Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. உழவு இயந்திரம் விபத்து சம்பவம் ; 06 சடலங்கள் மீட்பு வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த புதன்கிழமை (27) மாலை வரை 04 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட அதிரடிப்படை பொலிஸார் பங்கேற்றுள்ளதுடன் தன்னார்வ இளைஞர் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளன.தற்போது வரை 04 ஜனாசாக்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டிருந்தன. பின்னர் சீரற்ற காலநிலை மற்றும் இருள் காரணமாக மறுநாள் மீட்புப்பணியினை மேற்கொள்ள தயார் செய்யப்பட்டிருந்தது. மேலும் சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் முகமட் ஜெசில் முகமட் சாதீர்(வயது-16), அப்னான், பாறுக் முகமது நாஸிக்(வயது-15), சஹ்ரான்(வயது-15)ஆகியோரர் உள்ளடங்குவதுடன், தஸ்ரிப், யாசீன், ஆகிய மாணவர்களை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.மேலும் சம்மாந்துறை நீதிமன்ற பதில் எம்.ரி சபீர் அகமட் அவர்களின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் குறித்த சடலங்கள் மீதான மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை காணாமல் சென்ற தஸ்ரிப் என்ற மாணவனின் பாடசாலை புத்தகப் பை மீட்புக்குழுவினரால் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க்கிழமை (26) அன்று நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற 11 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே விபத்திற்குள்ளானது.இதன்போது நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரியிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற மாணவர்கள் 06 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர். இவர்கள் சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர். அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு இயந்திம் வெள்ள நீரில் அகப்பட்டு தடம்புரண்ட நிலையில் அதில் பயணம் செய்தவர்கள் வெள்ள நீரில் அள்ளுண்டு காணாமல் போயினர். குறித்த மீட்புப்பணியில் போது அப்பகுதியில் உள்ள அதி வலு மின்கம்பத்தை பிடித்திருந்த மாணவர்கள் சிலரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.மேலும் இந்த விபத்தில் 06 சிறுவர்கள் உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அவருடன் பயணித்த மற்றுமொருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தற்போது காணாமல் போயுள்ளனர்.எஞ்சிய நான்கு பேர் இன்னும் மீட்கப்படவில்லை அத்துடன் நள்ளிரவு தாண்டியதன் காரணமாக மீட்புப்பணி இடைநடுவில் கைவிடப்பட்டது. பின்னர் புதன்கிழமை (27) காலை முதல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.நிந்தவூர் மதரஸா பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது வெள்ளம் காரணமாக விபத்துக்குள்ளானது என தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது. காணாமல் போன குழந்தைகளை தேடும் பணியில் பொலிஸாரும் அப்பகுதி மக்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 2 சடலங்கள் வியாழக்கிழமை (28) காலை மீட்கப்பட்டுள்ளன.குறித்த மீட்புப்பணிகள் புதன்கிழமை (27) இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (28) அதிகாலை மீண்டும் ஆரம்பமாகி இருந்தது. இதன்போது எஞ்சிய இரு சடலங்களும் ஆங்காங்கே கிடந்த நிலையில் மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டன.அத்துடன் குறித்த சடலங்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரது சடலங்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சடலங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான் https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/உழவு-இயந்திரம்-விபத்து-சம்பவம்-06-சடலங்கள்-மீட்பு/150-347912
  2. NPP எம்.பி.க்கள் செல்ஃபி எடுக்கின்றனர்;சாடுகிறார் காசிலிங்கம் தேசிய மக்கள் சக்தியை (NPP) பிரதிநிதித்துவப்படுத்தி, வடமாகாணத்திலிருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) ஃபெங்கல் சூறாவளி பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தவறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் குழு உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான கீதாநாத் காசிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். "தேசிய மக்கள் சக்தியின் ஊடாக வடக்கிலிருந்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தவறிவிட்டனர்" என்று காசிலிங்கம் கூறினார், யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கானோர் உட்பட நாடு முழுவதும் 250,000 க்கும் மேற்பட்ட நபர்கள் கடுமையான வெள்ளத்தால் தத்தளித்து வருகின்றனர். பேரழிவால் ஏற்கனவே 10 பேர் உயிரிழந்துள்ளனர். பல குடும்பங்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவி தேவைப்பாடுள்ளது. “இயற்கை பேரிடர் ஏற்படும் போது, உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் போன்ற உடனடி உதவிகளை வழங்குவது அரசின் கடமை. இருப்பினும், பல நாட்களாக பெய்த கனமழை மற்றும் கடுமையான வெள்ளம் இருந்தபோதிலும், வடக்கிலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் சேவையை செய்வதை விட புகைப்படங்கள் எடுப்பதை தான் அதிகம் செய்கின்றனர்”என்று அவர் குற்றம் சாட்டினார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு NPP பிரதிநிதிகளால் உதவிகள் எதுவும் அனுப்பப்படவில்லை என்று காசிலிங்கம் குற்றஞ்சாட்டினார், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் SLPP போன்ற கட்சிகளை நம்பியிருக்கிறார்கள். "நாங்கள் இரவும் பகலும் களத்தில் இருந்தோம், முன்கூட்டியே திட்டமிட்டுள்ளோம் மற்றும் காலநிலை எச்சரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளிப்போம்," என்று அவர் கூறினார். தேசிய மக்கள் சக்தியை மேலும் விமர்சித்த அவர், “பொறுப்பான ஆட்சியை எதிர்பார்த்த மக்கள் வடக்கில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். ஆனாலும், சில வாரங்களுக்குள்ளேயே, அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறிவிட்டனர், இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் துன்பத்துக்குள்ளாகின்றனர். மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கிய பின்னரே நிவாரணம் வழங்குவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அங்கீகாரம் வழங்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். “பல வாரங்களுக்கு முன்பே கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டது. தயாராவதற்குப் பதிலாக, தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாடி, பாராளுமன்றத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்,” என்று காசிலிங்கம் குறிப்பிட்டார். SLPP தலைவர் பொறுப்பான நிர்வாகத்திற்கு அழைப்பு விடுத்து முடித்தார், "நாட்டிற்குத் தேவை தங்கள் மக்களுக்கு அர்ப்பணிப்புள்ள சட்டமியற்றுபவர்கள் தான், பேரழிவு மற்றும் தேவையின் போது தங்கள் கடமைகளை கைவிடுபவர்கள் அல்ல." என்றார். https://www.tamilmirror.lk/செய்திகள்/NPP-எம்-பி-க்கள்-செல்ஃபி-எடுக்கின்றனர்-சாடுகிறார்-காசிலிங்கம்/175-347914
  3. உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழக்க மாவீரர்நாள் நினைவேந்தல்! யாழ் பல்கலைக்கழக்கத்தில் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று (27) யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் தூபியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேஜர் விநோதரனின் தாயார் பாலசுந்தரம் பொதுச்சுடரை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்தமையடுத்து, ஏனையோர் ஈகச் சுடர்களை ஏற்றி மலர் தூவி உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதில் மாவீரர்களின் உறவுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/உணர்வெழுச்சியுடன்_இடம்பெற்ற_யாழ்_பல்கலைக்கழக்க_மாவீரர்நாள்_நினைவேந்தல்!
  4. தேராவில் துயிலும் இல்லத்திற்கு 15 வருடங்களின் பின்னர் வருகைத்தந்த மாவீரர்களின் உறவுகள் தாயக போரில் மரணித்த மாவீரர்களின் வித்துடல் விதைக்கப்பட்ட தேராவில் துயிலும் இல்லத்திற்கு 15 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் இருந்து அவர்களது பெற்றோர்கள் அஞ்சலி செலுத்த வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறுத்துடையவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்றைய தினம்(27.11.2024) கிளிநொச்சி – தருமபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து மாவீரரின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் வித்துடல் விதைக்கப்பட்ட தேராவில் துயிலும் இல்லத்திற்கு 15 வருடங்களின் பின்னர் அவர்களது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று வருகை தந்திருந்தனர். இதற்கமைய அவர்களையும் கண்ணியமான முறையில் இன்றைய தினம் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. https://akkinikkunchu.com/?p=300799 கொட்டும் மழைக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த உறவுகளை உணர்வெழுச்சியுடன் நினைவுகூறும் வகையில் வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கொட்டும் கடும் மழைக்கு மத்தியிலும், இயற்கை சீற்றத்தையும் பொருட்படுத்தாது இன்று மாலை தமிழர் தாயகப்பகுதியில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. வீதிகளிலும், மாவீரர் துயிலும் இல்லங்களிலும் சிப்பு, மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டு மாவீரர் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், மாவீரர்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு, கண்ணீரால் உறவினர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர். முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என ஒன்றுகூடி மாவீரர் தினத்தை அனுஷ்டித்திருந்தனர். கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக ஒன்று திரண்டு தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பிரதான பொதுச் சுடரை ஒரு மாவீரரின் தாய் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் இடைவிடாத கொட்டும் மழையிலும் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இமடபெற்றிருந்தது. மாலை 06.05மணிக்கு மணி ஓசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து மாவீரர்களுக்கான பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அத்துடன், சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர்சொரிந்து உணர்வெழுச்சியுடன் நினைவேந்தலை மேற்கொண்டனர். கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் யாழ்ப்பாணம் - கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றிருந்தது. இதன்போது அகவணக்கத்தைத் தொடர்ந்து ஈகைச் சுடரை மூன்று மாவீர்ர்களின் தந்தையான கந்தசாமி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்களால் பொதுச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படட்டது. குடத்தனை வடக்கில் மாவீரர் நினைவேந்தல் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனையிலும் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் முதல் நிகழ்வாக சிவப்பு மஞ்சள் கொடி ஏற்றப்பட்டது. கொடியினை மாவீரர் றதிகலாவின் தந்தை கனகரத்தினம் ஏற்றிவைத்தார். தொடர்ந்து பொதுச் சுடரினை வீரவேங்கை தொழில் வாயினின்றும் தாயார் இராசசுந்தரம் சின்னக்கிளி ஏற்றிவைத்தார். சாட்டி துயிலும் இல்லத்தில் யாழ் தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாலை 06.05 மணி ஒலி எழுப்பப்பட்டு ஒரு கரும்புலி மாவீரர் உட்பட மூன்று மாவீரர்களின் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்களால் சுடர்களை ஏற்றப்பட்டு மாவீரர்கள் நினைவு கூரப்பட்டனர். அதனைதொடர்ந்து நினைவு கற்களுக்கு மலர்மாலை அணியப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினத்தையொட்டி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவு தினம் இன்று (27) மாலை நினைவுகூரப்பட்டுள்ளது. ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழு வினால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. https://oruvan.com/sri-lanka/2024/11/27/heroes-day-celebrated-in-the-north-east-amid-pouring-rain
  5. யாழில் 43 ஆயிரத்து 682 பேர் பாதிப்பு adminNovember 27, 2024 யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் ,43 ஆயிரத்து 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் அறிக்கையிட்டுள்ளது. இரவு 7.30 வரையிலான நிலவரப்படி , 12 ஆயிரத்து 970 குடும்பங்களை சேர்ந்த 43 ஆயிரத்து 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் 129 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் 66 பாதுகாப்பு இடைத்தங்கல் முகாம்களில் ஆயிரத்து 634 குடும்பங்களை சேர்ந்த 5ஆயிரத்து 793 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/208779/
  6. நன்றி ஜஸ்ரின் விலாவரியான விளக்கத்திற்கு. கடிதத்தில் எனது மிக நெருங்கிய மருத்துவ நண்பனைப் பெயர் குறித்து வந்த அவசியமற்ற விமர்சனம் கவலையைத் தந்திருந்தது. உங்கள் விளக்கம் அக்கவலையைப் போக்கிவிட்டது.🙏🏽
  7. தமிழீழத் தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  8. மாவீரர்களின் தியாகங்களை தமிழர்கள் மறந்து வருகின்றார்களா? – மட்டு.நகரான் November 26, 2024 தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்.தமிழர்களின் உரிமை, தனித்தும், தேசியம் என்பனவற்றினை பெறுவதற்காக கடந்த 75 வருடத்திற்கு மேலாக பல்வேறு வழிகளிலும் போராடிவருகின்றார்கள். தமிழர்கள் இந்த நாட்டில் தனித்துவமாகவும் இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மையினம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் பெற்றுவாழவேண்டும் என்பதற்காகவே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது.அதில் ஆயுதப் போராட்டம் பிரதான பங்கினை வகிக்கின்றது. இந்த நாட்டில் தமிழர்கள் சுயகௌர வத்துடன் வாழவேண்டும் என்பதற்காக வாழ வேண்டிய வயதில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய் திருக்கின்றார்கள்.தன் இனம் தன்மானத்துடன் வாழவேண்டும் என்பதற்காக இளைஞர்கள் தமது உடலில் குண்டுகளை கட்டிச்சென்று வெடித்து சிதறியுள்ளனர்.இன்று அத்தனை இளைஞர்களின் குடும்பமும் தமது உறவின் இழப்புகளை நினைவுகூர்ந்துள்ள நிலையில் அத்தனை தியாகங்களையும் தமிழர்கள் மறந்து வருகின்றார்களா என்ற கேள்வி இன்றைய நிலைமையில் உணரமுடிகின்றது. தமிழ் தேசிய அரசியலை புறந்தள்ளி செயற்படும் நிலைமையானது இந்த மண்ணுக் காக மடிந்த அத்தனை மாவீரர்களினதும் பொது மக்களினதும் தியாகத்திற்கு செய்யும் பெரும் துரோகமாகவே பார்க்கவேண்டியுள்ளது.இந்த துரோகத்தினை வடகிழக்கில் உள்ள தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் செய்வது என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இன்றைய அரசியல் சூழ்நிலையினையும் தேசிய மக்கள் சக்தி போன்ற கட்சியினதும் உண்மையான முகங்களை அறியாமல் முன் னெடுக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் தமிழர் களை பாரிய அழிவுக்குள் கொண்டுசெல்லும் என்பதை காலம் எமக்கும் உணர்த்தும் நிலைமை யேற்படும். இம்முறை இலங்கையின் பாராளுமன்ற தேர்தலானது கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்தின் இருப்பின் அவசியத்தினை வலி யுறுத்தி நிற்கும் செய்தியை வழங்கியுள்ளது.இந்த செய்தியானது வடகிழக்குக்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் முழு உலகுக்கு மான செய்தியாகவே வேண்டியதாகவே சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் கிழக்கு மாகாண மக்களின் உள்ளார்ந்த செயற் பாட்டினை உணர்ந்து எதிர்காலத்தில் தமது செயற் பாடுகளை முன்நகர்த்தவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப் பாகும். அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளுக்கு கிழக்கு தமிழ் மக்கள் அமோக ஆதரவினை வழங்கியுள்ளதுடன் அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கில் பிரதேசவாதம் பேசி தமிழ் மக்களை படுகுழிக்குள்ள தள்ள நினைத்தவர்களை தோற்கடித்து நல்லதொரு பாடத்தினை கிழக்கு தமிழர்கள் வழங்கியுள்ளார்கள். குறிப்பாக வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக் குமாறு வடகிழக்கில் உள்ள தமிழர்களில் கல்வி மான்களாகவும் புத்திஜீவிகள் என்பவர்களினாலும் தொடர்ச்சியான கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த நிலையிலும் புலம்பெயர் தேசத்தில் உள்ள பலர் கோரிக்கைகளை முன்வைத்துவந்தபோதிலும் வடக்கில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றாலும் கிழக்கில் அவர்களால் வெற்றிகொள்ளமுடியாத நிலையே காணப்பட்டது. அதற்கான காரணமானது கிழக்கில் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப் பட்டுவந்த அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகளினால் கண்டுகொள்ளப்படாத நிலையே கிழக்கில் தேசிய மக்கள் சக்தியை தமிழர்கள் புறக்கணித்து தமக்கான பிரச்சினைக்கு என்றும் துணையாக தமிழ் தேசிய கட்சிகளே இருக்கும் என்ற உண்மையினை தொடர்ச்சியாக உணர்ந்ததே இதற்கான காரணமாக இருக்கின்றது. குறிப்பாக மக்கள் விடுதலை முன்னனியினர் வரலாற்றில் தமிழருக்கு செய்த மிகப்பெரிய துரோகத்தனங்களை மூடி மறைத்து விட்டு தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் வந்தனர். இவர்களுக்கு மட்டக்களப்பு தமிழ் மகன் தங்கள் தனித்துவத்தை இழக்க விரும்ப மாட்டான் என்ற செய்தி சொல்லப்பட்டு இருக்கிறது.அதிகாரம் கொண்டு வடகிழக்கு இணைந்த தாயகத்தை பிரிக்க முடியாத போதும் சட்டத்தை கொண்டு எம் தாயகத்தை பிரித்து மிகப்பெரிய துரோகம் செய்த மக்கள்விடுதலை முன்னணிக்கு கிழக்கு தமிழர்கள் தமது எதிர்ப்பினை இந்த தேர்தல் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். அடுத்ததாக அரசியல் இலாபத்துக்காக கிழக்கை கிழக்கு தமிழன் ஆளவேண்டும் என்று பிரதேச வாதம் பேசி வந்த தரப்பையும் மட்டக் களப்பு தமிழன் நிராகரித்து தோற்க்கடித்துள்ளான். இந்த மாவட்டத்தில் ஒட்டுக்குழுக்களுக்கும் கடந்த காலத்தில் இரத்தக்கறை படிந்தவர்களையும் இம்முறை கிழக்கு தமிழர்கள் புறக்கணித்திருக் கின்றார்கள். பெரும்பான்மையினத்தினால் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக தமிழர்கள் அனு பவித்துவரும் கஸ்டங்கள் என்பது அவர்கள் பெரும்பான்மை கட்சிகளை ஏற்றுக்கொள்ளாத நிலையே காணப்படுகின்றது.கணிசமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி கிழக்கில் பெற்றி ருந்தாலும் தமிழர் பகுதிகளில் தமிழர்கள் தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் வகையிலேயே தமது வாக்குகளை செலுத்தியிருந்தார்கள்.இருந்தாலும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தால் மேலும் ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் நிலைமையே இருந்திருக்கும். கிழக்கு மாகாணத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி மூன்று ஆசனங்களைப்பெற்றிருக்கின்றபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டாக காணப்படும் கட்சிகள் கொண்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினால் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றமுடியாமல்போனதுடன் கிழக்கில் படுதோல்வியை அந்த கட்டமைப்பு பெற்றிருக்கின்றது. தமிழ் தேசிய கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிளவுகளின் காரணமாக கிழக்கில் தமிழ் தேசிய கட்சிகள் ஆசனங்களைப்பெற்றுக்கொள்வது கடினம் என்ற விமர்சனங்களை கொழும்பி னையும் யாழ்ப்பாணத்தினையும் தளமாக கொண்டு செயற்படும் ஊடகங்கள் எழுதியபோதிலும் கிழக்கில் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்து தமிழரசுக்கட்சியை வெற்றிபெறச்செய்துள்ளனர். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியானது கிழக்கில் படுதோல்வியை சந்தித்திருக்கின்றது.ஜனாதிபதி தேர்தலிலும் சங்கு சின்னத்திற்கு கிழக்கில் ஆதரவு வழங்காத நிலையில் இம்முறை கிழக்கில் தமிழ் மக்கள் புறக்கணித்திருக்கின்றார்கள்.காரணம் சங்கு சின்னத்தில் வேட்பாளர்களாக இணைக்கப்பட்ட பலர் கடந்த காலத்தில் தமிழ் தேசியத்திற்கு எதிராகவும் பிள்ளை யான் குழு போன்றவர்களுடனும் இணைந்து செயற்பட்டுவந்துள்ளடன் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக எந்தவித செயற்பாடுகளையும் முன்னெடுக்காதவர்களா கவே காணப்பட்டதன் காரணமாக தமிழர்களினால் புறக்கணிக்கும் நிலைமை காணப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியானது இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தேர்தல் கேட்டபோதிலும் தமிழரசுக்கட்சியை சேர்ந்த ஒருவரே அங்கும்வெற்றிபெறும் சூழ்நிலை காணப்பட்டது. இதேபோன்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியானது கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் இலங்கை தமிழரசுக்கட்சி மீதான விமர்சனங்களை மட்டுமே முன்வைத்துவந்தது. குறிப்பாக கிழக்கில் தமிழர்கள் பல்வேறு அடக்குமுறைகளையும் பிரச்சினைக ளையும் எதிர்கொண்டுவந்த நிலையிலும் பிள்ளையான் போன்றவர்கள் அரச அதிகாரத்தினை பயன்படுத்தி பல்வேறு செயற்பாடுகளை முன் னெடுத்துவந்தபோதிலும் இவை தொடர்பில் தேர்தல் மேடைகளில் பேசாமல் வெறுமனே தமிழரசுக்கட்சிக்கு எதிரான கருத்துகளையே பேசி வந்ததன் காரணமாகவே பெருமளவில் தமிழ் மக்கள் அந்த கூட்டணியை நிராகரிக்கும் நிலைமை காணப்பட்டது. அத்துடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கூட்டங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல் வெறுமனே வடகிழக்கில் போராட்டத்தில் கொள்ளப்பட்டவர்கள் என்ற சொற்பிரயோகங்கள் தமிழ் தேசிய பரப்பில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியமையும் இதற்கான காரணமாக அமைந்தன.எவ்வாறாயினும் கிழக்கில் அனைத்து தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளும் ஒன்றி ணைந்து செயற்படவேண்டிய காலத்தின் தேவை தொடர்ச்சியாகயிருந்துவருகின்றது. அண்மையில் வடக்கு கிழக்குக்கு விஜயம் செய்த சீன தூதுவரின் விஜயம் இதனை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது.அதுவும் வடமாகாண மக்கள் சிறந்த தீர்மானத்தினை எடுத்திருக்கின்றார்கள் என்ற கருத்து அவர் தமிழ் தேசிய அரசியலை தமிழ் மக்கள் நிராகரித்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கின்றார். தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றதும் அவர் அவசர அவசரமாக வடகிழக்குக்கு விஜயம் செய்திருப்பது பெரும் சந்தேகங்களை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் அனைத்து தமிழ் தேசிய சக்திகளும் ஒன்றுபட்டு செயற்படும்போதே எங்களை நோக்கிவரும் சூழ்ச்சிமிக்க ஆபத்துகளை தடுத்து நிறுத்தமுடியும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். https://www.ilakku.org/மாவீரர்களின்-தியாகங்களை/
  9. தீர்வுத் திட்டம் குறித்து பேச தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு ! ShanaNovember 27, 2024 தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக வைத்து, ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாராளுமன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது. இவ்வாறான நிலையில், அவர்கள் அடுத்து வரும் காலப்பகுதியில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பரென எதிர்பார்க்கிறோம். எற்கனவே மைத்திரி – ரணில், கூட்டு அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றையாட்சியை மையப்படுத்திய புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையிலிருந்து, புதிய அரசியலமைப்பை உருவாக்க உள்ளதாக தேசிய மக்கள் சக்தியினர் அறிவித்துள்ளனர். ஒற்றையாட்சியை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த இடைக்கால அறிக்கை, தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதாக இல்லை. எனவே, இடைக்கால அறிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய மக்கள் சக்திக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ளதால், எந்தவிதமான முடிவுகளுக்கும் அவர்கள் செல்ல முடியும். தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவே இவர்கள் செயற்படுகின்றனர்.இதை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். இந்நிலையில், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுக்கான வரைவை அடிப்படையாக வைத்து ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். இவ் வரைபு தயாரிக்கப்பட்ட போது, சுமந்திரன் தவிர ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். துரதிர்ஷ்டவசமாக தொடர்ச்சியாக அவர்களின் பங்கேற்பு முழுமை பெறும் வரையில் நீடித்திருக்கவில்லை. தமிழ் மக்கள் பேரவையின் வரைபை கொள்கை அளவில் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளதால், அதனை மையப்படுத்தி பேச்சுக்களை ஆரம்பிப்பது பொருத்தமானதாக இருக்கும். இந்தச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கும் ஏனையவர்கள் அதில் பங்கேற்பதற்குமான பகிரங்க அறிவிப்பை விடுப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.battinews.com/2024/11/blog-post_524.html
  10. தமிழர் போராட்டத்தையும் ஜே.வி.பியின் போராட்டத்தையும் இணைத்து தமிழ் மக்கள் சித்தரிப்பது வெட்கப்பட வேண்டிய விடயம் இந்த அரசாங்கம் கொண்டு வருவதாக கூறும் மாற்றமானது ஒருபோதும் தமிழ் மக்களுக்கான மாற்றமாக இருக்காது. தங்கள் ஆட்சியைப் பலமாகத் தக்க வைத்துக் கொள்வதற்கும், இந்த நாட்டைத் தனிச் சிங்கள நாடாக மாற்றும் மென்போக்கான நகர்வுகளாகவே அவை இருக்கும். எமது போராட்டத்தையும் ஜே.வி.பியின் போராட்டத்தையும் இணைத்து அதுவும் எமது தமிழ் மக்கள் சித்தரிப்பதென்பது நாமே நம்மை எண்ணி வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முன்னாள் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். மாவீரர் நாள் தொடர்பான அறிக்கையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது இனத்தின் சுதந்திர விடுதலைக்காகப் போராடி வீரமரணமடைந்த மாவீரர்களை நினைவு கூரும் புனித நாள் மாவீரர் நாள். இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்த ஆட்சியாளர்கள் எமது இனத்தை அடிமைகளாக்க நினைத்தார்கள். அதனை எமது போராளிகள் எதிர்த்து நின்று போராடி எமது இனத்தைப் பாதுகாத்தார்கள். எமது இனத்தின் பாதுகாப்பிற்காகப் போராடி களத்திலே மடிந்த மாவீரர்களின் இலட்சிக் கனவினை எமது நெஞ்சிலே சுமந்த படி எமது விடுதலைக்கான பயணத்தை அரசியல் ரீதியாக முன்னெடுத்து வருகின்றோம். இந்த விடுதலைப் பயணமானது எமது சவால் மிகுந்த பயணமாகவே இருக்கின்றது. தற்போதைய சூழலில் இலங்கை ஒரு ஆட்சி மாற்றத்தைச் சந்தித்துள்ளது. சிங்கள மக்களின் பலமான வாக்குப் பலத்துடன் ஆட்சி அதிகாரத்தில் வந்திருக்கின்றது. தமிழினத்தின் சுதந்திரத்திற்காக அரசியல் ரீதியாகப் போராடி வந்த எமது அரசியற் தலைவர்கள் ஏமாற்றப்பட்டதன் விளைவால் 30 வருட காலமாக ஆயுதப் போராட்டம் இந்த மண்ணிலே நிகழ்த்தப்பட்டது. அந்த ஆய்தப் போராட்டத்தின் வெற்றியாகவே தமிழினம் ஒரு தேசிய இனம் என்பதை உலகுக்கு வெளிப்படுத்தி தமிழினத்தின் இருப்பை இங்கு நிலைநிறுத்தியது. அந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதிலிருந்து அது அரசியல் ரீதியான போராட்டமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மாவீரர் கண்ட கனவுகள், அவர்கள் சிந்திய இரத்தங்கள், தியாகங்கள், அர்ப்பணிப்புகள் அனைத்துமே எமது மக்களின் விடுதலையை நேசித்தது மாத்திரமே. அந்த மாவீரர்களின் தியாகங்கள் அர்ப்பணிப்புகளை நாம் உணர்ந்து கொண்டு அனைவரும் ஒரு தேசத்தின் மக்களாக அணிதிரண்டு எமது விடுதலையை வென்றெடுக்க ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். எமது தமிழ்த்தேசிய அரசியல் இன்று சிதைவுற்று பலவீனப்பட்ட ஒரு நிலையில் காணப்படுகின்றது. இது எமது தமிழினத்தின் எதிர்காலத்திற்கு உகந்ததாக அமையாது. எதிர்காலத்தில் எங்களை நாங்களே ஆளவேண்டும் என்ற கோட்பாட்டைப் பிடிங்கிக் கொண்டு செல்லும் தற்போதைய அரசின் நிகழ்ச்சி நிரலுக்கே அது தீணி போடும். ஆனால் எமது கிழக்கு மாகாணம் இதற்கு விதிவிலக்கான நிலையில் ஒரு மாற்றத்தைக் காண்பித்திருக்கின்றது. ஜே.வி.பி இன் போராட்டம் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டமே தவிர சுதந்திர விடுதலைக்கான போராட்டம் அல்ல. சிங்கள ஆட்சியாளர்களால் எமது இனம் அடக்கி ஒடுக்கப்பட்டதன் காரணத்தினாலேயே எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதனை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே தற்போது எமது போராட்டத்தையும் ஜே.வி.பி. இன் போராட்டத்தையும் இணைத்து அதுவும் எமது தமிழ் மக்கள் சித்தரிப்பதென்பது நாமே நம்மை எண்ணி வெட்கப்பட வேண்டிய விடயம். தற்போது ஜே.வி.பி தொடர்பில் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு வரலாறே இருக்கின்றது. இன்று அவர்கள் ஒரு புதிய பெயருடன் இலங்கை முழுவதும் தமிழர் பகுதியிலும் வந்து கொண்டு இன்று ஒரு நல்லாட்சியைக் கொண்டு வந்துள்ளோம், இனவாதம் கிடையாது, அனைவரும் ஒன்றுபட்ட மக்கள், ஒரே நாடு, அனைவருக்கும் சுதந்திரம் வழங்கப்படும் என்ற கருத்துகளோடு தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை முற்றுமுழுதாகத் துடைத்தெறியும் செயற்பாடுகள் எமது தாயகப் பகுதிகளிலே நடந்தேறி வருகின்றன. இந்த அடிப்படையில் இராணுவ முகாம்கள் அகற்றல் காணி விடுவிப்பு போன்ற விடயங்களைத் தமிழ் மக்களின் நலன் சார்ந்த விடயங்களாகவே மக்கள் பார்க்கின்றனர். ஆனால் உண்மை அவ்வாறு அல்ல இவை அனைத்தும் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாகத் தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் மேற்கொள்ளும் நடவடிகைகளே. உலக நாடுகளின் கடன் பெறுகைகள், பாதுகாப்பு செலவீனங்களைக் குறைத்தல் என்ற செயற்பாட்டை வெளிப்படுத்துவது போன்றவற்றிற்காகவே இராணுவ வீரர்களின் குறைப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. மாற்றமொன்றைக் கொண்டு வருவதாக இந்த அரசாங்கம் சொல்லியிருக்கின்றது. இது ஒருபோதும் தமிழ் மக்களுக்கான மாற்றமாக இருக்காது. மாறாக சிங்கள ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியைப் பலமாகத் தக்க வைத்துக் கொள்வதற்கான மாற்றமாகவே இருக்கும். இவை அனைத்தும் இந்த நாட்டைத் தனிச் சிங்கள நாடாக மாற்றும் மென்போக்கான நகர்வுகளாகவே இருக்கின்றன. தற்போதைய நிலையில் எமது தேசியத்தைப் பாதுகாக்கும் பலமாக எமது வாக்கு மட்டுமே இருக்கின்றது. இந்த வாக்குப் பலத்தினைச் சிதைத்து சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் பகுதிகளில் தங்களின் பிரதிநிதிகளை வெற்றிபெறச் செய்வதற்காக அவர்களைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் காண்பித்து எமது மக்களை ஏமாற்றி சிங்கள தேசியவாதத்திற்குப் பின்னால் இழுத்துச் செல்லும் தந்திரோபாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை எமது மக்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் கிழக்கில் மாறாமல் வெற்றியடைந்துள்ள தமிழ்த் தேசிய வெற்றியானது வடக்கை நோக்கி நகரும். இதில் எமது அரசியற் தலைவர்களும் நிலமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும். தற்போதைய இளைஞர்கள் மத்தியில் எமது போராட்ட வரலாறுகள் கடத்தப்படாதமையும் தமிழ்த் தேசியத்தின் தோல்வி நிலைக்கு ஒரு காரணமாக இருக்கின்றது. இந்த வரலாற்றுத் தவறை நாங்கள் திருத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் தமிழ்த் தேசிய அரசியலில் தனித்து உரிமை சார்ந்த விடயங்களை மாத்திரம் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல முடியாது. அபிவிருத்தி சார்ந்த விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஆயுதப் போராட்ட சமாதான காலத்திலும் கூட எம்மால் யுத்தத்தால் நலிவுற்ற எமது பிரதேசங்களுக்குரிய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தோம். எனவே தற்போதைய சூழலிலே நாங்கள் இந்த விடயங்களையும் கருத்திற்கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொரு ஆண்டும் எமது மாவீரர்களை நினைவு கூருவது எமது மரபாகும். எமது மாவீரர்களின் ஆத்மா எம்மை வழிநடத்தக் கூடிய விதமாக நாம் எம்மைப் புனிதர்களாக மாற்றி எமது இலட்சியத்தை அடையக் கூடிய உறுதியான நிலைப்பாட்டை நாங்கள் எடுத்து அந்த மாவீரர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காகச் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார். https://thinakkural.lk/article/312697
  11. மோசமான காலநிலைக்கு மத்தியிலும் மாவீரர்களை நினைவேந்த தயாராகும் தமிழர் தாயகம் தமிழர் தேசத்தின் விடிவுக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை இன்று உணர்வெழுச்சியுடன் நினைவேந்த தமிழர் தாயகம் தயாராகியுள்ளது. வடக்கு, கிழக்கில் 25 இற்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள் மற்றும் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நினைவேந்தப்படவுள்ளனர். கொட்டும் மழைக்கு மத்தியிலும் துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள், விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்கள் சிவப்பு, மஞ்சள் வர்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு நினைவேந்தலுக்குத் தயார் நிலையில் உள்ளன. இன்று மாலை 6.05 மணிக்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட துயிலும் இல்லங்கள், வீடுகள், பொது இடங்களில் சமநேரத்தில் சுடர் ஏற்றப்படவுள்ளது. இதேவேளை, போரில் உயிரிழந்த தமது உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவுகூர எவ்வித தடைகளையும் அரசு ஏற்படுத்தாது என்றும், தடைகளை ஏற்படுத்த அரசுக்கு அனுமதியும் இல்லை என்றும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும். நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் எனப் பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் புதிய அரசு அறிவித்திருக்கும் நிலையில்,தமிழ் மக்கள் யுத்தத்துக்கு பின்னர் சுதந்திரமாக தங்களுடைய உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார்கள். https://thinakkural.lk/article/312684
  12. கொழும்பு-யாழ் வீதியின் போக்குவரத்து பாதிப்பு November 27, 2024 09:12 am யாழ்ப்பாணம்-கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பிரதேசத்தில் இன்று (27) காலை பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது. இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், அக்குரஸ்ஸ, இம்புல்கொடவில் படகில் ஏறி வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 16 வயது மாணவன் ஒருவரை 20 வயது இளைஞன் காப்பாற்றியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. களனி கங்கை நிரம்பி வழிவதால் க்ளென்கொஸ், கித்துல்கல, தெரணியகல மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நில்வலா ஆறு நிரம்பி வழிவதால் பாணடுகம பிரதேசத்திற்கும் மகாவலி ஆறு நிரம்பி வழிவதால் பேராதனை மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மல்வத்து ஓயாவை அண்மித்த தந்திரமலை பிரதேசம், தெதுரு ஓயாவை அண்மித்த மொரகஸ்வெவ பிரதேசம் மற்றும் மஹா ஓயாவை அண்மித்த படல்கம பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196486
  13. சங்குக் கூட்டணியின் தோல்வி அல்லது DTNA யின் முடிவு November 26, 2024 — கருணாகரன் — ‘தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கதை முடிந்து விட்டது. இல்லாத கூட்டமைப்புக்காக ஏன் அடிபட்டுக் கொள்ள வேணும்‘ என்று சில மாதங்களுக்கு முன்பு, (DTNA உருவாக்கப்பட்டபோது) ரெலோவின் முக்கியஸ்தர் ஒருவரிடம் கேட்டேன். உடனே அவர் குரலை உயர்த்தி ஆவேசப்பட்டார். ‘கூட்டமைப்பு இல்லையென்று யார் உங்களுக்குச் சொன்னது? கூட்டமைப்பை விட்டு தமிழரசுக் கட்சிதான் வெளியேறிச் சென்றதே தவிர, நாம் தொடர்ந்தும் கூட்டமைப்பாகவே இருக்கிறோம்‘ என்றார். ‘அப்படியில்லையே! நீங்கள் DTNA (ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு‘ என்றல்லவா செயற்படுகிறீர்கள்? கூட்டமைப்பு என்ற பேரில் தமிழரசுக் கட்சிதானே உள்ளது?‘ என்றேன். ‘நாம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறவில்லை. தமிழரசுக் கட்சிதான் வெளியேறிச் சென்று, 2022 இல் தனியாக உள்ளுராட்சித் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்தது. நாங்கள் கூட்டமைப்பாகவே எப்போதும் இருக்கிறோம்‘ என்றார் அவர். ‘கிளிநொச்சியில் சிறிதரனின் பணிமனையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற பெயர்ப்பலகையே உள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்று உங்களை நீங்கள் சொல்லிக் கொண்டாலும் நீங்கள் இப்போது ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (DTNA) என்றுதானே உங்களை அடையாளப்படுத்த வேண்டியுள்ளது… சரி, ஒரு வாதத்துக்கு நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டாலும் தமிழரசுக் கட்சியை விட நீங்கள் பலவீனமாகத்தானே இருக்கிறீர்கள்…?‘ என்று கேட்டேன் அவருக்குக் கோபம் உச்சிக்கு ஏறி விட்டது. தன்னைச் சீண்டுகிறேன் என்று நினைத்திருப்பார் போலும். ‘தமிழரசுக் கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடையாது. சுமந்திரன் எல்லாவற்றையும் நாசமாக்கி விட்டார். நாங்கள் பலமான கூட்டணியை அமைத்திருக்கிறோம். எதிர்காலத்தில் எங்களோடு (DTNA யுடன்) இன்னும் பல கட்சிகளும் அணிகளும் சேரும். இருந்து பாருங்கள். தமிழரசுக் கட்சியே வந்து சேரும். விரைவில் தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்போகிறோம். நிச்சயமாகப் புதிய வரலாறு அப்படி எழுதப்படும்…‘ என்றார் அந்தப் பிரமுகர். இறுதியாக இன்னொன்றையும் சொன்னார், ‘உங்களுடைய ஊகங்களும் விருப்பங்களும் அரசியல் முடிவுகள் ஆகாது. அரசியலை விளங்கிக்கொள்ள வேணும் என்றால், மக்களின் மனநிலையை அறிய வேணும். எங்களுக்கு நாற்பது ஆண்டுகால வரலாறு உண்டு. இப்ப கூட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்… மக்கள் ஆதரவில்லாமல் இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகியிருக்கும்? ரெலோ ஒன்றும் சில்லறைக் கட்சியோ சிறிய இயக்கமோ இல்லை… நீங்கள் கொஞ்சம் அரசியல் படிக்க வேணும்‘ என ஒரு பத்து நிமிடம் பொழிந்து தள்ளினார். கதையைத் தொடங்கியது நான் என்பதால், வேறு வழியில்லாமல் எல்லாவற்றையும் கேட்க வேண்டியிருந்தது. இப்படித்தானிருக்கிறது இவர்களுடனான அரசியல் புரிதலும் உரையாடலும் என அதில் சில விடயங்களைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. கூடவே கள நிலைமையை – அவர்களுடைய அரசியலின் போக்கை, அரசியற் சூழலை அவர் விளங்கிக் கொண்ட விதத்தையெல்லாம் தெரிந்து கொண்டேன். அதற்கு மேல் எதையும் நான் பேசவில்லை. அதற்கு அவசியமுமில்லை. ஏனையவற்றை வரலாறு பார்த்துக் கொள்ளும் அல்லவா. வரலாறு என்பது வேறொன்றுமல்ல, காலமும் மக்களும்தான். ஆக என்னுடைய பொறுமைக்கும் செவி கொடுத்துக் கேட்டதற்கும் பயன் கிடைத்தது. அந்த ரெலோக்காரர் மட்டுமல்ல, இதேபோலத்தான் ஈ.பி.ஆர். எல்.எவ் ஆட்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ‘ஜனநாயக நடைமுறைகளுக்கு இடமளிக்காமல், கூட்டமைப்பைச் சிதைத்தது மட்டுமல்ல, அதை விட்டு வெளியேறியதும் தமிழரசுக் கட்சிதான். விரைவில் அது பாடம் படிக்கும். அதற்குப் பிறகு அதனுடைய திமிரெல்லாம் வடிந்தொடுங்க, பழையபடி கூட்டமைப்புக்குள் வந்து சேரும். அப்போது அதனுடைய பல்லைப் பிடுங்கி விடுவோம்.. குறிப்பாகச் சுமந்திரனை அரசியற் களத்திலிருந்து அகற்றி விடுவோம். எல்லாவற்றையும் விட மொத்தத்தில் தமிழரசுக் கட்சியை இல்லாமற் செய்வதே தங்களுடைய முதல் வேலை‘ என்றெல்லாம் ஏராளம் கனவுத் திட்டங்களை. இதையெல்லாம் கேட்கும்போது சிரிப்புத்தான் வந்தது. சிரிப்பு வந்தால் சிரிக்கத்தானே வேணும். சிரித்தேன். இதை நண்பர்களுடன் பகிர்ந்து எல்லோருமாகச் சிரித்தோம். அப்பொழுது ஒரு நண்பர் சொன்னார், ‘காரைநகர் கடற்படைத் தளத்தை நிர்மூலம் செய்த வரலாற்றுச் சாதனையாளர்கள், நிச்சயமாகத் தமிழரசுக் கட்சியையும் உடைத்து நொருக்கி விட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பார்கள். அதற்குப் பிறகுதான் ஒரு பிளேன் ரீயைக் கூடக் குடிப்பார்கள். அப்படியொரு வீர சபதத்தை எடுத்தவர்கள், அதை நிறைவேற்றும் வரையில் ஓய்ந்திருக்க மாட்டார்களல்லவா!… என்று. அன்று முழுவதும் சிரிப்பாகவே இருந்தது. இதனை மையப்படுத்தியே ‘ஒப்பிரேஷன் சுமந்திரன்‘ ‘புலிகளும் எலிகளும்‘ ‘EPRLF: கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும்‘ ‘அரசியலில் இதெல்லாம் சகஜமில்லை‘, ‘தமிழரசுக் கட்சியைப் பலவீனப்படுத்தும் தமிழ்ப்பொது வேட்பாளர்‘ ‘தமிழ்ப்பொது வேட்பாளரும் அரசியற் தற்கொலையும்‘, ‘தெற்கின் அரசியற் களமும் வடக்கின் அரசியல் முகமும்‘ ‘தமிழ்த்தேசியம் பலப்படுத்தப்படுகிறதா? பலவீனப்படுத்தப்படுகிறதா?‘, ‘எதிர்ப்பு அரசியலின் காலம் முடிந்தது‘, ‘காலம் கோருவது கருத்துருவாக்கிகளை மட்டுமல்ல‘, ‘தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு – தமிழரசுக் கட்சி – ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு: ஒற்றுமையும் வேறுபாடுகளும்‘, ‘விதியே விதியே தமிழ்ச்சாதியை என்னசெய்ய நினைத்தாய்?‘போன்ற பல கட்டுரைகளை அண்மையில் தொடர்ந்து எழுதினேன். இந்தக் கட்டுரைகளை நான், ரெலோ, ஈ.பி.ஆர்.எல், எவ், புளொட் தரப்பினருக்கும் சுமந்திரன், மனோகணேசன், சந்திரகுமார் போன்றோருக்கும் அனுப்பி வைப்பதுண்டு. பலரும் படித்து விட்டு அமைதியாகி இருந்து கொள்வார்கள். பதிலோ மறுப்போ விமர்சனங்களோ வராது. சிலர் விவாதிப்பர். சிலர் திட்டுவார்கள். ஒரு தடவை ஈ.பி.ஆர்.எல்.எவ்வைச் சேர்ந்த தோழர் ஒருவர் சொன்னார் – ‘உங்களுடைய விருப்பங்களை அரசியல் முடிவுகளாகக் காட்டக் கூடாது. நங்கள் மக்களோடுதான் நிற்கிறோம். மக்கள் என்ன நினைக்கிறார்கள்? எப்படிச் சிந்திக்கிறார்கள்? என்பதெல்லாம் எங்களுக்கும் விளங்கும்…‘ என. இன்னொருவர் சொன்னார், ‘சில ஊடங்களின் விருப்பத்துக்கும் சில வாசகர்களைக் குஸிப்படுத்தவும்தான் எழுதுகிறீங்கள். இதெல்லாம் நீண்ட காலத்துக்குத் தாக்குப் பிடிக்காது. DTNA யின் எழுச்சிக்குப் பிறகு பாருங்கள். மாற்றம் எப்படியிருக்குமென்று‘ என. இது தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தப்பட்ட சூழலில் இன்னும் மோசமாகியது. தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவதில் என்னுடைய உடன்பாடின்மையைக் குறிப்பிட்டு, அதனுடைய சாதக – பாதக நிலையை விளக்கி எழுதினேன். குறிப்பாக ‘தமிழ்ப்பொது வேட்பாளர்‘ ஒரு மோசமான நிலைப்பாடு. அதனால் தமிழ் மக்களைத் தேசமாகத் திரட்ட முடியாது. அதையும் விட தமிழ்த் தேசிய அரசியற் சக்திகளை ஒன்றிணைக்கவே முடியாது என்று குறிப்பிட்டிருந்தேன். அதை மறுத்த DTNA அணியினர் ஏறக்குறைய என்னையும் துரோகிப் பட்டியலில் சேர்த்தனர். இதுதான் உச்ச வேடிக்கையாகும். ஒரு காலம் அவர்களையே விடுதலைப் புலிகளும் அவர்களை ஆதரித்து நின்ற பெருந்திரள் தமிழ்ச்சமூகமும் துரோகிகளாகச் சித்தரித்ததுண்டு. இது தவறென காலம் முழுவதும் மூக்குச் சிந்திக் கொண்டிருந்தோரே மாற்றுக் கருத்துள்ளோரைத் துரோகி என்று கூறுவதாக இருந்தால்….? இந்தச் சூழலில் நம்முடைய உரையாடல்கள் குறைந்தன. ஆனாலும் தொடர்பை நாம் முறித்துக் கொண்டதில்லை. ஒரு சிலர் ‘தொடர்ந்து நாம் உரையாட வேண்டாம். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பேசலாம்‘ என்று நிறுத்திக் கொண்டனர். சங்குச் சின்னம் இரண்டரை லட்சம் வாக்குகளை எடுத்ததும் சற்று உசாரடைந்து மீண்டும் பேசத் தொடங்கினார்கள். அந்த உசாரோடு DTNA அணி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், தமிழ்ப்பொது வேட்பாளருக்கும் அப்போதைய சங்குக்கும் ஆதரவளித்த தமிழ் மக்கள் பொதுச் சபை தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டது. இருந்தாலும் பாராளுமன்றத் தேர்தலில் சங்கு அமோக வெற்றியைப் பெறும் என்று DTNA அணி முழுதாவே நம்பியது. அந்த நம்பிக்கையைப் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அடித்துக் கொண்டு போய் விட்டன. இப்பொழுது இந்தத் தரப்பில் கனத்த அமைதியே நிலவுகிறது. தேர்தலில் வெற்றி – தோல்வி ஏற்படுவது வழமை. ஆனால் இப்பொழுது நடந்தது அதுவல்ல. இதொரு அரசியற் தற்கொலை (Political suicide) ஆகும். அதாவது தமிழ்த்தரப்பினர் பொதுவாக மேற்கொண்டு வந்த பிராந்திய அரசியல் (தமிழ்த்தேசியவாத அரசியல்) பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளது. மீளவும் சிங்களத் தரப்பு அதற்கு உயிரூட்டவில்லை என்றால் பிராந்திய அரசியல் – தமிழ்த்தேசியவாத அரசியல் தொடர்ந்தும் உயிர்வாழ முடியாது. ஏற்கனவே போருக்குப் பிந்திய சூழலைப் புரிந்து கொண்டு, அதற்கான அரசியலை மேற்கொள்ளாத காரணத்தினால் தமிழ் அரசியற் சக்திகளை ஓரங்கட்டியுள்ளனர் மக்கள். இதில் மோசமாகப் பாதிக்கப்பட்டது DTNA தான். அதாவது, ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சக்திகளே. ஆனால், இந்தத் தேர்தலில் ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்களை நிராகரித்த மக்கள், ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்ட ஜே.வி.பியை ஏற்றுள்ளனர். இந்த முரணை வாசகர்கள் சற்று ஊன்றிக் கவனிக்க வேண்டும். காரணம், ஜே.வி.பி கடந்த காலப் படிப்பினைகளுக்கூடாக தேசிய மக்கள் சக்தியாகப் பரிணாமம் அடைந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் புதிய பரிணாமத்தையும் பரிமாணத்தையும் மக்கள் அங்கீகரித்துள்ளனர். வளச்சியின்றித் தேங்கிப் போன தமிழ் இயக்கங்களை மக்கள் நிராகரித்துள்ளனர். இதைப் புரிந்து கொண்ட தரப்பு தோழர் சுகு ஸ்ரீதரனும் அவருடைய தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியும்தான். ஆனால், சுகு ஸ்ரீதரனையும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியையும் DTNA பெரிதாகக் கணக்கிற் கொள்வதில்லை. DTNA கணக்கிற் கொள்ளாமல் விட்டாலும் வரலாறு தன்னுடைய கணக்கிற் கொண்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் வாசகர்களுக்கும் குறித்த ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் வினருக்கும் ஒன்றை நினைவூட்ட வேண்டும். தற்போதிருப்பது பத்மநாபாவின் ஈ.பி.ஆர்.எல்.எவ்வா? அல்லது பிரபாகரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ்வா? என்று கேட்டு எழுதியிருந்தேன். இதே கேள்வி ரெலோ, புளொட் மீதும் எழுப்பப்பட்டது. ஏனென்றால் இந்த இயக்கங்கள் எல்லாம் தம்முடைய பெயரில் மட்டும்தான் வேறுபாடுகளைக் கொண்டுள்ளனவே தவிர, அரசியலில் அப்படியல்ல. விடுதலைப்புலிகளுக்குப் பின், அதன் நீட்சியாகக் காட்டப்படும் தேசியவாத அரசியலையே (Pseudo-nationalist politics) பின்பற்றுகின்றன. இன்னொரு கேள்வி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் என்ன வேறுபாடு? அல்லது தமிழரசுக் கட்சிக்கும் DTNA க்கும் இடையில் என்ன வித்தியாசம்? எனவும் கேட்கப்பட்து. இதற்கான விடைகள் எல்லாம் இப்போது (பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளோடு) தெளிவாகக் கிடைத்து விட்டன. ஆனாலும் இந்தச் சக்திகள் அதை ஏற்றுக் கொள்ளவோ புரிந்து கொள்ளவோ தயாரில்லை. மீண்டும் ஒற்றுமை, ஐக்கியம் என்று பேச (புலம்ப) த் தொடங்கியுள்ளன. தமது பின்னடைவுக்கும் தோல்விக்கும் காரணம், தாம் பிரிந்து நின்றதேயாகும் என்றே இவை நம்புகின்றன. இதற்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ளலாம். எலிகள் பல சேர்ந்தாலும் வளையைத் தோண்ட முடியாது. இதற்குச் சரியான பரிகாரமென்றால், அரசியல் உள்ளடக்கத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அதாவது, மாற்று அரசியலைக் கொள்ள வேண்டும். உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டிலும் புத்தாக்கத்தைக் (Innovation) கொள்ளாத எத்தகைய அரசியல் முயற்சிகளும் பயனளிக்காது. காலப் பொருத்தமற்ற, சமூக வளர்ச்சியைப் பொருட்படுத்தாத, சமூக வளர்ச்சிக்குப் பயளிக்காத அரசியல் நிலைப்பாட்டோடு இருக்கும் வரையில் இவற்றால் வெற்றியைப் பெறவே முடியாது. மட்டுமல்ல, அதனால் மக்களுக்கும் வெற்றியைக் கொடுக்க முடியாது. இப்போது இந்தச் சக்திகளின் தலைக்குள் நிரம்பிக் கிடக்கும் பிரச்சினையெல்லாம் எப்படித் தமிழரசுக் கட்சி வெற்றியைப் பெற்றது? அதற்கு எப்படி 08 ஆசனங்கள் கிடைத்தன? அதில் சிறிதரன் போன்றவர்கள் எப்படி வெற்றியீட்டினார்கள்? கஜேந்திரகுமார் வெற்றி பெற்றது எப்படி? அப்படியான ஒரு வெற்றியைத் தாம் பெறுவது எப்படி? என்பதேயாகும். நிச்சயமாக மக்களின் நலனோ முன்னேற்றமோ விடுதலையோ அல்ல. அவற்றைப் பற்றிச் சிந்தித்தால், தமக்குள் நிச்சயமாக மாற்றத்தை (நிலைப்பாட்டு மாற்றத்தை – Position change) தமக்குள் உருவாக்கியிருக்கும். அல்லது இனியாவது உருவாக்க முயற்சிக்கும். ஆனால், அப்படிப் புதிதாக இவற்றால் சிந்திக்க முடியவில்லை. காரணம், ஏற்கனவே சொல்லப்பட்டதைப்போல புத்தாக்க அரசியற் சிந்தனையோ, புதிய அரசியல் உள்ளடக்கமோ (New Political Content) இவற்றிடம் இல்லை என்பதுதான். ஆனால், சரி, தவறுகளுக்கு அப்பால் இவற்றுக்கு வரலாற்றில் ஒரு இடமுண்டு. தம்மை அர்ப்பணித்துச் சமூகத்துக்கு பணியாற்றிய வரலாற்றைக் கொண்ட சக்திகள் இவையாகும். தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்க்காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆகியவற்றை விட இவை பன்மடங்கு பெறுமதிக்குரியவை. ஆனால், தமது அரசியல் வெறுமையினாலும் வறுமையினாலும் இன்று தமிழரசுக் கட்சியிடமும் தமிழ்க்காங்கிரஸிடமும் தோற்றுப் போயுள்ளன. உண்மையில் தமிழரசுக் கட்சி, தமிழ்க்காங்கிரஸ் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி), தமிழர் விடுதலைக் கூட்டணி மூன்றும் எப்போதோ காலாவதியாகி விட்டவை. மூத்த – பாரம்பரியக் கட்சி என்ற அடையாளமும் கட்சிச் சின்னமும் கட்சிப் பதிவும் உள்ளது என்பதற்காக அவற்றை அரசியற் செயற்பாட்டியக்கங்களாக மக்கள் கருதவே முடியாது. அவற்றிடம் நிகழ்கால, எதிர்கால அரசியலுக்கான சிறு துரும்பு கூடக் கிடையாது. இந்தத் தேர்தலிலும் வெற்றியைப் பெற்றுள்ளன: மக்களுடைய ஆதரவைக் கொண்டுள்ளன என்று யாரும் சொன்னால், அதைப்போல முட்டாள்தனம் வேறில்லை. ஏனென்றால், இவற்றின் அரசியல் வரலாற்றில் இவை மக்களுக்கு அளித்த பெறுமானங்கள் என்ன? வெற்றிகள் என்ன? அரசியற் செயற்பாட்டியக்கம் என்பது அது பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களுடைய சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு, ஜனநாயக அடிப்படைகளையும் உரிமைகளையும் பேணுவதோடு, அவற்றிலுள்ள இடர்ப்பாடுகள், நெருக்கடிகள், பின்னடைவுகளை வென்று முன்கொண்டு செல்கின்றதாக இருக்க வேண்டும். மக்களை வெற்றியாளர்களாக மாற்ற வேண்டும். இது நிகழ்ந்திருக்கிறதா? இதை இந்தக் கட்சிகளில் எதனிடம் காண முடியும்? தற்போதைய சூழல் போருக்குப் பிந்தியது. முப்பது ஆண்டுக்கு மேலான ஆயுதப் போராட்டத்துக்குப் பிந்தியது. அந்த ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டதற்குப் பின்னானது. ஆகவே இதற்கமைய போருக்குப் பிந்திய அரசியலை (Post – Wat Politics) யே முன்னெடுத்திருக்க வேண்டும். அதனுடைய பின்னடைவுகளையும் பாதிப்புகளையும் மனதிற் கொண்டு, அவற்றை ஈடு செய்வதற்கான அரசியலையும் பொறிமுறையையும் முதற்கட்டமாக உருவாக்கியிருக்க வேண்டும். அடுத்த கட்டமாக, மீளெழுச்சிக்கான சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கட்டுமானத்தைக் குறித்துச் சிந்தித்திருக்க வேண்டும். மூன்றாம் கட்டமாக விடுதலை அரசியலை முன்னெடுப்பதற்கான தளத்தைப் பற்றிச் சிந்தித்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் இதை எந்தக் கட்சிகள் புரிந்துள்ளன? இந்த உண்மையை கொள்கையளவிலேனும் ஏற்றுக் கொண்டுள்ளனவா? கிடையாது. இவை எதுவுமே இல்லாமல்தான் கடந்த 15 ஆண்டுகளாக இந்தக் கட்சிகள் அனைத்தும் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) வெற்றிப் பரப்பில் நின்றன. அதற்கான இடத்தை அளித்தது, சனங்கள் சிங்கள ஆட்சித்தரப்பின் மீது கொண்ட கோபமும் வெறுப்புமாகும். ஆனால், அந்தக் கோபமும் வெறுப்பும் குறையத் தொடங்கி விட்டது. அதிகாரத்தில் நேரடிக் கோபத்துக்குரியவர்களான ராஜபக்ஸக்களும் இல்லை என்பது இன்னொரு காரணம். அடுத்த காரணம், தமிழ் மக்களுடைய பொருளாதார நெருக்கடியும் முடிவுறாத அரசியற் சிக்கலுமாகும். அரசியலைப் பொறுத்தவரையில் இப்போதைக்கு தனிநாடோ, அதற்கு நிகரான தீர்வோ கிடையாது என்று பெரும்பாலான மக்கள் உணர்ந்துள்ளனர். ஆகவே இனியும் அந்த அரசியலை (தனிநாட்டுக்கான – தமிழீழத்துக்கான) முன்னெடுக்கும் சக்திகளை ஆதரிக்க அவர்கள் தயாரில்லை. அந்த இடத்தை நிரப்புவதற்காக அவர்கள் புதிய தெரிவுகளை நோக்கிச் செல்கின்றனர். இவ்வளவுக்குப் பின்னரும் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்றவற்றை விட ஆயுதப் போராட்டத்தின் வழியாக வந்த இயக்கங்களுக்கும் அவற்றின் இன்றைய தலைவர்களுக்கும் இப்போது கூட மதிப்புண்டு. தங்களைச் சமூக விடுதலைக்கும் இன விடுதலைக்குமாக அர்ப்பணிக்கத் துணிந்தவர்களாக இருந்தவர்கள். செயற்பாட்டு அரசியல் வழிமுறையினூடாக வளர்ந்தவர்கள். வரலாற்றின் துயரம் என்னவென்றால், பின்னாளில் இவர்களும் பிரமுகர் அரசியலில் வழுக்கி விழுந்ததேயாகும். அதற்குப் பின்னர் செயற்பாட்டு அரசியலை விட்டு வாய்ப்பேச்சு அரசியலில் பயணிக்கத் தொடங்கினர். தமிழரசுக் கட்சி, தமிழ்க்காங்கிரஸ் கட்சியைப்போல தாமும் ஆகினர். இறுதியில் தமிழரசியற் பரப்பில் மோதகமும் கொழுக்கட்டையும் என்றாகி விட்டனர். இப்போது மோதகமா கொழுக்கட்டையா என்றால், சனங்கள் குற்றங்கள் இழைக்காத, கசப்பான வரலாற்றைக் கொண்டிருக்காத, ரத்தக்கறை படியாத தரப்பை ஆதரிப்போம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். இது வாக்காளர்களில் ஒரு தரப்பினராக இருக்கும் 40 வயதுக்கு மேற்பட்டோரின் தெரிவாகும். 40 வயதுக்கு உட்பட்டோரின் தெரிவு, தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரசும். இரண்டும் சேர்ந்தும் ஒரு குறிப்பிட்டளவு வீதத்தினரே இதில் சேர்த்தி. ஏனையோர் வெளிப்பரப்பிலேயே சிந்திக்கின்றனர். இது இப்போது மட்டும் திடீரென எழுந்த NPP அலை மட்டுமல்ல. 2010 ல் யாழ்ப்பாணத்தில் மட்டும் ஈ.பி.டி.பி 03 ஆசனங்களையும் சுதந்திரக் கட்சி (அங்கயன்) ஒரு ஆசனத்தையும் பெறக் கூடியதாக இருந்தது. 2015 இல் டக்ளஸ் தேவானந்தா, அங்கயன் ராமநாதன், விஜயகலா மகேஸ்வரன் என மூன்று ஆசனங்கள் வெளியே நின்றன. 2020 அங்கயனே அதிகூடிய விருப்பு வாக்கைப் பெற்றிருந்தார். கிழக்கிலும் இதுதான் நிலைமை. அங்கே பிள்ளையான் அதிகூடிய விருப்பு வாக்குடன் தெரிவாகியிருந்தார். கூடவே வியாழேந்திரன் வெற்றியடைந்திருந்தார். இப்போது அந்த இடங்களையெல்லாம் NPP பெற்றிருக்கிறது. அவ்வளவுதான். இந்த வளர்ச்சி இனி அடுத்த கட்டத்துக்கு நகரும்போது பிராந்திய அரசியல் = தமிழ்த்தேசிய அரசியல் = எதிர்ப்பரசியல் முடிவுக்கு வந்து விடும். அதற்கு முன் சங்கும் அதைக் கொண்டிருக்கும் DTNA காணாமற் போய் விடக் கூடிய சூழலே உண்டு. (குறிப்பு: இந்தப் போக்கைத் தீர்மானிப்பதில் சரி பங்கு சிங்களத் தரப்புக்கு உண்டு. அதனுடைய அரசியல் தீர்மானங்களும் நடவடிக்கைகளுமே தமிழ் அரசியலின் அடுத்த கட்டத்தை நிர்ணயிப்பதில் பாதிப்பங்கைச் செய்யும்). https://arangamnews.com/?p=11479
  14. தலைவரின் பிறந்தநாளில் தனது பிறந்தநாளையும் கொண்டாடும் @வீரப் பையன்26 க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊
  15. வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்த முறையை விளங்கிக்கொள்ளுதல் November 24, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — 2024 நவம்பர் பாராளுமன்ற தேர்தல் கண்டிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல ‘முதலாவதுகளில்” கூடுதலான அளவுக்கு கவனத்தை ஈர்த்திருப்பவை தேசிய மக்கள் சக்தி சாதித்த இரு சாதனைகளேயாகும். தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்டமான வெற்றி இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தனியொரு கட்சி அல்லது கூட்டணி பாாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்ற முதலாவது சந்தர்ப்பத்தை குறித்து நிற்கிறது. அடுத்ததாக நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தை தவிர, ஏனைய சகலவற்றிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றியில் மிகவும் பிரத்தியேகமாக கவனிக்க வேண்டியது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் மட்டக்களப்பை தவிர ஏனைய மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றியமையேயாகும். மலையக தமிழர்கள் பெருமளவில் வாழ்கின்ற மாவட்டங்களிலும் அதே நிலைதான். சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு அரசியல் கட்சி தமிழ்த் தேசியவாத அரசியலின் ‘கோட்டை யாக’ விளங்கிய யாழ்ப்பாண மாவட்டம் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களில் பெரும்பாலான ஆசனங்களை முதற் தடவையாக கைப்பற்றியிருக்கிறது. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதற் தடவையாக வடக்கில் இருந்து தெற்கு வரையும் கிழக்கில் இருந்து மேற்கு வரையும் இன, மத வேறுபாடுகளைக் கடந்து வாக்காளர்களின் அமோக ஆதரவை தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கிறது. இந்த வரலாற்று வெற்றி குறித்து அகவுணர்வுக்கு அப்பாற்பட்ட சரியான வியாக்கியானத்தை அரசியல்வாதிகளோ அல்லது அவதானிகளோ இதுவரையில் வைத்ததாக கூற முடியாது. தேசிய மக்கள் சக்திக்கு நாடுபூராவும் கிடைத்த மகத்தான ஆதரவு தேசிய ஐக்கியத்தை நோக்கிய வழக்கம் மீறிய குறிப்பிடத்தக்க ஒரு அடியெடுத்து வைப்பு என்றும் வரலாற்று ரீதியாக மத்திய ஆட்சிமுறை மீது வெறுப்புக் கொண்டிருந்த பிராந்தியங்கள் கூட ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கின்றன என்றும் சில அவதானிகள் கூறியிருக்கிறார்கள். பாரம்பரியமான பிளவுகளை கடந்து தேசிய நோக்கு ஒன்றை வளர்ப்பதில் தேசிய மக்கள் சக்தி வெற்றி கண்டிருக்கிறது என்றும் பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களில் சிறுபான்மைச் சமூகங்களை அழுத்தும் முக்கியமான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றபோதிலும், வடக்கு, கிழக்கிலும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் தேர்தல் முடிவுகள் ஒரேமாதிரியாக அமைந்திருப்பது தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொள்வதில் அந்த மக்கள் அக்கறை காட்டத் தொடங்கி விட்டார்கள் என்பதன் வெளிப்பாடு என்றும் அந்த அவதானிகள் கூறுகிறார்கள். அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) தலைவர்கள் குறிப்பாக அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா போன்றவர்கள் சிறுபான்மைச் சமூகங்கள் இனவாத அரசியலை நிராகரித்திருக்கின்றன என்று கூறுகிறார்கள். வழமைக்கு மாறான முறையில், இந்தத் தடவை ஜனாதிபதி தேர்தலிலும் பாாளுமன்ற தேர்தலிலும் தென்னிலங்கையில் தேசியவாத பிரசாரங்களுக்கு இடமிருக்கவில்லை. ராஜபக்சாக்களின் தலைமையில் சிங்கள பௌத்த தேசியவாத அரசியலை முன்னெடுத்த சக்திகள் படுமோசமாக பலவீனமடைந்திருந்திருப்பதும் பிரதான அரசியல் கட்சிகள் சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகளைப் பெறுவதற்காக நேசக்கரம் நீட்டியதும் அதற்கு பிரதான காரணங்களாகும். இதுகாலவரை வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திவந்த தமிழ்த் தேசியவாத அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் மோசமான பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன. கடந்த பாராளுமன்றத்தில் கொண்டிருந்ததையும் விட இந்த தடவை இரு ஆசனங்களை கூடுதலாகப் பெற்றிருப்பது குறித்து இலங்கை தமிழரசு கட்சி பெருமைப்படுவதற்கு எதுவுமில்லை. ஐந்து மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றியதன் பின்னணியிலேயே அந்த கட்சி தமிழ் மக்கள் மத்தியில் அதன் தற்போதைய அந்தஸ்தை நோக்கவேண்டும். தமிழ்க் கட்சிகளின் இத்தகைய பின்னடைவுக்கு மத்தியில், தென்னிலங்கையில் சிங்கள பௌத்த கடும்போக்கு தேசியவாதிகள் என்று அடையாளம் காணப்பட்ட பல அரசியல்வாதிகள் இந்த தடவை பாராளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை. இந்த நிகழ்வுப் போக்குகளை அடிப்படையாக வைத்து தெற்கில் சிங்கள பௌத்த தேசியவாதமும் வடக்கில் தமிழ்த் தேசியவாதமும் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக சில விமர்சகர்கள் கூறமுற்படுகிறார்கள். குறிப்பிட்ட சில சிங்கள கடும்போக்கு தேசியவாதிகளின் தேர்தல் தோல்வியை சிங்கள பௌத்த தேசியவாதத்தின் தோல்வி என்று எவ்வாறு வியாக்கியானம் செய்யமுடியாதோ, அதேபோன்றே தமிழ்த் தேசியவாதக் கட்சிகளுக்கு வடக்கு, கிழக்கில் ஏற்பட்ட கடுமையான பின்னடைவை தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய வாதத்தை நிராகரித்திருப்பதாக வியாக்கியானம் செய்யமுடியாது. தமிழ் மக்கள் தேசியவாத சிந்தனைகளின் அடிப்படையிலான தங்களின் நியாயபூர்வ அரசியல் அபிலாசைகளில் அக்கறை காட்டாமல் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு தேர்தலில் ஆதரவை வழங்கினார்கள் என்று கூறமுடியாது. உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களாக தங்களை பிதிநிதித்துவம் செய்துவந்த தமிழ் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் மீதான வெறுப்பையே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பின் மூலம் வெளிக் காட்டியிருக்கிறார்கள். வெறுமனே கடந்த கால போராட்டங்களை மாத்திரம் நினைவுபடுத்திக் கொண்டு உணர்ச்சிவசமான தமிழ்த் தேசியவாத சுலோகங்களை பயன்படுத்தி எந்தப் பயனையும் தராத அரசியல் அணுகுமுறைகளை கடைப்பிடித்துவந்த தமிழ் அரசியல் தலைவர்கள் இனிமேலும் தங்களுக்கு சரியான பாதையை காட்டுவார்கள் என்று தமிழ் மக்கள் நம்பவில்லை. அத்துடன் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு தமிழ் அரசியல் சக்திகள் ஐக்கியப்பட்டு செயற்படவேண்டிய ஒரு காலகட்டத்தில் தமிழ் அரசியல் சமுதாயம் சிதறுப்பட்டு நிற்பதனால் தமிழ் மக்கள் சீற்றமடைந்திருக்கிறார்கள். தங்கள் மத்தியில் தமிழ்க் கட்சிகளுக்கு மாற்றாக நடைமுறைச்சாத்தியானதும் விவேகமானதுமான அரசியல் பாதையில் தங்களை வழிநடத்தக்கூடிய ஒரு அரசியல் சக்தி இல்லை என்பதனாலேயே தமிழ் மக்கள் வேறு வழியின்றி தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்பினார்கள். ஜனாதிபதி தேர்தலில் அநுரா குமார திசாநாயக்கவை பெருமளவில் ஆதரிக்காத அந்த மக்களுக்கு அவரின் வெற்றிக்கு பிறகு தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதில் நாட்டம் காட்டக்கூடிய ஒரு சூழ்நிலை உருவானது. பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களுக்கு தங்களிடம் வந்த தமிழ்த் தலைவர்களிடம் பல பகுதிகளில் தமிழ் மக்கள் தாங்கள் இந்த தடவை தேசிய மக்கள் சக்திக்கே வாக்களிக்கப்போவதாக நேரடியாகவே கூறினார்கள். தங்களது மக்களின் உணர்வுகளை சரியான முறையில் மதிப்பிடுவதற்கு தவறிய அந்த தலைவர்கள் வழமை போன்றே தமிழ்க் கட்சிகளுக்கு மாத்திரமே தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் மெத்தனமாக இருந்து விட்டார்கள். தவறான ஆட்சிமுறைக்கும் ஊழல்தனமான அரசியல் கலாசாரத்துக்கும் பொறுப்பான பாரம்பரியமான பிரதான அரசியல் கட்சிகளை தென்னிலங்கை மக்கள் நிராகரிப்பதற்கு சிறந்த மாற்றுச் சக்தியாக தேசிய மக்கள் சக்தி விளங்கியது. அறகலய மக்கள் கிளர்ச்சிக்கு பின்னரான காலப்பகுதியில் மாற்றங்கண்ட அரசியல் சூழ்நிலையை அனுகூலமாக பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தி தன்னை ஒரு பாரிய அரசியல் இயக்கமாக வளர்த்துக் கொண்டது. அதேபோன்றே வடக்கு, கிழக்கிலும் தமிழ் அரசியல் கட்சிகளை நிராகரிப்பதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு தேசிய மக்கள் சக்தியை தவிர வேறு மாற்று இருக்கவில்லை. கடந்தகால அனுபவங்களில் இருந்து படிப்பினைகைளைப் பெற்று நிலைவரங்கள் வேண்டிநிற்பதற்கு ஏற்றமுறையில் அணுகுகுறைகளை வகுக்கும் பழக்கமோ அல்லது பக்குவமோ இல்லாத தமிழ்க் கட்சிகள் தற்போது மக்கள் புகட்டியிருக்கும் பாடத்தில் இருந்தாவது எதையாவது படித்துக் கொள்வார்களோ தெரியவில்லை. இது இவ்வாறிருக்க, இனவாத அரசியலும் மதத் தீவிரவாதமும் மீண்டும் தலையெடுப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று கடந்த வியாழக்கிழமை புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தில் தனது அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய ஜனாதிபதி திசாநாயக்க கூறினார். இனவாதமும் மதவாதமும் மீண்டும் தலையெடுக்காமல் இருப்பதை உறுதிசெய்வது என்பது அவரது அரசாங்கத்தின் அணுகுமுறைகளிலும் செயற்பாடுகளிலுமே முற்றுமுழுதாக தங்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இன, மத வேறுபாடுகளை கடந்து மக்கள் தனது அரசாங்கத்துக்கு வழங்கியிருக்கும் மகத்தான ஆதரவு இனவாதம் மீண்டும் தலையெடுக்காமல் இருக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க உதவும் என்று ஜனாதிபதி நம்புகிறார் என்றால் அதே இனவாதம் தோற்றுவித்த பிரச்சினைகளுக்கு காலம் தாழ்த்தாமல் தீர்வுகளை காண்பது அவசியமானதாகும். சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும் மனக்குறைகளையும் மதிக்காத தென்னிலங்கை அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டியது ஜனாதிபதி தனது குறிக்கோளை அடைவதற்கான முதற் தேவையாகும். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு இதுகாலவரையில் முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் எதிர்த்த கசப்பான கடந்த காலத்தில் இருந்து விடுபடுவதற்கான தெளிவான அறிகுறிகளை இதுவரையில் தேசிய மக்கள் சக்தி குறிப்பாக ஜே.வி.பி. காண்பிக்கவில்லை. அண்மைக்காலத்தில் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் தொடர்பில் தோன்றிய சர்ச்சைகளின்போது தேசிய மக்கள் சக்தி வெளிப்படுத்திய நிலைப்பாடுகள் இதற்கு பிந்திய சான்றுகளாகும். முன்னைய ஜனாதிபதிகளில் எந்த ஒருவருக்குமே வழங்கியிராத பிரமாண்டமான ஆணையை திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். சட்டத்தில் திருத்தங்களைச் செய்தோ அல்லது புதிய அரசியலமைப்பை அறிமுகம் செய்தோ இனப்பிரச்சினை விவகாரத்தில் தீர்வுகளை காண்பதற்கு எந்த தடையும் அவருக்கும் அரசாங்கத்துக்கும் கிடையாது. அரசியல் துணிவாற்றல் மாத்திரமே அவசியமாகிறது. பெரும்பாலான தமிழ்க்கட்சிகளை நிராகரித்து தேசிய மக்கள் சக்தியை ஆதரித்திருக்கும் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி ஒரு தெளிவான செய்தியைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார். அதேவேளை வரலாற்றில் முதற்தடவையாக தேசிய கட்சியொன்றின் பல உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கும் வடக்கு , கிழக்கு மக்களின் பிரச்சினைகளை கையாளுவதில் எத்தகைய அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதற்கு தாங்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பதை சிங்கள மக்களுக்கு கூற வேண்டிய பொறுப்பும் ஜனாதிபதிக்கு இருக்கிறது. அதிகாரப்பரவலாக்கல் மற்றும் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் தொடர்பில் ஆழக்காலூன்றிய எதிர்மறையான நிலைப்பாடுகளைக் கொண்ட பெரும்பான்மைச் சமூக நம்பிக்கையை வென்றெடுத்து இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றை காண்பதற்கான சாதகமான சூழ்நிலையை தென்னிலங்கையில் உருவாக்குவதற்கு ஜனாதிபதி தன்னை அர்ப்பணிக்கவேண்டும். அதற்கான அரசியல் தகுதி அவருக்கு முழுமையாக இருக்கிறது. முன்னைய சிங்கள தலைவர்களைப் போன்று சிங்கள கடும்போக்கு தேசியவாத சக்திகளினதும் மகாசங்கத்தின் பிரிவுகளினதும் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்தால் ஜனாதிபதி திசாநாயக்கவும் வரலாறு வழங்கிய அரிய வாய்ப்புக்களை தவறவிட்ட தலைவர்களின் பட்டியலில் சேர்ந்து கொள்வார் என்பது நிச்சயம். புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை முன்னெடுப்பதற்கு முன்னதாக 13 வது திருத்தத்தை அவர் எவ்வாறு கையாளப் போகிறார் என்பது அவரது அரசியல் துணிச்சலுக்கு ஒரு அமிலப்பரீட்சையாக அமையும். இறுதியாக, கடந்தவாரம் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சென்னை ‘இந்து’ ஆங்கிலப் பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த ஒரு கருத்து முக்கிய கவனத்துக்குரியதாகும். “எம்மைத் தோற்கடித்தவர்களினால் எழுதப்பட்ட எமது வரலாறு காரணமாக தவறான ஒரு எண்ணம் நிலவுகிறது. நாம் எமது பாதையை விரும்பித் தெரிவு செய்யவில்லை. எம் மீது அந்தப் பாதை திணிக்கப்பட்டது. எமது வன்முறைப் போராட்டம் அரச அடக்குமுறைக்கான எமது எதிர்வினையேயாகும். இலங்கையின் தற்போதைய அரசியல் தருணம் எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஆயுதமேந்திய பயங்கரவாதிகளாக சிலரை வருணிக்காமல் எமது கட்சியின் வரலாற்றை மாத்திரமல்ல நாட்டின் வரலாற்றையும் திருப்பி எழுதுவதற்கு வெளியைத் திறந்து விட்டிருக்கிறது” என்று சில்வா கூறியிருக்கிறார். இது தமிழர்களின் போராட்டத்துக்கும் முறுமுழுதாகப் பொருந்தும். தங்களது ஆயுதப் போராட்டத்துக்கான மூலவேர்க் காரணிகள் குறித்து நிலவுகின்ற தப்பபிப்பிராயங்களை குறித்து தமிழர்களும் கூறுவதற்கு நீண்ட கதை இருக்கிறது என்பதையும் திரிபுபடுத்தப்பட்ட வரலாற்றை திருப்பி எழுதவேண்டிய தேவை இருக்கிறது என்பதையும் ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது. அதனால் தங்களுக்கு வரலாறு வழங்கியிருக்கும் அரிய வாய்ப்பை தவறவிடாமல் பெரும்பான்மையின மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து தேசிய இனப்பிரச்சினைக்கு காலந்தாழ்த்தாமல் அரசியல் இணக்கத் தீர்வு ஒன்றைக் காண அந்த தலைவர்கள் முன்வரவேண்டும். https://arangamnews.com/?p=11467
  16. ரெலோவின் மத்திய குழுவை உடன் கூட்டுமாறு கோரிக்கை - ஜனாவுக்கு வந்த கடிதம் Vhg நவம்பர் 25, 2024 ரெலோவின் மத்திய குழுவை உடனடியாகக் கூட்டவும், அனைத்து மத்திய குழு உறுப்பினர்களுக்கும் உரிய முறையில் அழைப்பிதழ் அனுப்பவும் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்சியில் செயலாளர் நாயகம் கோ.கருணாகரமிடம்(ஜனா), கட்சியின் நிர்வாகச் செயலாளர் என்.விந்தன் கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அந்தக் கோரிக்கை கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- "நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கட்சி சார்பில் நானும் ஒரு வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு (02/10/2024) அன்று எமது கட்சியின் திருகோணமலை காரியாலயத்தில் நடத்தப்பட்ட ரெலோவின் தலைமைக் குழு கூட்டம் ஏகமனதாக முடிவெடுத்திருந்தது. தலைமைக் குழுக் கூட்டத்துக்கு எமது கட்சியின் வடக்கு, கிழக்கு மாவட்ட செயலாளர்களும், துணை மாவட்ட செயலாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். குறித்த கூட்டத் தீர்மானத்துக்கு மாறாக பின்பு எனது பெயர் நீக்கப்பட்டிருந்தது. இது விடயமாகவும், தேர்தல் காலத்தில் எமது கட்சியின் பெயரைப் பயன்படுத்தி, கட்சியின் பெயரால், எமது கட்சி சார்ந்த சில வேட்பாளர்கள் சில தொழில் நிறுவனங்களிடம் பல கோடிகள் பெற்று, எமது கட்சி சார்பில் ஏனைய மாவட்டங்களில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்குச் சம பங்கீடு அல்லது சம அளவில் நிதி ஒதுக்காத விடயம் தொடர்பாகவும், பெற்றுக்கொண்ட நிதித் தொகைகள் விபரம் தொடர்பாகவும் கூடிப் பேசுவதற்கு மத்திய குழுவைக் கூட்டவும். எமது கட்சி சார்ந்த சிலர் கடந்த அரசிடம் பன்முகப்படுத்தப்பட்ட விசேட நிதி ஒதுக்கீடு மூலம் பல கோடிகள் பெற்று, அதில் இருபது கோடி ரூபாவை ஒரு வேட்பாளருக்கு மட்டும் ஒதுக்கி, எமது கட்சியின் ஏனைய வேட்பாளர்களும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களும் திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டமை தொடர்பாகவும், இவ்வாறான நிகழ்வுகளின் எதிரொலியாகவும் பிரதிபலிப்பாகவும் தேர்தல் காலங்களில் எமது கட்சியினரால் நடத்தப்பட்ட ஊடக சந்திப்புக்கள் உட்பட இன்னும் பல விடயங்கள் தொடர்பாகவும் கூடிப் பேசுவதற்கு ஏதுவாக இம்மாதம் 28 அல்லது 29 ஆம் திகதிகளில் எமது கட்சியின் மத்திய குழுவைக் கூட்டவும். மேலும் கட்சியின் மூத்த உறுப்பினரும் கட்சியில் கடந்த நாற்பது வருடங்களாகத் தொடர்ச்சியாகப் பயணிப்பவரும் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினரும் கட்சியின் நிர்வாகச் செயலாளரும் கட்சியின் முன்னாள் வலிகாமம் தெற்கு பிரதேச சபை, யாழ்ப்பாணம் மாநகர சபை, வடக்கு மாகாண சபை போன்றவற்றின் உறுப்பினருமான எனக்கு அறிவிக்காமல் கடந்த (20.11.2024) அன்று குறிப்பிட்ட சிலருடன் இணைய (சூம்) வழியாக தாங்கள் தலைமைக் குழு கூட்டத்தைக் கூட்டியது கவலையளிக்கின்றது." - என்றுள்ளது. https://www.battinatham.com/2024/11/blog-post_136.html
  17. இந்திய விஜயத்தின் பின், ஜனாதிபதி சீன விஜயம் தேசிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் தலைவரும், புதிய ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க, இந்திய விஜயத்தின் பின்னர் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் இலங்கைக்கான சீன தூதுவர் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார் என என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். டிசெம்பர் மூன்றாவது வாரத்தில் ஜனாதிபதி இந்தியாவிற்கான தனது பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் அவர் மேற்கொள்ளும் முதலவாது வெளிநாட்டு விஜயம் எனினும், இதற்கான திகதி தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்திய விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சீனாவிற்கு விஜயம் மேற்கொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/இந்திய-விஜயத்தின்-பின்-ஜனாதிபதி-சீன-விஜயம்/175-347797
  18. அஷாத் மவுலானாவை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட சனல்- 4 காணொளியில் பல சாட்சியங்களை வெளிப்படுத்தியிருந்த அஷாத் மவுலானாவை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கும் முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையான் மற்றும் முன்னாள் அரச புலனாய்வு பணிப்பாளர் சுரேஷ் சலே ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக அஷாத் மவுலானா சனல்- 4 காணொளியில் நேரடியாகத் தோன்றி வெளிப்படுத்தியிருந்தார். இது தொடர்பில், தற்போது சுவிட்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள அஷாத் மவுலானாவிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள அவரை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம், சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 270க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் பலர் அங்கவீனமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது வரையில் எதுவித சட்டநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதாக உறுதியளித்திருந்தது. அண்மையில், பிள்ளையான் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, அவரிடம் சுமார் 10மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே, தற்போது அஷாத் மவுலானாவிடம் விசாரணைகள் மேற்கொள்வதற்காக அவரை நாடு கடத்த அநுர அரசாங்கம் கோரியுள்ளது. அஷாத் மவுலானா வடக்குக் கிழக்கில் போர் நடைபெற்ற காலத்தில் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இணைந்து பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/அஷாத்_மவுலானாவை_நாடு_கடத்துமாறு_இலங்கை_அரசாங்கம்_கோரிக்கை!
  19. ஆகாஷுக்கு : வட மாகாண ஆளுநர் வாழ்த்து! adminNovember 26, 2024 இலங்கை 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து மிகச் சிறப்பான பந்துவீச்சு பெறுதியை பதிவு செய்த யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் மாணவன் விக்னேஸ்வரன் ஆகாஷுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆகாஷை தொலைபேசியூடாக நேற்றைய தினம் திங்கட்கிழமை (25.11.24) தொடர்புகொண்ட ஆளுநர், அவரை வாழ்த்தியதுடன் எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கவேண்டும் எனவும், தொடர்ந்து சாதனைகளைப் படைக்கவேண்டும் என்றும் ஆளுநர் ஆகாஷிடம் தெரிவித்தார். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆட்டத்தில் விளையாடிய ஆகாஷ், 5 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/208659/
  20. போட்டியை மிகவும் திறமையாக நடாத்திய @கந்தப்புவுக்கு பாராட்டுக்கள்👏👏👏 https://vm.tiktok.com/ZGd2ute2S/ This post is shared via TikTok. Download TikTok to enjoy more posts: https://vm.tiktok.com/ZGd2H145D/
  21. யாழ்கள பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற @பிரபாவுக்கும், இரண்டாம், மூன்றாம் இடங்களில் வந்த @வாதவூரான்க்கும் @வாலிக்கும் வாழ்த்துக்கள்🎉🎆🧨 பனிப் பைத்தியர் வென்ற தேர்தலில் 16 ஆம் படியில் நிற்பதும் அவமானம்தான்😳
  22. கூட்டை முறிக்க யோசிக்கிறதா?; ரெலோவும் தனி வழியில்? மக்களிடத்தில் ஆதரவு அற்ற கட்சிகளை ஒன்றிணைத்து கொண்டு நாங்கள் தொடர்ந்தும் பயணிப்பதா?அல்லது தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ இனி வருகின்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா?என்பது குறித்து கட்சியின் உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டியுள்ளது என மன்னார் மாவட்ட ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளருமான டானியல் வசந்தன் தெரிவித்தார். பாராளுமன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ரெலோ கட்சிக்காக பல்வேறு வகையிலும் உதவி புரிந்த கட்சியின் உறுப்பினர்களுடன் சந்திப்பும் மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(24) மதியம் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது. இதன் போது தலைமை தாங்கி உரையாற்றுகையிலே மன்னார் மாவட்ட ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளருமான டானியல் வசந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கட்சியின் தலைமைத்துவத்திற்கு எவ்வித பாதிப்புகளும் இன்றி மீண்டும் பாராளுமன்றம் அனுப்ப பல வழிகளிலும் உதவி புரிந்த தமிழீழ விடுதலை இயக்கம் -ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட உறுப்பினர்களுக்கு தலைவர் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் போட்டியிட்டது.அந்த 5 கட்சிகளில் 4 கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.தமிழீழ விடுதலை இயக்கம் மட்டும் இத் தேர்தலில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுள்ளது. மக்களிடத்தில் ஆதரவு அற்ற கட்சிகளை ஒன்றிணைத்துக் கொண்டு நாங்கள் தொடர்ந்து பயணிப்பதா?அல்லது தமிழீழ விடுதலை இயக்கம் இனி வருகின்ற தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதா? என்பன போன்ற விடயங்கள் குறித்து ஆலோசனைகளை உங்களிடம் முன் வைக்கின்றோம். நாங்கள் எதை நினைத்தாலும் மக்கள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர்.ஐந்து கட்சிகளை ஒன்றிணைத்து பலத்துடன் போட்டியிடுகின்றோம் என நாங்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். மக்கள் எமது கூட்டிற்கு ஆதரவு வழங்குவார்கள்.நாங்கள் தான் ஒற்றுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.ஐந்து போராட்ட குழுக்கள் ஒன்றாக நிற்கின்றோம் ,நாங்கள் கடந்த காலங்களில் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள்.எனவே எங்களுக்குத்தான் மக்களின் ஆதரவு இருக்கிறது என்று நாங்கள் எண்ணி இருந்தோம். அந்த எண்ணத்தில் மண்ணை போடுவது போல இலங்கை தமிழரசு கட்சி எவ்வாறு எம்மை விட்டு வெளியே சென்றார்களோ அவர்கள் நினைத்தது நடந்து விட்டது. நாங்கள் தவறானவர்களாகவும்,அவர்கள் சரியானவர்களாகவும் காண்பித்து இத் தேர்தலில் வடக்கு கிழக்கில் அவர்கள் 8 ஆசனத்தை பெற்றுள்ளனர். உண்மையில் இதனால் எமது அரசியல் இருப்பு கேள்விக்குறியாகி உள்ளது.எனவே இனி வருகின்ற தேர்தல்களில் நாங்கள் தோற்போமாக இருந்தால் எமது கட்சியின் நிலையும் கேள்விக் குறியாகிவிடும். கடந்த காலங்களில் தமிழீழ விடுதலை இயக்கம் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது.எனவே உங்களின் ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்தும் எதிர் பார்க்கிறோம்.எமது கட்சியின் உறுப்பினர்களை நம்பியே நாங்கள் அரசியலை முன்னெடுக்க உள்ளோம் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து உரை நிகழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இத்தேர்தலில் தனது வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவித்ததோடு,கட்சி எதிர் காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர். https://akkinikkunchu.com/?p=300436
  23. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்த கடற்றொழில் அமைச்சர்! இன்று காலை யாழ்ப்பாணம் - ஜே - 133 கிராம உத்தியோகத்தர் பிரிவு, காக்கைதீவு பகுதிக்கு சென்ற அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டதுடன், அங்கு வீதி ஓரங்களில் வீசப்பட்டுள்ள குப்பைகளையும் பார்வையிட்டு பிரதேச மக்களிடம் அது தொடர்பில் கலந்துரையாடினார். (ப) https://newuthayan.com/article/வெள்ளத்தால்_பாதிக்கப்பட்டுள்ள_மக்களை_நேரில்_சென்று_சந்தித்த_கடற்றொழில்_அமைச்சர்!
  24. வேலணையில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு adminNovember 24, 2024 தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் மற்றும் தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தீவகம் வேலணை துறையூர் பகுதியில் மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதிப்பளிக்கப்பட்டனர் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் வேலனை துறையூர் சந்தியில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க வேலணை ஐயானார் சனசமூக நிலைய மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு மாவீரர் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் மாலைகள் அணியப்பட்டு கண்ணீர் மல்க மலர் வணக்கம் செலுத்தப்பட்டது அதனை தொடர்நது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்களை கௌரவிக்கும் முகமாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன நிகழ்வில் யாழ்ப்பாணம் தீவகப் பகுதி மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் https://globaltamilnews.net/2024/208607/
  25. இனப்பிரச்சினையை அங்கீகரித்தலே ஆரோக்கிய ஆரம்பமாக அமையும் sachinthaNovember 22, 2024 ன் வாக்களித்த முதலாவது தேர்தல் 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலேயாகும். இத்தேர்தலில், அப்போது நவசமசமாஜ கட்சி சார்பாக போட்டியிட்ட வாசுதேவ நாணயக்காரவுக்கே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் எனது வாக்கை அளித்தேன். அத்தேர்தலில் குமார் பொன்னம்பலமும் தமிழ் வேட்பாளராக, தமிழர் நிலைப்பாட்டை முன்னிறுத்திப் போட்டியிட்ட போதிலும், எனது வாக்கை அவருக்கு நான் அளித்திருக்கவில்லை. நான், வாசுதேவ நாணயக்காரவுக்கு வாக்களித்தமைக்குக் காரணம் நான் இடதுசாரிச் சிந்தனை நிலைப்பாடு கொண்டதனால் அல்ல. மாறாக, இலங்கைத் தீவில் வாழும் தேசிய இனங்கள் குறித்த அங்கீகாரம் சார்ந்தும், இத்தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவை என அவரும் அவரது கட்சியும் எடுத்த நிலைப்பாடு சார்ந்துமே அவரை ஆதரித்தேன். பின்னர் அவர் நிலைமாறிப் போனது வரலாற்றுத் துயரம். என்னைப் பொறுத்தவரை எனது அரசியல் முடிவுகளில் கொள்கை நிலைப்பாடே முன்னிலைப்படும். இதில் இன, மத, சாதி, பால் வேறுபாடுளுக்கு இடமளிப்பதில்லை. அந்த தார்மீக உணர்வுடன்தான் இதனை எழுதுகிறேன். நான் போர் காரணமாக புலம்பெயர்க்கப்பட்டு நோர்வே வந்தடைந்தவன். நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து, போர் நெருக்கடி உந்தித்தள்ள தாயக மண்ணை விட்டு வெளியேறியவன். இவ்வெளியேற்றம் தந்த குற்ற உணர்வுடன் இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவன். ஒரு தனிமனிதனாக, எனது உணர்வின் நிலை நின்று இப்பதிவை எழுதுகிறேன். என் போன்ற உணர்வைக் கொண்டவர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். புலப்பெயர்வு வாழ்க்கை எம்மை புதியதொரு நாட்டின் குடிமக்கள் ஆக்கினும், நான் பிறந்து வளர்ந்த மண்ணை எனது தாயகமாக உணர்கிறேன். இலங்கைத் தீவில் வாழும் ஈழத்தமிழர் தேசத்தின் அங்கமாக என்னை இனங்கண்டு, நாடு கடந்த சமூகவெளியில் தாயகத்துடன் உறவுகளைப் பேணிய வண்ணம் வாழ்ந்து வருகிறேன். இதனால், ஏற்படும் ஈடுபாடு, அக்கறையின் காரணமாகவே இம்மடலை எழுதுகிறேன். என்னைப் பொறுத்தவரை, இலங்கைத்தீவு ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்களை/ தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்பதும், அதற்கான அங்கீகாரமும், தேசிய இனங்களுக்குரிய சுயநிர்ணய உரிமைக்கான உத்தரவாதமும் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் அடைந்த காலத்திலேயே அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இனங்களுக்கிடையேயான சமத்துவம் பேணப்பட்டு, இலங்கைத்தீவில் வாழும் தேசிய இனங்கள் ஐக்கியமாகவும் நட்புணர்வுடனும் வாழும் சூழல் இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தகையதொரு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பின் தமிழ் மக்கள் தனிநாடு கேட்டுப் போராடியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. இப்போது ஏதோவெல்லாம் நடந்து முடிந்து விட்டது. நீண்ட போர் நடந்து முடிந்து விட்டது. தமிழர் தாயகத்தில் பெருங்குருதி சிந்தப்பட்டு விட்டது. இழப்பின் வலியும், குருதியின் கனதியும் இதுவரை ஆட்சிபீடம் ஏறிவர்களுக்குப் புரிந்திருக்காது. தேசிய மக்கள் சக்தி தோழர்களே! உங்களுக்கு இவை நன்கு புரியும் என நம்புகிறேன். எனினும் சிந்தப்பட்ட குருதியில் உங்களின் பங்கும் உண்டு என்பது ஒரு வரலாற்று முரண்நகை அல்லவா! தேசிய மக்கள் சக்தியின் அமோக வெற்றியின் பின்னும்கூட தேசிய இனப்பிரச்சினை குறித்த உங்களின் நிலைப்பாடு என்ன என்பது எனக்குத் தெளிவாகப் புரியவில்லை. சமத்துவமாக அனைத்து மக்களும் நடத்தப்படுவார்கள் என்பதுவும், இதில் இன, மத பேதம் இருக்காது என்பதுவும், இனித் தமிழ் மக்கள் இன அடிப்படையில் போராட வேண்டிய தேவை இல்லை என்பதுவும் தேசிய மக்கள் சக்தியின் கருத்து எனப் புரிந்து கொள்கிறேன். மன்னிக்க வேண்டும், தோழர்களே! இவ்விடயத்தில் எனது பார்வை வேறுபட்டது. இலங்கைத் தீவின் தற்போைதய சூழலில், மக்களுக்கிடையேயான சமத்துவம் வருவதற்கு தேசிய இனங்களின் இருப்பு அங்கீகரிக்கப்படல் அவசியமானதாக இருக்கும் என்பது எனது கருத்து. வர்க்க மேலாதிக்கமும், ஒடுக்குமுறையும் உள்ள ஒரு நாட்டில், நாம் எல்லாரும் சமத்துவமானவர்கள் எனக் கூறி, தொழிலாளர் இயக்கங்கள் தேவை இல்லை எனக் கூறுவது எவ்வளவு அபத்தமோ, ஆண் மேலாதிக்கமும், பெண் ஒடுக்குமுறையும் நிலவும் ஒரு சமூகத்தில் ஆண், பெண் எல்லோரும் சமம் என்று கூறி பெண்ணிய இயக்கங்கள் தேவை இல்லை எனக் கூறுவது எவ்வளவு அபத்தமோ, சாதிப் பாகுபாடும், ஒடுக்குமுறையும் நிலவும் ஒரு சமூகத்தில் மனிதர்கள் எல்லாரும் சமம்; எல்லோருக்கும் ஒரு வாக்கு என்ற ரீதியில் வாக்களிக்கும் உரிமை உண்டு என்று கூறி, சமூக நீதிக்கான இயக்கங்கள் தேவை இல்லை எனக் கூறுவது எவ்வளவு அபத்தமோ, அதேபோல் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள தேசிய இனத்தின் மேலாதிக்கத்தின் கீழ் நாடாளுமன்றம், அரச இயந்திரம், நீதிமன்றங்கள், ஊடகம் ஆகியன உள்ளதொரு நாட்டில், அந்த மேலாதிக்கத்தின் ஊடாக ஏனைய தேசிய இனங்களை ஒடுக்கிய வரலாற்றைக் கொண்டதொரு நாட்டில், இந்த ஒடுக்குமுறைகளின் விளைவாகத் தோற்றம் பெற்ற போரில் இலட்சக்கணக்கான மக்களும், போராளிகளும் உயிரிழந்த வரலாற்றைக் கொண்டதொரு நாட்டில், தேசிய இனப்பிரச்சினை தோற்றம் பெற்று, வளர்ச்சி அடைந்தமைக்கான காரணங்களுக்குத் தீர்வு காணப்படாத ஒரு நாட்டில், நாம் அனைவரும் சமம்: அனைத்து மக்களும் சமமாக நடத்தப் படுவார்கள்; ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்கள் தமது உரிமைகளுக்காகக் போராடுவது அவசியம் இல்லை எனக் கூறுவதும் அந்தளவுக்கு அபத்தமானதாக எனக்குத் தெரிகிறது. மக்கள் எல்லோரும் சமமாக உணர்வதற்கு அவர்களது அரசியல் தலைவிதியை அவரவர்கள் தீர்மானிக்கும் உரிமை இருக்க வேண்டும். இன்றைய சூழலில், அரச கட்டமைப்பை பெரும்பான்மை இன மக்கள் மட்டுமே தீர்மானித்தல் தொடரும் நிலையில், அர்த்தபூர்வமான சமத்துவம் எவ்வாறு உருவாக முடியும்? இது பற்றிச் சிந்திக்கும் போது ஒரு உவமானம் நினைவுக்கு வருகிறது. ஒரு குடியிருப்பில் வாழும் வெவ்வேறு உணவுப் பண்பாடு கொண்ட மக்கள் மத்தியில், எண்ணிக்கையில் பெரும்பான்மை கொண்டவர்கள் தீர்மானிக்கும் அதிகாரத்தை தமது கைகளில் வைத்துக் கொண்டு, தமக்கு விருப்பமான உணவுகளையே சமைத்து அதனை எல்லோருக்கும் பரிமாறி, நாமும் இதனைத்தான் உண்கிறோம், நீங்களும் இதனையே உண்கிறீர்கள். நாம் எல்லோரையும் சமத்துவமாகத்தான் நடத்துகிறோம் எனக் கூறினால் அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ, அவ்வளவு அபத்தமாகவே தற்போதய சூழலில் இலங்கைத்தீவில் நாம் அனைவரும் சமத்துவமானவர்கள் என்ற கூற்றும் எனக்குத் தெரிகிறது. நீங்கள் எல்லோரும் சமத்துவமானவர்கள் எனக் கூறும் போது தமிழ் மக்களுக்கு அச்சம் தரும் இன்னொரு விடயமும் உண்டு. நாம் எல்லோரும் இலங்கையர்கள்; எல்லோரும் எங்கும் குடியேறி வாழலாம். இதில் பாகுபாடு எதுவும் காட்ட மாட்டோம் எனக் கூறி அதனை நீங்கள் ஊக்குவித்தால், தமிழ் மக்கள் தமது பாரம்பரியப் பிரதேசங்களை இழந்து விடும் அபாயம் உண்டு. தமிழ் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு மிக அடிப்படையாக இருந்தது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களே. ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு கடலில் வாழும் எல்லா மீன்களும் ஒன்றை ஒன்று விழுங்கி உயிர் வாழலாம்; அதுதான் சமத்துவம் என்றால், நடைமுறையில் பெரிய மீன்தான் சிறிய மீனை விழுங்கும். சிறிய மீனால் பெரிய மீனை விழுங்க முடியாது. அதேபோல், எல்லோரும் எங்கும் குடியேறலாம் என்பது அரச கொள்கையாக வந்து, அது ஊக்குவிக்கப்பட்டால் எண்ணிக்கையில் பல மடங்கு அதிகமான சிங்கள மக்கள் தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் குடியேறி தமிழர் பகுதிகளை விழுங்கி விடல் சாத்தியமானது. ஆனால், எண்ணிக்கையில் குறைவான தமிழ் மக்கள் எவ்வளவுதான் பரவிப் பரந்தாலும் சிங்கள மக்களின் தாயகப் பிரதேசங்களை விழுங்கி விட முடியாது. இதனால் இத்தகைய சமத்துவத்தால் தமது பாரம்பரியத் தாயகப் பிரதேசம் பறி போய் விடும் என்ற அச்சம் தமிழ் மக்களுக்கு உண்டு. தேசிய மக்கள் சக்தி தோழர்களே! இவற்றயெல்லாம் சுட்டிக் காட்டும் அதேவேளை உங்களுடனான உரையாடலுக்கும் நாம் தயாராக இருக்கிறோம். இன, மதரீதியில் சிந்திக்காது நாம் இலங்கையராக/ ஸ்ரீலங்கராக சிந்திப்போம் என்கிறீர்கள். உங்கள் சிந்தனை எமக்குப் புரிகிறது. அப்படி இலங்கையர் எனச் சிந்திப்பதற்கு இன, மத வேறுபாடுகளைக் கடந்த ஒரு தேச நிர்மாணம் நிகழ்திருக்க வேண்டும். அத்தகையதொரு தேச நிர்மாணம் இலங்கைத் தீவில் நிகழவில்லை. சிங்களத் தேசிய இனத்தின் மேலாதிக்கம் ஏனைய தேசிய மக்கள் மக்கள் மீது அரச கட்டமைப்பின் ஊடாகத் திணிக்கப்பட்டது. இதனால், பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்கொண்ட ஈழத்தமிழ் மக்கள் தம்மைத் தேசமாக சிந்திக்கும் எண்ணம் வலுப்பட்டது. மதரீதியாகவும் அரசு, பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசாகத்தான் இப்போதும் உள்ளது. இன, மத சமத்துவம் பேசும் உங்களாலும் அரசை மதசார்பற்ற அரசாக மாற்றுவோம் என்ற அறிவிப்பை இன்றுவரை செய்ய முடியாமல் இருக்கிறது. இந்நிலை இருக்கும் போது எங்கிருந்து சமத்துவம் வரும்? நாங்கள் இனவாதிகள் இல்லை என்கிறீர்கள். அதுவும் எமக்குப் புரிகிறது. தனிப்பட்ட மனிதர்களாக, இனவாதிகளாக இல்லை என்று நீங்கள் கூறுவதை நாம் மறுக்கவில்லை. நீங்கள் தனிப்பட்ட முறையில் இனவாதிகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், கடந்த காலத்தில் உங்கள் அமைப்பின் செயற்பாடுகள் இனவாதம் கொண்டவையாக அமையவில்லை என உங்களால் உரத்துக் கூற முடியுமா? மேலும், நீங்கள் தற்போது தலைமை தாங்கும் அரசு பேரினவாத மேலாதிக்கம் கொண்ட கட்டமைப்பாக உள்ளது. இக்கட்டமைப்புத்தான் தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறைகளைப் புரிந்தது. இந்த ஒடுக்குமுறைகள் இனவழிப்புப் பரிமாணம் கொண்டவை என்ற அச்சம் தமிழ் மக்களுக்கு எழுந்தது. நாம் அரசியலில் பேசும் பேரினவாத மேலாதிக்கம் என்பது தனிமனிதர் சார்ந்ததல்ல. அது அரசியலமைப்பைச் சார்ந்தது. அரச கட்டமைப்பைச் சார்ந்தது. ஆனால், நீங்கள் குறிப்பிடும் சமத்துவமும், சமஉரிமையும் தனிமனிதர் சார்ந்ததாகவே இருக்கிறது. இந்தத் தனிமனித சமத்துவமும், சுதந்திரமும் பேரினவாத அரச கட்டமைப்பால் தீர்மானிக்கப்படுகிறது. இதனால், இது பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை ஏனைய மக்கள் மீது திணிக்கும் ஒரு பொறிமுறையாக அமைந்து விடுகிறது. மாறாக, நாம் எதிர்பார்ப்பது மக்களாக எமது கூட்டுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதையே. தமிழ் மக்களாக நமது தலைவிதியை நாமே நிர்ணயித்து வாழ உரித்துடைய ஓரு தேசிய வாழ்வையே. அதற்கான ஓர் அரசியல் ஏற்பாட்டையேயாகும். எண்ணிக்கையில் குறைவான ஒரு தேசிய இனம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதாயுள்ளது. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து பல்வேறு வகையான ஏமாற்றங்களைச் சந்தித்த மக்கள், மாயமான்களைக் கண்டு ஏமாந்த மக்கள் மிக மிக விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது. வரலாறு கற்றுத் தந்த பாடங்களில் இருந்தும், உருவாக்கிய அச்சங்களில் இருந்தும் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுபடுவது இலகுவானதல்ல தோழர்களே! இலங்கைத்தீவில் வாழும் மக்களின் தேசிய இனத் தகைமையினை அங்கீகரித்து, ஸ்ரீலங்கா அரச கட்டமைப்பு பேரினவாத மேலாதிக்கத்தை வலுப்படுத்துகிறது என்பதை ஏற்றுக் கொண்டு, எத்தகைய ஏற்பாடுகளின் மூலம் தேசிய இனங்களுக்குடையில் சமத்துவத்தை ஏற்படுத்த முடியும் என ஆராய நீங்கள் விரும்பும் பட்சத்தில் உரையாடலுக்கான அரங்கு இலகுவில் உருவாகி விடும். குறைந்த பட்சம், இலங்கைத்தீவில் தேசிய இனப்பிரச்சினை என்று ஒன்று உண்டு; அதனை எவ்வாறு தீர்க்க முடியும் என நீங்கள் திறந்த மனதுடன் ஆராய விரும்பபின் உரையாடல் வெளி விரியும். இலங்கைத்தீவின் தேசியப் இனப்பிரச்சினயை அங்கீகரித்து, இதற்குப் பேரினவாத மேலாதிக்க அரச கட்டமைப்பைத்தான் காரணம் என்பதையும், இந்த ஒடுக்குமுறையில் கடந்த காலத்தில் நாங்களும் பங்குபற்றியிருக்கிறோம்; அது தவறு என்பதையும் ஏற்றுக் கொண்டு அடுத்த காலடியை முன்வையுங்கள். அது ஓர் ஆரோக்கியமான ஆரம்பமாக இருக்கும். செய்வீர்களா? கலாநிதி சர்வேந்திரா நோர்வே https://www.thinakaran.lk/2024/11/22/featured/97603/இனப்பிரச்சினையை-அங்கீகர/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.