Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. அலைகளின் நடுவே sudumanal இலங்கை அரசியல் ஜீன் சீக்லர் (Jean Ziegler) அவர்கள் சுவிஸ் இல் ஓர் அறியப்பட்ட இடதுசாரியாவார். பிடல் கஸ்ரோ மரணித்தபோது சுவிஸ் வானொலி அவருடன் ஒரு நேர்காணல் நடத்தியது. அதில் “பிடல் இறந்துவிட்டார். இந்த உலகின் கடைசி புரட்சியாளர் பிடல் என சொல்லலாமா” என கேட்கப்பட்டது. “புரட்சியாளர்கள் ஒவ்வொரு 5 வருடத்துக்கும் பிறப்பதில்லை. பல ஆண்டுகள், சிலவேளை நூற்றாண்டுகள் கூட ஆகலாம்” என்றார். பிடல் கடைசி புரட்சியாளராக இருக்க முடியாது என்றார். அவர் சொன்ன அந்த 5 வருடம் என்பது தேர்தலில் புரட்சியாளர்கள் பிறப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டவே ஆகும். 2019 இல் 3 வீத வாக்குகளை பெற்ற ஜேவிபியின் தலைவர் அநுர 2024 இல் 42 வீத வாக்குளை எடுத்து ஜனாதிபதியாக வருகிறார். இந்த 5 வருடத்தில் அரசியலில் ஜேவிபியோ அநுரவோ அப்படி என்னத்தைத்தான் புரட்டிப் போட்டார்கள், இந்த அலையை உருவாக்க என்றால் பதில் ஏதுமில்லை. 2022 இல் நடந்த அரகலய போராட்டத்தின் காலப்புரட்சியை ஒரு அமைப்பு வடிவம் பெற்றிருந்த ஜேவிபி தன்வசமாக்கியததான் நடந்தது. இந்த அரகலய போராட்டத்தை முன்னின்று நடத்திய சமவுரிமைக் கட்சியும் வெவ்வேறான இடதுசாரிய சிந்தனைக் குழுக்களும் உதிரிகளும் இந்த அமைப்பு வடிவத்தை கொண்டிராததால் அரகலயவில் பங்குபற்றிய ஜேவிபி இந்த தன்வயமாக்கலை நடத்தியது. அதன் வெற்றிதான் அநுரவின் வெற்றி. எனவே அநுர வென்றார் என்பதைவிட, அநுரவை அரகலய ஒரு முன்பாய்ச்சலான வரலாற்றுக் கட்டத்தில் தலைவராக நிறுத்தியிருக்கிறது என்பதே பொருத்தமாக இருக்கும். அரகலய எதிர்த்துப் போராடிய ஊழல் அமைப்புமுறைக்கும் இனவாதத்துக்கும் இடமளிக்க அனுமதிக்கப்படாத வரலாற்றுக் கட்டம்தான் அது. இந்த வரலாற்று நிலைமையை உருவாக்கியது நாட்டை திவாலாக்கிய பொருளாதார நெருக்கடிதான். இந்தக் காரணிகளின் ஒட்டுமொத்தக் குரலாக “முறைமை மாற்றம்” system change என்பதை அரகலய தனது முழக்கமாக முன்வைத்தது. என்பிபி யின் தேர்தல் பிரச்சாரம் இவற்றை மையங்கொண்டிருந்தது, இருக்கிறது, இருக்கிறது. இதே ஊழல் அரசாங்கத்தில் பாராளுமன்றத்திலும் குறுகியகால அமைச்சர் பதவியிலும் பங்குகொண்டவர்கள் ஜேவிபியினர். போரில் பங்குகொண்டவர்கள் அல்லது போரை ஆதரித்தவர்கள். நாட்டுக்குள் இனவழிப்பைச் செய்து வெற்றிகொண்ட போரை பாற்சோறு காய்ச்சி கொண்டாடியவர்களில் இவர்களும் அடக்கம். இந்தப் போர் அதிகாரவர்க்கம் கட்டற்ற ஊழலை செய்யவும் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யவும் பொருளாதார வீழ்ச்சியை துரிதமாக்கவும் இனவாத சிந்தனையை கூர்மைப்படுத்தவும் செய்தது. இவையெல்லாம் நாட்டை பேரழிவுக்குத் தள்ளியது என இப்போ சொல்ல முடிகிற நிலையை அவர்கள் (JVP) அன்று எதிர்த்து நின்று காட்டியவர்கள் அல்ல. அதை அரகலயதான் காட்டியது. எனவேதான் இந்த அரசாங்கத்தை அரகலய ஒரு வரலாற்றுக் கட்டத்தில் நிறுத்தியிருக்கிறது என்கிறேன். இன்று அவர்கள் சொல்லுகிற மாற்றம் என்பதை நிகழ்த்த பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை ஆசனங்களை அவர்கள் பெற வேண்டும் என்பது தர்க்க நியாயமான ஒன்று. அவர்கள் பெறுவார்கள் என்பது என் கணிப்பு. சிறுபான்மை இனங்கள் 2019 இல் ஜேவிபி க்கு அளித்த வாக்குகளை விட பலமடங்கு அதிகமாக அநுராவுக்கு கொடுத்தார்கள் என்பது புள்ளிவிபரம் காட்டும் விடயம். அதை அநுரவே சொல்லியுமிருக்கிறார். எந்த மாகாணங்களில் எந்தக் கட்சி கூடுதலான வாக்குகளைப் பெற்றது என்ற பருமட்டான வர்ண அடையாளமிட்ட வரைபடத்தை வைத்துக் கொண்டு சிங்கள மக்கள் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டனர். சிறுபான்மை இனங்கள் மாற்றத்தை விரும்பவில்லை என முடிவுக்கு வருவது பருண்மையானது. தவறானது. மாற்றத்தை விரும்பாத சாமான்ய அல்லது விளிம்புநிலை மனிதரை எங்காவது காண முடியுமா என்ன. மாற்றத்துக்காக அரகலயவை நடத்தியவர்களில் குமார் குணரட்ணம் தலைமை தாங்கும் சமவுரிமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜேவிபியிலிருந்து தள்ளி நிற்பதையும் இன்னொரு பகுதியினர் நுவான் போகபே அவர்களை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தி வாக்களித்தார்கள் என்பதையும்கூட வசதியாக மறந்து அல்லது மறைத்து எழுதும் ஆய்வுக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும். அவர்களும் மாற்றத்தை விரும்பாதவர்களா என்ன. அதிகாரத்தை சுகிப்பவர்களும் ஊழலில் திளைப்பவர்களும் என வாழ்க்கை நடத்தும் அதிகார சக்திகள் -அவர்கள் எந்த இன, மத, மொழியைச் சேர்ந்தவர்களாயினும்- மட்டுமே மாற்றத்தை விரும்பாதவர்களாக, அதை எதிர்ப்பவர்களாக இருப்பர் என்ற வர்க்க குணாம்சத்தைக்கூட புரியாமல் ஆய்பவர்களுக்கு வரப்போகும் பாராளுமன்றத் தேர்தல் முகத்திலறைந்து ஒரு செய்தியைச் சொல்லத்தான் போகிறது. சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெற சிறுபான்மையின கட்சிகளே நாங்கள் அநுரவின் “மாற்றம்” க்கு ஆதரவாக இருப்போம் என வாக்குக் கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது சிறுபான்மையின மக்களின் வாக்குகள் என்பிபி க்கு திரும்பத் தொடங்கியிருக்கிறதின் அறிகுறி. அப்படி அவர்கள் பெரும்பான்மையாக என்பிபி க்கு வாக்களிக்கிற நிலை வருகிறபோது, ‘திருந்திவிட்டார்கள்’ என்ற ஒற்றைச் சுட்டலானது -சாத்தியப்பாடுகளை முன்வைத்து எழுதவேண்டிய ஆய்வுகளுக்கு ஈடாக- எந்த அரசியல் அர்த்தத்தையும் வழங்காது. மாற்றம் என்பது மாறிவிடலை மட்டும் குறிப்பதில்லை. மாற்றத்தை நோக்கிய வளர்ச்சியையும் குறிப்பது. சிறுபான்மை இனங்கள் மத்தியில் ஜேவிபி க்கான அந்த வாக்கு வளர்ச்சியை புறக்கணித்து மாற்றத்தை விரும்பாதவர்கள் என முத்திரை குத்துவது ஒருவகை அறிவுச் சோம்பேறித்தனம் மிக்கது. தமிழ் மக்களின் வரலாறு குறிப்பாக 30 வருட போர் என்பது அழிவுகளின் வரலாறு. அது ஏற்படுத்திய தாக்கத்தை, தனித்த தேசியக் கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மீதான தயக்கத்தை புறக்கணித்து, ஆதரவு-எதிர்ப்பு என்ற இருமை சிந்தனையோடு அணுக முடியாது. இந்த தயக்கத்தினதும் தாக்கத்தினதும் உளவியல் எல்லா தமிழ்க் கட்சிகளினதும் வாக்குவங்கியை வங்குரோத்தாக விடாமல் வைத்திருக்கிறது. உருப்படியாக எதையுமே செய்யாமல் தமிழ்த் தேசியம் என்ற மந்திரத்தை ஓதி ஓதியே அரசியல் நடத்த அது வசதியாகவும் போய்விட்டது. அது தனியான ஒரு விடயதானம். இப்போ அதிக பெரும்பான்மையை என்.பி.பி எடுக்கிற பட்சத்தில், அது மாற்றத்தை நிகழ்த்துகிற படிமுறைகளில் முன்னேற வேண்டும். ஏனெனில் மக்கள் ஆணை வாக்குகளினால் கொடுக்கப்பட்டுவிடும். அதை அவர்கள் நிகழ்த்துவதில் அரச (state) வடிவக் கட்டமைப்பு எந்தத் தூரம் வரை அரசாங்கத்துடன் (government) பயணிக்கும் என்ற கேள்வி புறக்கணிக்க முடியாதது. 340 கோடி ஊழல் செய்த அர்ஜுன் அலோசியஸ் க்கு (மென்டிஸ் நிறுவனம்) வரி ஏய்ப்புக்காக அரச(state) கட்டுமானத்திற்கள் இயங்கும்- நீதிமன்றம் ஆறே ஆறு மாத கால சிறைத்தண்டனையை வழங்கியிருக்கிறது. இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பதுபோல் புதிய அரசாங்கத்தைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது. ஊழல் செய்வதற்கு எதிரான மனநிலையை அல்லது அச்சத்தை வழங்குவதற்குப் பதிலாக ஊழல் செய்வதற்கு தயங்காத ஒரு மனநிலையை இந்தத் தீர்ப்பு வழங்கக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது. பௌத்த மேலாதிக்க பெரும்பான்மைவாதத்தை அடித்தளமாகக் கொண்ட அரச கட்டமைப்பின் கருத்தியல் அகற்றப்படும் வரை “முறைமை மாற்றம்” என்பது ஒரு ஏமாற்று. சமத்துவம் என்பது ஒரு ஏமாற்று. எனவே அரசாங்கம் ஒரு சமூகநல அரசு என்ற வடிவத்தை நிர்மாணிப்பது முடியுமானதாகலாம். நிர்வாகத்துள் மாற்றம், செயற்திறன், ஊழலின்மை போன்றவற்றை அது சாதிக்கலாம். ஓர் அதிகாரப் பரவலாக்கல் முறைமையை பரீட்சிக்கலாம். முக்கியமாக பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை செயற்படுத்துவதில் அதிக கரிசனம் செலுத்தலாம். நடைமுறையில் வீரியமாக செயற்படலாம். முறைமை மாற்றம் என்பது அரகலயவின் முழக்கம். அதைச் சொல்லியே பாராளுமன்றத் தேர்தலிலும் வென்றபின், எல்லா புழுதிகளும் அடங்கியபின், வரலாறு என்பிபி யை கொணர்ந்து விட்டிருக்கிற இடத்திலிருந்து முன்னோக்கி பயணித்தாலே இந்த முழக்கத்தை தம்மோடு வைத்திருக்க முடியும். இது நடவாதபோது அல்லது முடியாதபோது அந்த தேக்கத்தை வரலாறு உடைக்கவே செய்யும். அந்த முழக்கம் திரும்பவும் மக்களிடமே வந்து சேரும். அரசு கட்டமைப்பையும் அதன் வன்முறை இயந்திரமான இராணுவத்தையும் திருப்திசெய்ய வேண்டிய நிலையின் அறிகுறி ஏற்கனவே தென்பட்ட ஒன்று. போர்க்குற்றத்தை உள்ளக விசாரணை செய்து உண்மையை கண்டறியலாம். ஆனால் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை தண்டிக்க மாட்டோம் என்பதை அநுர தெளிவாகவே சொல்லிவிட்டார். ஈஸ்ரர் படுகொலையின் சூத்திரதாரிகள் அரசியல்வாதிகள் என்பதைத் தாண்டி இராணுவ உளவுப்படையினரும் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது வெளிச் சதியாகவோ சிக்கல் அவிழுமாக இருந்தால் என்ன நடக்கும். இயலாமைகள் அல்லது மாற்றத்திற்குக் குறுக்கே எழும் தடைகளை தாண்ட முடியாத நிலையில் என்ன நிகழும். அதிகாரம் பண்புமாற்றத்தை என்பிபி அரசாங்கத்திடம் ஏற்படுத்திவிடக் கூடுமா, இன்னொரு அரகலய மேலெழும்புமா? அப்படி ஏற்படும் பட்சத்தில் அதை அரச அதிகார நிலையில் நின்று என்பிபி எப்படி கையாளும் என பல கேள்விகளுக்கான விடையை எதிர்காலம்தான் வைத்திருக்கிறது. இந்த 70 வருடகால அரசியல் பாரம்பரியத்துக்கு வெளியே, அரகலய மக்கள் போராட்டம் முன்வைத்த மாற்றம் என்ற புதிய எழுச்சி ஏற்படுத்திய புது நம்பிக்கையை என்பிபி சுமந்து நிற்கிறது. இதில் ஏமாற்றம் நிகழுமாயின் அதன் தாக்கம் மக்களின் உளவியலில் பலமானதாகவே இருக்கும். என்பிபி இதில் வெற்றிபெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது. நமதும்! பிரதமர் ஹரிணி அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவது என்பதைவிட அது அவர்களின் உரிமை என்று சொல்வதே சரியானது என்று தெளிவாக சொன்ன சொற்கள் முளைவிட்டு நிமிர்வதற்குமுன், என்பிபி யின் பொதுச்செயலாளர் சில்வா அவர்கள் “வடக்குக்கு 13ம் சட்டத் திருத்தமும் தேவையில்லை. அதிகாரப் பகிர்வும் தேவையில்லை. பொருளாதார வளர்ச்சியே தேவை” என சொன்னதாக செய்திகள் வந்திருக்கின்றன. அதிகாரப் பகிர்வு என்பது ஜனநாயக முறைமையின் ஒரு செழுமையான அம்சம் என்பதற்கு சுவிற்சர்லாந்து ஓர் அசல் உதாரணம். அது ஒருபுறம் இருக்க, எல்லா முரண்பாடுகளையும் பொருளாதார பிரச்சினைக்குள் உட்படுத்துவதை மார்க்சிய வழித்தோன்றல்களாக தம்மை காட்டிக் கொண்ட ஜேவிபி கூறுவதை ஏற்க முடியவில்லை. இலங்கையை இந்த நிலைமைக்குள் தள்ளிய இனப் பிரச்சினையின் தனித்தன்மையை மற்றைய பிரச்சினைகளுடன் ஒரே சிமிளினுள் அடைத்து முன்பு வர்க்கப் பிரச்சினை மட்டும்தான் என்றார்கள். இப்போ பொருளாதாரப் பிரச்சினை மட்டும்தான் என்கிறார்கள். பொருளாதார நெருக்கடி முதன்மை முரண்பாடாக தோன்றி இனவாதத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியிருக்கிறதே யொழிய நீண்ட வரலாறும், செயற்பாடும், பொது உளவியலும் கொண்ட இனவாதத்தை ஒரு தேர்தலால் அடித்து வீழ்த்த முடியும் என்பது 5 வருடங்களுக்கு ஒருமுறை புரட்சியாளர் தோன்றுவர் என எதிர்பார்ப்பதற்கு ஒப்பானது. * 19102024 ravindran pa https://sudumanal.com/2024/10/19/அலைகளின்-நடுவே/#more-6566
  2. இராஜபக்சக்களின் பின்வாங்கலும் ரில்வின் சில்வாவின் நேர்காணலும் ஐ.நாவின் அபிவிருத்திக்குழுவின் வருகையோடு தேர்தல் திருவிழா சூடு பிடித்துள்ளது. இந்த ஜனநாயகச் சடங்கில் வசைபாடலும், குழிபறித்தலும், அணி சேர்தலும், கோட்பாட்டு மோதலும் முதன்மை பெறுவதைக் காண்கிறோம். தமிழ்த் தேசியத்தை காப்பாற்ற வேண்டுமென்கிற முழக்கம் சகல மேடைகளிலும் எதிரொலிக்கிறது. ஒட்டாத குழுக்கள் அனைத்தும் தேச விடுதலை பற்றி பேசாமல். தேர்தலில் எத்தனை ஆசனங்களை கைப்பற்றுவது என்கின்ற இலட்சியத்தோடு இயங்குகின்றன. தற்போதைய சூழலில் தேர்தல் வெற்றிக் கணக்குகள், விருப்புவாக்கு தெரிவுகள் குறித்தே பரவலாக ஆராயப்படுகிறது. தமிழர் தாயக கணிப்புகள் பல, வன்னி மாவட்டத்தில் செல்வமும் ,காதர் மஸ்தானும் வெற்றி பெறுவார்கள் என கட்டியம் கூறுகின்றன. ஏனைய மாவட்டங்களில் எவரையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாதென்கிறார்கள். மலையகத்தில் அனுஷா சந்திரசேகரன் , வடிவேல் சுரேஷ் , ஜீவன் தொண்டைமான் மற்றும் திகாம்பரம் ஆகியோர் முன்னிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது. வடக்கு -கிழக்கு தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரை திருக்கோணமலையிலும் அம்பாறையிலும் 'மோதல் தவிர்ப்பு' உடன்பாடு காணப்பட்டு தமிழரசுக் கட்சி போட்டியிடுகிறது. சங்கின் உறுப்பினர்களும் திருக்கோணமலை வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திராவும் திசைகாட்டிச் சின்னத்தில் இறங்குவதால் போட்டி பலமான இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரண்டு உணர்திறன் மிக்க இடங்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற முன்னிற்கும் தமிழ்த் தேசியவாதிகள், ஏனைய மாவட்டங்களில் ஏன் ஒன்றிணையவில்லை என்கிற ஆதங்கம் மக்களிடம் உண்டு. இனி தமிழர் தாயக அரசியலுக்கும் தென்னிலங்கை அரசியலுக்குமான மோதல்கள் ,முரண்பாடுகள் குறித்து பார்ப்போம். இளையோர் பார்வையானது அநுராவின் ' தேசிய மக்கள் சக்தியின் மீது குவிவதை தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் எச்சரிக்கை உணர்வோடு அவதானிக்கின்றன. இதன் எதிர்வினை அரசியலாக, 'வடக்கு கிழக்கு ஊழல் அரசியல்வாதிகளை அநுராவால் அம்பலப்படுத்த முடியுமா?' என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ' 'மதுபானசாலை அனுமதிப்பத்திர பட்டியலை (பார் லைஸென்ஸ்) அநுர வெளியிடுவாரா ? ' என்று சுமந்திரனும் கூறத் தொடங்கியுள்ளனர். உண்மையிலேயே சகல மட்ட ஊழல்களையும் அநுர அரசு அம்பலப்படுத்த வேண்டுமென்பதே மக்களின் பெருவிருப்பாகும். 2015 இல் உருவாக்கப்பட்ட 'நல்லாட்சி' அரசின் மத்திய வங்கி கடன் முறி ஊழல் பற்றிய விசாரணைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெறுமதி சேர் வரி (வாட் வரி)3.5 பில்லியன் ரூபாவை செலுத்தாத மூவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். 'நுணலும் தன் வாயால் கெடும்' என்பதைப் போல, அநுர அரசிற்கு சவால் விடுத்த உதய கம்மன்பிலவிடமே , அதற்கான ஆதாரங்களை வெளியிடச் சொல்லி விஜித ஹெரத் எச்சரித்துள்ளார். திங்களன்று வருமென்கிறார் கம்மன்பில. பார்ப்போம் . இராஜபக்சக்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்தாலும், அக்குழுவின் இணை அனுசரணையாளர்களான கம்மன்பிலவும், விமல் வீரவன்சவும் தமது அரசியல் கருத்துக்களை உதிர்த்தவண்ணமுள்ளனர். இருப்பினும் இராஜபக்சக்களின் 'ஈரடி பின்னால்' நகர்வில் ஒரு அரசியல் தந்திரம் மறைந்திருப்பதாக ஊடக நண்பர் ஒருவர் தனது ஆய்வு நிகழ்வொன்றில் குறிப்பிட்டிருந்தார் . சனாதிபதி தேர்தலில் அநுர தரப்பினரால் கட்டமைக்கப்பட்ட ' இராஜபக்ச எதிர்ப்பு' பிம்பத்தை நாடாளுமன்றத் தேர்தலில் வலுவிழக்கச் செய்ய, இராஜபக்சக்கள் போட்டியிடவில்லை என்பதே நண்பரின் வாதம். குறைக்கப்படும் வாக்குகள் சஜித் பக்கம் கணிசமான அளவில் திரும்பும் என நண்பர் எதிர்பார்க்கின்றார். இது அநுராவின் வாக்குகளை உடைக்கும் மஹிந்தரின் தந்திரமாக இருக்கலாம். ஆனாலும் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வருவதன் ஊடாக, கடந்த ஆட்சியாளர்களை அரசியல் ஊடக வெளியில் முக்கிய பேசுபொருளாக வைத்திருக்கிறது தேசிய மக்கள் சக்தி. ஆகவே இராஜபக்சக்கள் தற்காலிகமாக ஒதுங்கினாலும் அநுராவின் கிடுக்கிப்பிடி, தேர்தலின் பின்னரும் தொடரும் வாய்ப்புகள் அதிகம் போல் தெரிகிறது . அடுத்ததாக ஜே. வி .பி இன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்கள் வழங்கிய நேர்காணலொன்று, தமிழ் ஊடகப் பரப்பில் பலத்த விவாதமொன்றினை ஏற்படுத்தியுள்ளது . அதுபற்றி பேசாமல் கடந்து செல்ல முடியாது. ' அடித்தட்டு தமிழ் மக்களின் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினையே' என்று கூறும் சில்வா , ' அம்மக்களுக்கு 13 அல்லது அதிகார பகிர்வு என்ற பிரச்சினை இல்லை ' என்கிறார். ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சி வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களையும் பாதிக்குமென்பது உண்மை. தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினையை அவர் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார் என்பதை அந் நேர்காணலே எடுத்தியம்புகிறது. ஆனாலும் இடதுசாரி கருத்தியலை வரித்துக்கொண்ட தோழர் டில்வின் சில்வா அவர்கள், ஒரு தேசிய இனத்தின் அரசியல் உரிமையினை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார் ?. அரசியல் உரிமை மட்டுமல்ல.... பொருளாதாரத்தை பங்கிடும் இறைமையுடன் கூடிய உரிமையும் மக்களின் பிரச்சினைதான். இவர்களுக்கும் நம்மவர்களுக்கும், இந்த இரண்டையும் இணைத்து முன்னெடுக்கும் அரசியல் புரிய வேண்டும். இனப்படுகொலையை எதிர்கொண்ட தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமையைப் புறந்தள்ளி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. வல்லரசுக் கழுகுகள் வட்டமிடுகின்றன. அவதானம் தேவை. மக்களோடு பேசுங்கள். அவர்களே தமக்கான அரசியல் தீர்வு எதுவென்று சொல்வார்கள். இதயச்சந்திரன் https://oruvan.com/sri-lanka/2024/10/19/the-retreat-of-the-rajapaksas-and-an-interview-with-rilvin-silva
  3. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தமிழ் மக்களுக்கான தீர்வாக ஆக்குவதற்கு முயற்சி : யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு October 19, 2024 தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும் அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும். மாறாக ஊழல் எதிர்ப்பு கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் என யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் ஒன்றிய பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது, சிங்கள – பௌத்த பேரினவாதம் முழுவீச்சில் செயற்படுவதற்கான வாய்ப்புக்களைப் பொருளாதார நெருக்கடி தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ள நிலையில் சிங்கள மக்கள் மாற்றமொன்றினை எதிர்பார்த்து வாக்களித்துள்ளனர். எனினும் சிங்கள மக்களின் வாக்களிப்பு முறைக்கு நேர்மாறாக வாக்களித்ததன் மூலம் எம்மிடையே நிலவுவது பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல என்பதை தமிழ் மக்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். 15 ஆண்டுகளாக தலைமைத்துவ வெற்றிடம் நிலவும் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தெற்கில் ஏற்பட்டுள்ள ஊழலற்ற ஆட்சி, இளையோர்களின் அரசியற் பங்கேற்பு உள்ளிட்டவைகளின் தாக்கம் உணரப்படாமலுமில்லை. தமிழ்த் தேசிய சித்தாந்தத்தை சமூக, பொருண்மிய, பண்பாட்டுத் தளங்களில் மக்களுக்கானதாகக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் எந்த முனைப்பையும் காட்டாத தமிழ்த் தேசிய முலாம் பூசிய அரசியல்வாதிகள், அரசியற் கட்சிகள் மீதான பெரும் அதிருப்தி வெகுவாக மக்கள் மத்தியில் உணரப்பட்டு வருகின்றது. தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் ஏற்பட்ட அலையில் தமிழ் மக்களிடையே குறிப்பாக இளையோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த கரிசனை தமிழ்த் தேசிய அரசியற்பரப்பில் தவிர்த்துப் புறமொதுக்க முடியாதவொன்றாகும். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும், அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும். மாறாக ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர். மேலும், மாற்றம், ஊழல் இளையோர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும் எனும் தென்னிலங்கையின் கவர்ச்சி அரசியலினால் வடக்கு – கிழக்கில் நடைபெறும் தொடர் ஆக்கிரமிப்புக்களை மழுங்கடிக்கப்படுவதும் அதன் மூலம் தென்னிலங்கைத் தரப்புக்களிற்கும், அரசியல் வேலைத்திட்டங்கள் ஏதுமின்றிய சுயேட்சைகளிற்கு வாக்களிப்பதும் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான பயணத்தை சீர்குலைக்கும் ஒன்றாகும். திம்புக் கோட்பாடுகளைப் புறமொதுக்கி தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களிற்கு முற்றிலும் முரணான “இமயமலைப் பிரடகணம்” எனும் பெயரில் தமிழ் மக்களை அரசியல் சூழ்ச்சியொன்றினுள் தள்ளும் முயற்சியென்றும் இடம்பெறுகின்றதென்றும், அது சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தமிழ் மக்களுக்கான தீர்வாக ஆக்குவதற்கு முயற்சிப்பதோடு, தமிழ் மக்களின் இறைமை அரசியலை தனியே அடையாள அரசியலினுள் சுருக்குவதற்கான கபட முயற்சியென்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கண்டனம் தெரிவித்தனர். https://www.ilakku.org/13ஆவது-அரசியலமைப்புத்-திர/
  4. சிறீதரன் வெற்றி பெற்றால் ”ஒழுக்காற்று விசாரணை” வெற்றிக்கு வேட்டு வைக்கும் - ப.கஜதீபன் இலங்கை தமிழரசுக்கட்சியில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் சிறீதரன் வெற்றி பெற்றால் பதவி பறிக்கப்படலாம் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர் ப.கஜதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தமிழரசுக் கட்சியில் சிறீதரன், மாவை சேனாதிராஜா, ஸ்ரீநேசன் உள்ளிட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளுக்காக கட்சியால் கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. அதை எங்களால் உறுதி செய்ய முடியும். நீங்கள் தமிழரசுக் கட்சியின் கொள்கை முடிவுகளை மீறி இருக்கின்றீர்கள். அப்படி செய்ய முடியாது என்பது தொடர்பாக அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கட்சியின் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம் விளக்கம் கோரியிருக்கிறார். இதனால் தமிழரசுக் கட்சியில் இருக்கின்ற பிரச்சினைகள் உலகறிந்தது. இதில் நீதிமன்ற வழக்குகள் பிரசித்தமானது, தொடர்ச்சியாக வழக்குகள் போடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன . அதனால் தேர்தலுக்குப் பின்னர் நடக்கக்கூடிய சம்பவங்கள் மிக வேடிக்கையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகின்றோம். இந்த ஒழுக்காற்று விசாரணையின் ஊடாக அனேகமாக பலர் ஓரங்கட்டப்பட்டிருக்கின்ற நிலையில் சிறீதரன் மாத்திரம் உள்வாங்கப்பட்டிருக்கிறார்.சில வேளைகளில் சிறீதரன் தங்களுடைய வேட்பாளர்கள் அத்தனை பேரையும் விட வாக்குகளை கவரக்கூடியவராக இருப்பார் என அவர்கள் நினைத்திருக்கக்கூடும். அதன் அடிப்படையில் அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார் என நாங்கள் நம்புகின்றோம். எனவே சிறீதரன் வெற்றிபெற்றாலும் தேர்தலுக்குப் பிறகு அநேகமாக நான் நம்புகின்ற ஒரு விடயம் ஒழுக்காற்று விசாரணை மூலமாக அதைக் கிடைக்காமல் செய்யக்கூடும் என்பதுதான் என்றார் https://akkinikkunchu.com/?p=295898
  5. இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை ”அதிகாரப்பகிர்வையும், 13ஆவது திருத்தச்சட்டத்தையும் வடக்கின் அரசியல்வாதிகள் கோரவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்டகாலமாக எமது மக்களின் கோரிக்கையும், அபிலாசையுமாகும். அரசியலமைப்பின் அங்கமாக உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறே நாம் கோருகிறோம்.” - இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ”இந்தியாவை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் செயல்பட பார்க்கிறது. ஆனால், இந்தியாவுடன் அனுசரித்து செல்வதே அவர்களுக்கு நல்லதாக இருக்கும் எனவும் செல்வம் அடைக்கலநாதன், எச்சரிக்கை விடுத்தார். அதிகாரப்பகிர்வு மற்றும் 13ஆவது திருத்தச்சட்டங்களை வடக்கின் அரசியல்வாதிகளே கோருகின்றன. மாறாக மக்கள் அல்ல என அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, தெரிவித்திருந்தார். இது தொடர்பில் 'ஒருவன்' பத்திரிகைக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியதுடன், மேலும் அவர் வலியுறுத்தியதாவது, ”அபிவிருத்தி என்பது மக்களுக்கு முக்கியம். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயத்தை இல்லையெனக் கூற முடியாது. 13ஆவது திருத்தச்சட்டம் மாகாண சபை முறைமைகளுக்காக அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பொன்றின் ஊடாக மாகாண சபை முறையை இல்லாதொழிக்க முடியும். ஆனால், இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எமது மக்கள் இனப்பிரச்சினையாலும் போராளும் பாதிக்கப்பட்ட மக்கள். அவர்கள் வெறும் அபிவிருத்தியை மாத்திரம் எதிர்பார்ப்பதாக ரில்வின் சில்வா கருத கூடாது. வடக்கின் அரசியல்வாதிகள்தான் அதிகாரப்பகிர்வை கோருவதாக கூறுவது பிழையான கருத்தாகும். அரசியலமைப்பில் உள்ள விடயத்தைதான் நாம் கோருகிறோம். இதில் அரசியல்வாதிகளை தொடர்புப்படுத்துவது தவறு. இது எமது உரிமையாகும். 13ஆவது திருத்தச்சட்டம் என்பது இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகதான் அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்பட்டது. இதனை இல்லாதொழிக்க முற்படுவது இந்தியாவுக்கு எதிரான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும். புதிய அரசாங்கத்துக்கு இந்தியாவை அனுசரித்து போக வேண்டிய தேவை உள்ளது. அண்டைய நாடாக உள்ள இந்தியாவை எதிர்த்துவிட்டு எதனையும் செய்ய முடியாது. இவர்களுடைய கருத்துகள் 13ஆவது திருத்தச்சட்டத்தை புதிய அரசியலமைப்பில் இருந்து இல்லாதொழிக்கும் வகையில் உள்ளது. ஆனால், இந்தியாவை பகைத்துத்கொண்டு இவர்களால் நகர முடியாது.” என்றார். https://oruvan.com/sri-lanka/2024/10/19/nothing-can-be-done-against-india-selvam-adhikalanathan-warns
  6. இறுதி தீர்வு சர்வஜன வாக்கெடுப்பினூடாகவே தீர்மானிக்கப்படவேண்டும்: தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்து http://www.samakalam.com/wp-content/uploads/2024/10/TMK-Manifesto.jpg இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச ரீதியான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்த வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணி 2024 ஆம் ஆண்டுக்கான தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது. இலங்கையில் எத்தகைய ஒரு தீர்வு தமக்கு வேண்டும் என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்கும் வகையில் சர்வதேச சமூகம் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த விஞ்ஞாபனம் அத்தகைய ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றபோது இருக்கக்கூடிய பல தெரிவுகளில் தமிழ் மக்கள் கூட்டணி வலியுறுத்திவரும் ‘கூட்டு சமஷ்டி’ அடிப்படையிலான தீர்வும் ஒரு ஒரு தெரிவாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. இறுதி தீர்வு சர்வதேச ரீதியான சர்வஜன வாக்கெடுப்பொன்றின் ஊடாக தீர்மானிக்கப்படவேண்டும் என்றும் கூட்டு சமஷ்டி அடிப்படையிலான தெரிவின் அடிப்படையிலேயே தீர்வு அமையவேண்டும் என்பதும் தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாடு என்றும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் குறிப்பிடப்பட்டிருந்தமை கவனிக்கத்தக்கது. கட்சியின் இந்த நிலைப்பாட்டினை கட்சியின் தலைவர் நீதியரசர் சி. வி விக்னேஸ்வரன் கடந்த 4 வருடங்களாக பாராளுமன்றத்திலும் சர்வதேசமாட்டங்களிலும் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதேவளை, இம்முறை தேர்தலில் யாழ் மாவட்டத்தில் மட்டும் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணி, அரசியல் அனுபவம் மிக்க இளையோர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் ஆளுமையுள்ள பெண்களை கொண்ட அணி ஒன்றை வேட்பாளர்களாக முன்னிறுத்தியுள்ளமை பலரதும் வரவேற்பை பெற்றுள்ளது. http://www.samakalam.com/இறுதி-தீர்வு-சர்வஜன-வாக்/
  7. தமிழ் மக்களை சீரழித்த தமிழ்த்தேசியக் கட்சிகள் October 18, 2024 — கருணாகரன் — பாராளுமன்றத் தேர்தல் தமிழ்பேசும் சமூகங்களைத் தடுமாற வைத்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டதையும் விட தேசிய மக்கள் சக்திக்கான (NPP அல்லது AKD) ஆதரவு அலை அதிகமாகக் காணப்படுகிறது. யாரைப் பார்த்தாலும் தேசிய மக்கள் சக்தி (NPP அல்லது AKD) யைப் பற்றியே பேசுகிறார்கள். “மாற்றத்துக்கு ஒரு வாய்ப்பளித்தால் என்ன?“ என்று கேட்கிறார்கள். இது தமிழ்த்தேசியவாதச் சக்திகள் சற்றும் எதிர்பார்த்திருக்காத நிலையாகும். இப்படியொரு பேரலை வந்து தம்மைத் தாக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. இந்த அதிர்ச்சி இரண்டு வகைப்பட்டது. ஒன்று, தேசிய மக்கள் சக்தி என்பது இடதுசாரித்தனமுடையது என்பதால், அதை ஏற்றுக் கொள்வதில் உள்ள தயக்கம். ஏனென்றால் தமிழ்ப் பெருந்திரளுக்கு இடதுசாரிகள், மாக்ஸிஸ்டுகள் என்றால் எப்போதுமே சற்றுக் கசப்பும் இளக்காரமுமுண்டு. அதனால் இடதுசாரிகளைத் தள்ளித் தூரத்தில் வைத்துக்கொள்வார்கள். அதை மீறித் தேசிய மக்கள் சக்தியின் பக்கமாக மக்கள் திரும்புவதை எப்படி ஏற்றுக் கொள்வது, அனுமதிப்பது என்ற சிக்கல். இரண்டாவது, தேசமாகத் திரள்வோம், தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்துவோம், தமிழ்த் தேசியக் கூட்டுணர்வை திரட்டுவோம் என்பதற்கு மாறாக – அதை விட்டு விலகி, தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரள்வது. இதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் – எதிர்ப் பரப்புரையைச் செய்ய முடியாமல் தடுமாறுகின்றன தமிழ்த்தேசியத் தரப்புகள். இப்போதுள்ள நிலையில் வடக்குக்கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கும் தமிழ்த்தரப்புகளுக்குமிடையில்தான் போட்டி. அதிலும் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தியே வெற்றி வாய்ப்பை அதிகமாகக் கொண்டுள்ளது. மட்டக்களப்பு, வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய தேர்தல் மாவட்டங்களில்தான் தேசிய மக்கள் சக்தி – ஐக்கிய மக்கள் சக்தி – தமிழ்த்தேசியத் தரப்புகள் ஆகியவற்றுக்கிடையிலான முத்தரப்புப் போட்டியுண்டு. இந்தப் போட்டிக் களத்தைச் சமாளித்து வெற்றியடைவதற்கு தமிழ்த்தேசியவாதச் சக்திகளிடத்தில் எந்தக் கைப்பொருளுமில்லை. மெய்ப்பொருளும் கிடையாது. இதேவேளை தேசிய மக்கள் சக்தியும் எதிர்பார்த்திராத ஒரு ஆதரவு நிலையை வடக்குக் கிழக்கில் பெற்றுள்ளது. அது வடக்குக் கிழக்கில் தன்னுடைய செல்வாக்குப் பரப்பைச் சரியாக விரிக்காமலே, தன்னுடைய வேலைத்திட்டங்களையும் ஆட்களையும் உருவாக்காமலே பெறுகின்ற ஆதரவாகவும் வெற்றியாகவும் இருக்கப்போகிறது. இதற்குக் காரணம், கேள்விக்கிடமில்லாத வகையில் தமிழ்த்தேசியவாதச் சக்திகள் நடத்திய பொய் (மாயை) அரசியலின் விளைவேயாகும். தமிழ்த்தேசியவாத சக்திகளின் பலவீனம் தேசிய மக்கள் சக்திக்கான வாய்ப்பை அளித்துள்ளது. இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், அதை தமிழ்த்தேசியவாத சக்திகள் வேறுவிதமாக உணர்ந்திருந்தன. தேசிய மக்கள் சக்தியை விட அரச ஆதரவுத் தரப்புகளான ஐ.தே.க அல்லது பொதுஜன பெரமுன அல்லது சு.க போன்றவைதான் தமக்குச் சவாலாக இருக்கும் என. அல்லது, அவற்றின் ஏஜென்டுகளாகத் தொழிற்படும் தமிழ்ச் சக்திகளே தமிழ்த்தேசிவாத சக்திகளுக்குப் போட்டியாக இருக்கும் என. என்பதால்தான் அவை முன்னேற்பாடாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்த முற்பட்டதாகும். இப்பொழுது நிலைமை முற்றிலும் வேறாகி விட்டது. அது யாராலும் கட்டுப்படுத்த முடியாத, கையாளவே முடியாத கட்டத்துக்குச் சென்று விட்டது. இனி நடப்பதைக் காண வேண்டியதுதான் என்ற கட்டத்துக்கு வந்திருக்கிறது. இந்த நிலைக்குக் காரணம், 2009 க்குப் பிறகு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் (தமிழரசுக் கட்சி) அதிலிருந்து பிரிந்து சென்ற பிற தரப்பினரும் மக்களுக்கான அரசியலைச் செய்யவே இல்லை. இவை செய்ததெல்லாம் அரச எதிர்ப்பை மையப்படுத்திய வெறும் வாய்ச்சவாடல் அரசியல்தான். அடுத்தது, தமக்கிடையிலான உள்மோதல். வாய்ச்சவாடல் அரசியலை தேர்தற் பரப்புரை தொடக்கம் பாராளுமன்றம், மாகாணசபை, உள்ளுராட்சி மன்றம் வலையில் தொடர்ந்தனர். போதாக்குறைக்கு ஊடக அறிக்கைகளிலும் ஊடகச் சந்திப்புகளிலும் அவற்றை நிகழ்த்தினர். அதற்கு அப்பால் மக்களுடைய பிரச்சினைகளுக்கான போராட்டங்களில் இவற்றின் பங்கேற்பு குறைவு. அல்லது இல்லை எனலாம். தொடக்கத்தில் சில போராட்டங்களில் தலையைக் காட்டினார்கள். காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுடைய போராட்டம், மீள்குடியேறும் மக்களுடைய போராட்டம் (வலி வடக்கு – கேப்பாப்பிலவு) நில அளவீட்டுக்கு எதிரான போராட்டம், அரசியற் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம், நில அபகரிப்பு – பௌத்த மயமாக்கலுக்கு எதிரான போராட்டம் போன்றவற்றில். இது கூட சம்பிரதாயமான எதிர்ப்பாக – பங்குபற்றுதலாக – இருந்ததே தவிர, இவற்றைத் தீவிரப்படுத்தி, மக்கள் போராட்டமாக எந்தச் சக்தியும் முன்னெடுக்கவில்லை. அதற்கான உழைப்போ, அர்ப்பணிப்போ எந்தத் தரப்பிடமும் இருக்கவில்லை. எந்த அரசியல்வாதியும் போராட்டங்களின் அடையாளமாக முகிழ்க்கவில்லை. இதனால் இவர்கள் தேர்தற் காலங்களில் முன்மொழிந்த எந்தப் பிரச்சினைக்கும் தீர்வைக்காண முடியாமற்போய் விட்டது. பதிலாகப் புதிய பிரச்சினைகள் உற்பத்தியாகின. ஆக எதிர்ப்பு அரசியல் என்பது சனங்களுக்கு நெருக்கடியைத் தரும் ஒன்றாக மாறியதே தவிர, அரசுக்கு அது எந்த நெருக்கடியையும் நிர்ப்பந்தத்தையும் வழங்கவில்லை. மட்டுமல்ல, இந்தத் தரப்புகள் சொன்னதைப்போல பிராந்திய சக்தியாகிய இந்தியாவையோ சர்வதேச சக்திகளான சீனா மற்றும் மேற்குலகத்தையோ வென்றெடுக்கவும் இல்லை. சீனாவுடன் தமிழ்த்தேசியத் தரப்புகள் நேரடியாகவே மோதிக்கொண்டன. எனவே எதிர்ப்பு அரசியலில் மக்கள் ஏமாற்றமே அடைந்தனர். அதாவது தமிழ்த்தேசிய அரசியலில் சலித்தனர். யாரை நம்புவது? யாரை ஏற்றுக் கொள்வது? என்று பகிரங்கமாகவே பலரும் சொல்வதைக் கேட்கலாம். மாற்றுத் தெரிவுகள் இல்லை என்ற நிலையில்தான் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழரசுக் கட்சியையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் மக்கள் தெரிவு செய்தனர் – ஏற்றனர். இனியும் அதைச் செய்ய முடியாது என்பதே மக்களின் இன்றைய நிலைப்பாடாகும். ஆனால், இதைக் கவனத்திற் கொள்ளத் தயாரற்ற தமிழ்த்தேசியவாதச் சக்திகள், இன்னொரு நிலையில் இதை – இந்தப் பலவீனத்தை – மறைத்துக் கொள்வதற்கும் தமக்கிடையில் அதிகாரத்தை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கும் தமக்குள் மோதிக் கொண்டன. இதற்காக அவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். ஒரு கட்டத்தில் இது வளர்ச்சியடைந்து இரண்டு அணிகளாகத் தோற்றம் கொண்டது. ஒரு அணி அரச சார்பு அல்லது மென்னிலை அரச எதிர்ப்பு அணியாகவும் மறு அணி அரச எதிர்ப்பு – தீவிர அணியாகவும் மாறியது. அதற்குள்ளும் உப அணிகள் உண்டு. ஆனாலும் இரண்டு வகையான போக்குகளே பெரிதாக அடையாளமாகின. சம்மந்தன், சுமந்திரன் போன்றோர் அரச ஆதரவாளர்களாக – துரோகிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். மறு தரப்பினர் தம்மைத் தியாகிகளாகக் காட்ட முற்பட்டனர். ஜனாதிபதித் தேர்தல் வரையிலும் இந்தக் காட்சிப்படுத்தல்தான் நடந்தது. ஏன் இப்போதும் அப்படியான ஒரு தோற்றப்பாட்டை முன்வைத்தே தமிழ்த்தேசியவாத அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. ஆக எப்போதும் கதாநாயகன் – வில்லன் என்ற வகையிலான அரசியலையே தமிழ்த்தரப்பு முன்னெடுத்தது. 1. தமிழ்த்தேசியவாதத் தரப்பு எதிர் அரசு மற்றும் சிங்களத் தேசியவாதம். 2. அரச ஆதரவுத் தமிழ்த்தேசியம் அல்லது மென்னிலைத் தமிழ்த்தேசியம் எதிர் தீவிர நிலைத் தமிழ்த்தேசியம். இதைச் சூடேற்றும் அரசியல் எனலாம். அதாவது எப்போதும் ஊடகங்களிலும் பொதுவெளியிலும் தம்மை – தமது குரலைப் பேசுபொருளாக (விவாதப் பொருளாக) வைத்துக் கொள்வதே இதனுடைய உத்தியாகும். இதனால் என்ன பயன் விளைகிறது என்பதையிட்டு இவர்களுக்கு எந்தக் கவலையும் இருக்கவில்லை. எத்தகைய அக்கறைகளும் இருந்தது கிடையாது. இதனால் இதற்கு அரசியற் பெறுமானங்கள் எதுவும் இல்லை. என்பதால்தான் மக்கள் இவற்றை – இவர்களை நிராகரிக்க முற்பட்டுள்ளனர். இதேவேளை இந்த அரசியலை முன்னெடுத்தவர்கள் கண்முன்னே பிரமுகர்களாகி வளர்ச்சியடைந்தனர். சொத்துகளைச் சேர்த்தனர். உலகச் சுற்றுப்பயணங்களைச் செய்தனர். இறுதியில் சாராயக்கடைகளை அரசிடம் சலுகையாகப் பெற்று அதை விற்பனை செய்வது வரையில் சென்றனர். பதிலாக இனவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளும் மக்களும் வரவரப் பலவீனப்பட்டனர். ஒருசாரார் இது சரிப்படாது என உணர்ந்து நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்தனர் – புலம்பெயர்ந்து கொண்டுள்ளனர். இவையெல்லாம் மக்களுக்குக் கடுமையான ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தின. இதனால் இந்தச் சக்திகளின் மீது சனங்கள் வெறுப்படைந்துள்ளனர். இந்த வெறுப்பை தேசிய மக்கள் சக்தி அறுவடை செய்கிறது. இன்னொரு நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த ஆதரவைப் பெறும் நிலை உண்டு. ஐக்கிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரையில் அது மட்டும்தான் தமிழ் பேசும் சமூகங்களை வெளிப்படையாக ஆதரித்தும் அரவணைத்தும் செல்லும் தரப்பாக தற்போதுள்ளது. அதனால், அதற்கும் ஒரு ஆதரவுத் தளம் காணப்படுகிறது. சற்றுச் சிந்திக்கக் கூடியவர்கள், தேசிய மக்கள் சக்திக்கு முழுமையான ஆதரவை அளிப்பது அதனைக் கேள்விக்கிடமில்லாத வகையில் பலப்படுத்தி, அதிகாரத்தின் உச்சத்துக்குக் கொண்டு போய் விடும். அதற்குப் பிறகு, அதனைக் கட்டுப்படுத்தக் கூடிய பலமோ வல்லமையோ நாட்டு மக்களுக்கு இல்லாமற் போய் விடும். ஆகவே அதைச் சமனிலைப்படுத்தக் கூடிய அளவுக்கு ஒரு பலமான எதிர்க்கட்சி (கீரைக்கடைக்கும் ஒரு எதிர்க்கடை) வேண்டும் என்று கருதுகிறார்கள். இது ஏற்றுக் கொள்ளக் கூடியதேயாகும். ஏனெனில், வரலாற்றில் எப்போதும் கேள்விக்கிடமில்லாத அதிகாரம் விளைக்கின்ற அநீதி எளிதாக இருப்பதில்லை. அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னே முற்போக்கு – ஜனநாயக சக்திகளாகத் தம்மைக் காட்டிக் கொண்ட தரப்புகள், அதிகாரக் கட்டிலில் ஏறிய பின்னர் நடந்து கொண்ட கசப்பான வரலாற்று அனுபவங்கள் ஏராளமுண்டு. என்பதால் சமனிலைப்படுத்தக் கூடிய ஒரு தேர்வை மக்கள் செய்ய வேண்டும். அதற்கு தமிழ்த்தேசியவாதச் சக்திகள் மட்டுமல்ல, முஸ்லிம் தேசியவாதக்கட்சிகளிடத்திலும் பலவீனமான நிலையே உண்டு. ஆகவே இதையெல்லாம் கடந்து ஒரு வலுச் சமநிலையைக் காணக்கூடிய அரசியற் தெரிவை மக்கள் செய்வதற்கு யார் வழிகாட்டுவது? அது நாட்டுக்குச் செய்யும் பெருந்தொண்டாகும். அதுவே தமிழ் மக்களுடைய – அவர்களுடைய தேசிய இருப்புக்கும் உதவும். https://arangamnews.com/?p=11339
  8. எண்ணிக்கையில் முன்னணியில் நிற்பவர்களை கடைசி நிமிடத்தில் வெல்வேன், சும் ஸ்டைல்😂🤣
  9. வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு! எதிர்வரும் பொதுத்தேர்தலில் வீடு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் அரசுக் கட்சியினால் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் 15க்கு குறையாமல் ஆசனங்களை வென்றெடுக்க முடியும் என அக்கட்சியின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதேவேளை, சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமது கூட்டணி இவ்விரு மாகாணங்களிலும் மொத்தமாக 6 - 8 ஆசனங்களை வெல்லும் என எதிர்பார்ப்பதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளதாகவும், இம்முறை தேர்தலில் தமது கட்சி 10க்கு குறையாத ஆசனங்களைப் பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். பொதுத்தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் மற்றும் வேட்புமனுத்தாக்கல் என்பன கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் நாடளாவிய ரீதியில் தமது தேர்தல் பிரசாரப்பணிகளை முன்னெடுத்துவருகின்றன. அந்த வகையில், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அவர்களது தேர்தல் பிரசார நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் வடக்கு மற்று கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களில் இருந்தும் நாடாளுமன்றத்துக்குப் பிரதிநிதிகளை அனுப்பக்கூடிய கட்சியாக தமிழ் அரசுக் கட்சி இருப்பதாகவும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் தம்மால் 15க்கு மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றமுடியும் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உள்ளடங்கலாக ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் தமது பிரசாரங்களின்போது பெரும்பாலும் 'ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சங்கு சின்னத்தைக் களவெடுத்துவிட்டது' என்ற விடயத்தையே கூறிவருவதாகவும், இது அக்கட்சிகள் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைக் கண்டு அச்சமடைந்திருப்பதையே காண்பிப்பதாகவும் சங்கு சின்னத்தில் போட்டியிடும் தர்மலிங்கம் சித்தார்த்தன் சுட்டிக்காட்டியுள்ளார். (ச) https://newuthayan.com/article/வடக்கு_-_கிழக்கில்_15ஆசனங்கள்_உறுதி-_சுமந்திரன்_தெரிவிப்பு!
  10. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு? adminOctober 18, 2024 சர்ச்சைக்குரிய வாகன மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் உள்ளகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுக்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக செயல்பட்டு வந்தாலும் அவர் தொடர்பில் எந்தவொரு தகவலும் இதுவரையில் கிடைக்கவில்லை. சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தங்கியிருந்த வீடு மற்றும் அவர் தங்கியிருக்கும் ஏனைய இடங்கள் அனைத்திலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என காவற்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வாகன உதிரி பாகங்களை இரகசியமாக இறக்குமதி செய்து அவற்றை பயன்படுத்தி பி. எம்.டபிள்யூ. கார் ஒன்றை தயாரித்துப் பயன்படுத்தியதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த கார் பதிவு செய்யப்படவில்லை என்றும், அது போலி எண் மூலம் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த கார் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வாகன தரிப்பிடத்தில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இரகசிய காவற்துறையினர் மூலம் கைப்பற்றப்பட்டது. ‘டாக்சி அபே’ எனப்படும் காமினி அபேரத்ன ஹில்டன் ஹோட்டலுக்கு முன்பாக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட காரை கைவிட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காரில் இருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமான ஆவணங்களும் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/207625/
  11. போட்டியை நடத்தும் கந்தப்புவுக்கு நன்றி பல🙏🏽 தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி உள்ள அறிவும், தரவும் இலங்கை அரசியலைப் பற்றி இல்லை! அதிலும் குறிப்பாக மக்களின் நாடிப்பிடிப்பை உணர்த்தும் நம்பகமான கருத்துக்கணிப்பு இல்லை. ஆனாலும் போட்டியில் கட்டாயம் கலந்துகொள்வேன்😀 யாழ் களப் போட்டியில் நான் வெல்வது சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வெல்வது மாதிரித்தான் இருக்கும்😆
  12. விசேட உரையில் ரணில் என்ன கூறினார்? இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (17) தெரிவித்துள்ளார். கொழும்பு, மால் வீதியிலுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த இலக்கை எட்டுவதற்கு ஒவ்வொரு வருடமும் ஒரு வீத பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, பொறுப்புகளில் இருந்து தட்டிக்கழிக்காத அனுபவமிக்க அணியே அடுத்த பாராளுமன்றத்திற்கு தேவை எனவும் வலியுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டை மீட்டெடுக்க தன்னுடன் இணைந்து செயற்பட்ட குழுவினர் சிலிண்டர் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, நிதி அதிகாரத்தை வைத்திருக்கும் பாராளுமன்றம் வலுவாக இருக்க அந்த குழு வெற்றி பெற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, “கடனைச் செலுத்த முடியாமல் திவாலாகிவிட்டதாக அறிவித்தபோது நான் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றேன். அந்த நேரத்தில் எனது முதன்மை நோக்கம் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதும் திவால்நிலையைத் தவிர்ப்பதும் ஆகும். அதற்காக எமக்கு கடன் வழங்கிய பதினெட்டு நாடுகளும், தனியார் பிணை முறியாளர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இரண்டு வருடங்களில் உடன்படிக்கைக்கு வந்தோம். அதன்படி, நமது கடன் செலுத்தும் காலத்தை நீடித்து பின்னர் நமது நாட்டை திவால் நிலையில் இருந்து மீட்பது குறித்தும் ஒரு உடன்பாட்டை எட்டினோம். இந்த நடைமுறைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தனியார் பிணை முறியாளர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. நாம் ஏற்படுத்திய அமைப்பு காரணமாக, இப்போது வெளிநாட்டு வங்கிகளுடன் கொடுக்கல் வாங்கல்களை செய்ய முடியும். வெளிநாட்டு உதவியும் கிடைக்கும். எங்கள் கடன் நிலைத்தன்மையின் காரணமாக திவால்நிலை இப்போது முடிந்துவிட்டது. நாடு திவாலானதால் பிணை எடுப்புப் பங்கிற்கு கடந்த நாடாளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றினேன். நாட்டை வங்குரோத்திலிருந்து மீட்கும் பணிகளுக்காக நான் கடந்த பாராளுமன்றத்துடன் இணைந்து செயற்பட்டேன். எனக்கு உதவிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நான்றியை தெரிவித்துக்கொள்கிறேன் அந்த பாராளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றிய எனது அதிகாரிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது நாம் அந்த நிலைத்தன்மை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இது தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி திருத்தங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், திருத்தப்பட்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நாட்டில் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவது புதிய பாராளுமன்றத்தின் பொறுப்பு. நிலைத்தன்மையை செயல்படுத்துவதற்கும் அதை அடைவதற்கும் எங்களிடம் பல இலக்குகள் உள்ளன. முதலில் 2028ஆம் ஆண்டிலிருந்து கடனை அடைக்க வேண்டும். 2027-க்குள் நமது அரசின் வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாக இருக்க வேண்டும். இப்போது அந்த எண்ணிக்கை 12 சதவீதமாக உள்ளது. அந்த இலக்கை அடைய, ஒவ்வொரு ஆண்டும் ஒரு சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டும். அடிப்படையில், இந்த ஆண்டு இறுதிக்குள், 2019ன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மீண்டும் பெற முடியும். அதே சமயம் அன்னியச் செலாவணி கையிருப்பையும் அதிகரிக்க வேண்டும். அந்த அந்நியச் செலாவணி கையிருப்பு 10-14 பில்லியன் டொலர் வரம்பில் இருக்க வேண்டும். இந்த இலக்குகளை அடைந்த பிறகு, கடனை அடைக்க வேண்டும். இந்தக் காலத்திற்குள் நாம் மேற்கூறிய இலக்குகளை அடைய வேண்டும். அதற்கு விரைவான வளர்ச்சியை உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் பலவற்றை செயல்படுத்துவதாகும். இந்த அனைத்து விடயங்களுக்கும் பாராளுமன்றமே பொறுப்பு. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்படி, நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. எப்படியாவது புதிய பாராளுமன்றத்தின் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமானால் கடந்த பாராளுமன்றத்தில் பெற்ற அனுபவத்தை நிறுத்த வேண்டும். அதாவது கடந்த பாராளுமன்றத்தில் இந்தப் பொறுப்புகளை ஏற்க எவரும் முன்வரவில்லை. நான் வந்து மொட்டு கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை கூட்டி வந்து இந்த அரசாங்கத்தை அமைக்க உழைத்தேன். அடுத்த நாடாளுமன்றத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க அனுமதிக்கக் கூடாது. இந்த நாடாளுமன்றத்தில் மூன்று முக்கிய குழுக்கள் உள்ளன. அந்த மூன்று குழுக்களில் ஒரு குழுவை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நான் சிலிண்டர் சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன். மொட்டு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, புதிய கூட்டணி என அனைத்துக் குழுக்களும் ஒன்றிணைந்து எனக்கு ஆதரவளித்தன. இவர்கள் எனது தலைமையின் கீழ் பணியாற்றினர். இப்போது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். அந்த எம்.பி.க்களில் ஒரு பகுதியினரும் என்னுடன் பணியாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பகுதியினரும் இணைந்து இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்கள் புதிய ஜனநாயகக் கட்சியின் மூலம் தங்களை முன்வைக்கின்றனர். எனது தலைமையில் இந்த தேர்தல் பணியை செய்ய உள்ளனர். இவர்களுக்கெல்லாம் அந்த அனுபவம் உண்டு. இந்தப் பணியைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக என்னுடன் பணியாற்றியவர்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட அனுபவம் உள்ளவர்கள் எனவே அவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத்தில் இருந்தாலும் சரி, இந்த அனுபவம் இல்லாமல் நாடாளுமன்றத்தை நடத்த முடியாது. பின்னர் அவர்கள் இலக்குகளை அடைவதில் தோல்வியடைகிறார்கள். எனவே மொட்டு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எமக்கு ஆதரவளித்த ஐக்கிய தேசியக் கட்சியில் செயற்பட்டவர்கள், புதிய கூட்டணியின் ஏனைய கட்சிகள் என அனைவரும் எமது வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றனர். மேலும், முன்னதாக வாக்களிக்காதவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன். நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்கு இந்த அனுபவம் வாய்ந்தவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். உங்கள் எதிர்காலத்தை புதிய பாராளுமன்றம் தீர்மானிக்கும். இந்தப் பணியை வெற்றிகரமாகச் செய்தால் நாடாக மீண்டு வரலாம். தவறினால் நாடு மீண்டும் அழியும். மீண்டும் வரிசையில் நிற்கும் காலத்திற்கு நகரும். எனவே, சிலிண்டருக்காக அனைவரும் தங்களது பெறுமதியான வாக்குகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/விசேட-உரையில்-ரணில்-என்ன/
  13. தேர்தலுக்கு பிறகு தமிழரசுக் கட்சி புத்துணர்வுடன் புதுப்பொலிவு பெறும் பெயருக்கு நடிப்புக்கு நாடகத்துக்கு எங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை. சேவை செய்யக்கூடியவராகயிருக்க வேண்டும், உறுதியானவராகயிருக்கவேண்டும், அடுத்த கட்டத்திற்கு தமிழ் தேசியத்தினை வழிநடத்தக்கூடியவராகயிருக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசனை வெற்றி பெறச்செய்வதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய பணிகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று(15) மாலை வவுணதீவில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மண்முனை மேற்கு கிளையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு கிளையின் தலைவர் பி.கோபாலபிள்ளை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன் உட்பட கிளை உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், இலங்கை தமிழரசுக் கட்சி நீண்டகாலத்திற்கு பின்னர் தனித்துவமாக இந்த தேர்தலில் போட்டியிடும் நிலைமை இருக்கின்றது. தேர்தலில் நிச்சயமாக இலங்கை தமிழரசுக் கட்சி மூன்று ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு இருக்கின்றது. அந்த மூன்று ஆசனங்களை பெறுவதுதான் நோக்கம் அல்ல. ஆசனங்களை பெறுவதில் அந்த ஆசனத்தில் வரக்கூடியவர்கள் யார் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும். இலங்கை தமிழரசுக் கட்சியின் இன்று பல்வேறுபட்ட இன்னல்கள், பிளவுகள் சட்டங்கள் வழக்குகள் என்று போடப்பட்டிருக்கின்றது. நேற்று ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.இந்த காரணங்களை நாங்கள் பார்க்கின்ற போது அதிலே நேர்மையானவர்கள், உண்மையானவர்கள், உறுதியானவர்கள் பற்றாளர்கள் அந்த கட்சியிலே இல்லாததன் காரணமாக இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் இலங்கை தமிழரசுக் கட்சி மாத்திரம் வெற்றி பெறக் கூடாது . இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து செல்கின்ற உறுப்பினர்கள் உறுதியானவர்களாக உண்மையானவர்களாக நேர்மையானவர்களை நாங்கள் இனங்காணவேண்டும். நான்கு உறுப்பினர்கள் இந்த மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டது 2004 ஆம் ஆண்டு மாத்திரம் தான் இருந்தது. அதில் தான் நான்கு பேர் நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டோம். அடுத்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒருவர் ஐந்து பேர் நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக சென்ற வரலாறு இருக்கின்றது. அதற்குப் பிறகு மூன்று கட்சி, இரண்டு கட்சியிலிருந்து கடந்த தேர்தலில் நான்கு கட்சியிலிருந்து வந்திருக்கின்றோம். வழிநடத்தக் கூடியவர்கள் ஒரு கட்சியில் இருந்தால் மாத்திரம் தான் அந்த கட்சி சிறப்பாக அமையும்.மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றம் செல்வது அவசியமாகும். அதன்காரணமாகவே சிறிநேசன் அவர்களை வெற்றிசெய்யவேண்டும் என்று உழைக்கின்றோம். பெயருக்கு நடிப்புக்கு நாடகத்துக்கு எங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை. சேவை செய்யக்கூடியவராகயிருக்கவேண்டும், உறுதியானவராகயிருக்கவேண்டும், அத்தகட்டத்துக்கு தமிழ் தேசியத்தினை வழிநடத்தக்கூடியவராகயிருக்கவேண்டும். நான் இலங்கை தமிழரசுக் கட்சியில் ஆயுட்கால உறுப்பினர். நான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தேன். உங்களுக்கு தெரியும் நான் கொள்கை ரீதியாக நான் கட்சி ரீதியாக நான் எப்பொழுதும் சொல்கின்ற விடயம் என்னவென்றால் கட்சியில் நிலைப்பாட்டில் எனக்கு ஒரு கொள்கை இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் பலரின் வேண்டுகோளை நான் சேர்ந்து தமிழ் தேசியத்தின் கொள்கையின் அடிப்படையில் தான் நான் இங்கு சென்றிருந்தேன். ஆனால் இப்பொழுது எனக்கு விளக்கம் கோரப்பட்டிருக்கின்றது. விளக்கம் கோரப்பட்டாலும் நான் இலங்கை தமிழரசுக் கட்சியிலே நான் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கின்றேன். இலங்கை தமிழரசுக் கட்சிக்காக நான் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றேன். விளக்கங்களை பற்றி நான் சிந்திப்பவன் அல்ல.ஆனால் இலங்கை தமிழரசுக்கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவேண்டுமானால் கட்சியினை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லக் கூடிய,தலைமைப் பொறுப்பினை ஏற்ககூடியவர்கள் வரவேண்டும். இன்னும் பல்வேறுபட்ட விடயங்கள் எங்கள் கட்சிக்குள் இருந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறு இருந்தாலும் கூட நாங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியை காப்பாற்ற வேண்டிய நிலையில் நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம். இந்த தேர்தலுக்கு பிறகு நிச்சயமாக இலங்கை தமிழரசுக் கட்சி ஒரு புத்துணர்வுடன் ஒரு புது பொலிவுடன் அங்கே செல்ல இருக்கின்றது. அதிலே பல மாற்றங்களை இலங்கை தமிழர் கட்சியில் காண இருக்கின்றது. அபிவிருத்தி என்பது மிக முக்கியமாகயிருக்கின்றது.நல்லாட்சியில் அதிகளவான கோடி பணங்களை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவந்தவர் சிறிநேசன் தான். மட்டக்களப்புக்கு அவர் கொண்டு வந்தாலும் கூட மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்று பாருங்கள். நிதிகளுக்காக மக்கள் வாக்களிப்பதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றது.தமிழ் தேசிய அரசியலை நன்றிக்கடனுக்காக பாவிக்கவேண்டாம். யார் வந்தாலும் நிதி வரும். அதை பெறுகின்ற தைரியம் அந்த அந்த இடத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்காக கிடைக்கும் அது எங்களுக்கு வந்து சேரும். அவர் செய்கின்றார், இவர் செய்கின்றார் அபிவிருத்தி தான் எங்கள் நோக்கமாக இருந்தால் எங்கள் அபிலாசைகள் அடிபட்டு போய்விடும். நாங்கள் பல்லாயிரக்கணக்கான மாவீரர்களை ஆகுதியாக்கிய மண் இந்த மண். அவர்களின் தியாகங்களுக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் தியாகங்கள் எழ வேண்டும் என்பதற்காகத்தான் நான் ஜனாதிபதி தேர்தலில் கூட நான் ஒரு தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட்டு இரண்டு லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளை எடுத்து நான் உலகத்துக்கு காட்டி இருக்கின்றேன் என்றால் அந்த தமிழ் தேசியம் இந்த மண்ணிலே வடகிழக்கிலே தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றது என்று அதற்கு பிறகு வந்த இந்த தேர்தலிலும் நாங்கள் அதனை வெளிப்படுத்தவேண்டியுள்ளோம். மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை எடுக்க வேண்டும். நாங்கள் நான்கு பாராளுமன்ற உறுப்பினரை எடுப்பது என்பது நல்ல விஷயம். 2004 ஆம் ஆண்டு போன்று இரவு பகலாக நாங்கள் உழைத்து ஒரே கட்சிக்கு நாங்கள் வாக்களிப்போமாகயிருந்தால் இருந்தால் நான்கு பேரை நாங்கள் எடுக்கலாம். நான்கு பேரை நாங்கள் இலக்கு வைத்தாலும் நிச்சயமாக மூன்று பேரை நாங்கள் பெறாவிட்டால் எங்கள் முயற்சி என்பது அடிபட்டு போய்விடும். இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கின வரலாற்றிலே இரண்டு பாராளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்புக்கு தந்த ஒரு அவல நிலை கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்டது. 2004 இல் நாங்கள் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர் நான்கு பேர் தெரிவுசெய்யப்பட்டு தேசியப் பட்டியலில் யோசப் பரராஜசிங்கம் ஐயா தெரிவு செய்யப்பட்டதன் மூலம் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர் சென்றோம். 2010ஆம் ஆண்டு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்,2015ஆம் ஆண்டு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றோம்.2020ஆம் ஆண்டு மட்டும் ஏன் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் வந்தார்கள் என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும். 2020ஆம் ஆண்டு அனைத்து கட்டமைப்புகளும் இருந்தன.பிரதேச சபைகள்,மாநகரசபைகள் இருந்தன. அனைத்து பகுதிகளிலும் வேலை செய்த போதிலும் நல்லாட்சி அரசாங்கத்திலே நாங்கள் செய்த சில நடவடிக்கைகளில் அதிருப்திகளினால் பழிவாங்கப்பட்டது. ஆகவே இந்த விடயங்களை நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆளுங்கட்சியிலே பலமானவர்கள் ஆளுங் கட்சியிலே போட்டியிடக்கூடிய சூழ்நிலை இருந்தாலும் கூட அவர்கள் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பில்லை. ஏனென்றால் இப்பொழுது இருக்கின்ற ஜனாதிபதி மாற்றம் என்பது எல்லோரையும் அழைத்து பதவி கொடுக்கின்ற ஜனாதிபதியாக அவரை நாங்கள் பார்க்க முடியாது.யார் வென்றாலும் அவர்கள் எதிர்க்கட்சியில் வரக்கூடிய நிலைமையே உள்ளது எனவும் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=295547
  14. சம்பந்தமில்லாத பதிலளித்த வைத்தியர் அருச்சுனா! யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் , ஊடகவியலாளர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் வழங்காது, சம்பந்தமில்லாத பதில்களை வைத்தியர் அருச்சுனா வழங்கி இருந்தார். சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அருச்சுனாவின் சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுகம் யாழில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கடந்த 05 மாதங்களுக்கு முன்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல்கள் , இலஞ்சம் வாங்குதல் , துஸ்பிரயோகம் , மோசடிகள் என பலவற்றை சமூக ஊடங்கள் ஊடாக வெளிப்படுத்தி இருந்தீர்கள். அது தொடர்பில் நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன ? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார் அதற்கு, "தற்போது இதற்கு பதில் வழங்க முடியாது. சில காலத்தில் பதில் சொல்லுவோம் நீங்கள் மறந்தாலும் உங்கள் வீடு தேடி வந்து சொல்லுவேன்" என பதில் கூறினார். இதுவரையில் நீங்கள் முன் வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. அதேவேளை ஆதாரங்களை வைத்துக்கொண்டு , முறைப்பாடுகளை மேற்கொள்ளவோ , மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காது இருக்க காரணம் என்ன ? என கேட்ட போதும், அதற்கு பதில் கூறாது, நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். இனிவரும் காலங்களில் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என கூறினார். (ப) https://newuthayan.com/article/சம்பந்தமில்லாத_பதிலழித்த_வைத்தியர்_அருச்சுனா!
  15. மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 2ம் இடம் adminOctober 15, 2024 கல்வி அமைச்சினால் நடாத்தப் பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8/9 மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இவர் யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினையும், மகரகம ஜனாதிபதி கல்லூரியில் 3/8/2024 ல் நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று வரலாற்று சாதனையினை படைத்துள்ளாா். இவர் 2018 ம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற English Resitation போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/207538/
  16. பல இளைய சட்டத்தரணிகள் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். இவர்கள் சட்டக்கல்லூரிக்குப் போய் பட்டம் எடுப்பது எம்பியாக வரவேண்டும் என்ற நோக்கில் போலத்தான் உள்ளது (இந்தியாவில் கலக்டர் ஆகவேண்டும் என்ற கனவு போல)😄 மக்கள் சேவை என்றால் என்னவென்று தெரியாத சுயநலம் பிடித்த விளம்பரப் பிரியர்களுக்கு பாடம் புகட்டுமளவிற்கு தமிழ் வாக்காளர்கள் உள்ளனரா என்று தெரியவில்லை!
  17. வேட்டையன் – போலி முற்போக்கு மசாலா சினிமா! -தயாளன் ஒரு பக்கா ரஜினி படத்தை சமகால சமூக பிரச்சினைகளை உள்ளடக்கி சொல்ல முயன்றுள்ளனர். வாழைப் பழத்தில் ஊசி சொருகுவது போல, பல விஷமத்தனமான விஷயங்களை அதி சிறந்த தொழில் நுட்பத்தில் மாஸாக காட்டிக் கொண்டே, கடைசியில் முற்போக்கு படம் போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறார் இயக்குனர் ஞானவேல்; ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முற்போக்கு கருத்துக்களை பேசி வெளியாகி இருக்கிறது வேட்டையன். ஜெய்பீம் படத்தின் மூலம் நல்ல சினிமா படைப்பாளியாக பேசப்பட்டவர் ஞானவேல். படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக போலீஸ்காரர் வேடத்தில் ரஜினி நடித்திருக்கிறார். கொடுரமான குற்றங்களை செய்யும் யாரையும் ஈவிரக்கமில்லாமல் சுட்டுத் தள்ளுகிறார். கதையில் அதியனாக அறிமுகக் காட்சியில் வழக்கமான பில்டப் காட்சிகளுடனும் இரைச்சலான பின்னணி இசையோடு தோன்றுகிறார் ரஜினி. ஸ்டைலிஷ்ஷான கோணங்களும், ஸ்லோமோஷனில் காட்டப்படும் தோற்றங்களுமாக ரஜினி ரசிகர்களின் பேராதரவைக் கோருகிறார் இயக்குனர். படத்தின் முன்னோட்ட காட்சிகளிலேயே என்கவுண்டர் காட்சிகளை ரொமாண்டிசைச் செய்வது தெரிகிறது. ரஜினியின் ஆக்‌ஷன் காட்சிகளும், ஸ்டைல் காட்சிகளும், பஞ்ச் வசனங்களும் வழக்கமான ரஜினி படத்தை நினைவுபடுத்தியது. படம் நீட் கோச்சிங், போதை, செம்மரம் கடத்தல், பெண்கள் மீதான குற்றம் என்று பல இடங்களுக்கு தாவி முடிவடைகிறது. படம் தொடங்கும் போது, ரஜினி ரசிகர்களுக்கான விருந்தளிக்கும் படத்தைப் போல காட்சியளித்து பின்பு என்கவுண்டர் என்னும் அநீதியை கண்டிப்பதாக முதல் பாதியும், அதன் பின் நீட் கோச்சிங் செண்டர் வணிக அரசியலை பேசுவதாக இரண்டாம் பாதியும் அமைந்துள்ளது. போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடித்த கையோடு டெக்னிக்கலாக தப்பிக்க வைத்து சுட்டுக் கொல்கிறார் ரஜினி. கூடவே அவர்களுக்கு உதவிய போலீஸ்காரரும் சாகிறார். ரஜினி விசாரணையில் தப்பி விடுகிறார். ரஜினிக்கு உதவும் துஷாரா வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதை விசாரிக்கும் போலீஸ் குணா என்பவரை கைது செய்கிறது. ஆனாலும் அவர் தப்பி விடுகிறார். அவரை கொல்ல ரஜினி அழைக்கப்பட்டு என்கவுண்டர் செய்கிறார். ஒரு கட்டத்தில் அப்பாவி ஒருவரை கொலை செய்வதில் மனமாற்றம் அடைகிறார் ரஜினி. அதன் பின் அமிதாப் அறிவுரையில் உண்மை குற்றவாளிகளை தேடி அவர்களுக்கு சட்டப்படியான தண்டனை வாங்கி தருகிறார். என்கவுண்டரை தவறு என்று படம் நல்ல கருத்தைத் தானே பேசுகிறது என்று பொத்தாம் பொதுவாக சொன்னாலும், என்கவுண்டர் காட்சிகளும் அது படமாக்கப்பட்டிருக்கும் விதமும் படத்தின் மையக் கருத்துக்கு நேர் எதிராக இருக்கிறது. பட்டாசு கொளுத்துவது போல் என்கவுண்டர்களை அதிரடியான இசையின் பின்னணியில் கொண்டாட்டமாக காட்டிக் கொண்டே, அப்பாவிகளை என்கவுண்டர் செய்வது தவறு என்று தடாலடியாக கதை சொல்வது இது ஒரு போலியான படம் என்பதை உணர்த்துகிறது. கிராமப்புறங்களில் “கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை” என்று சொலவடை உண்டு. அது வேட்டையன் பட இயக்குனர் ஞானவேலுக்கு பொருந்தும். வேட்டையனை பொறுத்த வரை ரெண்டுங் கெட்டான் நிலையில் மாஸ் படமாகவும் இல்லாமல், கிளாஸ் படமாகவும் இல்லாமல் போலி முற்போக்கு முகமூடி கிழிந்து தொங்குகிறது. சொல்ல வந்த கருத்தில் நேர்மைத் தன்மையுடன் கதையை நம்பி அதற்கான அர்ப்பணிப்புடன் இயக்கி இருந்தால் தமிழின் முக்கியமான படமாக இருந்திருக்கக் கூடும் வேட்டையன். மாஸ் நடிகர்களை நம்பி வணிக வெற்றியும், பான் இந்தியா மோகமுமாக ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்று திசை மாறி, குப்புற கவிந்திருக்கிறார் இயக்குனர் ஞானவேல். இந்த படத்தை ரஜினி, அமிதாப், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், ரித்திகா, அபிராமி போன்ற பெரும் நட்சத்திர பட்டாளங்களை நம்பி எடுத்திருக்கிறாரேயன்றி, கதையையோ, கண்டெண்டையோ நம்பியல்ல என்பதிலேயே படம் தோல்வி அடைந்து விடுகிறது. தனது ஜெய்பீம் படத்தில் சூர்யாவை நடிக்க வைத்தாலும், அளவு மீறாமல் கதையை முன்னிலைப்படுத்தி இயக்கியிருந்தார் ஞானவேல். ஆனால்,இதில் கதையின் இயல்புக்கு மாறாக பில்டப் காட்சிகளால் ரஜினியை முன்னிலைப்படுத்தி கதை சொல்லியதால் சறுக்கி இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த போர்த் தொழில் படத்தில் சரத்குமாரும், அசோக் செல்வனும் கச்சிதமாக காஸ்டிங் செய்யப்பட்டிருந்தனர். பெரும் நடிகரான அமிதாப்பச்சன் ஏதோ துணை நடிகரைப் போல வந்து போகிறார். இன்னொரு மகத்தான நடிகரான பகத் பாசிலை காமெடி நடிகராக்கி, அவரையும் சுட்டுக் கொலை செய்து விடுகின்றனர். அதில் நடித்திருக்கும் ரக்‌ஷனையே பேட்ரி பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கலாம். அதற்கு மேல் அந்த பாத்திரத்தில் எதுவுமில்லை. பெண்களிடம் வழிவது, விதம் விதமாக திருடுவது, சின்ன சின்ன காமெடிகளை உதிர்ப்பதற்கு எதற்கு பகத் பாசில்? இது போல், ராணா, ரித்திகா, மஞ்சுவாரியார், அபிராமி ஆகிய அத்தனை பேரின் நடிப்பும் வீணடிக்கப்படிருக்கிறது. எல்லா மொழிகளிலும் ஒவ்வொருவரை நடிக்க வைத்தால் படம் அந்தந்த மாநிலங்களில் வசூலைக் குவிக்கும் என்ற கற்பனைக்கு பலியாகி இருக்கிறார் இயக்குனர். படத்தின் திரைக்கதை வலுவாக முதலில் எழுதப்பட்டு பின்பு ஸ்டார் நடிகர்களின் இமேஜிக்காக திருத்தப்பட்டு, அதன் பலவீனமான நிலையை அடைந்திருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது. பெரும்பாலான காட்சிகள் வசனங்களாலேயே சொல்லப்படுகின்றன. கதையில் நிகழும் திருப்பங்களை பார்வையாளர்கள் ஏற்கனவே யூகித்து விடுகிறார்கள். ரஜினியின் தோற்றமும், படத்தின் உருவாக்கத்தில் செய்யப்பட்டு இருக்கும் ட்ரீட்மெண்ட்டும் ரஜினியின் முந்தைய படமான ஜெயிலரை நினைவூட்டுகிறது. படத்தின் மையக் கருத்தாக அப்பாவிகளை என்கவுண்டர் செய்ததைத் தான் ஹீரோ தவறு என்று புரிந்து கொள்கிறார். என்கவுண்டர் என்ற சட்ட விரோதத்தை செய்த ஹீரோ எந்த விசாரணைக்குமோ, தண்டனைக்குமோ உள்ளாவதில்லை. ஹீரோ, அப்பாவியை கொலை செய்ததற்கு பிராயசித்தமாக உண்மையான குற்றவாளியை கைது செய்வேன் என்று சத்தியம் செய்து விட்டு, அதே பிஜிஎம், அதே ஹைஸ்பீடு, ஸ்டைலாக கிளம்பி விடுகிறார். இந்த இடத்தில் ரஜினியின் பாத்திரப் படைப்பு நொறுங்கி விடுவதோடு, மொத்த படமும் அதல பாதாளத்தில் சரிகிறது. படத்தின் திரைக்கதையில் தர்க்க ரீதியான ஏராளமான பிழைகள். வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்படும் அந்த காட்சி தேவைக்கும் அதிகமாக மீண்டும், மீண்டும் காட்டப்படுகிறது. அந்த கொலை காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் விதமும் கேமரா கோணங்களும் குரூரமாக இருக்கிறது. ஒரு நேர்மையான இயக்குனர் நிச்சயம் இவ்விதம் எடுக்கவே மாட்டார். சண்டைக் காட்சிகளில் ரஜினி தனி மனிதனாக நின்ற இடத்தில் இருந்தே அனைவரையும் அடித்து துவைக்கிறார். ஒரு கையை தூக்கினால் ஒருவர் வீழ்கிறார். இன்னொரு கையில் இன்னொருவர். அனிமேஷன் கேம் ஷோ மாதிரி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ், நெல்சன் படக் காட்சிகளை நினைவூட்டக் கூடியதாக பல காட்சிகள் வருகின்றன. படத்தின் மிகப் பெரிய சாபக் கேடு அனிருத்தின் இசை இரைச்சல். படம் முழுக்க ஒரே லூப் மாதிரியான இசை. ரீ ரீக்கார்டிங் என்ற அம்சத்தையே கேலிக் கூத்தாக்கி இருக்கிறார் அனிருத். ஒரே விதமான பாடலை எத்தனை படத்தில் தான் கேட்பதோ. மனசில்லாயோ என்ற பாட்டை ஏற்கனவே இரண்டு மூன்று படங்களில் கேட்டதை போன்ற நினைவு. ஆழமான கண்டெண்டை எடுத்துக் கொண்டு, நல்ல மெஸேஜ் என்ற பெயரில் மோசமான வணிக சினிமாவை இயக்கி இருக்கிறார் ஞானவேல். இந்த படத்தின் வசூல் இது போன்ற பாசாங்குத்தனமான பல படங்கள் வருவதற்கு வழி வகுக்கலாம். இது தமிழ் சினிமாவுக்கும் நல்லதல்ல. டாஸ்மாக் கடைகளில் “மது குடிப்பது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு” என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். அது எவ்வளவு நகை முரணோ அப்படி இருக்கிறது வேட்டையன். ஒரு புறம் என்கவுண்டரை மிக ஸ்டைலிஷ்ஷாக படமாக்கி, அதை கொண்டாட்டமாக முன்வைத்து விட்டு, “அப்பாவிகளை என்கவுண்டர் செய்வது தவறு” என்று லேபிள் ஒட்டி வியாபாரம் செய்திருக்கிறார்கள். நீட் கோச்சிங் சென்டர்களின் வணிக சூதாட்டத்தை அம்பலப்படுத்திக் கொண்டே, சினிமா சூதாட்டத்தை நுட்பமாகவும், தந்திரமாகவும் செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் தற்போது கிட்டத்தட்ட அத்தனை திரைகளையும் வேட்டையன் மட்டுமே ஆக்ரமித்திருக்கிறது. எல்லா ஷோவும் எல்லா திரைகளும் வேட்டையன் மட்டுமே. மற்ற எளிய சிறு பட்ஜெட் படங்களுக்கு வாய்ப்பில்லை. ஏற்கனவே நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் சிறந்த படங்களான மெய்யழகன், லப்பர் பந்து போன்ற படங்களை அத்தனை திரையரங்குகளும் தூக்கி விட்டன. வேட்டையன் தனது வசூலை வேட்டையாடி முடிக்கும் வரை வேறு எந்த படத்திற்கும் திரையிட வாய்ப்பில்லை. இது இந்தப் படத்தின் வில்லன் செய்யும் அராஜகத்தை விட மோசமானது. ரஜினியை நம்பி படமெடுத்துள்ள ஞானவேலின் வேட்டையன் கன்டென்டில் மட்டும் முற்போக்கு காட்டுவது போலியானது. ரஜினி சாருக்கு நமது வேண்டுகோள் “போதும் சார் உங்கள் வேட்டை. ஓய்வெடுங்கள். நலம் பெற வாழ்த்துகள்” திரை விமர்சனம்; தயாளன் https://aramonline.in/19458/vettaiyan-rajini-cinema-review/
  18. 11,000 வைரங்களால் உருவாக்கப்பட்ட ரத்தன் டாடா உருவப்படம் இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த வாரம் அவரது 86ஆவது வயதில் காலமானார். இவர் வழிநடத்திய டாடா குழுமம், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்று. பெரிய செல்வந்தராக இருந்தாலும் நல்ல மனிதராகவும் வாழ்ந்தமையால் இவரது மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் டாடா மீது அதிக அன்பு கொண்டவர். தான் மிகவும் நேசித்த டாடாவின் மரணத்துக்கு தனித்துவமாக அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக 11,000 அமெரிக்க வைரங்களை பதித்து ரத்தன் டாடா உருவத்தை உருவாக்கி அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த படத்துக்கு பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவற்றுள், “தன்னிகரற்ற தலைவரை பெருமைப்படுத்த 11,000 வைரங்கள் போதுமானதாக இருக்காது”. “ரத்தன் டாடா தான் உண்மையான வைரம்” “ரத்தன் டாடா எனும் வைரத்துக்கு இந்த 11,000 வைரங்கள் ஈடாகாது” இவ்வாறு மக்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் ரத்தன் டாடா மீது மக்களுக்கு இருக்கும் அன்பும் மதிப்பும் வெளிப்படுகின்றது. https://oruvan.com/india/2024/10/14/a-unique-tribute-is-the-ratan-tata-portrait-made-of-11000-diamonds
  19. பாராளுமன்றத் தேர்தலும் தமிழ் மக்கள் முன்னுள்ள தெரிவுகளும் – ஐ.வி.மகாசேனன் October 15, 2024 நவம்பர்-14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி இடப்பட்டு உள்ளது. அதேவேளை அக்டோபர் 04-11ஆம் திகதி வேட்புமனு தாக்கல் இடம்பெற்றுள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை போன்றே, பாராளுமன்ற தேர்தலிலும் அதிகளவு கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் களமிறங்கியுள்ளன. முழு இலங்கைத்தீவிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் உள்ளடங்களாக 690 குழுக்கள் போட்டியிடப்போவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வடக்கு-கிழக்கும் பொதுத்தேர்தலை மையப்படுத்தி பெரும் குழப்பகரமான சூழலை எதிர்கொண்டுள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் தேசிய எழுச்சியை அதுசார்ந்திரட்சியை ஒருங்கிணைக் கும் களத்தை தமிழ் அரசியல் கட்சிகள் பொதுத்தேர்தலில் உருவாக்கி இருக்கவில்லை. கடந்த இரு தசாப்த கால ஈழத்தமிழர்களின் அரசியல் அடையாளமாக காணப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எனும் பதிவு செய்யப்படாத கட்டமைப்பு முழுமையாக சிதறடிக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தமிழ் அரசியலில் 75 ஆண்டு கால பாரம்பரியத்தை கொண்ட தமிழரசு கட்சிக்குள்ளும் அதிக குழப்பங்களை அவதானிக்க கூடியதாக உள்ளது. இக்குழப்பகரமான நிலையில், தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் எனும் விம்பத்தின் பிரதிபலனை தேசிய மக்கள் சக்தி வடக்கு-கிழக்கிலும் பெற்றுக்கொள்ளுமா எனும் வாதங்களும் பொதுவெளியில் காணப்படுகின்றது. இக்கட்டுரை பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் முன்னுள்ள தெரிவுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடக்கு-கிழக்கில் யாழ்-கிளிநொச்சி, வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம் பாறை ஆகிய ஐந்து தேர்தல் மாவட்டங்களி லும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் உள்ளடங்கலாக 250இற்கு மேற்பட்ட அணிகள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளன. வடக்கு-கிழக்கின் தேர்தல் மாவட்டங்களிற்கு முறையே யாழ்-கிளிநொச்சி 6 ஆசனங்கள், வன்னி 6 ஆசனங்கள், திருகோணமலை 4 ஆசனங்கள், மட்டக்களப்பு 5 ஆனங்கள், அம்பாறை 7 ஆனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 28 ஆசனங்களுக்கு ஏறத்தாழ 2500 வேட்பாளர்கள், 250இற்கு மேற் பட்ட அணிகள் போட்டியிடுகின்றன. இதில் ஒரு சில அணிகளில் ஒரே குடும்ப பிரதிநிதிகள், ஒரே தெருக்களில் வசிப்போர் களமிறங்கியுள்ளனர். ஒரு சில அணி அரசியல் அதிகாரத்துக்கு போட்டியிடுவதுடன், பலரும் பிரபல்யம், வெளி நாட்டு விசா என இதர பல காரணங்களுக்காக களமிறங்கியுள்ளனர். இது வாக்குகளை சிதறடிக் கும் செயலாகவே அமைகிறது. யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் மாத்திரமே முழுமையாக தமிழ் பிரதிநித்துவம் பகிரப்படுகிறது. ஏனைய தேர்தல் மாவட்டங்களில் முஸ்லீம் மற்றும் சிங்கள பிரதிநிதித்துவமும் கணிசமாக காணப்படுகின்றது. 2020 பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முழுமையாக தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டதுடன், திருகோணமலையில் நான்காவது ஆசனத்தை மயிரிழையில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் பெற்றுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. யாழ்-கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சி ஆகிய பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் தமது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர். தமிழரசு கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.10.2024) யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளர் விவரங்களை அறிவித்திருந்தன. அவ்முடிவில் அதிருப்தி அடைந்த தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், கொழும்பு மாவட்ட கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் மகளீர் அணி, இளைஞர் அணி செயற்பாட்டாளர்கள் கட்சியை விட்டு வெளியேறி சுயேட்சையாக களமிறங்கி உள்ளனர். யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் தென்னிலங்கை கட்சிகள், தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழு உட்பட ஆகக்குறைந்தது பத்து அணி தாக்கம் செலுத்தக்கூடியதாக அமைகின்றது. எனினும் யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்துக்கு சனத்தொகை விகிதாசார அடிப்படையில் ஆறு ஆசனங்களே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்ட பிரதிபலிப்புகளே வடக்கில் வன்னித் தேர்தல் தொகுதியிலும் கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை தேர்தல் தொகுதிகளிலும் காணப்படுகின்றது. வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி சார்பாக முல்லைத்தீவை சார்ந்த இளம் சட்டத்தரணி ஒருவர் களம் இறங்குவதாக முன்னர் அறிவிக் கப்பட்டது. எனினும் தமிழரசு கட்சியின் தமிழ்த் தேசிய நிலைப்பாடு சார்ந்த சந்தேகத்தினை வெளிப்படுத்தி, இளம் சட்டத்தரணி தான் தேர்தலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார். இது வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி சார்ந்து எதிரான விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. திருகோணமலை மற்றும் அம்பாறை தேர்தல் தொகுதியில் தமிழ் பிரதிநிதித்துவம் சார்ந்து எழுந்துள்ள அச்சத்தால் அரசியல் கட்சிகளிடையே கூட்டு முயற்சியை ஏற்படுத்த சிவில் சமூகங்கள் முயற்சியினை மேற்கொண்டிருந்தது. குறிப் பாக திருகோணமலை ஆயர் அவர்களும் இம்முயற்சியில் இறங்கியிருந்தார். எனினும் கட்சிகளின் தேசியப்பட்டியல் ஆசையால், கட்சிகளி டையே பொதுச்சின்னம் என்பதில் உடன்பாடு எட்ட முடியவில்லை. திருகோணமலையில் தமிழரசு கட்சியின் சின்னத்தில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் இணைந்து போட்டி யிட இணங்கியது. மாறாக அம்பாறை தேர்தல் தொகுதியில் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்ட ணியின் சின்னத்தில் தமிழரசு கட்சி இணைந்து செயல்பட மறுத்த நிலையில், அம்பாறையில் கட்சிகள் தனித்தனியாகவே போட்டியிடுகின்றன. பொதுத்தேர்தல் சார்ந்து வடக்கு-கிழக்கில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமைகள் தென்இலங்கை கட்சிகளுக்கு வாய்ப்பாகுமா எனும் சந்தேகங்கள் பொதுவெளியில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தென்இலங்கையில் விவாதிக்கப்படும் ஜே.வி.பி-யின் பரிமாணமாகிய தேசிய மக்கள் சக்தியின் மாற்றம் சார்ந்த அரசியல் அலை, வடக்கு-கிழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற வாதம் சமகாலத்தில் மேல் எழுந்துள்ளது. இது அடிப்படையில் தமிழ் அரசியல் கட்சிகளிடையே எழுந்துள்ள பிளவுகளும், அதனால் தமிழ் மக்களிடையே உருவாகியுள்ள அவநம்பிக்கை காரணமாக நோக்கப்படுகின்றது. வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்கு பொதுத் தேர்தல் சார்ந்து உள்ள தெரிவுகளை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது. முதலாவது, தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டிய தரப்புகளை சரியாக இணங்காணுதல் அவசியமாகிறது. தென்னிலங்கையில் ஏற்பட் டுள்ள மாயமான மாற்றம் எனும் வாதத்தை வடக்கு-கிழக்கிலும் ஏற்படுத்துவதற்கு ஜே.வி.பி அணியினர் முயற்சி செய்து வருகின்றனர். எனினும் தென்இலங்கை உரையாடும் மாற்றம் உறுதியானதா? மற்றும் இம்மாற்றத்தால் ஈழத் தமிழர்கள் நன்மையடைய கூடியதாக உள்ளதா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியது அவசியமாகின்றது. இப்பத்தியில், ‘இலங்கையில் ஏற்பட்டுள்ளது அமைப்பு மாற்றமா? ஆட்சி மாற்றமா?’ எனும் தலைப்பில், ஜே.வி.பி ஏற்படுத்தி உள்ள மாற்றம் என்பது வெறுமணமே ஆட்சி மாற்றம் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே கடந்த மூன்று வார கால ஆட்சியின் நடத்தைகளும் அமைந்துள்ளது. தேர்தல் பிரச்சார காலத்தில், தற்போதைய இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க, தன்னுடைய பெயர் பிறப்புச் சான்றிதழில் மாத்திரம் இருப்பதே தனக்கு போதும் எனவும், முன்னைய ஆட்சியாளர்கள் வீதிகள் அரச கட்டிடங்களில் தமது பெயர் பொறித்துள்ளமையை விமர்சித்திருந்தார். எனினும் தபால் திணைக்களம் தனது 150வது ஆண்டு தினத்தை முன்னிட்டு காபந்து அரசாங்கத்தின் பிரதமர் மற்றும் வெளிவிவாகர அமைச்சரின் புகைப்படங்களை தாங்கிய தபால் முத்திரையை வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பணத்தாளில் தனதுபடத்தை வெளியிட்டமை மற்றும் அரச கட்டிடங்களுக்கு தமது பெயரை சூடியமையையும் ஜே.வி.பி விமர்சித்திருந்தது. ஜே.வி.பி-யின் காபந்து அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தமது படங்களை தபால் முத்திரையில் பதிப்பு செய்வது மாற்றம் சார்ந்த உரையாடலை கேள்விக்கு உட்படுத்துவதாக அமைகின்றது. இது ஜே.வி.பி சார்ந்த அதன் மாற்றம் சார்ந்த அரசியல் உரையாடலின் பொது விம்பப் பிறழ்வை வெளிப்படுத்துகிறது. அதேவேளை ஈழத்தமிழ் அரசியலுக்கு ஜே.வி.பி பொருத்தமானவர்களா என்பதையும் ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் ஜே.வி.பி-யின் இனவிரோத செயற்பாடுகள் தொடர்பில் இப்பத்தியில், ‘ஜே.வி.பி.யின் இனவாத செயற்பாடுகளுக்கு அனுரகுமார திசாநாயக்கா பொறுப்புக்கூறுவாரா?’ மற்றும் :தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது!’’ எனும் தலைப்புகளில் நீண்ட விளக்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அது கடந்த காலமாக விமர்சிப்போருக்கு, ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஜே.வி.பி காபந்து அரசாங்கத்தின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை குறிப்பிடுவது பொருத்தமானதாக அமையும். 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தில், குறைந்தபட்சம் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட போர் குற்றங் களுக்கு பொறுப்பு கூறல் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஜே.வி.பி அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது. அதேவேளை இனப்படுகொலை குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு ஜே.வி.பி அரசாங்கமும் உயர் பதவிகளை வழங்கி வருகின்றது. திருகோணமலை வதைமுகாமில் மாண வர்கள் கொல்லப்பட்ட வழக்கில் கடற்படை அதிகாரிகளுக்கு உதவிய முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் சிறிமேவன் சரத் சந்திர ரணசிங்க துறைமுக அதிகார சபையின் தலைவராக ஜேவிபி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான பின்னணியில், தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவதுடன், அதேவேளை குறைந்த பட்ச தீர்வுகளையும் ஏற்றுக் கொள்ளாத ஜே.வி.பி அரசாங்கத்தை நிராகரிப்பது ஈழத் தமிழர்களின் தார்மீக பொறுப்பாகும். இரண்டாவது, தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியலுக்குள்ளும் சிலரை அடையா ளம் கண்டு நிராகரிக்க வேண்டிய பொறுப்பு தமிழரிடம் காணப்படுகின்றது. தமிழ் அரசியல் கட்சிகளிடையே தேசியம் என்பது அரசியல் மூலமாகவே காணப்படுகின்றது. அதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தென்இலங்கையுடன் உறவுகளை பேணிக் கொண்டு தமிழ் மக்களை தோற் கடிக்கும் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தி வருகின்றனர். தேர்தல் காலங்களில் மாத்திரம் போலியான தமிழ்த்தேசிய விம்பத்தையும் பாரம்பரிய அரசியல் விம்பத்தையும் வைத்துக்கொண்டு தமது அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்த முயல்கின்றார்கள். அதேவேளை தேர்தலுக்குப் முன்னரும் பின்னரு மான செயற்பாடுகளில் தமிழ் மக்களின் தேசிய திரட்சியை சீர்குலைப் பதில் முதன்மையான சக்தி யாகவும் காணப் படுகின்றார்கள். 2001ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம், தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதன் ஊடாக, அரசியல் ரீதியான திரட்சியை ஏற்படுத்தும் நோக்கிலேயே இடம்பெற்றது. எனினும் 2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்ட மௌனிப்புக்கு பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் தேசிய நீக்கத்திற்காக திரட்சியை சீர்குலைத்தார். அவரால் 2009க்கு பின்னர் ஈழத் தமிழ் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும், தமது குருவின் வழியே தமிழ் தேசிய திரட்சியை சீர்குலைப்பதை முனைப்பு டன் செயல்படுத்தி இருந்தார்கள். அந்தப் பின்னணியிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு மெல்ல மெல்ல உடைக்கப்பட்டது. அதன் உச்சமாக 2022ஆம் ஆண்டு நடைபெறாத உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு தமிழரசு கட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியே தனியாக கொண்டு செல்வதாக தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். அத்துடன் தமிழ் தேசியக் கூட்ட மைப்பு முழுமையாக சிதைக்கப்பட்டது. தற்போது பொதுத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் தெரிவில் தமிழரசுக்கட்சிக்குள் ம.ஆ.சுமந்திர னின் தன்னிச்சையான செயற்பாடுகள் அதிகரித்துள் ளதாக கூறி, தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் வெளியேறியுள்ளார்கள். இது தமிழரசுக் கட்சியையும் பிளவுபடுத்தியுள்ளது. இவ்வாறான பின்னணியில் தமிழ் தேசியத்தின் திரட்சியை சிதைக்கும் நோக்கில் தமிழ்த் தேசிய முலாம் பூசி, தமிழ் தேசிய பாரம்பரிய அரசியல் கட்சி என்ற விம்பத்துக்குள் சில அரசியல்வாதிகள் காணப்படுகின்றார்கள். இவ்வாறான போலிகளை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு, நிராகரிக்க வேண்டியது தமிழ் தேசிய அரசியலின் எதிர் காலத்திற்கு அவசியமானதாகும். மூன்றாவது, தமிழ் அரசியல் கட்சிகளில் சிறந்தவர்கள் என்ற தெரிவினை இனங்காட்டு வதும் கடினமானதாகும். தமிழ் அரசியல் பரப்பில் காணப்படும் அரசியல் கட்சிகள் குறைந்தபட்சம் தமிழ் மக்களின் தேசியத்தின் அடிப் படையில் ஒருங்கிணைந்து செயற்பட கூட முன் வராதவர்களாகவே காணப்படுகின்றார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் தேசிய எழுச்சியை அது சார்ந்த திரட்சியை உருவாக்குவதற்கே தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டு இருந்தார். எனினும் தமிழ்ப் பொது வேட்பாளர் சார்ந்து, தமிழ் அரசியல் கட்சிகளிடையே ஒரு இணக்கமான நிலைப்பாடு காணப்படவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தேர்தல் புறக்கணிப்பு சார்ந்து செயற்பட்டிருந்தார்கள். தமிழரசு கட்சி தமிழ் பொது வேட்பாளரை நிராகரித்து, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தீர்வை பரிந்துரைத்த தென்இலங்கை கட்சியினை ஆதரித்திருந்தது. அதேவேளை தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்புக்குள் பங்காளர்களாக செயற்பட்டவர்களிலும் புளொட் மற்றும் ரெலோ கட்சியினர் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக மனப்பூர்வமாக செயல்பட்டு இருக்க வில்லை . அதுமட்டுமன்றி ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியாக தமிழ் மக்களின் தேசிய எழுச்சிக்கான பொதுச்சின்னத்தை ஒரு கட்சிக்குள் முடக்கியுள்ளனர். இது தமிழ் மக்களின் தேசிய எழுச்சியை மலினப்படுத்தியுள்ளது. மேலும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் மதுபானசாலை அனுமதிக்கான சிபார்சு வழங்கியமை சர்ச்சைக்குரியதாக அமைகின்றது. இந்த பின்னணியில் தமிழ் அரசியல் கட்சிகளின் தமிழ்த் தேசிய கருத்தாடல் என்பது வெறும் அரசியல் முலாமாகவே அமைகின்றது. இவர்களில் ஒரு அணியை கைநீட்டக்கூடிய நிலை மைகள் இல்லை. கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தல்களில் பயன்படுத்திய ‘தீயதில் குறைந்த தீயதை’ தெரிவு செய்யும் அணுகுமுறையையே, இம்முறை தமிழ் மக்கள் பொதுத் தேர்தலில் கையாள வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. ஒவ் வொரு அணிகளிலும் இளையோர், முன்னாள் போராளிகளை பிரதான வேட்பாளர்கள் கறிவேப்பிலைக்காக உட்புகுத்தியுள்ளார்கள். இக்கறிவேப் பிலைகளுக்கு தமிழ் மக்கள் அதிகம் முக்கியத்துவம் அளிப்பதால், பழையவர்களையும் தவிர்க்க வேண்டியவர்களையும் நிராகரிப்பதே உசிதமான முடிவாகும். எனவே, 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் தமிழ் மக்களுக்கு கடினமான பாதையையே வெளிப்படுத்தி உள்ளது. இங்கு தமிழ் மக்கள் எதனை தெரிவு செய்கின்றார்கள் என்பதற்கு அப்பால், எதனை நிராகரிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. தமிழ் தேசிய அரசியலின் இருப்பிற்கு ஆபத்தான சக்திகளை, தமிழ்த்தேசியத்தை அழிப்பதை நிகழ்ச்சி நிரலாக கொண்டு செயற்படுவோரை நிராகரிப்பதன் மூலம் தமிழ் தேசிய அரசியலுக்கு வரக்கூடிய ஆபத்துக்களை குறைக்கக்கூடிய சூழல் காணப்படுகிறது. அதேவேளை குறை வான ஆபத்து சூழலில் எதிர்காலத்தையும் சரியாக கட்டமைக்கக்கூடிய இடைவெளியை பெறக்கூடிய தாக அமையும். தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டிய தரப்புகளை சரியாக அடையாளம் காண்பதும் காண்பிப்பதும் தமிழ்த் தேசிய ஆர்வலர்களின் பொறுப்பாகவும் கடமையாகவும் அமைகின்றது. https://www.ilakku.org/பாராளுமன்றத்-தேர்தலும்-த/
  20. அனுர அரசாங்கமும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது! October 14, 2024 அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது பொதுவேட்பாளருக்கு சார்பாக செயற்பட்ட ஒருவருக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர் எனமக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினரும் சமூக செயற்பாட்டளருமான ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-; இந்த ஆட்சியில் இருக்ககூடிய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என உறுதியளித்திருந்தது. இன்று இவர்கள் ஆட்சிக்கு வந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இன்று சிலருக்கு பயங்கரவாத தடுப்புபிரிவிலிருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றது. நண்பர் ஒருவர் இந்த முறை தமிழ்பொதுவேட்பாளராக களமிறங்கிய அரியநேந்திரனிற்கு சமூக வலைத்தளத்தில் பணம் செலுத்தி விளம்பரங்கள் செய்துகொண்டிந்தவர். அவ்வாறு பணம் செலுத்தி விளம்பரம் செய்யப்பட்டது ஒரு தீவிரவாத குற்றம் என வரையறை செய்வது போல தீவிரவாத தடுப்பு பிரிவினர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவருக்கு கடிதம் அனுப்பி முறைப்பாடு விசாரணையொன்றிற்கு அழைத்துள்ளனர். இந்த விசாரணை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் இடம்பெற்றிருக்கின்றது, சர்வதேசத்திலிருந்து எப்படி பணம் யாரிடமிருந்து வந்தது போன்ற கேள்விகளை கேட்டுள்ளனர். அனுரகுமாரதிசநாயக்கவிற்கு கூட பல்வேறு நாடுகளில் இருந்து பணம் வருகின்றது,வந்திருக்கின்றது இவற்றையெல்லாம் இவர்கள் என்ன கோணத்தில் விசாரணை செய்யப்போகின்றார்கள் குறிப்பாக தமிழ் மக்கள் மேல் தமிழ் மக்கள் சார்ந்த அரசியல்மேல்,பயங்கரவாதம் என்ற குற்றச்சாட்டும் பயங்கரவாதம் என்ற முத்திரையும்,குத்தப்படுவது அவர்கள் தங்கள் எதிர்கால அரசியலை எந்தவகையிலும் முன்னெடுக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தும் என்பதை இவர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். இளைஞர்கள் இந்த அரசியலிற்கு வருவதற்கு அரசியல் பேசுவதற்கு தங்களிற்கு எதிராக நிகழ்ந்துகொண்டிருக்கின்ற அடக்குமுறைக்கு எதிராக குரல்கொடுப்பதற்கு தயங்குவதற்கான ஒரு பிரதான காரணமாக பயங்கரவாத தடை;டச்சட்டம் காணப்படுகின்றது.எனவே இந்த பயங்கரவாத தடைச்சட்டம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு,பயங்கரவாத தடுப்பு பிரிவு எங்களின் மேல் தொடர்ச்சியான அடக்குமுறைகளை பிரயோகிப்பது, கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம் என நான் இந்த அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகின்றேன். இதேவேளை கிளிநொச்சியில் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரின் பெற்றோரிடம் விபரங்களை பெற்றுள்ளனர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தமிழ் மக்களிற்கு ஆதரவாக செயற்படுகின்றீர்கள் அதனால்,உங்களை விசாரணை செய்கின்றோம் என்ற வகையில் அவருக்கு ஒரு அழைப்பும் சென்றிருக்கின்றது,இந்த அழைப்பின் ஒலிவடிவம் என்னிடம் உள்ளது. இதேபோல அம்பாறை மாவட்ட காணாமல்போனோர் உறவினர்களுடைய அந்த போராட்டத்திற்கு தலைமை தாங்குகின்ற செல்வராணி என்ற பெண்மணியை இரண்டு மூன்று நாட்களிற்கு முன்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். https://www.ilakku.org/அனுர-அரசாங்கமும்-பயங்கரவ/
  21. இந்தியா தவறு செய்துவிட்டது: கனடா பிரதமர் தெரிவிப்பு October 15, 2024 இந்தியா தவறு செய்துவிட்டது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசலை அதிகரித்துள்ளது. கனடா நாட்டில் வசித்து வந்த தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இதை இந்தியா மறுத்தது. இந்த சூழலில் டெல்லியில் உள்ள கனடா தூதரக பொறுப்பு அதிகாரி ஸ்டூவர்ட் வீலருக்கு மத்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் (கிழக்கு) நேற்று மாலை சம்மன் அனுப்பினார். இதன் அடிப்படையில் ஆஜரான வீலரிடம் கனடா அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “கனடா நாட்டு மண்ணில் கனடா மக்களை அச்சுறுத்தும் மற்றும் கொல்லும் வெளிநாட்டு அரசாங்கத்தின் செயலை ஒருபோதும் எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. இது கனடாவின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ள முடியாத அத்துமீறல். கடந்த கோடை காலத்தின் தொடக்கம் முதலே எங்களது ‘ஃபைவ் ஐஸ் பார்ட்னர்ஸ்’ (ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலாந்து, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா) உடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். குறிப்பாக இந்தியாவின் இது மாதிரியான செயலை எதிர்கொண்ட அமெரிக்காவுடன் சேர்ந்து இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துகிறோம்” எனக் கூறியுள்ளார். முன்னதாக, இது தொடர்பாக இந்திய மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்: கனடாவில் உள்ள இந்திய தூதர் மற்றும் பிற தூதரக அதிகாரிகள் மீது ஆதாரமின்றி குற்றம் சாட்டி இருப்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்நாட்டு தூதரக பொறுப்பாளரிடம் தெரிவிக்கப்பட்டது. தீவிரவாதம் மற்றும் வன்முறை சூழலில், ட்ரூடோ அரசின் நடவடிக்கைகள் இந்திய அதிகாரிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் தற்போதைய கனடா அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அங்குள்ள இந்திய தூதர் மற்றும் பிற அதிகாரிகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம் என அவரிடம் தெரிவிக்கப்பட்டது. கனடா அரசிடமிருந்து ஒரு தகவல் வந்துள்ளது. அதில் ஒரு வழக்கு விசாரணையில் இந்திய தூதர் மற்றும் இதர தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்திய அரசு இந்த அபத்தமான குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிக்கிறது. ட்ரூடோ தலைமையிலான அரசு, வாக்கு வங்கி அரசியலை கருத்தில் கொண்டு இதுபோன்ற குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது. இந்தியாவுடன் கனடா பிரதமர் ட்ரூடோ நீண்ட காலமாகவே விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறார் என்பதற்கு ஆதாரம் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வதற்காகவே அவர் இந்தியா வந்திருந்தார். மேலும் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பிரிவினைவாத மற்றும் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அமைச்சர்களாக நியமித்தார். இது தவிர, கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் (விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு) தலையிட்டார். இதுவே அவரது இந்தியாவுக்கு எதிரான மனநிலையை பிரதிபலித்தது. இந்தியாவுக்கு எதிராக பிரிவினைவாத செயலை வெளிப்படையாக ஆதரிக்கும் ஒரு அரசியல் கட்சியை ட்ரூடோ அரசு நம்பி இருக்கிறது. இந்நிலையில், உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு இருப்பதை ட்ரூடோ கண்டுகொள்வதில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதையடுத்து, வெளிநாட்டு தலையீடு தொடர்பான கமிஷன் முன்பு ட்ரூடோ ஆஜராகி விளக்கமளிக்க இருக்கிறார். இந்நிலையில் இதை திசை திருப்புவதற்காகவே அவர் இந்தியா மீது குற்றம் சுமத்துகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.ilakku.org/india-has-made-a-mistake-canadian-prime-ministers-statement/
  22. மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்! Vhg அக்டோபர் 14, 2024 சரவணபவானுக்கு வாக்களித்தால் எப்படி சுமந்திரன் வெல்லுவார் என்று நீங்கள் எழுப்புகின்ற கேள்வி புரிகின்றது. ஆனால் அதுதான் உண்மை. மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் தான் இந்த சரவணபவன். தமிழரசுக் சின்னத்தில் மட்டக்களப்பில் போட்டியிட்டு மிகக் குறைவான வாக்கைப் பெறுவார் என்று கூறப்படுகின்ற ஒரு வேட்பாளர். ஆனால் மட்டக்களப்பில் நிச்சயம் தோற்பார் என்று கருதப்படுகின்ற இந்த வேட்பாளருக்கு நீங்கள் யாராவது வாக்களித்தால்கூட, அந்த வாக்கில் யாழ்ப்பாணத்தில் போட்டிபோடுகின்ற சுமந்திரன் வெற்றிபெற வாய்ப்பிருக்கின்றது. எப்படி என்று பார்ப்போம். 'யாழ்ப்பாணத்தில் இம்முறை சுமந்திரனை தோற்கடித்தே தீருவது' என்று கங்கணம் கட்டி நின்றுகொண்டிருக்கின்றார்கள் தமிழ் மக்கள். வாக்குகளின் அடிப்படையில் இம்முறை சுமந்திரன் வெல்லுவது என்பது மிக மிகக் கடினம் என்றுதான் பலரும் கூறுகின்றார்கள். ஆனால் அவர் தேசியப் பட்டியலின் மூலம் நாடாளுமன்றம் செல்லமுடியும். தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கு நீங்கள் அளிக்கக்கூடிய ஒவ்வொரு வாக்கும் சுமந்திரனின் என்கின்ற தமிழ் மக்கள் பெரிதாக விரும்பாத ஒரு நபரை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் அனுப்பி விடக்கூடிய அபாயத்துக்கு வித்திட்டுவிடும். ஒரு கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் என்பது, ஒரு கட்சிக்கு இலங்கை முழுவதும் விழக்கூடிய ஒட்டுமொத்த வாக்குகளில் இருந்து கிடைக்கக்கூடிய ஆசனம். அதனால் அந்தத் தேசியப் பட்டியல் ஆசனத்தின் மூலம் சுமந்திரன் தெரிவாகுவதற்கு சாத்தியம் இருக்கின்றது. உதாரணத்திற்கு, வீட்டுச் சின்னத்தில் போட்டியிரும் எந்த ஒரு வேட்பாளருக்கும் நீங்கள் அம்பாறையில் வாக்களித்தாலும் சரி, மட்டக்களப்பில் வாக்களித்தாலும் சரி, யாழ்ப்பாணத்தில் வாக்களித்தாலும் சரி, சுமந்திரன் தேசியப்பட்டியல் மூலம் உங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்வதற்கு மறைமுகமாக நீங்கள் வாக்களிக்கின்றீர்கள் என்பது தான் உண்மை. எனவே சுமந்திரன் இம்முறை தமிழ் மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், வீட்டுச் சின்னத்தில் போட்டிபோடுகின்ற எந்த ஒரு வேட்பாளரையும் நீங்கள் ஆதரிக்க முடியாது என்பதுதான் சமன்பாடு. https://www.battinatham.com/2024/10/blog-post_873.html
  23. தாயக அரசியலை தத்தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பும் புலம்பெயர் நிதி வழங்குனர்கள் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் நேரடிக் காலனித்துவ ஆட்சி உலகில் மறைந்துவிட்டபோதிலும் இன்றும் உலகில் முன்னேறிய நாடுகள் பல தத்தமது நோக்கங்களுக்காக ஏனைய நாடுகளை பல்வேறு வழிகளில் மறைமுகமாக நவகாலனித்துவ முறையில் தமது கட்டுப்பாட்டுக்குள் அல்லது சார்பு நிலையில் வைத்திருப்பதையும் வைத்திருக்க முயல்வதையும் காணமுடியும். இதற்கு அந்நாடுகள் பொருளாதார காரணிகளை பிரதான வழிமுறையாகக் கையாண்டாலும் மறைமுகமான, சிலவேளைகளில் நேரடியான அரசியல் தலையீடுகள் மூலமும் இதனைச் சாதிக்க முனைகின்றன. தமக்குச் சார்பான ஆட்சியாளர்களை அதிகாரத்தில் கொண்டுவர முனைவது போலவே முரண்டுபிடிப்போரை அதிகாரத்திலிருந்து அகற்றுதல், சிலவேளைகளில் அவர்களை படுகொலை செய்தல் என்பனவும் அவ்வழிமுறைகளுக்குள் அடங்கும். இன்று பெரும்பாலான நாடுகளில் ஜனநாயகமுறைத் தேர்தல்கள் மூலம் ஆட்சித் தலைவர்கள் தெரிவு செய்யப்படுவதால் தமக்குச் சார்பானவர்களை வெற்றி பெறச் செய்வதற்கு இந்நாடுகள் பல்வேறு உபாயங்களக் கையாளுகின்றன. அதிலொன்று தேர்தல் செலவுகளுக்காக குறித்த நபருக்கு அல்லது கட்சிக்கு நிதியை வாரி வழங்குவது. இலங்கை வரலாற்றிலும் இது நிகழ்ந்தே வந்தாலும் அது தொடர்பான தகவல்கள் அரிதாகவே வெளிவருகின்றன. 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷவை மீண்டும் பதவியிலமர்த்துவதற்காக சீனா பல கோடி யுவான்களை வழங்கியதான செய்திகள் வெளிவந்ததைப் போலவே ‘அரகலய’ போராட்டத்துக்கு பின்புலத்தில் மேற்குலகம் இருந்தது என்ற செய்திகளும் வெளிவந்திருந்தன. அதேபோல அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்றம்பை வெற்றிபெறச் செய்வதற்கான முறைகேடுகளில் ரஸ்யா ஈடுபட்டதான குற்றச்சாட்டும் உண்டு. 2005 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகள் மகிந்தவிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு வடக்கு- கிழக்கில் பகிஷ்கரிப்பினூடாக ரணிலைத் தோல்வியடையச் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு. நாடுகளுக்கிடையில் இவ்வாறு நடப்பதை ஒத்த செயற்பாடுகள் இன்று ஈழத் தமிழ் மக்களின் அரசியலிலும் வேறொரு வடிவில் அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. குறிப்பாக 2009 ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவுக்கு வந்ததிலிருந்து இன்றுவரை இலங்கையில் நடந்த அத்தனை தேர்தல்களிலும் அரசியல் கட்சிகளுக்கு கணிசமான நிதி புலம்பெயர் நாடுகளிலிருந்து உட்பாய்ந்த வண்ணமே உள்ளது. ஆரம்ப காலத்தில் இது ஒரு உதவியாகவே கருதப்பட்டாலும் இன்று பல்வேறு வழிகளில் விரிவடைந்து தமிழ் மக்களின் அரசியலைத் தூரவிருந்தே இயக்கும் ஒரு நிலைக்கு அது பரிணாம வளர்ச்சியடைந்து விட்டதை அவதானிக்க முடிகிறது. அதாவது தேர்தல் மற்றும் பிற செயற்பாடுகளுக்கு நிதி வழங்குவதன் மூலம் நிதி வழங்கும் புலம்பெயர் சக்திகள் தாயகத்தின் அரசியலை அது விருப்பத்துக்கு இயக்கும் நிலை வளர்ந்து வருகிறது. இதனால் இன்னுஞ் சிறிது காலத்தில் இங்குள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் புலம்பெயர் நாடுகளில் இருந்து எம்மவர் சிலரால் இயக்கப்படும் ரோபோக்களாக மாறி விடுவார்களோ என்ற ஐயம் மக்கள் மத்தியில் இன்று பரவலாக எழத்தொடங்கிவிட்டது. இதனால் ஏலவே பலவீனமடைந்துள்ள தமிழ் மக்களின் அரசியலை மேலும் படுகுழிக்குள் தள்ளுவதற்கான மோசமான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது.தொடக்கத்தில் தமிழ் அரசியல் கட்சி என்ற வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து பணம் அனுப்பப்பட்டது. குறிப்பாகத் தமிழரசுக்கட்சியின் கனடாக் கிளையினர் சகல தேர்தலுக்கும் அக்கட்சிக்குப் பணம் திரட்டி அனுப்பி வைத்தனர். இதில் அதிகம் பாடுபட்ட திருகோணமலைக் குகதாசன்தான் தமிழரசுத் தலைவர்களின் பேச்சை நம்பி இலங்கை வந்து இன்று ஓரங்கட்டப்பட்டு நிற்பவர் என்பது பலரும் அறிந்த ஒன்று. பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ்,ரெலோ போன்ற கட்சிகளின் முன்னாள் உறுப்பினர்கள் அக்கட்சிகளின் வெளிநாட்டுக் கிளை என்ற பெயரில் பணத்தைத் திரட்டி அக்கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு அனுப்பத் தொடங்கினர். இந்நிதி வரையறுக்கப்பட்ட தொகை மற்றும் தேர்தல் காலச் செலவுகளுக்கான ஒரு ஆதரவு என்ற வகையில் பிரச்சினைக்குரியதாக இருந்ததில்லை என்பதுடன், அவ்வாறு நிதி வழங்கியோர் கட்சிகளின் தீர்மானங்களில் தலையிட்டதுமில்லை. ஆனால் அண்மைக்காலங்களில் தேர்தல்கள், போராட்டங்கள் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கும் யார் யாரிடமிருந்தோ இங்கு எவரெவர்க்கோ பணம் கைமாற்றப்படுவதுடன், அவற்றில் செல்வாக்குச் செலுத்தும் நிலையும் அதிகரித்து வருகிறது. நாங்கள் பணம் அனுப்புகிறோம்; நீங்கள இதைச் செய்யுங்கள் என்றவகையிலான கட்டளைகள்கூட சில சந்தர்ப்பங்களில் பிறப்பிக்கப்படுவதை அறிய முடிகிறது. இங்கு இதுபோன்று புலம்பெயர்ந்தவர்களால் பணம் அனுப்பப்படுவது அல்லது இங்குள்ள கட்சிகளின் தலைவர்களோ, குழுக்களோ அதனைப் பெற்றுக் கொள்வது பிரச்சினையன்று. ஆனால் அவை என்ன நோக்கங்களுக்காக யாரால் அனுப்பப்படுகின்றன என்பதை ஆராயும்போதே தமிழரின் எதிர்கால அரசியல் தொடர்பான கவலைகள் மக்களிடையே அதிகரிக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு பணம் அனுப்புபவர்கள் யாரெனப் பார்த்தால் முன்னாள் போராளிகள். குறிப்பாக விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த அமைப்புகள் அல்லது அவர்களது செயற்பாடுகளுடன் இணைந்திருந்தவர்கள், அவர்களின் பெயரைச் சொல்லிக் காரியமாற்றுபவர்கள், புலம்பெயர்ந்தோர் சமூக அமைப்புகள், தனிமனிதர்கள், குழுக்கள் என விரிந்து செல்லும். இவர்களில் பலர் அல்லது சில அமைப்புகள் அரசியல் தேவைகளுக்கு மட்டுமன்றி மக்களுக்கு , குறிப்பாக யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கும் போராளிகளுக்கும் அதிகளவு நலன்புரி உதவி செய்பவர்களாகவும் உள்ளனர். ஆனால் இங்குள்ள முக்கிய பிரச்சினை என்னவென்றால், இவர்களுக்கிடையில் ஒத்த கொள்கைகளோ, பொதுவான நோக்கங்களோ, ஒருங்கிணைப்புகளோ அதிகம் இருப்பதில்லை. பதிலாகத் தனியன்களாகவும் எதிரெதிர் செயற்பாடுகளை ஊக்குவிப்பவர்களாகவும் இருப்பதைக் காணமுடிகிறது. புலம்பெயர் நாடுகளில் எவ்வாறு பிரிந்திருக்கிறார்களோ அவ்வாறே இங்கும் மக்களையும் அரசியல் தலைவர்களையும் பிரிப்பவர்களாகவும் அவர்களை அரசியல் எதிரிகளாக மாற்றுபவர்களாகவும் காணப்படுகின்றனர். 13ஐ ஆதரிக்கும் கட்சிகளுக்கு ஒரு தரப்பு நிதி வழங்குகிறது. அதை எதிர்க்கும் கட்சிக்கு இன்னொரு தரப்பு நிதி வழங்குகிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளருக்கு சில தரப்புகள் ஆதரவளிக்கின்றன. மறுபுறத்தில் வேறுதரப்புகள் அதனை எதிர்ப்பதற்காக உதவுகின்றன. இதில் ஒரு சில தரப்புகள் ஆதரிக்கும் எதிர்க்கும் இரண்டு தரப்புகளுக்கும் வேறுபட்ட மூலங்களினூடாக நிதி வழங்கி கூத்துப்பார்க்க விரும்புகின்றன. தேர்தல் செலவுகளுக்கு மட்டுமன்றி உரிமைகளுக்கான மக்கள் போராட்டங்களிலும் இதே நிலைமைகளை ஊக்குவிக்கின்றனர். இதன்மூலம் ஒன்றுபட்டு நிற்கும் அமைப்புகளை பிரிக்கவும் முயற்சிக்கின்றனர். இதற்கு நல்ல உதாரணம், ஒன்றுபட்டு நின்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பை இரண்டாகப் பிளந்து அதனைப் பலவீனமாக்கியது. ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றாக இணைந்து செயற்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு நாடாளுமன்றத் தேர்தலிலும் இணைந்து போட்டியிடுவது என்று முதலில் எடுத்த தீர்மானத்தை பின்னர் மறுதலித்தமைக்கு நிதி வழங்கிய புலம்பெயர் தரப்புகள், சிவில் அமைப்புகளின்மீது பிரயோகித்த அழுத்தமே காரணமென சில அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டுவதையும் காணமுடிகிறது. இன்று கட்சிகளின் வேட்பாளர்களாக யாரைப் போடவேண்டும், யாரைப் போடக்கூடாது என்பதையும் அவர்களே தீர்மானிக்கின்றனர். பல சுயேட்சைக் குழுக்களின் பிறப்புக்குப் பின்னாலும் அவர்களே உள்ளனர். முன்னாள் போராளிகள் அல்லது போராட்டத்துடன் இணைந்திருந்த அமைப்புகள் அல்லது சமூக அமைப்புகள் என்றாலும் ஒவ்வொன்றும் வேறான முரண்பட்ட நோக்கங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் நிதி வழங்கி ஊக்குவிப்பது ஆச்சரியமானது மட்டுமன்றி கவலைப்படவேண்டியதுமாகும். இத்தகைய தவறான விருத்தியின் இன்னொரு பரிணாம வளர்ச்சியாகக் கருதப்படுவது புலம்பெயர் தமிழ் தொழிலதிபரொருவர் தமிழர் அரசியலை முழுமையாகக் குத்தகை எடுக்கவிருப்பதாக வரும் செய்திகளாகும். நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சில கட்சிகளையும் தலைவர்களையும் இணைத்து புதியவர்களையும் உள்வாங்கி புதிய கட்சியொன்றின் பெயரில் வடக்கு,கிழக்கு, மலையகம், கொழும்பு ஆகிய இடங்களில் பரந்தளவில் தேர்தலில் ஈடுபடுத்துவதற்கு குறித்த தொழிலதிபர் எண்ணியதாகவும் காலம் போதாமையால் அதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு தற்போது தேர்தலில் இறங்கும் சில கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் நிதி வழங்கும் செயற்பாட்டில் இறங்கியிருப்பதாகவும் நம்பிக்கையான வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது. புதிய கட்சி தொடர்பாக ஜனநாயக தமிழ்த்தேசிய முன்னணித் தலைவர்கள் சிலருடனும் தமிழ் மக்கள் கூட்டணியைச் சேர்ந்த ஒருவருடனும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சிலருடனும் கட்சிசாராத சில முக்கிய பிரமுகர்களுடனும் தொடக்கக் கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களுள் தற்போது தேர்தலில் போட்டியிடுவோர்க்கு நிதி வழங்கப்பட்டதாகவும் சித்தார்த்தன், சிறிகாந்தா போன்றவர்கள் அதை நிராகரித்துவிட்டதாகவும் அறியக் கிடைக்கிறது. இவரைப்போன்ற பெரும் வர்த்தகப் புள்ளிகள் தங்கள் தொழில் நிறுவனங்களின் பாதுகாப்புக் கருதியும் சலுகைகளுக்காகவும் அரசியல் தலைவர்களின் தேர்தல் செலவுகளுக்காக நிதி வழங்குவது வழமை. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில், சஜித்துக்கு மட்டுமல்ல மாற்றத்துக்கான வேட்பாளர் அனுரவுக்கும் இவரால் பலகோடி ரூபாக்கள் கொடை வழங்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் தொழிலதிபர் என்ற வகையில் தனது வர்த்தக நலன்சார்ந்து இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு நிதி வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு தேர்தல் நன்கொடை வழங்குவதன் நோக்கம்தான் என்ன? அதிலும் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கி பணபலத்தால் தமிழ் மக்களின் அரசியலைக் கட்டுப்படுத்த விரும்புவதன் பின்னாலுள்ள தேவைகள் என்ன? இப்பொழுதே விலைபோகத் தொடங்கிவிட்ட நமது அரசியல் தலைவர்கள் எதிர்காலத்தில் என்ன செய்வார்கள் என்று ஊகிப்பது கடினமானதொன்றல்ல. ஏலவே புலம்பெயர் தமிழ் குழுக்களாலும் அமைப்புகளாலும் பணத்தினூடாகச் சின்னாபின்னமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர் அரசியலில் இந்த தொழிலதிபரின் தலையீடு ஆரோக்கியமானதொன்றாக இருக்கப் போவதில்லை. தனது வர்த்தக நலனுக்காக தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் நலனையும் இலங்கை ஆட்சியாளரிடம் அடகு வைப்பதற்கான ஒரு முயற்சியாகவே இது கருதப்பட வேண்டும். மக்கள் நலன்கருதி இதற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்கும் நிலையிலும் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இங்கில்லை. எரிகிற வீட்டில் பிடுங்குகிறது மிச்சம் என்ற மனநிலையிலேயே அவர்கள் உள்ளனர். புலம்பெயர் அமைப்புகள் ஒரேகுடையின் கீழ் ஒரே கொள்கையினடிப்படையில் இயங்குகின்ற போது அல்லது அரசியல் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் புலம்பெயர் தரப்புகள் வழங்கும் நிதி நிறுத்தப்படும்போது மட்டுமே தமிழ் மக்களின் அரசியல் சரியான பாதையில் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். ஆனால் அதற்கான எதிர்காலம் அண்மையில் இருப்பது போலத் தெரியவில்லை. https://thinakkural.lk/article/310744
  24. தேர்தல் செலவுக்கான செலவு அறிக்கையை அரியநேத்திரன் சமர்ப்பிக்கவில்லை! இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வடக்கு கிழக்கின் தமிழ் பொது வேட்பாளராக சங்கு சின்னத்தில் போட்டியிட்ட அரியநேத்திரன் வழங்கத் தவறியுள்ளார். பத்தரமுல்லை சீலரதன தேரர் மற்றும் சரத் கீர்திரத்ன ஆகியோரும் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இந்த மூவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இக் குற்றத்திற்கான அபராதத் தொகை 100,000 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது பிரச்சார நிதி அறிக்கைகளை சமர்ப்பிக்க நேற்று முன்தினம் (13) நள்ளிரவு வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் செலவின அறிக்கையை 35 வேட்பாளர்கள் வழங்கியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. http://www.samakalam.com/தேர்தல்-செலவுக்கான-செலவு/
  25. இலங்கை தமிழரசுக்கட்சியை உடைக்கவேண்டும், கட்சியை இல்லாமல்செய்யவேண்டும் என சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றது : இரா. சாணக்கியன் ! kugen இலங்கை தமிழரசுக்கட்சியை உடைக்கவேண்டும்,கட்சியை இல்லாமல்செய்யவேண்டும் என புலம்பெயர் நாடுகளில் உள்ள சில பிரதான தொழிலதிபர்கள்,வர்த்தகர்கள் சில சதிகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இரா.சாணக்கியனுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்,இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி கிளைகளின் முக்கிய உறுப்பினர்களுக்கான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி க.ரஞ்சனி உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது இலங்கை பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவது குறித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன் அது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன் எம்.பி., மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வெற்றியானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்டில் தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்றுவாழவேண்டும்,அதேபோன்று இந்த நாட்டில் நிகழ்த்தப்பட்ட மீறல்கள்,இனப்படுகொலைக்கு நீதிவேண்டும்ஆகிய கோரிக்கைளை நாங்கள் கடந்த காலத்தில் முன்வைத்து தொடர்ந்து அதனை முன்னிறுத்திவருகின்றோம். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைக்கோரக்கூடிய கட்சி இலங்கை தமிழரசுக்கட்சி மட்டுமேயாகும்.ஏனைய கட்சிகள் அழுத்தங்களை வழங்கினாலும் பிரதான விடயங்களை நாங்கள்தான் முன்னெடுத்திருந்தோம்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் களமிறங்கிபோது இதற்கான தீர்வுகளை பெறலாம் என நினைத்திருந்தோம். துரதிர்ஸ்டவசமான கோத்தபாய ராஜபக்ஸவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருந்தது.அவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வுதிட்டத்தினை முன்னிறுத்தகூடிய சூழல் அமையவில்லை. கடந்த நான்கு வருடமாக அதிதீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளியைப்போலவே தமிழ் இனம் இருந்துவந்தது.தவறான ஊசிகளை செலுத்தி அந்த நோயாளியை அழித்துவிடவேண்டும் என்ற வகையிலேயே கோத்தபாயவின் ஆட்சியிருந்தது.பல இடங்களில் அத்துமீறிய குடியேற்றங்களை முன்னெடுத்தார்.தொல் பொருள் என்ற போர்வையில் புதிதாக விகாரைகளை அமைப்பதற்கு முயற்சிகளை முன்னெடுத்தார். கோத்தபாய ராஜபக்ஸ எமது இனத்திற்கு செய்த துரோகத்திற்காக அவரை தெரிவுசெய்த அதே மக்கள் இரண்டு வருடங்களில் வீதிகளிலிறங்கி துரத்தியடித்தனர். கோத்தபாய ராஜபகஸதான் பேரினவாத சிந்தனைகொண்டவர்,தமிழர்களை கொன்றுகுவித்தவர்கள் அவர் அவ்வாறுதான் நடந்துகொள்வார்கள் என்றால் தமிழ் மக்களின் வாக்குகளினால் வெற்றிபெற்றவர் இருவர் இந்த மாவட்டத்தில் ஒருவர் விரைவில் சிறைக்கு செல்வார்.புதிய அரசாங்கத்தில் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத்தின் வழக்கினை மீள ஆரம்பிக்கப்போகின்றார்கள்,உயிர்த்த ஞாயிறு வழக்கினை மீள ஆரம்பிக்கப்போகின்றார்கள்.நிச்சயமாக அவர் சிறைக்கு செல்வார். இங்கு இருந்த இராஜாங்க அமைச்சர்கள் மண் கடத்துவதினையும் குளங்களை அமைப்பதற்கு பதிலாக மண் எடுத்து குளங்களை உருவாக்கினார்கள்.அதனை நாங்களே தடுத்து நிறுத்தினோம்.வாகரையில் இரால் வளர்ப்பு திட்டம் என்றும் இல்மனைட் அகழ்வு என்றும் மக்களின் வாழ்வாதாரத்தில் கைவைக்கும் நிலைமைகள் காணப்பட்டது. புளுட்டுமானோடையில் சந்திகாந்தன்,பிரசாந்தன் ஆகியோரது குடும்ப உறுப்பினர்களுக்கு காணிகள் வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டது.இவ்வாறு இந்த மாவட்டங்களில் உள்ள வளங்களை தங்களுக்கும் தங்களது ஆதரவாளர்களுக்கும் குடும்பங்களுக்கும் அபகரிக்கும் வேலைத்திட்டமே இங்கு முன்னெடுக்கப்பட்டது.இந்த மாவட்டங்களில் உள்ள வளங்களை இவ்வாறான கள்வர்களிடமிருந்து காப்பாற்றவேண்டிய பொறுப்பும் எங்களுக்குத்தான் இருந்தது. இதேபோன்று புதிய அரசாங்கத்துடன் பேசி எதிர்வரும் காலத்தில் மிகுதியாகவுள்ள அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். இந்தப் பிரதேச மக்கள் அன்றாடம் அனுபவித்த பிரச்சினைகளுக்காக நாங்கள் தான் குரல் கொடுத்தோம். மின்சாரக் கட்டணம் அதிகரித்த நேரத்திலே கோட்டைக்கல்லாறு, பெரிய கல்லாறு பாலத்திலே தீப்பந்தப் போராட்டம் நடத்தினோம். விலைவாசிகளை குறைக்க வேண்டும் என்று நாங்கள்தான் போராட்டம் நடத்தினோம். கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு பயணிக்கின்ற புலஸ்தி எனப்படுகின்ற புகையிரதமானது ஆரம்பத்தில் பொலன்னறுவை மாவட்டம் மட்டுமே பயணத்தில் ஈடுபட்டது. அந்தப் புகையிரதம் மட்டக்களப்பு வரை பயணிக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி நான் தான் அதனை மட்டக்களப்பிற்கு கொண்டு வந்தேன். நான் அபிவிருத்தித் திட்டங்கள் எதையும் செய்யவில்லை என்று கூறுகின்றார்கள். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற பதவியையும் சில அரச அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு மக்களுக்கு வரவேண்டிய நிதிகளை இல்லாமல் செய்தனர். அந்த அரச அதிகாரிகளுக்கு இனிவரும் அரசாங்கத்தில் நிச்சயம் தண்டனைகள் வழங்கப்படும். இங்கு அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட எத்தனையோ கிலோமீற்றர் கணக்கான வீதிகள் மீண்டும் மத்திய அரசாங்கத்தினால் மீளப்பெறப்பட்டது. ஏனென்றால் சாணக்கியன் சொல்லி அந்த வீதிகள் புனரமைக்கப்பட்டால் மக்கள் சாணக்கியனோடு நிற்பார்கள் என்பதாலாகும். 2020,2021,2022,2023 ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதிகூட எனக்கு வழங்கப்படவில்லை. மட்டக்களப்பிலுள்ள ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களிலே பிள்ளையானுக்கு ஐந்து கோடி, வியாழேந்திரன் அவர்களுக்கு 5கோடி, நஸீர் அகமட் அவர்களுக்கு 5கோடி, ஜனா அண்ணணுக்கு 5கோடி பிள்ளையானால் வழங்கப்பட்டது. எனக்கு வழங்கப்படவேண்டிய 5கோடி அதாவுல்லாவிற்கு வழங்கப்பட்டது. அதுபற்றி நான் விளக்கம் கேட்டபோது அதாவுல்லா அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் என்பதால் அவருக்கு வழங்கப்பட்டதாக கூறினார்கள். வெளியில் பேசுவதெல்லாம் முஸ்லிம் விரோதம், முஸ்லிம்களை நாங்கள் அகற்றப்போகின்றோம் என்பதாகும். ஆனால் நஸீர் அகமட் அவர்களுக்கு, அதாவுல்லாவிற்கு ஐந்துகோடி, தமிழ்த் தேசியத் தரப்பிலே அரசியல் செய்கின்ற எனக்கில்லை ஆனால் ஜனா அண்ணணுக்கு 5கோடி வழங்கப்பட்டிருக்கின்றது. அவர்களுக்குள் ஏதும் ஒப்பந்தம் இருக்கின்றதாவென எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு நிதி வழங்கப்படவில்லை. பின்னர் நான் ஜனாதிபதியை சந்தித்து அவருடன் சண்டை பிடித்து ஐந்து கோடி நிதியை கொண்டு வந்தேன். அதனைத் தொடர்ந்து 60கோடி ரூபா நிதியை ஆறுமாத காலத்தினுள் இந்த மாவட்டத்திற்காக கொண்டு வந்தோம். அதனைக்கொண்டு இந்த மாவட்டத்தில் எங்களிடம் கோரப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களையும் செய்து முடித்திருந்தோம். அமைச்சர்களாகிய எங்களுக்கே 35கோடி நிதி தான் ஒதுக்கப்படுகின்றது, சாணக்கியனுக்கு எவ்வாறு நீங்கள் 60கோடியை ஒதுக்கலாம் என்று கூறி 60கோடியில் 20கோடியை எங்களுக்கு கிடைக்காமல் செய்துவிட்டார்கள். இதனால் சில கிராமங்களுக்கான நிதிகள் வெட்டப்பட்டன. அமைச்சர்கள் மூன்று வருடங்களாக செய்யாத சில விடயங்களை வெறும் மூன்று மாதங்களில் நான் செய்துகாட்டியிருக்கின்றேன். அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, விமர்சித்து,தட்டிக்கேட்டு, பிழையான அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தித்தான் இந்த வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றோம். என்றார். https://www.battinews.com/2024/10/blog-post_905.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.