Everything posted by கிருபன்
-
யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி ஏற்றுமதிக்கு சுங்கத் திணைக்கள ஆதரவு!
யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி ஏற்றுமதிக்கு சுங்கத் திணைக்கள ஆதரவு! 12 Jan, 2026 | 04:21 PM யாழ்ப்பாணத்திலிருந்தே ஏற்றுமதி நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுப்பதுக்குரிய ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இலங்கைச் சுங்கத் திணைக்களம் தயாராக உள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் உறுதியளித்தார். வடக்கிலிருந்து நேரடியாக ஏற்றுமதிச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரால் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்குக் கடிதம் மூலம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அக்கோரிக்கைக்கு அமைவான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (12) மாலை நடைபெற்றது. இச்சந்திப்பின்போது வடக்கின் ஏற்றுமதிச் சவால்கள் குறித்துத் தெரிவித்த ஆளுநர்: வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த விவசாய மற்றும் ஏனைய உற்பத்தியாளர்கள், தமது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குத் தற்போதைய நிலையில் மூன்றாம் தரப்பினரையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இதனால் உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இலாபம் குறைவடைகின்றது. இந்நிலையை மாற்றியமைக்கும் வகையில், ஒரு விவசாயி தனது உற்பத்திப் பொருளைத் தானே நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றவகையிலான பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம். இத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த சுங்கத் திணைக்களம் உதவ வேண்டும், என வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, இந்தத் திட்டத்துக்குக் கொள்கையளவில் நாம் இணக்கத்தை வெளியிடுகின்றோம். தற்போதுள்ள சில நடைமுறைச் சிக்கல்களைத் துரிதமாகத் தீர்த்து, வெகு விரைவில் யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி ஏற்றுமதிக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்போம், எனக் குறிப்பிட்டார். இதனை எவ்வளவு விரைவாகச் சாத்தியப்படுத்த முடியுமோ, அவ்வளவு விரைவாக ஆரம்பிப்போம் என ஆளுநர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார். இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/235849
-
இந்தியாவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்
இந்தியாவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான் இந்தியாவில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன், முன்னாள் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர். குறித்த நிகழ்வானது தமிழ் நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய செந்தில் தொண்டமான், இலங்கையில் ஏற்பட்ட கொவிட் பெருந் தொற்று, பொருளாதார நெருக்கடி மற்றும் டித்வா புயலின் போது இந்திய அரசு இலங்கைக்கு பெரும் உதவிகளை வழங்கியுள்ளமையை சுட்டிக்காட்டினார். அதற்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmkaw905h03t4o29nipl2b1tq
-
சற்று முன்னர் கிளிநொச்சியில் பரபரப்பு.. பேருந்துடன் கார் மோதியதில் இருவர் பலி
சற்று முன்னர் கிளிநொச்சியில் பரபரப்பு.. பேருந்துடன் கார் மோதியதில் இருவர் பலி புதிய இணைப்பு விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது காரில் ஐந்து பேர் பயணித்துள்ள நிலையில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். அதேநேரம், காரில் இருந்த ஏனைய மூவரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். செய்தி - தேவந்தன் முதலாம் இணைப்பு சற்று முன்னர், கிளிநொச்சி - ஏ35 வீதியில் கார் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். முரசுமோட்டை பகுதியில் நடந்த குறித்த சம்பவத்தில் காரில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்தி - சுடரோன் https://tamilwin.com/article/accident-in-kilinochchi-murasumottai-2-death-1768217588
-
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழரசு கட்சி ஆதரவில்லை
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழரசு கட்சி ஆதரவில்லை கல்வி அமைச்சரும் நாட்டின் பிரதமருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அதன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவர் இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, பிரதமர் பதவியில் இருந்தும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்தும் ஹரிணி அமரசூரியவை பதவி நீக்கம் செய்வதற்காக எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவதுடன் அதற்கான கையெழுத்தையும் சேகரித்து வருகின்றனர். எனினும் அந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் இலங்கை தமிழரசுக் கட்சி கையெழுத்திடாது என தெரிவித்துள்ளார். ஹரிணி அமரசூரிய பெண் பிரதமர் என்ற அடிப்படையிலும், அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சரியான ஆதாரங்களை எவரும் வௌியிடாமை ஆகிய காரணங்களுக்காக அந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் எமது கட்சியினர் கையெழுத்திடவில்லை என தெரிவித்தார். சர்ச்சைக்குரிய அந்த கற்றல் தொகுதி நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்காக அவரை பதவி நீங்கக் கோருவதை ஒரு அரசியல் ரீதியான பழிவாங்கலாகவே தமது கட்சி கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பாராளுமன்ற குழுக்கூட்டத்திலும் கட்சியின் தலைமையுடன் கலந்துரையாடியுள்ளோம். எனவே அந்த நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் காலத்தில் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டாலும் அந்த பிரேரணைக்கு ஆதரவாகவும், பிரதமருக்கு எதிராகவும் எமது கட்சி வாக்களிப்பதில் சாத்தியமில்லை என தெரிவித்துள்ளார். நாட்டிற்கு புதிய கல்வி சீர்த்திருத்தம் ஒன்று அவசியமானதாகும். உலக நாடுகளில் ஆரம்ப கல்விக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் இலங்கையில் இல்லை. இலங்கையில் ஆரம்பக் கல்வி பின்னடைவாகவே உள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை கையாளுவதில் அரசாங்கத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. எனினும் தனிப்பட்ட ரீதியில் பெண் ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அவதூறுகளில் நாம் பங்காளிகளாக மாற முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmkat23ub03swo29nw0u30de6
-
நுகர்வுத் தாகத்துக்கு நோ லிமிட் - நிலாந்தன்
நுகர்வுத் தாகத்துக்கு நோ லிமிட் - நிலாந்தன் புத்தாண்டு பிறந்த பின் நடந்த முதலாவது போராட்டம் தையிட்டியில் நடந்தது. அது நடந்த அதே நாளில் யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் “நோ லிமிட்” பெருமெடுப்பில் திறக்கப்பட்டது. தையிட்டிக்கு வந்த ஜனத்தையும் நோ லிமிட்டுக்கு வந்த ஜனத்தையும் ஒப்பிட்டு சமூகவலைத்தளங்களில் பரவலாக குறிப்புகள் வெளிவந்தன. போராட்டத்துக்குப் போன மக்களை விடவும் நோ லிமிட்டுக்குப் போன மக்கள்தான் அதிகம். ஆனால் அதுதான் சமூக யதார்த்தம். உலக யதார்த்தம். மகாஜனங்கள் எப்பொழுதும் நுகர்வுத் தாகத்தோடு இருப்பார்கள். இப்போதுள்ள சமூக வலைத்தளச் சூழலில்,காணொளி யுகத்தில்,காசு கொடுத்துச் செய்யப்படும் விளம்பரங்கள் மக்களின் பசியை, தாகத்தை,விடுப்புணர்வை மேலும் அதிகப்படுத்தும். அந்த டிஜிட்டல் விளம்பரங்களால் ஆட்கொள்ளப்பட்டு அங்கே என்ன இருக்கிறது என்று பார்க்க மக்கள் வருவார்கள். பெரு வணிக நிறுவனங்கள் திட்டமிட்டு சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் நுகர்வு அலையை,நுகர்வுப் பசியை உற்பத்தி செய்யும். அந்த அலைக்குள் அள்ளுபட்டு மக்கள் வருவார்கள். யாழ்ப்பாணத்தின் உயர்தர உணவு விடுதிகளுக்கு இரவுகளில் சென்றால் தெரியும். அங்கு குடும்பமாக வந்து சாப்பிடுவது புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டும் அல்ல அவர்களைவிட அதிக தொகையில் உள்ளூர் மக்கள் வருவார்கள். உயர்தர உணவகங்களில் சாப்பிடுவது என்பது ஒரு பொதுப் போக்கு. ஒரு விடுப்பார்வம். ஒரு வித எடுப்பு. சமூகத்தில் அதிகமாக உழைக்கும் அனேகரை அங்கே காண முடியும். ஆனால் எல்லா அலைகளைப் போலவே இந்த அலையும் ஒரு நாள் தணிந்து விடும். ஹீல்ஸ்,நதியாஸ்,நோ லிமிட் போன்றவற்றுக்கு எப்பொழுதும் மக்கள் வெள்ளம் அலைமோதுவதில்லை. பண்டிகை நாட்களைத் தவிர. அதுபோலவே பேர்க்கர் கிங்,காலித் பிரியாணி போன்ற உயர்தர உணவகங்களில் எல்லா ஆசனங்களும் என்றென்றும் நிரம்பி இருப்பதில்லை. டிஜிட்டல் ப்ரோமோஷன் மூலம் துண்டப்பட்ட,உற்பத்தி செய்யப்பட்ட எந்த ஓர் அலையும் நிரந்தரமானது அல்ல. அலைகள் நிரந்தரமானவை அல்ல. மனிதர்கள் அரசியல் விலங்குகள் மட்டுமல்ல, இலத்திரனியல் வலைக்குள் சிக்கிய இரண்டு கால் பூச்சிகளுந்தான். அரசியலுக்கும் அப்பால் அவர்களுக்கென்று தெரிவுகள், ஈடுபாடுகள்,பசி,தாகம் இருக்கும். போர்க் காலங்களில் சமூகம் மூடப்பட்டிருக்கும்போது தெரிவுகள் குறையும். நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். அப்பொழுது ஒரு மக்கள் கூட்டத்தை அரசியல் பயப்படுத்துவது இலகுவானது. போர், அடக்குமுறை போன்றன ஒரு சமூகத்தை உணர்வுபூர்வமாக நொதிக்க வைக்கும்போது அங்கே மக்களை அரசியலில் உணர்திறன் அதிகமுடையவர்களாக இருப்பதுண்டு. கடல் அமைதியாக இருக்கும்போது மீன் அதிகம் படாது. கடல் கொந்தளிக்கும் நாட்களில் மீன் அலைக்குத் தப்பி வலைக்குள் விழும். எனவே ஒரு மக்கள் கூட்டத்தைத் திரட்டுவதற்கு,நொதிக்க வைப்பதற்கு ஒரு கூட்டு உளவியல் சூழல் இருக்க வேண்டும். அது இல்லையென்றால் அல்லது ஏற்கனவே உள்ள காரணங்களை உணர்வுபூர்வமானவைகளாக மாற்ற முடியவில்லை என்றால் அரசியல் விலங்குகள் திட்டமிட்டு உருவாக்கப்படும் வணிக நுகர்வு அலைகளால் அடித்துச் செல்லப்படும். தையிட்டி ஓர் உதாரணம். அங்கே போராட வேண்டிய தேவை இருக்கிறது. போராடும்போது அதைத் தடுப்பதற்கு போலீஸ் வருகிறது. அதாவது போராட்டம் தீவிரம் அடைந்தால் ஒடுக்குமுறை அதிகரிக்கும். ஒடுக்கு முறை அதிகரித்தால் அதற்கு எதிரான போராட்ட உணர்வும் தூண்டப்படும். இது ஒரு சமன்பாடு.தமிழ் மக்கள் மத்தியில் வாழ்ந்த கவிஞர் மு.பொன்னம்பலத்தின் கவிதை ஒன்று உண்டு.”அதிகாரம் புரியாத சமன்பாடு” என்ற அந்தக் கவிதையில்…. “சர்வாதிகாரம் என்பது விடுதலையை ஒடுக்குவதாகக் கூறிக்கொண்டு, தன்னை அறியாமலே அதைப் பிறப்பிக்க யோனிவாயிலில் காத்திருக்கும் மருத்துவச்சி” என்றும் ,அது அதிகாரம் புரியாத ஒரு சமன்பாடு என்றும் மு.பொ கூறுவார். பொருளாதார நெருக்கடி சிங்கள மக்களை வீதிக்குக் கொண்டு வந்தது; காலி முகத்திடலில் கிராமம் அமைத்துப் போராட வைத்தது. ராஜபக்ஸக்களுக்கு வாக்களித்த மக்கள் 21 மாதங்களில் அவர்களை விரட்டினார்கள். பொருளாதார நெருக்கடியின் விளைவுகளைப் பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தி அனுர அலையை உற்பத்தி செய்தது,வெற்றியும் பெற்றது. எனவே அலைகளை உற்பத்தி செய்வதற்கு அதற்குரிய அரசியல்,சமூகப் பொருளாதாரக் காரணிகள் இருக்க வேண்டும். கூட்டு உளவியல் இருக்க வேண்டும்.தென்னிலங்கையில் ஏற்பட்ட ராஜபக்சங்களுக்கு எதிரான வெறுப்பு அலையை,தேசிய மக்கள் சக்தி அனுர அலையாக மாற்றியது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகள் வாக்களிப்பு அலைகளைக் கூட உற்பத்தி செய்ய முடித்தவைகளாக மெலிந்து வருகின்றன. தமிழ்க் கட்சிகள் அலைகளுக்காகக் காத்திருக்க போகின்றனவா? அல்லது பொருத்தமான தருணங்களில் அலைகளை உற்பத்தி செய்யப் போகின்றனவா? அல்லது அலைகள் ஓய்வதில்லை என்று கூறி பழைய பெருமைகளை இரைமீட்டுக் கொண்டிருக்கப் போகின்றனவா? https://www.nillanthan.com/8044/
-
தையிட்டி: அனுரவின் தீர்வு என்ன? நிலாந்தன்.
தையிட்டி: காணிப் பிரச்சினையா? - நிலாந்தன் வருஷம் பிறந்த பின் வந்த முதலாவது பௌர்ணமி நாளில் தையிட்டியில் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் மக்களும் நில மீட்புக்காக போராடிக் கொண்டிருந்தபோது, தமிழ்மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சியான தமிழரசுக் கட்சி வவுனியாவில் கூடி உட்கட்சி முரண்பாட்டை வெளிப்படுத்தும் தீர்மானங்களை எடுத்தது. வருஷம் பிறந்த மூன்றாம் நாளில் தமிழ்த் தேசிய அரசியலின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம் இது. இத்தனைக்கும் தையிட்டியில் தமிழரசுக் கட்சிக்காரர்களும் காணப்பட்டார்கள். தமிழ்த் தேசிய அரசியலில் உள்ள பெரிய கட்சி அது. அதிகளவு நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருப்பது. தானே தலைமைக் கட்சி என்றும்,தானே தமிழ் அரசியலை வழி நடத்துவதாகவும் கூறிக்கொள்கிறது;கருதிக் கொள்கிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உட்பகையைத் தீர்த்துக் கொள்ள முடியாத ஒரு கட்சி. தொடர்ந்தும் பதில் தலைவரின் கீழும் பதில் செயலாளரின் கீழும் இயங்குவதை ஒரு தோல்வியாகச் சுட்டிக்காட்டக்கூடிய மூத்த கட்சி உறுப்பினர்களும் இல்லை. மூத்த ஆதரவாளர்களும் இல்லை. மதத்தலைவர்களாலோ அல்லது சிவில் சமூகத் தலைவர்களாலோ யாராலுமே தீர்க்கமுடியாத ஒரு முரண்பாடாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கட்சி தானே தனக்குள் இரண்டாகப் பிளந்து நிற்கிறது. ஏதாவது ஓர் அணி பலமடைந்து கட்சித் தலைமையை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் தவிர கட்சி தொடர்ந்து சிதைந்து கொண்டே போகும் நிலைமைகள்தான் அதிகரிக்கின்றன. கட்சிக்குள் காணப்படும் இரண்டு அணிகளும் சமூக வலைத்தளங்களில் முகமூடி அணிந்து கொண்டு ஒருவர் மற்றவரை வில்லன் ஆக்குகிறார்கள். ஒருவர் மற்றவரை மதிப்பிறக்கம் செய்கிறார்கள். ஒருவர் மற்றவரை சுற்றி வளைக்கும் முற்படுகிறார்கள். தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் அது அதிகம் சீரழிந்த ஒரு காலகட்டமாக இதைக் கூறலாமா? இதை அறிவுப்பூர்வமாக அணுகத்தக்க ஒருவருமே கட்சிக்குள் இல்லையா? இந்த முரண்பாட்டை அறிவுபூர்வமாக அணுகினால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியும்.கட்சி தனக்குள் இரண்டுபட்டிருக்கும் வரை கட்சியாகவும் உருப்பட முடியாது;தமிழ்த் தேசிய அரசியலையும் முன்னோக்கி நகர்த்த முடியாது. இந்த முரண்பாட்டைத் தீர்க்க கட்சிக்குள்ளும் ஆளில்லை கட்சிக்கு வெளியேயும் ஆள் இல்லை என்பது தமிழ்த் தேசிய அரசியலின் வீழ்ச்சியைக் காட்டுகிறது. இப்படிப்பட்டதோர் பாரதூரமான சீரழிவின் பின்னணியில் தையிட்டி போன்ற போராட்டக் களங்களில் உறுதியாக முன்னோக்கிச் செல்ல முடியுமா? ஒவ்வொரு பௌர்ணமி நாளும் போராடி காணிகளை மீட்க முடியுமா? இரண்டு பௌர்ணமிகளுக்கு இடையில் அரசாங்கம் தன்னை சுதாகரித்துக் கொண்டுவிடும். அரசாங்கம் தமிழ்த் தேசிய அரசியலின் பலவீனத்தை நன்கு விளங்கி வைத்திருக்கிறது. அதனால்தான் தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தை ஒரு காணிப்பிரச்சனையாக அது குறுக்கப் பார்க்கிறது. கடந்த பௌர்ணமி நாள் போராட்டத்தின் பின் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சரும் சட்டத்தரணிமான ஹர்ஷண நாணயக்கார,”இது காணி உரிமையாளர்களுக்கும் திஸ்ஸ விகாரையின் அதிபதிக்கும் இடையிலான ஒரு பிரச்சினை.இதில் வேறு தரப்பினர் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்… காணி உரிமையாளர்கள் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்களின் பிரகாரம் செயல்படாது பொறுமை காக்க வேண்டும் ” என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டின் முடிவில் யாழ் அரச அதிபருக்கும் காணி உரிமையாளர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்பும் அந்த அடிப்படையிலானது தான். தமிழ்ப் பகுதிகளில் உள்ள முக்கியத்துவம் மிக்க,நயினா தீவு விகாரையின் அதிபதி தமிழ் மக்களின் பக்கம் நின்று கதைத்தாலும், அவரும்கூட இந்த விடயத்தை காணிப் பிரச்சனையாகத்தான் சுருக்குகிறார். திஸ்ஸ விகாரையின் அதிபதி அதனை முழுக்க முழுக்க காணிப் பிரச்சினையாகவே குறுக்குகிறார். ஆனால் திஸ்ஸ விகாரை விவகாரம் ஒரு காணிப்பிரச்சினை மட்டுமல்ல. சட்டப்பிரச்சினை மட்டுமல்ல. அது அதைவிட ஆழமான பொருளில் ஓர் அரசியல் பிரச்சினை. அதற்கு அரசியல் தீர்வுதான் வேண்டும். அதை அரசாங்கம் ஒரு கொள்கை முடிவாக எடுக்க வேண்டும். திஸ்ஸ விகாரை விவகாரம் என்பது சட்ட நோக்கு நிலையிலும் காணி உரிமையாளர்களின் நோக்கு நிலையிலும் காணி அபகரிப்பாக இருக்கலாம். ஆனால் இங்கே அந்தக் காணியை அபகரித்து வைத்திருப்பது ஒரு விகாராதிபதி அல்ல. அவர் நன்கு நிறுவனமயப்பட்ட ஒரு கூட்டுச் செயற்பாட்டின் ஒரு கருவி மட்டுமே. அந்த விகாரைக்கு அத்திவாரம் போட்டது ராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா. அந்த விகாரையை பகலும் இரவும் தொடர்ச்சியாகக் கட்டியெழுப்பியது படையினர். அந்த விகாரைக்கு பாதுகாப்பு வழங்குவது படையினரும் போலீசாரும். அந்த விகாரையின் அதிபதிக்கு அவர் சார்ந்த பௌத்த மகா சங்கம் வடபகுதிக்கான உயர் பதவியை வழங்கியது. எனவே இது ஒரு கூட்டுச் செயற்பாடு. கூட்டு ஆக்கிரமிப்பு. அதை அதன் அரசியல் அடர்த்திக்கூடாகச் சித்தரித்தால் அது மிகத்தெளிவான ஒரு நிலப் பறிப்பு நடவடிக்கை. மிகத் தெளிவான ஒரு சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கை. அதாவது 2009க்குப் பின்னரான ஆக்கிரமிப்பின் ஆகப்பிந்திய உதாரணம். அதிலிருக்கும் அரசியலை நீக்கி அதைக் காணிப் பிரச்சினையாகக் காட்டுவதே ஓர் அரசியல்தான். எனவே அதனை அதற்குரிய அரசியல் பரிமாணத்தோடுதான் அணுக வேண்டும். காணி உரிமையாளர்களை அழைத்து அரசு அதிபர் பேசுவதனாலோ அல்லது அரசு அதிபரும் காணி உரிமையாளர்களும் விகாரதிபதிகளும் பேசுவதனாலோ இந்தப் பிரச்சினை தீர்த்துவிடாது. அதற்கு அரசியல் தீர்வு வேண்டும். இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனப்பிரச்சினை இல்லை என்று கூறுகிறது. தான் இனவாதத்துக்குத் தலைமை தாங்கவில்லை என்று கூறுகிறது. ஆனால் தையிட்டியில் நடப்பது சிங்கள பௌத்த மயமாக்கல்தான். இனவாத நடவடிக்கைதான். தையிட்டிப் போராட்டத்தைத் தொடர்ந்து கொதி நிலையில் வைத்திருந்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான். ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் அந்தக் கட்சி தையிட்டியில் போராடும். ஆனால் அந்தப் போராட்டங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் மட்டும்தான் பங்குபற்றுவதுண்டு. அவை மக்கள் மயப்பட்ட போராட்டங்களாக அநேகமாக இருப்பதில்லை. எனினும் சில விசேஷ தினங்களில் ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளும்,சிவில் சமூகங்களும் பல்கலைக்கழக மாணவர்களும் இணையும்போது அந்தப் போராட்டத்தில் பெருமளவு சனத் தொகையைக் காணலாம். திஸ்ஸ விகாரைக்கு எதிராக கடந்த 30 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடக்கின்றது. இப்போராட்டங்களில் சில நாட்களில் அதிக தொகை மக்கள் வருவார்கள். அதற்குக் காரணம் அங்கே எல்லா கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் மதகுருக்களும் கூடுவதுதான். கடந்த பௌர்ணமி நாளன்றும் அதுவே நடந்தது. அதற்கு முதலில் கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த போராட்டத்திலும் அவ்வாறு அதிகளவு ஜனத்தொகையை காண முடிந்தது. அந்தப் போராட்டத்திற்கு அதாவது ஆண்டின் இறுதியில் நடந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பிரதேச சபை. இப்பொழுது நீதி அமைச்சர் கூறுகிறார் அது திஸ்ஸ விகாரையின் அதிபதிக்கும் காணி உரிமையாளர்களுக்கும் இடையிலான ஒரு காணிப் பிரச்சினை என்று. இல்லை.அது காணிப் பிரச்சினையல்ல.அது அரசியல் பிரச்சினை. அதற்கு அரசியல் தீர்வுதான் உண்டு. காணி உரிமையாளர்கள் மட்டும் அரசாங்கத்தோடு பேச முடியாது.அந்தப் போராட்டத்தை தொடர்ந்தும் கொதிநிலையில் வைத்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் உட்பட எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் மதகுருக்களும் அந்த பேச்சுவார்த்தையில் பங்கெடுக்க வேண்டும். 15 மாதங்களுக்கு முன்பு மாற்றத்தை வாக்களித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது,தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் மாற்றத்தைக் காட்டவேண்டிய ஒரு களம் அது. ஆனால் அனுர அரசாங்கம் திஸ்ஸ விகாரை விடயத்தில் முன்னைய அரசாங்கங்களைப் போலவே அதற்குள்ள இன முரண்பாட்டுப் பரிமாணத்தை இல்லாமல் செய்து விட்டு அதை வெறும் காணிப் பிரச்சினையாகக் காட்டப் பார்க்கின்றது. புத்த பகவான் மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொன்னார். ஆனால் இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை விடயத்தில் மாற்றம் இன்மைதான் மாறிலியா? https://www.nillanthan.com/8048/
-
ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!
முகநூலில் இருந்து.. பிழையான நம்பிக்கைகள் : 1. பாலியல் பற்றிய அறிவை பிள்ளைகளுக்கு கொடுப்பதால் பிள்ளைகளிடையே பாலியல் பிறழ்வுகள் அதிகரிக்காது. 2. பாலியல் அறிவை பிள்ளைகளின் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ள நாடுகள் எல்லாம் இலங்கையை விட ஆகக்குறைந்தது ஆயிரம் மடங்காவது அபிவிருத்தி அடைந்த நாடுகள். 3. அந்த நாடுகளுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்றால் அதற்கான ஒரு தகுதி தேவை, அதை நிரூபிக்க வேண்டும் அல்லது சட்டவிரோதமாக செல்ல வேண்டும். 4. அந்த அபிவிருத்தி என்பது பொருளாதார ரீதியான அபிவிருத்தி மட்டுமல்ல, அறிவியல் ரீதியான அபிவிருத்தி. 5. பாலியல் கல்வி என்பது ஒரு ஆணும் பெண்ணும் எப்படி மற்ற ஆட்களுக்கு தெரியாமல் கள்ளத்தனமாக செக்ஸ் வைப்பது என்று சொல்லிக் கொடுப்பதில்லை . 6. பாலியல் கல்வி என்பது ஒவ்வொரு வயதிலும் இயற்க்கையாக ஏற்படும் உடல் மாற்றம் , உணர்வு மாற்றம் போன்றவற்றை விளங்கப்படுத்தி அதை சரியாக எதிர்கொள்ள பற்றி அறிவூட்டுவது . பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன , யாராவது அதற்கு முயற்சி செய்தால் அல்லது உண்மையாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டால் அதை எப்படி பெரியவர்களிடம் சொல்லி தீர்வு காண்பது என்று சொல்லிக் கொடுப்பதும்தான் பாலியல் அறிவு . மேலும் , ஒரு பெண்ணுக்கு பீரியட் தொடங்க முன்னமே , பேட் வாங்கி கொடுத்து அதை எப்படி பாவிப்பது என்று விளங்கப்படுத்தி, பீரியட் ஆரம்பித்ததும் அவளுக்கு வயிற்று வலி போன்றவை இல்லை என்றால் அடுத்த நாளைக்கே பாடசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பது தான் பாலியல் கல்வி. அதை விட்டுப் போட்டு பிள்ளையை 10 நாள் ரூமில் அடைத்து வச்சுப்போட்டு, பிறகு ஊருக்கே அழைப்பிதழ் கொடுத்து, மேக்கப் போட்டு பிள்ளையை காட்சிப் பொருளாக நிப்பாட்டி பிள்ளைக்கு பீரியட் தொடங்கிட்டு என்று தண்டோரா போட்டு சொல்லுறது மட்டுமில்லாமல் , ஹெலியில் கொண்டுவந்து இறக்கிறது , 13 வயது பிள்ளையை மச்சானை பார்த்தீங்களா என்று ஆட வைக்கிறதெல்லாம் மொக்குத்தனமென்பதை தாண்டி படு பட்டிக்காட்டுத்தனம் என்று புரிய வைப்பதுதான் பாலியல் கல்வி என்று சொல்லப்படும் அறிவியல் கல்வி . இதை சொல்வதால் எனக்கு எதிரிகள் அதிகரிக்கும் , ஏனென்றால் உடற்தொழிற்பாட்டை ஆழமாக கற்ற வைத்தியர்களே பிள்ளைகளுக்கு சாமத்திய வீடு சிறப்பாக செய்து வீடியோ போட்டு படம் காட்டும் சமூகம் நம் சமூகம். அப்படிப்பட்ட எல்லோருக்கும் இந்த கருத்தை சொல்வதால் நான் சமூக விரோதியாகிப்போவேன். சாராம்சம் : பாலியல் கல்வி ஒழுங்காக கொடுக்கப்படாததால் , 1. உங்கள் வீட்டில் உள்ள அநேகமான பெண்கள் இந்த பாலியல் அத்துமீறல்களை ஏதோ ஒரு வழியில் எதிர்கொண்டு அதை வெளியே சொல்ல முடியாமல் உள்ளே குற்ற உணர்வுடன் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். 2. கொஞ்சமாவது ஒழுங்காக படித்த பெண்கள் வளர்ந்தும் சாமத்திய வீட்டு கெசட்டை எடுத்து ஒளித்து வைப்பார்கள் அல்லது உடைத்து எறிவார்கள். https://www.facebook.com/share/1GBhRW3hpn/?mibextid=wwXIfr
-
மாதுளை மரம்
மாதுளை மரம் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட T.தம்பிமுத்து எழுதி ‘நியூ யோர்க்கர்’ சஞ்சிகையில், 05 நவம்பர் 1954-இல் வெளியாகிய சிறுகதை : The pomegranate tree. தமிழில்: எழுத்துக்கினியவன் சில மனிதர்களுக்கு ஒரு விசேடமான பலவீனம் இருக்கும்; அதற்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்து விடுவார்கள், தங்களுக்கு உயிரானவர்களின் மனமகிழ்ச்சியைக் கூட அர்ப்பணித்து விடத் தயங்க மாட்டார்கள். இதற்கு ஒரு நல்ல உதாரணம் மகாபாரதத்தில் திரௌபதியைப் பணயமாக வைத்து இழந்த தர்மன். எனது இரத்தின மாமாவின் பலவீனம் வட இலங்கையின் அச்சு வேலிக் கிராமத்தில், அவருடைய வீட்டுக் கிணற்றடிக்கு அருகில் வளரும் மாதுளை மரத்தின் பழங்களுக்குத்தான். விறாந்தைக்குக் கீழே கல்லாசனத்தின் மேல் விரித்திருந்த புலித்தோலில் உட்கார்ந்து மாதுளம் பழக் கொட்டைகளைச் சுவைத்தபடி இரத்தின மாமா எனக்கும் என் சகோதரர்களுக்கும் சேர் வால்டர் ஸ்காட்டின் கதைகளுக்குத் தானும் கொஞ்சம் கண்ணும் மூக்கும் வைத்து ஆலாபிப்பார்: “அப்போ அந்தக் கறுப்பு மறவன் கடிவாளத்தைப் பற்களால் கடித்துப் பிடித்தபடி குதிரையை ஓட்டிவந்து, ‘ஹோ ஐவன்ஹோ! ஹோ ஐவன்ஹோ!’ என்று கூவினான். ரெபெக்கா வெகு உயரத்திலிருந்து, தன் கூந்தல் ஒரு கார்மேகம் மாதிரிக் கவிழ்ந்து விழக் கீழே பார்த்தாள்…இந்த மாதுளம்பழம் அருமை. அச்சுவேலிக் கிணற்றடி மாதுளைக்குப் போட்டியாக எதுவுமே கிடையாது!” ஆங்கிலேயர் மாதுளம்பழக் கொட்டைகளைக் கரண்டியால் கோதி அள்ளி உண்ணும் முறை முழுப்பிழை என்று இரத்தின மாமா சொல்வார். கரண்டியால் கோதி எடுத்தால் ஏதோ கற்பூரத் தைலம் சாப்பிட்டது போல மாதுளம்பழத்தின் உருசியையே கெடுத்துவிடும். அது மட்டுமல்ல, மாதுளங் கொட்டைகளை விழுங்கக் கூடாது. ஒரு கொஞ்சத்தை வாயில் போட்டு ஒன்றிரண்டு முறை மென்று மாதுளம்பழச் சாற்றை, சிப்பிமீன் சாப்பிடுகிற மாதிரி உறிஞ்சி எடுத்தபிறகு கொட்டைகளைத் துப்பிவிட வேண்டும். மரத்திலேயே பழுத்த புத்தம்புது மாதுளம்பழம் கொஞ்சம் எலுமிச்சை கலந்த ஷாம்பேன் மாதிரி இருக்கும். அச்சுவேலிக்கு வெளியே இவ்வளவு உருசியான மாதுளம்பழத்தைக் கண்ட ஞாபகமே எனக்கு இல்லை. மாரிகாலத்தில் நானும் எனது ஐந்து சகோதரர்களும் எங்கள் பெற்றோருடன் கொழும்பு நகரத்தில் வசித்தோம். அங்கேதான் பள்ளிக்கூடம் போனோம். கோடை விடுமுறைகளுக்கு அச்சுவேலிக்குப் போய்விடுவோம். அப்பப்பா உயிரோடிருக்கும் வரை அவருடன் தங்கியிருந்தோம். அவருக்குப் பிறகு இரத்தின மாமாவுடன் அல்லது ஆறு மாமாவுடன். இரத்தின மாமா எனது அப்பாவின் ஒன்றுவிட்ட மைத்துனர். ஆறு மாமா அம்மாவின் மைத்துனர். இலங்கை உறவுமுறைகளின் படி இவர்கள் எனக்கும் என் சகோதரர்களுக்கும் மாமாக்கள்தான். இலங்கையில் மாமாக்கள் மருமக்களுக்கு அளவுமீறிய செல்லம் கொடுப்பது வழக்கம். ஆகவே அச்சுவேலிக்குப் போவதென்றால் எங்களுக்குக் கொள்ளைப் பிரியம். ஆறு மாமா ஒரு சன்னியாசி மாதிரியான மெலிந்த சிறிய உருவம் கொண்டவர். செம்மையாகச் செதுக்கிய கழுகு போன்ற தலையில் நரைத்துப்போன வெள்ளைத் தலைமுடி. ஒரு பறவை மாதிரி கொஞ்சம் பதற்றமான அசைவுகள் கொண்டவர். எந்த விஷயத்தையும் கவனித்துச் செய்கிற கறார்ப் பேர்வழி. கீரிமலைக் கேணியில் குளித்துப் பிறகு பிராமணக் கடையில் மதிய உணவு அருந்த எங்களைக் காரிலோ குதிரை வண்டியிலோ அனுப்பும் போது எல்லோருக்கும் தனித்தனியாகத் துவாய்களும், சாப்பிட்டபின் குட்டித்தூக்கம் போடப் பாய்களும் கவனமாக எடுத்து வைப்பார். பிறகு அந்தப் பயணத்துக்குத் தேவையான சரியான அளவு பணத்தை எடுத்துத் தன் மகன் – எங்கள் மைத்துனன் – ராஜா கையில் வைப்பார். ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்படாத மாலைகளில் எங்களை உள்ளான் குருவியோ புறாவோ வேட்டையாட அழைத்துச் செல்லும்படி ராஜாவைப் பணிப்பார். ராஜா உயரமாக அழகாக இருப்பான். கவிதைகளை, முக்கியமாக ஔவையாரின் நாலடிச் செய்யுள்களை, மேற்கோள் காட்டுவதென்றால் அவனுக்கு அலாதிப் பிரியம். இப்போது அவன் ஒரு அரசாங்க அதிபராகக் கடமையாற்றுவதால் நடைமுறைகளையும் பல்வேறு படிவங்களைப் பூர்த்தி செய்வதையும் சீராக நடத்துவதிலேயே கவனமாக இருக்கிறான். ஆனால் என் நினைவில் அவன் ஒரு கவிஞன்தான். வேட்டை என்பது திறந்த வெளிகளிலும், பனங்காணிகளிலும், வயல்வெளிகளிலும், பறவைகளிலும் காணக்கூடிய கவிதைகளின் ஒரு அம்சம்தான். சிலவேளைகளில் சிறுமிகளைப் பற்றிக் கேட்டு ராஜா எங்களைக் கேலி செய்வான். “வளர்ந்த பிறகு ஆரைக் கட்டுவாய்? நளினியா சகுந்தலாவா சாவித்திரியா?” நான் “சாவித்திரி!” என்று சிலவேளைகளில் கத்துவேன். அல்லது “சகுந்தலா!” ஒரே கும்மாளம்தான். திரும்பி வரும்போது பென்னாம்பெரிய பனையோலைகள் சரசரக்க, சில்வண்டுகள் இருண்ட பனங்காணிகளில் களேபரம் செய்ய, ஒற்றைக் காபைட் விளக்கெரியும் தெருவோரக் கடையில் நிறுத்தி ஒரு கோர்வை வடையும் எலுமிச்சம்பழச் சாறும் வாங்கித் தருவான். ஆறு மாமா வீட்டுக்குப் போகும் போது பெட்டிபெட்டியாக வாணங்களும் பட்டாசுகளும் இருக்கும் என்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். கோப்பாய்க்கு அருகிலுள்ள முடிவில்லாத ‘நிலாவரை’ கிணற்றைப் பார்க்கப் போகும்போதும் அல்லது விடுமுறை முடிந்து வீடு திரும்பும்போதும் ஆறு மாமா எங்களுக்கு ஆளுக்கொரு வெள்ளி ரூபாய் நாணயம் தருவார். இரத்தின மாமா வீட்டில் நாங்கள் இருந்தபோதும்கூட வேட்டை, நீச்சல் பயணங்கள் போயிருக்கிறோம் என்றாலும் அங்கே எங்களை மிகவும் கவர்ந்தது மாதுளம்பழங்களும் நாட்கணக்கில் தொடரும் இரத்தின மாமாவின் நெடுங்கதைகளும்தான். கிராமத்தினருக்கு இரத்தின மாமாவின் மேல் பயங்கலந்த மரியாதை இருந்தது. அவர் ஒரு ராங்கிபிடித்த, பிடிவாதக்கார, இலகுவாகத் திருப்தி செய்ய முடியாத, ஆனால் நல்ல மனமுள்ள சர்வாதிகாரி. அவர்தான் ஊர்ப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் பஞ்சாயத்தின் தலைவர். அப்பப்பா காலமான போது, அவருடைய பிள்ளைகள் யாரும் அந்தக் கிராமத்தில் வசிக்கவில்லை. இரத்தின மாமா, அப்பப்பாவின் மைத்துனர் என்கிற முறையில், அப்பப்பாவின் முறையான வாரிசாக, அச்சுவேலியின் முதற்குடிமகனாகத் தன்னைத்தானே வரிந்து கொண்டார். அத்தோடு கிடைக்கும் எல்லா விதமான விசேட உரிமைகளும் தனக்குத்தான் என எதிர்பார்த்தார். ஆறு மாமா இதற்கு முற்றிலும் பலத்த எதிர்ப்பு. கிராமத்தின் ‘உடையார்’ என்ற முறையில் சட்டத்துக்கும் நீதிக்கும் பொறுப்பான தான்தான் அச்சுவேலியின் நியாயமான முதற்குடிமகன் என்று நினைத்தார். அப்பப்பா உயிரோடிருக்கும் வரை கிராமத் தலைவர் யார் என்பதில் ஐயம் எதுவுமே இருக்கவில்லை. அவர் தெருவில் நடந்து வந்தால் ஊர் மக்கள் மரியாதை காட்டி தத்தம் வீடுகளுக்குள் ஓடிப்போய்ப் பதுங்கிக்கொள்வார்கள். நாங்கள் சிறுபிள்ளைகள் ஊர்த் தெருக்களிலும் ஒழுங்கைகளிலும் ஓடித்திரியும் போது, தாழ்த்தப்பட்ட சாதியினர் மண்டியிட்டு மரியாதை தந்தமை நகரத்துப் பிள்ளைகளான எங்கள் கண்களுக்கு வியப்பாகத் தெரிந்தது. எங்களோடு பேச முதல் அவர்கள் தலையில் கட்டியிருந்த தலைப்பாகையையோ தோளில் போட்டிருந்த துண்டையோ கழற்றி இடையில் சுற்றிக்கொள்வார்கள். ஏனென்றால் அவரது பேரப்பிள்ளைகளுக்கு முன்னால் பகட்டாக அணிந்துகொள்வது மரியாதையின்மை என்று கருதப்பட்டது. ஊருக்கு வருகை தரும் வெளியூர்ப் பிரமுகர்களுக்கு ஊரார்களை அறிமுகப்படுத்தும் பணியை அப்பப்பாவும், அவருக்கு முதல் அவரது தகப்பனும்தான் எப்போதுமே செய்வார்கள். ஆறு மாமா, இரத்தின மாமா இரண்டு பேருக்குமே அந்த உரிமை தங்களுக்குத்தான் வரவேண்டும் என்ற ஆசை. ஊரில் நடக்கும் எல்லாத் திருமண அல்லது மரண வீட்டு ஊர்வலங்கள் தன் வீட்டுக்கு நூறு யார்ட் அண்மைக்கு வந்ததும் தத்தம் வாத்தியக் கச்சேரிகளை நிறுத்திவிட வேண்டும் என்ற கட்டளையை இரத்தின மாமா அறிவித்த கையோடேயே ஆறு மாமாவும் அதே கட்டளையைப் பிறப்பித்தார். அப்பப்பாவுக்கு இன்னுமொரு சலுகையும் இருந்தது. வருடப்பிறப்பு நாளில் ஊரிலுள்ள எல்லா நாதஸ்வரக் கோஷ்டிகளும் அவரது வீட்டுக்குப் போய்த்தான் முதலாவது கச்சேரி வைக்க வேண்டும். ஆறு மாமா இந்தச் சலுகையைத் தனக்கென்று எடுத்துக்கொண்டதும் இரத்தின மாமா கோபம் கொந்தளிக்க ஆறு மாமாவோடும் அவரது குடும்பத்தோடும் பல வாரங்கள் பேசாமலேயே விட்டுவிட்டார். ஆறு மாமா சாதுரியமாகப் பெருமனதுடன் வேட்டைக்குப் பிறகு வழமையாகச் செய்வது போல ஒரு காட்டுப்பன்றித் தொடையை அனுப்பி வைத்த பிறகுதான் இரத்தின மாமாவின் கோபம் தணிந்தது. இப்படி உரிமைகளைத் தம் வயமாக்குவதற்கு இரண்டு மாமாக்களும் சமர் செய்யும்போது, அதன் விளைவுகள் அச்சுவேலியின் ஒவ்வொரு கல் வீட்டிலும் ஓலைக் குடிசையிலும் எதிரொலித்தன. மரபுவழிகளை மிகக் கவனமாகப் பேணும் ஒரு கிராமம்தான் அச்சுவேலி. கிராமத்து ஆண்கள் தங்கள் உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள். திருமண, மரண வீட்டு ஊர்வலங்கள் போகும் போது புழுதி பறக்கும் ஊர் வீதிகளில் விரிக்கும் வெள்ளைத் துணிகளை வழங்குவது ஊரிலுள்ள வண்ணாரின் உரிமை. அதை ஊர்த் துணிக் கடைக்காரர் செய்ய முனைந்தால் ஊர் பொங்கியெழுந்து தர்ம அடியிலோ கொலையிலோதான் முடிந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களுக்குத்தான் திருமண ஊர்வலங்களில் மண் கலயங்களைக் காவிக்கொண்டு செல்லும் உரிமை இருந்தது. அவர்கள் மண்பானைகளுக்குள் ஊதி ஒரு ஆழமான ஒத்ததிரும் தொனியைக் கிளப்புவார்கள். ஒவ்வொரு சில அடிகளுக்குப் பிறகும் நகர்வதை நிறுத்திச் சில வெள்ளி நாணயங்கள் பானைக்குள் போடப்படும் வரை பொறுத்திருப்பார்கள். நகை வேலை செய்யும் உரிமை ஒரு விசேடமான தட்டார் சாதியினருக்கே. பனந்தென்னைகளில் ஏறிக் கள் இறக்கும் உரிமை இன்னொரு சாதியினருக்கு மட்டும்தான். அனேகமாக எல்லா விஷயங்களிலும் கண்டிப்பான முன்னுரிமை வரிசை பேணப்பட்டது. உதாரணமாக, இரண்டு கிராமக் குடும்பங்கள் கொண்டாட்டங்களில் முதலில் பாடும் உரிமையைப் பாரம்பரியமாக வைத்திருந்தன. வேறு யார் பாடகர்கள் இருந்தாலும் பரவாயில்லை, முதலில் ஒரு குடும்பம் பாடிய பிறகு அடுத்த குடும்பம் தொடரும். மிகவும் தாழ்த்தப்பட்ட ஒரு சாதியினருக்குத்தான் திருமண, மரண வீட்டு விருந்துகளில் எஞ்சியிருக்கும் உணவுகளைச் சேகரிக்கும் உரிமை இருந்தது. செத்துப் போன மாடுகளைக் கொண்டு செல்லும் உரிமை நளவர்களுக்கு மட்டும்தான். சில உயர்த்தப்பட்ட சாதிகளுக்கு மட்டும்தான் காலணிகளை அணியும் உரிமை. இத்தகைய எழுதப்படாத விதிகளெல்லாம் மிகுந்த கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்கப்பட்டன. இப்படியான ஒரு பாரம்பரியம் எங்கெங்கும் படர்ந்திருந்த ஒரு பின்னணியில்தான் மற்றப்படி நல்ல மனதுகொண்ட இரத்தின மாமாவும் ஆறு மாமாவும் தங்களுடைய உரிமைகளுக்காக மல்லுக்கட்டினார்கள். பண்பாடு, பாரம்பரியம் என்ற உணர்ச்சிகள் அவர்களிடம் மேலோங்கி நின்றன. வருங்காலத்தில் எந்தக் குடும்பம் ஊரில் முன்னின்று தழைத்தோங்கி வளரும் என்பது அப்போதே தீர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயமாக இருந்தது. அதேநேரத்தில், போட்டிக்கு நின்ற இரண்டு குடும்பங்களுக்குமிடையில் ஒரு நிரந்தரமான பிணைப்பு வரப் போகிறது என்ற ஒரு கதை ஊரில் பரவலாகப் பேசப்பட்டது. இந்தக் கதை பரவிய கோடைகால விடுமுறையில் எனக்கு எட்டு வயதுதான் என்றாலும், குடும்பங்கள் இரண்டுக்கும் இடையில் நிலவிய இறுக்கமான பதற்றம் எல்லோருக்கும் போல எனக்கும் புரிந்திருந்தது. ஒருநாள் இரத்தின மாமா வீட்டு முற்றத்தில் நான் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு மீன்காரி தன் பனையோலைக் கடகத்தைக் காவிக்கொண்டு வந்தாள். நிலத்தில் கடகத்தை இறக்கி வைத்துக் கவிழ்த்தாள். வழக்கம் போலப் பெரிதும் சிறிதுமாகப் பலவகை மீன்கள் அதிலிருந்து கொட்டுண்டன. சூறை, வாள்மீன், இறால், நண்டு, கணவாய், சிங்கி இறால், நெய்த்தோலி என்று பலவகை. வல்லையோ பருத்தித்துறையோ ஏதோ பக்கத்தூர்க் கடற்கரை மணல் வைரத்துகள்கள் போல இன்னும் அந்த மீன்களில் ஒட்டிக்கொண்டிருந்தன. மாமிக்கும் அவரது இரண்டு சமையற்காரருக்கும் துணையாக வேடிக்கை பார்க்க அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் எல்லோரும் ஓடிவந்தார்கள். சமையற்காரர்தான் இறுதி முடிவு எடுப்பவர் என்றாலும், மாமிக்கு முன்னால் வைத்தே பேரம் பேசினார்கள். சமையற்காரர் திருப்தியடைந்து சம்மதம் கொடுத்ததும் மாமியும் சம்மதம் தெரிவித்துத் தலை ஆட்டுவார். அந்தக் காலை வெளிச்சத்தில் மீன்கள் கைமாறக் கூட்டத்தின் கலகலப்பு ஏறிப் பிறகு இறங்கித் தணிந்தது. கொஞ்சம் கலகலப்பு அடங்கிய நேரம் மீன்காரி சட்டென்று மாமியைப் பார்த்து “ஆறு ஐயாவின்ர மகனைச் சுந்தரி அம்மாவுக்குப் பேசுறீங்கள் எண்டு பத்தர் சொன்னார்” என்றாள். எங்களது மைத்துனன் ராஜாவைப் பற்றித்தான் அவள் சொல்கிறாள் என்று அறிந்ததும் எனது காதுகளைத் தீட்டிக்கொண்டேன். இரத்தின மாமாவுக்கு மகன்கள் கிடையாது. சுந்தரி ஒரே மகள். பக்கத்தில் விருந்தினரை உபசரிக்கும் ‘சாலை’ என்ற கொட்டகையில் நின்றிருந்த சுந்தரி நாணத்துடன் தலையைத் தாழ்த்திக்கொண்டாள். அவளுக்குப் பதினாறு வயது. இதுவரை அவளுக்கு நூறு தடவைகளாவது கல்யாண வரன் பேசி வந்த கதை கேட்டிருப்பாள். முதலாவது வரன் பேச்சு வந்த போது அவளுக்கு மூன்று வயது இருந்திருக்கலாம். அல்லது ஒரு வயதாகக் கூட இருந்திருக்கலாம். மாமி பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தார். “பெடியன் நல்ல வடிவு” மீன்காரி, சுந்தரியைத் திரும்பிப் பார்த்தபடி இளம் பெண்களைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைப்பதற்குப் பேசும் தெவிட்டுகின்ற குரலில் தொடர்ந்தாள், “படிப்பிலும் கெட்டிக்காரனாம்.” சுந்தரி வெட்கத்துடன் கலகலவென்று சிரித்தபடி, கையில் போட்டிருந்த காப்புகள் கிணுகிணுக்கத் தன் சேலையைச் சரி செய்துகொண்டாள். “சாத்திரியார் பொருத்தம் பாக்கிறார்” மாமி ஒப்புக் கொண்டார். “பொருத்தம் எண்டால்தான் மிச்சம் எல்லாம் நடக்கும்.” “நீங்கள் ஒரு லட்சம் சீதனம் குடுக்கிறியளாம்! மாப்பிளைக்கு அது சரிதான். எப்பவோ ஒருநாள் அரசாங்க அதிபரா வந்திடுவார்” மீன்காரி, சுந்தரியைக் கடைக்கண்ணால் பார்த்தபடி தொடர்ந்தாள். மாமி பதிலேதும் சொல்லவில்லை. மீன்காரி கடகத்தைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நழுவிப் போனாள். நகை செய்யும் ‘பத்தர்’தான் அச்சுவேலியின் செல்வந்தக் குடும்பங்களின் பாரம்பரியக் கல்யாணத் தரகர். ராஜாவுக்கும் சுந்தரிக்கும் திருமணப் பேச்சைக் கொண்டு நடத்துகிற இந்தத் தரகர் கொஞ்சம் அளவுக்கு மிஞ்சிப் புளுகிற, செருக்கு மிகுந்த, எப்போதும் குங்குமப் பொட்டு வைத்த, சிறிய, மாநிற மனிதர். அவரது தரகு வேலைத் திறமையும் எதையும் பேசி நிறைவேற்றி வைக்கக் கூடிய ஆற்றலும் அச்சுவேலிக்கு வெளியே கூடப் பேர் போனவை. தொலைவிலுள்ள திருகோணமலை மற்றும் கொழும்பு போன்ற நகரங்களில் கூடக் கூலிக்குத் தரகு வேலை செய்து வெற்றி கண்டவர். மெல்லிய திசுக் காகிதத்தில் பென்சிலால் வரைந்த தனது நகை வடிவமைப்புகளைக் காவிக் கொண்டு நாடு முழுவதும் பயணம் செய்யும்போது, அவர் வயதுவந்த வாலிபர்களினதும் யுவதிகளினதும் படங்களையும் ஒரு கட்டாகக் கொண்டு செல்வார். தனது தரகுத் தொழிலைத் திறந்த மனப்பான்மையுடன் அணுகுபவர். ஒரு சாதாரண பெண்ணுக்குப் பெரிய சீதனத்தோடு -ஐம்பதாயிரம் அல்லது ஒரு லட்சம் – பேசுவதும், ஒரு அழகான பெண்ணுக்குச் சில ஆயிரங்களோடு பேசி முடிப்பதும் அவருக்கு ஒன்றுதான். தனது இரண்டு கலைகளையும் -தரகு வேலையையும் நகை செய்யும் பத்தர் வேலையையும் -ஒன்றிணைத்ததால் மிகப் பெரிய செல்வந்தராகி விட்டார். தரகு வேலைக்குச் சீதனத்தின் பத்து வீதத்தை அறவிடுவார். திருகோணமலைக்கோ கொழும்புக்கோ பயணம் செய்யும்போது, கையில் போட்ட தங்க வளைகாப்பும், விரலில் போட்ட வைர மோதிரமும், வேட்டிக்கு மேல் அணிந்திருக்கும் வெள்ளை ஐரோப்பிய மேலங்கியும் அவரது செல்வந்தத்தை உலகத்துக்குப் பறைசாற்றின. இரத்தின மாமா தன் மகளை ஆறு மாமாவின் மகனுக்குக் கைபிடித்துக் கொடுக்கப் பண்ணினால் அது இந்தப் பத்தரின் தரகு வேலையின் சிகரமாகி விடும். அன்று மாலை, காகங்கள் எல்லாம் முருங்கை, வேப்ப மரங்களில் சென்றடைய, வௌவால்கள் இலுப்பம் பழங்களை வேட்டையாடப் படையெடுக்கத் தொடங்கிய நேரத்தில், அச்சுவேலியின் எல்லா வீடுகளிலும் ஒரே செய்தியைப் பற்றித்தான் கதை நடந்தது. இரத்தின மாமா கிணற்றடி மாதுளை மரத்திலிருந்து ஆறு பழங்களை ஆறு மாமா வீட்டுக்கு அனுப்பிவைத்தாராம் (இதற்கும் பிறகு நடந்ததற்கும் தொடர்பு ஏதாவது இருந்ததா என்று நான் பிறகு யோசித்ததுண்டு). பத்தரின் தரகு வேலையால் திருமண நாள் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. திருமண நாளுக்கு முதல் நாள் மாலை சீதனப் பேச்சு முடிவுற்றுச் சீதனம் மாப்பிள்ளையிடம் கையளிக்கப்படும். திருமண நாள் அருகே வர, இரத்தின மாமாவின் வீட்டில் வேலைகள் மும்முரமாக நடந்தன. பச்சையும் மஞ்சளுமான தென்னோலைகளால் வேயப்பட்ட கிடுகுகளால் பந்தல்கள் கட்டப்பட்டுக் கொன்றை, சம்பங்கி, வெள்ளையும் இளஞ்சிவப்புமான செவ்வரளி, செம்மஞ்சள் நிறத் தென்னம்பூ போன்ற பலவகைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டன. கூரைக்குக் கீழே வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டன. தரையில் இந்தியக் கம்பளங்கள் விரிக்கப்பட்டன. ஒரு பந்தலில் மிகையாக அலங்கரிக்கப்பட்ட கூரைக்குக் கீழே உயர்த்தி வைக்கப்பட்ட திண்ணைதான் மணவறை. அதிலே நண்பர்களோடு மணமகன் அமர்ந்திருப்பார். அவருக்கு முன்னால் ஒரு பித்தளைக் குடத்தின் மேல் வெற்றிலைகளும், மஞ்சள் எலுமிச்சம் பழமும், பூக்களும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அவை மகப்பேற்றுக்கான சின்னங்கள். இரத்தின மாமா காசியிலிருந்து கையால் நெய்யப்பட்ட சரிகை வேலைப்பாடுள்ள கூறைப்புடவை ஒன்றைக் கொண்டுவர ஒழுங்குபடுத்தியிருந்தார். குங்கும நிறத்தில் மின்னிய அந்தப் புடவையின் விலை அந்தக் காலத்திலேயே மூவாயிரம் ரூபாய். வளவின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து உள்ளூர்த் தவில் வாத்தியக்காரரைத் தவிர, தஞ்சாவூரிலிருந்து இரண்டு சங்கீதக் கோஷ்டிகளை வீட்டுக்குள் கச்சேரி வைக்கக் கொண்டுவந்திருந்தார். ஒவ்வொரு விருந்தினரின் வருகையையும் வாசற் தவில்காரர் அறிவிக்க, சிறுவர் குழாம் சீனப்பட்டாசு வெடிப்பதற்கு ஓடிப் போக, உள்ளேயிருக்கும் ஒரு சங்கீதக் கோஷ்டி கச்சேரியை ஆரம்பிக்க, மக்கள் கையிலிருக்கும் எல்லா விதமான ஆயுதங்களாலும் வெடிவைத்துக் கோலாகலமாக விருந்தினர்களை வரவேற்பார்கள். ஒவ்வொரு நாளும் வீட்டுக்குத் திருமணப் பரிசுகள் ஊர்வலமாக வந்தபடி இருந்தன. இரண்டு பேர் சுமக்கும் ஒரு தடியின் இரண்டு பக்கமும் தொங்கும் வாழைக் குலைகள், இலுப்பெண்ணை, நல்லெண்ணைச் சாடிகள், கால்நடைகள், கோழிகள், அரிசி மூட்டைகள், சாராயப் போத்தல்கள், சுருட்டுப் பெட்டிகள், கத்தரி, பலா, முருங்கை போன்ற காய்கறிகள், மாம்பழம், பப்பாசிப்பழம், ஜம்பு போன்ற பழவகைகள். கொஞ்சம் வறிய மக்கள் திருமண விருந்துக்குச் செய்யப்படும் கறிகளுக்குக் கூட்டுச் சேர்ப்பதற்காகத் தேங்காய்களை அனுப்பி வைத்தார்கள். திருமணத்துக்கு முதல் நாள் ஒருவர் மாமரத்துக்குக் கீழே உட்கார்ந்தபடி மணித்தியாலக் கணக்காக நெற்றியில் பொட்டாக அணிவதற்காகச் சந்தனம் அரைத்துக்கொண்டிருந்தார். அரைத்த சந்தனம் வெள்ளிப் பேழைகளில் போடப்பட்டு விருந்தினர்கள் வரும்போது அவர்களுக்குப் பன்னீர் தெளித்த பிறகு, சந்தனப் பொட்டு போடுவதற்காக நீட்டப்படும். வெளியே மாந்தோப்பில் மூன்று கல் வைத்த அடுப்புகளில் பென்னாம்பெரிய கிடாரங்கள் சோறு கறி சமைப்பதற்காக வைக்கப்பட்டன. திருமணத்துக்கு முந்நூறு விருந்தினராவது வருவார்கள். அதைத் தவிர, தாழ்த்தப்பட்ட சமூக வேலையாட்களுக்கும் மிஞ்சிய உணவு வழங்கப்படும். அது எல்லா விருந்துகளின் பின்னரும் நடக்கும் பாரம்பரிய வழக்குமுறை. முதலில் பெண்கள் ஆண்களுக்கு உணவு பரிமாறுவார்கள். அதற்குப் பிறகு பெண்களும் வேலையாட்களும் சாப்பிடுவார்கள். அதற்குப் பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்து வேலையாட்களுக்குப் புளியந்தோப்பிலோ மாந்தோப்பிலோ உணவு வழங்கப்படும். ஏனென்றால் அவர்களுக்கு வீடுகளுக்குள் வர அனுமதி கொடுப்பதில்லை. ஒரு தேர்ந்த பரிசுக் கிடாய் ஆடு வெட்டப்பட்டது. பந்தல்கள் அலங்கரிக்கப்பட்டன. சலவைக்கார வண்ணார் ஊர்வலம் செல்வதற்கு விரிப்பதற்காகக் கட்டுக் கட்டாக வெள்ளைத் துணி கொண்டுவந்தார். இரண்டு யானைகள் பாகர்களோடு வந்தன. மாப்பிள்ளையும் பெண்ணும் அவற்றில்தான் கோவிலுக்குப் போய் வருவார்கள். பக்கத்து ஊர் சங்கீதக் கோஷ்டிகளெல்லாம் அருகில் கூடாரம் போட்டிருந்தார்கள். சாத்திரியார், வழக்கறிஞர், பத்தர் அவர்களோடு ஆறு மாமா பிற்பகல் நேரம் வருவார். அப்போதுதான் சீதனம் பேசி நிர்ணயிக்கப்படும். இரத்தின மாமா முற்றத்தில் ஒரு மேசைக்கருகே உட்கார்ந்திருந்தார். மேசையில் ஒரு கிண்ணத்தில் மாதுளங்கொட்டைகளும் அதற்கருகே ஒரு போத்தல் சாராயமும் வைக்கப்பட்டிருந்தன. நானும் என் ஐந்து சகோதரர்களும் இரத்தின மாமாவைச் சுற்றி முண்டியடித்துக்கொண்டு நின்றோம். அவர் சிவப்பும் தங்கமுமாகச் சரிகை வைத்த தலைப்பாகை அணிந்திருந்தார். அவருடைய மேலங்கி முழங்கால் வரைக்கும் தொங்கியது. மேலே கழுத்துவரைப் பொத்தான் போடப்பட்டிருந்தது. அடிக்கடி கொஞ்சம் மாதுளங்கொட்டைகளை வாய்க்குள் போட்டு, ஒரு மிடறு சாராயமும் குடித்தார். பத்தர் சாத்திரியாருடன் வந்து சேர்ந்தார். “இருங்கோ” என்று சொன்ன இரத்தின மாமா “எங்கே இந்த ஆறு? தாமதமாப் போச்சு…” என்று கேட்டார். “கெதியா வந்திடுவார்” என்று பத்தர் தேற்றினார். இரத்தின மாமா பொறுமையில்லாமல் மேசையில் விரல்களால் தாளம் போட்டார். இன்னும் கொஞ்சம் சாராயம் குடித்தார். தட்டாருக்கோ சாத்திரியாருக்கோ சாராயம் கொடுத்து உபசரிக்கவில்லை. சாதி ஒழுங்குமுறையில் அவர்களுக்கு உட்காரும் தகுதி வழங்கப்பட்டிருந்தாலும் சேர்ந்து உண்பதற்கோ குடிப்பதற்கோ தகுதி வழங்கப்படவில்லை. இரத்தின மாமா சிந்தனையில் மூழ்கியிருந்தார். இன்றைய தினம் அவரது செல்வத்தின் பெரும்பகுதியைக் கொடுத்து விடப் போகிறார். தனக்கென்று இருந்த வீட்டையும் கொஞ்சம் வருமானத்துக்காக ஒருசில வயற்காணிகளையும் மட்டும்தான் வைத்துக்கொள்ளப் போகிறார். சீதனம் கொண்டு வருவதற்கு யாராவது மகன் இருந்திருந்தால் அவரை இது இவ்வளவாகப் பாதித்திருக்காது. கடைசியில் ஆறு மாமா ஒரு வழியாக வந்து சேர்ந்தார். வெள்ளைத் தலைமுடி குடுமியாகப் போடப்பட்டு, உருக்கி வார்த்தது போல இருந்த அவரது காதுகளில் கடுக்கன் தோடுகள் தொங்க, மிகவும் ஒல்லியாக மிடுக்காக இருந்தார். அவரும் முழங்கால் வரைக்கும் கறுப்பு நிற மேலங்கி அணிந்திருந்தார். “இதைக் கெதியா முடிப்பம்” என்றார் இரத்தின மாமா. “சரி, சரி” என்றபடி உட்கார்ந்த ஆறு மாமா, ஒரு சின்ன வெள்ளி உரலையும் உலக்கையையும் பையிலிருந்து எடுத்து அதற்குள் கொஞ்சம் வெற்றிலை பாக்கைப் போட்டு இடிக்க ஆரம்பித்தார். இரத்தின மாமா தாழ்த்திய குரலில் பேச ஆரம்பித்தார். “சகுனங்கள் எல்லாம் சரியாம். சாதகமும் நல்ல பொருத்தம் எண்டு சாத்திரியார் சொல்லுறார்.” எனது இருதயம் அடிக்கும் சத்தம் எனக்குக் கேட்டது. ‘சகுனம்’ என்ற சொல் ஏதோ பயங்கர மர்மங்களின் ஆட்டங்களை நினைவுக்குக் கொண்டுவந்தது. “அப்பிடித்தான் கேள்விப்பட்டன்” வெற்றிலை பாக்கை இடித்தபடி ஆறு மாமா சொன்னார். விருந்தினர் பந்தலில் பெண்கள் பரிவாரம் சூழ நின்ற சுந்தரியைக் கண்டேன். எல்லோரையும் போல அவளுக்கும் எதிர்பார்ப்பும் உற்சாகமும் நிறைந்திருந்தாலும் இந்தச் சந்தர்ப்பத்துக்குத் தகுந்த மாதிரி நாணமும் தன்னடக்கமும் கொண்டவளாய் நின்றாள். வழக்கறிஞர் கை நிறைய வீடு – காணி உறுதிகளைத் தூக்கிக் கொண்டு முற்றத்துக்கு வர, இரத்தின மாமா அவற்றைக் கையில் வாங்கிக்கொண்டார். “சுன்னாகத்து வயல் காணி எல்லாவற்றையும் எனது மகளுக்கு எழுதிவிடப் போகிறேன்” என்று இரத்தின மாமா ஆறு மாமாவைப் பார்த்துச் சொன்னார். “தவறணைக்குப் பின்னாலே உள்ள போயிலைக் காணி எப்பிடி?” ஆறு மாமா கேட்டார். “அதுவும் அவளுக்குத்தான்” என்றார் இரத்தின மாமா. ஆறு மாமா தொடர்ந்து வெற்றிலை பாக்கை இடித்துக்கொண்டிருந்தார். “அது இரண்டுக்கும் இருபத்தையாயிரம் பெறுமதி” இரத்தின மாமா தொடர்ந்தார் “ஐம்பதாயிரம் காசாக. மிச்சத்துக்கு இந்தக் காணியில் ஒரு பங்கையும் பக்கத்து வீட்டையும் குடுக்கிறன். வா, எல்லைக் கோட்டைக் காட்டுறன்.” அத்துடன் அவர்கள் எழுந்து கிணற்றடி நோக்கிப் போனார்கள். நானும் எனது சகோதரர்களும் பின் தொடர்ந்தோம், மற்ற வீட்டுக்காரர்களும் கூட்டமாகத் தொடர்ந்தார்கள். இரத்தின மாமா கிணற்றடியில் நின்று, மாதுளந்தோப்பின் நடுவே வளர்ந்திருந்த ஒரு மாமரத்துக்கு அப்பால் சுட்டிக் காட்டி “இதுதான் எல்லை” என்றார். “ஓ” என்றார் ஆறு மாமா. “பக்கத்துக் காணிக்குக் கிணறில்லாட்டி என்ன பிரியோசனம்? இரத்தின மச்சான், எல்லைக் கோட்டைக் கிணத்துக்கு நடுவால போடு. அப்பிடியெண்டா பக்கத்துக்கு வீட்டுக்குத் தண்ணி உரிமை இல்லாமல் போகாது.” இரத்தின மாமாவின் முகம் கறுத்தது. தனக்குப் பிரியமான மாதுளை மரத்தை ஏறிட்டுப் பார்த்தார். சீதனக் காணிக்குக் கிணற்றுக்கு நடுவில் எல்லைக் கோடு போட்டால், அந்த மரம் இனி அவருக்குச் சொந்தமில்லை. “கிணறு பாவிக்கிற உரிமையை எழுதித் தாறன்” இரத்தின மாமா சொன்னார், “ஆனால் எல்லைக் கோடு மாமரத்தடியோட போகட்டும்.” “நியாயமில்லாமல் கதையாத” ஆறு மாமா பதில் சொன்னார், “கிணத்துக்குள்ளால எல்லை போகட்டும். அதுதான் இலகுவான தீர்வு.” “இல்லையில்லையில்லை!” இரத்தின மாமா பிடிவாதத்துடன் முகத்தைக் கோணினார். பத்தர், இரத்தின மாமாவின் காதுக்குள் ஏதோ குசுகுசுத்தார். அது இரத்தின மாமாவை மிகவும் குழப்பிவிட்டது. பத்தர் பிறகு ஆறு மாமாவின் பக்கம் திரும்பி ஏதோ சொன்னார். “நான் சொல்லுறதைக் குறை நினைக்காத இரத்தி… கிணறு அல்லது கிணத்தின் பாதி என்ர மகனுக்கு வாற காணியில கட்டாயம் இருக்க வேணும்” ஆறு மாமா சொன்னார். பத்தர் மீண்டும் இரத்தின மாமாவின் காதில் ஏதோ குசுகுசுத்தார். இரத்தின மாமா “இல்லை!” என்று அடித்துச் சொல்லிவிட்டார். பத்தர், ஆறு மாமாவின் பக்கம் திரும்பி சலாம் போட்டுவிட்டு “கிணத்தில என்ன இருக்கு? நீங்கள் எப்ப வேணுமெண்டாலும் இன்னுமொரு கிணத்தைக் கிண்டிப் போட்டுப் போகலாம்” என்றார். “நான் கேட்ட மாதிரி எல்லைக் கோடு போடாட்டில்…” ஆறு மாமா தனது உரிமைகளைப் பாதுகாக்கும் கறாரான தொனியில் சொன்னார், “இந்தக் கலியாணம் நடக்காது!” “ஐயா! ஐயா!” பத்தர் கைகளைப் பிசைந்தபடி கெஞ்சினார். “மடையன்!” என்று இரத்தின மாமா முணுமுணுக்க, ஆறு மாமா திகைத்துப் போனார். இலங்கையில் ‘மடையன்’ என்று சொல்வது பெரிய அவமரியாதை. “சுத்த மடையன்” என்று திரும்பவும் சொன்ன இரத்தின மாமா, “பாழாப்போன கலியாணம்!” என்று சொல்லிவிட்டுத் தோப்புக்கூடாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். சீதனப் பேச்சுவார்த்தை குழம்பியதால் திருமணம் நிறுத்தப்பட்டது. பந்தல்களும் தோரணங்களும் அவிழ்க்கப்பட்டன. அன்றிரவு சாப்பிடும்போது “அந்தப் பிசாசு! அவன் என்ர கிணத்தடி மாதுளையைத்தான் கண் வச்சான்!” என்று இரத்தின மாமா கத்தினார். அடுத்த நாள், மலாயாவில் பெரிய தோட்டம் வைத்திருந்த தன் மைத்துனருக்கு அவரின் மகனுக்கும் சுந்தரிக்கும் கல்யாணம் பேசிக் கடிதம் அனுப்பினார். இரண்டு வாரத்துக்குள் மாப்பிள்ளை வந்து சேர்ந்தான். திருமணம் கோலாகலமாக நடந்தது. யாழ்ப்பாண நகரத்திலிருந்து ஒரு மின்னியற்றி இயந்திரம் வாடகைக்கு எடுத்து வீட்டைச் சுற்றியும் மரங்களுக்கு மேலும் வண்ண மின்சார விளக்குகளெல்லாம் போட்டு அமர்க்களம் பண்ணிவிட்டார். இந்த விளையாட்டெல்லாம் ஆறு மாமாவைப் பிரமிக்க வைக்கத்தான். ஆறு மாமா திருமணத்துக்கு வருகை தரவில்லை. ஆனால், கொஞ்ச நாள் போனதும் இரத்தின மாமாவுக்குக் காட்டுக் கோழியும், காட்டுப் பன்றித் தொடைகளும், மான் இறைச்சியும் வழக்கம் போல வேட்டைக்குப் பின்னர் அனுப்பி வைக்கத் தொடங்கினார். ராஜாவுக்குக் கல்யாணப் பேச்சு நேரம் சுந்தரிமேல் காதல் பிறந்து விட்டதால், பல வருடங்கள் கல்யாணம் வேண்டாம் என்று ஒற்றைக் காலில் நின்றான். பிறகு ஒருநாள் ஒரு கொழும்புப் பெண்ணைச் சந்தித்ததும் மனம் மாறிவிட்டான். அவளுக்குப் புத்தளத்தில் பெரிய தென்னந்தோப்புகள் இருந்தன. அவள் டென்னிஸ் விளையாடுவாள். கார் கூட ஓட்டத் தெரியும். அவள் உதட்டுச் சாயம் பூசி, கையில்லாத ரவிக்கையும் அணிந்ததைப் பார்த்து ஊரார் திகைப்பில் ஆடிப் போய்விட்டார்கள். ஆனால் அவள் ஆறு மாமாவின் வயதான காலத்தில் நல்ல மருமகளாக அவரைச் சந்தோஷமாக வைத்திருந்தாள். அவளுக்காக வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு டென்னிஸ் மைதானத்தையே ஆறு மாமா கட்டிக் கொடுத்தார். ஆனால் அவளுக்கு மூத்த மகன் பிறந்த கையோடு அவளது டென்னிஸ் ஆர்வம் விட்டுப் போயிற்று! இரத்தின மாமா இறந்தபோது, எனக்குப் பத்து வயதுகூட இல்லை. ஆனால் வேலைக்காரி ஒரு கிண்ணத்தில் கிணற்றடி மாதுளைமரத்தின் பழக் கொட்டைகளைக் கொண்டு வரும்போது அவரது வட்டமான, சுருக்கமில்லாத முகத்தில் மலரும் மகிழ்வு எனக்கு இப்போதும் கண் முன்னால் தெரிகிறது. அந்த மரம் அச்சுவேலி முழுக்கப் பிரபலமான மரமாக இருந்தது. இன்னும் இருக்கிறது. Artist : Arpitha Reddy எழுத்துக்கினியவன் என்ற புனைபெயரில் மொழியாக்கங்கள் செய்துவரும் ந.அசோகன் தமிழ் – ஆங்கிலம் என இருவழிகளிலும் மொழியாக்கங்களைச் செய்து வருகிறார். இவரது ஆங்கில மொழியாக்கங்கள் Copper Nickel, Lunch Ticket, Jaffna Monitor ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழ் மொழியாக்கங்கள் காலச்சுவடு, வீரகேசரி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. இவரது ஆங்கில மொழியாக்கமொன்று Gabo Prize-க்கான இறுதிப் பட்டியலில் தேர்வானது. https://thadari.com/the-pomegranate-tree-t-tambimuttu-short-story/?fbclid=IwdGRleAPHMyRleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEeCFdVxcuG8DMvh6BM5WiRfhB9f2VThtnfL0rsSEfZH3RPMi9z_Vw_uwQTi2Y_aem_tH25YO_Qwhrh963g_Z5J3w
-
ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!
ஹரிணியை மையமாகக் கொண்டு எழுந்திருக்கும் 'ஸம-லிங்கிக' சர்ச்சை: விளக்கமில்லாத குழப்பம்! 🖊️எழுத்து: M.L.M. மன்சூர் (கண்டி) இன்று சிங்கள சமூக ஊடகங்களை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சொல் 'ஸம - லிங்கிக' என்பது. தன்பாலீர்ப்பை (Homosexuality) குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் சிங்களச் சொல் அது. ஆண்கள் பெண்களை மோகிப்பதும், பெண்கள் ஆண்களை மோகிப்பதும் (எதிர்ப்பாலீர்ப்பு - Hetero sexual) இயல்பானது என்பதும், ஆண் - ஆண் மற்றும் பெண் - பெண் என்ற விதத்தில் ஏற்படும் பாலியல் ஈர்ப்பு இயற்கைக்கு மாறானது என்பதும் பொதுச் சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கும் விதி. ஆனால், எதிர்ப்பால் ஈர்ப்புக்கு அப்பால் பல்வேறு வினோதமான பாலியல் நாட்டங்களுடன் கூடிய ஒரு பிரிவினர் சமூகத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உயிரியல் ரீதியான யதார்த்தத்தை எவரும் மறுக்க முடியாது. சமயக் கிரந்தங்கள் கூட வரலாற்றில் அத்தகைய கூட்டத்தினரின் இருப்பு குறித்து (எதிர்மறையாக) குறிப்பிட்டிருக்கின்றன. இந்து சமயத்தில் மாற்றுப் பாலீர்ப்பாளர்களுக்கான பிரத்தியேகமான சடங்குகளும், திருவிழாக்களும் உள்ளன (உதாரணம்: தமிழ் நாட்டில் வருடாந்தம் இடம்பெறும் கூவாகத் திருவிழா). அந்த மாற்றுப் பாலீர்ப்பாளர்களை நாங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்பதும், அவர்கள் தொடர்பாக சகிப்புத் தன்மையுடன் கூடிய ஒரு அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்பதும் ஹரிணி அமரசூரிய போன்றவர்களின் கருத்து. அவர் மட்டுமல்ல இலங்கையின் பெரும்போக்கு அரசியல் கட்சிகள் பலவற்றின் முக்கியமான தலைவர்கள், முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் அத்தகைய நிலைப்பாட்டிலேயே இருந்து வருகிறார்கள். பழங்குடிகள், மாற்றுத்திறனாளிகள், மொழிச் சிறுபான்மையினர் மற்றும் மதச் சிறுபான்மையினர் போன்ற விளிம்பு நிலைச் சமூகங்கள் தேசிய பெருவாழ்வுக்குள் உள்வாங்கப்பட வேண்டும் (Inclusion) என்ற கருத்தாக்கத்தின் ஒரு நீட்சியாகவே பாலியல் சிறுபான்மையினருக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கும் ஆண்டு ஆறு ஆங்கில பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய மொடியூளுக்குமிடையில் எந்தத் தொடர்பும் இல்லை. 'ஹரிணி ஒரு லெஸ்பியனாக' இருந்து வருவதனால் LGBTQA கலாச்சாரத்தை இலங்கையில் போஷித்து வளர்க்கும் உள்நோக்கத்துடன் இந்தக் காரியத்தை செய்திருக்கிறார்' என்பது அவர் மீது முன்வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு. தான் ஒரு லெஸ்பியன் என ஹரிணி எந்த இடத்திலும் பகிரங்கமாக கூறியிருக்கவில்லை (அவரை நெருக்கமாக அறிந்து வைத்திருப்பவர்கள் பலரும் 'அவர் அப்படியானவர் அல்ல' என்று தான் சொல்கிறார்கள்). அவருடைய அந்தரங்க வாழ்க்கையில் அவர் அப்படி நடந்து கொண்டாலும் கூட - பிரதம மந்திரிக்கு இருந்து வரக்கடிய அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து, மக்கள் வரிப் பணத்தை பயன்படுத்தி தனது பாலியல் இச்சைகளை அவர் நிறைவேற்றிக் கொள்ளாத வரையில் - அது நாட்டு மக்களுக்கு ஒரு பிரச்சினையாக இருந்து வர முடியாது. சம்பந்தப்பட்ட பாடநூல் தொடர்பாக 'அந்தத் தவறுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறு செய்தவர்கள் உரிய விதத்தில் தண்டிக்கப்படுவார்கள்' என ஹரிணி திட்டவட்டமாக கூறிய பின்னரும் கூட, எதிர்க்கட்சி தரப்பும், ராஜபக்ச முகாமைச் சேர்ந்த ஒரு சில முன்னணி பிக்குகளும், சில அரச எதிர்ப்பு யூடிபர்களும் அதை மேலும் மேலும் கிளறிக் கொண்டிருக்கிறார்கள். எளிதில் மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய ஒரு தலைப்பு (Sensitive Topic) தொடர்பான விவாதமும், உரையாடலும் பிழையான நபர்களின் கைகளுக்கு போனால் என்ன நடக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்தச் சம்பவம். "உங்களுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை ஏற்பாடு செய்து தருகிறேன். கல்யாணம் செய்து பிள்ளை குட்டிகள் பெற்று வாழுங்கள்" என்று பிரதமருக்கு புத்திமதி சொல்கிறார் அரசியல் கோமாளியான பத்தரமுல்லே சீலரத்ன தேரர். ‘பெண்கள் திருமணம் செய்யாமல் வாழக் கூடாது‘ என்பது அவருடைய வாதம். "ஹரிணி நோநா, நீங்கள் ஏன் இந்த ஆபாச இணையதளத்தை ஆரம்பித்தீர்கள்" என்று அவர் கேட்பது அடுத்த அபத்தம். ஹரிணி மீது கல்லெறிந்திருக்கும் (ராஜபக்ச முகாமைச் சேர்ந்த) மற்றைய இரு பிக்குகள் பலங்கொட கஸப்ப தேரர் மற்றும் 'மிகிந்தலே ஹாமிதுருவோ' என பிரபல்யமடைந்திருக்கும் வளவாஹெங்குனவெவே தர்மரதன தேரர். மிகிந்தலே தேரரின் கருத்துக்கள் முகம் சுளிக்க வைப்பவை. ஒரு துறவி கட்டாயமாக தவிர்த்திருக்க வேண்டிய சொற்பிரயோகங்கள். தன்பால் புணர்ச்சி ஆர்வலர்களான ஆண்களையும், பெண்களையும் குறிப்பதற்கென சிங்கள பேச்சு வழக்கில் பயன்படுத்தப்பட்டு வரும் சொற்களை அவர் நன்கு ரசித்து, பொருத்தமான உடல் மொழியுடன் விளக்கிக் கூறுகிறார் (எஸ் பொ வின் சிறுகதை ஒன்றில் 'Gay' ஆட்களைக் குறிக்கும் வடக்கு கிழக்கு தமிழ் பேச்சு வழக்குச் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது). மறுபுறம், எதனை இயற்கைக்கு மாறானதென கூறி அவர்கள் தீவிரமாக எதிர்க்கிறார்களோ அந்த வழக்கம் நீண்ட காலமாக இலங்கை சமூகத்தில் நிலவி வருகிறது என்பதற்கான அத்தாட்சி இந்த ஹாமிதுரு பயன்படுத்தியிருக்கும் 'சொல்லகராதி'! 'கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம்' என இத்தேரர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கும் சுதத்த திலகசிரி போன்ற ஒரு சில (அரச சார்பு) யூடிபர்கள் சமய ஸ்தாபனங்களுக்குள் - குறிப்பாக பன்சல வளாகங்களுக்குள் - இளம் பிக்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வரும் அதே நபர்கள் இன்று Homosexuality க்கு எதிராக உரத்துக் குரலெழுப்புவது பெரும் நகைமுரண் என்கிறார்கள். 'ஹரிணி போன்றவர்களின் கொடிய கரங்களிலிருந்து' இலங்கை சிறுவர் சமுதாயத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்' என்று தொண்டை கிழியக் கத்துபவர்கள், 'பாடசாலைகளில் பாலியல் கல்வி கூடாது' என்ற கோரிக்கையை முன்வைப்பவர்கள் ஆகிய தரப்புக்கள் எளிதில் மறந்துவிடும் ஒரு விடயம் இருந்து வருகிறது. 'பாடசாலைகளில் பாலியல் கல்வி என்பது சிறுபிள்ளைகளுக்கு உடலுறவில் ஈடுபடும் விதத்தை சொல்லிக் கொடுக்கும் அசிங்கமான காரியம்' என இந்தப் பிக்குகளையும் உள்ளிட்ட பலர் நினைக்கிறார்கள். இலங்கையில் அண்மைக் காலத்தில் துரித வேகத்தில் அதிகரித்து வரும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தை / சுரண்டலை தடுப்பதற்கான ஒரு வழியாக பிள்ளைகளுக்கு குறைபட்சம் Good Touch, Bad Touch போன்றவை குறித்து அறிவூட்டி, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான பிள்ளைப் பருவத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இங்கு உதாசீனம் செய்யப்படுகிறது. அரசாங்கத்தின் மீதான வன்மத்தை கொட்டித் தீர்ப்பதற்கான ஒரு அரிய சந்தர்ப்பமாக இது வாய்த்திருப்பதுடன், எதிர்க்கட்சிகள் மிகவும் தந்திரமான விதத்தில் தமது பினாமிகளை களமிறக்கி, இந்த எதிர்ப்பை முன்னெடுத்து வருகின்றன. சமூக ஊடகங்களில் ஹரிணிக்கு எதிராக பல பெண் புத்திஜீவிகளும் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். (பேராசிரியர் ஜயதேவ உயன்கொட ராதிகா குமாரசுவாமி, எம் ஏ சுமந்திரன் ஆகியோரையும் உள்ளிட்ட) பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் தொழில்வாண்மையாளர்கள் 58 பேரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு அறிக்கை "பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அவதூறுப் பிரச்சாரம் ஒரு ஜனநாயக சமூகம் அனுமதிக்கும் எதிர்ப்பு மற்றும் ஆட்சேபணை செயற்பாடுகள் தொடர்பான தார்மீக வரம்புகளை" மீறிச் சென்றிருக்கும் விடயத்தை சுட்டிக் காட்டுவதுடன், "அந்த வன்மப் பிரச்சாரம்" உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளது. சி பி டி சில்வாவையும் உள்ளிட்ட 10 பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி யுஎன்பி நிகழ்த்திய ஒரு அரசியல் சூழ்ச்சியின் விளைவாக 1964 டிசம்பர் மாதத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான SLFP/LSSP/CP கூட்டணி அரசாங்கம் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதனையடுத்து 1965 மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில் யுஎன்பி முன்வைத்த முதன்மை பிரச்சார சுலோகம் - கம்யூனிஸ எதிர்ப்பு. என் எம் பெரேரா, பீட்டர் கெனமன் போன்ற நாத்திக மார்க்சிஸ்ட்களிடமிருந்து பௌத்த மதத்தையும், சிங்கள பௌத்த கலாசாரத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது அதற்கு அவர்கள் பயன்படுத்திய ஒரு பிரச்சார உத்தி. இதற்கென நாடெங்கிலும் 'ஸங்க ஸபாக்கள்' ஏற்பாடு செய்யப்பட்டன. அதாவது புத்த பிக்குகள் மட்டும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் பிரச்சாரக் கூட்டங்கள். அப்போதைய நட்சத்திர பேச்சாளர்களான பல முன்னணி தேரர்கள் அக்கூட்டங்களில் உரை நிகழ்த்தினார்கள். அவர்களில் ஒருவர் தல்பாவில சீலவங்ச தேரர். அவருடைய பேசுபொருள் ஐந்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகம் தொடர்பானது. மேடைகள் தோறும் அந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்று முதல் பக்கத்தை விரித்து பார்வையாளர்களுக்கு விளக்கமளிப்பது அவருடைய வழக்கம். அந்தப் பாடப் புத்தகத்தில் முதல் பக்கத்தில் ஒரு குடும்பத்தைக் காட்டும் மூன்று படங்கள் இருந்தன. முதல் படம் மகன் - Nimal; இரண்டாவது படம் மகள் - Manel மூன்றாவது படம் அப்பா - Perera. இந்தப் படங்களை எடுத்துக்காட்டி, அந்தத் தேரர் நிரூபிக்க முயன்ற விடயம் N M Perera தனது பெயரை பிரபல்யப்படுத்துவதற்கான ஒரு தந்திரமாக இந்தக் காரியத்தை செய்திருக்கிறார் என்பது (இலங்கை இடதுசாரி இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான அந்தப் பெருமகனார் யு என் பி முன்னெடுத்த அந்த மலினமான பிரச்சார உத்தியை பார்த்து உடலின் எந்தப் பாகத்தால் சிரித்திருப்பார் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை). இப்பொழுது திரும்பிப் பார்க்கும் பொழுது இலங்கை வாக்காளர்கள் எந்த அளவுக்கு சிறுபிள்ளைத் தனமான பிரச்சாரங்களை சகித்துக் கொண்டிருந்தார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு விதத்தில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் தோன்றுகிறது. 'வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது' என்று சொல்கிறார்கள். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னர் ஐந்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தை வைத்து தல்பாவில சீலவங்ச தேரர் செய்த அதே அபத்தமான பிரச்சாரத்தை இப்பொழுது ஆறாம் ஆண்டு ஆங்கிலப் பாடப் புத்தகத்தை வைத்து பத்தரமுல்லே சீலரத்ன தேரர் செய்து கொண்டிருக்கிறார். 'பௌத்த மதத்தையும், பௌத்த கலாச்சாரத்தையும் மத வெறுப்பு (நிராகமிக்க) பேர்வழிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்' என்ற அதே பழைய துருப்புச் சீட்டு. கூட்டு எதிர்கட்சி என்ற வெட்கம் கெட்ட லேபளில் முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் இப்பொழுது தமது புதிய கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டிருக்கும் நாமல் ராஜபக்ச, சாகர காரியவசம், சரத் வீரசேகர, பலங்கொட கசப்ப, ஞானசார, இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ கும்பல் முன்வைக்கும் புளித்துப் போன துருப்புச் சீட்டு. 2022 அறகலய மக்கள் எழுச்சியுடன் இணைந்த விதத்தில் இலங்கை சமூகத்துக்குள்- - குறிப்பாக சிங்கள சமூகத்திற்குள் படிப்படியாக நிகழ்ந்து வரும் வலி மிகுந்த ஒரு நிலைமாற்றமே இப்பொழுது ஒரு அரசியல் நெருக்கடியாக வெடித்திருக்கிறது. அந்தச் சமூக பரிமாணத்தை உதாசீனம் செய்து விட்டு, வெறுமனே அரசாங்க கட்சி - எதிர்க் கட்சி என்ற அரசியல் அணுகுமுறைக்கூடாக மட்டும் இதனைப் புரிந்து கொள்ள முடியாது. "தாழ்ந்த சாதிக்காரன் ராஜாவாக வந்தால் அந்த நாடு ஒருபோதும் உருப்பட முடியாது" என்று தீவிர ராஜபக்ச ஆதரவாளரான சிரி சமந்தபத்த தேரர் கூறியிருப்பதும், தலதா கண்காட்சியின் போது 'இது வரையில் மன்னர்களின் அனுசரணையின் கீழ் இடம்பெற்ற புனித தந்த தாதுக்களின் கண்காட்சி இப்பொழுது முதல் தடவையாக அரசவை கோமாளியின் (அந்தரேயின்) அனுசரணையின் கீழ் இடமபெறுகிறது' என ஞானசார தேரர் கூறியதும் வெறும் உளறல்கள் அல்ல. விளங்கிக் கொள்ளக் கூடியவர்களுக்கு ஒரு பூடகமான செய்தியை முன்வைக்கும் வன்மம் கலந்த கூற்றுக்கள் அவை. அரச எதிர்ப்பு சிங்கள யூடிபர்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வரும் சொல் 'மாளிமா டோபிகள்' என்பது. என்பிபி அரசாங்கத்தின் அழுக்குகளை கழுவி, அதனை தூய்மைப்படுத்துபவர்கள் என்ற கருத்தில் அப்படிச் சொன்னாலும் 'Dhobies' என்ற சொல் ஒவ்வொரு தடவையும் மிகவும் அழுத்தமாக உச்சரிக்கப்பட்டு வருகிறது. அநுரகுமாரவைப் போல ஹரிணியை அவருடைய குடும்பப் பின்னணியின் அடிப்படையில் இழிவுபடுத்த முடியாது. காலி அத்மீமன அமரசூரிய வளவ்வ என்ற பெரிய வீட்டின் உயர் குடி செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். பள்ளிப் படிப்பை கொழும்பிலும், பல்கலைக்கழக படிப்பை வெளிநாடுகளிலும் மேற்கொண்டவர். அதனால் அவர் மீது அவதூறு பொழிவதற்கு வேறு ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும். பார்வையாளர்களின் ஆர்வத்தை பெருமளவுக்குத் தூண்டக் கூடிய ஒரு ஆயுதம் அவருடைய பாலியல் வாழ்க்கை தொடர்பான புனைவுகள். 'அவருடைய காதலி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்' என்ற மேலதிக தகவலை வழங்குவதன் மூலம் மேலும் பார்வையாளர்களை ஈர்த்துக் கொள்ள முடியும். சிங்கள சமூக ஊடகங்களில் அந்தப் புனைவுகள் தான் இப்பொழுது மிகவும் அசிங்/கமான விதத்தில் அரங்கேறி வருகின்றன. 1960 ஜூலை மாதம் சிறிமாவோ பண்டாரநாயக்க இலங்கை பிரதமராக (உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையுடன்) பதவியேற்ற சந்தர்ப்பத்தில் " பாராளுமன்றத்தில் பிரதம மந்திரி அமரும் கதிரையை ஒவ்வொரு மாதமும் கழுவி, துப்புரவு செய்ய வேண்டி நேரிடும்" என்ற விதத்தில் பிரேமதாச போன்றவர்கள் தெரிவித்த அதே விதத்திலான அநாகரிகமான கருத்துக்களே இப்பொழுது ஹரிணியை இலக்கு வைத்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அநுர - ஹரிணி தலைமையிலான அரசாங்கம் குறைகள் எதுவும் அற்ற, சர்வ சம்பூர்ணமான ஒரு அரசாங்கமாக இருந்து வருகிறது என்று எவரும் சொல்ல முடியாது. அது கடந்த 15 மாத காலத்தில் பல சந்தர்ப்பங்களில் கடும் தடுமாற்ற நிலைளை எதிர்கொண்டிருந்தது. ஒரு சில இடங்களில் சறுக்கியிருக்கிறது. பல தடவைகள் முக்கியமான அமைச்சர்கள் சிலர் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு துளியும் பொருத்தமற்ற விதத்தில் ஆணவமாக பேசியிருக்கிறார்கள். அவை அனைத்தும் திருத்திக் கொள்ள வேண்டிய தவறுகள்; குற்றங்கள் அல்ல. எனவே, இப்பொழுது முதலில் இலங்கை மக்கள் தோற்கடிக்க வேண்டிய சக்தி NPP அரசாங்கம் அல்ல. அதற்குரிய தருணம் இன்னமும் வரவில்லை (It is too early). அதற்குப் பதிலாக ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்ட மத வெறியர்களின் ஆசீர்வாதத்துடன் நாமல் ராஜபக்ச தலைமையில் புதிதாக தலைதூக்கி வரும் வலதுசாரி மதவாத சக்திகள் உடனடியாக தோற்க்கடிக்கப்பட வேண்டும். தன்னை மதச்சார்பற்ற ஒரு கட்சியாக காட்டிக் கொள்ள முயற்சிக்கும் SJB போன்ற கட்சிகள் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்னெடுப்பதற்குப் பதிலாக, எதிர்கால இலங்கைக்கு பெரும் ஆபத்தாக அமையக் கூடிய மேற்படி சக்திகளை எதிர்கொண்டு, அவற்றை வலுவிழக்கச் செய்ய வேண்டும். அதனை வெளிப்படையாக கூறவும் வேண்டும். சந்தர்ப்பவாத அரசியலை கைவிடுவதற்கான தருணம் இப்பொழுது வந்திருக்கிறது. அவ்வாறு செய்தால் மட்டுமே என் பி பி க்கு எதிரான வலுவான ஒரு மாற்று அணியாக களமிறங்குவதற்கான தார்மீக உரிமை SJB க்குக் கிடைக்கும். 📌அதிகம் பகிருங்கள்! https://www.facebook.com/share/p/1AF66tytrG/?mibextid=wwXIfr
-
இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள்
இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள் (பகுதி I) 9 Jan 2026, 7:14 AM ஆறு மைல்கற்களும் அவற்றால் எழும் சவால்களும் ருக்மிணி எஸ் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருப்பதால், இந்தியாவின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் உலகை ஆழமாகப் பாதிக்கின்றன. ஆயினும், இந்த முக்கியமான மாற்றங்கள் இந்தியாவுக்குள்ளும் உலக அளவிலும் போதுமான அளவு ஆவணப்படுத்தப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை. ‘இந்தியாவிற்கான தரவுகள்’ (Data For India) என்னும் தளத்தில் உயர்தரமான இந்திய, உலகளாவிய தரவு மூலங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றங்களை நாங்கள் நெருக்கமாகக் கண்காணிக்கிறோம்: உலகளாவிய தரவுகளுக்கு உலக மக்கள்தொகையின் சாத்தியப்பாடுகள் குறித்த ஐக்கிய நாடுகளின் 2024ஆம் ஆண்டின் அறிக்கை (திருத்தப்பட்டது) (United Nations World Population Prospects, 2024 Revision), இந்தியத் தரவுகளுக்கு 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, மாதிரிப் பதிவு அமைப்பு (Sample Registration System), தேசியக் குடும்ப நல ஆய்வின் (National Family Health Survey) மக்கள்தொகை மதிப்பீடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். மூன்று பகுதிகள் கொண்ட இந்தத் தொடரின் மூலம், மக்கள்தொகை மாற்றங்கள் குறித்த இன்றியமையாத இந்தியத் தரவுகளைத் தொகுத்து, இந்தியாவில் நடைபெறும் இதர சமூக-பொருளாதார மாற்றங்களின் பின்னணியில் வைத்து, உலகளாவிய சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிக்கிறோம். இதன் மூலம், புதிய ஆராய்ச்சிக்கான பகுதிகளையும், கொள்கை, விவாதங்களுக்கான திசைகளையும் அடையாளம் காண்கிறோம். பகுதி Iஇல், தற்போதுள்ள நிலைமையையும், கவனிக்கப்படாமல்போனதாக நாங்கள் கருதும் முக்கியமான அண்மைக்காலத் தரவுகளையும் விவரிக்கத் தேவையான தரவுகளை வழங்குகிறோம். பகுதி IIஇல், குறைந்துவரும் பிறப்பு விகிதங்கள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்வதுடன், இந்தியா ஒருபுறம் தனித்துவமானதாகவும் மற்றொரு புறம் உலகளாவிய போக்கின் அங்கமாகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டும் ஆராய்ச்சிகளைப் பகிர்ந்துகொள்கிறோம். பகுதி IIIஇல், இந்திய மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்தொகை வேறுபாடுகள், அவை தற்போதைய சமூக-பொருளாதார, அரசியல் பதற்றங்களுக்கு வழிவகுக்கும் விதங்கள் ஆகியவை பற்றிய தரவுகளை ஆராய்கிறோம். மக்கள் தொகை விஷயத்தில் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முக்கியமான ஆறு திருப்புமுனைகளைக் கண்டுள்ளது. இவை உலகளாவிய மக்கள்தொகையியல், மேம்பாடு, வளர்ச்சி ஆகியவற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தருணங்கள். 1. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறுதல் 2020களின் தொடக்கத்தில், இந்தியா சீனாவை விஞ்சி 1.4 பில்லியன் மக்களுடன் உலகிலேயே மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக ஆனது. இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதில் ஐயம் இல்லை. மேலும் பல தசாப்தங்களுக்கு அது அவ்வாறே தொடரும். 2060களின் தொடக்கத்தில் உச்சத்தை அடையும்போது இந்தியாவின் மக்கள்தொகை 1.7 பில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எதிர்கால மக்கள்தொகை தொடர்பான கணிப்புகள் அதிகபட்சமாக 2100வரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தக் கட்டத்தைத் தாண்டியும் இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகையின் அளவு மற்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளுகிறது. ஆனால் நைஜீரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட இதர பெரிய நாடுகளும் வளர்ந்துவருகின்றன. உலக மக்கள்தொகையில் இந்தியாவின் பங்கு 2030க்குள் உச்சத்தை அடைந்து, அதன் பிறகு குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தியாவின் மக்கள்தொகை தொடர்ந்து வளர்ந்தாலும், இந்த வளர்ச்சியின் வேகம் ஏற்கெனவே கணிசமாகக் குறைந்துவிட்டது. நம்பகமான, ஒப்பிடக்கூடிய தரவு கிடைத்த ஆரம்ப ஆண்டுகளில், அதாவது இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகும் 1950களின் தொடக்கத்திலும் இந்தியாவின் மக்கள்தொகை ஆண்டுக்கு 2 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்துவந்தது. அதே காலகட்டத்தில் உலகின் மொத்த மக்கள்தொகை ஆண்டுக்கு சுமார் 1.75 சதவீதம் வளர்ந்துவந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய மூன்று தசாப்தங்களில், இந்தியாவின் மக்கள்தொகை இருமடங்காக அதிகரித்தது. 1980களிலிருந்து இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி குறையத் தொடங்கியது. 2020க்குள், இந்தியாவின் வருடாந்தர மக்கள்தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 1 சதவீதத்திற்குக் கீழே குறைந்தது. அடுத்த சில ஆண்டுகளில் உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்திற்குக் கீழே இது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மேலும் குறையும்போது இந்த இடைவெளி தொடர்ந்து அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புத்தாயிரத்தின் தொடக்கத்தில் இந்தியா தனது மக்கள்தொகையில் ஆண்டுக்கு சுமார் 20 மில்லியன் மக்களைச் சேர்த்துவந்தது. பிறகு இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியது. 2024ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா ஆண்டுக்கு 13 மில்லியனுக்கும் குறைவான மக்களையே சேர்த்தது. இந்தப் போக்கு தொடரும் நிலையில், இந்தியா மக்கள்தொகையைக் கூட்டுவதை 2060க்குள் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அதன் மொத்த மக்கள்தொகை குறையத் தொடங்கும். மக்கள்தொகை வளர்ச்சியில் ஏற்படும் குறைவு நாடு முழுவதும் நிகழ்கிறது. இருப்பினும், இப்படிக் குறைவதில் இரண்டு வேறுபட்ட வேகங்கள் உள்ளன. வரலாற்று ரீதியாக, இந்தியாவின் தெற்கு, மேற்கு மாநிலங்கள் வளமானவையாக இருந்துவருகின்றன. பெண்களின் கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்டவற்றில் சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளன. இதன் விளைவாகத் தெற்கு, மேற்கு மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சிக்கும், ஏழ்மையான, குறைந்த வளர்ச்சியடைந்த கிழக்கு, வடக்கு மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சிக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. இந்திய மாநிலங்கள் முழுவதும் மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்கள் 1970கள்வரை ஒரே மாதிரியாகவே இருந்தன. 1980களிலிருந்து இந்தியாவின் தெற்கு மாநிலங்களின் மக்கள்தொகை மத்திய, வடக்கு, கிழக்கு மாநிலங்களைவிட மிக மெதுவாக வளர்ந்துவருகிறது. உதாரணமாக, இந்தியாவின் தெற்கில் அமைந்துள்ள மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலமான கேரளத்தில் வருடாந்தர மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1970களில் இரண்டு சதவீதத்திற்குக் கீழே குறைந்தது. இந்தியாவின் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றான, கிழக்கில் உள்ள கங்கைச் சமவெளியில் அமைந்துள்ள பிகாரில், வருடாந்தர மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2010களின் பிற்பகுதியில்தான் இரண்டு சதவீதத்திற்குக் கீழே குறையத் தொடங்கியது. கேரளத்தில் மக்கள்தொகை இரண்டு சதவீதத்திற்குக் கீழே குறைந்த நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிகாரில் அவ்வாறு நிகழ்ந்திருக்கிறது. மக்கள்தொகை வளர்ச்சி ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும் மாநிலங்கள் எதிர்காலத்தில் இந்தியாவின் மக்கள்தொகையில் அதிக பங்கைக் கொண்டிருக்கும் என்பதே இதன் பொருள். 2011முதல் 2036வரையிலான இந்தியாவின் மொத்த மக்கள்தொகை அதிகரிப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே நிகழ்ந்திருக்கும். இதே காலகட்டத்தில் இந்திய மக்கள்தொகையில் அனைத்துத் தென்னிந்திய மாநிலங்களின் பங்கு குறைந்திருக்கும். (இந்தத் தொடரின் பகுதி III இந்தப் பிளவை இன்னும் விரிவாக விவாதிக்கிறது.) 2. கருவுறும் எண்ணிக்கை மக்கள்தொகையைப் ‘பதிலீடு செய்யும் விகிதத்திற்குக்’ கீழே குறைதல் பிறப்பு விகிதங்களில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சிதான் மக்கள்தொகை வளர்ச்சியில் ஏற்படும் இந்த வேகக் குறைவுக்குக் காரணம். மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate – TFR) என்பது ஒரு பெண் தனது வாழ்நாளில் பெற்றெடுக்க வாய்ப்புள்ள குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையைக் குறிக்கிறது. நாடுகள் வளரும்போதும் பெண்களுக்குச் சிறந்த சுகாதாரமும் கல்வியும் கிடைக்கும்போது கருவுறுதல் விகிதங்கள் குறையத் தொடங்குகின்றன. இது உலகம் முழுவதும் காணப்படும் போக்கு. ஒரு நாட்டின் TFR 2.1 ஆகக் குறையும்போது, அதாவது பெண்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக 2.1 குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்றால், அந்த நாடு “மக்கள் தொகையைப் பதிலீடு செய்யும் அளவுக்குக் கருவுறுதல்” (replacement fertility) என்னும் நிலையை அடைந்துவிட்டது என்று மக்கள்தொகையியலாளர்கள் கூறுகின்றனர். இரண்டு பெரியவர்கள் தங்கள் வாழ்நாளில் 2.1 குழந்தைகளைப் பெற்றெடுக்கும்போது, குழந்தைப் பருவம் அல்லது இளமைப் பருவத்தில் இறப்பதற்கான சில வாய்ப்புகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், அந்தத் தம்பதியினர் இரண்டு பெரியவர்களை உருவாக்குவார்கள். இதனால் மக்கள்தொகையின் அளவு மாறாமல் இருக்கும் என்பதே பதிலீடு செய்யும் அளவுக்குக் கருவுறுதல் என்பதன் பொருள். இது ஒரு நாட்டின் மக்கள்தொகைப் பயணத்தில் முக்கியமான மைல்கல். பதிலீடுசெய்யும் நிலைக்குக் கீழே கருவுறுதல் குறைந்தால், மக்கள்தொகையின் மொத்த எண்ணிக்கை குறையத் தொடங்கும். சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆரம்ப தசாப்தங்களில் அதிகமாக இருந்த இந்தியாவின் TFR பிறகு வேகமாகக் குறைந்து, சமீபத்திய அதிகாரப்பூர்வ இந்தியத் தரவுகளின்படி, இப்போது பதிலீட்டு விகிதத்திற்குக் கீழே 1.9 ஆகக் குறைந்துள்ளது. நகர்ப்புற இந்தியாவைவிடக் கிராமப்புற இந்தியாவில் கருவுறுதல் விகிதம் அதிகமாக உள்ளது; கிராமப்புற இந்தியாவிலும், கருவுறுதல் இப்போது பதிலீட்டு விகிதத்தை நெருங்கிவிட்டது. கருவுறுதல் எல்லா இடங்களிலும் குறைந்தாலும், இந்தியாவிற்குள் மாநிலங்களுக்கிடையே இதில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. தெற்கு, மேற்கு மாநிலங்களில் TFR பதிலீட்டு விகிதத்திற்குக் கீழே உள்ளது. இந்த மாநிலங்களில், கருவுறுதல் நிலைகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ளதைப் போலவே குறைவாக உள்ளன. உதாரணமாக, மும்பையைத் தலைநகராகக் கொண்ட மேற்கு மாநிலமான மகாராஷ்டிரத்தின் கருவுறுதல் விகிதம் நார்வேயைவிடக் குறைவாக உள்ளது. (இந்தத் தொடரின் பகுதி II கருவுறுதல் விவாதத்தை இன்னும் விரிவாக ஆராய்கிறது.) வரலாற்று ரீதியாக அதிகக் கருவுறுதலைக் கொண்டிருந்த வடக்கு, கிழக்கு மாநிலங்களிலும் கருவுறுதல் குறைந்துள்ளது. கருவுறுதலில் இந்தியாவின் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் மாநிலமான பிகாரிலும்கூட TFR இப்போது ஒரு பெண்ணுக்கு 3.0 குழந்தைகளுக்கும் குறைவாகவே உள்ளது. எனினும், வடக்கு, தெற்கு மாநிலங்களின் கருவுறுதல் விகிதங்களில் உள்ள இந்தத் தொடர்ச்சியான இடைவெளி இந்திய அரசியலில் முக்கியமானதொரு வேறுபாடாகும். கிராமப்புற பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் TFR இப்போதும் ஒரு பெண்ணுக்கு 2.5 குழந்தைகளுக்கும் அதிகமாக உள்ளது. அதேசமயம் கூடுதலாக வளர்ச்சியடைந்த மாநிலங்களின் கிராமப்புறங்களில்கூட TFR இப்போது பதிலீட்டு விகிதத்திற்குக் கீழே உள்ளது. 3. குழந்தைகளின் எண்ணிக்கை குறைதல் பிறப்பு விகிதங்கள் இவ்வளவு தீவிரமாகக் குறைந்ததன் விளைவாக, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2000களின் முற்பகுதியிலிருந்து குறையத் தொடங்கியது. புத்தாயிரத்தின் தொடக்கத்தில் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 29 மில்லியன் குழந்தைகள் என்னும் உச்சநிலையை அடைந்து, அதன் பிறகு குறையத் தொடங்கியது. இந்தியாவின் குழந்தைகளின் எண்ணிக்கை ஒட்டுமொத்த அளவிலும் ஒப்பீட்டளவிலும் கணிசமாகக் குறைந்துள்ளது என்பதே இதன் பொருள். 1960களின் முற்பகுதியில், இந்தியாவின் மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள். 2025க்குள் இந்த எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது. இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள குழந்தைகளைவிட 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்திய மாநிலங்களின் சமூக-பொருளாதார, மக்கள்தொகை நிலவரங்களில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், குழந்தைகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் குறைந்துவருகிறது. இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் கருவுறுதல் விகிதங்கள் தாமதமாகக் குறைந்ததன் காரணமாக, ஒட்டுமொத்த எண்ணிக்கையிலும், மொத்த மக்கள்தொகையில் அவற்றின் பங்கிலும், குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. இந்தியாவில் உள்ள 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூவரில் ஒருவர் பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே வாழ்கிறார்கள். எனினும், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலுமே குழந்தைகளின் எண்ணிக்கை சீராகக் குறைந்துவருகிறது. 4. மக்கள் தொகையின் சாளரத்தை மூடுதல் பொருளாதார நிபுணரும் மக்கள்தொகையியலாளருமான டேவிட் இ. ப்ளூமும் அவரது இணை ஆசிரியர்களும் 2003ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில், “மக்கள்தொகையின் பலன்” (demographic dividend) என்ற சொல்லாடலை உருவாக்கினார்கள். ஆய்வுத் துறையில் பெரும் செல்வாக்கு செலுத்திய கட்டுரை இது. சரியான கொள்கைகள் அமலில் இருக்கும் பட்சத்தில், ஒரு நாட்டின் மக்கள்தொகையில் உழைக்கும் வயதினரின் பங்கு அதிகம் இருப்பதால் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியின் ஊக்கத்தை இந்தச் சொல்லாடல் குறிக்கிறது. இந்தச் சொல்லாடல் இந்தியாவின் இளைஞர் மக்கள்தொகை தொடர்பில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிப் பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள். இது ஐரோப்பிய, வட அமெரிக்க, கிழக்காசிய நாடுகளைவிட இந்தியாவை மிகவும் இளைய நாடாக ஆக்குகிறது.எடுத்துக்காட்டாக, சராசரி அமெரிக்கர் அல்லது சீனரைவிடச் சராசரி இந்தியர் பத்தாண்டுகளுக்கும் மேல் இளையவராக இருக்கிறார். இருப்பினும், மக்கள்தொகையின் இந்தச் சாளரம் இந்தியாவில் இப்போது மூடப்பட்டுவருகிறது. மக்கள்தொகை மற்றும் தொழிலாளர்கள் தொடர்பான புள்ளிவிவரங்களின்படி “உழைக்கும் வயதுடையவர்கள்” என்று வரையறுக்கப்படும் 15-64 வயதுக்குட்பட்ட இந்தியர்களின் பங்கு, ஐ.நா.வின் மக்கள்தொகைக் கணிப்புகளின்படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் உச்சத்தை அடையவிருக்கிறது. இது மிக ஆழமான தாக்கங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக, கடந்த காலத்தை ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது: தனது உழைக்கும் வயதுடைய மக்கள்தொகைக் குழுமத்திலிருந்து திட்டமிடப்பட்ட “பலனை” இந்தியாவால் பெற்றெடுக்க முடிந்ததா? அடுத்து, எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. சார்ந்திருப்போரின் விகிதம் என்பது மக்கள்தொகையியலாளர்களும் பொருளாதார நிபுணர்களும் கூர்ந்து கவனித்துவரும் முக்கியக் காரணி. உழைக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கும் (குழந்தைகள் அல்லது முதியவர்கள்) உழைக்கும் வயதுடைய மக்கள்தொகைக்கும் இடையேயான விகிதம்தான் சார்ந்திருப்போரின் விகிதம். இந்த விகிதம் அதிகமாக உள்ள மாநிலங்கள் அல்லது நாடுகளில் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகையின் மீது அதிக நிதிச்சுமை இருக்கும். சார்ந்திருப்போருக்கு நலத்திட்டங்களை வழங்க வேண்டியிருப்பதால் அரசின் நிதிச்சுமையும் கூடுதலாக இருக்கும். இந்தியாவின் பெரிய எண்ணிக்கையிலான உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை, சுருங்கிவரும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டும் இணைந்ததன் விளைவாக, நாட்டின் சார்ந்திருப்போரின் விகிதம் குறைந்துள்ளது. 2026க்குள், இந்தியாவின் சார்ந்திருப்போரின் விகிதம் 543ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, உழைக்கும் வயதுடைய ஒவ்வொரு 1,000 பேருக்கும் 543 குழந்தைகளும் முதியவர்களும் இருப்பார்கள். இந்திய மக்களின் வயது தொடர்ந்து அதிகமாகும்போது, சார்ந்திருப்போரின் விகிதம் மீண்டும் உயரத் தொடங்கும். இந்த முறை வளர்ந்துவரும் முதியோர் மக்கள்தொகையால் இது நிகழும். ஆனால் இது சீரற்ற முறையில் பரவும். வடக்கு, கிழக்கு மாநிலங்களில் இப்போதுதான் பிறப்பு விகிதங்கள் குறைவதால், அவற்றின் சார்ந்திருப்போரின் விகிதங்கள் குறையும். ஏனெனில் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை வளர்ந்து, சார்ந்திருப்போரை ஆதரிப்பதற்கான கூடுதல் திறன் உருவாகியிருக்கும். தெற்கு, மேற்கு மாநிலங்களில், அவற்றின் மக்களுக்கு வயதாகி, அவற்றின் பணியாளர்கள் சுருங்கும்போது, சார்ந்திருப்போரின் விகிதங்களும் அதற்கேற்ப உயரும். 5. தொற்றுநோயியல் மாற்றம் உலகம் முழுவதும், காலப்போக்கில், வளர்ச்சியும் மேம்பாடும் மக்கள் எதனால் நோய்வாய்ப்படுகிறார்கள் மற்றும் இறக்கிறார்கள் என்பதை மாற்றியமைக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் (WHO) இறப்புக்கான காரணங்களை மூன்று பரந்த வகைகளாகப் பிரிக்கிறது: (i) தொற்று நோய்கள், பேறுகாலப் பிரச்சினைகள், பிறப்புக்குப் பிந்தைய சிக்கல்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு – மலேரியா போன்ற கிருமிகளால் பரவும் நோய்கள், கர்ப்பம், பிரசவம், பிறந்த்தும் ஏற்படும் சிக்கல்களால் ஏற்படும் இறப்புகள் ஆகியவை அடங்கும். (ii) தொற்றா நோய்கள் – இருதய நோய்கள், புற்றுநோய்கள் ஆகியவையும், நேரடித் தொடர்பு, காற்று அல்லது நோய்க்கிருமிகள் மூலம் பரவாத பிற நோய்கள் ஆகியவை இதில் அடங்கும். (iii) காயங்கள் – இதில் கொலைகள், தற்கொலைகள் மற்றும் சாலை விபத்துகள் ஆகியவை அடங்கும். ஒரு குழுவினர் புவியியல் ரீதியாகவோ சமூக ரீதியாகவோ குறைந்த வருமானம், மோசமான ஊட்டச்சத்து, சுத்தமான சுற்றுச்சூழல் இன்மை, சுகாதாரம் பேணுவதற்கான வாய்ப்பு குறைவாக இருத்தல் ஆகிய சூழ்நிலைகளில் இருக்கும்போது, தொற்று நோய்களும் பிரசவத்தை ஒட்டி நடக்கும் அசம்பாவிதங்களுமே பெரும்பாலான இறப்புகளுக்குக் காரணமாக அமைகின்றன. இந்தக் குழுக்கள் பணக்காரர்களாகி வயதாகும்போது, இந்த காரணங்களால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க முடியும்; அவை குறைந்துவிடுகின்றன. இதன் விளைவாக, இதய நோய், புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்களால் ஏற்படும் இறப்புகளின் பங்கு ஒப்பீட்டளவில் உயரத் தொடங்குகிறது. இந்தியா இந்த மாற்றத்தின் நடுவில் உள்ளது. இது பொது சுகாதாரத்தில் தொற்றுநோயியல் மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சூழலில், பிரதான இறப்புக்கான காரணங்கள் தொற்று நோய்கள், பிரசவம் தொடர்பான நிலைமைகள் ஆகியவற்றிலிருந்து தொற்றாத நோய்களுக்கு மாறுகின்றன. பேறுகால வசதிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள், மலேரியா போன்ற தொற்று நோய்களிலிருந்து ஏற்படும் இறப்புகள் பெருமளவு குறைதல் ஆகியவற்றில் இது பிரதிபலிக்கிறது. இந்தியாவின் வளமான மாநிலங்கள் இந்தத் தொற்றுநோயியல் மாற்றத்தில் மேலும் முன்னேறியுள்ளன; அங்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே பெரும்பாலான இறப்புகளுக்குத் தொற்றாத நோய்கள் காரணமாகிவிட்டன. ஏழ்மையான மாநிலங்களிலோ மிக அண்மைக் காலத்தில்தான் தொற்றுநோயியல் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகளுக்கு இன்றும் தொற்று நோய்களே காரணமாக இருக்கின்றன. இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் 20 சதவீதத்திற்கும் குறைவான இறப்புகளுக்கு மட்டுமே தொற்று நோய்கள் காரணமாக உள்ளன. தொற்றாத நோய்கள் இப்போது இந்தியாவின் குறைந்த, அதிக வளர்ச்சியடைந்த மாநிலங்கள் இரண்டிலுமே மொத்த இறப்புகளில் பாதிக்கும் மேலாகக் காரணமாகின்றன. ஆனால் தொற்றாத நோய்களால் ஏற்படும் இறப்பின் அளவு பணக்கார மாநிலங்களில் கணிசமாக அதிகமாக உள்ளது. 6. உயரும் இறப்பு விகிதம் 1950கள் முதல் 2000களின் முற்பகுதிவரை இந்தியா தனது இறப்பு விகிதத்தில் (மக்கள் தொகைக்கு விகிதாசாரமாக ஆண்டுதோறும் இறக்கும் நபர்களின் எண்ணிக்கை) சீரான வீழ்ச்சியைக் கண்டது. இந்தியாவில் ஆயுட்காலம் காலப்போக்கில் சீராக வளர்ந்துள்ளது. 1970இல் ஆயுட்காலம் 50 வயதுக்குக் குறைவாக இருந்தது. இன்று 70க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஒப்பிடக்கூடிய தரவு கிடைத்த 1970களில், இந்திய ஆண்களின் ஆயுட்காலம் பெண்களைவிட அதிகமாக இருந்தது. 1980களின் முற்பகுதியில் இந்த நிலை தலைகீழாக மாறியது. 2010களின் பிற்பகுதியில் பிறந்த ஒரு பெண் குழந்தை, அதே ஆண்டில் பிறந்த ஒரு ஆண் குழந்தையைவிடக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அதிக காலம் வாழும் என்று எதிர்பார்க்கலாம். குழந்தைகளின் உயிருக்கான ஆபத்துகள் பெரிதும் முறையில் குறைக்கப்பட்டதே இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவதற்கு முக்கியக் காரணம். 2025இல் இந்தியாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இறந்தன. ஆனால் கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் கைக்குழந்தைகளும் குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்தில் இருக்கும் குழந்தைகளும் இறக்கும் அபாயம் பெருமளவு குறைந்துள்ளது. 1950களில், இந்தியாவில் இறந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள்; ஒவ்வொரு ஆண்டும் இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள். இப்போது ஆரம்பகாலக் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் இறப்புகள் இந்தியாவில் ஏற்படும் பத்து இறப்புகளில் ஒன்றுக்கும் குறைவாகவே உள்ளன. குழந்தை இறப்பு விகிதத்தில் ஏற்பட்ட இந்தப் பெரிய முன்னேற்றங்களின் விளைவாக, இந்தியாவில் இறப்பின் அபாயம் ஒப்பீட்டளவில் முதியோர் குழுக்களுக்கு மாறிவருகிறது. இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் குழந்தை இறப்பு அபாயம் முதிய வயதில் இறக்கும் அபாயத்தைவிட அதிகமாக உள்ளது. பணக்கார மாநிலங்களில், இறப்புக்கான அபாயம் குழந்தைகளைக் காட்டிலும் முதியோரிடத்தில் அதிகமாகியிருக்கிறது. உதாரணமாக, கேரளத்தில், குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate – IMR) இப்போது ஐந்தாகக் குறைந்துள்ளது. (அதாவது, ஓராண்டில் உயிருடன் பிறக்கும் ஒவ்வொரு 1,000 குழந்தைகளில் ஐந்து குழந்தைகள் இறந்துபோகின்றன.) இது வடக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்கது. கேரளம்தான் இப்போது இந்தியாவில் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கான இறப்பு அபாயத்தைக் காட்டிலும் ஒரு குழந்தைக்கான இறப்பு அபாயம் குறைவாக இருக்கும் முதல் மாநிலமாகும். பெரும்பாலான வளரும் நாடுகளில் குழந்தைப் பருவத்தினருக்கு இருக்கும் தீவிர அபாயத்தைக் கேரளம் நீக்கிவிட்டது. ஆனால் நாடு முழுவதும் வயதானவர்கள் எண்ணிக்கை உயரும் நிலையில், ஒட்டுமொத்த மக்கள்தொகையின் இறப்பு விகிதங்கள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன. 1950களிலிருந்து சீராகக் குறைந்துவந்த இந்தியாவின் மொத்த இறப்பு விகிதம் (Crude Death Rate – CDR) – மக்கள்தொகையோடு ஒப்பிடுகையில் ஆண்டுதோறும் மதிப்பிடப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை – கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக 2020, 2021ஆம் ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்தது. 2023க்குள் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு CDR திரும்பியது. ஆனால் 2024இலிலிருந்து, இந்தியாவின் CDR உயரும் என்றும், எதிர்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. விகிதாச்சார அளவில் அல்லாமல் முழுமையான எண்ணிக்கையிலும், இந்தியாவில் ஆண்டுதோறும் இறப்புகளின் எண்ணிக்கை 2010களிலிருந்து அதிகரித்துவருகிறது. முடிவும் தரவு எச்சரிக்கைகளும் இந்த ஆறு போக்குகளையும் ஒன்றாகப் பார்க்கும்போது நாடு ஒரு சிக்கலான தருணத்தில் இருப்பது தெரிகிறது. இந்திய மக்கள்தொகை முழுமையான எண்ணிக்கையில் இன்னும் வளர்ந்துகொண்டிருந்தாலும், உலக மக்கள்தொகையில் இந்தியாவின் பங்கு விரைவில் குறையத் தொடங்கும். உலகம் உணர்ந்துகொண்டிருப்பதைவிட வேகமாகக் கருவுறுதல் குறைந்துவருகிறது. இந்தியாவிற்குள்ளும் இந்த மாற்றத்தின் அளவை ஒரு சிலரே புரிந்துகொண்டிருக்கிறார்கள். குழந்தை மக்கள்தொகை வீழ்ச்சியடைந்துவருகிறது. மக்கள்தொகையால் கிடைக்கும் பலனுக்கான சாளரம் (உழைக்கும் வயதிலுள்ள மக்கள்தொகையால் கிடைக்கும் பலன்) மூடிக்கொண்டிருக்கிறது. இந்தியர்கள் நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆனால் மக்களுக்கு வயதாகும்போது இறப்பு விகிதங்கள் உயரும். இந்தப் போக்குகள் அனைத்தும் இந்தியாவின் பணக்கார, ஏழை மாநிலங்களின் மாறுபட்ட யதார்த்தங்களால் மேலும் நுணுக்கமான விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. ஆயினும், இந்தியக் கல்வித்துறை, ஊடகங்கள் அல்லது அரசியல் ஆகிய களங்களில் நடக்கும் பொது விவாதம் மாறியுள்ள இந்த யதார்த்தங்களுடன் இணைந்து பயணிக்கவில்லை. பிறப்பு விகிதங்கள் குறைவது முக்கியமான விவாதமாக இருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும், “மக்கள்தொகை வெடிப்பு” தொடர்பான விவாதமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. தெற்கு மாநிலங்கள் பலவற்றைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது: மத்திய அரசாங்கத்தின் முன்னுரிமைகளிலிருந்து மிகவும் மாறுபட்ட பொது சுகாதார முன்னுரிமைகள், வயதான மக்கள்தொகை அதிகரிப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசு, சந்தை சார்ந்த தீர்வுகளின் தேவை, உழைக்கும் வயதுள்ள மக்கள்தொகை குறைவதைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் இடம்பெயர்வு குறித்து முன்பே நடந்திருக்க வேண்டிய விவாதம் ஆகியவை முக்கியமானவை. இவை தவிர, பெரும்பாலான மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்தொகை விவாதங்களில் ஆதிக்கம் செலுத்தும் தேர்தல் பிரதிநிதித்துவம் பற்றிய விவாதம் தனி. இந்தத் தொடர் மூலம் நாங்கள் முதலில் தரவுகளைப் பொது வெளிக்குக் கொண்டுவர முயற்சிக்கிறோம். இந்தியாவிற்கான மக்கள்தொகைத் தரவுகள் சில கடுமையான குறைபாடுகளைக் கொண்டுள்ளன. இந்தியா 2011க்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தாததால், 2011க்குப் பிந்தைய தரவுகள் இந்தியாவின் பதிவாளர் ஜெனரலால் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப்பட்ட கணிப்புகளிலிருந்து வருகின்றன. இந்த மதிப்பீடுகள் அடிப்படை ஆண்டிலிருந்து விலகிச் செல்லச் செல்ல, அவற்றின் நம்பகத்தன்மை குறைந்துபோவதை எங்கள் ஆராய்ச்சி காட்டுகிறது. நேரடியான தரவுகள் இல்லாததால் இறப்பு பற்றிய தரவுகளும் பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு இறப்பும் பதிவுசெய்யப்பட்டு, அதன் காரணத்தை ஒரு சுகாதார நிபுணர் உறுதிப்படுத்துவதே இறப்பைக் கணக்கிடுவதற்கு மிகவும் நேரடியான வழி. இந்தியாவைப் போன்ற குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் எல்லா இடங்களிலும் சீரான முறையில் இதைச் செய்வது சாத்தியமில்லை. அனைத்து இறப்புகளும் சிவில் அதிகாரிகளிடம் பதிவு செய்யப்படுவதில்லை. ஏழ்மையான மாநிலங்களில் இறப்புப் பதிவு விகிதங்கள் இன்னும் குறைவாகவே உள்ளன. இந்த இடைவெளிகளை நிரப்ப, இந்தியாவில் மாதிரிப் பதிவு அமைப்பு (Sample Registration System – SRS) உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான பிரதிநிதித்துவம் கொண்ட பெரிய அளவிலான மாதிரிக் கணக்கெடுப்பை நடத்துகிறது. இதில் கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்குச் சென்று, முந்தைய ஆண்டில் அந்த வீட்டில் நடந்த இறப்புகள் குறித்து விசாரித்து, தேசிய இறப்பு குறித்த மதிப்பீடுகளை உருவாக்குகிறார்கள். எங்கள் பெரும்பாலான ஆய்வுகள் இந்தத் தரவை நம்பியே உள்ளன. இருப்பினும், இதிலிருந்து கிடைக்கும் இறப்புத் தரவுகளில் அமைப்புரீதியான சிக்கல்களும் உள்ளன. தரவு மூலங்களையும் மூலத் தரவுகளையும் தீவிரமாக அலசி, அதை எங்கள் பகுப்பாய்வில் இணைத்துக்கொண்டு இந்தியாவின் மக்கள்தொகைச் சிக்கல்கள் பற்றிய உரையாடலைக் கணிசமாக முன்னோக்கிக் கொண்டுசெல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். கட்டுரையாளர்: ருக்மிணி எஸ். ‘தரவு இந்தியா’ (Data for India) நிறுவனத்தின் நிறுவனர். CASIஇன் தொலைதூர ஆய்வாளர். மக்கள்தொகையியல், சுகாதாரம், வீட்டுக் குடும்பப் பொருளாதாரம் ஆகியவை இவர் முக்கியமாகக் கவனம் செலுத்தும் பகுதிகள். இதற்கு முன்பு இந்தியச் செய்தி ஊடகங்களில் தரவுசார் இதழியல் பிரிவுக்குத் தலைமை தாங்கியுள்ளார் Whole Numbers Half Truths: What Data Can and Cannot Tell Us About Modern India (Westland, 2021) என்ற புத்தகத்தின் ஆசிரியர். தமிழில்: டி.ஐ. அரவிந்தன் நன்றி: பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இணையதளம் https://minnambalam.com/indias-population-problems-part-1/
-
தகுமோ… இது முறையோ! - கிரீன்லாந்து விவகாரம்
தகுமோ… இது முறையோ! sudumanal கிரீன்லாந்து விவகாரம் image: axious. co 1721 இல் டென்மார்க் இனால் காலனியாக்கப்பட்டு, பின் இணைக்கப்பட்டதுதான் கிரீன்லாந்து தீவு. வரலாற்றுப் போக்கில் டென்மார்க் இத் தீவுக்கு ஒரு சுய ஆட்சிப் பிரதேசம் (Autonomous Territory) என்ற அந்தஸ்தைக் கொடுத்து வைத்திருக்கிறது. அவை இரண்டும் டென்மார்க் இராசதானி (Kingdom of Denmark)என்ற வடிவத்துள் இணைக்கப்பட்டுள்ளன. கிரீன்லாந்தின் வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு, நீதித்துறை என்பன டென்மார்க் இன் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. பெருமளவு நிதி உதவியை டென்மார்க் வழங்குகிறது. அதிக இயற்கை கனிம வளங்களைக் கொண்டது இத் தீவு. அத்தோடு மேற்குப் பிராந்தியத்திற்கு மூலோபாய ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். இதன் காரணமாக ட்றம்ப் கிரீன்லாந்த்து மீது கண் வைத்திருப்பதும் அதை அவர் கையகப்படுத்த உறுதியுடன் இருப்பதும் அழுத்தமாகத் தெரிகிறது. அவரது நிகழ்ச்சி நிரலில் அடுத்தது அதுதானா என்பதும், அத் தீவு போர் மூலம் கைப்பற்றப்படுமா என்பதும் சந்தேகத்துக்கு உரியன. அடுத்தது கிரீன்லாந்துதான் என எழுப்பிவிடப் பட்டிருக்கிற செய்தி ஒரு கவனத் திசைதிருப்பலாகவும் இருக்கலாம். எதிர்பாராமல் ஈரான் மீதோ கொலம்பியா மீதோ தாக்குதல் நடந்தாலும் ஆச்சரியமில்லை. ஈரானில் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பின் சாதகமான நிலையை ஈரானிய மக்களின் அரசுக்கெதிரான போராட்டம் சிஐஏ க்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. கொலம்பியா அரச தலைவர் Gustavo Petro அவர்கள் முன்னாள் M-19 விடுதலை இயக்கப் போராளியாவார். இடதுசாரிய சிந்தனை முறை கொண்டவர். அதனால் ட்றம் க்கு அவர் ஒரு sick man ஆக தெரிகிறார். இதுகுறித்து ட்றம்ப் க்கு மிக காட்டமான முறையில் அவர் பதிலளித்திருக்கிறார். தான் சமாதான ஒப்பந்தத்துக்குப் பிறகு ஆயுதம் ஏந்துவதில்லை என முடிவெடுத்து இருந்ததாகவும், அமெரிக்கா போருக்கு வந்தால் அதன் பிறகு தான் மீண்டும் ஆயுதம் ஏந்தத் தயங்க மாட்டேன் எனவும் சொல்லியிருக்கிறார். வெனிசுவேலா தலைவரையும் துணைவியாரையும் கடத்தியது குறித்து ஒரு காட்டமான அரசியல் விமர்சனத்தையும் முன் வைத்திருக்கிறார். “விரும்பினால் வந்து கைது செய்” என ட்றம்ப் க்கு சவால் வேறு விடுத்திருக்கிறார். இது ஓர் இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறை இல்லாதிருக்கலாம். வாய்ச் சவடால் ஆகவும் இருக்கலாம். ஆனால் அமெரிக்காவுடனான போரில் வெற்றி பெறுவதான சவடால் அல்ல அது. தன்னை கைதுசெய்ய முடியாது என்பதான சவடாலுமல்ல. ஒரு போராளியாக இருந்த ஆன்மாவின் குரல் அது, அடங்க மறுக்கும் உணர்வு அது என புரிந்துகொள்ள இடமுண்டு. அதனால் கிரீன்லாந்தையும் விட, ட்றம்ப் கொலம்பியா அல்லது ஈரான் மீது முதலில் கவனத்தைக் குவித்திருக்க சாத்தியம் அதிகம் உள்ளது. ட்றம்பின் இந்த ஒரு வருட ஆட்சியில் அவரது அணுகுமுறை இப்படி தடாலடியாகவேதான் நிகழ்த்தப்படுகிறது. கிரீன்லாந்து மீது ட்றம்புக்கு இருக்கிற கவனத்தை இது குறைத்து மதிப்பிடுவதாகாது. ஆனால் பலரும் எதிர்பார்ப்பதுபோல் கிரீன்லாந்தை ட்றம்ப் விரைந்து கைப்பற்றுவாரா என்பதுதான் கேள்வி. ஆட்சிக்கு வந்து இந்த ஒரு வருடத்தில் அவர் ஆறு நாடுகள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார். அதை போர் என்ற நிலைக்குள் நகர்த்தாமல் அச்சமூட்டுகிற வேலையோடும், மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடும் மட்டும் நிறுத்திக் கொண்டிருக்கிறார். ஈரான், ஈராக், சிரியா, நைஜீரியா, யேமன், இப்போ வெனிசுவேலா என குண்டுவீசி திரும்பியிருக்கிறார். வெனிசுவேலா மீது எல்லை மீறி நடந்திருக்கிறார். ஒரு நாட்டின் அதிபரை இன்னொரு வல்லாதிக்க நாட்டின் தலைவர் நாடு புகுந்து கடத்திக் கொண்டு வரலாம் என்ற செயலும், அதில் அரசியல் நியாயம் காண்பதும், ஆதரிப்பதும் மிக ஆபத்தானது. இதை மற்றைய வல்லாதிக்க நாடுகளும் கடைப்பிடித்தால் இந்த உலகம் என்னவாகும். இனி, வெனிசுவேலா மீது அவர் எடுக்கப்போகும் அடுத்த நடவடிக்கை எப்படி அமையப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். வெனிசுவேலா மண்ணில் அவர் இராணுவ ஆக்கிரமிப்பை அல்லது நிலைகொள்ளலை மேற்கொள்வதன் மூலம் அவர் சேற்றுள் கால்வைக்கப் போகிறாரா இல்லையா என்பது தெரிய வரும். “ஆக்ரிக் பகுதியிலுள்ள கிரீன்லாந்துக்கு குறுக்குமறுக்கான ரசியாவும் சீனாவும் ஓடித்திரிகிறது. அது மேற்கு பிராந்தியத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கிறது. அமெரிக்காவிற்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் இருக்கிறது. அவர்களை டென்மார்க் இனால் கையாள முடியாது. நேட்டோவின் அங்கமாக இருக்கிற எம்மால்தான் கையாள முடியும்” என்று நியாயம் கற்பிக்கிறார். “We need Greenland” என ஒரே போடாய்ப் போட்டிருக்கிறார். ஐரோப்பாவோ ஒரு நேட்டோ நாட்டை இன்னொரு நேட்டோ நாடு தாக்குவது “தகுமோ… இது முறையோ” என்ற றேஞ்ச் இல் வார்த்தைகளை அளந்து பேசுகிறார்கள். “அமெரிக்காவுக்கும் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துக்கும் உறவு இருக்கிறது. அதன் அடிப்படையில் கிரீன்லாந்தில் அமெரிக்க படைத்தளமும் இருக்கிறது. கிரீன்லாந்தின் இறைமையை அமெரிக்கா மீறுவது சர்வதே சட்டவிதிகளுக்கு முரணானது” என்கிறார், Mette Frederiksen அவர்கள். அவரின் உயர்ந்தபட்ச மென்மையான எச்சரிக்கை “அது நடந்தால் அதுவே நேட்டோவின் முடிவாக இருக்கும்” என்பதுதான். அதற்கு அப்பால் போகவில்லை. அவர் வெனிசுவேலா மீதான ட்றம்ப் இன் செயலையும் கண்டிக்கவோ, ஆதாரம் காட்டிப் பேசவோ இல்லை. நேட்டோவின் 5வது சரத்துப்படி நேட்டோவிலுள்ள ஒரு நாட்டை தாக்கினால் அது நேட்டோவின் எல்லா நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குலாக கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகும். நேட்டேவுக்குள் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு இடையில் இராணுவ தாக்குதல் அல்லது ஆக்கிரமிப்பு நடந்தால், எப்படி அது கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து தெரியவில்லை. அதுகுறித்து இந்த தலைவர்கள் எவரும் பேசிக் கேட்டதில்லை. பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, ஸ்பெயின், போலந்து, இத்தாலி மற்றும் டென்மார்க் தலைவர்கள் ஒன்றுகூடி விட்டிருக்கும் அறிக்கையில் அமெரிக்காவின் இந்த முயற்சியை நேரடியாகக் கறாராகக் கண்டிக்காமல் வார்த்தைகளை கவனமாக வெளியிட்டிருக்கின்றனர். “கிரீன்லாந்து மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்க வேண்டும், மற்றவர்கள் அல்ல” என்கிறது அந்த அறிக்கை. அத்தோடு சர்வதேச சட்டவிதிகளை சுட்டிக்காட்டி, ஒரு நாட்டின் இறைமை பற்றி பேசுவதோடு அந்த அறிக்கை தீர்ந்து போகிறது. இதே சர்வதேச சட்டத்தை மதிக்காமல், ஐநாவின் பாதுகாப்புச் சபை அனுமதி பெறாமல், யூகோஸ்லாவியா, லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் என அமெரிக்கா தலைமையில்; நேட்டோ ஜக்கற் அணிந்து போருக்குப் போனபோது இந்த அறம் எங்கே ஒளிந்திருந்தது. இப்போதுகூட பெரும்பாலான ஐரோப்பிய தலைவர்களுக்கு வெனிசுவேலா மீதான இதே சர்வதேச சட்டவிதிகள், இறைமை என்ற அளவுகோல்கள் “செல்லாது செல்லாது” என்றே இருக்கிறது. டென்மார்க் உட்பட்ட ஐரோப்பிய தலைவர்கள் கிரீன்லாந்துப் பிரச்சினையை இராஜதந்திர ரீதியில் அணுகி தீர்க்க ட்றம்பை சந்தித்து பேச இடமுண்டு. அதற்குமுன் அரச செயலர் மார்க்கோ ரூபியோ இவர்களைத் தேடி வரவிருக்கிறார். ட்றம்ப் கொம்பனி மூன்று தேர்வுகளை முன்வைத்திருக்கிறது. முதலாவது தேர்வு கிரீன்லாந்தை வாங்குவது. ஆனால் கிரீன்லாந்து மக்கள்” எமது நிலம் விற்பனைக்கு இல்லை” என திடமாகக் கூறுகிறார்கள். டென்மார்க்கும் அதை பலமுறை கூறிவருகிறது. இரண்டாவது தேர்வு, ஒரு சட்டபூர்வமான ஒப்பந்தத்தை (COFA-compact of free association) செய்வது ஆகும். பசிபிக் பிராந்தியத்திலுள்ள Micronesia, Palau, Marshall Islands ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா இம்மாதிரியான ஒப்பந்தத்தை செய்து ஆளுகைக்குள் வைத்திருக்கிறது. ஆனால் அவை முழு இறைமையுள்ள நாடுகள் என அமெரிக்கா சொல்கிறது. பொருளாதார உதவியையும் பாதுகாப்பையும் அமெரிக்கா இந் நாடுகளுக்கு வழங்குகிறது. இதேபோன்றதொரு தீர்வுக்குள் கிரீன்லாந்தை இட்டுச் செல்ல ட்றம்ப் முயற்சிக்கலாம். இந்த இரு தேர்வுகளும் சரிவராத பட்சத்தில் அமெரிக்கா போரை அடுத்த தேர்வாக நாடலாம். அது போராக இருக்குமா என்பதுதான் கேள்வி. இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து 1946 இல் அமெரிக்கா கிரீன்லாந்தின் பாதுகாப்பை பொறுப்பெடுத்தது. இப்போதும் படைத்தளத்தை கிரீன்லாந்தில் அமெரிக்கா வைத்திருக்கிறது. 836000 சதுர மைல்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய இத் தீவின் சனத்தொகை வெறும் 57000 மட்டுமே. அதற்கென தனித்த இராணுவம் கிடையாது. டென்மார்க் இராணுவம்தான் அங்கும் உள்ளது. ஐரோப்பாவின் பாதுகாப்பை ஐரோப்பா தனித்து நின்று முழுமையாக உத்தரவாதப்படுத்தவில்லை. நேட்டோ என்ற அமைப்பின் கீழ் உத்தரவாதப்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை. அதையும் மிகத் திருத்தமாகச் சொன்னால் நேட்டோவிலுள்ள ஐரோப்பிய நாடுகளின் தேசிய ரீதியிலான பாதுகாப்பை மேவி, தமது வளத்தை நேட்டோவுக்குள் தாரைவார்க்கிறது என்பதே பொருத்தமானது. இந் நாடுகள் நேட்டோவின் பாதுகாப்பு நிதியை தமது தேசிய வருமானத்தின் (GDP) ஐந்து வீதமளவில் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஆயுத உற்பத்தியைக்கூட தன்னிறைவாக உருவாக்காமால் அமெரிக்காவிடம் பெருமளவு ஆயுதத்தை வாங்க வேண்டிய நிலையில் தொழில்நுட்ப ரீதியிலும், உற்பத்தித் திறனிலும், அணுவாயுத வளர்ச்சியிலும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. இந்த பலவீனங்கள் நேட்டோவின் சாரதியாக அமெரிக்கா குந்தியிருப்பதற்கான ஒரு பகுதிக் காரணங்கள் ஆகும். 2024 இல் நேட்டோவுக்கான 1.4 திரில்லியன் டொலர் பாதுகாப்புச் செலவில் அமெரிக்காவின் பங்கு மட்டும் சுமார் 66 சதவீதமாக இருக்கிறது. உயர் தொழில்நுட்பங்கள் கொண்ட வேவு பார்க்கும் கருவிகள், விமானங்கள், உளவுப்படை தகவல் பரிமாறல்கள், ஆயுதங்கள் எல்லாவற்றுக்கும் தமது உற்பத்திகளை விடவும் பெருமளவில் அமெரிக்காவில் தங்கியிருக்கிறார்கள். ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கை கூட ஐரோப்பாவை மையமாக வைத்து சுயாதீனமாக வரையப்பட்டிருக்கவில்லை என்பது குறித்து அரசியல் அறிஞர்கள் நீண்ட காலமாக விமர்சித்து வருகிறார்கள். அமெரிக்காவின் ஒரு இழுவை வண்டியாக ஐரோப்பா நேட்டோவுக்குள் செயற்படுகிறது. பாதுகாப்பில் மட்டுமல்ல, பொருளாதார ரீதியிலும் அமெரிக்காவிடம் பெருமளவு தங்கியிருக்கிறது. எனவே ஐரோப்பா அமெரிக்காவிடமிருந்து திடீரென நாணயக் கயிற்றைக் கழற்றி எறிந்துவிட்டு சுதந்திரமாக ஓடமுடியாது. அதை செய்வதாக இருந்தாலும் அதற்கொரு கால அவகாசம் தேவை. அதைத்தான் மக்ரோன் (இப்போ ஜேர்மன் சான்சலர் மேர்ற்ஸ் உம்) வலியுறுத்தி வருகிறார். ஐரோப்பாவுக்கான இராணுவமும் சுயமான பாதுகாப்பு கட்டமைப்பும் தேவை என்கின்றனர். ஐரோப்பாவில் நின்று இதை உறுதியாகச் சொல்லும் மக்ரோன் ட்றம்ப் முன்னால் -வளைந்து நெளியும் உடல் மொழியைத் தாண்டி- நிமிர்ந்து நின்று சொல்ல முடியாதவராக இருக்கிறார். ஆக அமெரிக்காவுக்கு ஐரோப்பா தேவைப்படுவதை விட, ஐரோப்பாவுக்கு அமெரிக்கா வேண்டும். அமெரிக்கா -நேட்டோவுக்கு வெளியில்- சுயாதீனமாக 80 நாடுகளில் 750 க்கு மேற்பட்ட படைத்தளங்களை கொண்ட வலிமையான நாடு. எனவே அமெரிக்காவுக்கும் (மிகுதி நேட்டோ நாடுகளான) ஐரோப்பாவுக்கும் போர் வரும் என ஒரு ஜனரஞ்சகக் கனவை காணலாம். அதைத் தாண்டி எதுவும் நடைபெற சாத்தியமில்லை. image:npr. org கிரீன்லாந்தின் மீதான ஆசை ட்றம்ப் இலிருந்து தொடங்கியதல்ல. அது 19ம் நூற்றாண்டில் தொடங்கியது. 1867 இல் அமெரிக்கா ரசியாவிடமிருந்து அலாஸ்காவை பணம் கொடுத்து வாங்கியபோதே, டென்மார்க் இடமிருந்து கிரீன்லாந்தை வாங்கும் திட்டத்தை அமெரிக்க அரச செயலர் William H. Seward என்பவர் முன்வைத்திருந்தார். சரிவரவில்லை. பிறகு, 1910 இல் டென்மார்க்கின் அமெரிக்க தூதர் Maurice Francis Egan இன்னொரு திட்டத்தை முன்வைத்தார். அமெரிக்கா கைப்பற்றி வைத்திருந்த பிலிப்பைன்ஸ் இன் Mindanao தீவை கொடுத்து டென்மார்க் இன் காலனியான கரீபியன் தீவுகளையும் (Danish Vergin Islands) கிரீன்லாந்தையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளலாம் என்பது அவரது ஆலோசனையாக முன்வைக்கப்பட்டது. அதுவும் சரிவரவில்லை. இருந்தபோதும் Danish Vergin Islands இனை அமெரிக்கா 1917 இல் டென்மார்க்கிடமிருந்து -25 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கத்தைக் கொடுத்து- வாங்கிக் கொண்டது. 1946 இல் இரண்டாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி Harry Truman கிரீன்லாந்துக்கு 100 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கக் கட்டிகளை பேரமாக வைத்து விலைபேசினார். டென்மார்க் ஏற்கவில்லை. இவ்வாறு காலனியாதிக்க பேரங்களினூடு வளர்ந்த மனக்கட்டமைப்போடு நவீன காலனியவாதி ட்றம்ப் வெளிக்கிளம்பியிருக்கிறார். மேற்குலகம் முன்வைக்கும் எல்லா ஜனநாயகக் கட்டமைப்புகளும் நடைமுறைகளும் “காலனிய மனக்கட்டமைப்பு” என்ற உளவியல் நோயைத் தாண்டி இருப்பதில்லை. அது தமது நாடுகளின் இறைமையைப் பேணும் வலுவான ஐனநாயகக் கட்டமைப்பைக் கொண்டதாகவும், அதேநேரம் மற்றைய (தாம் தவிர்ந்த) நாடுகளின் இறைமையை, குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீனமெரிக்க நாடுகளின் இறைமையை மறுப்பதாகவும், வளச் சுரண்டலை இயல்பாக்கம் செய்ததாகவும் இரட்டைத்தன்மை வாய்ந்த அளவுகோலைக் கொண்டிருக்கிறது. அதற்கான காரணம் இந்த சாகா வரம் பெற்ற காலனிய மனக் கட்டமைப்புத்தான் (colonial mindset). அதனால் மேற்குலக ஜனநாயகம் என்பது ஒரு பண்பாக வளர்ச்சியடையவில்லை. நிர்வாகக் கட்டமைப்பாக குறுக்கப்பட்டுவிட்டது. மற்றைய பண்பாடுகளை, தனித்துவங்களை, அதனூடான நாகரிக வளர்ச்சியை, அரச கட்டமைப்பின் வரலாற்று ரீதியான வளர்ச்சியை, அதன் வடிவங்களை, சுயாதீனங்களை, முழு இறைமையை ஏற்கவில்லை. தமது நியமங்களுக்கு (norms) வெளியேயான மனிதர்களை அது சக மனிதராக முழுமையாக ஏற்கவில்லை. தம் அளவுக்கு நாகரிகம் அடையாதவர்கள் என்றே கணிக்கிறது. ஐரோப்பிய மையவாத சிந்தனைக்குள்ளும் (euro-centric mentality), அதன் அளவுகோலுக்குள் மட்டும் நின்று, மற்றைய நாடுகளுக்கு வகுப்பு எடுப்பதாகவும், கருத்தியலை உருவாக்குவதாகவும், கதையாடல்களை கட்டமைப்பதாகவும், அதையே எமக்கு ஊட்டுவதாகவும், உலகப் பொதுமையாக இயல்பாக்கம் செய்வதாகவும் தன் பணி செய்கிறது. அதுவே “காலனிய மனக்கட்டமைப்பு” ஆகும். வெனிசுவேலா மீது அமெரிக்கா அத்துமீறியதற்கும், அந்த வளங்களை கொள்ளையடிக்க முனைவதற்கும், அந்த நாட்டை நிர்வகிக்குமளவுக்கு செல்வதற்கும், மிரட்டுவதற்கும் இதே காலனிய மனக்கட்டமைப்புத்தான் அவர்களது மூளைக்குள் ஓடித் திரிகிறது. இந்த இறைமை மீறலையும் அடாத்தையும் கண்டித்து பேச தயக்கம் காட்டுகிற ஐரோப்பிய மனநிலை இப்போதும் இதே கட்டமைப்புச் சேற்றுக்குள்தான் உழல்கிறது. உதாரணமாக ரசியாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக எழுந்த குரல்கள் அமெரிக்காவின் வெனிசுவேலா மீதான அத்துமீறலின் பக்கம் போகவே இல்லை. கமாஸின் ஒக்ரோபர் தாக்குதலில் இறந்த 1200 இஸ்ரேலிய மக்களை பேசுமளவுக்கு காஸா இனப்படுகொலை பற்றி அது பேசுவதில்லை. ‘ஆசியாவின் ஐரோப்பியர்கள்’ என்ற புனைவுவாத அரவணைப்போடு, இஸ்ரேலிய சியோனிஸ்டுகளை கண்டிப்பதுமில்லை. மாறாக ஆதரவு கொடுக்கிறது. கிரீன்லாந்து விடயத்தில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இருக்கும் இந்த சமாந்தரமான மனக்கட்டமைப்பானது தமக்குள் போரைவிட சமரசத்தையே முன்வைக்கும் சாத்தியம்தான் அதிகம். அந்த பேரத்தில் டென்மார்க் காலனியவாதிகள் அபகரித்த கிரீன்லாந்து தீவினது மக்கள் பகடைக் காய்களாக மாறினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை! ravindran.pa 08012026 https://sudumanal.com/2026/01/08/தகுமோ-இது-முறையோ/#more-7568
-
காரைநகரில் மகேஸ்வரன் வீதி பெயர்பலகை திறந்து வைப்பு.
காரைநகரில் மகேஸ்வரன் வீதி பெயர்பலகை திறந்து வைப்பு. சனி, 10 ஜனவரி 2026 06:30 AM காரை நகரில் முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் பிறந்த தினமான இன்றைய தினம் சனிக்கிழமை மகேஸ்வரன் பெயர் பலகை பொறிக்கப்பட்ட வீதி திறந்து வைக்கப்பட்டது. காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் க.பாலச்சந்திரனால் 2018ம் ஆண்டு காரைநகர் சின்னாலடி வீதியை முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரின் நினைவாக மகேஸ்வரன் வீதியாக மாற்றக்கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2022 டிசம்பர் மாதம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு தற்போதைய காரைநகர் பிரதேச சபையின் உறுப்பினர் த. செந்தூரனின் வேண்டுகோளுக்கிணங்க அமரர் மகேஸ்வரனின் பிறந்த தினமான 10ஆம் திகதி ஆகிய இன்று காலை 10.30 மணிக்கு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணன் கோவிந்தராஜ், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள்,பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் வீதிக்கான பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது https://jaffnazone.com/news/54120
-
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி!
கனடாவில் கனரக வாகனம் மோதி - இலங்கை பெண் உயிரிழப்பு! ஜனவரி 09, 2026 கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும், கனடாவில் வாழ்ந்து வந்தவருமான 3 பிள்ளைகளின் தாயான திருமதி.ராஜகாந் அனுஷா (வயது-35) உயிரிழந்துள்ளார். இன்று(09.01.2026) காலை Etobicoke Dixon வீதியில் வெள்ளைக் கோட்டின் ஊடாக வீதியைக் கடக்கும் போது கனரக வாகனத்தைச் செலுத்தி வந்த 26 வயதான சாரதி வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் குறித்த இளம் குடும்பப் பெண் மீது மோதியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. https://www.battinatham.com/2026/01/blog-post_634.html
-
ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!
ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்! 10 Jan, 2026 | 02:05 PM கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக தற்போது அவருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவேமுடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பிரதமர் என்கிற ரீதியிலும் அவரது கட்சியின் ஒரு முக்கியஸ்தர் என்ற வகையிலும் கல்வி அமைச்சர் என்கிற ரீதியிலும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் எமது அமைப்புக்கும் எனக்கும் மிக முக்கியமான தீர்க்கமான கொள்கை முரண்கள் இருக்கின்றபோதிலும் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவேமுடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://web.facebook.com/profile.php?id=61567246753629 https://www.virakesari.lk/article/235661
-
விபுலானந்த அழகியற் கற்கைகள் மாணவர்கள் தொடர் போராட்டம்: 08 பேர் வைத்தியசாலையில்
விபுலானந்த அழகியற் கற்கைகள் மாணவர்கள் தொடர் போராட்டம்: 08 பேர் வைத்தியசாலையில் மட்டக்களப்பு, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத்துறை மாணவர்கள், தமது விரிவுரையாளர் ஒருவரை மாற்றக் கோரி முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் மூன்றாவது நாளாகவும் நீடிக்கின்றது. நேற்றைய (09) நிலவரப்படி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களில் நால்வர் மயக்கமடைந்தும், 04 பேர் வாந்தி எடுத்த நிலையிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிறுவகத்தில் நடன நாடகத்துறையில் நான்காம் ஆண்டில் (2019/2020 கல்வியாண்டு) பயிலும் மாணவர்கள், தமக்குக் கற்பிக்கும் விரிவுரையாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். குறித்த விரிவுரையாளர் முறையாக வகுப்புகளை நடத்துவதில்லை என்றும், மாணவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், சில மாணவர்களின் உடலமைப்பைக் கேலி செய்து அவமானப்படுத்துவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், முறையான காரணமின்றி விரிவுரை நேரங்களில் மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியேற்றுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக கடந்த 2025 மார்ச் 4ஆம் திகதி, நிறுவகத்தின் பணிப்பாளர் பாரதி கெனடியிடம் மாணவர்கள் எழுத்துப்பூர்வமாக முறையிட்டனர். இதற்கான தீர்வை இரு வாரங்களில் பெற்றுத் தருவதாகப் பணிப்பாளர் உறுதியளித்த போதிலும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து, 2025 ஓகஸ்ட் 12ஆம் திகதி மீண்டும் கடிதம் மூலமாகவும் நேடியாகவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மாணவர் ஒன்றியத்தின் ஊடாக முயற்சி செய்தும் நியாயமான தீர்வு கிடைக்கவில்லை என மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், குறித்த பாடத்திற்கான பரீட்சகராக அந்த விரிவுரையாளரை நியமிக்க வேண்டாம் என வலியுறுத்தி கடந்த புதன்கிழமை (07) முதல் 67 மாணவர்கள் பணிப்பாளரின் அலுவலகத்திற்கு முன்னால் அமர்ந்து போராட்டத்தை ஆரம்பித்தனர். தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு பகலாக கடும் மழை மற்றும் குளிர்காற்றுக்கு மத்தியில் இந்த அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், ஏனைய மாணவர்கள் தமது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என உறுதியாக உள்ளனர். https://adaderanatamil.lk/news/cmk7p3rpo03qqo29npq6qq4wu
-
திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியல் வெளியானது
திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியல் வெளியானது 2026 ஜனவரி 09 , பி.ப. 09:00 பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ், பெயரிடப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. R https://www.tamilmirror.lk/செய்திகள்/திருத்தப்பட்ட-பயங்கரவாத-பெயர்-பட்டியல்-வெளியானது/175-370814
-
வடக்கு, கிழக்கு வானிலை குறித்த விசேட எச்சரிக்கை அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் பலத்த மழை வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்தோடு, வடக்கு மாகாணத்தில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/யாழ்ப்பாணத்தில்-பலத்த-மழை/175-370826
-
ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
செவ்வாச்சியம்மன் வழிபாடு தி. செல்வமனோகரன் அறிமுகம் ஐரோப்பியக் காலனிய ஆட்சிமுறைக்கு உட்பட்ட காலத்தில் தென்னிந்தியச் சமூகம் எதிர்கொள்ளாததும் எதிர்பாராததுமான சமய ஒடுக்குமுறைக்கு இலங்கை முழுவதும் உட்பட்டது. குறிப்பாக கரையோரப் பிரதேசங்களில் இருந்த சைவ, பௌத்த, இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்கள் யாவும் இடித்து அழிக்கப்பட்டன. சுதேச சமய வழிபாட்டு முறைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் ஈழத்துத் தமிழ்ச் சமூகம் தன் வாழ்வோடும் தொழிலோடும் இணைந்த, பண்டையகால வழிபாட்டு முறையான இயற்கைப் பொருள் வழிபாட்டுக்குத் திரும்பியது. மரம், கல் முதலிய இயற்கைப் பொருள்கள் வழிபடப்பட்டன. சூலம், வேல், பிரம்பு, பொல்லு, பானை முதலான பொருட்களும் வழிபடு பொருட்களாக, தெய்வீகம் பொருந்தியவையாகக் கருதி (குறி வழிபாடு) வழிபடப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஆறுமுக நாவலரின் வருகையும் செவ்வியல் சைவ மீட்டுருவாக்கமும் சமஸ்கிருதமயமாதல், மேனிலையாக்கம் எனும் கருத்துநிலைகளின் வழி, பெருந்தெய்வ வழிபாட்டை நிகழ்த்தியமை சிறுதெய்வ வழிபாட்டை செல்வாக்கிழக்கச் செய்துவிட்டது. குறிப்பாக யாழ்ப்பாணம் சமஸ்கிருதமயமாதலுக்கு முழுமையாக உட்பட்டு சிறுதெய்வங்களைப் பெருந்தெய்வமாக்கி பெருமரபாகிய மேனிலையாக்கத்திற்கு உட்பட்டுவிட்டது எனக் கூறப்பட்டு வருகிறது. இக்கூற்று மேம்போக்காகப் பார்க்கும் போது உண்மை போலத் தோன்றினும் அது முழுமையான உண்மையல்ல என்பதை அண்மைக்கால ஆய்வுகள் நிரூபணம் செய்கின்றன. நாட்டாரியல் தளத்திலான ஆய்வுகள் ஈழத்தில் சரிவர முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தை இது உணர்த்தி நிற்கின்றது. செவ்வாச்சி அம்மன் ஈழத்தில் தமிழ்ச் சமூகம் வாழுமிடமெங்கும் தாய்த் தெய்வ வழிபாடான அம்மன் வழிபாடு மிகுந்து காணப்படுகின்றது. கண்ணகி, மாரி, முத்துமாரி, காளி, பத்திரகாளி, பேச்சி, பூசைக்கிழவி, கொத்தி, நீலி முதலான கிராமியப் பெண் தெய்வங்கள் பல காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றாக செவ்வாச்சி அம்மன் வழிபாடு காணப்படுகின்றது. செவ்வாச்சி என்பது சிவலை நிறத்தை உடைய ஆச்சி, செவ்வாய்க்குரிய ஆச்சி, செவ்வாயில் பூசிக்கப்படுகின்றவள் எனப் பல பொருள் கொள்ளப்பட்டாலும் தெளிவான விளக்கம் சொல்லப்படவில்லை. பூச்சி என்பதே காலப்போக்கில் ஆச்சி என்று வந்திருக்கலாம். சிவந்த அல்லது நன்மைபுரிகின்ற ஒன்றாக இது கருதப்பட்டு இருக்கலாம். செவ்வாச்சி எனும் சொல்லுக்கான அர்த்தத்தைச் சரிவர அறிய முடியவில்லை. ஆயினும் அவர் ஒரு முதிர் பெண்ணாக சிறுகுடி வேளாளர் மரபினரால் வழிபடப்பட்டு வருவதை அறிய முடிகின்றது. யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் பொலிகண்டி, கொற்றாவத்தை, சமரபாகு, வதிரி போன்ற இடங்களில் இவ்வழிபாடு இன்றும் நிகழ்த்தப்படுகின்றது. இது முன்னோர் வழிபாடாகவும் இருக்கலாம். ஆயிரம் கண்ணுடையாள் கண்ணகியின் பிறிதொரு வழிபாட்டுமுறையாகவும் இருக்கலாம். ஏனெனில் ஆறு ஆலயங்களில் செவ்வாச்சியின் குறியீடாக பல்துவாரங்களை உடையதான பானையே வைத்து வழிபடப்பட்டு வருகின்றது. இலங்கையில் இவ்வழிபாடு முக்கியமாக வற்றாப்பளை கண்ணகி அம்மனின் திருத்தலத்தில் காணப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இத்தெய்வம் குலதெய்வமாகவே இருந்து வருகின்றது. இவ்வம்மனின் கோயில்கள் வீட்டு வளவினில் அமைந்துள்ளன. இப்போது சில கோயில்கள் தனித்து அறுக்கைப்படுத்தப்பட்டு நாற்புறமும் மதில்கள் கட்டப்பட்டு புனிதம் கருதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. யாவரும் வழிபாடியற்ற வழி செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வீட்டுவளவினில் தென்னோலைக் கிடுகுகளால் கூரை வேயப்பட்டு சுற்றி வர பனம் மட்டை வரியப்பட்டு, நிலம் பசும் சாணத்தால் மெழுகப்பட்டதாகக் கோயில்கள் அமைந்திருந்தன. அம்மன் உயர்ந்த கல்லின் மீது (பீடம்) வைக்கப்பட்டிருந்தது. கால ஓட்டத்தில் அவரவர் பொருளாதார, நம்பிக்கை வளர்ச்சிக்கு ஏற்ப சீமெந்துக் கட்டடங்கள் ஆக்கப்பட்டன. பெரும்பாலான கோயில்களில் முன்மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. செவ்வாச்சி அம்மனுக்கு உருவம் எனத் தனியாக ஒன்று இல்லை. செவ்வாச்சி, குறித்த ஒரு பூச்சி உருவில் வைத்தே வழிபடப்படுகிறார். வண்ணத்துப்பூச்சியை ஒத்த வடிவத்தை உடைய பூச்சி அதுவாகும். சாம்பல், கருப்பு, சிவப்பு, மஞ்சள் எனப் பல வர்ணங்களில் காணப்படும் இப்பூச்சியின் இருபக்கச் இறகுகளிலும் கண்கள் போன்ற வடிவம் காணப்படும். தவிர இறகுகளில் சிறுசிறு புள்ளிகளும் காணப்படும். அதனைக் குறிப்பதாக துவாரமுடைய பானை வைத்து வழிபடப்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர். ஒவ்வொரு கோயிலுக்கும் குறித்த நிறத்தை உடைய குறித்த பூச்சிவகையே வரும் என்ற கருத்தை கோயில் உரிமையாளர்கள், பூசாரிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது. கண் தெரியாத குருடுப் பூச்சி, காது இல்லாத பூச்சி, சிறகு சிதைந்த பூச்சி என இவை பலவாறு அமைகின்றன. எல்லாக் கோயில்களிலும் செவ்வாச்சி பூச்சியின் உருவமோ படமோ காணப்படுகிறது. நம்பிக்கைகள் செவ்வாச்சி அம்மன் நேரே வருவது இல்லை என்றும் பூச்சியின் ரூபத்தில் வருவாள் என்றும் அதுவே செவ்வாச்சிப் பூச்சி என்றும் மக்களிடையே நம்பிக்கை காணப்படுகின்றது. செவ்வாச்சிப் பூச்சி சிறிய ரூபத்தில் வந்தால் அவ்வீட்டில் அல்லது குறித்த நபருக்கு நன்மை நிகழும் என்றும் மத்திம அல்லது பெரிய பூச்சியாக வந்தால் துயரம் நிகழும் என்றும் மக்களிடையே இன்றும் நம்பிக்கை காணப்படுகின்றது. இவ்வழிபாட்டோடு சம்பந்தப்பட்ட மனிதர்கள் வாழும் இடம் எங்கும் (வவுனியா தொட்டு கனடா வரை) இந்தப் பூச்சி இவ்வண்ணம் அவர்கள் கண் முன்னே தோன்றி நன்மை, தீமையை முன்கூட்டியே அறிவிப்பதாக கோயில் பூசாரிகள் குறிப்பிடுகிறார்கள். இதனால் இத்தெய்வம் ‘கண் கண்ட தெய்வம்’ என யாவராலும் சுட்டப்படுகின்றது. பூசை முறை செவ்வாச்சி அம்மனுக்கு எல்லா நாட்களும் விளக்கு வைக்கப்படுகின்றது. அதனை விரும்பியவர் யாரும் வைக்கலாம். அதுபோலவே பூ வைத்தல், கற்பூரம் காட்டல் முதலியனவும் யாவராலும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. வருடாந்த, விசேட தினங்களில் மட்டுமே பூசாரி பூசை செய்யும் வழக்கம் காணப்படுகிறது. பொலிகண்டி மேற்கில் உள்ள பழவத்தை எனும் இடத்தில் காணப்படும் கோயிலில் மாசி மாதத்தில் ஒரு செவ்வாய் வருடாந்தப் விசேட பூசையும், நாச்சிமார் கோயிலடி செவ்வாச்சியம்மன் கோயிலில் பங்குனி இரண்டாங் கிழமையும், ஏனைய கோவில்களில் ஆடிச் செவ்வாய் ஒன்றில் அவரவர் வசதிக்கேற்ப விசேட பூசையும் இடம்பெற்று வருகின்றன. செவ்வாச்சிக்கு உகந்த நாளாக செவ்வாய்க்கிழமையே அமைவதாக நம்பப்படுகிறது. இவை தவிர பொங்கல், சித்திரை வருடம், நவராத்திரி, தீபாவளி, போன்ற சிறப்பு நாள்களும் விசேட தினங்களாகக் கருதப்பட்டு சிறப்புப் பூசைகள் இடம்பெறுகின்றன. நேர்த்திக்கடன் வைத்தவர்கள் தமக்குகந்த நாளில் நேர்த்திக் கடனைத் தீர்ப்பர். பழவத்தை, பொலிகண்டி தெற்கு, சமரபாகு, வதிரி ஆகிய இடங்களில் உள்ள செவ்வாச்சி அம்மன் கோயில்களில் ஆண் பூசாரிகளும்; ஏனைய கோயில்களில் பெண் பூசாரிகளும் பூசை செய்து வருகின்றனர். தலையில் முழுகி, ஈரச்சேலையோடு பெண் பூசாரிகள் வருடாந்தப் பூசையை செய்யும் முறைமை இன்றும் காணப்படுகிறது. சமரபாகு செவ்வாச்சி கோயில் இவை யாவற்றிலும் வேறுபாடு உடையதாக உள்ளது. முன்பு மண்பானை வைத்து வழிபடப்பட்டாலும் தற்போது சில்வர் குடம் வைத்து வழிபடப்படுகிறது. பொதுவில் பானைக்கு பீடம் காணப்பட, இங்கு அடுப்பின் மீது குடம் வைக்கப்பட்டிருப்பதும் கோயிலுக்கு வெளியேயும் தனி அடுப்பு நிரந்தரமாக அமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது அடுப்பு நாச்சியம்மன் வழிபாட்டை ஒத்ததாக அமைகின்றது. வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி, ஆழியவளை, உடுத்துறை போன்ற இடங்களில் மீனவ மக்கள் பானை வைத்து அதனுள் நிறைவாக நெல்லையிட்டு சட்டியினால் மூடி பூசைக்கிழவி என்னும் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். படையல் செவ்வாச்சியம்மன் கோயிலில், சமரபாகு கோயில் தவிர்ந்த ஏனையவற்றில் மரக்கறி உணவுப்படையல், மட்ச – மாமிசப் படையல், சாராயம், கள் முதலான படையல் முறைகள் காணப்படுகின்றன. சமரபாகு கோயிலில் சைவவுணவுப் படையல்முறை மட்டுமே தொடர்ந்து நடைபெற்று வருவதாக அக்கோயில் உரிமையாளர் சிவஞானம் சரஸ்வதி தெரிவித்தார். செவ்வாச்சியம்மனுக்கான பொதுப்படையல், நெல்லுப் பொரியும் தானியங்களில் அவிக்கப்பட்ட பிடிக்கொழுக்கட்டையும் ஆகும். குறித்த பூசைத் தினத்தில் காலையில் அடுப்பை மூட்டி நெல் பொரிக்கப்பட்டு அவை அம்மன் இருக்கும் இடம் எங்கும் சுற்றி வீசப்படும். இது செவ்வாச்சிப்பூச்சியின் செட்டையில் இருக்கின்ற புள்ளிகளைக் குறிப்பெனவாகவே கொள்ளப்படுகின்றது. நெல்லைப் பொரித்து அம்மனைச் சுற்றிப் பரவியபின் அரிசிமாவைக் குழைத்து சாத்துக்கொழுக்கட்டை அவித்துப் படைப்பர். வளுந்து, கோவிலை அண்மித்திருக்கும் கிணற்றடி, மரத்தடி முதலான இடங்களில் வைக்கப்பட்டு எடுக்கப்படுகிறது. தெய்வத்தின் முன்பு வாழையிலையைப் பரவி அதில் அக்காலப் பகுதியில் கிடைக்கும் மரக்கறிகளைப் படைப்பர். அவை இக்கோயிற் சூழலில் வாழும் மக்களின் விளைபொருட்களாக முன்பு இருந்தன. கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி, விவசாயத்தைச் சுருங்கச் செய்த அல்லது கைவிடச் செய்த காலம் தொட்டு மரக்கறிகள் சந்தைகளில் வாங்கிவரப்பட்டு தூயநீரில் கழுவிப் படைக்கப்படுகின்றன. கத்தரிக்காய், வாழைக்காய், பூசணிக்காய், மரவள்ளிக்கிழங்கு, ஈரப்பலா, உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, வெண்டிக்காய், வெங்காயம், மிளகாய், கீரை, பசளிக் கீரை, தேசிக்காய் உள்ளிட்ட பல்வேறு மரக்கறிவகைகள் படைக்கப்படுகின்றன. இவற்றின் மீதும் நெல்லுப்பொரி தூவப்படும். இது புனிதமாக்கும் செயலாக இருக்கலாம். இதன்பின் வளுந்து வைக்கப்பட்டு மூன்று சிறங்கை அல்லது மூன்று சுண்டு என ஒற்றை இலக்கத்தில் குத்தரிசி இட்டு சோறு காய்ச்சப்படும். எவ்வளவு நேரம் சென்றாலும் சோறு ஆக்கப்பட்ட பின்புதான் படையல் வைக்கப்பட்ட மரக்கறிகளை எடுத்து, வெட்டிக் கறியாக்கும் வழக்கம் இன்றுவரை காணப்பட்டு வருகிறது. செவ்வாச்சியம்மனுக்கான படையலாக மிளகாய்த்தூள் இடப்பட்ட கறிவகைகள், மிளகாய்த்தூள் இடப்படாத வெள்ளைக் கறிவகைகள் என்பன படைக்கப்படுகின்றன. அப்பளம் உள்ளிட்ட பொரியல்களும் பசுநெய், தயிர் போன்றனவும் படைக்கப்படுகின்றன. அதன்பின் சாமை, தினை, வரகு, குரக்கன், பனமொடியல், நெல்லரிசி, கூப்பன்மா (கோதுமை மா) உள்ளிட்ட தானியங்களின் மாவை தனித்தனியாகக் குழைத்து (சில கோயில்களில் தேங்காய்ப் பூ, சீனி அல்லது சர்க்கரை போன்றவற்றையும் கலந்து) கையால் பிடித்து விரல்கள் பதிந்த பிடிக்கொழுக்கட்டை செய்து அதனை நீராவியில் அவித்துப் படைப்பர். இது முதலாம் மடை எனப்படுகிறது (பழவத்தை, திருமதி. தவராசா சாந்தகுணதேவி, வயது 67). செவ்வாச்சியம்மனுக்கான சிறப்பு உணவுப்பண்டமாக இக்கொழுக்கட்டையே எல்லாக் கோயில்களிலும் படைக்கப்படுகின்றது. இன்பிலன் செவ்வாச்சியம்மன் கோயிலில் பனங்கட்டிப்பாணி கலந்து கொழுக்கட்டை அவித்துப் படைக்கப்படுகின்றது (அப்புத்துரை இரகுநாதன், வயது 58). முதலாம் மடையில் ஆயிரம் மோதகம் அவித்துப் படைக்கும் வழக்கமும் காணப்படுகின்றது (திருமதி. கிருபாகரன் ரஜிதா, வயது 45, ஆண்டாவளை, கரணவாய்). பொங்கல் பொங்கப்படும். பலகாரங்கள் யாவும் படைக்கப்படுகின்றன. குறிப்பாகக் கொழுக்கட்டை, மோதகம் என்பனவற்றோடு உழுந்து வடை படைக்கப்படுகிறது. அதிலும் வடை படைப்போர் யாவரும் அதில் ஒரு மாலையினைக் கட்டி மூலத்திலிருக்கும் பானைக்கு மாலையாக இடுவர். செவ்வாச்சிக்கு பழப்படையல்களுள் பிரதானமாக வாழைப்பழமே படைக்கப்படுகிறது. சீப்புச்சீப்பாகக் வெட்டி, மூக்கு நாக்குத்தள்ளி (பழத்தின் முன்பகுதியை வெட்டி விடுதல்) படையலாக்குவர். அதேவேளை வருடாந்தம் பூசைக்காலத்தில் கிடைக்கக்கூடிய மா, பலா, விளாம்பழம், தோடம்பழம் போன்ற பழங்களையும் படைப்பர். பழங்களை வெட்டி தேன், நெய் கலந்து பஞ்சாமிர்தமாகப் படைக்கும் வழக்கமுண்டு, உடல் வெப்பத்தைத் தணிக்கச் சிறந்த பழச்சாறாக இது அமையும். இவ்வாலயங்களில் பலியிடும் வழக்கம் இல்லை. ஆனால் மட்ச – மாமிசப் படையல் படைக்கும் வழக்கம் காணப்படுகிறது. இவ்வழக்கம் இணுவில் பத்திரகாளி உள்ளிட்ட வேறு சில இடங்களிலும் காணப்படுகிறது. தெய்வத்துக்கு மரக்கறி (சைவம்) படையலிடும் இடங்களில் மட்ச – மாமிசப் படையல் இடுவது குறைவெனினும் செவ்வாச்சிக்கு இருபடையலும் இடும் வழக்கம் காணப்படுகிறது. செவ்வாச்சி அம்மனுக்கு காலை, மதியப் படையல்கள் நடைபெறுவது போல இரவு ஆறு மணிக்குப் பின்பே மட்ச – மாமிசப் படையல் நடைபெறும். ஆடு, கோழி போன்றவற்றின் இறைச்சி கறியாக்கப்பட்டுப் படைக்கப்படும். மாடு, முயல், பன்றி போன்றன தமக்குத் தெரியப் படைக்கப்படுவதில்லை எனக் கோயிலின் உரிமையாளர்கள் யாவரும் தெரிவித்தனர். அதேவேளை பலவகை மீன்கள் படைக்கப்படுகின்றன. மீன் தலையை சுட்டோ, பொரித்தோ படைப்பர். ஏனைய பகுதிகள் கறிக் குழம்பாக்கப்படுகின்றன. குறிப்பாக வாளைமீன் படையல் முதன்மை பெறுகிறது. மீன் பொரியல், சுட்ட கருவாடு என்பனவும் படைக்கப்படுகின்றன. சில கோயில்களில் சுறா வறை, திருக்கை வறை, நண்டு, இறால், கணவாய் போன்றனவும் படைக்கப்படுகின்றன. முன்பு தட்டுவத்தில் (பனையோலையால் முடையப்பட்ட தட்டு) தான் மட்சப்படையல் வைக்கப்பட்டு வந்தது. பிற்காலத்தில் வாழையிலையிலிலும் பனையோலைப் பாயிலும் சோறு குவிக்கப்பட்டு சுற்றிவர, மட்ச – மாமிசப் பண்டங்களை நிறையுணவாக இடுவர். நடுவில் அவித்த கோழி முட்டைகள் இடப்பட்டிருக்கும். பூசை நிறைவுற்றபின் படைக்கப்பட்ட அத்தனை உணவிலிருந்தும் சிறிதளவு எடுக்கப்பட்டு இளநீர் கோம்பைக்குள் இடப்பட்டு அதனை முச்சந்தியிலோ நாற்சந்தியிலோ வைக்கும் வழக்கமும் உண்டு. சோற்றோடு இவை யாவும் குழைக்கப்பட்டு திரணை திரணையாக யாவர்க்கும் இறை பிரசாதமாக வழங்கப்படும். இம் மட்ச – மாமிசப் படையலோடு கள், கருப்பணி, சாராயம் என்பனவும் படைக்கப்படுகின்றன. செவ்வாச்சியை வழிபடும் மக்கள் குலத்தினர் முன்பு சீவல்தொழிலை பிரதான தொழிலாகக் கொண்ட பள்ளர் சமூகத்தினராவர். தம் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த பனம் பொருட்களையும் சிறிது தூரத்தில் இருக்கும் கடலின் வழி பெறப்பட்ட கடலுணவையும், கால்நடைகளையும் தம் செம்பாட்டு நிலத்தில் விளையும் பொருட்களையும் செவ்வாச்சிக்குப் படையலாக இட்டு வந்தனர். கண்ணப்பர், காளத்தி நாதருக்குத் தான் தன் இனம் உண்ணும் உணவுகளையே உண்ணக் கொடுத்தமையை ஒத்த பண்பாட்டசைவே இதுவாகும். சமரபாகு செவ்வாச்சிக்கு 60 வருடங்களுக்கு மேல் சைவப்படையல் மட்டுமே படைக்கப்படுகிறது. நேர்த்திக்கடனும் படையலும் செவ்வாச்சியம்மனை வழிபடும் மக்கள், நோய் நொடி ஏற்படாதிருக்கவும், ஏற்பட்ட காலத்திலும், மேலும் வேலைவாய்ப்பு, கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காகவும், இத்தெய்வத்தின் கோயிலில் நேர்த்தி வைத்து, நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் காணப்படுகிறது. துவாரமுள்ள பானையை வாங்கி வழங்குதல், ஆலயத்திற்கு தேவையான எண்ணை, கற்பூரம் முதலியவற்றை வழங்குதல், கட்டடம் கட்டல் முதலானவையும் இடம்பெறுகின்றன. தேங்காய் நேர்ந்து ஆலயத்திலேயே வைத்துவிட்டுச் செல்வர். நேர்ந்த விடயம் நிறைவேறியபின் ஆலயத்திற்கு வந்து அத்தேங்காயை எடுத்து சிதறு தேங்காயாக உடைத்து நேர்த்திக்கடனைத் தீர்ப்பர். (1) குறித்த நபருக்கு அம்மாள் வருத்தம் வருமிடத்து செவ்வாச்சியிடம் நோய் நீக்கத்திற்காக நேருவர். நோய் நீங்கிய பின் மூலத்தில் உள்ள பானையில் கற்பூரம் ஏற்றி வழிபடுவர். பின்பு நீர்க்கஞ்சி காய்ச்சி அடியார்க்கு வழங்குவர். நீர்க்கஞ்சி என்பது குத்தரிசியோடு எல்லா வகை மரக்கறிகளையும் இட்டு அவித்து (மிளகாய்த்தூள் இடுவதில்லை) நீருணவாக வழங்கப்படுவதாகும். 2) ஏனைய நேர்த்திகள் – தமது விருப்பங்கள் நிறைவேறிய காலத்தில் முன்சொன்னது போல குத்தரிசியோடு மரக்கறிகளை ஒன்றாக இட்டு அவித்து (மிளகாய்த்தூள் இடுபவரும் உண்டு, இடாதவரும் உண்டு) குழைசாதமாக வழங்குவர். தவிர அன்னதானமாக கறி, சோறு ஆக்கி வழங்கும் வழக்கமும் உண்டு. துடக்குப் படையல் தமது காணிக்குள் இருக்கும் குலதெய்வமான செவ்வாச்சிக்கு தமது வீட்டில் சமைக்கும் சிறப்புணவைப் படையலிட்டு உண்ணும் வழக்கம் காணப்பட்டுள்ளது. வீட்டில் நடைபெறும் திருமணம், குடிபுகுதல் விழா போன்றவற்றோடு, பிள்ளைப்பேறு, சாமத்தியவீடு (பூப்புனித நிகழ்வு) என்பவற்றுக்கான சமையலில் இருந்து யாவற்றையும் எடுத்துத் தெய்வத்துக்குப் படைத்து வழிபட்ட பின்னரே தாம் உண்பர். அதிலும் குறிப்பாக அரைத்த கறியை (மட்ச, மாமிசமுமோ மரக்கறியோ எதுவாயினும்) செவ்வாச்சிக்குப் படைத்த பின்னரே குறித்த பெண்ணுக்கு உண்ணக் கொடுப்பர். நற்சீரகம், மிளகு, உள்ளி, மஞ்சள், வேர்க்கொம்பு அல்லது இஞ்சி, தேங்காய்ச் சொட்டு (சிலர் மல்லியும் சேர்த்துக் கொள்வர்) இடப்பட்டு பட்டுப்போல அம்மியில் அரைத்து அதனை இட்டு வைக்கப்படும் கறியே அரைத்த கறி எனப்படுகிறது. இதனைப் பிறசமூகங்களில் சாமத்தியம் அடைந்த சிறுமியும் பிள்ளை பெற்ற தாயுமே உண்ணுவர். அதாவது யாருக்காக அரைத்த கறி வைக்கப்பட்டதோ அவர் மட்டுமே உண்பர். மிஞ்சிய கறியைச் சில இடங்களில் நிலத்தை வெட்டி அதனுள் இட்டுப் புதைக்கும் வழக்கமும் உண்டு. இம்மக்களிடம் செவ்வாச்சிக்குப் படைத்ததன் பின்பே உண்ணும் வழக்கம் காணப்படுதல் இவ்வழிபாட்டின் தனித்துவம் எனலாம். அதேவேளை இன்பிலன் பிரதேச அம்மன் கோயிலில் மரணவீட்டு உணவை – படையலை இத்தெய்வத்துக்குப் படைத்த பின்பே உண்ணும் வழக்கம் இன்றும் காணப்படுகிறது. இது ‘துடக்குச் சாப்பாடு’ (தீட்டு உணவு) என்று கூறப்பட்டாலும், தெய்வத்துக்குப் படைக்கப்படுதல் தம் இன்பத்திலும் துன்பத்திலும் தெய்வம் துணையிருக்கும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடாகிறது. அதிலும் குறிப்பாக மரணம் நடந்து எட்டாம் நாள் இறந்தவரின் விருப்பத்திற்குரிய அனைத்து வகையான சுவைகளையும் உடைய உணவுப்பண்டங்கள், குடிபான வகைகள், சுருட்டு எனப் படைக்கப்படும் அனைத்தையும் இத்தெய்வத்துக்கு இன்றும் படைத்து வருகின்றனர். மற்றைய செவ்வாச்சி ஆலயங்களில் இவ்வழக்கம் இல்லை. முதல் விளைச்சலைப் படைத்தல் தங்கள் வீட்டு வளவில் – விவசாய நிலத்தில் விளைகின்ற முதல் விளைச்சலை இத்தெய்வத்துக்கே வழங்குவர். தேங்காய், மாங்காயிலிருந்து தோட்டத்தில் விளையும் மிளகாய், வெங்காயம் வரை இது பொருந்தும். அதேபோல சீவல்தொழில் செய்யும் ஒருவர் கள்ளிறக்கும் போது அதனை விற்க முன் சிறிது கள்ளை எடுத்து தெய்வத்தின் வாசலில் சிந்தும் வழக்கம் காணப்படுகிறது. அதேபோல பதநீர், கருப்பணி முதலியனவும் முதற் படையலாக்கப்படுகின்றன. பசு கன்று ஈன்ற பின் பாலைத் தாம் குடிக்கவோ விற்கவோ தொடங்கமுன் கறந்து தெய்வத்துக்கு அர்ப்பணமாக்குவர். அதேபோல கோழியின் முதல் முட்டையும் படையலாக்கப்படும். இத்தெய்வத்துக்கு முதல் விளைச்சலை வழங்காதுவிடின் விளைச்சல் அழிந்துவிடும், கள் வற்றிவிடும், பசுவில் பால் அற்றுப்போய்விடும் முதலான நம்பிக்கைகள் காணப்படுகின்றன. நிறைவாக ஈழத்துச் சூழலில் பெரும்பாலும் கல், சூலம், மரம் உள்ளிட்ட பொருட்களே வழிபடப்பட்டு வந்துள்ளன. வடமராட்சி செவ்வாச்சியம்மன், பூச்சி வடிவிலான தெய்வமாக வழிபடப்படுதல் தனித்துவம் வாய்ந்த வழிபாடெனினும், அது தொடர்பான தொன்மக்கதைகள் பேணப்படாமை துரதிர்ஷ்டமேயாகும். மக்கள் தாம் வாழும் சூழமைவை அடிப்படையாகக் கொண்டே வழிபாட்டு முறைமையையும் படையல், பாத்திரங்கள், பண்டங்கள் வரை அனைத்தையும் கட்டமைத்திருந்துள்ளனர். கால்நடை, கடலுணவு, தானியங்கள், மரக்கறிகள், பழங்கள் என பல்வகைச் சத்துணவுகளைப் படையலாக்கியுள்ளனர். வெப்பம் நிறைந்த சூழலில் வரும் அம்மன் வருத்தத்தின் நேர்த்திக்கடனாக நீர்க்கஞ்சியையும் குழைசாதத்தையும் வழங்கி வருகின்றனர். இது ஈழத்து வடபுல தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ற, குறித்த காலத்துக்கான சிறந்த உணவு என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இயந்திர வாழ்வினாலும் விலைவாசிகளாலும் படையல் பொருட்கள் குறைவடைந்து வருகின்றன. சாதிய நீக்கம், தொழில்சார் கௌரவம், கல்வி, பொருளாதார விருத்தி என்பவற்றால் பலர் சீவல்தொழில் செய்வதில்லை. பனம் பொருட் பயன்பாடும் குறைவடைந்து தட்டுவம், ஓலைப்பாய் என்பவற்றுக்குப் பதிலாக வாழையிலையும், பின்னர் இன்று பிளாஸ்ரிக், சில்வர் பொருட்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டாரியல் பண்பு மாறாத வழிபாடாக இன்றும் மக்களால் மக்களுக்காகவே ஜனநாயகப் பண்போடு பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றதாக செவ்வாச்சியம்மன் வழிபாடு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.ezhunaonline.com/worship-of-goddess-sevvachi-amman/
-
அனர்த்த நிவாரண உதவிகளும் புவிசார் அரசியல் நலன்களும் — வீரகத்தி தனபாலசிங்கம் —
அனர்த்த நிவாரண உதவிகளும் புவிசார் அரசியல் நலன்களும் January 8, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — இயற்கை அனர்த்தத்தின் விளைவான அழிபாடுகளில் இருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் இடர்மிகுந்த சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கை மக்கள் புதிய வருடத்திற்குள் பிரவேசித்திருக்கிறார்கள். இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றுமே கண்டிராத படுமோசமான 2022 பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு பொருளாதாரத்தை நிலையுறுதிப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டு வந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுவந்த ஒப்பீட்டு அளவிலான முன்னேற்றத்தை ‘டித்வா’ சூறாவளி மறுதலையாக்கியிருக்கிறது. மக்களின் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி அநுரா குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் பதவிக்காலத்தின் முதல் வருடத்தைக் கடந்து வந்திருக்கும் நிலையில், இயற்கை அனர்த்தத்தின் விளைவாக சமாளிக்க முடியாத கடமைப் பொறுப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும், சூறாவளியின் பாதிப்புக்களை முன்கூட்டியே தணிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதையும் அனர்த்தத்துக்கு பின்னரான நிவாரண உதவிப் பணிகளிலும் புனரமைப்பு நடவடிக்கைகளிலும் காணப்படும் குறைபாடுகளையும் கண்டனம் செய்து கொண்டிருக்கும் எதிரணிக் கட்சிகள், தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு ஆட்சி முறையில் அனுபவமும் தகுதியும் இல்லை என்று ஏற்கெனவே முன்வைத்து வந்த விமர்சனத்தை மேலும் தீவிரப்படுத்தியிருக்கின்றன. பரந்தளவிலான கலந்தாலோசனையின் அடிப்படையிலான தீர்வுகளை வேண்டி நிற்கும் அரசியல், பொருளாதார நெருக்கடிகளாக இருந்தாலென்ன, இயற்கையின் சீற்றம் ஏற்படுத்தும் பேரழிவாக இருந்தாலென்ன தேசிய அனர்த்தங்களின்போது சகல தரப்புகளையும் அரவணைக்கும் அணுகுமுறை மூலமாக நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியுடன் அரசியல் சக்திகள் செயற்பட முன்வராத சாபக்கேடான கலாசாரம் ஒன்று இலங்கையில் ஆழமாக வேரூன்றிவிட்டது. 2024 ஆகஸ்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்ட வேளையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை குறித்து எதிரணி அரசியல்வாதிகள் அக்கறை காட்டிய போதிலும், அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு நம்பகத்தன்மை கொண்ட காரணங்களை அவர்களினால் முன்வைக்க முடியவில்லை. அதேபோன்றே சூறாவளியின் விளைவான நெருக்கடியையும் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை திருப்புவதற்கு பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பமாக நம்பியதில் அவர்கள் மீண்டும் தவறிழைத்துவிட்டனர். அதேவேளை, சகல தரப்புகளையும் ஈடுபடுத்தி அழிபாடுகளில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கான பணிகளை முன்னெடுப்பதில் அரசாங்கமும் அக்கறை காட்டவில்லை. நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி, அரசாங்கத்தின் அணுகுமுறையில் உள்ள பாரதூரமான குறைபாட்டை தெளிவாக அம்பலப்படுத்துகிறது. அந்த செயலணியில் அரசாங்கத் தரப்பைச் சாராத சகல உறுப்பினர்களுமே அனர்த்த முகாமைத்துவத்தில் அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை கையாளுவதில் அனுபவத்தை அல்லது நிபுணத்துவத்தை கொண்டவர்கள் என்று அறியப்படவில்லை என்ற விமர்சனம் சிவில் சமூக அமைப்புகளிடம் இருந்து வந்திருக்கிறது. ஒரு இடதுசாரிக் கூட்டணியாக இருக்கின்ற போதிலும் கூட, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிவில் சமூக அமைப்புக்களுடன் ஊடாட்டங்களைச் செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடனேயே நடந்துகொள்கிறது. பல்வேறு விமர்சனங்களுக்கு பின்னர்தான் ஜனாதிபதி செயலணியில் குறைந்தபட்சம் சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியையாவது சேர்த்துக்கொள்வதற்கு அரசாங்கம் முன்வந்திருப்பதாக தெரியவருகிறது. கொள்கைகளை வகுக்கும் செயன்முறைகளில் பரந்தளவிலான தரப்புகளின் பங்கேற்பை குறிப்பாக, சிறுபான்மைச் சமூகங்களை திட்டமிட்ட முறையில் புறக்கணித்த கடந்தகால அணுகுமுறைகளின் விளைவாக நாடு அனுபவித்த அவலங்களில் இருந்து தேசிய மக்கள் சக்தி எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ள முயற்சிக்கவில்லை. ஆனால், சர்வதேச சமூகத்தைக் கையாளுவதில் முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த அணுகுமுறைகளின் விளைவாக தோன்றியதைப் போன்ற நெருக்கடிகள் தங்களுக்கு வராமல் இருப்பதை உறுதி செய்வதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகுந்த விவேகத்துடன் செயற்பட்டுவருகிறது. அமெரிக்கா மற்றும் மேற்குலக வல்லாதிக்க நாடுகளுடனும் ஆசியாவின் பெரிய நாடுகளுடனுமான உறவுகளில் ஒரு சமநிலையை அவர்கள் பேணுகிறார்கள். இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் சூறாவளியின் பாதிப்புக்களில் இருந்து மக்களை மீட்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளும் மேற்குலக நாடுகளிடமிருந்து இருந்து கிடைத்த எதிர்பார்த்திராத வகையிலான பேரளவு உதவிகளும் இதற்கு சான்று. குறிப்பாக, இந்தியாவுடனும் சீனாவுடனும் உறவுகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகவும் சாதுரியமாகக் கையாளுகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு (ஜே.வி.பி.) நீண்டகாலமாக இருந்து வரும் நெருக்கமான அரசியல் தொடர்புகளையும் அதன் கடந்தகால இந்திய விரோத நிலைப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது அதன் தலைமையிலான ஆட்சியில் புதுடில்லிக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பெய்ஜிங்குடனான உறவுகள் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சகல எதிர்பார்ப்புக்களையும் பொய்யாக்கி ஜனாதிபதி திசநாயக்கவின் அரசாங்கம் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணுகிறது. ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவிய உறவுகளை அன்றைய வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் ‘மாற்றியமைக்கமுடியாத அளவுக்கு மகோன்னதமானவை’ என்று வர்ணித்தார். ஆனால், இன்று திசநாயக்கவின் ஆட்சியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை எவ்வாறு வர்ணிப்பது என்றே தெரியவில்லை. இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கும் வல்லாதிக்க நாடுகள் முண்டியடித்துக்கொண்டு ஓடிவந்ததை இந்து சமுத்திரத்தில் புவிசார் நலன்களின் மறைமுகமான ‘காட்சிப்படுத்தல்’ என்று கூறமுடியும். அனர்த்த நிவாரண உதவிகளை வழங்குவது ஒரு நல்லெண்ணச் செயற்பாடு மாத்திரமல்ல, இராஜதந்திர நகர்வுமாகும். நிவாரண உதவிகளை வழங்குவதற்கு கிடைத்த வாய்ப்பை வல்லாதிக்க நாடுகள் கொழும்புடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டன. இலங்கையில் அனர்த்தங்கள் நிகழ்கின்ற வேளைகளில் எல்லாம் முதலில் உதவிக்கு விரைகின்ற நாடான இந்தியா இந்த தடவை கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள் சகிதம் அதிவிசேடமான அக்கறையை வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக கொழும்புக்கு வந்து இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான உதவித்திட்டத்தை அறிவித்தார். அவர் ஊடாக மோடி ஜனாதிபதி திசநாயக்கவுக்கு கொடுத்தனுப்பிய கடிதத்தில் ‘இலங்கையின் பக்கத்தில் இந்தியா எப்போதும் நிற்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார். ஜெய்சங்கரின் விஜயத்தின்போது அறிக்கை ஒன்றை வெளியிட்ட திசநாயக்க ‘இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் இது ஒரு புதிய யுகம்’ என்று வர்ணித்திருந்தார். ஜெய்சங்கர் புதுடில்லி திரும்பிய உடனடியாக சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மத்திய குழுவின் உறுப்பினர் வாங் ஜுன்ஷெங் தலைமையிலான உயர்மட்டத் தூதுக்குழு ஒன்று இலங்கை அரசாங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஒட்டுமொத்தமாக நோக்கும்போது கேந்திரமுக்கியத்துவ போட்டிக்குரிய ஒரு பிராந்தியத்தில் தங்களது செல்வாக்கை மீளஉறுதிப்படுத்திக் கொள்வதற்கு இந்த சந்தர்ப்பத்தை வல்லாதிக்க நாடுகள் பயன்படுத்திக் கொண்டன. இலங்கையை போன்று காலநிலை மாற்றத்தின் விளைவான இயற்கை அனர்த்தங்களினால் அடிக்கடி பாதிக்கப்படும் ஆபத்தைக்கொண்ட நாடுகள், சகல நாடுகளுடனும் நல்லுறவைப் பேணவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், வெளிநாட்டு உதவிகளில் தங்கியிருக்கும் போக்கு அதிகரிக்கும்போது வல்லாதிக்க நாடுகளின் புவிசார் அரசியல் போட்டாபோட்டியின் மைதானமாக மாறுகின்ற ஆபத்தும் அதிகரிக்கிறது. உதவிகளைப் பெறுகின்ற அதேவேளை, முக்கியமான நாடுகளுடனான உறவுகளில் சமநிலை ஒன்றைப் பேணுவது என்பது மிகவும் சிக்கலான ஒரு காரியமாகும். ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச சமூகத்தை நம்பியிருக்கும் இலங்கை, இயற்கையின் சீற்றத்தின் அழிபாடுகளில் இருந்து மீட்சிபெறுவதற்கும் வெளிநாட்டு உதவிகளிலேயே தங்கியிருக்க வேண்டியிருப்பதால் வல்லாதிக்க நாடுகளின் புவிசார் அரசியல் நலன்களுக்குள் சிக்கிக் கொள்வதை தவிர்க்க முடியாமல் போகலாம். இதுகாலவரை அந்த நாடுகளுடனான உறவுகளில் பேணிவந்த சமநிலையை தொடர்ந்தும் பேணுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் இயலுமாக இருக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். இதனிடையே, நாட்டுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவருவதில் அரசாங்கத்தினால் போதியளவுக்கு கவனம் செலுத்துவதற்கு அவகாசம் கிடைக்குமா? https://arangamnews.com/?p=12578
-
சீனாவின் கடன் வலையில் முழுமையாக சிக்கிய பங்களாதேஷ்!! இலங்கையை விட நிலைமை மோசமாகியுள்ளது
சீனாவின் கடன் வலையில் முழுமையாக சிக்கிய பங்களாதேஷ்!! இலங்கையை விட நிலைமை மோசமாகியுள்ளது Mano ShangarJanuary 9, 2026 12:27 pm 0 பங்களாதேஷ் இப்போது பொருளாதார அழுத்தத்தில் மட்டுமல்ல, சீனாவின் கடன் பொறியிலும் ஆழமாக சிக்கியுள்ளது. நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், அந்நாட்டு உயர் அதிகாரிகள் கூட நாடு கடன் பொறியில் விழுந்துவிட்டதாக ஒப்புக்கொள்கிறார்கள். விவசாயம் மற்றும் கல்வி போன்ற அடிப்படைத் துறைகளின் கடன் சேவைச் செலவுகளை விடக் கடன் சேவைச் செலவுகள் அதிகமாகிவிட்டதால், கொள்கை முடிவுகளுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட நீக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, பங்களாதேஷ் இப்போது இலங்கையை விட மோசமான பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் வலையில் சிக்கித் தவிக்கும் பங்களாதேஷ் பங்களாதேஷ் ஏற்கனவே கடனில் சிக்கியுள்ளது என்றும், உண்மையை தொடர்ந்து புறக்கணித்தால் பொருளாதார மீட்சி சாத்தியமற்றது என்றும் அந்நாட்டு தேசிய வருவாய் சபைத் தலைவர் எம். அப்துர் ரஹ்மான் கான் கூறியுள்ளார். 2016 ஆம் ஆண்டு சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியில் இணைந்த பின்னர் பங்களாதேஷின் கடன் சுமை வேகமாக அதிகரித்தது. சீனாவிடமிருந்து 40 பில்லியன் டொலர் வரை நிதி உறுதிமொழிகளை பங்களாதேஷ் எதிர்பார்க்கிறது. இதில் கூட்டுத் திட்டங்களில் 14 பில்லியன் டொலர்களும் அடங்கும். இதன் விளைவாக, நாட்டின் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 34 சதவீதத்திலிருந்து 39 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. உலக வங்கியின் சர்வதேச கடன் அறிக்கை 2025 இன் படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் பங்களாதேஷின் வெளிநாட்டுக் கடன் 42 சதவீதம் அதிகரித்து தோராயமாக 105 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. வெளிநாட்டுக் கடன் இப்போது நாட்டின் ஏற்றுமதி வருவாயில் தோராயமாக 192 சதவீதமாக உள்ளது, அதே நேரத்தில் ஏற்றுமதிகளில் தோராயமாக 16 சதவீதம் கடன் திருப்பிச் செலுத்துவதற்கு மட்டுமே செலவிடப்படுகிறது. புலம்பிக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் இலங்கை ஏற்கனவே சர்வதேச அளவில் கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது. அதேபோல், பாகிஸ்தான் இன்னும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவிலும் சீனாவின் சுமார் 30 பில்லியன் டொலர் கடனிலும் தவித்து வருகிறது. பங்களாதேஷ் உடனடியாக அதன் கடன் வாங்கும் கொள்கை, சீன திட்டங்களின் நம்பகத்தன்மை மற்றும் கடன் விதிமுறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் கடுமையான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தாவிட்டால், அதன் பொருளாதாரக் கதை இலங்கையை விட வேதனையானது மற்றும் பாகிஸ்தானை விட நீடித்த ஒரு சோகமாக மாறும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். https://oruvan.com/bangladesh-is-completely-caught-in-chinas-debt-trap/
-
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி!
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி! Mano ShangarJanuary 9, 2026 10:17 am 0 கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை எட்டோபிகோக்கில் லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காலை ஒன்பது மணிக்குப் பின்னர் இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் டிக்சன் சாலை பகுதிக்கு அவசர உதவியாளர்கள் அழைக்கப்பட்டனர். இஸ்லிங்டனில் தெற்கே பயணித்த வாகனம், டிக்சனில் மேற்கு நோக்கிச் செல்ல வலதுபுறம் திரும்பும்போது, வீதியை கடக்க முயன்ற பெண் மீது லொறி மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் குறித்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விபத்து குறித்து மேலதிக தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். https://oruvan.com/a-woman-from-jaffna-died-in-an-accident-in-canada/
-
ஸ்கார்பரோ வாழ் தமிழர் மீது தாக்குதல்; கனடாவிலிருந்து இலங்கை வரை இயக்கப்பட்ட சதி!
ஸ்கார்பரோ வாழ் தமிழர் மீது தாக்குதல்; கனடாவிலிருந்து இலங்கை வரை இயக்கப்பட்ட சதி! கனடா – ஸ்கார்பரோ ஐயப்பன் ஆலய குருசாமி , யாழ்ப்பாணம் அனலைதீவில் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவமானது கனடாவிலிருந்து இயக்கப்பட்ட சதி என ‘Toronto Star பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. ஸ்கார்பரோ ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தின் முன்னாள் தலைவரே இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் என ‘Toronto Star’ கூறியுள்ளது. கனடா ஐயப்பன் ஆலய குருசாமி இலங்கையில் வைத்து அடித்துக் கொல்லப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கனடாவைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவருக்குத் தொடர்பிருப்பதாக இலங்கை காவல்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளதாக ‘Toronto Star’ குறிப்பிட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் ஸ்கார்பரோ ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தின் குருசாமி, சொந்த ஊரான யாழ்ப்பாணம் அனலைதீவுக்கு சென்றிருந்த போது அங்கே ஒரு கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் கிட்டத்தட்ட அடித்துக் கொல்லப்படும் தருவாயில் இருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணையில் வெளியான தகவல்கள் இந்தக் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கெனவே நான்கு பேர் இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ஐந்தாவது மற்றும் முக்கிய சந்தேக நபராக கனடாவில் வசிக்கும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ‘Toronto Star’ குறிப்பிட்டுள்ளது. ஆலய நிர்வாகம் மற்றும் அதிகாரப் போட்டி தொடர்பான விரோதமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் கனடாவில் ஆலய நிர்வாகத்தில் ஏற்பட்ட பிணக்குகள் கடல் கடந்து இலங்கையில் வன்முறையாக மாறியிருப்பது புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. https://akkinikkunchu.com/?p=355426
-
மட்டக்களப்பிற்கான உள்நாட்டு வானூர்தி சேவையை மீண்டும் ஆரம்பம்.!
மட்டக்களப்பிற்கான உள்நாட்டு வானூர்தி சேவையை மீண்டும் ஆரம்பம்.! ஜனவரி 09, 2026 இரத்மலானையில் இருந்து மட்டக்களப்பிற்கான உள்நாட்டு வானூர்தி சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு, ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளின் ஆலோசனைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி இந்த இணக்கத்தை வெளியிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இதேவேளை, பாலையடிவட்டை கிராமத்திலுள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டும் என்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு அமைய, 12 பேர்ச் காணியை விடுவிக்கவும் இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இது போதுமானதல்ல என சுட்டிக்காட்டியதையடுத்து, முழு காணியையும் விடுவிப்பதற்கான ஆய்வினை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அத்துடன் மட்டக்களப்பு வானூர்தி நிலைய வீதியை மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மாநகர சபைக்கு விடுவிப்பதற்கான அனுமதியை வழங்கும் அறிவித்தலை, மட்டக்களப்பு வான் படையினருக்கு வழங்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். https://www.battinatham.com/2026/01/blog-post_09.html
-
லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள்; நீதிக்கான போராட்டம் தொடர்கிறது
லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள்; நீதிக்கான போராட்டம் தொடர்கிறது 09 Jan, 2026 | 05:05 AM ( செ.சுபதர்ஷனி) 'சண்டே லீடர்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமையுடன் (ஜனவரி 8, 2026) 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அமரர் லசந்த விக்ரமதுங்கவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை (8) பொரளை பொது மயானத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி அத்திட்டிய பகுதியில் வைத்து லசந்த விக்ரமதுங்க கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். ஊழல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த அவரது இழப்பு, இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்கு விழுந்த பெரும் அடியாகக் கருதப்படுகிறது. 17 ஆண்டுகள் கடந்தும், இந்தப் படுகொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் அன்நாரது குடும்பத்தினர், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதன்போது கருத்துத் தெரிவித்தவர்கள், கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நீதியை நிலைநாட்டுவதாக உறுதியளித்த போதிலும், விசாரணைகள் மந்தகதியிலேயே உள்ளதாகக் கவலை வெளியிட்டனர். லசந்த விக்ரமதுங்க தொழில்முறை சட்டத்தரணியாவதுடன், ஊடகத்துறையில் நுழைவதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீவிர அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவராவார். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். பின்னரே முழுநேர ஊடகவியலாளராகத் தன்னை மாற்றிக்கொண்டு, 1994 இல் லால் விக்ரமதுங்கவுடன் இணைந்து 'சண்டே லீடர்' பத்திரிகையைத் தொடங்கினார். அத்தோடு லசந்த விக்ரமதுங்க மாத்திரமன்றி இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள போதும், அவற்றில் ஒரு வழக்குக் கூட முழுமையாக விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். அவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், யுனெஸ்கோ அவருக்கு 'உலக ஊடக சுதந்திர விருது' வழங்கி கௌரவித்தது. சர்வதேச ஊடக நிறுவனம் (IPI) அவரை உலகின் 50 துணிச்சலான ஊடகவியலாளர்களில் ஒருவராக அறிவித்தது. இதேவேளை, லசந்தவின் துணிச்சலான எழுத்துக்களும், அவர் எழுதிய "And Then They Came For Me" எனும் தலையங்கமும் இன்றும் உலகளவில் ஊடகப் போராட்டத்தின் அடையாளமாகப் போற்றப்படுகின்றன. கடந்த வாரம் கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்களை நினைவுகூரும் அருங்காட்சியகம் ஒன்றில் லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் உருவச்சிலைகள் திரைநீக்கம் செய்யப்பட்டன. அரசியல்வாதிகளால் செய்ய முடியாதவாறு, வடக்கு மற்றும் தெற்கு மக்களை இவ்வாறான ஊடகப் போராளிகளின் தியாகம் ஒன்றிணைத்துள்ளமையை இது சுட்டிக்காட்டுகிறது. பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தும், லசந்தவின் குடும்பத்தினர் இன்றும் சர்வதேச ரீதியில் நீதிக்காகப் போராடி வருகின்றனர். எதிர்வரும் காலத்திலாவது இந்தப் படுகொலைக்கான உண்மையான சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் என ஊடக அமைப்புகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/235566
-
முள்ளிக்குளம் மக்களின் காணிகளை விடுவிக்க கடற்படை இணக்கம் – ஜனாதிபதி அறிவிப்பு
முள்ளிக்குளம் மக்களின் காணிகளை விடுவிக்க கடற்படை இணக்கம் – ஜனாதிபதி அறிவிப்பு 09 Jan, 2026 | 12:33 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) முள்ளிக்குளத்தில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளதுடன், எதிர்வரும் 15ஆம் திகதி மன்னாருக்கு வருகை தரும்போது குறித்த முள்ளிக்குளம் காணிவிடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் - சிலாவத்துறை பிரதேசசெயலாளர்பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தினை விடுவிப்புச்செய்வதுடன், தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்வதற்கு காத்திருக்கும் முள்ளிக்குளம் கிராமமக்களை மீள்குடியமர்த்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்திய நிலையில் இ முள்ளிக்குளத்தில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு எதிர்வரும் 15ஆம் திகதி தாம் மன்னாருக்கு வருகைதரும்போது குறித்த முள்ளிக்குளம் காணிவிடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதியினாலும் பதில் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றக்கட்டடத் தொகுதியில் புதன்கிழமை (8) ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மன்னார் - சிலாவத்துறை பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமம் மீள்குடியமர்த்தப்படவேண்டுமென ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு முள்ளிக்குளம் மக்களின் நிலமைகள் தொடர்பிலும் முள்ளிக்குளம் கிராமத்தில் வாழ்ந்த 400வரையான குடும்பங்கள் கடந்ந 1990ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தனர். அதன்பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு 300வரையான குடும்பங்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறியதுடன், அதில் 150வரையான குடும்பங்களுக்கு வீடுகளும் அமைத்துக்கொடுக்கப்பட்டிருந்தன என்பதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். இதேவேளை அசாதாரண சூழ்நிலை காரணமாக மீண்டும் கடந்த 2007ஆம் ஆண்டு முள்ளிக்குளம்கிராம மக்கள் மீளவும் தமது பூர்வீக வாழ்விடத்திலிருந்து இடம்பெயர்ந்தபோதிலும் இதுவரை அந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை என்பதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு எம்.பி துரைசாரா கொண்டுவந்துள்ளார். இத்தகைய சூழலில் முள்ளிக்குளம் கிராமமக்கள் அயற் கிராமங்களான காயாக்குழி மற்றும் மலைக்காடு ஆகிய கிராமங்களில் பலத்த சிரமங்களுடன் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதையும், கடந்த 2002ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின்போது முள்ளிக்குளத்தில் அந்த மக்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடுகளில் தற்போது கடற்படையினரது குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் குறித்த கூட்டத்தில் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் முள்ளிக்குளத்தில் இயங்கிவரும் பாடசாலைக்கும் அங்குள்ள பரலோக மாதா தேவாலயத்திற்கும் மலைக்காடு,காயாக்குழி கிராமங்களில் தங்கியுள்ள முள்ளிக்குளம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட மக்களும், மாணவர்களும் சென்று வருகின்றார்கள் என்பதையும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரது ஆக்கிரமிப்பிலுள்ள குடியிருப்புக்காணிகள், தோட்டக்காணிகள்,வயற்காணிகள்,குளங்கள், கடற்றொழிலுக்காக மீனவர்களால் பயன்படுத்தப்படும் இறங்குதுறைகள் என எவையும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்பதையும் இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். எனவே தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேறுவதற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கும் முள்ளிக்குளம் கிராம மக்களை உடனடியாக மீளக் குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் அக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த கடற்படை அதிகாரி, முள்ளிக்குளத்தில் ஒருபகுதிக் காணி மக்களுடைய காணிகள் என தம்மால் அறியமுடிவதாகத் தெரிவித்ததுடன், அந்த மக்களுடைய காணிகளை விடுவிக்கக்கூடிய நிலையிருப்பதாகவும் தெரிவித்தார். கூடிய விரைவில் முள்ளிக்குளத்தில் கடற்படையினரின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதுதொடர்பான முடிவுகள் தம்மால் அறிவிக்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதி தாம் மன்னாருக்கு வருகைதரவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அவ்வாறு மன்னாருக்கு வருகை தரும்போது முள்ளிக்குளம் காணிவிடுவிப்புத் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/235562