Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 03 MAR, 2024 | 02:48 PM இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து இலங்கை கடல் எல்லையில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களால் கறுப்புக் கொடி ஏந்தி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (03) எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயற்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் இந்திய இழுவை மடி படகுகளை எதிர்த்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்வதற்கே யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாச பிரதிநிதிகளால் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து புறப்பட்ட படகுகள் இலங்கையின் கடல் எல்லையில் நின்று போராடினர். இதேவேளை கடற்றொழிலாளர்களின் போராட்டம் சர்வதேச கடற்பரப்பில் செல்லக்கூடாது என இலங்கை கடற்படை எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177804
  2. 2023 ஆம் ஆண்டில் கைதிகள் விவசாய நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வசதியளித்ததன் மூலம் சிறைச்சாலைகள் திணைக்களம் 253 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. கைதிகளை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்ததன் மூலம் 2023ஆம் ஆண்டு 90 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். சிறைக் கைதிகள் பயிர்களை வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஊக்குவிப்பதுடன், சிறைக் கைதிகள் சிறைச்சாலைக்குள் சாதாரண வாழ்க்கை முறைக்கு பழகுவதற்கு உதவுவதாகவும், சிறைக் கைதிகள் தண்டனைக்காலத்தின் பின் சமூகத்துடன் இணைக்கப்படும்போது அவர்களுக்கு நன்மை பயக்கும் என்றும் உபுல்தெனிய மேலும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 7 கைதிகளில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அல்லது மருத்துவ மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது, எனவே கைதிகளை விவசாய நடவடிக்கையில் ஈடுபடுத்துவதும் அவர்களது மனோநிலை மேம்பாட்டுக்கு உதவுகிறது. “கைதிகள் கைவிடப்பட்டதாக உணர்கிறார்கள், அவர்கள் தனியுரிமை உணர்வை இழக்கிறார்கள் மற்றும் அர்த்தமுள்ள செயல்பாடுகள் இல்லை, அத்துடன் அவர்கள் சிறையில் இருக்கும் போது சமூக தொடர்புகளை இழக்கிறார்கள். எனவே அவர்கள் விடுவிக்கப்படும் போது சமூகத்துடன் மீண்டும் அனுசரித்து செல்வது கடினமாக உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க அவர்களை தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறோம்” என்றார். https://thinakkural.lk/article/294121
  3. 2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான முதல் பாடசாலை தவணையின் முதல் கட்டம் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதல் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் மே 03 ஆம் திகதிவரை நடத்தப்படும் மற்றும் மூன்றாம் கட்ட முதல் பள்ளி தவணை மே 20 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரை நடைபெறும். இரண்டாவது பாடசாலை தவணை ஜூன் 3 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் பள்ளித் தவணையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 26 ஆம் திகதி முதல் நவம்பர் 22 ஆம் திகதி வரை நடைபெறும் மற்றும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் உயர்தரப் பரீட்சைக்குப் பிறகு 2025 ஜனவரி 02 ஆம் திகதி தொடங்கப்படும். 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணை 2025 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி முடிவடைய உள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/294116
  4. உலக காட்டுயிர் தினம்: இருவாச்சி பறவை தன் துணை இறந்துவிட்டால் செத்துவிடுமா? உண்மை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் மலை இருவாச்சி பறவைகள், சோலைக்காடுகளின் அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது. அவை இறுதிவரை ஒரே துணையுடன் பேரன்போடு வாழும் முறை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்தியாவின் உயிர்நாடியான முக்கிய பல்லுயிர் பெருக்க மண்டலமான மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர், குஜராத் மாநிலத்தில் தொடங்கி தமிழகத்தில் முடிவடைகிறது. 1.6 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் பல்வேறு அரிய வகை காட்டுயிர்கள், தாவரங்கள் மற்றும் பறவைகள் உள்ளன. இதில், சோலைக்காடுகளின் சின்னமாக, இயற்கைச்சூழல் ஆரோக்கியமாக உள்ளதை உணர்த்தும் அடையாளமாக விளங்குகிறது மலை இருவாச்சிப் பறவை. மேற்குத்தொடர்ச்சி மலைகளைப் பொறுத்தவரையில், மலை இருவாச்சிகளும் (இந்தியன் கிரேட் ஹார்ன்பில்), பெரிய மலபார் சாம்பல் இருவாச்சி (மலபார் பைடு ஹார்ன்பில்), மலபார் சாம்பல் இருவாச்சி (மலபார் கிரே ஹார்ன்பில்), சாம்பல் இருவாச்சி (கிரே ஹார்ன்பில்) ஆகிய நான்கு வகைகள் உள்ளன. இதில், மலை இருவாச்சி தனக்கென பல தனித்துவமான சிறப்புகளைக் கொண்டிருப்பதுடன், இவற்றின் இனப்பெருக்க முறையும், வாழ்வியலும் கேட்போரை மலைக்க வைப்பதைப் போன்று உள்ளது. மலை இருவாச்சியின் வாழ்க்கையில் அப்படி என்ன சிறப்பு? ‘காட்டின் பாதுகாவலன் மலை இருவாச்சி’ பட மூலாதாரம்,GETTY IMAGES மலை இருவாச்சிகள் காட்டின் பாதுகாவலனாக உள்ளதுடன், ஒருவனுக்கு ஒருத்தி என்பது போன்ற வாழ்க்கைமுறையில் பேரன்போடு வாழ்வதாகத் தெரிவிக்கிறார், பறவை ஆய்வாளரும் இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளையின் தலைவருமான ரவீந்திரன் நடராஜன். மலை இருவாச்சி குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய ரவீந்திரன் நடராஜன், ‘‘மலை இருவாச்சிகள் அதிகமாக சோலைக்காடுகள் போன்ற அடர் காட்டில்தான் வாழ்கின்றன. இவை பழங்கள் முதல் பாம்புகள் வரை சாப்பிடுவதுடன், தனது எச்சம் மூலம் காட்டில் மரங்களைப் பரப்பும் முக்கியப் பணியைச் செய்து வருகின்றன. ஓரிடத்தில் புலியைப் பார்த்தால் காடு எப்படி செழிப்பாக இருப்பதாக நாம் உணர்கிறோம். அதேபோலத்தான் சோலைக்காடுகளின் ஆரோக்கியச் சின்னமாக மலை இருவாச்சிகள் உள்ளன," என்றார். மேலும், ஒருவனுக்கு ஒருத்தி என்பது போல், ஒரே இணையுடன் இறுதி வரை வாழ்வதும், பெண் பறவை முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளை வளர்ப்பது வரையில் ஆண் பறவை பேரன்புடன் அதற்கு உதவுவதுதான் இதன் சிறப்பு என்றும் விளக்கினார் அவர். "ஆண் மலை இருவாச்சி முதலில் பெண் இருவாச்சிக்கு பழம், பூச்சிகள் போன்றவற்றை வழங்கும். பெண் இருவாச்சி அதில் ஈர்க்கப்பட்டால் மட்டுமே ஆண் பறவையைத் தனது இணையாகத் தேர்வு செய்யும். தேர்வு செய்தவுடன் பல ஆண்டுகள் அல்லது இறுதி வரையில் அந்த ஒரே துணையுடன் அவை அன்பாக வாழ்வது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது." பல ஆண்டுக்காலம் இணைந்து வாழ்ந்த ஆண் அல்லது பெண் பறவை இறந்துவிட்டால், அதன் துணையும் உணவு சாப்பிடாமல் தன்னைத்தானே வருத்திக்கொண்டு மரணிப்பதாக" அவர் தெரிவித்தார். இருப்பினும் இந்தப் பழக்கம் சில காலமே இணைந்து வாழ்ந்து பிரியும் சூழல் ஏற்படும்போது இருவாச்சிகளிடம் காணப்படவில்லை என்றும் கூறினார் அவர். இருப்பினும், இந்தக் குறிப்பிட்ட செயல்பாடு குறித்துப் பரவலாகப் பேசப்பட்டாலும் அது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறுகிறார் பறவை ஆராய்ச்சியாளர் முனைவர் வெ.கிருபாநந்தினி. அவரது கூற்றின்படி, தமது இனத்தைப் பெருக்குவதற்கான வழிகளையே பரிணாம வளர்ச்சி உயிரினங்களுக்கு அளிக்கிறது. அப்படியிருக்கும் சூழலில் ஒரு பறவை இணையை இழந்த பிறகு தன்னைத் தானே வருத்திக்கொள்ளுமா என்பது சந்தேகத்திற்கு உரியது என்கிறார் அவர். பிரமிக்க வைக்கும் ஆண் பறவையின் அன்பு பட மூலாதாரம்,GETTY IMAGES "பெண் இருவாச்சி தனது ஆண் துணையைத் தேர்வு செய்ததும் தங்கள் காதலை வெளிப்படுத்த, இரண்டும் உயரமாகப் பறந்து தங்கள் அலகுகளைக் கவ்விக்கொண்டு கீழ்நோக்கிப் பறந்து வரும். பிறகு பலமுறை இணைந்தே வானில் பறக்கும். அதன்பிறகுதான் இனப்பெருக்க செயல்முறையைத் தொடங்கும்," என்றும் ரவீந்திரன் விளக்கினார். "இனப்பெருக்கம் முடிந்ததும், மிகவும் உயரமான மரங்களின் பொந்துகளில் 2 – 3 முட்டையிட்டு 30 நாட்கள் வரையில் பெண் பறவை அடைகாக்கும். அந்தப் பொந்துகளில் மரப்பாம்புகள் வருவதைத் தடுக்க, தனது எச்சில் மற்றும் எச்சம், நச்சுத்தன்மையுள்ள காய்களைக் கொண்டு அந்தப் பொந்தை ஆண் பறவை அடைத்துவிடும். அதில் பெண் பறவை தனது அலகை வெளியிடும் அளவிற்கு மட்டுமே ஓட்டையிருக்கும். ‘உள்ளே இருக்கும் பெண் பறவை, முட்டைகளை அடைகாக்கத் தொடங்கியதும் தனது சக்தியைச் சேமிக்கத் தனது சிறகுகளைத் தானே உதிர்த்துவிடும். எங்கும் செல்லாமல் அந்தப் பொந்திலேயே அடைந்திருக்கும் பெண் இருவாச்சிக்கு ஆண் பறவைதான் உணவுகளைக் கொண்டு வந்து ஊட்டிவிடும். இந்தக் காலகட்டத்தில் ஆண் பறவையின் அன்பும், பெண் மற்றும் குஞ்சுகளைக் காப்பதில் அவை செய்யும் அளப்பரிய பணியும்,’’ பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார் ரவீந்திரன். படக்குறிப்பு, பறவைகள் ஆய்வாளர் ரவீந்திரன் சோலைக்காடுகள் சுருங்கி வருவது, காட்டில் உயரமான மரங்கள் வெட்டப்படுவது, அடர்காட்டை ஊடுருவி சாலைகள் அமைக்கப்படுவது போன்ற பல்வேரு காரணங்களால் இருவாச்சிகளின் வாழ்விடம் பாதிப்புகளைச் சந்தித்து வருவதாகவும் தனது கவலையை வெளிப்படுத்தினார் பறவை ஆர்வலர் ரவீந்திரன். "மனிதர்கள் பயணிக்கும் காடுகளில் அயல் தாவரங்கள் உற்பத்தி, வாகன இரைச்சல், கரிம வெளியீடு போன்ற பிரச்னைகளால் அவை பாதிக்கின்றன. மற்றபடி அவற்றின் எண்ணிக்கை குறையாமல்தான் வாழ்ந்து வருகின்றன. "அரிதாகக் காணப்படும் இருவாச்சி, அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் பார்த்தால் அந்த ஆண்டு மழை அதிகமாக இருக்கும் எனவும் பழங்குடியின மக்கள் நம்புகின்றனர். அவற்றை மலைமுழுங்கி எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்,’’ என்றும் குறிப்பிட்டார் அவர். இந்தியாவில் இருவாச்சிகளின் முக்கியத்துவம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES உலக அளவில் இருவாச்சி பறவை இனங்கள் அழிந்து வரும் பறவைகளாக, சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் (ஐ.யு.சி.என்) அறிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் அதிகம் வாழ்கின்றன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, அருனாச்சல பிரதேசத்தில் இருவாச்சிகள் உள்ளன. கேரளா மற்றும் அருனாச்சல பிரதேசத்தின் மாநிலப் பறவையாக இருவாச்சி அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது. இருவாச்சிகளை தங்கள் கலாசாரத்தில் முக்கிய பங்காகக் கருதும் நாகாலாந்து மாநில பழங்குடியின மக்கள், ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இருவாச்சி திருவிழாவை நடத்துகின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலைகளைத் தவிர அஸ்ஸாம், மேற்கு வங்கம் மற்றும் இமயமலைத் தொடர்களிலும் இருவாச்சிகள் இருப்பதை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். இயற்கையின் பாதுகாவலனாக, அன்பின் இலக்கணமாகத் திகழும் இருவாச்சிகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற குரல் சமீப காலமாக இந்தியா முழுவதிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இருவாச்சிகள் தொடர்பான தகவல்கள் பாடப் புத்தகங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளதால், இனிவரும் தலைமுறையினரும் இருவாச்சிகளின் சிறப்பைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இருவாச்சி பறவைகளுக்கு உள்ள ஆபத்து என்ன? பிபிசி தமிழிடம் பேசிய சாலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி மைய பணியாளரும் பறவைகள் ஆய்வாளருமான முனைவர் வெ.கிருபாநந்தினி, ‘‘மலை இருவாச்சிகள் இனப்பெருக்க நேரத்தில் ஒரே நாளில் பலமுறை பெண் பறவைக்கு உணவு கொடுக்க வேண்டியிருக்கும். இதற்காக கூடு அமைத்துள்ள பகுதிக்கு அருகில்தான் சுற்றித் திரிந்து ஆண் பறவை உணவு சேகரிக்கும். அப்போது, கூட்டுக்கு அருகே ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலோ, அல்லது அப்பகுதியில் மனித தலையீட்டால் பிரச்னை இருந்தாலோ, அவை நீண்ட தொலைவுக்குப் பயணித்து உணவு தேடி வரும். அப்போது ஆண் பறவை வேட்டை மற்றும் இதர காரணங்களால் மரணித்து, பெண் பறவையும் மரணிக்க அதிக வாய்ப்புள்ளது,’’ என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘‘சுற்றுலாப் பயணிகளும், காட்டுயிர் புகைப்படக் கலைஞர்களும், இருவாச்சிகளின் கூடு இருக்கும் மரத்திற்கு அருகிலேயே செல்வதுடன், அங்கு உணவுப்பொட்டலம், பிளாஸ்டிக் கழிவுகளைப் போடுகின்றனர். அங்கேயே நீண்ட நேரம் அவர்கள் காத்திருப்பதால், இருவாச்சிகள் அச்சுறுத்தலைச் சந்தித்து கூட்டிற்கே வராமல்கூட இருப்பதை நாங்கள் ஆய்வுகள் மூலம் பதிவு செய்துள்ளோம். சுற்றுலா பயணிகள் பயணிக்கும் பகுதிகளில் இருவாச்சிகளின் கூடுகள் இருந்தோல் அந்தப் பகுதிகளிலாவது, வனத்துறையினர் அடிக்கடி கண்காணிப்பு மேற்கொண்டு அச்சுறுத்தலைக் குறைக்க வேண்டும். அச்சுறுத்தலின்றி புகைப்படம் எடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல், காட்டின் எல்லைப்பகுதி மற்றும் காட்டினுள் இருக்கும் தேயிலைத் தோட்டங்களில் அதிக நச்சுத்தன்மையுள்ள, ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் நீண்ட கால அடிப்படையில் இருவாச்சிகள் பாதிக்கப்படுகின்றன,’’ என்கிறார் முனைவர்.வெ.கிருபாநந்தினி. https://www.bbc.com/tamil/articles/cerwyzkwl4go
  5. பாகிஸ்தானுக்கு சீனா அனுப்பிய சரக்குகளை இந்தியா தடுத்து நிறுத்தியது ஏன்? என்ன நடந்தது? பட மூலாதாரம்,PTI 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு ஜனவரி மாதம், இந்தியாவின் மும்பை துறைமுகத்தில் உள்ள சுங்கத் துறையினர், பாகிஸ்தானின் கராச்சிக்கு அனுப்பப்பட்ட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய சில பொருட்களைக் கைப்பற்றினர். அந்தப் பொருள் சீனாவில் இருந்து அனுப்பப்பட்டது. இத்தாலியின் ஜிகேடி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இரண்டு நவீன கணினி எண் கட்டுப்பாடு (CNC) இயந்திரங்கள் அதில் அடங்கும். பாகிஸ்தான் தனது அணுசக்தித் திட்டத்தில் இந்த மீண்டும் பயன்படுத்தக்கூரிய பொருளைப் பயன்படுத்தலாம் என்று தி இந்து செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. ஓர் ஆதாரத்தை மேற்கோள் காட்டி, அந்தப் பொருட்கள் தற்போது இந்தியாவின் பாதுகாப்பில் இருப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. முழு விஷயம் என்ன? தி இந்து நாளிதழ் ஓர் ஆதாரத்தை மேற்கோள் காட்டி, ஜனவரி 9ஆம் தேதி, சிஎம்ஏ ஜிஜிஏ அட்டிலா என்ற வணிகக் கப்பல் சீனாவில் உள்ள ஷேகு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டதாகக் கூறியுள்ளது. அந்தக் கப்பலில் மால்டா நாட்டின் கொடி இருந்தது. அது கராச்சி துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது, அங்கு இந்தப் பொருட்கள் காஸ்மோஸ் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளன. அந்தச் செய்தியில் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரத்தின்படி, "இந்த ஆண்டு ஜனவரி 22 அன்று, கப்பல் மும்பையின் நவா ஷேவா துறைமுகத்தை (ஜவஹர்லால் நேரு துறைமுகம்) அடைந்தது, அங்கு சுங்கத்துறை அதிகாரிகள் தங்களுக்குக் கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில் அதைக் கைப்பற்றினர்." மற்றோர் ஆதாரத்தை மேற்கோள் காட்டி, கப்பலில் உள்ள பொருட்கள் பாகிஸ்தானின் ஏவுகணைத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தி இந்து நாளிதழ் எழுதியுள்ளது, அதைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (டிஆர்டிஓ) அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் குழு அதை ஆய்வு செய்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஏவுகணைக்குத் தேவையான உதிரிபாகங்கள் தயாரிப்பில் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தும் சாத்தியம் உள்ளது என டிஆர்டிஓ அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக டெக்கான் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது. மார்ச் 2022இல், இத்தாலியிடம் இருந்து தெர்மோ-எலக்ட்ரிக் பொருட்களை வாங்க பாகிஸ்தான் முயன்று வருவதாகவும், காஸ்மோஸ் இன்ஜினியரிங் நிறுவனமும் இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகளை மேற்கோள் காட்டி தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நிறுவனத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. முன்னதாக பிப்ரவரி 2020இல், சீனா ஒரு ஆட்டோகிளேவ் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு அனுப்ப முயன்றது, அதை 'தொழில்துறை உலர்த்தி' என்று அழைத்தது. ஹாங்காங் கொடியுடன் பறக்கும் சீனாவின் டாய் சூய் யுன் கப்பலில் இருந்து இது கைப்பற்றப்பட்டது. இந்தக் கப்பல் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் ஜியாங்யின் துறைமுகத்தில் இருந்து பாகிஸ்தானின் காசிம் துறைமுகத்தை நோக்கிப் புறப்பட்டது. இதற்குப் பிறகு, பாகிஸ்தான் தனது ஏவுகணைத் திட்டத்துக்கான பொருட்களை சட்டவிரோதமாக கொள்முதல் செய்து விற்பனை செய்வதில் ஈடுபட்டதாக கவலை எழுந்தது. சி.என்.சி இயந்திரங்கள் ஆயுத உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பான Wassenaar ஆட்சியின் கீழ் வருகின்றன. 1996இல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் நோக்கம், சிவிலியன் மற்றும் ராணுவ இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களின் பெருக்கத்தைத் தடுப்பதாகும். வட கொரியா தனது அணுசக்தி திட்டத்தில் சிஎன்சி இயந்திரங்களைப் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/clwe39vppglo
  6. அதிக வெப்பம்; நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய கூடிய அபாயம்! நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம், மனித உடலில் உணரப்படக்கூடிய வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகளவில் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல்மாகாணம், வடமேல் மாகாணம், தென் மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இவ்வாறு வெப்பநிலை பதிவாகக்கூடும். அதிக வெப்பம் காரணமாக நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய கூடிய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நீண்டநேர உடல் உழைப்பு காரணமாக இந்த நிலை ஏற்படலாமென சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதிக வெப்பத்தால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக தொடர்ந்தும் தண்ணீர் அருந்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதுமக்கள் உண்ணும் உணவு மற்றும் பானங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, திரவ உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/294098
  7. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (02) ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிரான வழக்கொன்றிற்காக நேற்று முன்தினம் கொழும்புக்கு வருகை தந்த நிலையில் வழக்கு முடிவடைந்தும் அவர் நேற்று காலை சென்னைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/294096
  8. லீப் ஆண்டில் பிறந்த தாய்க்கு இந்த 2024 லீப் வருடத்தில் பெண் குழந்தை பிறந்ததாக அமெரிக்காவில் இருந்து ஒரு செய்தி பதிவாகியுள்ளது. வட கரோலினா பகுதியில் வசிக்கும் பேராசிரியரான காய் சன் பெப்ரவரி 29 அன்று சோலி என்ற மகளை பெற்றெடுத்தார். வட கரோலினாவில் உள்ள டியூக் ஹெல்த் காலேஜ் ஆஃப் மெடிசினில் உதவி பேராசிரியராக பணிபுரியும் காய் சன், பெப்ரவரி 29 அன்று காலை 5:12 மணிக்குப் பெண் குழந்தையை பிரசவித்தார். https://thinakkural.lk/article/294139
  9. Published By: RAJEEBAN 03 MAR, 2024 | 12:07 PM காசாவின் மீது அமெரிக்கா வான்வழியாக மனிதாபிமான உதவிகளை வீசியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று விமானங்கள் பராசூட்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன. ஜோர்தான் விமானப்படையுடன் இணைந்து அமெரிக்கா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. உணவுவாகன தொடரணியை சூழ்ந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 110க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து காசாவிற்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையிலேயே அமெரிக்கா இந்த நடவடிக்கையைமேற்கொண்டுள்ளது. சி130 ரக விமானங்கள் 38000 உணவுப்பொதிகளை காசாவிற்குள் பரசூட் மூலம் வீசின என அமெரிக்காவின் மத்திய கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் பிரான்ஸ் எகிப்து ஜோர்தான் ஆகிய நாடுகள் முன்னர் காசாவின் மீது இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன எனினும் அமெரிக்கா இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வது இதுவே முதல்தடவை. வியாழக்கிழமை இடம்பெற்ற துன்பியல் நிகழ்வு காசாவில் காணப்படும் மிகமோசமான மனிதாபிமான நிலை காரணமாக அந்த பகுதிக்கான மனிதாபிமான உதவிகள் விநியோகத்தை தொடர்ந்து பேணவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது என பைடன் நிர்வாகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/177790
  10. இலங்கை - இந்திய பிரச்சினைகளை தீர்க்க மீண்டும் பேச்சு 03 MAR, 2024 | 10:42 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்ளை பயன்படுத்தியும், இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தும் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். இதனால் இலங்கையின் வட பகுதி மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக வடக்கு மீனவர்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். இவ்வாறனதொரு நிலையில் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் 170 பேர் உள்நாட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த மீனவர்களுக்கு எதிராக உள்ளக நீதிமன்ற தீர்ப்புகளை எதிர்த்து இந்திய மீனவர்கள் போராட்டத்திலும் ஈடுப்பட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தைகள் ஊடாக இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வு காணப்பட்ட போதிலும், தொடர்ந்தும் அத்துமீறிய மீன்பிடிப்புகள் இடம்பெறுகின்றமையினால் இருதரப்பு மீனவர்களின் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்தே வருகின்றன. எனவே நீண்டகால நிலையான தீர்வை நோக்கி பயணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியிருந்தார். இதனடிப்படையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையிலான பேச்சு வார்த்தையின் போது நீண்டகால தீர்வு திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்க இருதரப்புகளுக்கும் இடையில் இதன் போது இணக்கப்பாடு எட்டப்பட்டன. https://www.virakesari.lk/article/177777
  11. பெங்களூரு இரட்டை குண்டுவெடிப்புக்கும், கோவை கார் வெடிப்புக்கும் தொடர்பா? சந்தேக நபரின் படம் வெளியீடு பட மூலாதாரம்,CCTV கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி ஹிந்திக்காக பெங்களூருவில் இருந்து 2 மார்ச் 2024 பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் வெள்ளிக்கிழமை பிற்பகல் குண்டுவெடிப்பு நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரின் சிசிடிவி வீடியோவை கர்நாடக காவல்துறை வெளியிட்டுள்ளது. குண்டுவெடிப்பில் தொடர்புடைய சந்தேக நபர் அல்லது சந்தேக நபர்களை கைது செய்ய 10 குழுக்களை போலீசார் அமைத்துள்ளனர். பெங்களூரு வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் குறைந்த தீவிரம் கொண்ட ஐஇடி குண்டுகள் வெடித்ததில் ஒரு பெண் உட்பட 9 பேர் காயமடைந்தனர். அந்தப் பெண் 40 சதவீதம் தீக்காயம் அடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் ஐந்து வினாடிகள் இடைவெளியில் நிகழ்ந்தன. முதல் குண்டுவெடிப்பு மதியம் 12:55:32 மணிக்கும், இரண்டாவது குண்டுவெடிப்பு 12:55:37 மணிக்கும் நிகழ்ந்துள்ளது. பெங்களூருவின் தகவல் தொழில்நுட்ப மையம் என்று அழைக்கப்படும் பகுதியில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. ஐடி துறையில் பணிபுரியும் இளைஞர்கள் இந்த இடத்திற்குச் சாப்பிட வருவது வழக்கம். பட மூலாதாரம்,CCTV FOOTAGE/POLICE SOURCES இந்த வெடிவிபத்தால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படவில்லை, ஆனால் வாஷ்பேசின் பகுதியில் அதிக அளவில் புகை மூட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு ஏராளமான ஆணிகள், நட்டுகள், போல்ட்கள் சிதறிக் கிடந்தன. குண்டுவெடிப்பு நடத்திய நபர் முதலில் ராமேஸ்வரம் கஃபேவில் ரவா இட்லி சாப்பிட்டுவிட்டு வாஷ் பேசின் அருகே உள்ள மரத்தடியில் பையை வைத்துவிட்டுச் சென்றதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஐஇடி குண்டுவெடிப்பு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தரமையா தான் முதலில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். குண்டுவெடிப்பை நடத்தியவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பின்போது உணவகத்தில் இருந்த ஒரு நபர், "நான் இங்கு மதிய உணவு சாப்பிட வந்தேன். ஒரு மணி இருக்கும். அப்போது எனக்கு பலத்த சத்தம் கேட்டது. வெடிகுண்டு போன்ற சத்தம் கேட்டது. ஆனால் அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. இது வெடிகுண்டு வெடித்தா அல்லது வேறு ஏதாவதா எனத் தெரியவில்லை," என்றார். Play video, "பெங்களூரு உணவகத்தில் நடந்த வெடிப்பு குண்டுவெடிப்பா? முதல்வர் சித்தராமையா சொன்னது என்ன? - காணொளி", கால அளவு 1,22 01:22 காணொளிக் குறிப்பு, "இந்தச் சத்தம் கேட்டு வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் சிலர் இதை சிலிண்டர் வெடிப்பு என்றும் அழைக்கிறார்கள். உள்ளே சுமார் 35-40 பேர் இருந்தனர். குண்டு வெடித்ததற்குப் பிறகு நிறைய புகை எழுந்தது," என்றார் அந்த நபர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை தொடர்கிறது இந்த குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் நாற்பது சதவீத தீக்காயங்களுக்கு உள்ளான 45 வயது பெண்ணும் அடங்குவார். இந்தப் பெண் புரூக்ஃபீல்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புரூக்ஃபீல்ட் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் பிரதீப் குமார், செய்தியாளர்களிடம் பேசுகையில், அங்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் நிலை குறித்து தெரிவித்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, குண்டுவெடிப்பு நடந்த இடத்தை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பார்வையிட்டார். "காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மூவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர். 45 வயது பெண் ஒருவர் 40 சதவீதம் தீக்காயம் அடைந்துள்ளார். அவர் ஐசியுவில் இருக்கிறார்," என்றார். “அந்தப் பெண்ணின் இடது பக்கத்தில் வெட்டுக் காயங்கள் உள்ளன, அதற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தேவைப்படும். வெடி சத்தத்தால், அவரது செவிப்பறையும் வெடித்துள்ளது,” என விரிவாகக் கூறினார். இருப்பினும், இது மிகவும் தீவிரமான வெடிப்பாக இருந்திருந்தால், நோயாளிகள் இன்னும் கடுமையான காயங்களுக்கு ஆளாகியிருப்பார்கள் என்று டாக்டர் பிரதீப் குமார் கூறினார். பெங்களூரு இரட்டை குண்டுவெடிப்புக்கும், கோவை கார் வெடிப்புக்கும் தொடர்பா? பட மூலாதாரம்,CCTV FOOTAGE/POLICE SOURCES இது தொடர்பாக கர்நாடக அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாநில உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பு சிலிண்டர் வெடி விபத்துடனும் தொடர்புப்படுத்திப் பேசப்பட்டது. ஆனால், அந்த உணவகத்தின் நிர்வாக இயக்குநர் திவ்யா ராகவேந்திரா, எந்த சிலிண்டராலும் வெடிப்பு ஏற்படவில்லை என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் தடயவியல் ஆய்வுக்காக சம்பந்தப்பட்ட குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கர்நாடக டிஜிபி அலோக் மோகன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். அவர் செய்தி முகமையான பிடிஐக்கு அளித்த பேட்டியில், உணவகத்தில் நடந்த விபத்து வெடிகுண்டு வெடிப்பு என்பதை உறுதிப்படுத்தினார். 2022 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி மங்களூருவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு மற்றும் 2022 செப்டம்பர் 23 ஆம் தேதி ஷிவமோகாவில் நடந்த குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய இந்த குண்டுவெடிப்பையும் ஆய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர். IED இல் பயன்படுத்தப்பட்ட டைமர் அந்த குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட டைமரைப் போன்றது என்று போலீஸ் வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளன. ஷிவமோகா குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கும் கோவை சிலிண்டர் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு உள்ளது. இந்த வெடிப்பு அக்டோபர் 2022 இல் நடந்தது. மைசூரில் இருந்து பெங்களூரு வந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், "இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் யாரோ ஒருவரா அல்லது ஏதேனும் ஒரு கும்பல் உள்ளதா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை." என்றார். வெளியிடப்பட்ட சந்தேக நபரின் படங்கள் மற்றும் வீடியோக்களில், அவர் தொப்பி மற்றும் அறுவை சிகிச்சை முகமூடியை அணிந்துள்ளார். இந்த சந்தேக நபர் ஓட்டலுக்கு அருகில் பஸ்ஸில் இருந்து இறங்கி வேகமாக ஓட்டலை நோக்கி செல்கிறார். பட மூலாதாரம்,CCTV சித்தராமையா கூறுகையில், “ஒரு நபர் முகமூடி மற்றும் தொப்பி அணிந்து பேருந்தில் வந்து ரவா இட்லியை வாங்கி சாப்பிட்டு பையை வைத்திருந்தார். இந்த பை வாஷ்பேசின் பகுதியில் உள்ள மரத்தின் அருகே வைக்கப்பட்டு இருந்தது. பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் மங்களூருவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்புக்கும் உள்ள தொடர்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டபோது, விசாரணை இன்னும் நடந்து வருகிறது என்றார். நவம்பர் 19, 2022 அன்று மங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பில், வெடிக்கும் பொருட்கள் அடங்கிய எரிந்த பிரஷர் குக்கரை கர்நாடக போலீசார் மீட்டனர். இது தவிர, ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து எரிவாயுவை எரிக்கும் இயந்திரத்தின் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டன. இந்த குண்டுவெடிப்பில் டிரைவர் மற்றும் பயணி காயமடைந்தனர். குக்கரில் எரிந்த பேட்டரிகளும் பொருத்தப்பட்டிருந்தன. இது டைமர் மூலம் இயக்கப்படும் சாதனமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கோவையில் மாருதி 800 ரக கார் வெடித்தது. சங்கமேஸ்வரர் கோவில் அருகே எல்பிஜி சிலிண்டர் வெடித்தது. மேலும், அந்த இடத்தில் இருந்து வெடிகுண்டுகளை போலீசார் கண்டுபிடித்தனர். பட மூலாதாரம்,CCTV FOOTAGE/POLICE SOURCES இந்த மூன்று சம்பவங்களிலும், வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் ஷாரிக் என்ற நபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தனஹள்ளியில் உள்ள குளத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கோயம்புத்தூர், மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஷாரிக் சென்றிருந்தார். இந்த மூன்று வழக்குகளையும் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரித்து வருகிறது. மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கு மற்றும் ராமேஸ்வரம் கஃபே வழக்கில் மற்றொரு பொதுவான அம்சம் என்னவென்றால், டைமர் டிஜிட்டல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதல்வர் சித்தராமையா என்ன சொன்னார்? பட மூலாதாரம்,ANI கர்நாடக முதல்வர் சித்தராமையா, மைசூரில் போலீஸ் அதிகாரியின் விசாரணையை மேற்கோள் காட்டி, இது ஐஇடி குண்டுவெடிப்பு என செய்தியாளர்களிடம் கூறினார். இதுகுறித்து அவர் பேசுகையில், "சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். யாரோ அந்தப் பையை அங்கு வைத்திருந்தனர். ஐஇடி குண்டுவெடிப்பு என்று கூறுகிறார்கள், இது தீவிரவாத தாக்குதலா இல்லையா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. எனக்கு கிடைத்த தகவலைத் தெரிவித்தேன். சம்பவ இடத்தில், போலீஸ் இருக்கிறார்கள்." இந்த விவகாரத்தில் அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். இந்த குண்டுவெடிப்பை நடத்தியது யார், என்ன வகையான குண்டுவெடிப்பு என அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஐஇடி வெடிகுண்டுதானா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், "ராமேஸ்வரம் உணவகத்தில் மதியம் ஒரு மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. அது குறைந்த தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பு. சுமார் பத்து பேர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,” என்றார். பாஜக என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,X/@TEJASVI_SURYA இந்த விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவருமான ஆர்.அசோக் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, இந்த வழக்கில் விசாரணை அமைப்புகளுக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “முதலில் சிலிண்டர் வெடிப்பு பற்றிய கதையை உருவாக்க முயன்றார்கள். இப்போது வியாபாரப் போட்டி என்ற கதையை உருவாக்குகிறார்கள். விசாரணை அமைப்புகளைத் தங்கள் வேலையைச் செய்ய காங்கிரஸ் அரசால் ஏன் அனுமதிக்க முடியவில்லை? வாக்கு வங்கியின் கட்டாயம் என்ன? விசாரணை நடத்த சுதந்திரம் வழங்க வேண்டும், பெங்களூரு மக்களுக்குத் தெளிவான பதில் அளிக்க வேண்டும்,” என அவர் பதிவிட்டுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cv2yeyqn2peo
  12. வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி பூஜை தொடர்பில் நீதிமன்றத்தை நாடும் ஆலய நிர்வாகம் 03 MAR, 2024 | 09:58 AM வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி பூஜை வழிபாடுகளின்போது மின்பிறப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கு ஆலய நிர்வாகத்தினர் சட்டத்தரணி ஊடாக வவுனியா நீதிமன்றத்திடம் அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். வவுனியா வடக்கு, ஓலுமடு வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களுக்கு சேதம் ஏற்படுத்தாத வகையில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. அதனடிப்படையில், அங்கு பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் 11ஆம் திகதி கொழும்பில் உள்ள தேசிய மரபுரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் மெதகொட அபய திஸ்ஸ தேரர், சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர் உள்ளிட்ட குழுவினர் இராணுவ பாதுகாப்புடன் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்துக்கு சென்று பார்வையிட்டனர். எதிர்வரும் 8ஆம் திகதி சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், குருந்தூர் மலை விகாராதிபதி சமூக வலைத்தளத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி பௌத்த இடம் நெடுங்கேணியில் ஆக்கிரமிக்கப்படவுள்ளது; அதனை பாதுகாக்க அணிதிரள்வோம் என பதிவு செய்துள்ளார். ஆனால், ஆலய நிர்வாகத்தினர் வழமை போன்று சிவராத்திரி பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், வெளிச்சத்துக்காக மின்பிறப்பாக்கி பயன்படுத்துவதாக இருந்தால் நீதிமன்றில் அனுமதியைப் பெறுமாறு நெடுங்கேணி பொலிஸார் ஆலய நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனடிப்படையில் ஆலய நிர்வாகத்தினர் மின்பிறப்பாக்கி பயன்படுத்த அனுமதி கோரி சட்டத்தரணி ஊடாக கடந்த வியாழக்கிழமை மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இது தொடர்பில் ஆராய்ந்து, எதிர்வரும் திங்கட்கிழமை முடிவை அறிவிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/177778
  13. நோ ஆயில், நோ பாயில்: அடுப்பே இல்லாமல் சோறு, சாம்பார், பொறியல் செய்வது எப்படி? உடலுக்கு நல்லதா? பட மூலாதாரம்,NO BOIL NO OIL/INSTAGRAM 2 மார்ச் 2024 முருங்கை கீரையை வைத்து வடை, வாழைக்காயை வைத்து கட்லெட் தொடங்கி, அரிசியே இல்லாமல் சோறு, எண்ணெய் இல்லாத ஃபிரைட் ரைஸ், மைதா இல்லாமல் நூடுல்ஸ் என, ‘நோ ஆயில், நோ பாயில்’ என்ற கான்செப்ட் தான் இப்போது சமூக ஊடகங்களில் டிரெண்டாக உள்ளது. அடுப்பு தேவையில்லை, ஒரு சொட்டு எண்ணெய் இல்லை. ஆனால் எல்லாவற்றையும் சமைக்காமலேயே சில முறைகளைப் பயன்படுத்தி, பதப்படுத்தி இந்த வகை உணவுகள் தயாரிக்கப்படும் வீடியோக்கள் சமீப நாட்களாக வைரலாகி வருகின்றன. அரிசிக்குப் பதிலாக ஊறவைத்த அவல்தான் சோறு. இதனால், அடுப்பில் வைக்காமலேயே சோறு தயாராகிவிடும். தவிர, அடுப்பில் வைக்காமலேயே சாம்பார், ரசம், புளிக்குழம்பு, பொறியல், தயிர் இல்லாத மோர்க்குழம்பு, இனிப்பு வகைகள் என ஒரு ‘முழு சாப்பாடு’ இந்த முறையில் சமைக்கப்படுகிறது. ’ஆதிகாலத்தில் இப்படித்தான் சாப்பிட்டோம்’, ‘இந்த முறையில் சாப்பிட்டால் உடலுக்கு உணவின் முழு சத்தும் கிடைக்கும்’ என்பதே இம்முறை சமையலின் ஆதரவாளர்கள் கூறும் கருத்தாக உள்ளது. இந்த முறை உணவுகள் எப்படி தயார் செய்யப்படுகின்றன, சமைக்காமலேயே காய்கறிகளைச் சாப்பிடலாமா, அவை எல்லோருக்கும் ஏற்றதா? இவ்வகை உணவுகளால் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம். எப்படி தயார் செய்யப்படுகின்றது? பட மூலாதாரம்,NO BOIL NO OIL/INSTAGRAM கோயம்புத்தூரில் உள்ள ‘படையல்’ உணவகத்தை நடத்தி வரும் சிவக்குமார், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, சுமார் 2,500 உணவு வகைகளை உருவாக்கியுள்ளதாக பிபிசியிடம் கூறுகிறார். அவர் கடந்த 3 ஆண்டுகளாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். முழுக்க காய்கறி சார்ந்த ‘வீகன்’ உணவுகள்தான் இங்கு கிடைக்கும். பால், தயிர் உள்ளிட்டவையும் தாவர அடிப்படையிலானதே. இங்கு ’மயோனீஸ்’ முந்திரியால் செய்யப்படுகிறது. இதே முறையில் உணவு வழங்கும் சில உணவகங்கள் சென்னை உட்பட தமிழகத்தின் சில பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ’நறுக்குதல், ஊற வைத்தல், கலத்தல்’ - இந்த சமையல் முறையின் மூன்று அடிப்படை செயல்முறைகள் இவைதான். ஒவ்வொரு காய்கறியையும் என்ன உணவு வகையோ அதற்கேற்ப நறுக்கிக் கொள்கிறார்கள். பின்னர், காய்கறிகளின் தன்மைக்கேற்ப தண்ணீர், இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, தேங்காய் பால், இளநீர் உள்ளிட்டவற்றில் ஊற வைக்கின்றனர். "இப்படி 12 ஊற வைக்கும் முறைகள் உள்ளன” என்கிறார், சிவகுமார். பின்னர்தான் இந்த உணவு வகைகள் தயாரிக்கப்படுவதாகக் கூறுகிறார் அவர். அரிசியைப் பொறுத்தவரை பாரம்பரிய அரிசி வகைகளை அவலாக மாற்றி, பின் ஊறவைத்து சோறு தயாரிக்கின்றனர். “இவ்வகை உணவுகளால் சத்துகள் அப்படியே கிடைக்கும். நம் குடல் நுண்ணுயிரிகளுக்கு நல்லது” என்கிறார் சிவகுமார். இவ்வகை உணவுகள் அனைவருக்கும் ஏற்றது என்றும் அவர் தெரிவிக்கிறார். ஆனால், சென்னையைச் சேர்ந்த சத்துணவு நிபுணர் தரணி கிருஷ்ணன் அனைத்து உணவுகளையும் இப்படியாக சமைக்காமல் சாப்பிட முடியாது என்கிறார். சமைக்காமல் சாப்பிடலாமா? உடலுக்கு நல்லதா? பட மூலாதாரம்,NO BOIL NO OIL/INSTAGRAM சென்னையைச் சேர்ந்த சத்துணவு நிபுணர் தரணி கிருஷ்ணன் பிபிசியிடம் இதுகுறித்துப் பேசினார். அவர் சொன்ன தகவல்கள்: நீரில் கரையக்கூடிய வைட்டமின்களான வைட்டமின் சி (நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவை) மற்றும் வைட்டமின் பி (கீரை வகைகள், பச்சைப் பட்டாணி) ஆகியவை மற்றும் காய்கறிகளைச் சமைக்கும்போது நிச்சயமாக சத்துகள் சிறிதளவு குறையத்தான் செய்யும். ஆனால், எவற்றையெல்லாம் சமைக்காமல் சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். புரதம், கொழுப்புச் சத்து, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்களை வேக வைப்பதால் எந்த பிரச்னையும் வராது. எல்லாவற்றையும் சமைக்காமல் சாப்பிட்டால் செரிமான பிரச்னைகள் ஏற்படும். வயிற்றுப்போக்கு, சிலவகை சத்துக் குறைபாடு உள்ளிட்டவை ஏற்படலாம். ஹீமோகுளோபின் குறைபாடு வரலாம். ஏனெனில், ஹீமோகுளோபினில் ‘ஹீம்’ என்பது இரும்புச்சத்து, ’குளோபின்’ என்பது புரதச் சத்து. உணவுப் பொருட்கள் சரியாகச் செரிக்காமல் போனால் இந்த சத்து குறைபாடுகள் ஏற்படலாம். நார்ச்சத்து மிகுதியான சிறுதானியங்களை எடுத்துக்கொண்டால், கேழ்வரகை மட்டும்தான் முளைக்கட்ட வைத்துச் சாப்பிட முடியும். கம்பு முளைகட்டினாலும் நம்மால் சாப்பிட முடியாது. சாப்பிட முடிந்தாலும் அதனால் பயனில்லை. நாள்போக்கில் உணவு மீது வெறுப்பு ஏற்படும். சமைக்காமல் சாப்பிடுவது தவறா? பட மூலாதாரம்,NO BOIL NO OIL/INSTAGRAM படக்குறிப்பு, ’படையல்’ சிவகுமார் இந்தக் கேள்விக்கு மற்றொரு ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி பதிலளித்தார். அவரது கூற்றின்படி, சமைக்காமல் சாப்பிடுவது தவறல்ல. நிச்சயமாக சில வகை காய்கறிகளைச் சமைக்காமல் சாப்பிடுவதால் நன்மைகள் உண்டு. அதேநேரம், சமைத்தாலும் காய்கறிகளில் உள்ள நார்ச்சத்து கிடைக்கும் வகையிலான காய்களும் உண்டு. "மாவுச்சத்து இருக்கும் பொருட்களைச் சமைத்துச் சாப்பிட்டால் நன்றாக அதில் அச்சத்து இறங்கியிருக்கும். அரிசி வகைகளை அவலாக்கிப் பின் ஊறவைத்து சாப்பிடலாம். முழு பருப்பு வகைகளை ஊறவைத்து பின் சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம்." ஆனால், எல்லோராலும் எல்லாவற்றையும் சமைக்காமல் சாப்பிட முடியும் என்பது தவறு. அது ஒவ்வொருவரின் செரிமான அமைப்பைப் பொறுத்தது என்கிறார் புவனேஸ்வரி. காய்கறிகளை நறுக்கியபின் சிறிது நேரம் ஆகிவிட்டாலோ, கைப்பட்டாலோ கிருமிகள் வர வாய்ப்புண்டு, பாக்டீரியா தொற்று ஏற்படலாம் எனக் கூறும் அவர், காலிஃபிளவர், பிரக்கோலி, முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகளைச் சமைக்காமல் சாப்பிடக்கூடாது என்றும் வலியுறுத்தினார். 'டிரெண்டிங் பின்னால் செல்லக்கூடாது' படக்குறிப்பு, கு.சிவராமன் எண்ணெய் இல்லாமல் சமைக்கப்படும் இவ்வகை உணவுகளால் பல நன்மைகள் உண்டு எனக் கூறுகிறார், சித்த மருத்துவர் கு.சிவராமன். ”எண்ணெய் இல்லாமல் சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் உண்டு. கொழுப்பு என்பது எண்ணெய் இல்லாமலேயே கிடைக்கும். ஆனாலும் சில வைட்டமின்கள் எண்ணெயில் மட்டும்தான் உறிஞ்சப்படும். வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்றவை எண்ணெயில்தான் இருக்கும். தாளிப்பதற்கு எண்ணெய் சேர்ப்பதால் பெரிய பிரச்னைகள் இல்லை. சுத்தமாக எண்ணெயே இல்லையென்றால் இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது,” என்றார். மேலும், ”எந்தவொரு உணவுத் திட்டமும் பொதுவானது அல்ல. ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப மாறுபடும். டிரெண்டிங்கின் பின்னால் செல்லக்கூடாது. உடலுக்கு என்ன தேவை என்பதை அறிந்து சாப்பிட வேண்டும்,” என்றார். "என்றைக்கு நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டதோ அப்போதிருந்து சமைத்தல் என்பது உண்டு." அவித்தல், இட்டல், தாளித்தல், பொறித்தல் ஆகியவை தமிழர் உணவு முறையில் பலகாலமாக இருந்திருப்பதாகக் கூறுகிறார் கு.சிவராமன். உடலுக்கு உள்ளேயும் அதே சூடுதான் உணவுப் பொருட்களைப் பக்குவப்படுத்துகிறது என்றும் அவர் கூறுகிறார். இவ்வகை உணவுகளை ஒரு கலவையாக எடுத்துக்கொண்டு வாரம் ஒருமுறை, இருமுறை சாப்பிடலாம் எனக் கூறும் அவர், எல்லா வேளையிலும் அதையே எடுப்பது நல்லதல்ல எனத் தெரிவித்தார். இந்த உணவுமுறையில் இருக்கும் இத்தகைய பிரச்னைகளுக்கு விளக்கமளித்த ‘படையல்’ சிவகுமார், “இவ்வகை உணவுகளில் எதுவுமே பச்சையானது அல்ல. காய்கறிகளோ, அரிசியோ எதுவாக இருந்தாலும் அதற்கென குறிப்பிட்ட முறையில் பதப்படுத்தித்தான் கொடுப்போம். ஆனால், இவை சமைக்காத உணவுகள். கேரட், பீட்ரூட், வெங்காயம், தக்காளி, வெண்டை உள்ளிட்ட பலவகை காய்களை நாம் சமைக்காமலேயே உண்ண முடியும். சில வகை கிழங்குகள், காய்கறிகளை அப்படியே உண்ண முடியாது. அவற்றை மிருதுவாக்கவும் அதிலுள்ள கிருமிகளை நீக்கவும் சில முறைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம்,” என்றார். உணவுப் பொருட்களைக் கைகளாலேயே கலக்கும்போது நம் உடலின் சூட்டால் அவை பதப்படுத்தப்படுவதாகக் கூறுகிறார் கு.சிவகுமார். கலவைகளில் சேர்க்கப்படும் கடலை வகைகள், நட்ஸ்கள் போன்றவை அந்தச் சூட்டால் எண்ணெயைப் பிரிப்பதால் வடை, கட்லெட் பதம்கூட கிடைப்பதாக அவர் கூறுகிறார். எண்ணெயை நேரடியாகப் பயன்படுத்தாமல் வேர்க்கடலை, எள், தேங்காய் உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களாக இவ்வகை உணவுகளில் பயன்படுத்தப்படுவதாக சிவகுமார் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c88xlvz2n95o
  14. இந்தியாவின் ஒத்துழைப்புடன் வடக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்மொழிவு : ஜனாதிபதி ரணிலுக்கு முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா அனுப்பிவைப்பு 02 MAR, 2024 | 11:46 PM ஆர்.ராம் இந்தியாவின் ஒத்துழைப்புடன் வட மாகாணத்தில் பல வருட பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் முன்மொழிவுகளை முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாராஜா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ளார். வட மாகாணத்தில் முன்னெடுக்கும் குறித்த செயற்றிட்டத்தினை ஏனைய மாகாணங்களிலும் முன்னெடுப்பதன் ஊடாக சமாந்தரமான வளர்ச்சிகள் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், அவர் அனுப்பி வைத்துள்ள முன்மொழிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியா இலங்கையில் இருந்து 23 கடல் மைல் தொலைவில் உள்ளது. அத்துடன் இந்தியா உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்திலிருக்கும் ஜேர்மனை விஞ்சுவதற்கான பயணத்தில் வேமாக ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் சந்தையில் பிரவேசிக்கும் வகையில் இந்திய மத்திய அரசுடனான உறவுகள், இந்திய மாநிலங்களுடனான உறவுகள், இந்திய வணிகத்துறையினருடான உறவுகள் தொழில்நுட்பம் உட்பட பல்வேறுபட்ட பரந்துபட்ட துறைகளில் நிதியுதவி உள்ளிட்ட ஒத்துழைப்புக்களை பெறுவது நோக்கமாக உள்ளது. இதன் மூலமாக வடக்கு மாகாணத்தின் வளர்ச்சி தூண்டப்பட்டு அது பொருளாதார ரீதியான எழுச்சியை அடைவதற்கு வழிசமைக்கும். அதேநேரம் ஒரே நேரத்தில் வட மாகாணத்தில் சிறப்புப் பொருளாதார வலயங்களை ஸ்தாபிக்கும் பணிகளை முன்னெடுக்க முடியும். அதேநேரம், வடக்கு மாகாண பொருளதாரத்தினை மேம்படுத்துவதை அடிப்படையான இலக்காகக் கொண்டு, தமிழ்நாடு கடந்த ஆண்டு செய்தது போன்று இலங்கை, இந்தியா மற்றும் பிற கண்டங்களைச் சேர்ந்த வளவாளர்களை ஒருங்கிணைத்து ‘கற்பனை வட மாகாணம்’ என்றொரு அமர்வை நடத்துவதைப் பற்றி பரிசீலிக்க வேண்டும். அந்த மாநாட்டை வட மாகாணத்தில் அல்லது இந்தியாவில் நடத்தலாமா என்பது குறித்து சிந்திக்கும் அதேநேரம், பல்வேறு துறை சார்ந்த நிபுணத்துவ மூலங்களில் இருந்து பல ஆண்டுகள் மேம்பாட்டு ஒத்துழைப்பை அமைப்பது தொடர்பாக மாநாட்டில் கலந்துரையாடி வழிவரைபடத்தினை தயாரிக்கலாம். அத்துடன், மேற்கூறிய செயற்பாடுகள் அனைத்தும் கடல், வான்வழி இணைப்புத் திட்டங்கள், கிழக்கு மாகாணத்தில் எண்ணெய் தாங்கிகள், சுற்றுலாத்துறை, விமான நிலையங்களுடனான இணைப்புகள், கொழும்பில் துறைமுக மேம்பாடு சுற்றுலா மற்றும் திறந்த பொருளாதார உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகள் உள்ளிட்டவை பாராட்டத்தக்கவை. அந்த வகையில், இந்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் மாகாண நிருவாகக் கட்டமைப்புக்களுக்கு வழங்கப்படுவதோடு தேவைப்பட்டால் நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய மாகாணங்களுக்கும் இம்முறையைப் பாயன்படுத்துவதன் ஊடாக அந்தந்த மாகாணங்களின் வளர்ச்சிகளும் தூண்டப்படும் என்றார். https://www.virakesari.lk/article/177765
  15. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நான் பல்கலைக்கழக படிப்புக்காக வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முந்தைய நாள் எனக்கு 18 வயதானது. பிரிட்டனில் மது வாங்குவதற்கான வயது வரம்பை நான் அப்போது கடந்திருந்தேன். எனது புதிய வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் நான் சென்றபோது, வாரத்திற்கு எத்தனை யூனிட் மது அருந்துவீர்கள் எனக் கேட்டார். பிரிட்டனில் 1.5 யூனிட் என்பது, தோராயமாக ஒரு சிறிய கோப்பை அளவிலான ஒயினுக்கு சமம். நான் தோராயமாக “ஏழு” என பதிலளித்தேன். "இந்த எண்ணிக்கை இனியும் உயரும்” என சிரிப்புடன் பதிலளித்தார். அதிக மது அருந்துவது, ஆயுட்காலம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும். ஆனால் 30, 40 அல்லது 50 வயதுடைய ஒருவருடன் ஒப்பிடும்போது எனது இளமை கூடுதல் ஆபத்துகளைக் கொண்டுவரும் என்று நான் கருதவில்லை. எல்லா பெரியவர்களுக்கும் மதுவால் ஏற்படும் ஆபத்துகள் ஒரே மாதிரியாக இருக்குமா? மதுபானம் இளம் பருவத்தினரின் மூளையை எப்படி பாதிக்கும் என்பது குறித்து எனக்கு இப்போது தெரிந்த விஷயங்களை முன்கூட்டியே நான் அறிந்திருந்தால், நான் சற்று எச்சரிக்கையாக இருந்திருப்பேன். இளம் வயதில் மது அருந்துவது நமது அறிவாற்றல் வளர்ச்சியில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். இளைஞர்களிடையே மதுவின் தாக்கம் பற்றி ஆராய்ச்சியாளர்களிடம் பேசுகையில், அதுகுறித்து எனக்குத் தெரியவந்த தகவல்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது. பிரிட்டன் அல்லது அமெரிக்காவைவிட ஐரோப்பியர்கள் ஆரோக்கியமான மதுப்பழக்கத்தைக் கொண்டுள்ளனர். மேலும் இளைஞர்களை வீட்டில் உணவுடன் மது அருந்த அனுமதிப்பது அவர்களுக்கு பொறுப்புடன் மது அருந்த கற்பிக்கிறது. ஆனால், மதுவின் தாக்கம் ஏற்படுத்தும் பிரச்னைகள் குறித்து அறிந்துகொள்வது, தங்கள் வீட்டில் மதுவை எவ்வாறு கையாள்வது என்பதைப் பெற்றோர்கள் தீர்மானிக்க உதவலாம். மூளையை சென்றடையும் ஆல்கஹால் பட மூலாதாரம்,JAVIER HIRSCHFELD/BBC/GETTY IMAGES ஆல்கஹால் ஒரு நச்சு. கல்லீரல் நோய் மற்றும் பல வகையான புற்றுநோய்கள் இதனால் ஏற்படுகின்றன. "மது அருந்தும்போது, ஆரோக்கியத்தைப் பாதிக்காத பாதுகாப்பான அளவு என்று எதுவும் இல்லை" என உலக சுகாதார மையம் கூறுகிறது. மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத்த பல நாடுகளில் சில வரம்புகள் உள்ளன. அமெரிக்காவில் ஆண்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு பானங்களுக்கு மேல் இல்லை என்றும், பெண்களுக்கு ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பானங்கள் இல்லை என்றும் வரையறுக்கப்படுகிறது. பல நாடுகளும் இதேபோன்ற வழிகாட்டுதலை வழங்குகின்றன. பீர் மற்றும் ஒயின் பொதுவாக பாதுகாப்பான பானங்களாகக் கருதப்பட்டாலும், அமெரிக்க வழிகாட்டுதலின்படி, பானத்தின் வகையைக் காட்டிலும் அதில் உள்ள ஆல்கஹால் அளவுதான் பிரச்னை. "12-அவுன்ஸ் பீரில், ஐந்து-அவுன்ஸ் அளவு கோப்பை ஒயின் அல்லது 1.5-அவுன்ஸ் மதுபானத்தில் இருக்கும் ஆல்கஹால் இருக்கிறது." பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில், மது வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 18. அமெரிக்காவில் 21 வயது. எவ்வாறாயினும், இளம் வயதினருக்கு மதுபானம் மிகவும் ஆபத்தானது என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இளம்பருவத்தினர் 21 வயது வரை தங்கள் வயது உயரத்தை எட்ட மாட்டார்கள், மேலும் அவர்கள் செங்குத்தாக வளர்வதை நிறுத்திய பின்னரும்கூட, 30 அல்லது 40 வயதையொட்டியவர்களின் உடலமைப்பை அடைந்திருக்க மாட்டார்கள். "ஒரு கோப்பை மது அருந்துவதால், பெரியவர்களைவிட இளைஞர்களுக்கு ரத்தத்தில் அதிகளவு ஆல்கஹால் சேர்கிறது" என்று மாஸ்ட்ரிச் பல்கலைக் கழகத்தின் முதுகலை ஆராய்ச்சியாளரும் மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயதை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்பவருமான ரூட் ரூட்பீன் கூறுகிறார். இளம் பருவத்தினரின் ஒல்லியான தேகமும் இதற்கு ஒரு காரணம். நீங்கள் மது அருந்தும்போது, அது உங்கள் ரத்த ஓட்டத்தில் நுழைந்து உங்கள் உடலில் பரவுகிறது. ஐந்து நிமிடங்களுக்குள் அது உங்கள் மூளையை அடைந்து, பொதுவாக உங்கள் மூளையை தீங்கு விளைவிக்கும் பொருட்களில் இருந்து பாதுகாக்கும் தடையை எளிதில் கடந்துவிடும். "இளைஞர்கள் மது அருந்தும்போது அதன் பெரும்பகுதி அவர்களின் மூளையைச் சென்றடைகிறது. இது, இளைஞர்கள் ஆல்கஹால் நச்சுத்தன்மையைப் பெறுவதற்கான மற்றொரு காரணம்" என்று ரூட்பீன் கூறுகிறார். 'மோசமான நடத்தைக்கு வழிவகுக்கும்' பட மூலாதாரம்,JAVIER HIRSCHFELD/BBC/GETTY IMAGES மண்டை ஓட்டில் ஏற்படும் மாற்றங்களையும் கவனிக்க வேண்டும். கடந்த காலத்தில், நமது பதின்பருவத்தில் நரம்பு வளர்ச்சி நின்றுவிடும் என்று கருதப்பட்டது. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சியின்படி, இளம்பருவ மூளையானது ஒரு சிக்கலான மறுபின்னலுக்கு உட்படுகிறது, அது குறைந்தது 25 வயது வரை முடிவடையாது. ஒரு செல் மற்றொன்றுடன் தொடர்புகொள்ள அனுமதிக்கும் ஒத்திசைவுகளை மூளை கத்தரிக்கும்போது "கிரே மேட்டர்" எனப்படும் சாம்பல் நிற திசுக்களைக் குறைப்பது, ஆல்கஹாலின் மிக முக்கியமான விளைவுகளுள் ஒன்று என அவர் கூறுகிறார். மூளையில் நடத்தை மற்றும் உணர்வுகளுடன் தொடர்புடைய லிம்பிக் அமைப்பு முதலில் முதிர்ச்சியடைகிறது. நெற்றிக்குப் பின்னால் அமைந்துள்ள ப்ரீஃப்ரன்டல் கோர்டெக்ஸ் எனப்படும் முன்புறணி வளரும் வேகம் மெதுவாக இருக்கும். இந்தப் பகுதி, உணர்ச்சிக் கட்டுப்பாடு, முடிவெடுத்தல் மற்றும் சுய கட்டுப்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடையது. இந்த இரண்டு பிராந்தியங்களின் வளர்ச்சியின் ஒப்பீடு, இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் ஏன் பெரியவர்களைவிட அதிக ஆபத்தைச் சந்திக்கிறார்கள் என்பதை விளக்கலாம். குறிப்பாக, உற்சாகமான பதின்ம வயதினருக்கு, ஆல்கஹால் மோசமான நடத்தை மற்றும் குற்றத்தின் சுழற்சியை உருவாக்கும் . "அதாவது, அதிக மனக்கிளர்ச்சி கொண்ட இளம் பருவத்தினர் அதிகமாகக் குடிக்க முனைகிறார்கள், பின்னர் குடிப்பது மேலதிக மனக் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது," என்கிறார், சௌத் கரோலினா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் உளவியலாளர் லிண்ட்சே ஸ்குக்லியா. இளம்பருவத்தினரின் மதுப்பழக்கம் நீண்டகால வளர்ச்சியை பாதிக்கலாம். பல ஆய்வுகள், ஆரம்பக்கால மதுப்பழக்கம் சாம்பல் நிற திசுக்கள் மிக விரைவாகக் குறைவதுடன் தொடர்புடையது என்று சுட்டிக்காட்டுகின்றன. அதே நேரத்தில் வெள்ளை நிற திசுக்களின் வளர்ச்சியும் தடைபடுகிறது," என்கிறார் அவர். அறிவாற்றல் சோதனைகளில் விளைவுகள் உடனடியாகத் தெரிவதில்லை; இளம் பருவத்தினரின் மூளையில், சிக்கலைத் தீர்ப்பதற்குப் பொறுப்பான பகுதிகள் பற்றாக்குறையை ஈடுசெய்யச் சிறிது கடினமாக உழைக்கலாம். இருப்பினும் இது என்றென்றும் நீடிக்காது. "பல வருட மதுப்பழக்கத்திற்குப் பிறகு, மூளையில் குறைவான செயல்பாடு மற்றும் மோசமான செயல்திறன் ஆகியவற்றைக் காண்கிறோம்," என்கிறார் ஸ்குக்லியா. ஆரம்பக்கால மதுப்பழக்கம் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். மேலும் எதிர்கால வாழ்க்கையில் மதுவைத் தவறாகப் பயன்படுத்துவதன் அபாயத்தை அதிகரிக்கிறது. குடும்பத்தில் ஏற்கெனவே மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு இது அதிகளவில் ஏற்படுகிறது. ஐரோப்பிய மதுப்பழக்கம் ஆரோக்கியமானதா? பட மூலாதாரம்,JAVIER HIRSCHFELD/BBC/GETTY IMAGE இந்தக் கண்டுபிடிப்புகள் ஓர் இளம் பருவத்தினரின் தேர்வுகளை எவ்வாறு பாதிக்கலாம்? எப்படி, எப்போது வீட்டில் குடிக்க அனுமதிக்க வேண்டும் என்பது பற்றிய பெற்றோரின் முடிவு என்னவாக இருக்க வேண்டும்? "முடிந்தவரை மதுப்பழக்கத்தைத் தொடங்கும் வயதைத் தாமதமாக்க வேண்டும். ஏனெனில் உங்கள் மூளை பதின்பருவத்தில் இன்னும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. மதுப்பழக்கத்தை தொடங்குவதற்கு முன் உங்கள் மூளை முடிந்தளவு ஆரோக்கியமாக இருக்கட்டும்," என்கிறார் அவர். இந்த அறிவுரை சட்டத்தில் இணைக்கப்பட வேண்டுமா என்பது வேறு விஷயம். மது அருந்துதல் பற்றிப் பொது வெளிகளில் தாம் பேசும்போது, "ஐரோப்பிய மதுப்பழக்க மாதிரி" குறித்துக் கேள்வி எழுப்பப்படுவதாக ஸ்குக்லியா கூறுகிறார். பிரான்ஸ் போன்ற சில நாடுகளில், சிறார்களுக்கு ஒரு கிளாஸ் ஒயின் அல்லது பீர், குடும்ப உணவுடன் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஐரோப்பாவிற்கு வெளியேயும்கூட, கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் மதுவை மெதுவாக அறிமுகப்படுத்துவது இளைஞர்களுக்குப் பாதுகாப்பாக மது அருந்த கற்றுக் கொடுக்கிறது என்றும், பிற்காலத்தில் அதிகமாக மது அருந்துவதைக் குறைக்கிறது என்றும் பல பெற்றோர்கள் நம்புகிறார்கள். இதுவொரு கட்டுக்கதை. "ஆல்கஹாலை பயன்படுத்துவதில் பெற்றோர்கள் எவ்வளவு அதிகமாக அனுமதிக்கிறார்களோ, அந்த அளவுக்கு ஒரு சிறார் பிற்காலத்தில் மதுவால் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் என்று ஆராய்ச்சிகள் சுட்டிக் காட்டுகின்றனர்" என்கிறார் ஸ்குக்லியா. "இளமைப் பருவத்தில் மது அருந்துவது தொடர்பான கடுமையான விதிகளைப் பெற்றோர்கள் விதிப்பது மதுபழக்கம் மற்றும் அதுதொடர்பான ஆபத்தான நடத்தைகளுடன் பெருமளவில் தொடர்புடையது," என்று ஓர் ஆய்வு கூறுகிறது. ஆஸ்திரியாவில் உள்ள ஜோஹன்னஸ் கெப்லர் பல்கலைக்கழக லின்ஸில் அலெக்சாண்டர் அஹம்மர் மேற்கொண்ட ஆய்வைக் கவனியுங்கள். அங்கு 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் சட்டப்பூர்வமாக பீர் அல்லது ஒயின் வாங்கலாம். கடுமையான சட்டங்கள் மது அருந்துவதற்கான விருப்பத்தை மட்டுமே அதிகப்படுத்தினால், அமெரிக்காவைவிட ஆஸ்திரியா ஆரோக்கியமான மதுப்பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். அங்கு மது அருந்துவதற்கான குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயது 21. ஆனால் இது விஷயமல்ல. பட மூலாதாரம்,JAVIER HIRSCHFELD/BBC/GETTY IMAGES இரு நாடுகளிலும் ஒருவர் குறைந்தபட்ச வயதைக் கடந்த பிறகு அதிகமாக மது அருந்துகின்றனர். "ஆனால் இந்த எண்ணிக்கை, அமெரிக்காவில் 21 வயதில் இருந்ததைவிட ஆஸ்திரியாவில் 16 வயதில் 25% அதிகமாக இருந்தது," என்று அலெக்சாண்டர் அஹம்மர் கூறுகிறார். அமெரிக்கர்கள் மது அருந்துவதற்கான சட்டப்பூர்வ வயது சற்று அதிகமாக இருப்பது, மதுபானங்களை வாங்க அனுமதிக்கப்படும்போது மிகவும் பொறுப்பான நடத்தையை ஊக்குவித்ததாகத் தோன்றியது. "ஆல்கஹால் சட்டப்பூர்வமாக மாறும்போது, பதின்வயதினர் முன்பைவிட மிகவும் குறைவான அபாயத்திற்கு ஆளாகின்றனர்," என்று அஹம்மர் கூறுகிறார். 16 வயதில், அத்தகைய தவறான பாதுகாப்பு உணர்வு ஆபத்தானதாக இருக்கலாம், அதேநேரம் 21 வயதில், அதிக முதிர்ச்சியடைந்த மூளை மதுபானத்தைக் கையாளுவதற்கு ஓரளவு சிறப்பாக மாறியுள்ளது. ஐரோப்பிய மதுப்பழக்கம் ஆரோக்கியமானது என்பது முற்றிலும் உண்மையில்லை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஐரோப்பிய பிராந்தியத்தில் ஆல்கஹால் காரணமாக ஏற்படும் புற்றுநோய்களில் மிதமான ஆல்கஹால் உட்கொள்வதால் ஏற்படுகிறது என்று தரவு சுட்டிக்காட்டுகிறது. அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில், அரசாங்கங்கள் சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயதை 25 அல்லது அதற்கு மேல் அமைக்க வேண்டுமா? தனிப்பட்ட சுதந்திரம் பற்றிய மக்களின் கருத்துகளுக்கு எதிராக பொது சுகாதார நலன்கள் சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதால், இது அவ்வளவு எளிதல்ல என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். "ஒரு கட்டத்தில் மக்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டும்" என அஹம்மர் ஒப்புக்கொள்கிறார். இளம் பருவத்தினருக்கு மதுவின் அபாயங்கள் மற்றும் மதுவால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சிறந்த கல்வியை வழங்கலாம் என்று, ஹாமில்டனில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் போதைக்கு அடிமையாதல் குறித்து ஆய்வு செய்து வரும் ஜேம்ஸ் மெக்கிலாப் பரிந்துரைக்கிறார். நீண்ட கால உடல்நல அபாயங்களை அறிந்திருந்தும், இன்றும் நான் மது அருந்துகிறேன். ஆனால் சுற்று கூடுதலாக மதுபானங்களை வாங்குவதற்கு முன் நான் இரண்டு முறை யோசிக்க இவை வழிவகுக்கலாம். *டேவிட் ராப்சன் விருது பெற்ற அறிவியல் எழுத்தாளர். அவரது அடுத்த புத்தகம் `தி லாஸ் ஆஃப் கனெக்‌ஷன்: தி டிரான்ஸ்ஃபர்மேட்டிவ் சயின்ஸ் ஆஃப் பீயிங் (The Laws of Connection: The Transformative Science of Being Social), ஜூன் 2024இல் கனோகேட் (பிரிட்டன்) மற்றும் பெகாசஸ் புக்ஸ் (அமெரிக்கா&கனடா) ஆகியவற்றால் வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cndj3xd229yo
  16. சுண்ணாம்புக் கற்கொள்ளை வடக்கே இருந்த காங்கேசன் சீமெந்து தொழிற்சாலையை மீள இயங்கவைத்தால் அதன் மூலப்பொருளாக யாழ்ப்பாணத்தில் சுண்ணக்கல் அகழ முடியாது என்றும் இதனால் இங்கே மீள அமைப்பது பொருத்தமான என்றதொரு சூழலியலாளர்களின் ஆர்வம் மிக்க கருத்தும் இத் தொழிற்சாலையின் மீள்நிர்மாணத்தில் பாரிய தாக்கத்தினை செலுத்துகின்றன. இச் சூழ்நிலையில் திருகோணமலையில் இயங்கிவரும் பிரபல சீமெந்து தொழிற்சாலைக்கு யாழ்பாணத்து சுண்ணாம்புக்கற்கள் தான் மூலப்பொருட்களாக கடந்த 04 வருடங்களாக அனுப்பட்டுவருவது ஏனோ இச் சூழலியலாளர்களுக்கும், சுற்றாடல் அதிகார சபைக்கும், மாவட்ட மற்றும் சம்பந்தப்பட்ட அகழ்வுக்குரிய பிரதேச செயலர்களுக்கும் தெரியவில்லை என்பது மிகப்பெரிய மர்மமாக இருக்கின்றது. மண்ணையும் மக்களையும் காப்போம் என திடசங்கற்பம் கொண்ட தமிழ் தேசிய வாதிகளுக்கும் தமிழ்ப்பற்று அரசியல் வாதிகளுக்கும் இச் சுரண்டல்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பூமிக்கு மேலே இருக்கும் கற்பாறையை உடைப்பதையும் பூமிக்கு கீழே இருக்கும் கல்லை அகழ்வதற்கும் இருக்கும் வேறுயாடுகள், அபாயங்கள் முதலியவற்றையும் அதற்குரித்தான சட்ட ஏற்பாடுகளையும் பின்பற்றாது அல்லது நடைமுறைப்படுத்தாது இவ் விடயம் தொடர்வது யாழ்ப்பாணம் என்றதொரு நிலத்தினை இல்லாமல் செய்வதற்கான செயற்பாடுகள் ஆகும். யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பிரபல வர்த்தகர் உட்பட்ட இரு தரப்பினரால் தினமும் 15 க்கு மேற்பட்ட 8 கியுப் காவுதிறன் கொண்ட பாரஊர்திகளில் மிகவும் இலாவகமாக மூடப்பட்டு அனுப்படுவதாக அவற்றில் பணியாற்றும் ஒரு சாரதி தெரிவிக்கின்றார். தான் தென்பகுதியை சேர்ந்தவர் எனவும் கடந்த 04 வருடங்களாக இப் பணியை செய்பவராகவும் தெரிவிக்கின்றார். இவ் வகையான மிகக் கூடியகாவுதிறனுக்கு அப்பாற்பட்ட அளவில் ஏற்றிச் செல்வதற்கு பொலிஸார் அனுமதிப்பார்களா என வினவியதற்கு தங்களது நிறுவனத்தில் பொலிஸாரின் விடயங்களை கையாள்வதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார் என்றும் எங்கேனும் சிக்கல் இருப்பின் அவர் உடனடியாக தொடர்பு கொள்வார் என்றும் சம்பந்தபட்ட பொலிஸாருக்கு யாழ்ப்பாணம் பெரிய இடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வரும் என்றும் அதனால் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மிகக் கௌரவமாக தெரிவிக்கின்றார். இவற்றை எங்கே ஏற்றுவீர்கள் என வினவியதற்கு எங்களுக்கு எங்களுடைய வாகன தரிப்பிடத்தில் பெரிய லோடரால் லோட் செய்யப்பட்டு வெளியே தெரியாதவகையில் தறப்பாளிடப்பட்டு கையளிக்கப்படும் எனவும், தங்களது மிகவும் பாதுகாப்பாக வெளித்தெரியாதவாறு முடக்கப்பட்ட வாகனத் தரிப்பிடமும் கல் ஏற்றுமிடமும் தங்களது நிறுவனத்தால் யாழ். புறநகர் பகுதியில் பேணப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கின்றார். வளக்கொள்வனவு அனுமதிக்கு புறம்பாக அகழப்படுகின்றது, அனுமதியற்று மாகாணத்திற்கு வெளியே கொண்டு செல்லப்படுகின்றது, சூழல் நேயம் மிக்க சீமெந்து உற்பத்தி தொழிற்சாலையாக அறியப்பெற்ற இலங்கை மற்றும் சர்வதேச தர நியமங்கள் பெற்ற சட்டரீதியான உற்பத்தி நிறுவனம் முறைகேடாக ஒரு வளக்கொள்வனவை மேற்கொண்டு மூலப்பொருளை உள்வாங்குகின்றது. இதனை முகமை செய்யவேண்டிய அரசுநிறுவனங்கள் அதிகார சபைகள், உத்தியோகத்தர்கள் என்போர் உறங்குநிலை போன்று உறங்குகின்றார்கள். சூழல் நலன் சார்ந்து சிந்திக்காத எந்தவொரு மனிதனும் வாழத் தகுதியற்றவன் என்பதை வாழ்வின் இறுதிக்காலத்தில் மட்டுமே உணர்வான் இப்போது வாழும் வரைக்கும் மண்ணை விற்றென்ன கல்லை விற்றென்ன வாழ்ந்தால் போதுமே என்ற நிலைதான் இருக்கின்றது. மேலுள்ள செய்தி உண்மையாகவே மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. எவ்வழியிலும் பணத்தைச் சேர்த்தால் சரி என நினைக்கிறார்கள். ஆனால் எல்லோரும் சமாதி ஆகக்கூடும்.
  17. இந்த அறிவியல் ஆதாரத்தை வைத்து இங்குள்ளோர் ஒற்றுமையாக வாழட்டும் என நினைத்தார்களோ?!
  18. சாந்தனின் உடலுக்கு பெருந்திரளானோர் கண்ணீருடன் அஞ்சலி! 03 MAR, 2024 | 10:35 AM மறைந்த சாந்தனின் உடல் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் வைக்கப்பட்டு, வவுனியாவில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டபோது, பொதுமக்கள் திரண்டு கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி காலமானார். இந்நிலையில் அவரது உடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் (01) எடுத்து வரப்பட்டு, பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவின் பின்னர், இன்று (03) காலை அவரது உடல் வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. வவுனியா முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகத்துக்கு முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் சாந்தனின் உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பின்னர் ஊர்வலமாக வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீருக்கு மத்தியில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சாந்தனின் உடலானது மாங்குளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. https://www.virakesari.lk/article/177780
  19. சிங்களவர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் உள்ள மரபணு நெருக்கம் Published By: VISHNU 01 MAR, 2024 | 05:27 PM தெற்காசியாவில் வேறு எந்த இனக் குழுமங்களுக்கும் இடையில் இத்தகைய நெருக்கம் கிடையாது என்று ஆய்வில் கண்டுபிடிப்பு பி.ரி.ஐ. (புதுடில்லி ) இலங்கையின் இரு பெரிய இனக்குழுமங்களான சிங்களவர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் இருக்கும் மரபணு ஒப்புடைமை தெற்காசியாவில் வேறு எந்த இனக்குழுமங்களுக்கும் இடையில் இருக்கக்கூடிய மரபணு ஒப்புடைமையை விடவும் மிகவும் நெருக்கமானது ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இலங்கையையும் இந்தியாவையும் சேர்ந்த மரபணு விஞ்ஞானிகளினால் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் 'ஐ சயனஸ் ' (i Science)என்ற சஞ்சிகையில் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. அந்த முடிவுகள் இலங்கையின் இனக்குழுமங்களின் தோற்றுவாய்களையும் அவற்றுக்கு இடையிலான சமூக ஊடாட்டங்களையும் தெளிவுபடுத்துகிறது. குறிப்பிடத்தக்க கலாசார மற்றும் மொழியியல் வேறுபாடுகள் இருக்கின்ற போதிலும் சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் கடந்த காலத்தில் பல நூற்றாண்டுகளாக கலந்து வாழ்ந்திருப்பதன் விளைவாக அவர்களுக்கிடையில் மரபணு ஒப்புடைமை ஏற்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். "பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கும் சிறுபான்மையினரான இலங்கை தமிழர்களுக்கும் இடையில் பரஸ்பர அவநம்பிக்கையும் பகைமையும் இருந்துவருகின்ற போதிலும், உள்நாட்டுப் போரொன்றில் அவர்கள் ஈடுபட்டபோதிலும் எமது கண்டுபிடிப்புக்கள் மிகுந்த வியப்பைத் தருகின்றன" என்று இந்தியாவின் வாரணாசியில் உள்ள பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் விலங்கியல் இலாகாவை சேர்ந்த பேராசிரியர் கியனேஷ்வர் ஷோபே கூறுகிறார். லக்னோவில் உள்ள பிர்பால் சானி தொல்லியல் ஆய்வு நிறுவனத்தையும் மங்களூர் பல்கலைக்கழகத்தையும் இலங்கையின் கொழும்பு பல்கலைக் கழகத்தையும் சேர்ந்த ஆய்வாளர்களும் பெனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆய்வாளர்களுடன் சேர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். இலங்கையின் மிகப்பெரிய இனக் குழுமத்தினரான சிங்களவர்கள் சனத்தொகையில் 74.9 சதவீதத்தினராக இருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களும் உள்நாட்டில் சோனகர் என்று அறியப்படும் முஸ்லிம்களும் முறையே 11.1 சதவீதத்தினராகவும் 9.3 சதவீதத்தினராகவும் இருக்கின்ற அதேவேளை, இந்தியத் தமிழர்கள் 4.1 சதவீதத்தினராக இருக்கிறார்கள். மிகவும் சிறிய ஒரு சதவீதத்தில் பறங்கியரும், மலாயர்களும், வேடர்களும் (ஆதிவாசிகள்) இருக்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் கி.பி.500 அளவில் அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டது. "சிங்களவர்கள் இந்தியாவின் மேற்கு பாகத்தில் இருந்து குடிபெயர்ந்த அதேவேளை இலங்கைத் தமிழர்கள் தென்னிந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தார்கள். இரு இனத்தவர்களின் குடிபெயர்வுகளும் ஏககாலத்தில் இடம்பெற்றது. இரு தரப்புகளில் இருந்தும் பல நூறு வருடங்களாக மரபணு பரவல் அல்லது மரபணு ஓட்டம் ( Flow of genes) இடம்பெற்றிருப்பதாக தோன்றுகிறது. அதன் விளைவே இந்த மரபணு ஒப்புடைமை" என்று கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விஞ்ஞானி ஆர். ரணசிங்க கூறினார். இந்த துறையில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மரபணு விபரங்களில் ஆழமானவையாக இருக்கவில்லை. அதனால் அவை தீர்க்கமான முடிவாகக் கொள்ளக்கூடியவையாக இருக்கவில்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டார்கள். "ஒரு தனிநபரில் ஒரு ஐந்து இலட்சம் மரபணு மாற்றம் அல்லது மரபணு விகாரம் ( Genetic mutations ) மீது மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வாக இது அமைந்திருக்கிறது. இந்த பணியின் முனைப்பு மற்றும் பரந்தளவிலான வீச்செல்லை காரணமாக எமது ஆய்வின் முடிவுகள் தீர்க்கமானவையாகவும் வலுவானவையாகவும் இருக்கிறது என்று நம்புகிறோம்" என்று ஷோபே கூறினார். ஒரு தனிநபரின் மரபணு விபரங்கள் அவரைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ளவர்களின் மரபணு விபரங்களுடன் பொதுத்தன்மையை வழமையாகக் கொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. "உதாரணமாக நாட்டின் வடபாகத்தைச் சேர்ந்த ஒருவரின் வட இந்தியாவில் உள்ள வேறு நகரங்களில் இருப்பவர்களுடன் பெருமளவுக்கு மரபணு ஒற்றுமையைக் கொண்டிருப்பார். ஆனால் இலங்கை ஆய்வில் தென்னிந்தியாவை விடவும் இந்தியாவின் மேற்கு பாகத்தின் மரபணுக் கூறுகளைக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சிங்களவர்களுக்கும் மராட்டியர்களுக்கும் ஒரு பொதுவான வேருக்கான தடயங்கள் இருக்கின்றன" என்று ரணசிங்க கூறினார். இனத்துவ மற்றும் மொழியியல் எல்லைக்கு அப்பால் இலங்கைத் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் வலுவான மரபணு பரவல் இருப்பது வியப்பைத் தருகின்ற இன்னொரு அம்சமாகும். தெற்காசியப் பின்புலம் ஒன்றில் இது வழமைக்கு மாறானதாகும் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் உள்ள சிங்கபுரவில் இருந்து சிங்களவர்கள் வந்தார்கள் என்றும் புராணக்கதைகள் கூறுவதை அவதானித்த விஞ்ஞானிகள் குழு அது சரியான இடம் அல்ல என்று மறுத்துரைக்கிறார்கள். "இரண்டு சிந்தனைகளைக் கொண்ட பிரிவினர் இருக்கிறார்கள். ஒரு பிரிவினர் அந்த இடம் வடமேற்கு இந்தியா என்று கூறுகிறார்கள். மற்றையவர்கள் மேற்கு வங்காளம் என்று கூறுகிறார்கள்.எமது ஆய்வு அவர்களின் தாயகம் வடமேற்கு இந்தியா என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது." என்று பிர்பால் சானி தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் புராதன மரபணு ஆய்வுகூடத்தைச் சேர்ந்த இன்னொரு மரபணு விஞ்ஞானி நிராஜ் ராய் கூறினார். இந்த ஆய்வை நடத்த முடிக்க ஐந்து வருடங்கள் சென்றது. இலங்கைத் தமிழர்கள் (88), சிங்களவர்கள் (129 ), இலங்கையைச் சேர்ந்த இந்தியத் தமிழர்கள் (56), இந்தியாவைச் சேர்ந்த இந்தியத் தமிழர்கள் (562 ) ஆகியோரிடமிருந்து 834 மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. https://www.virakesari.lk/article/177697
  20. மன்னார் காற்றாலை திட்டத்தால் சுற்றுச்சூழல், பொருளாதார சமநிலைக்கு பாரிய பாதிப்பு - இலங்கை வனவிலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை! 01 MAR, 2024 | 04:20 PM (சரண்யா பிரதாப்) அதானி கிரீன் எனர்ஜி ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் முன்மொழியப்பட்ட 205 மெகாவாட் மன்னார் காற்றாலை திட்டம், சுற்றுச்சூழல், பொருளாதார சமநிலை ஆகியவற்றுக்கு பாதிப்புகள் ஏற்படும் என இலங்கை வன விலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (‍பெப். 27) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை வனவிலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தினால் மன்னார் மக்கள் எதிர்கொள்ளப்போகின்ற நேரடி, மறைமுக பாதிப்புகள் குறித்து அக்கறை செலுத்தப்படவில்லை எனவும் அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில் ஆண்டுதோறும் 250 இனங்களைச் சேர்ந்த சுமார் 15 மில்லியன் இடம்பெயரும் பறவைகள் விரும்பும் முக்கிய இடமாக, மத்திய ஆசியா (பறவைகள்) பறக்கும் பாதையின் (CAF) தெற்கு பகுதியிலுள்ள இலங்கை விளங்குகிறது. குறிப்பாக, மன்னார், 150 இனங்களை உள்ளடக்கிய சுமார் ஒரு மில்லியன் பறவைகளுக்கு ஒரு முக்கியமான குளிர்கால நிலமாக காணப்படுகிறது. மேலும், இப்பகுதி 26 வகையான அச்சுறுத்தலுக்கு உள்ளான பறவைகளுக்கு இனப்பெருக்க வாழ்விடங்களை வழங்குகிறது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் CAF srilanka Waterbird Tracking Projectஇன் அறிவியல் சான்றுகளின்படி, புலம்பெயர்ந்த பறவைகளுக்கு ஒரு முக்கியமான நுழைவு மற்றும் வெளியேறும் இடமாகவும் மன்னார் விளங்குகிறது. மன்னாரின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்துவமிக்க பாதுகாக்கப்பட்ட பகுதிகள் (அடம்ஸ் பாலம் தேசிய பூங்கா, வங்காலை சரணாலயம் (ஒரு ரம்சா ஈரநிலம்) மற்றும் விடத்தல் தீவு இயற்கை காப்பகம்) மற்றும் இடம்பெயரும் உயிரினங்களின் மாநாடு (CMS) உயிரியல் பன்முகத்தன்மை மாநாடு மற்றும் ரம்சா மாநாடு (CBD) போன்ற சர்வதேச மாநாடுகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட 250 மெகாவாட் மன்னார் காற்றாலை மின் திட்டம் (கட்டம்) சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சமநிலை ஆகிய இரண்டுக்கும் குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது. இது யாலா தேசிய பூங்கா, சிங்கராஜா உயிர்க்கோளக் காப்பகம் மற்றும் ஹோர்டன் சமவெளி தேசிய பூங்கா போன்ற மன்னாரின் எல்லைகளுக்கு அப்பாலும் பாதிக்கப்படும். பசுமை ஆற்றல் எதிர்காலத்துக்கு முக்கியமானது. பசுமை ஆற்றல் திட்டங்களின் அபிவிருத்திக்கு இலங்கைக்கு சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார இழப்புகளைத் தணிக்க மூலோபாய சூழலியல் மதிப்பீடுகள் (SEA) தேவை. avistep போன்ற கருவிகளை பயன்படுத்துவது சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நன்மைகளை பாதுகாக்கும் அதேவேளை ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். இது தொடர்பில் வழக்கறிஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜகத் குணவர்தன கூறுகையில், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கீழ் சுற்றாடலுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அபிவிருத்தி தொடர்பில் மதிப்பீடு செய்ய மூன்று சட்டங்கள் உள்ளன. அவை, தேசிய சுற்றாடல் சட்டம், கரையோர பாதுகாப்பு சட்டம், தாவர மற்றும் விலங்கியல் (திருத்தச்) சட்டம் ஆகியவையாகும். மன்னார் காற்றாலை திட்டம் தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் வருகிறது. எனவே, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதியை இந்த திட்டம் பெறவேண்டும். கடந்த காலம் போல் அல்லாமல் சுற்றாடல் அதிகார சபை சுற்றுச்சூழலை மதிப்பிடும் நிறுவனம் கண்டிப்புடன் செயற்படுகிறது. இந்த அறிக்கையை மத்திய சுற்றாடல் அதிகார சபை மதிப்பீடு செய்யவுள்ளது. இதற்கு எழுத்து மூலம், வாய்மூலம் கருத்துக்களை சமர்பிக்க முடியும். அக்கறையுள்ள பொதுமக்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து குறித்து கருத்து தெரிவிக்கலாம். அது மார்ச் 6ஆம் திகதி வரை பொதுக்கருத்துக்கு திறந்திருக்கும். கருத்துக்களை மத்திய சுற்றாடல் அதிகார சபை பணிப்பாளர் நாயகத்திற்கு CEA dg@cea.lk என்ற மின் அஞ்சலுக்கு அனுப்ப முடியும் என்றார். மன்னார் காற்றாலை திட்டத்தின் சில முக்கிய குறைப்பாடுகள் * இலங்கை சட்டங்களை மீறி முழுமையடையாத குறிப்பு விதிமுறைகளின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது. * வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் நிபுணத்துவம் வாய்ந்த முக்கிய பங்குதாரர்களின் ஆலோசனை மற்றும் மேற்பார்வை இல்லாமை. * பறவைகள் தொடர்பான ஆய்வு முறை (Avifaunal) போன்றவற்றில் சிக்கல்கள். பறவை கண்காணிப்புகளின் நேரம் மற்றும் பருவம் போதுமானதாக இல்லை. முக்கியமாக இடம்பெயர்ந்த காலங்களை கவனிக்கவில்லை. * மோதல் இடர் மதிப்பீட்டு முறைமை வலுவானதாக இல்லை. *காலாவதியான முறைகள் மற்றும் மன்னாருக்கு கிடைக்கக்கூடிய மேம்பட்ட கண்காணிப்புத் தரவுகளின் பயன்பாடு இல்லாமை. *பறவைகளின் நடமாட்டம் பற்றிய சர்வதேச மரபுகள் மற்றும் அறிவியல் இலக்கியங்களின் அலட்சியம் *மன்னார் மக்களின் நேரடி மற்றும் மறைமுக பாதிப்புக்கள் குறித்து போதிய கவனம் செலுத்தாமை. *வெள்ளப் பாதிப்புகள் மற்றும் தணிப்பு பற்றி போதியளவு கருத்தில் கொள்ளப்படவில்லை. * திட்ட இருப்பிடத் தளங்கள் ஒன்றுடன் ஒன்று சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த, பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் இணைப்பைத் தடுக்கின்றன. *குறிப்பிடத்தக்க அகழ்வாராய்ச்சிகள் தொடர்பாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்துடன் ஆலோசனைகளை நடத்த தவறியது. *குறைந்த சூழலியல் தாக்கம் கொண்ட மாற்றுத் தளங்களின் போதிய அங்கீகாரம் இல்லாமை. போன்றவை காணப்படுகின்றன என தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் சம்பத் எஸ்.செனவிரத்ன தெரிவிக்கையில், மத்திய ஆசியா வழியாக இலங்கைக்கு பில்லியன் கணக்கான பறவைகள் ஒவ்வொரு வருடமும் வருகை தருகின்றன. உலகிலுள்ள பறவைகள் இடம்பெயரும் 8 பாதையூடாக, ஒவ்வொரு வருடமும் வடக்கிலிருந்து தெற்கிற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் பில்லியன் கணக்கான பறவைகள் இடம்பெயர்கின்றன. இவ்வாறு தெற்கிற்கு இடம்பெயரும் பறவைகள் 6 மாதங்கள் தங்கிவிட்டு வடக்கிற்கு செல்லும். இவ்வாறு பறவைகள் இடம்பெயரும் பாதைகளில் இலங்கையும் ஒன்றாகும். தலைமன்னார், பேசாலை, வங்காலை, உடுமலை, விடத்தல் தீவு, மன்னார் நகர் ஆகிய பகுதிகளுக்கு பறவைகள் வருகை தருகின்றன. இவை அனைத்தும் வனவிலங்கு பாதுகாப்புத் துறையால் சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட முக்கியமான ஈரநிலங்கள் ஆகும். இவ்வாறு இடம்பெயரும் பறவைகள் 22,000 அடி உயரம் வரை பறக்கும். இப்பறவைகள் ஒவ்வொரு வருடமும் 25,000 கிலோ மீற்றர் வரை தனது பயணத்தை மேற்கொள்கின்றன என்றார். மத்திய ஆசியா (பறவைகள்) பறக்கும் பாதையில் (CAF) தெற்குப் பகுதியான 30 நாடுகளில் இருந்து 250 இனங்களைச் சேர்ந்த 15 மில்லியன் பறவைகள் இடம்பெயர்ந்து இலங்கைக்கு ஆண்டுதோறும் வருகை தருகின்றன. இவற்றில், 150 இனங்களைச் சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான இடம்பெயர்ந்த பறவைகள் மன்னாரிக்கு வருகை தருகின்றன, இது ஒரு முக்கியமான குளிர்கால நிலமாக செயல்படுகிறது, மேலும் 26 இனங்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள பறவைகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாக உள்ளது. மன்னார் வழித்தடத்தில் வரவிருக்கும் உத்தேச 50 காற்று விசையாழி மின் திட்டத்தால் அந்த பறவைகள் அனைத்தும் பாதிக்கப்படும் அல்லது அழிக்கப்படும். உத்தேச 250 மெகாவாட் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சமநிலைக்கு குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்தும் உயிர் பல்வகைமை விஞ்ஞானி மற்றும் பொதுக் கொள்கை வழக்கறிஞர் கலாநிதி ரொஹான் பெத்தியகொடை தெரிவிக்கையில், மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான முன்மொழிவுகள் மார்ச் 6 ஆம் திகதிக்கு முன்னதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சமர்ப்பிக்கப்படும். தாம் சமர்ப்பித்துள்ள சுற்றாடல் தாக்க மதிப்பீடு (EIA) தொடர்பான முன்மொழிவுகள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் நிராகரிக்கப்பட்டால், அந்த திட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/177692
  21. பட மூலாதாரம்,WTO 8 மணி நேரங்களுக்கு முன்னர் உலக வர்த்தக சபையின் கூட்டத்தில் அரிசி விவகாரத்தில் இந்தியா மீது குற்றஞ்சாட்ட தாய்லாந்து முயன்றது. இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ’இந்தியா பொது விநியோக முறைக்காகக் குறைந்த விலையில் அரிசியை வாங்கி, சர்வதேச அரிசி ஏற்றுமதி சந்தையை ஆக்கிரமிப்பதாக’ உலக வர்த்தக அமைப்பிற்கான தாய்லாந்தின் தூதர் பிம்சானோக் வோன்கோர்போன் பிட்ஃபீல்ட், குற்றம் சாட்டினார். தாய்லாந்தின் இந்தக் கருத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட சில குழு உரையாடல்களில் பங்கேற்கவும் இந்திய பிரதிநிதிகள் மறுத்துவிட்டனர் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தாய்லாந்தின் கருத்தை சில செல்வந்த நாடுகளின் பிரதிநிதிகள் வரவேற்றனர் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி குறிப்பிடுகிறது. அரிசி விவகாரத்தில் என்ன சர்ச்சை? பட மூலாதாரம்,GETTY IMAGES உண்மையில் பொதுமக்களுக்கான உணவு கையிருப்பிற்கு வரம்பு உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இதற்கான நிரந்தரத் தீர்வை பலமுறை நிறுத்திவிட்டன. உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாட்டிலுள்ள மொத்த அரிசி உற்பத்தியில் 40 சதவிகிதத்தைக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் இந்தியா கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள விளைபொருட்கள் சந்தை விலையில் விற்கப்படுகின்றன. “பொது விநியோக முறைக்கு அதாவது PDSக்கு கொள்முதல் செய்ய இந்தியா MSP அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்குகிறது. PDSக்காக வாங்குவதற்கான ’பப்ளிக் ஸ்டாக் லிமிட்டில்’ இந்தியா விலக்கு பெற்றுள்ளது. அதாவது இந்திய அரசு பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக கொள்முதல் செய்யும் அரிசியின் மீது சேமிப்பு வரம்பு பொருந்தாது,” என்று மூத்த பத்திரிக்கையாளரும் வேளாண்மை நிபுணருமான ஹர்வீர் சிங் கூறினார். தாய்லாந்தின் இத்தகைய குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று அவர் கருதுகிறார். “பதிவுகளின்படி அப்படி இல்லை. பொது விநியோக முறைக்காக வாங்கும் அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்வதில்லை. மாறாக இந்திய ஏற்றுமதியாளர்கள் அரிசியை சந்தை விலையில் வாங்கி அதை ஏற்றுமதி செய்கிறார்கள் என்று இந்திய அரசு கூறுகிறது. இந்தியா மலிவு விலையில் அரிசியை வாங்கி ஏற்றுமதி செய்து அதன் மூலம் சந்தையை சீர்குலைப்பதாக தாய்லாந்து குற்றம் சாட்டுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டு உண்மை அல்ல,” என்று அவர் கூறினார். அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்திருந்தது பட மூலாதாரம்,GETTY IMAGES உள்நாட்டு சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியா படிப்படியாக அரிசி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியது. 2022இல் உள்நாட்டுச் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்தபோது இந்தியா கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியது. முதலில் உடைந்த அரிசிக்குத் தடை விதித்தது. பின்னர் வெள்ளை அரிசி ஏற்றுமதியை நிறுத்தியது. சில அரிசி வகைகளுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது. இது தவிர உள்நாட்டு சந்தையில் விலையைக் கட்டுப்படுத்த பாஸ்மதி அல்லாத அரிசிக்கும் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது. அரசு தனது கையிருப்பில் இருந்து குறைந்த விலைக்கு அரிசியை விற்றது. இந்தியா இந்தத் தடைகளை விதித்தபோது தாய்லாந்து அதை ஒரு வாய்ப்பாகக் கருதியது. இந்தச் சூழ்நிலையை தாய்லாந்து பயன்படுத்திக் கொள்ள முயலும் என்று தாய்லாந்து அரசின் அப்போதைய நிதி அமைச்சர் கூறியிருந்தார். ஆயினும் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் அரிசி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. உலக அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவிகிதம். தாய்லாந்தும் ஒரு பெரிய அரிசி ஏற்றுமதியாளராக உள்ளது. இந்தியா தனது சந்தையைக் கைப்பற்றுவதாக தாய்லாந்து நினைக்கிறது. உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் தாய்லாந்து அரிசி ஏற்றுமதி விவகாரத்தை எழுப்பியதற்கான காரணத்தை விளக்கிய ஹர்வீர் சிங், “உலக வர்த்தக அமைப்பில் விவசாய அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த மேடையில் இந்த விவகாரத்தை எழுப்பலாம் என்று தாய்லாந்து உணர்ந்திருக்க வேண்டும். தாய்லாந்து இந்த வாய்ப்பைp பயன்படுத்திக்கொண்டது. அரிசி ஏற்றுமதியில் தாய்லாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா தனது ஏற்றுமதிக்கு போட்டி கொடுப்பதாக தாய்லாந்து கருதுகிறது,” என்று குறிப்பிட்டார். அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இருப்பினும் அரிசி ஏற்றுமதி மீது இந்தியா விதித்துள்ள ’பகுதி தடை’, மேற்கத்திய நாடுகளிடையே கோபத்தை அதிகரித்துள்ளது. மானிய விலையில் கொள்முதல் செய்யப்படும் அரிசியை ஏற்றுமதி சந்தைக்கு அனுப்புவதன் மூலம் இந்தியா உலக வர்த்தகத்தில் செல்வாக்கு செலுத்த முயல்வதாக உலகின் வளர்ந்த நாடுகள் காட்ட முயன்றன. ஆனால் சேமிப்பு வரம்பு விதிகள் பணக்கார நாடுகளுக்குப் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்த விதிகள் காரணமாக உற்பத்தியில் 10 சதவீதம் வரை மானியத்தில் வாங்கலாம் என்ற வரம்பை இந்தியா மீறுகிறது. "இந்த விதிகள் கண்டிப்புடன் அமலில் இல்லை. மேலும் இந்தியா அதிலிருந்து விலக்கு பெறுகிறது. புதிய விதிகள் உருவாக்கப்படும் வரை விதி மீறலை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டன. இது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முடிவு செய்யப்பட்டது. அப்போதிருந்து எந்த சீர்திருத்தமும் செய்யப்படவில்லை. ஏழை நாடுகளுக்கான மிக முக்கியமான பிரச்னையை மேற்கத்திய நாடுகள் கவனிக்கவில்லை என்று இந்தியா கருதுகிறது," என்று ஹர்வீர் சிங் கூறினார். அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2022ஆம் ஆண்டில் உலக அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு சில அரிசி வகைகளின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்ட போதிலும், அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 27 சதவீதமாக இருந்தது. இருப்பினும் 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி குறையக்கூடும். இந்தியாவின் போட்டி நாடான பாகிஸ்தான் தனது உற்பத்தியை அதிகரித்துள்ளதால் போட்டி விலையில் அரிசியை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் பாஸ்மதி ஏற்றுமதி இந்த ஆண்டு குறையலாம் என்று ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. நீளமான பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் முன்னணியில் உள்ளன. இரான், இராக், செளதி அரேபியா, ஏமன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த அரிசிக்கான கிராக்கி அதிகமாக உள்ளது. இந்தியா 2023இல் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி மூலம் 5.4 பில்லியன் டாலர் சம்பாதித்துள்ளது. அதிக விலை காரணமாக, இந்தியா 2022ஐ விட 2023இல் 21 சதவீதம் அதிகமாக சம்பாதித்துள்ளது. தாய்லாந்தின் குற்றச்சாட்டுகள் இந்தியாவின் வர்த்தக உறவுகளை பாதிக்குமா? பட மூலாதாரம்,@NOIWEALA படக்குறிப்பு, உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ள இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல். உலக வர்த்தக அமைப்பின் 13வது அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில், உணவு சேமிப்பு வரம்புக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று இந்தியா கோரிய அதே நாளில் தாய்லாந்து தூதர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் கீழ் ’பொது உணவு கையிருப்பு' என்பது "அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அல்லது பிற பொது முகமைகள் மூலம் அரசுகள் உணவு தானியங்களை வாங்குதல், சேமித்தல் மற்றும் விநியோகித்தல்" என்பதாகும். தாய்லாந்தின் குற்றச்சாட்டுகள், ’பப்ளிக் ஸ்டாக் ஹோல்டிங்’ மற்றும் விவசாய மானியங்கள் தொடர்பான சிக்கல்களை மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளன என்று ஹர்வீர் சிங் குறிப்பிட்டார். கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு முக்கியமான உலகளாவிய விஷயமாக மாறியுள்ளது. தேசிய பாதுகாப்புடன் உணவுப் பாதுகாப்பும் இணைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில் இந்தியா தொடர்பான தாய்லாந்தின் கருத்துகள் பரந்த வர்த்தக நலன்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். “மன்றத்தில் வாய்ப்பு கிடைத்தவுடன் தாய்லாந்து இந்தப் பிரச்னையை எழுப்பியுள்ளது. இதன் காரணமாக விவசாயம் மற்றும் வர்த்தகம் தொடர்பான விஷயங்கள் பற்றிய விவாதம் தொடங்கும்," என்று ஹர்வீர் சிங் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அபுதாபியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். "இந்தப் பிரச்னைக்கான தீர்வை யார் தடுக்கிறார்கள், ஏன் உலக வர்த்தக அமைப்பின் பணிகள் சரியாக நடைபெறவில்லை என்பதை உலகம் பார்க்க வேண்டும். இந்தியா இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தை அடைய விரும்புகிறது. ஆனால் சில நாடுகள் இந்த ஒருமித்த கருத்தை உடைக்கின்றன," என்றார் அவர். உலக வர்த்தக அமைப்பில் எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், இந்திய விவசாயிகளின் நலன்கள் மனதில் கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என்று பியூஷ் கோயல் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES உலக வர்த்தக அமைப்பின் அமெரிக்க பிரதிநிதி கேத்தரின் தாய் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’சர்ச்சையைத் தீர்க்கும் சீர்திருத்தம் ஒரு சிக்கலான விஷயம்” என்றார். இந்தத் திசையில் ஒரு நேர்மறையான, ஆக்கப்பூர்வமான மற்றும் நடைமுறைக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் விவசாயத்தில் விரிவான சீர்திருத்தங்களுடன் இதை இணைக்கின்றன. விவசாய மானியங்களைக் குறைப்பதும் இறக்குமதி வரிகளைக் குறைப்பதும் இதில் அடங்கும். சமீபத்திய மாதங்களில் பல ஐரோப்பிய நாடுகளில் விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகள் காரணமாக மேற்கத்திய நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம், தற்போது மானியங்களைக் குறைப்பது அல்லது இறக்குமதி வரிகளைக் குறைப்பது பற்றி விவாதிக்கத் தயாராக இல்லை. இதனால்தான் பொது சேமிப்பு வரம்பு விஷயமும் விவாதிக்கப்படாமல் உள்ளது. கடந்த 2022இல் நடைபெற்ற உலக வர்த்தக சபைக் கூட்டத்தில், 2024ஆம் ஆண்டுக்குள் பயனுள்ள தீர்வு எட்டப்படும் என்று உறுப்பு நாடுகள் உறுதியளித்தன. இப்போது இந்த அமைச்சர்கள் கூட்டத்திலும் முடிவுகளை எட்டுவதற்குப் பதிலாக உறுதிமொழிகள் மட்டுமே வெளியாகும் என்று தெரிகிறது. இந்தியா மற்றும் தாய்லாந்து இடையே வணிக உறவுகள் பட மூலாதாரம்,@NOIWEALA இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரண்டுமே தெற்காசிய நாடுகள். இரு நாடுகளுக்கும் அந்தமான் கடலில் நீர் எல்லைகள் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று ரீதியான மற்றும் கலாசார உறவுகளும் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே நல்ல வர்த்தக உறவும் உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் தாய்லாந்து இடையே 14.41 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் இருந்தது என்று ’அப்சர்வர் ஆஃப் எக்கனாமிக் காம்ப்ளெக்ஸிடி’ அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியா தாய்லாந்திற்கு 5.91 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. தாய்லாந்து இந்தியாவிற்கு 8.5 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான தயாரிப்பு வைரங்கள் ஆகும். அதே நேரத்தில் தாய்லாந்து இந்தியாவிற்கு அதிகபட்ச பாமாயிலை ஏற்றுமதி செய்கிறது. கடந்த 2023 நவம்பரில் இந்தியா தாய்லாந்திற்கு 33.5 கோடி டாலர்களுக்கு ஏற்றுமதி செய்தது. தாய்லாந்து இந்தியாவுக்கு 80.6 கோடி டாலர்களுக்கு ஏற்றுமதி செய்தது. 2022 நவம்பருடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் ஏற்றுமதி 10.7 சதவிகிதம் குறைந்துள்ளது. தாய்லாந்தின் ஏற்றுமதி 13.3 சதவீதம் குறைந்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/cw8zw8p9251o
  22. HELL: தினமும் ஒரு சூரியனை விழுங்கும் 'பிரபஞ்சத்தின் நரகத்தை' கண்டுபிடித்த விஞ்ஞானிகள் - என்ன இது? நரகம் உண்மையில் எப்படி இருக்கும் என்பதை விஞ்ஞானிகளால் இதுவரை விவரிக்க முடியாத நிலை இருந்தது. ஒருவேளை அது குறித்து சொல்ல நரகத்திலிருந்து யாரும் திரும்பி வர முடியாததால் கூட இருக்கலாம். நரகம் என்பது மிகவும் மோசமான, நெருப்பால் சூழப்பட்ட, மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஒரு இடமாக தான் கற்பனை செய்யப்பட்டுள்ளது.
  23. சாந்தனின் பூதவுடல் நாளை மக்கள் அஞ்சலிக்கு! - நாளைய தினத்தை தமிழ் தேசிய துக்க தினமாக அறிவிக்க பொது அமைப்புகள் வேண்டுகோள் 02 MAR, 2024 | 06:58 PM சாந்தன் புகழுடல் நாளை (03) மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளைய தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளன. நாளைய தினத்தை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் இன்று சனிக்கிழமை ஒன்று கூடி தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன், துக்க தினமான நாளை தேவையற்ற களியாட்ட நிகழ்வுக்களை தவிர்த்து சாந்தனுக்கு அனைவரும் திரண்டுவந்து அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் நோய்வாய்ப்பட்டு உயிர் துறந்த அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடல் நாளை மக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக அவரது தாய்மண்ணுக்கு எடுத்துவரப்படவுள்ளது. நாளை காலை 8 மணிக்கு வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் சாந்தனின் புகழுடல், மாங்குளம் பகுதிக்கு 9.00 மணிக்கு எடுத்துவரப்படவுள்ளது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலியின் பின்னராக யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல் அடுத்த தினமான திங்கட்கிழமை அவரது குடும்ப மயானமான எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அஞ்சலி நிகழ்வுகளில் வேறுபாடுகளை களைந்து அனைவரையும் அணி திரண்டு அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் அனைத்து இடங்களிலும் நீதி கோரியும் துக்கதினத்தை நினைவு கூரும் வகையில் கறுப்பு கொடிகளை தொங்கவிடவும் கோரிக்கை விடுத்துள்ளன. பொது அமைப்புக்கள் இறுதிக்கிரியைகள் நடைபெறும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளன. பொது அமைப்புக்கள் இறுதிக்கிரியைகள் நடைபெறும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளன. https://www.virakesari.lk/article/177766
  24. 02 MAR, 2024 | 05:03 PM சென்னை: திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் உள்ள முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், திமுக அரசின் முதல்வரையும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “32 ஆண்டுகால நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட வயது முதிர்ந்த 3 இலங்கைத் தமிழர்களுக்கு உண்மையான விடுதலை வழங்காத திமுக அரசுக்கு கண்டனம். தமிழக சிறையில் 32 ஆண்டுகால நீண்ட சிறைவாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்கள் ராபர்ட் பயஸ், ஜெயகுமார், முருகன் சாந்தன் ஆகியோர் 11.11.2022 அன்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை குடிமக்கள் என்பதால் அயல் நாட்டுக்கு அனுப்பும்வரை நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் சிறப்பு முகாமின் இத்தகைய மனிதத் தன்மையற்ற நிர்வாகத்தின் காரணமாக திரு. சாந்தன் அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, எழுந்து நிற்கக்கூட முடியாமல் பல நாட்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரு. சாந்தன், கடந்த 28.2.2024 அன்று உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளது, தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு அவர்கள், சக முகாம்வாசிகள் யாருடனும் பேசவோ பழகவோ, உடற்பயிற்சி நடைபயிற்சி செய்யவோ அனுமதி மறுக்கப்பட்டு தனிமை அறையில், சிறை போலவே அடைக்கப்பட்டிருந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே 32 ஆண்டுகள் சிறையில் வாழ்க்கையை இழந்தவர்கள், விடுதலைக் காற்றை சுவாசிக்கப் போகிறோம் என்று பெருமூச்சு விடும்பொழுது, மீண்டும் சிறப்பு முகாம் எனும் கொடூரம் அவர்களது வாழ்க்கையில் அரங்கேறும் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அதிலும், சிறையில் இருக்கும் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு, மூச்சு முட்ட தனிமைச் சிறையினில் அடைக்கப்படுவோம் என்று நிச்சயமாக எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இதனால், கடுமையான மன உளைச்சலுக்கும், உடல் உபாதைகளுக்கும் ஆளாக்கப்பட்டு இவர்கள் அனைவரும் தவித்து வந்துள்ளனர். சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டதன் நோக்கமே அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான். முகாமில் அடைக்கப்படுவதற்கு முன்பே கூட, எந்த நாட்டுக்குச் செல்லப்போகிறீர்கள் என்று அவர்களுடைய விருப்பத்தை அரசு அதிகாரிகள் கேட்டபொழுது, அவர்கள் இலங்கை சென்றால் ஆபத்து மற்றும் தங்களுக்கு அங்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லை என்றும், அதனால் வெளி நாடுகளில் வாழும் தங்களுடைய குடும்பத்தினருடன் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால், இன்றைய நாள்வரை அவர்கள் விரும்பும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு எந்தவித முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை. இது தொடர்பாக, விடுதலையானவர்கள் தங்களை இலங்கை துணைத் தூதரகத்துக்கு அழைத்துச் செல்லும்படியும், முகாமில் மறுக்கப்படும் அடிப்படை மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு முதல்வர், UNHCR என தொடர்ச்சியாக பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தபோதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை என்று தெரிவித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, நடைபயிற்சிக்கு அனுமதி கேட்டு பல மாதங்கள் ஆன நிலையில், இந்த விடியா திமுக அரசு குறைந்தபட்சம் இந்த கோரிக்கைக்குக் கூட செவி சாய்க்கவில்லை என்பதில் இருந்தே அவர்கள் எத்தகைய மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபொழுது, ஏப்ரல் 2010-ஆம் ஆண்டு பிரபாகரன் அவர்களுடைய வயதான தாயார் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக முதலில் சென்னைக்கு வந்தபொழுது, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்து விமானத்தில் இருந்து இறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது அப்போதைய மைனாரிட்டி திமுக அரசும், மத்திய காங்கிரஸ் அரசும்தான். அதேபோன்று இன்று, விடுதலை பெற்ற திரு. சாந்தனை காலத்தே வெளிநாடு செல்ல மத்திய அரசுடன் பேசி, உரிய அனுமதி வாங்கித் தராத காரணத்தால், இறுதிக் காலத்தில் தனது குடும்பத்தினருடன் வாழ முடியாமல் மரணமடைந்துள்ளதற்கு இந்த நிர்வாகத் திறனற்ற, மனிதாபிமானமற்ற விடியா திமுக அரசே முழு பொறுப்பை ஏற்க வேண்டும். இனியாவது, மீதமுள்ள மூன்று பேரின் கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து, கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு தவறான சிகிச்சையில் ஒரு கண்ணில் பார்வையை இழந்த ஜெயகுமார் மற்றும் உடல்நலக் குறைவால் அவதியுறும் ராபர்ட் பயஸ் மற்றும் முருகன் ஆகியோரது கடைசி காலத்தில், எஞ்சிய வாழ்நாளை அவர்களுடைய குடும்பத்தினருடன் வசிப்பதற்கு, திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் இருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், விடியா திமுக அரசின் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/177757
  25. யாழ். இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு மார்ச் 5இல் போராட்டம் - எம்.வி.சுப்பிரமணியம் 02 MAR, 2024 | 04:27 PM வடக்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகை இடுவதற்கான போராட்டம் 5ஆம் திகதி கச்சேரியில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வரை நடைபெறும் என இணையத்தின் தலைவர் எம்.வி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இன்று (02) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 23ஆம் திகதி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொது சபை கூட்டமானது முல்லைத்தீவிலே நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 5ஆம் திகதி நாங்கள் வடக்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகை இடுவதற்கான போராட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அந்த வகையில் இந்த போராட்டமானது 5ஆம் திகதி கச்சேரியில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வரை நடைபெறும். இந்த போராட்டத்தை ஆக்கபூர்வமான, ஒரு உணர்ச்சிபூர்வமான போராட்டமாக மாற்ற வேண்டுமாக இருந்தால், இங்கே உள்ள பல அமைப்புகள், அனைத்து கடல் தொழிலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் அதில் முழுமையாக பங்குபற்றி வெற்றிபெறச் செய்ய வேண்டும். இந்தியாவிலிருந்து வருகின்ற படகுகளை நிறுத்துவதற்கு எமது அரசாங்கத்தால் முடியாது. அரசாங்கம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. இந்திய அரசாங்கம் நடித்துக்கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அது எங்களுக்கு தெரிந்த விடயம். வட புலத்திலே வாழ்கின்ற மீனவர்கள் தொடர்ச்சியாகவே துன்பத்தையே தமது வாழ்க்கையாக வாழ்ந்து, பல சவால்கள் மத்தியிலே உயிர்களை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டமைக்கு முக்கியமான காரணம் போராக இருந்தாலும், அடுத்ததாக இங்கே பூதாகரமாக புரையோடிக் கிடக்கின்ற இந்த இந்திய இழுவை படகினுடைய அத்துமீறிய வருகையும், அவர்களுடைய அடாவடித்தனமான சட்ட விரோதமான தொழில்முறையுமே காரணமாக இருக்கின்றது. இதன் மூலமாக அவர்கள் எங்களுடைய கடல் வளங்களை அழித்துச் செல்கின்றார்கள். வாழ்வாதாரத்தை சூறையாடி செல்கின்றார்கள். கடற்தொழில் உபகரணங்களை அடுத்து நாசமாக்கிவிட்டு செல்கின்றார்கள். அன்று நடந்த பேச்சுவார்த்தையில் 'நீங்கள் உங்களது எல்லைக்குள் மீன் பிடிக்காமல் ஏன் எங்களது எல்லைக்குள் வருகின்றீர்கள்' என கேட்டபோது 'எங்களது எல்லையில் மீன்கள் இல்லை, வளங்கள் அழிந்துவிட்டன. ஆகையால் தான் இங்கே வருகின்றோம்' என சொல்கின்றார்கள். ஆனால் அன்னியச் செலாவணியை ஈட்டுவதற்காக சென்னை பட்டினத்தில் இருந்து வெளிநாட்டுக்கு மீன்களை அனுப்புகின்றார்கள். அது எங்கே பிடிக்கப்பட்ட மீன்? எங்களுடைய வளங்களை அள்ளிக்கொண்டு போய் நீங்கள் வெளிநாடுகளுக்கு விற்றுவிட்டு, அங்கிருந்து வருகின்ற அந்நியச் செலாவணியை எடுத்து உங்களுக்கு மட்டுமல்ல. நாடு முழுவதற்கும் கொடுத்துவிட்டு இப்பொழுது நாங்கள் எங்களுடைய வலைகள் அறுந்துவிட்டன என்று ஆதங்கப்பட்டு 'இப்படி செய்தவர்களது படகுகளை எரிக்க வேண்டும், இப்படி செய்தவர்களை அடித்து துரத்த வேண்டும்' என்ற ஆதங்கத்தில் பேசினால் நீங்கள் கோபப்படுகிறீரகள். அறுக்கப்பட்டவர்கள் அழுகின்றோம். காரணம் இருக்கிறது. அறுத்துப்போட்டுப் போன நீங்கள் கோபப்படுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது? ஒரு நாளைக்கு மூன்று தடவை உங்களது படகுகள் வந்து எங்களது வளங்களை அள்ளிச் செல்கின்றன. சாதாரணமாக ஒரு பத்தாயிரம் அல்லது முப்பதாயிரம் இந்திய ரூபாய்க்கு ஒரு படகில் வந்து மீனை பிடிக்கின்றீர்கள். இந்த முப்பதாயிரம் ரூபா இலங்கை காசுக்கு ஏறக்குறைய ஒன்றேகால் இலட்சத்துக்கு மேலே வரும். அந்த வகையில் ஒரு படகு ஒரு வருஷத்துக்கு 60 கோடிக்கு அதிகமான மீனை பிடித்துக்கொண்டு போகின்றது. இதை உங்களது 2500 படகினால் பெருக்கிப் பாருங்கள். எத்தனை ஆயிரம் கோடியை நீங்கள் கொண்டு போகிறீர்கள் என்று. ஏறக்குறைய 1987ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு பிறகு 40 வருட காலமாக எங்களது கடலை வாரிச் செல்கின்றீர்கள். எத்தனை ஆயிரம் கோடிகளை கொண்டு போய்விட்டீர்கள். ஆனால் எமது அகதிகளுக்கு வரிப்பணத்தில் கொடுப்பதாக கொக்கரிக்கின்றீர்கள். எங்களது கடலை எங்களிடம் விடுங்கள். நாங்கள் எங்களுக்கு கிடைக்கின்ற வருவாயில் அகதிகளுக்கு காசு அனுப்புகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/177749

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.