Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை! 26 JAN, 2024 | 12:00 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் 16 நாடுகளுக்கு இடையிலான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 'சி' குழுவில் இடம்பெறும் இலங்கை, சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது. ஆபிரிக்க நாடுகளான ஸிம்பாப்வேயை டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 36 ஓட்டங்களாலும் நமிபியாவை 77 ஓட்டங்களாலும் வெற்றி கொண்டதன் மூலம் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு இலங்கை முன்னேறியுள்ளது. இந்த இரண்டு போட்டிகளைத் தொடர்ந்து தனது குழுவில் இடம்பெறும் பலம்வாய்ந்த அவுஸ்திரேலியாவை கிம்பர்லியில் நாளை சனிக்கிழமை (27) நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டியில் இலங்கை எதிர்த்தாடவுள்ளது. இரண்டு அணிகளும் சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட தகுதிபெற்றுவிட்டதால் கடைசி லீக் போட்டி முடிவு இரண்டு அணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. இந்த வருட இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் றோயல் கல்லூரி வீரர் சினேத் ஜயவர்தனவின் தலைமையிலான இலங்கை அணி பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை. ஸிம்பாப்வே அணிக்கு எதிரான தனது ஆரம்பப் போட்டியில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களான தினுர கலுபஹன (60), ஷாருஜன் சண்முகநாதன் (41 ஆ.இ.), ரவிஷான் டி சில்வா (31), ருசந்த கமகே (31) ஆகியோர் நிதானமாகத் துடுப்பெடுத்தாடியதன் பலனாக இலங்கை 204 ஓட்டங்களைப் பெற்றது. மல்ஷா தருப்பதி 4 விக்கெட்களையும் ருவிஷான் பேரேரா, விஷ்வா லஹிரு ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றி ஸிம்பாப்வேயை 89 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினர். நமிபியாவுக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டத்தில் இலங்கை பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட து. எனினும், சுப்புன் வடுகே மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 56 ஓட்டங்களைப் பெற்று இலங்கை 133 ஓட்டங்களை மொத்த எண்ணிக்கையாக பெற உதவினார். பந்துவீச்சில் ருவிஷான் பெரேரா, விஷ்வா லஹிரு ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் தினுர கலுபஹன 2 விக்கெட்களையும் கைப்பற்றி நமிபியாவை 56 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி இலங்கையை 77 ஓட்டங்களால் வெற்றிபெற உதவினர். இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை இளையோர் அணியின் ஆட்டத்திறன்கள் திருப்திகரமாக அமையவில்லை. இந் நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டியில் வெற்றிபெறுவதாக இருந்தால் இலங்கை அணி சகல துறைகளிலும் திறமையை வெளிப்படுத்த வேண்டிவரும். இக் குழுவில் ஸிம்பாப்வேயை 225 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்ட அவுஸ்திரேலியா, 2ஆவது போட்டியில் நமிபியாவிடம் கடும் சவாலை எதிர்கொண்டு 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது. எனவே, நமிபியாiவிட திறமையாக இலங்கை பந்துவீசினாலன்றி அவுஸ்திரேலியாவை வெற்றிகொள்வது இலகுவல்ல. இது இவ்வாறிருக்க, ஏ குழுவிலிருந்து இந்தியாவும் பி குழுவிலிருந்து இங்கிலாந்தும், டி குழுவிலிருந்து பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளும் சுப்பர் சிக்ஸில் விளையாடுவதை உறுதி செய்துகொண்டுள்ளன. https://www.virakesari.lk/article/174830
  2. Published By: VISHNU 26 JAN, 2024 | 03:48 PM ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழில், இன்று வெள்ளிக்கிழமை (26) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.பொது நூலகத்தில் இருந்து பேரணியாக யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் சிவில் சமூக அமைப்புக்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/174852
  3. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் மருத்துவமனையில் சேர்க்கக் கோரி மனு தாக்கல் Published By: RAJEEBAN 26 JAN, 2024 | 10:27 AM சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலையான சாந்தன் தன்னை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான சாந்தன் கடந்த 2022-ல் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விடுதலை செய்யப்பட்டார். அவர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது தாயாரை உடனிருந்து கவனிக்க வேண்டியுள்ளதால் தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க உத்தரவிடக்கோரி சாந்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. சாந்தனிற்கு கல்லீரல் சிறுநீரகபாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைக்கைதிகள் உரிமை மையம் தெரிவித்துள்ளது. திருச்சி சிறப்பு முகாமில் சாந்தனிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை இதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது இதனால் சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கவேண்டும் என சிறைக்கைதிகள் உரிமை மையம் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது விடுதலையான சாந்தன் இலங்கைக்கு திரும்புவதற்காக விசா போன்றவற்றை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றார், திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனிற்கு சிறுநீரக பாதிப்பு எற்பட்டுள்ளதால் அவருக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் திருச்சி சிறப்பு முகாமில் எடுக்கப்படாததால் அவரின் உயிரை காப்பாற்றுவதற்காக தமிழக முதல்வர் உரிய நடவடிக்களை எடுக்கவேண்டும் என சிறைக்கைதிகள் உரிமைகள் மையம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கால்கள் வீங்கியுள்ளன கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ள து எனினும் இரண்டுமாதங்களாக உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை இதனால் அவர் உயிருக்கு போராடுகின்றார் என்பதால் அவரை காப்பாற்றவேண்டும் என சிறைக்கைதிகள் மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/174816
  4. காற்றில் வரும் கீதமே: பவதாரிணி பாடிய மறக்க முடியாத 10 பாடல்கள் பட மூலாதாரம்,X/SOCIAL MEDIA கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளரும் பாடகியுமான பவதாரிணியின் குரல் தனித்துவமானது. 1984ஆம் ஆண்டு முதல் பாடிவரும் பவதாரிணி பாடிய மறக்க முடியாத சில பாடல்களின் பட்டியல் இது. 1. மஸ்தானா, மஸ்தானா பவதாரிணி 1984ஆம் ஆண்டில் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ படத்திலேயே அறிமுகமாகிவிட்டார் என்றாலும், 1995ல் வெளியான ராசய்யா படத்தில் அவர் பாடிய இந்தப் பாடல்தான், தமிழ் திரைப்பட இசை ரசிகர்களை அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அவருடைய பல பாடல்களோடு ஒப்பிட்டால், இந்தப் பாடல் அவ்வளவு சிறப்பான பாடல் இல்லைதான். ஆனால், இந்தப் பாடலில் ஒலித்த பவதாரிணியின் குரல், பாடலை கவனிக்க வைத்தது. அவருடைய குரலில் ஒரு குழந்தைத்தனமும் வசீகரமும் இருந்தது. இந்தப் பாடலுக்கு பிரபுதேவாவும் ரோஜாவும் நடித்திருந்தனர். பட மூலாதாரம்,X/SOCIAL MEDIA 2. நதியோடு வீசும் தென்றல் 1995ல் விஜயகாந்த் சங்கீதா நடித்து வெளியான திரைப்படம் அலெக்ஸாண்டர். இந்தப் படத்தில் இருந்த சண்டைக் காட்சிகளின் சத்தத்திற்கு நடுவே ஒலித்த இந்த மெல்லிய, அழகான பாடல், பெரிதாக கவனிக்கப்படவில்லை. "நதியோடு வீசும் தென்றல் மலரோடு பேசுமா, மலராத பூக்கள் இன்று அதைக் கேட்கக்கூடுமா?" என்ற துவங்கும் இந்தப் பாடலில் உன்னிகிருஷ்ணனும் பவதாரிணியும் ஒரு மாயாஜாலத்தையே நிகழ்த்தியிருப்பார்கள். வெளியாகி கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆகியும் புதிதாக ஒலிக்கும் பாடல் இது. இந்தப் பாடலுக்கு இசை கார்த்திக் ராஜா. 3. ஒரு சின்ன மணிக் குயிலு 1996ல் கட்டப் பஞ்சாயத்து என்று ஒரு படம் வெளியானது. இப்போது பலரும் மறந்துவிட்ட இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் இது. பாடலை அருண்மொழியும் பவதாரிணியும் இணைந்து பாடியிருந்தார்கள். கார்த்திக் - கனகா இந்தப் பாடலுக்கு நடித்திருந்தார்கள். படத்தின் பெயர் பலருக்கும் மறந்துவிட்டாலும் பாடல் இன்னமும் காற்றில் சுற்றிக் கொண்டிருக்கிறது. பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா. பட மூலாதாரம்,X/SOCIAL MEDIA 4. இது சங்கீதத் திருநாளோ 1997ஆம் ஆண்டில் வெளிவந்த காதலுக்கு மரியாதை திரைப்படம் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட். இளையராஜாவின் இசையில் வெளியான அந்தப் படத்தில் டைட்டில் பாடலாக இடம்பெற்றிருந்த "இது சங்கீதத் திருநாளோ" பாடல், தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. இளையராஜாவின் இசையையும் தாண்டி, பவதாரிணியின் குரலும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. 5. என் வீட்டு ஜன்னல் எட்டி பாலுமகேந்திரா இயக்கத்தில் 1997ல் வெளிவந்த ராமன் அப்துல்லா படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பாலுமகேந்திரா இயக்கிய படங்களில் இது கவனிக்கத்தக்க ஒரு படமாக அமையவில்லை. ஆனால் பவதாரிணியும் அருண் மொழியும் பாடியிருந்த இந்த ஒரு பாட்டு, படத்தின் பெயரை மூலைமுடுக்கெல்லாம் கொண்டுசென்றது. படம் வெற்றிபெறவில்லை என்றாலும் பாடல் ஹிட்டானது. இப்போதும் எங்கேயாவது இந்தப் பாடல் ஒலிக்கும்போது, வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைத்து, சில நொடிகள் பாடலை ரசித்துச் செல்கிறார்கள். பட மூலாதாரம்,X/SOCIAL MEDIA 6. தவிக்கிறேன்.. தவிக்கிறேன் பிரபுதேவாவும் சிம்ரனும் நடித்து 'டைம்' என்ற திரைப்படம் 1999ல் வெளிவந்தது. கீதா கிருஷ்ணா என்பவர் படத்தை இயக்கியிருந்தார். ராதிகா சௌத்ரி, மணிவண்ணன், அம்பிகா, நாசர் என ஏகப்பட்ட நடிகர்கள் படத்தில் இருந்தார்கள். ஆனால், படம் யார் நினைவிலும் தங்கவில்லை. ஆனால், இந்தப் படத்தில் இருந்த இந்தப் பாடல், எல்லோர் மனதிலும் தங்கிவிட்டது. இளையராஜாவின் இசையில் உருவான இந்தப் பாடலில் பல இடங்களில் பவதாரிணியின் குரல் அட்டகாசம் செய்திருக்கும். வீடியோ காட்சியில்லாமல் பாடலைக் கேட்பது நன்று. 7. மயில் போல பொண்ணு ஒன்னு 2000வது ஆண்டில் வெளியான பாரதி திரைப்படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அதில் 9 பாடல்கள் பாரதியின் பாடல்கள்தான். ஒரு பாடலை புலமைப்பித்தனும் ஒரு பாடலை மு. மேத்தாவும் எழுதியிருந்தனர். மு. மேத்தா எழுதிய இந்தப் பாடலை பவதாரிணி பாடியிருந்தார். ஒரு குழந்தை பாடுவதைப் அமைந்திருக்கும் இந்தப் பாடல், கேட்போரை மயங்கச் செய்தது. "குயில் போல பாட்டு ஒன்னு, கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல, அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல" என அந்தப் பாடலில் வரும் வரிகளைப் போலவே, நீண்ட மயக்கத்தைத் தந்த பாடல் அது. இந்தப் பாடல், சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதையும் பவதாரிணிக்குப் பெற்றுத் தந்தது. 8. தென்றல் வரும் வழியை 2001ல் வெளிவந்த ப்ரண்ட்ஸ் படத்தில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல், ஹரிஹரனுடன் இணைந்து பவதாரிணி பாடிய மற்றொரு சூப்பர் ஹிட் பாடல். இந்தப் பாடலில் நடுநடுவே வரும் பவதாரிணியின் ஹம்மிங், இந்தப் பாடலில் மற்றும் ஒரு போனஸ். பட மூலாதாரம்,X/SOCIAL MEDIA 9. காற்றில் வரும் கீதமே ஒரு நாள் ஒரு கனவு படத்தில் சாஸ்த்ரீய இசையில் அமைந்த இந்தப் பாடல், முதல் முறை கேட்கும்போதே மனதைக் கவரக்கூடிய பாடல். இந்தப் பாடலை அந்தப் படத்தில் இரண்டு இடங்களில் பாடியிருப்பார் பவதாரிணி. ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம் போன்றோரும் இணைந்து பாடியிருந்தாலும் பவதாரிணியின் குரல் தனித்து ஒலிக்கும். தான் பாடிய பாடல்களிலேயே தனது தந்தை இளையராஜாவுக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று என பவதாரிணி இந்தப் பாடலைக் குறிப்பிட்டிருந்தார். 10. தாலியே தேவையில்லை 2006ல் வெளிவந்த தாமிரபரணி படத்தில் இடம்பெற்ற 'தாலியே தேவையில்லை' பாடல் ஒரு சுமாரான பாடல்தான். ஆனால், ஹரிஹரனுடன் இணைந்து ஒலித்த பவதாரிணியின் குரல் அந்தப் பாடலை ஒரு நல்ல உயரத்திற்கு எடுத்துச் சென்றது. இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. பாடல்களைத் தவிர, பல பாடல்களில் பவதாரிணியின் ஹம்மிங் கவனிக்கத்தக்கதாக இருந்தது. உதாரணமாக, காதலுக்கு மரியாதை படத்தில் 'தாலாட்ட வருவாளா.." பாடலிலும் "முத்தே முத்தமா.." பாடலிலும் "தென்றல் வரும் வழியில்" பாடலிலும் இவரது ஹம்மிங் கவனிக்க வைத்தது. உல்லாசம் படத்தில் வரும் முத்தே முத்தம்மா பாடலைப் பாடியவர் ஸ்வர்ணலதா. ஹம்மிங் மட்டும் பவதாரணி. பவதாரிணி தனது பெரும்பாலான பாடல்களை ஹரிஹரனுடன் இணைந்தோ, அருண்மொழியுடன் இணைந்தோதான் பாடியிருந்தார். மேலே சொன்ன பாடல்களைத் தவிர, அரவிந்தன் (1997) படத்தில் இடம்பெற்ற "காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்" பாடலும் தேடினேன் வந்தது (1997) "ஆல்ப்ஸ் மலை காற்றுவந்து நெஞ்சில் கூசுதே" பாடலும் கவனிக்கத்தக்க பாடல்களாக அமைந்தன. https://www.bbc.com/tamil/articles/c131l1m512zo
  5. கொலைக் குற்றவாளிக்கு நைட்ரஜனை செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றிய அமெரிக்கா பட மூலாதாரம்,WHNT/CBS 24 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் கொலைக் குற்றவாளி கென்னத் யூஜின் ஸ்மித்துக்கு நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக், 58 வயதான ஸ்மித் தனக்கு எதிரான மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளில் தோல்வியடைந்தார். 2022 ஆம் ஆண்டில், ஸ்மித்துக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றும் முயற்சி தோல்வியடைந்தது. மரண தண்டனை தகவல் மையத்தின்படி, உலகில் எங்கும் நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் நபர் ஸ்மித் ஆவார். முகமூடி மூலம் நைட்ரஜனை செலுத்தினால் அவர் வாந்தியில் மூச்சுத் திணறல் ஏற்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அது சித்திரவதைக்கு சமம் என்று ஐ.நா. தெரிவித்திருந்தது. இதுவரை பரிசோதனை செய்யப்படாத இந்த புதிய மரணதண்டனை முறை குறித்த எண்ணங்களால் நிம்மதியில்லாமல் தவிப்பதாக ஸ்மித் பிபிசியிடம் கூறியிருந்தார். https://www.bbc.com/tamil/articles/cmmg411lpymo
  6. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தங்க சுரங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. அந்த நாட்டில் தென்மேற்கில் கங்காபா மாவட்டத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். திடீரென தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து சிக்கி கொண்டனர். உடனே மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கத்தில் மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தேசிய புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியான கரீம் பெர்தே கூறும்போது, இந்த விபத்து ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க இந்த கைவினைஞர் சுரங்கத்துறையை அரசு ஒழுங்குப்படுத்தும் என்றார். ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய தங்க உற்பத்தியாளரான மாலியில் சுரங்க பணிகளில் ஈடுபடும் சிறிய தொழிலாளர்கள் மற்றும் முறை சாரா தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது கிடையாது என கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/289344
  7. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார் பட மூலாதாரம்,X ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பவதாரிணி அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு லங்கா மருத்துவமனைக்கு வந்தார் இளையராஜா இலங்கையில் அவர் பித்தப்பை புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். அது கடைசி நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக பிபிசியிடம் பேசிய திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று மாலை 5:20 மணியளவில் பவதாரிணி உயிரிழந்ததாகவும் அவரது உடலை நாளை சென்னை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கொழும்பு லங்கா மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். கொழும்பில் இசை நிகழ்ச்சிக்காக வருகை தந்துள்ள இளையராஜா, மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது கிடைத்தது. ராமன் அப்துல்லா, தாமிரபரணி, புதிய கீதை உள்ளிட்ட படங்களில் அவர் பாடியுள்ளார். பவதாரிணி பாடிய முக்கியமான பாடல்கள் பட மூலாதாரம்,X பவதாரிணி பல முக்கியமான பாடல்களைப் பாடியுள்ளார். பிரபுதேவா நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான ராசய்யா படத்தில் வரும் மஸ்தானா மஸ்தானா பாடல் மூலம் அவர் பாடகியாக அறிமுகமானார். எம்.குமரன் படத்தில் வரும் அய்யோ அய்யோ பாடல், தாமிரபரணி படத்தின் தாலியே தேவையில்ல பாடல் போன்ற ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார் பவதாரிணி. அதேபோல், காதலுக்கு மரியாதை படத்தில் வரும் என்னைத் தாலாட்ட வருவாளா, ஆயுத எழுத்து படத்தின் யாக்கைத் திரி, காக்க காக்க படத்தின் என்னைக் கொஞ்சம் மாற்றி போன்ற தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க பாடல்களை அவர் பாடியுள்ளார். இளையராஜா மட்டுமின்றி கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரது இசையிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ‘மித்ர் மை பிரெண்ட்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இந்தியில் ரேவதி இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி, சல்மான் கான் ஆகியோர் நடிப்பில் வெளியான ஃபிர் மிலெங்கே என்ற படத்திலும் இசையமைத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES 1991-ஆம் ஆண்டு இளையராஜா உருவாக்கிய ராஜாவின் ரமணமாலை என்ற இசைத் தொகுப்பில் ஆராவமுதே என்ற பாடலை பவதாரிணி பாடினார். அலெக்சாண்டர், கருவேலம் பூக்கள், காதலுக்கு மரியாதை, டைம், பாரதி, அழகி, பிரெண்ட்ஸ், ஒரு நாள் ஒரு கனவு, அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, தாமிரபரணி, நாளைய பொழுதும் உன்னோடு, உளியின் ஓசை, தனம், கோவா, மங்காத்தா, அனேகன் ஆகிய தமிழ்ப் படங்களில் இடம்பெற்ற பாடல்களை அவர் பாடியுள்ளார். தமிழில் அமிர்தம், இலக்கணம், மாயநதி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். பவதாரிணி, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவருக்கு இரங்கல் தெரிவித்து பின்னணிப் பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “எனக்குத் தெரிந்த நல்ல மனிதர்களில் பவதாரிணி இளையராஜாவும் ஒருவர். பத்திரமாகப் போய் வா, அன்புப் பெண்ணே!” என்று பதிவிட்டுள்ளார். மேலும், “இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் தைரியத்துடன் இருக்க நான் வேண்டிக்கொள்கிறேன். இது மிகவும் மனதை உடைக்கும் செய்தி” என்றும் குறிப்பிட்டுள்ளார். “பதவாரிணியின் குரலில் ஒரு குழந்தைத்தன்மை இருக்கும். அவரது குரல் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான குரல். இவ்வளவு இளம் வயதில் இப்படிப் பிரிந்து செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரது மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று தெரிவித்தார் இசையமைப்பாளர் தினா. பாடகி பவதாரிணியின் குரல் மிகவும் மென்மையானது, தனித்துவமானது என்று இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தனது இரங்கலில் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,X அவரது மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். “பின்னணிப் பாடகி பவதாரிணியின் மரைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிரது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று எல்.முருகன் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார். பவதாரிணியின் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் பவதாரிணியின் மறைவுச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார். “இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி, தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது,” என்று புகழாரம் சூட்டியுள்ளார். பட மூலாதாரம்,X மேலும், “இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும். தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானிக்கும் பவதாரிணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,X "இசைஞானி இளையராஜா அவர்களின் புதல்வியும் இசையமைப்பாளருமான பவதாரிணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மருத்துவர் அய்யா அவர்களின் விருப்பப்படி தயாரிக்கப்பட்ட இலக்கணம் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தவர் அவர். அவரை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/c3g3e0yxly2o
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரே வீடியோ மூலம் 2.79கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ள யூடியூபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் மிகவும் பிரபலமான யூட்யூபரான மிஸ்டர்.பீஸ்ட் எக்ஸ்(ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட ஒரே வீடியோ மூலம் 2.79கோடி ரூபாய் வருமானம் பெற்றிருப்பதாக கூறி உலகை ஆச்சரிய பட வைத்துள்ளார். முன்னதாக எக்ஸ் நிறுவனம் தங்களது விளம்பர வருமானத்தில் இருந்து சிறிய பகுதியையே பகிர்ந்து கொள்வதால் அந்த தளத்தில் வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் எந்த பலனும் இல்லை என்று கூறியிருந்தார் அவர். ஆனால், கடந்த வாரம் எக்ஸ் குறித்த தனது கருத்தை மாற்றி கொண்டார். காரணம் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பழைய வீடியோ ஒன்று இது வரை 16 கோடி பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டுள்ளது. 2022 அக்டோபரில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து அந்நிறுவனத்தை லாபமீட்டும் நிறுவனமாக மாற்ற பல்வேறு உத்திகளை செயல்படுத்தி வருகிறார் எலான் மஸ்க். அதில் உயர்நிலையில் உள்ள க்ரியேட்டர்ஸ்களுடன் விளம்பர வருவாயை பகிர்ந்து கொள்ளும் திட்டமும் அடங்கும். யூட்யூப் போன்ற இதர தளங்களும் இதை ஏற்கனவே செய்து வருகின்றன. ஆனால், எக்ஸ் தளத்தின் பயனாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் மஸ்க் இந்த திட்டத்தை செயல்படும் ஒன்றாக பார்க்கவில்லை. போலி செய்திகள் மற்றும் வெறுப்பு பேச்சு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக தொடர்ந்து விளம்பரதாரர்களிடம் மஸ்க் உரசல் போக்கை கடைப்பிடித்து வருவதால் தொடர்ந்து எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாயும் வீழ்ச்சி நிலையில்தான் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யூட்யூப் சேனலான ‘மிஸ்டர் பீஸ்ட்’ - க்கு 23 கோடியே 40 லட்சம் பின்தொடர்பவர்கள் (Subscribers) உள்ளனர். யார் இந்த மிஸ்டர் பீஸ்ட்? மிஸ்டர் பீஸ்ட்டின் உண்மையான பெயர் ஜிம்மி டொனால்ட்சன். இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் யூட்யூப் வழியாக மில்லியன்கணக்கான டாலர்களை சம்பாதித்து வருகிறார். அதே சமயம் அதில் ஒரு பகுதியை நன்கொடையாகவும் தருகிறார். இவரது பிரதான யூட்யூப் சேனலான ‘மிஸ்டர் பீஸ்ட்’ - க்கு 23 கோடியே 40 லட்சம் பின்தொடர்பவர்கள் (Subscribers) உள்ளனர். இவருக்கு மேலும் நான்கு சேனல்களும் உள்ளது. அதில் ‘மிஸ்டர் பீஸ்ட்’-க்கு 3 கோடியே 63 லட்சம், ‘பீஸ்ட் ரியாக்ட்ஸ்’ - க்கு ஒரு கோடியே 19 லட்சம், ‘மிஸ்டர் பீஸ்ட் கேமிங்’ சேனலுக்கு 4 கோடியே 14 லட்சம் மற்றும் ‘பீஸ்ட் பிலான்த்ரோபி’-க்கு 2 கோடியே 12 லட்சம் பின்தொடர்பவர்கள் வீதம் உள்ளனர். மேலும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 4 கோடியே 93 லட்சம் மற்றும் எக்ஸ் தளத்தில் 2 கோடியே 71 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். எக்ஸ் தளத்தில் இவரது பதிவுகளை 100 கோடி பார்வையாளர்கள் பார்த்தாலும் , அவருக்கு சரியாக வருமானம் கிடைப்பதில்லை என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார் அவர். ஆனால் பின்னதாக அவரது வீடியோக்களில் ஒன்று எக்ஸ் தளத்தில் எவ்வளவு சம்பாதிக்கும் என்று பார்க்க ஆர்வமாக உள்ளதாக கூறி ஒரு வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார். அதன் பின்பு அந்த வீடியோவின் பார்வையாளர்கள் மற்றும் வருவாய் குறித்து பதிவிடப் போவதாக தெரிவித்திருந்தார் அவர். அப்படி அவர் வெளியிட்ட உண்மைதான் உலகையே உலுக்கியுள்ளது. அந்த வீடியோவால் தனக்கு எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது என்பதை அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். அவரின் பதிவில். “விளம்பரதாரர்கள் இந்த வீடியோ மக்களின் கவனத்தை ஈர்ப்பதை பார்த்திருக்க வேண்டும். அதற்கு பின் இதில் முதலீடு செய்துள்ளார்கள். அதனாலேயே நான் இவ்வளவு சம்பாதித்திருக்கலாம்” என்றும் எழுதியுள்ளார். மேலும் அவர் ஏற்கெனவே செய்தது போல, இந்த வருவாயையும் 10 அறிமுகமில்லாத நபர்களுக்கு பிரித்து கொடுப்பதாக கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இன்ஃப்ளியுன்ஸர்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இணைய பிரபலங்கள் இணையம் வழியாக அதிக பணம் சம்பாதிக்கின்றனர். இதுவே மிஸ்டர் பீஸ்ட்டாக இல்லாமல், வேறு யாராவதாக இருந்திருந்தால் இவ்வளவு வருவாய் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை நிபுணர்களும் ஒப்புக்கொள்கின்றனர். “2.79 கோடி வருவாய் பெற்றுள்ளதாக அவர் கூறுகிறார். வீடியோவுக்கு இந்த வருவாய் நல்லதுதான். ஆனால், இந்தளவுக்கு வருவாய் பெறுவதற்கு, உங்கள் பதிவுக்கு பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களைக் (Traffic) கொண்டிருக்க வேண்டும்” என்று கூறுகிறார் W மீடியாவின் கார்ஸ்டென் வைட். இன்ஃப்ளூயன்ஸர்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இணைய பிரபலங்கள் இணையம் வழியாக அதிக பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால், அது அவர்களின் பிரபலத்தன்மையை பொறுத்தது. அனைவராலும் இந்தளவு பணத்தை சம்பாதிக்க முடியாது. அவர்களின் வருவாய் குறித்த தகவல் பொதுவெளியிலும் கூட கிடைப்பதில்லை. இணைய நிறுவனங்களும் தனித்துவமான கன்டன்டுகளுக்காக இவர்களுக்கு சிறப்பு கட்டணம் வழங்குவதாக நம்பப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வீடியோக்களை உருவாக்க கோடிகளில் பணம் செலவழிப்பதாக கூறுகிறார் அவர். இந்த வருவாயால் ஏற்படும் தாக்கம் என்ன? மிஸ்டர் பீஸ்ட் ஓர் ஆண்டில் 54 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 440 கோடி ரூபாய்) வருவாய் ஈட்டியுள்ளதாக நவம்பர் 2022இல் செய்தி வெளியிட்டது போர்ப்ஸ் இதழ். அதிலிருந்து மிஸ்டர் பீஸ்ட்டை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பெருவாரியாக அதிகரித்துள்ளது. தற்போது அவரது ஆண்டு வருமானம் 233 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இவர் மிகவும் பிரபலமாக இருப்பதால் பல நிறுவனங்களும் இவருடன் இணைந்து பணியாற்றுகின்றன. தான் வீடியோக்களை உருவாக்க கோடிகளில் பணம் செலவழிப்பதாக கூறுகிறார் அவர். இவர் இந்த முறை அவர் பெரிய ஸ்ட்ரீமிங் தளத்தோடு முக்கியமான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட போவதாகவும் கூறப்படுகிறது. எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ, செப்டம்பர் 2023-லேயே யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் வெவ்வேறு கார்களின் விலை குறித்து அவர் பேசியுள்ளார். தற்போது வரை, அந்த வீடியோவை யூட்யூபில் 22 கோடி பேர் பார்த்துள்ளனர். இவரது பெரும் பகுதி வருமானம் இது போன்ற யூட்யூப் வீடியோக்கள் வழியாகவே வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதிய கன்டென்ட்டுகள் மட்டுமே எக்ஸ் தளத்தில் வருவாய் ஈட்ட முடியும். இது போன்ற இன்ஃப்ளியுன்ஸர்களின் வருமானத்தை மதிப்பிடும் தளமான Vierism, யூடியூபில் பதிவிடப்படும் மிஸ்டர் பீஸ்ட்டின் ஒரு வீடியோ ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வரை வருவாய் ஈட்டுவதாக மதிப்பிட்டுள்ளது. ஆனால், புதிய கன்டென்ட்டுகள் மட்டுமே எக்ஸ் தளத்தில் வருவாய் ஈட்ட முடியும். "எதிர்காலத்தில் எக்ஸ் தளத்தின் வருவாய் எங்கு செல்கிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமானது" என்று கூறுகிறார் Vierism தளத்தின் நிறுவனர் ஜென்னி சாய். தற்போது வரையில் எக்ஸ் தளத்தில் உள்ள 'இம்ப்ரெஷன்' என்றால் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறுகிறார் நெபுலாவின் தலைமை நிர்வாகி டேவ் விஸ்குல். நெபுலா என்பது உலகின் பிரீமியம் ஸ்ட்ரீமிங் தளமாகும். ஆனால், தற்போது இன்ஃப்ளியுன்ஸர்கள் எக்ஸ் தளத்தையும் முக்கியமானதாக எடுத்து கொள்ள முடியும் என்கிறார் அவர். “நீங்கள் ஏற்கனவே யூட்யூபுக்காக வீடியோக்களை உருவாக்குகிறீர்கள் என்றால், தற்போது அதை எக்ஸ் தளத்திலும் பதிவேற்ற முடியும். அதில் என்ன ஆகி விடப்போகிறது?” என்று கேட்கிறார் டேவ் விஸ்குல். ஆனால், இணையத்தில் பிரபலமாக இல்லாதவர்கள் பெரும்பணம் ஈட்டுவது எளிதல்ல என்றும் கூறுகின்றார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எலான் மஸ்க் ஆஷ்விட்ஸ் முகாமுக்கு பயணம் சென்றுள்ளார். பிபிசி தொழில்நுட்ப ஆசிரியர் ஜோய் க்ளீன்மேன் கூறுவது என்ன? இணையத்தில் உள்ள பெரும்பான்மையான க்ரியேட்டர்களால் மிஸ்டர் பீஸ்ட்டின் வருவாய்க்கு அருகில் கூட வர முடியாது. அவரை போல் உலகளவிலான ஊடகங்களின் வெளிச்சத்தையும் பெற முடியாது. தனது வருமானத்திற்கும் எக்ஸ் தளத்தில் உள்ள பயனர்களின் அனுபவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மிஸ்டர் பீஸ்ட்டே கூறுகிறார். ஆனால் இந்த எண்ணிக்கை எக்ஸ் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லிண்டா யாச்சரினோவை நிச்சயம் மகிழ்விக்கும். விளம்பர வணிக உலகில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக பயணித்த பிறகு கடந்த வருடம் எக்ஸ் தளத்தில் இணைந்தார் அவர். தனிப்பட்ட முறையில் எக்ஸ் தளத்தின் மீதான பிம்பத்துடன் அவர் போராட வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த தளத்திலும் விளம்பரங்கள் சிறப்பாக செயலாற்ற தொடங்கியதன் பிறகு அவர் உற்சாகமடைந்திருப்பார். யூத மக்களுக்கு எதிரான கன்டன்டுகளை எக்ஸ் தளம் எவ்வாறு கையாள்கிறது என்று உலகமே உற்றுநோக்கி கொண்டிருக்கும் சமயத்தில், கடந்த வாரம் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் ஆஷ்விட்ஸ் முகாமுக்கு பயணம் சென்றுள்ளார். இதுவே எக்ஸ் தளத்தின் முக்கியமான விளம்பரதாரர்கள் பலரும் கவலைப்படும் விஷயம். மேலும் மஸ்க் உடனடியாக சரி செய்ய வேண்டிய பிரச்னையும் கூட. சமீப காலமாகவே ஒரு பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனத்துடன் தனது நிகழ்ச்சிக்காக மிஸ்டர் பீஸ்ட் பேச்சுவார்த்தையில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அது மட்டும் உண்மையென்றால், தற்போது எக்ஸ் தளத்தில் அவர் செய்திருக்கும் இந்த சோதனை, அவருக்கு அதிகமான வருவாயை பெற்றுத்தர வாய்ப்புள்ளது. https://www.bbc.com/tamil/articles/c51v9v0270ro
  9. இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன. மறைந்த இராஜாங்க அமைச்சரின் பூதவுடல் இன்று மாலை 5.30 மணி வரை பொரளை ஜயரத்னவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இதேவேளை ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இறுதிச் சடங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இறக்கும் போது சனத் நிஷாந்தவிற்கு 48 வயது. https://thinakkural.lk/article/289377
  10. அதிசிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் காஃபீல்ட் சோபஸ் விருதை பெட் கமின்ஸ் வென்றெடுத்தார் 25 JAN, 2024 | 06:45 PM (நெவில் அன்தனி) வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீரருக்கான சேர் காஃபீல்ட் சோபஸ் விருதை அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கமின்ஸ் வென்றெடுத்தார். உற்சாகம் மற்றும் உத்வேகம் ஆகியவற்றுடன் கடந்த வருடம் முழுவதும் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்திய பெட் கமின்ஸ், தனது அணியை சிறப்பாக வழிநடத்தியிருந்தார். பெட் கமின்ஸின் தலைமையின் கீழ் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, தொடர்ந்து ஆஷஸ் தொடரைத் தக்கவைத்துக்கொண்டது. அத்துடன் நின்றுவிடாமல் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட்டில் தோல்வி அடையாத அணியாக சம்பியனாகி 6ஆவது தடவையாக உலக சம்பியன் பட்டத்தை சூடியிருந்தது. 2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பெட் கமின்ஸ் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் கிரிக்கெட் அரங்கில் அவுஸ்திரேலியா அணி உச்சத்தை எட்டியது. அவரது மிகத் திறமையான ஆளுமை, பொறுமை, கட்டுப்பாடு, சிறந்த பண்பு என்பன ஏனையவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தனது சக வீரர் ட்ரவிஸ் ஹெட், இந்திய வீரர்களான விராத் கோஹ்லி, ரவிந்த்ர ஜடேஜா ஆகியோரும் அதிசிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் பெட் கமின்ஸின் ஆட்டத் திறன், ஆளுமை, தலமைத்துவம் அனைத்தும் உயர்ந்திருந்தது. கடந்த வருடம் 24 போட்டிகளில் 422 ஓட்டங்ளைப் பெற்ற அவர் 59 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். அதிசிறந்த கிரிக்கெட் பருவ காலத்தைக் கொண்டிருந்த பெட் கமின்ஸ் அனைவரினதும் பாராட்டுதல்களை வென்றெடுத்தார். இந்தியாவுக்கு எதிராக கடந்த வருட ஆரம்பத்தில் நடைபெற்ற போடர் - காவஸ்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் தொடர், பெட் கமனின்ஸின் அவுஸ்திரேலியாவுக்கு சிறப்பாக அமையவில்லை. ஆனால், அதன் பின்னர் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சம்பியனான அவுஸ்திரேலியா, தொடர்ந்து ஆஷஸ் தொடரை தக்கவைத்துக்கொண்டது. வருட பிற்பகுதியில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட்டில் அனைத்துப் போட்டிகளிலும் அற்புதமாக விளையாடிய அவுஸ்திரேலியா, இறுதிப் போட்டியில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய பார்வையாளர்கள் முன்னிலையில் வெற்றிகொண்டு உலக சம்பியனானது. அந்த இறுதிப் போட்டியில் பெட் கமின்ஸ் அணியை வழிநடத்திய விதம், பிரயோகித்த வியூகங்கள், பந்துவீச்சாளர்களைக் கையாண்ட விதம் என்பன சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தன. ஆஷஸ் தொடரிலும் உலகக் கிண்ண கிரிக்கெட்டிலும் இக்கட்டான வேளைகளில் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவை வெற்றபெறச் செய்தவர் பெட் கமின்ஸ். வருட இறுதியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது இரண்டாவது 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்த பெட் கமின்ஸ் அந்தத் தொடரைக் கைப்பற்றி வருடத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்திருந்தார். https://www.virakesari.lk/article/174804
  11. 'யுக்திய' நடவடிக்கை : தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் உட்பட மூவர் காத்தான்குடியில் கைது 25 JAN, 2024 | 04:10 PM தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் உட்பட இருவர் யுக்திய போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 5 கிராம் 440 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, அதே பிரதேசத்தில் மற்றுமொருவர் 860 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் கைதாகியுள்ளார். தற்போது நாடு முழுவதும் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரையின் கீழ், 'யுக்திய' போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையிலேயே இந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் 2 கிராம் 960 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடி அமானுல்லா வீதியில் வைத்து 32 வயதுடைய இளைஞர் ஒருவரும், 2 கிராம் 480 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் புதிய காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து மற்றொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, கர்பலா பிரதேசத்தில் வைத்து 860 மில்லி கிராம் கேரள கஞ்சாவுடன் 48 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்க குறிப்பிட்டார். கைதான மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதான மூவரில் புதிய காத்தான்குடியை சேர்ந்த சந்தேக நபர் மட்டக்களப்பு நீதிமன்ற உத்தரவுக்கமைய, ஏழு நாட்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். ஏனைய இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/174786
  12. இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் காலமானார்! 25 JAN, 2024 | 09:27 PM இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக் குறைவு காரணமாக இன்று (25) இரவு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார். இளையராஜாவின் இசையில் பாரதி திரைப் படத்தில் 'மயில் போலப் பொண்ணு ஒன்னு' என்ற பாடலை பாடியதற்காக இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174813
  13. வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி. கிரிக்கெட் வீராங்கனையாக நெட் சிவர் ப்ரன்ட் 25 JAN, 2024 | 06:12 PM (நெவில் அன்தனி) வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீராங்கனைக்கான ரஷேல் ஹேஹோ ஃப்லின்ட் விருதை இங்கிலாந்து சகலதுறை வீராங்கனை நெட் சிவர் ப்றன்ட் இரண்டாவது தொடர்ச்சியான வருடமாக வென்றெடுத்துள்ளார். வருடம் முழுவதும் மிகத் திறமையாக விளையாடிய நெட் சிவர் ப்றன்ட், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் ஆஷஸ் தொடரில் (மூவகை கிரிக்கெட்) அபாரமாக துடுப்பெடுத்தாடியிருந்தார். இந்த விருதுக்கு சமரி அத்தபத்து, அவுஸ்திரேலிய வீராங்கனைகளான ஏஷ்லி கார்ட்னர், பெத் மூனி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்களது ஆற்றல்களைவிட நெட் சிவர் ப்றன்டின் ஆற்றல்கள் அற்புதமாக இருந்தது. ஆறு மகளிர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 3 சதங்களுடன் 393 ஓட்டங்களைக் குவித்த நெட் சிவர் ப்றன்ட், 3 விக்கெட்களை வீழ்த்தினார். பத்து மகளிர் சர்வதேச ரி20 போட்டிகளில் 3 அரைச் சதங்களுடன் 364 ஓட்டங்களைப் பெற்ற அவர், விக்கெட்களைக் கைப்பற்றினார். இரண்டு மகளிர் டெஸ்ட் போட்டிகளில் 137 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். இதற்கு அமைய மூவகை மகளிர் கிரிக்கெட் அரங்கில் 18 போட்டிகளில் மொத்தமாக 894 ஓட்டங்களைப் பெற்ற நெட் சிவர் ப்றன்ட் 9 விக்கெட்களைக் கைப்பற்றினார். வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை அவுஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா வென்றெடுத்துள்ளார். அவர் கடந்த வருடம் 13 டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள், 6 அரைச் சதங்களுடன் 1210 ஓட்டங்களை மொத்தமாக குவித்தார். சிட்னியில் கடந்த வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 195 ஓட்டங்களைக் குவித்து 2023 கிரிக்கெட் பருவகாலத்தை சிறப்பாக ஆரம்பித்தார். இந்த எண்ணிக்கையே டெஸ்ட் கிரிக்கெட் இன்னிங்ஸ் ஒன்றில் அவரது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும். https://www.virakesari.lk/article/174802
  14. இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்துவுக்கு ஐசிசியின் உயரிய விருது 25 JAN, 2024 | 03:14 PM (நெவில் அன்தனி) இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து வருடத்தின் அதிசிறந்த ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றெடுத்துள்ளார். ஐசிசி மகளிர் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணி, ஐசிசி மகளிர் ரி20 கிரிக்கெட் அணி ஆகியவற்றின் தலைவியாக ஐசிசியினால் பெயரிடப்பட்டிருந்த அத்தபத்து, அதிசிறந்த ஐசிசி மகளிர் சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு சற்று நேரத்திற்கு முன்னர் உரித்தானார். கடந்த வருடம் 8 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2 சதங்கள், ஒரு அரைச் சதம் உட்பட 415 ஓட்டங்களைக் குவித்திருந்தார். https://www.virakesari.lk/article/174780
  15. 25 JAN, 2024 | 11:03 AM இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவித்திடவிரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் 22-1-2024 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது என்றும் இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால் இதில் ஒன்றிய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள் தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிப்பதோடு மீனவ மக்களிடையே அச்சத்தையும் நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கியுள்ளதாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவச் சமூகங்களின் கலாச்சார மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும் முதலமைச்சர் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர் அவர்கள் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவினை அமைப்பதன் மூலம் இது சாத்தியமாகும் என்றும் தெரிவித்துள்ளார். அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தவிர்க்கவும் இந்திய மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஏதுவாகவும் உரிய தூதரக வழிமுறைகளை மேற்கொண்டு கூட்டு நடவடிக்கைக் குழுவினை கூட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைந்து விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/174763
  16. Published By: PRIYATHARSHAN 25 JAN, 2024 | 01:45 PM பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசினால் சபைக்கு சமர்ப்பித்திருந்த நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது. இது குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “சிவில் சமூகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களின் கோரிக்கைகளை உள்ளடக்காமல் பாராளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்ட இலங்கையின் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் சாத்தியமான தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. ஜனநாயக விழுமியங்களை ஆபத்தில் தள்ளுவதுடன் தெளிவற்ற மற்றும் மிகையான கடுமையான சட்டங்கள் முதலீடு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு இடையூறாக அமையும் என்பதுடன் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்குமாறும், எந்தவொரு சட்டமும் மக்களின் குரல்களை நசுக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் இலங்கையை அமெரிக்கா வலியுறுத்துகிறது என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  17. அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் அதிபர் வேட்பாளர் ஆகிறாரா? - அஞ்சும் நட்பு நாடுகள் பட மூலாதாரம்,REUTERS 24 ஜனவரி 2024 அமெரிக்காவின் அடுத்த அதிபர் வேட்பாளருக்கான போட்டியில், குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்குள் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். நிக்கி ஹேலியுடன் நேரடியாகப் போட்டியிடும் அவர், இன்று (ஜனவரி 23) நியூ ஹேம்ப்ஷைர் மாகாணத்தில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தேர்வுப் போட்டியில் 55% வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இதனால் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டிரம்ப் தான் என்பது முடிவாகி விட்டாது. இந்த முடிவுகள் வெளியானபோது உரையாற்றிய டிரம்ப், ஹேலி மற்றும் முன்னர் அவரது போட்டியாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி ஆகியோரைக் கடுமையாக விமர்சித்தார். ஆனால் டிரம்பை எதிர்த்துப் போட்டியிடும் நிக்கி ஹேலி, தான் போட்டியிலிருந்து விலகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார். இதையடுத்து டிரம்ப் ஹேலியை ‘மோசடிக்காரர்’ என்று விமர்சித்தார். நவம்பர் பொதுத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான அதிபர் ஜோ பைடனுடன் மீண்டும் போட்டியிடுவது இப்போது மிகவும் உறுதியாகத் தெரிகிறது. நியூ ஹாம்ப்ஷயரில் டிரம்பின் வெற்றி சமீபத்திய கருத்துக் கணிப்புகளால் கணிக்கப்பட்ட 20-புள்ளி வித்தியாசத்துடன் பொருந்தவில்லை என்றாலும், வேட்பாளர் போட்டியின் தற்போதைய நிலை மாறியுள்ளது. ஒவ்வொரு பகுதியில் நடக்கும் வாக்கெடுப்பிலும், ஒரு உண்மை தெளிவாகிறது. பல மாதங்களாக கருத்துக் கணிப்புகள் காட்டுவது போல், குடியரசுக் கட்சி இன்னும் டொனால்ட் டிரம்பின் கட்சிதான். பட மூலாதாரம்,FULTON COUNTY SHERIFF'S OFFICE படக்குறிப்பு, 2020ஆம் ஆண்டின் தேர்தலைக் கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் கடந்த ஆணடு ஆகஸ்ட் மாதம் அவர் ஜார்ஜியா மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். அரசியல் வீழ்ச்சியிலிருந்து மீண்டு வந்த டிரம்ப் கடந்த சில ஆண்டுகளாகவே பல சர்ச்சைகளிலும் வழக்குகளிலும் டொனால்ட் டிரம்ப் சிக்கினார். அவரது அரசியல் வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்டதாகவும் பலர் நினைத்தனர். கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய கலவரம் அமெரிக்காவையே அதிரவைத்தது. கடந்த 2020ஆம் ஆண்டின் தேர்தலைக் கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் கடந்த ஆணடு ஆகஸ்ட் மாதம் அவர் ஜார்ஜியாவில் கைது செய்யப்பட்டார். அதோடு சேர்த்து அவர் அப்போது வெவ்வேறு வழக்குகளுக்காக நான்கு முறை கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் இவை அனைத்தையும் தாண்டி தற்போது அதிபர் வேட்பாளர் போட்டியில் முன்னிலை வகித்து வருகிறார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய கலவரம் அமெரிக்காவையே அதிர வைத்தது. இது எப்படி சாத்தியமானது? இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை என்கிறார் டிரம்பின் பட்ஜெட் இயக்குநராகவும், அவரது ஆட்சியில் வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாகவும் இருந்த மிக் முல்வானே. ஓர் ஆண்டுக்கு முன்பு வரை டிரம்ப் மீண்டும் அரசியல் களத்தில் முன்னேற்றம் காண்பார் என்பது சந்தேகமாகவே இருந்தது, என்கிறார் அவர். “டிரம்ப் தனக்கு எதிராக நடந்த குற்ற விசாரணைகளையே தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டார்,” என்கிறார் முல்வானே. “பைடன் அரசாங்கம் அரசியல் எதிரிகளை வேட்டையாடுவது போல இதைச் சித்தரித்தார். இதை வைத்து வாக்காளர்களிடம் ஒரு செய்தியைச் சொன்னார். ‘எனக்கு நடப்பதைப் பாருங்கள். எனக்கே இந்த நிலைமை என்றால், உங்கள் நிலைமையை யோசித்துப் பாருங்கள். எனக்கு வாக்களித்தால் உங்களுக்கு இது நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார் அவர்,” என்று முல்வானே பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில் கூறினார். அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல் ஏன் முக்கியமானது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவின் பல நட்பு நாடுகள், டிரம்பின் மறுபிரவேசத்தைக் கண்டு மிகவும் பயப்படுகிறார்கள். அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலை அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே கூர்ந்து கவனிக்கிறது. அமெரிக்கா தற்போது யுக்ரேன், காஸா ஆகிய இரண்டு போர்களில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், அமெரிக்க-சீனா உறவுகள் மோசமடைந்து, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளும் பேசுபொருளாக மாறியிருக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சி செய்கிறார்கள். மேலும் ஏமனில் ஹூத்திகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட உலகின் எல்லாப் பகுதியிலும் அமெரிக்கத் தலைமை ஏதோவொரு வகையில் ஆதிக்கம் செலுத்துகிறது. டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவிக்கு வருவதற்கான வாய்ப்பும், அவரது ‘முதலில் அமெரிக்கா’ வெளியுறவுக் கொள்கையும், ஏற்கெனவே கொந்தளிப்பான இந்தச் சூழ்நிலையை மேலும் நிச்சயமற்றதாக ஆக்குகிறது. சில நாடுகள் அவர் மீண்டும் வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. ஆனால் அமெரிக்காவின் பல நட்பு நாடுகள், டிரம்பின் மறுபிரவேசத்தைக் கண்டு மிகவும் பயப்படுகிறார்கள். அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? இந்த ஆண்டு நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் சிறப்பாக நடந்து வருகிறது. இது ஒன்பது குடியரசுக் கட்சியினர், நான்கு ஜனநாயகக் கட்சியினர், இரண்டு சுயேச்சைகள் என 15 வேட்பாளர்களுடன் தொடங்கியது. இரண்டு பிரதான கட்சிகளும் ஒரு அதிபர் வேட்பாளர், ஒரு தொடர் மாநில ப்ரைமரிஸ்(primaries) மற்றும் காக்கஸ்களை(Caucuses) நடத்துவதன் மூலம் பரிந்துரைக்கின்றன. இதில், கட்சிகளுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. செயல்முறையும் ஒரு மாகாணத்திற்கும் மற்றொரு மாகாணத்திற்கும் மாறுபடும். மார்ச் 3ஆம் தேதி "சூப்பர் செவ்வாய்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அந்த நாளில் 12 மாகாணங்கள் தங்கள் முதன்மைப் போட்டிகளை நடத்தும். அதிபர் பைடன் இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தார். சில நீண்ட சவால்கள் இருந்தபோதிலும் - ஜனநாயகக் கட்சியின் வேட்புமனுவை எளிதாக வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுக் கட்சியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் இரண்டு மாகாணப் போட்டிகளிலும் வெற்றி பெற்றார், மேலும் அவர் ஏற்கெனவே வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் எனத் தெரிகிறது. முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் மருமகன் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் உட்பட சில சுயேட்சை வேட்பாளர்களும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/cxx5k87yy3eo
  18. போதைப்பொருளை நுகர்ந்த இளைஞன் உயிரிழப்பு - யாழில் சம்பவம்! 25 JAN, 2024 | 02:00 PM யாழ்ப்பாணம் நகரை அண்டிய கலட்டி பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (24) சடலமாக மீட்கப்பட்டார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , உடற்கூற்று பரிசோதனையில் இளைஞன் போதைப்பொருளை அதிக அளவு நுகர்ந்தமை கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பகுதியில் இளைஞன் ஒருவர் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக பொலிசாரின் விசேட நடவடிக்கைக்கான "யுக்திய" நடவடிக்கை யாழ்ப்பாணத்திலும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலையே போதைப்பொருள் பாவனையால் குறித்த இரு மரணங்களும் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174772
  19. 25 JAN, 2024 | 01:44 PM யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நடைபவனி நேற்று (24) காலை திருநெல்வேலி சந்தி முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் வரை இடம்பெற்றது. வட மாகாண சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடைபவனி திருநெல்வேலி சந்தியில் ஆரம்பமாகி, பலாலி வீதி வழியாக பரமேஸ்வரா சந்தியினை அடைந்து, அங்கிருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலை அடைந்தது. இந்த விழிப்புணர்வு நடைபவனியில் வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன், நல்லூர் பிரதேச செயலாளர் யசோதா உதயகுமார், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி, கோப்பாய் பொலிஸார், சுகாதார பரிசோதர்கள், மருத்துவ தாதியர், யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தனியார் கல்வி நிறுவன மாணவர்கள், நல்லூர் பிரதேச சபையினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது டெங்கு நோய் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன. அத்துடன், பொது சுகாதார பரிசோதகர்களால் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. https://www.virakesari.lk/article/174769
  20. ஒரு வீரருக்கு இந்திய விசா தாமதமானதால் டெஸ்டையே புறக்கணிக்க இங்கிலாந்து தயாரானதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு இந்திய விசா கிடைப்பதில் தாமதம் 55 நிமிடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தின் புதிய சுழற்பந்து வீச்சாளரான சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக எழுந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த 20 வயதான, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் தற்போது இந்திய விசாவைப் பெற்றுள்ளார். அவர் இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு வந்து இங்கிலாந்து அணியுடன் இணைவார். எனினும், அவர் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாட முடியாது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி, அபுதாபியில் நடைபெற்ற பயிற்சி போட்டிகளில் பங்கேற்று ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் வந்தபோது, சோயப் பஷீர் மட்டும் அபுதாபியில் இருந்தார். செவ்வாய்க்கிழமை அன்று, பஷீர் இங்கிலாந்து சென்றதாக தெரியவந்தது. இதையடுத்து, புதன்கிழமை அவருக்கு இந்திய விசா கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. படக்குறிப்பு, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் விளையாட திடீரென தேர்வு செய்யப்பட்டார் ஷோயப் பஷீர் யார் இந்த ஷோயப் பஷீர்? உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சோமர்செட் அணிக்காக விளையாடும் சுழற்பந்து வீச்சாளரான ஷோயப் பஷீர், இங்கிலாந்தின் சர்ரேவில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தார். அவர் இதுவரை ஆறு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் விளையாட திடீரென தேர்வு செய்யப்பட்டார். இதில் வாய்ப்பு கிடைத்தால், அவர் தனது முதல் சர்வதேச போட்டியை இந்தியாவில் விளையாடுவார். சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைத்ததற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES "இந்த விவகாரம் இப்போது தீர்க்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று அவ்வாரியம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. "சோயபிற்கு விசா கிடைத்துவிட்டது, அவர் இந்த வார இறுதியில் இந்தியா சென்று அணியில் சேருவார்". எனினும், வியாழக்கிழமை ஐதராபாத்தில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் பஷீர் விளையாடும் வாய்ப்பு முடிந்துவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து குடிமக்கள் இந்தியாவில் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று தனது அரசாங்கம் எதிர்பார்க்கிறது இந்தியா, இங்கிலாந்து அரசுகள் கூறுவது என்ன? பஷீருக்கு லண்டனில் விசா வழங்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் அவர், “இந்திய விசா வழங்குவது தொடர்பாக சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிகள் இந்த வழக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது" என்றார். "இங்கிலாந்து குடிமக்கள் இந்தியாவில் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று தனது அரசாங்கம் எதிர்பார்க்கிறது" என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர், செவ்வாய்கிழமையன்று கூறியிருந்தார். மேலும், “இதுகுறித்த விவரங்களைப் பற்றி பேச முடியாது. ஆனால் இந்திய தூதரகத்திடம் இதுபோன்ற பிரச்சினைகளை பல முறை எழுப்பியுள்ளோம்" என்று இங்கிலாந்து செய்தி தொடர்பாளர் கூறினார். அந்த அறிக்கையில், “பிரிட்டிஷ் குடிமக்களுக்கான விசா வழங்குவதில் இந்தியா எப்போதும் நேர்மையை கடைபிடிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பஷீரின் பங்களிப்பு இல்லாமல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட வாய்ப்பில்லை முதல் டெஸ்டை புறக்கணிக்க இங்கிலாந்து தயாரானதா? கடந்த புதன்கிழமை, பஷீருக்கு விசா கிடைக்கவில்லை என்ற செய்தி வந்தபோது, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், "பஷீரின் பங்களிப்பு இல்லாமல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட வாய்ப்பில்லை" என்றும் "போட்டி புறக்கணிக்கப்படும்" என்றார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்கும் யோசனையை அணிக்கு முன்வைத்ததாக அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் அது சர்ச்சையாக மாறியது. “ஒரு தலைவராக, ஒரு கேப்டனாக, குழு உறுப்பினர்கள் இவ்வாறு பாதிக்கப்படும் போது, நீங்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவீர்கள், நான் அவருக்காக (பஷீர்) வருத்தப்படுகிறேன்", என்று தெரிவித்தார் பென் ஸ்டோக்ஸ். அதே நேரத்தில், பஷீருக்கு விசா கிடைக்காதது குறித்த கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும் வருத்தம் தெரிவித்தார். அவர், "பஷீருக்காக நான் வருந்துகிறேன். அவர் இங்கிலாந்து அணியுடன் முதல் முறையாக இந்தியாவுக்கு வருகிறார். இது யாருக்கும் எளிதானது அல்ல" என்றார். "துரதிர்ஷ்டவசமாக இது பற்றிய கூடுதல் தகவல்களை வழங்க நான் விசா அலுவலகம் இல்லை. அவர் விரைவில் நம் நாட்டிற்கு வந்து, கிரிக்கெட் விளையாடுவார் என்று நம்புகிறேன்" என்றார் ரோகித் சர்மா. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டது. பாகிஸ்தானிய வீரர்களுக்கு விசாவில் சிக்கல் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நெடுங்காலமாக இருக்கும் பதற்றம் விளையாட்டுத் துறையையும் பாதித்துள்ளது. பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர், இந்தியா செல்வதில் சிரமப்படுவது இது முதல் முறையல்ல. ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா பாகிஸ்தானில் பிறந்தார். கடந்த ஆண்டு அவர் டெஸ்ட் போட்டி சுற்றுப்பயணத்திற்காக இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு, இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பங்கேற்க வரும் பாகிஸ்தான் அணி வீரர்கள் அனைவரும் விசா பெறுவதில் இதுபோன்ற பிரச்னைகளைச் சந்தித்தார்கள். டெஸ்ட் போட்டிகளுக்கான பிபிசியின் சிறப்பு வர்ணனையாளரான ஆதிப் நவாஸும் உலகக்கோப்பைக்காக இந்திய விசா பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவரது குடும்பம் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவரால் இந்தியா செல்ல முடியவில்லை. இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அகமது பாகிஸ்தானை வம்சாவளியை சேர்ந்தவர். கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு அவருக்கு விசா கிடைத்ததால், அவர் உலகக்கோப்பை போட்டியில் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டார். https://www.bbc.com/tamil/articles/cx8jn34zp1yo
  21. 44 ஆண்டுகளுக்கு பிறகு உல்ஃபா பிரிவினைவாத அமைப்பு கலைப்பு 25 JAN, 2024 | 10:50 AM குவாஹாட்டி: இந்தியாவின் அசாமை தளமாக கொண்டஆயுதம் ஏந்திய பிரிவினைவாத அமைப்பான உல்ஃபா உருவான 44 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முறைப்படி கலைக்கப்பட்டது. இந்த அமைப்பினர் தங்கள் ஆயுதங்களை இம்மாதம் அரசிடம் ஒப்படைக்க உள்ளனர். இறையாண்மை கொண்ட அசாமை உருவாக்கும் நோக்குடன் உல்ஃபா (அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி) அமைப்பு கடந்த 1979-ம்ஆண்டு வடக்கு அசாமின் சிவசாகரில் உருவானது. ஆயுதம் ஏந்திய இந்த பிரிவினைவாத அமைப்புஇ தொடர்ந்து அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வந்தது. இதனால் கடந்த 1990-ல் இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து உல்ஃபா அமைப்புக்கும் மத்திய அரசுக்கும் இடையேகடந்த 12 ஆண்டுகளாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை. நடைபெற்று வந்தது. இந்த பலனாக அசாம் மற்றும் மத்திய அரசுடன் இந்த அமைப்பு கடந்த டிசம்பர் 29-ம்தேதி முத்தரப்பு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. வன்முறையை கைவிடவும் தேசிய நீரோட்டத்தில் இணையவும் அந்த அமைப்பு ஒப்புக்கொண்டது. இந்நிலையில் இந்த அமைப்பின் கடைசி பொதுக்குழு கூட்டம் சிபாஜர் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முத்தரப்பு அமைதி ஒப்பந்தம் அடிப்படையில் உல்ஃபா அமைப்பை கலைப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து உல்ஃபா பொதுச் செயலாளர் அனுப் சேத்தியா நேற்று கூறும்போது “எங்கள் அமைப்பின் 9 முகாம்களை சேர்ந்த 900 உறுப்பினர்களின் கூட்டம் மத்திய அசாமின் மங்கல்டோய் முகாமில் நடைபெற்றது. இதில்அமைப்பை கலைக்கும் முடிவுஅங்கீகரிக்கப்பட்டது. முகாம்கள்இருந்த நிலத்தை விவசாயத்துக்காக எங்கள் உறுப்பினர்களுக்கு அசாம் அரசு வழங்க வேண்டும். முகாம்களில் உள்ள ஆயுதங்கள் இம்மாதம் நடைபெறும் விழாவில்அரசிடம் முறைப்படி ஒப்படைக்கப்படும். அசாம் விகாஷ் மன்ச்சா என்ற புதிய சமூக அமைப்பு உருவாக்கப்படும். விருப்பமுள்ள எங்கள் உறுப்பினர்கள் இதில் சேரலாம். வளர்ச்சித் திட்டங்களின் பலன்களை பெறவும் தன்னிறைவு அடையவும் பொதுவான தளமாக இது இருக்கும்” என்றார். 2011 பிப்ரவரியில் உல்ஃபா இரண்டு குழுக்களாக பிரிந்தது.அரபிந்த ராஜ்கோவா தலைமையிலான குழு வன்முறையை கைவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. பரேஷ் பரூவா தலைமையிலான குழு பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ‘உல்ஃபா இன்டிபென்டன்ட்’ என்ற பெயரில் செயல்பட முடிவு செய்தது. மியான்மர் மற்றும் வடகிழக்கின் சில பகுதிகளில் முகாமிட்டுள்ள இக்குழுவில் 200 உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/174760
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏமனின் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சௌதி தலைமையிலான கூட்டணியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராணுவம் ஒரு அங்கமாக உள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், நவல் அல்-மகாஃபி பதவி, பிபிசி நியூஸ், அரபு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஏமனில் அரசியல் படுகொலைகளைச் செய்யும் நபர்களுக்கு நிதியளித்துள்ளது. இது அரசாங்கத்திற்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை மேலும் மோசமாக்கியுள்ளது. இதுகுறித்த தகவல்கள் சமீபத்தில் செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து உலக நாடுகளுக்குத் தெரியவந்துள்ளது. பிபிசி நடத்திய புலனாய்வின் மூலம் இந்தத் தகவல் அம்பலப்படுத்தப்பட்டது. ஏமனில் உள்ள எமிரேட்ஸ் அதிகாரிகளுக்கு அமெரிக்க கூலிப்படையினரால் வழங்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியானது, உள்ளூர் மக்களை கீழ்த்தரமான செயல்களைச் செய்யப் பயிற்றுவிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. இது அரசியல் படுகொலைகளின் கணிசமான அதிகரிப்புக்கு வழிவகுத்தது என்று ஒரு தகவலறிந்தவர் பிபிசி நியூஸ், அரபு புலனாய்வுக் குழுவிடம் தெரிவித்தார். அல்கொய்தா மற்றும் தெற்கு ஏமனில் செயல்படும் ஐ.எஸ். ஆகிய ஜிஹாதி குழுக்களை ஒழிப்பதே அமெரிக்கக் கூலிப்படைகளின் குறிக்கோளாக இருந்த போதிலும், ஹூத்திகள் மற்றும் பிற ஏமன் ஆயுதப் பிரிவுகளுக்கு எதிராகப் போரிடுவதற்காக அல்கொய்தாவின் முன்னாள் உறுப்பினர்களை எமிரேட்ஸ் உண்மையில் நியமித்துள்ளது என்பதையும் பிபிசி கண்டறிந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் பயங்கரவாதத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர்களின் கொலைகள் தொடர்பான பிபிசி விசாரணையில் உள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுககள் "பொய் மற்றும் ஆதாரமற்றவை" என்று கூறியுள்ளது. பட மூலாதாரம்,JACK GARLAND/BBC படக்குறிப்பு, வழக்கறிஞர் ஹுடா அல்-சராரி ஏமனில் மனித உரிமைகளுக்கு ஆதரவாக செய்த பணிக்கான பதிலடியாக 2019 இல் தனது மகனை இழந்தார். மூன்று வருட காலப்பகுதியில் ஏமனில் 100 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது மத்திய கிழக்கின் ஏழ்மையான நாட்டில் பல சர்வதேச சக்திகளை ஒருவருக்கொருவர் எதிர்த்து நிற்கும் கசப்பான உள் மோதலின் ஒரு கூறு மட்டுமே. இந்த சூழ்நிலைகள் ஏமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கம் நிரந்தரமாக திரும்புவதை ஊக்கப்படுத்தியுள்ளது. கப்பல்களைத் தாக்கி, செங்கடலில் வர்த்தகத்தை சீர்குலைப்பதற்காக சமீபத்தில் செய்திகளில் வந்த இரான் ஆதரவு ஹூத்திகளுக்கு இது மறைமுகமாக உதவியது என்று கூட ஒருவர் வாதிடலாம் . சமீபத்திய நாட்களில், அக்குழுவை "உலகளாவிய பயங்கரவாதிகள்" என்று மறுபெயரிடப் போவதாக அமெரிக்கா அறிவித்தது. ஏமனில் 2014 ஆம் ஆண்டு தொடங்கிய மோதலைப் பற்றி நான் செய்திகளை அளித்து வருகிறேன். சண்டையின் காரணமாக நாட்டின் வடபகுதியை ஹூத்திகளிடம் அரசு நேரிட்டது. அவர்கள் பல ஆண்டுகளாக மிகவும் திறமையான மற்றும் சிறந்த உபகரணங்களைப் பெற்றிருந்த நிலையில், அவர்களிடம் அரசு அதிகாரங்கள் சென்றடைந்தன. 2015 ஆம் ஆண்டில், அமெரிக்காவும் பிரிட்டனும் ஹூத்திகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு சௌதி அரேபியா தலைமையிலான பெரும்பாலான அரபு நாடுகளின் கூட்டணியை ஆதரித்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதில் ஒரு முக்கிய கூட்டாளியாக இருந்தது. நாடு கடத்தப்பட்ட ஏமன் அரசாங்கத்தை மீண்டும் நிறுவுதல் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் நோக்கத்துடன் அக்கூட்டணி ஏமனை ஆக்கிரமித்தது. நாட்டின் தென்பகுதியின் பாதுகாப்பு பொறுப்பு எமிரேட்ஸிடம் விடப்பட்டது என்பதுடன் பிராந்தியத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக அந்நாடு உருவெடுத்தது. அல்கொய்தா நீண்ட காலமாக தெற்கில் இருந்து தனது பிரதேசத்தை கைப்பற்றி வைத்துள்ளது. ஆனால் அதிக ஸ்திரத்தன்மைக்கு பதிலாக, எனது பூர்வீக நாடான ஏமனுக்கு நான் அடிக்கடி செல்லும் பயணங்களின் போது, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு பகுதிகளில் மர்மமான முறையில் கொலைகள் அதிகரித்ததை நான் கண்டேன். இதில் பாதிக்கப்பட்டவர்கள் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில்லாத ஏமன் குடிமக்களாக இருந்தனர். சர்வதேசச் சட்டத்தின் கீழ், உரிய நடைமுறையின்றி பொதுமக்களைக் கொல்வது சட்டத்திற்குப் புறம்பான, நீதித்துறைக்கு அப்பாற்பட்ட மரண தண்டனையாகக் கருதப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அதன் நட்பு நாடுகளின் முயற்சிகள் இருந்தபோதிலும், ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமனின் பெரும்பகுதியை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் ஏமன் கிளையான இஸ்லாத்தை சேர்ந்தவர்கள். இது ஒரு பிரபலமான சர்வதேச சுன்னி இஸ்லாமிய இயக்கமாகும். இது அமெரிக்காவால் ஒருபோதும் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்படவில்லை. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட பல அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு நாட்டின் அரச குடும்பம் அதன் அரசியல் செயல்பாடு மற்றும் தேர்தல்களுக்கான ஆதரவை அச்சுறுத்தலாகக் கருதுகிறது. முதல் கொலை தொடர்பாக கசிந்த ட்ரோன் காட்சிகள் இந்த மர்மமான மரணங்களை விசாரிக்க எனக்கு தொடக்கப் புள்ளியைக் கொடுத்தன. டிசம்பர் 2015 இல் பதிவு செய்யப்பட்ட ஒரு காட்சி, ஸ்பியர் ஆபரேஷன்ஸ் குரூப் என்ற அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்தின் உறுப்பினர்களுக்குக் கிடைத்தது. 2020 இல் லண்டன் உணவகத்தில் உள்ள படங்களில் காணப்பட்ட அறுவை சிகிச்சையின் பின்னணியில் இருந்த ஒருவரை நான் சந்தித்தேன். முன்னாள் கடற்படை சீல்ஸ் உறுப்பினரான ஐசக் கில்மோர், பின்னர் ஸ்பியரின் செயல்பாட்டு இயக்குநரானார். ஏமனில் படுகொலைகளை மேற்கொள்ள எமிரேட்ஸ் அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்டதாகக் கூறிய பல அமெரிக்கர்களில் ஒருவராக அவர் இருக்கிறார். கில்மோர் ஸ்பியருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) வழங்கிய "கொலை பட்டியலில்" உள்ளவர்களைப் பற்றி விவாதிக்க மறுத்துவிட்டார். அவருடைய முதல் பணியின் இலக்கைத் தவிர: முதல் இலக்காக 2015 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், தெற்கு துறைமுக நகரமான தற்காலிக தலைநகர் ஏடனில் இஸ்லாஹ்வின் தலைவராகவும் செயல்பட்ட அன்சாஃப் மாயோ தான் அவர். அமெரிக்க அதிகாரிகள் இஸ்லாஹ்வை ஒருபோதும் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தவில்லை என்பது குறித்து நான் அவரிடம் கேட்டபோது, அவர் கூறினார்: "நவீன மோதல்கள் துரதிர்ஷ்டவசமாக மிகவும் வெளிப்படையின்றி உள்ளன. இதை நாங்கள் ஏமனில் காண்கிறோம். ஒரு சிவிலியன் மற்றும் மதகுரு தலைவரை வேறொருவர் பயங்கரவாதியாகத் தான் அங்கே பார்க்க முடிகிறது." பட மூலாதாரம்,JACK GARLAND/BBC படக்குறிப்பு, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஐசக் கில்மோர், எமிரேட்ஸ் மற்றும் ஏமன் படைகளுக்கு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பயிற்சி அளித்ததாக பிபிசியிடம் ஒப்புக்கொண்டார். ஏமனில் இருந்த மற்றொரு ஸ்பியர் ஊழியரான டேல் காம்ஸ்டாக், கில்மோர் மற்றும் அவருடைய பணி 2016 இல் முடிவடைந்தது என்று கூறினார். இருப்பினும், தெற்கு ஏமனில் கொலைகள் தொடர்ந்தன. உண்மையில், மனித உரிமைகள் அமைப்பான ரிப்ரைவ் அளித்த தகவல்களின் படி, அவை அடிக்கடி நிகழ்ந்தன. 2015 மற்றும் 2018 க்கு இடையில் ஏமனில் நடத்தப்பட்ட 160 கொலைகளை குழு விசாரித்தது என்பதுடன் பெரும்பாலான கொலைகள் 2016 இல் நடந்ததாகக் கூறியது. 160 இறப்புகளில் 23 பேர் மட்டுமே பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் அக்குழு தெரிவித்தது. அனைத்து கொலைகளும் ஸ்பியர் பயன்படுத்திய அதே தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதையும் அவர்கள் கண்டறிந்தனர்: ஒரு கவனச்சிதறலாக ஐஈடி (IED) வெடிகுண்டை வெடிக்கச் செய்து, அதன் பின் துப்பாக்கி சூடு நடத்துவதே அந்த தந்திரமாக இருந்தது. ஏமன் மனித உரிமைச் செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான ஹுடா அல்-சராரியின் கூற்றுப்படி, மிக சமீபத்தில் கடந்த மாதம் இதே முறையைப் பயன்படுத்தி லாஜ் நகரில் ஒரு இமாம் கொல்லப்பட்ட போது அந்தத் தந்திரம் கண்கூடாகத் தெரிந்தது. கில்மோர், காம்ஸ்டாக் மற்றும் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத வேறு இரண்டு ஸ்பியர் கூலிப்படையினர் ஏமன் நாட்டின் ஏடனில் உள்ள இராணுவ தளத்தில் எமிரேட்ஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதில் ஸ்பியர் ஈடுபட்டதாகக் கூறினர். பெயர் வெளியிட விரும்பாத ஒரு பத்திரிகையாளரும் அத்தகைய பயிற்சி குறித்த காட்சிகளைப் பார்த்ததாகக் கூறினார். கூலிப்படையினர் மேலும் விரிவான விவரங்களைத் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் நேரடியாக பணிபுரிந்த மூத்த ஏமன் அதிகாரி ஒருவர் கூடுதல் தகவல்களை அளித்தார். அவர்களின் சுயவிவரத்தின் காரணமாக, கூலிப்படையினர் ஏமனில் கவனத்தை ஈர்த்ததால், அவர்களின் பணி எமிரேட்ஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் விதத்திற்கு மாறியது. "அவர்கள் உள்ளூர் ஏமன்களுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கினர்," என்று ஏமன் சீருடை அணிந்தவர் பிபிசியிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,JACK GARLAND/BBC படக்குறிப்பு, அல்-இஸ்லாஹ் குழுவின் தலைவரான அன்சாஃப் மாயோ, தாக்குதலுக்கு இலக்கான பின்னர் அவர் நாடுகடத்தப்பட்டார். விசாரணை முழுவதும், ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஏமன் நாட்டு சாட்சிகளையும் கலந்தாலோசித்து தகவல் உறுதிப்படுத்தப்பட்டன. எமிரேட்ஸ் படையினரின் பயிற்சியை நிறைவு செய்த பின்னர், பயங்கரவாதத்துடன் தொடர்பில்லாத நபர்களை கொலை செய்ததாகக் கூறிய இருவரும் அவர்களில் இருந்தனர். ஒரு மூத்த ஏமன் அதிகாரியை கொலை செய்வதற்கு ஈடாக, எமிரேட்ஸ் சிறையில் இருந்து தன்னை விடுவிக்க முன்வந்ததாகவும், ஆனால் அதைத் தான் ஏற்கவில்லை என்றும் ஒரு நபர் கூறினார். ஏமனியர்கள் கொலைகளைச் செய்ததால், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்று அதைப் பற்றி விசாரிப்பது மிகவும் சவாலானதாக மாறியது. 2017 ஆம் ஆண்டில், எமிரேட்ஸ் ஏமனில் ஒரு துணை ராணுவப் படையை தெற்கு இடைநிலை கவுன்சில் (STC) பகுதியில் உருவாக்க உதவியது. அப்படை, நாட்டின் தெற்கு பகுதியில் ஆயுதக் குழுக்களின் வலையமைப்பை இயக்கும் ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். இந்த படை ஏமன் அரசில் இருந்து சுயாதீனமாக இயங்கியது என்பதுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து உத்தரவுகளை மட்டுமே பெற்றது. போராளிகள் சுறுசுறுப்பான முன்னணியில் போராடுவதற்கு மட்டும் பயிற்சியளிக்கப்படவில்லை. குறிப்பாக ஒரு குழு, பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு, படுகொலைகளை நடத்துவதற்கு பயிற்சி பெற்றதாக, தகவலறிந்தவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் வணிகக் கப்பல்களுக்கு எதிராக நடத்திய தொடர் தாக்குதல்களால் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளனர். இப்போது சதர்ன் ட்ரான்சிஸனல் கவுன்சில் பகுதியில் செயல்படும் துணை ராணுவ படையில் பணிபுரியும் முன்னாள் அல் கொய்தா உறுப்பினர்களின் 11 பெயர்களைக் கொண்ட ஆவணத்தை, அந்தத் தகவல் அளித்தவர் எங்களுக்கு அனுப்பியுள்ளார். அவர்களில் சிலரின் அடையாளங்களை நாங்கள் சரிபார்க்க முடிந்தது. புலன் விசாரணையின் போது, நாசர் அல்-ஷிபாவின் பெயரையும் பிபிசி கண்டுபிடித்தது. அவர் ஒரு காலத்தில் அல்கொய்தாவின் உயர் பதவியில் இருந்தவர் என்பதுடன் பயங்கரவாதத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பின்னர் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 17 மாலுமிகளைக் கொன்ற அமெரிக்க போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கோல் மீதான தாக்குதலில் அல்-ஷிபாவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக நாங்கள் பேசிய ஏமன் அமைச்சர் ஒப்புக்கொண்டார். ஆனால் தற்போது அந்த அல்-ஷிபா சதர்ன் ட்ரான்சிஸனல் கவுன்சிலில் செயல்படும் துணை ராணுவப் பிரிவுகளில் ஒன்றின் தளபதியாக இருக்கிறார் என்பதற்கு பல ஆதாரங்கள் எங்களிடம் கிடைத்துள்ளன. வழக்கறிஞர் ஹுடா அல்-சராரி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிதியுதவி பெறும் இந்த படைகள் செய்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அவரது பணியின் விளைவாக அவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இருப்பினும், அவரது 18 வயது மகன் மொஹ்சென் தான் தனது உயிரை விலையாகக் கொடுக்கவேண்டியிருந்தது. அந்த இளைஞர் மார்ச் 2019 இல் உள்ளூர் எரிவாயு நிலையத்திற்குச் சென்ற போது மார்பில் சுடப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு பரிதாபமாக உயிரிழந்தார். ஹுடா அவரது மரணத்திற்குப் பிறகு மீண்டும் தனது பணிகளைத் தொடங்கியபோது, அப்பணிகளில் ஈடுபடக்கூடாது என தன்னை எச்சரிக்கும் செய்திகள் வந்ததாக அவர் கூறினார். "ஒரு மகன் போதாதா? மேலும் ஒரு உயிரைப் பறிகொடுக்க வேண்டுமா?" என மிரட்டல்கள் வந்தன என்றார். ஏடன் வழக்கறிஞரின் அடுத்தடுத்த விசாரணையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆதரவு பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் உறுப்பினரால் மொஹ்சென் என்பவர் கொல்லப்பட்டார் என்று கண்டறியப்பட்டது. இருப்பினும் அதிகாரிகள் அந்தந்த நீதித்துறை செயல்முறையைத் தொடங்கவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக பெயரிடப்படாத அரசுத் தரப்பு உறுப்பினர்கள், பரவலான கொலைகள் அச்சத்தின் சூழலை உருவாக்கிவிட்டதாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆதரவு பெற்ற படைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதியைப் பெற அவர்கள் கூட பயப்படுவதாகவும் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏமனில் நடைபெறும் போரில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. 2020 இல் ஸ்பியர் அமைப்பு மேலும் பணம் செலுத்தியதாகக் காட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கசிந்த ஆவணத்தை ரிப்ரீவ் பெற்றார். இருப்பினும் ஏன் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஸ்பியர் நிறுவனர் ஆபிரகாம் கோலனிடம் அவரது கூலிப்படையினர் எமிரேட்ஸைச் சேர்ந்தவர்களுக்கு படுகொலை செய்வது குறித்து பயிற்சி அளித்தார்களா என்று கேட்கப்பட்டது. ஆனால் அவர் அதற்குப் பதிலளிக்கவில்லை. பிபிசி விசாரணையின் முடிவுகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், பயங்கரவாதத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர்களை கொலை செய்ய முயன்றதாக கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் தவறானது அரசு மறுத்துவிட்டது. மேலும், ஏமனில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அரசு கூறியது. "இந்த நடவடிக்கைகளின் போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சர்வதேச சட்டத்தின்படி செயல்பட்டது," ஏமன் அதிகாரிகள் பதிலளித்தனர். ‘ஸ்பியர் ஆபரேஷன்ஸ்’ குழுவைப் பற்றி விவாதிக்க அமெரிக்க பாதுகாப்பு மற்றும் அரசுத் துறைகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அக்கேள்வி குறித்து பதில் அளிக்க அத்துறைகள் மறுத்துவிட்டன. மேலும், "இது போன்ற ஒரு நடவடிக்கைக்கு அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமை (CIA) ஒப்புதல் அளித்தது என்ற கருத்து தவறானது," என அமெரிக்க அரசு புலனாய்வு அமைப்பு ஒரு அறிக்கையில் கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸால் பணியமர்த்தப்பட்ட அமெரிக்க கூலிப்படையினரால் பயிற்சியளிக்கப்பட்ட படைகளால் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஹுத்திகளும் பிற எதிர்ப்பாளர்களும் இலக்காகியுள்ளனர். சுருக்கமாக நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 2014 ஆம் ஆண்டில், ஏமனின் ஷியா முஸ்லிம் சிறுபான்மையினரின் ஒரு பிரிவைச் சேர்ந்த ஹூத்தி போராளிகள், தலைநகரான சனாவைக் கைப்பற்றினர். பிப்ரவரி 2015 இல் சனாவில் வீட்டுக் காவலில் இருந்து தப்பி ஓடிய பின்னர் அதிபர் மன்சூர் ஹாதி தெற்கு நகரமான ஏடனில் ஒரு தற்காலிக தலைநகரை நிறுவினார். சௌதி அரேபியாவும் மற்ற எட்டு சன்னி அரபு நாடுகளும் ஹூத்திகளுக்கு எதிராக ஒரு வான்வழித் தாக்குதலைத் தொடங்கின. அந்நாடுகள் பிராந்திய எதிரியான இரானால் தான் ஆயுதம் ஏந்தியதாகக் கூறினர். சௌதி தலைமையிலான கூட்டணி அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆதரவையும் பெற்றுள்ளது. வெளிப்படையாக ஒரே தரப்பில் இருப்பவர்களிடையே போர்கள் கூட நடந்துள்ளன. ஆகஸ்ட் 2019 இல், சௌதி ஆதரவுடைய அரசாங்கப் படைகளுக்கும், தெற்குப் பிரிவினைவாத இயக்கத்துக்கும் இடையே தெற்கில் போர் வெடித்தது. தெற்கில் செயல்படும் அமைப்புக்கள் அதிபர் ஹாதி தவறான நிர்வாகம் செய்வதாகவும் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றம் சாட்டின. அரேபிய தீபகற்பத்தில் உள்ள அல்கொய்தாவின் போராளிகள் மற்றும் போட்டி ஐ.எஸ். குழுவின் உள்ளூர் துணை அமைப்பினர் குழப்பத்தை பயன்படுத்தி தெற்கில் நிலப்பரப்பைக் கைப்பற்றி, குறிப்பாக ஏடனில் கொடிய தாக்குதல்களை நடத்துகின்றனர். ஹூத்திகள் தங்கள் சொந்த செல்வாக்கை விரிவுபடுத்தியுள்ளனர். நவம்பர் 2023 இல் அவர்கள் செங்கடலில் சர்வதேச கப்பல் வழித்தடங்களைத் தாக்கத் தொடங்கியதன் மூலம் இது வெளிச்சத்துக்கு வந்தது. https://www.bbc.com/tamil/articles/c9x0y63kyelo
  23. யாழில் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு 25 JAN, 2024 | 11:53 AM ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை (25) மாலை 4 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தின் முன் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன் இடம்பெறும் இப்போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் அணி திரளுமாறு யாழ். ஊடக அமையம் கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/174766
  24. 24 நாட்களில் 46 இந்திய மீனவர்கள் கைது கடந்த 24 நாட்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக 46 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 8 இந்திய மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/289342
  25. Published By: VISHNU 24 JAN, 2024 | 07:41 PM (எம்.மனோசித்ரா) வடக்கை அடிப்படையாகக் கொண்டு மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயத்தை ஆரம்பிப்பது தொடர்பில் வியாழக்கிழமை (25) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சீன நிறுவனமொன்றுடன் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார். அத்தோடு உள்நாட்டு டின்மீன் உற்பத்தியாளர்களின் மேம்பாட்டைக் கருத்திற் கொண்டு டின் மீன் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கும் அண்மையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மீனவர் நலன்புரி சேவை திட்டத்தை நாளை வெள்ளிக்கிழமை வெல்லமங்கரை மீன்பிடி துறைமுகத்தில் ஆரம்பிக்கவுள்ளோம். ஆழ்கடலில் மீனவர்கள் சுகவீனமடையும் போது, அவர்களுக்கான அவசர சுகாதார சேவைகளை வழங்குவது குறித்து இதன் போது அதிக அவதானம் செலுத்தப்படும். கடற்றொழில் அமைச்சு, சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஐஸ் விலை அதிகரிப்பு தொடர்பிலும், எரிபொருளுக்கான மாற்று திட்டம் தொடர்பிலும், மண்ணெண்ணெய் எஞ்சின் கொண்ட படகுகளுக்கான மாற்று திட்டம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய டின் மீன் உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்காக, டின்மீன் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு கடற்றொழில் அமைச்சு, மீன்பிடித் திணைக்களம் இணைந்து செயற்பட்டு வருகிறது. மேலும் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கை அடிப்படையாகக் கொண்டு மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயத்தை ஆரம்பிப்பதற்காக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சீனா உட்பட பல்வேறு நாடுகளிடமிருந்து புதிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை (25) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் சீன நிறுவனமொன்றுடன் இது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்காலத்தில் வடக்கில் மாத்திரமின்றி மீனவர்கள் வாழும் சகல மாகாணங்களையும் உள்ளடக்கி இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும். நாடுகளுக்கிடையிலான உறவுகளில் எவ்வித விரிசலும் ஏற்படாத வகையிலேயே இலங்கை - இந்திய மீனவர் பிரச்சனையை அணுகுகின்றோம். வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த பிரதான பிரச்சினை தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம். இவ்விடயத்தில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு கடற்படைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/174738

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.