Everything posted by ஏராளன்
-
நீதித்துறை விவகாரங்களில் தலையிடுவதை பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும்!
பாராளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில், நீதித்துறை மற்றும் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் விவகாரங்களில் தலையிடுவதை பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறான செயற்பாடுகளால் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை மீறப்படுவது போன்ற மோசமான விளைவுகள் ஏற்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் சுதந்திரத்தையும் சட்டவாட்சியையும் பாதுகாப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சுதந்திரமான மற்றும் தைரியமான நீதித்துறையை ஆதரிப்பதாகவும், சட்டவாட்சியை பாதுகாப்பது அவசியம் எனவும் அவர்கள் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீதித்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின், முதலில் அதனை பாரபட்சமின்றி விசாரணை செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறான விசாரணையின் பின்னர், நீதித்துறை அதிகாரி குற்றமிழைத்துள்ளார் என்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில், உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/304567
-
ஆண் பாம்புடன் சேராமலேயே 14 குட்டிகளை ஈன்ற பெண் பாம்பு - எப்படி சாத்தியம்?
26 ஜூன் 2024, 07:41 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆண் பாம்பு என தவறுதலாக கருதப்பட்ட பெண் பாம்பு ஒன்று 14 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த பெண் பாம்பு கருத்தரிப்பதற்காக ஆண் பாம்புடன் இணை சேரவில்லை. 13 வயதான, ரொனால்டோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போவா கன்ஸ்ட்ரிக்டர் வகை பாம்பு, பிரிட்டனின் சிட்டி ஆஃப் போர்ட்ஸ்மவுத் கல்லூரியில் அண்மையில் சில குட்டிகளை ஈன்றது. போவா கன்ஸ்ட்ரிக்டர், மலைப்பாம்பு வகையைச் சேர்ந்தது. இது மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் பரவலாக காணப்படுகிறது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இது குறித்து பேசிய அந்த கல்லூரியின் விலங்குகள் பராமரிப்பு நிபுணரான பீட் குவின்லான், குட்டிகளை ஈன்றதற்கு முன்பு வரை ரொனால்டோ ஒரு ஆண் பாம்பு என்றே தான் நம்பியதாக கூறினார். தன்னுடைய பராமரிப்பில் இருந்த ஒன்பது ஆண்டுகளில் ரொனால்டோ எந்த ஒரு ஆணுடனும் இணை சேரவில்லை என்கிறார் பீட். இணை சேராமல் குட்டியை ஈன்றெடுக்கும் இதுபோன்ற நிகழ்வு பார்தெனோஜெனிசீஸ் என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வு பிரேசிலிய போவா கன்ஸ்ட்ரிக்டர் வகை பாம்புகளில் இதுவரை மூன்று முறை மட்டுமே நடந்துள்ளது. விலங்குகள் வன்கொடுமை தடுப்புக்கான ராயல் சொசைட்டியிடம் இருந்து ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ரொனால்டோவை பெற்றதாக பீட் கூறுகிறார். சிட்டி ஆஃப் போர்ட்ஸ்மவுத் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகள் பராமரிப்பாளராக பணியில் சேர்ந்ததாகவும், அப்போது தன்னுடன் இந்த பாம்புகளையும் எடுத்து வந்ததாகவும் அவர் விவரித்தார். ரொனால்டோ குட்டியை ஈன்ற நாளன்று பீட் குவின்லான் வேறு இடத்திற்கு சென்றிருந்துள்ளார். அங்கு பயிலும் மாணவர் ஒருவர், ரொனால்டோ இருந்த பெட்டிக்குள் சில பாம்பு குட்டிகள் நெளிவதை அடையாளம் கண்டு, பணியில் இருந்த காவலர்களிடம் கூறியுள்ளார். “உடனடியாக நான் கல்லூரிக்கு விரைந்து வந்தேன். அங்கு நான் பார்த்த போது அந்த பெட்டிக்குள் எங்கு பார்த்தாலும் பாம்புக் குட்டிகள் நிறைந்திருந்தன.” சில விலங்குகளில் இணையில்லாமல் கருத்தரிக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன. குறிப்பாக முதுகெலும்பில்லாத சில பூச்சிகள், துணையுடன் இனச்சேர்க்கையில் ஈடுபடாமலேயே இனப்பெருக்கம் செய்கின்றன. இதுபோன்ற நடைமுறையின் போது தன்னைப் போலவே மரபணு ரீதியாக ஒத்திருக்கும் சந்ததிகளை அவை உயிரி நகலாக்கம்(க்ளோனிங்) செய்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் இணையின் உதவியில்லாமல் ஒரு திருக்கை மீன் தாமாகவே கருத்தரித்தது. அதேபோல ஆணின் துணையில்லாமல் பெண் முதலை தானாகவே கருத்தரித்த சம்பவம் கோஸ்டாரிகாவில் கடந்த ஆண்டு நடந்தது. ஆனால் பாம்பு போன்ற முதுகெலும்பு உள்ள விலங்குகளில் இத்தகைய நிகழ்வு அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/cp6684e2e8po
-
அதிபர், ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
அதிபர், ஆசிரியர் ஆர்ப்பாட்டப் பேரணி (படங்கள்) அதிபர், ஆசிரியர்களால் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியையும், பொலிஸாரால் பேரணியில் சென்றவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதையும் காணலாம். படப்பிடிப்பு – எஸ்.ரி.ரமேஷ் https://thinakkural.lk/article/304621
-
இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
இந்திய மீனவர்கள் 10 பேருக்கு விளக்கமறியல் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைதான 10 இந்திய மீனவர்களும் மல்லாகம் நீதவானின் உத்தரவுக்கமைய எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய சென்ற போது படகிலிருந்து தவறி விழுந்து கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். குறித்த கடற்படை சிப்பாய் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்தார் எனச் செய்திகள் வெளியான போதும், கடற்படை பேச்சாளர் அதனை மறுத்திருந்தார். எவ்வாறாயினும் கைது நடவடிக்கையின்போது, உயிரிழப்பொன்று ஏற்பட்டதால் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்ட மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன்படி 10 இந்திய மீனவர்களும் நேற்று (25) மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான் எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். https://thinakkural.lk/article/304609
-
கனடா, ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா விதிகள் கடுமை
கனடா, ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா விதிகள் கடுமை - தமிழ்நாட்டு மாணவர்கள் என்ன செய்கிறார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்று கல்வி கற்க வேண்டும் என விரும்பும் இந்திய மாணவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது கனடா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை தான். குறிப்பாக கனடாவில் கல்வி கற்க இந்திய மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிப்பது வழக்கம். ஆனால் கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சமீப காலமாக, மாணவர் விசாக்களைப் பெறுவதற்கான சட்டங்களையும் விதிமுறைகளையும் கடுமையாக்கி வருகின்றன. தமிழ்நாட்டிலிருந்து இந்த நாடுகளுக்கு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் மத்தியில் இந்த புதிய விசா விதிமுறைகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதைப் பார்க்கலாம். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். விசா விதிகள் கடுமை கனடா அரசாங்கம், இந்த ஆண்டின் தொடக்கத்தில், சர்வதேச மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் மற்றும் நாட்டின் உட்கட்டமைப்பு சுமைகளை கருத்தில் கொண்டு 2024 ஜனவரி மாதம் முதல் இரண்டு வருடங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை 35 சதவிகிதம் வரை குறைப்பதாக அறிவித்தது. இதனால் 2024ஆம் ஆண்டுக்குள் தோராயமாக 3,60,000 மாணவர் விசாக்களை மட்டுமே வழங்க கனடா அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. இதைத் தவிர மற்றொரு பெரிய மாற்றத்தையும் கனடா அரசு செய்தது. கனடாவில் அரசு-தனியார் கூட்டுறவின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு செப்டம்பர் முதல் அங்கு பணி செய்வதற்கான அனுமதி வழங்கப்படாது. கனடாவில் படித்து குடியுரிமை பெற விரும்பும் மாணவர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுமட்டுமல்லாது வரலாற்றில் முதன்முறையாக, தற்காலிகமாக வசிப்பவர்களின் எண்ணிக்கையைப் புதிதாக வருபவர்கள் சார்ந்து மட்டும் கட்டுப்படுத்த கனடா கருதியது. அடுத்த மூன்று ஆண்டுகளில் தற்காலிகமாக வசிப்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கனடா குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த ஆண்டு மார்ச் மாதம் தெரிவித்தார். செப்டம்பர் மாதம் முதல் இந்த நடவடிக்கை அமலுக்கு வரும். இந்த வரம்பு, சர்வதேச மாணவர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அகதிகளுக்கும் பொருந்தும். அதேபோல ஆஸ்திரேலிய அரசாங்கமும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்நாட்டில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்படும் என 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது. மாணவர் விசாவுக்கான தகுதித் தேர்வுகளையும் அது கடுமையாக்கியது. நிதிசார் விதிமுறைகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய மாணவர் விசாவுக்காக விண்ணப்பிப்பவர்கள் தங்கள் சேமிப்பில் 16,29,964 ரூபாய் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடந்தாண்டு இந்தத் தொகை 13,44,405 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மே மாதம் இது அமலுக்கு வந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES புதிய விதிகளின் தாக்கம் கனடா, ஆஸ்திரேலியா சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என 'ட்ரூமேட்டிக்ஸ் ஓவர்சீஸ் எஜுகேஷன் கன்சல்டன்சி'யின் இயக்குநர் சுரேஷிடம் கேட்டோம். "நிச்சயமாக 40-50 சதவீத மாணவர்களை இது பாதித்துள்ளது. உதாரணமாக தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 40 ஆயிரம் பேர் வரை கல்வி கற்பதற்காக கனடாவுக்கு செல்வார்கள், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. கனடாவுக்கு அடுத்து ஆஸ்திரேலியாவை தமிழ்நாட்டு மாணவர்கள் விரும்புவார்கள், இப்போது அங்கும் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள்" என்று கூறுகிறார் சுரேஷ். சமீப காலங்களில் இந்தியா- கனடா உறவில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, பெற்றோர் பலரும் தங்கள் பிள்ளைகளை அனுப்ப தயக்கம் காட்டியதாகவும், இப்போது இந்த புதிய கட்டுப்பாடுகளால் அவர்கள் மேலும் தயங்குவதாகவும் கூறுகிறார் அவர். "ஆஸ்திரேலியா புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இந்த வருடம் மே மாதம் முதல் நல்ல நிதி நிலைமை கொண்ட மாணவர்களால் மட்டுமே ஆஸ்திரேலியா மாணவர் விசா பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் வருடத்திற்கு குறைந்தது 15 முதல் 20 லட்சம் வரை சம்பாதிக்கும் பெற்றோர்களால் மட்டுமே தங்கள் பிள்ளைகளை அங்கு மேல்படிப்பிற்கு அனுப்ப முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது" என்று கூறுகிறார் சுரேஷ். பிரான்ஸ், நெதர்லாந்து, சுவீடன், அயர்லாந்து, பிரிட்டன் போன்ற நாடுகளை மாணவர்கள் மாற்றாகப் பார்க்கிறார்கள் என்றும், இந்த நாடுகளில் மாணவர் விசா கிடைப்பது எளிது என்றும் கூறுகிறார் சுரேஷ். தொடர்ந்து பேசுகையில், "இந்த நாடுகள் பெரும்பாலும் கல்விக் கடன் பெற்று வரும் மாணவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். பெற்றோர் வருமானத்தை பார்ப்பதில்லை, அதேபோல விசா விதிகளும் எளிமையானவை. உண்மை என்னவென்றால், சர்வதேச மாணவர்கள் அல்லது புதிதாக குடியேறுபவர்கள் இனியும் தங்களுக்கு தேவையில்லை என்று ஆஸ்திரேலியா, கனடா நாடுகள் நினைக்கின்றன. வரும்காலத்தில் மீண்டும் தேவை என்று நினைத்தால் அவை விதிகளைத் தளர்த்தும்." என்கிறார். இந்தியா- கனடா இடையேயான கசப்புணர்வு பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னையைச் சேர்ந்த வினோத் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கனடா செல்வதற்காக முயற்சித்து வந்தார், ஆனால் புதிய விதிகள் மற்றும் சமீபத்தில் இந்திய- கனடா உறவில் ஏற்பட்ட பதற்றங்கள் காரணமாகவும் தன்னை கனடா செல்ல வேண்டாமென பெற்றோர் கூறி விட்டதாகச் சொல்கிறார். "அவர்கள் பயப்படுவதிலும் ஒரு நியாயம் உள்ளது. செய்திகளில் வருவதையெல்லாம் அவர்களும் பார்க்கிறார்கள். கடன் வாங்கி என்னை படிக்க அனுப்பி வைத்துவிட்டு, கவலையுடன் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்தவாறு அவர்களால் உட்கார முடியாது அல்லவா." என்கிறார். காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த வருடம் ஜுன் மாதம் கனடாவில் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இந்திய புலனாய்வு முகமைகளின் பங்கு இருப்பதற்கான 'நம்பத் தகுந்த' ஆதாரங்கள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த பின் இந்தியா - கனடா இடையே ஏற்பட்டது. வினோத் குமாருக்கு அயர்லாந்து நாட்டின் பல்கலைக்கழகம் ஒன்றில், முதுகலைப் பட்டப்படிப்பு படிப்பதற்கான மாணவர் விசா கிடைத்துள்ளது. செப்டம்பர் மாதம் அவரது வகுப்புகள் தொடங்குகின்றன. 'கனடாவில் நிலைமை முன்பு போல இல்லை' பட மூலாதாரம்,GETTY IMAGES முதுகலைப் படிப்பிற்காக மாணவர் விசா மூலம் கனடா சென்றவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இப்போது அங்குள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த புதிய விதிகள் தொடர்பாக பிபிசியிடம் பேசினார். "பெரும்பாலும் கனடா வரும் மாணவர்களின் நோக்கம் என்பது நிரந்தரக் குடியுரிமை தான். இங்குள்ள வாழ்க்கைத் தரம் காரணமாக தான் அத்தகைய ஆசை பலருக்கும் இருந்தது. ஆனால் இன்று கனடாவில் அனைத்தும் மாறிவிட்டது. கடந்த சில வருடங்களில் விலைவாசி மிகவும் அதிகரித்துள்ளது. வரியும் மிக அதிகம். கொரோனா காலத்திற்கு பிறகு கனடா தனது விசா விதிகளைத் தளர்த்தியதால் தான் பலர் இங்கு வந்தனர். நானும் அப்படிதான் வந்தேன். அப்போது அவர்களுக்கு சர்வதேச மாணவர்களின் வருகை தேவைப்பட்டது, இப்போது அது தேவையில்லை என்று நினைக்கிறார்கள். எனவே புதிய கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். சமீபகால அரசியல் பிரச்னைகள் காரணமாக இந்தியர்கள் மீதான பார்வையும் மாறியுள்ளது" என்கிறார் விக்னேஷ். https://www.bbc.com/tamil/articles/cd11edgyy0yo
-
Factum கண்ணோட்டம் : பிரிக்ஸ், உலகளாவிய சமபங்கு மற்றும் டொலர் மதிப்பினை நீக்குதல்
Published By: VISHNU 26 JUN, 2024 | 04:35 AM நடாஷா குணரத்ன அபிவிருத்தி அடைந்துவரும் நாடொன்று, மிகவும் சிக்கலான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. வேலையின்மை நிலை அதிகரித்து வருகின்றது, ஆனால் பணவீக்கம் அதனைவிட மிகவும் வேகமாக அதிகரித்து வருகின்றது. தேசிய வங்கிகளில் வெளிநாட்டு நாணய இருப்பு வெறுமையாக உள்ளது. எரிபொருள் மற்றும் எரிவாயு இருப்புக்களும் அவ்வாறே உள்ளன. சர்வதேச நிதி நிறுவனங்கள் இதுபற்றி தட்டிக் கேட்டன. அ) நிதி உறுதியற்ற தன்மை அல்லது ஆ) பணம் செலுத்துவதில் உள்ள இயல்புநிலை இ) மேற்குறித்த இரண்டு விடயங்களாலும் ஏற்பட்ட அரசியல் அமைதியின்மை குறித்து அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை. தனிப்பட்ட கலந்துரையாடல்களில், அரசாங்கங்களின் அடுத்தடுத்த தோல்வி மற்றும் நுகர்வோர் விலை உயர்வு ஆகியவற்றிலேயே கவனம் செலுத்துகின்றனர். அரசியல் வெளிகளில் இடம்பெறும் கலந்துரையாடல்களை பொறுத்தவரை, அவை தேசிய ரீதியான ஊழல், அலட்சியம் மற்றும் தீவிரமான மாற்றத்தின் தேவை ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. நீங்கள் உலகளாவிய தெற்கைச் சேர்ந்தவர் என்றால், இந்த விளக்கம் உங்கள் நாடு போல் தோன்றலாம். ஆனால் இது உலகளவில் ஒன்றரை பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் 105இற்கும் மேற்பட்ட அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளைக் குறிக்கின்றது. உள்ளூர் பிரச்சினைகளை சர்வதேசமயமாக்குவது பற்றி கலந்துரையாடுவது 'அபிவிருத்தி அடைந்துவரும் உலகிற்கு' அரிது. தேசிய நிதி துயரங்களுக்காக நாம் வெறுக்கும் உள்ளூர் அரசியல்வாதியைக் குறை கூறவே நம்மில் பெரும்பாலோர் விரும்புகிறோம். மாறாக, அவர் பேச்சுவார்த்தை நடத்தும் தேசிய நிதி துயரங்களுக்கு மூலகாரணமான சர்வதேச நிறுவனத்தை நாம் குறைகூறுவதில்லை. ஆனால் 105 நாடுகள் இதே போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, அதை நன்றாகப் புரிந்துகொள்வது அவசியமாகிறது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டமானது, 2022ஆம் ஆண்டு வெளியிட்ட அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் வாழ்க்கைச் செலவு குறித்த ஒரு அறிக்கையில், கொவிட் தொற்றுநோய் குறித்து இவ்வாறு குறிப்பிட்டிருந்தது. 'கடந்த 50 வருட காலத்தில் ஏற்பட்ட அதிகரித்த பாதிப்பாகும். இது அரசாங்க வருவாயில் 250 சதவீதத்திற்கும் அதிகமான நிலைக்கு சமமானதாகும்' அதே வருடத்தில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளை பாதிக்கும் சுழற்சி அறிகுறிகளை விளக்கினார். உலகப் பொருளாதார நெருக்கடியால் இந்த நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. கொவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட முடக்கல் நிலைகள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி சரிவுகள், ரஷ்யா-உக்ரைன் மோதலால் மோசமடைந்த எரிபொருள் மற்றும் எரிசக்தி பற்றாக்குறை, உணவு மற்றும் அத்தியாவசிய பற்றாக்குறை ஆகியவற்றால் அவர்களிடம் குறைந்த வெளிநாட்டு இருப்பு காணப்பட்டது. இது சமூக அமைதியின்மை மற்றும் கிளர்ச்சிக்கு வழிவகுக்கின்றது, இது சர்வதேச நிதி, பிணை எடுப்பு மற்றும் கடன்களை எதிர்மறையாக பாதிக்கிறது. சுருக்கமாக கூறினால், தொடர்ச்சியான சார்ந்திருக்கும் நிலையானது சுழற்சியில் சிக்கியது, இது சர்வதேச கட்டமைப்பு பல வருடங்களாக மோசமடையத் தயாராக இருப்பதாகத் தோன்றியது. இலங்கையில் அந்தத் தருணத்தில் வெளிநாட்டுக் கடனுடன் என்ன நடந்து கொண்டிருந்ததோ, அது ஏனைய உலகளாவிய தெற்கு நாடுகளுக்கும் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், வீழ்ச்சியடைந்த முதல் முன்னோடியாக இலங்கை இருக்கும் என்றும் ஸ்டெய்னர் குறிப்பிட்டார். 'அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் தற்போது நிதி, நிதி நிலைத்தன்மை மற்றும் அரசியல் ரீதியாக மிகவும் ஆபத்தான காலகட்டத்தை கடந்து செல்கின்றன. நாடுகள் இயல்புநிலைக்கு வரும்போது, அத்தியாவசிய அன்றாட விநியோகங்களுக்கான அணுகல் மறைந்து, பசிக்கு வழிவகுக்கும் என்பதை இலங்கை போன்ற எடுத்துக்காட்டுகளுடன் நாம் கண்டோம். மற்றும் விரைவில் சாத்தியமான அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுக்கலாம்' இந்த நாடுகள் தாங்களாகவே இந்த சுழற்சியின் வழியில் செல்ல முடியாது என்பதை அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடல்கள் உறுதிப்படுத்தும். அதற்கு, சர்வதேச பலதரப்பு முதலீட்டு வங்கிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட முகவர்கள், தமது வழக்கமான பணி முறைகளை மாற்றி கடன் சேவை இடைநீக்க முன்முயற்சிகளை செயற்படுத்த வேண்டும். ஏனைய இடங்களில் உள்ள ஆய்வாளர்கள், உலகளாவிய சமபங்கு என்பது நாம் உண்மையிலேயே அடைய விரும்பும் இலக்காக இருந்தால், கடன் தள்ளுபடி பற்றி கலந்துரையாடுவது ஒரு தீவிரமான கருத்தாடலாக இருக்க வேண்டுமென ஏனைய இடங்களில் உள்ள ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், காலனித்துவ நீக்கம் இயக்கத்தில் இருந்தே, கடன் தள்ளுபடி பற்றிய கலந்துரையாடல்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கணிப்பு இப்போதும் உண்மையாக உள்ளது. ஒன்றுக்கொன்று சார்ந்த நிகழ்வுகளின் வீழ்ச்சிக்கு மிக சமீபத்திய உதாரணமாக பொலிவியா உள்ளது. இந்த உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச கடன்களை திருப்பிச் செலுத்துவதில் உள்ள சவால்கள்-அல்லது அதன் பற்றாக்குறை ஆகியவற்றிற்கு மத்தியில், மற்றொரு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பிரச்சினை எழுந்தது: உலகப் பொருளாதாரம் முதன்மையான வர்த்தக நாணயமாக அமெரிக்க டொலரை நம்பியிருப்பதில் இருந்து மாறுவதற்கான அவசரத் தேவையே அது. உலகளாவிய தெற்கின் பெரும்பகுதி முழுவதும் பரவலான பணமதிப்பு நீக்கம் காரணமாக இது மிகவும் பொருத்தமானது. இதற்கு மேலதிகமாக, அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் புவிசார் அரசியல் பதட்டங்களில் சிக்கியுள்ள நாடுகளை எவ்வளவு விரைவாகப் பாதிக்கும் என்பதை நினைவூட்டுகிறது. கடந்த ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா, அமெரிக்க டொலரை சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில், வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான பொதுவான நாணயத்தை தங்களுக்குள் உருவாக்குமாறு பிரிக்ஸ் உறுப்பு நாடுகளை வலியுறுத்தியமைக்கு இந்த காரணிகள் காரணமாக இருக்கலாம். ஆனால் சில சந்தர்ப்பங்களில் உறுப்பு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் குறைவாகவோ அல்லது இல்லாததாகவோ நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். பொதுவான வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நாணய அமைப்பு இலக்குகளாக இருந்தால், அவற்றை அடைவதில் சீனா மையமாக இருக்கும் என்று தோன்றியது. 2023 ஆம் ஆண்டில் சுமார் 3.4 டிரில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி மதிப்புடன், உலகின் மிகப்பெரிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக அது தொடர்ந்து நிலைத்திருக்கிறது. அதுமட்டுமன்றி, சீனா ஒரு சர்வதேச வர்த்தகர், கடன் வழங்குபவர், முதலீட்டாளர் மற்றும் பிரிக்ஸ்-இன் உறுப்பு நாடாக குறிப்பிடத்தக்க பாத்திரங்களைக் கொண்டுள்ளது. இந்த யோசனை தத்துவார்த்தமானது மட்டுமல்ல, பொலிவியா தனது பொருளாதார சரிவைத் தணிப்பதற்கான எடுத்த நடவடிக்கைப் போன்று, பிரேசில் மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகள் ஏற்கனவே டொலரில் இருந்து யுவானுக்கு மாறத் தொடங்கியுள்ளன. யுவான் அதன் வர்த்தகத்தில் சுமார் 10 வீதத்தை பயன்படுத்தி, டொலர் மதிப்பை நீக்கும் செயற்பாட்டில் உள்ளது என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. சவூதி அரேபியா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய புதிய உறுப்பினர்களை உள்ளடக்கி இந்த ஆண்டு பிரிக்ஸ் விரிவாக்கம் செய்யப்பட்டதன் அர்த்தம், பெரிய குழு இப்போது உலக மக்கள் தொகையில் 45 வீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது மற்றும் உலகின் கச்சா எண்ணெயில் 44 வீதத்தை உற்பத்தி செய்கிறது. அதன் தற்போதைய மற்றும் புதிய உறுப்பினர்கள் ஒருதலைப்பட்சமான தடைகளால் ஏற்படும் தீங்கை உணர்ந்து, பொருளாதார இறையாண்மையின் அவசியத்தை, குறிப்பாக பணமதிப்பு நீக்கம் மூலம் வலியுறுத்துகின்றனர். மேலும், சர்வதேச நிதி நிறுவனங்களான சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியை சீர்திருத்துவது, பிரிக்ஸ் நாடுகளுக்கு 2009இல் அரசுகளுக்கிடையேயான குழு நிறுவப்பட்டபோது முக்கிய இலக்காக இருந்தது. உலகளாவிய தெற்கில் சீன ரென்மின்பி ஒரு விரும்பத்தக்க டொலர் அல்லாத நாணயமாக அதிகரிப்பது, பாரம்பரியமாக டொலரால் ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளுக்கான மாற்று முறைகளை மறுபரிசீலனை செய்ய பிரெட்டன் வூட்ஸ் நிறுவனங்களை கட்டாயப்படுத்தலாம். அல்லது சீர்திருத்தங்களைக் கருத்தில் கொள்ள குறைந்தபட்சம் கடனாளி மாநிலங்களைத் தூண்டும். இருப்பினும், இந்த கலந்துரையாடல்களுக்கு குறிப்பிடத்தக்க தடைகள் இல்லாமல் இல்லை. குறுக்கு வர்த்தக பரிவர்த்தனைகளுக்கான நாணயமாக டொலர் மிகவும் உறுதியாக வேரூன்றியுள்ள நிலையில், சீனா மற்றும் இந்தியா போன்ற பொருளாதாரங்களில் கூட அதன் முக்கிய நிலையை மாற்றுவதற்கு கணிசமான நேரம் எடுக்கும். உதாரணமாக, 2023இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் இவ்வாறு குறிப்பிடப்பட்டது, '...இந்திய ஏற்றுமதியில் 15 சதவீதம் மட்டுமே அமெரிக்காவுக்கு சென்றாலும், 86 சதவீத இந்திய ஏற்றுமதிகள் டொலர் மதிப்பிலானவை. 2023இல், சீனாவின் 47 வீதம் எல்லை தாண்டிய கொடுப்பனவுகள் (மற்றும் எல்லை தாண்டிய பொருட்கள் மற்றும் சேவைகளின் வர்த்தகக் கொடுப்பனவுகளில் அதிக சதவீதம் இருக்கலாம்) டொலர்களில் இருந்தன, அதன் ஏற்றுமதியில் 17 வீதம் மட்டுமே 2021இல் அமெரிக்காவிற்கு கட்டுப்பட்டதாக அமைந்தது.....' எவ்வாறாயினும் மெதுவாக இருந்தாலும், இந்த மாற்றம் அமெரிக்காவிற்கு உலகளாவிய தெற்கில் வளர்ந்து வரும் விரக்திகளையும் சமிக்ஞை செய்யலாம். நாடுகளிடையே கூட அது வலுவான உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறது. இதனை வொஷிங்டன் 'பகிரப்பட்ட மதிப்புகள்' என்று கருதுகின்றது. மேலாதிக்கம் மற்றும் கட்டுப்பாட்டைப் பின்தொடர்வதில் கூட்டாண்மைக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகின்றது. பிரிக்ஸ் நாடுகள் இன்னும் தமது சொந்த நாணயத்தை உருவாக்குவதற்கான வழிகளைக் கொண்டிருக்கலாம் என்றாலும், குழு முதலில் உருவாக்கப்பட்டதை விட இன்று வொஷிங்டனில் பங்குதாரர்களை ஈடுபடுத்துவதற்கு அதிக பேரம் பேசும் சக்தியைக் கொண்டுள்ளது. மேற்கு நாடுகளுடன் எவ்வாறு ஈடுபடுவது என்பது பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் உட்பட உறுப்பு நாடுகளுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை பிரிக்ஸ் சமாளிப்பது மற்றும் ஒரு கூட்டு அரசுகளுக்கிடையேயான பணிக்குழுவை நிறுவுவது இப்போது அவசியமாக இருக்கலாம். இந்த குழு, டொலர் மதிப்பை நிலையானதாகவும், சாத்தியமானதாகவும் மாற்றுவதற்கு செயற்படுத்தப்படக்கூடிய சாத்தியமான அளவுகோல்களை ஆவணப்படுத்தும். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் UNCTAD போன்ற அமைப்புகளின் உதவி அல்லது நிபுணத்துவம் அத்தகைய செயன்முறையை மேம்படுத்தி வலுப்படுத்தும். கூடுதலாக, பொது மன்ற மட்டத்தில், உலகளாவிய தெற்கு மற்றும் வடக்கு ஆகிய இரு பகுதிகளினதும் நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களிடையே, தற்போதைய சீர்திருத்த செயன்முறைகளுடன், அத்தகைய நடவடிக்கையின் சாத்தியமான அம்சங்களைப் பற்றிய கலந்துரையாடல்கள் மற்றும் ஊக்குவிப்பு இருக்க வேண்டும். மற்றொரு உலகளாவிய பொருளாதார நெருக்கடியைத் தடுக்கவும், எதிர்காலத்தில் 105க்கும் மேற்பட்ட உலகளாவிய தெற்கு நாடுகள் (மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இன்னும் நீடித்திருக்கும்) அனுபவிக்கும் பொருளாதார வீழ்ச்சியின் அறிகுறிகளைத் தவிர்க்கவும், இந்த செயன்முறையும் உலகளாவிய சமத்துவத்தை நோக்கிய அதன் பயணமும் வடக்கு மற்றும் தெற்கில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்தக் கட்டுரையை எழுதிய நடாஷா குணரத்ன, கோஸ்டரிகாவில் உள்ள United Nations-mandated University இல் சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றில் இரட்டை முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும் பிலிப்பைன்ஸில் உள்ள Ateneo de Manila Universityஇல் உலகளாவிய ஆளுகையில் முக்கியப் பட்டத்துடன் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார். அவர் இலங்கை மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் பொது இராஜதந்திரத்தில் நிபுணராக பணியாற்றியுள்ளார். உலகளாவிய தெற்கில் உள்ள நிறுவனங்களுக்கிடையில் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளை உருவாக்குவதில் நடாஷா குணரத்ன முக்கிய பங்காற்றியுள்ளார். அவர் Perspective Southஇன் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆவார். இது புவிசார் அரசியல், சர்வதேச சட்டவியல் சொற்கள் மற்றும் உலகளாவிய தெற்கின் முன்னோக்குகளை பொதுமக்களுக்கு அணுகுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சர்வதேச தளமாகும். Factum என்பது சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றி செயற்படும் ஆசியாவை மையமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழுவாகும். www.factum.lk என்ற இணையத்தளத்தில் இது தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் இந்தக் கட்டுரையை எழுதியவரின் சொந்தக் கருத்தேயன்றி, அவை எந்தவகையிலும் எமது நிறுவனத்தை பிரதிபலிப்பதாக அமையாது. https://www.virakesari.lk/article/186981
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்தியா, பாகிஸ்தானில் இருந்து குவியும் வாழ்த்து - தாலிபன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 25 ஜூன் 2024 ஐசிசி டி20 உலகப்கோப்பையின் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வங்கதேச அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த சாதனை ஆப்கானிஸ்தான் அணிக்கு மிக முக்கியமானது. ஐசிசி உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு நுழைவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் இந்த வெற்றியை, கிரிக்கெட் ஆர்வலர்கள் எப்படி பார்க்கின்றனர்? ஆப்கன் கிரிக்கெட் வரலாறு என்ன? 1839-ம் ஆண்டு ஆங்கிலோ- ஆப்கன் போரின் போது கிடைத்த இடைவெளியில் பிரிட்டன் துருப்புகள் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். இதுதான் ஆப்கானிஸ்தானில் பதிவான முதல் கிரிக்கெட் போட்டியாகும். இருப்பினும், 1990 களின் நடுப்பகுதியில் தான், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் உண்மையில் வேரூன்றத் தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள அகதிகள் முகாம்களில் வளர்ந்த ஆப்கானியர்கள் கிரிக்கெட் மீது ஆர்வத்துடன் தங்கள் பிறந்த இடத்திற்குத் திரும்பினர். ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் முதல் முறையாக ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்கு முன்பு 1995-ம் ஆண்டு ஆப்கன் கிரிக்கெட் வாரியம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா தலைமையிலான படையினர் 2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து, தாலிபன்களை ஆட்சியில் இருந்து அகற்றிய பிறகு தேசிய கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் உறுப்பினராக ஆப்கானிஸ்தான் சேர்ந்தது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 2021-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த தாலிபன்களின் கொடிக்கு பதிலாக, கருப்பு, சிவப்பு, பச்சை நிறம் கொண்ட கொடியை அணிந்தே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடுகிறது. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நஸீப் கான் என்பவரை ஆப்கன் கிரிக்கெட் வாரிய தலைவராக நியமித்தது. ‘’இந்த வெற்றி, நாட்டில் உள்ள மக்களுக்கு நிறைய நம்பிக்கையை அளிக்கும். எங்கள் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஒரே விஷயம் கிரிக்கெட்தான்’’ என ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தனில் வெளியுறத்துறை அமைச்சர் மாவ்லவி அமிர் கான் மிட்டாகி, கேப்டன் ரஷித் கானுக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை ஆப்கன் கிரிக்கெட் வாரியம் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மூத்த கிரிக்கெட் வீரர்களின் வாழ்த்து இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் மாஸ்டர் பிளாஸ்டருமான சச்சின் டெண்டுல்கர் ஆப்கானிஸ்தான் அணியை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ’’ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உங்களது அரையிறுதிக்கான பயணம் அபாரமானது. இன்றைய வெற்றி, உங்களது கடும் உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்கு ஓர் உதாரணம். உங்களது முன்னேற்றம் பெருமையாக உள்ளது’’ என பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,X/SACHIN TENDULKAR ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் டிம் மூடி,’’ வாவ், என்னவொரு போட்டி. விறுவிறுப்பு நிறைந்ததாக இருந்தது. இந்த மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வாழ்த்துக்கள்’’ என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘’வாவ் ஆப்கானிஸ்தான். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து அரையிறுதியை எட்டியுள்ளது. என்னவொரு முயற்சி. இதைதான் முன்னேற்றம் என்பார்கள். வாழ்த்துகள்’’ என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் வாழ்த்தியுள்ளார். யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத் என பலரும் ஆப்கானிஸ்தானை வாழ்த்தியுள்ளனர். ’’தாலிபன்கள் அரையிறுதிக்கு நுழைந்து, உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது. நவீன் உல்ஹக்கின் சிறந்த திறனை வெளிப்படுத்தினார். கிரிக்கெட் அதன் சிறந்த நிலையில் உள்ளது’’ என யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வெற்றி கொண்டாட்டத்தில் ரஷித் கான் பாகிஸ்தானில் இருந்தும் வாழ்த்து முன்னாள் பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான கம்ரான் அக்மல், ரஷித் கான் மற்றும் நவீன் உல்ஹக்கை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். ’’அரையிறுதிக்கு நுழைந்த ஆப்கனுக்கு வாழ்த்துகள். அருமையான கிரிக்கெட். என்னவொரு சாதனை. பந்துவீச்சாளர்களின் அருமையான திறன்’’ என பதிவிட்டுள்ளார். பாகிஸ்தான் அரசியல் தலைவர்களும் ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் முன்னாள் தலைவர் ஃபவாட் சவுத்ரி,’’ காபுல் மற்றும் கந்தகார் பாய்ஸ், உலகில் மிகப்பெரிய விளையாட்டுப்போட்டியின் அரையிறுதிக்கு நுழைந்துள்ளனர்.’’ என வாழ்த்தியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/czkk03x4ppno
-
யாழில் 15 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்; 17 வயதான சிறுவன் விளக்கமறியலில்
Published By: DIGITAL DESK 3 26 JUN, 2024 | 10:34 AM யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை 17 வயதான சிறுவன் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சிறுமியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சிறுவன் தொடர்பான தகவல்களை பெற்ற பொலிஸார் சிறுவனை கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். நீதிமன்ற விசாரணைகளை அடுத்து, சிறுவனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186995
-
அதிபர், ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
அதிபர்கள், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம் Published By: DIGITAL DESK 3 26 JUN, 2024 | 09:09 AM நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் இன்று 26ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கத்துடன் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததன் காரணமாக அதிபர்கள்,ஆ சிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களின் பங்குபற்றுதலுடன் புதன்கிழமை (26) முற்பகல் 11 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/186987
-
மன்னாரில் மீளக்குடியேறிய மக்கள் தமது விவசாய நிலங்களை மீள பெற்றுத்தருமாறு கோருகின்றனர் - அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்
Published By: VISHNU 26 JUN, 2024 | 03:22 AM நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மன்னார் மாவட்டமும் பாதிக்கப்பட்டிருந்தது. மீள் குடியேற்றத்தின் பின்னர் நாங்கள் எதிர் நோக்குகின்ற முக்கியமான பிரச்சனையாகப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் உள்ளது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பொறி முறைகளுக்கான இடைக்கால செயலகத்தின் ஏற்பாட்டில் உத்தேச சட்ட வரைவு நிறுவுவதற்கு ஜனாதிபதியின் ஏற்பாட்டில் குறித்த குழு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(25) மன்னருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(25) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் பிரதேசச் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள தலைவர்களை உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பொறி முறைகளுக்கான இடைக்கால செயலகத்தின் உத்தேச சட்ட வரைவு நிறுவுவதற்கான குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடி உள்ளனர். இதன் போது மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்துக் குறித்த குழுவினர் கலந்துரையாடி உள்ளனர். இதன் போதே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் குறித்த குழுவினரிடம் குறித்த பிரச்சினையை முன் வைத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மன்னார் மாவட்டமும் பாதிக்கப்பட்டிருந்தது. மீள்குடியேற்றத்தின் பின்னர் நாங்கள் எதிர் நோக்குகின்ற முக்கியமான பிரச்சனையாகப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் உள்ளது. மன்னார் மாவட்டத்தில் முக்கியமான வாழ்வாதார செயல்பாடாக விவசாயம் காணப்படுகின்றது. விவசாயத்தை விருத்தி செய்ய பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கின்றோம். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வன வள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் கிட்டத்தட்ட 36 வீதம் காணிகளைப் பிடித்துள்ளனர். மேலதிகமாக புதிதாக 30 வீத காடுகளை உருவாக்கி உள்ளனர். இவர்கள் ஜீ.பி.எஸ். மற்றும் கூகுள் படம் ஊடாக கூடுதலான நூறுக்கு மேற்பட்ட விவசாய குளங்களை தமது எல்லைக்குள் அடையாளப்படுத்தி உள்ளமையினால் விவசாய அபிவிருத்தியைப் புனரமைப்பு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. இடம் பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறிய பின்னர் தமது விவசாய நிலங்களை மீளப் பெற்றுத்தருமாறு கோருகின்றனர். அதன் அடிப்படையில் குறிப்பிட்ட விவசாய நிலங்கள் தற்போது வன வள திணைக்களத்திடம் இருந்து மீளப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் மீள்குடியேறி பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க அடிப்படையில் அவர்களின் நிலங்களை மீள வழங்குவதில் நாங்கள் சவால்களை எதிர் நோக்குகிறோம். 1980 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்ததன் காரணமாக பொது மக்களினால் பயன்படுத்தப்பட்ட இடங்கள் கூட சிறு காடுகளாகக் காணப்படுகிறது. இதன் காரணமாக 12 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தைக் குறித்த திணைக்களத்திடம் உரிய ஆதாரத்துடன் சமர்ப்பித்து பொது மக்களின் 1500 ஹெக் டயர் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களினால் அடையாளம் காணப்பட்ட ஏனைய நிலங்களை விடுவிக்க முடியாத நிலை காணப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளைக் குறித்த குழுவினர் அரச அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உட்பட பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உத்தேச சட்ட வரைவு குறித்துக் கலந்துரையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186979
-
மாங்குளத்தில் கோர விபத்து – மூவர் உடல் சிதறி பலி!
மாங்குளத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்! 26 JUN, 2024 | 09:58 AM மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்க்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளது. பஸ் பழுதடைந்த நிலையில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளை, பின்னால் வாந்த லொறி மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பஸ் சாரதியும் பஸ்ஸில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளதுடன் லொறியின் சாரதியும் லொறியில் பயணித்த மற்றுமொருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். https://www.virakesari.lk/article/186986
-
மூதூரில் மதுபானசாலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த 15 பேர் கைது!
26 JUN, 2024 | 10:09 AM திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் மதுபானசாலை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த 15 பேரை கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றது. இதில் 11ஆண்களும் 4 பெண்களும் அடங்குவர். இதில் 5 ஆண்கள் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த அமைதியின்மை சம்பவத்தில் இரு பொலிஸார் மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் திருகோணமலை மாவட்ட மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் . https://www.virakesari.lk/article/186990
-
இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
றோலர் மூலமான மீன்பிடிக்கு தடை செய்யப்பட்ட லைலா வலை என்ற வலையை பயன்படுத்தி ஆழங்குறைந்த பாக்குநீரிணைக் கடலின் அடி மடி வரை வழித்துத் துடைப்பதால் மீன் குஞ்சுகளில் இருந்து பவளப்பாறைகள் வரை அழிக்கப்படுகின்றது.
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
அதெண்டா உண்மைதான். அண்ணை இலங்கையிலும் மதுப்பிரியர்கள் அதிகமாகி இருக்கினம். கசிப்பு மக்கள் குடியிருப்பிற்குள் தனி வீடுகளில் காய்ச்சி விக்கிறாங்கள்!
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
Kallakurichi: ‘Hospital-ல என் கண்ணு முன்னாடியே..’ கள்ளச்சாராயம் அருந்தி பிழைத்தவர்கள் கூறியது என்ன? கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 219 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், 5 பேர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்து, மீண்டு வந்துள்ளனர். அவர்கள் வீட்டிற்கு நேரடியாகச் சென்று பேசினோம். கள்ளச்சாராயம் குடித்து, சிகிச்சையின் மூலம் மீண்ட அவர்கள் பிபிசி தமிழிடம் கூறியது என்ன?
-
நிலவின் மறுபக்கத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்து வந்த சீன விண்கலம் - என்ன இருக்கிறது?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீன விண்கலம் செவ்வாய்க்கிழமை இன்னர் மங்கோலியா பாலைவனத்தில் தரையிறங்கியது கட்டுரை தகவல் எழுதியவர், லாரா பிக்கர் & ஜோயல் குயின்டோ பதவி, பிபிசி செய்தியாளர்கள் 59 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் செல்லாத நிலவின் மறுபக்கத்தில் சேகரித்த பாறை, மண் மாதிரிகளுடன் சீன விண்கலம் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது. சாங்கே 6 (Chang'e 6) எனும் சீன விண்கலம், செவ்வாய்க்கிழமை இன்னர் மங்கோலியா பாலைவனத்தில் தரையிறங்கியது. கிட்டத்தட்ட இரண்டு மாத நீண்ட பயணத்திற்குப் பிறகு, அதன் பணி நிறைவடைந்துள்ளது. இதனை சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) உறுதி செய்துள்ளது. கிரகங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்த முக்கிய கேள்விகளுக்கு இந்த மாதிரிகள் பதிலளிக்கக் கூடும் என்பதால் விஞ்ஞானிகள் Chang'e-6 மாதிரிகளை ஆய்வு செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டில் நிலவின் ஆராயப்படாத தொலைதூரப் பக்கத்தில் கால் பதித்த ஒரே நாடு என்ற பெருமையை சீனா பெற்றது. பூமியிலிருந்து அதன் தூரம் மற்றும் அதன் கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக, நிலவின் தொலைதூரப் பகுதிகளை அணுகுவது தொழில்நுட்ப ரீதியாக கடினமானது. அதன் நிலப்பரப்பு, பல பெரிய பள்ளங்கள் மற்றும் சில சமதளப் பகுதிகளை உள்ளடக்கியது. விஞ்ஞானிகள் இந்த ஆராயப்படாத நிலவின் பரப்பு மீது ஆர்வமாக இருப்பதற்கு முக்கிய காரணம், அதில் பனியின் தடயங்கள் இருக்கலாம், அப்படி பனியின் தடயம் கிடைத்தால் அதன் மூலம் தண்ணீர், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் இருப்பை ஆய்வு செய்ய முடியும் என்று கருதுகின்றனர். சீனா `சாங்கே 6’ விண்வெளி திட்டம் மூலம் நிலவுக்கான தனது பயணங்களில் மேலும் ஒரு அடி முன்னேறி அதன் போட்டியாளரான அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். `சாங்கே 6’ விண்கலம் மங்கோலியன் பாலைவனத்தில் தரையிறங்கியவுடன், அதிகாரிகள் சீனக் கொடியை பெருமையுடன் உயர்த்தும் காணொளியை சீன அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. சீன அதிபர் ஷி ஜின்பிங் `சாங்கே 6’ மிஷனின் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதிபர் ஷி ஜின்பிங், "மனித குலத்திற்கு பயனளிப்பதற்கும், நாட்டை மேம்படுத்துவதற்கும் ஆழமான விண்வெளி ஆய்வைத் தொடர முடியும். பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்ப்பதில் புதிய உயரங்களை எட்ட முடியும்" என்றும் நம்பிக்கை தெரிவித்தார். சீன விண்கலம் `சாங்கே 6’, மே மாத தொடக்கத்தில் நிலவுக்கு அனுப்பப்பட்டது/ சில வாரங்களுக்குப் பிறகு நிலவின் தென் துருவத்தில் எய்ட்கென் படுகையில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன் பணி 53 நாட்கள் நீடித்தது. சீன தொலைக்காட்சியான சிசிடிவி கூற்றுபடி, விண்கலம் சேகரித்த மாதிரிகள் ஆய்வுக்காக பெய்ஜிங்கிற்கு அனுப்பப்படும். இது சீனாவின் ஆறாவது நிலவுப் பயணமாகும். நிலவின் மறுபக்கத்தை ஆராயும் இரண்டாவது பயணமாகும். சீன புராணங்களில் சந்திர தெய்வமாக கருதப்படும் ``சாங்கே’’ (Chang'e) நினைவாக இந்த ஆய்வுக்கு Chang'e என்று பெயரிடப்பட்டது. பட மூலாதாரம்,CGTN படக்குறிப்பு,சீன விண்கலம் தரையிறங்கும் காட்சி பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆய்வில் ஒரு டிரில்லர் மற்றும் ஒரு ரோபோவைப் பயன்படுத்தி நிலவின் நிலப்பரப்பில் இருந்து மண் மற்றும் பாறைகளை சீன விண்கலம் தோண்டி எடுத்தது. பின்னர் நிலவு மேற்பரப்பின் சில புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது. அதன் பின்னர் சீனக் கொடியை நிலவின் மறுபக்கத்தில் நட்டது. சீனா கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இரண்டையும் முந்தும் முயற்சியில் அதன் விண்வெளி ஆய்வுகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு குழுவை நிலவுக்கு அனுப்புவதை சீனா நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் பின்னர் நிலவின் தென் துருவத்தில் ஒரு தளத்தை உருவாக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா தனது ஆர்ட்டெமிஸ் 3 திட்டத்தின் மூலம் 2026 ஆம் ஆண்டுக்குள் விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. அடுத்த விண்வெளிப் பந்தயம் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவது மட்டுமல்ல, நிலவின் வளங்களை உரிமை கோரவும் கட்டுப்படுத்தவும் நாடுகளுக்குள் போட்டி நடக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/cjkk30v7djlo
-
பிரிட்டன் சிறையில் இருந்து ஜூலியான் அசாஞ்ச் விடுதலை
அசஞ்சேயின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்களிற்கு நன்றி - ஸ்டெல்லா அசஞ்சே Published By: RAJEEBAN 25 JUN, 2024 | 12:27 PM விக்கிலீக்ஸ் ஸ்தாபகர்களில் ஒருவரான ஜூலியன் அசஞ்சேயின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்களிற்கு அவரின் மனைவி ஸ்டெல்லா நன்றியை தெரிவித்துள்ளார். உங்கள் பேராதரவு குறித்து நாங்கள் எவ்வளவு நன்றியுடையவர்களாக உள்ளோம் என்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. பல வருடங்களாக அவரின் விடுதலைக்காக நீங்கள் அணிதிரண்டிருக்கின்றீர்கள் இதனை சாத்தியமாக்கியிருக்கின்றீர்கள் என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவில் பிறந்த சட்டத்தரணியான ஸ்டெல்லா 2015 முதல் அசஞ்சேயுடன் உறவில் உள்ளார். ஸ்டெல்லா அசஞ்சேயின் சட்டகுழுவில் இணைந்தவேளை இருவரும் முதலில் சந்தித்தனர். அசஞ்சே சிறையில் இருந்தவேளை இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதேவேளை தனது மகனின் மிக நீண்டகால சட்டபோராட்டம் முடிவிற்கு வருவது குறித்து ஜூலியன் அசஞ்சேயின் தாயார் கிறிஸ்டின் அசஞ்சே நன்றியை தெரிவித்துள்ளார். எனது மகனின் சோதனைகள் இறுதியாக முடிவிற்கு வந்தது குறித்து நான் நன்றியுடையவளாகயிருக்கின்றேன். இது அமைதியான இராஜதந்திர முயற்சிகளின் ஆற்றலையும் சிறப்பையும் வெளிப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார். பலர் எனது மகனின் சூழ்நிலையை தங்கள் சொந்த நிகழ்ச்சி நிரல்களை முன்னிறுத்த பயன்படுத்தியுள்ளனர். எனவே ஜூலியனின் நலனிற்கு முதலிடம் கொடுத்த கண்ணிற்கு தெரியாத கடின உழைப்பாளிகளிற்கு நான் நன்றி உடையவனாகயுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். தனது மகனிற்காக பரப்புரை செய்தமைக்காக அசஞ்சேயின் தந்தை ஜோன்சிப்டன் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/186923
-
ஐ. நா.வின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரன்ச் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!
25 JUN, 2024 | 05:27 PM ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரன்ச், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றது. இதன்போது கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தமிழ் பொது வேட்பாளர் விடயங்கள் தொடர்பிலும் இருவருக்கிடையே கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே அதிகரித்திருக்கும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை ,தொடரும் கைதுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், உதவிப் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186964
-
இரணைமடு குளத்திலும் தடைசெய்யப்பட்ட இழுவை வலை தொழிலால் நன்னீர் மீனவர்கள் பாதிப்பு!
25 JUN, 2024 | 08:53 PM கிளிநொச்சி இரணைமடு குளத்தில் தடை செய்யப்பட்ட இழுவை வலைகளை பயன்படுத்த சிலர் சட்டவிரோத தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றமையால் பெரும்பாலான ஏனைய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி இரணைமடு குளத்தில் சுமார் 50 மீனவர்கள் தடை செய்யப்பட்ட இழுவை வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக ஏனைய மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறி தடை செய்யப்பட்ட தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றனர். நீரியியல் வள திணைக்களம் குறித்த தடை செய்யப்பட்ட தொழிலை மேற்கொள்ள வேண்டாம் என அறிவித்தும் அதனையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ள பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள். தொடர்ந்தும் சிலர் இவ்வாறு தடை செய்யப்பட்ட தொழில் ஈடுப்பட்டால் ஏனைய தொழிலாளர்கள் முற்றுமுழுதாக பாதிக்கப்படுவார்கள் எனவும் கவலை தெரிவித்துள்ளனர். இரணைமடு குளத்தை நம்பி 152 குடும்பங்கள் தங்களது வாழ்வாதார தொழிலாக நன்னீர் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் குறிப்பிட்டனர். எனவே இது தொடர்பில் உரிய திணைக்கள அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது இந்த விடயம் தொடர்பில் தனக்கும் தகவல் கிடைத்ததாகவும் எனவே தடை செய்யப்பட்ட தொழிலை மீனவர்கள் மேற்கொள்ளும் இடத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டநடவடிக்கை உட்படுத்தப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/186962
-
பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் ஆளுநர் அவர்களால் திறந்துவைப்பு
Published By: VISHNU 25 JUN, 2024 | 07:10 PM யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் செவ்வாய்க்கிழைமை (25) திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகள் இலகுவாகப் பயணிக்கக் கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய சுற்றுலா வழிகாட்டி கையேடுகளைத் தகவல் தொடர்பு நிலையத்தில் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையத்தைத் திறந்து வைத்ததன் பின்னர், விமான நிலைய செயற்பாடுகளை ஆளுநர் அவர்கள் பார்வையிட்டதுடன், விமான பயணிகளுடனும் கலந்துரையாடினார். சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், விமான நிலைய அதிகாரிகள் எனப் பலரும் கலந்துச் சிறப்பித்தனர். https://www.virakesari.lk/article/186973
-
எழுத்தாளர் அருந்ததி ராய் மீது யு.ஏ.பி.ஏ வழக்கு - டெல்லி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் - பின்னணி என்ன?
அருந்ததிராயிற்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மீளபெறவேண்டும் - 200க்கும் மேற்பட்ட இந்திய கல்விமான்கள் பத்திரிகையாளர்கள் கூட்டாக வேண்டுகோள் Published By: RAJEEBAN 25 JUN, 2024 | 11:27 AM எழுத்தாளர் அருந்ததி ராயிற்கு எதிராக வழக்குதொடருவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மீளப்பெறவேண்டும் என 200க்கும் இந்திய கல்விமான்களும் பத்திரிகையாளர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்திய அரசாங்கம் கடந்த வாரம் நாட்டின் கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் அருந்ததி ராயிற்க்கு எதிராக வழக்கு தொடர்வதற் கு அனுமதிவழங்கியிருந்தது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கின்றோம், எங்கள் நாடு தொடர்பான எந்த விடயம் குறித்தும் அச்சமின்றி சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவதற்கான உரிமை மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என அரசாங்கத்திற்கும் நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகளிற்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம் என கல்விமான்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பத்திரிகையாளர்களும் தங்கள் பகிரங்க கடிதத்தில் தெரிவித்துள்ளனர். அருந்ததி ராய்க்கு எதிராக வழக்கு தொடர்வது என்ற முடிவை நியாயப்படுத்த முடியாது என இந்த கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ள வரலாற்று பேராசிரியர் அஜய் டன்டேகர் தெரிவித்துள்ளார். அருந்ததி ராயின் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை இந்திய அரசமைப்பு உறுதிசெய்கின்றது என தெரிவித்துள்ள அவர் இந்தியா ஒரு அரசமைப்பு ஜனநாயகம் என தெரிவித்துள்ளார். அருந்ததி ராயிற்கு எதிரான இந்த நடவடிக்கை குறித்து விவசாயிகள் அமைப்பொன்றும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது, புதுடில்லி பெங்களுரில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அருந்ததி ராயிற்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அனுமதியை கடந்த வாரம புதுடில்லி ஆளுநர் வினய் குமார் சக்சேனா வழங்கியிருந்தார். 2010 இல் கருத்தரங்கொன்றில் தெரிவித்த கருத்துக்களிற்காகவே அருந்ததி ராயிற்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதற்கு புதுடில்லி ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார். காஸ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒரு பகுதியாகயிருந்ததில்லை என அருந்ததி ராய் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/186914
-
21,000 பாலஸ்தீனிய குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்!
காசா போரின் போது 21,000 பாலஸ்தீன குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக சேவ் தி சில்ட்ரன் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது. 4,000 குழந்தைகள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவர்களின் உடல்கள் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்த தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அந்தத் தாக்குதல்களில் 37,500 க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள். காணாமல் போன குழந்தைகளில் பெரும்பாலானோர் பெற்றோரைப் பிரிந்ததால் கண்டுபிடிக்கப்படவில்லை. யுத்தத்தின் போது இழந்த பிள்ளைகளை அவர்களது பெற்றோருடன் ஒன்றிணைப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என சேவ் த சில்ட்ரன் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ள போதிலும், அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக இந்த நிலைமை கடினமானதாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தவிர, இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குழந்தைகளும் கணிசமான அளவில் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. சேவ் தி சில்ரன் அறிக்கையின்படி, மோதலில் 33 இஸ்ரேலிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் காசா பகுதியில் அதிகளவான இஸ்ரேலிய குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். https://thinakkural.lk/article/304516
-
செயற்கைக்கோளின் மூலம் எடுக்கப்பட்ட ராமர் பால புகைப்படம்
Published By: DIGITAL DESK 3 25 JUN, 2024 | 01:22 PM விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட, இந்தியா - இலங்கை இடையிலான ராமர் பாலத்தின் புகைப்படத்தை ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது. இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா - இலங்கை இடையே, கடலுக்கடியில் 48 கிலோ மீற்றர் தொலைவுக்கு, இந்தியாவின் தென்கிழக்கு பகுதியான ராமேஸ்வரத்திலிருந்து, இலங்கையின் மன்னாருக்கு இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில், ராமர் பாலத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கோப்பர்நிக்கஸ் சென்டினெல் - 2 செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்துக்கு அனுப்பியிருக்கிறது. இந்த புகைப்படத்தை சமூக ஊடகத்தில் ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டுள்ளது. ராமர் பாலத்தில் இருக்கும் மண் அமைப்புகள் உலர்ந்து காணப்படுகிறன. இங்கு கடலின் ஆழமே ஒன்று முதல் 10 மீற்றர் வரைதான் உள்ளது என ஐரோப்பிய ஏஜென்சி தெரிவித்துள்ளது. பாலம் எப்படி உருவானது என்பது பற்றி பல கோட்பாடுகள் இருந்தாலும், புவியியல் சான்றுகள்படி இந்த சுண்ணாம்புக் கற்கள் ஒரு காலத்தில் இந்தியாவை இலங்கையுடன் இணைத்த நிலத்தின் எச்சங்கள் என்று புவியியல் சான்றுகள் கூறுகின்றன. https://www.virakesari.lk/article/186930
-
முன்பள்ளி ஆசிரியைகளின் கொடுப்பனவு அதிகரிப்பு!
முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம் முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில் பாடசாலைகளை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வீடற்ற மக்களுக்கான புதிய வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், எதிர்வரும் சில வருடங்களில் பல புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/304478
-
அதிபர், ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
நாளைய சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி. சசிதரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், சம்பள உயர்வுக்காக ஒருநாள் விடுமுறையை அறிவிப்போம். அதிபர்கள் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக 1998 ஆம் ஆண்டுமுதல் மாறி மாறி வருகின்ற ஆட்சியாளர்களிடம் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கையளித்தோம். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தீர்ப்பதாக வாக்குறுதியளித்து பின்னர் ஏமாற்றப்பட்டோம். இது காலம் காலமாகத் தொடர்கின்றது. இன்றைய கால கட்டத்தில் வாழ்வதற்குப் போதுமான வருமானமின்றி நாம் ஒவ்வொருவரும் கடனாளிகளாக மாறியுள்ளோம். இந்நிலையில் தருவதாக உறுதியளித்த வேதனத்தையாவது தருமாறு இந்த அரசிடம் கேட்கிறோம். நீண்டகாலமாக மாணவர்களின் நலன்களிலும், அவர்களின் கல்வியிலும் எத்தகைய பாதிப்புகளும் ஏற்படாதவகையில் எமது அதிபர்கள், ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செய்துவரும் சேவைக்கு மதிப்பளித்து, சம்பள அதிகரிப்பை வழங்குமாறு நாளை புதன்கிழமை (26) நடைபெறும் ஒருநாள் பணிப்பகிஸ்கரிப்பில் அனைவரும் கலந்துகொள்வோம். இது ஒவ்வொரு அதிபர், ஆசிரியரினதும் தனிப்பட்ட நியாயமான கோரிக்கை. இதனை நாம் அனைவரும் ஒருமித்து, ஒன்றுபட்டு அரசிற்கு எடுத்துரைப்போம் – என குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/304535