Everything posted by கிருபன்
-
காணி சுவீகரிப்பு முயற்சி மண்டைதீவில் முறியடிப்பு; அனுர அரசாங்கத்திலும் தொடர்கதை
காணி சுவீகரிப்பு முயற்சி மண்டைதீவில் முறியடிப்பு; அனுர அரசாங்கத்திலும் தொடர்கதை யாழ்ப்பாணம் - மண்டைதீவில் தனியார் காணியொன்றை அபகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரான கனகரத்தினம் சுகாஷ், தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் ஆகியோரும், பொதுமக்கள் பலரும் இணைந்து வெளிப்படுத்திய எதிர்ப்பைத் தொடர்ந்தே இந்தக் காணி சுவீகரிப்பு முறியடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. (ச) https://newuthayan.com/article/காணி_சுவீகரிப்பு_முயற்சி_மண்டைதீவில்_முறியடிப்பு;_அனுர_அரசாங்கத்திலும்_தொடர்கதை
-
யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன், மனைவியின் சடலங்கள் மீட்பு!
யாழில் கணவன், மனைவியின் சடலங்கள் மீட்பு! யாழ்ப்பாணம் – பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் – புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மாணிக்கம் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வீட்டிற்கு இன்று (30) புதன்கிழமை காலை சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். 50 மற்றும் 51 வயதான 2 பிள்ளைகளின் பெற்றோரே மிகவும் கொரூரமான நிலையில் கற்களால் தலையில் குற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பருத்தித்துறை நீதிவானுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் கொங்கிறீட் கல்லினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. பருத்தித்துறை நீதவானின் பிரசன்னத்திற்கு பின்னரே சடலங்களை மீட்டு மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.samakalam.com/யாழில்-கணவன்-மனைவியின்-ச/
-
ஶ்ரீலங்கா பாராளுமன்றத் தேர்தல் - தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது?
ஶ்ரீலங்கா பாராளுமன்றத் தேர்தல் - தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது? 👆🏿 ஶ்ரீலங்கா தேர்தலில் வாக்களிக்கும் உரிமையுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி என நண்பர் அனுப்பியிருந்தார். பார்த்து கருத்துக்களை வையுங்கள். தேர்தலில் வாக்களிக்கும் தாயகத் தமிழ் உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் எனவும் கேட்டிருந்தார். ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர திசநாயக்க வெற்றி பெற்று, உடனடியாகவே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலும் நடக்கவுள்ள சூழலில் பல தமிழ் யூடியுப்பர்கள் அநுர அலைக்குப் பின்னால் போயுள்ளது தாயகத்தையும், தேசியத்தையும் நேசிப்பவர்களை பதட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க ஓர் சரியான தலைமை இல்லாமல், இருந்த கட்சிகள் எல்லாம் குழிபறிப்பு வேலைகளைச் செய்து தமக்குள்ளேயே மோதிச் சிதறிச் சின்னாபின்னமாகி பல்வேறு கட்சிகளிலும், சுயேட்சைக் குழுக்களிலும் தேர்தல் களத்தில் குதித்துள்ளன. இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்குச்சீட்டில் உள்ள சின்னங்களைப் பார்த்தே குழம்பி என்ன செய்வது என்று தெரியாமல் தமக்குப் பரிச்சயமான அல்லது பரிச்சயமற்ற சின்னங்களில் ஒன்றுக்கு வாக்களிக்கும் சாத்தியம் அதிகம் உள்ளதால் எவர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக்கூடும் என்பதைக் கணிப்பதே மிகவும் கடினமாக உள்ளது. இத்தகைய அரசியல் சூழலில் தெற்குப் பகுதியில் சிங்கள மக்களினால் உண்டாக்கப்பட்ட அநுர அலை வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள்மீதும், மலையகத் தமிழ் மக்கள் மீதும் அடித்து, மக்கள் அலையில் அள்ளுண்டுபோகச் சாத்தியம் உள்ளது. எனினும் தமிழ் மக்கள் வாக்கைச் செலுத்தும் முன்னர் நிதானமாகச் சிந்தித்து தமது ஜனநாயகக் கடைமையைச் செய்யவேண்டும். அநுர திசநாயக்கா ஜனாதிபதித் தேர்தலில் வென்றபின்னர் தினமும் அரசியல் ஆய்வாளர்களாலும், சமூகவலை ஊடகங்களில் கருத்துரைப்போர்களாலும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாகவும், எதிராகவும், சந்தேகத்துடனும், குழப்பமாகவும் கருத்துக்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. அறகலயப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் கோத்தபாயவை ஜனாதிபதி பதவியிலிருந்து இறக்கியிருந்தும், பொதுமன பெரமுனவின் கைப்பொம்மையாக ரணில் ஜனாதிபதியாக வந்ததை தடுக்கமுடியவில்லை. போராட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கு பலமான அரசியல் கட்டமைப்பு நாடெங்கிலும் இல்லாதுதான் இதற்கு முக்கிய காரணம். இந்த நிலையில் சிங்களப் பகுதி முழுவதிலும் பலமான அரசியல் கட்டமைப்பைக் கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியினர் தேசிய மக்கள் சக்தியினுள் இணைந்து அறகலயப் போராட்டத்தின் விளைச்சலை அறுவடை செய்துள்ளனர். ஊழல் நிறைந்த ராஜபக்ஷர்களையும், மேற்தட்டு உயர்குழாமின் நலன்களைக் காக்கும் ரணிலையும், நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது உறுதியான முடிவுகளை எடுத்து தலைமைதாங்காத சஜித்தையும் சிங்கள மக்கள் பின்னே தள்ளி, சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்த அநுரவை தமது தெரிவாக்கி ஜனாதிபதியாக்கியுள்ளனர். அநுரவின் தேசிய மக்கள் சக்தி, அவருக்கு வாக்களித்த சிங்கள மக்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களின் ஆதரவைத் தொடர்ந்தும் தக்கவைக்க காத்திரமான வேலைத் திட்டங்களை உடனடியாகச் செயற்படுத்தி, அதன் பலாபலன்களை அவருக்கு வாக்களித்த கீழ்த்தட்டு, மத்தியவர்க்க மக்கள் அனுபவிக்க மிகவும் கடினமாக வேலை செய்யவேண்டிய நிலை உள்ளது. அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ள கொள்கைத் திட்டங்கள் இடதுசாய்வாக இருந்தாலும், திறந்த பொருளாதாரக் கொள்கையினுள் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்ள நாட்டை, உலக நாணய நிதியம், இந்தியா, சீனா போன்ற நாடுகளிடம் இருந்து தலைக்கு மேல் கடன்பெற்ற நாட்டை நிமிர்த்துவதும், பிற சிங்கள கட்சிகளை தலையெடுக்காமல் பார்ப்பதும் சவால் மிக்க செயல்கள். எனவே, தேசிய மக்கள் சக்தியானது ஈசலைப் போல குறுகிய ஆயுள் இல்லாமல் நீண்டகாலம் அரசை நடாத்த பல சமரசங்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளுடனும் செய்யவேண்டிய யதார்த்த நிலையை உணர்ந்தே செயற்படுவர். இதனால் அவர்களது “வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற தேர்தல் வாக்குறுதிகளிலும், கொள்கைகளிலும் தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ள தேவையானதை மட்டுமே முன்னெடுப்பார்கள். சிங்கள மக்கள் விரும்பிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற தோற்றப்பாட்டை உடனடியாகக் கொடுக்கக் கூடிய செயற்திட்டங்களும், பிற அரசியல் கட்சிகளை முடக்க அவர்கள் மீதான ஊழல் வழக்குகளையும், குற்றங்களையும் விசாரிப்பதும், இந்தியா, சீனாவோடு சீரான உறவுகளைப் பேணுவதும், உலக நாணய நிதியத்துடன் இணைந்து அவர்கள் நிபந்தனைகளுக்கமைய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதும் முக்கியத்துவம் பெறும் செயற்பாடுகளாக இருக்கும். ஶ்ரீலங்கா முழுமையாகவே சிங்களவர்களின் தீவு என்ற தம்மதீபக் கொள்கை மகாவம்ச துட்டகைமுனு காலத்தில் இருந்து சிங்கள மக்கள்மீது படியவைக்கப்பட்டுள்ளது. எனவே, பெளத்த சிங்கள பெருந்தேசிய உணர்வும், விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட மிதப்பும் சிங்களவர்களிடமிருந்து அகலும் என்று எதிர்பார்க்கக்கூடாது. “நாம் எல்லோரும் ஶ்ரீலங்கன்” என்ற கொள்கை சிங்களவர்களைச் சிங்களவர்களாகவே வைத்திருக்கவும், சிறுபான்மை இனங்களான தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர், பறங்கியர் தமது தனித்துவங்களை இழந்து, இன அடையாளங்களைத் துறந்து “ஶ்ரீலங்கன்” என்று சிங்களவர்களுடன் கலந்துகொள்ளவே வழிசமைக்கும். தமிழ் மக்களுக்கு நியாயமானதோர் தீர்வு என்பது முதலில் இனப்பிரச்சினை உள்ளது என்பதை ஒத்துக்கொள்வதில் இருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும். ஆனால் தேசிய மக்கள் சக்தி, தமிழர்களின் பிரச்சினையையும் பொருளாதாரப் பிரச்சினை எனக் குறுக்கி, தீர்வை புதிய யாப்பை உருவாக்குவது மூலம் கொடுக்கப்படும் அதிகாரப் பரவலாக்கம் மூலம், அதிக பட்சம் மாகாணசபைகள் மட்டத்தில், தீர்க்கவே முயலும். முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தையும், கட்டளை வழங்கிய அதிகாரிகளையும் பாதுகாக்கவே செய்யும். இதனை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கும் எண்ணம் உள்ளவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இலங்கையில் தமிழர்களின் அரசியல் திக்கற்ற கடற்பயணமாகியுள்ளது. தமிழ் அரசியலில் 2009 க்குப் பின்னர் விரிசல்கள் காணப்பட்டாலும், ஜனாதிபதித் தேர்தலுடன் அது சுக்குநூறாகத் துண்டு துண்டாக உடைந்துவிட்டது. தமிழ்த் தேசியத்திற்கு வாக்களிக்கும் நீண்ட பாரம்பரியத்தை உடைத்து, தமிழ் வாக்குகள் முழுமையாகப் பிளவுபட்டுள்ளன. இது தமிழர்களின் அடிப்படையான இனப்பிரச்சினை மற்றும் அதிகாரத்தை பகிரும் அபிலாஷைகள் மீதான பேரம் பேசும் நிலைகளைத் தடுக்கிறது. பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் அதிகபட்சம் 16-17 தமிழ் உறுப்பினர்களே தெரிவு செய்ய்யப்படும் நிலை உள்ளது. பல்வேறு கட்சிகளும், சுயேட்சைக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. சில சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுவோர் அரசியல் காரணங்களுக்காக இல்லாமல் தமது தனிப்பட்ட நலன்களுக்காகவும் போட்டியிடுகின்றனர். தேர்தலின் பின்னர் வெளிநாடுகளுக்குச் சென்று அகதி விண்ணப்பங்களில் தேர்தலில் போட்டியிட்டமையால் தமக்கு நெருக்கடி உள்ளது என்று காரணம் காட்டவும் சிலர் போட்டியிடுகின்றனராம்! இப்படித் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறிப் பிரியும்போது அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் முற்றாக இழக்கப்படவும், மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் முஸ்லிம் உறுப்பினர்கள் அதிகரிக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன. இது வடக்கு-கிழக்கில் 13 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்யப்படக்கூடிய நிலையை உருவாக்கலாம். அதிலும், தமிழ்த் தேசியக் கட்சிகள் சிதறியுள்ளமையால், அவர்கள் மீதான வெறுப்பு பிற தமிழ்க் கட்சிகளுக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் வாய்ப்புக்களைக் கொடுக்கவும் கூடும். ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்று தமிழர்களின் ஒற்றுமையைக் காட்டமுனைந்த பொதுக்கட்டமைப்பு, பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களுக்கு வழிகாட்டமுடியாத அளவுக்கு மூக்குடைபட்டுள்ளது. இது தமிழர் சிவில் சமூகக் கட்டமைப்பின் பாரிய தோல்வியாக உள்ளது. எனவே, மக்கள் தங்களது ஒவ்வொரு வாக்கின் பெறுமதியையும் உணர்ந்து, தமிழர்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடியவர்களை குப்பையில் குன்றிமணியைப் போல அடையாளம் கண்டு வாக்கைச் செலுத்தவேண்டும்.
-
சிந்து சமவெளி- 5000 ஆண்டு திராவிடப் பண்பாடு. : சூர்யா சேவியர்
சிந்து சமவெளி- 5000 ஆண்டு திராவிடப் பண்பாடு. : சூர்யா சேவியர் அக்டோபர் 2024 - Uyirmmai Media · சமூகம் 1922ம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளர் ஜான்மார்ஷல் நடத்திய அகழ்வாய்வில் மொகஞ்சதாரோ, ஹரப்பா என்ற இரு நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது இந்நகரங்கள் இரண்டும் நிலப்பரப்பின் அடிப்படையில் பாகிஸ்தானில் உள்ளன. உலக வரலாறு குறித்த சிந்தனைப் போக்கில் பெரும் மாற்றத்தை இக்கண்டுபிடிப்புகள் உருவாக்கியது. இவற்றின் கட்டமைப்புகள் கி.மு.2500 ல் நாகரிகத்தின் உச்சநிலையை அடைந்திருந்ததை உலகிற்கு உணர்த்தியது. இதில் ஆச்சரியமான ஒரு விசயம் யாதெனில் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட செங்கலின் அளவு இன்று வரை மாறாமல் இருப்பது தான். அங்கிருந்த மிகப்பெரும் தானியக் களஞ்சியம் தனியுடமை இல்லாத கூட்டு வாழ்க்கையைப் பறைசாற்றியது. எகிப்தின் மன்னராட்சி முறையும், சுமேரியாவின் நாடு போன்ற அமைப்பும் இங்கு இல்லை. ஆனால் அவர்களை விட நாகரிகத்தில் உயர்ந்து இருந்தார்கள். அதற்கு இங்குள்ள பாசன மேலாண்மையே முக்கியக் காரணமாக இருந்தது. இதன் எல்லை மிகவும் குறுகியது. இதையொட்டிய வேறு நகரங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எகிப்து, சுமேரியா போன்று பெரும் பாசனக் கால்வாய்கள் இங்கு இல்லை. அணை கட்டி அதன் அருகிலேயே விவசாயம் செய்துள்ளனர். இவர்கள் இரும்பு காலத்திற்கு முந்தையவர்கள். எனவே கலப்பையை இவர்கள் பயன்படுத்தவில்லை. ஆற்று வெள்ளம் கொண்டு வந்த வண்டலைப் பயன்படுத்தியே விவசாய முறை இருந்தது. தங்கள் தேவை போக மீதி உணவுகளை எகிப்து, சுமேரியாவுக்கு விற்றுள்ளனர். தற்போதைய பஹ்ரைன் அன்று முக்கியமான வணிகச் சந்தையாக இருந்துள்ளது. தங்கள் தேவைக்கான உணவை உற்பத்தி செய்து, அனைவரும் பங்கிட்டு வாழ்ந்த உயர்ந்த நாகரிகம் கொண்ட இந்த மக்கள் அழிந்தது எப்படி என்பதே கேள்வி? இதற்கான விடையை ரிக்வேதம் தருகிறது. ரிக்வேதத்தில் 10,552 செய்யுட்கள் உள்ளன. இதில் 1028 செய்யுட்களே மெட்டமைத்துப் பாடும் வடிவில் உள்ளன. இப்பாடல்களில் பெரும்பாலான பாடல்கள் முடிவே இல்லாமல் சோறு வேண்டும் என்றே புலம்புகிறது. நதிகளை விடுவித்த இந்திரன் ரிக் வேதத்தில் மீண்டும் மீண்டும் போற்றப்படுகிறான். வான் மேகமாக குவிந்த மழையை அவன் விடுவிக்கிறான். இந்திரனால் விடுவிக்கப்பட்ட நீரை செயற்கையான தடுப்பு போட்டு தடுத்திருந்தனர். அரக்கனாகிய விரித்திரன் ஒரு பாம்பு போல மலைச்சரிவில் ஆற்றின் குறுக்கே படுத்திருக்கிறான். ” குறுக்கே படுத்து ஆற்றின் வேகத்தைத் தடுத்துக் கொண்டு இருந்த அரக்கனைக் கொன்று ஆற்றை விடுவித்ததால் இந்திரனை ‘விரித்ராகரன்’ என்று ரிக்வேத வரிகள் போற்றுகிறது. விரித்ரன் என்றால் அடைப்பு என்று பொருள். அரக்கனை இந்திரன் கொன்றதும் இந்த அசுரனின் மூச்சற்ற உடல் மீது நீர் பிரவாகமாக ஓடியது. வண்டிச் சக்கரங்கள் போல் கற்கள் உருண்டன என்ற ரிக்வேத வரிகள் ஓர் அணையை உடைத்ததையே கவிதை நயத்தோடு விவரிக்கிறது. வேளாண்மை அறியாத நாடோடிக் கூட்டமான ஆரியர்களின் படையெடுப்பில் சிந்து சமவெளி நாகரிகம் அழிந்தது”( டி.டி. கோசாம்பி-“பண்டைய இந்தியா). சிந்துசமவெளியில் தீப்பற்றி எரிந்த தடயங்களும் கரிமப் படிவ ஆய்வில் கண்டறியப்பட்டன.இம்மக்களின் தேவைக்கான காடுகளை ஆரியர்கள் அழித்ததும் கூட இதற்கான காரணமாக இருக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டது. ஆரியர்களின் இந்தியப் படையெடுப்பே அழித்தொழித்த வரலாற்றிலிருந்தே தொடங்குகிறது. இந்தியா வேதங்களின் நாடு, சிந்துசமவெளி நாகரிகம் என்பதை சிந்து சரஸ்வதி நாகரீகம் என சங்பரிவார் அமைப்புகள் நிறுவ முயற்சிக்கிறார்கள். வேத நாகரீகம் இந்தியாவில் தான் தோன்றியது என சங்பரிவார் வாதிடுவார்கள். தங்களின் கருத்திற்கு வலு சேர்க்கவே, வேதத்தில் கூறப்பட்டுள்ள சரஸ்வதி நதி என்ற ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.அதற்கு ஆதாரம் என்ன? சரஸ்வதி என்ற சொல்லுக்கே நதி என்று தான் பொருள். ஆரியர் வருகை எனும் கோட்பாடு ஒன்று இங்கு உண்டு. இக்கோட்பாடு வெள்ளையர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு ஏற்பாடு என்றும், வேதங்கள் இந்தியாவில் தான் உருவானது என்றும் சங்பரிவார் அமைப்புகள் கூறிக் கொண்டிருக்கும். ஆரியர் வருகை எனும் கோட்பாடு எப்படி உருவானது? ஒரு சொல்லின் பிறப்பியலில் இருந்தும், மொழிகளை ஒப்பிட்டு நோக்கும் ஒப்பீட்டு மொழியியல் ஆய்வுகளிலிருந்துமே இக்கோட்பாட்டை உருவாக்கினர். அது என்ன ஒப்பீட்டு மொழியியல்? ஒரு மொழி தோன்றியதும், அம் மொழியைப் பேசுபவர்கள் இடம் பெயர்வதாலோ,அல்லது ஒரு மொழி பேசுவோர் வேறு வகையான மொழி பேசுவோரின் பண்பாட்டுத் தாக்கத்திற்கு உட்பட்டாலோ புதிய கிளை மொழி ஒன்று உருவாகும் என்பதே மொழியியல் ஒப்பீட்டின் அளவுகோல். இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. மனிதன் என்ற அடிப்படையில் எல்லோரும் ஒரு இனம் தான். மனித இனம் தான். தொடர்ந்த இடப்பெயர்வின் காரணமாகவே புதிய, புதிய மொழிகள் உருவாகின. உலகம் முழுமையும் மொழியின் பிறப்புகள் குறித்த ஆய்வுகள் நடைபெற்றன. இதுபோல் இந்தியாவில் உள்ள மொழிகளை ஆய்வு செய்யும் போது திராவிடம் மற்றும் வடமொழி என்ற இருபெரும் மொழித் தொகுதிகள் இருப்பது அறியப்பட்டது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயரும் பொழுது புதிய கிளை மொழிகள் தோன்றும். அப்படித் தோன்றிய புதிய கிளை மொழியில் சில பொதுவான சொற்கள் தொடர்ந்து வந்திருப்பதை அறிய முடியும். அதாவது ஒரு சொல்லின் வேர்ச்சொல் ஒன்று போலவே இருக்கும். உச்சரிக்கும் ஒலிப்பு முறையில் மட்டுமே மாற்றங்கள் இருக்கும். தமிழில் ‘எங்கு’ என்ற சொல் மலையாளத்தில் ‘எங்கன’ என்று ஒலிக்கும். இதுபோல் பல உதாரணங்கள் உண்டு. உறவுகள் சார்ந்த பெயர்கள் தாய் மொழியிலும், அதிலிருந்து பிரிந்த கிளை மொழியிலும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டிருக்கும். அதோடு தாய்மொழி உருவான பகுதிகளின் நில அமைப்பு, இயற்கைச் சூழல், பயன்படுத்தும் பொருட்கள், உடலின் பாகங்கள், ஆகியவற்றில் உள்ள சொற்களில் பெரும்பாலும் ஒப்புமை இருக்கும். அதே நேரத்தில் இங்கு உருதுச் சொற்கள் புழக்கத்தில் உள்ளன. அதுவும் தமிழின் கிளை மொழி என்று கூற இயலாது. அது கடன் பெற்று பயன்படுத்துவதே. நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படும் ஆஜர், வாய்தா உள்ளிட்ட பெரும்பாலான சொற்கள் உருது தான். மொழி ஒப்பியல் குறித்த ஆய்வுகள் பல உண்டு. அதில் உலகளவிலான ஆய்வுகளில் முக்கியமானது லத்தீன், கிரேக்கம்,வடமொழி குறித்த ஆய்வுகள். இம்மூன்று மொழிகளிலும் உள்ள பல சொற்கள் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போவதை மொழியியல் அறிஞர்கள் அறிந்தனர். உதாரணமாக லத்தீனில் ஆகாயக் கடவுளுக்கு ‘ஜூப்பிட்டர்’ என்றும், கிரேக்கத்தில் ‘தேயூஸ் பட்டர்’ என்றும், வடமொழியில் ‘தேயூஸ் பித்தர்’ என்றும் வழங்கப்படுகிறது. எண் சார்ந்த சொற்களிலும் இந்த ஒப்புமை ஏராளம் உண்டு. ஒன்று என்பதற்கு லத்தீனில் உன்னஸ், கிரேக்கத்தில் ஒய்ஸ், வடமொழியில் இக்கஸ், ஏழு என்பதற்கு லத்தீனில் ஸட்பம், கிரேக்கத்தில் ஹப்தா, வடமொழியில் ஸப்தா, நூறு என்பதற்கு கிரேக்கத்தில் எக்கடன், லத்தீனில் சென்டம், வடமொழியில் ஸதம். இதுபோல் அவெஸ்தா மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகளும் மேற்கண்ட மூன்றோடும் ஒப்புமை கொள்ளும். குதிரைக்கு ஈரானின் அவெஸ்தா மொழியில் அஸ்பா, கிரேக்கத்தில் ஹப்போஸ், லத்தீனில் இக்கியுஸ், ஜெர்மனியில் கோத்திக்கிஸ், வடமொழியில் அஸூவ எனப்படுகிறது. லத்தீனில் ரோட்டா, ஜெர்மனியில் ராட், வடமொழியில் ரத( ரதம்) எனப்படுகிறது. இதுபோன்ற பல மொழி ஒப்பியல் ஆய்வுகள் மூலம் கிரேக்கம், லத்தீன், வடமொழி ஆகியவை ஒரே குடும்பத்தைச் சார்ந்தவையென்றும், இக்குடும்பத்தினை இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என்றும் ஆய்வாளர்கள் அழைத்தனர். இம்மொழிக் குடும்பாத்தாரே “ஆரியர்கள்” என வகைப்படுத்தப்பட்டனர். மொழியியல் ஆய்வுகள் மூலம் தான் அவர்கள் ஆரியர்கள் என்று அழைக்கப்பட்டனர். வேதங்களில் சொல்லப்படுவது போல குதிரைகளில் வந்தவர்கள். குதிரையின் பலனை அறிந்தவர்கள். இங்கிருந்த பூர்வ குடிகளின் மீது ஆதிக்கம் செலுத்தினர் என்ற கருத்து உருவானது. கிரேக்கம், லத்தீன், ஜெர்மன், ரோமானிய மொழிகளின் குடும்ப மொழியாக வடமொழி இருக்குமென்றால், அது இங்கு தோன்றி அதன் பிறகு அங்கெல்லாம் பரவி இருக்கலாமே என்ற கேள்வி எழும். இப்போதுதான் இந்திய நிலப்பரப்பில் இருக்கும் மற்றொரு பெரும் மொழியான திராவிடக் குடும்ப மொழி இக்கேள்வியை இடைமறித்து நிற்கிறது. இந்தியாவில் ஆரியமொழி தோன்றியிருந்தால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட திராவிடம் எப்படித் தோன்றியது? ஐரோப்பா வரை பரவிய ஆரியமொழி அருகிலேயே இருக்கும் தென்பகுதியில் ஏன் பரவவில்லை? எனவே வட இந்தியாவில் ஆரியம் பரவியது. தென்னிந்தியாவில் திராவிடம் தொடர்ந்து இயங்கியது என்ற கருத்திற்கு வந்தனர்.மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து ஆரியம் பல்வேறு திசைகளுக்கும் பரவியது. அவ்வாறு பரவிய ஒரு கிளை மொழியே வடமொழி என அறியப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியில் இன்றளவும் பேசப்படும் பிருஹி மொழி திராவிடக்குடும்ப மொழியாகவே இருக்கிறது. இந்திய தீபகற்பத்தின் வடபகுதியிலும், அதையும் தாண்டியும் பரவிய ஆரியம் ஆப்கனின் ஒரு பகுதியில் பரவவில்லை. பிருஹி பேசும் மக்கள் ஒரு தனித்தீவாகவே உள்ளனர். இது போன்ற பல சான்றுகள் உள்ளன. மொழி ஒப்பியல் மற்றும் சொற்பிறப்பியல் ஆய்வுகளின் படியே 19 ம் நூற்றாண்டில் ஆரியவருகை எனும் கருத்து உருவாக்கப்பட்டது. ஆரிய வருகை எனும் கருத்தை பலரும் தங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பயன்படுத்திய பல நிகழ்வுகள் அப்போது நடந்தேறின. இந்தியாவில் ஆட்சி செலுத்திய ஐரோப்பியர்கள் இங்கிருந்த ஆரியக் கொள்கையைப் பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவின் வரலாற்றுச் சாதனைகள் முழுமையுமே ஐரோப்பிய நாகரீகத்தின் விளைவுதான் என வாதிட்டனர். தூய ஆரியர்களைக் கொண்ட மத்திய ஐரோப்பா பண்பாட்டில் உயர்ந்திருப்பதாகவும், ஆரியர்களிடமிருந்து பிரிந்த கிளையானதால் தாழ்வானதாக இருப்பதாகவும், ஆரியர்களுடன் தொடர்பே இல்லாத கருப்பர்கள் குரங்குகள் என்றும் வாதிட்டு வந்தனர். இங்கிருந்த ஆரியர்கள் ஐரோப்பிய வெள்ளையர்களை தங்களின் பிரிந்து போன சகோதரர்கள் என்ற ரீதியில் அணுகி, ஆரியக் குடும்பத்தின் இருபெரும் கிளைகளின் சந்திப்பு என்றே ஆரவாரமுற்றனர். எனவே தான் ஆர்.எஸ்.எஸ் ஆங்கிலேயர்களை ஆதரித்துக் கிடந்தது. வெள்ளையர்களும், நாமும் ஒரு குலமே என்று அவர்களோடு இணைந்து சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள முயன்றனர். ஆனால் மராட்டியத்தின் சமூகசீர்திருத்தவாதி ஜோதிபாபூலே போன்றவர்கள் இதை கடுமையாக எதிர்த்தார். உயர்சாதி ஆரியர்கள் அந்நியர்கள், ஆங்கிலேயர்களைப் போலவே நம்மை அடக்குகிறார்கள். எனவே இருவரையும் எதிர்த்து போராட வேண்டுமென முழங்கினார். ஆரியர்களின் பூமி இந்தியா. இங்கிருந்து தான் உலகம் முழுமையும் ஆரியர்கள் பரவினர் என்று ஒரு பிரிவினர் கூறி வந்தனர். ஆரியம் இங்கு உருவாகவில்லை என்பதற்குச் சான்றாக ஒரு பெரும் நிகழ்வு அப்போது அவர்களுக்கு பேரிடியாக வந்து சேர்ந்தது. தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட மொகஞ்சதாரோ புதைநகரம் அதுவரை இருந்துவந்த கருத்துகளை, தற்போது கீழடியைப் போல தலைகீழாகப் புரட்டிப் போட்டது. சிந்தி மொழியில் மொகஞ்சாரோ என்றால் “இறந்தவர்கள்மேடு” என்று பொருள். 1921 ம் ஆண்டு புத்தமத வரலாற்றுச் சின்னத்தை ஆராய ரக்கால் தாஸ் பானர்ஜி என்பவர் முற்பட்டபோது தான், அவ்விடத்தின் அடியில் ஒரு நாகரிகத்தின் அடிச்சுவடு இருப்பதை அறிந்தார். அதுவே மொகஞ்சதாரோ. உருவங்கள், முத்திரைகள்,வில்லைகள் பல கிடைத்தன. அதுவரை பாபிலோனிய, எகிப்து நாகரீகங்களே தொன்மையானது என்றும், ஆரிய வருகைக்குப் பிறகே இந்திய நாகரீகம் தோன்றியது என்றும் கருதியவர்களுக்கு சிந்துசமவெளி நாகரீகம் பேரிடியாய் அமைந்தது. மொகஞ்சதாரோவின் சிந்துசமவெளி நாகரீகம் கி.மு.3000 ஆண்டுகளைச் சார்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது வளர்ந்த வேதநாகரீகத்துக்கு வெகு முன்பே இந்தியாவில் நாகரீகம் இருந்ததை வெளிக்கொணர்ந்தது. 1944 ல் ஹரப்பா விரிவாக ஆராயப்பட்டது. மொகஞ்சதாரோ, ஹரப்பா கி.மு. 3000 த்தைச் சார்ந்தது. அதற்கு முன்பு ஏதுமில்லை என்று கருதிக் கொண்டிருந்த போது மேலும் ஒரு ஆய்வு அதற்கும் முந்தைய காலத்திற்கு அழைத்துச் சென்றது. 1974 ல் பாகிஸ்தானின் கட்ச் பகுதியில் உள்ள மெகர்கார்ஹ் எனும் பகுதியில் பிரெஞ்சு ஆய்வாளர் ஜூன்பிரன்சிஸ்ஜரிஜ் என்பவர் தலைமையில் நடந்த அகழ்வாய்வு முக்கியமானது. இங்கு கண்டுபிடிக்கப் பட்ட தொன்மையான குடியிருப்பு கி.மு. 7000 த்தைச் சார்ந்தது. மொகஞ்சதாரோவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பு. அதாவது இன்றிலிருந்து 9000 ஆண்டுகளுக்கு முந்தையது. சாலைகள், பொதுக்குளம்,பாதாளச் சாக்கடைகள், தானியக்கிடங்குகள், வாணிப வில்லைகள், எழுத்துகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. இங்கு கிடைத்தவற்றை மொழியியல் ஒப்பீட்டு மூலம் ஆய்வு செய்து கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன. மெகர்கார்ஹ், மொகஞ்சதாரோ,ஹரப்பா ஆகிய சிந்துசமவெளி நாகரீகங்கள் எப்படி அழிந்தது என்ற கேள்வி எழுந்தது. வேதங்களில் இந்திரனுக்கு “புரம்தாரா” என்று பெயர் உண்டு.புரம் என்பது கோட்டையைக் குறிக்கும். புரம்தாரா என்றால் கோட்டையைத் தகர்த்தவன் என்று பொருள்தரும் என ஆய்வாளர் வீலர் 1946 ல் கருத்து வெளியிட்டார். வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி 1956 ல், இந்திரனை விர்ட்ராஹனா என்று விர்ட்டை தகர்ப்பவன் என வேதம் குறிப்பிடுகிறது. எனவே சிந்து நாகரிகம் ஏற்படுத்திய தடுப்பு அல்லது அணையை தகர்த்து அழித்தவன் இந்திரன் என்று கருத்து கூறினார். 1947 வரை 37 சிந்துநாகரிக குடியிருப்புகள் மட்டுமே இனம் காணப்பட்டது. ஆனால் இன்று 2500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அகழ்வாராயப்பட்டுள்ளன. மேற்கே சுட்காகேன்டோர் முதல் கிழக்கே யமுனையின் கிளை நதியான ஹந்தானில் உள்ள ஆலம்சீர்பூர் வரையிலும், வடக்கே ஜம்முக்கு அருகே 28 கி.மீ தொலைவில் உள்ள மன்டாவிலிருந்து கட்ச்,சௌராஷ்டிரா வரை தெற்கிலும் விரிந்திருந்தது சிந்து நாகரீகம். சிந்து நாகரிகத்தை ஆராயும் போது மூன்று கட்டங்களாக அவை வளர்ந்துள்ளது அறியப்பட்டது. முதற்கட்டம் வடமேற்கேயுள்ள பகுதிகளில் காணப்பட்ட முற்கால சிந்து நாகரிகம். இடைக்கால சிந்து நாகரீகம் ஐந்து நதிக்கரைகளிலும் காணப்பட்டது. இக்கட்டத்தில் மைய ஆளுமை இருந்ததாக கருதப்பட்டது. பிற்கால சிந்து நாகரீகம் வட்டாரப் போக்குகளில் வேறுபாடுகளுடன் இருந்து யமுனை வரை பரவி இருந்தது. எனவே கி.மு. 2000 த்தில் தான் ஆரிய கலாச்சார வருகை குடியிருப்புகளில் காணப்படுகிறது. அவற்றில் தான் வேதங்களில் குறிப்பிடப்படும் பசுபதி போன்ற அம்சங்கள் காணப்பட்டன. இதுவே தொல்லியல் ஆய்வுகளாக நம்மிடம் இருக்கிறது. இதிலிருந்து வேதங்கள் இந்தியாவில் தோன்றியதல்ல என்ற முடிவுக்கு வந்தார்கள்.சங்பரிவார் அமைப்புகளுக்கு வேதபூமி இந்தியா இல்லை என்பது பெரிய சிக்கலாக ஆனது. நவீன தேசக் கொள்கை யாதெனில், ஒரு தேச எல்லைக் கோட்டிற்குள் வாழ்பவர்கள் அத்தேசத்தின் குடிமக்கள் என்பதே. இப்போது அதில் மதத்தை நுழைத்திருக்கிறார்கள். மெக்காவை வழிபடுபவர்கள் இந்தியர்கள் இல்லை என்ற மதவெறி போக்கில் இருக்கிறார்கள். அவர்களுக்கு பாரதம் பித்ருபூமி என்கிறார்கள். வேதங்களே இந்தியாவில் எழுதப்படவில்லையென்று ஆய்வுகள் நிரூபித்துவிட்டபடியால் இது புனிதபூமியாக அவர்களுக்கு இருக்காது. வேதம் காட்டும் புனிதபூமி இரான், ஆப்கானிஸ்தானில் உள்ள நதிகள் என்றாகிறது. எனவே தான் இல்லாத ஒரு நதியை சரஸ்வதி நதி என வாதிடத் தொடங்குகிறார்கள். சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று சொல்லத் துணிகிறார்கள். ஆப்கானிஸ்தானை குடியுரிமையில் இணைத்ததும் தங்களின் பித்ருபூமி என்ற தொட்டுத்தொடரும் பட்டுப்பாரம்பரியம் போலத்தான். சிந்து நாகரிகமும், வேத நாகரிகமும் வெவ்வேறானவை என்பதற்கு ஆய்வாளர்கள் தரும் விளக்கங்கள் எவை? வரலாறை படிக்கிற போது புவியியலோடு இணைந்து படித்திட வேண்டும்.இல்லையேல் கதைகளில் லயித்துப் போகும் பேராபத்தை உருவாக்குவார்கள். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முடிவுற்ற உறைபனிக் காலத்திற்குப் பிறகு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் காட்டுக்குதிரை பரிணமித்தது என்பதே விஞ்ஞான வரையறை. இந்தக் குதிரை தான் பழக்கப்படுத்தப்பட்டு வீட்டு விலங்காக ஆக்கப்பட்டது. இந்திய துணைக்கண்டத்தில் இயற்கையான குதிரை பரிணாமம் இல்லை. குதிரை போன்ற உருவமுடைய ஒருவகை கழுதையே இராஜஸ்தான் பகுதிகளில் இருந்தது. இந்தக் கழுதைகளைப் பயன்படுத்தி தேர் போன்ற வண்டிகளில் பூட்டி ஓட்ட முடியாது. சிந்து சமவெளி ஆய்வுகளில் குதிரை கண்டறியப்படவில்லை. ஆனால் ரிக் வேதத்தில் ஆரியர்கள் அஸ்வம் என்று அழைக்கும் குதிரை பற்றி பல செய்திகள் உண்டு.குதிரை உயர்வாகப் போற்றப்படுகிறது. அசுவமேதயாகம் என்பதும் குதிரை சார்ந்ததே. ரிக் வேதத்தின் பல பாடல்களில் இதனைக் காணலாம். எனவே குதிரையை மையமாக வைத்து எழுதப்பட்ட ரிக்வேதம், குதிரைகள் பரவியிருந்த பாரசீக சமவெளியிலும், இந்துகுஷ் மலைப்பகுதியிலுமே எழுதப்படிருக்க வேண்டும் என்பதே தொல்லியல் ஆய்வாளர்கள் முடிவு. சங்பரிவார்களின் அரசியல் பிரச்சாரங்கள் கூட குதிரை பூட்டிய ரத வடிவில் இன்றும் இருப்பது அவர்களின் வரலாற்றுத் தொடர்ச்சி தான்.விளிம்பு நிலை மக்களுக்கு நிராகரிக்கப்பட்டும், உடல் உழைப்பை அருவருப்பானதாகவும், தங்களை மேட்டுக்குடியாகவும் கருதிக் கொண்ட மனநோயாளிகளின் விளையாட்டாக உருவாக்கப்பட்டதே குதிரையேற்றம். குதிரையேற்றம் நி்ராகரிப்பட்ட மக்கள் உருவாக்கிய விளையாட்டே கால்பந்து. ஆதிக்க வர்க்கம் பொதுவாக இந்த விளையாட்டை ரசிப்பதில்லை.இதில் ஈடுபடுவதும் இல்லை.ஏனெனில் சூது சார்ந்த கோட்பாடுகளைக் கொண்டாடும் கூட்டம் அது. நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் முதல் பங்காளிகள் கோடிக்கணக்கான உழைக்கும் கூட்டத்தினரே. கிராமத்துக் கோவில் திருவிழாக்களில் குதிரையெடுப்பு என்ற நிகழ்வு இன்றும் உள்ளது. குதிரையில் வந்தவர்கள் நம்மை அழிக்கிறார்கள் என்பதன் எதிர்வினை பண்பாட்டு மரபே புரவியெடுப்பு. குதிரைகளில் நாட்டுப்புற தெய்வங்களை அமர வைத்து, கையில் ஆயுதங்களோடு நிறுத்தியதும் பார்ப்பனிய எதிர்சமய மரபே. வேதங்களில் மிகவும் பேசப்படும் ஒன்று சோமபானம். சோமபானம் எபித்திரா எனும் தாவரத்திலிருந்து தயாரிப்பதாக இனம் காணப்பட்டது. இந்த தாவரம் இந்தியாவில் விளைவதில்லை. இந்துகுஷ் மலைப்பகுதிகளில் அதிகமாக கிடைக்கும் தாவரமே எபித்திரா. வேதத்தில் பனி மூடிய மலைமுகடுகள் குறித்தும்,காடுகள் பற்றியும் கூறப்படுகிறது. மலைப்பாங்கான பகுதிகளில் வாழ்ந்ததாகக் குறிப்புகள் ஏராளமாய் காணக்கிடக்கிறது. ஆனால் சிந்துசமவெளி நாகரீகங்கள் முற்றிலும் சமவெளிப் பகுதிகள் சார்ந்தது. இங்கு காடுகளோ,பனி மூடிய பகுதிகளோ முற்றிலும் கிடையாது. ஹரப்பன் பகுதி நிலங்கள் கூட பாலைப் பகுதியைச் சார்ந்தது. ரிக்வேதத்தில் கூறப்படும் வாழ்விடப் பகுதிகள் நீண்ட பகலுக்கும், குறைவான இரவுக்கும் உள்ள விகிதம் 3:2 என்கிறது. 35 டிகிரி வடக்கில் அமைவதே 3:2 என்ற விகிதம். இந்தியப்பகுதியில் ஸ்ரீநகர், ஆப்கானிஸ்தானின் காபூல் முதலிய பகுதிகள் தான் 35 டிகிரி வடக்கில் வரும். நிலநடுக்கோட்டிற்கு அருகே உள்ளவர்களுக்கு இரவும் பகலும் சமமாக அமையும். எனவே ரிக்வேத வேதாங்க ஜோதிஷத்தின் படியும் இது ஆரியர்களின் பூமியல்ல. காலத்தால் மூத்த குடியிருப்புகள் இந்தியாவின் வடமேற்கில் தான் உள்ளன. இளைய குடியிருப்புகள் யமுனையில் காணப்படுகிறது. இதுபோல முற்கால ரிக் வேதத்தில் கங்கை நதி குறித்து எவ்வித குறிப்புகளும் இல்லை. எனவே வடமேற்கிலிருந்து பரவி வந்தனர் என்பதே ஆய்வாக இருக்கிறது. வேதம் இந்தியாவின் தொன்மம் என்று இவர்கள் கூறுவதைப் போல, ஈரான் பகுதியில் பரவியிருந்த பார்சி மதத்தின் மையநூல் அவெஸ்த்தா ஆகும். அவெஸ்த்தாவிற்கும், வேதத்திற்கும் பல ஒப்புமைகள் இருக்கிறது. சோமபானம் குறித்து இரண்டிலும் குறிப்புகள் உண்டு. மித்ரா, அசுரா முதலியவைகள் அவெஸ்தாவிலும் உண்டு. இரண்டிலும் பொதுவான பெயர் ஒப்புமைகள் இருந்தாலும், அதன் பொருள் சில இடங்களில் மாறுபட்ட தன்மையுடனும் உள்ளது. வடமொழியின் தேவா என்பது தேவன்,கடவுள் என்று பொருள். ஆனால் அவெஸ்தாவில் தேய்வா என்பது அசுரனாக பொருள் கொள்கிறது. நாஸத்யா என்பது அவெஸ்த்தாவில் பேய்த்தன்மை. ஆனால் வடமொழியில் தெய்வத்தன்மை. உதாரணமாக இதுபோல பல ஒப்புமைகளை இரண்டிலும் காணலாம். வேதநாகரிகத்திற்கும், இன்றைய ஈரான், துருக்கி பகுதிகளில் வாழ்ந்தவர்களுக்கும் கலாச்சாரத் தொடர்ச்சி இருந்ததற்கு மேலும் ஒரு வலுவான ஆதாரம் உண்டு. கி.மு.1350 ல் மிட்டானியின் அரசனான மட்டிவாஸாவை, ஹிட்டிடிஸின் அரசன் ஸீப்பில்லுலியும்மா தோற்கடித்த போது எழுதப்பட்ட ஒப்பந்தமே அந்த ஆதாரம். கியூனிபார்ம் எனப்படும் களிமண்ணில் இந்த ஒப்பந்தம் பொறிக்கப்பட்டுள்ளது. ஒபந்தத்தின் அடியில் கடவுள் பெயர்கள் எழுதப்பட்டு, இக்கடவுளின் மீது ஆணையாக ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என ஆவணம் கூறுகிறது. முதலில் வென்றவர்கள் கடவுள் பட்டியலிடப்பட்டுள்ளது. இரண்டாவதாக தோற்ற மிட்டானி கடவுள்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் வேதத்தில் உள்ள மித்ரா, வருண,இந்திர, இரண்டு நாஸத்தியர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆகவே இன்றைய ஈரான் பகுதியில் இந்தக் கடவுள்கள் இட்டுக்கட்டப்பட்டு, பின்னர் இந்தியா நோக்கி பரவிய கலாச்சாரம் அதை உள்வாங்கி புதிய வேதமதமாக உருவாகியது என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். சிந்துசமவெளி நாகரீகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மிருகத்தின் படத்தைக்காட்டி இதுதான் குதிரை என சங்பரிவார் கும்பல் இன்றுவரை வாதிடுவார்கள். அது ஒற்றைக் கொம்புள்ள காண்டா மிருகத்தின் சாயல் என்றும், யூனிகார்ன் எனும் கற்பனை மிருகம் என்றும் ஆய்வாளர்கள் மெய்ப்பித்தனர். புலி, காளை, மான்,யானை என பல விலங்குகள் வில்லைகளாக சிந்துசமவெளியில் கண்டறியப்பட்டாலும் குதிரை மட்டும் இல்லை. எனவே வேதங்கள் உருவானது இந்தியாவில் அள்ள என்றும், ஆரியர்களின் பித்ருபூமி இதுவல்ல என்றும் ஐராவதம் மகாதேவன் உள்ளிட்ட தொல்லியல் அறிஞர்கள் போட்டு உடைத்தனர். எனவே தான் தங்களுக்கான ஆதாரங்கள் ஏதுமற்ற நிலையில் இல்லாத, ஓடாத ஒன்றை இருப்பதாகக் கூறி, அதுதான் இது என்ற செந்தில்-கவுண்டமணியின் வாழைப்பழக் கதையை நிர்மலா சீத்தாராமன் பாராளுமன்றத்தில் பேச முயல்கிறார். அதுவே சரஸ்வதி நதி. இது ஏறக்குறைய தெனாலிராமன் வரைந்த குதிரைக்கதையைப் போலவே உள்ளது. குதிரையை தத்ரூபமாக வரைபவருக்கு பரிசு என மன்னன் அறிவிப்பான். தெனாலிராமன் படம் வரைந்து மன்னனுக்காக காத்திருப்பான். அரசன் பார்வையிட வருவான். தெனாலியின் படத்தைக் கண்டு திகைத்துவிடுவான் மன்னன். இது என்ன என்று தெனாலியிடம் கேட்பான் மன்னன். ஒரு கோட்டை வரைந்து வைத்து, இது குதிரையின் வால் என்பான் தெனாலி. அதுசரி குதிரை எங்கே என்பான் அரசன்.அதுவா.? சித்திரத்திற்கு அந்தப்புறம் இருக்கிறது என்பான் தெனாலி. இதுதான் இங்கு பாஜக சொல்கிறது. சிந்து சமவெளி நாகரீகத்தை சிந்து-சரஸ்வதி நாகரீகம் என்றும், வேதப்பண்பாட்டின் முன்னோடியாக முன்னிறுத்துவதற்கு சங்கத்துவக் கூட்டம் செய்து வரும் தொடர் முயற்சிகளுக்கு எதிரான கண்டுபிடிப்பு ஒன்றை புதிய ஆய்வு முடிவுகள் முன்வைக்கின்றன. பூனாவின் டெக்கான் கல்லூரி, பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அண்மையில் உத்திரப் பிரதேசம் மற்றும் அரியானா மாநிலத்தில் உள்ள ஹரப்பா நாகரீகத் தொடர்புடைய ஐந்து கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இப்பகுதிகள் கி.மு. 2600 மற்றும் கி.மு 1900 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் குறிப்பிடத்தக்க நகர வசிப்பிடங்களாக இருந்தன. இங்கு கண்டெடுக்கப்பட்ட பானைகளில் உள்ள உணவுத் துணுக்குகளை (lipid residue analysis) ஆய்வு செய்த அவர்கள், சிந்து சமவெளி மக்கள் ஆட்டு இறைச்சி மட்டுமின்றி, மாட்டிறைச்சியும், பன்றி இறைச்சியும் கூட உட்கொண்டனர் என்பதை உறுதி செய்துள்ளார்கள். பசுக்கள் புனிதமானவை, மாட்டிறைச்சி என்பது இந்துக்களால் வெறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது, இந்து கலாச்சாரம் தொடக்கம் முதலே அவற்றை ஒதுக்கி வைத்தது போன்ற வாதங்களை இந்த ஆய்வுகள் நிராகரிக்கிறது. சிந்து சமவெளி நாகரீகத்தை, சிந்து-சரஸ்வதி நாகரீகம் என்று சங்கத்துவத்தினர் உரிமை கொண்டாடினால், மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும் உட்கொண்ட ஒரு நாகரீகத்திற்குத் தான் உரிமை கொண்டாடுகிறார்களா என்று எதிர்க் கேள்வி கேட்க வேண்டும். நிஜங்கள் வெளிவரும்போது அவர்கள் நிர்வாணமாக நிற்க வேண்டி வருகிறது. சிந்து சமவெளி மக்கள் சுத்த அசைவத்தினர் என்பதே ஆய்வு மெய்ப்பிக்கும் உண்மை. (சூர்யா சேவியர் வெளியிட இருக்கும் “பண்பாட்டின் அரசியல்” என்ற நூலிலிருந்து ஒரு பகுதி) https://uyirmmai.com/article/uyirmmai-magazine-october-2024-surya-xavier-article-01/
-
இலங்கை- கண்ணால் காண்பதும் பொய் – இரா. முருகவேள்
இலங்கை- கண்ணால் காண்பதும் பொய் – இரா. முருகவேள் அக்டோபர் 2024 - Uyirmmai Media · அரசியல் இலங்கை சிவந்தது. மார்க்சீயவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டனர். இலங்கை ஒரு மார்க்சீய சார்பு கொண்ட ஜனாதிபதியைத் தேர்தெடுத்துள்ளது. புதிய ஜனாதிபதி சே குவேராவால் உத்வேகமூட்டப்பட்டவர் என்றெல்லாம் இந்திய, பன்னாட்டு ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு செய்தி வெளியிட்டன. ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட இடதுசாரி அமைப்பு தேர்தலில் நின்று வெற்றி கண்டது சிறப்பானது என்று இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட் ) தோழர்கள் கொண்டாடினர். இவையெல்லாம் முழுவதும் பொய் என்று சொல்லிவிட முடியாது. ஜேவிபி ஒரு சோஷலிச இலங்கையை உருவாக்கத்தான் தோற்றுவிக்கப்பட்டது. இலங்கை இடதுசாரிகள் போதுமான அளவுக்கு புரட்சிகரமாக இல்லை. மக்களைத் திரட்டவும் அரசியல் படுத்தவும் அவர்கள் முயலவில்லை என்று கருதிய ரோஹன விஜயவீரா என்ற இளைஞரும் அவரது தோழர்களும் 1965 வாக்கில் மக்கள் விடுதலை முன்னணி என்னும் ஜனதா விமுக்தி பெரமுனாவை உருவாக்கினர். 1971 ஆம் ஆண்டு இந்த புதிய கட்சி தன்னை ஒரு அரசியல் கட்சியாக அறிவித்துக் கொண்டது. இதன் வளர்ச்சி இலங்கை அரசுக்கும் பழைய பாணி இடதுசாரி கட்சிகளுக்கும் அதிர்ச்சியளித்தது. இந்தப் புதிய அமைப்பின் மீது அடக்குமுறைகள் ஏவி விடப்பட்டன. 1971 ஆம் ஆண்டு ஏப்ரலில் கடும் அடக்குமுறைகளை ஆயுத எழுச்சி கொண்டு எதிர்கொள்ள ஜேவிபி முடிவு செய்தது. போதுமான ஆயுதங்களும் பயிற்சியும் இல்லாமலிருந்தும் ஜேவிபியினர் தென்னிலங்கையின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர். இரண்டு வார போராட்டத்துக்குப் பிறகு இந்தியாவின் ராணுவ உதவியுடன் இலங்கை அரசு கிளர்சியை ஒடுக்கியது. 20,000 ஜேவிபியினர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பின்பு ஜேவிபிக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. அந்தக் கட்சி தேர்தலில் நின்றாலும் பெரிய வெற்றியோ வாக்குகளோ பெறவில்லை. இருந்த போதிலும் ஜேவிபி மக்களிடையே நல்ல செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அறிய முடிகிறது. சாஸ்திரி சிரிமாவோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ் நாட்டின் கூடலூர், வால்பாறை போன்ற பகுதிகளுக்கு வந்த இலங்கை மலையகத் தமிழர்களில் சிலர் ஜேவிபி ஆதரவாளர்களாக இருந்ததைப் பார்த்து தமிழ் நாட்டு தொழிற்சங்கவாதிகள் வியப்படைந்தனர். 1983 ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக நடந்த படுகொலைகளுக்கும் கலவரங்களுக்கும் பிறகு யாழ்ப்பாணத்தில் நிறுத்தப் பட்ட சிங்கள ராணுவ வீரர்களில் இளநிலை அதிகாரிகள் பலர் ஜேவிபி ஆதரவாளர்களாக இருந்தனர். செ. கணேசலிங்கனின் நாவல்களிலும் இதைக் காண முடியும். 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதையடுத்து, இந்திய விரிவாதிக்கத்தை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த ஜேவிபி பெரும் வளர்ச்சி கண்டது. வட இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய ராணுவத்துக்கும் கடும் போர் நடந்து வந்த நேரத்தில் தென்னிலங்கையில் ஜேவிபிக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே உக்கிரமான மோதல்கள் நடந்து வந்தன. ஜேவிபி பெரும்பாலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் போன்றவர்களை தனிநபர் அழித்தொழிப்பு செய்தது. போலீஸ், ராணுவத்தினர் மீது தாக்குதகள் நடத்தியது. பதிலுக்கு ராணுவம் பல்லாயிரம் ஜேவிபியினரை எரித்தும் சுட்டும் கொன்றது. சுமார் 60000 பேர் கொல்லப்பட்டதாக கணக்குகள் கூறுகின்றன. இந்த எழுச்சியில் மலையகத்தில் தலைமறைவாகவிருந்த ரோஹன விஜயவீர உள்ளிட்ட ஜேவிபியின் எல்லா தலைவர்களும் பிடிக்கப்பட்டு போலி மோதல்களில் கொல்லப்பட்டனர். தப்பிய சோமவன்சா அமரசிங்கே என்ற தலைவர் இலங்கை அரசின் வேட்டையால் பலநாடுகளில் சுற்றியலைந்து இறுதியில் பிரிட்டனில் தங்கி ஜனதா விமுக்தி பெரமுனாவை மீளக் கட்டியமைத்தார். இவர் 1990 லிருந்து 2014 வரை தலைவராக இருந்தார். 1994 ஆம் ஆண்டு இலங்கை திரும்பினார். இந்தக் காலகட்டத்தில் ஜேவிபி ஆயுதப் போராட்டத்தை முற்றிலும் கைவிட்டது. பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இலங்கை தேர்தல்களில் பங்கெடுத்துக் கொண்டது. சந்திரிகா குமாரதுங்கா ஜனாதிபதியாகவிருந்த சுதந்திரா கட்சி அரசில் ஜேவிபி பங்கு கொண்டது. அப்போது இப்போதைய ஜனாதிபதியான அனுரா குமார திசனாயகே விவசாய அமைச்சராக இருந்தார். அப்போதுதான் விடுதலைப்புலிகள் ஓயாத அலைகள் என்ற பெயரில் அடுத்தடுத்து நடத்திய பெரும் தாக்குதல்களில் வட இலங்கையில் முல்லைத்தீவு, ஆனையிறவு, பரந்தன், போன்ற மிகப் பெரிய ராணுவ முகாம்கள் துவம்சம் செய்யப்பட்டன. திரிகோணமலை தவிர தமிழ் ஈழம் என்றழைக்க்கப்பட்ட பகுதியில் 90 சதவீதம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பட்டின் கீழ் வந்தது. ராணுவம் பலத்த பின்னடைவைச் சந்தித்ததை அடுத்து சந்திரிகா விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தையைத் தொடங்கினார். சுனாமி வந்த போது நிதியை புலிகளுடன் பகிர்ந்து கொள்வது பற்றிப் பேசப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனுரா குமார திசநாயகே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 2014 ஆம் ஆண்டு ஜேவிபியின் தலைவரான சோமவன்சா அமரசிங்கே கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் பதவிவிலகி தனிக்கட்சி உருவாக்கினார். அதற்குப் பின்பு அனுரா குமார திசநாயகே தலைவரானார். அவர் தலைவரானதுமே முன்பு நடந்த எழுச்சிகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதன் மூலம் இன்னொருமுறை இப்படியொரு எழுச்சி நடக்காது என்று இலங்கை ஆளும் வர்க்கங்களுக்கு உறுதியளித்தார். ஜேவிபி தன்னை இலங்கையை ஆண்டு வரும் இரண்டு மூன்று குடும்பங்களுக்கு வெளியாள் என்று கூறிக் கொண்டாலும் மேலும் மேலும் இலங்கையின் ஆளும் நிறுவனங்களுக்குள் ஐய்க்கியப் பட்டது. அனுரா குமாரா திசநாயககே மேலும் மேலும் ரோஹன விஜயவீராவின் புரட்சிகர மார்க்சீய அரசியலில் இருந்து விலகிச் சென்றார். அந்த ஆண்டுகள் சிங்கள தேசியவாதமும், புத்தமத அரசியலும் உச்சத்திலிருந்த ஆண்டுகள். ஜேவிபியின் இடத்தை புத்த மத அரசியல் பிடித்துக் கொண்டது. ஜேவிபி பல இடதுசாரி கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், என் ஜி ஓக்களைக் கொண்டு தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினார். 2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் நின்ற திசநாயகே பெற்றது வெறும் 3 சதவீத வாக்குகள் தான். 2022 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் திவாலானது. கொரொனா முழு அடைப்புகளை ஒட்டி இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தது. ஏற்கெனவே தடுமாறிக் கொண்டிருந்த பொரு ளாதாரம் மேலும் நொறுங்கியது. அதனால் உலக வங்கி போன்றவர்களிடமிருந்து வாங்கிய கடன்களைத் திருப்பித் தர முடியவில்லை. எனவே உணவு, பெட்ரோல், மருந்துகள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியவில்லை. கடும் உணவுத் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டதையடுத்து அரகலயா என்ற பேரெழுச்சி ஏற்பட்டது. மிகவும் வலிமை வாய்ந்த ராகபக்ஷே குடும்பம் அரசியலில் வீழ்ச்சியடைந்தது. அதற்கு முன்பிருந்தே சுதந்திரா கட்சியும், ஐய்கிய தேசிய கட்சியும் அதிலிருந்து உடைந்த பிரிவுகளும் மேலும் மேலும் உடைந்து இலங்கை அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தின. இலங்கையை காலங்காலமாக ஆண்டு வந்த ஜெயவர்த்தனே, பண்டாரநா்யகா குடும்பங்களின் மேலுள்ள வெறுப்பு, திசநாயகாவின் ஏழைகளுக்கு ஆதரவான பேச்சுக்கள், 2022 இல் ஏற்பட்ட வீழ்ச்சி எல்லாம் சேர்ந்து ஒரு மார்க்சீயவாதியை ஜனாதிபதியாக உட்கார வைத்துள்ளன. ஏழை மக்களின் விருப்பமே இலங்கையில் வெற்றி பெற்றுள்ளது. இனி எல்லாம் நலமே நடக்கும் என்று முடிப்பது கட்டுரைக்கு நல்ல முடிவாக இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படி முடிக்க முடியாத வண்ணம் சில சிக்கல்கள் உள்ளன. ——————————————- எழுத்தாளர் சுஜாதாவின் கதை ஒன்று உண்டு. ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெறும். ஒரு அம்ப்பையர் மிகவும் நேர்மையானவர். அவரிடம் கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் வந்து ஒரு முக்கியமான பேட்ஸ்மேனுக்கு தவறாக அவுட் கொடுக்க கோடிக் கணகில் பேரம் பேசுவார்கள். அம்ப்பையர் மறுத்துவிடுவார். பின்பு போட்டியில் அந்த பேட்ஸ்மேன் இரண்டே ரன்னில் தானாகவே அவுட் ஆகிவிடுவார். அம்ப்பையர் சூதாட்டக்காரணை ஒரு விடுதியில் பார்ப்பார். பேட்ஸ்மேன் தானாகவே அவுட் ஆகிவிட்டாரே உங்கள் பணம் மிச்சம் என்பார். சூதாட்டக்காரன் சிரித்துக் கொண்டே எங்கே மிச்சம். உங்களுக்கு பேசிய தொகையை விட இரண்டு மடங்கு நேரடியாக அந்த பேட்ஸ்மேனுக்கே கொடுத்து விட்டேன் என்பான். பேட்ஸ்மேன் அபத்தமாக அவுட் ஆன ரகசியம் அம்ப்பையருக்கு புரியும். ————————————- 2022 ஆம் ஆண்டு கோத்தபய ராஜபக்ஷே அரசு திவாலாகி, கோத்தபய நாட்டை விட்டு ஓடியதும் இலங்கை முன்னால் இரண்டு வழிகள் இருந்தன. நாட்டை சூறையாடி வந்த ஆளும் வர்க்கங்களின் சொத்துக்களை அரசுடமை ஆக்கி, அன்னிய நிறுவனங்களை வெளியேற்றி, அநீதியான வெளிநாட்டு ஒப்பந்தங்களை ரத்து செய்து பொருளாதாரத்தை மீட்பது. ஐ எம் எஃப் இடம் பெரும் கடன் வாங்கி நெருக்கடியில் இருந்து மீள்வது. அதற்கு பதிலாக நாட்டின் செல்வ வளங்களை தனியார்மயமாக்குவது, மக்கள் சேவைக்கு ஒதுக்கப்படும் பணத்தை ரத்து செய்வது ஆகியவையே இந்த இரண்டு வழிகள். அமெரிக்கா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ரனில் விக்ரமசிங்கேவை அதிபர் ஆக்கியது. இலங்கை சட்டப்படி அதிபர் தேரதலில் நின்று வெற்றி பெற வேண்டும். ஆனால் ரனில் பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் விருப்பமான தேர்வு ரனில் என்று பேசப்பட்டது. ரனில் ஆட்சியில் ஐ எம் எஃப் இடம் கடன் வாங்கி இலங்கையின் பொருளாதாரம் மீட்கப்பட்டதாகக் கருதப்பட்டது. ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. மேலும் மேலும் நாசமாகி வந்தது. 2022 ஐ போன்ற இன்னொரு எழுச்சி ஏற்படும் என்ற சூழ்நிலை உருவாகி வருகிறது என்பதை இலங்கை ஆளும் வர்க்கங்களும், அமெரிக்காவும் அறிந்திருந்தன. மார்க்சிய கட்சி என்று கருதப்பட்ட ஜேவிபியின் செல்வாக்கு அதிகரித்து வந்தது. ஆரம்பத்தில் அமெரிக்கா, ரனில் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து வருகிறார் என்று தனது கைத்தடிகள் மூலம் பிரச்சாரம் செய்தது. ஆனால் ஒரு நல்ல அம்ப்பையரைப் போல மக்கள் மயங்கவில்லை. அவர்கள் மேலும் மேலும் மார்க்சீயம், ஏழைகளின் நலன் என்று பேசிய ஜேவிபி பக்கம் சாய்ந்து வந்தனர். எனவே சிறந்த கிரிக்கெட் சூதாடியைப் போல அமெரிக்கா பேட்ஸ்மேனான ஜேவிபியையே அணுகி காரியத்தை சாதித்து விட்டது. ஜேவிபி வென்று அனுரா குமார திசநாயகே அதிபர் ஆனார். ஆனால் ஒரு தூய மார்க்சீயவாதியாக ஐ எம் எஃப் ஐ நாட்டை விட்டு துரத்தாமல் அதனோடு பேச்சு வார்த்தை நடத்தி நிபந்தனைகளின் கடுமையை குறைக்கும் படி கேட்டுக் கொள்வேன் என்று கூறினார். அன்னிய முதலீட்டாளர்கள் அச்சப்பட வேண்டாம் என்று உறுதியளித்தார். இந்தியா மற்றும் சீனாவின் உறவு மதிக்க்ப்படும் என்றார். சோஷலிச லட்சியங்கள் பற்றிப் பேசாமல் எல்லா முதலாளித்துவ அரசியல்வாதிகளையும் போல ஊழல் ஒழிப்பு, தூய ஆட்சி பற்றியே பேசினார். பேட்ஸ்மேன் கிளீன் போல்ட் ஆனார் ——————— புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி என்று சொல்லப்பட்ட ஜனதா விமுக்தி பெரமுனாவுக்கு என்ன நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான கதை. திசநாயகேவின் வெற்றிக்கு இரண்டு காரணங்கள் உள்ளன என்று JVP/NPP leader elected as new president of sri lanka- Saman gunadasa Jayasekera – World socialist web site கட்டுரை கூறுகிறது. பொருளாதார நெருக்கடி அது ஏற்படுத்திய சமூக பிரச்சினைகள் ஆகியவை ஒரு காரணம். இலங்கை ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதி ஜேவிபியை ஆதரித்தது என்பது இன்னொரு காரணம். 2022 இல் நடந்த எழுச்சி திரும்பவும் நடக்கமல் தடுக்கவே ஆளும் வர்கத்தின் ஒரு பிரிவு ஜே வி பியை ஆதரித்தது என்கிறது மேற்சொன்ன கட்டுரை. ஜேவிபி ஆட்சிக்கு வருவது என்பது சோஷலிசம் நிலைநாட்டப்பட்டு விட்டது. எழுச்சி முடிவடைந்து விட்டது என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என்பதே இலங்கையின் ஆளும் வர்க்கங்கள், மற்றும் அமெரிக்காவின் கருத்தாகும். திசநாயக பொருளாதாரத்தை மீளக் கட்டியமைத்து, ஏழை மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தி, ஊழலையும், பணம் படைத்த வர்க்கங்களின் சலுக்கைகளையும் ஒழிப்பதாக சொல்லி ஓட்டுக் கேட்டார். அதே நேரம் அவர் ஐ எம் எஃப் சொல்லும் பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்யப் போவதாகவும் உறுதியுமளித்தார். அதற்கு பதிலாக அமெரிக்கா 3 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கும். இதற்காக அரசு நிறுவனங்களை விற்பனை செய்தல், பொதுத்துறை வேலைகளை இல்லாமல் செய்தல், சுகாதாரம், கல்வி போன்றவற்றில் தனியார் துறையை ஊக்குவித்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும். இதுபற்றி திசநாயகே எதுவும் பேசவில்லை. கடன் வேண்டாம் என்று சொல்லவும் இல்லை. நிபந்தனைகளுக்கு உடன்பட முடியாது என்றும் சொல்லவில்லை. திசநாயக தான் ஐ எம் எஃப் உடன் கடனுக்கான நிபந்தனைகளின் கடுமையைக் குறைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்போவதாக கூறியுள்ளார். ஆனால் ஐ எம் எஃப் அதற்கு இடமே இல்லை என்று கூறிவிட்டது. செப்டம்பர் 4 ஆம் தேதி தொழிலதிபர்கள், பெருவணிகர்களுக்கான மாநாட்டில் பேசிய திசநாயகா அவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதாகவும், அன்னிய முதலீட்டாளர்களை ஆதரிப்பதகவும் உறுதியளித்தார். The wizaedry of Anura Kumara Dissanayake, sri lanks’s new president – R.K. Radhakrishnan, Frontline, the hindu.com அனுரா குமார திசனாயகே குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றது ஒரு மாயாஜாலம் என்கிறது மேற்கண்ட கட்டுரை. 2019 ஆம் ஆண்டிலிருந்து ஏராளமான இலங்கை மக்கள் வறுமையில் தள்ளப்பட்டனர். திசனாயகே தன்னை இவர்களது குரலாக முன்னிலைப் படுத்திக் கொண்டார். 2022 முதல் 2024 வரை திசனாய்கே தான் இலங்கை ஆளும் வட்டங்களை சேர்ந்த ஆள் அல்ல. சாதாரணன் வெளியாள் என்று மக்களை நம்ப வைத்ததில் வெற்றி பெற்றார். பலவிதங்களில் இவரது அணுகுமுறை மோடியைப் போலிருக்கிறது என்கிறது பிரண்ட்லைன் கட்டுரை. திசனாயகேவின் தாயார் வாக்களிக்க இலங்கையில் டக் டக் என்று அழைக்கப்படும் ஆட்டோ ரிக்ஷாவில் வந்தார். ஆனால் திசநாயகே ஆடம்பரமான சொகுசு காரில் வந்தார். விக்ரமசிங்கே இது ஒரு நாடகம் என்று எக்ஸ் தளத்தில் கிண்டல் செய்தார். உண்மையில் திசநாயகே ஆளும் வர்க்கங்களுக்கு வெளியாள் அல்ல. 2001 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 லிருந்து 2005 வரை விவசாய அமைச்சராக இருந்தார். அது சந்திரிகா குமாரதுங்காவின் அப்பட்டமான முதலாளித்துவ அரசு. அதில் விவசாய அமைச்சராக இருந்த போதும் திசநாயகே விவசாயிகளின் நலனுக்கான திட்டங்கள் எதையும் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை. அது முழுவதும் சந்திரிகா அரசாகவே இருந்தது. எனவே அரசு நிர்வாகம், ஆளும் வர்க்க தொடர்புகள், பதவிகள் எல்லாம் ஜேவிபிக்கு பழக்கம் தான். பிடிவாதமாக தனது கொள்கைகளில் நிற்காமல் ஆளும் வர்க்கங்களுக்கு ஏற்ப வளைந்து கொடுப்பதும் திசநாயகேவின் ஜேவிபிக்கு வழக்கம் தான். இதில் இறுதி ஆணியை அடித்தது அமெரிக்கா. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று அமெரிக்க தூதர் ஜூலி சுங் ஜெவிபியின் தலைமை அலுவலகம் வந்து திசநாயகேவை சந்தித்தார். விமல் வீரவன்சா என்ற சிங்கள தேசியவாத பாரளுமன்ற உறுப்பினர் ஒரு விவாத மேடையில் இலங்கை அரசியலில் அமெரிக்கா தலையிடுகிறது. அமெரிக்கா ரனில் விக்ரமசிங்கேவை அதிபர் ஆக்க விரும்புகிறது. முடியாத நிலையில் அனுரா குமார திசநாயகேவை அதிபர் ஆக்க உறுதி கொண்டிருக்கிறது என்றார். அந்த வீடியோ மர்மமாக இணையத்தில் இருந்து மறைந்து விட்டது என்கிறது Tamil Guardian – Weerawansa caims US ambassador is interfering in Sri. Lankan elections என்ற கட்டுரையில். ஜூலி சுங் பலமுறை தேசிய மக்கள் சக்தி அலுவலகத்துக்கு வந்துள்ளார். யுஎஸ் எய்ட் அட்மினிஸ்ட்ரேட்டர் சம்ந்தா பவர், ஹரிணி அமரசூர்யவை சந்தித்தார் என்கிறார் விமல். ஜூலி சுங் இலங்கைக்கான அமெரிக்க தூதராக இருந்தார். அவரது பதவி காலம் முடிந்தும் இலங்கையில் இருந்து இந்த வேலைகள் செய்து வருகிறார். இதில் அதிர்ச்சிகரமாக 2022 போராட்டங்களிலும் ஜூலி சுங் பங்கு வகித்தார் என்கிறார் விமல். அதாவது திவாலான கோத்தபய அரசை கவிழ்ப்பதிலும் அமெரிக்கா பங்கு வகித்தது என்கிறார் விமல். வங்கதேசத்தில் ஷேக் அஸீனாவின் அரசுக்கு ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளுக்குக் காரணமான அமெரிக்காவே அவரது அரசைக் கவிழ்த்தது நினைவிருக்கும். இந்த சந்திப்பிற்குப் பிறகு அனுரா அமெரிக்கா சுற்று பயணம் மேற்கோண்டார். இதற்கான செலவுகளை அமெரிக்க தூதரகம் செய்தது என்ற வதந்தி பரவலாக இருந்தது. அதை அமெரிக்க மறுத்தது. அதன் பின்பு அனுரா முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், உலகமயம் தாராளமயம் பற்றியெல்லாம் பேசுவதே இல்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா வரும்படி அனுராவுக்கு மோடி அரசு அழைப்பு விடுத்தது. அனுரா திசநாயகே இந்தியா வந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் போன்றோரை சந்தித்தார். பின்பு இலங்கை திரும்பிச் சென்ற அனுரா அமுல் குழுமத்தின் வெற்றியை இலங்கையிலும் செயல்படுத்தப் போவதாகக் கூறினார். இந்திய விரிவாதிக்கத்துக்கு எதிரான அரசியலை முழுமையாகக் கைவிட்டு இலங்கை இந்திய உறவுகளைப் பேணுவதைப் பற்றிப் பேசினார். இந்தியாவுடனான உறவை மேலும் வலிமைப்படுத்த உறுதி கொண்டிருப்பதாகவும் கூறினார். எனவே அமெரிக்கா, இந்தியா, ஐ எம் எஃப், இலங்கையில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள், ஆகியோரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அனுரா குமார திசநாயகே இலங்கையின் அதிபர் ஆவது உறுதி செய்யப்பட்டது. ஜே வி பி தன்னிடம் மிச்சம் மீதியிருந்த சோஷலிச லட்சியங்களை முழுதாகக் கைவிட்டுவிட்டு இலங்கையின் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு உள்ளே வந்த பின்பே அனுர குமார திசநாயகே அதிபர் ஆக மேற்சொன்ன நாடுகளும், அதிகார மையங்களும் ஒப்புதலளித்தன. அதாவது எதுவுமே மாறாது என்பதை இந்த நாடுகளும் நிறுவனங்களும் உறுதிப் படுத்திக் கொண்ட பின்பே இந்த மாற்றத்தை ஏற்படுத்தின. இலங்கை சிவந்தது. இலங்கையின் உழைக்கும் மக்கள் தங்கள் அரசை ஏற்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுவதை அமெரிக்க, இந்திய, இலங்கை ஆளும் வர்க்கங்கள் கைதட்டி ஆமோதிக்கின்றன. இப்போது இருப்பது உங்கள் அரசு என்று இவர்கள் உழைக்கும் மக்களிடம் சொல்கின்றனர். இன்னொரு நாடகம் அரங்கேறுகிறது. https://uyirmmai.com/article/uyirmmai-magazine-october-2024-ra-murugavel-article-02/
-
தமிழரசில் இருந்து என்னை யாரும் வெளியேற்ற முடியாது!; சிறீதரன் சூளுரை
தமிழரசில் இருந்து என்னை யாரும் வெளியேற்ற முடியாது!; சிறீதரன் சூளுரை “அரசியல் ரீதியான அழுத்தங்களும், நெருக்கடிகளும் நிறைந்திருக்கும் சமகாலத்தில், அவை அனைத்தையும் எதிர்கொண்டவாறு எனது அரசியல் பயணத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்தவாறு தொடர்வதைப் போலவே, இனிவரும் காலங்களிலும் எனது பயணம் அமையும். கட்சியை விட்டு நான் ஒருபோதும் வெளியேறமாட்டேன். என் மீதான காழ்ப்புணர்ச்சியிலும், தமது தனிப்பட்ட இயலாமைகளின் அடிப்படையிலும் என்னை யாரும் எமது கட்சியிலிருந்து வெளியேற்றவும் முடியாது.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் சிவஞானம் சிறீதரனுக்கு ஆதரவளிக்கும் வகையில் யாழ். வட்டுக்கோட்டைத் தொகுதியில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிறீதரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, கட்சி ரீதியாகவும், தனிநபராகவும் என்னை ஆத்மார்த்தமாக நேசிக்கும் மக்களின் நியாயபூர்வமான கேள்விகள், உட்கட்சி முரண்நிலைகள் குறித்தே அமைந்திருக்கின்றன. கட்சிக்கு எதிராகவும் தெரிவு செய்யப்பட்ட தலைவராக நான் செயற்பட முடியாதவாறும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் பலர், கட்சியைவிட்டு நான் வெளியேறியிருக்கலாம் என்ற கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். அதேவேளை, என்னைக் கட்சியைவிட்டு வெளியேற்றும் கைங்கரியங்கள் முன்னெடுக்கப்படலாம் என்றும் எதிர்வுகூறுகின்றார்கள். என்னையும், எனது தலைமைத்துவத்தையும் நேசிக்கின்ற – விசுவாசிக்கின்ற எனது மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். எந்தச் சூழ்நிலையிலும் நான் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறப்போவதில்லை. என் மீதான காழ்ப்புணர்ச்சியிலும், தமது தனிப்பட்ட இயலாமைகளின் அடிப்படையிலும் என்னை யாரும் எமது கட்சியிலிருந்து வெளியேற்றவும் முடியாது. தடைகள் அனைத்தையும் தாண்டி, எமது மக்கள் விரும்புகின்ற, அவர்களது மனதறிந்த மக்கள் பிரதிநிதியாக எனது அரசியல் பயணம் தமிழரசுக் கட்சியிலேயே தொடரும் என்பதை, தமிழீழப் பிரகடனம் நிறைவேற்றப்பட்ட வரலாற்று மண்ணான வட்டுக்கோட்டையில் வைத்து உறுதியோடு உரைக்கின்றேன்.” – என்றார். https://akkinikkunchu.com/?p=297185
-
பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே ஜே.வி.பி முன்னெடுப்பதாக பொ. ஐங்கரநேசன் குற்றச்சாட்டு
பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே ஜே.வி.பி முன்னெடுப்பதாக பொ. ஐங்கரநேசன் குற்றச்சாட்டு October 28, 2024 ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சனநாயகத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பொ. ஐங்கரநேசன் கோண்டாவிலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இனங்களுக்கிடையே கலைஞர்களின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2003ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் தமிழ், சிங்கள கலை இலக்கியவாதிகள் இணைந்து கலைக்கூடல் நிகழ்ச்சியை நடாத்தியிருந்தனர். இதனை ஏற்பாடு செய்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இன நல்லிணக்கத்தைச் சகிக்கமுடியாத ஜே.வி.பியினர் புத்தபிக்குகள் சகிதம் ஊர்வலமாக வந்து தாக்குதல்களை மேற்கொண்டனர். தமிழர்கள்மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பியை தமிழ் மக்களே ஆதரிப்பது அரசியல் மடைமைத்தனமாகும் மார்க்சியம் இன மத மொழி பேதங்களைக் கடந்து மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் ஒரு தத்துவம் ஆகும். ஆனால் ரோகண விஜயவீராவின் மறைவுக்குப் பின்னர் ஜே.வி.பி ஏனைய சிங்களக் கட்சிகளைப் போன்றே முற்றுமுழுதாக பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சியாக மாறிவிட்டது. இந்திய – இலங்கை ஒப்பந்த காலப் பகுதியில் அதனை ஆதரித்தமைக்காக சந்திரிகா அம்மையாரின் கணவர் விஜய குமாரதுங்காவின் ஆதரவாளர்கள் பலரையும் விக்கிரமபாகு கருணரட்னவின் ஆதரவாளர்கள் பலரையும் தம் இனம் என்றும் பாராமல் சுட்டுக் கொன்றவர்கள் இவர்கள் தான். தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கை நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் துண்டாடியவர்கள் இவர்கள்தான். விடுதலைப் புலிகளை அழித்ததில் அமெரிக்காவின் பங்களிப்புக்காக அமெரிக்கத் தூதரகம் சென்று கைகுலுக்கியவர்களும் இவர்கள்தான். ஜே.வி.பி இப்போது தேசிய மக்கள் சக்தி என்ற புதிய முகமூடியுடன் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுவருகிறது. ஜனாதிபதித் தேர்தலின்போது ராஜபக்சாக்களின் மீதும் ரணில் தரப்பின் மீதும் சிங்கள மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பு தென்னிலங்கையில் அரசியல் தலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மாற்றம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரப்போவதில்லை. படித்தவர்கள் சிலர்கூட இதனைப் புரிந்து கொள்ளாமல் தமிழ்க் கட்சிகளின் மீது கொண்டிருக்கும் வெறுப்புக் காரணமாக ஜே.வி.பியை ஆதரிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள். அமைச்சர் பதவிக்காகத் தமிழ் மக்களை ஜே.வி.பியிடம் அடகு வைப்பதற்கும் சிலர் தயாராக இருக்கிறார்கள். தமிழ் மக்கள் இதனைப் புரிந்துகொண்டு ஜே.வி.பியை வடக்கு கிழக்கில் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/பௌத்த-சிங்கள-பேரினவாத-நி/
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
கட்சிக்குத் தலைவர் அமைந்தால் பாயசம், தலைவரே கட்சி என்றால் பாசிசம்! Oct 28, 2024 07:00AM IST ஷேர் செய்ய : ராஜன் குறை மக்களாட்சி ஒரே நாளில் உருவாகவில்லை. அது வெகுகாலமாக அதிகாரக் குவிப்பிற்கும், அதிகார பகிர்விற்குமான இயங்கியலில் பரிணமித்தது. அதிகாரப் பகிர்வு என்றால் கூட்டணி ஆட்சி என்பதல்ல. ஒரு நபரிடம் அதிகாரம் குவியக் கூடாது என்பதுதான். ஆனாலும் ஒரு முடிவு எடுக்க வேண்டுமென்றால் அது ஒற்றை முடிவாகத்தான் இருக்கும். அதனை இறுதியாக எடுத்துச் செயல்படுத்தும் பொறுப்பு ஒருவரிடம் கொடுக்கப்படும். அந்த முடிவை இறுதி செய்பவராக தலைவர் என்று ஒருவர் நாட்டிற்கும், அரசுக்கும், நிறுவனத்திற்கும், எந்தவொரு குழுவிற்கும், கட்சிகளுக்கும் தேவைப்படுவார். அப்படி ஒருவர் தலைவராக இருப்பது எதைக் குறிக்க வேண்டும் என்றால் அவர் தலைமை தாங்கும் அமைப்புக்குள் பல்வேறு பார்வைகளும், அணுகுமுறைகளும், பல்வேறு நலன்களும் இருக்கும், அவற்றிற்குள் விவாதங்கள் இருக்கும்; அந்த விவாதங்களில் பயன்பெற்று ஒரு முடிவை இறுதி செய்யத்தான் தலைவர் தேவை என்பது பொருளாகும். சுருங்கச் சொன்னால் அரசியல் கட்சிகளுக்குத் தலைவர் என்று ஒருவரை நியமிப்பது வசதி. அப்போதுதான் கட்சியிலுள்ள பல்வேறு தலைமைப் பண்பு கொண்டவர்களை, பல்வேறு மாறுபட்ட கருத்து நிலைகளை ஒருங்கிணைக்க முடியும். மக்களிடையே கட்சியின் ஒருமித்த முகமாக அவர் செயல்பட வேண்டும். அதனால் ஒவ்வொரு கட்சியும் சரியான தலைமை அமைய வேண்டும் என்று தேடுதலில் இருக்கும். பல சமயங்களில் அப்படி அமையும் தலைவர்கள் எதேச்சதிகாரமாக செயல்படத் துவங்குவதும் நடக்கும். அப்போது மெல்ல, மெல்ல கட்சியில் உற்சாகம் குன்றி, பிளவுகள் தலையெடுக்கும். மக்களிடையே அதன் செல்வாக்கு சரியும். இந்த வகையில் பொறுமையாக சிந்தித்தால் எந்த ஒரு நிறுவனமோ, அமைப்போ, கட்சியோ வலிமை பெறுவது என்பது எந்த அளவு பல்வேறு கருத்துநிலைகளின் விவாதத்திற்கு அது இடம் தருகிறது, எப்படி பல்வேறு அங்கங்களின் தேவைகளை, கோரிக்கைகளை மதித்து நடக்கிறது என்பதனையெல்லாம் பொறுத்துத்தான் அமையும். ஒற்றைத் தலைவரிடம் அதிகாரம் குவிவது குறுகிய காலத்திற்கு பலன் தரலாம். ஆனால் நீண்ட கால நோக்கில் அது பெரும் பலவீனத்திற்கே இட்டுச் செல்லும். அரசியல் கட்சி எப்படி உருவாக வேண்டும்? ஒரு அரசியல் கட்சி கட்டடம் கட்டுவது போல முதலில் அஸ்திவாரம் இட்டு, அதன் மேல் செங்கல்களை வைத்துக் கட்டி, சிமென்ட் பூசி, கான்கிரீட் உறுதிப்பாடு தேவையென்றால் அதனையும் அமைத்து, ஒவ்வொரு தளமாக உருவாக்கிச் செல்ல வேண்டும். கட்சியின் அஸ்திவாரம் என்பதை வேர்மட்டம் என்றும் ஆங்கிலத்தில் கிராஸ் ரூட் என்றும் சொல்வார்கள். எந்த கட்சிகளெல்லாம் வலுவான வேர்மட்ட அமைப்புகளின் மூலம் வலுப்பெறுகிறதோ அந்த கட்சிகளே நீண்ட காலம் நிலைத்து நிற்கும். எந்த கட்சியிலாவது தலைமை வலுவாக இருந்தாலும் வேர்மட்ட அமைப்புகள் கலைந்து போனால் அந்த கட்சி தாக்குப் பிடிப்பது கடினம். உதாரணமாகச் சொன்னால் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பின் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அமைப்பு பெருமளவு சீர்குலைந்தது. பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி என்ற மும்முனைப் போட்டியில் பலரும் காங்கிரஸிலிருந்து உள்ளிழுக்கப்பட்டார்கள். இன்றைக்கு பிரியங்கா, ராகுல் காந்தி போன்ற துடிப்புமிக்க தலைவர்கள் அங்கே இயங்கினாலும், கட்சி அமைப்பு சீர்குலைந்ததால் காங்கிரஸ் அங்கே காலூன்றுவது கடினமாகவே உள்ளது. வேறு பல மாநிலங்களிலும் காங்கிரஸ் இத்தகைய கட்டுமானச் சரிவை சந்தித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்று சிறப்பு என்னவென்றால் மிக வலுவான வேர்மட்ட அமைப்புகளை அது உருவாக்கியதுதான். ஒவ்வொரு கிராமத்திலும், ஊரிலும் தேநீர் கடைகளிலும், சலூன் கடைகளிலும், லாண்டரி கடைகளிலும், சைக்கிள் கடைகளிலும், கட்சிக் கிளைகளிலும், திருவள்ளுவர் மன்றங்களிலும் பலர் கூடி கட்சி ஏடுகளை வாசித்தார்கள். விவாதித்தார்கள். கட்சிக்கு என்று பெரும் லட்சியங்களும், கொள்கை, கோட்பாடுகளும் இருந்தன. தமிழ் மொழியின் பண்பாட்டுச் செழுமையினை அவர்கள் உரமாக்கிக் கொண்டார்கள். ஒரு புதிய அரசியல் சொல்லாடலை உருவாக்கினார்கள். அந்த வேர்கள் சமூக உளவியலில் ஆழமாகப் பற்றிப் பரவின. கவிதைகளாக, நாடகமாக, இலக்கியமாக அது பெரும் வீச்சினைக் கொண்டன. எங்களுடைய தி.மு.க துவக்க கால வரலாறு குறித்த Rule of the Commoner நூலில் காவியப் பாவலர் பண்ணன் என்ற உடுமலை நகர கிளை உறுப்பினரின் அனுபவப் பதிவுகளைக் கூறியுள்ளோம். அவருடைய வழிகாட்டியாக விளங்கிய பா.நாராயணன் அவரை கட்சி வேலைகளை நிறுத்திவிட்டு ஆனந்த விகடன் அறிவித்த இலக்கிய போட்டிக்கு நாடகம் எழுதி அனுப்பச் சொன்னதை விவரித்திருப்பார். அதற்காக கட்சி அனுதாபி ஒருவரிடம் சொல்லி அவரது தோட்டத்து வீட்டில் தங்கி முழு மூச்சாக எழுத வசதி செய்து தருகிறார். இப்படி ஆயிரம் பூக்களாக மலர்ந்த கட்சியைத்தான் சினிமா நடிகர்களால் வளர்ந்த கட்சி என்று ஒற்றைப் பரிமாணமாக பலர் புரிந்து கொள்கிறார்கள். அந்த சினிமா நடிகர்களின் காலத்தையெல்லாம் கடந்து நின்று இன்றும் இந்திய அளவில் திராவிட கருத்தியலை உயர்த்திப் பிடித்து சமூக நீதிக்கும், கூட்டாட்சிக்கும் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது என்றால் எந்த அளவு அதன் வேர்கள் சமூகத்தில் பரவியுள்ளன என்பதை யாரும் சிந்தித்துப் பார்க்கலாம். வெறும் தேர்தல்களில் வெல்லும் சூத்திரம் அல்ல இது. மக்களாட்சி தத்துவம் என்ற மாபெரும் கனவு. அடித்தளம் இல்லாத கட்டடங்கள் ஊடகங்கள் பெருகப் பெருக, மக்களிடையே நன்கு அறிமுகமான ஒருவர் அவருடைய பிரபலத்தை முதலீடாக வைத்து கட்சி துவங்கிவிடலாம் என்று நினைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளிலும் ஊடகப் பிரபலங்கள் எதேச்சதிகார போக்கு கொண்ட தலைவர்களாக மாறுகிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றால் பிரபலமானவர்தான். இவர் அதிபராக இருக்கும்போது யார் அறிவுரையையும் மதிக்காமல் முடிவுகள் எடுக்க முனைந்தவர், பாசிஸ்ட் என்று அவரிடம் பணியாற்றிய முக்கிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பாசிசம் என்பது தலைவரே கட்சி, ஆட்சி என்னும் நிலைதான். ஃபியூரர் கல்ச்சர் என்பார்கள். பெரும்பாலும் தன் பிரபலத்தை மட்டும் நம்பி கட்சி துவங்குபவர்கள் என்ன சொல்வார்கள் என்றால் நீங்கள் அனைவரும் சேர்ந்தவன்தான் நான் என்பார்கள். கர்ணன் படப் பாடலில் கிருஷ்ணன் பாடுவது போல “மன்னனும் நானே, மக்களும் நானே, மரம் செடி கொடிகளும் நானே” என்று கூறுவார்கள். நாமெல்லாம் ஒன்றுபட்ட சக்தி என்று சொல்லும்போது அதுதான் பாசிசம் என்பதை உணர மாட்டார்கள். கட்சி என்றால் அதில் பல அடுக்குகளில் பொறுப்புகள் இருக்க வேண்டும். அந்த பொறுப்புகளை வகிப்பவர்களை தலைமை மதித்து மக்கள் மத்தியில் எடுத்துக் கூற வேண்டும். அதன் பொருட்டுத்தான் மேடையில் பேசும்போது ஒவ்வொருவரின் பேரையும் கூறி “அவர்களே” என்று கூறுகிறார்கள். அதுதான் மக்களாட்சி பாயசம். அது ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர் இயல்பிலேயே பாசிச மோகம் கொண்டுள்ளார் என்பது தெளிவு. பெரும்பாலும் திரைப்பட நடிகர்கள் தமிழ்நாட்டில் கட்சி துவங்கும்போது இதுதான் நிகழ்கிறது. அவர்கள் ஒருவரை மட்டுமே, அவர்கள் பிரபலத்தை மட்டுமே முதலீடாக வைத்து கட்சி துவங்கப்படுகிறது. அவர் ஏதேதோ கொள்கைகளை எழுதி வைத்துப் படிக்கலாம். ஆனால் அவற்றை வடிவமைத்த கட்சி அமைப்பு எது. உயர்நிலைக் குழு எது, பொதுக்குழு எது என்றெல்லாம் தெரிய வேண்டும். அவர்களெல்லாரும் அந்தக் கொள்கைகளைப் பற்றிப் பேச வேண்டும். நடிகர் விஜயகாந்த் மதுரையில் கட்சி துவங்கியபோது நடத்திய மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது ஆய்வு சார்ந்த களப்பணியில் இருந்ததால் கட்சி அலுவலகத்திற்குச் சென்று, பத்திரிகையாளர்களுக்குக் கொடுத்த பாஸ் ஒன்றை நானும் பெற்றிருந்தேன். அதனால் விஜயகாந்த் கட்சி பெயரை அறிவித்தபோது மேடைக்கு வெகு அருகில் இருந்தேன். மக்கள் கூட்டம் அலைபோல மேடையை நோக்கி முண்டியபடி இருந்தது. முதல் நாளே பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு வளாகத்தில் குழுமியிருந்தார்கள். அவர்கள் பலருடன் உரையாடினேன். அவர்கள் அனைவரும் புதிய வரலாறு படைக்கப் போகிறோம், கேப்டனை முதல்வராக்கி தமிழ்நாட்டில் புதிய அரசியல் அத்தியாயம் துவங்கப் போகிறோம் என்று எழுச்சியுடன் பேசினார்கள். தூத்துக்குடியில் கலாசி வேலை செய்யும் ஒருவர் வட்டிக்கு ஐயாயிரம் கடன் வாங்கி மாநாட்டிற்கு நன்கொடை அளித்ததாகச் சொன்னார். நான் ஏன் என்று கேட்டேன். அப்போதுதான் மாநாட்டில் வாலண்டியராக சீருடையுடன் பங்கேற்க முடியும் என்று சொன்னார். உண்மையிலேயே பிரம்மாண்டமாக நடந்த அந்த மாநாடு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. பிரச்சினை என்னவென்றால் அவ்வளவு பெரிய கூட்டத்திடம் பேசுவதற்கு ஆட்கள் இல்லை. மேடையில் பலர் அமர்ந்து இருந்தார்கள். ஆனால் யாருமே சிறப்பாகப் பேசக் கூடியவராக, தலைமைப் பண்பு மிக்கவராக இல்லை. விஜயகாந்த் பேச்சு மட்டுமே முக்கியமானதாக இருந்தது. இன்றுவரை அவருடைய தே.மு.தி.க கட்சித் தலைவர் என்று யாரையும் அடையாளப்படுத்த முடியாது. விஜயகாந்த், அவர் மனைவி பிரேமலதா, மைத்துனர் சதீஷ், மகன் விஜய பிரபாகரன் என்பதைத் தாண்டி வேறு தலைவர்கள், சிந்தனையாளர்கள், நிர்வாகிகள் என்று எவர் பெயரையும் கூற முடியவில்லை. அப்படி ஒரு கட்சி தேய்ந்து வலுவிழக்காமல் என்ன ஆகும்? பல கட்சிகளிலும் இந்த நிலைதான். கட்சியின் தலைவர் இவர் என்று இல்லாமல், இவருடைய கட்சி இது என்று சொல்லும்படியாகத்தான் இருக்கிறது. தலைவருக்காகக் கட்சிதானே தவிர, கட்சிக்காகத் தலைவர் இல்லை. இந்த நிலையில் கட்சி துவங்குவது என்பது மக்களாட்சி தத்துவத்திற்கே விரோதமானது. இந்த செல்வாக்குள்ள நபர்கள் தங்களைத் தவிர கட்சியில் வேறு யாரும் பெயர் பெறுவதையும் விரும்புவதில்லை. மேடையில் கட்சி பொறுப்பாளர்களின் பெயர்களைக் கூறுவதையும், கண்ணியமாக “அவர்களே” என்ற பின்னொட்டுடன் அவர்களை அழைப்பதையும்கூட தேவையற்ற நாடகமாக கேலி செய்யும் அளவிற்குத்தான் மக்களாட்சி குறித்த புரிதல் உள்ளது. கலைஞர் ஒருமுறை எழுதினார். அடுக்குமொழியாகப் பேசுகிறேன் என்று சிலர் தானே சூடுபோட்டுக் கொள்கிறார்கள் என்றார். அவர் சுட்டிக்காட்டிய உதாரணம் மாற்றுக் கட்சிக்காரர் எழுதிய அடுக்குமொழி வசனம். “சர்பத்தையும் (பாம்பு) சாம்பார் வைத்து சாப்பிட்டுவிடுவேன்” என்று எழுதினாராம் அவர். அது போல பெரும் கூட்டத்தைக் கூட்டி தான் மட்டுமே பேசி அனுப்பிவைத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் “பாசிசம் பாசிசம் என்கிறார்களே, இவர்கள் மட்டுமென்ன பாயசமா?” என்று கேட்டுள்ளார். அவர் மக்களாட்சி என்பது பாயசம்தான் என்று புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடெங்கும் சாமானிய மக்களுக்கு அரசியல் உணர்வூட்டி, பேச்சுப் பயிற்சி கொடுத்து, சிந்தனைத் தெளிவு கொடுத்து தலைவர்களாக்கிய மாபெரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். தானொருவன் பேசினாலே மாநாடு என்று நினைக்கும் விஜய், பாசிசம் என்றால் என்னவென்று முதலில் படித்தறிய வேண்டும். தலைமைக்காக கட்சி என்பதே பாசிச வடிவம்தான் என்பதை உணர வேண்டும். முதலில் உங்கள் கட்சி நிர்வாகிகளை மதியுங்கள். அவர்களே கட்சி என உணரச் செய்யுங்கள். கதாநாயக சினிமாவில் நீங்களே திரைப்படமாக விளங்கியதுபோல, கட்சியிலும் நீங்களே கட்சியாக இருக்க முடியாது. உண்மையில் நல்ல சினிமா என்பது என்னவென்று தெரிந்தவர்களுக்கு கதாநாயக சினிமாவே பாசிசத் தன்மையுள்ளது என்பது புரியும். அந்த சினிமா பிரபலத்தை வைத்துக்கொண்டு கட்சி துவங்குவது மட்டுமல்லாமல் “பாசிசம், பாயசம்” என்ற கிண்டல் வேறு. குறைந்தபட்சம் விஜய் அவர் சக நடிகர் பிரகாஷ் ராஜிடம் கேட்டுப் பார்க்கட்டும். கெளரி லங்கேஷ் உயிரைக் குடித்த பாசிசம் பற்றி சொல்லித் தருவார் அல்லது சத்யராஜிடம் கேட்டுப் பார்க்கட்டும். “மணியாட்டுபவர்கள்” உருவாக்கிய சமூகம் பற்றி சொல்லித் தருவார். பெரியார் என்பது கடவுள் மறுப்பு மட்டும் அல்லதான். ஆனால், பார்ப்பனீய சமூக அமைப்பை வாழ்நாள் முழுவதும் சாடியவர். அந்த ஒரு வார்த்தையை, பார்ப்பனீயம் என்ற வார்த்தையை, சொல்ல முடியாவிட்டால் அவர் பெயரை சொல்லும் அருகதை ஒருவருக்கு இருக்க முடியாது. https://minnambalam.com/political-news/fascism-is-a-state-where-the-leader-is-the-party-and-the-government-article-in-tamil-by-rajan-kurai/
-
ஜனநாயக பெண் போராளி வேட்பாளர் தவமணி காட்டம்!
ஜனநாயக பெண் போராளி வேட்பாளர் தவமணி காட்டம்! October 28, 2024 மக்களுக்காக அன்று யுத்தத்தில் களம் ஆடினோம். இன்று 15 வருடங்களுக்கு பிறகு அதே மக்களுக்காக ஜனநாயக வழியில் அரசியலில் களமாட பிரவேசித்திருக்கின்றோம். உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் அம்பாறை மாவட்டம் சார்பாக சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணியம் தவமணி தெரிவித்தார் . காரைதீவைச் சேர்ந்த அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில் … அன்று அகிம்சை வழியில் போராடினோம் .பின்பு ஆயுத வழியில் போராடினோம்.இன்று அரசியல் போராட்டம் இடம்பெறுகின்றது. தென் இலங்கையில் அன்று ஆயுதம் தாங்கிய போராட்டம் இன்று அரசியல் போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கின்றது அவரே நாட்டின் ஜனாதிபதியாக வந்திருக்கின்றார்.. அதேபோல் நாமும் ஆயுத போராட்டத்தில் களமாடிய நாம் இன்று அதே மக்களுக்காக அரசியல் களம் ஆட வந்திருக்கின்றோம். எனவே வெற்றி நிச்சயம். தாயகம் தேசியம் சுயநிர்ணயஉரிமை போன்ற தாரக மந்திரங்களை எதிர்கொண்டு இந்த தேர்தலில் நாங்கள் இறங்கி இருக்கின்றோம் . பெண்கள் சிறுவர் வயோதிபர் உரிமைக்காக நாம் போராடி இருக்கின்றோம். வருடாவருடம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையில் மகளிருக்கு இதுவரை விடுதலை கிடைக்கவில்லை. வீட்டிலும் வன்முறை நாட்டிலும் வன்முறைகள். உரிமைகள் இல்லை. பெண்களுக்கு எப்பொழுது விடுதலை கிடைக்கின்றதோ அன்றுதான் உண்மையான மகளிர் தினம். நான் ஒரு போராளி. மேலும் ஒருமாற்றத் திறனாளி. மாற்றுத்திறனாளிகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று பல அரிசியல்கட்சியிடமும் கேட்டோம். ஆனால் யாரும் கணக்கெடுக்கவில்லை . விசேட தேவை உள்ளவர்கள் நிச்சயமாக அரசியல் ஈடுபட வேண்டும். நான் அதற்கு ஒரு முழு உதாரணமாக இருக்கின்றேன் . எனவே அம்பாறை மாவட்டத்தில் அனைத்து மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் என்னை ஆதரித்து பாராளுமன்ற உறுப்பினர் ஆக்க வேண்டும் . பெண்கள் அரசியலில் முன்வர வேண்டும். 52% வாக்களிக்க தகுதி உள்ள பெண்களுக்கு அரசியலில் சம உரிமை வழங்கப்படவில்லை. எனவே எனக்கு பின்னால் அடுத்தடுத்த தேர்தலில் வர இருக்கின்றன .அதற்கு கட்டாயம் நீங்கள் கைகோர்க்க வேண்டும். அன்று எதையும் எதிர்பாராமல் மக்களுக்காக நாங்கள் களத்தில் போராடினோம். அதேபோல் இன்று அரசியலில் அதே மக்களுக்காக ஒரு அங்கீகாரத்தை கேட்டு நிற்கின்றோம் . நாங்கள் மக்களுடைய சேவை செய்வோம். அரசியல் பெண்கள் ஈடுபட வேண்டும். மக்கள் மீதும் தேசியத்தின் மீதும் நம்பிக்கை வைத்து பெண்கள் முன்வராதது கவலை அளிக்கின்றது. சமூகத்துடன் சேவை செய்யும் நான் அரசியலுக்கு வந்திருக்கின்றேன். எனது இலக்கம் எட்டு. என்னை ஆதரித்து பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள். உங்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்று தருவேன். அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ் வாக்குகளை பிரிக்காமல் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றோம். ஜனநாய போராளிகள் கட்சி சார்பாக நான் எட்டாம் இலக்கத்தில் போட்டியிடுகின்றேன்.நம் மக்களின் நலனுக்காக களமாடிய பெண்களில் நானும் ஒருவள். அங்கவீனமான நிலையிலும் எமது தமிழ் மக்களின் நலனுக்காக இன்று தேர்தல் களத்தில் ஒரு பெண்ணாக போட்டியிடுகின்றேன். பெண்களுக்கான அங்கிகாரம் கிடைக்க பெண்கள் பக்கபலமாக செயற்பட வேண்டும். சமூகத்தின் முதுகெலும்பான பெண்கள் சமூக முன்னேற்ற செயற்பாடுகளில் முன்னுக்கு வர வேண்டும். ஆகவே அம்பாறை மாவட்ட தமிழ் பெண்கள் ஒற்றுமையாக சங்கு சின்னத்திற்கும் எனது இலக்கமான 08 க்கும் வாக்களிக்குமாறு அன்பாக கேட்டுக் கொள்கிறேன். அம்பாறை மாவட்ட தமிழர்களின் நலனில் அக்கறை இல்லாமல் தனித்தனியாக போட்டியிடும் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார். https://www.supeedsam.com/208095/
-
புலம்பெயர்ந்தோருக்கு எதிர்ப்பு - லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம்
புலம்பெயர்ந்தோருக்கு எதிர்ப்பு - லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் பிரித்தானியாவில், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வலதுசாரி போராட்டக்காரர்கள் லண்டனில் இடம்பெற்ற போராட்டங்களில் இணைந்து கொண்டனர். பிரித்தானிய குடிவரவுச் சட்டங்கள் தளர்த்தப்படுவதற்கும் இனவாதத்தை ஒழிப்பதற்கும் எதிராக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து நகரம் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, "அகதிகளை வரவேற்கிறோம்", "வலதுசாரிகளை குப்பையில் போடுங்கள்" என்ற முழக்கங்களுடன், தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக லண்டனில் மற்றுமொரு குழுவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில், நகரில் பொது ஒழுங்கை பராமரிக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக துணை உதவி ஆணையர் ரேச்சல் வில்லியம்ஸ் தெரிவித்தார். மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் எந்தவொரு செயலும் இடம்பெற வாய்ப்பில்லை எனவும், எந்தவொரு அசம்பாவிதத்தையும் எதிர்கொள்ள பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் நடனப் பட்டறை ஒன்றில் கலந்துகொண்ட மூன்று சிறுமிகள் கடந்த ஜூலை மாதம் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், முஸ்லிம் குடியேறி என்று சமூக ஊடகங்களில் தவறான செய்தி பரவியபோது, நாடு முழுவதும் வன்முறைகள் வெடித்திருந்தன. எவ்வாறாயினும், நேற்றைய போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்த நபர், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவர் இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். கடந்த ஜூலை மாதம் பிரித்தானியாவை விட்டு வெளியேறிய போது தனது கைப்பேசியின் பின் (PIN) இலக்கத்தை வழங்கத் தவறியமைக்காக அவர் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. https://oruvan.com/world/2024/10/28/massive-demonstration-in-london-against-immigrants
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: முக்கிய அறிக்கை இன்று வெளியிடப்படும்! -உதய கம்மன்பில
அசாத் மௌலானாவின் சாட்சி போலியானது!; உயிர்த்த ஞாயிறு தொடர்பில் கம்மன்பில வெளியிட்ட பரபரப்புத் தகவல் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட காணொளியினூடாக தகவல் வழங்குனரான அசாத் மௌலானா ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளிப்படுத்திய தகவல்கள் அனைத்தும் போலியானவை என ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் உறுதியாகியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே, ஏ.என்.டி அல்விஸின் அறிக்கையில் வெளியிடப்படாத சில தகவல்களை அவர் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், குறித்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பில், செனல்-4 தொலைகாட்சி வெளியிட்டிருந்த காணொளி தொடர்பில், ஆராய்வதற்காக கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாமின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினார். ராஜபக்ஸவினரை அதிகாரத்திற்கு கொண்டு வரும் நோக்கில், அரச புலனாய்வு பிரிவினால் ஏப்ரல் 21 தாக்குதல் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கலாம் என செனல்-4 தொலைக்காட்சி ஆவணப்படுத்தியிருந்தது. அதனை முற்றாக நிராகரிப்பதாக அந்த ஆணைக்குழு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. செனல்- 4 தொலைக்காட்சி ஏற்கனவே, இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு சந்தர்ப்பங்களில் செயற்பட்டுள்ளது. அரச புலனாய்வு சேவைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி, கடந்த காலத்தில் புலனாய்வு சேவை சீர்குலைக்கப்பட்டமையே, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வாளர்கள் அறிந்திருந்த போதிலும், எம்மால் அறிந்துகொள்ள முடியாமைக்கான காரணமாகும். இதேபோன்றுதான் தற்போது, அறுகம்பை பகுதியில் நடத்தப்படவிருந்த தாக்குதல் தொடர்பான தகவல்களை பெறும் விடயமும் அமைந்துள்ளது. தாக்குதலை நடத்திய தாக்குதல்தாரியான சஹ்ரான் ஹசிமுடன் மூன்று மணிநேரம் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்ததாக அசாத் மௌலானா செனல் 4 காணொளியில் தெரிவித்துள்ளார். அந்தக் கலந்துரையாடலில் தேசிய புலனாய்வு சேவையின் அப்போதைய பணிப்பாளர் மேஜர் ஜென்ரல் சுரேஷ் சாலேவும் பங்கேற்றிருந்ததாக அவர் கூறுகிறார். இந்த சந்திப்பு புத்தளம் – வனாத்தவில்லுவில் உள்ள சஹ்ரானுக்கு சொந்தமான தென்னந்தோட்டத்தில் அமைந்துள்ள வீடொன்றில் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வீட்டில் இருந்தே, 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 100 கிலோகிராமுக்கும் மேற்பட்ட வெடிப்பொருட்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டிருந்ததாக அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். குறித்த சந்தர்ப்பத்தில் 2 சந்தேகநபர்களும் அங்கு கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவரான ஹனீபா முனிஸ் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த வீடு 2018ஆம் ஆண்டு ஒகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் அளவிலேயே கட்டப்பட்டதாக வாக்குமூலம் வழங்கியிருந்ததாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வாறானால் அசாத் மௌலானா கூறியிருக்கும் காலப்பகுதியில், அங்கு வீடு ஒன்று இருந்திருக்கவில்லை. எனவே, அவர் செனல்-4 காணொளியில் வெளிப்படுத்திய தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என உறுதியாவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்துடன், அசாத் மௌலானா கூறிய குறித்த காலப்பகுதியில் சுரேஷ் சாலே மலேசிய தூதரகத்தில் பணியாற்றியிருந்தார். எனவே, அவர் இலங்கையில் தங்கியிருக்கவில்லை. எவ்வாறாயினும், ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து உண்மையான தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் புதிய விசாரணைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்குமானால், செனல்-4 காணொளியில் வரும் இரண்டாவது நபரான அரச அதிகாரி தொடர்பிலும் தனியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார். https://akkinikkunchu.com/?p=297050
-
நாடாளுமன்றத் தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையப்போகின்றது: சிங்கள மக்களின் கருத்து…
நாடாளுமன்றத் தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையப்போகின்றது: சிங்கள மக்களின் கருத்து… October 28, 2024 வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் பொதுத்தேர்தல் தொடர்பில் சிங்கள மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது குறித்து, இலக்கு ஊடகத்திற்காக சில சிங்கள சகோதர்கள் வழங்கிய சிறப்பு செவ்வி…. (சிங்கள மக்களின் கருத்துக்களை அறியும் நோக்கில் இச் செவ்வி எடுக் கப்பட்டது) ‘வங்குரோத்து அரசியலுக்கு முற்றுப்புள்ளி…’ எம்.ஜி..சமரவிக்கிரம, சமூக செயற்பாட்டாளர், கண்டி. இலங்கைக்கு இது தேர்தல் வருடமாகும்.இவ்வருடத்தில் முக்கியமான இரண்டு தேர்தல்கள் இடம்பெறுகின்றன.ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த மாதம் 14 ஆம் திகதி பாராளுமன்ற பொதுத்தேர்தல்கள் இடம்பெறவுள்ளன.இத்தேர்தல் குறித்த பிரசார நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில் அரசியல் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் பாராளுமன்றத்தில் அதிகரித்த பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ளும் முனைப்புடன் காய் நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.இது ஒரு வரலாற்று சாதனை என்றால் மிகையாகாது.’நாடு இக்கட்டான தருணத்தில் இருக்கும் போது எனது சகோதரர் ஒருவர் ஆட்சிக்கு வரு வார்” என்று நீண்ட காலத்துக்கு முன்னதாகவே மக்கள் விடுதலை முன்னணி யின் முன்னாள் தலைவர் றோஹண விஜேவீர கூறிய கருத்து இன்று மெய்ப் பிக்கப்பட்டிருக்கின்றது.இது ஒரு நல்ல சகுனமாகும்.ஜனாதிபதி அநுரவின் ஆட்சியில் ஊழல்கள், துஷ்பிரயோகங்கள் என்பன ஒழிக்கப்பட்டு நாடு அபிவிருத்திப் பாதையில் பயணிக்கும் என்று நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.இந்த நம்பிக்கை பலன் தரும் என்று கருதுகிறேன். இதனடிப்படையில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க சார்ந்துள்ள தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை பரவலாக எதிரொலிக்கின்றது.இதற்கேற்ப சுமார் 130 ஆசனங்களை அக்கட்சி பெற்று அளப்பரிய சாதனை படைப்பது திண்ணமாகும்.இந் நிலையானது நாட்டில் பல சாதக விளைவுகள் ஏற்படுவதற்கு அடித்தளமாகும்.பாராளுமன்றம் சிறந்த பல சட்டமூலங்களை உருவாக்கி நாட்டில் நிலவும் தீய கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் களுக்கான வரப்பிரசாதங்கள் குறைக்கப்படும் நிலையில் மக்கள் இதனால் நன்மையடைவார்கள்.நாட்டில் கடந்த காலத்தில் நிலவிய வங்குரோத்து அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதோடு கடன் சுமையும் குறைவடையும் என்று திடமாக நம்பலாம். ‘சிறுபான்மை கட்சிகள் தேர்தலில் மண் கவ்வும்’ எஸ்.எஸ்.குடாபண்டார, ஓய்வு பெற்ற தலைமைக் கணக்காளர், நுவரெலியா. நான் ஒரு பெரும்பான்மை இனத்தவனாக இருக்கின்றேன். இலங்கை நாட்டில் ஒரு பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவன் என்று கூறிக்கொள்வதில் நான் பெருமையடைகின்றேன். இந்நிலையில் பெரும் பான்மை மக்கள் அனுபவிக்கின்ற உரிமைகள் மற்றும் சலுகைகளுக்கு நிகராக சிறுபான்மை மக்களும் உரிமைகள் சலுகைகள் எனப் பலவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.எந்தவொரு இனத்துக்கும் பாரபட்சம் காட்டப்படலாகாது.எல்லோரும் ‘இலங்கையர்’ என்ற பொது வரையறைக்குள் நோக்கப்பட வேண்டியது அவசியமாகும். எனினும் இம்முறை தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையப்போகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.இத்தேர்தல் சிறுபான்மை கட்சிகளை மண் கவ்வச் செய்யும் நிலையே மேலோங்கி காணப்படுகின்றது.தேசிய மக்கள் சக்தியின் அலை இப்போது நாடளாவிய ரீதியில் காணப்படுகின்றது. இந்நிலையில் இந்த அலைக்கு ஏற்ப வாக்கு வங்கியிலும் கணிசமான அதிகரிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரவின் தேசிய மக்கள் சக்தி 57,40,179 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட நிலையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதா சாவை சார்ந்த ஐக்கிய மக்கள் சக்திக்கு 45,30,902 வாக்குகள் கிடைத்தன.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் 22,99,767 வாக்குகளைப் பெற்றுக் கொண்டமை தெரிந்ததாகும். இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் வாக்குகள் பல மடங்கு சரிவடையக் கூடும் என்று நம்பப்படுகின்றது.அத்தோடு தேசிய மக்கள் சக்தியின் வாக்குகள் அதிகரிக்கும்.இது பாராளுமன்ற பிரதிநிதித்துவ அதிகரிப்பிற்கும் வழிசமைக்கும். எவ்வாறெனினும் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும் பான்மையை பெற்றுக் கொள்ளக் கூடாது.அப்படி பெற்றுக் கொள்ளுமிடத்து இது பாதக விளைவுகள் பலவற்றுக்கும் அடித்தளமாக அமைந்துவிடும்.சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டு நிற்கின்றனர்.தங்களுக்குள் யார் பெரியவர் என்று போட்டி போட்டுக் கொண்டு பிழையான செயற்பாடுகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த முரண்பாட்டு நிலையானது பெரும்பான்மை கட்சிகளுக்கு வாய்ப்பாக போய் விடுகின்றது. இந்த நாட்டில் பல்லின மக்கள் வாழுகின்றனர்.பன்மைக் கலாசாரம் இங்கு காணப்படுகின்றது.ஒரு கொத்தில் தனி ஒரு மலர் இருப்பதைக் காட்டிலும் பல மலர்கள் சேர்ந்திருப்பதே அழகாகும்.இந்த வகையில் இலங்கை மாதாவிடத்தில் எல்லா இனங்களும் பல்வகைமை கலாசாரத்தோடு இணைந்து வாழ்வதே அழகாகும்.இதற்கு அடித்தளமிடும் வகையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அமைய வேண்டும்.இனவாதம் மற்றும் மதவாதத்தால் ஏற்கனவே இலங்கை தேசத்தின் தேகத்தில் தழும்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.இதனை எவரும் மறந்து செயற்படுதல் கூடாது. ‘கடனால் சூழப்பட்ட தீவு’ கே.கே.என்.நந்தகுமார, செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர், பொலன்னறுவை. கடந்தகால ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற அரசியல் நடவடிக்கைகள் காரணமாக நாடு இப்போது கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றது.இதற்கும் மத்தியில் இரண்டு தேர்தல்கள் இந்த ஆண்டில் நடக்கின்றன.இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 2025 ம் ஆண்டின் முற்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.அத்தோடு இந்தியா அதிகாரப்பகிர்விற்கு வலுவூட்டும் வகையில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.எனினும் இது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. ‘ கடலால் சூழப்பட்ட இலங்கை இப்போது கடனால் சூழப்பட்ட’ ஒரு நாடாக மாற்றம் பெற்றுள்ளதாக விமர்சனங்கள் மேலெழுந்து வரு கின்றன.இதற்கும் மத்தியில் அடிக்கடி தேர்தல்கள் இடம்பெறுவது நாட்டிற்கு உகந்ததல்ல.நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து மேலும் அதளபாதாளத்திற்கு கொண்டு செல்வதாகவே இது அமையும்.எனவே தேர்தல்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததன் பின்னர் மக்களின் தேவைகளை புறந்தள்ளி அவர்களை கைகழுவி விடும் நடவடிக்கைகளே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.இதனாலேயே பாராளுமன்றத்தில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கனுப்ப வேண்டும் என்று பொதுமக்களின் குரல் கடந்த காலத்தில் ஓங்கி ஒலித்தது. இம்முறை தேர்தலில் இது முழுமையாக சாத்தியமாகாவிட்டாலும் நூற்றுக்கு 75 வீதமானவர்கள் இம்முறை பாராளுமன்றத்தில் புதிய முகங்களாகவே இருக்கப்போகின்றனர் என்பது மட்டும் உண்மையாகும்.அத்தோடு முன்னைய பாராளுமன்ற உறுப்பினர் பலர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கியுள்ளனர்.88 வருட தேர்தல் வரலாற்றினைக் கொண்ட ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் எவரும் இத்தேர்தலில் போட்டியிடாததும் ஒரு சிறப்பம்சமாகும். அத்தோடு சமகாலத்தில் நடைமுறையில் உள்ள விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை 1978 ம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியல் அமைப்பின் ஊடாக முன்வைக்கப்பட்டது.விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை சிறு பான்மையினரின் பிரதிநிதித்துவ இருப்பினை பாதுகாத்துள்ளது.இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறுமிடத்து புதிய அரசியல் யாப்பினை முன்வைக்கப் போவதாக கூறிவருகின்றது. இதன் மூலம் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையிலும் மாற்றங்கள் ஏற்படும்.புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படுமிடத்து அது சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவ வீழ்ச்சிக்கும் ஏதுவாகலாம்.இதனை புரிந்து கொண்டு சகல சிறுபான்மை கட்சிகளும் புரிந்துணர் வின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.முரண்பாடுகளையும் சுயநலவாதங் களையும் மூட்டை கட்டி வைத்து விட்டு சமூகநலன் கருதி ஐக்கியத்துடன் எதிர்வரும் பாராளு மன்றத் தேர்தலை சந்திக்க சகலரும் முன் வருதல் வேண்டும். ‘அரசியலில் திருப்பு முனை’ ஏ.ஜே.ஆர்.அழகக்கோன், அரகலய போராட்டக்காரர், கொழும்பு. இலங்கையின் அரசியல் வரலாற்றில் அரகலய போராட்டத்தினை நாம் மறந்தோ அல்லது மறுத்தோ செயற்பட முடியாது.இப்போராட்டம் பல்வேறு விடயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததுடன் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினையும் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தது.இதேவேளை அரகலய போராட்டத்தின் காரணமாக பல கூட்டுக் கட்சிகளின் இணைப்பான தேசிய மக்கள் சக்தி தன்னை பலப்படுத்திக் கொண்டது.இதன் எதி ரொலியே தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பக்கபலமானது. அரகலய என்னும் இளைஞர் எழுச்சியில் கவரப்பட்ட இளைஞர்கள் கொள்கைக்காக போராடினர்.இந்தப் போராட்டம் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அரகலய போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரும் களமிறங்கியுள்ளனர்.இவர்கள் இத்தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில் புதிய ஒரு அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கு அது ஒரு வாய்ப்பாகவும் திருப்பு முனையாகவும் அமையும். இளைஞர்களிடத்தில் ஒரு தூரநோக்கு காணப்பட்டது.ஒளிமயமான நாட்டை கட்டி யெழுப்பும் நோக்கில் இன, மத, மொழி வேறுபாடுகளை மறந்து அவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் கை கோர்த்திருந்தனர்.இது சகலரிடத்திலும் அவர்கள் குறித்து ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்தி இருந்தது.இந்த ஈர்ப்பின் வெளிப்பாட்டினை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் காண முடியும்.நாட்டின் இளைஞர்கள் பாரம்பரிய அரசியலில் இருந்து விடுபட்டு புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த முனைகின்றனர்.மலையக இளைஞர்களும் இதற்கு விதிவிலக்காகிவிடவில்லை.இந்நிலையானது கணிசமான மாற்றத்தை சகல துறைகளிலும் ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அத்துடன் தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை நடை முறையில் உள்ளது.இது சாதக மற்றும் பாதக விளைவுகளை நாட்டில் ஏற்படுத்தி வருகின்றது.இதனிடையே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றியமைத்து பாராளுமன்றத்தை பலப்படுத்துகின்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற கோஷங்கள் அதிகரித்து வருகின்றன.எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து இதற்கான அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இதன் சாத்தியப்பாடுகள் தொடர்பில் பொறுத் திருக்க வேண்டியுள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக பலமான எதிர்க்கட்சி ஒன்று உருவாக வேண்டும்.இது ஜனநாயகத்தின் உறுதிப்பாட்டுக்கு உந்துசக்தியாக அமையும்.இதை விடுத்து தனியொரு கட்சி பெரும்பான்மையை பெற் றுக் கொள்ளுமிடத்து அது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்குவதோடு சர்வாதிகாரம் மேலோங்குவதற்கும் வழிகுப்பதாகவே அமையும்.கூட் டுக் கட்சிகளின் பங்களிப்புடன் ஆட்சியமைக்கப் படுவதே சிறந்ததென கருதுகின்றேன். https://www.ilakku.org/நாடாளுமன்றத்-தேர்தல்-ச/
-
பிரதமர் ஹரிணி அமரசூரிய வடக்குக்கு வருகை!
பிரதமர் ஹரிணி அமரசூரிய வடக்குக்கு வருகை! October 28, 2024 பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி பிரதமர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளார். நாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கவே அவர் வடக்குக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://eelanadu.lk/பிரதமர்-ஹரிணி-அமரசூரிய-வ/
-
வடக்கு கிழக்கில் அநுர அலையும் சுமந்திரனும்!
வடக்கு கிழக்கில் அநுர அலையும் சுமந்திரனும்! October 28, 2024 இன்று நடைமுறையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ‘தலைவராக’ செயல்பட்டுக் கொண்டிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் நேற்றைய தினம் கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அநுர அலை ஒன்று வீசுவதாகவும் அது ஆபத்தானது என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்’, என்று கூறியிருக்கிறார். ‘தங்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் அதிகாரத்தை தமிழ் மக்கள் எங்களுக்கே தரவேண்டும். அநுர அலையை அடியோடு அகற்றிவிட வேண்டும். தமிழ் அரசு கட்சியை ஓர் அணியாக – பேரம்பேசும் சக்தியாக பாராளுமன்றத்துக்கு அனுப்புவதன் மூலமாகவே தமிழ் மக்கள் தங்களது இலக்குகளை அடையமுடியும். அதற்கான ஆணையை எமது மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது’, என்றும் அந்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பிறகு முதலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரவேசம் செய்த சுமந்திரன் பிறகு இரு பாராளுமன்ற தேர்தல்களில் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு இதுவரையில் பதினான்கு வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார். இந்தத் தடவை பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளராக இல்லாமல் தமிழ் அரசு கட்சியின் வேட்பாளராகவே அவர் களமிறங்கியிருக்கிறார். இன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ்க் கட்சிகள் பலவாறாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும், அவற்றிடையே சுமந்திரனைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் ஓர் ஒற்றுமை இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். தாங்கள் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை, சுமந்திரன் தோல்வியடைய வேண்டும் என்ற ஓர்மத்துடனும் பலர் இருக்கிறார்கள். உண்மையில், இந்தத் தேர்தலில் அவர் முன்னென்றும் இல்லாத வகையிலான சவாலை எதிர்நோக்குகிறார் என்பதில் சந்தேகமில்லை. வெவ்வேறாகப் பிரிந்து தேர்தல் களத்தில் நின்றாலும் மனதளவில் தனக்கு எதிராக ஒற்றுமைப்பட்டு நிற்கும் மற்றைய தமிழ்க் கட்சிகளிடமிருந்து வரக்கூடிய சவாலைப் பற்றி பேசாமல் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியே தங்களுக்கு பெரிய சவாலாக இருப்பது போன்று சுமந்திரன் நேர்காணலில் கருத்து தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது. ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ந்து வருகிறது என்பது உண்மையே. அதை சுமந்திரன் கூறியிருப்பதைப் போன்று ஓர் ‘அநுர அலை’ என்று வர்ணிப்பது எந்தளவுக்கு பொருத்தமானது என்பது ஒரு முக்கியமான கேள்வி. தங்களிடம் வாக்குக் கேட்டு வரும் தமிழ் கட்சிகளின் வேட்பாளர்களிடம் தமிழ் மக்கள் ‘நாங்கள் இந்த முறை திசைகாட்டிக்குத்தான் வாக்களிக்கப் போகிறோம்’ என்று கூறுவதாக அறியமுடிகிறது. ஜனாதிபதி அநுரவுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் நெருக்கமான உறவு இருக்கிறது என்று பரவலாகப் பேசப்படுகிறது. தெற்கில் மக்கள் காண விரும்பும் மாற்றத்துக்கு ஆதரவாக வடக்கு மக்கள் வாக்களிப்பதே விரும்பத்தக்கது என்ற தொனியில் ஜனாதிபதி தேர்தலின்போது அநுர பேசியதை தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் இனவாதத்தை அவர் தூண்டுவதாக ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியபோது அதை மறுதலித்து, ‘அநுர இனவாத நோக்கத்துடன் அவ்வாறு கூறவில்லை’, என்று அவருக்காக ஓடிச்சென்று முதலில் குரல் கொடுத்தவர் சுமந்திரன். இப்போது அவர் அதே அநுர அலையைத் தடுத்தேயாக வேண்டும் என்று சூளுரைக்கிறார். தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தமிழ் அரசியல் கட்சி களிடம் – அதுவும் குறிப்பாக தனது தமிழ் அரசு கட்சியிடம் இருக்கவேண்டும் என்ற அவரின் அக்கறையே அதற்குக் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தமிழ்க் கட்சிகள் பல்வேறு கூறுகளாகப் பிரிந்து தங்க ளுக்குள் முட்டிமோதி தமிழ்த் தேசியவாத அரசியலை கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருப்பதனால் தங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் படுமோசமாக சிதறுப்படப் போகிறது என்று அஞ்சும் தமிழ் மக்கள், தமிழ் கட்சிகள்மீது கடுமையாக வெறுப்படைந்திருக்கிறார்கள். தங்கள் மத்தியில் மாற்று அரசியல் சக்தி ஒன்று இல்லை என்பதாலேயே அநுர பக்கம் தமிழ் மக்கள் திரும்பிப் பார்க்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதை சுமந்திரன் மாத்திரமல்ல, மற்றைய தமிழ் கட்சிகளின் தலைவர்களும் சிந்தித்துப் பார்ப்பது அவசியம். https://eelanadu.lk/வடக்கு-கிழக்கில்-அநுர-அல/
-
ஒக்டோபர் 28ஆம் திகதி நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகும் வடக்கு ரயில் சேவை
கொழும்பு – காங்கேசன் துறை புகையிரத சேவை ஆரம்பமானது! adminOctober 28, 2024 மஹவ மற்றும் அனுராதபுரம் வரையான புகையிரதப் பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன் துறை வரையான புகையிரத சேவை இன்று (28.10.24) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி புகையிரதப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) என்.ஜே. இந்திபொலகே விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தினமும் வடக்கு புகையிரதப் பாதையில் புகையிரதம் பயணிக்கும் என்றும், புகையிரதக் கடவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் புகையிரதத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்தப் புகையிரத நேர அட்டவணைக்கு அமைய, * கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.05 க்கு புறப்படும் புகையிரதம் பிற்பகல் 12.38 க்கு திருகோணமலையை சென்றடையும். * பிற்பகல் 1.30 க்கு திருகோணமலையில் இருந்து புறப்படும் புகையிரதம் இரவு 7.59 க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும். * கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.05 க்கு புறப்படும் புகையிரதம் பிற்பகல் 3.15 க்கு மட்டக்களப்பை சென்றடையும். * கொழும்பு கோட்டையில் இருந்து பிற்பகல் 3.15 க்கு புறப்படும் புகையிரதம் இரவு 10.22 க்கு மட்டக்களப்பை சென்றடையும். * மட்டக்களப்பில் இருந்து பிற்பகல் 1.40 புறப்படும் புகையிரதம் இரவு 8.55 க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும். * மட்டக்களப்பில் இருந்து இரவு 6.10 க்கு புறப்படும் புகையிரதம் இரவு 8.55 க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும். https://globaltamilnews.net/2024/207879/ மீண்டும் பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி! கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை புகையிரத சேவை இன்று திங்கட்கிழமை(28) முதல் ஆரம்பமாகியுள்ளது. வடக்கு புகையிரத சேவை இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் புகையிரத குறுக்கு வீதிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்திய நிதியுதவியுடன் மஹவ- ஓமந்தை புகையிரத பாதை புனரமைப்பு கருத்திட்டம் கடந்த 2019ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி ஆரம்பமானது. கட்டம் கட்டமாக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் காலப்பகுதியில் அபிவிருத்தி பணிகளுக்காக கோட்டை – காங்கேசன்துறை புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் கொழும்பு கோட்டை காங்கேசன்துறை புகையிரத சேவை இன்று முதல் மீள ஆரம்பமாகியுள்ளது. வடக்கு புகையிரத சேவை இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் புகையிரத குறுக்கு வீதிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று காலை 5.45 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி விசேட புகையிரதம் ஒன்று புறப்படவுள்ள நிலையில் மதியம் 1.30 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை வந்தடையும் எனவும் நாளை செவ்வாய்க்கிழமை(29) காலை 10.30 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் புகையிரதம் அன்று மாலை 6.30 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச) https://newuthayan.com/article/மீண்டும்_பயணத்தை_ஆரம்பித்த_யாழ்தேவி!
-
யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
யாழில் தாக்குதலுக்கு இலக்கானவர்களுக்கு விலங்கு - தாக்குதலாளிகளை கைது செய்ய பின்னடிக்கும் பொலிஸ்! யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு பொலிஸார் மருத்துவமனையில் கைவிலங்கிட்டுள்ளனர். தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மான் சின்னத்திற்கு ஆதரவு கோரி நேற்றைய தினம் சனிக்கிழமை நீர்வேலி கரந்தன் பகுதியில் பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்த வேளை ,ABT 1763 எனும் இலக்கமுடைய பச்சை நிற முச்சக்கர வண்டியில் நால்வர் கொண்ட வன்முறை கும்பல் அவர்களுடன் முரண்பட்டுள்ளனர். பின்னர் முச்சக்கர வண்டியில் வந்த கும்பல் அங்கிருந்து சென்று சுமார் 30 பேருடன் வந்து பிரச்சார பணிகளில் ஈடுபட்டிருந்த ஆண்கள் , பெண்கள் என இருபாலர் மீது மிக மோசமான தாக்குதலை மேற்கொண்டனர் தாக்குதலில் ஒரு பெண் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முறைப்பாட்டினை ஏற்க பின்னடித்துள்ளார். அது தொடர்பில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தொலைபேசி ஊடாக தமிழ் மக்கள் கூட்டணியினர் அறிவித்த போது , பொறுப்பதிகாரி தான் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டதாக பொய்யுரைத்துள்ளார். பின்னர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுத்தலின் பிரகாரம் முறைப்பாட்டினை ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாக்குதலுக்கு இலக்கான நபர்களுக்கு பொலிஸார் கைவிலங்கிட்டுள்ளனர். அது தொடர்பில் பொலிஸாரிடம் தமிழ் மக்கள் கூட்டணியினர் கேட்ட போது, தமக்கு மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவுக்கு அமையவே கைவிலங்கிட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். தாக்குதல் சம்பவம் நடைபெற்று 24 மணி நேரம் கடந்துள்ள நிலையிலும் தாக்குதலாளிகள் எவரையும் கைது செய்யாத பொலிஸார் , தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு கைவிலங்கிட்டுள்ளமை அச்சுறுத்தும் செயற்பாடே என தமிழ் மக்கள் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி நேற்றைய தினம் முறைப்பாட்டை ஏற்காது பின்னடித்தமை , இன்றைய தினம் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு கைவிலங்கிட்டுள்ளமை , 24 மணித்தியாலங்கள் கடந்தும் தாக்குதலாளிகளை கைது செய்யாமை போன்ற செயற்பாடுகள் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னால் பெரும் அரசியல் தலையீடு இருக்கலாம் என தமிழ் மக்கள் கூட்டணியினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ( https://newuthayan.com/article/யாழில்_தாக்குதலுக்கு_இலக்கானவர்களுக்கு_விலங்கு_-_தாக்குதலாளிகளை_கைது_செய்ய_பின்னடிக்கும்_பொலிஸ்!
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
வலிமையான எதிரிகளோடு மோதி வெல்வாரா விஜய்? -சாவித்திரி கண்ணன் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்யும் இரு பெரும் அதிகார மையங்களை தன் எதிரிகள் என பகிரங்கமாக விஜய் அறிவித்துள்ளார். ஆக எதிர் நீச்சல் போடத் துணிந்து விட்டார். இன்றைய த.வெ.க மாநாடு தரும் செய்திகள் என்ன..? ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் என்ன…? எனப் பார்ப்போம்; இத்தனை வருடங்களாக விடுபடாத புதிராக தொடர்ந்த நடிகர் விஜய்யின் அரசியல் தற்போது உள்ளங்கை நெல்லிக் கனி போல தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது! ஒரு நடிகனாக இருக்கும் வரை சினிமா வியாபார வெற்றி கருதி அவர் மனதில் புதைத்து வைத்திருந்த உணர்வுகளை சிறப்பாகவே வெளிப்படுத்திவிட்டார். விஜய்க்கு இருக்கும் இந்த தெளிவுக்கு அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட விதை தான் அடிப்படையாக இருக்க முடியும். இடதுசாரி, திராவிட இயக்க சித்தாந்த சாயலில் அவர் படமெடுத்தவர். அந்த வகையிலும், ஒரு பெரும் திரைக் கலைஞன் என்ற வகையிலும் அரசியலைப் பற்றிய அடிப்படை புரிதல்களை விஜய் பெற்றுள்ளவர் தான் என்பது அவருடைய இன்றைய கன்னிப் பேச்சில் இருந்து நமக்கு தெரிய வருகிறது. விஜய்யின் 50 நிமிட பேச்சில் தேவையற்ற வார்த்தைகள் எதுவும் இல்லை. மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களையோ, வாக்குறுதிகளையோ அவர் தரவில்லை. அலங்காரச் சொல் பிரயோகங்கள் எதுமில்லை. பெரியாரையும், காமராஜரையும், அம்பேத்கரையும், வேலு நாச்சியாரையும், அஞ்சலை அம்மாளையும் தங்கள் முன்னோடியாக ஏன் கருதுகிறோம் என்பதற்கு அவர் தந்த விளக்கங்களையே அவரது கொள்கை அறிவிப்பாக நாம் கருதலாம். தன்னுடைய கொள்கைகள் யாரது எதிர்ப்புகளையும், வெறுப்புகளையும் பெற்றுத் தரும் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். அனைவரும் சமம், அனைவருக்குமான வாய்ப்பு, மதச்சாரபற்ற கொள்கை என்பது அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் பண்பாடு என்பதையும் தெளிவுபடுத்திவிட்டார். அடுத்ததாக அவருடைய நெருங்கிய அரசியல் சகாக்களாக இன்று வெளிப்பட்டவர்கள் மிகப் பெரிய தொழில் அதிபர்களோ, புகழ் பெற்றவர்களோ, அறிவுத் தளத்தில் அறியப்பட்ட பிரபலங்களோ அல்ல, மிக சாதாரண நடுத்தர பிரிவினர், அசல் தமிழர்கள்! தலைவரைப் பற்றி மிகைப்பட புகழ்ந்து பேசுதல், மிகப் பெரிய பிம்பங்களை அவர்களைக் கொண்டு தன்னைக் குறித்து கட்டமைத்தல் ஆகியவற்றை விஜய் செய்யவில்லை. அந்த வகையிலும் இந்த மாநாடு கவனத்தை ஈர்த்துள்ளது. அனைத்து பேச்சாளர்களும் கொள்கை சார்ந்தே பேசினர். அதுவும் மிக அளவானவர்களே பேசினர். அவர்களே, இவர்களே என்று பேசிச் செல்லும் புகழ்ச்சி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் நேரடியாக மக்களிடம் சொல்ல வேண்டிய செய்திகளுக்கு வந்தது சிறப்பு தான்! பொன்னாடை அணிவிக்கும் பன்னாடை கலாச்சாரத்திற்கும் , தோள் தாங்க முடியாத பெரிய மலர் மாலைகளை அணிவிக்கும் கலாச்சாரத்திற்கும் முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது அனுமதிக்கப்பட்டு இருந்தால் அவ்வளவு மாவட்ட செயலாளர்களும் பொன்னாடைகளையும், மலர் மாலைகளையும் வாங்கி வந்து வரிசையில் நின்று போட்டு போட்டோவுக்கு போஸும் தந்திருப்பார்கள். அதற்கே ஒரு மணி நேரம் ஓடியிருக்கும். வெற்றிக் கழகம் என்ற பெயருக்கேற்ப வெள்ளியில் வீரவாள் பரிசளிக்கப்பட்டிருக்கலாமோ, என்னவோ. ஆயினும், இது ஆடம்பரம் மட்டுமல்ல, வாள் என்பது வன்முறையை நினைவூட்டத்தக்கது என்பதால், அதை தவிர்த்திருக்கலாம். நிழ்ச்சியை அதிகமாக வளர்த்துச் செல்லாமல் ஏழு மணிக்குள் எல்லாவற்றையும் சுருக்கமாக முடித்துக் கொண்டது பல வகைகளிலும் நல்லது. நிகழ்ச்சியை தொகுத்தளித்த பெண் தமிழை சரியாக உச்சரித்தார். உணர்ச்சி மேலோங்கப் பேசினார். சில நேரங்களில் சற்று மிகையாக பேசினார். மற்றும் ஒருவர் ‘தமிழ் நாட்டின் வருங்கால நிரந்தர முதல்வர்’ என விஜய்யை விதந்தோதினார்.இவை யாவும் வழக்கமான அரசியல் கலாச்சார மரபுகளில் இருந்து இவர்கள் இன்னும் முற்றாக விடுபடவில்லை என்பதை சொல்லின. இன்றைய தினம் பணம் கொடுக்காமல் வாகனங்களை ஏற்பாடு செய்து தராமல், பிரியாணி, குவார்ட்டர் கொடுக்காமல் இவ்வளவு பெரிய மக்கள் திரள் கூடியதற்கு காரணம், விஜய்யின் சினிமா புகழ் மட்டுமல்ல, ஒரு மாற்று அரசியலை விரும்பும் மக்களின் மழுங்கடிக்க முடியாத எதிர்பார்ப்புகளும் என்பதை நாம் உணர வேண்டும். ஒரு மிகப் பெரிய அரசியல் மாநாட்டை வசூல் வேட்டை நடத்தாமல் தான் சம்பாதித்த சொந்த பணத்தை கொண்டு மட்டுமே நடத்தியது. ‘சிறந்த கொள்கைகளை பேச்சளவில் மாத்திரமன்று, செயலிலும் காட்டுவேன்’ என்றது, ‘மதச்சார்பற்ற’ என்பதையும், ‘அனைவரும் சமம்’ என்பதை வலியுறுத்தியதால் ‘பாஜக தான் பிரதான எதிரி’ என்பதை புரிய வைத்தது, ‘ஊழலற்ற நேர்மையான நிர்வாகம்’ என்றதன் மூலம் தற்போதைய திராவிட மாடல் ஆட்சியாளர்கள் அடுத்த எதிரி என அடையாளம் காட்டியது, திராவிடம், தமிழ் தேசியம் என்ற இரண்டையும் ஏற்றது ஆகியவை அவரது அரசியல் பக்குவத்தை உணர்த்தின. எல்லாவற்றுக்கும் மேலாக தனித்தே தங்கள் கட்சியால் அனைத்து தொகுதிகளிலும் நின்று வெல்ல முடியும் என்றாலும், தகுதியானவர்களை அரவணைத்து கூட்டணி வைக்கவும், அதிகார பகிர்வு கொள்ளவும் முன் வந்தது மற்றொரு சிறப்பாகும் என்றாலும், தனியாக களம் கண்டு வெற்றி பெறுவதற்கான நம்பிக்கை இருந்தால், அவ்விதமே செயல்படட்டும். கறைப்பட்டுள்ள இன்றைய அரசியல் கட்சிகள் எதனுடனும் கைகோர்க்க வேண்டாம் என்று சொல்லத் தோன்றுகிறது. அடுத்ததாக ‘விஜய் பக்கம் காற்றடிக்கிறது’ என்றவுடன், மற்ற கட்சிகளில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகள் அணிவகுத்து வருவார்கள். அவர்களை தவிர்க்காமல் விட்டால் விஜய்யின் ‘நல்லாட்சி’ என்பது நிறைவேறாத கனவாகிவிடும். இதுவும் பத்தோடு பதினொன்று என்றாகிவிடும் ஜாக்கிரதை. இன்றைய த.வெ.க மாநாடும், அதில் விஜய் பேச்சும் தமிழக மக்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை, நம்பிக்கைகளை விதைத்துள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது. அதே சமயம் தேர்தலுக்கு எஞ்சி இருக்கும் இன்னும் ஒன்றரை வருடங்களில் விஜய் அரசியல் சார்ந்து மக்கள் பிரச்சினைகளில் என்னென்னெவெல்லாம் பேசுகிறார்..? எந்தெந்த பிரச்சினைகளுக்கு குரக் கொடுக்கிறார்..? எந்தெந்த விவகாரங்களில் களம் காண்கிறார். கட்சியின் கிளை அமைப்புகளை எவ்வாறு கட்டமைக்கிறார்..? என்பதைக் கொண்டே அவரது எதிர்காலம் இருக்கும். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/19638/tvk-conference-vijay-speech/
-
கிழக்கில் ஜே.வி.பி அலைக்கு எதிர்க்காற்று..!
கிழக்கில் ஜே.வி.பி அலைக்கு எதிர்க்காற்று..! October 27, 2024 — அழகு குணசீலன் — இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுற்று ஒரு மாதம் கடந்த நிலையில், பொதுத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கின்றன. முழு இலங்கையையும் போன்றே கிழக்கிலும் என்றும் இல்லாதவாறு அதிகளவான கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன. இவற்றில் சில கட்சிகளும், பெரும்பாலும் அனைத்து சுயேட்சைகளும் வெற்றி வாய்ப்பு அறவே அற்றவை. வெறுமனே வாக்கு பிரிப்பர்கள். இந்த நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், தேர்தலுக்கு பின்னரும் கிழக்கில் ஜே.வி.பி.க்கு இருந்த அலை தொடர்ந்தும் அடிக்கிறதா? அதற்கான காற்று வளம் வீசுகிறதா? என்ற கேள்விகளுக்கான பதிலை வெளிச்சத்தில் தேடுகிறது இப்பதிவு. அரசியல் கூட்டுக்களில் வெளியில் என்ன படம் காட்சிப்படுத்தப்பட்டாலும், பிரதான வகிபாகம் பலமான ஒரு கட்சியிடமே இருக்கிறது. இதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜனபெரமுன, உள்ளிட்ட பல கூட்டுக்களை குறிப்பிட முடியும். இந்த விதிக்கு ஜே.வி.பி. பிராதான பாத்திரம் வகிக்கின்ற என்.பி.பி. என்ற தேசிய மக்கள் சக்தியும் விலக்கல்ல . காரணம் இவை எல்லாம் கதிரை அதிகாரத்தை முதன்மையாகக் கொண்ட கூட்டுக்கள். கதிரைக்கு இடது, வலது என்ற வேறுபாடு இல்லை. ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களில் பெற்ற வாக்குகள் 1,97,689. இதில் திகாமடுல்ல, திருகோணமலையில் பெற்ற வாக்குகளில்( 1,08,971 + 49, 886 ) சிங்கள மக்களின் வாக்குகள் அதிகமானவை. அதே போன்று மட்டக்களப்பில் ஜனாதிபதி பெற்ற வாக்குகளிலும்(38,832) தமிழர் வாக்குகுகளுடன் ஒப்பிடுகையில் சோனகர்களின் வாக்குகள் அதிகமானவை. ஏனெனில் சஜீத்பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமிழ்,சோனக கட்சிகளின் ஆதரவுடன் பெற்ற வாக்குகளில் தமிழர், சோனகர் வாக்குகள் அதிகபங்கை வகித்துள்ளன. இது ஜனாதிபதி தேர்தல் நிலவரம். மக்கள் தங்களுக்கு நேரடியாக தொடர்பற்ற, சமூக, பொருளாதார, அரசியல் உறவற்ற கொழும்பு தலைமைக்கு அளிக்கும் வாக்கு. இது பாராளுமன்ற பொதுத்தேர்தல் களத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு நிலைப்பாடு. இதனால்தான் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு புள்ளி விபரங்களை கொண்டு பல்லின பிரதிநிதித்துவ கிழக்கு மாகாண பாராளுமன்ற தேர்தலை எதிர்வு கூற முடியாது. இது தபால் மூல வாக்களிப்பிலும் பிரதிபலிக்கும். ஆனால் ஒப்பீட்டளவில் தென்னிலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அடிப்படையிலான மதிப்பீடு வடக்கு கிழக்கு மாகாணங்களை விடவும் அதிகம் செல்வாக்கு செலுத்த வாய்ப்புண்டு. ஜனாதிபதி தேர்தலில் பொருளாதார மந்தம், ஊழல் ஒழிப்பு, ஜனநாயக அரசியல் செயற்பாட்டு மறுப்பு, மனிதவுரிமைகள் மீறல் போன்ற தேசிய ரீதியிலான நீதி, நிர்வாக சீர்திருத்தங்கள் முக்கிய பேசுபொருளாக இருந்தன. இனப்பிரச்சினை மேற்குறிப்பிட்ட அனைத்து தேசிய பிரச்சினைகளோடும் தொடர்பு பட்டதாக இருந்த போதும் மற்றைய வேட்பார்களைப் போன்றே அநுரகுமாரவும் அதைப்பொருட்படுத்தவோ, உறுதியான தீர்வு திட்டம் ஒன்றை முன்வைக்கவோ இல்லை. எனினும் ஒரு இடதுசாரி கட்சி (?) என்ற நம்பிக்கையில், வழக்கத்திற்கு மாறான ஒரு மாற்றாக தமிழர்களும், சோனகர்களும் கணிசமான அளவு வாக்குகளை நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கியுள்ளனர். இதில் பொதுவான தேசிய சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கான ஆதரவு முக்கியமானது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் கடந்த ஒரு மாதத்தில் இனப்பிரச்சினை தீர்வு குறித்த நம்பிக்கை சிறுபான்மை மக்களிடம் படிப்படியாக இழக்கப்பட்டு வருகிறது. இதுவே வடக்கு, கிழக்கில் பாராளுமன்ற தேர்தல் முடிவை தீர்மானிக்கின்ற முக்கிய போக்காக அமையும். இலங்கை சுதந்திரம் பெற்ற போது ‘இலங்கை அரசு’ சுதேசிகளால் கட்டமைக்கப்பட்டது. அதனூடாக ஒரு ‘இலங்கைத் தேசியம்’ உருவானது. ஆனால் ‘இலங்கையர்’ என்ற ஒரு பன்மைத்துவ சமூகக்கட்டமைப்பை அது உருவாக்கவில்லை. இந்த மூன்று வார்த்தை பிரயோகங்களும் சிங்கள மேலாண்மையை குறித்து நிற்கின்ற வார்த்தைகளாகவே இன்றும் அடையாளப்படுத்துகின்றன. ஒட்டு மொத்தத்தில் இந்த வார்த்தைகள் சிங்கள பௌத்த மேலாண்மையின் பிரதிபலிப்பாக, அடையாளமாக உள்ளன. இதன் மிகப்பிந்திய வெளிப்பாடே இனப்பிரச்சினையை பொருளாதாரப்பிரச்சினை என்பதும், அது அதிகாரப்பகிர்வை கோரவில்லை வெறுமனே அபிவிருத்தியை கோருகிறது என்ற ஆளுங்கட்சியான ஜே.வி.பி. யின் அதிஉயர் அந்தஸ்த்தையும், அதிகாரத்தையும் கொண்ட செயலாளர் ரில்வின் சில்வாவின் கூற்றாகும். இதற்கான பதிலை வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிறுபான்மை மக்கள் தங்கள் வாக்குகளால் வழங்குவதன்மூலம் ஜனாதிபதி தேர்தலில் நம்பிக்கையின் அடிப்படையில் விட்ட அரசியல் தவறை ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையின் ஊடாக திருத்திக்கொள்ள முடியும். ஜே.வி.பி.செயலாளர் ரில்வின் சில்வாவின் அறிவிப்பு ஜனாதிபதி அநுரகுமாரவினால் அல்லது கட்சியின் வேறேந்த முக்கியஸ்தர்களாலும் வாரங்கள் கடந்தும் இதுவரை மறுதலிக்கப்படவில்லை. வடக்கும், கிழக்கும் அங்கு பரம்பரையாக வாழ்கின்ற தமிழர்களினதும், சோனகர்களினதும் பாரம்பரிய தாயகம் என்பதையும், பன்மைத்துவ இனத்துவத்தையும், அடையாளங்களையும் மறுதலித்துக்கொண்டு அரசியல் செய்தால் சிவப்பு சாயம் மிக விரைவாக வெளிறிப்போகும். ஒரு இடதுசாரி அரசியல் இயக்கத்தில் இது ஒரு அடிப்படையான முரண்பாடு. சுமந்திரன் அமைச்சர் பதவிக்காக போட்டுள்ள டீலின் இரு கோரிக்கைகளும் காலத்தால் கரைந்து விடும். வடக்கும், கிழக்கும் பாரம்பரிய தாயகம் என அங்கீகரிப்பதனால் அது சமஷ்டியை வழங்குவதாகவோ, அல்லது வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பதாகவோ கருதப்படவேண்டியதில்லை. அந்த மண்ணில் வாழ்கின்ற மக்களின் தனித்துவ அடையாளங்களையும், பிரதேசத்தையும், சமூக பன்மைத்துவத்தையும் அங்கீகரிப்பதாகும். இது இடம்பெறாமல் இலங்கை ஒரு பன்மைத்துவ சமூகத்தைக் கொண்டது என்பது மேலாதிக்க பொய். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதல்ல இது. இது அந்த சட்ட நோக்கில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இன, மத, கலாச்சார, மொழி வேறுபாடுகளை அங்கீகரிக்காமல் சமூகநீதியை மறுதலித்து கொண்டு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதும் ஒருவகையில் அடக்கு முறையே. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஒரு வழக்கில் சிங்களவர், தமிழர், சோனகர் என்ற வேறுபாடின்றி ஒரே குற்றத்திற்காக ஒரே தண்டனையை வழங்குவது. ஆனால் பல்லின பன்மைத்துவ சமூகத்தில் தனித்துவமான வழக்குகளும், மரபுகளும், நடைமுறைகளும் முக்கியமானவை. கொரோனா கால ஜனாஷா எரிப்பு எல்லோருக்கும் ஒரே நியதி என்று கூறி தனித்துவங்களை நிராகரித்த செயல். இதனால்தான் இந்த “இலங்கையர்” என்ற வார்த்தை மேலாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு. . சகல இனத்துவ தனித்துவமான அடையாளங்களை, வாழ்வியல் பன்மைத்துவத்தை அங்கீகரிப்பது என்றால் சிங்கள மொழிக்கும், பௌத்தத்திற்கும், அவை சார்ந்த கலாச்சார விழுமியங்களுக்கும் தனியான முன்னுரிமையும், பாதுகாப்பும் எதற்கு?. இதில் சுதந்திர இலங்கையின் எந்த அரசாங்கமும் அநுரகுமார அரசாங்கம் உட்பட எந்த அரசாங்கமும் விலக்கல்ல. ஒரு இடதுசாரி கட்சியாக ஜே.வி.பி.க்கு ஒரு இளம் பிக்குகள் சங்கம் ஒன்று எதற்கு? தேவை தொழிலாளர் சங்கங்கள் அல்லவா? தமிழர்கள் ஜனாதிபதிக்கு அளித்த வாக்கை இந்த இலக்கில் மறுபரிசீலனை செய்யும் நிலையில், கிழக்கு சோனகர்கள் மத்தியில் ஜே.வி.பி. வடக்கு, கிழக்கை பிரித்து தந்திருக்கிறது, அதற்காக நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்ற ஒரு பிரச்சாரமும் முன்னெடுக்கப்படுவதாக அறிய முடிகிறது. மறுபக்கத்தில் சோனகர்கள் ஜே.வி.பி.க்கு ஆதரவளித்து வடக்கு, கிழக்கு இணைப்பை தடுக்கப்போகிறார்கள் என்று இணைப்புக்கு ஆதரவான தமிழ்த்தேசிய தரப்புக்களின் பிரச்சாரம் ஆரம்பமாகியுள்ளது. மேலும் ஜே.வி.பி . உள்ளிட்ட தென்னிலங்கை கட்சிகளின் சோனக வேட்பாளர்கள் தமிழர் வாக்குகளாலும், தமிழர் வேட்பாளர்கள் சோனகர் வாக்குகளாலும் வெல்லப்போகிறார்கள் என்ற பிரச்சாரங்கள் வேறு. தேர்தல் நெருங்க,நெருங்க எல்லாப்பூதங்களும் “அறுகம்பை பூதம்” போல் இன்னும் வெளிவரத்தான் போகின்றன. இங்கு முக்கியமாக சோனக சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், வடக்கு, கிழக்கு இணைப்புக்கு துளியும் வாய்ப்பில்லை. அதை தமிழர்களில் ஒரு பகுதியினரும், சிங்களவர்கள் முழுமையாகவும் எதிர்க்கிறார்கள். இதை ஆதரித்து ஜனாதிபதி கூட பேசப்போவதில்லை. மாறாக இரு சமூகங்களும் இனத்துவ அடையாளங்களையும்,வடக்கு , கிழக்கு பிரதேசங்களையும், அங்கீகரிக்க கோருகின்றன. இந்த அங்கீகாரம் தென்னிலங்கையில் வாழ்கின்ற தமிழ்,சோனக மக்களுக்கும், வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற சிங்கள மக்களுக்கும், மலையக மக்களுக்கும் ஒரு பன்மைத்துவ அங்கீகாரத்தை வழங்குவதாக அமையும், அமையவேண்டும். இந்த அச்சங்களும், முரண்பாடுகளும் ஆரம்பத்தில் இருந்ததை விடவும் ஜே.வி.பி அலையின் வேகத்தை குறைத்திருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களித்த சோனகர் சமூகத்தில் இஸ்ரேல் -பாலஸ்தீன போரில் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடும் கிழக்கில் பேசுபொருளாகி இருக்கிறது. புதிய அரசாங்கம் இதுவரை ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இஸ்ரேல் அரச பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருக்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஐ.நா. பிரகடனத்தில் இலங்கை கையொப்பமிடவில்லை. எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் சிங்கள-தமிழ் கிறிஸ்தவ வாக்காளர்களின் வாக்குகளை குறிவைத்து இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. பேராயர் மெல்ல, மெல்ல அநுர அரசின் பேச்சாளராக மாறி வருகிறார். இந்த பின்னணி கிழக்கு சோனகர் சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இன்னொரு பக்கத்தில் மட்டக்களப்பு கிறிஸ்த்தவ சமூகத்தில் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்குழு அறிக்கையை ஜனாதிபதி வெளியிடாததும், அதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களுக்கு பதவிகளை வழங்கியிருப்பதும். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அநுரகுமார திசாநாயக்க கூறிய உறுதியை இழுத்தடிக்கும் செயல் என மக்கள் கருதுகின்றனர். ஆகக்குறைந்தது அறிக்கையில் பெயர்குறிபிடப்பட்ட இருவரையும் இடைநிறுத்தி புதியவர்களை நியமித்து விசாரணையை மீள மேற்கொள்ள ஜனாதிபதி பணித்திருக்க வாய்ப்பு இருந்தது. அதை அவர் பயன்படுத்தவில்லை என்ற விசனம் ஜே.வி.பி.குறித்த சந்தேகத்தை கிழக்கு கிறித்தவ வாக்காளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அறுகம்பை குறித்து பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் சோனக சமூகத்தை அச்சுறுத்துவதற்கான கோத்தபாய பாணியிலான ஒரு தந்திரோபாயமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் பயங்கரவாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஒரு கருவியாக ஜே.ஆர். ஜயவர்தன முதல் கோத்தபாய வரையுமான பல தலைவர்களாலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஜனாதிபதி அநுகுமாரவும் அந்த வழி அமைப்பு ஒன்றின் ஊடாக அரசியலுக்கு வந்தவர். ஈஸ்டர் தாக்குதல் பாணியிலேயே தகவல்கள் வெளியாகின்றன. ஒக்டோபர் 7ம்திகதி இந்திய புலனாய்வு துறையினால் இலங்கைக்கு தகவல் பரிமாறப்பட்டதாக ஒரு செய்தி கூறுகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் , எடுத்திருந்தால் தூதரகங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்து மேற்கு நாடுகளின் உல்லாசப் பிரயாணத்தடையை தடுத்திருக்கலாம் என்றும் எதிர்கட்சிகள் கூறுகின்றன. இதன் மூலம் பாரிய அந்நியச் செலாவணி இழப்பை தவிர்த்திருக்க முடியும். ஆனால் அமைச்சர் விஜயகேரத் இந்திய புலனாய்வு துறை தகவல் வழங்கவில்லை என்று மறுத்துள்ளார். அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் பேசப்படுகின்ற மற்றொரு விடயம் ஜே.வி.பி.யின் தேசிய பட்டியல். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தேசிய பட்டியலில் 2வது இடத்தில் இம்தியாஷ் பார்க்கீர் மார்க்கார், 4வது இடத்தில் சாகரன் விஜயேந்திரன், 5வது இடத்தில் நிசாம் காரியப்பர் இடம் பிடித்துள்ளனர். மேலும் 23, 24, 25 ம் இடங்களில் மூன்று தமிழர்களும், 27, 28 ம் இடங்களில் இரு சோனகர்களும் உள்ளனர். ரணில் விக்கிரமசிங்க ஆதரவுடனான புதிய ஜனநாயக முன்னணியில் 3வது இடத்தில் மொகமட் பைசர் முஸ்த்தபா, 7வது இடத்தில் செந்தில் தொண்டமான், 8வது இடத்தில் சுரேன் ராகவன் உள்ளனர். பொதுஜன பெரமுனவில் 10வது இடத்தில் பளீல் மர்ஷான் அஸ்மி உள்ளார். இதில் தமிழர் எவரும் இல்லை. ஆனால் இலங்கை தேசியம், இலங்கையர் வார்த்தைகளை உரத்து உச்சரிக்கின்ற ஜே.வி.பி/என்.பி.பி. பட்டியலில் 10 வது இடத்திலேயே இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் 20 வது இடத்தில் அப்துல் ஃபதா முகமது இக்ராம் உள்ளார். 29 பேரைக்கொண்ட தேசிய பட்டியலில் சிறுபான்மை இனங்களை சேர்ந்தவர்களுக்கு போதிய பிரதிநித்துவம் மட்டும் அல்ல முன்னுரிமையும் வழங்கப்படவில்லை என்பது கவலைக்குரியது. ஆக, கிழக்கிலங்கையில் ஜே.வி.பி.க்கு காற்று வளம் செப்டம்பரில் போன்று நவம்பரில் அடிக்காது போல்தான் உள்ளது.? அரசியல் காலநிலை மாறுவதும் ஒரு மாற்றம் தானே ! இல்லையா?. https://arangamnews.com/?p=11370
-
தமிழ் மக்கள் ஏன் பலூன்களின் பின் போகிறார்கள்?
தமிழ் மக்கள் ஏன் பலூன்களின் பின் போகிறார்கள்? – நிலாந்தன். மருத்துவர் அர்ஜுனா ஊசிச் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஒரு விருந்தகத்தில் அவர் உணவருந்திக் கொண்டிருக்கும் பொழுது மான் கட்சியை சேர்ந்த ஒரு பெண் வேட்பாளர் அவருக்கு தன்னுடைய துண்டுப் பிரசுரத்தை விநியோகிக்கின்றார். அந்த காட்சியை அர்ஜுனா வழமை போல நேரலையில் விடுகிறார். அந்தப் பெண்ணிடம் கேள்வி கேட்கிறார். அந்தப் பெண் ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்து விலகிச் செல்கிறார். அர்ஜுனா அந்த வேட்பாளர் வழங்கிய துண்டுப் பிரசுரத்தால் தன் வாயைத் துடைக்கிறார். அதையும் நேரலையில் விடுகிறார். ஒரு சக வேட்பாளரை அந்த மருத்துவர் எப்படி நடத்தியிருக்கிறார் என்பது அவருடைய அரசியல் நாகரீகத்தைக் கேள்விக்கு உள்ளாக்கக்கூடியது. ஆனால் சில மாதங்களுக்கு முன் அவர் சாவகச்சேரியில் ஒரு கலகக்காரனாக எழுச்சி பெற்றார். தனக்கு கிடைத்த பிரபல்யத்தை அவர் மிகவும் திட்டமிட்டு கட்டமைத்தார். யூ டியூப்பர்களின் காலத்தில் அது அவருக்கு மிகவும் இலகுவாக இருந்தது. தனக்கு கிடைத்த பிரபல்யத்தை இப்பொழுது அவர் அரசியலில் எதிர்பார்ப்போடு முதலீடு செய்கிறார். அவருடைய தேர்தல் சின்னம் ஊசி. சமூக வலைத்தளங்களால் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட ஒரு பலூன் அவர். அவருடைய ஊசியே அவரைக் குத்தி வெடிக்கச் செய்துவிடும் என்பதைத்தான் அந்த விருந்தகத்தில் மான் கட்சியின் பெண் வேட்பாளரை அவர் கையாண்ட விதம் நமக்கு உணர்த்துகின்றதா? அவருக்கு கிடைத்த பிரபல்யத்துக்குக் காரணம் என்ன? சாமானியர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சமூக வலைத்தளங்களா? அல்லது, மருத்துவத் துறைக்குள் காணப்படும் விமர்சனத்திற்குரிய அம்சங்களா? அல்லது அந்த விவகாரங்களை அந்த துறை சார்ந்த ஒருவரே வெளியே கொண்டு வந்ததுதான் காரணமா? இல்லை. இவற்றைவிட ஆழமான ஒரு காரணம் உண்டு. தமிழ்மக்கள் தங்களுக்காக, தங்களுக்குரிய நீதிக்காகப் போராட யாராவது வரமாட்டார்களா? தங்களுக்காக தன்னைத் தியாகம் செய்ய யாராவது வரமாட்டார்களா? என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்பதுதான் அதற்குரிய முக்கிய காரணம். அதாவது அதைச் சுருக்கமாகச் சொன்னால், தலைமைத்துவ வெற்றிடம் ஒன்று காணப்படுகிறது என்று பொருள். அர்ச்சுனாவின் பின்னால் மட்டுமல்ல கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் வெவ்வேறு தரப்புகள், கட்டமைப்புக்கள் போன்றவற்றை நோக்கி அதிகரித்த எதிர்பார்ப்போடு அவற்றின் பின் சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த தலைமைத்துவம் அல்லது எதிர்பார்த்த தொடர்ச்சியான காட்சி மாற்றங்கள் நடக்கவில்லை. தமிழ்மக்கள் பேரவை தோன்றிய பொழுது தமிழ்மக்கள் அதிகம் எதிர்பார்ப்போடு அதை நிமிர்ந்து பார்த்தார்கள். இரண்டு எழுக தமிழ்களிலும் கலந்துகொண்ட அனைவருமே தாமாக வந்தவர்கள்தான். யாரும் வாகனம் விட்டு அழைத்து வரவில்லை. விக்னேஸ்வரன் மாகாண சபையில் சுமந்திரன் அணியினரால் சுற்றி வளைக்கப்பட்ட பொழுது அவருக்கு கிடைத்த ஆதரவு தன்னியல்பானது. யாரும் திட்டமிட்டு ஒழுங்கமைக்காதது. ஆனால் விக்னேஸ்வரன் தனக்கு கிடைத்த ஆதரவையும் அபிமானத்தையும் அங்கீகாரத்தையும் தொடர்ந்து தக்கவைக்க முடியாதவராகத் தன்னை நிரூபித்தார். தமிழ் மக்கள் பேரவையின் இயங்கா நிலைக்கு அவரும் ஒரு காரணம். மாகாண சபையின் காலம் முடிந்த பொழுது சமூக செயற்பாட்டாளராகிய திரு செல்வின் என்னிடம் கேட்டார்… “விக்கி இப்பொழுது என்ன முடிவை எடுக்க வேண்டும்? ஒரு கட்சியை தொடங்கி கட்சி அரசியலை முன்னெடுப்பதா? அல்லது தமிழ் மக்கள் பேரவையை ஒரு மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்து அதற்கு தலைமை தாங்குவாரா?” என்று. நான் சொன்னேன்…”அவர் மக்கள் இயக்கத்துக்கு தலைமை தாங்கத் தேவையான வாழ்க்கை ஒழுக்கத்தையோ அல்லது அரசியல் தரிசனத்தையோ கொண்டவர் அல்ல. அநேகமாக அவர் கட்சியைத் தொடங்கி ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடும்” என்று. விக்கி ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வந்தார். ஆனால் அவர் மாகாண சபைக்குள் சுமந்திரன் அணியினால் சுத்திவளைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அவருக்கு இருந்த கவர்ச்சியும் ஜனவசியமும் இப்பொழுது இல்லை. தமிழ் மக்கள் பேரவை ஓய்வுக்கு வந்து சில ஆண்டுகளில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி இடம் பெற்றது. அங்கேயும் தமிழ் மக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். தாமாகத் திரண்டார்கள். அது ஒரு பெரிய எழுச்சி. தூதரகங்களைத் திரும்பிப் பார்க்க வைத்த எழுச்சி. படைத் தரப்பை முகாம்களுக்குள் முடக்க வைத்த ஒரு எழுச்சி. ஆனால் அது பின்னர் பலூன் ஆகியது. அந்த பேரெழுச்சியின் பெயரால் உருவாக்கப்பட்ட அமைப்பு அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிக்கு போகவில்லை. அந்த அமைப்பின் இணைத் தலைவர்கள் ஆங்காங்கே மக்கள் போராட்டங்களில் காணப்படுகிறார்கள். ஆனாலும் அது ஒரு பேரியக்கமாக வளர்ச்சி பெறவில்லை. அப்படித்தான் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலையொட்டி தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி 2 லட்சத்து 26 ஆயிரம் மக்கள் திரண்டார்கள். தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகின்ற, கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்த ஒரு ஹைபிரிட் கட்டமைப்பை நோக்கி தமிழ்மக்கள் அதிகரித்த எதிர்பார்ப்போடு காணப்பட்டார்கள். ஆனால் சில நாட்களில் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொதுக் கட்டமைப்பு போட்டியிடவில்லை. பொதுக் கட்டமைப்பு தொடர்ந்து வரும் எல்லா தேர்தல்களிலும் கட்சிகளையும் மக்கள் அமைப்புகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று தமிழ்மக்கள் எதிர்பார்த்தார்கள். இப்பொழுதும் எதிர்பார்க்கிறார்கள். திருக்கோணமலையில் சங்கையும் வீட்டையும் இணைத்தது பொதுச் சபையின் மதத் தலைவர்களில் ஒருவராகிய திருமலை ஆயர்தான். எனவே தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு முயற்சித்து இருந்திருந்தால் மீண்டும் கட்சிகளை ஒருங்கிணைக்கலாம், அதன்மூலம் வாக்குச் சிதறலைத் தடுத்திருக்கலாம் என்று எதிர்பார்ப்பு சங்குக்கு வாக்களித்த மக்கள் மத்தியில் பரவலாக இருந்தது. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு முன்கையெடுத்திருந்தால் அரங்கில் இப்பொழுது தோன்றியிருக்கும் பெரும்பாலான சுயேச்சைகள் அந்த கட்டமைப்புக்குள் வந்திருக்கும் என்பது உண்மை. கட்சிகளுக்குள் உடைந்து வெளியே வருபவர்கள் பொதுக் கட்டமைப்பை நோக்கி வந்திருப்பார்கள். ஆனால் அது நடக்கவில்லை. பொதுக் கட்டமைப்பு இப்பொழுது நடைமுறையில் இல்லை. பொதுக் கட்டமைப்புக்குள் காணப்பட்ட மக்கள் அமைப்பு நாடாளுமன்றத் தேர்தலைக் கையாள்வதில்லை என்று முடிவெடுத்தது. இதனால் சங்குக்கு வாக்களித்த மக்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. இப்படியாக தமிழ் மக்கள் காலத்துக்கு காலம் வெவ்வேறு அமைப்புகளின் மீதும் நபர்களின் மீதும் தங்கள் நம்பிக்கைகளை முதலீடு செய்கிறார்கள். எதிர்பார்ப்போடு பார்க்கின்றார்கள். யாராவது வந்து மீட்க மாட்டார்களா? எந்தக் கட்டமைப்பாவது ஒரு காட்சி மாற்றத்தை ஏற்படுத்தாதா? என்று எதிர்பார்ப்போடு அந்த அமைப்பின் பின் அல்லது நபர்களின் பின் செல்கிறார்கள். முடிவில் உற்சாகமெல்லாம் வடிந்து போய்ச் சலித்து அரசியலில் ஆர்வமற்று ஒதுங்கி விடுகிறார்கள். இம்முறை நாடாளுமன்றத் தேர்தலிலும் அவ்வாறு தமிழ் மக்கள் சலிப்போடு ஒதுங்கி நிற்கும் ஒரு நிலைமை தோன்றக்கூடும் என்ற பயம் பரவலாக உண்டு. சில கிழமைகளுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தலில், தேசமாகத் திரள்வோம் என்று நின்ற மக்கள், இப்பொழுது விருப்பு வாக்கு கேட்டுத் தமிழர்களை வாக்காளர்களாகக் கூறுபோடும் கட்சிகளையும் சுயேச்சைகளையும் சலிப்போடும் ஏமாற்றத்தோடும் விரக்தியோடும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விரக்தி சிலசமயம் அனுர அலையின் பின் மக்களை உந்தித் தள்ளிவிடுமா என்ற பயம் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் உண்டு. இதே நிலைமை திருக்கோணமலையிலோ அம்பாறையிலோ ஏற்பட்டால் என்ன நடக்கும்? புலம்பெயர்ந்து வாழும் திருகோணமலையைச் சேர்ந்த ஒரு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் சொன்னார், திருகோணமலையில் எவ்வளவுதான் வாக்குகள் சிதறினாலும் ஒரு தமிழ்ப் பிரதிநிதித்துவம் தேவை என்பதற்காக இனமாகச் சிந்தித்து வாக்களிக்கும் ஒரு பாரம்பரியம் அங்குண்டு. அது இனியும் தொடரும் என்று. தொடர்ந்தால் நல்லது.அம்பாறையிலும் அப்படி நடந்தால் நல்லது. வடக்கில்,மீன் கரைந்தாலும் சட்டிக்குள்தான் இருக்கும் என்று நம்புவோமாக. https://www.nillanthan.com/6943/
-
ஜனாதிபதி அநுர ஜனவரி டெல்லிக்கு விஜயம்; பெப்ரவரியில் இலங்கை வரும் பிரதமர் மோடி!
ஜனாதிபதி அநுர ஜனவரி டெல்லிக்கு விஜயம்; பெப்ரவரியில் இலங்கை வரும் பிரதமர் மோடி! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முதலாவது அரச முறை வெளிநாட்டு விஜயமாக இந்தியா செல்ல உள்ளார். இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ஜனவரி மாதத்தில் டெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழு பங்கேற்க உள்ளது. இதன்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளனர். இலங்கை – இந்திய பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார உறவுகள் குறித்து பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளில் இருதரப்பும் ஈடுபட உள்ளன. இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்திய திட்டங்கள் குறித்து இலங்கை குழு அவதானம் செலுத்த உள்ளது. இதேவேளை, பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்திற்கான அழைப்பினை அநுரகுமார கையளிக்க உள்ளார். மோடியின் விஜயமானது இலங்கையின் சுதந்திர தினத்தன்று இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://akkinikkunchu.com/?p=296932
-
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் வீட்டில் சமையல்காரருக்கு துன்புறுத்தல்; பொலிஸார் விசாரணை
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் வீட்டில் சமையல்காரருக்கு துன்புறுத்தல்; பொலிஸார் விசாரணை பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரோகிதபோகொல்லாகமவின் உத்தியோபூர்வ இல்லத்தில் பணியாளர் ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து பிரிட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் சமையல்காரராக பணிபுரியும் ஒருவர் தனது நண்பர் ஊடாக பிரிட்டன் பொலிஸாரிற்கு முறைப்பாடு செய்துள்ளார். அந்த வீட்டிற்கு சென்ற பொலிஸார் அந்த வீட்டில் யாரோ தற்கொலை செய்யவுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இராஜதந்திர விடுபாட்டுரிமை காரணமாக பொலிஸார் அந்த வீட்டிற்குள் செல்லவில்லை என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை முறைப்பாடு செய்த நபர் அவசரகடவுச்சீட்டின் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். https://akkinikkunchu.com/?p=296942
-
எல்பிட்டிய பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி!
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி நேற்று (26) நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, தேசிய மக்கள் சக்தி – 17,295 வாக்குகள் – உறுப்பினர்கள் 15 ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகள் – உறுப்பினர்கள் 06 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,957 வாக்குகள் – உறுப்பினர்கள் 03 பொதுஜன எக்சத் பெரமுன – 2,612 வாக்குகள் – உறுப்பினர்கள் 02 சுயேட்சைக்குழு 1 – 2,568 வாக்குகள் – உறுப்பினர்கள் 02 பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி – 1,350 வாக்குகள் – உறுப்பினர்கள் 01 தேசிய மக்கள் கட்சி – 521 வாக்குகள் – உறுப்பினர்கள் 01 தெவன பரபுர கட்சி – வாக்குகள் 388 – உறுப்பினர்கள் தெரிவாகவில்லை ஜனசெத பெரமுன – வாக்குகள் 50 – உறுப்பினர்கள் தெரிவாகவில்லை 29 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் 1 சுயேச்சைக் குழுவும் இன்று தேர்தலில் போட்டியிட்டன. எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. இன்றைய வாக்களிப்பு 48 நிலையங்களில் இடம்பெற்றதுடன், இம்முறை எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் 55,643 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். http://www.samakalam.com/எல்பிட்டிய-பிரதேச-சபைத்/
-
வெண்முரசு நாவல் 16: “குருதிச்சாரல்”
ஆசானின் தளத்தில் மீண்டும் எனது பதிவு வந்துள்ளது! குருதியெழும் பொழுது https://www.jeyamohan.in/203918/ “செந்நா வேங்கை” நாவல் படிக்க மூன்று மாதம் எடுத்தது. இது குருஷேத்திரம் நோக்கி படைகள் ஒருங்குவதும் முதல்நாள் போரைப் பற்றியும் சித்தரிக்கும் நாவல். அடுத்த நாவலான “திசைதேர் வெள்ளம்” பதினொரு நாட்களில், விடுமுறை எடுக்காமலேயே, படித்துமுடித்தேன்! பத்தாவது நாள் போருடன் இந்நாவல் நிறைவடைகின்றது. போர்களற்ற உலகை விரும்பும் எனக்குப் போர்களிலும் விதம்விதமாகக் கொல்வதிலும் உள்ள ஆர்வம் பயத்தை உருவாக்கியது. அதனால் ஒரு மாதத்திற்கு மேலாக அடுத்த நாவல்களைப் படிக்காமல் இருக்கின்றேன்! படித்து முடித்த “செந்நா வேங்கை”, “திசைதேர் வெள்ளம்” பற்றி நயப்புரை எழுதவேண்டும்!
-
வட, கிழக்கில் ஜே.வி.பி. உள்ளிட்ட அனைத்து சிங்களக் கட்சிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் - செல்வராசா கஜேந்திரன்
வட, கிழக்கில் ஜே.வி.பி. உள்ளிட்ட அனைத்து சிங்களக் கட்சிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் “அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு இந்த நாட்டிலே தேனும் பாலும் ஓடச் செய்யும், மனுநீதிச் சோழன் போல நீதி வழங்குவார்கள் என்று தென்னிலங்கை சிங்கள மக்கள் புகழ்ந்து கொண்டிருப்பதை நம்பி தமிழ்ச் சமூகத்தில் ஆழமாகச் சிந்திக்கத் திறனற்றவர்கள் ஜே.வி.பி. இனவாதிகளைக் கொண்டாடுகின்ற நிலைமை காணப்படுகின்றது. தமிழர் தாயகத்தில் இனவாத ஜே.வி.பினரை முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும். அதுபோல் அனைத்து சிங்களப் பேரினவாத கட்சிகளையும் நிராகரிக்க வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தினார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், தேர்தல் விதிமுறையை மீறினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு வாக்குமூலங்களைப் பெற்றதன் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்தக் கைது தொடர்பில் ஊடகங்களுக்குக் கஜேந்திரன் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பொலிஸார் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து கைது செய்து வாக்குமூலம் பெற்றதன் பின்னர் விடுதலை செய்துள்ளனர். இந்தச் சம்பவமானது தமிழ் மக்களை ஆத்திரமூட்டும் வகையில் அமைந்துள்ளது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு இந்த நாட்டிலே தேனும் பாலும் ஓடச் செய்யும், மனுநீதிச் சோழன் போல் நீதி வழங்குவார்கள் என்று தென்னிலங்கை சிங்கள மக்கள் புகழ்ந்து கொண்டிருப்பதை நம்பி தமிழ்ச் சமூகத்தில் ஆழமாகச் சிந்திக்கத் திறனற்றவர்கள் ஜே.வி.பி. இனவாதிகளைக் கொண்டாடுகின்ற நிலைமை காணப்படுகின்றது. வடக்கு – கிழக்கைப் பொறுத்தவரையில் ஜே.வி.பியினுடைய சிந்தனையிலும், பொலிஸ் திணைக்களங்களினுடைய சிந்தனையிலும் எதுவித மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதை இந்தக் கைது எடுத்துக் காட்டுகின்றது. கடந்த அரசுகள் மேற்கொண்டதைப் போல் தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறையையும், இனவாதத்தையும்தான் ஜே.வி.பியினரும் பின்பற்றப் போகின்றார்கள் என்பதற்கு இந்தக் கைது சாட்சியாக அமைகின்றது. ஜே.வி.பி. அரசைக் கொண்டாடக்கூடிய தமிழர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் உங்களுடைய தலையிலே மண்ணை அள்ளிப் போடுகின்ற செயற்பாட்டை முன்னெடுக்கின்றீர்கள். ஜே.வி.பினுடைய இனவாத சிந்தனையிலே எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. புதிய வாக்காளர்கள், இளையோர் தென்னிலங்கையில் இடம்பெறும் போலித்தனமான பிரச்சாரங்களை நம்பி ஏமாந்து விடக் கூடாது. தமிழர் தாயகத்தில் இனவாத ஜே.வி.பினரை முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும். அதுபோல் அனைத்து சிங்கள பேரினவாதக் கட்சிகளையும் நிராகரிக்க வேண்டும். அதுவே தமிழ் மக்கள் கொடுக்கின்ற சாட்டை அடியாக இருக்கும்.” – என்றார். https://akkinikkunchu.com/?p=296780
-
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் பதவிக்கு சட்டவிரோதமான பதவியேற்புக்கு பலத்த எதிர்ப்பு!
சட்டவிரோதமான பதவியேற்புக்கு பலத்த எதிர்ப்பு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் பதவிக்கு சட்டவிரோதமான முறையில் புதிதாக பதவியேற்றவருக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளராக இதுவரை காலமும் பதவிவகித்தவர் தனது கற்கைகளை முடித்து வெளியேறிய நிலையில் அவருடைய பதவிக்கு முன்னைய ஒன்றியத்தின் நிர்வாகக் குழுவில் அங்கம்வகித்த ஒருவர் யாப்பு விதிகளுக்கு முரணாக புதிதாக பதவியேற்றுள்ளார். இதனால் புதிய கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கான பிரதிநித்துவம் தடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் விரிவுரையாளர்கள் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளன. சட்டவிரோதமான பதவியேற்பு தொடர்பான விசாரணைகளை உடன் மேற்கொள்ளுமாறு கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் கோரிக்கை கடிதம் ஒன்றும் நேற்றையதினம் துணைவேந்தரிடமும், மாணவர் நலச்சேவை அலுவலகத்திடமும் கையளிக்கப்பட்டுள்ளது. கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினை பிரதிநித்துவப்படுத்தி பிரதான மாணவர் ஒன்றிய செயலாளர் பதவி வகிக்கும் நிலையில் முன்னைய ஒன்றியத்தின் காலம் நிறைவடைந்த நிலையில் வறிதாக்கப்பட்ட செயலாளர் பதவிக்கு கலைப்பீட மாணவர் ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத ஒருவர் புதிதாக பிரதான மாணவர் ஒன்றிய செயலாளர் பதவியை கைப்பற்றியமை யாப்பு விதிமுறைகளுக்கு சட்டவிரோதமானது என யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க வட்டாரங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. மாணவர் ஒன்றிய செயற்பாடுகளை வலுவிழக்க செய்யும் வகையிலும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு சமூக மட்டத்தில் இருக்கும் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் புதிதாக சட்டவிரோதமாக செயலாளர் பதவியை பெற்றுள்ளாரா என்ற சந்தேகத்தை மாணவர்கள் வெளியிட்டுள்ளனர். (ப) https://newuthayan.com/article/சட்டவிரோதமான__பதவியேற்புக்கு_பலத்த_எதிர்ப்பு!