Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. எம்என்சி நிறுவனங்களிடம் கன்னட பணியாளர்களின் எண்ணிக்கை கேட்கும் அமைச்சர் – தமிழர்களுக்கு பிரச்னையா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 25 பிப்ரவரி 2024 கர்நாடகா கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, சமீபத்தில் அம்மாநிலத்தில் அலுவலகங்கள் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் (MNC) அங்கு ‘எத்தனை கன்னட பணியாளர்கள் உள்ளனர் என்ற தகவலை அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும்,’ எனப் பேசியது, அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இது உண்மையில் சாத்தியமா? இதனால் யாருக்கு பாதிப்பு ஏற்படும்? சமீப காலமாகவே கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்ற அரசியல் முழக்கங்கள் அதிகரித்து வருகின்றன. கர்நாடகம் முழுவதிலும் திரும்பிய திசையெல்லாம் அம்மாநில கொடியும், மொழிக்கான முக்கியத்துவம் தரப்படுவதையும் மிக எளிதாக பார்க்க முடியும். இதன் தாக்கத்தால் கர்நாடகாவின் பல பகுதிகளில், ஆட்டோ ஓட்டுநர்கள், கடை நடத்துபவர்கள் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி பேசுவோரிடம், கன்னடத்தில் பேசுமாறு வற்புறுத்தும் சம்பவங்களும், சர்ச்சைகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இப்படியான நிலையில் கடந்த டிசம்பர் மாதம், "அறிவிப்பு, விளம்பரப் பலகைகள் மற்றும் கடைகளின் பெயர் பலகைகளில், கன்னடம் 60% இருக்க வேண்டும்” என, பெங்களூரு மாநகராட்சி அறிவித்தது. அதன்பின், கர்நாடகா முழுவதிலும் இதை அமல்படுத்த வேண்டும் எனக்கூறி, கர்நாடகா ரக்ஷனா வேதிகே என்ற கன்னட அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. அதன் உறுப்பினர்கள் பெங்களூர் நகர் முழுவதிலும், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என பிற மொழிகளில் வைக்கப்பட்டிருந்த கடைகளின் பெயர்ப்பலகைகளை அடித்து நொறுக்கினர். இந்த விவகாரம் அப்போது பெரும் பேசுபொருளானது. பெயர் பலகைகளில் 60% கன்னடம் – மசோதா நிறைவேற்றம் கன்னட பெயர் பலகைகள் வைக்க வேண்டுமென, தொடர்ந்து கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் தான் கடந்த வாரம், கர்நாடகா சட்டப்பேரவையில், கன்னட மொழி வளர்ச்சி திருத்தம் என்ற மசோதாவை நிறைவேற்றியது. அந்த மசோதாவில், "அறிவிப்பு, விளம்பர பலகைகள் மற்றும் கடைகளின் பெயர் பலகைகளில், 60% கன்னடத்தில் இருக்குமாறு வைக்க வேண்டும். இல்லையென்றால் தொழில் நடத்துவதற்கான உரிமம் ரத்து செய்யப்படும்," என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது வணிக நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, கல்வி, மருத்துவம், தொழில்துறை என பலதுறைகளுக்கும் பொருத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மசோதாவை நிறைவேற்றிய போது பேசிய, கன்னட வளர்ச்சி மற்றும் கலாச்சார அமைச்சர் சிவராஜ் தங்கடகி, ‘‘மாநில அளவில் ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டு, கன்னடத்தில் பெயர் பலகைகள் இருப்பது உறுதி செய்யப்படும். அத்துமீறுவோருக்கு அபராதம் விதிப்பதுடன், தொழில் உரிமம் ரத்து செய்யப்படும்,’’ எனப்பேசியிருந்தார். படக்குறிப்பு, கன்னட வளர்ச்சி மற்றும் கலாச்சார அமைச்சர் சிவராஜ் தங்கடகி ‘MNC–க்கள் கன்னட பணியாளர்கள் எண்ணிக்கையை அறிவிக்க வேண்டும்’ பிப்ரவரி 22-ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கன்னட வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, "கர்நாடகத்தில் இருக்கும் MNC நிறுவனங்கள் தங்கள் அறிவிப்பு பலகைகளில், எத்தனை பணியாளர்கள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள் என அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் தொழில் உரிமம் திரும்பப்பெறப்படும்," எனப்பேசியிருந்தார். இது கர்நாடகத்தில் பணிபுரியம் ஐ.டி மற்றும் இதர துறை MNC நிறுவன பணியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி, அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளானதுடன், இந்த உத்தரவு கர்நாடகத்தின் தொழில் வளர்ச்சிக்கு எதிராக அமையும் எனக்கூறி பல தரப்பினர் அமைச்சரை கடுமையாக விமர்ச்சித்தனர். பட மூலாதாரம்,ANI இந்த விவகாரம் பெரிதான நிலையில், பிப்ரவரி 23-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், "கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு, கலாச்சாரத்துறை அமைச்சர் கூறியதைப்போன்ற எந்த திட்டமும் இல்லை. சில கன்னட அமைப்பினர் கலாச்சாரத்துறை அமைச்சரின் அந்த கோரிக்கையை முன்வைத்ததால் தான் அவர் அப்படி பேசியுள்ளார். அது போன்ற திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது. பெங்களூர் உலகத்தரம் வாய்ந்த நகரம், இங்கு தொழில் செய்ய அனைவரையும் வரவேற்கிறோம். நிறுவனங்கள் கன்னட பணியாளர்கள் எண்ணிக்கையை வெளியிடத்தேவை இல்லை," எனக்கூறி சர்ச்சைக்கு அரசின் விளக்கத்தை தெரிவித்தார். பட மூலாதாரம்,SAMPATH RAMANUJAN படக்குறிப்பு, சம்பத் ராமானுஜன் ‘தேர்தலுக்காக சொல்லப்பட்டது’ பிபிசி தமிழிடம் பேசிய, தமிழகத்தை பூர்விகமாகக்கொண்ட பெங்களூரின் முன்னாள் ஐ.டி நிறுவன ஊழியரும், சமூக செயற்பாட்டாளருமான சம்பத் ராமானுஜன், "நான் பல ஆண்டுகளாக பெங்களூர் ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றி உள்ளேன். கலாச்சாரத்துறை அமைச்சர் பேசியது முற்றிலும் சாத்தியமற்றது என்பதுடன், இதை அமல்படுத்தினால் தொழில்துறைக்கு பேரடியாகத்தான் இருக்கும்," என்றார். "மக்களவைத் தேர்தல் நடக்கவிருப்பதால் தான் அமைச்சர் மொழிக்கு முக்கியத்துவம் தருவதைப்போன்று பேசி, பாகுபாட்டை உருவாக்கி மொழியை வைத்து அரசியல் செய்கிறார். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி வரும் போதெல்லாம் தமிழர்களை சீண்டும் வகையிலும், அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், இது போன்று மொழி ரீதியாக மக்கள் பிரதிநிதிகள் பேசுவதும், மொழியை அரசியலுக்காக பயன்படுத்துவது நடக்கிறது. இதுவே கடந்த பா.ஜ.க ஆட்சியில் இங்கு திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது," என்கிறார் சம்பத் ராமானுஜன். படக்குறிப்பு, கர்நாடகா ரக்ஷனா வேதிகே என்ற கன்னட அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. அதன் உறுப்பினர்கள் பெங்களூர் நகர் முழுவதிலும், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என பிற மொழிகளில் வைக்கப்பட்டிருந்த கடைகளின் பெயர்ப்பலகைகளை அடித்து நொறுக்கினர் ‘இது நடைமுறையில் சாத்தியமற்றது’ பிபிசி தமிழிடம் பேசிய சென்னை ஐ.டி ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த சீதாராமன், "அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் இருக்கும் MNCக்களில் அமெரிக்கர்கள் குறைவு, இதை சரிபடுத்த வேண்டும் எனக்கூறி அதை வைத்து அரசியல் செய்திருந்தார். அதைப்போன்று தான், MNCக்கள் கன்னட பணியாளர்கள் விபரங்களை காட்சிப்படுத்த வேண்டும் என்ற பேச்சையும் பார்க்க வேண்டியுள்ளது," என்கிறார் அவர். பட மூலாதாரம்,SITHARAMAN படக்குறிப்பு, சீதாராமன் மேலும் தொடர்ந்த சீதாராமன், "மாநில வளர்ச்சிக்காக எத்தனை பணியாளர்கள் இருக்கிறார்கள் என அரசு தெரிந்துகொள்ளலாமே தவிர, நிறுவனங்கள் விபரங்களை காட்சிப்படுத்த வேண்டும், இல்லையென்றால் தொழில் உரிமம் ரத்து எனக்கூறுவது சாத்தியமற்ற ஒன்று. ஒரு வேளை இது அமல்படுத்தினால் பெங்களூரின் தொழில் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும். ஏனெனில் இப்படியான உத்தரவுகளை பின்பற்ற தயங்கி பல நிறுவனங்கள், பெங்களூருக்கு அடுத்த நிலையில் உள்ள புனே, ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களுக்கு தொழில் துவங்க சென்றுவிடுவார்கள்," என்கிறார் அவர். அமைச்சரின் விளக்கம் என்ன? ‘கன்னட பணியாளர்களின் எண்ணிக்கை வெளியிட வேண்டுமென்ற உத்தரவு அமலானால், பெங்களூருவின் தொழில் வளர்ச்சியை பாதிக்கும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது,’ என்ற கேள்வியை, கன்னட மொழி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகியிடம் பிபிசி தமிழ் முன்வைத்தது. பிபிசி தமிழிடம் பேசிய சிவராஜ் தங்கடகி, "கன்னட மொழியை வளர்ப்பதற்காக கன்னட அமைப்புகள் என்னிடம் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். அதில், ஒன்று தான் கன்னட பணியாளர்கள் விபரங்களை அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்பது. அந்த கோரிக்கையைத்தான் பொது வெளியில் தெரிவித்திருந்தேன். இது சாத்தியமா எனஅரசுடன் ஆலோசித்து தான் முடிவெடுக்கப்படும். இதனால் ஒன்றும் தொழில் வளர்ச்சி பாதிக்காது," எனக்கூறி, மேலும் பேச மறுத்துவிட்டார். https://www.bbc.com/tamil/articles/c72gpxvdy59o
  2. ஜெனிவா அமர்வுக்கு இம்முறை இலங்கையிலிருந்து குழு செல்லாது; வதிவிடப்பிரதிநிதியே விடயங்களை கையாள்வார் 24 FEB, 2024 | 05:30 PM ஆர்.ராம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் 55ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலோ அல்லது வேறெந்த உத்தியோகபூர்வமான அமைச்சர்கள் தலைமையிலான குழுவினரோ இம்முறை செல்லாதென அரசாங்கத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இலங்கையில் ஏற்பட்டள்ள மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பிலான முன்னேற்றகரமான விடயங்கள் தொடர்பில் ஜெனிவாவில் உள்ள வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்கவே விடயங்களை கையாளவுள்ளார். குறிப்பாக, இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அவதானிப்பு அறிக்கை மார்ச் மாதம் 4ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனையடுத்து, ஜெனிவாவுக்கான இலங்கை வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க அந்த வாய்மொழி அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்கள் சம்பந்தமாக பதிலளிப்பை வழங்கவுள்ளார். அத்துடன், பல்வேறுபட்ட பக்கநிகழ்வுகளிலும் அவர் பங்கேற்று கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். இதேநேரம், அவருக்கான சகல ஒத்துழைப்புக்களையும் வெளிவிவகார அமைச்சு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177211
  3. 25 FEB, 2024 | 10:25 AM பல்வேறு நபர்களின் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய சில இணையத்தளங்களிலிருந்து பெறப்படும் தரவுகளைக் கணினி ஹெக்கர்கள், குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதாகக் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தைப் பயன்படுத்தும் போது பயனாளர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்க இணையதளத்தில் பல்வேறு பாதுகாப்பு உத்திகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் சில அரசு மற்றும் தனியார் இணையதளங்கள் மூன்றாம் தரப்பினருக்கு மிக எளிதாகத் தகவல்களைப் பெறும் திறனைக் கொண்டுள்ளன. முகநூல், வட்ஸ்அப், மின்னஞ்சல் போன்ற முக்கியமான தரவுகளை உள்ளடக்கிய தனிப்பட்ட கணக்குகள் கணினி ஹெக்கர்களால் திருடப்படலாம் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், இணையத்தளத்தில் சிலரின் தனிப்பட்ட தரவுகளை உள்ளிடுவது அவசியமானால், இதற்கு பொறுப்பானவர்கள் அந்த இணையத்தளங்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, அவர்களின் தனிப்பட்ட தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்குப் பாதுகாப்பான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/177224
  4. செங்கடல் பகுதிக்கு இரகசியமாக கடற்படை கப்பலை அனுப்பியது இலங்கை - மோர்னிங் தகவல் Published By: RAJEEBAN 25 FEB, 2024 | 09:53 AM செங்கடல் பகுதிக்கு ரோந்து நடவடிக்கைகளிற்காக மிகவும் இரகசியமாக அனுப்பப்பட்ட இலங்கை கடற்படையின் கப்பல் தனது கூட்டு ரோந்து நடவடிக்கைகளை பூர்த்திசெய்துகொண்டு இலங்கைக்கு திரும்புகின்றது என மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது. பப் எல் மன்டெப் நீரிணைக்கு இலங்கை கடற்படை கப்பல் அனுப்பப்பட்டதை கடற்படை பேச்சாளர் கயன் விக்கிரமசூர்ய உறுதி செய்துள்ளதுடன் எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ளாமல் இலங்கை கடற்படை கப்பல் ரோந்து நடவடிக்கையை பூர்த்தி செய்துவிட்டு இலங்கை திரும்புகின்றது என தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் பின்னர் இலங்கை கடற்படை முன்னெடுத்த ஆபத்தான இந்த நடவடிக்கையின் இரகசிய தன்மை காரணமாக கடற்படை மேலதிக தகவல்களை வெளியிடவில்லை என மோர்னிங் தெரிவித்துள்ளது. மீண்டும் எப்போது இலங்கை கடற்படை தனது கப்பலை அனுப்பும் என்பது குறித்து இலங்கை கடற்படை எதனையும் தெரிவிக்கவில்லை. இலங்கை கடற்படை தனது கப்பலை எப்போது அனுப்பியது கப்பல் எப்போது தனது ரோந்துநடவடிக்கைகளை பூர்த்தி செய்தது போன்ற விபரங்கள் இரகசியமானவையாக காணப்படுகின்றன என மோர்னிங் தெரிவித்துள்ளது. இவ்வாறான தகவல்களை பகிரங்கப்படுத்தினால் அவற்றை பயன்படுத்தி ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்ட கப்பல்களை தாக்கக்கூடும் என பாதுகாப்பு தரப்பின் சிரேஸ்ட அதிகாரியொருவர் மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார். மிகவும் ஆபத்தான செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்குகப்பல்களின் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் யுத்தக்கப்பல்கள் தாங்கள் செயற்படும் இடத்தை பகிரங்கப்படுத்துவதில்லை. தாக்குதல் ஆபத்தை தவிர்ப்பதற்காக தங்களின் இலத்திரனியல் சமிக்ஞைகளை கூட அவதானமாகவே பயன்படுத்துகின்றன என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். செங்கடல் பகுதியில் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூட்டு ரோந்தில் இலங்கையும் இணைந்துகொள்ளும் என ஜனாதிபதி ஜனவரி மூன்றாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/177225
  5. மட்டக்களப்பில் 15 வயது சிறுமி கடத்தல் : 18 வயது காதலனும் அவரது சிறிய தாயாரும் கைது Published By: VISHNU 25 FEB, 2024 | 09:31 PM மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியைக் கடத்திச் சென்ற 18 வயது இளைஞனையும் அவரது சிறிய தாயாரையும் பொலிஸார் வாகரையில் வைத்து சனிக்கிழமை (24) இரவு கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர். கொக்குவில் பொலிஸ் பிரிவில் வசித்து வந்த சிறுமி கடந்த 7ம் திகதி பாடசாலைக்குச் சென்ற நிலையில் அவர் வீடு திரும்பாததையடுத்து அவரது உறவினர்கள் பொலிசாரிடம் முறைப்பாடு செய்தனர். இதையடுத்து கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கையின் போது குறித்த சிறுமியை அவரது காதலன் வாகரைப் பிரதேசத்திலுள்ள அவரது சிறிய தாயாரின் வீட்டிற்கு கடத்திச் சென்று வைத்துள்ளமை தெரியவந்தது. இதனையடுத்து குறித்த வீட்டை சுற்றுவளைத்த பொலிஸார் சிறுமியை மீட்டதுடன் கடத்தல் குற்றச்சாட்டில் 18 வயதுடைய காதலனையும் அவருக்கு உடந்தையாகச் செயற்பட்ட 47 வயதுடைய சிறிய தாயாரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) பொலிஸார் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. https://www.virakesari.lk/article/177279
  6. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 57 நிமிடங்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்திய, அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு திமுக அரசு மறுப்பதால் சர்ச்சை உருவாகியுள்ளது. 2018-ஆம் ஆண்டு நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அன்றைய அதிமுக அரசின் மீது வலுவான எதிர்ப்பலைகளை உருவாக்கியது. திமுகவும் அதனை தனக்கு சாதகமாக்கி, ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தது. அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டமன்றத்தில் முன்வைத்து அதிமுகவை கடுமையாக சாடியது. இருப்பினும், காவல் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் திமுக தலைமையிலான அரசு குழப்பமான நிலைப்பாட்டை எடுத்திருப்பது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது 13 பேர் கொல்லப்பட்டதை எதிர்க்கட்சியாக இருந்த திமுக கடுமையாகக் கண்டித்தது. சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்னோலின் தாயார் தொடுத்த வழக்கு 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையினால் ஏற்பட்ட தீவிர சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் உடல்நல பாதிப்புகளையும் கண்டித்து, ஆலையை மூட வலியுறுத்தி நீண்ட போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் நூறாவது நாளில் (மே 22ம் தேதி) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது நிகழ்த்தப்பட்ட கடும் வன்முறை மற்றும் துப்பாக்கிச்‌ சூட்டில் 12 பேர் குண்டுகள் பாய்ந்தும், ஒருவர் கூட்ட நெரிசலில் நெஞ்சில் மிதிப்பட்டும் உயிரிழந்தனர். இறந்தவர்கள் சிலரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் துப்பாக்கி குண்டுகள் மிக அருகிலிருந்து சுடப்பட்டதும், சிலருக்கு தலையில் சுடப்பட்டதும் தெரிய வந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட 18வயது ஸ்னோலினின் என்ற பெண்ணின் தலையின் பின் பகுதியில் நுழைந்த குண்டு வாய்வழியாக வெளியே வந்ததை பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது. இந்த சம்பவத்துக்கு காரணமான காவல் அதிகாரிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 302-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஸ்னோலினின் தாய் வனிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். மேலும் அவர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.1 கோடியாக உயர்த்தி தரவும், அரசு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அதனால் கிரிமினல் நடவடிக்கை கோரும் மனுவை தள்ளுபடி செய்ய கேட்டுக்கொண்டார். தமிழக அரசின் இந்த நிலைப்பாடு, துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. படக்குறிப்பு, அதிமுக ஆட்சிக் காலத்திலேயே நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டது அருணா ஜெகதீசன் அறிக்கை சொல்வது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலேயே நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டது. -துப்பாக்கிச்சூட்டுக்கான காரணங்கள், சூழல்கள் குறித்து கண்டறிதல், -சூழலுக்கு ஏற்ப தேவையான படைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டனவா, துப்பாக்கிச்சூட்டின் போது எல்லா விதிகளும் பின்பற்றப்பட்டனவா என கண்டறிதல் -காவல் அதிகாரிகள் தரப்பில் அதிக பலம் பயன்படுத்தப்பட்டனவா, அப்படி இருந்தால் அதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை கூறுதல் -இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் பரிந்துரைத்தல் ஆகிய நான்கு நோக்கங்களை விசாரித்த ஆணையம் தனது இறுதி அறிக்கையை 2022 ஜூன் 6 அன்று அரசிடம் வழங்கியது. படக்குறிப்பு, 17 காவல் அதிகாரிகளை பட்டியலிட்ட அருணா ஜெகதீசன் ஆணையம், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அருணா ஜெகதீசன் அறிக்கை காவல் அதிகாரிகள் தேவையானதை விட அதிகமான பலத்தை பயன்படுத்தியுள்ளனர் என்று கண்டறிந்து கூறியது. இந்த சம்பவத்துக்கு காரணமாக 17 காவல் அதிகாரிகளை பட்டியலிட்ட அருணா ஜெகதீசன் ஆணையம், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கையும் கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. மாவட்ட ஆட்சியர், மூன்று தாசில்தார்களை இந்த சம்பவத்துக்கு காரணமாக கண்டறிந்தது. அப்போதைய தென்மண்டல ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ் மற்றும் டிஐ ஜி கபில்குமார் சி ஆகிய ஐ பி எஸ் அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், துணை கண்காணிப்பாளர் லிங்க திருமாறன், ஆய்வாளர்கள் திருமலை, ஹரிஹரன், பார்த்திபன் உள்ளிட்டோர் அருணா ஜெகதீசன் ஆணையத்தால் பட்டியிலிடப்பட்டிருந்தனர். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் கொடுக்க பரிந்துரைத்தது. படக்குறிப்பு, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் என்ற நிவாரணத் தொகையாக தரவேண்டும் என்பதையும் ஏற்பதற்கில்லை என தமிழ்நாடு அரசு வாதிட்டுள்ளது 'எல்லா பரிந்துரைகளையும் ஏற்பதற்கில்லை' - தமிழ்நாடு அரசு அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளை முழுவதுமாக ஏற்கவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தமிழக அரசு. காவல் அதிகாரிகள் தேவைக்கு அதிகமான பலத்தை அதிகமாக பயன்படுத்தினர் என்பதையும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் ஏற்கும்போதிலும், கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் ரூ.50 லட்சம் என்ற நிவாரணத் தொகையாக தரவேண்டும் என்பதையும் ஏற்பதற்கில்லை என வாதிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூறும்போது "உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், தீவிர காயமடைந்த 40 பேருக்கு தலா ரூ.5 லட்சமும், லேசாக காயமடைந்த 64 பேருக்கு தலா ரூ.1.5 லட்சமும் வழங்கப்பட்டன. உயிரிழந்த 18வயது ஸ்னோலினின் சகோதரன் ஜான்ராஜ் உட்பட 21 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. மேலும் “சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்குகள் தவிர சம்பந்தப்பட்டவர்கள் மீது தொடுக்கப்பட்ட 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. போராட்டத்தின் போது, கைது செய்யப்பட்டு காவல் கட்டுப்பாட்டில் இருந்த 93 பேருக்கு தலா ஒரு லட்சம் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதியான பாரத்ராஜ், போராட்டத்தில் பங்கேற்றதற்காக காவலர்களால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். அந்த ஆண்டு மே மாதம் 30ம் தேதி உயிரிழந்துவிட்டார். அவரது குடும்பத்துக்கு 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேற்படிப்பு மேற்கொள்ள தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது” என தமிழக அரசு தான் எடுத்த நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் பட்டியலிட்டுள்ளது. படக்குறிப்பு, கொல்லப்பட்ட ஸ்னோலின் குடும்பத்தின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ரஜினி, துறை ரீதியான நடவடிக்கைகள் கண் துடைப்பு மட்டுமே என்கிறார் துறை ரீதியிலான நடவடிக்கைகள் போதுமா? தவறு செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகளே போதும் என்ற நிலைப்பாட்டை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். “சிபிஐ இந்த விவகாரத்தில் இரண்டு ஆண்டுகள் விசாரணை செய்து ஒரே ஒரு காவலர் அதுவும் கீழ் நிலையில் உள்ள திருமலை என்ற டிஎஸ்பி மீது மட்டும் தான் குற்றம் சுமத்தியுள்ளது” என்கிறார் ஹென்றி திபேன். ஸ்னோலின் குடும்பத்தின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ரஜினி துறை ரீதியான நடவடிக்கைகள் கண் துடைப்பு மட்டுமே என்றார். “ஆணையத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சைலேஷ் குமார் யாதவ் ஐ பி எஸ், வழக்கமான பதவி உயர்வு பெற்றுள்ளார். இது எப்படி சாத்தியம்? யாரை ஏமாற்றுகிறார்கள்?” என்கிறார். தமிழக அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணத்தில், “சிபிஐ எல்லா காவல் அதிகாரிகளையும் விசாரித்தது. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் வகையிலான அம்சங்களை சிபிஐ கண்டறியவில்லை (மேற்குறிப்பிட்ட நபர்கள் தவிர) . எக்ஸ்கியுடி மேஜிஸ்திரேட் உத்தரவின் படி தான் காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். எனவே அந்த வகையில் காவலர்களின் நடவடிக்கைகளை சிபிஐ ஏற்கெனவே நியாயப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு கிரிமினல் மற்றும் விதிமீறல் பார்வையிலிருந்து விலக்கு அளித்துள்ளது” என்று கூறுகிறது. "தவறு செய்த அதிகாரிகள் மீது எப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியும்? பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில் கேட்கவில்லை, சட்டரீதியான நியாயம் கிடைக்க வேண்டுமல்லவா? " என்று பிபிசி தமிழிடம் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஸ்னோலின் தாயார் வனிதா தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ‘‘கிரிமினல் நடவடிக்கை எடுக்க சிபிஐ பரிந்துரைக்கவில்லை என்று கூறுகிறார்கள். சிபிஐ என்பது யார்? அவர்கள் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக நிற்பவர்கள். போராடிய மக்கள் மீது வழக்கு தொடுத்துள்ளது சிபிஐ என்பது நினைவிருக்கட்டும். இதுவரை அரசால் அமைக்கப்பட்ட ஆணையங்கள் எல்லாமே அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளன. இந்த ஆணையம் உண்மையை கூறியதால் அதை ஏற்க மறுக்கிறார்கள். குண்டடிபட்டு தான் இறந்தார் ஸ்னோலின் என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. இதை அரசு உட்பட யாரும் மறுக்கவில்லையே. இன்னும் வேறு என்ன வேண்டும்?" என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரஜினி. படக்குறிப்பு, ஸ்னோலினின் தாய் வனிதா அதிகாரிகளை பாதுகாக்கிறதா அரசு? தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கை எடுத்த ஐந்து மாதங்களில் மூடிவிட்டது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்ரி திபேன். அரசாங்கம் அதிகாரிகளையே நம்பியிருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம் என்கிறார் அவர். ,"இந்த வழக்கை விசாரித்த சிபிஐ இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர் ஒரே ஒரு காவலரை மட்டும் தான் குற்றம் புரிந்ததாக அடையாளம் கண்டது. அவரும் கீழ் நிலையில் உள்ள காவலர்தான். இந்த அரசு, அதிகாரிகளையே நம்பியிருப்பது துர்திருஷ்டவசமானது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை பாதுகாக்கிறது." என்றார். ஒரு முறை வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது கூட தெரியாமல், அறிக்கை இனிமே வெளி வரும் என்று கடந்த மாதம் நீதிமன்றத்தில் கூறியதை சுட்டிக்காட்டுகிறார் அவர். தவறு செய்த அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக தமிழ்நாடு அரசாங்கம் கூறுகிறது.“தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்நிலையில், இது குறித்து மேலும் விசாரிக்க 2023ம் ஆண்டு மே மாதம் முதல் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ். தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் அறிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை” என்றும் கூறியது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐ பி எஸ் அதிகாரிகள் மீதும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. ஆனால், இந்த நடவடிக்கைகள் போதுமானதல்ல என்று விமர்சிக்கும் ஹென்றி திபேன், "2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போதும்,2021 ன் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போதும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம் என்று திமுக கூறியது. அந்த நடவடிக்கை எங்கே என்று தான் கேட்கிறோம்." என‌ கேள்வியெழுப்பினார். ‘‘13 உயிர்கள் பறி போகின. கடந்த ஆறு ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிடல்லை. இனிமேலும் திறக்க விடமாட்டார் கடவுள். என் மகளை இழந்து நான் படும் வேதனை எனக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்" என்கிறார் ஸ்னோலின் தாயார் வனிதா. இது குறித்து அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘இந்த விவகாரத்தில் தேவையான துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டன. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிலைப்பாடு அரசுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது’’ என்றார். https://www.bbc.com/tamil/articles/c191drwmj4po
  7. வறட்சியான காலநிலைக்கு பொதுமக்களால் மட்டுமே தீர்வுகளை வழங்க முடியுமாம்! Published By: VISHNU 25 FEB, 2024 | 07:07 PM காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் வறட்சியான காலநிலைக்கு பொதுமக்களால் மட்டுமே தீர்வுகளை வழங்க முடியும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஒருவர் வருடத்துக்கு ஒருவர் ஒரு மரக்கன்றையாவது நட்டினால் எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகளைத் தவிர்க்க முடியும் என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/177277
  8. யுக்ரேனுடன் போரிட ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் ஏமாற்றி சேர்ப்பு - முகவராக செயல்படும் 'பழனிசாமி' யார்? கட்டுரை தகவல் எழுதியவர், அமரேந்திர யர்லகத்தா பதவி, பிபிசி செய்தியாளர் 25 பிப்ரவரி 2024, 06:52 GMT சில இந்திய இளைஞர்கள் ரஷ்யா சென்று லட்சக்கணக்கான ரூபாயை சம்பாதித்து விடலாம் என நினைத்து சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளனர். அவர்கள் முகவர்களின் வார்த்தைகளை நம்பியதால், தற்போது யுக்ரேனுடனான ரஷ்யாவின் போரில் முன்கள வீரர்களாக போரிட்டுக் கொண்டிருப்பவதாகக் கூறுகிறார்கள். உதவியாளர் பணிக்கு அழைத்து வந்து, ஏமாற்றி ராணுவத்தில் சேர்த்ததாகவும் அவர்கள் புகார் கூறுகிறார்கள். தெலங்கானா உள்ளிட்ட கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து 16 பேர் ரஷ்யா சென்றுள்ளனர். இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி பாதுகாப்பு மற்றும் உதவியாளர் வேலை தருவதாக கூறி இந்திய இளைஞர்களை ஏஜென்டுகள் அழைத்துச் சென்றுள்ளனர். இதற்காக ரஷ்யாவில் இரண்டு முகவர்கள் மற்றும் இந்தியாவில் இரண்டு முகவர்கள் உள்ளனர். பைசல் கான் என்ற மற்றொரு முகவர் துபாயில் இருந்து இந்த நான்கு பேரையும் ஒருங்கிணைத்துள்ளார். பாபா விலாக்ஸ் என்ற யூடியூப் சேனலையும் அவர் நடத்தி வருகிறார். ரஷ்யாவில் ஹெல்பர் வேலைகள் குறித்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் போட்டு இளைஞர்களைஅவர் ஈர்க்கிறார். அந்த வீடியோக்களை பார்த்துவிட்டு, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்களை வேலை தேடும் இளைஞர்கள் தொடர்பு கொள்கிறார்கள். 35 பேரை அனுப்ப திட்டமிட்ட முகவர்கள் 35 பேரையும் ரஷ்யாவுக்கு அனுப்ப முகவர்கள் திட்டமிட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் நவம்பர் 9, 2023 அன்று இந்தியாவை விட்டு வெளியேறினர். சென்னை சென்று, அங்கிருந்து ஷார்ஜா, பின் மாஸ்கோவுக்கு 12 ஆம் தேதி சென்றுள்ளனர். நவம்பர் 16 அன்று, பைசல் கானின் அணி ஏழு பேரை ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்றது. அவர்களுக்கு சில நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, டிசம்பர் 24ம் தேதி ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக அவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர். துபாயில் உள்ள முகவரான பைசல் கான், பாதுகாப்பு மற்றும் உதவியாளர் வேலைகள் பற்றி யாரிடமும் எங்கும் கூறவில்லை என இளைஞர்களின் குடும்பத்தினர் பிபிசியிடம் கூறினர். “நான் ராணுவ உதவியாளர் என்றேன். எனது முந்தைய வீடியோக்களை நீங்கள் பார்க்கலாம். உதவியாளர் பணி குறித்து ரஷ்ய அதிகாரிகளிடமிருந்து வந்த தகவல்கள் எங்களிடம் உள்ளன. கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக இந்த வேலையில் இருக்கிறேன். இதுவரை, பல்வேறு இடங்களில், இரண்டாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளேன்,'' என அவர் அந்த வீடியோவில் பேசுகிறார். ரஷ்யா சென்ற சிலரின் பெயர்களை பிபிசி பெற்றுள்ளது. அவர்களில் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அப்சன், தெலுங்கானாவில் உள்ள நாராயணப்பேட்டையைச் சேர்ந்த சுபியான், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அர்பன் ஹுசைன், காஷ்மீரைச் சேர்ந்த ஜாகூர் அகமது, குஜராத்தைச் சேர்ந்த ஹேமல், சையத் இலியாஸ் ஹுசைன், சமீர் அகமது மற்றும் கர்நாடகாவின் குல்பர்காவைச் சேர்ந்த அப்துல் நயீம் ஆகியோர் அடங்குவர். படக்குறிப்பு, உ.பி.யில் இருந்து ரஷ்யா சென்ற ஒருவர் விஷயம் எப்படி வெளியே வந்தது? குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இல்லாதது குறித்து ரஷ்யாவில் இளைஞர்களிடம் இருந்து வெளியான காணொளிகள் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரண்டு வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. ஒரு வீடியோவில், கர்நாடகாவின் குல்பர்காவைச் சேர்ந்த சையத் இலியாஸ் உசேன், முகமது சமீர் அகமது மற்றும் சுஃபியான் ஆகியோர் பேசுவதைக் காணலாம். "நாங்கள் பாதுகாப்பு உதவியாளர்களாக கொண்டு வரப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டாேம். ரஷ்ய எல்லைக்கு கொண்டு வரப்பட்டு, காட்டில் போர்க்களத்தில் இங்கே வைக்கப்பட்டுள்ளோம். பாபா விலாக்ஸின் முகவரால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம்," என அந்த வீடியோவில் இளைஞர் கூறியுள்ளார். மற்றொரு வீடியோவில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அர்பாஸ் ஹுசைன் பேசுவதைக் காணலாம். கையில் காயம் இருப்பதைக் அவர் காட்டுகிறார். அதில், போர்க்களத்தில் தூக்கி வீசப்பட்டதாகவும், மிகவும் சிரமப்பட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அந்த வீடியோவில் கெஞ்சுகின்றனர். 'ரஷ்ய மொழியில் ஒப்பந்தங்களில் கையொப்பம் பெற்றனர்' ரஷ்யா சென்றதும் அங்குள்ள அதிகாரிகள் பயிற்சிக்கு முன் இளைஞர்களை ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைத்துள்ளனர். அந்த பத்திரம் ரஷ்ய மொழியில் இருந்ததாகவும், ஏஜென்டுகளை நம்பி அனைவரும் கையெழுத்திட்டதாகவும் நம்பப்பள்ளியைச் சேர்ந்த முகமது இம்ரான் தெரிவித்தார். பிபிசி அவரது வீட்டிற்கு சென்றபோது, அவரது மூத்த சகோதரர் முகமது இம்ரானை சந்தித்தோம். அவர்கள் ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வசிக்கிறார்கள். அஃப்பானுக்கு மனைவியும், இரண்டு வயது மகனும், 8 மாத குழந்தையும் உள்ளனர். அவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். யூடியூப்பில் பைசல் கான் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து, நல்ல சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரைத் தொடர்பு கொண்டதாகக் கூறினார். அஃப்ஸர் சகோதரர் முகமது இம்ரான் கூறுகையில், தனது சகோதரர் காணாமல் போய் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிறது, எனக் கூறி தன் கவலையை வெளிப்படுத்தினார். "கடைசியாக டிசம்பர் 31ஆம் தேதி எங்களிடம் பேசினார். அதன் பிறகு அவர் எங்களை தொடர்பு கொள்ளவில்லை," என்றார். "அங்கு பயிற்சியளிக்கப்படுவதாக அவர் எங்களிடம் சொன்னார், அது உதவியாளர் பயிற்சி போன்றது அல்ல. முகவர்களிடம் பேசினால், அது பயிற்சியின் ஒரு பகுதி, அழுத்தம் கொடுக்க வேண்டாம், அவர்கள் அனைவரும் திரும்பி வருவார்கள் எனச் சொல்கிறார்கள்," என்றார் முகமது இம்ரான். தொடர்ந்து பேசிய இம்ரான், "உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் எனது அண்ணனின் காலில் இரண்டு தோட்டாக்கள் தாக்கியதாகக் கூறினார். அவரை உடனடியாக அழைத்து வர வேண்டும்” என இம்ரான் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனவரி 18 முதல் எந்த தகவலும் இல்லை தெலுங்கானாவில் உள்ள நாராயணப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சையத் சுபியான், ஜனவரி 18ஆம் தேதி முதல் தொடர்பில் இல்லை என்று அவரது தாயார் நசீம் பானு பிபிசியிடம் தெரிவித்தார். "இங்கே என்னிடம் போன் இல்லை. எப்போது கூப்பிடுவேன் என தெரியாது. நான் நலமாக இருக்கிறேன் என்றார் என் மகன். அதன்பின்னர் போன் திரும்ப வரவில்லை. எங்களுக்கு யாரும் இல்லை. மோதி அரசு தான் எங்கள் மகனை மீட்க வேண்டும்," என்று அவர் புலம்பினார். இவர்களது குடும்பம் நாராயணப்பேட்டையில் வசித்து வருகிறது. இரண்டு அறைகள் கொண்ட சிறிய வீட்டில் இவர்கள் வாழ்கிறார்கள். 24 வயதான சுஃபியான் இரண்டு ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு பெற்றோர், சகோதரி மற்றும் சகோதரர் உள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி சுபியான் மேலும் 5 பேருடன் ரஷ்யா சென்றார். துபாயில் சந்தித்த இந்திய நண்பர்களுடன் ரஷ்யா செல்ல முடிவு செய்தார். கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவர் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவில்லை. “வாரத்திற்கு ஒருமுறை குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கிறோம். போர்க்களத்தில் இருக்கும்போது தொலைபேசியில் பேசினால், சிக்னல்களின் அடிப்படையில் யுக்ரேன் படைகளால் அடையாளம் காண முடியும். தொலைபேசி சிக்னல்களை கண்டறிந்து ட்ரோன் தாக்குகிறது. போர்க்களத்தில் போன்கள் பயன்படுத்தப்படுவதில்லை. அதனால்தான் அவர்கள் குடும்பத்துடன் தொடர்பில் இல்லை" என்று பைசல் கான் பிபிசியிடம் கூறினார். 10 இந்தியர்கள் எங்கே? ரஷ்யா சென்ற 16 பேரில் 6 பேரின் இருப்பிடம் மட்டுமே தெரியவந்துள்ளதாகவும், மேலும் பத்து பேரின் இருப்பிடம் இன்னும் தெரியவில்லை என்றும் பைசல் தெரிவித்துள்ளார். வைரலான வீடியோவை அனுப்பிய உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஹுசைன் என்னைத் தொடர்பு கொண்டார் அவர். "நாங்கள் அவரை வழிநடத்தி மாஸ்கோவிற்கு அழைத்துச் சென்றோம். அவர் இப்போது பாதுகாப்பாக இருக்கிறார். காணாமல் போனவர்களுக்காக தூதரகம் மற்றும் ரஷ்ய ராணுவ அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம்" என்று பைசல் கான் பிபிசியிடம் தெரிவித்தார். ரஷ்யா சென்ற தெலுங்கானா இளைஞர்களில் மேலும் சிலரின் இருப்பிடம் தெரியாததால் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். “ஆறு பேர் தொடர்பில் இருக்கிறார்கள். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் என்னைத் தொடர்பு கொண்டு என்னை மாஸ்கோவிற்குப் பத்திரமாக அழைத்து வந்தான். இருவரும் முன்கள வீரர்களாகப் போரில் ஈடுபட்டதாக அறியப்படுகிறது. உதவியாளர்கள் என்று சொன்னதால்தான் இளைஞர்களை அனுப்பினேன். ஆனால், ரஷ்ய அதிகாரிகள் அவர்களை ராணுவ வீரர்களாக மாற்றிவிட்டனர்,” என்றார். வாக்னர் குழுவில் சேர்க்கப்பட்டனரா..? ரஷ்யாவில் தனியார் ராணுவம் என்று அழைக்கப்படும் வாக்னர் குழுமத்தில் இந்திய இளைஞர்கள் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எங்கும் இல்லை. அதிகாரப்பூர்வமாக ரஷ்ய ராணுவம் என்று அழைக்கப்பட்டாலும், அதிகாரப்பூர்வமற்ற முறையில் வாக்னர் குழு ராணுவத்தில் பணியாற்றியதாக வதந்தி பரவுகிறது. இதே விஷயத்தைப் பற்றி பைசல் கானிடம் பிபிசி கேட்டது. அதற்கு அவர்,"முதலில் வாக்னர் குரூப் என்று சொன்னார்கள். பிறகு ரஷ்ய ராணுவத்தில் வேலைக்கு சேர்த்ததாக சொன்னார்கள். இருவரும் வெவ்வேறு குழுக்களா என்று கேட்டபோது, அனைத்தும் ரஷ்ய ராணுவம் என்று சொன்னார்கள்," என்றார். இதே பிரச்னையில் ரஷ்யாவில் முகவராக இருக்கும் மொயினிடம் பேச பிபிசி முயன்றது. ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. ஹைதராபாத்தில் உள்ள நாம்பள்ளியில் இருக்கும் அப்சானின் சகோதரர் முகமது இம்ரானிடம் பிபிசி பேசியது. “ஒப்பந்த ஆவணங்கள் ரஷ்ய மொழியில் உள்ளன. பின்னர், எனது தம்பி பத்திரப்பதிவு விவரங்களை அனுப்பியபோது, அதை மொழிபெயர்த்து படித்தேன். "வாக்னர் குழு அதில் இல்லை, ஆனால் ரஷ்ய ராணுவம் உள்ளது," என்று அவர் கூறினார். முகவராக செயல்படும் 'பழனிசாமி' யார்? பிபிசியின் விசாரணையில், இந்த முழு விவகாரத்தின் பின்னணியிலும் ஐந்து முகவர்கள் இருப்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள். ஆனால் வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். ரஷ்யாவில் ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் வேலை என்ற பெயரில் இந்திய இளைஞர்களை அழைத்துச் சென்று மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். ராஜஸ்தானைச் சேர்ந்த மொயின், தமிழ்நாட்டைச் சேர்ந்த பழனிசாமி ரமேஷ்குமார் ஆகியோர் ரஷ்யாவில் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுடன் தொடர்பில் உள்ள பைசல் கான் துபாயில் தங்கியுள்ளார். பாபா விலாக்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். விளம்பரம் கொடுத்து இளைஞர்களை சிக்க வைக்கிறார்கள். மும்பையில் உள்ள சுபியான் மற்றும் பூஜா என்ற ஏஜென்டுகளால் இந்திய இளைஞர்கள் சிக்குகின்றனர். சம்பவத்திற்குப் பிறகு மும்பையில் உள்ள முகவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. பிபிசி பைசல் கானிடம் பேசியது. ரஷ்யாவில் மொயினிடமும் பிபிசியும் பேசியது. அவர் பிறகு பேசுகிறேன் என்று கூறி துண்டித்துவிட்டு மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை. ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ. 3 லட்சம் வசூல் ரஷ்யா சென்றால் லட்சங்களில் சம்பளம் கிடைக்கும் என இளைஞர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், அங்கு சென்ற பிறகு பயிற்சி என்ற பெயரில் முதல் மூன்று மாதங்களுக்கு ரூ.40-50 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளனர். பைசல் கான் சம்பளம் பின்னர் அதிகரிக்கும் என்று சொல்லி வந்ததாக அந்த இளைஞர்கள் கூறினர். இளைஞர்களிடமிருந்து ரூ. 3 லட்சத்தை பைசல் கான் வசூலித்துள்ளார். அவர்கள் அனைவரும் தாங்கள் சேமித்த அல்லது கடன் வாங்கிய பணத்தில் அவருக்கு பணம் கொடுத்தனர். “எனது தம்பி துபாயில் இருந்தபோது முதல் வருடம் நன்றாக பணம் அனுப்புவார். ஏதாவது ஒரு மாதம் அனுப்பவில்லை என்றால் அடுத்த மாதம் அனுப்புவார். இரண்டாம் வருடத்தில் அனுப்புவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். சம்பாதித்த தொகையை மறைத்து ஏஜெண்டுகளிடம் கொடுத்தார். ரஷ்யா சென்றால் அதிகம் சம்பாதித்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று நினைத்தார். ஆனால், இப்போது நிலையும் மாறிவிட்டது" என்று தெலுங்கானா மாநிலம் நாராயணப்பேட்டையைச் சேர்ந்த சுபியானின் மூத்த சகோதரர் சயீத் சல்மான் பிபிசியிடம் கூறினார். “ஒவ்வொருவரிடமிருந்தும் தலா ரூ.3 லட்சம் வாங்கியுள்ளது உண்மைதான். அது செயல்பாட்டின் ஒரு பகுதி. நான் ரூ. 50,000 மட்டும் எடுத்துக்கொண்டு, மீதித் தொகையை ரஷ்யாவில் உள்ள ஏஜென்டுகளுக்குக் கொடுத்து வந்தேன்” என்கிறார் ஏஜென்ட் பைசல் கான். ரஷ்யா போகும் வரை ரகசியம் காத்த முகவர்கள் ரஷ்யா செல்லும் வரை அவர்கள் அங்கு செல்வது தெரியாது என்று சல்மான் கூறினார்.. “சுபியான் ரஷ்யா சென்றபோதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது. தான் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முயற்சிக்கிறேன் என்று முதலில் கூறி வந்தார். முகவர்கள் ரஷ்யா செல்வது பற்றி சொல்லவில்லை. ஏனெனில் ரஷ்யா செல்ல ரூ. 20-25 லட்சம் செலவாகும். ஆனால், 3 லட்சத்தை மட்டும் எடுத்து ரஷ்யாவுக்கு சென்றிருக்கிறார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் எல்லோரும் எங்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள் என வீட்டில் சொல்ல ஏஜெண்டுகள் விடவில்லை,'' என்றார் சல்மான். பட மூலாதாரம்,GETTY IMAGES அசாதுதீன் ஒவைசி என்ன சொல்கிறார்? கடந்த பிப்ரவரி 21ம் தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் சிலர் ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசியை சந்தித்தனர். ரஷ்யாவில் இருந்து தங்கள் குழந்தைகளை அழைத்து வரக் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தூதரக அதிகாரிகளிடம் பேசி இளைஞர்களை அழைத்து வருமாறு கூறினார். “இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரூ. 3 லட்சத்தை வசூலித்து ரஷ்யாவுக்கு கொண்டு சென்றனர். தற்போது இவர்களின் இருப்பிடம் குறித்து அவர்களது குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். நரேந்திர மோதியும் ஜெய்சங்கரும் ஒன்றிணைந்து அவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று அசாதுதீன் ஓவைசி கூறினார். மும்பையில் உள்ள இரு முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய வெளியுறவுத் துறை என்ன சொல்கிறது? ரஷ்யாவின் போர்க்களத்தில் இந்திய இளைஞர்கள் சிக்கிய விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை பிரதிநிதி ரந்தீர் ஜெய்ஸ்வால் பதிலளித்தார். அவர்களை விரைவில் வீட்டிற்கு அழைத்து வர ரஷ்ய அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது. "இந்தியர்கள் கவனமாக இருக்குமாறும், இதுபோன்ற மோசடிகளில் இருந்து விலகி இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்,'' என்றார். மறுபுறம், பிபிசி மின்னஞ்சல் மூலம் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தையும், இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தையும் தொடர்பு கொண்டது. அவர்களிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இம்ரான் ஐதராபாத்தில் உள்ள நம்பல்லி காவல் நிலையத்தில் தனது சகோதரர் வராதது குறித்து புகார் அளித்தார். முகவர் பைசல் கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. நம்பள்ளி போலீசார், பைசல் கான் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். https://www.bbc.com/tamil/articles/ckrd53023plo
  9. 25 FEB, 2024 | 06:05 PM மட்டக்களப்பு ஏறாவூர் கடற்கரை பகுதியில் சுமார் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான பெருமளவு சட்ட விரோத சுருக்குவலைகள் மற்றும் 3 தோணிகளை மீன்பிடி அதிகாரிகள் கடற்படையினருடன் இணைந்து கைப்பற்றியுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தினர் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (25) சட்டவிரோத சுருக்கு வலைகளை கண்டுபிடிப்பதற்கான சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதே இந்த வலைகளும் தோணிகளும் அதிகாரிகள் மற்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் சிலர் தொடர்ச்சியாக தடை செய்யப்பட்ட சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக மீனவர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மீன்பிடி அதிகாரிகள் கடற்படையினருடன் இணைந்து ஏறாவூர், குடியிருப்பு கடற்கரை பகுதியை முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது கடற்கரையில் மீன்பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்ட விரோத வலைகளும், இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 தோணிகளும் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட வலைகள், தோணிகளுக்கு எவரும் உரிமை கோராத நிலையில், அவை கல்லடியிலுள்ள மாவட்ட கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள காரியாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட வலைகள் மற்றும் தோணிகளை நாளை திங்கட்கிழமை (26) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/177271
  10. டெஸ்ட் தொடர்: கும்ப்ளே சாதனையை முறியடித்து அஸ்வின் வரலாறு - இங்கிலாந்தை வெல்லுமா இந்தியா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ராஞ்சியில் நடந்துவரும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இங்கிலாந்துக்கு அணி. இன்னும் 2 நாட்கள் முழுமையாக இருக்கும் நிலையில் இலக்கின் கால்பகுதியை இந்திய அணி கடந்துவிட்டநிலையில் நாளை வெற்றி எளிதாகலாம். அதேநேரம் கடைசி 2 நாட்களில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் மாறும் என்ற தகவலும், ஆட்டத்தை பரபரப்பாகக் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. அதேசமயம், அனில் கும்ப்ளேயின் சாதனையை முறியடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். உள்நாட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார். இதுவரை எந்த இந்திய பந்துவீச்சாளரும் இதை முறியடிக்கவில்லை. ஆனால், அஸ்வின் தனது 5 விக்கெட் வீழ்த்தியபோது, உள்நாட்டில் நடந்த போட்டிகளில் கும்ப்ளேயின் சாதனையை முறியடித்து 350 விக்கெட்டுகளைக் கடந்து 354 விக்கெட்டுகளை எட்டி சாதனை படைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியை 2-வது இன்னிங்ஸில் விரைவாக சுருட்டியதில் அஸ்வின், குல்தீப் யாதவ் பங்களிப்பு முக்கியமானது. இருவரும் சேர்ந்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் வெற்றிக்கு 152 ரன்கள் தேவை. களத்தில் கேப்டன் ரோஹித் சர்மா 24 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஏற்கெனவே இந்திய அணி 2 போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வென்று 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்த டெஸ்டில் இந்திய அணி வெல்லும்பட்சத்தில் 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்துக்கு நகரும். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆடுகளம் எப்படி? ராஞ்சி ஆடுகளம் களி மண்ணால் அமைக்கப்பட்டது. இயல்பாகவே மெதுவான ஆடுகளம். பேட்டர்களுக்கும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் அதிகம் ஒத்துழைக்கும் ஆடுகளமாக இருக்கும். ஆட்டத்தின் தொடக்கத்தில் காற்றின் ஈரப்பதம், தரையின் ஈரப்பதத்தால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முதல் 10 ஓவர்கள் ஒத்துழைக்கலாம். அதன்பின் சுழற்பந்துவீச்சாளர்கள் ராஜ்ஜியமாகவே இருக்கும். அதிலும் கடைசி 2 நாட்களில் ஆடுகளங்களில் அதிக வெடிப்பும், வறண்ட நிலையிலும் இருக்கும். அப்போது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பந்து நன்றாக சுழன்று பேட்டர்களுக்கு வரும், பந்து மிகவும் தாழ்வாக பேட்டரை நோக்கி வரும் என்பதால் எதிர்த்து பேட்டிங் செய்வது சற்று சிரமமாக இருக்கும். ஆதலால், இந்திய அணி நாளை ஆட்டத்தை கவனமாக எதிர்கொள்ள வேண்டும் கைவசம் 10 விக்கெட்டுகள் இருக்கிறதே என்று கவனக்குறைவாக பேட் செய்தால் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீப் ஆகியோரின் பந்துவீச்சைச் சமாளிக்க இந்திய பேட்டர்கள் சிரமப்பட்டனர். கடைசி இரு நாட்களில் இருவரின் பந்துவீச்சும் சவாலாக இருக்கும் பட்சத்தில் இந்திய அணி போராடியே வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்படலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்த ஜூரெல், குல்தீப்புக்கு அதிகமாக ஸ்ட்ரைக்கை வழங்காமல் தானே பேட் செய்து ரன்கள் சேர்த்தார் பொறுப்பான பேட்டிங் செய்த ஜூரெல் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 104.5 ஓவர்களில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 2வது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்திருந்தது. ஜூரெல் 30, குல்தீப் யாதவ் 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டத்தை ஜூரெல், குல்தீப் தொடங்கினர். இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்த ஜூரெல், குல்தீப்புக்கு அதிகமாக ஸ்ட்ரைக்கை வழங்காமல் தானே பேட் செய்து ரன்கள் சேர்த்தார். ஜூரெல் 96 பந்துகளில் டெஸ்ட் போட்டியில் முதல் அரைசதத்தை அறிமுகப் போட்டியில் எட்டினார். நிதானமாக பேட் செய்த குல்தீப் 28 ரன்களில் ஆன்டர்சன் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். 8-வது விக்கெட்டுக்கு குல்தீப், ஜூரெல் இருவரும் சேர்ந்து 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். அடுத்துவந்த ஆகாஷ் தீப் சிங், ஜூரெலுக்கு நன்கு ஒத்துழைத்து பேட் செய்தார். ஸ்கோரை உயர்த்தும் நோக்கில் ஜூரெல் அதிரடியாக பேட்செய்து பவுண்டரி, சிக்ஸர்களாகப் பறக்கவிட்டார். ஆகாஷ் தீப் தனது பங்கிற்கு ஒரு சிக்ஸர் உள்பட 9 ரன்கள் சேர்த்துஆட்டமிழந்தார். சதத்தை நெருங்கிய ஜூரெல் 149 பந்துகளில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 6பவுண்டரிகள் அடங்கும். 103.2 ஓவர்களில் இந்திய அணி 307 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்ததது. இதையடுத்து, இங்கிலாந்து அணி 46 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் சோயிப் பசீர் 5 விக்கெட்டுகளையும், ஹார்ட்லி 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராபின்சனின் விக்கெட்டை வீழ்த்தியபின் குதூகலிக்கும் குல்தீப் யாதவ் முன்னிலை பெற்றும் இங்கிலாந்து திணறல் 46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆடுகளம் நன்கு வறண்டு காணப்பட்டதும், காற்று இல்லாமல் இருந்ததும் அஸ்வின் சுழற்பந்து வீச்சுக்கும், பந்து டர்ன் ஆவதற்கும் ஏதுவாக இருந்தது. அஸ்வின் வீசிய 5-வது ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் டக்கெட் 15 ரன்களிலும், அடுத்துவந்த ஓலே போப் கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் வெளியேறினார். இங்கிலாந்து அணி 19 ரன்களுக்கு அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு வந்த ஜோ ரூட், கிராலேயுடன் சேர்ந்து நிதானமாக பேட் செய்தார். ரூட் மெதுவாக பேட் செய்ய கிராலோ அதிரடியாக ரன்களைச் சேர்த்து பேஸ்பால் ஆட்டத்தைக் கையாண்டார். இதனால் 11 ஓவர்களில் இங்கிலாந்து 50 ரன்களைக் கடந்தது. அஸ்வின் பந்துவீச்சுக்கு தொடக்கம் முதலே திணறிய ரூட் 11 ரன்கள் சேர்த்தநிலையில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். 65 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்துவந்த பேர்ஸ்டோ, கிராலியுடன் சேர்ந்து வேகமாக ரன்களைச் சேர்த்தார். கிராலி 71 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்து 60 ரன்களில் குல்தீப் பந்துவீச்சில் கிளீன் போல்டாகினார். தொடர்ந்து வெளியேறிய இங்கிலாந்து பேட்டர்கள் அதன்பின் இங்கிலாந்து பேட்டர்கள், பெவிலியனிலிருந்து களத்துக்கு வருவதும், மீண்டும் பெவிலியன் செல்வதும் என நடந்தார்களேத் தவிர நிலைத்து நின்று யாரும் நின்று ஆடவில்லை செய்யயவில்லை. 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி அடுத்த 35 ரன்களில் மீதமுள்ள 6 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. பேர்ஸ்டோ 30 ரன்கள் சேர்த்து ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய பென் போக்ஸ் (17) பென் ஸ்டோக்ஸ் (4), ஹார்ட்லி (7), ராபின்சன் (0), ஆன்டர்ஸன் (0) என வரிசையாக குல்தீப், அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதில் கடைசி 4 விக்கெட்டுகள் மட்டும் வெறும் 12 ரன்களில் இழந்தது இங்கிலாந்து அணி. 133 ரன்கள் வரை 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து, அடுத்த 12 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. நடுப்பகுதியில் ஜடேஜா, குல்தீப் பந்துவீச்சில் பந்து நன்றாக ட்ர்ன் ஆனது. ஆடுகளம் எந்த மாதிரி பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கிறது என்பதை பேட்டர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. சில நேரங்களில் குல்தீப், ஜடேஜா நினைத்ததைவிட பந்து நன்றாகவே டர்ன் ஆனது. 53.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஏற்கெனவே 46 ரன்கள் முன்னிலையும் சேர்த்து இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தியத் தரப்பில் அஸ்வின் 51-ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 22 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். டெஸ்ட் போட்டியில் 35 வது முறையாக 5விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உள்நாட்டில் 350 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார் வரலாறு படைத்த அஸ்வின் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்து ரவிச்சந்திர அஸ்வின் சாதனை படைத்துள்ளார். உள்நாட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார். இதுவரை எந்த இந்திய பந்துவீச்சாளரும் இதை முறியடிக்கவில்லை. ஆனால், அஸ்வின் தனது 5 விக்கெட் வீழ்த்தியபோது, உள்நாட்டில் நடந்த போட்டிகளில் கும்ப்ளேயின் சாதனையை முறியடித்து 350 விக்கெட்டுகளைக் கடந்து 354 விக்கெட்டுகளை எட்டினார். இதனால், உள்நாட்டில் 350 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். தற்போது 2-வது இடத்தில் அனில் கும்ப்ளே, 3-வது இடத்தில் ஹர்பஜன் சிங் (265), கபில் தேவ் (219), ரவீந்திர ஜடேஜா (206) விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர். 4வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அஸ்வின் விக்கெட் வீழ்த்தியபோது, இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியப் பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். கடந்த முறை ராஜ்கோட்டில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 500 விக்கெட்டுகள் சாதனையைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் 22 டெஸ்ட்போட்டிகளில் 114 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அனில் கும்ப்ளே 20 போட்டிகளில் 111 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 23 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 103 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஆசியாவில் மட்டும் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தார்போல், அஸ்வின் உள்ளார். இந்தியாவில் மட்டும் 352 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், இலங்கையில் 38 விக்கெட்டுகளையும், வங்கதேசத்தில் 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ‘ரசித்துப் பந்து வீசினேன்’ கும்ப்ளேயின் சாதனையை முறியடித்த அஸ்வின் அளித்த பேட்டியில் “புதிய பந்தில் மிகவும் ரசித்துப் பந்து வீசினேன். என் கரங்களை நன்றாக உயர்த்தி பந்து வீசி சற்று வேகமாக வீசினேன். இன்று காற்றும் பெரிதாக இல்லை என்பதால், நினைத்தமாதிரி பந்துவீச முடிந்தது. நாங்கள்தான் சேஸிங் செய்ய வேண்டும் என்பதால், கூடுதலாக ரன்கள் கொடுக்காமல் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினேன். குல்தீப் பந்துவீச்சும் அற்புதமாக இருந்தது. பந்துவீச்சில் வேகத்தை மாற்றி, லென்த்தையும் மாற்றி வீசி பேட்டர்களை திணறிடித்தார். பேட்டிங்கிலும் குல்தீப் டிபென்ஸ்ஸை வெளிப்படுத்தினார். துருவ் குறிப்பிட்ட நேரத்துக்குப்பின் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்ததால்தான் பெரிய இலக்கை எட்ட முடிந்தது. டெஸ்ட் போட்டியை வென்றால்தாந் சிறந்த கிரிக்கெட் வீரராக உணரமுடியும். நாளை நடக்கும் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/cevre8nkl9go
  11. ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இரு கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் களைகட்டத் தொடங்கியுள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. இதில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். தெற்கு மாகாணத்தில் நடந்த வாக்குப்பதிவில் அவர் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே நியூ ஹாம்ப்ஷையர் மற்றும் லோவா காகசஸ் மாகாணங்களில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/293106
  12. சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 2ஆவது நாளாக இன்றும் உண்ணாவிரதம் 25 FEB, 2024 | 04:56 PM இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக இன்று (25) தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தூத்துக்குடிக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்காக இந்திய கடல் எல்லையை தாண்டிய 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதனை தொடர்ந்து, கைதான ஐந்து மீனவர்களும் நீதிமன்ற உத்தரவுக்கமைய, வெலிக்கடை சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட ஐந்து மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், 2018ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை வசமுள்ள 151 விசைப் படகுகளை விடுவிக்கக் கோரியும் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் நேற்று (24) காலை 10 மணி முதல் தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். மீனவர்களின் இந்த உண்ணாவிரத போராட்டம் இன்றும் இரண்டாவது நாளாக தொடர்கிறது. இப்போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மீனவர்களின் இந்த போராட்டம் காரணமாக தங்கச்சி மடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், இலங்கை நீதிமன்றத்தால் கைதான மீனவர்கள் விடுதலை செய்யப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என நேற்றிரவு முழுவதும் உண்ணாவிரதம் கைக்கொண்டனர். https://www.virakesari.lk/article/177264
  13. தேசிய பூங்காக்கள், அடர்ந்த வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்லும் போது அங்கு விலங்குகளை புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு சுற்றுலாப்பயணிகள் அத்துமீறி நடந்து கொள்வதும், அவர்களை வன விலங்குகள் துரத்தும் காட்சிகளும் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது X இல் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், யானை ஒன்று இலைகளை சாப்பிட்டு கொண்டிருக்கிறது. அந்த யானைக்கு உணவளிப்பதற்காக இளம்பெண் ஒருவர் அருகில் செல்கிறார். அப்போது ஆவேசம் அடையும் யானை அந்த பெண்ணை தனது துதிக்கையால் தாக்குவதும், அந்த பெண் தூக்கி வீசப்படும் காட்சிகளும் பயனர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. யானையால் தூக்கி வீசப்பட்ட அந்த பெண் எழுந்து சிரித்துக்கொண்டே செல்வது போன்ற காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், காட்டு விலங்குகளை தனியாக விடுங்கள் எனவும், மற்றொரு பயனர், வால் அசைக்கும் போது யானையின் அருகில் செல்ல வேண்டாம். அது அச்சுறுத்தலாக உணர்கிறது எனவும் பதிவிட்டுள்ளனர். https://thinakkural.lk/article/293056
  14. வருடத்துக்கு ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு 'ஜனாதிபதி புலமைப்பரிசில்கள்' : ஜனாதிபதி நிதியம் 3600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 25 FEB, 2024 | 04:27 PM ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியம் "ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024/2025" திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, மொத்தமாக இலங்கையில் உள்ள 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில், தரம் 01 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் ஒரு இலட்சம் மாணவர்களுக்கு வருடாந்தம் இந்த நிதி உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த முழுமையான திட்டத்துக்கு 3600 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியம் ஒதுக்கியுள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள மாணவர்கள் பாடசாலை உபகரணங்கள், பயிற்சி புத்தகங்களைப் பெற்றுக்கொள்வது மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொள்வது போன்ற விடயங்களில் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். ஒவ்வொரு பாடசாலையிலும் மிகக் குறைந்த வசதியுடைய திறமையான மாணவர்களைத் தெரிவு செய்து, அந்தப் பிள்ளைகளுக்கு கல்வி கற்றலுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் இந்நாட்டு மாணவர்களுக்கு தொடர்ச்சியான பாடசாலைக் கல்வியை வழங்கி, அதன் ஊடாக நாட்டின் மனித வளத்தை மேம்படுத்த முதலீடு செய்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும். அதன்படி, இந்தப் புலமைப்பரிசில் பெறுவோரைத் தெரிவு செய்யும் செயல்முறை மற்றும் அது தொடர்பான அனைத்து தகவல்களும் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கமான www.facebook.com/president.fund மூலம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும். https://www.virakesari.lk/article/177262
  15. 25 FEB, 2024 | 04:11 PM தேராவில் குளத்து மேலதிக நீரினால் பாதிக்கப்பட்டு இரண்டு மாதங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தீர்வு வழங்கும் விதமாக முல்லைத்தீவில் வெள்ளநீர் முகாமைத்துவ செயற்றிட்டம் மாவட்ட அரசாங்க அதிபரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேராவில் குளத்தின் மேலதிக நீரினை வெளியேற்றுவதற்கான செயற்றிட்டம் லைக்கா ஞானம் அறக்கட்டளை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப் பங்களிப்புடன் இன்று (25) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது தேராவில் குளத்து மேலதிக நீரினை வெளியேற்றும் இத்திட்டத்துக்கான பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கனரக இயந்திரம் கொண்டு நீரை வெட்டி அகற்றும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. தேராவில் குளத்து நீர் நிரம்பி மேலதிக நீரினால் குளத்துக்கு அருகில் இருந்த 17 குடும்பங்களும் பாதிக்கப்பட்டு, சுமார் இரண்டு மாதங்களாக இடைத்தங்கல் முகாமில் தங்கிவரும் நிலையில், இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்தன், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் உபதலைவரும் முன்னாள் அரசாங்க அதிபருமான சு.அருமைநாயகம், கமநல சேவை திணைக்கள உதவிப் பணிப்பாளர் பரணிதரன், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் சி.கோகுலராஜா, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் க.அரங்கன், வனவள திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/177261
  16. நிர்வாக சபையின் அங்கீகாரத்துடன் சம்பளம் அதிகரிக்கப்பட்டது; பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தத் தயார் - மத்திய வங்கி Published By: VISHNU 25 FEB, 2024 | 05:29 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கை மத்திய வங்கியின் நிர்வாக சபையின் அங்கீகாரத்துடனும், தொழிற்சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே தமது ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க மத்திய வங்கி தயாராகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருப்பதாகக்கூறி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மத்திய வங்கி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அதேவேளை இதுகுறித்து விளக்கமளிப்பதற்காக எழுத்து மூல அவகாசம் கோருமாறு நிர்வாக சபையினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக, நிதியமைச்சராகக் கடமையாற்றும் ஜனாதிபதிக்கு கடந்த 22 ஆம் திகதி மத்திய வங்கி ஆளுநர் கடிதம் ஒன்றை அனுப்பவைத்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அவகாசத்தின் பின்னர் உரிய பாராளுமன்றக்குழுவின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க மத்திய வங்கி தயாராகவுள்ளதாக அவ்வறிக்கையில் மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177269
  17. புட்டின் அனைத்தையும் இழக்கவேண்டும் - உக்ரைன் ஜனாதிபதி Published By: RAJEEBAN 25 FEB, 2024 | 11:32 AM ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அனைத்தையும் இழக்கவேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஸ்யா படையெடுத்து இரண்டுவருடங்களாவதை குறிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக உக்ரைன் தலைநகருக்கு சென்ற மேற்குலக தலைவர்களை வரவேற்று உரையாற்றும்போதே உக்ரைன் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இத்தாலி கனடா பெல்ஜியம் தலைவர்கள் உக்ரைன் தலைநகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவரும் உக்ரைன் தலைநகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். உக்ரைன் தலைநகருக்கு அருகில் உள்ள ஹொஸ்டமொல் விமானநிலையத்தி;ற்கு மேற்குலக தலைவர்கள் சென்றுள்ளனர். உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கத்துடன் ரஸ்யாவின் பரசூட் பிரிவினர் கைப்பற்றிய இந்த விமானநிலையத்தை பின்னர் உக்ரைன் படைப்பிரிவினர் கைப்பற்றினர். இரண்டு வருடங்களின் பின்னர் இங்கு எதிரிகளின் துப்பாக்கி சூட்டினை சந்தி;த்தோம் தற்போது இரண்டு வருடங்களின் பின்னர் நண்பர்களை சந்திக்கின்றோம் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எந்த மனிதனும் போர் முடிவிற்கு வரவேண்டும் என விரும்புவான் ஆனால் நாங்கள் எவரும் எங்கள் உக்ரைன் முடிவி;ற்கு வருவதை அனுமதிக்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/177239
  18. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன்.க பதவி, பிபிசி தமிழுக்காக 25 பிப்ரவரி 2024, 02:21 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் கடந்த கால வரலாற்றில் சோழ, பாண்டிய, சேர மன்னர்கள் மிக முக்கியமானவர்கள். இவர்களைப் போன்றே பல்வேறு சிற்றரசர்களும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி புரிந்திருந்தனர். மக்களுக்கான திட்டங்களை வழங்கி நாட்டின் எல்லைகளை விரிவாக்கி, எதிரிகளிடமிருந்து மக்களை பாதுகாக்கும் பணியினை செய்த அரசர்கள் மட்டுமே வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள், பல்லவர்கள் ஆட்சி காலம் வரலாற்றில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. அவர்களுக்கு இணையாக, சிற்றரசர்கள் சிலரும் சிறந்த ஆட்சியின் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் அவர்களின் புகழும் பரவி இருந்துள்ளது. அப்படி ஆட்சி செய்த மன்னர்களில் சத்தியபுத்திர வம்சம் மிக குறிப்பிடத்தக்கது. சத்தியபுத்திரர்கள் பற்றி மௌரிய அரசர் அசோகர் 4 கல்வெட்டுகளில் பதிவு செய்துள்ளார். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சத்தியபுத்திரர் யார்? அவர்கள் எந்த பகுதியை எவ்வாறு ஆட்சி செய்தார்கள் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக காண்போம். வாலையூர் நகரம், ராசராச வள நாடு, ராஜேந்திரவள நாடு என்று பல பெயர்களில் கடந்த காலத்தில் அழைக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த ஜம்பை கிராமம் மணலூர்பேட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சத்தியபுத்திரர்கள் யார் என்பதை உலகிற்கு தெரிவித்த ஜம்பை கிராமத்திற்கு பிபிசி தமிழுடன் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ், உளுந்தூர்பேட்டை எழுத்தாளர் லலித் குமார் ஆகியோர் வந்திருந்தனர். இயற்கை எழில் மிகுந்த ஜம்பை கிராமத்தின் உள்ளே செல்லும் பொழுதே மிக தொன்மையான நகரின் சுவடுகள் இருப்பதை அறிய முடிந்தது. படக்குறிப்பு, 4 அடி நீளத்தில் 3 அங்குலம் அகலத்தில் கோடுகளைப் போன்ற தமிழ் பிராமி எழுத்துக்கள் சத்தியபுத்திரர் யார்? என்ற கேள்விக்கு விடை தந்த கல்வெட்டு வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் ஜம்பை கிராமத்தின் ஊர் எல்லைக்கு அருகில் உள்ள சிறிய மலை குன்றில் உள்ள தாசி மடம் என்ற மலை குகை பகுதிக்கு அழைத்துச் சென்றார். மிகுந்த சிரமமான வழிகளுக்கு இடையில் பாதுகாக்கப்பட்ட இரும்பு கதவுகள் பொருத்தப்பட்ட அந்த இடத்திற்கு சென்றோம். அங்கு மிகப்பெரிய பாறையில் 4 அடி நீளத்தில் 3 அங்குலம் அகலத்தில் கோடுகளைப் போன்ற தமிழ் பிராமிஎழுத்துகளை காண்பித்து வாசிக்கத் தொடங்கினார். அதில் ''சதிய புதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி'' என்று படித்து விளக்கம் கூறினார். அதாவது சத்தியபுத்திரரான அதியமான் நெடுமானஞ்சி என்பவன் இந்த பாலியை அதாவது சமண பள்ளியை அமைத்தான் என்பது இக்கல்வெட்டின் பொருளாகும் என்று விளக்கமாக கூறினார். கல்வெட்டு கி.பி.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும் என்று கூடுதல் தகவலையும் கூறினார். கல்வெட்டின் அருகில் படுக்கை அமைத்திருந்ததையும், அருகிலேயே மருந்துகள் இடிக்கும் குழிகள் உள்ளதையும் காண்பித்து, மக்களுக்கு அக்காலத்தில் வைத்தியம் பார்த்ததற்கான சான்று இவை தான் என்றும் கூறினார். படக்குறிப்பு, திருக்கோவிலூர் பகுதி ஆண்ட அதியமான் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக ஜம்பை இருந்தது. அதனால்தான் ஜம்பையில் சமணத் துறவிகள் தங்குவதற்காக பள்ளி அமைத்து கொடுத்துள்ளான். அசோகரின் கல்வெட்டில் இருந்த பெயரை, அரசனை காட்டிய கல்வெட்டு மௌரிய அரசர் அசோகனின் நான்கு கல்வெட்டுகளில் சதிய புத என்ற பெயர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தென்னாட்டில் தன் எல்லைகளை குறிப்பிடும்போது அசோகன் தன் சம காலத்தவர்களான சோழ, பாண்டிய, சேரர்களை குறிப்பிட்டு சத்தியபுத்திரர்களையும் குறிப்பிடுகின்றான் என்று பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார். அசோகன் தன் கல்வெட்டில் குறிப்பிட்ட சோழ, பாண்டிய, சேரர்கள் எவர் என்ற அறிவதில் எந்தவித ஐயப்பாடும் வரலாற்று ஆசிரியர்களிடம் இல்லை. ஆனால் சத்தியபுத்திரர்கள் யார் என்பதற்கு தெளிவான முடிவு இல்லாத நிலை இருந்தது. சத்தியபுத்திரர்கள் சங்க இலக்கியங்களில் பேசப்படும் 'வாய்மொழி கோசளர்' அல்லது காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டவர்களாக இருக்கலாம் என்றும் மகாராஷ்டிராவின் 'சத்புத்திரர்' என்பவராக இருக்கலாம் என்றும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் ஜம்பை கல்வெட்டு தெளிவான ஆதாரத்துடன் அதியமான் தான் என்று ஆணித்தரமாக உறுதிப்படுத்தும் கல்வெட்டாக அமைந்தது என்று கூறினார். திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட அதியமான் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக ஜம்பை இருந்தது. அதனால்தான் ஜம்பையில் சமணத் துறவிகள் தங்குவதற்காக பள்ளி அமைத்து கொடுத்துள்ளான். அதியமான் சங்க காலப் புலவர் ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த மன்னர் இவர்தான். மேலும் கர்நாடக மாநிலத்தில் பிரம்மகிரி என்ற இடத்தில் காணப்படும் மௌரிய மன்னன் அசோகனுடைய கல்வெட்டு சோழ பாண்டிய சேர புத்திர, சத்தியபுத்திரர் ஆகிய தென்னிந்திய அரச பரம்பரையினரை குறிக்கிறது இவர்களுள் சத்திய புத்திரர்கள் யார் என்பதில் நீண்ட காலமாக கருத்து வேறுபாடுகள் இருந்தது. ஆனால் ஜம்பையில் கிடைத்த கல்வெட்டின் மூலம் அதியமான் மரபினர் சத்தியபுத்திரர்கள் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது. இதன் மூலம் ஜம்பை சமணக் கல்வெட்டு தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பதை அறிய முடியும். அதேபோல் சமண சமயம் இப்பகுதியில் சிறந்து விளங்கியதையும் தெரிந்து கொள்ளலாம். படக்குறிப்பு, பேராசிரியர். ரமேஷ் சத்தியபுத்திரர் அதியமான் சத்தியபுத்திரரான அதியமான் ஆட்சி தகடூரை தலைநகராக கொண்டு கொங்கு நாடு குதிரைமலை, காவிரியின் கிழக்கு பகுதியிலிருந்து நாமக்கல் தெற்கு பகுதி வரை பரவி இருந்தது. இதில் திருக்கோவிலூரை தலைநகராக கொண்டு மலையமான் திருமுடிக்காரி ஆட்சி செய்தான். இந்தப் பகுதி மலையமான்களின் ஆட்சி பகுதியாகும். அதியமானுக்கும் திருமுடிகாரிக்கும் நடைபெற்ற போரில் மலையமான் திருமுடிக்காரி கொல்லப்பட்டார். இதனால் திருக்கோவிலூர் பகுதியின் மலைய மானாடு சிதைவுற்றது. அதியமான் வெற்றி பெற்று திரும்பிய வழியில் திருக்கோவிலூர் அருகே உள்ள ஜம்பை மலைக்குன்றில் தங்கி அங்கு வசித்த சமண முனிவர்களுக்கு படுக்கை அமைத்து கொடுத்தார். அப்பொழுது அதன் அருகிலேயே இந்த தமிழ் பிராமி கல்வெட்டையும் பொறித்து வைத்துள்ளார் என்று கூடுதல் விளக்கத்தையும் பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார். தொடர்ந்து உளுந்தூர்பேட்டை எழுத்தாளர் லலித் குமார் பிபிசி தமிழிடம் மலையமான்கள் பற்றி விவரிக்க தொடங்கினார் புறநானூறு புகழும் மலையமான்கள் எட்டுத்தொகை நூல்களில் தலைசிறந்தது புறநானூறாகும். புறநானூற்றில் போரில் வெற்றி பெற்ற மன்னர்கள், வள்ளல்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. புறநானூற்றில் 12 பாண்டிய மன்னர்கள், 13 சோழ மன்னர்கள், 18 வேளிர்கள் அதாவது சிற்றரசர்களை பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் பறம்பு மலையை ஆண்ட பாரி, பழனி மலை ஆண்ட பேகன், கொல்லிமலையை ஆண்ட ஓரி, பொதிகை மலையை ஆண்ட ஆய், திருக்கோவிலூர் மலையமான், தகடூரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த அதியமான் பற்றிய பாடல்களும் புறநானூற்றில் உள்ளதாக தெரிவித்தார். அதேபோல் வெண்ணி பறந்தலை போர், வாகை பரந்தலைப் போர், கழுமலைப் போர், தலையாலங்கானத்து போர் ஆகிய போர்க்களங்கள் குறித்தும் மிக விரிவாக புறநானூறு கூறுகின்றது. அதில் தகடூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த அதியமான் மிகச் சிறந்த கொடையாளர் ஆவார். இவர் கட்டிய கோட்டைக்கு அதியமான் கோட்டை என்று பெயர். இப்பொழுது அது அதமன்கோட்டை என்று அழைக்கப்படுகிறது என்று கூறினார். படக்குறிப்பு, "மராட்டிய சாத்புத அரசர்களையே இந்த சத்யபுத்திரர் என்பது குறிக்கிறது என்றனர்." குஜராத் கல்வெட்டிலும் சத்தியபுத்திரர் குஜராத்தில் உள்ள கிர்நார் மலைச்சரிவில் அசோகரது கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. தமது அரசின் எல்லைகளை குறித்த சாசன கல்வெட்டில் அரசின் எல்லைப்புற மன்னர்களாக “சோட, பாட, சத்யபுதோ, சேரபுதோ, தம்மபாணி” என்று குறித்திருக்கிறார். அசோகர் குறிக்கும் தமிழக மன்னர்களை சோட – சோழ, பாட – பாண்டிய, சேரபுதோ- சேர என்று எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். தம்மபாணி என்பது இலங்கை அரசர்களைக் குறிப்பதாகும். இதில் சத்யபுதோ யார் என்பது பற்றி குழப்பம் நிலவியது. ஏனெனில் தமிழ் இலக்கியங்களோ, வேறு ஆவணங்களோ இப்படி ஒரு மன்னர் குலம் இருப்பதை பதிவுசெய்யவில்லை. எனவே சில வரலாற்று ஆசிரியர்கள் ஆந்திராவை ஆண்ட சாதவாகனர்களே சத்யபுத்திரர்கள் என்று சொன்னார்கள். இன்னும் சிலர், மராட்டிய சாத்புத அரசர்களையே இந்த சத்தியபுத்திரர் என்பது குறிக்கிறது என்றனர். கே .ஏ. நீலகண்ட சாஸ்திரி போன்ற தமிழ் வரலாற்றாசிரியர்கள், மற்ற தமிழ் மன்னர்களோடு சேர்ந்து வருவதால், இவர்கள் ஒரு தமிழ் மன்னர் குலத்தவராகவே இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். இந்தக் குழப்பத்துக்கு முடிவாக திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள ஜம்பை என்னும் ஊரில் முதலாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தமிழ் ப்ராமி கல்வெட்டு 1981-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது . படக்குறிப்பு, லலித்குமார் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களுக்கு இணையான அரசன் அதியன் நெடுமானஞ்சி கொடுத்த பாழி (இருப்பிடம்) என்பதைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவன் சத்தியபுத்திரர் வம்சத்தில் வந்தவன் என்று பதிவுசெய்து, சத்தியபுத்திரர் யார் என்று கேள்விக்கு விடையளித்தது இந்தக் கல்வெட்டு. தகடூரை ஆண்ட அதியமான்களே சத்தியபுத்திரர் என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்கியது மட்டுமல்லாமல், வட பகுதியை ஆண்ட அசோகரின் கல்வெட்டில் இடம்பெறும் அளவுக்கு மூவேந்தர்களுக்கு இணையாக இவ்வரசன் விளங்கினான் என்பதையும் இந்தக் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. ஜம்பையில் தீர்த்தங்கரர் உருவச்சிலை மூன்றும், புத்தர் உருவச்சிலை மூன்றும் கிடைத்துள்ளன. இவற்றில் மிகப் பழமையானது எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த புத்தரின் சிலையாகும். இங்கு புத்த மதமும், சமண மதமும் இருந்ததற்கான மிகப்பெரிய சான்றாகவே இதை கருதலாம். அதேபோல் ஜம்பைக்கு அருகில் சிறிது தூரத்திலேயே பள்ளி சந்தல் என்ற ஊர் உள்ளது. இதனால் இங்கு சமண புத்த சமயங்களும் பரவி இருந்ததை அறியலாம். மலையமான்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்த ஜம்பை சத்தியபுத்திரர்களின் ஆட்சி பகுதியாக மாறியதுடன் தற்பொழுது அவர்கள் யார் என்று உலகிற்கு அடையாளம் காட்டும் கல்வெட்டையும் தன்னகத்தே கொண்டுள்ளது மிகச் சிறப்பாகும். திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த மலையமான்கள் சோழர் ஆட்சியில் மிக முக்கிய பொறுப்புகளை வகித்ததுடன், போர்க்களங்களில் உற்ற துணையாக இருந்தும் போர்களில் பல வெற்றியை பெறுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள் என்றும் எழுத்தாளர் லலித் குமார் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cmmg34m57l3o
  19. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க திட்டம் : மேற்கு, கிழக்கு மூலோபாய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி எடுத்துரைப்பு 25 FEB, 2024 | 03:09 PM ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிக்காக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய முதலீடுகளை தேசிய பொருளாதாரத்துக்கு நன்மை பயக்கும் வகையில் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதனை கிழக்கு சீனாவின் சோங்கிங் துறைமுகம் வரையில் விரிவுபடுத்தி, பின்னர் ஆபிரிக்கா வரை அதனை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, ஹம்பாந்தோட்டையை நாட்டின் பிரதான பொருளாதார மையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளையும் சுட்டிக்காட்டினார். மேற்கு, கிழக்கு மற்றும் ஹம்பாந்தோட்டை நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி ரணில் இதனை சுட்டிக்காட்டினார். கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் சுற்றுலா வலயங்கள் தொடர்பான மூலோபாய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நகர அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன் புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன. மொனராகலை பிரதேசத்தில் மேலதிகமாக காணப்படும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைப் பயன்படுத்தி புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கும் திட்டம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். மேலும், நகர நெரிசலைக் குறைப்பதற்காக அவிசாவளை மற்றும் எஹெலியகொட உட்பட பிரதேசங்களின் மூலோபாய திறன்களைப் பயன்படுத்தி புதிய நகரங்களை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஈர்த்து, பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில் வட கொழும்பு துறைமுகத்தை விரிவுபடுத்துதல், தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை நிர்மாணித்தல் தொடர்பான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை முக்கிய முதலீட்டு வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் குறித்தும் விரிவாகக் ஆராயப்பட்டது. அவ்வேளை, திருகோணமலை நகர அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கூட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு இந்திய - இலங்கை இரு தரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள், பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க மற்றும் குறித்த மாவட்ட செயலாளர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/177255
  20. 25 FEB, 2024 | 03:07 PM திருக்கோணேஸ்வர பெருமானின் நகர்வலம் வழமைபோன்று எவ்வித இடையூறுகளும் இன்றி திட்டமிட்டபடி இடம்பெறும் என ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு வருடாவருடம் இடம்பெறும் திருக்கோணேஸ்வர பெருமானின் நகர்வலம் இம்முறையும் திட்டமிட்டபடி இடம்பெறவுள்ளதாகவும், அதற்கு எந்த தடைகளும் இல்லை எனவும் பக்தர்கள் அது தொடர்பில் எவ்வித ஐயப்பாடும் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அத்துடன் கடந்த வருடத்தை விட இம்முறை மிகவும் சிறப்பான முறையில் நகர்வலம் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் சபை குறிப்பிடுகிறது. திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களை, உறுப்பினர்களாக செயற்படுவதை தடை செய்யும் வகையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் கடந்த 21ஆம் திகதி இடைக்கால தடைவிதித்து கட்டாணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில், நகர்வலம் தொடர்பில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதையடுத்து, இந்த கட்டாணை நகர்வலத்தில் எவ்வித தாக்கத்தையும் செலுத்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கினை சமய பெரியார்களின் முன்னிலையில் இணக்கப்பாட்டின் மூலம் சுமுகமான முறையில் தீர்வு காண்பதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. https://www.virakesari.lk/article/177254
  21. பெரும்பான்மை வாதம் குறித்து இலங்கை எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்; அதிகாரப் பகிர்வு அபிவிருத்திக்கு மிகவும் அவசியம் - இந்தியாவில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூர்ய Published By: RAJEEBAN 25 FEB, 2024 | 12:23 PM அதிகார பகிர்வு அனைவரையும் உள்வாங்கும் அபிவிருத்தி ஆகியவை இலங்கையின் பேண்தகு அபிவிருத்திக்கு மிகவும் அவசியம் என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூர்ய பெரும்பான்மைவாதம் குறித்தும் எச்சரித்துள்ளார் இந்தியாவின் 2022 ரைசினா டயலொக் 2024 நிகழ்வின் ஒரு பகுதியாக இடம்பெற்ற கலந்துரையாடலில்கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. இலங்கை 1980களின் நடுப்பகுதியில் இனமோதலை எதிர்கொண்டது என்பது உங்களிற்கு தெரியும் - இனமோதலிற்கு முன்னர் நாங்கள் பாதுகாப்பு செலவீனங்களிற்காக மிகவும்குறைவாகவே 0.5செலவிட்டோம். இது 1985 இல் மூன்று வீதமாக அதிகரித்தது பின்னர் பத்து வருடங்களின் 1995 இல் 5.9 வீதமாக அதிகரித்தது. 1985 இல் எங்களின் பாதுகாப்பு செலவீனம் 188 மில்லியன் டொலர் 2008 இல் இது 1.5 மில்லியன் டொலராக மாறியது. 1980-90களில் எங்களின் சமூக அபிவிருத்தி சுட்டிகள் ஏனைய தென்னாசிய நாடுகளை மிகவும் சிறப்பானவையாக காணப்பட்டன. நாங்கள் அபிவிருத்திக்காக செலவிட்டிருக்க கூடியவற்றை பாதுகாப்பிற்காக செலவிட்டோம், இலங்கையை பொறுத்தவரை நாங்கள் அனைவரும் ஜனநாயகம் குறித்து நம்பிக்கை கொண்டுள்ள போதிலும், நாங்கள் பெரும்பான்மை வாதம் குறித்து அவதானமாகயிருக்கவேண்டும். 1970களில் இலங்கையில் கல்வி சீர்திருத்தம் முன்னெடுக்கப்பட்டபோது அது சில சமூகத்தினர் பாரபட்சத்திற்குள்ளாக்கப்படும் நிலையை ஏற்படுத்தியது. இது அந்த சமூகத்தினர் ஆயுதங்களை ஏந்தும் நிலையை ஏற்படுத்தியது. ஆகவே நாங்கள் மிகவும் கவனமாகயிருக்கவேண்டும், ஜனநாயகத்தில் பெரும்பான்மை என்பதை நாங்கள் நம்புகின்ற போதிலும் அபிவிருத்தி என்பது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியாக காணப்படவேண்டும், சமூகத்தின் ஒரு பகுதியினருக்கான அபிவிருத்தியாக மாத்திரம் அது காணப்படமுடியாது. ஒருநாடாகவும் முன்னோக்கி செல்வதற்கும் நாங்கள் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும், நாங்கள் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளாவிட்டால் அரசியல்வாதிகள் பெரும்பான்மை வாதம் என்ற துரும்புச்சீட்டை பயன்படுத்துவார்கள். ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தை மாத்திரம் கவரும் நோக்கத்துடன் செயற்படுவார்கள். https://www.virakesari.lk/article/177246
  22. நாட்டின் மூத்த குடிமக்களின் வருமானம் பெரும் சரிவை சந்தித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். வங்கி வட்டி விகிதம் 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் வங்கிகள் பரிவர்த்தனைகளில் 3 சதவீதம் எடுத்துக் கொள்வதாலும் இவ்வாறு மூத்த குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மூத்த குடிமக்கள் ஓய்வு பெற்ற பின், வாழ்நாள் முழுவதும் சேவை செய்து கிடைக்கும் வருமானத்தை வங்கிகளில் வைப்பு செய்து, வட்டியில் தான் வாழ்கின்றனர். வங்கி வட்டி ஆனால் இன்று வங்கிகளில் வட்டி கொடுக்கும் முறையால் அவர்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவுகளால் ஏராளமான குடும்பங்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளது. இந்த முறையை உடனடியாக மாற்ற வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/bank-interest-rates-new-update-1708837734?itm_source=parsely-detail சீனியர் சிற்றிசன் என்ற பிரிவில் 15 லட்சத்திற்கு 14.06 - 15 வீதம் வரை முன்னர் வழங்கினார்கள். 25 வீதம் வரை வங்கி வட்டி அதிகரித்த போது சத்தம் இல்லாது இதனை நீக்கிவிட்டார்கள்.
  23. யாழ். வீரருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பு கிரிக்கட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக்க தொடரான இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வீரரொருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தேசிய கிரிக்கெட் வீரர்களின் முகவராகச் செயற்படும் அமில கலுகலகே தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது இளம் வீரர் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலைப்பந்துவீச்சாளராக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார். மார்ச் 19, 2024 அன்று சென்னை சூப்பர்கிங்ஸ் குழாமில் வலைப்பந்து வீச்சாளராக சேர இருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரரின் பெயரை விரைவில் வெளியிடுவோம். மேலும், அவரது பெற்றோர், பாடசாலை , கல்வி அமைச்சர் மற்றும் இலங்கை கிரிக்கட் பேரவை ஆகியோரிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது. 17ஆவது தொடர் இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 தொடர்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் அடுத்ததாக ஐ.பி.எல் தொடரின் 17ஆவது தொடர் மார்ச் மாதம் இறுதியில் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ளவுள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கிண்ணங்களை வென்றுள்ளன. நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஐ.பி.எல். தொடரின் அட்டவணை, வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 15 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/jaffna-player-joins-csk-team-1708760576?itm_source=article
  24. Published By: RAJEEBAN 25 FEB, 2024 | 10:40 AM உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள்குறித்த விசாரணகளின் அவசியத்தை அமெரிக்காவின் முகாமைத்துவம் மற்றும் வளங்கள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சட் வெர்மா வலியுறுத்தியுள்ளார். பொருளாதார நெருக்கடி உத்தேபயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் நல்லிணக்கம் போன்றவழமையான விவகாரங்களிற்கு அப்பால் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணகள் குறித்தும் வெர்மா ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியுடனான சந்திப்பின்போதும் பின்னர் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போதும் ரிச்சட்உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணைகள் குறித்து ஆராய்ந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் தனக்கு தெரிந்த ஒருவரை வெர்மா இழந்தார் எனவும் இதன் காரணமாக விசாரணைகள் குறித்து தனிப்பட்ட முறையில் வலியுறுத்தினார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிர்த்தஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகளிற்காக அமெரிக்காவின் உதவியை நாடியதாகவும் தனது தரப்பிலிருந்து விசாரணைகள் முடிவடைந்து விட்டன என அமெரிக்கா அறிவித்துள்ளதாகவும் இலங்கை தரப்பிலிருந்து அமெரிக்க அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது எனினும் அவர் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகள் விரைவில் பூர்த்தியாவதை விரும்புவதாக தெரிவித்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/177229 ஜனாதிபதியுடன் தனிப்பட்ட சந்திப்பை கோரிய அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் Published By: RAJEEBAN 25 FEB, 2024 | 11:00 AM இலங்கைக்குவிஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சட் வெர்மா உத்தியோகபூர்வ சந்திப்பில் ஈடுபடுவதற்கு முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தனிப்பட்ட சந்திப்பொன்றில் ஈடுபட்டார். ஜனாதிபதியை சந்திப்பதற்காக வந்த ரிச்சட் வெர்மா தனிப்பட்ட சந்திப்பொன்றிற்காக வேண்டுகோள் விடுத்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்கிரமசிங்க இதற்கு இணங்கியதுடன் மூடிய கதவுகளிற்குள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். தனிப்பட்ட சந்திப்பின்போது அமெரிக்க தூதுவர் ஜூலிசங்கும் பிரசன்னமாகியிருந்தார். உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளின் போது பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து ஆராயப்பட்டதாகவும் ஜனாதிபதி அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியதுடன் அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை பயங்கரவாதத்தை எதிர்ப்பு சட்டமூலம் அடுத்த புதிய நாடாளுமன்றத்தின் காலம்வரை பிற்போடப்படும் என ஜனாதிபதி தெரிவிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. யுஎஸ்எயிட்டின் நிர்வாகி சமந்தா பவரிடமும் ஜனாதிபதி இதனையே தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/177234
  25. சதம் குவித்து இங்கிலாந்தை மீட்டெடுத்தார் ஜோ ரூட்; அறிமுக வீரர் தீப் அபாரம், அஷ்வின் மைல்கல் சாதனை Published By: VISHNU 23 FEB, 2024 | 10:25 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தோடரில் தோல்வியைத் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் ரஞ்சி விளையாட்டரங்கில் நான்காவது டெஸ்ட் போட்டியை எதிர்கொண்ட இங்கிலாந்து, முன்னாள் அணித் தலைவர் ஜோ ரூட்டின் அற்புதமான சதத்தின் உதவியுடன் சிறந்த நிலையை அடைந்துள்ளது. photo:- akash deep getting family blessings இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான ஆகாஷ் தீப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் தனது குடும்பத்தினரிடம் ஆசி பெறுவதைப் படத்தில் காணலாம். இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய ஜோ ரூட் இந்தப் போட்டியில் மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி தனது 31ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்திசெய்தார். அதேவேளை, இந்த டெஸ்ட் போட்டிக்கு ஓய்வு வழங்கப்பட்ட ஜஸ்ப்ரிட் பும்ராவுக்குப் பதிலாக அணியில் இடம்பெற்ற அறிமுக வீரர் ஆகாஷ் தீப் எதிரணியின் முதல் 3 வீரர்களை ஆட்டம் இழக்கச் செய்து அணியினரின் பாராட்டைப் பெற்றார். ஆனால், அதன் பின்னர் அவரால் சாதிக்க முடியாமல் போனது. இது இவ்வாறிருக்க, இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் மைல்கல் சாதனை ஒன்றை நிலைநாட்டினார். ஜொனி பெயாஸ்டோவின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிராக 100 வீக்கெட்களை வீழ்த்திய முதலாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஷ்வின் நிலைநாட்டினார். ஸக் க்ரோவ்லி, பென் டக்கெட் (11) ஆகிய இருவரும் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3 விக்கெட்கள் ஆகாஷ் தீப்பினால் வீழ்த்தப்பட்டன. மூன்றாவதாக ஆட்டம் இழந்த ஸக் க்ரோவ்லி 42 ஓட்டங்களைப் பெற்றார். இதனிடையெ ஒலி போப் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். இந் நிலையில் ஜோ ரூட், ஜொனி பெயாஸ்டோ ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஜொனி பெயாஸ்டோ (38), அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் (3) ஆகிய இருவரும் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (112 - 5 விக்.) இதன் காரணமாக இந்திய அணியினர் பூரிப்பில் மிதந்தனர். ஆனால், ஜோ ரூட், பென் ஃபோக்ஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 113 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணியை ஓரளவு பலமான நிலையில் இட்டனர். பென் ஃபோக்ஸ் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 126 பந்துகளை எதிர்கொண்டு 47 ஓட்டங்களைப் பெற்றார். அடுத்து களம் நுழைந்த டொம் ஹாட்லி 13 ஓட்டங்களுடன் வெளியேற இங்கிலாந்து மீண்டும் ஆட்டம் கண்டது. ஆனால், ஜோ ரூட், ஒலி ரொபின்சன் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கை 300 ஓட்டங்களைக் கடக்க உதவினர். ஜோ ரூட் 226 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள் உட்பட 106 ஓட்டங்களுடனும் ஒலி ரொபின்சன் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 31 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் ஆகாஷ் தீப் 70 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/177160 STUMPS 4th Test, Ranchi, February 23 - 27, 2024, England tour of India England 353 India (73 ov) 219/7 Day 2 - India trail by 134 runs. Current RR: 3.00 • Last 10 ov (RR): 15/0 (1.50)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.