Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 15 SEP, 2024 | 12:49 PM நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள ஜம்பாரா மாநிலத்தில் இடம்பெற்ற படகுவிபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். 70 விவசாயிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த மரப்படகு கவிழ்ந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. விவசாயிகள் கும்பி நகரத்தில் உள்ள தங்கள் விவசாய நிலங்களை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். உளளுர் அதிகாரிகள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் மூன்று மணிநேர தேடுதலின் பின்னர் ஆறுபேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவம் இந்த பகுதியில் இடம்பெற்றமை இது இரண்டாவது தடவை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நாளாந்தம்900 விவசாயிகள் தங்கள் நிலங்களிற்கு கடல்மார்க்கமாக செல்கின்றனர் ஆனால் இரண்டு படகுகள் மாத்திரம் உள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/193739
  2. ஈழத்தமிழர் நிலங்கள் வலிந்து பறிக்கப்படுகின்றன தெற்கிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிங்கள, பௌத்த தேசியத்தின் மேலாண்மையை வலியுறுத்தியே பிரச்சார மேடைகளை அலங்கரிக்கிறார்கள் என வட கிழக்கு மாகாணங்களுக்கான நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் துறவியர் ஒன்றியத்தின் சார்பாக அருட்பணி கிறிஸ்தோபர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,, மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு நாடு தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த ஜனாதிபதி தேர்தல் பற்றிய அல்லது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றிய அரசியல் அறிவு, அவர்களது தனி-கூட்டு அரசியல் இறந்த கால வரலாற்றுடன் தான் எமக்கு முன்னுள்ள தெரிவாக முன்வைக்கப்பட்டுள்ளது. இது எவ்வளவு நம்பிக்கை தருவதாக இருக்கிறது என்பதை அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய தேவையில்லை. இந்த ஜனாதிபதி தேர்தலும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள் உள்ள சட்டகத்திற்குள் இருந்தே நடாத்தப்படுகின்றது என்ற உண்மையை கூறாமல் இருக்க முடியாது. தற்போது உள்ள ஜனநாயக முறைமை எண்களைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது என்ற உண்மை பொது அறிவுக்கு உட்பட்டது. வாக்குகளின் எண்ணிக்கையை மையப்படுத்திய ஜனாதிபதி ஜனநாயக தெரிவில் ஈழத்தமிழ் மக்களுடையதும் ஏனைய சிறுபான்மை இனக் குழுக்களினதும் வாக்குகள் செல்வாக்கு செலுத்துவது வரையறுக்கப்பட்டுள்ளது. தெற்கிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிங்கள, பௌத்த தேசியத்தின் மேலாண்மையை வலியுறுத்தியே பிரச்சார மேடைகளை அலங்கரிக்கிறார்கள். ஈழத்தமிழ் மக்களுடைய கூட்டு அரசியல் வேணாவாவையும் தமிழின அழிப்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற அரசியல் கோட்பாட்டுச் சூழலில் தெற்கில் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் தமிழின அழிப்புக்கு நீதி கோருவதை மறுப்பதோடு இல்லாமல் ஸ்ரீலங்காவின் படைக் கட்டுமானம் சிங்கள தேச விடுதலைக் கட்டுமானத்தில் ஆற்றிய பங்களிப்பை கதா நாயக சொல்லாடலுக்கு டாகவே கட்டமைக்கிறார்கள். தமிழர் தாயகம் தொடர்ந்து ஈழ தமிழ்த்தேசிய நீக்கத்துக்குள் வலிந்து தள்ளப் பட்டு கொண்டே இருக்கிறது.இது வெவ்வேறு வடிவங்களை, பரிமாணங்களை கொண்டுள்ளது. உதாரணமாக ஈழத்தமிழர் ஒருங்கிணைந்த தாயகத்தை துண்டாடல், தமிழர் தாயகத்தில் இராணுவ மயமாக்கச் செறிவை அதிகரித்தல், ஈழத்தமிழர் தாயகம் தொடர்ந்து அடக்குமுறைக்கு உட்பட்ட தேசமாகவே உள்ளது.ஈழத்தமிழர் நிலங்கள் வலிந்து பறிக்கப்படுகின்றன.சிங்கள – பௌத்த மயமாக்கல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒட்டு மொத்தத்தில் ஈழத் தமிழர் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இவ்வாறான அரசியல் சூழமைவில் அரசியல் அறம் தெரிவாக தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக நமக்கு முன் நிறுத்தப்பட்டுள்ளார். இம் முக்கியமான காலகட்டத்தில் தமிழ் மக்களின் தெரிவு, ஈழத்தமிழரின் அரசியல் வேணவாவை வலுப்படுத்தும் என்பது எமது ஆழமான நம்பிக்கை என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/309430
  3. சங்குக்கு வாக்களித்து தமிழர்களின் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம்; நெல்லியடி வாணிபர் கழகம் அழைப்பு தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக சங்கு சின்னத்துக்கு வாக்களித்து தமிழர்களாக எமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம் என நெல்லியடி வாணிபர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக நெல்லியடி வாணிபர் கழகத்தின் ஆதரவுடன் நெல்லியடி மத்திய சந்தைக்கு அருகாமையில் இன்று (14) காலை 10.00 மணிக்கு இரா.மயூதரன் தலைமையில் இடம்பெற்ற ‘நமக்காக நாம்’ பரப்புரை கூட்டத்தின் போது இவ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நெல்லியடி நகர் பகுதி வர்த்தகர்கள், அயல் பகுதி மக்களிடையே தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து இடம்பெற்ற பரப்புரை கூட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த செல்வின் இரணியேஸ் மரியாம்பிள்ளை, புலம்பெயர் செயற்பாட்டாளர் பீற்றர், நெல்லியடி வாணபர் கழக நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது நெல்லியடி வாணிபர் கழகம் சார்பி ஆதரவு தெரிவித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழர்களுக்காக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பது தமிழர்களாகிய எமது கட்டாய கடமையாகும். சிதறுண்டு போயுள்ள நாம் ஓரணியல் ஒன்று சேர்ந்து எமது ஒற்றுமையை உலகிற்கு காட்டுவதற்கு இந்த சந்தர்ப்பத்தினை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் தமிழப் பொது வேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு நெல்லியடி வாணிபர் கழகமாக எமது பூரண ஆதரவினை வழங்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/309421
  4. ஜனாதிபதித் தேர்தலில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புகின்றவர்கள் மாத்திரம் அன்றி, உள்நாட்டில் வசிக்கின்றவர்களும் வாக்காளர் அட்டை இன்றி வாக்களிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். வாக்காளர் அட்டை என்பது வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்க வேண்டிய தொகுதியை அடையாளம் காண்பதற்கும் வாக்குச்சாவடியில் தமது தொடரிலக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமே வழங்கப்படுகிறது.அந்த அடிப்படையில் வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் தங்களது அடையாள அட்டையை அல்லது அங்கீகரிக்கப்பட்ட சட்டரீதியான அடையாள ஆவணங்களைக் காண்பித்து வாக்கினைப் பதிவு செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/309342
  5. தமிழின எழுச்சியின் தடைகள் உடைத்து தமிழர் தேசமாய் அணி திரள்வோம் - யாழ் பல்கலை சமூகம் அழைப்பு வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் என யாழ் பல்கலை சமூகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் திறந்த மடல் எனும் தலைப்பிலான அறிக்கையிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நூற்றாண்டுகள் கடந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் எங்களின் அரசியல் விடுதலைப் பயணத்தில் தவிர்க்க முடியாதவொரு தேர்தலாக எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் மாறியுள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகமாக இம்மடலினை எங்கள் பேரன்புமிக்க தமிழ் மக்களை நோக்கி மாணவர்கள் நாங்கள் எழுதுகின்றோம். தமிழ் மக்கள் உதிரிகளாக்கப்படுதலும் கூட்டு மனவலு சிதைக்கப்படுதலும் 2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் தமிழ் மக்கள் தேசமாகச் சிந்திப்பதிலிருந்தும், எழுச்சியடைவதிலிருந்தும் எங்களை விலகியிருக்கச் செய்வதில் சிங்கள – பௌத்த பேரினவாதம் ஏறக்குறைய வெற்றியடைந்திருக்கின்றது. சாதிகளாக, மதங்களாக, பிரதேசங்களாக தமிழ் மக்களையும் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளையும் உதிரிகளாக்கி, எங்களின் கூட்டு மனவலுவைத் தகர்த்தெறிந்து உளவியல் ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனோநிலையினை எங்கள் மக்களிடையே விதைப்பதனை சிறிலங்கா அரசின் முகவர்களும் அவர்களது அமைப்புக்களும் கனகச்சிதமாகச் செய்து முடித்துள்ளன. தமிழ் மக்களினது அரசியற் பலத்தினையும் எழுச்சியினையும் இல்லாதொழிப்பதற்காகச் சாணக்கியம், ராஜதந்திரம் என்று பெயரிட்டு தமிழ்த் தரப்புகளால் முன்னெடுக்கப்பட்ட வெற்றுக் காசோலை அரசியல் பயன்படுத்தப்பட்டது. அதன் விளைவே கடந்த 2010, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல்களில் தமிழ் இனப்படுகொலை பொறுப்பாளிகளான ஒரு தரப்பினரை எதிர்ப்பதாகக் கூறி, இனப்படுகொலைக் குற்றத்தைப் புரிந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி, பதில் பாதுகாப்பு அமைச்சர், போர்க்குற்றம் புரிந்த பெருமளவான இராணுவத்தினரின் ஆதரவினைப் பெற்ற நபர்களுக்கு வாக்களித்தோம். பரிகார நீதியைக் கோர வேண்டிய நாம், எமது அரசியற் தலைமைகளினால் கண்மூடித்தனமாக வழிநடத்தப்பட்டோம். எம்மைச் சூழும் பொருளாதார நல்லிணக்க மாயைகள்! சிறிலங்காவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலையைக் காரணங்காட்டி கவர்ச்சிகர வாக்குறுதிகளை முன்வைத்து வரும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்கள் நாட்டின் இந்நிலைக்குத் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும், வலிந்து திணிக்கப்பட்ட போருமே அடிப்படைக் காரணம் என்பதை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. அடிப்படையில் இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அரசியல் உறுதித் தன்மை அவசியமாக உள்ள நிலையில், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள், ஒடுக்குமுறைகளை நிறுத்தும் சித்தம் ஏதுமின்றி, தமிழ் மக்களின் உரிமைக்கான குரல்களை இனிப்புத் தடவிய வார்த்தை ஜாலங்களினால் அறுத்தெறியும் பணிகளிலேயே நாட்டமும் மும்முரமும் காட்டுகின்றனர். தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பையோ அல்லது பௌத்தத்திற்கு முதன்மை வழங்கும் அதன் கட்டமைப்பையோ இவர்கள் எவரும் கேள்விக்குள்ளாக்காமல் நல்லிணக்கம் பேசுவதென்பது அற்ப வாக்குகளிற்காகவேயன்றி வேறெதற்காக? தமிழர் தேசமாய்த் திரள்வோம்! தொடர்ந்தும் தமிழர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கேற்ற பலமானதொரு திரளாக அரசியல் மற்றும் கட்டமைப்பு ரீதியாகத் தமிழ் மக்கள் நாங்கள் எழ முடியாது உதிரிகளாக்கப்பட்டு, கூட்டு மனவலு சிதைக்கப்பட்டுள்ளது. இக்கையறு நிலையாவது கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து, சுதாகரித்து முன்னகர வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். அதிகாரப்பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற ஒற்றையாட்சி, அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தினுள் தமிழரின் அரசியலை சுருக்கியது என்பது சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்பதோடு, தமிழ் மக்களிற்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளவல்ல திடசித்தமுள்ள தலைவர் ஒருவரையேனும் சிங்கள மக்கள் மத்தியில் காண முடியவில்லை என்பதும் நோக்கத்தக்கது. தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகளில் பயணிப்போர்கள் அனைவரும் தமிழினத்தின் விடுதலைக்கு, மேன்மைக்கு உழைப்பவர்கள் என்று நம்பி ஏமாந்த எங்களுக்கு, புலித்தோல் போர்த்திய நரிகளின் ஊளையிடுதல்களையும் கூச்சல்களையும் உதறித்தள்ளி, தமிழர் தேசமாக, எங்கள் தலைவிதியை நாங்களே மாற்றி எழுதும் பெருவாய்ப்பு இனப்படுகொலை நிகழ்ந்து 15 ஆண்டுகளின் பின் கனிந்துள்ளது. தமிழரை அணிதிரட்டி வெல்லட்டும் தமிழ்ப் பொதுவேட்பாளர்! தமிழ் மக்களைத் தேசமாய் அணி திரட்டுவதற்கும், பன்னாட்டுச் சமூகங்களிற்கு விடுதலைக்கான எங்களின் கூட்டு வேட்கையினையும், கூட்டு மனோபலத்தினையும் வெளிப்படுத்துவதற்கும் எங்களிற்குள்ள ஒரேயொரு வாய்ப்பாகத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எண்ணக்கருவினை நாங்கள் பலப்படுத்த வேண்டும். இது ஒரு காத்திரமான வழிமுறை. இது எமது வரலாற்றுக் கடமை. தமிழ்ப் பொதுவேட்பாளர் சிறிலங்காவின் அரச தலைவர் இருக்கையை வெல்லப் போகின்றவரல்ல ; மாறாக தமிழ் மக்களை அணிதிரட்டுவதில் வெல்லப் போகின்றவர். இனியாவது ஏமாற்றும் கபட அரசியலிற்குப் பலியாகாமல், தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுக்கோ, வெளித்தரப்புக்களுக்கோ சென்று சேர்வதைத் தவிர்த்து, தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களைத் தமிழ் மக்கள் கூட்டாக மேற்கொள்ள வேண்டும். தவறுவோமேயானால் நாங்கள் அரசியல் பிழைத்த மக்களாக்கப்படுவோம். நாங்கள் மாறி மாறி சிங்கள ஆட்சியாளர்களுக்கு வாக்களிக்க வழிநடத்தப்பட்டோம். இதனால் தமிழ் மக்களின் நிலை, அரசியல், சமூக ரீதியில் பரிதாபகரமாய்ப் போனதேயன்றி வேறேதும் நிகழவில்லை. உரிமைகளுற்கான தமிழரின் அரசியல் இன்று சலுகைகளுக்காகத் துவண்டு போயுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள திரு.பா.அரியநேத்திரன் அவர்களுக்கு, அவரின் சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்போம். மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், கட்சி வேறுபாடுகள் கடந்து வடக்கு – கிழக்கு, மலையகம், இதர பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை, இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/309418
  6. படக்குறிப்பு, இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட கடல் போக்குவரத்து சேவை தமிழகத்தில் மீண்டும் துவக்கம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல்வழியிலான போக்குவரத்து என்பது சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரை தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கி, நடந்து வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் விமானத்தின் மூலமே சென்றடைகிறார்கள் என்றாலும், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில், கப்பல் போக்குவரத்திற்கு முக்கியமான இடம் இருந்தது. தமிழக கடற்கரை பகுதிகளான நாகப்பட்டினம், மரக்காணம், பூம்புகார், மாமல்லபுரம் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. நூற்றாண்டு கால கப்பல் போக்குவரத்து வரலாற்றை கொண்ட நாகை இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துறைத் தலைவரும் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் முன்னாள் பேராசிரியருமான சு. இராசவேலு, இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான போக்குவரத்தில் நாகப்பட்டினம் துறைமுகம் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறினார். "பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வணிகக் கப்பல்கள் 2,500 ஆண்டுகளாக தமிழகத்தின் துறைமுகங்களில் நங்கூரம் இட்டன. தமிழகத்தின் வணிகர்கள், வணிகக் குழுக்களாக இணைந்து பல்வேறு நாடுகளோடு வர்த்தகம் செய்ததாகக் கூறும் சு.இராசவேலு, "அவ்வகையில் நாகப்பட்டினம் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக துறைமுக நகராக விளங்கி வந்திருக்கிறது," என்றார். அவரது கூற்றுப்படி, நாகப்பட்டினம் அயல் நாட்டு ஆய்வாளர்களால் நிகமா என அழைக்கப்பட்டது. கிரேக்கப் பயணியான தாலமி தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதியில் உள்ள நிகமா என்னும் துறைமுக நகரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். "நிகமா என்று அவர் குறிப்பிடும் துறைமுக நகரம் நாகப்பட்டினம்தான் என ஸ்காட்லாந்தை சார்ந்த நிலவியல் அறிஞரும் கடலோடியுமான கர்னல் யூல் கி.பி.1873ஆம் ஆண்டு அடையாளம் கண்டார். சங்க காலத்தில் காவேரிப்பூம்பட்டினம் ஒரு சிறந்த துறைமுகமாக விளங்கி வந்ததால், சங்க கால இலக்கியங்களில் நாகப்பட்டினம் துறைமுகம் தொடர்பான செய்திகள் அதிகம் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் நிகமா என்னும் பெயர் நாகப்பட்டினத்தைக் குறிக்கலாம் என்ற குறிப்பிலிருந்து இக்கடற்கரை நகரம் கடல் வாணிகம் செய்து வந்த பெருவணிகர்களைக் கொண்டு விளங்கி வந்துள்ளதை அறிய முடிவதாக" கூறுகிறார் பேராசிரியர் சு.இராசவேலு. வர்த்தக தலைநகரமாகத் திகழ்ந்த பண்டைய நாகை பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் முன்னாள் பேராசிரியருமான சு. இராசவேலு நிகமா என்னும் சொல் தமிழிக் கல்வெட்டுகளிலும், மட்கல ஓடுகளிலும் குறிக்கப்பட்டுள்ள வணிகக் குழுவோடு தொடர்புடையது. நிகமம் என்றால் பெருவணிகர்கள் வாழ்கின்ற ஊர் எனப் பொருள்படும். எனவே நாகப்பட்டினம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மிகச் சிறந்த வணிக நகரமாக விளங்கியிருக்கலாம் என்கிறார் பேராசிரியர் இராசவேலு. கி.பி. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவராப் பாடல்களில் இந்நகரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. மாட மாளிகைகளையும் மணிமண்டபங்களையும் நெடிய மாடங்களையும் நீண்ட வீதிகளையும் கொண்டு, அலை தழுவும் நகரமாகவும் கோட்டை மதிலுடன் கூடிய நகரமாகவும் இந்நகரைப் பற்றி தேவாரப் பாடல் குறிப்பிடுகிறது. இந்நகரில் பல வணிகர்கள் வாழ்ந்ததையும் பல நாட்டுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதையும் குதிரைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதையும் தேவாரப் பாடல்கள் குறிக்கின்றன. தொடக்க கால கல்வெட்டுகளிலும் தேவாரப் பாடல்களிலும் நாகப்பட்டினம் நாகை எனும் பெயரில்தான் வழங்கப்பட்டுள்ளது. நாகையில் சீனக் காசுககளும் சீனர்கள் பயன்படுத்திய பானை ஓட்டுச் சில்லுகளும் கிடைத்துள்ளன. இதனால், சீனாவிலிருந்து கப்பல்கள் இத்துறைமுகத்தில் நங்கூரம் இட்டு பின்னர் இலங்கைத் தீவிற்கும் பிற நாடுகளுக்கும் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நாகப்பட்டினத்தில் உள்ள நாகநாதர் கோவிலில் உள்ள தனிக்கல் ஒன்றில் "நாகைப் பெருந்தட்டான்" என்ற பெயர் காணப்படுகிறது. கிபி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டே இவ்வூரில் கிடைக்கும் பழமையான கல்வெட்டாகும். இக்கல்வெட்டு பல்லவர் கால எழுத்து வடிவில் இருக்கிறது. எனவே பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக நாகை விளங்கியிருக்கலாம் எனக் கூறுகிறார் சு.இராசவேலு. "தட்டான் என்பது உலோக வேலைப்பாடுகள் செய்கின்ற மக்களைக் குறிக்கும். சோழர் காலத்தில் நாகையில் தயாரிக்கப்பட்ட பல பௌத்த படிமங்கள் தென் கிழக்காசிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் சென்றுள்ளன." சோழர்களின் கப்பற்படை தளமாக செயல்பட்ட நாகை படக்குறிப்பு, நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து 2000 ஆண்டுகால வரலாற்றை கொண்டது சிற்பிகளும் வணிகர்களும் வாழ்ந்த பகுதியாக இந்நகரம் இருந்திருக்கிறது என்பதை வரலாற்று, இலக்கிய, மற்றும் தொல்லியல் தரவுகள் மூலம் புரிந்துகொள்ளலாம். இந்நகரம் காவிரி ஆற்றின் கிளை ஆறுகளான குடவையாறு மற்றும் உப்பனாறு ஆகிய ஆறுகளின் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்ததால், தேவாரத்தில் இந்நகர் "கழி சூழ் கடல் நாகை" எனக் குறிப்பிடப்படுகிறது. அப்பரும், சம்பந்தரும் நாகை துறைமுகத்தில் பல்வகை கலங்கள் நின்றிருந்ததைக் குறிப்பிடுவதுடன் இத்துறைமுகத்தில் கற்பூரமும் யானைகளும் கப்பல்களில் ஏற்றி நிறுத்தப்பட்டிருந்ததையும் துறைமுக கண்காணிப்பாளர்கள் இவற்றுக்குச் சுங்கவரி வசூலித்ததையும் குறிப்பிடுகின்றனர். ஆரம்பத்தில் நாகை எனக் குறிப்பிடப்பட்ட இந்நகரம், சோழர் காலத்தில்தான் பட்டினம் என்னும் வார்த்தையுடன் சேர்ந்து நாகப்பட்டினம் என்ற பெயருடன் அழைக்கப்படலாயிற்று. நாகை என்னும் பெயர் கடல் சங்கைக் குறிக்கும் நாகு என்னும் பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்கிறார் சு.ராசவேலு. பல்லவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த சோழர்கள் தொன்மைத் துறைமுகமான காவேரிப்பூம்பட்டினத்தைத் தவிர்த்து நாகப்பட்டினத் துறைமுகத்திற்குச் சிறப்பிடம் அளித்தனர். இவர்கள் காலத்தில் இந்நகரம் மிகச் சிறந்த வணிக நகரமாகவும் சோழர்களின் கப்பற்படை இருந்த நகரமாகவும் விளங்கியது. படக்குறிப்பு, தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகள் முதலாம் பராந்தக சோழர் தனது மூன்றாவது ஆட்சியாண்டில் ஈழத்தைக் கைப்பற்றி 'மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி' என்னும் பட்டத்தை வைத்துக் கொள்கின்றார். எனவே இந்த மன்னரின் ஆட்சிக் காலத்திலேயே சோழர்கள் சிறந்ததொரு கப்பற்படையை வைத்திருந்துள்ளனர் என அறியலாம். அதன்மூலம் இலங்கையைக் கைப்பற்றியதுடன் இலங்கை அரசர்களுடன் நட்புறவு பாராட்டிய பாண்டியர்களையும் முதலாம் பராந்தக சோழர் வெற்றி பெற்றார். தொடர்ந்து சோழ மன்னன் ராஜராஜன் காலத்தில் அவரது மகன் ராஜேந்திர சோழன் நாகப்பட்டினத்தை சோழர்களின் சிறந்த துறைமுக நகரமாக மாற்றியதோடு பல கப்பல்களை அங்கிருந்து செலுத்தும் வகையில் நாகை துறைமுகத்தை விரிவுபடுத்தினார். கேரளப் பகுதியிலிருந்து வந்த வணிகர்களும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் செல்ல நாகைப்பட்டினத் துறைமுகத்தையே பயன்படுத்தியுள்ளனர். நாகை அருகேயுள்ள கீழையூர் சிவன் கோவிலில் யவனர்கள் குறித்த முதல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டத்துக்கு உட்பட்ட கீழையூர் கைலாசநாதர் கோவிலில் கி.பி.1287ஆம் ஆண்டைச் சார்ந்த பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் காலக் கல்வெட்டில் "யவனர் திடர்" என்ற சொற்கள் கிடைக்கின்றன. தமிழகத்தில் யவனர்கள் பற்றிய சொல் பயன்பாட்டுடன் கூடிய முதல் கல்வெட்டு இதுதான். 'யவனர் திடர்' என்பது 'யவனர் திடல்' எனப் பொருள்படும். இது, யவனர்கள், அதாவது மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து வந்த வணிகர்கள் குடியிருந்த பகுதியாகக் கருதப்படுகிறது. படக்குறிப்பு, சுதந்திரத்திற்குப் பிறகும் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து இருந்து வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு அது நிறுத்தப்பட்டது சோழர்களுக்குப் பின் தஞ்சாவூர் நாயக்கர் காலத்திலும் இத்துறைமுக நகரம் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகும் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து இருந்து வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு அது நிறுத்தப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு மீண்டும் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. போதிய பயணிகள் இன்மையால், அந்தச் சேவை நிறுத்தப்பட்டு, இந்த ஆண்டு மறுபடியும் தொடங்கப்பட்டிருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2ylzmlndjo
  7. கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழினத்தின் கோரிக்கையாக தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு என்கிறார் ஸ்ரீநேசன் கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று தமிழ் இனத்தின் கோரிக்கையாக வேண்டுகோளாக அவர்களுடைய பிரச்சனைகளை சொல்லுகின்ற கருவியாக பயன்படுத்த வேண்டும்.அதன் அடிப்படையில் தாங்கள் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்க முன்வந்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டு. ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தற்பொழுது ஜனாதிபதி தேர்தல் இடம் பெற இருக்கின்றது இந்த தேர்தல் ஆனது கடந்த எட்டு ஜனாதிபதி தேர்தலை விடவும் முக்கியமான ஒரு தேர்தலாக கருதப்படுகின்றது காரணம் இந்த தேர்தலில் மாத்திரமே தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி இருக்கின்றார்கள். இந்த பொது வேட்பாளரை 83 சமூக கட்டமைப்புகளும் 10 தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து இவரை நிறுத்தி இருக்கின்றது என்றால் இந்த பொது வேட்பாளர் என்பது கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழினத்தின் சார்பாக இவர் நிறுத்தப்பட்டிருக்கின்றார். தமிழர்கள் ஒற்றுமையாக இந்த இடத்தில் பயணிக்க வேண்டும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் ஒரே குரலில் தங்களது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கும் உள்நாட்டிற்கும் செல்ல வேண்டும் எங்களுடைய தீர்வுகளையும் சொல்ல வேண்டும் என்கின்ற அடிப்படையில் இந்த தமிழ் பொது வேட்பாளர் சங்கு சின்னத்தில் அரியநேந்திரன் அவர்கள் நிறுத்தப்பட்டு இருக்கின்றார். இந்த விடயத்தை கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று தமிழ் இனத்தின் கோரிக்கையாக வேண்டுகோளாக அவர்களுடைய பிரச்சனைகளை சொல்லுகின்ற கருவியாக பயன்படுத்த வேண்டும் எனவே நாங்கள் தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் எங்களுடைய அருள் வாக்கு கூறுகின்ற அருட்தந்தை யோசப் மேரி அடிகளார் அவர்கள் அருமையாக கூறினார் தந்தை செல்வா அவர்களின் காலத்தில் இருந்து பயணித்தவர் தளராத வயதிலும் கூட தமிழ் தேசியப் பற்றோடு தமிழ் உணர்வோடு இந்த தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கூறினால் நாங்கள் கேட்டு தான் ஆக வேண்டும் ஏனென்றால் அவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் தடம் புரளாமல் ஆன்மீகப் பணிகளும் சரி அரசியல் பணியிலும் சரி மிகவும் அருமையாக பணியாற்றியவர். அவர் கூறுகின்றார் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். தமிழர்களை அவர்களது பிரச்சனைகளை வெளி உலகத்திற்கு கொண்டுவர வேண்டும் என அவர் எடுத்துரைக்கின்றார். எனவே ஒரு மூத்த அருட்தந்தை அவர்களுடைய அருள்வாக்கு நாங்கள் பின்பற்றுவதற்கு நாங்கள் திட சந்தர்ப்பம் எடுத்து இருக்கின்றோம் எனவே நடைபெறுகின்ற 21 ஆம் தேதி நடைபெறுகின்ற இந்த தேர்தலில் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் தமிழ் சமூகம் ஒற்றுமையாக இருக்கின்றோம் ஒரே குரலில் எங்களுடைய பிரச்சனைகளை கூறப்போகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டோம் உள்நாட்டு பொறிமுறை ஊடாக இந்த பிரச்சினைகளை தீர்க்கிறோம் எனக் கூறினார்கள் ஒன்றுமே நடைபெறவில்லை 15 ஆண்டுகளாக. அடுத்ததாக தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்துகின்றோம் எனக் கூறிக்கொண்டு எங்களுடைய கலாசார நிலையங்கள் அளிக்கப்படுகின்றது அந்த இடங்களில் விகாரங்கள் கட்டப்படுகின்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றது அந்த இடங்களில் எல்லாம் பௌத்த விகாரைகள் இருந்தது என்று கூறிவிட்டு அந்த இடங்களை ஆக்கிரமிக்கின்ற செயல்பாடுகள் இடம்பெற்று கொண்டிருக்கின்றது. இன்றும் கூட பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படாமல் தமிழ் மக்களை யுத்தத்தின் பின்னரும் ஒடுக்குகின்ற அந்த சட்டத்தை அவர்கள் வைத்திருக்கின்றார்கள் எங்களுடைய தமிழ் கைதிகள் முழுமையாக இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை இது மாத்திரம் அல்லாமல் வடக்கு கிழக்கில் ராணுவத்தின் ஆக்கிரமிப்பு என்பது இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மாதவனை இந்த மேச்சல் தரை இப்போதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார்கள் 365 நாட்களுக்கும் மேலாக அகிம்சை ரீதியாக வீதியில் இருந்து போராடிய அந்த கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எந்த ஒரு தீர்வும் இந்த ஜனாதிபதியால் கொடுக்கப்படவில்லை. 100 நாட்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாகி தரவேண்டும் என போராடினார்கள் அதுவும் கேட்கப்படவில்லை. எட்டு ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலத்திலும் அவர்களுக்கு வாக்களித்து இருந்தும் கூட அவர்கள் எங்களை தாராளமாக ஏமாற்றி இருக்கின்றார்கள் இந்த ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிலும் கூட சில வேளைகளில் பொது வேட்பாளர் திறக்கப்படாமல் இருந்திருந்தால் நாங்கள் யாரோ ஒரு சிங்கள ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களித்து இருப்போம் ஆனால் முதல் தடவையாக இந்த வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருக்கின்ற போது அதே போன்று தமிழர்களின் பிரச்சினைகளை கோரிக்கைகளை வைத்து இறக்கப்பட்டிருக்கின்றார் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் நாங்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய தார்மீக கடமை எங்களுக்கு இருக்கின்றது அதனை விடுத்து மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுவதற்கு நாங்கள் வழி கூறக்கூடாது. கேட்கின்றார்கள் இந்த வேட்பாளர் வெல்லப் போகின்றாரா என்று இவருக்கு வாக்களிப்பதால் என்ன கிடைக்கப் போகின்றது எனக்கு கேட்கின்றார்கள் நான் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன் எட்டு ஜனாதிபதிகளுக்கு நாங்கள் வாக்களித்தோம் எதைப் பெற்றிருக்கின்றோம் ஒன்றையுமே அவர்கள் தரவில்லை அவர்களை வெற்றி பெற செய்திருக்கின்றோம் கடந்த நல்லாட்சி காலத்தில் மைத்திரிபால ஸ்ரீசேனா அவர்களை வெற்றி பெறச் செய்தோம் மஹிந்த ராஜபக்சே அவர்களை தோற்கடித்தோம் பின்னர் மைத்திரிபாலு என்ன செய்தார் 2018 ஆம் ஆண்டு நாங்கள் யாரை தோற்கடிக்க வேண்டும் என்று மைத்திரிக்கு வாக்களித்தோமோ அவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதம மந்திரியாக வைத்துக்கொண்டு அவர் அழகு பார்க்கின்றார் பேச்சுவார்த்தை இடம்பெற்றது அரசியல் யாப்பு தருவோம் என கூறினார்கள் ஏமாற்றி விட்டார்கள். சந்திரிகா அம்மையார் சமாதான தேவதையாக வந்தார் என்ன செய்தார் கடைசியாக அவரும் ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டார். எனவே எங்களுடைய அரசியல் வரலாறு என்பது ஏமாற்றப்படுகின்ற வரலாறாக இருக்கின்றது அவர்கள் ஏமாற்றுகின்ற வரலாறாக காணப்படுகின்றது எனவே தமிழ் பேசும் மக்களுக்கும் தமிழ் சமூகங்களுக்கும் நாங்கள் கூறக்கூடிய விடயம் என்னவென்றால் வடக்கு கிழக்கு மாத்திரம் அல்ல அனைத்து மக்களும் எமக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் கூறுகின்றார்கள் நாங்களும் இவருக்கு ஆதரவு வழங்குவதற்கு சித்தமாக இருக்கின்றோம் என்று. எனவே நியாயத்தின் பேரில் உரிமையின் பேரில் நாங்கள் பதிக்கப்பட்ட சமூகம் என்பதன் பெயரில் நாங்கள் நீதியை நிலை நிறுத்துவதற்காக ஏமாற்றப்பட மாட்டோம் என்பதை எடுத்துக் கூறுவதற்காக எமக்கு ராயப்பு ஜோசப் ஆண்டகை கூறியது போன்று இறுதி யுத்தத்தின் போது ஒரு லட்சத்து 46 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் என்ற செய்தியை கூறி இருக்கின்றார் அவர் கூட அந்த இழப்புக்குரிய நீதியை பெற வேண்டும் என முயற்சித்தார் அவரும் கண்ணை மூடிவிட்டார் ஆனால் நீதி எங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை அழகாக கூறியது உண்மையை கண்டறிய வேண்டும் அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று அடுத்ததாக மீண்டும் இவ்வாறான அவலங்கள் ஏற்படாமல் இனப்பிரச்சனைக்குரிய நிரந்தரமான தீர்வை பெற வேண்டும் என கூறுகின்றார்கள் எதுவுமே இடம்பெறவில்லை 15 வருடங்களாக யுத்தத்தின் பின்னர் எங்களை ஏமாற்றி இருக்கின்றார்கள். மீண்டும் மீண்டும் நாங்கள் ஏமாறுவதற்கு தயாராக இல்லை இப்போது ஒரு கதை பேசப்படுகின்றது மீளபெற முடியாத அதிகாரத்தை தந்திருக்கின்றார் என்கின்ற ஒரு கதை அழகாக கூறப்படுகின்றது. மீளப்பெற முடியாத அதிகாரம் என்றால் எந்த விடயத்திற்கு மீளப்பெற முடியாத அதிகாரம் தரப்பட்டு இருக்கின்றது என கூற வேண்டும் சமஸ்டி ஆட்சி முறையில் மீளப்பெற முடியாத இந்த இந்த அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றது என கூற வேண்டும் இது மொட்டை கடிதம் எழுதுவது போன்று மீளப்பெற முடியாத அதிகாரம் தந்ததனால் அதற்குள் சமஷ்டி இருக்கின்றது என்று எங்களுடைய மக்களை ஏமாற்றுவதற்கு எம்மவர்கள் பார்க்கின்றார்கள் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/309416
  8. நேரடி விவாதத்தில் வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பில் வெளியான தகவல் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் நடந்த நேரடி விவாதத்தில் கமலா ஹாரிஸ் வெற்றிப் பெற்றதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியாவில் இவர்கள் இருவரும் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர். இதில் பொருளாதாரம், குடியேற்றம், ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் – காசா போர், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த இந்த நேரடி விவாதத்தில் வெற்றி பெற்றது யார்? என்பது குறித்து அமெரிக்க ஊடகங்கள் கருத்துக்கணிப்பு நடத்தின. இதில் டிரம்பை, கமலா ஹாரிஸ் பின்னுக்கு தள்ளினார். இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிசுக்கு 63 சதவீத பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். டிரம்புக்கு 37 சதவீத பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் வெற்றிப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கமலா ஹாரிஸ் இத்தகைய சூழலில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாவதாக விவாதம் நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக இனி கமலா ஹாரிசுடன் 2வது முறையாக விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/309434
  9. 51/1 தீர்மானத்தை காலநீடிப்பு செய்வது குறித்து வியாழன்று இணையனுசரணை நாடுகள் கூடி ஆராய்வு 14 SEP, 2024 | 08:30 PM (நா.தனுஜா) பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, மாலாவி, வட மெசிடோனியா மற்றும் மொன்டெனிக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகளின் ஏற்பாட்டில் இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வது குறித்தும், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆராயப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (9) ஜெனிவாவில் ஆரம்பமானது. அன்றைய தினம் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் உரை மற்றும் மியன்மார் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை, அதன்மீதான விவாதம் என்பவற்றைத் தொடர்ந்து இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது. அதன்படி இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுதுதல்' என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் என்பன தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றியதுடன், உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் இயங்கிவரும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் அவற்றின் அறிக்கைகளைச் சமர்ப்பித்தன. அவ்வறிக்கைகளில் இலங்கை தொடர்பாக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை மேலும் இருவருடங்களுக்கு நீடிக்கக்கூடியவகையில் அத்தீர்மானத்தைப் புதுப்பிக்குமாறு பேரவையிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது. இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம், பின்னர் 51/1 ஆக காலநீடிப்புச் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், அத்தீர்மானம் இம்மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. அதனையடுத்து புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவருவது பற்றி முன்னர் ஆராயப்பட்ட போதிலும், இலங்கையில் இது தேர்தல் ஆண்டு என்பதால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குக் காலநீடிப்புச் செய்வதற்கான சாத்தியப்பாடு குறித்து பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஆராய்ந்து வருகின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, மாலாவி, வட மெசிடோனியா மற்றும் மொன்டெனிக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகளின் ஏற்பாட்டில் இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வது குறித்தும், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் எதிர்வரும் 19 ஆம் திகதி பேரவையில் (பக்க அறையில்) ஆராயப்படவுள்ளது. இதில் மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளும், சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் பேரவை, ஆசிய பேரவை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்பர். அதேவேளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதியுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் முடிவடையவிருக்கும் நிலையில், ஒக்டோபர் முதலாம் வாரத்தில் ஜெனிவா செல்லவுள்ள இலங்கையைச் சேர்ந்த முன்னணி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், தேவையேற்படும் பட்சத்தில் இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்புச் செய்வதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறுகோரி உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளனர். https://www.virakesari.lk/article/193680
  10. 10 பேரடங்கிய குழுவை தேர்தல் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தியது சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு Published By: DIGITAL DESK 3 14 SEP, 2024 | 08:33 PM (நா.தனுஜா) சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு 10 பேரடங்கிய அதன் தேர்தல் கண்காணிப்புக்குழுவை இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது. மிகமுக்கிய தருணத்தில் நடைபெறும் இம்முறை ஜனாதிபதித்தேர்தல் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றும் எனவும் அவ்வமைப்பு எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கண்காணிப்புப்பணிகளை முன்னெடுப்பதற்காக வழமைபோன்று இம்முறையும் ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு மற்றும் ஏனைய சர்வதேச நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்பட்டது. அதற்கமைய ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் இரண்டு குழுக்கள் ஏற்கனவே நாட்டை வந்தடைந்ததுடன், அவை நாடளாவிய ரீதியில் தேர்தல் கண்காணிப்புப்பணிகளை ஆரம்பித்துள்ளன. அதேபோன்று சிஷேல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டெனி ஃபோர் தலைiயிலான 13 பேரடங்கிய பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக்குழு இன்றைய தினம் (15) நாட்டை வந்தடையவுள்ளது. அதுமாத்திரமன்றி பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பின் (சார்க்) அங்கத்துவ நாடுகளையும், ரஷ்யாவையும் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் அவர்களது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர். இவ்வாறானதொரு பின்னணியில் சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு அதன் தேர்தல் கண்காணிப்பாளர்களைக் கடந்த 11 ஆம் திகதி முதல் இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் கண்காணிப்புப்பணிகளில் ஈடுபடுத்தியுள்ளது. இக்கண்காணிப்பாளர்களில் தேர்தல் செயன்முறை ஆய்வாளர்கள் உட்பட 10 பேர் உள்ளடங்குகின்றனர். அவர்கள் நாடளாவிய ரீதியில் 7 மாகாணங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதுடன், 14 பிரதான நகரங்களையும், அவற்றைச் சூழவுள்ள ஏனைய பிரதேசங்களையும் இலக்காகக்கொண்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். இதன்போது தேர்தல் செயன்முறையுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ள அவர்கள், தேர்தல் பிரசார நடவடிக்கைகள், வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் செயன்முறை, தேர்தலுக்குப் பின்னரான நிலைவரம் என்பவற்றைப் பரந்துபட்ட அளவில் கண்காணிக்கவுள்ளனர். அதன்படி இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு, 'பொருளாதார ஸ்திரமின்மை, உயர் பணவீக்கம், மக்கள் மத்தியிலான அதிருப்தி ஆகியவற்றுக்கு நாடு முகங்கொடுத்திருந்த நிலையில், தீர்மானம் மிக்கதொரு தருணத்தில் இந்த ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தல் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் மிகமுக்கிய பங்காற்றும்' எனத் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/193691
  11. ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கடந்த 9ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மைதானத்தில் நீர் தேங்கியது. இதனால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. மைதானத்தில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் தேங்கிய தண்ணீரை உடனடியாக வெளியேற்ற முடியவில்லை. தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலையில் 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மைதான ஊழியர்கள் போராடி 3வது நாளான நேற்று முன்தினம் தண்ணீரை வெளியேற்றினர். ஆனால் மீண்டும் கிரேட்டர் நொய்டாவில் மழை பெய்ததன் காரணமாக இந்த போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் 91 வருடங்களில் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஒரு டெஸ்ட் போட்டி கைவிடப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த 1933 முதல் இதற்கு முன் இந்தியாவில் நடைபெற்ற எந்த டெஸ்ட் போட்டியும் இப்படி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதில்லை. இந்த போட்டி ரத்தான நிலையில், இந்திய வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. https://thinakkural.lk/article/309436
  12. தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கிறார் - வட, கிழக்கு நீதிக்கும் சமாதானத்திற்குமான குருக்கள் ஒன்றியம் Published By: DIGITAL DESK 3 15 SEP, 2024 | 10:21 AM (எம்.நியூட்டன்) தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கிறார் எனவே அவரையே தமிழ்மக்கள் தெரிவு செய்யவேண்டும் என வடக்கு கிழக்கு நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் துறவியர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு நாடு தயாராகிக்கொண்டு இருக்கின்றது. இச் ஜனாதிபதி தேர்தல் பற்றிய அல்லது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றிய அரசியல் அறிவு, அவர்களது தனி- கூட்டு அரசியல் இறந்தகால வரலாற்றுடன்தான் எமக்கு முன்னுள்ள தெரிவாக முன்வைக்கப் பட்டுள்ளது. இது எவ்வளவு நம்பிக்கை தருவதாக இருக்கிறது என்பதை அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய தேவையில்லை. இந்த ஜனாதிபதி தேர்தலும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள் உள்ள சட்டகத்திற்குள் இருந்தே நடாத்தப்படுகின்றது என்ற உண்மையை கூறாமல் இருக்க முடியாது. தற்போதுள்ள சனநாயக முறைமை எண்களைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது என்ற உண்மை பொது அறிவுக்குட்பட்டது. வாக்குகளின் எண்ணிக்கையை மையப்படுத்திய ஜனாதிபதி ஜனநாயக தெரிவில் ஈழத்தமிழ் மக்களுடையதும் ஏனைய சிறுபான்மை இனக் குழுக்களினதும் வாக்குகள் செல்வாக்கு செலுத்துவது வரையறுக்கப்பட்டுள்ளது. தெற்கிலிருந்து சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிங்கள பௌத்த தேசியத்தின் மேலாண்மையை வலியுறுத்தியே பிரச்சார மேடைகளை அலங்கரிக்கின்றார்கள். ஈழத்தமிழ் மக்களுடைய கூட்டு அரசியல் வேணாவாவையும் தமிழின அழிப்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற அரசியல் கோட்பாட்டுச் சூழலில் தெற்கில் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒன்றுபட்டிருக்கின்றார்கள். அதேநேரத்தில் தமிழின அழிப்பில் நீதி கோருவதை மறுப்பதோடல்லாமல் ஸ்ரீலங்காவின் படைக் கட்டுமானம் சிங்கள தேச விடுதலைக் கட்டுமானத்தில் ஆற்றிய பங்களிப்பை கதாநாயக சொல்லாடலுக் கூடாகவே கட்டமைக்கின்றார்கள். தமிழர் தாயகம் தொடர்ந்து ஈழ தமிழ்த்தேசிய நீக்கத்துக்குள் வலிந்து தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இது வெவ்வேறு வடிவங்களை/பரிமாணங்களை கொண்டுள்ளது. உதாரணமாக, ஈழத்தமிழர் ஒருங்கிணைந்த தாயகத்தை துண்டாடல், தமிழர் தாயகத்தில் இராணுவ மயமாக்கச் செறிவை அதிகரித்தல், ஈழத்தமிழர் தாயகம் தொடர்ந்தும் அடக்குமுறைக்கு உட்பட்ட தேசமாகவே உள்ளது. ஈழத்தமிழர் நிலங்கள் வலிந்து பறிக்கப்படுகின்றன. சிங்கள மயமாக்கல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. ஒட்டுமொத்தத்தில் ஈழத்தமிழர் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறான அரசியல் சூழமைவில் அரசியல் அறத் தெரிவாக தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக நமக்குமுன் நிறுத்தப்பட்டுள்ளார். இம்முக்கியமான காலகட்டத்தில் தமிழ் மக்களின் தெரிவு, ஈழத்தமிழரின் அரசியல் வேணவாவை வலுப்படுத்தும் என்பது எமது ஆழமான நம்பிக்கை என்றுள்ளது. https://www.virakesari.lk/article/193690
  13. 15 SEP, 2024 | 10:20 AM ராமேசுவரம்: விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை மொட்டையடித்து அனுப்பியதால், இலங்கை அரசைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 27-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும், அதிலிருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். சிறை தண்டனைக்குப்பின் இவர்களின் வழக்கு கடந்த 5-ம் தேதி மன்னார் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக் இன்னாசி, ராஜா, சசிக்குமார், மாரி கிங்ஸ்டன், மெக்கான்ஷ் ஆகிய 5 மீனவர்களை விடுதலை செய்ததுடன், தலா ரூ.50 ஆயிரம் அபதாரம் செலுத்தவும் உத்தரவிட்டார். மேலும் கணேசன, சேசு, அடைக்கலம் ஆகிய 3 மீனவர்கள் இரண்டாவது முறையாக எல்லைதாண்டி வந்ததாக கூறி ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், அவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபதாரமும் கட்ட உத்தரவிட்டார். இதனையடுத்து 3 மீனவர்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட 5 மீனவர்களுக்கு உறவினர்கள் கடன் வாங்கி 7-ம் தேதி பணத்தை செலுத்தியுள்ளனர். ஆனால் 6-ம் தேதி அபராததொகை செலுத்த வில்லை என சிறைத் துறையினர் அவர்களை கைவிலங்கிட்டு மொட்டை அடித்தும், இலங்கை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்து, வளாகத்திலுள்ள கழிவுநீர் கால்வாய்களையும் சுத்தம் செய்ய வைத்து கொடுமைப் படுத்தியதாகவும், சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். பின்னர் 5 மீனவர்களும் (செப்.13) காலை மெர்ஹானா முகாமில் இருந்து விமான மூலம் இரவு சென்னை வந்தடைந்ததாக கூறினர். மீனவர்கள் இன்று பகல் 1 மணியளவில் சொந்த ஊரான தங்கச்சிமடத்துக்கு வந்து சேர்ந்தனர். மீனவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு வந்ததை கண்ட அவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதற்கு மீனவர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து இலங்கை அரசாங்கத்தின் தொடர் அத்துமீறல் மற்றும் மனித நேயமற்ற செயலை கண்டித்தும், மத்திய அரசு மீனவர்கள் பிரச்சனையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பதற்கு கண்டனம் தெரிவித்தும், ராமேசுவரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தங்கச்சிமடம் பேருந்து நிறுத்தம் அருகே மீனவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மீனவ சங்க நிர்வாகிகள் ஜேசுராஜா, எமரிட் மற்றும் மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். மீனவர் சங்க தலைவர் எமரிட் கூறும்போது, “மொட்டை அடிக்கப்பட்டவர்கள் தமிழக மீனவர்கள் தான் என எண்ண வேண்டாம், எங்களுடைய வரிப்பணத்தில் வாழும் இலங்கை அரசு எங்கள் மீனவர்களை மொட்டை அடித்து மனித நேயமற்ற அரக்கர்களாக கொடுமைப்படுத்தி உள்ளனர். மத்திய அரசு இதையும் வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல. இது இந்தியாவை அவமானப்படுத்தியதாகத் தான் நாங்கள் கருதுகிறோம். ஆகவே, இதுவரை இலங்கை கடற்படை எங்களை அடித்து கொடுமைப்படுத்தியது, படகுகளை சிறை பிடித்தது, அதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இனிமேலும் இவ்வாறான மனிதநேயமற்ற செயலை பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஆகவே மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டங்களை தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கும் எதிராகவும் நடத்துவோம்” என்றார். https://www.virakesari.lk/article/193719
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் விவாதிக்க மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்று பிரிட்டன் பிரதமர் கூறினார் கட்டுரை தகவல் எழுதியவர், மாலு கர்சீனோ பதவி, பிபிசி செய்திகள் 14 செப்டெம்பர் 2024 சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வாஷிங்டனில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு ரஷ்யாவிற்குள் ஊடுருவி அதன் உள்புற இலக்குகளைத் தாக்குவதற்கு நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த யுக்ரேனை அனுமதிப்பது குறித்து சர் கியர் ஸ்டார்மர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. யுக்ரேன் குறித்து ஒரு உத்தியில் கவனம் செலுத்துவது குறித்து இருவரும் ஆக்கப்பூர்வமாக கலந்துரையாடியதாக சர் கியர் ஸ்டாமர் கூறினார். "இரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து ஆழ்ந்த கவலையை" வெளிப்படுத்துவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இரானில் தயாரிக்கப்பட்ட 70க்கும் மேற்பட்ட டிரோன்களைப் பயன்படுத்தி யுக்ரேன் முழுவதும் இரவோடு இரவாக ரஷ்யா தாக்கியது என்றும், தனது நாட்டு மக்களை பாதுகாக்க யுக்ரேனுக்கு கூடுதல் வான் பாதுகாப்பு மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் தேவை என்று யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) அன்று தெரிவித்தார். "இதற்காக நாங்கள் அனைத்து நட்பு நாடுகளுடனும் ஆலோசித்து வருகிறோம்", என்று அவர் கூறியிருந்தார். வெள்ளை மாளிகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பாக, ரஷ்யா மீது யுக்ரேன் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்க அனுமதிக்க வேண்டாம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இத்தகைய நடவடிக்கைகள் ரஷ்யா - யுக்ரேன் போரில் நேட்டோ நாடுகளின் "நேரடி பங்கேற்பை" குறிக்கும் விதமாக இருக்கும் என்று புதின் கூறினார். "புதினின் அச்சுறுத்தல்களை மீறி ரஷ்யாவில் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்க யுக்ரேனுக்கு நேட்டோ நாடுகள் அனுமதி அளிக்க வேண்டும். வெறும் பேச்சுவார்த்தைகள் மட்டும் நடத்துவது ரஷ்ய அதிபருக்கு நன்மை பயப்பதாக இருக்கின்றது" என்று பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சர் பென் வாலஸ் பிபிசி ரேடியோ 4-இன் டுடே நிகழ்ச்சியில் கூறினார். "இது மற்றொரு விஷயம் சார்ந்த இன்னொரு இழுபறியாக இருப்பதால் நான் ஏமாற்றமடைகிறேன்", என்று மேலும் அவர் தெரிவித்தார். சர் பென் வாலஸ், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ஆவார். மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளை தடுக்கவே புதின் இவ்வாறு எச்சரிக்கை விடுப்பதாக யுக்ரேன் பேச்சுவார்த்தைகளுக்கான முன்னாள் அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி கர்ட் வோல்கர் கூறினார். "இதுகுறித்து நாங்கள் நடவடிக்கை எடுப்பதை தடுக்கவே புதின் இவ்வாறு கருத்து தெரிவித்து வருகிறார். அவர் உண்மையில் என்ன செய்யப் போகிறார் அல்லது என்ன செய்ய நினைக்கிறார் என்பது இதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை", என்று அவர் டுடே நிகழ்ச்சியில் கூறினார். வெள்ளை மாளிகையில் பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமரை சந்திப்பதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "விளாதிமிர் புதினைப் பற்றி நான் அதிகம் நினைப்பதில்லை", என்று கூறினார். ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளை நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்க அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளும் இன்று வரை யுக்ரேனுக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால், ரஷ்யா- யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழி இதுதான் என்றும், இதற்காக இந்த ஏவுகணைகளை பயன்படுத்த யுக்ரேனுக்கு அனுமதி வழங்குமாறும் மேற்கத்திய நட்பு நாடுகளிடம் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். படக்குறிப்பு, நீண்ட தூர ஏவுகணை 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் யுக்ரேன் மீது ரஷ்யா முழு வீச்சில் படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து, யுக்ரேன் மீது ரஷ்யா தினசரி குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தி வருகிறது. யுக்ரேனின் இராணுவ நிலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், எரிசக்தி வசதிகள் மற்றும் மருத்துவமனைகளைத் தாக்கும் பல ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் ரஷ்யாவால் ஏவப்படுகின்றன. இந்தத் தாக்குதல்களை நடத்த ரஷ்யா பயன்படுத்தும் தளங்களைத் தாக்க தங்களை அனுமதிக்காதது தங்களது தற்காப்புத் திறனைத் தடுக்கிறது என்று யுக்ரேன் கூறுகின்றது. கடந்த மாதம் யுக்ரேன் படைகள் ரஷ்ய எல்லையைத் தாண்டி திடீர் தாக்குதலை மேற்கொண்டன. இதனை தொடர்ந்து பிரிட்டன் வழங்கிய ஆயுதங்களை யுக்ரேன் 'தற்காப்புக்காக' பயன்படுத்த முழு உரிமை அந்நாட்டிற்கு இருப்பதாகவும், 'ரஷ்யாவிற்குள் இதனை பயன்படுத்தினால் தடுக்க மாட்டோம்' என்றும் பிரிட்டன் கூறியது. அமெரிக்கா இந்த ஆண்டின் தொடக்கத்தில் யுக்ரேனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கியது, ஆனால் இவற்றின் மூலம் ரஷ்யாவின் உள்புற இலக்குகளைத் தாக்க அனுமதி வழங்கப்படவில்லை. நேட்டோ நாடுகளுடன் நேரடி போர் ஏற்படும் சாத்தியம் உண்டாகும் என்ற ரஷ்ய அதிபர் புதினின் அச்சுறுத்தல்களால் அவர் பயமுறுத்தப்பட்டாரா என்று பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "யுக்ரேன் போரில் 'விரைவான தீர்வுக்கான வழி' என்பது 'புதின் உண்மையில் என்ன செய்கிறார்' என்பதில் தான் இருக்கிறது", என்று கூறினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான வெள்ளை மாளிகை சந்திப்பில் யுக்ரேன் குறித்து குறிப்பிட்ட படிநிலை அல்லது செயல்முறை பற்றி அல்லாமல் ஒரு உத்தி குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பாக இருந்தது என்று சர் கியர் ஸ்டார்மர் கூறினார். இஸ்ரேல்-காஸா இடையே நீடிக்கும் போர் குறித்தும் மத்திய கிழக்கு நிலவரம் குறித்தும் இருவரும் பேசியதாக அவர் தெரிவித்தார். அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பிற்கு முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி பேசுகையில், "ரஷ்ய பகுதிகளை தாக்குவதற்கு அமெரிக்க ஆயுதங்களை யுக்ரேன் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள வரம்புகளில் எந்த மாற்றத்தை கொண்டு வர திட்டமிடவில்லை" என்றார். பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வாஷிங்டனில் சந்தித்தார். கடந்த வெள்ளிக்கிழமையன்று, பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் 6 பேரை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி ரஷ்யா வெளியேற்றியது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் "முற்றிலும் ஆதாரமற்றவை" என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அலுவலகம் நிராகரித்தது. பிரிட்டனில் புதிதாக பதவி ஏற்ற தொழிலாளர் கட்சி அரசாங்கத்தையும், மாற இருக்கும் பைடனின் நிர்வாகத்தையும் சோதிப்பதற்காகவே புதின் இவ்வாறு செய்கிறார் என்று பிரிட்டன் பாதுகாப்பு ஆய்வாளர் ஜஸ்டின் க்ரம்ப் பிபிசி-க்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார். "ரஷ்யா ஏற்கனவே பிரிட்டனின் எதிரிகளுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளது. நேட்டோ உறுப்பினர்களின் நலன்களுக்கு எதிராக நாசவேலை, உளவு, அழிவு மற்றும் தகவல்/சைபர் சார்ந்த நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டு வருகின்றது". "இவை அனைத்தும் விரைவுபடுத்தப்படலாம். யுக்ரேனை எதிர்த்து ரஷ்யா போரிடுவதை கருத்தில் கொண்டு பார்க்கும் போது நேட்டோ நாடுகளுக்கு எதிராக போராட்டத்தை தொடுப்பது ரஷ்யாவிற்கு சவாலானதாக இருக்கலாம்", என்று அவர் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமையன்று, ரஷ்ய ஊடகமான RT-க்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்தது. இது "ரஷ்யாவின் உளவுத்துறை அமைப்புடன் தொடர்புடைய ஒன்றாக இருக்கிறது" என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. "ரஷ்ய ஊடகமான RT, அமெரிக்காவில் ஜனநாயகத்திற்கு குழிபறிக்க இரகசியமாக முயன்று வருகின்றது", என்று உயர்மட்ட அமெரிக்க அதிகாரியான ஆண்டனி பிளிங்கன் கூறினார். அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த RT செய்தி ஆசிரியர் மார்கரிட்டா சிமோன்யான், "RT ஊழியர்கள் பலரும் அமெரிக்காவில், அந்நாட்டின் உதவித்தொகை பெற்று படித்தவர்கள்" என்று கூறியுள்ளார். இவர் மீதும் அமெரிக்கா கடந்த வாரம் தடை விதித்துள்ளது. ரஷ்யா மீது அடுத்தடுத்து பல தடைகளை அமெரிக்கா விதித்து வருவது குறித்துப் பேசிய ரஷ்ய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மரியா ஸக்கரோவா, ரஷ்யா மீது தடைகளை விதிக்கும் நிபுணத்துவம் பெறும் புதிய வேலை அமெரிக்காவில் இருக்க வேண்டும் என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c0lw893jrzxo
  15. பட மூலாதாரம்,RAMJI படக்குறிப்பு, தலைவெட்டி முனியப்பனாக மாற்றப்பட்ட புத்தர் சிலை கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 59 நிமிடங்களுக்கு முன்னர் 2022-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக தமிழ் பௌத்தர்கள் கருதுகின்றனர். சேலம் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு எதிரே பெரியேரி கிராமம், கோட்டை சாலையில் அமைந்திருக்கும் தலைவெட்டி முனியப்பன் கோவிலில் வழிபடப்படும் முனியப்பன் சிலை, உண்மையில் புத்தர் சிலை என்பது தான் அந்த தீர்ப்பு. ஆனாலும், தீர்ப்பு வந்த 2 வருடங்கள் கழித்து, தற்போது தான் தலைவெட்டி முனியப்பன் கோவிலில் பௌர்ணமி நாளன்று மட்டும் பௌத்த முறைபடி வழிபாடு தமிழ் பௌத்தர்கள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். பௌத்த வழிபாடு தொடங்கினாலும், மற்றொரு தரப்பினர் அந்தச் சிலை தலைவெட்டி முனியப்பன்தான் என்று தொடர்ந்து வாதிடுகின்றனர். புத்தர் சிலை என்று வழங்கப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அறநிலையத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை மட்டுமே பௌத்த வழிபாடு உயர் நீதிமன்றம் தீர்ப்புக்குப் பிறகு, மாதம் ஒருமுறையாவது வழிபாடு நடத்த உரிமை வழங்க வேண்டும் என்று மாவட்ட சிறுபான்மை நல அலுவலகத்தில் சேலம் புத்தர் அறக்கட்டளை அறங்காவலர் எம்.ராம்ஜி வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில், ஜூலை மாதம் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தலைவெட்டி முனியப்பனாக அலங்கரிக்கப்பட்டிருந்த சிலையின் அலங்காரம் அனைத்தும் நீக்கப்பட்டு புத்த மத வழிபாடு முதன்முறையாக ஜூலை 21ம் தேதி நடத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஆகஸ்ட் 19ம் தேதி அன்று புத்த பிக்குகளுடன் இந்த வழிபாடு நடத்தப்பட்டது. “பல்வேறு அலுவலகங்களுக்கு கடிதம் எழுதிவிட்டோம். மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு எங்களுக்கான நியாயத்தைப் பெற்று தரவேண்டும் என்று எவ்வளவோ போராடிவிட்டோம். 2011ம் ஆண்டு ஆரம்பித்த சட்டப் போராட்டத்தில் ஓரடி எடுத்து வைக்கவே எங்களுக்கு 13 ஆண்டுகள் ஆகிவிட்டன,” என்கிறார் ராம்ஜி. முதலில் நீதிமன்ற உத்தரவின்படி அங்குள்ள இந்து அறநிலையத்துறையின் பலகை நீக்கப்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பௌத்தர்களின் உரிமைகளை நிலைநாட்ட இந்து அறநிலையத்துறை உதவவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைக்கிறார். வருகின்ற நாட்களில் இந்தக் கோவிலில் திருவிழாக்கள் நடத்தக் கூடாது என்றும், பொதுமக்கள் மத்தியில் நன்கொடை பெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். பட மூலாதாரம்,RAMJI படக்குறிப்பு, ஜூலை மாதம் பௌர்ணமி நாளன்று முனியப்பன் அலங்காரம் கலைக்கப்பட்டு புத்தராக வழிபடப்பட்ட சிலை இந்து சமயத்தவர் கூறுவது என்ன? கோவிலில் பௌத்த மதத்தினர் வழிபாடு நடத்தியது குறித்துப் பேசிய அந்தக் கோவில் அர்ச்சகர் முனுசாமியின் மனைவி சாந்தி, தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார். "என்னுடைய மாமனார், அவரின் அப்பா என்று கிட்டத்தட்ட மூன்று தலைமுறையாக நாங்கள் தான் இந்தக் கோவிலில் பூஜைகள் நடத்தி வருகிறோம். தற்போது அந்தச் சிலையின் தலையில் இருக்கும் சில வடிவங்களை பார்த்துவிட்டு அவர்கள் புத்தர் சிலை என்று கூறுகின்றனர். ஆனால் இங்குள்ள பொதுமக்கள் அனைவருக்கும் இது முனியப்பன் கோவில் தான். இது இந்துக் கோவில் தான் என்று மேல்முறையீடு செய்திருப்பதாக இந்து அறநிலையத் துறையினர் குறிப்பிடுகின்றனர். என்ன நடக்கிறது என்று பொறுமையாக தான் பார்க்க வேண்டும்," என்று சாந்தி கூறினார். இந்து சமய அறநிலையத்துறை பதில் இது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணைய அலுவலகம் அனுப்பிய எழுத்துப்பூர்வமான பதிலில், "தலைவெட்டி முனியப்பன் திருக்கோயில் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆணையர் மற்றும் திருக்கோயில் தக்கார் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு, எண்ணிடப்படாமல் நிலுவையில் உள்ளது. மேற்படி வழக்கு நிலுவையில் உள்ளதால் அதன் முடிவுக்கு பின்னரே மேல் நடவடிக்கைகள் தொடரக்கூடிய நிலை உள்ளது," என்று தெரிவித்துள்ளது. பிபிசியிடம் பேசிய சேலம் மாவட்ட இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், "பல ஆண்டுகளாக இந்த சிலை முனியப்பனாகவே மக்கள் மத்தியில் வழிபட்டு வருகிறது என்பதாலும் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு அளித்துள்ளோம்" என்று தெரிவித்தனர். பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, தொல்லியல் துறையின் அறிவிப்பு பலகை தொல்லியல் துறையின் ஆய்வு முடிவுகள் தெரிவித்தது என்ன? 2011-ஆம் ஆண்டு, அந்தப் பகுதியில் பணியாற்றி வந்த பி.ரங்கநாதன் என்பவரும், சேலத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் புத்தர் அறக்கட்டளையும், தலைவெட்டி முனியப்பனாக வணங்கப்பட்டு வரும் சிலை புத்தர் சிலை என்று கூறி வழக்கு தொடுத்தனர். நீண்ட நாட்கள் நடைபெற்று வந்த வழக்கில் திருப்பமாக அமைந்தது 2017-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. 2017-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி, உயர் நீதிமன்றம், மாநிலத் தொல்லியல் துறையினர் இந்தச் சிலையை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி அன்று ஆய்வுகளை நடத்தி முடிவுகளை உயர் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது மாநிலத் தொல்லியல் துறை. "அந்த புத்தர் சிலை தாமரை மலர் மீது புத்தர் இருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் எந்தவித அலங்காரமும் இல்லை. கால் மீது கால் போட்டு, அர்த்த பத்மாசன நிலையில் உள்ளது. 108 செ.மீ உயரம் உள்ள சிலையின் அகலம் 58 செ.மீ. ஆக உள்ளது. கைகள் தியான முத்திரையில் உள்ளன. சுருள்முடியுடன் கூடிய லக்‌ஷண முத்திரையும், தலையில் உஷ்னிஷா எனப்படும் முப்பரிமாண கலசமும் இடம் பெற்றுள்ளது." என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தொல்லியல்துறை அறிக்கையை ஆய்வு செய்த உயர்நீதிமன்றம், தலைவெட்டி முனியப்பனாக இந்தச் சிலையை வழிபடுவது தவறானது என்று தீர்ப்பு வழங்கியது. இந்து அறநிலையத்துறை அந்தக் கோயிலில் இந்து சமய வழிபாடு நடத்துவது தவறு என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. படக்குறிப்பு, சேலம் பெரியேரியில் தலைவெட்டி முனியப்பனாக வழிபடப்படும் சிலை பௌத்த மத வழிபாட்டு தலங்களை மீட்ட பின்பு என்ன செய்வது? "இங்கு பௌத்த மத வழிபாட்டுத் தலங்களை மீட்க வேண்டும் என்று பல பௌத்தர்கள் குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் மீட்கப்பட்ட பிறகு அந்த தலங்களை என்ன செய்ய வேண்டும் என்பதில் ஒரு தெளிவான முடிவு இல்லை. அது தான் தற்போது தலைவெட்டி முனியப்பன் கோவிலிலும் ஏற்பட்டுள்ளது," என்கிறார் துணைப் பேராசிரியரும், தமிழ் ஆராய்ச்சியாளருமான ஸ்டாலின் ராஜாங்கம். வேறொரு மத வழிபாட்டு முறையில் இருந்து சிலையை மீட்டு, அதனை என்ன செய்வது என்று தெரியாமல் விடும் பட்சத்தில் அந்தச் சிலை மீண்டும் கைவிடப்படும் சூழல் தான் ஏற்படும் என்கிறார் அவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் அவர், "இந்தச் சிலைக்குப் பின்னால் இருக்கும் வரலாறோ, பௌத்த மதம் இந்த மண்ணில் இருந்து எவ்வாறு நீங்கியது என்பது தொடர்பான வரலாறோ, பொதுமக்களுக்குத் தெரியாது. அவர்களைப் பொருத்தவரை இது அவர்களது குறைகளைப் போக்கும் ஒரு நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு தலம்," என்கிறார். "எடுத்தவுடன் அவர்களிடம் 'இது புத்தர் சிலை, எனவே நீங்கள் இங்கு இனி வரக்கூடாது' என்று கூறுவது சிக்கலை தான் உருவாக்கும். இரு பிரிவினரின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, எந்த வகையில் வழிபாடு நடத்தினாலும் அது நம்முடைய கடவுள் தான் என்ற நம்பிக்கை ஏற்படும் வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தியிருக்க வேண்டும்," என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். "தொல்லியல் துறை, இந்து அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் போன்றவை புத்த பிக்குகளை அழைத்து வந்து இந்த விவகாரத்தில் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசித்திருக்க வேண்டும்,” என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். பட மூலாதாரம்,MAHATHMA SELVAPANDIAN / FACEBOOK படக்குறிப்பு, சமண பௌத்தவியல் ஆய்வாளர் செல்வபாண்டியன் புத்தர் சிலைகள் என்ன ஆயின? சேலம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புத்தர் மற்றும் ஜைன தீர்த்தங்கரர்களின் சிலைகள் சிறு தெய்வங்களின் சிலைகளாகவும், எல்லைக் காவல் தெய்வச் சிலைகளாகவும் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பல சிலைகள் கவனிப்பாரின்றி ஆங்காங்கே கைவிடப்பட்ட நிலையில் உள்ளன என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலை பல்லவர்களின் காலமான கி.பி. 6 முதல் 9 வரை நடந்திருக்கலாம் என்று சமண-பௌத்தவியல் ஆராய்ச்சியாளர் செல்வபாண்டியன் கூறுகிறார். பக்தி இயக்கத்தின் காலமான இந்த காலத்தில் தான் பௌத்தம் தமிழ் மண்ணில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போனது என்று அவர் தெரிவிக்கிறார். "மதங்களுக்குள் இருக்கும் பகைமை ஒரு காரணமாக இருந்தாலும், ஆட்சியாளார்கள் பின்பற்றும் சமயங்களும், அந்த சமயப் பணிகளுக்காக வழங்கப்பட்ட நன்கொடைகளும் இதர சமயத்தை பின்பற்றும் நபர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களும் இதற்கு காரணமாக அமைந்திருக்கிறது," என்கிறார் செல்வபாண்டியன். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய புத்தர் சிலை ஆராய்ச்சியாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம், "மக்களிடம் வரலாறு குறித்த விழிப்புணர்வும், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் குறைந்து வருவது ஒரு காரணம். சமய காழ்ப்புணர்வு இருப்பது மற்றொரு காரணம்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce38lvewz4wo
  16. குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டோருக்கு எதிரான இரண்டு குற்றவியல் வழக்குகளை அமெரிக்காவின் ஜோர்ஜியா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் தேர்தலில் குறுக்கீடு செய்தமை தொடர்பில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரச சட்டத்தரணிகள் மேற்படி வழக்கில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி அறிவித்திருந்தார். 2020 ஆம் ஆண்டு தேர்தலில் ஜோர்ஜியாவில் டொனால்ட் ட்ரம்ப்பின் தோல்வியை முறியடிப்பதற்குச் சதி செய்தார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்து டொனால்ட் ட்ரம்ப் மற்றும் 14 இணை பிரதிவாதிகள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/டரமபறக-எதரன-கறறவயல-வழகககள-தளளபட/50-343734
  17. பூமியையே 9 நாட்கள் உலுக்கிய மெகா சுனாமி - கடந்த ஆண்டு 656 அடி உயர மெகா அலைகள் எங்கே எழுந்தன? பட மூலாதாரம்,JEFF KERBY படக்குறிப்பு, கிரீன்லாந்தில் உள்ள ஃப்யோர்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பூமியையே உலுக்கும் அளவிற்கு ஓர் அலையை தூண்டியது. கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, பிபிசி செய்திகள் - அறிவியல் நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கிரீன்லாந்தில் டிக்சன் ஃப்யோர்டு பகுதியில் (Fjord) ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு, ஒன்பது நாட்களுக்கு பூமியையே உலுக்கும் அளவிற்கு ஒரு பேரலை உருவாக வழிவகுத்தது. இந்த நிகழ்வினால் ஏற்பட்ட நில அதிர்வு சிக்னல்கள், உலகம் முழுவதும் உள்ள சென்சார்களில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பதிவாயின. இந்த சிக்னல்கள் எங்கிருந்து வருகின்றன என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்த நிலச்சரிவின் போது ஒரு பனிப்பாறை உருகி அதன்மேலிருந்த மலை சரிந்து விழுந்தால், 200 மீட்டர் அளவிற்கு பேரலை எழுந்தது. குறுகலாக உள்ள ஃப்யோர்டு பகுதியில் இந்த அலை சிக்கிக்கொண்டு, ஒன்பது நாட்களுக்கு முன்னும் பின்னுமாக நகர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தியது. காலநிலை மாற்றம் காரணமாக கிரீன்லாந்தில் உள்ள மலைகளை தாங்கிப் பிடிக்கும் பனிப்பாறைகள் உருகுகின்றன. இதனால் இது போன்ற நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மெகா சுனாமியின் தோற்றம் சர்வதேச விஞ்ஞானிகள் குழு மற்றும் டேனிஷ் கடற்படை இணைந்து இந்த நிகழ்வைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டன. அந்த ஆராய்ச்சி முடிவுகள் "சயின்ஸ்" இதழில் வெளியிடப்பட்டன. "கடந்த ஆண்டு இந்த சிக்னல்களை எனது சக பணியாளர்கள் கண்டறிந்த போது, அது பூகம்பம் போல் தெரியவில்லை. அந்த நேரத்தில், நாங்கள் அதை 'அடையாளம் தெரியாத நில அதிர்வு போல ஒன்று' என்று குறிப்பிட்டோம்", என்று இந்த விஞ்ஞானிகள் குழுவை சேர்ந்த ஒருவரும் லண்டன் பல்கலைக் கழக கல்லூரியை சேர்ந்தவருமான முனைவர் ஸ்டீபன் ஹிக்ஸ் நினைவு கூர்ந்தார். "ஒன்பது நாட்களுக்கு, ஒவ்வொரு 90 விநாடிகளுக்கு ஒருமுறை இது நிகழ்ந்தது". இந்த குழப்பமான சிக்னல் குறித்து விஞ்ஞானிகள் குழு இணைய தளத்தில் விவாதங்களை தொடங்கியது. "அதே நேரத்தில், கிரீன்லாந்தில் களப்பணி செய்து கொண்டிருக்கும் டென்மார்க்கை சேர்ந்த எனது சக பணியாளர்கள், ஃப்யோர்டு பகுதியில் தொலைதூரத்தில் சுனாமி ஏற்பட்டு இருப்பது குறித்த அறிக்கைகளை பெற்றனர். அதற்கு பிறகு தான் அவர்களுடன் நாங்களும் அப்பணியில் இணைந்தோம்", என்று முனைவர் ஹிக்ஸ் விளக்கினார். படக்குறிப்பு, டேனிஷ் ராணுவம் பகிர்ந்த டிக்சன் ஃப்யோர்டு பகுதியின் நிலச் சரிவு குறித்த புகைப்படம் இந்த குழு நில அதிர்வு குறித்த தரவுகளை பயன்படுத்தி இந்த சிக்னல்கள் கிழக்கு கிரீன்லாந்தில் உள்ள டிக்சன் ஃப்யோர்டு பகுதியில் இருந்து தான் வருகின்றன என்று கண்டறிந்தனர். இந்த சிக்னல்கள் தோன்றுவதற்கு முன்பு டேனிஷ் கடற்படையால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் இந்த பகுதியின் செயற்கைக்கோள் படங்கள் போன்றவற்றை இந்த ஆராய்ச்சிக்கு விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். ஃப்யோர்டு பகுதியில் உள்ள ஒரு ஓடைக்கு மேல் தூசியாலான மேகம் சூழ்ந்திருப்பதை செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்று காட்டியது. இந்த நிகழ்விற்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்ததில், ஒரு மலை சரிந்து பனிப்பாறையின் ஒரு பகுதி தண்ணீருக்குள் அடித்துச் சென்றது தெரியவந்தது. 25 எம்பயர் ஸ்டேட் கட்டடங்களுக்கு சமமான அளவிலான 25 மில்லியன் கன மீட்டர் பாறையானது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இதனால் தான் 200 மீட்டர் உயரத்தில் "மெகா சுனாமி" ஏற்பட்டது. இந்த நிகழ்விற்கு பின் எடுக்கப்பட்ட இப்பகுதியின் புகைப்படங்களில், எவ்வளவு உயரத்திற்கு அலை மேல் நோக்கி எழுந்துள்ளது என்பது குறித்து பனிப்பாறையில் ஏற்பட்ட குறியீடு மூலம் அறியலாம். பட மூலாதாரம்,COPERNICUS SENTINEL DATA, 2023/ESA படக்குறிப்பு, ஃப்யோர்டு பகுதியில் உள்ள ஒரு ஓடைக்கு மேல் தூசியாலான மேகம் சூழ்ந்திருப்பதை செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்று காட்டியது. 'அலையால் அதன் ஆற்றலைச் சிதறடிக்க முடியவில்லை' பொதுவாக நிலத்தடியில் ஏற்படும் நிலநடுக்கங்களால் பரந்த கடலில், அலை மேல் எழுந்து சுனாமி நிகழ்கின்றது. ஆனால் இப்பகுதி ஒரு குறுகிய நிலப்பரப்பு என்பதால் அந்த அலை சிக்கிக்கொண்டது. "இந்த நிலச்சரிவு பரந்த கடலில் இருந்து 200 கிலோமீட்டர் உள்ளே நடந்தது. மேலும் ஃப்யோர்டு நில அமைப்பு மிகவும் சிக்கலானது. எனவே அலையால் அதன் ஆற்றலைச் சிதறடிக்க முடியவில்லை", என்று முனைவர் ஹிக்ஸ் விளக்கினார். அலைகள் சிதறடிக்கப்படுவதற்கு பதிலாக, ஒன்பது நாட்களுக்கு முன்னும் பின்னுமாக நகர்ந்தது என்பதை விளக்க இந்த குழு ஒரு மாதிரியை உருவாக்கியது. "நீண்ட காலமாக, இவ்வளவு பெரிய அளவில் நீர் எழுவதை நாங்கள் பார்த்ததில்லை" என்று முனைவர் ஹிக்ஸ் கூறினார். கிரீன்லாந்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், மலையின் அடிவாரத்தில் உள்ள பனிப்பாறை உருகியதால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,WIETER BOONE படக்குறிப்பு, அதிர்ஷ்டவசமாக நிலச்சரிவு ஏற்பட்டபோது அந்த பகுதியில் யாரும் இல்லை. "அந்த பனிப்பாறை தான் இந்த மலையைத் தாங்கிக் கொண்டிருந்தது. அது உருகி மெல்லியதாக மாறிய போது மலையை தாங்குவதை நிறுத்தியது. காலநிலை மாற்றம் இப்போது இந்த பகுதிகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகின்றது", என்று முனைவர் ஹிக்ஸ் கூறினார். இந்த நிகழ்வு ஒரு தொலைதூர பகுதியில் நடந்தது. ஃப்யோர்டு பகுதியைக் காண சில ஆர்க்டிக் பயணக் கப்பல்கள் வருவதுண்டு. அதிர்ஷ்டவசமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்ட போது இந்த பகுதியில் யாரும் இல்லை. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் ஆர்க்டிக் பகுதியில் அதிகரித்து வருவதாக டென்மார்க் மற்றும் கிரீன்லாந்திற்கான தேசிய புவியியல் ஆய்வுகளின் (GEUS) முன்னணி ஆராய்ச்சியாளரான முனைவர் கிறிஸ்டியன் ஸ்வென்னெவிக் கூறினார். "ராட்சத, சுனாமியை உண்டாக்கும் நிலச்சரிவுகள், குறிப்பாக கிரீன்லாந்தில் அதிகரிப்பதை நாம் பார்க்க முடிகின்றது", என்று அவர் பிபிசி செய்திகளிடம் கூறினார். "இது போன்ற பாதிப்புகள் டிக்சன் ஃப்யோர்டு பகுதியில் மட்டும் நிகழவில்லை. இந்த நிகழ்வு இது போல முன் நடந்திடாத அளவில் ஏற்பட்டு இருப்பதால் இது குறித்து மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றது", என்றார். உலகெங்கிலும் புவியின் மேலோட்டை, காலநிலை மாற்றம் எவ்வாறு பாதிக்கின்றது என்பதை உணர்த்தும் முதல் நிகழ்வாக இந்த டிக்சன் ஃப்யோர்டு பகுதியின் நிலச் சரிவு இருக்கும் என்று முனைவர் ஹிக்ஸ் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cwylxn34qr0o
  18. ஜனாதிபதி தேர்தல் - 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமைதியான காலப்பகுதியில் பிரசாரம் மற்றும் சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் சமூக ஊடக வலையமைப்பை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை தயாரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தேர்தல் பிரசாரங்கள் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதோடு, 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் அமைதியான காலகட்டமாக காணப்படுகின்றது. இந்த காலப்பகுதியில் பிரச்சாரம் செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக ஊடக குழுக்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அமைதியான காலத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் அவதூறு பரப்புரைகளை நிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவதூறு பிரச்சாரங்கள் இந்த பிரச்சாரங்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி சமூக ஊடகங்களில் ஏற்கனவே வெளியிடப்பட்ட அவதூறு பிரச்சாரங்கள் போன்றவற்றை நீக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார். அமைதியான காலத்தில் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் முறை ஒன்றை தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/sl-president-election-2024-social-media-banned-1726320709#google_vignette
  19. Published By: DIGITAL DESK 3 14 SEP, 2024 | 12:19 PM ஆபிரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதன்முதலில் குரங்கம்மை தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. ஆபிரிக்க நாடான கொங்கோவில் 'எம் பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை நோய் முதலில் கண்டறியப்பட்டது. இதுவரை ஆபிரிக்காவில் குரங்கம்மைக்கு 107 பேர் உயிரிழந்துள்ளனர். 3,160 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளது. பெரியம்மையை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கிருமி தான் குரங்கம்மை நோயை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், உடல் வலி, உடல் சில்லிடுதல் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகள். மிகவும் தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு முகம், கை, மார்பு மற்றும் பிறப்புறுப்புகளில் கட்டிகள் தோன்றும். இறப்பு ஏற்படும். இந்நிலையில் குரங்கம்மைக்கான தடுப்பூசியை, டென்மார்க்கைச் சேர்ந்த, 'பவாரியன் நார்டிக்' எனும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்தது. பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பின் உலக சுகாதார ஸ்தாபனம் அந்த தடுப்பூசிக்கு நேற்று அனுமதி வழங்கியது. அந்த அனுமதியில், இந்த ஊசியை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தற்போது பயன்படுத்த வேண்டும். இரண்டு டோஸ்களாக இந்த தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். குழந்தைகளிடையே குரங்கம்மை அதிகம் பரவியிருந்தால், அந்த சூழலில் தடுப்பூசியின் ஆபத்துக்களை விட, நன்மை அதிகம் எனில் அப்போது பயன்படுத்தலாம் என, தெரிவிக்கப்ட்டுள்ளது. தடுப்பூசி தேவைப்படும் ஆபிரிக்க நாடுகளுக்கு அதிகளவில் கொள்முதல், நன்கொடை போன்றவை வாயிலாக விநியோகிக்க உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியாசெஸ் அழைப்பு விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/193658
  20. Published By: RAJEEBAN 14 SEP, 2024 | 10:36 AM தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் வடக்கு, கிழக்கு, மலையகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இலங்கையின் பரந்துபட்ட அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் விதத்தில் இடைக்கால அமைச்சரவையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். வடக்குகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் இடைக்கால அமைச்சரவை ஏற்படுத்துவதற்கு தனது கட்சி முயலும் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் இலங்கை அரசாங்கத்தை ஏற்படுத்த விரும்புகின்றோம். சிங்கள அரசாங்கத்தையில்லை, என தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் சாராத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்கும் முதலாவது அமைச்சரவையாக இது காணப்படும் என தெரிவித்துள்ளார். 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வடக்குகிழக்கு மலையகத்தை சேர்ந்த சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக தெரிவு செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/193648
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கட்டுரை தகவல் எழுதியவர், ஹிமான்ஷு தூபே பதவி, பிபிசி நிருபர் 14 செப்டெம்பர் 2024, 12:07 GMT புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு விரைவில் இந்தியா வரவுள்ளார். இந்த தகவலை மாலத்தீவு அதிபர் அலுவலகத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் ஹீனா வலீத் தெரிவித்துள்ளார். முகமது முய்சுவின் இந்தியப் பயணம் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக மாலத்தீவு அரசாங்கத்தின் இரண்டு இணை அமைச்சர்களான மரியம் ஷியூனா மற்றும் மல்ஷா ஷெரீப் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்கள் இருவரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைப் பற்றி கடுமையாக விமர்சித்து கருத்துகளை வெளியிட்டவர்கள். அதற்காக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். முன்னதாக அதிபர் முகமது முய்சு தனது தேர்தல் பிரசாரத்தின் போது மாலத்தீவில், 'இந்தியாவே வெளியேறு' என்ற கோஷத்தை முன்வைத்தார். இதனால் முய்சு சீனாவின் பக்கம் சாயும் தலைவராகக் கருதப்பட்டார். இந்தியா - மாலத்தீவு உறவு முய்சு மாலத்தீவில் ஆட்சி அமைத்தவுடன், இந்தியாவுடனான மாலத்தீவின் ராஜதந்திர உறவுகளில் பதற்றமான சூழல் உருவானது. இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி மேற்கொண்ட லட்சத்தீவு பயணம் இரு நாட்டு உறவில் சலசலப்பை ஏற்படுத்தியது. மோதி லட்சத்தீவில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, அங்கு சுற்றுலா செல்லுமாறு இந்திய மக்களை கேட்டு கொண்டார். இதன் காரணமாக மாலத்தீவுக்கு எதிராக இந்தியர்களிடையே லட்சத்தீவு சுற்றுலா ஊக்குவிக்கப்படுகிறது என்ற விவாதம் சமூக வலைதளங்களில் வேகமெடுத்தது. முய்சு ஆட்சியில் அமைச்சராக இருந்த மரியம் ஷியுனா, பிரதமர் மோதியின் புகைப்படங்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளை எக்ஸ் தளத்தில் (முன்பு டிவிட்டர்) பதிவிட்டார். பிரதமர் மோதியை இஸ்ரேலுடன் தொடர்புபடுத்தி அவர் விமர்சித்தார். வேறு சிலரும் பிரதமர் மோதியை விமர்சித்தனர். இதனையடுத்து இரண்டு அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மோதி மீது மாலத்தீவு அமைச்சர்கள் முன்வைத்த விமர்சனத்தால் அதன் சுற்றுலாத்துறை சரிவை சந்தித்தது. மாலத்தீவின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் சுற்றுலாத் துறையில் மந்தநிலை ஏற்பட்டது. மாலத்தீவு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. மாலத்தீவு சுற்றுலாத் துறையின் தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டு ஜனவரியில் சுமார் 13 ஆயிரம் இந்தியர்களே மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். இந்த எண்ணிக்கை 2023 ஜனவரியில் 17 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மோதி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற போது, முகமது முய்சு புதுடெல்லிக்கு வருகை தந்தார். மாலத்தீவில் இருந்த இந்திய ராணுவ வீரர்களை படிப்படியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவும் முகமது முய்சு முடிவு செய்தார். ஆனால் இந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோதி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற போது, முகமது முய்சு புதுடெல்லிக்கு வருகை தந்தார். இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான தற்போதைய உறவுகள் குறித்து, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் சர்வதேச விவகாரங்களின் பேராசிரியர் ஹேப்பிமோன் ஜேக்கப், “நேபாளம் மற்றும் பூடானைப் போலவே, இந்தியா உடனான மாலத்தீவின் உறவுகள் கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் சிக்கலானதாக மாறியது. ஏனெனில், சீனா தெற்காசியாவில் தனது செல்வாக்கை அதிகரித்துள்ளது. சமீபத்திய சூழலை வைத்து பார்க்கும் போது, வங்கதேசமும் இந்தியாவிற்கு சாதகமாக இல்லை." "அண்டை நாடுகளில் சீனா தனது செல்வாக்கை அதிகரித்து வருவதால், இந்தியா யோசித்து செயல்பட வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில், வல்லரசாக மாற விரும்பும் ஒரு நாடு, தனது சிறிய அண்டை நாடுகளுடன் வலுவான கூட்டாண்மை வைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்” என்று விளக்கினார். அதிபர் முய்சுவின் 'இந்தியாவே வெளியேறு' பிரசாரம் மாலத்தீவில் ஆட்சிக்கு வந்த பிறகு, அதிபர் முகமது முய்சு இந்தியாவிடம் இருந்து விலகி நிற்பதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தினார். உதாரணமாக, இதற்கு முன்புவரை, மாலத்தீவு அதிபராக பதவி ஏற்பவர்கள், முதல் பயணமாக இந்தியா வருவது வழக்கம். ஆனால், அதிபர் முகமது முய்சு முதல் வெளிநாட்டுப் பயணமாக துருக்கி சென்றார். மாலத்தீவில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முகமது முய்சு `இந்தியாவே வெளியேறு’ என்ற பிரசாரத்தை முன்வைத்தார். தான் ஆட்சிக்கு வந்தால், மாலத்தீவு மண்ணில் இருந்து இந்திய படைகளை அகற்றுவதாகவும், இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை கட்டுப்படுத்துவதாகவும் முய்சு உறுதியளித்திருந்தார். மாலத்தீவில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் வேட்பாளர் முகமது முய்சு வெற்றி பெற்றார். இவர் அதிபராவதற்கு முன், மாலத்தீவு தலைநகர் மாலேயின் மேயராக இருந்தார். அவர் நவம்பர் 2023 ஆம் ஆண்டு மாலத்தீவின் எட்டாவது அதிபராக பதவியேற்றார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை சந்தித்தார் மாலத்தீவு - இந்தியா உறவுகளில் மாற்றம் ஜிண்டால் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் அஃபயர்ஸின் மூலோபாய மற்றும் சர்வதேச முயற்சிகள் துறையின் டீன் பேராசிரியர் (முனைவர்) மோகன் குமார் இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகளின் மறுபக்கத்தைச் சொல்கிறார். அவர் கூறுகையில், "ஒரு வருடத்திற்கு முன்பு மாலத்தீவு உடனான உறவுகள் தொடர்பாக இந்தியா எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலையில் இப்போது ஒரு பெரிய மாற்றம் காணப்படுகிறது. மீண்டும் இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகள் சரியான பாதையில் இருப்பதாகத் தெரிகிறது. இது இரு நாடுகளுக்கும் பலனளிக்கும்" என்கிறார். மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அணுகுமுறை மாறியது குறித்து பேராசிரியர் மோகன் குமார் கூறுகையில், "இந்தியா உடனான உறவு மோசமடைந்தால், மாலத்தீவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மாலத்தீவு புரிந்துகொண்டது" என்றார். "இந்த காரணத்திற்காக தான் மாலத்தீவு இப்போது தனது அணுகுமுறையை மாற்றியுள்ளது. அதன் நலன்களைப் பாதுகாப்பதற்காக, சீனா மற்றும் இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகளுடனும் சமநிலையை ஏற்படுத்தி முன்னேற முயற்சிக்கிறது. இந்தியா உடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பது எந்த வகையிலும் தங்களுக்கு பயனளிக்காது என்பதை மாலத்தீவு காலப்போக்கில் உணர்ந்துள்ளது” என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மாலத்தீவில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 'இந்தியாவே வெளியேறு' பிரசாரத்தைத் தொடங்கினார். இந்தியப் பெருங்கடலுக்கு என்ன தொடர்பு? இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான சலசலப்புக்கு மத்தியில் இந்தியப் பெருங்கடல் மீதான சீனாவின் ஆர்வம் அதிகரித்து வருவதாக பேராசிரியர் குமார் கூறுகிறார். "இந்தியப் பெருங்கடல் மீது சீனா காட்டும் ஆர்வம் வர்த்தகம் செய்வதற்கு மட்டும் அல்ல, உண்மையில் அது சீனாவின் மூலோபாயத்தின் ஒரு முக்கிய பகுதி", என்பது அவரது கருத்து. இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு இந்தியாவின் முக்கியமான அண்டை நாடாகும். இந்தியாவின் பார்வையில் மாலத்தீவின் புவியியல் இருப்பிடம் மிகவும் முக்கியமானது. மாலத்தீவு இந்தியப் பெருங்கடலின் முக்கிய கடல் வழிகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த வழித்தடம் வழியாக பெருமளவு சர்வதேச வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த வழியாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது. இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, இந்தியாவின் 50 சதவீத வர்த்தகம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ளது. இந்தியாவின் 90 சதவீத வர்த்தகம் இந்தியப் பெருங்கடல் வழியே நடைபெறுகிறது. இந்தியா மற்றும் மாலத்தீவை தவிர, இந்தியப் பெருங்கடல் மீது சீனாவின் ஆர்வம் அதிகரித்து வருவது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் அகிலேஷ் புரோஹித் கூறுகையில், "சீனா எப்போதுமே இந்தியாவை ஆசியாவில் பெரிய சவாலாகவே பார்க்கிறது. இதுவே சீனா- இந்தியா சார்ந்த விஷயங்களில் அடிக்கடி ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டே இருக்கிறது." "இந்தியப் பெருங்கடல் மீதான அதிகரித்து வரும் ஆர்வம் சீனாவின் புவிசார் அரசியல் உத்தியின் ஒரு பகுதி. உண்மையில், இதன் கீழ், இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்க சீனா விரும்புகிறது. இதனால் நேரம் வரும் போது, அவற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்த முடியும்" என்று விளக்கினார். மாலத்தீவு இந்தியா பக்கம் மீண்டும் திரும்புமா? மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியா வருவதற்கு முன்னதாக, மாலத்தீவு அமைச்சர்கள் இருவர் ராஜினாமா செய்திருப்பது குறித்து, அகிலேஷ் புரோகித் கூறுகையில், "பிரதமர் மோதி மீது சர்ச்சைக்குரிய விமர்சனங்களை வைத்த இரண்டு மாலத்தீவு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதன் பிறகு தான் அதிபர் முகமது முய்சு இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வது உறுதி செய்யப்பட்டது. இது தற்செயல் நிகழ்வு அல்ல, மாலத்தீவு இந்தியாவுடனான உறவை சரி செய்ய விரும்புகிறது என்பது தெளிவாகிறது” என்றார். அவரது வருகை தாக்கத்தை ஏற்படுத்துமா? இதற்கு பதிலளித்த புரோஹித், "மாலத்தீவின் வருமானத்தில் பெரும்பகுதி சுற்றுலாவில் இருந்தே கிடைக்கிறது. மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததால், சமூக வலைதளங்களில் மாலத்தீவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது. இது மாலத்தீவுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியது " "மாலத்தீவு மீண்டும் அதே நிலையை எதிர்கொள்ள விரும்பவில்லை. அதனால் தான் இந்தியாவுடனான உறவை சீராக்க நடவடிக்கை எடுத்து வருகிறது." என்றார். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cpqzjngld7no
  22. வாகன இறக்குமதியை நிறுத்திவிட்டு பசி பட்டினியில் வாடு மக்களுக்கு உணவளியுங்கள் - இராதாகிருஸ்ணன் எம்.பி. 14 SEP, 2024 | 06:24 PM மலையக மக்களுக்கு வாகன இறக்குமதி தேவையில்லை. வாகன இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு பசி பட்டினியில் இருக்கும் மக்களுக்கு முதலில் உணவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணி, மலையக இளைஞர் முன்னணி இணைந்து ஏற்பாடு செய்த இளைஞர் மாநாடு இன்று (14) ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் நடைபெற்றது. இராதாகிருஸ்ணன் ராஜாராம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் டாக்டர் அப்துல் கலாம் குடும்பத்தின் பேரனும் சர்வதேச அப்துல் கலாம் அறக்கட்டளையின் ஸ்தாபக இணைத் தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜே.எம்.ஜே சேக் சலீம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விசேட அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து வெளிவருகின்ற இதயக்கனி சஞ்சிகையின் வெளியீட்டாளரும் பிரதம ஆசிரியருமான இதயக்கனி எஸ்.விஜயன் ஆகியோரும் கலந்துகொண்டனர். அத்தோடு, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் சங்கரன் விஜயசந்திரன், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன், பொருலாளர் தாழமுத்து சுதாகரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பெருந்திரளான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதன்போது உரையாற்றிய இராதாகிருஷ்ணன் எம்.பி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலையில் கூறினார்... வாகன இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று. முதலில் மலையக மக்களுக்கு வாகன இறக்குமதி தேவையில்லை. வாகன இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு பசி பட்டினியில் இருக்கும் மக்களுக்கு முதலில் உணவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன இறக்குமதியை செய்து அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் சூழ்ச்சியையே செய்கின்றார், ரணில் விக்கிரமசிங்க. எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/193706
  23. வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை, இளைஞரால் துஷ்பிரயோகம் Published By: DIGITAL DESK 3 14 SEP, 2024 | 04:36 PM வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை (14) சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக அவர்களுக்கு கிடைத்த இரகசிய தவலையடுத்து பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை மீட்ட பொலிஸார் குறித்த சிறுமியிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர், வைத்திய பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணைகளின் போது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் குறித்த சிறுமியை தந்தை துஷ்பிரயோகம் செய்தமை தெரியவந்துள்ளதுடன், குறித்த சிறுமியின் வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவரும் கடந்த மாதம் 28 ஆம் திகதி குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், இளைஞரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த தந்தை தனது மூத்த மகளை 2020 ஆம் ஆண்டு துஷ்பிரயோகம் செய்த நிலையில் கைது செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/193692
  24. தான் சொல்லிக் கேக்கவில்லை என்று தான் எழுதுகிறார் அண்ணை.
  25. 11 SEP, 2024 | 04:48 PM கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவுக்கு தமது ஆதரவை தெரிவித்தபோது, மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் அந்த முடிவு தவறானதென நான் நேரடியாகவே சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்கான நியாயபூர்வமான ஆதாரங்களையும் நான் அவருக்கு சொல்லியிருந்தேன். அதிலே மிக பிரதான விடயமாக நான் கூறியிருந்த காரியம் ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுகிறபோது ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரோடு இணைந்து செய்துவந்த கருமங்களில் சிலவற்றை உடனடியாக செய்து முடிக்க இயலும் என்பதாகும். ஏனெனில், ரணில் தனக்கு ஆதரவு தருபவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டிய ஒரு கட்டாய தேவைப்பாடு உள்ள ஒரு நிலையில் இருக்கிறார். அது மாத்திரமல்ல, கடந்த நல்லாட்சி காலத்தில் பல எதிர்ப்புகளையும் தாண்டி ஒரு வரைபு யாப்பினை செய்து முடித்திருக்கிறார். ஆகையினாலே ஐந்தே சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி எமது மக்களின் அடிப்படை தேவைகளில் சிலவற்றினை நாம் நிறைவேற்றலாம் என கூறியிருந்தேன். ஆனால், பங்காளிக் கட்சிகள் கூடி ஒரு தீர்மானத்தினை எடுத்துவிட்டார்கள் என சம்பந்தன் ஐயா தெரிவித்தார். வாக்கெடுப்பு இடம்பெறுகின்ற நாள் காலையிலே தற்போது இராஜாங்க அமைச்சராக உள்ள சகோதர இனத்தினை சேர்ந்த எனது நண்பர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்கள் கட்சியில் இருந்து பலர் ரணிலுக்கு ஆதரவு தருவதற்கு இணங்கியுள்ளதாகவும் அவர்கள் யார் என்பதனையும் எனக்கு தெரியப்படுத்தினார். இந்த தகவலையும் நான் சம்பந்தன் ஐயாவுக்கு தெரியப்படுத்தியிருந்தேன். அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த தீர்மானம் அரசியல் களத்தை சரியாக புரிந்து எடுத்த ஒரு தீர்மானமாக இருக்கவில்லை என்பது எனது உறுதியான நிலைப்பாடு. அதே வழியில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி எடுத்துள்ள தீர்மானமும் அரசியல் களத்தினை தூர நோக்கில் சிந்திக்காத தீர்மானமாகவே நான் கருதுகிறேன். அதற்கான காரணங்கள் பலவுண்டு. 1. தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையிலான முடிவு. கடந்த காலங்களிலும் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை அடிப்படையாகக் கொண்டே எவரை ஆதரிப்பது என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. ஆனால், தமிழர்கள் வாக்களித்துச் வென்றவர்கள் முழுமையாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள காரியங்களை நடைமுறைப்படுத்தியது இல்லை. அதைப்போன்றே தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து தோற்ற வேட்பாளர்களும் தமிழர் அபிலாசைகளை பூர்த்தி செய்ததில்லை. ஆகக்குறைந்தது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதற்கு குரல் கொடுக்கவே இல்லை. ஆகையினாலே தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளவற்றினை கொண்டு ஆதரிப்பதும் எதிர்ப்பதும் என்பது எம்மை நாமே தேற்றிக்கொள்ளும் ஒரு செயற்பாடு மாத்திரமே. 2. தமிழ் அரசுக் கட்சியின் உட்கட்சி விவகாரம் தமிழ் மக்களை பெருபான்மையாக பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தமிழ் அரசுக்கு கட்சியின் உட்கட்சி பிரச்சினையானது அதன் எதிராளி கட்சிகளுக்கு தீனி போடுவதாக அமைந்துள்ளது. இதனால் தமிழ் அரசுக் கட்சி இன்று பல துண்டுகளாக பிரிந்துள்ளது. அதனை மிக அண்மைக்காலங்களில் அதன் தலைவர்கள் வெளியிடும் எதிரும் புதிருமான அறிக்கைகளில் இருந்து நாம் கண்டுகொள்ளலாம். ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகத்தினை சரிவர செய்ய முடியாமல் திணறுகின்ற தமிழ் அரசுக் கட்சியானது நாட்டின் ஜனாதிபதியோடு அல்லது அரசாங்கத்தோடு பேரம் பேசுகின்ற வலிமையை இழந்து நிற்பதாகவே நான் காண்கின்றேன். முன்னரெல்லாம் இந்திய வெளிவிவகார அமைச்சரோ அல்லது வேறு உயர் அதிகாரிகளோ விஜயம் செய்கின்றபோது தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினை மாத்திரம் சந்திப்பதே வழமையாக இருந்தது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் அந்த நிலைமை மாறியுள்ளது. இந்த யதார்த்தத்தினை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். மீண்டும் ஏகோபித்த ஒருமித்த வழியில் பயணிக்கவில்லையென்றால் வருகின்ற பொதுத்தேர்தல்களில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஓரங்கட்டப்படுவதை தவிர்க்க முடியாது. இந்த உட்கட்சி பிரச்சினை இன்று தமிழ் பொது வேட்பாளர் என்னும் ஒரு புதிய வேட்பாளரை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு வருவதற்கு வழி வகுத்துள்ளது. அரியநேத்திரன் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச் செயலாளராக வருவதனை ஸ்ரீதரன் விரும்பியிருந்தார் என்பது அப்பட்டமான உண்மை. அதே ஸ்ரீதரன் அவர்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து பேசினார் என்பதும் உண்மை. எனவே இலங்கை தமிழ் அரசு கட்சி கொள்கை ரீதியில் இணங்காத ஒரு விடயத்துக்கு அந்த கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவரும் அதன் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட தலைவரும் இணங்கி செயற்படுவது வேண்டுமென்றே கட்சியினை கீழே வீழ்த்தும் செயலாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்களின் பேச்சுக்களை கேட்கின்றபோதும் அவர்களது அறிக்கைகளை பார்க்கின்றபோதும் இந்த தேர்தலை ஒரு முக்கியமான தேர்தலாக அவர்கள் கணிக்கவில்லை என்பது புலனாகிறது. யார் தெரிவானாலும் பரவாயில்லை என்கின்ற ஒரு மனோநிலையே காணப்படுவதாக நான் காண்கின்றேன். கடந்த தேர்தல்களில் ஒரு பொது எதிரியாக ராஜபக்ஷ குடும்பம் இருந்தமையினால் தமிழ் மக்களின் வாக்கு இலங்கை தமிழ் அரசு கட்சி காட்டிய சின்னத்துக்கு சென்றது. ஆனால், இம்முறை களத்தில் உள்ள முன்னணி வேட்பாளர்கள் மூவரும் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆகவே, தமிழ் மக்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி காட்டுகின்ற சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இல்லை. ஆகவே, இம்முறை தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கு தமிழ் அரசியல் தலைமைகளின் ஒற்றுமையின்மை மிக முக்கிய காரணமாகும். மிக முக்கியமாக இந்த தேர்தலில் அரியநேத்திரன் அதிக வாக்குகளை பெறுவதற்கு இதர கட்சிகளோடு சேர்ந்து ஸ்ரீதரனும் உழைப்பார். தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு ஆதரவு தெரிவிக்கும் நபரை விட அரியநேத்திரனும் ரணில் விக்கிரமசிங்கவும் அதிக வாக்குகளை எடுக்க வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் பொதுச் சபையில் உள்ள கட்சிகள் மும்முரமாக இயங்கும் என்பதில் ஐயமில்லை. அது அவ்வாறு நடைபெறுகின்ற சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிளவினை தடுக்க முடியாது. 3. தமிழ் மக்களின் வாக்கு இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்கு பிளவடைவது முழு நிச்சயம். பிரதான வேட்பாளர்களில் எவரும் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவினை பெறமுடியாது என்பது உண்மை. தாம் ஆதரவு கொடுக்கின்ற சஜித் பிரேமதாச அதிகமான வாக்குகளை பெற வேண்டும் என தீவிர பிரச்சார பணிகளில் தமிழ் அரசுக் கட்சி இறங்கவில்லை. இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கின்ற நிலையில் கடைசி வாரத்தில் கள நிலவரங்கள் கணிசமான அளவு மாற்றம் அடையும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மிக முக்கியமாக இந்த தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிக்கப்போகிறார்கள் என்பதும் உன்னிப்பாக அவதானிக்கபடவேண்டிய ஒரு விடயமாகும். கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு தமிழ் பிரதேசங்கள் ஒரே நிலைப்பாட்டில் வாக்களித்திருந்தமையை நாம் காணலாம். ஆனால், இம்முறை தேர்தலில் அது அவ்வாறு இருக்குமா என்பது சந்தேகமே. எனது கணிப்பின் பிரகாரம், கிழக்கு மக்களின் வாக்கு பெரும்பாலும் ரணிலுக்கும் தமிழ் பொது வேட்பாளருக்கும் கிடைப்பதற்கான அதிக சாதித்தியக்கூறுகள் காணப்படுகின்றன. அதேவேளை வடக்கில் ஒரு சில தேர்தல் தொகுதிகளில் மாத்திரம் சஜித் முன்னிலை பெறுவார். ஏனைய பிரதேசங்களில் அவர் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்காது என்பது எனது ஊகம். தமிழ் மக்களின் வாக்குகள் இப்படியாக பிரிந்து போகின்ற பட்சத்தில் தமிழ் மக்கள் பேரம் பேசுகின்ற சக்தியை இழப்பது மாத்திரமல்ல, இணைந்த வடகிழக்கு என்னும் கோரிக்கையை நாம் எமது அரசியல் அபிலாசைகளில் இருந்து நீக்கவேண்டிய ஒரு கட்டாயத்துக்கும் உள்ளாவோம். இது எமது 70 வருட போராட்டத்துக்கு விழுந்த ஒரு பெரும் அடியாக காணப்படும். தேசிய பிரச்சினை தமிழ் மக்களின் மிகப் பெரிய கோரிக்கையான இனப்பிரச்சினைக்கான தீர்வினை எந்தவொரு வேட்பாளரும் தமது பிரதான குறிக்கோளாக இந்த தேர்தலில் முன்வைக்கவில்லை. அது குறித்து அவர்களது பிரச்சார மேடைகளிலும் அவர்கள் பேசியது இல்லை. மூன்று பிரதான வேட்பாளர்களும் பொருளாதாரம் மற்றும் ஊழல் ஒழிப்பு போன்ற விடயங்களை மாத்திரமே முன்வைத்து இந்த தேர்தலில் களமாடுகிறார்கள். ஆகவே இவர்களோடு தேர்தலுக்கு முன்னரான பேரம் பேசல் என்பது சாத்தியமற்ற விடயமாகும். எனவே தேர்தலின் பின்னர் யார் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை சிங்கள பேரினவாதத்தின் எதிர்ப்புகளை தாண்டி நடைமுறைப்படுத்துவார் என்பதை மையமாக கொண்டே எமது தமிழ் மக்களின் வாக்குகள் பாவிக்கப்படவேண்டும். எனவே, பௌத்த சிங்கள பேரினவாத சக்திகளை கையாளக்கூடிய ஆளுமை சஜித்துக்கா, அனுரவுக்கா, ரணிலுக்கா உண்டு என்பதைக் கொண்டே தமிழ் மக்களின் அரசியல் பயணம் இருக்க வேண்டும். தமிழ் மக்கள் தமக்கு வாக்கு அளித்தாலும் அளிக்காவிட்டாலும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான பொறிமுறையும் அறிவும் அதனை கையாளக்கூடிய பக்குவமும் உள்ள ஒருவருக்கு வாக்களிப்பதே சிறந்தது. ஊழல் பொருளாதார பிரச்சினை மற்றும் போதைவஸ்து பிரச்சினைகள் அரசியல் தலைவர் பொறுப்பெடுத்து தீர்க்கின்ற பிரச்சினைகள் அல்ல. அவை நாட்டிலுள்ள நிறுவனங்கள் மற்றும் சட்டங்கள் மூலம் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள். ஆனால், அரசியல் தீர்வென்பது நாட்டின் தலைவர் பொறுப்பெடுக்க வேண்டிய பிரச்சினை. அது சிக்கல் நிறைந்தது. ஆகவே, ஜனாதிபதியாக வருகின்ற ஒருவர் அத்தகைய சவால்களுக்கு முகங்கொடுக்க துணிந்தவராக இருக்க வேண்டும் என்பது இன்றியமையாததாகும். - ஆர். பாலச்சந்திரன் மறைந்த முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனின் ஊடக செயலாளர். https://www.virakesari.lk/article/193424

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.