Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ஜீவனை வென்ற சிறீதரன்! December 6, 2024 6:13 pm அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு எதிர்க்கட்சித் தரப்பின் பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்காக பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜீவன் தொண்டமானை 11 இற்கு 10 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இன்று நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருக்கின்றார். எதிர்க்கட்சித் தரப்பில் காஸ் சிலிண்ட.ர் சார்பில் தெரிவான தேசியப் பட்டியல் எம்.பி. ஒருவரும், ரோஹித அபேகுணவர்தன எம்.பியும் இந்தத் தேர்வில் பங்குபற்றாத நிலையில் சிறீதரன் வெற்றி பெற்றிருக்கின்றார். இதேசமயம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற விவகாரக் குழுவுக்குப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்புக்கும் தம்மைத் தெரிவு செய்ய சிறீதரன் விருப்பம் தெரிவித்த போதிலும், அந்தப் பொறுப்பைச் சாணக்கியனுக்கு வழங்குவதென தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்திருப்பதாக அறியவந்தது. https://oruvan.com/sridharan-the-conqueror-of-jeevan/
  2. கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை ஆளுனர் நியமித்தார். Vhg டிசம்பர் 06, 2024 கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் இரத்னசேகர மாற்றம் செய்துள்ளார். மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றிய எம்.வை.பைசால் மாகாண முதலைமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராக J.லியாகத் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எம்.எம்.நஸீர் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எச்.ஈ.எம்.டப்ளியூ.ஜி.திசாநாயக்கா விவசாய அமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாகாண ஆளுனரின் செயலாளராக கடமையாற்றிய எல் பி.மதன்னாயக்கா சுகாதார அமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக கடமையாற்றிய எம்.சிவலிங்கம் அவரது நிரந்தர பதவியான மட்டு.மாநகர ஆணையாளராக கடமையாற்ற பணிக்கப்பட்டுள்ளார். இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சின் பதில் செயலாளராக கடமையாற்றிய என்.மணிவண்ணன் அவரது நிரந்தர பதவியான மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கல்வி அமைச்சு, ஆளுனரின் செயலாளரின் நியமனங்கள் பற்றி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. https://www.battinatham.com/2024/12/blog-post_88.html
  3. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : சாட்சியங்களை ஆராயுமாறு கூறுகின்றார் ஸ்ரீநேசன் எம்.பி December 6, 2024 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆசாத் மௌலானா என்பவர் தெரிவித்த சாட்சியங்கள் ஆராயப்படுமானால் உண்மைக் குற்றவாளிகளை,சூத்திரதாரிகளை கண்டுகொள்ள முடியும் எனத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், மயிலந்தனை, மாதவனையில் அத்துமீறிய குடியேற்றங்கள் தொடர்பில் நீதிமன்றம் 3 தடவைகள் அளித்த தீர்ப்புகள் அமுல்படுத்தப்படாத நிலையில் இந்த ஆட்சியில் அங்கு சட்டவாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற கணக்கு வாக்குப்பதிவு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில், ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடன உரையில் சட்டவாட்சியை பலப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். ஆகவே சட்டவாட்சி இங்கு பலவீனமாக இருக்கிறது என்பதனை அவர் உணர்ந்துள்ளார். சட்டவாட்சி பலவீனமாக இருந்த காரணத்தினால் பல குற்றச்செயல்கள் நடந்துள்ளன உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் கூட சட்டவாட்சியின் பலவீனத்தினால்தான் நடந்தது. கடந்த காலத்தை எடுத்துக்கொண்டால் அதாவது மஹிந்த ராஜபக்ச ஆட்சி செய்த 2005 க்கும் 2015 க்கும் இடைப்பட்ட காலத்தை எடுத்துக்கொண்டால் அக்காலத்திற்குள் நடந்த படுகொலைகளைப்பற்றி சொல்லுவதாக இருந்தால் ஒருநாள் போதாது. 40 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். தமிழ் தேசியக்கூட்டமைப்பை அழிப்பதற்காக ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைசெய்யப்பட்டார் ரவிராஜ், சந்திரநேரு சிவநேசன் போன்ற எமது எம்.பி.க்கள் படுகொலைசெய்யப்பட்டனர். கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தரான் ரவீந்திரநாத் படுகொலைசெய்யப்பட்டார் சிவராம் நடேசன் ஏக்னலிகொட, லசந்த என்ற ஊடகவியலார்கள் படுகொலை செய்யப்பட்டனர் . ஆனால் இவற்றுடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தண்டனைவழங்கப்படவில்லை. இதனால் நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா என்ற கேள்வி காணப்பட்டது. பணநாயகமே நாட்டை ஆட்சி செய்த்து. வீதிகள் எல்லாம் பிணங்கள் குவிந்து காணப்பட்டன. எனவே பாரிய குற்றங்களை இழைத்து விட்டு கௌரவர்களாக ,தண்டிக்கப்படாதவர்களாக உலாவிவந்த அந்தக் குற்றவாளிகள் இந்த ஆட்சியில் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு முறையான தண்டனைகள் வழங்கப்படுவதன் மூலம் சட்டவாட்சியையோ பலப்படுத்த வேண்டும் .இவ்வாறு குற்றங்கள் புரிந்தவர்கள் ஒரு காலத்தில் இந்த பாராளுமன்றத்தைக்கூட அலங்கரித்திருந்தனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பாக ஆசாத் மௌலானா என்பவர் மிகவும் விபரமாக பல சாட்சியங்களை கூறியுள்ளார். அந்த சாட்சியங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அது சரியாக ஆராயப்படுமாக இருந்தால் குண்டுத்தாக்குதலுக்குரிய சூத்திரதாரிகள் யார் என்பதனை கண்டுகொள்ள முடியும். மயிலத்தமனை ,மாதவனை போன்ற பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்கள் காணப்படுகின்றன ,மாவட்டம் கடந்து அவர்கள் குடியேறியுள்ளனர். அத்துமீறிகுடியேறிய அந்தக் குடியேறிகளை , காணிகளை ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றுமாறு நீதிமன்றம் 3 தடவைகள் தீர்ப்பளித்துள்ளது ,ஆனால் கடந்த ஆட்சியாளர்கள் அந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த ஆட்சியில் சட்டவாட்சி அங்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார். https://www.ilakku.org/உயிர்த்த-ஞாயிறு-தாக்குத-33/
  4. மதுவரி அனுமதிப் பத்திரம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை December 6, 2024 07:12 am மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார். மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். அதிகாரிகள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டத்திற்கு முரணான விடயங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்டத்தை அமுல்படுத்துவது அவசியம் எனவும் வலியுறுத்திய ஜனாதிபதி, உரிய நேரத்தில் வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். மதுவரி வசூலிப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் அதில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அறவிடப்படவேண்டிய வரியை வசூல் செய்தல், கருப்புப் பட்டியிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் வரி வசூலிக்க முடியாத நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களை தடை செய்தல் போன்ற புதிய முறைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், வரி அறவீடு செய்வதில் தற்போதுள்ள சட்டதிட்டங்களில் காணப்படும் குறைபாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், வரி அறவீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் மதுவரி உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு முறையிலுள்ள குறைபாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களிடையில் நல்லபிப்பிராயம் கிடையாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான வகையில் அந்த நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அதேவேளை, உற்பத்தி மற்றும் பொதியிடல் செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளினால் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டதோடு , செயற்கைக் கள்ளு பாவனையினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196900
  5. அரிசி மாபியாவை விரைவில் ஒழிப்போம் December 6, 2024 10:37 am அரிசி நெருக்கடியை தீர்ப்பதற்காக கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்கு இம்மாதம் 20ஆம் திகதிக்குள் 50,000 மெற்றிக் தொன் அரிசி கிடைக்கப்பெறவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் அரிசி கையிருப்பு தொடர்பான அறிக்கைகள் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடரும் அரிசி மாபியாவை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் தயாராகி வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். “நாங்கள் வந்து சிறிது காலத்தில் நாட்டினுள் போதுமான அரிசி உள்ளதாக விவசாயத் திணைக்களத்திடம் இருந்து எங்களுக்குத் தகவல் வந்தது. ஆனால் நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய கணக்கெடுப்பின்படி அரிசிக்கு தட்டுப்பாடு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்தோம். "இரண்டு அல்லது மூன்று பேரின் ஏகபோக உரிமைக்கு இது அனுமதிக்கப்படவில்லை. இப்போது அந்த பலம் அவர்களிடம் உள்ளது. ஏனென்றால் நம்மிடம் கட்டுப்படுத்த எந்த கருவியும் இல்லை. நாங்கள் கடினமான நிலையில் இருக்கிறோம். தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். ஆனால் அதற்கு சிறிது காலம் எடுக்கும்” என்றார். https://tamil.adaderana.lk/news.php?nid=196912
  6. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் 4 லட்சம் கோடி ரூபாவை பெறுவதற்கு அநுர முயற்சி கடந்த அரசாங்கங்களை போன்றே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கடன் பெறுவதை பிரதான இலக்காகக் கொண்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான எஸ்.எம். மரிக்கார், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் 4000 பில்லியன்(4 லட்சம் கோடி) ரூபா கடன் பெறுவதற்கு அரசாங்கம் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அரசினால் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு வாக்குப்பதிவு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இனவாத செயற்பாடுகளுக்கு நாங்கள் என்றும் எதிரானவர்கள். என்று பாராளுமன்றத்துக்கு வந்து குறிப்பிட்டுக் கொண்டிருக்காமல், இனவாத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அரச செலவுகளை குறைத்து ஊழல் மோசடிகளை குறைப்பதாக தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தது.ஆனால் எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான பெரும் தொகை நிதி ஒதுக்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இவ்வாறே செலவிட்டார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில், கடன் பெறுவதற்கு ஜனாதிபதி தேவையில்லை என்று குறிப்பிட்டார். தற்போது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் 4000 பில்லியன் (4 லட்சம் கோடி) ரூபா கடனைப் பெறுவதற்கு அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. கடன் சுமைகளினால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்று நாட்டு மக்கள் குறிப்பிடுகிறார்கள். சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டங்களை மறுசீரமைப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது. தேசிய கடன் மறுசீரமைப்பின் போது ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய சேவையாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் தொழில் படையினர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆகவே ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் பயனாளர்களுக்க நியாயம் வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். https://akkinikkunchu.com/?p=301975
  7. ரேணுக பெரேராவின் கைது அரசியல் பழிவாங்கல்; பொதுஜனபெரமுன Published By: Vishnu 05 Dec, 2024 | 11:53 PM (எம்.வை.எம்.சியாம்) 1980 களில் மக்கள் விடுதலை முன்னணி இனவாதத்தை முன்னிலைப்படுத்தி மக்களை கொலை செய்யும் போது அதற்கு எதிராக ரேணுக பெரேரா முன் நின்றவர். அவ்வாறான ஒருவரை இந்த அரசாங்கம் கைது செய்வது அரசியல் பழிவாங்கலாகவே நாம் பார்க்கிறோம். நாட்டு மக்களுக்கு பொய்க்கூறி அதிகாரத்துக்கு வந்த அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தற்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மக்களை திசை திருப்பவே இவ்வாறு கைதுகளை மேற்கொள்கிறது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார் கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை (5) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கட்சியின் நிர்வாக உறுப்பினர் ரேணுக பெரேராவின் கைது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ரேணுக பெரேரா இனவாதியல்ல.இனவாதத்துக்கு எதிராக செயற்பட்ட ரேணுக பெரரோவையே நாம் அறிந்துள்ளோம்.1980 களில் மக்கள் விடுதலை முன்னணி இனவாதத்தை முன்னிலைப்படுத்தி மக்களை கொலை செய்யும் போது அதற்கு எதிராகவும் நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முன்னின்று செயற்பட்ட விஜயகுமாரதுங்கவின் அரசியல் கட்சியில் உறுப்பினராக செயற்பட்டவரே இந்த ரேணுக பெரேரா.அவ்வாறான ஒருவரை இந்த அரசாங்கம் கைது செய்வது அரசியல் பழிவாங்களாகவே நாம் பார்க்கிறோம். இது தமக்கு எதிராக செயற்படும் தரப்பினரை ஒடுக்கும் முயற்சியாகும். பாராளுமன்றத்தில் எத்தனையே எதிர்காட்சிகள் இருக்கின்றன. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி பொதுஜன பெரமுனவை குறி வைத்துள்ளது. இந்த அரசாங்கம் பொதுஜன பெரமுனவை கண்டு அச்சமடைந்துள்ளது.மாவீரர் தினம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுதலை செய்யும் போது நீதிமன்றம் மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தது. வடக்கில் பல பகுதிகளில் விடுதலை புலிகளை ஆதரித்து மாவீரர் தினம் கொண்டாடப்பட்டதாக சம்பந்தப்பட்ட அமைச்சரே பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். எனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலும் கூட அரசாங்கம் சட்டத்துக்கு மதிப்பளிக்காமல் அரசியல் பழிவாங்கலை செய்துள்ளமை இதன் ஊடாக தெளிவாகியுள்ளது.நாட்டு மக்களுக்கு பொய்க்கூறி அதிகாரத்துக்கு வந்த அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தற்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மக்களை திசை திருப்பவே இவ்வாறு கைதுகளை மேற்கொள்கிறது என்றார். https://www.virakesari.lk/article/200541
  8. மெண்டிஸ் நிறுவனத்திற்கு சீல்! December 5, 2024 09:00 pm டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனம் நாகொடை மற்றும் வெலிசறையில் அமைந்துள்ள உற்பத்தி நிலையத்திற்கும் இன்று(5) சீல் வைக்கப்பட்டது. மெண்டிஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய மதுவரி மற்றும் அதற்கான 3 வீத கூடுதல் கட்டணம் உள்ளிட்ட 5.7 பில்லியன் ரூபாயை செலுத்த தவறியதன் காரணமாக மதுவரி கட்டளைச் சட்டத்தின் சட்ட விதிகளின்படி, இன்று (5) முதல் அதன் மதுபான உற்பத்தி உரிமத்தை இடைநிறுத்துமாறு மதுவரி ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி மதுவரி திணைக்களம் மற்றும் கம்பஹாவின் மதுவரி அத்தியட்சகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அந்நிறுவனத்திற்கு சீல் வைத்துள்ளனர். ஆறு மணி நேரத்துக்கும் மேலான கண்காணிப்புக்குப் பிறகே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் டபிள்யூ. எம். மெண்டிஸ் கம்பனியின் அனைத்து உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என ஜா-எல மற்றும் கம்பஹா மதுவரி அத்தியட்சகர்கள் தெரிவித்தனர். வரி செலுத்த தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமத்தை கடந்த நவம்பர் 30ஆம் திகதி முதல் ரத்து செய்ய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இத்தகைய பின்னணியில் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமங்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுப்பதாக, மதுவரி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி அந்நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரணையின்றி நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (4) உத்தரவிட்டிருந்தது. https://tamil.adaderana.lk/news.php?nid=196894
  9. விமர்சனம்: புஷ்பா 2 ! KaviDec 05, 2024 21:00PM உதயசங்கரன் பாடகலிங்கம் குடும்பத்தோடு ரசித்து மகிழலாமா?! ‘இது பான் இந்தியா படமல்ல, ஒரு தெலுங்கு படம்’ என்றே ‘புஷ்பா’ பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூறி வந்தார் இயக்குனர் சுகுமார். ஆனால், அதன் தெலுங்கு, மலையாள ‘டப்’ பதிப்புகளை விட இந்திப் பதிப்பு மாபெரும் வெற்றியை ஈட்டியது. பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் நாயகன் அல்லு அர்ஜுனுக்குத் தனி ரசிகர் கூட்டம் உருவாகக் காரணமானது. இதன்பிறகு பான் இந்தியா நட்சத்திரமாக உருவெடுத்தார் நாயகி ராஷ்மிகா மந்தனா. மூன்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வு அது. அதன் தாக்கத்தின் காரணமாக ‘புஷ்பா 2’ திரைப்படம் தெலுங்கில் தயாராகி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மட்டுமல்லாமல் பெங்காலி மொழியிலும் ‘டப்’ செய்யப்பட்டிருக்கிறது. சட்டவிரோதமாகச் செம்மரம் வெட்டுகிற கூலியாளாக இருந்த புஷ்பா எப்படி மிகப்பெரிய கடத்தல்காரர்களில் ஒருவராகி, அதன் சிண்டிகேட்டின் தலைவர் ஆக ஆனார் என்பதைச் சொன்னது ‘புஷ்பா’. இரண்டாம் பாகமோ, கோடிகளில் புரளும் அவர் எவ்வாறு ஒரு மாநிலத்தின் அரசியலைத் தீர்மானிப்பவராக மாறினார் என்பதைச் சொல்கிறது. இதுதான் கதை என்று தெரிந்தபிறகும், ‘புஷ்பா 2’ பார்ப்பதில் ஆர்வம் காட்ட முடியுமா? ‘முடியும்’ என்கிறது இயக்குனர் சுகுமார் & டீம் காட்சியாக்கத்தில் காட்டியிருக்கும் சிரத்தை. சரி, ஒரு தெலுங்கு படமான ‘புஷ்பா 2’ எந்தளவுக்குத் தமிழ் ரசிகர்களை ஈர்க்கிறது அல்லது அயர்வுற வைக்கிறது? மிகச்சிறிய விஷயங்கள்! சட்டவிரோதமாகச் செம்மரக்கட்டைகளைக் கடத்துவதில் தனி ‘ராஜ்யம்’ நடத்திவரும் புஷ்பாவின் (அல்லு அர்ஜுன்) ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரத் துடிக்கிறார் காவல் கண்காணிப்பாளர் பன்வர் சிங் ஷெகாவத் (பகத் பாசில்). அதற்கேற்ப, அவரது ஆட்களைக் கூண்டோடு பிடிக்கிற வாய்ப்பு கிடைக்கிறது. ஷெகாவத் கைது செய்த ஆட்களில் சீனிவாசனும் ஒருவர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட முகூர்த்த நேரத்தில் அவர் லாக்கப்பில் இருக்கிறார். அவரை விடுவிப்பதற்காக அங்கு செல்கிறார் புஷ்பா. அப்போது ஷெகாவத்தின் கெடுபிடியால் விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியிருப்பதாகச் சொல்கின்றனர் போலீசார். உடனே, வாழ்நாள் முழுக்கப் பணி செய்தால் அவர்களுக்குக் கிடைக்கும் பணத்தை ஒட்டுமொத்தமாக அன்றிரவே தந்து, அவர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய வைக்கிறார். தனது ஆட்களையும் விடுவித்து அழைத்துச் செல்கிறார். அந்த சம்பவம் ஷெகாவத்தை இன்னும் எரிச்சலடைய வைக்கிறது. சித்தூர் பகுதியில் எம்.பி. ஆக இருக்கும் சித்தப்பா (ராவ் ரமேஷ்) மாநில அமைச்சர் ஆக ஆசைப்படுகிறார். அதனால், அவரை அழைத்துக்கொண்டு முதலமைச்சரைச் சந்திக்கச் செல்கிறார் புஷ்பா. அப்போது, தனது மனைவி ஸ்ரீவள்ளியின் (ராஷ்மிகா மந்தனா) விருப்பத்திற்காக முதலமைச்சர் (ஆடுகளம் நரேன்) உடன் புகைப்படம் எடுக்க முயல்கிறார். ஆனால், அவரோ ‘ஒரு கடத்தல்காரனோடு போட்டோ எடுத்தால் இமேஜ் என்னாவது’ என்கிறார். அது மட்டுமல்லாமல், ‘பொண்டாட்டி பேச்சை கேட்டு எவன்யா உருப்பட்டிருக்கான்’ என்று நக்கலடிக்கிறார். அவ்வளவுதான். அந்த நொடி முதல் சித்தப்பாவை முதலமைச்சர் ஆக்குவதென்று முடிவெடுக்கிறார் புஷ்பா. அதனைச் சொன்னதும், சித்தப்பாவே பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகிறார். ‘நடக்கிற காரியமா இது, போட்டோ எடுக்கலைன்னு முதலமைச்சரை மாத்தப்போறேன்னு சொல்றது நல்லாவா இருக்கு’ என்கிறார். ஆனால், புஷ்பா அந்த முடிவில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. டெல்லியில் இருக்கும் மத்திய அமைச்சர் பிரதாப் ரெட்டி (ஜகபதி பாபு) மூலமாக காய் நகர்த்த ஆரம்பிக்கிறார். கூடவே, கட்சியிலுள்ள எம்.எல்.ஏக்களை சித்தப்பா பக்கம் சாய்ப்பதற்காக பெரும்பணம் திரட்டும் ஒரு ‘டீலில்’ இறங்குகிறார். இந்த விஷயம் அரசல்புரசலாகப் புஷ்பாவின் தொழில்முறை எதிரியான மங்கலம் சீனு – தாட்சாயணி (சுனில், அனுசுயா) தம்பதிக்கும், அவர்கள் மூலமாக ஷெகாவத்துக்கும் தெரிய வருகிறது. அடுத்த நொடியே, அதனைத் தடுக்கும்விதமாக அனைத்துச் செயல்களிலும் அவர்கள் இறங்குகின்றனர். இறுதியில், புஷ்பா தான் நினைத்ததைச் சாதித்தாரா என்பதோடு மேலும் சில கிளைக்கதைகளையும் நமக்குக் காட்டுகிறது ‘புஷ்பா 2’. ’சிஎம்மோட நீ எடுத்த போட்டோவை வீட்டு ஹால்ல மாட்டணும்’ என்று ஸ்ரீவள்ளி புஷ்பாவிடம் சொல்வதும், அதனை நிறைவேற்றுவதற்காக முதலமைச்சரோடு புஷ்பா புகைப்படம் எடுக்க முயல்வதும் சிறிய விஷயங்கள் தான். அதன் காரணமாக ஒரு பிரளயமே ஏற்படுவதை ஒரு கமர்ஷியல் படத்திற்கே உரிய சுவாரஸ்யங்களுடன் திரையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுகுமார். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி. காரசாரமான ‘ஆந்திரா மீல்ஸ்’! அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடி உடன் பகத் பாசில், சுனில், அனுசுயா, ஜகபதி பாபு, ராவ் ரமேஷ், ஜகதீஷ் பிரதீப் பண்டாரி, சண்முக், அஜய், ஆதித்ய மேனன், பிரம்மாஜி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஒவ்வொருவரையும் நாம் நினைவில் இருத்தும்விதமாகச் சில காட்சிகளைத் தந்திருக்கிறது சுகுமாரின் திரைக்கதை. ஆனாலும், முதல் பாகம் போன்று ’செறிவான உள்ளடக்கம்’ என்று சொல்லும்படியாக இப்படம் இல்லை. பின்னந்தலையில் மயிர்க்கற்றை புரள, அடர்த்தியான தாடியைப் புறங்கையால் வருடும் ஸ்டைல் உடன் இடது தோளைக் கொஞ்சம் உயர்த்தியவாறு படம் முழுக்க ‘புஷ்பா’ எனும் பாத்திரமாகவே வருகிறார் அல்லு அர்ஜுன். கனவுப்பாடலான ‘பீலிங்ஸ்’ பாடலில் மட்டுமே அது ‘மிஸ்ஸிங்’. அந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும் அரிதாகக் காண்கிற ஒன்று. பொதுவாகத் தெலுங்கு படங்களில் நாயகிக்கு முக்கியத்துவம் அதிகமிருக்காது. இதில் ராஷ்மிகா வரும் காட்சிகள் இரட்டை இலக்கத்தைத் தொடாது என்றபோதும், பெரும்பாலான காட்சிகள் அவர் ‘ஸ்கோர்’ செய்யும் வகையிலேயே உள்ளது. என்ன, நாயகன் நாயகி இடையிலான ‘நெருக்கமான’ காட்சிகளைக் குடும்பத்தோடு காணும்போது மட்டும் ‘சங்கடப்பட’ வேண்டியிருக்கும். ‘புஷ்பா’ போல அதகளம் செய்யாதபோதும், இதில் பகத் பாசிலுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் சில காட்சிகள் தரப்பட்டுள்ளன. ராவ் ரமேஷ் உடன் அவர் பேசுகிற காட்சி மட்டுமல்லாமல் பிரம்மாஜி உடனான சில வசனங்களும் தியேட்டரில் சிரிப்பையும் கைத்தட்டல்களையும் வரவழைக்கின்றன. மாற்றந்தாய் வயிற்றில் பிறந்த சகோதரனாக வரும் அஜய் பாத்திரம் சம்பந்தப்பட்ட காட்சிகள், ராஷ்மிகா மற்றும் அல்லு அர்ஜுன் இடையிலான உரையாடல்கள் ரசிகர்களைக் கண்ணீர் வடிக்க வைக்கும் வகையிலான ‘சென்டிமெண்ட்’ டை கொண்டிருக்கின்றன. ஆக்‌ஷன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை விட அவையே இப்படத்தின் பலம் ஆக விளங்குகின்றன. ’கிஸ்ஸிக்’ பாடலுக்கு அல்லு அர்ஜுன் உடன் ஸ்ரீலீலா நடனமாடியிருக்கிறார். அசைவுகளில் ஆபாச நெடி அதிகம் என்றபோதும், அப்பாடல் அருவெருப்பூட்டும் விதமாக அமையவில்லை. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ‘புஷ்பா புஷ்பா’, ‘சூடான’ உள்ளிட்ட நான்கு பாடல்களும் கேட்கும் ரகம் என்றாலும், அவற்றின் வரிகளைத் தெளிவாகக் கேட்க முனையும்போது முகம் சுளிப்பது உறுதி. ‘யாரெல்லாம் இதற்கு ஒப்புதல் தெரிவித்தது’ என்று தெரியவில்லை. இப்படத்தில் கூடுதல் பின்னணி இசை என்று சாம் சி.எஸ். பெயர் குறிப்பிடப்படுகிறது. அது வெறும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மட்டும்தான் அவர் பின்னணி இசையமைத்தாரா அல்லது மொத்தப்படமும் அவர் கைவண்ணம்தானா என்பது தெரியவில்லை. ஆனால், டைட்டிலில் பின்னணி இசை என்று தேவிஸ்ரீ பிரசாத் பெயரே குறிப்பிடப்படுகிறது. ஒளிப்பதிவாளர் மிரோஸ்லா குபா ப்ரோஸக், படத்தொகுப்பாளர் நவீன் நூலி, தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ராமகிருஷ்ணா – மோனிகா இணை, விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் கமல் கண்ணன் உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் அபாரமான உழைப்பின் காரணமாகத் திரையில் ஒளிர்கிறது ‘புஷ்பா 2’வின் காட்சியாக்கம். கடந்த நாற்பதாண்டு காலமாகத் தெலுங்கு படங்களைப் பார்த்து ரசிக்கும் தமிழ் ரசிகர்களுக்கு, அப்படங்களில் இருக்கும் யதார்த்தத்தை மீறிய காட்சி சித்தரிப்புகள் ரொம்பவே பரிச்சயம். நாயகனுக்கான பில்டப், இதர பாத்திரங்களின் அட்ராசிட்டி, பெண் பாத்திரங்கள் மீதான அத்துமீறல்கள், நாயகியின் அதீத கவர்ச்சி, சண்டைக்காட்சிகளில் தெறிக்கும் வன்முறை என்று பல விஷயங்கள் திரையில் இடம்பெறுகையில், ‘இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்’ என்பதாக அவர்களது ரியாக்‌ஷன் இருக்கும். மொத்தப்படமும் ஒரு காரசாரமான ஆந்திரா மீல்ஸை கண்ணீர் பெருகப் பெருகச் சுவைத்துச் சாப்பிட்ட ‘எபெக்ட்’டை தரும். அது ‘புஷ்பா 2’வில் நிரம்பக் கிடைக்கிறது. அதே நேரத்தில், இதில் வழக்கத்தைவிட்டு விலகிய காட்சியமைப்புகளும் உள்ளன. சமீபகாலமாகவே நாயகிக்கு அடங்கி நடப்பவனாக நாயகனை காட்டும் ‘ட்ரெண்ட்’ பெருகி வருகிறது. ‘அதை தரை லெவலுக்கு ஹேண்டில் பண்ணியிருக்காரு நம்மாளு’ என்று அல்லு அர்ஜுன் ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு அவரது பாத்திரத்தை வார்த்திருக்கிறார் அல்லு அர்ஜுன். கறிக்குழம்பில் உப்பு அதிகம் என்று சிண்டிகேட் உறுப்பினர்கள் முன்னால் மனைவியாக வரும் ராஷ்மிகாவிடம் ‘கெத்தாக’ சொல்லிவிட்டு, அடுத்த நொடியே சமையலறைக்கு வந்து அவரது காலைப் பிடித்துவிட்டவாறே சமாளிப்பதாக ஒரு காட்சி வரும். அதே ரகத்தில் மேலும் சில காட்சிகளும் உண்டு. ஒரு ஆக்‌ஷன் காட்சிக்கு முன்னால், ‘நாம் இப்ப என்ன செய்யணும்’ என்று நாயகன் நாயகியிடம் கேட்பதாகவும் ஓர் இடம் உண்டு. இப்படிப்பட்ட சித்தரிப்புகள் தெலுங்கு சினிமாவில் மிக அரிதாகவே நிகழும். போலவே, ஒரு பாடல் மற்றும் சண்டைக்காட்சி முழுக்கப் பெண் வேடமிட்டு வருகிறார் நாயகன். இதர நாயகர்கள் அது போன்ற காட்சிகளில் நடிக்க அல்ல, அதனை இயக்குனர் விவரிக்கையில் காது கொடுத்துக் கேட்கவே தயங்குவார்கள் என்பதுதான் நிதர்சனம். இப்படிச் சில ‘ப்ளஸ்’கள் படத்தில் உண்டு. ஒரு தெலுங்கு படத்தைப் பார்ப்பதில் என்னவெல்லாம் சிக்கல்கள் உண்டு என்று மனதுக்குள் ஓட்டிப் பார்க்கிறோமோ அவை அனைத்தும் ‘புஷ்பா 2’வில் நிறையவே உண்டு. குறிப்பாக, இடிந்த கோட்டைக்குள் நிகழ்வதாக வரும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி வெறித்தனத்தின் உச்சமாக இருக்கிறது. அது போன்ற சில ‘மைனஸ்’கள் இதிலிருக்கின்றன. ’திருப்பதி மலைகளைச் சுற்றியுள்ள வனப்பிரதேசத்தில் நிகழ்ந்து வரும் செம்மரக்கட்டை கடத்தலை, அதன் பின்னிருக்கும் அரசியலை, அதனால் ஏற்படும் சட்டவிரோதச் செயல்பாடுகளை ஹீரோயிசத்துடன் அணுகுவது சரிதானா’ என்ற கேள்வியையும் சுமந்து நிற்கிறது இப்படம். ‘பொழுதுபோக்காக மட்டுமே இப்படத்தை அணுக வேண்டும்’ எனும் பதில் படக்குழுவினருக்குச் சரியானதாக இருக்கலாம். போலவே, இக்கதையில் உண்மையின் சதவிகிதம் எத்தனை எனும் கேள்வியும் நிச்சயம் சர்ச்சையை எழுப்பக்கூடியது. அதையும் சில ரசிகர்கள் ‘மைனஸ்’ ஆகக் கருதக்கூடும். ’கேஜிஎஃப் 2’வின் சாயல் நிறையவே உண்டு என்றபோதும், இப்படத்தில் திரைக்கதை ட்ரீட்மெண்டை ‘raw’வாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் சுகுமார். ஒரு வெற்றி பெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எப்படி உருவாக்கலாம் என்று நின்று நிதானித்துப் பல அம்சங்களைப் புகுத்தியிருக்கிறார். அதன்பிறகு படத்தொகுப்பு மேஜையில் எத்தனை நிமிடக் காட்சிகள், ஷாட்கள் வெட்டப்பட்டிருக்கும் என்று தெரியவில்லை. அதையும் மீறிப் படம் திரையில் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடுகிறது. பார்வையாளர்கள் அதன் காரணமாக அயர்ச்சியுறுகின்றனரா அல்லது இயக்குனர் உருவாக்கிய கதாபாத்திரங்களின் இயல்புகளையும் அந்த உலக நடப்பையும் தெளிவாக உள்வாங்கிக் கொள்கின்றனரா என்பதற்கான பதில் படத்தின் வெற்றி மூலமாகத் தெரிய வரும். இது போக ‘புஷ்பா 3 உண்டா’ என்ற கேள்விக்கும் பதில் சொல்கிறது இப்படம். மேற்சொன்னவற்றைப் படித்தபிறகு, இந்தப் படத்தைக் குடும்பத்தோடு பார்க்கலாமா என்ற கேள்வி எழுவது இயல்பு. முதல் நாள் முதல் காட்சியன்று அப்படியொரு ’ரிஸ்க்’கை சில பெற்றோர்கள் கையிலெடுத்திருந்ததையும் காண முடிந்தது. வீட்டுக்குச் சென்றபிறகு, ‘புஷ்பா 2’ சார்ந்து அக்குழந்தைகள் கேட்கும் கேள்விகளில் இருந்து அது தெரிய வரும். பதின்ம வயதுக் குழந்தைகளைக் கொண்ட பெற்றோர், அவர்களைத் தனியே படம் பார்க்க அனுப்பிவிட்டு தாங்கள் இன்னொரு நாள் செல்வது நல்லது. ‘பான் இந்தியா’ படமாக ’புஷ்பா2’வை முன்னிறுத்தியிருக்கிற காரணத்தால், அல்லு அர்ஜுன் ஜென்ஸீ தலைமுறையையும் கவர்ந்த ஒரு திரை நட்சத்திரம் என்பதால் இதனைச் சொல்ல வேண்டியிருக்கிறது..! https://minnambalam.com/cinema/pushpa-2-movie-review-in-tamil-this-story-tells-how-he-became-the-political-decider-of-a-state-by-udayasankaran-padakalingam/
  10. “மோதிப் பார்ப்போம்...” - திருச்சி எஸ்.பி விவகாரத்தில் சீமான் எச்சரிக்கை கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். கோவை: திருச்சி எஸ்.பி வருண்குமார் விவகாரத்தில், “மோதுவோம் என்றாகிவிட்டது; மோதிப் பார்ப்போம்” என கோவையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பில், கலந்துரையாடல் கூட்டம் கோவை ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை (டிச.5) நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது குறித்து கேட்கிறீர்கள், மக்களுக்கு உதவ வேண்டும் என நினைப்பதை எப்படி குறை சொல்ல முடியும். குறை சொல்லிக் கொண்டே இருப்பதற்கு நாங்கள் என்ன மன நோயாளியா?. சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு. நாம் தமிழர் கட்சி இந்திய அரசியலமைப்பின் படி பதிவு செய்யப்பட்ட கட்சி. 13 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மக்களை சந்தித்து தேர்தலில் நின்று வருகிறோம். தனித்து நின்று போட்டி போட்டு 36 லட்சம் வாக்குகள் பெற்ற கட்சியை, பிரிவினைவாத இயக்கம், கண்காணிக்க வேண்டும் எனக் கூறினால், இவர் தான் (வருண்குமார் ஐபிஎஸ்) நாட்டை ஆளுகின்றாரா?. தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தபோது, பிரிவினைவாத இயக்கம் என்பது தெரியாதா? அடிப்படை தகுதியே இல்லாமல் எப்படி ஐபிஎஸ் அதிகாரி ஆனாய்? உண்மையில் உன்னுடைய தாய் மொழி எது? தமிழ்த் தாய்க்கு, தந்தைக்கும் பிறந்திருந்தால் தமிழ் தீவிரவாதிகள் என்ற வார்த்தை சொல்லி இருப்பாயா? உனக்கு மட்டும் தான் குடும்பம் இருக்கிறதா? என்னை, என் குடும்பத்தினரை இழிவாக பேசியதற்கு வழக்கு போடுவாயா? இந்த காக்கி உடையில் எத்தனை வருடம் இருப்பாய்? ஒரு 50 வருடம், அதன் பின்னர் இறங்கி தானே ஆக வேண்டும். நாங்கள் இங்கேயே தான் இருப்போம். பார்த்து பேச வேண்டும். பிரதமர், உள்துறை அமைச்சர் போன்றவர்கள் துவக்கி வைத்த நிகழ்வில், அவர்கள் பேசியது வெளியே வராமல், இவர் பேசிய காட்சிகள் மட்டும் ஊடகத்திற்கு வருவது எப்படி? என் கட்சியை குறை சொல்வதற்காக ஐபிஎஸ் ஆனாயா?. மோதுவோம் என்றாகி விட்டது வா போதுவோம். ஃபெஞ்சல் புயல் மட்டுமல்ல, எந்த புயலுக்கும் மத்திய அரசு வராது. தமிழக அரசு வரியை தர முடியாது என்று மத்திய அரசிடம் சொல்ல முடியுமா? முடியாதா? மாநில அரசுகளிடமிருந்து வாங்கும் வரிதான் மத்திய அரசிடம் இருக்கிறது. பேரிடர் காலங்களில் கூட உதவவில்லை என்றால் அந்த பணம் எதற்கு? பிஹார், குஜராத்துக்கு உடனடியாக நிதி ஒதுக்கிய போது, மற்ற இடங்களுக்கு கொடுப்பதில்லை. டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் தமிழக அரசு நாடகமாடுகிறது. உணவை முதலில் உறுதி செய். அதன் பின்னர், என்ன சாப்பிட வேண்டும் என சொல். மாட்டுக்கறியை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது” என்று அவர் கூறினார். https://www.hindutamil.in/news/tamilnadu/1342270-naam-tamilar-party-leader-seeman-slam-varum-kumar-ips-1.html
  11. மதுபான அனுமதிப்பத்திரம் – சிபாரிசு செய்தவர்களின் பெயர் பட்டியலும் வெளியிடப்படும்! adminDecember 5, 2024 மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு சிபாரிசு செய்த அரசியல்வாதிகளின் பெயர் பட்டியல் விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் என அரசாங்கம் இன்று (05.12.24) உறுதியளித்துள்ளது. மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் நிதியமைச்சு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு பரிந்துரைத்த அரசியல்வாதிகளின் பெயர்ப்பட்டியல் அனைத்து மக்களுக்கும் தெரியும் வகையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ ளுமன்றத்தில் தெரிவித்தார். அனுமதிப் பத்திரம் பெற்றவர்களின் பெயர்களைப் போல் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு சிபாரிசு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை வெளியிடுமாறு அமைச்சரிடம் வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை வலியுறுத்தி உள்ளார். https://globaltamilnews.net/2024/209031/
  12. நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி யாழில் நிதி மோசடி நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடிகள் இடம் பெற்று வருவதாகவும், அவ்வாறு பொய்கூறி வருபவர்களை நம்ப வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி காணி பிடிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வது போன்ற செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டு வந்தனர் என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களது வீடுகளுக்குச் சென்று நாங்கள் விசாரிப்பது வழமை. அப்படி ஒரு வீட்டுக்கு சென்றது சம்பந்தமாக தான் எனக்கு எதிராக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு வந்தது. இதன்போது மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்றைய தினம் விசாரணைகளை மேற்கொண்டவேளை அவருக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியதோடு, நாங்கள் சென்று கலந்துரையாடிய பாதிக்கப்பட்டவர்கள் எமக்கு எவ்வாறான முறைப்பாடுகளை அல்லது குற்றச்சாட்டுகளை வழங்கினர் என பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தினேன். எமது கட்சியின் பெயரை பயன்படுத்தி இப்படியான மோசடிகள் செய்பவர்கள் தொடர்பாக மக்களாகிய நீங்கள் கட்டாயம் நீங்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய வேண்டும். அப்படி ஏதாவது உங்களுக்கு பயம் இருந்தால் நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் யாழ்ப்பாணத்தில் முழுநேர அரசியலில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றோம். கடந்த காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் தான் எமது கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கின்றது என நான் நினைக்கின்றேன். அந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை களைய வேண்டியது எனது கடமையாக இருக்கின்றது. நாமல் ராஜபக்ச வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றார், நாமல் ராஜபக்ச தங்கம் வியாபாரம் செய்கின்றார் போன்ற பொய்யான தகவல்களை சிலர் பரப்பி மோசடிகளை செய்து வருகின்றனர். இது தொடர்பாக என்னையும் சில தொடர்பு கொண்டு, கேட்டு நாமல் ராஜபக்ச தங்கம் வியாபாரம் செய்கின்றாரா? என கேட்டுள்ளனர். நான் அப்படி எதுவும் இல்லை என அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன். இப்படியானவர்களை மக்களாகிய நீங்கள் நம்ப வேண்டாம். எமது கட்சியின் பெயரை பயன்படுத்தி இவ்வாறு குற்றச் செயல்களை செய்கின்றவர்களை கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். https://oruvan.com/sri-lanka/2024/12/05/financial-fraud-using-namal-rajapaksas-name
  13. புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறைகள் சர்வகட்சிக் கூட்டத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அரசியல் தீர்வின் ஆரம்பப்புள்ளியாக விளக்கும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் ஒருபோதும் நீக்கப்படக்கூடாது எனவும், புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறைகள் சர்வகட்சிக்கூட்டத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, அச்செயன்முறைகள் 13 ஆவது திருத்தத்தின் அம்சங்களை மேலும் செழுமைப்படுத்தும் வகையிலேயே அமையவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் ‘அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தச்சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை முடிவுக்குக்கொண்டுவரவும், புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமத்துவ உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை வலுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி, புதன்கிழமை (4) கொழும்பிலுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு வலியுறுத்தினார். ‘இலங்கையில் தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வாக 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகக் கிடைக்கப்பெற்ற மாகாணசபை முறைமையை நீக்குவது குறித்து தற்போது அரசியல் ரீதியில் பேசப்பட்டுவருகிறது. மாகாணசபை முறைமை நீக்கப்படுவதை நாம் முற்றாக எதிர்ப்பதுடன், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தமானது அரசியல் தீர்வுக்கான சிறந்ததொரு ஆரம்பப்புள்ளியாக அமையும் என்றே நாம் கடந்த காலங்களிலும் கூறிவந்திருக்கிறோம். இருப்பினும் சில அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளால் எட்டாக்கனியாக மாறியிருக்கும் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்’ என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். அதேவேளை 13 ஆவது திருத்தம் இரத்துச்செய்யப்படும் எனவும், புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் உள்வாங்கப்படும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்த்தர் கூறியிருக்கும் பின்னணியில், அச்செயன்முறையானது சர்வகட்சிக்கூட்டத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார். அதுமாத்திரமன்றி சர்வகட்சிக்கூட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படக்கூடிய புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறைகள், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் உள்ள முக்கிய அம்சங்களை செழுமைப்படுத்தும் விதத்திலேயே அமையவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=301800
  14. இவ்வார இறுதியில் செல்வத்தை சந்திக்கிறார் கஜேந்திரகுமார் தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைவு மற்றும் தமிழ்த்தேசிய கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வார இறுதியில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதனை மன்னாரில் சந்திக்கவிருக்கிறார். அண்மையில் நடைபெற்றுமுடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து, இனிவருங்காலங்களிலேனும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி ஒன்றுபட்டுப் பயணிக்கவேண்டும் என்ற விடயம் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டுவருகின்றது. அதன்படி தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவை அடிப்படையாகக்கொண்டு ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக அண்மையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார். அதேவேளை இதுபற்றிக் கருத்து வெளியிட்டிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இத்தீர்வுத்திட்ட முன்மொழிவு குறித்தும், அதற்கு அப்பாலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிதரனை அவரது யாழ் இல்லத்தில் சந்தித்த கஜேந்திரகுமார், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு உள்வாங்கப்படவேண்டியதன் அவசியம், அதனை முன்னிறுத்திய அடுத்தகட்ட நடவடிக்கைகள், தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார். அதேபோன்று இவ்வார இறுதியிலோ அல்லது எதிர்வரும் திங்கட்கிழமையோ செல்வம் அடைக்கலநாதனை மன்னாரில் சந்திப்பதற்குத் திட்டமிட்டிருக்கும் கஜேந்திரகுமார், அவருடனும் இதுபற்றிக் கலந்துரையாடியதன் பின்னர், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தீர்மானிக்கவிருக்கிறார். https://akkinikkunchu.com/?p=301802
  15. வியட்நாமை உலுக்கிய வங்கி மோசடி; பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை வியட்நாம் வங்கியில் 12 பில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்ட பெண் தொழிலதிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. வியட்நாமின் ஹோ சி மின் நகரைச் சேர்ந்தவர் ட்ரோங் மை லான்(68). அந்நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர். ஆரம்ப காலத்தில் வறுமையில் வாடிய இவர், மார்க்கெட்டில் வேலைபார்த்து வந்தார். பிறகு தாயாருடன் சேர்ந்து அழகுசாதன பொருட்களை விற்கத் துவங்கினார். பொருளாதார சீர்திருத்தம் காரணமாக 1986 ல் அவர் தனது தொழிலை விரிவாக்கம் செய்தார். 1990ல் ஹோட்டல் மற்றும் உணவகம் துவக்கினார். பிறகு ‘Van Thinh Phat Group’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் துவங்கி அதில் கொடி கட்டிப் பறந்தார். 2022ம் ஆண்டு அக்., மாதம் ட்ரோங் மை லான் கைதான பிறகு அவரது மோசடிகள் வெளிச்சத்திற்கு வரத் துவங்கின. அந்நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய வங்கியான சைகோன் வணிக வங்கியை அவர் ரகசியமாக கட்டுப்படுத்தியது தெரிந்தது. மேலும் 2012 முதல் 2022 வரை பல போலி நிறுவனங்களை துவக்கியும், தனக்கு வேண்டியவர்கள் மூலமும் போலியாக கடன் பெற்று பெரும் மோசடி செய்தார். இதன் மூலம் அவர் 12.5 பில்லியன் டாலர் கடன் பெற்றார். வங்கி மோசடியை மறைக்க ட்ரோங் மை லான் வங்கி அதிகாரிகளுக்கு 5.2 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்து உள்ளனர். வியட்நாம் வரலாற்றில், இந்தளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும். இந்த முறைகேட்டில் ட்ரோங் மை லான், கணவர்( ஹாங்காங்கில் தொழிலதிபர்) மற்றும் உறவினர் உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. அவர்கள் மீதான ஆதாரங்களை 105 பெட்டிகளில் வைத்து போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதனை கண்காணிப்பதற்கு என சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஏப்ரல் மாதம் முதல் துவங்கிய விசாரணை முடிவில், மோசடி, லஞ்சம் மற்றும் வங்கி மோசடியில் ஈடுபட்டதற்காக ட்ரோங் மை லானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. வியட்நாம் சட்டப்படி மோசடித் தொகையில் 75 சதவீத தொகையை திருப்பி அளித்தால் மரண தண்டனை குறைக்கப்படும். இதனையடுத்து அரசுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய 9 பில்லியன் டாலரை திரட்டும் பணியில் அவரது வழக்கறிஞர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவரது சொத்துகளை விற்றும், நண்பர்களிடம் கடன் வாங்கும் முயற்சி நடக்கிறது. அவரது நிறுவனத்தின் பங்குகளை விற்க முயற்சி நடந்த போதும், அது சவாலாக உள்ளதாக கூறப்படுகிறது. https://akkinikkunchu.com/?p=301824
  16. காசா உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உயிரிழப்பு December 5, 2024 மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர். காசாவில் உள்ள குடும்பங்கள் தொடர்ந்து ‘மோசமான’ நிலைமைகளை எதிர்கொள்கின்றன என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு முதல் ஹமாஸ் இயக்கத்தை ஒழிக்கும் விதத்தில் இஸ்ரேல் காசாவில் தாக்குதலை நடத்தி வருகின்றது. இதில், இதுவரை 43,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வடக்கு காசாவின் பெய்ட் லஹியா நகரில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தியதில் மூன்று மருத்துவர்கள் காயமடைந்துள்ளனர். இது அண்மையில் மருத்துவ கட்டமைப்பின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய ஐந்தாவது தாக்குதல் என கூறப்படுகிறது. https://www.ilakku.org/israeli-attack-on-gaza-food-distribution-center-children-killed/
  17. மீளமைக்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை Vhg டிசம்பர் 05, 2024 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) கொழும்புக் கிளை நேற்று (04-12-2024) மீளமைக்கப்பட்டுள்ளது. இதன்போது கொழும்புக் கிளையின் முன்னாள் செயலாளர் சி.இரத்தினவடிவேல் தலைவராகவும், மலர்விழி சிங்காரநாதன் செயலாளராகவும், முத்துக்குமாரசாமி பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மத்திய செயற்குழு உறுப்பினர்கள் அத்துடன் ஐவர் மத்திய செயற்குழு உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளும்னற உறுப்பினருமான ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் பங்குபற்றினர். https://www.battinatham.com/2024/12/blog-post_90.html
  18. அகதி அந்தஸ்த்து கோரல் செயன்முறை கடினமாக்கப்பட்டுள்ளது; விளம்பர பிரசாரத்தை ஆரம்பித்தது கனடா Published By: Vishnu 05 Dec, 2024 | 02:03 AM சர்வதேச ரீதியில் புலம்பெயர்வோரையும், அகதிகளையும் பெரும் எண்ணிக்கையில் உள்வாங்கும் நாடாக இருந்துவரும் கனடா, தற்போது அகதி அந்தஸ்த்து கோரும் செயன்முறை கடினமாக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கும் வகையிலான இணையவழி விளம்பர பிரசாரமொன்றை உலகளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது. இந்த விளம்பர பிரசாரமானது ஸ்பானியமொழி, உருது, உக்ரேனிய மொழி, இந்தி மற்றும் தமிழ் உள்ளடங்கலாக 11 மொழிகளில் எதிர்வரும் மார்ச் மாதம் வரை முன்னெடுக்கப்படவிருப்பதாக கனடாவின் குடிவரவுத்திணைக்களம் 'ரொயிட்டர்' செய்திச்சேவைக்குத் தெரிவித்துள்ளது. அகதி அந்தஸ்த்து கோரலை மட்டுப்படுத்தும் நோக்கிலேயே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கத்தினால் இப்பிரசாரம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த 4 மாத இணையவழி விளம்பர பிரசாரத்துக்காக கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக இதனைப்போன்ற விளம்பரங்களுக்காக செலவிடப்பட்ட மொத்தத்தொகையில் மூன்று பங்கு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/200452
  19. ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தாருங்கள் : ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு மகஜர் Published By: Digital Desk 7 05 Dec, 2024 | 09:04 AM (ஆர்.ராம்) வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை உடன் மீட்டுத்தருமாறு, பாதிக்கப்பட்டவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு மகஜர் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோதும் ரஷ்ய தூதரகம் அவர்களின் மகஜரை பெற்றுக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. ரஷ்யப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டவர்களின் உறவினர்கள் கையளித்துள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்குச் செல்வதற்காக எமது உறவினர்கள் முகவர் ஊடாக பணம் செலுத்தி கடந்த மாதம் பயணமாகியிருந்தனர். அவர்களை கொழும்பு கட்டுநாயக்கவிலிருந்து ரஷ்யாவுக்கு கொண்டு செல்வதாகவும் பின்னர் அங்கிருந்து ஐரோப்பியாவுக்கு அழைத்துச் செல்வதாகவும் உறுதியளிக்கப்பட்டது. அதற்கு அமைவாக, அவர்களுக்கு 60இலட்சம் முதல் 70இலட்சம் வரையிலான பணம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் எமது உறவினர்கள் ரஷ்ய விமான நிலையத்தில் இருந்து ரஷ்யாவுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அவர்களுக்கு இராணுவப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 15நாட்கள் பயிற்சியின் பின்னர் அவர்கள் உக்ரேனுக்கு எதிரான போருக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்வதாக பணம்பெற்றுக்கொண்ட முகவர்களுடன் தொடர்புகளைக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே, தற்போதும் போர் உக்கிரமாக நடைபெற்று வருவதால் அவர்களின் உயிர்களைப் பாதுகாத்து எமது உறவுகளை பத்திரமாக மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது. மிதுர்ஷன், பகிரதன், பாலச்சந்திரன்,பிரதாப், சிவாஸ் ஆகியோரே ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/200463
  20. மாவீரர் நாள் குறித்து பொய் தகவல்களை பரப்பிய மொட்டு கட்சியின் முக்கியஸ்தர் கைது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக்க பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். மாவீரர் கொண்டாட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/313178
  21. மாவீரர் நாள் ஆட்சியாளர்களுக்கு சொல்லியிருக்கும் செய்தி என்ன? நடராஜ ஜனகன் இயற்கை அனர்த்தத்தால் நாடு வழமை நிலையை தொலைத்துவிட்ட நிலை காணப்படுகிறது. கிட்டத்தட்ட நாட்டின் 21 மாவட்டங்கள் வெள்ள அழிவுக்கு உள்ளாகியுள்ளது. வடக்கு, கிழக்கை பொறுத்தவரையில் அங்குள்ள அனைத்து மாவட்டங்களும் தற்போதைய சீரற்ற கால நிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. 2008 ல் அழிவை ஏற்படுத்திய லீசா புயலின் பின்னர் இத்தகைய அனர்த்தம் வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுள்ளது.மறுபுறத்தில் வடக்கு, கிழக்கு முழுவதும் மாவீரர்கள் நினைவு தினம் உணர்ச்சிபூர்வமாக மக்களால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கில் கொட்டும் மழையையும் வெள்ள அபாயத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் அணிதிரண்டு மாவீரர் நினைவு தின நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர். இத்தகைய சூழ்நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கொள்கை பிரகடன உரை கடந்த வாரம் இடம்பெற்றிருந்தது. தமிழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வை ஜனாதிபதி வலியுறுத்துவார் என்றே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஜனாதிபதியின் உரையில் அத்தகைய செய்திகள் எவையும் வெளிவராத நிலையில் நாட்டின் பொருளாதார நிலை தொடர்பான கரிசனையே மேலிட்டு காணப்பட்டது. இலங்கை போன்ற அபிவிருத்தியடையாத நாடுகளில் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு முதலிலே பலமடைய வேண்டும். இதற்கு தடையாக இருக்கின்ற பிரதான பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்கான தீர்வு இடம்பெற்றே ஆக வேண்டும். கடந்த 75 ஆண்டு காலமாக இலங்கை வரலாற்றை பொறுத்தவரையில் தமிழ்த் தேசிய பிரச்சினை நீண்ட கால கட்டமாக தீர்க்கப்படாமல் இருந்து வரும் பிரச்சினையாக அடையாளப் படுத்தப்படுகிறது. இதேநேரம் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை தொடர்பில் இலங்கையின் விற்பன்னர்களான என்.எம்.பெரேரா தொடக்கம் ஜே. ஆர். ஜெயவர்த்தன வரையில் பல்வேறுபட்ட பொருளாதார அணுகுமுறைகளை, அரசியலமைப்பு மாற்றங்களை பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்கும் முகமாக முன்னெடுத்திருந்தனர். ஆனால் அத்தகைய சிகிச்சைகள் எவையும் பயனளிக்காமல் இறுதியில் 2022ல் நாடு வங்குரோத்து நிலைக்கு சென்றமையே உண்மை நிலையாகும். நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்து வந்த தமிழ்த் தேசிய பிரச்சினை அகிம்சை போராட்டங்களை கடந்து ஆயுதப் போராட்டமாக மாறி இறுதியில் நாட்டின் வரலாற்றில் 30 வருட காலம் உள்நாட்டு போர் நடந்தேறி இருந்தது. இந்தப் போரை இறுதியாக நடத்தியவர்கள் போர் வெற்றிக்காக பெற்ற கடன் வெற்றியின் பின் தமக்கு கிடைத்த புகழை கவசமாகக் கொண்டு செய்த ஊழல் முறைகேடுகள் நாட்டின் பொருளாதாரத்தை இவ்வளவு மோசமான நிலைக்கு கொண்டு வந்து சேர்த்தது. தற்போது புதிதாக ஆட்சியை பொறுப்பேற்றிருக்கும் தேசிய மக்கள் சக்தியினர் நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் காட்டும் அக்கறை தமிழ் தேசிய பிரச்சினை தொடர்பில் வெளிப்படுத்தாமல் தவிர்ப்பது கவலை தரும் நிலையாகும்.இருந்த போதிலும் இம்முறை மாவீரர் தினத்தை தமிழ் மக்கள் அனுஷ்டிப்பதற்காக முன்பிருந்த தடைகள் யாவும் இம்முறை இடம் பெற்றிருக்கவில்லை. குறிப்பாக பாதுகாப்பு தரப்பினரின் தலையீடுகள் எதுவும் இடம்பெறாத நிலை இடம்பெற்றிருந்தது.எனவே தேசிய மக்கள் சக்தியின் இந்த ஆட்சி இந்த நிலை மேல்வருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை நம்பிக்கை தரும் நிலையாகும். எனவே தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாகவும் ஆட்சியாளரின் கரிசனை முதன்மை நிலை பெற வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். நாட்டின் பொருளாதார பிரச்சினை தொடர்பாக காட்டப்படும் கரிசனைக்கு சமாந்தரமாக தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு முயற்சிகளும் முன்னிலை பெற்றே ஆக வேண்டும். புதிய ஆட்சியாளரின் சர்வதேச நாணய நிதியத்துடனான உறவுநிலை ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்கால அணுகுமுறைகளை முழுமையாக பின்பற்றும் போக்கையே பிரதிபலிக்கிறது. நாட்டின் சந்தை பொருளாதாரத்தை விரிவுபடுத்தல், சர்வதேச முதலீடுகளை உள்ளிர்த்தல், சுற்றுலாத்துறையின் வருமானத்தை அதிகரிப்பதற்காக சகல செயற்பாடுகளையும் முன்னெடுத்தல் போன்றவை யாவும் முன்னையை அரசாங்கத்தின் கொள்கைகளின் பிரதி விம்பமே நட்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் தொடர்பான அணுகுமுறைகள் குழப்பமான நிலையிலேயே காணப்படுகின்றன. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அரச நிறுவனங்களை ஒருபோதும் தனியார்மயமாக்க இடமளிக்கமாட்டோம் என்ற தேசிய மக்கள் சக்தியின் இறுக்கமான நிலைப்பாடு, அது தொடர்பில் இலங்கை மின்சார சபை மற்றும் எயார்லங்கா நிறுவனங்கள் போன்றவை மறுசீரமைப்பு தொடர்பில் தனியார் மயமாக்கலுக்கு இடமே இல்லை என்ற பிரகடனங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புகளை முட்டி மோதாமல் தொடரும் நிலை சாத்தியப்படுமா என்பதே பிரதான விடயமாக மாறியுள்ளது. இவை யாவற்றிற்கும் தேசிய மக்கள் கட்சியினர் கொண்டு வர இருக்கும் வரவு – செலவுத் திட்டம் நிச்சயம் பதிலை வழங்கும். உலக நிதி நிறுவனங்களையும் பல்தேசிய கம்பெனிகளின் எதிர்பார்ப்புகளையும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக பொருளாதார எதிர்பார்ப்புகளை சரி செய்வது தேசிய மக்கள் சக்தியின் சோசலிஸ எதிர்பார்ப்புகளுக்கும் ஒன்றாக பயணிக்கக்கூடிய நிலைமைகள் தென்பட்டால் நன்றாக இருக்கும். எனவே தமிழ் தேசிய பிரச்சனை தீர்வை முன்னகர்த்துவதனூடாகவே தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு இலங்கை தேசியத்துக்குள் காலடி எடுத்து வைப்பார்கள் என்பதை தவிர்த்து, நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை கொண்டு தமிழ் மக்கள் தமிழ் தேசிய பிரச்சனையை கை விட்டுள்ளார்கள் என ஒரு முடிவுக்கு வருவதற்கு இம்முறை நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளில் மக்கள் உணர்ச்சிபூர்வமாக முன்னெடுத்த செயற்பாடுகள் மறுமொழியாக அமைகின்றது. https://thinakkural.lk/article/313140
  22. பிரான்ஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி December 5, 2024 07:29 am பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்ந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும். பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் பிரான்சில் ஆட்சி கவிழ்ந்துள்ளது. இது ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது. மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரனும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. https://tamil.adaderana.lk/news.php?nid=196855
  23. IMF உடன்படிக்கை திருத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு December 5, 2024 09:45 am சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் திருத்தப்பட்ட விடயங்கள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தெரியவரும் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். "அடுத்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் நாங்கள் செயல்பட வேண்டும் என்று நாங்கள் கூறினோம். அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறோம். ஆம், அது திருத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அந்தத் திருத்தங்களின் விடயங்களை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நாட்டு மக்கள் அறிந்து கொள்ள முடியும். பாராளுமன்றத்திற்கே நிதி அதிகாரம் உள்ளது. அனுபவமிக்க ரணில் விக்கிரமசிங்க எல்லா இடங்களிலும் VAT குறைக்கப்படவில்லை என்று பொய் சொன்னோம் என்றார். VAT குறைக்கப்பட வேண்டும். VAT குறைக்கப்படவுள்ளது. யாரால் குறைக்க முடியும்? இது ஒரு நிதி சட்டமூலம். அவரும் நமது பிரதமருக்கு டியூஷன் கொடுக்க முயன்றார். பாராளுமன்ற சட்டத்தின் மூலம் மட்டுமே வரிகளை குறைக்க முடியும். முதல் திட்டம் வரவு செலவுத்திட்டத்தில் செயல்படுத்தப்படும்" என்றார். https://tamil.adaderana.lk/news.php?nid=196860
  24. 13 ஆம் திருத்தம் மட்டுமே தமிழருக்கு உள்ள ஒரே பாதுகாப்பு” - சுரேஷ் க. பிரேமச்சந்திரன் ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் மாகாணசபை தொடர்பாக அண்மையில் வெளிப்படுத்திவரும் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஊடக அறிக்கையொன்றினை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்பொழுது மாகாணசபை முறைமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அதற்கான தேர்தல் விரைவாக நடத்தப்படும் என்றும் அதிலுள்ள அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதியினாலும் அவருடன் இருக்கக்கூடிய ஏனைய கட்சி உறுப்பினர்களாலும் பிரசாரம் செய்யப்பட்டது. வேறுபல உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் மேற்கண்ட உறுதிமொழியானது முக்கியத்துவமானதும் முதன்மையானதுமாகும். புதிதாக வந்திருக்க்கூடிய அனுர அரசாங்கமானது இனவாதம் மதவாதம் போன்றவற்றிற்கு இந்த நாட்டில் இடமில்லை என்று கூறுகின்றது. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் அவர்களுக்குக் கிடைத்த பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் இனவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது எனவும் பேசுகின்றனர். அனுர அரசாங்கமும் ஜேவிபியும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து ஆட்சிப்பீடமேறிய அனைத்து அரசாங்கங்களும் பல்வேறுபட்ட வழிமுறைகளில் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி வந்தனர். இதன்காரணமாக அன்றிலிருந்து இன்றுவரை மாறிமாறி வந்த அரசாங்கங்களின் தமிழர் விரோத கொள்கைகளிலிருந்து தமிழ் மக்கள் தம்மை தற்காத்துக்கொள்ள இவற்றிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நிலையும் போராட வேண்டிய நிலையும் ஏற்பட்டது. -(3) http://www.samakalam.com/13-ஆம்-திருத்தம்-மட்டுமே-தம/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.