Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. நிஸ்ஸன்க, அசலன்க துடுப்பாட்டத்தில் அபாரம்; இலங்கை வெற்றிபெற்று தொடரை (1-1) சமப்படுத்தியது Published By: VISHNU 15 MAR, 2024 | 10:30 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராம், ஸஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களால் இலங்கை வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1 - 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது. பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அபார சதம், உதவி அணித் தலைவர் சரித் அசலன்க பெற்ற அரைச் சதம் மற்றும் அவர்கள் பகிர்ந்த சாதனைமிகு 4ஆவது விக்கெட் இணைப்பாட்டம், வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே ஆகியோர் 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 34 ஓட்டங்கள் என்பன இலங்கையை வெற்றிபெறச் செய்தன. பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 287 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 47.1 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 287 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. பங்களாதேஷைப் போன்று இலங்கையும் ஆரம்ப வீரர் அவிஷ்க பெர்னாண்டோவை (0) முதலாவது ஓவரிலேய இழந்தது. (1 - 1 விக்.) பெத்தும் நிஸ்ஸன்க, அணித் தலைவர் குசல் மெண்டிஸ் (18) ஆகிய இருவரும் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிய உற்சாகத்தைக் கொடுத்தனர். குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம (1) ஆகிய இருவரும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் இலங்கை அழுத்தத்தை எதிர்கொண்டது. எனினும், பெத்தும் நிஸ்ஸன்க, சரித் அசலன்க ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் சாதனை மிகு 185 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர். அவர்கள் இருவரும் பகிர்ந்த 185 ஓட்டங்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் சகல நாடுகளுக்கும் எதிராக இலங்கையினால் பகிரப்பட்ட அதிசிறந்த 4ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக அமைந்தது. ஆனால், அவர்கள் இருவரும் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தமை இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. (235 - 5 விக்.) பெத்தும் நிஸ்ஸன்க 113 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 114 ஓட்டங்களைக் குவித்தார். இது அவர் பெற்ற 6ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சதமாகும். மறுபக்கத்தில் அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய சரித் அசலன்க, 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழந்தார். முதலாவது போட்டியில் அரைச் சதம் குவித்த ஜனித் லியனகே இந்தப் போட்டியில் வெறும் 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (251 - 6 விக்.) ஆனால், வனிந்து ஹசரங்கவும் துனித் வெல்லாலகேயும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்க இலங்கைக்கு உதவினர். வனிந்து ஹசரங்க 16 பந்துகளில் 2 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 25 ஓட்டங்களைப் பெற்றார். துனித் வெல்லாலகே ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்று இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார். பந்துவீச்சில் ஷொரிபுல் இஸ்லாம், தஸ்கின் அஹ்மத் ஆகிய இருவரும் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற ஒரே பந்துவீச்சுப் பெறுதியைக் கொண்டிருந்தனர். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 286 ஓட்டங்களைக் குவித்தது. இந்தத் தொடரில் இரண்டாவது தடவையாக லிட்டன் தாஸின் விக்கெட்டை முதலாவது ஓவரிலேயே டில்ஷான் மதுஷன்க வீழ்த்தினார். ஆனால், சௌம்யா சர்க்கார், அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர். ஷன்டோ 6 பவுண்டறிகளுடன் 40 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து சர்க்கார், தௌஹித் ரிதோய் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர். சர்க்கார் 11 பவுண்டறிகள், ஒரு சிச்ஸுடன் 68 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார். (130 - 3 விக்) அதே மொத்த எண்ணிக்கையில் மஹ்முதுல்லா ஓட்டம் பெறாமல் நடையைக் கட்டினார். ஆனால், முஷ்பிக்குர் ரஹிம் (25), மெஹிதி ஹசன் மிராஸ் (12), தன்ஸிம் ஹசன் சக்கிப் (18) ஆகியோர் தௌஹித் ரிதோய்க்கு சிறப்பான பங்களிப்பு வழங்கினர். ஒரு பக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தௌஹித் ரிதோய், பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் தஸ்கின் அஹ்மதுடன் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷ் அணியின் மொத்த எண்ணிக்கையை 286 ஓட்டங்களாக உயர்த்தினார். தௌஹித் ரிதோய் 102 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகள் உட்பட 96 ஓட்டங்களுடனும் தஸ்கின் அஹ்மத் 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். இப் போட்டியில் தனது ஏழாவது ஓவரில் உபாதைக்குள்ளாகி ஒய்வு பெற்ற டில்ஷான் மதுஷன்க 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஆட்டநாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க. https://www.virakesari.lk/article/178828
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தமிழ்நாட்டில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்திருப்பது, பாஜகவிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. பாஜக மட்டுமல்லாமல், ‘முருகன் தமிழர்களின் இறைவன்’ என்ற முழக்கத்தைத் தொடர்ந்து முன்வைத்து வரும் நாம் தமிழர் கட்சியும் இதை விமர்சித்துள்ளது. இந்து வாக்குகளை கவர்வதற்காகன ’அரசியல் தந்திரம்’ என்று அக்கட்சிகள் தெரிவித்துள்ளன. என்ன சர்ச்சை? அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஜூன் அல்லது ஜூலையில் வெகுவிமரிசையாக நடைபெறும். உலகளவில் இருக்கும் முருக பக்தர்கள், முருக கோவில்களைப் பராமரிப்பவர்களை தமிழகத்திற்கு அழைத்து இரண்டு நாட்கள் மாநாடு நடத்தப்படும்” எனத் தெரிவித்தார். இந்த மாநாட்டில் கண்காட்சிகள், கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே தமிழ்நாடு பாஜக இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. பாஜக பொதுச் செயலாளர் ஆர். சீனிவாசன், “முதலில் பாஜக மத்திய அரசின் திட்டங்களை தங்கள் திட்டங்களாக காட்டிக்கொண்டு ‘ஸ்டிக்கர்’ ஒட்டியது. முருகனை தமிழ்நாட்டுக்கு மட்டும் சுருக்கிவிட முடியாது. அவரை உலகம் முழுவதிலும் வழிபடுகின்றனர். இத்தகைய சூழ்ச்சிகளில் தமிழ்நாட்டு மக்கள் சிக்க மாட்டார்கள்,” எனத் தெரிவித்திருந்தார். இம்மாநாட்டை நடத்துவதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் ஆட்சி அமைத்ததில் இருந்தே முருகன் கோவில்களுக்காகப் பலவித திட்டங்களுக்கு நிதியுதவி செய்து வந்ததாகவும் சேகர்பாபு விளக்கம் அளித்தார். ”திருச்செந்தூர் முருகன் கோவிலைப் புணரமைக்க தமிழக அரசு ரூ.300 கோடி நிதி ஒதுக்கியுள்ளது” என்றும் அவர் கூறினார். இதையொட்டித்தான் தற்போது சர்ச்சை எழுந்திருக்கிறது. 'அரசியல் ஆதாயம்' முருகனுக்கு மாநாடு நடத்துவது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், "இது நிச்சயம் அரசியல் ஆதாயத்துக்காகத்தான்," என்று விமர்சித்தார். தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்குக்கூட முதலமைச்சர் வாழ்த்து கூறியதில்லை. முருகனுக்கு முக்கிய நிகழ்வான தைப்பூசத்திற்குக்கூட வாழ்த்து கூறியதில்லை. அப்படியிருக்கும்போது, இப்போது முருகனுக்கு மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? சனாதனம் குறித்துப் பேசிய உதயநிதிக்கு எந்தவித கண்டிப்பும் தெரிவிக்காத முதல்வர் இதை நடத்துவது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். 'பாஜகவின் ஏ டீமா?' பட மூலாதாரம்,@SEEMANOFFICIAL 'முப்பாட்டன் முருகன்', 'குறிஞ்சி தந்த தலைவன்', 'இன மூதாதை' என முருகன் 'தமிழ்க்கடவுள்', 'தமிழர்களுக்கான கடவுள்' என்ற வாதத்தை தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது நாம் தமிழர் கட்சி. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் அக்கட்சி சார்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகன் 'இந்து கடவுள் அல்ல, தமிழர் கடவுள்' என்பது அக்கட்சியின் வாதம். இம்மாநாடு தொடர்பாக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பிபிசி தமிழிடம் பேசுகையில், "திராவிடத்தை விடுத்து, தமிழர்களின் கடவுளைக் கொண்டாடினால்தான் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும் என்ற புரிதல் திமுகவுக்கு இப்போதுதான் வந்திருக்கிறது. நாங்கள் முருகனைக் கொண்டாடியதற்கு எங்களை பாஜக 'பி டீம்' என்றனர். இந்துத்துவத்திற்கும் வேலுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? ஆனால், எங்களை நோக்கி ஆர்.எஸ்.எஸ்-இன் இன்னொரு அமைப்பு என்றனர். இப்போது இவர்கள் பாஜகவின் ‘ஏ’ டீமா?" என்றார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஜூன் அல்லது ஜூலை மாதம் நடக்கவிருக்கும் மாநாடு குறித்து இப்போதே திமுக அறிவித்திருப்பது, தேர்தல் லாபத்திற்காகத்தான் என்றார் அவர். "இது அக்கட்சியின் அரசியல் உத்தி எனச் சொல்வதைவிட தந்திரம் என்றுதான் சொல்ல வேண்டும்," எனக் கூறுகிறார் காளியம்மாள். 'பாஜகவுக்கு பயம்' பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த விமர்சனங்கள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, "அறநிலையத்துறை வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் தான் இவை. இந்து சமய விதிகளுக்கு உட்பட்டு கோவில் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்தான். அதில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேள்வியெழுப்புகிறார். மேலும், "நாங்கள் முருகன் குறித்துப் பேசினால் பாஜகவுக்கு ஏன் கோபம் வருகிறது? அவர்கள் இதை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறார்கள் போல. அதனால் பயப்படுகிறார்கள் என நினைக்கிறேன். திமுகவின் கொள்கைகளைத் தெரிந்துகொள்ளாமல் பாஜக பேசுகிறது. இதற்கும் இந்துத்துவத்திற்கும் சம்பந்தமில்லை. எல்லா மதங்களுக்கும் அமைப்பு இருக்கிறது," என்றார். முஸ்லிம்கள் நலன்களுக்கென வக்பு வாரியம் இருப்பதையும் ஆர்.எஸ். பாரதி சுட்டிக்காட்டினார். முருகனும் தமிழக அரசியல் கட்சிகளும் பட மூலாதாரம்,L MURUGAN TWITTER படக்குறிப்பு, எல். முருகன் வேல் யாத்திரை சென்றபோது முருகனை முன்வைத்து யாத்திரை செல்வதோ, முருகனைக் கொண்டாடுவதோ தமிழக அரசியல் கட்சிகளுக்குப் புதிதல்ல. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி, 2020ஆம் ஆண்டு இறுதியில் அப்போதைய தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவரும் தற்போதைய மத்திய இணையமைச்சருமான எல். முருகன், திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை முருகனின் அறுபடை கோவில்களை மையமாக வைத்து ‘வேல் யாத்திரை நடத்தினார். அதேபோன்று, 2021ஆம் ஆண்டு ஜனவரியில், திமுக நடத்திய மக்கள் கிராமசபைக் கூட்டத்தில், மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் பரிசாக அளிக்கப்பட்டது. இதை, தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும் தங்களின் வேல் யாத்திரை வெற்றி பெற்றதை இது காட்டுவதாகவும் எல். முருகன் அப்போது தெரிவித்திருந்தார். பாஜக தவிர்த்து ஸ்டாலினுக்கு வேல் பரிசளிக்கப்பட்டதை அதிமுகவும் விமர்சித்தது. ''உண்மையான பிரார்த்தனை செய்யவேண்டும். நாம் மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்பவர்கள். ஸ்டாலின் வெளியில் பேசுவது ஒன்றாகவும், உள்ளே நினைப்பது ஒன்றாகவும் இருப்பதால், அவர் வேலை கையில் எடுத்தாலும், முருகனின் அருள் அவருக்குக் கிடைக்காது,'' என, எடப்பாடி பழனிசாமி அப்போது தெரிவித்திருந்தார். இத்தகைய விமர்சனங்களுக்கு அச்சமயத்தில் பிபிசியிடம் பதிலளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, "தமிழ்நாட்டில் முதலில் வேலுக்காக யாத்திரை நடத்தியவர் கலைஞர் கருணாநிதிதான். 1982இல் திருத்தணி கோவில் வேல் காணவில்லை என்பதை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ஏற்க மறுத்தார். திருச்செந்தூர் கோவில் வேல் மீட்கப்பட வேண்டும், திருடப்பட்ட வேல் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு நடைபயணம் சென்றவர் கருணாநிதி. இறுதியில், வேல் கண்டறிய அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கையை எம்ஜிஆர் வெளியிடவில்லை. கலைஞர் தனது திறமையால் அந்த அறிக்கையை வெளியில் கொண்டு வந்தார்,'' எனத் தெரிவித்தார். தமிழ் கலாசாரத்தில் முருகன் இம்மாநாட்டை பாஜகவின் இந்துத்துவ அரசியலுடன் பொருத்திப் பார்ப்பது பொதுபுத்தியால் விளைந்தது என்கிறார், மூத்த பத்திரிகையாளரும் 'கருணாநிதி - எ லைஃப்' உள்ளிட்ட புத்தகத்தின் ஆசிரியருமான ஏ.எஸ். பன்னீர்செல்வன். "பெரியாருடன் 1930களில் முதல் மொழிப்போரிலிருந்து உடன் இருந்தவர் மறைமலை அடிகளார். அவர் சைவ அறிஞர். தமிழ் மெய்யியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் திருமூலரும் வள்ளலாரும்தான் இருக்கின்றனர். தமிழ் மரபில் இங்கிருக்கும் முதன்மை இசை வடிவம் காவடி சிந்துதான். இது 2,000 ஆண்டுகால மரபின் நீட்சி. முருகனுக்கு மாநாடு எடுப்பதை இதனுடன் தான் பொருத்திப் பார்க்க வேண்டும்" என்றார். முருகன் தமிழ் கலாசாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஒரு கருப்பொருள் எனக் கூறும் பன்னீர்செல்வன், முக்கிய இசை வடிவமான 'காவடிச் சிந்து' பாடல்களில் அதிகமான பாடல்கள் முருகனுக்காக பாடப்பட்டுள்ளதை உதாரணமாகக் காட்டினார். "முருகன் தமிழ் கலாசாரத்தின் அடையாளம்" என்றார் அவர். "சமபந்தியும் சாதி மறுப்பு திருமணமும்தான் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை. முருகனுக்கும் குறத்திக்குமான உறவு சாதி மறுப்பைத்தான் பேசுகிறது. அதேபோன்று, இந்த இரண்டையும் பாஜக எங்கே பேசுகிறது" என அவர் கேள்வி எழுப்பினார். திருவாரூர் தேரைச் சரிசெய்து இயக்கியது, கோவில்களில் அதிகமான குடமுழுக்கு நிகழ்ச்சிகளை நடத்தியது போன்றவற்றையும் குறிப்பிட்ட பன்னீர்செல்வன், இந்து சமய அறநிலையத்துறையே நீதிக்கட்சியின் நோக்கங்களுள் ஒன்றுதான் என்றார். பாஜக இதுகுறித்துப் பேசுவது பெரிய விஷயமாக பார்க்கப்படுவதெல்லாம் இந்த தேர்தல் வரைதான் என்றும் சிறிய தோல்வி ஏற்பட்டாலும் அக்கட்சியின் இத்தகைய பேச்சுகள் மக்கள் களத்தில் எடுபடாது என்றும் அவர் கூறினார். திமுகவும் கடவுளும் பட மூலாதாரம்,TWITTER பெரியார் 1950களில் விநாயகர் சிலைகளை உடைத்தபோது, திராவிடர் கழகத்தின் வழிவந்த திமுக தலைவர் அண்ணா, "பிள்ளையாரை உடைக்கவும் மாட்டேன், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்" என்றார். "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்பதுதான் கடவுள் குறித்த திமுகவின் நிலைப்பாடாக அண்ணா கூறியது. "கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாராமாகிவிடக்கூடாது" என 'பராசக்தி' திரைப்படத்தில் வசனம் எழுதினார் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி. தற்போது, "இந்துக்களுக்கு எதிரானது திமுக" என்ற வாதத்திற்கு எதிராக அக்கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பலமுறை கருத்து தெரிவித்துள்ளார். "எங்கள் கட்சியில் 90% இந்துக்களே உள்ளனர். கோவில்களுக்குச் சென்று வழிபடுவது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம். திமுக இந்து விரோத கட்சி அல்ல" என்றார். தங்கள் குடும்பத்தினர் கோவில்களுக்குச் செல்வது அவர்களின் தனியுரிமை சார்ந்தது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். https://www.bbc.com/tamil/articles/c0jx8y85j3zo
  3. 16 MAR, 2024 | 10:05 AM வெடுக்குநாறி மலையில் மஹாசிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுவிக்ககோரி, நல்லூரில் இருந்து வவுனியா வரையான வாகனப் பேரணியானது நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் இருந்து இன்று சனிக்கிழமை (16) காலை 7.45 மணியளவில் ஆரம்பமாகியது. இப் பேரணியானது காலை 10 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தை அடைந்து, வெடுக்குநாறி மலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்ககோரி மாபெரும் போராட்டம் இடம்பெறும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்தார். இப் பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட ஆசிரிய சங்க தலைவர், உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், கைது செய்யப்பட்டவர்களின் உறவுகள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/178838
  4. இந்திய வணிகர் கிடங்கில் மீட்ட 1,500 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் - மருத்துவ உலகை புரட்டிப்போட்ட சம்பவம் கட்டுரை தகவல் எழுதியவர், எலியோனோர் ஃபிங்கெல்ஸ்டீன் பதவி, பிபிசிக்காக 40 நிமிடங்களுக்கு முன்னர் சுமார் 5 கோடி மதிப்புள்ள மனித எலும்புகளைச் சேகரித்து வைத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஜான் பிச்சயா ஃபெர்ரி. சமூக ஊடகங்களில் பலர் இவரைப் பின்தொடர்கின்றனர். எலும்பியல் துறைக்கு இவரது பணி புத்துயிர் அளிக்கிறது. நியூயார்க் நகரின் புரூக்ளினில் உள்ள அவரது கிடங்கிற்குச் சென்றபோது, தான் சேகரித்த எலும்புகள் மற்றும் கண்டுபிடித்த கண்கவர் பொருட்களைப் பற்றிய ஒரு பார்வையை நமக்கு அளித்தார். 'முறையாக சேகரிக்கப்பட்ட மனித எலும்புகள்' என்றால் என்ன? அவற்றைச் சேகரிப்பதால் எலும்பியல் துறைக்கு என்ன பயன்? மனித இனம் குறித்தும், அதன் வரலாறு குறித்தும் இந்த எலும்புகள் மூலம் எவ்வாறு அறிந்து கொள்ளலாம்? மனித எலும்புகளின் சேகரிப்பகம் "பல வீடுகளின் அடித்தளத்தில், பழங்கால குடியிருப்புகளின் பாதாள அறைகளில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மனித எலும்புகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றைக் கண்டுபிடிக்கும் மக்களுக்கு அதை என்ன செய்வதென்று தெரியவில்லை. முறையாகச் சேகரிக்கப்பட்ட மனித எலும்புகளைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மனித எச்சங்களின் சேகரிப்பகம் இது," என்கிறார் ஜான் பிச்சயா ஃபெர்ரி. ஒருகாலத்தில் மருத்துவ ஆய்வுகளுக்காக எலும்புகளை விற்பனை செய்யும் நடைமுறை பிரபலமாக இருந்தது. 1980களில் அந்த முறை முடிவுக்கு வந்தது. அப்போது பெறப்பட்ட எலும்புகளை வாங்கித் தனது சேகரிப்பகத்தில் ஜான் வைத்துள்ளார். "மருத்துவ ஆய்வுகளுக்காக தங்கள் உடலை தானமாக அளித்தவர்களின் மனித எச்சங்கள் இவை. சட்டத்திற்குப் புறம்பாக கல்லறைகளில் இருந்தோ அல்லது பழங்கால புதைவிடங்களில் இருந்தோ இதைப் பெறவில்லை. இவை பழங்குடிகளின் எலும்புகளும் இல்லை. அத்தகைய பொருட்களை நான் வாங்குவதில்லை," என்கிறார் ஜான். அமெரிக்காஅல்லது ஐரோப்பாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கும் வல்லுனர்களுக்கும் 1980கள் வரை ஆய்வுப் பணிகளுக்காக அசல் மனித எலும்புகளை வாங்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் இன்று அதுபோன்ற ஆயிரக்கணக்கான மனித எலும்புகள், ஏலத்தின் மூலமாக அல்லது குடும்பச் சொத்தாக பல தனி மனிதர்களின் பொறுப்பில் உள்ளது. "ஒரு மாதத்திற்கு 30 முதல் 50 மின்னஞ்சல்கள் வரை எங்களுக்கு வருகின்றன. உதாரணமாக, 'எங்கள் தாத்தா இறந்துவிட்டார், அவரது வீட்டின் அடித்தளத்தில் இருந்த அவரது அறையைச் சுத்தம் செய்தபோது ஒரு மனித எலும்புக்கூடு கிடைத்தது. அதை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை, பார்த்தால் பயமாக இருக்கிறது' என்பது போன்ற மின்னஞ்சல்கள் அவை," என்கிறார் ஜான். தொடர்ந்து பேசிய ஜான், "இவை அமிலங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்யப்பட்ட எலும்புகள் என்பதால் இதில் டி.என்.ஏ ஏதுமில்லை. அதனால் இவற்றை டி.என்.ஏ ஆய்வுகளுக்குப் பயன்படுத்த முடியாது. இவற்றைப் புதைப்பதும் சட்டப்படி குற்றம். அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மருத்துவ அருங்காட்சியகங்கள் அதிக அளவிலான மனித எலும்புகளைக் கையாளும் விதத்தில் வடிவமைக்கப்படவில்லை. எனவே மனித எலும்புகளை வைத்திருப்பவர்களுக்கு இதை என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது," என்று கூறுகிறார். மனித உடல்களுக்காக அதிகரித்த கல்லறைத் திருட்டுகள் மனித எலும்புகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளும் முன், மருத்துவ வரலாற்றின் ஒரு விசித்திரமான அத்தியாயத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். "அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில், 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளின்போது கல்வித்துறையில் மனித உடல்கள், எலும்புகளுக்கான தேவை அதிகமாக இருந்தது. இதனால் கல்லறைகளில் இருந்து பிணங்கள் திருடப்படுவது அதிகமாக நடைபெற்றது. இதைத் தடுக்க எண்ணற்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. அதில் ஒன்று கொலைச் சட்டம், 1751. அதன்படி ஒருவர் கொலைக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரது உடல் மருத்துவ ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படலாம். ஆனாலும்கூட அப்போது மனித எச்சங்களுக்கான தேவை குறையவில்லை. இந்த நிலை மோசமானதால், கல்லறைகளுக்கு இரும்பு வேலிகள், கூண்டுகள் போட வேண்டிய சூழல் ஏற்பட்டது," என்று கூறுகிறார் ஜான். உடற்கூறியல் சட்டம் 1832, உயிரற்ற மனித உடல்களை மருத்துவ ஆய்வுகளுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கியது. சிறைச்சாலைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை வாங்க 48 மணிநேரத்திற்கும் மேலாக யாரும் வரவில்லை என்றால், அந்த உடல்கள் ஆய்வுகளுக்கு வழங்கப்பட்டன. இறந்தவர்களின் உடல்களை மருத்துவ ஆய்வுகளுக்காக தானமாக கொடுப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. படக்குறிப்பு, ஒருவர் கொலைக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரது உடல் மருத்துவ ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்ற சட்டம் 1751இல் இயற்றப்பட்டது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள் "மருத்துவ எலும்பு வணிகம் 1800களில் தொடங்கி, 1920 முதல் 1984 வரையிலான காலகட்டத்தில் பெருமளவில் நடைபெற்றது" என்று குறிப்பிடுகிறார் ஜான். இவ்வாறு தொடங்கப்பட்ட எலும்பு வணிகம் உலகம் முழுவதும் பரவியது. 1950களில் எலும்புகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா தான் முன்னணியில் இருந்தது. "உங்கள் உறவினர்களின் உயிரற்ற உடல்களை மருத்துவ ஆய்வுகளுக்காக தானமாக வழங்கினால், அவர்களின் இறுதிச் சடங்குக்கான செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையைத் தருகிறோம் என அப்போது பல மருத்துவ நிறுவனங்கள் கூறின. இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன, பல குற்றங்களுக்கு அது வழிவகுத்தது" என்கிறார் ஜான். இந்தியாவில் 1985ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான ஒரு அதிர்ச்சிகரமான செய்தியால், உலகளவில் இந்த வணிகம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. "ஒரு எலும்பு வணிகரின் கிடங்கில் இருந்து 1500 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் இந்த முறைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டது," என்கிறார் ஜான். இந்தியாவில் போடப்பட்ட இந்தத் தடையால் மருத்துவ நிறுவனங்கள் செயற்கை எலும்புக்கூடுகளைப் பயன்படுத்தத் தொடங்கின. இன்று மருத்துவ எலும்பு வணிகம் என்பது ஒரு மறுவிற்பனை சந்தையாக மாறிவிட்டது. அமெரிக்காவின் லூசியானா, டென்னஸி, ஜார்ஜியா ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து பிற மாநிலங்களில் தங்களிடம் உள்ள மனித எலும்புகளை விற்க மக்களுக்கு அனுமதியுண்டு. "எலும்புகளை நாங்கள் பொது மக்களுக்கு விற்பதில்லை. பள்ளிகள், பல்கலைக்கழகங்களே எங்களது முக்கியமான வாடிக்கையாளர்கள். தேடுதல் மற்றும் மீட்புக் குழு உறுப்பினர்களே எங்களது இரண்டாவது பெரிய வாடிக்கையாளர்கள். எங்களிடம் எலும்புகளை வாங்கி, மோப்ப நாய்களுக்கு சடலங்களைக் கண்டறிவதற்கான பயிற்சிகளை அளிக்கப் பயன்படுத்துகிறார்கள். மனித எச்சங்களின் நாற்றத்தை மோப்ப நாய்கள் இந்த எலும்புகள் மூலம் தெரிந்துகொள்ளும்" என்று கூறுகிறார் எலும்பு சேகரிப்பாளர் ஜான். தனது சமூக ஊடகப் பக்கங்கள் மூலமாக மனித எலும்புகள் குறித்த மக்களின் பொதுப் பார்வையை மாற்ற முயல்கிறார் ஜான். "இவை வெறும் காட்சிப் பொருட்கள் அல்ல. ஒரு காலத்தில் உயிரோடு வாழ்ந்த, நம்மைப் போன்ற மனிதர்களின் எலும்புகள் இவை. எனவே இவற்றை மரியாதையோடும், கண்ணியத்தோடும் கையாள வேண்டும். இவற்றைப் பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்," என்கிறார் ஜான். https://www.bbc.com/tamil/articles/c25lpw82xr3o
  5. Published By: VISHNU 15 MAR, 2024 | 11:04 PM யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (15) அதிகாலை முச்சக்கர வண்டியில் பயணித்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகருக்கு அண்மையாக வெள்ளிக்கிழமை (15) அதிகாலை 2 மணியளவில் முச்சக்கர வண்டியில் பயணித்த 5 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்யூஸ் வீதியை சேர்ந்த 25 வயதான முச்சக்கர வண்டி சாரதி, கொக்குவிலை சேர்ந்த 25 வயதான இளைஞன், யாழ்ப்பாண நகரத்தை சேர்ந்த 20 வயதான இளைஞன், குருநகரை சேர்ந்த 26 வயதான இளைஞன், வண்ணார்பண்ணையை சேர்ந்த 19 வயதான இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டிக்குள் இருந்து வாள், இரும்பு கம்பி, இரும்பு குழாய் என்பன மீட்கப்பட்டன. https://www.virakesari.lk/article/178829
  6. விக்டோரியா, ரன்தெனிகல நீர்தேக்கங்களில் நீர் வற்றுகிறது Published By: DIGITAL DESK 3 16 MAR, 2024 | 10:23 AM மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலை காரணமாக விக்டோரியா மற்றும் ரன்தெனிகல நீர்த்தேக்கங்களில் இருந்து நாளொன்றுக்கு சுமார் எட்டு மில்லி மீற்றர் நீர் ஆவியாவதாக மத்திய மாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் திரு.தினேஷ் சுமனசேகர கூறுகிறார். மினிப்பே திட்டத்தின் கீழ் விவசாயம் மேற்கொள்வதற்காக நீர் பெறும் பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் 88 வீதம் தற்போதுள்ள போதிலும், நீர் வற்றும் நிலை கானப்படுவதால் எதிர்காலத்தில் விவசாய நடவடிக்கைகளில் நீர் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, நீரை பயன்படுத்தும் போது செய்யும் போது முறையான நீர் முகாமத்துவத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/178839
  7. இந்தியா, இலங்கையில் கூட்டாக 2026 ரி20 உலகக் கிண்ணம்; 2024 ரி20 உலகக் கிண்ண இறுதிச் சுற்றுக்கு இருப்பு நாட்கள் Published By: VISHNU 15 MAR, 2024 | 08:15 PM (நெவில் அன்தனி) ஐசிசியினால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு 2026 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவும் இலங்கையும் கூட்டாக நடத்தும் என்பதை ஐசிசி மீண்டும் உறுதிசெய்துள்ளது. 2026 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 20 அணிகள் பங்குபற்றும். 2026 ரி20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான முறைமையையும் ஐசிசி அங்கீகரித்துள்ளது. இந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் கூட்டாக நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் எட்டு இடங்களைப் பெறும் நாடுகள், வரவேற்பு நாடுகளான இந்தியாவுடனும் இலங்கையுடனும் இயல்பாகவே 2026 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெறும். வரவேற்பு நாடுகளின் நிரல்படுத்தல்களைப் பொறுத்து இரண்டு முதல் நான்கு வரையான மற்றைய அணிகள் தீர்மானிக்கப்படும். எஞ்சிய 8 நாடுகள் பிராந்திய தகுதிகாண் சுற்றுகள் மூலம் ரி20 உலகக் கிண்ணத்தில் இணையும். இது இவ்வாறிருக்க, இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு இருப்பு (ரிசேர்வ்) நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இன்றைய ஐசிசி சபைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அத்துடன் குழு நிலைப் போட்டிகள் (லீக் சுற்று) மற்றும் சுப்பர் 8 சுற்று போட்டிகளின்போது ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும அணிக்கு குறைந்தது ஐந்து ஓவர்கள் வீசப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் நொக் அவுட் போட்டிகளில் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு குறைந்தபட்சம் 10 ஓவர்கள் வீசப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி மேலும் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/178827
  8. 2024 ரி - 20 உலகக் கிண்ணத்திலிருந்து சர்வதேச வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நிறுத்தக் கடிகார முறைமை நிரந்தரம் 15 MAR, 2024 | 05:39 PM (நெவில் அன்தனி) இந்த வருடம் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து வெள்ளைப் பந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நிறுத்தக் கடிகாரம் (Stop clock) முறைமை நிரந்தரமாக்கப்படவுள்ளது. இந்த முடிவு வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) வருடாந்த சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் 2024 ஜூன் மாதம் தொடங்கவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியிலிருந்து அனைத்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் ரி20 சர்வதேச போட்டிகளிலும் நிறுத்தக் கடிகாரம் நிரந்தரமாக்கப்படும். ஆடவருக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் சர்வதேச போட்டிகளில் 2023 டிசம்பரில் பரீட்சார்த்த அடிப்படையில் நிறுத்தக் கடிகாரத்தை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இந்த பரீட்சார்த்த செயற்பாடு 2024 ஏப்ரல் வரை தொடர்வதாக இருந்தது. ஆனால், இந்த பரீச்சார்த்த செயற்பாடானது போட்டிகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைவு செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பரீட்சார்த்த செயற்பாட்டின் மூலம் ஒவ்வொரு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் 20 நிமிடங்களை மீதப்படுத்தலாம் என பிரதம நிறைவேற்று அதிகாரிகள் குழுவிடம் எடுத்துக்கூறப்பட்டது. இதற்கு அமைய சகல முழு அந்தஸ்துடைய நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ரி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்த முறைமை 2024 ஜூன் 1ஆம் திகதயிலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்திலிருந்துதான் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது. நிறுத்தக் கடிகார விதிக்கு அமைய வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகளில் களத்தடுப்பில் ஈடுபடும் அணியினர் ஒரு ஓவர் முடிவடைந்து 60 செக்கன்களுக்குள் அடுத்த ஓவரை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 60 செக்கன்களிலிருந்து பூஜ்ஜியம் வரை பின்னோக்கி நகரும் மின்னியல் கடிகாரம் மைதானத்தில் காட்சிப்படுத்தப்படும். கடிகாரத்தின் தொடக்கத்தை தீர்மானிப்பது மூன்றாவது மத்தியஸ்தரின் பொறுப்பில் இருக்கும். களத்தடுப்பில் ஈடுபடும் அணி முந்தைய ஓவர் முடிவடைந்து குறிப்பிட்ட 60 செக்கன்களுக்குள் அடுத்த ஓவரின் முதலாவது பந்தை வீச தவறினால் 2 எச்சரிக்கைகளுக்கு உள்ளாகும். தொடர்ச்சியாக மீறல்கள் இடம்பெற்றால் ஒவ்வொரு மீறல்களுக்கும் 5 ஓட்டங்கள் வீதம் அபாராதம் விதிக்கப்படும். அதாவது மற்றைய அணியின் மொத்த எண்ணிக்கைக்கு 5 ஓட்டங்கள் வீதம் சேரும். இந்த விதியில் சில விதிவிலக்குகள் உள்ளன, மேலும் கடிகாரம் ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்தால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப அது ரத்து செய்யப்படலாம். ஓவர்களுக்கு இடையில் ஒரு புதிய துடுப்பாட்ட வீரர் களம் நுழையும்போது, உத்தியோகபூர்வ தாகசாந்தி இடைவெளி அறிவிக்கப்படும்போது, துடுபாட்ட வீரர் அல்லது களத்தடுப்பாளருக்கு உபாதை ஏற்பட்டு சிகிச்சைக்கு கள மத்தியஸ்தர் ஒப்புதல் வழங்கும்போது, களத்தடுப்பில் ஈடுபடும் அணியின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட எந்த சூழ்நிலையிலும் நேரம் இழக்கப்படும்போது இந்த விதியில் விதிவிலக்களிக்கப்படும். https://www.virakesari.lk/article/178815
  9. நிவாரணப் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - 6 பேர் உயிரிழப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது. கடந்த ஐந்து மாதங்களாக இஸ்ரேல் இராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். முதலில் எல்லை அருகில் உள்ள வடக்குப் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்கல் நடத்தியது. இதில் வடக்கு காசா முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. இங்கு வசித்து வந்த பெரும்பாலான மக்கள் தெற்கு பகுதிக்கு சென்றுள்ளனர். இதேபோல் கடைசி நகராக, ரபா நகரை இஸ்ரேல் படை குறிவைத்துள்ளது. ரபா நகரில் உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்றிவிட்டு தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை திட்டமிட்டுள்ளது இதற்கிடையே போரினால் காசாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு சரியான அளவில் உணவு மற்றும் உதவிப் பொருட்கள் கிடைக்காததால்,பசி பட்டினியால் வாடுகின்றனர். மக்களுக்கு ஐ.நா. அமைப்புகள் சார்பில் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இங்கும் கடும் நெரிசல் காணப்படுகிறது. இந்நிலையில், வடக்கு காசா நகரில் நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படையினர் இன்று துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில்,6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். https://thinakkural.lk/article/295887
  10. நாட்டில் காசநோயாளர்களின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. அத்துடன் அடையாளம் காணப்பட்ட காசநோயாளர்களில் நாள் ஒன்றுக்கு இரண்டு பேர் மரணிப்பதாக அந்த வேலைத்திட்டம் குறிப்பிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் நாட்டில் 9,358 காசநோயாளரகள் பதிவாகினர். இதுவே அண்மையில் பதிவான அதிகூடிய எண்ணிக்கையாகும். நாட்டில் அதிகளவான காசநோயாளர்கள் மேல் மாகாணத்தின் கொழும்பு நகர எல்லையிலேயே பதிவாகியுள்ளனர். https://www.virakesari.lk/article/178823
  11. Published By: VISHNU 15 MAR, 2024 | 06:48 PM இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி யாழ். இந்தியத் துணைத் தூதரகம் முன்பு கடற்றொழிலாளர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: எமது யாழ்ப்பாண மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்திய மீனவர்கள் எமது வாழ்வாதாரத்தையும் தொழிலையும் தொடர்ச்சியாக அழித்து வரும் நிலையில் இலங்கை அரசாங்கத்திடமும் இந்திய அரசாங்கத்திடமும் எமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அண்மையில் இந்தியச் சட்டவிரோத மீன்பிடியாளர்களைக் கட்டுப்படுத்துமாறு கோரி இலங்கை கடல் எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்திடம் கோரிக்கை மனு கையளித்தோம். ஆனால், பயன் ஏதும் ஏற்படவில்லை. இவ்வாறான நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்பு தொடர்ச்சியான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். எமது போராட்டத்துக்கு ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த சங்கங்கள், சமாசங்கள் மற்றும் சம்மேளனங்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/178823
  12. மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து, பணம் கோரிய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வர்த்தகர் ஒருவரிடம் ஒரு இலட்சம் ரூபா கப்பம் கேட்டு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாகவே தலங்கமை பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவரை 5 லட்சம் ரூபாய் பெறுமதியான தலா இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு கடுவலை பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கம பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் சாட்சியாளர்களை அச்சுறுத்தக் கூடாது எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். https://thinakkural.lk/article/295904
  13. யாழ். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்திக் கொலை: குற்றச்சாட்டில் கைதான நால்வருக்கு 28ஆம் திகதி வரை விளக்கமறியல் Published By: VISHNU 15 MAR, 2024 | 06:13 PM யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை தனது மனைவியுடன் காரைநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பியவர்களை பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படையின் முகாம் முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்றது. கணவனை ஒரு வாகனத்திலும், மனைவியை ஒரு வாகனத்திலும் கடத்திய வன்முறை கும்பல், மனைவியை சித்தங்கேணி பகுதியில் இறக்கி விட்டு சென்றது. கணவனை கடத்தி சென்றவர்கள் கணவனை கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகாயங்களுடன் வட்டுக்கோட்டை வைத்திய சாலை முன்பாக வீசி சென்றனர். படுகாயத்துடன் காணப்பட்டவரை வைத்தியசாலை பணியாளர்கள் மீட்டு யாழ். போதனாவில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வட்டுக்கோட்டையில் ஒரு இளைஞனை கைது செய்தனர். அதேவேளை கிளிநொச்சியில் பதுங்கியிருந்த அராலி பகுதியை சேர்ந்த நான்கு பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை கடந்த புதன்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி, கிளிநொச்சியில் கைதான நால்வரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். ஆகவே அவர்களை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற, மன்று நால்வரையும் 48 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. மற்றைய சந்தேக நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது. அத்தோடு அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கும் கட்டளையிட்டது. அந்நிலையில் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட நால்வரையும் வெள்ளிக்கிழமை (15) மன்றில் முற்படுத்திய வேளை அவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது. இதேவேளை இளைஞன் கடத்தப்படும் போது கடற்படை முகாமில் இருந்த நான்கு கடற்படையினரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்முறை கும்பல் தம்மை கடத்த முற்பட்ட வேளை கடற்படை முகாமினுள் தஞ்சம் கோரி தாம் சென்ற வேளை, கடற்படையினர் அடைக்கலம் கொடுக்காது, தம்மை அடித்து விரட்டி, கடத்தலுக்கு ஒரு வகையில் உதவி இருந்தனர் என உயிரிழந்தவரின் மனைவி குற்றம் சாட்டி வரும் நிலையில், கடற்படை முகாம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் கடற்படையினர் தஞ்சம் கோரி வந்தவர்களை, விரட்டுவதும், கடற்படையின் அருகில் வைத்தே, வன்முறை கும்பல் தம்பதியினரை கடத்தி செல்லும் காட்சி நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/178819
  14. வட மாகாண சபையின் பிரதம செயலாளராக எல். இளங்கோவன் கடமையை பொறுப்பேற்றார்! 15 MAR, 2024 | 05:44 PM வட மாகாண சபையின் பிரதம செயலாளராக எல்.இளங்கோவன் யாழ்ப்பாணம் - கைதடியில் உள்ள தமது அலுவலகத்தில் இன்று (15) காலை கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். இதன்போது வட மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதி பிரதம செயலாளர்கள், மாகாண அமைச்சுகளின் உத்தியோகத்தர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதம செயலாளர், செயலக உத்தியோகத்தர்கள், மதகுருமார், நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர். எல்.இளங்கோவன் வட மாகாண அமைச்சுக்கள் பலவற்றின் செயலாளர் பதவி வகித்ததுடன், வட மாகாண ஆளுநரின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர், வட மாகாண பிரதம செயலாளராக நியமனம் பெறும் வரை வட மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக பணியாற்றி வந்தார். https://www.virakesari.lk/article/178797
  15. 2021 மற்றும் 2022 ஆம் ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மாணவர்களை கல்வியற்கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இன்று முதல் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், அடுத்த மாதம் 5ஆம் திகதியுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/295936
  16. தோனியை ஈர்த்த மாலிங்க பாணியிலான மாதுலன் 15 MAR, 2024 | 12:04 PM (நெவில் அன்தனி) சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வலைபந்துவீச்சாளராக யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் 17 வயதுடைய வலதுகை வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுலன் இணைந்துகொண்டுள்ளார். இண்டியன் பிறீமியர் லீக் ஆரம்பமாவதற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் அவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துகொண்டுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்னர் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 117ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டியில் சென். ஜோன்ஸ் சார்பாக பந்துவீசிய மாதுலன், எதிரணி வீரர் தகுதாஸ் அபிலாஷை இரண்டாவது இன்னிங்ஸில் யோக்கர் பந்தின் மூலம் ஆட்டம் இழக்கச் செய்திருந்தார். அவரது பந்துவீச்சுப் பாணி லசித் மாலிங்கவின் பந்துவீச்சை ஒத்ததாக இருந்ததுடன் அவர் வீசிய யோக்கர் பந்து சமூக ஊடகங்களில் பரவியது. இதனை அடுத்து இளம் வீரர் குகதாஸ் மாதுலனின் பந்துவீச்சை பார்க்க சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் எம்.எஸ். தோனி விரும்பியதாக செய்தி வெளியாகியது. இந்நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் உரிமையாளர்களால் குகதாஸ் மாதுலன் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது சென்னையில் இருக்கும் குகதாஸ் மாதுலனின் பந்துவீச்சை சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பயிற்றுநர் குழாம் அவதானித்து வருவதடன் அவருக்கு தேவையான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கிவருவதாக அறியக் கிடைக்கிறது. இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், குகதாஸ் மாதுலனின் பந்துவீச்சு இலங்கை பயிற்றுநர்களினதோ தெரிவாளர்களினதோ கண்களில் படாமல் போனதாகும். https://www.virakesari.lk/article/178786
  17. 15 MAR, 2024 | 03:28 PM மகாவலி மற்றும் 73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 90 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது . மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 80 சதவீதமாகக் குறைந்துள்ளதுடன் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மழையின்மை காரணமாகக் குறைந்துள்ளது. வெப்பமான வானிலை காரணமாக வீடுகள் மற்றும் அரச நிறுவனங்களில் தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/178803
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குறட்டை பழக்கம் கட்டுரை தகவல் எழுதியவர், சனீத் பெரேரா பதவி, பிபிசி உலக சேவை 15 மார்ச் 2024, 02:45 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குறட்டை விடும் பழக்கம் குறட்டை விடுபவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் குறட்டை அவர்களின் இணையர் மற்றும் உறவை பாதிக்கும், இதில் உடல் உறவு உட்பட தாம்பத்யம் தொடர்பான விஷயமும் அடக்கம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "என் கணவர் சத்தமாக குறட்டை விடுவதைப் பற்றி நான் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் சொல்லி கேலி செய்தேன், ஆனால் மனதளவில் ஆழமாக அது என்னைத் பாதித்தது. இதைப் பற்றி என் கணவருடன் பேசினால் அவர் மனம் புண்படுவார் என்று நான் கவலைப்பட்டேன்" என்று சிங்கப்பூரைச் சேர்ந்த 45 வயதான அருணிகா செல்வம் கூறுகிறார். குறட்டை என்பது சகஜமான ஒன்று என்று அருணிகா எண்ணினார். ஆனால் அது அவரின் கணவருக்கும் தாம்பத்திய உறவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. "அவர் இரவில் தூக்கத்தின் நடுவே பலமுறை எழுந்திருக்க ஆரம்பித்தார். காலையில் எரிச்சல் உணர்வோடு இருப்பார்," என்று அருணிகா பிபிசியிடம் தெரிவித்தார். கணவரின் குறட்டை சத்தத்தால் அருணிகாவால் ஆழ்ந்து உறங்க முடியவில்லை. ஓய்வின்மை மற்றும் தூக்கமின்மை காரணமாக வேலையில் அவரின் செயல்திறன் பாதிக்கப்பட்டது. இணையர் குறட்டை விடுவதை கண்டு கொள்ளாமல் விடுவது பொதுவாக பல வீடுகளில் நிகழும். ஆனால் குறட்டை பிரச்சனை, இணையருடனான உறவு மற்றும் இருவரின் ஆரோக்கியத்திலும் கடுமையான விளைவை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். படக்குறிப்பு, தூக்கத்தின் போது காற்றோட்டம் தடைபட்டு, சுவாசம் நின்று மீண்டும் தொடங்கும் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் (sleep apnoea) என்றால் என்ன? பொதுவாக சத்தமாக குறட்டை விடுவது, தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் (OSA) எனப்படும் தூக்கக் கோளாறுடன் தொடர்புடையதாக இருக்கும், இந்த நிலையில் தூக்கத்தின் போது காற்றோட்டம் தடைப்பட்டு, சுவாசம் நின்று மீண்டும் தொடங்கும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த கோளாறு தொண்டையின் சுவர்களை தளர்வடையச் செய்து, சுருங்கச் செய்து, சாதாரண சுவாசத்தை குறுக்கிட்டு, ஆக்ஸிஜன் குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது. இங்கிலாந்தின் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவ ஆலோசகர், சுவாச நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி சத்தியமூர்த்தியின் கூற்றுப்படி, தூக்கத்தில் மூச்சுத்திணறல் அறிகுறிகள் லேசான நிலை தொடங்கி கடுமையான நிலை வரை ஏற்படும். ஆனால் பாதிக்கப்பட்ட நபரை இந்த பிரச்னை படிப்படியாக மோசமான நிலைக்கு தள்ளும். மேலும் சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால், குறட்டை விடுபவர் மற்றும் அவர்களது இணையரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அது பாதிக்கும், தம்பதிகளின் உடல் உறவையும் பாதிக்கும் என்று அவர் எச்சரிக்கிறார். தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலின் அறிகுறிகள் என்ன? ஒருவர் தூங்கும்போதுதான் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன, அவை பின்வருவனவற்றை உள்ளடக்கியது: உரத்த சத்தத்துடன் குறட்டை சுவாசம் தடைப்பட்டு மீண்டும் தொடங்குவது மூச்சுத்திணறல், குறட்டை அல்லது மூச்சுத் திணறல் போன்ற சத்தங்கள் எழுப்புவது தூக்கத்தின் நடுவே அடிக்கடி எழுந்திருத்தல் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகல் நேரத்திலும் சில அறிகுறிகள் ஏற்படும், அவை: தூங்கி எழுந்ததும் தலைவலி மிகவும் சோர்வாக உணர்வது கவனச் சிதறல் மோசமான நினைவாற்றல் மனச்சோர்வு, எரிச்சல் அல்லது மனநிலையின் பிற மாற்றங்கள் மோசமான ஒருங்கிணைப்பு திறன் உடலுறவில் நாட்டமின்மை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மூச்சுத்திணறலின் போது ரத்த ஆக்ஸிஜன் அளவுகளில் ஏற்படும் திடீர் வீழ்ச்சி ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் குறட்டையால் பிற உடல்நலப் பிரச்னைகள் கூடுதலாக, தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத் திணறல் (obstructive sleep apnoea) பாதிப்பு மற்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். மூச்சுத்திணறலின் போது ரத்த ஆக்ஸிஜன் அளவுகளில் ஏற்படும் திடீர் வீழ்ச்சி ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர், மேலும் இது பல்வேறு மருத்துவ சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கும். சில ஆய்வுகள் ஓஎஸ்ஏ (obstructive sleep apnoea) இதய செயலிழப்பு அபாயத்தை 140% அதிகரிக்கும், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 60% மற்றும் கரோனரி இதய நோய் அபாயத்தை 30% அதிகரிக்கும் என்று கூறுகின்றன. தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவது உடலுறவையும் பாதிக்கலாம் என தூக்க சிகிச்சை வல்லுனர்கள் கூறுகின்றனர். சில தம்பதிகள் தங்கள் துணையின் குறட்டையை நகைச்சுவையாக அணுகினாலும், அது அவர்களின் தாம்பத்திய உறவை பாதிக்கும் என்று டாக்டர் சத்தியமூர்த்தி எச்சரிக்கிறார். "வழக்கமாக என்னிடம் வரும் நோயாளிகளில் 90% பேர், இணையரை தன் குறட்டை பழக்கம் பெரிதும் பாதித்ததால் தான் சிகிச்சை மேற்கொள்ளும் முடிவை எடுக்கின்றனர். நாளடைவில் தம்பதி தனியாக தூங்க முடிவெடுப்பர், மேலும் இந்த பிரிவு `தூக்க விவாகரத்து’ என்னும் நிலையை உருவாக்கும்." என்று அவர் பிபிசியிடம் குறிப்பிட்டார். “இது ஒரு மோசமான விஷயம் அல்ல’’ என்று குறிப்பிடும் அமெரிக்காவைச் சேர்ந்த உறவு சிகிச்சை நிபுணர் சாரா நாசர்சாதே, ``குறட்டை பழக்கம் இருந்தாலும், இல்லையென்றாலும், தம்பதிகள் சில சமயங்களில் தனித்தனியாக தூங்க வேண்டும்’’ என்று பரிந்துரைக்கிறார். ’’ஆழ்ந்த இரவு தூக்கத்துடன் நம் நாளைத் தொடங்குவது தம்பதிகளுக்கு ஆரோக்கியமான உறவை வளர்க்கும்’’ என்றும் அவர் பிபிசியிடம் கூறினார், இருப்பினும் வீட்டில் ஒரு கூடுதல் படுக்கையறை இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆனால் சில தம்பதிகளுக்கு, 'தூக்க விவாகரத்து' என்பது நிரந்தரமான பிரிவினைக்கான முதல் படியாக இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குறட்டை விடுவதை இயல்பான ஒன்று என பலரும் நம்புகின்றனர். குறட்டையால் சிங்கப்பூர் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை அருணிகா செல்வம், உலகிலேயே அதிக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட மிகவும் வளர்ந்த நாடான சிங்கப்பூரில் வசிக்கிறார். இருப்பினும் தன் வீட்டில் இணையர் உடன் இருக்கும் அறையை தவிர வேறு இடத்தில் தூங்குவது அவருக்கு சாத்தியமில்லை. "சிங்கப்பூரில் வாழ்க்கைச் செலவு அதிகமாக இருப்பதால் கூடுதல் வருமானம் ஈட்ட, எங்கள் விருந்தினர் அறையை வாடகைக்கு விட வேண்டியிருந்தது" என்று திருமணமாகி 15 வருடங்கள் கடந்து ஒரு குழந்தையின் தாயாக இருக்கும் அருணிகா தன் நிலையை விவரித்தார். எண்ணற்ற தூக்கமில்லாத இரவுகளைக் கடந்த பிறகு , இதற்கு மேல் முடியாது என்ற நிலையில் அருணிகா தன் கணவரிடம் அவரின் குறட்டை பிரச்சனை பற்றி பேசினார். அவரின் கணவர் குறட்டை விடுவது இயல்பானது என்று நம்புவதால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கத் தயங்கினார். மேலும் அவரது தந்தை மற்றும் தாத்தா இருவரும் குறட்டை விடும் பழக்கம் உடையவர் என்பதால் இது பெரிய பிரச்னையில்லை என அவர் நம்பினார். சத்தமாக குறட்டை விடுவது ஆண்மையின் ஒரு அங்கமாகவே பலர் கருதுகின்றனர். குறிப்பாக சில ஆசிய கலாச்சாரங்களில், குறட்டை விடுவது சாதரண விஷயம் என்றே நம்புகின்றனர்’’ என்று அருணிகா மேலும் கூறினார். குறட்டையால் ஏற்படும் தூக்கமின்மை மனச் சமநிலையை குலைக்கும். இதனால் ஏற்படும் மன உளைச்சல் தேவையற்ற வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும். சாரா நாசர்சாதே கூறுகையில், "இதுபோன்ற சூழ்நிலைகளில், குறட்டை விடும் இணையரிடம் சரியான நேரத்தில், நுட்பமான முறையில் இந்த விஷயத்தை புரிய வைக்க வேண்டும். இந்தப் பிரச்சனையை பற்றி பேச சரியான தருணத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.’’ "உடலுறவு கொண்ட பிறகு, நல்ல மனநிலையில் இருக்கும் போது இதைப் பற்றி பேச முயற்சிக்கலாம்" என்று நாசர்சாதே கூறினார். இவர் “லவ் பை டிசைன் - 6 இன்க்ரீடியன்ட்ஸ் டு பில்ட் லைஃப் டைம் ஆஃப் லவ்’’ என்னும் புத்தகத்தின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக உளவியல் நிபுணரான இவர் இதுகுறித்து கூறுகையில், "குறட்டை விடுபவர் அந்த நிலையை எண்ணி வெட்கப்படுகிறார்’’ என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம்.’’ என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குறட்டையால் திருமண உறவு கூட முடிவுக்கு வரலாம் குறட்டையால் தீவிரமான பாதிப்புகள் பிரிட்டிஷ் குறட்டை மற்றும் தூக்கநிலை மூச்சுத்திணறல் சங்கத்தின் கூற்றுப்படி, பிரிட்டனில் சுமார் 15 மில்லியன் குறட்டை பாதிப்பு கொண்டவர்கள் உள்ளனர். மேலும் இது நாட்டில் 30 மில்லியன் மக்களை பாதிக்கிறது - கிட்டத்தட்ட மக்கள்தொகையில் பாதி என்றே சொல்லலாம். "குறட்டை பழக்கம் உடையவர்களில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன’’ என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் குறட்டை விடுபவர் யாராக இருந்தாலும், அந்தப் பழக்கம் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் விவாகரத்துக்கான பொதுவான காரணங்களில் ஒன்று `குறட்டை’ என்று சில செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன, இருப்பினும் இந்த கூற்றை நிரூபிக்க போதுமான தரவுகள் இல்லை. குறட்டை பழக்கம் திருமண உறவில் ஆழமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். பிரிட்டனைச் சேர்ந்த குடும்பநல வழக்கறிஞரான ரீட்டா குப்தா, தனது நிறுவனம் குறட்டையுடன் தொடர்புடைய பல விவாகரத்து வழக்குகளை கையாண்டதாகக் கூறினார். "திருமண பந்தத்தில் ஏற்படும் மகிழ்ச்சியின்மைக்கு இது நிச்சயமாக ஒரு காரணமாக இருக்கும். அவர் குறட்டை விடுவதால் நாங்கள் பல ஆண்டுகளாக தனித்தனி அறைகளில் தான் தூங்குகிறோம், நாங்கள் ஏற்கெனவே பிரிந்துதான் வாழ்கிறோம்’, என்று நிறைய பேர் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்," என்றும் அவர் பிபிசியிடம் கூறினார். “இதுபோன்ற விவாகரத்து வழக்குகளில் பொதுவான பிரச்சினை என்னவெனில், மருத்துவ சிகிச்சைகளை புறக்கணிப்பது, இந்த சிக்கலை திறம்பட சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காதது தான்’’ என்று குடும்பநல வழக்கறிஞர் மேலும் கூறினார். "உதாரணமாக, ஒரு ஆணுக்கு எதிரான வழக்கில், அவருடைய மனைவி, 'என் கணவர் ஏற்கனவே மோசமாக குறட்டை விடுகிறார். இது என் தூக்கத்தை மோசமாக பாதிக்கிறது. ஆனால், அவர் அதை நிவர்த்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, CPAP சாதனம் தூக்கத்தின் போது ஏற்படும் சுவாசக் கோளாறைத் தடுக்க உதவுகிறது. குறட்டை அல்லது தூக்கநிலை மூச்சுத்திணறல் பிரச்னையை தீர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கான சிகிச்சைகள் வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்றுவதை உள்ளடக்கியது. உடல் எடைக் குறைப்பு புகைபிடிப்பதை நிறுத்துதல் மது அருந்துவதை கட்டுப்படுத்துதல் இருப்பினும், பலருக்கு, CPAP என்னும் காற்றுப்பாதை அழுத்த சாதனத்தைப் பயன்படுத்துவது அவசியமாகிறது. இந்த சாதனம், நீங்கள் தூங்கும் போது உங்கள் வாய் அல்லது மூக்கில் அணியும் முக கவசத்தினுள் காற்றை மெதுவாக உட்செலுத்துகிறது. இந்த CPAP சாதனம் தூக்கத்தின் போது ஏற்படும் சுவாசக் கோளாறைத் தடுக்க உதவுகிறது. மருத்துவர் ராமமூர்த்தி சத்தியமூர்த்தி கூறுகையில், “குறட்டை விடுபவர் மற்றும் அவரின் இணையர் ஆகிய இருவரின் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிப்பது முக்கியம். இது அவர்களை மருத்துவ ஆலோசனையைப் பெற ஊக்குவிக்கும்” என்கிறார். "குறட்டை பிரச்னைக்கு மருத்துவ ஆலோசனைப் பெறுவது, திருமண உறவுக்கு மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் நாளடைவில் குறட்டையால் ஏற்படும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை எடுக்கும் செலவும் குறையும். எனவே, இது முழு குடும்பத்திற்கும் ஒட்டுமொத்த நன்மை தரும்" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குறட்டை பிரச்னையை தீர்ப்பதில் உலக அளவில் பல காரணிகள் தடையாக உள்ளன. பொருளாதார, சமூகத் தடைகள் குறட்டை பிரச்னைக்கான அணுகுமுறைகள் உலகளாவிய மற்றும் தனி நபர் சார்ந்து மாறுபடலாம். பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார காரணிகள் மற்றும் பாலினம் மற்றும் பாலுணர்வால் கூட பாதிக்கப்படலாம். இலங்கையின் கொழும்பில் ஹோட்டல் வரவேற்பாளராகப் பணிபுரியும் 40 வயது தன்பால் ஈர்ப்பாளரான சமன் (அவரது உண்மையான பெயர் அல்ல), அவரது பாலினத்தை குடும்பத்தினரிடம் இருந்து ரகசியமாக வைத்துள்ளார். அவரது காதலர் தனது வீட்டில் உள்ள கூடுதல் அறையில் வாடகைக்கு வசிக்கும் நண்பர் என்று குடும்பத்தினரை நம்ப வைத்திருக்கிறார். "எனது இணையர் சத்தமாக குறட்டை விடுபவர், அவரின் குறட்டை சத்தத்தால் என்னால் தூங்க முடியவில்லை. என் அம்மா என்னைச் சந்திக்க வரும் போது மட்டும்தான் எனக்கு நன்றாகத் தூக்கம் வரும்" என்று சமன் பிபிசியிடம் கூறினார். "என் அம்மா வரும்போது, என் இணையர் விருப்பத்துடன் என் அம்மாவுக்கு அந்த கூடுதல் அறை வழங்கப்படும், எனவே என் இணையர் சோபாவில் தூங்கி என் அம்மாவுக்கு சந்தேகம் வராத வண்ணம் பார்த்துக் கொள்வார். அந்த நாட்களில் மட்டும் நான் நன்றாக தூங்குவேன்" என்று அவர் குறிப்பிட்டார். "எனது காதலர் தன்னை பெண்பால் குணங்கள் கொண்ட தன்பால் ஈர்ப்பாளராக கருதுகிறார், ஆனால் குறட்டை விடுவது நமது கலாச்சாரத்தில் ஆண்மைக்குரியதாகவே கருதப்படுகிறது. இந்த விஷயத்தைப் பற்றி விவாதிப்பது அவரை காயப்படுத்தி என்னை விட்டு அவர் விலகி செல்ல வழிவகுக்கும் என்று நான் அஞ்சுகிறேன்" என்றும் குறிப்பிட்டார். ஒருபுறம் குறட்டை பிரச்சனையை காதலனிடம் விவாதிக்க சமன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டிருக்கையில், மறுபுறம், அருணிகா ஒருவழியாக தன் கணவரிடம் மருத்துவரை அணுகுமாறு வற்புறுத்தத் தொடங்கினார். அதன் விளைவாக அருணிகாவின் கணவருக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் இருப்பது கண்டறியப்பட்டது. உடல் எடையை குறைக்கும் நோக்கத்தில் உடற்பயிற்சிகள் மேற்கொண்டு தனது கணவர் ஏற்கெனவே பிரச்சனைகளுக்கான தீர்வை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டதாக அருணிகா மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/articles/cz9zwk1v395o ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று உலக தூக்க தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
  19. Published By: RAJEEBAN 15 MAR, 2024 | 03:43 PM செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது பெருமளவு அதிகரித்துள்ள நிலையில் ஒழுக்கவியல் சார்ந்த அடிப்படைகள் அவசியம். அவ்வாறா ஒழுக்கவியல் அடிப்படையில்லாவிட்டால் முடிவற்ற நெருக்கடிகள் உருவாகலாம் என தமிழ் நாடு உட்கட்டுமான நிதி முகாமைத்துவ தலைவரும் டான்சம் அமைப்பின் பணிப்பாளருமான பேராசிரியர் எம்.ஆறுமுகம் தெரிவித்தார் வவுனியாவில் இடம்பெற்ற ஆசிய பசுபிக்சமாதான ஆராய்ச்சி சங்கத்தின்2024ம் ஆண்டுக்கான சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சர்வதேச மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் குறிப்பிட்டதாவது கடந்த 35 வருடங்களாக நான் செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான விடயங்களில் ஈடுபட்டுள்ளேன். இது ஒன்றும் இன்று நேற்று உருவான புதிய விடயமல்ல செயற்கை நுண்ணறிவு என்பது 30 முதல் ஐம்பது வருடங்கள் பழமையானது. ஆனால் உலகம் தற்போதுதான் சகலதுறைகளிலும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. எந்த துறையிலும் செயற்கை நுண்ணறிவு முழுமையாக நுழைந்துள்ளது. சட்ஜிபிடியின் அடுத்த வடிவம் வெளியாவதற்கு இரண்டு மூன்று வருடங்கள் எடுக்கலாம் என நாங்கள் கருதினோம் ஆனால் ஒரு வருட காலத்திற்குள் அதன் அடுத்த வடிவம் வெளியாகிவிட்டது. செயற்கை நுண்ணறிவை உயிரியல் தொழில்நுட்பட் மரபணுதொழில்நுட்பம் ஆகியவற்றிலேயே அதிகம் பயன்படுத்துகின்றனர். செயற்கை மரபணுவை உருவாக்க முயல்கின்றனர் நீங்கள் உங்கள் மனிதனை உருவாக்கலாம். பொதுவான மரபணுவை உருவாக்கலாம். ஆனால் இது பெரும் ஆபத்துக்களையும் விளைவுகளையும் உருவாக்கும். காலநிலை குறித்த விடயங்களில் இதன் பயன்பாடு முக்கியமானதாக அமையும். காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாங்கள் அனைவரும் அனுபவிக்கின்றோம் எதிர்கொண்டுள்ளோம். மழை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது அல்லது குறுகிய நேரத்தில் பெரும் மழை பொழிகின்றது செனனை 900 மில்லிமீற்றர் மழையை குறுகிய நேரத்தில் எதிர்கொண்டது. காலநிலை விவகாரத்தை கையாள்வதற்காக செயற்கை நுண்ணிறிவை அடிப்படையாக கொண்ட பல எதிர்வுகூறல்களை எதிர்காலத்தில் உருவாக்குவார்கள் காற்றின் வேகம் மழைவீழ்ச்சி போன்றவற்றை கண்காணிப்பதற்கு இது உதவியாக அமையும். பாதுகாப்பு தொழில்துறையில் இது மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவரும் ஏவுகணை தொழில்நுட்பம் போன்றவை மாற்றமடையும். ஈரானிற்குள் வைத்து அந்த நாட்டின் விஞ்ஞானியை இஸ்ரேல் கொலை செய்ததை செய்மதி தொழில்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவை இணைத்தே கண்டுபிடித்தார்கள். ஆனால் செயற்கை நுண்ணறிவு என்ற விடயத்தில் தடுமாற்றங்களும் குழப்பங்களும் உள்ளன. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது பெருமளவு அதிகரித்துள்ள நிலையில் ஒழுக்கவியல் சார்ந்த அடிப்படைகள் அவசியம். இல்லாவிட்டால் முடிவற்ற நெருக்கடிகள் பிரச்சிளைகள் உருவாகலாம். https://www.virakesari.lk/article/178807
  20. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி வழங்கிய 'லாட்டரி கிங்' மார்ட்டின் யார்? - விரிவான தகவல்கள் பட மூலாதாரம்,MARTINFOUNDATION.COM படக்குறிப்பு, சாண்டியாகோ மார்ட்டின் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 15 மார்ச் 2024, 09:36 GMT புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அதிக நிதி கொடுத்தது, 'லாட்டரி கிங்' என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் எனத் தெரியவந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்த நிறுவனங்கள், நிதியைப் பெற்ற அரசியல் கட்சிகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பாரத ஸ்டேட் வங்கி இந்த விவரங்களை உச்ச நீதிமன்றத்திற்கு அளித்தது. அவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. அந்தத் தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று (மார்ச் 14-ஆம் தேதி) தனது இணையதளத்தில் வெளியிட்டது. அதில் இருந்த தரவுகளின்படி, அதிகபட்ச தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனம் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் எனத் தெரியவந்திருக்கிறது. 2020-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2024-ஆம் ஆண்டு ஜனவரிக்கு இடையில் இந்த நிறுவனம் 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. 2021-ஆம் ஆண்டு அக்டோபரில் இந்த நிறுவனம் 195 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் 2022-ஆம் ஆண்டு ஜனவரியில் இரண்டு முறை ரூ.210 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களையும் வாங்கியது. இந்த ஆண்டு ஜனவரியில் ரூ.63 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியிருக்கிறது. பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் 1991-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இதன் பதிவு அலுவலகம் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1980களின் இறுதியில் கோயம்புத்தூரில் மார்ட்டின் லாட்டரி ஏஜென்சீஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்தைத் துவங்கினார் மார்ட்டின் சாண்டியாகோ மார்ட்டின் ‘லாட்டரி கிங்’ ஆனது எப்படி? சாண்டியாகோ மார்ட்டினின் ஆரம்ப கால வாழ்க்கை குறித்த தகவல்கள் தெளிவாகக் கிடைக்கவில்லை. மார்ட்டினின் பெற்றோர் மியான்மரில் வசித்தவர்கள். மியான்மர் நாட்டில் ஒரு சாதாரண தொழிலாளியாக அவரது வாழ்க்கை துவங்கியது. மியான்மரில் இருந்து நாடு திரும்பிய இவரது குடும்பம், கோயம்புத்தூரில் குடியேறியது. 13 வயதில் ஒரு தேநீர் கடையில் லாட்டரி சீட்டுகளை விற்க ஆரம்பித்த மார்ட்டின், விரைவிலேயே தனக்கென தனியாக ஒரு நெட்வர்க்கை உருவாக்கினார். 1980களின் இறுதியில் கோயம்புத்தூரில் மார்ட்டின் லாட்டரி ஏஜென்சீஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்தைத் துவங்கினார் மார்ட்டின். தமிழ்நாடு மட்டுமல்லாமல், மார்ட்டின் கர்நாடகா என்ற நிறுவனத்தின் மூலம் கர்நாடக மாநிலத்திலும் மார்ட்டின் சிக்கிம் லாட்டரி நிறுவனத்தின் மூலம் மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் போன்ற வட கிழக்கு மாநிலங்களிலும் தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார் மாட்டின். இது தவிர மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிராவிலும் லாட்டரி விற்பனையில் இவரது நிறுவனமே முன்னணியில் இருக்கிறது. இந்தக் கட்டத்தில்தான் 'லாட்டரி கிங்' என்ற பெயர் இவருக்கு வந்து சேர்ந்தது. 260-க்கும் மேற்பட்ட ஏஜென்டுகள், 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் என ஒரு பிரம்மாண்டமான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார் மார்ட்டின். கடந்த 1990-களில் இவரது நிறுவனத்தின் இரு நம்பர் லாட்டரி, கோயம்புத்தூரில் கொடி கட்டிப் பறந்தது. லாட்டரி மோகம் தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்த நிலையில் ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் 2003-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லாட்டரியைத் தடைசெய்தது. இருந்தாலும் பிற மாநிலங்களில் இவரது நிறுவனத்தின் செயல்பாடுகள் பிரச்சனையின்றி தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் லாட்டரி மட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட், கட்டுமானம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பொழுதுபோக்கு, ஜவுளி, மருத்துவம், கல்வி, மென்பொருள், விவசாயம், கட்டுமானப் பொருட்கள் போன்ற துறைகளிலும் கால் பதித்தது இவரது நிறுவனம். படக்குறிப்பு, தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்றது உட்பட ஒட்டுமொத்தமாக 14 வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டன. பிறகு குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது மார்ட்டினின் அரசியல் நெருக்கம் பல மாநிலங்களிலும் பல அரசியல் தலைவர்களுடன் பெரும் நெருக்கம் இவருக்கு இருந்தது. கடந்த 2007 – 2008-ஆம் ஆண்டில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான தேசாபிமானிக்கு மார்ட்டின் ரூ.2 கோடி நன்கொடை அளித்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு, அந்தப் பணத்தை கட்சி திருப்பி அளித்ததோடு, தேசாபிமானியின் பொது மேலாளர் இ.பி. ஜெயரஞ்சன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். 2011-இல் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி, மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவலை அடிப்படையாக வைத்து கதை - வசனம் எழுதிய 'இளைஞன்' படத்தை மார்ட்டினின் மார்ட்டின் புரொடக்ஷன்ஸ் தயாரித்தபோது, அது பற்றியும் சர்ச்சை எழுந்தது. 2011-இல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கோயம்புத்தூரில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நில அபகரிப்பு வழக்கில் மார்ட்டினை கைதுசெய்யப்பட்டார். அடுத்த 15 நாட்களில் அவர் குண்டர் சட்டத்திலும் கைதுசெய்யப்பட்டார். தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்றது உட்பட ஒட்டுமொத்தமாக 14 வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டன. பிறகு குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. சுமார் 7 மாதங்கள் சிறையில் இருந்த மார்ட்டின், எல்லா வழக்குகளிலும் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். இந்தத் தருணத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆனந்த வடிவேல் என்பவரும் சென்னையைச் சேர்ந்த செல்வம் என்ற ஹல்வா செல்வமும் தங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பணம் தராவிட்டால், வேறு மாநிலங்களில் இருந்து லாட்டரியைக் கடத்திவந்து, தமிழ்நாட்டில் மார்ட்டினின் பெயரில் விற்கப்போவதாகக் கூறுவதாகவும் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் காவல் துறையில் புகார் அளித்தார். பட மூலாதாரம்,MARTINFOUNDATION.COM படக்குறிப்பு, மார்டினின் மனைவி லீமா ரோஸ் மார்டின் லீமா ரோஸ் மார்ட்டின் கைது 2013-ஆம் ஆண்டில் கணக்கில் வராத பணத்தை, சட்டபூர்வமாக்குவதற்காக போலித் பத்திரங்களைத் தயார் செய்த குற்றச்சாட்டில் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் கைதுசெய்யப்பட்டார். இதற்குப் பிறகு, பாரி வேந்தரின் கட்சியான இந்திய ஜனநாயகக் கட்சியில் இணைந்தார் லீமா ரோஸ். 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோதி கோயம்புத்தூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றபோது, அந்த மேடையில் லீமா ரோஸ் மார்ட்டினும் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. லீமா ரோஸ் தற்போதுவரை இந்திய ஜனநாயகக் கட்சியில்தான் இருந்து வருகிறார். சாண்டியாகோ மார்ட்டின் - லீமா ரோஸ் மார்ட்டின் தம்பதிக்கு டெய்ஸி என்ற மகளும் சார்லஸ் ஜோஸ், டைஸன் ஆகிய மகன்களும் இருக்கின்றனர். 2015ஆம் ஆண்டில் சார்லஸ் ஜோஸ் பா.ஜ.கவில் இணைந்ததாக ஒரு செய்தி புகைப்படங்களுடன் பரவியது. அந்தச் செய்தியை இரு தரப்பும் உறுதிசெய்யவில்லை. மார்ட்டினுக்கு எதிரான காவல்துறை, புலனாய்வு நடவடிக்கைகள் சாண்டியாகோ மார்ட்டின் பல முறை காவல்துறை நடவடிக்கைகளுக்கும் மத்தியண புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைக்கும் உள்ளாகியிருக்கிறார். 2015-ஆம் ஆண்டில் வருமான வரித்துறை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்த மார்ட்டினின் இடங்களில் சோதனை நடத்தியது. 2016-இல் பணப் பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சட்டவிரோத லாட்டரி விற்பனை தொடர்பாக 2018-இல் மத்தியப் புலனாய்வுத் துறை மார்ட்டினின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தியது. 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அத்துடன் மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் காசாளராக பணிபுரிந்து வந்த பழனிச்சாமி என்பரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மே 3-ஆம் தேதியன்று வெள்ளியங்காடு அருகே பழனிச்சாமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். வருமான வரித்துறையினர் சித்ரவதை காரணமாக தன் தந்தை மரணமடைந்ததாக அவரது மகன் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் அந்தத் தருணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிக்கிம் அரசுக்கு சுமார் ரூ.900 கோடி இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டை விசாரித்த அமலாக்கத் துறை 2023-ஆம் ஆண்டு மே 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் பணமோசடி தடுப்புச் சட்ட விதிகளின் கீழ், சென்னையிலும் கோவையிலும் உள்ள பியூச்சர் கேமிங் சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் இடங்களில் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையை அடுத்து சுமார் ரூ. 457 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன. கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிற 15 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை ஒரு வழக்கைப் பதிவு செய்தது. விற்கப்படாத லாட்டரி சீட்டுகளை தக்கவைத்துக்கொண்டு, அவற்றுக்கு பரிசு விழுந்ததாகக் காட்டுவது, விற்கப்படாத லாட்டரிகளை விற்றதாகக் காட்டுவது ஆகிய குற்றச்சாட்டுகள் இந்த நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cl4k8zzxg10o
  21. தேர்தல் பத்திரங்களின் ரகசியங்களை உடைக்கும் எண்களை வெளியிட எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கெடு பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தக் கட்சிக்கு யார் எவ்வளவு நன்கொடைகளை அளித்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் வகையில், தொடர்புடைய தேர்தல் பத்திரங்களின் எண்களை (எண்ணும் எழுத்தும் கொண்டது - Alphanumeric) வரும் மார்ச் 17-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 763 பேர் கொண்ட இரண்டு பட்டியல்களில், ஒன்றில் பத்திரம் வாங்கியவர்கள் பற்றிய விவரங்களும், மற்றொன்றில் அரசியல் கட்சிகள் பெற்ற பத்திரங்களின் விவரங்களும் உள்ளன. அரசியல் சார்ந்த நன்கொடைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டது. இதன் மூலம் தேர்தல் நிதி தொடர்பான தகவல்கள் மீது போடப்பட்டிருந்த பெரும் திரை நீக்கப்பட்டுள்ளது. ஆனால் யார் எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை அளித்தார்கள் என்பது மட்டும் இன்னும் தெரியவில்லை. யார் யார் எவ்வளவு பத்திரம் வாங்கினார்கள், எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கிடைத்தது உள்ளிட்ட தகவல்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ளது. ஆனால் வாங்கிய பத்திரத்தின் பிரத்யேக எண்ணோ, பத்திரங்களை யார் பணமாக்கினார்கள் என்ற விவரமோ கொடுக்கப்படவில்லை. இந்த பிரத்யேக எண்கள் இருந்தால் மட்டுமே, யார் எந்த அரசியல் கட்சிக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி அளித்த தரவுகளின்படி, 2019 ஏப்ரல் 1 முதல் 2024 பிப்ரவரி 15 வரை ரூ.12,156 கோடி அரசியல் நன்கொடைகளாக வழங்கப்பட்டுள்ளன. பத்திரங்களை வாங்கிய உயர்மட்ட நன்கொடையாளர்கள், ரூ.5830 கோடியை வழங்கியுள்ளனர், இது மொத்த அரசியல் நன்கொடையில் 48 சதவிகிதமாகும். தேர்தல் பத்திர திட்டம் 2018-இல் நரேந்திர மோதி அரசால் தொடங்கப்பட்டது. இது அரசியல் நிதி பற்றிய தகவல்களில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரும் என்று கூறப்பட்டது. ஆனால், பத்திரம் வாங்கியவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பெற்ற பணம் குறித்த விவரங்களில், யார் யாருக்கு பணம் கொடுத்தார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள முடியவில்லை. எனவே, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு நிதி அளிப்பதன் பின்னணியில் உள்ள நன்கொடையாளரின் உள்நோக்கம் என்ன என்பதை அறிந்துக் கொள்ள முடியாது. மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2017 பட்ஜெட் உரையில், தேர்தல் பத்திரங்கள் தேர்தல் நிதியில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்று கூறியிருந்தார். இந்த வெளிப்படைத்தன்மை இல்லாமல், சுதந்திரமான, நேர்மையான தேர்தல்கள் சாத்தியமில்லை. ஆனால், தேர்தல் நிதி குறித்து இன்னும் முழுமையான வெளிப்படைத்தன்மை எட்டப்படவில்லை என்பதே உண்மை. தேர்தல் பத்திர விவகாரத்தில், மனுதாரர் ஏடிஆர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், 'எக்ஸ்' பக்கத்தில், "தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்திருக்கும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களில், பத்திரங்களின் பிரத்யேக வரிசை எண்கள் குறிப்பிடவில்லை. அப்படி குறிப்பிட்டிருந்தால், யார் யாருக்காக பத்திரங்களை வாங்கினார்கள் என்ற தகவல் வெளிப்பட்டிருக்கும். பட மூலாதாரம்,ANI இதற்கு பதிலளித்த ஸ்டேட் வங்கி தரப்பு, ``பிரமாணப் பத்திரத்தில் இந்த தகவல்கள் வெவ்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன’’ என்று விளக்கம் கொடுத்தது. முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, இதுகுறித்து 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையில், ``எஸ்.பி.ஐ., தேர்தல் கமிஷனுக்கு அளித்துள்ள தரவுகளின் அடிப்படையில், பத்திரத்தை வாங்கியவர், எந்த கட்சிக்காக வாங்கினார் என்பதைக் கண்டுபிடிப்பது கடினம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த தகவல்களை வழங்க ஜூன் 2024 வரை கால அவகாசம் கேட்டிருந்தது எஸ்பிஐ. குரேஷி எழுதியிருந்த கட்டுரையில், "நாட்டு மக்கள் இந்த தகவல்களை அறிய விரும்புவதால், ஜூன் மாதத்திற்குள் முழுத் தகவல்களை வெளியிட வேண்டும் என்று எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்க வேண்டும். இது அரசாங்கத்திற்கும், இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையில் ஏதேனும் தொடர்பு உள்ளதா இல்லையா என்பதை வெளிப்படுத்தும்.” “2018 க்கு முன், இந்த விஷயத்தில் முழு ஒளிவுமறைவு இருந்தது என்பதே உண்மை. அரசியல் நிதிகள், 70 சதவீதம் பணமாக வழங்கப்பட்டது. ஆனால், 20,000 ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்தால், தேர்தல் கமிஷனில் தகவல் தெரிவிக்க வேண்டும், அந்த நிதிக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டது.” “ஆனால் தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தேர்தல் நிதி பற்றிய தகவல்கள் மேலும் ரகசியமாக்கப்பட்டுள்ளது. யார் யாருக்கு நன்கொடை வழங்கினார்கள் என்று தெரியவில்லை, இங்குதான் அரசியல் கட்சிகளுக்கும், நன்கொடை வழங்கியவர்களுக்கும் தொடர்பு உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.’’ இவ்வாறு குரேஷி குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அரசின் முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கார்க், 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஊடகத்துக்கு கொடுத்தப் பேட்டியில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகள் குறித்து கேள்விகளை எழுப்பி, யார் எவ்வளவு பத்திரங்கள் வாங்கினார்கள் என்பதை மட்டுமே இது காட்டுகிறது, ஆனால் எந்த கட்சிக்காக வழங்கப்பட்டது, யாரிடம் இருந்து எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. எஸ்பிஐயிலும் இது குறித்த தரவுகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு தேர்தல் பத்திரத்துடன் அதனை பெற்றவர் யார் என்பதை பொருத்தி பார்ப்பது இயலாத காரியம். இவ்வாறு பொருத்தியிருக்கும் தகவல்கள் வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறவில்லை என்றாலும், இதற்காக மூன்று மாத கால அவகாசம் கேட்டிருக்கிறது எஸ்பிஐ. உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ பொய்யான சாக்குப்போக்கை முன்வைப்பதாக கார்க் தெரிவித்துள்ளார். கார்க் குறிப்பிடுகையில், “யார் எவ்வளவு தொகைக்கு பத்திரங்களை வாங்கினார்கள் என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. அனைத்து பத்திரங்களும் எஸ்பிஐ இடமிருந்து மட்டுமே வருவதால், யார் எந்த பத்திரத்தை வாங்கினார்கள் என்பது தெரியவில்லை. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அனைத்து பத்திரங்களையும் பார்க்க முடிந்தாலும், ஒரு குறிப்பிட்ட பத்திரத்தை யார் வாங்கினார்கள், யார் டெபாசிட் செய்தார்கள் என்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியாது.” எனக் கூறியுள்ளார். “பத்திரம் வாங்கியவர்களையும் பணத்தை பெற்றவர்களையும் பொருத்தி தகவல் வெளியிட அதிக நேரம் தேவை என்று எஸ்பிஐ கூறுகிறது என்றால், எஸ்பிஐ அதை ஒருபோதும் செய்ய முடியாது. இது ஒரு பொய்யான சாக்கு. “ இந்த வழக்கில், மனுதாரர் ஏடிஆர் சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷன், இந்தியன் எக்ஸ்பிரஸிடம், பத்திர எண் மற்றும் அதை வாங்கிய நபர் பற்றிய தகவல் குறித்து உச்ச நீதிமன்றத்தை அணுக முடியும் என்று கூறினார். இதன் மூலம், நன்கொடை வழங்கியவர், எந்தக் கட்சிக்காக குறிப்பிட்ட பத்திரத்தை வாங்கியுள்ளார் என்பதை அறிய முடியும். பட மூலாதாரம்,ANI உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன? தேர்தல் ஆணையம் மார்ச் 14 அன்று தனது இணையதளத்தில் தேர்தல் பத்திர விவரங்களை பொதுவில் வெளியிட்டது. 763 பக்கங்கள் கொண்ட இரண்டு பட்டியல்கள் பதிவேற்றப்பட்டன. ஒன்றில் பத்திரங்கள் வாங்கியவர்கள் பற்றிய தகவல்களும் மற்றொன்றில் அரசியல் கட்சிகள் பெற்ற பத்திரங்களின் விவரங்களும் உள்ளன. 12 ஏப்ரல் 2019 முதல் 11 ஜனவரி 2024 வரையிலான தரவுகள் வெளியிடப்பட்டன. சான்டியாகோ மார்ட்டினின் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சேவை நிறுவனம்தான் அதிகபட்சமாக தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. இந்த நிறுவனங்கள் மட்டும் ரூ. 1,368 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வாங்கியுள்ளன. இந்த பத்திரங்கள் அக்டோபர் 21, 2020 மற்றும் ஜனவரி 24 க்கு இடையில் வாங்கப்பட்டுள்ளன. கட்சிகளைப் பொறுத்த வரையில் பா.ஜ.க தான் அதிகபட்ச நன்கொடைகளைப் பெற்றுள்ளது. தரவுகளின்படி ரூ. 6,060 கோடி பெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, அ.தி.மு.க, பி.ஆர்.எஸ், சிவசேனா, டி.டி.பி, ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ், தி.மு.க, ஜனதா தளம் எஸ், என்.சி.பி, ஜே.டி.யு மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்களை பணமாக்கியுள்ளன. மார்ச் 15-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் இந்த விவரங்களைப் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அதனைத் தொடர்ந்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மார்ச் 12, 2024 அன்று உச்ச நீதிமன்றத்தில் தரவுகளைச் சமர்ப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் புதிய கெடு தேர்தல் பத்திரங்களின் தனிப்பட்ட எண் இல்லாமல், நன்கொடைகள் யாருக்கு வழங்கப்பட்டன என்பதை இணைத்துப் பார்க்க முடியாது என்பதால், அந்தப் பத்திரங்களின் எண்களையும் சேர்த்து வரும் மார்ச் 17-ஆம் தேதிக்குள் வெளியிடுமாறு எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறும்போது, " இந்த தகவலில் பத்திரங்களின் எண் இல்லை, எனவே முழு தகவலையும் வழங்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிமன்றம் எஸ்பிஐக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் திங்களன்று இந்த வழக்கை விசாரிக்க பட்டியலிட்டுள்ளது." நோட்டீஸுக்கு வரும் திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று எஸ்பிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் கபூரிடம் நீதிமன்றம் கூறியது. https://www.bbc.com/tamil/articles/cn0e6x0p9x4o
  22. 15 தமிழக மீனவர்கள் கைது Published By: DIGITAL DESK 3 15 MAR, 2024 | 10:02 AM இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (15) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனையடுத்து, இந்திய மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், இந்திய மீனவர்களை, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178771
  23. இலங்கையில் சீனாவின்இராணுவதளம்? அமெரிக்க புலனாய்வு பிரிவினரின் தகவலை நிராகரித்தது இலங்கை Published By: RAJEEBAN 15 MAR, 2024 | 09:48 AM இலங்கையில் இராணுவதளங்களை உருவாக்குவதற்கு சீனா திட்டமிடுகின்றது என அமெரிக்காவின் புலனாய்வு பிரிவுகள் வெளியிட்டுள்ள தகவலை இலங்கை நிராகரித்துள்ளது. இலங்கையின் எல்லைக்குள் தளங்களை அமைப்பது தொடர்பில் சீனா உட்பட எந்த நாட்டுடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புகளின் தகவல் தவறானது. இதனை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை தனது எல்லைக்குள் எந்த சூழ்நிலையிலும் எந்தநாடும் தளங்களை அமைப்பதற்கு அனுமதிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை உட்பட பல நாடுகளில் இராணுவ கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து சீனா ஆராய்ந்து வருகின்றது என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தமது சமீபத்தைய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது. டிஜிபுட்டியில் உள்ள அதன் இராணுவதளத்தையும் கம்போடியாவில் உள்ள அதன் கடற்படை தளத்தையும் மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீனா இதற்கு அப்பால் இலங்கை உட்பட பல நாடுகளில் தனது தளங்களை உருவாக்க முயல்கின்றது என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர் என ஐஏன்என்எஸ் தெரிவித்துள்ளது. சீனா 2035 ஆண்டளவில் முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவ படையை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்துகின்றது. 2049ம் ஆண்டுக்குள் சீன இராணுவத்தை உலகதரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன. இதே காலப்பகுதியில் சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி தனது இறையாண்மை பிரதேசம் என கருதும் பகுதிகளை பாதுகாப்பதற்கு சீன இராணுவத்தை பயன்படுத்தவும் பிராந்திய விவகாரங்களில் தனது முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தவும் தனது இராணுவத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவம் சர்வதேச அளவில் தனது வலிமையை வெளிப்படுத்தவும் நீரிணை மோதலின் போது அமெரிக்காவின் தலையீட்டை தடுக்கவும் எதிர்க்கவும் தனது இராணுவத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178770
  24. இலங்கை இராணுவத்துக்கு நேர்மறை மீள்வரைவிலக்கணம் வழங்குகிறதா அமெரிக்கா? - சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் விமர்சனம் Published By: DIGITAL DESK 3 15 MAR, 2024 | 08:59 AM (நா.தனுஜா) 'குறைந்தபட்சம் பகுதியளவிலான பொறுப்புக்கூறலையேனும் உறுதிசெய்யவேண்டிய நிலையில் இருக்கும் பிரச்சினைக்குரிய கட்டமைப்பு' எனும் நிலையிலிருந்து தற்போது 'இந்திய - பசுபிக் பிராந்திய கடற்பாதுகாப்பில் மிகமுக்கிய பங்காளி' எனும் நிலையை நோக்கி அமெரிக்கா இலங்கை இராணுவத்துக்கு மீள்வரைவிலக்கணம் வழங்குவதாக சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் விமர்சித்துள்ளார். இலங்கையின் கடற்பிராந்தியம்சார் விழிப்புணர்வு மற்றும் இயலுமையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம், கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகம் மற்றும் இலங்கை விமானப்படை என்பன இணைந்து இம்மாதம் 12 - 14 ஆம் திகதி வரை இரத்மலானையில் அமைந்துள்ள இலங்கை விமானப்படைத்தளத்தில் கண்காணிப்பு விமானங்களின் முன்னோட்டமொன்றை நடாத்தியிருந்தன. இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், இலங்கையின் கடற்பிராந்திய வளப்பாதுகாப்பை விரிவுபடுத்தல், சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை முறியடித்தல், தனித்துவம் வாய்ந்த பொருளாதார வலயத்தைக் கண்காணித்தல் மற்றும் கடற்பிராந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்கு உதவக்கூடியவகையில் நடாத்தப்பட்ட முன்னோட்டத்தின்போது அமெரிக்காவுக்குச் சொந்தமான விமானத்தில் தானும் பறந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று மனிதாபிமான உதவிகள், அனர்த்தங்களின்போது உதவிகளை வழங்கல், கடற்பிராந்தியப்பாதுகாப்பு ஆகிய விடயங்களில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதை முன்னிறுத்தி அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயலாற்றிவருவதாகவும் அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார். இருப்பினும் அமெரிக்கத்தூதுவரின் எக்ஸ் தளப்பதிவை மேற்கோள்காட்டிப் பதிவிட்டுள்ள சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன், 'குறைந்தபட்சம் பகுதியளவிலான பொறுப்புக்கூறலையேனும் உறுதிசெய்யவேண்டிய நிலையில் இருக்கும் பிரச்சினைக்குரிய கட்டமைப்பு எனும் நிலையிலிருந்து தற்போது இந்திய - பசுபிக் பிராந்திய கடற்பாதுகாப்பில் மிகமுக்கிய பங்காளி எனும் நிலையை நோக்கி இலங்கை இராணுவத்துக்கு அமெரிக்கா மீள்வரைவிலக்கணம் வழங்குவதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கின்றது' என விமர்சித்துள்ளார். அதேவேளை அமெரிக்கா போர்க்குற்றவாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் வெளியிடப்பட்ட புத்தகத்தில் 'எமது அரசாங்கத்துக்கு எதிராக வெளியக சக்திகள் செயற்பட்டன' எனக் கூறப்பட்டிருப்பது உண்மை என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ளமுடிகின்றது எனவும் மேலும் சில சமூகவலைத்தளப் பயனாளர்கள் இதனை விமர்சித்துள்ளனர். https://www.virakesari.lk/article/178765

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.