Everything posted by ஏராளன்
-
அமெரிக்காவில் பனிப்புயல்: 61 பேர் பலி.
அமெரிக்காவில் 90 பேர் பலி; அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் - எச்சரிக்கை வெளியீடு | பனிப்புயல்
-
எம்எல்ஏவின் மகன் வீட்டில் பணியாற்றிய 18 வயது பட்டியல் சாதிப் பெண் - பிபிசியிடம் கூறிய அதிர்ச்சி சம்பவங்கள்
திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் வீட்டில் பணியாற்றிய பெண் பிபிசியிடம் கூறிய அதிர்ச்சி சம்பவங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 24 ஜனவரி 2024, 02:21 GMT புதுப்பிக்கப்பட்டது 24 ஜனவரி 2024, 02:50 GMT எச்சரிக்கை: இந்த கட்டுரையின் உள்ளடக்கம் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். “ஒரு நாள் நான் விரைவாக எனது பணியை முடிக்கவில்லை என்பதற்காக காலை 10 முதல் இரவு 11 மணி வரை கரண்டியால் என்னை அடித்தார். நான் எவ்வளவு கெஞ்சியும் நிறுத்தாமல், என் முகத்தை கழுவிவிட்டு வரச் சொல்லி என்னை அடித்தார்கள்” இப்படித்தான் தான் அனுபவித்த சித்திரவதையை விவரிக்கிறார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பட்டியல் சாதிப் பெண். இந்தப் பெண், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் வேலை பார்த்த போது, ஆண்ட்ரோவும், அவரது மனைவி மெர்லினும் தன் உடலில் சூடு வைத்தும், அடித்தும் சித்திரவதை செய்ததாக ஜனவரி 16 ஆம் தேதி புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜனவரி 18 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டு குறித்து கேட்க மதிவாணன் மற்றும் மெர்லினை தொடர்புகொள்ள முடியவில்லை. பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியிடம் கேட்டபோது, தனது மகன் வீட்டில் என்ன நடந்தது எனத் தனக்குத் தெரியாது எனக் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES என்ன நடந்தது? இச்சம்பவம் தொடர்பாக பிபிசி தமிழ் சார்பில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசினோம். அப்போது அவர், பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, மேற்படிப்பிற்காக பணம் சேர்ப்பதற்காக வேலையில் சேர்ந்ததாகக் கூறினார். “நான் கடந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு, எங்காவது வேலைக்கு சேரலாம் என இருந்தேன். என் அம்மா அப்போது கேளம்பாக்கத்தில் ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஒரு ஏஜென்சி மூலமாக திருவான்மியூரில் உள்ள எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் துடைப்பதற்கும், அவர்களுக்கு உதவியாக இருப்பதற்கும் வேலைக்கு சேர்ந்தேன்,” என தான் எப்படி வேலைக்குச் சேர்ந்தார் என பிபிசியிடம் பகிர்ந்தார். ஆனால், வேலைக்கு சேர்ந்த இரண்டே நாட்களில், வேலை பிடிக்காததால், வேலையை விட்டு செல்ல முயன்றதாகவும், அப்போது கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ தன் அம்மாவை போலீசில் சிக்க வைத்துவிடுவேன் என மிரட்டியதால், அந்த வேலையைத் தொடர்ந்ததாகவும் அவர் கூறினார். “இரண்டு நாட்களிலேயே எனக்கு கடுமையான வேலைகள் கொடுத்தனர். என்னால் செய்ய முடியாது என என் அம்மாவிடம் தொலைபேசியில் சொன்னேன். ஆனால், அப்போதே என் அம்மாவை எதாவது செய்துவிடுவோம் என மிரட்டியதால், நான் அதற்குப் பிறகு எதுவும் சொல்லவில்லை. வேலைக்கு சேர்ந்து எட்டு நாட்களுக்கு பின் என் அம்மா வந்தார்." "அப்போதுதான் ஒப்பந்தம் போட்டனர். அதில், மாதம் ரூ 16,000 சம்பளம் என்று கூறியிருந்தனர். அப்போதே நான் என் அம்மாவிடம் கூறியிருக்க வேண்டும். ஆனால், பயத்தால் என்னால் சொல்ல முடியவில்லை. அன்றே எனது தொலைபேசியை என் அம்மாவிடம் கொடுத்து அனுப்பிவிட்டனர்,” என்றார் அந்த 18 வயது பெண். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘காலால் முகத்தில் உதைத்தனர்’ கடந்த எட்டு மாதங்களாக திருவான்மியூரில் உள்ள ஆண்ட்ரோவின் வீட்டில் பணியாற்றி வந்த இவர், தினமும் தான் எதாவது ஒரு காரணத்திற்காக துன்புறுத்தப்பட்டதாகக் கூறினார். “ஒரு நாள் அவர்கள் மும்பைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அன்று இரவு 2 மணி வரை அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு, பிறகு தான் தூங்கினேன். காலையில் உணவும் தயார் செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தனர். ஆனால், என்னால், 7 மணிக்குத் தான் எழுந்திருக்க முடிந்தது. அதற்கு மெர்லின் என்னை கடுமையாகத் தாக்கி, அசிங்கமாகத் திட்டினார்” என்றார். இதேபோல, கடந்த ஜனவரி 1 ஆம் தேதி துணி துவைக்கத் தெரியாது என்று கூறியதற்காக, மிளகாயைச் சாப்பிடச் சொல்லி கொடுமைப்படுத்தியதாக அந்தப் பெண் கூறினார். “எதாவது வேலை எனக்குத் தெரியாது எனச் சொன்னால், மெர்லின் மிளகாயைச் சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தி கொடுமைப் படுத்துவார்கள். கடந்த ஜனவரி 1 ஆம் தேதி, அப்படி துணி துவைக்கத் தெரியாது என்று கூறியதற்கு 10 மிளகாயை சாப்பிட வைத்தனர். குடிக்கத் தண்ணீரும் கொடுக்கவில்லை,” என்றார். மேலும், தன்னுடைய முகமே மாறிவிட்டதாக அந்தப் பெண் மிகவும் வேதனை தெரிவித்தார். "அவர்கள் என்னை கீழே தள்ளி முகத்தின் மீது மிதிப்பார்கள், காலால் உதைப்பார்கள். அவர்கள் துன்புறுத்தியதில், என் முகமே மாறிவிட்டது. எவ்வளவு காயமானாலும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கூட அழைத்துச் செல்ல மாட்டார்கள்," என்றார் அவர். இதுகுறித்து கருத்துகேட்க ஆண்ட்ரோவையும், அவரது மனைவி மெர்லினையும் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால், அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES காவல்துறைக்கு எப்படித் தெரிந்தது? பாதிக்கப்பட்ட பெண் பொங்கல் விடுமுறைக்காக வீட்டிற்கு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். அப்போதுதான் வீட்டிற்குச் செல்ல அனுமதித்தாக அவர் கூறினார். “என் அம்மா என்னிடம் எப்போதாவது தான் பேசுவார். அவர் எப்போது பேசினாலும், அவர்கள் சொல்வதைத் தாண்டி நான் எதுவும் பேசக்கூடாது. மீறி பேச முயன்றால், என்னை அடிப்பார்கள். பொங்கலுக்காக வீட்டிற்கு செல்ல வேண்டும் எனக் கூறியபோதும், அவர்கள் வீட்டில் நடந்ததை யாருக்கும் சொல்லக் கூடாது என மிரட்டித்தான் என்னை அனுப்பினர். நானும் அவர்களுக்கு பயந்து யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றதால்தான் இது வெளியே வந்தது,” என்றார் அந்தப் பெண். ஜனவரி 16 ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது, அவரது முகம், கை, கால், தலை மற்றும் பிற இடங்களில் ஏற்பட்டுள்ள காயத்தை பார்த்த மருத்துவர்கள், அது தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் மருத்துவமனைக்கு விரைந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகளை கேட்டுவிட்டு, சென்னை அடையார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அடையார் போலீஸ் மாவட்ட சரகத்திற்கு உட்பட நீலாங்கரை மகளிர் போலீசார், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியிடம் கேட்டபோது, “என் மகன் வீட்டில் என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. ஆனால், எங்கள் வீட்டில் பணியாற்றும் நபர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவராகத் தான் பார்க்கிறோம்,”என்றார் அவர். காவல்துறையினர் என்ன சொல்கிறார்கள்? இந்த வழக்கு குறித்து அடையார் சரகத்தில் உள்ள ஒரு மூத்த அதிகாரி பிபிசியிடம் பேசினார். அப்போது அவர், “இந்த வழக்கில், எந்த தாமதமும் இல்லை. புகார் பெற்ற உடனேயே வழக்குப்பதிவு செய்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்ட ஆண்ட்ரோ மற்றும் மெர்லினை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்,” என்றார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் பெற்ற பிறகு அவரிடம் தொடர் விசாரணை செய்யவில்லை என்றும் கூறினார். “பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் நாங்கள் மீண்டும் ஒரு முறை விசாரணை நடத்தி, அவரின் வாக்குமூலத்தை முழுமையாக பதிவு செய்ய வேண்டியுள்ளது. அதுவும் விரைவில் செய்யப்படும்,” என்றார். இதற்கிடையில், இந்த வழக்கை கையில் எடுத்திருக்கும் தமிழ்நாடு மகளிர் ஆணையம், ஜனவரி 29 தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரிக்க உள்ளனர். https://www.bbc.com/tamil/articles/cz7kgyz42jdo
-
முல்லைத்தீவு துணுக்காய் பாணலிங்கேஸ்வரம் சிவன் ஆலய காணிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - வட மாகாண ஆளுநர்
24 JAN, 2024 | 05:39 PM முல்லைத்தீவு துணுக்காய் பாணலிங்கேஸ்வரம் அருள்மிகு நர்மதா நதீஸ்வரர் சிவன் கோவிலின் காணிப் பிரச்சினை தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். ஆலயத்தின் நான்கு திக்கு இராஜ கோபுரங்களுக்குமான அடிக்கல் நடும் நிகழ்வும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவும் இன்று (24) இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கலந்துகொண்டார். இதன்போது, ஆலய காணிப் பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் ஆளுநரிடம் தமது கருத்துக்களை தெரிவித்தனர். அதற்கு பதிலளிக்கையிலேயே ஆளுநர், நர்மதா நதீஸ்வரர் சிவன் கோவிலின் காணிப் பிரச்சினை தொடர்பில் தனக்கு ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். அத்துடன், ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, நல்லிணக்க செயற்பாடுகளும் மக்களின் காணிப் பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/174724
-
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் : 224 உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க வேண்டும் - சிவில் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தல்
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது! 24 JAN, 2024 | 07:38 PM பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசினால் சபைக்கு சமர்ப்பித்திருந்த நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதம் இன்று புதன்கிழமை (24) இரண்டாவது நாளாக இடம்பெற்ற நிலையில் மாலை 5மணியளவில் விவாதம் நிறைவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. சட்ட மூலத்தை நிறைவேற்ற வாக்கெடுப்பைக் கோரினார். இதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 46 மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இதில் சட்ட மூலத்துக்கு ஆதரவாக அரசுடன் இணைந்து எதிர்கட்சி தரப்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எம்.பி.யான துமிந்த திசாநாயக்க, சுயாதீன எதிரணி எம்.பி. யான நிமல் லான்ஸா , அலிசப்ரி ரஹீம், ஜோன் செனவிரத்ன. எ.எல்.எம். அதாவுல்லா, அரச தரப்பு எம்.பி.யான ரொஷான் ரணசிங்க , ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான வடிவேல் சுரேஷ் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர். எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிராகவே வாக்களித்தன. 54பேர் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை. அதன் பிரகாரம் நிகழ்நிலை காப்புச்சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபைக்கு அறிவித்தார். https://www.virakesari.lk/article/174730
-
அரசாங்கம் திருடர்களை சரியாக பிடித்திருந்தால் வற் வரியை விதித்து மக்களை நசுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது - எதிர்க்கட்சித் தலைவர்
Published By: DIGITAL DESK 3 24 JAN, 2024 | 05:38 PM நாட்டை பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்கி, நாட்டு மக்களை மிகவும் நிர்க்கதியான எதிர்காலத்திற்கு ஆளாக்கிய தரப்பினர் யார் என்பதனை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின் ஊடக வெளிக்கொணரப்பட்டது. இவ்வாறு வெளிக்கொணரப்பட்ட கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, அஜித் நிவாட் கப்ரால், எஸ்.ஆர்.ஆடிகல, பி.பி. ஜயசுந்தர, டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் சமந்தா குமாரசிங்க போன்றவர்களைத் தவிர பொறுப்புக் கூற வேண்டிய மேலும் பலர் இந்த அரசாங்கத்தில் உள்ளனர். இந்த ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என வரிச்சுமைக்கு ஆளான மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். வற் வரியை அறவிடமால், திருடிய திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த திருடர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அனைத்து வித தண்டனைகளும் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எரிவாயு, சீனி, நானோ நைட்ரஜன், நிலக்கரி மற்றும் மல உர ஊழல்கள் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார். எரிவாயு, சீனி, நானோ நைட்ரஜன், நிலக்கரி, மல உரம் போன்றவற்றுக்கு எதிரான விசாரணைகள் தாமதமாக இடம்பெற்றாலும், நுண், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு பரேட் சட்டத்தை அமுல்படுத்தி அவர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். 2019-2022 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பல முறைகேடுகள் தொடர்பான விசேட கணக்காய்வு விசாரணைகள் தொடர்பான பல சிக்கல்கள் உள்ளன. இது தொடர்பில் தனித்தனியாக வினவுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். சீனி வரி மோசடிக்கு எதிராக என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இதன் பிரகாரம், 2020 ஆம் ஆண்டு 1 கிலோ சீனிக்கு விதிக்கப்பட்ட விசேட பண்ட வரியை 50 ரூபாவில் இருந்து 25 சதமாக அரசாங்கம் குறைத்ததன் காரணமாக, நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்காத நிலையில், அரசாங்கத்திற்கு ரூ.16707 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாக 23.03.2022 அன்று வெளியிடப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கோபா குழுவிற்கு அறிக்கையை அனுப்பிய பிறகு, வருமானம் பெறாததற்கு பொறுப்பான தரப்பினரை அடையாளம் காண 21 ஜூன் 2022 அன்று சி.ஐ.டி.க்கு அனுப்பி வைக்கப்பட்டு 19 மாதங்கள் கடந்து விட்டன. இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர் யார் என கேள்வி எழுப்புகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இலகு ரயில் திட்டம் நிறுத்தப்பட்டதால் 10000 மில்லியன் ரூபா நஷ்டம் இலகு ரயில் திட்டம் எந்த தர்க்க ரீதியான அடிப்படையும் இல்லாமல் இடைநடுவிலையே நிறுத்தப்பட்டதால் 10000 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டதாக 23.11.2022 அன்று வெளியிடப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விசேட கணக்காய்வு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 13 மாதங்கள் கடந்துள்ள போதிலும், கோப் அல்லது கோபா குழுக்களில் கருத்தில் கொள்ளாததற்கான காரணங்களை அவர் கேள்வி எழுப்பினார். இந்த முட்டாள்தனமான முடிவால், ஜப்பான் நாடு இன்னும் நமது நாட்டுடன் சிறந்த மனதுடன் இல்லை. இதனால் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். சேதன உரங்களால் ஏற்பட்ட இழப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை 2021-2022 ஆம் ஆண்டில் 96000 மெட்ரிக் டொன் சேதன உரங்கள் கொள்முதல் செய்யப்பட்டதால், அரசாங்கத்திற்கு 69000 அமெ.டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், கணக்கிடப்படாத பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 26.8.2022 திகதியிடப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது வெளியிடப்பட்டு 16 மாதங்கள் கடந்துள்ள போதிலும், கோப் அல்லது கோபா குழுக்களால் இது தொடர்பில் இதுவரை ஏன் பரிசீலிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். நானோ நைட்ரஜன் மோசடி கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை ஒரு போத்தல் நானோ நைட்ரஜன் திரவ உரம் 5.25 அமொ.டொலர்களுக்கு கொள்வனவு செய்ய முடியுமாக இருந்தாலும், 12.45 மற்றும் 10 அமெ.டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்கு 711 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாக 12.13.2023 திகதியிட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டு இழப்பு யாது? இந்த அறிக்கை எப்போது கோப் அல்லது கோபா குழு முன் பரிசீலிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். நிலக்கரி ஊழலினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவது எப்போது? நிலக்கரி நிறுவனத்தால், 500 பில்லியன் பெறுமதியான கொள்முதலை தகுதியில்லாத வழங்குநருக்கு வழங்குவதற்கான உடன்பாட்டை எட்டுவதற்கு முன் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவில்லை என்றும், கொள்முதல் குழுவும், தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவும் இந்தப் பணிகளைச் சரியாகச் செய்யவில்லை என்றும் 30.9.2022 திகதியிட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அறிக்கையின் பரிந்துரைகளுக்கு பொது அலுவல்கள் குழுவும் ஒப்புதல் அளித்துள்ள நேரத்தில், அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் அந்த இழப்பை ஈடுகட்ட அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பினார். எரிவாயு மோசடிக்கு யார் பொறுப்பு? எல்.பி.ஜி கொள்முதலின் போது, சியாம் கேஸ் ட்ரேடிங் நிறுவனத்திடம் இருந்து குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யாமல், ஓகிம் டிரேடிங்கில் நிறுவனத்திடம் இருந்து அதிக விலைக்கு கொள்வனவு செய்தமையினால், அரசாங்கத்திற்கு 1138 அமொ.டொலர் மேலதிக செலவு ஏற்பட்டது. முறையான நிதி மதிப்பீடு அல்லது நிதி உறுதிப்படுத்தல் இல்லாமல் எரிவாயுவை கொள்வனவு செய்ததால், கப்பல்களுக்கு கூட 210 மில்லியன் ரூபா 5 மாத காலத்திற்கு மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ளதாக 11.12.2022 ஆம் திகதியிட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கோப் மற்றும் கோபா குழுக்களில் பரிசீலிக்கப்படவில்லை. இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்று கேள்வி எழுப்பினார். அதிக கடன் பெற்று அதனை மீளச் செலுத்தாதுள்ள பிரதான நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் கிட்டிய காலத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. தான் சபையில் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு சரியான பதில்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இலங்கை வங்கியிலும், மக்கள் வங்கியிலும் அதிக தொகை கடன் பெற்று அதனை மீளச் செலுத்தாதுள்ள 10 வர்த்தகர்களின் பெயர்களை வெளியிடுமாறு வினவிய போதும் இன்றும் இதற்கான பதில் கிடைக்கவில்லை. பரேட் சட்டத்தை அமுல்படுத்தி சாதரண நபர்களின் சொத்துக்களை ஏலம் விடுவதை விடுத்து, பாரிய தொகை கடன் செலுத்தாதுள்ள அரசாங்க தரப்பு, நட்பு வட்டார பிரதான நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது எப்போது என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பினார். https://www.virakesari.lk/article/174716
-
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் : 224 உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க வேண்டும் - சிவில் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தல்
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, சட்டமூலம் மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. https://thinakkural.lk/article/289321
-
உயிருக்கு ஆபத்தான நிலையில் சாந்தன்- சிறுநீரகம் கல்லீரல் பாதிப்பு - சிறைக்கைதிகள் உரிமை அமைப்பு ஸ்டாலினிற்கு கடிதம்
Published By: RAJEEBAN 24 JAN, 2024 | 05:11 PM இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பல வருடங்களின் பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாகி தற்போது திருச்சி சிறைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைக்கைதிகள் உரிமை மையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. சாந்தனிற்கு கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைக்கைதிகள் உரிமை மையம் தெரிவித்துள்ளது. திருச்சி சிறப்பு முகாமில் சாந்தனிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை, இதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கவேண்டும் என சிறைக்கைதிகள் உரிமை மையம் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது விடுதலையான சாந்தன் இலங்கைக்கு செல்வதற்காக விசா போன்றவற்றை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றார், திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனிற்கு சிறுநீரக பாதிப்பு எற்பட்டுள்ளதால் அவருக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் திருச்சி சிறப்பு முகாமில் எடுக்கப்படாததால் அவரின் உயிரை காப்பாற்றுவதற்காக தமிழக முதல்வர் உரிய நடவடிக்களை எடுக்கவேண்டும் என சிறைக்கைதிகள் உரிமைகள் மையம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கால்கல் வீங்கியுள்ளன கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ள து. எனினும் இரண்டுமாதங்களாக உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை. இதனால் அவர் உயிருக்கு போராடுகின்றார் என்பதால் அவரை காப்பாற்றவேண்டும் என சிறைக்கைதிகள் மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/174731
-
பெண்கள் தலைமையிலான தொழில் நிறுவனங்களுக்கு ஐ.நா.வின் பெண்கள் அமைப்பும் ஜப்பானும் இணைந்து ஆதரவு
24 JAN, 2024 | 04:12 PM ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐ.நா.வின் பெண்கள் அமைப்பும் மற்றும் கிறிசாலிஸ் நிறுவனனும் இணைந்து நாட்டில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டபெண்கள் தலைமையிலான 600 சிறு மற்றும் நடுத்தர தொழிவல் நிறுவனங்களுக்கு வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு 110 மில்லியன் ரூபா மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 'நெருக்கடியில் உள்ள பெண்களுக்கு அதிகாரமளித்தல்' என்ற நோக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்ட ஒருவருட திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பெண்கள், சிறுவர்கள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் ஒத்துழைப்புடன் ஐ.நா. பெண்கள் அமைப்பு மற்றும் கிறிசாலிஸ் நிறுவனமும் இணைந்து இலங்கையில் சமூகப் பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளனர். இது தொடர்பான நிகழ்வொன்று அண்மையில் பத்தரமுல்லையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இங்கைக்கான ஜப்பான் தூதுவர் MIZUKOSHI Hideaki கூறுகையில், “இலங்கையில் 5 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மகத்தான முயற்சிக்கு ஜப்பான் தூதரகம் ஆதரவளிப்பதில் மகிழ்ச்சி அடைவதோடு, பெண்களின் பொருளாதாரத்திற்கு ஆதரவாக ஐ.நா. பெண்கள் அமைப்புடன் இணைந்து இந்த கூட்டுறவை தொடர நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான ஐ.நா.வின் மகளிர் பிராந்திய அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் சாரா நிப்ஸ், “ஜப்பான் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 600 பெண்கள் தலைமையிலான நுண் நிறுவனங்களுக்கு வர்த்தகம் தொடர்பான மேம்பட்ட பயிற்சிகளை வழங்கியுள்ளோம். டிஜிட்டல் கருவிகள் மற்றும் வளங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களின் தயாரிப்புகளை சிறந்த முறையில் சந்தைப்படுத்த முடியும். "ஐ.நா. பெண்களுக்கான பயிற்சியில் பங்கேற்றமை எனக்கு சிறந்த சாத்தியக்கூறுகளை உருவாக்கியது. சமூக ஊடக தளங்கள் மற்றும் இணைய வணிகச் செயல்பாடுகளுக்கான அவற்றின் திறனைப் பற்றி நான் கற்றுக்கொண்டேன். எனது குழந்தைகளின் உதவியுடன், நான் இப்போது எனது சொந்த சமூக ஊடகப் பக்கத்தை நிர்வகிக்கிறேன், எனது தயாரிப்புகளை காட்சிப்படுத்த Facebook மற்றும் YouTube போன்ற தளங்களை மேம்படுத்துகிறேன். குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை நான் அடைந்ததால் எனது உற்பத்திற்கான பிரச்சினையை தீர்க்க இது எனக்கு உதவியது” என்று வட மாகாணத்தின் கனகராயன்குளத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் நிகழ்ச்சியின் பங்கேற்பாளருமான தர்சன் வக்சலா (32) கூறினார். அம்பாறை, கொழும்பு, மொனராகலை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பெண்கள் தலைமையிலான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இத்திட்டம் பெரிதும் துணைபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174709
-
தோடம்பழச்சாறு ஒன்றின் விலை 6,000 ரூபா!
இலங்கையின் முன்னணி விருந்தகம் ஒன்றில் தோடம்பழச்சாறு ஒன்றின் விலை 6,000 ரூபா என்று விடயம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. எனினும் பிரசுரிக்கப்பட்டுள்ள பணம் செலுத்தும் சீட்டு உண்மையானதா என்பதை விருந்தகம் இன்னும் முறையாக உறுதிப்படுத்தவில்லை. குறித்த கட்டண சீட்டில் விருந்தகம் ஒரு வாடிக்கையாளரிடம் தோடம்பழச்சாறுக்காக 6, 075 ரூபாயை கட்டணமாக குறிப்பிட்டுள்ளது. அத்துடன் குறித்த கட்டணச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விலையில் வரி 1,055.80 ரூபா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையின் விளைவாக இலங்கையில் உள்ள விருந்தகங்கள், பல பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/289281
-
நடிகைகளால் சிக்கலில் சிக்கிய அமைச்சர் ஜீவன்!
தைப்பொங்கல் விழா குறித்த சர்ச்சைகளுக்கு ஜீவன் தொண்டமான் விளக்கம்! தென்னிந்திய நடிகைகள் பலரின் பங்குபற்றுதலுடன் அண்மையில் ஹட்டனில் இடம்பெற்ற ‘தேசிய தைப் பொங்கல்’ விழா தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெளிவுபடுத்தியுள்ளார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம், நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் திணைக்களம் ஆகியன இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) நடைபெற்ற இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் வேளையில் இவ்வாறான கொண்டாட்டம் நடத்தப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் ஜீவன் தொண்டமான் இது குறித்து விளக்கமளித்துள்ளார். தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தேசிய தைப்பொங்கல் நிகழ்விற்கு குறைந்தளவு அரசாங்க நிதியே செலவிடப்பட்டது எனவும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நிதி ஒதுக்கீடுகள் வரையறுக்கப்பட்டவை எனவும் வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இந்த நிகழ்விற்கு அனுசரணை வழங்கியிருந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏனைய தேசிய நிகழ்வுகளுக்கு செலவிடப்படும் தொகைகளுடன் ஒப்பீடு செய்யும் போது மிகவும் குறைந்தளவு பணமே செலவிடப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொங்கல் விழாவிற்கு அதிகளவு செலவிடவில்லை செலவு மிகுந்த ஆடம்பர களியாட்டமாக இந்த நிகழ்வு நடத்தப்படவில்லை செழுமையான கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். விருது வென்ற தென்னிந்திய நடிகைகள் அழைத்து வரப்பட்ட விடயத்தை சிலர் அற்பமான விடயமாக விமர்சனம் செய்து வருவதாக தெரிவித்துள்ள அவர் அது அற்பமான விடயமல்ல எனவும் சமூகத்தை வலுவூட்டும் நோக்கில் அழைத்து வரப்பட்டதாகவும் தமிழ்நாட்டுடன் காணப்படும் நீண்ட கால உறவுகளின் அடிப்படையில் தாம் நடிகைகளை அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் மீதான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் நடிகைகள் இலங்கை விஜயம் செய்திருந்தனர் . நடிகைகள் தங்களது உரைகளில் அர்த்தபூர்வமான பல விடயங்களை எடுத்துரைத்தனர். பெண்களை வலுவூட்டல், பிள்ளைகளின் பாடசாலை கல்வி போன்றவற்றை அவர்கள் தங்களது உரைகளில் வலியுறுத்தியதாக அமைச்சர் ஜீவன் தெரிவித்துள்ளார். சிலர் பெண் ஆளுமைகளை மலினப்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுவது வேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் தேசிய தைப்பொங்கல் விழா அனைத்து சமூகங்களின் மீதான அரசாங்கத்தின் கரிசனையை வெளிப்படுத்தும் வகையிலானது என அவர்குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/289279
-
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் : 224 உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க வேண்டும் - சிவில் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தல்
நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலம் குறித்த குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பு - 97 வீதமானவர்கள் எதிர்ப்பு Published By: RAJEEBAN 24 JAN, 2024 | 02:58 PM நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து மேற்கொள்ளப்பட்ட குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தவர்களில் 97 வீதமானவர்கள் உத்தேச சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று மாலைவரை குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பில் கலந்துகொண்ட 1531 பேரில் 1492 பேர் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இலங்கையின் மக்களிற்கான தகவல்தொழில்நுட்ப துறையினர் என்ற குழுவினர் இந்த குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பை நடத்துகின்றனர். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து மேற்கொள்ளப்பட்ட குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தவர்களில் 97 வீதமானவர்கள் உத்தேச சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று மாலைவரை குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பில் கலந்துகொண்ட 1531 பேரில் 1492 பேர் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இலங்கையின் மக்களிற்கான தகவல்தொழில்நுட்ப துறையினர் என்ற குழுவினர் இந்த குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பை நடத்துகின்றனர். தகவல்தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்த குறுஞ்செய்தி ஊடான சர்வஜனவாக்கெடுப்பை ஆரம்பித்துள்ளனர் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் தடைசெய்யப்பட்ட அறிக்கைகளிற்காக சிறைத்தண்டனையையும் அபராதத்தையும விதிக்க முடியும்இ இந்த சட்டமூலத்தினால் எதிர்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் முடக்கப்படலாம் ஊழல் குறித்த பத்திரிகையாளர்களின் செய்தியிடல் மௌனமாக்கப்படலாம் தகவல்தொழில்நுட்ப துறை மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளலாம் என எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து தங்கள் கரிசனைகளை முன்வைத்துள்ள தகவல்தொழில்நுட்ப துறைசார்ந்தவர்கள் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்த மக்களின் கருத்தை அறிவதற்காக குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பை ஆரம்பித்துள்ளனர். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்த தங்களின் குரல்கள் செவிமடுக்கப்படுவதற்கான வாய்ப்பை பொதுமக்களிற்கு ஏற்படுத்திக்கொடுப்பதே இதன் நோக்கம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/174696
-
உலக அழிவை குறிக்கும் டூம்ஸ்டே கடிகாரம்: நள்ளிரவை நெருங்க 90 விநாடிகளே பாக்கி
படக்குறிப்பு, அணு ஆயுதங்கள் மற்றும் பல்வேறு காரணிகளால் உலகம் அழிவின் விளிம்புக்குச் செல்லும் என்பதை அடையாளமாகக் காட்டும் எச்சரிக்கைக் கடிகாரமாக டூம்ஸ்டே கடிகாரம் அமைந்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜேன் கார்பின் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் டூம்ஸ்டே கடிகாரம்: அணுசக்தி அழிவுக்கு உலகம் இன்னும் எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதைக் காட்டும் ஓர் அடையாளமாக இது உள்ளது. இந்தக் கடிகாரம் நள்ளிரவை நெருங்க இன்னும் தற்போது 90 விநாடிகள் மட்டுமே தேவை. விஞ்ஞானிகள் அந்தக் கடிகாரத்தின் முட்களை "டூம்ஸ்டே"க்கு (அழிவு ஏற்படும் நாள்) மிக அருகில் நகர்த்தியிருப்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டுள்ளனர். ஆனால் அந்த முட்களை மேலும் முன்னோக்கி நகர்த்துவதை நிறுத்திவிட்டனர். புதிய அணு ஆயுதப் போட்டியின் அச்சுறுத்தல், யுக்ரேன் போர் மற்றும் காலநிலை மாற்றக் கவலைகள் அனைத்தும் அழிவுக்கான காரணிகள் என்று அவர்கள் கூறினர். இந்தக் கடிகாரத்தின் நேரம் ஆண்டுதோறும் அணு விஞ்ஞானிகள் வெளியிடும் வருடாந்திர செய்தியை அடிப்படையாக வைத்து அமைக்கப்படுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல், செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற புதிய, மனிதர்களால் உருவாக்கப்பட்ட அபாயங்களின் தாக்கத்தையும், அத்துடன் மிகப்பெரிய அச்சுறுத்தலான அணு ஆயுதப் போரையும் கருத்தில் கொண்டு இந்தக் கடிகாரத்தின் நேரம் மாற்றியமைக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமையன்று, 2024ஆம் ஆண்டுக்கான அணு விஞ்ஞானிகளிள் அறிக்கையில், சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் அனைத்தும் “தங்கள் அணு ஆயுதங்களை அதிகரிக்க அல்லது நவீனப்படுத்த" பெரும் தொகையைச் செலவழித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இது "அணு ஆயுதப் போர் குறித்துத் தொடர்ந்து நீடிக்கும் ஆபத்தை" சேர்த்தது. யுக்ரேனில் நடந்த போர் "எப்போதும் இல்லாத அணுசக்தி அதிகரிப்பின் அபாயத்தை" உருவாக்கியுள்ளது என்று இந்த அறிக்கை கூறுகிறது. காலநிலை மாற்றம் குறித்த நடவடிக்கையின் பற்றாக்குறை மற்றும் வளர்ந்து வரும் உயிரியல் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுக் (AI) கருவிகளை "தவறாகப் பயன்படுத்துவதில்" தொடர்புடைய ஆபத்துகள் ஆகியவை மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. படக்குறிப்பு, இந்தக் கடிகாரம் நிறுவப்பட்டதில் இருந்து அணுஆயுத ஆபத்துகள் அதிகரித்த போதெல்லாம் அதன் முட்கள் அணு விஞ்ஞானிகளால் நகர்த்தப்பட்டு வருகின்றன. “டூம்ஸ்டே” கடிகாரம் 1947இல் ஜே ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் மற்றும் அணுகுண்டை உருவாக்கிய சக அமெரிக்க விஞ்ஞானிகளால் நிறுவப்பட்டது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போரின் முடிவில், ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அதன் பேரழிவு விளைவுகளை அவர்கள் நேரடியாகக் கண்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் பொது மக்களை எச்சரிக்க விரும்பினர் என்பதுடன் அணு ஆயுதங்கள் மீண்டும் பயன்படுத்தப்படாது என்பதை உறுதிப்படுத்த உலகத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பினர். இந்தக் கடிகாரத்தின் முட்கள் 25 முறை நகர்த்தப்பட்டுள்ளன. 1947ஆம் ஆண்டில், அவை நள்ளிரவு முதல் ஏழு நிமிடங்களில் தொடங்கின. பனிப்போரின் முடிவில் 1991இல், கடிகாரத்தின் முட்களை அவர்கள் நள்ளிரவு முதல் 17 நிமிடங்கள் வரை முன்னோக்கித் திருப்பினர். அணு விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையின் தலைவர் ரேச்சல் ப்ரோன்சன் பிபிசியிடம் பேசுகையில், "பிரிட்டன் உட்பட ஒவ்வொரு பெரிய நாடும் அணு ஆயுதங்கள் மிக நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தக் கூடியது போல் தங்கள் அணு ஆயுதங்களில் முதலீடு செய்கின்றன. இது மிகவும் ஆபத்தான நேரம். தலைவர்கள் பொறுப்புடன் செயல்படவில்லை," எனக் கவலை தெரிவித்தார். பல ஆண்டுகளாக டூம்ஸ்டே கடிகாரத்தின் நேரத்தை மாற்றியமைப்பதில் ஈடுபட்டுள்ள ரஷ்ய அணு ஆயுத நிபுணரான பாவெல் போட்விக், யுக்ரேன் படையெடுப்பிற்குப் பிறகு அதிபர் புதின் ரஷ்யாவின் அணுசக்தி படைகளை உஷார்படுத்தியபோது அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார். ரஷ்ய அதிபரின் அச்சுறுத்தலுக்கு உலகம் திகிலுடன் பதிலளித்தது. ஆனால் அவர் ஓர் எச்சரிக்கையை வெளிப்படுத்த வேண்டுமென்றே அதுபோன்று செய்ததாகத் தெரிகிறது. "எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சுதந்திரம் உள்ளது என்பதை உறுதிப்படுத்தத்தான் எங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன," என அவர் கூறியதாக போட்விக் கூறுகிறார். "ரஷ்ய அதிபர் இந்த அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் மேற்குலக நாடுகளை யுக்ரேன் போரில் தலையிடுவதைத் தடுக்க முடியும் என்று நம்பினார். இது சரியான கணக்கீடுதான். இவ்வாறுதான் அணு ஆயுதப் போர் தடுப்பு செயல்படுகிறது." படக்குறிப்பு, ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை துல்லியமானது எனக் கருதமுடியாது. பல தசாப்தங்களாக ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் இருந்தபோதிலும், உலகில் இன்னும் 13,000 அணு ஆயுதங்கள் உள்ளன, அவற்றில் 90% ரஷ்ய மற்றும் அமெரிக்க நாடுகள் வசம் இருக்கின்றன. பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா ஆகிய மற்ற ஆறு நாடுகள் அணுசக்தி நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலிடம் இந்த ஆயுதங்கள் இருப்பதாகப் பரவலாக நம்பப்படுகிறது, ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. பெரும்பாலான நவீன அணு ஆயுதங்கள் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியை அழித்ததைவிட பல மடங்கு சக்தி வாய்ந்தவை. கடந்த 2021ஆம் ஆண்டில், பிரிட்டன் தனது போர்க் கப்பல்களின் எண்ணிக்கையை 225இல் இருந்து 260 ஆக உயர்த்தியது. மேலும் 35 போர்க் கப்பல்கள் உருவாக்கப்படும் சாத்தியமும், நாட்டின் அணுசக்தியும் அதிக எச்சரிக்கையுடன் உள்ளன. யுக்ரேனில் போர் தொடங்கியதில் இருந்து, மாஸ்கோவின் அணு ஆயுதங்கள் பிரிட்டனுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என்று அரசுடன் நெருங்கிய மூத்த ரஷ்ய பிரமுகர்களிடம் இருந்து எச்சரிக்கைகள் வெளிப்பட்டன. பிரிட்டனின் அணு ஆயுதத் தடுப்புப் பிரிவுப் படை ஸ்காட்லாந்தின் மேற்கில் ஃபாஸ்லேன் ராணுவ தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு ‘வான்கார்ட்’ நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றில் அணு ஆயுதங்களை ஏந்திய டிரைடென்ட் ஏவுகணைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரிட்டனின் வான்கார்ட் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றான எச்எம்எஸ் விஜிலன்ட், ஃபாஸ்லேனில் நிறுத்தப்பட்டுள்ளது. ஹெச்எம்எஸ் விக்டோரியஸ் நீர்மூழ்கிக் கப்பலில் பணியாற்றிய முன்னாள் லெப்டினன்ட் சிடிஆர் ஃபியர்கல் டால்டன், டிரைடென்ட் ஏவுகணையை உண்மையில் ஏவிய ஒரு சில நபர்களில் ஒருவர். அது போலியாக உருவாக்கப்பட்ட போரின்போது சோதனை அடிப்படையில் ஏவப்பட்டது. "எப்போதும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் 15 நிமிடங்களில் செயல்படுவதற்குத் தயாராக இருந்துகொண்டே இருக்கும்," என்று டால்டன் கூறுகிறார். "நாம் பேசுகையில், அங்கு ஒரு அணுசக்தி தடுப்புப் படை உள்ளது. உலகில் உள்ள விளாதிமிர் புதின் போன்றவர்களுக்கு அது எப்போதும் தயாராக இருப்பது நன்றாகவே தெரியும். அது நம்பகமான அமைப்பு என்பதுடன், தேவைப்பட்டால் அதை எப்போதும் பயன்படுத்தலாம்," என்றார். அணுகுண்டு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்தே இந்த ஆயுதங்களுக்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. 1980களில், கிரீன்ஹாம் பொது அமைதி முகாமைச் சேர்ந்த பெண்கள் அனைத்து அமெரிக்க அணுசக்தி ஏவுகணைகளையும் பிரிட்டன் மண்ணில் இருந்து அகற்றப் போராடினர் - எஞ்சிய கடைசி போர்க் கப்பல்களும் 2008ஆம் ஆண்டு வெளியேறின. படக்குறிப்பு, சஃபோல்க்கில் உள்ள ஆர்ஏஎஃப் லேகன்ஹீத்தில் அணு ஆயுத எதிர்ப்புப் போராளிகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இருப்பினும், சஃபோல்க்கில் உள்ள ஆர்ஏஎஃப் லேக்கன்ஹீத்தில் (RAF Lakenheath) - இருக்கும் ராயல் விமானப் படைத் தளத்தில்- அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசாரம் காரணமாக இப்போது அமெரிக்க ஆயுதங்கள் மீண்டும் திரும்புவதற்கான சாத்தியக் கூறுகளும் குறைந்து வருகின்றன. பென்டகன் ஆவணங்கள் - அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பால் முதலில் அறிவிக்கப்பட்டது - அமெரிக்க "சிறப்பு" ஆயுதங்களுக்கு என இருக்கும் தளத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் எனக் கூறுகிறது. அத்தகைய ஆயுதங்களை வீழ்த்தும் திறன் கொண்ட அமெரிக்க போர் விமானங்கள் 2021இல் லேக்கன்ஹீத்தை வந்தடைந்தன. மேலும் இந்தத் தளத்தில் அணுசக்தி பணியில் ஈடுபடுவதற்கு,போர் வீரர்களுக்கான தங்குமிடங்களை உருவாக்க அமெரிக்க விமானப்படை தற்போது திட்டமிட்டுள்ளது. "நாங்கள் எங்கள் பக்கத்தில் பொதுக் கருத்தைப் பெற்றுள்ளோம் என்பதை நாங்கள் அறிவோம்," என்று அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசார அமைப்பைச் சேர்ந்த சோஃபி போல்ட் விளக்குகிறார் - அவரது சிறிய குழு, படைத்தளத்தின் சுற்றளவு வேலிக்கு அருகே முழக்கங்களை எழுப்பியது. "கிட்டத்தட்ட 60% மக்கள் பிரிட்டனில் அணுகுண்டுகளை வைத்திருக்க விரும்பவில்லை," என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்ஏஎஃப் லேகன்ஹீத், அமெரிக்க விமானப் படையின் 48வது போர் விமானப் பிரிவின் தளமாக இயங்குகிறது. "இந்தத் தளத்துடன் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இது முற்றிலும் அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ளது," என்று மற்றொரு எதிர்ப்பாளர் ஆலன் ரைட் கூறுகிறார். "அடுத்த முறை மீண்டும் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நுழைந்தால், அவர் அணுகுண்டைப் பயன்படுத்தலாம். ஏனெனில் அவர் புதினைவிட பெரிய அளவிலான அணுசக்தியைப் பெற்றுள்ளார்." எவ்வாறாயினும், டொனால்ட் டிரம்ப் ஏற்கெனவே யுக்ரேனில் நடந்த போரை 24 மணிநேரத்திற்குள் முடிவுக்குக் கொண்டு வருவதாகக் கூறினார். இருப்பினும் அது எப்படி சாத்தியம் என்று அவர் விளக்கமளிக்கவில்லை. யுக்ரேனுக்கான அமெரிக்க ஆதரவு குறையக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கடந்த தசாப்தத்தில், அணு ஆயுத கிளப்பில் இணைந்த சமீபத்திய நாடான வட கொரியாவின் அதிபரான கிம் ஜாங்-உன், அணு ஆயுதப் போர் பற்றிய அச்சத்தையும் அதிகரித்துள்ளார். அமெரிக்காவை சென்றடையக்கூடிய அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லக்கூடிய ஏவுகணைகளை சோதனை செய்ததாக அவர் பெருமையாகக் கூறியுள்ளார். அணு விஞ்ஞானிகள் ஒவ்வோர் ஆண்டும் அளிக்கும் அறிக்கையைத் தயாரிக்கும் குழுவின் முன்னாள் உறுப்பினரும், ‘டூம்ஸ்டே’ கடிகார ஆலோசகருமான சிக் ஹெக்கர், ஒரு அறிவியல் ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக வட கொரியாவின் அணுசக்தி நிலையங்களை ஏழு முறை பார்வையிட்டுள்ளார். மேலும் வட கொரியாவிடம் இப்போது 50 முதல் 60 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று அவர் மதிப்பிடுகிறார். "அணு ஆயுதங்கள், அணு ஆயுத பயங்கரவாதம், அணு ஆயுத பரவல் - இவை அனைத்தும் தவறான திசையில் செல்கின்றன என்பது மட்டும் உண்மை," என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/czd7pl23d0jo
-
சீனாவின் ஷியாங் யாங் ஹோங் 3 கப்பல் எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ளாது!
சீனாவின் ஷியாங் யாங் ஹோங் 3 என்ற சர்ச்சைக்குரிய ஆய்வு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் அது எந்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாது என மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கப்பலுக்கான அனுமதியை முன்னதாக இலங்கை நிராகரித்திருந்தது. இதனையடுத்து மாலைத்தீவு அதற்கு அனுமதி வழங்கியதுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் குறித்த கப்பல் அங்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பணியாளர்களின் சுழற்சி மற்றும் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக மாத்திரமே ஷியாங் யாங் ஹோங் 3 என்ற சீன கப்பல் தங்களது கடற்பகுதியில் நங்கூரமிடவுள்ளதாகவும், இது எந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளாது எனவும் மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. https://thinakkural.lk/article/289243
-
அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா துப்பாக்கிச் சூட்டில் பலி!
பெலியத்தவில் ஐவர் கொலை : மாத்தறையில் ஒருவர் கைது! Published By: DIGITAL DESK 3 24 JAN, 2024 | 01:49 PM பெலியத்தவில் ஐவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறையில் வைத்து அவர் இன்று புதன்கிழமை (24) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர், தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் சாரதி எனவும் இவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை திட்டமிட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/174692
-
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் : 224 உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க வேண்டும் - சிவில் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தல்
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் Published By: DIGITAL DESK 3 24 JAN, 2024 | 03:23 PM (எம்.நியூட்டன்) நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக இன்று புதன்கிழமை (24) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றது. ஜனநாயகத்தை அச்சுறுத்தாதே, நிகழ் நிலை காப்புச் சட்டத்தை மீளப்பெறு, ஊடகங்களை சமூக ஊடகங்களை நசுக்கும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மீளப்பெறு போன்ற பல கோரிக்கைகள் போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டது. நிகழ்நிலை காப்பு சட்டமூலம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174698
-
தகவல் தருவோருக்கு பண வெகுமதி – பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் தொடர்பில் தகவல் தருவோருக்கு பண வெகுமதிகள் வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். நாடு தழுவிய ‘யுக்திய’ நடவடிக்கைக்கு இணங்க பணச் சலுகைகளை அறிமுகப்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதேச அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்தநிலையில் தகவல் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, தானியங்கி துப்பாக்கிகளுடன் (T56, AK47, M16, SAR 80, T81) சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய உதவினால் 250,000 ரூபா வழங்கப்படும். சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு தானியங்கி துப்பாக்கியை (T56, AK47, M16, SAR 80, T81) மீட்டெடுப்பதற்கு வழிவகுக்கும் தகவலுக்கு 250,000 ரூபா வழங்கப்படும். அரை தானியங்கி துப்பாக்கிகளை (பிஸ்டல்கள், 84 எஸ்எல்ஆர், ஒட்டோ-லோடிங் சொட்கன்கள்) மீட்டெடுக்க 250,000 ரூபா வழங்கப்படும். ரிவோல்வர் ரக துப்பாக்கியை வைத்திருக்கும் சந்தேக நபரை கைது செய்ய 150,000 ரூபா வழங்கப்படும். சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு ரிவால்வரை மீட்டெடுப்பதற்கு 100,000 ரூபா வழங்கப்படும். ரிப்பீட்டர் ரக துப்பாக்கியை மீட்டெடுப்பதற்கு 50,000 ரூபா வழங்கப்படும். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கிகளுக்கு 15,000 ரூபா வழங்கப்படும். சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து கைக்குண்டொன்றை மீட்டெடுப்பதற்கு 25000 ரூபாயும், சந்தேகத்திற்கு இடமின்றி அதனை மீட்பதற்கு 15,000 ரூபாயும் வழங்கப்படும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை மீட்டெடுப்பது குறித்த தகவல்களுக்கு 15,000 ரூபா வெகுமதியாக வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/174698
-
நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் அமெரிக்க கைதியின் கடைசி நேர அச்சம்
பட மூலாதாரம்,ALABAMA DEPARTMENT OF CORRECTIONS படக்குறிப்பு, 1988இல் செய்த கொலைக்காக மரணதண்டனையை எதிர்கொள்கிறார் ஸ்மித் கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பேட்மேன் பதவி, பிபிசி நியூஸ் 24 ஜனவரி 2024, 04:45 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் மரணதண்டனை முறைகளின் கிராஃபிக் விளக்கங்கள் உள்ளன, இது சில வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். அமெரிக்காவின் அலபாமா சிறையில் தனது இறுதி நாட்களைக் கழித்து வருகிறார் கென்னத் யூஜின் ஸ்மித், நைட்ரஜன் வாயு மூலம் மரணம் அடையப் போகும் அமெரிக்காவின் முதல் மரணதண்டனைக் கைதி. இதுவரை பரிசோதனை செய்யப்படாத இந்த புதிய மரணதண்டனை முறை குறித்த எண்ணங்களால் நிம்மதியில்லாமல் தவிப்பதாக கூறுகிறார் ஸ்மித். கென்னத் யூஜின் ஸ்மித்துக்கு முதல்முறையாக தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்த போது, அலபாமா சிறையின் மரணதண்டனை நிறைவேற்றும் ஊழியர்களுக்கு அவரைக் கொல்ல பல மணிநேரம் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. பட மூலாதாரம்,ASSOCIATED PRESS படக்குறிப்பு, ஸ்மித்துக்கு, ஹோல்மன் கரெக்ஷனல் ஃபெசிலிட்டியில் உள்ள ஒரு சிறிய அறையில் மரணதண்டனை நிறைவேற்றப்படும். 'டெத் சேம்பர்' எனப்படும் மரண அறை ஹோல்மன் கரெக்ஷனல் ஃபெசிலிட்டி எனப்படும் அலபாமா சிறையின் 'டெத் சேம்பர்' என்று அழைக்கப்படும் அறையில், மரணதண்டனை விதிக்கப்பட்ட ஸ்மித்தைக் கட்டி வைத்து, அவரது உடலில் ஒரு கொடிய ரசாயன கலவையை செலுத்த முயன்றனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. காரணம், ஸ்மித்தின் உடலில் ரசாயனத்தை செலுத்த சரியான நரம்பை கண்டறிய முடியவில்லை. நேரம் நள்ளிரவைத் தாண்டியதால், அரசின் மரண உத்தரவு காலாவதியானது. ஊழியர்கள் முயற்சியைக் கைவிட்டனர். நரம்பைக் கண்டறிய எடுக்கப்பட்ட முயற்சிகளால், ஸ்மித்தின் உடலில் பல வெட்டுகள் ஏற்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள். இது நடந்தது நவம்பர் மாதம், 2022ஆம் ஆண்டில். இப்போது அலபாமா சிறை நிர்வாகம் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள். இம்முறை, ஸ்மித்தின் முகத்தில் காற்று புகாத முகமூடியை மாட்டி, அதன் மூலம் நைட்ரஜன் வாயுவை செலுத்தி சுவாசிக்க வைப்பது தான் திட்டம். நைட்ரஜன் வாயுவை சுவாசிப்பதன் மூலம், உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூச்சுத் திணறி மரணமடையும் திட்டத்தை அங்கீகரித்துள்ளது அமெரிக்க அரசு. ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையர் இதைப் பற்றி பேசுகையில், "இதுவரை பயன்படுத்தப்படாத இந்த தண்டனை முறை மிகவும் கொடூரமான, மனிதாபிமானமற்ற ஒரு இழிவான நடத்தையாகும், இது நிறுத்தப்பட வேண்டும்" என்று கூறினார். மரணதண்டனையை தடை செய்ய ஸ்மித்தின் வழக்கறிஞர்கள் வைத்த கோரிக்கையை அமெரிக்காவின் ஃபெடரல் நீதிமன்றம் நிராகரித்தது. இறுதி மேல்முறையீட்டு தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது. ஸ்மித்துக்கு வியாழக்கிழமை தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் ஸ்மித் செய்த குற்றம் என்ன? 1989-இல் ஒரு போதகரின் மனைவியான எலிசபெத் சென்னட்டைக் கொலை செய்ததற்காக தண்டனை பெற்ற இருவரில் ஸ்மித்தும் ஒருவர். கூலிப்படை மூலமாக 1,000 டாலர்கள் கூலிக்காக கொலை செய்யப்பட்டார் எலிசபெத் சென்னட். அமெரிக்காவில் மரணதண்டனைக்கு இரண்டு முறை அழைத்துச் செல்லப்பட்ட ஒரே கைதி ஸ்மித். நைட்ரஜன் வாயு மூலம் மரணத்தை எதிர்கொள்ளும் முதல் நபரும் இவரே. "உடலும் மனதும் மிகவும் பலவீனமாக, நொறுங்கி கிடப்பதைப் போல உணர்கிறேன். தொடர்ந்து எடை குறைந்து வருகிறது," என ஒரு இடைத்தரகர் மூலம் பிபிசி கேட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார் ஸ்மித். அலபாமாவில் மரணதண்டனைக் கைதிகளை பத்திரிகையாளர்கள் நேருக்கு நேர் சந்திப்பது தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் நாங்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம், ஆனால் அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதால் நேர்காணலைத் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். "எனக்கு எப்பொழுதும் குமட்டல் உணர்வு இருக்கிறது. பேரச்சத் தாக்குகள் (Panic attacks) தொடர்ந்து உருவாகின்றன. இது நான் தினசரி எதிர்கொள்ளும் துன்பங்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. அடிப்படையில் இதுவே விகப்பெரிய சித்திரவதை," என்று அவர் எழுதினார். நிலைமை மேலும் மோசமாகும் முன் இந்த குறிப்பிட்ட மரணதண்டனை முறையை நிறுத்த அலபாமா அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார். நைட்ரஜன் வாயுவை உடலில் செலுத்துவது விரைவில் சுயநினைவை இழக்கச் செய்யும் என்று அரசு கூறுகிறது, ஆனால் அதற்கு எந்த நம்பத்தகுந்த ஆதாரத்தையும் அரசு முன்வைக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES நைட்ரஜன் கசிவின் அபாயங்கள் இந்த மரணதண்டனை மூலம் பேரழிவு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதைக் குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் பிரச்சாரகர்கள் எச்சரித்துள்ளனர். வலிப்பு ஏற்பட்டு உயிர் போகாமல், கோமா நிலைக்குள் செல்வது முதல் முகமூடியிலிருந்து வாயு கசிந்து, ஸ்மித்தின் ஆன்மீக ஆலோசகர் உட்பட அறையில் உள்ள மற்றவர்களைக் கொல்லும் வாய்ப்பு கூட இருக்கிறது என எச்சரித்துள்ளனர். "ஸ்மித் இறப்பதற்கு பயப்படவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் அதை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் இந்த மரண தண்டனை முறையின் மூலமாக தான் மேலும் சித்திரவதை செய்யப்படுவோமோ என அவர் பயப்படுகிறார் என்று நான் நினைக்கிறேன்," என்று அவரது ஆன்மீக ஆலோசகர் மற்றும் ரெவ் டாக்டர், ஜெஃப் ஹூட் கூறுகிறார். நைட்ரஜன் கசிவின் அபாயங்களை பட்டியலிடும் மாநிலத்தின் சட்டப்பூர்வ பொறுப்புத் துறப்பு அறிக்கையில் அவர் கையெழுத்திட்டுள்ளார். "நான் அவரிடமிருந்து பல அடி தூரத்தில் இருப்பேன், என் உயிரைப் பணயம் வைத்து இதைச் செய்கிறேன் என்று பல்வேறு மருத்துவ நிபுணர்கள் பலமுறை எச்சரித்துள்ளனர். குழாயில் ஏதேனும் கசிவு ஏற்பட்டால், நைட்ரஜன் அறைக்குள் பரவுவதற்கு அது வழிவகுக்கும்" என்று டாக்டர் ஹூட் பிபிசியிடம் கூறினார். இந்த மரண தண்டனை முறை குறித்து விசாரணைக் குழு ஒன்று ஐ.நா.வுக்கு அறிக்கை அனுப்பியது. அதில் உறுப்பினராக உள்ள இணை ஆசிரியர் ஒருவர் இந்த முறை மிகவும் ஆபத்தானது என்று கூறுகிறார். எமோரி யுனிவர்சிட்டியின் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மயக்கவியல் துறையில் இணைப் பேராசிரியரான டாக்டர் ஜோயல் சிவோட், "அலபாமா சிறைச்சாலை அதிகாரிகள் 'கொடூரமான' மரணதண்டனைகள் மற்றும் அதன் மூலம் கிடைத்த 'பயங்கரமான' சாதனைகளுக்கு பெயர் போனவர்கள்" என்று குற்றம் சாட்டினார். "மொத்த அமெரிக்காவில் கென்னத் ஸ்மித் தான் மிக மோசமான மனிதர் என நாமே கற்பனை செய்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஏனென்றால் அலபாமா சிறைச்சாலை அவரைக் கொல்வதில் மிகவும் முனைப்பாக உள்ளது. அவரைக் கொல்லும் முயற்சியில் அவர்கள் மற்றவர்களைக் கொல்லக் கூட தயாராக இருக்கிறார்கள்" என்று டாக்டர் ஜோயல் பிபிசியிடம் கூறினார். "துப்பாக்கிச் சூடு மூலம் மரணதண்டனை பெறப்போகும் நபருக்கு அருகில் அனைத்து சாட்சிகளையும் அதிகாரிகளையும் வரிசையாக நிற்க வைப்பதாக கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் அனைவரையும் உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் இல்லை என்று சொல்லி பொறுப்புத் துறப்பு பாத்திரத்தில் கையெழுத்திட சொல்கிறார்கள்" "ஏனென்றால் துப்பாக்கியால் சுடப்போகும் நபர்களுக்கு சரியாகத் சுடத் தெரியாது. அதனால் அவர்கள் உங்களையும் சுட்டுக் கொல்லும் வாய்ப்பு உள்ளது என்று சொன்னால் எப்படி இருக்கும். இதுவே நைட்ரஜன் வாயு தண்டனை முறையில் நடக்கிறது" என்று அவர் கூறினார். "நைட்ரஜன் வாயுவைப் பற்றி நாம் அறிந்தது என்னவென்றால், ஆரோக்கியமான தன்னார்வலர்கள் கொண்டு நடத்தப்பட்ட தொடக்க ஆய்வில், கிட்டத்தட்ட அனைவருக்கும், வாயுவை சுவாசித்த 15 முதல் 20 வினாடிகளில் ஒரு வலிப்பு ஏற்பட்டது," என்று அவர் கூறினார். அத்தகைய சூழ்நிலையில், ஸ்மித் சுயநினைவை இழக்கலாம் அல்லது தொடர்ச்சியான மோசமான வலிப்புகளால் பாதிக்கப்படலாம். படக்குறிப்பு, அலபாமாவில் உள்ள சிறையில் மரணதண்டனை பெற்று, தனது இறுதி நாட்களை கழித்து வருகிறார் ஸ்மித். தோல்வியில் முடிந்த மரணதண்டனை முயற்சிகள் அமெரிக்காவில் அதிகபட்ச தனிநபர் மரணதண்டனை விகிதங்களை உடைய மாகாணங்களில் அலபாமாவும் ஒன்றாகும், தற்போது அங்கு 165 பேர் மரணதண்டனைப் பெற்று சிறையில் உள்ளனர். 2018ஆம் ஆண்டு முதல், வெவ்வேறு கைதிகளுக்கு மூன்று முறை விஷ ஊசி மூலமாக மரணதண்டனை நிறைவேற்றும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கு அரசு பொறுப்பேற்றுள்ளது. இத்தோல்விகள் ஒரு உள் ஆய்வுக்கு வழிவகுத்தது, அதன் முடிவில் கைதிகள் மீதே குற்றம் சாட்டப்பட்டது. கடைசி நேரத்தில் மரணதண்டனையை நிறுத்தி வைப்பதற்காக, அவசர நீதிமன்ற மேல்முறையீடுகள் மூலம் கைதிகளின் உயிரைக் காப்பாற்ற வழக்கறிஞர்கள் முயன்றதாகவும் அந்த ஆய்வு கூறியது. இத்தகைய செயல்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டும் என ஒரு 'தேவையற்ற காலக்கெடு அழுத்தத்தை' சிறை ஊழியர்களுக்கு ஏற்படுத்தியதாக கூறியது. இப்போது ஸ்மித்தின் தண்டனையை நிறைவேற்ற அதிக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறை கொலைகளை நிறுத்தும் அதிகாரம் கொண்ட அலபாமா ஆளுநர் கே ஐவி, நிபுணர்கள் எச்சரிக்கைகள் மற்றும் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஐ.நா.வின் கவலைகள், கைதி ஸ்மித்தின் கவலைகள் போல் ஆதாரமற்றவை என்று அட்டர்னி ஜெனரல் அலுவலகம் கூறியிருக்கிறது. அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "விசாரணை நீதிமன்றம் ஸ்மித்தின் கேள்விகளை ஆராய்ந்தது, பல மருத்துவ நிபுணர்களிடமிருந்து கருத்து கேட்டது, மேலும் நைட்ரஜன் ஹைபோக்ஸியா பற்றிய ஸ்மித்தின் கவலைகள் 'வெறும் ஊகம்' மற்றும் 'கோட்பாட்டு ரீதியிலானது' மட்டுமே என்று தீர்மானம் எடுக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "ஜனவரி 25ஆம் தேதி அவரது மரணதண்டனையை நாங்கள் நிறைவேற்ற விரும்புகிறோம்" என கூறப்பட்டுள்ளது. நைட்ரஜன் வாயு மூலம் மரணதண்டனையை அங்கீகரிக்க ஆதரவாக வாக்களித்த குடியரசுக் கட்சியின் மாநில சட்டமன்ற உறுப்பினர் ரீட் இங்க்ராம், ஐ.நாவின் விமர்சனத்தை நிராகரித்தார். "இழிவுபடுத்துவது பற்றி எனக்குத் தெரியாது, மனிதாபிமானமற்றது பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் தண்டனை முறையை நாங்கள் மேம்படுத்துகிறோம் என்று நினைக்கிறேன். கொல்லப்பட்ட பெண்ணிற்கு அவர் செய்ததை விட இந்த தண்டனை முறை சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் பிபிசியிடம் கூறினார். மேலும், "எங்கள் ஆளுநர் ஒரு கிறிஸ்தவர். அவர் இந்த முழு விஷயத்தை குறித்தும் தீவிரமாக விவாதித்தார். இது சரியான முறை தான் என அவர் நினைக்கிறார். இது சற்று மனதை உலுக்கும் கனமான முடிவு தான், ஆனால் அது தானே சட்டம்" என்று கூறினார் ரீட் இங்க்ராம். எலிசபெத் சென்னட்டின் குடும்பத்தினரை பிபிசி அணுகியது, ஆனால் வியாழக்கிழமை வரை எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டோம் என்று அவர்கள் கூறினார்கள். 1996இல் ஒரு நடுவர் மன்றம் ஸ்மித்திற்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனையை பரிந்துரைத்தது, ஆனால் நீதிபதி அதை நிராகரித்து அவருக்கு மரணதண்டனை விதித்தார். வழக்கு விசாரணையில், எலிசபெத் கொல்லப்பட்டபோது உடனிருந்ததை ஒப்புக்கொண்ட ஸ்மித், ஆனால் அந்த கொலையில் தான் பங்கேற்கவில்லை என்று கூறியிருந்தார். https://www.bbc.com/tamil/articles/cmmg411lpymo
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவில் கடும் மோதல்கள் தொடர்கின்றன - ஒரேநாளில் 24 இஸ்ரேலிய படையினர் பலி Published By: RAJEEBAN 23 JAN, 2024 | 04:14 PM காசாவில் திங்கட்கிழமை இடம்பெற்ற மோதலில் 24 படையினரை இழந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இரண்டு கட்டிடங்களிற்கு அருகில் நின்றுகொண்டிருந்த இஸ்ரேலிய டாங்கிகளை இலக்குவைத்து பாலஸ்தீன போராளிகள் ஆர்பிஜி தாக்குதலை மேற்கொண்டதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கட்டிடமொன்றை அழிப்பதற்காக கண்ணிவெடிகளை வைத்துவிட்டு இஸ்ரேலிய படையினர் காத்திருந்தனர் அவ்வேளை ஆர்பிஜி விழுந்து வெடித்ததில் கட்டிடத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டது என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர். மத்திய காசாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/174629
-
50 வருடங்களுக்கு முன் பெற்ற மாற்று சிறுநீரகம் – 108 வயதிலும் ஆரோக்கியம்
வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள நகரம் ஹவுட்டன் லெ ஸ்ப்ரிங். ஹவுட்டனில் வசித்து வருபவர் சூ வெஸ்ட்ஹெட். அவருக்கு தற்போது 108 வயது ஆகிறது. தனது 12-ஆவது வயதில் உடல்நலம் பிரச்சினையால் அவதிப்பட்ட வெஸ்ட்ஹெட்டிற்கு சிறுநீரக நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, 25 ஆவது வயதில் டயாலிசிஸ் செய்து கொள்ள தொடங்கினார். நீண்ட சிகிச்சைக்கு பிறகும் அவருக்கு நோய் தீரவில்லை. 1970களின் தொடக்கத்தில் வெஸ்ட்ஹெட்டிற்கு சிறுநீரகத்துறை சிகிச்சை நிபுணர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர். 1973 இல் வெஸ்ட்ஹெட்டின் தாயார் ஆன் மெட்கால்ஃப் சிறுநீரகம் தர முன்வந்ததையடுத்து முறையான பரிசோதனைக்கு பின்னர் அறுவை சிகிச்சை நடந்து தாயாரின் சிறுநீரகம், வெஸ்ட்ஹெட்டிற்கு பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை ரோயல் விக்டோரியா மருத்துவமனையில் நடந்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், அடுத்த 5 வருடங்களுக்கு கூட தான் உயிருடன் இருக்க முடியும் என வெஸ்ட்ஹெட் அப்போது நம்பவில்லை. ஆனால், 50 வருடங்கள் கடந்தும், எந்தவிதமான சிறுநீரக சிக்கலும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார், வெஸ்ட்ஹெட். இந்த நிகழ்வு, தற்போது வெஸ்ட்ஹெட்டிற்கு உடல்நல மேற்பார்வையும் ஆலோசனையும் வழங்கி வரும் சண்டர்லேண்ட் ரோயல் மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது. மிகவும் மகிழ்ச்சியுடன் அங்கு வந்திருந்த வெஸ்ட்ஹெட்டுடன் உரையாடிய அங்குள்ள மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவமனை பணியாளர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மக்கள் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். https://thinakkural.lk/article/289077
-
உலகின் முதலாவது மலேரியா தடுப்பூசி திட்டம் கமரூனில் ஆரம்பம்
Published By: DIGITAL DESK 3 23 JAN, 2024 | 04:59 PM ஆபிரிக்க நாடான கமரூனில் மலேரியாவுக்கு எதிரான உலகின் முதலாவது தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திங்களன்று கமரூனின் தலைநகாரான யவுண்டே அருகே உள்ள சுகாதார நிலையத்தில் டேனியலா என்ற பெண் குழந்தைக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 600,000 பேர் மலேரியாவால் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 80 சதவீதம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கமரூன் அரசாங்கம், ஆறு மாதங்கள் நிறைவடைந்த அனைத்து குழந்தைகளுக்கும் RTS,S தடுப்பூசியை இலவசமாக வழங்குகிறது. மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மொத்தம் நான்கு தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். எனவே, தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் முறையை பெற்றோர்களுக்கு இலகுப்படுத்தும் வகையில் மற்றைய வழக்கமான குழந்தை பருவ தடுப்பூசிகள் போடப்படும் அதே நேரத்தில் குறித்த தடுப்பூசியும் போடப்படும் என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். கென்யா, கானா மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. அங்கு தடுப்பூசி மூலம் மலேரியா உயிரிழப்புகள் 13 சதவீதம் குறைந்துள்ளது என யுனிசெப் தெரிவித்துள்ளது. தடுப்பூசி குறைந்தது பாதிக்கப்பட்ட 36 சதவீதமானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அறியப்படுகிறது. அதாவது, மூன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த தடுப்பூசி சந்தேகத்திற்கு இடமின்றி உயிர் காக்கும் ஒரு நிவாரணமாக இருந்தாலும், இது ஒரு மந்திர ஆயுதம் அல்ல என கென்யாவின் மலேரியா நோய்த் தடுப்பு சபையின் வைத்திய நிபுணர் வில்லிஸ் அக்வாலே தெரிவித்துள்ளார். ஆனால் வைத்தியர்களுக்கு இது மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தில் நுளம்பு வலைகள் மற்றும் மலேரியா மாத்திரைகளுடன் ஒரு முக்கியமான மருந்தாகும். எனவே, இந்த மூன்றையும் ஒன்றாகப் பயன்படுத்துவது குழந்தைகளுக்கு மலேரியாவிலிருந்து 90 சதவீத பாதுகாப்பை அளிக்கும் என்று இங்கிலாந்து தலைமையிலான ஆய்வு ஒன்று மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. "மலேரியா நோயாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கும் திறன் மற்றும் நோயை அகற்றுவதை துரிதப்படுத்தும் திறன் எங்களிடம் உள்ளது" என கமரூனில் தடுப்பூசி வெளியீட்டை வழிநடத்தும் வைத்தியர் ஷாலோம் என்டோலா தெரிவித்துள்ளார். RTS,S தடுப்பூசியின் தயாரிக்க பிரித்தானிய மருந்து தயாரிப்பாளரிப்பு நிறுவனமான ஜிஎஸ்கேவிற்கு 30 வருடங்கள் ஆகியுள்ளது. நுளம்புகளால் பரவும் நோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் கமரூனில் தடுப்பூசி அறிமுகம் ஒரு வரலாற்று தருணம் என தடுப்பூசிக்கு அனுமதி வழங்கி உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டியுள்ளது. இதேவேளை, இம்மாத தொடக்கத்தில் மற்றொரு முக்கிய நிகழ்வு இடம் பெற்றுள்ளது. அதாவது, 50 வருட கால வரலாற்றில் உலக சுகாதார அமைப்பால் அதிகாரப்பூர்வமாக மலேரியா நோய் இல்லாத முதல் துணை-சஹாரா ஆப்பிரிக்க நாடாக கேப் வெர்டே அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/174612
-
புதுச்சேரியில் கட்டி முடித்த ஒரே மாதத்தில் சீட்டுக்கட்டாக சரிந்த கட்டடம் - என்ன காரணம்?
திடீரென சரிந்து வீழ்ந்த புதிதாக கட்டப்பட்ட 3 மாடி வீடு Published By: DIGITAL DESK 3 23 JAN, 2024 | 03:45 PM தமிழ்நாட்டில் புதுச்சேரியில் திங்கட்கிழமை வாய்க்காலில் தோண்டப்பட்ட பள்ளத்தின் காரணமாக புதிதாக 3 மாடி கட்டிமுடிக்கப்பட்ட வீடொன்று திடீரென சரிந்து வீழ்ந்து தரைமட்டடமாகியுள்ளது. புதுமனைப் புகுவிழா நடைபெற இருந்த நிலையிலேயே இவ்வாறு குறித்த வீடு இடிந்து விழுந்துள்ளது. தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. புதுச்சேரியில் நகரத்தின் வாய்க்காலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இன்று மதியம் பெக்கோ இயந்திரம் மூலம் வாய்க்காலின் பக்கவாட்டு பகுதி சீரமைக்கப்பட்டு சுவர் எழுப்புதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக வாய்க்காலின் மண் அகழும் பகுதியில் ஜேசிபி இயந்திரம் ஈடுபட்டது. இதனால் வாய்க்கால் ஓரம் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிர்வு ஏற்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில், திடீரென அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த மூன்று மாடி கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்தது. இதனை சற்றும் எதிர்பாராத அதன் அருகே நின்றிருந்த பொதுமக்கள், பொலிஸார் மற்றும் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் அங்கிருந்து ஓடினார்கள். குறித்த வீட்டுக்கு இன்னும் சில தினங்களில் புதுமனை புகுவிழா நடைபெற இருந்தது. இந்நிலையில் குறித்த புது வீடு சரிந்து வீழ்ந்துள்ளது. வீடு கட்டுமான பணி நிறைவு பெற்றும் கிரகப்பிரவேசம் நடக்காததால் வீட்டின் உள்ளே எவரும் இருக்கவில்லை. வெளியே நின்று இருந்தவர்களும் ஓடியதால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அதிகப்படியான மணல் அள்ளியதன் காரணமாக வீடு இடிந்து விழுந்ததாக குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/174622
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாசின் சிரேஸ்ட தலைவர்கள் காசாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேற இஸ்ரேல் அனுமதி? சிஎன்என் செய்தி Published By: RAJEEBAN 23 JAN, 2024 | 02:14 PM பரந்துபட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஹமாஸ் அமைப்பின் சிரேஸ்ட தலைவர்கள் காசாவிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கும் யோசனையொன்றை இஸ்ரேல் முன்வைத்துள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள இரு தரப்புகள் இதனை சி.என்.என்னிற்கு தெரிவித்துள்ளன. காசாவில் யுத்தம் நான்கு மாதங்களாக நீடிக்கின்ற போதிலும் ஹமாஸ் அமைப்பினை முற்றாக அழிக்க முடியாத நிலையில் இஸ்ரேல் உள்ள சூழ்நிலையிலேயே இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் இதுவரை ஹமாசின் முக்கிய தலைவர்கள் எவரையும் கைதுசெய்யவில்லை, ஹமாசின் போரிடும் திறன் மிக்க 70 வீதமான உறுப்பினர்கள் இன்னமும் உயிருடன் உள்ளனர் என இஸ்ரேல் மதிப்பிட்டுள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே ஒக்டோபர் தாக்குதலின் சூத்திரதாரிகள் என கருதப்படும் ஹமாசின் சிரேஸ்ட தலைவர்கள் காசாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அனுமதிப்பதற்கு இஸ்ரேல் இணங்கியுள்ளது. காசாவிலிருந்து ஹமாசின் சிரேஸ்ட தலைவர்கள் வெளியேறினால் ஹமாஸ் அமைப்பின் காசா மீதான பிடியை அது பாதிக்கும் மேலும் வெளிநாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் தொடர்ந்தும் இலக்குவைக்கமுடியும் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்திற்கு வெளியே பல மத்தியகிழக்கு நாடுகளில் ஹமாஸ்தலைவர்கள் வசிக்கின்றனர். இதேவேளை இஸ்ரேலின் இந்த யோசனையை ஹமாஸ் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு என சிஎன்என் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/174615
-
"கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்" - விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி
கைதி பற்களை உடைத்ததாக புகார் - அம்பை ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் இடைநீக்கம் ரத்து ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களின் பற்களை கற்களால் உடைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட அம்பாசமுத்திரம் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கு நிலுவையில் இருக்கும்போது இடைநீக்கம் ரத்துசெய்யப்பட்டது ஏன்? நடந்தது என்ன? திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் துணைச் சரகத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) பணியாற்றி வந்தவர் பல்வீர் சிங். இவர் அங்கே ஏ.எஸ்.பியாக பணியாற்றி வந்த காலகட்டத்தில், அந்தச் சரகத்திற்குட்பட்ட அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய மூன்று காவல் நிலையங்களுக்கு வரும் விசாரணைக் கைதிகளை தாக்கியதாகவும், அவர்களின் பற்களைப் பிடுங்கியதுடன் வேறு பல துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் 2023 மார்ச் மாதம் மிகப் பெரிதாக வெடித்தது. பணியாளர் தேர்வாணய விதிகள் என்ன சொல்கின்றன? யுபிஎஸ்சி மூலம் அகில இந்தியப் பணிகளில் சேர்பவர்களுக்கான ஒழுங்கு விதிமுறைகள், குற்றம் சாட்டப்படும் ஒரு அதிகாரி எவ்வளவு காலகட்டத்திற்கு இடைநீக்கத்தில் இருக்கலாம் என்பதை வரையறுக்கிறது. அதன்படி, "ஊழல் தவிர்த்த பிற குற்றங்களை எதிர்கொள்ளும் அதிகாரி, ஓராண்டிற்கு மேல் இடைநீக்கத்தில் வைக்கப்பட முடியாது. அந்த கால கட்டத்திற்குள் விசாரணையை முடித்து, உரிய நடவடிக்கைகளுக்கான ஆணையை அரசு பிறப்பிக்க வேண்டும். இடைநீக்கம் செய்யப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டிற்குள், இந்த நடவடிக்கைகள் நிறைவடையவில்லையெனில், அந்த அதிகாரியின் இடைநீக்கம் தானாகவே ரத்தாகிவிடும்". ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அதிகாரிகளை மட்டும் இரண்டாண்டுகளுக்கு இடைநீக்கத்தில் வைத்திருக்கலாம். தமிழ்நாடு அரசு ரகசியம் காப்பது ஏன்? என கேள்வி சம்பந்தப்பட்ட அதிகாரி மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கையை எடுத்து, உரிய அறிக்கையைத் தாக்கல் செய்யாதது யார் தவறு எனக் கேள்வியெழுப்புகிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திஃபேன். "இடைநீக்கத்திற்கு கால வரம்பு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இந்த காலகட்டத்திற்குள் உரிய நடவடிக்கையை எடுக்காதது யார் தவறு? முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் துறை இது. அவர் பதில் அளிப்பாரா? தேர்தல் வரும்போது என்னவெல்லாம் சொன்னார்களோ அதற்கு மாறாகச் செயல்படுகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி அமுதா அளித்த அறிக்கை ஏன் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது? அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு ஒன்பது மாதங்களாகியும் எந்த நடவடிக்கை முடிவும் ஏன் எடுக்கப்படவில்லை? இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்டது. அது தொடர்பாக இப்போதுவரை அரசு பதிலளிக்கவில்லை. இதுபோல 1990களின் துவக்கத்தில் தூத்துக்குடியில் ஏடிஎஸ்பியாக இருந்த ஒரு அதிகாரி மீது சரியாக நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தான், அவர் தொடர் தவறுகளில் ஈடுபட்டுக் கொண்டே சென்றார். இந்த அதிகாரியும் அப்படி ஆகிவிடுவாரோ என்ற அச்சம் இருக்கிறது. அமுதா அளித்த அறிக்கை வெளியில் வரவில்லை, காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகள் வெளியில் வரவில்லை, ஆனால் இடைநீக்கம் குறித்த செய்திகள் மட்டும் கசிய விடப்படுகின்றன என்றால் என்ன அர்த்தம்? இந்த அரசு யார் பக்கம் இருக்கிறது?" எனக் கேள்வியெழுப்புகிறார் ஹென்றி திஃபேன். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பல்வீர் சிங் 2020ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்றவர். தமிழ்நாடு பிரிவில் இடம்பெற்ற அவர், அம்பாசமுத்திரத்தில் பயிற்சி ஏஎஸ்பியாக பணியாற்றி வந்த காலகட்டத்தில் இந்த விவகாரம் வெடித்தது. https://www.bbc.com/tamil/articles/cqv6e46x152o
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது மீண்டும் அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் - கடும் எச்சரிக்கை Published By: RAJEEBAN 23 JAN, 2024 | 11:02 AM யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை இலக்குவைத்து அமெரிக்காவும் பிரிட்டனும் மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலத்தடி சேமிப்பகங்கள் அவர்களின் ஏவுகணை மற்றும் கண்காணிப்பு நிலைகள் மீது எட்டுக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. ஹெளத்திகிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அவசியமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக கூட்டறிக்கையொன்று தெரிவித்துள்ளது. செங்கடலில் பதற்றத்தை தணித்து இயல்புநிலையை உருவாக்குவதே எங்களின் நோக்கம் உலகின் மிகவும் முக்கியமான நீர்நிலையில் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில் உயிர்களையும் சுதந்திரமாக வர்த்தகம் நடைபெறுவதையும் பாதுகாக்க நாங்கள் தயங்கமாட்டோம் என்ற எங்களின் எச்சரிக்கையை ஹெளத்தி தலைமைத்துவத்திற்கு மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றோம் என அமெரிக்காவும் பிரிட்னும் தெரிவித்துள்ளன. யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள எட்டாவது தாக்குதல் இது .பிரிட்டனுடன் இணைந்து மேற்கொண்ட இரண்டாவது தாக்குதல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. யுஎஸ்எஸ் ஐஸ்னோவரிலிருந்து சென்ற விமானங்களே தாக்குதலை மேற்கொண்டுள்ளன. https://www.virakesari.lk/article/174589
-
வைத்தியர்கள் நாளை முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு!
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர். வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை இந்த மாதம் முதல் 35,000 ரூபா முதல் 70,000 ரூபா வரை அதிகரிப்பதாக அரசாங்கம் முன்னதாக உறுதியளித்திருந்தது. எவ்வாறாயினும், குறித்த மேலதிக கொடுப்பனவை வழங்காதிருப்பதற்கு தற்சமயம் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதன் அடிப்படையில், தாம் நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதேநேரம், வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபா மேலதிக கொடுப்பனவு தமக்கும் வழங்கப்பட வேண்டுமென கோரி, தாதியர்கள், ஆய்வக தொழில்நுட்ப நிபுணர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் என சுமார் 70இற்கும் அதிகமான மருத்துவ துறைசார் தொழிற்சங்கத்தினர் அண்மையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். https://thinakkural.lk/article/289123