Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 3 14 FEB, 2024 | 04:13 PM (இராஜதுரை ஹஷான்) மக்கள் விடுதலை முன்னணி கடந்த காலங்களை காட்டிலும் தற்போது முன்னிலையில் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த முன்னேற்றத்தை ஏற்க முடியாத மனநிலையில் ஒருசில அரசியல் தரப்பினர் இல்லை என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டார். கொழும்பில் புதன்கிழமை (14) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் 'மக்கள் விடுதலை முன்னணியின் முன்னேற்றம்' தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஒருசில கருத்துக்கணிப்புக்கள் ஊடாக மக்கள் விடுதலை முன்னணி கட்சி என்ற ரீதியில் முன்னிலையில் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. எழுமாற்றாக எடுக்கப்படும் கருத்துக்கணிப்புக்களில் உண்மைத்தன்மை சந்தேகத்துக்குரியது. தற்போதைய நிலையில் மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது முன்னிலையில் உள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசியலில் வங்குரோத்து நிலையடைந்துள்ளவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் நாங்கள் உண்மையை ஏற்றுக்கொள்வோம். அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்குவதை காட்டிலும் தேர்தலை பிற்போடுவதற்கான உள்ளக சூழ்ச்சிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானங்களுக்கு அமைய ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது. ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கும், பாராளுமன்றத்தின் பதவி காலத்தை நீடிப்பதற்கும் நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் என்பதை ஜனாதிபதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/176355
  2. 13 பிப்ரவரி 2024 2019ஆம் ஆண்டு கொலம்பிய நாட்டைச் சேர்ந்த தன் காதலியான ஆன்னியை மணந்த ஹர்பால் சிங், மார்ச் 2021 வரை மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். டெல்லி எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த அவர் மார்ச் 5ஆம் தேதி ஒரு பயங்கரமான விபத்தை சந்தித்தார். இந்த விபத்து அவரது முழு வாழ்க்கையையும் புரட்டி போட்டுவிட்டது. "என்னால் கை, கால்களை அசைக்க முடியாது. என் மனைவி இல்லாவிட்டால் நான் உயிருடன் இருந்திருக்கவே வாய்ப்பில்லை. அவள் அளித்த ஆதரவுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்." என்கிறார் ஹர்பால் சிங். ஹர்பாலும் ஆன்னியும் 2018இல் பேஸ்புக் வாயிலாக சந்தித்துக் கொண்டனர். 2019இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர், ஆன்னி கொலம்பியாவுக்குத் திரும்பிச் சென்றார். 2021ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றிருந்தார் ஹர்பால். நவம்பர் 5, 2021 அன்று அவர் டெல்லியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, குராலி-சண்டிகர் சாலையில் ஒரு மோசமான விபத்தில் சிக்கிக்கொண்டார். விபத்துக்குப் பிறகு அவரது கைகால்கள் செயலிழந்து விட்டதால், படுக்கையிலே முழு நேரத்தையும் கழிக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக தனது கணவனை குழந்தைப் போல பார்த்துக்கொள்கிறார் மனைவி ஆன்னி. வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற வேண்டுமென ஹர்பால் விரும்புகிறார், ஆனால் குடும்பத்தாரிடம் போதிய பணம் இல்லாததால், ஹர்பால் சிங் மற்றும் ஆன்னி நிதி உதவிக்காக காத்திருக்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/cd19wqjdnz7o
  3. ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகிறார் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிற்கான தனி பெருபான்மை கிடைக்கவில்லை. ஏற்கனவே பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. இந்த நிலையில் ஸ்திரதன்மையான அரசியலை உருவாக்கி பாகிஸ்தானை காப்பாற்ற நாவஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ ஆகியோர் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தனர். மேலும் சில கட்சிகளை தங்களது கூட்டணியில் இணைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் யார் பிரதமர் போன்ற விவாதம் கிளம்பியது. இந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ மற்றும் அவரது தந்தை சர்தாரி ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை. மந்திரி சபையிலும் இடம் பெற போவதில்லை. வெளியில் இருந்து நவாஸ் ஷெரீப் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்தனர். இந்த நிலையில் நவாஸ் ஷெரீப், அவரது சகோதரரான ஷெபாஸ் ஷெரீப்-ஐ பிரதமர் வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளார். அதேவேளையில் நாவஸ் ஷெரீப் அவரது மகளை பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராகவும் பரிந்துரை செய்துள்ளார். இதை கூட்டணி கட்சிகள் ஏற்றக்கொண்டால், பாகிஸ்தான் நாட்டின் அடுத்த பிரதமாக ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்பார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த கட்சிகளுக்கு நவாஸ் ஷெரீப் நன்று தெரிவித்துள்ளா். இந்த முடிவால் பாகிஸ்தான் நெருக்கடியில் இருந்து வெளியே வரும் என நம்புவதாக தெரிவித்தார். https://thinakkural.lk/article/291687
  4. சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த சமர்க்கள நாயகன் எங்களுக்கு வாழ்க்கையில் சண்டை தெரியாது ஆனால் நீங்கள் எத்தனையோ சண்டை களங்களை பார்த்துள்ளீர்கள். உங்களை பார்க்கும்போது பெருமையாக உள்ளது என சிங்கப்பூர் ஜெனரல் விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி பிரிகேடியர் பால்ராஜை நோக்கி கூறியதாக தமிழரசு கட்சியின் தலைவர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழ் தேசிய கலை இலக்கிய பேரவைனுடைய ஏற்பாட்டில் எழுத்தாளர் நா. யோகேந்திர நாதன் எழுதிய 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு எனும் நூல் கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் மகாதேவா ஆசிரமத்தின் தலைவர் சி மோகன பவன் உட்பட படைப்பாளிகள் அதிபர் ஆசிரியர் மற்றும் படைப்பாளிகள் பொதுமக்கள் அரசியல் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். தொடர்ந்தும் சிறீதரன் தெரிவிக்கையில்... https://tamilwin.com/article/kilinochchi-book-release-event-1707921777
  5. கூகுள், அமேசான் போன்ற பெரு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டினாலும் ஆள் குறைப்பு செய்வது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டினா ஜெ.ஆர்காஸ் பதவி, பிபிசி நியூஸ் 42 நிமிடங்களுக்கு முன்னர் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுவரை இல்லாத அளவிலான லாபங்களை ஈட்டிய போதிலும் ஆள் குறைப்பு ஏன் தொடர்கதையாக உள்ளது? அமெரிக்க பங்குச் சந்தைகளை தீர்மானிக்கக் கூடியவை அந்த பெரு நிறுவனங்கள். வால் ஸ்ட்ரீட்டின் செல்ல நண்பர்கள். "மேக்னிஃபிசென்ட் 7" என்று அழைக்கப்படும் குழுவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களின் விற்பனையும் லாபமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவர்களின் மதிப்பும் கூட அதிகரிக்கின்றன. பிற துறையில் உள்ள நிறுவனங்களை விட, இந்த ஆண்டு 12% அதிகமாகவும், 2025 -ல் மற்றொரு 12% அதிகமாகவும் அவர்களின் விற்பனை இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட், ஆப்பிள், அமேசான், மெடா மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகியவை கூட்டாக சுமார் 327 பில்லியன் டாலர் சம்பாதித்தன. இது கடந்த ஆண்டை விட 25.6% அதிகமாகும். இது, கொலம்பியா அல்லது சிலி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒத்ததாகும். எனினும்கூட, டெஸ்லா மற்றும் என்விடியா ஆகியவற்றை உள்ளடக்கிய "மேக்னிஃபிசென்ட் 7" என்ற பிரத்யேக குழு, அதிக அளவிலான ஆட்குறைப்புகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டும் இதே போன்ற ஆட்குறைப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஜூலை 2023 மைக்ரோசாஃப்ட் தனது பணியாளர்களைக் குறைத்தது. Activision Blizzard ஐ $69 பில்லியனுக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முடிவு செய்த பிறகு, 2024 -ல் மேலும் 1,900 பேர் பணிநீக்கம் செய்யவுள்ளது. அமேசான் நிறுவனத்திலும் இதேநிலை தான். கடந்த ஆண்டில் 9,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அதன் ட்விச் இயங்குதளத்தின் 35% பணியாளர்களையும், அமேசான் பிரைம்-ல் பணிபுரியும் 100 பேரையும் பணி நீக்கம் செய்யவுள்ளது. அதுபோதாதென்று, இந்த பிரத்யேக குழுவில் மேலும் பல சிறிய நிறுவனங்கள் இணைந்துள்ளன. மொத்தத்தில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒரே மாதத்தில் 122 தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து கிட்டத்தட்ட 32,000 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவல் ராய்ட்டர்ஸ் பத்திரிகையால் மேற்கோள் காட்டப்பட்ட Layoffs.fyi என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இன்னும் 11 மாதங்கள் மீதம் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES முன்னணி நிறுவனங்களில் எவ்வளவு ஆட்குறைப்பு? இந்த ஆண்டு PayPal நிறுவனத்தில் 2,500 பணியாளர்களும் , Spotify நிறுவனத்தில் 1,500 பணியாளர்களும், eBay நிறுவனத்தில் 1,000 பணியாளர்களும், Snapchat நிறுவனத்தில் 500 பணியாளர்களும் நீக்கப்படவுள்ளனர். தொழில்நுட்பத் துறையில் நன்கு அறியப்பட்ட நிறுவனங்களின் நிலை இதுவே. 2000-ம் ஆண்டு மற்றும் அதற்கு அடுத்த ஓரிரு ஆண்டுகளில், இணையத்தின் எழுச்சி டாட்-காம் பபிளுக்கு வழிவகுத்தது. (இணையவழி நிறுவனங்களில் செய்யப்பட்ட அதிக முதலீடுகள் காரணமாக, பங்குச்சந்தை மதிப்புகள் அபரிமிதமாக உயர்ந்தன. இதுவே டாட்-காம் பபிள் (dotcom bubble) என்றழைக்கப்படுகிறது. ) தற்போது நடைபெறும் ஆட்குறைப்பை டாட்காம் பபிளுடன் பலர் ஒப்பிட்டு வருகின்றனர். பிரபல நிதி நிறுவனமான ஜூலியஸ் பேயரின் தலைமை ஆய்வாளரான மாத்தியூ ராச்சேட்டரைப் பொறுத்தவரை, இந்த ஒப்பீடு சரியல்ல. ஏனெனில், ‘மெகா கேப்’ எனப்படும் நிறுவனங்களின் (200 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்பை கொண்ட நிறுவனங்கள்) பங்குகளின் மதிப்பு இன்னும் 2000 களின் நிலையை அடையவில்லை என்கிறார். "மேக்னிஃபிசென்ட் 7" நிறுவனங்கள் அதிக வருவாய் ஈட்டக்கூடியவை என்றும், இது சிக்கல்கள் ஏற்பட்டால் உதவும் என்று பேயர் கூறுகிறார். எனவே இந்த இரண்டாவது அலை ஆட்குறைப்பின் பின்னணி என்ன? முக்கியமான 3 காரணங்கள் பார்க்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES 1. செயற்கை நுண்ணறிவு மற்றும் மூலோபாய மாற்றங்கள் "தொழில்நுட்பத் துறையின் வரலாற்றில் பெரிய நிறுவனங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, அந்த துறையில் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் அடுத்த தலைமுறை நிறுவனங்களின் புதுமையான முயற்சிகள் காரணமாக ஏற்படும்”என்று முதலீட்டு ஆலோசனைகள் வழங்கும், ODDO BHF AM நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மேலாளர் பிரைஸ் ப்ருனாஸ் கூறுகிறார். டாட்காம் பபிளின் போது இதுதான் நடைபெற்றது. இந்த தசாப்தத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளின் வளர்ச்சி ஒரு புரட்சியாகும். "உதாரணத்திற்கு மொழி சார்ந்த நிறுவனமான டியோலிங்கோவை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் சிலர் எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள். அவர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு செயல்முறைகள் பயன்படுத்தப்படும்" என்று குவார்க் வலைத்தளம் விளக்குகிறது. செயற்கை நுண்ணறிவு வேகமாக செயல்படக் கூடியது. ஒருவர் 60 முதல் 90 நிமிடங்களில் எழுதுவதை, செயற்கை நுண்ணறிவு 10 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் எழுதி முடிக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், கோல்ட்மேன் சாக்ஸ் அறிக்கை ஒன்று, செயற்கை நுண்ணறிவு 30 கோடி முழுநேர வேலைகளுக்கு சமமான வேலைகளை செய்யக்கூடும் என்று கூறியது . "நாங்கள் அதை 2000 களின் டாட்காம் பபிளின் போது பார்த்தோம். இடையூறுகள் எப்போதும் நிறுவனங்கள் தங்களை மறுகட்டமைக்க வழிவகுக்கின்றன" என்று eToro -ன் மூத்த சந்தை ஆய்வாளர் ஜேவியர் மோலினா கூறுகிறார். "ஒருபுறம், நிறுவனத்தின் உத்தியில் சில மாற்றங்கள் ஏற்படுவதையும், சில துறைகள் மூடப்படுவதையும் காண முடியும். மறுபுறம், செயற்கை நுண்ணறிவை நோக்கிய ஒரு நகர்வையும் காண்கிறோம். இது பல பணியிடங்கள் காணாமல் போவதற்கு காரணமாகிறது"என்கிறார் மோலினா. பட மூலாதாரம்,GETTY IMAGES 2. 2022-ன் நினைவும் பாடங்களும் 2023 ஆம் ஆண்டில் தொழில்நுட்பத் துறை 1,68,032 பேரை பணிநீக்கம் செய்தது. பிற துறைகளை ஒப்பிடும் போது, அதிக எண்ணிக்கையிலான ஆட்குறைப்பு தொழில்நுட்பத் துறையிலேயே நடைபெற்றது என்று சேலஞ்சர், கிரே & கிறிஸ்துமஸ் என்ற நிறுவனம் கூறுகிறது. கொரோனா பெருந்தொதொற்று காலத்தில், பல சிலிகான் பள்ளத்தாக்கு நிறுவனங்கள் ஆள் சேர்ப்பை அதிகரித்து, காற்று தொடர்ந்து தங்களுக்கு சாதகமாக வீசும் என்ற எண்ணத்துடன் தங்கள் வளர்ச்சித் திட்டங்களை விரிவுபடுத்தின. ஆனால் நிலைமைகள் மாறிய போது, 2022-ம் மற்றும் 2023-ம் ஆண்டில் ஆள் குறைப்பு தொடங்கின. புதிய திட்டங்கள் தொடங்கப்படாமல் போனதற்கு மற்றொரு காரணம், பணவீக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தியதே. பல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்ப நிலையில், நிறைய மூலதனம் தேவைப்படும். ஆனால், கடன் வாங்குவது இப்போது அதீத செலவினமாக மாறிவிட்டது. "சமீபத்திய வட்டி விகித உயர்வுகள் பல திட்டங்களை பாதித்துள்ளன. கடந்த காலங்களில் இந்த திட்டங்களில் முதலீடு செய்து, பின்னர் வளரவும் லாபத்தை அடையவும் முடியும்" என்று ஏ & ஜி நிதிகளில் டிஐபி மதிப்பு நிதியின் மேலாளர் ஆண்ட்ரேஸ் அலெண்டே கூறுகிறார். "கடன் பெறுவது சிரமமானதால், முதலீடுகள் மிகவும் குறைந்துவிட்டன. இதனால் தொழில்நுட்ப திட்டங்கள் மேலும் முடங்கியுள்ளன "என்று அவர் மேலும் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES 3. தொழில்நுட்பத் துறையின் வளார்ச்சி பாதை 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்பை கொண்ட ‘மெகா கேப்’ எனப்படும் நிறுவனங்கள் கூட, அதிக லாபம் என்ற முதலீட்டாளர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்ய செலவுகளை குறைத்துக் கொள்கின்றன. ஆனால் உண்மை என்னவென்றால், "தொழில்நுட்பத் துறையின் சுழற்சி பொதுவாக அப்படி தான் இருக்கும். திடீரென, ஆனால் வேகமாகவும், இருக்கும். விரைவில், இந்த நிறுவனங்கள் மற்றும் அதன் திட்டங்கள் மாற்றியமைத்து மீண்டும் புதுப்பிக்கப்படும். இதில் தப்பிப் பிழைப்பவை மீண்டும் மிகப்பெரிய வாய்ப்புகளை பெறலாம்." என்று அலண்டே விளக்குகிறார். புதிய சுழற்சிக்கான அறிகுறிகள் ஏற்கெனவே காண தொடங்கி விட்டன. இந்த சுழற்சி ஏற்படும் வரை தொழில்நுட்பத் துறையில் உள்ள சிரமங்கள் பிற துறைகளின் நுகர்வு மற்றும் முதலீட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சிறிய நிறுவனங்களில் உள்ள நிலைமகளையும் பெரிய நிறுவனங்களின் நிலைமைகலையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கக் கூடாது என்று நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர். சிறிய நிறுவனங்களில் தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக சில முடிவுகள் எடுக்கப்படும். பெரிய அளவிலான மூலதனத்தைக் கொண்டு சிரமங்களை சமாளிக்கக் கூடிய பெரிய நிறுவனங்களின் முடிவுகளை சிறிய நிறுவனங்களுடன் ஒப்பிட முடியாது என்று கூறுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/ckrdjmerl78o
  6. கருங்கடலில் தாக்கி அழிக்கப்பட்ட ரஷ்ய போர்க்கப்பல் கருங்கடலில் ரஷ்ய கடற்படையின் போர்க்கப்பலை உக்ரைன் படையினர் தாக்கி அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதல் தொடர்பில் உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் இதனை கூறியுள்ளது. உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது இராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை ஆரம்பித்தது. அமெரிக்கா உதவி இந்தப் போரில் உக்ரைன் இராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் இராணுவம் மீட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்ய இராணுவத்தின் போர்க் கப்பலை அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், ''பிப்ரவரி 14 அன்று உக்ரைன் படையினர் கருங்கடலில் ரஷ்ய கடற்படையின் போர்க்கப்பலை அழித்தனர்'' என தெரிவித்துள்ளது. https://tamilwin.com/article/ukraine-destroys-russian-warship-1707929053
  7. கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திருவண்ணாமலையை அடுத்த ஜவ்வாதுமலையை சேர்ந்த 23 வயதான ஸ்ரீபதி என்ற பழங்குடி பெண் சிவில் நீதிமன்ற நீதிபதிக்கான தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். பிரசவித்த மறுநாள் தேர்வு, வறுமை என பல தடைகளை தகர்த்து அவர் சாதித்தது எப்படி? தடைகளை தகர்த்து சாதனை! தமிழகத்தில் சமீபகாலமாக பழங்குடி மக்கள் பல துறைகளில் சாதித்து தடம் பதித்துவருகின்றனர். அந்த வகையில் அடிப்படை வசதிகளற்ற பழங்குடி கிராமத்தில், வறுமையான குடும்பத்தில் பிறந்து, பல போராட்டங்களை கடந்து உரிமையியல் நீதிபதி தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளார் 23 வயதான ஸ்ரீபதி. திருவண்ணாமலை அடுத்த ஜவ்வாது மலைப்பகுதியில் குறிஞ்சிக்குப்பம் கிராமத்தில் பிறந்து தற்போது புலியூர் பழங்குடி கிராமத்தில் ஸ்ரீபதி தனது கணவர் வெங்கட்ராமனுடன் வசித்து வருகிறார். சட்டப்படிப்பில் இளங்கலை பட்டம் முடித்துள்ள ஸ்ரீபதி (B.A. B.L), கடந்த ஆண்டு நடந்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தேர்வில் வென்று உரிமையியல் நீதிபதி பதவிக்கு தேர்வாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் ஸ்ரீபதியை பாராட்டி வருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது அரசு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை என்று கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன்,’’ என பதிவிட்டு ஸ்ரீபதியை பாராட்டியுள்ளார். ‘மகிழ்ச்சியாக உள்ளது’ - ஸ்ரீபதி தேர்வில் வென்றது தொடர்பாக பிபிசி தமிழ் ஸ்ரீபதியை தொடர்பு கொண்டது. பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபதி, ‘‘தேர்வில் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்தார். நீதிபதி பொறுப்புக்கான முறையான உத்தரவு வரும் வரை இது குறித்து மேலும் பேச மறுத்துவிட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற தேர்வை எழுத நேரில் வந்திருந்தார் ஸ்ரீபதி. தனது கிராமத்திலிருந்து 250 கி.மீ பயணம் செய்து வந்த ஸ்ரீபதி அப்போது, குழந்தை பிரசவம் செய்து இரண்டு நாட்களே ஆகியிருந்தன. மன உறுதியுடன் தேர்வு எழுதிய ஸ்ரீபதி அதில் தேர்ச்சிப் பெற்றார். அதன் பின் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நேர்முகத் தேர்வில் பங்கேற்று அதிலும் தேர்ச்சி பெற்றார். மலைக்கிராமத்தில் வாழ்க்கை, ஏழ்மை, பிரசவித்த அடுத்த நாளில் தேர்வு என, பல தடைகளைத் தகர்த்து ஸ்ரீபதி எப்படி சாதித்துள்ளார் என்பதை அந்தக் கிராமத்தினர் பிபிசி தமிழிடம் பகிர்ந்துள்ளனர். ‘வறுமையிலும் வென்ற ஸ்ரீபதி’ ஸ்ரீபதியின் பெற்றோர் குறிஞ்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள். மலைப்பகுதியான ஏலகிரியில் சிறிது காலம் தங்கிவந்த போது அங்குள்ள ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்து தான் அவரது தாய் அவரை வளர்த்தார். ஸ்ரீபதி திருமணத்துக்கு பிறகு புலியூரில் வசித்து வருகிறார். புலியூர் ஊராட்சித் தலைவர் அன்பழகன் பிபிசி தமிழிடம் பேசிய போது, “ ஏலகிரியில் தங்கி அங்குள்ள அரசுப்பள்ளியில் பிளஸ்2 முடித்து, தொலைதூர கல்வியாக இளங்கலை முடித்து, பின் சென்னையில் தான் இளங்கலை சட்டம் முடித்துள்ளார்” என்று தெரிவித்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே திருமணமாகி மூன்று ஆண்டுகளாக புலியூரில் தன் கணவருடன் வசித்து வருவதாகவும், அவரது கணவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணி புரிவதாகவும் அன்பழகன் தெரிவித்தார். “ஸ்ரீபதி பழங்குடியின மக்களுக்கும், எங்கள் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்,’’ என்றார் மகிழ்ச்சியுடன். ‘எங்கள் கிராமத்தை உலகறியச் செய்துள்ளார் ஸ்ரீபதி’ ஸ்ரீபதி போல முதல் தலைமுறை பட்டதாரிகள் சிலர் புலியூரில் உள்ளனர். அவர்கள் அனைவருமே தினசரி வாழ்க்கையை இன்னல்களுக்கு இடையில் நடத்திக் கொண்டு தான் படித்து முன்னேறி உள்ளனர். புலியூரை சேர்ந்த யுவன்ராஜ் தற்போது சென்னையில் பொறியாளராக பணிபுரிகிறார். பிபிசி தமிழிடம் பேசிய யுவன்ராஜ், ‘ஸ்ரீபதி திருமணமாகி எங்கள் கிராமத்தில் தான் வசித்து வருகிறார். அவரது குடும்பம் பற்றி எனக்குத் தெரியும். தற்போது பெரிய சாதனையை செய்து, தமிழகத்தின் ஒரு மூலையில் இருக்கும் எங்கள் புலியூர் கிராமத்தையும், ஜவ்வாதுமலை பழங்குடியின மக்களையும் உலகறியச் செய்துள்ளார். இதை நினைத்து எங்கள் ஒட்டுமொத்த கிராமமும் பெருமைப்படுகிறது. வறுமைக்கு மத்தியில் பல தடைகளைத்தாண்டி தான் ஸ்ரீபதி பள்ளிப்படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்துள்ளார்,’’ என்கிறார் யுவன்ராஜ். மேல்நிலைப் பள்ளிக்கு 25 கி.மீ பயணம் ஸ்ரீபதி உட்பட புலியூர் கிராமத்தில் படித்த, படிக்கும் அனைவரும் 25 கி.மீ பயணம் மேற்கொண்டே மேல்நிலைப்பள்ளிக்கு செல்கின்றனர். ‘‘புலியூர் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. எங்கள் பகுதி மாணவர்கள் புலியூர் கிராமத்தில் இருந்து 25 கிலோ மீட்டரில் உள்ள ஜமுனாமடத்தூர் சென்று தான் மேல்நிலைப்பள்ளி படிக்கின்றனர்.” என்கிறார் யுவன்ராஜ். மேல்நிலைப்பள்ளியை சென்றடைய இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. “இது புலியூரின் நிலை மட்டுமல்ல, ஜவ்வாது மலையில் உள்ள 11 ஊராட்சிகளுக்கும் இதேநிலை தான். ஸ்ரீபதி சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார், நான் பொறியியல் படித்துள்ளேன், எங்கள் கிராமத்தில் இன்னும் சிலர் படித்துள்ளனர். பழங்குடி மக்களுக்கு அரசு உரிய அடிப்படை வசதி, வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தால் ஸ்ரீபதி போல் பலரும் சாதிப்பார்கள்,’’ என்றார் யுவன்ராஜ். https://www.bbc.com/tamil/articles/cv2jv3yjy92o
  8. Published By: VISHNU 14 FEB, 2024 | 08:17 PM யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் வேன் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று புதன்கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளது. வேனில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உட்பட இருவர் பலியாகியுள்ளனர். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகி்ன்றது. மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/176396
  9. இந்தியா உள்பட உலகெங்கும் தேர்தல் முறைகேடுகள் எப்படியெல்லாம் நடக்கின்றன தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், இசாரியா ப்ரைதாஞ்சியம் பதவி, பிபிசி உலக சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு, உலகின் இந்தியா உள்பட 60க்கும் மேற்பட்ட நாடுகளில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் 400 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள். இந்தியா உள்பட உலகளவில் ஜனநாயகம் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். தேர்தல் நடைமுறைகளில் பல வழிகளில் மோசடிகள் நடக்கலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள், மேலும் அதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென அவர்கள் பரிந்துரைக்கின்றனர். நேர்மையான தேர்தல் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் அதிகாரியான ரிக்கார்டோ செல்லேரி கூறுகையில், "வாக்காளர்களின் விருப்பங்களையும் அவர்கள் எப்படி வாக்களிக்கப் போகிறார்கள் என்பதையும் ஒரு முழு தேர்தல் செயல்முறை பிரதிபலிக்கும் போது, அதை ஒரு நேர்மையான தேர்தல் என்று அழைக்கலாம். அத்தகைய ஒரு தேர்தல் செயல்முறை மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும், அப்போது தான் அவர்கள் தேர்தல் நாளன்று வாக்களிக்க முன் வருவார்கள்" என்கிறார் செலேரி. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறையில், ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு பிரிவில் பணிபுரியும் செலேரி மேலும் கூறுகையில், "தேவையான அனைத்து தகவல்களையும் மக்கள் எளிதாக அணுகுமாறு இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். தேர்தல்கள் வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும்" என்கிறார். செலேரியைப் பொருத்தவரை, "தேர்தல் என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அது வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிப்பது மட்டுமல்லாது, அனைத்து அரசியல் கட்சிகளும் பாரபட்சமின்றி இதில் பங்கேற்கவும் வன்முறை இல்லாமல் பரப்புரை செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும்" என்கிறார். பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஜனநாயகப் பேராசிரியரான டாக்டர். நிக் சீஸ்மேன் கூறுகையில், "வேட்பாளர்களும் குடிமக்களும் சுதந்திரமாகப் பங்கேற்று, பதிவான வாக்குகள் முறையாக எண்ணப்படுவது தான் ஒரு நல்ல தேர்தல். ஆனால் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தேர்தல் செயல்முறையின் தரம் குறைந்து வருகிறது என எனது ஆராய்ச்சியின் முடிவுகள் கூறுகின்றன" என்கிறார். தரம் குறைந்த தேர்தல்கள் வழக்கமாகி விடும் அபாயம் உள்ளது என்கிறார் அவர். டாக்டர் சீஸ்மேனின் கூற்றுப்படி, "எந்தவொரு தேர்தலும் ஆகச்சிறந்த முறையில் நடப்பதில்லை, ஆனால் நல்ல தரமான தேர்தல்கள் வாக்காளர்களுக்கு அவர்களின் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கவும், அவர்களின் தலைவர்களைக் கேள்வி கேட்பதற்கான அதிகாரத்தையும் அளிக்கின்றன." தேர்தல் முறைகேடுகள் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு தேர்தல் முடிந்து அடுத்த தேர்தலுக்கான தயாரிப்பு வரை தேர்தல் செயல்முறை தொடர்கிறது. இந்த சுழற்சியில் எந்த நேரத்திலும் வாக்காளர்களை ஏமாற்ற முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "புதிதாக வருபவர்களே தேர்தல் நாளன்று மட்டும் மோசடிகளைத் திட்டமிடுகிறார்கள். ஆனால் இதில் வல்லுநர்களாக இருப்பவர்கள், ஒரு வருடத்திற்கு முன்பாகவே இதைத் திட்டமிடுகிறார்கள்" என டாக்டர் சீஸ்மேன் கூறுகிறார். தேர்தல் முறைகேடுகள் என்பது ஆளும் அரசு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்கு பெரிய அளவில் பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்துவது, எதிர்க்கட்சி செய்திகளைத் தடுக்க ஊடகங்களின் மீதான தணிக்கை மற்றும் ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்குப் பதிவு செயல்முறையை மாற்றி அமைத்தல் ஆகியவை இந்த முறைகேடுகளில் அடங்கும். "வழக்கமாக நடப்பது என்னவென்றால், ஆளுங்கட்சி நடுநிலை இல்லாத நீதிபதிகளை நியமிக்கிறது. அதனால் இறுதி தேர்தல் முடிவுக்கு எதிரான எந்த மேல்முறையீடுகளும் நீதிமன்றங்களில் ஏற்றுக் கொள்ளப்படாது," என்கிறார் செல்லரி. இதைப் பற்றிய பரவலான அச்சம் இருந்த போதிலும், அமெரிக்காவில் இது நடக்கவில்லை. அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில், டொனால்ட் டிரம்ப் உச்ச நீதிமன்றத்திற்கு மூன்று நீதிபதிகளை நியமித்தார். இது உச்ச நீதிமன்றத்தில் 6-3 விகிதத்தில் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மைக்கு வழிவகுத்தது. ஆனால் 2020 ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்ததை எதிர்த்து டிரம்ப் சார்பில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது, அந்த வழக்கில் டிரம்பிற்கு உச்ச நீதிமன்றம் அதிக பெரும்பான்மையுடன் தீர்ப்பளித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல்களில் முறைகேடு செய்வதற்கான மற்றொரு வழி, நியாயமற்ற ஆதாயங்களை அடையும் நோக்கில் தேர்தல் தொகுதிகளை மறுவரையறை செய்வது. ஆளும் கட்சிகள் அல்லது அரசாங்கங்கள் தங்கள் பிரசாரங்களுக்காகவும், பொய்யான செய்திகளைப் பரப்பி தேர்தல் செயல்முறையை இழிவுபடுத்துவதற்கும், வாக்குகளை விலைக்கு வாங்குவதற்கும் பொது நிதியைப் பயன்படுத்துகின்றன. "அமெரிக்காவில், தொகுதிகளை மறுவரையறை செய்தல், வாக்காளர்கள் மீதான அடக்குமுறை மற்றும் பொய்யான செய்திகள் பரவுவது ஆகியவை மிகவும் கவலைக்குரிய பிரச்னைகளாக இருக்கின்றன" என்கிறார் டாக்டர் சீஸ்மேன். "தேர்தலில் பிரசாரம் கூட இன்னும் தொடங்கப்படாத நிலையில், வாக்களிப்பதைப் பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஜனாதிபதியின் குரலில் ஒரு போலியான டிஜிட்டல் செய்தி வெளியானதை நாங்கள் ஏற்கனவே பார்த்தோம்" என்கிறார் அவர். எல் சால்வடார் மற்றும் இலங்கை தேர்தல்களின் போது பொய்யான செய்திகள் பரவுதல் மற்றும் தேர்தல் மோசடிகள், அரசியல் வன்முறைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக டாக்டர் சீஸ்மேன் கூறினார். தேர்தல் மோசடி என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES வாக்களித்த பின் தேர்தல் முடிவை மாற்றும் முயற்சி இது. வாக்குப்பெட்டியில் முன்பே நிரப்பப்பட்ட வாக்குச் சீட்டுகளை போடுவது, வாக்களித்த பிறகு எண்ணிக்கையை மாற்றுவது அல்லது எதிரணியினரின் வாக்குகளை அழிக்க வாக்குப்பெட்டிகளை அழிப்பது ஆகியவை இதில் அடங்கும். ரஷ்யாவின் 2021 நாடாளுமன்றத் தேர்தலின் போது நடந்த மூன்று நாள் வாக்குப்பதிவில், பரவலான தேர்தல் மோசடிகள், முன்பே நிரப்பப்பட்ட வாக்குச் சீட்டுகளை வாக்குப்பெட்டிகளில் போட்டது மற்றும் தேர்தல் பார்வையாளர்களுக்கு எதிரான மிரட்டல் போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இணையத்தில் பலரால் பகிரப்பட்ட வீடியோக்களில் மக்கள் வாக்குப் பெட்டிகளில் காகிதங்களைத் திணிப்பதைக் காண முடிந்தது. எவ்வாறாயினும், எந்தவொரு 'தீவிரமான தேர்தல் விதிமீறல்களையும்' பதிவு செய்யப்படவில்லை என்று கூறியது ரஷ்ய அரசாங்கம். "ஆனால், முழு தேர்தல் செயல்முறையும் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், நீங்கள் எளிதாக 'பொய்' சொல்லலாம் அல்லவா" என்கிறார் 'How to Rig an Election' புத்தகத்தின் இணை ஆசிரியர் டாக்டர் சீஸ்மேன். தேர்தல் செயல்முறை மிகவும் சிறப்பாகப் பேணப்படும் நாடுகளில் கூட வாக்கு மோசடிகள் நடக்கலாம் என்று அவர் கூறுகிறார். இந்த நாடுகளின் பல வாக்குச்சாவடிகளில், வாக்குகள் பதிவாவதை கண்காணிக்கவும், தேர்தல் முடிவுகளை கணக்கிடவும் உள்நாட்டு தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் உள்ளனர். கானாவில் 2016இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலைக் குறிப்பிடுகிறார் டாக்டர் சீஸ்மேன், அங்கு எதிர்க்கட்சிகள் தேர்தல் முடிவுகளைக் கண்காணிக்க ஒரு கைப்பேசி செயலியைப் பயன்படுத்தின. இதற்கிடையில், 2021இல் ஜாம்பியாவில், உள்நாட்டு தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேவாலயக் குழுக்கள் சர்வதேச சமூகத்துடன் இணைந்து ஒரு வாக்காளர் பட்டியலைத் தயாரித்தன. இதனால் துல்லியமான தேர்தல் முடிவுகளை வெளியிட தேர்தல் கமிஷனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. எவ்வாறாயினும், கடந்த 10 ஆண்டுகளில் இந்த முறையை பின்பற்றுவது மிகவும் கடினமாகிவிட்டது என்று டாக்டர் சீஸ்மேன் கூறுகிறார். ஏனெனில் தேர்தலின் போது சிவில் சமூகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த சட்டங்களை இயற்றியுள்ளன சர்வாதிகார அரசாங்கங்கள். "தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் செயல்முறையின் கடைசி பகுதியை மட்டுமே கண்காணிக்கிறார்கள், ஆரம்ப கட்ட மோசடிகளை அவர்களால் தடுக்க முடியாது" என்கிறார் செலேரி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2023 டிசம்பரில், காங்கோ மக்களாட்சிக் குடியரசில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எதிர்க்கட்சிகளால் தேர்தலில் மோசடி செய்ய முடியுமா? டாக்டர் சீஸ்மேன் கூறுகையில், "எதிர்க்கட்சிகளும் ரகசியமான முறையில் மோசடிகளைச் செய்யலாம், அதிலிருந்து தப்பிக்கவும் அவர்களால் முடியும். "தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் டொனால்ட் டிரம்ப் போன்ற ஒருவர், அனைத்து வகையான குற்றச்சாட்டுகளையும் ஆளும் அரசின் மீது சுமத்தலாம். அதில் சில உண்மையானதாகவும், அதிகம் பொய்யானதாகவும் இருக்கலாம். ஆளும் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முயற்சியாக அவர் அதைப் பயன்படுத்தலாம்." ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் அதிகாரியான ரிக்கார்டோ செல்லேரி கூறுகையில், "நாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள தேவையில்லை. உலக அளவில் ஜனநாயகத்தின் மோசமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜனநாயகம் சரிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்" என்கிறார். பலவீனமான பொருளாதாரம் மற்றும் சதி கோட்பாடுகளை பரப்புவதில் சமூக ஊடகங்களின் எதிர்மறையான தாக்கம் இதற்கு காரணம் என்று அவர் கூறுகிறார். ஜனநாயகத்தின் எதிர்காலம் இந்த ஆண்டு தேர்தல் முடிவுகளை சார்ந்துள்ளது என்கிறார் டாக்டர் சீஸ்மேன். "தொடர்ந்து தேர்தல் மோசடிகள் நடக்கும் ஒரு ஜனநாயகத்தில் மக்கள் வாழ்ந்தால், விரைவில் அல்லது பின்னர், அதன் மோசமான விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். உண்மையான தேர்தல்களை நடத்துவதற்கான உரிமையை அமைப்பு நமக்கு வழங்கவில்லை என்றால், வாக்களிப்பது அல்லது அரசியல் பங்கேற்பின் பயன் என்ன?" என்று கேள்வியெழுப்புகிறார் சீஸ்மேன். https://www.bbc.com/tamil/articles/c4nk4q0dkj7o
  10. அபுதாபியில் பிரமாண்ட இந்து கோவில் : இன்று திறந்து வைக்கிறார் இந்திய பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயில் இன்று பெப்ரவரி 14 பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமீரகத்திற்கு சென்றிருந்த போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க அபுதாபியில் இந்து கோவில் ஒன்று கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அந்த கோவிலை கட்டுவதற்கு துபாய்-அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அபுதாபி அரசு சார்பில் கோவில் கட்ட நிலத்தை அன்பளிப்பாக தருவதற்கான உத்தரவை அன்றைய அபுதாபி பட்டத்து இளவரசராக பொறுப்பில் இருந்த தற்போதைய அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பிறப்பித்தார். அபுதாபியின் ரக்பா பகுதி அருகே அல் முரைக்கா பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கோவில் கட்டமான பணிகள் மும்முரமாக நடந்து வந்தன . இந்த கோவில் கட்டுமான பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தன. கோவில் இரும்பு மற்றும் கம்பிகள் எதுவும் இல்லாமல் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு மற்றும் பளிங்கு கற்களை கொண்டு பாரம்பரிய இந்து கோவிலாக கட்டப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். மேலும் கட்டிட உறுதிக்காக சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரக பகுதிகளை குறிக்கும் வகையில் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன . இதன் ஆயுட்காலம் 1,000 ஆண்டுகளாகும். அபுதாபி இந்து கோவில் வளாகம் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோவில் கட்டிடம் மட்டும் மொத்தம் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய கலையரங்கம், கண்காட்சி அரங்கம், நூலகம், உணவகங்கள், கூட்டங்கள் நடத்தும் பகுதி மற்றும் 5 ஆயிரம் பேர் நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் பார்வையிடும் வசதியுடன் 2 சமூக அரங்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வளாகத்தின் அருகே 53 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் வாகன தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1,200 கார்கள் மற்றும் 30 பஸ்கள் ஒரே நேரத்தில் நிறுத்திக்கொள்ளலாம். கூடுதலாக ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக 2 தளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் மோடி இன்று கோவிலை திறந்து வைக்கிறார். https://thinakkural.lk/article/291678
  11. யாழ் A9 வீதியில் மோட்டார் சைக்கிள் - அரச பேருந்து விபத்து Published By: VISHNU 14 FEB, 2024 | 06:32 PM யாழ்ப்பாணம் - தென்மராட்சி - A 9 வீதி, நாவற்குழி பகுதியில் இந்தச் சம்பவம் புதன்கிழமை (14) பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றது. A9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் திரும்ப முற்பட்டபோது பின்னால் பயணித்த அரச பேருந்து அதனை முட்டி தள்ளியதோடு பாதையை விட்டு விலகி காணிக்குள் புகுந்துள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளுக்கு சேதங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் அதில் பயணித்த இருவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள். https://www.virakesari.lk/article/176393
  12. ‘படுகொலை”க்கு வழிவகுக்கும் இஸ்ரேல் - ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அமைப்பின் பிரதானி எச்சரிக்கை காசாவின் தெற்கு நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தினால் அது ‘படுகொலை”க்கு வழிவகுக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அமைப்பின் பிரதானி மார்ட்டின் கிரிஃபித்ஸ் (Martin Griffiths) எச்சரித்துள்ளார். காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் ஏற்கனவே பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஃபா மீதான படையெடுப்பின் விளைவுகள் ‘பேரழிவாக” அமையும் எனவும் அவர் கூறியுள்ளார். குறித்த நகரில் பதுங்கியிருப்பதாக கூறப்படும் ஹமாஸ் ஆயுததாரிகளை தோற்கடிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இந்தநிலையில் வழக்கத்திற்கு மாறாக வலுவான வார்த்தைகளுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அமைப்பின் பிரதானி மார்ட்டின் கிரிஃபித்ஸ் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ‘ரஃபாவில் நெரிசலில் சிக்கி, மரணத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும்” அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/291656
  13. 14 FEB, 2024 | 04:42 PM எமது நாட்டிற்கு பெரும் வளமாக காணப்படும் மலையக மற்றும் தென் பகுதி தோட்ட சமூகத்தினரின் வாழ்க்கை, வாழ்வாதாரம், ஜீவனோபாயம் உள்ளிட்ட சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, மலையகம் மற்றும் தென் பகுதிய பெருந்தோட்டத் துறையில் உள்ள சமூகத்துடன் இன்று ஒரு முக்கியமான சமூக உடன்படிக்கையை மேற்கொள்ள முடிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இதற்கென தனியான ஜனாதிபதி செயலகம் ஸ்தாபிக்கப்பட்டு, மலையக மற்றும் தென் பகுதி தோட்ட சமூகத்தினர் எதிர்நோக்கும் பொருளாதார, சமூக ரீதியான அபிவிருத்தி மற்றும் அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புத் துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் இணக்கப்பாட்டுடன் உடன்படிக்கை எட்டப்பட்டதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார். இன்று (14) ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமை அலுவலகத்தில், மலையக, தென்பகுதி பெருந்தோட்ட சமூகங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான உறுதிமொழியை வழங்கி, பல்வேறு தோட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளுடன், சுமூக உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார். இலட்சக்கணக்கான மலையக மற்றும் தென் பகுதி பெருந்தோட்ட சமூகங்கள் நாட்டின் உயிர்நாடிக்கு பங்களித்து வருவதால், அவர்களை எப்போதும் கூலித்தொழிலாளிகளாகவே வைத்திருக்காது, அவர்களுக்கு பயிர்ச்செய்கை நில உரிமை மற்றும் வீட்டுரிமைகளை வழங்குவதோடு, பெருந்தோட்டத் துறையில் பெருந்தோட்ட தொழில் முயற்சியாளர்களாக பணியாற்றும் பெரும் வாய்ப்பும் இதன் மூலம் உருவாவதாகவும், இது வரை இரண்டாம், மூன்றாம் வகுப்பினர் எனும் கவனிப்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்த இந்த சமூகத்திற்கு, வார்த்தைகளோடு மட்டுப்பட்ட கோஷங்களை கடந்து, ஒரு குறித்த காலக்கெடுவுக்கு உட்பட்ட வகையில், இந்த மக்களை வலுவூட்ட, தெளிவான சமூக இணக்கப்பாட்டை எட்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார். ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம் நிறுவப்பட்ட முதல் நாளிலிருந்தே, இந்த பிரச்சினைகள் அனைத்தையும் கலந்துரையாடுவதற்கு பதிலாக, இந்த சமூக ஒப்பந்தத்தை நடைமுறை ரீதியாக யதார்த்தமாக்குவதற்கு தாம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த அவர், இந்நாட்டின் ஜனநாயக வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம் என்று கூறலாம் எனவும், அரசியல் சூழ்ச்சிகளால் நாளுக்கு நாள் வஞ்சிக்கப்படும் மலையக மற்றும் தென்பகுதி பெருந்தோட்ட சமூகத்திற்கு, பொருளாதார மற்றும் சமூக சுதந்திரத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான பயணத்தை மேற்கொள்வதே, ஐக்கிய மக்கள் கூட்டணியின் முதன்மையான பணி என்றும் அவர் தெரிவித்தார். மலையக, தென் பகுதி பெருந்தோட்ட சமூகத்தின் உண்மையான பிரதிநிதிகளுடன் இன்றைய தினம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகவும், தமது சொந்த பதவி சலுகைகளை விடுத்து, தமது சமூகத்தை பாதுகாத்து அபிவிருத்தியின் விடியலை கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இவ்வாறானவர்களுடன் இப்படியான சமூக ஒப்பந்ததை எட்டியதில் மகிழ்ச்சியடைவதாகவும் எதிர்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார். இந்த உடன்படிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தேசிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னனணி தலைவர் வி.இராதாகிருஷ்ணன், கேகாலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் ஆகியோர் கைச்சாத்திட்டனர். https://www.virakesari.lk/article/176382
  14. நிகழ்நிலை காப்பு சட்டம் : அவதானம் செலுத்துமாறு சமந்தா பவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை நிகழ்நிலை காப்பு சட்டத்தினூடாக பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து வௌியிடும் சுதந்திரத்திற்கு ஏற்படும் அழுத்தம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு USAID எனப்படுகின்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டுமென்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக அந்த நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்து இலங்கை மேற்கொண்டுள்ள சட்டத் திருத்தம் காரணமாக சர்வதேச சமூக வலைத்தள நிறுவனங்கள் குற்றவியல் வழக்குகளுக்கு உட்படும் அபாய நிலை காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/291788
  15. இலங்கையில் சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தம் - மருத்துவமனைகளில் ராணுவம் என்ன செய்கிறது? பட மூலாதாரம்,SRILANKAN ARMY MEDIA கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 57 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் சுகாதார ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப் புறக்கணிப்பு காரணமாக, மருத்துவமனைகளில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். எனினும், மருத்துவமனையின் நடவடிக்கைகளை தடையின்றி வழங்க 1000திற்கும் அதிகமான ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. சுகாதார சேவையுடன் இணைந்ததான சேவைகள் உள்ளிட்ட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியிடப்பட்ட போதிலும், அதையும் பொருட்படுத்தாது இந்த பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏன் இந்த பணிப் புறக்கணிப்பு? சுகாதார சேவையிலுள்ள 72 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த பணிப் புறக்கணிப்பை நேற்றைய தினம் (13.2.24) ஆரம்பித்தன. மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட டெட் என அழைக்கப்படும் கொடுப்பனவுக்கு ஒத்ததான கொடுப்பனவொன்றை தமக்கும் வழங்குமாறு கோரியே இந்த பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவிக்கின்றார். இந்த விசேட கொடுப்பனவுக்கு ஒத்ததான கொடுப்பனவொன்றை வழங்குமாறு கடந்த காலங்களிலும் சுகாதார தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக கோரிக்கையை முன்வைத்து வந்தன. இந்த கோரிக்கை தொடர்பில் கடந்த 12ம் தேதி நிதி அமைச்சுடன், சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும், பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத நிலையிலேயே இந்த பணிப் புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே இந்த பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். ''நாட்டு மக்களுக்கு உண்மையை கூற வேண்டும். சுகாதார துறையின் உண்மையாக விடயங்களை மறைத்து, அந்த உண்மையான பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி, தமது அரசியல் நிகழ்ச்சி திட்டலுக்கு அமைய தமது இருப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுவதாகவே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதனை பார்க்கின்றது." என அவர் கூறினார். இலங்கை: வரலாறு காணாத அளவில் கிடைக்கும் கணையான் மீன்கள்; நன்நீர் மீனவர்களுக்கு வெள்ளத்தால் விளைந்த 'நன்மை'14 பிப்ரவரி 2024 படக்குறிப்பு, ''பணிப் புறக்கணிப்பு காரணமாக மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு மணிநேரத்திற்கு மேல் காத்திருக்கின்றோம்." நிர்க்கதி நிலையில் நோயாளர்கள் சுகாதார ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப் புறக்கணிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள நோயாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளில் சிப்பாய்கள் சுகாதார சேவைக்கு அமர்த்தியுள்ள போதிலும், முக்கிய சேவைகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. மாவனெல்ல பகுதியில் மரமொன்றின் கிளையொன்று முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கான முதலுதவிகளை ராணுவம் வழங்கிய போதிலும், அவரை காப்பாற்ற முடியவில்லை என தெரிய வருகின்றது. இவ்வாறு நோயாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ''பணிப் புறக்கணிப்பு காரணமாக மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு மணிநேரத்திற்கு மேல் காத்திருக்கின்றோம்." என கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகைத் தந்த நோயாளர் ஒருவர் தெரிவித்தார். ''நாங்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கியுள்ளோம். மயக்கமும் வந்தது. அதிகாலை 6.30 மணிக்கு வருகைத் தந்தேன்." என மற்றுமொரு நோயாளர் குறிப்பிடுகின்றார். ''அவர்கள் நாற்காலிகளில் அமர்ந்து நன்றாக உணவு உட்கொள்கின்றார்கள். அப்பாவி பொதுமக்கள் இங்கு துன்பப்படுகின்றார்கள். இவர்கள் மீது தான் தாக்குதல் நடத்த வேண்டும். மருந்து இல்லை. மருந்து இல்லை என கூறுகின்றார்கள்." என மருத்துவமனைக்கு வருகைத் தந்த பெண் நோயாளர் ஒருவர் கூறுகின்றார். பட மூலாதாரம்,SRILANKAN ARMY MEDIA கடமைகளில் ஈடுபட்டுள்ள ராணுவம் இலங்கை முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 1,100 ராணுவ சிப்பாய்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவிக்கின்றது. சுகாதார சேவையை தடையின்றி முன்னெடுத்து செல்லும் நோக்குடன் தாம் இந்த நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளதாக ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவிக்கின்றார். இந்த நிலையில், கொழும்பு, கண்டி தேசிய மருத்துவமனைகள் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 64 மருத்துவமனைகளில் ராணுவம் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். சுகாதார சேவையை தடையின்றி முன்னெடுத்து செல்வதற்கு எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தயார் நிலையில் இருப்பதாக ராணுவம் அறிவித்துள்ளது. பட மூலாதாரம்,RAVI KUMUDESH படக்குறிப்பு, சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் சுகாதார தொழிற்சங்கத்தின் பதில் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவொன்றை வழங்கும் வரை போராட்டம் தொடரும் என சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவிக்கின்றார். ''3,000 ரூபாவே வழங்க முடியும் என சுகாதார அமைச்சர் கூறுகின்றார். சேவைக்கு சமூகமளிக்குமாறு அவர் கோரிக்கை விடுக்கின்றார். எமக்கு 3,000 ரூபா பிரச்னை இல்லை. எம்மை சமமாக கருதாத பிரச்னையே எமக்குள்ளது. 35,000 ரூபாவிற்கும், 3,000 ரூபாவிற்குமான கொடுப்பனவு நியாயமான கொடுப்பனவு என்பதை எம்மால் நினைக்க முடியாது. எமக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும்" என சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் குறிப்பிடுகின்றார். இலங்கைவாழ் நோயாளர்களிடம் தாம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். பட மூலாதாரம்,RAMESH PATHIRANA FACEBOOK படக்குறிப்பு, சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண சுகாதார அமைச்சரின் பதில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை விட்டு சுமார் 1,300 மருத்துவர்கள் வெளியேறியுள்ள நிலையிலேயே, அவர்களுக்கு 35,000 ரூபா கொடுப்பனவொன்று வழங்க முன்வந்ததாக சுகாதார அமைச்சர் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார். ''நாடு எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சுமார் 1,300 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனால், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு டெட் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் அமல்படுத்தப்பட்ட வரி திட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட தரப்பு என்ற அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்னைக்கு மத்தியில், அரச ஊழியர்களின் சிரமத்தை கருத்திற் கொண்டு 10,000 ரூபா கொடுப்பனவை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிப் புறக்கணிப்பு காரணமாக இலங்கை மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். இந்த நாட்டு மக்கள் தொடர்பில் சிந்தித்து, மீண்டும் தொழிலுக்கு வருகைத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன்." என சுகாதார அமைச்சர் குறிப்பிடுகின்றார். பட மூலாதாரம்,BANDULA GUNAWARDANA FACEBOOK படக்குறிப்பு, அமைச்சர் பந்துல குணவர்தன அரசாங்கத்தின் பதில் சுகாதார ஊழியர்கள் விடுக்கின்ற கோரிக்கைகளை நிறைவேற்றும் இயலுமை அரசாங்கத்திடம் தற்போது கிடையாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். '' அனைத்து கோரிக்கைகளையும் வழங்க முடியும் என்றால், ஜனாதிபதி, நிதி அமைச்சர் மிக விரைவாக அதனை பெற்றுக்கொடுப்பார். இந்த கோரிக்கைகளை வழங்க வேண்டும் என்றால், மேலும் வாட் வரி அதிகரிக்கப்பட வேண்டும். மேலும் வருமான வரி அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கான இயலுமை அரசாங்கத்திடம் கிடையாது. இ ந்த நிலைமையிலிருந்து மீண்டெழுவதற்காக முடியுமானளவு வேலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்ற நிலையில், தொடர்ச்சியாக பணிப் புறக்கணிப்புக்களை மேற்கொண்டால், அது தொடர்பில் பொதுமக்களே சிந்தித்து பார்க்கவேண்டும்." என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். https://www.bbc.com/tamil/articles/cy0mgxd733ko
  16. Published By: DIGITAL DESK 3 14 FEB, 2024 | 04:57 PM காலநிலை மாற்றம் மற்றும் மனித செயற்பாடுகளின் விளைவாக உலகில் இடம்பெயரும் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்து போகும் அபாயத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயரும் மிருகங்கள் பற்றிய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் 100 கோடி விலங்குகள் பாலைவனங்கள், சமவெளிகள் அல்லது பெருங்கடல்கள் வழியாக இனப்பெருக்கம் மற்றும் உணவுகளை தேடி இடம்பெயர்வை மேற்கொள்கின்றன. இந்நிலையில், இடம்பெயரும் உயிரினங்களின் மீது திணிக்கப்படும் நீடிக்க முடியாத அழுத்தங்கள் அவற்றின் எண்ணிக்கையை குறைவடைய செய்வதோடு, உணவு விநியோகத்தை சீர்குலைத்து வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும், 1979 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயரும் விலங்குகளை பாதுகப்பதற்கான மாநாட்டில் 1,189 இனங்கள் இருப்பதாக பட்டியலிடப்பட்டது. அதில் 44 சதவீதம் குறைவடைந்துள்ளதோடு, 22 சதவீதம் முற்றிலும் அழிந்துவிடும். இந்த தரவினை 1970 முதல் 5,000 க்கும் மேற்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கையை ஒருங்கிணைக்கும் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) மற்றும் உலகளாவிய உயிரியல் பன்முகத்தன்மையின் நிலையைக் குறிக்கும் லிவிங் பிளானட் இன்டெக்ஸ் (எல்பிஐ) வழங்கிய மதிப்பீடுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மற்றும் பிற வகையான அதீத சுரண்டல் உள்ளிட்ட செயல்பாடுகளால், மனிதர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர், இதனால், ஐக்கிய நாடுகள் சபையின் பட்டியலில் உள்ள 70 சதவீதமான உயிரினங்கள் பாதிப்படைகின்றன. வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வறட்சி அல்லது காட்டுத் தீ போன்றவை வானிலையில் பாதிப்பை ஏற்படுத்திதுகிறது. இதன் காரணமாக இடம்பெயர்வு காலத்தை சீர்குலைக்கிறது. இதேவேளை, வாழ்விடங்கள் அழிந்து வருவதால் 75 சதவீதமான உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தனிமைப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் கட்டமைப்புக்கு இடையே அதிக இணைப்பு தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அணைகள், குழாய்கள் அல்லது காற்றாலைகள் போன்ற உள்கட்டமைப்பை நிறுவும் போது வாழ்விடங்கள் மற்றும் இடம்பெயர்வு பாதைகளை சீர்குலைப்பதைத் தவிர்க்குமாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிய உலகளாவிய உயிர்ப்பல்வகைமை ஒப்பந்தத்தின் கீழ் 2030 ஆம் ஆண்டிற்குள் உலகின் 30 சதவீதமான நிலம் மற்றும் கடல் பிரதேசங்களை இயற்கைக்காக ஒதுக்கி வைப்பதற்கான 2022 ஆம் ஆண்டு உறுதிமொழியை மதிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/176365
  17. ஜனாதிபதி நிதியத்திற்காக (https://www.presidentsfund.gov.lk) புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தளத்தின் அங்குராப்பண நிகழ்வு நேற்று (13) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றது. இந்த மைல்கல், மருத்துவ உதவிக்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்குவதற்கான விருப்பத்துடன், ஜனாதிபதியின் நிதியத்தால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களை மூன்று மொழிகளிலும் பொது அணுகலை வழங்குகிறது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான சரத் குமார், ஜனாதிபதி நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் கயான் மொரலியகே மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். https://thinakkural.lk/article/291781
  18. 14 FEB, 2024 | 04:21 PM 2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைகளுக்கான தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள பல்வேறு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதற்கான தகவல் உறுதிப்படுத்தல் கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு செல்ல அவசியமில்லை என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2005 பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2008 ஜனவரி 31 ஆம் திகதிக்குட்பட்ட காலப்பகுதியில் பிறந்த விண்ணப்பதாரர்களுக்கு தகவல் உறுதிப்படுத்தல் கடிதம் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/176375
  19. விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகைக் குண்டுவீச்சு - பஞ்சாப், ஹரியாணா எல்லையில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES 14 பிப்ரவரி 2024, 07:16 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் ஹரியாணா - பஞ்சாப் மாநில எல்லையில் ஷாம்பு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லியிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து முன்னேறக் கூடாது என்பதற்காக இரண்டாவது நாளாக இன்று கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளன. தடுப்புகளை மீறி ஹரியாணா எல்லையை கடக்க விவசாயிகள் முயன்று வருகின்றனர். காலை 11 மணி முதல் விட்டுவிட்டு கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. கண்ணீர் புகைக் குண்டுகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஈரமான சாக்குப்பைகளை கைகளில் வைத்திருக்கின்றனர் விவசாயிகள். இந்த பேரணியில் பங்கேற்பவர்கள் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநில விவசாயிகள். அவர்கள், பஞ்சாப் - ஹரியாணா மாநில எல்லைப் பகுதியை செவ்வாய்கிழமை மதியம் வந்தடைந்தனர். அப்போதே அவர்கள் கலைந்து செல்வதற்காக ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. விவசாயிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஆங்காங்கே நாள் முழுவதும் நீடித்து வந்த மோதல் இரவானதும் தற்காலிகமாக ஓய்ந்தது. விவசாயிகள் பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் முகாமிட்டு, நாளைய தினத்திற்காக தயாராவார்கள் என்று விவசாயத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியிருந்தார். இரவில் போராட்டத்தை நிறுத்திக் கொண்டு முகாமிட்ட விவசாயிகள் இன்று மீண்டும் டெல்லி நோக்கி முன்னேறி வருகின்றனர். படக்குறிப்பு, கண்ணீர் புகைக் குண்டுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஈரமான சாக்குப்பைகளை விவசாயிகள் வைத்திருக்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதில் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவரிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த முறை விவசாயிகள் டெல்லிக்குள் நுழையக் கூடாது என்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லி நகர் முழுவதும் முள் கம்பி வேலிகள், சிமெண்ட் கற்கள் கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி எல்லையில், ஆயுதமேந்திய போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் காவலில் உள்ளனர். கடந்த முறை தொடர் போராட்டத்தின் காரணமாக, நரேந்திர மோதி அரசு விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதில் வெற்றி பெற்ற விவசாயிகள், தங்களது கோரிக்கைகளுக்காக மீண்டும் களத்தில் இறங்கியிருக்கின்றனர். விவசாய சங்கத் தலைவர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, விவசாயி ராகேஷ் டிகாய்ட் கிஷான் ஐக்கிய முன்னணியை சேர்ந்த விவசாயியான ராகேஷ் திகாயத், அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், விவசாயிகள் அரசுடன் பேச தயராக உள்ளார்கள். எந்த இடம், நேரம் என்பதை அரசுதான் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி முகமையுடன் பேசிய அவர், “ விவசாயிகளை அரசு துன்புறுத்தக்கூடாது. அவர்கள் டெல்லிக்கு போவார்களே தவிர, திரும்பி பஞ்சாப் செல்ல மாட்டார்கள். ஏதாவது நடந்தால், விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். விவசாயிகளோ அல்லது டெல்லியோ வெகுதொலைவில் இல்லை” என்று கூறியுள்ளார். மேலும், “பிப்ரவரி 16 வரைதான் அரசுக்கு கால அவகாசம். அன்று எங்களது கூட்டமைப்பின் ஒரு கூட்டம் நடக்கவுள்ளது. அதற்குள் அரசு பேசவில்லையென்றால் எங்கள் கூட்டத்தில் எடுக்கும் முடிவை பின்பற்றுவோம். படிப்படியாக இந்த இயக்கம் வளரும். அதற்காக அனைவரும் டெல்லிக்குதான் போக வேண்டும் என்பதில்லை, எங்கிருந்து வேண்டுமானாலும் அவரவர் இருக்கும் இடத்திலேயே போராட்டங்கள் தொடங்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். “விவசாயிகள் கற்களை எறியவில்லை. வெளியிலிருந்து வந்த யாரவது அதை செய்திருக்கலாம். ஆனால், விவசாயிகள் பேச்சுவார்தையின் மூலமே இந்த பிரச்னைக்கு ஒரு வழி கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.” இந்த இயக்கத்தின் தலைமை குறித்து பேசிய அவர், “கிசான் ஐக்கிய முன்னணி இன்னும் இந்த போராட்டத்தில் பங்குபெறவில்லை. ஆனால், இந்த போராட்டத்தை வழிநடத்தி வரும் தலைவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். அரசு எங்களை உடைக்க முயற்சிக்க கூடாது. அதற்கு பதிலாக எங்களது பிரதிநிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். நாளை மாலை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ஜக்ஜித் சிங் தலேவால் விவசாய அமைப்பின் முன்னாள் தலைவரான ஜக்ஜித் சிங் தலேவால், இதுகுறித்து தான் பாட்டியாலா நிர்வாக அதிகாரிகளோடு சந்திப்பில் இருந்ததாக தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி முகமையின் படி, “புகை குண்டுகளை போடுவதை நிறுத்தினால் மட்டுமே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியம் என்று அரசு அதிகாரிகளிடம் தான் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்” இதுகுறித்து பேசியுள்ள தலேவால், “ பாட்டியாலா துணை ஆணையர், டிரோன்கள் குறித்து அம்பாலா துணை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார்.” என்று தெரிவித்துள்ளார். அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தாலும், இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் மட்டுமே அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த ஜக்ஜித் சிங் தலேவால் கூறுகையில், "பிப்ரவரி 15ம் தேதி அதாவது நாளை மாலை 5 மணிக்கு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. நாளை வரை ஒத்துழைக்குமாறு எங்கள் தலைவர்கள், இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்" என்றார். சர்வான் சிங் பந்தேர் கூறுகையில், "இன்று நாங்கள் தொடர்ந்து ஒரு சரியான சூழலை உருவாக்க வேண்டும் அனைவரிடமும் பேசி முடிவு செய்தோம். ஆனால் நாங்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தோம், ட்ரோன் வந்து, எங்கள் மீது ஷெல் குண்டுகளை வீசியது." "மத்திய அரசின் அணுகுமுறை சரியில்லை. நாங்கள் அமைதியாக அமர்ந்திருக்கிறோம். நீங்கள் பேசுங்கள். நாங்கள் மோதலை விரும்பவில்லை. டெல்லிக்கும் சென்றே தீர வேண்டும் என்றும் விரும்பவில்லை." அரசு உடனான சந்திப்புக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலேவால் தெரிவித்தார். அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி அரசுடனான பேச்சுவார்த்தைகளில் இன்னும் முடிவு எட்டப்படாததால் விவசாயிகளின் இரண்டு பெரிய அமைப்புகளான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய இரண்டும், தங்களது கோரிக்கைகளுக்காக செவ்வாய்க்கிழமை 'டெல்லி நோக்கி அணிவகுப்போம்' என்ற பேரணியை தொடங்கினர். இதில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக வந்து கொண்டிருக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லியின் எல்லையில் தங்கிப் போராடிய விவசாயிகளின் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால் நரேந்திர மோதி அரசாங்கம் விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்-2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) விலை ஒப்பந்த உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவற்றை ரத்து செய்தது. சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் பிபிசியிடம் பேசுகையில், "எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற 'தில்லி சலோ' கோஷத்தை நாங்கள் கொடுக்கவில்லை. விவசாயிகள் போராட்டத்தைத் திரும்பப் பெற அரசு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்கிறோம்,” என்றார். மேலும் பேசிய தலேவால், "அப்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பதாக அரசு உறுதியளித்தது. இதனுடன், போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும் கூறியது. லக்கிம்பூர்-கேரி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வேலையும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்கப்படும், என்று கூறியிருந்தது,”என்றார். 2021-ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்புர்-கேரி என்ற இடத்தில் அரசாங்கத்தின் விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய நான்கு சீக்கிய விவசாயிகள், உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியின் வாகனத்தால் மோதப்பட்டு கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. விவசாயிகள் சுற்றுச்சூழல் மாசுபாடு சட்டங்களிலிருந்து விடுவிக்கப்படுவர் என்று அரசாங்கம் கூறியதாக டலேவால் கூறினார். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி விவசாயிகளுக்கு பயிர் ஆதார விலை வழங்கப்படும் என்பது மிகப்பெரிய வாக்குறுதி. ஆனால் இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையில் விவசாயிகளுக்கு பயிர்ச் செலவை விட ஒன்றரை மடங்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருகிறது. இரண்டு ஆண்டுக்குப் பிறகு விவசாயிகள் மீண்டும் போராடுவது ஏன்? முந்தைய போராட்டம் திடீரென முடிவுக்கு வரவில்லை என்று விவசாயிகள் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருபவர்கள் கூறுகிறார்கள். அரசாங்கம் அப்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விவசாயிகள் இப்போது அழுத்தம் கொடுக்க முடிவெடுத்திருக்கின்றனர். விவசாயிகள் உரிமை ஆர்வலரும் பத்திரிகையாளருமான மந்தீப் பூனியா அதுபற்றிக் கூறுகையில், “நான்கு மாதங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று விவசாயிகள் கருதுகின்றனர். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை உருவாக்க இதுவே சரியான தருணம் என்று கருதுகின்றனர்,” என்றார். பிபிசியிடம் பேசிய அவர், "தற்போதைய குறைந்தபட்ச ஆதரவு விலை ஃபார்முலா மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் விலை, அவர்களின் செலவுகளைக் கூட கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி, அதாவது ஒன்றரை மடங்கு செலவில் குறைந்தபட்ச ஆதரவு விலை கோருகின்றனர். தற்போது உள்ளீட்டுச் செலவின் அடிப்படையில் மட்டுமே அரசு இதை முடிவு செய்கிறது. இதில் ஊதியம் கூட சேர்த்து கொள்ளப்படுவதில்லை, என்றார். தலேவால் கூறுகையில், "அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நாங்கள் நினைவூட்டுகிறோம். தேர்தல் வந்துவிட்டது, புதிய அரசு வந்தால் நாங்கள் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்று சொல்ல வாய்ப்புண்டு. எனவே இதுவே சரியான தருணம் என்று அரசு கொடுத்த வாக்குறுதிகளை நினைவூட்ட நினைக்கிறோம்,” என்றார். எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவித்த அரசு, அவரது பெயரில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அமல்படுத்தாதது முரணானது என்றார் தேலேவால். “விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்க வேண்டாம் என்று அவர் பரிந்துரைத்திருந்தார், ஆனால் அரசாங்கம் அதைத்தான் செய்ய முயற்சிக்கிறது,” என்றார். https://www.bbc.com/tamil/articles/cjk62586r28o
  20. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் சகலதுறை வீரருக்கான தரவரிசையில் ஷக்கிப்பின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டினார் நபி Published By: VISHNU 14 FEB, 2024 | 07:31 PM (நெவில் அன்தனி) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் (ODI) அரங்கில் ஐசிசி சகலதுறை வீரருக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் மொஹமத் நபி முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் குவித்ததை அடுத்து சகலதுறை வீரருக்கான தரவரிசையில் நபி முதலிடத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிசிறந்த சகலதுறை வீரருக்கான தரவரிசையில் 2019 மே 7ஆம் திகதியிலிருந்து 2024 பெப்ரவரி 9ஆம் திகதிவரை 1739 நாட்கள் முதலிடத்தில் இருந்தவாறு ஷக்கிப் அல் ஹசன் செலுத்திவந்த ஆதிக்கத்தை மொஹமத் நபி முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். மொஹமத் நபி 314 தரவரிசை புள்ளிகளைப் பெற்று ஷக்கிப் அல் ஹசனைவிட 4 புள்ளிகள் விததியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். ஷக்கிப் அல் ஹசனுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானின் சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் ரஷித் கான் முதலிடத்தில் இருந்துவந்தார். இலங்கைக்கு எதிராக பல்லேகலையில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 136 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் 39 வயதான மொஹமத் நபி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளார். இதன் மூலம் மிகக் கூடிய வயதில் (39 வருடங்கள், ஒரு நாள்) சகலதுறை வீரருக்கான தரவரிசையில் முதல் இடத்தை அடைந்தவர் என்ற சாதனையை மொஹமத் நபி நிலைநாட்டியுள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனை இலங்கையின் திலக்கரட்ன டில்ஷானுக்கு சொந்தமாக இருந்தது. டில்ஷான் 2015ஆம் ஆண்டு தரவரிசையில் முதலிடத்தை அடைந்தபோது அவரது வயது 38 வருடங்கள், 8 நாட்களாகும். https://www.virakesari.lk/article/176395
  21. பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 14 பிப்ரவரி 2024, 04:35 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திமுக அணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளை கோரியிருப்பதுடன் அதில் ஒன்று பொதுத் தொகுதியாக இருக்க வேண்டும் என கோரியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளை வென்ற அந்த கட்சி இரண்டு பொதுத் தொகுதிகளை கைப்பற்றியது. அப்போது கட்சியின் தலைவர் திருமாவளவன், “எங்களை தலித் கட்சியாக தனிமைப்படுத்தி சுருக்க நினைத்தவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்திருந்தார். தலித் கட்சி என்று தங்களை சுருக்கிவிடக் கூடாது என்று விசிக நினைக்கிறது. தலித் கட்சி என்ற அடையாளத்திலிருந்து வெளிவர வேண்டும் என்ற முடிவு தங்களை விரிவுப்படுத்தி, பலதரப்பட்ட மக்களை தங்களுடன் அணிதிரட்டவா அல்லது தன்னிடம் உள்ள தலித் அல்லாத முகங்கள் சிலவற்றை தக்க வைத்துக் கொள்ளவா? பட மூலாதாரம்,FACEBOOK விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் வரலாறு தலித் பேந்தர்ஸ் இயக்கம் என்ற பெயரில் தலித்துகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்பாக 1982ம் ஆண்டு தொடங்கப்பட்ட இயக்கமே, பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியாக (விசிக) உருவெடுத்தது. 1999ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் அரசியலுக்கு அறிமுகமானது விசிக. கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வரும் விசிக, தமிழ்நாட்டு அரசியலில் கவனிக்கத்தக்க இடத்தை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணியின் அங்கமாக உள்ள விசிக தேசிய அளவில் குறிப்பிடத்தக்க தலித் இயக்கமாகவும் அடையாளப்பட்டுள்ளது. தொல் திருமாவளவன் கவனிக்கப்படும் முக்கியமான தலைவராக இயங்குகிறார். இது வரை தனித்து போட்டியிடாத விசிக, கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்தித்த போது, சுமார் 1.5% வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பொதுத் தொகுதிகளான நாகப்பட்டினத்தில் ஆளூர் ஷாநவாஸ் மற்றும் திருப்போரூர் தொகுதியில் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் விசிக சார்பில் வெற்றி பெற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள 144 மாவட்டச் செயலாளர்களில் 17 பேர் தலித் அல்லாதவர்கள் ஆவர். இதில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர். திமுக கூட்டணியில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தனித் தொகுதிகளான சிதம்பரத்தில் திருமாவளவன் பானை சின்னத்திலும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் திமுக சின்னமான உதய சூரியனிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். தலித் கட்சியா விடுதலைச் சிறுத்தைகள்? விசிக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார், தங்களுக்கு பொதுத் தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தார். “கடந்த சட்டமன்றத் தேர்தலில், நான்கு தனித் தொகுதிகளிலும் இரண்டு பொதுத் தொகுதிகளிலும் போட்டியிட்டோம். இதில் தனி தொகுதிகளில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றோம். அதாவது 50% வெற்றி. போட்டியிட்ட இரண்டு பொதுத் தொகுதிகளிலுமே விசிக வெற்றி பெற்றது. அதாவது 100% ஸ்டிரைக் ரேட்” என குறிப்பிட்டார். “பட்டியலின மக்களுக்கு மட்டுமான கட்சி என்ற அடையாளத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்பவில்லை. அவர்களுக்கு எல்லா பொது பிரச்னைகளிலும் அக்கறை இருக்கிறது. அவர்கள் முதலில் பட்டியலின மக்களுக்கான கட்சியாகவே தொடங்கினர். பின்பு, தாங்கள் விரிவடைய வேண்டும் என்று உணர்ந்துள்ளனர்” என தலித் விவகாரங்கள் குறித்த ஆய்வாளரும் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மண்ட் ஸ்டடீஸ் மையத்தின் முன்னாள் பேராசிரியர் லக்ஷ்மணன் குறிப்பிடுகிறார். 1980களில் பட்டியலின மக்களின் குரலாக கன்ஷிராம் உருவாக்கிய பகுஜன் சமாஜ் கட்சி, மற்றும் 2000ம் ஆண்டில் ராம் விலாஸ் பாஸ்வான் உருவாக்கிய லோக்ஜனசக்தி கட்சி ஆகியவை இதற்கு முன்னுதாரணங்கள் ஆகும் என்று லக்ஷ்மணன் சுட்டிக்காட்டுகிறார். பட மூலாதாரம்,ரவிக்குமார் விசிகவை ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கான கட்சி என முத்திரையிடக் கூடாது என்கிறார் ரவிக்குமார். “இது எல்லோருக்குமான கட்சியாகும். ஒரு சாதியை சார்ந்து ஒரு மதத்தை சார்ந்து எந்தவொரு கட்சியும் இயங்க முடியாது. அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். நல்லிணக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அம்பேத்கர் எல்லோருக்குமான சட்டத்தை தான் இயற்றினார்” என்கிறார். கன்ஷிராம் வழியில் திருமாவளவன் பரிசோதனை செய்கிறார் என்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் கே சந்துரு. “1999 தேர்தலில் கன்ஷிராம் உருவாக்கிய பகுஜன் சமாஜ் கட்சி 14 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதே போன்றதொரு பரிசோதனையை திருமாவளவனும் மேற்கொள்கிறார். அவர்களுடைய கட்சியில் எந்த சமூகத்தை சேர்ந்தவரும் உறுப்பினராவதற்கு தடை இல்லாதபோதும் அதை தலித் கட்சி என்றே பார்க்கிறார்கள். எனவே அவர் அந்த பிம்பத்தை உடைக்க நினைக்கிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவிற்கு எதிராக முனைவர் வசந்தி தேவியை போட்டியிட வைத்தார்.” எல்லோரது வாக்கும் தேவை தலித் கட்சி என்ற பிம்பத்தை உடைப்பது விடுதலை சிறுத்தைகளுக்கு அவசியமாக இருக்கிறது என்கிறார் திமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன். “தாங்கள் தலித் கட்சி என்ற பிம்பத்தை உடைக்கவே பொதுத் தொகுதியிலும் போட்டியிட விரும்புகிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களும் தலித் மக்களுக்காக இருக்கிறார்கள் என்பதை அது வெளிப்படுத்தும்” என்று குறிப்பிட்ட அவர், எந்தவொரு தொகுதியாக இருந்தாலும் நிறுத்தப்படும் வேட்பாளர் அந்த தொகுதியில் மக்களிடம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்பது முக்கியம். தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபரை நிறுத்த முடியாது” என குறிப்பிட்டார். தனித் தொகுதியில் போட்டியிட்டாலும், அந்த தொகுதியில் உள்ள மற்ற சமூகத்தினரின் வாக்குகள் இல்லாமல், ஒரு வேட்பாளர் வெற்றி பெற முடியாது என சுட்டிக்காடுகிறார் ரவிக்குமார். “எந்த தொகுதியாக இருந்தாலும் அனைத்து சமூகத்தினரின் ஆதரவும் தேவை. அது தான் பலமும் கூட. பொதுத் தொகுதிகளில் பட்டியலினத்தவர் போட்டியிடுவது புதிதும் கிடையாது. திமுக அதிமுக இரு கட்சிகளுமே தலித் வேட்பாளர்களை தங்கள் சின்னத்தில் பொதுத் தொகுதிகளில் நிறுத்தி அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர். எந்த கட்சியும் பணக்காரர்களுக்காகவோ, உயர்சாதியினருக்காகவோ இருப்பதாக தங்களை கூறிக் கொள்வதில்லை அல்லவா? எனவே, கூடுதல் இடம் கொடுக்க வேண்டிய கடமை எல்லா கட்சிகளுக்குமே இருக்கிறது” என்று விளக்கினார். பட மூலாதாரம்,X பொதுத் தொகுதிகள் ஏன் முக்கியம்? ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குறிப்பிடுகையில், “தலித் மக்கள் மட்டுமே வாக்களித்து தங்களுடைய தலைவரை தேர்ந்தெடுக்கும் நிலைமை இருந்தால்தான் உண்மையான தலைவர்கள் எழுவார்கள் என்ற அம்பேத்கரின் வாதத்தை காந்தி ஏற்கவில்லை. ஆனால் காந்தி அப்படியொரு பரிசோதனைக்கு தயாராக இல்லை. இப்போதுள்ள முறையில் எல்லோருடைய வாக்குகளும் கிடைப்பது ஒரு கட்சிக்கு முக்கியம். எனவே தங்கள் கட்சியின் மேல் தலித் என்ற முத்திரை குத்தப்படுவதை நீக்க திருமாவளவன் முயற்சி எடுக்கிறார்” என்கிறார். தலித் வளர்ச்சிக்கு திராவிட கட்சிகள் தடையாக அமைந்திருப்பதாக குறிப்பிடுகிறார் பேராசிரியர் லட்சுமணன்,” திராவிட கட்சிகள் பிராமண எதிர்ப்பு கட்சிகளாக இருந்தன. அவை தலித் விரோத போக்கை 1920கள் முதல் இன்று வரை கடைப்பிடித்து வருகின்றன. அதனால் தான் வன்கொடுமைகள் இன்றும் நடைபெறுகின்றன. அவர்கள் பல நேரங்களில் மௌனமாக இருந்துள்ளனர். பொது நீரோட்டத்தில் இருக்கும் கட்சிகள் தலித் பிரச்னைகள் குறித்து, போதிய அளவு பேசவில்லை என்றதால் தான் விசிக, அவர்களுக்காக குரல் கொடுத்தது. திராவிட கட்சிகளில் ஒரு பட்டியலினத்தவரை கட்சிக்குள் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. அவரை முழுமையான தலைவராக ஏற்றுக் கொள்வதும் இல்லை. நாங்கள் தான் தலித் மக்களுக்கு பேண்டு, சட்டை போட கற்றுக் கொடுத்தோம் என்று பொதுமேடைகளில் மூத்த தலைவர்கள் பேசியுள்ளனர்” என தெரிவித்தார். பட்டியல் சாதியினரின் ஜனநாயக போராட்டத்தில் பொதுத் தொகுதிகளை நோக்கி விரிவாவது முக்கியமான படி என்கிறார் ரவிக்குமார். “பொதுத் தொகுதியில் விசிக நிற்க வேண்டும் என்று கூறுவதால், தலித் மக்களின் குரலாக இருக்க வேண்டும் என்பதிலிருந்து எங்களின் கவனம் மாறி விட்டது என்று அர்த்தம் கிடையாது. ஜனநாயக சக்திகளின் உதவியுடன் தான் இயங்க முடியும். தனி தொகுதிகள் என்பது குறைந்தபட்ச பிரதிநிதித்துவத்துக்கான உறுதியாகும். ஆனால் அதுவே அதிகபட்சம் கிடையாது.” என்று தெரிவித்தார். “விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவது ஜனநாயக உரிமை தானே. பட்டியலின மக்கள் தனி தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்று நினைப்பது ஒரு சாதிய போக்கு ஆகும். பட்டியிலின வேட்பாளர்கள் பொதுத் தொகுதிகளில் போட்டியிடுவது முற்போக்கானதாகும்” என்று பேராசிரியர் லட்சுமணன் தெரிவித்தார். பட மூலாதாரம்,நீதிபதி கே சந்துரு திமுக, அதிமுக கட்சிகளே பொதுத் தொகுதிகளில் அதிகம் போட்டியிடுகின்றன. தலித் வேட்பாளர்களை அவ்வப்போது நிறுத்தியுள்ளனர். இதுபற்றி கேட்டபோது “பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர்கள் நிறுத்த திமுகவுக்கு எந்த தயக்கமும் தடையும் இல்லை” என்று குறிப்பிட்ட டி.கே.எஸ்.இளங்கோவன் “கோவையில் சி டி தண்டபாணி என்ற திமுக மாவட்டச் செயலாளர் பொதுத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இது ஆரோக்யமான விசயமே” என்று விளக்கினார். அதே சமயம் திமுக சின்னத்தை பயன்படுத்துவது வெற்றி வாய்ப்பினை அதிகரிக்கும் என்கிறார் அவர். “கடந்த முறை திருமாவளவன் 2500 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார். ரவிக்குமார் நல்ல வாக்கு வித்தியாசம் பெற்றிருந்தார். எனவே அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார். சொந்த சின்னத்தில் போட்டியிட்டால்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற முடியும் என சுட்டிக்காட்டுகிறார் ரவிக்குமார், “விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்னும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தால் அங்கீகாரம் கிடைக்கும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டதால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இல்லையென்றால் கடந்த முறையே கிடைத்திருக்கும். தேர்தல் அரசியலில் நுழைந்து 25 ஆண்டுகள் ஆன கட்சி. கண்டிப்பாக அங்கீகாரம் கிடைக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டார். வெற்றிக்கான பார்முலா எது? பலம் என்னவாக இருந்தாலும், வெற்றியை நோக்கியே வியூகம் அமைய வேண்டும் என்கிறார் டி.கே.எஸ்.இளங்கோவன், “திமுகவை பொறுத்தவரை எத்தனை இடங்கள் ஒதுக்கப்படுகின்றன என்பது இரண்டாம்பட்சம். வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்கு. 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் ஃபார்முலா வெற்றியை பெற்று தந்தது. எனவே, இந்த முறையும் அதையே கடைப்பிடிக்க வாய்ப்புள்ளது. இந்த முறை கூட்டணியில் புதிதாக எந்த கட்சியும் இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டணியில் இருந்தவர்களே இப்போதும் கூட்டணியில் இருக்கிறார்கள். 2019 ஃபார்முலா வெற்றிக்கான ஃபார்முலாவாக இருந்தது. எனவே அது போன்று அமையவே வாய்ப்புள்ளது. விசிகவுக்கு கடந்த முறையை விட அதிக இடங்கள் ஒதுக்கினால், பிற கூட்டணி கட்சிகளும் அதிக இடங்கள் கேட்பார்கள்.” என்று தெரிவித்தார். கூட்டணி முக்கியம்தான், ஆனால் எண்ணிக்கையும் அவசியம் என்கிறார் வி.சி.க பொதுச் செயலாளர் ரவிக்குமார், “நாங்கள் நான்கு தொகுதிகள் கேட்டுள்ளோம். அது நியாயமான கோரிக்கை என்று தான் நினைக்கிறோம். எனினும் திமுக தான் முடிவு செய்ய வேண்டும். திமுகவுக்கு கூட்டணி நெருக்கடி இருக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் நான்கு தொகுதிகள் கேட்பதற்கான தகுதியும் நியாயமும் இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற “வெல்லும் ஜனநாயகம்” மாநாடு நல்ல வரவேற்பை பெற்றது. எட்டு லட்சம் முதல் 10 லட்சம் பேர் வரை மாநாட்டில் கலந்து கொண்டிருப்பார்கள் என்று மதிப்பீடு செய்கிறோம். வந்தவர்கள் அனைவரும் இறுதி வரை கலையாமல் இருந்தது கவனிக்கத்தக்கது. கடந்த ஐந்து ஆண்டுகளில் விசிகவின் வளர்ச்சியையும் மறுக்க முடியாது. விசிகவுக்கு வலுவான வாக்கு வங்கி இருக்கிறது. எனவே நான்கு தொகுதிகள் கேட்பதில் தார்மீக நியாயம் இருக்கிறது” என்றார். https://www.bbc.com/tamil/articles/cq5x28qz7z7o
  22. சத்திமுத்தப் புலவரின் "நாராய் நாராய் செங்கால் நாராய்" - செ .பாஸ்கரன் கவிஞர்கள் ஏழையாக இருந்து ஊர் ஊராக திரிந்து பாடிக்கொண்டு இருப்பார்கள். அப்படியான ஒரு கவிஞர்தான் இந்த சத்திமுத்தபுலவர். நாராய் நாராய் செங்கால் நாராய்’ என்ற இப்பாடல் எனக்கு பிடித்த பாடல். மிகவும் எளிமையாகப் புரியக்கூடியது. புறநானூற்றுத்தொகுப்பில் இடம் பெற்ற பாடல் என்று தமிழாசிரியர் திரு. வேலையா குறிப்பிட்டுள்ளார். நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய் நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி வடதிசைக்கு ஏகுவீராயின் எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு எங்கோன் மாறன் வழுதிக் கூடலில் ஆடையின்றி வாடையில் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழீஇப் பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழையாளனைக் கண்டனம் எனுமே வரி பொருள் நாராய் நாராய் செங்கால் நாராய் நாரையே நாரையே சிவந்த கால்களை உடைய நாரையே பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பழங்கள் நிறைந்த பனைமரத்து கிழங்கை பிளந்தது போன்ற பவளக் கூர்வாய் செங்கால் நாராய் பவளம் போல் சிவந்த கூர்மையான அலகை கொண்ட செங்கால் நாரையே நீயும் நின் பேடையும் தென் திசைக் குமரியாடி நீயும் உன் பெட்டையும் தென் திசையில் உள்ள கன்யாகுமரியில் நீராடிய பின் வட திசைக்கு ஏகுவீராயின் வட திசைக்கு திரும்புவீரானால் எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி எங்கள் ஊரில் உள்ள சத்திமுத்த குளத்தில் தங்கி நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி நனைந்த சுவர்களையும் கூரையையும் கனைக்கும் பல்லிகளும் கொண்ட பாடு பாத்திருக்கும் என் மனைவியை கண்டு வீட்டில் என்னை எதிர்பார்த்திருக்கும் என் மனைவியிடம் எங்கோன் மாறன் வழுதிக் கூடலில் எங்கள் அரசன் மாறன் வழுதி ஆளும் மதுரையில் ஆடையின்றி வாடையில் மெலிந்து குளிர்காலத்தில் சரியான ஆடையில்லாமல் உடல் மெலிந்துபோய் கையது கொண்டு மெய்யது பொத்தி போர்வை இல்லாததால் கையைக் கொண்டு உடம்பை பொத்தி காலது கொண்டு மேலது தழீஇப் காலைக் கொண்டு என் உடலை தழுவி பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும் பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பை போல உயிரை பிடித்து வைத்திருக்கும் ஏழையாளனை கண்டனம் எனமே உன் ஏழைக் கணவனை கண்டோம் என்று சொல்லுங்கள்! http://www.tamilmurasuaustralia.com/2019/05/blog-post_26.html
  23. 19 வயதின் கீழ் உலகக் கிண்ண தெரிவு அணியில் நான்கு இந்தியர்கள்; அணித் தலைவர் ஹியூ வெய்ஜென் Published By: VISHNU 13 FEB, 2024 | 12:09 AM (என்.வீ.ஏ.) தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவந்த ஐசிசி ஆடவர் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய வீரர்களிலிருந்து தெரிவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 12 அணிகள் பங்குபற்றிய போதிலும் ஐசிசி தெரிவு அணியில் ஐந்து நாடுகளைக் கொண்ட வீரர்களே பெயரிடப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் 12ஆவது வீரராக ஸ்கொட்லாந்து வீரர் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். ஆறு துடுப்பாட்ட வீரர்கள், ஒரு சகலதுறை வீரர், 4 பந்துவீச்சாளர்கள் தெரிவு அணியில் இடம்பெறுகின்றனர். நான்கு இந்திய வீரர்கள் இடம்பெறும் தெரிவு அணிக்கு சம்பியனான அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஹியூ வெய்ஜென் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். ஐசிசியின் தெரிவு அணி துடுப்பாட்ட வரிசையில்: லுவான் ட்றே ப்ரிட்டோரியஸ் (தென் ஆபிரிக்கா, விக்கெட் காப்பாளர் 287 ஓட்டங்கள்) ஹெரி டிக்சன் (அவுஸ்திரேலியா, 309 ஓட்டங்கள்) முஷீர் கான் (இந்தியா, 360 ஓட்டங்கள்) ஹியூ வெய்ஜென் (அவுஸ்திரேலியா, தலைவர், 304 ஓட்டங்கள்) உதய் சஹாரன் (இந்தியா, 397 ஓட்டங்கள்), நேதன் எட்வேர்ட் (மே. தீவுகள், 101 ஓட்டங்கள், 11 விக்கெட்கள்) கெலம் விட்லர் (அவுஸ்திரேலியா, 14 விக்கெட்கள்), உபைத் ஷா (பாகிஸ்தான், 18 விக்கெட்கள்) க்வேனா மஃபாக்கா (தென் ஆபிரிக்கா, 21 விக்கெட்கள்) சௌமி பாண்டே (இந்தியா, 18 விக்கெட்கள்) 12ஆவது வீரர்: ஜெமி டன்க் (ஸ்கொட்லாந்து 263 ஓட்டங்கள்) https://www.virakesari.lk/article/176234
  24. துணையுடன் தூங்குவதைத் தவிர்க்கும் இளைய தலைமுறை - நன்மைகள் கிடைக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஃபெர்னாண்டா பால் பதவி, பிபிசி நியூஸ் வேர்ல்டு 34 நிமிடங்களுக்கு முன்னர் கோவிட் தொற்றுநோய்க்கு பிறகு இந்த பிரச்னை தொடங்கியது. ஒரு கட்டத்திற்கு மேல் கணவரின் குறட்டையை சிசிலியாவால் தாங்க முடியவில்லை. அவர் தூங்க முடியாமல் தவித்தார். எவ்வளவோ முயற்சிகள் எடுத்துப் பார்த்தும், கணவரின் குறட்டையை அவரால் நிறுத்த முடியவில்லை. 35 வயதான சிசிலியாவால் இதை மேலும் தாங்க முடியவில்லை. எனவே கணவன் மனைவி இருவரும் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இனி ஒரே அறையில் ஒன்றாக தூங்க முடியாது என்ற முடிவு. "என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. நாள் முழுவதும் சோர்வாக உணர்கிறேன். ஓரிரு இரவுகள் அதைப் பொறுத்துக் கொள்ளலாம், ஆனால் தொடர்ந்து அவ்வாறு தூக்கமில்லாமல் வாழ முடியாது" என்று பிபிசியிடம் கூறினார் சிசிலியா. இவர் லண்டனில் வசித்து வருகிறார். "இது சற்று கடினமான முடிவு தான், மனதளவில் மிகவும் கஷ்டமாக தான் உள்ளது. ஆனால் இப்படி செய்தால் தான் தூங்க முடியும் என்பதால், இந்த முடிவை எடுத்தோம்" என்கிறார் சிசிலியா. சிசிலியா மற்றும் அவரது 43 வயது கணவர், 'ஸ்லீப் டிவோர்ஸ்' என்ற முறையைப் பின்பற்றுகிறார்கள். அதாவது கணவன், மனைவி தனித்தனி அறையில் தூங்கும் வழக்கம். "பொதுவாக 'ஸ்லீப் டைவர்ஸ்' என்பது தற்காலிமாக தான் கணவன் மனைவி இடையே கடைபிடிக்கப்படும். ஆனால் தனியாக தூங்குவதன் மூலம் நன்றாக தூங்க முடியும் என்பதை தம்பதியினர் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்" என்கிறார் அமெரிக்காவில் உள்ள மெக்லீன் மருத்துவமனையின் மனநல மருத்துவர் ஸ்டெபானி கோலியர். “முக்கிய காரணம் உடல்நலம் தான். பொதுவாக குறட்டை விடும் ஒரு நபர், தூக்கத்திலிருந்து அடிக்கடி எழுவார் அல்லது பலமுறை கழிப்பறையைப் பயன்படுத்துவார். மேலும் அவர்கள் தூக்கத்தில் அடிக்கடி புரள்வார்கள், இது பக்கத்தில் படுத்திருக்கும் நபரை மிகவும் தொந்தரவு செய்கிறது" என்று அவர் பிபிசியிடம் கூறினார். "'ஸ்லீப் டிவோர்ஸ்' என்ற இந்த டிரெண்ட் இப்போது வேகமாக பரவி வருகிறது" என்கிறார் ஸ்டெபானி கோலியர். பட மூலாதாரம்,GETTY IMAGES இளம் தலைமுறையினர் விரும்பும் 'ஸ்லீப் டிவோர்ஸ்' கடந்த ஆண்டின் இறுதியில், பிரபல அமெரிக்க நடிகை கேமரூன் தியாஸ், தானும் தன் கணவரும் ஒரே அறையில் தூங்குவதில்லை என்று ஒரு போட்காஸ்டில் பேசியிருந்தார். மேலும் கணவன் மனைவி தனித்தனி அறைகளில் தூங்குவதை ஒரு சாதாரண விஷயமாக பார்க்க வேண்டுமென கூறியிருந்தார். அவரது கருத்துக்கு சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான எதிர்வினைகள் வந்தது. சர்வதேச ஊடகங்கள் பல்வேறு கட்டுரைகள் எழுதவும் அது வழிவகுத்தது. ஆனால் இது நடிகை கேமரூனின் கருத்து மட்டுமல்ல, பலர் இவ்வாறு கூறியிருக்கிறார்கள். தி அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசின் (ஏஏஎஸ்எம்) 2023ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி, மூன்றில் ஒரு தம்பதியினர், எப்போதாவது அல்லது தொடர்ந்து தனித்தனி அறைகளில் தூங்குவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதாகக் கூறியிருக்கிறார்கள். 'மில்லினியல்கள்' எனப்படும் புதிய தலைமுறையினர் மத்தியில் (தற்போது தோராயமாக 28 மற்றும் 42 வயதுக்கு இடைப்பட்ட தலைமுறையினர்) 'ஸ்லீப் டிவோர்ஸ்' போக்கு அதிகமாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதில் 43% பேர், தங்கள் துணையுடன் அல்லாமல் தனி அறையில் தூங்குவதாக கூறியுள்ளனர். மற்ற தலைமுறைகளைப் பொறுத்தவரை, தலைமுறை Xஇல் (1965 மற்றும் 1980க்கு இடையில் பிறந்தவர்கள்) 33% இதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். தலைமுறை Zஇல் (1997 மற்றும் 2012க்கு இடையில் பிறந்தவர்கள்) 28% இதற்கு ஆதரவாக உள்ளார்கள். இறுதியாக பேபி பூமர்ஸ் எனப்படும் தலைமுறையினர் (1946 மற்றும் 1964க்கு இடையில் பிறந்தவர்கள்) 22% 'ஸ்லீப் டிவோர்ஸ்' முறைக்கு ஆதரவாக உள்ளார்கள். "குறிப்பாக இளைய தலைமுறையினர் ஏன் அவ்வாறு செய்கிறார்கள், இதற்கு என்ன காரணம் என சரியாக சொல்ல முடியவில்லை. கணவன் மனைவி தனித்தனியாக தூங்குவது ஒரு வகையான கலாச்சார மாற்றம். ஆனால் இளம் தலைமுறையினர் நினைப்பது என்னவென்றால் 'நான் நன்றாக தூங்கினால், நாள் முழுவதும் நன்றாக உணர்கிறேன். எனவே இதில் என்ன தவறு?" என்கிறார் மனநல மருத்துவர் ஸ்டெபானி கோலியர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த காலங்களில் தம்பதிகள் தனித்தனி அறைகளில் தூங்குவது வழக்கம் என்று வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். வரலாற்றில் கணவன் மனைவி தனித்தனி அறையில் தூங்குவது புதிதல்ல. கணவன் மனைவி 'ஒரே படுக்கையில்', ஒரு அறையில் தூங்குவது என்பது ஒரு நவீன கருத்தியல் என சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். தொழில்துறை புரட்சியின் காரணமாக அது அதிகரித்தது என்றும், அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் வாழும்போது, இட நெருக்கடி காரணமாக இந்த முறை வந்தது என்றும் அவர்கள் கூறுகின்றனர். விக்டோரியா காலத்திற்கு முன்பாகவே திருமணமான தம்பதிகள் தனித்தனியாக தூங்குவது பொதுவான ஒன்றாக இருந்துள்ளது. "மேலும் பணக்கார வர்க்கத்தினரிடையே, அது மிகவும் பொதுவானதாக இருந்தது. சமூகத்தின் உயர் வகுப்பினர் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவும் இது உதவுகிறது" என சிலியின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியின் சோம்னாலஜிஸ்ட் (தூக்க அறிவியல் நிபுணர்) பாப்லோ ப்ரோக்மேன் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நன்றாக தூங்குவது ஒரு 'ஆரோக்கியமான' உறவைப் பேணவும் உதவும் என மனநல மருத்துவர் உறுதியளிக்கிறார். தம்பதியினர் தனித்தனியாக தூங்குவது நன்மைகள் என்ன? தனித்தனி அறைகளில் தூங்க முடிவு செய்யும் தம்பதிகளுக்கு பல நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். "முக்கிய நன்மை என்னவென்றால், தொடர்ச்சியாக ஆழ்ந்த உறக்கத்தை அவர்களால் பெற முடியும். மேலும் நல்ல தூக்கம் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் அவசியம்” என்கிறார் மருத்துவர் ஸ்டெபானி கோலியர். தொடர்ந்து பேசிய கோலியர், “ஒருவரால் தூங்க முடியாவிட்டால், அது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் செயல்பாடு வரை அனைத்தையும் பாதிக்கிறது. கூடுதலாக, நீங்கள் அடிக்கடி கோபப்படுவீர்கள், எளிதில் பொறுமையை இழப்பீர்கள். இது ஒரு வகையான மனச்சோர்வை கூட உருவாக்கலாம்” என்று கூறுகிறார். நன்றாக தூங்குவது ஒரு 'ஆரோக்கியமான' உறவைப் பேணவும் உதவும் என மனநல மருத்துவர் உறுதியளிக்கிறார். "தம்பதியினர், நன்றாக ஓய்வெடுக்காதபோது, அவர்களுக்குள் அதிகமாக விவாதங்கள் ஏற்படலாம், அதிகமாக எரிச்சல் அடைவார்கள் மற்றும் அவர்களுக்குள் இருக்கும் புரிதலை இழக்க நேரிடும்" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். நுரையீரல் நிபுணர் மற்றும் ஏஏஎஸ்எம் செய்தித் தொடர்பாளர் சீமா கோஸ்லா, மேலே உள்ள கருத்துடன் உடன்படுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனித்தனி அறைகளில் தூங்க முடிவு செய்யும் தம்பதிகளுக்கு பல நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். "மோசமான தூக்கம் ஒருவரின் மனநிலையை மோசமாக்கும் மற்றும் தூக்கமின்மை உள்ளவர்கள் தங்கள் துணையுடன் வாதிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தூக்கத்தை கெடுக்கும் நபர் மீது அவர்களுக்கு சில மனக்கசப்புகள் இருக்கலாம், இது உறவுகளை எதிர்மறையாக பாதிக்கும்" என்று ஏஏஎஸ்எம் தனது 'ஸ்லீப் டிவோர்ஸ்' குறித்த தனது ஆய்வைத் தொடங்கியபோது அவர் குறிப்பிட்டிருந்தார். "ஒரு நல்ல இரவு தூக்கம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டிற்கும் முக்கியமானது, எனவே சில தம்பதிகள் தங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக தனியாக தூங்குவதைத் தேர்ந்தெடுப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை," என்று அவர் மேலும் கூறினார். சிசிலியாவைப் பொறுத்தவரை, கணவரிடமிருந்து விலகி வேறு அறையில் தூங்குவது அவருடைய வாழ்க்கையை மாற்றியுள்ளது. "நன்றாக தூங்குவது, படுக்கையில் அதிக இடம் இருப்பது, யாருக்கும் இடையூறு விளைவிக்காமல் புரண்டு படுப்பது என இது மிகவும் வசதியாக உள்ளது” என்று அவர் கூறுகிறார். “மேலும், உங்கள் துணை தூங்கி எழும் நேரத்தில் நீங்களும் எழுந்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் விரும்பும் போது அல்லது தேவைப்படும் போது தூக்கத்திலிருந்து எழ முடியும்" என்கிறார் சிசிலியா. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இதற்கிடையில் 'ஸ்லீப் டைவர்ஸ்' என்பது எல்லா தம்பதியினருக்கும் வேலை செய்யக்கூடிய ஒன்றல்ல என்று உறுதியாக கூறுகிறார் தூக்க அறிவியல் நிபுணர் தனித்தனி அறையில் தூங்குவதில் உள்ள தீமைகள் என்ன? இருப்பினும், இந்த முடிவு சில எதிர்மறை அம்சங்களையும் கொண்டு வரலாம். பல தம்பதிகள், தங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை இழப்பதைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். "எனது துணையுடனான உறவில், ஏதோ ஒன்று மாறிவிட்டது என்று நான் நினைக்கிறேன்," என்று சிசிலியா ஒப்புக்கொள்கிறார். "கணவன்- மனைவி உறவு, நெருக்கம் பாதிக்கப்படுகிறது. ஆனால் அது அவ்வளவு தீவிரமானது அல்ல. நன்மைகள் தான் அதிகம் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார். முழுநேர வேலை செய்யும் பலருக்கு, தங்கள் துணையுடன் இணையும் தருணம் என்பது அவர்கள் தூங்கச் செல்லும் நேரமாகத் தான் இருக்கும் என்று மருத்துவர் ஸ்டீபனி கோலியர் விளக்குகிறார். "எனவே, கணவன் மனைவி ஒன்றாக செலவழிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவதே இதற்கான தீர்வுகளில் ஒன்றாகும்" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். இதற்கிடையில் 'ஸ்லீப் டைவர்ஸ்' என்பது எல்லா தம்பதியினருக்கும் வேலை செய்யக்கூடிய ஒன்றல்ல என்று உறுதியாக கூறுகிறார் தூக்க அறிவியல் நிபுணர் பாப்லோ ப்ரோக்மேன். பட மூலாதாரம்,GETTY IMAGES "ஜோடியாக தூங்குவதால் சில உயிரியல் நன்மைகள் உள்ளன. பலருக்கு, கனவில் ஒரு இணைப்பு உருவாகிறது. இது மனித இனத்தின் பழமையான ஒரு இணைப்பு. உதாரணமாக, ஒரு தாய்க்கும் அவளுடைய குழந்தைக்கும், பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் போது இந்த பிணைப்பு உருவாகிறது. இதனால் இருவரும் ஒரே சமயத்தில் ஓய்வெடுக்கும் வகையில் ஒரே மாதிரியான தூக்க சுழற்சிகளைக் கொண்டிருப்பார்கள்" என்கிறார் பாப்லோ ப்ரோக்மேன். "பல வருடங்களாக ஒன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் தம்பதிகள், மனதளவில் நல்ல இணைப்பில் இருந்தால் நல்ல அமைதியான ஆழமான உறக்கத்தைப் பெறுகிறார்கள் என்பதைக் காட்டும் ஆய்வுகள் உள்ளன. இதன் மூலம் உங்களின் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறீர்கள்,” என்கிறார் சோம்னாலஜிஸ்ட் பாப்லோ. மொத்தத்தில் ஒரு ஜோடி 'ஸ்லீப் டிவோர்ஸ்' முறையை பின்பற்ற முடிவு செய்தால், கவனத்தில் கொள்ள வேண்டிய சில பரிந்துரைகள் உள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர். “ஒருவர் இந்த முறையை விரும்பி, மற்றவர் விரும்பாதபோது இது வேலை செய்யாது, ஏனெனில் அது மேலும் வெறுப்புக்கு வழிவகுக்கும்” என்கிறார் ஸ்டெபானி கோலியர். "சிலர் தனியாக தூங்க விரும்புவதில்லை, அது அவர்களை மனதளவில் மோசமாக உணர வைக்கிறது. இது போன்ற நிலையில் கணவன் மனைவி இருவரும் சரிசமமாக பேசி ஒரு முடிவை எடுக்க வேண்டும்" என ப்ரோக்மேன் ஒப்புக்கொள்கிறார். “பிரச்னை உள்ளவருக்கு, அதாவது குறட்டை, தூக்கத்தில் நடப்பது அல்லது தூக்கத்திலிருந்து அடிக்கடி எழுவது என எதுவாக இருந்தாலும், அது அவரது துணைக்கு கஷ்டமாக இருக்கலாம். இதைப் பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள், பொதுவாக பல ஆண்களே தனியாகத் தூங்க தயங்குவார்கள்’’ என்கிறார் ப்ரோக்மேன். இருப்பினும், அதிகரிக்கும் 'ஸ்லீப் டைவர்ஸ்' போக்கு, ஒரு நல்ல இரவு தூக்கத்திற்காக, எதுவும் செய்யலாம் என்பதை நிரூபிப்பதாகத் தெரிகிறது. படக்குறிப்பு, மருத்துவர் எஸ்.ஜெயராமன் 'குறட்டை ஒரு நோயின் அறிகுறி' பலர் தன் துணையிடமிருந்து விலகி தனியாக உறங்க விரும்புவதற்கு முக்கிய காரணம் குறட்டை தான் என்கிறார் நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் எஸ்.ஜெயராமன். "பெரும்பாலும் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக குறட்டை ஏற்படுகிறது, அதாவது ஸ்லீப் அப்னியா அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்ற நோயின் அறிகுறியே குறட்டை. ஒருவர் குறட்டை விட்டால், அசந்து தூங்குகிறார் போல, தூங்கட்டும் என நினைப்போம். ஆனால் குறட்டை என்பது ஒரு நோயின் அறிகுறி. வயதானவர்களுக்கு குறட்டையின் மூலமாக மரணம் கூட நிகழலாம்" என எச்சரிக்கிறார் மருத்துவர் எஸ்.ஜெயராமன். "பெரும்பாலும் ஆண்களுக்கே இந்த குறட்டை பிரச்னை உள்ளது. கணவன் குறட்டை விடுவதால், அருகே இருக்கும் மனைவி தூக்கத்தை இழப்பார். இது மனச்சோர்வை உண்டாக்கும். இதனால் தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படலாம். வெளிநாடுகளில் இதனால் விவாகரத்து வரை செல்கிறார்கள். நம் ஊரில் பலர் பொறுத்துக் கொள்கிறார்கள். எனவே குறட்டை ஒரு தீவிரமான பிரச்னை என்பதை முதலில் உணர வேண்டும்" "என்னிடம் குறட்டைக்கான சிகிச்சைக்கு வந்த ஒரு நபரின் மனைவி, 'என் கணவர் அடிக்கடி மூச்சு விட முடியாமல், தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்கிறார்' என்றார். இவ்வாறு தூக்கத்தில் மூச்சு விட முடியாமல் முழிப்பது மாரடைப்பு வருவதற்கான அறிகுறி. தொடர்ச்சியாக குறட்டை பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு இது நிகழும், முக்கியமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு" என்கிறார் மருத்துவர் எஸ்.ஜெயராமன். "இளம் வயதினருக்கு குறட்டை பிரச்னை என்றால் எளிதில் குணப்படுத்தலாம். முதலில் அவர்களது தூக்க சுழற்சியை ஆய்வு செய்வோம். பின்னர் அதைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். உடல் எடையைக் குறைத்தல், தொண்டையில் வளர்ந்துள்ள சதையை லேசர் மூலம் அகற்றுதல், தைராய்டு பிரச்னை இருந்தால் அதற்கான தீர்வு என நிறைய வழிகள் உள்ளன. ஆனால், 20% பேருக்கு தான் குறுகிய காலத்தில் தீர்வு கிடைக்கும், 80% பேருக்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும்" என்று கூறினார் நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் எஸ்.ஜெயராமன். (இந்தக் கட்டுரையில் பிபிசி தமிழுக்காக கூடுதலாக சில தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன) https://www.bbc.com/tamil/articles/c4nw0lrw000o
  25. அழகு நிறைந்த ஃபிளமிங்கோ பறவைகள்! Published By: DIGITAL DESK 3 14 FEB, 2024 | 10:32 AM “ஃபிளமிங்கோ” வலசை பறவைகள் மன்னார் பகுதியில் காணப்படுகிறது. இங்கு உணவு கிடைப்பது, வானிலை மற்றும் இனப்பெருக்க ஜோடிகளைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல காரணங்களால் தங்கள் நாட்டிலிருந்து இலங்கைக்கு இடம்பெயர்வதாக அறியப்படுகிறது. இவ்வாறு இடம்பெயரும் பறவைகளுள், மிகவும் அரிதான மற்றும் மிகவும் உணர்திறன் கொண்ட பறவை ஃபிளமிங்கோ ஆகும். தற்போது அவை அனைத்தும் மன்னாரில் குவிந்துள்ளன. இடம்பெயர்ந்த காலம் எப்போதுமே பார்வையாளர்களுக்கு ஒரு உற்சாகமான நேரமாக உள்ளது, அவர்கள் மன்னாரின் ஈரநிலங்களில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக செலவழிக்கும் அழகான மற்றும் கம்பீரமான ஃபிளமிங்கோ பறவைகளை ஓய்வு நேரத்தில் பார்க்கவும், ஆச்சரியப்படுத்தவும், படிக்கவும் மற்றும் புகைப்படம் எடுக்கவும் இணையற்ற வாய்ப்பைப் பெறுகிறார்கள். இந்த வகை பறவைகள் நவம்பரில் மாதம் முதல் ஏப்ரல் வரை தங்கியிருக்கும். அவைகள் இலங்கைக்கு மட்டுமன்றி, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கும் இடம்பெயர்கின்றன. ஃபிளமிங்கோ பறைவைகளை புகைப்படம் பிடித்த வனவிலங்கு புகைப்பட கலைஞர் ஏ.எல் முஹமட் ரசீம் தெரிவிக்கையில், மன்னாரில் தற்போது சுமார் 3,000 க்கும் அதிகமான ஃபிளமிங்கோ பறைவைகளை என்னால் அவதானிக்க கிடைத்தது. ஆனால் பல ஆண்டுகளாக எண்ணிக்கையில் தெளிவான ஏற்ற இறக்கத்தை காணக்கூடியதாக உள்ளது. "2012 இல், 12,000 ஃபிளமிங்கோ பறவைகள் இருந்தன, ஆனால் அது 1,500 ஆகவும் குறைந்து பின்னர் 7,000 ஆக உயர்ந்தது. பின்னர் சென்ற வருடம் 3,000 தெடக்கம் 5,000 வரை இருந்தது. தற்போது அது 3,000 ஃபிளமிங்கோ பறவையாக உள்ளது." அந்த வகையில் இந்த ஃபிளமிங்கோ பறவைகளை காண அதிமான வெளிநாட்வர்கள் வந்துள்ளனர். இந்த வருடம் பல நாட்கள் நான் மன்னார் சென்று இந்த புகைப்படங்களை எடுத்து வருகின்றேன். https://www.virakesari.lk/article/176329

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.