Everything posted by ஏராளன்
-
புதுக்குடியிருப்பில் பொலிஸாரால் மரக்கடத்தல் முறியடிப்பு
10 MAR, 2024 | 04:15 PM முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாகத் தேக்கு மரகுற்றிகளை கடத்த முற்பட்ட வாகனத்தின் சாரதி பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று சனிக்கிழமை (09) மாலை இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு பகுதியில் பட்டா ரக வாகனத்தில் தேக்கு மரகுற்றிகளை கடத்துவதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர் கைதானார் . இந்தநிலையில் 13 தேக்கு மர குற்றிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். https://www.virakesari.lk/article/178362
-
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் கஞ்சாவுடன் இராணுவ புலனாய்வு அதிகாரியும் இளைஞரும் கைது
10 MAR, 2024 | 01:52 PM முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் நேற்று (09) பிற்பகல் கேரளா கஞ்சாவுடன் இராணுவ அதிகாரி மற்றும் இளைஞர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, இவர்களிடமிருந்த 10 கிராம் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தேராவில் தேக்கங்காடு இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்த 40 வயதுடைய சார்ஜன்ட் மேஜரையும், உடையார்கட்டு தெற்கினை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரையுமே பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவரையும் நேற்று முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் நிறுத்தியபோது இருவரும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வரும் அதேவேளை, சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். https://www.virakesari.lk/article/178355
-
யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தின் வசமிருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு!
10 MAR, 2024 | 03:19 PM யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்திடம் இருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் பாவனைக்காக கைளிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களின் ஒரு தொகுதி காணிகள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இராணுவ பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்ட பதில் அரசாங்க அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (10) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி அலுலகத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரட்நாயக்க கலந்துகொண்டு காணி உரிமையாளர்களுக்கான காணிப் பத்திரங்களை வழங்கிவைத்தார். இதில் கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரம ரட்ன, ஜனாதிபதி செயலக வட மாகாண இணைப்பாளர் எல்.இளங்கோவன், முன்னாள் அரசாங்க அதிபர்கள் பாதுகாப்பு படையினர், கடற்படையினர், பிரதேச செயலாளர்கள், ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/178361
-
யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா
கமராவில் அம்பிட்டால் காப்பாற்றுவினம் தானே அண்ணை?!
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அண்ணை எல்லாம் அந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி்க்காகவா? என எண்ணத் தோன்றுகிறது.
-
பங்களாதேஸ் - இலங்கை கிரிக்கெட் தொடர்
குசல் மெண்டிஸ் அதிரடி, நுவன் துஷார ஹெட் - ட்ரிக்: இலங்கைக்கு தொடர் வெற்றி 09 MAR, 2024 | 09:50 PM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று (09) நடைபெற்ற 3ஆவது கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் குசல் மெண்டிஸ் குவித்த அரைச் சதம், நுவன் துஷாரவின் ஹட்-ட்ரிக் அடங்கலான 5 விக்கெட் குவியல் என்பன இலங்கைக்கு 28 ஓட்ட வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை கைப்பற்றியது. பங்களாதேஷ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது நான்காவது ஓவரை வீச அழைக்கப்பட்ட நுவன் துஷார தனது முதல் ஓவரிலேயே ஹட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்தி எதிரணியை திக்குமுக்காட வைத்தார். சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை சார்பாக ஹட்ரிக் முறையில் விக்கெட்களைக் கைப்பற்றிய 5ஆவது வீரரானார் நுவன் துஷார. ஆனால், அது இலங்கை சார்பாக பதிவான 6ஆவது ஹட்ரிக் ஆகும். இதற்கு முன்னர் திசர பெரேரா, லசித் மாலிங்க (2 தடவைகள்), தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க ஆகிய இலங்கை வீரர்கள் சர்வதேச ரி20 போட்டிகளில் ஹட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர். எவ்வாறாயினும் ரிஷாத் ஹொசெய்ன் பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்து பங்களாதேஷுக்கு ஆறுதலைக் கொடுத்தார். நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, தௌஹித் ரிதோய், மஹ்முதுல்லா ஆகிய முன்வரிசை வீரர்களையே நுவன் துஷார தனது முதலாவது ஓவரின் 2ஆவது, 3ஆவது, 4ஆவது பந்துகளில் ஆட்டம் இழக்கச் செய்திருந்தார். தனது அடுத்த ஓவரில் சௌம்யா சர்க்காரை ஆட்டம் இழக்கச் செய்த துஷார, தனது கடைசி ஓவரில் ஷொரிபுல் இஸ்லாமை வெளியேற்றியிருந்தார். இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 175 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், துஷாரவின் பந்துவீச்சில் ஆட்டம் கண்டதுடன் 14ஆவது ஓவரில் 7 விக்கெட்களை இழந்து 76 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. ஆனால், ரிஷாத் ஹொசெய்ன் 7 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களையும் தஸ்கின் அஹ்மத் 31 ஓட்டங்களையும் பெற்று அணியை மோசமான வீழ்ச்சியிலிருந்து மீட்டபோதிலும் அணியின் தோல்வியைத் அவர்களால் தடுக்க முடியாமல் போனது. பந்துவீச்சில் நுவன் துஷார ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் தடைக்குப் பின்னர் அணிக்கு மீள திரும்பிய அணித் தலைவர் வனிந்து ஹசரங்க 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஏஞ்சலோ மெத்யூஸ் தனது 2ஆவது ஓவரின் முதலாவது பந்தை வீசியதுடன் உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்றார். அவரது ஓவரை தனஞ்சய டி சில்வா வீசி முடித்தார். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரராக களம் இறங்கிய தனஞ்சய டி சில்வா 8 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். மொத்த எண்ணிக்கை 52 ஓட்டங்களாக இருந்தபோது கமிந்து மெண்டிஸ் 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஆனால், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குசல் மெண்டிஸ் 3ஆவது விக்கெட்டில் வனிந்து ஹசரங்கவுடன் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார். வனிந்து ஹசரங்க 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் சரித் அசலன்க (3) குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினார். மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 56 பந்துகளில் 6 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 86 ஓட்டங்களைக் குவித்தார். மத்திய வரிசையில் ஏஞ்சலோ மெத்யூஸ் 10 ஓட்டங்களையும் தசுன் ஷானக்க 19 ஓட்டங்களையும் பெற்றனர். துடுப்பாட்ட வரிசையில் 8ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடிய சதீர சமரவிக்ரம 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மத 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரிஷாத் ஹொசெய்ன் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: நுவன் துஷார. தொடர்நாயகன்: குசல் மெண்டிஸ். https://www.virakesari.lk/article/178331
-
யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா
கோவை: யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா - பிபிசி தமிழின் நேரடி விசிட் படக்குறிப்பு, கடந்த 15 ஆண்டுகளில் கோவை - பாலக்காடு வழித்தடத்தில் 11 யானைகள் இறந்துள்ளன - வனத்துறை தரவுகள் கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மார்ச் 2024 தமிழ்நாடு முழுவதும் யானைகள் ரயில்களில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுகிறது. வனத்துறையின் அதிகாரப்பூர்வ தகவலின்படி தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே, ரயில்களில் மோதி 36 யானைகள் மரணித்துள்ளன. இதில், குறிப்பாக கோவை மாவட்டம் மதுக்கரை அருகே, கோவை – பாலக்காடு வழித்தடத்திலுள்ள இரண்டு ரயில் தண்டவாளங்களில், 2008 முதல் இதுவரையில், 11 யானைகள் மரணித்துள்ளதாக வனத்துறை கூறுகிறது. குறிப்பாக மதுக்கரையில் கடந்த, 2021 நவம்பர் மாதம் ஒரு குட்டியானை உள்பட மூன்று யானைகள் ரயிலில் அடிபட்டு மரணித்த சோக சம்பவமும் அரங்கேறியது. இதுபோன்று தமிழ்நாட்டில் வன எல்லையிலும், காப்புக் காட்டிற்கு உள்ளேயும் பயணிக்கும் ரயில் தண்டவாளங்களில் யானைகள் மட்டுமின்றி, இதர வனவிலங்குகள் அடிபட்டு மரணித்து வருகின்றன. இதைத்தொடர்ந்து மதுக்கரை அருகேயும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் யானைகள் ரயிலில் மோதி இறப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம், வனத்துறை மற்றும் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்தியாவில் முதல் முறையாக, ரயில்களில் யானைகள் அடிபட்டு இறப்பதைத் தடுக்க, செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை கோவையில் வனத்துறை அமைத்துள்ளது. யானைகள் உயிரைக் காக்க இந்தக் கட்டுப்பாட்டு அறை எப்படிச் செயல்படுகிறது? இந்தியாவின் முதல் AI கேமரா கண்காணிப்பு தமிழகத்தைப்போன்று நாட்டில் பல மாநிலங்களில் இதேபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதைத் தடுக்க மத்திய ரயில்வே அமைச்சகம், மேற்கு வங்கம், அசாம், ஒடிசா போன்ற மாநிலங்களில், ‘கஜ்ராஜ்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தில் ரயில்வே தண்டவாளங்கள் அருகே செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சென்சார்களை பொருத்தி, யானைகள் நடமாட்டம் குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்து வருகின்றனர். ஆனால், கென்யா, ஆப்ரிக்கா போன்ற நாடுகள், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கேமராக்கள், சென்சார்கள் பொருத்தி, மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் யானைகளைப் பாதுகாக்கின்றனர். படக்குறிப்பு, 24 மணிநேரம் செயல்படும் வகையில் கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது இதே தொழில்நுட்பத்தை மையமாக வைத்து தற்போது, தமிழ்நாடு வனத்துறை கோவை மதுக்கரையில் செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாடு அறையை அமைத்து, ரயில் தண்டவாளத்தில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். இந்தத் திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். கட்டுப்பாட்டு அறை எப்படிச் செயல்படுகிறது, எப்படி யானைகள் பாதுகாக்கப்படுகிறது என்பதை அறிய, பிபிசி தமிழ் குழு கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்றிருந்தது. கோவை மதுக்கரையில் ரயில் தண்டவாளம் அருகே அமைந்திருந்த கட்டுப்பாட்டு அறையை நாம் அடைந்தபோது, அங்குள்ள பணியாளர்கள் மும்முரமாக ரயில்வே மற்றும் வனத்துறை பணியாளர்களுக்கு, தண்டவாளம் அருகே யானைக்கூட்டம் நிற்கும் தகவலைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். 12 AI கேமராக்கள் - இரண்டு வகை பார்வை படக்குறிப்பு, "இந்தியாவிலேயே முதல் முறையாக AI தொழில்நுட்ப உதவியுடன் யானைகள் ரயில் தண்டவாளங்களைக் கடப்பது கண்காணிக்கப்படுகிறது," என்கிறார் சுப்ரியா சாஹூ. பிபிசி தமிழிடம் பேசிய, கட்டுப்பாட்டு அறை பணியாளர் மணிகண்டன், ‘‘யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க, கோவை – பாலக்காடு வழித்தடத்திலுள்ள இரண்டு ரயில் தண்டவாளங்கள் ‘ஏ டிராக்’ மற்றும் ‘பி டிராக்’ எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு தண்டவாளங்களில் மொத்தம், 12 டவர்கள் அமைத்து அதில், 12 AI கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு கேமராவில் சாதாரண வீடியோ மற்றும் வெப்ப காட்சி (Thermal View) என இரண்டு வகை வீடியோக்களை நேரலையாகப் பார்க்க முடியும். ரயில் தண்டவாளத்திலும், அதன் இருபக்கமும் 100 அடி வரையில் யானை வந்ததும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் யானை கண்டறியப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் அலாரம் அடித்து எச்சரிக்கை கிடைக்கும். யானை கண்டறிந்தவுடன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம், அருகிலுள்ள ரயில் நிலையம், அந்த நிலையத்தின் அதிகாரி மற்றும் வனத்துறை பணியாளர்களுக்கு யானை எந்த டிராக்கில் எத்தனையாவது மைல் கல் அருகே நிற்கிறது என மெசேஜ் அனுப்பப்படும். உடனடியாக இந்தத் தகவல் லோகோ பைலட்டுக்கு தெரிவிக்கப்பட்டு ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு ஹாரன் அடித்துக்கொண்டே மிக மெதுவாக ரயில் இயக்கப்படும். யானை மட்டுமின்றி காட்டு மாடு, மான் கூட்டம், சிறுத்தை என எந்த விலங்கு வந்தாலும் எச்சரிக்கை அனுப்பப்படும்,’’ என்கிறார். 24 மணிநேர கண்காணிப்பு மணிகண்டன் நம்மிடம் விவரித்துக் கொண்டிருந்தபோதே ‘பி டிராக்’ பகுதியில் ஒரு குட்டியுடன் ஒரு பெண் யானை தண்டவாளத்தைக் கடந்தது. அதைப் பற்றி ரயில்வே துறைக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்து, யானை பாதுகாப்பாக தண்டவாளத்தைக் கடந்த பிறகு பேச்சைத் தொடர்ந்தனர். மேலும் தொடர்ந்த மணிகண்டன், ‘‘இரு துறைகளுக்கும் மெசேஜ் சென்றாலும், கூடுதலாக நாங்கள் யானையின் நகர்வைப் பொறுத்து கேமராக்களை நகர்த்தி யானையின் நடமாட்டத்தை முழுமையாகக் கண்காணிப்போம். இந்தத் தகவல்களை தண்டவாளம் அருகே 24 மணிநேரமும் பணியில் இருக்கும் வனத்துறை பணியாளர்களுக்கு, வாக்கி டாக்கி அல்லது மொபைல் மூலமாக நேரடியாகத் தெரிவிப்போம். அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று யானைகளைப் பாதுகாப்பாக தண்டவாளத்தில் இருந்து காட்டிற்குள் விரட்டிவிடுவார்கள். ரயில் வேகத்தைக் குறைப்பது, யானைகளைப் பாதுகாப்பாக வனத்தினுள் விரட்டி அவற்றை ரயில் விபத்தில் இருந்து பாதுகாப்பது ஆகியவைதான் கட்டுப்பாட்டு அறையின் முதன்மைப் பணி. இந்தக் கட்டுப்பாட்டு அறையில் நாங்கள், 4 பேர் 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,’’ என்றார். யானைகள் குறித்து 388 முறை எச்சரிக்கை படக்குறிப்பு, தெர்மல் கேமரா உதவியுடன் இரவிலும் யானையின் நடமாட்டம் கவனிக்கப்படுகிறது. யானைகள் கண்காணிப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய, தமிழ்நாடு வனத்துறை செயலாளரும் அரசின் முதன்மைச் செயலாளருமான சுப்ரியா சாஹூ, ‘‘கோவை மதுக்கரையில் ‘ஏ டிராக்’ தண்டவாளத்தில் 1.78 கிலோமீட்டர், ‘பி டிராக்’ தண்டவாளத்தில் 2.8 கிலோமீட்டர் தொலைவு, என இரண்டும் 12 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. 7.24 கோடியில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற திட்டம் இதுவரை இல்லை, இது நாட்டின் முதல் முயற்சி," என்றார். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டுமென யோசித்து, தாங்களாகவே இத்திட்டத்தை உருவாக்கி, ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை வைத்து திட்டத்தைச் செயல்படுத்தியதாகவும் சுப்ரியா சாஹூ கூறினார். மேலும், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் யானைகள் கண்காணிப்பு திட்டத்தின் சோதனை ஓட்டம் துவங்கப்பட்டு இதுவரை மட்டுமே, 388க்கும் மேற்பட்ட எச்சரிக்கை ரயில்வே நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார் அவர். அதோடு, ‘‘யானை தண்டவாளத்திலோ, அதற்கு அருகில் வன எல்லையிலோ நின்றால், செயற்கை நுண்ணறிவு தாமாக யானைகளைக் கண்டறிந்து நமக்குத் தகவல் தருகிறது. பணியாளர்கள் மூலம் யானைகள் வனத்தினுள் விரட்டப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்தக் கட்டுப்பாட்டு அறைக்கு அருகே, யானைகள் வனத்தினுள் கடந்து செல்ல இரண்டு இடங்களில் சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களால் யானைகள் தண்டவாளத்தைப் பாதுகாப்பாகக் கடந்து செல்வதுடன், யானை – ரயில் மோதல் விபத்து சம்பவங்கள் தவிர்க்கப்படுகின்றன. அதிக ரயில் விபத்துகள் ஏற்படும் கோவை, தருமபுரி, ஓசூர் மற்றும் மனித – யானை மோதல் அதிகளவில் நிகழும் கூடலூர் என, ஐந்து இடங்களில் இத்திட்டத்தை விரைவில் வனத்துறை செயல்படுத்த உள்ளது,’’ என்றார். பிபிசி தமிழிடம் பேசிய கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் சந்தோஷ், ‘‘தண்டவாளத்தில் நின்ற யானை, தண்டவாளத்தின் இருபுறமும் 100 அடிக்குள் நின்ற யானைகள், வனத்தினுள் இருந்து தண்டவாளத்தை நோக்கி நகரும் யானைகள் என அனைத்தையும் பற்றி எச்சரிக்கைகளை வழங்கியுள்ளோம். அந்த வகையில்தான் 6 மாதத்தில் 388 எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், யானைகள் தண்டவாளத்தில் நின்ற சம்பவம் என்றால் அதிகபட்சமாக, 60 சம்பவங்கள்தான் இருக்கும்,’’ என விளக்கியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘பயணம் மிக எளிதாகிறது – விபத்து தவிர்க்கப்படுகிறது’ இந்த வழித்தடத்திலுள்ள எட்டிமடை ரயில்வே நிலைய அலுவலர் செளவுரவ் குமார், ‘‘இந்த கேமரா திட்டம் வருவதற்கு முன்பு யானைகள் எங்கு நிற்கிறது, எத்தனை யானைகள் நிற்கின்றன என எந்தத் தகவலும் தெரியாது. பகலிலாவது லோகோ பைலட்கள் மெதுவாக வருவார்கள், கண்களால் வனத்தைப் பார்க்க முடியும். ஆனால் இரவு நேரங்களில் எதுவுமே தெரியாது. இந்தத் திட்டம் துவங்கப்பட்டபின், இரவு நேரங்களிலும் யானைகள் குறித்த தகவலை வனத்துறை வழங்குகின்றனர்," என்றார். "யானை எந்த மைல் (கி.மீட்டர் தொலைவில்) கல் அருகே நிற்கிறது, எத்தனை யானைகள் நிற்கின்றன, தண்டவாளத்தில் நிற்கிறதா இல்லை அருகிலா என அனைத்து தகவல்களையும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். யானை நிற்பதாக தகவல் வந்ததும் நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிப்போம், லோகோ பைலடுக்கு கட்டுப்பாட்டு அறை தகவல் உடனடியாகத் தெரிவித்ததும், சாதாரணமாக 70 கிலோமீட்டருக்கு மேல் செல்லும் ரயிலின் வேகத்தை 20 – 30 கி.மீ வேகமாகக் குறைப்பார்கள். மேலும், 2 கி.மீ தொலைவுக்கு முன்பிருந்தே ஹாரன் அடித்துக்கொண்டு பாதுகாப்பாக வருவார்கள். இந்தத் திட்டம் யானைகள் விபத்தில் சிக்குவதைத் தவிர்க்கிறது,’’ என்றார். https://www.bbc.com/tamil/articles/crg9n4vv12zo
-
வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
வெடுக்குநாறிமலை விவகாரம் : பொலிஸாரின் மிலேச்சத்தனமான ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம் - அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், புலம்பெயர் தமிழர்கள் தெரிவிப்பு 10 MAR, 2024 | 10:42 AM (நா.தனுஜா) சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் பொலிஸாரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டார்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட பலர் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதுமாத்திரமன்றி இவ்வாறானதொரு சூழ்நிலையில் புதிதாக ஸ்தாபிக்கப்படும் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் என்று எவ்வாறு கூறமுடியும்? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (08) சிவராத்திரி தினத்தன்று நீதிமன்ற அனுமதியுடன் பூஜை வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் அங்கு வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதன்படி, பாதுகாப்புத் தரப்பினரின் மிலேச்சத்தனமான இந்நடவடிக்கையைக் கடுமையாக கண்டிப்பதாகத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தொல்லியல் திணைக்களம், பௌத்த பிக்குகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட சகலரும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் வழிபாட்டுரிமைக்குத் தடை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி, தமிழர்களுக்குச் சொந்தமான வழிபாட்டிடங்களை பௌத்த தலமாக மாற்றுவதற்கான இனவாத செயற்பாடாகவே தாம் இதனைப் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோன்று இதுபற்றிக் கருத்து வெளியிட்ட இலங்கை தமிழ் அரசு கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தமிழ் மக்கள் மிக நீண்ட காலமாக வழிபாடுகளில் ஈடுபட்டுவருவதாகவும், அவ்வாறிருக்கையில் தற்போது பாதுகாப்புத் தரப்பினர் இவ்வாறு செயற்படுவது கண்டிக்கத்தக்க விடயம் எனவும் தெரிவித்தார். அத்தோடு, தமிழ் மக்களை இலக்குவைத்து நிகழ்த்தப்படும் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஜனாதிபதி வேட்பாளர்கள் என்று கூறுவோர் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதாகவும், இவற்றைப் பார்க்கும்போது ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவாத வன்முறையைத் தூண்ட முயற்சிப்பது போல் தெரிவதாகவும் அவர் விசனம் வெளியிட்டார். அதேவேளை இவ்விவகாரத்தில் பாதுகாப்புத் தரப்பினர் ஜனாதிபதியின் கட்டளைகளை மாத்திரமன்றி, நீதிமன்ற உத்தரவுகளுக்கும் மதிப்பளிப்பதில்லை எனவும், மாறாக, வெடுக்குநாறிமலை, குருந்தூர்மலை, மயிலத்தமடு மேய்ச்சல் தரை போன்ற விவகாரங்களில் பௌத்த பிக்குகளின் உத்தரவுகளே பாதுகாப்புத் தரப்பினரால் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கவலை வெளியிட்டார். அதுமாத்திரமன்றி, இத்தகைய போக்கு மிகப் பாரதூரமான விளைவையே ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். மேலும், சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பக்தர்கள் கைதுசெய்யப்பட்டமையை வன்மையாக கண்டித்துள்ள அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்பான தமிழ் அமெரிக்கர்கள் கூட்டிணைவு, இது மத உரிமைகளை மீறுவதாகும் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு, தமிழ் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு உடன் தலையீடு செய்யுமாறும் அவ்வமைப்பு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் பின்வருமாறு கேள்வி எழுப்பியுள்ளார்: 'இங்கு வழிபாட்டில் ஈடுபடும் மக்கள் எதற்காக பொலிஸாரால் வெளியேற்றப்படுகின்றார்கள்? எதற்காக கைதுசெய்யப்படுகின்றார்கள்? அவர்களது மத உரிமை எதற்காக மீறப்படுகின்றது? இவ்வாறானதொரு சூழ்நிலையில் புதிதாக ஸ்தாபிக்கப்படும் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் என்று எவ்வாறு கூறமுடியும்?' என வினவியுள்ளார். https://www.virakesari.lk/article/178341
-
இலங்கையில் கடந்த வருடம் 1,550 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!
10 MAR, 2024 | 10:44 AM சுகாதார அமைச்சின் தேசிய தொழுநோய் அறிக்கையின்படி , 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 1,550 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் படி ,2023 ஆம் ஆண்டில் கொழும்பு மாவட்டத்தில் 259 தொழுநோயாளிகளும், கம்பஹா மாவட்டத்தில் 168 தொழு நோயாளர்களும் , களுத்துறை மாவட்டத்தில் 116 தொழு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் . 2019 ஆம் ஆண்டு 1,660 தொழுநோயாளிகளும், 2020 ஆம் ஆண்டு 1,213 நோயாளிகளும், 2021 ஆம் ஆண்டு 1,026 தொழுநோயாளிகளும், 2022 ஆண்டு 1,401 நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/178340
-
என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதி - நூல் வெளியிடுகின்றார் கோட்டாபய
எனது கோரிக்கையை ரணில் மாத்திரமே அச்சமின்றி ஏற்றுக்கொண்டார் : 'சதி' நூலில் கோட்டாபய 10 MAR, 2024 | 10:54 AM (எம்.மனோசித்ரா) பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு தன்னால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே அச்சமின்றி பொறுப்பேற்றதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதிய 'சதி' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் பிரதமர் பதவியை ஏற்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர் நிராகரித்ததாகவும் அந்த புத்தகத்தின் 163ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவிடம் பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோது தன்னால் உடனடியாக பதவியை ஏற்க முடியாது என்றும், அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கோட்டாபய குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அந்த நூலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: 'இந்த வன்முறைக்கு மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை என்ற கோரிக்கைக்கு அமைய பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை நியமிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. எனவேதான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியை ஏற்குமாறு கேட்டுக்கொண்டேன். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய முடியாது எனக் கூறி அவர் எனது கோரிக்கையை நிராகரித்தார். அதன் பின்னர் சரத் பொன்சேகாவுடன் பேசி பிரதமர் பதவியை ஏற்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர் தன்னை பிரதமராக நியமிப்பதை பகிரங்கமாக அறிவிக்குமாறும், அதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டார். எனினும் அவருக்கு வழங்கப்பட்ட பதவியை அவர் உடனடியாக ஏற்கவில்லை. https://www.virakesari.lk/article/178342
-
வெடுக்குநாறி மலையில் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பு முன்னெடுப்பு - சிறிதரன், கஜேந்திரன் சுட்டிக்காட்டு
Published By: DIGITAL DESK 3 09 MAR, 2024 | 08:26 PM ஆர்.ராம் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினை பௌத்த அடையாளமாக மாற்ற வேண்டுமென்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்படுவதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர். வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிவராத்திரி பூஜைவழிபாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் எதேச்சதிகாரமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பில் கருத்துவெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இந்நிலையில் சிவஞானம் சிறீதரன் தெரிவிக்கையில், வெடுக்குநாறிமலை ஆலயம் இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் இருந்தபோதும், விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தபோதும் பூஜைவழிபாடுகள் இடம்பெற்று வந்தவொரு ஆலயமாகும். அதுமட்டுமன்றி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக வரலாறும் இதற்கு காணப்படுகின்றது. அவ்வாறான நிலையில் எமது மக்கள் மரபு ரீதியாக வழிபட்டு வந்த இந்த ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு முன்னெடுத்த விசேட வழிபாடுகளை பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்டு தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்தச் செயற்பாடு கண்டிக்கதக்கது என்பதோடு, தற்போதும் தென்னிலங்கை சிங்கள, பௌத்த தேசியவாதிகள் அரசாங்கத்தின் கட்டமைப்புக்கின் துணையுடன் ஆக்கிரமிப்பைச் செய்வதற்கு எவ்வளவு தூரம் முனைகின்றார்கள் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும் என்றார். இதேவேளை, செல்வராசா கஜேந்திரன் தெரிவிக்கையில், தமிழர்களுக்கு பூர்வமாகவுள்ள பகுதிகளை தொல்பொருளின் பெயரால் முதலில் அடையாளப்படுத்துவதும் பின்னர் பௌத்த அடையாளங்களை அங்கு நிறுவுவதும் தொடர்ச்சியாக தாயகப் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடாகிவிட்டது. சிவராத்திரி பூஜை நிகழ்வுகளுக்காக நாம் வெடுக்குநாறி மலைக்குச் சென்றபோது அங்கு பௌத்த தேரர்கள் வருகை தந்தமைக்கான நோக்கம் என்ன? அவர்கள்,வெடுக்குநாறி மலையில் தமது அடையாளங்களை அமைத்து தமது ஆக்கிரமிப்பை விஸ்தரிப்பதனையே நோக்காகக் கொண்டு அங்கு வருகை தந்திருந்தார்கள். ஆகவே, தென்னிலங்கையின் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன என்பதற்கு வெடுக்குநாறிமலை மீண்டும் சாட்சியாகின்றது. அதுமட்மன்றி, பொலிஸாரும், அரச படைகளும் பெரும்பான்மை இனத்துக்கும், தேரர்களுக்கும் சாதகமாக செயற்படுகின்றார்கள் என்பதும் இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள், வழிபாட்டுக்காகச்சென்ற மக்களை நடத்திய விதமும், மக்களின் பிரதிநிதியான என்னை கையாண்ட முறைமையும் அதற்கு சான்றாகின்றது என்றார். https://www.virakesari.lk/article/178314
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கை கடற்பரப்பில் 22 இந்திய மீனவர்கள் கைது! 10 MAR, 2024 | 07:25 AM நெடுந்தீவு - காங்கேசன்துறை பகுதியில் வைத்து சனிக்கிழமை (9) இரவு 22 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 22 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் இரண்டு படகுகளுடனும், காங்கேசன்துறை கடற்பரப்பில் ஒரு படகுடனும் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேரும் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். மேலதிக நடவடிக்கைகளை நீரியல்வள திணைக்களத்தினர் மேற்கொள்வார்கள் என கடற்படையினர் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/178336
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்
முதல் போட்டியில் மிரட்டிய இங்கிலாந்து, கடைசியில் இந்தியாவிடம் சரணடைந்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியால் மூன்று நாட்கள்கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை 9 மார்ச் 2024 தரம்சாலாவில் நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியால் மூன்று நாட்கள்கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதில் இருந்தே இந்தியாவின் ஆதிக்கத்தை அறிந்து கொள்ளலாம். இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. பேஸ்பால் உத்தியுடன் இந்தியாவுக்குச் சவால் விட்ட இங்கிலாந்தின் மிகப்பெரிய, நான்காவது தொடர் தோல்வி இதுவாகும். பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் பயிற்சியின் கீழ் இங்கிலாந்து அணி பெற்ற முதல் தொடர் தோல்வியும் இதுதான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா தனது இடத்தை மேலும் வலுப்படுத்தியது. ரவிச்சந்திரன் அஸ்வின் தனது நூறாவது டெஸ்டில் 128 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே சமயம் இங்கிலாந்துக்காக தனது நூறாவது டெஸ்டில் விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 68 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டெஸ்ட் ஆடுகளத்தில் இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியின் ஸ்கிரிப்டை இப்படித்தான் டீம் இந்தியா எழுதியது. முதல் இன்னிங்சில் பெரிய முன்னிலை இந்தியா முதல் இன்னிங்சில் 259 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் 84 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 39 ரன்களும் எடுத்து நீடித்திருந்தனர். ஆனால் மற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களிடம் சரணடைந்தனர். முதல் 10 ஓவர்களிலேயே இங்கிலாந்தின் முதல் மூன்று வீரர்கள் அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்தனர். மதிய உணவுக்கு சற்று முன், இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதில் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளையும் குல்தீப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்பிறகு, மீண்டும் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, பென் ஃபோக்ஸை வெளியேற்றி அஸ்வின் தனது ஐந்தாவது விக்கெட்டை பெற்றார். பின்னர் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் நம்பிக்கையை பும்ரா முற்றிலும் முறியடித்தார். சோயப் பஷீர் சிறிது நேரம் ரூட்டுடன் நிலைத்துநின்றார். இந்த இணை 48 ரன்களைச் சேர்த்தது. பஷீர் இறுதியில் 13 ரன்களில் ரவீந்திர ஜடேஜாவிடம் பலியானார். ஜோ ரூட் தனது சதத்திற்கு 16 ரன்கள் தேவைப்படும்போதே ஆட்டமிழக்க, இங்கிலாந்து தொடரில் நான்காவது முறையாக தோல்வியடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரவிச்சந்திரன் அஸ்வின் தனது நூறாவது டெஸ்டில் 128 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேப்டனாக இருந்த பும்ரா மூன்றாவது நாளில், ரோஹித் சர்மா முதுகில் பிடிப்பு காரணமாக பீல்டிங்கிற்கு வரவில்லை. இதனால் ஜஸ்பிரித் பும்ரா அணித்தலைவராக இருந்தார். அவர் 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 40 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது வரலாற்று 100வது டெஸ்டில் 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அஸ்வின் 36வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையும் முறியடிக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் இன்னிங்ஸில் ஜொலித்த குல்தீப் - அஸ்வின் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸை 218 ரன்களுக்குள் முடித்தனர். இந்திய இன்னிங்ஸில் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோரின் அற்புதமான சதங்கள் அடங்கும். இவர்களைத் தவிர, தனது முதல் டெஸ்டில் விளையாடிய தேவ்தத் படிக்கல் 65 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களும், சர்பராஸ் கான் 56 ரன்களும் எடுத்தனர். ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனை 41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 700வது விக்கெட்டை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் அவரது 700வது விக்கெட். இந்த நிலையை எட்டிய உலகின் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். சுழற்பந்து வீச்சாளர்களான முத்தையா முரளிதரனும், ஷேன் வார்னும் மட்டுமே இதுவரை எழுநூறு விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளனர். இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் சோயப் பஷீர் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய இன்னிங்ஸ் 477 ரன்களில் முடிவடைந்தது. இதன் மூலம் இந்தியா முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் முன்னிலை பெற்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்ட நாயகன் ஜெய்ஸ்வால் இப்போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வின் 9 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். குல்தீப் முதல் இன்னிங்சில் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆட்ட நாயகனாக குல்தீப் தேர்வு செய்யப்பட்டார். தொடரில் 712 ரன்கள் குவித்த இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருதை பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தொடரில் 712 ரன்கள் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடம் இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா தனது இடத்தை மேலும் வலுப்படுத்தியது. வெலிங்டனில் கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த நியூசிலாந்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டு, இரண்டு முறை இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியது. தர்மசாலாவில் நடந்த மாபெரும் வெற்றி, இந்தியா 12 புள்ளிகளைப் பெற உதவியது. புள்ளிகள் சதவிகிம் 64.50 லிருந்து 68.51 ஆக அதிகரித்தது. நியூசிலாந்து அணியின் புள்ளிகள் சதவிகிதம் 60 ஆக இருக்கிறது. ஆஸ்திரேலியா 59.09 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து எட்டாவது இடத்தில் உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவுடனான 5 போட்டி டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்து அணியின் பேஸ்பால் உத்தி பற்றி மிகவும் பரவலாகப் பேசப்பட்டது சரணடைந்த இங்கிலாந்து இந்தியாவுடனான 5 போட்டி டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்து அணியின் பேஸ்பால் உத்தி பற்றி மிகவும் பரவலாகப் பேசப்பட்டது. அனுபவமில்லாத வீரர்களைக் கொண்ட இந்திய அணியை எளிமையாக வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. அதேபோல முதல் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து 28 ரன்கள் வீழ்த்தியது. முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தபோது இந்திய அணியால் வெற்றி பெற இயலவில்லை. அப்போது இந்திய அணியின் பலவீனங்கள் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் மெக்கல்லம் ஆகியோர் பாராட்டுப் பெற்றனர். முதல் போட்டி முடிந்த பிறகு வெற்றி குறித்து சிலாகித்துப் பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “தோல்வி வந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை” என்று கூறினார். ஆனால் அடுத்தடுத்து 4 தோல்விகள் வரும் என்று அவர் நினைத்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் கடைசியில் போட்டியில் சரணடைவது போன்ற தோல்வி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். முதல் டெஸ்ட் போட்டி முடிந்ததும் பாராட்டுகளைப் பெற்ற ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் ஆகியோர் இப்போது நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். “தோல்விகளில் இருந்து பாடம் கற்றிருக்கிறோம். அணியை அடுத்த போட்டிகளுக்கு முன்னெடுத்துச் செல்வோம்” என்கிறார் பென் ஸ்டோக்ஸ். https://www.bbc.com/tamil/articles/c9w9yyvmxewo
-
முதலில் 'ஜனாதிபதி தேர்தல்' என்ற தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி ரணில், மஹிந்த, பஷில் சந்திப்பு இணக்கப்பாடின்றி முடிவு
10 MAR, 2024 | 10:18 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி தேர்தலை வருட இறுதிக்குள் நடத்தும் தீர்மானத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி, உத்தேச தேசிய தேர்தல்கள் மற்றும் எதிர்கால அரசியல் கூட்டணி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில், முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சினிலமவின் புதல்வரின் திருமணத்தில் சாட்சி கையெழுத்திடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை சென்றிருந்தார். அங்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ உரிய நேரத்துக்கு வருவதாக இருந்த போதிலும் ஜனாதிபதி ரணில், திருமண நிகழ்விலிருந்து சென்ற பின்னரே பஷில் ராஜபக்ஷ வந்துள்ளார். எனினும், அன்றைய தினம் இரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது. ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவும் பங்கேற்றிருந்தார். உத்தேச தேசிய தேர்தல்கள் மற்றும் எதிர்கால அரசியல் கூட்டணி குறித்து இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல் மூலங்கள் குறிப்பிட்டன. எந்த தேர்தல் முதலில் இடம்பெறும் என்ற ஐயப்பாடு அரசியல் கட்சிகளுக்கு மாத்திரமன்றி நாட்டு மக்களுக்கும் உள்ளன. ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய பாராளுமன்ற கொள்கை பிரகடன உரையில் தெளிவாகவே வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்ற விடயத்தை உறுதிப்பட கூறியுள்ளார். ஆனால், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால அரசியல் நலன்களை மையப்படுத்தி முதலில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை முன்வைத்து ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் பிரகாரம் ஜனாதிபதி ரணிலுக்கும், பஷில் ராஜபக்ஷ மற்றும் மஹந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற சந்திப்பிலும் தேர்தல் விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தலும், அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தலும் அதனை தொடர்ந்து மாகாண சபை தேர்தலை நடத்தப்படும் என்ற தேர்தல் கால அட்டவனையை ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தினார். எனினும், இந்த விடயம் குறித்து மீண்டும் கட்சி உறுப்பினர்களுடன் பேசுவதாக பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். ஆனால், முதலில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற குழு ஏற்கனவே எடுத்துள்ளது. எனவே இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றியும் அடுத்த சந்திப்பிற்கான நாட்கள் இறுதிப்படுத்தப்படாமலும் நிறைவடைந்துள்ளது. https://www.virakesari.lk/article/178339
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
திமுக கூட்டணியில் கமல்ஹாசன் செய்த செயல்: மக்கள் நீதி மய்யம் இனி என்ன ஆகும்? பட மூலாதாரம்,MAIAMOFFICIAL/X கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சில தினங்களாக தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் நிலவிவந்த ஒரு ஊகத்திற்கு திமுக முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்படும் என்றும் திமுக தலைமை சனிக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது. 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், ஒரு மாநிலங்களவை சீட்டுடன் முடங்கியது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. சமீப காலமாகவே கமல்ஹாசன் காங்கிரஸுக்கு நெருக்கமானவராக இருந்தார். ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ’ பயணத்திலும் அவர் கலந்துகொண்டார். இந்நிலையில், நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில், காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கும் இடங்களில் இரண்டு தொகுதிகளை மக்கள் நீதி மய்யத்திற்குக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதேநேரம், கடந்த தேர்தல்களில் குறிப்பிடத் தகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய தென்சென்னை மற்றும் கோயம்புத்தூர் தொகுதிகளை கமல்ஹாசன் திமுகவிடம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தங்களின் வலுவான தொகுதியான தென்சென்னையை விட்டுத்தர திமுக முன்வரவில்லை என்றும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிலையில்தான், மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, மக்களவை தேர்தலில் இக்கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் பரப்புரை மேற்கொள்ளப்படும் என திமுக அறிவித்துள்ளது. 'தேசத்திற்காக கைகோர்த்துள்ளோம்' பட மூலாதாரம்,MAIAMOFFICIAL/X இந்த ஒப்பந்தம் இறுதியான பின்பு, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபின் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்றும் மாறாக, இக்கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த முடிவு பதவிக்கானது அல்ல என்றும் தேசத்திற்காக கைகோர்த்திருப்பதாகவும் அவர் கூறினார். கடந்த 2018ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய கமல், அதிமுக, திமுக இரு கட்சிகளையும் விமர்சித்து வந்தார். 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது. மக்களவை தேர்தலில் சுமார் 4% வாக்குகளையும் சட்டமன்ற தேர்தலில் சுமார் 2.5% வாக்குகளையும் பெற்றது. மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் சுமார் 1.5 லட்சம் வாக்குகளையும் தென் சென்னை தொகுதியில் சுமார் 1.44 லட்சம் வாக்குகளையும் அக்கட்சி பெற்றது. சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் சுமார் 1,600 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். கட்சியை பலப்படுத்த தவறிவிட்டாரா? பட மூலாதாரம்,MAIAMOFFICIAL/X இந்நிலையில் ஒரேயொரு மாநிலங்களவை சீட்டுக்கு கமல் திமுகவுடன் கைகோர்த்தது ஏன் என்ற கேள்வியை அரசியல் ஆலோசகரும் மூத்த பத்திரிகையாளருமான லட்சுமணனிடம் முன்வைத்தோம். "ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கோஷத்துடன் கட்சி ஆரம்பித்தவர் கமல்ஹாசன். அது வெற்று முழக்கமாக இல்லாமல் ஓரளவுக்கு அர்த்தம் இருக்க வேண்டும் என்றால் முதலில் கட்சி கட்டமைப்பு இருக்க வேண்டும். கிராமங்கள்தோறும் கிளைகள் இருக்க வேண்டும். இந்த அடிப்படையான விஷயங்கள் குறித்துத் துளிகூட கமல் கவலைப்படவில்லை. இதில் ஒருசதவீதத்தைக்கூட கமல் செய்யவில்லை. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அக்கட்சி பெற்ற சுமார் 4 சதவீத வாக்குகள், கமல் என்ற தனி மனிதரின் பிரபலத்திற்கும் அவர் முன்வைத்த புதிய முழக்கத்திற்காகவும்தான் கிடைத்தது. அதைத் தக்கவைக்க கட்சியைப் பலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அக்கட்சி அதில் தோற்றுவிட்டது," என்றார். இந்தத் தேர்தலில் 1-2 தொகுதிகளை திமுகவிடம் கமல் கேட்டது நிஜம் என்றும் தென்சென்னை தொகுதியில் கமல் உறுதியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். கமல் வசிக்கும் இடம், மேல்தட்டு வகுப்பினர் பெரும்பாலானோர் உள்ள தொகுதி என்ற சாதகம் இருந்தாலும் அந்தத் தொகுதியை திமுக விட்டுக்கொடுக்க முன்வரவில்லை என லட்சுமணன் தெரிவித்தார். மகேந்திரன் அக்கட்சியிலிருந்து விலகிய பிறகு கோவையில் அக்கட்சிக்கு தளகர்த்தர் இல்லை என்பதால், அடுத்த வாய்ப்பாக கோவையை கேட்கும் கள யதார்த்தத்தையும் கமல் இழந்துவிட்டார் என அவர் கூறினார். "இந்த யதார்த்தமான பலவீனத்தை கமல் புரிந்துகொண்டார் என எடுத்துக்கொள்ளலாம். உதயநிதி உடனான நெருக்கம் இதற்கு ஓர் காரணமாக இருக்கலாம். பரப்புரை செய்வதற்கு ஒரு பலன் இருக்க வேண்டும் என்பதால் ராஜ்ய சபா சீட் கொடுத்திருக்கின்றனர். நிச்சயம் அந்த இடம் கமல்ஹாசனுக்குதான்" என்றார் லட்சுமணன். மேலும், "ஒன் மேன்' கட்சி என்றுகூட மக்கள் நீதி மய்யத்தைச் சொல்ல முடியாது. இதே நிலைமை நீடித்தால் இக்கட்சி மிக விரைவில் காணாமல் சென்றுவிடும். வளரும் ஒரு கட்சியின் எந்த நிர்வாகிக்கும் இந்த முடிவு நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்காது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கமல்ஹாசனே கட்சியைப் பலவீனப்படுத்தி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்," என்றார். பட மூலாதாரம்,MAIAMOFFICIAL/X 'கிராமங்களை சென்றடையவில்லை' கட்சி கட்டமைப்பு பலமாக இல்லை என்பதை ஒப்புக்கொள்ளும் விதமாகவே பிபிசியிடம் பேசினார், மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் (ஊடகப்பிரிவு) முரளி அப்பாஸ். "கட்சியை ஆக்கபூர்வமாக உருவாக்க வேண்டும். மீண்டும் தேர்தலில் நின்று தோற்று சோர்வடைந்தால், அது தவறான முடிவாக இருக்கும். கிராமங்களில் நாங்கள் சரியாகச் சென்றடையவில்லை.அதற்காக தலைவரை அங்கு தெரியவில்லை என்பது அர்த்தம் இல்லை. ஆதரவை நிர்வாக ரீதியாக இணைக்கவில்லை. தொண்டர்கள் மட்டத்தில் சரியாக இல்லாமல் தேர்தலைச் சந்திப்பதால் ஏற்படும் இழப்புகளை நாங்கள் பார்த்துவிட்டோம். இந்த தேர்தலில் தேசிய அரசியலில் மாற்றம் உருவாவதுதான் முக்கியம். எங்களுக்கு தொகுதி ஒதுக்கும் சூழலில் திமுக இல்லை. இந்தச் சூழலில், மாற்றுக் கூட்டணிக்கு செல்ல முடியாது. கமல்ஹாசனின் வலிமையான அரசியல் குரல் விரயமாகக்கூடாது என்பதற்காக இதற்கு ஒப்புக்கொண்டோம்," என்றார் அவர். நகரங்களை மையமாக வைத்து சில தொகுதிகளைக் கேட்டதாக அவர் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் 'ஒன் மேன்' கட்சி என்பதைவிட வலிமையான தலைமை உள்ள கட்சி எனச் சொல்லலாம் என்கிறார் முரளி அப்பாஸ். முன்பு திமுகவை விமர்சித்தது குறித்துப் பேசிய அவர், "பழைய கதைகளைப் பேசக்கூடாது. இந்த அரசை மக்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவதுதான் நல்லது. காழ்ப்புணர்ச்சியுடன் புறக்கணிக்கக் கூடாது. எங்களின் சுயலாபத்திற்காக இதைச் செய்யவில்லை. தேசிய நலனுக்காக தளர்த்திக்கொள்வது தாழ்ந்து போவதல்ல, அனுசரித்துப் போவது," என்றார். https://www.bbc.com/tamil/articles/crgv22pn2eno
-
700 விக்கெட்டுகள் வீழ்த்தி ஜேம்ஸ் அண்டர்சன் சாதனை!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் அண்டர்சன் புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியா இங்கிலாந்து இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாக் கிராலி 79 ரன்கள் குவித்து இருந்தார். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியில் ரோகித் சர்மா 103 ரன்களும், சுப்மன் கில் 110 ரன்களும், தேவ்தத் படிக்கல் 65 ரன்களும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களும், சர்ஃப்ராஸ் கான் 56 ரன்களும் எடுத்தனர். இதேபோல் இறுதியில் களமிறங்கிய குல்தீப் யாதவ் 30 ரன்களும், ஜஸ்ப்ரித் பும்ரா ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ரன்களை குறித்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் 173 ரங்களை விட்டுக் கொடுத்த ஷோயப் பஷீர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜேம்ஸ் அண்டசன், டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஜேம்ஸ் அண்டர்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 700ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவர் தொடர்ந்து 3ஆவது இடத்தில் நீடித்து வருகிறார். இந்த பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களுடனும், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் 708 விக்கெட்டுகளுடனும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். ஜேம்ஸ் எண்டர்சனின் சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அண்டர்சன் மேலும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினால் அவர் இந்த பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/295064 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட் வீழ்த்திய முதலாவது வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் எனும் சாதனைக்கும் உரியவராகிறார். ஜேம்ஸ் அண்டர்சனின் பந்துவீச்சு பெறுதியின் அட்டவணை.
-
ரணிலின் தொங்கு பாலத்திலிருந்து ராஜபக்ஷர்களே கரை சேர்ந்துள்ளனர் - சஜித் பிரேமதாச
09 MAR, 2024 | 05:46 PM (எம்.மனோசித்ரா) தொங்கு பாலத்திலிருந்து நாட்டு மக்களை கரைசேர்த்ததாக ஜனாதிபதி கூறினாலும், உண்மையில் நாட்டை அழித்த ராஜபக்ஷர்களை மாத்திரமே ஜனாதிபதி தொங்கு பாலத்திலிருந்து கரைசேர்த்துள்ளார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படும் 'மக்கள் அரண்' வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம், யாப்பஹுவ தேர்தல் தொகுதியின் தலதாகம சந்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று சனிக்கிழமை (09)நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், முழு நாடும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும், நாட்டின் மின்சாரக் கட்டணம் 500 - 600 சதவீதம் வரை அதிகரித்தது. நீர்க் கட்டணம் அதிகரித்து, வாழ்க்கைச் சுமை அதிகரித்து, வேலையிழப்பு அதிகரித்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, இளைஞர்கள் வீதிக்கு இறங்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. கொவிட் காலத்தைப் போல நாட்டில் ஒரு புதிய இயல்புநிலை ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு சுமைகள் அதிகரித்து வரும் நிலைமையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பார்வையில் புதிய இயல்பு நிலையாக உள்ளது. இன்று சில தரப்பினர் கோப்பு மூட்டைகளை காட்டி திருடர்களை பிடிக்க அதிகாரம் கோருகின்றன. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும், தனது ஐக்கிய சட்டத்தரணிகள் குழு, மக்களுக்கான புத்திஜீவிகள் பேரவை மூலம் உயர் நீதிமன்றத்துக்கு சென்று எதிர்க்கட்சியில் இருந்தவாறே ராஜபக்ஷர்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்ற தீர்ப்பை பெற்றுக்கொண்டது. திருடர்களை பிடிப்போம் என கோப்புகளை காட்டி அரசியல் நாடகங்களை நடத்தாது ஐக்கிய மக்கள் சக்தி செயல் ரீதியாக நடவடிக்கை எடுத்தது. நாட்டு மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகும்போது ஜனாதிபதி தலைமையிலான நாட்டை அழித்த மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்ஷர்களுடன் இணைந்து தமது விருப்பப்படி நடந்து வருகின்றனர். பாராளுமன்றத்தில் 113 பேர் சுகாதாரத்துறையில் நடந்த மோசடிகளுக்கு ஆதரவாக கைகளை உயர்த்துகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் இந்நாட்டிலுள்ள தேசிய வளங்கள், மக்களின் வளங்கள், சொத்துக்கள் மற்றும் பணத்தை அபகரித்த குழுக்களுக்கு எந்த மன்னிப்பும் கிடையாது. வறுமையின் காரணமாக நாட்டு மக்கள் நுண்கடன் வலையில் சிக்கியுள்ள நிலையில், வறுமையை ஒழிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் வரம்பற்ற அழுத்தங்களை பிரயோகித்து. தமது தொழில் இலக்கை முதன்மைப்படுத்தி வர்த்தகர்களால் இது பெரும் கடன் பொறியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கடன் சுமையில் தவிக்கும் மக்களுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். இந்த நுண்கடன் திட்டங்களுக்கு வலுவான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் வைப்புச் சொத்துக்கள் மற்றும் வளங்களை பராட்டே சட்டத்தின் மூலம் ஏலம் விடுவதற்கான மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 2024ஆம் ஆண்டு தேர்தல் வருடமாக இருப்பதால், ஏல நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்தாலும், தனியார் நிதி நிறுவனங்கள் போட்டிக்கு ஏலங்களை நடத்தி வருகின்றன என்றார். https://www.virakesari.lk/article/178322
-
போசணை குறைப்பாட்டினால் 410,000 பெண் பிள்ளைகள் உடல் எடை குறைந்திருப்பதாக ஆய்வில் தகவல்
அது பெண்டிர்க்கு அண்ணோய்! இவர்கள் சிறுமிகள் எல்லோ?
-
கடும் வெப்பம்; வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
அதிக வெப்பம் : கண் நோய்கள் ஏற்படும் சாத்தியம்! அதிக வெப்பம் காரணமாக கண் நோய்கள் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக கண் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சூரிய ஒளி நேரடியாக கண்ணில் பட்டால், அதன் செல்கள் சேதமடைவதுடன், விழிப்புலன் இழக்கப்படலாமென கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர், கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மதுவந்தி திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், வெப்பம் காரணமாக கண் வறட்சி ஏற்படும் என்பதினால், தேவையான நீராகாரங்களை உட்கொள்வது அவசியம். வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படலாம். கணினி பாவனை அதிகம் உள்ள நபர்கள் மற்றும் ஏற்கனவே கண் நோய் உள்ளவர்களுக்கு பாதிப்புகள் அதிகரிக்கக் கூடுமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் இன்று அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வாறு அதிக வெப்பநிலை பதிவாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/295082
-
மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை
வடக்கு மாகாணத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மீள விடுவிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள அரச மரக்கூட்டுதாபனத்தில் அமைச்சரை நேரடியாக சந்தித்து ஆளுநர் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட காணிகள் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த காணிகளுக்குள் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாதுள்ளதாக ஆளுநர், துறைசார் அமைச்சரிடம் எடுத்துரைத்தார். இதனால் குறித்த வர்த்தமானியை மீளப்பெற்று, மக்களுக்கான பயன்பாட்டு காணிகளை விடுவிக்குமாறும் ஆளுநர் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் விபரம் அடங்கிய அறிக்கையும் அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சியிடம், ஆளுநர் இதன்போது சமர்ப்பித்தார். வடக்கு மாகாண ஆளுனரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மற்றும் கலந்தாலோசிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சி, ஆளுநரிடம் உறுதியளித்தார். https://thinakkural.lk/article/295069
-
யாழில் விமானப்படையின் கண்காட்சி
விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 6000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாகசம் 09 MAR, 2024 | 06:29 PM இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணம் முற்றவெளியில் மாபெரும் கண்காட்சி இன்றைய தினம் (09) ஆரம்பமாகியுள்ளது. இதன்போது, 6000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாகசம் நிகழ்த்தப்பட்டது. இந்த கண்காட்சி நாளையும் (10) காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நடைபெறும். பாடசாலை சீருடையில் வரும் மாணவர்கள் இந்த நிகழ்வை முற்றுமுழுதாக இலவசமாக பார்வையிடலாம். ஏனையோர் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி இந்த நிகழ்வை பார்வையிட முடியும். இந்த கண்காட்சி மூலம் பெற்றுக்கொள்ளப்படும் முழுத் தொகையும் வடக்கு மாகாணத்தில் காணப்படும் 73 பாடசாலைகளின் புனர் நிர்மாணத்துக்கும், அந்த பாடசாலையில் கல்வி கற்கும் பின்தங்கிய மாணவர்களின் நலன்புரி செயற்பாடுகளுக்கும், அவர்களுக்கு 73 ஆயிரம் பாடசாலை புத்தகங்களை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் 73 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் செயற்றிட்டமும் இதன் மூலம் ஆரம்பமாகியுள்ளது. வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கான பூரண அனுசரணையை வட மாகாண ஆளுநர் செயலகம் ஊடாக இலங்கை விமானப்படை பெற்றுள்ளது. இலங்கை விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் உதயனீ ராஜபக்ஷவின் கண்காணிப்பு மற்றும் வழிக்காட்டுதல்களின் ஊடாக இந்த கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/178326
-
புதுச்சேரியில் மாயமான 9 வயது சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்பு: பொதுமக்கள் சாலை மறியல் - போலீஸ் குவிப்பு
புதுச்சேரியில் குழந்தை கொல்லப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது? புதிய தகவல்கள் - பிபிசி கள ஆய்வு படக்குறிப்பு, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சிறுமி. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 51 நிமிடங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் 9 வயதுக் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள் என்றாலும் மாநிலத்தில் போதைப் பொருள் பரவல் குறித்த கவலை பரவலாகக் காணப்படுகிறது. கடந்த இரண்டாம் தேதி காணாமல் போன குழந்தை, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பிரதேசத்தை மட்டுமல்லாமல் தமிழகத்தையும் அதிரவைத்திருக்கிறது. இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பிபிசி தமிழ் அந்தப் பகுதியில் கள ஆய்வு நடத்தியது. புதுச்சேரியில் நடந்தது என்ன? புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 9 வயது குழந்தை கடந்த சனிக்கிழமை - மார்ச் 2ஆம் தேதி - காணாமல் போனது. குழந்தையின் தாயார் அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மாலையில், அவர் வேலையிலிருந்து திரும்பியதும் குழந்தையைக் காணவில்லை எனத் தேட ஆரம்பித்தவர், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். "என் குழந்தை சாப்பிட்டுவிட்டு, எங்கள் சந்தில் விளையாடிக் கொண்டிருந்தது. நண்பகல் 12 மணி வரை குழந்தை விளையாடிக் கொண்டிருப்பதை அங்கிருந்த ஆட்கள் பார்த்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு யார் கண்ணிலும் குழந்தை படவில்லை. இதற்குப் பிறகுதான் குழந்தை கடத்தப்பட்டிருக்க வேண்டும்." என்கிறார் குழந்தையின் தாயார். படக்குறிப்பு, சிறுமிக்கு நீதி கேட்டு பொதுமக்கள் போராட்டம் மூன்று நாள் தேடுதல் குழந்தையின் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். இவர்களது இரு குழந்தைகளும் அருகில் உள்ள அரசுப் பள்ளிக்கூடத்தில் சென்று படித்துவிட்டு, வீடு திரும்புவது வழக்கம். அதற்குப் பிறகு, இவர்கள் வசிக்கும் தெருவுக்கு அருகில் உள்ள இன்னொரு தெருவில் இருக்கும் சரணா என்ற மையத்தில் டியூஷன் படிப்பது வழக்கம். "வேலைக்குப் போய்விட்டு நான் ஐந்து மணிக்கு திரும்பி வந்தேன். குழந்தையைக் காணவில்லையெனத் தெரிந்ததும் தேட ஆரம்பித்தோம். பிறகு ஏழேகால் மணியளவில் காவல்துறையில் புகார் கொடுத்தோம். அவர்கள் இந்தத் தெருவிலும் அடுத்த தெருவிலும் மாறி மாறி தேடினார்கள். வீட்டிற்குள் தேடினார்கள். குழந்தை கிடைக்கவில்லை." "ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை என அடுத்த மூன்று நாட்களுக்குத் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. புதன்கிழமை மதியம் 2.45 மணிக்குத் குழந்தையின் சடலம் கிடைத்தது" என்கிறார் குழந்தையின் தாய். குழந்தை காணாமல் போன தினத்தன்று சனிக்கிழமை என்பதால் பள்ளிக்கூடம் இல்லாத நிலையில், குழந்தை விளையாடிவந்த போதுதான் காணாமல் போனது. இரு நாட்கள் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், திங்கட்கிழமையன்று பெற்றோர், உறவினர், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்குப் பிறகு, காவல்துறை கண்காணிப்பாளர்கள் லட்சுமி, ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அந்தப் பகுதியில் இருந்த அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆராயப்பட்டன. அதில், அந்தக் குழந்தை அந்தப் பகுதியை விட்டு வெளியேறவில்லை என்பது தெரிந்ததும், சோலை நகர் பகுதியில் இருந்த ஒவ்வொரு வீடாக காவல்துறை சோதனை நடத்தியது. கால்வாய்கள், கடற்கரை போன்ற இடங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கைவிடப்பட்ட இடங்களிலும் சோதனை நடந்தது. இந்த நிலையில், குழந்தை டியூஷன் படிக்கும் பகுதியில் இருந்த மாட்டுத் தொழுவத்திற்கு அருகில் இருந்த கால்வாயில் ஒரு சாக்கு மூட்டையில் இருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. தேடுதல் வேட்டை நடந்துகொண்டிருந்த தருணத்தில், அந்தப் பகுதியில் இருந்த சந்தேகத்திற்கிடமான சிலரை அழைத்துச் சென்று காவல்துறை விசாரித்தது. அதில் குடும்பத்தினர் ரும் இல்லாமல், மாட்டுத் தொழுவம் அருகில் ஒரு சிறிய வீட்டில் வசித்துவந்த 59 வயதான விவேகானந்தன் என்பவர் சில விஷயங்களை ஒப்புக்கொண்டதாக காவல்துறை கூறுகிறது. அதாவது, அதே பகுதியில் வசித்துவந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் தனது இடத்தில் வைத்து குழந்தை ஒன்றுக்கு பாலியல் தொல்லை தந்துகொண்டிருந்ததை தான் பார்த்ததாக அந்த நபர் கூறியிருக்கிறார். படக்குறிப்பு, சிறுமியின் வீட்டின் முன் குவிந்துள்ள மக்கள் காவல்துறை விசாரணை இதையடுத்து காவல்துறை கருணாஸைப் பிடித்து விசாரித்தது. அவர், தன்னுடன் சேர்ந்து விவேகானந்தனும் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், மயங்கிவிட்ட குழந்தையை இருவரும் கொலைசெய்து கால்வாயில் வீசியதாகவும் தெரிவித்ததாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. பொதுமக்கள் போராட்டம் இந்த விவகாரம் புதுச்சேரி முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என அரசுத் தரப்பு அளித்த வாக்குறுதியை அடுத்தே அவர்கள் கலைந்துசென்றனர். குற்றவாளிகளைக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் புதுச்சேரியில் போதை பரவலை தடுக்க வேண்டும் என்றும் கூறி, முழு அடைப்புப் போராட்டமும் நடைபெற்றது. குழந்தையை கொன்றதாக கைதுசெய்யப்பட்டிருப்பவர்கள் கஞ்சா போதையில் இந்தச் செயலில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுவதால், புதுச்சேரியில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. "முதலில் புதுச்சேரியில் மது விற்பனை செய்யப்படும் நேரத்தைக் குறைக்க வேண்டும். சமீபத்தில் பல ரெஸ்டோ பார்களை 12 மணிக்கு மேலும் நடத்த அனுமதித்திருக்கிறார்கள். புதுச்சேரிக்கு வரி வருவாய் வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்கிறார்கள்." என்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான அசோக் ராஜா. "இதுபோன்ற பார்கள் சிலவற்றில், மது மட்டுமல்லாமல் எல்லாவிதமான போதைப் பொருட்களும் கிடைக்கின்றன. இதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி பல வெளிமாநிலங்களில் இருந்தும் ஆட்கள் இதற்காக இங்கே வருகிறார்கள். மற்றொரு பக்கம் புதுச்சேரி முழுக்கவும் கஞ்சா சர்வ சாதாரணமாகக் கிடைக்கிறது." "ஒரு காலத்தில் மதுவுக்குத்தான் புதுச்சேரி பிரபலம் என்பார்கள். இப்போது எல்லா போதைப் பொருட்களுக்கும் புதுச்சேரி பிரபலமான இடம் என்பதைப் போல ஆகிவிட்டது. கஞ்சா விற்பவர்களைப் பிடிக்க பல அணிகளை உருவாக்கினார்கள். அவர்கள் சிறு வியாபாரிகளைப் பிடிக்கிறார்களே தவிர, பெரிய வியாபாரிகளைப் பிடிப்பதில்லை. இப்படி கஞ்சா கிடைப்பதுதான் இது போன்ற குற்றங்களுக்குக் காரணம்" என்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான அசோக் ராஜா. ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தபோது சிலர் எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பினர். இருந்தபோதும் அவர் குழந்தையின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துச் சென்றார். குற்றவாளிகளை விரைவில் விசாரித்துத் தண்டிக்க விரைவு நீதிமன்றம் ஒன்றை அமைக்கப்போவதாகவும் வாக்குறுதி அளித்தார். "அரசியல்வாதிகளும் காவல்துறையும் நினைத்திருந்தால் கஞ்சாவை ஒழித்திருக்கலாம். புதுச்சேரியில் சின்னச்சின்ன பெட்டிக் கடைகளில்கூட கஞ்சா கிடைக்கிறது. பள்ளிக்கூடங்களில் சின்னச் சின்ன பையன்கள் கூல் லிப், போதை ஸ்டாம்பு குறித்துப் பேசுகிறார்கள். இந்த விஷயத்தில் அரசுக்கு மட்டும் பொறுப்பு இல்லை. பெற்றோர்களும் தனது ஆண் குழந்தை எங்கே போகிறான், என்ன செய்கிறான் என்பதைக் கவனிக்கவேண்டும். நம் பிள்ளை ஒழுக்கமாக இருக்கலாம் என்ற எண்ணம் பெற்றோருக்கு இருக்கலாம். ஆனால், எல்லாத் தருணங்களிலும் உண்மையாக இருக்காது. ஒவ்வொரு பெற்றோரும் தனது குழந்தையை கூர்ந்து கவனிக்க வேண்டும்" என்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான தனலக்ஷ்மி. பட மூலாதாரம்,TWITTER படக்குறிப்பு, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் 'காவலர்கள் மீது குற்றம் சுமத்தாதீர்கள்' குழந்தையின் குடும்பத்தினருக்கு 20 லட்ச ரூபாயை ஆறுதல் தொகையாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறை மீது குற்றம்சாட்டப்படுவதை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மறுக்கிறார். "இதுபோல நடக்கும்போதெல்லாம் காவல்துறை மீது குற்றம்சாட்டுவது வழக்கம்தான். காவல்துறை தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் கஞ்சாவைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. அரசியல் உள்நோக்கத்தோடு சிலர் அப்படிச் சொல்லலாம். இந்த அரசு வந்த பிறகு கஞ்சா கடத்துபவர்கள் நிறையப் பேரைப் பிடித்திருக்கிறோம். மற்ற மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளிகளை அந்த மாநிலத்திலேயே சென்று பிடித்திருக்கிறோம். கஞ்சா பழக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறோம். இருந்தாலும் வேறு மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்குள் வரும் சூழல் இருக்கிறது. தொடர்ந்து கண்காணிக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் தடயவியல் ரீதியான விசாரணைகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த 11 காவலர்களையும் இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/cy6z7pjq60po
-
வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
வெடுக்குநாறி மலை சம்பவம் : வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதே வெளிப்படுகிறது ; தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா? - அருட்தந்தை மா.சத்திவேல் 09 MAR, 2024 | 05:17 PM வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை வெடுக்குநாறி மலை சிவ வழிபாடு சம்பவம் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று (09) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வவுனியா வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவிலில் நீதிமன்ற அனுமதியுடன் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிவ பக்தர்களையும், அவர்களின் வழிபாட்டையும் அவமானப்படுத்தும் வண்ணம் பொலிஸார் வழிபாட்டுப் பொருட்களை சப்பாத்து காலால் உதைத்து தள்ளியதோடு, பெண்களை இழிவுபடுத்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட அறுவரை கைது செய்துள்ளனர். இதில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஒட்டுமொத்த சிவ பக்தர்களுக்கும் வருத்தத்தை தெரிவிப்பதோடு, இது நாட்டின் அடிப்படை மனித உரிமையும் மற்றும் வழிபாட்டு உரிமையையும் மீறும் செயல் மட்டுமல்ல. தமிழர்கள் மீதும் இந்துக்கள் மீதும் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனவாத மதவாத வன்முறையின் தோற்றமுமாகும். இதில் பொலிஸார் அராஜகத்தோடு பேரினவாத அதிகார அரசியல் பக்கபலமும் அதற்கு உள்ளது என்பதை உணரக்கூடியதாக உள்ளது. இக்கொடிய மதவாத இனவாத வன்முறை தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். இதனை சமயம் கடந்து அனைத்து சமய தலைவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தமது எதிர்ப்பை கூட்டாக வெளிக்காட்ட வேண்டும். களனியை மையமாகக் கொண்டு இயங்கும் பௌத்த தகவல் நிலையம் எனும் அமைப்பு வெடுக்குநாறி மலையில் இனவாதம், மதவாதம் என்பவற்றை தோன்றுவிக்கும் வழிபாடு நடைபெறவுள்ளதாக பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இக்கடிதம் எதனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது? சிவராத்திரி வழிபாடு எவ்வாறு இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் எனவும் கேட்கின்றோம். இனவாதம், மதவாதம் அடிப்படை கருத்தியலில் இயங்கும் பயங்கரவாத அரசின் கூலிகளாக இயங்கும் பொலிஸாரே இனவாத, மதவாத அதிகார வெறியினை சிவ பக்தர்களிடம் காட்டியுள்ளமை வெட்கக்கேடாகும். அங்கு கூடியிருந்த பக்தர்கள் பொலிஸ் அராஜகம் ஒழிக என்றோ அல்லது வேறு எந்த வகையிலோ தமது எதிர்ப்பை காட்டவில்லை. சமய பக்தி கோஷங்களையே அவர்கள் எழுப்பினர். இதுவா மதவாத மற்றும் இனவாத வழிபாடு. ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும்போதே தமிழர்களின் வழிபாட்டு உரிமை மீறப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பாக கடந்த காலங்களில் மனித உரிமை பேரவை பல அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் கடந்த காலங்களில் வழங்கியபோது அவற்றை பின்பற்றால் சர்வதேசத்தை ஏமாற்றும் ஆட்சியாளர் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நடக்கும் சந்தர்ப்பங்களில் அதனை அவமதிப்பது போல் நடப்பது இது முதல் தடவை அல்ல. அமைச்சர் ஒருவர் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து விரட்டி மிரட்டியதும் இவ்வாறான காலப்பகுதியிலாகும். அதேபோன்று நேற்று இந்துக்களின் சிவ வழிபாட்டை கொச்சைப்படுத்தி அராஜகம் புரிந்துள்ளனர். இது இந்நாட்டில் தமிழர்களுக்கு எதிரான இனவாத வன்முறையை தொடர்கிறது என்பதை சுட்டி நிற்கிறது. உயிர்ப்பு தினத்தில் கூண்டுகளை வடிக்கச் செய்து உயிர்களைக் கொண்டு அரசியல் செய்தவர்கள் தொடர்ந்து வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை வெடுக்குநாறி மலை சிவ வழிபாடு சம்பவம் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா எனவும் கேட்கின்றோம். தேர்தல் காலத்தில் தமிழர்களின் வாக்குகளை எதிர்பார்த்து அரசியல் செய்யும் தென்பகுதி கட்சிகள் வெடுக்குநாறி மலையில் நடந்த அரச பயங்கரவாதத்துக்கு எதிராகவும் அதனை தூண்டிவிட்டு குளிர் காய்பவர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவிக்க வேண்டும். சர்வதேச பெண்கள் தினத்தில் அவ்வழிபாட்டில் கலந்துகொண்ட பெண்களை அவமானப்படுத்தியதற்கு பெண்கள் தினத்தை கொண்டாடிய அனைத்து சக்திகளும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும். அத்தோடு மனித உரிமை அமைப்புகள் இதற்கு எதிராக தம் எதிர்ப்பை தெரிவிப்பதோடு ஜெனிவா மனித உரிமை பேரவையில் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு தனது ஆதரவையும் நல்க வேண்டும். தமிழர் தாயகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும், செயற்பாட்டாளர்களும் தமிழர் தாயகத்தை சூழ்ந்துள்ள இருளினை கருத்தில் கொண்டு விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். அத்தகைய விழிப்பினை கடந்த வாரம் சாந்தனின் உடல் எடுத்துச் சென்றபோது காட்டியது போன்று ஒன்றுபட்ட சக்தியாக வெளிப்படுத்துவதற்கான காலம் உருவாகி வருகின்றது என்பதை உணர்ந்து தேசிய சிந்தனையோடு கூட்டாக செயற்படுவதையும் உறுதி செய்தல் வேண்டும் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/178312
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்
IND vs ENG: ஷுப்மன் கில், ஜெய்ஸ்வாலிடம் ரோஹித் ஷர்மா பின்பற்றும் தோனி அணுகுமுறை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விமல் குமார் பதவி, மூத்த விளையாட்டு நிருபர், தர்மசாலாவிலிருந்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் சில மாதங்களுக்கு முன்பு, தென்னாப்பிரிக்க தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள ஒரு ஓட்டலில் கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மான் கில்லுடன் காபி குடித்துக்கொண்டிருந்தபோது, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் பற்றிப் பேசப்பட்டது. அது ஐபிஎல் மினி ஏலத்திற்கு அடுத்த நாள், ரோஹித் தனது பழக்கமான பாணியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டன் கில்லுக்கு தலைமைத்துவம் குறித்து சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். இந்த செய்தியாளர் அருகில் நின்று இவற்றையெல்லாம் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். ரோஹித், ஒரு மூத்த சகோதரரைப் போல, கில்லிடம் விளக்குகிறார், "தம்பி, நீங்கள் இந்தியா அணி கேப்டனாக விரும்பினால், பேட்டிங்கில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதைத் தவிர, ஐபிஎல் கேப்டன்சியிலும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், அதை நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்," எனப் பேசிக் கொண்டிருந்தார். தரம்சாலா டெஸ்டின்போது இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுவது அவசியமாகிறது. ஏனெனில் ஷுப்மான் கில்லின் மூன்றாவது டெஸ்ட் சதத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு வீரர் இருக்கிறார் என்றால், அது கேப்டன் ரோஹித் சர்மாதான். ரோஹித் - கில் இடையிலான ஒற்றுமை பட மூலாதாரம்,GETTY IMAGES உண்மையில், பல வழிகளில், தனது ஆரம்ப நாட்களில் ரோஹித் கொண்டிருந்த மிகவும் திறமையான பேட்ஸ்மேனுக்கு உரிய அம்சங்களை ஷுப்மன் கில்லிடமும் காணலாம். தற்செயலாக, கில் தனது 24வது டெஸ்டில் விளையாடி, இதுவரை மூன்று டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். மேலும் ரோஹித்தும் தனது முதல் 24 டெஸ்டில் 3 சதங்களை மட்டுமே அடித்துள்ளார். இதன் பொருள் என்னவென்றால், ரோஹித்தை போலவே, கில் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆரம்ப கட்ட சவால்களைச் சமாளிக்க நேரம் எடுத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் புகழ்பெற்ற கபா டெஸ்டில் 91 ரன்களில் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி கில் ஒரு பிரகாசமான எதிர்கால நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்ததைப் போல, ரோஹித் முதல் இரண்டு டெஸ்டில் இரண்டு சதங்களை அடித்திருந்தார். ரோஹித் மிடில் ஆர்டரை விட்டு வெளியேறி, பின்னர் ஒரு தொடக்க ஆட்டக்காரராக ஆனார். அவரது ஆட்டம் நிலையானதாக மாறியதால், கில் தொடக்க ஆட்டக்காரராக இருந்து விலகி இப்போது மிடில் ஆர்டருக்கு மாறினார், அதன் காரணமாக அவரது ஆட்டமும் சீராகி வருகிறது. கோலியின் இடத்தை நிரப்புவாரா கில்? பட மூலாதாரம்,GETTY IMAGES இதை வெறும் தற்செயல் என்று கூறலாம், நடப்பு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் ஜெய்ஸ்வாலுக்கு பிறகு அதிக ரன்களை குவித்து 400 ரன்களை கடந்துள்ளனர். விராட் கோலி போன்ற வீரர் இல்லாத நிலையில், அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனாக அதிக பொறுப்புகளை ஏற்க ரோஹித்துக்கு சவால் விடப்பட்டது. அதனால், கில் ஒரு டெஸ்ட் தொடரிலாவது தனது ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டும் என்ற அழுத்தத்தில் இருந்தார். ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருக்கும் கோலியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் உண்மையான வாரிசாக கில் பார்க்கப்படுகிறார். வெள்ளிக்கிழமை, இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் பேட்டிங் செய்ய வெளியே வந்தபோது, இருவரும் வெவ்வேறு பாணிகளைக் கொண்டிருந்தனர். குறிப்பாக கில் மிகவும் ஆக்ரோஷமாகத் தெரிந்தார், அவர் தனது கேப்டனுக்கு முன்பாகத் தனது சதத்தை நிறைவு செய்வார் எனத் தோன்றியது. அது நடக்கவில்லை. ஆனால் இந்த தொடரில், இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் தங்கள் இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்தனர். இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணியை மிகவும் வலுவான நிலையில் வைத்தனர். இந்தக் காலகட்டத்தில் ரோஹித் பல சிறந்த சாதனைகளைப் படைத்துள்ளார். அவர் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 சதங்களை அடித்துள்ளார், இது அவரது சமகாலத்தவர்களான முரளி விஜய் (61 போட்டிகளில்) மற்றும் அஜிங்க்யா ரஹானே (85 போட்டிகளில்) ஆகியோருக்கு சமம். இதுமட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட்டின் ஒவ்வொரு வடிவத்தையும் சேர்த்தால், அவர் ஒரு தொடக்க ஆட்டக்காரராக 43 சதங்கள் அடித்துள்ளார். இது கிறிஸ் கெயிலை விடவும், டெண்டுல்கர் (45), டேவிட் வார்னர் (49) ஆகியோரை விடவும் அதிகம். சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலை பற்றிப் பேசினால், கேப்டன் ரோஹித் சர்மா தனது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் 48 சதங்களை சமன் செய்துள்ளார். இப்போது கோலி (80), டெண்டுல்கர் (100 சதங்கள்) மட்டுமே அவரைவிட முன்னிலையில் உள்ளனர். புதிய தலைமுறையினரை நம்ப வேண்டிய நேரம் இது பட மூலாதாரம்,GETTY IMAGES கேப்டன் ரோஹித் ஷர்மா கில் உடன் இருப்பதைப் பார்த்தால், பஞ்சாபை சேர்ந்த இந்த வீரரை ரோஹித் மிகவும் உயர்வாக மதிப்பிடுவதை நீங்கள் உணர்வீர்கள். உலகக் கோப்பைக்கு சற்று முன்பு, இந்த எழுத்தாளர் ரோஹித் ஷர்மாவை நேர்காணல் செய்தபோது, திறமை என்ற ஒரு வார்த்தை உங்களுக்குத் தெரிந்தால், எந்த முகம் முதலில் உங்கள் நினைவுக்கு வரும் என்று ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார், ரோஹித் கண் இமைக்காமல் "கில்" என்று கூறினார். முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கோலி மற்றும் ரோஹித் போன்ற திறமையான வீரர்களின் ஆரம்பப் போராட்டங்களுக்கு மத்தியிலும் நம்பிக்கை வைத்து அவர்களுக்குச் சிறந்த வழிகாட்டுதலையும் அளித்த ஒரு காலம் இருந்தது. ஒருவேளை ரோஹித் இதை தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கலாம். மேலும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக, கில், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களை வித்தியாசமாக வழிநடத்த வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருக்கலாம். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதோடு, ஜெய்ஸ்வால், கில் ஆகியோர் அந்த முதிர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பதையும் கண்டு ரோஹித் மகிழ்வார். இதன் காரணமாக, ஒரு காலத்தில் தோனி ரோஹித்-கோலி மீது காட்டிய அதே நம்பிக்கையை டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய தலைமுறை பேட்ஸ்மேன்கள் மீதும் ரோஹித் காட்டலாம். https://www.bbc.com/tamil/articles/cj56qjq60rlo
-
யாழ். மத்திய கல்லூரிக்கும் - யாழ். பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி ஆரம்பம்.
வடக்கின் சமர் : சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு 39ஆவது வெற்றி 09 MAR, 2024 | 02:58 PM (நெவில் அன்தனி) யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (09) மதிய போசன இடைவேளைக்கு சற்று பின்னர் நிறைவுக்கு வந்த சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான 117ஆவது வடக்கின் சமரில் 10 விக்கெட்களால் சென். ஜோன்ஸ் இலகுவாக வெற்றிபெற்றது. இதன் மூலம் வடக்கின் சமரில் 39ஆவது வெற்றியைப் பதிவு செய்த சென். ஜோன்ஸ் கல்லூரி, வடக்கின் சமர் தொடரில் 39 - 28 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. 79 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் விக்கெட் இழப்பின்றி 81 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. இதன் மூலம் கடந்த வருட தோல்வியை சென். ஜோன்ஸ் நிவர்த்தி செய்துகொண்டது. துடுப்பாட்டத்தில் அபிஜோய்ஷாந்த் 10 பவுண்டறிகள் உட்பட 50 ஓட்டங்களுடனும் அண்டசன் சச்சின் 3 பவுண்டறிகள் உட்பட 30 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். முன்னதாக தனது இரண்டாவது இன்னிங்ஸை போட்டியின் மூன்றாம் நாளான இன்று (09) காலை 9 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த யாழ். மத்திய கல்லூரி மொத்த எண்ணிக்கை 149 ஓட்டங்களாக இருந்தபோது கடைசி விக்கெட்டை இழக்க இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. விசேட விருதுகள் சிறந்த துடுப்பாட்ட வீரர்: சகாதேவன் சயந்தன் (யாழ். மத்திய கல்லூரி) சிறந்த பந்துவீச்சாளர்: அருள்சீலன் கவிஷன் (சென். ஜோன்ஸ்) சிறந்த சகலதுறை வீரர்: நேசகுமார் எபநேசர் ஜெஸியால் (சென். ஜோன்ஸ்) சிறந்த விக்கெட் காப்பாளர்: சங்கீத் க்ரேம்ஸ்மித் (சென் ஜோன்ஸ்) சிறந்த களத்தடுப்பாளர்: ஜெயச்சந்திரன் அஷ்னாத் (சென். ஜோன்ஸ்) ஆட்டநாயகன்: உதயனன் அபிஜோய்ஷாந்த் (சென் ஜோன்ஸ்) எண்ணிக்கை சுருக்கம் யாழ். மத்திய கல்லூரி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 157 (சகாதேவன் சயந்தன் 55, ரஞ்சிதகுமார் நியூட்டன் 24, சதாகரன் ஸ்மில்டன் 22, அருள்சீலன் கவிஷன் 34 - 5 விக்., குகதாஸ் மாதுளன் 52 - 3 விக்.) சென். ஜோன்ஸ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 228 (நேசகுமார் ஜெய்ஸால் 53, அண்டசன் சச்சின் 40, உதயனன் அபிஜோய்ஷாந்த் 39, மகேந்திரன் கிந்துஷன் 22, முர்ஃபின் ரெண்டியோ 22, தகுதாஸ் அபிலாஷ் 24 - 5 விக்., முரளி திசோன் 64 - 4 விக்.), யாழ். மத்திய கல்லூரி 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 149 (நிஷாந்தன் அஜய் 23, சதாகரன் சிமில்டன் 21, சுதர்ஷன் அனுஷாந்த் 20, விக்னேஸ்வரன் பாருதி 20, ஸடான்லி சம்சன் 19 - 2 விக்., கிருபானந்தன் கஜகமன் 28 - 2 விக்., ஜெயச்சந்திரன் அஷ்னாத் 30 - 2 விக்.) சென். ஜோன்ஸ் (வெற்றி இலக்கு 79) 2ஆவது இன்: விக்கெட் இழப்பின்றி 81 (உதயனன் அபிஜோய்ஷாந்த் 50 ஆ.இ., அண்டசன் ஸ்மித் 30 ஆ.இ.) https://www.virakesari.lk/article/178315