Everything posted by ஏராளன்
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
முதலாவது டெஸ்ட்: இந்தியாவை 46 ஓட்டங்களுக்கு சுருட்டிய நியூஸிலாந்து 134 ஓட்டங்களால் முன்னிலை (நெவில் அன்தனி) பெங்களூரு, எம். சின்னசுவாமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை அதன் முதல் இன்னிங்ஸில் 31.2 ஓவர்களில் வெறும் 46 ஓட்டங்களுக்கு சுருட்டிய நியூஸிலாந்து, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 134 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவின் 92 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி அதன் சொந்த மண்ணில் பெற்ற மிகக் குறைந்த எண்ணிக்கை இதுவாகும். அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் 1936இல் பெற்ற 36 ஓட்டங்கள், இங்கிலாந்துக்கு எதிராக லோர்ட்ஸில் 1974இல் பெற்ற 42 ஓட்டங்களுக்கு அடுத்ததாக 3ஆவது மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும். புதன்கிழமை ஆரம்பமாகவிருந்த இந்த டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் கடும் மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை ஆட்டம் தொடர்ந்தபோது, முதலாம் நாளன்று நாணய சுழற்சியின்போது தீர்மானித்தவாறு இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடியது. முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டதால் இரண்டாம் நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இப் போட்டியில் மெட் ஹென்றி, வில்லியம் ஓ'ரூக் ஆகிய இருவரின் வேகப்பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, விராத் கொஹ்லி உட்பட இந்திய துடுப்பாட்ட வீரர்கள் வரிசையாக ஆட்டம் இழந்தனர். இந்தப் போட்டியில் தனது 4ஆவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்த மெட் ஹென்றி 100 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்திசெய்தார். ஆரம்ப வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் (13), ரிஷாப் பான்ட் (20) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். விராத் கோஹ்லி, சர்பராஸ் கான், கே. எல். ராகுல், ரவிந்த்ர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய ஐந்து முக்கிய வீரரகள் ஓட்டம் பெறாமல் நடையைக் கட்டினர். ரோஹித் ஷர்மா (2), குல்தீப் யாதவ் (2), ஜஸ்ப்ரிட் பும்ரா (1) ஆகியோர் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் வெளியேறினர். மொஹம்மத் சிராஜ் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் மெட் ஹென்றி 3 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 13.2 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் வில்லியம் ஓ'ரூக் 6 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 12 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் டிம் சௌதீ 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதன் காரணமாக ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு உகந்ததல்ல என இந்தியாவால் சாக்குப்போக்கு சொல்ல முடியாது. டெவன் கொன்வே மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 91 ஓட்டங்களைப் பெற்றார். 13 ஓட்டங்களைப் பெற்ற டொம் லெதமுடன் ஆரம்ப விக்கெட்டில் 67 ஓட்டங்களை ப் பகிர்ந்த டெவன் கொன்வே, 33 ஓட்டங்களைப் பெற்ற வில் யங்குடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 75 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ஆட்டநேர முடிவில் ரச்சின் ரவிந்த்ரா 22 ஓட்டங்களுடனும் டெரில் மிச்செல் 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். இது இவ்வாறிருக்க, ரிஷாப் பான்டின் வலது முழங்காலுக்குக் கீழ் பந்து தாக்கியதால் வலி தாங்க முடியாதவராக தற்காலிக ஓய்பு பெற்றார். அவருக்குப் பதிலாக கே.எல். ராகுல் விக்கெட் காப்பாளராக செயற்பட்டார். https://www.virakesari.lk/article/196532
-
இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
கனடாவில் ஈழத்தமிழர்களை ஆபத்தில் சிக்க வைக்கும் முயற்சியில் இந்திய புலனாய்வு அமைப்புகள்!!
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
பொதுத் தேர்தல் தொடர்பாக 257 முறைப்பாடுகள் - தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரை 257 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெறப்பட்ட புகார்கள் அனைத்தும் சட்டத்தை மீறியவை எனத் தெரிவித்துள்ளது. பெறப்பட்ட புகார்களில் 181 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு, மேலும் 76 புகார்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/196533
-
ஜோன்ஸ்டன் வெளிநாடு செல்ல தடை
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு! சட்டவிரோதமான முறையில் ஒருங்கினைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிக்க அவகாசம் கோரிய நிலையில், தற்கோது அவர் தலைமறைவாகியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் இது தொடர்பில் விசாரணையை முன்னெடுக்க விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் அவரை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அது பலனலிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், மேலும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடு மற்றும் தங்கும் இடங்களில் நடத்திய சோதனையில் அவர் பற்றிய எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகிறது. அண்மையில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் சர்ச்சைக்குறிய கார் தொடர்பான வாக்குமூலத்தைப் பெற குற்றத்தடுப்பு பிரிவுக்கு வருமாறு தெரிவித்திருந்த போதிலும், அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி அதைத் தவிர்த்து வந்தார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இந்நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவு வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு ஒன்றையும் கடந்த 10.10.2024 அன்று பிறப்பித்திருந்தது. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சொகுசு வாகனம் எவ்வாறு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது, யார் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. https://tamilwin.com/article/johnston-fernando-absconding-1729160364#google_vignette
-
அரசியல்வாதியின் பெயரிலுள்ள பாடசாலையின் பெயரை உடனடியாக நீக்குமாறு உத்தரவு
கிளிநொச்சியில் பாடசாலையொன்றின் பெயர் திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது: சுகாஷ் கருத்து (Photos) 10 months ago கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையானது தற்போது நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதுடன் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவரது முகநூல் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மோசடியான பெயர்ப்பலகை "கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை 1955களில் சின்னத்தம்பி ஆசிரியர் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. தற்சமயம் 55% தமிழ் மாணவர்களும் 45% முஸ்லிம் மாணவர்களும் கற்று வருகின்றனர். இது யுத்த காலம்வரை குறித்த பெயரிலேயே இயங்கி வந்துள்ளது. ஆனால் அதன் பின் சில பிரகிருதிகளால் அ.த.மு.க (அரசினர் தமிழ் முஸ்லிம் கலவன்) பாடசாலை என்றும் தற்சமயம் அ.மு.க (அரசினர் முஸ்லிம் கலவன்) பாடசாலை என்றும் மோசடியாகப் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுத் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது, மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை குறித்த பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயர் கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையே ஆகும். இதற்கு ஆதாரமாக இம்முறை வெளியாகிய க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேற்றில் பாடசாலையின் பெயர் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே பாடசாலையில் திட்டமிட்டுக் கடந்த சில ஆண்டுகளாக மோசடியாகப் பெயர்ப்பலகை வைத்துத் தமிழின அடையாளங்களை அழித்து வருபவர்கள் யார்? இந்தச் சதிக்கு உடந்தையாக இருந்தோர் - இருப்போர் யாவர்? உடனடியாகப் பாடசாலையின் பெயர்ப்பலகையை கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை (அ.த.க) என்று மாற்றுமாறு கோருகின்றோம். உங்கள் தமிழின அழிப்பிற்கு அப்பாவித் தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பலிக்கடா ஆக்காதீர்கள். உண்மை நிலைநாட்டப்படாவிட்டால் சதிக்கு உடந்தையாக இருந்த அத்தனை நபர்களின் விபரங்களும் வெளியிடப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/the-name-of-kilinochchi-school-changed-by-planning-1702327869#google_vignette
-
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்
பட மூலாதாரம்,REUTERS 17 அக்டோபர் 2024, 14:16 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் கொல்லப்பட்டாரா என்பதற்கான ‘சாத்தியக்கூறுகளைச் சரிபார்த்து வருவதாக’ இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ‘இறந்த மூன்று பயங்கரவாதிகளின்’ அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "பயங்கரவாதிகள் கொல்லப்பட்டக் கட்டடம் இருந்த பகுதியில் பணயக்கைதிகள் இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை," என்று இஸ்ரேல் ராணுவம் மேலும் கூறியிருக்கிறது. கொல்லப்பட்டவர் யஹ்யா சின்வாரா என்பதை உறுதிப்படுத்த மரபணு பரிசோதனை நடைபெற்று வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியதாக AFP செய்தி முகமை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சின்வாரின் டிஎன்ஏ மற்றும் பிற தரவுகளை அவர் சிறையில் இருந்த காலத்திலிருந்து ஏற்கனவே இஸ்ரேல் கோப்பில் வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மேலும் தகவல்கள் பகிரப்படும். யார் இந்த யாஹ்யா சின்வார்? 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் பணயக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இதற்கு காரணமானவர்களில் ஒருவராக யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் குற்றம்சாட்டி வந்தது. இவர் காஸா பகுதியின் தெற்கு முனையில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் பிறந்தார். 62 வயதாகும் யாஹ்யா சின்வார், அபு இப்ராஹிம் என்று பரவலாக அறியப்படுகிறார்.பாலத்தீனர்கள் ‘அல்-நக்பா’ (பேரழிவு) என்று அழைக்கும் சம்பவத்திற்குப் பிறகு அவரது குடும்பம் அகதிகளானார்கள். 1948 ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்திற்கு பிறகு இஸ்ரேல் என்ற நாடு உருவானது. அதைத் தொடர்ந்து நடந்த போரில் பாலத்தீனர்கள் அவர்களின் மூதாதையர் வீடுகளில் இருந்து பெருமளவில் இடம்பெயர்ந்தனர். சின்வார் முதன்முதலாக 1982 ஆம் ஆண்டு, அவரது 19-வது வயதில் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் 1985 ஆம் ஆண்டு கைதான போது ஹமாஸின் நிறுவனர் ஷேக் அகமது யாசினின் நம்பிக்கையைப் பெற்றார். இருவரும் ‘மிகமிக நெருக்கமானார்கள்’ என்று டெல் அவிவில் உள்ள தேசியப் பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் கோபி மைக்கேல் கூறுகிறார். அமைப்பின் ஆன்மீகத் தலைவருடனான இந்த உறவு பின்னர் சின்வாருக்கு இயக்கத்திற்குள் ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்தது, என்கிறார் அவர். ஹமாஸ் 1987ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சின்வார் அக்குழுவின் பயங்கரமான உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான அல்-மஜ்தை நிறுவினார். 1988 ஆம் ஆண்டு சின்வார் இரண்டு இஸ்ரேலிய வீரர்களைக் கடத்திச் சென்று கொல்ல திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அதே ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். 12 பாலத்தீனர்களைக் கொன்றதற்காக இஸ்ரேலால் தண்டிக்கப்பட்டார். அவருக்கு நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எகிப்த்தில் சின்வார் (படத்தின் நடுவே இருப்பவர்), 2017-இல் எடுக்கப்பட்ட படம் 'மக்கள் அவரைப் பார்த்து பயந்தார்கள்' சின்வார் தனது வாழ்வில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேலிய சிறைகளில் கழித்துள்ளார். அவர் 2011-ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்பட்டார். அதில் 1,027 பாலத்தீன மற்றும் இஸ்ரேலிய அரேபிய கைதிகள், ஒரே ஒரு இஸ்ரேலிய பணயக்கைதியான இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாட் ஷாலிட்டிற்கு ஈடாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஹமாஸின் மூத்த இராணுவத் தளபதியான சின்வாரின் சகோதரரால் கடத்தப்பட்டு ஐந்து வருடங்களாக ஷாலித் சிறைபிடிக்கப்பட்டிருந்தார். இதன் பிறகு அவர் காஸாவிற்கு திரும்பியதும், உடனடியாக ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார், என்று கோபி மைக்கேல் கூறுகிறார். ஆனால், "மக்கள் அவரைப் பார்த்து பயந்தார்கள். அவர் மிகவும் கொடூரமானவர்," என்றும் கோபி மைக்கேல் கூறுகிறார். சிறையை விட்டு வெளியேறிய உடனேயே, சின்வார் இஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் படை மற்றும் அதன் தலைமைப் பணியாளர் மர்வான் இசாவுடன் ஒரு கூட்டணியை உருவாக்கினார் என்று வாஷிங்டன் மையத்தின் ஆராய்ச்சியாளர் எஹுட் யாரி கூறுகிறார். 2013-ஆம் ஆண்டு, அவர் காஸா பகுதியில் உள்ள ஹமாஸின் அரசியல் பணியகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், 2017-ஆம் ஆண்டு அவர் அதன் தலைவராக ஆனார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஹமாஸ் குழுவின் தலைவர் சின்வாரின் இரக்கமற்ற தன்மை மற்றும் வன்முறைப் போக்கு ‘கான் யூனிஸின் கசாப்புக்காரன்’ என்ற புனைப்பெயரை அவருக்குப் பெற்றுத் தந்தது. இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் காவல் அமைப்பில் உள்ள பலர், கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சின்வாரை சிறையில் இருந்து வெளியேற்றியது மிகப்பெரிய தவறு என்று கருதுகிறார்கள். 2015-ஆம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை, சின்வாரை ‘உலகளாவிய பயங்கரவாதி’ என்று அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தியது. 2021-ஆம் ஆண்டு மே மாதம் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் காஸா பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தைக் குறிவைத்தன. 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஒரு தொலைக்காட்சி உரையில், கிடைக்கக் கூடிய எந்தவொரு வழியிலும் இஸ்ரேலைத் தாக்குமாறு பாலத்தீன மக்களை அவர் ஊக்குவித்தார். ஹமாஸின் அரசியல் பணியகத்தை அதன் ஆயுதப் பிரிவான இஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் படையுடன் இணைக்கும் முக்கிய நபராக சின்வாரை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் அமைப்புதான், தெற்கு இஸ்ரேலில் அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியது. சின்வார், தனது சிக்னல் கண்காணிக்கப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்விடுவோமோ என்ற அச்சத்தில் யாருடனும் தொடர்பு கொள்ளாமல், காஸாவிற்கு கீழே எங்கோ சுரங்கப்பாதையில் தனது மெய்க்காப்பாளர்களுடன் ஒளிந்துகொண்டிருப்பதாக இஸ்ரேல் நம்பி வந்தது. இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட பிறகு 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சின்வார் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c0m03yxj0yvo
-
கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி!
https://online.land.rgd.gov.lk/request மேலுள்ள இணைப்பில் தேடலமா என்று பாருங்கண்ணை. https://online.land.rgd.gov.lk/
-
வவுனியாவில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களிடையே கலந்துரையாடல்!
தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இன்று வியாழக்கிழமை (17) நடைபெற்றது. இதன்போது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னெடுக்கப்படவேண்டிய பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பாக அங்கத்தவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க உட்பட வன்னி மாவட்ட வேட்பாளர்கள், அங்கத்தவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/196512
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
ஐ.சி.சி. மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதி : தென் ஆபிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா அவுஸ்திரேலியா? (நெவில் அன்தனி) துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (17) இரவு நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண முதலாவது அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியா எதிர்த்தாடுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு அனுகூலமான அணியாக அவுஸ்திரேலியா காணப்படுகி ன் றபோதிலும் தென் ஆபிரிக்கா இப் போட்டியை இலகுவில் நழுவ விடப்போவதில்லை. ஒன்பதாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் தோல்வி அடையாமல் இருக்கும் ஒரே ஒரு அணியான அவுஸ்திரேலியா 8ஆவது தடவையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு கடுமையாக முயற்சிக்கவுள்ளது. உலகக் கிண்ண இறுதிச் சுற்றில்தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக தென் ஆபிரிக்காவை அவுஸ்திரேலியா சந்திக்கிறது. கேப் டவுன், நியூலண்ட்ஸ் கிரிக்கெட் விளையாட்டரங்கில் கடந்த வருடம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை 19 ஓட்டங்களால் வெற்றி கொண்ட அவுஸ்திரேலியா 6ஆவது தடவையாக மகளிர் ரி20 உலக கிண்ண சம்பியனானது. மகளிர் சர்வதேச ரி20 போட்டிகளில் 9 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது. உலகக் கிண்ணத்தில் விளையாடப்பட்ட அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 7 போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா தோல்விகளையே தழுவியுள்ளது. இதேவேளை, அவுஸ்திரேலிய அணித் தலைவி அலிசா ஹீலி இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. லீக் சுற்று போட்டியின்போது காயமடைந்த அவர் இதுவரை பூரண குணமடையவில்லை எனவும் பயிற்சிளில் ஈடுபடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் விளையாடாத பட்சத்தில் அணியின் தலைவியாக தஹிலா மெக்ரா செயற்படுவார். இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் மெக்ராதான் தலைவியாக விளையாடினார். அணிகள் அவுஸ்திரேலியா மகளிர்: அலிஸா ஹீலி (தலைவி), பெத் மூனி, எலிஸ் பெரி, ஏஷ்லி கார்ட்னர், க்றேஸ் ஹெரிஸ், அல்லது ஃபோப் லிச்ஃபீல்ட், தஹிலா மெக்ரா, ஜோர்ஜியா வெயாஹாம், அனாபெல் சதர்லண்ட், சொஃபி மொலினொக்ஸ், மெகான் சூட், தய்லா விலேமின்க். தென் ஆபிரிக்கா மகளிர்: லோரா வுல்வார்ட் (தலைவி), தஸ்மின் ப்ரிட்ஸ், ஆனேக் பொஷ், மாரிஸ்ஆன் கெப், க்ளோ ட்ரையொன், ஆன்எரி டேர்க்சன், சுனே லுஸ், நாடின் டி கேர்க், சினாலோ ஜஃப்டா, நொன்குலுலேக்கோ மிலாபா, அயாபொங்கா காக்கா. https://www.virakesari.lk/article/196513
-
ரணில் விசேட உரை
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத்தில் அனுபவசாலிகள் அவசியம் - விசேட அறிக்கையில் ரணில் நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் முன்னோக்கி நகர்வதற்கும் தன்னுடன் இணைந்து செயற்பட்ட அனுபவசாலிகள் நாடாளுமன்றத்திற்கு செல்வது அவசியம் என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கான விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். உங்களது எதிர்காலத்தை புதிய நாடாளுமன்றம் தீர்மானிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நான் ஜனாதிபதி தேர்தலில் சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டேன். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் புதிய கூட்டணி ஆகியன ஒன்றிணைந்து எனக்கு ஆதரவளித்தன. இவர்கள் அனைவரும் எனது தலைமையின் கீழ் செயற்பட்டனர். இவர்கள் அனைவரும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஒன்றிணைகின்றனர். புதிய ஜனநாயக கட்சியாக போட்டியிடுகின்றனர். எனது தலைமைத்துவத்தின் கீழ் அவர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். இவர்கள் அனைவரும் உரிய அனுபவம் உள்ளவர்கள். இவர்கள் கடந்த காலங்களில் தங்கள் பணியை ஒழுங்கான முறையில் முன்னெடுத்துள்ளனர். கடந்த இரண்டு வருடகாலமாக என்னுடன் இணைந்து செயற்பட்டவர்களுக்கு நாட்டின் பொருளாதார நெருக்கடியை கையாள்வதற்கான அனுபவம் உள்ளது. ஆகவே அவர்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெறவேண்டும். அனுபவம் இன்றி நாடாளுமன்றத்தை நிர்வகிக்க முடியாது. நீங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் தோல்வியடைவீர்கள் என்றார். https://www.virakesari.lk/article/196503
-
செரண்டிப் பி தி சேஞ்ச் அறக்கட்டளையின் “பசியற்ற கல்வி” திட்டம் : யாழில் 10 ஆயிரம் மாணவர்கள் பயனடைவு!
(ஸ்டெப்னி கொட்பிறி) “பசியற்ற கல்வி” என்ற திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் உள்ள பத்தாயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக செரண்டிப் பி தி சேஞ்ச் (Serendip Be The Change) அறக்கட்டளையின் தலைவரும் அமைப்பாளருமான பூங்கோதை சந்திரஹாசன் தெரிவித்துள்ளார். கொழும்பு மானியும்பதி ஹோட்டலில் நேற்று புதன்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், செரண்டிப் பி தி சேஞ்ச் அறக்கட்டளையின் இணை அமைப்பாளரும் பணிப்பாளருமான தருன இந்துஜா, தலைமை நிறைவேற்று அதிகாரி அநுஜன் நவரத்னராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், செரண்டிப் பி தி சேஞ்ச் அறக்கட்டளையானது 2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான மாணவர்கள் பட்டினியோடு தங்களது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்நிலையில், மரக்கறி வகைகளின் விலைகள் உயர்வடைந்ததால் அவற்றைக் கொள்வனவு செய்ய முடியாத மாணவர்கள் வெறும் சோற்றை மாத்திரம் உட்கொண்டனர். இந்தப் பாரதூரமான நிலைமையை மாற்றுவதற்காகவும் மாணவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்குவதற்காகவும் செரண்டிப் பி தி சேஞ்ச் அறக்கட்டளையின் மூலம் “பசியற்ற கல்வி” என்ற திட்டம் 2022ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. “பசியற்ற கல்வி” திட்டமானது விவசாய திணைக்களம் மற்றும் கல்வி திணைக்களம் ஆகியவற்றின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள் பசியற்ற கல்வி கற்க வேண்டும், அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த திட்டத்தின் ஊடாக மாணவர்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை தங்களது பாடசாலை தோட்டத்தில் அல்லது வீட்டுத் தோட்டத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் மாணவர்களுக்கு தங்களது சொந்த முயற்சியினால் அறுவடை செய்யும் மரக்கறிகளைப் பயன்படுத்தி தங்களது பணத் தேவை மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். முதன் முதலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் உள்ள 15 அரச பாடசாலைகளைச் சேர்ந்த பத்தாயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கல்வி திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்க பாடசாலைகளிலேயே இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டது. இன, மத வேறுபாடின்றி மாணவர்கள் பசியற்ற கல்வி கற்பதும் அவர்களுக்கான ஆரோக்கியமான உணவுகளை வழங்குவதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இத்திட்டத்தின் ஊடாக மாணவர்கள் விவசாயத்துறை தொடர்பிலும் கற்றுக்கொள்கின்றனர். இந்த திட்டமானது முழுவதுமாக மாணவர்களின் பங்கேற்புடன் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அறுவடை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் எமது அறக்கட்டளையின் ஊடாக வழங்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட இந்த திட்டத்தை புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பிப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னர் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். மேலும், இந்த திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு சென்று செயற்படுத்துவதற்கு நாம் எதிர்பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு மாணவர்களுக்குப் பசியற்ற கல்வி மற்றும் ஆரோக்கியமான உணவுகளை வழங்க முடியும் என நாம் நம்புகின்றோம். நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றான குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை தீர்ப்பதற்கு ஒரு சமூகமாக நாம் ஒன்றுபடுவோம். செரண்டிப் பி தி சேஞ்ச் அறக்கட்டளையின் “பசியற்ற கல்வி ” என்ற திட்டத்தில் இணைவதற்குப் பங்குதாரர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களை அன்புடன் அழைக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (படங்கள் - ஜே. சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/196505
-
அரசியல்வாதியின் பெயரிலுள்ள பாடசாலையின் பெயரை உடனடியாக நீக்குமாறு உத்தரவு
கண்டி வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை பிரிவிலுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலையின் பெயரை உடனடியாக மாற்றுமாறு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபயகோன் நேற்று உத்தரவிட்டுள்ளார். இக்கல்லூரியை குண்டசாலை றோயல் ஆரம்ப பாடசாலை என மாற்றம் செய்வதற்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கட்டமைப்புக் குழு சமர்ப்பித்த யோசனைக்கு ஆளுநர் அனுமதியளித்துள்ளார். கடந்த காலங்களில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இப்பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயரை மாற்ற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் பல அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 2012 ஆம் ஆண்டு மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் இப்பாடசாலைக்கு கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலை என பெயரிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் இனிமேல் இக்கல்லூரியை குண்டசாலை றோயல் ஆரம்பப் பாடசாலை என மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/310844
-
அநுரா குமார திசாநாயக்க; இலங்கை வானில் 'இடதுசாரி' நட்சத்திரம்
'தோழர் அநுர' பத்து வருடங்களுக்கு முன்னர் ஜே.வி.பி.யின் ஐந்தாவது தலைவராக வந்தபோது.....! பாகம் 3 டி பி.எஸ். ஜெயராஜ் அது 1969ஆம் ஆண்டு. 31 வயதான தாய் தனது ஆறு மாத ஆண் குழந்தையின் ஜாதகத்தை எழுதுவிப்பதற்காக பிரபலமான ஒரு சோதிடரின் சேவையை நாடினார். முன்னைய வருடத்தில் குழந்தை பிறந்த நேரத்தில் இருந்த கிரக நகர்வுகளின் அடிப்படையில் சில கணிப்பீடுகளைச் செய்த சோதிடர் தாயாரை பெரு வியப்புடன் பார்த்து "உங்கள் மகனுக்கு அவனது விதியில் ஒரு இராஜயோகம் இருக்கிறது. அவன் ஆளப்பிறந்தவன். அவன் ஒரு நாள் இந்த நாட்டை ஆட்சி செய்வான்" என்று கூறினார். தாயாருக்கு மகிழ்ச்சிதான். ஆனால், ஆச்சரியம். அவர் குறைந்த வருமானத்தைக் கொண்ட ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 'எவ்வாறு எனது மகன் ஆட்சியாளராவான்?' அவருக்கு ஆச்சரியம். அந்த குழந்தை வளர்ந்து பையனாகி 12வது பிறந்த தினத்தைக் கொண்டாடியபோது தாயார் ஒரு புதிய பிரச்சினையை எதிர்நோக்கினார். அவரது மகன் பௌத்த பிக்குவாக வரவேண்டும் என அந்த கிராமத்தின் விகாராதிபதி விரும்பினார். அந்த பையனின் நல்லொழுக்கம், விவேகம் மற்றும் நடத்தையினால் அந்த விகாராதிபதி பெரிதும் கவரப்பட்டார். ஆனால் நீண்ட யோசனைக்கு பிறகு பெற்றோர் மறுத்துவிட்டார்கள். அந்த முடிவை எடுக்கும்போது தாயார் சோதிடர் கூறிய இராஜயோகத்தைப் பற்றியே முக்கியமாக நினைத்தார். 55 வருடங்கள் கழித்து சோதிடர் கூறியது உண்மையாகியது. அந்த பையன் பெரிய ஆளாக வளர்ந்து இறுதியில் நாட்டின் பிரதம ஆட்சியாளராக வந்துவிட்டான். அது வேறு யாருமல்ல... 2024 செப்டெம்பர் 21ஆம் திகதி இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவே. நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்ட நாள் முதல் அநுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகமவில் உள்ள திருத்தியமைக்கப்பட்ட அவரது எளிமையான வீட்டுக்கு பத்திரிகையாளர்கள், யூரியூபர்கள் உட்பட பெருவாரியான வெளியாட்கள் வருகை தந்த வண்ணம் இருக்கிறார்கள். புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அந்த வீட்டில் தங்கியிருப்பதில்லை என்ற போதிலும், இப்போது அவரின் தாயார் சீலாவதியும் மூத்த சகோதரி சிறியலதாவும் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களும் அதில் வசிக்கிறார்கள். முன்கூட்டியே அறிவிக்காமல் வருகை தருவோரை மிகவும் நேச உணர்வுடன் விருந்தோம்புகிறார்கள். 86 வயதான தாயாரை ஊடகவியராளர்கள் அடிக்கடி பேட்டி காண்கிறார்கள். அவரும் தனது மகனின் இளமைக்காலத்தைப் பற்றி பேசுவதில் பெருமையடைகிறார். இந்த பேட்டிகளிலேயே தாயார் மகனின் இராஜயோகம் பற்றியும் அவனை பிக்குவாக்க விரும்பிய பௌத்த விகாராதிபதி பற்றியும் விபரங்களை கூறினார். இரு வாரங்களுக்கு முன்னர் வெளியான "அநுரகுமார திசாநாயக்க; இலங்கை வானில் இடதுசாரி நட்சத்திரம்" என்ற தலைப்பில் அமைந்த இந்த கட்டுரைத் தொடரின் முதல் பாகத்தில் நான் அநுரவின் இளமைக்காலத்தை பற்றி எழுதியிருந்தேன். அதில் நான் அவருக்கு வாசிப்பிலும் நீச்சலிலும் இருந்த பேரார்வத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். சீலாவதி அம்மையாரும் கூட தான் வழங்கிய பேட்டிகளில் அவற்றைப் பற்றி கூடுதல் விபரங்களை கூறினார். அநுர தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள 'நாராச்சியாவ' குளத்தில் தான் நீச்சல் பழகினார். நீந்துவதில் எப்போதும் அவருக்கு ஆர்வம். தனது மகன் தீவிரமான ஒரு வாசகன் என்றும் சாப்பிடும்போது கூட ஒரு புத்தகத்தையோ அல்லது பத்திரிகையையோ வாசித்துக்கொண்டிருப்பார் என்றும் தாயார் கூறினார். வாசிப்பதற்கு அநுர விரும்பித் தெரிவுசெய்தது வீட்டு வளவில் வளர்ந்திருந்த தேமா (அரலிய) மரத்தையேயாகும். அந்த மரத்தின் ஒரு கிளையில் அமர்ந்திருந்து புத்தகங்களை அவர் வாசிப்பார். படிப்பதற்கு அவரை தான் ஒருபோதும் நிர்ப்பந்திக்க வேண்டியிருந்ததில்லை என்று தாயார் கூறுகிறார். ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சிக் காலகட்டத்தில் தாங்கள் எதிர்நோக்கிய தொல்லைகள் பற்றியும் அநுரவின் தாயார் பேசினார். அநுரவின் ஒன்றுவிட்ட சகோதரன் எவ்வாறு சித்திரவதைக்குள்ளாகி கொலைசெய்யப்பட்டார் என்பதையும் நீண்டகாலமாக அநுர கைதாகாமல் எவ்வாறு தப்பி வாழ்ந்தார் என்பதையும் சீலாவதி விபரித்தார். தந்தையார் ரண்பண்டா திசாநாயக்க மரணமடைந்தபோது இறுதிச்சடங்குக்காக அநுர வீட்டுக்கு வருவார் என்று எதிர்பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் அருகாமையில் உள்ள பகுதிகளில் காத்திருந்தார்கள். அவ்வாறு தனக்கு ஒரு வலை விரிக்கப்படும் என்பதை எதிர்பார்த்த அநுர அங்கு வரவில்லை. சொந்த தந்தையாரின் இறுதிச் சடங்குகளில் கூட அவரால் பங்கேற்க முடியாமல் போய்விட்டது என்று சீலாவதி கவலையுடன் கூறினார். அநுரகுமார திசாநாயக்கவை பற்றி இந்த கட்டுரையை நான் எழுதத் தொடங்கியபோது இரு பாகங்களுடன் மாத்திரம் நிறைவு செய்து கொள்வதற்கே உத்தேசித்திருந்தேன். ஆனால், கட்டுரை வாசகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கட்டுரையின் வீச்செல்லையை விரிவுபடுத்தி எழுதுமாறு பல வேண்டுகோள்கள் வந்தன. அதனால் அநுர மீதான கவனக்குவிப்பு மேலும் தொடருகிறது. இரு வாரங்களுக்கு முன்னர் வெளியான இந்த கட்டுரையின் முதலாவது பாகத்தில் நிகழ்வுகள் பல நிறைந்த அநுரவின் ஆரம்பகால வாழ்க்கையை ஓரளவு விபரங்களுடன் எழுதினேன். கடந்த வாரம் வெளியான இரண்டாம் பாகத்தில் ஜனதா விமுக்தி பெரமுனவுக்குள் (ஜே.வி.பி.) ஒரு அரசியல் தலைவராக அவரது சீரான வளர்ச்சி எவ்வாறு அமைந்தது என்பதை ஓரளவு விரிவாக எழுதினேன். இந்த மூன்றாவது பாகத்தில் ஜே.வி.பி.யின் தலைவராக அவர் அடைந்த உயர்வு பற்றி விபரிக்கவிருக்கிறேன். சோமவன்ச அமரசிங்க முன்னர் குறிப்பிடப்பட்டதை போன்று ஜே.வி.பி. 1965இல் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து 1989 வரை 23 வருடங்களாக வசீகரமான அதன் தாபகர் றோஹண விஜேவீரவினாலேயே தலைமைதாங்கப்பட்டு வந்தது. முதலாவது ஜே.வி.பி. தலைவர் விஜேவீர, இரண்டாவது தலைவர் சமான் பியசிறி பெர்னாண்டோ, மூன்றாவது தலைவர் லலித் விஜேரத்ன - இவர்கள் மூவரும் 1989 - 1990 காலப்பகுதியில் அரசினால் கொல்லப்பட்ட 14 ஜே.வி.பி. தலைவர்களில் அடங்குவர். உயிர் தப்பியிருந்த ஒரே சிரேஷ்ட தலைவர் சிறி ஐயா என்ற சோமவன்ச அமரசிங்க மாத்திரமே. அவர் 1990 ஜனவரியில் ஜே.வி.பி.யின் நான்காவது தலைவராக வந்தார். சோமவன்ச அமரசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் ஜே.வி.பி.க்கு அதன் மீளெழுச்சிக்காக புதியதொரு கொள்கை தேவைப்பட்டது. இலங்கைப் படைகள் தமிழீழ விடுதலை புலிகளுடன் போரில் ஈடுபட்டிருந்தனர். இலங்கை தேசப்பற்று மற்றும் நாட்டுப் பிரிவினைக்கு எதிர்ப்பு என்ற போர்வையில் ஜே.வி.பி. சோமவன்சவின் தலைமையின் கீழ் சிங்களப் பேரினவாத போக்கு ஒன்றைக் கடைப்பிடித்தது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை ஆதரித்த பல்வேறு வழிகளில் போர் முயற்சிகளுக்கு முழுமையாக உறுதுணையாக இருந்தது. சோமவன்ச அமரசிங்கவின் கீழ் ஜே.வி.பி. எந்த வகையான சமாதான முன்முயற்சியையும் முற்றுழுழுதாக எதிர்க்கின்ற ஒரு போர்விரும்பி அமைப்பாக விளங்கியது. விடுதலைப்புலிகளுடனான சமாதான முயற்சிகள் தொடர்பில் ஜே.வி.பி. மிகவும் முறைப்பான ஒரு கடும் நிலைப்பாட்டை எடுத்தது. ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் சமாதான முயற்சிகளை அது எதிர்த்தது. அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 2022ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகளுடன் சமாதான முயற்சி ஒன்றில் பிரவேசித்தபோது ஜே.வி.பி. அதை எதிர்த்தது. சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக அது பல ஆர்ப்பாட்டங்களையும் பொதுக் கூட்டங்களையும் நடத்தியது. நோர்வே வகித்த அனுசரணையாளர் பாத்திரத்தையும் அது கடுமையாக எதிர்த்தது. ஒஸ்லோ அதன் மத்தியஸ்த முயற்சிகளை நிறுத்தவேண்டும் என்று ஜே.வி.பி. தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தது. இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையின் அடிப்படையிலான தீர்வொனறைக் காண்பது தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் காணப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையை ஜே.வி.பி. கண்டனம் செய்தது. ஒரு இடைக்கால ஏற்பாடாக உள்ளக சுயாட்சி அதிகார சபையை (Internal Self - Governing Authority) அமைப்பதற்கான யோசனையை விடுதலைப்புலிகள் முன்வைத்த போது ஜே.வி.பி. அதற்கு எதிராக சுவரொட்டி இயக்கம் ஒன்றை முன்னெடுத்தது. 2004ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் தேர்தலில் தோற்கடிக்கப்படுவதை உறுதிசெய்வதன் மூலமாக சமாதான முயற்சிகளை குழப்பியடிப்பதற்கு ஜே.வி.பி. உறுதிபூண்டது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் அணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டது. விக்கிரமசிங்க தோற்கடிக்கப்பட்டார். அந்த தேர்தலில் ஜே.வி.பி.க்கு பாராளுமன்றத்தில் 39 ஆசனங்கள் கிடைத்தன. அநுர குமார திசாநாயக்க உட்பட ஜே.வி.பி.யின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். அநுர விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி, நீர்ப்பாசன அமைச்சராக நியமிக்கப்பட்டார். சுனாமி உதவிக் கட்டமைப்பு ஆனால், சுனாமியினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் கரையோரப் பகுதிகளுக்கு வெளிநாட்டு நிதியைப் பகிர்ந்தளிப்பதற்காக மரபுக்கு மாறான கட்டமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான யோசனையை முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க முன்வைத்தபோது ஜே.வி.பி.யின் அமைச்சர்கள் பதவி விலகியதுடன் அதன் 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினர். அந்த உத்தேச கட்டமைப்பு சுனாமிக்கு பின்னரான செயற்பாட்டு முகாமைத்துவ கட்டமைப்பு [Post - Tsunami Operational Management Structure (P - TOMS)] என்று அழைக்கப்பட்டது. அது அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஒரு கூட்டுப் பொறிமுறையாகும். அந்த சுனாமி உதவிக் கட்டமைப்பை ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்தது. அநுர உட்பட ஜே.வி.பி.யின் 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரணை செய்த அன்றைய பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு சுனாமி உதவிக் கட்டமைப்புக்கான உடன்படிக்கையின் முக்கியமான செயற்பாட்டு பிரிவுகளை கட்டுப்படுத்தி இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதையடுத்து அந்த கட்டமைப்பை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இடைக்காலத் தடையுத்தரவை வரவேற்ற ஜே.வி.பி. கூட்டுப் பொறிமுறை நடைமுறைப்படுத்தப்படுவதை வெற்றிகரமாக தடுத்துவிட்டதாக கூறியது. சுனாமி உதவிக் கட்டமைப்பு தொடர்பான ஜே.வி.பி.யின் கதையை கடந்த வாரம் வெளியான இந்த கட்டுரையான இரண்டாம் பாகத்தில் காலவரிசைப்படி விபரித்திருந்தேன். வடக்கு - கிழக்கு இணைப்பு ஜே.வி.பி. அதன் இந்த நடவடிக்கைகளை எல்லாம் பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்ப்பது என்ற அடிப்படையில் நியாயப்படுத்திய அதேவேளை, இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் செய்யப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்பு மீதான விரோதத்தையும் பெரியளவில் வெளிக்காட்டியது. "வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்களாக இருந்து வந்திருக்கின்றன. இந்த பிராந்தியத்தில் இதுவரை காலமும் அவர்கள் ஏனைய இனக்குழுக்களுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்" என்று சமாதான உடன்படிக்கையின் 1.4 பந்தி கூறுகிறது. இணைப்பை தொடரவேண்டுமானால் ஒரு வருடத்துக்கு பிறகு கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட முறையில் இரு மாகாணங்களும் தற்காலிகமாக இணைக்கப்பட்டன. போர் முடிவின்றித் தொடர்ந்த காரணத்தினால் சர்வஜன வாக்கெடுப்பை அரசாங்கங்கள் தொடர்ச்சியாக ஒத்திவைத்துவந்தன. வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிராக ஜே.வி.பி. ஒரு கடும்போக்கை கடைப்பிடித்தது. ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் இணைப்புக்கு வெளிப்படையாக எதிர்ப்பை காட்டியதற்கு புறம்பாக ஜே.வி.பி. எதிர்ப்பை தீவிரப்படுத்துவதற்காக வேறு அமைப்புக்களையும் உருவாக்கியது. பரந்தளவில் கருத்தரங்குகளும் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதுடன் இலட்சக்கணக்கான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிரான நீணடதொரு பிரசார இயக்கத்துக்கு பிறகு ஜே.வி.பி. 2006ஆம் ஆண்டில் நீதிமன்றத்தையும் நாடியது. வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைக்கப்பட்டு ஒரு தனியான தமிழ் பேசும் மாகாணம் உருவாக்கப்பட்டதை ஆட்சேபித்து ஜே.வி.பி. இலங்கை உயர்நீதிமன்றத்தில் மூன்று அடிப்படை உரிமைமீறல் மனுக்களை தாக்கல் செய்தது. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வசந்த பியதிஸ்ஸ, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர, சம்மாந்துறையைச் சேர்ந்த ஒரு அரசாங்க சேவையாளரான ஏ.எஸ்.எம். புஹாரி ஆகியோரே மனுதாரர்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களை மக்களினால் தெரிவு செய்யப்படும் ஒரு சபையினால் நிருவகிக்கப்படும் ஒரு நிருவாக அலகாக்குவதற்காகவும் அதற்காக அந்த மாகாணங்களை இணைப்பதற்காகவும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆ்.ஜெயவர்தனவினால் 1988 செப்டெம்பர் 2ஆம் திகதியும் 8ஆம் திகதியும் செய்யப்பட்ட பிரகடனங்களை செல்லுபடியற்றவை என்று அறிவிக்குமாறு உயர்நீதிமன்றத்தை ஜே.டி.பி.யின் மனுதாரர்கள் கோரினர். பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, நீதியரசர்கள் நிஹால் ஜயசிங்க, என்.கே. உடலாகம, நிமால் காமினி அமரதுங்க, ரூபா பெர்னாண்டோ ஆகிய ஐவரைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லுபடியற்றது என்று தீர்ப்பளித்தது. 23 பக்கங்களைக் கொண்ட அந்த தீர்ப்பில் அவர்கள் 1987ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் பிரிவு 31 (1) (பி )யில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளில் எந்த ஒன்றுமே நிறைவேற்றப்படாத போதிலும், அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் இரு மாகாணங்களையும் இணைத்தார் என்று கூறியிருந்தனர். மோதல் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்பதும் சகல தீவிரவாத குழுக்களும் ஆயுதங்களைக் கையளிக்கவேண்டும் என்பதுமே அந்த இரு நிபந்தனைகளுமாகும். இணைப்பு என்பது ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை விட மிகையானதாகும் என்று உயர்நீதிமன்றம் கூறியது. எனவே, தமிழர்கள் சம்பந்தப்பட்ட சில விவகாரங்களில் ஜே.வி.பி. கடந்த காலத்தில் மிகுந்த கடும்போக்கை கடைப்பிடித்தது என்பதை காணக்கூடியதாக இருந்தது. தங்களது இந்த போக்கு சாதாரண தமிழர்களுக்கு எதிரானது அல்ல. விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் எதிரானது என்று ஜே.வி.பி. நியாயம் கற்பித்தது.தேசத்தின் சுயாதிபத்தியத்தைப் பாதுகாத்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தாங்கள் கடமைப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கூறினர். ஆனால், மெய்யாகவே தமிழர்களுக்கு விரோதமானது என்று அழைக்கப்படக்கூடிய கொள்கை ஒன்றை ஜே.வி.பி. கடந்த காலத்தில் கடைப்பிடித்தது என்பது மறுதலிக்க முடியாத கேள்விக்கு இடமின்றிய உண்மையாகும். இந்த விவகாரங்களில் எல்லாம் அநுர குமார திசாநாயக்க வகித்த பங்கு என்ன என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஜே.வி.பி. அந்த நேரத்தில் தன்னை ஒரு மார்க்சிஸ்ட் என்று பிரகடனப்படுத்திக் கொண்ட அதேவேளை பெருமளவுக்கு சிங்கள கடும்போக்காளராகவும் இருந்த சோமவன்ச அமரசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இருந்தது. இந்த விவகாரங்களில் அவருக்கு ஒரு இடதுசாரி என்பதை விடவும் கூடுதலான அளவுக்கு தீவிரமான சிங்கள தேசியவாதியாக இருந்த விமல் வீரவன்ச நன்றாக உதவினார். அந்த நாட்களில் இந்த விவகாரங்களில் அநுரவின் பெயர் பெரிதாக அடிபடவில்லை. உட்கட்சி விவாதங்களில் இந்த நடவடிக்கைகளை அவர் எதிர்த்துப் பேசினாரா என்பது தெரியவில்லை. ஆனால் சுனாமி உதவிக்கட்டமைப்புக்கு எதிரான வழக்கில் அவரும் ஒரு மனுதாரர் என்பது உண்மை. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பை எதிர்ப்பதிலும் அவர் கட்சியின் கொள்கையை பின்பற்றினார். ஜே.வி.பி.யின் கடந்த காலமும் நிகழ்காலமும் ஜே.வி.பி.யின் இந்த சர்ச்சைக்குரிய கடந்த காலம் அதன் தலைமையிலான தற்போதைய தேசிய மக்கள் சக்தியிடமிருந்து கணிசமானளவுக்கு வேறுபடுகிறது. நாளடைவில் ஜே.வி.பி. தன்னை மாற்றியமைத்துக்கொண்டிருக்கக்கூடியது சாத்தியமே. தேசிய மக்கள் சக்தி என்பது ஜே.வி.பி.யின் மாற்றியமைத்து மெருகூட்டப்பட்ட ஒரு வடிவமே. அநுர குமார திசாநாயக்க ஒரு கெட்டியான கோட்பாட்டுப் பிடிவாதமுடையவராக அன்றி நெகிழ்வுத்தன்மையுடன் நடைமுறைச் சாத்தியமான கொள்கைகளை கடைபிடிக்கும் ஒருவராக கருதப்படுகிறார். அவரின் போக்கின் பிரகாரம் கட்சியும் அதன் கொள்கைகளை மாற்றியமைத்திருக்கக்கூடியது சாத்தியமே. கடந்த காலத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு ஜே.வி.பி.யை கண்டனம் செய்வது நியாயமற்றது. தற்போது அநுர குமார திசாநாயக்க இலங்கை மக்களின் குறிப்பாக இளைய தலைமுறையினரின் அன்புக்குரியவராக விளங்குகிறார். ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மக்கள் மத்தியில் பெருமளவு செல்வாக்கைக் கொண்டதாக இருக்கிறது. இத்தகைய பின்புலத்தில் ஜே.வி.பி.யின் கடந்தகால நெறிகெட்ட அம்சங்கள் அலட்சியப்படுத்தப்பட வோ, கண்டும் காணமால் விடப்படவோ அல்லது பேசாமல் தவிர்க்கப்படவோ கூடியவை அல்ல. புதிய ஜே.வி.பி.யையும் அதன் தலைவர் அநுரவையும் ஏற்றுக்கொண்டு வரவேற்கின்ற அதேவேளை, அண்மைய கடந்த காலத்தை நாம் மறந்துவிடவும் கூடாது. வரலாற்றில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படலாம். அதன் காரணத்தினால் தான் இந்த பத்திகளில் ஜே.வி.பி.யின் கடந்த காலத்துக்கு பெருமளவு இடம் ஒதுக்கப்பட்டது. விமல் வீரவன்சவின் பிளவு சோமவன்ச அமரசிங்கவின் தலைமையின் கீழான ஜே.வி.பி. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நேச அணியாக விளங்கிய அதேவேளை எதிரணியிலேயே தொடர்ந்தும் இருந்தது. ஆனால், ஜே.வி.பி.யில் ஒரு பிளவு ஏற்பட்டது. அதையடுத்து அந்த கட்சிக்கும் மகிந்த அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகள் கசப்படையும் நிலை ஏற்பட்டது. ஜே.வி.பி.யின் பிரபலமான பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச 2008 மார்ச்சில் கட்சியின் தலைமைத்துவத்துடன் முரண்பட்டுக்கொண்டார். ஊழல் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் அவர் ஈடுபட்டதாகக் கூறி ஜே.வி.பி.யின் நிறைவேற்றுக்குழு வீரவன்சவை இடைநிறுத்தியது. தனது விசுவாசிகள் சிலருடன் ஜே.வி.பி.யில் இருந்து வெளியேறிய வீரவன்ச 2006 மே 14ஆம் திகதி தேசிய சுதந்திர முன்னணி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். அந்த வருடம் டிசம்பரில் புதிய கட்சி அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டதை அடுத்து வீரவன்ச ஒரு அமைச்சரவை அமைச்சரானா். பிளவுக்கு காரணமாக இருந்தவர்கள் என்று மகிந்தவையும் அவரின் சகோதரர் பசிலையும் சந்தேகித்த ஜே.வி.பி. அவர்கள் மீது கடும் ஆத்திரமடைந்தது. " தற்போதைய அரசியல் சூழ்நிலையில் புதிய அரசியல் கட்சிக்கான எந்த ஒரு தேவையும் இல்லை" என்று அநுர குமார திசாநாயக்க கூறியதாக ஊடகங்கள் அந்த நேரத்தில் செய்தி வெளியிட்டன. பொன்சேகாவுக்கு ஆதரவு விடுதலைப் புலிகளுடனான போர் 2009 மே நடுப்பகுதியில் முடிவுக்கு வந்ததற்கு பிறகு இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் ஆளும் ராஜபக்ஷக்களுக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றத் தொடங்கின. இறுதியில் பொன்சேகா 2010 ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராக மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டார். ராஜபக்ஷவுக்கு எதிராக பொன்சேகாவை ஆதரித்து ஜே.வி.பி. தீவிரமாக பிரசாரம் செய்தது. ஆனால், பொன்சேகா தோல்வியடைந்தார். 2010 பாராளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி. சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் அங்கமாக போட்டியிட்டது. அந்த கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் ஏழு ஆசனங்கள் கிடைத்தன. ஜே.வி.பி. நான்கு ஆசனங்களை பெற்றது. அநுர தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2004 பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கமாக 39 ஆசனங்களைக் கைப்பற்றிய ஜே.வி.பி. 2010ஆம் ஆண்டில் நான்கு ஆசனங்களுக்கு வீழ்ச்சி கண்டது. ஒரு விசித்திரமான திருப்பமாக, வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அந்த தேர்தலில் ஜே.வி.பி.யை விடவும் கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றியது. குமார் குணரத்தினம் 2012ஆம் ஆண்டில் ஜே.வி.பி.யில் இன்னொரு பிளவு ஏற்பட்டது. சோமவன்ச அமரசிங்கவின் தலைமைத்துவம் பாணி குறித்து ஜே.வி.பி. செயற்பாட்டாளர்களில் ஒரு குழுவினர் மத்தியில் பெருமளவு வெறுப்புணர்வு காணப்பட்டது. ஜே.வி.பி. அதன் புரட்சிகர குணாம்சத்தை இழந்து பாரம்பரியமான பூர்ஷுவா (முதலாளித்துவ) கட்சி ஒன்றின் குணாதிசயங்களைப் பெறத் தொடங்குவதாக அவர்கள் உணர்ந்தார்கள். அந்த அதிருப்தியாளர்கள் குழுவுக்கு நொயல் முதலிகே என்ற பெயரில் அவுஸ்திரேலியாவில் இருந்த குமார் என்ற பிரேம்குமார் குணரத்தினம் தலைமை தாங்கினார். இந்த அரசியல் முரண்பாடுகள் ஜே.வி.பி. தலைவர் சோமவன்சவுக்கும் பிரேம்குமாருக்கும் இடையில் கடுமையான மோதல்களுக்கு வழிவகுத்தது. இந்த உட்கட்சிச் சண்டையில் அநுர குமார சோமவன்சவை ஆதரித்தார். தீவிரவாதப் போக்குடையவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சி ஒன்றை அமைத்தார்கள். புதிய முன்னரங்க சோசலிஸ்ட் கட்சியை (Frontline Socialist Party) ஆரம்பித்து வைப்பதற்காக நொயல் முதலிகே என்ற குணரத்தினம் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை திரும்பினார். அரசாங்கத்தின் ஏஜண்டுகளினால் கடத்தப்பட்ட அவர் "காணாமல்" போனார். ஆனால் ஜே.வி.பி.க்குள் குமார் குணரத்தினம் என்ற பெயர் கொண்ட ஒரு நபர் கிடையாது என்று அநுர குமார கூறினார். அவ்வாறு கூறியது அவருக்கு என்றென்றைக்குமே அவப்பெயர். அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் முயற்சியின் விளைவாக இறுதியில் குமார் விடுதலை செய்யப்பட்டார். முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி 2008 ஏப்ரலில் தொடங்கப்பட்டது. ஜே.வி.பி.யின் பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர் அணிகளைச் சேர்ந்த கணிசமான எண்ணிக்கையினர் வெளியேறி புதிய கட்சியில் இணைந்தனர். பெருமளவு உறுப்பினர்கள் முன்னரங்க சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்ததால் சிறிது காலம் ஜே.வி.பி.யின் ஊடகப்பிரிவு மூடப்பட்டிருந்தது. புத்தம் புதிய தலைவர் வீரவன்ச தலைமையிலான பிளவு பல சிங்கள தேசியவாதிகளையும் குணரத்தினத்தின் தலைமையிலான பிளவு பல புரட்சிகர சோசலிஸ்டுகளையும் ஜே.வி.பி.யிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டன. ஜே.வி.பி.யில் எஞ்சிவிடப்பட்டவர்கள் சிங்கள தேசியவாதத்துக்கும புரட்சிகர சோசலிசத்துக்கும் இடையிலான "மிதவாதிகளாகவே" இருந்தார்கள். ஜே.வி.பி. அதன் ஊக்கத்தையும் உயிர்த்துடிப்பையும் இழக்கத் தொடங்கி அதன் முன்னைய வடிவத்தின் ஒரு கேலிச்சித்திரமாக மாறிக்கொண்டுவந்தது. ஒரு அரசியல் சக்தியாக பிழைத்திருக்க வேண்டும் என்றால் புதிய தலைவர் ஒருவரின் கீழ் ஜே.வி.பி.க்கு புதியதொரு செல்நெறி தேவைப்படுகிறது என்பது பெருமளவுக்கு தெளிவாகத் தெரியத் தொடங்கியது. தான் பதவியில் இருந்து இறங்கவேண்டிய தேவையை புரிந்துகொண்ட மூத்த தலைவர் சோமவன்ச அமரசிங்க விரைலில் ஓய்வுபெறப்போவதாக சூசகமாக அறிவிக்கத் தொடங்கினார். அவருக்கு பிறகு தலைவர் யார் என்பதே கேள்வி. கே.டி.லால்காந்த, ரில்வின் சில்வா, விஜித ஹேரத், சுனில் ஹந்துனெத்தி, பிமால் இரத்நாயக்க, அநுர குமார திசாநாயக்க என்று அடுத்து தலைவராக வரக்கூடிய பலர் இருந்தார்கள். இவர்களில் பொதுச் செயலாளரான ரில்வின் சில்வாவே புதியதலைவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜே.வி.பி.யின் 17வது தேசிய மகாநாடு 2014 பெப்ரவரி 2ஆம் திகதி நடைபெற்றது. தலைவர் பதவியில் இருந்து இறங்கிய சோமவன்ச அமரசிங்க தன்னை பதிலீடு செய்வதற்கு அநுர குமார திசாநாயக்கவை பிரேரித்தார். அது ஏகமனதாக மகாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது. அநுர குமாரவின் ஆற்றல்களை நன்றாக புரிந்துகொண்ட சோமவன்ச தனக்கு பிறகு தலைவராக்குவதற்காக அவரை வளர்த்துவந்தார். ஜே.வி.பி.யின் வரலாற்று பயணம் பத்து வருடங்களுக்கு முன்னர் 2014ஆம் ஆண்டில் அநுர குமார திசாநாயக்க ஜே.வி.பி.யின் ஐந்தாவது தலைவராக வந்தார். அவரின் தலைமைத்துவத்தின் கீழ் ஜே.வி.பி. முன்னெடுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார தெரிவாகுவதற்கு வழிவகுத்தது. இது ஏன், எவ்வாறு நடந்தது என்பதை இந்த கட்டுரையின் நான்காவதும் இறுதியானதுமான பாகத்தில் பார்ப்போம். https://www.virakesari.lk/article/196240
-
வடக்கு கிழக்கை பிரித்த நாள்… ராஜபக்சக்களை விஞ்சியவர்களா ஜேபிவி
Courtesy: தீபச்செல்வன் ஜேவிபி (JVP) எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி தற்போது இங்கையின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் வாயிலாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் மக்கள் விடுதலை முன்னணி வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு உருப்படியான தீர்வு ஒன்றை முன்வைக்குமா? என்ற பேச்சுகள் ஒருபுறத்தில் எழுந்துள்ளன. அதேவேளை மக்கள் விடுதலை முன்னணி தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியின் பெயரில் செயற்பட்டு வருகின்றது. எனினும் அது பெயரளவிலான மாற்றம் மாத்திரமே என்பதை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ள கருத்து தெளிவுபடுத்தி நிற்கிறது. இந்த நிலையில் இந்த நாள் (16.10.2024) என்பது ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் ஜேவிபியால் ஏற்படுத்தப்பட்ட மறக்க முடியாத ஒரு நாளாக இருக்கிறது. தீர்வு வழங்கும் எண்ணமில்லையா? வடக்கின் அடித்தட்டு மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியமற்றது என்ற கருத்தை மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது. தமிழ் தலைவர்கள் தமக்கான அதிகாரத்தை தக்க வைப்பதற்காகவே 13ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பரவலாக்கல் குறித்துப் பேசுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். வடக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லை என்றும் அவர்களுக்கு விவசாயத்திற்கு நீரும் சந்தைப்படுத்தலும் கல்வியும் மாத்திரம் வழங்கினால் போதும் என்று அவர் கூறியுள்ளார். கடந்த காலத்தில் பல சிங்கள தலைவர்களே தமிழ் மக்களுக்கு சமஸ்டி ஆட்சி வழங்க வேண்டும் என்பதையும் அதிகாரப் பகிர்வு இலங்கையின் இனப்பிரச்சனைக்கு அவசியம் என்பதையும் ஏற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் 2009இற்குப் பிறகு தமிழ் தேசத்திற்கு வந்த ஜேவிபி தமிழ் மக்களுக்கென எந்தத் தீர்வும் முன்வைக்கத் தேவையில்லை என்றும் தமிழ் மக்களும் இலங்கையர்கள் என்றும் அவர்களுக்கு தனியான பிரச்சினைகள் இல்லை என்றும் கூறி வந்தது. இந்த நிலையில் அநுர குமாரவின் மூளையாக செயற்படும் ரில்வின் சில்வா போன்றவர்கள் இலங்கை இனப்பிரச்சினை குறித்து ஜேவிபி காலம் காலமாக கொண்டுள்ள கொள்கையை வெளிப்படுத்தியுள்ளனர். ஜேவிபி தேசிய மக்கள் சக்தி என்ற பெயரை மாற்றிக் கொண்டாலும் அதன் உள்ளடக்கமான இனவாத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதை நாம் மிகக் கவனமாக அவதானிக்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு வடக்கில் அநுர மீது கண்மூடித்தனமான - கடந்தகால பார்வையற்ற - அறிவற்ற ஆதரவு கொண்டவர்களே இதில் விழித்துக் கொள்ள வேண்டும். இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் இடம்பெற்றது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கும் இடையில் இலங்கை இந்திய ஒப்பந்தம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கையில் ஏற்பட்ட உரிமை மறுப்பு மற்றும் பேரினவாத இன ஒடுக்குமுறைக்கு எதிராக தனித் தமிழ் ஈழம் வேண்டி ஈழத் தமிழ் இளைஞர்கள் போராடிய நிலையில், இலங்கை இந்திய ஒப்பந்தம் இடம்பெற்றது. இலங்கை அரசுடன் பேச்சு நடாத்தி இந்தியாவின் தலையீடாகவும் தீர்வாகவும் முன்வைக்கப்பட்ட 13ஆவது அரசியல் திருத்தத்தின் அடிப்படையில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு மாகாண அலகாக ஆக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் 1988ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. 13ஆவது திருத்தம் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்றும் அதனை தாண்டிய சமவுரிமை ஆட்சி வழங்க வேண்டும் என்றும் அன்று வலியுறுத்திய தமிழர் தரப்பு அந்தத் தேர்தலைப் புறக்கணித்தது. எனினும் சில தரப்புக்கள் மாத்திரம் தேர்தலில் போட்டியிட்டன. அதன் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சராக வரதராஜப் பெருமாள் தெரிவு செய்யப்பட்டார். அதில் எந்த அதிகாரமும் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பின்னாளில் அவர் துறந்திருந்தார். வடக்கு கிழக்கை பிரித்த நாள்? இதேபோன்றதொரு நாளில் தான் இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணம் நீதிமன்றத் தீர்ப்பினால் பிரிக்கப்பட்டது. தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை முதலிய மாவட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இணைக்கப்பட்ட நிலையில் இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையின் ஆகக் குறைந்த ஒரு சிறப்பாக, ஏற்றுக்கொள்ளப்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை இல்லாமல் ஆக்க வேண்டும் என்பது சிங்களப் பேரினவாதிகளின் கனவாக இருந்தது. அதனை மக்கள் விடுதலை முன்னணி என்கின்ற ஜேவிபி நீதிமன்றத் தீர்ப்பின் வாயிலாகப் பிரித்துச் சாதித்தது. 2006ஆம் ஆண்டில் (2006.10.16) வடக்கு கிழக்கை பிரித்த அதேவேளை அன்றைய நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக்கூடாது என்றும் சமாதான ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து போரைத் தொடங்கி விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்றும் ஜேவிபி அன்றைய மகிந்த அரசுக்கு மக்கள் மத்தியில் இனவாதத்தை ஊட்டி ஆதரவை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் சந்திரிகா அரசுக்கு ஜேவிபி ஆதரவு வழங்கியதுடன் பின்னர் மகிந்தவுக்கு போருக்கான ஆதரவை வழங்கியது. அந்த அடிப்படையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு ஆதரவு திரட்டியவர்கள் என்ற வகையில் தமக்கே போர் வெற்றி சொந்தம் என்றும் ஜேவிபி முன்னயை காலத்தில் அரசுடன் முரண்பட்டதும் பெருமைப்பட்டதும் கூட வரலாறு ஆகும். கடந்த காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் கசப்பான பல அனுபவங்களை ஜேவிபி ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்மைய காலத்தில் அநுர குமார திசாநாயக்க தேர்தலின்போது போர்க்குற்றவாளிகளைத் தண்டிப்பேன் என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அன்னையர்களின் கண்ணீருக்குப் பதில் கூறுவேன் என்றும் சொல்லியிருந்தபோதும் இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதன் ஊடாகவும் வடக்கு கிழக்கிற்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லை என்பதன் ஊடாகவும் தனது மெய்யான பேரினவாத முகத்தைக் காட்டுகிறது. https://ibctamil.com/article/split-of-north-east-rajapaksas-vs-jvp-1729146082#google_vignette
-
எனது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒருவரின் கணவர் கேள்விப்பத்திரத்தை பெறுவதற்காக பல மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்க முயன்றார்- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
எனது அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த பெண் ஒருவரின் கணவர் எனக்கு பல மில்லியன் டொலர்களை இலஞ்சமாக வழங்க முன்வந்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வர்த்தகர் ஒருவர் கேள்விப்பத்திரத்தை பெற விரும்பினால் அவர் ஒரு மில்லியன் டொலருடன் எங்களிடம் வருவார். இந்த கேள்விப்பத்திரத்தை எனக்கு தாருங்கள் என வேண்டுகோள் விடுப்பார். இது எனக்கு நடந்துள்ளது. நான் பிரதமராகயிருந்தவேளை எனது அலுவலகத்திற்கு ஐந்து மில்லியன் டொலர்களுடன் வந்தார்கள். அதனை எடுத்துக்கொண்டு உடனடியாக வெளியே செல்லுங்கள் என்றேன். எனது அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரான பெண்ணொருவரின் கணவரே அவ்வாறு பெருந்தொகை பணத்துடன் வந்தார். உடனடியாக அதனை எடுத்துக்கொண்டு வெளியே போகாவிட்டால் நான் உங்களை கைதுசெய்வேன் என எச்சரித்தேன். அந்த நபருடன் சிங்கப்பூரை சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் வந்திருந்தார். இளவயதிலிருந்து விழுமியங்களை கற்றுக்கொடுப்பதற்கு முயலவேண்டும், ஊழலிற்கு பழகிப்போனவர்களின் மனதை மாற்றுவது கடினம். உங்களால் திருடமுடிந்த அளவிற்கு திருடுங்கள், ஆனால் பிடிபடாதீர்கள் என தெரிவிக்கும் ஜனாதிபதியொருவரும் இருந்தார். அவர் இதனை தனது அமைச்சரவைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும், தனது கட்சிக்காரர்களிற்கும் தெரிவித்துள்ளார். அனைவரும் திருடினார்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. இந்த அமைப்பு முறையே நாட்டை சீரழித்தது. அரசாங்கத்தின் திட்டங்களை பெற்றுக்கொள்வதற்காக வர்த்தகர்கள் இலஞ்சம் வழங்க முன்வருவார்கள், பரந்துபட்ட ஊழல் நாட்டை இறுதியில் வங்குரோத்து நிலைக்கு இட்டுச்செல்லும். https://www.virakesari.lk/article/196489
-
இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - வெளியான பின்னணி
ஏர் இந்தியா (Air India) விமானம் உட்பட 10 விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக மும்பை காவல்துறையினர் சிறுவன் ஒருவரை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த்கானைச் சேர்ந்த தரம் 11 இல் கல்வி பயிலும் 17 வயது மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விமானப் பாதைகளில் மாற்றங்கள் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 72 மணி நேரத்தில் 10 க்கும் அதிகமான இந்திய விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதனால் விமானப் பாதைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும், பல விமானங்கள் தாமதமாகச் சென்றன. இந்நிலையில் குறித்த மிரட்டல்கள் சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ராஜ்னந்த்கான் பகுதியில் இருந்து 'எக்ஸ்' தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.. கடந்த திங்கள் முதல் மொத்தம் 19 மிரட்டல் பதிவுகள் அந்த கணக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ளன. விரைந்து செயற்பட்ட காவல்துறை சம்பவம் தொடர்பில் சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கான் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்தனர். சிறுவன் தனது நண்பரின் புகைப்படத்தை வைத்து சமூக வலைதளங்களில் போலிக் கணக்கை பயன்படுத்தி மிரட்டல் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. போலி வெடிகுண்டு மிரட்டல் தற்போது, இந்த வழக்கு அண்மையில் சில விமானங்களுக்கு வந்த போலி வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களுடன் தொடர்புடையதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவருக்கு பணம் தொடர்பாக நண்பருடன் சில தகராறு இருந்ததால் இது பழிவாங்கும் சதி என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சிறுவன் மற்றும் அவனது தந்தை இருவரும் விசாரணைக்காக மும்பைக்கு வரவழைக்கப்பட்டனர். சிறுவனின் வயது மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/bomb-threat-to-indian-airlines-last-72-hrs-1729140463
-
யுக்ரேன் போர்: ரஷ்ய படையில் வட கொரிய வீரர்கள், சீனா, இரானின் ஆயுதங்களா? உண்மை என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரிமி ஹோவெல் பதவி, பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனுடனான போரில் ரஷ்யா ஆண்டுக்கு லட்சக்கணக்கான ஷெல் குண்டுகளை யுக்ரேன் ராணுவத்தின் மீது வீசுகிறது. மேலும் அங்கு பொதுமக்கள் வாழும் பகுதிகளின் மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறது. இதில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான வெடிபொருட்கள் ரஷ்யாவின் நட்பு நாடுகளால் வழங்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் அந்நாட்டின் ஆயுதங்களைத் தயாரிக்கும் திறனைத் தடுக்க முயல்கின்றன. ஆனால், அதே வேளையில் சீனா, இரான், வட கொரியா போன்ற நாடுகள் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கி உதவுவதாகக் கூறப்படுகிறது. இரான் வழங்கும் ட்ரோன்கள், ஏவுகணைகள் ஃபாத்-360 என்பது 150 கிலோ வெடிபொருட்களை சுமந்து, சுமார் 120 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய ஒரு ஏவுகணை. குறுகிய தூரம் தாக்கும் இந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை, சுமார் 200 அல்லது அதற்கும் மேற்பட்ட அளவில் ரஷ்யாவுக்கு வழங்க இரான் ஒப்பந்தம் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ரஷ்யாவின் ஆயுதப்படையைச் சேர்ந்த பல வீரர்கள் இந்த ஏவுகணையைப் பயன்படுத்த இரானில் பயிற்சி எடுத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குறிப்பிடுகிறது. மேலும், எதிர்காலத்தில் இந்த ஏவுகணைகள் மூலம் யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GAVRIIL GRIGOROV/POOL/AFP படக்குறிப்பு, ரஷ்ய படையில் வட கொரிய வீரர்கள் சண்டையிடுவதாக முன்பு எழுந்த குற்றச்சாட்டை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் "முழுமையான முட்டாள்தனம்" என்று கூறி மறுப்பு தெரிவித்தார் ரஷ்யா ஃபாத்-360 ஏவுகணைகளைப் பயன்படுத்தி யுக்ரேனின் பல்வேறு நகரங்கள் மற்றும் அந்நாட்டின் எல்லைகளுக்கு அருகிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற இடங்களைத் தாக்கலாம். இதனால் யுக்ரேனின் மிகவும் உள்ளார்ந்த பகுதிகளில் இருக்கும் இலக்குகளைத் தாக்குவதற்கு மட்டும் அதன் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த முடியும். "ஃபாத்-360 ஏவுகணை ரஷ்ய எல்லைக்கு அருகிலுள்ள யுக்ரேனிய இலக்குகளைத் தாக்குவதற்கு உதவும். ரஷ்யாவிடம் இதுபோன்ற ஏவுகணை இல்லை," என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுத் துறையைச் சேர்ந்த முனைவர் மெரினா மிரோன் கூறுகிறார். ரஷ்யா இரானுக்கு அணுசக்தி தொழில்நுட்பம் உள்பட ராணுவத் தொழில்நுட்பத்தை வழங்கலாம் என்றும் அவர் கூறுகிறார். ரஷ்யாவுக்கு ஏவுகணைகளை வழங்கியதற்காக இரான் மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் புதிய தடைகளை விதித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் இரானை சேர்ந்தவர்களின் மீது, பயணத் தடைகள், சொத்து முடக்கம் ஆகியவற்றுடன் சேர்த்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவிற்குள் நுழைய இரானின் விமானங்கள் மீது கட்டுப்பாடுகள் போன்றவை விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவிற்கு ஃபாத்-360 போன்ற சுயமாக இலக்கை நோக்கிச் செல்லும் ஆயுதங்களை வழங்குவதை இரான் பலமுறை மறுத்துள்ளது. படக்குறிப்பு, ஷாஹேத்-136 ட்ரோன், நகரங்கள், உள்கட்டமைப்புகளைத் தாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் 500 கிலோ எடையுள்ள ராக்கெட்டை சுமந்து செல்ல முடியும். கடந்த 2022ஆம் ஆண்டில் யுக்ரேன் - ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து ஷாஹேத்-136 ட்ரோன்களை இரான் ரஷ்யாவிற்கு வழங்கி வருவதாக யுக்ரேன் அரசாங்கம் மற்றும் மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகளும் கூறுகின்றன. ஷாஹேத் ட்ரோன் அதன் முனையில் வெடிபொருட்களைக் கொண்டுள்ளது. அதோடு, தாக்குவதற்கான உத்தரவு வழங்கப்படும் வரை அது இலக்கைச் சுற்றியே வட்டமடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. யுக்ரேனின் வான் பாதுகாப்பை முறியடிக்க முயற்சி செய்ய இந்த ட்ரோன்களை அதிக எண்ணிக்கையில் ரஷ்ய படைகள் பயன்படுத்துகின்றன. இந்த ட்ரோன்கள், அதிக வெடிபொருட்களைக் கொண்டு அதிக சேதங்களை ஏற்படுத்தும். இவை பெரும்பாலும், க்ரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிப்பது, யுக்ரேனின் வான் பாதுகாப்பை முறியடிப்பது ஆகியவற்றுக்காகப் பயன்படுகின்றன. யுக்ரேன் - ரஷ்யா போர் தொடங்குவதற்கு முன்பு 'சிறிய எண்ணிக்கையில்' மட்டுமேரோன்களை வழங்கியதாக இரான் அரசு கூறுகிறது. இருப்பினும், இரான் ரஷ்யாவுக்குத் தொடர்ச்சியாக ஆயுதங்களை வழங்கி வருவதாக, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் குற்றம் சாட்டின. ஐரோப்பிய ஒன்றியம் இதில் தொடர்புடைய மக்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது. வட கொரியா வழங்கும் ஷெல் குண்டுகள், ஏவுகணைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES வட கொரியா ரஷ்யாவிற்கு மூன்று மில்லியன் ஷெல் குண்டுகளை வழங்கியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பு (DIA) 2024ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ரஷ்யா - யுக்ரேன் போரில் முன்வரிசையில் இரு தரப்பினரும் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் பீரங்கி. இது எதிரி நாட்டின் காலாட்படை முன்னேறித் தாக்குதல் நடத்துவதில் இருந்தும், அவர்களின் ஆயுதங்களிடம் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது. சமீபத்திய மாதங்களில், யுக்ரேனைவிட ரஷ்யாவிடம் 5 மடங்கு அதிகமான ஷெல் குண்டுகளின் இருப்பு காணப்படுவதாக ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனம் எனப்படும் பிரிட்டனை சேர்ந்த ஒரு திட்டக் குழு கூறியுள்ளது. கடந்த 2023அம் ஆண்டு கிழக்கு யுக்ரேனில் அதிக பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்ததற்கு இது ஒரு முக்கியக் காரணம் என்றும் அந்தத் திட்டக்குழு கூறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேனில் உள்ள கார்கிவ் பகுதியில் ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தியதில் பயன்படுத்தப்பட்ட இரண்டு வகையான குறுகிய தூர இலக்குகளைத் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சிதைவைக் கண்டுபிடித்ததாகவும், அவை வட கொரியாவால் தயாரிக்கப்பட்டவை என்றும் யுக்ரேனிய உளவுத்துறை அதிகாரிகள் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவித்தனர். அதில் ஒன்று KN-23/ஹ்வாசாங்-11 ஏவுகணை என்று யுக்ரேனின் உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இது 400 கிலோமீட்டர் முதல் 690 கிலோமீட்டர் வரை தாக்கக்கூடிய குறுகிய தூரம் தாக்கும் ஒரு ஏவுகணை. இதனால் 500 கிலோ எடையுள்ள வெடிபொருட்களையும் சுமந்து செல்ல முடியும். கடந்த 2006ஆம் ஆண்டு முதல் வட கொரியாவுடன் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தொடர்பான வர்த்தகத்திற்கு ரஷ்யாவுக்கு ஐ.நா அனுமதி அளித்துள்ளது. வடகொரியா ரஷ்யாவிற்கு 50 ஏவுகணைகளை அனுப்பியுள்ளதாக யுக்ரேன் உளவுத்துறை கூறுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ஐ.நா பாதுகாப்பு சபையின் கூட்டத்தில், யுக்ரேன் மீது நடத்தப்பட்ட குறைந்தது 9 வான் தாக்குதல்களில் வட கொரிய ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ரஷ்ய படையில் வட கொரிய வீரர்களா? கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து ரஷ்யாவும் வடகொரியாவும் ஆயுத விற்பனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்ததாகவும், 2023ஆம் ஆண்டு வட கொரியா ரஷ்யாவிற்கு சோதனைக்காக ஆயுதங்களை அனுப்பியதாகவும் அமெரிக்க பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பு கூறுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி யுக்ரேன் மீது ரஷ்யா தாக்கத் தொடங்கியதாகவும் அது கூறுகிறது. "இஸ்கண்டர் போன்ற குறுகிய தூரம் தாக்கும் ஏவுகணைகளைவிட ஹ்வாசாங்-11 ஏவுகணைகள் ரஷ்யாவிற்கு மலிவானவை. செலவுகளைக் கணக்கிட்டு ரஷ்யா இதைச் செய்துள்ளது" என்கிறார் முனைவர் மெரினா மிரோன். மேலும், இரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகளுடன் ஆயுத ஒப்பந்தங்கள் மேற்கொள்வது மூலம் ரஷ்யா தனக்கு நட்பு நாடுகள் இருப்பதையும், அது தனிமைப்படுத்தப்படவில்லை என்பதையும் மேற்குலகுக்கு காட்டுகிறது. ஹ்வாசாங்-11 போன்ற பாலிஸ்டிக் ஏவுகணைகள் அவற்றின் இலக்கை நோக்கி மிக அதிக வேகத்தில் செல்வதால் அதை இடைமறிப்பது கடினம். ஆனால் வட கொரியாவில் இருந்து பெறப்பட்ட இந்த ஏவுகணைகளைக் கொண்டு யுக்ரேன் இலக்குகளைத் தாக்க ரஷ்யா தவறிவிட்டது. ஏனெனில் அவை மின்னணு பிழைகள் காரணமாகத் திட்டமிடப்பட்ட பாதைகளில் செல்லவில்லை என்று யுக்ரேனின் உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பவில்லை என்று வடகொரியா கூறுகிறது, வடகொரியாவில் இருந்து ஆயுதங்கள் எதையும் பெறவில்லை என்று ரஷ்யா கூறுகிறது. ரஷ்ய படைகளுடன் வடகொரிய வீரர்கள் இருப்பதைக் கண்டதாக யுக்ரேனிய உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கிழக்குப் பகுதியில் ரஷ்ய ராணுவ பயிற்சித் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஆறு வட கொரிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் மூவர் காயமடைந்ததாகவும் யுக்ரேன் உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாக கடந்த அக்டோபர் 3ஆம் தேதியன்று யுக்ரேனின் செய்தித்தாள்களில் வெளியான செய்திகள் கூறுகின்றன. யுக்ரேனில், ரஷ்ய படையில் வட கொரிய வீரர்கள் சண்டையிடுவதாக ஏற்கெனவே 2023ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் "முழுமையான முட்டாள்தனம்" என்று கூறி மறுப்பு தெரிவித்தார். சீனாவில் ரஷ்யாவின் டிரோன் தொழிற்சாலையா? பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்யாவுக்கு அதிகளவிலான ஆயுதங்களை வழங்கி, அதன் ராணுவ நடவடிக்கைகளுக்கு சீனா உதவி வருவதாக, நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒருமித்த குரலில் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்கள் பயன்பாடுகளைக் கொண்ட, அதேவேளையில் ஆயுதங்களை உருவாக்கவும் பயன்படுத்தவல்ல, கணினி சிப்கள் போன்ற ‘இரட்டைப் பயன்பாடுள்ள’ பொருட்களை சீனா வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏவுகணைகள், டிரோன்கள், ராக்கெட்டுகள் போன்ற ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படும் ‘உயர் முன்னுரிமை’ கொண்ட இரட்டை பயன்பாட்டுத் தயாரிப்புகளை ஒவ்வொரு மாதமும் சீனா ரஷ்யாவிற்கு அனுப்பி வருவதாக அமெரிக்காவில் இருந்து இயங்கும் சர்வதேச அமைதிக்கான கார்னெகி எண்டோவ்மென்ட் கூறுகிறது. தனது மொத்த இயந்திரக் கருவிகளில் 70% (ஆயுத உறைகள் தயாரிக்கப் பயன்படுத்தலாம்), மைக்ரோ மின்னணு தயாரிப்புகளான சிப்கள், செமி கண்டக்டர்களில் 90% ஆகியவற்றை ரஷ்யாவிற்கு விற்பனை செய்வதாக கார்னெகி எண்டோவ்மென்ட் கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES அந்த அமைப்பு 2023இல், ரஷ்யா அதன் அனைத்து உயர் முன்னுரிமை வாய்ந்த இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களில் 89 சதவிகிதத்தை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ததாகக் கூறுகிறது. போருக்கு முன்பாக, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் அவற்றில் பெரும்பாலானவற்றை வழங்கி வந்ததாகவும் கார்னெகி அமைப்பு குறிப்பிடுகிறது. யுக்ரேன் போர் விவகாரத்தில் தாம் நடுநிலை வகித்ததாகக் கூறி, ஆயுதங்களை உருவாக்க ரஷ்யாவுக்கு உதவுவதை சீனா மறுத்துள்ளது. சீனா ரஷ்யாவிற்கு ஆபத்தான உபகரணங்களை வழங்கவில்லை எனவும், தான் விற்கும் உதிரிபாகங்களில் கவனமாக இருந்ததாகவும் சீனா கூறியுள்ளது. இதற்கிடையே, கார்பியா-3 என்ற புதிய வகை நீண்ட ஆளில்லா விமானத்தைத் தயாரிப்பதற்காக ரஷ்யா சீனாவில் ஒரு தொழிற்சாலையை அமைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது. ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, அப்படி எந்தவொரு திட்டத்தைப் பற்றியும் தான் அறிந்திருக்கவில்லை என்றும் டிரோன் ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாடுகளைத் தனது அரசு கொண்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cj9jx0dzm2ro
-
கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி!
அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடா நாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் மானிப்பாய் பகுதியில் உள்ள தனது ஆதனங்கள் சிலவற்றுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்தவருக்கு தனது அற்றோனித் தத்துவத்தை வழங்கி இருந்தார். குறித்த நபர் தனக்கு அற்றோனித் தத்துவத்தில் வழங்கப்படாத அதிகாரத்தை பயன்படுத்தி மேலும் சில ஆதனங்களை மோசடியாக உரிம மாற்றம் செய்துள்ளார். இது தொடர்பில் கனடாவை சேர்ந்த நபர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து இருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் புதன்கிழமை (16) நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. https://www.virakesari.lk/article/196487
-
கிளிநொச்சி இரணை மடுக்குளத்தின் இடது கரை நீர் விநியோக வாய்க்கால் சீரமைப்பு பணிகள் ஆரம்பம்
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் இடது கரை நீர் விநியோக வாய்க்கால் சீரமைப்பு பணிகள் 35 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர் பாசன குளமான இரணைமடு குளத்தின் முரசுமோட்டை ஊரியான் உருத்திரபுரம் பெரிய பரந்தன் ஆகிய பிரதேசங்களுக்கான இடது கரை நீர் விநியோக வாய்க்காலின் நீர் திறந்து விடப்படும் துலுசுப் பகுதியல் ஏற்பட்டிருந்த நீர்க்கசிவினைத் தடுக்கும் வகையிலான சீரமைப்பு பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகள் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் 35 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர் பாசன பொறியியலாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். கடந்த சிறுபோக செய்கை அறுவடையின் பின்னர் குளத்தினுடைய குறித்த புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி திருவையாறு ஏற்று நீர் பாசன திட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் ஏனைய நீர்விநியோக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் குறித்த புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன் புனரமைப்பு பணிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவுறுத்தப்பட உள்ளதாகவும் நீர் பாசனத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/196476
-
ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
ஊடகவியலாளர் தராகி சிவராமின் (Taraki Sivaram) கொலைக்கும் புளொட்டுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என புளொட்டின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Sitharthan) தெரிவித்துள்ளார். சிவராமின் கொலை வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிவராமினுடைய கொலையானது 20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. அது சம்பந்தமாக சிலர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று அந்த வழக்கிலிருந்து அவர்கள் முழுமையாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனுடைய அர்த்தம் இனிமேல் அந்த வழக்கை விசாரிக்க முடியாது என்பதாகும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோது கூட என்னிடம் விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அந்தக் கொலைக்கும் புளொட்டுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதும், வேறு நபர்களே அந்தக் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு மிகத் தெளிவாகத் தெரியும். அரசியல் நோக்கம் அது தொடர்பில் அரசும் இப்போது அது பற்றி கூறியிருப்பது அரசியல் நோக்கம் கொண்டதாகவே கருதுகின்றேன். ஜே.வி.பியினரும் வடக்கு, கிழக்கிலே போட்டியிடுகின்றார்கள். தங்கள் அரசியல் நலன்களுக்காகவே இந்த வழக்குகளைப் பற்றி அவர்கள் பேசியிருக்கின்றார்கள். அதுபோல ஏனைய தமிழ்க் கட்சிகளும் தங்கள் அரசியல் நோக்கத்துக்காகவே தராகி சிவராமையும் எங்களையும் தொடர்புபடுத்தி பேசிக் கொண்டிருக்கின்றன. தராகி சிவராம் கொலை வழக்கை மீள விசாரிப்பது தொடர்பில் அரசு தெரிவித்த கருத்தை நான் ஒரு விடயமாகவே கருதவில்லை. கடந்த காலங்களிலே எத்தனையோ கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. அது சம்பந்தமாக எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. தராகி சிவராம் கொலை வழக்குத்தான் மீள விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது என்று சொல்லப்படுகின்றது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகுகின்றது. அதனைப் பார்த்து அரசு உட்பட அனைவருமே பயமடைந்து தான் தராகி சிவராம் கொலை வழக்கையும் புளொட்டையும் தொடர்புபடுத்திக் கருத்தைச் சொல்லி வருகின்றார்கள் என்றார். https://ibctamil.com/article/plote-leader-reject-journalist-sivaram-murder-case-1729133992#google_vignette
-
யாழ். மாவட்ட செயலகத்தில் மூன்றாம் காலாண்டிற்கான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!
மூன்றாம் காலாண்டிற்கான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் புதன்கிழமை (16) பி. ப 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், இக் கூட்டத்தின் நோக்கமானது நிதி முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடுகள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றதா என்பதனை ஆராய்வதும், நிதி முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதாகவும் தெரிவித்ததுடன், இவ் மீளாய்வுக் கூட்டத்தில் நிதி முன்னேற்றங்களைஆராய்ந்தவகையில் திருப்திகரமாகவிருப்பதாகவும் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், கணக்காளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/196475
-
காஞ்சிபுரம்: சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர்கள் போராடுவது ஏன்? - பிபிசி கள நிலவரம்
சாம்சங் இந்தியா போராட்டத்தில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது எப்படி? 5 முக்கியக் கேள்விகள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 16 அக்டோபர் 2024 சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் நடந்து வந்த தொழிலார்களின் போராட்டம் முடிவை எட்டியுள்ளது. '38 நாட்களாக நீடித்து வந்த தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக' அமைச்சர் எ.வ.வேலு, செவ்வாய் (அக்டோபர் 15) அன்று அறிவித்திருந்தார். “இரு தரப்பு உடன்பாட்டை தொழிலாளர்களும் ஏற்றுக் கொண்டனர். நாளை (அக்டோபர் 17) முதல் அவர்கள் வேலைக்குச் செல்ல உள்ளனர்,” என்று கூறியிருந்தார் சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன். தங்களின் பிடிவாதத்தை சாம்சங் இந்தியா நிறுவனம் தளர்த்தியதால் தான் உடன்பாடு எட்டப்பட்டதாக கூறுகிறார், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன். ஒன்பது முறைகளுக்கு மேல் நீடித்த பேச்சுவார்த்தைகள், நள்ளிரவுக் கைதுகள், தொடர் வழக்குகள், கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம், அமைச்சர்களின் தலையீடு ஆகியவற்றைக் கடந்து ஒப்பந்தம் கையெழுத்தானது எப்படி? பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, புதன்கிழமையன்று சாம்சங் இந்தியா தொழிலாளர்களுடன் பொதுக்குழு கூட்டம் நடத்திய சி.ஐ.டி.யு நிர்வாகிகள், இரு தரப்பு உடன்பாட்டுக்கு ஒப்புதல் பெற்றனர் பிரச்னையின் துவக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா தொழிற்சாலை அமைந்துள்ளது. சுமார் 1800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் இந்நிறுவனத்தில் வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த ஜூலை மாதம் சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சி.ஐ.டி.யு சார்பில் சங்கம் தொடங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு சாம்சங் இந்தியா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, ஆலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காஞ்சிபுரம் சுங்குவார் சத்திரத்தில் 2007-ஆம் ஆண்டு சாம்சங் இந்தியா ஆலை நிறுவப்பட்டது 'சாம்சங்' என்ற பெயருக்கு எதிர்ப்பு அடுத்து, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, 'ஊதிய உயர்வு உள்பட தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து சி.ஐ.டி.யு உடன் சாம்சங் இந்தியா நிர்வாகம் பேச வேண்டும்' என தொழிலாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த சாம்சங் இந்தியா நிர்வாகம், சங்கத்தின் பெயரில் 'சாம்சங்' எனப் பெயர் வைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் பின்னர், அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் 14 கோரிக்கைகளை சாம்சங் இந்தியா நிறுவனம் ஏற்றுக் கொண்டதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார். தொழிலாளர்களும் ஏற்றுக் கொண்டதால் சுமுக உடன்பாடு ஏற்பட்டதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார். இதனை ஏற்க மறுத்து போராட்டம் தொடர்வதாக அறிவித்த சாம்சங் இந்தியா தொழிற்சங்கத் தலைவர் (சி.ஐ.டி.யு) தலைவர் முத்துக்குமார், “நிறுவனத்துக்கு வேண்டிய தொழிலாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு அமைச்சர்கள் நாடகம் ஆடுகின்றனர்,” என்றார். இதன்பிறகு போராட்டம் நீடித்ததால் போராட்டப் பந்தல் அகற்றம், தொழிலாளர்கள் மீது வழக்குப் பதிவு, நள்ளிரவுக் கைது எனப் பதற்றம் நீடித்தது. பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, சாம்சங் இந்தியா தொழிலாளர்களுடன் சி.ஐ.டி.யு நிர்வாகிகள் நடத்திய பொதுக்குழு கூட்டம் பிபிசி தமிழுக்கு சாம்சங் சொன்ன விளக்கம் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பாக பிபிசி தமிழ் அனுப்பிய கேள்விகளுக்கு சாம்சங் இந்தியா ஊடகத் தொடர்பாளர் விளக்கம் அனுப்பியிருந்தார். அதில், ஊதியம், சலுகைகள், பணிச்சூழல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் நேரடியாகத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளதாகக் கூறியிருந்தார். மேலும், "ஊழியர்களின் நலனே எங்களுக்குப் பிரதானமாக உள்ளது. இந்தியாவின் அனைத்துச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கிச் செயல்படுகிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறோம்," என சாம்சங் இந்தியா நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பணியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்பட நான்கு அமைச்சர்கள் ஈடுபட்டனர். அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், நான்கு கோரிக்கைகளை சாம்சங் இந்தியா நிறுவனம் ஏற்றுக் கொண்டதால் இரு தரப்பிலும் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். “தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதன் தீர்ப்பை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும்,” என்றார் அமைச்சர் எ.வ.வேலு. "இரு தரப்பிலும் உடன்பாடு எட்டப்பட்டாலும் தொழிலாளர்களிடம் இதனை எடுத்துக் கூறி அவர்களது ஒப்புதலைப் பெற்ற பின்னரே போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும்," என சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார். புதன்கிழமையன்று (அக்டோபர் 16) சாம்சங் இந்தியா தொழிலாளர்களுடன் பொதுக்குழு கூட்டம் நடத்திய சி.ஐ.டி.யு நிர்வாகிகள், இரு தரப்பு உடன்பாட்டுக்கு ஒப்புதல் பெற்றனர். இதன்பின்னர், போராட்டம் முடிவுக்கு வருவதாக அ.சவுந்தரராஜன் அறிவித்தார். "தொழிலாளர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக அமைச்சர் எ.வ.வேலு வாய்மொழியாக கூறியுள்ளார். என் மீதும் வழக்கு போட்டு ஒருநாள் சிறை வைத்தனர். நாளை (அக்டோபர் 17) முதல் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல உள்ளனர். ஒப்பந்த விதிகளை நிறுவனம் மீறாது என நம்புகிறோம்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார், சி.ஐ.டி.யு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர் ஐந்து கேள்விகளும் பதில்களும் கேள்வி: பல நாட்களாக, பல மணிநேரமாக பேச்சுவார்த்தை நீடித்தது. இழுபறிக்கு என்ன காரணம்? பதில்: சாம்சங் இந்தியா நிறுவனத்தில், ‘சி.ஐ.டி.யு தொடர்பான எந்த நடவடிக்கைகளும் இருக்கக் கூடாது’ என்பது நிறுவனத்தின் வாதமாக இருந்தது. அவர்கள் தொடர்ந்து அடம் பிடித்து வந்ததால், அமைச்சர்களிடம் ஒரே ஒரு கேள்வியை முன்வைத்தோம். எங்களிடம் 19 கோரிக்கைகள் உள்ளன. அதற்கு எழுத்துப்பூர்வமான பதிலை தொழிலாளர் நலத்துறையில் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றோம். இந்த 19 கோரிக்கைகளில் சம்பள உயர்வு, 7 மணிநேர வேலை உள்பட எதை வேண்டுமானாலும் அவர்கள் மறுக்கட்டும். அது அவர்களின் உரிமை எனக் கூறினோம். இதை ஏற்காவிட்டால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தொழிலாளர் தீர்ப்பாயத்துக்கு அரசு சார்பில் அறிக்கை அனுப்ப வேண்டும் என்றோம். தீர்ப்பாயத்துக்கு இந்த வழக்கு செல்லும்போது இரு தரப்பும் வாதங்களையும் முன்வைப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இதற்கு சாம்சங் இந்தியா தரப்பு உடன்படவில்லை. அதேநேரம், தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வது தொடர்பான கோரிக்கையைப் போராட்டத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை நாங்கள் முன்வைக்கவில்லை. அது சட்டரீதியாக எங்களிடம் வந்து சேரும் என எதிர்பார்க்கிறோம். நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நாளை வர உள்ளது. அப்போது எங்கள் தரப்பு வாதத்தை முன்வைப்போம். பட மூலாதாரம்,@TRBRAJAA படக்குறிப்பு, சாம்சங் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தமிழ்நாடு அமைச்சர்கள் ஒப்பந்தம் சட்டரீதியாக ஏற்புடையதா? கேள்வி: சுமுக உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் சட்டரீதியாக ஏற்புடையதா? பதில்: ஆமாம். 'தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குச் செல்லும்போது பழிவாங்கும் நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ளக் கூடாது' என்பதை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் தொழிலாளர் நலத்துறையின் இணை ஆணையர், துணை ஆணையர் என இருவர் கையொப்பமிட்டுள்ளனர். இதன் மூலம் இது அரசு ஆவணமாக மாறிவிட்டது. இந்த விவகாரத்தில் யார் பிரச்னை செய்தாலும் சட்டரீதியாக நடவடிக்கையை எடுக்க முடியும். கேள்வி: தொழிற் சங்க அங்கீகாரம் – தொழிற்சங்கப் பதிவு, இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? பதில்: சி.ஐ.டி.யு ஏற்படுத்தியுள்ள சங்கத்தை சாம்சங் இந்தியா நிறுவனம் ஏற்றுக் கொள்வதை அங்கீகாரம் என்கின்றனர். அப்படியொரு அங்கீகாரம் இருந்தால் நிர்வாகத்துடன் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தைகள் நடக்கும். அதைத் தாண்டி அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. நிறுவனத்தின் அங்கீகாரம் என்பது பெரிய விஷயம் அல்ல. அதில் சில நிபந்தனைகள் இடம் பெற்றிருக்கும். எங்களுக்கென நிறுவனத்துக்குள் ஓர் அறையை ஒதுக்குவார்கள். இதனால் தொழிலாளர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. தொழிற்சங்கத்தை அரசு பதிவு செய்வது தான் முக்கியம். அதற்கு சாம்சங் இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய தொழிற்சங்க சட்டம் 1926இன்படி, தொழிற்சாலையில் ஏழு பேர் இருந்தாலே சங்கத்தைப் பதிவு செய்யலாம் சங்கத்தின் பெயரில் காப்புரிமைச் சிக்கலா? கேள்வி: சாம்சங் இந்தியா போராட்டத்தைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் இனி வேறு நிறுவனங்களில் தொழிற்சங்க பதிவுகள் எளிதாக நடக்க வாய்ப்புள்ளதா? பதில்: கடந்த இரு மாதங்களில் மட்டும் சி.ஐ.டி.யு சார்பில் கொடுத்த ஏழுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கம் பதிவு தொடர்பான விண்ணப்பங்களை ஏற்றுப் பதிவு செய்துள்ளனர். இதுதவிர, 23 நிறுவனங்களில் வெவ்வேறு தொழிற்சங்கங்கள் பதிவு செய்துள்ளன. இவை எல்லாம் அந்தந்தக் கம்பெனிகளின் பெயர்களில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் மட்டும் தான் ‘சாம்சங்’ எனப் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கேள்வி: 'சாம்சங் இந்தியா' என்ற பெயர் காப்புரிமைக்குள் வருவதாகக் கூறியதால் தான் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததாக கூறப்படுகிறதே? பதில்: இதை அவர்கள் பேச்சுவார்த்தையில் முன்வைத்தனர். ஆனால் இது சரியான வாதம் அல்ல. சாம்சங் என்ற பெயரைப் பயன்படுத்துகிறவர்கள், அதே பெயரிலான பொருள்களை உற்பத்தி செய்யும்போது தான் காப்புரிமை பிரச்னை ஏற்படும். அந்த பிராண்டை பயன்படுத்திப் பணம் சம்பாதிப்பது தான் தவறு. நாங்கள் அவர்களுக்குப் போட்டியாக தொழில் நடத்தப் போவதில்லை. 'இதை ஒரு பிரச்னை என நீங்களும் பேசலாமா?' என அமைச்சர்களிடம் எடுத்துக் கூறினோம். அவர்களும் ஏற்றுக் கொண்டனர். பட மூலாதாரம்,@TRBRAJAA படக்குறிப்பு, சாம்சங் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள் குழு ‘பிடிவாதத்தை தளர்த்திய சாம்சங்’ - அமைச்சர் சி.வி.கணேசன் இதையடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். “தமிழ்நாட்டில் சொற்பமான எண்ணிக்கையில் முதலாளிகள் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து பெரிய நிறுவனங்களை எல்லாம் தொழில் தொடங்குவதற்காக முதலமைச்சர் அழைத்து வருகிறார். போராட்டம் நீடித்தால் பிற தொழில் நிறுவனங்கள் மத்தியில் தவறான புரிதல் ஏற்படும். அதனால் தான் ஒன்பது முறை பேச்சுவார்த்தை நடத்தினோம். தனிப்பட்ட முறையிலும் சி.ஐ.டி.யு நிர்வாகிகளிடம் வேண்டுகோள் வைத்தேன்," என்கிறார் சி.வி.கணேசன். தொடர்ந்து, சுமுக உடன்பாடு எட்டப்பட்டது குறித்துப் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், “இரு தரப்பிலும் சமசர உடன்பாட்டைத் தொடர்ந்து ஏற்படுத்தியதால் தான் மனக்கசப்பில்லாமல் முடிவுக்கு வந்தது. ‘கூட்டணிக் கட்சிகளின் மனம் நோகாமல் நடந்து கொள்ள வேண்டும்’ என முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். நேற்று முன்தினம் மட்டும் 11 மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்று (அக்டோபர் 15) எட்டு மணி நேரத்துக்கு மேல் பேசினோம். நேற்று தான் சாம்சங் இந்தியா நிறுவனம் தங்களின் பிடிவாதத்தை தளர்த்தியது,” என்றார். “நான் அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம், ‘தமிழ்நாட்டுக்கு மிக நல்ல முதலமைச்சர் கிடைத்திருக்கிறார். அவர் மனதை வலிக்கச் செய்ய வேண்டாம். உங்கள் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என நினைக்கிறார். விட்டுக் கொடுங்கள்’ என்றேன். ஒருகட்டத்தில் அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்,” என்றார். சாம்சங் இந்தியா நிறுவனத்தின் பொதுமேலாளர் பார்த்திபனிடம் பேச்சுவார்த்தை தொடர்பாகக் கேட்டபோது, “ஊடகத் தொடர்பாளர் மட்டுமே பதில் அளிப்பார். நான் பேச விரும்பவில்லை” என்று மட்டும் பதில் அளித்தார். சாம்சங் இந்தியா ஊடகத் தொடர்பாளரின் இமெயில் முகவரிக்கு பிபிசி தமிழ் சார்பில் கேள்விகளை அனுப்பினோம். அதற்கு பதில்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்தக் கட்டுரையில் சேர்க்கப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1wnxqv2790o
-
சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது
சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம் யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், குறித்த போராட்டமானது நேற்று புதன்கிழமை (16) மாலை மீண்டும் ஆரம்பமாகியது. சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த போராட்டமானது, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/196474
-
மதுபானசாலை விவகாரம் - யாழ் வேட்பாளர்கள், முன்னாள் எம்.பி.க்களுக்கு கீதநாத் காசிலிங்கம் சவால்
ஜேவிபியினரும் மதுபானசாலை அனுமதிகளை பெற்றுள்ளார்களா?; கீத்நாத் காசிலிங்கம் கேள்வி மதுபான சாலைக்கான அனுமதிகளை பெற்றவர்களின் பெயர் பட்டியலை இதுவரை வெளியிடாது இருப்பதால், ஜே.வி.பி யினரும் மதுபான சாலைகளுக்கான அனுமதிகளை பெற்றுள்ளனரா என நாங்கள் சந்தேகிக்கிறோம் என சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் கீத்நாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை (16) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பெரமுன கட்சியில் இருந்த பலர் தற்போது கட்சியில் இல்லை. அவர்கள் கட்சியை விட்டு போய்விட்டார்கள். கட்சியில் இருந்த இனவாதிகள், குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள் என எல்லோரும் கட்சியை விட்டு போய்விட்டார்கள். தற்போது பெரமுன தூய கட்சியாக காணப்படுகிறது. கட்சியில் பல பிரச்சனைகள் இருந்தன. நாம் அவற்றில் இருந்து புதிய பாதையில் பயணிப்போம், தற்போது நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நாமல் ராஜபக்சே கட்சியின் தேசிய அமைப்பாளராக உள்ளார். நாங்கள் அவரின் தலைமையில் பயணிப்போம். எமது கட்சி யாழில் பல பின்னடைவுகள் சந்தித்து இருந்தன. இனிவரும் காலங்களில் மக்களோடு மக்களாக இருந்து வேலை செய்வோம். இப்ப உள்ள அரசாங்கம் பல பொய்களை சொல்லி. ஆட்சிக்கு வந்துள்ளார்கள். அதன் உண்மைகளை மக்களுக்கு தெளிவூட்டுவோம். தென்னிலங்கையை பொறுத்த வரைக்கும் அரசியலில் 15 தொடக்கம் 30 வருட காலங்கள் இருந்தவர்கள், அரசியலில் ஓய்வு பெற்று விலகி இருக்கிறார்கள். அவர்கள் இளையோருக்கு வழி விட்டுள்ளனர். ஆனால் வடக்கில் யாரும் இளையோருக்கு வழி விட்டுக்கொடுக்க தயார் இல்லை. தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம் வடக்கிலும் வர வேண்டும். கடந்த காலங்களில் என்னை நேரடி அரசியலுக்கு வருமாறு பல்வேறு அழைப்புக்கள் வந்தன. நாமல் தேசிய அமைப்பாளரான பின்னரே நானும் நேரடி அரசியலுக்குள் வந்துள்ளேன். 13ஆம் திருத்தம் தொடர்பாக நாமல் வெளியிட்ட கருத்து கட்சியின் கருத்து. அதாவது காணி பொலிஸ் அதிகாரம் வழங்க முடியாது என்பது. ஆனால் நான் உள்ளிட்ட பலர் அதனை ஏற்கவில்லை. அதனை அவர்களுக்கு நாங்கள் புரிய வைப்போம் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. ஜேவிபி யினர் முன்னர் 13 க்கு எதிராக போராடியவர்கள். பின்னர் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 13 ஐ முழுமையாக தருவோம் என்றார்கள். இன்று 13ஐ தரவே மாட்டோம் என சொல்கின்றனர். அன்று 13ஐ தர முடியாது என கூறிய நாமலை இனவாதிகள் என கூறியவர்கள் இன்று ஜனாதிபதி அநுராவிற்கு என்ன கூற போகிறார்கள். அதேபோன்று தேர்தல் காலத்தில், முன்னைய அரசாங்கத்திடம் மதுபான சாலைக்கான அனுமதிகளை பெற்றுக்கொண்டவர்களின் விபரங்கள் தம் வசம் உண்டு எனவும் அதனை வெளியிடுவோம் என கூறியவர்கள் ஏன் இன்னமும் அதனை வெளியிடவில்லை ? அவர்கள் பெயர் பட்டியலை வெளியிடாது இருப்பதனை பார்க்கும் போது, மதுபான சாலைக்கான அனுமதிகளை ஜேவிபியினரும் பெற்று இருக்கலாம். என நாம் சந்தேகிக்கிறோம். அல்லது பெரிய டீலை முடித்துள்ளதால் தான் பட்டியலை வெளியிடாது உள்ளனரா எனும் சந்தேகமும் உண்டு. தேர்தலுக்கு முன்னர் மதுபான சாலைக்கான அனுமதிகளை பெற்ற்வர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டு, அவர்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதேவேளை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் தாம் யாரும் மதுபான சாலைக்கான அனுமதியை பெறவில்லை என சத்திய கடதாசி முடித்து தர சொல்லுகிறோம். நான் யாருக்கும் மதுபான சாலைகளை பெற்றுக்கொடுக்கவோ, எனது பெயரில் பெறவோ இல்லை என சத்திய கடதாசி முடித்துள்ளேன். அதனை போல ஏனையவர்களும் சத்திய கடதாசி முடித்து தரட்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனை பெரியளவிலான பிரச்சனை என்பதனை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். எமது கட்சியின் ஆட்சி காலத்தில் அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்தோம். முடியவில்லை. தற்போதுள்ள அரசாங்கம் அந்த பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். அதற்கு எமது கட்சியும் நிச்சயம் ஆதரவு வழங்குவோம். கடந்த காலங்களில் வடக்கில் நாம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் போதாது என்பதனை ஏற்றுக்கொள்கிறேன். அதனால் தான் நான் இம்முறை வடக்கிற்கு வந்துள்ளேன். மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்போம். நாமல் ராஜபக்சேயும் இனிவரும் காலங்களில் வடக்கிற்கு நேரடியாக விஜயம் செய்து இங்குள்ள மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயற்சிகளை முன்னெடுப்பார். மாதத்தில் ஒன்று, இரண்டு தடவைகள் வருகை தந்து இங்குள்ள மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அதனை தீர்க்க முயற்சிகளை முன்னெடுப்பார் என்றார். https://www.virakesari.lk/article/196478
-
இஸ்ரேலுக்கு அமெரிக்கா விதித்த 30 நாள் கெடு - எதற்காக? மீறினால் என்ன ஆகும்?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மத்திய காஸாவில், இஸ்ரேல் தாக்குதலால் நடந்த சேதங்களுக்கிடையே தனது குழந்தையுடன் அமர்ந்திருக்கும் பெண் கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பேட்மேன் பதவி, பிபிசி வெளியுறவு துறை செய்தியாளர், வாஷிங்டனிலிருந்து 4 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் 30 நாட்களில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை அதிகரிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அமெரிக்க ராணுவத்தின் சில உதவிகளை நிறுத்த நேரிடும் என்றும் தெரிவித்து இஸ்ரேலுக்கு அமெரிக்கா கடிதம் எழுதியுள்ளது. தன் நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) அனுப்பப்பட்ட அக்கடிதம், அமெரிக்காவிடமிருந்து இதுவரை அறியப்பட்ட, வலுவான எழுத்துபூர்வ எச்சரிக்கையாக உள்ளது. வடக்கு காஸாவில் இஸ்ரேலின் புதிய தாக்குதல்களால் குடிமக்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில் அமெரிக்கா இக்கடிதத்தை எழுதியுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கிடையேயான சுமார் 90% மனிதாபிமான உதவிப்பொருட்களின் விநியோகத்தை கடந்த மாதம் இஸ்ரேல் மறுத்தது அல்லது தடுத்ததாகவும், காஸாவில் மனிதாபிமானச் சூழல் மோசமாகிவருவதாகவும் ஆழ்ந்த கவலைகளை அக்கடிதத்தில் அமெரிக்கா எழுப்பியுள்ளது. அமெரிக்காவின் கடிதத்தை மதிப்பாய்வு செய்து வருவதாக, இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “இந்த விவகாரத்தை இஸ்ரேல் தீவிரமாக எடுத்துள்ளதாகவும்", அமெரிக்கா “எழுப்பியுள்ள கவலைகள் குறித்து கவனம் கொள்வதாகவும்,” அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 4 லட்சம் மக்களின் நிலை? வடக்கு காஸாவில் உள்ள ஹமாஸ் தளங்களை தாங்கள் இலக்கு வைப்பதாகவும் மனிதாபிமான உதவிகளைத் தடுக்கவில்லை என்றும் இஸ்ரேல் முன்னதாகத் தெரிவித்திருந்தது. காஸாவுக்குள் மனிதாபிமான உதவிகள் நுழைவதற்கு பொறுப்பான இஸ்ரேல் ராணுவத்தின் அமைப்பான ‘கோகாட்’ (Cogat), உலக உணவுத் திட்டத்தின் மனிதாபிமான உதவிகள் அடங்கிய 30 லாரிகள் வடக்கு காஸாவுக்குள் எரெஸ் கடவுப்பாதை வழியாக திங்கட்கிழமை நுழைந்ததாகத் தெரிவித்தது. வடக்கு காஸாவில் இரண்டு வார காலத்திற்கு உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை என்றும் அங்குள்ள சுமார் 4 லட்சம் பாலத்தீனர்கள் உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் தீர்ந்துவருவதாகவும் ஐ.நா., கூறியது இதன்மூலம் முடிவுக்கு வந்தது. காஸா 'எப்போதும் உச்சபட்ச அவசரநிலையிலேயே' இருப்பதாக ஐ.நா., அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனப் பிரதேசங்களுக்கான உலக உணவுத்திட்டத்தின் தலைவரான ஆண்டோன் ரெனார்ட், அப்பிரதேசத்தின் வடக்குப் பகுதியில் உள்ள மக்களுக்கு, ஐ.நா. முகமைகளால் வழங்கப்படுவதைத் தவிர வேறு புதிய உணவுகள் கிடைப்பதில்லை என்றும், “அம்மக்கள் உதவிகளை மட்டுமே சார்ந்திருப்பதாகவும்" ஏ.எஃப்.பி., செய்தி முகமையிடம் தெரிவித்தார். இஸ்ரேலுக்கு அதிகளவில் ஆயுதங்களை விநியோகிக்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. கடந்த ஓராண்டாக காஸாவில் ஹமாஸுக்கு எதிரான போரில் அமெரிக்காவால் வழங்கப்படும் விமானங்கள், இலக்குகளைத் துல்லியமாக தாக்கும் வகையிலான வெடிகுண்டுகள் (guided bombs), ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் அதிகமாகச் சார்ந்துள்ளது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சுமார் 17 லட்சம் பேர், குறுகலான அல்-மவாசி கடற்கரை பகுதிக்கு இடம்பெயர நிர்பந்திக்கப்பட்டதால், 'நோய்த்தொற்றுக்கான அதிக அபாயம் இருப்பதாக' அமெரிக்கா தெரிவித்துள்ளது கடிதத்தில் கூறியிருப்பது என்ன? இஸ்ரேல் அரசுக்கு அமெரிக்கா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் அமெரிக்க வெளியுறவு துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கடிதம் குறித்த செய்தி ஆக்ஸியோஸ் (Axios) எனும் செய்தி இணையதளத்தில்தான் முதலில் வெளியானது. அக்கடிதத்தில் வெளியுறவுத் துறைச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். “காஸாவில் மனிதாபிமானச் சூழல் மோசமாகிவருவது குறித்த அமெரிக்க அரசின் ஆழ்ந்த கவலைகளை வலியுறுத்துவதற்காக இக்கடிதத்தைத் தற்போது எழுதுகிறோம். இந்தப் போக்கை மாற்றுவதற்கான அவசரமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை இம்மாதம் உங்கள் அரசாங்கம் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்,” என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் அரசின் உத்தரவு காரணமாக, சுமார் 17 லட்சம் பேர், குறுகலான அல்-மவாசி கடற்கரை பகுதிக்கு இடம்பெயர நிர்பந்திக்கப்பட்டதாகவும் அப்பகுதியில் பெருந்திரளான மக்கள் கூட்டம் காரணமாக, “பெரும் பாதிப்பை ஏற்படுத்தவல்ல நோய்த்தொற்றுக்கான அதிக அபாயம் இருப்பதாகவும்”, அம்மக்கள் உயிர்வாழ்வதற்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட முடியாத நிலையில் இருப்பதாகவும், மனிதநேய அமைப்புகள் தெரிவிக்கின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “செப்டம்பர் மாதம் வடக்கு மற்றும் தெற்கு காஸாவுக்கு இடையே சுமார் 90% மனிதாபிமான உதவிப்பொருட்களின் விநியோகத்தை இஸ்ரேல் அரசாங்கம் தடுத்து நிறுத்தியது, அந்த உதவிகளை பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக உள்ள அதிக கட்டுப்பாடுகள் தொடர்வது, புதிய பரிசோதனைகள், அவற்றுக்குச் சட்டபூர்வ பொறுப்பேற்றல் மற்றும் மனிதாபிமான உதவிகளை கொண்டு சேர்க்கும் பணியாளர்கள் மற்றும் உதவிப் பொருட்களுக்கான சுங்கக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட இஸ்ரேல் அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து நாங்கள் குறிப்பாக கவலை கொண்டுள்ளோம். இவற்றுடன் சட்டமீறல் மற்றும் சூறையாடல் ஆகியவையும் காஸாவில் சூழல் மோசமடைவதை அதிகரித்துள்ளதாக,” அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்கச் சட்டம் என்ன சொல்கிறது? மனிதாபிமான உதவிகள் சென்று சேர்வதை அதிகப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை “இப்போதிலிருந்து தொடங்கி 30 நாட்களுக்குள் மேற்கொள்ள வேண்டும்,” எனவும், தவறினால், “அமெரிக்க கொள்கையில் அதனால் தாக்கங்கள் ஏற்படும் என்றும்,” அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மனிதாபிமான உதவிகள் சேருவதைத் தடுக்கும் நாடுகளுக்கு ராணுவ உதவிகளைத் தடை செய்யும் அமெரிக்கச் சட்டங்கள் அக்கடிதத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. குளிர்காலத்திற்கு முன்னதாக, நான்கு முக்கியக் கடவுப்பாதைகள் மற்றும் புதிதாக திறக்கப்பட்ட ஐந்தாம் பாதை வழியாக ஒருநாளைக்கு குறைந்தது 350 லாரிகள் சென்று சேருவது உட்பட, 'அனைத்து வித மனிதாபிமான உதவிகளையும் காஸா முழுவதும் சென்று சேருவதை மும்முரமாக மேற்கொள்ள வேண்டும்' என்றும் அல்-மவாசி கடற்கரையில் உள்ள மக்களை எல்லையிலிருந்து இன்னும் தொலைவுக்குள் இடம்பெயர அனுமதிக்க வேண்டும் என்றும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா கூறியுள்ளது. 'குடிமக்களை கட்டாயமாக வெளியேற்றுவதற்கான கொள்கை ஏதும் இல்லை' என்பதை உறுதிப்படுத்தி, 'வடக்கு காஸாவை தனிமைப்படுத்துவதை' இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 30 நாள் காலக்கெடு ஏன்? செவ்வாய்கிழமை (அக்டோபர் 15) வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவு துறை செய்தித்தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களிடம், “அக்கடிதம், பொதுவில் வெளிப்படுத்தும் நோக்கம் இல்லாத, தனிப்பட்ட ராஜதந்திர ரீதியிலானது,” என தெரிவித்தார். “பாதுகாப்புத் துறைச் செயலாளர் பிளிங்கன் மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின், காஸாவில் மனிதாபிமான உதவிகள் நுழைவதை அதிகரிப்பதற்கு மீண்டும் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை இஸ்ரேல் அரசுக்கு தெளிவுபடுத்துவது நல்லது என நினைத்தனர்,” என்றார் அவர். மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை அதிகரிக்காவிட்டால் இஸ்ரேலுக்கு என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து தெரிவிக்க மில்லர் மறுத்துவிட்டார். ஆனால், “அமெரிக்க ராணுவ உதவிகளைப் பெறும் நாடுகள், அமெரிக்காவின் மனிதாபிமான உதவிகளைத் தன்னிச்சையாக மறுக்கவோ, தடுக்கவோ முடியாது. சட்டம் அதைத்தான் சொல்கிறது, நாம் நிச்சயமாக அதனை பின்பற்ற வேண்டும். ஆனால், நாங்கள் வலியுறுத்தியுள்ள மாற்றங்களை இஸ்ரேல் மேற்கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம்,” என அவர் குறிப்பிட்டார். இந்த 30 நாட்கள் காலக்கெடுவுக்கும் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் தொடர்பு அல்ல என கூறிய அவர், “பலவிதப் பிரச்னைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு உரிய நேரம் வழங்குவதுதான் ஏற்றது,” என கூறினார். படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ‘ஆயுதத் தடை’ நடவடிக்கை காஸா முழுதும் விநியோகிக்கப்படும் மனிதாபிமான உதவிகளின் அளவு தொடர்பாக எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை என இஸ்ரேல் முன்னதாக வலியுறுத்தியுள்ளது. மேலும், மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் தோல்வியுற்றதாக ஐநா சர்வதேச முகமைகளையும் இஸ்ரேல் குற்றம்சாட்டியது. மனிதாபிமான உதவிப்பொருட்களை ஹமாஸ் திருடுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டிய நிலையில், அதனை அந்த அமைப்பு மறுத்துள்ளது. கடந்த மே மாதம் தெற்கு காஸா நகரமான ரஃபா நகரில் தரைவழித் தாக்குதலுக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முழு வீச்சிலான தாக்குதலை தடுக்கும் பொருட்டு 2,000 மற்றும் 500 பவுண்ட் எடை கொண்ட வெடிகுண்டுகள் அடங்கிய சரக்குகளை ரத்து செய்தார். ஆனால், இந்நடவடிக்கை காரணமாக ஜோ பைடன் குடியரசு கட்சியினரிடையே எதிர்ப்பை சந்தித்தார். மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நடவடிக்கையை 'ஆயுதத் தடையுடன்' ஒப்பிட்டார். இதையடுத்து, இந்த ரத்து நடவடிக்கை கடந்த ஜூலை மாதம் பகுதியளவு விலக்கிக்கொள்ளப்பட்டது, மீண்டும் ஒருபோதும் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, கடந்த 10 தினங்களுக்கு முன் இஸ்ரேல் ராணுவம் புதிதாக தரைவழி தாக்குதலை தொடங்கியதிலிருந்து ஜபாலியா நகரம், கடும் குண்டுவீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியது ‘கற்பனைக்கு அப்பாற்பட்ட பயம்’ கடந்த 10 தினங்களுக்கு முன்பு, இஸ்ரேலின் தாக்குதலால் வடக்கு காஸாவில் உள்ள குடும்பங்கள், 'கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவுக்கு பயம், அன்பானவர்களின் இழப்பு, குழப்பம் மற்றும் அதீத சோர்வால்' பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்தது. ஜபாலியா நகரம் மற்றும் அதன் நகர்ப்புற அகதிகள் முகாமில் மீண்டும் ஒன்றிணைந்துள்ள ஹமாஸ் படையினரை அழிக்க அப்பகுதிகளுக்கு பீரங்கிகள் மற்றும் துருப்புகளை அனுப்பியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஜபாலியா மற்றும் அருகிலுள்ள பெயிட் லாஹியா மற்றும் பெயிட் ஹனௌன் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள், அல்-மவாசி “மனிதாபிமான பகுதிக்கு” செல்லுமாறு உத்தரவிட்டுள்ளது. சுமார் 50,000 பேர் காஸா நகரம் மற்றும் வடக்கின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது. ஆனால், பலருக்கும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவது பாதுகாப்பற்றதாக உள்ளது அல்லது உடல்நலமில்லாததால் அவர்களால் வெளியே வர முடிவதில்லை. ஜபாலியாவைச் சேர்ந்த காலித் என்பவரது அனுபவம், பிபிசி-யின் புதிய ஆவணப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. அவர், ஒரு வாரமாக தானும் தன்னுடைய குடும்பத்தினரும் பயத்திலேயே வாழ்ந்துவருவதாக அவர் அனுப்பிய குரல்பதிவில் தெரிவித்திருந்தார். “எங்களிடம் தெற்குப் பகுதிக்குச் செல்லுமாறு கூறப்பட்டது. ஆனால், குவாட்காப்டர் வகை ட்ரோன்கள் (quadcopter drones) அல்லது அழுக்கான தடுப்புகள் மூலம் இஸ்ரேல் ராணுவம் அப்பகுதியைச் சுற்றிவளைத்துள்ளது. எங்களால் இடம்பெயர முடியவில்லை, அது மிகவும் கடினமானதாக உள்ளது,” என்றார். “அதேசமயம், தீவிரமான குண்டுவீச்சின் காரணமாக, நாங்கள் தொடர்ந்து பயத்திலேயே இருக்கிறோம். என் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அவளுக்குக் காய்ச்சல் இருக்கிறது. குண்டுச் சத்தம் காரணமாக, அவளுடைய முழு உடலும் பயத்தில் நடுங்குகிறது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளை என்னால் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்ல முடியவில்லை,” எனவும் அவர் தெரிவித்தார். 'சர்ச்சைக்குரிய திட்டம்' ஹமாஸால் நடத்தப்படும் பாதுகாப்பு முகமை (Civil Defence agency), செவ்வாய்கிழமை (அக்டோபர் 15) ஜபாலியா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இஸ்ரேலிய வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 42 பேரின் உடல்களை மீட்டுள்ளதாகத் தெரிவித்தது. இறந்தவர்களுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் உள்ளதாகவும் பெரும்பாலும், அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் அவர்களது வீடு நள்ளிரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முந்தைய தினம் ஜபாலியாவில் இருந்த 'டஜன் கணக்கிலான பயங்கரவாதிகளை' தங்கள் துருப்புகள் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்கிழமை தெரிவித்தது. ''ஜெனரல் பிளான்' எனப்படும் (சர்ச்சைக்குரிய) திட்டத்தை இஸ்ரேல் ராணுவம் அமைதியாகச் செயல்படுத்த தொடங்கிவிட்டதற்கான ஆபத்தான அறிகுறிகள் தென்படுவதாக' பாலத்தீனர்கள் எழுப்பிய கவலைகளை இஸ்ரேல் மனித உரிமைகள் குழுக்கள் கடந்த திங்கட்கிழமை எதிரொலித்தன. வடக்கில் உள்ள அனைத்து குடிமக்களையும் வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யவும், அதைத் தொடர்ந்து அங்கு எஞ்சியிருக்கும் ஹமாஸ் படையினரை சுற்றிவளைத்து அவர்களைச் சரணடையக் கட்டாயப்படுத்தவும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கவும் அந்த சர்ச்சைக்குரிய திட்டம் வலியுறுத்துகிறது. இத்திட்டத்தை அமல்படுத்துவதாக கூறப்படுவதை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. 'மக்களை ஆபத்திலிருந்து வெளியேற்றுவதற்காக மட்டுமே' இத்திட்டம் எனவும் தெரிவித்துள்ளது. தெற்கு இஸ்ரேல் மீது 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி சுமார் 1,200 பேரின் உயிரிழப்பிற்கும் 251 பேர் பணையக்கைதிகளாக பிடிப்பதற்கும் வழிவகுத்த ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸை அழிக்கும் நோக்கில் ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது. இதில், காஸாவில் 42,340-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக, ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c79n0zd1ev2o