Everything posted by ஏராளன்
-
க.பொ.த சாதரண தரப் பரீட்சைச் செய்திகள்
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வாரங்களுக்குள் வெளியாகும் - கல்வி அமைச்சர் Published By: DIGITAL DESK 3 14 SEP, 2024 | 03:50 PM 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படவுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெறவுள்ளது. நீண்ட காலதாமதத்தை எதிர்கொண்ட கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும், 2025 ஆம் ஆண்டில் பரீட்சைகள் காலதாமதம் இன்றி உரிய நேரத்தில் நடைபெறும் என உறுதியளித்துள்ளார். https://www.virakesari.lk/article/193678
-
குளிர்சாதனப் பெட்டிகளால் ஏற்படும் விபத்துகளை தடுப்பது எப்படி? - பராமரிக்கும் வழிகள்
பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி இரண்டு பெண்கள் பலியாகியுள்ளனர். மதுரை மாவட்டம், பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் பெண்கள் விடுதி ஒன்றில் செப்டம்பர் 12, வியாழன், காலை 4.30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலியானோர் பிரமிளா சௌத்திரி (50), சரண்யா (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட புகையில் மூச்சுத் திணறிய பெண்களை பத்திரமாக மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2022ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் ஏற்பட்ட இதேபோன்ற விபத்து ஒன்றில் சிக்கி இரண்டு பெண்கள் உட்பட மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளிர்சாதனப் பெட்டிகள் உட்பட மின்னணு இயந்திரங்கள் அனைத்துமே முறையாகப் பராமரிக்கப்படுகின்ற போது இத்தகைய விபத்துகள் பெருமளவில் தவிர்க்கப்படலாம். அதற்கு உங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளை எப்படிப் பராமரிப்பது எனத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதுபோன்ற விபத்துகளை தவிர்ப்பது எப்படி? குளிர்சாதனப் பெட்டியை புதிதாக வாங்கும்போது கவனிக்க வேண்டியது என்ன? ஏற்கெனவே பயன்படுத்திய ஒரு குளிர்சாதனப் பெட்டியை மற்றொருவர் வாங்கும்போது எதையெல்லாம் செய்ய வேண்டும்? இங்கு விரிவாகக் காண்போம். தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுவது என்ன? கோவை மாவட்டத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக குளிர்சாதனப் பெட்டிகள் தொடர்பான தொழில்நுட்ப பிரச்னைகளைக் கவனித்து வரும் ராஜேஷ், பெரும்பாலான சூழல்களில் முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதே இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் என்று குறிப்பிடுகிறார். தனியார் நிறுவனம் ஒன்றின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வரும் அவர், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குளிர்சாதன பெட்டியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். "பொதுவாக நம் வீடுகளில் குளிர்சாதனப் பெட்டிகளை குளிர்சாதனப் பெட்டிகளாக, மின்னணு கருவியாகப் பார்ப்பதில்லை. மேலே துணியைப் போட்டு மூடி வைத்திருப்பது. சரியாக சுத்தம் செய்யாமல் வைத்திருப்பது, அதன் அருகிலேயே பழைய துணிகள், குப்பைகள், அட்டைப் பெட்டிகள் போன்று எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களைப் போட்டு வைத்திருப்பது போன்றவற்றை நாம் பார்த்திருப்போம். முதலில் இவற்றைத் தவிர்க்க வேண்டும்," என்கிறார் ராஜேஷ். "திடீரென மின் இணைப்பில் ஒரு பிரச்னை ஏற்பட்டு 'ஷார்ட் சர்க்யூட்' ஆகும் பட்சத்தில் வயரில் இருந்து தீப்பற்றிக் கொள்வது இத்தகைய பொருட்கள்தான். ஆனால் பொதுமக்கள், குளிர்சாதனப் பெட்டிதான் வெடித்து விபத்து ஏற்படுத்திவிட்டதாகக் கூறுவார்கள்," என்று மேற்கோள் காட்டினார். செய்யக் கூடாதவை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. மக்களுக்குத் தேவையான அனைத்து செய்திகளும் அவர்கள் கைகளுக்கே வந்துவிடுகிறது. அதனால்தான் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் மின்னணு கருவிகளில் ஏற்படும் பிரச்னைகளை பொதுமக்கள் தாங்களே சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் 'ரிப்பேர்' பணிகளை மேற்கொள்வதாகவும் கூறுகிறார் ராஜேஷ். "யூடியூப் போன்ற தளங்களுக்குச் சென்று அங்கே கிடைக்கும் லட்சக்கணக்கான வீடியோக்களில் ஒன்றைத் தேர்வு செய்து அதில் கூறியிருப்பது போன்றே, உதிரி பாகங்களை வாங்கி வைத்து ரிப்பேர் பார்க்கின்றனர். ஆனால் இவை பாதுகாப்பான முடிவுகளைத் தருவதில்லை," என்கிறார் அவர். மேலும் மின்னணு சாதனங்களைப் பொறுத்தவரை, என்னவெல்லாம் செய்யக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்துகிறார்: சுயமாக குளிர்சாதனப் பெட்டிகளை ரிப்பேர் செய்யும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். விலை குறைவாகக் கிடைக்கிறது என்று போலியான உதிரிபாகங்களை வாங்கி அதை குளிர் சாதனப் பெட்டிகளில் பொருத்த வேண்டாம். கம்பிரஷர் அருகே இருக்கும் பகுதிகளில் உள்ள வயர்களின் இணைப்பைத் துண்டித்தல் அல்லது துண்டித்திருக்கும் இணைப்பை இணைத்தல் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். ஸ்டெபிலைசர்களை பொறுத்தவரை ஐ.எஸ்.ஓ தரச்சான்று இல்லாத தயாரிப்புகளை வாங்க வேண்டாம். துணி, அட்டைப் பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை குளிர்சாதன பெட்டிகளுக்கு அருகே வைக்க வேண்டாம். என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கம்பிரஷர் அருகே இருக்கும் பகுதிகளில் உள்ள வயர்களின் இணைப்பைத் துண்டித்தல் அல்லது துண்டித்திருக்கும் இணைப்பை இணைத்தல் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் பழுது ஏற்பட்டுவிட்டால் உடனே அதை வாங்கிய ஏஜென்ஸிக்கு அழைப்பு விடுத்து புகாரைப் பதிவு செய்ய வேண்டும் என்கிறார் ராஜேஷ். தொழில்நுட்பப் பிரிவினர் பழுதைச் சரிபார்க்கும் வரை குளிர்சாதனப் பெட்டியைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறிய ராஜேஷ் ஸ்டெபிலைசர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும் வலியுறுத்துகிறார். "கூடுதலாகச் சிறிதளவு தொகை செலவானாலும், தரமான ஸ்டெபிலைசர்களை பயன்படுத்துவதே நல்லது. விலையைக் கருத்தில் கொண்டு சிலர் ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் இல்லாமல் மலிவு விலையில் கிடைக்கும் ஸ்டெபிலைசர்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். சில நாட்களில் அது குளிர்சாதன பெட்டிக்குத் தேவையான பாதுகாப்பை வழங்காமல் போகும்போது விபத்தில் வந்து முடிகிறது," என்றும் அவர் விவரித்தார். ராஜேஷின் அறிவுறுத்தல்களின்படி, ஒற்றைக் கதவு கொண்ட குளிர்சாதன பெட்டிக்கு பொதுவாக 500 வாட் இருக்கும் ஸ்டெபிலைசர்களை பயன்படுத்துவது நல்லது இரட்டைக் கதவு கொண்ட குளிர்சாதன பெட்டிகளுக்கு ஒரு கிலோ வாட் வரை உள்ள ஸ்டெபிலைசர்களை பயன்படுத்தலாம் உணவகங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப ஸ்டெபிலைசர்களை தொழில்நுட்பப் பிரிவினரே பரிந்துரை செய்வார்கள் தூய்மையாக வைத்திருங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES விபத்துக்கும் குளிர்சாதனப் பெட்டியின் தூய்மைத்தன்மைக்கும் தொடர்பு இல்லை என்றாலும், அதைத் தூய்மையாக வைத்திருப்பது அவசியம் என்று வலியுறுத்துகிறார் ராஜேஷ். அமெரிக்காவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆய்வுச் சேவை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி குளிர்சாதனப் பெட்டியை 40 டிகிரி ஃபாரன்ஹீட்டில் வைத்திருக்க வேண்டும். சமைத்த உணவுப் பொருட்களை நான்கு நாட்கள் வரை மட்டுமே வைத்திருக்க வேண்டும். சமைக்கப்படாத பச்சை இறைச்சியை இரண்டு நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. வெளிப்புறத்தைத் துணி மற்றும் சோப் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கண்டென்சரில் காற்று எந்தத் தடையும் இன்றிச் செல்லும் வகையில் 'ஃபிரண்ட் கிரில்லை' தூசி படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு சில முறையாவது கண்டென்சர் சுருளைச் சுத்தம் செய்வது அவசியம் என்றும் அறிவுறுத்துகிறது அமெரிக்காவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆய்வுச் சேவை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c6282pn3v6xo
-
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்போம் - யாழ்பல்கலைக்கழக சமூகம் அறிக்கை
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்வேட்பாளருக்கு வாக்களிப்போம் - யாழ்பல்கலைக்கழக சமூகம் அறிக்கை Published By: DIGITAL DESK 3 14 SEP, 2024 | 02:46 PM (எம்.நியூட்டன்) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனின் சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்போம் என அறைகூவல் விடுத்த யாழ். பல்கலைக்கழக சமூகம், மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், கட்சி வேறுபாடுகள் கடந்து வடக்கு – கிழக்கு, மலையகம், இதர பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை, இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் என அறிக்கை வெளியீட்டுள்ளது அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பேரன்புமிக்க தமிழ் மக்களிற்கு வணக்கம், நூற்றாண்டுகள் கடந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் எங்களின் அரசியல் விடுதலைப் பயணத்தில் தவிர்க்க முடியாதவொரு தேர்தலாக எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் மாறியுள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகமாக இம்மடலினை எங்கள் பேரன்புமிக்க தமிழ் மக்களை நோக்கி மாணவர்கள் நாங்கள் எழுதுகின்றோம். தமிழ் மக்கள் உதிரிகளாக்கப்படுதலும் கூட்டு மனவலு சிதைக்கப்படுதலும் 2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் தமிழ் மக்கள் தேசமாகச் சிந்திப்பதிலிருந்தும், எழுச்சியடைவதிலிருந்தும் எங்களை விலகியிருக்கச் செய்வதில் சிங்கள - பௌத்த பேரினவாதம் ஏறக்குறைய வெற்றியடைந்திருக்கின்றது. சாதிகளாக, மதங்களாக, பிரதேசங்களாக தமிழ் மக்களையும் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளையும் உதிரிகளாக்கி, எங்களின் கூட்டு மனவலுவைத் தகர்த்தெறிந்து உளவியல் ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனோநிலையினை எங்கள் மக்களிடையே விதைப்பதனை சிறிலங்கா அரசின் முகவர்களும் அவர்களது அமைப்புக்களும் கனகச்சிதமாகச் செய்து முடித்துள்ளன. தமிழ் மக்களினது அரசியற் பலத்தினையும் எழுச்சியினையும் இல்லாதொழிப்பதற்காகச் சாணக்கியம், ராஜதந்திரம் என்று பெயரிட்டு தமிழ்த் தரப்புகளால் முன்னெடுக்கப்பட்ட வெற்றுக் காசோலை அரசியல் பயன்படுத்தப்பட்டது. அதன் விளைவே கடந்த 2010, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல்களில் தமிழ் இனப்படுகொலை பொறுப்பாளிகளான ஒரு தரப்பினரை எதிர்ப்பதாகக் கூறி, இனப்படுகொலைக் (Genocide) குற்றத்தைப் புரிந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி, பதில் பாதுகாப்பு அமைச்சர், போர்க்குற்றம் புரிந்த பெருமளவான இராணுவத்தினரின் ஆதரவினைப் பெற்ற நபர்களுக்கு வாக்களித்தோம். பரிகார நீதியைக் கோர வேண்டிய நாம், எமது அரசியற் தலைமைகளினால் கண்மூடித்தனமாக வழிநடத்தப்பட்டோம். எம்மைச் சூழும் பொருளாதார நல்லிணக்க மாயைகள்! சிறிலங்காவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலையைக் காரணங்காட்டி கவர்ச்சிகர வாக்குறுதிகளை முன்வைத்து வரும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்கள் நாட்டின் இந்நிலைக்குத் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும், வலிந்து திணிக்கப்பட்ட போருமே அடிப்படைக் காரணம் என்பதை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. அடிப்படையில் இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அரசியல் உறுதித் தன்மை அவசியமாக உள்ள நிலையில், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள், ஒடுக்குமுறைகளை நிறுத்தும் சித்தம் ஏதுமின்றி, தமிழ் மக்களின் உரிமைக்கான குரல்களை இனிப்புத் தடவிய வார்த்தை ஜாலங்களினால் அறுத்தெறியும் பணிகளிலேயே நாட்டமும் மும்முரமும் காட்டுகின்றனர். தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பையோ அல்லது பௌத்தத்திற்கு முதன்மை வழங்கும் அதன் கட்டமைப்பையோ இவர்கள் எவரும் கேள்விக்குள்ளாக்காமல் நல்லிணக்கம் பேசுவதென்பது அற்ப வாக்குகளிற்காகவேயன்றி வேறெதற்காக? தமிழர் தேசமாய்த் திரள்வோம்! தொடர்ந்தும் தமிழர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கேற்ற பலமானதொரு திரளாக அரசியல் மற்றும் கட்டமைப்பு ரீதியாகத் தமிழ் மக்கள் நாங்கள் எழ முடியாது உதிரிகளாக்கப்பட்டு, கூட்டு மனவலு சிதைக்கப்பட்டுள்ளது. இக்கையறு நிலையாவது கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து, சுதாகரித்து முன்னகர வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். அதிகாரப்பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற ஒற்றையாட்சி, அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தினுள் தமிழரின் அரசியலை சுருக்கியது என்பது சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்பதோடு, தமிழ் மக்களிற்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளவல்ல திடசித்தமுள்ள தலைவர் ஒருவரையேனும் சிங்கள மக்கள் மத்தியில் காண முடியவில்லை என்பதும் நோக்கத்தக்கது. தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகளில் பயணிப்போர்கள் அனைவரும் தமிழினத்தின் விடுதலைக்கு, மேன்மைக்கு உழைப்பவர்கள் என்று நம்பி ஏமாந்த எங்களுக்கு, புலித்தோல் போர்த்திய நரிகளின் ஊளையிடுதல்களையும் கூச்சல்களையும் உதறித்தள்ளி, தமிழர் தேசமாக, எங்கள் தலைவிதியை நாங்களே மாற்றி எழுதும் பெருவாய்ப்பு இனப்படுகொலை நிகழ்ந்து 15 ஆண்டுகளின் பின் கனிந்துள்ளது. தமிழரை அணிதிரட்டி வெல்லட்டும் தமிழ்ப் பொதுவேட்பாளர் ! தமிழ் மக்களைத் தேசமாய் அணி திரட்டுவதற்கும், பன்னாட்டுச் சமூகங்களிற்கு விடுதலைக்கான எங்களின் கூட்டு வேட்கையினையும், கூட்டு மனோபலத்தினையும் வெளிப்படுத்துவதற்கும் எங்களிற்குள்ள ஒரேயொரு வாய்ப்பாகத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எண்ணக்கருவினை நாங்கள் பலப்படுத்த வேண்டும். இது ஒரு காத்திரமான வழிமுறை. இது எமது வரலாற்றுக் கடமை. தமிழ்ப் பொதுவேட்பாளர் சிறிலங்காவின் அரச தலைவர் இருக்கையை வெல்லப் போகின்றவரல்ல ; மாறாக தமிழ் மக்களை அணிதிரட்டுவதில் வெல்லப் போகின்றவர். இனியாவது ஏமாற்றும் கபட அரசியலிற்குப் பலியாகாமல், தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுக்கோ, வெளித்தரப்புக்களுக்கோ சென்று சேர்வதைத் தவிர்த்து, தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களைத் தமிழ் மக்கள் கூட்டாக மேற்கொள்ள வேண்டும். தவறுவோமேயானால் நாங்கள் அரசியல் பிழைத்த மக்களாக்கப்படுவோம். நாங்கள் மாறி மாறி சிங்கள ஆட்சியாளர்களுக்கு வாக்களிக்க வழிநடத்தப்பட்டோம். இதனால் தமிழ் மக்களின் நிலை, அரசியல், சமூக ரீதியில் பரிதாபகரமாய்ப் போனதேயன்றி வேறேதும் நிகழவில்லை. உரிமைகளுற்கான தமிழரின் அரசியல் இன்று சலுகைகளுக்காகத் துவண்டு போயுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள திரு.பா.அரியநேத்திரன் அவர்களுக்கு, அவரின் சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்போம். மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், கட்சி வேறுபாடுகள் கடந்து வடக்கு – கிழக்கு, மலையகம், இதர பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை, இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் - என்றுள்ளது. https://www.virakesari.lk/article/193674
-
இலங்கை: பட்டாம்பூச்சிகளை கடத்த முயன்றதாக தந்தை, மகனுக்கு ரூ. 1.67 கோடி அபராதம்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யாலா தேசிய பூங்காவில் பட்டாம்பூச்சிகளை கடத்த முயன்றதாக தந்தை-மகனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என்ஜி பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் திறந்தவெளிப் பூங்கா ஒன்றில், உள்நாட்டில் மட்டுமே காணப்படும் 92 வகையான பட்டாம்பூச்சிகள் உட்பட நூற்றுக்கணக்கான பூச்சியினங்களைக் கடத்த முயன்றதாக, இத்தாலியை சேர்ந்த தந்தை-மகனுக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் 60 மில்லியன் ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஒரு கோடியே 67 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பூச்சிகளுடன் கூடிய ஜாடிகளை அவர்கள் வைத்திருந்ததைக் கண்டறிந்ததையடுத்து, லூயிஜி ஃபராரி (68), அவருடைய மகன் மட்டியா ஆகிய இருவரையும் கடந்த மே மாதம் 8ஆம் தேதி யாலா தேசிய பூங்காவின் பாதுகாவலர்கள் கைது செய்தனர். அவர்கள் இருவரும் பூச்சிகளைக் கவர்வதற்கான பொருட்களைப் பயன்படுத்தி அவற்றைப் பிடித்ததாகவும், மெழுகு பூசப்பட்ட பாக்கெட்டுகளை பயன்படுத்தி பூச்சிகளைப் பதப்படுத்த முயன்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சட்ட விரோதமாக பூச்சிகளைப் பிடித்து, கடத்த முயன்றதாக, செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருவர் மீதான குற்றமும் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுயிர் தொடர்பான குற்றங்களில் மிகப்பெரும் அபராதம் இருவருக்கும் விதிக்கப்பட்டது. எப்படி சிக்கினார்கள்? பூங்காவின் பாதுகாவலர்களுள் ஒருவரான கே சுஜீவா நிஷாந்தா பிபிசி சிங்களா சேவையிடம் கூறுகையில், அன்றைய தினம் பூங்கா சாலையில் “சந்தேகத்திற்கிடமான கார்” ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக பூங்கா ஜீப் ஓட்டுநர் ஒருவர் பாதுகாவலர்களிடம் தெரிவித்ததாகக் கூறினார். அந்த காரில் இருந்த இருவரும் பூச்சிகளைப் பிடிக்கும் வலைகளுடன் வனத்திற்குள் நுழைந்ததாகவும் அவர் தெரிவித்தார். அந்த கார் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த பாதுகாவலர்கள், காரின் பின்பக்கத்தில் பூச்சிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான ஜாடிகளை கண்டுபிடித்தனர். “நாங்கள் அதைக் கண்டறிந்தபோது அனைத்து பூச்சிகளும் இறந்திருந்தன. அந்த பாட்டில்களில் அவர்கள் ரசாயனத்தை செலுத்தியுள்ளனர். அதில், முந்நூறுக்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் இருந்தன,” என நிஷாந்தா தெரிவித்தார். இருவர் மீதும் 810 குற்றச்சாட்டுகள் ஆரம்பத்தில் பதியப்பட்டன. ஆனால், பின்னர் 304 குற்றச்சாட்டுகளாகக் குறைக்கப்பட்டன. இந்த அபராதத் தொகையை செப்டம்பர் 24க்குள் செலுத்தாவிட்டால் இருவரும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். 'சிறந்த முன்னுதாரணம்' அந்த நேரத்தில் இருவரும் இலங்கையில் விடுமுறையைக் கழிக்கச் சென்றதாகவும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் இலங்கையில் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் இத்தாலி நாட்டு செய்திகள் கூறுகின்றன. இலங்கையின் தென்-கிழக்கு பகுதியில் அமைந்துள்ள யாலா தேசிய பூங்கா, அந்நாட்டின் பிரபலமான காட்டுயிர் பூங்காவாக உள்ளது. இங்கு அதிகளவிலான சிறுத்தைகள், யானைகள், காட்டெருமைகள் மற்றும் பிற விலங்குகளும் உள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யாலா தேசிய பூங்கா இலங்கையின் பிரபலமான காட்டுயிர் பூங்காவாக உள்ளது (கோப்புப்படம்) எலும்பியல் நிபுணரான லூயிஜி ஃபராரி கால் மற்றும் கணுக்கால் காயங்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் என்றும் அவருடைய நண்பர்களால் பூச்சியின ஆர்வலர் என்றும் அழைக்கப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள மோடெனா நகரத்தில் உள்ள பூச்சியியல் சங்கத்திலும் அவர் உறுப்பினராக உள்ளார். இத்தாலியில் உள்ள அவருடைய நண்பர்கள் மற்றும் சகாக்கள், அபராதத் தொகையைக் குறைக்குமாறு கோரியுள்ளனர். அவர் பிடித்த பட்டாம்பூச்சிகளுக்கு எந்தவித வணிக மதிப்பும் இல்லை என இத்தாலிய தினசரி செய்தித்தாளான கோரியெர் டெல்லா சேரா ( daily Corriere della Sera) கூறுவதாகச் சிலர் தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழல் சட்டத்தில் நிபுணரான டாக்டர் ஜெகத் குணவர்த்தனா பிபிசி சிங்கள சேவையிடம் கூறுகையில், இந்த அபராதத் தொகை, குற்றவாளிகளுக்கு எச்சரிக்கையாகவும் சிறந்த முன்னுதாரணமாகவும் இருக்கும் எனத் தெரிவித்தார். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqxjx7e4qxpo
-
நான்காவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்
தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியனஷிப் 2024: கடைசி நாளன்று இலங்கை 3 சாதனைகளுடன் 4 தங்கங்களை சுவீகரித்தது; ஒட்டுமொத்த நிலையில் இலங்கை இரண்டாம் இடம் Published By: VISHNU 13 SEP, 2024 | 11:48 PM (நெவில் அன்தனி) தமிழகத்தின், சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்த நான்காவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை (13) 3 புதிய போட்டி சாதனைகளுடன் 5 தங்கப் பதக்கங்கள் உட்பட 16 பதக்கங்களை இலங்கை வென்றெடுத்தது. ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 21.33 செக்கன்களில் நிறைவு செய்த இந்துசார விதுஷான் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 2.17 மீற்றர் உயரத்தை தாவி புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை லெசந்து அர்த்தவிந்து வென்றெடுத்தார். ஆண்களுக்கான 4 x 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியிலும் இலங்கை அணியினர் புதிய போட்டி சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர். அப் போட்டியை 40.28 செக்கன்களில் இலங்கை அணியினர் ஓடி முடித்தனர். ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள் 09.27 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கை அணியினர் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர். இதேவேளை, ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை ஹசித்த திசாநாயக்க வென்று கொடுத்தார். அவர் முப்பாய்ச்சலில் 15.09 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்தார். இலங்கைக்கு இன்றைய தினம் கிடைத்த ஏனைய பதக்கங்கள் ஆண்களுக்கான உயரம் பாய்தல்: டினுஷான் மெண்டிஸ் (2.10 மீற்றர்) - வெள்ளி. ஆண்களுக்கான முப்பாய்ச்சல்: ஹன்சக்க சந்தீப்ப (14.92 மீற்றர்) - வெள்ளி. ஆண்களுக்கான 1500 மீற்றர்: ப்ரஷான் புத்திக்க (4 நிமிடங்கள், 03.79 செக்.) - வெண்கலம். ஆண்களுக்கான 200 மீற்றர்: கௌஷான் தமெல் (21.44 செக்.) - வெண்கலம். ஆண்களுக்கான ஈட்டி எறிதல்: டில்ஹார தனசிங் (62.22 மீற்றர்) - வெண்கலம். பெண்களுக்கான 4 x 100 மீற்றர் தொடர் ஓட்டம்: இலங்கை (46.48 செக்.) வெள்ளி பெண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டம்: இலங்கை (3 நி. 49.99 செக்.) - வெள்ளி பெண்களுக்கான முப்பாய்ச்சல்: டில்கி நெஹாரா (12.32 மீற்றர்) - வெள்ளி. பெண்களுக்கான 1500 மீற்றர்: துலஞ்சனா ப்ரதீபா (4 நி. 39.01 செக்.) - வெண்கலம். பெண்களுக்கான குண்டு எறிதல்: இசாலி மல்கெத்மி (10.68 மீற்றர்) வெண்கலம். பெண்களுக்கான ஈட்டி எறிதல்: நிசன்சலா மதுபாஷ் (35.02 மீற்றர்) - வெண்கலம்) சென்னையில் மூன்று நாட்கள் நடைபெற்ற நான்காவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 9 தங்கம், 9 வெள்ளி, 17 வெண்கலம் உட்பட மொத்தம் 35 பதங்கங்களை வென்றெடுத்த இலங்கை ஒட்டுமொத்த நிலையில் இரண்டாவது இடத்தைப் பெற்றது. இப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா 21 தங்கம், 22 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 48 பதக்கங்களை வென்றெடுத்து ஒட்டுமொத்த சம்பியனானது. பங்களாதேஷ் 3 வெண்கலப் பதக்கங்களுடன் 3ஆம் இடத்தையும் மாலைதீவுகள் 2 வெண்கலப் பதக்கங்களுடன் 4ஆம் இடத்தையும் நேபாளம் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் 5ஆம் இடத்தையும் பெற்றன. https://tamilwin.com/srilanka#google_vignette
-
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றமை நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறும் பேர்ல் அமைப்பு
இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் (The People for Equality and Relief in Lanka (பேர்ல்) அமைப்பு, புதிய ஒரு சட்ட விளக்கக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், 2009 இல் இலங்கை அரசாங்கமும் இராணுவமும் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபட்டதாக அந்த அமைப்பு நிரூபித்துள்ளது. இனப்படுகொலை ஐக்கிய மனித உரிமைகள் பேரவையின் 57வது அமர்வுடன் இணைந்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், 2009 ஜனவரி முதல் மே 18 வரை தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலைகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் தனது கொடூரமான அட்டூழியங்களை 'பயங்கரவாதத்திற்கு எதிரான' மொழியில் மூடிமறைத்தது மற்றும் காசா உட்பட இதேபோன்ற இனப்படுகொலைச் செயல்களுக்கு வழி வகுத்தது" என்று பேர்லின் நிறைவேற்று இயக்குநர் மதுரா ராசரத்தினம் கூறியுள்ளார். எனவே, 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் கூறிவரும், 2009 இல் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கையின் இனப்படுகொலையை முறையாக அங்கீகரிக்குமாறு பேர்ல் அமைப்பு, சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்களை தமது அறிக்கையின் ஊடாக வலியுறுத்தியுள்ளது. இதேவேளை இனப்படுகொலைகளின் மிகவும் பொறுப்பான குற்றவாளிகளில் ஒருவரான, அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச, "விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் மட்டுமே" இறுதி யுத்தத்தின்போது "எதிர்ப்பு மண்டலத்தில்" இருப்பதாகக் கூறியிருந்தமையானது, இனப்படுகொலைக்கான சாத்தியத்தை நிரூபிப்பதாகவும் பேர்லின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/pearl-organization-claims-genocide-sl-proven-1726283559#google_vignette
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் படித்த முட்டாள்களுக்கு பாடம் புகட்டுவோம்; க.வி.விக்னேஸ்வரன்! 14 SEP, 2024 | 10:11 AM தமிழகளின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் செயற்பட்டுவரும் படித்த முட்டாள்களுக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளரை இழிவாகப் பேசி சிங்கள வேட்பாளர்களுடன் கூட்டு என்று கூறி அவரையும் நிராகரிக்க கோரும் பகிஸ்கரிப்பாளர்களுக்கும் தகுந்த பாடம் புகட்டும் வகையில் வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி காலையிலேயே சென்று சங்கு சின்னத்துக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை - சுப்பர்மடம் பொது மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை 05.00 மணிக்கு இரா.மயூதரன் தலைமையில் இடம்பெற்ற நமக்காக நாம் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில், எனக்கு இருதய சத்திரசிகிச்சை பொருந்துமா அல்லது Stent என்னும் உறைகுழாய் பொருத்தப்படுதல் பொருந்துமா என்று மருத்துவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இங்கு உங்களுடன் இணைந்து பொது வேட்பாளரை ஆதரிக்கும் கூட்டத்தில் பங்கு பற்ற வந்திருக்கின்றேன் என்றால் எந்த அளவுக்கு பொது வேட்பாளருக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்க வேண்டும் என்று ஆவலாய் இருக்கின்றேன் என்பது உங்களுக்குப் புரியவரும். எமது வடகிழக்கு மாகாணங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? நேற்று எனக்குக் கிடைத்த ஆய்வு விபரங்களின் படி (இன்று அவை பத்திரிகைகளிலும் வந்துள்ளன) திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறும் காணி ஆக்கிரமிப்பின் காரணமாக தற்போது அம் மாவட்ட சனத்தொகையில் 27 சதவிகிதமானோர் சிங்கள மக்கள் என்றும் அம் மாவட்டத்தின் மொத்த நில விஸ்தீரணத்தில் 36 சதவிகிதத்தை அம் மக்கள் தம் கைவசம் வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆய்வறிக்கையைத் தந்துள்ளவர்கள் கலிபோர்ணியாவில் இருந்து கடமையாற்றும் ஓக்லண்ட் நிறுவனத்தார். அவர்களின் ஆய்வாளர்கள் இங்கு வந்து நிலைமையை அறிந்தே தமது ஆய்வறிக்கையைத் தந்துள்ளார்கள். இதைவிட மிகவும் ஆபத்தான ஒரு விடயம் வெளியிடப்பட்டுள்ளது. வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் திருகோணமலையின் குச்சவெளிப் பிரதேசம் கடந்த பத்து ஆண்டுகளில் மிக மோசமான மாற்றங்களைச் சந்தித்துள்ளது. அப்பிரதேசத்தின் 50 சதவீத நிலங்கள், அதாவது 41,164 ஏக்கர் காணிகள், பல அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் பௌத்த கோயில்களைக் கட்டுவதற்காகவும் அரசாங்க திணைக்களங்களால் கையேற்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்த மக்கள் விரட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 3887 ஏக்கர் கையேற்க்கப்பட்ட காணிகளில் 26 பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறான மிகவும் செழிப்பான காணிகளிலும் கரையோரப் பிரதேசங்களிலும் இருந்து வந்த தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. விரட்டப்பட்ட மக்கள் தமது காணிகளுக்குப் போக முடியாதபடி இராணுவம் அங்கு நிலை கொண்டிருக்கின்றது என்றும் கூறப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் நாடு பூராகவும் உள்ள பிராந்திய தலைமையகங்கள் ஏழில் ஐந்து தலைமையகங்கள் வடக்கு கிழக்கில் குடிகொண்டிருக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. இது நடைபெறுவது இன்றைய ஜனாதிபதி பதவி வகிக்கும் காலகட்டத்தில் என்பதை நாங்கள் மறக்கக்கூடாது. பௌத்த விகாரைகளை வடக்கு கிழக்கில் கட்ட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தவர் சஜித் பிரேமதாச அவர்கள். சேர்ந்திருந்த வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் நீதிமன்றம் மூலம் பிரிக்க நடவடிக்கை எடுத்தவர் அனுரகுமார அவர்கள். மூவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். நாமல் பற்றிக் கூறவே தேவையில்லை. ராபக்சக்களின் மோசமான இனவாத தோற்றத்திற்கு அவர் மெருகூட்டி வருகின்றார். எந்த சிங்கள வேட்பாளர் வந்தாலும் வடக்குக் கிழக்கின் நிலங்கள் கையேற்கப்படுவதுடன் அவற்றின் தொடர்ச்சி துண்டிக்கப்படுவதும், அங்கு சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுவதும் பௌத்த கோவில்கள் கட்டப்படுவதும் ஓயாமல் நடக்கப் போகின்றன. எமது இளைஞர்கள், படித்தவர்களும் பாமரர்களும், நாளாந்தம் வெளிநாடுகளுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றார்கள். எமது சனத்தொகை இதனால் குறையப் போகின்றது. ஆகவே சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு எம் மக்கள் வாக்களிப்பது இவ்வாறான தமிழர் எதிர்ப்பு செயல்களை முடக்கி விடப்போகின்றது என்பதில் சந்தேகமில்லை. இதனால்த்தான் எமது தமிழ் வேட்பாளருக்கு உங்கள் மேன்மையான வாக்குகளை அளியுங்கள் என்று கேட்கின்றோம். அவரால் இவ்வாறான காணி ஆக்கிரமிப்புகளை நிறுத்த முடியுமா என்று கேட்பீர்கள். முடியும் என்பது எனது பதில். எமது மக்கள் ஒன்றிணைந்து தமது தனித்துவத்தைக் காட்டும் வண்ணம் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களித்தால், ஆறு இலட்சத்துக்கு மேல் எமது மக்களின் வாக்குகள் பதியப்பட்டால், நாம் உலக அரங்கிலே எமது தனித்துவத்தையும் எமக்கு நேர்ந்த கதியையும் தற்போது எமக்கெதிராக நடக்கும் நடவடிக்கைகளையும் கோடிட்டு சொல்லமுடியும். எமது பொது வேட்பாளரும் அவருடன் சேர்ந்தவர்களும் உலகநாடுகளிலே மற்றும் ஐக்கிய நாடுகளிலே தற்போதைய அவலங்கள் பற்றியும், தொடர்ந்து வந்த சிங்கள அரசாங்கங்கள் எமக்கு செய்து வரும் அநியாயங்கள் பற்றியும் கூற முடியும். நான் 2018ல் புதிய கட்சியைத் தொடங்கிய பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கவில்லை. 2020ல் எனக்கு 81 வயது ஆகியிருந்தது. எனினும் உலக நாடுகளில் உள்ள அரச அலுவலர்களிடம் இணையத் தொடர்புகள் மூலம் எமது நிலை பற்றிக் கூறி, எம் மக்களுக்கான சேவைகளைச் செய்து கொண்டு போக முடியும் என்று நினைத்திருந்தேன். அப்பொழுது எனது நண்பர்கள் ஒன்றைக் கூறினார்கள். நீங்கள் நீதியரசராக இருந்திருக்கலாம். முதலமைச்சராக இருந்திருக்கலாம். ஆனால் வெளிநாட்டு அரச அதிகாரிகளுடன் பேசும் போது இப்பொழுது நீங்கள் யார் என்று கேட்பார்கள். நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர் என்று கூறும் போது மக்களின் பிரதிநிதி நீங்கள் என்ற ரீதியில் உங்கள் கூற்றுக்களுக்கு வலு இருக்கும் என்றார்கள். ஆகவேதான் நானும் தேர்தலில் போட்டியிட்டேன். அதேபோல்த்தான் திரு.அரியநேத்திரன் அவர்களுக்கு எமது மக்கள் வெகுவாக வாக்களித்தால் அந்த வாக்குகளுக்கு ஒரு மதிப்புண்டு மாண்புண்டு! அதை வைத்து அவரை தமிழ் மக்களின் ஒரு அடையாளமாகக் காட்டி எமக்கு நடந்து வரும் அநியாயங்கள் பற்றி நாடுகளுக்குக் கூறி இலங்கை அரசாங்கம் எமக்கு தொடர்ந்தும் இன்னல்களை விளைவிப்பதைத் தடுக்கலாம். தற்போது வெளிநாடுகள் எமது அரசாங்கத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன. ஐக்கிய நாடுகளின் அறிக்கைகள் இலங்கையை சரிவர எடை போடுவதாகவே அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ் மக்கள் ஒருமித்து தமது ஒற்றுமையை, தேசியத்தை, ஒருங்கிணைந்த குறிக்கோள்களை இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி எமது அரசாங்கத்தை விழித்தெழச் செய்யும். அதனால்த்தான் எமது தமிழ் பொது வேட்பாளருக்கு நீங்கள் உங்கள் வாக்கினை அளிக்க வேண்டும் என்று தயவாகக் கேட்டுக் கொள்கின்றோம். எமது ஒற்றுமை ஒன்றே எம்மை இரட்சிக்கும். எமது ஒற்றுமையைச் சிதைக்கும் வகையில் படித்த முட்டாள்கள் சிலர் நடந்து வருகின்றார்கள். சிலர் சிங்கள வேட்பாளர்களுடன் கைகோர்க்க வேண்டும் என்கின்றார்கள். மற்றும் சிலர் தேர்தலைப் பகிஸ்கரிக்கக் கோருகின்றார்கள். சிங்கள வேட்பாளர்களுடன் கைகோர்ப்பது குறித்த அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் பதவிகளை வழங்க இடமளிக்கலாம். அதனால் தமிழ்ப் பேசும் மக்களுக்கு என்ன இலாபம்? நல்லாட்சி அரசாங்கத்தை ஆதரித்து இந்தா தீர்வு வருகின்றது. அந்தா தீர்வு வருகின்றது என்று திரு.சம்பந்தன் அவர்கள் நம்பிக்கையுடன் கூறிவந்தார். ஆனால் தீர்வு வந்ததா? அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் உத்தியோகபூர்வ வாஸஸ்தலமும் கிடைத்தன. தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. எனவே பெரும்பான்மையின வேட்பாளர்களை ஆதரிப்பது தமிழ்ப்பேசும் அரசியல்வாதிகளுக்கு தனிப்பட்ட நன்மைகளைத் தரும். ஆனால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது. பகிஸ்கரிப்பவர்கள் ஏன் நாம் பகிஸ்கரிக்க வேண்டும் என்ற கேள்வியைத் தம்மைத் தாமே கேட்க வேண்டும். புலிகள் முன்னர் பகிஸ்கரித்தார்கள் ஆகவே நாமும் பகிஸ்கரிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் சூழலையும் கால கட்டத்தையும் மறந்து பேசுகின்றார்கள். அன்று புலிகளுக்குப் பலம் இருந்தது. அன்று மலையக மக்களுக்கு அவர்களின் அரசியல் போராட்டங்களின் போது தொழிற்சங்க பலம் இருந்தது. இன்று இவர்களுக்கு என்ன பலம் இருக்கின்றது? இவர்கள் பகிஸ்கரித்தால் அது யாருக்கு நன்மை? எவருக்கும் இல்லை. யாருக்குப் பாதிப்பு? எவருக்கும் இல்லை. சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தொடங்கிய இந்த பகிஸ்கரிப்பாளர்கள் இப்பொழுது தமிழ் வேட்பாளரையும் பகிஸ்கரியுங்கள் என்கின்றார்கள். ஏன் என்றால் திரு.அரியநேத்திரன் அவர்கள் சிங்கள வேட்பாளர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார் என்ற அப்பட்டமான பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளார்கள். அரியநேத்திரன் அவர்கள் தனது கட்சியுடன் முரண்டே பொது வேட்பாளராக நிற்கின்றார். அவர் தமது வருங்கால அரசியல் வாழ்க்கையைத் தியாகம் செய்தே பொது வேட்பாளராக நிற்கின்றார். இந்தத் தேர்தலில் அவருக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த நன்மையும் கிடையாது. அவர் தேர்தலில் வெல்லப் போவதும் இல்லை. அப்பேர்ப்பட்ட ஒருவரை இழிவாகப் பேசி சிங்கள வேட்பாளர்களுடன் கூட்டு என்று கூறி இந்த பகிஸ்கரிப்பாளர்கள் தங்களை தமிழ் மக்கள் மனதில் தாழ்த்தியே வருகின்றார்கள். அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக நீங்கள் ஒவ்வொருவரும் இம் மாதம் 21ந் திகதியன்று காலையிலேயே நேரத்துடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். சுப்பர்மடம் கடற்றொழிலாளர்களுடன் வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களுக்காக சங்குச் சின்னத்தில் வாக்களிக்க கோரி இடம்பெற்ற பரப்புரை கூட்டத்தில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த செல்வின் இரணியேஸ் மரியாம்பிள்ளை, புலம்பெயர் செயற்பாட்டாளர் பீற்றர், சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூ.சங்க நிர்வாகிகள் மற்றும் அவ்வூர் மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/193641
-
பேஸ்புக் நிறுவனத்திற்கு பெருந்தொகை டொலர்களை வாரி வழங்கிய ஜனாதிபதி வேட்பாளர்கள்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியில் வேட்பாளர்கள் பெருந்தொகை டொலர்களை விளம்பரங்களுக்கு செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேஸ்புக் Ad Library மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அதற்கமைய சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜூலை 13 முதல் செப்டெம்பர் 10 வரையான காலப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக 49,300 டொலர்களை செலவிட்டுள்ளார். பேஸ்புக் விளம்பரம் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறித்த தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும், அவரை விளம்பரப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள Join Ranil என்ற பேஸ்புக் பக்கத்திற்கு செலவிடப்பட்ட தொகை 38,400 டொலர்களை அண்மித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, ஏறக்குறைய மூன்று மாத காலப்பகுதியில் 90,000 டொலர்களும் இலங்கையின் ரூபா பெறுமதியில் 27 மில்லியன் ரூபாவாகும். இந்தத் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை விட இந்தத் தொகை அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பட்டியலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இரண்டாமிடத்தில் உள்ளார். அமெரிக்க டொலர் இந்தக் காலப்பகுதியில் அவர் 48,600 அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அநுரகுமார திஸாநாயக்க மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்தக் காலப்பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக 20,400 டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிதிகள் அமெரிக்காவின் மெட்டா நிறுவனத்திற்கு முழுவதுமாக டொலர்களில் செலுத்தப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக 109 ரூபாய் செலவழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/election-candidated-who-spends-dollar-for-fb-ad-1726277951#google_vignette
-
மன்னாரில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் - ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
Published By: VISHNU 14 SEP, 2024 | 02:35 AM ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை(13) மாலை 4.30மணியளவில் மன்னார் நகர பேருந்து நிலையத்தில் இடம் பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் குறித்த பொதுக்கூட்டம் இடம் பெற்றது. இதன்போது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு மன்னார் மக்கள் அமோக வரவேற்பு வழங்கினர். குறித்த பொதுக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா, முன்னாள் யாழ் மேயர் மணிவண்ணன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், முன்னாள் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். இதன்போது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களை ஆதரித்து, தமிழ் மக்கள் சங்கு சின்னத்திற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து உரை நிகழ்த்தினர். இதன் போது சுமார் ஆயிரம் பேர் வரை குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/193638
-
திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பதவி இடைநிறுத்தம்!
திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இடைநிறுத்தம் திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதம் நேரடியாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது ஒழுக்கக்கேடான நடத்தை ஒன்று தொடர்பாக விசாரணையை ஆரம்பத்துள்ள நீதிச் சேவை ஆணைக்குழு அவரின் விளக்கத்தைப் கோரி பெற்றதன் பின்னர் அவரைச் சேவையில் இருந்து இடைநிறுத்தியுள்ளது. பதில் நீதிவான் அவரது இடத்துக்குத் திருகோணமலை பிரதம நீதிவான் பயஸ் ரஸாக் பதில் கடமையாற்றுவார் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிரான வழக்கை இதுவரை விசாரித்து வந்தவர் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/trincomalee-judge-manikawasakar-ganesaraja-1726278368
-
கடந்த கால அரசுகள் கிறிஸ்பூதம், வாள்வெட்டு கலாச்சாரங்களை விதைத்தது - விஜயகலா பகிரங்கம்!
Published By: VISHNU 14 SEP, 2024 | 02:09 AM இறுதி யுத்தத்தில் மக்கள் பலர் கொல்லப்பட்டதோடு . பொதுமக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்ததோடு தமது சொத்துக்கள் உடமைகளையும் இழந்தனர். கடந்த கால அரசுகள் கிறிஸ்பூதம், வாள்வெட்டு கலாச்சாரங்களை விதைத்தனர். 2005ல் தமிழ் மக்கள் ரணிலுக்கு அளிக்காத வாக்குகளையும் இம்முறை அளித்து ரணிலை வெற்றி பெறச்செய்வோம் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். இன்று சுழிபுரத்தில் இடம்பெற்ற ரணில் விக்கிரமசிங்க விற்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2 வருடங்களுக்கு முன்னர் மக்கள் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள், எரிவாயு வாங்க வீதிகளில் வரிசையில் நின்றது வரலாறு. அந்த நிலையினை மாற்றியமைத்ததோடு நாட்டில் பொருளாதாரத் தன்மையினை ஒரு நிலைக்கு கொண்டு வந்தவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே அத்தோடு அவரின் ஆட்சி காலத்தில் தான் வடக்கிற்கான 3 பாதைகளும் திறக்கப்பட்டதோடு உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த பொதுமக்களின் காணிகள் பலவும் விடுவிக்கப்பட்டன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 90 ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. யுத்தத்தை முடித்த ராஜபக்ஷ்கள் மக்களுக்கு சரியான வழிகாட்டல்களை செய்யவில்லை. வாழ்வாதார உதவிகளை செய்ய முன்வரவில்லை 2013 ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது காணி விடுவிப்பிற்காக தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தார். 2005 இல் தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களித்திருந்தால் நாம் துன்பப்பட்டிருக்கமாட்டோம். அந்த தவறை மீண்டும் வடக்கு கிழக்கு மக்கள் விடக்கூடாது. 2005ல் தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிக்கவுக்கு அளிக்காத வாக்குகளையும் இம்முறை அளித்து ரணில் விக்ரமசிங்காவை வெற்றி அடையச் செய்வதன் மூலம் நாட்டினை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடிவதோடு தமிழருக்கான தீர்வினையும் பெற்றுக் கொள்ள முடியும் என்றார். https://www.virakesari.lk/article/193636
-
சென்னை அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணுவை பேச அழைத்தது யார்? புதிய தகவல்கள்
கொழுத்த ஆடுகள் மகாவிஷ்ணு மதுரைப்பக்கமாக ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இப்போது சின்ன வயதிலேயே சொந்தமாக தனியார் ஜெட் விமானம் வைத்திருக்கிறார் என்று தொலைக்காட்சி செய்தியொன்றில் பார்த்தேன். அதெப்படி இவ்வளவு சீக்கிரமாக இவ்வளவு கோடிக்கணக்கில் சம்பாதித்தார் என அந்த நிகழ்ச்சியிலேயே வினவுகிறார்கள். இது ஒன்றும் கடினம் அல்ல - இந்து மதத்திலும் (வேறு சில மதங்களிலும்தான்) கார்ப்பரேட் கள்ளச்சாமியார்கள் ஒரு சில ஆண்டுகளிலேயே நூற்றுக்கணக்கான கோடிகள் பணத்தை சேர்க்கமுடியும். உழைக்கவெல்லாம் வேண்டியதில்லை. ஓஷோவால் அமெரிக்காவில் சொந்தமாக ஒரு நகரத்தையே உருவாக்க முடிந்தது; நூற்றுக்கணக்கான விலைமதிப்பான கார்கள், தங்க வைர நகைகளை வைத்திருந்தார். "எதுவுமே என்னுடையது அல்ல, என் பக்தர்களின் பரிசுகள்" என்றார் அவர். ஏன் ஏழைகளின் பரிசுகள் அவரிடம் இல்லை? ஏன் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொடையாளர்கள் பயங்கர பக்திமான்களாக இருக்கிறார்கள்? அடுத்து ஓஷோ கைதானபிறகு அவரது பணம் எங்கே போயிற்று? ஏனென்றால் அவர் தனது பெருமளவுக்கான செல்வாக்கும் செல்வமும் இன்றிதான் இந்தியாவுக்குத் திரும்பி தன் கடைசிக் காலத்தைக் கழித்தார். மீதமிருந்த 100 கோடிப் பணத்தை அவரது வெளிநாட்டு பக்தர்கள் கையாடிவிட்டதாக ஒரு புகார் நீதிமன்றத்தில் உள்ளது. இதேதான் நித்தியானந்தாவுக்கும் அவர் இந்தியாவை விட்டுத் தப்பியோடியபோது நடந்தது. அதெப்படி தனிநபரின் பணத்தை சுலபத்தில் பறிக்கமுடியும்? அது முறையற்று சம்பாதித்த பணமென்றாலும்கூட? ஏன் ஓஷோவில் இருந்து ஜக்கி, நித்திவரை பணக்கார பக்தர்களையே முதலில் நாடுகிறார்கள்? தமது ஆன்மீகத் தொண்டுக்கு பணக்கார பக்தர்களைக்கொண்டு நிதியைத் தேடுவதாக அவர்கள் கூறினாலும் தாம் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணத்தை நூற்றுக்கணக்கான கோடிகள் அவர்கள் ஏன் கொண்டுவந்து ஒரு சாமியாரின் மடியில் கொட்டவேண்டும்? இந்தக் கேள்விகளை எனக்குத் தெரிந்து யாருமே எழுப்புவதில்லை. இப்பணம் அடிப்படையில் கறுப்புப்பணமாகும், ஒரு பெரிய கார்ப்பரேட் சாமியாரை பெரும்பணக்காரர்கள் சேர்ந்து உருவாக்குகிறார்கள். தமது பணத்தை அயல்நாட்டில் பதுக்குவதற்குப் பதிலாக இந்த சாமியார்களுக்கு காணிக்கையாக அளித்து வருமான வரித்துறையினரின், அமலாக்கத்துறையினரின் தொந்தரவு இன்றி பாதுகாக்கிறார்கள். அதற்கு ஏற்ப இந்தியாவில் சட்டம் உள்ளது. அதனாலே அவர் சிக்கலில் மாட்டும்போது அவரிடம் இருந்து பணத்தைப் பறித்துக்கொள்கிறார்கள். 2-3 ஆண்டுகளில் ஒருவர் உழைக்காமலே, சொந்த முதலீடுயின்றியே பெரும் செல்வந்தராகிறார் என்றால் அவர் கறுப்புப்பணத்தின் முகவராக இருக்கிறார் என்று பொருள். கார்ப்பரேட் சாமியார்கள் மிகப்பாதுகாப்பான ஒரு கறுப்பணச் சந்தை நிர்வாகியாக மாறுகிறார்கள். அதனாலே இந்த பெரும் செல்வந்தர்களும் ஊடகங்களும் சேர்ந்து அவர்களுக்கு மகத்தான ஆதரவளிக்கிறார்கள். நாம் அவர்களுடைய கருத்துக்களையும் செயல்பாடுகளையும் விமர்சிக்கும் அளவுக்கு அவர்களுடைய பொருளாதார செயல்பாடுகளை கவனிப்பதில்லை. மகாவிஷ்ணு விளம்பரத்துக்காகவும் யுடியூப் சேனலில் பேட்டியளிப்பதற்காகவும் நிகழ்ச்சிகளை நடத்தவும், அமைச்சர்களை அணுகவும் அவருக்குப் பின்னிருந்து கோவை, திருப்பூர் தொழிலதிபர்கள் இயக்குகிறார்கள், நிதியாதரவுத் தருகிறார்கள் என்பது என் ஊகம், கூடுதலாக வெளிநாட்டினரின் கறுப்புப் பணமும் அவர்வழியாக நம் சந்தைக்குள் புழங்குகிறது என நினைக்கிறேன். அல்லாவிடில் இவர்களால் இவ்வளவு சுலபத்தில் கல்வி நிலையங்களை ஊடுருவி, அரசியல் தலைவர்களை நெருங்க இயலாது. கட்சிகளுக்கு பெரும்பணத்தை நிதியாக அளித்துவிட்டே தம் கடையை இவர்கள் விரிப்பார்கள். எல்லா வாயில்களும் இவர்களுக்குத் திறப்பது இப்படித்தான். ஜக்கி சட்டவிரோதமாக வனநிலத்தை ஆக்கிரமித்து இன்னும் ஆசிரமம் நடத்துவது அவருக்கு உள்ள அரசியல் அணுக்கத்தைக்கொண்டே. வெறும் சன்னியாசிப் பிம்பம் மட்டும் இதைத் தீர்மானிப்பதில்லை. நாட்டில் ஆயிரக்கணக்கில் அனாதைச் சாமியார்கள் இருக்கிறார்களே. ஒரு கறுப்புப் பண முகவரை நாம் இந்துத்துவவாதி, மதவாதி, சனாதனவாதி, அடிமுட்டாள் என்றெல்லாம் சாடுவது அவரைக் காப்பாற்ற மட்டுமே உதவும். அவருக்குப் பின்னால் இருக்கும் கறுப்புப் பண முதலைகள் இதைப் பார்த்து இளித்துக்கொண்டிருப்பார்கள். என்னை ஆச்சரியப்படுத்துவது இரண்டு விடயங்கள் தாம் - 1) இந்த கார்ப்பரேட் கறுப்புப் பணச்சாமியார்களில் ஜக்கியையும் ஶ்ரீஶ்ரீயும் தவிர பெரும்பாலானவர்களால் நிலைக்க முடிவதில்லை. ஆடு கொழுத்ததும் அறுப்பதைப்போல மொத்தப் பணத்தையும் பறித்து ஊரைவிட்டே துரத்திவிடுகிறார்கள். இதற்கும் பொருளாதாரக் காரணங்களே கணிசமாக இருக்கும் என நினைக்கிறேன். இதைப்பற்றி ஆராய்ந்து அறிந்து ஊடகங்கள் ஏன் எழுதுவதில்லை? இந்த ஊடக முதலாளிகளில் எத்தனை பேர்கள் இச்சாமியார்களிடம் தம் கறுப்புப் பணத்தைக் கொடுத்து வைத்திருக்கிறார்கள்? 2) மகாவிஷ்ணு அரசுப் பள்ளியில் பேசிய பேச்சுக்காக மட்டும் கைது பண்ணப்பட்டதாக நான் கருதவில்லை. நிச்சயமாக அந்த வழக்கு நிற்காது. வேறேதோ காரணம் இருக்கிறது. அவர் செட்டில் பண்ணிவிட்டு வந்துவிடுவார் என பலரும் எதிர்பார்ப்பது அதனாலே. மலைமலையாகக் குவியும் கறுப்புப் பணம் ஒரு துரும்பைக்கூட உலகப்பிரபலமாக்கிவிடும். பொதுமக்களின் கறுப்புப்பணத்தை சட்டவரையறைக்குள் கொண்டுவர விரும்பும் அரசியல் தலைமை ஒருபோதும் பெரும் செல்வந்தர்களையும் தலைவர்களையும் அவ்வாறு கட்டுப்படுத்த நினைப்பதில்லை. அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு வலை உள்ளது - அதுவே இத்தகைய சாமியார்கள் எனும் கறுப்புப்பண வங்கிகள். என்ன நடந்தாலும் சாமியார்களுக்கு அளிக்கப்படும் நிதிக்கு சாமியார்களும் நிதியாளர்களும் ஒழுங்காக கணக்குக்காட்ட வேண்டும் என ஒரு சட்டத்தைக் கொண்டு வர மாட்டார்கள். அப்படிச் செய்தால் இவர்களை விட ஆற்றல்மிக்க இன்னொரு கறுப்புப் பண முகமையை உருவாக்கிவிட்டே செய்வார்கள். கொழுத்தாடுகள் ஒரு நோக்கத்துடனே வளர்க்கப்படுகின்றன. நாம் ஆடுகளைப் பழிக்காமல் வளர்க்கிறவர்களைக் கேள்வி கேட்கப் பழகவேண்டும். Posted Yesterday by ஆர். அபிலாஷ் http://thiruttusavi.blogspot.com/2024/09/blog-post_12.html
-
யாழில். விபத்து - தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு
Published By: VISHNU 14 SEP, 2024 | 02:12 AM யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். வேலணை பகுதியில் இருந்து அராலி சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி, எதிரே வந்த ஜே.சி.பி வாகனத்தினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/193634
-
வடக்கின் இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் இன்று அங்குரார்ப்பணம்
Published By: VISHNU 13 SEP, 2024 | 11:32 PM வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்கத் திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் வெள்ளிக்கிழமை (13) உத்தியோகப்பூர்வமாகப் பெயரிடப்பட்டன. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பரந்தன் ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் பெயரிடப்பட்டன . இந் நிகழ்வுகளில் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம அவர்களும், முதலீட்டு பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு கொண்டனர். இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்களிலும் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/193632
-
காஞ்சிபுரம்: சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர்கள் போராடுவது ஏன்? - பிபிசி கள நிலவரம்
படக்குறிப்பு, தொழிற்சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தனியார் இடத்தில் தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 13 செப்டெம்பர் 2024 காஞ்சிபுரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராகக் காலவரையற்ற போராட்டத்தை அங்கு பணிபுரியும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். தொழிற்சங்கம் தொடங்குவதற்கு நிர்வாகம் அனுமதி மறுப்பதாகவும், சம்பள உயர்வு, பணிநேரம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தபோது, நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளானதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். சட்டத்துக்கு உட்பட்டு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சாம்சங் இந்தியா நிறுவனம் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளது. வியாழன் (செப்டம்பர்12) அன்று தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதிலும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. தமிழ்நாட்டில் 17 ஆண்டுகளாக சாம்சங் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது போராட்டம் வெடித்தது ஏன்? என்ன பிரச்னை? தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாம்சங் நிறுவனத்துக்கு இந்தியாவில், உத்தரபிரதேசத்தில் நொய்டாவிலும், தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்திலும் தொழிற்சாலைகள் உள்ளன. காஞ்சிபுரத்தில் சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில், வாஷிங்மெஷின், குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, கம்ப்ரஸர் (compressor) ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணியில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், 1,700 பேர் வரை நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர். சாம்சங் இந்தியா நிறுவனம் 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும், இதுநாள் வரையில் அங்கு தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் எதுவும் குறிப்பிடும்படியாக இல்லை. இதனைப் போக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் சி.ஐ.டி.யூ சார்பில் சாம்சங் இந்தியா தொழிலாளர் நலச்சங்கம் உருவாக்கப்பட்டது. இதற்கான அங்கீகாரக் கடிதம் கேட்டு தொழிற்சாலை நிர்வாகத்தை அணுகியபோது, ஏராளமான பிரச்னைகளைத் தாங்கள் எதிர்கொண்டதாகத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். போராட்டம் வெடித்தது ஏன்? சி.ஐ.டி.யூ காஞ்சிபுரம் மாவட்டச் செயலரும், சாம்சங் இந்தியா தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவருமான முத்துக்குமார், "தொழிற்சாலையில் சங்கம் அமைத்த பிறகு, அதை ஏற்க முடியாது என நிர்வாகம் கூறியது. அத்துடன் மட்டும் நிற்காமல் சங்கத்தை அழிப்பது, சங்கத்தின் பின்புலத்தில் உள்ள தொழிலாளர்களை அச்சுறுத்துவது என பலவழிகளில் நிர்வாகம் அத்துமீறி செயல்படுகிறது,” என்கிறார். மேலும், " 'சி.ஐ.டி.யூ-வில் சேரக் கூடாது, நிர்வாகம் ஏற்படுத்திய தொழிலாளர் அமைப்பில் மட்டும் இணைய வேண்டும்' என வற்புறுத்தினர். அதற்காக அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆபத்தானவை. அதனால்தான் வெளியே வந்து போராட்டம் நடத்துகிறோம்," என்கிறார், படக்குறிப்பு, தொழிற்சங்கம் தொடங்குவதற்கு நிர்வாகம் அனுமதி மறுப்பதாக தொழிலாளர்கள் புகார் கூறுகின்றனர் தொழிற்சாலையில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களில் சுமார் 1,500 பேர் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளதாக குறிப்பிடும் முத்துக்குமார், "சம்பள உயர்வு, தொழிலாளர் நலன் ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக சாம்சங் நிர்வாகம், தொழிற்சங்கத்திடம் பேச வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பதுதான் எங்களின் பிரதான கோரிக்கை. அதற்காகவே போராடுகிறோம்," என பிபிசி தமிழிடம் தெரிவித்தார். தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால், கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி போராட்டத்தைத் துவங்க உள்ளதாக நிர்வாகத்துக்கு சி.ஐ.டி.யூ தரப்பில் இருந்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்காததால் தொழிற்சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தனியார் இடத்தில் தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். களநிலவரம் என்ன? நான்காம் நாள் (செப்டம்பர் 12) போராட்டத்தின் போது களநிலவரத்தை அறிவதற்காக பிபிசி தமிழ் போராட்டம் நடக்கும் இடத்துக்குச் சென்றது. சாம்சங் இந்தியா தொழிற்சாலையின் சீருடையில் தொழிலாளர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். 'எதற்காக இந்தப் போராட்டம்?' என்பது குறித்து ஒவ்வொருவரும் தனித்தனியாக மேடையில் பேசினர். போராட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்காகப் பல வகைகளில் நிர்வாகம் முயற்சி செய்வதாக அங்கிருந்த தொழிலாளர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். படக்குறிப்பு, ஒரே வேலை செய்யும் தொழிலாளர்களிடையே சம்பள வித்தியாசம் இருப்பதாக, தொழிலாளர்கள் கூறுகின்றனர் பெயர் அடையாளம் வேண்டாம் எனக் கூறிவிட்டு பிபிசி தமிழிடம் பேசிய பணியாளர் ஒருவர், "அனைவரும் பொதுவான வேலையைத்தான் செய்கிறோம். ஆனால், சம்பளத்தில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. சிலருக்கு 50,000 ரூபாய் சம்பளம் தருகின்றனர். சிலர், 20,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கின்றனர். ஒரே வேலையில் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. இதைச் சரிசெய்யுமாறு கேட்டபோது, நிர்வாகம் மறுத்துவிட்டது. கேள்வி கேட்க முடியாத இடத்தில் இருப்பதை உணர்ந்ததால்தான் சங்கத்தையே துவங்கினோம்," என்கிறார். அங்கிருந்து, சாம்சங் இந்தியா நிறுவனத்துக்குச் சென்றபோது, அதன் பிரதான வாயில்களில் சீருடை அணிந்த பாதுகாவலர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் பேசியபோது, "நாங்கள் எதையும் பேசக் கூடாது. நிர்வாகம் தரப்பில் பதில் சொல்வார்கள்," என்று மட்டும் பதில் அளித்தனர். பேச்சுவார்த்தையில் தோல்வி ஏன்? காலவரையற்றப் போராட்டம் தொடங்குவதற்கு முன்னர் தொழிலாளர் நலத்துறையின் காஞ்சிபுரம் மாவட்டத் துணை கமிஷனர் கமலக்கண்ணனுடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். "இந்தப் பேச்சுவார்த்தையில் சாம்சங் இந்தியா நிர்வாகம் தரப்பில் என்ன சொல்லப்பட்டதோ அதை அப்படியே தொழிலாளர் நலத்துறையும் பேசியது. 'இது அரசின் பேச்சுவார்த்தை போல இல்லை' எனக் கூறி வெளியேறிவிட்டோம்," என்கிறார் சாம்சங் இந்தியா தொழிற்சங்க தலைவர் முத்துக்குமார். போராட்டம் தொடங்கிய பிறகும் இதேபோன்ற நிலை ஏற்பட்டால் பேச்சுவார்த்தையில் தொடர்வதை மறுபரிசீலனை செய்வோம் என அதிகாரிகளிடம் கூறிய பிறகே தொழிலாளர்களின் புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக, பிபிசி தமிழிடம் முத்துக்குமார் தெரிவித்தார். படக்குறிப்பு, சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்பு ஆலை "அடிப்படைச் சம்பளம் 35,000, இரவுப் பணிக்கான படி உயர்வு, மருத்துவ அலவன்ஸ் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். வேலை நேரத்தை 8 மணிநேரமாக இல்லாமல் 7 மணிநேரமாக குறைக்கப்பட வேண்டும் ஆகியன முக்கியமானவை. 'இரவு 11 மணி வரையில் ஓவர் டைம் பார்க்க முடியாது' எனக் கூறினோம். இதை மட்டும் நிர்வாகம் ஏற்றுக் கொண்டு, கட்டாயப்படுத்த மாட்டோம் எனக் கூறியது. இதர கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் அரசு தொழிலாளர்களின் பக்கம் நிற்கவில்லை," என்கிறார் முத்துக்குமார். இந்தக் கருத்தை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், "தொழிலாளர்களின் நலனுக்காக மட்டுமே அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களின் பக்கம் நிற்கவில்லை என்பது தவறானது. குடும்ப ஓய்வூதியம், தனி நபர் ஓய்வூதியம், மருத்துவ உதவிகள், பணியின் போது இறந்தால் இழப்பீடு என தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறோம்," என்கிறார். தென்கொரிய போராட்டத்துடன் தொடர்பா? "சி.ஐ.டி.யூ சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு வேறு வேலைகளைக் கொடுக்கின்றனர். உதாரணமாக, போர்க் லிப்ட் (Forklift) ஆபரேட்டர்களை வாஷிங்மெஷின் பிரிவில் வேலை பார்க்க சொல்கின்றனர். தங்களுக்குத் தெரியாத வேலையைப் பார்க்குமாறு அழுத்தம் கொடுப்பதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்," என்கிறார் முத்துக்குமார். படக்குறிப்பு, இங்குள்ள சம்பளம் என்பது இதர நிறுவனங்களை ஒப்பிடும் போது குறைவுதான் என்கின்றனர் தொழிலாளர்கள் தென்கொரியாவில் சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் வெடித்ததால்தான் இங்கும் போராட்டம் நடப்பதாக கூறும் தகவலில் உண்மையில்லை எனக் குறிப்பிடும் முத்துக்குமார், "தென்கொரியாவில் அண்மையில் இரண்டு போராட்டங்களை அங்குள்ள தொழிலாளர்கள் நடத்தினர். அதில் ஒன்று, விடுமுறை தொடர்பானது. அடுத்து வர்த்தகத்தில் கிடைத்த லாபத்தில் ஊதியம், போனஸ் ஆகியவற்றைக் கேட்டனர். ஆனால், தமிழ்நாட்டில் சங்கமே கூடாது என நிர்வாகம் கூறுவதால்தான் போராட்டம் நடக்கிறது. தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதில் கூட அரசு நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்,” என்கிறார். "தென்கொரியாவில் ஒரு தொழிலாளிக்கு மாதம் லட்சக்கணக்கணக்கான ரூபாய்களை சாம்சங் நிறுவனம் செலவு செய்கிறது. இங்கு ஒரு தொழிலாளிக்கு 28,000 முதல் 35,000 வரை செலவு செய்கின்றனர். அங்கு வாரத்துக்கு இரண்டு நாள்கள் விடுப்பு என்றால் இங்கு 1 நாள் தான் விடுமுறை. இங்குள்ள சம்பளம் என்பது இதர நிறுவனங்களை ஒப்பிடும் போது குறைவுதான்," என்கிறார். உற்பத்தியில் பாதிப்பா? தொழிலாளர்களின் போராட்டம் நான்காவது நாளை கடந்து நீடிப்பதால் சாம்சங் இந்தியா நிறுவனத்தில் வீட்டு உபயோக பொருள் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் முத்துக்குமார். "80% அளவுக்கு உற்பத்தி நடைபெறவில்லை எனத் தெரிகிறது. இதை சரிசெய்வதற்கு நொய்டாவில் இருந்தும், இங்குள்ள ஒப்பந்த ஊழியர்களையும் பயன்படுத்தியும் அந்த வேலைகளைச் செய்யுமாறு கூறுகின்றனர். இது நிரந்தரம் அல்ல. அவ்வாறு செய்ய முடியாது. "அதையும் மீறி பணிகள் தொடர்ந்தால், 'அது சட்டவிரோத உற்பத்தி' என தொழிலாளர் நலத்துறையிடம் தெரிவித்துவிட்டோம். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர். போராட்டத்தையும் மீறி இந்த உற்பத்தி தொடருமானால் அதை நிறுத்தும் வகையில் எங்களின் அடுத்தகட்ட போராட்டம் நடக்கும்," என்கிறார் முத்துக்குமார். படக்குறிப்பு, சாம்சங் இந்தியா நிறுவனத்தில் வீட்டு உபயோக பொருள் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் முத்துக்குமார். 'பிரச்னைகளை தீர்ப்போம்' - அமைச்சர் சி.வி.கணேசன் தொழிலாளர்களின் போராட்டம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் நலத்துறை துணை கமிஷனர் கமலக்கண்ணனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, "தற்போது இந்த விவகாரம் குறித்துப் பேச முடியாது," என மறுத்துவிட்டார். பட மூலாதாரம்,CV GANESAN/FACEBOOK படக்குறிப்பு, அமைச்சர் சி.வி. கணேசன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "சாம்சங் இந்தியா நிறுவனம் குறித்த பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு உறுதியளித்திருக்கிறேன். இதற்கான பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை செயலர், முதல்வரின் செயலர் ஆகியோர் உள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றித் தருவோம்," என்கிறார். சாம்சங் இந்தியா நிறுவனம் சொல்வது என்ன? சாம்சங் இந்தியா நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் கேட்பதற்கு அந்நிறுவனத்தின் பொதுமேலாளர் பார்த்திபனிடம் பிபிசி தமிழ் பேசியது. "ஊடக நிறுவனங்களுக்கு நிறுவனத்தின் தரப்பில் இருந்து செய்தி அறிக்கை வெளியிடப்படும்," என்று மட்டும் பதில் அளித்தார். இதன்பின்னர், சாம்சங் இந்தியா நிறுவனத்தின் இ-மெயில் முகவரிக்கு கேள்விகளை அனுப்பினோம். தொழிலாளர்களை அச்சுறுத்துவது, அரசுத்துறையுடன் இணைந்து தொழிற்சங்கத்தைத் தொடங்கவிடாமல் தடுப்பது ஆகியவை குறித்து கேள்விகளைக் கேட்டிருந்தோம். இந்தக் கேள்விகளுக்கு சாம்சங் இந்தியா நிறுவனம் நேரடியாக பதில் அளிக்கவில்லை. மாறாக, அந்நிறுவனத்தின் ஊடக செய்தி தொடர்பாளர் பிபிசி தமிழுக்கு அனுப்பியுள்ள இமெயிலில், "எங்களுக்கு தொழிலாளர்களின் நலன்கள்தான் முதன்மையானவை. தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளைச் சட்டத்துக்கு உட்பட்டு நிறைவேற்றுவது குறித்துப் பேசி வருகிறோம். எங்கள் நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்," எனக் குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c9wjw2pldpvo
-
யாழில். தியாக தீபத்தின் நினைவேந்தலுக்கு தடை கோரி மனு தாக்கல்
Published By: VISHNU 14 SEP, 2024 | 02:02 AM தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ். நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. அந்நிலையில், யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க கோரி யாழ், நீதவான் நீதிமன்றில் பொலிஸார் வெள்ளிக்கிழமை (13) மனு தாக்கல் செய்துள்ளனர். குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 18ஆம் திகதி முன்னெடுப்பதாகவும் அன்றைய தினம் மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள செல்வராசா கஜேந்திரன் மற்றும் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரை மன்றில் முன்னிலையாகுமாறு மன்று கட்டளையிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/193635
-
வடக்கிற்கான புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
யாழ். கொழும்பு தொடருந்து சேவை - வெளியான முக்கிய அறிவிப்பு வடக்கிற்கான மாஹேவில் இருந்து அநுராதபுரம் (Anuradhapura) வரையான தொடருந்து பாதையில் நேற்று (12) நடைபெற்ற பரீட்சார்த்த பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடருந்து பாதையில் வேலைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து தொடருந்து பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் தொடருந்து திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர். தொடருந்துகளின் இயக்கம் பாதுகாப்பற்றது யானைகள் சுரங்கப்பாதை மற்றும் மாஹோவுக்கும் அனுராதபுரத்துக்கும் இடையிலான ஆறு புகையிரத நிலையங்களின் புனரமைப்புப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர். அத்துடன் மாஹோவிற்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான வண்ண சமிக்ஞை அமைப்பு இன்னும் நிறுவப்படவில்லை என்றும், இந்த குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு தொடருந்துகளின் இயக்கம் பாதுகாப்பற்றதாக இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே குறித்த காரணங்களை கருத்தில் கொண்டு தொடருந்து பயணம் காலவரையின்றி நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://ibctamil.com/article/trains-between-colombo-and-jaffna-to-posponted-1726134638#google_vignette
-
லாட்டரியில் ரூ.2.5 கோடி பரிசு; மனைவியே காரணம் என நெகிழ்ச்சி - பழைய இரும்பு கடைக்காரருக்கு அதிர்ஷ்டம்
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரத்தில் வசிக்கும் பழைய இரும்பு வியாபாரியான ப்ரீதம் லாலுக்கு, ஆகஸ்ட் 25-ஆம் தேதி செய்தித்தாள் நல்ல செய்தியைக் கொண்டுவந்தது. கடந்த 50 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்கிவரும் அவருக்கு இப்போது பஞ்சாப் ஸ்டேட் லாட்டரியில் இரண்டரை கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது.
-
நான்காவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்
தெற்காசிய கனிஷ்ட ஆண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் இலங்கையின் சந்துனுக்கு தங்கம் Published By: VISHNU 12 SEP, 2024 | 09:54 PM (நெவில் அன்தனி) சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நான்காவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை (12) இலங்கைக்கு மேலும் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 10 பதக்கங்கள் கிடைத்தது. போட்டியின் முதல் நாளன்று இலங்கைக்கு 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்திருந்தன. இதற்கு அமைய இரண்டாம் நாள் போட்டி முடிவில் இலங்கைக்கு 4 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. போட்டியின் இரண்டாம் நாளான இன்று வியாழக்கிழமை (12) ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி போட்டியை 14.06 செக்கன்களில் ஓடி முடித்த இலங்கை வீரர் கோஷல சந்துன் தங்கப் பதக்கத்தை வென்றுகொடுத்தார். ஆண்களுக்கான 400 மீறறர் ஓட்டப் போட்டியை 47.17 செக்கன்களில் ஓடிமுடித்த ஒமெல் ஷஷின்த வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். இந்த நேரப் பெறுதியானது அவரது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியாகும். ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் தெவிந்து சந்தில் தூவகே (7.22 மீற்றர்), ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் விஷ்வா தாருக்க (14.27 செக்.), ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் டிலுக் தபரேரா (39.24 மீற்றர்), பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் சிதன்சா மியுனி குணதிலக்க (15.32 செக்.), பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் ஜே. எச். கௌராஞ்சனி (37.95 மீற்றர்), பெண்களுக்கான 3000 ஓட்டப் போட்டியில் ஜீ. எச். துலாஞ்சி (10 நி. 39.39 செக்.), பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் தனஞ்சனா (5.73 மீற்றர்), பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நுஹன்சா தக்ஷிமா (55.27 செக்.) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்தனர். https://www.virakesari.lk/article/193537
-
பல நாடுகளின் உளவுப்பிரிவினர் மத்தியில் தனித்துநிற்கும் ‘தமிழ் பொதுவேட்பாளர்’
சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் என்பது பல நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகள் இறங்கி விளையாடுகின்ற ஒரு களம் என்பது யாவரும் அறிந்த உண்மை. எந்த வேட்பாளர்களை களமிறக்குவது, எப்படியான தேர்தல் வியூகங்களை வகுப்பது என்று, பல நாடுகளின் தூதரகங்களே இறங்கி நின்று காரியமாற்றுகின்ற ஒரு செயற்கை ஜனநாயக நடைமுறைதான் சிறிலங்காவின் இந்த ஜனாதிபதித் தேர்தல். சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்காவின், இந்தியாவின், சீனாவின் ஆதவுபெற்ற வேட்பாளர்கள் என்ற அடையாளத்துடன் பலர் களமிறக்கப்பட்டிருக்கின்ற நிலையில், தமிழ் பொது கட்டமைப்புக்களால் களமிறக்கப்பட்டுள்ள ஒரு தமிழ் பொதுவேட்பாளருக்கான ஆதரவு என்பது ஆச்சரியமானமுறையில் பலமடங்கு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
-
உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா செல்கிறார் அஜித் தோவல்
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை ரஷ்ய அதிபர் புதின் சந்தித்தது ஏன்? - தெளிவுபடுத்திய ரஷ்யா பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அஜித் தோவல் 40 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை செப்டம்பர் 12-ஆம் தேதி ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சந்தித்தார். ரஷ்ய அதிபர் புதின் வழக்கமாக தனக்கு இணையான தலைவர்களை மட்டுமே சந்திப்பது வழக்கம். ஆனால், இம்முறை அவர் அஜித் தோவலை சந்தித்துப் பேசியுள்ளார். புதின், கடந்த ஆண்டும் மாஸ்கோவில் அஜித் தோவலை சந்தித்தார். கடந்த இரண்டு மாதங்களில் பிரதமர் மோதி ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரு நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். இந்தச் சூழலில் தோவல்-புதின் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் வீடியோவை ரஷ்ய செய்தி நிறுவனமான 'ஸ்புட்னிக்' சமூக ஊடகங்களில் வெளியிட்டு, “யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனான பிரதமர் மோதியின் சந்திப்பு குறித்து தோவல் புதினிடம் தெரிவித்தார்,” என்று குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிமிட்ரி பெஸ்கோவ் உடன் புதின் புதினிடம் தோவல் என்ன பேசினார்? அந்த வீடியோவில் தோவல், “பிரதமர் மோதி உங்களிடம் தொலைபேசி உரையாடலில் கூறியது போல், யுக்ரேன் பயணம் மற்றும் யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்தது குறித்து உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறார். நான் இங்கு வந்ததற்கு முக்கிய காரணம் அந்த உரையாடலைப் பற்றி உங்களிடம் கூற வேண்டும் என்று பிரதமர் மோதி விரும்பினார்,” என்று கூறுகிறார். தோவல் மேலும், “பேச்சுவார்த்தை மூடப்பட்ட அறையில் நடந்தது. இரு நாட்டுத் தலைவர்கள் மட்டுமே இருந்தனர். ஜெலென்ஸ்கியுடன் இரண்டு பேர் இருந்தனர். பிரதமர் மோதியுடன் நானும் இருந்தேன். அந்த உரையாடலுக்கு நானும் சாட்சி,” என்றார். அக்டோபர் 22-ஆம் தேதி ரஷ்ய நகரம் கசானில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில், பிரதமர் மோதி உடனான தனிப்பட்ட இருதரப்பு சந்திப்புக்கு இந்த உரையாடலின்போது புதின் முன்மொழிந்தார் என ரஷ்யாவின் ஆர்.டி செய்தி சேனல் கூறுகிறது இந்தச் சந்திப்பின்போது, இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான வெற்றிகரமான கூட்டாண்மை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், இந்தியாவில் உள்ள ரஷ்யத் தூதரகம் தெரிவித்துள்ளது. யுக்ரேனில் இருந்து திரும்பிய பிறகு பிரதமர் மோதியும் புதினும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது பிரதமர் மோதி, தனது யுக்ரேன் பயணம் குறித்து புதினிடம் பேசினார். அண்மையில் நடந்த தோவல்-புதின் சந்திப்பு குறித்து ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, அஜித் தோவல் மற்றும் புதின் ரஷ்யா தரப்பு சொல்வது என்ன? தோவல் உடனான சந்திப்புக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்-விடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். தோவல், யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் இருந்து ஏதாவது செய்தி கொண்டு வந்திருக்கிறாரா என்று செய்தித் தொடர்பாளரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த புதினின் செய்தித் தொடர்பாளர், அப்படி எந்தச் செய்தியும் கொடுக்கவில்லை என்றார். யுக்ரேனில் நடந்து வரும் போருக்குத் தீர்வு காண்பது தொடர்பாக தோவல் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக பெஸ்கோவ் கூறினார் என்று ரஷ்யச் செய்தி நிறுவனமானடாஸ் செய்தி வெளியிட்டுள்ளது பெஸ்கோவ் கூறுகையில், "யுக்ரேனில் நடக்கும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மோதியின் பார்வையை தோவல் விளக்கினார். எனினும், நாங்கள் தெளிவான சமாதான ஒப்பந்தத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை,” என்றார். பிரதமர் மோதி ஆகஸ்ட் 23-ஆம் தேதி யுக்ரேன் சென்றார். இந்தியா- யுக்ரேன் இடையே தூதரக உறவுகளை நிறுவிய பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் யுக்ரேனுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக அது அமைந்திருந்தது. இந்தப் பயணத்தின் போது, போருக்கு அமைதி வழியில் தீர்வு காண்பது குறித்து பிரதமர் மோதி பேசினார். இந்தச் சந்திப்பில், டெல்லியில் அமைதி மாநாடு நடத்துவது பற்றி ஜெலென்ஸ்கி பேசியிருந்தார். ஆனால், முதல்முறை நடந்த அமைதி மாநாட்டின் அறிக்கையில் இந்தியா கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. புதின்-தோவல் சந்திப்பின் பின்னணி பாகிஸ்தானில் உள்ள சர்வதேச அரசியல் ஆய்வாளரான முனைவர் கமர் சீமா, அமெரிக்காவின் டெலாவேர் பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளிப் பேராசிரியரான முக்தர் கானிடம், மோதி அரசாங்கத்தில் அஜித் தோவலின் முக்கியத்துவம் பற்றிக் கூறினார். "இந்தியாவைப் பொறுத்தவரை, ராஜதந்திரத்தில் மூன்று நிலைகள் உள்ளன. முதலில் பிரதமர் மோதியே ராஜதந்திரம் செய்வது. மோதி பயணம் செய்யும் போது, அவரது மனதில் ராஜதந்திரம் உள்ளது. ஜெய்சங்கர் இரண்டாம் நிலை ராஜதந்திரத்தில் ஈடுபடுவார். மூன்றாம் நிலை ராஜதந்திரம், அஜித் தோவல் செய்வது,” என்றார் அவர். ரஷ்யாவில் நடந்த அஜித் தோவல்-புதின் சந்திப்பு பல வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரஷ்யா-யுக்ரேன் இடையிலான அமைதி ஒப்பந்த பணிகளில் இந்தியா இணையவேண்டும் என ஐரோப்பாவின் பல நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே அமைதியை நிலைநாட்ட இந்தியாவிடம் உறுதியான அமைதி திட்டம் எதுவும் இல்லை என்று ஆங்கில நாளிதழான ‘தி இந்து’ கூறியுள்ளது. அதே சமயம், நேரடிப் பேச்சுவார்த்தை இல்லாமல், தூதுவராகச் செயல்பட்டு மோதலைக் குறைக்க இந்தியா தயாராக உள்ளது எனவும் ‘தி இந்து’ கூறுகிறது பிரதமர் மோதியும் ஜெலென்ஸ்கியும் இந்த மாத இறுதியில் நியூயார்க் செல்கின்றனர். அங்கு இருவரிடையே சந்திப்பு நடைபெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா, ரஷ்யா-யுக்ரேன் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்புகள் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக இந்தியா ரஷ்யாவின் நட்பு நாடாக இருந்து வருகிறது. யுக்ரேன் மீது போர் தொடங்கிய பின்னர் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. ஆனால் இந்தத் தடையை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தக உறவைத் தொடர்ந்தது. போரின் போதும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து மிக அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜூலை 8-ஆம் தேதி ரஷ்யா சென்ற பிரதமர் மோதி, புதினை ஆரத்தழுவினார். ஜூலை மாதம் ரஷ்யா சென்ற பிரதமர் மோதி, புதினை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார். ஜெலென்ஸ்கி உட்பட பல மேற்கத்திய நாட்டு தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், பிரதமர் மோதி யுக்ரேன் சென்ற போது, ஜெலென்ஸ்கியையும் ஆரத்தழுவி அவரது தோள் மீது கைப்போட்டுப் பேசினார். பல வல்லுநர்கள் நடுநிலையாக இருக்க இந்தியா பின்பற்றும் கொள்கையாக இதனைக் கண்டனர். ஆனால், இதுகுறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “உலகின் பல்வேறு பகுதிகளில், மக்கள் ஒருவரை ஒருவரை சந்திக்கும் போது, அன்புடன் கட்டிப்பிடித்துக் கொள்வது வழக்கம். உங்கள் கலாசாரத்தில் இந்த நடைமுறை இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது எங்கள் கலாசாரத்தின் ஒரு பகுதி என்று நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்வேன். அதிபர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்த போதும், பிரதமர் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினார்,” என்று அவர் விவரித்தார். இருப்பினும், ராண்ட் கார்ப்பரேஷனின் சிந்தனைக் கூடத்தின் இந்தோ-பசிபிக் ஆய்வாளர் டெரெக் ஜே கிராஸ்மேன், பிரதமர் மோதி ஜெலென்ஸ்கியைக் கட்டிப்பிடிக்கும் படத்தைப் பகிர்ந்து, “மோதி அனைவரையும் கட்டிப்பிடித்து மரியாதையை வெளிப்படுத்துவது சரியல்ல. அதில் எந்த அர்த்தமும் இல்லை,” என்கிறார். ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச மன்றங்களில் யுக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஏதேனும் முன்மொழிவு அல்லது விவாதம் நடந்த போதெல்லாம், இந்தியா அவற்றிலிருந்து விலகியே இருந்தது. அதே சமயம், இந்தியா யுக்ரேனுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பி வருகிறது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2021-22 நிதியாண்டில் இந்தியாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையே சுமார் 3.3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 28,000 கோடி ரூபாய்) வர்த்தகம் நடந்துள்ளது. ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே 50 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான (இந்திய மதிப்பில் சுமார் 4.2 லட்சம் கோடி ரூபாய்) வர்த்தகம் நடந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் வரும் காலத்தில் 100 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 8.4 லட்சம் கோடி ரூபாய்) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோதியை புதின் வெளிப்படையாகவே புகழ்ந்து வருகிறார். பட மூலாதாரம்,ANI யுக்ரேன் விஷயத்தில் புதின் யாரை நம்புகிறார்? செப்டம்பர் 5-ஆம் தேதியன்று புதின், “யுக்ரேனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால் அதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன,” என்றார். "இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளி நாடுகளை நாங்கள் மதிக்கிறோம். முக்கியமாக இந்தியா, சீனா, மற்றும் பிரேசில் ஆகியவை மோதலை முடிவுக்கு கொண்டு வர நினைக்கின்றன,” என்று புதின் கூறியிருந்தார். “இந்த விவகாரம் குறித்து, நட்பு நாடுகளுடன் தொடர்ந்து பேசி வருகிறேன்,” என்று புதின் கூறியிருந்தார். இந்தச் சிக்கலான செயல்முறையின் அனைத்து நுணுக்கங்களையும் புரிந்து கொள்ள இந்த நாடுகளின் தலைவர்கள் தீவிர முயற்சி செய்கிறார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த நாடுகளுடன் ரஷ்யா நம்பகமான உறவைக் கொண்டுள்ளது,” என்று புதின் கூறினார். பிரதமர் மோதி பல சந்தர்ப்பங்களில் இது போருக்கான நேரம் அல்ல என்று கூறியிருக்கிறார். 2022-இல் தாஷ்கண்டில் புதினிடம் இதையே அவர் வலியுறுத்தினார். சீன வெளியுறவு அமைச்சரைச் சந்தித்த தோவல் சீனாவின் பார்வையில் தோவலின் ரஷ்யப் பயணம் முக்கியமானதாக கருதப்படலாம். ரஷ்யப் பயணத்தின் போது சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயையும் தோவல் சந்தித்தார். இதன் போது, இந்தியச்-சீன எல்லையில் இருந்து ராணுவம் விலகுவது குறித்தும் பேசப்பட்டது. இந்தச் சந்திப்பின் போது, எல்லையில் நான்கு ஆண்டு கால ராணுவ பிரச்னையை தீர்ப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் வாங் யீயும் வியட்நாமில் சந்தித்துப் பேசினர். பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோதி இடையிலான சந்திப்புக்கான வாய்ப்புகள் குறித்து, வாங் மற்றும் தோவல் இடையேயான சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சந்திப்புக் குறித்து வெளியான வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இருதரப்பு உறவுகள் இரு நாடுகளுக்கு மட்டுமல்ல, முழு பிராந்தியத்திற்கும், உலகிற்கும் முக்கியமானது என்பதை இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன. எல்லையில் அமைதி மற்றும் மரியாதையை நிலைநாட்டுவது குறித்து தோவல் பேசினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது செப்டம்பர் 12-ஆம் தேதி, ஜெனிவாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஜெய்சங்கர், "இந்திய மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையேயான 75% பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன. முட்டுக்கட்டை நிலையில் இருந்து இரு தரப்பு ராணுவமும் திரும்பி, அமைதி நிலவினால் இந்தியா-சீனா உறவுகளை சீராக்குவதற்கான மற்ற சாத்தியக்கூறுகளையும் யோசிக்கலாம்,” என்றார். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c8dpd3n872mo
-
யூடியூப் சனலில் சாதனை படைத்த ரொனால்டோ
100 கோடி பேர் பின் தொடரும் முதல் பிரபலம்; சமூக வலைத்தளத்தை மிரள வைத்த ரொனால்டோ கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமூக வலைதள கணக்குகளை மொத்தமாக 100 கோடி ரசிகர்கள் பின் தொடர்ந்து உள்ளனர். கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானா ரொனால்டோ சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் மொத்தமாக ஒரு பில்லியன் ஃபாலோயர்கள் அதாவது 100 கோடி ஃபாலோயர்கள் பெற்றுள்ளார் என்பதும் இந்த சாதனையை படைத்த முதல் நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் உலகின் மிகப்பெரிய இடத்திற்கு உயர்ந்துள்ளதாக கருதுகிறேன், நான் எப்போதும் எனது குடும்பத்திற்காகவும் உங்களுக்காகவும் தான் விளையாடி உள்ளேன். என்னை நம்பி ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றி’ என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமாக பதிவு செய்துள்ளார். 900 கோல்கள் அடித்து மாபெரும் வரலாற்று சாதனையை படைத்த கிறிஸ்டியானா ரொனால்டோ தற்போதைய 100 கோடி ஃபாலோயர்கள் பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. https://thinakkural.lk/article/309396
-
குவாட் உச்சி மாநாட்டை ஏற்று நடத்தும் அமெரிக்கா
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், செப்டம்பர் 21ஆம் திகதி, ‘குவாட்’ எனப்படும் நான்கு நாடுகள் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையிலான உச்சநிலை மாநாட்டை ஏற்று நடத்தவிருக்கிறார். டெலவேர் நகரில் இந்த மாநாடு நடைபெறும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் ‘குவாட்’ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன. நான்காவது முறையாக நடைபெறும் இந்த மாநாடு உத்யோகபூர்வ ஒருங்கிணைப்பு, தடையற்ற, வெளிப்படையான இந்தோ – பசிஃபிக் வட்டாரம் குறித்த ஒருமித்த கருத்து ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டது. அவுஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை வரவேற்க அமெரிக்க ஜனாதிபதி ஆவலாக இருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கை குறிப்பிட்டது. ‘குவாட்’ தலைவர்கள் நேரடியாகக் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டை பைடன் ஏற்று நடத்துவது இதுவே முதல்முறை. அவர்களுடனான தமது ஆழமான உறவுகளையும் ‘குவாட்’ அமைப்பின் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அவர் இந்த மாநாட்டை ஏற்றுநடத்துவார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை கூறியது. சுகாதாரப் பாதுகாப்பு, இயற்கைப் பேரிடர்களைக் கையாளுதல், கடல்துறைப் பாதுகாப்பு, உயர்தர உள்கட்டமைப்பு, பருவநிலை மாற்றமும் பசுமை எரிசக்தியும், இணையப் பாதுகாப்பு போன்றவற்றைக் குறித்துத் தலைவர்கள் இந்த உச்சநிலை மாநாட்டில் கலந்துரையாடுவர் எனக் கூறப்பட்டது. அடுத்த ‘குவாட்’ உச்சநிலை மாநாட்டை இந்தியா ஏற்று நடத்தும். https://thinakkural.lk/article/309411
-
அரவிந்த் கேஜ்ரிவால் கைது: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு என்பது என்ன? முழு விவரம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு 13 SEP, 2024 | 01:52 PM புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (செப்.13) பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 6 மாதங்களுக்கு பின்னர் அவர் சிறையில் இருந்து வெளியே வருகிறார். மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயர் மற்றும் பிஎஸ்ஆர் கட்சியைச் சேர்ந்த கே.கவிதா ஆகியோருக்கு பின்பு அரவிந்த் கேஜ்ரிவால் பிணை பெற்றுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் இந்தாண்டு மார்ச் 21-ம் தேதி முதன்முதலாக கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறையின் காவலில் இருக்கும் போதே, கடந்த ஜூன் 26-ம் தேதி சிபிஐ-யும் அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தது. இதனிடையே, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜுலை 12-ம் தேதி அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. என்றாலும் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டிருந்ததால் அவர் தொடந்து திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த கைதை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், தனக்கு பிணை கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் ஏற்கெனவே நடைபெற்று முடிந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு அர்விந்த் கேஜ்ரிவால் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 5-ம் தேதியன்று ஒத்திவைத்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற வலைதளத்தில் செப்டம்பர் 13-ம் தேதி விசாரணைக்கு வரும் வழக்குகளின் பட்டியலில் அர்விந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவும் இடம்பெற்றிருந்ததது. இந்த நிலையில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று (செப்.13) உத்தரவிட்டது. ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அரவிந்த் கேஜ்ரிவால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அக்.5ம் தேதி நடைபெற உள்ள ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் பாஜக மற்றும் தனது கூட்டாளியான இண்டியா கூட்டணியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி களம் காண இருப்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/193582
-
அனுரவுக்கு தமிழ் மக்களிடம் சென்று வாக்கு கேட்கும் உரிமையில்லை
இலங்கை – இந்திய ஒப்பந்தம் மற்றும் மாகாண சபை முறைமைக்கு எதிராக அன்று போர்க்கொடி தூக்கிய ஜே.வி.பியினருக்கு வடக்குக்குச் சென்று வாக்குக் கேட்பதற்குரிய உரிமை கிடையாது. ஆனால், எமக்கு அதற்குரிய உரிமை உள்ளது. ஏனெனில் அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்கும் கட்சிதான் எமது கட்சியாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக மக்களைக் கொன்ற கட்சிதான் ஜே.வி.பி. மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டவர்களையும் ஜே.வி.பி. கொன்றது. இந்திய மருத்துகளைக் கொண்டு வந்த அதிகாரிகளையும் இந்தக் கட்சி கொலை செய்தது. இந்தியப் பொருட்களைப் புறக்கணிக்குமாறு அழைப்பும் விடுத்தது. எனவே, இந்தக் கட்சியினருக்கு வடக்குக்குச் சென்று வாக்கு கேட்கும் உரிமை கிடைக்காது. வடக்கு மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பகிர்வு மற்றும் அபிவிருத்திகளைச் செய்யக்கூடிய தலைவர் சஜித் பிரேமதாஸதான் என்பதை அந்தப் பகுதி மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். வடக்கில் உள்ள தமிழ்த் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனை அவர்கள் வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர். அதேபோல் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் சஜித்துக்கு பேராதரவு வழங்கும் நிலைப்பாட்டில் உள்ளனர். குறித்த பகுதிகளுக்குச் சென்றபோது சஜித்துக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/309409