Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. @குமாரசாமி ஐயா இப்ப மூக்குச் சாத்திரம் பார்ப்பதை முழுநேர தொழிலாக்கிவிட்டார்🤪 நான் பிரித்தானியாவில் உள்ள பெரிய கட்சிகள் நான்குக்கும் ஒருபோதும் வாக்களிப்பதில்லை! ஆனால் The Guardian பத்திரிகையை வாசிப்பவன். அப்படியென்றால் என்னவென்று நீங்கள் தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்😃
  2. அவசரமாக வாசிக்காமல் ஆறுதலாக கிரகித்து வாசிக்கவேண்டும் @Kapithan. நான் அசாத்தை விரட்டிய இஸ்லாமியத் தீவிரவாதிகளை நல்லவர்கள் என்று சொல்லவில்லை! அவர்கள் கொடுங்கோலன் அசாத்தைவிட பரவாயில்லை. அதனால்தான் சிரிய மக்கள் அசாத்தின் வீழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாறவும், தலிபான் போன்று ஷரியாச் சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் முயலலாம். எப்படி என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.
  3. அசாத் பூட்டினின் விருந்தாளி என்பதால் பூட்டின் விசுவாசிகளுக்கு அவர் நல்லவர்! சொந்த நாட்டு மக்களையே இரசாயன ஆயுதம் பாவித்து அழித்தவரை, பல்லாயிரம் பேரை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்தவரை வெள்ளையடிக்க ஒரு விதமான மனம் வேண்டும்! இப்போது சிரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இஸ்லாமியர் நல்லவர்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும் அசாத்தை விட மோசமானவர்களாக இருக்கப்போவதில்லை என்று சிரிய மக்களே சொல்கின்றார்கள்.
  4. YouTube அமா்க்களங்கள்! டிசம்பர் 9, 2024 –பவித்ரா நந்தகுமார் கொரோனா பரவலுக்குப் பிறகு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போக்கு மக்களிடம் பன்மடங்கு பெருகிப் போனது நாம் அறிந்ததே. ஜூம், கூகுள் மீட் போன்ற இணைய சந்திப்புகள் பற்றிய அறிவு சாமானியருக்கும் தெரிய வந்தது, அதன் பிறகு தான். யூ டியூப் (YouTube) சேவை கூட அப்படித்தான். 2005 இலேயே தொடங்கப்பட்டிருந்தாலும் வேக வேகமாக ஓடிக் கொண்டிருந்த மக்கள், ஊரடங்கு நேரத்தில் கிடைத்த நீண்ட ஓய்வுகளில்தான் யூ டியூப் காணொளிகளை அதிகமாகப் பாா்க்கத் தொடங்கினா். கிடைத்த ஓய்வு நேரத்தில் பலரும் யூ டியூப் பக்கங்களை உருவாக்கி தங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டனா். 2019 இற்குப் பிறகே யூ டியூப் பன்மடங்கு வளா்ச்சி அடைந்தது எனச் சொல்லலாம். 2024, மாா்ச் மாத நிலவரப்படி யூ டியூபானது 200 கோடியே 49 இலட்சத்துக்கும் அதிகமான பயனாளா்களைக் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து மட்டும் 460 மில்லியனுக்கும் அதிகமான பயனாளா்களைக் கொண்டுள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருப்பதால் யூ டியூபின் மிகப் பெரிய சந்தையாகவும் மாறி உள்ளது. சந்தா தேவைப்படும் பெரும்பாலான காணொளித் தளங்களைப் போல் அல்லாமல், யூ டியூப் ஒரு கவா்ச்சிகரமான தளமாகும். சந்தாதாரா்கள் மற்றும் பாா்வைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு யூ டியூபின் தரமும் செயல் திறனும் மதிப்பீடு செய்யப்படுகிறது. யூ டியூப் தொடக்கத்தில் புதுப்புது செய்திகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கும் கற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது என்பதை மறுக்க முடியாது. நம் தேவைக்கு ஏற்ற வேளையில் குறிப்பிட்ட நேர எல்லையில் நாம் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வசதி இருப்பதுதான் யூ டியூபின் சிறப்பு. நம் தினசரி வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும் துறை வல்லுநா்களிடம் தகவல்களைப் பெற்று அதை பல்வேறு கோணங்களில் அலசி, அதற்கான விடைகளைச் சுடச்சுட பரிமாறி இருப்பாா்கள். பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப வெவ்வேறு படிநிலைகளில் காலப்போக்கில் தேடப்படும் அத்தனை கேள்விகளுக்கும் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஏதோ ஒரு யூ டியூபில் பதிலளித்துக் கொண்டே இருக்கிறாா்கள். காய்கறி நடவாகட்டும், சமையல் செய்முறையாகட்டும் பொருட்களின் பயன்பாட்டு விளக்கங்களாகட்டும், புதுப்புது தொழில்நுட்ப செய்திகளாகட்டும், நாட்டு நடப்பு சங்கதிகளாக இருக்கட்டும் எதைப்பற்றியும் தெரிந்து கொள்ள யூ டியூப் பக்கங்கள் உள்ளன. அத்துடன் கல்வி, வணிகம், விளையாட்டு, திரைப்படம், இசை, ஊா் சுற்றுதல், பொழுதுபோக்கு, நகைச்சுவை,கேளிக்கை, மொழி அறிவு, ஆன்மிகம், ராசி பலன், மருத்துவக் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், அழகு சாதனங்களை உபயோகிக்கும் முறை, பிரபலங்களுடன் கலந்துரையாடல், தனது அன்றாட நிகழ்வுகளைப் படம் பிடிப்பது, பொது அறிவு, இலக்கியம், போட்டித் தோ்வுகள், வரி மேலாண்மை, சட்ட ஆலோசனை என எக்கச்சக்கமான யூ டியூப் காணொளிகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இதில் என்ன ஒரு சௌகரியம் என்றால், நாம் நேரம் ஒதுக்கி இணையத்தில் தேடுபொறிகள் மூலம் தேடிப் பிடித்து படித்துப் பாா்த்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை நாம் இன்னொரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே ஓா் எளிய காணொளி மூலம் அறிந்து கொள்கிறோம். ஆரம்பத்தில் தனக்கு பிடித்தமான காணொளிகளைக் காண சந்தாதாரா்களாக இணைந்த மக்கள், அதிகப்படியான பாா்வையாளா்களைப் பெறுவதன் மூலம் பணம் ஈட்டவும் முடியும் என்பதைப் பரவலாக அறிந்து கொண்டு, படைப்பாற்றல் திறனை பக்கபலமாக்கி தினம் ஒரு காணொளியை பதிவிட்டு கலக்குகிறாா்கள். இன்றைய திகதி நிலவரப்படி யூ டியூப் மூலம் உலக அளவில் அதிகம் சம்பாதிப்பது அமெரிக்காவைச் சோ்ந்த ரயான் (Rayyan) என்னும் ஏழு வயதுச் சிறுவன் தான். ஃபோா்ப்ஸ் சஞ்சிகையின் கணக்கின்படி பொம்மை விமா்சகரான ரயான் யூ டியூப் மூலம் 22 மில்லியன் டொலா்களைச் சம்பாதித்து முதல் இடத்தைப் பிடித்துள்ளாா். யூ டியூப் வணிகம் என்றே ஒரு புது வணிக உலகம் புதிய திசையில் பயணிக்கிறது. வாடகைக்குக் கடை தேவை இல்லை, சரக்கு இருப்பு அவசியமில்லை, கையிருப்பை வைத்து ஒவ்வொன்றாக காணொளியில் காண்பித்தால் போதும். அதைப் பாா்த்த பின்பு வரும் எண்ணிக்கைகளை வைத்து , அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல இயலும். இப்படி பல யூ டியூப் பக்கங்களை உருவாக்கி வாழ்வில் மிகப்பெரிய உயரத்துக்கு சென்ற பலா், நம் முன் உதாரணங்களாக இருக்கிறாா்கள். மற்றொரு பக்கம், மக்களை மகிழ்விக்க தினம் புதுப் புது யுக்திகளைக் கையாண்டு ரசிப்புக்குரியதாக படம் எடுத்து அதைப் பதிவிட்டு பிரபலங்களாக வலம் வருகிறாா்கள். திரைப்பட கதாநாயக, கதாநாயகிகளுக்கு இருக்கும் புகழ் இவா்களுக்கும் உருவாகி இருக்கிறது. காணொளிகளாகப் பதிவிட்டு மக்களுக்கு அவா்கள் முகம் பழகி புகழ் வெளிச்சமும் அவா்கள் மீது விழுவதால் யூ டியூப் ஆளுமைகள், இன்றைய தேதியில் அதிகரித்துள்ளாா்கள். நவீன காலத்திற்கு இப்படி வரப்பிரசாதமாக வந்த இந்த யூ டியூப் அதற்கே உண்டான குறைகளையும் கொண்டுள்ளது. ஒருவரைத் தரக்குறைவாக விமா்சித்து அதன் மூலம் இலட்சக்கணக்கான பாா்வையாளா்களைக் கடந்து பெரும் புகழ் பெற வேண்டும் எனும் போக்கு சமீப காலமாக அதிகரித்துள்ளது. யூ டியூபில் தோன்றக் கூடிய நபரைப் பொறுத்து அவா் சொல்லும் செய்திகளின் நம்பகத்தன்மையை அளவிட வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பதிவிடப்படும் கருத்துகள் பாதிக்கும் மேல் பொய்யும் புரட்டுமாக இருப்பதால், அதன் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகி நிற்கிறது. யூ டியூப்பில் நேரலை என்ற ஒரு வசதி இருக்கிறது. அதில் மக்கள் ஆா்வமாக ஒன்று கூடி கண்டுகளிக்கிறாா்கள். புடவை விற்பனை, பொருட்கள் விற்பனை என களை கட்டும் அந்தப் பக்கத்தை எட்டிப் பாா்த்தால், சில நேரங்களில் முகம் சுளிக்கவும் நேரிடுகிறது. தனிப்பட்ட நபரின் மீது தாக்குதல் நிகழ்த்தும் வகையில் தரம் தாழ்ந்து விமா்சனங்களை முன்வைக்கிறாா்கள். குறிப்பாக நேரலைகளில் இது போன்ற அத்துமீறல்கள் அதிகம். அதே நேரத்தில் பாா்வையாளா்களைக் கலவரப்படுத்தக் கூடிய காணொளிகளை பல யூ டியூபா்கள் தொடா்ந்து பதிவிட்டு வருவதும் கவலையளிக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த வழித்தடத்தில் பணத்தை அள்ளி இறைத்து மக்கள் என்ன செய்கிறாா்கள் என்பதைக் காணொளியாக எடுத்துப் பதிவிடுவதும், மனைவியின் பிரசவத்தின்போது பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி ஆா்வத்தைக் கிளப்புவதும், ரயில் தண்டவாள தடம், மலையுச்சி போன்ற வில்லங்கமான இடங்களுக்கு அருகே நின்று ஆபத்தை விலைக்கு வாங்குவதும், கா்ப்பத்தின் போதே பாலினத்தை அறிவிப்பதும் என சில அரைவேக்காட்டுத்தனங்கள் அதிா்ச்சிக்குள்ளாக்குகின்றன. அதிகமான பாா்வைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தனிநபரின் அந்தரங்கத்தைப் பொதுவெளியில் பேசுவது, சம்பந்தப்பட்டவரிடம் பணம் பெற்றுக் கொண்டு தரமற்ற ஒன்றைப் பற்றி ‘ஆகா ஓகோ’ எனப் புகழ்வது, புதிய செய்திகளை முந்தித் தர வேண்டும் என்ற முனைப்பில் சரிவர ஆராயாது, தப்பும் தவறுமாக தகவல் உரைப்பது என இதன் மற்றொரு பக்கம் அடா்கருமையில் இருக்கிறது. அத்துடன், சமகாலத்தில் திரைப்படங்கள் குறித்தான அவதூறு செய்திகளைப் பரப்புவதாக யூ டியூபா்களை சில திரைப்படத் தயாரிப்பாளா்கள் குற்றம் சாட்டுகின்றனா். அதன்படி திரையரங்க வளாகத்தில் யூ டியூபா்கள் விமா்சனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளா்கள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதன் மூலம் இதன் வீா்யத்தை நாம் அறியலாம். அவரவரின் தனிப்பட்ட விரோதத்தை பொதுவெளியில் வெளிப்படுத்த யூ டியூபை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் போக்கு கவலை அளிக்கிறது. ஒரு திரைப்படத்தைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். அதைப் பிரதிபலிக்கும் விதமாக விமா்சனம் அமைந்தால் எல்லாருக்கும் நல்லது. அதே வேளையில் விமா்சனம் இல்லை என்றால் சிறிய பொருட்செலவில் எடுக்கக்கூடிய சில நல்ல திரைப்படங்கள் கூட கவனம் பெறாமல் போய்விடும் அபாயமும் உள்ளது. இந்திய ஊடகத்துறையில் கடந்த 46 ஆண்டுகளில் மிகப்பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (Press Council of India)- 1978 என்ற சட்டம் இந்த அமைப்புக்கான அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. தற்போதைய நிலவரப்படி பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு குறைந்த அதிகாரங்களே உள்ளன. எந்த ஒரு வழிமுறையையும் அல்லது விதிமுறைகளையும் பின்பற்றும்படி உத்தரவு போடும் அதிகாரம் அதற்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றங்களை ஏற்படுத்தி ‘பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு’ அதிகாரத்தை வழங்கியும் அனைத்து வகையான ஊடகங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து கண்காணிக்கும் வகையிலும் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் சொல்கின்றன. ஆக, இன்று இணையத்தில் கொட்டிக்கிடக்கும் பல்லாயிரக்கணக்கான தகவல்களும் காணொளிகளும் நம் வேலையைப் பன்மடங்காகக் குறைத்தாலும், அது உண்மைக்கு மிக நெருக்கமாகக் கூட இருக்குமா என்றால் கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. இது யூ டியூபிற்கும் பொருந்தும். https://chakkaram.com/2024/12/09/youtube-அமா்க்களங்கள்/
  5. அமெரிக்க வரலாற்றில் முதல் முறை; ஒரே நாளில் 1,500 பேருக்கு தண்டனையை குறைத்த பைடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் பதவி விலக உள்ள நிலையில், ஒரே நாளில் சுமார் 1500 பேரின் தண்டனைகளை குறைத்துள்ளார். 19 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதன்படி கொரோனா பரவல் அதிகரித்தபோது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 தண்டனை கைதிகளின் தண்டனை குறைக்கப்படுகிறது, வன்முறையற்ற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 39 நபர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் அதிக நபர்களுக்கு கருணை காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தண்டனை கைதிகள் திருந்தி வாழ இரண்டாவது வாய்ப்புகளை வழங்க முடியும். செய்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்து, சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதற்காக விருப்பம் தெரிவித்தவர்களுக்கு மன்னிப்புகளும் தண்டனைக் குறைப்புகளும் வழங்கப்படுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். பைடனின் கருணை நடவடிக்கையை மனித உரிமைக் குழுக்கள், ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தினர் பாராட்டியுள்ளனர். நீதி அமைப்பில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. https://akkinikkunchu.com/?p=302980
  6. மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரி புத்தர்சிலை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது – முன்னாள் பா.உ. கோ.கருணாகரம் (ஜனா) ! By kugen மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை நிறுவப்பட்டது வட கிழக்கினை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது. மக்கள் பிரதிநிதிகள் மாகாணத்தில் நடைபெறுவதற்கு ஏதுவாக அமைந்துவிடும். எனவே மக்களினால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேசிய அமைப்பாளருமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக்கல்லூரியின் முன்னால் புத்தர்சிலை நிறுவப்பட்டமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு முன்னால் புத்தர் சிலையொன்று திடீரென்று நிறுவப்பட்டுள்ளது. தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் பௌத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர். அந்தவகையில் வைத்தியசாலை நிருவாகத்திற்குத் தெரியாமல் அவர்களது அனுமதியைப் பெறாமல் ஒரு புத்தர் சிலையை வைத்திருப்பதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாத கண்டனத்துக்குரிய நிகழ்வாகப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இந்த நாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களை பௌத்த மயமாக்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் தொடர்ச்சியாக நடைபெற்று வந்திருக்கிறது. அந்தவகையில் கடந்த அரசாங்கத்தில் கூட வட மாகாணத்தின் சுகாதாரப் பணிப்பாளராக ஒரு சிங்களவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்ட பொழுது அவர், யாழ்ப்பாண வீதிகளில், சுற்றுவட்டங்களில் புத்தருடைய சிலையை நிறுவியதன் காரணமாக ஏற்பட்ட எதிர்ப்பின் பிரகாரம் உடனடியாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படடதாக அறிந்திருக்கிறேன். அந்த வகையில் புதிதாக இந்த நாட்டில் உருவாகியிருக்கின்ற அரசாங்கம் சாதி, மத, இன பேதமற்ற ஒரு இலங்கையை உருவாக்கவேண்டும் என்ற கோசத்துடன் ஆட்சியைப் பிடித்திருக்கின்றார்கள். இவர்களும் தொடர்ச்சியாக இப்படி தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றார்களா, அல்லது அரசாங்கத்திற்கு ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டும் என்ற தோரணையில் இந்த தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் அவர்கள் செயற்படுகின்றாரா என்ற கேள்விக்குறி எங்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. எது எவ்வாறாயினும் வட கிழக்குப் பிரதேசம் என்பது தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் கணிசமாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் மட்டக்களப்பு போதனா வைத்தியாசலைக்குள் அனுமதியின்றி ஒரு புத்தர் சிலையை நிறுவியிருப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வைத்தியசாலை நிருவாகம் உடனடியாக இவ்விடயத்தில் தலையிட்டு அங்கிருக்கும் பதற்ற நிலைமையை தவிர்ப்பது மாத்திரமல்லாமல் இந்த மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது விடயமாக கூடுதலான கரிசனையை எடுத்து அங்கு ஏற்படவிருக்கும் பதற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். இல்லாவிட்டால் தொடர்ச்சியாக இப்படியான சம்பவங்கள் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நடைபெறுவதற்கு ஏதுவாக அமைந்துவிடும். எனவே இந்த மக்கள் மீது அக்கறை கொண்டு மக்களினால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் உடனடியாகத் தொடர்புகொண்டு இதை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பது என்னுடைய எண்ணம் மாத்திரமல்ல மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையில் பணிபுரியும் ஏனையோரினதும் தமிழர்களினதும் ஆதங்கமாக இது பார்க்கப்படுகிறது. எனவே உடனடியாக மக்களினால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலையினை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று அவர்களை வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார். https://www.battinews.com/2024/12/blog-post_232.html
  7. சூடானில் உள்நாட்டு போர் தீவிரம்; இராணுவ தாக்குதலில் 127 பேர் உயிரிழப்பு சூடானில் நீடித்து வரும் உள்நாட்டு போரில் துணை ராணுவப்படை வீரர்களின் முகாம்கள் மீது குண்டு வீசப்பட்டதில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு இராணுவமும், துணை இராணுவப் படையின் அதிவிரைவுப் படையினரும் இணைந்து இராணுவப் புரட்சியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் அப்துல்லா ஹாம்டொக் சிறைப்பிடிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதன் பிறகு, அங்கு இராணுவ ஆட்சி நடந்து வந்த நிலையில், மீண்டும் ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இது தொடர்பாக, இராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தா அல் புர்ஹானுக்கும், துணை இராணுவத்தின் அதிவிரைவுப் படைத் தளபதி முகமது ஹம்தான் டாக்லோவுக்கும் இடையே மோதல் வெடித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே உள்நாட்டு போர் மூண்டது. இதில் பொதுமக்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து போரை நிறுத்த இரு தரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. இதற்கிடையே இரு இராணுவ தளபதிகளும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டதையடுத்து சவுதி அரேபியாவில் அமைதி பேச்சு வார்த்தை தொடங்கியது. இதில் இராணுவ பிரதிநிதிகள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்திய போது எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் சூடானில் மீண்டும் உள்நாட்டு போர் தீவிரமடைந்து உள்ளது. இந்த நிலையில் சூடானில் உள்நாட்டு கலவரம் நீடித்து வரும் நிலையில் துணை ராணுவப்படை வீரர்களின் முகாம்கள் மீது குண்டு வீசப்பட்டது. இதில் 127 பேர் உயிரிழந்தனர். இதற்கு துணை ராணுவம் பதிலடி கொடுக்கும் என்பதால் உள்நாட்டு போர் தீவிரம் அடையும் என்று கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/313616
  8. உதயங்க, கபிலவுக்கு எதிராக புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் ; சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் நம்பிக்கை Published By: Vishnu 13 Dec, 2024 | 01:02 AM (நா.தனுஜா) அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட தடையை அடுத்து உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேன ஆகியோருக்கு எதிராக இலங்கையின் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் தெரிவித்துள்ளது. சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (9) மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும் (10) முன்னிட்டு உலகளாவிய ரீதியில் ஊழல் மோசடிகள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக அமெரிக்கா கடந்த திங்கட்கிழமை தடைகளை விதித்துள்ளது. அந்தத் தடை பட்டியலில் ராஜபக்ஷ அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேன ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். ஏற்கனவே இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிராக நுழைவு அனுமதித்தடை உள்ளடங்கலாகப் பல்வேறு தடைகளை விதிக்குமாறு வலியுறுத்தி அதனுடன் தொடர்புடைய 60 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளையும், ஆவணங்களையும் அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசாங்கங்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் அனுப்பிவைத்திருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் ஊழல் குற்றங்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் இருவருக்கு எதிராக அமெரிக்க அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம், 'ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்குக் காரணமாக அமைந்த மிக் விமானக்கொள்வனவில் மிகமுக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராகவும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேனவுக்கு எதிராகவும் அமெரிக்கா தடைகளை விதித்திருக்கிறது' எனச் சுட்டிக்காட்டியுள்ளது. அதுமாத்திரமன்றி உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேன ஆகியோருக்கு எதிராகவும், கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் உதயங்க வீரதுங்கவுடன் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஏ.வி.எம்.ஜயநாத் குமாரசிறி என்பவருக்கு எதிராகவும் இலங்கையின் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/201121
  9. எமது அரசாங்கத்தில் எந்தப் பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் : ஜனாதிபதி 13 Dec, 2024 | 11:35 AM மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளியோம் என்றும் எமது அரசாங்கத்தில் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அரச ஊடக பிரதானிகளுடன் இன்று (13) காலை நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமாக இந்நாட்டு மக்கள் பல்வேறு அரசாங்கங்களை தெரிவு செய்தனர். பல அரசாங்கங்களை கவிழ்த்துள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக இம்முறை நாட்டு மக்கள் இரண்டு சந்தர்ப்பங்களின் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கிய வரலாற்று மக்கள் ஆணையின் அர்த்தம் மற்றும் நோக்கம் என்னவென்பது தொடர்பிலான ஆழமான சிந்தனை எமக்கு உள்ளது. தரமான மற்றும் நிலையான நாட்டை கட்டியெழுப்புவோம் என்ற நம்பிக்கையில் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தனர். அந்த சிறப்பான நம்பிக்கை கடுகளவிலும் சிதைந்து போவதற்கு எமது அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. நாட்டுக்குள் தவறு செய்கின்ற எவரையும், எந்த காரணத்துக்காகவும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை. நாட்டுக்குள் மட்டுமன்றி எமது அரசாங்கத்தினுள் எந்த தரத்தில் இருப்பவராயினும் தவறு செய்தால் அதற்கு எதிரான நடவடிக்கையை எடுப்பதற்கு நாம் தயங்கப்போவதில்லை. அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய சரியான சந்தர்ப்பத்தில் அதனை மேற்கொள்வதற்கும் நாம் இரு முறை சிந்திக்கப்போவதில்லை. ஏழு தசாப்தங்களாக ஏமாற்றங்களுக்கு உள்ளான மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாக்கவும், இந்த நாட்டை மிகச் சிறந்த நாடாக மாற்றுவதற்கும் தான் நிபந்தனைகளின்றி அர்ப்பணிப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார உள்ளிட்ட அரசாங்கத்தின் ஊடக பிரதானிகள் இதன்போது கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/201138
  10. தமிழ்நாட்டில் போராடும் தமிழ் இளைஞனுக்காக குரல் கொடுத்த நாமல் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழகத்தில் தஞ்சமடைந்த ஒருவர், தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி மண்டியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணொளி ஒன்றைத் தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் அல்லது தம்மை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறித்த நபர் வலியுறுத்தியுள்ளார். இந்தநிலையில், இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்துடன் இணைந்து உடனடியாக குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமல் வலியுறுத்தியுள்ளார். மேலும், குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்குத் தாம் தயாராகவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். R https://www.tamilmirror.lk/செய்திகள்/தமிழ்நாட்டில்-போராடும்-தமிழ்-இளைஞனுக்காக-குரல்-கொடுத்த-நாமல்/175-348681
  11. தே.ம.ச எம்.பிகளின் பட்டங்களை ஆராய குழு நியமிக்க பிரேரணை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதி, பேராசிரியர், கலாநிதிப் பட்டங்கள் உள்ளிட்டவற்றை ஆராய தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியும் புதிய ஜனநாயக முன்னணியும் தீர்மானித்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர் குழுத் தலைவர் ஜீவன் தொண்டமான் இது தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் மற்றும் மற்றுமொரு அமைச்சரின் பொறியியற் பட்டம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் இந்த தெரிவுக்குழுவை நியமிக்க முன்வந்துள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடிக்கு சபாநாயகரிடமிருந்தோ அல்லது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமிருந்தோ ஏற்றுக்கொள்ளக் கூடிய பதில் கிடைக்காததால், உரிய தெரிவுக்குழுவை நியமிக்கும் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என்றும், புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/தே-ம-ச-எம்-பிகளின்-பட்டங்களை-ஆராய-குழு-நியமிக்க-பிரேரணை/175-348687
  12. மஹிந்தவிடம் கோடிக்கணக்கான பணத்தைப் பெற்ற டக்ளஸ் - சுப்பையா பொன்னையா குற்றச்சாட்டு! ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்தவர்களை இராணுவ வீரர்களாக அடையாளப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், கோடிக்கணக்கான பணத்தை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுக்கொண்டதாக அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் சுப்பையா பொன்னையா குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்தவின் காலத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அங்கத்தவர் ஒருவருக்கு 65,000 ரூபாய் வரை கணக்குக் காட்டி டக்ளஸ் தேவானந்தா பணத்தைப் பெற்றுக்கொண்டார். ஆனால் எங்களுக்கு 10,000 அல்லது 15,000 ரூபாய் வரையில் வேதனம் வழங்கினார்கள். கட்சியிலிருந்து விலகும் வரை மாதாந்தம் 3000 ரூபாய் சேமிப்பதாகத் தெரிவித்திருந்தனர். ஆனால் அவ்வாறு எதுவுமே சேமிக்கப்படவில்லை. வேதனம் கேட்ட சிலரை டக்ளஸ் இல்லாமல் ஆக்கியுள்ளார் என சுப்பையா பொன்னையா குறிப்பிட்டுள்ளார். https://www.hirunews.lk/tamil/390605/மஹிந்தவிடம்-கோடிக்கணக்கான-பணத்தைப்-பெற்ற-டக்ளஸ்-சுப்பையா-பொன்னையா-குற்றச்சாட்டு
  13. குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் ஆரம்பம்! December 12, 2024 09:35 pm குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடி திட்டம் மாத்தளையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது பிடிபடும் குரங்குகள் கிரிதலே கால்நடை பராமரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கருத்தடை செய்யப்பட்டு, மீண்டும் அதே பகுதிகளில் விடப்படவுள்ளன. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 4.5 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்ன, நீண்டகாலத்திற்காக குரங்குகளை கட்டுப்படுத்தும் முன்னோடி செயற்திட்டம் ஒன்றே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேவேளை, கதிர்காமம் ஆலயம் மற்றுமத் வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து கடந்த ஓராண்டுக்கு முன்னர் செயற்படுத்திய குரங்குகளை பிடித்து காட்டுக்குள் விடுவிக்கும் வேலைத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த காலப்பகுதியில் குரங்குகளின் நடமாட்டம் குறைந்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதேவேளை, இந்த நாட்டில் 25-30 இலட்சம் குரங்குகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அத தெரண பிக் ஃபோகஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுற்றாடல் பிரதி அமைச்சர் புவியியலாளர் என்டன் ஜெயக்கொடி தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=197208
  14. தற்போது எலி காய்ச்சல் நோய் (leptospirosis ) யாழ் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட சில நோயாளிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதை பொறுப்பற்ற பல ஊடகங்கள் ஊதி பெருப்பித்து யாழ்ப்பாணத்துக்கு சென்றால் ஆபத்தான நோய் தொற்று ஏற்பட்டு விடும் என்பது போன்ற ஒரு பிரமையையும் பயத்தையும் தோற்றுவித்துள்ளனர். இதனால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு பயந்து பலர் என்னிடம் தொடர்பு கொண்டுள்ளனர். முக்கியமாக இந்த நோய் காற்றின் மூலமாகவோ, தொடுகை மூலமாகவோ பரவாது என்பதனால் யாழ்ப்பாணத்துக்கு அல்லது வட மாகாணத்துக்கு செல்வதற்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எவ்வாறான பாதுகாப்பான வழிமுறைகளை கைக்கொள்ளவேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய பிரசுரம் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு பொறுப்பான ஊடகவியாளர்கள் என்னுடன் தொலைபேசி மூலம் 0779068868 தொடர்பு கொள்ள முடியும். Dr முரளி வல்லிபுரநாதன் சமுதாய மருத்துவ நிபுணர், சுகாதார அமைச்சு வருகைநிலை விரிவுரையாளர், கொழும்பு, பேராதனை மற்றும் யாழ் பல்கலைக்கழகங்கள் 12.12.2024 பிரசுரம் முகப்புத்தகத்தில் உள்ளது.. https://www.facebook.com/share/p/17viZZvFsA/?mibextid=WC7FNe
  15. லண்டனில் ஓம் சரவணபவா சாமியார் சின்னப் பெண்பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்து பொலிஸ் பிடித்து பிணையில் வரக்கூட முடியாதபோதும், அவரின் பக்தர்களாக தொடர்ந்தும் இருந்தது।இருப்பது போல இருக்கின்றது உங்கள் நிலை! இதை ஆங்கிலத்தில் “in denial “ என்பார்கள். மற்றும்படி நீங்கள் குறிப்பிட்ட வட்டுக்கோட்டை பெண் மரணித்த சம்பவம் பல இட்டுக்கட்டப்பட்ட இணையவழிச் செய்திகளின் சுருக்கம். இதைப் பற்றி இன்னொரு திரியில் அலசப்பட்டுள்ளது.
  16. இலக்கியம் பலி கேட்கிறதா என்ன? jeyamohanDecember 8, 2024 அன்புள்ள ஜெயமோகன், நான் நண்பர் * வுடன் வந்து உங்களைச் சந்தித்ததை நினைவுகூர்வீர்கள் என நம்புகிறேன். அவர் இலக்கியத்திற்காக வாழ்ந்த ஒரு களப்பலி. அவர் நடத்திய சிற்றிதழை அன்று கொண்டுவந்து உங்களுக்கு அளித்தோம். குமரிமாவட்ட இலக்கியத்தில்கூட இன்று அவரை நினைவுகூர்பவர்கள் இல்லை. இன்று அவர் இல்லை. அவர் இலக்கியத்தால் கொல்லப்பட்டார் என்றே நான் நம்புகிறேன். அவரைப் பற்றி நீங்கள் பதிவுசெய்யவேண்டும் என்று விரும்புகிறேன். இலக்கியவாதிகள் அவரைப்பற்றி ஏன் பேசுவதே இல்லை? க அன்புள்ள க, உங்கள் நீண்ட கடிதத்தைச் சுருக்கியிருக்கிறேன். அக்கடிதத்தில் பெரும்பகுதி இலக்கியவாதிகள் பற்றிய வசைகள், ஏளனங்கள். இலக்கியவாதிகள் அனைவருமே தன்னலவாதிகள், தந்திரமானவர்கள் என்பது உங்கள் கணிப்பு. வாழ்க்கையில் தோல்வியடைந்து, நலிந்து மறைந்திருந்தால் மட்டுமே உங்கள் பார்வையில் அவர் இலக்கியவாதி. அவர் பெரிதாக ஏதும் எழுதவில்லை என்றாலும் பிரச்சினை இல்லை. வாழ்க்கையில் சமநிலையைப் பேணிக்கொண்டவர், தொடர்ச்சியாக எழுதியவர்கள் எல்லாருமே சந்தர்ப்பவாதிகள், அயோக்கியர்கள். இதைச் சொல்லும் நீங்கள் உங்களை எங்கே நிறுவிக்கொள்கிறீர்கள்? நீங்கள் ‘மனசாட்சியுள்ள சான்றோன், மற்றும் நுண்ணுணர்வு கொண்டவர்’ இல்லையா? ஆனால் இலக்கியத்துக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? நல்ல இலக்கியவாதி என நீங்கள் நம்பும் படைப்பாளிகளுக்காக ஒரு கூட்டமாவது ஏற்பாடு செய்ததுண்டா? ஒரு குறிப்பு எழுதியதுண்டா? குறைந்தபட்சம் நல்ல வாசகராகவாவது இருந்ததுண்டா? இல்லை என்பதை நான் அறிவேன், இல்லையா? எனில் உங்கள் ஆதங்கம்தான் என்ன? உங்களுக்கு இலக்கியவாதிகள் மேல், இலக்கியம் மேல் இருக்கும் காழ்ப்பை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பம் தேவைப்படுகிறது, இல்லையா? அதற்கு இந்த ‘பரிதாப’ எழுத்தாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் இல்லையா? அதன்பொருட்டு இலக்கியவாதிகள் தோல்வியடையவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள், காத்திருக்கிறீர்கள், இல்லையா? இந்த பிணந்தின்னிக் கழுகு உளநிலையை நீங்கள்தான் மறுபரிசீலனை செய்யவேண்டும். உங்கள் பாவனைகளை களைந்து உங்களைப் பாருங்கள். * தமிழில் எப்போதுமே ‘எழுதமுடியாதுபோன’ எழுத்தாளர்களின் ஒரு நீண்டபட்டியல் உண்டு. தொடர்ச்சியாக எழுதுபவர்கள் குறைவு. எழுத்தில் சாதிப்பவர்கள், சாதித்தோம் என அகம் நிமிர்பவர்கள் மிகமிகக் குறைவு. பெரும்பாலானவர்களுக்கு எழுதும் முனைப்பு உலகியல் வாழ்க்கையின் ஈடுபாட்டால் இல்லாமலாகி விடுகிறது. ஒரு பதவி உயர்வு இலக்கியத்தைவிட பெரிதாகப் படுகிறது, பத்தாண்டுகள் இலக்கியத்தை விட்டுவிடுகிறார்கள். குடும்பம், வணிகம் என பிறவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதனாலேயே எழுதமுடியாமலாகிறது. சிலருக்கு சமூகவலைத்தள வம்புகளே எழுத்தை அழித்துவிடுகின்றன. அத்துடன் இலக்கியமும் கலைகளும் அத்தனை எளிதாக அருள்வனவும் அல்ல. அந்த தெய்வம் முழுமையான அர்ப்பணிப்பை கோருகிறது. இடைவிடாத முயற்சியை நோன்பெனக் கொள்ளச் செய்கிறது. கலையை நிகழ்த்துபவனிடம் இயல்பான திறனும் நுண்ணுணர்வும் இருந்தாகவேண்டும். அதை இன்றைய உலகியல் சூழலில் பொத்திப்பாதுகாத்து, ஒவ்வொரு நாளுமென வளர்த்துக்கொண்டே இருந்தாகவேண்டும். அதற்கும் அப்பால் நல்லூழும் தேவை. கலையை அடைய இடைவிடாது முயல்வதற்குரிய வாழ்க்கைச் சூழலும் குடும்பச்சூழலும் அமைவதே இந்தியச்சூழலில் ஒரு நல்லூழ். அனைத்தும் இருந்தாலும்கூட கலைப்படைப்பு கலைஞனில் வந்தமைவதில் ஒரு தற்செயல் உள்ளது. அதை விளக்கவே முடியாது. கனவு நிகழ்வதுபோலத்தான். நாம் சூழலை அமைத்துவிட்டுக் காத்திருக்கலாம். நிகழவேண்டுமென விரும்பலாம், அவ்வளவுதான். ஆகவே ஆசைப்படுபவர்களில் சிலருக்கே கலையிலக்கியத்தில் வெற்றி அமைகிறது. அவர்களுக்கே இலக்கியத்திலும் வரலாற்றிலும் இடம். எஞ்சியோர் பலர் தன்னிரக்கம் வழியாக கடுமையான காழ்ப்பு நோக்கிச் செல்கிறார்கள். முதலில் கலையிலக்கியத்தில் சாதித்தவர்கள் மேல் அக்காழ்ப்பு வெளிப்படுகிறது. அத்தனை இலக்கியவாதிகளையும் இழிவுசெய்யத் தொடங்கி, மெல்ல மெல்ல இலக்கியத்தையே இழிவுசெய்ய ஆரம்பிக்கிறார்கள். எந்தக் கலையை அவர்கள் வாழ்நாளெல்லாம் விரும்பினார்களோ அதையே சிறுமை செய்ய ஆரம்பிக்கிறார்கள். சமூகவலைத்தளம் அதற்குரிய களம். அங்கே தன்னிரக்கப் புலம்பல்களுக்கென தனி ஆதரவாளர் வட்டமே உண்டு. அவர்கள் வெறும் உலகியலாளர்கள், உலகியலில் திளைப்பது பற்றிய குற்றவுணர்ச்சி கொண்டவர்கள். இப்புலம்பல்கள் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கின்றன, ‘நல்லவேளை நான்லாம் தப்பிச்சேன்’ என அவர்கள் மகிழ்கிறார்கள். அந்த மகிழ்வை ‘உச் உச் அடாடா, நீங்கள்லாம் எங்கியோ இருக்கவேண்டியவரு சார். இலக்கியவாதிகளே கெட்டவங்க சார்’ என்று சொல்லி வெளிப்படுத்துகிறார்கள். இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக இழிவுசெய்யும் இடத்திற்கு இந்த தோல்வியடைந்த இலக்கியமுயற்சியாளர் சென்றாரென்றால் ஆதரவு வட்டம் பெருகும். நூறுபேர் கூடி அத்தனை இலக்கியமேதைகளையும், ஒட்டுமொத்த இலக்கியத்தையும் சிறுமைசெய்து வசைபாடுவார்கள். இலக்கியத்தில் வெற்றி- தோல்வி என்பது புறவயமானது அல்ல என்று முதலில் சொல்ல விரும்புகிறேன். புகழ் பணம் ஆகியவையே புறவயமானவை. இலக்கியத்தில் ஒருவர் அடையும் நிறைவு என்பது அவரே அறிவது, உணர்வது மட்டுமே. ஒருவர் தொடர்ச்சியாக எழுதுகிறார், எழுத்தில் மனமகிழ்ச்சி கொள்கிறார் என்றால் அதுவே அவர் வாழ்க்கையில் அடையும் வெற்றிதான். வெளியே ஒரு வெற்றி அவருக்கு தேவையில்லை. அவர் தன்னளவில் நிறைவடைந்தாலே போதும். இந்த வாழ்க்கை எத்தனையோ சோர்வுகளும் சரிவுகளும் கொண்டது. நீக்கவே முடியாத பிரபஞ்சத்தனிமையால் சூழப்பட்டது. அதை எதிர்கொள்ள முடியாமல்தான் கோடானுகோடிப்பேர் வெற்றுக்கேளிக்கைகளில் திளைக்கிறார்கள். போதைகளை நாடுகிறார்கள். அரசியல் காழ்ப்புகளில், குடும்ப வம்புகளில் சிக்கி எதிர்மறை மனநிலைகொண்டவர்களாக ஆகிறார்கள். கசப்பை திரட்டிக்கொண்டும் அக்கசப்பை பிறர்மேல் உமிழ்ந்துகொண்டும் முதுமைநோக்கி செல்கிறார்கள். இலக்கியமெனும் தனியுலகை கண்டடைந்து அதில் ஈடுபடுபவர், அதைக்கொண்டே அனைத்து வெறுமைகளையும் நிரப்பிக்கொள்ள முடியும். அத்தனைச் சரிவுகளிலும் தன்னைக் காத்துக்கொள்ள முடியும். அந்தப் பெரிய அருள் கிடைத்த ஒருவருக்கு உண்மையில் அதற்குமேல் எதுவுமே தேவையில்லை. எவருடைய ஏற்பும் தேவையில்லை. எவரும் வாசிக்கவில்லை என்றாலும் கூட குறையில்லை. இதை நான் மெய்யாகவே உணர்ந்து சொல்கிறேன். எனக்கு புகழும், ஏற்பும் இலக்கியத்தில் உள்ளன. ஆனால் இவை இல்லையென்றாலும் எக்குறையையும் உணர மாட்டேன். ஏனென்றால் எனக்கு எழுத்து என்பது எனக்கான தனியுலகம். அங்கே நான் உணரும் மகிழ்வும் நிறைவுமே எனக்கான பெரும் பரிசுகள். இதை என்னையோ என் எழுத்தையோ அறிந்த எவரும் உணரமுடியும். இத்தனை எழுதுகிறேன் என்றால், எச்சூழலிலும் எழுதுகிறேன் என்றால் அதற்குக் காரணம் அது என் அந்தரங்கமான கொண்டாட்டம் என்பதனால்தான். அங்கே நான் மகிழ்ந்திருக்கிறேன் என்பதனால்தான். இலக்கியத்தில் தங்களுக்கு உரிய ஏற்பில்லை என்று கசந்து , இலக்கியவாதிகளையும் இலக்கியத்தையும் வசைபாடும் நிலைக்குச் செல்பவர்கள் உண்மையில் நாடியது எதை என்னும் வினா எப்போதுமே என்னில் எழுவதுண்டு. அவர்கள் நாடியது புகழையும், பணத்தையும், சமூக ஏற்பையும் மட்டுமே. அதன்பொருட்டு அவர்கள் தெரிவு செய்ததே இலக்கியம். ஆகவேதான் அந்த கசப்பு. இலக்கியத்தை மெய்யாக அறிந்த ஒருவர், இலக்கியம் படைப்பதன் இன்பத்தையும் இலக்கிய வாசிப்பின் களிப்பையும் துளியேனும் உணர்ந்த ஒருவர், இலக்கியத்தை இழிவுசெய்ய மாட்டார். நமக்கு மெய்யான அழகியல் அனுபவங்கள் அளித்த இலக்கியவாதிகளைச் சிறுமைசெய்ய மாட்டார். எந்நிலையிலும் இலக்கியத்தின் பொருட்டு நிலைகொள்பவராக, அதற்காக பேசுபவராக, இலக்கியச் சாதனையாளர்களை கொண்டாடுபவராக மட்டுமே திகழ்வார். காழ்ப்பைக் கொட்டுபவர்களுக்கு உண்மையில் இலக்கியம் முக்கியமே அல்ல. அவர்களுக்கு புகழும் பணமும் ஏற்பும் பெற ‘ஏதேனும்’ ஒரு துறை தேவை என படுகிறது. அவர்களின் முதல்தெரிவுகள் சினிமா, அரசியல் என பல. எளியது என்று நினைத்துத்தான் அவர்கள் இலக்கியம் பக்கம் வருகிறார்கள். இலக்கியத்தை யார் வேண்டுமென்றாலும் உருவாக்கிவிடலாம் என்று எண்ணிக்கொள்கிறார்கள். அதற்கான வாசிப்பை, மொழித்தேர்ச்சியை, வடிவப்பயிற்சியை அடைவ முயல்வதே இல்லை. இவர்களில் பலர் இலக்கியம் மீதும், இலக்கியவாதிகள் மீதும் காழ்ப்புகளைக் கொட்டும்போது புகழ்பெற்ற படைப்பாளிகளை ’தாஜா செய்தும், குழு அரசியல் செய்தும் புகழ்பெற்றவர்கள்’ என்று அடிக்கடிச் சொல்வதைக் காணலாம். உண்மையாகவே இலக்கியத்தில் அவ்வாறு வெற்றிபெறலாம் என நம்பிச் செயல்பட்டவர்கள், செயல்படுபவர்கள் இவர்கள். இலக்கியத்தில் அது அணுவளவும் செல்லுபடியாகாது. இலக்கியம் என்பது வாசகர்களால் தீர்மானிக்கப்படுவது. நுண்ணுணர்வுகொண்ட, சமரசமற்ற, ஆனால் கண்ணுக்குத்தெரியாத வாசகவட்டம் ஒன்று எப்போதுமுண்டு. அவர்களே மெய்யான சக்தி. அவர்களிடம் மெய்யான கலைப்படைப்புடன் மட்டுமே சென்று நிற்க முடியும். இலக்கியத்தை இவ்வாறு அற்பமாக எண்ணிக்கொள்வதனால் இவர்களில் பலர் அதில் எதையும் சாதிப்பதில்லை. பணமோ புகழோ பெறுவதற்கு இலக்கியம் எவ்வகையிலும் உதவாது என காலப்போக்கில் புரிந்துகொள்கிறார்கள். இவர்களில் பலர் இலக்கியத்தில் இருப்பதே வேறெதிலும் எதையும் செய்ய முடியாதவர்கள் என்பதனால்தான். பலரை நான் அறிவேன், அவர்களின் உண்மையான கனவு சினிமாதான். சினிமாவுக்குள் செல்ல இலக்கியம் ஒரு வழி என நினைக்கிறார்கள். இலக்கியம் அதற்கு உதவாதபோது இலக்கியத்தால் அழிந்தேன் என இலக்கியத்தை வசைபாடுகிறார்கள். இலக்கியத்தால் அழிந்தோம் என்றெல்லாம் சொல்லும் பலர் இலக்கியத்தை நம்பியவர்களோ, அதில் தீவிரமாக ஈடுபட்டவர்களோ அல்ல. பலர் திரைப்படத்துறைக்குச் செல்ல இலக்கியத்தை ஊடகமாக்கிக்கொண்டவர்கள். நீங்கள் குறிப்பிட்ட நம் நண்பரும் அவ்வாறே. அவர் திரை இயக்குநராக விரும்பினார். நீங்கள் பாடலாசிரியராக முயன்றீர்கள். உங்களால் எண்ணியபடி உள்ளே நுழைய முடியவில்லை, ஆனால் அதற்கு இலக்கியம் பொறுப்பேற்கவேண்டும் என்கிறீர்கள். திரைப்படம் ஒரு தொழில். ஒரு தொழிலில் நுழைய முயன்று தோல்வி அடைந்தவர்கள் பலர் இருப்பார்கள். அவ்வாறு பலவகை தொழில்களில் நுழைய முயன்று முடியாமலான அனுபவம் அனைவருக்கும் இருக்கும். காலப்போக்கில் அவரவருக்கு சாத்தியமான தொழிலில் சென்று அமைகிறார்கள். ஒரு தொழில் அமையாது போவதற்கு தொழிலில் உள்ள தேவைகள், தொழில்தேடுபவரின் தகுதி என பல காரணங்கள் இருக்கும். ஒருவருக்கு ஒரு தொழிலில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அவர் அத்தொழிலின் ’புனிதபலி’யா என்ன? இலக்கியத்தின் பொருட்டு அருந்தவம் இயற்றியவர்கள் உண்டு. பெரியசாமி தூரன் போல. எஸ்.வையாபுரிப்பிள்ளை போல. இன்றும் நம்மிடையே அத்தகையோர் வாழ்கிறார்கள். அவர்களை தொடர்ச்சியாக அடையாளம் காட்டிக்கொண்டே இருக்கிறோம். இலக்கியத்தின் பொருட்டு சொத்துக்களை இழந்தவர்கள் உண்டு. க.நா.சு. முதல் சி.சு.செல்லப்பா வரை. அவர்களுக்கு என்றும் வரலாற்றில் இடமுண்டு. இலக்கியத்தின் வழியாக சினிமாவுக்கு முயன்று முடியாமல் போனவர்களுக்கு இலக்கியம் பொறுப்பா என்ன? அவர்களில் பலருக்கு சினிமாவும் தெரியாது. தெரியாத ஒன்றை வென்றுவிட முட்டாள்தனமாக முயல்கிறார்கள். தோற்றால் இலக்கியத்தின் களப்பலி என்கிறார்கள். நீங்கள் குறிப்பிட்ட நண்பருக்கே வருகிறேன். அவருடைய இலக்கு சினிமா மட்டுமே. என்னிடம் அவர் சினிமா வாய்ப்பு பற்றி மட்டுமே பேசியிருக்கிறார். சினிமாவில் ஓர் அறிமுக அடையாளம் என்னும் வகையிலேயே ஒரு சிற்றிதழை சில இதழ்கள் கொண்டுவந்தார். அதேசமயம் சினிமாவுக்குத் தேவையான எந்த தகுதியையும் அவர் உருவாக்கிக் கொள்ளவில்லை. நான் அவருக்கு ஒரு நடிகரிடம் கதைசொல்ல வாய்ப்பு வாங்கிக்கொடுத்தேன், உங்களுக்கே தெரியும். அவரால் கதையைச் சொல்ல முடியவில்லை—அவர் தயாரித்துக்கொண்டே செல்லவில்லை. அத்துடன் சினிமாவின் அடித்தளத்திலுள்ள குடி போன்ற பழக்கங்கள். அவை மிக எளிதாக வந்து தொற்றிக்கொள்பவை. இலக்கியம் தொழில் அல்ல. மனிதர்கள் வாழ்வதற்கு தொழில் தேவை. வாழ்வதற்குரிய செல்வம் இல்லை என்றால் தொழில் ஒன்றைச் செய்தே ஆகவேண்டும். இன்று உலகம் முழுக்க இதுதான் நிலைமை. இலக்கியம் ஒருவனின் அந்தரங்கமான உலகம். ஆன்மிக ஈடுபாட்டை ஒருவன் தன் தொழில் என சொல்லிக்கொள்ள முடியுமா? ஆன்மிகம் எனக்கு சோறுபோடவில்லை என அங்கலாய்க்க முடியுமா? ஆன்மிக ஈடுபாட்டுக்கு நிகரான அகவிடுதலையையே இலக்கியவாதி இலக்கியத்தில் தேடுகிறான். இலக்கியத்தில் அவன் தனக்கான இன்பங்களை அடைகிறான், நிறைவைக் கண்டடைகிறான். அவன் இலக்கியத்தில் முதன்மைச் சாதனைகளைச் செய்தான் என்றால் ஒருவேளை பணமோ புகழோ ஏற்போ தேடிவரக்கூடும். தொழில் தேவையில்லாமல், எழுத்தில் வாழவும் முடியக்கூடும். இலக்கியத்தை நான் எனக்கு சோறும் துணியும் சம்பாதித்துத் தரவேண்டும் என ஏவியதில்லை. அதற்கு அரசுவேலையையே நாடியிருந்தேன். அரசு வேலை கிடைக்காவிட்டால் ஏதாவது வணிகம் செய்திருப்பேன். ஓர் உணவகம் நடத்தியிருக்கக்கூடும். இன்று சினிமா என் தொழில், நேற்று தொலைத்தொடர்புப் பணி எப்படியோ அப்படி. இன்றும் எழுத்து எனக்கு முதன்மையான வருமான வழி அல்ல. ஆகவேதான் லட்சக்கணக்காக விற்கும் நூல்களை முற்றிலும் பதிப்புரிமை இல்லாமல் பொதுவெளிக்கு அளிக்கவும் என்னால் இயல்கிறது. நான் இந்த தோல்விகளை புனிதப்படுத்துவதோ கொண்டாடுவதோ இல்லை. அதைச் சாக்கிட்டு சாதித்தவர்களை புழுதிவாரித் தூற்றவேண்டிய அவசியமும் எனக்கில்லை. தங்கள் இயலாமைகளால், இன்னும் என்னென்னவோ சிக்கல்களால் வீழ்ந்தவர்களை எல்லாம் இலக்கியத்தின் களப்பலிகளாக சித்தரித்து இலக்கியம் என்னும் செயல்பாட்டின்மேலேயே அடுத்த தலைமுறைக்கு அவநம்பிக்கையையும் சோர்வையும் உருவாக்க விரும்புவதுமில்லை. நான் மெய்யான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு சாதித்தவர்க்ளையே முன்வைக்கிறேன். நான் சொல்ல விரும்புவது இதுதான். மெய்யாகவே இலக்கியத்தை தவமென இயற்றியவர்கள் எவரும் அப்படி மறைந்துபோனதில்லை. எஸ்.வையாபுரிப் பிள்ளையோ பெரியசாமித் தூரனோ வரலாற்றில் பேராளுமைகள் மங்கிப்போன பின்னரும் ஒளியுடன் நீடிக்கத்தான் செய்கிறார்கள். எழுத்தில் வென்ற எவரும் தனிப்பட்ட சிக்கல்கள் கொண்டவர்கள் என்றாலும் முற்றிலும் கைவிடப்பட்டதுமில்லை. பிரான்ஸிஸ் கிருபாவோ, விக்ரமாதித்தனோ. அவர்களுக்கான வாசகர்கள், புரவலர்கள் என்றுமிருப்பார்கள். ஆம், இலக்கியம் எவரையும் களப்பலி கொண்டதில்லை. ஒரு மெய்யான உபாசகனைக்கூட இந்த தெய்வம் கைவிட்டதில்லை. நம்புங்கள். https://www.jeyamohan.in/208907/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR1y1yddtXhZM9kg9TbJuH94XkB2SdlMTZ7sszBICyjUKVaQeFP98lMI864_aem_Pp9n2qGyQA5KRXnsH_8Y9Q
  17. இனவாதத்துக்கு எதிரான அரசாங்கத்தின் உறுதிப்பாடும் அதிகாரப் பரவலாக்கத்தில் அதன் நிலைப்பாடும் Veeragathy Thanabalasingham on December 9, 2024 Photo, SOUTH ASIAN VOICES தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு நாளடைவில் வரக்கூடிய சவால்கள் பிரதானமாக இனவாத அரசியல் சக்திகளிடமிருந்தே வரக்கூடும் என்று அதன் தலைவர்கள் நினைக்கிறார்கள் போலும். புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை நவம்பர் 21 சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்து தனது அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இனவாத அரசியலும் மதத் தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று சூளுரைத்தார். தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்காக நாடு நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த மிகவும் உறுதியான சந்தர்ப்பம் தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை நாடாளுமன்ற தேர்தல் வெளிக்காட்டியிருக்கிறது என்றும் எங்களுக்கு இடையில் வேறுபட்ட அரசியல் கோட்பாடுகள் இருந்தாலும், இனவாத அரசியலுக்கு மீண்டும் இடம்கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார். அதை தொடர்ந்து கடந்தவாரம் ஜனாதிபதியின் உரை மீதான நாடாளுமன்ற விவாதத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய இன, மத வேறுபாடுகளைக் கடந்து முன்னேறுவதற்கு மக்களுக்கு முன்னாலுள்ள பொன்னான சந்தர்ப்பத்தை பாழ்படுத்தக்கூடியதாக தோற்கடிக்கப்பட்ட அரசியல் சக்திகள் அரசியல் அனுகூலத்துக்காக இனவாதத்தையும் பிளவுகளையும் தூண்டுவதற்கு மேற்கொள்ளக்கூடிய எந்த முயற்சியையும் ஒடுக்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயங்கப்போவதில்லை என்று எச்சரிக்கை செய்தார். அதே போன்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உட்பட பல அமைச்சர்களும் தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகளும் இனவாத அரசியலுக்கு இனிமேல் நாட்டில் இடமில்லை என்று கூறினர். அவர்களைப் பொறுத்தவரை, “இன, மத வேறுபாடுகளின்றி மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கிறார்கள். அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக இனவாதமும் மதத்தீவிரவாதமும் பயன்டுத்தப்படுவதைத் தடுக்கவேண்டியது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு” இலங்கைக்கு சாபக்கேடாக இருந்துவரும் இனவாதத்துக்கும் மதத் தீவிரவாதத்துக்கும் எதிரான ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் இந்த உறுதியான நிலைப்பாடு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. வடக்கு, கிழக்கில் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளை பயன்படுத்தி இனவாதத்தை தூண்டும் நோக்குடன் சமூக ஊடகங்களில் பதிவுகளைச் செய்தவர்களுக்கு எதிராக உடனடியாகவே சட்ட நடவடிக்கை எடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது. முன்னைய தேர்தல்களைப் போலன்றி இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் இனவாத அரசியல் முனைப்புப் பெறவில்லை. அதே சூழ்நிலையை தொடர்ந்தும் உறுதி செய்வதில் அரசாங்கம் அக்கறை காட்டுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. வடக்கு, கிழக்கு உட்பட நாடு பூராவும் தங்களுக்கு மக்கள் அளித்த மாபெரும் ஆதரவை தேசிய ஐக்கியத்துக்காக தரப்பட்ட ஒரு ஆணையாக தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் நோக்குகிறார்கள். இனவாதம் தோற்றுவித்த பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமானதும் உருப்படியானதுமான தீர்வுகளைக் காண்பதில் அரசாங்கத் தலைவர்கள் எந்தளவுக்கு அக்கறை காட்டுவார்கள் என்பதிலும் அந்த நோக்கத்துக்காக அவர்களால் பெரும்பான்மையின சிங்கள மக்களின் நம்பிக்கையை எந்தளவுக்கு வென்றெடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதிலேயே இனவாதத்துக்கு எதிராக அரசாங்கம் “பிரகடனம் செய்திருக்கும் போரின்” வெற்றி தங்கியிருக்கிறது. அதேவேளை, தாங்கள் மீண்டும் தலையெடுப்பதற்கு வாய்ப்பான சந்தர்ப்பங்களுக்காக இனவாத சக்திகள் காத்துக் கொண்டிருக்கின்றன. தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த மகத்தான தேர்தல் வெற்றியையும் குறிப்பிட்ட சில கடும்போக்கு தேசியவாத அரசியல்வாதிகளுக்கு கிடைத்த தோல்வியையும் இனவாதத்தின் தோல்வியாகக் கருதவும் முடியாது. இலங்கையின் இனவாத அரசியலின் தன்மையையும் அதன் வரலாற்றையும் நன்கு விளங்கிக் கொண்டவர்களுக்கு இது விடயத்தில் எந்த குழப்பமும் இருக்காது. மாவீரர் தினத்தில் நினைவேந்தல்களைச் செய்வதற்கு அரசாங்கம் தமிழ் மக்களை அனுமதித்தைக் கூட சகித்துக்கொள்ள முடியாமல் தென்னிலங்கை சிங்கள கடும்போக்கு அரசியல்வாதிகள் கண்டனம் செய்தார்கள். அதற்கு முதல் யாழ்ப்பாணத்தில் சில இராணுவ முகாம்களை அகற்றி அந்த நிலங்களை அவற்றின் உரிமையாளர்களான குடிமக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபோது தேசிய பாதுகாப்பில் தாங்கள் மாத்திரமே அங்கறை கொண்டவர்கள் என்ற நினைப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ போன்றவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். ஆனால், முன்னைய ஆட்சியாளர்களைப் போலன்றி தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் குறிப்பாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால போன்றவர்கள் போரில் இறந்த தங்களது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை இருக்கிறது என்று கூறி அரசாங்கத்தின் நடவடிக்கையை நியாயப்படுத்தினார்கள். இவ்வாறாக அரசாங்கத் தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மனநிலை மாற்றம் படிப்படியாக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வென்றைக் காண்பதற்கான முயற்சிகள் தொடர்பான அணுகுமுறைக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். குறிப்பாக, இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு கிடைத்திருக்கும் பொன்னான சந்தர்ப்பம் என்று அரசாங்கத் தலைவர்கள் வர்ணிக்கின்ற தற்போதைய சூழ்நிலையை சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு குறிப்பாக அதிகாரப் பரவலாக்கத்துக்கு எதிராக தென்னிலங்கையில் நிலவும் ஆழமான எதிர்ப்புணர்வுகளை படிப்படியாக அகற்றுவதற்கும் பயன்படுத்த வேண்டும். 1987 ஜூலை இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து மாகாண சபைகளை அமைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தம் 37 வருடகாலமாக நாட்டின் அரசியலமைப்பில் இருந்துவருகின்ற போதிலும், அதை நடைமுறைப்படுத்துவதில் மாத்திரமல்ல, சிங்கள மக்கள் மத்தியில் பேசுவதற்கே தென்னிலங்கையின் பிரதான அரசியல் சக்திகளிடம் ஒரு மனத்தடை இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தொடக்கத்தில் இருந்தே 13ஆவது திருத்தத்தை எதிர்த்துவந்த போதிலும் காலப்போக்கில் மாகாண சபைகளில் அங்கம் வகித்தது. மாகாண சபைகள் முறைமை இந்தியாவினால் இலங்கை மீது திணிக்கப்பட்டது என்பது தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் நிலைப்பாடாக இருக்கின்ற போதிலும், அதை அரைகுறையாகவேனும் நடைமுறைப்படுத்துவதை அரசாங்கங்களினால் தவிர்க்க முடியவில்லை. இந்தியாவுடனான உடன்படிக்கை ஒன்றின் விளைவாக மாகாண சபைகள் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்காவிட்டால் இலங்கையில் என்றைக்காவது ஏதாவது ஒரு உருப்படியான அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாட்டை எம்மால் காணக்கூடியதாக இருந்திருக்குமா? தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் கடந்த காலத்தில் அரசாங்கங்களுடன் தமிழ்த் தலைவர்கள் செய்துகொண்ட உடன்படிக்கைகள் எல்லாமே தென்னிலங்கை இனவாத சக்திகளின் எதிர்ப்பின் காரணமாகவே கிழித்தெறியப்பட்டன. இந்தியாவின் தலையீட்டின் விளைவாகக் கொண்டுவரப்பட்ட ஒரே காரணத்தினால் மாத்திரமே மாகாண சபைகள் முறை இன்று வரை விட்டு வைக்கப்பட்டிருக்கிறது என்பதுதானே உண்மை. தங்களது பிரச்சினைகளுக்கு மாகாண சபைகள் முறையை ஒரு தீர்வாக தமிழ் மக்கள் விரும்புவார்களாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ஜனாதிபதியாக வருவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் கூறியதை அநுர குமார திசாநாயக்க மறந்திருக்கமாட்டார். உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பின்னர் தமிழ் மக்களை நடைமுறைச் சாத்தியமானதும் விவேகமானதுமான பாதையில் வழிநடத்தத் தவறிய தமிழ் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபை முறைமை தொடர்பில் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை அரசாங்கம் இனிமேலும் கருத்தில் எடுக்கத் தேவையில்லை. இந்தத் தமிழ்க் கட்சிகள் இதுகாலவரையான தங்களது அரசியல் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால் தமிழ் மக்களிடமிருந்து மேலும் தனிமைப்படும் ஆபத்தே அவர்களைக் காத்திருக்கிறது. நீண்டகால அடிப்படையில் நிலையான அரசியல் தீர்வொன்றை நோக்கிய பயணத்தில் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக மாகாண சபை தேர்தல்களை நடத்தி 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கொழும்பில் அரசாங்கத் தலைவர்களுடனும் இந்திய இராஜதந்திரிகளுடனும் பேசும்போது கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் அந்த விடயத்தில் அதற்கு அப்பால் எதுவும் செய்வதில்லை. தமிழ் மக்களிடம் ஒரு கற்பனாவாத தமிழ்த் தேசியவாதம் பற்றியே அவர்கள் பேசுவார்கள். இந்த தடவை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மூலமாக அவர்கள் எந்த படிப்பினையையாவது பெற்றிருக்கிறார்களா என்பது சந்தேகமே. மாகாண சபைகளின் எதிர்காலம் குறித்து ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் ஊடக நேர்காணல்களில் தெரிவித்த கருத்துக்களை அடுத்து தோன்றிய சர்ச்சைக்குப் பிறகு அது தொடர்பில் விளக்கம் அளித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும் வரை மாகாண சபைகள் தற்போதுள்ளதைப் போன்று அப்படியே இருக்கும் என்று கூறினார்கள். ஆனால், கடந்த ஆறு வருடங்களாக மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடத்தப்படாமல் அவை ஜனாதிபதியின் பிரதிநிதிகளான ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழேயே இருந்துவருகின்றன. அடுத்தவருட இறுதியில் மாகாண சபை தேர்தல்களை நடத்தப் போவதாக கடந்த வாரம் தன்னைச் சந்தித்த இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுவிடம் ஜனாதிபதி திசாநாயக்க கூறியதாக செய்திகள் வெளியாகின. ஆனால், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதாகத் தெரியவரவில்லை. சமஷ்டி முறையின் அடிப்படையிலான தீர்வை வலியுறுத்திய அவர்களிடம் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் தொடங்கும்போது அதைப் பற்றி பரிசீலிக்கலாம் என்று ஜனாதிபதி மேலோட்டமாக கூறியிருக்கிறார். ஆனால், புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு மூன்று வருடங்கள் எடுக்கும் என்றும் அப்போது மாகாண சபைகள் மற்றும் அதிகாரப்பரவலாக்கல் உட்பட முக்கியமான விவகாரங்கள் குறித்து பொதுப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு போதுமான வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த வாரம் செய்தியாளர்கள் மகாநாட்டில் கூறினார். மாகாண சபைகள் தொடர்பில் உறுதியான தீர்மானம் எதையும் தாங்கள் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மூன்று வருடங்கள் என்பது அரசியலைப் பொறுத்தவரை ஒரு நீண்டகாலமாகும். அந்த இடைப்பட்ட காலத்திற்குள் அரசியல் நிலைவரங்களில் மாற்றங்கள் கூட ஏற்பட்டு விடலாம். இலங்கையில் புதிய அரசியலமைப்பை கொண்டுவந்த எந்த அரசாங்கமும் இவ்வளவு நீண்டகாலம் தாமதித்ததில்லை. முதலாவது குடியரசு அரசியலமைப்பை 1972 மே மாதம் கொண்டுவந்த பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1971 ஜே.வி.பி. கிளர்ச்சி இல்லாவிட்டால் முன்கூட்டியே அந்த அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியிருக்கும். ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்த ஒரு வருடத்துக்கும் சற்று அதிகமான காலத்திற்குள் இரண்டாவது அரசியலமைப்பை கொண்டுவந்தது. அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசாங்கம் முன்னெடுத்த அரசியலமைப்பு வரைவுச் செயன்முறை நான்கு வருடங்கள் (2015 – 19) நீடித்து இடைக்கால அறிக்கையுடன் முடிவுக்கு வந்தது. அந்த செயன்முறையை நிறைவுசெய்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி திசாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்தார். தனது போட்டி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தங்களது விஞ்ஞாபனங்களில் உறுதியளித்ததை போலன்றி திசாநாயக்க 13ஆவது திருத்தத்தை பற்றி குறிப்பிடுவதை திட்டமிட்டே தவிர்த்துக்கொண்டார். புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் தேசிய ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திட்டத்தை பொறுத்தவரை, ஒரு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப் போவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய திசாநாயக்கவும் அந்த பதவியில் மூன்று வருடங்கள் நீடிக்கப் போகிறார் என்பதாகும். புதிய அரசியலமைப்பில் புதிய தீர்வுத் திட்டத்தை முனவைக்கப்போவதாகக் கூறும் அரசாங்கம் அந்த இடைப்பட்ட மூன்று வருட காலத்திற்குள் தற்போதுள்ள அதிகாரங்களுடனாவது மாகாண சபைகளை இயங்கவைக்குமா? அடுத்த வருட இறுதியில் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படும் என்று தமிழரசு கட்சி நாடாளுமன்ற குழுவிடம் ஜனாதிபதி கூறியிருக்கிறார். உண்மையிலேயே உள்ளூராட்சி தேர்தல்களையும் விட முன்கூட்டியே நடத்தப்பட வேண்டியவை மாகாண சபை தேர்தல்களே. ஆறு வருடங்களாக அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரமே சாத்தியமானளவு விரைவாக உள்ளூராட்சி தேர்தல்களை அடுத்த வருடம் ஜனவரியில் அல்லது பெப்ரவரியில் நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டிருக்கிறது. மாகாண சபை தேர்தல்கள் தாமதிக்கப்படுவதற்கு எதிராக தமிழ்க் கட்சிகள் கூட நீதிமன்றத்தை நாடுவதில் அக்கறை காட்டவில்லை. உள்ளூராட்சித் தேர்தல்கள் முடிவடைந்த பிறகு அடுத்த வருட இறுதிவரை காத்திருக்காமல் அரசாங்கம் மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டும். அரசியலமைப்பில் புதிய தீர்வுத்திட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன்னதாக தற்போது கைவசம் இருக்கும் மாகாண சபைகளை முழுமையான அதிகாரங்களுடன் இயங்க வைப்பதே முக்கியமானதாகும். ஏனென்றால், 13ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களையே 37 வருடங்களாக முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கும் நிலையில் அதில் உள்ளதையும் விட கூடுதலான அதிகாரங்கள் கொண்ட ஏற்பாட்டை எவ்வாறு புதிய அரசியலமைப்பில் எதிர்பார்க்கமுடியும்? 13ஆவது திருத்தத்தில் இருக்கின்ற அதிகாரங்களாவது முழுமையாக புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுமா என்று கிளம்புகின்ற சந்தேகத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. அடுத்த வாரம் ஜனாதிபதி திசாநாயக்க புதுடில்லியில் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைகள் விவகாரத்தை இந்தியத் தலைவர்கள் அவரின் கவனத்துக்குக் கொண்டு வருவார்கள். முன்னைய ஜனாதிபதிகளைப் போன்று புதுடில்லியில் ஒன்றையும் கொழும்பில் வேறு ஒன்றையும் கூறாமல் திசாநாயக்க வித்தியாசமாக நடந்துகொள்வார் என்று நம்புவோமாக. சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கும் அதிகாரப்பரவலாக்கலுக்கும் எதிராக தென்னிலங்கை அரசியல் சமுதாயத்திடமும் மக்களிடமும் இருக்கின்ற ஆழமான வெறுப்புணர்வை அகற்றுவதற்கு தனக்கும் அரசாங்கத்துக்கும் தற்போது இருக்கும் பேராதரவைப் பயன்படுத்தி ஜனாதிபதி திசாநாயக்க துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்காமல் இனவாதத்துக்கு எதிராக பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. முதலில் தேசிய மக்கள் சக்தி தன்னிடம் இருக்கும் மனத்தடையை முழுமையாக அகற்ற வேண்டும். வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/11888
  18. “என் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள்”: இலங்கை தமிழர் கோரிக்கை! KaviDec 12, 2024 08:14AM இந்தியா வந்து பல ஆண்டுகள் ஆகியும் அடையாள அட்டை வழங்காமல், சொந்த நாட்டுக்கும் அனுப்பாமல் அலைக்கழிக்கப்படுவதாக ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர் மண்டியிட்டு கண்ணீர் விட்டு கதறியவாறு போராட்டத்தில் ஈடுபட்டது பேசுப்பொருளாகி உள்ளது.. இலங்கை தமிழரான 37 வயது ஜாய், தனக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், இலங்கைச் செல்ல அனுமதி வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக தமிழக அரசு அலைக்கழிப்பதாகக் கூறி, நேற்று (டிசம்பர் 11) ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் மண்டியிட்டு கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ”இலங்கை தலைமன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நான் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, கடந்த 1997-ம் ஆண்டு படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது, யாரோ எங்களது படகை எடுத்து வந்து தனுஷ்கோடி பகுதியில் இறக்கிவிட்டனர். அதன்பின் என்னை தனுஷ்கோடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். நான் மூன்று முறை போலீஸாரால் கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் புழல் சிறையில் இருந்துள்ளேன். தற்போது மண்டபம் முகாமில் எனக்கு இலங்கை தமிழருக்கான பதிவு, அடையாள அட்டை, சலுகைகள் இன்றி தங்க வைத்துள்ளனர். எனது தாய், தந்தையைப் பார்க்க இலங்கைக்கும் செல்ல முடியவில்லை. பல நேரம் கோயில்களில் போடும் அன்னதானம் வாங்கி சாப்பிட்டுவிட்டு எங்காவது உறங்குகிறேன். இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படி பலமுறை இலங்கை அகதிகள் முகாம் நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார். அதனையடுத்து, ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸார் இளைஞர் ஜாயை அழைத்துச் சென்று அறிவுரைகள் கூறி, கியூ பிரிவு போலீஸாரை அணுகுமாறு அனுப்பி வைத்தனர். இலங்கை தமிழர் ஜாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவர் மீது நாகர்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், அங்குள்ள நீதிமன்றம் உடனடியாக ஜாயை இலங்கையில் இருக்கும் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனர். மேலும், இவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும், இல்லை என்றால் உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணாடியை உடைத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததும் குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/tamil-nadu/sri-lankan-tamil-kneel-and-cry-in-protest-at-the-ramanathapuram-collectorate/
  19. கிழக்கில் அருணின் அரசியல் முக்கியத்துவம்……! December 11, 2024 — அழகு குணசீலன் — “நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பு தேவை. அந்த அரசியல் அமைப்பில் இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும்……. புதிய அரசியல் அமைப்பில் பதின்மூன்றாவது திருத்தம் மட்டும் அல்ல பழைய அரசியல் அமைப்பில் செய்யப்பட்டுள்ள இருபத்தியிரண்டு திருத்தங்களும் இல்லாமல் போகும்….” . இது வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவின் தர்க்க ரீதியான குழப்பங்களை தவிர்த்த கருத்து. அண்மையில் ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வாவினால் கூறப்பட்டு, பின்னர் மறுக்கப்பட்ட/திருத்தப்பட்ட தெளிவற்ற கருத்தை சொல்லாடல் அரசியலுக்குள் சிக்காமல் தர்க்கரீதியாக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் பிரதி அமைச்சர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் என்.பி.பி. அரசாங்கத்தில் கிழக்கு மாகாணத்தின் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக அருண் ஹேமச்சந்திர அதிக முக்கியத்துவத்தையும், மக்களின் கவனஈர்ப்பையும் பெற்ற ஒருவராக உள்ளார். அருண் ஜே.வி.பி./என்.பி.பி. யின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் என்ற வகையிலும் ஆளும் கட்சியின் முக்கிய புள்ளியும், கட்சிதலைமைத்துவத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒருவருமாகும். திருகோணமலை மாவட்டத்தில் என்.பி.பி.யில் அதிகூடிய 38,368 விருப்புவக்குகளை பெற்றவர். இரண்டாவது நிலையில் வந்த ரொஷான் அக்மீமன 25, 814 விருப்புவாக்குளையே பெற்றிருந்தார். இதற்கு மூன்று சமூகங்களும் அருணுக்கு விருப்பு வாக்குகளை அளித்ததே காரணம். இந்த அடிப்படையிலேயே ஜனாதிபதியினால் சர்வதேச உறவுகளைக்கொண்ட வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். பூகோள அரசியல், பொருளாதார கேந்திர முக்கியத்துவம் கொண்டதும், பிராந்திய, சர்வதேச வல்லரசுகளின் கழுகுப்பார்வைக்கு உட்பட்டதுமான திருகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு பங்களிப்பு செய்து கணிசமான அந்நியச் செலாவணியை இலங்கைக்கு பெற்றுத்தரும் ஒரு மாகாணம் என்ற அடிப்படையிலும் ஜனாதிபதியின் இந்த தேர்வு மிகவும் பொருத்தமானது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. வெளியுறவு அமைச்சராகவிருந்த லக்ஷ்மன் கதிர்காமருக்கு பின்னர் வெளியுறவுத்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒரு தமிழர் இவர். அதேவேளை அவரது கட்சியின் கொள்கைக்கு ஏற்ப அவர் பற்றிய தகவல் விபரத்தில், தேசியம்: “இலங்கையர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மறுபக்கத்தில் சர்வதேச, உள்நாட்டு ஊடகப்பதிவுகள் இதற்கு முரணாக அவரை “இலங்கை”அரசியல்வாதி என்று அடையாளம் காண்பதற்கு பதிலாக “தமிழ்”அரசியல்வாதி என்று அடையாளப்படுத்துகின்ற போக்கே முதன்மை பெறுகிறது என்பதையும் இங்கு குறிபிட்டே ஆகவேண்டும். இந்த இரண்டு அடையாளங்களையும் சமத்துவமாக, சமாந்தரமாக,சமகாலத்தில் பேணுவதே பன்மைத்துவ சமூக கட்டமைப்பின் அடிப்படை சமூக, ஜனநாயக, அரசியல் உரிமையாக இருக்கமுடியும். இல்லையேல் கடந்த காலங்கள் போன்று அரசாங்க ஆதரவு தமிழ், முஸ்லீம் அரசியல்வாதிகளை” சிங்களவர்களாக” பார்க்கின்ற இனவாத நோக்கே மேலோங்குமேயன்றி அரசாங்கம் எதிர்பார்க்கின்ற “இனவாதம்” அற்ற இலங்கை சமூகங்களை உருவாக்குவதற்கான நம்பிக்கையை அது வழங்காது. அருண் ஹேமச்சந்திரவின் முக்கிய அரசியல் நியமனங்களின் பின்னணியில் ஜனாதிபதிக்கும், அவரது கட்சிக்கும் “கிழக்கு” குறித்து சில இலக்குகள் இல்லாமல் இவை ஒன்றும் இடம்பெறவில்லை. 1. ஒப்பீட்டளவில் சிங்கள மக்கள் மத்தியில் பலமாகவும், தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் பலவீனமாகவும் உள்ள என்.பி.பி./ஜே.வி.பி.யை கிழக்கில் கட்டி எழுப்புதல். 2. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் இடம்பெற்ற “அநாகரீக சண்டை அரசியலை” முடிவுக்கு கொண்டு வருதல். 3. அருண் ஹேமச்சந்திராவை கிழக்குமாகாண முதலமைச்சர் வேட்பாளராக தயார் படுத்துதலில் அதற்கான சமூக, பொருளாதார, அரசியல் சூழலை ஏற்படுத்துதல். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் என்.பி.பி. கிழக்கு மாகாணத்திற்கான 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் (திருகோணமலை:4, மட்டக்களப்பு:5, அம்பாறை:7) 7 உறுப்பினர்களை ( முறையே 2+1+4) பெற்றுள்ளது. அடுத்த இரண்டாவது நிலையில் தமிழரசுக்கட்சி (முறையே (1+3+1) 5 உறுப்பினர்களை பெற்றுள்ள சூழலில் மற்றைய கட்சிகள் 4 உறுப்பினர்களை பெற்றுள்ளன. இந்த 7:5:4 என்ற நிலையானது இன்றைய நிலையில் என்.பி.பி.க்கு திருப்பி அளிப்பதாக இல்லை. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவில் என்.பி.பி. திருப்தி அடையவில்லை. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் 7:9 என்ற அடிப்படையில் வாக்குகளை பார்த்தால் கிழக்குமாகாண சபையை என்.பி.பி. கைப்பற்றுவது உறுதியாக இல்லை. இதை சீர்செய்வதற்கான பணி பிரதியமைச்சர் அருணுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கொழும்பு ஜே.வி.பி. வட்டாரங்களிலிருந்து கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த காய் நகர்வின் ஒரு பகுதியே அம்பாறையில் தேசிய பட்டியலில் முஸ்லீம் பிரதிநிதி ஒருவரை உள்வாங்கி இருப்பது . வடக்கு, கிழக்கில் கிழக்கு மாகாணசபையை கைப்பற்றும் இலக்கையும், வடக்கில் எதிர்க்கட்சி நிலையை எட்டும் இலக்கையும் அரசாங்கம் கொண்டுள்ளது. இதன் மூலம் அரசியல் அமைப்பு திருத்தம், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று வரும் போது இந்த “இலங்கையர்” அங்கீகாரம் சர்வஜன வாக்கெடுப்புக்கு அப்பால் வடக்கு கிழக்கின் இரண்டாவது – துணை அங்கீகாரமாக காட்டப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். அத்துடன் பாரம்பரிய தாயகக்கோட்பாட்டை அது நொண்டியாக்கும். கிழக்கு மாகாணத்தில் என்.பி.பி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் மூன்று இலட்சத்திற்கும் சற்று குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. தமிழரசுக்கட்சி ஏறக்குறைய 1,67,000 வாக்குகளை பெற்றுள்ளது. எனினும் மற்றைய பிரதான எதிர்க்கட்சிகள் பெற்ற மிகுதி வாக்குகளோடு ஒப்பிடுகையில் என்.பி.பி.யின் வாக்குகள் குறைவானவை. இதனால் கிழக்கில் இந்த கட்சிப்பணி அவசியமாகிறது. கிழக்கில் சிங்கள,தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்குபெறுகையை அதிகரித்தால் வடக்கு, கிழக்கு துண்டாடலின் அரசியல் பயனை ஜே.வி.பி. அனுபவிக்க கூடியதாக இருக்கும். எனினும் இது இனப்பிரச்சினை தீர்வினால், தமிழ் முஸ்லீம் மக்களின் அரசியல் அபிலாஷைகளினால் நிர்ணயிக்கப்படுகின்ற ஒரு விடயமாக அமையப் போகிறது என்பதால் “இலங்கையர்” கோஷத்தோடு இந்த இலக்கை அருண் ஹேமச்சந்திர ஊடாக அடைவது அவ்வளவு இலகுவானதல்ல. அதே வேளை இவரைத் தவிர மூவினமக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைமைத்துவம் என்.பி.பி.க்கு கிழக்கில் இல்லை. “கிழக்கு மாகாண சபைக்கு சிங்கள முதலமைச்சரா?” என்று கேட்கின்ற சாணக்கியனுக்கு அருண் மூலம் பதிலளித்து இருக்கிறார் அநுர. இந்த மாகாணசபை குறி பார்த்து சுடும் அரசியலில் என்.பி.பி.மட்டும் அல்ல முஸ்லீம் காங்கிரஸும் இறங்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு தேசியப்பட்டியல் நியமனம் ஏறாவூர் நளீம் ஹாயியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மூலம் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஊர்ச்சண்டை பிளவுகளுக்கு ஒட்டுப் போட்டுள்ளார் ஹக்கீம். மட்டக்களப்பு மாவட்டத்தில் சிதறும் முஸ்லீம் வாக்குகளை மாகாணசபை அதிகாரத்தை நோக்கி இணைப்பதற்கான மற்றொரு முயற்சி இது. இந்த தந்திரோபாய நகர்வுகள் எதுவும் இன்றி தமிழரசுக்கட்சியில் முதலமைச்சர் வேட்பாளர் நியமனத்தில் மற்றொரு பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்பே அதிகமாக காணப்படுகிறது. “பிரிந்தவர் கூடினால் கேட்கவும் வேண்டுமா ?” என்று பொசிட்டிவாக கேட்பதற்கு இங்கு எதுவும் இல்லை. யாழ்ப்பாண முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் மாகாணசபைகள் தொடர்பான தனிநபர் பிரேரணையை, சாணக்கியன் எம்.பி. தொடரப்போவதாகவும் அதனூடாக மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கான அழுத்தத்தை அரசாங்கத்திற்கு கொடுக்கப் போவதாகவும் விளம்பரப்படுத்தப்படுகிறது. 159 உறுப்பினர்களை கொண்ட அரசாங்கத்தரப்புக்கு இந்த அழுத்தம் எப்படி அமையும் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வெளிச்சம். சஜீத், ஹக்கீம் அணிகளை நம்பி அதில் தொங்குகிறது தமிழரசுக்கட்சி. கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரமும் இதில் தன்பங்கை செலுத்த தவறப்போவதில்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் அதிக இடத்தை பிடித்திருந்தன. கூட்டங்களை கௌரவமான அரசியல், அதிகாரிகள் கூட்டமாக விடயதானம் சார்ந்து ஒழுங்காக நடாத்த முடியாத நிலையே இருந்தது. அபிவிருத்திக்குழுக் கூட்டங்களை நடாத்தி முடித்தல் என்பதைவிடவும் குழப்பி முடித்தல் என்பது ஒருதரப்பு அரசியல் இலக்காக இருந்தது. தற்போது அடையாள அரசியல் பேசும் கட்சிகளான தமிழரசுக்கட்சி மூன்று உறுப்பினர்களையும், முஸ்லீம் காங்கிரஸ் இரண்டு உறுப்பினர்களையும் (தேசிய பட்டியல் ஒருவர்) கொண்டுள்ள நிலையில், அரசியல் அனுபவமேயற்ற, பலவீனமான என்.பி.பி. உறுப்பினர் ஒருவருடன் அரசாங்க தரப்பு செயற்படுவது கருத்து முரண்பாடான சந்தர்ப்பங்களில் மிகவும் கஷ்டமானதாக இருக்கும். இதற்கு பலம் சேர்க்கும் வகையிலேயே பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர கொழும்பு தேசிய அரசியலில் அவருக்குள்ள வேலைப்பளுவுக்கு மத்தியிலும் திருகோணமலக்கு மட்டும் அல்ல மட்டக்களப்புக்கும் ஒருங்கிணைப்பு குழுவுக்கு தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பு குழுகூட்ட கேள்விகள் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டால் அதற்கு பதிலளிக்கின்ற பந்தும் நேரடியாக அவரிடமே இருக்கிறது. மட்டக்களப்பு ஒருங்கிணைப்பு கூட்டங்களில் ஆரம்பத்தில் கட்சி அரசியலில் ஜனா சாணக்கியனோடு ஒத்துழைத்தார். வியாழேந்திரன் பிள்ளையானோடு ஒத்துழைத்தார். பின்னர் இந்த ஒத்துழைப்பு இரு தரப்பிலும் நீடிக்கவில்லை. அப்போது குழப்பும் வேகம் குறைந்து காணப்பட்டது. கச்சேரிக்கு வெளியே வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முன்னாள் மட்டக்களப்பு மேயரும், அன்றைய முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சாணக்கியனின் முதுகை பலப்படுத்தினர். இப்போது அவர்களில் ஒருவரான சிறிநேசன் எம்.பி.யாகியுள்ளபோதும் தமிழரசுக்கட்சியின் சுமந்திரன், சிறிதரன் அணி அரசியல் இவர்களுக்கு இடையே குறுக்கே நிற்கிறது. ஜனாதிபதியுடனான சந்திப்பு கேள்விகளும், பதில்களும் பாஸ்ட்பேப்பர் மீட்டல் வகுப்பாக ஊடகங்களில் திருப்பி திருப்பி அரைக்கப்படுவதற்கு இதுவே காரணம்.முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்களின் ஒத்துழைப்பை தமிழரசுக்கட்சி பெறமுடியாத சூழலில் அருண் ஹேமச்சந்திராவுக்கு கூட்டங்களை கொண்டு நடாத்துவதற்கான சூழலை இது இலகு படுத்துகிறது. கிழக்கு மாகாண சபை அதிகாத்தை கைப்பற்றுதல் மூன்று சமூகங்களினதும் அரசியல் எதிர்காலத்தை -திசையை நிர்ணயிப்பதில் மிகவும் முக்கியமானது. தேசிய ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தலில் இருந்து பிராந்திய அடிப்படையிலும், அதிகாரப்பகிர்விலும் இது வேறுபட்டது என்பதால் பிராந்திய கட்சிகள் இதில் அதிக ஆர்வம் காட்டுவது வழமைக்கு மாறானது அல்ல. எனினும் தேசியக்கட்சி ஒன்று தென்னிலங்கைக்கு வெளியே பிராந்திய மட்டத்தில் தன்னைத் தக்க வைத்துக்கொள்வதற்கும் இது அவசியமாகிறது. அதுவும் அநுர அலை நாடாளுமன்ற தேர்தலில் ஏற்படுத்திய தாக்கத்தை தொடர திசைகளை கடந்த என்.பி.பி.க்கு இது இன்னும் முக்கியமானது. https://arangamnews.com/?p=11527
  20. இந்தியாவின் உதவி எப்போதும் தேவை – வடக்கு ஆளுநர் வேதநாயகன் December 12, 2024 11:44 am இந்தியாவின் ஒத்துழைப்பும், உதவியும் எப்போதும் எங்களுக்குத் தேவை என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத் தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது, மகாகவி சுப்பிரமணியம் பாரதியாரின் 142 ஆவது பிறந்த நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு ஆளுநர் உட்பட அதிதிகள் மலர்மாலை அணிவித்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், எங்கள் சேவைகள் மெருகூட்டப்படுவதற்குப் பயிற்சிகள் முக்கியம் என்று குறிப்பிட்டார். தாம் பதவிக்கு வந்த காலத்தில் இவ்வாறான பயிற்சிகளுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறவில்லை என்றும், தற்போது வழங்கப்படும் இந்தப் பயிற்சிகளை உத்தியோகத்தர்கள் உரியமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். மனித வளத்தை மேம்படுத்தாவிட்டால் மக்களுக்கான சேவைகளைச் சிறப்பாக வழங்க முடியாது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். ஐரெக் திட்டத்தின் கீழ் இந்தியாவிலுள்ள தரமான கல்வி நிலையங்களிலேயே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்றும், அந்தப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக சிறந்த சேவைகளை எமது மக்களுக்கு வழங்கக்கூடியதாகவும் இருக்கும் என்றும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார். “இந்தியா எமக்குப் பல வழிகளிலும் உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றது. அது தொடர வேண்டும். குறிப்பாக வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் விவசாயம் முக்கியமானது. விவசாயத்துறை சார்ந்த பயிற்சிகளை வழங்குவதற்கு முன்வரவேண்டும்.” – என்றும் ஆளுநர் தனது உரையில் கோரிக்கை முன்வைத்தார். வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு இந்தியத் துணைத்தூதரகத்தின் சார்பில் சாதகமான பதில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிறி.சற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். https://oruvan.com/indias-help-is-always-needed-northern-governor-vedanayagan/
  21. அநுரவின் இந்தியப் பயணம் – பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன? December 12, 2024 11:26 am இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தப் பயணத்தின் போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார். அத்துடன், பல்வேறு துறையினரையும் ஜனாதிபதி சந்திக்க திட்டமிட்டுள்ளதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முதலீடுகளை ஈர்க்கும் சில சந்திப்புகளையும் அவர் நடத்த உள்ளார். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தீர்மானங்கள் இல்லை ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட உயர்மட்ட அரச குழுவொன்று புதுடில்லி செல்ல உள்ளது. இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சில ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட உள்ளன. அநுரகுமார திசாநாயக்க இந்திய விஸ்தரிப்புவாதத்தை பேசிய ஜே.வி.பியின் தலைவராக உள்ள போதிலும் இலங்கையின் அடுத்த மக்கள் தலைவராக உருவெடுக்க போகிறார் என்பதை புலனாய்வு தகவல்கள் ஊடாக உணர்ந்த புதுடில்லி கடந்த ஆண்டு அவரை புதுடில்லிக்கு அழைத்து சிவப்பு கம்பள வரவேற்பை அளித்தது. இந்தியா தொடர்பான ஜேவிபியின் வரலாற்று நிலைப்பாடு அநுரவின் இந்தப் பயணத்தின் பின்னர் சில மாற்றங்களுக்கு உள்ளானது என்பதுடன், இந்தியாவையை பகைத்துக்கொண்டு இலங்கையை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டுசெல்வது கடினம் என்பதையும் ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி உணர்ந்ததுடன், பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எந்தவொரு தீர்மானத்தையும் எதிர்காலத்தில் அமையும் தமது அரசாங்கம் எடுக்காதெனவும் தெரிவித்திருந்தார். பேசுபொருளாகுமா கச்சத்தீவு பாரம்பரியமாக தேசியவாதத்தை பேசிய கட்சியான ஜே.வி.பி , இலங்கைத் தீவில் இந்திய செல்வாக்கை நீண்டகாலமாக எதிர்த்திருந்தது. 1987ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது ஜே.வி.பி.யின் கடுமையான எதிர்ப்பு சர்வதேச ரீதியில் மிகவும் உச்சரிக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் தமிழர் சுயாட்சிக்காக உருவாகிய சில வாய்ப்புகளையும் ஜே.வி.பியின் கடுமையான எதிர்ப்பே இல்லாதொழித்தது. பல தசாப்தங்களாக, ஜே.வி.பி இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) போன்ற உடன்படிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டிருந்தது. 2008இல் “கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்க ரகசிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.” என அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்பதையும் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதையும் இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் வலியுறுத்தி வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கச்சத்தீவு விவகாரம் இந்தியாவில் மிகவும் பேசுபொருளானதுடன், கச்சத்தீவை காங்கிரஸ்தான் இலங்கைக்கு வழங்கியது என பிரதமர் மோடி கூறியிருந்தார். மோடி கூறப்போகும் செய்தி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் கடந்த காலத்தில் வலுவாக இருந்த போதிலும் இந்திய விஸ்தரிப்பு வாதத்தை பேசிய கட்சியாக உள்ள ஜே.வி.பியின் தலைவர் ஒருவர் முதல் முறையாக இலங்கையின் அரச தலைவராக இந்திய அரச தலைவரை சந்திக்கிறார். இதனால் கடந்தகால வரலாறுகளும் அவை ஏற்படுத்தியுள்ள தாக்கங்களும் இந்த சந்திப்பு குறித்து சர்வதேசம் உற்றுநோக்கியுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் அரசாங்கங்கள் செய்துகொண்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களின் அடுத்தகட்ட நகர்வு எவ்வாறு இருக்கிற போகிறது, இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கு தொடர்பில் மோடி அநுரவிடம் என்ன கூற போகிறார், இருநாட்டு பொருளாதார உறவுகள் எவ்வாறு வலுபெற போகிறது மற்றும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் அநுரவிடம் மோடி கூற போகும் செய்தி என்ன என்பது தொடர்பில் பல்வேறு கருத்துகள் சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக உள்ளது. புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட்டாலும் அதில் 13ஆவது திருத்தச்சட்டம் உள்வாங்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருக்க என்பதே இந்திய அரசியல் ஆய்வாளர்களது கருத்தாகும். இதனை மோடி அநுரவிடம் உறுதியாக கூற உள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து ஆழமான பேச்சு இந்தியா தொடர்பில் அநுரகுமார திசாநாயக்க தனது தொனியை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றியுள்ளார் என்பதே அவரது பல கருத்துகள் எடுத்துரைக்கின்றன. அதன் காரணமாகவே தனது முதல் வெளிநாட்டு பயணத்துக்காக அநுர இந்தியாவை தேர்ந்தெடுத்துள்ளார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதல் இராஜதந்திரியாக இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கையின் பூகோள அரசியல் நகர்வுகள் இந்தியாவின் நலனுக்கு எதிராக அமையக் கூடாதென்ற செய்தியை தெரிவிக்கும் வகையில் இடம்பெற்றதாகும். வெளியுலகுக்கு அது சம்பிரதாயப்பூர்வமான அழைப்பை விடும் சந்திப்பாக காட்டப்பட்டாலும் அது இந்தியாவின் உள் எண்ண ஓட்டத்தின் நிகழ்ச்சி நிரலாகும். பூகோள அரசியலில் இயக்கவியலை அநுர மறுத்துச் செயல்பட்டால் அது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியான சூழலை மீண்டும் தமது அரசாங்கத்துக்கும் ஏற்படுத்தும் என்பதை அநுர அறிந்தவராக இருப்பார என்பதால் இந்தியாவின் கருத்துகளை அவர் புறக்கணித்து செயல்பட மாட்டார் என்றும் புதுடில்லி வழங்கப்போகும் சிவப்பு கம்பள வரவேற்புக்கு மரியாதையளிக்கும் நபராகவே அநுர எதிர்காலத்தில் செயல்படுவார் என்றும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மன்னாரில் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் நிலையம், இருநாடுகளையும் இணைக்கும் கடல்வழி பாலம், கேபிள் முறையில் மின்சாரப் பரிமாற்ற திட்டம் மற்றும் கடந்த அரசாங்கம் செய்துகொண்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள் அநுரவின் இந்தப் பயணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்பதுடன், இவை தொடர்பிலான ஆழமான பேச்சுகள் இடம்பெறும் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுப்ரமணியம் நிஷாந்தன் https://oruvan.com/sri-lankan-president-makes-india-the-destination-for-his-first-foreign-visit/
  22. பைடன் மனைவியுடனான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து டிரம்ப் குசும்பு The photo’s caption reads, “A fragrance your enemies can’t resist!” அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப், தன் வாசனை திரவிய பொருட்களின் விளம்பரத்துக்காக தற்போதைய அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில்லுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப், அடுத்த மாதம் 20ல் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். தொழிலதிபரான டிரம்ப், தன் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை தன் சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது விளம்பரப்படுத்துவார். உயர் ரக கை கடிகாரங்கள், வர்த்தக அட்டைகள், தான் கையெழுத்திட்ட கிதார் இசைக்கருவி உள்ளிட்டவை இவற்றில் பிரபலமானவை. தேர்தல் வெற்றிக்கு பின், ‘ஷூ’க்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்டவற்றை அவர் தன் சமூக வலைதள பக்கம் வாயிலாக விளம்பரப்படுத்தி வருகிறார். இந்நிலையில், ஐரோப்பிய நாடான, பிரான்ஸ் நாட்டின் பாரிசில் உள்ள புதுப்பிக்கப்பட்ட நார்டே – டேம் – கதீட்ரல் தேவாலயம் கடந்த 7ம் தேதி திறக்கப்பட்டது. இந்த விழாவில், டொனால்டு டிரம்ப், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில், மகள் ஆஷ்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் மூவரும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை தன் வாசனை திரவியத்துக்கான விளம்பர படமாக, சமூக வலைதளத்தில் டிரம்ப் பகிர்ந்துள்ளார். ‘உங்கள் எதிரிகளாலும் நிராகரிக்க முடியாத நறுமணம்’ என்ற வரியுடன் அந்த புகைப்படம் வெளியாகி உள்ளது. டிரம்பின் இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வெளியானநிலையில், பெரும்பாலானோர் அதை கடுமையாக விமர்சித்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தின் போது, ஜோ பைடனை தரக்குறைவாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது அதிபரின் மனைவியை தன் சுய விளம்பரத்துக்காக டிரம்ப் பயன்படுத்தியுள்ளது காட்டுமிராண்டித்தனமானது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், எதிரிகளும் தன் வாசனை திரவியத்தை விரும்புவர் என்ற வாசகத்தை பயன்படுத்தியுள்ளதை குறிப்பிட்டுள்ள இணையதளவாசிகள், டிரம்பின் நகைச்சுவை உணர்வை பாராட்டி வருகின்றனர். https://akkinikkunchu.com/?p=302786
  23. சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியோ அல்லது சபாநாயகரோ விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். அவர் உண்மையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கலாநிதி பட்டம் பெற்றிருந்தால், இந்தக் கதைக்கு எந்த அர்த்தமும் இல்லை. ஆனால் அதற்கு பதில் தராமல் காலம் தாழ்த்தி வருவதும், அரசாங்கம் தரப்பில் பேசப்பட்ட ஊடகவியலாளர் செய்தியில் பதில் அளிக்காமல் இருப்பதும், கலாநிதி பட்டம் தொடர்பான விவகாரத்தை பாராளுமன்ற இணையதளத்தில் இருந்து நீக்கியதும் பெரும் சிக்கலைக் காண முடிகிறது. அவரது கலாநிதி பட்டம் அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் நாங்கள் கலந்துரையாடப் போகிறோம். அப்படி நடந்தால், தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்களும் தங்கள் மனசாட்சிப்படி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது வாக்களிப்பார்கள் என்றார். https://thinakkural.lk/article/313594
  24. வழமைக்குத் திரும்பிய இன்ஸ்டாகிராம் - வட்ஸ்அப் செயலிகள்! சர்வதேச ரீதியாகச் செயலிழந்திருந்த மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் ஆகிய செயலிகளின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. எனினும் ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டதா? என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த விடயம் தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மெட்டா நிறுவனம் 99 சதவீத சிக்கல்கள் தீர்க்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இதனால் பாதிப்படைந்த பயன்பாட்டாளர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியாக 22,000க்கும் அதிகமானோர் பேஸ்புக் சிக்கல் தொடர்பில் முறைப்பாடளித்துள்ளதாக செயலிழப்பு - கண்காணிப்பு தளமான டவுன்டிடெக்டர் தெரிவித்துள்ளது. அத்துடன் வட்ஸ்அப் சிக்கல் தொடர்பில் 18,000க்கும் அதிகமானோர் முறைப்பாடளித்துள்ளதாகவும் டவுன்டிடெக்டர் குறிப்பிட்டுள்ளது. பிரித்தானியா, ஆசியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பா ஆகியவற்றில் செயலிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. செயலிழப்பு - கண்காணிப்பு தளமான டவுன்டிடெக்டரின் தகவல்களுக்கு அமைய, செயலிழப்பு சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாக வேறுபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த செயலிழப்புகளுக்கான காரணம் தொடர்பில் இதுவரையில் தகவல் வெளிப்படுத்தப்படவில்லை. https://www.hirunews.lk/tamil/390514/வழமைக்குத்-திரும்பிய-இன்ஸ்டாகிராம்-வட்ஸ்அப்-செயலிகள்
  25. சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்! சிரியாவின் முன்னாள் ஜனாதிபதியும் ஆட்சி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி பஷர் அல் - அஷாட்டின் தந்தையுமான ஹபீஸ் அல் - அசாட்டின் கல்லறையைக் கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து அழித்துள்ளனர். 54 ஆண்டு கால ஆட்சியைக் கவிழ்ந்துள்ள கிளர்ச்சியாளர்கள், முன்னாள் ஜனாதிபதியின் சொந்த ஊரில் உள்ள கல்லறையையே இவ்வாறு அழித்துள்ளனர். அதேநேரம், ஆட்சி கவிழ்க்கப்பட்ட சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் - அஷாட், ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். ரஷ்யாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் இதனை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறான பின்னணியில் சிரியாவில் உள்ள பல ஆயுத களஞ்சிய சாலைகளை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. https://www.hirunews.lk/tamil/390530/சிரிய-முன்னாள்-ஜனாதிபதியின்-தந்தை-கல்லறையை-தீ-வைத்து-அழித்த-கிளர்ச்சியாளர்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.