Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. பெலிசிற்றா : ஜே.கே ஜே.கே ஏழு பதினொன்றுக்கு வரவேண்டிய தொடருந்து தாமதமானதால் பயணிகள் மேடை அலுவலகப் பணியாளர்களாலும் பாடசாலை மாணவர்களாலும் நிறைய ஆரம்பித்தது. தலைக்கு பீனித் தொப்பி, கழுத்துச்சால்வை, முழங்கால்வரை நீளும் குளிர் ஜாக்கட், சுடச்சுடக் கோப்பி என அத்தனை போர்வைகளையும் மீறிக் குளிர் அவர்களை உறைய வைத்துக்கொண்டிருந்தது. இந்தக் குளிரிலும் காற்சட்டை அணிந்து மேலே வெறுமனே ஒரு சுவெட்டரை மாத்திரம் மாட்டியிருக்கும் மாணவர்களைப் பார்த்து பெலிசிற்றா பொறாமைப்பட்டாள். அவர்களில் பலரும் இந்திய நிறத்தைச் சூடியவர்கள். சிலருக்குச் சீனத்து முகம் இருந்தது. பெலிசிற்றா அவுஸ்திரேலியாவுக்கு வந்த இந்த நாற்பது வருடங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றம் இது. இந்த நிலத்தில் வாழ்ந்த ஆதிக்குடிகளைப் பின்னாளில் வந்த வெள்ளையர்கள் வடக்குக்கும் மத்திய உலர் நிலங்களுக்கும் துரத்தியடித்து துறைமுக நகரங்களை நிர்மாணித்தார்கள். இப்போது புதிய குடியேறிகள் வந்து அதே நகரங்களை ஆக்கிரமித்து வெள்ளையர்களை நாட்டுப்புறங்களுக்குத் துரத்திவிடுகிறார்கள். இன்று அத்தனை பெரு நகரங்களும் பல்வேறு நிறங்களாலும் கடவுள்களாலும் நிரம்பிக்கிடக்கின்றன. தொடருந்துக்குள் ஏறினால் அரபிக்கும் மலையாளமும் மண்டரினும் சத்தமாகக் கேட்கிறது. கறி வாசமும் வியற்நாமிய இஞ்சிப்புல்லும் கமகமக்கிறது. தொடருந்திலேயே இரவு உணவுக்குத் தேவையான வெங்காயமும் உருளைக்கிழங்கும் வெட்டிக்கொண்டிருக்கும் இந்தியப்பெண்களின் தரிசனம் கிட்டுகிறது. பெலிசிற்றா நாட்டுக்கு வந்த காலத்தில் அவள் தொடருந்துக்குள் ஏறினால் அத்தனை வெள்ளைக்காரர்களும் தாம் வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்திலிருந்து தலை நிமிர்த்தி இவளை நோட்டம் விடுவார்கள். இவள் தம் அருகில் வந்து அமர்ந்துவிடுவாளோ என்ற சுழிப்பு ஒரு கணம் அவர்கள் முகத்தில் தோன்றி மறையும். ஆனால் எதிர் இருக்கையில் உட்காரும்போது சிறு புன்னகையை உதிர்க்கவும் மறக்கமாட்டார்கள். சில வயதானவர்கள் பேச்சும் கொடுப்பார்கள். எப்படி இருக்கிறாய் இளம் பெண்ணே என்று அவளை முதன்முதலாகத் தொடருந்தில் விளித்த தாத்தாவின் முகம் பெலிசிற்றாவுக்கு இன்னமும் கண்களில் நிற்கிறது. இப்போது எல்லோரும் காதுகளில் சத்தமாகப் பாடல்களைக் கேட்டபடி செல்பேசியில் முகம் புதைத்திருக்கிறார்கள். தாம் அமர்ந்திருக்கும் தொடருந்துப் பெட்டிக்குள் ஒரு கொலை நிகழ்ந்தால்கூட சமூக வலைத்தளங்களினூடாகத்தான் இவர்கள் அறிந்துகொள்கிறார்கள். பெலிசிற்றாவின் மூச்சுக்காற்று வைத்தியசாலை விடுதியின் யன்னல் கண்ணாடி எங்கும் புகாராய்ப் படர்ந்தது. கண்ணாடியைத் துடைத்துவிட்டு ஹைடில்பேர்க் தொடருந்து நிலையத்தை அவள் தொடர்ந்து விடுப்புப் பார்க்க ஆரம்பித்தாள். கடைசியில் அந்தப் பஞ்சாபிப் பெண்ணைக் கண்டுவிட்டாள். அவள் தன்னுடைய மகளை அவசர அவசரமாக இழுத்துக்கொண்டு தொடருந்து நிலையத்தை நோக்கி ஓடுவது தெரிந்தது. காலையின் அவதிக்கு இன்னமும் பழக்கப்படாத பதட்டம் அவளிடமிருந்தது. இப்படித்தான் ஒவ்வொரு நாளும் அவள் பரபரப்புடன் தாமதமாக அவ்விடம் ஓடிவருவாள். அண்மையில் வந்த குடியேறியாக இருக்கவேண்டும். அவளுடைய கணவன் அதிகாலையிலேயே வேலைக்குச் செல்லவேண்டிய தொழிற்சாலையில் பணி புரியலாம். அல்லது வாடகை வண்டி, பார ஊர்தி ஓட்டுபவனாக இருக்கலாம். இவளும் பாவம், காலையிலேயே எழுந்து, தேநீர் ஊற்றி, எல்லோருக்கும் உணவு சமைத்து, மகளைக் குளிப்பாட்டி, உடை அணிவித்துத் தயார் செய்து, பள்ளிக்குக் கொண்டுபோய் அவளை விட்டுவிட்டு, பின்னர் தானும் ஒரு குழந்தைகள் காப்பகத்திலோ அல்லது கடையொன்றுக்கோ வேலைக்குச் செல்லவேண்டியிருக்கலாம். இந்தியாவிலாவது இந்தப்பெண் வீட்டில் மாத்திரம்தான் குத்தி முறிந்திருப்பாள். பாவம், இங்கு கூடுதலாக வேலைக்கும் சென்று தேயவேண்டியிருக்கிறது. பெரும் சத்தத்தோடு ஹோர்னை அடித்துக்கொண்டு, தொடருந்து சரியாகப் பதினைந்து நிமிடங்கள் தாமதமாக நிலையத்தை வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் நெருக்கியடித்துக்கொண்டு உள்ளே ஏறினார்கள். பெலிசிற்றா மெல்பேர்னுக்கு வந்த புதிதில் இந்த அவசரங்கள் எவரிடத்திலும் இருக்கவில்லை. உள்ளிருக்கும் பயணிகள் வெளியே இறங்கும்வரைக்கும் பொறுமை காத்து, அத்தனை பேரையும் பரஸ்பரம் குசலம் விசாரித்தபடி, சாவகாசமாகத்தான் புதிய பயணிகள் உள்ளே ஏறுவார்கள். தொடருந்தும் அதுவரைக்கும் பொறுமையாகக் காத்து நிற்கும். இப்போது எல்லோருக்கும் சுடுது, மடியைப் பிடி என்கின்ற அவசரம். என்றோ ஒரு நாள் அவர்களும் பெலிசிற்றாவைப்போல, நேரத்தைப் போக்க வழி தெரியாமல், ஏதேனும் ஒரு வைத்தியசாலை நோயாளர் விடுதி யன்னலுக்குள்ளால் ஊரைப் புதினம் பார்க்கும் அவலம் வரும்வரைக்கும் அந்த அவசரம் அவர்களைப் பீடித்துக்கொண்டேயிருக்கும். பெலிசிற்றாவும் ஒரு காலத்தில் அப்படி ஓடிக்கொண்டிருந்தவள்தான். இருபத்திரண்டு வயதில் அவுஸ்திரேலியாவுக்கு ஓடி வந்து, அகதியாகி, ஆங்கிலம் பேசத் தெரியாது தடுமாறி, கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து, கடைசியில் மார்சியாவின் புண்ணியத்தால் இரட்சணிய சேனையில் நிரந்தர வேலைக்கு இணையும்வரைக்கும் பெலிசிற்றா இந்த நாட்டில் நூறு மீற்றர் வேக ஓட்டம்தான் ஓடிக்கொண்டிருந்தாள். உழைப்பது, சிக்கனமாக வாழ்ந்து காசு சேர்ப்பது. சேர்த்த காசை மொத்தமாக வீட்டுக்கு அனுப்புவது என்பவைதான் அவளது வாழ்வின் இலட்சியங்களாக இருந்தன. அவளின் வீட்டில் எப்போதுமே காசுக்கான தேவை இருந்துகொண்டேயிருந்தது. தங்கைகள் அடுத்தடுத்து சாமத்தியப்பட்டார்கள். உறவுக்காரர்களுக்குத் திருமணங்கள் முற்றாகின. அம்மாவின் கருப்பையை அகற்றவேண்டி வந்தது. இப்படி ஏதும் அவசரத் தேவைகள் இல்லை என்றால் உடனே வீட்டின் கிடுகுக்கூரையைப் பிரித்து ஓடு விரிக்கவேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு வந்துவிடும். சொந்தமாகப் பசுமாடு வாங்கி வளர்த்தார்கள். திடீரென்று மூத்த தம்பி, பதினெட்டு வயது ஆன கையோடு கூடப்படித்த பெண்ணைக் கர்ப்பமாக்கிக்கொண்டு வந்து நின்றான். பெலிசிற்றாவுக்கு ஊரிலிருந்து வந்த கடிதங்கள் எல்லாவற்றிலும் கவலைகளே நிறைந்திருந்தன. நீ ஆன தீனி உண்கிறாயா? நீ வாழும் வீடு எப்படி? உன் நண்பர்கள் எப்படி? அந்த ஊர் எப்படி? குளிரா? வெயிலா? மழையா? என்ன வேலை செய்கிறாய்? எப்படி வேலைக்குப் போகிறாய்? ம்ஹூம். இவை எவற்றையுமே அக்கடிதங்கள் கேட்பதில்லை. நீ நலமாக இருக்கக் கர்த்தரைப் பிரார்த்திக்கிறேன் என்கின்ற முதல் வரிக்கு அப்புறம் எல்லாமே அவர்களின் கவலைகளும் பிரச்சனைகளும்தான். அவள் நலத்தை மட்டும் கர்த்தர் கையில் ஒப்படைத்துவிட்டுத் தம் நலத்துக்கு பெலிசிற்றாவிடம் இறைஞ்சும் சுயநலவாதிகள். எப்படி இருக்கிறாய் இளம்பெண்ணே என்று அவளை ஆதரவுடன் விசாரித்த, பெயரே தெரியாத அந்தத் தாத்தாவின் கரிசனைகூட எப்படி அவளது குடும்பத்தில் இல்லாமல் போனது? தம் குடும்பத்தின் மூத்த பெண், இருபத்திரண்டு வயதில் வீட்டை விட்டுப் போய், திக்குத் தெரியாத ஒரு ஊரில் தனியாக, பேசிப்பழக மனிதர் இன்றி, வாய்க்குச் சுவையான உணவு இன்றி, எந்தப் பிடிப்பும் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து தவிக்கிறாளே என்கின்ற ஒரு சின்னக் கவலைகூட அந்தக் கடிதங்களுக்கு இருந்ததில்லை. அவளுமே அதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொண்டதில்லை. ஊர்ச்செய்திகள் எல்லாம் உயிரிழப்பையும் உடைமைச் சேதத்தையும் இடப்பெயர்வுகளையும் சுமந்துவரும்போது, ஊரின் கவலைகளோடு ஒப்பிடுகையில் தன்னுடைய கவலை என்று எதுவுமே இல்லை என்றுதான் அவள் நினைத்திருந்தாள். ஆனால் இப்போது எண்ணிப்பார்க்கையில் என்ன இருந்தாலும் அவள் கவலை அவளுக்கானது அல்லவா என்றே தோன்றுகிறது. மொத்தக்குடும்பமும் அவளது உழைப்பில் குளிர் காய்ந்தது என்னவோ உண்மைதானே? அதற்கான குறைந்தபட்ச நன்றியுணர்வுகூட எப்படி அவர்களிடத்தில் இல்லாமற்போனது? தொடருந்து புறப்பட முன்னரேயே அந்தப் பஞ்சாபிப்பெண் மகளுக்குக் கையசைத்து விடைகொடுத்துவிட்டு அவசர அவசரமாக நிலையத்தை விட்டு வெளியேறினாள். நடக்கும்போதே தன் செல்பேசியை எடுத்து யாருடனோ பதற்றத்துடன் பேச ஆரம்பித்தாள். பணியிடத்தின் முகாமையாளராக இருக்கவேண்டும். இப்படியே பேசிக்கொண்டு நேராகப் பேருந்துத் தரிப்பிடத்துக்குச் செல்வாள். இரண்டு வண்டிகள் வைத்திருக்கும் வசதி இன்னமும் அந்தக்குடும்பத்தில் வந்திருக்காது. அவளின் காலத்துக்கு இன்று பேருந்தும் தாமதமாகியது. அவள் தரிப்பிடத்து இருக்கையில் உட்கார்ந்து, கைகளை விசுக்கி விசுக்கி யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். ஊரிலிருந்து வந்த அழைப்பாக இருக்கலாம். நடுச்சாமத்தில் தூக்கம் வராத வயோதிபர் யாராவது அவளுக்கு அழைப்பெடுத்து ஊர்க்கதைகளைச் சொல்லக்கூடும். அல்லது வீட்டில் பெரும் சண்டை நிகழ்ந்து மனிதர்கள் சாமம் கழிந்தும் தூங்காமல் இருப்பார்கள். எங்காவது சாவு விழுந்திருக்கலாம். அவர்கள் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டின் மேசன் ஒழுங்காக வேலைக்கு வராமல் ஏமாற்றலாம். தங்கைக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும். அம்மாவின் புற்று நோய் கீமோதெரபிக்குப் பணம் தேவைப்பட்டிருக்கலாம். இவளிடம் பணம் கேட்பதற்கு ஊர் ஆயிரம் அவசரங்களை உருவாக்கிக்கொள்ளும் என்று பெலிசிற்றாவுக்குத் தோன்றியது. இவளோடு ஒப்பிடுகையில் பெலிசிற்றாவின் நிலையாவது பரவாயில்லை எனலாம். எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வெறுங் கடிதங்கள் மாத்திரமே அவளுக்கு வந்துகொண்டிருந்தான். வீட்டிலிருந்து மாதத்துக்கு ஒரு கடிதம் வரும். சண்டை ஏதாவது ஆரம்பித்துப் பாதை மூடப்பட்டுவிட்டால் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து நான்கைந்து கடிதங்கள் ஒன்றாக வந்து சேரும். ஒருமுறை மொத்தமாக எட்டுக் கடிதங்கள் வந்து குவிந்தன. மூன்று கடிதங்கள் மாமாவிடமிருந்து. இரண்டு பெரியம்மாவிடமிருந்து. இரண்டு அவள் வீட்டிலிருந்து. அவள் படித்த ஆரம்பப் பள்ளியிலிருந்துகூடக் கடிதம் வந்திருந்தது. எல்லாமே பணம் கேட்டுத்தான். அவளைவிட இளையவளான மச்சாளுக்குச் சீதனம் கொடுக்கவேண்டும். பள்ளிக்குக் கக்கூஸ் கட்டவேண்டும். தம்பியின் மகனுக்குப் பிறந்தநாள் என்றுகூடக் கூசாமல் காசு கேட்டிருந்தார்கள். ஊரிலிருந்து அழைப்பிதழ்கள் வந்தாலே எரிச்சல்தான் ஏற்படும். இந்தப்பெண்ணுக்கு முப்பது தாண்டுகிறதே, ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்யவேண்டும் என்று எவருக்குமே தோன்றியதில்லை. மலை அட்டைகள். இரத்தம் குடிக்கும் மலை அட்டைகள். ஒரு அட்டை அவள் முழங்காலில் கடித்து, முட்ட முட்டக் குடித்துக் கழன்று விழுவதற்குள் இன்னொரு அட்டை அவளது தொடைவரை ஏறிவிட்டிருக்கும். ஏக சமயத்தில் ஏழெட்டு அட்டைகள்கூட இரத்தம் குடிப்பதுண்டு. அதுவும் வலிக்காமல் உடலைக் குதறி எடுக்கும் வித்தை தெரிந்த அட்டைகள். இனி போதும் என்று அவையே தாமாக விழுந்தபின்னர்தான் இரத்தம் கசிவது இவளுக்குத் தெரியவரும். அவளும் விசரிபோல இது எதுவும் புரியாமல் தேயிலைக் கொழுந்துகளைப் பறித்துக்கொண்டேயிருந்திருக்கிறாள். ஒரு நாள் உடைகளை எல்லாம் கழட்டி உதறி, அம்மணமாகி, அத்தனை அட்டைகளையும் கொடுக்கோடு பிடுங்கி எறிந்துவிட்டு வெற்றிலை எச்சலை அட்டை கடித்த இடத்தில் துப்பி எல்லாவற்றையும் தலை முழுகியிருக்கவேண்டும். வந்த கடிதங்களைப் பிரிக்காமலேயே கிழித்துப்போட்டிருக்கவேண்டும். யாருக்கும் சொல்லாமல் முகவரியை மாற்றி நிம்மதியாகத் தன் உறவுகளிடமிருந்து தப்பித்திருக்கவேண்டும். ஆனால் ஏனோ அதை அவள் செய்யவில்லை. ஏதோ ஒரு புள்ளியில் அவர்களின் இருப்பு அவளுக்கு வேண்டியிருந்தது. அவள்மீதான அவர்களின் கவனக் குவிவும் வேண்டியிருந்தது. அந்தக் கடிதங்களை அவள் உள்ளூர ரசிக்கவே செய்தாள். அவளின்றி அந்தக் குடும்பங்கள் எப்படித் தப்பிப்பிழைக்கும் என்ற எண்ணம் அவளுக்குச் சிறு திருப்தியைக் கொடுத்தது. அதுவும் இல்லையெனில் இந்தப் பிரபஞ்சத்தில் அவள் எப்போதோ காணாமற்போயிருக்கக்கூடும். தன்னையே எரித்து எரித்து ஒளி கொடுத்தாலும் பூமி இல்லாமல் சூரியனுக்கு இருப்பு ஏது? பெலிசிற்றாவின் இரத்தத்தை உறிஞ்சவாவது சில அட்டைகள் அவளது கால்களில் ஒட்டிக்கிடக்கின்றன அல்லவா? செல்பேசிச் சத்தம் பெலிசிற்றாவின் சிந்தனையைக் கலைத்தது. எடுத்துப்பார்த்தாள். அம்மாதான் சிறுநீர் கழிக்கவென எழுந்திருக்கிறார். ஊர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமரா கண்டுபிடித்துச் செய்தி அனுப்பியிருந்தது. பெலிசிற்றா கமராவை அழுத்தி அம்மாவின் அறையையே பார்த்துக்கொண்டிருந்தாள். இருட்டில் கமராவின் சன்னமான வெளிச்சத்தில் அம்மாவின் படுக்கை கொஞ்சமே தெரிந்தது. மெலிந்து, தளர்ந்து, கருவறையில் சுருண்டுகிடக்கும் நிறைமாசக் குழந்தையைப்போல அந்தத் தொண்ணூற்றைந்து வயது மனிசி குறண்டிக்கொண்டு படுத்திருந்தது. நுளம்புகள் பல கமராவின் வெளிச்சத்தில் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து திரிந்தன. அவை உறிஞ்சுவதற்கு அம்மாவிடம் சொட்டு இரத்தம்கூட இருக்குமா என்ற சந்தேகம் பெலிசிற்றாவுக்கு வந்தது. நுளம்புகளின் கடியை உணரும் சக்தியைக்கூட அம்மா இழந்துவிட்டிருக்கக்கூடும். மின்விசிறி சுற்றிக்கொண்டிருந்தாலும் நுளம்புகள் எப்படியோ நெருங்கி வந்துவிடுகின்றன. வீட்டுச்சுவர்களிலுள்ள மேல் ஓட்டைகளுக்கு வலை அடிக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் மாலையில் வீட்டை நன்றாகப் பூட்டி உள்ளே புகைபோடுமாறு வேலைக்காரப் பெண்ணிடம் சொல்லவேண்டும். பல நாட்களாக அம்மா ஒரே சேலையைத்தான் அணிந்திருக்கிறார். அவரை இந்த வாரம் குளிப்பாட்டவும் இல்லை என்று தெரிந்தது. பாதிரியாரை அழைத்து வந்து செபம் செய்யக்கேட்டது. அதுவும் நிகழவில்லை. பெலிசிற்றாவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. மாசமாசம் பணம் மட்டும் வங்கியில் விழவேண்டும். ஆனால் வேலைக்காரி சொன்ன வேலையைச் செய்யமாட்டாள். இதுதான் மாசச் சம்பளம். நீ இந்திந்த வேலைகள் செய்யவேண்டும் என்று பேசித்தீர்த்தாலும் காரியங்கள் நிகழுவதில்லை. காசையும் கொடுத்து, கெஞ்சிக்கேட்டு வேலை செய்விக்கும் அவலம் எங்கள் ஊரில் மாத்திரமே நிகழக்கூடிய ஒன்று. பெலிசிற்றா இப்போது வீட்டிலிருந்த ஏனைய கமராக்களையும் அழுத்திப்பார்த்தாள். சமையலறையில் பாத்திரங்கள் எதுவும் கழுவப்படாமல் அப்படியே கிடந்தன. ஹோலில் மின்விசிறி தனியாகத் தேவையின்றி ஓடிக்கொண்டிருந்தது. வெளி வாசற்படியில் ஜிம்மி சுருண்டு தூங்கிக்கொண்டிருந்தது. நினைவு தெரிந்து அவர்களது வீட்டு நாய்களுக்கு ஜிம்மி என்றே பெயரிட்டு வந்தார்கள். பெலிசிற்றா சிறுமியாக இருந்தபோது ஒரு கறுத்த ஜிம்மி அவர்களோடு வாழ்ந்து வந்தது. இடது பக்கப் பின்னங்கால் ஊனமான நாய் அது. அவள் நினைவுக்குக் குட்டை பிடித்துப்போன, வயதான அந்த ஜிம்மியின் முகந்தான் இன்னமும் படிந்திருக்கிறது. அது இறந்ததும் புதைத்துவிட்டு ஒரு பிரவுண் கலர் நாய்க்குட்டியை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார்கள். அந்த ஜிம்மிதான் பெலிசிற்றாவின் உற்ற நண்பி. இருவரும் சேர்ந்தே விளையாடி வளர்ந்தார்கள். ஐந்தாறு வருடங்கள் கழித்து அது லொறி ஒன்றில் மோதி இறந்துவிட வேறொரு ஜிம்மி வீட்டுக்கு வந்தது. அது ஒரு பொமனேரியன். அவளுடைய சாமத்திய வீட்டுக்குப் பரிசாக சாக்காரியா பாஃதர் கொடுத்தது. பெலிசிற்றா ஊரை விட்டுக் கிளம்பும்வரைக்கும் அந்த ஜிம்மிதான் வீட்டிலிருந்தது. பின்னர் அவள் அவுஸ்திரேலியா வந்த பிற்பாடு இரண்டு ஜிம்மிகள் வீட்டுக்கு வந்து, வளர்ந்து, இறந்துவிட்டன. ஒரு ஜிம்மி இடம்பெயர்வோடு காணாமற்போய்விட்டது. இப்போது இருக்கும் ஜிம்மிக்கு மூன்று வயதாகிறது. வேலைக்காரப்பெண்தான் கொண்டுவந்து அதை வீட்டில் விட்டவள். பெடியன் நாய். வெள்ளையும் பிறவுனும் கலந்த ஊர்ச்சாதி. செல்பேசியில் பேசும்போது ஜிம்மியையும் காட்டுமாறு அந்தப்பெண்ணிடம் பெலிசிற்றா கேட்பதுண்டு. இவள் இந்தப்பக்கமிருந்து ஜிம்மி என்றால் அது சன்னமாகத் தன் வாலை ஆட்டும். டேய் ஜிம்மிக் குட்டி என்றால் மின்விசிறிபோல வால் சுழலும். பெலிசிற்றாவுக்குச் சிரிப்பு வந்தது. கமராவில் ஜிம்மியையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஜிம்மி அவ்வப்போது நுளம்புகள் கடிக்கும்போது எழுந்து, விசனத்தில் வாலை அடித்து அவற்றைக் கடிக்க முயன்றது. பெலிசிற்றா செல்பேசிக் கமரா செயலியிலிருந்த ஒலிவாங்கியை அழுத்தி ஜிம்மி என்று சொல்லிப்பார்த்தார். ஜிம்மி சற்றே காதுச்சோனைகளை நிமிர்த்திப்பார்த்துவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தது. டேய் ஜிம்மிக்குட்டி. ஜிம்மி இப்போது எழுந்து நின்று கமராவைப் பார்த்து வாலை ஆட்டியது. ஜிம்மி, என்ர செல்லமே. நீயாவது என்னை நல்லா ஞாபகம் வச்சிருக்கிறாய். ஜிம்மி சின்னதாகக் குரைத்து வாலை ஆட்டிவிட்டு மீண்டும் தூங்கப்போனது. இத்தனைக்கும் ஜிம்மியை பெலிசிற்றா நேரில் கண்டதில்லை. அவுஸ்திரேலியாவுக்கு வந்ததற்கு ஒரே ஒருமுறைதான் பெலிசிற்றா ஊருக்குப் போயிருக்கிறாள். அதுவும் பத்து வருடங்களுக்கு முன்னர் அவளது தம்பியின் மகனுக்குத் திருமணம் என்று போனது. ஊர் எப்போதுமே நினைவுகளில் சுகத்தையும் நேரிலே கசப்பையும்தான் அவளுக்குக் கொடுத்ததுண்டு. இந்தப்பயணத்திலும் வழமையான குசல விசாரிப்புகள் முடிந்து மூன்றாம் நாளே அது ஆரம்பித்துவிட்டது. உன்னால் இந்தக் குடும்பமே அவமானப்பட்டுவிட்டது என்ற பழைய பல்லவியையே பாடினார்கள். இரண்டாவது தங்கையான திரேசமேரியும் அவள் கணவனும் அவர்களது குடும்பத்திலேயே அரச உத்தியோகம் பார்ப்பவர்கள். அதனால் குடும்பத்தின் பெரிய முடிவுகளை எல்லாம் திரேசமேரியே எடுத்துக்கொள்வாள். பெலிசிற்றாவின் செய்கைகளால் ஊருக்குள் தான் தலையே காட்ட முடிவதில்லை என்று அவள் புலம்ப ஆரம்பித்தாள். குடும்ப மானத்தைக் கப்பலேற்றிவிட்டாள் என்றாள். திருமணத்தன்று பெலிசிற்றா முன் இருக்கையில் அமர்ந்தால் தான் பின்னாலே சென்றுவிடுவேன் என்று மிரட்டினாள். இதனால் பெலிசிற்றா தேவாலயத்திற்குச் செல்வதையே தவிர்க்க நேர்ந்தது. பெண் பிள்ளையைத் தனியாக விமானமேற்றி வெளிநாட்டுக்கு ஏற்றும்போதும் அவள் கற்றை கற்றையாகக் காசு அனுப்பும்போதும் போகாத பொல்லாத மானம். பாஃதர் செய்த அசிங்கத்துக்கும் அவளைத்தான் குற்றம் சொன்னார்கள். முப்பத்திரண்டு வயதில் ஒரு ஆணோடு இணைந்து வாழ்ந்தபோதும் குறை கண்டார்கள். மரியதாஸ் செய்த காரியம் என்னவென்றே தெரியாமல் வசை பாடினார்கள். தம் முகம் குரூரமாகத் தெரிந்தால் கண்ணாடியை வையும் மூடர் கூட்டம். பெலிசிற்றா வீதியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். வாசற்படிக்கருகே ஐந்தாறு குடி தண்ணீர் பிடிக்கும் கலன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வீதிக்கு அடுத்த பக்கம் நின்ற ஜாம் மரத்தில் யாரோ கொடி கட்டி உடுப்புக் காயப்போட்டிருந்தார்கள். அம்மாவின் சேலைகளும் உள்ளாடைத் துணிகளும்தான் அவை. உடுப்புக் காயப்போடக்கூட வசதியற்ற, குச்சுக் காணி முழுதும் கட்டப்பட்டிருந்த குட்டி வீடு அது. வாசல் கதவைத் திறந்தவுடன் வீதி வந்துவிடும். விசாலமான முற்றமுள்ள ஒரு காணிக்குள் வீடு கட்டி வாழவேண்டுமென்று அம்மா பெலிசிற்றாவிடம் புலம்பிக்கொண்டேயிருப்பார். ஆனால் இருந்த ஐந்தடி முற்றத்தையும் வீதி அகலமாக்கவென மாநகரசபைக்கு அழுததுதான் ஈற்றில் நிகழ்ந்தது. நினைத்திருந்தால் பக்கத்துக் காணியையும் வாங்கி, பெரிய முற்றத்தோடு ஒரு வீட்டினை ஊரில் அவள் கட்டியிருக்கமுடியும். இந்த வயதில் ஒரு தனிக்கட்டைக்கு எதற்குப் பெரிய வீடு என்று நினைத்து அப்படியே விட்டுவிட்டாள். ஊரின் வீடு அவளுக்கு நல்ல நினைவுகளைக் கொடுத்ததேயில்லை. வீட்டைத் துறப்பதற்கான மனநிலைதான் இறப்புக்குத் தயாராவதற்கான முதல்படி என்று அடிக்கடி பெலிசிற்றா தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுண்டு. அடுத்த தொடருந்தின் ஹோர்ன் சத்தம் கேட்கவும், பெலிசிற்றா செல்பேசியை வைத்துவிட்டு மறுபடியும் யன்னலுக்கு வெளியே பராக்குப் பார்க்க ஆரம்பித்தாள். பேருந்துத் தரிப்பில் நின்றிருந்த அந்தப் பெண்ணை இப்போது காணவில்லை. இன்று அவள் தாமதமாகத்தான் வேலைக்குப் போகப்போகிறாள். மேலதிகாரியிடம் ஏச்சு வாங்கவேண்டியிருக்கும். ஒரு மணி நேர ஊதியம்கூட வெட்டுப்படலாம். பெலிசிற்றாவுக்கு அம்மாவின் ஞாபகம்தான் மீண்டும் வந்தது. மனிசியும் காலையிலேயே எழுந்து, தண்ணீர் பிடித்துவந்து, பால் வாங்கி, எல்லோரையும் எழுப்பித் தேநீர் ஊற்றிக்கொடுத்துவிட்டு தேவாலயத்துக்கு ஓடிவிடும். அங்கே காலைத் திருப்பலிக்கு முன்னர் தேவாலயத்து மண்டபத்தையும் முற்றத்தையும் கூட்டிப் பெருக்கி, தண்ணீர் தெளித்து, பாஃதர் தொழுகையை ஆரம்பித்ததும் அவசர அவசரமாக வீட்டுக்குத் திரும்பி, காலை உணவு செய்து, கணவனைத் தொழிலுக்கு அனுப்பி, பெலிசிற்றாவையும் அவளது ஆறு சகோதரர்களையும் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு, பின்னர் கொஞ்சங்கூட ஓய்வு எடுக்காமல் கிடுகு பின்னும் வேலைக்குப் போய், மதியம் மறுபடியும் வீட்டுக்கு வந்து உணவு ஆக்கி, பிள்ளைகள் ஒவ்வொருவராய் பாடசாலை முடிந்து வீடு திரும்ப, சாப்பாடு கொடுத்து, மாலையில் மீண்டும் தேவாலயம் சென்று பாஃதரின் வீட்டைத் துப்புரவாக்கி, அவருக்குச் சமையல் செய்து, கணவன் இரவு வீடு திரும்பும் முன்னர் தான் வந்து வீட்டைக் கூட்டி, இரவு உணவு ஆக்கி என்று அம்மாவின் ஒரு நாள் பொழுதை யோசிக்கவே பெலிசிற்றாவுக்கு மூச்சு முட்டியது. பாவம் மனிசி. குடும்பத்துக்காக உழைத்துக் காய்ந்து கருவாடு ஆனதைத்தவிர வேறு சுகங்கள் எதனையும் அம்மா அனுபவித்து அறியாதவர். அடுத்தடுத்து ஏழு பிள்ளைகள். அதுகூட கசிப்பு நெடியுடன் தினமும் இரவு வீட்டுக்கு வருகின்ற ஐயோவோடான உறவின் பயன் எனும்போது பெலிசிற்றாவுக்குத் தாயின்மீது கழிவிரக்கமே ஏற்பட்டது. அம்மாவின்மீது பெலிசிற்றாவுக்குக் கோபம் ஏதுமில்லை. வெறும் ஆதங்கம்தான். உறவுகள் யாரும் பெலிசிற்றாவைப் புரிந்துகொள்ளவில்லை என்பதைக்கூட மன்னித்துவிடலாம். அவர்கள் தாம் வாழும் சமூகத்தின் சூழ்நிலைக் கைதிகள். ஆனால் அம்மா அப்படியல்லவே. அம்மாவைப் புரிந்துகொண்டவள் பெலிசிற்றா மட்டும்தானே. இருவருக்குமிடையேயான இரகசியங்கள் அவர்களை மேலும் நெருக்கமாக அல்லவா பிணைத்திருக்கவேண்டும்? ஆனால் அம்மா மேலும் மேலும் பெலிசிற்றாவிடமிருந்து விலகியல்லவா சென்றார்? திரேசமேரியுடன் சேர்ந்து அம்மாவும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினார். பாஃதரைப்பற்றிய பேச்சு எழுந்தபோது அம்மாவின் முகத்தில் சிறு குற்ற உணர்வாவது தென்படும் என்று அவள் தேடினாள். ஆனால் அம்மா திரேசமேரிக்கும் மேலே நின்று சதிராடினார். இப்போதெல்லாம் மனிதர்கள் குற்றவுணர்வுகளுக்குப் பாவ மன்னிப்புகள் கேட்பதில்லை. எதிரே நிற்பவரிடத்தில் அந்தக் குற்றத்தைச் சுமத்திவிடுகிறார்கள். அம்மா அதைத்தான் செய்தார். எந்தத் திரேசமேரியை நம்பி அம்மா பெலிசிற்றாவை இகழ்ந்தாரோ அதே திரேசமேரி அம்மாவைத் தனியாக விட்டுவிட்டு இரண்டே வருடங்களில் கனடாவுக்கு ஓடிவிட்டாள். குழந்தை, குடும்பம் என்றில்லாமல் தனியாக வாழ்கின்ற பெலிசிற்றாதான் அம்மாவைக் கவனிக்கவேண்டும் என்று வேறு திரேசமேரி பெலிசிற்றாவுக்குச் சொல்லியிருந்தாள். வணக்கம் பெலிசிற்றா? எப்படி இருக்கிறீர்கள்? கதவைத் திறந்துகொண்டு தாதிப்பெண் உள்ளே வந்தாள். இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் கருவியின் பட்டையை பெலிசிற்றாவின் கையில் சுற்றினாள். வணக்கம் பீனா, இன்னமும் ஷிப்ட் முடித்து வீட்டுக்குப் போகவில்லையா? நான் பீனா இல்லை. பியாட்றிஸ். பீனா இந்தியன் அல்லவா, மறந்துவிட்டீர்களா? பெலிசிற்றாவுக்குக் குழப்பமாக இருந்தது. ஏனோ அவர் நினைவில் இந்த இத்தாலிய தாதிப்பெண்ணின் பெயர்தான் பீனா என்று பதிந்திருந்தது. அதிருக்கட்டும். என்ன காலையிலேயே எழுந்து பராக்குப் பார்க்க ஆரம்பித்தாயிற்றுப்போல. இன்றைக்கு ஏனோ தெரியாது, ஏழு பதினொன்றுக்கு வரவேண்டிய ரயில் பதினைந்து நிமிடங்கள் தாமதமாகிவிட்டது பெலிசிற்றா யன்னலினூடாக ஹைடில்பேர்க் தொடருந்து நிலையத்தைக் காட்டினார். பியாட்றிசும் வெளியே எட்டிப்பார்த்தாள். ரயில் தாமதமா? இது ஒரு பெரிய விசயமா? மெல்பேர்னின் வானிலையைக்கூட எதிர்வு கூறிவிடமுடியும். ரயில் வரும் நேரத்தை மாத்திரம் எடை போடமுடியாது அந்தப் பஞ்சாபி மனிசி பாவம். ரயில் தாமதமாகியதால் பேருந்தையும் விட்டுவிட்டாள். இன்று அலுவலகத்தில் ஏச்சு வாங்கப்போகிறாள். பியாட்றிஸ் மறுபடியும் வெளியே எட்டிப்பார்த்தாள். பதினேழாம் மாடியிலிருந்து கீழே பார்க்கவே அவளுக்குத் தலையைச் சுற்றியது. எப்படித்தான் இவ்வளவு உயரத்திலிருந்து எல்லாவற்றையும் பார்க்கிறீர்களோ தெரியாது. வேண்டுமானால் டிவியைப் போட்டுவிடவா? வேண்டாம். காலையில் வேலைக்காரி வந்ததும் நான் சற்றுத் தூங்கப்போகிறேன். பியாட்றிஸ் கணம் யோசித்துவிட்டுப் பின்னர் புரிந்தவளாய்த் தலையாட்டினாள். ஓ, உங்களது ஶ்ரீலங்கன் வீட்டைச் சொல்கிறீர்களா? உங்கள் அம்மா எப்படி இருக்கிறார்? கமரா வேலை செய்கிறதா? படுக்கை ஈரமாகிக் காய்ந்தும் விட்டது. ஆனால் வேலைக்காரப்பெண் இன்னமும் வரவில்லை. பல தடவை அழைப்புகள் எடுத்துவிட்டேன். பதில் இல்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை அங்கு இப்போது நடுச்சாமம் அல்லவா? காலையில் எழுந்ததும் உங்களுக்கு அழைப்பு எடுப்பார்கள். நீங்கள் நிம்மதியாக இருங்கள். பியாட்றிஸ் ஆதரவாக பெலிசிற்றாவின் முடியைத் தடவிவிட்டார். அந்தப் பிரிவில் பணி புரியும் அத்தனை பேருக்கும் பெலிசிற்றாவின் குடும்ப இரகசியங்கள் தெரிந்திருந்தன. சரி, நீங்கள் பாத்ரூம் போகப்போகிறீர்களா? நான் உதவி செய்யவா? பெலிசிற்றா தயங்கினார். என்னால் எழுந்து நடக்கமுடியும் என்று தோன்றவில்லை. கொள்கலனைத் தரமுடியுமா? வர வர பெலிசிற்றாவுக்கு சோம்பல் அதிகரித்துவிட்டது. பியாட்றிஸ் செல்லக்கோபத்துடன் பெலிசிற்றாவின் கன்னத்தைத் தட்டிவிட்டு, மூத்திரக் கலனை எடுத்துவந்து அவரின் உடையை விலக்கி உள்ளே அணைத்து வைத்தாள். முடித்ததும் கூப்பிடுங்கள், நான் பக்கத்துப் படுக்கையிலிருக்கும் எலீனைப் பார்த்துவிட்டு வருகிறேன். பெலிசிற்றா பெருமூச்சு விட்டபடியே செல்பேசியில் வீட்டுக் கமராவைப் பார்த்தபடி இருந்தாள். அம்மாவின் படுக்கையில் மறுபடியும் ஈரம் கொஞ்சம் கொஞ்சமாகக் கசிய ஆரம்பித்திருந்தது. 000 ஜேகே தற்சமயம் எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் அத்தியாயங்களுள் ஒன்று இந்தப் “பெலிசிற்றா”. இரு வேறு நிலங்களின் பிறழ்வுகளுக்கிடையில் சிக்கித்தவிக்கும் நம் சக மனிதர்களின் வாழ்வினைப் புரிந்துகொள்ளும் சிறு முனைப்பை இந்நாவல் செய்கிறது. ஜே.கே அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் ஜே.கே, ‘படலை’ என்ற வலைத்தளத்தில் தொடர்ச்சியாக எழுதிவருபவர். இவர் எழுதிய ‘என் கொல்லைப்புறத்து காதலிகள்’ நூல் நல்ல கவனிப்பை பெற்றது. சமாதானத்தின் கதை என்ற சிறுகதைத்தொகுப்பும், கந்தசாமியும் கலக்சியும் என்ற நாவலும் இதுவரை அச்சுப்பதிப்பாக வெளிவந்து வரவேற்பைப் பெற்றன. https://akazhonline.com/?p=8913
  2. ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிந்தது ஏன்? : சாய்ரா பானு விளக்கம்! Nov 24, 2024 14:54PM IST ஏ.ஆர். ரகுமான் விவாகரத்து அறிவித்ததை தொடர்ந்து, அவரது மனைவி சாய்ரா பானு ஆடியோ மூலம் இன்று (நவம்பர் 24) விளக்கம் அளித்துள்ளார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று அனைவராலும் கொண்டாடப்படும் இசையமைப்பாளராக உள்ளவர் இந்திய திரையுலகில் கோலோச்சுபவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். சமீபகாலமாக பிரபலங்களின் விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில், அதில் ஏ.ஆர். ரகுமானும் இணைந்தார். தனது 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே இவர்களது விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்கள் வெளிவந்து சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இதனையடுத்து அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கூறி ஏ.ஆர்.ரகுமான் சார்பில் அவரது வழக்கறிஞர் நர்மதா சம்பத், சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூடியூபர்களுக்கும் நேற்று நோட்டீஸ் அனுப்பி எச்சரித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக ஏ.ஆர். ரகுமான் குறித்து சாய்ரா பானு வெளியிட்டுள்ள இன்று ஆடியோ வெளியிட்டுள்ளார். உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் அவர்! அதில், “நான் சாய்ரா ரகுமான் பேசுகிறேன். இப்போது மும்பையில் தங்கி இருக்கிறேன். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், நான் இப்போது சென்னையில் இல்லை. ஏ.ஆர்.ரகுமான் மீது தயவு செய்து யாரும் அவதூறு பரப்பாதீர்கள். இந்த உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் அவர். அவர் போன்ற அற்புதமான ஒரு மனிதரை பார்க்க முடியாது. எனவே அவர் மீதான அனைத்து பொய்யான குற்றச்சாட்டுகளையும் நிறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சிகிச்சைக்காக மும்பை வந்துள்ளேன்! கடந்த சில மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை. அதற்காக நான் மும்பையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். இதன் காரணமாக தான் ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து கொஞ்ச காலம் நான் பிரேக் எடுத்துக் கொள்ள விரும்பினேன். ரகுமான் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள்! என் உடல்நிலை காரணமாக தான் இந்த பிரிவு. ஏ.ஆர்.ரகுமானின் பிசியான இந்த நேரத்தில் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என் குழந்தைகளையும் நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அவர் மீது நான் வைத்த நம்பிக்கை என் வாழ்வை விட பெரியது. அவர் அந்தளவு சிறந்த மனிதர். நான் அவரை அந்த அளவுக்கு நேசிக்கிறேன். சிகிச்சை முடிந்தவுடன் விரைவில் நான் சென்னை திரும்புவேன். அவர் பெயருக்கு தயவு செய்து யாரும் களங்கம் ஏற்படுத்தாதீர்கள். அவர் மிகச்சிறந்த மனிதர்” இவ்வாறு சாய்ரா பானு அதில் பேசியுள்ளார். https://minnambalam.com/cinema/why-did-she-break-up-with-a-r-rahman-saira-banu-explains/
  3. ஐபிஎல் 2025 ஏலத்தில் விற்கப்பட்ட வீரர்களின் முழுப் பட்டியல்! Nov 24, 2024 18:28PM IST IPL Auction : அடுத்தாண்டு நடைபெற உள்ள 18வது ஐபிஎல் தொடரை முன்னிட்டு சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள அபாடி அல் ஜோஹர் அரங்கத்தில் ஐபிஎல் மெகா ஏலம் இன்றும் (நவம்பர் 24), நாளையும் நடைபெறுகிறது. இதில் ரிஷப் பந்த், கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற முன்னணி இந்திய வீரர்களுடன் மொத்தம் மொத்தமாக 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் ஏலத்துக்காக 120 கோடி ரூபாய் செலவு செய்யலாம். இருப்பினும் அனைத்து அணிகளும் வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக கணிசமான தொகையை ஏற்கனவே பயன்படுத்தி விட்டதால் மீதமுள்ள தொகையுடன் ஏலத்தில் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில் இன்று மதியம் 4 மணிக்கு தொடங்கிய ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் வீரராக இந்தியாவைச் சேர்ந்த இளம் (25 வயது) வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் ரூ. 18 கோடிக்கு ஆர்.டி.எம். முறையை பயன்படுத்தி பஞ்சாப் கிங்ஸ் அணி. அதிகப்பட்சமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்தை ரூ. 27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஷ் அய்யரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும் வாங்கியுள்ளது. ஐபிஎல் 2025 ஏலத்தில் விற்கப்பட்ட வீரர்களின் முழுப் பட்டியல் : அர்ஷ்தீப் சிங்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 18 கோடி (ஆர்டிஎம்) ககிசோ ரபாடா: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 10.75 கோடி ஷ்ரேயாஸ் ஐயர்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 26.75 கோடி ஜோஸ் பட்லர்: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 15.75 கோடி மிட்செல் ஸ்டார்க்: டெல்லி கேப்பிடல்ஸ் – ரூ 11.75 கோடி ரிஷப் பந்த்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 27 கோடி முகமது ஷமி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 10 கோடி டேவிட் மில்லர்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 7.5 கோடி யுஸ்வேந்திர சாஹல்: பஞ்சாப் கிங்ஸ் – ரூ 18 கோடி முகமது சிராஜ்: குஜராத் டைட்டன்ஸ் – ரூ 12.25 கோடி லியாம் லிவிங்ஸ்டோன்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ரூ 8.75 கோடி கேஎல் ராகுல்: டெல்லி கேப்பிடல்ஸ் – ரூ 14 கோடி டெவான் கான்வே: சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ.6.25 கோடி ஹாரி புரூக்: டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ.11.75 கோடி https://minnambalam.com/sports/full-list-of-players-sold-in-the-2025-ipl-mega-auction/
  4. தமிழரசுக்கட்சியை வடக்கிலும் கட்டியெழுப்ப தயார்! தமிழரசுக்கட்சியினை வடக்கிலும் நாங்கள் கட்டியெழுப்ப தயாராகயிருக்கின்றோம். எங்களை அழைத்தால் அங்கு சென்று வடமாகாணத்திலும் தமிழரசுக்கட்சியை கட்டியெழுப்பவதற்கு தயாராகயிருக்கின்றேன் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். பொறுப்பினை தந்தால் தமிழரசுக்கட்சியை மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டியெழுப்பியதுபோன்று ஏனைய மாவட்டங்களிலும் கட்டியெழுப்ப தயாராகயிருக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடகிழக்கில் அதிகூடிய விருப்பு வாக்கினைப்பெற்று வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினராக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களுக்கு வரவேற்பளித்து கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முதலைக்குடா, முனைக்காடு பகுதியில் மக்களினால் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலைக்குடாவில் உள்ள ஆலயங்கள், கிராம அமைப்புகள், விளையாட்டுக்கழகங்கள் இணைந்து இந்த வரவேற்பினை வழங்கியது. இதேபோன்று முனைக்காடு பகுதியிலும் ஆலயங்கள்,கிராம அமைப்புகள், விளையாட்டுக்கழகங்கள் இணைந்து மாபெரும் வரவேற்பினை பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கியது. இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலானது ஒரு சவால் மிக்க தேர்தலாக அமையும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் மட்டக்களப்பில் பெரும் சவாலாக வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சிக்கு வீட்டு சின்னத்திற்கு ஒரே ஒரு ஆசனம் தான் கிடைக்கும் என பலராலும் பேசப்பட்டது. பலர் பல அச்சுறுத்தல்களை கொடுத்திருந்தார்கள் மட்டக்களப்பில் நீங்கள் ஒரு சில கொலைகார கட்சிகளை சேர்த்து எடுக்காவிட்டால் நீங்கள் இம்முறை ஒரு ஆசனத்தை பெறுவதும் கஷ்டமாக இருக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் மூன்று ஆசனங்களை தட்டி விட்டு செல்வார்கள் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் செல்ல போகின்றது என்று எல்லாம் கூறினார்கள் ஆனால் கடந்த நான்கு வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து மூளை முடுக்குகளுக்கும் சென்று மக்களோடு மக்களாக நின்றதன் காரணமாக என்னுடைய மனதில் தெரிந்திருந்தது நாங்கள் மட்டக்களப்பில் நிச்சயமாக நான்கு ஆசனங்கள் எடுக்கக்கூடிய அளவில் எமது ஆதரவு இருக்கின்றது என்பது எனக்கு தெரிந்து விடயம். இந்த நான்காவது ஆசனத்தை இழந்தது வெறும் 8,000 வாக்குகளினால் நான்காவது ஆசனம் பெறுவதற்கும் சில வழிகள் காணப்பட்டது. அந்த நான்காவது ஆசானம் பெற முடியாமல் போனது சில கட்சிக்குள்ளே இருக்கின்ற சிலர் அதாவது கட்சிக்குள் இருப்பவர்கள் என்பதை விட கட்சிக்கு எதிராக செயல்பட்டு என்னுடைய விருப்பு வாக்குகளை குறைக்க வேண்டும் என எடுத்த சில முன்னெடுப்புகளின் காரணமாகத்தான் அந்த 8,000 வாக்குகள் இல்லாமல் சென்றது அவர்கள் மௌனமாக இருந்திருந்தாலே 8,000 வாக்குகளுக்கு மேலதிகமாக கிடைக்கப் பெற்றிருக்கும். சில இடங்களுக்கு சென்று சாணக்கியனுக்கு வாக்கு செலுத்த வேண்டாம் என்று கூறியதனால் தான் அந்த இடத்திற்கு நான் சென்று இல்லை எனக்கு வாக்களிக்க வேண்டும் என நியாயப்படுத்தியதனால் வெளியில் இருக்கின்ற வாக்காளர்களை உள்ளே கொண்டுவர முடியாத சூழல் ஏற்பட்டது இல்லாவிட்டால் எமக்கு நான்கு ஆசனங்கள் கிடைக்கப்பெற்று. மட்டக்களப்பில் நாங்கள் மூன்று ஆசனங்களை எடுத்து வரலாறிலே ஒரு சாதனை ஒன்றினை படைத்திருக்கின்றோம் அது இந்த முனைக்காடு கிராமத்தில் வசிக்கின்ற மக்களது பெரும்பான்மையில்தான் செய்தோம் என்பதனை பகிரங்கமாக கூறுகின்றேன். கடந்த தேர்தலில் ஒரு கட்சி ஐந்து மாவட்டங்களிலும் போட்டி போட்டு கிட்டத்தட்ட 50 வேட்பாளர்கள் சேர்ந்து 65,000 வாக்குகள் தான் பெற்றார்கள் நான் மட்டக்களப்பில் தனித்து நின்று அதைவிட 200 வாக்குகள் அதிகமாக பெற்றிருக்கின்றேன் அவ்வளவு கட்சிகள் கூறினார்கள் அந்த கட்சி இந்த கட்சி அவர்கள் அவ்வாறு இவர்கள் இவ்வாறு என்று எல்லாம் கூறினார்கள் ஆனால் மக்கள் இம்முறை மக்களின் மனநிலை கொலை செய்தவர்கள், கொள்ளையடித்தவர்கள், கற்பழித்தவர்கள், கப்பம் வாங்கியவர்கள், தரகு வாங்கியவர்கள், மண் கடத்தியவர்கள் இவர்கள் அனைவரையும் நிராகரிக்க வேண்டும் என்று மக்கள் ஒரே அடியாக மட்டக்களப்பில் பார்த்தீர்கள் என்றால் வியாழேந்திரன், பிள்ளையான், கருணா, ஜனா, துறைரெட்னம் இவ்வாறு பெரிய பெயர்கள் இவர்கள் எல்லாம் 30 வருடங்களாக இந்த பிரதேசத்தில் பேசப்பட்ட பெயர்கள் முழு பெயரையும் மக்கள் துரத்தி விட்டார்கள். எமது கட்சியிலும் மூன்று ஆசனம் கிடைக்கப்பெற்றது எனது வாக்குகளினால் எமது கட்சியிலும் எனக்கு 65,000 வாக்குகள் எனக்கு அடுத்ததாக இருந்தவருக்கு 22,000 வாக்குகள் எனக்கு வழங்கப்பட்ட அந்த வாக்குகள் கிடைக்கப்பெறாமல் இருந்திருந்தால் எமது கட்சியிலும் ஒரு ஆசனம் தான் கிடைக்கப் பெற்றிருக்கும். ஆனால் நாங்கள் இதிலிருந்து முன்னோக்கி பயணிக்க வேண்டும் தமிழரசு கட்சியை தனித்துவமாக நாங்கள் பலப்படுத்த வேண்டும் எனக்கு மற்றய மாவட்டங்களை பற்றி கூற முடியாது எதிர்வரும் காலங்களில் அந்த பொறுப்பு தரப்பட்டால் ஏனைய மாவட்டங்களை இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தை கட்டி எழுப்பியது போல ஏனைய மாவட்டங்களையும் கட்டி எழுப்ப தயார். கிழக்கு மாகாணத்தில் கடந்த நான்கு வருடங்களாக நான் அம்பாறை, திருகோணமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பல சவால்களுக்கு முகம் கொடுத்தோம் அந்த மக்களோடு மக்களாக நின்று மக்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக செயல்பட்டோம் அதனால் தான் கிழக்கு மாகாணத்தில் அதிகளவு வாக்குகள் கிடைக்கப்பெற்று தமிழரசு கட்சிக்கு கிழக்கு மாகாணத்தில் ஐந்து ஆசனங்கள் கிடைக்கப்பெற்று இருக்கிறது. வடக்கையும் கட்டி எழுப்ப நாங்கள் தயார் வாருங்கள் என்று எம்மை அழைத்தால் அங்கும் சென்று வடக்கை கட்டி எழுப்ப நாங்கள் தயார் யாழ்ப்பாணத்திற்கும் வர தயார் வன்னிக்கு வருவதற்கும் தயார் அங்கும் வந்து மக்களுடன் மக்களாக நின்று தமிழரசு கட்சியை கட்டி எழுப்ப தயார். நாட்டில் ஜனாதிபதி அவர்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஆசனங்களை பெற்றுவிட்டார் நாங்கள் உண்மையில் எதிர்பார்த்தது 105 ஆசனங்கள் தான் கிடைக்கப்பெறும் என்று சிங்கள மக்கள் வாக்களித்ததை பற்றி நாங்கள் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனம் வன்னியில் இரண்டு ஆசனம் என்றால் சிங்கள மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்களா? அவர்கள் வழங்கியிருக்கின்றார்கள் ஆனால் நாட்டில் ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க வந்திருக்கின்றார் அவருடைய கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க பெற்று இருக்கின்றது என்பதனை நாங்கள் பெரிய ஒரு பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஜனாதிபதி என்னை பாராளுமன்றத்தில் சந்தித்தார் என்னைக் கண்டு வந்து சந்தித்து கையை கொடுத்து “மட்டக்களப்பை மாத்திரம் தான் என்னால் பிடிக்க முடியாமல் போனது” என்று கூறினார் நான் கூறினேன் பிரச்சனை இல்லை நான் தானே அதனை பிடித்து இருக்கின்றேன் என்று கொலைகாரனோ கொள்ளைக்காரனோ பிடிக்கவில்லை நான் தான் பிடித்திருக்கின்றேன் என்றேன் பிரச்சனை இல்லை நாங்கள் சேர்ந்து வேலை செய்வோம் என கூறி இருக்கின்றேன். மக்களினுடைய குறைபாடுகளை கண்டறிந்து நாங்கள் தான் அதற்கு பாராளுமன்றம் வரை கொண்டு செல்வோம் பாராளுமன்றத்தில் தீர்வு காணப்படாவிட்டால் ஜனாதிபதி வரை கொண்டு செல்வோம் அங்கும் தீர்வு காண முடியாவிட்டால் சர்வதேசம் வரை கொண்டு செல்வோம். அதே போன்று எமது அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் நாங்கள் முன்னெடுப்போம் எங்களுடைய வரிப்பணத்தில் கிடைக்கின்ற அபிவிருத்திகளை எமது மக்களுக்கும் கிடைக்க வேண்டும் அதையும் நாங்கள் செய்வோம் ஆனால் எங்களுடைய மக்கள் நாங்கள் எவ்வாறு கூறுகின்றனோ ஜனாதிபதியினுடைய கட்சியும் அமைச்சரோ வந்து இப்போதுதான் வேலை பழகுகின்றார்கள் ஒரு மூன்று மாதம் கால அவகாசம் அவர்களுக்கு வழங்க வேண்டும். நாட்டினுடைய புதிய வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் தான் வரும் இப்போது இடைக்கால ஒரு வரவு செலவு திட்டத்தை முன்வைக்க போகின்றார்கள் அடுத்த மாதம் நான்காம் மாதத்தில் இருந்து தான் புதிய வரவு செலவுத் திட்டத்திற்கான வேலைகள் இடம் நான்காம் மாதத்திற்கு முன்னர் எந்தவிதமான அபிவிருத்தி திட்டங்களும் இடம்பெறப் போவதில்லை அதற்கு பின்னர் நாங்கள் பார்ப்போம். ஆனால் இந்த இடத்தில் இருந்து நாங்கள் கூறுவது ஜனாதிபதிக்கும் ஒரு எச்சரிக்கையாகவோ அல்லது ஒரு கருத்தாக கூறலாம் ஜனாதிபதி சரியாக செயல்படுவாராக இருந்தால் அவர் செய்கின்ற அனைத்து விடயங்களையும் நாங்கள் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை நல்ல விடயங்களை நாங்கள் ஆதரிக்கலாம் ஆனால் தமிழ் இன விரோத செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடுவார்கள் ஆனால் அதனை நாங்கள் அனுமதிக்க முடியாது. தமிழ் இனம் ஒரு தனித்துவமான இடம் வடக்கு கிழக்கு தமிழர்கள் தாயகம் இதில் நாங்கள் மாறப்போவதில்லை ஜனாதிபதியும் எங்களை மாற்ற நினைக்க கூடாது என்பதனை கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=300351
  5. மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு! சுண்டிக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவேந்தலும், பெற்றோர் கௌரவிப்பும் கிளிநொச்சியில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது. கடந்த 7 ஆண்டுகளாக சுண்டிக்குளம் இளைஞர்களால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. 2024 ஆம் ஆண்டு மாவீரர் வாரம் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நிகழ்வு எழுச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. மாவீரர்களின் பெற்றோரால் பொது உருவப்படம் ஏந்திவரப்பட்டது. எழுச்சி கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன், வீதி வளைவும் அமைக்கப்பட்டு பெற்றோர் அஞ்சலி மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலிக்கப்பட்டது. இதன்போது மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவீரர் பெற்றோரை கெளரவிக்கும் வகையில் உலருணவுப்பொதியும், மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது. https://akkinikkunchu.com/?p=300348
  6. வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கங்கள் அனுப்பும் நிதி லஞ்சம், ஊழலை வளர்த்துவிடுகின்றது!” - ஆளுநர் வேதநாயகம் “யாழ் பாடசாலைகள் சில நேரடியாக வெளிநாடுகளிலிருந்து பழைய மாணவர் சங்கங்களுடாக நிதியைப் பெறுகிறார்கள். ஆனால் அவை எவ்வாறு செலவிடப்படுகின்றது என்ற பொறுப்புக் கூறல் எதுவும் அங்கில்லை. இது ஊழலுக்கே இட்டுச் செல்லும்” என ஆளுநர் நா வேதநாயகம், ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள சில முன்னணிப் பாடசாலைகள் சட்டவிரோதமாக அன்பளிப்பு என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் லட்சக் கணக்கிலும் அன்பளிப்புக் கோருகின்றனர். பாடசாலைகளில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வுக்கும் மாணவர்களிடமோ ஆசிரியர்களிடமோ பணம் கோரக்கூடாது என அளுநர் அங்கு அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் துறைசார் மீளாய்வுக் கூட்டத்திலேயே இக்கருத்தை ஆளுநர் வெளியிட்டார். “வடக்கில் 12 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்கின்றார். ஆனால் நாட்டில் சராசரியாக 17 மாணவர்களுக்கே ஒரு ஆசிரியர்” எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம பற்றிக் டிறன்ஞன் வடக்கில் பாட ரீதியாகவே ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாகக் குறிப்பிட்டார். யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பட்டதாரி ஆசிரியர்களால் கலைப்பாடங்களுக்கான ஆசிரியர்கள் தேவைக்கதிகமாக குவிக்கப்பட்டுள்ளது. https://akkinikkunchu.com/?p=300405
  7. 56ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ஜனாதிபதி Vhg நவம்பர் 24, 2024 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் தனது 56 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவர் இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டம் கலேவலை என்னும் ஊரில் 1968 நவம்பர் 24 இல் பிறந்தார். அநுர குமார தனது பாடசாலைக் கல்வியை தம்புத்தேகமை காமினி மகா வித்தியாலயத்திலும், தம்புத்தேகமை மத்திய கல்லூரியிலும் கற்றார். தனது பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான முதலாவது மாணவராக விளங்கிய இவர் பாடசாலை நாட்களில் இருந்தே மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளராக இருந்ததோடு, அக்கட்சியில் 1987இல் இணைந்து, மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்த அவர் சில மாதங்களுக்குப் பிறகு அச்சுறுத்தல் காரணமாக வெளியேறி ஓராண்டு கழித்து 1992 இல் களனி பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டு, 1995 இல் இளம் அறிவியல் பட்டத்துடன் வெளியேறினார். 2000இல் நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து கட்சியின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்றம் சென்றார். 2001 தேர்தலில் மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரானார். பின்னர் செப்டம்பர் 2015 முதல் டிசம்பர் 2018 வரை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் தலைமைக் கொறடாவாகப் பணியாற்றினார். 2014 பெப்ரவரி 2 அன்று, மக்கள் விடுதலை முன்னணியின் 17ஆவது தேசிய மாநாட்டின் போது, சோமவன்ச அமரசிங்கவிற்குப் பின், கட்சியின் புதிய தலைவராக அநுரகுமார திசாநாயக்க நியமிக்கப்பட்டார். 2019 ஓகஸ்ட் 18ஆம் திகதியன்று, மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசியல் கூட்டமைப்பான தேசிய மக்கள் சக்தி, 2019 ஜனாதிபதி தேர்தலில் அநுர தனது ஜனாதிபதி வேட்பாளராக இருப்பார் என்று அறிவித்தது. இத்தேர்தலில் திசாநாயக்க 418,553 (3%) வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றார். மீண்டும் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 5,634,915 வாக்குகளைப் பெற்று இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகக் காணப்படுகிறார். https://www.battinatham.com/2024/11/56.html
  8. ஆயுதப்படையின் நினைவாக பொப்பி மலர் தினம் ஆயுதப்படையின் நினைவு தின நிகழ்வு முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் அமைந்துள்ள இராணுவ வீரர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் திங்கட்கிழமை (24) முற்பகல் நடைபெற்றது. முதலாம் உலகப் போரிலிருந்து இன்று வரை தாய்நாட்டின் பாதுகாப்புக்காக உயிர் தியாகம் செய்த சிப்பாய்களை நினைவுகூரும் முகமாக இலங்கை இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றோர் சங்கத்தினால் இராணுவத்தினர் ஒத்துழைப்புடன் வருடாந்தம் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. நிகழ்விடத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இலங்கை இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லெப்டினன் கேணல் (ஓய்வு) அஜித் சியம்பலாபிட்டிய வரவேற்றார். இதன்போது சர்வமத வழிபாடுகளின் பின்னர் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இலங்கை இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றோர் சங்கத்தின் பிரதிநிதிகள் இராணுவ நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொண்தா, பாதுகாப்புப் பதவிநிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, வெளிநாட்டுத் தூதுவர்கள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள், நாட்டுக்காக உயிர் நீத்த முப்படை வீரர்களின் குடும்ப உறவினர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/ஆயுதப்படையின்-நினைவாக-பொப்பி-மலர்-தினம்/46-347688
  9. சீனத் தூதுவர் தமிழ் மக்களுக்குச் சொல்லாமல் சொன்ன செய்தி? - நிலாந்தன் adminNovember 24, 2024 அண்மையில் நடந்த “நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்” இவ்வாறு தெரிவித்திருப்பவர் இலங்கைக்கான சீனத் தூதர். இந்த வாரம் அவர் வடக்கு கிழக்குக்கு விஜயம் செய்தார். நடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு தமிழர்களை நோக்கி வந்த முதலாவது வெளிநாட்டுத் தூதுவர் அவர். யாழ்ப்பாணத்தில் அவர் யாழ். ஊடக அமையத்துக்கு விஜயம் செய்து அங்கே ஒரு ஊடகச் சந்திப்பையும் நடத்தினார். ஒரு நாட்டின் தூதுவர் நாட்டின் ஒரு மாவட்டத்தில் உள்ள “பிரஸ் கிளப்புக்கு” தானாக வந்து ஊடகவியலாளர்களை சந்திப்பது என்பது பொதுவானது அல்ல. அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்களில் ஒன்றுதான் மேலே உள்ளது. இனப்பிரச்சினைக்கு சீனா முன்வைக்கும் தீர்வு என்ன? என்று கேட்கப்பட்ட பொழுது, அவர் மேற்கண்ட பதிலைச் சொன்னார். அந்த ஊடகச் சந்திப்பின் தொடக்கத்தில் அவர் பின்வருமாறு சொன்னார்.. ”இலங்கை வரலாறிலேயே முதற் தடவையாக தெற்கை மையப்படுத்திய கட்சியான என்பிபிக்கு -தேசிய மக்கள் சக்திக்கு- யாழ்ப்பாண மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்”என்று. மேலும், தனது யாழ் விஜயத்தின் போது தான் பருத்தித்துறைக்குச் சென்றதாகவும் அங்கே, “பல்வகைமைக்குள் ஒற்றுமையே சிறீலங்காவின் பலம் ” என்ற வாசகத்தைப் பார்த்ததாகவும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்த வாசகம் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதாவது சீனா, என்பிபியின் வெற்றியை ஆர்வங் கலந்த எதிர்பார்ப்போடு பார்க்கின்றது. அந்த வெற்றியில் தமிழ்மக்கள் பங்காளிகளாக இணைந்திருப்பதை மிகவும் எதிர்பார்ப்போடு பார்க்கின்றது. இனப்பிரச்சனைக்கான தீர்வுக்குரிய அடிப்படைகளை அது பலப்படுத்தும் என்றும் சீனா கருதுவதாகத் தெரிகிறது. மேலும் முக்கியமாக என்பிபியின் வெற்றியானது சீனாவுக்கு சௌகரியமான ஒர் அரசியற் சூழலை ஏற்படுத்தியிருப்பதாக சீனா கருதுவதாகத் தெரிகிறது. யாழ்ப்பாணத்தில் சீனத் தூதர் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்திருக்கிறார். இதில் முதலீட்டுத் துறையோடு ஈடுபாடுடையவர்கள், தொழில் முனைவோர் போன்றவர்கள் அதிகமாககு காணப்பட்டிருக்கிறார்கள். இதற்குமுன் யாழ்ப்பாணம் வந்திருந்தபொழுது இங்குள்ள கருத்துருவாக்கிகளையும் சந்தித்தார். அதில் சில கருத்துருவாக்கிகள் உரையாடலின் மையத்தை இனப்பிரச்சினையை நோக்கிக் குவித்தார்கள். இலங்கைத்தீவின் வளர்ச்சிக்கு சீனா எப்படி உதவ முடியும் என்ற உரையாடலில் இருந்த கவனக்குவிப்பு இனப்பிரச்சினை மீது மாற்றப்பட்டது. ஆனால் இம்முறை அவ்வாறான விவகாரங்களைத் தொடக்கூடிய கருத்துருவாக்கிகள் சந்திப்பில் தவிர்க்கப்பட்டிருக்கிறார்கள். சிவில் சமூகங்களை சந்தித்தபொழுது இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான கேள்விகளை சீனத் தூதுவர் பெருமளவுக்கு தவிர்க்க முயற்சித்திருக்கிறார். ஆனால் ஊடகச் சந்திப்பில் அவர் என்பிபியின் வெற்றிக்கு தமிழ் மக்கள் பங்களித்தமையை சிலாகித்துப் பேசியுள்ளார். சீனா மட்டுமல்ல, எம்பிபியின் மூத்த தலைவராகிய ரில்வின் சில்வா கூறுகிறார், வடபகுதி மக்கள் இனவாதத்தைப் புறக்கணித்துவிட்டு தமக்கு வாக்களித்திருப்பதாக. சட்டத்தரணி பிரதீபா மகாநாம என்பவர் கூறுகிறார், “இனி வரும் காலங்களில் ஜெனிவாவில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று கூற முடியாது” என்று. விமல் வீரவன்ச கூறுகிறார், இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்குத் தாம் எதிரானவர்கள் என்ற செய்தியை தமிழ் மக்கள் வழங்கியுள்ளதாக. ஒற்றை ஆட்சிக்குள் அனைத்து இன மக்களும் சம உரிமை கிட்டும் வகையிலான பயணத்தைத் தொடர வேண்டும் என்பதற்குரிய ஆணையே அதுவென்றும் அவர் மேலும் கூறியுள்ளார். மேற்சொன்ன கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? என்பிபியின் வெற்றியை குறிப்பாக அதற்கு தமிழ்மக்கள் வழங்கிய ஆதரவை வைத்து இன முரண்பாடுகள் தணிந்து விட்டதாக அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. என்பிபிக்குக் கிடைத்திருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது அசாதாரணமானது. அது மூவினத்தன்மை பொருந்தியது. ஆனால் அதன் பொருள் தமிழ் மக்கள் இந்தமுறை மட்டும்தான் அவ்வாறு தெற்கில் உள்ள ஓர் அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ளார்கள் என்பதல்ல. கடந்த 2015ல் ரணில் மைத்திரி கூட்டரசாங்கத்துக்கும் தமிழ்மக்கள் ஆதரவை வழங்கினார்கள். ஆனால் அந்த ஆதரவை அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே வழங்கினார்கள். இந்தமுறை வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் நேரடியாக அரசாங்கத்துக்கே அந்த ஆதரவை வழங்கியதுதான். இந்த வித்தியாசத்தைத்தான் சீனத் தூதர் எதிர்பார்ப்போடு பார்க்கிறாரா? இம்முறை ஒரு தொகுதி தமிழ் வாக்குகள் என்பிபிஐ நோக்கிப் பெயர்ந்திருக்கின்றன. ஆனால் எனது கட்டுரைகளில் திரும்பத்திரும்பக் கூறப்படுவதுபோல, அவை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் என்பிபி முன்வைத்த வாக்குறுதிகளுக்காக வழங்கப்பட்ட வாக்குகள் அல்ல. அவை தமிழ்த் தேசியக் கட்சிகளின் தோல்வியின் விளைவாக வெறுப்பும் சலிப்பும் அடைந்த மக்கள் வழங்கிய வாக்குகள்தான். அண்மையில் பிபிசி தமிழ்ச் சேவை தமிழ் மக்களைப் பேட்டி கண்ட பொழுது அது தெளிவாக வெளிப்பட்டது. எனவே என்பிபிக்கு கிடைத்த வாக்குகள் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக வழங்கப்பட்ட மக்கள் ஆணை அல்ல. ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது அரசியலமைப்பை மாற்றத் தேவையான அடிப்படைகளில் ஒன்று. அந்த அடிப்படையில் சிந்தித்தால், இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்தோடு ஒரு புதிய யாப்பை உருவாக்க என்பிபி தயாரா ? இங்கு ஒரு முக்கியமான விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டுமே இனப்பிரச்சினையைத் தீர்த்து விடாது. மாறாக, இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான “பொலிடிக்கல் வில்” அதாவது அரசியல் பெரு விருப்பம் என்பிபியிடம் இருக்க வேண்டும். அதை மேலும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், மகாவம்ச மனோநிலைக்கு வெளியே வந்து தமிழ் மக்கள் ஏற்கத்தக்க ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை அதுதான் உண்மையான மாற்றம். இதற்கு முன்னிருந்த சிங்கள ஆட்சியாளர்களிடம் இருக்காத அந்த அரசியல் பெரு விருப்பம் என்பிபியிடம் உண்டா? இந்தவிடயத்தில் என்பிபியின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைதான் அதற்குத் தடையாகவும் இருக்கப் போகிறது. ஏனெனில் என்பிபி பெற்றிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை புரட்சிகரமானது அல்ல. 2019இல் மூன்று விகித வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி 2024 இல் ஜனாதிபதி தேர்தலில் 42 விகித வாக்குகளைப் பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றி இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. இந்த எழுச்சியானது சிங்கள பௌத்த கூட்டு மனோநிலையை அரசியல் மயப்படுத்தியதால் கிடைத்த எழுச்சியல்ல. முன்னைய ஆட்சியாளர்களின் மீது ஏற்பட்ட வெறுப்பினால் ஏற்பட்ட கோப எழுச்சி. ராஜபக்சங்களுக்கு வாக்களித்த அதே சிங்கள வாக்காளர்கள்தான் அவர்களை ஓட ஓட விரட்டினார்கள். அதே வாக்காளர்கள்தான் இப்பொழுது என்பிபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொடுத்திருக்கிறார்கள். அதாவது முன்னைய ஆட்சியாளர்கள் மீது வெறுப்படைந்த சிங்கள முஸ்லிம், மலையக வாக்காளர்களும் தமிழ்த் தேசிய கட்சிகளின் மீது நம்பிக்கையிழந்த ஒரு பகுதி தமிழ் வாக்காளர்களும் அள்ளிக் கொடுத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை அது. இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான மக்கள் ஆணையல்ல. என்பிபி அந்த வெற்றியின் கைதியாக இருக்குமா? அதாவது இறந்த காலத்தின் கைதியாக இருக்குமா? அல்லது வருங்காலத்தின் துணிச்சலான புரட்சிகரமான தொடக்கமாக இருக்குமா? சீனத் தூதர் தனது ஊடகச் சந்திப்பில் சுட்டிக்காட்டிய அந்த வாசகங்கள் எழுதப்பட்ட சீமெந்துப் பலகை பருத்தித்தறையில் உள்ளது. சிங்கக் கொடிக்குக் கீழே அந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது. அது படைத்தரப்பால் நிறுவப்பட்ட ஒரு விளம்பரப் பலகை. அதுபோன்ற பல தமிழ்ப் பகுதிகளில் உண்டு. குறிப்பாக 2009இல் ஆயுத மோதல்கள் முடிந்த கையோடு “ஒரே நாடு ஒரே தேசம்” என்ற சுலோகம் ஒரு வெற்றிக் கோஷமாக முன்வைக்கப்பட்டது. பல படை முகாம்களின் முகப்பில் அல்லது மதில்களில் அது எழுதப்பட்டது. இப்பொழுது பல்வகைமைக்குள் ஐக்கியம் என்ற வாசகம் மிஞ்சியிருக்கிறது. பலாலி பெருந் தளத்தின் வடமாராட்சி எல்லை என்று வர்ணிக்கத்தக்க ஒரு திருப்பத்திலும் இந்த வாசகம் உண்டு. தமிழ் மக்களின் நிலத்தைப் பிடித்து வைத்திருக்கும் ஒரு படைத்தரப்பின் சுலோகங்கள் அவை. பல்வகைமைக்குள் ஒற்றுமை என்று அங்கு கூறப்படுவது அதன் மெய்யான பொருளில் சிங்கக் கொடியின் கீழ் ஒரே நாடு ஒரே தேசம் என்பதுதான். சீனத் தூதுவர் அதை உதாரணமாகக் காட்டுகிறார். ரில்வின் சில்வாவின் கருத்துக்களும் அதைத்தான் நிரூபிப்பவைகளாகக் காணப்படுகின்றன. தமிழ் மக்கள் இனவாதத்தைப் புறக்கணித்திருப்பதாக அவர் கூறுகிறார். தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாடு என்பது இனவாதம் அல்ல. சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் தமிழ் மக்களை ஒடுக்கியது. தமிழ் மக்களுடைய தேசிய இருப்பை அழிக்க முற்பட்டது. அதற்கு எதிரான போராட்டத் தத்துவந்தான் தமிழ்த் தேசியவாதம். அதில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் ஒடுக்குமுறைக்கு எதிரானது என்பதனால் அது முற்போக்கானது என்று மார்க்சியர்கள் கூறுவார்கள். எனவே தமிழ்த்தேசிய வாதம் இனவாதம் அல்ல. அதை இனவாதம் என்று கூறுவதுதான் சுத்த இனவாதம். அதுபோலவே ஜனாதிபதி அனுரவின் புதிய நாடாளுமன்றத்துக்கான முதலாவது உரையிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் குறித்துத் தெளிவான அரசியல் அடர்த்தி மிக்க வாக்குறுதிகள் இல்லை. மாறாக மேலோட்டமான பொத்தாம் பொதுவான சொல்லாடல்தான் உண்டு. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் பெரு விருப்பம் என்பிபியிடம் உண்டு என்று நம்பத்தக்க துணிச்சலான வார்த்தைப் பிரயோகங்கள் அங்கு இல்லை. சீனத் தூதுவர் தன்னையறியாமல் சுட்டிக்காட்டியதுபோல சிங்கக் கொடியின் கீழ் பல்வகைமைக்குள் ஒற்றுமை? https://www.nillanthan.com/6983/
  10. யாழ் பல்கலையில் மாவீரருக்கு அஞ்சலி November 23, 2024 யாழ்.பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபிக்கு மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். https://globaltamilnews.net/2024/208561/
  11. நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் adminNovember 23, 2024 மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக இன்று மாலை 6.30 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட குறித்த கல்வெட்டுக்கள் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. மாவீரரின் தாய் ஒருவரால் கொடி ஏற்றப்பட்டு பின்னர் ஈகைச் சுடரேற்றப்பட்டு கல்வெட்டுக்கள் ஒரே நேரத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது https://globaltamilnews.net/2024/208576/
  12. வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளரின் பதவி மீள பெறப்பட்டுள்ளது adminNovember 24, 2024 வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலர் எம்.ஜெகூவின் பதவி,உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் மீளப்பெறப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மன்னார் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளி ஒருவருக்கும் பொறியியலாளருக்கும் இடையில் நீண்டகாலமாக ஏற்பட்டுவந்திருந்த முரண்பாடு, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைகலப்பில் முடிவடைந்தது. இது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் குறித்த தொழிலாளி மற்றும் பொறியியலாளருக்கு திணைக்கள மட்ட விசாரணை முடியும்வரை அமைச்சின் செயலாளரினால் தற்காலிக இடமாற்றங்கள் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி குறித்த தொழிலாளி மன்னார் நீதிமன்றில் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ததோடு வடக்கு மாகாண ஆளுநரிடத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். இந்த பின்னணிகளின் மத்தியிலையே , வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலர் எம்.ஜெகூவின் பதவி, வடக்கு மாகாண ஆளுநரால் மீளப்பெறப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. https://globaltamilnews.net/2024/208597/
  13. ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து: முதல்முறையாக மவுனத்தை உடைத்த மோகினி தே Kumaresan MNov 23, 2024 10:40AM இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு அவரின் மனைவி சாயிரா பானு பிரிவதாக சமீபத்தில் அறிவித்தார். சாயிரா பானுவின் அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே அவரது இசைக்குழுவில் கிட்டாரிஸ்ட்டாக இருந்த மோகினி தே தனது கணவரைப் பிரிவதாக அறிவிக்க, பல கேள்விகள் எழுந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியை பிரிய இவர்தான் காரணமாக இருப்பாரோ? என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சாயிரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா, மோகினி தே கணவரை பிரிவதற்கும் ரஹ்மான் விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுத்திருந்தார். இதற்கிடையே, ஏ.ஆர். ரஹ்மானின் மகள் ரஹீமா, மகன் அமீன் ஆகியோரும் வதந்தி பரப்புவோருக்கு கண்டனம் தெரிவித்தனர். அமீன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தனது தந்தையின் கண்ணியத்தையும் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை காக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மோகினி தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “என்னை பேட்டி எடுக்க பல மீடியாக்கள் போட்டி போடுகின்றன. ஆனால், அதற்கெல்லாம் என்ன காரணம் என எனக்கு நன்றாகவே தெரியும். நான் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்ற விரும்பவில்லை. என்னை நேர்காணல் எடுப்பதற்காக அனுகியவர்களிடம் முடியாது எனக் கூறிவிட்டேன். வதந்திகளுக்கு பதில் அளித்துக் கொண்டு அதன் பின்னால் ஓடி கொண்டிருக்க முடியாது. எனது, சக்தியையும் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. எனது தனியுரிமையும் சுதந்திரத்தையும் மதிக்கவும்” எனக் குறிப்பிட்டுள்ளார். https://minnambalam.com/cinema/mohini-dey-breaks-silence-on-her-divorce-rumours-of-ar-rahman/
  14. கோடிக் கணக்கில் பண மோசடி யாழில் பெண்ணுக்கு 35 ஆண்டுகள் சிறை யாழ்ப்பாணத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக கூறி கோடிக்கணக்கான பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுப்பட்ட பெண்ணுக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக இளையோரிடம் பணத்தினை பெற்று மோசடி செய்து வந்தமை தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பெண்ணை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளில், சுமார் 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தினை மோசடியாக பெற்றமை, பண மோசடியில் ஈடுபட்டமை, அனுமதியின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராக அடையாளப்படுத்தி மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்டவை தெரியவந்துள்ளது. பண கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் பெண்ணின் சொந்த கணக்கு இலக்கம் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றின் ஆதாரங்களுடன் பெண்ணை யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுவந்தன. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணைகளில் பெண் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண்ணுக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. https://akkinikkunchu.com/?p=300186
  15. 13 பற்றி கதைக்கும் தருணம் இதுவல்ல; புதிய அரசமைப்பை உடன் இயற்றுங்கள்; சஜித் அணி வேண்டுகோள் “அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி கதைப்பதற்கான தருணம் இதுவல்ல. எனவே, வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணிகளை தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்க வேண்டும். அதற்கு ஆதரவு வழங்கப்படும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா கூறியவை வருமாறு:- “13,14,15 என கதைத்துக்கொண்டிருப்பதற்கான தருணம் இதுவல்ல. நாட்டுக்குப் புதியதொரு அரசமைப்பு அவசியம். நாடாளுமன்றத்தில் இதனை செய்வதற்குரிய மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் தேசிய மக்கள் சக்திக்கு கிட்டியுள்ளது. அதேபோல வடக்கையும், கிழக்கையும், மலையகத்தையும்கூட பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக தேசிய மக்கள் சக்தி மாறியுள்ளது. மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அக்கட்சியில் உள்ளனர். புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் என்ற உறுதிமொழியை தேசிய மக்கள் சக்தி கொண்டுவர வேண்டும். அதற்குரிய ஆதரவை நாம் வழங்குவோம். ஒரு வருட காலப்பகுதிக்குள் இதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். சர்வகட்சி பொறிமுறை ஊடாக இதற்கான பணியை முன்னெடுத்தால் நல்லது.” – என்றார். https://akkinikkunchu.com/?p=300228
  16. சட்டங்களை மீறாத வகையில் மாவீரர் நாளை நினைவு கூர காவல்துறை ஆலோசனை! November 23, 2024 நாட்டின் சட்டங்களை மீறாத வகையில் சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்குமாறு காவல்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளதாக சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் க.பண்பரசன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கடந்த வருடம் சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வை செய்வதற்கு மூதூர் நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை உத்தரவால் நினைவேந்தல் செய்ய முடியாமல் போனது. இம்முறை பயங்கரவாத தடைச்சட்டத்தை மீறாத வகையில் நினைவேந்தல் செய்வதற்கான ஆலோசனைகளை சம்பூர் காவல்துறையினர் வழங்கியுள்ளதாகவும், பொலிஸாரின் ஆலோசனைக்கு அமைவாக காவல்துறையினர் உட்பட முப்படையினரின் கடமைகளுக்கு குந்தகம் விளைவிக்காத வகையிலும் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன் இது ஜனநாயக நாடாகும். இந்த நாட்டில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. இந்த விடயம் அரசியல் அமைப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை கூட கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் மறுத்திருந்தார்கள். தற்போதைய புதிய அரசாங்கத்துக்கு வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் பெரும்பான்மை அதிகூடிய வாக்குகளை வழங்கியுள்ளமையானது மீண்டும் தமிழர் தேசம் ஜனநாயக ரீதியில் பயணிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. அந்த வகையில், புதிதாக ஆட்சியை அமைத்திருக்கின்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைகள் ஏதும் விதிக்காது எமது உரிமைகளை மதித்து அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், மாவீரர் நாள் நினைவேந்தல் தினத்தை காரணம் காட்டி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சில அரசியல் கட்சிகள் தமது அரசியல் இலாபத்துக்காக நிதி சேகரித்து வருவதாகவும் புலம்பெயர் தேசத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது உள்நாட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி உதவி செய்ய விரும்புவோர் வெளிப்படையான எமது கணக்கிலக்கத்துக்கு உதவி செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.ilakku.org/சட்டங்களை-மீறாத-வகையில்/
  17. தேர்தல் முடிந்தது: இனிச் செய்ய வேண்டியது என்ன - எம். ஏ. நுஃமான் யாரும் எதிர்பாராத வகையில் மூன்றில் இரண்டுக்கு அதிகமான பெரும்பான்மை பெற்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தைக் கைப்பற்றி இருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தைத் தவிர இலங்கையின் 21 தேர்தல் மாவட்டங்களிலும் அது வெற்றி பெற்றிருக்கின்றது, வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில், அது பெற்ற வெற்றி வரலாற்று முக்கியத்துவம் உடையது. பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற வேறுபாடு இன்றி; சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் என்ற வேறுபாடு இன்றி, எல்லா மக்களும் இதன் வெற்றியில் பங்களிப்புச் செய்துள்ளனர். அண்மைக்கால இலங்கை அரசியல் வரலாற்றில் இது ஒரு பாரிய மாற்றம் என்பதில் ஐயமில்லை. இந்த மாற்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த மக்கள் எழுச்சியின் (அரகலய) தொடர்ச்சி என்றே சொல்ல வேண்டும். பாரம்பரிய அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் மீதான மக்களின் வெறுப்பும்; தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி அளித்ததுபோல் அரசியலிலும், நாட்டிலும் புதிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்ற மக்களின் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இந்த வெற்றியின் அடிப்படை என்பதில் ஐயமில்லை. ஜனாதிபதி தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பல. ஊழலை ஒழிப்பதிலிருந்து அடிப்படையான அரசியல் மாற்றங்கள் வரை இதில் அடங்கும். “வளமான நாடு அழகான வாழ்க்கை“ என்ற தலைப்பில் அவர்கள் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவை விரிவாகப் பேசப்படுகின்றன. அவற்றை நான் இங்கு பட்டியல்படுத்த வேண்டியதில்லை. அவை எல்லாவற்றையும் அடுத்துவரும் அவர்களின் ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் அவர்களால் நிறைவேற்றமுடியும் என்றும் நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அவற்றுள் சுமார் 25% வீதத்தையாவது அவர்கள் நிறைவேற்றினாலே மக்கள் இவர்களை ஆட்சிக்குக் கொண்டுவந்ததன் பயனை அடைந்தவர்களாவார்கள் என்பதில் ஐயமில்லை. 1994ல் சந்திரிகா பண்டாரநாயக்க பல வாக்குறுதிகளை அளித்து 62% வீதமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப் பட்டபோது மக்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், அவருடைய பத்தாண்டுகால ஆட்சியில் அவற்றுள் எதையும் அவரால் நிறைவுசெய்ய முடியவில்லை. அதற்குரிய தற்துணிபு அவருக்கு இருக்கவில்லை என்பது மட்டுமன்றி, பாராளுமன்றத்தில் அவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை என்பதையும் ஒரு சமாதானமாகக் கூறலாம். ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அந்தச் சிக்கல் இல்லை. மக்கள் பூரணமான ஆணை கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதற்கு இவர்களுக்கு எந்தவித காரணமும் இல்லை. இதுவரை எல்லாம் நன்றாகவே முடிந்திருக்கின்றது. சில சர்ச்சைகள் மேற்கிளம்பினாலும் உயர் கல்வித் தகைமை பெற்ற பலர் அமைச்சரவையிலும் இருக்கிறார்கள். இனிச் செய்ய வேண்டியது என்ன? என்பதையே அரசாங்கம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். அதுபற்றியே நான் இங்கு சில கருத்துகளைச் சொல்ல விரும்புகிறேன். 1. பொருளாதார வங்குறோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுத்தல் அரசு நிறைவேற்ற வேண்டிய முக்கியமான சவாலாகும். மக்கள் பழைய அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, இந்த அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தியமைக்கு அடிப்படைக் காரணமே தங்கள் பொருளாதாரச் சுமையிலிருந்து விடுபட வேண்டும் என்பதுதான். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, மக்களின் வருமானத்தை அதிகரித்து, வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அரசு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டியதில்லை. ஆனால், இது இலகுவான காரியம் அல்ல என்பது எல்லாருக்கும் தெரியும். முன்னைய அரசாங்கங்கள் சேமித்துவைத்த பல்லாயிரம் கோடி உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் சுமை இந்த அரசாங்கத்தின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச வட்டிக் கடைக்காரரிடம் நாடு ஏற்கனவே அடகுவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் ஹமில்ரன் றிசேவ் வங்கி 240 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை இலங்கை அரசு திருப்பிச் செலுத்த்வேண்டும் என்று தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அரசாங்கத்துக்கு ஒருமாத அவகாசம் வழங்கியுள்ளதாக தற்போது ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அரசாங்கம் இத்தகைய அழுத்தங்களி லிருந்து மீள்வது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. நாம் பூகோள மயப்படுத்தப்பட்ட பெருமுதலாளித்துவ யுகத்தில் வாழ்கிறோம். ஒவ்வொரு வளர்முக நாடும் நிதிமூலதன வல்லரசுகளால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப் படுத்தப்படுகின்றது. நமது சுயாதீனமான வளர்ச்சிக்கு அதுவே பிரதானமான சவாலாகும். அதை இந்த அரசு எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பது காலப்போக்கில்தான் தெரியவரும். 1977ல் இருந்து நடைமுறையிலிருக்கும், இன்றைய சமூக அரசியல் நெருக்கடிகளுக்கெல்லாம் மூல காரணமான திறந்த பொருளாதாரக் கொள்ளையிலிருந்து நாம் விடுபடுவது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. ஆயினும், இறக்குமதிப் பொருளாதாரத்தை மட்டுப்படுத்தி சுயசார்புப் பொருளாதாரக் கொள்கை ஒன்றை வகுத்துச் செயற்படுவது நாட்டு மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு அவசியமாகும். அதில் இந்த அரசு அக்கறை செலுத்தும் என்று நம்புகின்றேன். 2. இன ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்தி தேசிய ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவது இந்த அரசின் முன்னுள்ள பிறிதொரு முக்கிய சவாலாகும். சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த நாட்டில் மேலோங்கிவந்த இனவாதமும், இனமுரண்பாடும், மோதல்களும், பிரிவினைவாத யுத்தமும் இன்றைய இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளுக்கு பிரதானமான காரணிகளாகும் என்பதைப் பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். நீண்ட கால இனப்பாகுபாடும், முரண்பாடுகளும், முப்பது ஆண்டுகால யுத்தமும் சிறுபான்மை மக்கள்மீது ஏற்படுத்தியுள்ள மாறாத வடுக்களை மாற்ற இந்த அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தி, குறிப்பாக அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் இனவாதத்துக்கு எதிராகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் அதிகம் பேசினார். வட கிழக்குத் தமிழ் மக்கள் உட்பட இலங்கை முழுவதிலும் வாழும் அனைத்துச் சிறுபான்மை மக்களும் அவர்மீது நம்பிக்கை வைத்து பெருமளவில் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இந்த அரசாங்கத்துக்கு உண்டு. இலங்கையின் பல்லினத் தன்மையை ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு சமூகத்தின் தனித்துவத்தையும், பிரச்சினைகளையும் புரிந்துகொண்டு, தாங்கள் அன்னியப்படுத்தப்பட்டவர்கள் என்ற உணர்வுக்கு அவர்கள் ஆளாகாதவகையில் அவர்களையும் அரசியலில் பங்காளிகளாக ஏற்றுக்கொண்டு ஆட்சி நடத்தாத வரையில் இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப முடியாது என்பதை இந்த அரசு செயலில் காட்டவேண்டும். இது தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகளை நான் இங்கு சுட்டிக்காட்டலாம். 1. வட கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாம்களை அகற்றுதல் அல்லது மட்டுப்படுத்துதல். 2. ராணுவம் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகளை விடுவித்தல். 3. காணாமற்போனோர் பிரச்சினையைத் தீர்த்துவைத்தல். 4. அகதிகளின் மீள் குடியேற்றத்தை விரைவுபடுத்தல். 5. சட்டபூர்வமற்ற குடியேற்றங்களைத் தடுத்தல் 6. ஆட்சிமொழிச் சட்டத்தை நாடுமுழுவதிலும் சரியாக அமுல்படுத்துதல் 7. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு /மாகாண சபை முறைமையை முழுமையாக அமுல்படுத்துதல் 8. பாராபட்சமற்ற தொழில்வாய்ப்பு. அரச தனியார் தொழில் வாய்ப்புகளில் இனவிகிதாசாரத்தைப் பேணுதல் 9. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல். 3. 1994 ஜனாதிபதி தேர்தல் காலத்திலிருந்து, கோட்டாபாய ராஜபக்ச தவிர்ந்த, எல்லா வேட்பாளர்களும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகவே வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், பதவிக்கு வந்தபின் ஜனாதிபதியின் அதிகாரத்தை அதிகரிக்கவும், ஆட்சிக்காலத்தை நீடிக்கவும் முயன்றார்களே தவிர, அதை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை. புதிய ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது “இதுதான் கடைசி ஜனாதிபதி தேர்தல்“ என்று கூறியிருக்கின்றார். தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதுபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் அடுத்த தேர்தல் பாராளுமன்றத் தேர்தலாக இருக்கவேண்டுமே தவிர ஜனாதிபதி தேர்தலாக இருக்கக் கூடாது என்பது மக்களின் எதிர்பார்ப்பு. இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் முடிவுக்குவரமுன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையற்ற, ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்ற, இன ஐக்கியத்தை உறுதிப்படுத்துகின்ற, மக்கள் நல அரசை உருவாக்குகின்ற ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோம். ஏற்கனவே 2000, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் புதிய யாப்புத் திருத்தத்துக்கான யோசனைகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் இந்த அரசாங்கம் கருத்தில் கொள்வது அவசியமாகும். 4. ஊழல் ஒழிப்பு தேசிய மக்கள் சக்தியின் கவர்ச்சிகரமான ஒரு தேர்தல் பிரச்சாரமாக இருந்தது. பழம்பெரும் அரசியல் வாதிகளின் பாரிய ஊழல் மோசடிகள் பற்றியே அவர்கள் அதிகம் பேசினார்கள். அவற்றைக் கண்டுபிடித்து அவர்கள்மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்தான். ஆனால், லஞ்சமும், ஊழலும் அரச நிருவாகத்தின் எல்லா மட்டங்களிலும் ஆழ வேரோடி உள்ளது. அதை அகற்றுவதற்கான, அல்லது மட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்குவது முக்கியமானது. இந்த ஆட்சிக்காலத்தில் அது செயற்பட வேண்டும். இலங்கை உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் வரிசையைவிட்டு, ஊழல் குறைந்த நாடுகளின் வரிசையில் சேரும் காலம் விரைவில் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 5. பாராளுமன்றத்தைச் சுத்திகரித்தல் பற்றி ஜனாதிபதி தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் சுவையாகப் பேசினார். பாராளுமன்றத்தைச் சுத்திகரித்தல் என்பது ஊழல் மிகுந்த பழைய அரசியல் வாதிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, புதிய அரசியல்வாதிகளால் பாராளுமன்றத்தை நிரப்புவது அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். புதியவர்களும் பழையவர்கள்போல் ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளாக ஆகமுடியாத, சட்டபூர்வமான ஒரு புதிய சூழலை உருவாக்குவதாகவே அது இருக்கவேண்டும். தொழில்ரீதியான அரசியல்வாதிகள் (Professional Politicians) உருவாக முடியாத ஒரு சூழலை உருவாக்குவது அதன் பொருளாக இருக்கவேண்டும். வேறு தொழில் எதுவும் இல்லாது, அல்லது தனது தொழிலைக் கைவிட்டு, பாராளுமன்றப் பதவியையே தன் வாழ்நாள் தொழிலாகக் கொள்பவர்தான் தொழிலரீதியான அரசியல்வாதி எனப்படுகிறார். பின்னர், அது அவருடைய குடும்ப உரிமையாகிறது. அது அவர்கள் சொத்துக் குவிப்பதற்கான வாயிலாகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட தொழில் ரீதியான அரசியல்வாதி பிரச்சினைக்கு உரியவர்தான். தொழில் ரீதியான அரசியல்வாதிகள் உருவாவதைத் தவிர்க்க வேண்டுமானால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம், வயது, கல்வித்தகைமை என்பன பற்றி சட்டரீதியான வரையறைகள் வேண்டும். தங்களைப் பாதிக்கும் சட்டரீதியான இத்தகைய வரையறைகளைச் செய்ய பதவியிலுள்ள எந்த அரசாங்கமும் முன்வருமா என்பது ஐயத்துக்குரியது. இவற்றை மேற்கொள்ளாமல் பாராளுமன்றத்தைச் சுத்திகரிக்க முடியுமா என்பது கேள்விக்குரியதுதான். அடுத்துவரும் ஐந்தாண்டு காலத்துள் நல்லது நடக்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு By Nuhman Mohamed https://www.facebook.com/share/p/14shYgdhRe/?mibextid=WC7FNe
  18. நான் 30 கேள்வி என்று மாறி நினைத்துவிட்டேன்! மன்னிக்கவும் @கந்தப்பு. திருகோணமலை நகரத்தில் தமிழர்கள் அதிகம் என்று நினைத்தது தப்பாகப் போய்விட்டது☺️
  19. சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாடு: வெளியானது அறிவிப்பு இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு அறிவித்துள்ளது. இந்த இணக்கப்பாட்டு ஒப்பந்தம் நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையும் முகாமைத்துவமும் அங்கீகரித்ததன் பின்னர் சமர்ப்பிக்கப்பட்டு விரைவில் நான்காம் கட்ட கடன் வழங்கப்படும் என்றும் நான்காம் கட்ட கடனாக இலங்கைக்கு 330 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான கடந்த 17ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்ததுடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், உயர்மட்ட அரச அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியது. அதன் பிரகாரம் அரசுடன் எட்டப்பட்ட உடன்பாடு தொடர்பில் இன்று சனிக்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகச் சந்திப்பிலேயே இவ்வாறு கூறியது. கொள்கைகளை தொடர்ச்சியாக பராமரிக்க புதிய அரசாங்கம் காட்டும் அர்ப்பணிப்பு, திட்டத்தின் நோக்கங்களை அடைய முக்கியமானது என்றும் பீட்டர் ப்ரூவர் கூறினார். விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் 2.9 பில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்க 2022ஆம் ஆண்டு உடன்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/sri-lanka/2024/11/23/staff-level-agreement-with-the-international-monetary-fund-announcement-released
  20. அர்ச்சுனா : கற்றுக்கொள்ள வேண்டியது! இலங்கைத்தீவின் நாடாளுமன்றம் 225 அங்கத்தவர்களைக் கொண்ட ஓரவைச் சட்டமன்றமாகும். இது பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தன்மையைக் கொண்டது. சபாநாயகர் அல்லது அவர் சமூகமளிக்காத போது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அல்லது குழுக்களின் பிரதித் தலைவர் சபைக்கு தலைமை தாங்குவார் என்பது மரபு. 1972 மார்ச் 22 ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து முற்று முழுதான இறைமை கொண்ட நாடாகியது. அதாவது குடியரசானது. அதனையடுத்து பிரதிநிதிகள் சபைக்குப் பதிலாக தேசிய அரசுப் பேரவை உருவாக்கப்பட்டது. இதற்கு 168 பேர் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1977 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக தேசிய அரசுப் பேரவை கலைக்கப்பட்டு இலங்கை நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை மற்றும் மரபுகள் சம்பிரதாயங்கள் ஆகியவற்றைப் பேணும் வகையில் நிலையியற் கட்டளைச் சட்டமும் உண்டு. ஜனாதிபதி, பிரதமர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு நிரந்தரமான இடத்தில் ஆசனங்கள்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். ஏனைய உறுப்பினர்களின் ஆசன இடங்கள் அவ்வப்போது மாறுபடும். ஒரு உறுப்பினர் இன்னுமொரு உறுப்பினரின் ஆசனத்தில் அமர்ந்திருக்கலாம். ஆனால் குறித்த உறுப்பினர் உரையாற்றும் நேரம் வரும்போது அவருக்குரிய ஆசனத்தில் இருக்க வேண்டும். அந்த ஆசனத்துக்குரிய ஒலிவாங்கியில் தான் அந்த உறுப்பினர் பேசவும் வேண்டும். ஆக வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் நடைபெறும் அமைச்சுக்களுக்கான குழு நிலை விவாத்தின்போது மாத்திரம் எந்த ஒரு உறுப்பினரும் வேறு ஆசனங்களில் இருந்து உரையாற்ற முடியும். ஆகவே இந்த மரபுசார்ந்த நடைமுறைகள் உறுப்பினர்களுக்குரிய ஒழுக்கங்கள். மற்றும் சிறப்புரிமை என்பது விசேடமானது. நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் எந்த விடயத்தையும் துணிந்து பேசலாம். சுட்டிக்காட்டலாம். ஆனால் தகவல்கள் தவறாக இருக்கக்கூடாது. தகவல்கள் தவறு என்று வேறு யாராவது ஒரு உறுப்பினர் ஒழுங்குப் பிரச்சிஜனை எழுப்பினால் குறித்த அந்த உரையின் சில பகுதிகள் ஹன்சாட் பதிவுப் புத்தகத்தில் இருந்து நீக்கப்படும் சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்குவார். ஆகவே நாடாளுமன்ற நிலையியற் கட்டளை விதிகள் அவற்றின் கீழ் உள்ள நடைமுறைகள், விவாதம் மற்றும் சபையினுள் உறுப்பினர்களது நடத்தை என்பன சீரமைக்கப்பட்டுள்ளன. நிலையியற் கட்டளைகளின் பிரதான நோக்கமானது, நாடாளுமன்றத்தின் ஒழுங்கமைதியுடைய, காத்திரபூர்வமான செயற்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகளை வரையறுப்பதாகும் நிலையியற் கட்டளைகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் முக்கியமான மூல ஆதார ஏடாகவும் மற்றும் விவாதங்களுக்கு அதிக சந்தர்ப்பம் அளிப்பனவாகவும், பரிசீலனையின் பின்பு தீர்மானங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்குகின்றன. இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பு தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் - உரிமைகளை வழங்க மறுக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் அதன் கொள்கைத் தீர்மானங்களில் தமிழர்கள் பங்குகொள்ளக்கூடிய ஏற்பாடுகள் இந்த அரசியல் யாப்பில் இல்லை என்பதும் பகிரங்கமானதுதான். ஆனால் நாடாளுமன்றம் என்பது ஒரு 'அரச சபை' அதற்குரிய 'மாண்புகள்' 'மரபுகள்' பேணப்பட வேண்டும். எந்த ஒரு எதிர்க் கருத்துள்ள நாடாளுமன்றத்திற்குச் சென்றாலும் அங்குள்ள மரபுகளை பேண வேண்டியது கட்டாயம். அது ஒரு அரசியல் பண்புடன் கூடிய நாகரிகம். எதிர்த்தரப்பு உறுப்பினர்களுடன் வாதிடும்போதுகூட நாகரிகம் உண்டு. வார்த்தைகள் ஏற்புடையதாக இருக்க வேண்டும். ஒருவர் சபைக்குச் சமூகமளிக்காத நேரத்தில் அவரைப் பற்றிப் பேசுவதுகூட நாடாளுமன்ற மரபல்ல. இவ்வாறானதொரு கட்டமைப்பு உள்ள நிலையில் புதிதாகத் தெரிவான உறுப்பினர் அர்ச்சுனா 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு கூடியபோது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். அது முதலாவது அமர்வுதான். புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட முன்னரே ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரைக்காக முதலாவது அமர்வு கூடிய முறையும் கேள்விக்குரியதுதான். ஆனாலும் மரபு பற்றிய புரிதல் என்பது மிக முக்கியமானது. 'அரச சபை' என்றால் நிச்சியமாக ஆசன ஒதுக்கீடுகள் இருக்கும் அதுவும் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனம் பிரத்தியேகமானது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதுவும் அனுபவமுள்ள நாடாளுமன்ற படைக்கல உதவி சேவிதர்கள் அது பற்றி விளக்கமளித்தபோதும் அதனை மறுத்துரைத்த அந்த உறுப்பினர், அதற்கு வழங்கிய விளக்கம் அரசியல் பண்பல்ல. பல மூத்த உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் மாண்புக்கு மாறாகச் செயற்பட்டிருக்கின்றனர் என்பது வேறு. ஆனால் போரினால் பாதிக்கப்பட்டு இன்றுவரை அரசியல் விடுதலை கோரி மெதுமெதுவாகச் சிதைவடைந்து வரும் ஒரு சமூகத்தின் புதிய பிரதிநிதியாக சபைக்குள் வந்த ஒரு புதிய உறுப்பினர் அநாகரிகமாக நடந்துகொள்வது அச் சமூகத்தை மேலும் தலைகுனிய வைக்கிறது. 1883 ஆம் ஆண்டு பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட சட்ட சபைகள் மற்றும் 1948 இன் பின்னரான நாடாளுமன்றங்களில் மாபெரும் தமிழ் சட்ட மேதைகள் உறுப்பினர்களாக இருந்த இடத்தில் சில தமிழ் உறுப்பனர்கள் நடந்துகொள்ளும் முறை அரசியல் பண்பல்ல. 2004 ஆம் ஆண்டு ஈழவேந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தனது எதிர்க்கட்சி ஆசனத்தை விட்டு அரச தரப்பு ஆசனங்களிலும் மாறி அமர்ந்த கதைகள் உண்டு. ஆனால் ஈழவேந்தனை அறிவுசார் உறுப்பினராக ஏனைய சிங்கள உறுப்பினர்கள் மதிப்புக் கொடுத்திருந்தனர். ஈழவேந்தன் வயது மூப்பினால் அவ்வாறு செயற்படுகிறார் என்ற வாதங்கள் அன்று இருந்தன. அப்போது சபாநாயகராக இருந்த வி.ஜே.மு லொக்குபண்டார ஈழவேந்தனின் ஆங்கில மொழி உரைகளை செவிமடுத்து அதற்கு மேலும் பொருள் விளக்கம் கேட்டதையும் மறுப்பதற்கில்லை. நாடாளுமன்றத்தில் வரப்பிரசாதங்கள் உண்டு. சிறப்புரிமைகள் உண்டு என்பதற்காக ஒவ்வொரு உறுப்பினர்களும் தமக்கு வாக்களித்த மக்களின் சுயமரியாதையை அவமதிக்க முடியாது. அதுவும் புதிய தமிழ் உறுப்பினர்களின் செயற்பாடுகள் முற்போக்கான மற்றும் அரசியல் அபிலாஷை நோக்கில் இயங்க வேண்டியது அவசியமானது. இது ஒவ்வொரு தமிழ் உறுப்பினர்களுக்கும் சமர்ப்பணம். ”ஒருவன்” ஞாயிறு வார இதழின் ஆசிரியர் தலையங்கம் https://oruvan.com/sri-lanka/2024/11/23/what-archuna-mp-needs-to-learn
  21. நானும் தேசிய மக்கள் சக்தி வெல்லும் என்று கணித்திருந்தேன். புள்ளிகள் கூடவில்லை!🥹
  22. சிறந்த தமிழினப்பற்றாளர் மதியண்ணாவின் இழப்பு தமிழினத்தின் பேரிழப்பாகும்! November 22, 2024 கனடாவில் நேற்று இரவு துரதிஷ்டவசமாக மரணித்த யாழ் அரியாலையைச் சேர்ந்த சிறந்த தமிழினப் பற்றாளர் குலத்துங்கம் மதிசூடி அண்ணாவின் இழப்பு தமிழ் இனத்திற்கு ஒரு பாரிய பேரிழப்பாகும். என்று பிரபல சமூக செயற்பாட்டாளரும், இலங்கை தமிழரசுக்கட்சி காரைதீவு தலைவரும் ,மீனாட்சி அம்மன் ஆலய தலைவரும் ,முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தனது அனுதாப அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளார். அவரது திடீர் மறைவு குறித்து கவலையுடன் ஜெயசிறில் மேலும் தெரிவிக்கையில். பிறந்த மண்ணை வெகுவாக நேசித்த தமிழினப் பற்றாளர் திரு.மதி அண்ணா அவர்கள். கொரோனா காலகட்டத்திலும் வெள்ள அனர்த்த காலகட்டத்திலும் வடக்கில் மாத்திரமல்ல கிழக்கில் அம்பாறை மாவட்டத்திலும் பாரிய சேவைகளை செய்தவர். அது மாத்திரமல்ல ஒவ்வொரு வருடமும் வந்து நலிவுற்ற மக்களுக்கு நேரடியாகச் சென்று உதவி செய்து வந்தவர். எமது மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்திலும் சில ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்து பல ஆக்கபூர்வமான பல திட்டங்களிலும் பங்கெடுத்தவர் . அவர் தமிழினத்தின் மிகுந்த பற்றாளராக விளங்கியவர். கனடாவில் கடந்த 40 வருடங்களாக தாயக மக்களின் உணர்வுகளை விளங்கிடச் செய்தவர். ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர். இறுதியாக காரைதீவு பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலய கன்னி தேரோட்டத்தில் கலந்து கொள்வதற்காக கனடா இருந்து வந்தவர் . சேவையாளரான அவர் அக்கால கட்டத்தில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் திறந்து வைத்த சுவாமி விவேகானந்தர் நினைவு பூங்காவையும் ஆர்வத்துடன் பார்வையிட்டவர். அவரது இழப்பையிட்டு அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் சார்பாக அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். என்றார். https://www.supeedsam.com/210163/
  23. உயிர் அச்சுறுத்தல் காரணமாக இடமாற்றம் கோரும் மன்னார் மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதனால் உடனடியாக வடமாகாணத்திலிருந்து இடமாற்றம் வழங்குமாறு கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.ஹனிபா சுகாதார அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அண்மையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ராஜஸ்ரீ என்ற தாயும் அவரது சிசுவும் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதிக் கோரி அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தநிலையில், மகப்பேற்று விடுதிக்குள் நுழைந்த குழுவொன்று வைத்தியசாலையின் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து தாம் நிலைமை குறித்து விவாதிக்கவும், வருகை தந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பொலிஸாரின் உதவியை நாடியதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் குறித்த குழுவினர் தம்மைத் தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த முற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் கடந்த 20ஆம் திகதி சிலர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் வெளிநோயாளர் பிரிவுக்குள் நுழைந்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிப்பாளர் எம்.ஹனிபா சுகாதார அமைச்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பிரசாரங்கள் இடம்பெறுவதாகவும் சிலர் உயிர் அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தமக்கு வட மாகாணத்தில் பாதுகாப்பற்ற பணிச் சூழல் நிலவுவதனால் உடனடியாக இடமாற்றம் வழங்குமாறு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.ஹனிபா சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் தமக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் அவர் மன்னார் பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளார். இதேவேளை, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ராஜஸ்ரீ என்ற தாயும் அவரது சிசுவும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுகாதார அமைச்சின் இரண்டு குழுக்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று விசாரணைகளை நடத்தியுள்ளன. அதேநேரம், வடமாகாண சுகாதார அமைச்சின் ஊடாக ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எஸ்.டி.பத்திரன தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=300254
  24. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 3 நாள் செயலமர்வு! November 23, 2024 09:53 am பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு 2024 நவம்பர் மாதம் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பாராளுமன்ற குழு அறை இலக்கம் 01ல் நடத்தப்படவுள்ளது. புதிய பாராளுமன்றத்தின் ஆரம்பத்தில் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாக இந்த திசைமுகப்படுத்தல் செயலமர்வு இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப. 9.30 மணிக்கு இடம்பெறும் இந்த செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல, பிரதி சபாநாயகர் வைத்தியகலாநிதி மொஹமட் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் வைத்திய கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, பாராளுமன்ற செயலாளர் நாயகம், பிரதிச் செயலாளர் நாயகம் மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த மூன்று நாள் செயலமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம், பாராளுமன்ற சிறப்புரிமைகள், பாராளுமன்றத்தின் சட்டவாக்க செயற்பாடுகள், பாராளுமன்ற குழு முறைமை, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள், அரசியலமைப்பின் ஏற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலத்திரனியல் வாக்களிப்பு முறை குறித்த நடைமுறை அமர்வொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன், ஊழலுக்கு எதிரான சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் பாராளுமன்ற விவகாரப் பிரிவின் பங்கு குறித்தும் இங்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது. மேலும், பாராளுமன்றத்தின் திணைக்களங்கள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், அந்தந்தப் பிரிவுகளின் மூலம் பாராளுமன்றச் செயற்பாடுகளில் உறுப்பினர்களின் பங்களிப்புகள் மற்றும் பணிகள் குறித்து உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196279
  25. நேற்று ஸ்கார்பரோவில் முதியவர் ஒருவரை அவரது மகன் கத்தியால் குத்தி மரணமான விடயத்தை ஊடகங்கள்வாயிலாக அறிந்தபோது அவர் யாராக இருக்கும் என்று எண்ணினேன். இன்றுதான் நண்பர் ஆனந்தன் அனுப்பிய 'காலை முரசு' பத்திரிகை மூலம் அவர் யார் என்பதை அறிந்தேன். உண்மையில் அதிர்ச்சியாகவிருந்தது. அவருக்கு இந்நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது என்று தோன்றியது. எண்பதுகளில் கறுப்பு ஜுலையைத்தொடர்ந்து இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகக் கனடா நோக்கிப் பெருந்தொகையாக வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பல்வேறு தமிழ் விடுதலை அமைப்புகளும் இயங்கின. அவற்றில் விடுதலைப் புலிகள் அமைப்புக்காகத் தீவிரமாக வேலை செய்தவர் மதி என்று அழைக்கப்படும் அரியாலையச் சேர்ந்த குலதுங்கம் மதிசூடி. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இவரை மாற்று அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் நட்பாகப் பழகிய ஒருவராகவே நான் பார்க்கின்றேன். இவர் யாழ் இந்துக் கல்லூரி மாணவர் என்றும் கருதுகின்றேன். அவ்வப்போது வழியில் கண்டால் அதே சிரிப்புடன் நலம் விசாரித்துச் செல்வார். கடைசியாக இவரை நண்பர் வேந்தனார் இளஞ்சேய் தனது தந்தையின் நூல்களைக் கனடாக்கந்தசாமி ஆலயத்தில் வெளியிட்டபோது அங்கு சந்தித்தேன். அப்பொழுதும் அதே புன்சிர்ப்புடன் நலம் விசாரித்துச் சென்றார். அங்கு அவர் பணியாற்றிக்கொண்டிருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். பல்வேறு அமைப்புகளுக்காகவும் பிரதிபலன்கள் எவற்றையும் எதிர்பாராது உழைத்தவர்கள் பலர். அவர்களில் ஒருவராகவே மதியையும் பார்க்கின்றேன். இவரைப்பற்றிய தனது முகநூல் நினைவுக்குறிப்பில் ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் குலசிங்கம் பரமேஸ்வரன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். "சகோதர இயக்க மோதல்கள் நடைபெற்ற போது அந்த இயக்கங்களின் நண்பர்களது வீடுகளுக்கு எங்களில் ஒரு சிலரை அழைத்துக் கொண்டு சென்று அவர்களுடன் ஆறுதலாக - அன்பாக உரையாடி தொடர்ந்தும் நட்புறவை வளர்த்த பண்பாளன்" இது மதி அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்துகின்றது. இவருக்கு ஏற்பட்ட இந்த நிலை துரதிருஷ்ட்டமானது. இவரது மகன் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம் என்னும் கொடிய நோயினைப் புறக்கணிக்காது உரிய நேரத்தில் உரிய ஆலோசனைகளையும், மருத்துவ உதவிகளையும் பெற வேண்டியதன் அவசியத்தையும் இந்நிகழ்வு வலியுறுத்துகின்றது. மன அழுத்தம் புகலிடத்தில் பலரது உயிர்களை எடுத்திருக்கின்றது. மக்கள் மத்தியில்; இது பற்றிய விழிப்புணர்வு முக்கியமானது. அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது அவசியமானது. இவர் இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். நவரட்னம் கிரிதரன் முகநூல் பதிவு https://www.facebook.com/share/p/15TsaCi7Ez/?mibextid=WC7FNe

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.