Everything posted by ஏராளன்
-
மாணவர் சேர்க்கை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிக்கை!
பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் படி, விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் அதிபர்கள் நேர்முகப்பரீட்சை நடத்தி மாணவர்களை சேர்த்துக் கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே பாடசாலைகளில் ஆறாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 2024 ஆம் ஆண்டில், தரம் 1, 5 மற்றும் 6 தவிர இடைநிலை வகுப்புகளுக்கு க.பொ.த (உயர்தரம் உட்பட) மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட வேண்டும். அந்த பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருந்தால், அதிபர்களால் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின்படி நேர்காணல்கள் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் கல்வி அமைச்சின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அத்துடன், பாடசாலைகளுக்கான மாணவர் சேர்க்கை கடிதங்களை கல்வி அமைச்சு வௌியிடாது எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/292409
-
யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
Published By: DIGITAL DESK 3 19 FEB, 2024 | 02:00 PM யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (19) ஆட்சேபனை அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கல்லூரிக்கு முன்பாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிக்காத வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 208 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க ஒரு ஆண்கள் பாடசாலையில் முதல் முறையாக பெண் அதிபரை நியமிப்பதற்கு ஆட்சேபனை செய்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அத்தோடு கல்லூரியின் அதிபராக செயற்பட்ட எஸ்.இந்திரகுமாரை மீண்டும் நியமிக்குமாறு மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பிரச்சினைக்கு சரியான ஒரு தீர்வை விரைவில் பெற்றுத்தருவதாக கடற்றொழில் அமைச்சரும், கல்லூரியின் பழைய மாணவருமான டக்ளஸ் தேவானந்தா உறுதி வழங்கியதாக பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/176754
-
மின் கட்டண குறைப்பு தொடர்பான பிரேரணை மீளாய்வு!
மின்சார கட்டணக் குறைப்பு தொடர்பான பிரேரணையை மீளாய்வு செய்து சமர்ப்பிக்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட பிரேரணையை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவிடம் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இடம்பெற்ற மக்கள் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கையின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்போது, சுமார் 40 பேர் தமது யோசனைகளை சமர்ப்பித்த நிலையில், இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்ட கட்டணக் குறைப்பு வீதத்தை விடவும் அதிக வீதத்தில் கட்டணக் குறைப்பை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். இந்த விடயங்கள் அனைத்தையும் பரிசீலித்து, மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனையை மீள்பரிசீலனை செய்து திருத்தம் செய்ய வேண்டுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, தற்போதைய மின்சார கட்டணத்தை 20 முதல் 25 வீதம் வரை குறைக்க முடியும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் மற்றும் இலங்கை மின்சார சபையின் அண்மைய நிதிநிலை அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலான மீளாய்வின் பிரகாரம் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, மின் கட்டணத்தை அடுத்த மாதத்திற்கு முன்னதாக திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/292264
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இரத்துச் செய்ய நடவடிக்கை!
Published By: DIGITAL DESK 3 19 FEB, 2024 | 10:58 AM காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. உள்ளுராட்சி மன்ற முன்னாள் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்ய கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சு ஆலோசனைக் குழு ஏகமனதாக தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/176731
-
தலை மன்னாரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை
இலங்கை: தலைமன்னாரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 17 பிப்ரவரி 2024 இலங்கை தலைமன்னார் பகுதியில் 10 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக, சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர் தனது போலியான அடையாளத்துடன் தலைமன்னார் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பணியாற்றி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமி எப்படி உயிரிழந்தார்? யார் அந்த நபர்? என்ன சொல்கிறார்கள் காவல்துறையினர்? நடந்தது என்ன? மன்னார் - தலைமன்னார் பகுதியில், உயிரிந்த 10 வயது சிறுமியும், அவரது நான்கு சகோதரர்களும், தங்களின் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் புத்தளம்-பூங்குளம் பகுதியில் தொழில் செய்து வருகின்றனர். அதனால், அவர்களின் ஐந்து குழந்தைகளும் தங்களின் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 15) அன்று மாலை, இந்த 10 வயத சிறுமி அருகில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளார். வர்த்தக நிலையத்திற்கு சென்ற சிறுமி, நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அதனையடுத்து, அவரது உறவினர்களை, அவரை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். பல மணித்தியாலங்கள் தேடல் தொடர்ந்த போதிலும், சிறுமி தொடர்பான எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை. இதையடுத்து, சிறுமியின் பாட்டி உள்ளிட்ட உறவினர்கள், தலைமன்னார் போலீஸ் நிலையத்தில் அன்று மாலையே புகார் செய்துள்ளனர். தொடர்ந்து, தலைமன்னார் போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து, சிறுமியை தேடியுள்ளனர். எனினும், சிறுமி தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, போலீசார் அருகிலுள்ள சிசிடிவி கமராக்களை ஆராய்ந்துள்ளனர். அதில், சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர், சிறுமியைப் பின்தொடர்ந்து செல்வதை போலீசார் கண்டறிந்தனர். சிறுமியைப் பின்தொடர்ந்து சென்ற நபர், அப்பகுதியில் உள்ள தென்னை தோட்டத்தில் வேலை செய்யும் நபர் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர் பட மூலாதாரம்,GETTY IMAGES பெயர் மாற்றி வாழ்ந்த வந்த சந்தேக நபர் சந்தேகத்திற்கிடமான வைகயில் சிறுமியை பின்தொடர்ந்த நபர், திருகோணமலை-குச்சவெளி பகுதியைச் சேர்ந்த கே.வி.அப்துல் ரகுமான்(52) என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அவரது அனைத்து அடையாள அட்டையிலும், அவரது பெயர் கே.வி அப்துல் ரகுமான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவர் விஜேந்திரன் என்ற பெயரிலேயே வாழ்ந்து வந்ததாகவும் போலீசார் கூறினர். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள தென்னைத் தோட்டம் ஒன்றில், காணாமல் போன 10 வயது சிறுமியின் சடலம் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டாரா? சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர். காணாமல் போன சந்தர்ப்பத்தில் சிறுமி பெண்கள் அணியும் நீளமான சட்டையொன்றை அணிந்திருந்த நிலையில், சிறுமி அரை நிர்வாணமாக மீட்கப்பட்டார் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலத்தில் காணப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு வருகைத் தந்த மன்னார் மாவட்ட நீதவான், விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். அத்துடன், மன்னார் மாவட்ட சட்ட மருத்துவ அதிகாரியும் சம்பவ இடத்தில் ஆய்வுகளை நடத்தியுள்ளதாக போலீசார் குறிப்பிடுகின்றனர். இந்த விசாரணைகளை அடுத்து, சடலம் மன்னார் மாவட்ட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் போலீசார் ஆரம்பித்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி போராட்டம் சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி தலைமன்னார் பகுதியில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வீதியை மறித்து இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். சிறுமியை கொலை செய்த குற்றவாளி உடனடியாக தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தி பிரதேச மக்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர். அத்துடன், இந்த குற்றவாளிக்கு விரைவில் உரிய தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் வகையிலான மகஜரொன்றை பிரதேச மக்கள் நீதவானிடம் வழங்கியுள்ளனர். இவ்வாறான சம்பவங்களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? படக்குறிப்பு, இளையதம்பி தம்பையா, மூத்த வழக்கறிஞர் சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர் தொடர்ச்சியாக அவதானத்துடன் இருப்பது இந்த காலப் பகுதியில் அத்தியாவசியமானது என மூத்த வழக்கறிஞர் இளையதம்பி தம்பையா பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். அத்துடன், இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பெற்றோர் சிறுவர்களுக்கு தெளிவூட்டி வைத்தல் மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிடுகின்றார். இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட சிறுவர்களுக்கு எதிராக வன்முறைகள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான தெளிவூட்டல்களை பெற்றுக்கொள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அவசர தொலைபேசி இலக்கமான 1929 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புக் கொள்ள வேண்டும். https://www.bbc.com/tamil/articles/cw0rk2y74ero
-
பாடசாலை முதலாம் தவணை இன்று ஆரம்பம்
Published By: DIGITAL DESK 3 19 FEB, 2024 | 08:51 AM அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2024ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்கான முதலாம் தவணை இன்று (19) ஆரம்பமாகியது. பாடசாலைகளின் மூன்றாம் தவணை கடந்த 16 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. 2023ஆம் ஆண்டுக்கான 3ஆம் தவணை விடுமுறை டிசம்பர் 22ஆம் தகதி முதல் பெப்ரவரி 02ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது. அத்துடன், கொவிட் தொற்று பரவல் காரணமாக மாற்றமடைந்த பாடசாலை தவணை முறைகளை, 2025ஆம் ஆண்டு முதல் சீரமைக்க கல்வி அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/176722
-
இந்திய மீனவர்களின் தொல்லை : இந்தியா தூதரகத்தை முற்றுகையிட முடிவு - யாழ்ப்பாண மீனவ அமைப்புக்கள் தெரிவிப்பு
Published By: VISHNU 19 FEB, 2024 | 02:30 AM இந்தியா மீனவர்களின் எல்லை தாண்டிய அத்துமீறிய மீன்பிடி தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் தமக்கான தீர்வை பெற்றுத் தருமாறு கோரி யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தை செவ்வாய்க்கிழமை (20) முற்றுகையிட மீனவ அமைப்புகள் முடிவு செய்துள்ளன. யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், எமது கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களில் அத்துமீறல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. எமது வளங்கள் நாளுக்கு நாள் தொடர்ச்சியாகச் சூறையாடப்படும் நிலையில் எமது வாழ்வாதாரங்களும் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் பல தடவைகள் இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் கோரிக்கை விடுத்தோம் எமக்கு உங்கள் உதவிகள் வேண்டாம் எமது வளத்தை இந்திய மீனவர்களிடம் இருந்து பாதுகாத்து தருமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தோம் ஆனால் அது நடைபெறவில்லை. தற்போது இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் தமது மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக இலங்கை கடற்பரப்பு சென்றார்கள் கைது செய்து விட்டார்கள் விடுவிக்குமாறு கோரிக்கை விடுகிறார்கள். நாங்கள் அவர்களிடம் ஒன்றை கூற விரும்புகிறோம் நீங்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வருவது பாரிய குற்றம் மட்டுமல்லாது எமது மீனவர்களின் வாழ்க்கையை அழிக்கிறீர்கள். ஆகவே இந்திய மீனவர் மீனவர்களின் வருகையை நிறுத்துமாறு கோரி யாழ் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர். குறித்த ஊடக சந்திப்பில் யாழ் மாவட்ட கிராமிய கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், சமாசங்கள் மற்றும் சம்மேளங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/176716
-
அமெரிக்காவை அச்சுறுத்தும் ரஷ்யாவின் புதிய ஆயுதம் - நவீன போர்க்களமாக மாறுகிறதா விண்வெளி?
பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜெஆர் பதவி, பிபிசி செய்திகள், வாஷிங்டன் 17 பிப்ரவரி 2024 ரஷ்யா ஒரு புதிய ஆயுதத்தை உருவாக்கி வருவதாகவும், அது தனக்கு கவலையளிப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. எனினும், அந்த ஆயுதத்தை ரஷ்யா இன்னும் பயன்படுத்தவில்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரின் அறிக்கைக்கு ஒரு நாள் பிறகு, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி இதனைத் தெரிவித்தார். இந்த ஆயுதம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் என குடியரசுக் கட்சி எம்.பி., ஜான் கிர்பி, பிரதிநிதிகள் சபையில் எச்சரித்துள்ளார், இந்த ஆயுதத்தை விண்வெளியில் பயன்படுத்த முடியும் என சிபிஎஸ் செய்தி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் அணுசக்தி பொருத்தப்பட்டு செயற்கைக்கோள்களை தாக்க பயன்படுத்த முடியும். இந்த தகவலை ஜான் கிர்பி உறுதிப்படுத்தவில்லை. மேலும், இந்த அச்சுறுத்தல் குறித்த கூடுதல் தகவல்களை வழங்க அவர் மறுத்துவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES மறுபுறம், அமெரிக்காவின் கூற்றை மறுத்துள்ள ரஷ்யா, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமெரிக்க காங்கிரஸை கட்டாயப்படுத்தி, உக்ரைனுக்கு கூடுதல் நிதியை எப்படியாவது ஏற்பாடு செய்வதற்கான கூட்டுச்சதி இது என ரஷ்யா கூறியுள்ளது. சமீபத்தில், ஜான் கிர்பி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்த ஆயுதம் குறித்து பேசிய அவர், அமெரிக்க மக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். “நாங்கள் மனிதர்களைத் தாக்கும் ஆயுதம் அல்லது பூமியில் ஏதேனும் தீங்கு விளைவிக்கக் கூடிய ஆயுதம் குறித்து பேசவில்லை,” என்று கூறினார். இது குறித்து அதிபர் ஜோ பைடனுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறும், ஜான் கிர்பி, பைடன் தலைமையிலான அரசு இந்தப் பிரச்னையை 'மிகவும் தீவிரமாக' எடுத்துக் கொண்டதாகக் கூறினார். இந்த விவகாரத்தில் ரஷ்யாவுடன் நேரடி இராஜ தந்திர தொடர்பை ஏற்படுத்த அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES பிரதிநிதிகள் சபையின் புலனாய்வுக் குழுத் தலைவர் மைக் டர்னர் புதன்கிழமை அன்று தேசிய பாதுகாப்பு எதிர்கொள்ளும் கடுமையான சவால்கள் குறித்த சமிக்ஞைகளை எச்சரித்தார். அவரது அறிக்கைக்குப் பிறகு, அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் வசந்திகள் பரவத் தொடங்கின. இருப்பினும், விண்வெளி ஆயுதங்களைப் பற்றி பேசும் போதெல்லாம், ஒரு அறிவியல் புனைகதை நாவல் குறிப்பிடப்படுவது போல் தெரிகிறது. ஆனால், தொழில்நுட்பத்தை சார்ந்து இருக்கும் உலகில் விண்வெளி அடுத்த போர்க்களமாக இருக்கும் என்று ராணுவ வல்லுநர்கள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர். அமெரிக்க இதை எப்படி அணுகுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES ஜான் கிர்பியின் கருத்துகளைத் தவிர, அமெரிக்க அரசு அதிகாரிகள் இந்த அச்சுறுத்தல் பற்றிய எந்த உறுதியான தகவலையும் இன்னும் வெளியிடவில்லை. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், அமெரிக்க அரசு தெரிந்தே மெளனமாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அச்சுறுத்தல் பற்றிய தகவல்களை சேகரிக்க அமெரிக்க உளவு அமைப்புகள் செயல்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். நியூயார்க் டைம்ஸ், ஏபிசி மற்றும் சிபிஎஸ் போன்ற செய்தி நெட்வொர்க்குகள் தங்கள் அறிக்கைகளில், இந்த அச்சுறுத்தல் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் ஆயுதத்தால் வந்ததாகக் கூறியது. இது விண்வெளியில் அமெரிக்க செயற்கைக்கோள்களைத் தாக்க பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் அமெரிக்கா இந்த அச்சுறுத்தலை 'மிக தீவிரமாக' எடுத்துக் கொள்கிறது என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES பல ஆண்டுகளாக ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவுடன் போட்டியிட விண்வெளியில் தங்கள் ராணுவத் திறன்களை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்க அதிகாரிகளும், விண்வெளி நிபுணர்களும் கூறி வருகின்றனர். அமெரிக்காவின் சிந்தனைக்குழுவான ஸ்ட்ராடிஜிக் அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ்(Strategic and International Studies), கடந்த ஆண்டு வெளியிட்ட ஒரு அறிக்கையில், ரஷ்யா செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்களை உருவாக்கி வருவதாகக் கூறியிருந்தது. நவம்பர் 2021 இல், செயலிழந்த ஒரு சோவியத் கால செயற்கைக்கோளுக்கு எதிராக ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட ஒரு சம்பவத்தையும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது. இந்த அறிக்கையின் ஆசிரியர்களின் ஒருவரும், அமெரிக்க பாதுகாப்புத்துறையின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியுமான பிங்கன் பிபிசியிடம் பேசுகையில், உக்ரைனுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யா ஏற்கனவே பல வழிகளை முயற்சித்துள்ளதாகக் கூறினார். அவர்களின் முயற்சியில் செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை சீர்குலைக்க சைபர் தாக்குதல் நடத்துவதும் அடக்கும் என்றார் பிங்கன். "இவை அனைத்தும் ஏற்கனவே ரஷ்யாவின் தாக்குதல் முறைகளில் உள்ளன,"என்றார் அவர். ரஷ்யாவின் புதிய ஆயுதத்தால் அமெரிக்காவுக்கு என்ன அச்சுறுத்தல்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்கப் புலனாய்வுக்குழுத் தலைவர் மைக் டர்னர், ரஷ்யாவின் புதிய ஆயுதம் குறித்து ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார். அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் உள்ளிட்ட அமெரிக்க காங்கிரஸின் மூத்த தலைவர்கள், மக்களை இப்போதே எச்சரிக்க வேண்டியதற்கான அவசியம் இல்லை என்றும் கூறுகிறார்கள். மைக் டர்னர் மக்களை எச்சரித்ததற்காக விமர்சனங்களை எதிர்கொள்கிறார். அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த ஆண்டி ஓகல்ஸ் இது அலட்சியம் என்று கூறியுள்ளார். எவ்வாறாயினும், அமெரிக்க செயற்கைக்கோள்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுமானால் அது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்களும், முன்னாள் அரசு அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர். அமெரிக்க ராணுவம் செயற்கைக்கோள் தகவல் தொடர்பைத்தான் பெருமளவு நம்பியுள்ளது. அதில், கண்காணிப்பு, ஏவுகணை ஏவுதல்களைக் கண்டறிதல், வான் மற்றும் கடல் தாக்குதல் முதல் ஜிபிஎஸ் வழிகாட்டுதல் மூலம் இலக்கை தாக்கும் குண்டுகள் மற்றும் போர்க் களத் தொடர்பு வரை அனைத்திற்கும் செயற்கைக்கோள்களைத்தான் அமெரிக்கா பயன்படுத்துகிறது. பட மூலாதாரம்,REUTERS காரி பிங்கன் அமெரிக்க பாதுகாப்புத் துறையில் இரண்டாவது உயர் மட்ட உளவுத்துறை அதிகாரியாக இருந்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில்,"இன்று நமது ராணுவம் போராடும் விதம் மற்றும் நாம் முதலீடு செய்யும் ஆயுதங்கள் அனைத்தும் நமது விண்வெளி திறன்களைப் பொறுத்தது. அது இல்லாவிட்டால், நாம் ஒரு கடினமான சூழ்நிலையில் இருப்போம். நாங்கள் இப்படி போராடக் கற்றுக்கொண்டோம். எங்களால், அது இல்லாமல் போராட முடியாது,” என்றார். இருப்பினும், ராணுவத் தேவைகளைத் தவிர, ஜிபிஎஸ் போக்குவரத்து சேவை, உணவு விநியோகம் மற்றும் வானிலை தகவல் போன்ற பல இடங்களில் செயற்கைக்கோள்களும் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயம் முதல் சிக்னல் சார்ந்த நிதி பரிவர்த்தனைகள் வரை அனைத்திலும் இது தேவைப்படுகிறது. தொடர்ந்து பேசிய காரி பிங்கன்,"செயற்கைக்கோள்கள் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். அமெரிக்கர்களும் உலகெங்கிலும் உள்ள மக்களும் விண்வெளியை நம்பியிருக்கிறார்கள்," என்றார். விண்வெளி ஆயுதங்கள் தொடர்பாக உள்ள விதிகள் என்ன? பட மூலாதாரம்,AIRBUS கோட்பாட்டளவில் அவர்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாது என்றாலும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்கனவே உலகம் முழுவதும் உள்ள செயற்கைக்கோள்களை தாக்கும் திறன் உள்ளது. மூன்று நாடுகளும் 1967 விண்வெளி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன, அதன் மூலம் ஆயுதம் ஏந்திய எதையும் பூமியின் சுற்றுப்பாதையில் அனுப்ப முடியாது. தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், இந்த ஒப்பந்தம் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை என்று முன்னாள் அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரியான மிக் முல்ராய் கூறினார். "ரஷ்யா தான் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை முற்றிலும் புறக்கணித்துள்ளது. அது அனைத்து சர்வதேச விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறி உக்ரைனுக்கு எதிராக ராணுவ பலத்தை பயன்படுத்தியது. அந்த நாடு தனது சொந்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை,"என்றார் அவர். நவீன போர்க்களமாக மாறுகிறதா விண்வெளி? அமெரிக்க மூலோபாய விவகார காங்கிரஸின் உறுப்பினரும், முன்னாள் அதிபர்களான புஷ், ஒபாமா மற்றும் டிரம்ப் ஆகியோரின் காலத்தில் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரியாக இருந்த மேத்யூ குரோனிங் பிபிசியிடம் பேசினார். அப்போது அவர், உலகெங்கிலும் உள்ள ராணுவ சக்திகள் விண்வெளியில் ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியமில்லை என்று கூறினார். "ஒரு காலத்தில், மனிதர்கள் விண்வெளியை ஆராய்ந்தனர். இப்போது நாம் விண்வெளியை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு சகாப்தத்தில் நுழைகிறோம், நாம் இன்னும் அதன் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம்," என்றார். இந்தக் கட்டத்தில், உலகெங்கிலும் உள்ள சக்திகள் விண்வெளியில் தங்கள் கட்டுப்பாட்டை நிறுவுவதில் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார். "வானமும் கடல்களும் இலவசம் மற்றும் வணிக ரீதியாக நாம் விரும்பியபடி பயன்படுத்த முடியும் என்பதை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்கிறோம்,” என்றார் மேத்யூ குரோனிங். "வரவிருக்கும் 30 ஆண்டுகளில் இதேபோன்ற இடத்தை நாம் பார்க்க விரும்புகிறோம், அங்கு சுதந்திரமான இருக்க முடியும், வர்த்தகம் செய்ய முடியும் மற்றும் அதை வாழக்கூடியதாக மாற்றவும் முடியும்." என்று கூறிய அவர், அது பாதுகாப்பான இடமாக இருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும் என்றார். https://www.bbc.com/tamil/articles/cqedjjpj9p3o
-
தேர்தலை பிற்போட ஜனாதிபதி சூழ்ச்சி செய்தால் பதவி காலம் நிறைவடைய முன் வீடு செல்ல நேரிடும் - அனுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை
Published By: VISHNU 19 FEB, 2024 | 02:14 AM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை நடத்த எதிர்வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் நடத்த வேண்டும்.தேர்தலை பிற்போட ஜனாதிபதி சூழ்ச்சி செய்தால் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி வீடு செல்ல நேரிடும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். குருநாகல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் தனது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி அறிய சோதிடம் பார்க்கிறார்கள்.சோதிடத்தில் ஏதேனும் பாதிப்புக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தால் அதற்கு பரிகாரம் செய்வார்கள்.அதன் பின்னர் தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும்,ராஜபக்ஷர்களுக்கும் வாக்களிக்கிறார்கள்.பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பரிகாரம் செய்து விட்டு ராஜபக்ஷர்களுக்கு வாக்களித்தால் பரிகாரம் எவ்வாறு சாத்தியமடையும். 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்ட மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 5 இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளை வழங்கினார்கள்.இதனால் என்ன பயன் கிடைக்கப் பெற்றது என்பதை குருநாகல் மாவட்ட மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் வழங்கிய மக்களாணை இன்று முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனி ஆசனத்துடன் பாராளுமன்றத்துக்கு வந்தார்.நெருக்கடியான நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்றார் என்று பொதுஜன பெரமுனவினர் தற்போது புகழ்பாடுகிறார்கள்.2022 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சரவை பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் பதவியை ஏற்குமாறு கோட்டபய ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்தார்.அவர் அதனை ஏற்கவில்லை. அதன் பின்னர் கோட்டபய ராஜபக்ஷ,சரத் பொன்சேகாவிற்கு அழைப்பு விடுத்தார்.மூன்;று நாட்களுக்கு பின்னர் பதிலளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.மூன்று நாட்கள் கூட நெருக்கடியை சமாளிக்க முடியாத நிலையில் கோட்டபய ராஜபக்ஷ,ரணில் வி;க்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்தார் அவர் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரசாரங்களில் 'மத்திய வங்கியின் பிரதான சூத்திரதாரியான ரணிலை சிறைக்கு அனுப்புவோம்' என்பது பொதுஜன பெரமுனவின் பிரதான அரசியல் வாக்குறுதியாக அமைந்தது.ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவே 2019 ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும்,2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் மக்கள் ராஜபக்ஷர்களுக்கு ஆணை வழங்கினார்கள்.ஆகவே தனக்கு எதிரான மக்களாணையில் ஆதிக்கம் செலுத்துவதையிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெட்கப்பட வேண்டும்.ராஜபக்ஷர்களின் நம்பிக்கையான பாதுகாவலன் ரணில் விக்கிரமசிங்க என்பதால் பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தது. அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.ஜனாதிபதி தேர்தல் நெருங்குகின்ற நிலையில் தான் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை என்பதொன்று நாட்டில் அமுலில் உள்ளது என்பது ஜனாதிபதிக்கு நினைவுக்கு வந்துள்ளது.நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை தேவையா,இல்லையா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.மக்களாணை இல்லாத இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தீர்மானிக்க முடியாது. ஜனாதிபதி தேர்தலை பிற்போட்டு தனது பதவி காலத்தை நீடித்துக் கொள்ள ஜனாதிபதி முயற்சித்தால் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் அவர் வீடு செல்ல நேரிடும்.ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலை உரிய காலத்தில் நடத்தாவிடின் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என்றார். https://www.virakesari.lk/article/176714
-
புதினை கடுமையாக எதிர்த்த நஞ்சூட்டபட்ட அலெக்ஸி நவல்னி இறப்பு
கணவர் மறைந்த பின் அலெக்ஸி நவல்னியின் மனைவி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள முதல் பதிவு Published By: DIGITAL DESK 3 19 FEB, 2024 | 10:46 AM சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவல்னியின் மனைவி யூலியா நவல்னாயா, தனது கணவர் குறித்து சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். யூலியா நவல்னாயா தனது கணவர் உயிரிழந்து இரண்டு நாட்களின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அலெக்சி நவல்னியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், "நான் உன்னை காதலிக்கிறேன்" (I Love You) என ரஷ்ய மொழியில் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார். மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ், நவல்னியின் மரணத்தை உறுதிப்படுத்தினார். மேலும், அவரது உடலை உடனடியாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு கோரியதோடு, உடலை ஒப்படைக்க தாமதப்படுத்த ரஷ்ய அதிகாரிகள் பொய் உரைப்பதாகவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176725
-
நம் முன்னோர்கள் நரமாமிசம் உண்டது ஏன்? நாம் ஏன் அதைக் கைவிட்டோம்?
பட மூலாதாரம்,NETFLIX கட்டுரை தகவல் எழுதியவர், ஜோஸ் லூயிஸ் குயில் குரேரோ பதவி, தி கன்வர்ஷேசன் 18 பிப்ரவரி 2024, 07:40 GMT கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ’. இந்தப் படம், அதீதமான ஒரு சூழ்நிலையில் மக்கள் நரமாமிசம் உண்பதைப் பற்றிப் பேசுகிறது. ஆண்டிஸ் மலைத்தொடரில் விமான விபத்தில் சிக்கிய உருகுவே நாட்டு மக்கள் குழுவின் உண்மைக் கதை அது. அந்தக் குழுவினர், தங்களுடன் பயணித்த தோழர்களின் சடலங்களை உண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், படத்தில் வரும் பனிக்கட்டிகளின் பின்னணியில் நமக்குள் நாமே எதிர்கொள்ளும் ஒரு கேள்வியும் எழுகிறது: நாம் எப்போது, எந்த நேரத்தில், மனித மாமிசத்தை சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்? ஹோமினிட் ஆகிய நாம், நமது பரிணாம வரலாற்றின் பல்வேறு காலக்கட்டத்தில் அதைச் செய்துள்ளோம். ஒரு வேளை, அது அந்தக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட தேவையின் காரணமாகக் கூட நாம் அதைச் செய்திருக்கலாம். நரமாமிசம், மனித பரிணாமத்தின் ஒரு பகுதி சுமார் 14.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, கென்யாவில், நம் முன்னோர்கள் ஒருவரை ஒருவர் அறுத்துக் கொன்றனர் என்பதற்கான மிகப் பழமையான ஆதாரம் உள்ளது. கால் முன்னெலும்பில் உள்ள வெட்டுக் குறியின்படி, நம் முன்னோர்கள் ஒருவரை ஒருவர் சாப்பிட்டுள்ளனர். ஆனால், நரமாமிதத்தைப் பற்றிய மற்றொரு தகவல் என்னவென்றால், இந்தப் பழக்கம், தென்னாப்பிரிக்காவில் ப்ளியோ-ப்ளீஸ்டோசீன் காலத்தில், அதாவது சுமார் 25 முதல் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்த பழைய மனித இனத்திடமிருந்து வந்திருக்கலாம். இவர்களைத் தொடர்ந்து, பெரும்பாலான ஹோமினிட் இனத்தினர் (மனிதர்களை உள்ளடக்கிய குரங்குகளின் பரிணாமக் குடும்பம்), அடாபுர்காவின் ஹோமோ முன்னோர்கள் முதல், நியண்டர்தால்கள் முதல் வெவ்வேறு ஹோமோ சேபியன்ஸ் சமூகங்கள் வரை அனைவரும் நரமாமிசம் உண்டவர்கள் எனத் தெரிகிறது. உதாரணமாக, அமெரிக்காவில் கொலம்பஸ் பார்த்த முதல் பழங்குடியினர் நரமாமிசம் உண்பவர்கள் என்பதற்காக சான்றுகள் உள்ளன. சில பசிபிக் தீவுகள் உட்பட பிற புவியியல் பகுதிகளில், நரமாமிசம் சமீப காலம் வரை நடைமுறையில் இருந்தள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவில் கொலம்பஸ் பார்த்த முதல் பழங்குடியினர் நரமாமிசம் உண்பவர்கள் என்பதற்காக சான்றுகள் உள்ளன ‘நாம் வேட்டையாடுபவர்களாக இருந்தபோது நிறைய கொழுப்பு தேவைப்பட்டது’ நம்முடைய இனங்கள் மற்றும் நமக்கு முந்தைய உறவினர்கள், எந்த வகையான வாழ்விடத்திலும் வாழ பழகிக்கொள்ள வேண்டி இருந்தது. அந்தத் தன்மை, நமது உணவு முறையில் ஒரு தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பூமியின் துருவப் பகுதிகளில் உறைபனிக்காலங்களில், அப்பகுதியில் உள்ள விலங்குகள் உண்ணும் உணவின் விகிதம், வெப்பமான பகுதிகளில் இருக்கும் விலங்குகளின் உண்ணும் உணவின் விகிதத்த விட அதிகமாக இருந்தது. மேலும், அங்கு வாழ்வதற்கான முக்கிய ஆற்றலாக, விலங்கின் கொழுப்பு இருந்தது. இதற்கு மாறாக, தென் பிராந்தியங்களில், கார்போஹைட்ரேட் நிறைந்த தாவர உணவுகள் அதிகம் உண்ணப்படும். இதில், கொழுப்பைச் சார்ந்திருப்பது எப்போதும் இருந்து வந்துள்ளது. மற்ற காரணங்களுக்கிடையில், ஓமேகா-3 மற்றும் ஓமேகா-6 கொழுப்பு அமிலங்களை உட்கொள்ள வேண்டும். ஏனென்றால், இது, தற்கால மனிதர்கள் உள்ளிட்ட ஹோமினிட்களுக்கு மூளையின் சரியான செயல்பாட்டிற்கு அவசியமாகிறது. உண்மையில், ஒமேகா-3 இன் குறைபாடு பல்வேறு நோய் தொற்றுகளுக்கு வழிவகுக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES குதிரைகள் மற்றும் யானைகள் மான்களை விட அதிக ஓமேகா-3 ஐ கொண்டுள்ளன எளிய வயிற்றைக் கொண்ட பாலூட்டிகளில் (ஹோமினிட்கள், குதிரைகள், கரடிகள், யானைகள் மற்றும் மாமத்கள்) ஒமேகா-3 நிறைந்த தோலடி கொழுப்பு உள்ளது. மாறாக, சிக்கலான செரிமான அமைப்பு அல்லது ரூமினன்ட்கள் (ஆடுகள், கலைமான், மான் மற்றும் காட்டெருமை) கொண்ட விலங்குகளின் உடல்களில் உள்ள கொழுப்பில், இந்த வகை கொழுப்பு அமிலங்கள் குறைவாகவே காணப்படுகின்றது. இதிலிருந்து நமது முன்னோர்களின் ஊட்டச்சத்து நிலை பெரும்பாலும் அவர்களின் இரையின் தேர்வைப் பொறுத்தது. கற்கால ஹோமினிட்கள், வாழ்வாதாரத்திற்காக ஒரு சில வகையான விலங்குகளை நெருக்கமாகச் சார்ந்திருந்தனர் என்பதையும், தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததையும் நாம் அறிவோம். ஒமேகா-3 அமிலங்கள் நிறைந்த இரை அதிகமாகக் கிடைக்காதபோது என்ன நடந்தது? பதில்: ஆளி விதைகள், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஒத்த வளங்கள் போன்ற ஒமேகா-3 இன் பிற தாவர ஆதாரங்களை நம்பியிருந்திருக்கலாம். இருப்பினும், யூரேசியாவில், நீண்ட பனிக் குளிர்காலத்தில், தாவர வளங்களும் பற்றாக்குறையாகவே இருந்தன. இது ஒமேகா-3 குறைபாடு நோய்கள் அடிக்கடி வெளிப்படுவதற்கு காரணமாக இருந்திருக்கும், எனவே நீண்டகாலத்தில் ஹோமினிட் குழுவின் பரிணாம வளர்ச்சி சமரசம் செய்யப்பட்டிருக்கும். ஓமேகா-3 குறைபாடுக்கும் நரமாமிசத்திற்கும் என்ன தொடர்பு? இந்த அனைத்து காரணங்களுக்காகவும், யூரேசியாவில், கற்காலத்தில், மாமிச உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதுவும், குறிப்பாக, பனிக்காலங்களில், மனிதர்கள் அவற்றையே நம்பியிருந்தனர். கார்போஹைட்ரேட்டுகளின் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, விலங்குகளின் கொழுப்பை உண்பதன் மூலம் தேவையான ஆற்றல் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும். இந்த விலங்கின் கொழுப்பு, ஒரே நேரத்தில், தேவையான ஆற்றல், ஒமேகா-3, மற்றும் ஒமேகா-6 ஆகியவற்றையும் வழங்கியது. இருப்பினும், வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்டத்தில், ஹோமினிட்கள், அதிக இரைப்பை கொண்ட விலங்குகளை சர்ந்திருந்தனர். ஆனால், அவற்றில் தேவையான, ஒமேகா-3 இல்லை. இத்தகைய கடினமான சூழலில், ஹேமினிட்கள், ஒருவரையொருவர் சாப்பிட வேண்டிய தேவை ஏற்பட்டது. அது ஒமேகா-3 அளவை அவர்களுக்கு கூடுதலாக வழங்கியது. சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு, நியண்டர்தால்களும் நவீன மனிதர்களும் ஒருவரையொருவர் வேட்டையாடி சாப்பிட்டிருக்கலாம், அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்த ஹோமினிட்கள் ஒருவரையொருவர் சாப்பிட்டிருக்கலாம். உண்மையில், இந்தச் சூழ்நிலையில் மிகவும் சுவையான ஒன்றாக ஹோமினிட்களின் மூளை இருந்திருக்கக்கூடும். அளவில் பெரிதாக இருந்த அது, தேவையான டி.எச்.ஏ-வை வழங்கியிருக்கக்கூடும். இது ஒரு வகை ஒமேகா -3 கொழுப்பு அமிலமாகும். எனவே, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நரமாமிசம் உண்ணப்பட்டிருக்கக் கூடியதன் சாத்தியத்தை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம் என்றே தோன்றுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES பூமியின் எல்லா பகுதியிலும் நரமாமிசம் உண்ணும் பழக்கம் இருந்ததா? கற்கால யூரேசியாவில் ஒமேகா-3 அமிலத்தின் தேவைக்காக மனிதர்கள் நரமாமிசம் உண்டனர். சரி. ஆனால் ஒமேகா-3 அமிலங்கள் அதிகமாகக் கிடைத்த பிற சூழல்களிலும் நரமாமிசம் உண்ணப்பட்டிருக்குமா? ஆம் என்பதே பதில். பூமியின் தெற்குப் பகுதிகளில் ஒமேகா-3 அமிலங்களின் மூலங்களை அதிக அளவில் கிடைத்தாலும், மீன் அல்லது கொட்டைகள் போன்ற அமிலங்கள் நிறைந்த உணவுகள் எப்போதும் சரியான அளவில் கிடைத்திருக்காது. ஊட்டச்சத்து மூலம் என்ற வகையிலும், எளிதில் பெறக்கூடிய ஒரு உணவு என்ற வகையிலும் மனித உடல் இருந்ததால், நரமாமிசம் உண்ணும் வழக்கம் எப்போதும் ஹோமினிட்களின் உயிர்வாழ்விற்கு பரிணாம ரீதியாகச் சாதகமாகவே இருந்திருக்கும். ஆனால், இதனால் நாம் வன்முறை மற்றும் ஆக்கிரமிப்பு சார்ந்த இனம் என்பது பொருளல்ல. மாறாக நாம் ‘நிபந்தனைகள் சார்ந்து வன்முறையாக’ இருந்திருக்கிறோம். அதாவது, கிடைக்கக்கூடிய ஆதாரங்களைப் பொறுத்து நமது நடத்தை மாறியிருக்க வேண்டும். அடுத்த முறை நீங்கள் ஒரு பல்பொருள் அங்காடிக்குச் சென்று, மீன், வால்நட், அல்லது ஆளி எண்ணெய் போன்ற ஒமேகா-3 நிறைந்த உணவுகள் உட்பட பல்வேறு வகையான உணவுகளைப் பார்க்கும்போது, நம் முன்னோர்களின் வள பற்றாக்குறையின் நீண்ட வரலாற்றை சில நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள். * ஜோஸ் லூயிஸ் குயில் குரேரோ, அல்மேரியா பல்கலைக்கழகத்தில் உணவு தொழில்நுட்பப் பேராசிரியராக உள்ளார். https://www.virakesari.lk/article/176674
-
கர்ப்பிணிப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்த கொடூரம் - ம.பி அதிர்ச்சி
18 FEB, 2024 | 10:28 AM மொரேனா: மத்தியப் பிரதேசம் மொரேனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணிப் பெண்ணை மூன்று ஆண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அந்தப் பெண்ணின் உடலில் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் வசித்து வந்திருக்கிறார். இந்தப் கர்ப்பிணி பெண்ணின் கண்வர் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கர்ப்பிணி பெண் தனது கணவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பெண்ணின் வீட்டுக்கு சமரசம் பேசுவதற்காக சென்றிருக்கிறார். இதையடுத்து அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்த மூன்று ஆண்கள் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதன் பிறகு குற்றம்சாட்டப்பட்ட மூன்று ஆண்களும் வீட்டில் இருந்த ஒரு பெண்ணும் சேர்ந்து அந்த கர்ப்பிணிப் பெண் மீது எரிபொருளை ஊற்றி எரித்துள்ளனர். மொரேனா மாவட்டத்தில் உள்ள அம்பா நகரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள சந்த்கா புரா கிராமத்தில் வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட பெண் 80 சதவீத தீக்காயங்களுடன் குவாலியரில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் இது தொடர்பான வீடியோ ஒன்றை காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/176651
-
இலங்கையில் குட்டி யானைகளை பலி கொள்ளும் 'அவுட்டுக்காய்' - 10 ஆண்டுகளில் 587 யானைகள் உயிரிழப்பு
பட மூலாதாரம்,RMJ BANDARA படக்குறிப்பு, மனிதக் குழந்தைகளைப் போலவே, குட்டி யானைகளும் ஆர்வத்தால் வாயில் பொருட்களை வைத்து கடிக்க முயல்கின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், சுனேத் பெரேரா பதவி, பிபிசி உலக சேவை 38 நிமிடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள புகைப்படங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு ருசியான மிகவும் இனிப்பான ஒரு பொருளை கடிப்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால், அதைக் கடித்த பின், உங்களின் கீழ் தாடை வெடித்து, அதிக வலி ஏற்படுகிறது. நீங்கள் வேதனையுடன் விலகிச் செல்லலாம். ஆனால், காயங்கள் ஆறாமல், அவை தொற்றுநோயாகும். பின், சாப்பிடவோ தண்ணீர் குடிக்கவோ முடியாமல், நீங்கள் பட்டினியால் வாடலாம். துரதிர்ஷ்டவசமாக, இலங்கையில் குட்டி யானைகளின் மரணத்திற்கு இந்த அவுட்டுக்காயே அதிக காரணம். 'ஹக்கா பட்டாஸ்' அல்லது தாடை பட்டாசுகள் என்றும் அழைக்கப்படும் இந்த வகை அவுட்டுக்காய், காட்டுப்பன்றிகளை உடனடியாக வேட்டையாடுவதற்காக வேட்டையாடுபவர்களால் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். சில விவசாயிகள் பயிர்களை அழிக்கும் பன்றிகள் உள்ளிட்டவற்றை கொல்லவும் அவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், யானைகள் பொதுவாக இந்த கொடிய காயால் பலியாகின்றன. இவை கடித்தால், வெடிக்கும். இந்தக் காய் மிகவும் வேதனையான மரணத்திற்கு வழிவகுக்கிறது. யானைகள் காட்டுப்பன்றிகளை விட பெரியதாக இருப்பதால், அவை வெடித்தபின் வாயில் காயங்களுடன் வலியுடன், பட்டினியால் இறக்கும் வரை பல நாட்கள் நடக்கின்றன, நிபுணர்களின் கூற்றுப்படி, இளம் யானைகள் இந்த வகை அவுட்டுக்காயால் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. 2023 ஆம் ஆண்டில், வீட்டில் தயாரிக்கப்பட்ட கருவியால் கொல்லப்பட்ட யானையின் வயது 10 மாதம். பட மூலாதாரம்,RMJ BANDARA படக்குறிப்பு, அவுட்டுக்காயால் காயமடையும் யானைகள் விரைவில் உயிரிழக்கின்றன. "மனிதக் குழந்தைகளைப் போலவே, ஆர்வத்தின் காரணமாக, குட்டி யானைகள் எதைக் கண்டாலும் கடிக்கின்றன. வாயில் பொருட்களை வைக்கும்போது அவை தொடுதல் மற்றும் சுவை உணர்வுகளை ஆராய்கின்றன," என்றார் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் அகலங்கா பினிடியா. இவர் இலங்கை வனவிலங்கு கால்நடை மருத்துவ சங்கத்தின் தலைவர். "மருத்துவ அறிக்கைகள் மற்றும் தரவுகளைப் பார்க்கும்போது, குட்டி யானை முதல் பெரிய யானை வரை தாடை குண்டுகளால் கொல்லப்பட்டதைக் காணலாம். இருப்பினும், பாதிக்கப்பட்ட யானைகளில் பெரும்பாலானவை இரண்டு முதல் பத்து வயதுடைய இளம் யானைகள்," என அவர் பிபிசியிடம் கூறினார். இலங்கையில் 2023 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, இதுவரை இல்லாத அளவில் யானைகளின் இறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில், 470க்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப்பட்டிருந்தன. அவுட்டுக்காயை எப்படித் தயாரிக்கிறார்கள்? சமன் குமார (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வட இலங்கையில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் தாடை வெடிகுண்டுகளை தயாரிக்கும் பலரில் ஒருவர். எளிதாகத் தயாரிக்கக் கூடியவை என்பதால், தன்னைப் போன்ற வேட்டைக்காரர்கள் அந்த பொருளை நாடுவதாக அவர் பிபிசியிடம் கூறினார். "நாங்கள் உள்ளூர் கடைகளில் இருந்து பட்டாசுகளை வாங்குகிறோம். பின்னர் நாங்கள் அவற்றில் இருந்து வெடி மருந்தை எடுத்து, அவற்றை சரளை மற்றும் உலோக குப்பைகளுடன் கலக்கிறோம்," என்றார் அவர். "நாங்கள் அவற்றை உருண்டைகளாக வடிவமைத்து பிளாஸ்டிக் பைகளில் கட்டி, பின்னர் காட்டுப்பன்றிகளை ஈர்ப்பதற்காக சர்க்கரை பனை பழங்கள், பூசணிக்காய்கள் அல்லது அழுகிய மீன்களைக் கொண்டு மூடுகிறோம்,"என்றார். பட மூலாதாரம்,MADAWA KULASOORIYA படக்குறிப்பு, தாடை வெடிகுண்டுகள், காட்டுப்பன்றிகளை புஷ்மீட்டிற்காக உடனடியாக கொல்ல வேட்டைக்காரர்கள் பயன்படுத்தும் வீட்டில் வெடிக்கும் சாதனங்கள். யானைகள் மீன்களை உண்ணாவிட்டாலும், சில பழங்கள் போன்ற தூண்டிலில் அவை சிக்கிக்கொள்வதாக குமார கூறினார். ஆனால், குட்டி யானைகளுக்கு தீங்கு விளைவிப்பது தனது நோக்கமல்ல என்றும் குமார விளக்கினார். "குழந்தைகள் எல்லாம் ஒன்றுதான். குட்டி காட்டுப்பன்றிகளாக இருந்தாலும் சரி, யானைக் குட்டிகளாக இருந்தாலும் சரி, அவை வாயில் பொருட்களை வைக்கும். அது அவர்களின் இயல்பு. அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது," என்றார் அவர். பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தாலும், வேட்டையாடுபவர்கள் வேட்டையாடுவதை நிறுத்துவதில்லை என்றார் குமார. "அவர்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க எளிதான வழிகளை மட்டுமே கண்டுபிடிக்கிறார்கள். தாடை வெடிகுண்டுகளைத் தயாரிக்கத் தெரிந்தால், நீங்கள் துப்பாக்கியை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. ஒரு சில பட்டாசுகள் மற்றும் ஜல்லிகள் போதும்," என்றார் அவர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருட்களின் அதிக விலை காரணமாக, கிராமப்புறங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் வனவிலங்கு மாமிசம் சாப்பிட வருகிறார்கள். இது தாடை குண்டுகளின் பயன்பாடு அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் குமார நம்புகிறார். அவுட்டுக்காயால் பலியாகும் யானைக்குட்டிகள் இலங்கையில் வனவிலங்கு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, கடந்த தசாப்தத்தில் தாடை குண்டுகளால் யானைகள் இறந்தது தான் அதிகம். 2013 முதல் அக்டோபர் 2023 வரை, இந்த அவுட்டுக்காய் அல்லது தாடை குண்டுகளால், 587 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. இது துப்பாக்கிச்சூட்டில் இறந்த யானைகளின் இறப்பை விட அதிகம். இதே காலக்கட்டத்தில், 575 யானைகள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளன. தாடை குண்டுகளால் காயமடைந்த யானைகளில் 99% யானைகளுக்கு சிகிச்சை அளித்தாலும் காப்பாற்ற முடியாது என்று வனவிலங்கு கால்நடை மருத்துவர் பினிடியா கூறுகிறார். "யானை வாயில் வைத்து கடித்தால், சில நேரங்களில் ஒரு துண்டு அல்லது முழு நாக்கும் உடைந்து விடும். அது தவிர, தாடை, பற்கள் மற்றும் மென்மையான பகுதிகளும் சிதைந்துவிடும்," என்றார் அவர். "தாடை உடைந்தால், யானைகளால் சாப்பிட முடியாது. மேலும், வாயின் தசைகள் சேதமடைந்தால், தாடை வேலை செய்யாது. நீங்கள் மெல்ல முடியாது. வாய் எப்போதும் திறந்திருக்கும். நாக்கு உடைந்தால், உணவு அல்லது தண்ணீரை உள்ளே தள்ள முடியாது." "துன்பத்தின் காலம் என்பது காயத்தின் அளவு, விலங்கின் வயது மற்றும் அதன் சகிப்புத்தன்மையைப் பொறுத்தது. சில விலங்குகள் இரண்டு வாரங்கள் வரை அவதிப்படுகின்றன," என்றார் அவர். மனிதன் - யானை மோதல் இலங்கையில் உள்ள யானை, இந்தத் தீவை பூர்வீகமாகக் கொண்டது. ஆசிய யானைகளில் இந்த துணை இனம் மிகப்பெரியது. இலங்கையில் கடைசியாக, 2011 ஆம் ஆண்டு காட்டு யானைகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, இலங்கையில், 5,879 யானைகள் உள்ளதாக தெரியவந்தது. பட மூலாதாரம்,AKALANKA PINIDIYA படக்குறிப்பு, இலங்கையில், 2023 ஆம் ஆண்டில் மட்டும், 470 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. இந்த யானைகள், இலங்கை மக்களின் இதயத்தில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளனர். இந்த யானைகள், அந்த நாட்டின் வரலாறு, கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர். ஆனால், காடுகளை அழிப்பதாலும், நாட்டில் நடந்த வரும் வளர்ச்சித் திட்டங்களாலும், மனிதன்-யானை மோதல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. "இலங்கையில் ஒரு யானை பேரழிவு நடக்கிறது," என்று இலங்கையில் விலங்குகளை பாதுகாக்கும் அமைப்பான ரேர்(RARE) நிறுவனர் பாஞ்சாலி பனாபிட்டிய கூறினார். "இலங்கையில் யானைகள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் ஒரு மனிதர் இறந்து கொண்டே இருக்கிறான். இரவில் யானைகளால் வீடுகள் உடைக்கப்படும் என்ற அச்சத்தில் கிராம மக்கள் எப்போதும் தூங்குவதில்லை," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "வன விலங்கு சுற்றுலா மூலம் இலங்கைக்கு வெளிநாட்டு வருவாயை ஈட்டுவதில் யானை முதன்மையான பங்களிப்பாகும். இருப்பினும், மனிதன்-யானை மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் இதை புரிந்து கொள்ளவில்லை, ஏனெனில் இந்த சமூகங்களுக்கு சரியான வருமானம் இல்லை," என்றார் அவர். இலங்கையில் தாடை குண்டுகள் சட்டவிரோதமானது என்றாலும், அதிகாரிகள் சட்டத்தை அமல்படுத்தவோ அல்லது உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ முன் வருவதில்லை என்றார் பனாபிட்டிய. ஆனால், இதனை வனவிலங்கு அதிகாரிகள் மறுக்கின்றனர். தாடை வெடிகுண்டுகளின் பயன்பாட்டைக் குறைக்க கிராமப்புறங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக அவர்கள் கூறுகிறார்கள். "யானையைக் கொல்வது இலங்கைச் சட்டத்தின்படி குற்றமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ 10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம்" என்று இலங்கை வனத்துறை அதிகாரி ஹாசினி சரத்சந்திர தெரிவித்தார். "தற்போது, தாடை வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது தொடர்பான பல வழக்குகள் விசாரணையில் உள்ளன, மேலும் நீதிமன்றம் ஏற்கனவே பலரை தண்டித்துள்ளது," என்றும் அவர் பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம்,RMJ BANDARA படக்குறிப்பு, தாடை வெடிகுண்டுகளால் காமடைந்த யானைகளில் 99% யானைகளுக்கு சிகிச்சை அளித்தாலும் காப்பாற்ற முடியாது. தாடை வெடிகுண்டுகளை தயாரிப்பதில் அல்லது அவற்றைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடுவதில் ஈடுபடும் நபர்கள் குறித்து புகார் அளிக்க ஹாட்லைன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக சரத்சந்திர கூறினார். "யானைகள் நம் நாட்டின் சொத்து. இவை ஒவ்வொரு ஆண்டும் கணிசமான எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கின்றன. அதேபோல், விவசாயிகளும் முக்கியமான சொத்து. அவர்கள் எங்களுக்கு உணவு கொடுக்கிறார்கள். எனவே, விவசாயி மற்றும் யானை, இரண்டையும் பாதுகாப்பது அவசியம்," என்றார் அவர். காட்டுப்பன்றிகளை தாக்கும் தாடைக்குண்டுகளால் பல யானைகள் கொல்லப்பட்டாலும், தற்போது யானைகளை குறிவைத்து குறிப்பாக விவசாய நிலங்களை சுற்றியுள்ள பகுதிகளில் யானைகளை தாக்கும் சம்பவங்கள் நடப்பதாக கால்நடை மருத்துவர் பினிடியா தெரிவித்தார். ஆனால் யானைகள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், இந்த கொடிய சாதனங்களால் ஏற்படும் மரணம் இயற்கை அல்லது மனிதனால் ஏற்படும் பிற மரணங்களை விட மிகவும் வேதனையானது, என்று அவர் கூறினார். "நோக்கம் என்னவாக இருந்தாலும், இந்த அவுட்டுக்காயால், யானை பசி, தாகம் மற்றும் தாங்க முடியாத துன்பம் உள்ளிட்ட பெரும் வலியை அனுபவிக்கிறது." என்றார் அவர். https://www.bbc.com/tamil/articles/c72g56d7wn1o
-
பாரத் – லங்கா வீட்டுத்திட்டம் ஒருங்கிணைப்பின் கீழ் ஆரம்பம்
18 FEB, 2024 | 09:13 PM இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் – லங்கா எனும் வீட்டுத் திட்டம் திங்கட்கிழமை (19) ஆரம்பமாகவுள்ளது. முதற்கட்டமாக ஆயிரத்து 300 வீடுகளுக்கு ஒரே தடவையில் நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பணம் இடம்பெறவுள்ளது. இதன் பணிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, காலி, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 45 தோட்டங்களில் 19.02.2024 அன்று நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பண விழா நடைபெறுகின்றது. இதன்பிரதான நிகழ்வு 19.02.2024 அன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோரின் பங்கேற்புடன் நிகழ்நிலை மூலம் பிரதான நிகழ்வு இடம்பெறும். அதேபோல 45 தோட்டங்களுக்கும் மக்கள் பிரதிநிதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் நேர்த்தியான முறையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/176698
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
யுக்ரேனில் முக்கிய நகரை கைப்பற்றியது ரஷ்யா - போரின் போக்கு ரஷ்யாவுக்கு சாதகமாக மாறுகிறதா? பட மூலாதாரம்,ALESSANDRO GUERRA/EPA-EFE/REX/SHUTTERSTOCK கட்டுரை தகவல் எழுதியவர், ஜரோஸ்லாவ் லுகீயவ் பதவி, பிபிசி நியூஸ் 58 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்ய - யுக்ரைன் போரின் ஒரு பகுதியாக நான்கு மாதங்களாக அவ்திவ்கா பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு அந்த பகுதியில் இருந்து பின்வாங்கியுள்ளது யுக்ரேன் படை. “மக்களின் உயிரை காப்பாற்றவும், சுற்றி வளைக்கப்படுவதை தவிர்க்கவும், அவ்திவ்காவிலிருந்து எனது படைகளை பின்வாங்குகிறேன்” என்று அறிவித்துள்ளார் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி. இந்த மாதம் யுக்ரேன் ராணுவத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி “ மக்களின் உயிரை பணயம் வைப்பதற்கு பதிலாக நான் பின்வாங்குவேன்” என்று கூறியிருந்தார். அதைத்தான் கிழக்கு யுக்ரேனிலும் அவர் பின்பற்றினார். இந்த போரில் ரஷ்யாவும் அதிக இழப்புகளை சந்தித்துள்ள போதிலும், நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் போரால் யுக்ரேனிய வீரர்கள், ஆயுதம் மற்றும் வெடிமருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு யுக்ரேனின் எதிர் தாக்குதல் தோல்விக்கு பிறகு, இந்த போரில் ரஷ்யாவுக்கு கிடைத்துள்ள பெரிய வெற்றி இது. அவ்திவ்கா 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. ஆனால் யுக்ரைன் அதை மீண்டும் கைப்பற்றிக்கொண்டது. எனவே, இந்த நீண்ட மோதலில் அவ்திவ்காவின் வீழ்ச்சி எதை உணர்த்துகிறது? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ரஷ்யாவின் மக்கள் தொகை 144 மில்லியன் ஆகும். இது யுக்ரேனிய மக்கள்தொகையை விட நான்கு மடங்கு பெரியது. மாபெரும் சக்தி கொண்ட நாட்டுடன் நீளும் போராட்டம் ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையிலான போர் நீண்டுகொண்டே இருக்கும் நிலையில், இரு நாடுகளுக்கும் உள்ள வலிமையின் வேற்றுமை வெளிப்படையாகவே தெரிய தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் மக்கள் தொகை 144 மில்லியன் ஆகும். இது யுக்ரேனிய மக்கள்தொகையை விட நான்கு மடங்கு அதிகம். இந்த போரில் ரஷ்யா ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்துள்ள போதிலும், புதிய வீரர்களை களத்துக்கு கொண்டு வருவதன் மூலம் தனது பலத்தை காட்டியுள்ளது. யுக்ரேனிய ராணுவம் இழப்புகளை சந்தித்துள்ள போதிலும், அது ரஷ்ய இழப்பை விட குறைவே ஆகும். யுக்ரேனின் முன்பகுதியில் அமைந்துள்ள நகரங்களில் நடந்தது போலவே, முழுமையாக அழிக்கப்பட்ட இந்த நகரத்தை கைப்பற்றியுள்ளது ரஷ்யா. இங்கு நிறுத்தப்பட்டிருந்த யுக்ரேனின் 3வது தாக்குதல் படைப்பிரிவு, தாங்கள் அனைத்து திசைகளில் இருந்தும் எதிர்ப்படையினரால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். ரஷ்யா தனது நன்கு பயிற்சியளிக்கப்பட்ட படைகளை அங்கு நிறுத்தியிருப்பதாகவும், யுக்ரேனிய ராணுவ இலக்குகள் மீது நாளொன்றுக்கு 60 குண்டுகள் வரை வீசியதாகவும் நம்பப்படுகிறது. கடந்த முறை யுக்ரேனிய நகரமான பாக்முத் நகரை ரஷ்யா கைப்பற்றியபோது, ஜெனரல் சிர்ஸ்கி விமர்சிக்கப்பட்டார். காரணம் அங்கு நீண்டகாலம் பதவியில் இருந்தவர் அவரே. மேலும், தேவையில்லாத இழப்புகளை ஏற்படுத்தி குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற அவர் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அந்த அனுபவம் அவரது அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது போல தெரிகிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கடந்த ஆண்டு யுக்ரேனிய நகரமான பக்முட்டை ரஷ்யா கைப்பற்றியது போர் ரஷ்யா பக்கம் சாய்கிறதா? தற்போதைய ரஷ்யாவின் முன்னேற்றம் ஒன்றும் ஒரே இரவில் நடக்கவில்லை. கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து, அவ்திவ்காவின் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது ரஷ்யா. இந்த தொழில் நகரத்தின் வலுவான தளங்கள் மற்றும் பாதுகாப்பின் மூலம் யுக்ரேனிய வீரர்கள் அங்கிருந்தவாறே ரஷ்யா மீது குறிப்பிட்ட தாக்குதல்களை நடத்தி அவர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தி வந்தனர். இதனால் இந்த நகரமே ரஷ்ய வீரர்களின் சடலமயமாக மாறிப்போனது. ரஷ்யாவின் கவச வாகனத்தையும் அவர்கள் அழித்துவிட்டனர். ஆனால், ரஷ்யாவின் முதல் தாக்குதலுக்கு பிறகு கடந்த பத்தாண்டுகளாக பலப்படுத்தப்பட்டு வந்த இந்த பாதுகாப்பு தளத்திற்குள் தற்போது ரஷ்யா முன்னேறி வந்துவிட்டது. ஆனால் ரஷ்யா மிக சமீபத்தில் உருவாக்கிய எந்த தளத்திற்குள்ளும் ஊடுருவ முடியாமல் இருப்பது யுக்ரேனுக்கு ஒரு பின்னடைவே. "ரஷ்யாவால் தந்திரத்தின் மூலம் மட்டுமே இலக்குகளை அடைய முடியும், ஆனால் உத்தியைக் கொண்டு அடைய முடியாது" என்கிறார் யுக்ரேனிய இராணுவத்தின் 3வது தாக்குதல் படைப்பிரிவின் துணைத் தளபதி மேஜர் ரோடியன் குத்ரியாஷோவ், போன் வழியாக பிபிசியிடம் பேசிய அவர், "எங்களது வீரர்கள் ஏழுக்கு-ஒன்று என்ற கணக்கில் குறைவாக இருக்கின்றனர். இது ஏதோ நாங்கள் இரண்டு எதிரிகளுடன் சண்டையிடுவது போல் இருக்கிறது” என்று கூறுகிறார். அவர்கள் போக்ரோவ்ஸ்க் மற்றும் கோஸ்ட்யான்ட்னிவ்கா உள்ளிட்ட நகரங்களுக்குள் ரஷ்யர்களால் நுழைய முடியாது என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். ஆனால், அதற்கு உத்தரவாதம் எதுவும் கிடையாது. ரஷ்யா அவ்திவ்காவை கைப்பற்றியது, கிழக்கில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டொனெட்ஸ்க் நகரத்தின் மீதான அவர்களின் அழுத்தத்தை குறைக்கும். இந்த நகரத்தை 2014 இல் ரஷ்யா கைப்பற்றியிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மேற்கத்திய உதவியில் ஏற்பட்டுள்ள பின்னடைவே, தற்போது அவ்திவ்கா பின்வாங்கலுக்கு நேரடி காரணம் என்று கருதப்படுகிறது. ரஷ்ய-யுக்ரேன் போரின் தற்போதைய நிலை என்ன? யுக்ரைன் பின்வாங்குவது இது ஒன்றும் முதல் முறையல்ல. குறிப்பாக 2022 கோடைகாலத்தில் நவீன ஆயுதங்களோடு கூடிய பெரிய எண்ணிக்கையிலான ரஷ்ய படை, லிசிசான்ஸ்க் மற்றும் செவெரோடோனெட்ஸ்க் பகுதிகளை சுற்றிவளைத்தது. அந்த சமயத்தில் யுக்ரேனால் எதுவுமே செய்ய முடியவில்லை. இருப்பினும் மேற்கத்திய ஆயுதங்கள் மற்றும் தனது ராணுவத்தின் மூலம் விரைவிலேயே நிலைமையை மாற்றியது. அதே ஆண்டில் கெர்சன் மற்றும் கார்கிவ் பகுதிகளை ரஷ்யாவிடம் இருந்து விடுவித்தது யுக்ரேனிய ராணுவம். ஆனால், தற்போது இந்த போர் வேறு நிலையை அடைந்துள்ளது. இந்த போர்க்களத்தின் மீது உலக அரசியல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகள் வழஙகும் உதவியில் ஏற்பட்டுள்ள பின்னடைவே, தற்போது அவ்திவ்கா பின்வாங்கலுக்கு நேரடி காரணம் என்று கருதப்படுகிறது. யுக்ரேனுக்கு ஆயுதம் வழங்குவதில் அமெரிக்கா முதன்மையானதாக இருக்கிறது. அதற்கு காரணம் அதனால் மட்டுமே, வேகமாக அதிக அளவிலான ஆயுதங்களை வழங்க முடியும். யுக்ரேனுக்கு வழங்குவதற்கான 95 பில்லியன் அமெரிக்க டாலர் உதவிகளை அமெரிக்கா இன்னமும் வழங்கவில்லை. மற்ற நட்பு நாடுகளும் இந்த இடைவெளியை நிரப்ப போராடி வருகின்றன. எனவே யுக்ரேன் தனது ஆயுதங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் அவர்களது தன்னம்பிக்கையும் குறைந்து விட்டது. ஆனால் யுக்ரேன் எதிர்பார்த்தபடி, அவ்திவ்கா மட்டுமே பின்வாங்கும் இடமாக இருக்காது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு ஒட்டுமொத்த யுக்ரேனும் தேவைப்படுகிறது. அதை அவர் பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பு மேற்கத்திய ஒற்றுமையின் மூலம் தகர்ந்தும் போகலாம் அல்லது அசாதாரண திறமையை கொண்டுள்ள போதிலும் யுக்ரேன் இந்த போரில் வெற்றி பெறாது என்ற சந்தேகத்தையும் வலுப்படுத்தலாம் என்பதே தற்போதைய ரஷ்ய-யுக்ரேன் போரின் நிலை. https://www.bbc.com/tamil/articles/crgrpddmlk7o
-
அரச வங்கிகள் தேசிய வளங்களாக பாதுகாக்கப்பட வேண்டும்!
அரசியல்வாதிகளுக்கும் பாரிய வர்த்தகர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கடன் பாரதூரமானது - பிரதமர் Published By: VISHNU 18 FEB, 2024 | 06:25 PM (எம்.வை.எம்.சியாம்) அரசியல்வாதிகளுக்கும் பாரிய வர்த்தகர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கடன் பாரதூரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அரச வங்கிகள் தேசிய வளமாக பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் சில மாற்றங்களைச் செய்வது குறித்து கலந்துரையாட வேண்டும். இல்லையென்றால் நாம் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் இதன்போது தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், நிறுவனங்களின் மறுசீரமைப்பு, மாற்று முன்மொழிவுகள், நிறுவனங்களைப் பாதுகாத்தல் மற்றும் கொண்டு நடத்தல் தொடர்பான பல விடயங்களை முன்வைத்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், இந்த அரச வங்கிகள் தேசிய வளமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சில மாற்றங்களைச் செய்வது குறித்துக் கலந்துரையாட வேண்டும். இல்லையென்றால் நாம் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் ஓரளவு மீண்டிருப்பதால் முக்கியமான வங்கிகளை எப்படியேனும் பாதுகாக்க வேண்டும். அதை எப்படி செய்வது என்பது இன்னும் விரிவாக கலந்துரையாடப்பட வேண்டும். பல பாரிய வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தான் பாரதூரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகளுக்குக் கடன் கொடுத்ததால் தான் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. அதை தனியார் நிறுவனத்திற்கு விற்பதுதான் ஒரே வழி என்பவையெல்லாம் புனையப்பட்ட கதைகள். இது போன்ற கதைகளில் நாம் ஏமாறாமல் இந்த மூன்று வங்கிகளிலும் சிறப்பான முறையில் தலையிட வேண்டும். பெருந்தோட்டக் கிராமங்களை அமைப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பெருந்தோட்டக் கிராமங்களை அமைப்பதற்கான குறிப்பிட்ட பகுதிகளை அடையாளம் காணும் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. 3500 அடிக்கு மேல் உள்ள பகுதிகளில் எந்த விதத்திலும் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படமாட்டாது. இது அரசாங்கத்தின் முடிவு. அந்தப் பகுதிகள் படிப்படியாக வனப் பாதுகாப்பிற்கு விடுவிக்கப்படும். தற்போது நாம் இணங்கியுள்ள சர்வதேச காலநிலை மாற்ற உடன்படிக்கையின் படி மூவாயிரம் அடிக்கு மேல் உள்ள தோட்டங்களைக் குடியிருப்பாளர்கள் இன்றியே வைத்திருக்க முடியும். இது போன்ற உயரமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு என்ன செய்வது என்று இந்த நாட்களில் கலந்துரையாடப்படுகிறது. பெருந் தோட்டங்களில் 143,000 வீட்டு உரிமையாளர்களே உள்ளனர். ஏனையவர்கள் தோட்டங்களில் வசிக்கவில்லை என்றார். https://www.virakesari.lk/article/176697
-
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் செய்திகள்
இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட ஜெய்ஸ்வால், ஜடேஜா, சர்ஃபராஸ் கான் - பதிவான சாதனைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 40 நிமிடங்களுக்கு முன்னர் ராஜ்கோட் மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அப்போது, கேப்டன் ரோகித் சர்மா சர்ஃபராஸ் அகமதுவை கட்டிப்பிடிக்க, ஆட்டநாயகன் ரவீந்திர ஜடேஜா பந்தை முத்தமிட்டார். அதே பந்தில், தனது சுழற்பந்து வீச்சால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் சாதனை படைத்துள்ளார். இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், 33 ரன்களுக்குள் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பிய நேரத்தில், அவர் அணிக்காக களத்தில் நிலைத்து ஆடினார். கேப்டன் ரோகித் சர்மாவுடன் 100 ரன் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிய அவர் நான்காவது டெஸ்ட் சதத்தையும் அடித்தார். இந்தியாவின் முதல் இன்னிங்சில் 112 ரன்கள் குவித்ததுடன், இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியை பாதி ஆட்டக்காரர்களை பெவிலியன் திருப்பி அனுப்பிய ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ராஜ்கோட் டெஸ்டில், இந்தியா தொடர்ந்து நான்கு நாட்கள் வலுவான நிலையில் இருந்தது. இதில், 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஐந்து டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணிக்கு எதிராக 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 122 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்காக மார்க் வுட் 33 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் 20 ரன்கள் கூட எடுக்க முடியவில்லை. இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜாவைத் தவிர குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். நான்காவது நாளில் நடந்தது என்ன? முதல் இன்னிங்சில் இந்தியா 445 ரன்களையும், இங்கிலாந்து 319 ரன்களையும் எடுத்தன. 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட் நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்திருந்தது. இரண்டு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்த நிலையில் நான்காம் நாள் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 430 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 557 ரன்களை இந்தியா வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்சில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாச, ஷுப்மான் கில் 91 ரன்களில் ரன் அவுட் ஆனார். தனது வாழ்க்கையில் முதல் சர்வதேச டெஸ்டை விளையாடிய சர்ஃபராஸ் கான், இரண்டாவது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் எடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியால் எந்த நிலையிலும் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு போட்டி கொடுக்க முடியவில்லை. இங்கிலாந்துக்கு முன்னால் மிகப்பெரிய இலக்கு இருந்தபோதிலும், ஏறக்குறைய இரண்டு நாட்கள் ஆட்டம் எஞ்சியிருந்ததால், இந்தப் போட்டியில் அந்த அணி தோல்வியைத் தவிர்க்கும் வாய்ப்பு இருந்தது, ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 50 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், இரண்டாவது இன்னிங்சில் 122 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டானது. இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக மார்க் வுட் 33 ரன்களையும், பென் ஃபோக்ஸ் மற்றும் டொம் ஹார்ட்லி ஆகியோர் தலா 16 ரன்களையும், பென் ஸ்டோக்ஸ் 15 ரன்களையும், ஜேக் கிராலி 11 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இங்கிலாந்து அணியை சுருட்டினர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்ட நாயகன் ஜடேஜா என்ன சொன்னார்? போட்டி முடிந்ததும், அவரது பேட்டிங் குறித்து ஜடேஜாவிடம் கேட்டபோது, "நாங்கள் கடினமான சூழ்நிலையில் இருந்தோம். நான் ரோஹித்துடன் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முயற்சித்தேன். நான் எனது திறமையை நம்பி ஷாட்களை இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டியிருந்தது." என்றார். ஆடுகளம் குறித்து ஜடேஜா கூறுகையில், ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும் என்றார். மேலும் அவர் கூறுகையில், "இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்யும் போது ரன்களை எடுப்பது எளிது. படிப்படியாக அது சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறும்" என்றார். "ரோகித் டாஸ் வென்றபோது, நாங்கள் என்ன விரும்பினோமோ அதனைப் பெற்றோம். இந்த ஆடுகளத்தில் விக்கெட்டுகளை எளிதாகப் பெற முடியாது, இதற்காக நீங்கள் களத்தில் அதிகம் உழைக்க வேண்டும். பந்தை நீங்கள் சரியாக பிட்ச் செய்ய வேண்டும், நீங்கள் கடினமாக உழைத்து விக்கெட்டுகளை எடுக்க வேண்டும்." என்று ஜடேஜா கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்ஃபராஸுக்கு முன் ஜடேஜா ஏன் அனுப்பப்பட்டார்? இந்தியா சந்தேகத்திற்கு இடமின்றி டாஸ் வென்றது. ஆனால் அதன் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் 33 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். அப்படிப்பட்ட நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து ரவீந்திர ஜடேஜா 4வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தார். பேட்ஸ்மேனாக தனது வாழ்க்கையில் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி கொண்டிருந்த சர்பராஸ் கானுக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா ஆடுகளத்திற்கு அனுப்பப்பட்டார். இதற்குப் பின்னால் உள்ள காரணம் நிச்சயமாக அவரது அனுபவத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது மற்றும் சர்ஃபராஸ் தனது முதல் போட்டியிலேயே இதுபோன்ற அழுத்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் ரஜத் படிதார் தனது அறிமுகப் போட்டியில் பூஜ்ஜியத்திற்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பியிருந்தார். போட்டி முடிந்ததும் கேப்டன் ரோகித் சர்மாவிடம் இதுபற்றி கேட்டபோது, “ஜடேஜாவுக்கு அனுபவம் அதிகம், அதிக ரன்கள் எடுத்தது, லெப்ட்-ரைட் கூட்டணி வேண்டும் என்பதால் அவரை முதலில் அனுப்பினோம். சர்ஃபராஸ் இந்த போட்டியில் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டினார். எதிர்காலத்திலும் இது இப்படியே தொடருமா? இது குறித்து ரோகித் கூறுகையில், "இது நீண்ட காலத்துக்கானது அல்ல. தேவைக்கு ஏற்ப, அன்றைய தினம், அணி மற்றும் பந்துவீச்சை பார்த்து, மதிப்பீடு செய்து முடிவெடுப்போம்," என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES முத்திரை பதித்த ஜெய்ஸ்வால் இந்தியாவின் இந்த வரலாற்று வெற்றியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 214 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸின் போது, அவர் சில சாதனைகளை செய்தார். இது மிகவும் விவாதிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய அணிக்காக தனது முதல் டெஸ்டில் விளையாடிய யஷஸ்வியின் பேட் தொடர்ந்து களத்தில் ரன்களை குவித்து வருகிறது. யஷஸ்வி இதுவரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் 71.75 சராசரியில் 861 ரன்கள் எடுத்துள்ளார். சதத்துடன் தனது டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கிய அவர் தற்போது தொடர்ந்து இரண்டு டெஸ்ட்களில் இரட்டை சதம் அடித்த சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த இந்தியாவின் மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்த இன்னிங்ஸில் யஷஸ்வி 12 சிக்சர்களை அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டின் எந்த இன்னிங்ஸிலும் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனை இதுவாகும். யஷஸ்வியின் மூன்று சதங்களும் 150க்கும் அதிகமான ஸ்கோராகும். முதல் டெஸ்டில் 171 ரன்களும், ஆறாவது டெஸ்டில் 209 ரன்களும், ஏழாவது டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 214 ரன்களும் அவர் எடுத்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES சாதனை படைத்த ஜெய்ஸ்வால் என்ன சொன்னார்? போட்டிக்கு பிறகு பேசிய அவர், "முதல் இன்னிங்சில் ரோகித் மற்றும் ஜடேஜா பேட்டிங் செய்த விதம் எனக்கு மிகவும் உத்வேகம் அளித்தது. மேலும் அனைத்து சீனியர்களும் என்னிடம் கூறியது போல், நீங்கள் செட் ஆனவுடன், பெரிய ஸ்கோரை அடிக்க முயல வேண்டும்" என்றார். "எனவே நான் ஆடுகளத்தில் இறங்கும் போதெல்லாம், நான் பெரிய இன்னிங்ஸ் விளையாட முயற்சிக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்து என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. எனவே நான் ஒருமுறை செட்டில் ஆனவுடன் என்னால் முடிந்தவரை விளையாட முயற்சிக்கிறேன்." தொடக்கத்தில், யஷஸ்வி அதிக பந்துகளில் விளையாடி குறைவான ரன்களையே எடுத்திருந்தார். அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, "ஆரம்பத்தில் ரன்களை எடுப்பது சற்று கடினமாக இருந்தது. பின்னர் ஒவ்வொரு செஷன் மற்றும் பந்துவீச்சாளர் மீது கவனம் செலுத்தினேன். ஆடுகளத்தில் நன்றாக செட்டில் ஆனதும் பந்துகளை எங்கே அடிக்க வேண்டும் என்று ஒரு திட்டம் வைத்திருந்தேன்." என்றார். சதம் அடித்ததும் காயத்தால் களத்தில் இருந்து வெளியேறியது குறித்து, அவர் கூறுகையில், "சிறிது நேரம் பேட்டிங் செய்த பிறகு, என் முதுகு சரியில்லை. நான் வெளியே செல்ல விரும்பவில்லை, ஆனால் என் முதுகில் இருந்த பிரச்னை மிகவும் பெரியது. நான் செல்ல வேண்டியிருந்தது. " என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சர்ஃபராஸ் குறித்து கேப்டன் ரோகித் கூறியது என்ன? போட்டிக்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “சர்ஃபராஸ் பேட்டிங் செய்வதை நான் பார்த்ததில்லை. ஆனால் கடினமான சூழ்நிலையிலும் அவர் அற்புதமாக செயல்பட்டார் என்று அனைத்து மும்பை வீரர்களும் கூறினார்கள். அவர் பெரிய ரன்கள் எடுத்தார்." என்றார். "அவர் 300 ரன்கள், இரட்டை சதம் அடித்துள்ளார். அடிக்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு உள்ளது. நான்கைந்து வருடங்களாக உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்களை குவித்து வருகிறார். அறிமுக வீரர்கள் பதற்றமாக இருப்பது வழக்கம். ஆனால் சர்ஃபராஸ் கான் பதற்றமாக இருந்ததாக நான் உணரவில்லை. அவர் தனது பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் விளையாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினார். பார்க்க நன்றாக இருந்தது." என்று கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஜடேஜா, ஜெய்ஸ்வால் குறித்து ரோகித் என்ன சொன்னார்? போட்டி முடிந்ததும், இந்திய வீரர் ரோகித்திடம் இந்த ஆட்டம் குறித்து கேட்டபோது, "டெஸ்ட் கிரிக்கெட் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமானது அல்ல. ஐந்து நாட்கள் விளையாடுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இங்கிலாந்து சிறப்பாக விளையாடியதால் எங்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது. எங்களது பந்துவீச்சு வலுவாக உள்ளது. மறுநாள் நாங்கள் திரும்பி வந்த விதம் ஆச்சரியமாக இருந்தது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது, நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்." என்றார். போட்டியின் திருப்புமுனைகள் குறித்து பேசிய ரோஹித், "பல திருப்பு முனைகள் இருந்தன. டாஸ் வெல்வது நல்லது, ஏனென்றால் அதன் முக்கியத்துவம் எங்களுக்குத் தெரியும். பந்துவீச்சாளர்கள் வலுவாக மீண்டு வந்தனர். ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான் ஆகிய இரண்டு இளம் பேட்ஸ்மேன்களுக்கு நன்றி, எங்கள் வேலை பாதி முடிந்தது. அந்த முன்னிலையை எங்களுக்குக் கொடுத்தார். அதுதான் எங்களுக்குத் தேவை. நிச்சயமாக இரண்டாவது இன்னிங்ஸில், ஜடேஜா பந்துவீச்சில் அற்புதமாக செயல்பட்டார்." என்று கூறினார். ஜெய்ஸ்வால் குறித்து கேப்டன் ரோகித் கூறுகையில், "நான் அவருடன் இங்கும், விசாகப்பட்டினத்திலும் நிறைய பேசியுள்ளேன். அவரைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. அவர் தனது கேரியரை சிறப்பாக தொடங்கினார், அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகத் தெரிகிறார்” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES தொடரை வெல்ல விரும்புகிறேன்: பென் ஸ்டோக்ஸ் இந்த தொடரில் இங்கிலாந்து அணி 1-2 என பின்தங்கியிருந்தாலும், தனது அணி வலுவாக மீண்டு வந்து தொடரை வெல்ல விரும்புவதாக அந்த அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகிறார். தொடரில் 1-2 என பின்தங்கிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், "பென் டக்கெட் அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார். இன்னிங்ஸ் முழுவதும் நாங்கள் அப்படித்தான் விளையாட விரும்பினோம். இந்தியாவின் ஸ்கோரை நெருங்க விரும்பினோம். சில நேரங்களில் எங்கள் திட்டம் வேலை செய்கிறது. எப்போது அது நடக்காது." என்றார். தனது அணி இங்கிருந்து மீண்டு வர விரும்புவதாகவும், இந்தத் தொடரை வெல்ல விரும்புவதாகவும் ஸ்டோக்ஸ் கூறினார். "தற்போது தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளோம், மீண்டும் மீண்டும் தொடரை வெல்ல எங்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடரை வெல்ல அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும், அதையே செய்ய விரும்புகிறோம்" என்றார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி இந்த டெஸ்டில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரன் வித்தியாசத்தில் இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். முன்னதாக, 2021ல் நியூசிலாந்துக்கு எதிராக (372 ரன்கள் வித்தியாசத்தில்) ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணிக்கு இது இரண்டாவது பெரிய தோல்வியாகும். தவிர, டெஸ்ட் வரலாற்றில் ரன் வித்தியாசத்தில் எட்டாவது பெரிய வெற்றி இதுவாகும். யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது இன்னிங்ஸின் போது 12 சிக்ஸர்களை அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையை சமன் செய்துள்ளார். வாசிம் அக்ரம் 1996 இல் ஜிம்பாப்வேக்கு எதிராக 257 ரன்கள் எடுத்திருந்த போது அதே எண்ணிக்கையிலான சிக்ஸர்களை (12) அடித்திருந்தார். அதேசமயம், இந்தியாவைப் பொருத்தவரை, இந்த சாதனை இதற்கு முன்பு நவ்ஜோத் சிங் சித்து (எட்டு சிக்ஸர்கள்) பெயரில் இருந்தது. இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் இரண்டாவது இந்திய மற்றும் 9வது சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார். https://www.bbc.com/tamil/articles/cyx72p9rngko
-
சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்: டொனால்ட் ட்ரம்பிற்கு 355 மில்லியன் டொலர்கள் அபராதம்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு 355 மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்து நியூயோர்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்களை அளித்ததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளாக தன்னுடைய சொத்து மதிப்பு குறித்து தவறான தகவல்களை வழங்கி வந்ததாக ட்ரம்ப் மீது சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் நிறைவில், பெருந்தொகை அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப், அவருடைய இரு மூத்த மகன்கள், அவருடைய நிறுவனம், நிர்வாகிகள் ஆகியோர் திட்டமிட்டு தங்கள் சொத்துகள் பற்றி பொய்யான நிதி விபரங்களை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அளித்து, தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர். இந்த தீர்ப்பு காரணமாக ட்ரம்ப் குடும்பத்தினர் நடத்தி வரும் வணிக நிறுவனம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதுடன், நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் செயற்பட வேண்டிய கட்டாயமும் நேர்ந்திருக்கிறது. மேலும், இதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடக் கூடிய வகையில் முன்னேறிவந்த டொனால்ட் ட்ரம்ப்பிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ட்ரம்ப்க்கு அபராதம் 355 மில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ள போதும், அமெரிக்க சட்டப்படி அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பதால், அவர் சுமார் 450 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/292285
-
குழந்தைகள் விரும்பும் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி சேர்ப்பு - ஆய்வில் அதிர்ச்சி
பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை! பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளது. இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், “பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் ரொடமைன் பி (Rhodamine-B) எனப்படும் செயற்கை நிறமூட்டி வேதிப்பொருள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவின்படி, தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவின்படி, ரொடமைன் பி எனப்படும் செயற்கை நிறமூட்டியைக் கொண்டு உணவு பொருட்கள் தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் இதுகுறித்து ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னையில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மெரினா கடற்கரையில் கடந்த பெப்.8ஆம் திகதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது வண்ணங்கள் அதிகம் சேர்க்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட பஞ்சுமிட்டாய் பக்கட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி இருந்தனர். ஆய்வு முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன் பி (Rhodamine B) என்ற நச்சுப்பொருள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியதாவது: ரோடமைன் பி நச்சுப்பொருள் ஜவுளி உற்பத்தி துறையில் சாயத் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறைந்த செலவில் மக்கள் மனம் கவரும் வண்ணத்தை கொடுப்பதால் பஞ்சு மிட்டாயில் பயன்படுத்தப்படுகிறது. இயற்கை உணவுகளில் உள்ள வண்ணங்கள் நமது உடலில் இருந்து 24 மணி நேரத்தில் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ஆனால் இதுபோன்ற நச்சு வண்ணங்கள் வெளியேற 45 நாட்கள் ஆகும். இது உடலில் தங்கி சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டலம், மூளை போன்றவற்றை பாதிக்கும். இவை உடல் செல்களில் உள்ள மரபணுக்களை சிதைக்கும் திறன் உடையவை. அதனால் இவற்றை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். நன்றி – இந்து தமிழ் https://thinakkural.lk/article/292194
-
புதினை கடுமையாக எதிர்த்த நஞ்சூட்டபட்ட அலெக்ஸி நவல்னி இறப்பு
ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் உடலை கையளிப்பதற்கு தயங்கும் ரஸ்ய அதிகாரிகள் - நவால்னியின் சகாக்கள் தெரிவிப்பு Published By: RAJEEBAN 18 FEB, 2024 | 10:21 AM சிறையில் உயிரிழந்த ரஸ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸே நவல்னியின் உடலை அவரது தாயரிடம் கையளிப்பதற்கு ரஸ்ய அதிகாரிகள் மறுக்கின்றனர் என நவால்னியின் நெருங்கிய சகாவொருவர் தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னரே உடலை கையளிப்போம் என ரஸ்ய அதிகாரிகள் நவால்னியின் தயாரிடம் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலையில் நடந்துகொண்டிருந்த வேளை தீடிரென மயக்கமடைந்து வீழ்ந்து நவால்னி உயிரிழந்தார் என ரஸ்ய அதிகாரிகள் அவரின் தாயாரிடம் தெரிவித்துள்ளனர். தீடீர் இறப்பு நோய் அறிகுறி காணப்பட்டுள்ளதாக ரஸ்ய அதிகாரிகள் நவால்னியின் தாயாரிடம் தெரிவித்துள்ளனர். எனினும் இது ஒரு தெளிவற்ற பொதுவான விளக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. சிறைச்சாலைக்கு அருகில் உள்ள நகரமொன்றிற்கு நவால்னியின் உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நவால்னியின் தாயாருக்கு தெரிவித்தனர் அவர் அங்கு சென்றவேளை பிரேதஅறை மூடப்பட்டிருந்தது என நவால்னியின் சகாக்கள் தெரிவித்துள்ளனர். முதலாவது பிரேத பரிசோதனை முழுமையானதாக காணப்படாததால் மற்றுமொரு பிரேத பரிசோதனையை மேற்கொள்ளவேண்டியுள்ளது என ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடயங்களை மறைப்பதற்காக வேண்டுமென்றே நவால்னியின் உடலை அதிகாரிகள் மறைக்கின்றனர் என தெரிவித்துள்ள நவால்னியின் சகாக்கள் அவரது உடலை உடனடியாக குடும்பத்தினரிடம் வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/176650
-
பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்
ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் எதிர்வரும் 20ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு பணிபுறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (16) கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மாகாண ஆளுநர்கள் மற்றும் கல்வி தொழிற்சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். இச்சந்திப்பில் மாகாண கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பாடசாலை கட்டிடங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்களை சூட்டுவதை நிறுத்துமாறு தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/292241
-
யாழில் தமது கட்டுப்பாட்டிலுள்ள 300 ஏக்கர் விவசாய காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்
18 FEB, 2024 | 02:48 PM யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஒரு மாத காலத்துக்குள் சாதகமான பதிலை வழங்குமாறு இராணுவத்தினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விவசாய காணிகள் விடுவிப்பு, இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஆலயங்களுக்கு வழிபட அனுமதிப்பது தொடர்பிலும் ஆராய்ப்பட்டபோதே ஜனாதிபதியின் உத்தரவு தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது. இந்நிலையில், 300 ஏக்கர் விவசாய நிலம் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது குறித்து இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். மேலும் வறுத்தலைவிளான், காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி வீதி இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. அத்துடன் பலாலி கிழக்கு பகுதியில் உள்ள காணிகளை விடுவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/176677
-
அரசு பாடசாலைகளில் ஆசிரியர்களை விட ஆசிரியைகள் மூன்று மடங்கு அதிகம்! – கணக்கெடுப்பில் தகவல்!
நாடு முழுவதும் உள்ள அரசுப் பாடசாலைகளில் பணிபுரியும் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆண் ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் என்று கல்வி அமைச்சு நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள அரசு பாடசாலைகளில் ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை 236,738 என்றும் அவர்களில் 56,817 பேர் ஆண் ஆசிரியர்கள் மற்றும் 179,921 பேர் பெண் ஆசிரியர்கள் என்றும் பெண் ஆசிரியர்களின் தொகை 76 சதவீதமாக உள்ளது என்றும் குருநாகல் மாவட்ட சிரேஷ்ட கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம். பாலசூரிய தெரிவித்துள்ளார் .. 396 தேசிய பாடசாலைகளும் 9,730 மாகாண பாடசாலைகளும் உள்ளடங்கலாக தற்போது 10,126 பாடசாலைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாகவும் இவற்றில் சுமார் 1,473 பாடசாலைகளில் 50க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர் என்றும் குறிப்பிட்ட அவர் சுமார் 34 பாடசாலைகளில் 4,000 மாணவர்களுக்கும் அதிகமாக உள்ளதாகவும் கூறினார். கல்வி அமைச்சு இந்த ஆண்டுக்கான அரசாங்கப் பாடசாலைகளின் தரம் ஒன்றிற்கு புதிய மாணவர்களை பெப்ரவரி 22ஆம் திகதி சேர்த்துக்கொள்ளவுள்ளது. அரசாங்கப் பாடசாலைகளில் தரம் ஒன்றில் சுமார் 350,000 மாணவர்கள் இவ்வருடம் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என பாலசூரிய மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/292291
-
அரச வங்கிகள் தேசிய வளங்களாக பாதுகாக்கப்பட வேண்டும்!
அரச வங்கிகள் தேசிய வளங்களாக பாதுகாக்கப்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் நிறுவன பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நிறுவனங்களின் மறுசீரமைப்பு, மாற்று முன்மொழிவுகள், நிறுவனங்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பான பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன. அரச வங்கிகளை தேசிய வளங்களாக பாதுகாப்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் எனவும், ஏதேனும் பிரச்சினைகள் மற்றும் மாற்றங்கள் தொடர்பான கருத்துக்கள் இருப்பின் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்காமல் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன இதன்போது தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/292301
-
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா
90 இலட்சம் ரூபாய் மதிப்பில் கச்சதீவு திருவிழா; 10 இலட்சம் ரூபாய் திணைக்களங்கள் வழங்கியதாக யாழ். மாவட்ட செயலர் தெரிவிப்பு 18 FEB, 2024 | 02:03 PM கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு உத்தேச செலவீனமாக 90 இலட்சம் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 10 இலட்ச ரூபாயே திணைக்களங்கள் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். இம்முறை பயணிகளிடம் ஒருவழி படகுப் பயண கட்டணமாக 1,500 ரூபாய் பணம் அறவிடப்படவுள்ளதாகவும் யாத்திரிகர்கள் இம்முறை தமக்கு தேவையான உணவை தாமே கொண்டுவர வேண்டும் என்பதாகவும் பல்வேறு அறிவுறுத்தல்கள் யாழ். மாவட்ட செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். மேலும், இந்திய துணைத்தூதரகம் நிதி பங்களிப்புக்களை வழங்கி வந்த நிலையில், அதைப் பற்றி இம்முறை தூதரகம் இதுவரையில் எந்தவொரு தகவலையும் எமக்கு அளிக்கவில்லை எனவும் அவர் கூறினார். கச்சதீவு திருவிழா எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இலங்கையில் இருந்து 4 ஆயிரம் பக்தர்களும் இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதனை கண்டித்தும், அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், இராமேஸ்வர மீனவர்கள் கச்ச தீவு திருவிழாவை புறக்கணிக்கவுள்ளதாக தீர்மானம் எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/176675