Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. திருகோணமலை உவர்மலையில் 36 வருடங்களுக்குப் பின் வீதி ஒப்படைப்பு எஸ்.கீதபொன்கலன் திருகோணமலை உவர்மலை வாழை முனை( Plantan Point) கீழ் சுற்றுவட்ட வீதி 36 வருடங்களுக்குப் பின்னர் மக்களின் பாவனைக்காக இராணுவத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (01) திறந்து வைக்கப்பட்டது. பிரித்தானியரின் ஆட்சியின் போது,திருகோணமலை உற்துறைமுகத்தின் பாதுகாப்பிற்கென இயற்கையான கேந்திர தானமான இவ் முனைப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. சுதந்திரத்தின் பின்னர் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தின் முகாம் இவ்விடத்தில் இயங்கி வருகின்றது.இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த உவர்மலையின் பின்பகுதியான இவ் சுற்றுவட்ட வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளமையின் மூலம் உவர்மலை மத்திய வீதியினூடாக செல்கின்ற மக்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் அமைந்துள்ள உவர்மலை கீழ் வீதியினூடாக திரும்பி வரமுடியும். இவ்வீதி சுமார் 36 வருடங்களுக்குப் பின்னர் மக்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டு மக்களின் பயணம் இலகுவாக்கப்பட்டுள்ளது. இவ்வீதியானது 1988 ஆம் ஆண்டு மூடப்படும் வரை நகர பாடசாலை மாணவர்களுக்கான பேரூந்து சேவை ஒன்று இவ் வீதி ஊடாக நடைபெற்று வந்தது. இப்பகுதிக்குச் சென்று திருகோணமலையின் மற்றுமொரு இயற்கை அழகை இரசிக்க முடியும்.முனைப்பகுதியில் இருந்து மிக அண்மித்த தூரத்தில் அமைந்துள்ள பிறீமா மா ஆலை தொழிற்சாலை,டோக்கியோ சீமேந்து தொழிற்சாலை என்பவற்றை காண முடியும்.அத்துடன் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள் இராணுவ அருங்காட்சியகத்தையும் பார்வையிடலாம். அத்துடன் 22ஆம் படைப்பிரிவு அமைந்துள்ள வீதியூடான சுற்றுவட்ட வீதியை திறப்பதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாகவும்,எதிர்வரும் இரண்டு மாதகாலத்திற்குள் அவ்வீதியும் மக்களின் பாவனைக்காக திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் வீதியும் திறக்கப்படுமானால் உவர்மலையில் உள்ள அனைத்து கரையோரமான வீதிகளினூடாவும் சுற்றி வருகின்ற வாய்ப்பு இப்பகுதி மக்களுக்கு கிடைக்கும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நல்லிணக்க செயற்பாடுகளில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/36-வருடங்களுக்குப்-பின்-வீதி-ஒப்படைப்பு/175-348171
  2. தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது - டக்ளஸ் மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஆட்சிப் பீடமேறியுள்ள தற்போதைய அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் 13 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்படும் என்று ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுள் ஒருவரான ரில்வின் சில்வாவினால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகத்தினால் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; "தற்போதைய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாணசபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வு என்பது, இதுவரை காலமும் கௌரவமான அரசியல் உரிமைகளை இந்த நாட்டிலே பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கு கிடைத்துள்ள சிறிதளவான பரிகாரமாகவே நோக்கப்படுகின்றது. மாகாணசபை முறைமையினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலமே தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கான தீர்வை காண முடியும் என்பதை ஈ.பி.டி பி. கட்சியினாராகி நாமும் கடந்த 35 வருடங்ளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றோம். கடந்த காலங்களில் 13 ஆம் திருத்தச் சட்டத்தினை பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளையும் நாம் மேற்கொணாடிருந்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். குறிப்பாக 2010 - 2015 காலப் பகுதியிலும் 13 ஆம் திருத்தச் சட்டத்தினை வலுவிழக்கச் செய்யும் முயற்சியை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த அப்போதைய ஆட்சியாளர்கள் முன்னெடுத்திருந்த நிலையில், அரசாங்கத்தின் அங்கமாக நாம் இருந்தபோதிலும், ஆளும் தரப்பில் அப்போதிருந்த தென்னிலங்கையை சேர்ந்த முற்போக்காளர்களான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து எமது ஆட்சேபனையை வெளிப்படுத்திய நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது. அண்மையில் சிநேகிதபூர்வமாக உங்களை சந்தித்த வேளையிலும், 13 ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினையும், அதனை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமான பொறிமுறையாக இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தோம். அத்துடன், அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ் மக்களின் கணிசமான ஆதரவு உங்களுக்கு கிடைத்திருக்கின்ற நிலையில், அவர்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம். அதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள உங்களுக்கு, புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிந்திப்பதற்கு முன்னர் தற்போதைய அரசியலமைப்பினை முழுமையாக நடைமுறைப்படுத்தி பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை இருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஆக, உங்களுக்கு இருக்கும் தார்மீக கடப்பாட்டின் அடிப்படையிலும், தேர்தல் காலத்தில் எமது மக்களுக்கு நீங்கள் வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலும், 13 ஆம் திருத்தச் சட்டத்தினை தொடர்ந்தும் பாதுகாப்பதோடு மாகாணசபைகளுக்கான தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச) https://newuthayan.com/article/தமிழ்_மக்களின்_உணர்வுகளை_பாதிக்கும்_வகையில்_அரசாங்கம்_செயற்படக்கூடாது_-_டக்ளஸ்
  3. சிவாஜிலிங்கத்திடம் விசாரணை! விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடிய வடக்கின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஆளும் கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், அனுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் கீழ் நவம்பர் 30ஆம் திகதி கைது செய்யப்பட்ட வடக்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கத்தை வல்வெட்டித்துறை பொலிஸுக்கு வருமாறு அழைப்பு விடுத்தபோதிலும், தனக்கு உடல்நிலை சரியில்லை என அவர் அறிவித்த நிலையில், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்று சுமார் ஒரு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழீழத் தலைவராகக் கருதப்பட்டதாகவும், அதனால் அவரது பிறந்த திகத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்ததாகவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம். கே. சிவாஜிலிங்கம் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/சிவாஜிலிங்கத்திடம்-விசா/
  4. புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் அமைப்பினருக்கும் வடக்கு ஆளுநருக்குமிடையே கலந்துரையாடல்! 03 Dec, 2024 யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில்சார் புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் (IMPACT) அமைப்பினர் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். தமது அமைப்பால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்கு அவர்கள் விவரித்ததுடன், மருத்துவத்துறையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள திட்டங்களை முன்னெடுப்பதிலுள்ள சவால்கள் தொடர்பிலும் அவற்றை எவ்வாறு நிவர்த்திக்கலாம் என்பது தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடினர். பெண்கள் வலுவூட்டல் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பிலும் தமது திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்து ஆளுநருடன் கலந்துரையாடியதுடன், எதிர்காலத்தில் வடக்கின் அபிவிருத்திக்கு தம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கமுடியும் எனவும் ஆளுநருக்கு உறுதியளித்தனர். இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர், சிறுநீரக தொகுதி அறுவை சிகிச்சை நிபுணர் பா.பாலகோபி, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளர், சமுதாய மருத்துவ நிபுணர் எஸ்.குமரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் மகப்பேற்று அறுவை சிகிச்சை நிபுணர் சி. ரகுராமன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் சிறுநீரக வைத்திய நிபுணர் பிரம்மா ஆர். தங்கராஜா, பிரபல பௌதீகவியல் ஆசிரியர் ரா.குமரன், பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர் ம. அருளினியன், பொறியியலாளர் ந.நந்தரூபன் ஆகியோர் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/200293
  5. மன்னாரில் 7,500 ஹெக்டேயர் விவசாய நில பயர்ச்செய்கை அழிவு ; வங்கிக் கடன்களை இரத்து செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை! 03 Dec, 2024 மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக 7,603 ஹெக்டேயர் விவசாய நிலங்களில் பயர்ச்செய்கை அழிவடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட கமநல சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இலுப்பை கடவை கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட 1100 ஹெக்டேயர் விவசாய நிலங்களும் மாந்தை பகுதியில் 1168 விவசாய நிலங்களும், நானாட்டானில் 768 ஹெக்டேயர் விவசாய நிலங்களுமாக மொத்தம் 7603 ஹெக்டேயர் விவசாய நிலப்பரப்புகளில் செய்கையிடப்பட்ட பயிர்கள் வெள்ளத்தால் அழிவடைந்துள்ளன. இம்முறை மன்னார் மாவட்டத்தில் காலபோக செய்கைக்கென 11,776 ஹெக்டேயர் விவசாய நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 4173 ஹெக்டேயர் விவசாய நிலப் பயிர்கள் மாத்திரம் தற்போது பகுதியளவில் காப்பாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் இம்முறை விவசாய செய்கைக்காக பல விவசாயிகள் அரச மற்றும் தனியார் வங்கிகளிலும், கிராம மட்ட அமைப்புகளிடமும் கடன்களை பெற்றுள்ள நிலையில், அவற்றை மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் தள்ளுபடி செய்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/200300
  6. தீவொன்றில் சிக்கியிருந்த 60 இலங்கைத் தமிழர்கள்! நடந்தது என்ன? December 3, 2024 11:17 am இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த புலம்பெயர்ந்த இலங்கைர்கள் குழுவொன்று இங்கிலாந்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 16 குழந்தைகள் உட்பட 60 பேர் அடங்கிய இலங்கைத் தமிழர்கள் குழுவொன்றே இவ்வாறு இங்கிலாந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. கடந்த 2021 நவம்பர் மாதம் முதல் இந்த குழுவினர் டியாகோ கார்சியா தீவில் அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் மோசமான நிலையில் வசித்து வந்துள்ளனர். இவ்வாறு, இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள், அந்நாட்டில் 6 மாதக்காலம் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த ஆறு மாதங்களுக்கு தேவையான நிதி வசதியையும் அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு வழங்க தீர்மானித்துள்ளது. இவர்கள் தீவில் இருந்த காலப்பகுதியில், பல உண்ணாவிரதங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் அதில் சிலர் சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முகாமுக்குள் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளும் பதிவாகியுள்ளதாக 'பிபிசி' தெரிவித்துள்ளது. என்றாலும், மூன்று பேர் மீது மட்டும் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவர்கள் தொடர்ந்து Diego Garcia தீவிலேயேதான் வைக்கப்பட்டிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. https://tamil.adaderana.lk/news.php?nid=196772
  7. வட தமிழகத்தை புயல்கள் அடிக்கடி தாக்குவது ஏன்? தென் தமிழகம் தப்பிக்க இலங்கை காரணமா? imd.gov.in சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை கொண்ட வட தமிழ்நாடு, அதன் புவியியல் அமைவிடம் மற்றும் வானிலை நிகழ்வுகள் காரணமாக, நீண்ட காலமாக புயல்களால் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலால் சமீபத்தில் ஏற்பட்ட சேதங்களே அதற்கு உதாரணம். தமிழகத்தின் தென் பகுதி, புயல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டாலும், வட தமிழ்நாடு பல்வேறு காரணிகளால் அடிக்கடி மற்றும் தீவிரமான தாக்கங்களை எதிர்கொள்கிறது. புயல் அமைப்புகள் பொதுவாக உருவாகி தீவிரமடையும் வங்காள விரிகுடாவின் தாக்கம் மற்றும் வடக்கு கடற்கரையை நோக்கி புயல்களை வழிநடத்தும் காற்று வடிவங்கள் (wind model) இதில் முக்கிய காரணிகள் ஆகும். கூடுதலாக, வடக்கு கடற்கரையின் நிலப்பரப்பு, அதன் தாழ்வான பகுதிகள் மற்றும் அடர்த்தியான மக்கள்தொகை, இந்த புயல்களால் ஏற்படும் அபாயங்களை அதிகரிக்கிறது. 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தாக்கிய ஃபெஞ்சல் புயல் பலத்த மழை, பலத்த காற்றுடன் சேர்த்து, கடலூர் மற்றும் விழுப்புரத்தில் பரவலான வெள்ளத்தையும் ஏற்படுத்தியது. வட தமிழகம் புயல்களால் அதிகம் பாதிக்கப்படுவது புதிதானது அல்ல. நீண்ட காலமாகவே, வங்கக்கடலில் ஏற்படும் புயல்களில் அதிகமானவை, தமிழ்நாட்டின் வட கடலோரப் பகுதிகளையே தாக்கி வந்துள்ளன என்பதை இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகள் தெரிவிக்கின்றன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின் படி, 1819 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை உருவான 98 காற்று சுழற்சி தடங்களை ஆய்வு செய்ததில், அவற்றில் பெரும்பாலானவை வட கடலோர மாவட்டங்களையே அதிகமாக பாதித்துள்ளன. இந்த காலக்கட்டத்தில் ஏற்பட்ட 29 தீவிர புயல்களில் 23 புயல்கள் தமிழ்நாட்டின் வட கடலோரப்பகுதிகளில் கரையை கடந்துள்ளன. அதே நேரம், ஆறு தீவிர புயல்கள் மட்டுமே தென் கடலோரப் பகுதிகளில் கரையை கடந்துள்ளன. மேலும், அப்போது உருவான 25 புயல்களில் 24 புயல்களும், 44 காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களில் 34 காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களும் வட தமிழ்நாட்டை பாதித்துள்ளன. அந்த தரவுகள், வட கடலோர மாவட்டங்களிலேயே புயல்களின் தீவிரத்தன்மை அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடுகின்றன. Royal Geographical Society via Getty புயல்களின் தீவிரத்தன்மைக்கும் அது உருவாகும் இடத்துக்கும் தொடர்பு உள்ளது பூமத்திய ரேகைக்கு அருகில் புயல்கள் குறைவு? புயல்களின் தீவிரத்தன்மைக்கும் அது உருவாகும் இடத்துக்கும் தொடர்பு உள்ளது. பூமத்திய ரேகைக்கு அருகில் பொதுவாக புயல்கள் உருவாகுவது குறைவாக இருக்கும் என்றும், அதன் தீவிரத்தன்மை குறைவாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். புயல்கள் உருவாகும் போது, அவை துருவமுனையை நோக்கி நகரும். உதாரணமாக, பூமத்திய ரேகைக்கு வடக்கில் அமைந்துள்ள இந்தியாவுக்கு அருகில் உருவாகும் புயல்கள் வடக்கு நோக்கி நகரும். தமிழ்நாட்டில் தென் பகுதி அல்லாமல் வட தமிழகம் புயல்களால் அதிகம் பாதிக்கப்படுவதற்கும் இதுவே காரணமாக அமைந்துள்ளது என்று, பிபிசி தமிழிடம் பேசிய வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “பூமத்திய ரேகைக்கு அருகில் பூமியின் சுழற்சி குறைவாக இருக்கும். எனவே தான் அங்கு புயல் உருவாவதில்லை. பொதுவாக, பூமத்திய ரேகையிலிருந்து 5 டிகிரி தூரத்திலேயே புயல்கள் உருவாகும். விதிவிலக்காக சில புயல்கள் பூமத்திய ரேகைக்கு 2 டிகிரி தொலைவிலும் உருவாகியுள்ளன. ஆனால், அவை அரிதான நிகழ்வு. பூமத்திய ரேகையிலிருந்து மேலே செல்லச் செல்ல (higher latitude) புயல்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும்,” என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ஒய்.இ.ஏ ராஜ் விளக்குகிறார். வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் புயல் உருவாகும் காலமும் தமிழகத்துக்கு மழையை கொடுக்கும் என்கிறார், தனியார் வானிலை ஆய்வாளர் க.ஶ்ரீகாந்த் பிபிசி தமிழிடம் பேசிய தனியார் வானிலை ஆய்வாளர் க.ஶ்ரீகாந்த் இதே கருத்தை முன் வைக்கிறார். “அதாவது ஒரு பம்பரம் சுற்றுவது போல தான். சுற்றிக்கொண்டே இருக்கும் போது, பம்பரம் ஒரு திசையில் தனது வேகத்துக்கு ஏற்ப நகர்ந்துக் கொண்டே இருப்பது போலவே, புயலும் நகரும். புயல் தீவிரமடையும் போது, அது துருவமுனையை நோக்கி நகர்வது வழக்கம். பூமத்திய ரேகைக்கு வடக்கே இருக்கும் பகுதியில் (இந்தியா பூமத்திய ரேகைக்கு வடக்கில் உள்ளது) உருவாகும் புயல் வடக்கு நோக்கி நகர்வது வழக்கம். எனவே தான், தமிழக கடற்கரையை ஒட்டி வரும் புயல்கள் வடக்கு - வட மேற்கு திசையில் நகரும். அதனால் புயல்கள் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் என, மேலும் வடக்கு நோக்கி செல்கிறது” என்கிறார் . வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் புயல் உருவாகும் காலமும் தமிழகத்துக்கு மழையை கொடுக்கும் என்றும், வட கிழக்குப் பருவமழை காலமும் அதனுடன் பொருந்திப் போகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார். Getty Images "இலங்கை இல்லாமல் இருந்திருந்தால், புயல்களின் தாக்கம் தென் தமிழகத்தில் அதிகமாக இருந்திருக்கும்" தானே புயல் இதற்கான மிக சரியான உதாரணம், 2011ம் வட தமிழகத்தைத் தாக்கிய தானே புயல். 2011-ம் ஆண்டு தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகி, பிறகு புயலாக வலுப்பெற்றது. தானே புயல் தொடர்ந்து மேற்கு வட-மேற்கு திசையில் எந்த விலகலும் இல்லாமல் நகர்ந்து கொண்டே வந்தது. மிக தீவிர புயலாக வகைப்படுத்தப்பட்ட தானே புயல், கடலூர் அருகே மணிக்கு 140 கி.மீ வேக சூரைக்காற்றுடன் கரையை கடந்து, அப்பகுதியில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. NASA இலங்கை – 'தென் தமிழகத்தின் காவலன்' தென் தமிழகத்துக்கு தீவிர புயல்கள் ஏற்படாமல் இருக்க பூகோள ரீதியான காரணமாக இலங்கை அமைந்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். திருச்சி என்ஐடி பேராசிரியர் சுப்பராயன் சரவணன் உட்பட ஆய்வாளர்கள் கடந்த 2022-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், வங்கக் கடலில் ஏற்படும் புயல்கள் இலங்கை இருப்பதன் காரணமாக, திசை திருப்பப்பட்டு, வட தமிழகத்தை நோக்கி நகர்வதற்கு உதவுகின்றன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை இல்லாமல் இருந்திருந்தால், புயல்களின் தாக்கம் தென் தமிழகத்தில் அதிகமாக இருந்திருக்கும் என்கிறார், வானிலை ஆய்வாளர் க.ஶ்ரீகாந்த். “இலங்கைக்கு அப்பால் உருவாகும் புயல், இலங்கையை கடந்து தமிழ்நாட்டின் பக்கம் வரும்போது அவை வலுவிழந்துவிடுகிறது. மேலும், இந்திய துணைக் கண்டத்தில் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் இருக்கும் பகுதி இலங்கை. அங்கு புயல்களின் தீவிரம் குறைவாக இருக்கும். தமிழ்நாட்டின் தெற்கு பகுதிக்கு அருகே இலங்கை அமைந்திருப்பதால், தென் தமிழ்நாட்டின் பாதுகாவலனாக இலங்கை இருக்கிறது என்று கூறலாம்” என்கிறார். NASA கடந்த 2017ம் ஆண்டு தென் தமிழகத்தை தாக்கிய ஒக்கி புயலின் செயற்கைக்கோள் படம் விதி விலக்கான புயல்கள் இதற்கு விதி விலக்காக, சில புயல்கள் இருந்துள்ளன. 1964ம் ஆண்டு உருவான பாம்பன் புயல், 1992ம் ஆண்டு உருவான தூத்துக்குடி புயல், 2017ம் ஆண்டு உருவான ஒக்கி புயல் ஆகியவை தென் தமிழகத்தை தாக்கிய வலுவலான புயல்கள் ஆகும். “பொதுவாக இலங்கையை கடந்து ஒரு புயல் வரும் போது அது வலுவிழந்துவிடும். ஆனால், பாம்பன் புயல் இலங்கையை கடந்து மன்னார் வளைகுடாவை தாண்டி தென் தமிழகத்தை வந்தடைந்தது. அதேபோன்று, 1992-ம் ஆண்டில் தூத்துக்குடி புயலும், பூமத்திய ரேகைக்கு மிக அருகில் ஏற்பட்ட புயல்களில் ஒன்றாகும்” என்று வானிலை ஆய்வாளர் க.ஶ்ரீகாந்த் விளக்குகிறார். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, 1995ம் ஆண்டு வெளியான புயலின் தாக்கம் குறித்த கட்டுரையில், “இந்த புயலால் இலங்கையை விட தென் தமிழகத்திலேயே அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம், கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் மீது காற்று மேலெழும்பியதாகும்” என்று தமிழகத்தில் குறைந்தது 200 பேரை பலி வாங்கிய தூத்துக்குடி புயல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. புயல்களின் தாக்கத்திற்கு மற்றொரு காரணத்தைக் குறிப்பிடுகிறார் வானிலை ஆய்வாளர் ஶ்ரீகாந்த், இந்திய அரபிக் கடல் பகுதியிலும், இந்திய சீனக் கடல் பகுதியிலும் உருவாகும் உயர் அழுத்தமே புயலை நகர்த்திக் கொண்டே செல்கிறது. எந்தப் பகுதியில் உருவாகும் உயர் அழுத்தம் புயலை நகர்த்துகிறது என்பதும், புயலின் திசையை தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்று. உதாரணமாக, ஃபெஞ்சல் புயல் சில மணி நேரம் எங்கும் நகராமல் அமைதியாக நிலவியதற்கு இது காரணமாக அமைந்துள்ளது. எந்த உயர் அழுத்தமும் அதை குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு நகர்த்தவில்லை என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqjzl2jq5ldo
  8. அனர்த்த நிவாரணம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் December 3, 2024 12:19 pm கடந்த சில நாட்களாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (03) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியும் பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். திறைசேரியில் இருந்து அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் வழங்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார். நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 139,439 குடும்பங்களை சேர்ந்த 469,872 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். மொத்தம் 12,348 குடும்பங்களை சேர்ந்த 38,616 பேர் 247 பாதுகாப்பான மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார். எவ்வாறாயினும், அனர்த்தத்தினால் மறைமுகமாக பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த அளவை விட உயர்வாக மதிப்பிடப்படுவதால், அனர்த்த நிவாரணம் மற்றும் அனர்த்தத்தின் பின்னரான நிவாரணங்களை வழங்குவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=196775
  9. ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் இன்று December 3, 2024 06:56 am பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடவுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடவுள்ள நிலையில் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் நடைபெற உள்ளதாகவும், அது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் பாராளுமன்றம் எதிர்வரும் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் 2025ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால நியமக் கணக்கு தொடர்பான பிரேரணையை டிசம்பர் மாதம் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விவாதம் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது. இதேவேளை, 10வது பாராளுமன்றத்தின் தெரிவுக்குழுவை அமைக்கும் நடவடிக்கையும் இன்று இடம்பெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196759
  10. கண்கலங்க செய்த திருவண்ணாமலை நிலச்சரிவு… குழந்தைகள் உட்பட 7 பேர் பலி… 4 பேரின் உடல்கள் மீட்பு! christopherDec 02, 2024 22:50PM திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 7 பேரில் இதுவரை 4 பேரின் உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மூவரின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. கரைகடந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தீபமலையில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அதன் அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் கருமாரியம்மன் கோயிலின் பின்புறத்தில் உள்ள வீட்டின் மீது நேற்று மாலை சுமார் 40 டன் எடை கொண்ட பாறை உருண்டு வந்து விழுந்தது. இதில் அந்த வீடும், அந்த வீட்டில் தங்கியிருந்த ராஜேந்திரன், மீனா அவர்களது இரு பிள்ளைகள், உறவினர் பிள்ளைகள் உட்பட மொத்தம் 7 பேரும் சிக்கினர். சம்பவம் அறிந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். ஆனால் தொடர் மழை மற்றும் இருட்டியதால் நேற்று இரவு மீட்பு பணிகள் தடைபட்டு, இன்று காலை மீண்டும் தொடங்கியது. பாறை விழுந்த இடத்திற்கு நேரில் வந்த அமைச்சர் எ.வ.வேலு மீட்பு பணிகளை துரிதப்படுத்த, தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தினர். குறுகிய சாலை வசதிக்கொண்ட அந்த பகுதியில் ஒரு வழியாக ராட்சத இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்தது. இந்த நிலையில் மண்ணுள் புதைந்து சிதைந்த நிலையில் ஒரு சிறுவனின் உடல் முதலில் மீட்கப்பட்டது. இதனைக் கண்ட மீட்பு படையினரே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். அதனையடுத்து ஒரு சிறுமியின் உடல் மீட்கப்பட்ட நிலையில், பாறை விழுந்து கடந்த 24 மணி நேரமாக மண்ணில் புதையுண்ட 4 பேரின் உடல்களின் பாகங்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. இதனைக்கண்ட அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதக் காட்சி காண்போரை கலங்க செய்தது. மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 பேரின் உடல்களை கொட்டும் மழைக்கிடையே தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. https://minnambalam.com/tamil-nadu/eye-catching-landslide-in-tiruvannamalai-7-people-including-children-killed-bodies-of-4-recovered/
  11. 2025ஆம் ஆண்டில் அநுர அரசாங்கம்: சந்திக்கப்போகும் சவால்கள்! 2025ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் , சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பார்ப்புக்களை சமநிலைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் கடுமையான நிதி சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது ஒன்றும் எளிதான காரியம் அல்ல. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பொது மக்களின் எதிர்பார்ப்புகளை பூரணப்படுத்துவதற்கும் இடையே உள்ள கடுமையான சவால்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு தலை இடியாக இருக்கப் போகிறது. பல எதிர்க்கட்சிகளும், பழைய அரசியல் தலைமைகளும் தேசிய மக்கள் சக்தியின் இந்த சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள போகின்றது என்பது தொடர்பில் உற்று நோக்கி வருகின்றன. 2025 ஆம் ஆண்டளவில் அரசாங்க வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 வீதமாக ஆக உயர்த்த இலங்கையின் திறனை அடிப்படையாகக் கொண்டு தனது அடுத்த கடன் தவணையை வெளியிட சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அதிருப்தியை அதிகரிக்காமல் இதை அடைவது அரசாங்கத்திற்கு கணிசமான அழுத்தத்தை கொடுக்கும் விடயமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 வீதத்தால் மாத்திரமே பொதுச் செலவினங்களை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளதால், மக்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கையை அடைய முடியாமல் போவது தவிர்க்க முடியாதது. மேலும், இந்த நிதி இலக்குகளை அடைய, சொத்து வரி, தனிநபர் வரி, மற்றும் மதிப்பிடப்பட்ட வாடகை வருமானச் சட்டம் உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய கொள்கைகளை, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. இது குறிப்பாக சொத்து உரிமையாளர்கள் மற்றும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கும். எனவே, மக்கள் விரும்பாத கொள்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது. 2024ஆம் ஆண்டில் வரி அதிகரிப்பு குறித்து அரசாங்கம் ஏற்கனவே பரவலான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. தற்போது நடுத்தர குடும்பங்கள் அதிகரித்த செலவுகளின் சுமையை உணர்ந்துள்ளன. வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், மட்டுப்படுத்தப்பட்ட பொதுச் செலவுகள் நிவாரணம் அல்லது மானியங்களை வழங்குவதற்கான திறனை மட்டுப்படுத்தியதால், சமூக நலனுக்கான அரசாங்கத்தின் ஆதரவு போதுமானதா என்றும் பல தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், அரசு நம்பகத்தன்மை நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. அதாவது, அரசியல் மேடைகளில் அளிக்கப்படும் இலட்சிய வாக்குறுதிகளை இந்தச் சூழ்நிலையில் இப்போது நிறைவேற்ற முடியாது என்ற எண்ணத்தில் வாக்காளர்கள் ஆழ்ந்த ஏமாற்றம் அடைவார்கள். சவால்கள் இருந்தபோதிலும், சீர்திருத்தத்திற்கான வாய்ப்புகள் பல உள்ளன. திறமையின்மைகளை நிவர்த்தி செய்வதன் மூலமும், வரி தளத்தை விரிவுபடுத்துவதன் மூலமும், மக்கள் மீது சுமையில்லாமல் நிலையான வருவாய் வளர்ச்சியை அரசாங்கங்கள் இலக்காகக் கொள்ள முடியும். வரி வசூலை முறைப்படுத்தவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும், வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கவும் டிஜிட்டல் முறைகளை அறிமுகப்படுத்துவது வருவாய் இடைவெளியைக் குறைக்க உதவும். இதேவேளை, சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி விரிவாக்கத்தைத் தூண்டும். எவ்வாறாயினும், இந்த முயற்சிகளுக்கு அதிக காலம் எடுக்கும், மேலும் சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட தற்போதைய காலக்கெடு படிப்படியாக செயல்படுத்தப்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிதி ஒழுக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் மற்றும் வெளிப்படையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும், இந்த நடவடிக்கைகளின் அவசியத்தை பொதுமக்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், உற்பத்தியை மேம்படுத்தவும் தனியார் துறையுடன் ஒத்துழைப்பதன் மூலமும் பொருளாதார பின்னடைவை உருவாக்க முடியும். இவ்விடயமானது, சரியான திட்டமிடல் இல்லாமல் ஆடம்பர வார்த்தைகள் மற்றும் அறிக்கைகள் மூலம் நாடுகளை கட்டியெழுப்ப முடியாது என்பதை உலகிற்கும் வலியுறுத்துகிறது. சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான இலக்குகள் கடினமானவை என்றாலும், நீண்ட கால ஸ்திரத்தன்மைக்காக நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மறுவடிவமைப்பதற்கான வாய்ப்பையும் வழங்குகின்றன. இருப்பினும், இதற்கு நிதி விவேகம் மட்டுமல்ல, அரசியல் அறிவும், பொது நம்பிக்கையும் முக்கியமாகும். எதிர்வரும் ஆண்டுகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவசரமாக விதைக்க வேண்டிய அடிப்படை விதைகள் இவையாக பார்க்கப்படுகின்றன. https://oruvan.com/sri-lanka/2024/12/02/challenges-that-the-anuradhapura-government-will-face-in-2025
  12. கடற்றொழில் அமைச்சரின் சகா என கூறி அடாவடியில் ஈடுபட்டவரால் யாழில் பரபரப்பு! கடற்றொழில் நீரியல் வள அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தனி நபர் ஒருவர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் களஞ்சியசாலை ஒன்றைத் தான் கொண்டுவந்த பூட்டு ஒன்றினால் பூட்டித் திறப்பை எடுத்துச் சென்ற சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் யாழ். பருத்தித்துறை, முதலாம் குறுக்குத் தெரு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை முதலாம் குறுக்குத் தெருப் பகுதியில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள களஞ்சியசாலை ஒன்றுக்கு வந்த நபர் ஒருவர், அங்கிருந்த படி களஞ்சியசாலையின் காப்பாளருக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். தன்னைக் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சரின் ஒரிங்கிணைப்பாளர் என்று அறிமுகப்படுத்திய பின் அடாவடியில் அவர் ஈடுபட்டதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். எவ்வித நடைமுறைகளையும் பின்பற்றாமல் தான் எடுத்துக்கொண்டு வந்த பூட்டைக் களஞ்சியசாலையில் பூட்டிய பின்னர் அதன் திறப்புகளை எடுத்துச் சென்றுள்ளார். இதன்படி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளரால் ஜனாதிபதி செயலகத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி முறைப்பாடு கிடைத்து ஒரு மணி நேரத்தினுள் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சருக்கும், சம்பந்தப்பட்ட நபருக்கும் அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து வேறு நபர்கள் களஞ்சியசாலைக்கு அனுப்பப்பட்டு, சட்டவிரோதமாகப் பூட்டப்பட்ட பூட்டு மீளப்பெறப்பட்டதாக கூறப்படுகிறது. https://akkinikkunchu.com/?p=301385
  13. கடற்றொழில் அமைச்சருக்கு வடக்கில் காத்திருக்கும் நெருக்கடிகள் கலாநிதி சூசை ஆனந்தன் இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்களின் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் புதிதாக பதவியேற்றிருக்கின்றார். வட பகுதியில் மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்ற பல நெருக்கடிகளுக்கு சுமுகமான தீர்வினை வழங்குவதில் உறுதியாக உள்ளதாக அமைச்சர் யாழில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆயினும் இது அவருக்கு இலகுவாவானதாக இருக்கப் போவதில்லை. இந்திய மீனவர் விவகாரம் இந்தியாவுடன் தொடர்பானது, தென்பகுதி மீனவர் விவகாரம் சிறிலங்கா அரசுடன் தொடர்பானது. அமைச்சரோ தமிழர். கடந்த கால அமைச்சரும் தமிழராகவே இருந்துள்ளார். இருவரும் கடற்றொழிலுடன் சம்பந்தப்பட்டவர்களாக இருந்ததில்லை. இருக்கவேண்டிய அவசியமும் இல்லையெனினும் தமிழர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என சர்வதேசத்தை ஏமாற்றிய, ஏமாற்றும் அரசினது உத்திகள் இவை எனக் கருதலாம். முக்கிய விடயமான இந்திய மீனவர் விகாரத்தை தமிழ் அமைச்சரைக் கொண்டே மோதவிட்டுள்ளது அரசு. அதேவேளை தென்பகுதி மீனவர் விவகாரத்தை சிங்கள அதாவது சிங்கள அரசோடு அமைச்சரை முரண்பட வைக்கலாம். இதனை இவர் விரும்பப் போவதில்லை. இதனால் இப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதில் சவால்களை சந்திக்கவே நேரிடும். முன்னைய அமைச்சரின் இந்திய மீனவர் விடயமும் தென்பகுதி மீனவர் விடயம் மற்றும் மீனவர் மீள்குடியேற்ற விவகாரம் போன்றவை மறந்துபோன விடயமாகவே இருந்தது. புதிய அமைச்சர் என்ன செய்யப் போகிறாரோ தெரியாது?.இது விடயத்தில் அவர் சவால்களை சந்திக்க வேண்டிய வாய்ப்புக்கள் நிறையவே உண்டு. பிரச்சினைகள் முக்கியமாக இந்திய மீனவர் அத்துமீறல் விவகாரம் தென்பகுதி மீனவர் விவகாரம், மீனவர் மீள்குடியேற்றம், சட்டபூர்வமற்ற மீன்பிடி முறைகள், நீரில் வளர்ப்பு , ஆழ்கடல் மீன்பிடி தொடர்பான விடயங்கள் இதில் முக்கியமானவையாகும். கடந்த காலத்து அமைச்சர்களாக இருந்த பலராலும் வடபுல மீனவர்களின் மேற்கூறிய நெருக்கடிகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகள் எவற்றையும் தீர்த்து வைப்பதில் வெற்றி கண்டதில்லை. புதியவர் எந்தளவுக்கு இத்தகைய நெருக்கடிகளுக்கு தீர்வைக் கண்டுபிடிப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்திய மீனவர் விவகாரம் இந்திய மீனவர்கள் வடக்கே இலங்கை – இந்திய ஆள்புல கடல் எல்லைகளை மீறி மீன்பிடியில் ஈடுபடுவதும், தடை செய்யப்பட்ட இழுவை மடிகளைப் பயன்படுத்துவதும் முக்கியமானவையாகும். ஆள்புல எல்லையினை மீறி தமிழக மீனவர்கள் வடபுல கடற்பரப்பினுள் வருவதானது நாட்டின் இறைமையை மீறுகின்ற ஓர் செயற்பாடாகும். இவை இந்திய மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் தெரியாத விடயமல்ல. அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கே உரியது. ஆயினும் இதுவரையில் இவ்வாறான ஓர் அத்துமீறல் நடவடிக்கைகளை தடுப்பதில் இந்திய அரசு தவறியே வந்துள்ளது. அரசு மட்டத்தில் பல தடவைகள் இது குறித்து பேசப்பட்டாலும் மீனவர் ஊடுருவலை தடுக்க பழுதடைந்த பஸ்களை பாக்கு நீரிணையில் அமிழ்த்தியதைத் தவிர, தீர்வு எதனையும் இதுவரை எட்ட முடியவில்லை. தமிழக மீனவர்களுக்கு வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளபோதிலும் அதற்காக சர்வதேச நியமனங்களை அப்பகுதி மீனவர் மீறுவது ஏற்புடையதல்ல. மேலும் வடபுலத்தில் ஏற்கனவே போரினால் மிக மோசமாகப் பாதிப்புற்ற ஐம்பதாயிரம் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்துடன் சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பதையும் மறந்துவிடக் கூடாது. மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென இலங்கை அரசை இந்தியா கோருவது நகைப்புக்கிடமானது. மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டியது இந்தியாவே தவிர, இலங்கை அல்ல. அத்துடன் சூழலுக்கு அச்சுறுத்தலையும் வள அழிவுக்கு காரணமாகவும் உள்ள இழுவைமடிப் பிரயோகம் பிரதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதையும் இந்தியா மறந்து விடலாகாது.கைது செய்யப்படும் மீனவர்களை சடுதியாக விடுவிப்பதில் காட்டும் வேகம் பிரச்சினையை தீர்ப்பதில் காட்டுவதில்லை. இழுவைமடி தடையை கட்டாயமாக அமுற்படுத்தல் 2017 இல் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை கடந்தகால அரசு நடைமுறைப்படுத்த தவறியிருந்தது. இதற்கான காரணம் ஏன்? என்பது புரியவில்லை. தடைச் சட்டம் முறையாக அமுற்படுத்தப்பட்டிருப்பின் இந்த மீனவர் விவகாரம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்க முடியும். ரணில் ஆட்சியில் கூட இது சாத்தியமாகவில்லை.வாக்கு வங்கி அரசியலும் லஞ்ச ஊழலுமே இதற்கு தடையாக அமைந்திருந்தது. ஆகவே புதிய அரசு உள்ளூரில் தடை செய்யப்பட்டுள்ள குறித்த இழுவைமடியினை முற்றிலுமாக பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை அமுற்படுத்துவது அவசியம்.பொருளாதாரம் நலிவுற்ற நிலையிலிருந்த இலங்கையை மீட்க இந்தியா ஆற்றியிருந்த நிலையில், இந்தியாவுடன் மீனவர் விவகாரத்தை கையாளுவதென்பது சவாலானதாகவே அமையும்.தடையினை அமுல்படுத்துவது இந்தியாவும் இழுவைமடி தடையினை மேற்கொள்ள தூண்டுதலாக அமையலாம். தென்பகுதி மீனவர் உள்வருகை வடபுல கடலோரங்களில் தென்பகுதி மீனவர்கள் பருவ காலங்களில் வந்து குடியேறிய மீன்பிடியில் ஈடுபட்டு வருவதானது நீண்டகாலமாக இடம்பெற்று வருகிறது. இதனால் உள்ளூர் மீனவர்களுக்கும் தென்பகுதி மீனவர்களுக்குமிடையே சச்சரவுகள் அடிக்கடி ஏற்பட்டு வருவதானது தீராத பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. முக்கியமாக மன்னாரில் சவுத்பார், சிலாவத்துறை, தலைமன்னார் பியர் ஆகிய இடங்களிலும் முல்லைத்தீவில் கொக்கிளாய், நாயாறு ஏரிப்பகுதிகளிலும் வடமராட்சி கிழக்கிலும் மீனவர்களுக்கிடையிலே இன மோதல்களை உருவாக்கி விட்டுள்ளது. இடம் பெயர்ந்து வருவோர் பெரும்பான்மைச் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பதினால் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் உதவிகளுடன் பாரம்பரியமான தமிழ் கிராமங்களை அவர்கள் ஆக்கிரமித்து மீன்பிடியில் வல்லாதிக்கம் செய்து வருகின்றனர். இதனால் ஏரி மீன்பிடி கரைவலைப்பாட்டு மீன்பிடியாளர்கள் பெரும் துன்பங்களையும் இராணுவ கெடுபிடிகளையும் சந்தித்து வருகின்றனர். புதிய அரசு இது விடயத்தில் அக்கறையுடனும் சரியான பொறிமுறையூடாக நீதியைப் பெற்றுத் தரவேண்டும். மீனவர் மீள்குடியேற்றம் போரின்போது இடம்பெயர்ந்த பல மீனவ குடும்கள் யுத்தம் முடிந்து தசாப்தம் கடந்தும் இதுவரை தமது சொந்த இருப்பிடம் திரும்பவில்லை. தமிழ் நாட்டிலும் வேறு இடங்களிலும் தற்காலிகமாக தங்கியுள்ள மீனவர்கள் தமது சொந்த இடம் திரும்பி மீண்டும் தமது வாழ்க்கையைத் தொடர ஏற்பாடு செய்யப்படவேண்டும். யாழில் வலி.வடக்கின் பலபகுதிகளும் முல்லைத்தீவில் கருநாட்டுக் கேணி,கொக்குத் தொடுவாய், கொக்கிளாய், நாயாறு சார்ந்துள்ள பகுதிகள், மன்னாரில் முள்ளிக்குளம் போன்ற இடங்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. தேசிய பாதுகாப்பு என காரணம் கூறி இராணுவம் அப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது.தேசிய பாதுகாப்பு என்பது மக்களின் பாதுகாப்பே தவிர மக்களின் இருப்பிட ஆக்கிரமிப்பு அல்ல. யுத்த சூழல் எதுவுமற்ற சூழலில் மக்கள் குடியிருப்பை ஆக்கிரமித்துவிட்டு தேசியப் பாதுகாப்புக்கே எனக் கூறுவதை ஏற்க முடியாது. அது தேசிய ஆக்கிரமிப்பாகவே கருதப்படும்.நிலங்களை ஆக்கிரமித்துள்ளதுடன், அவர்களது நிலங்களில் விவசாயம் செய்து வியாபாரம் பண்ணுவது, பாடசாலைகள் நடத்துவது போன்றவை நகைப்புக்கிடமானது. கண்துடைப்புக்காக ஒருசில வீதிகளை விடுவிப்பது, முகாம்களை மூடுவது சரியல்ல. அவை ஏமாற்று வேலைகள் போலவே தெரிகிறது.மேலும் படையினருக்கு காணிகள் தேவையென அடம்பிடித்து நிற்பதும் சரியல்ல.வடக்கில் அனுர அரசுக்கு பெருமளவில் மக்கள் ஆதரித்து வாக்களித்துள்ளனர். அந்த நம்பிக்கையை மேற்குறித்த நெருக்கடிகளை தீர்ப்பதன் மூலமே நிறைவேற்ற முடியும். இது விடயத்தில் சிக்கல்கள் இருப்பது புரியாததல்ல.எனினும் நாளடைவில் படிப்படியாக இத்தகைய பிரச்சினைகளுக்கு புதிய அரசு தீர்வுகாண வேண்டும் என்பது மக்களின் அவாவாகும். முறையற்ற ( IUU ) மீன்பிடிச் செயற்பாடுகள் சட்டபூர்வமற்ற, பதிவு செய்யப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பீடிச் செயற்பாடுகளான டைனமெட் வெடி வைத்து, மீன்பிடித்தல் சுருக்குமடி பயன்படுத்தல், ஒளிபாய்ச்சி மீன்பிடித்தல், அகலச் சிறகுவலைகள் பயன்படுத்தல், முறையற்ற வகையில் கடல் அட்டைப் பண்ணைகள் வைத்தல், குழைவைத்து மீன்பிடித்தல் போன்ற செயற்பாடுகள் மீள் ஒழுங்குபடுத்தப்படுவது அவசியம். வள முகாமைத்துவம், கண்காணிப்பு, விழிப்பணர்வு நடவடிக்கைகள் எவையும் இங்கு இல்லை. மேற்குறித்த விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். ஆழ்கடல் மீன்பிடி வடக்கில் ஆழ்கடல் வள வாய்ப்புக்கள் உண்டு. ஆயினும் அதனை அடைந்து கொள்வதில் அதற்கான உள்ளீட்டு வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. துறைமுகம், இறங்கு துறை, மூலதனம், தொழில் நுட்பம், பயிற்சி வசதிகள் போன்றன பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. இவை குறித்து அமைச்சு அதிக கவனம் செலுத்துவதும் அவசியம். பவளப்பாறைகள் அழிவு மன்னார் குடாக் கடலில் Gulf of Mannar- அமைந்துள்ள பல கி.மீ.நீளமான பவளப் பாறைகள் தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற பாரிய இழுவைப்படகுகளாலும்.டைனமெட் பாவனையாலும் அடித்து நொருக்கப்பட்டு வருகின்றன. அரிப்புத் திட்டு, வங்காலை, சிலாவத்துறை திட்டுக்கள், அலைத் தடுப்பு சுவர்கள் போல கடலில் அமைந்திருந்தன. அவை மேற்குறித்த மீன்பிடிச் செயற்பாடுகள் காரணமாக அழிவடைந்தமையினால் அதனைச் சார்ந்துள்ள கரையோரம் அரித்தலுக்குள்ளாகி வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளன. அரிப்பு முதல் சவுத்பார் வரையிலான கரையோரங்கள் மிக மோசமாகப் பாதிக்குள்ளாகியிருக்கின்றன.அத்துடன் கண்டல் மரங்கள் வெட்டப்பட்டு கடலில் மீன்கள் ஒருங்கு சேர்வதற்கான செயற்கைத் தளமாக உருவாக்கப்படுகின்றன. அவ்விடங்களில் ஒருங்கு சேரும் மீன்கள் டைனமெட் வெடி வைத்துக் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக கண்டல் அழிவும் சிற்றளவு மீன்பிடி ஒழுங்கும் சீரழிகின்றன. கரையோரங்களில் கடற்படையினர் இருந்தும் பயனில்லை. சுற்றுச்சூழல் அதிகாரசபை, மீபா என்னும் கடல்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை போன்றவை இருந்தும் இவைகளினால் மேற்குறித்த அனர்த்தங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகவே புதிய அமைச்சர் இதுவிடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனக் கோருகின்றோம்.விடியலைத் தேடி ஏங்கி நிற்கும் வடபுல மீனவர்களுக்கு அனுர ஆட்சியிலிருந்தேனும் விடிவு கிட்டுமா? புதிய அமைச்சர் சவால்களை வெற்றி கொள்வாரா? https://thinakkural.lk/article/312924
  14. அமைச்சர்களுக்கு இனி பங்களாக்கள் வழங்கப்படாது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை குறைக்கும் நடவடிக்கையில், அமைச்சர்களுக்கு அரச பங்களாக்களை ஒதுக்காது இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஒருவர் நேற்று தெரிவித்தார். மேலும், எம்.பி.க்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் வரியில்லா வாகன அனுமதிகளும் ரத்து செய்யப்படும். கடந்த அரசாங்கங்களில் பதவி வகித்த அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரச பங்களாக்களை என்ன செய்வது என்பதை அரசாங்கம் தீர்மானிக்கும் என பாராளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பான பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று டெய்லி மிரருக்கு தெரிவித்தார். "தற்போதைய அரசாங்கத்தின் எந்த அமைச்சருக்கும் இந்த வீடுகளை நாங்கள் ஒதுக்க மாட்டோம்," என்று அவர் கூறினார். வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப் பத்திரங்களுக்குப் பதிலாக, பிரிவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விலை குறைந்த வாகனங்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். "எம்.பி.க்களுக்கு வரியில்லா வாகன அனுமதியை நாங்கள் வழங்க மாட்டோம். அவர்களுக்கு செலவு குறைந்த, எரிபொருள் சிக்கனமான வாகனங்கள் வழங்கப்படும்," என்று அவர் கூறினார். கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பண ஆதாயங்களுக்காக வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன. சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அதிக தொகைக்கு பிறருக்கு அனுமதிகள் மாற்றப்பட்டன. மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய பலன்களை இந்த முறை முதல் ரத்து செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிகள் பயன்படுத்தியதாக அடையாளம் காணப்பட்ட 344 சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட அல்லது அதை மீண்டும் வேறு வகையில் உபயோகப்படுத்தவும் அரசாங்கம் எத்தனிக்கிறது. இவற்றில் சில வாகனங்களை ஏலம் விடுவதற்கு அனுமதி கோரி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அமைச்சரவை பத்திரத்தை சமர்பிப்பார் என அவர் கூறினார். "குறிப்பிட்ட சொகுசு வாகனங்களில் வி8 வாகனங்களும் உள்ளடங்குகின்றன " என்று அவர் கூறினார். https://www.tamilmirror.lk/செய்திகள்/அமசசரகளகக-இன-பஙகளககள-வழஙகபபடத/175-348099
  15. எரிகின்ற வீட்டில் பிடுங்குவதுவரை லாபம் என்று பைடன் தனது மகனை ஜெயிலில் இருந்து காப்பாற்றியுள்ளார். இன்னும் நாலு வருஷத்தில் ட்ரம்ப் ஆட்சி முடிந்தாலும் ஜனநாயகக் கட்சி மீண்டுவரச் சந்தர்ப்பம் இல்லை என்று பைடனுக்குப் புரிந்துவிட்டது!
  16. சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது. இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09:00 மணியளவில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி முறையே அகவணக்கம், மலர்வணக்கம், தீபமேற்றல், உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றோடு நிறைவுபெற்றன. தமிழீழ விடுதலைக்காகவும், தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பானது அமைப்பின் ஒழுங்கின் அடிப்படையில் அந்நிகழ்வுக்குரிய மகத்துவத்துடன் மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10:45 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுவிஸ் வாழ் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து சிறப்பித்திருந்தார்கள். தமிழீழத்தின் பல்வேறு மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து சேகரிக்கப்பெற்ற புனித மண்ணையும், கல்லறைக் கற்களையும், சீருடையின் சாட்சியாக எம்மிடம் சேர்க்கப்பெற்றவற்றையும் மாவீரர்களின் பிள்ளைகளால் அரங்கிற்கு எடுத்துவரப்பட்டு மாவீரர் பொதுத்தூபி முன்றலில் வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு துயிலுமில்ல நிகழ்வுகள் உணர்வுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன், காலத்தின் தேவை கருதி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 2008ஆம் ஆண்டின் தேசிய மாவீரர் நாள் உரை முழுமையாக அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டது. சங்கொலி, பறையிசை, மணியொலி எழுப்பலுடன் அகவணக்கத்தினைத் தொடர்ந்து தாயக நேரம் 18:07 மணியளவில் முதன்மைச் சுடரேற்றப்பட்டு துயிலுமில்லப் பாடலோடு மலர்வணக்கப் பாடலும் ஒலிபரப்பப்பட்டது. மக்களால் மலர், சுடர் வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் மாவீரர்களுக்கான வணக்கப்பாடல்களும் காணிக்கைப்படுத்தப்பட்டன. தமிழீழத் தேசிய மாவீரர் நாள் சுவிஸ் நிகழ்வில், சுவிசின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வரலாற்றுக் கடமைக்கான உறுதிமொழியை மாவீரர் திருவுருவப் படங்களுக்கு முன்னால் எடுத்தமையானது சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் தேசிய உணர்வையும், இலட்சியப்பற்றையும் மீளவும் வெளிப்படுத்தி நிற்கின்றது. மிகப் பிரமாண்ட அரங்கில் 1700 இற்கு மேற்பட்ட மாவீரர்களின் திருமுகங்கள் ஏற்றப்பட்ட சுடர்களிலே ஒளிவீச, முதன்மை கோபுரமும் அடிக்கற்களின் தடையகற்றிகளின் கோபுரமும் நடுகல்நாயகர்களின் கோபுரமும் கரும்புலிகளின் கோபுரங்களும் நிமிர்ந்து நிற்க, நாட்டுப்பற்றாளர், மாமனிதர்கள் திருவுருவப்படங்கள் உணர்வோடு சங்கமிக்க, முள்ளிவாய்க்கால் நினைவு மக்கள் தூபி தமிழின அழிப்பின் சாட்சியாய் நிற்க, தமிழீழத் தேசியச் சின்னங்கள் அரங்கு முழுவதையும் எழுச்சியூட்ட, தமிழீழத்தேசியக்கொடி பட்டொளி வீச, மாவீரர் குடும்ப உறவுகளின் உணர்வலைகள் மாவீரம் சொல்ல குழந்தைகள், சிறுவர், இளையோர், உணர்வாளர்கள், போராளிகள், செயற்பாட்டாளர்களென எல்லோரும் மாவீரர் நினைவுகளோடு உறைந்திருந்து உறுதி எடுத்துக்கொண்ட காட்சி மாபெரும் வரலாற்றுப் பதிவாகும். தமிழீழ விடுதலைப்புலிகளின் 2024 மாவீர்ர் நாளின் உத்தியோகபூர்வ அறிக்கையின் உரைவடிவம் ஒலிக்கவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து,தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளையின் கொள்கை விளக்கப்பேச்சும் நிகழ்த்தப்பட்டதுடன், தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிசினால் நடாத்தப்பட்ட மாவீரர்; நினைவுகள் சுமந்த பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டது. எத்தடை வரினும் அத்தடை உடைத்து தமிழீழத் தேசியத் தலைவரது வழிகாட்டலை ஏற்ற மக்களாக தமிழீழத்தை மீட்போம் என்ற உறுதியுடன் 'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்“ என்ற தாயகப் பாடலையடுத்து, தமிழீழத் தேசியக்கொடி கையேற்றல், தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நிறைவுபெற்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ் கிளை https://www.thaarakam.com/news/08a5b5e3-6ab3-470f-be0e-fe2ab036bedb
  17. தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம் December 1, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கை தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம் என்ன? அண்மைய பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து எழுகின்ற இந்த கேள்வியை வெறுமனே தமிழ்க் கட்சிகளின் எதிர்கால தேர்தல் வாய்ப்புக்களுடன் இணைத்து நோக்கக் கூடாது. இது தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் நிறைவேறக்கூடிய வாய்ப்புக்கள் பற்றிய எதிர்பார்ப்புகளுடனும் ஏக்கங்களுடனும் சம்பந்தப்பட்ட கேள்வியாகும். உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்து வந்த தமிழ் தேசியவாத அரசியல் கட்சிகள் இந்தத் தடவை பாராளுமன்ற தேர்தலில் பெரிய தோல்வியைச் சந்தித்தன. தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான கடந்த காலப் போராட்டங்கள் பயன்தராமல் போனதற்கான காரணங்கள் குறித்து சுயபரிசோதனையைச் செய்துபார்ப்பதில் ஒருபோதும் மானசீகமான அக்கறைகாட்டாத இந்த கட்சிகள் இந்த வரலாற்று தோல்விக்கு பிறகாவது தங்களது இதுவரையான அரசியல் பாதையை திரும்பிப்பார்த்து திருந்திக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது கூட கஷ்டமானதாகவே தெரிகிறது. தமிழ் தேசியவாதக் கட்சிகள் பிளவுபட்டு பல்வேறு பிரிவுகளாக தேர்தலில் போட்டியிட்டதன் விளைவாக வடக்கு, கிழக்கு தமிழர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இந்த தடவை முன்னரை விடவும் மோசமாக பலவீனப்பட்டிருக்கிறது. முன்கூட்டியே விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை தமிழ் அரசியல்வாதிகள் பொருட்படுத்தவில்லை. கடந்த பாராளுமன்றத்தில் ஆறு ஆசனங்களை கொண்டிருந்த இலங்கைத் தமிழரசு கட்சி இந்த தடவை எட்டு ஆசனங்களை பெற்றதை அதன் மக்கள் செல்வாக்கில் ஏற்பட்ட ஒரு அதிகரிப்பாக நினைத்து திருப்திப்பட முடியாது. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் சிங்களவர்களின் ஆதிக்கத்திலான தேசியக் கட்சி ஒன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் முதற் தடவையாக கூடுதலான ஆசனங்களை கைப்பற்றியிருப்பதன் பின்னணியிலேயே தமிழரசு கட்சி அதன் தேர்தல் செயற்பாட்டை நோக்க வேண்டும். தேசிய இனப்பிரச்சினை உட்பட தமிழ் மக்களை அழுத்தும் முக்கியமான பிரச்சினைகளுக்கு உருப்படியான தீர்வு குறித்து எந்த வாக்குறுதியையும் வழங்காமலேயே ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தமிழ்ப் பகுதிகளில் பெருவெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி குறித்து யானை பார்த்த குருடர்களைப் போன்று அரசியல்வாதிகளும் அவதானிகளும் பலவிதமான கருத்துக்களை கூறுகிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் தங்களுக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவை தமிழ் இனவாத அரசியலின் நிராகரிப்பாக வியாக்கியானம் செய்கிறார்கள். தென்னிலங்கையில் சிங்கள பௌத்த கடும்போக்கு தேசியவாதிகள் என்று அடையாளம் காணப்பட்ட அரசியல்வாதிகள் இந்த தடவை தேர்தலில் கண்ட தோல்வியை சிங்கள இனவாதத்தின் தோல்வியாக காண்பிக்கவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள். அதேவேளை, சில தமிழ் அரசியல்வாதிகள் வடக்கு, கிழக்கில் தமிழ்க்கட்சிகள் எல்லாவற்றுக்கும் கிடைத்த வாக்குகளை கூட்டிப்பார்த்து அதை தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகளுடன் ஒப்பிட்டு தமிழ்த் தேசிய வாதத்தை தமிழ் மக்கள் நிராகரிக்கவில்லை என்று ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். தேர்தல் என்று வரும்போது கிடைக்கின்ற ஆசனங்களே முக்கியமானவை. தேர்தலில் தோல்வியைச் சந்தித்த கட்சிகளின் வாக்குகளின் மொத்த தொகையையும் சேர்த்து சான்றாகக்காட்டி தமிழ்த் தேசியவாத உணர்வு மக்கள் மத்தியில் துடிப்புடன் இருக்கிறது என்று நிறுவ முற்படுவதில் அர்த்தமில்லை. தென்னிலங்கையில் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளின் தேர்தல் தோல்வியை எவ்வாறு சிங்கள பௌத்த தேசியவாதத்தின் தோல்வி என்று கூறமுடியாதோ அதே போன்றே வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியவாத கட்சிகளுக்கு கிடைத்த தோல்வியையும் தமிழ்த் தேசியவாதத்தின் தோல்வி என்று கூறமுடியாது. இலங்கையில் இனவாத அரசியலும் மதத் தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று புதிய பாராளுமன்றத்தில் தனது கொள்கை விளக்கவுரையில் சூளுரைத்திருக்கும் ஜனாதிபதி திசாநாயக்க அதே இனவாதமும் மதவாதமும் தோற்றுவித்த நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணாமல் ஒருபோதும் அந்த இலட்சியத்தை அடைய முடியாது. தேசிய இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுதான் தமிழ் மக்கள் அவர்களுக்கு பெருமளவில் வாக்களித்தார்கள் என்று ஒருபோதும் கூறமுடியாது. அதேபோன்றே தமிழ்க்கட்சிகள் கண்ட தோல்வியை தமிழ் மக்கள் தங்களது நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் தொடர்பிலான நீண்டகால அடிப்படைக் கோரிக்கைகளை அலட்சியம் செய்துவிட்டு தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைவதற்கு அவர்கள் தயாராகி விட்டதன் அறிகுறியாகவும் வியாக்கியானம் செய்யமுடியாது. வடக்கே பருத்தித்துறை தொடக்கம் தெற்கே தேவேந்திரமுனை வரை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்திருக்கும் முறையை நோக்கும் போது சிங்கள மக்களைப் போன்றே தமிழ் மக்களும் பாரம்பரியமான அரசியல் கட்சிகளை நிராகரிப்பற்கு சந்தர்ப்பம் ஒன்றுக்காக காத்திருந்தார்கள் என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. தங்களை இதுகாலவரை பிரதிநிதித்துவப்படுத்திவந்த தமிழ் தேசியவாத கட்சிகளின் செயற்பாடுகள் மீதான வெறுப்பின் காரணமாகவே தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பிறகு தங்களது உரிமைப் போராட்டத்தை சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்கு பொருத்தமான முறையில் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகளுடன் அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியாமல் இருந்த தமிழ்க் கட்சிகளுக்கு மாற்றாக உருப்படியான அரசியல் இயக்கம் ஒன்று தங்கள் மத்தியில் இல்லாத நிலையில் தமிழ் மக்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. அதேவேளை, நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு ஏற்ற முறையில் சிந்தித்துச் செயற்படாமல் வெறுமனே உணர்ச்சியமான தமிழ்த் தேசியவாதச் சுலோகங்களை வாய்ப்பாடு போன்று உச்சரித்துக்கொண்டும் அவ்வப்போது நினைவேந்தல்களை செய்துகொண்டும் திரியும் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் பல்வேறுபட்ட வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததும் அவர்கள் மீதான வெறுப்புக்கு இன்னொரு காரணம். இரண்டரை வருடங்களுக்கு முன்னர் முன்னென்றும் இல்லாத வகையிலான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தென்னிலங்கையில் மக்கள் கிளர்ச்சி மூண்டபோது தமிழ் மக்களுக்கு அது ஒரு பிரச்சினை அல்ல என்று கூறிய தமிழ் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள தனவந்தர்களை இலங்கையில் சுதந்திரமாக முதலீடு செய்ய அனுமதித்தால் பொருளாதார பிரச்சினைக்கு இடமிருக்காது என்று பாராளுமன்றத்தில் அரசியல்வாதிகள் பேசியதையும் காணக்கூடியதாக இருந்தது. தாங்கள் இதுவரை காலமும் பிரதிநிதித்துவம் செய்த மக்கள் மத்தியில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவந்த சிந்தனை மாற்றத்தை தமிழ் அரசியல்வாதிகளினால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாராளுமன்ற தேர்தலில் தாங்கள் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களிக்கப் போவதாக தமிழ் அரசியல்வாதிகளிடம் நேரடியாகவே வடக்கில் பல இடங்களில் மக்கள் கூறினார்கள். ஆனால், வழமை போன்று தமிழ்க் கட்சிகளுக்கே அவர்கள் பெருமளவில் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அரசியல்வாதிகள் மெத்தனமாக இருந்து விட்டார்கள். ஆரம்பக்கட்டப் பிரசாரங்களில் தமிழ்க்கட்சிகள் தங்களுக்கு நேரவிருக்கின்ற ஆபத்தை புரிந்து கொள்ளவில்லை. இறுதிக்கட்டங்களிலேயே அவை நிலைவரத்தை உணர்ந்து தேசிய மக்கள் சக்தி மீது கடுமையான தாக்குதல்களை தொடுத்தன. அதற்கு முதல் யாழ்ப்பாணத்தில் மற்றைய கட்சிகள் மாத்திரமல்ல இலங்கை தமிழரசு கட்சிக்குள் இருந்தவர்களும் “தமிழ்த் தேசியவாதத்தைக் காப்பாற்றுவதற்காக” முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை தோற்கடிப்பதிலேயே தீவிர அக்கறை காட்டினார்கள். தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கடந்த காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக கடைப்பிடித்த கொள்கைகளையும் முன்னெடுத்த செயற்பாடுகளையும் தமிழ் அரசியல்வாதிகள் பிரசாரங்களின்போது திரும்பத்திரும்ப சுட்டிக்காட்டிய போதிலும் கூட, மக்களை தங்கள் பக்கம் பெருமளவில் அவர்களால் திருப்பமுடியாமற் போய்விட்டது. தாங்கள் பல்வேறு அணிகளாகப் பிரிந்து நின்று தேர்தலில் போட்டியிட்டதன் காரணத்தினால் மாத்திரமே தமிழ் மக்கள் தங்கள் மீது ஆத்திரமடைந்து தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள் போன்று தெரிகிறது. கடந்த சில நாட்களாக அவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்களை நோக்கும்போது மீண்டும் ஐக்கியப்பட்டு செயற்பட முன்வந்தால் மக்கள் முன்னரைப் போன்று தங்களுக்கு அமோக ஆதரவை தருவார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள் போலும். பத்து வருடங்களுக்கு முன்னர் தமிழ்ச் சிவில் சமூக அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் சேர்ந்து அமைத்த தமிழ் மக்கள் பேரவை முன்வைத்த அரசியல் தீர்வு யோசனைகளின் அடிப்படையில் மற்றைய தமிழ்க்கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். ஆனால், தமிழ்க் கட்சிகளிடமிருந்தது இதுவரையில் பதில் வரவில்லை. அதேபோன்றே, தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுவின் தலைவரான சிவஞானம் சிறீதரனும் மீண்டும் ஐக்கியப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்தார். அதற்கும் பதில் வரவில்லை. வேறு அரசியல்வாதிகளும் மீண்டும் ஐக்கியப்பட வேண்டியதன் அவசியம் குறித்து பேசியிருக்கிறார்கள். உள்நாட்டுப்போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பலம்பொருந்திய அரசியல் இயக்கமாக தமிழ் தேசிய கூட்டமைப்பை கட்டியெழுப்புவதற்கு இருந்த வாய்ப்பை தவறவிட்டதன் மூலம் தமிழ் அரசியல் சமுதாயத்தின் இன்றைய சீரழிவுக்கு பொறுப்பான அதே தலைவர்கள் மீண்டும் ஒன்றுபடுவதற்கு முன்வந்தால் கூட தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது சாத்தியமாகுமோ தெரியவில்லை. தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்த முயற்சியையும் தமிழ் மக்கள் நிச்சயமாக சந்தேகத்துடனேயே நோக்குவார்கள். மீண்டும் ஐக்கியத்தில் நாட்டம் காட்டுவதற்கு மக்கள் மத்தியில் எத்தகைய விளக்கத்தை தமிழ் அரசியல்வாதிகள் முன்வைக்கப் போகிறார்கள்? தமிழ்க்கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட பிளவுகளுக்கு கொள்கை வேறுபாடுகளை விடவும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வியூகங்களே பிரதான காரணமாக இருந்தன. இதுவரை கால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தமிழ் அரசியல் கட்சிகளிடையே ஐக்கியத்தை அல்லது ஒருமித்த அணுகுமுறையை எதிர்பார்ப்பதை போன்ற வீணான செயல் வேறு எதுவும் இருக்கப் போவதில்லை. கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் காலங்காலமாக தலைவர்களுக்கு இடையிலான தன்னகம்பாவமும் ஆளுமைப் போட்டியும் தமிழர் அரசியலின் பின்னடைவுக்கு முக்கியமான காரணிகளாக இருந்து வந்திருக்கின்றன. மிதவாத அரசியல் தலைவர்களை விடவும் ஆயுதமேந்திய தமிழ்த் தீவிரவாத இயக்கங்களின் தலைவர்கள் இதுவிடயத்தில் பல படிகள் மேலே சகோதரப் படுகொலைகளை சர்வசாதாரணமாகச் செய்தார்கள். அத்தகைய விபரீதமான போக்கு இப்போதும் வெவ்வேறு வடிவங்களில் தொடருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் கடந்த பதினைந்து வருடகாலமாக தாங்கள் கடைப்பிடித்துவந்த கொள்கைகளும் அணுகுமுறைகளும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதை நோக்கிய திசையில் ஒரு அங்குலமேனும் முன்னோக்கிய நகர்வுக்கு உதவியிருக்கிறதா என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அரசியல் தீர்வைத் தரவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்ற போதிலும், இலங்கையில் தொடர்ந்தும் வாழ்ந்தால் தங்களுக்கு ஒரு எதிர்காலம் இருக்கும் என்று தமிழ் மக்களுக்கு கொஞ்சமேனும் நம்பிக்கை ஏற்படக்கூடியதாக தங்களது இதுவரையான செயற்பாடுகள் அமைந்திருந்தனவா என்பதையும் தமிழ் அரசியல்வாதிகள் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். தமிழ்த் தேசியவாதம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் நிலப்பிராந்தியம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு அந்த நிலப்பிராந்தியத்தில் மக்கள் வாழவேண்டும். மக்களும் நிலமும் இல்லாமல் எந்த தேசியவாதத்தையும் பாதுகாக்க முடியாது. வடக்கு, கிழக்கில் தொடர்ந்து வாழ்ந்தால் தங்களுக்கும் தங்களது எதிர்காலச் சந்ததிகளுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கில் தமிழர்களில் கணிசமான பிரிவினர் அங்கே தொடர்ந்து வாழ விரும்பப்போவதில்லை. அரசியல்வாதிகள் வீடுவீடாகச் சென்று ஒரு ஆய்வைச் செய்து பார்த்தால் எத்தனை தமிழர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் நாட்டம் காட்டுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். மக்கள் இல்லாத மண்ணில் தேசியவாதத்தைக் காப்பாற்றுவதற்கு என்ன இருக்கிறது? தற்போது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருக்கும் தமிழ்ப் பிரதிநிதிகள் தேர்தலில் மக்கள் புகட்டிய பாடத்துக்கு பின்னராவது தங்களது முன்னைய போக்குகளை மாற்றிக்கொண்டு ஒன்றுபட்டுச் செயற்படுவார்களா என்பது முக்கியமான ஒரு கேள்வி. தேர்தலுக்கு பிறகு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரை தனித்தனியாகச் சந்தித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுவும் இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மீது நெருக்குதல்களைக் கொடுக்கவேண்டிய அவசியம் பற்றியே வலியுறுத்தியதாக தெரியவருகிறது. இந்தியா உட்பட சர்வதேச வல்லாதிக்க நாடுகள் இலங்கை மீது நெருக்குதல்களைக் கொடு்க்கும் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு இதுவரை கடைப்பிடித்த அணுகுமுறைகள் எந்தளவுக்கு பயனளித்திருக்கின்றன என்பதையும் தமிழ்க் கட்சிகள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். முன்னைய அரசாங்கங்களுடன் கடைப்பிடித்த அதே அணுகுமுறைகளை விடுத்து வேறுவிதமாக புதிய அரசாங்கத்தைக் கையாளுவதற்கான சாத்தியங்கள் குறித்தும் ஆராயவேண்டும். இந்தியாவின் மீதும் மேற்குலக வல்லாதிக்க நாடுகள் மீதும் தொடர்ந்தும் நம்பிக்கை வைப்பதன் மூலம் எதையாவது சாதிக்க முடியுமா என்பது குறித்து இனிமேலும் தமிழர்கள் சிந்திக்காமல் இருக்கமுடியாது. தமிழர்கள் தங்கள்மீது நம்பிக்கை வைக்கமுடியாமல் வெளியுலகத்தையே உதவிக்கு பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய அளவுக்கு அவர்களின் அரசியல் சமுதாயம் படுமோசமாக சிதறுப்பட்டு பலவீனமடைந்திருக்கிறது. தங்கள் மீது நம்பிக்கை வைத்து பலம்பொருந்திய ஜனநாயக ரீதியான அரசியல் இயக்கம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம். நிலையான அரசியல் தீர்வொன்றுக்காக ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து பாடுபடுவதே தமிழர்களுக்கு இருக்கக்கூடிய ஒரே மார்க்கம். அதையும் படிப்படியாகவே செய்யவேண்டும். அதை விடுத்து வேறு எந்த அணுகுமுறையுமே 1980 களில் இருந்து இதுவரையில் பெறப்பட்ட அனுபவங்களைப் போன்று வீணாக காலத்தையும் சக்தியையும் விரயம் செய்வதாகவே அமையும். எந்தவொரு வெளிநாடுமே அதன் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களுக்கு வாய்ப்பாக அமையும் பட்சத்திலேயே எமக்கு உதவுவதில் நாட்டம் காட்டும். மக்களின் நலன்களின் அடிப்படையில் அவை உதவ முன்வருவதில்லை. இலங்கையிலும் பங்களாதேஷிலும் இந்தியாவின் தலையீடு இந்தியாவின் நலன்களை நோக்கமாகக் கொண்டதே தவிர இலங்கை தமிழர்களினதோ அல்லது வங்காளிகளினதோ நலன்களை உண்மையில் மனதிற் கொண்டவையல்ல. ஆனால், இந்தியா அதன் நலன்களுக்காக இலங்கை இனநெருக்கடியில் படைகளுடன் வந்து தலையீடு செய்த சந்தர்ப்பத்தையாவது சமயோசிதமாக பயன்படுத்தக்கூடிய விவேகம் தமிழர்களுக்காக போராடிய சக்திகளிடம் இருக்கவில்லையே. அந்த சந்தர்ப்பத்தை மிகவும் சூழ்ச்சித்தனமாக பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தமிழர்களுக்கு எதிராக அல்லவா புதுடில்லியை திருப்பி விடுவதில் வெற்றிகண்டார். இந்தியாவுக்கும கொழும்புக்கும் இடையே முரண்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் அன்றைய சூழ்நிலையை தமிழ்களுக்கு அனுகூலமானதாக மாற்றுவதற்கு முடியாமற்போனதற்கான காரணங்களை இன்றுவரை தமிழ் அரசியல் சக்திகள் சுயபரிசோதனை செய்து உண்மையை ஒப்புக்கொண்டதில்லையே. இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே தமிழர்கள் இனிமேல் இந்தியாவை நாடுவதில் உள்ள பயனுடைத்தன்மை பற்றி சிந்திக்கவேண்டும். இலங்கையுடனான இந்தியாவின் உறவுகளைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர் பிரச்சினை புதுடில்லியின் முன்னுரிமைக்குரிய விவாகரமாக இனிமேலும் இல்லை. இருதரப்பு உறவுகளுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தமிழர் பிரச்சினைக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுப்பபதை தாங்கள் விரும்பவில்லை என்பதை இலங்கை அரசாங்கங்கள் தெளிவாகவே வெளிக்காட்டி வந்திருக்கின்றன. அதனால், மாகாணசபை தேர்தல்களை நடத்தி அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையை இடைக்கிடை கேட்பதை தவிர இந்தியாவிடமிருந்து வேறு எந்த அணுகுமுறையையும் எதிர்பார்க்கமுடியாது. அதேவேளை 13 வது திருத்தத்தையாவது காப்பாற்ற வேண்டும் என்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் மானசீகமான அக்கறையை காட்டுவதுமில்லை. 13 வது திருத்தத்தையே மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முறையாக நடைமுறைப்படுத்தாமல் இருந்துவரும் இலங்கை அரசாங்கங்களிடம் சமஷ்டி ஆட்சிமுறையின் அடிப்படையிலான தீர்வை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்று தங்களிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கூறியதை தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். கைவசம் இருக்கும் 13 வது திருத்தத்தில் தொடங்கி படிப்படியாக அதிகாரப்பரவலாக்கல் செயன்முறையை மேம்படுத்தி அதன் மூலமாக நீண்டகால அடிப்படையிலான அரசியல் தீர்வை நோக்கி பயணம் செய்வதே தமிழர்களுக்கு இன்று இருக்கக்கூடிய நடைமுறைச் சாத்தியமான ஒரே மார்க்கம். அதை வலியுறுத்துவதில் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டம் காட்டினால் கணிசமானளவுக்கு வெளியுலகின் ஆதரவை பெறுவது சாத்தியமாகலாம். 13 வது திருத்தத்துக்கு தென்னிலங்கையில் எதிர்ப்பு இருக்கிறது உண்மை..ஆனால், தமிழர் தரப்பும் அதில் நாட்டத்தைக் காட்டவில்லையானால் யாருக்காக அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்? தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டுவரப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்க பெரும் பொறுப்பு காத்திருக்கிறது. நிலைவரங்கள் வேண்டிநிற்பதற்கு ஏற்றமுறையில் தொலைநோக்குடனும் அரசியல் விவேகத்துடனும் அவர்கள் செயற்படத் தவறினால் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தையும் கைவிட்டு இறுதியில் எதையுமே பெறமுடியாத ஒரு மக்கள் கூட்டமாக தமிழ் மக்கள் விடப்படும் நிலையே உருவாகும். இறுதியாக, இலங்கை தமிழர்களின் அரசியலை தங்களது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றமுறையில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்குடன் பணத்தை வீசியெறிந்த புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள சக்திகளுக்கும் பாராளுமன்றத் தேர்தல் ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. https://arangamnews.com/?p=11491
  18. சுமந்திரன் இல்லாத பாராளுமன்றம் (ஏ)மாற்றமா…..? November 30, 2024 — அழகு குணசீலன் — அன்றைய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும், இன்றைய தமிழரசுக்கட்சியினதும் ஊடகப்பேச்சாளர் மதியாபரணம் சுமந்திரன் நடந்து முடிந்த பராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சிக்கும், விருப்பத்தேர்வில் சுமந்திரனுக்கும் மக்கள் அளித்த வாக்குகள் குறைவானவை. இதனால் 63,327 வாக்குகளை (19.5 %) வாக்குகளை பெற்ற தமிழரசுகட்சிக்கு ஒரு இருக்கையே கிடைத்தது. அது மக்களின் விருப்பத்தேர்வின் அடிப்படையில் சிவஞானம் சிறீதரன் எம்.பி.யாக தெரிவு செய்யப்பட வாய்ப்பளித்துள்ளது. இது சுமந்திரனை சிறிதரன் தோற்கடித்த இரண்டாவது சந்தர்ப்பம். முன்னையது தமிழரசுக்கட்சி தலைவர் தேர்வில் பொதுச்சபையில், பின்னையது கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மன்றத்தில். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான என்.பி.பி. அண்மைய இரண்டு தேர்தல்களிலும் புதிய அரசியல் அமைப்பு மாற்றம் ஒன்றை தேர்தல் விஞ்ஞானத்தில் அறிவித்திருந்தது. தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ள என்.பி.பி.க்கு தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஆனால் தமிழ்த்தேசிய பரப்பில் புதிய அரசியல் அமைப்பு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் போது சுமந்திரன் பாராளுமன்றத்தில் இல்லையே என்ற ஏக்கம் ஒரு தரப்பால் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு மாறாக தமிழ்த்தேசிய மறு தரப்பு சுமந்திரன் பாராளுமன்றத்தில் இருந்தால் அவர் கொழும்பு அரசுக்கு ஆதரவாகவே செயற்படுவார் இதனால் சுமந்திரன் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? என்று கேட்கிறது. தேர்தல் காலத்தில் இருந்தே சுமந்திரனின் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்காக யாழ்.பத்திரிகை ஒன்று சுமந்திரனுக்கு ஆதரவான கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. இவற்றில் சுமந்திரனுக்கும், ஜனாதிபதிக்கும் இடையே இடம்பெற்ற தொலைபேசி குசேலம் விசாரிப்புக்களும், சந்திப்புக்களும் கூட அரசியலாக்கப்பட்டன. மந்திரி பதவியும் இதில் ஒன்று. ஜனாதிபதியுடனான டக்ளஸ் தேவானந்தாவின் சந்திப்பை விமர்சித்த அந்த பத்திரிகை சுமந்திரனை தோளில் தட்டிக்கொடுத்தது. சுமந்திரனும், டக்ளஸும் இதை தேர்தலுக்கு பயன்படுத்த முயன்ற போது ஜே.வி.பி முக்கியஸ்தர்கள் அதை மறுத்து ஊடகச்சந்திப்பு நடாத்தினர். ஜனாதிபதி தனிப்பட்ட வகையில் தேர்தலில் தோல்வியுற்ற சுமந்திரனை தேற்றுவதற்கு கூறிய வார்த்தைகள் உத்தியோகபூர்வ அரசாங்கத்தின் வார்த்தைகள் அல்ல. என்.பி.பி.யின் உத்தியோகபூர்வ நிலைப்பாடும் அல்ல. இவை எல்லாமே திட்டமிட்டு அரசியலாக்கப்படும் நிலை காணப்படுகிறது. இதே ஆறுதலை ஜனாதிபதி டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சொன்னதாகவும் பேசப்படுகிறது. இது அரசியல் நாகரிகம். இந்த நாகரிகத்தை அநாகரிகமாக்கி தமிழ்த்தரப்பு அநாகரிக அரசியல் செய்கிறது. தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் சி.வி.கே. சிவஞானமும் சுமந்திரனுக்கு ஆதரவான கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இவர் கட்சியில் சுமந்திரன் அணியைச் சேர்ந்தவர். பல சந்தர்ப்பங்களில் சுமந்திரனின் வாயாகவும், மூளையாகவும் செயற்படுபவர். இந்த சுமந்திரன் ஆதரவு தரப்புக்கள் கூறும் “சுமந்திரன் இல்லாத பாராளுமன்றம்” தமிழ்மக்களுக்கு பாதகமானதா? அப்படி ஒரு விம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்க இந்த பரப்புரை செய்யப்படுகிறதா? தமிழரசுகட்சியை/ தமிழ்த்தேசியக் கட்சிகளை பொறுத்த மட்டில் சுமந்திரனின் தோல்வி குறித்து இரு வேறு விமர்சனங்கள் உண்டு. ஒரு பிரிவினர் சுமந்திரனின் தோல்வியினால் “ஏமாற்றம்” அடைந்து இருப்பவர்கள். மறு பிரிவினர் சுமந்திரனின் தோல்வி மக்கள் விரும்பிய. “மாற்றம்” ஒன்றின் வெளிப்பாடு என்று கூறுகிறார்கள். சுமந்திரனோ இவை பற்றி வெளிப்படையாக அலட்டிக்கொள்ளாமல் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன், தேசியப்பட்டியலில் எம்.பி.யாக மாட்டேன், பாராளுமன்றத்திற்குள் இருந்துதான் அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதல்ல, வெளியில் இருந்தும் செய்யலாம், அப்படி ஏற்கனவே வெளியில் இருந்து பணிசெய்து கிடந்ததால் தான் சம்பந்தர் காலத்தில் தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்டேன் ….. என்றெல்லாம் பட்டியல் போட்டு தமிழ்த்தேசிய அரசியலில் -தமிழரசுக்கட்சியின் தலைசிறந்த ஜனநாயக வாதியாக தன்னைக்காட்டி கொள்கிறார். ஆனால் கடந்த காலத்தில் சுமந்திரனின் அரசியல் செயற்பாடுகளையும், நகர்வுகளையும் பட்டியல் போடும் மறு தரப்பு சுமந்திரன் தமிழ்தேசிய ஒற்றுமையை குலைத்தவர், கொழும்பு அரசுக்கு ஆதரவானவர், தமிழ்த்தேசிய போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர், கடந்த நல்லாட்சியில் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தாது ஒத்தோடியவர், ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவுகள் சுமந்திரனின் தனிப்பட்ட முடிவுகளுக்கு கட்சிசாயம் பூசப்பட்டவை என்று கூறுகின்றனர். முன்னுக்கு பின் முரணாக செயல்படுபவர், கட்சிக்குள் மாற்று கருத்துக்கள் கொண்டவர்களை ஓரம் கட்டி உட்கட்சி ஜனநாயகத்தில் -கருத்துச்சுதந்திரத்தில் தன் ஆதரவாளர்களை கொண்டு ஆதிக்கம் செலுத்துபவர் என்றெல்லாம்…. பட்டியல் போடுகின்றனர். இதற்கு சுமந்திரன் பாராளுமன்றத்தில் இல்லாத இந்த குறுகிய காலத்தில் தமிழ்தேசிய சூழலில் இடம்பெறும் சாதகமான மாற்றங்களை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஒரு பொது நிலைப்பாட்டிற்காக பேசுவதற்காக தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு அழைப்பு விட்டிருக்கிறார். செல்வம் அடைக்கலநாதன் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று கோரியிருக்கிறார். தமிழ்த்தேசிய அரசியல் ஆய்வாளர்கள், ஊடகங்கள் தமிழ் தரப்பு பிரிந்து நின்றதினால்தான் என்.பி.பி.வடக்கில் வெற்றி பெற்றது என்று பேசுகின்றனர். ஆக, சுமந்திரன் இல்லாத பாராளுமன்றம் மாற்றத்திற்கான ஒரு திசையை காட்டுகிறது என்பது இவர்கள் வாதம். மதியாபரணம் சுமந்திரன் தலைசிறந்த இலங்கை சிவில் சட்டத்தரணிகளுள் ஒருவர். ஜனாதிபதி சட்டத்தரணியும் கூட. சட்ட நுணுக்கங்கள் அவருக்கு தண்ணி பட்டபாடு என்று கூறப்படுகிறது. சர்வதேச இராஜதந்திரிகளுடனும் தனிப்பட்ட உறவுகளை கொண்டவர். ஆனால் இவை எல்லாம் தெரியாமல் யாழ்ப்பாண மக்கள் அவரை நிராகரிக்கவில்லை. சுமந்திரனின் இந்த தகுதிகளுக்கும் திறமைகளுக்கும் அப்பால் அந்த மக்கள் வேறு ஒன்றை, கடந்த 15 ஆண்டுகளாக முதுமை அடைந்திருந்த இரா.சம்பந்தரை விடவும் சுமந்திரனிடம் இருந்து எதிர்பார்த்தார்கள். தங்களின் எதிர்பார்ப்பிற்கும் சுமந்திரனின் செயற்பாட்டிற்கும் இடையிலான இடைவெளியை வெளிப்படுத்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் சுமந்திரனுக்கு ஒரு “சிவப்பு சிக்னல்” காட்டினார்கள். அதுதான் சுமந்திரன் ஒரு இலட்சம் விருப்பு வாக்குகள் பெறுவேன் என்று கூறியபோது அதை அவர்கள் அரைவாசியாக குறைத்த முன் எச்சரிக்கை. அந்த முன்எச்சரிக்கையை சுமந்திரன் கடந்த நான்கு ஆண்டுகளில் கவனத்தில் கொள்ளவில்லை. அவரின் அரசியலில் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை. அதனால் மக்கள் “ஆளைமாற்ற” தீர்மானித்தனர் என்றே கொள்ளவேண்டி உள்ளது. இன்னும் ஒரு விடயம் முக்கியமானது. பொது வேட்பாளருக்கு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மக்கள் அளித்த வாக்குகள் சுமந்திரனின் சஜீத் ஆதரவு அரசியல் நிலைப்பாட்டிற்கான எதிர்ப்புக் காட்டலாக அமைந்த மிகப்பிந்திய வெளிப்பாடு எனக் கூறமுடியும். இன்றைய பாராளுமன்ற சூழலில் அரசியல் அமைப்பு திருத்தம், அல்லது புதிய அரசியலமைப்பு விடயத்தில் சுமந்திரன் பாரிய பாத்திரம் எதையும் வகிக்கும் நிலை அசாத்தியமானது. சுமந்திரன் தனித்து மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழ்த்தேசிய கட்சிகளும் இதில் தாக்கம் செலுத்த வாய்ப்பில்லை. எப்படி கதிரை எண்ணிக்கையை கொண்டு சுமந்திரன் கணக்கு பார்த்து மகிழ்ச்சி அடைந்தாலும் தமிழ்த்தேசிய அரசியலின் பலவீனம் வெளிச்சமானது. அரசியல் அமைப்பு தொடர்பான முடிவுகள் என்.பி.பி., தென்னிலங்கை கட்சிகள், பௌத்த மத பீடங்கள் என்பனவற்றால் எடுக்கப்பட வேண்டியவையாகவே இருக்கப் போகின்றன. பின்னர் பெரும்பான்மை சிங்கள மக்களால் நிராகரிக்கப்படும் சர்வஜன வாக்கெடுப்பால் வடிகட்டப்படவுள்ளன. வடக்கு கிழக்கிலும், மலையகத்திலும் என்.பி.பி.க்கு தமிழ், முஸ்லீம் மக்கள் அளித்துள்ள வாக்குகள் சிறுபான்மை தரப்புக்களை விடவும் பெரும்பான்மைக்கே அதிகம் பயன்படப்போகிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வு தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தாலும் அதற்கு கை உயர்த்துவதைத்தவிர வடக்கு கிழக்கு, மலையக தமிழ், முஸ்லீம் என்.பி.பி எம்.பி.களுக்கு வேறு வாய்ப்பில்லை. இது சுமந்திரன் பாராளுமன்றத்தில் இருப்பதனால் மாறப்போவதில்லை. என்.பி.பி. 159 எம்.பி.க்களை தனியாக கொண்டிருப்பினும் சிறுபான்மை தேசிய இனங்களுக்கான சாதகமான உரிமைகளை வழங்குவதில் அது தனித்து செயற்படப்போவதில்லை. தமிழ்த்தேசியம் எதைக் கேட்பார்கள் என்பதும் என்.பி.பி.க்கும், தென்னிலங்கை கட்சிகளுக்கும் தெரியாததல்ல. இலங்கை பாராளுமன்றம் 75 ஆண்டுகளாக இந்தக்கோரிக்கைகள் அரைத்த மாவாக திருப்பி திருப்பி அரைக்கப்பட்டு வந்துள்ளன. புதிய அரசியல் அமைப்பு தமிழ்த்தேசிய நிலைப்பாட்டிற்கு முரணாக சிங்கள பௌத்த இன, மத தேசியத்தின் பாதுகாவலராகவே அமையப் போகிறது. அதற்கு முன்னர் உள்ளூராட்சி, மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடாத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் என்.பி.பி.தனது ஆட்சியை நிலைநிறுத்த முயற்சிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகளை மக்கள் ஆணையாகக் காட்டி அதற்கேற்ப சில திருத்தங்கள், சீர்திருத்தங்கள் புதிய அரசியல் அமைப்பூடாக செய்வதற்கான வாய்ப்பே அதிகமாக இருக்கிறது. இதனால் சிலர் பேசுவது போன்று சுமந்திரன் இல்லாத பாராளுமன்றம் தமிழ்த்தேசியத்திற்கு இழப்பும் இல்லை, என்.பி.பி.க்கு இலாபமும் இல்லை. வேண்டுமானால் சுமந்திரன் இல்லாத பாராளுமன்றம் தமிழ்த்தேசிய தனிநபர் தரப்பில் யாருக்கு பலம், பலவீனம் என்று பார்த்தால், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வழியில் குறுக்கே கிடந்த பறாங் கல் ஒன்றை யாழ்ப்பாண மக்கள் நெம்புகோல் கொண்டு அகற்றி வழியை துப்புரவு செய்திருக்கிறார்கள். இது பாராளுமன்றத்தை சுத்திகரியுங்கள் என்ற என்.பி.பி .யின் அறைகூவலாக ஏன் இருக்க முடியாது. மக்களின் சுத்திகரிப்பில் சுமந்திரன் தோற்க என்.பி.பி.யில் மூவர் வெற்றி பெற்றுள்ளனர். சுமந்திரன் இல்லாத பாராளுமன்றத்தில் சிவஞானம் சிறிதரனின் கை பாராளுமன்ற குழுவில் ஓங்கியிருக்கிறது. இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு சுமந்திரன் இல்லாதது சில சந்தர்ப்பங்களில் ஒரு கை இழப்பாகவும், சில சந்தர்ப்பங்களில் ஒரு தொல்லை குறைந்ததாகவும், சுயமாக சிந்தித்து செயற்படுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமையலாம். ஆனால்…..! ஆனால்……. ! பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் விருப்த்தேர்வில் இரண்டாவது இடத்தில் உள்ள சுமந்திரன், தனது கையாள் சத்தியலிங்கத்தை தேசிய பட்டியில் பாராளுமன்றம் அனுப்பியுள்ள சுமந்திரன், அவரது வார்த்தைகளில் கூறிய “மக்கள் தீர்ப்பை” ஏற்று சும்மா இருப்பாரா…….? யாழ்ப்பாண மக்கள் ஏற்படுத்திய மாற்றத்தை தொடர்ந்தும் ஏற்பாரா….? அல்லது அவர்களை ஏமாற்றுவாரா…..? சிவஞானம் சிறீதரன் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடப் போகிறார், சத்தியலிங்கம் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடப் போகிறார் என்ற கதைகள் சுமந்திரனின் ஆதரவாளர்களாலேயே கட்டி விடப்படுகின்றன என்று சிறீதரன் ஆதரவு அணியினர் கூறுகின்றனர். மாடில்லாமல் இந்த மணியோசை கேட்கவில்லை ……! https://arangamnews.com/?p=11487
  19. உள்ளூராட்சி சபைத் தேர்தல் - பழைய வேட்புமனு இரத்து! Vhg டிசம்பர் 01, 2024 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக முன்னர் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "2022ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காகக் கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்ய அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஒன்று கூடி முடிவு எடுத்துள்ளனர். நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்றபோது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னர் தாக்கல் செய்த வேட்புமனுக்களை இரத்துச் செய்துவிட்டு புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். நாங்களும் அதற்கு இணக்கம் தெரிவித்தோம்." - என்றார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஏனைய கட்சித் தலைவர்களான சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ச, ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க மற்றும் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இதன்படி, 2022ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு விசேட தீர்மானம் ஒன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது. மேலும், 2022ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தி வாக்குப் பதிவு நடத்தப்பட்டால், பதிவு செய்யப்பட்ட சுமார் 4 இலட்சம் வாக்காளர்களுக்குப் பெரும் அநீதி ஏற்படும் என்று இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.battinatham.com/2024/12/blog-post_10.html
  20. மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் - நலன்புரி நிலையங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு December 1, 2024 4:54 pm 0 comment மன்னாரிற்கு இன்று (01) விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களுக்கு சென்று பார்வையிட்டார். இதன்போது மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் சிறிஸ்கந்த குமார் , மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். எழுத்தூர் பாடசாலை, செல்வநகர் ஆலய மண்டபம் போன்ற இடங்களில் தங்கியிருந்த மக்களையும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களை பார்வையிட்டு அவர்களுக்கு உலர் உணவு பொதியையும் அமைச்சர் வழங்கி வைத்தார். https://www.thinakaran.lk/2024/12/01/breaking-news/99457/மன்னாரிற்கு-விஜயம்-மேற்க/
  21. கனடாவை அடுத்து இந்தியா, ரஷ்யாவுக்கு கடும் மிரட்டல் விடுத்த டொனால்டு ட்ரம்ப் எதிர்வரும் ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கும் நிலையில் உலக நாடுகள் இரண்டாவது முறையாக மிகப்பெரிய வரி விதிப்புப் போரை எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து மெக்சிகோ ஜனாதிபதி ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடியதுடன், சுமூகமான தீர்வு எட்ட வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரிடையாக புளோரிடாவுக்கு சென்று டொனால்டு ட்ரம்பை சந்தித்துள்ளார். இந்த நிலையில், இந்தியா, ரஷ்யா உட்பட்ட BRICS நாடுகளுக்கு 100 சதவிகித வரி விதிப்பதாக டொனால்டு ட்ரம்ப் கடும் மிரட்டல் விடுத்துள்ளார். BRICS நாடுகள் அமெரிக்க டொலரின் மதிப்பை குறைக்க முயன்றால் அல்லது சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு என புதிதாக வேறு நாணயத்தை உருவாக்க முடிவு செய்தால், கட்டாயம் 100 சதவிகித வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அக்டோபர் மாதம் BRICS நாடுகள் முன்னெடுத்த கூட்டம் ஒன்றில், அமெரிக்க டொலருக்கு மாற்றாக புதிய பரிவர்த்தனைகளை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிற நாடுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த அக்டோபர் சந்திப்பும் விவாதமும் ட்ரம்பை தற்போது கொந்தளிக்க வைத்துள்ளது. சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், BRICS நாடுகளின் முடிவை தம்மால் வேடிக்கை பார்த்திருக்க முடியாது என்றார். டொலர் பரிவர்த்தனைகளில் இருந்து அவர்களால் விலகிச்செல்வது சாத்தியமல்ல. இந்த நாடுகள் புதிய BRICS நாணயத்தை உருவாக்கவோ அல்லது வலிமைமிக்க அமெரிக்க டொலருக்குப் பதிலாக வேறு எந்த நாணயத்தையும் பரிவர்த்தனை செய்யவோ கூடாது. மீறினால் 100 சதவிகித வரி விதிப்பை எதிர்கொள்ள நேரிடும். அமெரிக்காவில் அவர்களின் பொருட்களும் தடை செய்யப்படும் நெருக்கடி உருவாகும் என்றார். BRICS கூட்டமைப்பில் சமீபத்தில் இணைந்த எகிப்து, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகமும் டொலருக்கு மாற்றான ஒரு நாணயத்தில் பரிவர்த்தனை வேண்டும் என்றும், இதனால் உள்ளூர் பண மதிப்பு உயரும் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர். ஆனால் உச்சிமாநாட்டின் முடிவில் மாற்று வழிகள் எதுவும் செய்யப்படவில்லை என்றே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளிப்படுத்தியிருந்தார். https://akkinikkunchu.com/?p=301328
  22. மதமாற்ற தடை சட்டம்; ராஜஸ்தான் அமைச்சரவை அனுமதி கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள மதமாற்ற தடை சட்டமூலத்திற்கு இந்தியாவின் ராஜஸ்தான் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இந்த சட்டமூலம் எதிர்வரும் கூட்டத்தொடரில் சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதை இந்த சட்டம் உறுதி செய்கிறது. இது குறித்து ராஜஸ்தான் முதல்-அமைச்சர் பஜன் லால் சர்மா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கட்டாய மதமாற்றத்தை தடுப்பதில் ராஜஸ்தான் மாநில அரசு உறுதியாக இருக்கிறது. இதன்படி சட்டமன்றத்தில் ‘ராஜஸ்தான் சட்டவிரோத மதமாற்ற தடை சட்ட மசோதா- 2024’ -ஐ தாக்கல் செய்ய அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. தவறான தகவல், மோசடி அல்லது கட்டாயத்தின் அடிப்படையில் ஒரு நபரின் மதத்தை மாற்றும் முயற்சியை இந்த சட்ட மூலம் தடை செய்கிறது. சட்டவிரோத மதமாற்றத்திற்காக ஒரு திருமணம் நடத்தப்பட்டால், அந்த திருமணத்தை செல்லாது என அறிவிக்கும் உரிமை குடும்ப நீதிமன்றங்களுக்கு வழங்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இது குறித்து துணை முதல்-அமைவ்வர் பிரேம் சந்த் பைரவா கூறுகையில், “மக்கள் தங்களுக்கு அறிமுகமில்லாத மதங்கள் மீது கவர்ந்திழுக்கப்படுகிறார்கள். கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் விதமாக பிற மாநிலங்களில் இருக்கும் கொள்கைகளை பரிசீலித்து, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இந்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார். https://akkinikkunchu.com/?p=301331
  23. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர் கைது; அரசின் இனவாத முகம் தெரிகிறது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் – சர்வதேச தரத்திற்கு மாற்றியமைக்கவேண்டும் என ஒப் புக்கொண்டிருந்த தரப்பு அதே சட்டத்தை பயன்படுத்தி நினைவுகூரல் குற்றமாக கருதி கைது செய்வதை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கிறோம். மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார். தமிழீழ விடுத லை புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வை கொண்டாடியமைக்காகவும், மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தியமைக்காகவும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகள் இடம்பெறுவது தொடர்பாக கேட்டபோதே அ வர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இலங்கையின் மனித உரிi மகள் ஆணைக்குழுவே 2015ம் ஆண்டில் ஒரு ஆலோசனை வழங்கியுள்ளது. அதில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தடைசெய்யபட்டிருந்தாலும் அவர்களுடைய உறுப்பினர்கi ள நினைவுகூருவதற்கு உறவினர்களுக்கும், மக்களுக்கும் உரித்துள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே நினைவுகூருவதற்கு உரித்துள்ளது. அதற்கான அனுமதியை வழங்கவேண்டும். அதுவே சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமைவானது எ ன அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கினார்கள். இன்றைக்கு அரசாங்கத்தில் உள்ள இதே தரப்புக்க ள் பயங்கரவாத தடைச்சட்டம் கொடூரமான சட்டம் அதை நீக்கவேண்டும். அல்லது சர்வதேச நியமங்களுக்கு அமைய மாற்றவேண்டும் என ஒப்புக் கொண்டிருந்தார்கள். இன்று அ தே சட்டத்தை பயன்படுத்தி நினைவுகூரலை குற்றமாக கருதி நடவடிக்கை எடுப்பதை நாம் வன்மையா க கண்டிக்கிறோம். இன்றைக்கு ஜே.வி.வி தலைவரை கொண்டாடும் நிலை இருக்கும் என்றால் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரையும், அவர்களின் உறுப்பினர்களையும் நினைவுகூருவது குற்றம் என்றால் அதற்கு இனவாதம் மட்டுமே காரணமாக இருக்கமுடியும். அதைவிட வேறு காரணங்கள் இல்லை. தமிழ் மக்கள் இதுவரையில் மாற்றம் என்ற ஒன்றை நம்பிக் கொண்டிருந்தால் அது பொய் என்பதற்கா ன சிறந்த சாட்சி இது ஒன்றுதான். மாவீரர்களை நினைவுகூருவது எங்கள் ஆத்மாவுடன் இணைந்த விட யம் என்றார். https://akkinikkunchu.com/?p=301340
  24. விடலைத்தன அரசியலிலிருந்து விடுபடுதல் November 30, 2024 ஆண்டுகள் தோறும் அழுது, தங்களின் பிள்ளைகளை நினைத்துக் கொள்ளும் நிகழ்வுகள் கடந்த பதனைந்து வருடங்களில் பல்வேறு விதமாக நடந்தேறியிருக்கின்றது. ராஜபக்ஷக்கள் அரக்கத்தனமாக துயிலும் இல்லங்களை இடித்தழித்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் எவ்வாறு ஈராயிரம் ஆண்டு கால பௌத்த அடையாளங்களை இடித்தழித்தனரோ, அதேபோன்றதொரு அடிப்படைவாத வெறித்தனத்தோடும், வெற்றி மமதையிலும், விடுதலைப் புலிகள் மீதான வெறுப்பை, போரில் இறந்து போன அவர்களது உறுப்பினர்களின் அடையாளங்கள் மீது காண்பித்தனர். வரலாற்றில், போரில் தோற்றவர்களை, போரில் வெற்றிபெற்றவர்கள் பெருந்தன்மையுடனும் கண்ணியத்துடனும் நடத்தும் மரபு பண்டைய அரசர் காலத்தில் கூட இருந்திருக்கின்றது. துட்டகைமுனு கூட, அவ்வாறான நற்புண்புகளை வெளிப்படுத்தியதாக, வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. தங்களை நவீன துட்டகைமுனுக்கள் என்று அழைத்துக் கொள்ள முற்பட்ட ராஜபக்ஷக்கள் தங்களை வெறித்தனத்தின் கோரமுகமாகவே காண்பித்தனர். ஆனால், அப்போது கூட கோபங்களை தங்களுக்குள் புதைத்துக்கொண்டு, தங்களின் பிள்ளைகளை நினைவு கூர்வதை அவர்களது உறவினர்கள் கைவிடவில்லை. ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில்தான், முதல் முதலாக அச்சமின்றி நினைவு கூர்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. எனினும் கண்காணிப்புகள் தொடரவே செய்தது. கோட்டாபயவின் குறுகிய கால ஆட்சியிலும் கண்காணிப்புகள் தீரமடைந்தது, ஆங்காங்கே தடைகள் ஏற்படுத்தப்பட்டன – எனினும், துயிலும் இல்லங்களில் முடிந்தவரையில் மக்கள் ஒன்று திரண்டனர். ஆனால், இம்முறை ஒப்பீட்டடிப்படையில் மிகவும் சுதந்திரமாகவும் கண்காணிப்புக்கள் இன்றியும் தங்களின் பிள்ளைகளை நினைத்து அழுவதற்காக மக்களால் ஒன்று கூட முடிந்திருக்கின்றது. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் மக்கள் சுதந்திரமாக தங்களின் பிள்ளைகளை நினைவு கூர முடிந்திருக்கின்றது என்று கூறுவதில் தவறில்லை – அதற்காக அநுர அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் அடிப்படைகளை ஏற்றுக்கொண்டு விட்டதாக அர்த்தமில்லை. வடக்கு மாகாணத்தில் – குறிப்பாக யாழ்ப்பாணத்தில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை எதிர்பார்த்திராத, தமிழ்த் தேசிய அரசியலை அரைகுறையாக புரிந்து கொண்டிருக்கும் ஒரு குழுவினர், தங்களின் பிள்ளைகளை, உறவுகளை நினைவு கூர்வதற்காக ஒன்றுதிரண்ட மக்கள் தமிழ்த் தேசியத்தை நிலைநாட்டி விட்டதாக கதைகள் புனைய முற்படுகின்றனர். தமிழ்த் தேசிய அரசியலை மக்கள் மயப்படுத்தி, புதிய சூழலுக்கு ஏற்றவாறு எவ்வாறு அரசியலை கட்டியெழுப்புவது என்று தெரியாத குழுக்கள், மக்கள் தங்களை விட்டுப் பிரிந்த உறவுகளை எண்ணி சிந்தும் கண்ணீருக்கு தமிழ்த் தேசிய விளக்கமளிக்க முற்படுகின்றனர். ஏனெனில் அரசியலை புதிய சூழலுக்கு ஏற்றவாறு முன்னெடுக்கும் வழிவகைகள் இவர்களுக்குத் தெரியாது. இதன் காரணமாகவே இவ்வாறானவர்களை அரசியல் விடலைகள் என்று வரையறுக்க வேண்டியிருக்கின்றது. ஏனெனில் இவ்வாறானவர்கள் அரசியலை மந்திரம் போன்று உச்சரித்துவிட்டு தங்களின் வசதியான வாழ்வுக்குள் சுருங்கிக் கொள்கின்றனர். தங்களால் நேசிக்கப்படும் ஒருவர் பிரிவுறும் போது, ஏற்படும் துயரம், அதன் மீதான நினைவுகள் என்பது, அந்த குடும்பத்திற்கானது, அவர்களை நேசித்தவர்களுக்கானது. அதற்கு தமிழ்த் தேசிய விளக்கமளிப்பதானது, தேசிய அரசியல் பற்றிய அறியாமையிலிருந்தே நிகழ்கின்றது. விடுதலைப் புலிகள் அவர்களை நினைவுகூரும் போது இருந்த அரசியல் சூழல் வேறு. இப்போது, அவர்களை நினைவு கூர்வதென்பது முற்றிலும் அவர்களின் உறவுகள் தொடர்பானது மட்டும்தான். தேசிய அரசியல் என்பது, சூழ்நிலைகளை துல்லியமாக மதிப்பிட்டு, அந்தச் சூழலில் அரசியலை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்னுமடிப்படையில் அரசியலை திட்டமிடுவதாகும். இன்றைய காலத்தில், தூய தேசிய அரசியல் என்று ஒன்றில்லை – மக்களின் இருப்பை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்தும் ஏதேவொரு வகையில் தேசிய அரசியல்தான். https://eelanadu.lk/விடலைத்தன-அரசியலிலிருந்/ குறிப்பு: ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் யதீந்திரா என்று கேள்விப்பட்டேன். உறுதிப்படுத்தமுடியவில்லை.
  25. குருநகரில் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் உறுதி December 1, 2024 யாழ்ப்பாணம், குருநகர் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள இந்தப் பிரதேசத்துக்கான துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் ஊடாக கலந்துரையாடி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக கடற்றொழிலாளர் விழா குருநகர் தொழிலாளர் இளைப்பாறு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, “விவசாயம் மற்றும் கடற்றொழில் வடக்கு மாகாணத்தின் முக்கியமான தூண்கள். இந்தப் பிரதேச மக்களின் அபிவிருத்திக்காக யாழ். மாவட்டச் செயலராக நான் பணியாற்றிய காலத்தில் பல்வேறு விடயங்களைச் செய்திருக்கின்றேன். அன்றும் இன்றும் உங்கள் பிரதேசத்தின் பிரதேச செயலராக இருக்கின்ற சா. சுதர்சனும் இதில் முக்கிய பங்காற்றியிருக்கின்றார். கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்ற இராமலிங்கம் சந்திரசேகர், எமது பிரதேசத்தின் மேம்பாடு தொடர்பில் அக்கறையுள்ளவர். அவர் பலவற்றை உங்களுக்காகச் செய்வார். கடந்த காலத்தில் உங்களின் கோரிக்கைக்கு அமைவாக இந்தப் பகுதிக்கு துறைமுகம் அமைப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டபோதும் அது சாத்தியமாகவில்லை. அதன் தேவைப்பாட்டை நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம். எதிர்காலத்தில் கடற்றொழில் அமைச்சருடன் இணைந்து அதைச் செயல்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்”- என்றார். முன்னதாக இந்த நிகழ்வில் ஆசியுரையாற்றிய குருநகர் புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தை – அருட்தந்தை யாவிஸ் அடிகளார் கூறுகையில், வடக்கு மாகாண ஆளுநராக பொருத்தமான ஒருவரைத்தான் நியமித்திருக்கின்றார்கள். அவரை எந்த நேரத்திலும் யாரும் அணுக முடியும். இந்த மாவட்டத்தின் மாவட்டச் செயலராக இருந்து பல அபிவிருத்திப் பணிகளைச் செய்தவர். மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ளக் கூடிய ஒருவர். அவரது காலத்தில் இந்த மாகாணம் முன்னேற்றமடையும் என நம்புவதாகக் குறிப்பிட்டார். இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கிய கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் யூலியன் சகாயராஜா தனது உரையில், 1990 ஆம் ஆண்டு போர்க்காலத்தில் இந்தப் பகுதியிலிருந்த வெளிச்சவீடு அழிக்கப்பட்டதாகவும் அதை மறுசீரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்தார். அத்துடன் துறைமுகத்தையும், இந்தப் பிரதேசத்தின் பிரதான வீதியையும் புனரமைத்துத் தருமாறும் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சா. சுதர்சன், யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஜே. சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். https://eelanadu.lk/குருநகரில்-துறைமுகம்-அமை/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.