Everything posted by ஏராளன்
-
கண்டி உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி
உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி Dec 18, 2025 - 07:57 PM கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உடுதும்பரை பிரதேச செயலகப் பிரிவின் உடுதும்பரை பகுதியில் 308 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும், உடுதும்பரை பிரதேச செயலகப் பிரிவின் பொப்பிட்டிய பகுதியில் 234 மி.மீ, நுகதென்ன பகுதியில் 221 மி.மீ மற்றும் கைகாவல பகுதியில் 218 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன. உடுதும்பரை பகுதியில் மண்சரிவுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்படுவதால் மண்சரிவு அபாயம் நிலவுவதாகவும், அப்பகுதி மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கோரிக்கை விடுத்துள்ளது. நிலவும் மழை நிலைமையால் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவுக்கான 'வெளியேற்றல்' (சிவப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதன் புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார். இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்பரை, மெததும்பரை மற்றும் மினிப்பே ஆகிய பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன மற்றும் மதுரட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் பெய்த கடும் மழையினால் பல பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதால், வீடுகள் அல்லது கட்டிடங்களில் வெடிப்புகள் காணப்பட்டால் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என வசந்த சேனாதீர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். அப்பகுதிகளில் மீண்டும் மண்சரிவு அல்லது மண்மேடு சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவ்விடங்களைத் தவிர்த்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjbjbw6b02w2o29nu17fjd93
-
மதுவுக்காக இரண்டு மாதக் குழந்தையை விற்ற தாய்
மதுவுக்காக இரண்டு மாதக் குழந்தையை விற்ற தாய் Published By: Digital Desk 2 18 Dec, 2025 | 04:37 PM மதுபானம் வாங்குவதற்காக தனது சொந்த மகனை தாய் ஒருவர் விற்ற சம்பவம் இந்தியாவின் தெலுங்கானாவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நிஜாமாபாத் எல்லம்மா குட்டா பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் - லெட்சுமி தம்பதிக்கு 2 மாத ஆண்குழந்தை உள்ளது. மதுப் பழக்கத்திற்கு அடிமையான குழந்தையின் தாயார் மது அருந்துவதற்கு பணம் இல்லாததால் தனது கணவருக்கு தெரியாமல் குழந்தையுடன் தலைமறைவானார். பிறந்து இரண்டு மாதமே ஆன குழந்தையை 2 பெண்களின் உதவியுடன் புனேயைச் சேர்ந்த எ ர் நிறுவன ஊழியருக்கு இந்திய மதிப்பில் ரூ.2.4 இலட்சத்திற்கு விற்றுள்ளார். எனினும் அந்த பெண்ணின் கணவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. தாய் உட்பட குழந்தையை விலைக்கு வாங்கிய தரப்பினரை அந்த மாநில பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/233735
-
119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்
119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் Dec 18, 2025 - 04:48 PM 119 அவசர அழைப்பு இலக்கம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பது மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான ஏனைய குறுந்தொலைபேசி இலக்கங்கள் குறித்து தெளிவுபடுத்தி இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். '119' அவசர அழைப்பு சேவைக்குக் கிடைக்கும் அழைப்புகளை ஆராயும்போது, பொலிஸார் உடனடியாகச் செயற்பட வேண்டிய முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, பொய்யான முறைப்பாடுகள் மற்றும் ஏனைய அவசர சேவைகளுக்குப் பாரப்படுத்த வேண்டிய முறைப்பாடுகளையும் இந்த அழைப்பு மையத்திற்கு வழங்கி, அதனைத் தவறாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உண்மையான அவசர சந்தர்ப்பங்களில் 119 அவசர அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவடைவதுடன், இவ்வாறான தேவையற்ற முறைப்பாடுகளுக்காக நேரத்தைச் செலவிடுவதன் மூலம், பொலிஸாரின் உடனடி உதவி தேவைப்படும் அத்தியாவசிய அவசர முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கும் திறன் பாதிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த 119 அழைப்பு இலக்கத்திற்கு போலித் தகவல்களை வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரச உத்தியோகத்தர் ஒருவருக்குத் தெரிந்தே பொய்யான தகவல்களை வழங்குவது இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பொலிஸாரின் நேரடி உதவி அவசியமில்லாத ஏனைய நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கு அந்தந்த நிறுவனங்களுக்குரிய குறுந்தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்துமாறும், இந்த அவசர அழைப்பு இலக்கத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 01. Police Emergency Service - 119 02. Ministry Of Child Development and Women's Affairs (Women Help Line) - 1938 03. Ministry Of Child Development and Women's Affairs (Child Help Line) - 1929 04. Fire and Rescue Service - 110 05. National Transport Commission - 1955 06. Drug Organized Crime Issues Emergency Notification unit - 1997 07. The Bureau for the Prevention and Investigation of Abuse of Children and women - 109 08. Emergency Call Center (Tamil Medium) - 107 09. Commission to Investigate Allegations of Bribery or Corruption - 1954 10. Expressway Emergency - 1969 11. Department of Immigration and Emigration - 1962 12. National Dangerous Drug Control Board - 1984 13. Sri Lanka Bureau Of foreign Employment - 1989 14. National Help Desk (Ministry of Defance) - 118 15. Disaster Management Call Center - 117 16. Sri Lanka Tourism - 1912 17. Government Information Center - 1919 https://adaderanatamil.lk/news/cmjbckst002voo29n0l3czd9u
-
சூரிய குடும்பத்தைவிட பல கோடி ஆண்டுகள் பழமையான வால் நட்சத்திரம் கண்டுபிடிப்பு
3I/ATLAS: பூமியை நெருங்கும் வால்மீன் - இதை வேற்றுகிரக விண்கலம் எனப் பலரும் சந்தேகித்தது ஏன்? பட மூலாதாரம்,NASA, ESA, David Jewitt (UCLA) படக்குறிப்பு,நாசாவின் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி கடந்த நவம்பர் 30ஆம் தேதியன்று படம்பிடித்த 3ஐ/அட்லஸ் வால்மீனின் புகைப்படம் கட்டுரை தகவல் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் "டிசம்பர் மாதத்தில் வால்மீன் வந்து பூமியின் மீது மோதி அழிவு ஏற்படப் போகிறது" என்று கவலைப்பட்டுக்கொண்டே கேட்டார் எனக்கு அழைத்த ஒரு சிறுமி. அதேபோல, ஒரு பதின்ம வயது மாணவர், "வேற்றுகிரகவாசிகள் வேவு பார்க்க வருகிறார்கள்," என்று உறுதிபடப் பேசினார். வாராது வந்த மாமணியைப் போல, சூரிய குடும்பத்திற்குள் திடீரென வந்துள்ள 3I/Atlas என்று அழைக்கப்படும் வால்மீன், பல புதிரான தன்மைகள் காரணமாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வால்மீன் ஏன் புதிராக இருக்கிறது? இதுகுறித்துப் பல்வேறு ஊகங்கள் கிளம்புவதற்கும் வானியலாளர்கள் இதைக் கூர்ந்து கவனிப்பதற்கும் என்ன காரணம்? இங்கு விரிவாகக் காண்போம். இந்திய நேரப்படி, வருகின்ற டிசம்பர் 19ஆம் தேதி மாலை சுமார் 4:30 மணிக்கு, '3ஐ/அட்லஸ்' எனும் ஒரு மர்ம வால்மீன் நமது பால்வெளியின் எங்கோ தொலைதூரத்தில் இருந்து வந்து பூமியின் அருகே கடந்து செல்லும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவைப் போல சுமார் இரு மடங்கு தொலைவான, 27 கோடி கிலோமீட்டருக்கு அப்பால் இது கடந்து செல்வதால் வெறும் கண்களுக்குப் புலப்படாது. டிசம்பர் 20 அதிகாலையில், சூரிய உதயத்திற்கு முன்பு, வடகிழக்குத் திசையில் சிம்ம ராசி பகுதியில் உள்ள ரெகுலஸ் எனும் பிரகாசமான "மகம்" நட்சத்திரத்தின் அருகே இது காணப்படும். இதன் ஒளி முழு நிலவைவிட 40 கோடி மடங்கு மங்கலாக இருப்பதால், இதைக் காண குறைந்தபட்சம் 30 சென்டிமீட்டர் குழிலென்ஸ் கொண்ட தொலைநோக்கி தேவைப்படும். 3I/ATLAS: சூரிய குடும்பத்திற்கு வந்துள்ள புதிய விருந்தாளி கடந்த ஜூலை 2 ஆம் தேதி இரவு 21:31 யுடிசி நேரத்தில் (இந்திய நேரம் ஜூலை 3 அதிகாலை 3:01) வெளியிடப்பட்ட சிறுகோள் மின்னணு சுற்றறிக்கை(M.P.E.C. 2025-N12) உலக வானியலாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உலகெங்கும் உள்ள ஐந்து தொலைநோக்கி வலைப்பின்னல் அமைப்பான 'ATLAS' தானியங்கித் தொலைநோக்கி அமைப்பு, பூமிக்கு அருகில் வரும் ஒரு புதிய பொருளைக் கண்டறிந்தது. அதன் காரணமாகவே வானியலாளர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய வான்பொருளாக அது மாறியது. மறுபுறம் சமூக ஊடகங்களில், பல்வேறு கவலைகளும் புனைவுகளும் பரவத் தொடங்கின. சரி, இதற்கெல்லாம் காரணமான அந்த மூன்று புதிர்கள் என்ன? அதில் முதலாவது, 3ஐ/அட்லஸ் வால்மீனின் பாதை. பூமியை எடுத்துக்கொண்டால் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. மேலும் சில வான்பொருட்கள் வட்டமான பாதையில் சுற்றலாம். அதுவே வெகுதொலைவில் இருந்து வரக்கூடிய வால்மீன் போன்ற வான்பொருட்கள் பரவளையத்தில்(Parabolic) சுற்றுகின்றன. ஆனால் இந்த வால்மீனின் பாதை, சூரியனுக்கு அருகே கிட்டத்தட்ட ஒரு நேர்கோட்டைப் போல அமைந்த அதிபரவளையப் பாதையாக உள்ளது. சூரியனின் ஈர்ப்புத் தளையில் கட்டுண்டு இயங்கும் பொருட்கள் அனைத்தும் மூடிய வட்ட, நீள்வட்ட அல்லது பரவளையப் பாதைகளிலேயே செல்லும். அதற்கு மாறாக, அதிபரவளையப் பாதை ஒரு திறந்த பாதை; நேர்கோட்டைப் போன்றது. எனவே, இந்த வான் பொருள் சூரியக் குடும்பத்துக்கு வெளியிலிருந்து வந்தது; அடுத்த சில மாதங்களில் சூரியக் குடும்பத்தை விட்டு வெளியேறும் என்பதும் உறுதியானது. பட மூலாதாரம்,Intl Gemini Observatory/NOIRLab/NSF/Aura/Shadow the Scientist; Processing: J Miller, M Rodriguez, TA Rector, M Zamani இரண்டாவதாக, வால்மீனின் வேகம் ஒரு புதிரான விஷயமாக இருந்தது. பொதுவாக, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவைப் போல சுமார் முப்பது முதல் ஐம்பது மடங்கு தொலைவில் உள்ள கைப்பர் வளையப் பகுதியில், ஐம்பது முதல் இருநூறு ஆண்டுகள் காலத்திற்குள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் வால்மீன்கள் குடிகொண்டுள்ளன. இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான, பத்தாயிரம் லட்சம் வருடங்கள் வரையிலான ஊசல் காலத்தைக் கொண்ட வால்மீன்கள், பூமி-சூரியன் தொலைவைப் போல 2,000 முதல் 2,00,000 மடங்கு தொலைவிலுள்ள ஊர்ட் மண்டலத்தில் இருந்து வருகின்றன. இவற்றின் பாதை நீள்வட்டமாகவோ அல்லது பரவளையமாகவோ அமையும். ஆனால் 3ஐ/அட்லஸ் கண்டுபிடிக்கப்பட்டபோது, இதன் வேகம் மணிக்கு 2,21,000 கிலோமீட்டர் (நொடிக்கு 61 கிமீ) ஆக இருந்தது. சூரியனை நெருங்க நெருங்க இந்த வேகம் கூடியது. அக்டோபர் 30, 2025 அன்று சூரியனுக்கு அருகே 21 கோடி கிலோமீட்டர் தொலைவில் இது கடந்து சென்றபோது, அதன் வேகம் மணிக்கு 2,46,000 கிலோமீட்டர் வரை உயர்ந்தது. மூன்றாவதாக, இந்த வால்மீனில் பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்தான் அதிகமாக உள்ளது. பிற தனிமங்களின் அளவு மிக மிகக் குறைவாக இருக்கிறது. சூரிய குடுமபத்தில் இருக்கும் வான் பொருட்களில் ஹைட்ரஜன், ஹீலியம் மட்டுமே இருக்காது. பிற பொருட்களின் செறிவும் அதிகமாக இருக்கும். இந்த மூன்றையும் வைத்துப் பார்த்தால், 3ஐ/அட்லஸ் வால்மீன் சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது இல்லை என்பதையும் அது வேறு ஏதோவொரு விண்மீன் குடும்பத்தில் உருவாகி சூரிய குடும்பத்திற்குள் வந்திருக்கக்கூடிய ஒரு விருந்தாளி என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. பட மூலாதாரம்,Atlas/University of Hawaii/Nasa படக்குறிப்பு,அட்லஸ் தொலைநோக்கி, பூமியுடன் மோதக்கூடிய வாய்ப்புகளைக் கொண்ட வான்பொருட்களைக் கண்டறிய விண்வெளியை ஆய்வு செய்கிறது. இருப்பினும் 3ஐ/அட்லஸ்ஸால் அத்தகைய ஆபத்து இல்லை என்று வானியலாளர்கள் கூறுகிறார்கள். 3ஐ/அட்லஸ் வால்மீன் எங்கிருந்து வருகிறது? ஒரு பந்து செல்லும் பாதையைப் பார்த்து அது எங்கிருந்து வந்தது என ஊகிக்க முடியும். அதுபோல, இந்த வால்மீனின் வந்த பாதையைக் கணக்கிட்டு, ஒரு கோடி ஆண்டுகள் பின்னோக்கி அது கடந்து வந்த வழியை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இருப்பினும், பால்வெளி மண்டலத்தின் மற்றொரு பகுதியில் இந்த வால்மீன் பிறந்திருக்கலாம் எனத் தெரிய வந்தாலும், எந்தக் குறிப்பிட்ட விண்மீனின் அருகே இது உருவானது என்பதை இன்னும் இனங்காண முடியவில்லை. அதுகுறித்த சமீபத்திய ஆய்வுகள், வயது குறைந்த விண்மீன்கள் நிரம்பிய பால்வெளியின் மெல்லிய வட்டுப் பகுதியிலிருந்தே இது வந்திருக்கலாம் எனக் கூறுகின்றன. இதன் வேகம், பாதை ஆகியவற்றைக் கவனத்தில் கொண்ட விஞ்ஞானிகள், "சுமார் 700 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தொலைதூரத்தில் ஏதோவொரு விண்மீன் பிறக்கும்போது அதனுடன் உருவாகி, விண்மீன்களுக்கு இடையிலான விண்வெளியில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வால்மீன் தற்போது நமது சூரிய மண்டலத்தைக் கடந்து செல்வதாக" கணித்துள்ளனர். இதற்கு முன்னர், 2017இல் கண்டுபிடிக்கப்பட்ட 1ஐ/ஓமுவாமுவா எனும் வால்மீனும், 2019இல் கண்டறியப்பட்ட 2ஐ/போரிசோவ் எனும் வால்மீனும் இதேபோன்ற தன்மைகளைக் கொண்டிருந்தன. எனவே நாம் இதுவரை அறிந்துள்ள தகவல்களின்படி, நமது சூரிய குடும்பத்திற்கு அப்பாலிருந்து வரும் மூன்றாவது வான் பொருளே இந்த 3ஐ/அட்லஸ். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த ஜனவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்ட, ஒளிரும் பச்சை நிறத்தில், கண்ணுக்குத் தெரியும் வால் பகுதியுடன் பயணிக்கும் C/2025 A6 (லெம்மன்) வால்மீன் (கோப்புப் படம்) 3I/ATLAS என்று பெயர் சூட்டப்பட்டது ஏன்? கடந்த சில பத்தாண்டுகளாக பூமியில் மோதுவதற்கான வாய்ப்பு இருக்கக் கூடிய விண்பாறைகள், விண்கற்கள் போன்றவற்றைக் கண்காணிப்பதற்கான வலைப்பின்னல் போன்ற தொலைநோக்கி அமைப்பு செயல்பட்டு வருகிறது. அப்படி இருக்கக்கூடிய ஒரு வலைப்பின்னல் அமைப்பின் பெயர் ஆஸ்டிராய்டு டெரஸ்ட்ரியல் இம்பாக்ட் லாஸ்ட் அலெர்ட் சிஸ்டம் (Asteroid Terrestrial Impact Last Alert System). அதாவது சுருக்கமாக அட்லஸ் (ATLAS). அதன் மூலமாகத்தான் இந்த வால்மீன் அவதானிக்கப்பட்டது என்பதால் அட்லஸ் என்ற பெயர் அதற்குச் சூட்டப்பட்டது. மேலும் ஐ என்பதற்கு இன்டர்ஸ்டெல்லார் என்று பொருள். அதாவது, இரண்டு விண்மீன் குடும்பங்களுக்கு இடையிலுள்ள விண்வெளிப் பகுதியே இன்டர்ஸ்டெல்லார் என்று அழைக்கப்படுகிறது. இந்த வால்மீனும் அந்தப் பகுதியில் காணப்படும் ஒரு வான்பொருள் என்பதால் அதைக் குறிப்பதற்காக ஐ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றோடு, இதுவரை நாம் கண்டுபிடித்துள்ள விண்மீன்களுக்கு இடையிலான வான்பொருட்களில் இது மூன்றாவது பொருள். அதைக் குறிக்கவே 3 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அடிப்படையிலேயே, சூரிய குடும்பத்திற்குள் நுழைந்துள்ள இந்தப் புதிய வால்மீனுக்கு 3ஐ/அட்லஸ் (3I/ATLAS) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Intl Gemini Observatory/NOIRLab/NSF/Aura/K Meech (IfA/U Hawaii); Processing: J Miller, M Zamani படக்குறிப்பு,வால் மீன் 3ஐ/அட்லஸ் சூரிய குடும்பம் வழியாக நகரும்போது அதன் வண்ணமயமான பாதையை ஹவாயில் உள்ள ஜெமினி வடக்குத் தொலைநோக்கி படம்பிடித்தது. ஹார்வர்ட் விஞ்ஞானி முன்வைத்த வேற்றுகிரக விண்கலம் கருதுகோள் இந்த வால்மீனை சிலர் வேற்றுகிரகத்தில் இருந்து வந்திருக்கக்கூடிய ஒரு விண்கலம் என்று சமூக ஊடகங்களில் பேசுகிறார்கள். இத்தகைய பரபரப்பான பேச்சுகளுக்கெல்லாம் தொடக்கமாக இருந்தது, முனைவர் அவி லோப் என்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிதான். இந்த வால்மீன் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், அப்போதிருந்த தகவல்களை அடிப்படையாக வைத்து "இதுவொரு வேற்றுகிரக விண்கலமாக இருக்க வாய்ப்புள்ளது" என்று அவர் கூறினார். இதை ஓர் அளவீட்டை வைத்துப் புரிந்துகொள்ள முயல்வோம். அதாவது, 0 என்றால், அது இயற்கையான வான்பொருள்; 10 என்று கூறினால், அதுவொரு முற்றிலும் செயற்கையான விண்கலம். இத்தகைய மதிப்பீட்டில், அப்போதைக்குத் தம்மிடம் இருந்த தகவல்களை அடிப்படையாக வைத்து, இந்த வான்பொருளுக்கு 4 என்ற மதிப்பீட்டை விஞ்ஞானி அவி லோப் வழங்கினார். அதாவது "பெருமளவுக்கு இயற்கையான வான்பொருளைப் போலத்தான் இருக்கிறது. ஆனால், சில புதிர்களும் இதில் இருக்கின்றன" என்பதே அந்த மதிப்பீட்டிற்கான காரணம். அதில் அவர் புதிர்கள் உள்ளன என்று கூறியதைச் சிலர் ஊதிப் பெரிதாக்கியதால், பல்வேறு விதமான அச்சங்களைக் கிளப்பிவிடக் கூடிய கோட்பாடுகள் பரவி வருவதை நாம் பார்க்கிறோம். அதில் இருப்பதாகச் சொல்லப்பட்ட மர்மங்களில் ஒன்றாக, "செயற்கையாக ஏவப்படும் ராக்கெட் போன்றவற்றின் பாதை பெருமளவுக்கு நேர்க்கோடு போலவே இருக்கும். அதேபோல இந்த 'விண்கலத்தின்' பாதையும் இருகிறது" என்று கூறப்பட்டது. அவி லோப், சூரிய குடும்பத்தில் உள்ள வான்பொருட்களில் இப்படி இருக்க முடியாது என்று ஒரு கருத்தை முன்வைத்தார். முதலில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த வால்மீனின் பாதையை ஆராய்ந்தபோது அதுவொரு நேர்க்கோடு போலத்தான் தெரிந்தது. ஆனால், கிட்டத்தட்ட நேர்க்கோடு போலத் தெரிந்தாலும், அந்த வால்மீன் அதிபரவளையத்தில் சுற்றி வருகிறது என்பது தெரிய வந்தது. பட மூலாதாரம்,M Hopkins/Ōtautahi-Oxford team; Base map: Esa/Gaia/DPAC, S Payne-Wardenaar படக்குறிப்பு,வால் மீன் 3ஐ/அட்லஸ் (சிவப்பு நிறத்தில் காட்டப்பட்ட பாதை), நமது சூரியன் (மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட பாதை) போலவே நமது பால்வெளி மண்டலத்தின் மையத்தைச் சுற்றி வருகிறது. வால்மீனுக்கு வால் தோன்றுவதில் ஏற்பட்ட தாமதம் ஒரு வால்மீனை எடுத்துக்கொண்டால், அதில் பனி போன்றவை இருக்கும். சூரியனில் இருந்து வெகுதொலைவில் இருக்கும்போது மிகவும் குளிர்ந்த நிலையில் அதிக பனியுடன் இருக்கும். அதுவே சூரியனை நெருங்கி வரும்போது வெப்பநிலை உயர்ந்து பனி உருகத் தொடங்கும். அதோடு சேர்த்து, சூரியனில் இருந்து வரும் சூரியக் காற்று காரணமாக, உருகும் பனியால் வால்மீனின் பின்புறத்தில் ஒரு வால் உருவாகும். அந்த வால், சூரியனுக்கு மேலும் நெருக்கமாக வர வரப் பெரிதாகிக் கொண்டே செல்லும். ஆனால், வியப்பளிக்கும் வகையில் இந்த வால்மீன் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் முதல் சில மாதங்களுக்கு வால் தோன்றவே இல்லை. அது மிகவும் புதிரான அம்சமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது பார்த்தால், அந்த வால்மீனில் வால் உருவாகி, வளர்ந்தும் வருகிறது. எனவே அது தற்போது ஒரு முக்கியமான புதிராக இல்லை. ஜூலை 21 அன்று ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி எடுத்த கூர் படங்களில், இது ஒரு கண்ணீர்த்துளி போன்ற வடிவில் சிறு வாலுடன் தென்பட்டது. பின்னர் சூரியனை நெருங்க நெருங்க, அதன் வால் நீண்டுகொண்டே போனது. கடந்த நவம்பரில் சூரியனுக்கு மிக அருகில் இருந்த நிலையில், ஹபிள் தொலைநோக்கி மற்றும் வியாழன் கிரகம் நோக்கிப் பயணிக்கும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் 'ஜூஸ்' (JUICE) விண்கலம் நுட்பமாகப் படம் எடுத்தபோது, வளர்ந்த வால் தெளிவாகத் தென்பட்டது. அவற்றின் மூலம் இதுவொரு வால்மீன்தான் என உறுதிப்படுத்தப்பட்டது. சில வால்மீன்களுக்கு ஏற்படுவது போலவே, சூரியனுக்கு அருகே செல்லும் நிலையில் நவம்பர் மாதத்தில் இதற்கு இரண்டு வால்கள் உருவாயின; தூசும் தும்பும் கொண்ட ஒரு வால் சூரியனுக்கு எதிர்த்திசையிலும், பிளாஸ்மா எனும் அயனி கலவைப் பொருள்கள் நிறைந்த இன்னொரு வால் சூரியன் உள்ள திசையிலும் என எதிரெதிர்த் திசைகளில் முளைத்தன. பட மூலாதாரம்,Nasa/SPHEREx படக்குறிப்பு,ஒளியியல் மற்றும் அருகிலுள்ள அகச்சிவப்பு ஒளியால் வானத்தை ஸ்கேன் செய்யும் நாசாவின் SPHEREx ஆய்வகம், வால் மீன் 3ஐ/அட்லஸ்ஸில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீர் பனிக்கட்டியை அளவிட்டது. விண்கலம் போல திடீரென வேகம் பெற்றது எப்படி? இவைபோக, முன்பு பார்த்தபோது ஒரு நிறத்திலும், பின்னர் வேறொரு நிறத்திலும் தெரிவதாகவும் வால்மீன் பிரகாசமடைவதாகவும், இத்தகைய பிரகாசம் செயற்கை ஒளிகளின் வாயிலாகவே தோன்றியிருக்கும் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. உண்மையில், வால்மீன் சூரியனுக்கு நெருக்கமாக வரும்போது, அதிலுள்ள பனியில் பட்டுப் பிரதிபலிக்கிறது. பொதுவாக, பூமியில் பனி என்றால் அது தண்ணீரால் ஆனது. ஆனால், இத்தகைய வால்மீன்களில், கார்பன் டை ஆக்சைடால் ஆன பனி இருக்கும். அந்தப் பனி சூரியனுடைய வெப்பத்தில் உருகி, வால்மீனை சுற்றி பனிமூட்டம் போலப் படர்ந்திருந்தது. அந்தப் பனிமூட்டத்தில் பட்டு சூரிய ஒளி பிரதிபலிக்கும்போது பிரகாசமாகத் தெரிகிறது. இதன் மூலம், செயற்கை ஒளிகள் அதில் இருப்பதைப் போலத் தெரிந்தது ஒரு தோற்றமயக்கம்தான் என்பது மேலதிக ஆய்வுகளில் நமக்குத் தெளிவாகியுள்ளது. இவற்றைப் போலவே முன்வைக்கப்பட்ட மற்றொரு புதிர், வால்மீனின் வேகம் குறித்தானது. வால்மீன் ஒரு பாதையில், குறிப்பிட்ட வேகத்தில் சீராகச் செல்ல வேண்டும். ஆனால், இந்த வால்மீன் திடீரென வேகமெடுத்து நகர்ந்தது. அது 'எப்படிச் சாத்தியமானது?' என்ற கேள்விகளும் சந்தேகங்களும் வேற்றுகிரகவாசிகளின் விண்கலம் என்ற கருதுகோள் குறித்த பேச்சுகள் ஏற்படக் காரணமாயின. அதோடு, "வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை ஒரு காரணியாக வைத்து, இதுவொரு ராக்கெட் போன்ற பொருள், செயற்கையாக அதில் வேகம் கூட்டப்பட்டுள்ளது" என்றெல்லாம் விவாதங்கள் எழத் தொடங்கின. ஆனால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு இதற்கான உண்மைக் காரணம் தெரிய வந்துள்ளது. அந்த ஆய்வுகளின்படி, வால்மீனில் பனி உருகி வெளியேறும்போது, அதிலுள்ள பல்வேறு விதமான வாயுப் பொருட்கள் வெளியே சிதறுகின்றன. அந்த வாயுப் பொருட்களின் சிதறல் காரணமாகவே வேகம் அதிகரித்தது. அதாவது, ஒரு பலூனை நன்கு ஊதிய பிறகு அதன் மீதுள்ள பிடியை விடுவித்தால் உள்ளிழுத்த காற்றை முழு வேகத்துடன் வெளியேற்றியபடி பறக்கும் அல்லவா, அதேபோல வாயுப் பொருட்கள் வெளியேறும்போது கிடைத்த உந்துதலின் விளைவாகவே வால்மீன் வேகம் பெற்றது. பட மூலாதாரம்,ESO/O. Hainaut படக்குறிப்பு,3I/Atlas வால்மீன் இதுவரை காணப்படாத மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் சீன விண்கலம் எடுத்த புகைப்படத்தில் என்ன தெரிந்தது? ஆரம்பக் கட்டத்தில் பார்க்கும்போது மேலோட்டமான சிவப்பு நிறத்தில் அதன் தூசுகள் தென்பட்டன. அதற்குப் பிறகு கூடுதலான திறன் கொண்ட தொலைநோக்கி மூலமாக ஆய்வு செய்தபோது அது நீல சாயல் கொண்ட நிறத்தையுடையது என்பது தெளிவானது. ஆனால், இந்த வால்மீன் பச்சோந்தியை போலத் தனது நிறத்தை மாற்றிக் கொள்வதாகச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டனர். உண்மையில் அனைத்து வால்மீன்களுக்குமே ஒவ்வொரு தனித்துவமான பண்புகள் இருக்கும். அத்தகைய தனித்துவமான பண்புகளின் பின்னுள்ள காரணங்களைத் தீவிரமான ஆய்வுகளுக்குப் பிறகே அறிய முடியும். அதேபோல, 3ஐ/அட்லஸ் வால்மீனுக்கு சில தனித்துவமான பண்புகள் உண்டு. அவை குறித்த அறிவியல் விளக்கங்களை மேலதிக ஆராய்ச்சிகளில்தான் நாம் தெரிந்துகொள்ள முடியும். சமீபத்தில் செவ்வாய் கோளை சுற்றி வரும் சீனாவின் தியான்வென்-1 விண்கலத்தின் உயர்தெளிவுத் திறன் கொண்ட கேமரா உதவியுடன் 3ஐ/அட்லஸ் வால்மீனை புகைப்படம் எடுத்துப் பார்த்தார்கள். அந்தத் தெளிவான புகைப்படத்தில், இதுவொரு விண்கலமாக இருப்பதற்கான எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை என்பதும் இயல்பான வால் விண்மீன் என்பதும் நமக்குத் தெரிய வந்துள்ளது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். அதெல்லாம் சரி, ஒரு வால் விண்மீன் குறித்து இவ்வளவு பரபரப்பாகப் பேசப்படுவதற்கு என்ன காரணம்? விஞ்ஞானிகள் இதன்மீது மிகுந்த ஆர்வம் காட்டுவது ஏன்? இதை ஒரு சிறு உதாரணத்துடன் பார்ப்போம். ஓரிடத்தில் கட்டடம் ஒன்றைக் கட்டுகிறார்கள். கட்டடத்தை கட்டி முடித்த பிறகு அந்த இடத்தைச் சுற்றி செங்கல், மண் போன்ற அதைக் கட்டுவதற்குப் பயன்பட்ட பொருட்களின் மிச்சங்கள் கிடக்குமல்லவா! அதேபோல, சூரிய குடும்பத்தில், சூரியன், கோள்கள் ஆகியவை உருவான பிறகு, அவற்றின் உருவாக்கம் போக மிச்சம் எஞ்சியுள்ள வான்பொருட்கள்தான் வால்மீன்களாக, விண்கற்களாக சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றில், சிறு கற்கள், மணல் துகள்கள், கடும் குளிர் நிலையில் உறைந்த கார்பன் டைஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, மீத்தேன் போன்ற எளிதில் ஆவியாகக்கூடிய வாயுக்கள், பனிக்கட்டி வடிவில் உள்ள நீர் ஆகியவை கலந்த கலவையே வால்மீன்கள். சூரியனைச் சுற்றி வரும் வால்மீன்களைப் போலவே, வேறொரு விண்மீன் அருகே கோள்கள் உருவாகும்போது அதோடு சேர்ந்து 3ஐ/அட்லஸ் உருவாகியிருக்க வேண்டும். எனவே, இந்த வால்மீனை ஆய்வு செய்வதன் மூலம், வேறொரு விண்மீன் குடும்பத்திலுள்ள கோள்கள் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பது குறித்தும் அறிய முடியும். இந்த அரிய வாய்ப்புக்காகத்தான், "வாராது வந்த மாமணி" போன்ற இந்த 3ஐ/அட்லஸ் மீது உலகின் கவனம் குவிந்தது. (கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn81d64zznpo
-
டித்வா பேரிடர்: மலையக மக்களின் நிவாரணம், புனர்வாழ்வு, புனர்நிர்மாணத்தில் உடனடி நடவடிக்கை தேவை - மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு வலியுறுத்தல்
டித்வா பேரிடர்: மலையக மக்களின் நிவாரணம், புனர்வாழ்வு, புனர்நிர்மாணத்தில் உடனடி நடவடிக்கை தேவை - மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு வலியுறுத்தல் 18 Dec, 2025 | 02:04 PM ‘டித்வா’ புயலால் ஏற்பட்ட கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக மலையகப் பிரதேசங்கள், குறிப்பாக தோட்டப்பிரதேசங்களில் வாழும் மலையகத் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே வறுமை மற்றும் அபாய நிலைகளில் வாழ்ந்துவந்த இம்மக்கள், இந்தப் பேரிடரால் மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு தெரிவித்துள்ளது. அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரண, புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாணத் திட்டங்கள் மலையக மக்களைச் சென்றடைவதில் பல்வேறு சவால்கள் நிலவுவதாகவும், அவற்றை உடனடியாக தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தெளிவான தகவல் தொடர்பாடல் அவசியம் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் தற்போது முகாம்கள், பாடசாலைகள், உறவினர் வீடுகள் மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளில் தங்கியுள்ளனர். எதிர்காலத்தில் அவர்களுக்கான நிவாரணம், மீள்குடியேற்றம், நிரந்தரத் தீர்வுகள் என்ன என்பது குறித்த தெளிவான தகவல் இல்லாததால், மக்களிடையே அச்சம் மற்றும் மன உளைச்சல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், அனைத்து அனர்த்த நிவாரண மற்றும் மீள்கட்டமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களும் ”தமிழ் மொழியில், உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் வெளியிடப்பட வேண்டும்“ என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலதிக ஆளணி நியமனம் தேவை தோட்டப்பிரதேசங்களில் கிராம சேவையாளர் பிரிவுகள் மிக அதிகமான சனத்தொகையை கொண்டுள்ள நிலையில், ஒரே கிராம சேவையாளருக்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பொறுப்பாக இருப்பது நிவாரணப் பணிகளை தாமதப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ் பேசும் மேலதிக அரச உத்தியோகத்தர்களை தற்காலிகமாக நியமித்து, நிவாரண விண்ணப்பங்கள், சேத மதிப்பீடு மற்றும் சிபாரிசு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நிவாரணத் தகுதிகளில் நெகிழ்வு அவசியம் காணி உரிமை இல்லாமை காரணமாக தோட்ட மக்களுக்குப் பயிர் சேதம், கால்நடை இழப்பு, சிறுதொழில் பாதிப்பு போன்றவற்றிற்கான இழப்பீடுகளைப் பெறுவதில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால், மலையக மக்களின் தனித்துவமான நிலைமைகளை கருத்தில் கொண்டு விசேட சுற்றுநிருபங்கள் மற்றும் நெகிழ்வான தகுதி நிபந்தனைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்ட உட்கட்டமைப்பு மீள்கட்டமைப்பு – அரச பொறுப்பு டிட்வா பேரிடரால் தோட்டப் பிரதேசங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் வீதிகள், பாலங்கள், வடிகால்கள், பாதுகாப்புச் சுவர்கள், முன்பள்ளிகள், மருத்துவ நிலையங்கள் உள்ளிட்ட சமூக உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. இவை பெரும்பாலும் தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் இருந்ததால், மீள்கட்டமைப்பு தாமதமடையும் அபாயம் இருப்பதாகவும், இப்பணிகளை நேரடியாக அரச பொறுப்பில் எடுத்துக் கொண்டு போதிய நிதி ஒதுக்க வேண்டும்** என கோரப்பட்டுள்ளது. காணி மற்றும் வீட்டு உரிமைக்கு நிரந்தரத் தீர்வு மலையக மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் வீடு நிர்மாணத்தில் காணி உரிமை இல்லாமை முக்கிய தடையாக இருப்பதாகவும், இதற்கான தெளிவான கொள்கை தீர்மானங்களை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என சிவில் சமூக கூட்டிணைவு வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாற்று இடங்கள் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூகத் தொடர்புகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக பிரதியமைச்சர் பிரதிப் சுந்தரலிங்கம் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மலையக பிரதிநிதிகள் மனோ கணேசன், இராதாகிருஷ்ணன், ஜீவன் தொண்டமான் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் சாதகமான ஆதரவை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கோரிக்கைகளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, உடனடி தீர்மானங்களைப் பெற அனைத்து அரசியல் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும் என மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/233717
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்
பங்களாதேஷிடம் இலங்கை தோல்வி; அரை இறுதிகள்: இந்தியா - இலங்கை, பங்களாதேஷ் - பாகிஸ்தான் 17 Dec, 2025 | 06:57 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பி குழுவில் இடம்பெறும் பங்களாதேஷ் தோல்வி அடையாத இரண்டாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு எதிராக துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் இன்று புதன்கிழமை (17) நடைபெற்ற பி குழுவுக்கான கடைசிப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 39 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த சுற்றுப் போட்டியில் இலங்கை அடைந்த முதலாவது தோல்வி இதுவாகும். இந்த போட்டி முடிவுடன் பி குழுவில் முதல் இடத்தைப் பெற்ற பங்களாதேஷ் ஏ குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பாகிஸ்தானை முதலாவது அரை இறுதிப் போட்டியில் எதிர்த்தாடும். பி குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை ஏ குழுவில் தோல்வி அடையாமல் முதல் இடத்தைப் பெற்ற இந்தியாவை இரண்டாவது அரை இறுதியில் சந்திக்கும். இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி முன்வரிசை வீரர்களின் சிறந்த பங்களிப்புடன் 46.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீரர் ஸவாத் அப்ரார் 49 ஓட்டங்களையும் ரிபாத் பெக் 36 ஓட்டங்களையும் கலாம் சிதிக்கி 32 ஓட்டங்களையும் பரீத் ஹசன் 29 ஓட்டங்களையும் பெற்றனர். ஸவாத் அப்ரார், ரபாத் பெக் ஆகிய இருவரும் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். தொடர்ந்து அஸிஸுல் ஹக்கிம், கலாம் சிதிக்கி ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் கவிஜ கமகே 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் விரான் சமுதித்த 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரசித் நிம்சார 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இன்றைய போட்டியில் விக்னேஸ்வரன் ஆகாஷுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ஆதம் ஹில்மி, ரசித் நிம்சார ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 56 ஓட்டங்கள் இலங்கை இளையோர் அணியை படுதோல்வியிலிருந்து காப்பாற்றியது. துடுப்பாட்டத்தில் சாமிக்க ஹீனட்டிகல 41 ஓட்டங்களையும் ஆதம் ஹில்மி 39 ஓட்டங்களையும் அணித் தலைவர் விமத் டின்சார 17 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஷஹாரியார் அஹ்மத் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் இக்பால் ஹொசெய்ன் ஏமொன் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சமியுன் பசிர் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: இக்பால் ஹொசெய்ன் ஏமொன் https://www.virakesari.lk/article/233684#google_vignette
-
முட்டையில் ஆபத்தான ஆன்டிபயாடிக் உள்ளதா? - உணவுப் பாதுகாப்புத் துறையின் விளக்கம்
முட்டையில் ஆபத்தான ஆன்டிபயாடிக் உள்ளதா? - உணவுப் பாதுகாப்புத் துறையின் விளக்கம் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் முட்டைகளில் தடை செய்யப்பட்ட நைட்ரோஃபுரான் (Nitrofuran) ஆன்டிபயாடிக் மருந்து உள்ளதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, சென்னை, நாமக்கலில் முட்டை மாதிரிகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். "கடந்த 10 ஆண்டுகளாகத் தடை செய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்தும் வழக்கம் இல்லை," என்று நாமக்கல் மாவட்ட முட்டை ஏற்றுமதியாளர்கள் பிபிசி தமிழிடம் கூறினர். புற்றுநோயைப் பரப்பும் காரணிகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் நைட்ரோஃபுரான் மருந்தை, இந்திய அரசு தடை செய்துள்ளது. இந்தியாவில் எக்கோஸ் (Eggoz) என்ற தனியார் நிறுவனம் முட்டை விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முட்டைகளில் தடை செய்யப்பட்ட நைட்ரோஃபுரான் கலவை இருப்பதாக சர்ச்சை எழுந்தது. உணவுத் தர சோதனைகள் தொடர்பான காணொளிகளை வெளியிடும் யூடியூப் சேனல் ஒன்றில் இதுதொடர்பான விவரங்கள் வெளியாகியிருந்தன. எக்கோஸ் நிறுவன முட்டையை ஆய்வுக்கு உட்படுத்தியபோது ஒரு கிலோவுக்கு 0.74 மைக்ரோகிராம் அளவுக்கு ஏஓஇசட் (a metabolite of nitrofuran antibiotics) கலவை உள்ளதாக காணொளியில் கூறப்பட்டிருந்தது. இந்தியாவில் ஏஓஇசட் கலவையை உணவு உற்பத்தி செய்யும் விலங்குகளில் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. 'ஆபத்தை விளைவிக்கும்' - இந்திய அரசின் எச்சரிக்கை கடிதம் இந்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் ஜெனரல் அலுவலகம் கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், "குளோராம்பெனிகால் (Chloramphenicol), நைட்ரோஃபுரான்ஸ் (Nitrofurans) ஆகிய மருந்துகளை இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல், விநியோகித்தல் மற்றும் உணவு உற்பத்தி செய்யும் விலங்குகள் வளர்ப்பில் பயன்படுத்துதல் ஆகியவை தடை செய்யப்பட்டது குறித்த கடிதம்' என கூறப்பட்டுள்ளது. அதோடு, "உணவு உற்பத்தி செய்யும் விலங்குகள் வளர்ப்பு மையங்களில் இந்த மருந்துகளைப் பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும். இவற்றின் விற்பனை மற்றும் விநியோகத்தின் மீது கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்" எனவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. உணவு உற்பத்தி செய்யக்கூடிய விலங்குகளில் நைட்ரோஃபுரான் மருந்தைப் பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், தங்கள் நிறுவனத்தின் முட்டைகளில் தடை செய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்து உள்ளதாகக் கூறப்படும் தகவலை எக்கோஸ் நிறுவனம் மறுத்துள்ளது. எக்கோஸ் நிறுவனம் கூறியது என்ன? "தங்கள் நிறுவனம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத்தின் விதிகளுக்கு உட்பட்டு இயங்குகிறது. தீவனம் முதல் விநியோகம் வரை முறையான செயல்முறைகளைப் பின்பற்றுகிறோம்," என்று அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வக அறிக்கைகளை தங்கள் இணையதளத்தில் பொதுவெளியில் வைத்துள்ளதாக, எக்கோஸ் நிறுவனம் கூறியுள்ளது. அதோடு, "எக்கோஸ் நிறுவன முட்டை மாதிரிகளின் ஆய்வக அறிக்கைகளை அனைவரின் பார்வைக்காக பொதுவெளியில் பகிர்ந்துள்ளோம். நுகர்வோரின் பாதுகாப்பும் நம்பிக்கையுமே எங்களுக்கு அவசியம். பண்ணைகளில் எப்போதும் உயர்ந்த தரத்தைப் பின்பற்றி வருகிறோம்." எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் முட்டைகளின் மாதிரிகளை ஆய்வங்களுக்கு அனுப்பும் பணியில் உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஈடுபட்டு வருகிறது. சென்னை, நாமக்கலில் ஆய்வு சென்னையில் சுமார் 15 முட்டைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இருப்பதாக, இந்திய உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தென்மண்டல இயக்குநர் வி.கே.பஞ்சாம் தெரிவித்துள்ளார். சென்னையில் விற்பனையில் இருந்த பிராண்டட் முட்டைகளின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறிய அவர், "அடுத்த வாரம் ஆய்வக முடிவுகள் வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், புதன்கிழமையன்று (டிசம்பர் 17) நாமக்கலில் முட்டை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களிடம் இருந்து உணவுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் மாதிரிகளைச் சேகரித்துள்ளனர். தமிழ்நாட்டில் முட்டை ஏற்றுமதி மையமாக நாமக்கல் உள்ளது. இந்த மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டை உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை தினந்தோறும் சுமார் ஆறு கோடிக்கும் அதிகமான முட்டைகளை உற்பத்தி செய்வதாகக் கூறுகிறார், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ். நாமக்கலில் இருந்து பிரிட்டன், ஜப்பான் உள்படப் பல்வேறு நாடுகளுக்கு முட்டைகளை ஏற்றுமதி செய்து வருவதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். 'ஆன்டிபயாடிக் புகார்கள் இதுவரை இல்லை' "முட்டைகள் அவ்வப்போது ஆய்வகங்களுக்குத் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. இருப்பினும் தடை செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் உள்ளது" என்கிறார், நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் தங்க விக்னேஷ். "இதுவரை முட்டைகளில் ஆன்டிபயாடிக் இருந்ததாக ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லை" எனக் கூறிய அவர், "மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அவசியம்." என செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images இதுதொடர்பாக முட்டை உற்பத்தியாளர் சங்கங்களுடன் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விரிவான ஆலோசனை ஒன்றையும் நடத்தியுள்ளனர். ஆய்வின்போது சேகரிக்கப்பட்ட முட்டைகளை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் மருத்துவர் தங்க விக்னேஷ் தெரிவித்தார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட நைட்ரோஃபுரானை கோழிப் பண்ணைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்துவதில்லை எனக் கூறுகிறார், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ். "இந்த மருந்தை கால்நடை மருத்துவர்களும் பரிந்துரைப்பதில்லை. ஆய்வுக்கு முட்டைகளை அனுப்பும்போது தடை செய்யப்பட்ட மருந்து இருந்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை," எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். நாமக்கலில் ஒரு முட்டையின் விலை 6.25 ரூபாயாக உள்ளது. வெளிச் சந்தையில் 7.50 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதைக் குறிப்பிட்டுப் பேசும் சிங்கராஜ், "விலை அதிகமானதால் முட்டை குறித்து தவறான தகவல் பரப்பப்படுவதாகவே நாங்கள் இதைப் பார்க்கிறோம்" என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "குளிர்காலங்களில் முட்டை விற்பனையில் வரக்கூடிய வருமானத்தை வைத்து இழப்பு ஏற்படும் காலங்களில் அதை ஈடு செய்துகொள்கிறோம். மற்ற உணவுப் பொருட்களுடன் ஒப்பிடும்போது இதைச் சாதாரண விலையாகவே பார்க்கிறோம்." என்றார். பட மூலாதாரம்,Getty Images '21 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு' நாமக்கல் மாவட்டத்தில் 21 நாட்களுக்கு ஒருமுறை முட்டைகளை ஆய்வகங்களில் பரிசோதிப்பதாகக் கூறுகிறார், நாமக்கல் கால்நடை அறிவியல் கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் சந்திரசேகர். இவர் கால்நடை உணவியல் துறையில் பணிபுரிந்தவர். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நாமக்கலில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை ஆய்வகம் உள்ளது. அங்கு முட்டைகள் பரிசோதிக்கப்பட்டு சான்று வழங்கப்படுகிறது. இங்கு முட்டைகளில் வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்கம் உள்ளதா என சோதனைகள் நடத்தப்படுகின்றன." என்றார். கோழிகளுக்கு வைட்டமின், தாது சத்து, லிவர் டானிக் போன்றவை கொடுக்கப்படுவதாகக் கூறும் அவர், "நைட்ரோஃபுரான் மூலமாக புற்றுநோய் பரவுவதாக சந்தேகம் உள்ளது. ஆகையால் இந்த மருந்து எந்த வகையிலும் கோழிகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை." எனக் கூறுகிறார். மனித உயிருக்கு ஆபத்தா? நைட்ரோஃபுரான்களை தொடர்ந்து பயன்படுத்துவது மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என, அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. இந்த மருந்தை நீண்டகாலம் பயன்படுத்தும்போது புற்றுநோய், மரபணு பாதிப்பு, ஒவ்வாமை, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறுகிறார், சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தி. "கோழி, மீன் மற்றும் கால்நடைத் தீவனங்களில் இதைப் பயன்படுத்துவதை அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்," எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அதேநேரம், "முட்டையை சாப்பிடுவதற்குத் தயக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையின் குடல் இரைப்பை அறுவை சிகிச்சை மருத்துவர் கேசவன். "குழந்தைகளுக்கு தினசரி ஒரு முட்டை' வழங்க வேண்டும் என்பதை யுனிசெஃப் வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டத்தில் தினசரி ஒரு முட்டை என்பதைச் செயல்படுத்தி வருகின்றனர்" என அவர் குறிப்பிட்டார். "தினமும் குறைந்தது ஒரு முட்டையைச் சாப்பிடும்போது முழு புரதச்சத்து கிடைக்கிறது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக இது உள்ளது" எனக் கூறும் மருத்துவர் கேசவன், "அரசின் ஆய்வக முடிவுகள் வெளியாகும்போது கோழி தீவனத்தில் நைட்ரோஃபுரான் கலக்கப்பட்டதா என்பது தெரிய வரும்" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1kprz17444o
-
தும்பிக்கைக்குள் தவறுதலாக குத்திக்கொண்ட தந்தம் : இறக்கும் நிலைக்கு சென்ற யானை!
இறக்கும் நிலைக்கு சென்ற யானை : காப்பாற்றிய அறக்கட்டளையினர்! 18 Dec, 2025 | 09:58 AM கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கென்யா நாட்டின் சாவோ தேசிய பூங்காவில், ஆண் யானை ஒன்று தனது தந்தத்தை தும்பிக்கையால் வருடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தந்தம் தும்பிக்கைக்குள் குத்திக் கொண்டது. இதனால் அந்த யானை, சுமார் மூன்று நாட்களாக அதே நிலையில் சிக்கி, இரை எடுக்கவும், நீர் அருந்தவும், முறையாக சுவாசிக்கவும் முடியாத நிலையில் இருந்தது. பசி மற்றும் தாகம் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையிலும் யானை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையை அவதானித்த ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை குழுவினர், கென்யா வனவிலங்கு சேவையுடன் இணைந்து மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். அதன்படி, யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்ட பின்னர், தந்தத்தில் சிக்கியிருந்த தும்பிக்கை கவனமாக அகற்றப்பட்டது. மேலும், தும்பிக்கையில் ஏற்பட்டிருந்த காயங்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், யானையின் உயிர் வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/233693
-
பசிபிக் கடலில் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் - 8 பேர் பலி
பசிபிக் கடலில் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் - 8 பேர் பலி 17 Dec, 2025 | 01:48 PM பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச கடல் பகுதியில் பயணித்த மூன்று படகுகளை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் நேற்று (16) இந்தத் தாக்குதலை நடத்தியது. இந்தப் படகுகள் பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் பாதையில் சென்றதாகவும், கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் உளவுத்துறை உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என இராணுவம் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமை காட்டி வரும் நிலையில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படகுகள் இதேபோல் தாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை போதைப்பொருள் படகுகள் இல்லை என்றும் இந்தத் தாக்குதல்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என்றும் விமர்சனம் எழுந்தது. ஆனால், சர்வதேச சட்டங்களின்படியே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பென்டகன் விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/233627
-
19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்
19இன் கீழ் ஆசிய கிண்ணம்: ஆப்கானிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி 17 Dec, 2025 | 06:02 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் ஆறுதல் வெற்றி ஒன்றை பெற்றுக்கொண்டது. 19 வயதுக்குட்பட்ட நேபாள அணிக்கு எதிராக துபாய், தி செவன்ஸ் மைதானத்தில் புதன்கிழமை (17) நடைபெற்ற பி குழு போட்டியில் 6 விக்கெட்களால் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது. பங்களாதேஷ், இலங்கை அணிகளிடம் தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் இன்றைய ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பவுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட நேபாள அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் தில்சாத் அலி 32 ஓட்டங்களையும் சாந்தன் ராம் 27 ஓட்டங்களையும் அபிஷேக் திவாரி 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸய்துல்லா ஷஹீன் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அப்துல் அஸிஸ் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நூரிஸ்தானி ஓமர்ஸாய் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வாஹிதுல்லா ஸத்ரான் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 26.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. உஸைருல்லா நியாஸாய் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 61 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை இலகுவாக்கினார். ஒஸ்மான் சதாத் 28 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் அபிஷேக் திவாரி 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/233682
-
டித்வா சூறாவளி சவால்களைத் தோற்கடித்து இலங்கை விரைவில் மீண்டெழும் – சீன தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர்
பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படச் சீனா தயார் - பிரதமர் ஹரிணியிடம் சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிரந்தரக் குழுவின் உப தலைவர் உறுதி 17 Dec, 2025 | 06:06 PM சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) நிரந்தரக் குழுவின் உப தலைவர் வெங் டொங்மின் (Wang Dongming) மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடையில் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு புதன்கிழமை (17) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டிய துறைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இலங்கை அண்மையில் எதிர்கொண்ட இயற்கை அனர்த்தத்தின் போது சீன அரசாங்கம் வழங்கிய துரித உதவிகளுக்காகப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்ததோடு, அனர்த்தத்தின் பின்னர் இலங்கை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்புதல் மற்றும் மீளக்கட்டியெழுப்பும் கட்டத்திற்குள் பிரவேசித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்ட வெங் டொங்மின், எதிர்வரும் மறுசீரமைப்புப் பணிகளுக்கும் சீனாவின் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என உறுதியளித்தார். பிரதமரின் அண்மைய சீன விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, பாடசாலை சீருடை, உர மானியம், டிஜிட்டல் கல்விச் செயற்பாடுகளுக்கான தொழில்நுட்ப உதவி, வீதி அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அத்துறைகளில் நட்புறவை மேலும் பலப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது. பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படச் சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்த வெங், இந்நாட்டின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகத் தொடர்ச்சியாகப் பங்களிப்பு செய்வதாக உறுதி அளித்தார். பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த உறவை மேலும் பலப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் இதன்போது இணக்கம் தெரிவித்தனர். இந்நிகழ்வில் சீனத் தூதுவர் ஷி ஷென்ஹொங் (Qi Zhenhong), பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமர் அலுவலகத்தினதும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினதும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/233681
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
"Rebuilding Sri Lanka" நிதியத்திற்கு Indra Traders 100 மில்லியன் ரூபா நன்கொடை Dec 17, 2025 - 10:33 PM டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அரசாங்கத்தின் "Rebuilding Sri Lanka" நிதியத்திற்கு Indra Traders (Pvt) Ltd 100 மில்லியன் ரூபா நிதி நன்கொடையை வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை Indra Traders (Pvt) Ltd ஸ்தாபகர்/தலைவர் இந்திரா சில்வா, இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். Indra Traders (Pvt) Ltd பணிப்பாளர் சபை உறுப்பினர்களான ருஷங்க சில்வா, ஹசீந்திர சில்வா மற்றும் பொது முகாமையாளர் சசினி சில்வா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://adaderanatamil.lk/news/cmja9fldh02upo29nqp2497pl
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
ஐபிஎல் 10 அணிகளின் முழு விவரம் - எந்த அணியில் எந்த வீரர்கள்? பட மூலாதாரம்,Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் அபுதாபியில் நடைபெற்ற ஏலத்திற்குப் பிறகு, 2026 ஐபிஎல் அணிகள் இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொடரின் 19-வது சீசனில் 10 அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீரர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. *வெளிநாட்டு வீரர்களைக் குறிக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் எம்.எஸ் தோனி அன்ஷுல் கம்போஜ் குர்ஜப்னீத் சிங் ஜேமி ஓவர்டன்* முகேஷ் செளத்ரி நேதன் எல்லிஸ்* நூர் அகமது* ராமகிருஷ்ணா கோஷ் சஞ்சு சாம்சன் ருதுராஜ் கெய்க்வாட் ஷிவம் துபே ஸ்ரேயாஸ் கோபால் கலீல் அகமது ஆயுஷ் மாத்ரே டெவால் ப்ரெவிஸ்* உர்வில் படேல் கார்த்திக் ஷர்மா பிரசாந்த் வீர் ராகுல் சஹர் மேட் ஹென்றி* அகீல் ஹொசைன்* மேத்யூ ஷார்ட்* ஸாக் ஃபோக்ஸ்* சர்ஃபராஸ் கான் அமன் கான் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜோஸ் பட்லர் டெல்லி கேபிடல்ஸ் அபிஷேக் பொரெல் அஜய் மண்டல் அசுதோஷ் சர்மா அக்ஷர் படேல் துஷ்மந்தா சமீரா கருண் நாயர் கே.எல் ராகுல் குல்தீப் யாதவ் மாதவ் திவாரி மிட்செல் ஸ்டார்க்* முகேஷ் குமார் நிதிஷ் ராணா சமீர் ரிஸ்வி டி. நடராஜன் திரிபுரானா விஜய் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்* விப்ராஜ் நிகம் ஆகிப் நபி தார் பதும் நிசன்கா* கைல் ஜேமிசன்* லுங்கி இங்கிடி* பென் டக்கட்* டேவிட் மில்லர்* பிரித்வி ஷா சாஹில் பராக் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,முகமது சிராஜ் குஜராத் டைட்டன்ஸ் அனுஜ் ராவத் கிளென் ஃபிலிப்ஸ்* குர்னூர் சிங் ப்ரார் இஷாந்த் சர்மா ஜெயந்த் யாதவ் ஜோஸ் பட்லர்* ககிசோ ரபாடா* குமார் குஷாக்ரா மானவ் சுதார் முகமது சிராஜ் முகமது அர்ஷத் கான் நிஷாந்த் சிந்து பிரசித் கிருஷ்ணா ஆர். சாய் கிஷோர் ராகுல் திவாதியா ரஷித் கான்* சாய் சுதர்சன் ஷாருக் கான் சுப்மன் கில் வாஷிங்டன் சுந்தர் ஜேசன் ஹோல்டர்* டாம் பேன்டன்* அஷோக் சர்மா லூக் வுட்* பிரித்விராஜ் யார்ரா பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வருண் சக்கரவர்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அஜிங்க்யா ரஹானே அங்க்ரிஷ் ரகுவன்ஷி அனுகுல் ராய் ஹர்ஷித் ராணா மனிஷ் பாண்டே ரமன்தீப் சிங் ரிங்கு சிங் ரோவ்மன் பவல்* சுனில் நரைன்* உம்ரான் மாலிக் வைபவ் அரோரா வருண் சக்கரவர்த்தி கேமரூன் கிரீன்* மதீஷா பதிரனா* முஸ்தபிஸுர் ரஹ்மான்* தேஜஸ்வி சிங் ரச்சின் ரவீந்திரா* ஃபின் ஆலன்* டிம் செய்ஃபர்ட்* ஆகாஷ் தீப் ராகுல் திரிபாதி தக்ஷ் கம்ரா சர்தக் ரஞ்சன் பிரசாந்த் சோலங்கி கார்த்திக் தியாகி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரிஷப் பண்ட் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அப்துல் சமத் எய்டன் மார்க்ரம்* ஆகாஷ் சிங் அர்ஜுன் டெண்டுல்கர் அர்ஷின் குல்கர்னி ஆவேஷ் கான் ஆயுஷ் பதோனி திக்வேஷ் ராத்தி ஹிம்மத் சிங் மணிமாறன் சித்தார்த் மேத்யூ ப்ரீட்ஸ்கி* மயங்க் யாதவ் முகமது ஷமி மிட்செல் மார்ஷ்* மோசின் கான் நிக்கோலஸ் பூரன்* பிரின்ஸ் யாதவ் ரிஷப் பண்ட் ஷாபாஸ் அகமது ஜாஷ் இங்கிலிஸ்* முகுல் செளத்ரி அக்ஷத் ரகுவன்ஷி ஆண்ரிக் நோர்க்யா* வனிந்து ஹசரங்கா* நமன் திவாரி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அல்லா கசன்ஃபர்* அஷ்வனி குமார் கார்பின் பாஷ்* தீபக் சஹர் ஹர்திக் பாண்ட்யா ஜஸ்ப்ரித் பும்ரா மயங்க் மார்கண்டே மிட்செல் சான்ட்னர்* நமன் திர் ரகு ஷர்மா ராஜ் அங்கத் பாவா ராபின் மின்ஸ் ரோஹித் சர்மா ரயன் ரிக்கில்டன்* ஷர்துல் தாக்கூர் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட்* சூர்யகுமார் யாதவ் திலக் வர்மா டிரென்ட் போல்ட்* வில் ஜாக்ஸ்* குவின்டன் டி காக்* மயங்க் ராவத் அதர்வா அங்கோலேகர் முகமது இஸார் டேனிஷ் மலேவர் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அர்ஷ்தீப் சிங் அஸ்மதுல்லா ஓமர்சாய்* ஹர்னூர் பண்ணு ஹர்பிரீத் ப்ரார் லாகி ஃபெர்குசன்* மார்கோ யான்சன்* மார்கஸ் ஸ்டாய்னிஸ்* மிட்ச் ஓவன்* முஷீர் கான் நேஹல் வதேரா பிரப்சிம்ரன் சிங் பிரியான்ஷ் ஆர்யா பைலா அவினாஷ் ஷஷாங்க் சிங் ஸ்ரேயாஸ் ஐயர் சூர்யான்ஷ் ஷெட்கே விஷ்ணு வினோத் வைஷாக் விஜய்குமார் சேவியர் பார்ட்லெட்* யஷ் தாக்கூர் யுஸ்வேந்திர சஹால் பென் த்வார்ஷுயிஸ்* கூப்பர் கானலி* விஷால் நிஷாத் பிரவின் துபே பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,யஷஸ்வி ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் ராயல்ஸ் துருவ் ஜூரெல் டானவன் ஃபெரீரா* ஜோஃப்ரா ஆர்ச்சர்* க்வேனா மஃபாகா* லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்* நாண்ட்ரே பர்கர்* ரவீந்திர ஜடேஜா ரியான் பராக் சாம் கரண்* சந்தீப் ஷர்மா ஷிம்ரான் ஹெட்மயர்* ஷுபம் துபே துஷார் தேஷ்பாண்டே வைபவ் சூர்யவன்ஷி யஷஸ்வி ஜெய்ஸ்வால் யுத்வீர் சரக் ரவி பிஷ்னோய் ஆடம் மில்ன்* ரவி சிங் சுஷாந்த் மிஸ்ரா குல்தீப் சென் பிரிஜேஷ் ஷர்மா அமன் ராவ் பெரலா விக்னேஷ் புத்தூர் யஷ் ராஜ் புஞ்சா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபிநந்தன் சிங் புவனேஷ்வர் குமார் தேவ்தத் படிக்கல் ஜேக்கப் பெதல்* ஜிதேஷ் ஷர்மா ஜாஷ் ஹேசல்வுட்* க்ருனால் பாண்டியா நுவான் துஷாரா* ஃபில் சால்ட்* ரஜத் படிதார் ரசிக் தார் ரொமாரியோ ஷெப்பர்ட்* சுயஷ் சர்மா ஸ்வப்னில் சிங் டிம் டேவிட்* விராட் கோலி யாஷ் தயாள் வெங்கடேஷ் ஐயர்* மங்கேஷ் யாதவ் ஜோர்டான் காக்ஸ்* கனிஷ்க் சௌஹான் விஹான் மல்ஹோத்ரா விக்கி ஓஸ்ட்வால் சாத்விக் தேஸ்வால் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,விராட் கோலி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபிஷேக் சர்மா அனிகேத் வர்மா பிரைடன் கார்ஸ்* இஷான் மலிங்கா* ஹர்ஷ் துபே ஹர்ஷல் படேல் எய்ன்ரிக் கிளாசன்* இஷான் கிஷன் ஜெய்தேவ் உனத்கட் கமிந்து மெண்டிஸ்* நிதிஷ் குமார் ரெட்டி பேட் கம்மின்ஸ்* ஸ்மரன் ரவிச்சந்திரன் டிராவிஸ் ஹெட்* ஜீஷன் அன்சாரி லியாம் லிவிங்ஸ்டன்* ஜாக் எட்வர்ட்ஸ்* சலில் அரோரா ஷிவம் மாவி கிரைன்ஸ் ஃபுலேத்ரா பிரஃபுல் ஹிங்கே அமித் குமார் ஓன்கர் டார்மலே சகிப் ஹுசேன் ஷிவாங் குமார் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y9xl8exk5o
-
19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்
19இன் கீழ் ஆசிய கிண்ணம்: மலேசியாவை துவம்சம் செய்து தோல்வி அடையாத அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது இந்தியா Published By: Vishnu 17 Dec, 2025 | 01:10 AM (நெவில் அன்தனி) துபாய், தி செவன்ஸ் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற ஆசிய கிண்ண ஏ குழு போட்டியில் மலேசியாவை துவம்சம் செய்து 315 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய இந்தியா, தோல்வி அடையாத அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது. அபிக்யான் அபிஷேக் குண்டு குவித்த ஆட்டம் இழக்காத இரட்டைச் சதம், வேதாந்த் த்ரிவேதி பெற்ற அரைச் சதம், தீப்பேஷ் தேவேந்திரன் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல் என்பன இந்தியாவின் வெற்றியை இலகுவாக்கின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 408 ஓட்டங்களைக் குவித்தது. அபிக்யான் அபிஷேக் குண்டு ஆட்டம் இழக்காமல் 208 ஓட்டங்களையும் வேதாந்த் த்ரிவேதி 90 ஓட்டங்களையும் வைபவ் சூரியவன்ஷி 50 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் முஹம்மத் அக்ரம் 89 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். 409 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசியா 32.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 93 ஓட்டங்களுக்கு சுருண்டது. மத்திய வரிசையில் ஹம்ஸா பங்கி 35 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். பந்துவீச்சில் தீப்பேஷ் தேவேந்த்ரன் 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் உதாவ் மோகன் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: அபிக்யான் அபிஷேக் குண்டு virakesari.lk/article/233584#google_vignette
-
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025
பொண்டி தாக்குதலில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட 3 ஆவது ஆஷஸ் போட்டியில் அலெக்ஸ் கேரி அபார சதம் 17 Dec, 2025 | 05:19 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு கிழக்காக அமைந்துள்ள பொண்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 15 பேருக்கு கௌரவஞ்சலி செலுத்தும் முகமாக அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை (17) காலை ஆரம்பமாவதற்கு முன்னர் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் வீரர்கள், மத்தியஸ்தர்கள், பார்வையாளர்கள் அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர். இரண்டு அணிகளினதும் வீரர்கள் கறுப்புப் பட்டி அணிந்து விளையாடினர். இந்தப் போட்டி ஆரம்பமாவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர் ஸ்டீவன் ஸ்மித் விலகிக்கொண்டார். தலைச்சுற்று, குமுட்டல் காரணமாக நாணய சுழற்சிக்கு சற்று முன்னர் ஸ்டீவன் ஸ்மித் விலகிக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக விளையாடும் பதினொருவர் அணியில் உஸ்மான் கவாஜா இணைத்துக்கொள்ளப்பட்டார். இன்று ஆரம்பமான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலியா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 326 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அவுஸ்திரேலியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலியா 4 விக்கெட்களை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. ட்ரவிஸ் ஹெட் (10), ஜேக் வெதரோல்ட் (18), மானுஸ் லபுஸ்ஷேன் (19) ஆகிய மூவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர். ஐபிஎல் ஏல வரலாற்றில் சாதனைமிகு 25.20 கோடி இந்திய ரூபாவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரால் வாங்கப்பட்ட கெமரன் கிறீன் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். எனினும் அணிக்கு மீளழைக்கப்பட்ட உஸ்மான் கவாஜாவுடன் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டார். உஸ்மான் கவாஜா 82 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து ஜொஷ் இங்லிஸுடன் 6ஆவது விக்கெட்டில் மேலும் 59 ஓட்டங்களை கேரி பகிர்ந்தார். ஜொஷ் இங்லிஸ் 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஆறு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அணியில் இணைந்த அணித் தலைவர் பெட் கமின்ஸ் 13 ஓட்டங்களுடன் வெளியேறினார். (271 - 7 விக்.) இந் நிலையில் அலெக்ஸ் கேரி 8ஆவது விக்கெட்டில் மிச்செல் ஸ்டார்க்குடன் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கை 300 ஓட்டங்களைக் கடக்க உதவினார். அலெக்ஸ் கேரி 143 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 106 ஓட்டங்களைப் பெற்றார். மிச்செல் ஸ்டார்க் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஜொவ்ரா ஆச்சர் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்றைடன் கார்ஸ் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வில் ஜெக்ஸ் 105 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/233663
-
19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்
19இன் கீழ் ஆசிய கிண்ண தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கை சாதனையை இந்திய வீரர் அபிக்யான் சமப்படுத்தினார் 16 Dec, 2025 | 05:02 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற மலேசியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய மத்திய வரிசை வீரர் அபிக்யான் அபிஷேக் குண்டு ஆட்டம் இழக்காமல் 209 ஓட்டங்களைக் குவித்து, தனிநபருக்கான ஆசிய கிண்ண துடுப்பாட்ட சாதனையை சமப்படுத்தினார். கோலாலம்பூரில் 13 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் கத்தாருக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் வீரர் சௌம்யா சர்க்கார் 209 ஓட்டங்களைக் குவித்து தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கை சாதனையை நிலைநாட்டியிருந்தார். அத்துடன் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத்தில் இரட்டைச் சதம் குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையையும் சர்க்கார் நிலைநாட்டியிருந்தார். அவரது சாதனையையே 17 வயதுடைய அபிக்யான் அபிஷேக் குண்டு இன்று சமப்படுத்தினார். 125 பந்துகளை எதிர்கொண்ட அபிக்யான் அபிஷேக் குண்டு 17 பவுண்டறிகளையும் 9 சிக்ஸ்களையும் குண்டுமாரி பொழிவதுபோல் விளாசித் தள்ளினார். அவரது இரட்டைச் சத உதவியுடன் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 408 ஓட்டங்களைக் குவித்தது. அத்தடன் அப் போட்டியில் அபிஷேக் குண்டு 3ஆவது விக்கெட்டில் வேதாந்த் த்ரிவேதியுடன் 212 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மிகவும் பலமான நிலையில் இட்டார். தொடர்ந்து கனிஷ்க் சௌஹானுடன் 6ஆவது விக்கெட்டில் மேலும் 87 ஓட்டங்களை அபிஷேக் குண்டு பகிர்ந்தார். அதிரடிக்கு பெயர்பெற்ற இளம் புயல் வைபவ் சூரியவன்ஷி 50 ஓட்டங்களையும் வேதாந்த் த்ரிவேதி 90 ஓட்டங்களையும் பெற்றனர். இப் போட்டியில் இந்தியா குவித்த 408 ஓட்டங்களானது 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் பதிவான இரண்டாவது அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும். நான்கு தினங்களுக்கு முன்னர் ஐக்கிய இராச்சியத்துக்கு எதிராக இந்தியா 6 விக்கெட்களை இழந்து குவித்த 433 ஓட்டங்களே 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும். பந்துவீச்சில் மொஹம்மத் அக்ரம் 83 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். 409 ஓட்டங்கள் என்ற நினைத்துப்பார்க்க முடியாத இமாலய வெற்றி இலக்கை நோக்கி மலேசியா துடுப்பெடுத்தாடி வருகிறது. https://www.virakesari.lk/article/233564
-
போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது.
அவுஸ்திரேலிய துப்பாக்கிச்சூடு ; துப்பாக்கிதாரி மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு Published By: Digital Desk 3 17 Dec, 2025 | 12:32 PM அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட இரு துப்பாகிதாரிகளில் உயிர் பிழைத்த துப்பாகிதாரி நவீத் அக்ரம் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள் உட்பட 59 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் தெரிவித்துள்ளது. மற்றொரு துப்பாக்கிதாரியான அவரது 50 வயதுடைய தந்தை சஜித் அக்ரம், சம்பவ இடத்தில் பொலிஸார் நடந்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். சிட்னி நகரின் மிகவும் பிரபலமான போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (14) மாலை யூதர்களின் ஹனுக்கா நிகழ்வில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் சிறுமி ஒருவர் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 40 பேர் காயமடைந்தனர். 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு இதுவாகும் என குறிப்பிடப்படுகிறது. https://www.virakesari.lk/article/233622
-
இலங்கைக்கு தெற்கே நிலைகொண்டுள்ள காற்றுச் சுழற்சி!
இலங்கைக்கு தெற்கே நிலைகொண்டுள்ள காற்றுச் சுழற்சி ! Published By: Digital Desk 3 17 Dec, 2025 | 04:50 PM வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய காற்றுச் சுழற்சி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டுள்ளது. அதேபோல இலங்கையின் தென்பகுதியில் ஒரு வளிமண்டல உறுதியற்ற நிலைமையும் காணப்படுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார். இதன் காரணமாக தற்பொழுது நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை இரவு முதல் (18) வடக்கு மாகாணத்திற்கு மழை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் கிழக்கு ஊவா, மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மழை நீடிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. காற்றுச்சுழற்சி இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டிருப்பதனாலும் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல உறுதியற்ற தன்மையினாலும் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் இன்று முதல் (17) எதிர்வரும் 19 ஆம் திகதி வரை சற்று கனமழையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை மாவட்டங்களில் கனமழையோடு இணைந்த நிலச்சரிவு தொடர்பில் மக்கள் அவதானமாக இருப்பது அவசியமானதாகும். அதேவேளை கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளுக்கும் மழை தொடர்ந்து கிடைத்து வருவதாலும் கிழக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மழை கிடைக்கும் என்பதனாலும் கிழக்கு மாகாணத்தில் குளங்களுக்கு நீரை கொண்டு வருகின்ற நீரேந்துப் பிரதேசங்களுக்கும் மழை தொடரும் என்பதனாலும் கிழக்கு மாகாண குளங்களுக்கு அதிகளவான நீர்வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கிடைத்து வருகின்ற மிதமான மற்றும் கனமான மழை காரணமாக வடக்கு மாகாணத்தில் பல குளங்கள் வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகின்றது. எனினும் நாளை (18) இரவு முதல் வடக்கு மாகாணத்திற்கு மழை குறைவடையும் வாய்ப்புள்ளது. அதேவேளை கடந்த சில நாட்களாக நிலவிய குளிர் மீண்டும் நாளை மறு தினம் (19) முதல் அதிகரிக்கும் என்பதோடு இந்த குளிரான வானிலை 26 ஆம் திகதி வரைக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/233662
-
டித்வா சூறாவளி சவால்களைத் தோற்கடித்து இலங்கை விரைவில் மீண்டெழும் – சீன தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர்
டித்வா சூறாவளி சவால்களைத் தோற்கடித்து இலங்கை விரைவில் மீண்டெழும் – சீன தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் 17 Dec, 2025 | 04:11 PM டித்வா சூறாவளியால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மிக விரைவில் மீண்டெழும் என்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று புதன்கிழமை (17) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை எதிர்கொண்ட மிக மோசமான பேரழிவு குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த உப தலைவர் , பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்க சீன அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால பொருளாதார, கலாச்சார மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த அனர்த்த சமயத்தில் இலங்கைக்கு வருகை தந்தமை தொடர்பில் உப தலைவர் உள்ளிட்ட தூதுக் குழுவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சீனா இலங்கைக்கு வழங்கிய பொருள் மற்றும் நிதி உதவியையும் அவர் மனப்பூர்வமாக பாராட்டினார். குறிப்பாக சேதமடைந்த ரயில் கட்டமைப்பை மீளமைப்பதற்கும் புனரமைப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்குமாறு ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட சீன அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அத்தோடு இலங்கை எதிர்கொண்ட அனர்த்த நிலைமை மற்றும் மறுசீரமைப்பு முன்னெடுப்புகள் குறித்து சீன பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதே அரசாங்கத்தின் பிரதான பிரயத்தனமாக இருந்தாகவும் பின்னர் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அவர்களின் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்காக திட்டமிடப்பட்ட வகையில் பணியாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சீன தேசிய மக்கள் காங்கிரஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வள பாதுகாப்பு குழுவின் தலைவரான LU XINSHE, வெளிநாட்டலுவல்கள் குழுவின் உப தலைவரும் தேசிய மக்கள் காங்கிரஸின் சீன-இலங்கை நட்புறவுக் குழுவின் உப தலைவருமான WANG KE, சமூக அபிவிருத்திக் குழுவின் உப தலைவரான TAN TIANXING, நிலைக்குழுவின் பொதுச் செயலகத்தின் வெளியுறவுக் குழுவின் உப பணிப்பாளர் TANG JIAN,வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஆசிய விவகாரத் திணைக்கள ஆலோசகர் YANG YIN , வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஆசிய விவகாரத் திணைக்கள மூன்றாவது செயலாளர் SHA LONG மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் QI ZHENHONG ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/233645
-
மண்டைதீவில் நள்ளிரவு வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம் - உதவிக்கு சென்ற முதியவர்கள் மீது சித்திரவதை
மண்டைதீவில் நள்ளிரவு வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம் - உதவிக்கு சென்ற முதியவர்கள் மீது சித்திரவதை 17 Dec, 2025 | 02:58 PM யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து அட்டகாசம் புரிந்த வன்முறை கும்பலிடம் இருந்து இளம் தாயையும் குழந்தையையும் மீட்க சென்ற முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மண்டைதீவு பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றின், கணவர் கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற நிலையில் , மனைவியும் அவர்களது சிறு குழந்தையும் வீட்டில் தனியாக இருந்த போது நள்ளிரவு வேளை மூவர் அடங்கிய வன்முறை கும்பல் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதமாக்கி அட்டகாசம் புரிந்துள்ளனர். வீட்டில் இருந்த பெண் , அபயக்குரல் எழுப்பிய வேளை உதவிக்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் முதியவரும், மற்றுமொரு வீட்டில் வசிக்கும் வயோதிப தம்பதிகளும் விரைந்துள்ளனர். அதன் போது முதியவர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்ட போது, அவரது கை விரல் ஒன்று துண்டாட்டப்பட்டுள்ளது. அத்துடன் வயோதிப தம்பதியினரில் முதியவர் மீது தாக்குதல் மேற்கொண்டு, தம்பதியினரை முழங்காலில் இருந்தியுள்ளனர். வீட்டினுள் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நின்று அட்டகாசம் புரிந்த பின்னர் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் மண்டைதீவு சந்தியில் பொலிஸ் கடற்படை இணைந்து கடமையில் நிற்கும் நிலையில் மண்டைதீவுக்குள் இவ்வாறான வன்முறை சம்பவங்கள் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, வன்முறைகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறாதை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/233639
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன முதல் 5 வீரர்கள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி வீரர்கள் ஏலம் நேற்று (டிசம்பர் 16) அபு தாபியில் நடந்து முடிந்தது. மொத்தம் 77 பேர் வாங்கப்பட்ட இந்த ஏலத்தில் சில வீரர்களுக்கு கோடிகளில் பணத்தை அணிகள் அள்ளிக் கொடுத்துள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் தவிர, சர்வதேச போட்டிகளே ஆடியிராத சில இந்திய உள்ளூர் வீரர்களும் எதிர்பாராத அளவுக்கு அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். இந்த ஏலத்தில் பெரிய தொகைக்கு ஏலம் போன முதல் 5 வீரர்கள் யார்? அவர்களுக்கு அவ்வளவு பெரிய தொகையை அணிகள் வாரியிறைக்க என்ன காரணம்? 1. கேமரூன் கிரீன் - ரூ 25.2 கோடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பெரிய தொகையோடு ஏலத்துக்குள் நுழைந்ததால், கிரீன் பெரும் தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப் போலவே அந்த இரண்டு அணிகளும் இவருக்காக கடுமையாகப் போட்டியிட்டன. இறுதியில் அவரை 25.2 கோடி ரூபாய்க்கு நைட் ரைடர்ஸ் வாங்கியது. பெரிய தொகை வைத்திருந்த அணி என்றாலும், கொல்கத்தாவுக்கு கிரீன் தேவைப்பட்டதன் காரணம் அவர்கள் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற ஆண்ட்ரே ரஸ்ஸலின் வெற்றிடத்தை நிரப்ப வேண்டியிருந்தது. இந்த ஏலத்தில் அவர்கள் அதைச் செய்திருக்கிறார்கள். ரஸ்ஸலைப் போல் அதிரடியாக பெரிய ஷாட்கள் ஆடக்கூடியவர் கிரீன். ஒருசில ஓவர்களும் வீசக்கூடியவர் என்பதால் அடுத்த சில ஆண்டுகளுக்கு நைட்ரைடர்ஸ் அணியில் அவர் முக்கிய அங்கமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தான் கொல்கத்தா இவ்வளவு பெரிய தொகையை அவர் மீது முதலீடு செய்திருக்கிறது. கிரீன் 25.2 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருந்தாலும், அவருக்கு சம்பளமாக 18 கோடி ரூபாயே கிடைக்கும். மினி ஏலத்தில் வாங்கப்படும் வெளிநாட்டு வீரர்கள், மெகா ஏலத்தின் அதிகபட்ச ஏலத்தொகை அல்லது அதிகபட்ச ரிடன்ஷன் தொகையை விட அதிகமாக ஊதியம் பெற முடியாது என்று ஐபிஎல் புதிய விதி வகுத்திருக்கிறது. அதன்படி கேமரூன் கிரீன், மெகா ஏலத்தின் அதிகபட்ச ரிடன்ஷன் தொகையான 18 கோடி ரூபாயை ஊதியமாகப் பெறுவார். மீதமிருக்கும் 7.2 கோடி ரூபாய் பிசிசிஐ வீரர் நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2025 ஐபிஎல் தொடரில் கேமரூன் கிரீன் விளையாடவில்லை 2. மதீஷா பதிரனா - ரூ 18 கோடி வழக்கமாக வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் அதிக கிராக்கி இருக்கும். அதிலும், அதிவேகமாகப் பந்துவீசக் கூடியவர்களாகவோ, டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாகவோ அறியப்பட்டால் அவர்கள் மீது அணிகள் கூடுதல் ஆர்வம் காட்டுவார்கள். பதிரனா டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாகப் பந்துவீசிய அனுபவம் உடையவர் என்பதால் அவர் மீது பெரும் தொகையை முதலீடு செய்திருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். கடந்த சீசனில் அந்த இடம் நைட்ரைடர்ஸ் அணிக்கு மிகப் பெரிய பிரச்னையாக இருந்தது. அவர்கள் 2024 சீசனில் கோப்பை வென்றபோது மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணாவுடன் இணைந்து டெத் ஓவர்களில் ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார். அது 2025ல் கிடைக்காததால், அதை சரிசெய்ய பதிரனாவை வாங்கியிருக்கிறார்கள். அவரின் சமீபத்திய ஃபார்ம், காயமடைந்த வரலாறு பரவலாகப் பேசப்பட்டாலும், அவர் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் காரணமாக அவரை நம்பியிருக்கிறது நைட் ரைடர்ஸ். பட மூலாதாரம்,Getty Images சரியாக ஏலத்துக்கு முந்தைய நாள், ஐஎல்டி20 தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்காக 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் வென்றார். பவர்பிளேவில் ஒரு ஓவர் வீசியவர், அதை மெய்டனாக்கி விக்கெட்டும் எடுத்தார். தொடர்ச்சியான ஏமாற்றமான செயல்பாடுகளுக்குப் பிறகு இந்த ஆட்டம் அவர் மீது அணிகளின் நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கலாம். 3 & 4. கார்த்திக் சர்மா & பிரஷாந்த் வீர் - ரூ 14.2 கோடி ராஜஸ்தானைச் சேர்ந்த கார்த்திக் சர்மாவுக்கும், உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பிரஷாந்த் வீருக்கும் தலா 14.2 கோடி கொடுத்திருக்கிறது சூப்பர் கிங்ஸ். இதன்மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட 'அன்கேப்டு' வீரர்கள் என்ற சாதனையை இவர்கள் படைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரின் அடிப்படை விலையுமே 30 லட்ச ரூபாயாக இருந்தது. விக்கெட் கீப்பர் பேட்டரான கார்த்திக் சர்மாவுக்கு இப்போது 19 வயது தான் ஆகிறது. உள்நாட்டு டி20 போட்டிகளில் சிறப்பான ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கிறார். ஏலத்துக்கு முன்பாக பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் சிஎஸ்கே வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன் "கார்த்திக் சர்மாவின் அதிரடி ஆட்டம் பல அணிகளின் கவனத்தைப் பெற்றிருக்கிறது. அவர் மிகப் பெரிய ஷாட்கள் அடிக்கிறார்" என்று கூறியிருந்தார். இந்த ஏலத்தின்போதும் அது வெளிப்பட்டது. மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என பல அணிகளோடு போட்டியிட்டுத்தான் சூப்பர் கிங்ஸ் அவரை வாங்கியது. அதேபோல், ஆல்ரவுண்டரான பிரஷாந்த் வீரும் உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். கிரிக்பஸ் தரவுகளின்படி 2025 யுபி டி20 லீக்கில் 10 போட்டிகளில் ஆடிய அவர், 320 ரன்கள் அடித்திருக்கிறார். அதை 155.34 என்ற ஸ்டிரைக் ரேட்டிலும், 64 என்ற சராசரியிலும் அடித்திருக்கிறார். பந்துவீச்சிலும் 21.75 என்ற சராசரியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இடது கை பேட்டரும், இடது கை ஸ்பின்னருமான அவரை ஜடேஜாவுக்கான மாற்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் பார்க்கிறது என்று பிபிசி தமிழிடம் கூறினார் கிரிக்கெட் வல்லுநரும் வர்ணனையாளருமான நானீ. இவரை வாங்க மும்பை, லக்னோ, ஹைதராபாத், ராஜஸ்தான் ஆகிய அணிகள் சென்னையோடு போட்டியிட்டன. அதனால், அவரின் மதிப்பும் பன்மடங்கு உயர்ந்தது. கடந்த சீசன் ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல், பிரெவிஸ் போன்ற இளம் வீரர்கள் பெருமளவு சோபித்ததால், அவர்கள்மீது அதிகம் முதலீடு செய்ய சிஎஸ்கே முடிவு செய்திருக்கலாம் என்கிறார் நானீ. 5. லிவிங்ஸ்டன் - ரூ 13 கோடி இந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டருக்கு பல அணிகள் போட்டியிடுவார்கள் என்று ஏலத்துக்கு முன்பு எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதிரடி பேட்டர், லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் இரண்டுமே வீசக் கூடியவர் என்பதால், நிறைய அணிகளுக்கு அவர் தேவைப்படுவார் என்று கருதப்பட்டது. ஆனால், முதல் சுற்றில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை. பல அணிகளும் இளம் வீரர்களையும் வெளிநாட்டு வேகப் பந்துவீச்சாளர்களையும் வாங்குவதற்காக தங்கள் தொகையை அப்படியே வைத்திருந்ததால், தொடக்க கட்டத்தில் பல வீரர்கள் ஏலம் போகவில்லை. அதில் லிவிங்ஸ்டனும் ஒருவராகவே இருந்தார். ஆனால், ஏலத்தின் கடைசி கட்டத்தில் இவர் வர, 13 கோடி ரூபாய் கொடுத்து அவரை வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த ஆண்டு ஆர்சிபி அணியோடு ஐபிஎல் பட்டம் வென்றிருந்தார் லியாம் லிவிங்ஸ்டன் பொதுவாகவே ஐபிஎல் ஏலத்தின் கடைசி கட்டத்தில் வரும் ஒருசில வீரர்கள் இப்படி அதிக தொகைக்கு ஏலம் போவது வழக்கம். ஒருசில அணிகளுக்கு பெரிய தொகை மீதமிருக்கும். ஆனால், ஒருசில வீரர்களே தேவையாக இருக்கும். அப்படியிருக்கும் போது வரும் சில வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள். உதாரணமாக 2024 சீசனுக்கான ஏலத்தில், கடைசி கட்டத்தில் ரைலி ரூஸோ 8 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். லிவிங்ஸ்டன் விஷயத்தில் அதுவே நடந்தது. சன்ரைசர்ஸ், சூப்பர் ஜெயின்ட்ஸ் இரு அணிகளுக்குமே கடைசி கட்டத்தில் பெரும் தொகை மீதமிருந்ததால், லிவிங்ஸ்டனுக்கு அந்த அணிகள் சண்டையிட்டு 13 கோடி ரூபாய் வரை கொண்டு சென்றன. ஏற்கெனவே பலமான பேட்டிங் ஆர்டர் கொண்டிருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அவரை ஒரு ஃபினிஷராகப் பயன்படுத்தக் கூடும். "ஒருவேளை அணியின் ஒட்டுமொத்த பேலன்ஸ் கருதி இரண்டாவது வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரைக் களமிறக்க நினைத்தால், லிவிங்ஸ்டன் வெளியே கூட அமர வைக்கப்படலாம்" என்கிறார் நானீ. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c7vmqz3e183o
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு Rekhas Sri Jewellery 5 மில்லியன் ரூபா நன்கொடை 17 Dec, 2025 | 11:57 AM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தொடங்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் பரோபகாரிகளிடமிருந்து தொடர்ச்சியாக நன்கொடைகள் கிடைத்து வருகிறது. அதன்படி, Rekhas Sri Jewellery யினால் 05 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. Rekhas Sri Jewellery சார்பாக, அதன் பணிப்பாளர் ரெங்கசாமி சசிஹரன் (Rengasamy Sasiharan) மற்றும் முகாமையாளர் கே.கே. கேதீஸ்வரன் (K.K. Kedheeswaran ) ஆகியோர் இந்த நன்கொடைக்கான காசோலையை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர். https://www.virakesari.lk/article/233614
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு லிந்துலை டிலிகூல்றி தோட்டத் தொழிலாளர்கள் நிதி உதவி
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு லிந்துலை டிலிகூல்றி தோட்டத் தொழிலாளர்கள் நிதி உதவி Published By: Digital Desk 3 17 Dec, 2025 | 11:19 AM டித்வா சூராவளியைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகள் பாரிய அனர்த்தத்திற்கு உள்ளாகின. இதில் பலர் உயிரிழந்ததுடன், பெறுமதிமிக்க சொத்துகளும் முற்றாக சேதமடைந்தன. பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் வீடுகள் இடிந்து விழுந்தும், முழுமையாக நாசமாகியும் உள்ளன. மண்ணில் புதையுண்டவர்களை மீட்க முடியாமல் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதன் விளைவாக, பல குடும்பங்கள் கடுமையான வாழ்வாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இந்நிலையில், பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் பல சவால்களை எதிர்கொண்டு செயல்பட்டு வருகிறது. அதனுடன், அரசாங்கம் மற்றும் வெளிநாடுகளின் உதவியுடன் பாரிய அளவில் மனிதாபிமான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்புவதற்காக தேசிய நிதியம் ஒன்றை உருவாக்கியுள்ளது. உலகின் பல பகுதிகளில் இருந்து மனிதாபிமான அடிப்படையில் நிதி மற்றும் நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மலையகத்தில் பல அரசியல் தலைவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் கோடிக்கணக்கான சொத்துகள் இருந்த போதிலும், இந்நிதியத்திற்கு ஒரு சதம் கூட வழங்க முன்வராத நிலை காணப்படுகிறது. இதற்கு மாறாக, எந்தவித வசதி வாய்ப்புகளும் இன்றி, ஒருநேர உணவுக்கே போராடி வாழும் தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் நேர்மையான உழைப்பிலிருந்து ஒரு பகுதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் வழங்க முன்வந்தமை பாராட்டத்தக்கதாகும். அந்த வகையில், நுவரெலியா மாவட்டம், லிந்துலை – நாகசேன டிலிகூல்றி தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், விவசாயிகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து தேசிய நிதியத்திற்கு நிதி உதவி வழங்கியுள்ளனர். இதன்படி, 114 பேர் இணைந்து ரூ. 1,81,100 இலங்கை வங்கி திறைசேரி கணக்கில் வைப்பு செய்துள்ளனர். இது குறித்து சிலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இது தொடர்பில் நிதி பங்களிப்பு செய்த எம். சத்யானந்தன் கருத்து தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி அவர்கள் பெரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார். மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர அவர் கடுமையாக உழைத்து வருகிறார். இந்த நிலையில், தோட்டத் தொழிலாளர்களாகிய நாமும் நிதி உதவி வழங்கி ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். உறவுகளை இழந்து துயரத்தில் தவிக்கும் மக்களுக்கு எங்களால் இயன்ற அளவில் உதவி செய்ய கிடைத்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டில் அனைவரும் நலமாக இருந்தால்தான் நாங்களும் நிம்மதியாக வாழ முடியும். பெரிய உதவி செய்ய இயலாவிட்டாலும், சிறிய உதவியையாவது செய்ய முடிந்ததற்கு இறைவனுக்கு நன்றி.” மேலும், “தோட்ட மக்களிடம் உதவி கேட்கும் போது யாரும் மறுக்கவில்லை. அவர்களால் இயன்ற அளவு மன நிறைவோடு பங்களிப்பு செய்தனர். ஒவ்வொருவரின் பெயரிலும் வங்கியில் வைப்பு செய்து, ரசீதுகளும் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய அரசியல் சூழலில் பலர் மக்களின் பணத்தை தனிப்பட்ட சுகபோக வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு ரூபாய் கூட வழங்காதது மன வேதனையை ஏற்படுத்துகிறது. இருப்பினும், ஜனாதிபதி மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இந்த நிதியுதவியை வழங்கியுள்ளோம். நாடு நன்றாக இருந்தால்தான் எங்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் பாதுகாப்பாக இருக்கும்” என அவர் தெரிவித்தார். நிதி பங்களிப்பு செய்த கலைச்செல்வி கருத்து தெரிவிக்கையில், “கடவுளின் ஆசீர்வாதத்தால் எங்கள் தோட்டத்தில் பெரிய அனர்த்தம் ஏற்படவில்லை. ஆனால், எங்கள் உறவுகள் பலர் இன்று தங்கள் உறவுகளை இழந்து நிராதரவாக உள்ளனர். அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது. இந்த நிலையில், தோட்ட இளைஞர்கள் வீடு வீடாக வந்து உதவி கோரிய போது, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக எங்கள் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை வழங்கினோம். இது எங்களுக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது. தோட்டத் தொழிலாளர்கள் வருமான ரீதியாக எப்போதும் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், உதவி செய்யும் மனம் எங்களிடம் உள்ளது. வெளிநாடுகளில் இருப்பவர்கள் எங்கள் நாட்டுக்கு உதவி செய்கிறார்கள் என்றால், நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. எங்களால் முடிந்த சிறிய உதவியை செய்துள்ளோம்” என்றார். இன்றும் பல பகுதிகளில் மக்கள் ஒருநேர உணவுக்கே போராடி, உறவுகளை இழந்து கண்ணீருடன் வாழ்கின்றனர். அவர்களுக்கு உதவுவது தங்களுக்கும், தங்களின் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்தாலும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் செயல்படும் தோட்டத் தொழிலாளர்கள், நாட்டிற்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகின்றனர். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தங்களின் உழைப்பிலிருந்து நிதி பங்களிப்பு வழங்கிய தோட்ட மக்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/233603
-
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்ப உதவும் ஜப்பான்!
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்ப உதவும் ஜப்பான்! 17 Dec, 2025 | 11:07 AM அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்புவதற்கு ஜப்பான் அரசாங்கம் தொடர்ந்து பல உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வகையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர கால நிதி உதவியை வழங்க ஜப்பான் அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (16) தீர்மானித்துள்ளது. சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு (IOM), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவற்றின் மூலம் ஜப்பான் அரசாங்கத்தால் இந்த அவசர கால நிதி உதவி வழங்கப்படும். அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீளுவதற்காக இலங்கைக்கு இந்த அவசர கால நிதி உதவி வழங்கப்படவுள்ளது. இந்த அவசர கால நிதியுதவி மூலம், உணவு மற்றும் உணவு அல்லாத ஏனைய நிவாரண பொருட்களை இலங்கைக்கு வழங்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இந்த அவசர கால நிதியுதவிக்கு, சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு (IOM) மூலம் 1 மில்லியன் அமெரிக்க டொலரும், உலக உணவுத் திட்டம் (WFP) மூலம் 1 மில்லியன் அமெரிக்க டொலரும், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) மூலம் 500,000 அமெரிக்க டொலரும், ஜப்பான் மூலம் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. சர்வதேச புலம்பெயர் அமைப்பு [International Organization for Migration (IOM)], ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் [United Nations Children's Fund (UNICEF)] மற்றும் உலக உணவுத் திட்டம் [World Food Programme (WFP)] மூலம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர நன்கொடைகளை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. IOM மூலம் கண்டி, பதுளை மற்றும் கேகாலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு, சமையலறைப் பொருட்கள், கழுவும் பாத்திர பொருட்கள் மற்றும் படுக்கைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை 615 தங்குமிடங்களுக்கு ஜப்பான் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கும். கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் கேகாலை ஆகிய நான்கு மாவட்டங்களில் பாதுகாப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு உதவுவதற்காக, WFP மூலம் ஜப்பான் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உணவு உதவியை வழங்கும். இந்த உதவியின் கீழ், குடும்பங்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க முடியும். இவற்றுக்கு மேலதிகமாக , யுனிசெஃப் மூலம், ஜப்பான் மத்திய, ஊவா, கிழக்கு, மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை இலக்காகக் கொண்டு நீர், சுகாதாரம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக 500 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்கும். இந்த அவசர கால நிதியுதவி மூலம், நீர் மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்குதல், நீர்வழங்கல் வசதிகளில் உள்ள கோளாறுகளைச் சரிசெய்தல் மற்றும் நீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கச் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துதல், சுத்தமான நீரை வழங்குதல், தொற்றுநோய்களைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கு முன்னரும், ஜப்பான் அரசாங்கம் கூடாரங்கள் , போர்வைகள், படுக்கை விரிப்புகள், நீர் சுத்திகரிப்பான்கள் போன்ற அவசரகால நிவாரணப் பொருட்களை கண்டி, மாத்தளை, பதுளை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கியது. மேலும், ஜப்பான் அவசரகால மீட்புக் குழுவைச் சேர்ந்த 31 உறுப்பினர்களை கொண்ட மருத்துவக் குழுவையும் ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு அனுப்பியது. ஜப்பான் அவசரகால மீட்புக் குழு டிசம்பர் 3 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை சிலாபத்தில் கள வைத்திய முகாமை அமைத்து 1,250 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்கியிருந்தது. இந்த உதவிகள், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் வலுவான நம்பிக்கை மற்றும் நட்புறவுக்கான சான்றாகும். இது தேவைப்படும் நேரத்தில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கான ஜப்பானின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. https://www.virakesari.lk/article/233607