Everything posted by கிருபன்
-
சங்கு சின்னமும் அரசியலில் அறமும்!
சங்கு சின்னமும் அரசியலில் அறமும்! October 11, 2024 சங்கு சின்னத்தை முன்வைத்து பொதுச் சபையினர் ஆங்காங்கே அறம் பற்றி பேச முற்படுவதாகத் தெரிகின்றது. அவர்கள் அவ்வாறு பேசுவது சரியானதா – அதற்கான தார்மீக தகுதி அவர்களுக்கு உண்டா? சங்கு சின்னத்தை ஒரு தேர்தல் தந்திரமாகவே ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் எடுத்திருக்கின்றனர். தேர்தல் என்றால் ஒவ்வொரு கட்சியும் தங்களது வெற்றி பற்றியே சிந்திக்கும். இதில், ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சங்கு சின்னத்தை எடுத்திருக்கும் அரசியல் கட்சிகள் தங்களின் நியாயத்தை கூறுகின்றனர். குறிப்பாக, பொதுச் சபையின் சார்பில் பங்கு கொண்டவர்கள் ஒற்றைச் சொல்லில் அதனை எடுக்க வேண்டாம் – கைவிடுங்கள் என்று அழுத்தமாகக் கூறவில்லை என்கின்றனர். மறுபுறம் பொதுச் சபையின் சார்பில் பொதுவெளிகளில் பேசுகின்றவர்களில் சிலர் தாங்கள் அவ்வாறு கூறவில்லை என்கின்றனர். இதில் எவர் கூறுவது சரி – எவர் கூறுவது தவறு என்பதற்கு அப்பால் சங்கு சின்னத்தை பொதுக் கட்டமைப்பிலுள்ள கட்சியொன்று எடுத்ததை அறம் சார்ந்து விவாதிக்க முடியுமா? முதலாவது விடயம், பொதுச் சபைக்கும் ஏழு அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான உடன்பாட்டில் பொது வேட்பாளராக நிறுத்தப்படும் குறிப்பிட்ட நபருடன் பொருத்தமான உடன்பாடு செய்யப்படுமென்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்த உடன்பாடு எங்கே? இதற்கு பொதுச் சபையினரால் பதிலளிக்க முடியாது. ஏனெனில், அவ்வாறானதோர் உடன்பாடு செய்யப்படவில்லை. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் பொதுச் சபையின் உடன்பாட்டை பொதுச் சபையே முறையாகக் கைக்கொள்ளவில்லை. பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட பா. அரியநேத்திரன் இப்போது, கொள்கைரீதியாக பொதுவேட்பாளரை எதிர்ப்பதாகவும் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதே சரியென்று முடிவெடுத்த தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றார். அறம் பற்றிப் பேசுவதாயின், அரியநேத்திரனின் தீர்மானம் அறம் சார்ந்ததா? எந்தக் கட்சிகள் அவருடன் பொது வேட்பாளர் விடயத்தில் உடன்பட்டு கைகோத்து பயணித்தனவோ அவர்களுக்கு எதிராகவே அரியநேத்திரன் பிரசாரம் செய்யப்போகின்றார். மட்டக்களப்பில் சங்கு சின்னத்தில் ஓர் அணியும் வீட்டுச் சின்னத்தில் இன்னொரு தரப்பும் மோதவுள்ள நிலையில், சங்குக்கு சங்கு ஊதப்போவதாக சூளுரைத்து அரியநேத்திரனுக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுத்த சாணக்கியன் அணிக்கு ஆதரவாகவே அரியநேத்திரன் பிரசாரங்களை செய்யவுள்ளார். இந்த விடயத்தில் அறம் சார்ந்து அரிய நேத்திரனை பொதுச் சபையால் கட்டுப்படுத்த முடியுமா? அது முடியாது என்றால் மற்றவர்களின் அறம் பற்றிப் பேசுவதற்கு பொதுச் சபைக்கு என்ன தகுதியுண்டு? அவர் தனிப்பட்ட காரணங்களை கூறினாலும் இறுதியில் அவர் சாணக்கியன் அணியை பலப்படுத்தும் பணியையே செய்யப்போகின்றார். இந்தப் பின்புலத்தில் சங்குச் சின்னம் தொடர்பில் அறம் பற்றிப் பேசும் தகுதிநிலையை பொதுச் சபை முற்றிலும் இழந்துவிட்டது. பொதுச் சபையின் தவறு எங்கு ஆரம்பிக்கின்றது என்றால், பொதுச் சபை அரசியலை கையாளுவது தொடர்பில் அரைகுறையான பார்வையையே கொண்டிருந்திருக்கின்றது. மேலும் – விடயங்களின் பக்க விளைவுகளை ஆராயாமல் சிறுபிள்ளைத்தனமாக முடிவெடுத்திருக்கின்றது. பொதுச் சபையை வழிநடத்தியவர்களில் சிலர் கருத்துருவாக்கிகள் – புத்திஜீவிகளாக தங்களை அடையாளப்படுத்தியிருந்த போதிலும்கூட, ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளும்போது அதன் பக்கவிளைவுகள் குறித்துத் தெளிவாக ஆராய்ந்தே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் பொதுச் சபையின் அணுகுமுறை சிறுபிள்ளை வேளாண்மை போன்றே காணப்படுகின்றது. தூரநோக்கின்றி முன்னெடுக்கப்படும் பக்க விளைவுகளை ஆராயாமல் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் அனைத்தும் இப்படித்தான் முடிவுறும். அரசியலை கையாளும் விடயத்தில் பொதுச் சபை தோல்வியடைந்துவிட்டது என்பதே உண்மை. https://eelanadu.lk/சங்கு-சின்னமும்-அரசியலில/
-
தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களின் பெயர்கள்
தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களின் பெயர்கள் Freelancer / 2024 ஒக்டோபர் 11 , பி.ப. 05:37 பாராளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளநிலையில், தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. அதில் பிமல் ரத்நாயக்க, பேராசிரியர் வசந்த சுபசிங்க, கலாநிதி அனுர கருணாதிலக்க, பேராசிரியர் உபாலி பனிலகே, எரங்க உதேஷ் வீரரத்ன, அருணா ஜெயசேகர, கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனித ருவன் கொடிதுக்கு, புண்ய ஸ்ரீ குமார ஜெயக்கொடி, ராமலிங்கம் சந்திரசேகர், கலாநிதி நஜித் இந்திக்க, சுகத் திலகரத்ன, வழக்கறிஞர் லக்மாலி ஹேமச்சந்திர, சுனில் குமார் கமகே, காமினி ரத்நாயக்க, பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க, சுகத் வசந்த டி சில்வா, கீர்த்தி வெலிசரகே, சமிலா குமுது பிரிஸ், அப்துல் ஃபதா முகமது இக்ராம், ரஞ்சன் ஜெயலால் பெரேரா, மொஹமட் முகமது நசீர் இக்ராம், க்ளோமெட் மார்ட்டின் நெல்சன், ரொமேஷ் மோகன் டி மெல், பெனிடா பிரிஷாந்தி ஹெட்டிதந்த்ர, புபுது நுவன் சமரவீர, சரத் லால் பெரேரா, அனுர ஹெட்டிகொட கமகே, ஹேமதிலக கமகே உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ( https://www.tamilmirror.lk/செய்திகள்/தேசிய-மக்கள்-சக்தி-வேட்பாளர்களின்-பெயர்கள்/175-345282
-
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிய ராஜபக்ச குடும்பம்
ராஜபக்ஸ சகோதரர்கள் போட்டியிடாத தேர்தல்... பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்து தீவிர அரசியலில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்பத்தின் சகோதரர்கள் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளனர். இதன்படி, பல தசாப்தங்களுக்குப் பின்னர் முதன்முறையாக ராஜபக்ச சகோதரர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது விசேட அம்சமாகும். நாமல் ராஜபக்ஷ தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளதோடு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகவும் போட்டியிட்டார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை. R https://www.tamilmirror.lk/செய்திகள்/ராஜபக்ஸ-சகோதரர்கள்-போட்டியிடாத-தேர்தல்/175-345292
-
அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்!
எல்லாரும் படத்தை நல்லாப் பார்த்து புள்ளடி போடிவினம்! “யானைக்கு எதிரே புள்ளடி” என்று சின்ன வயதில் போஸ்ரர் பார்த்த நினைவு. இப்ப சங்கு, தபால்பெட்டி, வீடு, மான், சைக்கிள், திசைகாட்டி என்று கலாதியாக இருக்கு😂
-
இலங்கை தமிழ் அரசு கட்சி - மட்டக்களப்பில் வேட்புமனு தாக்கல் செய்தனர்
இலங்கை தமிழ் அரசு கட்சி - மட்டக்களப்பில் வேட்புமனு தாக்கல் செய்தனர் Vhg அக்டோபர் 10, 2024 எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் - சாணக்கியன் தலைமையில் இன்று வியாழக்கிழமை (10-10-2024) ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். கட்சியின் வேட்பாளர்கள்..... 1:-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்- சாணக்கியன் 2:-முன்னாள்.பா.உறுப்பினர் ஞானமுத்து - சிறினேசன் 3:- மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் மேஜர் தியாகராசா- சரவணபவன் 4:-ஏறாவூர் பற்று முன்னாள் தவிசாளர் சின்னத்துரை- சர்வானந்தன் 5:-வைத்தியர் ஸ்ரீநாத் 6:- இளைஞர் அணித் தலைவர் கிருஷ்ணபிள்ளை- செயோன் 7:-அருணாச்சலம்- கருணாகரன் https://www.battinatham.com/2024/10/blog-post_66.html
-
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகூடிய ஆசனங்களை பெறும் கட்சியாக எமது கட்சி காணப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது : சிவனேசதுரை சந்திரகாந்தன் !
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகூடிய ஆசனங்களை பெறும் கட்சியாக எமது கட்சி காணப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது : சிவனேசதுரை சந்திரகாந்தன் ! By kugen எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எமது கட்சி கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய வாக்குகளை பெறும் எனும் நம்பிக்கை எமக்கு உள்ளது, இது வரலாற்றில் ஓர் திருப்புமுனையாக கூட இருக்கலாம், என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகூடிய ஆசனங்களை பெறும் கட்சியாக எமது கட்சி காணப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. கடந்த காலங்களிலும் மக்களின் ஆணை மூலம் அவர்களுக்குரிய அபிவிருத்தி உரிமை சார்ந்த விடயங்களை மிகவும் கவனமாக முன் எடுத்து வந்தோம், மக்களின் நம்பிக்கை பெற்றுள்ள காரணத்தினால் மக்களுக்குரிய அபிவிருத்திகளை முடியுமான அளவு முன்னெடுத்து வந்தோம். புதிய அரசாங்கம் ஜனாதிபதியுடன் எதிர்காலத்தில் ஒரு இணக்கப்பாட்டுடன் ஆன அரசியலை முன்னெடுக்க நாம் தயாராக இருக்இன்றோம், என்பதை மக்கள் நன்குணர்ந்து அதற்குரிய ஆதரவை எமக்குத் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார். https://www.battinews.com/2024/10/blog-post_192.html
-
திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை வீட்டுச் சின்னத்தில் போட்டி : எம். ஏ சுமந்திரன் !
திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை வீட்டுச் சின்னத்தில் போட்டி : எம். ஏ சுமந்திரன் ! By kugen திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை வீட்டுச் சின்னத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர் என்றும் முதன்மை வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்டப் பணிமனையில் வியாழக்கிழமை (10)மாலை இடம் பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் தெரிவிக்கையில். நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளோம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் நால்வரும் ஏனைய கட்சிகளுடன் மூவருமாக மொத்தமாக 7 வேட்பாளர்கள் களமிறங்கிய உள்ளனர். பொது அமைப்புக்கள் பேராயர் தலைமையிலும் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்மானம் எடுத்தோம். இதில் சண்முகம் குகதாசன், கந்தசாமி ஜீவரூபன், கதிர்காமத் தம்பி சுந்தரலிங்கம், காலி ராஜா கோகுல் ராஜ் ஆகிய நால்வரே தமிழ் அரசு கட்சியின் சார்பில் களமிறங்கவுள்ளனர். பலதரப்பட்ட விமர்சனங்கள் சிக்கல்களை எதிர்கொண்டு கலந்துரையாடல் ஒன்றின் பின்பே தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என்றார். https://www.battinews.com/2024/10/blog-post_940.html
-
கலைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேடம் - கருணா அம்மான்
வடக்கு கிழக்கு தமிழர்களை தலைமை தாங்க வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது - தேசிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைமை வேட்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் ! By kugen தமிழ் அரசியல்வாதிகளுக்கு இடையே காணப்படும் ஒற்றுமை மற்றும் பதவி மோகம் காரணமாக மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியானது தமிழ் மக்களுக்கு பாரிய துரோகம் இழைத்துள்ளது பண ஆசையில் சிக்குண்டு பல கூறுகளாக பிரிந்து தமிழர்களுக்கு பாரிய துரோகங்களை இழைத்து விட்டனர்- தேசிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைமை வேட்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவிப்பு . இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியானது தமிழ் மக்களுக்கு பாரிய துரோகம் இழைத்துள்ளது பண ஆசையில் சிக்குண்டு பல கூறுகளாக பிரிந்து இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர் அவர்களது பணியை நாம் முன்னெடுப்பதற்காகவே இன்று தனித்துவமாக நாம் போட்டியிடுகின்றோம் இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் இன்று தமிழ் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியான நிலையிலும் கேலிக்கூத்தான நிலையிலும் காணப்படுகிறது தமிழ் அரசியல்வாதிகளுக்கு இடையே காணப்படும் ஒற்றுமை மற்றும் பதவி மோகம் காரணமாக மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்த நிலையில் அந்த இடைவெளியை நிரப்ப வேண்டிய தார்மீக கடமை என் மீது சுமத்தப்பட்டுள்ளது என நினைக்கிறேன் வடக்கு கிழக்கு தமிழர்களை தலைமை தாங்க வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. அந்த காலங்களில் இவர்களுக்கு நாம் விட்டுக் கொடுப்புகளை முன்னெடுத்து வந்தோம் தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பார்கள் என்று ஆனால் அவர்கள் தமிழர்களுக்கு பாரிய துரோகங்களை இழைத்து விட்டனர், கடந்த காலங்களில் தேசிய கட்சிகளின் இணைந்து செயல்பட்டதால் நமது இடங்கள் பறிபோகி உள்ள காரணத்தினால் நாங்கள் தற்போது சிறந்த வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளோம் எனவே அன்பான மக்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தேசிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைமை வேட்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார். https://www.battinews.com/2024/10/blog-post_682.html
-
ரத்தன் டாடா காலமானார்: இந்தியத் தொழில்துறையின் முகமாகத் திகழ்ந்தவர்
மக்கள் மனங்களில் மறைந்தும் மறையாமல் வாழும் டாடா ச.சேகர் வியாபாரத் துறையில், மக்களின் நலனுக்கு முக்கியத்துவமளித்து, மக்களுக்காக சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கருமமாற்றுவது என்பது, இன்றைய உலகில் அரிதாகிவிட்டது. அவ்வாறான சூழலில், சமூக நலனுக்கு முன்னுரிமையளித்து செயற்படும் முக்கியமான வியாபாரச் செயற்பாட்டாளர்கள் எண்ணிப் பார்க்கக்கூடியவர்களே உள்ளனர். அதில் ஒரு முக்கியமான நபர் அண்டைய நாட்டின் உலகறிந்த ரட்டன் டாடா தனது 86வது வயதில் இயற்கை எய்தினார். 1991 ஆம் ஆண்டில் இந்தியா பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த ஒரு காலகட்டத்தில் டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்புக்கு ரத்தன் டாடா நியமிக்கப்பட்டார். அக்கால கட்டத்தில் டாடா குழுமத்தின் செயற்பாடுகள் வெறும் இந்தியாவில் மாத்திரம் அறியப்பட்டதுடன், 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருடாந்த வருமானமாக பெறும் நிறுவனமாக திகழ்ந்தது. இவர் 2012 ஆம் ஆண்டு வரை சுமார் இரண்டு தசாப்த காலம் டாடா குழுமத்தின் தலைப் பொறுப்பை வகித்ததுடன், அக்காலப் பகுதியில் தமது தூர நோக்குடைய தலைமைத்துவத்தினூடாக, டாடா குழுமத்தை 100 பில்லியன் வருமானமீட்டும் குழுமமாக தரமுயர்த்தியிருந்தார். நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் டாடா குழுமம் இன்று இயங்குவதுடன், உருக்கு இரும்பு (ஸ்டீல்), வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் பாவனைப் பொருட்கள் என டாடா பிரசன்னம் வியாபித்துள்ளது. 1961 ஆம் ஆண்டு டாடா குழுமத்தில் பணியாற்ற ஆரம்பித்த ரத்தன் டாடா, ஆரம்பத்தில் உருக்கு இரும்பு தொழிற்சாலையில், இரும்பு உற்பத்தியில் ஈடுபடும் ஊழியர்களுடன் பணியாற்றியிருந்தார். அவ்வாறு ஆரம்பித்த இவரின் பயணம், டாடா குழுமத்தை சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நிறுவனமாக தரமுயர்த்துவது வரை தொடர்ந்திருந்தது. நாட்டின் கீர்த்தி நாமத்தை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்வதற்காக இந்தியாவையும், இந்திய மக்களையும் முன்னிலைப்படுத்திய கொள்கைச் செயற்பாடு, இவரின் வெற்றிக்கு வழிகோலியிருந்தது. பிரித்தானியாவின் தேயிலை வர்த்தக நாமமான டெட்லி (Tetley), 450 மில்லியன் அமெரிக்க டொலருக்கு இவரின் தலைமைத்துவத்தில் கீழ் டாடா குழுமம் கொள்வனவு செய்திருந்தது. இதுவே, சர்வதேச வர்த்தக நாமமொன்றை கொள்வனவு செய்த முதலாவது இந்திய நிறுவனமாக திகழ்ந்ததுடன், சர்வதேச பானத் துறையில் டாடா குழுமத்தின் பிரசன்னத்தையும் உறுதி செய்திருந்தது. ஐரோப்பாவின் இரண்டாவது மாபெரும் உருக்கு இரும்பு (ஸ்டீல்) உற்பத்தியாளராக திகழ்ந்த கோரஸ் ஸ்டீல் (Corus Steel) நிறுவனத்தை 2007 ஆம் ஆண்டில் ரட்டன் டாடாவின் தலைமைத்துவத்தின் கீழ் டாடா குழுமம் கொள்வனவு செய்திருந்தது. அதனூடாக உலகின் மாபெரும் உருக்கு இரும்பு உற்பத்தியாளர்களில் ஒன்றாக டாடா குழுமம் வளர்ச்சி பெற்றது. ஐரோப்பாவில் புகழ்பெற்ற வாகன வர்த்தக நாமமான ஐக்குவார் லேன்ட் ரோவர் (Jaguar Land Rover) வர்த்தக நாமத்தை டாடா குழுமம் 2008 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்திருந்தது. 2.3 பில்லியன் அமெரிக்க டொலருக்கு இந்த கொள்வனவை பூர்த்தி செய்திருந்தது. அதனூடாக, சர்வதேச வாகனங்கள் உற்பத்தியாளர்களில் ஒன்றாக டாடா குழுமத்தை தரமுயர்த்த முடிந்ததுடன், சொகுசு கார் வர்த்தக நாமங்களிலும் டாடா குழுமத்தின் பிரசன்னத்தை விஸ்தரித்தது. இந்தியா மற்றும் இந்தியர்களுக்கு முன்னுரிமையளித்து 2008 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் விலை குறைந்த கார் எனும் கொள்கையின் பிரகாரம் டாடா நனோ காரை டாடா குழுமம் அறிமுகம் செய்ததது. ரத்தன் டாடாவின் நோக்கான, இந்திய நடுத்தர வருமானமீட்டும் வர்க்கத்தினருக்கு சகாயமான விலையில் நான்கு சர்க்கர வாகனமொன்றை பெற்றுக் கொடுக்கும் வகையில், 1 இலட்சம் இந்திய ரூபாய்களுக்கு இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. புத்தாக்கத்தினூடாக மில்லியன் கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு இதனூடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட மும்பை தாஜ் சமுத்திரா ஹோட்டல் 2008 ஆம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு இலக்கானது. இதனால் ஹோட்டலுக்கு சேதம் ஏற்பட்டதுடன், அதனை உறுதியாக மீளக் கட்டியெழுப்புவதில் ரத்தன் டாடா முக்கிய பங்காற்றியிருந்தார். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மீது இவர் காண்பித்திருந்த கரிசனையினூடாக, ஊழியர்கள் மற்றும் மக்கள் மீது அவரின் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. வியாபாரத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ரத்தன் டாடா ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவருக்கு இந்தியாவிலும், சர்வதேச ரீதியிலும் பல விருதுகள் மற்றும் கௌரவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன. பத்ம பூஷன் (2000), பத்ம விபூஷன் (2008), ஐக்கிய இராஜ்ஜியம் – இந்திய உறவுகளை மேம்படுத்துவதில் இவர் ஆற்றியிருந்த பங்களிப்புக்கான இரண்டாம் எலிசபெத் மகா ராணியின் KBE கௌரவிப்பு (2009), ஆண்டின் சிறந்த வியாபார தலைமை செயற்பாட்டாளர் (2006), சமாதானத்துக்கான ஒஸ்லோ பிஸ்னஸ் விருது (2010), வாழ்நாள் சாதனையாளர் விருது (2014), வியாபாரத்தில் ஆண்டின் சிறந்த இந்தியருக்கான CNN-IBN விருது (2006) போன்றன இவற்றில் முக்கியமான சிலவாகும். வியாபார செயற்பாடுகளுக்கு அப்பால், ஆகாய பறப்பில் தமது ஈடுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் 2007 ஆம் ஆண்டில், F-16 Falcon பறப்பில் ஈடுபட்ட முதலாவது இந்தியர் எனும் பெருமையை பெற்றுக் கொண்டார். டாடா குழுமத்தின் மனித நேய செயற்பாடுகளில் இவர் ஆழமான ஈடுபாட்டை கொண்டிருந்தார். கல்வி, சுகாதார பராமரிப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தி போன்றவற்றில் பங்களிப்பு வழங்கும் டாடா நம்பிக்கை நிதியங்களில் இவர் நேரடியாக ஈடுபட்டிருந்தார். குழுமத்தின் செல்வங்கள் நாட்டுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்திருப்பதை இவர் தமது தலைமைத்துவ காலப்பகுதியில் உறுதி செய்திருந்தார். டாடா சன்ஸ் பங்கிலாபங்களில் 60-65 சதவீதமானவை மனிதநேய செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. ஒழுக்கமான முறையில் தலைமைத்துவமளித்து, வியாபார செயற்பாடுகளை நேர்மையான வழியில் முன்னெடுத்துச் செல்வது என்பதில் ரத்தன் டாடா தீவிரமாக இருந்தார். இவரின் தலைமைத்துவத்தின் கீழ் டாடா குழுமம் நம்பிக்கை, நேர்மை மற்றும் சமூக பொறுப்புணர்வு போன்றவற்றில் நன்கறியப்பட்டது. இந்தியாவில் மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியில் இவரின் ஒழுக்கமான மற்றும் நேர்மையான தலைமைத்துவம் என்பது பலரையும் கவர்ந்திருந்தது. இவரின் கொள்கைகள் உறுதியானவை. தமது நிறுவனத்தின் வெற்றிக்காக ஊழியர்களை ஊக்குவிப்பதில் இவர் கையாண்ட வழிமுறைகள் சகலருக்கும் பொருந்தக்கூடியவை. அவரின் சில பொன்னான வார்த்தைகளில், “வேகமாக செல்ல வேண்டுமானால் தனியே செல். நீண்ட தூரம் செல்ல வேண்டுமாயின், இணைந்து செல்”, “உன் மீது மக்கள் எறியும் கற்கை சேகரித்து, சொந்த நினைவுச்சின்னத்தை கட்டியெழுப்ப அதை பயன்படுத்து”, “வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் எமது பயணத்துக்கு மிகவும் முக்கியம், ஏனெனில் ECG அறிக்கையில் கூட நேர் கோடு என்பதால் உயிர் பிரிந்துவிட்டது என்பதை உணர்த்துகின்றது”, ”தலைமைத்துவம் என்பது பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகும், மாறாக சாட்டுகளை தெரிவிப்பதல்ல”, “வாய்ப்புகளை உங்களை தேடி வரும் வரை காத்திருக்க வேண்டாம், உங்கள் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்”, “சரியான தீர்மானங்களை மேற்கொள்வதில் நான் நம்பிக்கை கொள்வதில்லை. தீர்மானங்களை எடுத்துவிட்டு அவற்றை சரியாக்குவேன்” போன்றன அவற்றில் சிலவாகும். இவரின் இழப்பு ஈடு செய்யப்பட முடியாதது என்பதுடன், இவரால் வியாபாரம், சமூகம், மற்றும் நாட்டுக்கு ஆற்றப்பட்ட பங்களிப்புகள் எதிர்காலத்திலும் நினைவில் நிலைத்திருக்கும். செல்வத்தை உருவாக்குவது என்பது இவரின் வாழ்நாள் பணியாக இருந்துவிடாமல், இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும் பெறுமதியை உருவாக்குவது என்பதாக அமைந்திருந்தது. மறைந்தும் மக்கள் மனங்களில் மறையாமல் இவர் என்றும் வாழ்வார் என்பது உறுதி. https://www.tamilmirror.lk/வணிகம்/மக்கள்-மனங்களில்-மறைந்தும்-மறையாமல்-வாழும்-டாடா/47-345217
-
மாலதியின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள்
மாலதியின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் adminOctober 11, 2024 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று (10) வியாழக்கிழமை மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. குடும்ப உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் போராளிகள்,உறவினர்கள்,உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர். இதன் போது அவரது உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு,மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. https://globaltamilnews.net/2024/207359/
-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு தாக்கல்
தெற்கில் ஏற்பட்ட மாற்றம் தமிழ் மக்களுக்கான மாற்றம் அல்ல: மீண்டும் சங்கு வெல்லும் தமிழ் தேசியத்தின்பால் பயணிக்கின்ற மக்களின் திரட்சியாக சங்குச் சின்னம் பாராளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான ஆசனத்தை பெற்று வெற்றி பெறும் என ரெலோ அமைப்பின் பேச்சாளரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சுரேன் குருசுவாமி தெரிவித்தார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்தில் தமிழ் தேசியத்தின் திரட்சிக்காக பொது வேட்பாளர் களம் இறக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் அவருக்கு அமோக ஆதரவை வழங்கினார்கள். அந்த ஆதரவை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் சங்கு சின்னத்தில் களமிறங்கியுள்ளோம். ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தமிழ் மக்களுக்கான மாற்றம் கிடையாது. அதனை அரசாங்கம் ஜெனிவா தொடர்பில் வெளியிட்ட கருத்து தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது. ஜெனிவா தீர்மானத்தை முற்றாக நிராகரிக்கிறோம் உள்நாட்டு பொறிமுறை மூலமே பிரச்சனைகளுக்கான தீர்வு என இலங்கை அரசாங்கம்,தெரிவித்திருக்கின்ற நிலையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு சிதறடிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் தமிழருக்கு ஏதாவது செய்யும் என பெரும்பாலானோர் எதிர்பார்த்திருக்கும் நிலையில்,அவர்களின் நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை வழங்கியுள்ளதுடன் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியத்தின் பால் பயணிக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து சங்குச் சின்னத்தில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி எமது பலத்தை காட்டியுள்ளோம். அடுத்து பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, ஓரணியில் பயணிக்கின்ற தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்தில் களமிறங்கி உள்ளன. சங்குச் சின்னம் தமிழ் தேசிய உணர்வுடன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பயணிக்கும் சின்னமாக காணப்படுகின்ற நிலையில் சங்குச் சின்னத்தை அமோக வெற்றி பெறச் செய்வதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பயணத்தை தொடர முடியும்” என அவர் தெரிவித்தார். https://oruvan.com/sri-lanka/2024/10/10/the-change-in-the-south-was-not-a-change-for-the-tamil-people
-
கலைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேடம் - கருணா அம்மான்
கலைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேடம் Vhg அக்டோபர் 10, 2024 தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேடம் கலைந்து விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சரான விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (09-10-2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இவ்வளவு காலமும் போலி வேடங்களை போட்டு தேசியம் தேசியம் என பேசி மறுபக்கம் அரசாங்கங்களிடம் இலஞ்சங்களை வாங்கி கொண்டு மக்களை ஏமாற்றியுள்ளனர். காத்திரமான தலைமைத்துவம் எனவே, மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு காத்திரமான தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்பது எங்களது நோக்கம். கடந்த காலத்தில் அந்த சந்தர்பங்களை அவர்களுக்கு வழங்கியிருந்தேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒன்றாக இருக்கவேண்டும் என நான் அந்த காலத்தில் இடையூறு விளைவித்ததில்லை” எனத் தெரிவித்துள்ளார். https://www.battinatham.com/2024/10/blog-post_83.html
-
அம்பாறை பிரதிநிதித்துவம் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆதங்கம்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆதங்கம் October 9, 2024 அம்பாறை மாவட்டத்தை ‘வே….வெத்திலை பெட்டியாக’ பாவிக்கும் கலாசாரம் இந்த தேர்தலோடு மாற்றமடைய வேண்டும் அல்லது மாறவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார். அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்று தனது முகப்புத்தகம் வாயிலாக இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது அம்பாறை மாவட்டம் முழுதும் கடந்த சில தினங்களாக சில பயணங்களையும் பல நண்பர்களையும் பயணங்கள் வழியே சந்திக்க நேர்ந்தது. அதுனூடாக பெற்ற செய்திகளின் அடிப்படையில் சில தகவல்களை உங்களுடன் பகிர்கின்றேன். பொது தேர்தலுக்காக பல கட்சிகளும் சுயேட்சைகளும் அம்பாறைக்குள் களமிறக்கப்பட்ட நிலையில் அந்தந்த கட்சிகளுக்காகவும் சுயேட்சைகளுக்காகவும் களமிறக்க ஆள் பிடிக்கும் படலமும் தேடுதல்களும் பரவலாக இடம்பெற்று வருகின்றது. அம்பாறையில் தமிழர்களுக்கென்று ஒரு ஆசனம் இலவு காத்த கிளியாக காத்திருக்கும் வேளையில் அம்பாறை தமிழ்மக்களின் இருப்பை தக்கவைக்கும் வேலைத்திட்டத்தில் ஒரே சின்னத்தின் கீழ் கொண்டு வருவதற்கான அடிமட்ட எத்தனிப்புகளை பல்வேறு மட்ட சமூக அமைப்புக்கள் செய்தும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் கேள்விக்குறியாக போய் நின்கின்ற இருப்பையும் அவர்களின் எதிர்பார்ப்புகளையும் உணர்வுகளையும் நாடி பிடித்து அறிந்திருந்தும் தங்களது சுயநலன்களுக்காக ஆளாளுக்கு களத்தில் இறங்கியிருக்கும் நிலையை பார்க்கின்றபோது உண்மையில் பரிதாபமும் கோபமுமே வருகின்றது. பெண்களின் வாக்குரிமை 52%மாக தேர்தலில் வெற்றியாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள் இருந்தும் கட்சிக்காக உழைத்த பெண் வேட்பாளர்கள் சம அளவில் எந்த கட்சிகளுக்குள்ளும் உள்வாங்கப்படாததும் ஆளுமையான தலைமைத்துவமுள்ள இளைஞர்கள் இனங்காணப்பாடாததும் உண்மையில் வேதனை. வெறுமனே பொதுவெளியில் சமூக அமைப்புகளா தங்களை வெளிகாட்ட முனையும் பொது அமைப்புக்கள் தங்களுக்குள் பொதுவெளியில் ஒரு கொள்கையும் மறுபுறத்தே தமது கட்சி விசுவாசிகளுக்காக ஒரு கொள்கையும் வைத்து பொதுவெளியில் மக்களை ஏமாற்றி குடைபிடிப்பதுடன் வீட்டிக்குள் இருந்து செய்தி எழுதும் ஊடகவியலாளர்கள் அவர்களுக்கு ஜால்ரா அடிப்பதும் வெட்கப்ட வேண்டிய விடயமாகும். எனவே ஐந்துக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு அம்பாறை மாவட்ட தமிழர்களின் பிரதிநிதித்துவத்தையும் அவர்களது இருப்பையும் கேள்விக்குறியாக்கியிருப்பதுடன் பிரதிநிதித்துவ சந்தர்ப்பம் இல்லாமல் போகும் பட்சத்தில் தேர்தலில் குதித்த பல்வேறு தரப்பினரும் இதற்கான தீர்வு என்ன என்பதை மக்களுக்கு உறுதிமொழியாக உங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்குவதும் கட்டாயமானதாகும். ஏனெனில் அம்பாறை மாவட்டத்தை ‘வே….வெத்திலை பெட்டியாக’ பாவிக்கும் கலாசாரம் இந்த தேர்தலோடு மாற்றமடைய வேண்டும் அல்லது மாறவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.என்றார். https://www.supeedsam.com/206731/
-
தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ்.மாவட்ட வேட்பாளர்கள் விபரம்
தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட இளையோர் அணி வேட்பு மனு தாக்கல் Share This : http://www.samakalam.com/wp-content/uploads/2024/10/TMK-Jaffna-candidates.jpg நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு இளையோர் அணி இன்று புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றது. இந்த பட்டியலில் யாழ் மாநகர சபை முன்னாள் மேயர் வி. மணிவண்ணன், தவச்செல்வம் சிற்பரன் ( கட்டட கலைஞர், தமிழ் மக்கள் கூட்டணி சிரேஷ்ட உறுப்பினர்), மிதிலைச்செல்வி ஶ்ரீ பத்மநாதன் (தமிழரசுக் கட்சி கொழும்பு மாவட்ட கிளையின் முன்னாள் உப தலைவர் மற்றும் மகளிர் அணி உறுப்பினர், யாழ் பல்கலைக்கழக பட்டதாரி), வரதராஜா பார்த்தீபன் (யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மற்றும் யாழ் எயிட் தொண்டுநிறுவன சிரேஷ்ட தலைவர்), நாவலன் கோகிலவாணி ( முன்னாள் போராளி, நிவாக இயக்குநர் , தொழில்முனைஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்), அருள்பரன் உமாகரன் ( சட்டத்தரணி, கவிஞர் மற்றும் தமிழரசு கட்சி உறுப்பினர்), பிரான்சிஸ் குலேந்திரன் செல்ரன்( யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர், யாழ் பல்கலைக்கழக பட்ட்டதாரி ), முருகானந்தம் யசிந்தன் (பிராந்திய இயக்குனர் , ஆர். பி. கொ நிறுவனம்), கதிரேசன் சஜீதரன் (யாழ் பல்கலைக்கழக பட்டதாரி, கோண்டாவில் இந்துக்கல்லூரி ஆசிரியர்) ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் கூட்டணியின் பதிவுசெய்யப்பட்ட மான் சின்னத்தில் இவர்கள் போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் வேட்பாளர்கள் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் வேட்பாளர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர். அரசியலில் இளையோருக்கு இடமளிக்கும் வகையில் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் ஆனால் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து தங்கியிருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவிருப்பதாகவும் மூன்று வாரங்களுக்கு முன்னர் சி. வி. விக்னேஸ்வரன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.samakalam.com/தமிழ்-மக்கள்-கூட்டணி-சார/ ’அநுர அரசுடன் சேர்ந்து பயணிக்கத் தயார்’ தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டால் அரசுடன் சேர்ந்து முன்செல்லத் தயாராக இருக்கின்றோம் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கில் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்தனர். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கின்றது என்பதை அநுரகுமார அரசு உண்மையில் ஏற்றுக்கொண்டால் அரசுடன் சேர்ந்து முன்செல்லத் தயாராக இருக்கின்றோம். தமிழரசுக் கட்சி முன்னர் இருந்த பலரும் தற்போது அந்தக் கட்சிக்குள் இப்போது நடைபெறும் சம்பவங்கள் காரணமாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மனவருத்தத்தில் உள்ளனர். இதனால் ஒரு சிலர் வெவ்வேறு கட்சிகளுடன் இணைந்துள்ளனர். தேசிய மக்கள் சக்தியினர் அதிகளவான இளைஞர்களை உள்ளீர்த்தமை போன்று நாமும் இளைஞர்களை உள்ளீர்த்துப் பலமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம். இந்தத் தேர்தலில் மற்றக் கட்சிகளை நாங்கள் விமர்சனம் செய்யாமல் நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என்பதையே கூறி எமது பிரசாரங்களை முன்னெடுப்போம் என்றார். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/அநுர-அரசுடன்-சேர்ந்து-பயணிக்கத்-தயார்/175-345193
-
அமெரிக்க அதிபர் தேர்தலும், உலக அரசியல் சூழலும்: தமிழர்கள் அறிய வேண்டியவை என்ன?
அமெரிக்க அதிபர் தேர்தலும், உலக அரசியல் சூழலும்: தமிழர்கள் அறிய வேண்டியவை என்ன? Oct 07, 2024 07:00AM IST ஷேர் செய்ய : ராஜன் குறை உலகின் எந்தப் பகுதியுமே இன்று தனித்தீவு அல்ல. மிக நெருக்கமாகப் பின்னப்பட்ட பொருளாதார வலைப்பின்னல் அனைத்து சமூகங்களையும் பிணைத்துள்ளது. நீங்கள் கேட்கலாம். இது புதியதல்லவே, உலகில் தூர தேசங்களிடையே வர்த்தகம் என்பது பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ளதே என்று. உதாரணமாக, தமிழ்நாட்டில் ரோமப் பேரரசின் நாணயங்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், இத்தகைய வர்த்தகப் பரிமாற்றங்கள் உள்நாட்டு பொருளாதாரத்தை, உள்ளூர் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பவையாக இருக்கவில்லை. ஏனெனில் பண்டங்கள் அனைத்தையும் தொலைதூரங்களுக்கு துரிதமாகக் கொண்டு செல்லும் வாய்ப்பு இல்லாததால், பெரும்பாலும் நுகர்வு என்பது உள்ளூர் உற்பத்தியை சார்ந்தே இருக்கும். இன்றைக்கு உணவுப் பொருட்கள், காய்கறிகள் என அனைத்துமே பிரம்மாண்டமான போக்குவரத்து வலைப்பின்னலில் பிணைக்கப்பட்டுள்ளன. அதனால் பெட்ரோல் போன்ற எரிபொருட்களின் விலை அதிகரித்தால் உள்ளூர் சந்தையில் காய்கறிகள் விலை அதிகரிக்கும் சூழல் உள்ளது. முதலீடு, உற்பத்தி, தொழிலாளர்கள், பண்டங்கள், நுகர்வு எல்லாமே எல்லைகள் கடந்து இடம்பெயரும், பரவும் தன்மையுடன் உள்ளன. அத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டியது என்னவென்றால், மக்களாட்சி அரசியல் என்ற தத்துவமும் உலகளாவிய ஒரு சிந்தனைப்போக்காக மலர்ந்தது என்பதைத்தான். ஒவ்வொரு பண்பாட்டிலும் அதற்கான வேர்கள், விழுமியங்கள் பலவிதமாக உருவாகியிருக்கலாம். ஆனால், அவையனைத்தும் ஒன்றோடொன்று இணைந்து உலக அளவிலான மானுடவாத நோக்காக, மக்களாட்சி தத்துவமாக மலர்ந்தது. தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தன்னை இந்த உலகளாவிய மறுமலர்ச்சியின் பகுதியாகத்தான் கருதியது. பல்வேறு உலக சிந்தனையாளர்களையும், பல்வேறு நாட்டின் அரசியல் இயக்கங்களையும் குறித்து திராவிட இயக்க ஏடுகள் தொடர்ந்து எழுதி வந்தன. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, ஐரோப்பிய நாடுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் தங்கள் ஆட்சியை நிறுவியதுதான். அதனால் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டி என்பது 1914-ம் ஆண்டு உலகப் போராக மாறியது. அதனால்தான் தமிழ்நாட்டுக்கு எந்த நேரடித் தொடர்பும் இல்லாத ஜெர்மனியின் எம்டன் கப்பல் 1914-ம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் குண்டுகளை வீசியது. இதனால் எம்டன் என்ற சொல் தமிழ் மொழியில் வெகுஜன வழக்கில் ஆபத்தான திறமையும், ஆதிக்க உணர்வும் கொண்டவர்களை குறிக்க பயன்படுத்தப்பட்டது. முதல் உலகப்போரின் விளைவாக செய்தித்தாள் வாசிப்பும், பத்திரிகைகள் வாசிப்பும் தமிழ்நாட்டில் அதிகரித்தது. முதல் உலகப் போர் முடிந்து இருபது ஆண்டுகள் கழித்து இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. இதனால் உலக அரசியல் என்பது குறித்த அக்கறை தமிழ்நாட்டில் தவிர்க்கவியலாமல் பரவியது. பல்வேறு நாடுகளிலும் காலனி ஆதிக்கத்தை எதிர்த்தும், பழைய மன்னராட்சி போன்றவற்றை எதிர்த்தும் உருவான மக்கள் கிளர்ச்சிகள், போராட்டங்கள் ஆகியவை தமிழ்நாட்டிலும் அரசியல் தன்னுணர்வை வளர்க்கப் பயன்பட்டன. துருக்கியின் கமால் பாட்ஷா, வியட்நாமின் ஹோசிமின் உள்ளிட்ட பல தலைவர்களைக் குறித்து திராவிட இயக்க ஏடுகள் எழுதி வந்தன. இருப்பினும் கடந்த சில பத்தாண்டுகளில் உலக அரசியலில் தமிழ் ஊடகங்கள் போதுமான ஆர்வம் காட்டுவதில்லை. உள்ளூர் அரசியல் செயல்பாடுகளில் கவனத்தைக் குவிப்பதால் நம்மை வெகுவாக பாதிக்கக்கூடிய உலகச் செய்திகளைக்கூட மிகக் குறைவாகவே ஊடகங்கள், குறிப்பாக தமிழ் தொலைக்காட்சி ஊடகம் விவாதிக்கிறது. உண்மையில் உலகம் இன்று மிக விநோதமான ஒரு முரண்பாட்டில் சிக்கியுள்ளது. மிகப்பெரிய பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள், Multi National Corporation (MNC) என்பவை உலகளாவிய உற்பத்தி, வர்த்தகத்தை நிர்வகிக்கின்றன. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் நிறுவப்பட்ட உலக வங்கி (World Bank), சர்வதேச நிதிக் குவியம் (International Monetary Fund) ஆகியவை உலக நாடுகள் அனைத்திற்கும் கடன் வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தை நிர்வகித்து வருகின்றன. அதேசமயம், உலகெங்கும் பல தேசங்களிலும் தீவிர வலதுசாரி தேசியம் இன வெறுப்பு அரசியலையும், குறுகிய தேசிய பார்வையையும் கொண்டு வளர்ந்து வருகிறது. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இரு துருவ உலக அரசியலின் குறியீடாக விளங்கிய பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும் இணைந்தபோது, ஒரு துருவ உலகம் உருவாகிவிட்டதாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து சோவியத் ரஷ்யாவின் கம்யூனிச அரசு வீழ்ந்ததும், ரஷ்யா பல நாடுகளாக சிதறியதும் ஒரு துருவ உலக அமைப்பு (Unipolar World) நிலைபெற்றதாகக் கருத இடமளித்தது. உலக அளவில் மிகப்பெரிய ராணுவ பலத்தைக் கொண்ட அமெரிக்கா, பொருளாதார ஆற்றல் மிக்க நாடாகவும் இருந்ததால் ஒரு துருவ உலகின் மேற்பார்வையாளனாக, போலீஸாக இருக்கும் என்றும் கருதப்பட்டது. இன்றைக்கு அதில்தான் மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது. மீண்டும் இரு துருவ உலகம் எண்பதுகளில் சீனா, அமெரிக்க முதலீட்டை அனுமதித்ததால், அமெரிக்காவுடன் பிரம்மாண்டமான வர்த்தகப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதால் அது ஒரு துருவ உலக அமைப்புக்கு எதிரானதாகக் கருதப்படவில்லை. ஆனால், கடந்த முப்பதாண்டுகளில் அது அமெரிக்காவுக்கு இணையான ராணுவ, பொருளாதார வலிமை கொண்ட தேசமாக மாறியுள்ளது. ராணுவ பலம் இருந்தாலும், பொருளாதார வலுவில்லாத ரஷ்யாவுக்குப் பின்புலமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. வட கொரியா, ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய அணு ஆயுத சக்தி வாய்ந்த நாடுகள் தெளிவாக அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கு எதிராக இயங்கும் வல்லமையுடன் கூட்டணி சேர்ந்து உள்ளன. எந்த நாடு அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினாலும் அது பெரும் சேதத்தை விளைவிப்பதுடன், உலகப் போருக்கே வித்திடலாம் என்பதால் அணு ஆயுத நாடுகளைப் பிற நாடுகள் நேரடியாகத் தாக்குவது தவிர்க்கப்படுகிறது. அணு ஆயுத ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தபோது மேற்கத்திய நாடுகள் அனைத்தும் உக்ரைனுக்கு ராணுவ, பொருளாதார உதவிகள்தான் செய்கின்றனவே தவிர, எந்த நாடும் ரஷ்யாவைத் தாக்க முன்வரவில்லை. காரணம், அப்படித் தாக்கினால் ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தத் தயங்க மாட்டார் என்பதுதான். அதனால் உக்ரைன் போர் மூன்றாவது ஆண்டாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. அவ்வப்போது தாக்குதல்கள் கடுமையாகி உக்ரைனில் கடும் சேதங்கள் விளைகின்றன. உக்ரைனும் ரஷ்யாவின் மீது சில தாக்குதல்களை நிகழ்த்துகிறது என்றாலும், ரஷ்யா பன்மடங்கு வலுவானது என்பதால் உக்ரைன் அதை வெல்வது சாத்தியமில்லை. ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து அதைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் அமெரிக்காவால் வெற்றி பெற முடியவில்லை. இந்தியா உட்பட பல நாடுகளும் வர்த்தக ஆதாயம் கருதி ரஷ்யாவுடன் தொடர்ந்து பொருளாதார உறவுகளைப் பேணி வருகின்றன. இந்தியாவும், பிரதமர் மோடியும் போர் நிறுத்தத்திற்கு முயற்சி செய்வதாகச் சொன்னாலும், சந்தர்ப்பவாத நிலைபாடுகளையே மேற்கொள்வதாகத் தெரிகிறது. சீனா வெளிப்படையாகவே ரஷ்யாவை ஆதரித்து அதற்கான பின்புலமாக விளங்கி வருகிறது. உக்ரைனுக்கு அடுத்த முக்கிய போர்ச்சூழலாக இஸ்ரேல் – லெபனான் – ஈரான் போர் மூளத் தொடங்கியுள்ளது. வெகுகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பாலஸ்தீனியப் பிரச்சினையில், காஸாவின் மீதான தன் ஒடுக்குமுறையை இஸ்ரேல் தளர்த்தாததால், காஸாவில் ஆட்சியிலிருந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தீவிரவாதத் தாக்குதலைத் தொடுத்து, பலரை கடத்திச் சென்றது. ஹமாஸுக்கு பாடம் புகட்டுவதாக இஸ்ரேல் காஸாவின் மீது கொடூரத் தாக்குதலை நிகழ்த்தி, அப்பாவி மக்களை இரக்கமின்றி கொன்று குவிக்கத் தொடங்கியது. இந்தப் போர் துவங்கி ஓராண்டுக் காலம் ஆகியும் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. நாற்பதாயிரம் அப்பாவி பாலஸ்தீனியர்களைக் கொன்றும், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. பிணையக் கைதிகளையும் மீட்க முடியவில்லை. இதற்கிடையில் ஹமாஸுக்கு ஆதரவாகத் தெற்கு லெபனானிலிருந்து ஹிஸ்புல்லா என்ற தீவிரவாத அமைப்பு இஸ்ரேலை தாக்க, இஸ்ரேல் அங்கும் கடும் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டது. ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர் கருவிகளில் குண்டு வைத்து விநியோகம் செய்து அவற்றை வெடிக்கச் செய்த இஸ்ரேல் பல அப்பாவி மக்களும் அந்த விபரீத பேஜர் வெடிப்புகளில் இறக்கக் காரணமாகியது. ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேல் தாக்குதல்கள் லெபனான் மீதான தாக்குதல்களாக மாற, ஹிஸ்புல்லா/லெபனானுக்கு ஆதரவாக ஈரான் இஸ்ரேலைத் தாக்கியுள்ளது. பதிலடியாக இஸ்ரேலும் ஈரானைத் தாக்கப் போவதாகக் கூறியுள்ளது. ஈரானுக்கு ஆதரவாக சீனா குரல் எழுப்பியுள்ளது. லெபனானுக்கு ஆதரவாக ரஷ்யாவும், ஃபிரான்ஸும் குரல் கொடுத்துள்ளன. எந்த நேரத்திலும் மிகப்பெரிய போர் ஒன்று இஸ்ரேல் – அரேபியப் பகுதிகளில் வெடிக்க வாய்ப்புள்ளது. இத்தகைய பதற்றமான சூழ்நிலையில்தான் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் அலங்கோலங்கள் மன்னரேயில்லாத நவீன மக்களாட்சிக் குடியரசாக இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உருவான அமெரிக்காவின் மக்களாட்சி இன்று அலங்கோலமாகக் காட்சியளிக்கிறது. காரணம், ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப். இவர் கடுமையான இனவெறி வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதுடன், சர்வதேச அரசியலிலும் வாய்க்கு வந்தபடி பேசி அதிர்ச்சியளிப்பவராக இருக்கிறார். டொனால்ட் டிரம்ப் ரியல் எஸ்டேட் அதிபரான தந்தைக்குப் பிறந்தவர். தந்தையும், தனயனும் பல சர்ச்சைக்குரிய பணப்பரிமாற்றங்களில், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். பின்னர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராகப் புகழ்பெற்றார். அவர் அரசியலில் புகுந்து ரிபப்ளிகன் கட்சியின் வேட்பாளராக 2016-ம் ஆண்டு களம் இறங்கினார். அப்போதே அவர்மீது பாலியல் ரீதியான புகார்கள், பெண்களை இழிவாகப் பேசிய புகார்கள் எழுந்தன. ஆனால் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் வரும் அகதிகளுக்கு எதிராக கடும் இனவெறுப்பு அரசியல் பேசியும், தீவிர வலதுசாரி அரசியல் பேசியும் கவனம் ஈர்த்தார். அமெரிக்கத் தேர்தல் முறை வித்தியாசமானது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேர்தல் சபை பிரதிநிதிகள் உண்டு. அமெரிக்க அதிபராகப் போட்டியிடும் வேட்பாளருக்கு அனைத்து மக்களும் நேரடியாக வாக்களித்தாலும், மாநில வாரியாக யார் அதிக வாக்குகள் பெறுகிறாரோ அவருக்கு அந்த மாநிலத்தின் தேர்தல் சபை வாக்குகள் அனைத்தும் கிடைத்துவிடும். இந்த முறையில் டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்ட டெமாக்ரடிக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனைவிட டிரம்ப் தேசிய அளவில் குறைவான வெகுஜன வாக்குகள் பெற்றாலும், அதிக தேர்தல் சபை வாக்குகளைப் பெற்று அதிபராகப் பதவி ஏற்றார். இவர் பதவிக் காலத்திலும் சர்ச்சைகளுக்குக் குறைவில்லை; கொரோனா வைரஸ் குறித்து இவர் பேசியதெல்லாம் இன்னொரு வேடிக்கை. அதையெல்லாம் தூக்கியடித்தது என்னவென்றால் 2020 தேர்தலில் இவர் டெமாக்ரடிக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தெளிவாகத் தோற்றபோதும் இவர் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்ததுதான். இவருடைய ஆதரவாளர்களை ஏவிவிட்டு அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தையே தாக்க வைத்தார். தேர்தல் முடிவுகளுக்கு எதிராக இவர் தொடுத்த வழக்குகள் எல்லாம் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும், இவரும், இவர் ஆதரவாளர்களும் இன்றுவரை தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார்கள் என்பதுதான் விபரீதமானது. இப்போது நடைபெறும் தேர்தலில் இவருக்கு எதிராக டெமாக்ரடிக் கட்சியில், துணை குடியரசுத் தலைவராக உள்ள, கருப்பின மற்றும் இந்திய-தமிழ் வம்சாவழியினரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அமெரிக்காவின் இருநூற்றைம்பது கால மக்களாட்சி வரலாற்றில் இதுவரை ஒரு பெண் அதிபராக பதவி வகித்ததில்லை என்பது வெட்கக் கேடானது. இதைக் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக் கூரை என்று அமெரிக்கப் பெண்கள் அமைப்புகள் வர்ணிக்கின்றன. அந்த கண்ணாடிக் கூரையான ஆணாதிக்க மனப்பான்மையின் துணையுடன்தான் ஹிலாரி கிளிண்டன் என்ற பெண்ணை தோற்கடித்து டிரம்ப் ஆட்சிக்கு வந்தார். உலக அரசியலின் பிரச்சினைகளுக்குப் பின்னணியில் அமெரிக்க உலக மேலாதிக்க முயற்சிகளின் வரலாறு இடம்பெற்றுள்ளது. அதனால் திடீரென அமெரிக்கா அந்தப் பிரச்சினைகளிலிருந்து விலக முடியாது. ஆனால், தீவிர வலதுசாரி தேசியம் பேசும் டிரம்ப் தேசிய சுயநலத்தை வெகுஜன கவர்ச்சி அரசியலாகப் பேசுகிறார். உலக செல்வந்தர் பட்டியலில் முதலிடம் வகிக்கும் எலான் மஸ்க் டிரம்ப்பை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். உக்ரைன் X ரஷ்யப் போர், இஸ்ரேல் X காஸா – லெபனான் – ஈரான் போர் ஆகியவற்றின் பின்னணியில் அமெரிக்காவின் தொடர் செயல்பாடுகள் உள்ளன. ஒரு காலத்தில் ரஷ்யாவின் அங்கமாக இருந்த உக்ரைனை அதன் செல்வாக்கிலிருந்து பிரித்து நேட்டோ அமைப்பில் சேர்த்து தங்கள் வசம் கொண்டுவர அமெரிக்கா செய்த முயற்சிகளின் விளைவாகத்தான் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது என்பதே வல்லுநர்கள் பலரின் கருத்து. அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டுமானால் அது அமெரிக்காவின் பங்கின்றி நடக்காது. டிரம்ப் உக்ரைனை கைவிட நினைக்கிறார். அது மேலும் சமன் குலைவையே ஏற்படுத்தும். அதைவிட இஸ்ரேலுக்கு டிரம்ப் இரு தினங்களுக்கு முன் சொன்ன ஆலோசனைதான் கடும் அதிர்ச்சியளிப்பது. ஈரானின் அணு ஆயுத நிலையங்களைத் தாக்கி அழித்துவிட வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அறிவுறுத்தியுள்ளார் டிரம்ப். அவர் சமநிலையுடன் (Mental balance) சிந்தித்துச் செயல்படுவதில்லை என்று அவருடன் பணியாற்றிய சிலர் கூறியுள்ளார்கள். அந்தக் கூற்றை நம்பாமல் இருக்க முடியவில்லை. இஸ்ரேல் அப்படி ஈரானின் அணு ஆயுத ஆற்றலைத் தாக்கினால் ஈரான் என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா? அல்லது ஈரானுக்கு பின்னால் நிற்கும் சீனாதான் வாளாவிருக்குமா? உலக அரசியல் முரண்பாடுகள் மிகுந்த சிக்கலடைந்து கொண்டுள்ளது தெளிவாக உள்ளது. அந்த சிக்கலுடன் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகும் சிக்கலையும் உலகம் தாங்குமா என்று தெரியவில்லை. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்கும் மக்களுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன உலக அரசியல் தெரியுமோ அந்த அளவுக்குக்கூட தெரியுமா என்பது ஐயமே. இதுதான் இன்றைய உலகின் நிலை. பெரும்பாலான நாடுகளில் மக்கள் அன்றாட பிரச்சினைகளில் மூழ்கியுள்ளார்கள் அல்லது அதிலிருந்து விடுபட கேளிக்கைகளை நாடுகிறார்கள். முதலீட்டிய சக்திகளும், தேசிய அரசுகளும் சிக்கலான அதிகாரப் போட்டியில் பெரும் ராணுவங்களுடன், அணு ஆயுதங்களுடன் ஈடுபட்டுள்ளன. முற்போக்கு சிந்தனையாளர்கள் இடையில் கிடந்து அல்லாடுகிறார்கள். கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி https://minnambalam.com/political-news/us-presidential-election-and-global-political-environment-what-tamils-need-to-know-by-rajan-kurai-article-in-tamil/
-
ரத்தன் டாடா காலமானார்: இந்தியத் தொழில்துறையின் முகமாகத் திகழ்ந்தவர்
ரத்தன் டாடா ஏன் திருமணம் செய்யவில்லை? பின்னணியில் அத்தனை சோகம்! Kumaresan MOct 10, 2024 11:16AM நாட்டின் மிகப் பெரிய தொழில்நிறுவனம் டாடா. இந்த நிறுவனத்தைப் பல ஆண்டுகளாகக் கட்டி ஆண்டவர் ரத்தன் நெவல் டாடா. இவர் தலைவராக இருந்த காலத்தில்தான் டாடா நிறுவனம் பல ஏற்றங்களைக் கண்டது. தற்போது இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. 1937-ம் ஆண்டு பிறந்த ரத்தன் டாடாவின் இளமைக் காலம் சோகம் நிறைந்தது. 1940-ம் ஆண்டு ரத்தனின் தந்தை நெவல் ஹோம் சூஜி, தாயார் சூனாவை விவாகரத்து செய்தார். இதனால் ரத்தன் பாட்டியிடம் வளர வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, ரத்தன் டாடாவுக்கு 10 வயதுதான் ஆகியிருந்தது. நியூயார்க்கில் கார்னெல் பல்கலையில் இன்ஜினீயரிங் படித்து விட்டு. ஹார்வர்டில் பிசினஸ் படிப்பு படித்தார். ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழிற்சாலையில் 1971-ம் ஆண்டு வரை பணி புரிந்தார். பின்னர், 1991-ம் ஆண்டு டாடா குழுமத் தலைவரானார். தொலைநோக்குப் பார்வை கொண்ட இவரின் தலைமையின் கீழ் டாடா நிறுவனம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது. டாடா குழுமத்தின் ஒரு அங்கமான டி.சி.எஸ் நிறுவனம் உலகின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றாக உயர்ந்தது. இதன் தலைவராக இருந்த என். சந்திரசேகரன்தான் தற்போது டாடா சன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரசேகரனின் திறமையை அடையாளம் கண்டு கொண்ட ரத்தன் டாடா தன் குழுமத்தையை அவர் கையில் ஒப்படைத்தார். என். சந்திரசேகரனின் சொந்த ஊர் நாமக்கல் என்பது குறிப்பிடத்தக்கது. ரத்தன் டாடா தலைவராக இருந்த காலக்கட்டத்தில் பிரிட்டனின் புகழ்பெற்ற ஜாக்குவார், லேண்ட் ரோவர், கோரஸ், டெட்லி போன்ற நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது. 1998-ம் ஆண்டு அறிமுகமான டாடா இண்டிகா இந்திய சாலைகளில் கோலோச்சியது. இது டாடாவின் கனவு கார்களில் ஒன்று. ‘மக்களின் கார்’ என்று சொல்லப்பட்ட ‘நானோ’ இவரின் பிரைன்சைல்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது. நானோ கார் தொழிற்சாலை மூடப்பட்டாலும் , ஒவ்வொரு இந்தியரும் காரில் பயணிக்க வேண்டுமென்ற டாடாவின் ஆசை ஓரளவுக்கு இதனால் நிறைவேறியது. இப்படி… பிசினஸில் கொடிகட்டிப் பறந்த ரத்தன் நெவல் டாடாவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சியான ஒன்றாக அமையவில்லை. காதலித்த 4 பெண்களையுமே வெவ்வேறு காரணங்களால் அவரால் கரம் பிடிக்க முடியாமல் போனது. இந்தியா- சீனா போரும் ரத்தன் திருமணம் நடக்காததற்கு ஒரு காரணமாக இருந்துள்ளது. அமெரிக்காவில் படித்த ரத்தன் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவரை விரும்பியுள்ளார். 1962-ஆம் ஆண்டு ‘அவரை வளர்த்த பாட்டியின் உடல் நிலை மோசமானதால் ரத்தன் இந்தியா திரும்பினார். தொடர்ந்து அந்தப் பெண்ணையும் இந்தியாவுக்கு வருமாறு ரத்தன் அழைத்தார். இந்தச் சமயத்தில் இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. அமெரிக்க ஊடகங்கள் பெரும் போராகச் சித்திரித்து செய்திகள் வெளியிட்டு வந்தன. இதனால், பயந்துபோன அமெரிக்கப் பெண், ரத்தனை திருமணம் செய்ய மறுத்துள்ளார். ரத்தன் முதல் காதல் இப்படித்தான் தோல்வியில் முடிந்தது. `திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? ‘ என்ற கேள்விக்கு, நான்கு முறை திருமணம் கைகூடியதாகவும், ஏதோ ஒரு காரணமாக திருமணம் தடைப்பட்டதாகவும், நான்கு முறை காதலில் விழுந்ததாகவும் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரத்தன் டாடா குறிப்பிட்டிருந்தார். ரத்தன் டாடா காதலித்த பெண்களில் பிரபல இந்தி நடிகை சிமி கோர்வெலும் ஒருவர். ஆனாலும் பல்வேறு காரணங்களால் சிமி கோர்வலும் ரத்தன் டாடாவும் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு சிம் கோர்வல் ஊடகம் ஒன்றுக்கு ரத்தன் டாடா பற்றி பேட்டியளித்துள்ளார். அதில், ரத்தன் டாடா ஜென்டில்மேன் என்றும் பணத்தை மட்டுமே குறியாக கொண்டு ஒரு போதும் அவர் இயங்கியதில்லை என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது, ரத்தன் டாடா மறைவையடுத்து சிமி கோர்வெல் தன் எக்ஸ் பக்கத்தில் ரத்தன் டாடாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், ”எல்லோரும் நீங்கள் மறைந்து விட்டதாக கூறுகிறார்கள். உங்கள் இழப்பை தாங்கிக் கொள்வது மிகவும் கடினமான விஷயம் ஆகும். சென்றுவாருங்கள் என் நண்பரே” என்று சிமி கோர்வெல் உருக்கத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். https://minnambalam.com/india-news/why-ratan-tata-didnt-marry/
-
யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழரசின் வேட்பாளர்கள்
யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழரசின் வேட்பாளர்கள் adminOctober 10, 2024 நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் , யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் வீட்டு சின்னத்தில் போட்டியிட தமிழரசு கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் கையெழுத்திட்டனர். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சி . சிறிதரன் , எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருடன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச. சுகிர்தன் , கேசவன் சயந்தன் , இமானுவேல் ஆர்னோல்ட் , மற்றும் தி.பிரகாஷ் , ச. இளங்கோ , ச. சுரேக்கா , சி. கிருஷ்ணவேணி ஆகியோர் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர். https://globaltamilnews.net/2024/207317/
-
தமிழரசு கட்சியினா் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி
தமிழரசு கட்சியினா் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி adminOctober 10, 2024 இலங்கை தமிழரசு கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை கையளித்துள்ளனர். வேட்புமனுவை கையளிப்பதற்கு முன்பதாக யாழில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், தந்தை செல்வாக்கு அஞ்சலி செலுத்தினார்கள். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்ககளை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சி . சிறிதரன் , எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருடன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச. சுகிர்தன் , கேசவன் சயந்தன் , இமானுவேல் ஆர்னோல்ட் , மற்றும் தி.பிரகாஷ் , ச. இளங்கோ , ச. சுரேக்கா , சி. கிருஷ்ணவேணி ஆகியோர் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர். https://globaltamilnews.net/2024/207324/
-
விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
விமலின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை adminOctober 10, 2024 முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு அரசியல் இயக்கம் என்ற வகையில், மக்கள் விடுதலை முன்னணியின் வரலாற்றுப் பாரம்பரியத்தை மதிக்கும் மற்றும் உரிமையுள்ள ஒரு இயக்கம் என்ற வகையில், ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் ஆணையைப் பாதுகாப்பதற்கும் அந்த ஆணையை வழங்கிய மக்களின், எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவாக நிற்பதற்கும் தாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என வீரவன்ச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதை உறுதிசெய்வதை இலக்காகக் கொண்டு, பெரும்பான்மையை அடையாத பட்சத்தில் முடிவுகளைப் பாதிக்கக்கூடிய ஏனைய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் தங்கியிருக்காமல் ஆட்சியமைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா். கட்சியின் அனைத்து மட்டத்தினருடனும் கலந்தாலோசித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த வீரவன்ச, எதிர்வரும் பொதுத் தேர்தல்கள் தொடர்பான கொள்கைப் பிரகடனத்தை அடுத்த சில நாட்களில் கட்சி வெளியிடும் எனவும் தொிவித்துள்ளாா். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இரண்டாம் கோட்டாபய ஆக்குவதற்கான ஏகாதிபத்திய சதியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும், அவ்வாறான முயற்சிகளில் தேசிய சுதந்திர முன்னணியும் ஒரு கட்சியாக இருக்காது எனவும் வீரவன்ச குறிப்பிட்டுள்ளாா். https://globaltamilnews.net/2024/207329/
-
இந்திய ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதினை பெற்றுக் கொண்டார் லைக்கா புரடக்ஸனின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன்
லைக்காவின் ஒருவன் தளச் செய்தி..
-
புலிகளை ஒதுக்கிய நரிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்
புலிகளை ஒதுக்கிய நரிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் Vhg அக்டோபர் 09, 2024 புலிகளை ஒதுக்கிய நரிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என முன்னாள் போராளி கந்தசாமி இன்பராஜா தெரிவித்துள்ளார். வவுனியா வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை கந்தசாமி இன்பராஜா தலைமையிலான சுயேட்சைக்குழு இன்றையதினம் (09-10-2024) தாக்கல் செய்தது. எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக புணர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி சுயேட்சை குழுவில் போட்டியிடுகின்றது. நாடாளுமன்ற தேர்தல் இதனையடுத்து, வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று (09-10-2024) வேட்புமனுவினை தாக்கல் செய்தது. இதன்போது வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்த நிலையில், கந்தசாமி இன்பராஜாவும் கலந்துகொண்டு தமது கருத்தை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் போராளிகள், மாற்றத்தினை கொண்டு வருவதற்காக களம் இறங்கியுள்ளோம். இன்று மக்களும் போராளிகளும் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர் அத்தோடு தங்களுக்குள் முரன்பட்டு சண்டையிட்டுக்கொண்ட அரசியல்வாதிகள், தேர்தலுக்காக புத்தில் இருந்து ஈசல் வருவது போல வருகின்றனர். அத்துடன் இளையவர்களுக்கும் புலிகளுக்கும் வாய்ப்பை கொடுக்காமல் நரிகள் எல்லாம் வெளியே வருகின்றனர் ஆனால் நரிகளுக்கு பாடம்புகட்ட மக்கள் தயாராக உள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார். https://www.battinatham.com/2024/10/blog-post_54.html
-
அநுரவின் பதவியில் முதல் 10 நாள் செயற்பாடுகள்: தொடரும் மாற்றங்கள்
அநுரவின் பதவியில் முதல் 10 நாள் செயற்பாடுகள்: தொடரும் மாற்றங்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் முதல் 10 நாள் செயற்பாடுகள்: 01.டொலரின் பெறுமதி 300 ரூபாய்க்கு கீழே காணப்படுகிறது. 02.பங்குச் சந்தை வீழ்ச்சியடையாமல் வரலாற்றில் மிக விரைவான வளர்ச்சியைக் காட்டுகிறது. 03.வரலாற்றில் மிக அமைதியான தேர்தல் நடைபெற்றது. 04. சர்வதேச அளவில் நாடு ஓரங்கட்டப்படாமல் அனைத்து பலம் பொருந்திய நாடுகளின் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றமை. 05. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்தமை. 06. ஆடம்பரமற்ற முறையில் சத்தியப் பிரமான நிகழ்வை நடாத்தி, பல இலட்சங்கள் சேமிக்கப்பட்டமை. 07. பேராசிரியர் பட்டம் பெற்ற பெண்ணை பிரதமராக நியமித்ததன் மூலம் பெண்கள் அரசியல் மேலும் ஊக்குவிக்கப்பட்டது. 08. ஜனாதிபதி மற்றும் பிரதமர் பாதுகாப்புப் படைகளில் மேலதிகமாக இருந்த பாதுகாப்பு அதிகாரிகளையும் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு என அளிக்கபட்டிருந்த அவசியமற்ற பாதுகாப்பு அதிகாரிகளையும் நீக்கி சாதாரண கடமைகளில் ஈடுபடுத்தியமை. 09. அனைத்து அரச வாகனங்களையும் மீள பெற்றுக் கொண்டமை. 10. காணாமல் போன அரச வாகனங்கள் குறித்து ஆய்வு நடாத்தி விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளமை. 11. முட்டை வர்த்தக ஏகபோகம் தடுக்கபட்டதன் மூலம் முட்டை விலை குறைந்தமை. 12. பிரதமரின் உத்தரவின் பேரில் பாடசாலைகள் அரசியல் மயமாவது தடுக்கப்பட்டமை. 13. அரசியல் தொடர்புகள் இல்லாத, சம்பந்தப்பட்ட துறையில் அனுபவமும் கல்வித் தகுதியும் கொண்ட அதிகாரிகளை அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களாகவும் நியமித்தமை. 14. ஹெக்டயார் ஒன்றுக்கு வழங்கப்படும் விவசாயிகளின் உதவித் தொகை அதிகரிக்கப்பட்டமை. 15. அரசாங்கத்தின் அனுசரணையில் இடைநிலை நிறுவனங்களின் தலையீடு இல்லாமல் இலங்கையில் விசா வழங்கும் செயல்முறையை மேற்கொண்டமை. 16. ஜனாதிபதி பதவியேற்று மிகக் குறைந்த காலத்தில் அதிகமான ஊழல்வாதிகள் மீது வழக்குத் தொடரப்படவுள்ளமை. 17. அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் பங்களாக்களை மிகக் குறுகிய காலத்திற்குள் உடனடியாக மீட்பதற்கான உத்தரவுகளை வழங்கப்பட்டுள்ளமை. 18. மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியம் வழங்கப்பட்டமை. 19. பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமித்தமை. 20. கோட்டை ஜனாதிபதி மாவத்தை மற்றும் பரோன் ஜயதிலக மாவத்தையை மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டமை. 21. ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் இந்நாட்டில் தற்போது வேலை பாதியில் நிறுத்தப்பட்டுள்ள 11 திட்டங்களின் கட்டுமானப் பணிகளை உடனடியாகத் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை . 22. கலால் வரி மோசடி செய்திருந்த பல நிறுவனங்களின் உரிமம் இரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டமை. 23. எரிபொருள் விலையை படிப்படியாக குறைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டமை. 24. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விற்பனை செய்யப்படாது என அறிவித்தமை. 25. வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் ஆலோசகர்கள் சம்பளம் அல்லது கொடுப்பனவுகள் எதுவுமின்றி கௌரவ சேவையாக பணியாற்ற முன்வந்துள்ளமை. 26. ஜனாதிபதியின் ஒரு பயணத்திற்கு அநாவசியமாக இரண்டு அல்லது மூன்று ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி முப்பது லட்சங்களுக்கு மேல் செலவழித்து இந்த நாட்டின் அபரிமிதமான விரயம் நிறுத்தப்பட்டமை. பல முற்போக்கான மாற்றங்கள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தகக்து. https://akkinikkunchu.com/?p=294489
-
இந்திய ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதினை பெற்றுக் கொண்டார் லைக்கா புரடக்ஸனின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன்
இந்திய ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதினை பெற்றுக் கொண்டார் லைக்கா புரடக்ஸனின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் இந்தியாவின் 70 ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில், சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதினை லைக்கா குழுமத்தின் நிறுவனரும், லைக்கா புரடக்ஸன் நிறுவனத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் இந்திய ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, கடந்த 2022 ஆண்டு இயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் இரு பாகங்களாக பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா புறடக்ஸன் தயாரித்திருந்தது. இதில் முதல் பாகம் 2022ஆம் ஆண்டும், இரண்டாம் பாகம் 2023ஆம் ஆண்டும் வெளிவந்தன. பொன்னியின் செல்வன் முதலாவது படத்திற்கு நான்கு தேசிய விருதுகள் கிடைதிருந்தன. சிறந்த தயாரிப்பாளர் - லைகா புரடக்ஸனின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் சிறந்த பின்னணி இசையமைபாளர் ஏ.ஆர்.ரகுமான் சிறந்த ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சிறந்த இசை வடிவமைப்புக்கான விருது ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி. ஆகியோருக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/sri-lanka/2024/10/08/இந்திய-ஜனாதிபதியிடம்-இருந்து-இந்திய-ஜனாதிபதியிடம்-தேசிய-விருதினை-பெற்றுக்-கொண்டார்
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் முன்மொழியப்பட்ட தீர்மான வரைவை இலங்கை நிராகரித்துள்ளது. 51/1 தீர்மானத்திற்கு நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் யுத்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் நகல்வடிவை நிராகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். எனினும், உள்நாட்டு நடைமுறைகள் மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய மனித உரிமைப் பொறிமுறைகளுடன் ஒத்துழைப்புடன் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களில் இலங்கை ஈடுபடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://oruvan.com/sri-lanka/2024/10/08/the-anura-government-rejected-the-un-human-rights-resolution-regarding-sri-lanka
-
இ.தொ.க உப தலைவர் பதவி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி விலகல்!
மனோவுடன் இணைந்தார் பாரத் அருள்சாமி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளராகவும், உப தலைவராகவும் செயற்பட்ட பாரத் அருள்சாமி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இயங்கும் ஜனநாயக மக்கள் முன்னணியில் இணைந்துள்ளார். பாரத் அருள்சாமி மனித வள அறக்கட்டளையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார், மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த எஸ். அருள்சாமியின் மகனும் ஆவார். ஜனநாயக மக்கள் முன்னணியில் இணைந்துள்ள பாரத் அருள்சாமி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கீழ் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைக் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக பாரத் அருள்சாம் நேற்றைய தினம் அறிவித்திருந்தார். கட்சியின் பொது செயலாளருக்கு பதவி விலகல் அனுப்பியிருந்தார். இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்குள் அண்மைய நாட்களாக உட்கட்சிபூசல்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான பின்னணியிலேயே பாரத் அருள்சாமியும் பதவி விலகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது https://oruvan.com/sri-lanka/2024/10/08/bharat-arulsamy-joined-mano-ganesans-party