Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்; ஜஸ்டின் பொய்லட் 10 Nov, 2025 | 01:28 PM இலங்கையில் நல்லிணக்கத்துக்கும் பொறுப்புக் கூறுதலுக்கும் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியம் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான முதன்மைச் செயலர் ஜஸ்டின் பொய்லட் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (09) யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அரசியல் தீர்வும் பொறப்புக் கூறலும் என்ற ஆவண காப்பக அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நல்லிணக்கமும் ஸ்த்திரத்தன்மை ஏற்பாடுவதற்கு அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியமாக என்ற நிலையில் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வு நல்லிணக்கத்துக்கு வலுச்சேர்க்கும். இனங்களுக்கு இடையில் ஏற்படுகின்ற நல்லிணக்கம் அமைதி மற்றும் வன்முறை ஏற்ற சூழலை உருவாக்குவதோடு நாட்டின் அரசியல் ஸ்த்திரத் தன்மையை பலப்படுத்தும். ஆகவே இனங்களுக்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் இனியும் ஏற்படாமல் இருக்க நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவதற்கு புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியம் என நம்புகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/229984
  2. யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய மீனவர்களுக்கும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு 10 Nov, 2025 | 02:56 PM யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் செப்டெம்பர் 28 மற்றும் ஒக்டோபர் 9ஆம் திகதிகளில் இரு படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு திங்கட்கிழமை (10) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மீனவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்வழக்கினை ஆராய்ந்த நீதவான் 26 மீனவர்களுக்கும் 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அத்துடன் இரு படகுகளையும் செலுத்தியவர்களுக்கும் ஒரு படகு உரிமையாளருக்கும் 6 மாத கட்டாய சிறைத்தண்டனையும் ஒவ்வொருவருக்கும் தலா 4 மில்லியன் அபராத தொகையை செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/229990
  3. பிலிப்பைன்ஸில் பங்-வோங் சூறாவளி தாக்கியதில் இருவர் பலி; 14 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு! 10 Nov, 2025 | 11:41 AM பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையோர பகுதியில் பங்-வோங் சூறாவளி தாக்கியதில் இதுவரை 14 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்-வோங் சூறாவளி மணித்தியாலத்திற்கு 185 கி.மீ முதல் 230 கி.மீ வரை வீசியதால் பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் வாழும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸில் பாரிய சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கல்மேகி புயலுக்குப் பிறகு, தற்போது பங்-வோங் சூறாவளி தாக்கி வருகிறது. கல்மேகி புயல் தாக்கியதில் பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமில் அதிகளவானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையோர பகுதிகளை தாக்கிய பங்-வோங் சூறாவளி ஞாயிற்றுக்கிழமை (9) இரவு லூசோன் தீவின் அரோரா மாகாணத்தின் கரையைக் கடந்தது. இதன் காரணமாக லூசோன் தீவின் பல பகுதிகளில் வாழும் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/229965
  4. 10 Nov, 2025 | 03:43 PM மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இன்று திங்கட்கிழமை (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், இலங்கை கல்வி வெளியீட்டுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றிய திருஞானம் ஜோன் குயின்ரஸ் என்ற 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று காலை தனது வாகனத்தில் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்டபோது இவர் உயிரிழந்திருக்கலாம் என தெரியவருகிறது. சடலத்தை கண்ட ஆலய நிர்வாகத்தினர் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.பிரபானந்தன் சடலத்தை பார்வையிட்டார். பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சடலத்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/229994
  5. Nov 10, 2025 - 07:11 AM பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை தவிர்க்க பிள்ளைகளுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து கண்டி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பான திட்டங்களைத் தயாரிப்பதற்கு நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் இதன்போது கூறினார். அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, "6 ஆம் தரத்திற்காக, வயதுக்கு ஏற்ற வகையில் ஒரு புத்தகத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு, குறிப்பாகக் குடும்பநல சுகாதாரப் பிரிவு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. நம் நாட்டில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தலுக்குக் பிள்ளைகள் உள்ளாகும் போக்கு அதிகரித்து வருவதால், இதிலிருந்து பாதுகாக்க பிள்ளைகளுக்கு இது பற்றி கற்பிக்க வேண்டும் என்று குடும்பநல சுகாதாரப் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சு தொடர்ந்து எங்களிடம் கூறி வருகின்றன. அதேபோல், இது ஒரு பாரதூரமான பிரச்சினை என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் எங்களிடம் கூறியுள்ளது. தங்களது உடலைப் பாதுகாத்துக்கொள்வது குறித்துக் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இது குறித்து அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் அதிகார சபைகளுடன் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம். அவர்களின் பரிந்துரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எந்த வயதில், எவ்வாறு, எப்போது இதை அறிமுகப்படுத்துவது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்தக் கலந்துரையாடல்களின்படி, பிள்ளைகளுக்குத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய விதம் மற்றும் தங்களது உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வயதுக்கு ஏற்ற வகையில் சரியான கல்வி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இந்தக் விடயங்களை நாங்கள் சுகாதாரத் துறையின் நிபுணர்களின் ஆலோசனையின்படியே செய்வோம்." என்றார். https://adaderanatamil.lk/news/cmhsh7ru101hoo29nfs3hi79x
  6. அததெரண கருத்துப்படம்.
  7. பட மூலாதாரம், Win McNamee/Getty Images படக்குறிப்பு, மே 2025-இல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் செளதி இளவரசர் முகமது பின் சல்மான். கட்டுரை தகவல் நஸ்ரின் ஹாதூம் பிபிசி உருது செய்தியாளர் 9 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்கா மற்றும் செளதி அரேபியா இடையேயான உறவுகளில், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்துவது போன்ற பல முக்கியமான பிரச்னைகள் மீண்டும் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளன. செளதி இளவரசர் முகமது பின் சல்மான் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் செளதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து எஃப்-35 போர் விமானங்களை வாங்கும் விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது. இது குறித்து இரண்டு தகவல்கள் வெளிவந்துள்ளன. முதலாவதாக, அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாவதாக, இந்த ஒப்பந்தத்தின் கீழ் செளதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து 48 விமானங்களை வாங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எஃப்-35 ஒப்பந்தம் குறித்து அறிந்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. எஃப்-35, அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் செளதி அரேபியா ஆனால், இந்த ஒப்பந்தத்திற்கான பாதை இப்போதைக்கு தெளிவாக இல்லை, இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய, அமெரிக்க அரசு, அமெரிக்க அதிபர் மற்றும் நாடாளுமன்றம் ஆகிய மூன்று தரப்பினரின் ஒப்புதலும் அவசியம். செளதி எழுத்தாளர் முபாரக் அல்-அத்தியா கூறுகையில், இதுபோன்ற ஒப்பந்தங்களுக்கு, சட்டப்படி அமெரிக்க அரசு மட்டுமின்றி நாடாளுமன்றத்தின் அனுமதியும் பெற வேண்டும் என்பதை செளதி அரேபியா புரிந்து கொண்டுள்ளது. அவர் பிபிசி உருதுவிடம் பேசுகையில், இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நாடாளுமன்றத்தை இணங்க வைக்க முடிந்தால் மட்டுமே, ஒப்பந்தத்தை அவர் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று கூறினார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக, ஜனநாயக கட்சியினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செளதி அரேபியா-இஸ்ரேல் உறவுகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அழுத்தம் கொடுப்பார்கள் என்று முபாரக் அல்-அத்தியா கூறுகிறார். டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கச் சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுத்துள்ளார், ஏனெனில் அவர் செளதி அரேபியாவை ஒரு உத்தி ரீதியான கூட்டாளியாகக் கருதுகிறார், எனவே அதன் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் கீழ் அவசியம் என்றும் அவர் நம்புகிறார். செளதி அரேபியாவின் பாதுகாப்புக் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய அமெரிக்கா மறுத்தால், சீனா மற்றும் ரஷ்யா போன்ற அமெரிக்காவின் எதிரிகளை செளதி அரேபியா நாடக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் கவலை தெரிவித்துள்ளார் என்று முபாரக் அல்-அத்தியா கூறுகிறார். செளதி அரேபியா மீண்டும் மீண்டும் போர் விமானங்களுடன் சேர்த்து, மற்ற வகையான ராணுவ மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது பற்றிப் பேசியுள்ளது என்று அல்-அத்தியா விளக்கினார். பட மூலாதாரம், SAUL LOEB/AFP via Getty Images படக்குறிப்பு, செளதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து எஃப் 35 போர் விமானங்களை வாங்க விரும்புகிறது. இந்த ஒப்பந்தம் குறித்த இஸ்ரேலின் கவலை இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், அது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு முக்கிய மாற்றத்தைக் குறிக்கும். இதன் பொருள் மத்திய கிழக்கில் இஸ்ரேலின் ராணுவ சக்திக்குச் சவால் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், செளதி அரேபியாவுடனான இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலின் ராணுவ மேலாதிக்கம் இந்தப் பிராந்தியத்தில் நீடிக்கும் வகையில் நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் சேர்க்கப்படலாம். டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய விரும்புகிறார், ஏனெனில் செளதி தலைமையின் நோக்கங்களை அவர் புரிந்துகொள்கிறார். செளதி அரேபியாவின் இலக்கு அதன் எல்லைகளின் பாதுகாப்பைத் தாண்டி இல்லை என்று டிரம்ப் நம்புகிறார் என்று முபாரக் அல்-அத்தியா கூறுகிறார். இந்தப் பிராந்தியத்தில் உள்ள அதன் சில அண்டை நாடுகளைப் போலல்லாமல், செளதி அரேபியாவுக்கு விரிவாக்க விருப்பங்கள் இல்லை என்பதையும் அதிபர் டிரம்ப் அறிவார் என்று அல்-அத்தியா கூறுகிறார். அமெரிக்கா செளதி அரேபியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை விற்பதை இஸ்ரேல் விரும்பவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இஸ்ரேலிய ஊடக செய்திகளின்படி, மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளுடன் அதன் உறவுகள் இயல்புக்குத் திரும்பவில்லை என்றால், இதுபோன்ற ஒரு ஒப்பந்தம் எதிர்காலத்தில் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஒரு தீவிர அச்சுறுத்தலை உருவாக்கலாம். ஆனால், செளதி அரேபியாவைப் பொறுத்தவரை, இப்போது அது அரபு நாடுகள் விவகாரத்தில் அதன் கொள்கைகள் மற்றும் கடமைகளை மாற்ற விரும்பவில்லை என்றும் முபாரக் அல்-அத்தியா நம்புகிறார். இதில் ஒரு முக்கியமான பிரச்னை பாலத்தீனம் ஆகும், 1967ஆம் ஆண்டு எல்லைகளின் அடிப்படையில் ஒரு சுதந்திர பாலத்தீன தேசம் உருவாக்கப்பட வேண்டும் என்று செளதி அரேபியா நம்புகிறது. மத்திய கிழக்கின் எதிர்காலம் குறித்த எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் இதுவே அடிப்படை நிபந்தனையாகும். செளதி அரேபியா எஃப்-35 போர் ஜெட் தொழில்நுட்பத்தை ரஷ்யா, சீனா அல்லது இரானுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இஸ்ரேல் அஞ்சுகிறது என்று அல்-அத்தியா கூறுகிறார். அப்படி நடந்தால், இரான் பாதுகாப்பு விஷயத்தில் ஒரு படி முன்னேறி அதற்கு எதிராக இஸ்ரேலின் மேலாதிக்கம் குறைந்துவிடும். இதற்கு முன்னர், 2020 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற கவலை எழுந்தது, அப்போது அமெரிக்கா ஆபிரகாம் ஒப்பந்தங்களின் (Abraham Accords) கீழ் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) எஃப்-35 விமானங்களை விற்கவிருந்தது. இருப்பினும், அந்த நேரத்தில் ஒப்பந்தம் முன்னேற முடியவில்லை. அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில், விமானங்களின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்கா பல கட்டுப்பாடுகளை விதித்தது, இதில் விமானங்களைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகளும் அடங்கும். சீனாவுடன் ஐக்கிய அரபு அமீரகம் கொண்டுள்ள ஆழமான உறவுகள் காரணமாகத் தொழில்நுட்பப் பரிமாற்றம் நடந்துவிடுமோ என்று அமெரிக்கா கவலைப்பட்டது. செளதி-அமெரிக்கா உறவுகளின் திசை மாறுமா? டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் செளதி அரேபியாவுக்கான ஆயுத ஒப்பந்தங்களுக்கு கதவுகளைத் திறந்தார். இந்த ஆண்டு மே மாதம், அமெரிக்காவும் செளதி அரேபியாவும் ஒரு முக்கியப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமாக விவரிக்கப்பட்டது. டிரம்பின் செளதி பயணத்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. டிரம்ப் செளதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். வெள்ளை மாளிகை வழங்கிய தகவலின்படி, அமெரிக்கா செளதி அரேபியாவுடன் 600 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு விரிவான ஒப்பந்தத்தைச் செய்தது. 142 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் இந்த விரிவான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இதன் கீழ் அது அமெரிக்காவிடமிருந்து எஃப்-35 போர் விமானங்களை வாங்கும். எனினும், எஃப்-35 போர் விமான ஒப்பந்தத்தின் உண்மையான சோதனை அமெரிக்க நாடாளுமன்றத்தின் அரங்குகளில் தான் நடக்க உள்ளது. செளதி இளவரசர் மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் செளதி-அமெரிக்க உறவுகளில் உள்ள ஒரு சிறப்பு என்னவென்றால், அனைத்துக் கோப்புகளும் இரு தரப்பினராலும் விவாதிக்கப்படுகின்றன. மேலும் கருத்து வேறுபாடுகள் உறவுக்குத் தடையாக மாறுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று முபாரக் அல்-அத்தியா கூறுகிறார். செளதி இளவரசரின் அமெரிக்கப் பயணத்தின் நோக்கம் ஆயுத ஒப்பந்தத்தை இறுதி செய்வது அல்ல, மாறாக இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவை ஆழப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறுகிறார். இந்தக் காலக்கட்டத்தில் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்பது வெளிப்படையானது. செளதி அரேபியா பற்றி முபாரக் அல்-அத்தியா கூறுகையில், அது எஃப்-35 போர் விமானங்களுடன் சேர்த்து, பிற விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாதுகாப்பு கொள்கையை ஏற்றுக்கொள்கிறது, என்று கூறினார். செளதி இளவரசரின் அமெரிக்கப் பயணத்தில் எஃப்-35 பற்றிய விவாதம் முக்கியமானது, ஆனால் அது உறவுகளை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணி அல்ல என்று அவர் கூறுகிறார். போர் விமானமா அல்லது பாதுகாப்பு உத்தரவாதமா? பட மூலாதாரம், Win McNamee/Getty Images படக்குறிப்பு, எஃப்-35 போர் விமானங்களை செளதி அரேபியாவுக்கு விற்க டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதலை பெறவேண்டும் செளதி அரேபியா, அமெரிக்காவிடமிருந்து எஃப்-35 போர் விமானங்களை வாங்க உறுதிபூண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால். எந்தவிதமான தாக்குதல் நடந்தாலும் செளதி அரேபியாவை பாதுகாக்கும் வகையில் அமெரிக்காவுடன் ஒரு விரிவான பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துகொள்வதில் அதன் கவனம் இருக்கிறது. அண்மையில், அமெரிக்கா-கத்தார் பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா அறிவித்தது. இதன் கீழ் கத்தார் மீதான எந்தவொரு தாக்குதலும் அமெரிக்காவின் "அமைதி மற்றும் பாதுகாப்புக்கு" அச்சுறுத்தலாகக் கருதப்படும் என்று கூறப்பட்டது. இந்த ஒப்பந்தம் அதிபரின் 'செயலாக்க உத்தரவாக' வெளியிடப்பட்டது, அதாவது அமெரிக்க அதிபர் மாறினால் இதைத் திருத்தலாம் அல்லது ரத்து செய்யலாம். கத்தாருடனான ஒப்பந்தம் சட்டரீதியாக கட்டாயமாக அமலாக்கக்கூடிய பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல, இதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலும் தேவையில்லை. செளதி அரேபியாவின் முன் உள்ள மிகப்பெரிய சவால் இப்போது இதுதான்: அதன் பாதுகாப்பை உறுதிபடுத்த, கத்தாரைப் போல அமெரிக்க நிர்வாகத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஓர் ஒப்பந்தத்தை அது ஏற்றுக்கொள்ளுமா? அல்லது அமெரிக்காவில் அதிபர் மாறினாலும் அதன் பாதுகாப்பு உத்தரவாதத்தை பாதிக்காத வகையில், அமெரிக்காவிடம் ஒரு திடமான சட்டரீதியான பாதுகாப்பு ஒப்பந்தத்திற்காக அழுத்தம் கொடுக்குமா? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cze623487jno
  8. அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு - நலன்புரி நன்மைகள் சபை Published By: Vishnu 10 Nov, 2025 | 03:17 AM (இராஜதுரை ஹஷான்) அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டில் மனக்குறைகளை தெரிவித்த விண்ணப்பதாரர்களுக்குத் தகவல்களை புதுப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும்,அதற்குக் காரணம், அந்த விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தகவல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. மேலும்,தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தும் போது குடும்ப உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் செயற்படக் கூடிய கையடக்கத் தொலைபேசி இலக்கம் என்பன இருப்பது அத்தியாவசியமாகும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இணைய இணைப்புள்ள கணினி அல்லது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மூலம் https://eservices.wbb.gov.lk என்ற இணைய முகவரிக்குச் சென்று, தாளில் குறிப்பிடப்பட்டுள்ள தமது HH இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தித் தகவல் முறைமைக்குள் உட்பிரவேசித்து, தகவல் உறுதிப்படுத்தல் மெனுவிற்குச் சென்று குடும்பத் தகவல்களை உள்ளிடலாம். அவ்வாறு இல்லையெனில், பிரதேச செயலகத்தின் நலன்புரி கொடுப்பனவுத் தகவல் பிரிவுக்குச் செல்வதன் மூலமாகவோ அல்லது கிராம உத்தியோகத்தர் ஊடாக ஆண்டுத் தகவல் புதுப்பிப்பு விண்ணப்பப் படிவத்தை பிரதேச செயலகத்தின் நலன்புரி கொடுப்பனவுப் பிரிவில் சமர்ப்பிக்கலாம். அதன்படி, அஸ்வெசுமவின் முதல் கட்டத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களும் தனிநபர்களும் தகவல் புதுப்பித்தலில் பங்கேற்பது கட்டாயமாகும் என்றும், பங்கேற்காத குடும்பங்களும் தனிநபர்களும் அடுத்த ஆண்டில் அஸ்வெசும கொடுப்பனவுக்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/229946
  9. Published By: Vishnu 10 Nov, 2025 | 03:15 AM நீதிச் சேவையின் நீதவான் பதவிக்கான ஆட்சேர்ப்பு தகுதிகளைத் திருத்துவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நீதிச் சேவையின் இரண்டாம் தரத்தின் முதல் தர நீதவான் பதவிக்கான தகுதிகளே இவ்வாறு திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த பதவிக்கு நிறைவேற்றப்பட வேண்டிய 4 தகுதிகளை நீதிச் சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 3 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்கு செயற்பாட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ள அல்லது ஈடுபட்டிருக்கும் சட்டத்தரணியாக இருத்தல்,சட்டத்தரணியாகப் பதவிப் பிரமாணம் செய்து 3 வருடங்களுக்குக் குறையாத சேவைக் காலத்தைக் கொண்டுள்ள, உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் அல்லது சட்ட ஆராய்ச்சி அதிகாரியாகப் பணியாற்றிய சட்டத்தரணியாக இருத்தல் ஆகியவை குறித்த தகுதிகள் ஆகும். அத்துடன் ஏதேனும் அமைச்சு, திணைக்களம், அரச கூட்டுத்தாபனம் அல்லது பிற அரச நிறுவனமொன்றில் 3 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்குச் சட்ட அதிகாரியாகப் பணியாற்றிய மற்றும் அக்காலப்பகுதியில் தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் ஆஜரான சட்டத்தரணியாக இருத்தலும் குறித்த தகுதிகளில் அடங்கும். ஏதேனும் நிறுவனம், வங்கி அல்லது நிறுவனத்தில் 3 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்குச் சட்ட அதிகாரியாகப் பணியாற்றிய மற்றும் அக்காலப்பகுதியில் தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் ஆஜரான சட்டத்தரணியாக இருத்தலும் நீதிச் சேவை இரண்டாம் தரத்தின் முதலாம் தர நீதவான் பதவிக்கான தகுதியாகும் என நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் குறித்த பதவிக்கு, சட்டத்தரணியாக 4 வருடங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்குச் சேவையாற்றி இருக்க வேண்டும் என்ற தகுதியே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த சேவைக் காலத்தை ஒரு வருடத்தால் குறைப்பதற்கு இங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/229945
  10. ரூ.200 கோடி மோசடி: குஜராத்தில் 'வாடகை' வங்கி கணக்குகள் வழியே புதுமையான முறையில் பணம் கைமாறியது எப்படி? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் ராக்ஸி ககடேகர் சாரா பிபிசி செய்தியாளர் 9 நவம்பர் 2025 வீடு, கடை, கார், பங்களா போன்றவற்றை வாடகைக்கு விடுவது சாதாரண விஷயம் தான். ஆனால் இப்போது, குஜராத்தில் வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விடும் புதிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை குஜராத் காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இந்தக் கணக்குகள் குஜராத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவை. பெரும்பாலான கணக்குகள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குச் சொந்தமானவை. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுபோன்ற இன்னும் பல வங்கிக் கணக்குகள் வெளிச்சத்திற்கு வர வாய்ப்பு உள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, குஜராத் காவல்துறை, சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை கண்டுபிடித்துள்ளது. என்ன நடந்தது? குஜராத் சைபர் கிரைம் பிரிவு நடத்திய விசாரணையில், சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மக்களை ஏமாற்றி, போலியான வேலை வாய்ப்பு அறிவிப்புகள், ஃபிஷிங் மோசடிகள் மூலம் பணம் பறித்ததாக கூறப்படுகிறது. சிலரிடம் 'டிஜிட்டல் கைது' என்ற பெயரிலும் பணம் பறித்துள்ளனர். வங்கிக் கணக்கை வாடகைக்கு எடுப்பது என்பது, ஒருவரிடம் இருக்கும் வங்கி கணக்கின் லாகின் ஐடி, பாஸ்வேர்டு போன்ற விவரங்களை மற்றொருவருக்கு கொடுத்து, அந்தக் கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் செய்ய அனுமதிப்பதைக் குறிக்கிறது. காவல்துறையினர் வழங்கிய தகவலின்படி, இதுபோன்ற கணக்குகள் சைபர் குற்றவாளிகளுக்கு பணத்தை மாற்ற உதவுகின்றன எனத் தெரியவருகிறது. இதுபோன்ற வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விடுபவர்களை சைபர் கிரைம் மொழியில் 'மணி ம்யூல் ' ('Money Mule') என்றும், அத்தகைய கணக்குகள் 'ம்யூல் கணக்குகள்' ('Mule Account') என்றும் அழைக்கப்படுகின்றன. சைபர் குற்றங்களில் பாதிக்கப்படும் நபர்கள் தங்கள் பணத்தை 'மியூல் கணக்கில்' டெபாசிட் செய்வார்கள். இந்த வழக்கை விசாரித்து வரும் மாநில சிஐடி குற்றப்பிரிவின் சைபர் குற்றப் பிரிவு, சர்வதேச சைபர் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை கைது செய்துள்ளது. மகேஷ் சோலங்கி, ரூபின் பாட்டியா (மோர்பி), ராகேஷ் லானியா, ராகேஷ் தகாவாடியா (லக்தார், சுரேந்திரநகர்), நவ்யா கம்பாலியா, பங்கித் கதாரியா (சூரத்) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் தங்கள் வங்கி கணக்குகளை மாதம் ₹25,000க்கு வாடகைக்கு விட்டிருந்தனர் அல்லது ஒரு லட்சம் ரூபாய் பரிவர்த்தனைக்கு ₹650 ரூபாய் 'கமிஷன்' பெற்றிருந்தனர் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. சைபர் மோசடி மூலம் பெறப்பட்ட பணம் முதலில் இந்த கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டு, பின்னர் அது மோர்பி, சூரத், துபாய் போன்ற இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து பிபிசி குஜராத்தியிடம் பேசிய சைபர் கிரைம் பிரிவின் ஏஎஸ்பி சஞ்சய் குமார் கேஷ்வாலா, "குற்றம் சாட்டப்பட்டவர்கள் மோர்பியில் ஒரு மையத்தை அமைத்திருந்தனர். சூரத் மற்றும் சுரேந்திரநகரைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து ஒரு பெரிய வலையமைப்பை அவர்கள் உருவாக்கியிருந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் முன்பு வைரம் பட்டை தீட்டும் துறையில் பணிபுரிந்தனர். பின்னர், எளிதாக பணம் சம்பாதிக்கும் ஆசையில், அவர்கள் சைபர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்" என்று கூறினார். அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பெயரில் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டு, அதில் பணப் பரிவர்த்தனைகள் நடந்ததாக கூறப்படுகிறது. காவல்துறை எப்படிக் கண்டுபிடித்தது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் பொதுவாக, நிதி புலனாய்வு பிரிவு (Financial Intelligence Unit) மற்றும் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவுகள், வங்கி கணக்குகளில் நடைபெறும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. அவ்வாறு தரவுகளை ஆய்வு செய்யும் போது, சுரேந்திரநகரின் லக்தர் பகுதியில் உள்ள ஏபிஎம்சியில் செயல்படும் 'சிவம் டிரேடிங்' என்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் அசாதாரணமான பணப் பரிவர்த்தனைகள் நடந்தது காவல்துறைக்கு தெரிய வந்தது. அதைத் தொடர்ந்த விசாரணையில், இந்த பெரிய அளவிலான மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. "இப்படி ஒரு கணக்கு பற்றி எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடன், எங்கள் உளவுத்துறை பல மாதங்கள் அமைதியாக கண்காணிக்கும். இந்தக் கணக்கை நாங்கள் சுமார் ஒன்றரை மாதங்களாகக் கண்காணித்து வந்தோம். போதுமான ஆதாரங்கள் கிடைத்த பிறகுதான் அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட்டது"என்கிறார் கேஷ்வாலா. பணம் எங்கிருந்து வருகிறது, எங்கு செல்கிறது, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள், இந்தப் பணம் இறுதியில் எங்கு சென்றடைகிறது என்பது குறித்து அவர்கள் விசாரணை நடத்தினர் என்று காவல்துறை கூறுகிறது. விசாரணையின் விவரங்களை அளித்த காவல்துறை, இதுபோன்ற ஒரு மியூல் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டவுடன், அது மோர்பியில் உள்ள ஏதாவது ஒரு வங்கிக் கிளையிலிருந்தும் எடுக்கப்பட்டு, லட்சக்கணக்கான ரூபாய் அங்கடியா வழியாக சூரத்துக்கு அனுப்பப்பட்டது என்றும், அங்கு அந்தத் தொகை கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டு, துபையில் உள்ள ஒருவருக்கு டெலிவரி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். துபையில் கிரிப்டோகரன்சி வடிவில் சென்ற பணம் யாரைச் சென்றடைகிறது என்பது குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது? இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஜூலை 2011 மாஸ்டர் சுற்றறிக்கையில் 'மியூல் கணக்கு' என்ற சொல்லுக்கு வரையறை கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய கணக்குகளை வைத்திருப்பவர்கள் 'மணி மியூல்ஸ்' (Money Mules) என்று அழைக்கப்படுகிறார்கள். சுற்றறிக்கையின்படி, மோசடிகளிலிருந்து (ஃபிஷிங் மற்றும் அடையாள திருட்டு போன்றவை) வருமானத்தைப் பெற "மணி மியூல்ஸ் " பயன்படுத்தப்படுகின்றன. சைபர் குற்றவாளிகள் "மணி மியூல்ஸாக" செயல்பட மூன்றாம் தரப்பினரை வேலைக்கு அமர்த்துகிறார்கள் மற்றும் சட்டவிரோதமாக பணத்தை மாற்ற அவர்களின் கணக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். சில நேரங்களில் இந்த மூன்றாம் தரப்பினர் அறியாமல் சிக்கியவர்களாக இருக்கலாம், சில சமயங்களில் குற்றவாளிகளுடன் நேரடியாக தொடர்புடையவர்களாக இருக்கலாம். சைபர் கிரைம் நிபுணரான வழக்கறிஞர் பரேஷ் மோடியிடம் பிபிசி இது குறித்துப் பேசியது. "ஒருவருக்குத் தெரியுமா இல்லையா என்பது முக்கியமில்லை. யாராவது ஒரு கணக்கை இவ்வாறு பயன்படுத்தியிருந்தால், அந்தக் கணக்கைப் பறிமுதல் செய்யலாம். அதில் உள்ள பணம், இந்தக் குற்றத்துடன் தொடர்புடையதாக இல்லாவிட்டாலும் கூட முடக்கப்படும்," என்று அவர் கூறுகிறார். மேலும், "வழக்கமாக, இந்த வகையான குற்றத்திற்கு மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஆனால் பணமோசடி, மோசடி அல்லது என்டிபிஎஸ் தொடர்பான பிரிவுகள் அதில் சேர்க்கப்பட்டால், தண்டனை 20 ஆண்டுகள் வரை இருக்கலாம்" என்றும் அவர் விளக்குகிறார். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விதிகளின்படி, ஒருவர் தனது வங்கிக் கணக்கு மூலம் சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகளுக்கு உதவினால், அவர் மீது பணமோசடி தடுப்புச் சட்டம் 2002, பாரத நியாய சன்ஹிதா (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் குற்றவியல் வழக்கு தொடரப்படலாம். அத்தகைய நபருக்கு பிஎன்எஸ் பிரிவு 316 இன் கீழ் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். பிஎன்எஸ் பிரிவு 318 இன் கீழ் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் மற்றும் பணமோசடிக்கான மிகவும் கடுமையான பிரிவுகளின் கீழ் அவர் தண்டிக்கப்படலாம். 8.5 லட்சம் மியூல் கணக்குகள் கண்டுபிடிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில், சிபிஐயின் ஆபரேஷன் சக்ரா-V இன் கீழ் தேசிய அளவிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜூன் 2025 இல், ராஜஸ்தான், டெல்லி, ஹரியாணா, உத்தராகண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தில் 42 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. டிஜிட்டல் கைதுகள், போலி விளம்பரங்கள், யூபிஐ அடிப்படையிலான மோசடி மற்றும் மியூல் கணக்குகளின் வலையமைப்பு ஆகிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. வங்கிக் கணக்குகளை தொடங்கும் போது கேஒய்சி விதிகள் மீறப்பட்டிருந்தது என சிபிஐ தெரிவித்துள்ளது. பல்வேறு கணக்குகளை வைத்திருப்பவர்கள் தவறான முகவரிகளை கொடுத்திருந்தனர், வங்கி மேலாளர்கள் உயர்நிலை கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. சில வங்கி ஊழியர்கள், முகவர்கள் மற்றும் இணைய நண்பர்கள் கமிஷனுக்காக மியூல் கணக்குகளைத் திறக்க உதவி செய்துள்ளனர். இந்த சோதனைகளின் போது மொபைல் போன்கள், கேஒய்சி ஆவணங்கள், பரிவர்த்தனை தரவுகள் மற்றும் வங்கி கணக்கு தொடங்கியதற்கான ஆவணங்களை சிபிஐ பறிமுதல் செய்தது. நாடு முழுவதும் சுமார் 700 வங்கிகளின் பல்வேறு கிளைகளில் இதுபோன்ற 8.5 லட்சம் மியூல் கணக்குகள் இருப்பது தெரியவந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c740v94wx9ko
  11. Published By: Vishnu 09 Nov, 2025 | 10:56 PM (இராஜதுரை ஹஷான்) மத்தியக் கிழக்கில் தலைவறைவாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த 7 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கை பொலிஸ் அதிகாரிகளிடம் சரணடைய இணக்கம் தெரிவித்துள்ளார்கள். போதைப்பொருளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். கொழும்பு மாவட்டச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (9) நடைபெற்ற முழு நாடும் ஒன்றாக செயற்திட்ட கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, போதைப்பொருள் ஒழிப்புக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும். சமூக கட்டமைப்பில் இருந்து போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை மக்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள். போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் வலையமைப்பை இல்லாதொழிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மத்தியக் கிழக்கில் தலைவறைவாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த 7 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கை பொலிஸ் அதிகாரிகளிடம் சரணடைய இணக்கம் தெரிவித்துள்ளார்கள். போதைப்பொருளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அரசியல் தரப்பினர் கட்சி பேதமின்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்கள் ஒன்றுக்கொண்டு தொடர்புப்பட்டுள்ளது. ஆகவே போதைப்பொருள் வர்த்தக வர்த்தக வலையமைப்பை இல்லாதொழித்தால் பாதாளக் குழுக்களை கட்டுப்படுத்தலாம். முழு நாடும் ஒன்றாக செயற்திட்டம் எதிர்கால இளம் தலைமுறையினரை இலக்காகக் கொண்டது. நாடளாவிய ரீதியில் சகல மாவட்டங்களிலும் இந்த செயற்திட்டம் அமுல்படுத்தப்படும். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/229942
  12. Published By: Digital Desk 3 09 Nov, 2025 | 03:18 PM வடக்கு ஜப்பானின் கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனால் இவாட் மாகாணம் முழுவதும் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 5:03 மணிக்கு (உள்ளூர் நேரம்) 6.7 ரிச்டர் அளவில் ஏற்பட்டதாகவும், அதன் மையப்பகுதி பசிபிக் பெருங்கடலில் சான்ரிகு அருகே சுமார் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கடலில் அலைகள் ஒரு மீட்டர் (மூன்று அடி) வரை உயர வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவாட் மாகாணத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் 4 ரிச்டர் அளவிலான நில அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/229917
  13. ஆஸ்திரேலிய டி20 தொடர்: இந்தியாவின் சோதனை முயற்சிகளுக்கு கிடைத்த பலன் என்ன? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்றிருக்கிறது இந்திய அணி. 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மற்றும் கடைசிப் போட்டி மழையால் கைவிடப்பட, 2-1 என தொடரை வென்றது சூர்யகுமார் யாதவின் அணி. ஹோபர்ட்டில் மூன்றாவது போட்டியில் 186 ரன்களை சிரமம் இல்லாமல் சேஸ் செய்த இந்தியா, கோல்ட் கோஸ்ட்டில் நடந்த நான்காவது போட்டியில் 49 ரன்களில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிகளில் பேட்டிங், பௌலிங் இரண்டு பிரிவும் சிறப்பாக செயல்பட்டிருந்தன. மெல்போர்னில் இந்தியா தோற்றபோது, பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியிருந்தது. இந்தத் தொடரில் நிறைய வீரர்களை, நிறைய காம்பினேஷன்களை இந்திய அணி முயற்சி செய்து பார்த்தது. பலதரப்பட்ட திறன் கொண்ட வீரர்கள் நல்ல பங்களிப்பைக் கொடுத்தது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். "வெவ்வேறு திறமைகள் கொண்ட வீரர்களை அணியில் கொண்டிருப்பது என்னுடைய அதிர்ஷ்டம். எல்லோரும் ஒவ்வொரு திறனை அணிக்குக் கொடுக்கிறார்கள். அவர்கள் அணிக்கு நல்ல உத்வேகத்தைக் கொண்டுவருகிறார்கள். அவர்கள் ஒன்றாக மைதானத்துக்குள் போவதை மக்கள் ரசிக்கிறார்கள்" என்றார் சூர்யா. திருப்தியளிக்கும் பேட்டிங் இந்திய அணியின் பேட்டிங் தனக்கு ரொம்பவும் திருப்தியளிப்பதாகக் கூறினார் சூர்யகுமார் யாதவ். "பேட்டிங்கைப் பொறுத்தவரை கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களாக என்ன செய்துகொண்டிருக்கிறோமோ அதைத்தான் செய்கிறோம். எதையும் மாற்றவில்லை. வீரர்கள் அதை மிகவும் சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார்கள். டாப் ஆர்டரில் அவர்கள் பேட்டிங் செய்யும் விதம் அனைவருக்கும் சந்தோஷம் கொடுக்கிறது" என்றார் சூர்யா. டி20 போட்டிகளில் தொடர்ந்து அதிரடியாக ஆடும் அனுகுமுறையைக் கையில் எடுத்திருந்தது இந்திய அணி. அதை அவர்கள் ஆஸ்திரேலிய மண்ணிலும் தொடர்ந்தனர். அதனால் அது ஒவ்வொரு போட்டியிலும் இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. இந்திய பெரிய ரன்கள் எடுப்பதில் டாப் ஆர்டர் கொடுக்கும் நல்ல தொடக்கம் பெரிய தாக்கம் ஏற்படுத்தியது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தொடர் நாயகன் விருது வென்றார் அபிஷேக் ஷர்மா குறிப்பாக இடது கை பேட்டர் அபிஷேக் ஷர்மா தன் அதிரடியை ஆஸ்திரேலியாவிலும் அப்படியே தொடர்ந்து நல்ல தாக்கம் ஏற்படுத்தினார். இந்தத் தொடரில் 163 ரன்கள் எடுத்து அவர் தொடர் நாயகன் விருதும் வென்றார். ஒவ்வொரு போட்டியிலும் எந்த ஆஸ்திரேலிய வீரராக இருந்தாலும், பந்தை பௌண்டரிக்கு அடிப்பதையே உறுதியாகக் கொண்டிருந்தார் அபிஷேக். இந்தத் தொடரில் 161.38 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார் அவர். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் அவருக்கு சவாலாக இருக்கும் என்று கருதப்பட்டிருந்த நிலையில், அவர் அதை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். இதுபற்றி தொடர் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அபிஷேக், "இங்கு கூடுதல் வேகம் இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால், அணியின் பக்கமிருந்து யோசித்தபோது நான் என்னுடைய ஆட்டத்தை அப்படியே தொடரவேண்டும் என்று திட்டமிட்டேன். ஏனெனில், ஒரு ஓப்பனராக உங்களின் பங்கு என்ன என்பது உங்களுக்கு எளிதாகப் புரிந்துவிடும்" என்று கூறினார். மேலும், தன் அணுகுமுறைக்கு கேப்டனும், பயிற்சியாளரும் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையே காரணம் என்றும் அவர் சொன்னார். "அதேசமயம் நீங்கள் எதிரணி மீது ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று நினைத்தால், அதற்கான திறனும் நம்பிக்கையும் இருக்கவேண்டும். அந்த விஷயத்தில் கேப்டனும் பயிற்சியாளரும் எனக்கு தொடர்ந்து ஆறுதல் கொடுத்திருக்கிறார்கள். நான் இதற்காக தீவிரமான பயிற்சி மேற்கொண்டேன். ஏனெ`னில், ஆஸ்திரேலியாவுக்கு வந்து அவர்களை வைட் பால் போட்டிகளில் வீழ்த்துவது என்பது எளிதல்ல. ஆசிய கோப்பைக்கு முன்பிருந்து என்ன மாதிரி ஆடினோமோ அதே வகையான ஆட்டத்தையே நான் விளையாட நினைத்தேன்" என்றார் அவர். கில் மீதான கேள்விகளும் பதில்களும் அபிஷேக் ஒருபக்கம் அதிரடியாக ஆடியபோது அவருடைய சக ஓப்பனரான கில்லின் ஆட்டம் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு விதமாக இருந்தது. சில போட்டிகளில் ரன் எடுக்க நேரம் எடுத்துகொண்ட அவர், ஓரிரு போட்டிகளில் ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கினார். அவர் மெதுவாக ஆடிய போட்டிகளில் அவர்மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதை முன்வைத்து கேப்டன் சூர்யாவிடம் பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், "அவர்கள் இருவருக்கும் இடையிலான தொடர்பு சிறப்பாக இருக்கிறது. நன்றாக விக்கெட்டுக்கு இடையே ஓடுகிறார்கள். ஆம், ஆட்டத்தில் மொத்தம் 120 பந்துகள்தான். ஆனால், சில நேரங்களில் நீங்கள் நினைப்பதை விட அதிக நேரம் இருக்கும். சில சமயங்களில் அவர்கள் சூழ்நிலைகளை அறிந்துகொள்ள கூடுதலாக நான்கைந்து பந்துகள் எடுத்துக்கொள்கிறார்கள் என்றால், பின்னால் அதற்கு ஈடுகட்டும் திறன் அவர்களுக்கு இருக்கிறது" என்று கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சில போட்டிகளில் அதிரடி காட்டிய கில், ஒருசில ஆட்டங்களில் நிதானமாக ஆடியிருக்கிறார் கில்லுடைய ஆட்டத்தைப் பற்றி தன் யூ-டியூப் சேனலில் பேசிய இந்திய முன்னாள் ஓப்பனர் ஆகாஷ் சோப்ரா, "கில் நன்றாக விளையாடிய 2 போட்டிகளிலுமே துருதிருஷ்டவசமாக மழை வந்துவிட்டது. கான்பெராவில் நடந்த முதல் போட்டியில் நன்றாக ஆடினார், இந்த ஐந்தாவது போட்டியிலும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், மழையால் அவரால் அதை பெரிய ஸ்கோர்களாக மாற்ற முடியவில்லை" என்று குறிப்பிட்டார். இந்தத் தொடரில் கில் ஸ்டிரைக் ரேட் போட்டி வாரியாக: 185, 50, 125, 117.94, 181.25 ஒருநாள் கேப்டனாக கில்லின் அறிமுகம், டி20 பேட்டிங் என அனைத்தையும் குறித்துப் பேசிய ஆகாஷ் சோப்ரா, "இந்த சுற்றுப்பயணம் அவருடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக நிறைய கேள்விகளைத்தான் எழுப்பியிருக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை கேள்விக்குறிகள் எதுவும் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்" எனக் கூறினார். இந்த டி20 தொடருக்கு முன் கில் தலைமையில் ஒருநாள் போட்டிகளில் ஆடிய இந்திய அணி 1-2 என ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. சஞ்சு சாம்சன் இடம் என்ன? இந்தத் தொடர் எழுப்பியிருக்கும் பெரும் கேள்விகளில் ஒன்று சஞ்சு சாம்சனின் இடம் என்ன என்பது. "பெரிதாக எழுந்து கொண்டிருக்கும் கேள்வியெனில், சஞ்சு சாம்சனை என்ன செய்யப்போகிறோம் என்பதுதான். அவர் விளையாடாதது மிக மிக மிக பெரிய கேள்வியை எழுப்புகிறது. அவர் அபாரமாக ஆடினார் என்று நான் சொல்லவில்லை. ஆனால், நன்றாக ஆடியிருக்கிறார். ஆசிய கோப்பையில் மிடில் ஆர்டரிலிருந்து ஓமனுக்கு எதிராக டாப் ஆர்டரில் அனுப்பினார்கள், அங்கும் அவர் அரைசதம் அடித்தார்" என்று தன் யூ-டியூப் வீடியோவில் கூறியிருந்தார் ஆகாஷ் சோப்ரா. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தத் தொடரில் முதலிரு போட்டிகளில் மட்டுமே சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது ஓப்பனராக ஆடிக்கொண்டிருந்த சாம்சன், சுப்மன் கில் துணைக் கேப்டன் ஆன பிறகு மிடில் ஆர்டரில் களமிறக்கப்பட்டார். ஆசிய கோப்பையில் ஐந்தாவது வீரராக ஆடினார். இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் மூன்றாவது இடத்தில் களமிறக்கப்பட்டார். அந்தப் போட்டியில் அவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆக, அடுத்த போட்டிகளில் அவருக்குப் பதிலாக ஜித்தேஷ் ஷர்மாவைக் களமிறக்கியது இந்திய அணி. மூன்றாவது போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 22 ரன்கள் எடுத்து போட்டியை முடித்துக்கொடுத்ததால், அவரை ஃபினிஷராக இந்திய அணி பிரதானப்படுத்துகிறது என்றும் சிலர் கருதுகிறார்கள். சாம்சனின் இடம் இப்போது கேள்விக்குறியாகி இருப்பதால் பலரும் அதைப் பற்றி கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். இதுபற்றி தன் யூ-டியூப் சேனலில் பேசிய முன்னாள் இந்திய வீரர் மொஹம்மது கைஃப், "ஜித்தேஷ் ஷர்மாவை இந்திய அணி சாம்சனை விட நல்ல ஃபினிஷராகப் பார்க்கிறது. சுப்மன் கில்லை எதிர்கால கேப்டனாகக் கருதுவதால் ஓப்பனர் இடத்திலும் சாம்சனால் ஆட முடியவில்லை. அவர் மிகச் சிறப்பாக ஆடியிருக்கிறார். ஆனால், பேட்டிங் பொசிஷனைப் பொறுத்து இப்போது வீரர்களைத் தேர்வு செய்வதால் அவருக்குப் பிரச்னை" என்று கூறியிருக்கிறார். சாம்சனுக்குப் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காதது பலதரப்பட்ட கருத்துகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆல்ரவுண்டராக ஜொலித்த வாஷிங்டன் சுந்தர் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மூன்றாவது போட்டியில் பேட்டிங்கிலும், நான்காவது போட்டியில் பந்துவீச்சிலும் நல்ல பங்களிப்பைக் கொடுத்தார் வாஷிங்டன் இந்தத் தொடரில் வாஷிங்டன் சுந்தருக்கு 3 போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறையாக ஹோபர்ட்டில் களம் கண்டவருக்கு ஒரு ஓவர் கூடக் கொடுக்கப்படவில்லை. ஆனால், அடுத்த இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய வந்தவர், அதிரடியாக விளையாடினார். 23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். நான்காவது போட்டியிலுமே அதே அதிரடி பாணியைக் கடைப்பிடித்து 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்தப் போட்டியில் 8 பந்துகளே வீசிய அவர், 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். கிடைத்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் வாஷிங்டன் சுந்தர். 'அனைவரும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள்' இந்திய அணியின் பந்துவீச்சை இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா எளிதாக எதிர்கொண்டுவிட்டது. அதன்பிறகு ஒவ்வொரு போட்டியிலும் நல்ல முன்னேற்றம் கண்டது இந்திய அணி. குல்தீப், துபே இருவரும் தாங்கள் பந்துவீசியபோது நிறைய ரன்கள் கொடுத்தனர். ஆனால், அவர்களும் கூட விக்கெட்டுகள் எடுத்துக்கொடுத்தனர். இந்திய அணிக்கு அதிகபட்சமாக தமிழ்நாட்டு வீரர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தத் தொடரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் வருண் சக்ரவர்த்தி அணியின் பௌலிங் பற்றிப் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "பந்துவீச்சைப் பொறுத்தவரை எல்லோருமே பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். பும்ரா போன்ற ஒரு அனுபவ பௌலர் இருக்கும்போது, அனைவரும் அவரிடம் பேசுகிறார்கள், நிறைய கற்றுக்கொள்கிறார்கள். அது மிகவும் நல்ல விஷயம். அதனால் அணிக்குள் ஒரு நல்ல நட்பும் உருவாகிறது" என்று கூறினார். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்தத் தொடரில் இந்திய அணிக்கு நிறைய சாதகமான விஷயங்கள் நடந்திருக்கின்றன. ஒருசில கேள்விகளும் எழுந்திருக்கின்றன. கேப்டன் சூர்யா கூட "எல்லாமே சிறப்பாக இருக்கிறது என்ற நிலை கிடையாது. நாங்கள் அதை அடைய முயற்சி செய்கிறோம். நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலிருந்தும் கற்றுக்கொள்கிறோம். இதுவரை எல்லாம் சிறப்பாகவே செல்கிறது. இது தொடரும் என்று நம்புவோம்" என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருந்தார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2dr2ljjp2ro
  14. 09 Nov, 2025 | 05:48 PM இந்த வரவுசெலவுத் திட்டத்தில் நாட்டின் அனைத்துத் துறைகளும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், அரசாங்கம் குறுகிய கால நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காகவோ செயல்படுவதில்லை எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2026ஆம் ஆண்டுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், பிரதமர் நவம்பர் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், ஜனாதிபதி வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும்போது, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாட்டினைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டுச் சரியாகச் செவிமடுத்திருந்தால், அவரது உரையிலும், சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்திலும் நம் அனைவருக்கும் பார்க்கவும், கற்றுக்கொள்ளவும் பல விடயங்கள் இருந்தன. அதன் உள்ளடக்கத்தைப் போலவே, அந்த விடயங்கள், அந்த முன்மொழிவுகள், அந்தப் புள்ளிவிவரங்கள் ஆகிய அனைத்திற்கும் பின்னால் மிகவும் முக்கியமான ஒரு கதை இருக்கின்றது. அந்தக் கதையைச் சரியாகப் புரிந்துகொள்ள அனைவரும் முயற்சி செய்யுங்கள் என நான் கேட்டுக்கொள்கிறேன். திட்டமிடல் சரியாக இடம்பெறும் போது கொள்கைகள் மற்றும் திட்டங்களை இயற்றுவது மாத்திரம் இன்றி, சட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப்படும்போது, இலக்குகளை முதன்மைப்படுத்திய தலைமைத்துவத்துடன், அரசியல் ஒழுக்கத்துடன் ஆட்சி செய்வதன் மூலம் அதன் பெருபேறுகளை எவ்வாறு பெறுவது, ஒரு நாடு எவ்வாறு அபிவிருத்தி செய்கின்றது என்பதைப் பற்றிய மிகச் சிறந்ததொரு உரை வரவுசெலவுத் திட்டத்திலும், வரவுசெலவு உரையிலும் இருக்கின்றது. அதுவே இந்நேரத்தில் முக்கியமானதாகும். இது அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத் திட்டமாகும். நாம் எமது முதலாவது வரவுசெலவுத் திட்டத்தை 2025 ஏப்ரல் மாதத்திலேயே சமர்ப்பித்தோம். ஆயினும் அதற்கு முன்னர் நாம் ஆட்சியைப் பொறுப்பேற்ற வேளையில் நாடு இருந்த நிலைமை, சர்வதேசத்தின் நிலைமை, அத் தருணத்தில் நாட்டு மக்கள் வெளிப்படுத்திய கருத்துகள் ஆகியன அந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு எமக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைப் பற்றிய ஒரு நிச்சயமற்ற தன்மையே நிலவியது. அவ்வாறு நம்பிக்கைகள் சிதைந்திருந்த ஒரு தருணத்திலேயே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. வீழ்ந்து கிடந்த நாட்டைப் பொறுப்பேற்ற இந்த அரசாங்கம் ஏப்ரல் மாதத்திலேயே முதலாவது வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தது. நேற்று சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியையே குறிக்கின்றன. அந்த வரவுசெலவுத் திட்டமானது ஒன்பது மாதங்களுக்காகவே சமர்ப்பிக்கப்பட்டது. ஆகையினால் மொத்தச் செலவினத்தை டிசம்பர் மாதத்திலேயே காட்டக் கூடியதாக இருக்கும். நாட்டை நிலைப்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ், நிதி ஒழுக்கத்துடன் நாட்டை நிர்வாகித்தல் மற்றும் ஆட்சிபுரிதல் ஆகியவற்றின் வெற்றியையே ஜனாதிபதி நமக்குச் சுட்டிக்காட்டினார். அதனை நாம் பாராட்ட வேண்டும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இன்றி அதனை ஏற்றுக்கொண்ட பின்னரே இதுபற்றி எம்மால் மேற்கொண்டு உரையாடக் கூடியதாகவும் குறை நிறைகளைப் பற்றிச் சுட்டிக்காட்டக் கூடியதாகவும் இருக்கும். இதுவரை நாம் ஆறு மாத காலத்திற்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான முன்னேற்றத்தைக் காட்டியிருக்கிறோம். பொதுவாக, அரசாங்கம் அடுத்த இரண்டு மாதங்களில், அதாவது டிசம்பர் 31ஆம் திகதியை அடையும்போது இந்தச் செலவானது இதைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றது. காரணம் எமது செயற்திட்டங்கள் செப்டம்பர் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆகையினால் அந்த அடிப்படையில் பார்ப்பதன் மூலம் நம்மால் மிகவும் சரியானதொரு புரிதலைப் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் என நான் நினைக்கிறேன். வீழ்ந்து கிடந்த ஒரு நாட்டையே என்று நாம் இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று திறைசேரி நிரம்பி வழிகிறது என எதிர்க்கட்சியினரே கூறுகிறார்கள். அரசாங்கம் நிதி ஒழுக்கத்தைப் பேணி வருகிறது. இவையனைத்தும் தற்செயலாக நிகழ்ந்தவை அல்ல. இவை தொலைநோக்குமிக்கத் தலைமைத்துவத்தின் விளைவுகளாகும். இந்தக் நேரத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மற்றும் பாராட்ட வேண்டிய விடயம் இதுவே என நான் நினைக்கிறேன். இங்கே நாம் சந்தோஷப்பட வேண்டிய இன்னுமொரு விடயமும் இருக்கின்றது. நாம் ஆட்சிக்கு வந்தபோது, ஏனைய அரசாங்கங்களைப் போல், எமது ஆட்களைக் கொண்டு நிறுவனங்களை நிரப்பவும் இல்லை. இடமாற்றங்களை மேற்கொள்ளவுமில்லை. எமது இந்த நிலைப்பாட்டைப் பற்றி சில சமயங்களில் எமது கட்சி ஆதரவாளர்களே எம்மைக் குறை கூறினார்கள். இருப்பினும் சரியான தலைமைத்துவத்துடனும், சரியான நோக்கத்துடனும், திட்டமிட்டுச் செயற்பட்டால், அதே அரச சேவையை, அதே அதிகாரிகளை, அதே தலைகளை வைத்துக் கூட எம்மால் சாதிக்க முடியும் என்பதை நாம் நிரூபிக்க வேண்டியிருந்தது. மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய இடங்கள் இன்னும் இருக்கவே செய்கின்றன. இதைவிடத் திறமையாகச் செயற்பட வேண்டுமா? ஆம் நிச்சயமாக இதைவிடச் சிறப்பாகச் செயற்பட வேண்டும். அரச சேவைக்கு நாம் பெருமளவு சலுகைகளை வழங்கியதற்கும், ஜனவரி மாதம் முதல் இரண்டாவது சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பதற்கும், அத்தோடு அரச சேவையில் கிடைக்கப்பெற வேண்டிய ஏனைய சலுகைகளை, கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் காரணம் இன்னும் சிறப்பாகவும் திறமையாகவும் அவர்கள் செயற்பட வேண்டும் என்பதற்காகவே ஆகும். இந்த வரவுசெலவுத் திட்டத்திலும் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அரச சேவையைத் திறமையான, மக்கள் நேயமான, திட்டமிடப்பட்ட, இலக்குகளை நோக்கிய சேவையாக மாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். இது ஒரு தொடர்ச்சியான செயற்பாடாகும். இதில் 2025 ஜனவரியை விட இன்று நாம் ஒரு முன்னேற்றத்தைக் காண்கிறோம். 2026 ஆண்டில் இதைவிட அதிகமான வளர்ச்சி, இதைவிட அதிகமான முன்னேற்றம், இதைவிட முற்றிலும் வேறுபட்ட திட்டமிட்ட அபிவிருத்திச் செயற்பாட்டைக் காண முடியும் என நாம் நம்புகிறோம். தனிப்பட்ட அல்லது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அல்லாமல், ஒரு குழுவாக, ஒரு கூட்டுச் செயற்பாடாக, நாட்டிற்குத் தேவையான அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட பயணம் என்பதை, தற்போது ஏற்பட்டு வரும் இந்த மாற்றங்கள் மூலம் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். நாம் இந்த நாட்டின் ஆட்சியினை ஏற்ற வேளையில் எங்கிருந்து ஆரம்பித்தோம் என்பதை மறந்துவிட்டால் எம்மால், இதைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலாது. நாட்டிற்குத் தேவையான அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்வதற்கான திட்டமிட்ட பயணம் என்பதை இந்தக் காலகட்டத்தில் அரசாங்கம் மட்டும் அல்லாமல், அரச அதிகாரிகளும் மக்களும் புரிந்துகொண்டு இருப்பதனாலேயே எமக்கு இந்தப் பெறுபேறுகளைப் பெற முடிந்திருக்கின்றது. இது ஒரு தொடர்ச்சியான செயற்பாடாகும். ஏனைய அரசாங்கங்கள் ஆட்சியைக் கைப்பற்றிய வேளையில் அவர்கள் செயல்பட்ட விதத்தையும், எமது அரசாங்கம் செயல்படும் விதத்தையும் வெறுமனே மேலோட்டமாக ஒப்பிட்டுப் பார்த்தால், ஏற்பட்டு வரும் மாற்றத்தையும், பரிமாற்றத்தையும் எளிதில் புரிந்துகொள்ள இயலாது என நான் நினைக்கிறேன். காரணம் நாம் பயணிக்கும் பாதை வித்தியாசமானதாகும் என்பதையும் நாம் இங்கே தெளிவாகக் கூற வேண்டும். நாம் குறுகிய கால தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலோ, தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையிலோ, அமைச்சர்களின் தற்பெருமையை வளர்த்துக் கொள்ளும், அல்லது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காகவோ அமைச்சின் பின்னால் இருந்து செயற்படவில்லை. இது நாம் கூட்டு உணர்வுடன் உருவாக்கிய ஒரு திட்டமாகும். நாட்டைப் பற்றிச் சிந்தித்து உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். அதற்கு அமையவே நாம் செயற்படுகிறோம். நமது நூற்று ஐம்பத்தி ஒன்பது அங்கத்தவர்களும் அதனைப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு இருக்கிறது. அதனை நாம் நிறைவேற்றும்போதே எமது முழுத் திட்டத்தினையும் நம்மால் வெற்றி கொள்ள முடியும் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆகையினால் அதன்படியே நாம் செயற்பட்டு வருகின்றோம். எமதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தை எம்மை விட எதிர்க்கட்சியினறே நன்கு மனப்பாடம் செய்து வந்திருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். அதன் பக்கங்கள், எண்கள், பந்திகள் ஆகிய அனைத்தையும் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். இது எமது ஐந்து வருடத் திட்டம் என்பதையும், இந்த நாட்டைப் பற்றி எமக்கு நெடுங்கால நோக்கு இருக்கின்றது என்பதையும் மிகுந்த அன்புடன் நான் அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். இன்னும் ஐந்து ஆண்டுகளின் பின்னர் தேர்தல் வர இருக்கின்றது. அப்போது அத் தேர்தல் மேடைகளில் எமது முன்னேற்றம் குறித்து நாம் விவாதிப்போம். இன்று இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், பலகட்சி முறைமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சி குற்றம் சாட்டி வருகின்றது. ஜனநாயகத்திற்கு எங்கே ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது என நான் எதிர்க்கட்சியிடம் கேட்க விரும்புகிறேன். இந்தப் பாராளுமன்றத்திற்கு இருக்க வேண்டிய முழுமையான நிதிப் பொறுப்பு மீதான அதிகாரத்தினை நாம் முழுமையாகப் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானதா? சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, ஏற்றத்தாழ்வின்றி பாரபட்சம் காட்டாது சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானதா? தற்போது, பல கட்சிக்காரர்கள் ஆகிய நீங்கள் ஒன்றிணைந்து இருக்கிறீர்கள். பல கட்சிகள் ஒரே கட்சியாக மாற்றம் பெறும்போது பலகட்சி முறைமைக்கு ஆபத்து ஏற்படவே செய்யும். அந்த வகையில், பலகட்சி முறைமையை ஆபத்தில் வீழ்த்தியிருப்பது உண்மையில் எதிர்க்கட்சியே. தமது கட்சிகளைப் பாதுகாப்பதில், தமது கட்சிகளைக் கட்டியெழுப்புவதில், தமது கட்சிகளை மக்கள் உணரும் விதத்தில், மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் கட்டியெழுப்பத் தவறி இருப்பதனாலேயே இன்று நாட்டில் பலகட்சி முறைமைக்கு அச்சுறுத்தல் இருக்குமானால், அந்த அச்சுறுத்தல் எதிர்க்கட்சியின் மூலமே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. பலகட்சி முறைமையை இல்லாதொழிக்க அரசாங்கத்திற்கு எந்தவித அவசியமும் இல்லை. அதைச் செய்ய எமக்கு நேரமும் இல்லை. நாம் எதிர்க்கட்சிக்காக ஆட்சிக்கு வரவில்லை. இந்த நாட்டு மக்களுக்காக, இந்த நாட்டைக் கட்டியெழுப்பவதற்காக, இந்த நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே நாம் ஆட்சிக்கு வந்திருக்கின்றோம். நாம் அதை இலக்காகக் கொண்ட ஒரு பயணத்தை மேற்கொள்கையிலேயே அரசியலில் மாற்றம் ஏற்படுகின்றது. அரசியலிலிருந்து மக்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதில் மாற்றம் ஏற்படுகின்றது. இதுவே உண்மையில் இங்கே ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மிகப்பெரிய மாற்றமாகும். அதாவது நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. மக்கள் மீண்டும் அந்தக் பழைய முறைக்குத் திரும்பிச் செல்ல மாட்டார்கள். இந்தப் புதிய அரசியல் கலாச்சாரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு, உங்களது கட்சிகள் இந்த மாற்றத்திற்கு அமையத் தம்மை மாற்றிக் கொள்ளாது பழையதிலேயே ஒட்டிக்கொண்டிருக்கும்வரை உங்களால் இதைப் புரிந்து கொள்ள இயலாது. இந்த வரவுசெலவுத் திட்டத்தில் நாம் கைநழுவ விட்ட, புறக்கணித்த எந்தவொரு துறையோ, எந்தவொரு சமூகக் குழுவோ இல்லை என்பதை விசேடமாக இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மிக நேர்த்தியாக, ஒவ்வொன்றாக, இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகளைச் சரியாக இனம் கண்டு, ஆதரவு தேவைப்படும் சமூகக் குழுக்களைச் சரியாக அடையாளம் கண்டு, ஒரு வருடத்திற்குள் அதற்காகச் செய்யக்கூடியது என்ன, மறுபுறத்தில் நீண்டகால அடிப்படையில் வரிசைப்படுத்தி, கட்டமைப்புரீதியிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சிந்தித்து, ஒரு வருடத்திற்குள் எம்மால் செய்யக்கூடியதை மிகவும் தெளிவாகவும், தர்க்கரீதியாகவும், திட்டமிட்டும் சமர்ப்பித்துள்ளோம். ஆகையினால் எந்தவொரு விடயத்தையும் கைவிட்டுச் சென்றிருக்கிறோம் எனக் கூற இயலாது. நாடு நிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், அடுத்த கட்டமாக நாட்டின் வளர்ச்சியை எவ்வாறு அடைவது, நிரம்பி வழியும் திறைசேரியின் பணத்தை எவ்வாறு சரியாக முகாமைத்துவம் செய்து மக்களுக்கு அதன் நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பது, மறுபுறத்தில், மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி வருவதைத் தடுப்பது எப்படி என்ற அனைத்தையும் சிந்தித்து இந்த வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/229936
  15. 2026 வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு; ரூ. 1,757 பில்லியன் பற்றாக்குறை Published By: Vishnu 07 Nov, 2025 | 08:32 PM 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு–செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெள்ளிக்கிழமை (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த வரவு–செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வின் இரண்டாம் கட்டம் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் எனவும், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூ. 1,750 ஆக உயர்த்தப்படும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், சுங்க வரிக் கொள்கையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்தார். அவர் உரையில், நாட்டின் பொருளாதாரம் 2019 ஆம் ஆண்டின் நிலையை இவ்வாண்டின் இறுதிக்குள் மீண்டும் அடையும் என நம்பிக்கை தெரிவித்தார். அரசாங்கத்தின் மொத்த வருவாய் ரூ. 5,300 பில்லியனாகவும், மொத்தச் செலவு ரூ. 7,057 பில்லியனாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வரவு–செலவுத் திட்டப் பற்றாக்குறை ரூ. 1,757 பில்லியனாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் வரவு–செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரும் பங்கேற்ற வழக்கமான தேநீர் விருந்துபசாரம் இன்று பிற்பகல் நடைபெற்றது. இதனிடையே, இரண்டாம் வாசிப்பு விவாதம் நாளை (08) தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெறும் எனவும், வாக்கெடுப்பு நவம்பர் 14 மாலை 6.00 மணிக்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் வாசிப்பு (குழுநிலை விவாதம்) நவம்பர் 15 முதல் டிசம்பர் 05 வரை நடைபெறவுள்ளதுடன், இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 05 மாலை 6.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/229802
  16. விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி 07 Nov, 2025 | 03:17 PM விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) சமர்ப்பிக்கப்பட்ட போது நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்தார். ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், அரச சேவையின் ஆட்சேர்ப்பின் போது விசேட தேவையுடையோர் 3 சதவீதமளவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாதாந்தம் 5000 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு 50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வரவு - செலவுத்திட்ட நேரலையை பார்வையிட https://www.virakesari.lk/article/229638 https://www.virakesari.lk/article/229742
  17. Nov 9, 2025 - 10:59 AM அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த சபை குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டில் மனக்குறைகளை தெரிவித்த விண்ணப்பதாரர்களுக்குத் தகவல்களை புதுப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், அதற்குக் காரணம், அந்த விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தகவல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. மேலும், தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தும் போது, குடும்ப உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் செயற்படக் கூடிய கையடக்கத் தொலைபேசி இலக்கம் என்பன இருப்பது அத்தியாவசியமாகும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இணைய இணைப்புள்ள கணினி அல்லது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மூலம் https://eservices.wbb.gov.lk என்ற இணைய முகவரிக்குச் சென்று, QRதாளில் குறிப்பிடப்பட்டுள்ள தமது HH இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தித் தகவல் முறைமைக்குள் உட்பிரவேசித்து, தகவல் உறுதிப்படுத்தல் மெனுவிற்குச் சென்று குடும்பத் தகவல்களை உள்ளிடலாம். அவ்வாறு இல்லையெனில், பிரதேச செயலகத்தின் நலன்புரி கொடுப்பனவுத் தகவல் பிரிவுக்குச் செல்வதன் மூலமாகவோ அல்லது கிராம உத்தியோகத்தர் ஊடாக ஆண்டுத் தகவல் புதுப்பிப்பு விண்ணப்பப் படிவத்தை பிரதேச செயலகத்தின் நலன்புரி கொடுப்பனவுப் பிரிவில் சமர்ப்பிக்கலாம். அதன்படி, அஸ்வெசுமவின் முதல் கட்டத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களும் தனிநபர்களும் தகவல் புதுப்பித்தலில் பங்கேற்பது கட்டாயமாகும் என்றும், பங்கேற்காத குடும்பங்களும் தனிநபர்களும் அடுத்த ஆண்டில் அஸ்வெசும கொடுப்பனவுக்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmhr9xd7401hiqplptimpzqzk
  18. Published By: Digital Desk 3 09 Nov, 2025 | 12:20 PM சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா சனிக்கிழமை (08) அமெரிக்காவைச் சென்றடைந்தார். அமெரிக்கா அவரை பயங்கரவாத தடுப்புப்பட்டியலில் இருந்து நீக்கிய ஒரு நாளுக்குப் பின்னர் அமெரிக்காவைச் சென்றடைந்தார் என சிரிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் நீண்டகால ஆட்சியாளர் பஷார் அல்-அசாத்தை பதவி நீக்கம் செய்த கிளர்ச்சிப் படைகளின் தலைவரான அல்-ஷாரா, திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார். 1946 ஆம் ஆண்டு சிரியா சுதந்திரம் பெற்றதன் பின்னர் சிரிய ஜனாதிபதி ஒருவர் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். செப்டம்பர் மாதம் நியூயோர்க் நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அல்-ஷாரா உரையாற்றினார். மே மாதம் ட்ரம்பின் மத்திய கிழக்கு சுற்றுப்பயணத்தின் போது இடைக்காலத் தலைவர் ட்ரம்பை முதன்முறையாக ரியாத்தில் சந்தித்தார். இந்த மாத தொடக்கத்தில், சிரியாவிற்கான அமெரிக்க தூதர் டாம் பராக், அல்-ஷாரா இஸ்லாமிய அரசுக்கு எதிரான சர்வதேச அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் "நம்பிக்கையுடன்" கையெழுத்திடும் என தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை அல்-ஷாராவை உலகளாவிய பயங்கரவாதி பட்டியலில் இருந்து நீக்க அமெரிக்க வெளிவிவகார அமைச்சு எடுத்த தீர்மானம் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயமாகும். https://www.virakesari.lk/article/229897
  19. சாணக்கியனின் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி Nov 9, 2025 - 03:29 PM இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (9) அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்துடன் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடலுக்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது. அன்னாரின் திருவுடல் இன்று (09) மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. -கொழும்பு நிருபர் க்ளின்டன்- https://adaderanatamil.lk/news/cmhrjkhd001hgo29ng1mous6i
  20. ஆபாச காணொளிகளை பதிவு செய்த தம்பதி கைது Published By: Digital Desk 3 09 Nov, 2025 | 03:51 PM ஆபாச காணொளிகளை பதிவு செய்து பிரித்தானிய இணையத்தளம் ஒன்றில் பதிவேற்றிய திருமணமான தம்பதி நுகேகொடை சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவர் தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் பட்டம் பெற்றவர் எனவும், மனைவி தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் உளவியல் டிப்ளோமா பட்டம் பெற்றவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வெள்ளிக்கிழமை (08) ராஜகிரியவில் உள்ள வீடொன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த தம்பதி மூன்று மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் வசித்து வந்துள்ளதோடு, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கீழ் தளங்களில் வசித்து வந்துள்ளனர். குறித்த தம்பதியினால் பிரித்தானிய இணையத்தளம் ஒன்றில் 334 ஆபாச காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில் அவர்கள் வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்ததுள்ளனர். அதன்படி, அவர்கள் மாதத்திற்கு எட்டு வீடியோக்களை வழங்க வேண்டும். மாதந்தோறும் ரூ.150,000 முதல் ரூ.200,000 வரை சம்பாதித்ததாகவும், பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அதிக பணம் செலுத்தப்பட்டதாகவும் தம்பதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், இருவரும் வேலை இன்மையால் நிதி நெருக்கடியை சந்தித்ததன் பின்னர், இந்த காணொளிகளை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இலங்கைக்குள் இந்த இணையத்தளம் அணுக முடியாமல் இருந்தமையினால் தங்கள் அடையாளங்களை எவரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என தம்பதியினர் நம்பினர் இருந்தனர். தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை என்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) கொழும்பு அளுத்கம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். https://www.virakesari.lk/article/229915
  21. ‘முழு நாடுமே ஒன்றாக’ போதைப்பொருள் தடுப்புத் திட்டம்: பலர் கைது! Published By: Digital Desk 1 09 Nov, 2025 | 11:20 AM நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று சனிக்கிழமை (08) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 5 கிலோ கிராம் 782 கிராம் ஹெரோயின், 827 கிராம் ஐஸ், 71 கிலோ கிராம் 682 கிராம் கஞ்சா, 275,501 கஞ்சா செடிகள்,4 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 25 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 637 போதை மாத்திரைகள் மற்றும் 1 கிலோகிராம் 585 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 994 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், 1,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், மறுவாழ்வு நிலையங்களுக்கு 5 பேர் அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/229889
  22. க.பொ.த. உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம் : நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் Published By: Digital Desk 1 09 Nov, 2025 | 07:37 AM எம்.மனோசித்ரா கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இதற்காக நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இம்முறை 340, 525 பேர் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள் டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 246 521 பரீட்சாத்திகள் பாடசாலை ஊடாகவும், 94 004 பரீட்சாத்திகள் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளனர். அதற்கமைய ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 340 525 ஆகும். உயர்தர பரீட்சைகளுடன் தொடர்புடைய சகல மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள், கருத்தரங்குகளுக்கும் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை ஊடாக பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும் அவை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார். பரீட்சாத்திகள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் என்பவற்றை கொண்டு வர வேண்டியது கட்டாயமானது என்றும் அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/229871
  23. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நீங்கள் வாசிக்கும்போது உங்கள் தலைக்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்று எப்போதாவது யோசித்ததுண்டா? கட்டுரை தகவல் அனலியா லோரென்டே பிபிசி நியூஸ் முண்டோ 8 நவம்பர் 2025 " நம் அனுபவத்தின் எல்லைகளை விரிவாக்குவதற்கு வாசிப்பது ஒரு சிறந்த வழியாகும்," மூளையின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்துள்ள கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் முனைவர் ரேமண்ட் மார் இதை விளக்கியுள்ளார். மூளையின் செயல்பாட்டைக் குறித்த ஆய்வுகளின்படி, ஒரு நாவலில் உள்ள கதாபாத்திரத்தின் கதையை வாசிப்பது, அதை நிஜத்தில் வாழ்வதற்குச் சமமானதாக இருக்கிறது. ஆனால், மனிதர்களின் மிக சிக்கலான உறுப்பான மூளையின் புதிரான செயல்பாட்டிற்கும் வாசிப்பிற்கும் இடையிலான உறவு குறித்த விஞ்ஞானிகளின் பல கண்டுபிடிப்புகளில் இது ஒன்றுதான். வாசிக்கும்போது நம் மூளையில் என்ன நடக்கிறது என்று ஆய்வு செய்த மூன்று ஆராய்ச்சியாளர்களை பிபிசி பேட்டி கண்டது. மூளையும் மனமும் ஆராய்ச்சியாளர்கள் முதலில் இருந்து வலியுறுத்தி வருவது ஏதாவது இருக்குமானால் அது மூளைக்கும் மனதிற்கும் உள்ள வித்தியாசமே ஆகும். "மூளை என்ன செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, மனம் என்ன செய்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மூளையைப் பற்றி தனியாகப் பேச முடியாது," என்று கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் அறிவாற்றல் உளவியல் (Cognitive Psychology) பேராசிரியரான கீத் ஓட்லி சுட்டிக்காட்டினார். "நாம் வாசிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட மூளைப் பகுதி செயல்படுகிறதா என்பதை அறிவது மட்டும் போதாது. அந்தச் செயல்பாட்டில் மனம் எவ்வாறு இயங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்வதும் அவசியம்," என்று மார் ஏற்றுக்கொள்கிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாம் வாசிக்கும்போது மூளை அதற்கானப் படங்களை உருவாக்குகிறது. மனதில் தோன்றும் படங்கள் வாசிக்கும்போது தூண்டப்படும் முதல் எதிர்வினைகளில் ஒன்று, மனதில் படங்களை உருவாக்குவதுதான். "நாம் வாசிக்கும்போது, விளக்கப்பட்டதைப் போன்ற உருவங்களை மனம் உருவாக்குகிறது அல்லது நினைவுபடுத்துகிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன," என்று மார் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். "அடிப்படையில், நீங்கள் ஒரு காட்சியைப் பற்றிய விரிவான விளக்கத்தைப் வாசித்தால், உங்களால் மூளையின் காட்சிப் புறணியில் (visual cortex) செயல்பாட்டைக் காண முடியும். அறிதலுக்கும் (perceiving) அறிதல் பற்றி வாசிப்பதற்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன," என்று அவர் கூறினார். நாம் வாசிப்பதையே நிஜத்திலும் வாழ்கிறோமா? புனைகதைக் கதாபாத்திரத்தின் அனுபவத்தைப் பற்றி வாசிப்பதற்கும், அந்தச் செயல்பாட்டை நிஜ வாழ்க்கையில் அனுபவிப்பதற்கும் இடையில் மூளை பெரிய வேறுபாட்டைக் காண்பதில்லை என தோன்றுவதாக ஓட்லியும் மாரும் முடிவுக்கு வந்துள்ளனர். "ஏதோவொன்றைப் பற்றி வாசிப்பதற்கும் அதை அனுபவிப்பதற்கும் மூளை ஒரே மாதிரியாகவே வினைபுரிவதாக தெரிகிறது," என்று மார் விளக்கினார். அந்த நிபுணரின் கூற்றுப்படி, ஒரு நாவலில் ஒரு கதாபாத்திரம் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதைப் பற்றி ஒருவர் வாசிக்கும்போது, அந்த நபர் நிஜத்தில் அந்தச் செயலைச் செய்யப் பயன்படுத்தும் அதே மூளைப் பகுதிகளே செயல்படுகின்றன. "உதாரணமாக, ஒரு கதையின் கதாநாயகன் ஆபத்தான அல்லது பயப்படக்கூடிய சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, நாம் பயத்தை உணர்கிறோம் என்பது நமக்குத் தெரியும்," என்று மார் உதாரணம் அளித்தார். இது ஒன்றில் அல்லது ஒருவரிடத்தில் தன்னைப் பொருத்திப்பார்க்கும் தெளிவான பச்சாதாப உணர்வு. "நிஜ வாழ்க்கையில் மக்கள் பச்சாதாபம் உள்ளவர்களாக இருக்கிறார்களா என்பதை அறிய மூளையின் சில பகுதிகளை கண்காணிக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டது. கதைகளில் உள்ள கதாபாத்திரங்களைப் பற்றிப் வாசிக்கும்போது அதே மூளைப் பகுதிகள்தான் தூண்டப்படுகின்றன. ஏனெனில், உளவியல் செயல்முறை ஒத்திருக்கிறது," என்று ஓட்லி பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிய விரிவான விளக்கத்தை வாசிக்கும்போது, நாம் நம்மை அவர்களின் இடத்தில் வைத்து, ஏறக்குறைய அதே உணர்வுகளை அனுபவிக்க முடியும். இயக்கம் செயலைக் குறிக்கும் ஒரு வினைச்சொல்லை நாம் வாசித்தால், நாம் அதைச் செய்வதாக மூளை புரிந்துகொள்கிறதா? "நாம் ஒரு செயல்பாட்டு வினைச்சொல்லை மௌனமாகப் வாசிக்கும்போது செயல்படும் மூளையில் உள்ள இயக்கப் பகுதிகளும், நாம் இயக்கத்தைச் செய்யும்போது செயல்படும் பகுதிகளும் மிக அருகில் உள்ளன," என்று பிரான்சின் லியோனில் உள்ள மொழியியல் இயக்கவியல் ஆய்வகத்தின் (Language Dynamics Laboratory) அறிவாற்றல் நரம்பியல் ஆராய்ச்சியாளர் வெரோனிக் பூலெங்கர் சுட்டிக்காட்டினார். காலால் உதைப்பது, நடப்பது அல்லது ஓடுவது போன்ற செயல்களை ஒருவர் வாசித்தால், மூளை இயக்கப் பகுதியைத் தூண்டும் என்று அந்த ஆராய்ச்சியாளர் கூறினார். "ஒரு வகையில், மூளை நாம் வாசிக்கும் செயலை உருவகப்படுத்துகிறது," என்று பூலெங்கர் பிபிசி முண்டோவிடம் கூறினார். போட்டி ஆனால், ஒரு செயல்பாட்டு வினைச்சொல்லை வாசித்து, அதே நேரத்தில் ஒரு அசைவைச் செய்ய முயற்சித்தால் என்ன நடக்கும்? "ஒரு ஆய்வில், பங்கேற்பாளர்களை ஒரு திரையில் செயல்பாட்டு வினைச்சொற்களை வாசிக்கும் அதே நேரத்தில் ஒரு பொருளை எடுக்கச் சொன்னோம். அப்போது, வாசிக்காதபோது இருப்பதைவிட, அசைவுகளின் வேகம் குறைவாக இருந்தது," என்று பூலெங்கர் விளக்கினார். மூளையின் அதே வளங்களைப் பயன்படுத்துவதில் "குறுக்கீடு அல்லது போட்டி" இருப்பதால் இது நடக்கிறது என்று அந்த ஆராய்ச்சியாளர் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வாசிப்பதும் செயல்படுவதும் மூளையில் "குறுக்கீடு அல்லது போட்டி"யை உருவாக்குகின்றன. நேரடி அல்லது மரபுத்தொடர் மூளையின் செயல்பாட்டைக் கண்டறியும் செயல்பாட்டு காந்த அதிர்வு இமேஜிங் (functional magnetic resonance imaging - fMRI) என்ற மற்றொரு ஆய்வில், கை அல்லது கால் தொடர்பான செயல்பாட்டு வினைச்சொற்களை உள்ளடக்கிய நேரடி வாக்கியங்கள் அல்லது மரபுத் தொடர்களை வாசிக்கும்போது மூளையின் செயல்பாட்டை பூலெங்கர் பகுப்பாய்வு செய்தார். "இரண்டு வகையான வாக்கியங்களுக்கும், மூளையின் மொழி பகுதிகளின் செயல்பாடுகளுடன், இயக்க மற்றும் முன்-இயக்க மூளைப் பகுதிகளின் (motor and premotor brain regions) செயல்பாடுகளும் காணப்பட்டன," என்று அவர் விளக்கினார். அந்த நிபுணரின் கூற்றுப்படி, கை தொடர்பான வாக்கியங்கள் மூளையில் கையைச் சித்தரிக்கும் இயக்கப் பகுதியையும், அதே சமயம் கால் தொடர்பான வாக்கியங்கள் மூளையின் வேறுபட்ட இயக்கப் பகுதியையும் தூண்டுகின்றன. இது, மூளையின் இயக்கப் புறணியின் (motor cortex) உடலமைப்பு பிரதிபலிப்புக்கு (somatotopy) பதிலளிக்கிறது. அதாவது, உடலின் வெவ்வேறு பாகங்கள் இயக்கப் புறணியின் வெவ்வேறு துணைப் பகுதிகளில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அமைப்பு இது. நிஜ வாழ்க்கையில் எப்படி உதவும்? கதைகளைப் புரிந்துகொள்வதில் ஈடுபட்டுள்ள மூளைப் பகுதிகளுக்கும், மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் நாம் பயன்படுத்தும் பகுதிகளுக்கும் இடையே பொதுவான பகுதிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அப்படியானால், புனைகதைக் கதாபாத்திரங்களைப் வாசிப்பதன் மூலம் பச்சாதாபம் கொள்வது, நிஜ வாழ்க்கையில் மக்களை நன்கு புரிந்துகொள்ள உதவுமா? மார் அப்படித்தான் நம்புகிறார். "நாம் அடிக்கடி வாசிப்பதிலும், அதில் உள்ள கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் ஈடுபாடு காட்டுவதாக இருந்தால், அது மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் நம் திறனை மேம்படுத்தலாம் அல்லது கற்றுக்கொள்ளலாம் என்று இது பொருள்படலாம்," என்று அவர் பகுப்பாய்வு செய்தார். "உதாரணமாக, ஒரு மாற்றுத்திறனாளி போல வாழ்வது எப்படி என்று நமக்கு ஒருபோதும் தெரியாமல் இருக்கலாம்," என்று அவர் கூறினார், "ஆனால், அதை அனுபவிக்கும் நபரின் இடத்தில் நம்மை வைக்கும் மிகச் சிறப்பாக எழுதப்பட்ட ஒரு கதையை வாசித்தால், நாம் அந்த அனுபவத்தைப் புரிந்துகொள்ளும் நிலையை அடையலாம்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2310jvzpzpo பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
  24. என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஒதுங்க தாயார் - சிவஞானம் சிறிதரன் எம்.பி பகிரங்க அறிவிப்பு 09 Nov, 2025 | 09:43 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மனநோயாளியான பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஒதுங்கத் தாயார். பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் அதற்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, கடந்த 2025 ஒக்ரோபர் 23ம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்ற சிறப்புரிமை; மீறலில் நான் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டு உண்மைக்கும், அறத்திற்கும் மாறான வகையில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் எனக்கு எதிரான சிறப்புரிமை மீறல் பிரேரணை ஒன்றை சபையில் முன்வைத்துள்ளார். அரசியலமைப்பின் திருத்தம் செய்யப்பட்ட 2018 ஆண்டின் 18 திருத்தத்தின் பிரகாரம் 2024 டிசம்பர் 06 திகதி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 11 பேரின் இரகசிய வாக்களிப்பில் தேர்தல்மூலமாக உயர் பதவிகளைத் தீர்மானிக்கும் அரசியலமைப்புசபைக்கு நான் ஜனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்பட்டேன். இப்பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உட்பட பலர் கண்வைத்து திரைமறைவில் ஈடுபட்ட போதும் நானும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களும் தேர்தலில் போட்டியிட்டு நான் தெரிவு செய்யப்பட்டேன். தெரிவுசெய்யப்பட்ட 2024.12.06 திகதி முதல் இன்றுவரை எனது கௌரவமான பங்களிப்பை நேர்மையுடனும், அரசியலமைப்பு உறுப்புரிமை 9 இன் பீரகாரமும் எனது மனச்சாட்சிக்கு இணங்க செயற்பட்டு வருகின்றேன். அரசியலமைப்பின் உறுப்புரை 29 இன் பிரகாரமும் உறுப்புரை 7இன் பிரகாரமும் எனது தேசத்து மக்கள் சார்ந்து பொதுநலனில், மக்கள் நலனில் நின்றே எனது முடிவுகளை மிகத்தெளிவாக அரசியலமைப்பு சபையில் முன்வைத்துள்ளேன். என் கட்சிக்காகவோ அல்லது வெளிநபர்களின் நெருக்குதலுக்காகவோ எந்தமுடிவுகளையும் நான் மாற்றிக்கொள்ளவில்லை. எந்தவித வெளிப்புற அழுத்தமும் என்மீது பிரயோகிக்கப் படவுமில்லை. அவ்வாறு பிரயோகிக்கவும் முடியாது என்பதை கடந்த ஓராண்டு காலமாக நேர்மையுடனும், கண்ணியத்துடனும் அறம் சார்ந்து தைரியத்துடன் நிரூபித்துள்ளேன். 'சிவில் புத்தி பெரமுன' என்ற அமைப்பைச் சார்ந்தவர் எனக்கூறப்படும் 'சஞ்சய் மகவத்' என்பவரால் நிதிக்குற்றப்புலனாய்வுபிரிவில் நான் சொத்துக்கள் குவித்து வைத்திருப்பதாக 2025 ஜுலை 25ஆம் திகதி முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்ததாக பத்திரகைகளில், சமூக ஊடகங்களில் பார்வையிட்டிருந்தேன். செய்திகள் வெளிவந்த உடனேயே பகிரங்கமாக இவ்விசாரணையைச் செய்து உண்மையை வெளிக்கொண்டு வருமாறு வெளிப்படையாகக் கூறியிருந்தேன். இன்று ஏறத்தாள 04மாதங்களை நெருங்குகின்ற போதும் இதுவரை நிதிக்குற்றப் புலனாய்வுப்பிரிவினரால் எந்த முடிவுகளும் வெளியீடப்படவில்லை. இப்பொழுதும் இந்த உயர்ந்த சபையினூடாக ஒரு ஒரு கோரிக்கையை முன் வைக்கின்றேன். எனது பெயரிலோ, என்குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ அல்லது பினாமிகள் பெயரிலோ எனக்கு சொத்துக்கள் இருந்தால் வீசாரணை செய்து சட்டநடவடிக்கை எடுக்குமாறு பகிரங்கமாக கேட்கின்றேன். அதுபோல் எனது பெயரிலோ அல்லது எனது சிபாரிசிலோ, கடந்த காலங்களில் நான் மதுபான சாலைக்கான அனுமதிப்பத்திரம் ஏதும் பெற்றிருந்தால்சிபார்சு செய்திருந்தால் உடன் வெளிப்படுத்தி என்மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோருகின்றேன். அசியலமைப்பு உறுப்புரை 41இன் பிரகாரம் நான் நீதியான முறையில் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்டுள்ளேன். அரசியலமைப்பு சபையில் மொத்தம் 10 உறுப்பினர்களில் நான் மட்டுமே இலங்கை வரலாற்றில் முதன்முதலில் தேர்தல்மூலம் தெரிவு செய்யப்பட்டவன் எனக்கருதுகிறேன். பாராளுமன்ற நிலையியற்கட்டளை 29(2) பிரகாரம் இது ஒரு சிறப்புரிமை மீறல் அல்ல என்பதையும் அரசியலமைப்பின் உறுப்புரை 41/ 1 இன்படி விசாரணை நடாத்தி உண்மையை முதலில் வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த போது தமிழ் அதிபர் ஒருவரை முழந்தாழிட்டார்.இவர் ஒரு மன நோயாளி என்றே குறிப்பிட வேண்டும். பாராளுமன்ற நிலையியற் கட்டளை 29(2) பிரகாரம் இது ஒரு சிறப்புரிமை மீறல் அல்ல என்பதையும் அரசியலமைப்பின் உறுப்புரை 41/ 1 இன்படி விசாரணை நடத்தி உண்மையை முதலில் வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலக தயார். அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் அதற்கும் ஒத்துழைப்பு வழங்குவேன் என்றார். https://www.virakesari.lk/article/229875
  25. "அம்மாவை விட அதிகம் கணிக்கும் அல்காரிதம்கள்" - வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பட மூலாதாரம், Laura G. De Rivera படக்குறிப்பு, நாம் உணராத அளவிற்கு அல்காரிதம்கள் நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்று லாரா ஜி. டி ரிவேரா கூறுகிறார். கட்டுரை தகவல் கிறிஸ்டினா ஜே. ஆர்காஸ் பிபிசி முண்டோ 51 நிமிடங்களுக்கு முன்னர் நீங்கள் இரவு உணவு சாப்பிட வெளியே செல்ல முடிவு செய்கிறீர்கள். நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்கள் என்று உங்கள் துணையால் தெரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம், ஆனால் செயற்கை நுண்ணறிவுக்கு அது தெரியும்: மாலையில் நீங்கள் 'டாக்கோஸ்' (Tacos) பற்றிய வீடியோக்களை பார்ப்பதைக் கண்டது, அதனால் இப்போது நீங்கள் அதைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது என்பதை அது தெளிவாக உணர்ந்துள்ளது. "நாம் முடிவுகளை எடுக்காவிட்டால், மற்றவர்கள் நமக்காக அதைச் செய்வார்கள்," என்று ஸ்பானிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான லாரா ஜி. டி ரிவேரா, பல ஆண்டுக்கால ஆராய்ச்சியின் விளைவாக வெளிவந்த தனது "அல்காரிதம்களின் அடிமைகள்: செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எதிர்ப்புக்கான கையேடு"("Slaves of the Algorithm: A Manual of Resistance in the Age of Artificial Intelligence,") என்ற புத்தகத்தில் எழுதுகிறார். "மனிதர்கள் மிகவும் கணிக்கப்படக் கூடியவர்கள் என்பதால் நாம் வெளியிலிருந்து திணிக்கப்பட்ட எண்ணங்கள், விருப்பங்கள் மற்றும் உணர்வுகளில் மூழ்கி வாழ்கிறோம். நமது கடந்த கால செயல்களில் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துவது போதுமானது, அது யாரோ ஒருவர் நம் மனதைப் படித்தது போலாகிவிடும்," என்று அவர் மேலும் கூறுகிறார். நமது தேவைகள் அல்லது விருப்பங்களைக் கணிப்பதில் துல்லியம் மிக அதிகமாக உள்ளது. நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட அல்காரிதத்திற்கு போதுமான டிஜிட்டல் தரவுகள் அளிக்கப்பட்டால் நீங்கள் விரும்புவதையோ அல்லது விரும்பும் விஷயங்களையோ உங்கள் தாயைவிட மிகச் சிறப்பாக அதனால் கணிக்க முடியும் என்று ஸ்டான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழக உளவியலாளர் மற்றும் பேராசிரியர் மைக்கேல் கோசின்ஸ்கி தனது சோதனைகளில் நிரூபித்தார். செயற்கை நுண்ணறிவால் ஒருவரின் ஆர்வங்களை மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும் என்பது கொள்கையளவில், நல்லதாகத் தோன்றுகிறது. ஆனால் அதற்கு ஒரு விலை உண்டு, அது மிக அதிகம் என்று டி ரிவேரா கூறுகிறார்: "சுதந்திரத்தை இழக்கிறோம், நாம் நாமாக இருக்கும் திறனை இழக்கிறோம், கற்பனையை இழக்கிறோம்." "சமூக வலையமைப்பு (Social Network) இருக்கவும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கவும் நாமெல்லாம் நம் புகைப்படங்களைப் பதிவேற்றுவதன் மூலம் இன்ஸ்டாகிராமுக்கு இலவசமாக வேலை செய்கிறோம். விழிப்புடன் இருந்து, அபாயங்கள் உங்களைப் பாதிக்காமல் பார்த்துக் கொண்டு தளங்களின் நன்மைகளைப் பயன்படுத்துவது அவசியம்," என்று அவர் கூறுகிறார். பெரு நாட்டின் அரெகுய்பா நகரில் நவம்பர் 6 முதல் 9 வரை நடைபெறவுள்ள 15 நாடுகளில் இருந்து 130 பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும் ஹே விழாவின் (Hay Festival) பின்புலத்தில் டி ரிவேராவுடன் நாங்கள் பேசினோம். பட மூலாதாரம், Penguin Random House படக்குறிப்பு, "தகவல்தான் அதிகாரம். அதைப் பெறுவதற்கான போட்டி கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது," என்று புத்தக ஆசிரியர் எழுதுகிறார். அல்காரிதத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி? என்ன தீர்வு? நான் காணும் தீர்வு மிகவும் எளிமையானது, யாருக்கும் சாத்தியமானது, இலவசமானது மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாதது. அதுதான் சிந்திப்பது. அதாவது, நமது மூளையைப் பயன்படுத்துவது. இது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்ட ஒரு மனிதத் திறன். நாம் வேலை செய்யாத அல்லது மக்களுடன் இல்லாத ஒவ்வொரு தருணத்திலும், நாம் தொலைபேசியை எடுத்துத் திரையில் கவனம் செலுத்தி நம்மை திசை திருப்புகிறோம். இப்போது மருத்துவரின் காத்திருப்பு அறையிலோ அல்லது வீட்டில் சலிப்படையும்போதோ நாம் சிந்திப்பதில்லை. நாம் சிந்திக்க வைத்திருந்த அந்த இடங்கள் இப்போது தொடர்ச்சியான திசை திருப்பலால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நமது ஸ்மார்ட்ஃபோன் மூலம், நம்மால் சிந்திக்க முடியாத அளவுக்குத் தொடர்ந்து தூண்டுதல்களைப் பெறுகிறோம். நாம் செய்யக்கூடிய வேறு சில விஷயங்களும் உள்ளன, ஆனால் இதுதான் மிக அடிப்படையானதாகவும் எளிதானதாகவும் நான் கருதுகிறேன். அல்காரிதத்தின் கட்டுப்பாடு மற்றும் மூன்றாம் தரப்பினரின் விருப்பத்திற்கு எதிராக விமர்சனப் பார்வையால் மட்டுமே தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாக்க முடியும். நீங்கள் ஒரு தளத்தில் பதிவு செய்யும்போது உங்கள் தரவை வழங்காமல் இருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஒரு சேவையின் அனைத்து நுணுக்கமான விஷயங்களையும் படிப்பது அல்லது ஒவ்வொரு முறை ஒரு வலைதளத்திற்குள் நுழையும்போதும் "குக்கீகளை" (cookies) நிராகரிப்பது இன்னும் சிக்கலானது. நாம் என்ன சோம்பேறிகளாகிவிட்டோமா? நாம் கொஞ்சம் சோம்பேறிகளாகவும், கொஞ்சம் கைப்பாவைகளாகவும் இருக்கிறோம், ஆனால் நமக்குத் தகவல் இல்லாமலும் இருக்கிறோம். டிக் டோக் தளத்தில் பல மணிநேரம் செலவிடும்போது, அந்தத் தளத்திற்கு இலவசமாக வேலை செய்கிறோம் என்பதைப் பலர் புரிந்து கொள்வதில்லை. தங்கள் ஆன்லைன் நடத்தையைப் பற்றிய எல்லா தகவல்களையும் அவர்கள் கொடுக்கிறார்கள், மேலும் அந்தத் தகவலுக்கு மதிப்பு இருக்கிறது. அதனால்தான் கல்வி முக்கியமானது, இந்தப் பெரிய தளங்களின் வணிக மாதிரி எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்குவதே அது. நமக்கு கூகுள் இலவசமாக சேவை செய்கிறது என்றால், உலகின் பணக்கார நிறுவனங்களில் ஒன்றாக அது இருப்பது எப்படிச் சாத்தியம்? இதைப் பற்றிச் சிந்திப்பது மிகவும் முக்கியம், அப்போதுதான் தங்களைப் பற்றி அளிக்கக்கூடிய அனைத்துத் தகவல்களும் எவ்வளவு மதிப்பு மிக்கவை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, "முடிவெடுப்பது நமக்கு பயத்தை தருகிறது, மேலும் ரோபோக்களை போல் இருந்துகொண்டு, என்ன செய்ய வேண்டுமென்று மற்றவர்கள் சொல்ல வேண்டுமென நாம் விரும்புகிறோம்," என்று பத்திரிகையாளர் கூறுகிறார். செயற்கை நுண்ணறிவின் ஆபத்து என்ன? உண்மையான ஆபத்து மனிதர்களின் மடமைதான். ஏனென்றால் செயற்கை நுண்ணறிவு உங்களுக்குத் தீங்கு செய்ய வேண்டியதில்லை, அவை பூஜ்ஜியங்களும் ஒன்றுகளும் (zeros and ones) மட்டுமே. ஆனால், நம்முடைய சோம்பல் மிக அதிகமாக இருப்பதால், விஷயங்கள் நமக்குச் செய்து முடிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டால், அது மிகவும் நல்லது என ஏற்றுக்கொள்கிறோம். இதெல்லாம் நாம் இன்னும் அதிக அளவில் கையாளப்படக் கூடிய சூழ்நிலையில் நம்மை வைக்கிறது. நாம் மன விருப்பம் மரத்துப் போய்விட்ட நிலையில் வாழ்கிறோம். சுகாதார அமைப்பின் டிஜிட்டல்மயமாக்கல், பாரிய கண்காணிப்பு மற்றும் நமது குழந்தைகளின் ஆன்லைன் கல்வி ஆகியவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்கிறோம். அநீதிகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் அறியாமையை நாம் தவிர்க்க முடியாத விஷயங்களாக ஏற்றுக் கொள்கிறோம், நாம் மிகவும் சோம்பலாக இருப்பதால் அவற்றுக்கு எதிராக நம்மால் கிளர்ச்சி செய்ய முடியாது. ஒரு அல்காரிதம் அமைப்பில் தன்னியக்கத்தின் பேரில் செயற்கை நுண்ணறிவு மேற்கொள்ளும் கணிப்புகளை முழுமையாக நம்புவதால் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும்? நமது கருத்து வேறாக இருந்தாலும்கூட, ஒரு கணினி சொன்னால், அது உண்மையாக இருக்கும் என்று மனிதர்கள் நம்பத் தலைப்படுகிறார்கள் என ஆய்வுகள் காட்டுகின்றன. அதனால், வாழ்வா, சாவா முடிவுகள் உள்பட முக்கியமான முடிவுகளை நாம் பிறரிடம் ஒப்படைக்கும்போது அபாயம் மிக அதிகமாக உள்ளது. அப்படியானால், யார் முடிவெடுக்க நீங்கள் அனுமதிக்கப் போகிறீர்கள்? உங்கள் அம்மா, உங்கள் ஆசிரியர், உங்கள் முதலாளி, அல்லது செயற்கை நுண்ணறிவு? இது மனிதர்களுக்கு மிகவும் பழமையான ஒரு பிரச்னை. மேலும் உளவியலாளர், சமூகவியலாளர் மற்றும் பிராங்பேர்ட் பள்ளியின் உறுப்பினரான எரிக் ஃப்ரோமின் "சுதந்திரத்தைப் பற்றிய பயம்" (fear of freedom) என்ற புத்தகத்தை நான் மிகவும் விரும்புகிறேன். இந்தப் புத்தகம் இதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் நமக்குச் சொல்வதையே மனிதர்கள் விரும்புகிறார்கள் என்று ஃப்ரோம் வாதிடுகிறார். ஏனென்றால் அது நம்மைச் சார்ந்தது என்று நினைப்பது நமக்குப் பயங்கரமான பீதியைக் கொடுக்கிறது. முடிவெடுப்பது நமக்கு மிகவும் பயமாக இருக்கிறது, மேலும் ரோபோக்களை போல் இருந்து என்ன செய்ய வேண்டுமென மற்றவர்கள் சொல்ல வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். இதை ஃப்ரோம் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவுக்காக மிகப்பெரிய தரவு மையங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன நமது தரவை ஆன்லைனில் கொடுக்காமல் இருக்க ஏதேனும் வழி இருக்கிறதா? நிச்சயமாக இருக்கிறது. உங்கள் தரவை வழங்காமல் இருக்க வழிகள் உள்ளன. தேவையானதை மட்டும் கொடுக்க வழிகள் உள்ளன. ஆனால் முக்கியமானது, தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிவதுதான். அப்போதுதான் நீங்கள் நடவடிக்கைகளை எடுக்க முடியும். உங்கள் வாழ்க்கையையும் தரவையும் வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு அதைச் சற்றுக் கடினமாக்குவதற்காக மட்டுமே என்றாலும்கூட ஒரு பக்கத்திற்குள் நுழையும்போது குக்கீகளை நிராகரிப்பது போன்ற சிறிய செயல்களுக்கு நீங்கள் பழகிக் கொள்ளலாம். வேறு என்ன செய்ய முடியும்? நம்மைப் பாதுகாக்க ஓர் ஒழுங்குமுறை தேவைப்படுவதைப் பற்றிப் பேசலாம். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் நெறிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் பேசலாம். விசில்ப்ளோயர்கள் (Whistleblowers – கூகுள் அல்லது மெட்டா போன்ற நிறுவனங்களுக்குள் பணிபுரியும் மற்றும் அமைப்பு பற்றித் தெரிந்தவர்கள்) கூறும் விஷயங்களைக் கேட்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றிப் பேசலாம். அவர்கள் பேச முடிவு செய்யும்போது அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பதுடன் அவர்களைப் பாதுகாப்பதும் முக்கியம். அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளால் பயன்படுத்தப்படும் கண்காணிப்பு அமைப்புகளை வெளிப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடனின் வழக்கைக் குறிப்பிடுகிறீர்களா? ஆம், ஸ்னோடன் எனக்கு இந்த நூற்றாண்டின் ஹீரோக்களில் ஒருவர். ஆனால் மேலும் பலர் இருக்கிறார்கள். அவருடையதுதான் மிகவும் அறியப்பட்ட வழக்கு. சோஃபி ஜாங் (Sophie Zhang) என்ற ஃபேஸ்புக்கின் தரவு விஞ்ஞானியும் உள்ளார். பொதுக் கருத்தைத் திரட்டுவதற்காகவும் வெறுப்பைத் தூண்டுவதற்காகவும் அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளால் போலிக் கணக்குகள் மற்றும் போட்களை (bots) திட்டமிட்டுப் பயன்படுத்தப்படுவது குறித்து அவர் நிறுவனத்திற்கு உள்ளேயே எச்சரித்த பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டார். லத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பாவின் சில இடங்கள் உள்பட உலகின் பல பகுதிகளில், அரசியல்வாதிகள் போலிக் கணக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். நிஜத்தில் இல்லாத பின்தொடர்பவர்கள்(Followers), நிறுத்த முடியாத விருப்பங்கள் மற்றும் மறுபதிவுகளைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் உண்மையான ஆதரவும் மக்கள் ஏற்பும் இல்லாதபோதுகூட தங்களிடம் அது இருப்பதாக நம்ப வைக்கிறார்கள் என்பதை ஜாங் உணர்ந்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நமது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய சிக்கலான தகவல்களின் முழுத் தொகுப்பும் பெரிய தரவு மையங்களில் சேமிக்கப்படுகின்றன. பிரச்னை குறித்துத் தனது உயரதிகாரிகளுக்குத் தெரிவித்தபோது, யாரும் அதைச் சரிசெய்ய விரும்பவில்லை என்பதைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார். உதாரணமாக, ஹோண்டுராஸின் அப்போதைய அதிபர் ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸின் போலியான பின்தொடர்பவர்கள் வலையமைப்பை நீக்க ஒரு வருடம் பிடித்தது. இவர் அமெரிக்காவுக்கு கொகைன் இறக்குமதி செய்வதற்கான சதியில் ஈடுபட்டது மற்றும் இயந்திரத் துப்பாக்கிகளை வைத்திருந்ததற்காக நியூயார்க்கில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். உங்கள் புத்தகத்தில், கூகுளின் செயற்கை நுண்ணறிவு நெறிமுறைக் குழுவின் இணை இயக்குநராக இருந்த கணினிப் பொறியாளர் டிம்னிட் கெப்ருவின் (Timnit Gebru) வழக்கையும் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அவரும் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆம், அல்காரிதம்கள் இனம் மற்றும் பாலின பாகுபாட்டிற்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியதற்காக (பணி நீக்கம் செய்யப்பட்டார்). பெரிய மொழி மாதிரிகள் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், மக்கள் அவற்றை மனிதர்கள் என்று நம்பக்கூடும் என்றும், அவற்றால் பிறரைக் கையாள முடியும் என்றும் அவர் எச்சரித்தார். அவருடைய பணிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறுவனத்தின் 1,400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கையெழுத்திட்ட கடிதம் இருந்தபோதிலும், அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். யூட்யூப்பின் முன்னாள் ஊழியரான கியோம் சாஸ்லோட் (Guillaume Chaslot) மற்றொரு "விசில்ப்ளோயிங் ஹீரோ". பரிந்துரை அல்காரிதம் பயனர்களைப் பரபரப்பான, சதிக் கோட்பாடு மற்றும் பிளவுபடுத்தும் உள்ளடக்கங்களை நோக்கித் தள்ளுவதை அவர் கண்டுபிடித்தார். நமக்கு எஞ்சியிருக்கும் நம்பிக்கை என்ன? உறுதியாக நமக்குத் தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு மென்பொருள் நிரல் (Software Program) என்ன செய்தாலும், அது புதிய விருப்பங்களைக் கண்டுபிடிப்பதற்கான மிகச் சிறிய அளவிலான படைப்பாற்றலைக்கூட அளிக்க முடியாது, அதாவது கடந்த கால தரவுகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இல்லாத படைப்பாற்றலை அதனால் கொடுக்க முடியாது. அதனால் மற்றவரின் நிலையில் தன்னை வைத்துப் பார்க்கும் பச்சாதாபத்தின் (empathy) அடிப்படையிலான தீர்வுகளையும் அளிக்க முடியாது, அல்லது மற்றவர்களின் மகிழ்ச்சியில் தனது சொந்த மகிழ்ச்சியைத் தேடும் ஒற்றுமையின் (solidarity) அடிப்படையிலான தீர்வுகளையும் அளிக்க முடியாது. இந்த மூன்று குணங்களும் வரையறையின்படி மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானவை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c6290v66d8lo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.