-
Posts
35002 -
Joined
-
Days Won
173
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by கிருபன்
-
சீனாவின் உத்தரவாதம் போதுமானதாக இல்லை இலங்கைக்கு வழங்கியுள்ள கடன்களை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பு செய்வதற்காக சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி (EXIM) தமக்கு செலுத்தப்பட வேண்டிய கடன் மற்றும் வட்டித் தொகையை இரண்டு வருடங்களுக்கு அறவிடாமல் இருப்பதனூடாக, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ள போதிலும், குறித்த நிதி வசதியை இலங்கைக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு அந்த உத்தரவாதம் போதுமானதாக இல்லை என கலந்துரையாடல்களில் பங்கேற்கும் நபர்களை மேற்கோள்காட்டி ரொய்டர் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. அதுபோன்று சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் ஆதரவை வெளிப்படுத்தப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அவ்வாறான உடன்பாடு பற்றிய எவ்வித அறிவிப்பும் தமக்குக் கிடைக்கவில்லை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாகவும் அச் செய்திச் சேவையின் செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு வரையில் இலங்கைக்கு சீனாவிடமிருந்து 7.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக வழங்கப்பட்டுள்ளதுடன், இதில் 4 பில்லியன் பெறுமதியான தொகை சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியினூடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடன் தொகையை மீளச் செலுத்துவதற்காக எதிர்வரும் இரண்டாண்டு காலப் பகுதிக்கு சலுகைக் காலத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்து நிதி அமைச்சுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ள போதிலும், அந்தக் கடனை நீக்கிக் கொள்வது பற்றி எதனையும் குறிப்பிடவில்லை. https://www.tamilmirror.lk/வணிகம்/சீனாவின்-உத்தரவாதம்-போதுமானதாக-இல்லை/47-311322
-
தலாய் லாமாவை வரவேற்பதை கடுமையாக எதிர்க்கும் சீனா
கிருபன் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
தலாய் லாமா: சீன அரசியலால் சுற்றி வளைக்கப்பட்ட ஓர் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா: சீன அரசியலால் சுற்றி வளைக்கப்பட்ட ஓர் ஆன்மீகத் தலைவர் “ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல் இயற்கையின் அடிப்படை விதியாகும். மனிதர்கள் போன்ற உயர் ரக உயிரினங்கள் மட்டுமன்றி மதம், கல்வி, சட்டம் எதுவும் அறியா புழு பூச்சிகள் கூட, கூடி வாழ்வதன் அவசியத்தை உணர்ந்து இருக்கின்றன. கடல்கள், மேகங்கள், காடுகள், மலர்கள் எல்லாம் இயற்கையின் இந்தத் தத்துவத்தையே முன் நிறுத்துகின்றன. ஒருவரோடு ஒருவா் சார்ந்து வாழ்தலில் தான் மனித இனத்தின் இருப்பு அடங்கி இருக்கிறது.” இப்படி சொல்லியிருப்பவா் சீனாவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் 14வது தலாய் லாமா தான். தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. திபெத்தின் பௌத்த ஆன்மீகத் தலைவராக இருக்கும் தலாய் லாமா இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ள வேண்டும் என்ற இலங்கையின் பௌத்த பிக்குகள் கோரிக்கை விட்டிருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கையின் சுற்றுலாத்துறையை முன்னேற்றவும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், திபெத்தின் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவை, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ராமன்ய மகா சங்கத்தின் பிரதம குரு மாஹூல்வேவே விமல தேரர் தலைமையிலான பிக்குகள் குழு அழைப்பு விடுத்திருந்ததாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. தலாய் லாமா இந்தியாவின் புத்தகாயாவுக்கு விஜயம் செய்ததன் பின்னர், அங்கு வருகை தருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை கருத்தில் கொண்டே, தலாய் லாமாவிற்கு இலங்கை பிக்குகள் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. தலாய் லாமா தொடா்பான இந்த தகவல் சீனாவுக்கு பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. குறித்த செய்தியால் சீற்றம் கொண்ட இலங்கைக்கான சீன தூதரகம் கடும் அதிருப்தியை வெளியிட கண்டி நகருக்கே ஓடிச் சென்றது. மகாநாயக்க தேரா்களிடம் மண்டியிட்டு தனது நிலைப்பாட்டை முன்வைத்தது. தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் செய்வது தொடா்பான செய்தி, சீனாவுக்கு ஏன் சா்ச்சைக்குரிய விவகாரமாய் மாறியது? சீனா தலாய் லாமாவை வெறுப்பதின் பின்னால் உள்ள அரசியல் என்ன என்பதை அலசுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். கண்டி மல்வத்து பீடத்தின் பிரதம பிக்கு திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை, சந்தித்து கலந்துரையாடிய போதே, இலங்கைக்கான சீன தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஹூ வெய் தலாய் லாமாவின் இலங்கை வருகை தொடா்பான தனது கடும் ஆட்சேபனையை தெரிவித்தார். தலாய் லாமாவின் இந்த விஜயத்தின் காரணமாக சீன – இலங்கை உறவுகள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்படலாம் என சீனத் தூதரக அதிகாரி தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன. தலாய் லாமா என்ற பெயரில் உள்ள நபர்களை சர்வதேச நாடுகள் மிக அதிகமாக வரவேற்பதை கண்டிப்பதாக ஹூ வெய் தெரிவித்திருந்தார். 14ஆவது தலாய் லாமா ஒரு துறவியல்ல என்றும், மத ரீதியான வேடம் தரித்த அரசியல் பிரமுகர் எனவும், சீனாவுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு திபெத்தை சீனாவிலிருந்து பிரிக்க முயற்சிக்கும் ஒருவா் எனவும் ஹூ வெய் மகாநாயக்க தேரரிடம் தொிவித்திருந்தாா். சீனா, இலங்கையுடன் தொடர்ந்தும் ஒற்றுமையாக செயற்படுவதாகவும் அதற்கமைவாக இரு நாட்டு பௌத்த மக்களும் தலாய் லாமாவின் விஜயத்தை தடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டிருந்ததோடு, சீனாவுக்கும் இலங்கைக்கு இடையிலான வரலாற்று உறவுகளை தலாய் லாமாவின் வருகை பாதிப்படையச் செய்யும் எனவும் அவா் எச்சரிக்கை தொனியில் கருத்து வெளியிட்டிருந்ததாக ஊடக செய்திகள் கூறியிருந்தன. இது தொடர்பில் கருத்து தொிவித்த மல்வத்த பீட மகாநாயக்கா் திப்பட்டுவாவே சுமங்கல தேரா், சீன-இலங்கை உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தாம் எதனையும் செய்யப்போவதில்லை என சீன அதிகாரிக்கு உறுதி மொழி வழங்கியிருந்தாா். தலாய் லாமாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இந்த மோதல்கள் மத, கலாசார, வரலாற்று ரீதியிலான முரண்பாடுகளின் வேர்களை ஆழமாக பதித்த, ஒரு சிக்கலான பிரச்சினையாக பாா்க்கப்படுகிறது. தலாய் லாமா திபெத்தின் ஆன்மீகத் தலைவராகவும், திபெத்தின் தேசிய அடையாளமாகவும் இருந்து வருகிறார். தலாய் லாமா அவரைப் பின்பற்றுபவர்களால் இரக்கத்தின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து சீனா திபெத்தின் மீது உரிமையைக் கோரி வருவதோடு, பௌத்த ஆன்மீக தலைவரான தலாய் லாமாவை ஒரு பிரிவினைவாத அச்சுறுத்தலாகவும் பாா்த்து வருகிறது. 1950களில், சீனா திபெத்தின் மீது கட்டுப்பாடுகளையும் அடக்குமுறைகளையும் செலுத்தத் தொடங்கியது. இராணுவ தளங்களை திபெத்தில் அதிகமாக நிறுவியது. சீனாவின் பெரும்பான்மை இனமான ஹான் இன சீனர்களை திபெத்தில் அதிகமாக குடியேற்றியது. சீனாவின் இந்த நடவடிக்கைகள் திபெத்திய சுதேச மக்களிடையே பரவலான எதிர்ப்புகள் உருவாக காரணமாகியது. இது திபெத்திய மக்கள் மத்தியில் எழுச்சிகளுக்கு வழிவகுத்தன. இவ்வாறு எழுந்த திபெத்திய மக்களின் எழுச்சியை சீன அரசு அடக்குமுறையைப் பயன்படுத்தி இன்று வரை ஒடுக்கி வருகிறது. திபெத் மீது நிகழ்த்தப்ட்ட சீனாவின் ஆக்கிரமிப்பிற்குப் பின்னா், 1959ம் ஆண்டு திபெத்தை விட்டு வெளியேறிய தலாய் லாமா இந்தியாவில் அடைக்கலம் பெற்றார். அன்றிலிருந்து, அவர் இந்தியாவில் இமாசல பிரதேச மாநிலத்தில் தர்மசாலாவில் வசித்து வருகிறார். தலாய் லாமா சர்வதேச சமூகத்தில் ஒரு முக்கியமான பௌத்த துறவியாக கருதப்படுகிறாா். தலாய் லாமா திபெத்திய மக்களின் உரிமைகள் மற்றும் சுயாட்சிக்காக குரல் கொடுப்பவராக இருந்து வருவதோடு, திபெத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பையும், அதன் அடக்குமுறை கொள்கைகளையும் கடுமையாக எதிா்த்து வருகிறார். இதேவேளை, தலாய் லாமா சீனாவிலிருந்து திபெத்தை பிரிக்க முயல்வதாக குற்றம் சாட்டும் சீனா, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தலாய் லாமாவை சீனா ஓா் ஆன்மீக தலைவராக பாா்க்காமல், ஓா் அரசியல் சதிகாரா் என்ற கண்ணோட்டத்தில் பாா்க்கிறது. தலாய் லாமா தொடா்பான சீனாவின் அணுகுமுறை ஒரு மதப் பிரச்சினை என்பதையும் ஓா் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஏனெனில், தலாய் லாமா திபெத்தில் சீனா நிகழ்த்தி வரும் அடக்குமுறை ஆட்சியை கடுமையாக விமர்சிப்பவராக இருக்கிறாா். அதுமட்டுமல்லாமல், திபெத் பிராந்தியத்திற்கு சுயாட்சி வேண்டும் என்று வாதிட்டு வருகிறாா். தலாய் லாமாவை பிரிவினைவாதியாக கருதும் சீனா, திபெத்தில் அவா் வன்முறையைத் தூண்டி, கலவரத்தைத் தூண்டி வருவதாகவும் குற்றம் சாட்டி வருகிறது. தலாய் லாமாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த சீனா பலவிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவரது நடமாட்டத்தையும் அவரைப் பின்பற்றுபவர்களின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்துவதில் சீனா கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது. சீனாவுக்கும் தலாய் லாமாவுக்குமிடையிலான இந்த மோதல்கள் பல ஆண்டுகளாக பல முனைகளில் இடம்பெற்று வருகின்றன. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க வியடமாக பாா்க்கப்படுவது, தலாய் லாமாவின் மறுபிறவி தொடா்பான பிரச்சினையாகும். திபெத்திய புத்த மத பாரம்பரியத்தின் படி, தலாய் லாமா என்ற ஆன்மீக தலைமை, தொடர்ச்சியான வருகின்ற ஆன்மீகத் தலைமைத்துவத்தின் மறு அவதாரம் என்று நம்பப்படுகிறது. மேலும், திபெத்தியா்களிடம் அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு ஒரு முக்கியமான மத, கலாசார, அரசியல் செயல்முறையாக பாா்க்கப்படுகிறது. இது இப்படியிருக்க, அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் பூரண உரிமை தனக்கே இருப்பதாக சீனா வாதிட்டு வருகிறது. இந்த உரிமைக் கோரல் சீனாவிற்கும் திபெத்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களுக்கும் இடையே குரோதத்தையும், பெரும் விரிசலையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது. தலாய் லாமாவை பின்பற்றுபவா்கள், அடுத்த தலாய் லாமாவை தொிவு செய்வது திபெத்திய பாரம்பரிய, பௌத்த நடைமுறைகளின்படி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வாதிட்டு வருவதோடு, சீனாவுக்கு அதற்கான உரிமை கிடையாது என்றும் கூறி வருகின்றனா். என்ற போதிலும், கடந்த 2019ம் ஆண்டு சீனா ஓா் அறிவித்தலை வெளியிட்டது. அதில் அடுத்த தலாய் லாமாவை தாமே தெரிவு செய்யப் போதாகவும், அதற்கான உரிமை தனக்கே இருப்பதாகவும் சீனா பகிரங்கமாக அறிவித்தது. அது மட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் இந்தியா ஒருபோதும் தலையிடக் கூடாது என்று சீனா இந்தியாவை அந்த அறிக்கையில் எச்சரித்தும் இருந்தது. தற்போதைய தலாய் லாமா, அந்த வரிசையில் 14வது தலாய் லாமாவாக கருதப்படுகிறாா். அவாின் வயது தற்போது 87 ஐ தாண்டியிருக்கிறது. இதன் காரணமாக அடுத்த தலாய் லாமாவை தோ்வு செய்வதில் இரு தரப்பினரிடையேயும் சா்ச்சைகளையும், முறுகல்களையும் தோற்றுவித்திருக்கிறது. சீனாவுடனான இந்த மோதல்களின் விளைவாக, திபெத்தில் மனித உரிமை மீறல்களை சீனா அதிகம் நடாத்தி வருவதாக சா்வதேச நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. சித்திரவதைகள், தன்னிச்சையான கைதுகள், அநீதியான தடுப்புக்காவல்கள், மத அடக்குமுறைகள் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடா்பாக சீனாவின் மீது பரவலான குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சமீப காலங்களில், தலாய் லாமாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல்கள் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். திபெத்திய போராட்டக்காரா்கள் தமக்குத் தாமே தீமூட்டி தற்கொலை செய்து கொள்ளும் எதிா்ப்பு நடவடிக்கைகள் எழுச்சி பெற்று வருகின்றன. கடந்த 2009 பெப்ரவரி மாதம் 27ம் திகதி முதல் 2022 மே மாதம் வரை, சீன ஆட்சிக்கு எதிராக 160க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் இவ்வாறு தமக்குத் தாமே தீமூட்டி தீக்குளித்து மரணித்துள்ளனா். தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் இந்த செயற்பாட்டை கண்டித்துள்ள தலாய் லாமா, விடுதலைக்கான அவா்களின் துணிச்சலை பாராட்டியும் இருந்தாா். திபெத்தியா்களை இந்த நிலைக்கு தள்ளியுள்ள சீனாவின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கோரி வருகிறாா். எது எப்படியிருப்பினும், தலாய் லாமா திபெத்தின் தேசிய அடையாளமாகவும் மற்றும் எதிர்ப்பின் சக்திவாய்ந்த அடையாளமாகவும் இருந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது. தலாய் லாமாவின் இலங்கை விஜயம் தொடா்பாக எழுந்துள்ள சா்ச்சையும், சீனத் தூதரகத்தின் தீவிர எதிர் வினையாற்றலும் மேற் சொன்ன அரசியல் பின்னணிகளோடு பார்க்கப்பட வேண்டும். 2015ஆம் ஆண்டு கூட தலாய் லாமாவின் இலங்கைக்கான பயணம் ஒன்று ஏற்பாடாகி இருந்தது. இதே போன்று சீனாவின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் அன்று அதுவும் கைவிடப்பட்டது. “ஒரே சீனக் கொள்கை” க்கு இணங்கி, இந்த முடிவை எடுத்ததாக அப்போதைய மைத்திரி - ரணில் அரசாங்கம் அறிவித்திருந்தது. தலாய் லாமாவின் இலங்கை வருகையை தடுப்பதின் பின்னணியில் தொடா்ந்தும் சீன அரசியலே இருந்து வருகிறது. மஹிந்த ராஜபக்ஷ அரசு சீனாவுடனான மிகுந்த நட்பை பாதுகாக்கும் நோக்கில் தலாய் லாமா விவகாரத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. 2015ம் ஆண்டில் ஆட்சியிலிருந்த மைத்திரி - ரணில் நல்லாட்சி அரசும் ராஜபக்ஷா்களின் அதே கொள்கையையும் அணுகுமுறையையும் கடைப்பிடித்தது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையில் சீனாவின் நிலைப்பாட்டை எதிா்பாா்த்து நிலைகுலைந்து போயிருக்கும் இலங்கைக்கு தலாய் லாமா விவகாரம் ஒரு புதிய தலை வலியை கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை சா்வதேச நாணய நிதியத்திலிருந்து பெறுவதற்கு இலங்கைக்கு சீனாவின் கடன் மறுசீரமைப்பு சான்றிதழ் மிகவும் முக்கியமானது. தலாய் லாமாவுக்கு இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர் இலங்கைக்கு பயணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று திபெத்திய அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் அண்மையில் ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தார். த பெடரல் செய்தித்தளம் இந்த செய்தியை பிரசுரித்திருந்தது. “சீனாவின் கடும் ஆட்சேபனையை அடுத்து தலாய் லாமா இலங்கை செல்வது நல்லதா?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள திபெத்தின் அதிகாரி, இந்த கேள்வியை இலங்கை மக்களிடமே கேட்க வேண்டும் என்று பதிலளித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தலாய்-லாமா-சீன-அரசியலால்-சுற்றி-வளைக்கப்பட்ட-ஓர்-ஆன்மீகத்-தலைவர்/91-311333 -
பாராளுமன்றத்தில் இல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றுக்கு புனர்வாழ்வு மையங்களை நடத்தும் அதிகாரத்தை வழங்கும் புனர்வாழ்வுப் பணியக சட்டமூலம், புதன்கிழமை (18) இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பிற அரசியல் எதிரிகளை, இராணுவத்தால் இயக்கப்படும் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கும் அதிகாரத்தை, இந்தச் சட்டம் அரசாங்கத்துக்கு வழங்கும் என, இந்தச் சட்டமூலத்தின் விமர்சகர்கள் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவால் அமைச்சரவையில் அங்கிகரிக்கப்பட்டு, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டமூலமானது 23 ஆதரவு வாக்குகளுடனும், வெறும் ஆறு எதிர்ப்பு வாக்குகளுடனும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்தின் மூல வடிவம், 2022 செப்டெம்பர் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டமூலம் அரசிலயமைப்புடன் இயைபுடையது அல்ல என சிவில் சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சி எம்.பிக்கள் போன்றோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தியிருந்தனர். இந்தச் சட்டமூலம் முற்றிலும் அரசியலமைப்புக்கு விரோதமானது என்று உயர்நீதிமன்றம் தனது தீர்மானத்தை வௌியிட்டிருந்தது. குறித்த சட்டமூலத்தில் உள்ள பெரும்பாலான சரத்துகள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையின் ஒப்புதல் தேவை என்றும், அத்தோடு சர்வசனவாக்கெடுப்பொன்றில் மக்கள் அங்கிகாரமும் பெறப்படவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்மானித்திருந்தது. ஆயினும், குறித்த சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம், சாதாரண பெரும்பான்மையோடு திருத்தப்பட்ட சட்டமூலம் நிறைவேற்றப்பட முடியும் என்றும் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. குறிப்பாக, இராணுவத்தால் நடத்தப்படும் புனர்வாழ்வு மையங்களுக்கு ‘முன்னாள் போராளிகள்’, ‘வன்முறை மற்றும் தீவிரவாத குழுக்கள்’, ‘வேறு எந்த நபர்களின் குழு’க்களையும் அனுப்புவதற்கு, அரசாங்கத்தை அனுமதிக்கும் விதிகள் நீக்கப்பட்டால், சாதாரண பெரும்பான்மையோடு திருத்தப்பட்ட சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என்றும் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது. போதைக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வுக்கானது என்ற நோக்கில் சமர்ப்பிக்கப்படுவதாக அரசாங்கம் வியாக்கியானம் சொன்ன சட்டமூலத்தில், ‘ஏனையோரை’ உள்ளடக்குவது ஏன் என்ற கேள்வி நியாயமானதே! சட்டமூலத்தின் மீதான உயர்நீதிமன்றின் தீர்மானத்துக்குப் பின்னர், சட்டமூலத்தின் புதிய பதிப்பை பாராளுமன்றத்தில் முன்வைத்த அரசாங்கம், நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கு இணங்க சட்டமூலத்தைத் திருத்தியதாகவும், குறித்த சட்டமூலம் ‘போதைப்பொருள் சார்ந்த நபர்கள்’ மற்றும் ‘சட்டத்தால் வழங்கப்பட்ட பிற நபர்களுக்கு’ மட்டுப்படுத்தப்பட்டதாக அமையும் என்றும் கூறியது. ஆயினும், பாராளுமன்ற விவாதத்தில் சுட்டிக்காட்டியபடி, ‘சட்டத்தால் அடையாளம் காணப்பட்ட பிற நபர்கள்’ என்ற சொற்றொடரைச் செருகுவது என்பது தௌிவற்ற நிலையை உருவாக்குகிறது என்ற அச்சம் வௌியிடப்பட்டிருந்தது. ‘சட்டத்தால் அடையாளம் காணப்பட்டது’ என்பது, நீதித்துறையால் நிர்ணயிக்கப்படுவதா இல்லையா என்ற கேள்விக்கு, பாராளுமன்றத்தில் தெளிவான பதில் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த அடக்குமுறைச் சட்டத்தின் நோக்கத்தையும் பயன்பாட்டையும் விரிவுபடுத்துவதற்காக, அடுத்தடுத்து திருத்தங்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகளை இது பரந்த அளவில் திறந்து விடுகிறது. இது மிகவும் ஆபத்தானது. ஆகவே, இலங்கை வாழ் மக்களை நேரடியாகப் பாதிக்கக் கூடிய சட்டம் இது. குறிப்பாக, மக்களின் உரிமைகளை அடக்க, இதனை ஒரு பலமான ஆயுதமாக அரசாங்கம் பாவிக்க முடியும். அப்படிப்பட்ட சட்டமூலம் வாக்களிப்புக்கு வரும்போது, மொத்தப் பாராளுமன்ற உறுப்பினர்களில் 13% மட்டுமே பாராளுமன்றத்தில் இருந்து வாக்களிப்பில் பங்குபற்றியிருந்தனர். 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 29 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்கெடுப்புக்கு வந்திருந்தனர். ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களில் வெறும் 29 பேர் மட்டுமே மொத்தமாக வாக்களித்திருந்தனர். ஏனையோர் எவரும் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. மிகக்குறிப்பாக ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரேனும் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. குறித்த சட்டமூலம் மீதான விவாதம் நடந்த போது, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்வீச்சு விமர்சனங்களுக்கு குறைவிருக்கவில்லை. ஆனால், வாக்கெடுப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் 54 பாராளுமன்ற உறுப்பினர்களில், வெறும் ஐந்துக்கும் குறைவானவர்களே பாராளுமன்றத்தில் இருந்தனர். இந்தச் சட்டமூலம் மீதான விவாதம் இந்த வருடத்தின் முதல்வாரத்தில் நடந்தபோது, அதில் ஆங்கிலத்தில் உரையாற்றியிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், “அமைச்சரிடம் நான் கூற விரும்பும் மற்றோர் அடிப்படைப் பிரச்சினை உள்ளது. ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்படுவதென்பது, நீதித்துறையின் தீர்ப்புக்குப் பிறகுதான் நடக்க வேண்டும். இப்போது அந்தக் குறிப்பில் இருந்து, இது ஒரு விலகலாக அமைகிறது. நாம் இப்போது குற்றவாளி என்று நீதிமன்றம் கண்டறியாமல் ஒரு நபரை சிறையில் அடைக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியுள்ளோம். இந்த வார்த்தைகளை நன்றாக யோசித்துத்தான் பயன்படுத்துகிறேன். ஏனெனில் ஒருவரது தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறித்தபின், அவர் ஓடிப்போனால், அவரை மீண்டும் பிடித்து வரும் ஏற்பாடுகள் இந்தச் சட்டமூலத்தில் உள்ளன. போதைப்பொருள் மறுவாழ்வு திட்டத்தில் ஒரு முக்கியமான அடிப்படையானது, குறித்த நபரின் தன்னார்வத் தன்மையாகும். அந்த நபர் மறுவாழ்வு பெற வேண்டும் என்று, நீங்கள் அதை அவரது தொண்டைக்குள்ளே கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது. எனவே, போதைப்பொருள் சார்பு சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தில் நீதித்துறை தீர்ப்புக்கு கூடுதலாக மருத்துவக் கருத்தையும் கருத்திற் கொள்ள வேண்டும். அந்த இரண்டு நிபந்தனைகளும் இணைக்கப்பட்டால், நீங்கள் ஒரு மறுவாழ்வு மையத்தை அமைக்கலாம். ஆனால் அது அந்தத் துறையில் உள்ள நிபுணர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும்; பாதுகாப்பு நிபுணர்களால் அல்ல” என்று குறிப்பிட்டிருந்தார். மிகத் தேர்ந்த அனுபவமும், நிபுணத்துவமும் மிக்க மனித உரிமைகள் சட்டத்தரணியான சுமந்திரன், இந்தச் சட்டமூலம் சட்டமாக்கப்படுவதால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய ஆபத்தை மிகச்சரியாக எதிர்வுகூறியிருக்கிறார். சட்டங்கள் என்பவை ஆயுதத்தைப் போல; ஒரு பலமான ஆயுதத்தை உருவாக்கிவிட்டு, அதனை நான் சரியான தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன் என்று ஒருவர் சொல்லலாம். உருவாக்கியவர் அத்தகைய நல்லவராகவே இருக்கட்டும்; ஆனால், நாளை அந்த ஆயுதம் இன்னோர் அராஜகவாதியின் கைக்கு சென்றுவிட்டால், ஓர் அராஜகவாதியிடம் ஒரு பலமான ஆயுதம் கிடைத்துவிடுமில்லையா? இதுதான் இங்குள்ள பிரச்சினை. பயங்கரவாத தடுப்புச் சட்டமும் அவசரகாலச் சட்டமும், இந்நாட்டு மக்களை, குறிப்பாக சிறுபான்மையினரை, மிகக் குறிப்பாக தமிழர்களை அடக்கியொடுக்க எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு அந்த இருண்ட வரலாறே சாட்சி! இன்றும் குற்றம்சாட்டப்படாது, பல்லாண்டுகளாக ‘அரசியல் கைதி’களாக எத்தனை பேர் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்? இந்தப் புனர்வாழ்வுப் பணியகச் சட்டமும் இந்த வகையறாச் சட்டம்தான். இது தனிமனித உரிமைக்கும், சுதந்திரத்துக்கும் எதிரான பெரும் சவால். இப்படியொரு சட்டம் வாக்கெடுப்புக்கு வரும்போது, இதை எதிர்த்துப் பேசிய சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அவையிலிருந்து தமது எதிர்ப்பு வாக்கைப் பதிவு செய்திருக்க வேண்டாமா? அது அவர்களது கடமையல்லவா? இதைவிட என்ன பெரிய கடமை அவர்களுக்கு இருக்கிறது? ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் முதற்கடமை பாராளுமன்றத்துக்கு சமூகமளித்து, அவைச் செயற்பாடுகளில் அக்கறையோடு பங்குபற்றுதல் ஆகும். அதற்குப் பிறகுதான் மற்றையதெல்லாம். இதற்குத்தான் மக்கள் அவர்களைத் தேர்ந்தெடுத்து, பாராளுமன்றத்துக்குத் தமது பிரதிநிதிகளாக அனுப்புகிறார்கள். இதற்குத்தான் மக்கள் பணத்தில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இத்தனைக்கும் ஒரு மாதத்தின் ஒவ்வொரு வேலைநாளும் பாராளுமன்ற அமர்வுகள் இருப்பதில்லை. பாதீடு சமர்ப்பிக்கப்படும் மாதத்தைத்தவிர, விசேட காரணங்கள் இருந்தாலன்றி, ஒரு மாதத்தில் 10ற்கும் குறைவான நாள்களே பாராளுமன்ற அமர்வுகள் இருக்கின்றன. அவற்றில்கூட, முறையாகப் பங்குபற்ற முடியாதவர்கள், சட்டமூலம் மீதான விவாதங்களில், வாக்கெடுப்பில் பங்குபற்றாதவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து யாருக்கு என்ன பயன்? தேர்தல் காலத்தில் மக்களை வந்து வாக்களியுங்கள் என்று சொன்னவர்கள், தாம் பாராளுமன்றத்தில் வந்து வாக்களித்து, தமது கடமையைச் செய்ய வேண்டாமா? இனியாவது மக்கள், கடமையைச் செய்யத்தக்கவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால், பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்படுவது ஒரு சிறப்புரிமை அல்ல; அது அடிப்படையில் ஜனநாயகக் கடமை. அதைச் சரியாகச் செய்யாதவர்கள் ஜனநாயக விரோதிகளே! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பாராளுமன்றத்தில்-இல்லாத-பாராளுமன்ற-உறுப்பினர்கள்/91-311282
-
நாவிதன்வெளி பிரதேச சபையை மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது! நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சேர்ந்த உறுப்பினர் அந்தோனி சுதர்சன் 03 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என் . மணிவண்ணன் தலைமையில் சபை மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்றது. வெற்றிடமாகி இருந்த தவிசாளர் பதவிக்கு புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான இக்கூட்ட அமர்வில் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 13 உறுப்பினர்கள் மண்டபத்தில் சமூகமளித்திருந்தனர். இதன்போது கூட்டத்திற்கு தேவையான நிறைவெண் இருப்பதனால் கூட்டத்தை தொடர்ந்து நடாத்துவதற்கு உள்ளுராட்சி ஆணையாளர் அறிவித்ததோடு புதிய தவிசாளருக்கான முன்மொழிவுகளை கோரினார். இந்நிலையில் மூவர் புதிய தவிசாளர் தெரிவிற்காக சபையில் உறுப்பினர்களினால் பிரேரிக்கப்பட்டனர்.இதனை அடுத்து பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என சபையில் விடப்பட்டது.இதன் போது பெரும்பாலான உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பினை கோரினர்.இதற்கமைய உறுப்பினர்களால் பிரேரிக்கப்பட்டு வழிமொழியப்பட்ட மூன்று புதிய தவிசாளர் தெரிவு உறுப்பினர்களும் பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய உறுப்பினர்களால் புதிய தவிசாளராக தெரிவு செய்ய கோரப்பட்டது. இதன் போது நடைபெற்ற தேர்வில் வாக்குகளை குறைவாக பெற்ற புதிய தவிசாளர் தேர்வு உறுப்பினரான திருமேனி யோகநாதன் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு ஏனைய இரு போட்டியாளர்களான தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட அந்தோனி சுதர்சன் மற்றும் சிவலிங்கம் குணரட்னம் ஆகிய இருவரில் புதிய தவிசாளர் பதவிக்காக தெரிவு செய்வதற்கு மீண்டும் இரண்டாவதாக பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன்போது நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கு சபையின் 13 உறுப்பினர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 04 உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 02 உறுப்பினர்களுடன் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருமாக 07 உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட அந்தோனி சுதர்சனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மற்றுமொரு புதிய தவிசாளர் தேர்வு உறுப்பினரான தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சிவலிங்கம் குணரட்னத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் சுயேட்சை குழு உறுப்பினர்கள் இருவர் என 04 பேர் வாக்களித்தனர். இத்தேர்வில் சுயேட்சைக்குழு மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணயின் உறுப்பினர் என 02 பேர் நடுநிலை வகித்திருந்தனர். இந்நிலையில் மூன்று மேலதிக வாக்குகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அந்தோனி சுதர்சன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி ஆணையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார். இதன்போது நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முன்மொழியப்பட்ட உறுப்பினர் அந்தோனி சுதர்சன் என்பருக்கு 07 வாக்குகளும் அதே கட்சி சார்பில் முன்மொழியப்பட்ட மற்றுமொரு உறுப்பினரான சிவலிங்கம் குணரட்னம் என்பருக்கு 04 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் புதிய தவிசாளரை ஆதரித்தனர்.நாவிதன்வெளி பிரதேச சபை கடந்த காலத்தில் மேற்படி சபையை கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் சுயேட்சைக் குழு உறுப்பினர் அமரதாஸ ஆனந்த என்பவர் தவிசாளராக ஆட்சி செய்து வந்த நிலையில் 14 குற்றச்சாட்டுக்கள் பெருன்பான்மை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டு 2023ம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டமையினால் வறிதான தவிசாளர் வெற்றிடத்திற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேற்குறித்த புதிய தவிசாளர் தெரிவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் நாகேந்திரன் தர்சினி பிரேரித்து முன்மொழிந்தது அதே கட்சியை சேர்ந்த உறுப்பினர் முருகப்பன் நிரோஜன் வழிமொழிந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அந்தோனி சுதர்சன் 07 உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய தவிசாளராக தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. புதிய தவிசாளர் தெரிவினை தொடர்ந்து புதிய தவிசாளர் அந்தோனி சுதர்சன் தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் உறுப்பினர்கள் பலரும் புதிய தவிசாளருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.மேலும் நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளரை அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் சபைக்கு வருகை தந்து பாராட்டினார். புதிய தவிசாளர் தெரிவினை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையை சுற்றி சவளக்கடை பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதனை அவதானிக்க முடிந்தது. https://athavannews.com/2023/1321634
-
யாழ்.மாநகர முதல்வராக மீண்டும் ஆர்னோல்ட்-வெளியானது வர்த்தமானி
கிருபன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
யாழ் மாநகர முதல்வர் தெரிவில் சூட்சுமம் – மேல் நீதிமன்ற படியேறிய மணிவண்ணன் யாழ். மாநகர முதல்வராக மீண்டும் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளமை முறையற்ற விதம் எனத் தெரிவித்து முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு பதவி நீக்கப்பட்ட ஒருவரை மீண்டும் முதல்வராக தெரிவு செய்ய முடியாது என அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்.மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் அதன் முதலாவது சமர்ப்பிப்பின் போது தோற்கடிக்கப்பட்ட நிலையில், பெரும்பான்மை ஆதரவைப் பெற முடியாத நிலையில், முதல்வராக இருந்த சட்டத்தரணி மணிவண்ணன் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, யாழ். மாநகர சபைக்கு புதிய முதல்வரை தெரிவு செய்வதற்காக கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதுடன், உள்ளூராட்சி அதிகார சபைகள் மற்றும் தேர்தல்கள் கட்டளை சட்டத்தின் படி யாழ். மாநகர சபையின் புதிய முதல்வராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கடந்த 20 ஆம் திகதி வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டது. இதன்படி யாழ். மாநகர சபை முதல்வராக இம்மானுவேல் ஆர்னோல்ட் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் இந்த நிலையில், முறையற்ற விதத்தில் யாழ். மாநகர முதல்வராக மீண்டும் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து முன்னாள் முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணனால் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூன்று விடயங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. தேர்தல் கட்டளை சட்டத்தின் படி ஒரு முதல்வரை தேர்வு செய்ய முடியாது, பாதீடு தோற்கடிக்கப்பட்ட ஒருவரை முதல்வராக தெரிவு செய்வதற்கு இடம் இல்லை, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சபையில் கோரமில்லை என அறிவித்துவிட்டுச் சென்று சூட்சுமமான முறையில் வர்த்தமானி பிரசித்தமை ஆகிய மூன்று விடயங்களுக்கு எதிராக சட்டத்தரணி மணிவண்ணனால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. https://akkinikkunchu.com/?p=236242 -
கூட்டமைப்பு தலைவர் பதவியில் இருந்து சம்பந்தன் விலக்கப்பட்டாரா? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து சம்பந்தன் விலக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்தள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். ”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகும் வரைக்கும் தமிழரசு கட்சி ஒரு செயலிழந்த கட்சியாகவே பார்க்கப்பட்டது தமிழீழ விடுதலைப் புலிகள் அதற்கான அங்கீகாரத்தை வழங்கி வீட்டுச் சின்னத்தை ஒரு பொதுச் சின்னமாக தலைவர் அவர்கள் அங்கீகாரம் வழங்கி நாங்கள் ஒரு தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தினோம். இன்று தமிழரசுக் கட்சி தனித்துவமாக முடிவை எடுத்து ஒரு தொழில்நுட்பம் முறை என்றும் ராஜதந்திர முறை என்றும் கருத்துக்களை மக்கள் மத்தியில் கூறிக்கொண்டு, வீட்டுச் சின்னம் தான் தமிழ் மக்களுடைய சின்னம் என்றும், தமிழரசுக் கட்சி தான் தமிழ் மக்களுடைய தாய் கட்சி என்றும் வலியுறுத்தி ஊடகங்களிலே செய்து வெளியிட்டு வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பும் ஊடகப் பேச்சாளர் பொறுப்பும் எங்களிடமே இருக்கின்றது என்று தமிழரசு கட்சி கூறி வருகின்றது. உண்மையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து கட்சிகளைக் கொண்டு தற்போதைய காலத்தின் தேவை உணர்ந்து ஒரு புதிய பரிணாம வளர்ச்சி கண்டு இங்குநிற்கின்றது. அந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ரெலோ, பிளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி என ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக குற்றுவிளக்கு சின்னத்தில் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றது. இந்த சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தனித்துவமாக தமிழரசு கட்சி இல்லாமல் செயல்பட்டு வருகின்றது இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து சம்பந்தன் ஐயா விலக்கப்படுகின்றார் ,கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரன் விலக்கப்படுகின்றார். சம்பந்தன் ஐயா வெறுமனே திருகொணமலை மாவட்டத்தின் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும், சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்ற நிலை இங்கே உருவாகி இருக்கின்றது. http://www.samakalam.com/கூட்டமைப்பு-தலைவர்-பதவிய/
-
சாய்ந்தமருது சபை உருவாக்கத்திற்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி எந்த தடையும் இல்லை By T. Saranya 24 Jan, 2023 | 09:19 AM சாய்ந்தமருது சபை உருவாக்கத்திற்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி எந்த தடையும் இல்லை. இந்த விடயத்தில் கல்முனை மாநகர சபை மக்கள் ஒரு சிலரை விட எல்லோரும் தெளிவாக இருக்கின்றார்கள் என கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான ஏ.எல். அன்ஸார் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட சமகால அரசியல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் 2023 தொடர்பில் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம் இருக்கின்றது. என்னை போன்று தான் இக்கட்சியின் கொள்கையும் இருக்கின்றது. சாய்ந்தமருது சபை உருவாக்கத்திற்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி எந்த தடையும் இல்லை.இந்த விடயத்தில் கல்முனை மாநகர சபை மக்கள் ஒரு சிலரை விட எல்லோரும் தெளிவாக இருக்கின்றார்கள். எல்லைப்பிரச்சினைகள் தீர்க்கப்பட் வேண்டும்.தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.சாய்ந்தமருது மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.இவ்வாறான விடயங்கள் தீர்க்கப்படுகின்ற போது கல்முனை மாநகரில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லீம் மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.அத்துடன் தமிழ் முஸ்லீம் கட்சி தலைமைகள் இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும். நாங்கள் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அதிகார வர்க்கத்திடம் கெஞ்சியாவது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்போம் என்றார். அத்துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறி ஐக்கிய காங்கிரஸில் இணைவதற்கு காரணம் திறமைக்கு இடம்கொடுக்கவில்லை என்பதே ஆகும். கட்சி தலைவர் என்பவர் திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கி மதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். மேலும் அம்பாறை மாவட்டத்தில் பொருளாதார ரீதியான அபிவிருத்தி முன்னெடுப்துடன் பாரிய உரிமை இருப்பு சார்ந்த விடயங்களையும் இளைஞர்களின் வேலைவாய்ப்பினையும் முன்னெடுக்கவுள்ளோம்.எம்மதமும் சம்மதம் என்ற நிலையில் எமது வேலைத்திட்டங்கள் அமையும் என நம்பிக்கை வெளியிட்டார். குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் முன்னிலையில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தருமான ஏ.எல். அன்ஸார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அஹமட் புர்க்கான் ஆகியோர் உத்தியோகபூர்வமாக ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/146536
-
துருக்கி தனது நேட்டோ உறுப்பினர் முயற்சியை ஆதரிக்கும் என்று சுவீடன் எதிர்பார்க்கக்கூடாது: எர்டோகன் துருக்கி தனது நேட்டோ உறுப்பினர் முயற்சியை ஆதரிக்கும் என்று சுவீடன் எதிர்பார்க்கக்கூடாது என்று துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். ஸ்டாக்ஹோம் போராட்டத்தில் குர்ஆன் நகல் எரிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அவரது இந்த கருத்து வெளிவந்துள்ளது. நமது நாட்டுத் தூதரகத்தின் முன் இத்தகைய அவப்பெயரை ஏற்படுத்தியவர்கள், தங்கள் விண்ணப்பம் தொடர்பாக இனி எங்களிடம் எந்த நன்மையையும் எதிர்பார்க்க முடியாது என்பது தெளிவாகிறது என அவர் கூறினார். டேனிஷ் கட்சியைச் சேர்ந்த தீவிர வலதுசாரி அரசியல்வாதியால் நடத்தப்பட்ட சமீபத்திய எதிர்ப்பு, பேச்சு சுதந்திரத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய அவதூறு என்று எர்டோகன் கண்டனம் செய்தார். மேலும், துறவிகளை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என்று எர்டோகன் கூறினார். எர்டோகனின் கருத்துகளுக்கு பதிலளித்த சுவீடன் வெளியுறவு அமைச்சர் டோபியாஸ் பில்ஸ்ட்ரோம், துருக்கிய தலைவர் கருத்து தெரிவிப்பதற்கு முன் என்ன சொன்னார் என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். ‘சுவீடனுக்கு பரந்த கருத்துச் சுதந்திரம் உள்ளது, ஆனால் சுவீடன் அரசாங்கமோ அல்லது நானோ வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை ஆதரிக்கிறோம் என்பதை இது குறிக்கவில்லை’ என்று சுவீடன் வெளியுறவு அமைச்சர் கூறினார். ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பிறகு சுவீடன், ஃபின்லாந்துடன் சேர்ந்து நேட்டோவில் சேர விண்ணப்பித்தது, ஆனால் ஏற்கனவே உறுப்பினராக இருக்கும் துருக்கி அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். எனினும், சமீபத்திய எதிர்ப்புகள் பதற்றத்தை அதிகரித்துள்ளன. https://athavannews.com/2023/1321470
-
கலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு: 7பேர் உயிரிழப்பு! கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய தாக்குதல்கள் சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே சுமார் 30 மைல் (50 கிமீ) தொலைவில் உள்ள கடற்கரை நகரமான ஹாஃப் மூன் பேவில் இரண்டு தனித்தனி இடங்களில் நிகழ்ந்தன. தாக்குதல் நடத்தியவர் உள்ளூர்வாசியான 67 வயதான ஜாவோ சுன்லி என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டார். உயிரிழந்தவர்களின் முதல் நான்கு பேர் உள்ளூர் நேரப்படி 14:22 மணியளவில் காளான் பண்ணையில் கண்டுபிடிக்கப்பட்டனர், மற்ற மூன்று பேர் பின்னர் அருகிலுள்ள டிரக்கிங் வணிகத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கான காரணத்தை இதுவரை புலனாய்வாளர்கள் தெரிவிக்கவில்லை. ஆனால், துப்பாக்கிதாரி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட எட்டாவது நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சான் மேடியோ கவுண்டி ஷெரிஃப் கிறிஸ்டினா கார்பஸ் கூறினார். முன்னதாக, சந்திர புத்தாண்டன்று லொஸ் ஏஞ்சல்ஸின் கிழக்கு விளிம்பில் பெரும்பான்மையான ஆசிய அமெரிக்க நகரமான மான்டேரி பூங்காவில் உள்ள கார்வே அவென்யூவில் உள்ள பால்ரூம் நடன கிளப்பில் சனிக்கிழமை நடந்த துப்பாக்கி சூட்டில் 11பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2023/1321497
-
தர்மலிங்கத்தின் சிலை கல்வெட்டில் தமிழரசு கட்சியின் பெயர் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு தர்மத்தையே கற்றுத் தந்த தர்மரின் சிலையில் அவரது பெயருக்கும் புகழுக்கும் காரணமாக இருந்த தமிழரசுக் கட்சியின் பெயர் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது என வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். தர்மலிங்கத்தின் நினைவுத் தூபிக்கு நேற்று (திங்கட்கிழமை) மாலை சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, ”இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகாலத் தலைவர்களில் அமரர் தர்மலிங்கமும் ஒருவர். அவர் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் தோல்வியுற்றமை கிடையாது. இதனால்தான் அவரை மக்கள் முடிசூடா மன்னர் என்று அழைத்தார்கள். அந்த அளவுக்கு அவர் மக்கள் மனங்களில் இடம்பிடித்திருந்தார். அவரது மகன் ஆயுதக்குழு உறுப்பினராக இருந்து பின் ஜனநாயக வழியில் தேர்தலில் போட்டியிட்டபோது தந்தையின் பெயரையும் தமிழரசுக் கட்சியின் பெயரையும் பயன்படுத்தித்தான் மக்கள் மனங்களை வென்றார். இன்று தர்மத்தையே கற்றுத் தந்த தர்மரின் சிலையில் அவரது பெயருக்கும் புகழுக்கும் காரணமாக இருந்த தமிழரசுக் கட்சியின் பெயர் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. அதனைத் தமிழரசின் வாலிபர் முன்னணியினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். சிலை திறப்புவிழா நிகழ்வில் அவரை யார் கொலை செய்தார்களோ அந்த ஆயுதக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் கலந்துகொண்டுள்ளார்கள். இன்று தனது தந்தையைக் கொன்ற கயவர்களுடன் அவரது மகன் கூட்டுச் சேர்ந்துள்ளமை வேதனையைத் தருகிறது” என்றார். https://athavannews.com/2023/1321487
-
கடனில் உள்ள இலங்கைக்கு உதவ இந்தியா உறுதியளித்துள்ளது – ஐ.எம்.எப். சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டத்தின் ஒரு பகுதியாக, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான இலங்கையின் கடன் சுமையை குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கை கடனாக 2.9 பில்லியன் டொலரைக் கோருகின்ற நிலையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வலுவாக ஆதரிப்பதாக இந்தியா, சர்வதேச நாணய நிதியத்திடம் கூறியதாக கடந்த வாரம் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் மற்ற இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இதேபோன்ற உத்தரவாதங்களை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி, இலங்கை பாரிஸ் கிளப் உறுப்பினர்களான இந்தியா, ஜப்பான், சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. ஏற்கனவே ஜப்பானுடன் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ள அதேவேளை, பாரிஸ் கிளப் உறுப்பினர்களுடன் இந்த வாரம் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என நிதி அமைச்சு உறுதிப்படுத்தியது. அவர்களிடம் இருந்து போதுமான உத்தரவாதங்கள் பெறப்பட்டு, மீதமுள்ள தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன், கடனுதவி திட்டத்தை பரிசீலிக்கும்படி சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு தசாப்தங்களில் ஏற்பட்ட மோசமான நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அவசியமான சர்வதேச நாணய நிதியத்துடன் இறுதி உடன்படிக்கையை எட்டுவதற்கு, சீனா மற்றும் இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு தேவைப்படுகிறமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1321508
-
மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக 9 ஆம் திகதி போராட்டத்திற்கு அழைப்பு! அரசாங்கத்தின் பிழைப்புக்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து எதிர்வரும் 9 ஆம் திகதி போராட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த நாட்டில் செலவழிக்கப்படும் வரிப்பணத்தில் கிடைக்கும் நன்மைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னெஹெக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1321523
-
யாழில் காணி விடுவிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்! யாழ் மாவட்டத்தில் வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிவிடுவிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ்மாவட்ட செயலக அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி செயலக, வனவள திணைக்கள அதிகாரிகளுக்குமிடையில் யாழ்மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. நேற்று பிற்பகல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன், வடக்குமான பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளி, மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், வனவள திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மறும் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் இணையவழியூடாக கொழும்பைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர். வனவள தினைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிகள் தொடர்பில் நாளையதினம் களவிஜயம் ஒன்றும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவுள்ளது. https://athavannews.com/2023/1321502
-
புடின் தோல்வியடைந்தால் உலகதிற்கு அது நல்ல நேரம் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ்ற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். முன்னாள் பிரதமரை உக்ரைன் அதிபர் வோல்மியுர் ஜெலென்ஸ்கி வரவேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனில் ரஷ்யப் படைகள் பின்வாங்கிய பகுதிகளையும் போரினால் சேதமடைந்த பகுதிகளையும் பிரித்தானிய முன்னாள் பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டதாக கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தோல்வியடைந்தால், அது உக்ரைனுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதற்கும் நல்ல நேரமாக அமையும் என பிரித்தானிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த பயணத்தின் போது கூறியது உலகம் முழுவதும் பலத்த விவாதத்தை உருவாக்கியுள்ளது. தனது ஆட்சிக்காலத்தில் ரஷ்யாவை தோற்கடிக்க பிரித்தானியா எந்தவொரு ஆதரவையும் வழங்க தயாராக இருப்பதாக பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மேலும் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. https://akkinikkunchu.com/?p=236072
-
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு - 9 பேர் உயிரிழப்பு
கிருபன் replied to கிருபன்'s topic in உலக நடப்பு
கலிபோர்னியாபடுகொலை – தாக்குதலை மேற்கொண்டவர் அடையாளம் காணப்பட்டார் கலிபோர்னியாவின் மொன்டெரே பார்க்கில் துப்பாக்கிசூட்டை மேற்கொண்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 72வயதான ஹியு கான் டிரான் என்பவரே பத்துபேர் கொல்லப்பட்ட இந்த துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து தப்பிச்செல்ல முயன்ற வானை பொலிஸார் துரத்திச்சென்றவேளை இந்த நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.வானிற்குள்ளிலிருந்து 72 வயதான டிரானின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்த நபர் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற இடத்திற்கு நடன நிகழ்வு இடம்பெற்ற பகுதிக்கு அடிக்கடி சென்று வந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.சந்தேகநபர் தனது முன்னாள் மனைவியை அங்கு சந்தித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=236093 -
ராஜபக்சாக்களையடுத்து பிள்ளையான் மீதும் தடை விதிக்குமா கனடா – ஆதாரங்களுடன் தீவிர முன் நகர்வுகள்! கனேடிய அரசு ராஜபக்ச சகோதரர்கள் மீது விதித்த பயணத்தடையை வரவேற்றுள்ள கனேடிய தமிழ் அமைப்புகள், பிள்ளையான் மீதும் பயணத்தடையை விதிக்கவேண்டும் எனக்கேட்டுக் கொள்ளவுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், சமூகசேவையாளர்கள், அரசியல்பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பல பொதுமக்களின் படுகொலைக்குக் காரணமான பிள்ளையான் மீது கடுமையான தடைகளை கனடா விரைவில் அறிவிக்க வேண்டும் என்பதற்கமைய தாம் செயற்படுவதாகவும் கனடிய தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐரோப்பிய அவுஸ்திரேலிய அரசுகளிடமும் பிள்ளையான் மீதான பயணத்தடையை மேற்கொள்ளுமாறு கோருவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தகவல்களையும் தமது மனுக்களில் இணைப்பதற்காக ஆராய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் பிள்ளையானின் சகாக்களின் தகவல்களும் இணைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனவரி 29ம் திகதியில் இருந்து நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://akkinikkunchu.com/?p=236102
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் தமிழ் தேசிய பொங்கல் விழா ! kugenJanuary 23, 2023 வட்டாரக்கிளைத் தலைவர் எஸ்.சன்முகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்.இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம்,பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா,மாநகர முதல்வர் தி;.சரவணபவன்,வாலிபர் முன்னனி தலைவர் கி.சேயோன் என முக்கிய அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன்போது மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டது.கணபதி பூஜா துரந்தரர் சிவஸ்ரீ மு.சண்முகம் ஆசியுரை நிகழ்த்தினார்.கிரானைச் சேர்ந்த 1977 ஆம் ஆண்டு காலப்பகுதி தொடக்கம் தமிழரசு கட்சிக்கு தொண்டாற்றிய கூட்டணி அப்பா என்று அழைக்கப்பட்ட அமரர் பாக்கியராசா அவர்களுக்கு நினைவுச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 'பூத்தது தமிழ் புத்தாண்டு புதுமைகள் பொலிகமாதோ 'என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.இவ் கவியரங்கத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கி.துரைராஜசி;கம் தலைமை வகித்தார்.கதிரவன் பட்டிமன்ற குழுவினரால் பட்டிமன்ற நிகழ்வு நடைபெற்றது.பட்டி மன்றக் குழுவினர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் இறுதியில் தமிழரசுக் கட்சியில் அங்கத்துவம் படிவம் வழங்கப்பட்டு புதிய அங்கத்துவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இந் நிகழ்வானது எதிர்வரும் 2023.03.09 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான கட்சியின் சார்பில் வாழைச்சேனை பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களை கௌரவித்து மக்கள் முன் அறிமுகப்படுத்தும் பிரச்சார கூட்டமாகவும் அமைந்திருந்தது. http://www.battinews.com/2023/01/blog-post_334.html
-
யாழ்.மாநகர முதல்வராக மீண்டும் ஆர்னோல்ட்-வெளியானது வர்த்தமானி
கிருபன் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
முதல்வர் தெரிவில் தனது தலையீடு இருக்கவில்லை : வடக்கு ஆளுனர்! யாழ். மாநகர சபையில் இடம்பெற்ற புதிய முதல்வர் தெரிவு தனது அதிகாரத்திற்கு உட்பட்ட விடயம் அல்ல என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரையும் ஆணையாளரை நியமிக்கும் அதிகாரங்கள் மட்டுமே தங்கிருப்பதாவும் வடமாகாண ஆளுநர் கூறியுள்ளார். இமானுவேல் ஆர்னோல்ட்நியமிக்கப்பட்டதாக தெரிவித்து சனிக்கிழமை வெளிவந்த வர்த்தமானி தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் பிரகாரம் முதல்வர் தெரிவை மேற்கொள்ளும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்கே இருப்பதாகவும் ஜீவன் தியாகராஜா குறிப்பிட்டுள்ளார். ஆளுனரின் அழுத்தத்தினாலேயே யாழ் மாநகர முதல்வராக இம்மானுவேல் ஆர்னோல்ட் நியமிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1321325 -
கூட்டமைப்பின் பிளவு மக்கள் மத்தியில் பாரியதொரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது – செல்வம் எம்.பி. தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவது ஆரோக்கியமான விடயமல்ல என்றும் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவு மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தனித்து போட்டியிடுவதனால் கூட்டமைப்பிற்குள் கருத்து முரண்பாடுகள் உருவாகலாம் என்றும் தேர்தலின் பின் ஏற்படக்கூடிய சிக்கல்களுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என எவரும் சிந்திக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றும் அதன் மூலமாகவே மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகள், அரசியல் தீர்வு, காணாமல் போனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டாக பல்வேறு உறுதி மொழிகளை மக்களுக்கு வழங்கியது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2023/1321349
-
சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் – ஜேர்மனி ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் என ஜேர்மனி அறிவித்துள்ளது. அத்தகைய கோரிக்கையை முன்வைக்கப்பட்டு போலந்தும் அனுமதியை வழங்கினால் அவற்றை வழங்குவோம் என ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படுவதையும், உக்ரைனின் பிரதேசம் விடுவிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ஜேர்மனியால் தயாரிக்கப்பட்ட டாங்கிகளை உக்ரேனுக்கு வழங்க ஐரோப்பிய நாடுகளுக்கு பெர்லின் அங்கீகாரம் அளிக்கத் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவரை, மேற்கத்திய நாடுகளால் வடிவமைக்கப்பட்ட முக்கிய போர் டாங்கிகள் எதுவும் ரஷ்யப் படைகளுக்கு எதிரான போருக்கு வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1321357
-
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு - 9 பேர் உயிரிழப்பு துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரை ஆம்புலன்சில் ஏற்றும் காட்சி லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருந்தபோது அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு 10.22 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. நடன அரங்கில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஒரு ஆண் என்றும், கையில் வைத்திருந்த இயந்திர துப்பாக்கியைக் கொண்டு அவர் கண்மூடித்தனமாக சுட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டை அடுத்து அங்கிருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு பாதுகாப்பான இடம் நோக்கி ஓடியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொண்டாட்டத்தில் இருந்தபோது எதிர்பாராத விதமாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளிவர முடியவில்லை என்றும் 47 வயதாகும் எட்வின் சென் என்ற நபர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நடன அரங்குக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கட்டுப்பாட்டாளர் கென்னித் மெஜியா ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார். https://www.hindutamil.in/news/world/932440-nine-people-killed-in-mass-shooting-at-monterey-park-in-california-s-los-angeles-area.html
-
தமிழர் அபிலாஷைகளை பூர்த்திசெய்யக்கூடிய நேரடிப் பேச்சுவார்த்தை அவசியம் – தமிழர் தரப்பிடம் கோரிக்கை January 22, 2023 தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், 13ஆவது திருத்தம், 13 ‘பிளஸ்’, மேலவை என ஒற்றையாட்சி அரசியலமைப்பினுள் பேச்சுவார்த்தையை முடக்கி காலத்தை கடத்தாமல், நேரடியாகவே தமிழர்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுகளை நோக்கி பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று 27 தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் 551 தனிநபர்களும் தமிழர் தரப்பிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். அதுமாத்திரமன்றி, தமிழ் அரசியல் தலைவர்கள் மாத்திரம் தமிழர் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வது என்பது கனதியான தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும், பேச்சுவார்த்தையில் இலங்கையின் இராஜதந்திர சூழ்ச்சிகளை எதிர்கொள்வதற்கும் போதுமானது அல்ல என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் பேச்சுவார்த்தைகளின்போது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சிவில் சமூகப் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளை தமிழர் தரப்பில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அரசாங்கத்துக்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், இப்பேச்சுவார்த்தைகளின்போது தமிழர் தரப்பு விசேடமாக கவனம் செலுத்தவேண்டிய விடயங்களை உள்ளடக்கிய கூட்டறிக்கையொன்று தமிழ் சிவில் சமூகத்தவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் சுயாதீன தமிழ் இளைஞர்கள் அமைப்பு, தமிழ் சட்டத்தரணிகள் பேரவை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம், பி2பி மக்கள் இயக்கம், தமிழ் சிவில் சமூக அமையம் என்பன உள்ளடங்கலாக 27 தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும், தவத்திரு அகத்தியர் அடிகளார், மன்னார் ஆயர் பி.எப்.இம்மானுவல் பெர்ணான்டோ, திருகோணமலை பேராயர் நோயல் இம்மானுவல், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோர் உள்ளடங்கலாக 551 தனிநபர்களும் கையெழுத்திட்டுள்ளனர். அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: இலங்கையில் நிலவும் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார். ஆனால், தமிழர் தரப்பு எவ்வித முன்னாயத்தமோ அல்லது ஏகோபித்த கொள்கை இணக்கமோ இன்றி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. இன்றளவிலே இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. கடந்த பல தசாப்த காலமாக இலங்கை அரசாங்கம் ஏனைய தமிழ்த் தேசங்களை சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் எதிரியாக கருதி செயற்பட்டதன் விளைவே இதுவாகும். இந்த உண்மையை தற்போது வரை சிங்கள தேசத்தின் பெரும்பாலான அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ அல்லது மக்களோ வெளிப்படையாக ஏற்றுக்கொண்டதில்லை. இருப்பினும், தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதன் மூலமே தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து மீளலாம் என்ற உண்மையை உணர்ந்ததனாலேயே அரச தரப்பினால் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்போது தமிழர் தரப்பு கவனத்தில் கொள்ளவேண்டிய சில முக்கிய விடயங்கள் உள்ளன. அதன்படி, இனவழிப்பை எதிர்கொள்கின்ற தமிழ்த் தேசத்துக்கு எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாதவை, அவர்களின் தேசிய இருப்பு மற்றும் தேசிய அடையாளங்களுக்கான பாதுகாப்பாகும். எனவே, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இந்த உத்தரவாதத்தை வழங்குவதாகவே அமையவேண்டும். நாட்டின் தேசிய இனப்பிரச்சினை வரலாற்றை பொறுத்தமட்டில், இதற்கு முன்னதாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் இலங்கை அரசு அதற்கு சாதகமாகவே பயன்படுத்திக்கொண்டது என்பதை நாம் மறக்கக்கூடாது. அதேபோன்று முதலில் பேச்சுவார்த்தைகளுக்கான தெளிவான வழிவரைபடமொன்றை இருதரப்புகளும் ஒன்றிணைந்து தயாரிக்க வேண்டும். இவ்வரைபடம் முக்கிய அடைவுகள், அவற்றுக்கான கால அட்டவணை என்பவற்றை கொண்டிருக்க வேண்டும். இப்பேச்சுவார்த்தைகள், இனவழிப்பின் விளைவுகளாக தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் இறுதி அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் என இரண்டு தளங்களில் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக, இறுதி அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை பொறுத்தமட்டில், அவை காத்திரமானவையாக அமையவேண்டுமெனில், இலங்கையின் தற்போதைய ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அப்பாலான தீர்வை நோக்கியதாக ஆரம்பத்திலிருந்து இருக்கவேண்டும். 13ஆவது திருத்தம், 13 ‘ப்ளஸ்’, மேலவை என ஒற்றையாட்சி அரசியல் யாப்பினுள் பேச்சுவார்த்தையை முடக்கி காலத்தை கடத்தாது, நேரடியாகவே தமிழர்களது அபிலாஷைகளை பூர்த்திசெய்யக்கூடிய தீர்வுகளை நோக்கிப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தைகளின்போது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சிவில் சமூகப் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளை தமிழர் தரப்பில் இணைத்துக்கொள்ள வேண்டும். தமிழ் அரசியல் தலைவர்கள் மாத்திரம் தமிழர் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வது என்பது கனதியான தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும், பேச்சுவார்த்தையில் இலங்கையின் இராஜதந்திர சூழ்ச்சிகளை எதிர்கொள்வதற்கும் போதுமானது அல்ல. எனவே, அதற்கேற்றவாறு புத்திஜீவிகள் மற்றும் பல்துறைசார் நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக்குழுவொன்றை நியமித்துக்கொள்ள வேண்டும். இலங்கை அரசுடன் தமிழர் தரப்பு நடத்தும் எந்தவொரு பேச்சுவார்த்தையும் வெளிப்படைத்தன்மையுடன் கூடியதாக இருக்கவேண்டும். தமிழர் தரப்பின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பவர்கள் பேச்சுவார்த்தை பற்றியும், தீர்வுத்திட்டம் தொடர்பாகவும் தமிழ் மக்களுடன் துணிச்சலான, வெளிப்படையான கலந்துரையாடல்களை தொடர்ந்து முன்னெடுத்து, இறுதித்தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் பற்றிய மக்களின் அபிப்பிராயங்களை பெற்றுக்கொண்டு அவற்றுக்கேற்ப தம்மை தகவமைத்துக்கொள்ள வேண்டும். அதுமாத்திரமன்றி, பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் தமிழ்த் தரப்பினர் தேவைப்படும் அனைத்து சந்தர்ப்பங்களின்போதும் பேச்சுவார்த்தை மற்றும் அதன் அடைவுகள் என்பன தொடர்பில் தமிழ் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். இப்பேச்சுவார்த்தைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள், குறிப்பாக, இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாப்பதற்கு முன்வரும் நாடுகள் மத்தியஸ்தம் வகிப்பது சிறந்தது என்றே கருதுகின்றோம். ஆனால், அவர்களது மத்தியஸ்தம் தொடர்பான விதிமுறைகள் முன்கூட்டியே உருவாக்கப்பட வேண்டும். மேலும், இந்நாடுகளுடன் உலகிலுள்ள பிரபல்யமான, மனசாட்சியுள்ள, எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்கின்ற, நசுக்கப்படுபவர்களுக்காக குரல் கொடுக்கின்ற, அழுத்தங்களுக்கு அடிபணியாத தனிநபர்களுள் சிலராவது மத்தியஸ்தர்களாகவும், கருத்துரைக்கும் பார்வையாளர்களாகவும் பேச்சுவார்த்தையில் இணைக்கப்பட வேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.ilakku.org/a-direct-dialogue-is-necessary-to-meet-the-aspirations-of-the-tamils/
-
திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள், வடக்கின் தீவுகள் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடல் January 22, 2023 திருகோணமலை மாவட்டத்தை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் இந்திய வௌிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப் பட்டதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கர் இலங்கைக்கு வந்திருந்த போது, இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல், பொருளாதார, சமூக விடயங்கள் மற்றும் முதலீடு தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தை எரிசக்தி மையமாக எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என்பது தொடர்பில் இந்திய வௌிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். அந்த திட்டத்திற்குள் திருகோணமலை எரிபொருள் தாங்கிகளும் அடங்குவதாக அவர் கூறினார். அது தொடர்பில் உடன்படிக்கைகள் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை எனவும் வௌிவிவகார அமைச்சர் மேலும் கூறினார். இதேவேளை, கலாநிதி S.ஜெய்சங்கர் பல இராஜாங்க அமைச்சர்களையும் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார். திருகோணமலையை எரிசக்தி ஏற்றுமதி மத்திய நிலையமாக மாற்ற வேண்டும் எனவும் அது தொடர்பில் இந்திய வௌிவிவகார அமைச்சர் விசேட கவனம் செலுத்தியதாகவும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பின் போது இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவுள்ள விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகThe Hindu செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.ilakku.org/discussion-with-india-on-trincomalee-oil-bearings-northern-islands/
-
நெருக்கடியால் வீடுகளை விற்பனை செய்ய முடியாமல் திணறும் நபர்கள் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பிற கட்டிடங்களை விற்கவும், வாடகைக்கு எடுக்கவும் முடியாமல் கிட்டத்தட்ட 10,000 பேர் அவல நிலையில் உள்ளனர். அந்த வீடுகளை கட்ட செலவழித்த கோடிக்கணக்கான பணம் வீணாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த வர்த்தகர்கள், நிதி நெருக்கடி காரணமாக இந்த நாட்டு மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை கொள்வனவு செய்வதை சுமார் 80 வீதத்தால் குறைத்துள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர். வெளிநாட்டில் வசிக்கும் குறைந்த எண்ணிக்கையிலான இலங்கையர்களே அடுக்குமாடி குடியிருப்புகளை கொள்வனவு செய்து வருவதாகவும், இந்த நிலையில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக பெற்ற வங்கிக் கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளில் பொருளாதாரப் பிரச்சனைகள் காரணமாக கட்டுமானத் துறையுடன் தொடர்புடைய சுமார் 25000 நிறுவனங்கள் மூடப்பட்டதால் அத்துறை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளதாக கட்டுமானத் துறை தொடர்பான வட்டாரங்கள் தெரிவித்தன. பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை, கட்டுமானத் துறையில் உள்ள 650,000 நேரடித் தொழிலாளர்களும், ஏறக்குறைய 700,000 மறைமுகத் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக நிர்மாணத்துறையில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு காணப்படுவதாக சபை குறிப்பிட்டுள்ளது. இப்பிரச்சினைகளை தனித்தனியாக கண்டறிந்து நடைமுறைப்படுத்தாவிட்டால் பொறியியல் துறை பாரியளவில் வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாது எனவும், இதனை தடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் பிரேரணையை முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.thaarakam.com/news/54e104a2-83cd-4b20-9ccb-0988f7e36446
-
சின்னத்தில் என்ன இருக்கிறது? - நிலாந்தன் தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு புதிய கூட்டமைப்பை அமைக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இதனால் விக்னேஸ்வரன்-மணிவண்ணன் அணியானது மான் சின்னத்தின் கீழும் ஏனைய கட்சிகள் குத்துவிளக்கு சின்னத்தின் கீழும் போட்டியிடுவதாக முடிவாகியுள்ளது. தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு பெரிய கூட்டை உருவாக்கப் போகின்றன என்று எதிர்பார்க்கப்பட்ட கட்சிகள் ஒரு பொதுச் சின்னத்தை கண்டுபிடிக்க முடியாமல் தங்களுக்கு இடையே இரண்டாக உடைந்து விட்டன. இந்த உடைவை தொகுத்துப் பார்த்தால் வெளிப்படையாக ஒரு விடயம் தெரிகிறது. ஆயுதப்போராட்ட மரபில் வந்த கட்சிகள் ஓரணியிலும் ஆயுதப்போராட்ட மரபில் வராத கட்சிகள் இன்னொரு அணியாகவும் நிற்பதைக் காணலாம். இது ஆயுதப் போராட்ட மரபில் வந்த கட்சிகளுக்கும் ஆயுதப் போராட்ட மரபில் வராத கட்சிகளுக்கும் இடையிலான ஒரு முரண்பாடாக தோன்றும். கடந்த வாரம் நடந்த சந்திப்புகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியை கூட்டுக்குள் இணைத்துக் கொள்வதற்கு விக்னேஸ்வரன் முதலில் தயக்கம் காட்டினார். ஏனைய கட்சிகள் விளக்கம் கேட்ட பொழுது ஜனநாயக போராளிகள் கட்சியை உள்ளே வைத்துக்கொண்டு அந்த விளக்கத்தை தன்னால் கூற முடியாது என்றும் அவர்களை வெளியே அனுப்பினால்தான் அந்த காரணத்தை வெளிப்படையாக சொல்லலாம் என்று கூறியிருக்கிறார். அதனால் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பை தொகுத்துப் பார்க்கும் ஒருவருக்கு பின்வரும் கேள்வி எழும். தமிழரசு கட்சிக்கு எதிரான ஒரு பலமான கூட்டை உருவாக்க முடியாமல் போனமைக்கு காரணம்,ஆயுதப் போராட்ட மரபில் வந்த கட்சிகளும் அந்த மரபில் வராத கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடா ? என்பதே அக்கேள்வியாகும். காலைக்கதிர் பத்திரிகையின் செய்தியாளர் வர்ணிப்பதுபோல “மிலிட்டரி ஹோட்டலும் சைவ ஹோட்டலும்” வேறு வேறாக நிற்கின்றனவா? ஆனால்,கடந்த பொதுத் தேர்தலில் விக்னேஸ்வரன் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சின்னத்தின் கீழ்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அது மட்டுமல்ல அதற்கு முன்பு கடந்த வடமாகாண சபையில் அவர் தமிழரசுக் கட்சிக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தபோது அவரைக் காப்பாற்றியது ஆயுதப் போராட்ட மரபில் வந்த இயக்கங்கள்தான். விக்னேஸ்வரனின் எழுச்சியென்பது ஆயுதப் போராட்ட மரபில் வந்த கட்சிகளின் உதவியால் கிடைத்த ஒன்றுதான். அதாவது விக்னேஸ்வரனுக்கு “அசைவ ஹோட்டலில்தான்” விருந்து கிடைத்தது. ”சைவ ஹோட்டலில்” அல்ல. எனவே தமிழரசுக் கட்சிக்கு எதிரான ஒரு புதிய கூட்டை உருவாக்க முடியாமல் போனமைக்கு காரணம் ஆயுதப் போராட்ட மரபில் வந்த கட்சிகளை மிதவாத மரபில் வந்தவர்கள் ஏற்றுக்கொள்ளத் தவறியமை என்று கூறப்படும் விளக்கம் முழுமையானது அல்ல. உண்மையான பிரச்சினை சின்னம்தான். கூட்டின் பெயர்தான். தமிழரசு கட்சிக்கு எதிராக ஒரு பலமான கூட்டை கட்டி எழுப்புவது என்றால் கூட்டமைப்பு என்ற பெயர் தேவை என்று விக்னேஸ்வரன் அல்லாத ஏனைய கட்சித் தலைவர்கள் நம்பினர். கூட்டமைப்பு என்ற பெயரில் வாக்குக் கேட்டால் அதற்கென்று ஒரு வாக்கு வங்கி இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். அதனால் ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு, அதாவது ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவது என்று முடிவெடுத்தார்கள். கட்சியின் பெயர் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதாகும். அது புளட் இயக்கமும் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் சுகு அணியும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்சியாகும். ஈ.பி.ஆர்.எல்.எப்பின் சுகு அணியானது, தமிழ்த் தேசிய சிந்தனைக்கு வெளியே நிற்கிறது. அந்த இயக்கத்தின் சுரேஷ் அணி தமிழ்த் தேசிய சிந்தனைக்குள் நிற்கிறது. இவ்வாறு புளட்டும் ஈ.பி.ஆர்.எல்.எஃபின் சுகு அணியும் சேர்ந்து உருவாக்கிய கட்சியின் சின்னத்தை பயன்படுத்தி புதிய கூட்டமைப்பை பதிந்த பின் அதில் இருக்கும் “ஜனநாயக” என்ற வார்த்தையை பின்னர் நீக்கலாம் என்று மேற்படி கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இது தமிழரசுக் கட்சியைத் தவிர்த்துவிட்டு கூட்டமைப்பைப் பதிவது என்று பங்காளிக் கட்சிகள் திட்டமிடத் தொடங்கிய பொழுதே கருக்கொண்ட ஒரு யோசனையாம். ஆனால் விக்னேஸ்வரனும் மணிவண்ணனும் அந்த சின்னத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். அக்கட்சியின் செயலாளராக இருப்பவர் புளட் இயக்கத்தைச் சேர்ந்த ஆர்.ஆர் என்று அழைக்கப்படும் ராகவன். விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் கூட்டமைப்புக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு அது என்ற அடிப்படையில் அந்த கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவதற்கு விக்கி-மணி அணி தயங்குகிறது. புதிய கூட்டின்மீது தனதுபிடி பலமாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு தனது கட்சியின் சின்னத்தையே பொதுச் சின்னமாக பயன்படுத்த வேண்டும் என்றும்,தன்னை கூட்டின் செயலாளராக நியமிக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் விரும்பியதாக தெரிகிறது. இவ்வாறாக சின்னம் மற்றும் செயலாளர் விடயத்தில் ஒரு பொதுக் கருத்தை எட்ட முடியாத காரணத்தால் கூட்டு உருவாகவில்லை. தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு பலமான கூட்டைக் கட்டியெழுப்பும் பொழுது அதில் கூட்டமைப்பு என்ற பெயர் தேவை என்று விக்னேஸ்வரன் அல்லாத ஏனைய கட்சித் தலைவர்கள் நம்புவதாக தெரிகிறது. கூட்டமைப்பு என்ற பெயர் கடந்த இரண்டு தசாப்தங்களாக மக்கள் மத்தியில் பதிந்திருப்பதனால், அந்த பெயருக்கு என்று ஒரு வாக்குவங்கி இருக்கும் என்றும் அவர்கள் நம்புகின்றார்கள். அதுபோலத்தான் தமிழரசுக் கட்சியும் தனது வீட்டுச் சின்னத்துக்கென்று ஒரு பெரிய வாக்குவங்கி உண்டு என்று நம்புகிறது. பழக்கப்பட்ட ஒரு சின்னம் அல்லது பழக்கப்பட்ட ஒரு பெயர் என்பது விமர்சன பூர்வமாக சிந்திக்காத வாக்காளர்களை கவர்வதற்கு இலகுவான வழி என்று நம்பப்படுவதுண்டு. அது ஒரு விதத்தில் பொதுப்புத்தியை அதிகம் உழைப்பின்றி கவர்வதற்கான ஒரு உத்திதான். ஆனால் தமிழ் தேசியப் பரப்பில் கடந்த சில தசாப்தகால அனுபவங்களை தொகுத்துப் பார்த்தால் அது முழு வெற்றி பெற்ற ஒரு உத்தி அல்லவென்பது தெரியவரும். அதற்கு கீழ்வரும் உதாரணங்களைக் காட்டலாம். இந்திய அமைதிகாக்கும் படைக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்ற பொழுது வெளிச்சவீட்டு சின்னத்தின் கீழ் போட்டியிட்ட ஈரோஸ் இயக்கம் 13 ஆசனங்களை கைப்பற்றியது. தமிழ் அரசியலில் ஒரு சுயேச்சை குழு அந்தளவு ஆசனங்களை அதற்கு முன்னும் கைப்பற்றவில்லை இன்றுவரையிலும் கைப்பற்றவில்லை. அங்கே சின்னம் ஒரு விவகாரமாக இருக்கவில்லை. அந்த சின்னம் அதற்கு பின் எந்த ஒரு தேர்தலிலும் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய வாக்குகளைப் பெறவில்லை. அதேபோன்று கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலின் போதும் தமிழரசு கட்சிக்கு எதிராகக் கூட்டுச்சேர முற்பட்ட கட்சிகளின் மத்தியில் சின்னம் ஒரு விவகாரமாக காணப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னம் வெற்றிகரமானது என்று கருதப்பட்டது. தமிழ்மக்கள் பேரவைக்குள் காணப்பட்ட கட்சிகளை இணைக்க முடியாமல் போனமைக்கு அந்த சின்னமும் ஒரு காரணம். தேர்தலில் அந்தச்சின்னம் கிழக்கில் ஒப்பீட்டளவில் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றது. எனினும் அது ஒரு நிர்ணயகரமான வெற்றியல்ல. உதயசூரியன் சின்னம் ஒரு காலம் வெற்றியின் சின்னமாகக் கருதப்பட்டது. ஆனால் ஆயுதப்போராட்டத்தின் பின்னணியில் வீட்டு சின்னம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது உதயசூரியன் தோற்கடிக்கப்பட்டது. ஏன் அதிகம் போவான் ? கடந்த பொதுத் தேர்தலின்போது வீட்டுச் சின்னத்துக்கு வெளியே வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையை தமிழ்மக்கள் மூன்று வெவ்வேறு தரப்பினருக்கு வழங்கினார்கள். முதலாவது தரப்பு,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. இரண்டாவது,விக்னேஸ்வரனின் கட்சி. மூன்றாவது, வியாழேந்திரன். எனவே சின்னந்தான் வெற்றிக்கு அடிப்படை காரணம் என்று நம்புவது சரியா ?அதே போல பழக்கப்பட்ட ஒரு பெயரை வைத்து விமர்சனபூர்வமாக சிந்திக்காத வாக்காளர்களின் கூட்டு உளவியலை கையாளலாம் என்று நம்புவதும் சரியா? சின்னங்கள் குறியீடுகள்தான். பெயர்களும் குறியீடுகள்தான். ”வார்த்தைகள் அர்த்தங்களால் சுமையேற்றப்படுகின்றன”என்று ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி கூறுவார். வார்த்தைகளுக்கும் சின்னங்களுக்கும் மந்திரசக்தியை கொடுப்பது கட்சிகளின் வேலை. செயற்பாட்டாளர்களின் வேலை. ஒரு கட்சி எந்தளவு கடுமையாக உழைக்கிறது என்பதில்தான் அது தங்கியிருக்கிறது. எனவே தமிழரசுக் கட்சிக்கு சவாலாக எழுவது என்பது, சின்னங்களிலும் பெயர்களிலும் தங்கியில்லை. விசுவாசமான உழைப்பில்தான் தங்கியிருக்கிறது. சிறந்த தலைவர்கள் சின்னங்களை உருவாக்குகிறார்கள். வார்த்தைகளுக்கு புதிய அர்த்தங்களைக் கொடுக்கிறார்கள். சின்னங்களுக்கும் வார்த்தைகளுக்கும் மந்திர வலிமை ஏற்றுகிறார்கள். இதுதொடர்பில் இரண்டு விடயங்களை அழுத்திச் செல்லவேண்டும். முதலாவது, தமிழரசுக்கட்சிக்கு எதிராக என்று சிந்திப்பதே தவறு. அது அதன் உளவியல் அர்த்தத்தில் தமிழரசுக்கட்சியின் பலத்தைக் குறித்த தாழ்வுச்சிக்கலையுங் குறிக்கும். மாறாக தேசத் திரட்சியை கட்டியெழுப்புவதற்காக என்று சிந்திப்பதே சரி. அதுதான் ஆக்கபூர்வமானது. இது முதலாவது. இரண்டாவது விடயம், கட்சிகளின் வெற்றி என்பது சின்னங்களிலும் பெயர்களிலும் தங்கியிருப்பதில்லை. நவீன தகவல்தொடர்பு யுகத்தில் கட்சிகளின் வெற்றிக்குரிய விளம்பர உத்திகளையும் பிரச்சார உத்திகளையும் வகுத்துக் கொடுப்பதற்கென்றே தொழிற்சார் வல்லுநர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் நினைத்தால் சின்னங்களையும் பெயர்களையும் திட்டமிட்டு ஸ்தாபிப்பார்கள். ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்குவார்கள். எனவே இந்தச்சின்னம்தான் வேண்டும்,இந்தப் பெயர்தான் வேண்டும் என்ற மாயைகளில் இருந்து புதிய கூட்டுக்கள் விடுபடவேண்டும். தமிழ் மக்களையும் அந்த மாயைகளில் இருந்து விடுவிக்க வேண்டும். மாயைகளில் மூழ்கிக் கிடந்தால் மெய்மையை கண்டுபிடிக்க முடியாது. மெய்மையை கண்டுபிடித்தால்தான் பொருத்தமான உழைப்பைக் கொட்டி வார்த்தைகளையும் சின்னங்களையும் மந்திரசக்தி மிக்கவையாக மாற்றலாம். எல்லாவற்றிற்கும் கடும் உழைப்பு வேண்டும். வியட்நாமிய புரட்சியின் தந்தை கோஷிமின் கூறியது, புதிய கட்சிக் கூட்டுக்களுக்கும் பொருந்தும். “மக்களிடம் செல்லுங்கள்,மக்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள், மக்கள் உங்களுக்கு வெற்றிகளைப் பெற்றுத் தருவார்கள் “ http://www.nillanthan.com/5851/