Everything posted by ஏராளன்
-
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் எழுதப்பட்ட நூல் ஜனாதிபதி தலைமையில் வௌியீடு
Published By: VISHNU 28 JUN, 2024 | 09:44 PM முப்பது வருடகால யுத்தத்தை நிறைவு செய்ய சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் "இராணுவ தளபதி தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி - இந்த யுத்தம் அடுத்த தளபதி வரையில் நீடிக்க இடமளியேன்" என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெள்ளிக்கிழமை (28) கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கில் நடைபெற்றது. இதன்போது புத்தகத்தின் முதல் பிரதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது. அதனையடுத்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதிக்கு நினைவு பரிசு ஒன்றையும் வழங்கி வைத்தார். இதன்போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் சேவைக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி, யுத்தத்தை வெற்றிகொண்டது மாத்திரமன்றி, பல்வேறு அரசியல் சவால்களுக்கும் முகம்கொடுத்தவர் என்ற வகையில் எதிர்காலத்தில் நாட்டிற்கு பெரும் சேவையாற்ற முடியும் என்றும் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, "பீல்ட் மார்ஷல் அந்தஸ்த்தை சரத் பொன்சேகா மட்டுமே வகிக்கிறார். அவர் யுத்த சவால்களை வெற்றிக்கொண்ட அதேநேரம் அதற்கு வெளியில் அரசியல் சவால்களுக்கும் முகம்கொடுத்திருந்தார். யுத்த காலத்தில் ஜெனரல் சிசில் வைத்தியரத்ன ஊடாகவே இவரை நான் அறிந்துகொண்டேன். ஜெனரல் சிசில் வைத்தியரத்ன என்னோடு சமீபமாக பழகியவர். இந்த அதிகாரிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது அதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுக்குமாறு சிசில் வைத்தியரத்ன கூறினார். யுத்தம் ஆரம்பித்த காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் அரசாங்கத்திலிருந்த நான் யுத்தத்தில் பங்கெடுத்திருந்த பெரும்பாலான அதிகாரிகளை அறிவேன். அப்போது பல்வேறு சிறந்த அதிகாரிகள் உருவானதோடு அவர்களின் வரிசையில் சரத் பொன்சேகாவுக்கு சிறந்த இடம் காணப்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஜயசிக்குரு போராட்டம் தோல்வியை தழுவியதால் இராணுவம் கைப்பற்றிய பலவற்றை இழக்க நேரிட்டது. அந்த நேரத்தில் நான் பிரதமராக பதவி வகித்ததோடு, யாழ்ப்பாணத்தை யாரிடம் கையளிப்பது என்ற கேள்வி காணப்பட்டது. அப்போது பலர் இறந்து போயிருந்ததோடு, காயங்களுக்கும் உள்ளாகியிருந்ததால் படையினர் எண்ணிக்கை குறைந்திருந்தது. யாழ்ப்பாணத்துக்கான படைப்பிரிவொன்று அவசியமென சிலர் கூறினர். அப்போது நான் சரத் பொன்சேகாவிடம் யாழ்ப்பாணத்தை ஒப்படைப்போம் என இராணுவ தளபதியிடம் கூறினேன். அதன்படியே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அவர் வீழ்ந்த இடத்தில் எழுந்து யுத்த வெற்றியை நோக்கி நகர்ந்தார். அதற்காக கஷ்டமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. யுத்தம் என்பது கிரிக்கட் போட்டியை போன்றதல்ல. உயிரிழப்புக்கள் ஏற்படும். சொத்துக்கள் இழக்கப்படும். அதற்கு மத்தியிலும் யுத்தத்தை வழிநடத்திச் செல்லும் வல்லமை அவரிடம் இருந்தது. உலகத்தில் மிக் மோசமான யுத்தமொன்றுக்கே நாம் முகம்கொடுத்தோம். மற்றைய நாடுகளில் இன்றும் அவ்வாறான யுத்தங்கள் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தான் யுத்தம் இலங்கைக்கு முன்னதாக ஆரம்பமானது. அந்த வகையில் சரத் பொன்சேகா தனது பொறுப்பை சரிவர செய்திருக்கிறார். அதேபோல் சிவில் வாழ்க்கையிலும் அவர் பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார். அதன்போது அவர் தனிமைப்பட்ட வேளைகளிலும், சிறையிடப்பட்ட வேளையிலும் வலுவான மனிதராக உருவாகினார். அதனால் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோடு கலந்துரையாடி சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஷல் அந்தஸ்த்து வழங்கப்பட்டது. அதற்கு தகுதியானவர் என்ற வகையில் அவரும் ஏற்றுக்கொண்டார். அரசாங்கம் என்ற வகையில் சரத் பொன்சேகாவின் தெரிவை கொண்டு நாம் பயனடைந்தோம். அவர் போராட்ட குணம் கொண்டவர். யுத்த களத்திலும் அரசியல் களத்திலும் போராட்டத்தை கைவிடவில்லை. அவரால் நாட்டுக்கு இனியும் சேவையாற்ற முடியும். அவரின் சேவைகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். "Old soldiers never die they fade away.In this instance he wont fade away either, so he is still there." என்ற வகையில் எதிர்காலத்தில் அவரிடத்திலிருந்து பெறக்கூடிய சேவையை பெற்றுக்கொள்ள நாட்டுக்கு சந்தர்ப்பம் கிட்டுமென நான் நம்புகிறேன். தற்போது நாட்டுக்குள் யுத்தம் முடிந்துவிட்டது சமாதானத்துக்கான பணிகளை செய்வோம் என்று சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் வைத்து ஒரு முறை கூறினார். அதற்கு தேவையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை முன்னேற்றிச் செல்வோம் என்று கேட்டுக்கொள்கிறேன். எமது இராணுவம் அனுபவங்கள் நிறைந்து. நாட்டைக் கட்டியெழுப்பி சமாதானத்தை ஏற்படுத்த இவர்களால் முடியும்." என்றும் தெரிவித்தார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா "படையினரின் அர்ப்பணிப்பின் பலனாகவே யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது. ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். பெருமளவானவர்கள் அங்கவீனமடைந்தனர். அதற்கான கௌரவத்தை அனைத்து இராணுவ வீரர்களின் குடும்பத்துக்கும் தெரிவிக்கிறேன். நமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவே அவர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். அதேபோல் நாட்டில் சமாதானத்தையும் ஏற்படுத்தினர். யுத்தத்தை நிறைவு செய்ய அரசியல் தீர்வை எட்ட வேண்டுமென பலரும் கூறினர். நான் இராணுவ தளபதியாக பொறுப்பேற்ற வேளையிலும் பாதுகாப்பு படை வீரர்கள் கவலையுடனேயே இருந்தனர். இருப்பினும் நாம் முப்பது வருட யுத்தத்தை வெற்றிகொண்டோம். இராணுவ வீரர்களின் இரத்தம், வியர்வை சிந்தப்படமால் அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்யப்படாதிருந்தால் யுத்தத்தை வெற்றிகொண்டிருக்க முடியாது. யுத்தத்தின் பின்னர் இந்நாட்டு மக்களும் ஆட்சியாளர்களும் இராணுவ வீரர்களுக்கு உரிய மரியாதையை வழங்கியிருந்தனரா என்பது கேள்விக்குரியாகும்." என்றும் தெரிவித்தார். மகா சங்கத்தினர் தலைமையிலான ஏனைய மதத் தலைவர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும், தூதுவர்கள், முன்னாள் இராணுவ தளபதிகள், அனோமா பொன்சேகா உட்பட அவரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/187221
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
கெஹலிய உட்பட 7 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் 28 JUN, 2024 | 06:08 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 7 பேரை எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்கள் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (28) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கின் சந்தேக நபரான மருந்துகள் விநியோக பிரிவின் அதிகாரியொருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/187206
-
'தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் வேண்டும்' - மாணவர்கள் மத்தியில் விஜய் பேசியது என்ன?
பட மூலாதாரம்,PTI 2 மணி நேரங்களுக்கு முன்னர் “நல்ல தலைவர்கள் தான் தமிழ்நாட்டில் இல்லை,” என்றும், “நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்,” என்றும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், திரைப்பட நடிகருமான விஜய் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். மேலும், போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமையாக இருந்தாலும், சில விஷயங்களிலிருந்து நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். விஜய்யின் இப்பேச்சு தமிழக அரசியல் களத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. விஜய் சொன்ன கருத்துகள் பொதுவான வாதமாக இருப்பதாகவும் நேரடியான குற்றச்சாட்டு இல்லை என்றும் தி.மு.க-வினர் கூறிவருகின்றனர். விஜய்யின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீமான், இதனை கூட்டணிக்கான அஸ்திவாரமாக எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்வு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தொகுதி வாரியாக, 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாகப் பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜூன் 28, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்தாண்டு இந்நிகழ்வு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்றது. இந்தாண்டு, இந்நிகழ்ச்சி இருகட்டங்களாக நடைபெறுகிறது. இதன் இரண்டாம் கட்டம் வரும் ஜூலை 3 அன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் நாங்குநேரி சாதிய வன்முறையில் பாதிக்கப்பட்டு, 12-ஆம் வகுப்பில் 469 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் சின்னதுரையின் அருகில் அமர்ந்திருந்தார். பின்னர், இந்நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றி, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விஜய் உரையின் சிறப்பம்சங்கள் பட மூலாதாரம்,VIJAY / INSTAGRAM வாழ்க்கையில் நாம் என்னவாக போகிறோம் என்பது குறித்த தெளிவு பலருக்கும் இருக்கலாம். ஆனால், சில மாணவர்களுக்கு எந்த துறையை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பதில் தொய்வு இருக்கலாம். எல்லா துறையும் நல்ல துறைதான், அதில் நீங்கள் முழு ஈடுபாட்டுடன் 100% உழைப்பை செலுத்தினால் யாராக இருந்தாலும் வெற்றி நிச்சயம். எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் ஆலோசியுங்கள். பொறியியல், மருத்துவம் மட்டுமே நல்ல படிப்பு இல்லை. தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள் உள்ளனர். ஆனால், நல்ல தலைவர்கள்தான் தமிழ்நாட்டில் இல்லை. இன்னும் நமக்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகின்றனர். அரசியலும் ஏன் ஒரு துறையாக வரக்கூடாது? அப்படி வரவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். “நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமா, வேண்டாமா?” என விஜய் கேள்வி எழுப்பினார். அப்போது, அரங்கிலிருந்தவர்கள் ஆரவாரம் செய்ததையடுத்து, “உங்களின் ஆர்வம் புரிகிறது, இப்போதைக்குப் படியுங்கள், மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்,” எனத் தெரிவித்தார். மறைமுகமாகவே நீங்கள் அரசியலில் ஈடுபடலாம் எனக்கூறிய விஜய், ஒரு செய்தியை பல செய்தித்தாள்கள் எப்படி வெவ்வேறு விதமாக கையாள்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். சமூக ஊடகங்கள் நல்லவர்களைக் கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் காண்பிக்கின்றனர். அதையெல்லாம் படியுங்கள், ஆனால் எது உண்மை, எது பொய் என்பதை ஆராய கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் நாட்டில் என்ன பிரச்னைகள் உள்ளன, சமூகத் தீமைகள் குறித்து உங்களுக்குத் தெரியும். சில கட்சிகளின் பொய்யான பிரசாரங்களை நம்பாமல், நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கும் விசாலமான பார்வை கிடைக்கும். அதுதான் சிறந்த அரசியல், என்றார். நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நண்பர்கள் தவறான பழக்கங்களில் ஈடுபட்டால் முடிந்தால் அவர்களை நல்வழிப்படுத்த பாருங்கள். தவறான பழக்கங்களில் ஈடுபடக் கூடாது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதை கட்டுப்படுத்துவது அரசின் கடமை, இளைஞர்களை காப்பாற்றுவது அரசின் கடமை, இப்போது ஆளும் அரசு அதைத் தவற விட்டுவிட்டார்கள் என்பதை நான் பேச வரவில்லை, அதற்கான மேடையும் இதுவல்ல. சில சமயங்களில் அரசாங்கத்தைவிட நம் பாதுகாப்பை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். போதைப் பழக்கத்தை தவிர்க்கும் பொருட்டு, ‘Say No to Temporary pleasure, Say No to drugs’ என மாணவர்களை உறுதிமொழி ஏற்கச் சொன்னார் விஜய். தேர்வில் தோல்வியடைந்தவர்கள், நினைத்த மதிப்பெண்களை பெற முடியாதவர்கள் விரக்தி அடைய வேண்டாம். வெற்றி, தோல்வியை சமமாக பாவிக்கக் கற்றுக்கொண்டால், தோல்வி நம்மிடம் வருவதற்கு பயப்படும். வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது தொடர்கதை அல்ல, என்றார். சீமான் கூறியது என்ன? பட மூலாதாரம்,X/ நாம் தமிழர் கட்சி படக்குறிப்பு,சீமான் ‘தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர்கள் வேண்டும்’ என்றும், ‘போதைப் பழக்கம்’ குறித்தும் விஜய் பேசியது பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த தி.மு.க செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, “விஜய் யாரைச் சொல்கிறார் எனத் தெரிந்தால்தான் பதில் சொல்ல முடியும். போதைப்பொருள் புழக்கம் அதிகமாகியுள்ளது என விஜய் கூறியிருப்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன? இது பொதுவான குற்றச்சாட்டு. தமிழ்நாடு கல்வி, மருத்துவம் என பல்வேறு துறைகளில் தேசியச் சராசரியைவிட அதிகமாக உள்ளது,” என தெரிவித்தார். மாணவர்களுக்கு இத்தகைய நிகழ்ச்சி நடத்துவதற்காக விஜய்க்கு வரவேற்பு அளித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை-பணக்காரர் என்ற எவ்விதப் பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும் விஜய்க்கு வாழ்த்துகள்,” எனப் பதிவிட்டுள்ளார். விஜய்யின் பேச்சு குறித்து தனியார் தொலைக்காட்சியில் பேசிய சீமான், விஜய்யை பலரும் எதிர்த்தபோது தான் தொடர்ந்து பல நேரங்களில் அவருக்கு ஆதரவாக நின்றதாகக் கூறினார். அப்போது, இதனை கூட்டணிக்கான அஸ்திவாரமாக எடுத்துக்கொள்ளலாமா என செய்தியாளர் கேட்டபோது, “எடுத்துக்கொள்ளலாம்,” என சீமான் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c4nge1dkd2xo
-
மாலைத்தீவு ஜனாதிபதிக்குப் பில்லிசூனியம் – இரு அமைச்சர்கள் கைது!
மாலைத்தீவு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு கடந்த ஆண்டு மாலைத்தீவில் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். பதவியேற்றதிலிருந்து இந்தியப் படைகளை வெளியேற்றியது உட்படப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி முய்சு, சீன ஆதரவாளராகப் பார்க்கப்படுகிறார். இந்நிலையில் ஜனாதிபதி முய்சுவிற்கு எதிராக ப்ளக் மெஜிக் (Black Magic) மூலம் பில்லிசூனியம் வைக்க முயன்றதாகத் தெரிவித்து அவரது கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் அந்நாட்டுக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் ஷாம்னாஸ் சலீம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சராகப் பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் 7 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/304756
-
சர்வதேச விண்வெளி நிலையத்தை பசிபிக் பெருங்கடலில் தள்ளவிருக்கும் ஈலோன் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ - ஏன்?
பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,2000-ஆம் ஆண்டு முதல், விண்வெளி நிலையத்தில் நிரந்தர பணியாளர்கள் உள்ளனர் கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் அமோஸ் பதவி, பிபிசி அறிவியல் நிருபர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ஐ.எஸ்.எஸ் - International Space Station - ISS) ஆயுட்காலம் இன்னும் சில ஆண்டுகளில் முடிவடைய உள்ள நிலையில் அதைச் செயலிழக்கச் செய்து அழிக்க, ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தை நாசா தேர்வு செய்துள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில், கலிஃபோர்னியாவைத் தளமாகக் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 4.3 லட்சம் கிலோ எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தை பசிபிக் பெருங்கடலில் தள்ளக்கூடிய ஒரு வாகனத்தை உருவாக்க உள்ளது. கடந்த புதன்கிழமை (ஜூன் 26), இந்தப் பணிக்கான 843 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ஏழாயிரம் கோடி) மதிப்புள்ள ஒப்பந்தம் பற்றிய தகவல் வெளியானது. ஐ.எஸ்.எஸ் விண்வெளி நிலையத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் 1998-இல் துவங்கப்பட்டன. மேலும் 2000-ஆம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்களின் குழு நடவடிக்கைகளுடன் இயங்கத் துவங்கியது. ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும், இந்த விண்வெளி நிலையம் 400 கிலோமீட்டர்கள் உயரத்தில் பூமியை முழுவதுமாகச் சுற்றி வருகிறது. அதாவது 90 நிமிடங்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில் ஒரு நாளைக்கு சராசரியாக 16 முறை பூமியை சுற்றி வருகிறது. மனிதர்களுக்கு வயதாகும் செயல்முறை முதல், புதிய வகை பொருட்களுக்கான சூத்திரம் வரை பலவிதமான முக்கியத் தலைப்புகளை ஆய்வு செய்து ஆயிரக்கணக்கான அறிவியல் சோதனைகள் அங்கு நடத்தப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,நிலவுக்கு அருகில் விண்வெளி நிலையத்தை உருவாக்க ஐ.எஸ்.எஸ் கூட்டாளிகள் தயாராகி வருகின்றனர் ‘தானே பூமியின் மேல் விழக்கூடும்’ பொறியாளர்களின் கூற்றுப்படி, ஐ.எஸ்.எஸ் ஆய்வகத்தின் கட்டமைப்பு இன்னும் அப்படியே நல்ல நிலையில் இருந்தாலும், அதனை அகற்றுவதற்கான எதிர்காலத் திட்டங்களை இப்போதே உருவாக்க வேண்டும். எந்த உதவியும் வழங்கப்படாவிட்டால் அது இறுதியில் தானே பூமியின்மேல் விழுந்து, பூமியில் உள்ள மக்களுக்குக் குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும். "ஐ.எஸ்.எஸ் விண்வெளி நிலையத்தின் நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் சமயத்தில், அதனை குறைந்த புவிச் சுற்றுப்பாதையில் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான முறையில் தரையிறக்க நாசா மற்றும் பிற சர்வதேச விண்வெளி நிலையங்களுக்கு அமெரிக்க டி-ஆர்பிட் (US De-orbit) வாகனம் உதவும்," என்று நாசாவின் விண்வெளிச் செயல்பாடுகளுக்கான இயக்குநர் கென் போவர்சாக்ஸ் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார். மேலும் "இந்த முடிவு நாசாவின் எதிர்கால வணிகத் திட்டங்களை ஆதரிக்கும், பூமிக்கு அருகில் உள்ள விண்வெளியின் பகுதியைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கிறது," என்றும் கூறினார். ஐ.எஸ்.எஸ் திட்டத்தை அமெரிக்காவும் ரஷ்யாவும் வழிநடத்துகின்றன. ஐரோப்பா, கனடா மற்றும் ஜப்பான் துணைப் பாத்திரங்களை வகிக்கின்றன. ரஷ்யா குறைந்தபட்சம் 2028-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஈடுபடும் என்று கூறினாலும், மேற்கத்திய பங்காளிகள் அனைவரும் 2030-ஆம் ஆண்டு வரை நிலையத்திற்கு நிதியளிக்க உறுதிபூண்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நாசா தேர்வு செய்துள்ளது பசிபிக் கடலில் விழவிருக்கும் விண்வெளி நிலையம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் முடியும் போது அதனை அகற்றுவதற்கான (end-of-life disposal) பல்வேறு வழிகளை நாசா இதுவரை ஆய்வு செய்துள்ளது. விண்வெளி நிலையத்தைத் தனித்தனியாகப் பிரித்து எடுத்து, அதில் புதிய கூறுகளை இணைத்து எதிர்காலத்திற்கான ஒரு தளமாக ஒருங்கிணைக்கத் திட்டமிட்டது. மற்றொரு யோசனை என்னவென்றால், அதை இயக்க மற்றும் பராமரிக்க ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தைசர்வதேச தேர்ந்தெடுத்துப் பொறுப்பை வழங்க வேண்டும். ஆனால் இந்த தீர்வுகள் அனைத்தும் சிக்கலானவை. செலவும் அதிகம். அத்துடன், உரிமை தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதில் சட்டரீதியான சவால்களும் உள்ளன. நாசாவோ அல்லது ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனமோ டி-ஆர்பிட்டிங் இழுவைப் படகு (டக் போட் - tug boat) வடிவமைப்பின் விவரங்களைத் தற்போதுவரை வெளியிடவில்லை. ஆனால் சரியான இடத்தில் மற்றும் சரியான நேரத்தில் வளிமண்டலத்தில் நிலையத்தைப் பாதுகாப்பாக வழிநடத்தி மாற்றுவதற்கு கணிசமான உந்துதல் தேவைப்படும். விண்வெளி தளத்தின் பெரிய நிறை மற்றும் அளவு தோராயமாக ஒரு கால்பந்து ஸ்டேடியத்தின் அளவு இருக்கும். எனவே அதன் சில கட்டமைப்புகள் மற்றும் கூறுகள்பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது ஏற்படும் வெப்பத்தைத் தாங்கிக்கொண்டு, பூமிப்பரப்பினை வந்தடையும். இந்தப் புதிய திட்டத்தின் கருவிகள் ஐ.எஸ்.எஸ் விண்வெளி மையச் சுற்றுப்பாதையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் இயற்கையாகவே சிதைக்க அனுமதிக்கும். மேலும், கடைசி குழுவினரை வெளியேற்றிய பிறகு, இறுதி டி-ஆர்பிட் திட்டத்தை செயல்படுத்த இழுவைப் படகுக்கு (tug boat) கட்டளையிடப்படும். தேவையற்ற விண்கலங்கள், 'பாயிண்ட் நீமோ’ எனப்படும் பசிபிக் பகுதியில் உள்ள தொலைதூர இடத்தை இலக்காகக் கொண்டுள்ளன. இங்கு தான் அவை அழிக்கப்படுகின்றன. 'நீமோ’ என்னும் பெயர், எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்னின் '20,000 லீக்ஸ் அண்டர் தி சீ’ புத்தகத்தில் உள்ள புகழ்பெற்ற நீர்மூழ்கிக் கப்பல் மாலுமியின் பெயர் ஆகும். விண்கலங்களுக்கான இந்தக் 'கல்லறை’ அருகிலுள்ள நிலத்திலிருந்து 2,500கி.மீ. தொலைவில் உள்ளது. ஐ.எஸ்.எஸ் விண்ணில் இருந்து வெளிவருவதற்குள் பல தனியார் கூட்டமைப்புகள் வணிக விண்வெளி நிலையங்களைத் துவங்கும் என்று நாசா நம்புகிறது. விண்வெளி அமைப்புகள், சந்திரனைச் சுற்றி வரும் கேட்வே பிளாட்பார்ம் அமைப்பதற்கான திட்டத்தில் தங்கள் முயற்சிகளை மீண்டும் கவனம் செலுத்தும். https://www.bbc.com/tamil/articles/cw5yx9vkwk7o
-
அமெரிக்காவின் 248 வது சுதந்திர தின நிறைவை கொண்டாடிய அமெரிக்கத் தூதரகம்
28 JUN, 2024 | 06:06 PM கோல் ஃபேஸ் ஹொட்டேலில் ஜூன் 27ஆம் திகதி அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங் ஏற்பாடு செய்த ஒரு கொண்டாட்ட வைபவத்துடன் அமெரிக்க சுதந்திரத்தின் 248ஆவது ஆண்டு நிறைவை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கொண்டாடியது. புகழ்பெற்ற இலங்கை அதிகாரிகள், இராஜதந்திரிகள் மற்றும் வர்த்தக, சிவில் சமூக மற்றும் ஊடகத்துறையினைச் சேர்ந்த பங்காளர்களுடன், இவ்வைபவத்தின் பிரதம விருந்தினரான சுற்றுலா, காணிகள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவை அமெரிக்கத் தூதுவர் வரவேற்றார். நீண்டகாலம் நிலைத்திருக்கும் ஜனநாயக உணர்வையும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் வலுவான பங்காண்மையினையும் இவ்வருட அமெரிக்க சுதந்திரக் கொண்டாட்டம் எடுத்துக்காட்டியது. ஜனநாயகம் மற்றும் அதன் விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கான பங்காண்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங், “இன்றிரவு நாம் அமெரிக்காவின் சுதந்திரத்தையும் எமது ஜனநாயகத்தின் பிறப்பையும் கொண்டாடுவது மாத்திரமன்றி, 248 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஜனநாயக இலட்சியங்களை நிலைநாட்டுவதற்கான நீடித்த போராட்டம் மற்றும் அதற்கான உறுதியான அர்ப்பணிப்பு என்பன தொடர்பாகவும் சிந்திக்கிறோம், ஜனநாயகத்தில் அமெரிக்காவின் சோதனை எவ்வாறிருக்கும் என்பது பற்றி அப்போது எதுவும் நிச்சயமாகத் தெரிந்திருக்கவில்லை. எமது கொள்கைகள், அபிலாஷைகள் மற்றும் தொலைநோக்கு என்பன தொடர்பான ஒரு துணிச்சலான அறிக்கையுடன் நாம் எமது சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினோம். இந்த உண்மைகள் வெளிப்படையானவை என நாங்கள் வெளிப்படுத்துகிறோம். எல்லா மனிதர்களும் சமமாக படைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை படைத்தவரால் சில மறுக்க முடியாத உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவ்வுரிமைகளுள் உயிர் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரமாக இருப்பதற்கான உரிமை மற்றும் மகிழ்ச்சியினை நாடிச் செல்வதற்கான உரிமை என்பனவும் அடங்குகின்றன. இந்த உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, ஆளப்படுபவர்களின் சம்மதத்திலிருந்து தமக்குரிய நியாயமான அதிகாரங்களைப் பெறுகின்ற அரசாங்கங்கள் மனிதர்களிடையே நிறுவப்படுகின்றன. ஆனால் அமெரிக்க ஜனநாயகம் இந்தப் பிரகடனத்துடன் ஆரம்பித்து அரசியலமைப்பு உருவாக்கத்துடன் முடிவடையவில்லை. ஜனநாயகம் நிலையான ஒரு நிலை அல்ல; அது ஒரு செயல்முறையாகும். அடிப்படைக் கொள்கைகளுக்கான அர்ப்பணிப்புகளை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டிருக்கும் செயல்முறையாகும். ஒரு தேசம் ஸ்தாபிக்கப்பட்டதை மட்டும் நாம் இன்றிரவு நினைவுகூரவில்லை. மாறாக எம்மையும் அமெரிக்க-இலங்கை பங்காண்மையினையும் வரையறை செய்யும், நீண்டகாலமாக நிலைத்திருக்கும் ஒற்றுமை உணர்வையும் சுதந்திர உணர்வையும் நாம் நினைவுகூருகிறோம்" என தூதுவர் சங் மேலும் கூறினார். ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இருதரப்பு உறவுகள் மற்றும் அதை விட அதிக காலமாக காணப்படும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்புகள் ஆகியவற்றுடன் இராஜதந்திரம், வர்த்தகம், கலாசாரம் மற்றும் பல விடயங்களில் எமக்கிடையே காணப்படும் பொதுவான ஜனநாயக விழுமியங்களையும் மற்றும் நலன்களையும் மேம்படுத்தி அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காண்மையானது தொடர்ந்து பலமடைகிறது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல், எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துதல், மக்களிடையே தொடர்புகளை கட்டியெழுப்புதல் மற்றும் கல்வி மற்றும் ஆங்கில மொழியினைக் கற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் நாடு கடந்த அச்சுறுத்தல்களை முறியடித்தல் போன்ற பரப்புகளில் இலங்கையுடனான பங்காண்மையினைப் பேணுவதில் அமெரிக்கத் தூதரகம் கொண்டுள்ள உறுதிப்பாட்டினை 2024 சுதந்திர தின கொண்டாட்டம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. முன்னோக்கிப் பார்க்கையில், எதிர்காலத்தில் இன்னும் பலமான ஒரு அமெரிக்க-இலங்கை உறவை கட்டியெழுப்புவதற்கான ஒரு தொலைநோக்கினை பிரதிபலிக்கும் வகையில் இரு நாடுகளும் அனைத்து துறைகளிலும் தமது ஒத்துழைப்பை ஆழப்படுத்தவுள்ளன. "American Neighborhood Block Party" எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வானது அமெரிக்க சுற்றுப்புறங்களில் நடைபெறுவதைப் போன்ற பண்டிகைக் கால கொண்டாட்டத்தினை இங்கே கொழும்பில் மீளுருவாக்கம் செய்தது. இதில் அமெரிக்கா முழுவதும் இடம்பெறும் ஜூலை 4ஆம் திகதிய கொண்டாட்டங்கள் மற்றும் மிகச் சிறந்த அமெரிக்காவுக்குரிய விளையாட்டுக்கள் ஆகியவற்றின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் கண்காட்சியும் நடைபெற்றது. அமெரிக்க சுற்றுப்புறங்களில் நடைபெறும் ஒரு பொதுவான விருந்தின் சமூகத்தை மையமாகக் கொண்ட உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது விருந்தினர்களை துடிப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஓர் ஒழுங்கமைப்பில் ஒன்றிணைத்து பொழுதுபோக்கு நடவடிக்கைகள் நிறைந்த ஒரு மாலைப் பொழுதை வழங்கியது. இந்த சிறப்பு நிகழ்வின் ஆனந்தம் மற்றும் ஒற்றுமைக்கான ஒரு சான்றாக, Galle Face Greenஇல் இடம்பெற்ற ஒரு வாணவேடிக்கையுடன் கொண்டாட்டம் நிறைவடைந்தது. மேலதிக விபரங்களுக்கு பின்வரும் சமூக ஊடகப் பக்கங்களில் எம்மைப் பின்தொடரவும்: முகநூல் https://www.facebook.com/USEmbassyColombo, இன்ஸ்டகிராம் https://www.instagram.com/usembassycolombo, அல்லது ட்விட்டர் https://twitter.com/USEmbSL. அமெரிக்க சுதந்திரத்தின் 248 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் உரையாற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங். ஜூலை 4 கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடும் விருந்தினர்கள். அமெரிக்கக் கொடியினை வைபவ ரீதியாக அமெரிக்கத் தூதுவரிடம் வழங்கும் அமெரிக்க மரைன் படையினர். அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் கையெழுத்தானதன் 248ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் விருந்தினர்களுடன் உரையாடும் அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங். https://www.virakesari.lk/article/187201
-
இலங்கையில் பறவைக் காய்ச்சல் தொற்று?
Published By: DIGITAL DESK 3 28 JUN, 2024 | 04:43 PM பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடையாளம் காணப்பட்ட நபர் வெளிநாட்டை சேர்ந்த ஆண் ஒருவராவார். பிசிஆர் பரிசோதனையில் இன்ப்ளுவன்சா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல், ஏவியன் இன்ப்ளூயன்ஸா என்றும் அழைக்கப்படுகிறது. இது மனிதர்களைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை இன்ப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படுகிறது. அவற்றில் ஒரு விகாரகம் H5N1ஆகும். https://www.virakesari.lk/article/187196
-
மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம்!
மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் இன்று காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ”அரசாங்கம் சர்வதேச நாடுகளை ஏமாற்றியதைப் போன்று, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடுகின்ற தாய்மாரின் கண்ணீரையும், அவர்களின் துயரங்களையும் ஏமாற்றி வெற்றி பெற முடியாது” என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/304753
-
தமிழ்நாட்டின் இந்த கிராமத்தில் எல்லா ஆண்களும் 'வீட்டோடு மாப்பிள்ளைகள்' - ஏன் தெரியுமா?
படக்குறிப்பு,தனது மனைவியுடன் பள்ளி ஆசிரியர் மாணிக்கம். கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 25 ஜூன் 2024 திருமணத்திற்கு பின் மணமகள் மணமகன் வீட்டோடு சென்று வாழும் வழக்கம் இன்று தமிழ்ச் சமூகத்தில் பரவலாக காணப்படும் ஒன்று. ஆனால், தமிழகத்தின் ஒரு கிராமத்தில் ஆண்கள் தங்கள் மனைவியின் வீட்டுக்கு சென்று 'வீட்டோடு மாப்பிள்ளையாக' வாழ்கின்றனர். இப்படிப்பட்ட கிராமம் எங்கே இருக்கிறது என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? தூத்துக்குடி மாநகரில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் சுற்று வட்டார தொலைவில் அமைந்துள்ள சிவகளை, செக்காரக்குடி, புதூர், தளவாய்புரம், பொட்டலூரணி, முடிவைத்தானேந்தல், கூட்டுடன்காடு, செட்டியூரணி, வர்த்தகரெட்டிபட்டி, ஏரல், சொக்கலிங்கபுரம், பணகுளம், பாண்டியபுரம், தட்டப்பாறை, ராமச்சந்திரபுரம், உட்பட 16 கிராமங்களில் வாழும் நன்குடி வேளாளர் சமூக மக்களின் பழக்க வழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். யார் இந்த நன்குடி வேளாளர்? நன்குடி வேளாளர் சமூகத்தினர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வேளாளர் சமூகத்தில் உள்ள ஒரு உட்பிரிவாகும். தமிழ்நாட்டில், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வாழுகின்றனர். நன்குடி வேளாளர் சமூகத்தினரை சிவகளைப் பிள்ளைமார் எனவும் அழைக்கிறார்கள். பெண்களுக்கு சொத்துரிமை நன்குடி வேளாளர் சமூகத்தில் பெண்களுக்கு எல்லா விசயங்களிலும் சம உரிமை உண்டு. அரசாங்கம் பெண்களுக்கும் சொத்துரிமை தருவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே 'வீடு, நன்செய், புன்செய்' போன்றவை பெண்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆண், பெண் குழந்தைகளை வளர்ப்பதில் எந்த பாகுபாடும் இல்லை என்றாலும் கூட, பெண் குழந்தைகளே பெற்றோருடன் ஆயுள் முழுவதும் வசிப்பார்கள் என்பதால் இயல்பாகவே, அவர்கள் சற்று கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறார்கள். இந்த சமூகத்தில் கடைபிடிக்கப்படும் வழக்கப்படி, திருமணத்தன்று மணமகள் வீடு வரும் மணமகன் தொடர்ந்து அங்கேயே தங்கி பெண் வீட்டாரில் ஒருவராக ஆயுள் முழுவதும் இணைந்து விடுவார். மணமகளின் பெற்றோர்களும் அவரை, 'மரு'மகனாக ஏற்றுக் கொள்வதோடு தங்களது முதுமை காலம் வரை மகள் குடும்பத்துடன் வசிப்பார்கள். வித்தியாசமான திருமண சடங்குகள் நன்குடி வேளாளர் சமூகத்தினர் திருமணத்தில் கடைபிடிக்கும் சடங்குகள் வித்தியாசமானவை. பெண் வீட்டாரே மாப்பிளை கேட்டுச் செல்வார்கள். முகூர்த்தப்பட்டு, திருமாங்கல்யம் பெண் வீட்டாரே வாங்கிக்கொள்ர். பரிசப்பட்டு மட்டுமே மணமகன் வீட்டார் கட்டுவர். 'பொன் உருக்குவது' 'முகூர்த்தக்கால் நடுவது' போன்றவையெல்லாம் பெண் வீட்டில் நடைபெறும். திருமண நாளன்று மாப்பிளையை இன்றும் யானை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வருவார்கள். பெண்கள் பெருமிதம் வெளியூர் மக்கள் எங்கள் வாழ்வியல் முறைகளை தெரிந்து கொண்டு மிகவும் ஆச்சர்யப்படுவதாக கூறுகிறார் நன்குடி வேளாளர் சமூகத்தை சேர்ந்த மூதாட்டி முத்தம்மா சேரந்தையன். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தலைமுறைதலைமுறையாக நாங்கள் சிவகளை கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் சமூகத்தில் பல தலைமுறையாக பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டு வருகிறது. எங்கள் கிராமத்தில் திருமணங்கள் வித்தியாசமான முறையில் நடைபெறும். மணமகள் இல்லத்தில் தான் திருமணம் நடைபெறும். மணமகன் மறுவீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் மருமகள் வீட்டுக்கு வீட்டோடு மாப்பிள்ளையாக வந்து விடுவார். ஒரு வீட்டில் குலவைச் சத்தம் கேட்கிறது என்றால் அந்த வீட்டில் குழந்தை பிறந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். பிறந்த குழந்தையை தொட்டிலில் போடும் போது குலவைச் சத்தம் எழுப்புவோம். உரத்த குலவைச் சத்தமாக இருந்தால் அங்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என தெரிந்து கொள்ளலாம்" என்கிறார். படக்குறிப்பு,முத்தம்மா சேரந்தையன் மேலும், "அதற்காக ஆண் குழந்தையை விரும்பவில்லை என அர்த்தம் கிடையாது. பெண் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் தாய், தந்தையுடன் வசிப்பவர்கள் என்பதாலோ என்னவோ பெண் பிள்ளைகள் மீது பிரியம் சற்று அதிகம். எங்கள் சமூகத்திற்கு என்று தென்னவன் கிளை, கேளரன் கிளை, திருவெம்பு கிளை, திருமால் கிளை, கன்றெறிந்தான் கிளை, நாராயணன் கிளை, காங்கேயன் கிளை, காளியார் கிளை என 8 பிரிவுகள் உண்டு. ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் அதே பிரிவைச் சேர்ந்தவர்களுடன் திருமண பந்தம் வைத்துக் கொள்வதில்லை. மாற்றுக் கிளையைச் சேர்ந்தவர்களுடன் தான் மகனுக்கோ, மகளுக்கோ மணம் முடிப்போம்" என்கிறார் சிவகளையை சேர்ந்த முத்தம்மா சேரந்தையன். "ஆண்களின் சுதந்திரம் பாதிக்கிறது" வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதால் தனது சுதந்திரம் பாதிக்கப்பட்டதாக கூறுகிறார் சிவகளையை சோந்த பள்ளி ஆசிரியர் மாணிக்கம். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "எங்கள் ஊரில் வசிக்கும் அனைவருமே வீட்டோடு மாப்பிள்ளை தான். எனக்கு வயது 48 ஆகிறது எனக்கு திருமணம் ஆகி 28 ஆண்டுகள் ஆகிறது. "எனது முன்னோர்கள் இந்த வழக்கத்தை ஏற்றுக் கொண்டார்கள் அவர்களுக்கு அது ஏதுவாக இருந்தது. ஆனால் எனக்கு ஆரம்ப காலத்தில் மிகவும் கடினமாக இருந்தது. இந்த வீட்டோடு மாப்பிள்ளை வழக்கத்தால் என்னுடைய சுதந்திரம் பறிபோவதாக நான் உணர்ந்தேன்" என்றார். படக்குறிப்பு,பள்ளி ஆசிரியர் மாணிக்கம் "காரணம் எனது வீட்டில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அனைத்தும் எனது மனைவியின் தந்தை அதாவது எனது மாமனார் எடுத்து வந்தார். நான் ஒரு வீட்டிற்கு வாழ சென்றதால் அந்த வீட்டின் சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் என்னால் வெகுநாளாக மாற முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன்" என்கிறார். "ஆனால் இப்போதைய காலகட்டத்தில் எனது மகள் திருமணமாகும் நிலையில் உள்ளார். அவருக்கு திருமணம் செய்து வைத்தால் அவர் என்னுடன் கடைசி காலம் வரை வாழ்வார் என்பதை நினைக்கும் போது வீட்டோடு மாப்பிள்ளை என்ற வழக்கம் எனக்கு இப்போது மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது" என கூறுகிறார் பள்ளி ஆசிரியர் மாணிக்கம். 2K கிட்ஸ்-களுக்கு இந்த வழக்கம் எப்படி இருக்கிறது? 'ஆண் நண்பர்கள் கேலி செய்வார்கள், அதே வேளை பெண் நண்பர்கள் எங்கள் கிராமத்தில் பிறக்கவில்லையே என நினைத்து ஏங்குவார்கள்' என்கிறார், சமீபத்தில் திருமணமான சிவகளையை சேர்ந்த வங்கி மேலாளர் சுப்பையா. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "என்னுடைய சொந்த ஊர் வாழ்வியல் குறித்து என் நண்பர்களுடன் விவாதிக்கும் போது ஆண் நண்பர்கள் கேலியும் கிண்டலும் செய்தார்கள். ஆனால் பெண் நண்பர்களை பொருத்தவரை, இந்த முறை மிக வித்தியாசமாக இருந்தாலும் 'நாங்கள் உங்கள் கிராமத்தில் பிறக்காமல் போய் விட்டோமே' என மிகுந்த ஏக்கத்துடன் என்னிடம் பல முறை சொல்லியுள்ளனர்" என தெரிவிக்கிறார். படக்குறிப்பு,வங்கி மேலாளர் சுப்பையா மேலும் பேசிய அவர், "அவ்வாறு கூறும் பெண் நண்பர்கள் திருமணம் முடிந்து பெற்றோரை விட்டு கணவன் வீட்டுக்கு செல்வதால் தங்களது அனைத்து சுதந்திரமும் பறிபோவதாக உணர்வதாக தெரிவிக்கின்றனர். முதலில் என்னை கேலி செய்த ஆண் நண்பர்கள் தற்போது எனக்கு திருமணமாகி ஆறு மாத காலம் ஆன நிலையில் என்னுடைய வாழ்வியல் முறையை பார்த்து ஆண்கள் இப்படியும் பெண் வீட்டாரின் சூழலுக்கு ஏற்றாற் போல் வாழ முடியுமா என ஆச்சர்யப்படுகின்றனர். என் தாத்தா, எனது அப்பா, தற்போது நான், அடுத்து வரும் தலைமுறை என அனைவரும் இதே வழக்கத்தை பின்பற்றி தான் வாழ்வோம். எங்கள் கிராமத்தின் வாழ்வியல் என்பது எங்கள் அடையாளம். இதில் தான் எங்களது மகிழ்ச்சியும் கௌரவம் அடங்கியுள்ளது" என்று அவர் கூறுகிறார் சுப்பையா. https://www.bbc.com/tamil/articles/c6ppprzz16lo
-
இணைய மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் உட்பட 33 பேர் கைது
இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 117 பேர் கைது! 28 JUN, 2024 | 03:13 PM நாட்டில் வெவ்வேறு இடங்களில் தங்கியிருந்து இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்கள் நீர்கொழும்பு - கொச்சிக்கடை, தலங்கம மற்றும் மடிவெல பிரதேசங்களில் தங்கியிருந்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்படி, தலங்கம - ஹெயினடிகும்புர பகுதியில் உள்ள வீடொன்றைச் சுற்றிவளைத்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், 19 பேரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 09 மடிக்கணினிகள் மற்றும் 59 கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றியுள்ளனர் . நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் உள்ள விடுதியொன்றில் சோதனை நடத்திய போது, மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 40 கணினிகள், நிதி மோசடிக்குப் பயன்படுத்திய 38 கையடக்கதொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் பின்னர், மடிவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலும், கொச்சிக்கடை பொருதொட்ட பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்றிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இந்தக் கடத்தலில் ஈடுபட்ட மேலும் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இணையச் சூதாட்ட மோசடி இலங்கையிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187164
-
திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் ஏப்ரல் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும்
மின்சார சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார் Published By: DIGITAL DESK 3 28 JUN, 2024 | 03:57 PM மின்சார சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வியாழக்கிழமை (27) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினர். மின்சாரத் தொழிலுக்கான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யும் நோக்கிலான இந்த சட்டமூலம் 2024 ஏப்ரல் 25 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டது. அதனையடுத்து, கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 44 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய, இந்த சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரம் சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது. https://www.virakesari.lk/article/187187
-
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
தேர்தலொன்று நடத்தப்படவுள்ளதாகவும் அதற்காகத் தயாராகுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தமது திணைக்களத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடும் பட்சத்தில், அதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதி அல்லது ஒக்டோபர் 16ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது. இதன்படி, ஜனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பாகச் சட்டவாக்கத்தின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு கோரல், உரிய காலப்பகுதிக்குள் நடைபெறும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/304726
-
தமிழகத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட 8 சிறார்கள் மீட்பு : படகு உரிமையாளர்களுக்கு அபராதம்
Published By: DIGITAL DESK 3 27 JUN, 2024 | 05:43 PM தமிழகத்தில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகில் 18 வயதுக்குட்பட்ட 8 சிறார்கள் தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, படகு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், இந்திய அரசாங்கத்தினால் மானியமாக வழங்கப்படும் டீசல் மற்றும் மீன்பிடி அனுமதிச்சீட்டு இரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்து, மீன்பிடியில் ஈடுபடும் விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடிக்கும்போது சிறார்களும் கைது செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதனடிப்படையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீன்பிடி படகுகளில் சிறார்கள் மீன்பிடித் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் ராமேஸ்வரம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், தொழிலாளர் நல வாரியம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கூட்டாக திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது, நேற்று (26) ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இலங்கை கடற்பரப்புக்கு அருகில் மீன்பிடிக்க வந்து, இன்று (27) காலை கரை திரும்பிய 8 மீன்பிடி படகுகளில் 8 சிறார்கள் மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த எட்டு சிறார்களை மீட்ட தொழிலாளர் அமுலாக்கப் பிரிவு உதவி ஆணையர் மலர்விழி தலைமையில் அதிகாரிகள் "சிறார்கள் மீன்பிடி தொழிலுக்கு வரக்கூடாது" என்றும் சிறுவர்களை பள்ளிக்கு செல்லுமாறும் அறிவுரை வழங்கியதுடன், சிறார்களை மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்திய விசைப்படகு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறார்களை மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தியதற்காக தமிழக அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதிச் சீட்டு மற்றும் மானிய டீசல் இந்த வழக்கு முடியும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/187114
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
அமெரிக்க அதிபர் தேர்தல்: நேருக்கு நேர் மோதிய பைடன் - டிரம்ப் - விவாதத்தில் என்ன பேசினர்? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயக கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான ஜோ பைடன், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இருவரும் முதன்முறையாக நேருக்கு நேர் விவாதித்தனர். இந்த விவாதத்தில் தனிப்பட்ட தாக்குதல்களுக்குக் குறை இல்லை. மேலும், பைடன் அவ்வப்போது கம்மிய குரலில் பேசினார். இதனால், ஜனநாயக கட்சியினர் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும், “மெதுவாக ஆரம்பித்தாலும் வலுவாக விவாதத்தை நிறைவு செய்ததாக,” பைடனுக்கு ஆதரவாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். மறுபுறம், டொனால்ட் டிரம்ப், பைடனை பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை சார்ந்து தாக்கிக்கொண்டே இருந்தார். அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 5 அன்று அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், போட்டியிடும் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதித்துக்கொள்வது அமெரிக்க அதிபர் தேர்தலின் முக்கிய நிகழ்வு. அதன்படி, ஜூன் 27, வியாழக்கிழமை அன்று ஜார்ஜியாவில் உள்ள அட்லான்டாவில் முதல் விவாதம் நடைபெற்றது. ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் இருவருக்கும் இடையே 90 நிமிடங்கள் இந்த விவாதம் நீடித்தது. 2020 அதிபர் தேர்தலுக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து இரு தலைவர்களும் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டனர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பொருளாதாரம் பொருளாதாரம் சார்ந்துதான் இந்த விவாதம் தொடங்கியது. விவாதத்தில் பணவீக்கம் பிரச்னை எழுப்பப்பட்டபோது, வேலை வாய்ப்பின்மையுடன் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தையே டொனால்ட் டிரம்ப் தனக்குக் கையளித்ததாகத் தெரிவித்தார் பைடன். அப்போது, தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் ‘சிறப்பாக’ இருந்ததாக டிரம்ப் தெரிவித்தார். டிரம்ப் ஒன்றும் செய்யவில்லை எனக் கூறிய பைடன், அவருடைய ஆட்சிக் காலத்தில் நிலைமை “மோசமாக” இருந்ததாகக் கூறினார். “எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டியிருந்ததாக” பைடன் கூறினார். அப்போது, “பெருங்குழப்பம்” என்ற வார்த்தையை அடிக்கடி பைடன் உபயோகித்தார். “டிரம்ப் பணக்காரர்களுக்கு ஆதரவாக இருந்ததாக” பைடன் தெரிவித்தார். அப்போது டிரம்ப், தான் மக்களுக்கு முன்பு இல்லாத வகையில் வரியை குறைத்ததாகக் கூறினார். ஆப்கானிஸ்தான் விவகாரம் பட மூலாதாரம்,REUTERS ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது குறித்தும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அரசின் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. டிரம்ப் ஆட்சிக் காலத்தில்தான் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் சண்டையிட்டதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை கண்ணியம் மற்றும் பலத்துடன் திரும்பப் பெறத் தான் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால், “அப்படைகளை (பைடன் ஆட்சிக் காலத்தில்) திரும்பப் பெற்றபோது அது அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் அவமானகரமான நிகழ்வாக இருந்ததாகவும்” டிரம்ப் கூறினார். கொரோனா கொரோனா பெருந்தொற்று விவகாரம் இந்த விவாதத்தில் முக்கிய இடம் பிடித்தது. கொரோனா காலத்தை டிரம்ப் எப்படி கையாண்டார் என்பது குறித்துப் பேசிய பைடன், அச்சமயம் “பெருங்குழப்பங்களுடன் கூடியது” எனக் குறிப்பிட்டார். “கொரோனா பெருந்தொற்றுப் பேரிடரின்போது தேவைகளுக்கு ஏற்ப நாங்கள் பணத்தைச் செலவழித்தோம். இதனால், மிகுந்த அழுத்தத்திற்குள் நாங்கள் தள்ளப்படவில்லை. எல்லாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது” என்றார் டிரம்ப். எல்லைகள் குறித்த பிரச்னை அமெரிக்க எல்லைகள் சார்ந்த கொள்கைகளில் பைடனை டிரம்ப் தாக்கிப் பேசினார். அப்போது, சிறைவாசிகள், மனநல சிகிச்சை மையங்களில் உள்ளவர்கள் மற்றும் பயங்கரவாதிகள் எல்லைகள் வாயிலாக நாட்டுக்குள் வருவதாக டிரம்ப் கூறினார். ஆனால், டிரம்ப் கூறுவதை ஆதரிப்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என பைடன் கூறினார். அமெரிக்கப் படையினர் மரணங்கள் பட மூலாதாரம்,REUTERS கடந்த பத்து ஆண்டுகளில் உலகின் எந்தப் பகுதியிலும் அமெரிக்கப் படையினர் தன்னுடைய ஆட்சியில்தான் உயிரிழக்கவில்லை என பைடன் கூறினார். பிபிசி உண்மை சரிபார்ப்புக் குழுவின்படி, பைடனின் இந்தக் கூற்று தவறானது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜோர்டானில் ட்ரோன் தாக்குதலில் அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர். இதுதவிர, ஆகஸ்ட் 2021ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும்போது காபூல் விமான நிலையத்தில் நிகழ்ந்த தற்கொலை தாக்குதலில் அமெரிக்கப் படையினர் 13 பேர் உயிரிழந்தனர். ஐ.எஸ். அமைப்பின் ஐ.எஸ்-கே பிரிவு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. போரில் உயிரிழக்கும் படையினர் குறித்த ஆய்வு அமைப்பு (Defense Casualty Analysis System) அளித்தத் தகவலின்படி, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கப் படைகளைச் சேர்ந்த 65 பேர் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. டிரம்ப் மீதான வழக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2006ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்புடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்குப் பணம் கொடுக்கப்பட்டதாக (hush money) டேனியல்ஸ் கூறியுள்ளார். இந்த வழக்கில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதை விவாதத்தின்போது ஜோ பைடன் குறிப்பிட்டார். பைடன் கூறுகையில், “குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் இங்கு இருக்கிறார், அவரைத்தான் நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என கூறினார். டிரம்ப் ஒழுக்கமான நபர் அல்ல என பைடன் கூறினார். அதேநேநேரம், பைடனின் குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்தார். இஸ்ரேல்-ஹமாஸ் போர் பட மூலாதாரம்,REUTERS காஸா குறித்த கேள்வி எழுகையில், முன்னாள் அதிபர் டிரம்ப் இஸ்ரேல் தன் வேலையை முடிக்க வேண்டும் எனக் கூறினார். பைடன் பாலத்தீனியராகவே மாறிவிட்டதாக டிரம்ப் கூறினார். மேலும், யுக்ரேனுக்கு அமெரிக்கா உதவுவது குறித்தும் டிரம்ப் எழுப்பினார். யுக்ரேனுக்கு உதவுவதில் அமெரிக்காவை விட ஐரோப்பிய நாடுகள் குறைவாக செலவழித்துள்ளன என தெரிவித்தார். யுக்ரேனுக்கு உதவ அதிகமாக பணம் செலவழிக்குமாறு நேட்டா (NATO) நாடுகளுக்கு பைடன் ஏன் அழுத்தம் தரவில்லை என்றும் டிரம்ப் கேள்வியெழுப்பினார். இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வர என்ன செய்வீர்கள் என பைடனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, போரை நிறுத்த ஹமாஸ் விரும்பவில்லை என பைடன் தெரிவித்தார். இஸ்ரேலின் உறுதியை மீண்டும் வலியுறுத்திய பைடன், ஹமாஸ் அழிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES / REUTERS இருவரும் எப்படி விவாதித்தனர்? வட அமெரிக்கா குறித்து செய்தி சேகரிக்கும் பிபிசி செய்தியாளர் ஆண்டனி ஸர்ச்செர், முன்னாள் அதிபர் டிரம்ப்பின் விவாதம் கட்டுப்பாட்டுடனும் அமைதியுடனும் இருந்ததாகக் கூறினார். வாக்குவாதம் செய்தல், மிகைப்படுத்தப்பட்ட பதில்களைத் தருவதிலிருந்து டிரம்ப் விலகியிருந்தார்55. ஏனெனில், கடந்த தேர்தல் விவாதத்தின்போது, இந்த விஷயங்கள் அவரை பலவீனமாக்கின. டிரம்ப்பின் சில கூற்றுகள் முழுமையான தரவுகளின் அடிப்படையில் இல்லாவிட்டாலும், அவை முழுவதும் தவறான தகவல்கள் இல்லை. எனினும், டிரம்ப்பை பைடனால் மடக்க முடியவில்லை. உதாரணத்திற்கு கருக்கலைப்பு குறித்த விவாதம் எழுந்தபோது, டொனால்டு டிரம்ப் அதை ‘ஜனநாயக (கட்சியினரின்) தீவிரவாதம்’ எனக் குறிப்பிட்டார். மேலும், பைடன் கட்சியின் தலைவர்கள் குழந்தைகள் பிறந்த பிறகு, கருக்கலைப்பை ஆதரிப்பதாக, தவறான தகவலைத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பைடன் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் அதைச் செய்ய பைடன் தவறிவிட்டார். விவாதத்தின்போது பல நேரங்களில் பைடனின் குரல் கரகரப்பாக இருந்தது, இதற்கு கடந்த சில தினங்களாகவே அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவே காரணம் என, அவருடைய பிரசார அதிகாரிகள் தெரிவித்தனர். பைடன் விவாதத்தின்போது சில நேரங்களில் தடுமாறியதாகவும் அவருடைய வாதங்கள் தட்டையாக இருந்ததாகவும் பிபிசி செய்தியாளர் ஆண்டனி ஸர்ச்செர் குறிப்பிட்டுள்ளார். விவாதத்தின் ஆரம்பத்தில் அவருடைய வாதங்கள் அறிவுபூர்வமற்றதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். வயதைக் கடந்து தனக்கு போதிய ஆற்றல், வலு இருப்பதாக நிரூபிக்க பைடன் தவறிவிட்டார் என ஸர்ச்செர் குறிப்பிட்டுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c8vdpnvg6e8o
-
கனிய மண் அகழ்விற்காக நிலத்தை இழந்தவர்களுக்கு மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் அவசர வேண்டுகோள்
Published By: DIGITAL DESK 3 28 JUN, 2024 | 03:30 PM மன்னாரில் கனிய மண் அகழ்விற்காக நிலத்தை இழந்தவர்கள் மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவ் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று வெள்ளிக்கிழமை (28) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் நகர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கனிய மண் அகழ்விற்காக உள்ளூர் காணி முகவர்கள் மூலம் சட்ட விரோதமான முறையில் காணி அபகரிக்கப்படுவதாக பல்வேறு விதமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. சில குழுக்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியும் அதிகாரத்தை உபயோகித்தும் சாதாரண மக்களின் காணிகளை அபகரித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். அத்துடன், பயன்படுத்தப்படாத நிலங்களுக்கு ஆட்சி உறுதிகளையும் எழுதுவதாகவும் கூறுகின்றனர். அது மாத்திரமின்றி சில காணிகளுக்கு பயன்பாட்டில் இல்லாத வேறு உறுதிகளை எல்லைகளை மாற்றி குறித்த இடங்களில் நில அபகரிப்பிலும் ஈடுபடுகின்றனர் எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஆதாரங்களோடு குற்றம் சாட்டுகின்றனர். இதில் இவ்வாறு முறைகேடான உறுதிப் பத்திரம் தயாரிப்புகளை சில சட்டத்தரணிகள் மேற் கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு அபகரிக்கப்பட்ட காணிகளை பல கோடி ரூபாய் பெறுமதிக்கு அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்டு கனிய மண் அகழ்வில் ஈடுபட உள்ள இலங்கை முகவர் நிறுவனங்களுக்கு வழங்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த சட்டத்தரணிகள் இவ்வாறான மோசடி கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவது என்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். இவ்வாறு பாதிக்கப் பட்டிருக்கின்ற மக்கள் எங்களோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த மோசடி கும்பலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆகவே, நில அபகரிப்பாளர்களுக்கு அஞ்சாமல் முன்வருமாறு தங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/187181
-
மூதூரில் மதுபானசாலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த 15 பேர் கைது!
மூதூர் மதுபானசாலைக்கு எதிரான போராட்டத்தில் கைதான 15 பேரும் விடுதலை 28 JUN, 2024 | 02:19 PM மூதூர் - இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற மதுபானசாலைக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 15 பேரும் இன்று (28) மூதூர் நீதிமன்றத்தால் பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கானது எதிராளிகள் சார்பாக நகர்த்தல் விண்ணப்பத்தின் மூலம் இன்றைய தினம் (28) மூதூர் நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கைது செய்யப்பட்ட அனைவரும் நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.தஸ்னீம் பௌசான் முன்னிலையில் திறந்த நீதிமன்றில் நூற்றுக்கும் அதிகமானவர்களுடன் ஆள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள். பின்னர் ஒவ்வொருவரும் தலா 50,000 பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததோடு, எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இருதயபுரம் பகுதியில் திறக்கப்பட்ட மதுபான சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இரவு 8.00 மணிக்குப் பின்னர் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருந்த கைகலப்பை காரணம்காட்டி அங்கிருந்தவர்கள் மீது பொலிசார் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். பின்னர் அவ்விடத்திற்கு மேலதிக பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் அழைக்கப்பட்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீதும், அதனுடன் தொடர்புபடாத மக்கள் மீதும் வீடுகளில் இருந்த நிலையிலும், பாதுகாப்புத்தேடி தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த மக்கள் மீதும் மிலேச்சுத்தனமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இந்த சம்பவத்தில் பாடசாலை மாணவன் உட்பட 11 ஆண்களும், பாலூட்டும் தாய் உட்பட 4 பெண்களுமாக 15 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்ததுடன், 13 துவிச்சக்கரவண்டி, 11 மோட்டார் சைக்கிள், 3 முச்சக்கரவண்டி ஆகியனவும் பொலிஸாரினால் கொண்டு செல்லப்பட்டிருந்தன. கைது செய்யப்பட்டவர்கள் மறுநாள் புதன்கிழமை (26) பொலிஸாரினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்கள். இதன்போது எதிர்வரும் யூலை மாதம் 3 ஆம் திகதி விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கானது நேற்று (27) வியாழக்கிழமை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட நகர்த்தல் விண்ணப்பத்தின் மூலம் எடுத்துக் கொள்ளப்பட்டு எதிராளிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த சில வழக்குப் பிரிவுகள் பொலிஸாரினால் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187167
-
யாழ். மருதனார் மடத்தில் உணவகத்திற்கு சீல்!
28 JUN, 2024 | 01:55 PM யாழ்ப்பாணம் மருதனார் மட பகுதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், உரிமையாளருக்கு 54 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வெதுப்பாக உரிமையாளரை கடுமையாக எச்சரித்த நீதிமன்று, அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. சுன்னாகம், மருதனார் மடம் மற்றும் இணுவில் பகுதிகளில் உள்ள உணவு கையாளும் நிலையங்களில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்தனர் . அதன் போது உணவகம் ஒன்றும் வெதுப்பகம் ஒன்றும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு நேற்று வியாழக்கிழமை (27) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது உரிமையாளர்கள் இருவரும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர்களை கடுமையாக எச்சரித்து, வெதுப்பக உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று, உணவக உரிமையாளருக்கு 54ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன், உணவகத்தில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு உத்தரவிட்டது. https://www.virakesari.lk/article/187162
-
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
ஸ்டார்லைனர் விண்கலனில் கோளாறு - சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தாமதம் பட மூலாதாரம்,NASA கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலமான ஸ்டார்லைனரை சோதிக்க, விண்வெளிக்குச் சென்ற இரண்டு விண்வெளி வீரர்கள் இந்நேரம் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கியிருக்க வேண்டும். புதன்கிழமை இரவே புறப்பட்டிருக்க வேண்டிய அவர்கள், இன்னும் கிளம்பவில்லை. தற்போது அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ளனர். பூமிக்குத் திரும்ப வேண்டிய விண்கலனில் சில கோளாறுகள் இருப்பதால், இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது. விண்கலனில் உள்ள த்ரஸ்டர் (thruster), விண்கலனை உந்தித் தள்ளும் இயந்திரமாகும். அதில் சில பிரச்னைகள் இருப்பதாலும், ஹீலியம் வாயு கசிவாலும் விண்கலன் குறித்த நேரத்தில் கிளம்ப முடியவில்லை. இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உயர்மட்ட ஆய்வுகளை நடத்தி வருகிறது. அதன் பிறகே, விண்கலனும் அதிலுள்ள விண்வெளி வீரர்களும் பூமிக்குத் திரும்புவது குறித்து முடிவு எடுக்கப்படும். இந்த விண்கலனில் பயணம் மேற்கொண்ட அமெரிக்க விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர் இருவருக்கும் எந்த ஆபத்தும் கிடையாது. ஆனால் விண்கலனில் ஏன் இந்தக் கோளாறுகள் ஏற்பட்டன, அவர்கள் பூமிக்குத் திரும்புவதை இது எப்படி பாதிக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ஹீலியம் வாயுக் கசிவு எப்போது நடைபெற்றது? பட மூலாதாரம்,NASA ஹீலியம் வாயு சிறதளவில் கசிந்த போதும், ஸ்டார்லைனர் ஜூன் 5ஆம் தேதி, விண்ணில் செலுத்தப்பட்டது. விண்கலனை வான்வெளியில் இயக்குவதற்கும், பூமியின் வளி மண்டலத்தில் நுழையும்போது அதன் வேகத்தைக் குறைப்பதற்கும் உதவும் த்ரஸ்டர் இயந்திரத்தை இயக்குவதற்கு ஹீலியம் வாயு பயன்படுத்தப்படுகிறது. ஹீலியம் கசிவு மிகச் சிறிய அளவிலேயே இருந்ததால், விண்வெளி பயணத் திட்டத்தை இது எந்த வகையிலும் பாதிக்காது என்று பொறியாளர்கள் நம்பினர். எனவே விண்கலன் வானில் செலுத்தப்பட்டது. ஆனால், தனது விண்வெளி பயணத்தைத் தொடங்கிய பிறகு, ஸ்டார்லைனரில் மேலும் நான்கு முறை ஹீலியம் கசிவு ஏற்பட்டது. விண்கலனை திசை மாற்றி இயக்குவதற்காக உள்ள 28 த்ரஸ்டர்களில் ஐந்து விண்வெளி மையத்தை அடையும் முன்பே பழுதாகிவிட்டன. பழுதான ஐந்து த்ரஸ்டர்களில் நான்கு மீண்டும் இயக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டன. இந்தப் பயணம் எட்டு நாட்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டது. ஆனால், பொறியாளர்கள் இந்தக் கோளாறுகளை ஆய்வு செய்து வருவதால், விண்கலன் பூமிக்குத் திரும்புவது தாமதமாகியுள்ளது. அமெரிக்க நேரப்படி ஜூன் 26ஆம் தேதி இரவு பத்து மணிக்கு (இந்திய நேரப்படி ஜூன் 27ஆம் தேதி காலை 7.30 மணி) ஸ்டார்லைனர் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கும் என்று நாசா அறிவித்திருந்தது. ஹீலியம் கசிவால் விண்வெளி வீரர்களுக்கு பாதிப்பா? பட மூலாதாரம்,NASA ஹீலியம் கசிவுகளால் விண்வெளி வீரர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று நாசா முன்னரே தெரிவித்திருந்தது. “விண்கலன் செய்யவேண்டிய இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொள்ள ஏழு மணிநேரம் மட்டுமே ஆகும். ஸ்டார்லைனரில் 70 மணிநேரங்களுக்குத் தேவையான ஹீலியம் இருப்பில் உள்ளது.” ஆனால் சில நாட்கள் கழித்து, ஸ்டார்லைனர் ஜூலை மாதத்தில் பூமிக்குத் திரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாசா முடிவு செய்தது. பூமிக்குத் திரும்பும் தேதி ஏன் மாற்றப்பட்டது என்பது குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்தக் கோளாறுகள் எதனால் ஏற்பட்டது என்று, விண்கலன் பூமிக்குத் திரும்புவதற்கு முன்பாகவே, முழுவதுமாகக் கண்டறிய விண்கலனின் பொறியாளர்கள் விரும்புவதாக நாசா தெரிவித்துள்ளது. ஏனென்றால், விண்வெளியில் இருந்து திரும்பி வரும்போது, பூமியின் வளிமண்டலத்தில் விண்கலம் நுழையும் நேரத்தில், ஸ்டார்லைனரின் கோளாறுகள் நிறைந்த கீழ் சர்வீஸ் மோட்யூல் (service module) எனும் பகுதி எரிந்துவிடும். அதிலுள்ள தகவல்களை இழந்துவிட்டால், கோளாறு எதனால் ஏற்பட்டது என்று தெரிந்துகொள்ள முடியாது. விண்வெளி வீரர்கள் விண்வெளி மையத்தில் சிக்கிக் கொள்ளவில்லை என்று நாசா வலியுறுத்துகிறது. சர்வதேச விண்வெளி மையத்தில், ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், விண்கலன் உடனடியாக பூமிக்குத் திரும்பத் தயார் நிலையில் உள்ளது என்று நாசா கூறியுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பது நாசாவின் மறு ஆய்வுகளைப் பொருத்ததாகவே இருக்கும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ஹீலியம் கசிவு ஏற்பட்ட பிறகும் விண்ணில் செலுத்தியது சரியா? தற்போது நடைபெற்றுள்ளதைப் பார்க்கும்போது, ஹீலியம் கசிவு ஏற்பட்ட பிறகும், ஸ்டார்லைனர் விண்ணில் செலுத்தப்பட்டது சரியா என்ற கேள்விகள் எழுகின்றன. விண்கலன்கள் உந்து இயந்திரங்களைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ‘ராக்கெட் என்ஜினியரிங்’ என்ற நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஆதாம் பேகர், ஹீலியம் கசிவு ஏற்பட்ட பிறகும், விண்கலன் ஏன் விண்ணில் செலுத்தப்பட்டது என்று தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்கிறார். இருப்பினும் கசிவு ஏற்பட்ட போதே, எதனால் ஏற்பட்டது என்ற காரணத்தை அறிந்து அதை முழுமையாகச் சரி செய்திருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். “எல்லாவற்றையும் மிகச் சரியாகச் செய்ய வேண்டும் என்று வெகு காலம் எடுத்துக்கொள்ளும்போது, அதற்கான செலவு அதிகரிக்கும். மக்கள் மற்றும் அரசியல் ஆதரவும் மறைந்துவிடும்” என்று கூறிய அவர், அதே நேரம், “விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு இந்தக் கசிவுகள் மோசமடையலாம் என்று போதுமான அளவு கணித்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நாசாவும் போயிங் நிறுவனமும் செய்திருக்க வேண்டியது இதுதான்” என்றார். அதாவது, விண்கலனை அதன் ஏவுதளத்தில் இருந்து விலக்கி, விண்கலனில் உள்ள உந்து இயந்திரங்களை நீக்கி ஆய்வு செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்வது அதிக செலவுகளை உள்ளடக்கிய நடவடிக்கை. பட மூலாதாரம்,NASA நாசா கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயத்தை ஒபன் யூனிவர்சிட்டியில் உள்ள விண்வெளி விஞ்ஞானி டாக்டர் சிமோன் பார்பர் சுட்டிக்காட்டுகிறார். இந்த விண்கலன் ஏற்கெனவே இரண்டு முறை ஆளில்லாமல் பயணம் மேற்கொண்டபோது, இந்தக் கோளாறு ஏன் கண்டறியப்படவில்லை என்பதை நாசா ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார். “கடந்த சில வாரங்களாக ஏற்படும் கோளாறுகள், பொதுவாக இறுதிக் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் விண்கலனில் ஏற்படும் என்று யாரும் எதிர்ப்பார்க்க மாட்டார்கள்” என்றார் அவர். “இந்தத் திட்டத்தின் நோக்கமே, விண்கலனை விண்வெளி வீரர்கள் இயக்கினால், அதன் செயல்திறன் எப்படி இருக்கும் என்று சோதித்துப் பார்ப்பதுதான். ஆனால் அதைவிட்டு, சில அடிப்படையான விஷயங்களைக் கையாண்டு கொண்டிருக்கிறோம்” என்றார். இந்த ஹீலியம் கசிவுகள் எதனால் ஏற்பட்டன என்ற சரியான காரணத்தைக் கண்டறியும் முக்கியப் பணி நாசாவுக்கு உள்ளது. அதைக் கண்டறியும் வரை, விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புவது குறித்து திட்டமிடுவதும், அவசர காலத் திட்டமிடல்களும் முழுமை பெறாது என்று டாக்டர் பார்பர் தெரிவிக்கிறார். “கோளாறுகளுக்கான ஆணிவேர் என்னவென்று கண்டறியும் வரை, விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்புவது குறித்து என்ன கணிப்பு இருந்தாலும் அது முழுமையான தகவல் கையில் இல்லாமல் எடுக்கப்படுவதாகும். தவறு எதனால் நடந்தது என்று புரிந்து கொள்ளவில்லை என்றால், அடிப்படை உந்து இயந்திரங்கள் மட்டுமல்லாமல் மாற்று இயந்திரங்களையும் பாதிக்கும் கோளாறுகள் எதுவும் விண்கலனில் இல்லை என்று உறுதியாகக் கூற முடியாது” வேறு வழியே இல்லை என்றால், விண்வெளி வீரர்களை ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ட்ராகன் விண்கலனில் (ஈலோன் மஸ்க்-க்கு சொந்தமான நிறுவனம்) பூமிக்குத் திரும்ப அழைத்து வரலாம். ஆனால் அது போயிங் நிறுவனத்துக்கு மிகுந்த தர்ம சங்கடத்தை உருவாக்கும். இன்னும் அப்படி ஒரு சூழல் ஏற்படவில்லை என்கிறார் டாக்டர் பேகர். “ஒரு புதிய விண்கலனில் எதிர்ப்பார்க்காததை எதிர்ப்பார்க்க வேண்டும்” என்கிறார் அவர். “இந்தப் பயணத்தில் இது முழுவதுமாக எதிர்ப்பார்க்கப்பட்ட தடங்கல்தான். இது மிகப்பெரிய கவலைக்குரிய விஷயம் என்று நான் கருதவில்லை. இதை ஆய்வு செய்து, அடுத்த முறை ஆட்களுடன் விண்வெளிக்குச் செல்லும் முன் சீரமைக்க வேண்டும்,” என்றார். https://www.bbc.com/tamil/articles/cjqe28xy1v0o
-
யாழ். வைத்தியசாலை முன் சந்தேகத்திற்கு இடமான நிறுத்தி வைக்கப்பட்ட கார் பொலிஸாரால் மீட்பு!
Published By: VISHNU 28 JUN, 2024 | 12:19 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 13ஆம் இலக்க நுழைவாயில் முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினை யாழ்ப்பாண பொலிஸார் மீட்டு சென்றுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்திற்கு செல்லும் நுழைவாயிலான 13ஆம் இலக்க நுழைவாயிலை முற்றாக மறித்தவாறான நிலையில் நபர் ஒருவர் காரினை நிறுத்தி சென்றுள்ளார். அதனால் மருந்து களஞ்சியத்தில் இருந்து வைத்தியசாலை வாகனம் வெளியே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டமையால் , வைத்தியசாலை ஊழியர்கள் , காரின் சாரதியை தேடி உள்ளனர். நீண்ட நேரமாகியும் காரின் சாரதி அவ்விடத்திற்கு வராதமையால், வைத்தியசாலை பணிப்பாளர் ஊடாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து , விசாரணைகளை மேற்கொண்டதுடன் , அயலில் உள்ள கடைகளில் விசாரித்த போதிலும் காரின் சாரதியை கண்டறிய முடியாததால் , காரினை அவ்விடத்தில் இருந்து கனரக வாகனத்தின் உதவியுடன் மீட்டு , பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். காரின் இலக்க தகட்டின் ஊடாக அதன் உரிமையாளரை கண்டறிவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/187125
-
மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள்சென்ற எரிபொருள் கொள்கலன் வாகன விபத்தில் இருவர் காயம்
Published By: VISHNU 27 JUN, 2024 | 10:52 PM திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை_கண்டி பிரதான வீதியின் 98ம் கட்டை பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் வியாழக்கிழமை (27) மாலை இடம் பெற்றுள்ளது . கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த எரிபொருள் கொள்வனவு வாகனமே இவ்வாறு வீட்டு மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றுள்ளது. நித்திரை கலக்கம் காரணமாக இவ்விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது. இதில் எரிபொருள் கொள்கலனைச் செலுத்திய சாரதி வயது (50), உதவியாளர் வயது (45) ஆகிய இருவர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மதுகம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது. இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/187124
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
தடுமாறிய பைடன் - கலக்கத்தில் ஜனநாயக கட்சியினர் Published By: RAJEEBAN 28 JUN, 2024 | 11:26 AM அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிற்கும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற நேரடி விவாதத்தின் போது ஜோ டைபனின் தடுமாற்றம் மிகுந்த பதில்களும் செயற்பாடுகளும் கரிசனையை ஏற்படுத்தியுள்ளன. சிஎன்என் ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதி தேர்தல் விவாதம் பைடனின் பிரச்சாரகுழுவினருக்கு பல கேள்விகளிற்கு பதில் சொல்லவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவரது பிரச்சார குழுவினர் பாதிப்புகளை சரிசெய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். பைடனும் டிரம்பும் குடியேற்றவாசிகள், பொருளாதாரம், கருக்கலைப்பு உரிமை போன்றவை குறித்து விவாதித்தனர். பைடனின் மெதுவான ஆரம்பம் ஜனநாயக கட்சியின் சிலருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜோ பைடனின் கரடுமுரடான குரலும்( உடல்நிலை சரியில்லை என அவரது பிரச்சாரகுழுவினர் தெரிவித்துள்ளனர்)பைடன் தனது சிந்தனையை இழந்ததாக தோன்றிய சில தருணங்களும், பார்வைக்கு தென்பட்ட சிறந்த விடயங்கள் இல்லை என பிபிசி தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நவம்பரில் பைடன் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து அமெரிக்க ஊடகங்களில் ஆய்வாளர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர். குடியரசுக் கட்சியினரும் இதே விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளனர். அதேவேளை ஜனநாயக கட்சியினர் உடனடியாக ஜனாதிபதியின் பின்னாள் அணி திரண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/187160
-
டெல்லியில் கனமழை பாதிப்பு: விமான நிலைய மேற்கூரை விழுந்து 3 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
28 JUN, 2024 | 10:57 AM புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கனமழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து 6 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. விமான நிலைய மேற்கூரை சரிந்தது மட்டுமின்றி அதனை தாங்கியிருந்த பீமும் விழுந்ததில் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் டெல்லி விமான நிலைய டெர்மினல் 1 பகுதியில் நடந்துள்ளது. மழை காரணமாக விமான சேவையும் தாமதம் அடைந்துள்ளதாக தகவல். இடிபாடுகளில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பதை டெல்லி தீயணைப்பு படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கூரை சரிந்து விழுந்ததில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை 5.30 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து அங்கு அவர்கள் விரைந்துள்ளனர். பீம் சரிந்து விழுந்து சேதமடைந்த காரில் இருந்து ஒருவரை மீட்டுள்ளனர். பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த சம்பவத்தால் டெர்மினல் 1 பகுதியில் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. செக்-இன் கவுண்டர்களும் மூடப்பட்டுள்ளன. இந்த இடையூறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது விமான நிலைய தரப்பு. மேலும், இந்த சம்பவத்தை தனிப்பட்ட கவனத்தில் எடுத்துக் கொண்டு கண்காணித்து வருவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இதனை அவர் எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். டெல்லி மழை: கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இதன் காரணமாக அங்கு தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இந்த சூழலில் நேற்று (வியாழக்கிழமை) அங்கு மழை பதிவானது. அதோடு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தொடர்ந்து வியாழக்கிழமை இரவு மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரம் பதிவான மழை காரணமாக டெல்லி மற்றும் அதனை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அங்கு பருவமழை முன்கூட்டியே எதிர்பார்க்கப்படுவதாக தனியார் வானிலை ஆய்வு நிறுவனங்கள் நேற்று தெரிவித்து இருந்தன. அதே நேரத்தில் காலநிலை மாற்றம் காரணமாக அதீத வெப்பம் மற்றும் மழை என இரண்டையும் எதிர்கொண்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/187154
-
ஹிருணிகாவுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை
அண்ணை மருதர் காஜலிசத்தில் மூழ்கிவிட்டார் என நினைக்கிறேன்!
-
யாழில் மிக்ஸரில் பல்லி; 15 ஆயிரம் ரூபாய் தண்டம்
Published By: DIGITAL DESK 3 28 JUN, 2024 | 11:13 AM யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸரில் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டமை தொடர்பில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், மிக்ஸரை விற்பனை செய்த நபருக்கு 15ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு, ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர், ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது, அதனுள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்லியுடன் காணப்பட்ட மிக்ஸரை சான்று பொருளாக பெற்றுக்கொண்ட பொது சுகாதார பரிசோதகர் குறித்த இனிப்பு கடைக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கு நேற்று வியாழக்கிழமை (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, மிக்ஸரை விற்பனை செய்த நபரை கடுமையாக எச்சரித்த மன்று அவருக்கு 15ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. https://www.virakesari.lk/article/187156
-
கடற்படை மாலுமியின் இறுதி நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் !
28 JUN, 2024 | 11:19 AM நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது உயிரிழந்த கடற்படை மாலுமியின் இறுதி கிரியைகளில் வியாழக்கிழமை (28) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதேவேளை யாழ்.மாவட்டத்தில் இருந்து கடற்தொழிலாளர்களின் பிரதிநிதிககளும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உயிரிழந்த கடற்படை மாலுமிக்கு அஞ்சலி செலுத்தினர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய படகொன்றினை வழிமறித்து, படகில் இருந்தவர்களை கடற்படையினர் கைது செய்ய முற்பட்ட வேளை கடற்படை மாலுமி உயிரிழந்தார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும், கடற்படை சிறப்பு மாலுமியான குருநாகல் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ரத்நாயக்க என்பவரே உயிரிழந்திருந்தார். சம்பவத்தினை அடுத்து, படகில் இருந்த 10 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு புதன்கிழமை காங்கேசன்துறை பொலிஸார் ஊடாக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை அவர்களை எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/187155