமுக்கம் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது மேலும் தீவிரமடைவதுடன் இன்று மாலையளவில் பொத்துவிலுக்கும் திருகோணமலைக்கும் இடையாக இலங்கையின் கரையை நோக்கி வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் . வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். கண்டி, நுவரெலியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் 50 - 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியங்களின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, கிழக்கு , வடமத்திய, மத்திய ,வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு மற்றும் ஹம்பகா மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றராக அதிகரித்தும் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சக்தி வாய்ந்த தாழ் அமுக்கம் இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் மட்டக்களப்பில் இருந்து சுமார் 200 km தொலைவில் நிலை கொண்டுள்ளது. அதன்படியினால் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்வு கூறல்களை கவனத்திற் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சிலாபம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 35 - 45 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். காற்றின் வேகமானது மணிக்கு 60 - 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் அடிக்கடி கொந்தளிப்பான நிலையில் இருந்து மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 - 3.5 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. https://www.virakesari.lk/article/235567
-
சிங்கத்துக்கு பதிலாக கண்காணிப்பவர் மீது செலுத்தப்பட்ட மயக்க ஊசி – என்ன நடந்தது?
சிங்கத்துக்கு பதிலாக கண்காணிப்பவர் மீது செலுத்தப்பட்ட மயக்க ஊசி – என்ன நடந்தது? பட மூலாதாரம்,Hanif Khokhar/Getty 9 ஜனவரி 2026, 10:20 GMT புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர் குஜராத்தில் பெண் சிங்கம் ஒன்றைப் பிடிக்க முயன்றபோது 'டிராக்கர்' ஒருவர் உயிரிழந்தார். இந்தத் டிராக்கர் உயிரிழந்த விதம் மிகவும் அரிதானது என்றும், குஜராத் வனத்துறையின் வரலாற்றில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விஷயங்கள் மற்றும் தரவுகள் மூலம் விலங்குகளின் நடமாட்டம் மற்றும் நடத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் டிராக்கர்கள் என அழைக்கப்படுகின்றனர். பெண் சிங்கத்தை மயக்கமடையச் செய்வதற்காகச் செலுத்தப்பட்ட ஊசி, சிங்கத்தின் மீது செலுத்தப்படுவதற்குப் பதிலாக, அதற்குப் பின்னால் நின்று கொண்டிருந்த டிராக்கரின் கையில் தவறுதலாகப் பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை அவர் உயிரிழந்தார். இது எப்படி நடந்தது மற்றும் ஒரு சிங்கத்தை மயக்கமடையச் செய்ய எவ்வளவு மருந்தளவு பயன்படுத்தப்படுகிறது? இது மனிதர்கள் மீது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது? இந்த முழுச் சம்பவமும் நடந்தது எப்படி? பிபிசி குஜராத்தியின் ஹனிப் கோகர் ஜூனாகத்திலிருந்து வழங்கிய தகவலின்படி, விஸாவதரின் நாணி மோன்பாரி என்ற சிறிய கிராமத்தில் ஒரு பெண் சிங்கத்தினால் மக்களிடையே அச்சம் பரவியது பண்ணைப் பகுதியில் வசித்து வந்த தொழிலாளியான சைலேஷ்பாய் பர்கியின் சிவம் என்கிற நான்கு வயது மகனை, ஒரு பெண் சிங்கம் தாக்கியது. அந்தச் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். குழந்தையின் மரணத்திற்குப் பிறகு, அந்தப் பெண் சிங்கத்தை மீட்பதற்காக சாசனிலிருந்து ஒரு சிறப்புக் குழு வரவழைக்கப்பட்டது. மீட்புக் குழுவில் விஸாவதர் வனச்சரக அதிகாரிகள், ஆர்.எஃப்.ஓ, மருத்துவர்களின் குழு மற்றும் டிராக்கர்கள் இடம்பெற்றிருந்தனர். பட மூலாதாரம்,Hanif Khokhar படக்குறிப்பு,ராம்ரத்தன் நாலா ஜூனாகத் வனப் பாதுகாவலர் முனைவர் ராம்ரத்தன் நாலா, "மீட்புப் பணியின் போது, பெண் சிங்கத்தை மயக்கமடையச் செய்வதற்காக மயக்க மருந்து செலுத்தும் துப்பாக்கியிலிருந்து மயக்க மருந்து ஊசி செலுத்தப்பட்டது. அந்த நேரத்தில், டிராக்கர் அஷ்ரப் பாய் சௌஹான் பெண் சிங்கத்திற்குப் பின்னால் நின்று கொண்டிருந்தார், துரதிர்ஷ்டவசமாக அந்த ஊசி சிங்கத்தின் மீது படுவதற்குப் பதிலாக டிராக்கரின் இடது கையில் குத்தியது," என்றார். "அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அஷ்ரப் பாய் சௌஹான் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்," என்றார். சிங்கத்தை மீட்கும் முயற்சியின் போது டிராக்கர் ஒருவர் உயிரிழந்த இந்தச் சம்பவம், குஜராத் வரலாற்றிலேயே இதுவே முதல்முறை என்று வனத்துறை தெரிவித்துள்ளது. மனிதர்களுக்கு எவ்வளவு ஆபத்தானது? பட மூலாதாரம்,Getty Images முனைவர் ராம்ரத்தன் நாலா கூறுகையில், "பெண் சிங்கத்தின் எடையானது ஒரு மனிதனை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும். ஒரு மனிதனின் சராசரி எடை 70 கிலோ, ஆனால் ஒரு பெண் சிங்கத்தின் எடை 210 முதல் 250 கிலோ வரை இருக்கும். பெண் சிங்கத்தை மயக்கமடையச் செய்வதற்கான மருந்தின் அளவு அதன் எடையைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. எனவே, ஒரு மனிதருக்கு இந்த அளவு மருந்து செலுத்தப்பட்டால், அது அவரைத் தீவிரமாகப் பாதிக்கும்," என்றார். பெண் சிங்கத்திற்கு வழங்கப்பட்ட மருந்து மனிதர்கள் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் அவர் தெரிவித்தார். "அந்த ஊழியர் வனத்துறையின் ஒப்பந்தத்தின் கீழ் இருந்தார், அவருக்கு காப்பீடு உள்ளது. அந்தப் பணம் அவரின் குடும்பத்துக்கு சென்றடையும் மற்றும் வனத்துறையினால் சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்," என்றார் முனைவர் ராம்ரத்தன் நாலா. இந்த நடவடிக்கையின்போது அந்தப் பெண் சிங்கம் வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgyxz274y0o
-
இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் புயல் உருவாகுமா? நிலவரம் என்ன?
24 மணிநேரத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி அம்பாறையில் Jan 9, 2026 - 07:43 AM கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 38 மி.மீ. அளவில் மழை பதிவாகியுள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று (9) காலை தெரிவித்தார். அதேநேரம் நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் 10 மி.மீ. க்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். இருப்பினும், 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 28 நீர்த்தேக்கங்களும், அதேபோல் 22 நடுத்தர அளவிலான குளங்களும் இன்னும் வான் பாய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யான் ஓயா மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றம் கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் எந்தவொரு ஆற்றுப் பள்ளத்தாக்கிலும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தும் வகையில் நீர் வெளியேற்றப்படவில்லை என்றும் பொறியியலாளர் சூரியபண்டார மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmk68s3r403pdo29n1e0bmg4g