Everything posted by கிருபன்
-
பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம்
பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம் சுமார் 25 வருடங்களுக்கு முன்னர், நமது தூர்தர்ஷனில் மகாபாரதம் ஒளிபரப்பானது. அப்போதுதான் தமிழ்நாட்டில் டெலிவிஷன் என்பது புழக்கத்தில் வந்த சமயம். தூர்தர்ஷனைத் தவிர வேறு சேனல்கள் இல்லை. எனவே பலருடைய வீடுகளில் அப்போது தூர்தர்ஷனை மட்டுமே விரும்பி பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறுதோறும் காலையில் 10 மணி அளவில் முக்கால் மணி நேரம் பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் ( அக்டோபர், 2, 1988 – 24 ஜூன் 1990) என்ற பிரம்மாண்டமான தொடர் ஹிந்தியில் ஒளிபரப்பானது. (தயாரிப்பு: பி.ஆர்.சோப்ரா டைரக்ஷன்: ரவி சோப்ரா) அந்த தொடர் ஒளிபரப்பாகும் சமயம் ஊரே அமைதியாக இருக்கும். சாலையில் அவ்வளவாக போக்குவரத்து குறிப்பாக இருசக்கர வாகனங்கள் கூட இருக்காது. அதன் தலைப்பு பாடலோடு கண்ணனின் சங்கு முழக்கமும் கேட்டால் மகாபாரதம் டீவியில் ஒளிபரப்பு தொடங்கி விட்டது என்று அர்த்தம். மகாபாரதம் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை என்பதால் அந்த தொடரை பார்த்தவர்கள் அனைவருமே ரசித்தனர். கதை தெரியாதவர்களுக்கு மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவி செய்தனர். கதையின் பிரமாண்டத்திலும் அதன் பிரமிக்கத்தக்க காட்சி அமைப்புகளிலும் மக்கள் மனதைப் பறி கொடுத்தனர். எனக்கு ஆங்கிலத்தில் வெளிவந்த பிரமாண்டமான பத்துக் கட்டளைகள் ( TEN COMMANTMENTS) மற்றும் பென்ஹர் (BENHAR) திரைப்பங்களை நினைவூட்டின. தொடரில் நடித்த நடிகர்களும் நடிகைகளும் மகாபாரத கதைப் பாத்திரங்களுக்கு உயிரூட்டினர். (படம் – மேலே) கதையின் தொடக்கத்தில் வரும் மன்னன் சந்தனு வேடத்தில் ரிஷப் சுக்லா (Rishabh Shukla) மற்றும் தனது முதல் ஏழு குழந்தைகளைக் கங்கையில் கொல்லும் கங்காதேவியாக நடித்த கிரோன் ஜுனேஜா (Kiron Juneja) (படம் – மேலே) சக்திமான் தொடரில் சக்திமானாக நடித்தவர் முகேஷ் கன்னா.( Mukesh Khanna ). அவர் இந்த தொடரில் பிதாமகர் பீஷ்மராக நடித்து இருந்தார். நல்ல உயரம். நல்ல குரல் (படம் – மேலே) பிறவிக் குருடனாகப் பிறந்த ஹஸ்தினாபுரத்து அரசன திருதிராஷ்டிரன் வேடத்தில் வந்து மனங் கவர்ந்தவர் கிரிஜா சங்கர் (GIRIJA SHANKAR) (படம் – மேலே) கிருஷ்ணர் வேடத்தில் நிதிஷ் பரத்வாஜ் என்.டி ராமராவ் என்றால் அவர் திரைப்படங்களில் ஏற்று நடித்த கிருஷ்ணர் வேடம்தான் எனக்கு நினைவுக்கு வரும். ஆந்திர ரசிகர்களும் அவரை கிருஷ்ணராகவே தரிசித்தனர். பி.ஆர். சோப்ராவின் மகாபாரதத்தில் நிதிஷ் பரத்வாஜ் (Nitish Bharadwaj) கிருஷ்ணனாக காட்சி அளித்தார். அவர் தனது கதாபாத்திரத்தை திறம்படவே செய்தார். (படம் – மேலே) கைகளில் தாயக் கட்டைகளை வைத்து உருட்டிக் கொண்டே இருப்பவர் சகுனிமாமா. அவர் மூன்று, ஐந்து என்று சொல்லி தாயக் கட்டைகளை வீசுவார். நினைத்தபடியே தாயக் கட்டைகள் விழும். அந்த அழுத்தமான சகுனி வேடத்தில் நடித்தவர் கூஃபி பெயிண்டால் (Gufi Paintal). ( கொசுறு செய்தி கேரளாவில், கொல்லம் மாவட்டத்தில் பவித்ரேஸ்வரம் என்னுமிடத்தில் சகுனிக்கு கோயில் உண்டு. தகவல் உபயம் - விக்கிபீடியா) (படம் - மேலே) பஞ்ச பாண்டவர்களோடு கிருஷ்ணர் மற்றும் திரௌபதி. (யுதிஷ்ட்ரன் வேடத்தில், கஜேந்த்ர சவுகான் (Gajendra Chouhan ), அர்ச்சுனன் வேடத்தில் அர்ச்சுன் (Arjun) , பீமன் வேடத்தில் ப்ரவீன் குமார் (Praveen Kumar ) , நகுலன் வேடத்தில் சமீர்(Sameer ), சகாதேவன் வேடத்தில் சஞ்சீவ் (Sanjeev) மற்றும் திரௌபதி வேடத்தில் ரூபா கங்கூலி (Roopa Ganguly) – ஆகியோர் நடித்தனர். .பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் தூர்தர்ஷனில் இந்தியில் தொடராக ஒளி பரப்பப்பட்ட போது, எங்கள் வீட்டில் எனது அப்பா அம்மா என்று எல்லோரும் தொடர்ந்து பார்த்தனர். என்னால் தொடர்ந்து பார்க்க இயலாவிட்டாலும், அவ்வப்போது பார்த்து இருக்கிறேன் இப்போது அதன் தமிழ் வடிவத்தை (94 EPISODES(அத்தியாயங்கள்) YOUTUBE – இல் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்துள்ளது. விக்ரம் கிருஷ்ணா (VIKRAM KRISHNAN) என்பவர் 94 அத்தியாயங்களையும் யூடியூப்பில் ஏற்றி வைத்துள்ளார். இதுவரை 25 அத்தியாயங்கள் (EPISODES) பார்த்து விட்டேன். தொடர்ந்து பார்க்க வேண்டும். தமிழ் வடிவத்தில் ஆரம்ப காட்சியாக ஒலிக்கும் பாடலின் வரிகள் இவை . (சங்கு ஒலிக்கிறது) மகாபாரதம் .... மகாபாரதம் .... மகாபாரதம் அ... ஆ... அ.. ஆ... இதுதான் மகாபாரதக் கதை இதுதான் மகாபாரதக் கதை ஆ ... ஆ .. மகாபாரதக் கதை மகாபாரதக் கதை ஒரு கதைக்குள் பல கதை பல கதைகளின் ஒரு விதை கடவுளே ஒரு மனிதனாய் வந்தவரித்த திருக்கதை! தர்மம் என்றும் வெல்லுமே ... என்றே உணர்த்தும் பெருங்கதை! தர்மம் என்றும் வெல்லுமே ... (சங்கு ஒலிக்கிறது) யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம் பரித்ராணாய சாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே சம்பவாமி யுகே யுகே …. சம்பவாமி யுகே யுகே (இதன் பொருள்: எப்பொழுதெல்லாம் தர்மத்துக்கு தலைகுனிவு ஏற்படுகிறதோ, எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் இந்த பூமியில் அவதரிக்கிறேன். சாதுக்களை இரட்சிப்பது, தர்ம வழியில் நில்லாத தீயவர்களை சித்திரவதமான முறையில் அழிப்பது, தர்மத்தை நிலை நிறுத்துவது ஆகிய இம்மூன்று பயன்களுக்காகவே இந்த பூமியில் நான் அவதரிக்கிறேன்.) பி.ஆர். சோப்ராவின் மகாபாரதத்தின் மேலே சொன்ன ஆரம்ப காட்சி (TITLE SONG) பாடலையும் மற்றும் 94 அத்தியாயங்களையும் (94 EPISODES ) தமிழில் கண்டும கேட்டும் ரசிக்க கீழே உள்ள வலைத்தளம் செல்லவும்.*****. https://youtube.com/@penbhaktitamil?feature=shared முதல் அத்தியாயம் முடிந்தவுடன் தொடர்ந்து அனைத்து 94 அத்தியாயங்களும் அவைகளாகவே ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்துவிடும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! http://tthamizhelango.blogspot.com/2014/08/blog-post.html
-
2024-ஆம் ஆண்டு நோபல் பரிசு: செய்திகள்
உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2024 அருணாசலம் ரமணன் அக்டோபர் 7, 2024 நம் உடலில் உள்ள ஒவ்வொரு ‘செல்’லிலும் ஒரே மாதிரியான மரபணு வழிமுறைகள் அல்லது டிஎன்ஏ உள்ளது. இந்த மரபணுக்களில் சில மட்டுமே ஒவ்வொரு ‘செல்’லிலும் வெளிப்படுத்தப்படுகின்றன, இது ‘செல்’லின் தனித்துவமான செயல்பாடுகளைச் செய்யும் புரதங்களின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. 2024ஆம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ப்ரோஸ் (இயற்கை அறிவியல் பேராசிரியர், Massachusetts medical school) மற்றும் கேரி ருவ்குன் (மரபியல் பேராசிரியர், Massachusetts General Hospital & Harvard medical school) ஆகியோருக்கு இந்த முக்கியமான ஒழுங்குமுறை செயல்முறையைச் செய்யும் மைக்ரோஆர்என்ஏ (miRNS அல்லது சிறிய எம்ஆர்என்ஏ துண்டு) என்ற மூலக்கூறைக் கண்டுபிடித்ததற்காகவும், டிரான்ஸ்கிரிப்ஷனலுக்குப் பிந்தைய மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கிற்காகவும் வழங்கப்பட்டுள்ளது. புரதங்களை உருவாக்குவதற்கான வழிமுறைகள் உயிரணுக்களின் கருவில் உள்ள டிஎன்ஏவில் சேமிக்கப்படுகின்றன. மெசஞ்சர் ஆர்என்ஏக்கள் (mRNA) இந்த வழிமுறைகளை கருவில் இருந்து கருவுக்கு வெளியே உள்ள புரதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்கின்றன. மைஆர்என்ஏக்கள் (மைக்ரோஆர்என்ஏக்கள்) குறுகிய குறியீட்டு அல்லாத ஆர்என்ஏக்கள் ஆகும், இவை மரபணு வெளிப்பாட்டிற்கு பிந்தைய டிரான்ஸ்கிரிப்ஷனலை கட்டுப்படுத்துகின்றன. ஒரு மைக்ரோஆர்என்ஏ பலவிதமான மரபணுக்களைக் கட்டுப்படுத்தும் மற்றும் ஒரு மரபணுவை பல மைக்ரோஆர்என்ஏக்களால் கட்டுப்படுத்த முடியும். மைக்ரோஆர்என்ஏக்களின் ஆரம்ப கால கண்டுபிடிப்பு (எண்பதுகளில்) மரபணு ஒழுங்குமுறையின் புதிய மற்றும் எதிர்பாராத பொறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இவர்களின் ஆரம்பகால ஆராய்ச்சிகள் சிறிய புழுவான C. elegans இல் நடத்தப்பட்டது. பிறகு மனிதர்கள் மற்றும் விலங்குகளின் மரபணுக்களில் இந்த வழிமுறை கண்டறியப்பட்டது. மைக்ரோஆர்என்ஏ வின் கண்டுபிடிப்பு மரபணு ஒழுங்குமுறையில் (gene regulation) ஒரு புதிய துறையை உருவாக்கி இருக்கிறது. டிஎன்ஏவில் உள்ள பல மரபணு வழிமுறைகளில் சில மட்டுமே உடலில் உள்ள பல்வேறு உயிரணுக்களில் செயல்படும் புரதங்களை எவ்வாறு விளைவிக்கிறது என்பதை விளக்குகிறது. கரு வளர்ச்சி, இயல்பான உடலியல் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் பற்றிய நமது புரிதலுக்கு இவை முக்கியம் என கருதப்படுகிறது. மேலும்: Scientific background 2024 – For the discovery of microRNA and its role in post-transcriptional (nobelprize.org) https://solvanam.com/2024/10/07/உடலியல்-அல்லது-மருத்துவத/
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! October 8, 2024 எனக்கு மதுபான சாலை இருப்பதாக தெரிவித்து வருகின்றார்கள். இது உண்மையென நிறுபிக்கப்படுமாகில் நான் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்திக் கொள்வேன் என முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் திங்கள் கிழமை (07) மன்னார் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடகச் சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில். அண்மை காலமாக ஜேவிபி அரசு ஆட்சிக்கு வந்த பின்பு ஊழல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தமாக பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன. நான் தேசியத்தை தொடர்ச்சியாக நேசிக்கின்ற வகையில் எங்கள் தமிழீழ இயக்கம் மக்களின் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள். இப்பொழுது பொதுவாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச் சாட்டில் முன்னைய ஜனாதிபதி ரணில் அவர்களால் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மதுபான சாலை வழங்கப்பட்டு வந்தன. இதில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மதுபான சாலை பேர்மிட் பெற்றுள்ளனர் என்ற சந்தேக கண்கள் கொண்டு பார்க்கும் நிலை இருந்து வருகின்றது. தமிழீழ இயக்கத்தில் இருக்கின்ற எமது நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் இந்த மதுபான சாலை பேர்மிட் எடுக்கவில்லை என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து நிற்கின்றேன். மக்களுக்கு அநீதி விளைவிக்கும் எந்த செயல்பாட்டிலும் எமது இயக்கம் செயல்படாது என்பதை தெரிவித்து நிற்கின்றேன். என்னை பொறுத்த மட்டில் அரசியல் வாழ்க்கையில் தேசியத்தோடு பயணிக்கின்ற செயல்பாடாகவே நான் இருந்து வருகின்றேன். மதுபான சாலை பேர்மிட் வழங்கும் வேளையில் நாங்கள் இதை பெறுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எந்த ஈனச் செயலிலும் நாங்கள் இறங்க மாட்டோம். எனக்கு வவுனியாவில் மதுபான சாலை இருப்பதாகச் சொல்லுகின்றார்கள். இது உண்மைக்கு மாறான விடயம். இது நிறுபிக்கப்படுமாகில் நான் தேர்தலில் போட்டியிடும் நிலையிலிருந்து விலகி விடுவேன். இந்த ஊழல் சம்பந்தமான விடயத்தில் எமது தமிழீழ இயக்கத்தின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசியத்தை நேசித்து செயல்பட்டவர்கள். ஆயுதம் ஏந்தி போராடியவாகள் என்ற வகையில் நாங்கள் ஈனச் செயல்களை செய்யவில்லை செய்ய மாட்டோம் என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்ளுகின்றேன். https://www.supeedsam.com/206574/
-
ரஷ்ய எண்ணெய் நிலையம் மீது உக்ரேன் தாக்குதல்!
ரஷ்ய எண்ணெய் நிலையம் மீது உக்ரேன் தாக்குதல்! இது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள எரிசக்தி வசதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் அண்மைய தாக்குதல் ஆகும். குடாநாட்டின் மிகப்பெரிய எண்ணெய் பதப்படுத்தும் வசதியான ஃபியோடோசியா முனையத்தின் மீது அந்நாட்டின் ஏவுகணைப் படைகள் ஒரே இரவில் தாக்குதல் நடத்தியதாக கிய்வில் உள்ள உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதுவும் ஏற்படவில்லை. தீயினால் ஃபியோடோசியாவிலிருந்து 300 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய அரசு நடத்தும் Tass செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மொகோவில் உள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், உக்ரேனால் ஆல் ஏவப்பட்ட 21 ஆளில்லா விமானங்களில் 12ஐ ஒரே இரவில் தீபகற்பத்தில் சுட்டு வீழ்த்தியதாக கூறியுள்ளது. https://akkinikkunchu.com/?p=294452
-
இஸ்ரேலினால் தடுக்க முடியாத ஈரானின் ஆயுதங்கள்-வேல்ஸில் இருந்து அருஸ்
இஸ்ரேலினால் தடுக்க முடியாத ஈரானின் ஆயுதங்கள்-வேல்ஸில் இருந்து அருஸ் October 7, 2024 கடந்த செவ்வாய்க்கிழமை(1) இரவு ஈரான் இஸ்ரேல் மீது கடும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்க புலனாய்வுத்துறையினாலும், இஸ்ரேலிய மொசாட்டினாலும் முன்கூட்டியே தாக்குதல் திட்டத்தை அறிய முடியாதவாறு ஏவுகணைகளை நகர்த்திய ஈரான் ஒரு அதிர்ச்சிகரமான தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் முக்கிய நகரமான ரெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல நகரங்களில் இருந்த படை நிலைகள் மீது ஏவுகணைகள் சரமாரியாக வீழ்ந்து வெடித்ததை காணொளிகள் மூலம் பார்க்கக்கூடியதாக இருந்தது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் முழுவதும் 1864 இடங்களில் அபாய ஒலிகள் எழுப்பப்பட்டதுடன், மக்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியதையும் காணக்கூடியதாக இருந்தது. தனது உண்மையான வாக்குறுதி- 2 படை நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளதாகவும், 90 விகிதமான ஏவுகணைகள் இலக்குகளை தாக்கி அழித்துள்ளதாகவும் ஈரான் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்துமாக இருந்தால் இதைவிட மோசமான தாக்குதலை இஸ்ரேல் எதிர்கொள்ள நேரிடும் என ஈரானின் அதிபர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ஈரானில் வைத்து கொல்லப்பட்ட ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவர் இஸ் மயில் ஹனியா, கடந்தவாரம் லெபனானில் கொல்லப்பட்ட ஹிஸ்பல்லாக்களின் தலைவர் சயீட் கசான் மற்றும் அவருடன் கொல்லப்பட்ட ஈரானின் ஜெனரல் ஆகியோருக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. தமது நாட்டை பாதுகாக்க தாம் தயாராக உள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. அதேசமயம் ரெல் அவிவ் பகுதியில் உள்ள இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பான மொசாட்டின் தலமையகத்தை ஏவுகணை தாக்கியதாக சி.என்.என் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் தாக்குதலில் நவாடிம் வான்படைத் தளம் உட்பட இரண்டு வான்படைத்தளங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், நவாட்டின் வான்படைத்தளம் அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை விமானங்களாக எப்-35விமானங்களில் தரிப்பிடம் எனவும் அதில் 20 விமானங்கள் முற்றாக அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு விமானத்தின் பெறுமதி 120 மில்லியன் டொலர் களாகும். மத்தியகிழக்கில் பைடன் அரசின் கொள்கையின் தோல்வியையே ஈரானின் பதிலடி காட்டுவதாக இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ரஸ்யாவின் வெளிவிவகார பேச்சாளர் மரியா சக்கரோவா தெரிவித்தள்ளார். அதேசமயம் இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிய பிரதமர் பென்சமின் நெத்தனியாகு பதுங்கு குழியை நோக்கி அவசரமாக ஓடும் காட்சிகளும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி யுள்ளன. இந்த தாக்குதல் என்பது இஸ்ரேலின் அயன் டோம் முற்றாக செயலிழந்துள்ளதையே காட்டு கின்றது அல்லது ஈரானிடம் நவீன தொழில்நுட்பம் உள்ளதை காட்டுவதாக பி.பி.சியின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஆனால் தாக்குதலுக்கு முன்னர் இஸ்ரேலின் அயன் டோமின் கணினிகளை ஈரான் சைபர் தாக்குதல் மூலம் செயலிழக்கச் செய்து விட்டதாக கூறப்படுகின்றது. தமக்கு இந்த தாக்குதல் தொடர்பில் முன்னர் தெரிந்திருக்கவில்லை என பென்ரகன் தெரிவித்தள்ளது. ஆனால் இறுதி நேரத்தில் தான் தாம் ரஸ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் தெரியப்படுத்தி யதாக ஈரான் தெரிவித்துள்ளதுடன், இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை அமெரிக்கா தாக்கினால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் அனைத்தும் தாக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது. பிரித்தானியா பிரதமர், ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இந்த தாக்குதலை கண்டித் துள்ளன. ஏப்பிரலில் இடம்பெற்ற தாக்குதலை விட இந்த தாக்குதல் இரண்டு மடங்கு பெரிதானது எனவும், ஈரான் 200 இற்கு மேற்பட்ட பலிஸ்ரிக் ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளதாகவும் அமெரிக்காவின் பென்ரகனின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பற்றிக் தெரிவித்துள்ளார். மத்திய தரைக்கடலில் நின்ற தமது டிஸ் ரோயர் கப்பல்கள் ஈரானின் ஏவுகணைகளை முறி யடிப்பதற்கு 24 ஏவுகணைகளை ஏவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அவை ஈரானின் ஏவகணைகளை தாக்கியதா என்பதை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்த தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்ராமர் ஆகியோர் இஸ்ரேலிய அதிபர் பென்சமின் நெத்தனியாகுவை தொடர்புகொண்டு பேசியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு நிமிடத்தையும் பைடன் அவதானிப்பதாக அமெரிக்க வெள்ளைமாளிகைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஈரான் நவீன பலிஸ்ரிக் ஏவுகணைகளை (Ballistic missiles) ஏவியதாக intelligence consultancy firm Armament Research Services (ARES) என்ற அமைப்பின் ஆய்வாளர் Patrick Senft தெரிவித்தள்ளார். இந்த ஏவுகணைகள் குரூஸ் ஏவுகணைகளை விட இலக்குகளை மிக விரைவாக எட்டிவிடும். அதிக வேகம் காரணமாக இந்த ஏவுகணைகளை தடுப்பது என்பது கடினமானது. இஸ்ரேலிடம் மூன்று அடுக்கு வான் பாதுகாப்பு பொறிமுறை உள்ளது. முதலாவது அயன்டோம் இது தரையில் இருந்து 10 கி.மீ உயரத்தில் வைத்து உந்துகணைகளை தடுக்கும் சக்தி கொண்டது. அதன் தூரவீச்சு 70 கி.மீ. இரண்டாவது டேவிட் ஸ்லிங் வகை ஏவுகணை இது இருந்து 15 கி.மீ உயரத்தில் வைத்து இடைத்தர தூரவீச்சு ஏவுகணைகளை தடுக்கும் சக்தி கொண்டது. அதன் தூரவீச்சு 300 கி.மீ. மூன்றாவதான அரோ ஏவுகணைத் தொகுதி இது இருந்து 100 கி.மீ உயரத்தில் வைத்து பலிஸ்ரிக் ஏவுகணைகளை தடுக்கும் சக்தி கொண்டது. அதன் தூரவீச்சு 2,400 கி.மீ.ஆனால் ஈரான் தனது பற்றா-1 மற்றும் பற்றா-2 என்ற கைப்பசொனிக் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலின் அரோ ஏவுகணைகளை தாக்கி அழித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. கடந்த ஏப்பிரல் மாதம் ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களை விட இந்த வாரம் மேற்கொண்ட தாக்குதல்களில் பயன்படுத்திய ஏவுகணைகள் அதிகளவில் இலக்குகளை தாக்கியுள்ளதாக Missile Defense Project at the Center for Strategic and International Studies (CSIS) என்ற அமைப்பின் அதிகாரியான மார்க் கன்சியன் தெரிவித்துள்ளார். அதாவது இந்த தாக்குதல் மூலம் ஈரான் மூன்று விடையங்களை கூறியுள்ளது. ஒன்று இஸ் ரேலின் வான்பாதுகாப்பை ஈரான் இலகுவில் உடைத்துவிடும். இரண்டாவது இஸ்ரேலின் எந்த பகுதியையும் தாக்கும் வல்லமை ஈரானுக்கு உண்டு. மூன்றாவது ஈரானிடம் அணுவாயுதம் இருந்தால் அதன் மூலம் இஸ்ரேலை தாக்குவதற்கும் ஈரானினால் முடியும் என்பது தான் அது. அதாவது ஈரானின் தொழில்நுட்ப வளர்ச் சியை இஸ்ரேலும், மேற்குலகமும் தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டால் அதற்கான விலையை செலுத்த வேண்டும் என்பதே யதார்த்த மானது. https://www.ilakku.org/இஸ்ரேலினால்-தடுக்க-முடிய/
-
பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்: தமிழர்களின் மண்டைகளை கழுவும் செயற்பாடுகளும் ஆரம்பம்-மட்டு.நகரான்
பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்: தமிழர்களின் மண்டைகளை கழுவும் செயற்பாடுகளும் ஆரம்பம்-மட்டு.நகரான் October 8, 2024 இலங்கையின் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக் கான ஏற்பாடுகள் மிக விரைவாக முன் னெடுக்கப் பட்டுவருகின்றன. வடக்கு கிழக்கில் வாக்கு அரசியலை மையப்படுத்திய வகையில் தமிழர்களின் மண்டைகளை கழுவும் செயற்பாடு கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திற்காக வும் சுயநிர்ணய உரிமைகளுக்காகவும் தமிழர்களின் தாயக கனவிற்காகவும் போராடுவதாக கூறுகின் றவர்கள். இன்று இலங்கையின் பாராளுமன்ற கதிரைகளை பிடித்துக்கொண்டு அதில் வரும் சுகபோகங்களை அனுபவிப்பதற்காக தீவிரமாக செயற்பட்டுவருகின்றனர். இவர்களுக்கு எல்லாம் இன்று தேவையாகவுள்ளது தமிழ் தேசிய உணர்வு இதனை பயன்படுத்தி அதிகாரத்திற்கு வருவதற்காக பல்வேறு பிரயத்தனங்களை முன்னெடுத்துள்ளனர். வடக்கு கிழக்கில் தமிழர்கள் இன்று முக்கிய காலப்பகுதியில் நிற்கின்றனர்.தென்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஒரு பாரிய போராட்டத்தின் விளைவாக ஒரு போராட்ட பின்புலத்தில் தோற்றம்பெற்ற கட்சியொன்று ஆட்சியமைப் பதற்கான முயற்சிகளை முன்னெடுத்த நிலையில் கடந்த 35வருடமாக தமது உரிமைகளுக்காக போராடிய தமிழ் மக்கள் இன்று தமது தீர்விற்கான கோரிக்கையினை முன்னிறுத்தியுள்ளனர். கடந்த 35வருடத்திற்கு மேலாக போராடிய ஒரு சிங்கள கட்சி அதே கொள்கையுடனும் வீரியத்துடனும் தொடர்ச்சியான பல்வேறு ஜன நாயக ரீதியான போராட்டங்களையும் ஆயுத ரீதியான போராட்டங்களையும் கிளர்சியையும் முன்னெடுத்து இன்று இலங்கையின் ஆட்சி அதிகாரத்தினை பிடித்துள்ளது.சிங்கள மக்களினால் குறித்த கட்சியின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாத போதிலும் தொடர்ச்சியாக தமது குறிக்கோளில் உறுதியாகயிருந்து ஆட்சி அதிகாரத் தினை பிடித்துள்ளனர். ஆனால் இந்த நாடு சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் தொடர்ச்சியாக ஏமாற்றப் பட்டுவரும் ஒரு இனமாக தமிழினம் காணப் படுகின்றபோதிலும் காலத்திற்கு காலம் தமிழர் கள் மத்தியில் தோற்றம்பெற்ற உறுதியற்ற தலை மைகளும் சுயநல அரசியலும் தமிழர்களை ஏனைய இனங்கள் அடக்கியாளும் நிலைக்கு இட்டுச்சென்றது. இருந்தபோதிலும் தமிழர்கள் மத்தியில் தோற்றம்பெற்ற ஆயுதப்போராட்டம் தமிழர்களுக்கான வலுவான குரலாகவும் தமிழர்களின் நீடித்து நிலைத்த குறிக்கோளையும் கொண்டிருந்த காரணத்தினால் தமிழர்களின் உரிமைப் போராட் டத்தினை சர்வதேசமே ஏற்றுக்கொள்ளும் நிலை மைகளும் உருவாகியிருந்தது.எனினும் சர்வதேசத்தின் வல்லாதிக்க போட்டிகளும் இலங்கையின் சர்வதேச நாடுகளுக்கு தேவையான முக்கியத்துவதும் தமிழர்களின் உரிமைக்கோசத்தினை மறைத்து இலங்கைக்கு உதவும் நிலைமை ஏற்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் இலங்கையில் யுத்தம் மௌனிக்கப்பட்ட நிலையில் தமிழர்கள் இராஜதந்திர ரீதியிலும் அரசியல் ரீதியாகவும் உறுதியான கொள்ளைகையுடன் தமிழர்களின் போராட்டத்தினை முன்கொண்டுசெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் இன்று அனைத்தும் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலை மையிலேயே காணப்படுகின்றது. இந்த நாட்டில் தமிழீழ விடுதலைப்புலிக ளின் காலத்தில் மட்டும் தமிழர்களின் உரிமைக்கான கொள்கைகளும்கோட்பாடுகளும் உறுதியாக முன்கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அதன் பின்னரான காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசிய அரசியலானது வாக்கு அரசியலாகவும் சுயநல அரசியலாகவுமே காணப்படுகின்றது.ஆயுதப்போராட்டத்திற்கு முந்திய காலத்தில் இவ்வாறான நிலைமைகள் காணப்பட்டதன் காரணமாகவே தமிழ் இளைஞர்கள் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அவ்வாறான நிலை இன்று உருவாகியுள்ள போதிலும் இன்றைய நிலையில் தமிழ் இளை ஞர்களின் போக்குகளும் எதிர்பார்ப்புகளும் என்பது தமிழர்களின் இருப்பினை எதிர்காலத்தில் கேள்விக்குள்ளாக்கிவிடுமோ என்ற அச்ச நிலை மைகள் காணப்படுகின்றன.இவ்வாறான நிலைமையினை இந்த தமிழர் தேசம் எவ்வாறு எதிர் கொள்ளப்போகின்றது என்பதே இன்று உள்ள மிகப்பெரும் சவாலான விடயமாகவுள்ளது. சிங்கள தேசத்தில் ஊழலுக்கும் அங்கு காணப்பட்ட அடாவடித்தனங்களுக்கும் எதிராக சிங்கள மக்கள் கிளந்தெழுந்து ஆட்சியை மாற்றியுள் ளார்களே தவிர இந்த ஆட்சி மாற்றத்தினால் தமிழர்களுக்கான உரிமையினையோ அல்லது தமிழர்களுக்கான நீதியையோ தேசிய மக்கள் சக்தி போன்ற கட்சிகள் ஒருபோதும் வழங்காது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க நியமிக்கப்பட்டது தொடக்கம் இன்றுவரையில் தமிழர்கள் தொடர்பில் எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்காத நிலையே உள்ளது.எதிர்வரும் காலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதனால் தமிழர்கள் சார்ந்து சில உறுதி மொழிகள் வழங்கப்படலாம்.ஆனால் தமிழர்களுக்கான உரிமைசார்ந்த எந்த விடயமும் நடைபெறாது என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.ஏன் என்றால் சிங்கள தேசத்தின் டிசைன் என்பது அதுதான். இந்த டிசைன் தெரியாமல் ஒரு போராட்ட வடிவத்திற்குள் வாழும் மக்களாகவுள்ள தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள கட்சிகளுக்கு ஆதரவாக எழும் அலையென்பது தமிழர்களின் இருப்பினை கேள்விக்குள்ளாக்ககும்.இதனை முளையில் கிள்ளவேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசிய சக்தி களுக்கு காணப்படுகின்றது. இணைந்த வடகிழக்கில் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டுமானால் இரண்டு மாகாணங்களிலும் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படவேண்டும்.இந்த இருப்பு பாதுகாக் கப்படவேண்டுமானால் தமிழர்களின் அரசியல் உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும்.வெறு மனே வாக்கு அரசியல்மட்டும் தமிழர்களின் உரிமையினை பாதுகாக்காது என்பதை அனை வரும் உணரவேண்டும். கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரை யில் மூவினங்களும் வாழும் பகுதியாகவுள்ள போதிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நிலையில் அரசியல் என்பது கேள்விக் குறியாகியே வருகின்றது.இலங்கையின் தேர் தல் முறைமையினால் கிழக்கில் தமிழர்கள் அரசியல் ரீதியாக பின்னடையும் நிலையே காணப்படுகின்றது.கிழக்கில் அனைத்து தமிழ் தேசிய அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்படும் காலங்களில் எல்லாம் பிரிந்துநின்று செயற்பட்ட காரணத்தினாலும் சுயநல அரசியல், வாக்கு அரசியல் காரணமாகவும் கிழக்கில் தமிழ் தேசிய அரசியல் கேள்விக்குள்ளாகி ஒட்டுக்குழுக்களும் அரசாங்கத்தினை ஆதரிக்கும் ஊழல்வாதிகளும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து தமிழர்களை விற்றுப்பிழைக்கும் நிலைமை உருவாகியுள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு தமிழ் தேசிய அரசியலை வடக்குடன் மட்டுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட சிங்கள தேசத்தின் அரசியல் நிரலினை இலகுவாக அமுல்படுத்தும் நிலைமைகள் ஏற்பட்டுவருகின்றது.வடக்கில் தமிழ் தேசிய அரசியல் நிலைபெறும்போது கிழக்கில் கேள்விக்குட்படுத்தப்படுமானால் கிழக்கு மாகாண மக்கள் தமிழ் தேசிய அரசியலையும் வடகிழக்கினையும் நிராகரிக்கின்றார்கள் என்ற வகையான பிரசாரங்களை தெற்கு கட்சிகளும் பிரதேசவாத கட்சிகளும் முன்னெடுக்கும் நிலை மைகள் உருவாகியிருக்கின்றன. இதன்காரணமாகவே இந்த தேர்தல் வடகிழக்கு மக்களுக்கு குறிப்பாக கிழக்கு மாகாண மக்களுக்கு மிக முக்கியத்துவம்வாய்ந்த தேர்தலாக காணப்படுகின்றன.கிழக்கு மக்கள் என்றும் தமிழ்தேசியத்தின் பாதையில் பயணிப்பவர்கள் என்பதை மீண்டும் இந்த நாட்டிற்கு காட்டவேண்டிய பாரிய பொறுப்பு காணப்படுகின்றது.இந்த நிலைமைகளை உணர்ந்துசெயற் படவேண்டிய நிலையில் தமிழ் தேசிய கட்சிகளும் இருக்கின்றன. கிழக்கு மாகாணத்தில் பல பிரிவுகளாக நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய சக்திகள் களமிறங்கப்படும் நிலைமைகள் காணப்படுகின்றன.இவற்றினை தடுத்து நிறுத்தி அனைவரை யும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கின்றது.இது தொடர்பான கோரிக்கை அண்மையில் அம்பாறை மாவட்டத்திலிருந்து விடுக்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் அனைத் தையும் ஒன்றிணைந்து தேர்தலை முகங்கொடுத்து தமிழர் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டிருக்கின்றது.அவ்வாறு செயற்படாவிட்டால் நாங்கள் சிங்கள கட்சிகளை ஆதரிக்கும் நிலையுருவாகும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அம்பாறை-திருகோணமலை மாவட்டங்க ளில் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து தேர்தலில் களமிறங்கப்படும்போதே அங்குள்ள தமிழர் பிரதிநிதித்துவத்தினை பாதுகாக்கமுடியும்.அதேபோன்று கிழக்கில் தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து கேட்பதன்மூலமே தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்கமுடியும்.வெறுமனே வாக்கு அரசியலுக்காகவும் சுயநல அரசியலுக்காகவும் பிரிந்துநின்று செயற்படுவதா னது ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்திலும் தமிழர்களின் இருப்பினையும் தமிழர்களின் தமிழ் தேசிய கோரிக்கையினையும் வலுவிழக்கச்செய்யும் செயற்பாடாகும்.இதனை உணர்ந்து செயற்பட வேண்டிய நிலையில் தமிழர்களும் தமிழ் தேசிய அரசியல் சக்திகளும் உள்ளனர்.இதற்கான அழுத்தங்களை சர்வதேச தமிழர் அமைப்புகளும் சிவில் சமூக கட்டமைப்புகளும் வழங்கவேண்டும். https://www.ilakku.org/பொதுத்தேர்தலுக்கான-ஏற்ப/
-
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போ வதில்லை என்று தெரிவித்துள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியானது ஜனநாயக தேசியக் கூட்டணியில் அங்கத்துவம் வகிப்பதுடன் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது. இதில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்துக்கு ஏற்ப இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் வழிவிடும் முகமாக இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்குத் தான் தீர்மானித்துள்ளார் என்று சிவசக்தி ஆனந்தன் அறிவித்துள்ளார். https://thinakkural.lk/article/310400
-
இ.தொ.க உப தலைவர் பதவி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி விலகல்!
இ.தொ.க உப தலைவர் பதவி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி விலகல்! இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி பதவி விலகும் கடிதத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு இன்று (07) மாலை அனுப்பி வைத்துள்ளார். மக்களினதும், கட்சி அங்கத்தவர்களினதும் எதிர்பார்ப்புகளை மீறி எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த நாட்டினை வங்குரோத்து நிலைக்கு அடைய செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தங்களது சுயநல அரசியலுக்காக கண்டி மக்களை அடகு வைத்த உறுப்பினர்களோடு இணைந்து தாம் போட்டியிட தயார் இல்லை எனவும், கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக மக்களின் எதிர்பார்ப்புக்கு அப்பால் தன்னால் செயல்பட இயலாது என்பதன் காரணமாக இந்த முடிவை தான் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அது மாத்திரமன்றி 2013 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் மாகாண சபை உறுப்புரிமையை பெற்றுக்கொள்வதற்காக தனது தந்தையும், தானும் அயராது உழைத்தது மாத்திரமன்றி மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானினால் மாவட்ட பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை கடந்த தேர்தலில் இ.தொ.காவிற்கு ஆதரவாக வெறும் மூன்று வாரங்களில் ஏரதாள 25 ஆயிரம் வாக்குகளை பெற்று மக்களின் நம்பிக்கையை வென்றதாகவும், இம்மாவட்ட மக்களின் நலனுக்காக அரசாங்கத்தின் ஊடாகவும், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாகவும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்ததோடு, மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒரு போதும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடனும், அதன் தலைமையை விமர்சித்த தலைமைகளோடு சேர்ந்து தான் தேர்தல் கேட்க தயார் இல்லை எனவும் தெரிவித்தே இப்பதவி விலகல் கடிதத்தை அவர் அனுப்பி வைத்துள்ளார். மேலும், மக்களின் நலனுக்காகவே கட்சி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமே தவிர சில தனி நபர்களின் வளர்ச்சிக்காக மாத்திரமே கட்சி முடிவுகளை எடுக்க கூடாது என்பதினையும் சுட்டிக்காட்டி உள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினராக தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றியுள்ளதுடன், கட்சியின் இளைஞர் அணி உருவாக்கம் மற்றும் கட்சியினுடைய சர்வதேச தொடர்புகள், கண்டியில் இ.தொ.காவின் வளர்ச்சியில் தனது அலப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் அதற்கு துணை நின்ற கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து நல்லுல்லங்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/இ-தொ-க-உப-தலைவர்-பதவி-கட்சி/
-
தமிழரசுக்கட்சியிலிருந்து விலகினார் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா - உத்தியோகபூர்வ கடிதம் கிடைக்கவில்லை என்கிறார் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம்
மாவையிடம் இருந்து சிறீதரனுக்கு பறந்த கடிதம்! அக்டோபர் 08, 2024 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள மாவை சேனாதிராஜா, கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்குமாறு கோரி கட்சியின் உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா ஆகிய நான் இதுவரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து செயற்பட்டு வந்திருக்கின்றேன். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு 2024 ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்றபோது பொதுக்குழுவில் தாங்கள் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தீர்கள். தமிழரசுக் கட்சியின் தலைவர் தாங்கள் அந்தவகையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பை இன்னும் ஏற்கவில்லை. அதனால் நான் தொடர்ந்தும் கட்சியின் தலைவராகச் செயலாற்றி வந்துள்ளேன். அந்தப் பொறுப்பை உடன் ஏற்றுத் தலைவராகச் செயற்படுமாறு அன்றிலிருந்து பல தடவைகள் வற்புறுத்தி வந்துள்ளேன். 2024 ஒக்டோபர் 7ஆம் திகதியிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியிருக்கத் தீர்மானித்துள்ளேன் என்பதனை இந்தக் கடிதம் மூலம் அறியத் தருகின்றேன். எனவே, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்று நிறைவேற்றிச் செயற்படுமாறு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது. தமிழரசு கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தான் விலகுவதாக நமது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ள போதிலும் அவர் கடிதம் எதனையும் எனக்கு அனுப்பி வைக்கவில்லை என கட்சியின் செயலாளர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். https://www.battinatham.com/2024/10/blog-post_60.html
-
வடக்கில் காத்திருப்பு காலமின்றி கண்புரை சத்திர சிகிச்சையை முன்னெடுக்க நடவடிக்கை
வடக்கில் காத்திருப்பு காலமின்றி கண்புரை சத்திர சிகிச்சையை முன்னெடுக்க நடவடிக்கை October 8, 2024 வடமாகாணத்தில் காத்திருப்பு பட்டியல் இன்றி கண்புரை சத்திர சிகிச்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் , 10 நாட்களுக்கு 2ஆயிரம் கண்புரை சத்திர சிகிச்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ் . போதனா வைத்தியசாலை கண் வைத்திய நிபுணர் எம். மலரவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச பார்வை தினத்தினை முன்னிட்டு, யாழ் . போதனா வைத்தியசாலை கண்ணியல் பிரிவில் 2ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை செய்யவுள்ளோம். யாழ் போதனா வைத்தியசாலையில் குறுகிய காலத்தில் கண்புரை சத்திர சிகிச்சை முகாமை நடத்துவது இது மூன்றாவது தடவை. வடமாகாணத்தில் இது நாலாவது தடவையாகும். இலங்கையில் மாத்திரம் இன்றி , சார்க் வலய நாடுகளில் கூட “பேகோ” மூலம் இப்படியான சத்திர சிகிச்சை முகாம்கள் நடத்ததில்லை. வடக்கிலையே இவ்வாறான கண் புரை சத்திர சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. முதல் தடவை நாங்கள் 1200 சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டோம். அதுபோன்று கடந்த வருடம் இரத்தினபுரி வைத்தியசாலை நட்புறவு மன்றத்தின் ஏற்பாட்டில் “சர்வதேச பார்வைகள் தினம் – 2023” முன்னிட்டு ஐந்து நாட்களில் 1200 பேருக்கு சத்திர சிகிச்சை செய்தோம் இந்த முறை யாழ்.போதனா வைத்தியசாலை கண்ணியல் பிரிவு , வடமாகாணத்தில் உள்ள ஏனைய கண்ணியல் பிரிவுடன் இணைந்து 2ஆயிரம் கண்புரை சத்திர சிகிச்சையை ஐந்து, ஐந்து நாட்களாக 10 நாட்களுக்குள் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தனியார் – அரசாங்க நட்புறவு உதவிகளுடன் அலாக்க பவுண்டேசன் (ALAKA FOUNDATION) , ஆனந்தா பவுண்டேசன் (ANANDA FOUNDATION) மற்றும் அசிஸ்ட் ஆர்.ஆர் (Assist RR) நிறுவனம் ஆகிவற்றின் உதவியுடன் இந்த கண்புரை சத்திர சிகிசிச்சையை மேற்கொண்டு வருகிறோம். கடந்த வருடம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சத்திர சிகிச்சை செய்துள்ளோம். இது வளர்ந்த நாடுகளுக்கு ஒப்பானது. இந்த வருடம் இதுவரையிலான கால பகுதியில் யாழ் . போதனா வைத்தியசாலையில் மாத்திரம் 09 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்புரை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளோம் கிளிநொச்சி . வவுனியாவில் 05 ஆயிரம் பேருக்கு செய்துள்ளோம் வடமாகாணத்தில் இந்த வருடம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்புரை சத்திர சிகிச்சையை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தோம். ஆனால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு செய்ய முடியும் என நம்புகிறோம். இதன் நிறைவு விழா எதிர்வரும் 25ஆம் திகதி வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் நடாத்தவுள்ளோம். அன்றைய தினம் ஆளூநரால் இரண்டு பிரகடனங்கள் வெளியிடப்படவுள்ளது . வடமாகாணத்தில் கண்புரை சத்திர சிகிச்சைக்கான காத்திருப்பு காலம் பூச்சியமாக பேணுவது. அதாவது சத்திர சிகிச்சைக்காக பதிந்தால் ஒரு வார கால பகுதிக்குள் சத்திர சிகிச்சையை மேற்கொள்ளல் ஆகும். அதொரு சிறப்பான விடயமாக அமையும் யாழ்ப்பாணத்தில் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காத்திருப்பு 2 வருடங்களுக்கு மேலாக இருந்தது. சத்திர சிகிச்சைக்கு பதிந்தால் 2 வருடங்களின் பின்னரே சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடியும். சிலவேளைகளில் 4 வருடங்களுக்கு பின்னர் கூட சிலருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது லண்டன் உள்ளிட்ட நாடுகளில் கூட காத்திருப்பு காலம் இன்றும் உள்ளது. காசு கட்டி செய்வதாக இருந்தாலும் கூட இந்த காத்திருப்பு காலம் உண்டு இந்த நிலையில் தான் வடமாகாணத்தில் காத்திருப்பு காலம் இல்லாது பதிந்தால் உடனடியாக சத்திர சிகிச்சையை மேற்கொள்ள கூடியவாறு இருக்கும். எதிர்வரும் 25ஆம் திகதி முதல் செயற்படவுள்ளோம். அதேவேளை இரண்டாவது பிரகடனமாக அனைத்து ஆரம்ப சுகாதார பிரிவுகளிலும், வடமாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய சுகாதார திணைக்களத்தால் காத்திருப்பு காலம் இல்லாது உடனுக்கு உடன் கண்புரை சத்திர சிகிச்சையை செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளோம். எனவே வடமாகாணத்தில் வசிக்கும் அனைத்து மக்கள் ஆகிய உங்களுக்கு கண்புரை இருக்கிறது அல்லது பார்வை குறைப்பாடுகள் இருப்பதாக உணர்ந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்திற்கோ அல்லது தள வைத்தியசாலைக்கோ அல்லது மாவட்ட வைத்திய சாலைக்கோ சென்று கண்களை பரிசோதித்து, கண்புரை சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் எனில் காத்திருப்பு காலம் இன்றி செய்ய கூடியவாறாக இருக்கும் என தெரிவித்தார். https://eelanadu.lk/வடக்கில்-காத்திருப்பு-கா/
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பெண் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் பாரியார் திருமதி சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் இன்று திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான சசிகலா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். அந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியே தனக்கு எதிராகச் சதி செய்தது என்று சசிகலா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கட்சி மீது கடந்த காலங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருந்தார். இவ்வாறான நிலையில் இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடுவதற்கு அவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், தமிழரசுக் கட்சியில் அவருக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படவில்லை. தமிழரசுக் கட்சியின் இந்த வேட்பாளர் தெரிவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அடாவடித்தனமாகப் பல்வேறு குளறுபடிகளைச் செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு நியமனத்தைக் கொடுத்துள்ளார் என்று சசிகலா நேற்று குற்றஞ்சாட்டியிருந்தார். "எனக்கு மட்டுமல்லாது கட்சியின் நீண்ட கால உறுப்பினர்கள் பலருக்கும் வேட்பாளர் நியமனம் கொடுக்கபடாமல் தனக்குத் தேவையானவர்களுக்கே சுமந்திரன் நியமனம் கொடுத்துள்ளார்." - என்றும் சசிகலா குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து தமிழரசுக் கட்சியில் இருந்து இன்று காலை வெளியேறிய சசிகலா, ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சின்னமான சங்குச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்று பிற்பகல் கையெழுத்திட்டுள்ளார். https://oruvan.com/sri-lanka/2024/10/07/sasikala-who-came-out-of-tamilarasu-party-competes-in-the-conch-symbol
-
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி!
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி! kugenOctober 7, 2024 யாழ் மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் நாயகமும் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் 9 ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு இன்று திங்கட்கிழமை (07) தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது 2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஈபிடிபி வேட்பாளர்களின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய வேட்பு மனுவே யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அத்தாட்சி அலுவலரிடம் கையளித்தார். இதேவேளை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, வடக்கின் ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் கொழும்பு உள்ளடங்களாக ஒன்பது மாவட்டங்களில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பிடி.பி தனது சின்னமான வீணைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. இதன்போது ஊடகவியலாளர்கள் கொழும்பில் இம்முறை ஈ.பி.டி.பி போட்டியிடுவதற்கு விசேட காரணங்கள் ஏதும் உண்டா? என்ற கேள்விக்கு கொழும்பிலுள்ள எமது கட்சியின் ஆதரவாளர்கள் கொழுப்பிலும் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்திவந்திருந்தனர். அவர்களது கோரிக்கையின் அடிப்படையில் இம்முறை அந்த மாவட்டத்திலும் போட்டியிடுகின்றது ஈ.பி.டி.பி. இதேநேரம் ஈ.பிடி.பி ஆரம்பகாலம் முதற்கொண்டு தொடர்ச்சியாக கூறிவருகின்ற தேசிய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அதை வலுப்படுத்தும் நோக்குடன் கொழும்பு மாவட்டம் பல்லின பல மொழி பேசும் மக்கள் வாழும் இடமாக இருப்பதனால் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் வேட்பாளர்கள் களமிறங்ககின்றனர். அந்தவகையில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் இலக்கை அடைவதற்கு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்திருநதமை குறிப்பிடத்தக்கது. https://www.battinews.com/2024/10/blog-post_259.html
-
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழில் வேட்புமனு தாக்கல்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழில் வேட்புமனு தாக்கல் October 7, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதன்போது கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். வேட்புமனுத்தாக்கலின் பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். https://eelanadu.lk/நாடாளுமன்றத்-தேர்தலில்-ப/
-
நாளையும் தீர்மானம் எடுக்க போவதில்லை – பெண்கள் கிடைக்கவில்லை – சுமந்திரன்
இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள் விபரம்! பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதன்படி வேட்பாளர்களாக எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், இ.ஆர்னோல்ட், எஸ்.சுகிர்தன், கே.சயந்தன், இளங்கோவன், பிரகாஸ், சுரேகா, கிருஷ்ணா ஆகியோர் போட்டியிடவுள்ளனர். இதேவேளை கட்சியின் சில தீர்மானங்களை எதிர்த்து தமிழரசுக் கட்சியின் முக்கிஸ்தர்கள் பலர் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. http://www.samakalam.com/இலங்கை-தமிழ்-அரசு-கட்சிய/
-
தமிழரசுக்கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறக்கிறார் மாவை!
தமிழரசுக்கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறக்கிறார் மாவை! adminOctober 7, 2024 இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு அதன் தலைவர் மாவை சேனாதிராசா தீர்மானித்துள்ளார். பதவியை துறந்தாலும் அவர் கட்சி உறுப்பினராக தொடர்ந்தும் பதவி வகிப்பாரென தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை முக்கியஸ்த்தர் சட்டத்தரணி கே.வி தவராசா தமிழரசுக்கட்சியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/207216/
-
நீலநிற சூரியன் : விமர்சனம்!
நீலநிற சூரியன் : விமர்சனம்! christopherOct 06, 2024 10:30AM பெண்ணாகத் தன்னை உணரும் ஆணின் கதை! பெரும்பாலான திரைப்படங்கள் வாழ்வோட்டத்தில் இருக்கிற பெருஞ்சிக்கல்களைப் பேசுவதே இல்லை. சமத்துவ சமுதாயம், பாலின சமத்துவம், சூழல் பாதுகாப்பு உட்படப் பல விஷயங்களைப் பேசுகிற வாய்ப்புகள் கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. அப்படியொரு நிலையில், தன்னைச் சிறு வயதில் இருந்து பெண்ணாக உணரும் ஆணின் உருமாற்றத்தைப் பேசுகிறது ‘நீலநிற சூரியன்’. சம்யுக்தா விஜயன் இதனை எழுதி இயக்கியிருக்கிறார். இந்தப் படம் தரும் காட்சியனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? வலிமிகு தருணங்கள்! பானு என்ற பெயரில் தன்னைப் பெண்ணாகப் பாவித்துக்கொண்டு பேசிப் பார்க்கிறார் அரவிந்த் (சம்யுக்தா விஜயன்). அப்போது, தன் குரலில் மாற்றம் பெரிய அளவில் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைகிறார். இந்தக் காட்சியில் இருந்து ‘நீலநிற சூரியன்’ திரைப்படம் தொடங்குகிறது. அரவிந்தின் முன்கதை எப்படிப்பட்டது? எதனால் அவர் இப்படியொரு மாற்றத்திற்கு உள்ளானார்? எப்போது அதற்கான முதல் விதை விழுந்தது என்பது போன்ற விஷயங்கள் எதையும் பேசாமல் நேராக அவரது சமகால வாழ்வுக்கு நகர்கிறது திரைக்கதை. அதுவே இக்கதைக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றும் அரவிந்த், தன் பெற்றோரிடத்தில் (கஜராஜ் – கீதா கைலாசம்) கூட அதிர்ந்து பேசுவதில்லை. வீட்டை அடமானம் வைத்துக் கடன் வாங்கித் தனது கடையை நடத்த விரும்புகிறார் அரவிந்தின் தந்தை. அதற்காக, அவரது சகோதரர் (பிரசன்னா பாலச்சந்திரன்) ஒரு பைனான்சியரிடம் அழைத்துச் செல்கிறார். ஒரே சாதியைச் சார்ந்தவர்கள் என்ற வகையில், தனது மகளை அரவிந்துக்குக் கல்யாணம் செய்துவைக்க அந்த பைனான்சியர் எண்ணுகிறார். கடனாக அல்லாமல் சீதனமாகப் பணம் தர விரும்புவதாகத் தெரிவிக்கிறார். ஆனால், அரவிந்த் அதனை ஏற்பதாக இல்லை. ‘எனக்குக் கல்யாணம் வேண்டாம்’ என்கிறார். ஹார்மோன் மாற்றத்திற்காக மருத்துவ சிகிச்சை எடுத்துவரும் அரவிந்த், திருமண நிர்ப்பந்தத்தால் உடனடியாகத் தான் பெண்ணாகச் சமுதாயத்திற்குத் தெரிய வேண்டுவது அவசியம் என்றெண்ணுகிறார். அது வீட்டிலும், தான் பணியாற்றும் பள்ளியிலும் எத்தகைய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறார். அதனால், அவரிடத்தில் பெருகிய தயக்கங்கள் உடையச் சரியான தருணம் இது என்று சொல்கிறார் சக ஆசிரியை ஒருவர். நட்போடு அவர் சொல்லும் வார்த்தைகள், அரவிந்தைப் பானுவாக மாற வைக்கின்றன. அதனால், அவர் சந்தித்த விளைவுகள் எத்தகையவை என்பதைச் சொல்கிறது இப்படத்தின் இரண்டாம் பாதி. ஒரு ஆண் தன்னைப் பெண்ணாக உணர்வதும், அதனைச் சமூகத்தில் வெளிப்படுத்துவதும் சாதாரண விஷயமல்ல. யாரோ ஒருவருக்கு அது நிகழும்போது இரண்டொரு வார்த்தைகள் உதிர்த்துவிட்டுக் கடந்து போகின்றவர்கள், தமது குடும்பத்தில் அவ்வாறு நிகழ்வதை இம்மியளவு கூட விரும்ப மாட்டார்கள். ‘நீலநிற சூரியன்’ அப்படிப்பட்ட ’பேசாப்பொருட்களை’ப் பற்றிப் பேசுகிறது. வலிமிகு தருணங்கள் பலவற்றை உள்ளடக்கிய கதை இது. ஆனாலும், அனைத்தையும் திரையில் காட்டாமல் சிலவற்றை வசனங்களில் சொல்லிச் செல்கிறது. சில விஷயங்கள் பூடகமாக உணர்த்தப்படுகின்றன. அது, இப்படத்திற்கு வேறொரு வண்ணத்தைப் பூசியிருக்கிறது. ’மெலோடிராமாவாகத் திரையில் நகர்ந்து நம்மை அயர்ச்சிக்கு உள்ளாக்குமோ’ என்று நினைக்கிற உள்ளடக்கத்தை, ரொம்பவே எளிமையாகத் திரையில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் சம்யுக்தா விஜயன். அதுதான் ‘நீலநிற சூரியன்’ படத்தின் பலம். சிறப்பான முயற்சி! ‘நீலநிற சூரியன்’னை எழுதி இயக்கியிருக்கும் சம்யுக்தா விஜயன், இதில் அரவிந்த் ஆக நடித்திருக்கிறார். ‘அதீதம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு, ரொம்பவே சாதாரணமாகத் திரையில் வந்து போயிருக்கிறார். ஆத்திரம் பொங்குகிற தருணங்களில் கூட, அவர் அப்படி நடித்திருப்பது மட்டுமே கொஞ்சம் இடறுகிறது. அரவிந்தின் பெற்றோராக வரும் கஜராஜ், கீதா கைலாசம் இருவருமே ‘அளவாக’ நடித்திருக்கின்றனர். அதேநேரத்தில், ’சமகாலச் சமூகத்தில் இப்படியொரு சூழலை எதிர்கொள்ளும் பெற்றோர்கள் இப்படித்தான் இருப்பார்களா’ என்ற கேள்வியை முன்வைக்கிறது அவர்களது நடிப்பு. பல காட்சிகள் பாதியில் தொடங்குகின்றன அல்லது பாதியில் முடிவடைகின்றன என்கிற எண்ணமே அதற்கான பதிலாகவும் நாம் கொள்ள வேண்டியிருக்கிறது. இக்கதை பொள்ளாச்சியில் நிகழ்வதாக உள்ளது. அதற்கேற்ப, கோவை வட்டாரத் தமிழ் பேசியிருக்கிறார் சித்தப்பாவாக வரும் பிரசன்னா பாலச்சந்திரன். அவரது மனைவியாக வருபவரும் அந்த உச்சரிப்பைச் சரிவரப் பயன்படுத்தியிருக்கிறார். இதர பாத்திரங்கள் ஏதும் அதனைப் பின்பற்றவில்லை. அது இப்படத்தின் மைனஸ்களில் ஒன்று. பள்ளி துணை முதல்வராக வரும் கேவிஎன் மணிமேகலை, இக்கதையில் வரும் ’உணர்ச்சிமிகு தருணங்களுக்கு’ உத்தரவாதம் தருகிறார். சாதாரண மனிதர்களின் பிரதிநிதியாகத் திரையில் தெரிகிறார். இக்கதையில் உடற்கல்வியியல் ஆசிரியர்களாக ஆண், பெண் என்று இரண்டு பேர் காட்டப்படுகின்றனர். ஆசிரியையாக வருபவர் முதன்மை பாத்திரத்தை தோழமையுடன் நடத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது. அவரது நடிப்பில் ‘இயல்பு’ நிறைந்திருப்பது அருமை. இன்னொரு ஆசிரியராக வருபவரின் பாத்திரம் கொஞ்சம் ‘கத்தி மீது நடப்பது’ போன்றது. அதனை அவர் மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, நமது வசவுகளை வாங்குமளவுக்கு நடித்திருக்கிறார். மருத்துவராக வரும் சீரியல் நடிகை, அவர் பரிந்துரைக்கும் மனநல நிபுணராக வரும் கிட்டி என்று இதில் சில தெரிந்த முகங்களும் உண்டு. இவர்கள் தவிர்த்து பள்ளி முதல்வர், தாளாளர், மாணவர்கள், மாணவிகள், அவர்களுள் ஒருவராக வரும் மசாந்த் ராஜன் உட்பட அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மட்டுமல்லாமல் இப்படத்தின் இசையமைப்பையும் கையாண்டிருக்கிறார் ஸ்டீவ் பெஞ்சமின். உண்மையைச் சொன்னால், இப்படம் முழுக்கத் தென்படும் வண்ணங்கள் ஒரேமாதிரியான அலைவரிசையில் இருக்கின்றன. அவற்றில் எந்த ஏற்றமோ, இறக்கமோ இல்லை. டிஐயில் அது இப்படித்தான் அமையும் என்பதைத் திட்டமிட்டு ஒளிப்பதிவு செய்தால் மட்டுமே அது சாத்தியம். போலவே, கேமிரா கோணங்களிலும் பெரிதாக ‘வெரைட்டி’ காட்டவில்லை. படத்தொகுப்பை மனதில் கொண்டு, திரையில் கதை மெதுவாகவும் சீராகவும் நகரும் வண்ணம் ‘கட்’கள் அமைந்துள்ளன. பெரும்பாலான இடங்களில் அமைதியைத் தவழவிட்டு, முதன்மைப் பாத்திரத்தின் மனவோட்டம் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கிற வேளைகளில் மட்டும் பின்னணி இசையைத் தந்திருக்கிறார் ஸ்டீவ் பெஞ்சமின். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை மூன்றிலும் சிறப்பான பங்களிப்பைக் கொண்டிருப்பதால் மட்டுமே, ஒரு வழக்கத்திற்கு மாறான திரையனுபவத்தை நாம் பெறுகிறோம். நிச்சயமாக, அவரது உழைப்பு சிறப்பானது. இதைத் தாண்டி டிஐ, ஒலிப்பதிவு உட்பட இதர அம்சங்களும் இக்கதையை முன்னிறுத்தும் வகையில் அமைந்துள்ளன. ஒரு இயக்குனராக, சம்யுக்தா விஜயன் இப்படத்தில் தான் விரும்பிய ஒன்றைச் சொல்லியிருக்கிறார். திருநங்கையாகத் தன்னை உணர்ந்து, அதே போன்றிருப்பவர்களோடு சேர்ந்து வாழ்பவர்கள் சிலர். மிகச்சிலர் அதில் தங்களை அடக்கிக்கொள்ளாமல் தனிமையாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நபரை முன்னிறுத்துவதாக ‘நீலநிற சூரியனை’ வடிவமைத்திருக்கிறார். பெயர் மாற்றத்திற்காக வட்டாட்சியர் அலுவலகம் செல்கையில், அங்கிருக்கும் பெண் கிளார்க் விண்ணப்பத்தில் ‘திருநங்கை’ என்று குறிப்பிடச் சொல்வதாக ஒரு காட்சி உண்டு. அது முடியும்போது, உடல்நலம் சரியில்லாத குழந்தையை ஆசீர்வாதம் செய்யுமாறு முதன்மை பாத்திரத்திடம் ஒரு பெண் வேண்டுவார். போலவே, தான் விரும்புகிற ஆண் ஒருவரோடு ஒரு ஹோட்டலில் முதன்மை பாத்திரம் தனியாக அமர்ந்து பேசுவதாக ஒரு காட்சி வரும். தன்னைப் பெண்ணாக உணர்கிற ஆண் இந்த சமூகத்தில் எப்படிப்பட்ட பார்வைகளைக் கடக்க வேண்டியிருக்கும் என்பதை இவ்விரு காட்சிகளும் மிகச்சரியாகக் காட்டியுள்ளன. பள்ளிக்கூடக் காட்சிகளில் கூட, அரவிந்தை பானுவாகப் பார்க்கும் மாணவர்களின் அனுபவம் எத்தகையது என்பது காட்டப்படவில்லை. போலவே, உறவினர்கள் மற்றும் குடும்பத்தாரின் கேலி, கிண்டல்கள் இதில் காட்டப்படவில்லை. முக்கியமாக, முதன்மை பாத்திரம் மீது வன்முறை பிரயோகிக்கப்படுவதாக ஓரிடத்தில் கூடச் சொல்லப்படவில்லை. ஆனால், இது போன்று நாம் பார்த்த பல கதைகள் அப்படிப்பட்ட அனுபவங்களையே தந்தன. திரைக்கதையில் எந்தெந்த இடங்களைத் தவிர்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டு காட்சிகளை அமைத்திருப்பதால், இப்படம் திரையில் வித்தியாசமானதொரு அனுபவத்தைத் தருகிறது. அதனாலே, சிறப்பானதாகவும் இம்முயற்சி அமைந்திருக்கிறது. சிறிய பட்ஜெட்டில், சிறப்பான திட்டமிடல் உடன் கவனமாகக் கதை சொல்லலைக் கையாண்டால் வெற்றி பெறலாம் என்று காட்டியிருக்கிறது ‘நீலநிற சூரியன்’. டீசர், ட்ரெய்லர் பார்த்துவிட்டு அல்லது இப்படம் பேசும் விஷயங்கள் எத்தகையவை என்று அறிந்துகொண்டு, அதன்பிறகு தியேட்டருக்கு வருபவர்களுக்கு ‘நீலநிற சூரியன்’ நல்லதொரு அனுபவத்தைத் தரும்! https://minnambalam.com/cinema/neela-nira-sooriyan-movie-review/
-
வைத்தியரால் நிலைகுலைந்த - மாவை,சிறிதரன் மூன்று மாதங்கள் மட்டுமே எம்.பி
வைத்தியரால் நிலைகுலைந்த - மாவை,சிறிதரன் மூன்று மாதங்கள் மட்டுமே எம்.பி Vhg அக்டோபர் 06, 2024 நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சி.சிறிதரன், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையின் முதல் படியாக விளக்கம் கோரி பதில் பொதுச் செயலாளர் வைத்தியர் பா.சத்தியலிங்கத்தால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை யாழ்ப்பாண புலனாய்வு அறிந்துள்ளது. இவ்வாறான கடிதத்தை அனுப்புவதாயின் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது பொதுவான விதி, அவ் விதி இங்கு மீறப்பட்டுள்ளது. இவ்வாறான கடிதம் எழுதுவதற்கு முன்னர் கட்சி தலைவருடன் பொதுச் செயலாளர் கலந்துரையாட வில்லை. நடந்து முடிந்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தேர்தலின் பின்னர் விளக்கம் கோரி கடிதம் அனுப்புவது என்று எடுக்கப்பட்ட முடிவு மாற்றப்பட்டு வேட்பு மனு தாக்கலுக்கு முன்னர் இக்கடிதங்கள் அனுப்பப்பட்டமையின் பின் பெரும் ஆபத்து உள்ளதை இச் சிக்கலுக்குள் ஆக்கப்பட்டவர்களுக்கு தெரியுமோ தெரியாது. சுமந்திரன் மன்னாரில் கடந்த வாரம் கூறினார் இன் நடவடிக்கை பற்றி இப்போது நடத்தி விட்டார். சுமந்திரன், சீ.வி.கே.சிவஞானம், துரைராஜசிங்கம், பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம் இக் கடித வரைவில் பங்கெடுத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது. சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை 2020 பாராளுமன்ற தேர்தலின் போது எடுக்க வேண்டும் என்று மத்திய குழு தீர்மானம் நிறைவேற்றிய போது ஒழுக்காற்றுக் குழுவின் தலைவராக இருந்த சீ.வி.கே. சிவஞானம் பதவியை இராஜனாமா செய்து சுமந்திரனின் விசாரணையை நீர்த்துப் போக செய்தவர். கட்சியால் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப் பட்ட ஒருவரை வேட்பாளர் பட்டியலில் இணைத்தாலும் கட்சியின் செயலாளர் அவரின் வேட்பாளர் உரிமையை இரத்துச் செய்யும் அதிகாரம் உள்ளதை நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட அனைவரும் சிந்திப்பது நல்லது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் இக்கடிதங்கள் நகர்த்தப்பட்டுள்ளமை மிக ஆபத்து என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆகவே சுமந்திரனின் அடுத்த திட்டமும் வெற்றி, அரசியல் அநாதைகளாக்கப் படும் சங்கூதிய சாமானுகள். இது போலவே வேட்பாளர் பட்டியல் அமையும் இறுதி நாளில் வேட்புமனு தாக்கல் இடம் பெறும், சுமந்திரனின் விருப்பப் பட்டியல் மட்டுமே தெரிவத்தாட்சி அலுவலகரிடம் வழங்கப்படும் யாழ்ப்பாண புலனாய்வுக்கு கிடைத்த மிக முக்கிய தகவல். இந்த மொக்கு மாவை பாப்பம் தம்பி, ஓ... தம்பி என கூறி தானும் அழித்து, கட்சியையும் அழித்து, தமிழ் தேசியம் என்றவர்களையும் அழிக்கப் போகிறது. சுமந்திரன் நேற்று கூறிய கூற்று மிக முக்கியமானது, யாழ் தேர்தல் மாவட்டத்தில் நானும் சிறிதரனும் போட்டியிடுகிறோம் என்று கூறியதன் அடிப்படையில் ஆழமாக பார்த்தால் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்ட வரை கட்சி அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து நீக்கியது என முடிவெடுத்தால் கட்சியின் அங்கத்துவம் இழக்கப்படும். பின்னர் இப்போதைய சட்டத் திருத்தத்திற்கு அமைய கட்சியின் செயலாளர் கட்சி நீக்கிய ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதனை நிராகரிக்கிறது புதியவரின் பெயரை பரிந்துரைக்கிறோம் என தேர்தல் திணைக்களத்தை கோரினால் கட்சியின் முடிவை தேர்தல் திணைக்களம் நடைமுறைப்படுத்தும். அதற்கு எதிராக நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவு எடுத்தால் கூட மூன்று மாதங்களுக்கு மேல் செல்லாது எனவே புதிய பாராளுமன்றத்தில் சிறிதரன் வெற்றி பெற்றால் அவரின் பாராளுமன்ற ஆயுள் வெறும் மூன்று மாதங்கள் மட்டும். எனவே சுமந்திரனின் ஆதரவாளர்களால் தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் எல்லாம் இவ்வருட இறுதியில் மீளப் பெறப்பட்டு வருகின்ற தை மாதம் கட்சியின் மகாநாட்டை நடத்தி தலைவராக சுமந்திரனும் செயலாளராக சாணக்கியனும் தெரிவு செய்யப்படுவர் என யாழ்ப்பாண புலனாய்வு அறிகிறது. இத்தனை செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்த நன்றி கடனுக்கு இம்முறை தேசிய பட்டியல் ஊடாக பதில் பொதுச் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் பாராளுமன்றம் செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2024/10/blog-post_48.html
-
மீண்டும் கூடியுள்ள தமிழரசுக்கட்சியின் நியமனக்குழு
மீண்டும் கூடியுள்ள தமிழரசுக்கட்சியின் நியமனக்குழு Vhg அக்டோபர் 06, 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் இன்று (06-10-2024) கூடியுள்ளது. நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக ஆராய்வதற்காக 11 பேர் கொண்ட நியமனக்குழுவை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு நியமித்திருந்தது. களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் இந்நிலையில் குறித்த நியமனக்குழு இன்று காலை 11 மணியளவில் வவுனியாவில் கூடியுள்ளது. இதன்போது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழ் கட்சிகள் இணைந்து போட்டியிடுதல் மற்றும் களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ககப்படுகின்றது. https://www.battinatham.com/2024/10/blog-post_8.html
-
கனடாவில் யாழ்.பெண் கொலை பெண்ணின் சகோதரன் கைது
கனடாவில் யாழ்.பெண் கொலை பெண்ணின் சகோதரன் கைது gayanOctober 5, 2024 கனடா -ஸ்காபுரோ பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இச் சம்பவம் தொடர்பாக பெண்ணின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 54 வயதான துஷி லட்சுமணன் என்ற பெண்ணே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். கனடாவின் Orton Park – Ellesmere சந்திப்புக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொலைச் சம்பம் இடம்பெறுள்ளதுடன், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையினால் இப் பெண் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த பெண்ணின் சகோதரர் மீது இரண்டாம் நிலை கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், டொராண்டோ நகரைச் சேர்ந்த அவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதிலும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், கொலைக்கான காரணங்கள் இதுவரை தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். https://www.thinakaran.lk/2024/10/05/breaking-news/88755/கனடாவில்-யாழ்-பெண்-கொலை-ப/#google_vignette
-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மற்றும் தமிழ் அரசியலின் வகி பாகம் என்ன? - வி.சிவலிங்கம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மற்றும் தமிழ் அரசியலின் வகி பாகம் என்ன? October 5, 2024 — வி.சிவலிங்கம் — நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலும், அதன் முடிவுகளும் புதிய அரசியல் சகாப்தத்தைத் தோற்றுவித்துள்ளன. சுதந்திரத்திற்குப் பின்னதான அரசியல் வரலாற்றில் முதன் முறையாக அதிகார வர்க்கத்திற்கு அப்பால் அரசியல் அதிகாரம் கை மாற்றப்பட்டிருக்கிறது. அதுவும் சாமான்ய குடும்பத்தில் பிறந்து, அதிகாரம் என்பதை சுவைத்து அனுபவிக்காத குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் அதுவும் மிகவும் கொடுமையான ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுத்த அமைப்பினைச் சார்ந்த ஒருவர் மிக நீண்ட போராட்டத்தின் பின்னணியில் இன்று மக்களால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டுள்ளார். இதற்காக அவர்கள் பல சகாப்தங்கள் சளைக்காமல் பல இழப்புகளுக்கு மத்தியில் மக்கள் மத்தியில் செயற்பட்டதன் விளைவே இவ் அதிகார மாற்றம் ஆகும். கோட்பாட்டு அடிப்படையிலான மாற்றங்கள்: ———————————- இத் தேர்தல் முடிவுகளைக் கோட்பாட்டு அடிப்படையில் விபரிப்பதானால் மக்கள் இனவாதம், அதிகாரக் குவிப்புக் கலந்த நவதாராளவாத ஆட்சிக் கட்டுமானத்தை மாற்ற உதவியதோடு, அதன் அடிப்படையில் உருவான பொருளாதாரக் கட்டுமானத்தையும் மாற்றும்படி கோரியுள்ளனர். அவ்வாறாயின் புதிதாக பெரும்பான்மை மக்களால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன முன்னைய பிரதான கட்சிகளை விட முற்றிலும் வேறான அரசியல் மற்றும் பொருளாதாரக் கோட்பாடுகளைக் கொண்டிருப்பதாகவே அடையாளப்படுத்த முடியும். அந்த அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன நவதாராளவாத அரசியல் மற்றும் நவ தாராளவாத பொருளாதாரக் கட்டுமானங்களுக்கு மாற்றாக புதிய சமூக ஜனநாயக அரசியல் கட்டுமானத்தையும், சமூக சந்தைப் பொருளாதாரக் கோட்பாட்டை நோக்கியே தமது கவனத்தைக் குவித்துள்ளதாக கருதலாம். குறிப்பாக இந்த இரு சாராரும் இடதுசாரி மைய விசையைக் ( Centre-left forces) கொண்ட சக்திகளாகவே கொள்ள வேண்டும். இதற்கான நியாயங்களைத் தொடர்ந்து படிக்கும் வேளையில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். அத்துடன் தமிழ் அரசியலின் எதிர்காலத்தை மையமாகக் கொண்டு பார்க்கையில் பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை நோக்கியே மக்களின் எண்ணம் திரும்பியுள்ளது எனலாம். இக் கட்டுரை அகில இலங்கை அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கவனத்தில் கொண்டும், தேசிய ஐக்கியத்தை நோக்கிய பாதையில் நாடு மாற்றத்தை நோக்கி நகர்வதாக கருதுகிறது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த நிலையில் பொதுத் தேர்தலுக்கான திகதியும் வெளியாகியுள்ளது. எனவே ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாக வைத்து பொதுத் தேர்தலுக்கான அணுகுமுறை எவ்வாறு அமைதல் அவசியம்? என்பது குறித்தே இக் கட்டுரை அதிக கவனம் செலுத்துகிறது. தேர்தலும், கொள்கை மாற்றங்களும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி- ஜே வி பி இணைந்த அணி வெற்றி பெற்ற போதிலும் ஐக்கிய மக்கள் சக்தி சகல சமூகங்களினதும் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாக காணப்படுகிறது. அந்த அடிப்படையில் இந்த இரு கட்சிகள் பற்றிய குறிப்பாக அரசியல் தாக்கங்களையும், எதிர் காலம் பற்றிய விபரங்களையும் ஆராய்வது முக்கியமானது. ஜே வி பி- தேசிய மக்கள் சக்தி ஆகியன இணைந்து எவ்வாறு அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்தது? என்பதை நாம் அறிதல் அவசியம். இக் கட்சிகளின் இணைவும், தேர்தல் முடிவுகளும் ஓர் பாரிய மாற்றம் ஒன்றிற்கான ஆரம்பமாகவே உள்ளது. மாக்ஸிச சித்தாந்தத்தினை தனது அரசியல் கோட்பாடாகக் கொண்டிருந்த கட்சி குறிப்பாக மிகவும் அடிப்படை மாற்றங்களைக் கோரி பல இழப்புகளைச் சந்தித்த ஒரு கட்சி இன்று தன்னால் நாட்டின் பிரதான அரசியல் நீரோட்டத்தின் தீர்மானகரமான அரசியல் சக்தியாக தேசிய அளவில் நடைபெற்ற தேர்தலில் தனித்து வெல்ல முடியும் என்பதை நிருபித்துள்ளது. இந்தக் கட்சியின் வெற்றி என்பது நாட்டு மக்கள் கடந்த கால அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் எவ்வளவு வெறுப்படைந்துள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டியது. குறிப்பாக சிறீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன நாட்டின் அரசியலில் பல தசாப்தங்களாக பாரிய தாக்கத்தைச் செலுத்தி வந்தன. ஆனால் இன்று அக் கட்சிகளே நாட்டில் ஊழலையும், பொருளாதார நெருக்கடியையும். வறுமையையும் மக்களுக்கு விட்டுச் சென்றுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் வெற்றி என்பது பரந்த தொழிலாள வர்க்கத்தின் செயற்பாட்டின் வெளிப்பாடே இந்த வெற்றியாகும். அவர்களே பொருளாதார மாற்றம் ஒன்றைத் தரும்படி தேசிய மக்கள் சக்தி மேல் அழுத்தங்களைப் பிரயோகித்தார்கள். நியாயமான விதத்தில் தேசிய செல்வத்தைப் பங்கீடு செய்யுமாறும், ஊழலை ஒழிக்கும்படியும், சமூக நீதியை வழங்குமாறும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும் கோரினார்கள். இத் தேர்தல் முடிவுகள் அவர்களின் குரலாகவே முடிவடைந்துள்ளது. தேசிய மக்கள் சக்தியினர் தமது கூட்டங்களில் பொருளாதார ஏற்றத் தாழ்வை, ஊழலை ஒழிப்பதாக மக்களுடன் ஒரு ஒப்பந்தம் ஒன்றை இத் தேர்தல் மூலம் ஏற்படுத்தியுள்ளனர். ஜே வி பி- தேசிய மக்கள் சக்தி இணைப்பு அமைப்பினர் எதிர்க் கட்சியில் இருந்த வேளையில் அதுவும் மூன்று உறுப்பினர்களே பாராளுமன்றத்தில் இருந்த போதிலும் தமது அரசு பதவிக்கு வந்தால் என்ன செய்வோம்? என்பது குறித்து மிகவும் விரிவாகவே விவாதங்களின்போது முன் வைத்தார்கள். குறிப்பாக, வினைத்திறன் மிக்க பொருளாதார முகாமைத்துவம், அரச கட்டுமானங்களில் சீர் திருத்தம், வெளி நாட்டு முதலீடுகளை ஆகர்ச்சிக்கும் வகையில் உள்கட்டுமான மாற்றங்கள் போன்றவற்றை மேற்கொள்வதாக மக்களுக்கு உறுதியளித்தார்கள். இதுவே இக் கட்சி மீது மக்கள் நம்பிக்கை கொள்வதற்கு காரணமாக அமைந்தது. அத்துடன் நாட்டினை ஓர் கலப்புப் பொருளாதாரத்தின் அடிப்படையில் எடுத்துச் சென்று நாட்டில் ஓர் சோசலிச சமூகத்தைத் தோற்றுவிக்க முடியும் என்பதாக நம்பிக்கை ஊட்டினார்கள். இங்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பணி குறித்து குறிப்பாக சிறுபான்மைத் தேசிய இனங்களின் நம்பிக்கையை அக் கட்சி வென்றுள்ளது. அக் கட்சி தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தித் துறைகளின் வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவித்தார்கள். ஐக்கிய மக்கள் சக்தியினர் இத் தேர்தலில் எவ்வாறு தேசிய சிறுபான்மை இனங்களின் வாக்குகளை அதிகளவில் பெற முடிந்தது? என்பதனை ஆராய்ந்தால் அக் கட்சியினர் முதலில் தேசிய நல்லிணக்கம் தொடர்பாகவும், சிறுபான்மைத் தேசிய இனங்களின் குறிப்பாக தமிழ், முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பாக எடுத்த முடிவுகள் ஒரு வகையில் லிபரல் ஜனநாயக அடிப்படைகளைக் கொண்டுள்ளதாகவும், மத்தியை நோக்கிய பாதையாகவும் சிறுபான்மை இனத்தவர் அடையாளம் கண்டார்கள். குறிப்பாக வரலாற்று அடிப்படையில் தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்ட மக்கள் அதுவும் இனக் குழுமம் மற்றும் மத அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்கான நம்பிக்கையான அணுகுமுறையாக சகல சிறுபான்மைத் தேசிய இனங்களும் உணர்ந்தன. தேர்தல் முடிவுகளை ஆராயும்போது ஐக்கிய மக்கள் சக்தி தன்னைத் தேசிய நல்லிணக்கத்திற்கான சக்தியாக, சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளை அங்கீகரிக்கும் சக்தியாக, ஆட்சியில் சகல பிரிவினருக்குமான வாய்ப்பு உண்டு என்பதை நம்பும் வகையில் கருத்துக்களை முன் வைத்தார்கள். இக் கட்சியினர் தேசிய பொருளாதார வளர்ச்சியில் சாத்தியமான வகைகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த திட்டங்களை முன் வைத்தார்கள். குறிப்பாக பொருளாதார வளர்ச்சியுடன், சமூக பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளையும் தேசிய மக்கள் சக்தியை விட வித்தியாசமான வகையில் முன் வைத்தார்கள். இந்த இரு கட்சிகளினதும் அரசியல் மற்றும் பொருளாதார திட்டங்களை நோக்கும்போது சில அடிப்படைகளில் வித்தியாசமான போக்குகளை நாம் அடையாளம் காண முடியும். உதாரணமாக தேசிய மக்கள் சக்தியின் அணுகுமுறை என்பது தொழிலாள வர்க்கத்தை முதன்மைப்படுத்துவதாக அமைந்திருந்தது. குறிப்பாக கிராமிய ஏழை விவசாய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் அடிப்படை நோக்கத்தைக் கொண்டிருந்தது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியினரின் அணுகுமுறைகள் சிறுபான்மைத் தேசிய இனங்களினதும், நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தின் தேவைகளை உள்ளடக்கியதாக அமைந்தது. வாக்களிப்பு முறை இலங்கையின் வாக்களிப்பு முறை என்பது சமூகம் மிக அதிக அளவில் வர்க்கங்களாக பிளவுற்றிருப்பதையே இத் தேர்தல் உணர்த்தியது. தேசிய மக்கள் சக்தியினர் செல்வத்தை நியாயமான விதத்தில் பங்களிப்பதையும், இதில் அரசின் தலையீட்டின் அவசியம் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது. பதிலாக ஐக்கிய மக்கள் சக்தியினர் உற்பத்தி குறித்தே அதிக கவனம் செலுத்தினர். இக் கொள்கைகள் மத்தியதர வர்க்கத்தினருக்கு உகந்த கொள்கைகளாக அமைந்திருந்தன. இருப்பினும் இனப் பிரச்சனை குறித்த அம்சங்கள் குறிப்பாக பிராந்திய மற்றும் இனக் குழும அடிப்படையில் நோக்கும்போது சிறுபான்மைத் தேசிய இனங்கள் ஐக்கிய மக்கள் சக்தி மேல் தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். வெவ்வேறு பிரதேசங்களில் காணப்பட்ட வாக்களிப்பு விபரங்கள் இவற்றைப் புலப்படுத்தின. இப் பிரச்சனை என்பது மிகவும் உணர்ச்சிகள் கலந்த பிரச்சனை என்பதும், தேசிய மக்கள் சக்தியினர் அதில் மேலும் தெளிவான நிலைப்பாடுகளை எடுத்தல் அவசியம் என்பதையே முடிவுகள் உணர்த்துகின்றன. இனப் பிரச்சனை குறித்து சரியான கொள்கைகளைப் பின்பற்றாவிடில் மேலும் பிளவுகளை அதிகரிப்பதாகவே நிலமைகள் மாறக் கூடும். எனவே தேசிய நல்லிணக்கம், அதிகார பகிர்வு போன்ற அம்சங்களில் தீவிர கவனம் செலுத்துவதன் மூலம் ஓர் நிலையான அரசியல் புறச் சூழலை ஏற்படுத்த முடியும். கூட்டு அரசியலுக்கான அடித்தளங்கள் இத் தேர்தல் முடிவுகள் புதிய அத்தியாயம் ஒன்றிற்கான குறிப்பாக புதிய அரசியல் கூட்டணிக்கான வாய்ப்புகளைத் திறந்துள்ளது. உதாரணமாக, தேர்தல் முடிவுகளை ஆராயும் போது தேசிய மக்கள் சக்தியினர் தமது ஆட்சியை பலமானதாகவும், வினைத் திறன் மிக்கதாகவும் நடத்துவதற்கு அதுவும் பாராளுமன்ற ஆட்சி முறைக்குள் கூட்டணி அவசியமாகிறது. அதே போலவே ஐக்கிய மக்கள் சக்தியினரும் சிறிய கட்சிகளுடன் இணைந்து பரந்த கூட்டணி உருவாக்குவது காலத்தின் தேவையாக மாறியுள்ளது. குறிப்பாக, சிவில் சமூக அமைப்புகள், சிறிய கட்சிகள், நாட்டின் பொருளாதாரத்தில் அக்கறையுடைய வர்த்தக சமூகத்தினது ஆதரவு அவசியமாகிறது. இதன் மூலமே எதிர்கால தேர்தல்களை எதிர் நோக்க முடியும். பொருளாதார முகாமைத்துவம் மற்றும் கொள்கை வேறுபாடுகள் தேசிய மக்கள் சக்தியினர் தற்போது மிகவும் பலமான சவால்களுக்கு முகம் கொடுக்கும் நிலையில் உள்ளனர். மிக அதிக அளவிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கடன், உள்நாட்டு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி மூலப் பொருட்கள் இல்லாமல் தொழிற்சாலைகளை இயக்க முடியாத நிலை, வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறை, உற்பத்திச் செலவு அதிகரிப்புக் காரணமாக விவசாயம் பாதிப்படைந்துள்ள நிலமைகள் எனப் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளப் போகின்றனர். தேர்தலில் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினருக்கான கொடுப்பனவுகள் தேசிய செல்வத்தைப் பகிர்ந்தளித்தல் என்ற அடிப்படையில் பல வாக்குறுதிகள் தேசிய மக்கள் சக்தியினரால் வழங்கப்பட்டுள்ளன. இவ் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதானால் அதிக வரி விதிக்கவேண்டிய நிலை ஏற்படலாம். இவ்வாறு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உள்ளுர் வர்த்தக சமூகமும், வெளிநாட்டு கடன் வழங்குவோரும் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்த வாய்ப்பு உண்டு. இவ்வாறான தருணத்தையே அரசியல் எதிரிகளும் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறான சிக்கலான வேளையில் இரு தரப்பாருக்குமிடையே சம நிலையைப் பேணிச் செல்வது தவிர்க்க முடியாத அம்சமாக மாறலாம். ஐக்கிய மக்கள் சக்தியினர் தம்மை பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்பவர்களாகவும், சந்தை நடிவடிக்கைகளில் சீர் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும், தேசிய உற்பத்தியைத் தூண்டும் விதத்தில் புதிய உற்பத்தியாளர்களை உருவாக்கப் போவதாகவும் தெரிவித்தார்கள். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நிதி முகாமைத்துவம், ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரித்தல், சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தித் துறைகளை விஸ்தரித்தல் என்ற கொள்கைகளை முன்வைப்பதில் அல்லது செயற்படுத்துவதில் கொள்கை வேறுபாடுகள் எழ வாய்ப்பு உண்டு. சிக்கலைத் தோற்றுவிக்கும் அம்சங்கள் மேலே குறிப்பிட்ட அம்சங்களை அவதானிக்கும் போது பொருளாதாரக் கொள்கைகளில் முரண்பாடு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக, வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுதல், தனியார் மயமாக்குதல், சந்தைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் என்பன சிலவாகும். இன்று இந்தியப் பொருளாதாரத்தில் இப் பிரச்சனைகள் மிகவும் உக்கிரமடைந்து வருவதை அவதானிக்கலாம். திறந்த பொருளாதாரம் குறித்து இந்த இரு சாராரும் சந்தேகங்களை வெளியிட்டு வருகின்ற போதிலும் குறிப்பாக தேசிய மக்கள் சக்தியினரின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியினரின் அணுகுமுறைகளோடு முரண்படும் வாய்ப்புகள் உண்டு. உதாரணமாக, ஐக்கிய மக்கள் சக்தியினர் சந்தை விஸ்தரிப்பில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அவ்வாறாயின் சில கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். உதாரணமாக நாடு அதிகளவு கடனில் இருப்பதால் கடன் வழங்குபவர்கள் பல நிபந்தனைகளை விதிக்கலாம். வரிச் சலுகைகள், மற்றும் பல கோரிக்கைகளை முன் வைக்கலாம். இதன் மூலம் இந்த இரு பிரிவினருக்குமிடையே கொள்கை அடிப்படையில் முரண்பாடுகள் தோற்ற வாய்ப்பு உண்டு. தேசியவாதமும், நாட்டின் இறைமையும் இப் பிரச்சனை குறித்து நாம் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகிறது. தேசிய மக்கள் சக்தியினர் இலங்கைத் தேசியத்தின் அடையாளம் குறித்து பல்வேறு கருத்துக்களைக் கடந்து வந்துள்ளனர். குறிப்பாக இலங்கையின் பொருளாதார இறைமையை அந்நிய நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் செல்ல அனுமதிக்க முடியாது என்ற கோட்பாட்டை அடிக்கடி வலியுறுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தேசிய உற்பத்தியின் பிரதான துறைகள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருத்தல் அவசியம் என்கின்றனர். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியினர் நாட்டின் பிரதான துறைகள் சர்வதேச தரத்திற்கு உற்பத்தியை மேற்கொள்ளும் விதத்தில் நவீன மயப்படுத்தப்பட வேண்டுமென வற்புறுத்துகின்றனர். அவ்வாறு நவீன மயப்படுத்த வேண்டுமெனில் அந்நிய நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறாயின் நாட்டின் இறைமை அதிகாரம் என்பது பங்கீட்டு அடைப்படையில் அமைய வேண்டும். ஒரு புறத்தில் தேசத்தின் உற்பத்தித் துறையை பாதுகாத்தல் என்பதும், மறு புறத்தில் அவை வெளிநாட்டு உதவியுடன் நவீன மயப்படுத்தல் என்பதும் மிகவும் சிக்கலான கொள்கைப் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கலாம். இலங்கை உற்பத்திகள் சர்வதேச தரத்தை அடைய வேண்டுமெனில் வெளிநாட்டு தொழில்நுட்ப உதவிகள் இவற்றை எதுவித லாப நோக்கமும் இல்லாமல் இந் நாடுகள் வழங்கப் போவதில்லை. அத்துடன் சீனா அல்லது ரஷ்யா பொன்ற நாடுகளின் உதவிகளைப் பெறுவதாயின் அணிசேராக் கொள்கை என்பது சிக்கலான நிலைக்குள் தள்ளப்படும். நாம் ஒரு புறத்தில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியைக் கொண்டாடுகின்ற போதிலும், அவை அதிகாரக் கட்டுமானத்தை அடைந்ததும் புதிய நிலமைகளைத் தோற்றுவிப்பதால் ஏற்கெனவே தெரிவித்த கொள்கைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த நிர்ப்பந்திக்கின்றன. இவற்றைக் கட்சி அடிப்படையிலான பிரச்சனைகள் என்பதை விட சமூகத்தின் வெவ்வேறு பிரிவினரின் நலன்களின் போட்டியாக அவை மாறிவிடும். இங்கு கட்சி அரசியலை விட தேசிய நலன் முதன்மை பெறுகிறது. விட்டுக் கொடுப்பு என்பது நிர்ப்பந்திக்கப்படுகிறது. கூட்டாட்சியும், கட்டுமான சீர் திருத்தமும் பொருளாதார அடிப்படைகளில் முரண்பாடுகள் எழும்போது அது ஆட்சிக் கட்டுமானத்தை நெருக்கடிக்குள் தள்ளுகிறது. தற்போதுள்ள ஆட்சிக் கட்டுமானம் இவ்வாறான நெருக்கடிகளைச் சமாளிக்கும் அடிப்டையில் மாற்றங்கள் தேவையாகின்றன. பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் சில பிரிவினர் அரசாங்கத்திற்கு சில சமயங்களில் நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தக் கூடும். தேசிய மக்கள் சக்தியினர் இவ்வாறான பிரிவினரின் நிபந்தனைகள், ஊழல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாயின் அரச நிறுவனங்கள் பலப்படுத்தப்படுதல் அவசியமாகிறது. இவ்வாறான சமயங்களில் ஐக்கிய மக்கள் சக்தியினர் வெளிப்படைத் தன்மை, வினைத் திறன் மிக்க பொதுச் சேவை, சட்டப்படியான ஆட்சி என்பவற்றை வற்புறுத்தக் கூடும். எதிர்காலம் எவ்வாறு அமையலாம்? இலங்கையின் சமீப கால அரசியலை நோக்கும்போது அவை ஓர் கூட்டு அரசாங்கமாகவே அமைந்துள்ளன. அவ்வாறான ஓர் கூட்டு அரசு ஒன்றிற்கான அடையாளங்களே தற்போதும் தென்படுகின்றன. நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டு இருக்கையில் கட்சி அரசியலுக்கு முதலிடம் கொடுக்க எந்த ஆட்சியாளரும் விரும்பப் போவதில்லை. தேர்தல் முடிவுகள், கொள்கைகள் அக் கொள்கைகள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகப் பிரிவுகளின் நலன்களும் செயற்பாடுகளும் சமூக முன்னேற்றத்திற்கு அவசியமானவை. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பொதுத் தேர்தல் முடிவுகளைக் கணித்தால் அவை ஆட்சி என்பது நல்லிணக்க கூட்டு அரசாக அமைவதே சாத்தியம் எனக் கருத முடிகிறது. தென் ஆபிரிக்கா 1994 ம் ஆண்டு வெள்ளை இன ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு பெரும்பான்மை கறுப்பு இன மக்களின் அரசாக மலர்ந்தது. அவ் விடுதலைப் போராட்டத்தில் நெல்சன் மன்டெலா தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி தலைமை தாங்கியது. கடந்த 30 ஆண்டுகளாக தென் ஆபிரிக்க பாராளுமன்றத்தில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருந்தது. ஆனால் 2024ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தனது பெரும்பான்மையை இழந்தது. இதற்குப் பிரதான காரணம் ஆபிரிக்க தேசிய காங்கிரசிற்குள் ஏற்பட்ட உள் முரண்பாடுகள், ஊழல், விரயம் அதிகரித்துச் சென்றமையேயாகும். இந் நிலையில் தமது தோல்வியை ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பின்வருமாறு விபரித்தது. அதாவது தேசிய ஐக்கியமும், எதிர்பார்த்த பொருளாதார அபிவிருத்தியும் அடைய முடியாமைக்குக் காரணம் அரசியல் கட்சிகளுக்கிடையே காணப்பட்ட முரண்பாடுகளே எனவும், தேசிய பொருளாதாரத்தை எடுத்துச் செல்வதில் அதாவது முதலாளித்துவமற்ற வளர்ச்சிப் பாதையில் நாட்டை இட்டுச் செல்வதா? அல்லது தாராளவாத பொருளாதார அடிப்படையில் எடுத்துச் செல்வதா? என்ற பிரச்சனைகள் எழுந்த நிலையில் நாட்டின் பிரதான எதிர்க் கட்சியாகிய ஜனநாயக கூட்டணியுடன் ( பெரும்பான்மை வெள்ளை இன மக்களின் ஆதரவுடைய கட்சி) புதிய அரசை உருவாக்கினர். தற்போது அந்த அரசு தேசிய ஐக்கிய அரசு என அழைக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடி பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய அடிப்படையில் அவ்வாறான ஒரு தேசிய அரச உருவாக்கமே இலங்கையிலும் சாத்தியமாகத் தென்படுகிறது. தேசிய மக்கள் சக்தியினர் நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்களினதும், மத்தியதர வர்க்கத்தினரதும் நம்பிக்கையை வெற்றி கொள்வதாயின் ஒரு கூட்டு அரசை தோற்றுவிப்பதன் மூலம் நிலைபேறான ஆட்சியை வழங்க முடியும். ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்க் கட்சியாக அமர்ந்தாலும் தேசிய முன்னேற்றம் குறித்த பிரச்சனைகளில் ஒத்துழைப்பு வழங்கும் விதத்திலான இணைப்பு அவசியம். உதாரணமாக, தேசிய இனப் பிரச்சனை சாத்தியமான விதத்தில் தீர்க்கப்படுவதற்கு இந்த இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தேவையாகிறது. மிக நீண்டகாலப் பிரச்சனையை நியாயமான விதத்தில் அணுகித் தீர்த்தால் பொருளாதாரப் பிரச்சனை தீர்வதற்கான பல கதவுகள் திறக்க வாய்ப்புண்டு. உதாரணமாக தேர்தல் முடிவுகளை ஆழமாக அவதானிக்கும் போது குறிப்பாக 50 சதவீதத்திற்கும் குறைவான மக்களே ஜனாதிபதிக்கு வாக்களித்த நிலையிலும், பெரும்பான்மையான சிறுபான்மை இனத்தவர்களும், மத்தியதர வர்க்கத்தினரும் புதிய ஜனாதிபதிக்கு வாக்களிக்காத நிலையிலும் அனைவரையும் அணைத்துச் செல்லும் அரசியல் அணுகுமுறை மூலமே நிலைபெறான ஆட்சியை நடத்த முடியும் என்பது மிகவும் வெளிப்படை. எனவே கூட்டு அடிப்படையிலான அரசு ஒன்றிற்கான அதாவது சிறுபான்மைத் தேசிய இனங்களினதும், மத்தியதர வர்க்கத்தினதும் நம்பிக்கையைப் பெறும் வகையிலான கூட்டு அரசு தேவையாகிறது. தேர்தல் முடிவுகள் தற்போது புதிய தேர்தல் கூட்டணிக்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிலவும் பொருளாதார சமத்துவமற்ற நிலமையை ஏற்படுத்தவும், ஆட்சி முறையில் பாரிய மாற்றங்களையும் ஏற்படுத்தினால் தேசிய மக்கள் சக்தியின்மேல் தொழிலாள வர்க்கத்தினர் நம்பிக்கை கொள்வார்கள். ஆனால் மறு பக்கத்தில் பொருளாதார செயற்பாடுகள் சிக்கலான நிலமைகளைத் தோற்றுவித்தால் மத்தியதர வர்க்கத்தினரும், நகர்ப்புற தொழிலாளர்களும் ஐக்கிய மக்கள் சக்தியை நோக்கி நகர முற்படலாம். இவை பொதுத் தேர்தலில் பலமான போட்டிக் களங்களைத் தோற்றுவிக்கலாம். எனவே எதிர்வரும் பொதுத் தேர்தல் என்பது எதிர்கால அரசியல் பொருளாதாரப் பாதையை தேர்ந்தெடுக்கும் தேர்தலாக அமையலாம். தேசிய இனப் பிரச்சனை இலங்கை அரசியலில் தேசிய இனப் பிரச்சனை என்பது பிரதான மைய அம்சமாக உள்ளது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஐக்கிய மக்கள் சக்தியினர் தேசிய சிறுபான்மை இனங்களின் பலமான ஆதரவைக் கொண்டிருப்பது புலப்படுகிறது. அந்த அடிப்படையில் தேசிய இனப் பிரச்சனைக்கான நியாயமான தீர்வுகளை எட்டுவதற்கு அக் கட்சி காத்திரமான பங்கினைச் செலுத்த வேண்டும். குறிப்பாக தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாக அல்லது ஐக்கிய மக்கள் சக்தி அரசாக அமைந்தாலும் நிலையான ஆட்சி ஒன்றினைத் தருவதாயின் நாட்டில் இன மற்றும் மத முரண்பாடுகளைத் தணித்தல் அவசியமாகிறது. குறிப்பாக இனியும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்து விடப்பட்டவைகளாக உணரும் நிலை ஏற்படக் கூடாது. தேசிய பொருளாதாரக் கட்டுமானம் தொடர்பான விவாதங்கள் எதிர் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் நிறைந்த அம்சங்களாக மாற வாய்ப்புண்டு. இவையே தேசிய அரசியலின் எதிர்காலப் போக்கினைத் தீர்மானிக்கும். கடந்த காலங்களில் இனவாதம், தேசிய பாதுகாப்பு என்பன தேசிய அரசியலின் போக்கைத் தீர்மானித்தன. தேசிய மக்கள் சக்தியின் பிரதான இலக்குகளான தேசிய பொருளாதார வளர்ச்சி, சந்தைச் செயற்பாடுகளில் நம்பிக்கை கொள்ளுதல் என்பன தேசிய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் பாரிய பங்கினைச் செலுத்தப் போகின்றன. ஒரு புறத்தில் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினருக்கான பாதுகாப்புக் கொள்கைகளுக்கும், பொருளாதார வளர்ச்சியில் சந்தைச் செயற்பாடுகளின் பங்களிப்பிற்குமிடையே மிகக் காத்திரமான பொருளாதார முரண்பாடுகள் தோற்றம் பெற வாய்ப்பு உண்டு. இலங்கையின் எதிர்கால அரசியல் என்பது ஏற்கெனவே குறிப்பிட்ட பிரச்சனைகளில் ஜே வி பி- தேசிய மக்கள் சக்தி எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறது? என்பதிலும் அவ்வாறான நெருக்கடிகளின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளிலும் எதிர்காலம் மிகவும் தங்கியுள்ளது. இவ்வாறான சிக்கலான பின்னணியில் தமிழ் அரசியலின் மூலோபாய தூர நோக்கு என்ன? என்பதே பிரதான கேள்வியாக அமைகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னதான நிலமைகளை அவதானிக்கும் போது தமிழ் பிரதேசங்களிலுள்ள இடதுசாரி மையக் கருத்துகளைக் கொண்டிருக்கும் கட்சிகள், குழுக்கள், இயக்கங்கள், தனி நபர்கள் என்போர் இச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் தற்போது எழுந்துள்ள அரசியல் சூழல் என்பது மிக அபூர்வமாகவே ஏற்படும். பழைய வலதுசாரி இனவாத, ஏகாதிபத்தியசார்பு அதிகார வர்க்க பிரிவினர் நாட்டை மிக மோசமான நிலைக்குள் தள்ளி மக்களை வறுமை நிலைக்குத் தள்ளியதன் விளைவே தற்போதைய புதிய நிலமையாகும். அது மட்டுமல்லாது கடந்த காலங்களில் தமிழ் அரசியல் என்பது முரண்பாட்டை கூர்மைப்படுத்தும் அணுகுமுறையைக் கையாண்டிருந்தது. உதாரணமாக, இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணியாக 1970 ம் ஆண்டு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஐக்கிய முன்னணி அரசு தோற்றம் பெற்றது. தமிழரசுக் கட்சி அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தவில்லை. 1994 இல் சந்திரிகா தலைமையில் அரசு உருவானபோது எடுக்கப்பட்ட முடிவுகள் குறிப்பாக 2000ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசியல் பொதி தமிழரசுக் கட்சியின் ஆதரவு அற்ற நிலையில் தோற்றுப் போனது. அதே போலவே 2015ம் ஆண்டில் மைத்திரி தலைமையில் நல்லிணக்க அரசு தோற்றம் பெற்ற வேளையில் தமிழரசுக் கட்சிக்குள் உள் முரண்பாடுகள் அதிகரித்தன. இவ்வாறு கிடைத்த சந்தர்ப்பங்கள் நழுவ விடப்பட்ட பின்னர் அத் தீர்வுகள் குறித்து குறிப்பாக சந்திரிகா தலைமையில் முன்வைக்கப்பட்ட அரசியல் பொதி பற்றி இன்னமும் சிலாகித்துப் பேசப்படுகிறது. இந்த நிலமைகளைச் சரியாகக் கணித்து எதிர்கால அரசியலுக்கான புதிய பாதையைத் தோற்றுவிப்பதே இந்த இடதுசாரி மைய விசைகளின் பணியாக அமையும். குறிப்பாக இலங்கை முழுவதும் புதிய மாற்றத்தை நோக்கி மக்கள் தயாராவதை அவதானிக்க முடிகிறது. பழைய பிற்போக்கு இனவாத, மதவாத சக்திகளைத் தோற்கடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போலவே இன முறுகல்களைப் பயன்படுத்தி பிரிவினைவாத அரசியலை முன்னெடுக்கும் குறும்தேசியவாத சக்திகளும் தோல்வியடையும் நிலைகள் உள்ளன. மறு புறத்தில் பல அரசியல் கட்சிகள் சமூக ஜனநாயக கோட்பாடுகளை வரித்து இன நல்லிணக்கம், சகல பிரிவினரையும் உள்ளடக்கிய ஆட்சி முறை, மொழி அடிப்படையிலான பாரபட்ச கொள்கைகளை நிராகரிக்கும் போக்கு, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரதேசங்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள், அதிகார பரவலாக்கம் என்பது பற்றி தேசிய அளவில் விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளன. இவ்வாறான விவாதங்கள் முன்னெப்போதும் சிங்களப் பகுதிகளில் நடந்ததில்லை. நிறைவேற்று அதிகாரத்தை எட்டியுள்ள தேசிய மக்கள் சக்தியினர் பிரதேச அபிவிருத்தி, சம அடிப்படையிலான பிரதிநிதித்துவம், சுயாதீன செயற்பாடு என்பவற்றை மிகவும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். சிறுபான்மைத் தேசிய இனங்களின் நம்பிக்கையை வெல்வதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான முன்னெடுப்புகள் என்பது மொழி, மத, இன மற்றும் வர்க்க வேறுபாடுகளைக் கடந்து செல்வதாக உள்ளது. இக் கொள்கைகள் இன்று பலமாக முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்ப் பிரதேச அரசியல் மேலும் மேலும் இன ஐக்கியத்தை நோக்கிய வழியில் திரும்பியுள்ள பின்னணியில், தமிழ் மக்களின் வாக்குப் பலம் படிப்படியாக தேசிய ஐக்கியத்தை வலியுறுத்தும் கட்சிகளை நோக்கிச் சென்றுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன தேசிய நல்லிணக்கத்திற்கான பாலமாக மாற்றமடைந்து வருகின்றன. இவ்வாறான வரலாற்று மாற்றத்தை தமிழ் அரசியலில் உள்ள இடதுசாரி மைய விசைகள் இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு சக்திகளையும் தமது நேச சக்திகளாக மக்கள் கருத வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சமத்துவம், தேசிய செல்வத்தை நியாயமான விதத்தில் பங்கீடு செய்தல் போன்றவற்றில் இணைந்தும், சமூக நீதி, பொருளாதார சமத்துவம், சகலத்தையும் உள்ளடக்கிய அபிவிருத்தி போன்றவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் செயற்பட முடியும். இந்த இரு கட்சிகளும் ஊழலுக்கு எதிராகவும், நியாயமான பொருளாதார வளர்ச்சியை ஆதரித்தும், தேசிய சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தியும், ஓர் ஜனநாயக அரசை தோற்றுவித்தலை வலியுறுத்தியும் செல்கையில் இப் பொதுவான அம்சங்களில் தமிழ் தலைமை தனித்து நிற்பதை விட இணைந்து செல்வதே மேல் என்பதை நாம் உணர வேண்டும். சிறுபான்மைத் தேசிய இனங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான அடையாளங்கள் தென்படும் இவ் வேளையில் குறிப்பாக தமிழ் பிரதேசங்களின் கல்வி, சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் காத்திரமான கரிசனையைக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன தேசிய வளர்ச்சியில் அதிக கரிசனையைக் கொண்டிருக்கும் வேளையில் அதிகார பரவலாக்கம், போர்க்குற்ற விசாரணைகள், காணி அதிகாரம், கலாச்சார சுயாதீனம் என்பவற்றை வலியுறுத்தும் புறச் சூழல் படிப்படியாக ஏற்பட்டு வருகிறது. தேசிய ஐக்கியம், தேசிய அரசுக் கட்டுமானத்தில் சகல தேசிய இனங்களுக்குமான பங்களிப்பு என வற்புறுத்தி வரும் இன்றைய அரசு ஒரு பரந்த தேசிய நல்லாட்சிக் கட்டுமானத்தை நோக்கிச் செல்கையில் அவ்வாறான முற்போக்கான பயணத்தில் ஏனைய தேசிய சிறுபான்மை இனங்கள் இணைந்து கொள்ள மறுப்பதற்கான தடைகள் என்ன? ஓர் காத்திரமான சமூக நீதியை நோக்கிச் செல்கையில் அவற்றைப் பலப்படுத்த தவறுவதன் அடிப்படை என்ன? இலங்கை ஒரு பல் தேசிய இனங்கள் வாழும் நாடு என்பதை ஏற்றுள்ள நிலையில் குறிப்பாக பொருளாதார சமத்துவத்தை வலியுறுத்துவதோடு, தேசிய சிறுபான்மை இனங்களின் பிரச்சனைகளையும் அணுகித் தீர்ப்பதற்கான தருணத்தில் ஐக்கியத்தை நோக்கிய பாதையில் அரசியலை எடுத்துச் செல்வது அத்தியாவசியமானது. இடதுசாரி மைய விசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகள் இந்த ஒட்டு மொத்தமான மாற்றத்தில் ஓர் பரந்த முற்போக்கு அணியைப் பலப்படுத்துவதில் ஈடுபட வேண்டும். குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியிலுள்ள முற்போக்கு மற்றும் இடதுசாரி மையவிசை சக்திகள் வலதுசாரி பிற்போக்கு சக்திகளுக்கு எதிரான இப் போராட்டத்தில் கலந்து பலப்படுத்துவது வரலாற்றுக் கடமையாகும். இவ்வாறான பரந்த இடதுசாரி மைய விசைக் கூட்டணியை தோற்றுவிப்பதன் மூலம் பிளவுபட்டிருக்கும் தமிழ், முஸ்லீம், மலையக தமிழ் கட்சிகளையும் அதே வேளை தேசிய முன்னேற்றத்தில் அதிக கவனத்தைச் செலுத்தும் மத்தியதர வர்க்கத்தினருடனும் இன, மத, வாக்காளர் என்ற எல்லைகளைக் கடந்து இணைய முடியும். இவ்வாறான இணைப்பு என்பது பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தமிழரசுக் கட்சியின் பணி என்ன? தமிழரசுக் கட்சியும் மிக நிர்ணயமான அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 76 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் தேசிய பாதுகாப்பை நோக்கி தமிழ் அரசியல் சென்றிருந்தது. ஆரம்பத்தில் மிதவாதத் தலைமையினாலும் பின்னர் தீவிரவாதத் தலைமையினாலும் வழி நடத்தப்பட்டது. முடிவில் தீவிரவாதத் தலைமையின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் படிப்படியாக வன்முறையை நோக்கி மாறி பாரிய சிவில் யுத்தத்தைத் தோற்றுவித்தது. பல ஆயிரம் மக்களும், கோடிக் கணக்கான சொத்துக்களும், பல லட்சம் மக்களின் இடப் பெயர்வுகளும் தமிழ் தேசியவாதத்தின் விளைபொருளாக அமைந்தன. இன்று தமிழ் தேசியவாதம் என்பது மிகவும் பலவீனமடைந்து கூறுகளாக உள்ளது. இவ்வாறான நிலையைச் சிங்கள பௌத்த பேரினவாதம் தமக்குச் சார்பாகப் பயன்படுத்தியது. தமிழ் பிரதேசங்களில் ராணுவ முகாம்கள், குடியிருப்புகள், குடியேற்றங்கள், நில அபகரிப்புகள், அரச நிறுவனங்களில் தமிழர்களின் பங்களிப்பு அருகிச் செல்லல் என நிலமைகள் நாளாந்தம் அடையாளங்களை இழக்கும் அவதிக்குள் சென்றுள்ளன. இவ்வாறான நிலையில் முதலில் இருப்பதையும் இழக்கும் நிலையை நோக்கி வழுக்கிச் செல்லும் நிலமைகளைத் தடுப்பதாயின் தற்போதுள்ள வாய்ப்பான ஜனநாயக மாற்றங்களை இறுகப் பற்றுவது அவசியமானது. தற்போதைய தமிழ் அரசியல் மிக மோசமான தனிநபர் தாக்குதலாக மாறி பண்பற்ற, நெறி பிசகிய வரலாற்றிற்குள் சென்றுள்ளது. இவ்வாறான நிலையிலிருந்து மாற்றத்தைக் கோரும் வகையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியின் கோரிக்கையை ஏற்று வாக்களித்துள்ளனர். 2015ம் ஆண்டு மகிந்த ராஜபக்ஸ தனது மூன்றாவது பதவிக் காலத்திற்காக நடத்திய ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள, முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் ஒன்றிணைந்து தோற்கடித்தார்கள். அவ்வாறே 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இனவாத ரணில்-ராஜபக்ஸ கூட்டிற்கு எதிராக முழு நாடும் இணைந்து வாக்களித்தது. இன்று தேசிய ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்துள்ளது. தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை வலியுறுத்தியும், தேசிய பொருளாதார வளர்ச்சியை முன் நிறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் மக்கள் வாக்களித்துள்ளனர். இதில் தமிழ் மக்களும் இணைந்துள்ளனர். எனவே தேசிய நல்லிணக்கத்திற்கு ஆதரவான இரு பிரதான சக்திகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் இக் கட்சிகளுடன் நல்லுறவை ஏற்படுத்துவது தமிழரசுக் கட்சியின் பிரதான கடமையாகிறது. குறும் தேசியவாத சகதிக்குள் மக்களை அழைத்துச் செல்லாது தேசிய அடிப்படையிலான மாற்றத்தின் பங்குதாரிகளாக மாற்றுவது தமிழ் அரசியல் தலைமைகளின் பிரதான பணியாகிறது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தல் என்பது தமிழ் அரசியலில் காத்திரமான அடிப்படை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியைத் தோற்றுவிக்க வேண்டும். https://arangamnews.com/?p=11302
-
அம்பாறை மாவட்டத்தில் ஏழு தமிழ் தேசிய கட்சிகள் ஒரே குடையின் கீழ் ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு : காரைதீவில் சிவில் அமைப்பு கூட்டத்தில் தீர்மானம் !
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் மீண்டும் இழக்கப்படும் ஆபத்து!!! October 5, 2024 அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் மீண்டும் இழக்கப்படும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது. 1994 மற்றும் 2020 களில் அம்பாறை மாவட்டத்தில் ஒற்றுமை இன்மையால் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டமை தெரிந்ததே. இம் முறையும் அதே போன்றதொரு துர்ப்பாக்கிய நிலை உருவாகக் கூடிய களநிலவரம் ஒன்று தென்படுகிறது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த வேளையில் அம்பாறை மாவட்டத்தில் மூன்றாவது சமூகமாகவுள்ள தமிழர்கள் ஒரு குடையின் கீழ் போட்டியிட வேண்டும். இன்றேல் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு பிரதிநிதித்தும் இழக்கப்படும் என்று பொதுக் கட்டமைப்பு உட்பட பல சமூக ஆர்வலர்களும் உரத்த குரலில் கருத்தை தெரிவித்துள்ளார் வைத்தனர். இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஆறு தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஓரணியில் போட்டியிடுவதென வியாழக்கிழமை இரவு காரைதீவில் இடம் பெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் 24 மணிநேரத்துள் இலங்கை தமிழரசுக் கட்சி தனிவழி போக தீர்மானித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தங்கள் தலைமையில் ஓரணியில் ஒன்றுசேருமாறு கோரி வேட்புமனு விண்ணப்ப படிவத்தை பெற்றுள்ளது. இந் நிலையில் ஏனைய கட்சிகளும் தனிவழி போனால் சுமார் எட்டு அணிகள் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயமாக பிரதிநிதித்துவத்தை இழக்க செய்யும் என்பதை அனைவரும் அறிவர். பிரதிநிதித்துவம் தான் குறிக்கோள் என்றால் அனைவரும் இதயசுத்தியுடன் ஒரு அணியில் போட்டியிடுமாறு அக்கறையுள்ள சமூக ஆர்வலர்கள் இறுதி நேர கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.supeedsam.com/206392/
-
பார் பெர்மிற் – நிலாந்தன்
பார் பெர்மிற் – நிலாந்தன் அரசுத் தலைவர் அனுர, பார் பெர்மிற் – மதுச்சாலை அனுமதிகள் தொடர்பான விடயத்தைக் கைவிட்டாலும் சுமந்திரன் அதனைக் கைவிட மாட்டார் போலத் தெரிகிறது என்று ஒரு வெளிநாட்டில் வசிக்கும் நண்பர் முகநூலில் எழுதியுள்ளார். அதில் உண்மை உண்டு. தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பகுதியினருக்கு ரணில் விக்கிரமசிங்க மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் அதிகமாக முன்வைத்ததும் அதைப் பிரசித்தப்படுத்தியதும் சுமந்திரனும் அவருடைய அணியினரும்தான். ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தன் வசப்படுத்துவதற்கு அவ்வாறு மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களை வழங்கியதாகக் குற்றஞ் சாட்டப்படுகின்றது. தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே தமது சொந்த மக்களுக்கு மது விற்கிறார்கள் என்பது தமிழ் பொது உளவியலில் தாக்கத்தைச் செலுத்தக்கூடிய ஒரு குற்றச்சாட்டு. சுமந்திரன் அதை நன்கு விளங்கி தனக்கு எதிரான தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக அதனை திட்டமிட்டுக் கட்டமைத்து வருகிறார். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் மதுச்சாலைகளுக்கான அனுமதிப் பத்திரத்தை அல்லது எரிபொருள் விற்பனை நிலையத்துக்கான அனுமதிப் பத்திரத்தை வாங்குகிறார்கள், மதுசாலைகளையும் எரிபொருள் விற்பனை நிலையங்களையும் தாங்களே நடத்துகிறார்கள் அல்லது தங்களுடைய பினாமிகளுக்கு ஊடாக நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு புதியது அல்ல. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீதும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீதும் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஆனால் தொகையாக ஒரு தொகுதி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அவ்வாறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது இதுதான் முதல் தடவை. அவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறுமைப்படுத்தலாம், மக்கள் முன் அம்பலப்படுத்தலாம் அவமானப்படுத்தலாம். அவர்களுடைய வாக்காளர்கள் மத்தியிலேயே அவர்களுடைய மதிப்பைக் குறைக்கலாம். அவர்கள் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதையும் தடுக்கலாம். தமிழ்ப் பொதுப் புத்திக்குள் குடியாமை அதாவது மது அருந்தாமை என்பது ஓர் ஒழுக்கமாக கருதப்படுகின்றது. எனினும் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய பல சான்றோர், துறைசார் நிபுணர்கள் மதுப்பிரியர்களாக இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். இங்கே பிரச்சினை எங்கு வருகிறது என்றால் மக்கள் பிரதிநிதிகள் மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுதான். அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகிய விக்னேஸ்வரன் அதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதன் விளைவாக இப்பொழுது சர்ச்சைகளுக்குள் சிக்கியிருக்கின்றார். ஆனால் குற்றஞ்சாட்டப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அவர் ஒருவர் தான் இதுவரை குற்றச்சாட்டு தொடர்பாக தனது வாக்காளர்களுக்கு தன்னிலை விளக்கத்தை வழங்கியிருக்கிறார். ஏனைய யாருமே அது தொடர்பாக வாய் திறக்கவில்லை. அரசுத் தலைவர் அந்தப் பட்டியலை வெளிவிடும்வரை காத்திருக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் குற்றச்சாட்டுகளில் உண்மை உண்டா இல்லையா என்பதனை தமது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்டு. மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களில் மட்டுமல்ல காசுப் பெட்டி கைமாறியது, கள்ள டீல்கள் செய்தது போன்றவை தொடர்பாகவும் வாய்திறக்க வேண்டும். இவை தொடர்பில் அவர்கள் கள்ள மௌணம் சாதிக்க முடியாது. இவைபோன்ற விடயங்களில் தமது சொந்த மக்களுக்குப் பொறுப்புக்கூற முடியாத அல்லது பதிலளிக்க முடியாத அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கத் தகுதியற்றவர்கள். தென்னிலங்கையில் இப்பொழுது “அனுர அலை” ஒன்று அடிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ் நோக்கு நிலையில் அது மெய்யான மாற்றம் இல்லைத்தான். ஆனாலும் அரசியலில் நேர்மையானவர்களையும் கண்ணியமானவர்களையும் தெரிவு செய்ய வேண்டும் என்ற பொது ஜன விருப்பத்தை அது மீண்டும் அரங்கில் பேசுபொருள் ஆக்கியிருக்கிறது. அந்த அலை தமிழ் மக்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உண்மையானவர்கள், நேர்மையானவர்கள், கண்ணியமானவர்கள் போட்டியிட வேண்டும். குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்களும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியலை தேக்க நிலையில் வைத்திருப்பதற்கு பொறுப்பானவர்களும் போட்டியிடக் கூடாது என்ற கோரிக்கைகள் வலிமையாக மேலெழுகின்றன. பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும், தமது மக்களுக்கு பொறுப்புக் கூறத்தக்க நேர்மையானவர்கள், தகுதியுள்ளவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக மேலெழுகின்றன. இப்படிப்பட்டதோர் பின்னணியில் தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக சுமந்திரன் அணியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு வலிமை உண்டு. தமிழ்ப் பொது புத்தியை பொறுத்தவரை மக்கள் பிரதிநிதிகள் மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றது, அல்லது தமது பினாமிகளின் ஊடாக மதுச்சாலைகளை நிர்வகிப்பது என்பது அவர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கூடியது. ஆனால் தன் அரசியல் எதிரிகளை அவ்வாறு தகுதி நீக்கம் செய்ய முற்படும் சுமந்திரன் அணி அந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தகுதியுடையதா? ஏனெனில் சுமந்திரன் எப்படிப்பட்ட ஒரு அரசியலை செய்கின்றார்? தமிழ் மக்களைச் சிதறடிக்கும் அரசியலைத்தான் அவர் செய்து வருகிறார். அவர் எல்லாவற்றையும் கொட்டிக் குலைக்கிறார். தனது சொந்தக் கட்சியையும் கொட்டிக்குலைக்கிறார். அவரும் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறாத ஒருவர்தான். அதைவிட முக்கியமாக, தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்புத் தொடர்பில் பொறுப்புக்கூறத் தயாரற்ற சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டார். ஜனாதிபதித் தேர்தல் நடந்த பொழுது ஐநா கூட்டத் தொடரும் நடந்து கொண்டிருந்தது. அங்கே போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்தின் அடுத்த கட்டத்தைத் தீர்மானிப்பது தொடர்பில் விவாதங்கள் நடந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் சஜித் பிரேமதாச பொறுப்புக்கூறல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியையும் வழங்கவில்லை. பொறுப்புக்கூறல் எனப்படுவது இறந்த காலத்தில் நிகழ்ந்த குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவது. இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயாரற்ற ஒரு தலைவர் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் எப்படிப் பொறுப்புக் கூறுவார்? இந்த விடயத்தில் பொறுப்புக் கூறத் தயாரற்ற சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்கும் ஒரு அரசியல்வாதி, தமிழ் அரசியலை எங்கே கொண்டு போய் நிறுத்த முயற்சிக்கின்றார்? தமிழ் மக்களுக்கு எப்படிப்பட்ட ஒரு நீதியைப் பெற்றுத் தர முயற்சிக்கின்றார்? பிரதான அரசியல் விவகாரத்தில் தனது சொந்த மக்களுக்குப் பொறுப்புக் கூறாத ஓர் அரசியல்வாதி தனது அரசியல் எதிரிகள் சலுகையாக மதுச்சாலை அனுமதிகளைப் பெற்றது குறித்துக் குற்றம் சாட்டுகிறார். தனது அரசியல் எதிரிகளை சிறுமைப்படுத்தித் தோற்கடிக்க முயற்சிக்கும் அவர் எப்படிப்பட்ட ஓர் அரசியலை முன்னெடுக்கிறார்? தமிழ் மக்களைச் சிதறடிக்கும் ஓர் அரசியலைத்தானே முன்னெடுக்கிறார்? தனது அரசியல் எதிரிகளைக் குற்றஞ் சாட்டுவதன் மூலம் அவர் தன்னை குற்றமற்றவராகக் காட்டப் பார்க்கிறாரா? கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மிதவாத அரசியல் எனப்படுவது குற்றங்கள் மிகுந்ததாக, கண்ணியமற்றதாக, நேர்மையற்றதாக மொத்தத்தில் பொறுப்புக்கூறத் தயாரற்றதாக மாறிவிட்டது. அதற்கு சம்பந்தரும் பொறுப்பு, சுமந்திரனும் பொறுப்பு. சுமந்திரனை குற்றஞ்சாட்டும் ஏனைய தமிழ் அரசியல்வாதிகளும் பொறுப்பு. ஆனால் அதைத் தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரான சக்திகள் மிகவும் தந்திரமாக திட்டமிட்டு பயன்படுத்துகின்றன. எப்படியென்றால், தமிழ் மக்கள் தெரிந்தெடுத்த பிரதிநிதிகளையே அவர்கள் முன் குற்றவாளிகளாகக் காட்டி, சிறுமைப்படுத்தி, கீழ்மைப்படுத்தி தமது சொந்த பிரதிநிதிகளை தமிழ் மக்கள் நம்ப முடியாத ஒரு சூழலை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இது எங்கே கொண்டு போய்விடும்? தமது சொந்தப் பிரதிநிதிகளின் மீது நம்பிக்கையிழந்த மக்கள் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் அலைக்குப் பின் போகக்கூடிய வாய்ப்புகளை அதிகப்படுத்தும். தமிழ் வாக்குகள் தமிழ்த் தேசிய அரசியலுக்கு வெளியே போகும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும். இதை இப்படி எழுதுவதற்காக இக்கட்டுரையானது மதுச்சாலை அனுமதிகளைப் பெற்ற அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தக்கூடாது என்று கூறுவதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. தமது வாக்காளர்களுக்குப் பொறுப்புக்கூறும் தகுதியற்றவர்கள் அனைவரையும் தமிழ் அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். ஆனால் அதனை தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து செய்ய வேண்டும். தமிழ் மக்களை ஒரு இனமாகத் திரட்டுவது; தேசமாகத் திரட்டுவது என்ற நோக்கு நிலையிலிருந்து செய்ய வேண்டும். தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் நோக்கு நிலையிலிருந்து செய்ய முடியாது. தமிழ் மக்களைச் சிதறடிக்கும் அரசியல்வாதிகள் அதைச் செய்வது என்பது தமிழ்த் தேசிய அரசியலை சிதைக்க முற்படும் வெளித் தரப்புகளுக்குத்தான் சேவகம் செய்யும். மாறாக தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் நோக்கு நிலையில் இருந்து தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள நேர்மையற்றவர்கள், கண்ணியமற்றவர்கள், நபுஞ்சகர்கள், நசியல் பேர்வழிகள், வழிந்தோடிகள், டீலர்கள் போன்றவர்களைத் தமிழ்மக்கள் தோற்கடிக்க வேண்டும். https://www.nillanthan.com/6916/
-
அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் மகிந்த ராஜபக்ச
அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் மகிந்த ராஜபக்ச adminOctober 6, 2024 அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என அவா் தீர்மானித்துள்ள நிலையில் தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. சமகால அரசியலில் நிலவும் பாதகமான சூழல், உடல்நிலை, வயது போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த காலங்களில் பல்வேறு இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் அங்கம் வகித்த பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள மைதொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதுடன் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த அரசாங்கமே காரணம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2024/207190/
-
காத்தான்குடியிலிருந்து வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிகள் பாலியல் வன்கொடுமை
காத்தான்குடியிலிருந்து வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிகள் பாலியல் வன்கொடுமை பெற்றோர்களின் தொல்லை தாங்க முடியாது, கொழும்பு சென்று வாழ வேண்டும் என வீட்டை விட்டு வெளியேறிய 14 வயதுடைய இரு சிறுமிகளை விடுதி ஒன்றிற்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்த சென்ற தனியார் பேருந்தொன்றின் நடத்துனர் மற்றும் சாரதி சனிக்கிழமை (5) அன்று கைது செய்யப்பட்டுள்ளனர் . காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய இரு சிறுமிகளின் பெற்றோர்கள் தொடர்ச்சியாக கண்டித்து வருவதன் காரணமாக அவர்களின் தொல்லை தாங்க முடியாது வீட்டை விட்டு கொழும்புக்கு சென்று தங்கி வாழ வேண்டும் என திட்டமிட்ட சிறுமிகள் புதன்கிழமை (02) அன்று காலை பாடசாலை செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்கு சென்று ஓர் இடத்தில் தமது பாடசாலை உடைகளை மாற்றிக்கொண்டு கொழும்பு செல்வதற்காக பஸ் தரிப்பு நிலையத்தில் காத்திருந்துள்ளனர் . இதன் போது அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்து மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்துக்கு வந்த நிலையில் அதன் மூலம் ஓட்டுமாவடிக்கு சென்று அங்கிருந்து கொழும்பிற்கு செல்ல முடியும் என இருவரும் பேருந்தில் ஏறி ஓட்டுமாவடிக்கு செல்ல பிரயாண சீட்டை பெற்றுக் கொண்டுள்ளனர் . பேருந்து வாகரைக்கு சென்றடைந்த நிலையில் , நடத்துனர் நித்திரையில் இருந்த இரு சிறுமிகளிடம் சென்று ஓட்டுமாவடிக்கு ரிக்ட் எடுத்துவிட்டு இறங்காமல் இருந்துள்ளீர்கள் தற்போது வாகரைக்கு வந்துள்ளீர்கள் என கூறியபோது தாங்கள் கொழும்புக்கு போவதாக சிறுமிகள் தெரிவித்த நிலையில், திருகோணமலை சென்று அங்கிருந்து ரயிலில் செல்ல முடியும் நான் ரயிலில் ஏற்றி விடுகிறேன் என நடத்துனர் கூறியுள்ளார் . திருகோணமலைக்கு சென்றடைந்ததும் இரு சிறுமிகளையும் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் , ரயில் கொழும்பு நோக்கி புறப்பட்டு சென்று விட்டது எனவும் இனி கொழும்புக்கு பேருந்துகள் காலையில் தான் இருக்கும் எனவே அதுவரைக்கும் இருவரையும் அறை ஒன்றில் தங்க வைத்து அனுப்புவதாகவும் கூறி விடுதியொன்றில் இரு அறைகளை எடுத்து அந்த சிறுமிகளுடன் நடத்துனரும் சாரதியும் தங்கியிருந்து அவர்களை இரு தினங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையடுத்து இரு சிறுமிகளையும் திருகோணமலையில் இருந்து வெள்ளிக்கிழமை (04) இரவு 10 மணிக்கு காத்தான்குடியில் விட்டு சென்றுள்ளதையடுத்து என்ன செய்வது என தெரியாது சிறுமிகள் வீடுகளுக்கு திரும்பி சென்று தமக்கு ஏற்பட்டதை வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியபடுத்தியதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் திருகோணமலை மற்றும் கல்முனை நாற்பட்டிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 35, மற்றும் 27 வயதுடைய நடத்துனர் மற்றும் சாரதியை கைது செய்துள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய தனியார் பேருந்தையும் கைப்பற்றியுள்ளனர் . கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . https://www.tamilmirror.lk/செய்திகள்/வீட்டை-விட்டு-வெளியேறிய-சிறுமிகள்-பாலியல்-வன்கொடுமை/175-344963
-
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள்!
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள்! Share This : ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பலரின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அக் கட்சி தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி என்பன இணைந்து ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியில் போட்டியிடுகின்றன. குறித்த கட்சியில் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவனேசன் (பவான்), ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் துளசி, கரைத்துறைப்பற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் க.விஜிந்தன், முருங்கன் பகுதி வர்த்தகர் அ.றொஜன், முன்னாள் போராளியான க.ஜசோதினி ஆகியோரது பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ரெலோ மற்றும் புளொட் சார்பாக மேலும் ஒவ்வொருவர் நியமிக்கபடவுள்ளனர். http://www.samakalam.com/வன்னித்-தேர்தல்-தொகுதிய-2/