Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் கத்திரிக்காய்களில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நடத்திய ஆய்வில், சந்தையில் இருந்து எடுக்கப்படும் புதிய கத்தரிக்காய் மாதிரிகளில் 23 சதவீதம் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்ந்த நீரில் கழுவுவதற்குப் பதிலாக, வினிகர் அல்லது உப்பு சேர்த்து கழுவ வேண்டும். இதன் மூலம் இரசாயனங்களை அகற்ற முடியும். மேலும் காய்கறிகள் மற்றும் பழங்களின் வெளிப்புற தோலை அகற்றுவதன் மூலம் உணவில் உள்ள நச்சு இரசாயனங்களை எளிதில் அகற்ற முடியும் என்று ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர். ஏ. அபேசுந்தர தெரிவித்துள்ளார். அருண https://thinakkural.lk/article/294783
  2. முகமது அஸ்ஃபான்: இந்திய இளைஞர் ரஷ்ய ராணுவத்தில் சிக்கி யுக்ரேன் போரில் பலி - முழு பின்னணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முகமது அஸ்ஃபானின் மனைவி, தன் குழந்தை மற்றும் கணவரின் படத்துடன். 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹைதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்ஃபான் வேலை தேடிக் கொண்டிருந்தார், இந்தத் தேடல் அவரை ரஷ்ய ராணுவத்திற்கு அழைத்துச் சென்றது. அவருக்கு வேலையும் கிடைத்தது, ஆனால் அந்த வேலையே அவரது வாழ்க்கையின் முடிவாக அமைந்துவிட்டது. அசாதுதீன் ஒவைசியின் கட்சியான ஏஐஎம்ஐஎம் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் முகமது அஸ்ஃபானின் மரணத்தை உறுதி செய்துள்ளது. ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை சமூக ஊடகங்களில், "இந்திய குடிமகன் முகமது அஸ்ஃபானின் துயர மரணம் பற்றி அறிந்தோம். அவரது குடும்பத்தினருடனும் ரஷ்ய நிர்வாகத்துடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்," எனக் கூறியது. முன்னதாக, இஸ்ரேலில் ஹெஸ்புலா தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். இதே தாக்குதலில் மேலும் இரு இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். மூவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. ரஷ்ய ராணுவத்தில் குறைந்தது 20 இந்திய குடிமக்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரஷ்யாவில் இந்தியர் ஒருவர் உயிரிழந்த செய்தி வெளிவந்துள்ளது. இந்த அறிக்கைக்குப் பிறகு, ரஷ்ய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இவர்களை இந்தியா அழைத்து வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. பிப்ரவரி 29 அன்று, இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியது, "சுமார் 20 இந்தியர்கள், நாடு திரும்ப உதவி கோரி மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தை அடைந்துள்ளனர்," என்று கூறியுள்ளது. அஸ்ஃபான் பற்றிக் கிடைத்த தகவல்கள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முகமது அஸ்ஃபானின் சகோதரர் முகமது இம்ரான் ஹைதராபாத்தை சேர்ந்தவர் முகமது அஸ்ஃபான். இவருக்கு அஸ்மா ஷிரீன் என்ற மனைவியும் ஒரு சிறு குழந்தையும் உள்ளனர். அஸ்ஃபானுக்கு வயது 30. என்டிடிவி சேனல் அஸ்ஃபானின் குடும்பத்தினரிடம் பேசியுள்ளது. அஸ்ஃபான் ஹைதராபாத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்ததாக என்டிடிவி செய்தி கூறுகிறது. முகமது அஸ்ஃபானின் சகோதரர் முகமது இம்ரான் பைனான்சியல் டைம்ஸிடம், பாபா விலாக்ஸ் என்ற யூடியூபரின் வீடியோக்களை பார்த்து தனது சகோதரர் இதில் சிக்கியதாகக் கூறினார். மாஸ்கோவில் ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிய வாய்ப்புகள் இருப்பதாகவும், வேலையில் சேர்ந்தால் ஓராண்டில் ரஷ்ய குடியுரிமை கிடைக்கும் என்றும் பாபா விலாக்ஸ் யூடியூபர் கூறியதாக இம்ரான் கூறுகிறார். "கடந்த ஆண்டு செப்டம்பரில், ரஷ்யாவில் டெலிவரி பாய் வேலைகள் குறித்த வீடியோ ஒன்று பாபா விலாக்ஸ் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டது. மற்றொரு வீடியோவில், ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களுக்கான வேலைகள் பற்றித் தெரிவிக்கப்பட்டது. பீட்டர்ஸ்பர்க் தெருக்களில் சுற்றித் திரியும் இந்த யூடியூபர், தனது வீடியோக்களில் ரஷ்யாவின் வானிலையைப் புகழ்ந்து பேசி, ரஷ்ய ராணுவத்தில் ரூபாய் 1 லட்சம் மாத சம்பளத்தில் வேலைகள் இருப்பதாகக் கூறுகிறார். மூன்று மாத பயிற்சியும், தங்குமிடம் மற்றும் உணவும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்." முகமது இம்ரானின் கூற்றுப்படி, இதுபோன்ற வீடியோக்களால்தான் அஸ்ஃபான் ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முகமது அஸ்ஃபான் தனது சகோதரனைக் கண்டுபிடிக்க இந்த வாரம் ரஷ்யா செல்ல நினைத்ததாக ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் முகமது இம்ரான் கூறியுள்ளார். "முகமது அஸ்ஃபான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரஷ்யா சென்றடைந்தார். ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட ஒப்பந்தம் அவருக்குக் கையெழுத்திட வழங்கப்பட்டது. பின்னர் டிசம்பர் மாதத்தில் யுக்ரேன் எல்லைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார், அதன் பிறகு அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அஸ்ஃபானுடன் பணிபுரிபவர்கள் ஜனவரி மாதம் தொலைபேசியில் அழைத்து அவருக்கு காலில் குண்டடி பட்டதாகத் தெரிவித்தனர்," என்று இம்ரான் கூறுகிறார். அஸ்ஃபானை தவிர, ரஷ்யாவுக்குச் சென்ற பஞ்சாப் மற்றும் ஹரியாணாவை சேர்ந்த சில இளைஞர்கள் அரசாங்கத்திடம் உதவி கேட்டு தங்கள் உறவினர்களுக்கு வீடியோ அனுப்பியுள்ளனர். தவறாக வழிநடத்தப்பட்டு விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைந்ததாகக் கூறி ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக இந்த இளைஞர்கள் தெரிவித்தனர். புகைப்பட ஏஜென்சியான கெட்டியின் கூற்றுப்படி, கடந்த மாதம் அஸ்ஃபானின் குடும்பத்தினர் அவரது புகைப்படத்துடன் உதவி கோரினர். அஸ்ஃபானை சீக்கிரமாக ரஷ்யாவில் இருந்து மீட்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். ரஷ்ய வேலைக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அஸ்ஃபானை தவிர, ரஷ்யாவுக்கு சென்ற பஞ்சாப், ஹரியாணாவை சேர்ந்த சில இளைஞர்கள் அரசாங்கத்திடம் உதவி கேட்டு தங்கள் உறவினர்களுக்கு வீடியோ அனுப்பியுள்ளனர். இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, துபாயில் அலுவலகம் வைத்திருக்கும் ஒரு முகவர் வேலைக்கு ஈடாக ஒவ்வொரு இளைஞரிடம் இருந்தும் மூன்று லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாக முகமது இம்ரான் கூறியுள்ளார். ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தியிலும் முகமது இம்ரானின் அறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள பாபா விலாக்ஸ் யூடியூப் சேனலை பார்த்தோம். இந்த சேனலுக்கு சுமார் மூன்று லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். ரஷ்ய வேலை தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோ 26 செப்டம்பர் 2023 அன்று பதிவேற்றப்பட்டது. இந்த சேனல்களில் வேறு பல நாடுகளைப் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டு, அங்குள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. முகமது அஸ்ஃபானின் மரணச் செய்திக்குப் பிறகு இந்த சேனலில் எந்த அப்டேட்டும் இல்லை. சேனலில் கடைசியாக ஜனவரி மாதம் ஒரு வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, அஸ்ஃபான் ரஷ்யாவை அடைந்த பிறகு முகவரைத் தொடர்புகொண்டு, தனக்கு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்படுவதாகப் புகாரளித்துள்ளார். இது வேலையின் ஒரு பகுதி என்று முகவர் அஸ்ஃபானிடம் கூறியுள்ளார். பின்னர் அந்த இளைஞர்கள் ரஷ்யா-யுக்ரேன் போர் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என முகமது இம்ரான் கூறுகிறார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, அஸ்ஃபான் உயிருடன் இருப்பதாக முகவர்கள் கூறுவதாகவும், ஆனால் அஸ்ஃபான் இறந்துவிட்டதாக தூதரகம் கூறுவதாகவும் முகமது இம்ரான் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ஒவைசி ஒவைசி தரப்பினர் வைத்த வேண்டுகோள் முகமது அஸ்ஃபானின் மறைவுக்கு அசாதுதீன் ஒவைசியின் கட்சியான ஏஐஎம்ஐஎம் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்துள்ளது. "இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு ஒவைசி ஏற்கெனவே ஒரு கடிதம் எழுதியிருந்தார். மேலும் இந்திய இளைஞர்கள் எப்படி வலுக்கட்டாயமாக போருக்குத் தள்ளப்படுகிறார்கள் என்றும் கூறினார். முகமது அஸ்ஃபானின் உடலை இந்தியா கொண்டு வர வெளியுறவு அமைச்சகம் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்," என ஏஐஎம்ஐஎம் கட்சி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது. சில இந்தியர்களின் குடும்பங்கள் தன்னைச் சந்தித்ததாகவும், தங்கள் அன்புக்குரியவர்கள் ரஷ்யா- யுக்ரேன் போருக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டதைப் பற்றி அவர்கள் தன்னிடம் கூறியதாகவும், பிப்ரவரி 21 அன்று ஒவைசி ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அப்போது ரஷ்ய அரசுடன் பேசி இளைஞர்களை நாட்டுக்கு அழைத்து வருமாறு பிரதமர் நரேந்திர மோதி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் ஒவைசி வேண்டுகோள் விடுத்தார். இந்தியாவில் இருந்து இரண்டு பிரிவுகளாக ரஷ்யாவிற்கு இளைஞர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஒவைசி கூறியிருந்தார். இரண்டு ஆண்டுகளாக தொடரும் ரஷ்யா- யுக்ரேன் போர் படக்குறிப்பு, ரஷ்யா- யுக்ரேன் போரில் ரஷ்ய வீரர்களுடன், இந்திய இளைஞர்ளும் போர்க்களத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன. ரஷ்யா, யுக்ரேன் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. ரஷ்ய ராணுவம் வீரர்கள் பற்றாக்குறையால் அவதிப்படுவதாக பல செய்திகள் கூறின. சமீபத்தில் ரஷ்யா- யுக்ரேன் போரில் ரஷ்ய வீரர்களுடன், இந்திய இளைஞர்ளும் போர்க்களத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன. ரஷ்யாவில் சிக்கியுள்ள நபர்களின் கூற்றுப்படி, ரஷ்யாவில் உதவியாளர் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலைகள் வழங்கப்படும் என்று முகவர்கள் அவர்களிடம் கூறியுள்ளனர். இந்த நெட்வொர்க்கில் உள்ள இரண்டு முகவர்கள் ரஷ்யாவிலும், இருவர் இந்தியாவிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நான்கு முகவர்களின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் ஃபைசல் கான் என்ற மற்றொரு முகவர் துபாயில் இருந்துள்ளார். இந்த ஃபைசல் கான் 'பாபா விலாக்ஸ்' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த முகவர்கள் மொத்தம் 35 பேரை ரஷ்யாவுக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தனர். முதலில் மூன்று பேர் சென்னையில் இருந்து ஷார்ஜாவிற்கு 9 நவம்பர் 2023 அன்று அனுப்பப்பட்டனர். ஷார்ஜாவில் இருந்து அவர்கள் நவம்பர் 12 அன்று ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். நவம்பர் 16 அன்று, ஃபைசல் கானின் குழு ஆறு இந்தியர்களையும் பின்னர் ஏழு இந்தியர்களையும் ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்றது. அவர்கள் ராணுவ வீரர்களாக அல்லாமல் உதவியாளர்களாகப் பணியாற்ற வேண்டும் என்று முதலில் கூறப்பட்டது. அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்களுக்கு சில நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், அதன் பிறகு அவர்கள் 24 டிசம்பர் 2023 அன்று ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாகவும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். 'பாபா விலாக்ஸ்' சேனலின் விளக்கம் என்ன? பட மூலாதாரம்,YT/BABA VLOGS படக்குறிப்பு, 'பாபா விலாக்ஸ்' ஃபைசல் கான் ஃபைசல் கான் பிபிசியிடம் பேசினார். "இது பொது வேலைகள் அல்ல, ராணுவத்தில் உதவியாளர் பதவிக்கான வேலைகள் என இளைஞர்களிடம் தெரிவிக்கப்பட்டது," என்று அவர் கூறுகிறார். "இது ராணுவ உதவியாளர் பணி என்று வேலை தேடுபவர்களிடம் நான் கூறியிருந்தேன். எனது யூடியூப் சேனலில் முன்பு வெளியிட்ட வீடியோவை நீங்கள் பார்க்கலாம். இது ராணுவ உதவியாளர் பணி என்று ரஷ்ய அதிகாரிகளுக்கும் தெரிவித்திருந்தோம். நான் இந்தத் துறையில் ஏழு ஆண்டுகளாக இருக்கிறேன். இதுவரை நான் சுமார் இரண்டாயிரம் பேருக்கு வெவ்வேறு இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்," என்கிறார் பைசல் கான். வேலைக்காக ரஷ்யா சென்ற சிலரின் பெயர்களை பிபிசி கண்டுபிடித்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்ஃபான், தெலங்கானாவில் உள்ள நாராயண்பேட்டையைச் சேர்ந்த சுஃபியான், உத்தர பிரதேசத்தை சேர்ந்த அர்பன் அகமது, காஷ்மீரை சேர்ந்த ஜாகூர் அகமது, குஜராத்தை சேர்ந்த ஹமீல் மற்றும் கர்நாடகாவின் குல்பர்காவை சேர்ந்த சையத் ஹுசைன், சமீர் அகமது மற்றும் அப்துல் நயீம் ஆகியோர் ரஷ்யா சென்றுள்ளனர். https://www.bbc.com/tamil/articles/c72ex2y47p8o
  3. ஹமாஸ் பேச்சுவார்த்தைக் குழுவினர் கெய்ரோவிலிருந்து வெளியேறினர் Published By: SETHU 07 MAR, 2024 | 05:47 PM போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்த ஹமாஸ் இயக்கத்தின் பிரதிநிதிகள் கெய்ரோவிலிருந்து வெளியேறியுள்ளனர் என எகிப்திய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். காஸாவில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்துவது குறித்து கத்தார், எகிப்து ஏற்பாட்டில், எகிப்திய தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்த்கைள் நடைபெற்றுவந்தன. இந்நிலையில், ஹமாஸ் பிரதிநிதிகள் கெய்ரோவிலிருந்து வெளியேறியுள்ளனர் என எகிப்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆலோசனைகளுக்காக ஹமாஸ் பிரதிநிதிகள் கெய்ரோவிலிருந்து வெளியேறியுள்ளனர். எனினும் அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் என எகிப்திய அரசாங்க வட்டாரமொன்று தெரிவித்ததாக எகிப்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, உடன்பாடொன்று ஏற்படும்வரை பேச்சுவார்த்தை தொடரும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. உடன்பாடொன்றை ஏற்படுத்துவதற்கு மத்தியஸ்தர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் இஸ்ரேல் தடுத்துவிட்டது என ஹமாஸ் பிரதிநிதி சமி அபு ஸுஹ்ரி கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/178192
  4. திருக்கோணேஸ்வர ஆலய சிவராத்திரி நிகழ்வில் பங்கேற்ற போரூர் ஆதீனம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதஸ்தல அடிகளார் மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வில் போரூர் ஆதீனம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதஸ்தல அடிகளார் மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் விசேட அழைப்பாளராக கலந்துகொண்டனர். நேற்றைய தினம் போரூர் ஆதினம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதஸ்தல அடிகளார் அவர்களின் தெய்வீக சொற்பொழிவும், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் தெய்வீக கானங்களும் இடம்பெற்றது. கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் கடந்த 02 ஆம் திகதி முதல் சிவராத்திரி நிகழ்வுகள் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் தொடர்சியாக தினமும் மாலை வேளையில் இடம்பெற்று வருகின்றன. பெருந்திரளான பக்தர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றனர். இதேவேளை, எதிர்வரும் 08ஆம் திகதி சிவராத்திரி தினம் வரை இந்நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/294844
  5. Published By: DIGITAL DESK 3 07 MAR, 2024 | 03:49 PM எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், மன்னார் தீவு பகுதியில் மக்களை பாதிக்கும் வகையில் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் மக்களின் எதிர்ப்பையும் மீறி ரகசியமாக இடம்பெற்று வருகின்றது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வியாழக்கிழமை (7) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையின் காரணமாக கடல் வளம் சுறண்டப்படுவதினால் எமது மீனவர்கள் வாழ முடியாத நிலை காணப்படுகிறது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நாங்கள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்த போதும் இதற்கு எவ்வித முடிவும் கிடைக்காத நிலை காணப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் முன் நின்று குரல் கொடுத்து வருகிறோம். இலங்கை கடற்பரப்பினுல் ஆயிரக்கணக்கான இந்திய இழுவைப்படகுகள் வந்து மீன் வளங்களை அழிப்பதோடு, மீனவர்களின் சொத்துக்களும் அழிக்கப்படுகின்றது. இதனால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கை இடம் பெறுகின்றது. மன்னார் தீவை பாதுகாக்க மன்னார் மாவட்ட மக்கள் எம்முடன் கைகோர்த்துள்ளனர். வளம் நிறைந்த மன்னார் மண்ணை வளமற்ற நிலமாக மற்ற அந்நிய சக்திகள் முயற்சிக்கின்றது. கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் மக்களின் எதிர்ப்பையும் மீறி ரகசியமாக இடம்பெற்று வருகின்றது. எனவே மக்களை பாதிக்கும் குறித்த நடவடிக்கைகள் மன்னார் தீவு பகுதியில் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/178171
  6. பட மூலாதாரம்,REUTERS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் இந்தியாவில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் குறித்துக் கூறியுள்ள கருத்துக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. அவரது கருத்துகள் ‘தேவையற்றவை’ எனவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் எதார்த்தத்தை அவை பிரதிபலிக்கவில்லை எனவும் இந்தியா கூறியுள்ளது. இந்தியாவின் தேர்தல் அனுபவத்திலிருந்து பல நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும், அதைப் பின்பற்ற விரும்புவதாகவும் இந்திய அரசு அதுகுறித்த தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மன்றத்தின் 55வது கூட்டத்தொடரின்போது இந்தியாவின் இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த அமர்வில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க், உலகின் பல பகுதிகளில் போரை நிறுத்துவதற்கான அமைதி முயற்சிகள் குறித்து, மக்கள் சமூகங்கள் செழிக்க ‘வெளிப்படைத்தன்மை’ அவசியம் என்பது குறித்தும் பேசினார். குடிமக்களுக்கான வெளிப்படைத்தன்மை கொண்ட சூழலைப் பற்றிப் பேசிய அவர், பல நாடுகளில் தேர்தல்கள் நடத்தப்படும்போது அது இன்னும் முக்கியத்துவம் பெறுவதாகவும் கூறினார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் தனது உரையில் கூறியது என்ன? பட மூலாதாரம்,WEBTV/UN ரஷ்யா, இரான், செனகல், கானா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெறும் தேர்தல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான தலைமை அதிகாரி வோல்கர் டர்க் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதன்போது அவர் இந்தியாவையும் குறிப்பிட்டுள்ளார். டர்க் இதுகுறித்துப் பேசியபோது, “96 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவின் தேர்தல் தனித்துவமானது. இந்த நாட்டின் மதச்சார்பின்மை, ஜன்நாயக மரபுகள், மற்றும் அதன் பெரிய பன்முகத்தன்மையை அவர் பாராட்டினார். ஆனால், அவர் சில கவலைகளையும் வெளிப்படுத்தினார்.” குடிமக்களின் உரிமைகள் மீதான ‘அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்’, அத்துடன் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், விமர்சகர்களின் ‘இலக்கு’ மற்றும் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான ‘வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் பாகுபாடு’ குறித்து டர்க் கவலை தெரிவித்தார். தேர்தலுக்கு முன்பாக, அனைவருடைய அர்த்தமுள்ள பங்கேற்பை உறுதி செய்வதற்கான வெளிப்படையான சூழலை உருவாக்குவது மிகவும் முக்கியம் எனவும் டர்க் வலியுறுத்தினார். மேலும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவர் இதன்போது வரவேற்றுள்ளார். கடந்த மாதம், உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேர்தல் பத்திரங்களை ரத்து செய்து, அவை அரசமைப்புக்கு விரோதமானது என்றும், தேர்தல் பத்திரங்களை விற்க அதிகாரம் பெற்ற ஒரே வங்கியான எஸ்பிஐக்கு, ஏப்ரல் 12, 2019 முதல் தற்போது வரையிலான அவற்றை வாங்குமாறும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை அளிக்கவும் உத்தரவிட்டது. இந்த ஆண்டு 60க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல்கள் நடைபெறும் என்றும் இந்தக் கண்ணோட்டத்தில் 2024 ஒரு முக்கிய தேர்தல் ஆண்டு எனவும் டர்க் குறிப்பிட்டார். வோல்கர் டர்க்கின் அறிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு பட மூலாதாரம்,WEBTV/UN ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி அரிந்தம் பக்சி, இந்த அமர்வின்போது இந்தியாவின் தரப்பை முன்வைத்து, டர்க்கின் அறிக்கையைத் தாம் கவனத்தில் எடுத்ததாகக் கூறினார். வோல்கர் டர்க்கின் அறிக்கை ‘தேவையற்றது’ எனக் கூறிய அவர், அவரது கருத்துகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் எதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றும் தெரிவித்தார். அரிந்தம் பக்சி, “எந்தவொரு ஜனநாயகத்திலும் விவாதம் இயல்பானது. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் தங்கள் முடிவுகளைப் பிரசாரங்கள் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது முக்கியம். பன்முகத்தன்மை, பன்மைத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை ஆகியவை நமது ஜனநாயகத்தின் முக்கியக் கொள்கையின் ஒரு பகுதி மற்றும் அரசமைப்பு மதிப்புகளிலும் அது பொதிந்துள்ளது,” என்றார். “இதற்காக, வலுவான நீதித்துறையும் அனைவரின் உரிமைகளையும் பாதுகாக்கும் சுதந்திரமான அமைப்புகளும் உள்ளன. இந்த மதிப்புகள் மீதான இந்தியாவின் அணுகுமுறை மொத்த பூமியும் ஒரே குடும்பம் என்ற நாகரிகத்தின் மதிப்பிலிருந்து வருகிறது,” என்று பக்சி கூறினார். கோவிட்-10 பேரிடரைக் கையாள்வதில் அதன் நட்பு நாடுகளுக்கு உதவுவதுல் இந்தியாவின் இந்த அர்ப்பணிப்பு பிரதிபலித்தது எனக் கூறிய அவர், நெருக்கடி காலங்களில் உதவத் தயாராக உள்ள நாடு இந்தியா என்றார். “இன்று உலகம் மோதல்களாலும் போராலும் சூழப்பட்டிருக்கும்போது, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் தீர்வுகாண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்துகிறது. கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில், இந்திய மக்கள் தங்கள் விருப்பங்களுக்குக் குரல் கொடுக்கும் என்று அவர்கள் நம்பும் ஓர் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்குத் தங்கள் வாக்கை சுதந்திரமாகப் பயன்படுத்துவார்கள் என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை,” என்றும் பக்சி கூறினார். பாகிஸ்தான் பற்றி வோல்கர் டர்க் என்ன கூறினார்? பட மூலாதாரம்,REUTERS பாகிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தல்களைக் குறிப்பிடும் டர்க், இந்தத் தேர்தலை ஏராளமான வாக்காளர்களை வரவேற்றதுடன், ஜனநாயகத்தில் தலையிடுவதை பாகிஸ்தான் மக்கள் விரும்புவதை இது காட்டுவதாகக் கூறினார். “எதிர்க்கட்சி வேட்பாளர்கள், ஊடகவியலாளர்கள், சிறுபான்மை சமூக உறுப்பினர்கள், பிறரை தன்னிச்சையாக காவலில் வைப்பதை நிறுத்துமாறு பாகிஸ்தானின் புதிய அரசாங்கத்திடம் முறையிடுகிறேன்,” என்று டர்க் கூறினார். பல வாரங்களாக அவர்களைப் பற்றிய தகவல் கிடைக்காதது போன்ற விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதேநேரத்தில், வங்கதேசத்தில் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி வேட்பாளர்கள், உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதற்கு அவர் கவலை தெரிவித்தார். அக்டோபர் மாதத்தில் இருந்து பல தடுப்புக் காவல் மரணங்களும் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார். “எந்தவிதமான அரசியல் வன்முறையையும் நான் கண்டிக்கிறேன், அனைத்து வழக்குகளையும் விரைவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cg3rv0mmp93o
  7. வடமாகாண இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களில் முறைகேடு - ஆளுநருக்கு தொழிற்சங்கம் முறைப்பாடு Published By: DIGITAL DESK 3 07 MAR, 2024 | 01:45 PM (எம்.நியூட்டன்) வடக்கு மாகாண பொதுச்சேவைக்கு விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு மாகாண மட்டத்தினுள் இடமாற்றம் செய்யப்பட்ட போது, தேசிய இடமாற்றக் கொள்கை மீறப்பட்டுள்ளதுடன், அவ்விடமாற்றங்களுள் முறையற்ற, பாரபட்சமான சந்தர்ப்பங்களும் அவதானிக்கப்பட்டுள்ளதாக இ.க.நி.சேவை வாண்மையாளர்கள் (மட்டுப்படுத்தப்பட்ட) தேசிய சங்கத்தின் செயலாளர் - வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் மூலம் முறையிட்டுள்ளார். இச்சங்கத்தின் செயலாளர் ஆர்.ஏக்கநாயக்க, வடக்கு மாகாண ஆளுநருக்கு கடந்த 29ம் திகதி எழுதியுள்ள முறைப்பாட்டுக் கடிதத்தில், இ.க.நி.சேவை உத்தியோகத்தர்களுக்கான மாகாண இடமாற்றக் கொள்கையில் தேசிய இடமாற்றக் கொள்கையிலிருந்தான வேறுபாடுகள் மற்றும் மாற்றங்களை சுட்டிக்காட்டியிருப்பதுடன், இம்மாகாண இடமாற்றக் கொள்கையை தயாரித்த குழுவின் தலைவரான வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரே, இடமாற்ற சபையின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளதன் மூலம் அதிகாரத் துஸ்பிரயோகம் மற்றும் பழிவாங்கல்கள் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தியுள்ளார். மேலும், இடமாற்ற சபையில் இ.க.நி.சேவை வாண்மையாளர்கள் தொழிற்சங்கங்கள் எவற்றினதும் பிரதிநிதித்துவம் பெறப்படாததுடன் வடக்கின் சகல வலயங்களிலிருந்தும், 60 சதவீதமான உத்தியோகத்தர்களுக்கு ஒரே வருடாந்த இடமாற்றத்தில் இடமாற்றங்களை வழங்கியிருப்பதுடன் யாழ் மாவட்ட வலயமொன்றில் 100 சதவீதமான உத்தியோகத்தர்களுக்கும் இடமாற்றம் வழங்கியிருப்பதானது இடமாற்றச் சுற்றறிக்கைகளை மீறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளதுடன் இவ்விடமாற்றல்கள் மூலம் ஏற்பட்டுள்ள கட்டமைப்புச் சிதைவையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தேசிய இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக வடக்கு மாகாண இ.க.நி.சேவை இடமாற்றக் கொள்கை மீளாய்வுக்குட்படுத்தப்பட்டு திருத்தப்படுதல், கொள்கையுருவாக்கம் மற்றும் இ.க.நி.சேவை இடமாற்ற சபைச் செயற்பாடுகளில் தொழிற்சங்க பிரதிநிதிகளின் பங்குபற்றுதல் ஆகியன உறுதிப்படுத்தப்படும் வரை குறித்த இடமாற்றங்களை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கையெடுக்குமாறும் ஆளுநரிடம் கோரப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178163
  8. 07 MAR, 2024 | 01:21 PM இலங்கையில் 62 இலட்சம் தெருநாய்கள் இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நாடாளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார். இது சுற்றுலாப் பிரதேசங்களில் மிகவும் பாரதூரமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த தென்னகோன், இது தொடர்பில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விலங்குகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறினார். https://www.virakesari.lk/article/178158
  9. ராமர் குறித்த ஆ.ராசாவின் பேச்சு இந்தியா கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்துமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 6 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆ. ராசா ராமாயணம் குறித்தும், இந்திய நாடு குறித்தும் சமீபத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் பதிலளிக்க வேண்டுமென பா.ஜ.க. வலியுறுத்துகிறது. இந்தச் சர்ச்சையின் பின்னணி என்ன? சில நாட்களுக்கு முன்பாக கோபிச்செட்டிபாளையத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கலந்துகொண்டு பேசினார். அந்தப் பேச்சின் சில பகுதிகள்தான் இப்போது சர்ச்சையாகியிருக்கின்றன. "அன்புதான் கடவுள் என்று சொல்லுங்கள். மனிதனுக்கு மனிதன் காட்டுகிற இரக்க உணர்வில்தான் கடவுள் இருக்கிறான் என்று சொல்லுங்கள். கள்ளமில்லாத உள்ளம் அதுதான் கடவுளின் இல்லம் என்று சொல்லுங்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொல்லுங்கள். அப்படிப்பட்ட கடவுள் மீது எங்களுக்குக் கோபமில்லை. ஏன் பெரியாருக்கே கோபமில்லை,” என்று அவர் பேசினார். மேலும், 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானோவை பாலியல் வன்புணர்வு செய்தவர்களும் ஜெய் ஸ்ரீராம் என்றுதான் குறியதாகத் ராசா தெரிவித்தார். ஆனால், அந்த வழக்கில் இரட்டை அயுள் தண்டனை பெற்ற 16 பேரை குஜராத் மாநில அமைச்சரவையைக் கூட்டி, அவர்கள் 10 வருடம் தண்டனை அனுபவித்துவிட்டனர், அவர்களுக்கு தண்டனை போதும் என்று அவர்களை விடுதலை செய்ததாகவும் ராசா குறிப்பிட்டார். “அவர்கள் வெளியே வந்தபோது பா.ஜ.க காரர்கள் சென்று அவர்களிடம் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று சொல்லி வரவேற்றனர்,” என்றார் ராசா. அதைத் தொடர்ந்து, “நீங்கள் சொல்கிற கடவுள் இந்தக் கடவுள் என்றால், இதுதான் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்றால், இதுதான் 'பாரத் மாதா கி ஜெய்' என்றால், அந்த ஜெய் ஸ்ரீ ராமையும் பாரத மாதாவையும் ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழ்நாடு ஏற்காது,” என்றார். பட மூலாதாரம்,X/A RAJA படக்குறிப்பு, சில நாட்களுக்கு முன்பாக கோபிச்செட்டிபாளையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா பேசினார் கம்பராமாயணத்தை மேற்கோள் காட்டிப் பேசிய ஆ ராசா “நீ வேண்டுமானால் சொல்லிப்பார், ராமனுக்கு எதிரி என. என்ன ராமனுக்கு எதிரி? என் தமிழாசிரியர் சொல்லிக்கொடுத்திருக்கிறார். ராமன் சகோதரர்கள் நான்கு பேர். சீதையைத் தேடி காட்டுக்குப் போகிறான். காட்டில் வசிக்கும் குகன் வருகிறான். குகன் ராமனைத் தொழுது தேனும் மீனும் கொடுக்கிறான். மீனை சாப்பிட மாட்டார் ராமர். அதனால், தேனை சாப்பிட்டுவிட்டு, ராமர் சொல்கிறான் நாங்கள் நான்கு பேர், குகனோடு ஐவரானோம் என்கிறான். நீ வேடுவன் என்றாலும் இவ்வளவு அன்போடு கானகத்தில் என்னைப் பார்த்துக்கொண்டாயே எனக்கு நீ சகோதரன் என்கிறான். அடுத்ததாக சுக்ரீவன் வருகிறான். போருக்கு துணை நிற்கிறான். குகனோடு ஐவரானோம், குன்று சூழ்வான் மகனோடு அறுவாரானோம் என்கிறான்,” என்று அவர் கம்பராமாயணத்தை மேற்கோள்காட்டிப் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், “அப்புறம் வந்தான் விபீஷணன். குகனோடு ஐவரானோம், குன்று சூழ்வான் மகனோடு அறுவாரானோம் ஐய, நின்னொடும் எழுவர் ஆனோம் என்கிறான். எந்த ஜாதி, எங்கே பிறந்தான் என்பதைப் பார்க்கவில்லை. மேலும், தனக்கு ராமாயணத்தில் நம்பிக்கையில்லை, ஆனால், இதுதான் கம்ப ராமாயணம், என்றும், நான்கு பேராகப் பிறந்து, ஒரு வேட்டுவரை, ஒரு குரங்கை, இன்னொரு நபரை சகோதரனான ஏற்கும் ராமாயணத்திற்குப் பெயர்தான் மனித நல்லிணக்கம் என்று பேசினார் ஆ. ராசா. பட மூலாதாரம்,X/BJP4TAMILNADU/X படக்குறிப்பு, தி.மு.க. இருக்காது என பிரதமர் மோதி பேசியதைச் சுட்டிக்காட்டி ஆ ராசா பேசினார் மோதியின் பேச்சு மீது விமர்சனம் அவரது இந்தப் பேச்சு தவிர, தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. இருக்காது என பிரதமர் மோதி பேசியதைச் சுட்டிக்காட்டி இன்னொரு கூட்டத்தில் பேசும்போது, "தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. இருக்காது என்றால் இந்தியா இருக்காது. நாம் நமது அரசியல்சட்டத்தை மதச்சார்பற்றதாக கட்டமைத்திருக்கிறோம். இவர்கள் அந்த அரசியல் சட்டத்தைத் தூக்கியெறிய வேண்டுமென நினைக்கிறார்கள்," என்றார். மேலும், "நான் இந்தியா இருக்காது என்று சொல்வதற்குக் காரணம் என்ன? நீங்க திரும்ப ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் இருக்காது. அரசியல் சட்டம் இல்லாவிட்டால் இந்தியா இருக்காது. இந்தியா இல்லாவிட்டால் தமிழ்நாடு இருக்காது. நாங்கள் தனியாகப் போய்விடுவோம். இதை விரும்புகிறதா இந்தியா என்பதைக் கேட்டுச்சொல்லுங்கள்," என்றும் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,X/A RAJA படக்குறிப்பு, உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசியிருந்தது ஏற்கனவே சர்ச்சையாகியிருந்தது சர்ச்சையைக் கையிலெடுத்த பா.ஜ.க இப்போது இந்த இரண்டு பேச்சுகளும்தான் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றன. மார்ச் ஐந்தாம் தேதி அவரது இந்தப் பேச்சுகளின் சில பகுதிகளை பா.ஜ.கவின் ஐடி பிரிவின் பொறுப்பாளரான அமித் மால்வியா வெளியிட்டார். "தி.மு.கவிலிருந்து வெறுப்புப் பேச்சுகள் தொடர்கின்றன. சனாதன தர்மத்தை அழிக்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் கூறினார். இப்போது ஆ. ராசா, இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்கிறார். பகவான் ராமரைப் பற்றி மோசமாகப் பேசுகிறார். மணிப்பூர் மக்களைப் பற்றி இழிவான கருத்துகளைத் தெரிவிக்கிறார். இந்தியா ஒரு தேசம் என்ற கருத்தாக்கத்தை கேள்விக்கு உட்படுத்துகிறார்,” என்றார். “காங்கிரசும் இந்தியா கூட்டணியின் பிற அங்கத்தினர்களும் அமைதியாக இருக்கிறார்கள். ராகுல்காந்தியின் மௌனம் பொருள்மிக்கதாக உள்ளது," என்று குறிப்பிட்டு, ஆ. ராசா பேசிய சில பகுதிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வெளியிட்டார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் (வலது) ‘இது ராசாவின் தனிப்பட்ட கருத்துக்கள், கூட்டணியின் சிந்தனை அல்ல’ என்று தெரிவித்துவிட்டார் இந்தியா கூட்டணி தலைவர்கள் சொன்னது என்ன? இதற்குப் பிறகு இந்த விவகாரம் ஆங்கில ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் பதிலளிக்க வேண்டுமென பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்த ஆரம்பித்தனர். இதற்குப் பதிலளித்த பல தலைவர்கள், ஆ. ராசாவின் கருத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறி, விலகிக்கொண்டனர். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ‘இது ராசாவின் தனிப்பட்ட கருத்துக்கள், கூட்டணியின் சிந்தனை அல்ல’ என்று தெரிவித்துவிட்டார். தேசிய அளவில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாதே, இந்த அறிக்கையை காங்கிரஸ் ஏற்கவில்லை என்று கூறியிருக்கிறார். “அவரது கருத்துடன் நான் உடன்படவில்லை. இதுபோன்ற பேச்சுகளை நான் கண்டிக்கிறேன். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர், எங்கும் நிறைந்தவர் என்று நான் நம்புகிறேன். இமாம்-இ-ஹிந்த் என்று அழைக்கப்பட்ட ராமர் சமூகங்கள், மதங்கள் மற்றும் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்று நான் நம்புகிறேன். மக்கள் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்று தெரிவித்திருக்கிறார். ஆ ராசாவின் விளக்கம் என்ன? ஆ. ராசாவிடம் இது குறித்துக் கேட்டபோது, "எனது பேச்சை முழுமையாகக் கேட்கட்டும். எல்லோரும் கேட்கட்டும். அதற்குப் பிறகு இதற்கெல்லாம் பதில் சொல்கிறேன்" என்று மட்டும் தெரிவித்தார். படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் ‘இந்தியா கூட்டணிக்கு இது நெருக்கடிதான்’ தேர்தல் நெருங்கும் நிலையில் இதுபோன்ற பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டியவை என்கிறார் மூத்த பத்திரிகையாளாரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன். "இது போன்ற பேச்சுகள் நிச்சயமாக இந்தியா கூட்டணிக்கு நெருக்கடியாகத்தான் இருக்கும். இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை மோதியை பிரதமர் பதவியிலிருந்து இறக்குவதுதான் ஒரே நோக்கம். அப்போதுதான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும் என்கிறார்கள். ஆனால், ஜனநாயகத்தைக் காப்பாற்ற அதுமட்டம் போதாது. ஜாதி ஆதிக்கம் போன்ற விஷயங்களில் ஒரு குறைந்த பட்ச செயல்திட்டம் தேவை,” என்கிறார். “அந்தக் கூட்டணியில் அப்படி ஏதும் இல்லாத நிலையில், இது போன்ற பேச்சுகள் தேவையற்றவை என்றுதான் சொல்வேன். இப்படிப் பேசினால், இந்தியா கூட்டணியில் பிரச்சனை ஏற்படும் என்றால் அதைத் தவிர்க்க வேண்டும். தேர்தல் நெருங்கும் இந்தத் தருணத்தில் இதைப் பேசியிருக்கவேகூடாது. மோதியை பதவியிலிருந்து அகற்றுவதுதான் நோக்கம் என்றால், அதற்கு ஏதான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். இல்லாவிட்டால், இந்தியா கூட்டணியில் இல்லாமல் இருக்க வேண்டும்," என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன். படக்குறிப்பு, மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன். 'இந்தப் பேச்சை தவிர்த்திருக்கலாம்' இதே கருத்தையே எதிரொலிக்கிறார் மூத்த பத்திரிக்கையாளரான ப்ரியன். "இந்த விஷயத்தில் ஆ. ராசா இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு பேசவேண்டியதில்லை. பா.ஜ.க. திரும்ப ஆட்சிக்கு வந்தால் பல ஜனநாயக அமைப்புகள் பின்னடைவைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை. உதயநிதி சனாதனம் பற்றி பேசியதை எந்த அளவுக்குக் கொண்டுபோனார்கள் என்பதைப் பார்த்தோம். தி.மு.க. பல சோதனைகளைத் தாண்டி நீடித்து நிற்கும் கட்சி. பிரதமர் தி.மு.க. இருக்காது என்று சொன்னால், தங்கள் கட்சி எப்படி சோதனைகளை தாண்டி நீடித்து நிற்கிறது என்று விளக்கலாம்," என்றார். "பல்வேறு விஷயங்களில் தி.மு.க. குறிவைக்கப்படும் நிலையில், இதைப் பேச வேண்டியதில்லை. தி.மு.கவில் ஆ. ராசா உட்பட நான்கைந்து பேர் பேசுவதை தொடர்ந்து கண்காணித்து அதனை வைத்து சர்ச்சையை ஏற்படுத்த முயல்கிறார்கள். இம்மாதிரி சூழலில் இதைத் தவிர்த்திருக்கலாம்," என்கிறார் ப்ரியன். படக்குறிப்பு, தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ‘ஆ ராசா பேசியதில் தவறில்லை’ ஆனால், ஆ. ராசா பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டன்டைன். "பா.ஜ.கவிடம் இந்தத் தேர்தலில் முன்வைக்க எதுவுமே இல்லை. எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் ஆளும் கட்சியை குறைசொல்வார்கள். ஆளும் கட்சியாக இருப்பவர்கள், தங்கள் சாதனைகளைச் சொல்வார்கள். அடுத்த முறையும் தேர்தலைச் சந்திக்கும்போது சாதனைகளைத்தான் சொல்வார்கள். ஆனால், பா.ஜ.கவுக்கு அப்படிச் சொல்ல எதுவுமே இல்லை. அதனால், ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிதுபடுத்துகிறார்கள்," என்கிறார் கான்ஸ்டைன்டீன். மேலும், ஆ. ராசாவின் பேச்சு இந்தியா கூட்டணியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் பேசியதுதான் நாட்டுப்பற்று மிகுந்த பேச்சு என்றும் குறிப்பிடுகிறார் கான்ஸ்டைன்டீன். "இந்தியா கூட்டணியில் இருக்கும் பிற கட்சிகளைப் பொறுத்தவரை, அது தி.மு.க-வின் கொள்கை, எங்களுக்கு உடன்பாடு இல்லை என சொல்லிவிடுவார்கள். கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளோடும் எங்களுக்கு கொள்கை உடன்பாடு இருக்கிறதா? நுணுக்கமான வேறுபாடுகள் உண்டு,” என்றார். மேலும், “ஆ. ராசா எதையும் புதிதாகச் சொல்லிவிடவில்லை. 1963 மே மாதம் மாநிலங்களவையில் பேசிய அண்ணா இந்தியா ஒரு நாடல்ல, அது ஒரு துணைக் கண்டம் என்று குறிப்பிட்டிருக்கிறார். அரசியலமைப்புச் சட்டம், இந்தியா பல மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் குறிப்பிடுகிறது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டிற்கு ஆபத்து, இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும். அதனால் அவர்கள் வரக்கூடாது என்கிறார். இதுதான் உண்மையான தேசப்பற்று," என்கிறார் கான்ஸ்டன்டைன். https://www.bbc.com/tamil/articles/cqe3281l2myo
  10. Published By: DIGITAL DESK 3 07 MAR, 2024 | 01:19 PM யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி கடை கட்டிடத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி இன்று வியாழக்கிழமை (07) நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது அங்கிருந்த கடை கட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் லொறியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்ததுடன் கடையும் சேதமடைந்துள்ளது. லொறியின் சாரதி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை அருகில் இருந்த முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்த முச்சக்கரவண்டியொன்றும் சேதமாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/178156
  11. Published By: DIGITAL DESK 3 06 MAR, 2024 | 09:58 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மின் உற்பத்தி அபிவிருத்தியால் அனலைத் தீவு, நெடுந்தீவு மற்றும் நயினாத்தீவு பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். வடக்கு மாகாணத்தில் சூரிய மின்கல திட்டத்துக்கு சீனாவுக்கும், இந்தியாவுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், வடக்கு மாகாணத்தில் சீன நிறுவனத்துக்கு சூரிய மின்கல திட்டம் வழங்கப்படவுமில்லை, சீன நிறுவனம் அவ்வாறான கோரிக்கைகள் எதனையும் விடுக்கவில்லை. அதேபோல் வடக்கு மாகாணத்தில் சூரிய மின்கல திட்டத்தை முன்னெடுக்க அதானி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வடக்கில் சூரிய மின்கல திட்ட அபிவிருத்தியில் அதானி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி செய்யப்படும் ஒரு மின்னலகுக்கு 50 ரூபா கிடைக்கப்பெறும் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் குறிப்பிடுகிறார். ஊடகங்கள் ஏதும் இவ்வாறு பொய்யான செய்தியை வெளியிடவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதானி நிறுவனம் அவரிடம் தனிப்பட்ட முறையில் இவ்வாறு யோசனைகளை முன்வைத்ததா? என்பதை நாங்கள் அறியவில்லை. வடக்கு மாகாணத்தில் மின்னுற்பத்தி திட்டத்தை மேம்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதற்கு 10 மில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் வடக்கு மாகாணத்தில் மின்னுற்பத்தி திட்டத்தை மேம்படுத்த 11 மில்லியன் டொலர் நிவாரணத்தை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு விலைமனுகோரல் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய நிவாரணத்தினால் வடக்கு மாகாணத்தில் அனலை தீவு, நெடுந்தீவு மற்றும் நயினைத்தீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். இந்த திட்டத்துக்கு அரசாங்கம் ஒரு சதம் கூட செலவழிக்க தேவையில்லை. அத்துடன் எதிர்காலத்திலும் செலவழிக்க தேவையில்லை.இவ்வாறான நிலையில் இந்த திட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும். மன்னார் காற்றாலை மின்னுற்பத்தியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். சுற்றுச்சூழல் மாசுப்படுவதாக இருந்தால் காற்றாலை திட்டத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்கினாலும் பாதிப்பு ஏற்படும் தேசிய நிறுவனங்களுக்கு வழங்கினாலும் பாதிப்பு ஏற்படும். காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமாயின் காற்றாலை மின்னுற்பத்தி வலயத்தில் இருந்து மன்னார் பகுதியை நீக்க வேண்டும். ஒரு தரப்பினர் குறைகளை மாத்திரம் முன்னிலைப்படுத்தி அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்துகிறார்கள் என்றார். https://www.virakesari.lk/article/178081
  12. 06 MAR, 2024 | 05:31 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வீழ்ச்சியடைந்த நாட்டை பாதுகாக்க யாரும் முன்வராத நிலையில் தான் அந்த நெருப்பு பிழம்பில் குதித்ததாக ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால் அவர் நெருப்பு பிழம்பில் குதிக்கவில்லை மாறாக திருடர்கள் குழுவில் குதித்துள்ளார். அவர் நாட்டை வீழ்ச்சியடையச் செய்தவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச்) சட்டமூலம், ஈட்டுச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம், நிதி குத்தகைக்குவிடுதல் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி சபையில் ஆற்றிய உரையில் புத்தரின் உன்னத வார்த்தைகளை பிரயோகித்து அவரது தொலைநோக்கு பயணத்தை நனவாக்க பெரும் முயற்சியை மேற்கொண்டார். தொங்கு பாலம் குறித்து பேசிய ஜனாதிபதி வங்குரோத்து நிலையை ஏற்படுத்தியவர்களை பாதுகாத்து வருகிறார். நாட்டில் வங்குரோத்து நிலையை ஏற்படுத்திய பேரழிவை உருவாக்கியவர்களிடமிருந்து நாட்டு மக்களுக்கு நட்டஈடு பெறுவதற்கான வசதிகளைக்கூட தற்போதைய ஜனாதிபதியே நிறுத்தியுள்ளார். பேரழிவை உருவாக்கிய தலைவர்கள் திருடிய சொத்துக்களையும் இந்த ஜனாதிபதியே பாதுகாத்து வருகிறார். நாட்டை சீரழித்த ராஜபக்‌ஷக்கள் அந்த தொங்குபாலத்தில் மேலே வர உதவுபவரும் ஜனாதிபதியாகும். அதனால் ஜனாதிபதியின் செயற்பாடுகளால் 220 இலட்சம் மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர். அத்துடன் நாட்டை பாதுகாக்க பாரிய தீ பிழம்புக்குள் பாய்ந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால் அவர் உண்மையில் பாய்ந்தது தீ பிழம்புக்குள் அல்ல. திருடர்கள் கூட்டத்திற்குள் ஆகும். ஒருபோதும் தனக்கு வாக்குகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியாததை திருடர்கள் மூலம் பெற்றுக்கொண்டுள்ளார். நிகழ்நிலைக் காப்புச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் மூலம் ஒடுக்குமுறைகளை செய்ய முயற்சிக்கிறார். அத்துடன் ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவையை நிறைவேற்றுத்துறையின் பொம்மையாக மாற்ற முயற்சிக்கிறார். சபாநாயகருடன் இணைந்து அரசியலமைப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எந்த கருத்தும் இப்போது கூறுவதில்லை. தொங்கு பாலத்தில் ஏறி மேலே வந்தவர்கள் நாட்டை சீர்குலைத்த ராஜபக்‌ஷ குழுக்களே ஆகும். எவ்வாறாயினும் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வை ஐக்கிய மக்கள் சக்தி தயாரித்துள்ளது. பொருளாதார முன்னேற்றம் தொடர்பான வேலைத்திட்டத்தையே எதிர்பார்த்துள்ளோம். அனைவரையும் இணைத்துக்கொண்ட தேசிய அபிவிருத்தி திட்டத்தை எமது அரசாங்கத்தில் நாங்கள் ஏற்படுத்துவோம் என்றார். https://www.virakesari.lk/article/178086
  13. 06 MAR, 2024 | 10:02 PM 'சமாதானம், ஜனநாயகத்துக்கான செயற்கை தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றம்' எனும் தலைப்பில் வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாநாடு நாளை (07) ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (06) இடம்பெற்றது. இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த ரி.மங்களேஸ்வரன், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் ஆசிய பசுபிக் சமாதான ஆராய்ச்சி அமைப்பும் இணைந்து “சமாதானம் மற்றும் ஜனநாயகத்துக்கான செயற்கை தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றம்” என்ற தலைப்பில் இம்முறை ஆய்வு மாநாட்டை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். இதில் 250க்கும் மேற்பட்ட கல்வியியலாளர்களும் ஆராய்ச்சியாளர்களும், நல்லிணக்கத்துறையில் சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்களும், ஊடக மற்றும் தொழில்நுட்ப புலமையாளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். இங்கு சர்வதேச நாடுகளை சேர்ந்த புலமையாளர்களின் 200க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், கலாசாரம் மற்றும் சமாதானத்துக்கான மருத்துவ ரீதியான போக்கு, சமாதானம் மற்றும் ஜனநாயகத்துக்கான செயற்கை தொழில்நுட்பம், சமாதானத்துக்கான கல்வியும் அதன் சவால்களும் என்ற தலைப்பில் குழுக் கலந்துரையாடல்களும் இடம்பெறும். இந்த மாநாடானது நாளைய தினம் ஆரம்பமாகி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடம்பெறும். இம்மாநாட்டில் நல்லிணக்கம் தொடர்பாக சர்வதேச புலமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் ஒரு நாட்டில் எவ்வாறு சமாதானம் மற்றும் நல்லுறவை ஏற்படுத்த முடியும் என்ற அவர்களது அனுபவங்களையும் பகிரவுள்ளனர். எனவே, இந்த மாநாட்டின் ஊடாக அது தொடர்பான தெளிவினை பெற்றுக்கொள்ள முடியும். இந்த விடயத்தில் அக்கறை உடையவர்களை மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைத்து நிற்கின்றோம் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/178105
  14. 06 MAR, 2024 | 10:03 PM வட மாகாணத்தில் பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த மாணவர்களுக்கு வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டது. இலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவை வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் விசேட நிகழ்ச்சிகள் இன்று (06) முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய அங்கமாக, வட மாகாணத்தில் கல்வி, விளையாட்டு என பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த 20 மாணவர்களை உலங்கு வானூர்தியில் ஏற்றிச் சென்று யாழ்ப்பாணத்தை சுற்றி பார்க்க வாய்ப்பு வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் மாணவர்களை ஏற்றிய உலங்கு வானூர்தி யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளை சுற்றி வட்டமிட்டதுடன் மீண்டும் கல்லூரி மைதானத்தில் தரையிறங்கியது. https://www.virakesari.lk/article/178106
  15. Published By: VISHNU 06 MAR, 2024 | 08:11 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இந்தியச் சிறையில் இருக்கின்ற முருகன், ரொபட் பயஸ் உள்ளிட்டவர்களையாவது உயிருடன் விடுதலை செய்து அவர்களுடைய குடும்பத்தோடு சேர நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர், இந்தியப்பிரதமர் மற்றும் இலங்கை அரசிடம் கேட்கிறோம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச்) சட்டமூலம், ஈட்டுச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம், நிதி குத்தகைக்குவிடுதல் (திருத்தச்) சட்டமூலம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இன்றைய நாள் 16 வருடங்களுக்கு முன்னர் எங்களுடைய மண்ணிலே மாமனிதர் கிட்டினன் சிவனேசன் இலங்கையினுடைய படையினரால் ஆழ ஊடுருவும் படை என்ற பெயரில் மிக மறைமுகமாக கொலை செய்யப்பட்டிருந்தார் இந்த பாராளுமன்றத்தினுடைய உறுப்பினராக இருந்த சிவனேசன் அநியாயமாக கொல்லப்பட்டார். அதேவேளை இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை ஆகியும் கூட வீடு வர முடியாமல் சில நாட்களுக்கு முன்னர் மரணத்தை தழுவிக் கொண்ட சாந்தன்னுக்கும் நான் இந்த இடத்திலே எங்களுடைய அஞ்சலிகளை செய்து கொள்கிறேன் தன்னுடைய தாயைப் பார்க்க, உறவினர்களை பார்க்க தன்னுடைய ஊரை பார்க்க துடியாய் துடித்த 20 வயதில் புறப்பட்ட இளைஞன் 53 வயதைக் கடந்து சடலமாக வரவேண்டிய மிகப்பெரிய நெருக்கடியும் ஒரு மன உளைச்சலும் இந்த மண்ணிலே ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய ஆதங்கம். இது தொடர்பாக நான் மனோகணேசன் எம்.யுடன் சென்று இலங்கையினுடைய வெளியுறவுத் துறை அமைச்சர் அலிசப்ரி மற்றும் நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் பேசி இருந்தேன் அதேபோல இந்தியாவிலே இருக்கிற இலங்கை தூதரகத்தினுடைய தூதரக அதிகாரியையும் கூட தொடர்பு கொண்டு சாந்தனின் வருகைக்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அந்த முயற்சிகள் தோல்வி கண்டிருந்தது. உயிருடன் வீட்டுக்கு வர ஆசைப்பட்ட சாந்தனின் உயிரற்ற உடல் மட்டும்தான் இங்கு வந்தது என்பது மக்கள் மனங்களிலே மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே தற்போது இந்தியச் சிறையில் இருக்கின்ற முருகன் ரொபட் பயஸ் உள்ளிட்டவர்களையாவது உயிருடன் விடுதலை செய்து அவர்களுடைய குடும்பத்தோடு அவர்கள் சேர வேண்டும் அதற்கு உயர்ந்த சபையின் ஊடாக தமிழ்நாட்டினுடைய முதலமைச்சரையும் பாரதத்தினுடைய பிரதமரையும் இலங்கையினுடைய அதிகாரிகளையும் அவர்களை இந்த மண்ணிலே தங்களுடைய குடும்பத்தோடு சேர்ந்து வாழக்கூடிய வகையிலே ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/178116
  16. மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடர் இந்தியாவின் பெங்களூரு, டெல்லி நகரங்களில் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் உள்ள போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷப்னிம் இஸ்மாயில் ஆட்டத்தின் 3 ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின 2 ஆவது பந்தை மேக் லேனிங் வீராங்கனைக்கு எதிராக 132.1 கி.மீட்டர் வேகத்தில் வீசினார். இதன் மூலம் மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்து வீசிய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக எந்த வீராங்கனையும் 130 கி.மீட்டர் வேகத்தை தாண்டியது கிடையாது. இதற்கு முன்னதாக 2016 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 128 கி.மீட்டர் வேகத்தில் வீசியதே சாதனையாக இருந்தது. தற்போது அவர் சாதனையை அவரே முறியடித்துள்ளார். மேலும் 2022 உலகக் கோப்பை தொடரில் இரண்டு முறை 127 கி.மீட்டர் வேகத்தில் வீசியுள்ளார். தென்ஆப்பிரிக்கா அணிக்காக கடந்த 16 ஆண்டுகள் விளையாடிய 34 வயதான இஸ்மாயில் 127 ஒருநாள் மற்றும் 113 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் களம் இறங்கியுள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 192 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 63 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. https://thinakkural.lk/article/294615
  17. சி.எஸ்.கே. வில் டோனிக்கு புதிய பொறுப்பு இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22 ஆம் திகதி தொடங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் டோனி கெப்டனாக களமிறங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், தொடங்க இருக்கும் 2024 ஐ.பி.எல். தொடரில் புதிய ரோலை ஏற்க இருப்பதாக மகேந்திர சிங் டோனி தெரிவித்து இருக்கிறார். மேலும் புதிய பொறுப்பை ஏற்பதில் சுவாரஸ்யமாக இருப்பதாகவும் தெரிவித்து இருககிறார். டோனி ஏற்கவிருக்கும் புதிய பொறுப்பு என்னவென்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. https://thinakkural.lk/article/294496
  18. ஜெர்மனியில் 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபருக்கு என்ன ஆனது? பட மூலாதாரம்,PA MEDIA கட்டுரை தகவல் எழுதியவர், மிச்செல் ராபர்ட்ஸ் பதவி, டிஜிட்டல் ஹெல்த் எடிட்டர் 46 நிமிடங்களுக்கு முன்னர் ஜெர்மனியைச் சேர்ந்த 62 வயதான ஒரு நபர், மருத்துவர்களின் ஆலோசனைக்கு எதிராக 217 முறை கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வினோதமான சம்பவம் குறித்து 'தி லான்செட்' (The Lancet) எனும் மருத்துவ ஆய்வு இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை வருட காலத்தில், தனியாரிடமிருந்து பெறப்பட்ட தடுப்பூசிகளை அவர் பயன்படுத்தியுள்ளார். ஆனால் அந்த நபர் இதுவரை எந்த மோசமான விளைவுகளையும் சந்திக்கவில்லை என்று எர்லாங்கன்-நியூரம்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 'பரிசோதனையின் போது மீண்டும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது' பட மூலாதாரம்,PA MEDIA எர்லாங்கன்-நியூரம்பெர்க் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையைச் சேர்ந்த மருத்துவர் கிலியன் ஸ்கோபர் கூறுகையில், "நாங்கள் இந்தச் சம்பவத்தைப் பற்றி செய்தித்தாள் மூலம் அறிந்து கொண்டோம். பின்னர் அவரைத் தொடர்புகொண்டு, பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள எர்லாங்கனுக்கு அழைத்தோம். அவர் மிகுந்த ஆர்வத்துடன் இந்த சோதனைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்," என்கிறார். அந்த நபரின் இரத்தம் மற்றும் உமிழ்நீர் மாதிரிகள் பெறப்பட்டன. இதற்கு முன்பாக அவரே சேமித்து வைத்திருந்த சில உறைந்த இரத்த மாதிரிகளையும் ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்தனர். "அந்த நபரின் சொந்த வற்புறுத்தலின் பேரில் ஆய்வின் போது மேலும் ஒரு தடுப்பூசி அவருக்குச் செலுத்தப்பட்டது. இதனால் புதிய இரத்த மாதிரிகளை எங்களால் எடுக்க முடிந்தது. தடுப்பூசிக்கு நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதைத் தீர்மானிக்க இந்த மாதிரிகளைப் பயன்படுத்த முடிந்தது," என்கிறார் மருத்துவர் ஸ்கோபர். அந்நபர் செலுத்திக்கொண்டதாகத் தெரிவிகும் 217 தடுப்பூசிகளில், 130-க்கான ஆதாரங்கள் ஜெர்மனியின் மாக்டேபர்க் நகரின் அரசு வழக்கறிஞரால் சேகரிக்கப்பட்டன. அதை வைத்து அவர் தடுப்பூசி விவகாரத்தில் நடந்த மோசடிகள் குறித்த விசாரணையைத் தொடங்கினார். ஆனால் அந்நபர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. கோவிட் தடுப்பூசிகளால் நோய்த்தொற்றை ஏற்படுத்த முடியாது, ஆனால் நோயை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதை உடலுக்கு கற்றுக்கொடுக்க முடியும், என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். தடுப்பூசிகள் எவ்வாறு வேலை செய்கின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES வைரஸிலிருந்து பெறப்பட்ட சிறிதளவு மரபணுக் குறியீட்டை உடலின் செல்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், வைரஸை எதிர்த்து வேலை செய்கின்றன தூது-ஆறனை (Messenger RNA, mRNA) தடுப்பூசிகள். கோவிட் தொற்றை உண்மையாக எதிர்கொள்ளும்போது அதை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதை நமது நோயெதிர்ப்பு அமைப்பு அறிந்து கொள்ள வேண்டும். நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு மீண்டும் மீண்டும் தடுப்பூசி டோஸ்களை அளிப்பது, சில செல்களை சோர்வடையச் செய்திருக்கலாம் என்று டாக்டர் ஸ்கோபர் கருதுகிறார். ஆனால் 62 வயது நபரின் உடலில் இருந்து இதற்கான எந்த ஆதாரத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை. மேலும் அவருக்கு இதுவரை கோவிட் தொற்று ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. கோவிட் தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? பட மூலாதாரம்,ANDRIY ONUFRIYENKO/GETTY IMAGAES "முக்கியமாக, மீண்டும் மீண்டும் தடுப்பூசிகள் எடுத்துக்கொள்வதை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான ஒரு உத்தியாக நாங்கள் அங்கீகரிக்கவில்லை," என ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். 62 வயது நபர் மூலம் செய்யப்பட்ட சோதனைகளின் முடிவுகள் எந்த முக்கியமான முடிவுகளையும் எடுக்கப் போதுமானதாக இல்லை, என்கின்றர் அவர்கள். "வழக்கமான டாப்-அப் தடுப்பூசிகளுடன் சேர்த்து மூன்று-டோஸ் தடுப்பூசிகள் எடுத்துக்கொள்வதே பரிந்துரைக்கப்படும் அணுகுமுறையாக உள்ளது என்று தற்போதைய ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. ஒருவருக்கு அதை விட அதிக தடுப்பூசிகள் தேவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை," என்று பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். "கோவிட் தடுப்பூசிகள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்படுகின்றன, ஆனால் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்ட சிலருக்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படலாம். அவ்வாறு தேவைப்படுபவர்களை நாங்களே தொடர்பு கொண்டு பரிந்துரைக்கப்பட்ட மருந்தை செலுத்துகிறோம்," என தேசிய சுகாதார அமைப்பு கூறுகிறது. கோவிட் தடுப்பூசிகள் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு பொதுவான பக்கவிளைவு, ஊசி செலுத்தப்பட்ட கையில் ஏற்படும் கடுமையான வலி. https://www.bbc.com/tamil/articles/c97wpxx3g76o
  19. சீனாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்தபிறகு, இந்தியா குறித்து மாலத்தீவு அதிபர் என்ன சொன்னார்? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எதிர்வரும் மே 10-ஆம் தேதிக்குப் பிறகு இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரர் கூட சீருடையிலோ அல்லது சாதாரண உடையிலோ மாலத்தீவில் இருக்க மாட்டார்கள் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தான் மாலத்தீவில் உள்ள மூன்று விமான தளங்களை கவனித்துக்கொள்ள ஒரு தொழில்நுட்பக் குழுவை இந்தியா அனுப்பி வைத்தது. இந்நிலையில் முய்சு இவ்வாறு கூறியுள்ளார். மே 10-ஆம் தேதிக்குள் இந்தியப் படைகள் மாலத்தீவை விட்டு வெளியேறும் என்றும் அதன் முதல் கட்டம் மார்ச் 10-ஆம் தேதி தொடங்கும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 'மாலத்தீவிற்கு இந்திய ராணுவம் திரும்பி வராது' பட மூலாதாரம்,GETTY IMAGES மாலத்தீவைச் சேர்ந்த உள்ளூர் செய்தி இணையதளம் ஒன்று அளித்துள்ள தகவலின்படி, கடந்த செவ்வாயன்று மாலத்தீவின் ஐலாஃபுஷி நகரத்தில் ஒரு சமூக நிகழ்வில் உரையாற்றிய அதிபர் முய்சு, இந்திய ராணுவத்தை நாட்டிலிருந்து வெளியேற்றுவதில் தனது அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறினார். இதன் காரணமாக பொய்யான வதந்திகளை பரப்பி, நாட்டில் சிலர் குழப்பத்தை உருவாக்கி வருகின்றனர் என்றார். "வெளியேறப்போகும் இந்திய ராணுவ வீரர்கள் சீருடையை மாற்றிக்கொண்டு சாதாரண உடையில் மீண்டும் திரும்பி வரப் போவதில்லை. நமக்குள் குழப்பத்தை உருவாக்கும், பொய்களைப் பரப்பும் இதுபோன்ற விஷயங்களைக் நம்பக் கூடாது. "மே 10ஆம் தேதிக்கு பிறகு சீருடையிலோ அல்லது சாதாரண உடையிலோ, இந்திய ராணுவ வீரர்கள் யாரும் நாட்டில் இருக்க மாட்டார்கள். இந்திய ராணுவத்திற்கும் இந்த நாட்டிற்கும் எந்த வகையிலும் தொடர்பு இருக்காது என்பதை நான் உறுதியுடன் கூறுகிறேன்,” என்றார் அதிபர் முய்சு. கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி டெல்லியில் இருநாடுகளுக்கும் இடையிலான உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, மே 10-ஆம் தேதிக்குள் மாலத்தீவில் உள்ள மூன்று விமான தளங்களை பாதுகாக்கும் தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெற இந்தியா ஒப்புக்கொண்டதாகவும், இந்த நடைமுறையின் முதல் கட்டம் மார்ச் 10-ஆம் தேதிக்குள் முடிவடையும் எனவும் மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் கூறியது. முய்சுவின் பேச்சுக்கு ஒரு நாள் முன்னதாக, மாலத்தீவு சீனாவுடன் ராணுவ உதவி தொடர்பான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பட மூலாதாரம்,PRESIDENCYMV/X சீனா மற்றும் மாலத்தீவுக்கு இடையே கையெழுத்தான ராணுவ ஒப்பந்தம் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை வாபஸ் பெறுவதற்கும், இந்திய தொழில்நுட்பக் குழு மாலத்தீவை சென்றடைவதற்கும் காலக்கெடு அளிக்கப்பட்ட பின்னர் சீனா மற்றும் மாலத்தீவுகள் இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது. திங்களன்று, மாலத்தீவு பாதுகாப்பு மந்திரி முகமது மோமூன் மற்றும் சீனாவின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புக்கான துணை இயக்குனர் மேஜர் ஜெனரல் சாங் பாகுன் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். "மாலத்தீவிற்கு இலவச ராணுவ உதவியை வழங்குவதன் மூலம் இருதரப்பு உறவுகள் மேம்படும்," என அப்போது கூறப்பட்டது. மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் இந்த ஒப்பந்தம் பற்றிய சில தகவல்களை சமூக ஊடகமான எக்ஸில் (முன்னர் ட்விட்டர்) வெளியிட்டது. இருப்பினும் ஒப்பந்தம் பற்றிய விரிவான தகவல்கள் வழங்கப்படவில்லை. ஐலாஃபுஷி நிகழ்வில், சீனாவுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தம் குறித்து அதிபர் முய்சு பேசினார். மாலத்தீவுடனான ராணுவ ஒத்துழைப்பை சீனா எப்போதும் பேணி வருவதாகவும், இந்த ஒப்பந்தம் மாலத்தீவுகளின் ராணுவத் திறனை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் கூறினார். “இந்த ஒப்பந்தத்தின்படி, மாலத்தீவு ராணுவத்துக்கு பல வகையான பயிற்சிகள் கிடைக்கும். உயிரிழப்பை ஏற்படுத்தாத பல்வேறு ராணுவ உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். இது தான் எங்கள் ஒப்பந்தம். இது ராணுவத்தின் தொழில்நுட்பத் திறனை அதிகரிக்கும்” என்றார் அதிபர் முய்சு. மேலும், “நமது ராணுவம் தனித்துச் செயல்படவும், நமது சுதந்திரம் மற்றும் சுயாட்சியைப் பாதுகாக்கவும் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது," என்றார். இது தவிர மாலத்தீவு சுகாதார அமைச்சகத்துக்கு 12 ஆம்புலன்ஸ்களை சீனா வழங்கியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில், முய்சு ஐந்து நாள் பயணமாக சீனாவுக்குச் சென்றிருந்தார். அப்போது, சீன-மாலத்தீவு உறவுகளை முன்னெடுத்துச் செல்ல முடிவு எடுக்கப்பட்டது. மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர், சீனாவுடனான ஒப்பந்தம் குறித்து எக்ஸில் (முன்னர் ட்விட்டர்) பின்வருமாறு பதிவு செய்துள்ளார்: “சீனா எக்சிம் வங்கியின் பிரதிநிதிகள் குழு மற்றும் சீன இராணுவக் குழுவை வழிநடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து பயனுள்ள விவாதம் நடைபெற்றது." மாலத்தீவின் நிபந்தனைகளை ஏற்று தனது படைகளை வாபஸ் பெற ஒப்புக்கொண்டு, ராணுவத்திற்கு பதிலாக ஒரு தொழில்நுட்பக் குழுவை இந்தியா அனுப்பி வைத்துள்ள நேரத்தில் இது நடந்துள்ளது. தான் ஆட்சிக்கு வந்தால் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களை விரட்டியடிப்பேன் என முய்சு தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தே கூறி வருகிறார். நேற்று அவர் இந்த வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES அண்டை நாடுகளை அச்சுறுத்துகிறதா இந்தியா இந்த வாரம் டெல்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அண்டை நாடுகளுக்கு இந்தியா ஒரு 'பிக் புல்லியாக' (பலவீனமானவர்களை வம்புக்கு இழுப்பவரை பிக் புல்லி- Big bully என்று அழைப்பார்கள்) மாறி வருகிறதா என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், 'பிக் புல்லிஸ்' எனப்படுபவர்கள் கடினமான காலங்களில் தங்கள் அண்டை நாடுகளுக்கு '37,000 கோடி ரூபாய் வழங்கி உதவுவதில்லை' என்று கூறியிருந்தார். கடந்த வருடங்களில் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தபோது, அதற்கு இந்தியா உதவியதை அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். எஸ்.ஜெய்சங்கரின் இந்த பதில் மாலத்தீவு ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருவதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஜெய்சங்கரின் இந்த பதில், ஜனவரி மாதம் சீனாவுக்குச் சென்ற பிறகு அதிபர் முய்சு அளித்த பேட்டிக்கான பதிலாக பார்க்கப்படுகிறது. அதிபர் முய்சு அப்போது, “மாலத்தீவு ஒரு சிறிய நாடாக இருக்கலாம், ஆனால் எங்களை அச்சுறுத்தும் உரிமையை எந்த நாட்டிற்கும் நாங்கள் கொடுக்கமாட்டோம்,” என கூறியிருந்தார். இந்தியாவின் ஆதரவாளர் என்று தன்னை கூறிக்கொள்ளும் மாலத்தீவின் எம்.பி ஈவா அப்துல்லா, அவர் நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசியபோது, "மாலத்தீவின் பலவீனமான வெளியுறவுக் கொள்கை மக்களுக்கு சாதகமாக இல்லை. இது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, இதுபோன்ற வெளியுறவுக் கொள்கை எந்த வளர்ச்சித் திட்டங்களுக்கும் சாதகமாக இருக்காது," என்று கூறினார். மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்தின் மருமகள் இவா அப்துல்லா. அவர் இந்தியாவுடனான உறவுக்கு ஆதரவாக பல வாதங்களை முன்வைக்கிறார். மாலத்தீவுகள் இந்தியாவுடன் கலாச்சார உறவுகளைக் கொண்டிருப்பதாகவும் தெற்காசிய ஜனநாயக நாடுகளுடன் நெருக்கமாக இருப்பதாகவும் அவர் விவரிக்கிறார். "மாலத்தீவில் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கலாச்சார மையங்களை கட்டியுள்ளது இந்திய அரசு. இந்திய கலாச்சாரத்தின் தாக்கம் இங்கு தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவில் இருந்து எதிரொலிக்கும் பதற்ற நிலையை மாலத்தீவுகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை," என்று ஈவா கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES சீன சுற்றுலாப் பயணிகளுக்கு அழைப்பு முய்சு தனது சீன விஜயத்தின் போது, சீன மக்கள் சுற்றுலாவுக்காக அதிக எண்ணிக்கையில் மாலத்தீவுக்கு வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார். கடந்த ஆண்டைப் பொறுத்தவரை மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதில் முன்னணியில் இருந்தது இந்தியர்களே. ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் மாலத்தீவின் இளநிலை அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோதியைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டனர், அதன் பிறகு இந்தியாவில் 'மாலத்தீவுகளைப் புறக்கணிக்கவும்' என்ற பிரச்சாரம் தொடங்கியது. அன்று முதல் மாலத்தீவுக்கான சுற்றுலாவில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. 1965-இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, முதலில் இங்கு முடியாட்சி இருந்தது. பின்னர் நவம்பர் 1968-இல் குடியரசாக அறிவிக்கப்பட்டது. மாலத்தீவு இந்தியாவின் தென்மேற்கில் அமைந்துள்ளது. இந்திய நகரமான கொச்சியில் இருந்து சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மாலத்தீவு. இது 1,200 தீவுகளின் குழுவாகும். பெரும்பாலான தீவுகள் மக்கள் வசிக்காதவை. மாலத்தீவின் பரப்பளவு 300 சதுர கிலோமீட்டர். அதாவது டெல்லியை விட இது ஐந்து மடங்கு சிறியது. மாலத்தீவின் மக்கள் தொகை சுமார் நான்கு லட்சம். இந்திய திரைப்படங்கள், ஃபேஷன் மற்றும் உணவு ஆகியவற்றின் புகழ் மாலத்தீவிலும் பரவியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மாலத்தீவு குடிமக்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள். சுற்றுலாவுக்காக மட்டுமல்லாது மருத்துவ சிகிச்சைக்காகவும் அவர்களுக்கு மிகவும் பிடித்த நாடாக இந்தியா உள்ளது. இந்த சிறிய தீவுக் குழுவின் பாதுகாப்பில் இந்தியா முக்கியப் பங்காற்றியுள்ளது. 1988-இல் ராஜீவ் காந்தி ராணுவத்தை அனுப்பி மௌமூன் அப்துல் கயூமின் அரசைக் காப்பாற்றினார். கடந்த 2018-ஆம் ஆண்டு மாலத்தீவு மக்கள் குடிநீர் பிரச்னையை எதிர்கொண்டபோது, பிரதமர் மோதி தண்ணீரை அனுப்பி வைத்தார். இதற்குப் பிறகு மாலத்தீவை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக மோதி அரசு பலமுறை கடன் கொடுத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவிற்கும் இந்தியாவிற்கும் மாலத்தீவு ஏன் முக்கியம்? மாலத்தீவு 5 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஒரு சிறிய நாடு, அதன் பொருளாதாரம் சுற்றுலாவை நம்பியுள்ளது. ஆனால், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான இந்தியா மற்றும் சீனாவுக்கு இந்த சிறிய நாடு மிகவும் முக்கியமானது. தெற்காசியாவில் தங்கள் ஆதிக்கத்தை அதிகரிக்க இரு நாடுகளும் மாலத்தீவில் நடக்கும் சிறு சிறு முன்னேற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. நீண்ட காலமாக பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியாக மாலத்தீவின் மிகப்பெரிய நட்பு நாடாக இருக்கிறது இந்தியா. முன்னாள் அதிபர் முகமது சோலியின் அரசிற்கு இந்தியாவுடன் இருந்த நெருக்கம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், சீனா தனது பெரும் நிதி ஆதாரங்கள், உள்கட்டமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் துறைமுகங்களை குத்தகைக்கு எடுத்துக்கொள்வதன் மூலம் பல ஆண்டுகளாக தெற்காசிய பகுதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. கோவிட் காலத்தில், பெரும்பாலான நாடுகள் மாலத்தீவின் சுற்றுலாத் துறையில் தங்கள் பணிகளை நிறுத்தியபோதும் கூட சீன நிறுவனங்கள் இங்கு தொடர்ந்து பணத்தை முதலீடு செய்தன. ஆனால் சீன நிறுவனங்களின் இந்தப் பணம் வணிகச்சந்தையில் இருந்து வசூலிக்கப்படவில்லை. இந்தப் பணம் சீனாவின் அரசு வங்கிகளுக்குச் சொந்தமானது. அதாவது இது நேரடியாக சீன அரசாங்கத்தின் பணம். முன்னதாக, சோலிஹ் அரசாங்கத்தின் போது மாலத்தீவில் 45-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் இந்தியாவின் பங்கு இருந்தது. ஆகஸ்ட் 2021-இல், இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையில் கிரேட்டர் மாலே இணைப்புத் திட்டம் கையெழுத்தானது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா 4,100 கோடி இந்திய ரூபாயை நிதியுதவியை வழங்க இருந்தது. மார்ச் 2022-இல், மாலத்தீவில் பத்து கடலோர ரேடார் அமைப்புகளை நிறுவியது இந்தியா. மாலத்தீவின் அட்டு தீவில் ஒரு போலீஸ் அகாடமியைத் தொடங்கவும் இந்தியா உதவியது. முய்சு அதிபராக பதவியேற்றதில் இருந்து, சீனாவுடனான மாலத்தீவின் நெருக்கமும் அதிகரித்துள்ளது. பதவியேற்ற பிறகு சீனாவுக்கு தனது முதல் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டார் முய்சு. இந்த வாரம், மாலத்தீவுகளைப் பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்டு பேசிய ஜெய்சங்கர், "உலகம் நன்றியுணர்வின் அடிப்படையில் இயங்குவதில்லை, அது ராஜதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்போம்," என்று கூறியிருந்தார். https://www.bbc.com/tamil/articles/cw0z4e2xp05o
  20. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: டிரம்பிற்கு நிதியுதவி அளிக்கிறாரா மஸ்க்? அமெரிக்காவில் இவ்வருடம் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட உள்ள தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் களம் இறங்கி உள்ளார். தனது பிரசாரங்களுக்கு நிதி தேவைப்படுவதால் குடியரசு கட்சி ஆதரவாளர்களில் பல முன்னணி தொழிலதிபர்களை சந்தித்து டொனால்ட் டிரம்ப் நிதியுதவி கோரி வருகிறார். இந்நிலையில், உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரும் அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்கை டொனால்ட் டிரம்ப் சந்தித்து பிரசாரங்களுக்கு நிதி கோரியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புளோரிடா (Florida) மாநில பாம் பீச் (Palm Beach) பகுதியில் டொனால்ட் டிரம்ப் நடத்திய பல பிரமுகர்களுடனான சந்திப்பில் எலான் மஸ்க் கலந்து கொண்டார். பாம் பீச் விமான நிலையத்தில் எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரின் விமானங்களும் ஒரு மணிக்கும் குறைவான கால இடைவெளியில் வந்திறங்கியது குறித்து முன்னரே தகவல்கள் வெளியாகின. 2024 ஜனாதிபதி தேர்தல் போட்டிக்கு டிரம்பை எலான் மஸ்க் ஆதரிப்பாரா என்பது தற்போது வரை தெரியவில்லை. 2022 இல் தனக்கு ஆதரவாக மஸ்க் வாக்களித்ததாகவும் அதை அவரே ஒப்பு கொண்டதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், இதனை அப்போது மஸ்க் மறுத்தார். இதுவரை அமெரிக்காவின் இரு கட்சிகளில் எந்த கட்சியையும் சாராதவராக தன்னை முன்னிறுத்தி வந்திருக்கும் உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டிரம்பை ஆதரிக்கும் பட்சத்தில், பைடனின் வெற்றி வாய்ப்புகள் பெருமளவு குறையக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். https://thinakkural.lk/article/294692
  21. மற்றொரு ரஷிய போர்க்கப்பலை மூழ்கடித்ததாக உக்ரைன் அறிவிப்பு மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், டிரோன் தாக்குதலில்மற்றொரு ரஷிய போர்க்கப்பலை மூழ்கடித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு ரஷியா போர் தொடுத்து வருகிறது. கருங்கடல் பகுதியில் ரஷியாவின் ரோந்து கப்பல் நிறுத்தப்பட்டு உக்ரைனுக்கு அச்சுறுத்தலாகவிருந்து வந்தது. இந்நிலையில், அதிபர் புதினின் புதிய ரோந்து கப்பலை உக்ரைன் தாக்கி அழித்து உள்ளது. இதுபற்றி உக்ரைன் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ரஷியாவின் மற்றொரு கப்பல், நீர்மூழ்கி கப்பலாக மேம்படுத்தப்பட்டு உள்ளது. எனினும், உக்ரைனின் சிறப்பு பிரிவான குரூப் 13, ரஷியாவின் ரோந்து கப்பலை தாக்கியது. இதில், ரூ.538 கோடி மதிப்பிலான செர்கெய் கொடோவ் என்ற அந்த கப்பலை, உக்ரைன் கடல்படையின் ஆளில்லா விமானங்களான மகுரா வி5 தாக்கியன. இதில், கப்பலின் விளிம்பு பகுதி, வலது மற்றும் இடது புறங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இனிமையான நாளின் தொடக்கம். வீரர்களே, சிறந்த பணியை செய்திருக்கிறீர்கள் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் கருங்கடலில் தங்களது ‘வெற்றிகரமான’ டிரோன் தாக்குதல் மூலம் மற்றொரு ரஷிய போர்க்கப்பலை மூழ்கடித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. https://thinakkural.lk/article/294567
  22. ஜேர்மனியில் 62 வயதான நபர் ஒருவர் 217 முறை ‘கொவிட்-19’ நோய்த்தடுப்பு ஊசிகளைப் பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நபர் தனியார் மருத்துவமனைகளிலிருந்து ‘கொவிட் 19’ நோய்த்தடுப்பு ஊசிகளைப் பெற்றுள்ளார். கடந்த 29 மாதங்களாக இவர் தடுப்பூசிகளை பெற்றுள்ளார். அந்த நபரிடம் மருத்துவ ஆய்வை மேற்கொண்ட எர்லாங்கன் - நூரம்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ‘கொவிட்-19’க்கு எதிராக அவர் 217 தடுப்பூசிகளைப் பெற்றிருந்தாலும், அவருக்கு எந்த பக்க விளைவுகளும் இல்லை என்று விளக்குகின்றனர். (AFP) https://thinakkural.lk/article/294590
  23. 86 கிராமங்களில் 45,000 இளநீர் கன்றுகளை நட விசேட திட்டம் நமது நாட்டில் இளநீர் செய்கையை விரிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க தெங்கு செய்கை சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி நாட்டில் இளநீர் செய்கைக்கு ஏற்ற 86 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உற்பத்திக்கான காரணங்களை ஆராய்ந்து மேற்படி கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். எமது நாட்டு இளநீருக்கு சர்வதேச சந்தையில் பாரிய தேவை உருவாக்கப்பட்டுள்ளதுடன் சர்வதேச சந்தையில் இளநீர் மீதான ஏகபோக உரிமையை இலங்கை கொண்டுள்ளது. இதற்குக் காரணம், நம் நாட்டில் இளநீர்களின் சுவையும், தரமும் மிக அதிகம். மேலும், பல நாடுகள் இளநீர் செய்கைக்கு முயற்சித்த போதிலும், இலங்கை இளநீரின் தரத்தை பெற முடியவில்லை. எனவே, நம் நாட்டில் இளநீருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளநீர் செய்கையை ஒரு பயிராக பிரபலப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (05) விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது. தென்னை பயிர்ச்செய்கை சபை, தென்னை அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அதன்படி, 86 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த கிராமங்களில் 45,000 இளநீர் கன்றுகளை நட முடிவு செய்யப்பட்டது. கிராமங்களாக தெரிவு செய்யப்பட்டாலும் ஒரு கிராமத்தில் அதிக ஏக்கர் பரப்பளவில் இளநீரை யாராவது பயிரிட விரும்பினால், அதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கமைய இளநீர் நாற்றுகள், தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும். இதன்படி மொனராகலையில் 03 கிராமங்கள், மாத்தறையில் 01 கிராமம், குருநாகலில் 08 கிராமங்கள், குளியாப்பிட்டியவில் 09, கேகாலையில் 08, கம்பஹாவில் 09, களுத்துறையில் 10, மாரவில 09, இரத்தினபுரி 04, ஹம்பாந்தோட்டையில் 08, அனுராதபுரம், அனுராதபுரம் 02, இந்திராதபுரம், பொலன்னறுவையில் 02, அம்பாறையில் 02, மாத்தளையில் 04, காலியில் 08, மட்டக்களப்பில் 02, யாழ்ப்பாணத்தில் 03, கண்டியில் 04 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதன்போது கருத்து தெரிவித்த விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் .மகிந்த அமரவீர, இந்த நாட்களில் நிலவும் வரட்சியான காலநிலையினால் எமது நாட்டில் இளநீருக்கான தேவையும் அதிகரித்துள்ளதோடு விலையும் அதிகரித்துள்ளது. ஆனால், ஏற்றுமதியை அடைந்து, இந்தப் பயிர்களைத் தொடங்குவதன் மூலம், விவசாயிகள் அதிக வருமானம் பெற முடியும் என்பதுடன், இளநீர் பெறுமதி சேர்க்கப்பட்ட பொருளாக சந்தையில் அறிமுகப்படுத்த புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/294724
  24. கிழக்கு மாகாண ஆளுநர் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து ஆதீனங்கள் இலங்கைக்கு வருகை! பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக விளங்கும் திருக்கோணேஸ்வரம் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையானதாகும்.இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது.7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது பதிகங்கள் பாடியுள்ளார். இவ்வாறு வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெற்று வருகின்ற சிவராத்திரி நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து ஆதீனங்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுகின்றனர். நேற்றைய தினம் சிவராத்திரி நிகழ்வில் தமிநாடு திருநெல்வேலி பெருங்குளம் திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம்,103வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ சிவப்பிரகாச சத்தியஞான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் விசேட அழைப்பாளராக கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவை வழங்கினார். பெருந்திரளான பக்தர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/294632

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.