Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. கொல்லப்பட்டு 19 வருடங்களாகியும் நீதி கிடைக்காத சிவராமுக்கு வடக்கு, கிழக்கில் அஞ்சலி 02 MAY, 2024 | 10:52 AM தலைநகரில் கடத்தப்பட்டு கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயத்தில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு இதுவரை நீதி நிலைநாட்டப்படாத நிலையில், அவரது 19ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கின் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் ஊடக அமையம், வவுனியா ஊடக அமையம், மட்டக்களப்பு ஊடக அமையம், அதே போல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைத் தேடி வவுனியாவில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் போராட்டக் களத்திலும், பம்பலப்பிட்டி பொலிஸுக்கு அருகில் ஏப்ரல் 28, 2005 அன்று சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆட்சியின்போது, வேனில் வந்த குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட 'தராகி' என அழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் நினைவுகூரப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு ஊடக அமையம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியன இணைந்து மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக இலங்கையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூபியில் தர்மரத்தினம் சிவராமின் புகைப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தின. தென்னிலங்கை ஊடகங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மௌனம் காப்பதாக, கொழும்பில் இருந்து நினைவேந்தல் நிகழ்வுக்காக மட்டக்களப்பு சென்றிருந்த ஊடகவியலாளர் பெடி கமகே தமிழ் ஊடகங்களுக்குத் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.28) தெரிவித்தார். “குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தென்னிலங்கை மௌனம் காக்கிறது என்பது வருத்தமளிக்கிறது. தெற்கில் உள்ள ஊடகங்கள் அமைதியாக இருக்கின்றன. தெற்கில் உள்ள அரசியல் குழுக்கள் மௌனமாக இருக்கின்றன.” ஆட்சிக்கு வரக் காத்திருக்கும் எதிர்க்கட்சி அதிகாரக் குழுக்களைச் சுற்றி முன்னாள் இராணுவத் தளபதிகள் ஒன்றுசேர்வதில் அந்த அரசியல் சக்திகளால் நீதி கிடைக்கும் என தமிழ் மக்கள் நம்ப முடியாத நிலையில் தொடர்ந்தும் போராட வேண்டியதன் அவசியத்தை அவர் மேலும் வலியுறுத்தினார். "இதைவிட ஆபத்தான சூழ்நிலை உள்ளது. ஏனெனில், ஆட்சிக்கு வரக் காத்திருக்கும் எதிர்க்கட்சி அதிகாரக் குழுக்களும் கூட தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் பற்றி விவாதிப்பதில்லை. அது மாத்திரமன்றி, இன்று அந்தப் படைகள் முன்னாள் இராணுவத் தளபதிகளால் நிரம்பியுள்ளன.” இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளருமான கோவிந்தன் கருணாகரம், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவதற்கு எந்த அரசாங்கமும் தயாரில்லை என குற்றஞ்சாட்டினார். “இந்த நாட்டில் நாங்கள் நீதியை கேட்கின்றோம். கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை கேட்கின்றோம். அதேபோன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு வருடக் கணக்காக நீதியை கேட்டுக்கொண்டிருக்கின்றோம். அதேபோன்று வடக்கு, கிழக்கில் அழிக்கப்பட்ட, கொல்லப்பட்ட அனைவருக்கும் நாம் ஒரு நிவாரணத்தை கேட்கின்றோம். ஆனால், மாறி மாறி நாட்டை ஆளும் அரசாங்கங்கள் அந்த நீதியை கொடுப்பதற்கு தயாராக இல்லை” என்றார். பிரதியீடு இல்லை யாழ்ப்பாணம் ஊடக அமையம் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி சனிக்கிழமையன்று ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி யாழ்ப்பாணம் ஸ்டன்லி வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் செல்வராஜா ராஜீவர்மனையும் நினைவு கூர்ந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஊடக அமையத்தின் ரட்ணம் தயாபரன், தர்மரத்தினம் சிவராம் கொல்லப்பட்டு பத்தொன்பது வருடங்கள் கடந்துள்ள போதிலும், அவருக்கு நிகரான எவரும் இதுவரை கிடைக்கவில்லை குறிப்பிட்டார். “மக்களுக்கு தேசியம் சார்ந்து செயற்பட்ட 39 ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்களை இழந்துள்ளோம். சிவராம் படுகொலை செய்யப்பட்டு 19 வருடங்கள் கடந்துள்ளபோதிலும், அவருக்கான பிரதியீடு என்பது இதுவரை எமக்கு கிடைக்கவில்லை. உண்மையில் தியாகங்கள் போற்றப்பட வேண்டும். மதிக்கப்பட வேண்டும். நினைவுகூரப்பட வேண்டும். அதனூடாகத்தான் அடுத்த சந்ததிக்கு வரலாற்றை சொல்ல முடியும்." வவுனியா ஊடக அமையத்தில் கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் நினைவுகூரப்பட்டதோடு, வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைத் தேடி வவுனியாவில் 2,600 நாட்களைக் கடந்து தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் போராட்ட களத்திலும் சிவராம் நினைவுகூரப்பட்டார். 44 ஊடகவியலாளர்கள் இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் (JDS) தொகுத்துள்ள அறிக்கைக்கமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் நாட்டில் 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வடக்கைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள். அவர்களில் எவருக்கும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை. பாதுகாப்புடனான கொலை 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி மட்டக்களப்பில் பிறந்த தர்மரத்தினம் சிவராம் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வெள்ளை வேனில் வந்த நால்வரினால் கடத்தப்பட்டார். சிவராமின் படுகொலை செய்யப்பட்ட சடலம் மறுநாள் இலங்கை நாடாளுமன்றத்துக்கு அருகிலுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவர் சித்திரவதை செய்யப்பட்டு தலையில் சுடப்பட்டிருந்தார். 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சக ஊடகவியலாளர் ரிச்சர்ட் டி சொய்சாவின் வழிகாட்டுதலின் கீழ் தனது ஊடகப் பணியை ஆரம்பித்த சிவராம் படுகொலை செய்யப்பட்ட போது பிரபல தமிழ்நெட் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியராக இருந்தார். 1997ஆம் ஆண்டு தமிழ் நெட் இணையத்தளம் ஆரம்பிக்கப்படும் வரை சிவராம் தி ஐலண்ட், சண்டே டைம்ஸ், டெய்லி மிரர், வீரகேசரி மற்றும் தமிழ் டைம்ஸ் ஆகியவற்றில் சுயாதீன ஊடகவியலாளராக பணியாற்றினார். தராகி 1989இல், தி ஐலன்ட் (The Island) பத்திரிகையின் பிரதம ஆசிரியர் காமினி வீரகோன், அரசியல் ஆய்வாளரைத் தேடியபோது ரிச்சர்ட் டி சொய்சா சிவராமை அறிமுகப்படுத்தினார். காமினி வீரகோன் சிவராமுக்குச் சூட்டிய பெயர் 'தாரக'. ஆனால், செய்தி திருத்தத்தின்போது ஏற்பட்ட பிழை காரணமாக 'தராகி' என பெயர் அச்சிடப்பட்டது. பிழைகளுடன் வெளியிடப்பட்ட அந்தப் பெயரை சிவராம் தான் இறக்கும் வரை புனைபெயராக பயன்படுத்தி வந்தார் என்று சொல்லப்படுகிறது. https://www.virakesari.lk/article/182458
  2. இந்த மாத இறுதியில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மே இறுதி வாரத்தில் வெளியிட முடியும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 346,976 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அவர்களில் 281,445 பேர் பாடசாலை மூலமாகவும் 65,531 தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். https://thinakkural.lk/article/300670
  3. Published By: RAJEEBAN 02 MAY, 2024 | 10:35 AM இலங்கையின் வடபகுதி அமைதியாக உள்ளது அது சிறப்பான விடயம் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்திற்கு கடும் பதிலடி கொடுத்துள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் இராணுவத்தினர் அங்கு தங்கள் முகாம்களை விஸ்தரிக்கின்றனர் ஊடகங்கள் சிவில் சமூகத்தினர் போன்றவர்களை கடுமையாக கண்காணிக்கின்றனர் துன்புறுத்துகின்றனர் இது அமைதிக்கு மாறான நிலையை ஏற்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார். அம்பிகா சற்குணநாதன் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் வடபகுதி கடுமையாக இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது பாதுகாப்பு தரப்பினர் சிவில் சமூகத்தினரை மாற்றுக்கருத்துடையவர்களை ஊடகங்களை கண்காணிக்கின்றனர் துன்புறுத்துகின்றனர் அச்சுறுத்துகின்றனர். பொதுமக்களின் காணிகளை கைப்பற்றுவதன் மூலம் இராணுவம் தொடர்ந்தும் தனது முகாம்களை விஸ்தரிக்க முயல்கின்றது, இந்து வழிபாட்டு தலங்களை பௌத்த மதகுருமாரும் தொல்பொருளியல் திணைக்களமும் கைப்பற்றுவதற்கு உதவுகின்றது. இது பாதுகாப்பின்மையை ஏற்படுத்துகின்றது அமைதிக்கு எதிரான சூழலை உருவாக்குகின்றது. வேறு விதத்தில் சொல்வதானால் - வெள்ளையடித்தல் இலங்கை அரசாங்கம் அதன் திட்டங்களை முன்னெடுக்க உதவுதல். https://www.virakesari.lk/article/182460
  4. அமெரிக்காவில் மாணவர் போராட்டம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது - லாஸ் ஏஞ்சலஸில் இரு தரப்பினர் மோதல் பட மூலாதாரம்,AFP கட்டுரை தகவல் எழுதியவர், மேட் மர்ஃபி பதவி, பிபிசி செய்திகள் 1 மே 2024 அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்தில் பாலத்தீனத்திற்கு ஆதரவாகப் போராடி வரும் மாணவர்களைக் கலைப்பதற்காக நூற்றுக்கணக்கான போலீசார் உள்ளே நுழைந்தனர். பல்கலைக் கழகத்தில் இருக்கும் ஒரு கூடத்தில் இருந்த மாணவர்களை அகற்றுவதற்காக போலிசார் ஏணியில் ஏறிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகின. மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாகவே, போராடும் மாணவர்கள் இடத்தைக் காலிசெய்ய வேண்டும் அல்லது அவர்கள் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கொலம்பியா பல்கலைக்கழகம் எச்சரித்திருந்தது. இஸ்ரேல் காஸா மீது நடத்திவரும் தாக்குதலால் மனிதாபிமானச் சிக்கல்கள் தீவிரமடைந்து வருவதால், கொலம்பியா பல்கலைக்கழகம் இஸ்ரேலில் இருக்கும் தனது மூலதனங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என போராடும் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர். கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் பல முக்கிய பல்கலைக் கழகங்களிலும் மாணவர்கள் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை எதிர்த்தும், பாலத்தீனத்திற்கு ஆதரவகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலுடன் தொடர்புள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைப் புறக்கணிக்கக் கோரி அமெரிக்கா முழுவதும் பல்வேறு நகரங்களிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவின் 20-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் மாணவர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், பல முக்கியப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளுகக்கு எதிராகப் போராடும் மாணவர்களை 'யூத வெறுப்பாளர்கள்' என்று யூத மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொலம்பியா மற்றும் வேறு சில பல்கலைக் கழகங்களில் உள்ள யூத மாணவர்கள் தங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைப் போல் உணர்வதாகத் தெரிவித்திருக்கின்றனர். ஆயினும் பல யூத மாணவர்களும் இஸ்ரேலுக்கு எதிரான இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஹாமில்டன் கூடத்திற்குள் நுழையும் நியூ யார்க் நகரக் காவல்துறையினர் 'போலீசார் மாணவர்களை மோசமாகக் கையாண்டனர்' மாணவப் போராட்டக்காரர்கள், கலைந்து செல்வதற்குக் கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடுவை மீறியதால், நியூ யார்க் காவல் துறை (NYPD) அதிகாரிகள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய, பல்கலைக்கழக அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 80-100 போலீசார் கட்டிடத்திற்குள் நுழைந்ததாக ஒரு மாணவர் பிபிசி-யிடம் தெரிவித்தார். பல்கலைக்கழக வளகத்தில் இருந்த ஹாமில்டன் கூடம் 'ஆக்கிரமிக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டு, முற்றுகையிடப்பட்ட பிறகு, எங்களுக்கு வேறு வழியில்லை' என்று கொலம்பியா பல்கலைக்கழகம் கூறியது. நியூ யார்க் காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில், பல்கலைக் கழகத் தலைவர் மினூஷ் ஷபிக், 'மிகுந்த வருத்தத்துடன்' காவல்துறை உதவியைக் கோரியதாகக் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையினர் வளாகத்தினுள் நுழைந்தவுடன் அதிகாரிகள் 'போராட்டக்காரர்களை திசைதிருப்ப' வீரியம் குறைந்த 'ஸ்டன் கையெறி குண்டுகளைப்' பயன்படுத்தினர் என்று பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. படக்குறிப்பு,ஒரு மாணவர் பிபிசி-யிடம் காவல்துறை அத்துமீறல்களை விவரித்துக்கொண்டிருந்த போதே, ஒரு காவலர் ஜன்னலை மூடினார் கட்டடத்திற்குள் நுழைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களைப் பிடித்து இழுத்தும் தள்ளியும் மோசமாக நடத்தியதாக சில மாணவர்கள் குற்றம் சாட்டினர். அவர்களில் ஒருவர் ஜன்னல் வழியே பிபிசி-யிடம் பேசினார். நியூ யார்க் காவல் அதிகாரிகள் மூன்று மாணவர்களை படிக்கட்டுகளில் இருந்து கீழே தள்ளியதாகக் கூறினார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு காவல் அதிகாரி குறுக்கிட்டு ஜன்னலை வலிந்து மூடியதால், நேர்காணல் தடைப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கைது செயப்பட்ட மாணவர்கள் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர் 50 மாணவர்கள் கைது நியூ யார்க் காவல்துறையின் பொதுத் தகவல் உதவி ஆணையர், கார்லோஸ் நீவ்ஸ், காவல் அதிகாரிகளுக்கு ஆதரவாகப் பேசினார். மாணவர்கள் ஹாமில்டன் கூடத்தின் கதவுகளை 'மேசைகள், நாற்காலிகள் அல்லது சோடா இயந்திரங்களைக்' கொண்டு 'தடுத்து' வைத்திருந்ததாக அவர் கூறினார். அதிகாரிகள் உள்ளே 'பார்க்க முடியாதபடி' செய்தித்தாள்கள் கொண்டு ஜன்னல்களையும் மூடிவைத்திருந்ததாக அவர் குற்றம் சாட்டினார். இச்சம்பவத்தில் சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டதாக சிபிஎஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொலம்பியா பல்கலைக் கழகத்தில் இருந்து செய்தியறிக்கை அளித்த பிபிசி-யின் அமெரிக்கச் செய்தியாளர் நோமியா இக்பால், பல நியூ யார்க் காவல்துறைப் பேருந்துகள் பல்கலைக் கழக வளாகத்திலிருந்து வெளியேறுவதைக் கண்டதாகக் கூறினார். அவற்றில் போராட்டக்காரர்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். கைது செய்யப்பட்ட மாணவர்கள் தங்கள் கைகள் கட்டப்பட்டு அணிவகுத்து அழைத்துச் செல்லப்பட்டபோது, போராட்டக்காரர்கள் அவர்களுக்கு ஆதரவாகப் பெரும் கோஷங்களை எழுப்பினர். `அவர்களைப் போக விடுங்கள்` என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். அந்தக் கட்டடத்தில் இருந்தபடி போராடிய மாணவர்கள் அனைவரும் அகற்றப்பட்டதாகவும், யாருக்கும் எந்த காயங்களும் ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை என்றும் நியூ யார்க் காவல்துறை கூறியது. கொலம்பியா பல்கலைக் கழக மாணவர்கள் கிட்டத்தட்ட கடந்த இரண்டு வாரங்களாக பல்கலைக்கழக வளாகத்தில் கூடாரம் அமைத்துப் போராடி வருக்கின்றனர். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் திரண்டிருக்கும் காவலர்கள் மற்ற பல்கலைக்கழகங்களிலும் கைது நடவடிக்கை செவ்வாய்க்கிழமை இரவு நியூ யார்க்கில் கருப்பினத்தவர் அதிகம் வசிக்கும் ஹார்லெம் பகுதியில் உள்ள நகரக் கல்லூரியிலும் போலீசார் நுழைந்து பல மாணவர்களைக் கைது செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் டெக்சாஸ், கலிபோர்னியா, ஜார்ஜியா, வட கரோலினா, யூட்டா, வர்ஜீனியா, நியூ மெக்ஸிகோ, நியூ ஜெர்சி, கனெக்டிகட் மற்றும் லூசியானா ஆகிய மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களிலும், 1,000-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் இஸ்ரேல் ஆதரவு மற்றும் பாலத்தீன ஆதரவு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் மோதல் அமெரிக்காவின் மேற்கு கரையில், லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் நிர்வாகிகள் 'சட்ட விரோதமானவை' என்று அவர்கள் அழைக்கும் போராட்டக்காரர்களின் முகாமை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். அதைத்தொடர்ந்து இஸ்ரேல் ஆதரவு மற்றும் பாலத்தீனர் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையே மோதல்கள் வெடித்தன. இது நீண்ட நேரம் தொடர்ந்தது. கறுப்பு உடை அணிந்த இஸ்ரேல் ஆதரவாளர்கள் அமெரிக்க நேரப்படி நள்ளிரவில் வளாகத்திற்கு வந்தனர். அவர்கள் முகாமைச் சுற்றியிருந்த தடுப்புகளை அகற்ற முயற்சித்தனர், என்று 'லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து வெளியான வீடியோ காட்சிகள் கலவரங்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் சுடர்கள் மற்றும் பட்டாசுகள் வெடிப்பதைக் காட்டின. மற்ற வீடியோ காட்சிகள் இரு குழுக்களிடையே நடந்த மோதலைக் காட்டின. பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,நள்ளிரவில் மோதிக் கொண்ட மாணவர்கள் லாஸ் ஏஞ்சலஸ் மேயர் கரேன் பாஸ் இந்த காட்சிகளை 'வெறுக்கத்தக்கவை, மன்னிக்க முடியாதவை' என்று விவரித்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் வளாகத்திற்கு வந்ததாகக் கூறினார். சில அதிகாரிகள் மாணவப் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மற்றவர்கள், காவல்துறையினரை அழைத்தனர். தேசிய அரசியல்வாதிகள் சிலர், இந்தப் போராட்டங்களில் யூத வெறுப்பு வெளிப்படுவதாகக் கூறி, கல்லூரிகள் இதனைச் சமாளிக்க மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,இஸ்ரேல் ஆதரவு மாணவர்களின் தாக்குதலுக்குப் பிறகு பாலத்தீனர் ஆதரவு மாணவர்கள் தங்களது போராட்ட முகாமை காவல் காத்து நின்ற காட்சி https://www.bbc.com/tamil/articles/cjr7ldqew20o
  5. யாழ். புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரையில் மனித எச்சங்கள் அகழ்வு Published By: DIGITAL DESK 3 02 MAY, 2024 | 10:37 AM யாழ்ப்பாணம் - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை (02) அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன. ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி நீதீவான் நளினி சுபாகரன், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது , மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அண்மையில் வெளிவந்தன. அதனை தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர். அதன் அடிப்படையில் இன்றையதினம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவ்விடத்தில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/182459
  6. தோனியை களத்தில் வைத்து சென்னையை திணறடித்த பஞ்சாப் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மே 2024, 02:52 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்துவது கடினம் என்று கூறப்பட்ட வரலாறு மாறி வருகிறது. சிஎஸ்கே அணியின் பலவீனத்தைப் புரிந்து கொண்ட அணிகள் இந்த சீசனில் எளிதாக சொந்த மைதானத்தில் வீழ்த்தி வருகின்றன. ஏற்கெனவே லக்னெள அணி சிஎஸ்கே அணியை தோற்கடித்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே-வை எளிதாக வென்றிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ். சிஎஸ்கே அணியில் திறமையான பேட்டர்கள், அதிரடியான வீரர்கள் இருந்தும் பஞ்சாப் அணியை ஆட்டத்தின் எந்தச் சூழலிலும் முந்த முடியவில்லை. பஞ்சாப் கிங்ஸ் வெற்றியால் அந்த அணிக்கு புள்ளிப்பட்டியலில் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படப்போவதில்லை என்றாலும், சிஎஸ்கே ப்ளே ஆஃப் செல்வதில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த இந்த 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. 163 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 13 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியை தொடர்ந்து 5 முறை வீழ்த்திய 2-ஆவது அணி என்ற பெருமையை பஞ்சாப் கிங்ஸ் பெற்றது. இதற்கு முன் 2018-19ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அந்த பெயரை பெற்றிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பஞ்சாப் பிளே ஆப் செல்ல வாய்ப்பு உள்ளதா? இந்த வெற்றி மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் 4 வெற்றி, 6 தோல்வி என 8 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் அடிப்படையில் மைனஸ் 0.0.62 ஆக உயர்ந்திருக்கிறது. இன்னும் 4 போட்டிகள் பஞ்சாப் அணிக்கு மீதம் இருப்பதால், அந்த 4 ஆட்டங்களிலும் கண்டிப்பாக வென்றால்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். எனினும் வெற்றியால், இப்போதைக்கு ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேற்றப்படுவதை தாமதப்படுத்திக்கொண்டது பஞ்சாப் கிங்ஸ் அணி. சிஎஸ்கே அணியுடன் மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் அணி விளையாடுகிறது. அந்த ஆட்டத்த்தில் ஒருவேளை பஞ்சாப் தோற்றாலே ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிடும். ஏனென்றால், குறைந்தபட்சம் 16 புள்ளிகளுடன் இருந்தால்தான் ப்ளே ஆஃப் சுற்றில் 4-ஆவது இடத்துக்கு மல்லுக்கட்ட முடியும், 14 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் செல்வது கடினமானதாக இந்த சீசனில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES பிளே ஆப் செல்வதில் சென்னைக்கு என்ன சிக்கல்? சிஎஸ்கே அணி 10 போட்டிகளில் 5 தோல்வி, 5 வெற்றி என 10 புள்ளிகளுடன் தொடர்ந்து 4-ஆவது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே நிகர ரன்ரேட் லக்னெள அணியைவிட கூடுதலாக 0.627 வைத்துள்ளது. இருப்பினும் அடுத்து வரும் 4 ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணி கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதில் பஞ்சாப் அணியுடன் மே-5ஆம் தேதி மீண்டும் சிஎஸ்கே மோதுகிறது. இது தவிர்த்து குஜராத் (மே10), ராஜஸ்தான் (மே12), ஆர்சிபி(மே18) ஆகிய போட்டிகளும் சிஎஸ்கேவுக்கு உள்ளன. இதில் ராஜஸ்தான், குஜராத் அணிகளுடனான ஆட்டம் கடினமாக இருக்கும். ஏற்கெனவே ஆர்சிபி, குஜராத் அணிகளை முதல் ஆட்டங்களில் சிஎஸ்கே வென்றுள்ளது. ஆனால், ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தீர்மானிக்கும் போட்டிகளில் இவ்விரு அணிகளும் நெருக்கடி கொடுத்தால், சிஎஸ்கே நிலை போராட்டமாக அமையும். சிஎஸ்கே அணியில் ஏற்கெனவே டேவன் கான்வே இல்லாதது தொடக்க ஆட்டத்தில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அதற்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட் க்ளீசனை சிஎஸ்கே வாங்கியது. கடந்த போட்டியோடு வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானும் வங்கதேசம் செல்வதால் பந்துவீச்சில் பலவீனம் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிதாக ஒரு பந்துவீச்சாளரை சேர்க்க இருக்கிறதா அல்லது இருக்கும் பந்துவீச்சாளர்களுடன் போட்டிகளை சிஎஸ்கே எதிர்கொள்ளப் போகிறதா என்பது கேள்வியாக இருக்கிறது. சிஎஸ்கே அணியில் பந்துவீச்சில் வேரியேஷன்களை காண்பித்து பந்துவீசுவது முஸ்தபிசுர் ரஹ்மான் முன்னணியில் இருந்தார். அவரும் செல்வதால், தேஷ்பாண்டே, பதீராணா, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர் ஆகியோரை வைத்துதான் பந்துவீச வேண்டியதிருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES நேற்றைய போட்டியில் என்ன நடந்தது? சிஎஸ்கே நிர்ணயித்த 163 ரன்களை துரத்திய பஞ்சாப் அணிக்கு பேர்ஸ்டோ(46), ரூஸோ(43) நல்ல அடித்தளம் அமைத்தனர். 2-ஆவது விக்கெட்டுக்கு இருவரும் 62 ரன்கள் சேர்த்துக் கொடுத்து வெற்றியை எளிதாக்கினர். குறைவான ரன்கள் என்பதால், விரைவாக ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்று, ரன்ரேட்டில் தொய்வில்லாமல் பஞ்சாப் பேட்டர்கள் ஆட்டத்தைக் கொண்டு சென்றனர். சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்க வாய்ப்பில்லாத வகையில் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்து நம்பிக்கை வளராத வகையில் பஞ்சாப் பேட்டர்கள் நேர்த்தியாக பேட் செய்தனர். பேர்ஸ்டோ, ரூஸோ ஆட்டமிழந்தபின் சஷாங் சிங், சாம் கரன் கூட்டணி ஆட்டத்தை வெற்றி பெறச் செய்தனர். சஷாங் சிங் ஒரு பவுண்டரி, சிக்ஸர் உள்பட 25 ரன்னிலும், சாம் கரன் 3பவுண்டரிகள் உள்பட 26 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னை வீரர்களை வீழ்த்திய பஞ்சாபின் சுழல் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு அந்த அணியில் இருக்கும் இரு சுழற்பந்துவீச்சாளர்கள்தான் முக்கியக் காரணம். ஹர்பிரி்த் பிரார், ராகுல் சஹர் இருவரும் இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தனர். இருவரின் பந்துவீச்சிலும் கெய்க்வாட் உள்ளிட்ட எந்த பேட்டராலும் பெரிய ஷாட்களை அடிக்க முடியவில்லை. ஹர்பிரித் பிரார், ராகுல் சஹர் இருவரும் 8 ஓவர்கள் வீசி, 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சராசரியாக ஓவருக்கு 4 ரன்களை விட்டுக் கொடுத்தனர். இருவரும் தங்களின் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸரைக் கூட சிஎஸ்கே பேட்டர்களை அடிக்க அனுமதிக்கவில்லை. இதில் இரு திருப்புமுனையான விக்கெட்டுகளான ரஹானே, ஷிவம் துபேவை வெளியேற்றி 4 ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்த ஹர்பிரித் பிரார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். பிரார், சஹர் இருவரும் 8 ஓவர்கள் பந்துவீசி அந்த 8 ஓவர்களிலும் ஒருபவுண்டரி, சிக்ஸர் கூட அடிக்கவிடாமல் சிஎஸ்கே அணியின் ரன்ரேட்டை கட்டிப்போட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES தோனி களமிறங்கிய பிறகு என்ன நடந்தது? வழக்கமாக தோனி களமிறங்கியதும் பெரிய ஷாட்களை அடித்து ரன்களைக் குவிப்பதுதான் இந்த சீசனில் வழக்கமாக இருக்கிறது. ஆனால் பஞ்சாப் வீரர்களிடம் அதி பெரிய அளவில் நடக்கவில்லை. அதுவும் ரன்கள் குவிக்கப்படவேண்டிய 19-ஆவது ஓவரில் தோனியை பேட் செய்ய வைத்தே, ரன்களைக் கட்டுப்படுத்தினர் பஞ்சாப் வீரர்கள். 19-வது ஓவரை வீசிய ராகுல் சஹர் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து, மொயின் அலியின் விக்கெட்டையும் வீழ்த்தினார். அந்த ஓவரில் 4 பந்துகளைச் சந்தித்த தோனியால் 2 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. எனினும் கடைசி ஓவரில் ஒரு சிக்சரும் பவுண்டரியும் அடித்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கக்கூடும். பவர் பிளேயில் ஓரளவு சிறப்பாகத் தொடங்கிய சிஎஸ்கே, 7-ஆவது ஓவர் தொடங்கி, 15-ஆவது ஓவர்கள் வரை மிக மெதுவாகவே ஆடியது. இந்த 8 ஓவர்களில் ஷிவம் துபே, ஜடேஜா, ரஹானே, ஆகியோர் விக்கெட்டுகளையும் சிஎஸ்கே இழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே தோல்விக்கு மைதானம் காரணமா? சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நிலவிய பனிப்பொழிவு, ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றாற்போல் மாறியதும், சிஎஸ்கே பேட்டர்களுக்கு சவாலாக அமைந்திருந்தது. இந்த சீசனில் ரஹானே தொடர்ந்து மோசமான ஃபார்மில் இருந்து வருகிறார். இருப்பினும் தொடக்க ஆட்டத்துக்கு வேறுவீரர் இல்லை என்பதால், அவருக்கு மீண்டும், மீண்டும் வாய்ப்பளித்து வருகிறது சிஎஸ்கே நிர்வாகம். இந்த ஆட்டத்தில்கூட பவர்ப்ளேயில் 5 பவுண்டரிகள் உள்பட 29 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ரஹானே-கெய்க்வாட் சேர்த்த 64 ரன்கள்தான் பெரிய பார்ட்னர்ஷிப். அதன்பின் வந்த எந்த பேட்டரும் பெரிதாக கெய்க்வாட்டுடன் சேர்ந்து ரன்களைச் சேர்க்கவில்லை. குறிப்பாக ஷிவம் துபே(0), ஜடேஜா(2) இருவரும் 6 ரன்கள் இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது சிஎஸ்கே அணியை பெரிய இடரில் தள்ளியது. அதிலும் நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே ரன்ரேட்டை தோளில் சுமக்கும் பேட்டர் துபே ஆட்டமிழந்தது சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. ஆல்ரவுண்டர் எனக் கூறப்படும் ஜடேஜாவும் வெளியேறியது சிஎஸ்கேயின் நம்பிக்கையை உடைத்தது. ஐபிஎல் ஏலத்தில் ரூ.8.40 கோடிக்கு வாங்கப்பட்ட உத்தரப் பிரதேச பேட்டர் சமீர் ரிஸ்வி பேட்டிங் மீது நேற்று பெரிய கேள்வி எழுந்தது. இளம் வீரர், பெரிய ஹிட்டர், பவர் ஹிட்டர் என்றெல்லாம் பாராட்டப்பட்ட சமீர் ரிஸ்வியை ஏலத்தில் சிஎஸ்கே எடுத்து, அதனால் எந்தப் பலனையும் பெறவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த சீசனில் ரிஸ்வி தனது ஆட்டத்திறமையை நிரூபிக்க இந்த ஆட்டம் சமீர் ரிஸ்விக்கு வாய்ப்பாக அமைந்திருந்தது. ஆனால், அவர் 23 பந்துகளில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிலும் தான் சந்தித்த 23 பந்துகளில் 22-வது பந்தில்தான் தேர்டுமேன் திசையில் ஒரு பவுண்டரி அடித்தார். அதுவரை 21 பந்துகள்வரை ஒருபவுண்டரிகூட ரிஸ்வி அடிக்கவில்லை. ரஹானே களத்தில் இருந்தவரை அடிக்கப்பட்ட 5 பவுண்டரிகள்தான் சிஎஸ்கே கடைசியாக அடித்தது. அதன்பின் 55 பந்துகளாக ஒரு பவுண்டரிகூட சிஎஸ்கே அணி அடிக்கவில்லை. கேப்டன் கெய்க்வாட், துபே, ஜடேஜா, ரிஸ்வி ஆகியோர் களத்தில் வந்து சென்றபோதிலும் 55 பந்துகளாக பவுண்டரி இல்லை. ஐபிஎல் சீசனில் பவுண்டரி அடிக்காமல் நீண்டநேரம் இருந்த ஆட்டமாக இருந்தது, இதற்கு முன் குஜராத்-டெல்லி அணிகளுக்கு இடையே 38 பந்துகளாக பவுண்டரி அடிக்காமல் இருந்ததை சிஎஸ்கே முறியடித்துவிட்டது. கடைசியில் களமிறங்கிய மொயின் அலி(15), தோனி(15) ஆகியோரால்தான் 150 ரன்களை சிஎஸ்கே கடந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES தோல்வி பற்றி கெய்க்வாட் கூறியது என்ன? தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் கூறுகையில் “ நாங்கள் 50 முதல் 60 ரன்கள் குறைவாகச் சேர்த்துவிட்டோம் இது தோல்விக்கு பிரதான காரணம். நாங்கள் பேட் செய்தபோது, ஆடுகளம் சிறப்பாக இல்லை, பனிப்பொழிவு இருந்தது. இந்த ஆடுகளத்தில் அதிகமாக பயிற்சி எடுத்துள்ளேன், வென்றுள்ளேன். ஆனால், இந்த ஆட்டத்தில் என்னால் வெல்ல முடியவில்லை.” என்றார். “டாஸ் போடும்போது அழுத்தம் இருந்தது, பனிப்பொழிவு ஆட்டத்தை இன்னும் கடினப்படுத்தியது. கடந்த ஆட்டத்தில் நாங்கள் சன்ரைசர்ஸ் அணியை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் இதே மைதானத்தில்தான் வென்றோம் என்பது வியப்பாக இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். கடந்த 2 போட்டிகளாக நாங்கள் 200 ரன்களுக்கு மேல்சேர்க்க முயன்றோம். இந்த முறை விக்கெட் கடினமாக இருந்தது. பதிரணா, தேஷ்பாண்டே இல்லாதது முக்கிய குறைபாடு. இரு பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினம். இது தவிர பனிப்பொழிவும் சேர்ந்து கொண்டது. எங்களால் பெரிதாக முயற்சிக்க முடியவில்லை” எனத் தெரிவித்தார் கெய்க்வாட். பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் முறையாக ஆட்டமிழந்த தோனி இந்த சீசனில் கடந்த 9 ஆட்டங்களில் தோனி ஆட்டமிழக்காமல் பேட் செய்து வருகிறார் என்ற பெயர் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால், நேற்று அந்த சாதனை தகர்க்கப்பட்டது. தோனி களமிறங்கிய சிறிய கேமியோ ஆடி 14 ரன்னில் மோகித் சர்மாவால் ரன்அவுட் செய்யப்பட்டார். ஆட்டமிழக்காமல் ஆடிவந்த தோனியின் சாதனையும் முடிவுக்கு வந்தது. ஆனால், இந்த சீசனில் தோனி ஆட்டமிழந்துவிட்டாரே தவிர, எந்த பந்துவீச்சாளராலும் ஆட்டமிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளில் ஒரு ரன், 2 ரன்கள் சேர்த்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதைவிட, பவுண்டரி, சிக்ஸர்கள் அடிப்பதுதான் பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்லும். ஆனால் நேற்று சிஎஸ்கே பேட்டர்கள் யாரும் பெரிய ஷாட்களுக்குச் செல்லவில்லை, பவுண்டரி, சிக்ஸர்கள் அதிகமாக அடிக்கவில்லை. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே தரப்பில் மொத்தம் 4 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டன. தனி ஒருவனாக போராடிய கெய்க்வாட் இந்த ஆட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்தவுடன் நிதானமாக ஆடிய கெய்க்வாட் 44 பந்துகளில் அரைசதம் அடித்து 62 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 5பவுண்டரிகள் அடங்கும். அதிலும் குறிப்பாக சேப்பாக்கம் மைதானத்தில் கெய்க்வாட் ஆட்டம் சிறப்பாக இருந்து 396 ரன்களை சேப்பாக்கத்தில் மட்டும் சேர்த்துள்ளார். இந்த சீசனில் 5-ஆவது அரை சதத்தை கெய்க்வாட் அடித்துள்ளார். இதற்கு முன் கடந்த சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் டேவான் கான்வே அதிகபட்சமாக 390 ரன்கள் சேர்த்திருந்தநிலையில் அதை கெய்க்வாட் முறியடித்தார். https://www.bbc.com/tamil/articles/czrxgvdz70mo
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையின் வடக்கு எல்லையில், திருவொற்றியூரில் வசிக்கும் எஸ்.பாக்கியலட்சுமி கடந்த வாரம் தனது இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு பேரன்களுடன் அருகில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். கோடைகாலத்தில் மகள் வீட்டில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள அல்ல, தனது வீட்டில் நான்கு நாட்களாக தண்ணீர் வராததால் அவர் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டிருந்தார். திருவொற்றியூர் ஆறாவது தெருவில் வசிக்கும் அவரது வீட்டில் அவருடன் சேர்த்து ஐந்து பேர் வசிக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாலை 5 மணி முதல் 7 மணி வரை அரசு வழங்கும் குடிநீர் கிடைக்கும். அதை அடுத்து இரண்டு நாட்களின் பயன்பாட்டுக்காக வீட்டில் உள்ள ட்ரம், பாத்திரங்களில் நிரப்பி வைத்துக் கொள்வார். குடிப்பதற்கு கேன் தண்ணீர் பயன்படுத்தும் பாக்கியலட்சுமியின் குடும்பத்தினர் மற்ற எல்லா தேவைகளுக்கும் இந்த நீரையே நம்பியுள்ளனர். “எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் சேறும் சகதியுமாக இருக்கும். அதை யாரும் பயன்படுத்த மாட்டோம். கடல் நீரை குடிநீராக்கும் ஆலையிலிருந்து எங்களுக்கு கிடைக்கும் நீர், போதிய அழுத்தம் இல்லாததால் எங்கள் பகுதி வரை வந்து சேரவில்லை என்று இந்தப் பகுதி கவுன்சிலர் கூறினார். எனவே இரண்டு நாட்கள் அனைவரும் மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டோம். அங்கும் மெட்ரோ வாட்டர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் கிடைக்கும், ஆனால் நிலத்தடி நீரின் தரம் பரவாயில்லை,” என்றார். இந்த ஆண்டு பெங்களூரூ நகரில், தேர்தல் விவகாரமாக பேசப்படும் அளவுக்கு, கடுமையான நீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒரு கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட பெங்களூரூ நகரம் தனது குடிநீர் தேவையில் 60%-ஐ பூர்த்தி செய்ய காவிரி நீரையேச் சார்ந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூருவில் குடிநீர் பிரச்னையைச் சரிசெய்யக் கோரி நடத்தப்பட்ட போராட்டம் பெங்களூருவின் குடிநீர் பிரச்னை காவிரி ஆற்றுப்படுகையில், மரங்கள் அழிக்கப்பட்டதால் பெங்களூருவின் குடிநீர் தேவையை காவிரி ஆற்றால் பூர்த்தி செய்யமுடியவில்லை, என்றும் அதிகரித்து வரும் கட்டடங்களால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது என்றும் பெங்களூருவின் இந்திய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர். பெங்களூரூ போன்றே சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட மாநகரம் சென்னை. பெங்களூரு இன்று சந்திப்பது போன்ற வறட்சியை ஐந்து ஆண்டுகளுக்கு முன் சென்னை சந்தித்திருந்தது. மீண்டும் அப்படி ஒரு நிலை சென்னையில் வராது என்று கூறுவதற்கு எந்த காரணமும் இல்லை. அதிகரிக்கும் வெப்ப அலை, குறைந்து வரும் ஏரிகளின் நீர் மட்டம் ஆகியவை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 5 ஏரிகளிலும் வேகமாக குறையும் நீர்மட்டம் சென்னைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஐந்து ஏரிகளில் 50% நீர் இருப்பே உள்ளது. சென்னையில் 1944-ஆம் ஆண்டு கட்டப்பட்ட முதல் நீர்த்தேக்கம் பூண்டி. பெரிய நீர் தேக்கங்களில் ஒன்றான பூண்டியில் அதன் முழு கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் 27.79% மட்டுமே நீர் உள்ளது. அதே போன்று 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் நீர் தேக்கத்தில் 9.99% நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் அதன் 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவில் 89.7% நீர் இருப்பும் செம்பரம்பாக்கத்தில் 64.64% நீர் இருப்பும், தேர்வாய் கண்டிகையில் 76% நீர் இருப்பும் உள்ளது. பட மூலாதாரம்,VINAY IAS படக்குறிப்பு,சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் வினய் ஐ.ஏ.எஸ் காவிரி நீர் பற்றாக்குறையும் சென்னையை பாதிக்கிறது இதைத் தவிர சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய, கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி கடந்த இரண்டு மாதங்களாக வறண்டு கிடக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் சோழ அரசர்களால் அமைக்கப்பட்டு, 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் சென்னையிலிருந்து 250 கி.மீ தொலைவில் உள்ளது. காவிரி நீரை கொண்டு வந்து சேர்க்கும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைவாக இருப்பதால், கடந்த 21 ஆண்டுகளாக சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக இருந்து வரும் வீராணம் ஏரி தற்போது வறண்டு கிடக்கிறது. சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் நீர் தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 13,222 மில்லியன் கன அடியில் 6,702 மில்லியன் கன அடி அதாவது 50.69% மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் வினய் ஐ.ஏ.எஸ் பிபிசி தமிழிடம் பேசும் போது, “வீராணம் ஏரி வறண்டு போவதற்கு முன்பாக, அதிலிருந்து ஒரு நாளுக்கு 165 மில்லியன் லிட்டர் நீர் எடுப்போம். தற்போது வீராணத்துக்கு அருகில் உள்ள நெய்வேலி சுரங்கம், பரவனாறு ஆற்று நீர், மற்றும் பரவனாற்றுக்கு அருகில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் 65 மில்லியன் லிட்டர் நீர் கிடைக்கிறது,” என்றார். பட மூலாதாரம்,DR L ELANGO சென்னைக்கு வரும் கிருஷ்ணா நதி நீர் இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமான சென்னை மாநகரம், தமிழ்நாட்டிலேயே அதிக மக்கள் அடர்த்தி கொண்டதாகும். சென்னையில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 26,000 முதல் 27,000 பேர் வரை வசிக்கின்றனர். இது லண்டன் மாநகரத்தின் சராசரி மக்கள் அடர்த்தியை விட ஐந்து மடங்கு அதிகம். இந்நிலையில் சென்னையின் குடிநீர் தேவை தற்போது ஒரு நாளுக்கு 1,070 மில்லியன் லிட்டராக உள்ளது. இதில் 1,040 மில்லியன் லிட்டர் நீரை சென்னை குடிநீர் வாரியம் வழங்குவதாகக் கூறுகிறது. சென்னையின் குடிநீர் தேவைக்கும், குடிநீர் வழங்கலுக்கும் இடையிலான வித்தியாசம் வரும் நாட்களில் அதிகரிக்கப் போகிறது என்று அண்ணா பல்கலை கழகம் மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸ் இணைந்து நடத்திய ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வை நடத்திய சென்னை ஐ.ஐ.டி-யின் பகுதி நேர பேராசிரியர் முனைவர் எல்.இளங்கோ பிபிசி தமிழிடம் பேசுகையில், “சென்னையில் 2030-ஆம் ஆண்டில் ஒரு நாளுக்கு 2,365 மில்லியன் லிட்டர் நீர் தேவைப்படும். அப்போது ஒரு நாளுக்கு 466 மில்லியன் லிட்டர் நீர் குறைபாடு இருக்கும். அதேபோன்று சென்னையில் 2040-ஆம் ஆண்டு ஒரு நாளுக்கு 717.5 மில்லியன் லிட்டர் குறைவாக இருக்கும், மேலும் 2050-ஆம் ஆண்டு 962 மில்லியன் லிட்டர் நீர் ஒரு நாளுக்கு தட்டுப்பாடாக இருக்கும். சென்னையின் சராசரி மழை அளவு, நிலத்தடி நீர் என பல்வேறு அளவுகோல்களை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது,” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சென்னையிலுள்ள ஒரு கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, சென்னைக்குக் கை கொடுக்கும் 'ஆபத்பாந்தவன்' கடல் நீரை குடிநீராக்கும் திட்டமாகும். சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை முதன் முதலாக 2010-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சென்னையின் வடக்கில் மீஞ்சூரில் அமைக்கப்பட்ட அந்த ஆலை ஒரு நாளுக்கு 100 மில்லியன் லிட்டர் நீரை அப்பகுதியில் உள்ள 10 லட்சம் மக்களுக்கு வழங்கி வருகிறது. சென்னையின் தென் திசையில் நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள ஆலை 110 மில்லியன் லிட்டர் ஒரு நாளுக்கு வழங்கக் கூடியது. நெம்மேலியில் ரூ.1,516 கோடி மதிப்பீட்டில், 150 மில்லியன் லிட்டர் தரக்கூடிய மற்றொரு ஆலை கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டது. நான்காவது ஆலை, சென்னையிலிருந்து புதுச்சேரி வரை வங்கக் கடலை ஒட்டிய கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் ரூ.4,276 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. எதிர்வரும் 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படும் இந்த ஆலை ஒரு நாளுக்கு 450 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கும் திறன் கொண்டது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய ஆலையான இதிலிருந்து சென்னையின் தென் பகுதியில் உள்ள 22 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும் என்று அரசு கூறுகிறது. இதன் மூலம் இந்தியாவிலேயே 750 மில்லியன் லிட்டர் குடிநீரை கடல் நீரிலிருந்து பெறக் கூடிய நகரமாக சென்னை இருக்கும் என தமிழக அரசு கூறுகிறது. இந்த ஆண்டும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் கூறுவதற்கு இந்த ஆலைகளே முக்கிய காரணம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமான சென்னையில் சுமார் ஒரு கோடி பேர் வசிக்கின்றனர் அதிகாரிகள் சொல்வது என்ன? சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் டி.ஜி.வினய் ஐ.ஏ.எஸ், “சென்னையின் ஏரிகளில் 50%-க்கும் குறைவான நீர் இருப்பு இருந்தாலும், மார்ச் மாதத்துக்கு முன் எவ்வளவு தண்ணீர் வழங்கப்பட்டதோ, அதே அளவு நீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. சென்னையின் ஏரிகளிலிருந்து ஒரு நாளுக்கு 42 மில்லியன் கனஅடி நீர் சென்னையின் தேவைக்காக எடுக்கப்படுகிறது. இப்போது உள்ள நீர் இருப்பைக் கொண்டு, கிட்டத்தட்ட 150 நாட்களுக்கு நீர் வழங்க முடியும். கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளிலிருந்து 360 மில்லியன் லிட்டர் ஒரு நாளுக்கு பெறமுடியும். தற்போது 250 மில்லியன் லிட்டர் பெறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் இந்த அளவு அதிகரிக்கப்படும். எனவே செப்டம்பர் முதல் வாரம் வரை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை,” என்றார். இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என்று வைத்துக்கொண்டாலும், இது இந்த ஆண்டுக்கு மட்டுமான பிரச்னை அல்ல. வறட்சி, நீர் பற்றாக்குறை, மண்வளம் குறைதல், கடல் நீர் உட்புகுதல், காட்டுத் தீ, உயிரினங்கள் அழிவது, வெப்ப அசௌகரியம் ஆகியவை காலநிலை மாற்றத்தின் அறிகுறிகளாகும். காலநிலை மாற்றத்தின் நீண்ட கால விளைவுகளை தமிழ்நாடு அரசு வகுத்துள்ள காலநிலை செயல்திட்டம் கணித்துள்ளது. அதன்படி 2100-ஆம் ஆண்டுக்குள் சென்னையின் ஆண்டுக்கான சராசரி வெப்பம் 3.1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும், மழை பொழிவு 9% குறையும். சென்னையில் மழை பற்றாக்குறையா? காலநிலை மாற்றத்தின் ஒரு விளைவு தான் மாறி வரும் மழைப்பொழிவு என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். சென்னையில் சராசரியாக ஆண்டுக்கு 1,200மி.மீ. மழை பெய்கிறது. இது சென்னை நகரத்தின் நீர் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான அளவு மழை ஆகும். எனினும், சில நேரங்களில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்து விடுகிறது. ஒரு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழை முடிந்து தென்மேற்குப் பருவ மழை தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் உள்ள நாட்கள் ‘வறண்ட நாட்கள்’ என்று அழைக்கப்படும். கடந்த 2010-ஆம் ஆண்டு சென்னையில் 150 வறண்ட நாட்கள் இருந்தன, அது 2019-ஆம் ஆண்டு 193 நாட்களாக அதிகரித்தது. இடையில் சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட 2015-ஆம் ஆண்டும் 193 வறண்ட நாட்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சென்னையில் 2023-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை காரணமாக நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டது பெருவெள்ளமும், கடும் வறட்சியும் சென்னையில் 2005, 2015, 2018, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் சென்னை நகரையே ஸ்தம்பிக்க வைத்தது. ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து தண்ணீரே இல்லாத நிலையை குறிக்கும் ‘பூஜ்ஜிய நாள்’ அறிவிக்கப்பட்டது. அப்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விடுதிகள் மூடப்பட்டன. உணவக நேரம் குறைக்கப்பட்டது. குடியிருப்புப் பகுதிகளில் தாண்ணீருக்காக அடிக்கடி கைகலப்புகள் நேர்ந்தன. அப்போது பிற மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அருகில் உள்ள விவசாய கிணறுகளிலிருந்தும் கல் குவாரிகளிலிருந்தும் தண்ணீர் எடுத்து வரப்பட்டது. அதேபோல 2003-ஆம் ஆண்டும் மிகக் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை சென்னை சந்தித்தது. வெள்ளத்துக்கும் வறட்சிக்கும் முக்கிய காரணமாக இருப்பது நகரமயமாக்கல், நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டடங்கள், என வல்லுநர்கள் கூறுகின்றனர். படக்குறிப்பு,சென்னையில் நீர்நிலைகளின் பரப்பளவு சுருங்கி வருகிறது. பூண்டி நீர்த்தேக்கத்தின் கோப்புப் படம் 'சென்னையின் நீர் நிலைகள் சுருங்கிவிட்டன' 1893-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் சென்னையில் 12.6 சதுர கி.மீ.-ஆக இருந்த சென்னை நீர் நிலைகளின் பரப்பளவு 3.2 சதுர கி.மீ.-ஆகச் சுருங்கியுள்ளது. சென்னையில் உள்ள கட்டங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 1,488 சதுர கி.மீ. பரப்பளவில் கட்டடங்கள் உள்ளன. இது 100 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று அண்ணா பல்கலை கழகம் மற்றும் சென்னை ஐ.ஐ .டி நடத்திய ஆய்வின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் நமது எல்லா பிரச்னைகளுக்கும் காலநிலை மாற்றத்தின் மீது பழி போடக் கூடாது என்கிறார் லண்டன் பல்கலைகழகத்தின் நீர் மற்றும் வளர்ச்சிக்கான மையத்தின் முன்னாள் ஆய்வாளராகவும், பல்துறை நீர்வள ஆய்வுகளுக்கான தெற்காசிய கூட்டமைப்பின் தலைவராகவும் இருக்கும் எஸ்.ஜனகராஜன். பட மூலாதாரம்,S JANAKARAJAN படக்குறிப்பு,எஸ்.ஜனகராஜன் இதுகுறித்து பிபிசி தமிழிடம் அவர் பேசும்போது, “தமிழகத்தின் அனைத்து நீர் நிலைகளும் எக்காரணம் கொண்டும் அழிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று 2007-ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. ஆனால், அந்தச் சட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 'Tank Memoirs' என்ற ஆவணத்தின்படி சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், 3,600 நீர் நிலைகள் இருந்தன. இன்று இவற்றில் பல காணாமல் போய்விட்டன,” என்றார். மேலும், “ஏரிகள் ஒவ்வொன்றும் இணைக்கப்பட்டவை. ஒன்று நிரம்பும் போது, அங்கிருந்து நீர் அடுத்த ஏரிக்குச் செல்லும். அந்த முறை இன்று முற்றிலும் அழிந்துவிட்டது. வளர்ச்சிக்கு யாரும் தடை சொல்லவில்லை. அந்த வளர்ச்சி நிலையானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்,” என்கிறார். மாறி வரும் மழைப்பொழிவுக்கு ஏற்றாற் போல மழைநீர் சேகரிப்பு முறைகள் வடிவமைக்க வேண்டும் என்கிறார் அவர். “ஒரே நாளில் பெய்யும் கனமழை கடலில் கலப்பதற்கு முன்பாக அதைச் சேமிக்க நவீன வழிகள் இருக்கின்றன. பூமிக்கு அடியில் பல கிலோ மீட்டருக்கு கால்வாய்கள் அமைத்து நீரைச் சேமிக்கும் பல நாடுகள் இருக்கின்றன. போதிய மழை பெய்யும் சென்னையில் தெற்கு ஆசியாவிலேயே பெரிய கடல்நீரை குடிநீராக்கும் ஆலை தேவை இல்லை. ஏரிகளை முறையாகத் தூர்வாரி, நவீன மழை நீர் சேமிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்தினாலே போதும்,” என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சென்னையில் மெட்ரோ வாட்டர் வினியோகம் செய்யப்பட்டாலும், பெரும்பாலான மக்கள் அதைக் குடிக்க விரும்புவதில்லை சென்னையில் கிடைக்கும் குடிநீர் தரமானதா? மத்திய அரசு நடத்திய 'பே ஜல் சர்வேக்ஷன்' (Peyjal Survekshan) ஆய்வில் இந்தியாவில் உள்ள 485 நகரங்களில் 46 நகரங்கள் மட்டுமே மக்களுக்குத் தரமான குடிநீர் வழங்குகின்றன என்று கண்டறியப்பட்டது. சென்னையின் குடிநீர் தேவையை 90%-க்கும் மேல் பூர்த்தி செய்து விட்டதாக அரசு கூறினாலும், சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் நீரை பலரும் குடிப்பதில்லை. சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி சென்னையில் 70% குடியிருப்புகள் குடி தண்ணீர் கேன்களை பயன்படுத்துகின்றன. 25 கி.மீ. நீள கடற்கரை கொண்ட சென்னையில் கடலோரப் பகுதிகளில் கடல் நீர் உட்புகுவதால், நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரிப்பது சென்னையின் மற்றொரு சவாலாகும். சென்னை கோடம்பாக்கத்தில் வசிக்கும் எஸ் குமாரி, “எங்களுக்கு 24 மணி நேரமும் மெட்ரோ வாட்டர் கிடைக்கிறது. ஆனால் அந்த தண்ணீரில் கழிவுநீர் கலக்கலாம், தூசு கலக்கலாம் என்பதால் அதைக் குடிப்பதில்லை. தண்ணீர் கேன்கள் வாங்கிக் கொள்கிறோம்,” என்றார். ஐ.ஐ.டி-யின் ஆய்வை நடத்திய முனைவர் எல்.இளங்கோ, “குடிநீர் வாரியம் குடிநீரை எவ்வளவு தான் சுத்தப்படுத்தி வழங்கினாலும், குழாய்களில் இருக்கும் தூசு, வழியில் யாராவது கொண்டுள்ள கழிவுநீர் இணைப்புகள் நீரின் தரத்தை பாதிக்கின்றன. அதேநேரம் கேன்களில் நீரில் அதன் எல்லா தாது சத்துகளும் நீக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. குடிநீரில் 500 TDS இருக்க வேண்டிய சத்துகள் 50-க்கும் குறைவாகவே இருக்கின்றன. கேன்களில், பாட்டில்களில் விற்கப்படும் குடிநீரில் குறைந்தபட்ச தாதுக்களின் அளவை நிர்ணயிக்க வேண்டும்,” என்றார். https://www.bbc.com/tamil/articles/c0x0v85l72po
  8. Published By: VISHNU 01 MAY, 2024 | 09:37 PM வடக்கு, கிழக்கில் உள்ள எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கு ஆவனசெய்யவதற்காகவே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களம் இறக்கவேண்டும் என்று சொல்லிவருகின்றோம். அதெப்படி என்று நீங்கள் கேட்கக்கூடும். பொதுவேட்பாளர் தேர்தலில் நாம் தேர்தலில் வெல்ல போட்டியிடவில்லை. பின் எதற்காக என்று கேட்டால் எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றை வட கிழக்கு மாகாணங்களில் பெற ஆவனசெய்யவுமே தான் இந்த ஏற்பாட்டை வலியுறுத்துகின்றோம். ஐ.நா வினால் வடகிழக்கு மாகாணங்கள் மக்கள் தீர்ப்பிற்கு விடப்பட்டால் மக்களின் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். முன்னைய தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றவாறு தமிழர்களாகிய நாம் எமது வருங்கால சந்ததியினரை மனதில் வைத்து சில போராட்டங்களில் ஈடுபட வேண்டும். வன்முறை தேவையில்லை. பட்டினி கிடக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பொது வேட்பாளரை முன் நிறுத்தி எமது தமிழ்ப் பேசும் உறவுகளை ஒன்றிணைத்து எமக்கென உலக அரங்கத்தில் சில நன்மைகளைப் பெற முயற்சிப்பதே இந்தப் போராட்டம். அவ்வாறான ஒரு போராட்டவழிமுறையாகவே தமிழ் பொதுவேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்தும் செயல் அமைகின்றது. தக்க பொதுவேட்பாளர் ஒருவரை நாம் முன்னிறுத்தினால் அவர் மும்மொழிகளிலும் எமது வரலாறு பற்றி, எமக்கிழைக்கப்பட்ட அநியாயங்கள் பற்றி, இன்னல்கள்,பாகுபாடுகள் பற்றி உலகுக்கு எடுத்துரைத்து எமது வடக்குகிழக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களை ஐக்கிய நாடுகள் நடத்தக்கூடிய தகுந்த மக்கள் வாக்கெடுப்பின் மூலம் வெளிக் கொண்டுவர முடியும் என்ற கருத்தை நிலைநாட்டமுடியும். பலர் பொதுவேட்பாளரை முன்னிறுத்தினால் தமக்கு வேண்டிய சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாது போய்விடும் என்று அஞ்சுகின்றார்கள். அது தவறு. பொதுவேட்பாளருக்கு நாம் எமது முதல் வாக்கை அளித்துவிட்டு 2ஆம் 3ஆம் விருப்பு வாக்குகளை நாம் விரும்பும் சிங்கள வேட்பாளருக்கு அளிக்க முடியும். இதன் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமை பேணப்படும். எமது எதிர்பார்ப்புக்கள் உலகறியச் செய்யப்படும். அதேநேரத்தில் எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் இடமளிக்கப்படும். இவ்வாறு செய்வதால் இனக்கலவரங்கள் வெடிக்கவேண்டிய அவசியம் எதுவும் ஏற்படாது என்றார். https://www.virakesari.lk/article/182440
  9. நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மே தின கூட்டங்கள் 01 MAY, 2024 | 09:37 PM சர்வதேச தொழிலாளர்கள் தினம் இன்று (மே 01) உலகளாவிய ரீதியில் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், நாட்டில் பல இடங்களில் இன்றைய தினம் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினரின் ஏற்பாட்டில் மே தின கூட்டங்களும் ஊர்வலங்களும் இடம்பெற்று வருகின்றன. கொட்டகலை கொட்டகலை பொது விளையாட்டரங்கில் இன்று (01) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் இ.தொ.கா. கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், கட்சியின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நிதிச்செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கண்காணிப்புக் குழு பாராளுமன்ற உறுப்பினருமான மருதுபாண்டி ராமேஸ்வரன் போன்றோரும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில், தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு - புறக்கோட்டை கொழும்பு புறக்கோட்டையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டார். மாத்தறை மாத்தறையில் இன்று தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணியும் கூட்டமும் இடம்பெற்றது. இதில் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். வவுனியா 'உழைக்கும் மக்கள் ஒன்றிணைவோம்; நாட்டின் வளங்களை பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மே தின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் இன்று (01) காலை வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்பாக ஆரம்பமான இந்த ஊர்வலம் பஜார் வீதி ஊடாக வவுனியா நகர மண்டபத்தை அடைந்தது. அதன் பின்னர் அங்கு பிரதான மே தினக் கூட்டம் இடம்பெற்றது. இம்முறை மே தினப் பேரணியில் 'உணவுப் பொருட்கள் எரிபொருட்களின் விலைகளைக் குறை', 'IMF ஆலோசனைகள், நிபந்தனைகளால் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை நாசமாக்காதே', 'வற் (VAT) வரி, மின்சாரம் உள்ளிட்ட கட்டணங்களின் அதிகரிப்பை உடன்குறை', 'அந்நியக் கம்பனிகளுக்கும், பெரு முதலாளிகளுக்கும் வழங்கும் வரிச்சலுகையை உடன் நிறுத்து', 'தேசிய இனங்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறைகளை உடன் நிறுத்து', 'தமிழ், முஸ்லிம், மலையகத் தேசிய இனங்களின் சுயாட்சி உரிமைகளை வழங்கு' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மே தின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் இடம்பெற்றது. இப்பேரணியில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்ததுடன் அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பியிருந்தனர். வவுனியா, குருமன்காடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதான மே தின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் வவுனியாவில் இன்று எழுச்சியுடன் இடம்பெற்றது. முன்னதாக வவுனியா பண்டாரவன்னியன் சிலை முன்பாக ஆரம்பமான மே தின ஊர்வலம் அங்கிருந்து குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானம் வரை சென்றது. அங்கு மே தின கூட்டம் இடம்பெற்றது. முண்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் தவபாலன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன், முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், சட்டத்தரணி க.சுகாஸ் மற்றும் தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர். பேரணியில் கலந்துகொண்டவர்கள் 'எங்கள் நிலம் எமக்கு வேண்டும்', 'இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும்', 'வெடுக்குநாறி எங்கள் சொத்து' போன்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர். மானிப்பாய் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வு இன்றைய தினம் (01) மானிப்பாய் பிரதேச சபையின் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. “அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த தொழிலாளர் தின நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு காலை 9.45 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து தலைமை உரை, விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான செல்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சபா குகதாஸ், திரு.கஜதீபன், ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர்கள், கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணம் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் "நாட்டைக் கட்டியெழுப்பும்; தீர்வுக்கு ஓரணியில் இனம், மதம், சாதி, பேதம் இல்லாத புதிய சுதந்திர போராட்டத்துக்காகப் போராடுவோம்" என்னும் கருப்பொருளிலான மே தின கூட்டம் இன்று (01) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் கலந்துகொண்டு இனம், மதம், சாதி, பேதம் இல்லாத புதிய சுதந்திர போராட்டத்துக்காக குரல் கொடுப்போம் எனும் கருப்பொருளில் உரையாற்றினர். இதில் தேசிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட பிரதான அமைப்பாளர் இ.சந்திரசேகரம், மதத்தலைவர்கள், மகளிர் அமைப்பின் செயற்பாட்டாளர்கள், மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள், இணைப்பாளர், தோட்ட தொழிலாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர். கட்டுநாயக்க சுரண்டலுக்கு, அடக்கு முறைக்கு மற்றும் பல்வகை அழுத்தங்களுக்கு எதிரான பெண் தொழிலாளர்களின் ஒன்றிணைந்த மே தின ஊர்வலம் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று (01) முற்பகல் 10 மணியளவில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் பிரதான நுழைவாயில் அருகில் இருந்து ஆரம்பமானது. இந்த ஊர்வலத்தை பெண்கள் மத்தியஸ்தானம் ஏற்பாடு செய்திருந்தது. நாட்டின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த பெண்கள் மத்திய ஸ்தானத்தின் கிளை உறுப்பினர்கள், பல்வேறு சிவில் அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதில் பங்குபற்றினர். காலை 10.30 மணியளவில் கட்டுநாயக்க பேஸ்லைன் வீதியூடாக ஊர்வலம் இடம்பெற்றது. பின்னர், ஊர்வலம் மீண்டும் அதே வீதி வழியாக திரும்பி வந்து, கட்டுநாயக்க மரக்கறி சந்தை முன்பாக அமைக்கப்பட்டிருந்த மே தின ஊர்வல மேடையருகில் வந்து நின்றது. அதன் பின்னர், அங்கு கூட்டம் இடம்பெற்றது. அதில் தொழிலாளர்கள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர். யாழ்ப்பாணம் - நல்லூர் (எம்.நியூட்டன்) இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம் யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் இன்று புதன்கிழமை (01) நடைபெற்ரது. சங்கத்தினர் பங்கேற்ற பேரணியானது நல்லூர் ஆலயத்துக்கு அருகில் இருந்து ஆரம்பித்து நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நிறைவடைந்ததை தொடர்ந்து, அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள் என பலரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். சாய்ந்தமருது சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த 'உழைப்பாளிகளை உழைப்பால் உயர்ந்தவர்களை கௌரவிக்கும் மே தின நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக முன்றலில் இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. வர்த்தக சங்க தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வு கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.எம். சம்சுதீன், சிரேஷ்ட வர்த்தகர் ஆதம்பாவா மீராசாஹிப், சிரேஷ்ட கல்விமான் ஏ.எல்.எம்.பஷீர், சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்க நிர்வாகிகள், வர்த்தகர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. கல்முனை மாநகர சுகாதார பிரிவின் ஊழியர்கள், திண்மக்கழிவகற்றல் பிரிவின் ஊழியர்கள் சகலருக்கும், அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை பாராட்டி இதன்போது பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொத்துவில் பிரதேசத்தில் இன்று முழுநாளும் தொழிலாளிகளை கௌரவிக்கும் வகையில் சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்கம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. திருகோணமலை சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே தின ஊர்வலமொன்று திருகோணமலையில் இன்று (01) இடம்பெற்றது. இந்த ஊர்வலத்தை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கட்சி முக்கியஸ்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்தனர். 'உழைப்பே உயர்வு' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த ஊர்வலமானது உவர்மலை சந்தியில் இருந்து லிங்க நகர் வரை பேரணியாக சென்றது. அதன் பின்னர், மே தினம் தொடர்பான கூட்டம் இடம்பெற்றது. இதன்போது பொது மக்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். கிளிநொச்சி இலங்கை தமிழரசு கட்சியின் மே தின பேரணி சற்று முன்னர் பேரெழுச்சியுடன் நிறைவடைந்து. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் முன்றலில் இருந்து ஆரம்பமானது. இப்பேரணி தொழிலாளர்களின் அடக்குமுறைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை காட்சிப்படுத்தியதாக அமைந்தது. இதில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், சாந்தினி, மாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், முன்னாள் தவிசாளர்கள், தமிழரசு கட்சியின் மாதர் முன்னணியினர், இளைஞர் அணி, தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். பருத்தித்துறை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்றைய தினம் (01) மே தின நிகழ்வுகளை பருத்தித்துறையில் ஏற்பாடு செய்திருந்தது. அதன் அடிப்படையில் ஈ.பி.டி.பியின் தொழிலாளர் தின கூட்டம் பருத்தித்துறை நகரில் பருத்தித்துறை பல நோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தலைமையேற்றார். முன்பதாக மே தின நிகழ்வுகளில் ஓர் அங்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலக முன்றலிலிருந்து அழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களின் பிரசன்னத்துடன் வாகனப் பேரணியொன்று இடம்பெற்றது. இப்பேரணி யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதி வழியாக பருத்தித்துறை நகரை சென்றடைந்தது. அதேவேளை மற்றொரு வாகன பேரணி கட்சியின் சாவகச்சேரியிலுள்ள பிரதேச அலுவலக முன்றலிலிருந்து பேரெழுச்சியுடன் ஆரம்பமாகி பருத்தித்துறையை நோக்கி சென்றமையும் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் பலநோக்கு கூட்டறவு சங்க கேட்போர் கூடத்தில் கூட்டம் நடைபெற்றன. இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் உழைப்பாளர் தின செய்தி வாசிக்கப்பட்டதுடன் உறுதியும் எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் தொழிற்சங்ககங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு - பெரியகல்லாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் தின நிகழ்வு மட்டக்களப்பு பெரியகல்லாறு பிள்ளையார் ஆலய முன்றலில் இன்று புதன்கிழமை (01) நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர். கம்பஹாவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டம் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேதின பேரணி... ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணி கொழும்பு கெம்பல் பார்க்கில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதின பேரணி https://www.virakesari.lk/article/182408
  10. 01 MAY, 2024 | 08:17 PM அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் தெரிவித்தார். மேலும் திருத்தப்பட்ட மக்கள் சார்பான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எமது ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெறும் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் சிறுவர், மகளிர் உரிமைக்கான ஜனாதிபதி செயலணி, இளைஞர் ஜனாதிபதி செயலணி, சுயாதீன ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு எமது ஆட்சியில் நிறுவப்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் மேலும் குறிப்பிட்டார். தாம் ஏனைய அரசியல்வாதிகளைப் போன்று வாக்குறுதிகளை மீறவில்லை எனவும், இந்த நாட்டின் 76 வருடகால ஜனநாயக வரலாற்றில் எதிர்க்கட்சியினால் செய்யப்படாத சேவையை எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு மக்களுக்கு செய்துள்ளதாகவும், அதனால் நான் அளித்த வாக்குறுதிகளில் பாதிக்கு மேல் எதிர்க்கட்சியில் இருந்தே செய்து முடித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மேலும், 76 வருட வரலாற்றைப் பற்றி பேசும் இந்நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பயணம் குறித்து அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் என்றும், 76 ஆண்டுகளில் இந்நாட்டின் எந்த அரசியல் தலைவர்களும் எந்த பதவியும் அதிகாரமும் இல்லாமல் எந்த பணியையும் செய்யவில்லை, ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத சேவையை, ஜனநாயக வரலாற்றில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளதாலயே ஐக்கிய மக்கள் சக்தி இலங்கையின் நம்பர் 1 கட்சி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். “ஐக்கியமான நாடு சுபிட்சமான எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பு, செத்தம் வீதியில் நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டை அழித்தவர்களுடன் தமக்கு எந்த ஒப்பந்தமும் இல்லை என்றும், அவ்வாறு ஒப்பந்தம் செய்ய வேண்டியிருந்தால், பிரதமர் பதவிகளயோ அல்லது ஜனாதிபதி பதவிகளையோ தனக்கு முன்னரே பெற்றுக் கொள்ள முடியும் எனவும், தானும் தனது குழுவும் எப்பொழுதும் மக்களுக்காவே கொள்கை ரீதியாக தீர்மானங்களை எடுத்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். அத்துடன், நாட்டில் கொலைக் கலாசாரத்துக்கும் வன்முறைக்கும் இடமில்லை என்றும், நாட்டில் நீதியும் நியாயமும் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், போதைப்பொருள் கலாச்சாரம், தீவிரவாதம், இனவாதம் போன்றவற்றுக்கு இடமில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எந்த ஒரு பயங்கரவாதத்தையும் ஆரம்பிக்க அனுமதிக்கப்பட மாட்டாது, மேலும் இந்த நாட்டின் சிங்களவர் அல்லாத மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு வழங்கப்படும் என்றும், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அங்கு செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே, மக்களுக்கான சலுகைகள் இன்றி மக்களுக்காக நாட்டுக்காக சேவையாற்ற விரும்பும் அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் திறந்துள்ளதாகவும் கொள்கையை அடிப்படையாக கொண்ட ஆட்சிக்காக எம்முடன் ஒன்றிணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார். அத்துடன் நாட்டின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு விசேட நிதியம் ஸ்தாபிக்கப்படும் என்றும், 76 வருட காலம் குறித்து பேசும் போது நாம் பெருமடைகிறோம்.எந்தவொரு எதிர்க்கட்சியும் மேற்கொள்ளாத பணியை ஐக்கிய மக்கள் ஆற்றயுள்ளது. ( படங்கள் - எஸ். எம். சுரேந்திரன் ) https://www.virakesari.lk/article/182432
  11. 01 MAY, 2024 | 05:37 PM புத்தளம் கருவலகஸ்வெவ எகொடபிட்டிய பகுதியில் 3 மாத யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானைக் குட்டியை பெரிய யானைகள் காலால் மிதித்து கொன்று இருக்கலாமென சந்தேகிப்பதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த யானைக் குட்டியை குழிதோண்டி புதைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/182431
  12. அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ள முன்வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு Published By: VISHNU 01 MAY, 2024 | 09:23 PM சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை வெற்றியடையச் செய்து நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாக்க அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ள முன்வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி உள்ளிட்ட அரசியல் கட்சிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார். வழமையான அரசியலில் செயற்பட்டு சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை எதிர்த்து, அதனை சீர்குலைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, நாடு 2022ல் இருந்த நிலைமைக்குத் திரும்ப இடமளிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார். கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை (01) பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். "மீண்டும் வீழாத பெருமைமிகு நாடு என்றென்றும்" என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மே தினக் கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புள்ள அமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்தொகையான கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கயாஷான் நவனந்தனவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும். மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சி முடிவடைந்து விட்டதாகத் தெரிவித்து கட்சியை சிலர் புதைக்கத் தயாராக இருந்தாலும், புதையுண்டுள்ள பொருளாதாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியே மீட்டெடுத்தது. நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஜனநாயக மற்றும் பொருளாதார மறுமலர்ச்சியையே இன்று நாடு பூராகவும் நடைபெறும் மே தின பேரணிகள் எடுத்துக் காட்டுவதாக தெரிவித்த ஜனாதிபதி, காலி முகத்திடலில் இருந்து துரத்தப்பட்ட எதிர்கட்சி தலைவருக்கு தமது கட்சியின் மேதினக் கூட்டத்தை செத்தம் வீதியில் நடத்தக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். நாட்டில் வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கி இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கும் திட்டமொன்றை முன்வைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முதலில் இந்த மே தின பேரணிக்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஐக்கிய தேசியக் கட்சி முடிந்துவிட்டதாக சிலர் நினைத்தனர். கட்சியை குழிதோண்டி புதைக்க வேண்டும் என்றார்கள். ஆனால் புதையுண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு நாம் புத்துயிர் கொடுக்க வேண்டியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் சவப்பெட்டிக்கு கடைசி ஆணி அடிக்கப்பட்டதாக 1956ஆம் ஆண்டு கூறப்பட்டது. ஆனால் ஐ.தே.க மீண்டும் வலுப்பெற்றது. 1970ல் ஐக்கிய தேசியக் கட்சி முடிந்து விட்டது என்று கூறப்பட்டது. ஆனால் நாங்கள் 17 வருடங்கள் ஆட்சி செய்தோம். முடிந்து விட்டது என்று கூறிய ஐக்கிய தேசியக் கட்சி தான் இன்று நாட்டைக் காப்பாற்ற முன் வந்தது. ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்குவதற்கு பிரதமர் டி.எஸ். சோனாநாயக்க சுபநேரம் பார்த்தார். அந்தக் கூட்டம் காலையில் நடைபெறாமல் மாலையில் நடைபெற்றது. மேலும் இலங்கைக்கு சுதந்திரம் வழங்குவதற்கும் சுபமுகூர்த்தம் பார்க்கப்பட்டது. எனவே நாட்டுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தான் சுபமுகூர்த்தம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால்தான் வீழ்ந்த நாட்டைஎம்மால் உயர்த்த முடிந்தது. இன்று கொழும்பைச் சுற்றி பல மே தினப் பேரணிகள் நடைபெறுகின்றன. கெம்பல் மைதானத்தில் பொதுஜன பெரமுனவும் , செத்தம் வீதியில் ஐக்கிய மக்கள் சக்தியும் தலவாக்கலையில் திகம்பரமும், கொட்டகலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரசும், யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பியும் இன்று மே தினக் கூட்டங்களை நடத்துகின்றன. இதுதான் ஜனநாயகம். நான் சர்வாதிகாரி என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் இன்று நடுவீதியில் கூட்டங்களை நடத்தலாம். என்னை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். இந்த நிலைமை இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் இருக்கவில்லை. அன்று எதிர்க்கட்சித் தலைவர் தாக்கப்பட்டு காலிமுகத்திடலில் இருந்து துரத்தப்பட்டார். ஆனால் இன்று அவரது மே தின பேரணியை செத்தம் வீதியில் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதான் ஜனநாயகம். இந்த நாட்டின் அரசியல் முறைமை சீர்குலைந்ததால் நான் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் ஆனேன். பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் பிரதமர் பதவி விலகும்போது எதிர்க்கட்சித் தலைவர் பிரதமராக நியமிக்கப்படுவார். ஆனால் நம் நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல ஏனைய அனைத்துக் கட்சிகளும் பின்வாங்கி ஓடிவிட்டன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளும் எவருக்கும் ஆதரவளிப்பதாக பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருந்த பொதுஜன பெரமுன அறிவித்திருந்தது. முதலில் எதிர்க்கட்சித் தலைவரிடம் வினவப்பட்டது. ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் ஜேவிபி முன்வரவில்லை. இறுதியாக, தனியொரு எம்.பி.யை கொண்ட கட்சியின் தலைவர் என்ற முறையில், நான் நாட்டின் பொறுப்பை ஏற்க வேண்டியதாயிற்று. ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் சவால்களில் இருந்து ஓடியதில்லை. இதை ஏற்க வேண்டாம் என்று சிலர் கூறினர். ஆனால் நாங்கள் அனைவரும் ஒன்றாக முன்னேற்றம் கண்டோம். அன்று ஜனாதிபதி பதவி விலகிய பின்னர் பாராளுமன்றத்தை கைப்பற்ற முயன்றார்கள். இதையடுத்து பாராளுமன்றத்தில் இருந்த அனைவரும் ஓடிவிட்டனர். நான் என்ன செய்யலாம் என்று இராணுவத் தளபதி என்னிடம் கேட்டார். கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு என்ன நடந்தது என்று கேட்டேன். அனைவரும் சென்றுவிட்டதாக சொன்னார். அப்படியானால் பாராளுமன்றத்தைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு என்று அவரிடம் சொன்னேன். அன்று தப்பி ஓடியவர்கள் இன்று பாராளுமன்ற ஜனநாயகம் பற்றி எப்படி பேசுகிறார்கள்? அந்தக் குழு பதவியில் இருந்திருந்தால், இன்றைய நாட்டின் நிலைமையை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? இன்று சகல இடங்களிலும் மே தினக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மக்கள் பஸ்களில் வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன், பஸ்களை இயக்குவதற்கு எரிபொருள் இருக்கவில்லை. சிங்களம் மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்றும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றன. புத்தாண்டை மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள். இப்போது மே தினத்தை கொண்டாடுகிறோம். இன்னும் மூன்று வாரங்களில் வெசாக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகும். அப்பொழுது கொழும்பு மீண்டும் மக்களால் நிரம்பியிருக்கும். அரசாங்கத்தை நாம் துணிச்சலுடன் முன்னோக்கிக் கொண்டு வந்ததாலேயே கண்டி பெரஹெராவை கண்டுகளிக்கவும் நல்லூர் திருவிழா மற்றும் தெவிநுவர பெரஹரா போன்றவற்றை பார்வையிடச் செல்வதற்கும் உகந்த சூழல் உருவானது. இதற்காக உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மொட்டுக் கட்சியின் ஒரு பகுதியினர் ஒத்துழைப்பு வழங்கினர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஒரு தரப்பினரும் உதவ முன்வந்தனர். டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட பல தரப்பினர் எங்களுடன் இணைந்துச் செயற்படுகின்றனர். கட்சி சின்னமொன்று இல்லை. மொட்டுக் கட்சியின் ஒரு குழு எம்மோடு இணைந்தது. மற்றுமொரு குழு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டது. மிகவும் சிரமப்பட்டு இந்த நிலைக்கு வந்துள்ளோம். எமது தீர்மானங்கள் வெற்றியளிக்கும் என்று எவரும் நினைக்கவில்லை. மேலும், குற்றச் செயல்களுக்கு எதிராக கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. சிரமத்துடனாவது அந்த தீர்மானங்களை எடுத்தோம். சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தின் போது புதிதாக பணத்தை அச்சிட முடியாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அரச வங்கிகளில் கடன் வாங்கவும் முடியாதென அறிவிக்கப்பட்டது. அரசு வருமானம் ஈட்ட வேண்டும் என்றும் தெரிவித்தனர். ரூபாயை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கஷ்டமாக இருந்தாலும் அதற்கான முடிவுகளை எடுத்தோம். மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தியும் அப்போது என்ன சொன்னார்கள்? ஆனால் இன்று நாட்டின் நிலைமை என்ன? இன்று ரூபாயின் பெறுமதி பலப்படுத்தப்பட்டுள்ளது. டொலருடன் ஒப்பிடுகையில், ரூபாவின் பெறுமதி 280 ஆக உள்ளது. ரூபாய் பெறுமதி வலுவடைந்திருப்பதால் மக்கள் கையிலிருக்கும் பணத்தின் மதிப்பு அதிகரிக்கிறது. தற்போது, பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகின்றனர். மேலும், கடந்த பெரும்போகத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது. மேலும் தொழில்கள் மீண்டும் உயிர்பெறுகின்றன. சிறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாக்கும் வகையில் பராட்டே சட்டத்தை ஒரு வருடத்திற்கு அமுல்படுத்தாதிருக்க நடவடிக்கை எடுத்தோம். மேற்படித் துறைகளை பாதுகாப்பதற்காக தனிப் பிரிவொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது. அதனால் மிகவும் சிரமப்பட்டே இன்றைய நிலைக்கு வந்துள்ளோம். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தினால் அந்த பாதுகாப்பு கிடைத்துள்ளது. இந்த நிலைமையை பாதுகாத்து முன்னேறிச் செல்வதா? அல்லது நாட்டை 2022 இல் இருந்த நிலைக்கு கொண்டுச் செல்வதா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் இத்திட்டத்திற்கு எதிராக செயற்படக்கூடாதென கேட்டுக்கொள்கிறேன். வேலைத்திட்டத்திற்கு இடையூறு செய்யவும் வேண்டாம். இந்த நிலையைப் பாதுகாக்க மக்களைப் பற்றிச் சிந்தித்து அரசாங்கத்துடன் இணைந்துச் செயற்பட முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன். நாம் அனைவரும் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். 2003 ஆம் ஆண்டு டோக்கியோ மாநாட்டிற்குச் சென்று 03 பில்லியன் டொலர்களை இலங்கைக்குக் கொண்டு வந்தேன். அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஒரு பில்லியன் டொலர்களை வழங்கினார். அதனால் 04 பில்லியன் டொலர்கள் கிடைத்தன. ஆனால் 2004 ஆம் ஆண்டில் அனைத்தும் மாறியது. அதனால் அவர்கள் திரும்பிச் சென்றனர். அந்த 04 பில்லியன் டொலர்கள் எம்மிடம் இருந்தால் இன்று அதன் பெறுமதி 10 பில்லியன் டொலர்களாக இருக்கும். 2018-2019 க்குள் வரவு செலவுத் திட்டத்தில் உபரி ஏற்பட்டது. அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை மாற்றினால் நெருக்கடி ஏற்படலாம். சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனைகள் மற்றும் நாட்டின் துரித அபிவிருத்திக்கு தேவையான நிபந்தனைகள் அடங்கிய சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளேன். அதற்கு ஆதரவு தருமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் அதற்கு ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதோடு, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாகவும் மாற வேண்டும். இந்த நாட்டின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. நாட்டு மக்கள் இன்னமும் கஷ்டத்தில் வாழ்கின்றனர். பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். 03 வருடங்களாக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. 2019 ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் நாட்டின் பொருளாதாரம் ஓரளவு சரிவடைந்தது. எனவே இளைஞர்களுக்கான எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டும். பழைய பொருளாதார முறைமையினால் இதனைச் செய்ய முடியாது. இதற்கு பொருளாதாரம் திறக்கப்பட்டு புதிய முதலீடுகள் கொண்டுவரப்பட வேண்டும். கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் நிறுவனங்களின் வருமானம் குறைவடைந்திருந்தது. நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காக 04,05 பில்லியன் டொலர்களை தேடிக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும். வறுமையை ஒழிக்க கிராமப் பொருளாதாரத்தை நவீனமயப்படுத்த வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். நலன்புரித் நிவாரணத் தொகை மூன்று மடங்காக மேம்படுத்தப்பட்டுள்ளன. பயனாளிகளின் எண்ணிக்கை 24 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளன. அரச ஊழியர்களின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தனியார் துறையினருக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கி இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குதற்கான திட்டத்தை முன்வைக்கிறேன்.எனவே, பாரம்பரிய அரசியலை கைவிட்டு எம்மோடு இணையுமாறு மக்கள் விடுதலை முன்னணிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் அழைப்பு விடுக்கிறேன். அதேபோல், நாட்டிலிருக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாத்து புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஆதரவளிக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/182439
  13. அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய தகவல்களை திருட முயன்ற இரண்டு இந்திய உளவாளிகள் 2020 இல் வெளியேற்றப்பட்டனர் - சர்வதேச ஊடகங்களின் தகவலால் அதிர்ச்சி Published By: RAJEEBAN 01 MAY, 2024 | 12:25 PM 2020 ம் ஆண்டு அவுஸ்திரேலியா இந்தியாவின் ரோ புலனாய்வுபிரிவை சேர்ந்த இருவரை தனது நாட்டிலிருந்து வெளியேற்றியது என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ரோவிற்கும் மேற்குலகின் உள்நாட்டு பாதுகாப்பு சேவைகளை சேர்ந்தவர்களிற்கும் இடையிலான மோதல்களில் இதுவும் ஒன்று என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை இரகசிய தகவல்களை திருடுவதற்கான முயற்சியில் ஈடுபட்ட இந்தியாவின் புலனாய்வு அமைப்பை சேர்ந்த இருவர் வெளியேற்றப்பட்டனர் என 2020இல் வெளியேற்றப்பட்டனர் என அவுஸ்திரேலிய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இருவர் வெளியேற்றப்பட்டனர் என த அவுஸ்திரேலியனும் சிட்னி மோர்னிங் ஹெரால்ட்டும் தெரிவித்துள்ள அதேவேளை இந்தியாவின் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களின் நடவடிக்கை குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஏபிசி எனினும் எத்தனை பேர் வெளியேற்றப்பட்டனர் என்பதை தெரிவிக்கவில்லை. மிகவும் இரகசியமான பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் விமானநிலைய பாதுகாப்பு அவுஸ்திரேலியாவின் வர்த்தக உறவுகள் தொடர்பான இரகசிய விபரங்களை திருட முயன்ற இந்தியாவின் புலனாய்வு பிரிவை சேர்ந்த இருவர் வெளியேற்றப்பட்டனர் என ஏபிசி தெரிவித்துள்ளது. 2020 இல் அவுஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அமைப்பினால் வெளியேற்றப்பட்ட உளவாளிகளின் கூடுகளை சேர்ந்தவர்கள் அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்களை உன்னிப்பாக அவதானித்து வந்தனர். தற்போதைய முன்னாள் அரசியல்வாதிகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திவந்தனர் எனவும் ஏபிசி தெரிவித்துள்ளது. 2021 இல் ஆற்றிய உரையொன்றில் அவுஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் இந்த சம்பவத்தை மறைமுகமாக தெரிவித்திருந்தார் என ஏபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/182405
  14. படக்குறிப்பு,பிலிப்பைன்ஸ் கப்பலை சுற்றி வளைத்த சீன கப்பல்கள் கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனத்தன் ஹெட் பதவி, தென்கிழக்கு ஆசிய செய்தியாளர் 13 நிமிடங்களுக்கு முன்னர் பெரிய சீனக் கப்பல் ஒன்று எங்கள் கப்பலுக்கு மிக நெருக்கமாக செல்வதை எங்களால் காண முடிந்தது. எங்களது இரு கப்பல்களும் அதிவேகமாக சென்றுக் கொண்டிருந்தன. சீன கப்பலில் இருந்தவர்களின் முகத்தை பார்க்க முடியுமளவு அவர்களது கப்பல் எங்களுக்கு நெருக்கமாக இருந்தது. எங்களை போலவே அதிலிருந்த இருவர் எங்கள் கப்பலை நோக்கி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் கப்பலான பிஆர்பி பககேவை (BRP Bagacay) செவ்வாய்க்கிழமையன்று சீனக் கப்பல் நெருங்கிய சமயத்தில் பிபிசி குழுவும் அந்த கப்பலில் இருந்தது. பிலிப்பைன்ஸ் கடற்படை கிட்டத்தட்ட மோதலுக்கு தயாராகிக் கொண்டிருந்தது. திடீரென்று சீனக் கப்பல் எங்களது கப்பலின் முற்பகுதிக்கு அருகே திரும்பி, எங்களது கப்பலை மெதுவாக இயக்குமாறு கட்டாயப்படுத்தியது. இரண்டு கப்பல்களுக்கும் இடையில் வெறும் 5 மீட்டர் இடைவெளியே இருந்தது. எங்களது கப்பல் பிலிப்பைன்ஸ் கடற்கரைக்கு மேற்கே 220 கிமீ (137 மைல்) தொலைவில் சீனாவும் உரிமை கோரும் ஸ்கார்பரோ ஷோலை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. படக்குறிப்பு,பிபிசி குழுவை வீடியோ எடுத்த சீன கடற்படையினர் சீனக்கப்பல்கள் எங்களை தடுப்பதில் உறுதியாக இருந்தன. அவர்களின் கப்பலில் நிறைய பேர் இருந்தனர். ஒரு கட்டத்தில் கடலோரக் காவல்படை மற்றும் கடலோர போராளிகள் குழுவைச் சேர்ந்த 10 பேர் அந்த பக்கம் இருந்தனர். எனினும், பிலிப்பைன்ஸ் கேப்டன் தனது ஜப்பானிய கப்பலின் வேகம் மற்றும் திறனை நம்பி சீனர்களை தாண்டி கப்பலை செலுத்தினார். கிட்டத்தட்ட கரைக்கு 600 மீட்டர் அளவுக்கு நெருங்கி இருந்த போது, நாம் அருகில் வந்துவிட்டோம் என்று கூறினார். ஆனால் சமீபத்தில் சீனர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய தடுப்பு ஒன்று தடையாக நின்றது. எங்களுக்கு பின்னால் வந்த சீன கப்பல்கள் உடனே இருபுறமும் பிலிப்பைன்ஸ் கப்பலை சூழ்ந்துக் கொண்டன. மறுகணமே அவர்களது தண்ணீர் ஆயுதத்தை கொண்டு எங்கள் கப்பலை தாக்க ஆரம்பித்து விட்டனர். அவர்கள் பீய்ச்சி அடித்த நீர் கப்பலின் உலோக மேற்பரப்பின் மீது இடியை போல் இறங்கியது. இதனால் கப்பலின் ஒரு பகுதியே சிதைந்து விட்டது. பிலிப்பைன்ஸ் மீனவர்களுக்காக பொருட்களை ஏற்றிவந்த, எங்களது கப்பல் தொகுதியில் இடம் பெற்றிருந்த இரண்டாவது கப்பல் தான் இந்த தாக்குதலில் மிக மோசமாக சேதமடைந்தது. தென் சீனக் கடலில் இந்த டாம் & ஜெரி விளையாட்டு ஒன்றும் புதிதல்ல. ஆனால், பிலிப்பைன்ஸ் அதிபர் போங்பாங் மார்கோஸ், கடந்த காலத்தை விட மிகவும் உறுதியாக சர்ச்சைக்குரிய பகுதிகளில் சீன இருப்பை எதிர்கொள்வதற்கான அதிகாரத்தை கடலோர காவல்படைக்கு வழங்கியதில் இருந்து, இந்த மோதல்கள் சமீபத்தில் அடிக்கடி நடப்பவையாகவும், மிக தீவிரமானவையாகவும் மாறியுள்ளன. "இங்கு எப்போதுமே ஆபத்தான எச்சரிக்கை கோடு இருப்பதாக சீன அரசு கூறுகிறது" என்று மேற்கு பிலிப்பைன்ஸ் கடலின் கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் கொமடோர் ஜே டாரியேலா கூறுகிறார். “சீனாவின் கெடுபிடிகளால் ஷோல் கரையில் இருந்து 12 கடல்மைல் எல்லையை எங்களால் கடக்க முடியாது என்று அவர்கள் கூறினர். ஆனால் புதிய அரசின் கீழ், சீனா சர்வதேச சட்டத்தை மதிக்கவில்லை என்பதைக் காட்ட நாங்கள் ஏற்கனவே அந்த எல்லையை மீறிவிட்டோம்.” நாங்கள் இருந்த இந்த செயல் திட்டமும் அந்த வலுவான எதிர்வினையின் ஒரு பகுதிதான். ஸ்கார்பரோ ஷோலில் பல தசாப்தங்களாக பணிபுரிந்து வந்த பிலிப்பைன்ஸ் மீனவர்களுக்கு உணவு மற்றும் எரிபொருளை வழங்குவதே அந்த திட்டத்தின் இலக்கு. இந்த பகுதி 2012 இல் சீன கடலோர காவல்படையின் கட்டுப்பாட்டில் வந்ததில் இருந்து, இந்த மீனவர்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர். சீனாவை விட பிலிப்பைன்ஸுக்கு மிக அருகில் இருக்கும் ஷோல் மீதான தனது உரிமையை நிலைநாட்டுவதற்கான பிலிப்பைன்ஸின் உறுதியை நிரூபிப்பதாகவும் இது இருந்தது. 2016 இல் வழங்கப்பட்ட சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தென் சீனக் கடலில் சீனாவின் உரிமைகோரல்களின் முக்கிய கூறுகளான அதன் நைன் - டேஷ் லைன் (Nine - Dash Line) மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் அதன் பல்வேறு நடவடிக்கைகள் போன்றவை சட்டவிரோதமானது என்று கூறப்பட்டது. ஆனால் தான் இந்தத் தீர்ப்பை அங்கீகரிக்கவில்லை என்று சீனா கூறுகிறது. படக்குறிப்பு,சீன கப்பல்களை தொடர்ந்து கண்காணிக்கும் பிலிப்பைன்ஸ் கடற்படையினர் ஷோலில் காணப்படும் சீனக் கப்பல்களின் எண்ணிக்கை பயமுறுத்துவதாக இருந்தது. அனைத்து திசைகளிலும் நாம் அவர்களைப் பார்க்க முடியும், "அவர்களின் கோலியாத்திற்கு நாங்கள் தான் டேவிட்," என்கிறார் கொமடோர் டாரியலா. அதிபர் மார்கோஸின் இந்தப் புதிய கொள்கை பில்ப்பைன்ஸை எங்கே கொண்டு செல்லும் என்பதைப் அறிந்துகொள்வது கடினம். இருப்பினும் அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வலுவான ஆதரவு கிடைத்துள்ளது. ராணுவத்திற்கான நீண்டகால நவீனமயமாக்கல் திட்டத்தை இது விரிவுபடுத்தியுள்ளது. சீனக் கப்பல்கள் ஆபத்தானவை என்றாலும், அவற்றின் உத்திகளில் தெளிவான திறன் கொண்டவை. அவர்கள் தங்களது தடைகளை கிட்டத்தட்ட காலவரையின்றி வைத்திருக்கலாம். சீன கப்பலை நாங்கள் எதிர்கொண்ட பிறகு, தங்களது கடல் எல்லைக்குள் நுழைந்த பிலிப்பைன்ஸ் கப்பல் ஒன்றை தாங்கள் விரட்டியடித்ததாக அறிக்கை வெளியிட்டது சீனா. பிஆர்பி பககே கப்பல் இரண்டு பக்கங்களிலிருந்தும் தாக்கப்பட்ட பின்னர் ஸ்கார்பரோ ஷோலிலிருந்து பின்வாங்கியது உண்மைதான். இரண்டாவது கப்பலில் இருந்த பொருட்கள் மற்றும் அதன் பெரும்பாலான மின்னணு சாதனங்கள் சேதமடைந்தன. எங்களுக்கு பின்னால் 20 கிலோமீட்டர் தொலைவில் சீனக் கப்பல்களால் அது மூழ்கடிக்கப்பட்டது. எனவே எங்கள் கப்பல் அதற்கு உதவ அங்கு சென்றது. படக்குறிப்பு,பிலிப்பைன்ஸ் கப்பலிடம் உதவி பெற வந்த மீனவர்கள் ஆனால் இரண்டு கப்பல்களும் சீனாவின் "சிவப்புக் கோட்டிற்கு" வெளியே கடலில் நிலைக் கொண்டிருந்தன. இருப்பினும் இன்னும் அதன் "நைன்-டேஷ் லைனுக்கு" உள்ளேயே இருந்தன. காலையில் டஜன்கணக்கான மீன்பிடி படகுகள் எங்களைச் சுற்றி உதவிகளை பெறுவதற்காக குவிந்தன. ஆனால் தூரத்தில் இருந்து சீன கடலோரக் காவல்படைக் கப்பல் தொடர்ந்து கண்காணித்து கொண்டிருந்தது. சீனாவின் துன்புறுத்தும் தந்திரங்கள் மீண்டும் ஒருமுறை அம்பலமான நிலையில், பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை தங்களது பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியதாக கருதுகிறது. https://www.bbc.com/tamil/articles/cd18xndw822o
  15. இந்திய - இலங்கை கப்பல் சேவை இம்மாதம் மீண்டும் ஆரம்பம் Published By: DIGITAL DESK 3 01 MAY, 2024 | 05:04 PM இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவையானது இம்மாதம் 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்திய - இலங்கை கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான பல முயற்சிகள் சீரற்ற கடல் நிலை காரணமாக இரத்து செய்யப்பட்டது. வட கிழக்கு பருவ மழையின் காரணமாக, குறித்த கப்பல் சேவையை ஒக்டோபர் 20 ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என தெரிவித்துள்ளார். 4 தசாப்தங்களின் பின்னர் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிலையில், ‘செரியாபாணி’ எனப்படும் பயணிகள் கப்பல் சேவையின் முதல் பயணத்தில் கிட்டத்தட்ட 50 பயணிகள் வருகை தந்தனர். ஷிப்பிங் கோர்ப்பரேஷன் ஓப் இந்தியாவுக்கு (எஸ்.சி.ஐ.) சொந்தமான 35 மீட்டர் நீளமும், 9.6 மீட்டர் அகலமும் கொண்ட ‘செரியாபாணி’ என்ற அதிவேகக் கப்பல் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு நான்கு மணித்தியாலங்கள் வரை பயணமாகும் இக்கப்பலில் ஒரு சுற்றுப் பயணத்திற்கு இலங்கை ரூபாய் 26,750 மற்றும் இரண்டு சுற்றுப் பயணங்களுக்கு 53,500 கட்டணம் அறவிடப்படும். https://www.virakesari.lk/article/182418
  16. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 10 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 30 ஏப்ரல் 2024 வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தின் கட்டுமானப் பணிகள் நிதுத்தி வைக்கப்பட்டுள்ளது என - தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வள்ளலாரின் தத்துவமான பெருவெளி நிலத்துக்குள் எந்த கட்டுமானப் பணிகளும் நடைபெறக் கூடாது என அரசு மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "106 ஏக்கர் பெரு வெளி நிலத்தில் மூன்று ஏக்கரில் வள்ளலார் சர்வதேச மைய பணிகள் நடைபெற்று வருகின்றன, அந்த இடம் தொல்லியல் முக்கியத்துவம் இடமாக உள்ளது, தொல்லியல் துறை நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அவர்களின் அறிக்கை கிடைத்த பிறகே, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார். வள்ளலாரின் பாரம்பரியத்தை கௌவரவிக்கும் வகையில் தமிழக அரசால் ரூ.100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் புதிய வள்ளலார் சர்வதேச மையத்திற்கு எதிர்ப்பு ஏன்? வடலூரில் என்ன நடக்கிறது? ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில், ரூ.100 கோடி மதிப்பில் 3.42 ஏக்கர் பரப்பளவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த சர்வதேச மையத்தில் தியான மண்டபம், மின் நூலகம், வள்ளலாரின் கொள்கைகளை எடுத்துரைக்கும் தகவல் மையம், நிகழ்வரங்கம், முதியோர் இல்லம், வெளிநாட்டு ஆய்வு மாணவர்களுக்கான விடுதி ஆகியவை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானம் வள்ளலாரின் ‘பெருவெளி’ தத்துவத்துக்கு எதிராக இருப்பதாக கூறி வள்ளலாரை பின்பற்றுபவர்களும், வடலூர் பகுதியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வள்ளலாரை முன்னிறுத்தி கருத்தியல் மோதல் வள்ளலார் எனப்படும் ஸ்ரீ ராமலிங்க அடிகளாருக்கு 175 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீதும் அவரது கொள்கைகள் மீது பற்றுக் கொண்ட மக்களால் 106 ஏக்கர் நிலம் சத்ய தர்ம சாலை அமைப்பதற்காக தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலம் சத்ய தர்ம சாலையின் ‘பெருவெளி’ என்று அழைக்கப்படுகிறது. வள்ளலாரால் நிறுவப்பட்ட சத்ய ஞான சபையில் பௌர்ணமி மற்றும் தைபூசம் நாளன்று சமரச சன்மார்க சங்க இயக்கத்தைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கானோர் கூடுவது வழக்கம். தைப்பூசம் நிகழ்வுக்கு 10 முதல் 15 லட்சம் பேர் கூடுவார்கள். பௌர்ணமி நாட்களில் ஒன்று முதல் இரண்டு லட்சம் பேர் வரை கூடுவார்கள். இது ஒரு கருத்தியல் மோதலாகவும் இருப்பதால் அரசியல் சர்ச்சையாகவும் மாறி வருகிறது. தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கும் நபர்களை பாஜக போன்ற அரசியல் அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டும் எழுகின்றன. சனாதன தர்மத்தை ஆதரித்தவர் வள்ளலார் என்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கூறிய போது, வள்ளலார் எவ்வாறு சாதியையும் சடங்குகளையும் எதிர்த்தார் என்று கருத்துகள் முன்வைக்கப்பட்டன. பெருவெளியில் கட்டிடம் எழுப்புவது சத்ய தர்ம சாலையின் மாண்பை குறைக்கும் செயல் என்று கூறி, வள்ளலாரை பின்பற்றுபவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்துக்கு பாஜக, பாமக, தமிழ் தேசிய பேரியக்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெருவெளியில் சன்மார்க்க நிகழ்வுகளை நடத்துவதற்கும் இத்திட்டம் இடையூறாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். வள்ளலார் யார்? வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் 19ம் நூற்றாண்டின் தமிழ் சைவ ஆன்மீகவாதி ஆவார். சமய பேதங்கள் இல்லாமல் அனைவருக்குமான பொது நெறியை வகுத்த வள்ளலார், 1865-ம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். உருவ வழிபாட்டை மறுத்து, ஒளி வழிபாட்டை நம்பினார். அதேபோன்று, கோயில் என்ற அமைப்புக்கு பதில் சபையை உருவாக்கினார். வெளியை வெறும் நிலப்பரப்பாக மட்டும் பார்க்காமல் ஞானத்தின் ஒரு பரந்த தொடர்ச்சியாக நம்பினார் வள்ளலார். அவரது கொள்கைகள் பக்தியின் ஸ்தூலமான வெளிப்பாடுகளுடன் முரண்படுவதை காணலாம். அவர் எழுதிய திருவருட்பா ஆறு பாகங்களாக உள்ளன. இவை திருமுறைகள் என்று அழைக்கப்படும். முதல் ஐந்து திருமுறைகளில் ஆன்மீக வாழ்க்கை குறித்து பேசிய வள்ளலார், தனது கடைசி ஒன்பது ஆண்டுகளில் எழுதப்பட்டதாக நம்பப்படும், ஆறாம் திருமுறையில் சாதியை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். சடங்குகளையும் நம்பிக்கைகளை கடுமையாக சாடியிருந்தார். “கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடி போக” என்று எழுதியிருந்தார். 1927ம் ஆண்டு வெளி வந்த குடியரசின் முதல் பதிப்பில் வள்ளலாரின் வரிகளை தந்தைப் பெரியார் பிரசுரித்திருந்தார். “வேத ஆகமங்கள் என்று வீண் வாதமாடுகின்றீர், வேத ஆகமத்தின் விளைவு அறியீர்” என்று ஆறாவது திருமுறையில் கூறியுள்ளார். வள்ளலார் சர்வதேச மையத்துக்கு ஏன் எதிர்ப்பு ? 1867-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 80 காணி நிலம் (106 ஏக்கர்) நிலத்தை மக்கள் வள்ளலாருக்கு தானமாக கொடுத்தனர். அதில் அவர், சத்ய தர்ம சாலையை நிறுவினார். 1871-ம் ஆண்டு சத்ய ஞான சபையின் கட்டுமானம் தொடங்கி 1872-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக திறந்த வெளியாக இருக்கும் இடத்தில், புதிய கட்டுமானம் எழுப்பப்படுவது தங்கள் தத்துவத்தை குலைக்கும் செயல் என்கிறார், வள்ளலார் பணியக கடலூர் மாவட்ட பொறுப்பாளர், முனைவர் சுப்ரமணிய சிவா. “மக்கள் கொடுத்த 106 ஏக்கரின் நடுவே ஞான சபையை நடுவில் கட்டவில்லை வள்ளலார். உடம்பில் உள்ள தலையை குறிக்கும் வண்ணம் தென் திசை மூலையில் கட்டியிருந்தார். பூத வெளி, உயிர் வெளி, யோக வெளி என 40 வெளிகளை கொண்டது பெருவெளி. ஒளி, வெளி இரண்டுமே சன்மார்க்கத்தின் பிரிக்க முடியாத அமைப்பு. எனவே வெளி என்பது எங்களுக்கு வெறும் திடல் அல்ல. பெருவெளி என்பது தத்துவம். அதை குலைக்காதீர்கள்” என்று தெரிவித்தார். எப்படி கோயில்கள் அமைப்பதற்கு ஆகம விதிகள் உள்ளனவோ அது போன்ற விதிகள் இங்கும் உள்ளன என்று சுட்டிக்காட்டும் சுப்ரமணிய சிவா, “தில்லை நடராஜர் கோயிலில் அதன் பழமையை குலைக்கும் வகையில் தீட்சிதர்கள் கட்டிடத்தில் மாற்றங்கள் செய்கிறார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அதே இந்து சமய அறநிலையத்துறை எங்களது பெருவெளியை குலைக்கப் பார்க்கிறது.” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். நிலத்தை தானமாக வழங்கிய பார்வதிபுரம் மக்கள் வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள மக்களின் முன்னோர்கள் சத்ய தர்ம சாலை அமைப்பதற்காக தங்கள் நிலத்தை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சர்வதேச மையத்தின் கட்டுமானத்தை எதிர்க்கும் அவர்கள், பெருவெளியில் தோண்டப்பட்ட குழிகளுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்திட்டத்துக்கான கருத்துக்கேட்புக் கூட்டம் வெளிப்படையாக நடத்தப்படவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாடாக இருக்கிறது. ஏப்ரல் 10ம் தேதி மீண்டும் அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ‘வேண்டுகோள் ஆர்ப்பாட்டம்’ நடத்தினர். இதில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ‘அரசு வெளிப்படையாக இல்லை’ பட மூலாதாரம்,FACEBOOK இந்து சமய அறநிலையத்துறை மக்களிடம் வெளிப்படையாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்கிறார் தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “முதலில் 12 ஏக்கர் நிலம் எடுக்கப்படும் என்றார்கள், பிறகு 3.8 ஏக்கர் நிலம் எடுப்போம் என்கிறார்கள். வள்ளலாரின் கொள்கைகளை உலகுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்தை வரவேற்கிறோம். ஆனால் அரசின் முயற்சி அவரது கொள்கைகளுக்கே மாற்றாக இருந்தால், முன்னுரிமை கொள்கைக்கு தான், பிறகு தான் சர்வதேச மையம்” என்கிறார். “சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் அனுமதி இல்லாமல் ஏதாவது கட்டடம் கட்ட முடியுமா? விவேகானந்தர் பாறையில் புதிதாக எதையும் கட்ட முடியுமா?” என்று கேள்வி எழுப்பும் மணியரசன், இதுவும் மதத்தின் ஒரு பிரிவு, ஒரு தனிப்பட்ட வழிபாட்டு முறை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, “வள்ளலார் சர்வதேச மையம் வள்ளலாரின் கொள்கைகள் அடிப்படையில் அமைய வேண்டும், திராவிட மாடல் அடிப்படையில் அல்ல” என்று குறிப்பிட்டிருந்தார். அரசு என்ன கூறுகிறது? இந்து சமய அறநிலையத்துறை சார்பாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வள்ளலார் சர்வதேச மையத்துக்கான அடிக்கல் நாட்டு நடைபெற்றது. இந்த விழாவை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலி வாயிலாக சென்னையிலிருந்து தொடங்கி வைத்தார். வடலூரில் நேரில் இருந்து அடிக்கல் நாட்டிய வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், “பெருவெளி நிலமான 72 ஏக்கரில் 3.42 ஏக்கர் மட்டுமே சர்வதேச மையம் கட்டுவதற்கான பயன்படுத்தப்பட உள்ளது. ஆனால் இதை வேண்டுமென்றே சிலர் அரசியலாக்குகின்றனர்” என்று பேசியிருந்தார். இத்திட்டத்துக்கான கருத்துக்கேட்புக் கூட்டங்கள் இரண்டு தடவை முறையாக நடத்தப்பட்டுள்ளன என்றும் அரசு தரப்பு கூறுகிறது. சர்வதேச மையத்தின் கட்டுமான விவரங்களை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமானம் குறித்த தகவல்களை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு வரும் 24ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. பாஜகவின் ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவை சேர்ந்த வினோத் ராகவேந்திரன், சத்ய ஞான சபை நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அருட்பெரும் ஜோதியை எட்டுகால் வாயில் திறப்பின் போது மக்கள் காண்பதற்காக வள்ளலார் பெருவெளியை விட்டுச் சென்றார் என்றும் எனவே அந்த இடத்தில் சர்வதேச மையம் கட்டக் கூடாது என்றும் தனது மனுவில் கூறியிருந்தார். தைப்பூசம் மற்றும் பௌர்ணமி நாட்களில் மக்கள் பெருவெளியில் கூடும் போது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதாலேயே அங்கு சர்வதேச மையம் அமைக்க திட்டமிட்டது என தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியது. அறங்காவலர்கள் கொண்ட குழு அமைக்காமல் சர்வதேச மையம் அமைப்பது இந்து சமய அறநிலைய சட்டம் 1959-ன் படி குற்றமாகும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வதேச மையம் கட்டி முடிக்கப்பட்ட பின் அது சத்ய ஞான சபையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cn0w7p9gnz4o
  17. மே தினத்தில் குப்பைகளை அள்ள 1000 தொழிலாளர்கள் பணியில்! தொழிலாளர் தினமான இன்று (மே 1) கொழும்பு நகரை துப்பரவு செய்யும் பணியில் 1000 பேர் கொண்ட பணியாளர்கள் ஈடுபடவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் ஷாஹினா மைஷான் தெரிவித்துள்ளார். ஏனைய நாட்களில் கொழும்பு நகரை துப்பரவு செய்யும் 700 தொழிலாளர்களுக்கு மேலதிகமாக மேலும் 300 பேர் இவ்வாறு பணியமர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நடத்தும் மே பேரணிகள் மற்றும் அணிவகுப்புகள் மூலம் கொழும்பில் இன்று குவியும் கழிவுகளை விரைவாக அகற்றுவதே இந்த குழுவின் முதன்மை நோக்கமாகும் என்றும் 1000க்கும் மேற்பட்ட இந்த தொழிலாளர் படை 24 மணி நேரமும் இரவும் பகலும் வேலை செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி மே 2ஆம் திகதி தொழிலாளர் தினத்தின் பின்னர் கொழும்புக்கான சேவைகளை வழங்குவது உட்பட கடமைக்கு வரும் பொது மக்களை தூய்மையான நகரமாக காண கொழும்பு மாநகர சபை தன்னால் இயன்றளவு செயற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/300640
  18. அண்ணை இது விசப்பரீட்சை என்று தோன்றுகிறது.
  19. 3 மணி நேரங்களுக்கு முன்னர் குஜராத்தின் சூரத் நகரைச் சேந்த அங்கித் பரன்வால் ஒரு ஃபுட் விலாகர். சூரத் நகரத்தில் இருக்கும் உணவகங்கள், கஃபேடேரியாக்கள், ரெஸ்டாரண்டுகளுக்கு சென்று தன்னுடைய யூடியூப் சேனல் பார்வையாளர்களுக்காக சிறந்த மற்றும் புதிய உணவு வீடியோக்களைப் பதிவு செய்து வெளியிடுகிறார். “இந்தியாவின் முதல் மாற்றுத் திறனாளி ஃபுட் விலாகர் நான் தான் என்று நினைக்கிறேன். என்னால நடக்க, நகர முடியாது, ஆனாலும் இந்தத் துறையில் நுழைந்தேன். நான் இந்த தொழிலில் என்னால் முடிந்ததை செய்கிறேன்”, என்கிறார் அங்கித் பரன்வால். தொடர்ந்து உற்சாகமாக பேசும் அவர், “நான் சூரத்தில் பிஆர்டிஎஸ் திட்டத்தில் 18 மாதங்கள் வேலை செய்தேன். கொரோனா வந்த பிறகு, என் வேலையை இழந்தேன். வேலைக்காக பல இடங்களில் விண்ணப்பித்தேன், ஆனால் கிடைக்கவில்லை. நான் ஒரு உணவுப் பைத்தியம், பலவகையான உணவுகளை ருசிக்க விரும்புவேன். இதற்கு முன்பாக, சில வெப் சீரிஸ்கள், குறும்படங்களை எடுத்துள்ளேன். நடக்க முடியாத ஒருவர் ஃபுட் வீலாகிங் செய்வது இதுவே முதல் முறை. மக்கள் எனது வீடியோக்களை விரும்பினார்கள், அவர்களால் நான் இன்று பிரபலமாகிவிட்டேன்.” என்கிறார் அங்கித். பிபிசியிடம் பேசிய அங்கித்தின் தாய் அன்னு பரன்வால், “அங்கித் பிறந்த போது அவனுக்கு முதுகில் புற்றுநோய் கட்டி இருந்தது. அங்கித் மூன்று மாத குழந்தையாக இருந்தபோது, மருத்துவர்கள் அந்த கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்தனர். அங்கித் 1 வயதாக இருந்தபோதும், அவனது கால்களில் எந்த அசைவும் இல்லை. நாங்கள் மருத்துவர்களைக் கலந்தாலோசித்தோம், ஆனால் அவர்களால் அங்கித்தின் நிலைமைக்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் இந்த விஷயங்களைச் செய்யத் தொடங்கிய போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். அவனுடைய பணி மற்றும் அர்ப்பணிப்புக்காக மக்கள் இன்று அவனைப் பாராட்டுகின்றனர்” என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/ce9rqn3z3d2o
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 30 ஏப்ரல் 2024 இந்திய சுற்றுலாத்துறை 2023-ம் ஆண்டு வெளியிட்ட பட்டியலின்படி, இந்திய அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பிடித்து இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்குப் பிடித்தமான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது. தற்போது, கோடைக்காலம் என்பதால் வெப்ப அலையில் மக்கள் வாடி வதங்கி வருகின்றனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. வெப்பத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் மலைப்பிரதேசங்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் கோடை விடுமுறை காலத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் குவிவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி, கொரோனா காலத்தில் கடைபிடித்தது போல இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற உத்தரவிட்டிருக்கிறது. இ-பாஸ் பெறுவது எப்படி? அரசு பேருந்துகளில் செல்லலாமா? அரசு கூறுவது என்ன? இந்த நடைமுறையால் சுற்றுச்சூழல் காக்கப்படுமா? தமிழ்நாட்டில் பல்வேறு வகையான சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. அதில் கொடைக்கானல், ஊட்டி, ஏலகிரி, ஏற்காடு போன்ற மலைகள் சார்ந்த சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் அரசியாக கருதப்படும் ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை என்பது ஆண்டுதோறும் இருக்கும். குறிப்பாக கோடைக் காலங்களில் வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மக்கள் இந்த இரண்டு சுற்றுலாத்தலங்களை முக்கியமாக தேர்வு செய்வார்கள். இப்போது இதற்கு நீதிமன்றம் இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்துள்ளது. இ- பாஸ் முறை ஏன்? சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இதில் நீலகிரி மற்றும் திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர்கள் காணொளி வாயிலாக ஆஜராகி இருந்தனர். தமிழ்நாடு அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் ஊட்டிக்கு நாள்தோறும் கோடை விடுமுறை காலங்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருவதாகவும் இதில் 1,300 வேன்கள் அடங்கியிருப்பதாகவும் தகவல் அளித்திருந்தது. இதனை கேட்ட நீதிபதி அதிர்ச்சியடைந்து இவ்வளவு வாகனங்கள் ஒரே நேரத்தில் மலை பகுதிகளுக்குச் சென்றால் நிலைமை மோசமாகும், உள்ளூர் மக்கள் நடமாட இயலாத சூழல் ஏற்படும், சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறினர். மேலும், சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம் ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வறிக்கையை அளிக்குமாறு கூறினர். மேலும், மலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறையை ஊட்டி மற்றும் கொடைக்கானலில் மே ஏழாம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும் என்றும் நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இ- பாஸ் நடைமுறைகள் என்ன? இ-பாஸ் விதிமுறையை பின்பற்ற கூறிய நீதிபதிகள் அதனை வழங்குவதற்கு முன்பாக வாகனங்களில் வருவோரிடமிருந்து என்ன மாதிரியான வாகனம், எத்தனை பேர், எத்தனை நாள் சுற்றுலா உள்ளிட்ட விவரங்களை பெற வேண்டும். இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், உள்ளூர் மக்களுக்கு இந்த இ- பாஸ் நடைமுறையில் விலக்கு அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். இந்த இ-பாஸ் நடைமுறையை இந்திய அளவில் விரிவான விளம்பரம் கொடுக்க வேண்டும், இ-பாஸ் வழங்குவதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். 'மலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு' இதுகுறித்து பிபிசி தமிழிடம் பெயர் குறிப்பிடாத சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகம். குறிப்பாக, கொடைக்கானலை சீசன் அல்லாத மாதங்களில் ஆயிரம் முதல் 2,000 வாகனங்கள் மலைக்கு சுற்றுலாப் பயணிகளுடன் வரும். இதுவே கோடை விடுமுறை நாட்களில் 20,000 முதல் 30,000 வரையில் வாகனங்கள் வரும். இதனால் மலையில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிரம்பி வழியும் சூழலை காண முடியும். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் இதனை நம்பி தொழில் செய்யும் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு வருமானத்தை ஈட்டி கொடுக்கும் மறுபுறம் போக்குவரத்து நெரிசலால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது கடினமாக மாறி இருக்கிறது. நீதிமன்றம் இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்திடம் சுற்றுலாவுக்காக வரும் மக்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. சுற்றுலாத்துறை, காவல்துறை, வனத்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து இ-பாஸ் நடைமுறையை எப்படி முறைப்படுத்தி செயல்படுத்தலாம் என்பது குறித்து பேசப்பட்டு இருக்கிறது. எதன் அடிப்படையில், இ-பாஸ் எத்தனை பேருக்கு வழங்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது", என்றார். இ-பாஸ் பெறுவது எப்படி? படக்குறிப்பு,திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி இதுகுறித்து பிபிசி தமிழிடம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பேசுகையில், "நீதிமன்றம் அளித்த உத்தரவுகளை பின்பற்றி இ-பாஸ் சேவையை வழங்குவது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. இ-பாஸ் பதிவு செய்யும் இணையதள பக்கம் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் பதிவு செய்த வாகனங்கள் மட்டுமே கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்படும். அதற்கு முன்னதாகவே இந்த இணையதள பக்கம் பயன்பாட்டுக்கு வரும். இதில் முன்பதிவு செய்துவிட்டு கொடைக்கானலுக்கு சென்று மக்கள் சுற்றிப் பார்க்கலாம். ஒருநாளைக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம், பேருந்தில் செல்பவர்களுக்கு அனுமதி எப்படி உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் விரிவாக விவாதிக்கப்பட்டு இருக்கின்றன. ஓரிரு நாளில் அதற்கான அறிவிப்புகள் முறையாக அறிவிக்கப்படும்", என தெரிவித்தார். 'இ- பாஸ் நடைமுறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு சிக்கல்' படக்குறிப்பு,சுற்றுலாத்துறை உதவி பேராசியர் கோ.வை. திலீபன். "இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப் பயணிகள் சில சிக்கல்களை சந்திக்கலாம்", என்கிறார் சுற்றுலாத்துறை உதவி பேராசியர் கோ.வை. திலீபன். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், "கோடை காலங்களில் மலைப்பிரதேசங்களை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருக்கும். இதனால் கூட்ட நெரிசலை சுற்றுலா தலங்கள் சந்திக்கும். தற்பொழுது நீதிமன்றம் வாயிலாக நடைமுறைக்கு வரவிருக்கும் இ-பாஸ் முறை சுற்றுலாப் பயணிகள் கூட்ட நெரிசலின்றி சுற்றுலா சென்று பல்வேறு பகுதிகளை பார்த்து வர இயலும். ஆனால், சிலருக்கு விடுமுறை நாட்களில் மட்டுமே சுற்றுலா செல்ல முடியும். அவர்களுக்கு இந்த இ-பாஸ் நடைமுறை சிக்கலை கொண்டு வரலாம். ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிக்கு மட்டுமே இந்த நடைமுறை ஏற்படுத்தப்பட்டிருப்பதால், ஏலகிரி, ஏற்காடு, மேகமலை போன்ற வேறு சில பகுதிகளை நோக்கிச் சுற்றுலா பயணிகள் செல்வார்கள். இதனால் அந்த பகுதியில் சுற்றுலா சார்ந்த வியாபாரங்கள் நடைபெறும்”, என்றார். 'சுற்றுலாப் பயணிகளை நம்பியிருப்போர் தொழில்கள் பாதிப்பு' இதுகுறித்து சுற்றுலா வழிகாட்டி விஜய் பிபிசி தமிழிடம் பேசுகையில், "கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை நம்பி ஹோட்டல்கள், தங்கும், விடுதிகள் சிறு வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என அனைத்துத் தரப்பு தொழிலும் இ-பாஸ் நடைமுறையால் பாதிக்கும் சூழல் ஏற்படும். கொடைக்கானலுக்கு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும். இதனால் குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகள் மட்டுமே கொடைக்கானலுக்கு வருவார்கள். இவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதால், சீசனை நம்பி பல ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து தொழில் செய்யும் சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, இதனை நடைமுறைப்படுத்த அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிப்பதாக”, கூறுகிறார். 'சொந்த வாகனங்களுக்குக் கட்டுப்பாடு அவசியம்' படக்குறிப்பு,'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன் "கொடைக்கானல், ஊட்டி ஆகிய நகரங்கள் தாங்கும் திறனை தாண்டி விட்டதாக," கூறுகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், "கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை சுற்றுலாத் தலங்கள் அதன் தாங்கு திறனை தாண்டி விட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மக்கள் நெரிசலால் உயிர்பன்மை தன்மை பாதிக்கப்படாமல் அதை பாதுகாக்க வேண்டும். சுற்றுலா தலங்களுக்கு சொந்த வாகனங்களில் செல்வதற்குக் கட்டுப்பாடுகள் வேண்டும், அறிவியல்பூர்வமாக, அதன் தாங்கும் திறனை கண்டறிந்து தொழிலாளர்களின் பொருளாதாரம் பாதிக்காத வகையில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்", என்கிறார். https://www.bbc.com/tamil/articles/cv26jjgvq1xo
  21. சர்வதேச தொழிலாளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது .இத்தினத்தை உலகின் ஒவ்வொரு நாடும் அணிவகுப்புகள், பேரணிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொண்டாடுகிறது! இந்த ஆண்டு தொழிலாளர் தினத்தை கொண்டாடும் வகையில், இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இன்று மே தின அணிவகுப்பு கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன. அதன்படி நாடளாவிய ரீதியில் 40 பேரணிகள் நடைபெறவுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இன்று இரண்டு மே தினக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி, இன்று காலை கொட்டகலை பொது விளையாட்டரங்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். தேசிய மக்கள் சக்தி கொழும்பு, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் அனுராதபுரத்தில் நான்கு பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பிலும் தலவாக்கலையிலும் இரண்டு மே தினக் கூட்டங்களை நடத்துகிறது . ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கொழும்பு கெம்பல் மைதானத்தில் மேதினக் கூட்டத்தை நடத்துகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தை கம்பஹாவில் நடத்துகிறது. https://thinakkural.lk/article/300621
  22. 01 MAY, 2024 | 10:15 AM பேலியகொடை பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 25 விபச்சாரிகள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரிய வந்துள்ளது . போதைப்பொருள் பாவனைக்காக விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு, கைது செய்யப்பட்ட 25 பெண்களும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் இவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது . இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போது இவர்கள் கொனோரியா, ஹெர்பெஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது . சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்திய கண்காணிப்பின் கீழ் அவர்களுக்கு சிகிச்சை அழித்து மறுவாழ்வு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், இந்த பெண்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வைத்திய பரிசோதனைகளை செய்து கொள்ளுமாறு பேலியகொடை பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/182382
  23. சாதாரண தரப் பரீட்சைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி: பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிவிப்பு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடாத்துவதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்நிலையில், சீரற்ற வானிலை மற்றும் மழையுடன் கூடிய அவசர நிலைமைகள் ஏற்பட்டால், தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மழை காரணமாக மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டால், ‘117’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்க முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்வருடம் 459,979 பரீட்சார்த்திகள் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு 3527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/300629
  24. ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு Published By: DIGITAL DESK 7 01 MAY, 2024 | 09:19 AM ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் (Mr. Erik Solheim) வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை, மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றம், எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள், சுற்றாடல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/182377
  25. இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு! Published By: VISHNU 30 APR, 2024 | 09:44 PM இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ஒக்டேன் 92 பெற்றோலின் விலை லிட்டருக்கு 3 ரூபாவினால் குறைக்கப்பட்டு 368 ரூபாவாக குறைந்துள்ளது. ஒக்டேன் 95 பெற்றோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 420 ரூபாவாகும். அதேபோல், ஒரு லீற்றர் லங்கா டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டவுள்ள நிலையில் அதன் புதிய விலை 333 ரூபாவாக குறைவடையவுள்ளது. சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 9 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 377 ரூபாவாகும். மேலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 215 ரூபாய் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/182364

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.