Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    35002
  • Joined

  • Days Won

    173

Everything posted by கிருபன்

  1. தலைநகர் கிளர்ச்சி எதிரொலி – பிரேசில் ராணுவத் தலைவர் பதவி நீக்கம் பிரேசிலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிட்ட அதிபர் ஜெயீர் போல்சனாரோ தோல்வி அடைந்தார். ஆனால் அவர் தனது தோல்வியை ஏற்காமல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்தாக குற்றம் சாட்டி வந்தார். இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபர் இனாசியோ லுடா சில்வா கடந்த 1-ம் தேதி பதவியேற்றார். இதற்கிடையில் லுடா அதிகாரத்தைக் கைப்பற்றுவதை தடுக்க ராணுவ தலையீட்டுக்கு அழைப்பு விடுத்து போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 8-ம் தேதி தலைநகர் பிரேசிலியாவில் திரண்ட போல்சனாரோவின் ஆதரவாளர்கள் பாராளுமன்றம், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் அதிபர் மாளிகை ஆகிய கட்டிடங்களுக்குள் புகுந்து சூறையாடினர். இதனால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலவரக்காரர்களை அப்புறப்படுத்தினர். கலவரத்தில் ஈடுபட்டதாக 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போல்சனாரோ இந்த கலவரத்தை தூண்டியதாக அதிபர் லுலா டா சில்வா குற்றம் சாட்டிய நிலையில், போல்சனாரோ அதனை திட்டவட்டமாக மறுத்தார். இந்நிலையில், தலைநகரில் ஜனவரி 8-ம் தேதி கிளர்ச்சியைத் தொடர்ந்து நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா நேற்று பிரேசிலின் ராணுவத் தளபதியை பதவி நீக்கம் செய்தார். இதன்படி, ஜெனரல் ஜூலியோ சீசர் டி அர்ருடா ராணுவத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக பிரேசிலிய ஆயுதப் படைகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக தென்கிழக்கு ராணுவக் கட்டளைத் தலைவராக இருந்த ஜெனரல் டோமஸ் மிகுவல் ரிபேரோ பைவா நியமிக்கப்பட்டார். ஏற்கனவே அதிபர் இல்ல கலவரம் தொடர்பாக 40 வீரர்களை பணிநீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் லூலா உத்தரவிட்டுள்ளார். https://akkinikkunchu.com/?p=236027
  2. தனித்துத் தேர்தலை முகங்கொடுக்கும் செயற்பாடு நிரந்தரப் பிரிவாக அமையாது : பாராளுமன்ற உறுப்பினர் - த.கலையரசன்! kugenJanuary 22, 2023 (சுமன்) நாங்கள் தனித்து இந்தத் தேர்தலை முகங்கொடுக்கும் செயற்பாடு ஒரு நிரந்தரப் பிரிவை ஏற்படுத்துகின்ற செயற்பாடாக அமையாது. நாங்கள் கூட்டாக இருந்து எதிர்காலத்திலும் எமது மக்களின் பிரச்சனைகளைக் கையாளுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். இன்றைய தினம் அம்பாறை கச்சேரியில் தமிழரசுக் கட்சி சார்பில் வேட்புமனு கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை இன்று கையளித்துள்ளோம். அம்பாறை மாவட்டதில் கல்முனை மாநகரசபை தவிர்த்து மற்றைய அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு, திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், நாவிதன்வெளி, சம்மாந்துறை போன்ற ஆறு தமிழ் பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை இன்று கையளித்துள்ளோம். ஜனநாயகம் பொருந்திய எமது தமிழரசுக் கட்சியிலே இம்முறை மக்களால் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். எனவே மக்கள் நிச்சயமாக எமது கட்சிக்கு உறுதியான ஆணையைத் தருவார்கள் என்று நம்புகின்றோம். மாகாணசபை மற்றும் இந்த உள்ளூராட்சி மன்றங்களிலேயே எமது அரசியல் அதிகாரம் அத்தியாவசியமானதாக இருக்கின்றது. அந்த அடிப்படையில் நாங்கள் பலமாக இருந்து செயற்பட்டு எமது மக்களையும், எங்கள் மக்களின் வாக்குகளையும் எமது அரசியற் பிரதிநிதித்துவத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முகம்கொடுக்கும் விதமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்த தமிழரசுக் கட்சி, டெலோ, புளொட் ஆகியன ஒன்றாகக் கேட்கும் போது வட்டாரம், விகிதாசாரம் என்ற ரீதியில் இத்தேர்தல் முறை இருப்பதால் எமக்கு அதிக பின்னடைவு இருக்கின்றது. அந்த அடிப்படையிலேதான் நாங்கள் தனித்துக் கேட்கின்றோம். நாங்கள் தனித்து இந்தத் தேர்தலை முகங்கொடுக்கும் செயற்பாடு ஒரு நிரந்தரப் பிரிவை ஏற்படுத்துகின்ற செயற்பாடாக அமையாது. நாங்கள் கூட்டாக இருந்து எதிர்காலத்திலும் எமது மக்களின் பிரச்சனைகளைக் கையாளுவோம். எமது மக்களுக்கு இந்த நாட்டில் பிரச்சனைகள் இருக்கின்றது. அந்த அடிப்படையில் ஒற்றுமையாகவே நாங்கள் செயற்படுவோம். இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையில் எந்தவொரு அரசியற் கட்சியும் அதிக ஆசனங்களைப் பெற்றாலும் கூட ஆட்சி அதிகாரங்களைப் பெற முடியாது. அந்த அடிப்படையில் தான் இம்முறை இவ்வாறானதொரு அரசியல் அணுகுமுறையை நாங்கள் கையாண்டிருக்கின்றோம். அந்த அணுகுமுறையை ஒரு பிரிவாகக் கருதாமல் நாங்கள் எதிர்காலத்திலும் ஒற்றுமையாகவே செயற்படுவோம் என்று தெரிவித்தார். http://www.battinews.com/2023/01/blog-post_960.html
  3. ஒற்றுமையுடன் செயற்பட்டால் அதிக வட்டாரங்களை கைப்பற்ற முடியும் – சாணக்கியன் நம்பிக்கை! kugenJanuary 22, 2023 ஒற்றுமையுடன் செயற்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வட்டாரங்களை கைப்பற்ற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘மழையுடன் ஆரம்பித்துள்ள பல நிகழ்வுகளை வெற்றிகரமாகவே முடித்துள்ளோம். இதற்கு சிறந்த உதாரணமாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியினை குறிப்பிடலாம். தமிழரசு கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட எந்தவொரு வேட்பு மனுக்களும் நிராகரிக்கபடவில்லை. குறிப்பாக சொல்லப்போனால் இந்த தேர்தலை பொறுத்தவரையில் அதிகளவான உள்ளுராட்சி சபைகளில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 76 வட்டாரங்களில் வெற்றி பெற்ற நாம் இம்முறை 100 இற்கும் மேற்பட்ட வட்டாரங்களில் தமிழரசு கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை. கடந்த காலங்களில் பங்களாக்கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட போதும், ஆட்சியமைப்பதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்திருந்தோம். எனினும், எங்களுடைய தந்திரமான நடவடிக்கை காரணமாக இம்முறை எந்தவொரு ஒட்டுக்குழுவின் ஆதரவும் இல்லாமல் ஆட்சியமைக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார். http://www.battinews.com/2023/01/blog-post_563.html
  4. நிலவில் கால் பதித்தவர் 93 வயதில் திருமணம் நிலவில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவரான பஸ் ஆல்ட்ரின், தன், 93வது வயதில், நீண்ட காலமாக காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்தார். கடந்த 1969 இல், அப்பல்லோ – 11 விண்கலம் வாயிலாக நிலவுக்கு பயணித்து, இதில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவர் புஸ் ஆல்ட்ரின். இவருடன் பயணித்த மற்ற வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, ‘நாசா’வில் பணியாற்றிய ஆல்ட்ரின், 1971இல் ஓய்வு பெற்றார். விண்வெளி ஆய்வு தொடர்பாக தனியாக ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர், ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்து, அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்றார். இந்நிலையில், சமீபத்தில் தன், 93வது பிறந்த நாளை இவர் கொண்டாடினார். அப்போது, அன்கா பார், 63, என்ற பெண்ணுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அந்த பெண்ணை திருமணம் செய்ததாக பதிவிட்டுஇருந்தார். இதில் அவர் கூறியுள்ளதாவது: என் நீண்ட நாள் காதலியை, என்னுடைய 93வது வயதில் திருமணம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது. நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆல்ட்ரின் திருமணம் செய்துள்ள அன்கா பார், அமெரிக்காவில் டொக்டராக பணியாற்றுகிறார். https://thinakkural.lk/article/235103
  5. பெரு நாட்டில் தீவிரமடைந்த மக்கள் போராட்டம்; மூடப்பட்ட உலக அதிசயம் தென் அமெரிக்க நாடான பெருவில் மக்கள் போராட்டம் உச்ச அடைந்துள்ளது. அந்நாட்டில் சில மாதங்களாகவே அரசியல் குழப்பம் ஓயாது நிலவி வருகிறது. அதன் விளைவாக 2022 டிசம்பரில் அங்கு ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது. ஜனாதிபதியாக இருந்த பெட்ரோ காஸ்டில்லோ, பாராளுமன்றத்தை கலைத்து அவசர நிலையை அறிவிக்க திட்டமிட்டார். அதற்குள்ளாகவே அவரை பாராளுமன்றம் பதவியை விட்டு நீக்கியது. துணை ஜனாதிபதியாக இருந்த டினா பொலுவார்டேஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். பெரு நாட்டின் முதல் பெண் அதிபர்ஜனாதிபதி ஆவார். பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதிய பெட்ரோ மெக்சிகோ நாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அவரை பெரு அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில், டினா பதவியேற்றதற்கு எதிராக அந்நாட்டில் மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும், பெட்ரோவை விடுதலை செய்யவும் அவரது ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி வன்முறை போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த அரசு அவசர நிலை அறிவித்தது. காவல்துறையை வைத்து போராட்டத்தை ஒடுக்க பெரும் முயற்சியில் பெரு அரசு களமிறங்கியுள்ளது. இருப்பினும் போராட்டத்தை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் எதிரொலியாக பெருவில் உள்ள உலக அதிசயமான மச்சு பிச்சுவை மூடி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 15ஆம் நூற்றாண்டு இன்கா பேரரசால் எழில் கொஞ்சும் மலை மீது கட்டப்பட்ட பழம்பெருமை வாய்ந்த நகரம் மச்சு பிச்சு. யுனேஸ்கோவல் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மச்சு பிச்சுவிற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது மச்சுபிச்சுவை பெரு அரசு மூடியுள்ள நிலையில், அங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகள் சிக்கியுள்ளனர். தங்களை பத்திரமாக மீட்டு சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என பெரு சுற்றுலா அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த ஒரு மாத கால போராட்டத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இராஜினாமா செய்ய வாய்ப்பே இல்லை ஜனாதிபதி டினா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/235114
  6. யாழில் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு யாழ்.மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சிலவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். யாழ்.மாவட்டத்தில் 157 வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டபோது 150 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 7 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பு மனு வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்பு மனு வேலணை பிரதேச சபையில் முழுமையாகவும் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையில் பகுதியளவிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பு மனு வேலணை பிரதேச சபையில் முழுமையாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் பகுதியளவிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனு ஊர்காவற்றுறை பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. நவலங்கா நிதஹஸ் பக்ஷவின் வேட்புமனு வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார். இதேவேளை யாழ். மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை குழுக்களின் எந்தவொரு வேட்புமனுவும் நிராகரிக்கப்படவில்லை. https://thinakkural.lk/article/235108
  7. நிலாவெளியில் பப்பாளிச் செய்கையில் பாரிய வீழ்ச்சி : வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை By Nanthini 22 Jan, 2023 | 01:19 PM நிலாவெளி, கும்றுப்பிட்டி முதலான பிரதேசங்களில் பப்பாளி செய்கையாளர்கள் இம்முறை பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்பகுதியில் சுமார் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியில் பப்பாளி பயிரிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளமையினால் பப்பாளிப்பழ விற்பனை சரிவடைந்துள்ளது. முன்பு போல சுற்றுலாப் பயணிகள் பப்பாளிப் பழங்களை கொள்வனவு செய்ய வருவதில்லை. உள்ளூர் வியாபாரிகளினாலும் உரிய விலையில் பழங்கள் வாங்கப்படாததால் பப்பாளிச் செய்கையில் இம்முறை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனவும் பப்பாளி செய்கையாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பப்பாளி பயிருக்கு தேவையான யூரியா, எம்.ஓ.பி, டி.எஸ்.பி முதலான பசளைகளும் கிடைப்பதில்லை என்பதோடு அவற்றின் விலைகளும் அதிகரித்து காணப்படுகின்றன. ஒரு பப்பாளிக் கன்று 125 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. அந்த கன்றுகளுக்கு தேவையான பசளை மற்றும் நீர்ப்பாசனத்துக்கும் செலவழிக்க வேண்டியுள்ளது. பப்பாளி கன்றுகளை செய்கையிடுவதற்கு ஓரிரு லட்சங்கள் செலவழிக்கிறோம். எனினும், செலவுக்கு ஏற்ப வருமானம் கிடைப்பதில்லை. வருமானம் பெறுவதற்கு எமக்குள்ள தொழில் இது மட்டுமே. இதனால் இதில் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருகிறோம். பப்பாளி செய்கையில் வீழ்ச்சி ஏற்படுகிறபோது அரசாங்கம் எமக்கு உதவி செய்யவேண்டும் என்கின்றனர். https://www.virakesari.lk/article/146420
  8. பேச்சுவார்த்தைக்கான நிபுணத்துவ அறிவு கட்சிகளுக்குத் தேவையா ? நிலாந்தன். கடந்த 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பதினோராம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணம் ராஜா க்ரீம் ஹவுஸ் மண்டபத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது. மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கமானது மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழ்த்தேசிய மக்கள்முன்னணி அழைக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவு சுமூகமானது அல்ல. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இது போன்ற ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்குள் உள்ளே கொண்டு வரக்கூடிய ஒரே சிவில் அமைப்பாக தமிழ் சிவில் சமூக அமையும்தான் காணப்படுகிறது. எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அந்த சந்திப்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும்,சந்திப்புக்கு அழைக்கப்பட்ட கட்சிகளிலும் சிலர் பங்குபற்ற வில்லை. புளொட் இயக்கத்தின் தலைவரும் டெலோ இயக்கத்தின் தலைவரும் அங்கு வந்திருக்கவில்லை. புளொட் இயக்கம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரை அனுப்பியிருந்தது. சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவும் வந்திருக்கவில்லை. சுமந்திரன் வந்திருந்தார். மாவை சேனாதிராஜா வந்திருந்தார். விக்னேஸ்வரன் வரவில்லை, அருந்தவபாலனை அனுப்பியிருந்தார். சுரேஷ் பிரேமசந்திரன்,ஐங்கரன்நேசன் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் வந்திருந்தார்கள். யாழ் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறை தலைவரும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளின் ஆசிரியர்களும் தமிழ் பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகளை எழுதுபவர்களும் அங்கே வந்திருந்தார்கள். மேற்படி சந்திப்பின் நோக்கம் பேச்சுவார்த்தைகளை இலக்காகக் கொண்டு ஒரு நிபுணர் குழுவை உருவாக்குவது ஆகும். பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும்,அக்கட்டமைப்பானது கட்சிகளில் மட்டும் தங்கியிராமல் கட்சிகளுக்கு வெளியே புதுஜீவிகள், கருத்துருவாக்கிகள்,சமூகப் பெரியார்கள், சமயப் பெரியார்கள், செயற்பாட்டாளர்கள் போன்ற பல தரப்புகளையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. சந்திப்பின் முடிவில் அவ்வாறு ஒரு கட்டமைப்பை உருவாக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. கட்சிகளோ அல்லது கட்சி பிரமுகர்களோ தனி ஓட்டம் ஓடுவதை தடுப்பது மேற்படி சந்திப்பின் உள்நோக்கம் ஆகும். தமிழ் மக்கள் ஒரு தரப்பு என்ற அடிப்படையில் ஒரு தேசம் என்ற அடிப்படையில் சிந்திக்க வேண்டும் என்றும், எனவே ஒரு தேசத்துக்குரிய கட்டுமானம் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை திட்டமிடவும் ஒழுங்குபடுத்தவும் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அக்கருத்தை அங்கு கூடியிருந்த பெரும்பாலான அரசியல்வாதிகள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சிந்திப்பதன் பொருள்,தமிழ் தரப்பு இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தைகளை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்கிறது என்பது அல்ல. சுமந்திரன் கூறுவது போல ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களையும் வெளிநாடுகளையும் ஏமாற்றுவதற்காக ஒரு பட்டத்தை வானில் விட முயற்சிக்கிறார் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அவர் பட்டம் விடுகிறாரோ இல்லையோ தமிழ் மக்கள் அதற்காக அண்ணாந்து பார்த்து கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க தேவையில்லை. ரணில் வருவார் போவார் அவரைப் போல எத்தனையோ தலைவர்கள் கடந்த ஒரு நூற்றாண்டு முழுவதும் வந்து போய்விட்டார்கள். ஆனால் எல்லாத் தலைவர்களும் தமிழ் மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள். எனவே அந்த ஒரு நூற்றாண்டு கால அனுபவத்தின் அடிப்படையில் சிங்கள தலைவர்களை எதிர்கொள்ளவும், அவர்கள் விரிக்கும் சூழ்ச்சி வலைகளை அறுத்து எறியவும், அவற்றை அனைத்துலகத்திற்கு அம்பலப்படுத்தவும் தமிழ் மக்களிடம் ஒரு கட்டமைப்பு இருக்க வேண்டும். ஒரு தேசம் என்ற அடிப்படையில் தமிழ்மக்கள் அதற்குரிய கட்டமைப்பை கொண்டிருக்க வேண்டும். சிங்களத் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு விசுவாசமாக இருக்கலாம், இல்லாமல் விடலாம். ஆனால் தமிழ் மக்கள் வெளி உலகத்துக்கு தாங்கள் பேச்சுவார்த்தைக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதனை நிரூபிக்கும் விதத்தில் ஒரு கட்டமைப்பை வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகளும் நிரந்தரமானவர்கள் அல்ல. இன்றைக்கு இருக்கும் மக்கள் பிரதிநிதி நாளை இல்லாமல் போகலாம். ஆனால் ஒரு தேசமாக தமிழ் மக்கள் தொடர்ந்து இருக்கிறார்கள், இருக்கவும் வேண்டும். எனவே ஒரு தேசம் என்ற அடிப்படையில் இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஒரு கட்டமைப்பு இருக்க வேண்டும். அது அரசியல்வாதிகளில் தங்கியிராமல் சுயாதீனமாக இயங்கும் ஒரு கட்டமைப்பாகவும் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் பேச்சு வார்த்தைகளுக்கான ஒரு சுயாதீனக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கடந்த 11ஆம் திகதி ராஜா கிரீம்ஹவுஸில் நடந்த சந்திப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழ் மக்கள் ஓர் அரசுடைய தரப்பு அல்ல. ஓர் அரசற்ற தரப்பாக இருப்பதனால் தமிழ் மக்களுக்கு ஐநா போன்ற உலகப் பொது மன்றங்களிலும் உரிய அங்கீகாரம் இல்லை. அது மட்டுமல்ல இந்தியா சீனா அமெரிக்கா போன்ற பேரரசுகளும் கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தைத்தான் எப்பொழுதும் கையாளப் பார்க்கும். அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார் அணுகுமுறை அத்தகையதுதான். அண்மையில்கூட இந்திய நாடாளுமன்றத்தில் தமிழக அரசியல்வாதியான வை.கோபாலசாமி ஒரு கேள்வியை எழுப்பிய பொழுது இந்திய வெளியுறவு அமைச்சர் வழங்கிய பதிலில் அதை காணலாம். பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகள் ஒரு இனத்துக்கு என்று வழங்கப்படவில்லை,இலங்கைக்கு பொதுவாகவே வழங்கப்பட்டன என்று அவர் கூறுகிறார். ஏனென்றால் இலங்கையை இந்தியா கொழும்புக்கு ஊடாகத்தான் அணுகுகின்றது. கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தைத்தான் இந்தியா கையாள முயற்சிக்கும். கொழும்பில் உள்ள அரசாங்கம் இந்தியாவின் வழிக்கு வரவில்லை என்றால்,தமிழ் மக்களை ஒரு கருவியாக பயன்படுத்தி, கொழும்பைப் பணியவைப்பார்கள். அதுதான் இந்திய-இலங்கை உடன்படிக்கை.எனவே ஓர் அரற்ற தரப்பாக இருப்பதனால் தமிழ் மக்களிடம் ஒரு தேசமாக இருப்பதற்கு தேவையான கட்டுமானங்கள் அநேகமாக இல்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு கருநிலை அரசை நிர்வகித்தபொழுது அவர்கள் ஒரு தொகுதி கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். ஆனால் 2009க்கு பின் அவ்வாறான கட்டமைப்புகள் எவையும் தமிழ் மக்கள் மத்தியில் கிடையாது. உதாரணமாக வெளிநாடுகளை அணுகுவதற்கு ஒரு வெளியுறவுக் கொள்கை வேண்டும். வெளியுறவுக் கொள்கையை வகுப்பதற்கு ஒரு சிந்தனைக் குழாம் வேண்டும். வகுக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கையை அமல்படுத்துவதற்கு நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு வெளியுறவுக் கொமிட்டி வேண்டும். ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக அப்படிப்பட்ட கட்டமைப்புகள் எவையும் தமிழ் மக்கள் மத்தியில் கிடையாது. கடந்த 13ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகள் ராஜதந்திரிகளோடும் வெளிநாடுகளோடும் அனைத்துலக நிறுவனங்களோடும் இடையூடாடி வருகின்றன. ஆனால் அவ்வாறான ராஜிய இடையூடாட்டங்களுக்கு பொருத்தமான கட்டமைப்புகள் எவையும் எந்த ஒரு கட்சியிடமும் இல்லை. அரங்கில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகளும் தனிநபர்களின் ஆங்கிலப் புலமை,ராஜதந்திரப் புலமை என்பவற்றில்தான் தங்கியிருக்கின்றன. ஆனால் வெளியுறவு நடவடிக்கைகள் எனப்படுகின்றவை அதற்கு பொருத்தமான நிபுணர்களைக் கொண்ட கட்டமைப்புக்களால் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட கட்டமைப்புகள் எவையும் தமிழ் கட்சிகளிடம் கிடையாது.அதனால் தான் கட்சிப் பிரமுகர்கள் ராஜதந்திரப்பரப்பில் தனியோட்டம் ஓடுகிறார்கள். இக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட ராஜா கிரீம் கவுஸ் சந்திப்புக்கூட பேச்சுவார்த்தைகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு சந்திப்புத்தான். அதுவே தவறு. பேச்சுவார்த்தைக்கான ஒரு நிபுணர் குழுவை உருவாக்குவது என்பது,திடீர் ரசத்தை, அல்லது திடீர் தோசையைப் போன்றது அல்ல. அது தேசநிர்மாணத்தின் ஒரு பகுதி. அப்படி ஒரு கட்டமைப்பு இதுவரையிலும் தமிழ்த் தரப்பில் இல்லை என்பது எதைக் காட்டுகிறது? ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளுக்கு விசுவாசமாக இருக்கிறாரா இல்லையா என்பதல்ல இங்கு பிரச்சனை,தமிழ்த் தரப்பு பேச்சுவார்த்தை என்று வரும்பொழுது கொழும்பையும் அனைத்துலக சமூகத்தையும் எதிர்கொள்வதற்கு வேண்டிய தயாரிப்புகளோடு இருக்கிறதா இல்லையா என்பதே இங்கு பிரச்சனை. இதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால் ஒரு தேசம் என்ற அடிப்படையில் அதற்கு தேவையான வெளியுறவு கட்டமைப்பைத் தமிழ்த் தரப்பு கொண்டிருக்கிறதா இல்லையா என்பதே இங்கு கேள்வி. இந்த அடிப்படையில் பேச்சுவார்த்தைகளுக்கான நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்கு என்று ஒரு கட்டமைப்பை உருவாக்குவது என்று கடந்த 11ஆம் திகதி ராஜா க்ரீம் ஹவுஸில் கூடிய கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் உடன்பட்டிருந்தார்கள். பேச்சுவார்த்தைகள் 13ஆம் திகதி ஆரம்பமான பின்,அடுத்தகட்ட நகர்வை முன்னெடுப்பது என்றும் சிந்திக்க பட்டது. பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக கடந்த புதன்கிழமை மேலும் ஒரு சந்திப்பு இடம்பெறவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் கடந்த புதன்கிழமை நடந்த சந்திப்பு சர்ச்சைக்குரியதாக மாறியது. அச்சந்திப்பில் அரச தரப்புடன் சம்பந்தரும் சுமந்திரனும் மட்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அதில் ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களைப்பற்றி பின்னர் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அச்சந்திப்பில் பங்குபற்றவில்லை. விக்னேஸ்வரனின் கட்சியும் கலந்து கொள்ளவில்லை. உரிய முறைப்படி உரிய நேரத்தில் தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்று மேற்படி காட்சிகள் தெரிவித்தன. விக்னேஸ்வரன் அதுதொடர்பாக பகிரங்கமாக விமர்சித்திருந்தார். அது ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு அல்ல என்று அரசுத் தலைவரின் செயலகம் தெரிவித்துள்ளது. வரும் 5ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஒரு சந்திப்பு இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பேச்சுவார்த்தைகள் என்று தொடங்கிய பின் அரசாங்கம் ஒரு கட்சியை மட்டும் அழைத்துச் சந்திப்பது ஒரு நல்ல அறிகுறியல்ல. மேலும் எல்லாக் கட்சிகளும் இணைந்து பேச்சுவார்த்தைகளுக்கென்று ஒரு கட்டமைப்பை உருவாக்குவது என்று தீர்மானித்துவிட்டு ஒரு கட்சி மட்டும் தனியாகச் சென்று அரசுத் தலைவரை சந்தித்தமையும் நல்ல தொடக்கமல்ல. பேச்சுவார்த்தைகளுக்காக ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது எத்துணை சவால்கள் மிகுந்தது என்பதைத்தான் அது உணர்த்துகின்றது. https://athavannews.com/2022/1317200
  9. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை ! நிரந்தர நண்பரும் இல்லை!…. அவதானி. இலங்கை, இந்திய அரசியலை தொடர்ந்து கூர்ந்து அவதானித்து வருபவர்களுக்கு எமது முன்னோர்கள் எமக்கு விட்டுச்சென்ற முதுமொழிகள்தான் நினைவுக்கு வரும். சமகாலத்தில் இலங்கையில் அரசியல் நிலவரங்களை அவதானிக்கும் எமக்கு, கூட்டணிகள், கூத்தணிகளாக மாறியிருப்பது அதிசயமல்ல. இதற்கு முன்னரும் அரசியல் கட்சிகளின் கூத்துக்களை பார்த்து வந்திருப்பவர்கள்தான். தேர்தல் காலம் நெருங்கும்போது இக்கூத்துக்கள் ஊடகங்களில் அம்பலமாகிவிடும். எனினும், மக்கள் ஏதாவது ஒரு கூத்தணிக்கு வாக்களித்துவிட்டுத்தான் வருவார்கள். அத்தகைய கூத்தணிகளுக்கு தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் தேவைப்படுவார்கள். அப்போது ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை என்பதுபோன்று எவராவது கிடைத்தும் விடுவார்கள். இம்முறை நடக்கவிருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வடக்கிலிருந்து மாத்திரம் சுமார் 23 அரசியல் கட்சிகள் களமிறங்கவிருப்பதாக அறியப்படுகிறது. அவற்றின் பெயர்களில் “ தமிழ் “ என்ற சொல் மாத்திரம் நிச்சயம் இருக்கும். அதனால் வாக்களிக்கும் மக்களுக்கு மனக்குழப்பமும் வருவதுண்டு. எனினும், அவர்கள் எளிதாக மாவையின் கட்சி, விக்னேஸ்வரன் கட்சி, சுரேஷ் பிரேமசந்திரன் கட்சி, சிவாஜிலிங்கம் கட்சி, சித்தார்த்தன் கட்சி, கஜேந்திர குமார் கட்சி, டக்ளஸின் கட்சி, சந்திரகுமார் கட்சி, வரதராஜப்பெருமாள் கட்சி, ஆனந்தசங்கரி கட்சி , அங்கஜன் கட்சி, விஜயகலா மகேஸ்வரன் கட்சி , ஜனநாயகப் போராளிகள் கட்சி என அடையாளம் கண்டுகொள்வார்கள். மக்களுக்கு இதுவிடயத்தில் பல வருட இனம் காணும் அனுபவம் இருக்கிறது. இம்முறை வீடு சின்னத்தில் போட்டியிடவிருக்கும் தமிழரசுக்கட்சிக்கும், குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடவிருக்கும், புதிய தமிழ்த்தேசியக்கூட்மைப்பினை உருவாக்கியிருக்கும் சில கட்சிகளும் மத்தியில் பலமான போட்டியிருந்தாலும், இவர்களுக்கு கிடைக்கவிருக்கும் வாக்குகள் விக்னேஸ்வரனின் கட்சியாலும், கஜேந்திரகுமாரின் கட்சியாலும், அங்கஜன், டக்ளஸ், மற்றும் இதர கட்சிகளினாலும் சிதறண்டு போவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. முன்னர், ரணில் விக்கிரமசிங்காவுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தேன்நிலவு கொண்டாடிய காலத்தில் யாழ்ப்பாணம் வந்த ரணிலை, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம். பி. யுமான சுமந்திரன் தமது வடமராட்சி இல்லத்திற்கு அழைத்து இளநீரும் பனம் நுங்கும் கொடுத்து உபசரித்தார். ஆனால், இம்முறை ரணில் தைப்பொங்கல் வேளையில் வந்தபோது, முன்னைய அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்தவரும் 2008 ஆம் ஆண்டு புதுவருடம் பிறந்தவேளையில் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டவருமான மகேஸ்வரனின் யாழ்ப்பாணம் இல்லத்திற்கே வந்து திரும்பியிருக்கிறார். இதே மகேஸ்வரனின் துணைவியார் கடந்த பொதுத்தேர்தலில், ரணிலை எதிர்த்த சஜித் பிரேமதாசவுக்கே தனது ஆதரவை வழங்கியிருந்தார். அத்துடன் தேர்தலில் தோற்றும் போனார். இவற்றையெல்லாம் திரும்பிப்பார்க்கும்போதுதான், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை என்ற கூற்றின் சூட்சுமம் புரிகிறது. இந்தப்பின்னணியில் யாழ்ப்பாணம் மேயர் பதவியை தருவதாகச்சொல்லி, தமிழரசுக்கட்சி ஒரு புதிய வேட்பாளரை களமிறக்கப்போவதாக செய்தி கசிந்திருக்கிறது. யாழ்ப்பாணம் இதற்கு முன்னர் பல மேயர்களை கண்டிருக்கிறது. அவர்களில் சிலர் படுகொலையும் செய்யப்பட்டனர். அல்ஃபிரட் துரையப்பா, சரோஜினி யோகேஸ்வரன், பொன். சிவபாலன், ஆகியோரைத் தொடர்ந்து மேயர் பதவிக்கு வந்தவர்கள் அனைவரும் சவால்களையே சந்தித்தனர். அண்மையில் யாழ். மேயர் மணிவண்ணனும் தனது பதவியை இராஜிநாமா செய்ய நேரிட்டது. மீண்டும் யாரை அந்தப் பதவியில் அமர்த்துவது என்பதில் தொடர்ந்தும் குழப்பங்கள் நீடிக்கிறது. யாழ். மாநகர மக்களுக்கு ஏன் இந்த சோதனை…?! இடையில், யாழ்ப்பாணத்தில் இந்துக்கள்தான் பெரும்பான்மை. அதனால், இந்து சமயத்தைச் சேர்ந்த ஒருவருக்கே அந்தப் பதவியை வழங்கவேண்டும் என்று இலங்கை சிவசேனைத் தலைவர் ஒருவர் கேட்கத் தொடங்கியுள்ளார். எமது சமூகம் எங்கே செல்கிறது…? புதிய மேயர் தெரிவு இடம்பெறாமலேயே அடுத்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. சில கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யத் தொடங்கிவிட்டன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா, ஜே.ஆர். ஜெயவர்தனாவுக்குப் பின்னர் அரசியலில் ராஜதந்திரி என நன்கு அறியப்பட்டவர். அவரால் இதர கட்சிகள் மற்றும் விடுதலை இயக்கங்களுக்குள் ஏற்கனவே பிளவுகள் உருவாகியிருக்கின்றன என அரசியல் அவதானிகள் சொல்லி வருகின்றனர். இவரது ராஜதந்திரம் சில சமயங்களில் அவதந்திரமாகி, அவருக்கே அந்தரமாகிப்போன செய்திகளும் பல உண்டு. ரணில், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து தமிழ்க் கட்சிகளையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைக்கத் தொடங்கியவுடனேயே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்குள் பிளவுகள் தோன்றிவிட்டன. அத்துடன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினை விட்டு ஏற்கனவே வெளியேறியிருந்த விக்னேஸ்வரன், கஜேந்திர குமார் கட்சிகள் தங்கள் விமர்சன அறிக்கைகளையும் வெளியிடத் தொடங்கியிருந்தன. தற்போது, ரணில் விக்கிரமசிங்காவின் யாழ். விஜயத்துடன், அங்கே தமிழர் தரப்பு அரசியலில் புதிய நாடகங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளன. இவற்றை அவதானிக்கும் ஶ்ரீமான் பொதுஜனன் தனக்குள் இவ்வாறு பேசிக்கொள்கிறார்: – “ தேசியத்தலைவர் என வர்ணிக்கப்பட்ட வேலுப்பிள்ளை பிரபகாரன் தற்போது இல்லாதமையினால்தான் , இத்தகைய காட்சிகள் அரங்கேறுகின்றன. அவர் இருந்திருப்பின் இவர்கள் எவரும் யாழ்ப்பாணம் பக்கமே வந்திருக்க மாட்டார்களே… ! இவர்கள் மட்டுமா, பாழாய்ப்போன போதை வஸ்தும் வந்திருக்காது “ மாணவர் முதல் பெரியவர்கள் வரையில் போதை வஸ்து ஆட்கொண்டிருக்கும்போது, எமது தமிழ்த் தலைவர்களை ஆணவம் நிரம்பிய அரசியல் போதை திக்குமுக்காடச்செய்துகொண்டிருக்கிறது. மேல் உலகம் சென்றுள்ள தந்தை செல்வநாயகம் “ தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் “ என இன்னமும் சொல்லிக்கொண்டிருப்பார் போலும் ! https://akkinikkunchu.com/?p=235875
  10. நானுஓயா விபத்தில் இறந்தவர்களின் விபரம் வெளியானது: காயமடைந்த மாணவர்களுக்கு உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு By Nanthini 21 Jan, 2023 | 11:52 AM நுவரெலியா - நானுஓயா, ரதெல்ல பகுதியில் நேற்றிரவு (20) இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சுற்றுலா பஸ்ஸொன்று, வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் வேனில் பயணித்த அறுவரும், முச்சக்கரவண்டி சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். வேனில் பயணித்த தாய், தந்தை, இரு பிள்ளைகள், உறவினர் ஒருவர் மற்றும் சாரதி ஆகியோர் ஹட்டன், டிக்கோயா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஆட்டோ சாரதி நானுஓயா பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம் 01. அப்துல் ரஹீம் (55) 02. ஆயிஷா பாத்திமா (45) 03. மரியம் (13) 04. நபீஹா (08) 05. ரஹீம் (14) 06. நேசராஜ் பிள்ளை (25) - வேன் சாரதி 07. சண்முகராஜ் (25) - முச்சக்கரவண்டி சாரதி கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து நுவரெலியாவுக்கு கல்விச் சுற்றுலாவுக்காக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, மீண்டும் கொழும்பு நோக்கி நேற்றிரவு பயணித்துக்கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து அதிக வேகம் காரணமாகவும் 'பிரேக்' செயற்படாததாலும், நானுஓயா, ரதெல்ல பகுதியில் வைத்து வேன் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி, பேருந்து சுமார் 50 அடி வரை பள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதில் வேனும் முச்சக்கரவண்டியும் கடுமையாக சேதமடைந்ததோடு, அதில் பயணித்தவர்கள் உயிரிழந்துள்ளனர். எனினும், பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு உயிராபத்து ஏதும் நேரவில்லை. இவ்விபத்தையடுத்து பிரதேச மக்களும், பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் நுவரெலியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளன. அவை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், பலத்த காயங்களுக்குள்ளான மாணவர்களை விமானம் மூலம் துரிதமாக கொழும்புக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். விபத்து நேர்ந்ததையடுத்து நானுஓயா குறுக்கு வீதி மூடப்பட்டுள்ளது. எனவே, சுற்றுப்பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர். வெளிப் பிரதேசங்கள் அல்லது மாவட்டங்களில் இருந்துவரும் சாரதிகள் நானுஓயா குறுக்கு வீதியை பயன்படுத்துவதால் இதுபோன்ற விபத்துகள் அதிகரிக்கின்றன. அவர்களுக்கு அவ்வீதியின் தன்மை புரிவதில்லை. எனவே, சுற்றுப்பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். விபத்து ஏற்பட்டதையடுத்து நேற்றிரவே வைத்தியசாலைக்கு சென்ற இ.தொ.கவின் பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். அத்துடன், குறுக்கு வீதியை மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/146346
  11. விக்கி: நம்பிக்கைகளை சிதைக்கும் அவசர நாயகன் புருஜோத்தமன் தங்கமயில் “கைகளின் இரத்தக் கறை உள்ளவர்களுடன் என்னை என்னால் இணைத்துப் பார்க்க முடியாது; தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றில் இணைய வேண்டுமாக இருந்தால் தமிழரசுக் கட்சியில் இணைவேன்...” என்று சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்ற சில மாதங்களில் தெரிவித்த விடயம் பெரும் சர்ச்சையானது. இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார். அப்போது, கூட்டமைப்பின் பேச்சாளராக ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரான சுரேஷ் பிரேமசந்திரன் இருந்தார். அவர், விக்னேஸ்வரனின் கூற்று, தமிழ் மக்களிள் கூட்டமைப்பிற்கு வழங்கிய ஆணையையும், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, புளொட் உள்ளிட்ட கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளையும் அவமதிப்பதாகவும் கண்டனம் வெளியிட்டிருந்தார். முன்னாள் ஆயுதப் போராட்டங்கள் குறித்து, இரத்தக்கறை விமர்சனம் வெளியிட்ட விக்னேஸ்வரன், இப்போது ஜனநாயகப் போராளிகள் கட்சியினரை பார்த்து, அரச புலனாய்வாளர்களோடு தொடர்புகளைப் பேணுபவர்கள் என்று குற்றஞ்சாட்டி இருக்கிறார். அதனால், ஜனநாயகப் போராளிகள் அங்கம் வகிக்கும் தேர்தல் கூட்டில் தன்னால் இணைந்து கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து நின்று களம் காண்பது என்று தமிழரசுக் கட்சி முடிவு எடுத்தது. அதனால், கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் தொடர்ந்தும் போட்டியிட முடியாது என்கிற சிக்கல் டெலோவுக்கும் புளொட்டுக்கும் ஏற்பட்டிருக்கின்றது. அதனால், கூட்டமைப்பினர் தாங்களே என்ற கோரிக்கையோடு புதிய கூட்டொன்றை அமைத்திருக்கிறார்கள். இந்தக் கூட்டணி, புளொட்டின், இன்னொரு கட்சியான ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி என்கிற பெயரில் குத்து விளக்குச் சின்னத்தில் போட்டியிடப் போகின்றது. இந்தக் கூட்டுக்கான ஆரம்ப கட்டப் பேச்சுகளில் விக்னேஸ்வரன் இணைந்து கொண்டிருந்தார். அவர், புதிய கூட்டணியின் தலைமைத்துவமும், அதன் ஒட்டுமொத்த கையாளுகைக்கான அதிகாரம் தனக்கு கிடைக்கும் என்று நம்பினார். ஆனால், தமிழரசுக் கட்சி, கூட்டமைப்புக்குள் ஏக அதிகாரத்தோடு நடந்து கொண்டது போல, புதிய கூட்டணிக்குள் எந்தவொரு தரப்பும் நடந்து கொள்வதற்கு அனுமதிப்பதில்லை என்று டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிகள் தீர்மானித்தன. அதனால், புதிய கூட்டணியில் விக்னேஸ்வரனுக்கு அதிகார இடம் கேள்விக்குள்ளானது. அதனால், அவர் புதிய கூட்டணியில் இணையவில்லை. இந்த நிலையில்தான், புதிய கூட்டணியில் ஏன் இணையவில்லை என்று ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போது விக்னேஸ்வரன், ஜனநாயகப் போராளிகளை அரச புலனாய்வர்கள் போன்றதொரு தோற்றப்பாட்டை வெளிப்படுத்தினார். விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய அரசியலுக்கு வந்து இந்த ஆண்டோடு பத்து வருடங்களாகின்றன. இந்தக் காலப்பகுதிக்குள் அவரை உச்சத்தில் ஏற்றிவிட்ட அனைத்துத் தரப்பினரையும் அவர் ஏமாற்றியிருக்கிறார். அதுவும், அந்தத் தரப்பினரை மிக மோசமாக குற்றச்சாட்டுகளை சுமத்தி விமர்சித்து, தன்னை நியாயமானவராக காட்ட முயற்சி செய்திருக்கிறார். விக்னேஸ்வரனை, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் எதிர்ப்புகளைச் சமாளித்து இரா.சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும் வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக அரசியலுக்குள் அழைத்து வந்தார்கள். முதலமைச்சர் பதவி ஏற்றதும், விக்னேஸ்வரன் சம்பந்தனுக்கு நிகரான தலைவராக தன்னை எண்ணத் தொடங்கினார். சம்பந்தனின் காலத்துக்குப் பின்னர், அந்த இடம் தனக்குரியது; அதற்குத் தானே தகுதியானவன் என்று நம்பினார். தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து சம்பந்தன் விலகும் போது, அந்தப் பதவி தனக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை மாவை சேனாதிராஜாவிடம் வழங்கிவிட்டு, கூட்டமைப்பின் தலைவராக மாத்திரம் இருக்கும் முடிவுக்கு சம்பந்தன் வந்தார். அதனை, விக்னேஸ்வரனால் ஏற்க முடியவில்லை. அதுவரை காலமும் கூட்டமைப்பின் பொது (முதலமைச்சர்) வேட்பாளராக இருந்தாலும், விக்னேஸ்வரன், தன்னை தமிழரசுக் கட்சியோடுதான் இணைத்துப் பார்த்தார். அதனால்தான், இரத்தக்கறை படிந்தவர்களோடு தன்னால் இணைய முடியாது என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை அவமதிக்கவும் செய்தார். தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் என்கிற விக்னேஸ்வரனின் எதிர்பார்ப்பு சாத்தியமாகாத புள்ளியில், அவர் கூட்டமைப்பு மீதான விமர்சனங்களை மெல்ல மெல்ல விடுக்கத் தொடங்கினார். இனியும் கூட்டமைப்புக்குள் இருந்தால் சம்பந்தனுக்கு நிகரான இடத்தை அடைய முடியாது என்கிற நிலையில், தனி ஓட்டத்துக்காக அவர் தயாரானார். அப்போதுதான் கூட்டமைப்புக்கு மாற்றான தலைமைத்துவம் தமிழ்த் தேசிய பரப்பில் உருவாக்கப்பட வேண்டும் என்கிற வேட்கையோடு இயங்கிய தரப்புகள், விக்னேஸ்வரனை அந்த இடத்தில் பொருத்திப் பார்க்க விரும்பின. அதனால் தமிழ் மக்கள் பேரவை என்கிற அமைப்பினை உருவாக்கினார்கள். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடங்கி கூட்டமைப்புக்கு மாற்றான தரப்புகளாக முன்னிறுத்திய பலரும் விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தை ஏற்பதாக அறிவித்து, 2015 பிற்பகுதியில் ஒன்றுகூடின. கிட்டத்தட்ட தான் சம்பந்தனுக்கு நிகரான தலைவராக உருவாகிவிட்டதாக விக்னேஸ்வரன் நம்பினார். பேரவைக்குள் இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சுரேஷ் பிரேமசந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட பிரசாரப் பயணத்தின் மூலம், ‘எழுக தமிழ்’ என்கிற பேரணிகள் ஊடாக, மாற்றுத் தலைமையாக தன்னை விக்னேஸ்ரன் முன்னிறுத்தினார். ஆனால், அப்போதும் அவர் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பற்றிக் கொண்டிருந்தார். நல்லாட்சிக் காலத்தில் கிடைத்த ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி, தமிழ்த் தேசிய பரப்பில் பலமான மாற்றுத் தலைமைத்துவமொன்று கட்டமைக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால், அதனை யாழ் மையவதாக அரசியல் ஆய்வாளர்கள், புலமையாளர்களைக் கொண்ட தமிழ் மக்கள் பேரவை சிதைத்தது. இயல்பாக உருவாக வேண்டிய மாற்றுத் தலைமையை, அவசர அவசரமாக விக்னேஸ்வரனைக் கொண்டு நிரப்ப முயன்றது. விக்னேஸ்வரன் அப்போதுதான் தமிழ்த் தேசிய அரசியலின் அரிச்சுவடியைப் படித்துக் கொண்டிருந்தார். அவரின் தலைமையில் மாற்றுத் தலைமை என்கிற பெரும் பாரம் ஏற்றப்பட்டது. அதற்கு, கஜேந்திரகுமாரும், சுரேஷும், த. சித்தார்த்தனும் துணையாக இருந்தார்கள். விக்னேஸ்வரனை பெருந்தலைவராக முன்னிறுத்தி நாளொரும் வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அரசியல் ஆய்வுகள் எழுதப்பட்டன; பெரும் பிம்பம் கட்டமைக்கப்பட்டது. ஆனால், மண் குதிரையை நம்பி பெரும் தடைகளைத் தாண்ட முடியாது என்று இந்தப் பத்தியாளர் உள்ளிட்ட சிலர் சுட்டிக்காட்டினார்கள். ஆனால், அப்போது அது கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்திலேயே விக்னேஸ்வரன் ஒரு மண் குதிரை என்பதும் பதவிகள் மீது பேராசை கொண்டவர் என்பதுவும் வெளிப்பட்டுவிட்டது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் விக்னேஸ்வரனை முன்னிறுத்திக் கொண்டு கஜேந்திரகுமார், சுரேஷ் உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய பரந்து பட்ட கூட்டணியை அமைக்க, தமிழ் மக்கள் பேரவை முயன்றது. ஆனால், அப்போது, விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவி மீதான பற்றால் அவற்றை நாசமாக்கினார். அதனால், பேரவை அமைக்க நினைத்த பரந்து பட்ட கூட்டணி சாத்தியமில்லாமல் போனது. அத்தோடு, பேரவைக்குள் அதுவரை அண்ணனும் தம்பியுமாக இயங்கிய சுரேஷும் கஜேந்திரகுமாரும் குடுமிப்பிடி சண்டை போட்டு பிரிந்து கொண்டார்கள். ஒரு கட்டம் வரையில் கூட்டமைப்பையே அச்சுறுத்தும் அளவுக்கு எழுந்து வந்த பேரவை, கலகலத்து காணாமற்போனது. விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக் காலம் முழுவதையும் பூர்த்தி செய்துவிட்டு, அடுத்த நாள் புதிய கட்சியைத் தொடங்கினார். அதுதான், தமிழ் மக்கள் பேரவையின் இறுதி நாள். கூட்டமைப்போடு முரண்பட்ட தரப்புகள், கடந்த பொதுத் தேர்தலில் விக்னேஸ்வரன் தலைமையில் கூட்டணி அமைத்தன. விக்னேஸ்வரனை வெற்றிபெறவும் வைத்தன. அத்தோடு, அந்தக் கூட்டணியும் கலைந்து போனது. இப்போது, விக்னேஸ்வரனோடு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பு இணைந்து கொண்டிருக்கின்றது. அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு, மணிவண்ணனின் ஆதரவுத் தளம் தனக்கு உதவும் என்று விக்னேஸ்வரன் நினைக்கிறார். அதனால், தன்னை ஏக தலைவராக ஏற்றத் தயாராக இல்லாத, டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்பை அவர் உதறித் தள்ளியிருக்கிறார். விக்னேஸ்வரன் இருக்கிறார் என்று நம்பி தமிழரசுக் கட்சியை எரிச்சலூட்டிய டெலோவும் புளொட்டும், இப்போது கிட்டத்தட்ட நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு வந்துள்ளன. அவர்கள், தங்களை கூட்டமைப்பாக முன்னிறுத்தினாலும், அவர்களின் புதிய பாதையை மக்கள் அங்கிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. கடந்த காலத்தில் வீட்டுச் சின்னத்தில் பெற்ற வெற்றியை அடையும் வாய்ப்பில்லை. தமிழ்த் தேசிய அரசியலில் விக்னேஸ்வரனை நம்பிக் கெட்டவர்கள் என்கிற அணியை அமைத்தால், அதற்குள் சம்பந்தன், சுமந்திரன் தொடக்கம் கஜேந்திரகுமார் ஈறாக, அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும், தரப்புகளும் அடங்குவார்கள் என்பது காலத்தின் பதிவு. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விக்கி-நம்பிக்கைகளை-சிதைக்கும்-அவசர-நாயகன்/91-311047
  12. ரஷ்யாவின் வாக்னர் குழுவை நாடுகடந்த குற்றவியல் அமைப்பாக அறிவிக்க அமெரிக்கா தீர்மானம்! உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டுவரும் ரஷ்யாவின் வாக்னர் குழுவை நாடுகடந்த குற்றவியல் அமைப்பாக அமெரிக்கா அறிவிக்கவுள்ளது. அடுத்த வாரம் இந்த குழு மற்றும் ஆதரவு வலையமைப்பு மீது புதிய தடைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, விதிக்கும். இது, சிரியா, லிபியா மற்றும் மத்திய ஆபிரிக்கக் குடியரசில் மற்ற இடங்களில் செயற்பட்டு வந்த துணை இராணுவக் குழுவிற்கு எதிராக பரந்த பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்த அமெரிக்க அரசாங்கத்தை அனுமதிக்கும். இந்தக்குழு, உக்ரைன் மற்றும் பிற இடங்களில் அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை செய்கிறது என தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி கூறினார். உக்ரைனில் இப்போது சுமார் 50,000 வாக்னர் கூலிப்படையினர் இருப்பதாக அவர் கூறினார். கிர்பியின் கூற்றுப்படி, உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட வாக்னர் துருப்புக்களில் சுமார் 80 சதவீதம் சிறைகளில் இருந்து எடுக்கப்பட்டவர்கள். இந்தக் குழு ரஷ்யாவின் வழக்கமான இராணுவப் படைகளுக்கு போட்டியாக மாறியுள்ளது என்றும், வட கொரியாவிற்குள் ரஷ்ய ரயில் கார்கள் நுழைவதை அமெரிக்க உளவுத்துறை புகைப்படங்கள் காட்டுவதாகவும் கிர்பி கூறினார். https://athavannews.com/2023/1321062
  13. தீர்வைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பது தீர்வாகாது: தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் ஜெய்சங்கர் தெரிவிப்பு! தீர்வைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பது தீர்வாகாது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வடக்கு-கிழக்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் இல்லத்தில் வடக்கு -கிழக்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு கூறினார். மேலும், இருக்கும் அதிகார பகிர்வு விடயங்களை இடைக்கால தீர்வாக அமுல்படுத்தாது போனால் கிடைப்பதும் இல்லாது போய்விடும் என்பதை தமிழ் அரசியல் தரப்புக்கு தெளிப்படுத்தினார். தெற்குடனான பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண்பதை தமிழர் தரப்பே செய்ய வேண்டும் எனவும் அதில் இந்தியா தலையிட முடியாது எனவும் ஜெய்சங்கர் கூறினார். இதை தவிர அதிகார பகிர்வுக்கு எமது ஆதரவை முழுமையாக வழங்கத் தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்தார். https://athavannews.com/2023/1321074
  14. யாழ்.மாநகர முதல்வராக மீண்டும் ஆர்னோல்ட்-வெளியானது வர்த்தமானி யாழ். மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். இந்தப் பிரகடனத்தைத் தாங்கிய 2315/62 ஆம் இலக்க விசேட வர்த்தமானி நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு வெளியாகியது. யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் முதலாவது சமர்ப்பிப்பின் போது தோற்கடிக்கப்பட்டது. இதனை அடுத்து முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்ததார். இந்த நிலையில் அவரது வெற்றிடத்திற்கு 2012ஆம் ஆண்டு 22ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66 (எ) பிரிவின் கீழ், கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தெரிவின் மூலம், முன்மொழியப்பட்ட படி இ. ஆர்னோல்ட் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்ததனால் வெற்றிடமாக இருந்த முதல்வர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது 24 உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தில் கூடியிருந்தனர். கூட்டத்துக்குத் தேவையான நிறைவெண் இருப்பதனால் கூட்டத்தைத் தொடர்ந்து நடாத்துவதாக உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் அறிவித்ததோடு, முதல்வருக்கான முன்மொழிவுகளைக் கோரினார். தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட்டின் பெயர் முன்மொழியப்பட்டது. இதனையடுத்து முன்மொழிவை ஆட்சேபிப்பதாகத் தெரிவித்து ஈ.பி.டி.பி ஐ சேர்ந்த எம்.ரெமீடியஸ் சபையையிலிருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேறினர். இதனால் தெரிவைக் கொண்டு நடாத்துவதற்குத் தேவையான கோரம் இல்லாத காரணத்தனால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், தெரிவுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு நியாயமற்றது என கூட்டத்தில் கலந்து கொண்ட 20 உறுப்பினர்கள் தமது எழுத்து மூல ஆட்சேபனையை உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பி வைத்திருந்தனர். இது தொடர்பில் ஆளுநர் தலைமையில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர்களில் ஒருவரும் கூடி ஆராய்ந்ததாகவும், அதன் பின் யாழ். மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இ. ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட உத்தரவிட்டுள்ளதாகவும் ஆளுநர் செயலக வட்டாரங்களில் இருந்து அறிய முடிந்தது. இதற்கமைய தற்போது யாழ். மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். https://athavannews.com/2023/1321101
  15. இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும்! தவறினால் கறுப்புக்கொடி போராட்டம்-சிவாஜிலிங்கம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும். அதை செய்யத் தவறின், ஜனாதிபதி வரும் இடமெல்லாம் கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்துவோம் என முன்னாள் வடக்குமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சமகால நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “வேலன் சுவாமியை கைதுசெய்தமையை கண்டிப்பதோடு இவ்வாறெல்லாம் ஜனநாயக போராட்டங்களை அடக்க முடியாது ஜனாதிபதி இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் அவ்வாறு விடுதலை செய்யத் தவறின் ஜனாதிபதிக்கு எதிராக அனைத்து இடங்களிலும் கறுப்புக்கொடி போராட்டம் நடத்துவோம். அத்துடன் எங்களை எந்த சட்டத்தின் கீழும் கைதுசெய்யலாம் ,அதற்காக நாங்கள் அஞ்சப் போவதில்லை. எத்தகைய தடைகள் வந்தாலும், நாங்கள் அவற்றை தகர்த்து,எமது மக்களுக்காக எங்களுடைய ஜனநாயக ரீதியான போராட்டத்தை தொடர்ச்சியாக நாங்கள் நடத்துவோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1321123
  16. தேசிய பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை வலுப்படுத்த வேண்டியது அவசியம் Photo, AP/ Eranga Jayawardena via Yahoo News இதுகாலவரை தங்களது அதிகாரம், மதிப்பு மற்றும் சட்ட விலக்கு ஆகியவை காரணமாக தீண்டப்படமுடியாதவர்களாகக் கருதப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகள் மூவரை நேரடியாக பாதித்த கடந்த வாரத்தைய எதிர்பார்க்கப்படாத நிகழ்வுகள், தீர்க்கப்படாமல் இருக்கும் போர்க்கால மனித உரிமைகள் பிரச்சினைகளைக் கையாளுவதற்கு உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையொன்றை அமைக்கும் அரசாங்கத்தின் யோசனைக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுக்கும். முதலாவது, முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்‌ஷவும் கோட்டபாய ராஜபக்‌ஷவும் பதவியில் இருந்த காலப்பகுதிகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்காக அவர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படுவதாக கனடா அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பாகும். கனடாவில் அவர்களுக்கு இருக்கக்கூடிய எந்தவொரு சொத்தும் முடக்கப்படமுடியும். அவர்கள் கனடாவுக்கு பயணம் செய்வதும் தடைசெய்யப்படும். முன்னர் மனித உரிமை மீறல்களைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவே குறிப்பாக அமெரிக்காவினால் மட்டுப்படுத்தப்பட்ட பயணத்தடைகள் விதிக்கப்பட்டன. இரண்டாவது எதிர்பார்க்கப்படாத நிகழ்வு 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் உயர் நீதின்றம் வழங்கிய தீர்ப்பாகும். அந்தத் தாக்குதல்கள் இடம்பெற்ற நேரத்தில் அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த உயர்மட்ட உறுப்பினர்கள் விழிப்புடன் செயற்படவில்லை என்று குற்றஞ்சாட்டி பாதிக்கப்பட்ட குழுக்கள் தங்கள் சார்பிலும் பாதிக்கப்பட்ட ஏனைய மக்கள் சார்பிலும் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தன. அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பாதுகாப்புத்துறையின் உயர்மட்ட உறுப்பினர்களும் தனிப்பட்ட முறையில் இந்த இழப்பீட்டை வழங்கவேண்டியவர்களாக இருக்கிறார்கள். இந்த இழப்பீட்டுத்தொகை இலங்கையின் தராதரங்களின் பிரகாரம் நோக்கும்போது மிகவும் அதிவிசேடமானதாகும். ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கும் இந்தத் தீர்ப்பு தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் அரச அதிகாரிகள் நீதித்துறையின் நடவடிக்கைக்கு உட்படவேண்டியவர்களாகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. எதிர்வரும் நாட்களிலும் மாதங்களிலும் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பொறுப்புக்கூறல் செயன்முறைகள் மேலும் உத்வேகம் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கனடாவின் தீர்மானம் அந்த நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில் அந்நாட்டு அரசாங்கம் காட்டிய அக்கறையின் விளைவானதாகவே இருந்திருக்கிறது எனலாம். புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதியொருவர் கனடா நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கிறார். ஏனைய மேற்கு நாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர் தமிழர்கள் இதேபோன்ற நடவடிக்கைகளை தங்களது அரசாங்கங்கள் எடுக்கக்கூடியதாக செல்வாக்கு செலுத்துமளவுக்கு பெருவாரியானவர்களாகவோ அல்லது செல்வாக்கு கொண்டவர்களாகவே இல்லை. ஆனால், சகல மேற்கு நாடுகளும் சர்வதேச நியாயாதிக்கக் கோட்பாட்டை ஆதரிக்கின்றன. இதன் மூலம் உலகின் எந்தப்பகுதியிலும் இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் (அவற்றைச் செய்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும்) அந்த நாடுகளின் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட முடியும். அந்த நாடுகளின் பிரசைகள் தனிப்பட்ட முறையில் தங்களது முறைப்பாடுகளின் நம்பகத்தன்மைக்கான பூர்வாங்க சான்றாக கனடா அரசாங்கத்தின் தீர்மானத்தைப் பயன்படுத்தி வழக்குகளைத் தொடரமுடியும் என்பதே இதன் அர்த்தமாகும். இத்தகைய நாடுகளின் வரிசையில் இறுதியாக சேர்ந்திருக்கிறது அமெரிக்கா. உக்ரெய்ன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து தோன்றிய சூழ்நிலைகளில், மனித உரிமை மீறல்களைச் செய்தவர்கள் பாதுகாப்பாக தங்கியிருக்கக்கூடிய ஒரு நாடாக அமெரிக்கா நோக்கப்படுவதைத் தடுக்கும் நோக்குடன் சர்வதேச சட்டத்துக்கு இசைவான முறையில் தனது சட்டக்கோவையை வாஷிங்டன் கொண்டுவந்திருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் பைடன் இந்த மாதம் புதிய சட்டம் ஒன்றில் கைச்சாத்திட்டிருக்கிறார். சர்வதேச மனித உரிமைகளை மீறியதாக சந்தேகிக்கப்படுபவர்கள் அமெரிக்காவில் இருந்தால் – அவர்களோ அல்லது பாதிக்கப்பட்டவர்களோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அந்த மீறல்கள் எந்த நாட்டில் இடம்பெற்றிருந்தாலும் – சமஷ்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு இந்த சட்டம் அமெரிக்க அரசாங்கத்துக்கு அதிகாரமளிக்கிறது. இலங்கையின் பல தலைவர்களின் குடும்பங்கள் அமெரிக்காவில் இருக்கின்றன. நிதிச் சொத்துக்களையும் அங்கு அவர்கள் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். கனடா அரசாங்கத்தின் தீர்மானத்தின் பின்புலத்தில் அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட சட்டமாற்றத்தினால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று இந்தத் தலைவர்கள் கவலைப்படுவார்கள். முன்னாள் ஜனாதிபதிகளை இலக்குவைத்து கனடா அரசாங்கம் விதித்திருக்கும் தடைகளில் ஒப்பீட்டளவில் கீழ்மட்டத்தில் உள்ள இரு இராணுவ அதிகாரிகளும் உள்ளடக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கதாகும். மனித உரிமைகளை மீறியிருக்கக்கூடிய பரந்தளவு பிரிவினரை இந்தத் தடைகள் இலக்காகக் கொண்டுள்ன என்பதே இதன் அர்த்தமாகும். அந்த உரிமை மீறல்களில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களும் சம்பந்தப்படாதவர்களும் இதில் உள்ளடங்கியிருக்கலாம். ஆனால், உத்தரவுகளை வழங்குகின்ற தொடர் கட்டளை பொறுப்புக்களில் அவர்கள் இருந்திருக்கலாம். இதனால் இலங்கையின் பாதுகாப்புப் படைகளில் உள்ளவர்கள் அல்லது பாதுகாப்பு நிறுவனத்தில் உள்ளவர்கள் மனதில் ஒரு பாதுகாப்பின்மை உணர்வு தோன்றும். சர்வதேச நியாயாதிக்கத்தின் அடிப்படையில் வழக்குகளைத் தொடுப்பதற்கு அனுமதிக்கின்ற நாடுகளில் வழக்குகளை எதிர்நோக்குவதில் இருந்து தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் உணருவார்கள். தற்போது கூட போர்க்காலத்தில் படையணிகளில் சேவையாற்றிய ஆனால் எந்த விதமான குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத நற்பெயரைக் கொண்ட இராணுவ அதிகாரிகள் மனித உரிமைகள் தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக தங்களுக்கு பயிற்சிக்கான சர்வதேச வாய்ப்புக்களையோ அல்லது சர்வதேச சேவைகளில் பணியாற்றக்கூடிய வாய்ப்புக்களையோ பெறமுடியாதவர்களாக இருக்கிறார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட மக்களோ அல்லது கத்தோலிக்க திருச்சபையோ இழப்பீட்டு மட்டத்துடன் அல்லது உயர் நீதிமன்றத்தின் மட்டுப்படுத்தப்பட்ட முடிவுகளுடனோ திருப்திப்படக்கூடிய சாத்தியம் இல்லை. குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இருந்திருக்கக்கூடியவர்கள் பற்றிய உண்மையை அறிய அவர்கள் விருப்புவார்கள். அத்துடன், எந்தளவு இழப்பீட்டை கொடுத்தாலும் அது மாண்டுபோன தங்கள் அன்புக்குரியவர்களின் உயிரின் மதிப்புக்கு ஈடாகாது என்று அவர்கள் கூறுவார்கள். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து திருப்தியடைவதாக கத்தோலிக்க திருச்சபை ஏற்கெனவே கூறியிருக்கின்ற போதிலும், குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை அது தனது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை. “உயர்நீதிமன்றத்தினால் வியாழக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் இருக்கக்கூடிய உண்மையை கண்டறிவதில் மேலும் வெற்றிகளுக்கு வழிவகுக்கும் என்று நாம் நம்புகிறோம். தாக்குதல்கள் மீதான விசாரணைகள் தொடர்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவதைக் காண நாம் விரும்புகிறோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஸ்கொட்லண்ட் யார்ட்டின் உதவியுடன் புதிய விசாரணையொன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தற்போதைய ஜனாதிபதியும் கூறினார். ஆனால், எதுவும் நடக்கவில்லை” என்று கார்டினல் மல்கம் ரஞ்சித் கூறினார். இதேபோன்ற நிலைமையே மூன்று தசாப்தகால இனப்போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரையிலும் காணப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை போரில் இழந்தார்கள். இந்த இழப்பு ஒரு இனத்துக்கு மாத்திரம் மட்டுப்பட்டதாக இல்லாமல் சகல சமூகங்களும் பாதிக்கப்பட்டன. ஆனால், தமிழர்களே கூடுதல் இழப்புகளைச் சந்தித்தார்கள். இவற்றில் சில சம்பவங்கள் விசாரிக்கப்பட்டன. இராணுவ நீதிமன்றங்களினால் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் குற்றச்செயல்களுக்காக இராணுவ அதிகாரிகள் குற்றவாளிகளாகக் காணப்பட்டு சிவில் நீதிமன்றங்களினால் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார். அதனால் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கவலைகொண்டுள்ளார்கள். போர்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கங்கள் அக்கறையில்லாத மனோபாவத்தையே வெளிக்காட்டி வந்திருப்பதுடன் அந்த பிரச்சினைகள் வேண்டிநிற்கும் கவனத்தையோ முன்னுரிமையையோ கொடுக்கத் தவறிவிட்டன. தேசிய பொறிமுறைகள் முன்னாள் ஜனாதிபதிகள் இருவருக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் எதிராக கனடா அரசாங்கம் விதித்திருக்கும் தடைகள் மனித உரிமை மீறல்கள் விவகாரம் எந்தளவு பரந்த வீச்செல்லையக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகள் உரியமுறையில் கையாளப்படவேண்டிய தேவையை அவை சுட்டிக்காட்டுகின்றன. அந்தப் பிரச்சினைகளை அலட்சியம் செய்யவோ நிராகரிக்கவோ முடியாது. அவை கிளப்பப்பட்ட பிறகு காணாமல் போய்விடாது. இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது (1983 – 2009) திட்டமிட்ட முறையில் முழு அளவில் மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக கனடா அரசாங்கம் விளக்கம் அளித்திருக்கிறது. இலங்கையில் மனித உரிமைகளை மீறியவர்களுக்கு திட்டமிட்ட முறையில் சட்ட விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் போக்கு தொடருவதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான வாய்ப்புகளளில் முன்னேற்றம் ஏற்படமுடியாமல் இருப்பதுடன் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளும் ஆபத்துக்குள்ளாகியிருக்கின்றன. அரசியல் தலையீட்டின் விளைவாக – குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகள் கோட்டபாய ராஜபக்‌ஷவினதும் மஹிந்த ராஜபக்‌ஷவினதும் காலங்களில் – போர்க்குற்றங்களைச் செய்ததாக நம்பகமாகக் கூறப்பட்ட பெருவாரியான முன்னாள் மற்றும் தற்போதைய அரச அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வேண்டுமென்றே கைவிடப்பட்டன அல்லது குற்றவாளியாகக் காணப்பட்டவர்களுக்கு எதிரான தீர்ப்புகள் செல்லுபடியற்றதாக்கப்பட்டன என்று கனடா கூறியிருக்கிறது. உள்விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் அரசாங்கம் அதன் உள்ளகப் பொறிமுறைகள் வலிமைவாய்ந்தவை என்றும் சர்வதேச தராதரங்களுக்கு இசைவானவை என்றும் காண்பிக்கவேண்டிய தேவை இருக்கிறது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இலங்கையின் நீதித்துறை சுயாதீனமானது என்றும் செயலூக்கம் உடையது என்றும் சர்வதேச சமூகம் நம்புவதற்கு ஓரளவுக்கு உதவும். பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான வழக்குகளையும் விசாரணைக்கு எடுப்பதற்கு உயர் நீதிமன்றம் இணங்கியிருக்கிறது. ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இறுதி கூட்டத்தொடரில் பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. தவறான பொருளாதார முகாமைத்துவம் மற்றும் ஊழல் மோசடிகள் நாடு எதிர்நோக்கும் பாரதூரமான பிரச்சினைகள். அவற்றுக்காக புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தையோ எதிர்க்கட்சிகளையோ குற்றஞ்சாட்ட முடியாது. இறுதியாக நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை படுமோசமான தோல்வியைச் சந்தித்தது என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். நிதி முறைகேடுகளுக்காகவும் தவறான பொருளாதார முகாமைத்துவத்துக்காகவும் குற்றஞ்சாட்டி முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ, முன்னாள் நிதியமைச்சர்கள் மஹிந்த ராஜபக்‌ஷ, பசில் ராஜபக்‌ஷ மற்றும் 36 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்திருப்பது முக்கியமான ஒரு திருப்புமுனையாகும். இந்த வழக்குகள் ட்ரான்ஸ்பேரென்சி இன்டர்நஷனல் இலங்கைப் பிரிவினாலும் வேறுபலராலும் தொடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதியை 203 ரூபாவாக நிர்ணயிப்பதற்கு நாணய சபையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவகாரங்கள், சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடுவதில் காட்டிய தாமதம், வெளிநாட்டு செலாவணி கையிருப்பைப் பயன்படுத்தி 18 ஜனவரி 2022ஆம் திகதி 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அரசாங்க பிணைமுறியை செலுத்தியமை ஆகியவை தொடர்பில் கணக்காய்வு செய்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் கணக்காய்வாளர் நாயகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பொருளாதாரக் குற்றங்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் ஒரு முன்னோடியான நடவடிக்கையை எடுக்குமேயானால் ஆட்சிமுறையில் பொறுப்பக்கூறலை நாடிநிற்கின்ற நாடுகளின் முன்னரங்கத்தில் இலங்கையும் இடம்பெறக்கூடிய சூழ்நிலை தோன்றும். அதன் மூலம் நாட்டின் நிர்வாக மற்றும் அரசியல் பதவிகளை மனமுவந்து முன்வந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய தலைமுறையொன்று உருவாகி போராட்ட இயக்கம் நாடிநின்ற ‘முறைமை மாற்றத்துக்கு’ வழிவகுக்கக்கூடியதாக இருக்கும். அத்தகைய சாதகமான மாற்றங்கள் மீண்டும் சர்வதேச ஆதரவு பெருமளவில் கிடைக்கவும் கடந்த பல தசாப்தங்களாக தாழ்ந்த மட்டத்துக்குச் சென்ற முதலீடுகள் வந்து குவியவும் வழிவகுக்கும். கலாநிதி ஜெகான் பெரேரா https://maatram.org/?p=10596
  17. நியூசிலாந்து பிரதமர் முன்னர் ஒருபோதும் இல்லாத துன்புறுத்தல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டார் - முக்கிய பிரமுகர்கள் தகவல் By Rajeeban 20 Jan, 2023 | 12:19 PM நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் முன்னர் ஒருபோதும் இல்லாத துன்புறுத்தல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டார் என நியுசிலாந்தின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து தீவிரமடைந்த தடுப்பூசிக்கு எதிரான இயக்கத்திடமிருந்தே நியூசிலாந்து பிரதமர் கடும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டார் 2022 இல் பிரதமருக்கு எதிரான இவ்வாறான நடவடிக்கைகள் மூன்று மடங்காக அதிகரித்தன என நியூசிலாந்தின் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரை படுகொலை செய்யப்போவதாக எச்சரித்த பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் ஜெசிந்தா ஆர்டெனின் காரை துரத்தி சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை பார்த்து நாஜி என சத்தமிட்டுள்ளனர் என பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். பாராளுமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் ஜெசின்டாவை கொலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்ததையும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். சமூக ஊடகங்களின் காலத்தில் ஜெசிந்தா வெறுப்பையும் கொடுமையையும் எதிர்கொண்டார் இது முன்னர் ஒருபோதும் நம்நாட்டில் இடம்பெறாதது என முன்னாள் பிரதமர் ஹெலென் கிளார்க் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/146294
  18. இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி ஜனாதிபதிக்கு அழைப்பு By T. Saranya 20 Jan, 2023 | 12:56 PM (நா.தனுஜா) வெகுவிரைவில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் விடுக்கப்பட்ட அழைப்பை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளார். அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடிய இந்திய வெளிவிவகார அமைச்சர், வெகுவிரைவில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் விடுக்கப்பட்ட அழைப்பையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளார். அதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதன்போது குறிப்பாக இலங்கையின் வலுவான மீட்சியை முன்னிறுத்தி மேற்கொள்ளத்தக்க நடவடிக்கைகள் குறித்து இருநாட்டுத்தலைவர்களும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பர். https://www.virakesari.lk/article/146300
  19. யாழ்.இராணுவ தளபதியுடனான சந்திப்பில் காணி விடுவிப்பு தொடர்பில் மாவட்ட செயலர் பேச்சு! By Digital Desk 5 20 Jan, 2023 | 12:54 PM யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட மரியாதை நிமித்தமாக சந்தித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற குறித்த சந்திப்பில், யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுவிக்கப்படாத காணிகளின் விபரங்கள் தொடர்பாகவும், முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களை மீளக்குடியேற்றுதல் தொடர்பாகவும், விவசாயம் சார் உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால நிலைப்பாட்டின் மேம்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினாா். இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக செயலர் ம.பிரதீபன் , மாவட்ட மேலதிக செயலர் (காணி) எஸ்.முரளிதரன் ஆகியோா் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/146279
  20. புலிகளை பிளவுபடுத்தவே உதவிகளைச் செய்தோம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மாத்தயா, யோகியை பிளவுபட வைக்கவே எனது தந்தையின் காலத்தில் சில உதவிகள் செய்யப்பட்டன என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதில் ஒரு கட்டத்தில் தன்னால் பாடசாலைக்குளுக்கு வழங்கப்பட்டுவரும் பஸ்கள் மற்றும் உதவிகள் தொடர்பில் பட்டியலிட்டார் . இதன்போது குறுக்கிட்ட அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க, உங்கள் தந்தையான பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு திறைசேரி ஊடாக காசோலைகள் வழங்கப்பட்டன.அதற்கு நன்றிக்கடனாகவே தற்போது வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் உங்களுக்கு நிதி உதவி அளிப்பதாகவும் அதனை வைத்துத்தான் நீங்கள் இவ்வாறு பஸ்களை அன்பளிப்பு செய்வதாகவும் மக்கள் பேசிக்கொள்கின்றனர் என்றார். இதற்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச பதிலளிக்கையிலேயே, இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பெயர்ட் பவர் என்பவர் ஹிட்லரின் படைகளுக்கும் முசோலினியின் படைகளுக்கும் ஆயுதங்களை வழங்கி உதவினார். இது இரு அணியில் உள்ளவர்களையும் பிளவு படுத்தும் தந்திரம். அதேபோன்றுதான் விடுதலைப்புலிகள் அமைப்பில் அதன் தலைவர் பிரபாகரனோடு மாத்தயாவும் யோகியும் முரண்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் சில உதவிகளை வழங்கி அவர்களை மேலும் பிளவடைய வைக்கப்பட்டது. விடுதலைப்புலிகளுக்கு எனது தந்தை காசு கொடுத்தது என்றால் 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்‌ஷவும் விடுதலைப்புலிகளுக்கு காசு கொடுத்துத்தான் தேர்தலில் வெற்றி பெற்றார் என்றார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/புலிகளை-பிளவுபடுத்தவே-உதவிகளைச்-செய்தோம்/150-310991
  21. 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவது, முன்கூட்டிய மாகாணசபைத் தேர்தல் மிகவும் முக்கியமானவை – ரணிலிடம் வலியுறுத்தினார் எஸ்.ஜெய்சங்கர்! 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து, இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இணைந்து அவர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தியிருந்தார். இந்தியாவுடனான கூட்டாண்மை, நாட்டின் பொருளாதார மீட்சியை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்து கலந்துரையாட ஜனாதிபதி விக்ரமசிங்கவை விரைவில் இந்தியாவிற்கு வருமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கடிதத்தை கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சமூகத்தின் தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியா, இலங்கையின் நம்பகமான அண்டை நாடு, நம்பகமான பங்காளி மற்றும் இலங்கைக்கு தேவை ஏற்படும்போது, எந்த தொலைவுக்கு செல்ல தயாராக உள்ள ஒரு நாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது இலங்கைப் பயணம், பிரதமர் மோடியின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கை என வலியுறுத்திய ஜெய்சங்கர், தேவைப்படும் நேரத்தில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், திருகோணமலையை ஒரு வலுசக்தி மையமாக மேம்படுத்தும் திறன் இலங்கைக்கு உள்ளது. அத்தகைய முயற்சிகளுக்கு நம்பகமான பங்காளியாக, இந்தியா தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒத்துழைப்பை முன்னோக்கி கொண்டு செல்லும், புதுப்பிக்கத்தக்க சக்தி கட்டமைப்புக்கு, கொள்கை அடிப்படையில் இன்று இணக்கம் எட்டப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1320938
  22. வாக்னர் கூலிப்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் ரஷ்யாவின் முடிவிற்கு செர்பியா கண்டனம்! உக்ரைனில் உள்ள ரஷ்ய துருப்புக்களுடன் சேர்ந்து போரிட செர்பிய தன்னார்வலர்கள் பயிற்சி பெறுவதைக் காட்டுவதாகக் வெளிப்படுத்தும் ஒரு ரஷ்ய செய்தி காணொளி செர்பியாவில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கான தனது லட்சியத்தை விட ரஷ்யாவுடனான அதன் நீண்டகால நட்புக்கு செர்பியா முன்னுரிமை அளிப்பதாக விமர்சகர்கள் அடிக்கடி குற்றம் சாட்டுகின்ற நிலையில், இந்த காணொளி வெளியாகியுள்ளது. போருக்கான ஆட்சேர்ப்பை ஊக்குவிப்பதற்காக செர்பிய மொழியில் வெளியிடப்பட்ட காணொளிகளை தேசிய தொலைக்காட்சியில் செர்பியாவின் ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் கடுமையாக விமர்சித்தார். தங்கள் விதிமுறைகளுக்கு இது எதிரானது என குறிப்பிட்ட அவர் ஏன் செர்பியாவிலிருந்து யாரையும் அழைக்கிறீர்கள் என கேள்வியெழுப்பினார். ரஷ்யாவுடனான உறவுகளை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி வுசிக், உக்ரைன் போர் தொடர்பாக செர்பியா நடுநிலை மட்டுமல்ல, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பல மாதங்களாக பேசவில்லை என்றும் கூறினார். செர்பியர்கள் வெளிநாடுகளில் நடக்கும் மோதல்களில் பங்கேற்பது சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1320885
  23. ரணிலின் சாதனையை முறியடித்தார் ஜீவன் தொண்டமான்! இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான், இலங்கையில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இளம் அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வசமிருந்த சாதனையை ஜீவன் தொண்டமான் முறியடித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க 1977 ஆம் ஆண்டு தனது 29 வயதில் இலங்கையின் இளம் அமைச்சரவை அமைச்சராக பதவியேற்றதே சாதனையாக இருந்தது. இந்தநிலையில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ஜீவன் தொண்டமான் நேற்று நியமிக்கப்பட்டார். ஜீவன் தொண்டமான் தனது 28வது வயதில் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து, இலங்கையின் இளம் அமைச்சரவை அமைச்சராக வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார். https://athavannews.com/2023/1320910
  24. சுதந்திரம் இல்லாத நாட்டில் எதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் – விமல் ரத்நாயக்க! சுதந்திரம் இல்லாத நாட்டில் எதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த காலத்தில் நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களை விரட்டுவதற்கு, ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பல இளைஞர்கள் யுவதிகள் தற்போதும் சிறையில் வாடுகின்றார்கள். அவ்வாறான நிலையில் சுதந்திர தினம் தேவைதானா ? முதலில் அவர்களுக்கு விடுதலையை கொடுங்கள். அதன் பிறகு நீங்கள் சுதந்திரத்திர தினத்தை கொண்டாடலாம். அதேவேளை, உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் அடிப்படையில் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும். கடந்த வருடம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்ட சபைகளுக்கான தேர்தல் கட்டாயமாக மார்ச் 20 க்கு முன்னர் நடாத்தப்பட வேண்டும். 75 ஆவது சுதந்திர தினத்திற்கு கோடிக்கணக்கான பணத்தினை செலவழிக்க இருக்கின்றனர். அதே போல யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ரணில் விக்கிரமசிங்க கோடிக்கணக்கில் பணத்தினை செலவழித்திருக்கின்றார். ஆனால் தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என கூறுவது வேடிக்கையான விடயமாகும். இந்தியாவிலிருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளார்கள். அதேபோல் போலீசாருக்கு வாகனங்களை பெற்றிருக்கின்றார்கள். இதற்கெல்லாம் எங்கே கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த நிதியெல்லாம் எங்கே கொண்டு செல்லப்படுகின்றது ? என்பது எமக்கு சந்தேகமாக உள்ளது. போலீசாருக்கு நவீன ரக வாகனம் தற்போது தேவைதானா? ஒரு நாட்டில் ஒரு தேர்தலை நடத்தி ஜனநாயக முறைப்படி மக்கள் ஒரு புதிய ஆட்சி முறையை உருவாக்குவது மக்களுக்குள்ள ஜனநாயக உரிமை. அதனை இந்த அரசாங்கம் பிற்போடுமாக இருந்தால் தோல்வியடைந்த அரசாகவே நாங்கள் கருத வேண்டி வரும். குறிப்பாக 100 கோடி ரூபாய் நிதியை பெறுவதற்கு அரசாங்கத்திற்கு இயலாமையாக இருந்தால், இந்த அரசாங்கம் ஒரு தோற்ற அரசாகவே நாங்கள் கருத வேண்டி வரும். ஆனால் மக்களின் ஜனநாயக உரிமை ஆன தேர்தலை பின் போடுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.“ எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1320926
  25. மனோவுக்கு ரணில் வழங்கிய உறுதிமொழி! இப்போது வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என்பதை இங்கு வந்துள்ள மனோ கணேசனுக்கு உறுதி கூற விரும்புகிறேன். அதேபோல் முஸ்லிம் கட்சிகளுடனும் உரையாடுவேன் என பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சபாநாயகர், அமைச்சர்கள், நசீட் அஹமத், அலி சப்ரி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் உட்பட பல்வேறு பிரமுகர்கள் கலந்துக்கொண்ட இந்நிகழ்வில், மேலும் உரை நிகழ்த்துகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாவது, தமிழ் கட்சிகளுடன் இன்று இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பேசுகிறேன். ஆனால், அது மாத்திரம் போதாது. நான் இப்படி கூறும்போது, இந்நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ள திரு. மனோ கணேசன் என்னை உற்று நோக்குகிறார். வடக்கு கிழக்கு கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என நான் அவருக்கு உறுதி கூற விரும்புகிறேன். முஸ்லிம் கட்சிகளுடனும் நான் பேசுவேன். இலங்கையில் சிங்களவர், இலங்கை தமிழர், மலையக தமிழர், முஸ்லிம்கள் என இனக்குழுக்கள் வாழ்கிறார்கள். அனைவரையும் இணைத்து இலங்கை தேசத்தை கட்டி எழுப்புவதே என் நோக்கம். அனைவருக்கும் வெவ்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆகவே எல்லாவற்றையும் ஒன்றாக ஒரே இடத்தில் பேச முடியாது. ஒன்றுடன் ஒன்று சிக்கி சிக்கலை ஏற்படுத்தும். ஆகவே வெவ்வேறு இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடன் வெவ்வேறாக பேச முடிவு செய்துள்ளேன். கடைசியில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இலங்கை தேசத்தை கட்டி எழுப்புவோம். http://www.samakalam.com/மனோவுக்கு-ரணில்-வழங்கிய/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.