Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் Vhg அக்டோபர் 26, 2024 மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் ஒவ்வொரு மாதமும் தமது கவன ஈர்ப்பை சர்வதேசத்துக்கு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் மட்டக்களப்பு பொலிஸாரினால் தடை செய்யப்பட்டு போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அமலநாயகி தலைமையில் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் முன்னெடுக்கப்படவிருந்த நிலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்ப உறுப்பினர்கள் தற்போது தேர்தல் காலம் என்ற நிலையில் மக்கள் ஒன்று கூடுவதையும் கூட்டம் போடுவதையும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான போராட்டங்கள் செய்ய முடியாது என அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்ப உறுப்பினர்கள் காந்தி பூங்கா வளாக பகுதியில் ஒவ்வொரு இடங்களில் தனித்து நின்று தனது கவன ஈர்ப்பை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2024/10/blog-post_906.html
  2. இனியும் தும்புத்தடியை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்களா? October 25, 2024 – கருணாகரன் – பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கலாம்? என்ற கேள்வியும் விவாதமும் தமிழ் மக்களிடத்திலே வழமையை விடக் கூடுதலாகக் காணப்படுகிறது. சனங்கள் சற்றுச் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள். மாற்றங்களை விரும்புகிறார்கள். பழைய தலைகளை விலக்க வேண்டும் என்ற விருப்பம் சற்றுக் கூடுதலாகத் தெரிகிறது. புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மெய்யாகவே மக்களுடைய பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு, அதற்காகச் செயற்படக் கூடியவர்களையும் நேர்மையானவர்களையும் தெரிவு செய்ய வேண்டும் என்று பலரும் எண்ணுகிறார்கள். இதனால் இந்தத் தேர்தற் களம் முற்றிலும் வேறாகக் காட்சியளிக்கிறது. இதுவரையிலும் தமிழ் மக்களிடம் ஒரு சூத்திரமிருந்தது. பெருந்திரளானோர் எந்தக் கேள்வியுமில்லாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அதாவது வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிப்பார்கள். இவர்கள் அரசியல் உரிமையை முதன்மைப்படுத்திச் சிந்திப்போராகும். அல்லது அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டோர் எனலாம். இன்னொரு விதமாகச் சொன்னால் இவர்கள், தமிழரசுக் கட்சியின், விடுதலைப் புலிகளின் அரசியலைப் பின்தொடர்கின்றவர்களாக இருந்தனர். இதனால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட, தமக்குரிய சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர்களாகவே இருந்தனர். என்பதால்தான்,‘நாம் தும்புத்தடியை நிறுத்தினாலும் அதற்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பர்‘ என்று கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா. சம்மந்தன் திமிரோடு (மக்களை மலினப்படுத்தி) சொல்லக்கூடியதாக இருந்தது. உண்மையும் அதுதான். அதனால்தான் எந்தக் கேள்வியுமில்லாமல் பெருந்திரளான தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு – வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து வந்தனர். மறு தொகுதியினர் வடக்கில் – யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தா, அங்கயன், விஜயகலா போன்றோருக்கு ஆதரவளிப்பவர்கள். கிழக்கில் சந்திரகாந்தன், வியாழேந்திரன் போன்றோரை ஆதரிப்பர். இவர்கள் அபிவிருத்தி, முன்னேற்றம் போன்றவற்றை முன்னிலைப்படுத்திச் சிந்திக்கும் தரப்பினராகும். அதற்காக இவர்கள் அனைவரும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை ஆதரிப்பவர்களோ, தமிழ் மக்களுக்கான உரிமையை மறுப்பவர்களோ இல்லை. ஆனால் இவர்களும் தமது ஆதரவின் பெறுமானத்தைக் குறித்தும் நியாயத்தைக் குறித்தும் சிந்திப்பதில்லை. அதை மீள்பரிசீலனை செய்வதில்லை. இந்த அரசியலின் விளைவுகள், பெறுமானங்கள், முறைமைகளைக் குறித்து பேசுவதோ விவாதிப்பதோ கிடையாது. அப்படி விவாதிக்க முற்பட்டால், தமிழ்த்தேசியத் தரப்பினரைப்போல, அதை ஏற்றுக் கொள்ளாமல், விமர்சனங்களை முன்வைப்போரை அவமதித்து, நிராகரித்து வந்தனர். பதிலாக ஏதோ நடக்கிறது. கிடைப்பது லாபம் என்ற அளவில் தமது அரசியலை மேற்கொண்டு வந்தனர். தம்மைச் சற்று நிதானப்படுத்திச் சிந்தித்திருந்தால், இந்த அரசியலுக்கான அடித்தளத்தையும் முறைமை ஒன்றையும் உருவாக்கியிருக்க முடியும். அதைக் குறித்து இவர்கள் சிந்திக்கவில்லை. ஆக இரண்டு தரப்புகளும் தமக்குரிய (தாம் உருவாக்கிய அல்லது அப்படி அமைந்த) Formula வின்படி தமது அரசியலைச் செய்து வந்தனர். அதற்கேற்ற வகையில் வாக்காளர்களும் பிரிந்திருந்ததால் அரச எதிர்ப்புத் தரப்புக்கும் இடமிருந்தது. அரச ஆதரவுத் தரப்புக்கும் வாய்ப்பிருந்தது. அவரவர் தத்தமது தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டுமிருந்தனர். இதற்குத் தோதாக ஒவ்வொரு தரப்பும் தங்களுடைய அரசியலுக்கு நிறமூட்டிக் கொண்டிருந்தனர். ஒரு தரப்பு தமிழ்த்தேசியம் என. மறுதரப்பு அபிவிருத்தி அரசியல் என்று. இப்படி இரண்டு பிரிகோடுகளில் தமிழ் அரசியல் பயணித்துக் கொண்டிருந்ததால் இரண்டு வகையான அரசியலாளர்களும் தமக்குரிய இடம் எப்படியோ உறுதியாக உண்டு என்ற நம்பிக்கையுடனிருந்தனர். சிலவேளை இதில் சிறிய அளவிலான அசைவுகள் நடக்கும். அப்படி நடக்கும்போது டக்களஸ் தேவானந்தா ஒன்றோ இரண்டோ கூடுதலான ஆசனங்களைப் பெறுவார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒன்று இரண்டு ஆசனங்களை இழக்க நேரிடும். இன்னொரு வகையில் சொல்வதென்றால், அரச ஆதரவுத் தரப்பு ஒன்றிரண்டு ஆசனங்களைக் கூடுதலாகப் பெறும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒன்றிரண்டு ஆசனங்களை இழக்கும். ஆனால், பெரிய மாற்றங்கள் ஏற்படாது. இந்தத் தடவை இந்தச் சூத்திரத்துக்கு அடி விழுந்துள்ளது. இப்போதுள்ள களநிலவரத்தின்படி வடக்கிலும் கிழக்கிலும் வழமைக்கு மாறான வகையிலான தேர்தல் முடிவுகளே வரப்போகின்றன. ஏனென்றால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, உடைந்து நொறுங்கி இல்லாமற்போய் விட்டது. பதிலாக ‘தமிழ்த்தேசியம்‘ என்ற அடையாளத்தோடு (மஞ்சள் – சிவப்பு நிறத்தில்) பல கட்சிகளும் குழுக்களும் போட்டியில் இறங்கியுள்ளன. இவற்றின் பெயரையெல்லாம் மனதில் வைத்திருப்பதற்குக் கடவுளாலும் முடியாது. சாத்தானாலும் இயலாது. எல்லாவற்றுக்கும் ஒரு அடைமொழியைப்போல முன்னொட்டில் ‘தமிழ்த்தேசியம்‘ என்ற சொல் மட்டும் உள்ளது. அந்தச் சொல்லையும் மஞ்சள் சிவப்பு நிறத்தையும் இணைத்துக் கொண்டால், தமிழ் மக்களுடைய அரசியல் சரியாகி விடும் என்று இவை நம்புகின்றன. தமிழ்ச்சனங்களை அந்தளவுக்கு மலினமாகக் குறைத்து மதிப்பிட்டுள்ளன. இந்தக் குறைபாடு, தும்புத்தடியை நிறுத்தினாலும் தமிழ்மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று சொன்ன மூத்த தலைவரான சம்மந்தனிலிருந்து இன்றைய இளைய தலைமுறை உறுப்பினர்கள் வரையில் தொடர்கிறது. இதில் எந்தத் தரப்பும் மாறுதலைக் கொள்ளவில்லை என்பதால் எந்தத் தரப்பை ஆதரிப்பது என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், எல்லாமே தமிழ்த்தேசியம் எனவும் மஞ்சள் – சிவப்பு நிறத்திலும்தான் வந்து முன்னிற்கின்றனவே தவிர, தாம் எந்த அடிப்படையில் ஏனையவற்றிலிருந்து வேறுபடுகிறோம்? தம்முடைய தனித்துவம் என்ன? எதிர்கால அரசியலை எந்த அடிப்படையில் முன்னெடுப்போம்? அதற்கான பொறிமுறைகளும் வழிமுறையும் என்ன? கடந்த காலத் தவறுகளுக்கும் பின்னடைவுகளுக்குமான காரணங்களும் பாத்திரவாளிகளும் யார்? அதற்கான பொறுப்பை ஏற்பது எவர்? கடந்த காலத் தோல்விகளிலிருந்து மீள்வது எப்படி? புதிய அரசியலுக்கான உத்தரவாதம் என்ன? அதைச் செயற்படுத்தும் கால அட்டவணை எப்படியானது? என எதைப்பற்றியும் எந்தக் கட்சியும் எந்தக் குழுவும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. தமிழ்த்தேசியக் கட்சிகளில் அல்லது மஞ்சள் – சிவப்புக் குழுக்களில் பெரியளவில் இருப்பவை நான்காகும். ஒன்று இலங்கைத் தமிழரசுக் கட்சி. இது வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகிறது. அடுத்தது, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (DTNA). இது சங்குச் சின்னத்தில் நிற்கிறது. அடுத்தது, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ். இது காங்கிஸின் சின்னமான சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது. (பேசாமல் காங்கிரஸின் பேரிலேயே நிற்கலாம். இடையில் என்ன தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. அது அப்படித்தான்… ‘சும்மா ஒரு இதுக்குத்தான்‘ அப்படிச் சொல்வது. அதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் தொடர்ந்து படியுங்கள்). அடுத்தது, தமிழரசுக் கட்சியிலிருந்து தேர்தலுக்காகப் பிரிந்தவர்கள், ஐங்கரநேசனின் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தோடு கூட்டிணைந்து நிற்கிறார்கள். இவர்கள் கையில் ஏந்தியிருப்பது மாம்பழமாகும். ஐந்தாவதாகவும் ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் பின்னாளில் சாராயத் தவறணை விடயத்தில் சிக்கியிருப்பவருமான விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி. இதனுடைய சின்னம்,மான். இப்படிப் பல அணிகளாகச் சிதறியிருக்கும் தமிழ்த்தேசியத் தரப்புகளின் வாக்குகளை எப்படி ஒன்று திரட்டுவது? என்ற கேள்வியும் கவலையும் தமிழ்த்தேசிய ஆதரவாளர்களிடம் எழுந்துள்ளது. இந்தக் கவலைக்கு அவர்களும் பொறுப்பாளிகளே! ஏனென்றால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள்மோதல்களைக் கண்டிக்காமலும் கண்டு கொள்ளாமலும் இருந்ததன் விளைவுகளையே இப்போது நேரில் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது. இதனால் முன்னர் கண்ணை மூடிக்கொண்டு வீட்டுச் சின்னத்துக்குக் கீறிய நிலைபோய், இப்போது எந்தச் சின்னத்தைத் தேர்வது? யாரை ஆதரிப்பது? எதை நம்புவது என்று தெருவில் நின்று யோசிக்க வேண்டி நிலை வந்துள்ளது. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல், தமக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என ஒவ்வொரு தரப்பும் மனக்கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றன. சங்குக் கூட்டணி சொல்கிறது, தாம் எப்படியும் 10 இடங்களைக் கைப்பற்றுவோம் என. தமிழரசுக் கட்சி பிரகடனப்படுத்துகிறது தனக்கு எப்படியும் 12 இடங்கள் கிடைக்கும் என. சைக்கள் கம்பனி சொல்கிறது, தாமே கூடுதலான இடங்களைக் கைப்பற்றுவோம் என. அப்படிப் பார்தால், அவர்களுக்கு எப்படியும் 14 இடங்களுக்கு மேல் கிடைக்க வேண்டும். இதெல்லாம் நடக்குமா என்று உங்கள் உள்மனது கேட்கிறது. ஏன், வாய்விட்டே நீங்கள் சிரிக்கிறீர்கள் என்பதும் தெரியும். ஆனால் இவர்கள் இப்படிக் கணக்குப் பார்த்தும் கணக்கு விட்டும் வந்ததன் பழக்கமே இப்போதும் இப்படிச் சொல்வதற்குக் காரணமாகும். அதனால்தான் சனங்களை மடையர்களாக்கியோ என்னவோ எப்படியாவது தமக்கான வாக்குகளைக் கவர்ந்து விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கின்றன, அனைத்துக் கட்சிகளும். இதற்காகச் சில கட்சிகள், தனிநபர்களை (சுமந்திரன் போன்றோரை) குறி வைத்துத் தாக்குகின்றன. பொதுவாக அனைத்துத் தரப்பும் தம்மை மாற்றுக்குறையாத தங்கம் எனவும் மற்றவர்கள் போலி என்றும் காட்ட முற்படுகின்றன. இது மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபத்தை உருவாக்கியிருக்கிறது. இதன் விளைவுகளைச் சமூகவலைத்தளங்கள் தொடக்கம் மக்களின் பொது உரையாடல்வெளிகளில் தெளிவாகப் பார்க்கமுடிகிறது. தமிழ்த்தேசியத் தலைமைகளையும் கட்சிகளையும் வறுத்தெடுக்கும் சமூக வலைத்தளப் பதிவுகளே அதிகமாகப் பொது வெளியில் காணப்படுகின்றன. இந்தச் சூழலில், தமது அடுத்த தெரிவு என்ன? எந்தத் தரப்பை அல்லது யாரை ஆதரிக்கலாம் என்ற கேள்வியோடு மக்கள் நிற்கிறார்கள். இந்தக் கேள்வியே அவர்களை விவாதத்துக்குத் தூண்டியிருக்கிறது. அவர்கள் இரண்டு வகையில் பிரதானமாகச் சிந்திக்கின்றனர். 1. தமிழ்த்தேசியத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த உடைவையும் சிதைவையும் பார்த்துச் சினமடைந்திருக்கின்றனர், கவலை கொண்டுள்ளனர். இதனால் ‘தமிழ் மக்கள் ஒன்றாக நிற்க வேண்டும். தேசியத்தைப் பலப்படுத்த வேண்டும். தேசமாகத் திரள வேண்டும். தமிழ்த்தேசியத் தரப்புகளுக்கிடையில் ஒற்றுமை வேண்டும்‘ என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, அதற்கு மாறாகச் செயற்படும் (நாடகமாடும்) கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். இவர்களுடைய வாக்குகள் வழமைக்கு மாறாக எதிர்த்தரப்புகளுக்குச் செல்ல வாய்ப்புண்டு. அதற்காக டள்ளஸ் தேவானந்தா, பிள்ளையார் போன்றோருக்கு அவை கிடைக்காது. மாறாக அனுரவின் NPP க்கும், சஜித்தின் SJB பிக்கும் பிரியப்போகின்றன. இதற்கொரு காரணமும் உண்டு. இதில் ஒரு சாரார் யோசிக்கின்றனர், இப்போதுள்ள சூழலில் NPP க்கு ஆதரவளித்தால், அது ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும் என. ஆனால், இன்னொரு சாரார் இதை மறுத்து, பேராதரவுடன் NPP அதிகாரத்தைக் கைப்பற்றினால், அது நாட்டுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் எதிரானதாகவே மாறும். ஆகவே, ஒரு வலுவான எதிர்த்தரப்பு – எதிர்க்கூட்டணி அல்லது கூட்டரசாங்கம் ஒன்று அமையக் கூடியவகையில் தம்முடைய ஆதரவு இருக்க வேண்டும். ஜனநாயக வெளி பாதுகாக்கப்பட வேண்டும் என. இவர்கள் சஜித்தின் SJB ஐ ஆதரிப்பதற்கு முற்படுவர். இப்போதுள்ள சூழலும் அப்படித்தான் உள்ளது. 2. அரச தரப்பை அனுசரித்து நிற்கும் டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் போன்றோருக்கான ஆதரவுத் தளம் சற்று வீழ்ச்சியடைகிறது. இவர்களை NPP ஏற்றுக் கொள்ளவில்லை, ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதால் இந்தச் சரிவு எனலாம். ஆகவே இவற்றின் விளைவுகள் நிச்சயமாகத் தேர்தல் முடிவுகளில் நிச்சயமாகப் பிரதிபலிக்கும். இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ளன, இதை அறிந்து கொள்வதற்கு. https://arangamnews.com/?p=11365
  3. இளங்கோ டிசேயின் முகநூல் பதிவு.. கனடா - இந்தியா உறவுகள் இப்போது மிக மோசமான நிலைமையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே இந்தியாவிலிருந்து குடிபுகும் மாணவர்கள் மீதொரு ஒவ்வாமை கனடிய பொதுச்சமூகத்தில் ஊடகங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அத்தோடு இரு நாட்டு உறவுகள் மேலும் மேலும் சிக்கலாகி வந்தபடி இருக்கின்றன. கடந்த வாரம் கனடிய அரசு, இங்கிருக்கும் இந்திய தூதரலாயத்தில் இருந்து ஆறுக்கு மேற்பட்டவர்களை வெளியேற்றியிருந்தது. இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாக இந்தியாவின் உளவுநிறுவனம் பின்னால் நின்று காலிஸ்தான் ஆதரவுள்ள இந்திய வம்சாவளி கனடியர் ஒருவரைப் பொதுவெளியில் சுட்டுக் கொன்றமையே காரணம். இவ்வாறான காலிஸ்தான் ஆதரவுள்ள இன்னொருவரை அமெரிக்காவில் கொல்ல முயன்றபோது இந்திய உளவுத்துறை வசமாக மாட்டுப்பட்டும் இருந்தது. அமெரிக்காவோ, கனடாவோ தனது குடிமக்கள் மீது வேறு நாட்டில் எவரும் கைவைத்தால் கூடஅவர்களைக் காப்பாற்ற - அது ஒருவகையில் அவர்களின் தன்மானத்துக்கான சவால் என்பதால்- கடைசி எல்லைவரை செல்லக்கூடியது. அப்படி இருப்பவர்களின் நாட்டில் இன்னொரு அரசு வாடகைக் கொலைகாரர்களை வைத்துச் செய்யும் நடவடிக்கைகளை ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்பது ஓர் எளிய பாடம். இந்தக் கொலைகள்/கொலை முயற்சிகளுக்கு முன்னரும் ஒரு கொலை நடந்திருந்தது. எயர் இந்தியா விமானக் குண்டு வெடிப்பில் (காலிஸ்தான்/பொற்கோயில் பிரச்சினையில் 80களில் நடந்த சம்பவம்) குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு பஞ்சாபியர் பட்டப்பகலில் வைத்து வன்கூவரில் கொலைசெய்யப்பட்டார். இந்தளவு வயதானவரை (80களை அண்டியவர்) கொல்லப்பட்டபோதே இது சும்மா செய்யப்பட்ட கொலையல்ல, கடந்தகால நிகழ்வுகளின் பழிவாங்கலாக இருக்குமென நண்பரொருவரிடம் சொல்லியிருந்தேன். இப்போது அந்தக் கொலைவழக்கும் கனடிய அரசால் தூசி தட்டப்பட்டு, இரு வாடகைக் கொலையாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். எனவே அந்தக் கொலையின் பின்னணியார் யார் இருந்தார்கள் என்கின்ற விபரங்களும் விரைவில் வெளியிடப்படலாம். கனடிய அரசு, ஒரு வணக்கஸ்தலத்தின் முன் நடந்த இந்தக் கொலையை பற்றி இந்திய அரசிடம் விளக்கம் கோரியது. இந்திய அரசோ விளக்கம் கொடுப்பதை விடுத்து கடந்த வருடம் இந்திய தூதுராலயத்தில் இருந்த கனடிய அதிகாரிகள் பலரை வெளியேற்றியது. அதுமட்டுமில்லாது அப்போது கனடியர்களுக்கு விஸா கொடுப்பதையும் இந்திய அரசு தடுத்து நிறுத்தியது. அப்போதும் கனடிய அரசு நிதானமாகவே இந்த விடயத்தைக் கையாண்டது. பதில் நடவடிக்கையாக எந்த எதிர்விடயங்களையும் செய்யவில்லை. இதற்கிடையில் இந்திய உளவுத்துறையின் இரத்தக்கறை இருப்பதற்கான ஆதாரங்களைப் பார்க்க கனடிய அரசு எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழைத்தது. அந்தவகையில் கனடாவில் மூன்றாவது பலமான தரப்பாக இருக்கும் (ஒரளவு இடதுசார்புள்ள நான் ஆதரிக்கும் புதிய ஜனநாயக் கட்சி) தலைவரான ஜஸ்மீட் சிங்கும் இந்தியாவின் நுழையீடு கனடாவில் இருப்பதை, ஆதாரங்களைப் பார்த்தவர் என்றவகையில் பொதுவெளியில் அறிவித்தார். கனடிய அரசு நிறைய அவகாசம் கொடுத்தபின்னும், இந்திய அரசு இந்தக் கொலைக்கான விளக்கத்தைக் கொடுக்காதபோது இப்போது கனடிய அரசு இங்கிருக்கும் இந்திய தூதரலாயத்தில் இருந்து 6இற்கு மேற்பட்டவர்களை வெளியேற்றியிருக்கின்றது. இந்த விடயம் ஒருபுறம் போய்க் கொண்டிருக்க, குடிவரவாளர்களாக வரும் இந்தியர் (மாணவர்கள்) மீது ஒவ்வாமையும், இனத்துவேஷமும் கனடாவில் இப்போது அதிகம் வெளிப்படத் தொடங்கியுள்ளது. கனடா, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்பவை 'வெள்ளையினப் பெருமை' உள்ள நாடுகள் என்பதை நாம் நன்கு அறிவோம். இனவாதம் வெளிப்படையாகத் தெரியாது இந்தநாடுகள் தம்மை மறைத்துக் கொண்டிருந்தாலும், இனத்துவேஷம் உள்ளோடியிருப்பதை அகதிகளாக/ குடிவரவாளர்களாக வந்த நாம் அனைவரும் அனுபவித்திருப்போம். வருகின்ற சில இந்திய மாணவர்களும் தம்மை ஏற்கனவே இருக்கின்ற சமூகத்தோடு கட்டமைக்காமல் 'இந்தியப் பெருமை'களில் சிக்கிச் சீரழிந்து 'நுணலும் கெடும் தன் வாயால்' என்கின்றமாதிரி இங்கே ஆகிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் ஒரளவு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நமது ஈழத்தவர்கள் இலங்கையிலிருந்த சாதி உள்ளிட்ட விடயங்களை அப்படியே அள்ளிக்கொண்டு வந்தமாதிரி இந்தியர்களும் எண்ணற்ற விடயங்களை அப்படியே கொண்டு வந்திருக்கின்றனர். ஒருவர் தனது நம்பிக்கைகள்/விருப்புக்களை தனிப்பட்டு வைத்திருப்பதற்கும், அதைப் பொதுவெளியில் பகட்டாக காட்டுவதற்கும் வித்தியாசங்களுண்டு. இப்போது நாமிருக்கும் மாகாணத்தில் இந்தியர்கள் செறிவாக வாழும் சில நகரங்களில் இந்தியர்கள் செய்யும் 'அழிச்சாட்டியங்களை' படம்பிடித்து பொதுவெளியில் பலர் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். உண்மையில் இவை எல்லாச் சமூகங்களும் கனடிய நீரோட்டத்தில் கலக்க முன்னர் தன்னைத் தகவமைத்துக் கொண்டு போகும்போது செல்கின்ற பாதைதான். ஆனால் இப்போது இந்திய மாணவர்கள் மீது எல்லோரும் கவனம் குவித்திருப்பதால் அது பெரும் விடயங்களாக ஊடகங்களினால் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றன. இதனால் இப்போது இனவாதம் சம்பந்தமான நிகழ்வுகள் பொலிஸ் நிலையங்களில் நிறைய பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த மாணவர்களை பொதுப்புத்தியோடு வெறுக்கின்ற நம்மவர்க்கும், இது எல்லாமே இறுதியில் எமது அடிப்படை உரிமைகளையும் சுதந்திரமான வாழ்வையும் கேள்விக்குட்படுத்தும் என்பதை அறிந்தார்களில்லை. நாமும் அதே 'மண்ணிறமானவர்கள்', நாமும் இப்படி ஒருகாலத்தில் அகதிகளாக வந்தவர்கள் என்பதை மறந்துவிடுகின்றோம். இந்திய மாணவர்களும், தம்மைப் போல அதிக அளவில் சர்வதேச மாணவர்களாக வரும் சீன மாணவர்களைப் போன்று, அவர்கள் எவ்வாறு 'அலட்டிக்கொள்ளாது/படங்காட்டாது' பொதுச்சமூகத்தில் எவ்வாறு எளிதில் இணைந்துகொள்கின்றார்கள் என்கின்ற பாடங்களைக் கற்றுக் கொள்வதன் மூலம் தேவையற்ற பல பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். இவையெல்லாவற்றின் நீட்சியாக கனடிய அரசு இப்போது குடிவரவாளர்கள்/சர்வதேச மாணவர்கள் கனடாவில் குடியுரிமை/நிரந்தர வதிவிடம் பெறும் சட்டங்களை மிக இறுக்கமாகக் கொண்டுவரத் தொடங்கியுள்ளது. கனடா/அமெரிக்கா/இங்கிலாந்து/ஆஸ்திரேலியா ஒரே நேர்கோட்டில் தமது முடிவுகளை எடுக்கக் கூடியவை. இவ்வாறு சர்வதேச மாணவர்களாக வந்தவர்களை இங்கிலாந்தில் தங்கவிடாது சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்து தனது சட்டங்களை இறுக்கியதை நாம் ஏலவே அறிவோம். இப்போது கனடாவும் அதைப் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றது. அதுமட்டுமின்றி இப்போது கனடிய லிபரல் அரசு கனடாவில் ஒவ்வொரு வருடமும் ஏற்றுக்கொள்ளும் குடிவரவாளர்களின் எண்ணிக்கையையும் குறைப்பதாக அறிவித்திருக்கின்றது. குடிவரவாளர்களின் பெரும்பான்மை ஆதரவால் அரசமைத்த லிபரல் அரசே இவ்வாறு குடிவரவாளர்க்கான அனுமதி/சட்டங்களை இறுக்கின்றபோது, அடுத்த வருடம் நடைபெற்றவுள்ள தேர்தலில் வெல்லச் சாத்தியமுள்ள வலதுசாரியான பழமைவாதக் கட்சி பெரும் மாற்றங்களை குடிவரவாளர்கள்/சர்வதேச மாணவர்களில் நிச்சயம் கொண்டுவரும். டிரம்ப் அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்தபோது, பல இந்தியர்கள் அங்கே வதிவிட அனுமதி மறுக்கப்பட்டு, கனடாவுக்கு எல்லை தாண்டியபோது கனடா அவர்களை ஏற்றுக்கொண்டது. இனி அமெரிக்காவிலும், கனடாவிலும் வலதுசாரி அரசுக்கள் வெல்லும் சாத்தியங்கள் இருக்கும்போது நம்மைப் போன்ற அகதிகள்/குடிவரவாளர்களே பெரும் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கப் போகின்றது என்பதுதான் துயரமானது. ***********
  4. கனடாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு- பிரதமர் அதிரடி நடவடிக்கை Maalaimalar ஒட்டாவா: வடஅமெரிக்க நாடான கனடா சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து குடியேறுபவர்களை நம்பி தான் இந்நாட்டின் பொருளதார வளர்ச்சி உள்ளது. ஆனால் சமீப காலமாக இந்திய வம்சாவளியினர் என்ற போர்வையில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கிருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதில் இருந்து இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிராக எம்.பி.க்களும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அவர் பதவி விலக வேண்டும் என கெடுவும் விதித்துள்ளனர். இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இனி வரும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கனடாவில் குடியேறும் மக்களின் எண்ணிக்கையை குறைக்க போவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு கனடாவில் புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க போகிறோம். இது தற்காலிகமானது தான் என தெரிவித்துள்ளார். அதன்படி இந்த ஆண்டு 4 லட்சத்து 85 ஆயிரமாக இருக்கும் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 2025-ம் ஆண்டு 3 லட்சத்து 95 ஆயிரமாகவும், 2026-ம் ஆண்டு 3 லட்சத்து 80 ஆயிரமாகவும் குறைக்கப்படும். 2027-ம் ஆண்டு இது 3 லட்சத்து 65 ஆயிரமாக குறையும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. தொழிலாளர்கள் தேவையை நிவர்த்தி செய்யவும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கும் முதல் நடவடிக்கை இதுவாகும். இதனை சிலர் விமர்சனம் செய்துள்ளனர். கனடா போன்ற மிகப்பெரிய நிலப்பரப்பு கொண்ட நாட்டில் உற்பத்தி நிலையானதாக இருக்கிறது. இதனை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் ஆட்களின் எண்ணிக்கை அவசியம். ஆனால் ட்ரூடோ அரசின் இந்த அறிவிப்பு கனடா பொருளாதாரத்தை பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. https://www.maalaimalar.com/news/world/nasa-astronaut-remains-at-hospital-after-returning-from-an-extended-stay-in-space-744177
  5. சிறிநேசனை தோற்கடிக்க சுமோவும் சாணாவும் மாஸ்டர் பிளான் – கோட்டை பிடிபடுமா? Vhg அக்டோபர் 24, 2024 மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி வேட்பாளர் ஶ்ரீநேசனின் ஆதரவலையை குறைக்க சாணக்கியன் போட்ட இரகசிய சதித்திட்டம் தீட்டுவது அம்பலமாகியுள்ளது. மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சாணக்கியன் நேற்று முன்தினம் (22,10,2024) இரவு 7.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணிவரை களுவாஞ்சிகுடி கடற்கரை தோட்டத்தில் உள்ள தனது பங்களாவில், ஶ்ரீநேசனை தோற்கடிக்க, சுமந்திரன் வழங்கிய சதித்திட்ட ஆலோசனையை ஆதரவாளர்களுடன் பகிர்ந்துள்ளார். அன்று இடம்பெற்ற இரவு விருந்தில், தமிழரசு கட்சியில் தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களான வைத்தியர் ஶ்ரீநாத், முன்னாள் மேஜர் சரவணபவன், வாலிபர் அணி தலைவர் கி.சேயோன் ஆகிய வேட்பாளர்களுடனேயே இந்த விசேட இரகசிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. அந்த மூன்று வேட்பாளர்களுடன் சென்ற ஆதரவாளர்களை வேறு இடத்தில் நிற்க வைத்துவிட்டு சாணக்கியன், ஏனைய மூன்று வேட்பாளர்களான மேற்குறித்த மூவரையும் ஒரு அறையில் தனியாக வைத்து நீண்ட நேரம் தேர்தல் பற்றி உரையாடியுள்ளார். உரையாடும்போது சுமந்திரனும் மூவருடனும் தொலைபேசியில் கதைக்க ஒழுங்கு செய்யப்பட்டு அவரும் அந்த ஆலோசனை கூறியுள்ளார். இதுதான் அந்த ஆலோசனை... “ஶ்ரீநேசனை வெற்றி பெறாமல் தடுத்து விருப்பு வாக்குகளை அவருக்கு செல்லாமல் வைத்தியர் ஶ்ரீநாத்துக்கு வாக்குகளை வழங்கி அவரை வெற்றிபெற வைக்கவேண்டும். அவரும் சாணக்கியனும் பாராளுமன்றம் செல்லவேண்டும். ஶ்ரீநேசனை தோற்கடிக்க வேண்டும் அதற்கான வழி சேயோன், சரவணபவன், இருவரும் தமது பிரசாரத்தை 2ஆம் இலக்கமான ஶ்ரீநாத்துக்கும், 3ஆம் இலக்கமான சாணக்கியனுக்கும் மட்டும் பிரசாரம் செய்வதுடன் தமது இலக்கங்களான சேயோனின் 4ஆம் இலக்கத்திற்கும், சரவணபவனுடைய 7ஆம் இலக்கத்துக்கும் வாக்களிக்கவேண்டாம் என கூறும்படியும் ஶ்ரீநாத்துடன் இணைந்து பிரசாரம் செய்யுமாறும் பணிக்கப்பட்டது. இந்த இருவரையும் மாகாணசபையில் வேட்பாளராக நிறுத்தி தாம் வெற்றிபெற வைப்பதாகவும் உறுதி கூறப்பட்டது. இந்த விடயத்தை கூறியபோது சேயோன் கேட்டகேள்வி “ஏன் 1ஆம் இலக்க வேட்பாளர் கருணாகரன், 8ஆம் இலக்க வேட்பாளர் சர்வானந்தன், 5ஆம் இலக்க வேட்பாளர் ஜெயந்தி ஆகியோரை அழைக்கவில்லை” என சாணக்கியனிடம் கேட்டபோது, அவர்களை எனக்காக பிரசாரம் செய்ய சொல்லியுள்ளேன். இது இரகசியமான திட்டம் அவர்களுக்கு சொன்னால் வெளியில் உண்மை தெரிந்துவிடும். சுமந்திரன் உங்கள் மூவருக்கும் மட்டுமே இதை கூறச்சொன்னார் என்றார். வைத்தியர் ஶ்ரீநாத், “ஏன் ஶ்ரீநேசனை தோற்கடிக்க வேண்டும் அவரும் பிரசாரம் செய்யட்டுமே” என கேட்டிருக்கிறார். அதற்கு சாணக்கியன் கூறிய பதில் ஶ்ரீநேசனை வேட்பாளராக போடக்கூடாது என்பதில் சுமந்திரன் திடமாக இருந்தார் ஆனால் சிலரின் தூண்டுதலால் வேட்பாளராக போடப்பட்டாலும் அவரை வெற்றி பெறவைத்தால் அவர் சீனியர் என்று கட்சியில் ஈடுபடுவார் நான் யூனியராக இருக்க வேண்டிவரும். அவர் இல்லை எனில் நான்தான் தமிழரசுகட்சியில் தொடர்ந்தும் மாவட்ட தலைவராக தொடர்ந்தும் செயல்படமுடியும். அதைவிட ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டிய அரியநேத்திரன், யோகேஸ்வரன், நடராசா இதுபோன்ற சிலர் மீண்டும் தமிழரசுகட்சிக்குள் ஆதிக்கம் காட்டி மக்களை குழப்புவார்கள் இதற்கு இதுதான் ஒரேவழி என்றாராம். இது போன்ற வேறொரு திட்டத்தை தாம் யாழ்ப்பாணத்தில் செய்ய உள்ளதாகவும் சுமந்திரன் கூறினாராம். https://www.battinatham.com/2024/10/blog-post_295.html
  6. AI உடன் காதலில் விழுந்த சிறுவன் அதனுடன் வாழ உயிர்மாய்ப்பு ! Shana ஏஐ உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்றைய நவீன காலகட்டத்தில் பல நவீன தொழிநுட்ப கண்டுபிடிப்புக்களால் ஆதாயம் உள்ளபோதும், மனித உறவுகளை தூரத்தில் கொண்டு செல்வதுடன், இளையோரின் பல விபரீத முடிவுகளுக்கும் காரணமாகி விடுகின்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இணையத்தளங்களுக்கு அடிமையாகி உள்ளனர். சிலவேளைகளில் இந்த மோகத்தால் அவர்கள் விபரீத முடிவுகளுக்கும் சென்று விடுகின்றனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரபல வரலாற்று புதின தொலைக்காட்சி தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் வரும் பெண் கதாபாத்திரமான டேனிரோ டார்கேரியன் (Daenero) கதாபாத்திரத்தினை மையமாகக் கொண்டு உருவான டேனி சாட் ஜிபிடியுடன் பல மாதங்களாக உரையாடி வந்துள்ளான். சாதாரணமாகத் தொடங்கிய உரையாடல் காதல், காமம் உள்ளிட்ட விஷயங்களை பற்றியும் நகர்ந்துள்ளது. இந்த உரையாடல்கள் ஒரு கட்டத்தில் சிறுவனை டேனி மீது காதல் கொள்ள செய்துள்ளது. எதார்த்தத்தில் இருந்து தன்னை முற்றிலுமாக துண்டித்துக்கொண்டு சேட் ஜிபிடியே கதி என்று இருந்துள்ளான். இதனால் நிஜ உலகை வெறுக்கத்தொடங்கிய சிறுவன, தான் காதலியாக கருதும் உலகத்தில் இல்லாவே இல்லாத அந்த சாட் ஜிபிடியுடன் வாழ வேண்டும் என்றால் தானும் இந்த உலகத்தில் இருக்கக்கூடாது என்ற விபரீத முடிவுக்கு வந்து இறுதியில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளான். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட சாட் ஜிபிடி நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதேவேளை தொழிநுட்ப வளர்ச்சியால் ஏற்படும் அழிவுகள் குறித்து சைன்ஸ் பிக்க்ஷன் சினிமாக்களில் கதையாக கூறப்பட்ட இதுபோன்ற சம்பவங்கள் நிஜத்திலேயே நடந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. https://www.battinews.com/2024/10/ai.html
  7. யாழ்ப்பாணம், கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு டிஜிட்டல் வலயங்கள் அரசாங்க சேவையை இலகுபடுத்துவதற்கும் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தற்போதைய அரசாங்கம் நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தெளிவான பார்வையை கொண்டுள்ளது. தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையிலான கொள்கை நாட்டுக்கு தேவை. இதன்படி யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு டிஜிட்டல் வலயங்களை உருவாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சர்வதேச டிஜிட்டல் நிறுவனம் மற்றும் தேசிய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதும் அவசியமானது. தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப கல்வியை கட்டியெழுப்புதல், அதற்கு தேவையான வசதிகளை வழங்குதல், தொழிற்துறையாளர்களுக்கு தேவையான கொடுப்பனவுகளை வழங்குவதும் முக்கியமானது. அதேபோன்று டிஜிட்டல் பிரிவில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதும் அவசியமாகும். இதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனத் தெரிவித்திருந்தார். https://thinakkural.lk/article/311142
  8. ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு நீதி வழங்காது; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறீலங்காவிற்கும் தமிழீழ் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தின் போது இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் செயல்முறையில் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான கவனத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது. மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் செயற்பாட்டிற்கும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அவரது நேர்மையான, விரிவான அறிக்கைக்காகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டை தெரிவித்துக் கொள்கின்றது. எவ்வாறாயினும், பொறுப்புக்கூறலுக்கான முன்னேற்றம் இன்மையால் ஈழத்தமிழ் மக்கள் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். இதுதொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் வெளியிட்ட அறிக்கையில், 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9 ஆம் திகதி ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பொறுப்புக்கூறலைத் தவிர்ப்பதற்கு சிறிலங்காவிற்கு மனித உரிமைப் பேரவையால் வழங்கும் இலவச அனுமதியின் தொடர்ச்சியாகும். மனித உரிமைகள் ஆணையத்தின் சிறிலங்கா மீதான மென்மையான நிலைப்பாடு, தண்டனையின்மையை மேலும் வலுப்படுத்துகின்றது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்பாக அடுத்தடுத்து வந்த சிறிலங்கா அரசாங்கங்களின் கடந்தகால செயற்பாடுகள், சிங்களத் தலைமைகள் ஆதிக்கம் செலுத்தும் அரசாங்கத்தில் தமிழர்களுக்கான நீதி தொடர்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை திடசங்கமாக எடுத்துக் காட்டுகிறது. 2015 ஆம் ஆண்டில், சர்வதேச சமூகம் “நல்லாட்சியின்” கலங்கரை விளக்கமாகப் போற்றிய சிறிலங்கா அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி அதில் கையொப்பமிட்டது. மார்ச் 2017 இல், சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் மனித உரிமைகள் ஆணையம் இரண்டு வருட கால நீடிப்பு வழங்கியது. நவம்பர் 11, 2017 அன்று, “நல்லாட்சியின் ஆளுமை” ஜனாதிபதி, கொழும்பு இராணுவ மருத்துவமனையில் 350 உயர்மட்ட அரச இராணுவ அதிகாரிகளுக்கு உரை நிகழ்த்திம்போது போர்வீரர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இடமளிக்க மாட்டேன் என்றும் மேலும் வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளுக்கு உட்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறினார். 2019 இல், புதிய சிறிலங்கா ஜனாதிபதி பதவிக்கு வந்தார், அவர் UN HRCதீர்மானம் 30/1 இல் இருந்து சிறிலங்கா விலகுவதாக வெளிப்படையாகக் கூறினார். இருந்த போதிலும், மனித உரிமை ஆணையம் நீத்துப்போன தீர்மானத்திற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளித்தது. புதிய சிங்கள ஜனாதிபதியின் செயற்பாடுகள் அவரும் வேறுபட்டிருக்க மாட்டார் என்பதை நிரூபித்துள்ளது. சிறிலங்கா, புதிய அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மீது முன்னெச்சரிக்கையான தாக்குதலை தொடுத்து பேரவையின் வரைவுத் தீர்மானத்தை நிராகரித்தது, ஆயினும் தீர்மானம், அடுத்த நாளே வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை சர்வதேச சமூகத்திடம் இருந்து சிறிலங்கா மேலும் தனிமைப்படுத்தப்பட்டு வருவதையே எடுத்துக்காட்டுகிறது. புதிய ஜனாதிபதி, தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, தனது அரசியல் கட்சி “உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட எவரையும் தண்டிக்க முயலாது” என்று கூறியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் இந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த தனது அறிக்கையில், “காத்திரமான முன்னேற்றத்திற்கான அடிப்படை அட்டூழியக் குற்அங்களிற்கான பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்வதாகும்.” “இன்றுவரை, மோதலின் போது ஏற்பட்ட அட்டூழியக் குற்றங்களை சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக்கொள்ளவில்லை”என்றும் குறிப்பிட்டார். ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு இழைத்த இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றை இந்றுவரை புதிய ஜனாதிபதி உட்பட எந்த ஒரு சிறிலங்கா ஜனாதிபதியும் ஒப்புக்கொள்ளவும் இல்லை அல்லது அதற்கு மன்னிப்பும் கேட்கவில்லை. தனது கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.வி.பி.) சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக கடந்தகால வன்முறைக் கிளர்ச்சிகளுக்காக புதிய ஜனாதிபதி மன்னிப்புக் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான அரசின் அட்டூழியக் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறல் பற்றிய எந்தக் குறிப்பும் புதிய ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை. கொழும்பில் ஈழத்தமிழ் மாணவர்கள் 11 பேர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மூடி மறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா கடற்படையின் முன்னாள் அட்மிரல் சிறிமேவன் சரத்சந்திர ரணசிங்கவை துறைமுக நிர்வாகத்தின் அதிபராகவும், போர்க்குற்றவாளி சம்பத் துயகொண்டாவை பாதுகாப்பு செயலாளராகவும் புதிய ஜனாதிபதி நியமித்துள்ளார். இந் நியமனங்கள் புதிய நிர்வாகம் பொறுப்புக்கூறல் விடயத்தில், பழைய நிர்வாகத்தின் தொடர்ச்சியாக உள்ளதை எடுத்துக் காட்டுகிறது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உட்பட ஏழு விசாரணைகளை மீள ஆரம்பிக்கப் போவதாக புதிய ஜனாதிபதி கூறுகின்றார் – இந்த வழக்குகளில் சிங்கள ஆயுதப் படைகளால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் வழக்கு எதுவும் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. யதார்த்தம் என்னவென்றால், சிங்கள அரசியலில் இனவாதம் வேரூன்றி உள்ளதே என்பதாகும். சிங்கள அரசியல் கலாச்சாரம் ஈழத் தமிழர்களுக்கான நீதியை ஒருபோதும் அனுமதிக்காது Oakland Institute தனது 2021 அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி சிறிலங்கா ஒரு இனவாத அரசு. மறைந்த அன்னை தெரசா சிறிலங்காவின் ஜனாதிபதியானாலும், சிங்கள இனவாதம், சிங்கள அரசியல் கலாச்சாரம், ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கவிடாது. சிறிலங்காவின் இனப்பிரச்சனை தனிநபர்களுக்கு அப்பாற்பட்டது-அது கட்டமைப்பு ரீதியானது. சமீபகாலமாக, உள்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்று உலக சமூகத்திற்கும் அதன் நிறுவனங்களுக்கும் (ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் உட்பட) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தொடர்ச்சியான நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளது. மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் தனது அறிக்கையில், போர்க்குற்றவாளிகள் என்று நம்பத்தகுந்ததாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராகஇ சொத்து முடக்கம், பயணத் தடைகள் மற்றும் பிற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கவும், விரிவுபடுத்தவும் பரிந்துரைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகருக்கு உரிய மரியாதையுடன் அவரது மேற்கூறிய பரிந்துரைகள் காத்திரமான செயற்திறன் அற்றவை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டுகின்றது. ரஷ்ய பணமுதலைகளைப்போல், சிறிலங்காவில் இருந்து போர்க்குற்றவாளிகள், இன அழிப்பாளிகள் விடுமுறைக்காக மேற்கு நாடுகளுக்கு அடிக்கடி செல்வதும் இல்லை, அல்லது மேற்கத்திய நாட்டு வங்கிகளில் சொத்துக்களை வைத்திருப்பதும் இல்லை. மேலும். அவர்கள் வெளிநாடுகளுக்குள் நுழையும்போது, அவர்களைக் கைது செய்வதற்கான பொறிமுறையும் இல்லை. அரிதான சந்தர்ப்பங்களில் சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்போது, சவேந்திர சில்வா (அப்போது ஐ.நா. பிரதிநிதி) மற்றும் மகிந்த ராஜபக்ச (அப்போது சிறிலங்கா ஜனாதிபதி) போன்றவர்கள் நீதியைத் தவிர்ப்பதற்காக இராஜதந்திர விலக்கு(diplomatic immunity / அரசின் தலைவர் விலக்கு (head-of-state immunity)ஆகிய சட்டக்கோட்பாடுகள் கேடயங்களாக பாவிக்கப்பட்டன. உயர் ஸ்தானிகரின் அறிக்கை மேலும் ஐ.நா பாதுகாப்பு சபையின் முலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (I.C.C)பாரப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உள்ளது எனவும் குறிப்பிடுகிறது. அத்தகைய முயற்சி ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுக்கப்படலாம் என்ற கருத்து சில தரப்புகளில் உள்ளது. சூடானுடன் நெருங்கிய அரசியல் பொருளாதார உறவைக் கொண்டிருந்த சீனா தன்னுடைய வீடடோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சூடானை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தியதை தடுக்கவில்லை என்பதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது. அட்டூழியக் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தும் முயற்சியை பாதுகப்புச் சபையில் உள்ள எந்தவொரு நாடும். தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்க முயன்றால் அந் நாடு சர்வதேச கண்டனத்திற்கு உள்ளாகும். மேலும் அந் நாட்டின் மதிப்பையையும், நற்பெயரையும் வெகுவாகப் பாதிக்கும்,பெரும் வல்லரசுகளின் உலகளாவிய செல்வாக்கிற்கான தற்போதைய போட்டியைக் கருத்தில் கொள்ளும்போது அவர்கள் சிறிலங்கா இனப்படுகொலையாளர்களையும் போர்க்குற்றவாளிகளையும் பாதுகாக்க தங்கள் செல்வாக்கை தியாகம் செய்ய வாய்ப்பில்லை என்பதே யதார்த்தமாகும். இறுதியாக, உயர் ஸ்தானிகரின் அறிக்கை சிறிலங்காவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில்((ICJ) சட்ட நடவடிக்கைகளை நாடுகள் மேற்கொள்ள பரிந்துரை செய்கின்றது. சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளை எந்த ஒரு நாடும் வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுத்து நிறுத்த முடியாது. இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்ட உறுப்பு நாடுகளை சிறிலங்காவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்துகின்றது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான மேற்கூறிய நடவடிக்கைகள் பொறுப்புக்கூறலுக்கு வழி வகுக்கும் மற்றும் சிறிலங்காவில் வேரூன்றியிருக்கும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவரும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது. என்றுள்ளது. https://thinakkural.lk/article/311144
  9. அறுகம்குடா குறித்த வெளிநாட்டு தூதரகங்களின் எச்சரிக்கை – சுற்றுலாத்துறை கூட்டமைப்பு கரிசனை கடும் கண்டனம் October 25, 2024 இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதாக வெளிநாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளமைக்கு இலங்கையின் சுற்றுலாத்துறை கூட்டமைப்பு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் என விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையால் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பாரிய பின்னடைவு ஏற்படலாம் என ஸ்ரீலங்கா சுற்றுலத்துறை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் அதன் பின்னர் வேறு சில நாடுகளும் விடுத்த பயண எச்சரிக்கை சுற்றுலாத்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என அந்த அமைப்பு கரிசனை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு தூதரகங்கள் இலங்கை குறித்தும் அதன் பொருளாதார மீட்சிக்கு அவசியமான சுற்றுலாத்துறை குறித்தும் ஈவிரக்கமற்ற வேடிக்கையில் ஈடுபட்டுள்ளனவா என என ஸ்ரீலங்கா சுற்றுலத்துறை கூட்டமைப்பின் தலைவர் மலிக் ஜே பெர்ணாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் இருவரை கைதுசெய்துள்ளனர் என்பதை சுற்றுலாத்துறை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. புதிய தகவல்களை உள்வாங்கி திருத்தம் செய்யப்படாத வெளிநாட்டு தூதரகங்களின் அறிக்கை இலங்கை குறித்தும் அதன் சுற்றுலாத்துறை மீது அவற்றிற்கு அக்கறை இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுற்றுலத்துறை கூட்டமைப்பு சமீபத்தைய பொருளாதார நெருக்கடியின் பாதிப்பில் இன்னமும் சிக்குண்டுள்ள மில்லியன் கணக்கான கிராமிய மக்களை கைதூக்கிவிடுவதில் சுற்றுலாத்துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றது என தெரிவித்துள்ளது. அறுகம் குடா குறித்த அமெரிக்காவின் எச்சரிக்கையை இஸ்ரேலிய ஊடகங்கள் பெரிதுபடுத்தின முழு இலங்கையும் இஸ்ரேலியர்களிற்கு பாதுகாப்பற்றது போன்ற உணர்வை ஏற்படுத்தின என சுற்றுலாத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. https://eelanadu.lk/அறுகம்குடா-குறித்த-வெளிந/
  10. புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை! பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இணையும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசில் வெளிவிவகார அமைச்சுப் பதவி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்படவுள்ளது என எனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனக்குக் கிடைத்த தகவலைத்தான் வெளிப்படுத்துகின்றேன். இதற்கு சான்று இல்லை. நான் பிழையெனில் அதனை ஜனாதிபதி சரி செய்யலாம். தேர்தலின் பின்னர் தமிழரசுக் கட்சி அரசுடன் இணையும், சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது என்பதுதான் எனக்குக் கிடைத்துள்ள தகவல். இதற்காக இரு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுக்கும் ஜனாதிபதி உடன்பட்டுள்ளார். இவ்வாறு இணக்கம் தெரிவிக்கவில்லையெனில் அதனையும் ஜனாதிபதி மறுக்கலாம். 2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பு பணியை முன்னோக்கி கொண்டு செல்லுதல் என்பது முதலாவது நிபந்தனை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் என்பது இரண்டாவது நிபந்தனை. அதனை மீள நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இவற்றுக்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளார். இதற்கு என்னிடம் சாட்சி இல்லை. தகவல்களை வெளிப்படுத்துகின்றேன். இல்லையெனில் ஜனாதிபதி அது பற்றி தெளிவுபடுத்தலாம் என கூறியுள்ளார். -(3) http://www.samakalam.com/புதிய-அரசாங்கத்தின்-சுமந/
  11. கையடக்கத் தொலைபேசிகள் வெடிக்கும் என்ற வதந்திகள்! கையடக்கத் தொலைபேசிகளுக்கு பதிலளித்தால் உடனடியாக வெடித்துவிடும் எனும் பொய்யான வதந்தி அண்மைக் காலமாக சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. அவ்வாறான காணொளிச் செய்தியினால் மக்கள் பீதியடைய வேண்டாம் என இலங்கை கணினி அவசரத் தயார்நிலைக் குழு அறிவித்துள்ளதாக டெய்லி மிரர் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் பல அழைப்புகள் வந்துள்ளதாக மேற்குறித்த குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனபொல கூறியதாகவும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீடியோவில், பார்வையாளர்கள் இதனை கவனமாகக் கேட்டு இச் செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ”13 அல்லது 4 இல் தொடங்கும் எண்களில் இருந்து நீங்கள் அழைப்பைப் பெற்றால், எக் காரணத்துக்காகவும் பதிலளிக்க வேண்டாம். நீங்கள் அழைப்புக்கு பதிலளிக்கும்போது உங்கள் தொலைபேசி உடனடியாக வெடிக்கும். இவ்வாறான சம்பவங்கள் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் நடைபெற்று பலர் உயிரிழந்துள்ளனர். இது இலங்கையையும் பாதிக்குமா என்பது குறித்து தெரியவில்லை. ஆனால், 13 அல்லது 4 இல் தொடங்கும் எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம். மேலும் இச் செய்தியை அனைவருடனும் பகிரவும்” என அறிவுறுத்தப்படுகிறது. தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும்பட்சத்தில் கையடக்கத் தொலைபேசிகள் வெடித்த சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை எனவும் தமுனுபொல தெளிவுபடுத்தினார். பின்னணி குரலுடன் தொடர்பில்லாத வகையில், தலையில்லாத மனிதன் இரத்த வெள்ளத்தில் அமர்ந்திருப்பதைப் போன்ற ஒரு காட்சி காணொளியில் காண்பிக்கப்படுகிறது. குறித்த எண்களிலிருந்து வரும் அழைப்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பல கோரிக்கைகள் வந்ததன் அடிப்படையில், காணொளியை சரிபார்க்க விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அழைப்பொன்றினால் கையடக்கத் தொலைபேசி வெடிப்பதற்கான தொழில்நுட்ப சாத்தியம் இல்லை எனவும் தமுனுபொல விளக்கமளித்துள்ளார். 13 அல்லது 4 எண்களில் இருந்து வரும் அழைப்புகளினால் தொலைபேசி வெடிக்கும் எனும் செய்திக்கு எதுவித ஆதாரமும் இல்லை. மக்கள் தேவையற்ற அச்சத்தை பரப்பி வருகின்றனர். தொழில்நுட்பக் கோளாறால் தொலைபேசி வெடிக்கலாம் ஆனால், அழைப்புகளினால் தொலைபேசி வெடிக்காது. எனவே இவ்வாறான தவறான கருத்துக்களை நம்ப வேண்டாம் என இலங்கை கணினி அவசர ஆயத்தக் குழு பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. http://www.samakalam.com/கையடக்கத்-தொலைபேசிகள்-வெ/
  12. சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் திட்டம் – யாழ் . வாசி உள்ளிட்ட இருவர் கைது adminOctober 24, 2024 சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் உள்ளிட்ட இருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். சுன்னாகம் பகுதியை சேர்ந்த சந்தேகநபரை , சுன்னாகத்தில் அவரின் வீட்டில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதுடன் மற்றையவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபர், குற்றச்செயல் ஒன்றிற்காக இலங்கை சிறையில் தண்டனை அனுபவித்த கால பகுதியில் சிறையில் பாகிஸ்தான் மற்றும் ஈரான் கைதிகளுடன் தொடர்புகளை பெற்று , நாசகார செயலில் ஈடுபட முனைந்தார் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துளள்னர். அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்பே பகுதிக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதை தவிர்க்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்றைய தினம் புதன்கிழமை அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/207778/
  13. ஜோன்ஸ்டனின் கைதுக்கு காரணமான கார் தொடர்பான தகவல்கள்! முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பதிவு செய்யப்படாத BMW ரக கார் இங்கிலாந்தில் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சர்வதேச பொலிஸ் தரவுகளின் மூலம் சம்பந்தப்பட்ட BMW காரின் Chassis எண்ணை சோதனை செய்தபோது, இது 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட கார் என்பது தெரியவந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் அசெம்பிள் செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத BMW ரக காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (23) உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபரை நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அங்கு, குறித்த BMW கார் தொடர்பான வழக்கின் பிரதான சந்தேக நபராக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பாரிய கொள்ளைப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த BMW வாகனமானது திருடப்பட்ட இலக்கத் தகடு மூலம் பயன்படுத்தப்பட்டதாகவும், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தரவு அமைப்பைச் சோதித்ததில் அது சட்டப்பூர்வமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். சர்வதேச பொலிஸ் தரவுகளின் மூலம் சம்பந்தப்பட்ட BMW காரின் Chassis எண்ணை சோதனை செய்தபோது, இது 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட கார் என்பது தெரியவந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலதிகத் தகவல்களை வழங்கிய அதிகாரிகள், சட்டவிரோதமாக காரை இலங்கைக்குக் கொண்டு வந்த பின்னர், இரு வேறாக காணப்பட்ட பாகங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. அப்போது சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், குறித்த கார் இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட போதிலும், தனது கட்சிக்காரருக்கு இதில் தொடர்பு இருப்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே, பணமோசடி சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது எனவும் தெரிவித்தார். எனவே, எந்தவொரு நிபந்தனையின் கீழும் தமது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் கோரிக்கை விடுத்தார். இரு தரப்பு உண்மைகளையும் பரிசீலித்த நீதிபதி, சந்தேகத்திற்குரிய முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை ஒக்டோபர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். கொழும்பில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றின் தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த BMW காரொன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாரிய கொள்ளைப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி சோதனையிடப்பட்டது. பொலிஸாரின் விசாரணையில் அது முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்க உரித்தானது என்பது தெரியவந்துள்ளது. அதன்படி, ஒக்டோபர் 10ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கை செய்த நீதவான் தனுஜா லக்மாலி, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்தார். இதேவேளை, தம்மை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தை மனுதாரர் வழங்குவது இன்றியமையாதது என மனுதாரரின் சட்டத்தரணியிடம் நீதிபதி சுட்டிக்காட்டினார். மனுதாரரின் சட்டத்தரணி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று (23) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்து உரிய வாக்குமூலத்தை அளித்து பின்னர் கைது செய்யப்பட்டார். http://www.samakalam.com/ஜோன்ஸ்டனின்-கைதுக்கு-கார/
  14. இஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் திட்டம் – இருவர் கைது இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் வழங்கப்பட்டிருந்தது. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அறுகம்பே பகுதியானது, அலைச்சறுக்கு (Surfing) செய்பவர்கள் அடிக்கடி வந்து செல்லும், உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அந்தப் பகுதி இஸ்ரேலியர்கள் அதிகம் கூடும் பகுதியாகவும் காணப்படுகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் அறுகம்பே பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு அறிவித்துள்ளன. இது தொடர்பான தாக்குதல் அக்டோபர் 19 முதல் 23 வரை நடத்தப்படலாம் என இந்திய உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன. அண்மைய நாட்களில் ஹிஸ்புல்லாஹ் தலைவர்களை இஸ்ரேல் கொன்றமைக்கு பழிவாங்கும் முகமாக இந்த நாட்டில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலைப் பெற்றுக்கொண்ட பாதுகாப்பு தரப்பினர் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பலப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர். அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் எவ்வாறு பாதுகாப்பை பலப்படுத்தி அங்குள்ள வெளிநாட்டினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர் என்பதை அவதானிக்க முடிந்தது. அறுகம்பே பிரதேசத்தின் பாதுகாப்பின் பின்னணியில் இஸ்ரேலியர்கள் வருகை தரும் வெலிகம உட்பட தென் மாகாணத்திலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. எல்ல பிரதேசத்திலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, அறுகம்பே மற்றும் தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பிரதேசங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு நாட்டில் தங்கியுள்ள இஸ்ரேலிய மக்களை இஸ்ரேலிய தேசிய பாதுகாப்புத் தலைமையகம் இன்று அறிவித்தது. இதன்படி, அறுகம்பே கரையோரத்திற்கு மேலதிகமாக காலி, ஹிக்கடுவ மற்றும் வெலிகம போன்ற பிரதேசங்களில் இருந்து இஸ்ரேலிய பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள பகுதிக்கு உடனடியாக செல்லுமாறும் அல்லது உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறும் இஸ்ரேல் அரசாங்கம் இந்த அறிவிப்பின் மூலம் அவர்களுக்கு அறிவித்திருந்தது. அத்தோடு, பாதுகாப்பற்ற இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.samakalam.com/இஸ்ரேலிய-பிரஜைகள்-மீதான/
  15. தேசிய மக்கள் சக்தி கூறிய மாற்றங்கள் சரிவருமா?; சறுக்குமா? கந்தையா அருந்தவபாலன் முன்னைய ஆட்சியாளர்களின் பலவீனங்களை மூலதனமாக்கி மாற்றங்களைத் தருவோம் என்ற நம்பிக்கையை மக்களிடத்து விதைத்து ஆட்சியைப் பிடித்த தேசிய மக்கள் சக்தியினர் தாங்கள் கூறியதைப் போல மாற்றங்களை ஏற்படுத்துவது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பதை இப்போது உணரத் தொடங்கிவிட்டனர் என்பதை அவர்களின் கருத்துகளும் செயற்பாடுகளும் வெளிப்படுத்தி நிற்கின்றன. அதனையுந்தாண்டி அவர்கள் கூறியவாறு மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தாலும் பிரச்சினை. முனையாவிட்டாலும் பிரச்சினை. ஏனெனில் மாற்றத்துக்காக தங்களால் கொண்டுவரப்பட்டவர்களால் மாற்றமேற்படுத்தப்படாதவிடத்து அவர்களை மாற்றுவதற்கும் மக்கள் தயங்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை நிலை. இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசநாயக்கவை நாட்டு மக்கள் தெரிவுசெய்து இன்றுடன் ஒருமாதம் நிறைவடைகிறது. இந்த ஒருமாதகால இடைவெளியில் அதுவும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அதற்கான தேர்தலுக்கும் நாட் குறிக்கப்பட்டு, ஜனாதிபதியையும் உள்ளடக்கிய மூன்று பேரை மட்டும் கொண்ட ஒரு காபந்து அமைச்சரவையையும் கொண்டு புதிய ஜனாதிபதியினால் பெரிதாக எதையும் செய்வது கடினம். எனினும் புதிய அரசாங்கத்தின் சில முன்மாதிரியான செயற்பாடுகள், நிவாரணங்கள், அறிவிப்புகள் நம்பிக்கை தருவனவாக இருந்தாலும் மக்கள் எதிர்பார்க்கும் முக்கிய மாற்றங்களை எவ்வளவுதூரம் இவ்வரசாங்கம் வழங்கும் என்பதில் நிச்சயமற்ற ஒரு நிலை இருந்து வருவதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளான ஊழல்கள், அதிகார முறைகேடுகள், ஈஸ்டர் குண்டு வெடிப்பு உட்பட சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் தொடர்பான விசாரணைகள், சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை மற்றும் மன்னார் காற்றாலை உட்பட வெளிநாட்டு முலீடுகளை மறுபரிசீலனை செய்தல், அரச செலவுகளை மட்டுப்படுத்தல், அரச சொத்துக்களைத் தனியார் மயப்படுத்துவதை நிறுத்துதல்,வாழ்க்கைச் செலவுக் குறைப்பு உட்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் வழங்குதல், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக மக்கள் எதிர்பார்க்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பதில் தெளிவற்ற ஒரு நிலையே தென்படுகிறது. இதற்கு நாடாளுமன்றத் தேர்தல் ஒரு காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டாலும் அதற்குப் பின்னர்கூட சாத்தியப்படுமா என்பது கேள்விக்குரியதொன்றாகவே தென்படுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 115 -120 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது நாடாளுமன்றத்தின் அறுதிப் பெரும்பான்மைக்குப் போதியதாகும். தேர்தலின் பின் வேறு சில கட்சிகளும் அரசாங்கத்துடன் இணைந்தோ அல்லது வெளியிலிருந்தோ ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்தவகையில் சட்டவாக்க அதிகாரமும் நிறைவேற்று அதிகாரமும் தேசிய மக்கள் சக்தியின் கைகளில் வந்தாலும்கூட சில முக்கிய விடயங்களில் அரசாங்கம் எதிர்பார்ப்பதுபோல இலகுவில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான களநிலைமைகள் இல்லை என்பதே யதார்த்தமாகும். முக்கியமாக அரசு செலவுகளைக் கட்டுப்படுத்துதல் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு அடிப்படையானதொன்றாகும். இது எவ்வளவு தூரம் சாத்தியமாகும்? தேசிய மக்கள் சக்தியினர் கூறுவது போல அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலமோ, ஜனாதிபதியின் வாகனங்களை குறைப்பதன் மூலமோ, அரசியல்வாதிகளின் பாதுகாப்புப் பணியாளரைக் குறைப்பதன் மூலமோ, முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களைக் குறைப்பதன் மூலமோ சாத்தியப்படக்கூடியதொன்றல்ல. இவை நல்ல விடயங்கள் என்றாலும் ஜனரஞ்சக அரசியலுக்கு பெரிதும் உதவலாமேயொழிய அரச செலவைக் குறைப்பதற்கு யானைப் பசிக்கு சோளப்பொரி போலவே இருக்கும். இலங்கையின் வரவு – செலவுத்திட்டப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 2021 இல் அதியுச்சமாக 11.7 ஆக இருந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலின்கீழ், ரணில் ஆட்சிக்காலத்தில் வரியதிகரிப்பு, அடிப்படை நுகர்வுப்பொருட்களான எரிபொருட்கள், மின்சாரம் போன்றவற்றின் விலையதிகரிப்பு, அரச மானியங்களில் குறைப்பு போன்ற பல்வேறு கடினமான சீர்திருத்தங்களின் மூலம் அப்பற்றாக்குறை 2023 இல் 8.3 வீதமாக குறைக்கப்பட்டது. எனினும் இப்பற்றாக்குறையினளவை 6% -7% க்குக் குறைக்கவேண்டுமென்பதே சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை. இது சாத்தியமா? இதுவும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கால வாக்குறுதிகளும் ஒன்றுக்கொன்று முரணானவை. அது வழங்கிய வாக்குறுதிகளில் மக்களுக்கான வரிக்குறைப்பும் மானியங்களும் முக்கியமானவை. ஆனால் இவை அரச வருமானத்தைக் குறைத்து செலவைக்கூட்டுமாகையால் வரவு – செலவுத்திட்டப் பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்யும். ஏலவே அரசாங்கம் உரமானியத்தை 10,000 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், ஓய்வூதியர்க்கான மேலதிக கொடுப்பனவாக 3000 ரூபாவையும் வழங்கத் தொடங்கியுள்ளது. இதுகூட நாடாளுமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டதாகவும் இருக்கலாம். ஆனால் அவர்கள் கூறியது போல வரி மறுசீரமைப்பு உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீளாய்வு செய்வது தொடர்பாக எந்தவொரு முயற்சியும் அரசாங்கத்தினால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மேற்கொண்டாலுங்கூட அதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்தின் பிரயோக வழிமுறைகளில் மாற்றத்துக்கு இணங்கினாலும் கடனுடன் இணைக்கப்பட்ட இலங்கை தொடர்பான அதன் அடிப்படை இலக்குகளில் மாற்றத்தை ஏற்படுத்த ஒருபோதும் இணங்காது. அதேவேளை அந்நிதியத்தின் உதவியைப் புறந்தள்ளி இன்றைய நிலையில் ஆட்சியைத் தக்கவைப்பதும் கடினம். இதனைக்கருத்திற் கொண்டே சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது இலங்கைக்கு அவசியமானதொன்று என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அண்மையில் கூறியிருந்தார். இதனை உறுதிப்படுத்துவதுபோல தேசிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்கள் சிலரது கூற்றுக்கள் அமைந்துள்ளன. அண்மையில் ஜே.வி.பி கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வாவிடம் பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு அவர் பதிலளிக்கையில், “ மக்கள் முறைமை மாற்றத்தை எதிர்பார்த்தனரேயன்றி விலைக் குறைப்பை எதிர்பார்க்கவில்லை” என்று கூறியிருந்தார். அதேபோல அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில், ரணில் தலைமையிலான முன்னைய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டிலிருந்தான அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்ச்சி பற்றி எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு, அமைச்சர் விஜித ஹேரத் பதிலளிக்கையில், அது நிதியமைச்சு மற்றும் திறைசேரி என்பவற்றின் அனுமதி பெறாத அமைச்சரவைத் தீர்மானம் எனவும் அதனால் அவ்வாறு வழங்குவது சாத்தியமற்றதொன்று எனவும் கூறியிருந்தார். இதுதான் இலங்கையின் இன்றைய யதார்த்த நிலைமை. ரில்வின் சில்வா கூறுவதுபோல மக்கள் விலைக்குறைப்பை எதிர்பார்க்கவில்லை என்பதோ அல்லது சம்பள அதிகரிப்பை விரும்பவில்லை என்பதோ யதார்த்தமன்று. உண்மையில் மக்கள் விரும்பிய முறைமை மாற்றத்துக்கான அடிப்படையே அவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும் வாழ்கைத்தரம் வீழ்ச்சியுமாகும். தங்களுக்கு வளமான வாழ்கையொன்றை அமைப்பதற்குத் தேவையான பொருளாதார,சமூகக் கட்டமைப்பை உருவாக்கும் வல்லமையை தற்போதைய அரச கட்டமைப்பும் அதனை வழிநடத்திய முன்னைய ஆட்சியாளரும் கொண்டிருக்கவில்லை என்பதற்காகவே மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களேயன்றி வெறுமனே தலைவர்களை மாற்றுவதற்காகவல்ல. முன்னைய ஆட்சியாளர்மீது தேசிய மக்கள் சக்தியினர் வைத்த பிரதான குற்றச்சாட்டுகளிலொன்று அரசபடு கடன் பற்றியதாகும். அதாவது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் அளவுக்கதிமாக உள்நாட்டு வெளிநாட்டுக் கடன்களை பெற்றமையும் ஒரு பிரதான காரணி என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். அது உண்மையுங்கூட. ஆனாலும் ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதை முற்றாக எதிர்த்த தேசிய மக்கள் சக்தியினர் பின்னர் தேர்தல் வெற்றிக்காக அந்நிதியத்துடனான உடன்படிக்கை தொடரும் என்றும் ஆனால் மக்களைப் பாதிக்கும் நிபந்தனைகளை மீளாய்வு செய்வோம் என்று சமரசம் கண்டனர். இவ்வாறு அரச படுகடனை விமர்சித்த புதிய ஆட்சியாளரின் இன்றைய நிலை என்ன? இம்மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரையிலான 13 நாட்கள் காலப்பகுதியில் அரசாங்கம் திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மூலம் 419 பில்லியன் ரூபா கடனைப் பெற்றுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவிரத்ன ஆதாரங்களுடன் குற்றஞ் சுமத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதன்படி ஒரு மணித்தியாலத்துக்கு 1.34 பில்லியன் ரூபா கடனசுமை நாட்டு மக்களின் தலையில் ஏற்றப்பட்டுள்ளது. இதனை மறுத்துள்ள ஜனாதிபதியின் பொருளாதார, நிதிக்கான மூத்த ஆலோசகர் அனில் ஜயந்த, அரசாங்கம் புதிய கடன் எதையும் பெறவில்லை என்றும் அமைச்சுகளுக்கான செலவுக்கும் முதிர்ச்சியடைந்த கடன்பத்திரங்களுக்கான கொடுப்பனவுக்குமான வழமையான நிதிச்சேகரிப்பே அது என்றும் வியாக்கியானம் செய்துள்ளார். அரச நிதிக்கருவூலத்தைப் பொறுத்தமட்டில் வட்டியுடனோ அல்லது வட்டியின்றியோ திருப்பிச் செலுத்த வேண்டிய அனைத்துப் பெறுகைகளும் கடனாகவே கொள்ளப்படும். அந்தவகையில் அரசு திரட்டும் வரிமூலமான வருமானங்கள், வரி தவிர்ந்த ஏனைய வருமானங்கள், திருப்பிச் செலுத்தவேண்டிய தேவையற்ற உள்நாட்டு, வெளிநாட்டுக் கொடைகள் தவிர்ந்த அனைத்துப் பெறுகைகளும் கடன்களாகும். குறித்த ஆலோசகர் கூறுவதுபோல அது வழமையான ஒன்றாக இருக்கலாம். ஆனால் அது கடனல்ல எனக் கூற முடியாது. அதுவுமன்றி வழமையை மாற்றுவதுதானே மாற்றம். தேசிய மக்கள் சக்தியினரால் முன்வைக்கப்பட்ட இன்னொரு குற்றச்சாட்டு முன்னைய ஆட்சியாளர்களின் ஊழல்கள் பற்றியது. ஊழல்களை அம்பலப்படுத்துவோம். ஊழல்வாதிகளைச் சிறையிலடைப்போம். வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கறுப்புப் பணத்தை மீட்டெடுப்போம் போன்றவை புதிய ஆட்சியாளரின் முன்னைய வாக்குறுதிகள். தங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விடுத்து முடிந்தால் நிரூபியுங்கள் என நாமல் ராஜபக்‌ஷ சவால் விடுத்துள்ளபோதும் இதற்கான காத்திரமான முன்னெடுப்புகள் எவையும் இதுவரை புதிய அரசினால் மேற்கொண்டதாகச் செய்திகள் இல்லை. இனிவரும் புதிய அமைச்சர்கள் ஊழல் செய்யாதவராக இருக்கக்கூடும் என்றாலும் அதற்கான உத்தரவாதத்தைக்கூட அனுரவால் வழங்க முடியாதிருக்கும். எந்தப் புற்றில் என்ன பாம்பு இருக்கும் என்பதை எதிர்காலந்தான் தீர்மானிக்கும். இதற்கு நல்ல உதாரணம் பல்வேறு ஊழல்களுக்கும் அதிகார முறைகேடுகளுக்கும் குற்றஞ்சாட்டப்பட்ட விமல் வீரவங்சவும் ஒருகாலத்தில் ஜே.வி.பி.யின் உயர்மட்ட உறுப்பினராக இருந்த ஒருவர் என்பது. இதற்கு மேலாக அரச துறைகளில் புரையோடிப் போய்விட்ட இலஞ்சம், ஊழல் என்பவற்றை இலகுவில் அகற்றிவிட முடியாது. தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான இன்னொரு வாக்குறுதி சட்டத்திற்கு புறம்பான கொலைகள் மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளை நீதிமன்றில் நிறுத்துவது என்பது. இது தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என காவல்துறை மா அதிபர் அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார். எனினும் அது உண்மையில் முடுக்கிவிடப்பட்டுள்ளதா அல்லது தேர்தலை நோக்காகக் கொண்ட அறிவிப்பா என்பது தேர்தலின் பின்னர்தான் தெரியவரும். எனினும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை தொடர்பில் நடவடிக்கை எடுக்க புதிய அரசாங்கம் தயங்குகின்றதா என்ற ஐயம் தற்போது எழுந்துள்ளது. அண்மையில் இது தொடர்பான ஊடகவியலாளரின் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போது அமைச்சர் ஹேரத் அது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் பன்னிரண்டு பக்கங்களைக் காணவில்லை எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அமைச்சர் கூறுவது பொய். அவ்வாறு எதுவும் காணாமல் போகவில்லை. அவ்விரு விசாரணை அறிக்கைகளின் பிரதிகள் தன்னிடம் உள்ளதாகவும் அரசாங்கம் அதை வெளியிடாவிட்டால் அதனை வரும் திங்கட்கிழமை தான் வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளார். அதற்கு மேலாக இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம், இரகசியம் பேணல் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் தன்னைக் கைது செய்ய ஆலோசித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். உண்மையில் பக்கங்கள் சில காணாமல் போயிருந்தால் கூட அதைப்பெறுவதில் அதிக சிரமமிருக்காது. நிச்சயமாக விசாரணைக்குழுக்களின் தலைவர்களிடம் அதன் பிரதிகள் இருக்கவே செய்யும் அல்லது தன்னிடம் இருப்பதாக கூறும் கம்மன்பிலவிடம் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும். அதைவிடுத்து கம்மன்பில மீது மிரட்டல் விடுக்கவேண்டிய தேவை என்ன? இதனால்தான் இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்குகிறதா என்ற ஐயம் எழுகின்றது. அவ்வாறானால் அனுரகுமார பலமுறை கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து வாக்குறுதியளித்ததும், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து வாக்குறுதியளித்ததும் வெறுமனே கத்தோலிக்க மக்களின் வாக்குகளைப் பெறுவதற்குத்தானா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது. இதைப்போலவே அதானி குழுமத்தினால் அமைக்கப்படவுள்ள காற்றாலைத் திட்டத்தை இரத்துச் செய்வோம் என முன்னர் கூறியவர்கள் இப்போது உயர்நீதிமன்றம் கூறியதால் மீள் பரிசீலனை செய்வோம் என்கின்றனர். அதிலும் சமரசம் செய்யத் தீர்மானித்து விட்டனர் என்பதுதான் இதன் பொருள். அடுத்த விடயம் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம். ஜனாதிபதித் தேர்தலின் தொடக்க காலத்தில் அனுரகுமார திசநாயக, தேர்தல் பரப்புரைகளில் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக 13ஆம் திருத்தம் பற்றிப் பேசவேண்டாம் என ஏனைய கட்சித் தலைவர்களிடம் கேட்டிருந்தார். பின்னர் தானே 13 ஆம் திருத்தத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டால் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றார். அதேநேரம் 13 ஐ முழுமையாகவா என்பதற்கும் உறுதியான பதிலை அவர் வழங்கவில்லை. பின்னர் புதிய அரசியலமைப்பினூடாக தமிழ் மக்களுக்கு தீர்வு என்றார். இவ்வாறு இனப்பிரச்சினை தொடர்பாக தேசிய மக்கள் சக்தித் தலைவர்கள் நேரத்துக்கு நேரம் ஒவ்வொன்றை உச்சரிப்பதன் காரணம் அவர்களிடம் எந்தவொரு தீர்வுத் திட்டமும் இல்லை என்பதைவிட இங்கு இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்று அவர்கள் கருதுவதேயாகும். அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினையை தேசிய இனப்பிரச்சினையாகப் பார்க்காமல் வெறும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினையாகவே பார்க்கின்றார்கள். இந்த உண்மையை அண்மையில் ரில்வின் சில்வா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழரின் வாக்குகளுக்காக அவ்வப்போது சில இனிப்பு வார்த்தைகளை தேசிய மக்கள் சக்தித் தலைவர்கள் உதிர்த்தாலும் அடிப்படையில் அவர்கள் முன்னைய சிங்களத் தலைவர்களிலிருந்து வேறுபட்டவர்களல்லர் என்பதை எதிர்காலம் மேலும் உறுதிப்படுத்தும். உண்மையில் ஒரு நாட்டிலுள்ள இனங்களுக்கிடையில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் ஏற்படாதவரையில் அந்த நாட்டில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முன்னோக்கிய மாற்றங்களும் வெற்றி தரப்போவதில்லை. அதை தேசிய மக்கள் சக்தி உணருமா என்பது தெரியவில்லை.வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு கிழக்கில் ஓரிரு ஆசனங்கள் கிடைக்கக் கூடும். அதைக் கருத்தில் கொண்டு தமிழ் மக்கள் தமது கொள்கைகளை ஏற்று தம்முடன் இணைந்து செல்லத் தயாராகிவிட்டார்கள் என்று தப்புக்கணக்குப் போடுவார்களானால் அதைவிட முட்டாள்தனம் வேறொன்றும் இருக்க முடியாது. இவ்வாறுதான் 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாட்டுக் கோரிக்கையை வைத்து 18 ஆசனங்களைப் பெற்றபோது கல்குடா தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த தேவநாயகம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அதேபோல 2004 இல் தமிழத் தேசியக் கூட்மைப்பு அதிகூடுதலாக 22 ஆசனங்களைப் பெற்றபோது யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் டக்ளஸும் வெற்றி பெற்றிருந்தார். இக்காலப்பகுதிகளில்தான் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடங்கி உச்ச நிலையை அடைந்தது என்பதே வரலாறு. முன்னைய ஆட்சியாளர்களின் பலவீனங்களை மூலதனமாக்கி மாற்றங்களைத் தருவோம் என்ற நம்பிக்கையை மக்களிடத்து விதைத்து ஆட்சியைப் பிடித்த தேசிய மக்கள் சக்தியினர் தாங்கள் கூறியதைப் போல மாற்றங்களை ஏற்படுத்துவது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பதை இப்போது உணரத் தொடங்கிவிட்டனர் என்பதை அவர்களின் கருத்துகளும் செயற்பாடுகளும் வெளிப்படுத்தி நிற்கின்றன. அதனையுந்தாண்டி அவர்கள் கூறியவாறு மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தாலும் பிரச்சினை. முனையாவிட்டாலும் பிரச்சினை. ஏனெனில் மாற்றத்துக்காக தங்களால் கொண்டுவரப்பட்டவர்களால் மாற்றமேற்படுத்தப்படாதவிடத்து அவர்களை மாற்றுவதற்கும் மக்கள் தயங்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை நிலை. ‘சொல்வது யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்ற வள்ளுவன் வாக்கு ஒருபோதும் பொய்ப்பதில்லை. https://thinakkural.lk/article/311030
  16. இலங்கையில் பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை இலங்கையில் அருகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்க பிரஜைகளுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; இலங்கையில் அருகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என தூதரகத்திற்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. இந்த அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள கடுமையான ஆபத்து காரணமாக, தூதரகம் உடனடியாக மற்றும் மறு அறிவித்தல் வரை அறுகம் பேக்கான பயணத் தடையை தூதரக பணியாளர்களுக்கு விதித்துள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை அறுகம் வளைகுடா பகுதியை தவிர்க்குமாறு அமெரிக்க குடிமக்கள் கடுமையாக வலியுறுத்தப்படுகிறார்கள். அந்தவகையில் அமெரிக்க பிரஜைகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாக, அனைத்து சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் மற்றும் அவசரநிலைகளை 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அழைத்து உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, எப்பொழுதும் விழிப்புடன் இருங்கள் மற்றும் உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் உள்ளத்தை நம்புங்கள், ஒரு சூழ்நிலை சரியாக இல்லை என்றால், அதிலிருந்து வெளியேறுங்கள். உங்களிடம் எப்பொழுதும் ஏதேனும் ஒரு வகையான தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசிகளை வைத்திருத்தல் வேண்டும். செய்திகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/311020
  17. மன்னார் நீதிமன்ற தீவைப்பு : ஜனாதிபதியிடம் புதிய விசாரணை கோரும் ரங்கா ! By kugen சேறு பூசும் சுவரொட்டிகளுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவுக்கு தொடர்பு இருக்குமாயின், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு, கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு, திங்கட்கிழமை (21) உத்தரவிட்டிருந்த நிலையில், ஸ்ரீரங்கா, வவுனியாவில், ஊடகவியலாளர்களை செவ்வாய்க்கிழமை (22) சந்தித்துள்ளார். அப்போது, 2012 ஆம் ஆண்டு மன்னார் நீதிமன்றத்தில் நடந்த அநியாயம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என ஜெ. ஸ்ரீரங்கா கோரியுள்ளார். வன்னி தேர்தல் தொகுதி சுயேச்சைக் குழு வேட்பாளரான ஜெ. ஸ்ரீரங்கா, வவுனியாவில், நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில், நீதிபதி யூட்சன், மன்னார் நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது அந்த நீதிமன்றத்துக்கு கல் வீசப்பட்டது என்றும்,ரிஷாட் பதியுதீன் மிரட்டினார் என்றும் முறைப்பாடு செய்திருந்தார். இது உரிய முறையில் விசாரணை செய்யவில்லை என கூறி பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா, உயர் நீதிமன்றத்தை மூடி உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் இணைந்து பகிஷ்கரிப்பினை மேற்கொண்டனர். இதன் பின்னர் விசாரணைகள் நடாத்தப்பட்டன. இந்நிலையில் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான வழக்கு அரசுக்கெதிரானது என கூறி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவை வீட்டுக்கு அனுப்பினார். தற்போது இருக்கின்ற ஜனாதிபதி அனுரகுமாரவும் நாங்களும், பிரதம நீதியரசரை விலக்கியமை பிழை என கூறியதோடு இதனை செய்த அரசாங்கம் நீதித்துறையை குழி தோண்டி புதைக்கின்றது என தெரிவித்திருந்தோம். ஜூன் 5ம் திகதி வழக்கறிஞர்கள் முகப்புத்தகத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பின்புலத்துடன் மன்னாரில் கடமையாற்றிய நீதிபதியை தொலைபேசியில் அச்சுறுத்தி நீதிமன்றத்தை தாக்கி சேதப்படுத்தி தீ வைத்த வழக்கு, நாளைய தினம் தீர்ப்பாக திகதி இடப்பட்டுள்ளது என எழுதியுள்ளார். இதேபோன்று ஜூன் ஆறாம் திகதி யும் 2012ம் ஆண்டு மன்னாரில் தமிழ் மீனவர்களின் உரித்து பறிக்கப்பட்டு ரிஷாட் பதியுதீனின் பின்புலத்துடன் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் கொடுக்கப்பட்ட வழக்கு இன்றைய தினம் வண்ணார் மேல் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டிருந்தது. வழக்கு தொடுத்தோர் தரப்பில் எழுத்து மூலம் சமர்ப்பணம் தாக்கல் செய்வதற்கு மேலதிக கால அவகாசம் கோரியமையால் மீண்டும் தீர்ப்புக்காக 18ம்திகதி ஜூலை 2024ம் ஆண்டு தீர்ப்பு திகதியிடப்பட்டுள்ளதாக பதிவிட்டிருந்தார். இது ஒரு பொது ஆவணமாகும். இது தவிர்ந்து யாழ் வழக்கறிஞர்கள் மன்னார் நீதிமன்றதில் இவ்வழக்கு தொடர்பாக அவதானித்திருந்தனர். எனவே, இது ஒரு சாதாரண விடயமல்ல. மேலும் மன்னார் நீதிமன்றத்தை தீ வைத்து எரிக்க முற்பட்ட வழக்கை இன்று சுவரொட்டி ஒட்டியமை என்று பொய் பிரச்சாரத்தை கொண்டு செல்ல வேண்டிய நிலைமைக்கு ரிஷாட் பதியுதீன் தள்ளப்பட்டுள்ளார். எனவே, இது தொடர்பான விசாரணைகளை ஜனாதிபதி மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும். ராஜபக்ஷ காலத்தில் விசாரணை உரிய முறையிலே நடைபெறவில்லை என அனுரகுமார திசாநாயக்க பல முறை கூறியிருக்கின்றார். எனவே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலே நீதிக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தை உரியமுறையிலே மீண்டும் விசாரணை செய்ய வேண்டும். மேலும் மன்னார் நீதிமன்றத்திற்கு கல் எறிந்து தீ வைத்தவர்களை விடுதலை செய்வார்கள் என்ற அச்சம் இருப்பதாக குறித்த சுவரொட்டியில் கூறப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டியினை தயாரித்தவர்களை நான்கு மாதத்திற்கு முன்னரே கைது செய்துள்ளனர். நான், வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக நியமன பத்திரம் கையளிக்கப்பட்ட பின்னர். கைது செய்யப்பட்ட குறித்த தரப்பினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் இவ் சுவரொட்டி வழக்கில் ரங்காவிற்கு சம்பந்தம் உள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். 2012ம் ஆண்டு மன்னார் நீதிமன்றம் தொடர்பாக ரிஷாட் பதியுதீன் சம்மந்தப்பட்ட வழக்கு என்றும் உரிய முறையில் நீதி கிடைத்ததா என சட்டத்தரணி சுகாஸின் முகப்புத்தகத்தின் ஊடாக கேள்வி எழுப்பி உள்ளார். அதனையே சுவரொட்டியில் அடிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ரங்காவிற்கு சம்பந்தம் உள்ளதாகவும் மூன்று மாதம் சிறையில் இருக்கும் கைதி கூறி இருக்கின்றார். கைது செய்யப்பட்டவர்கள் செப்டம்பர் மாதத்தில் ஊடக சந்திப்பின் ஊடாக குறித்த சுவரொட்டியினை தயாரிக்க சொன்னது ரிஷாட் பதியுதீன் என தெரிவித்திருந்தனர். இதனை ஏன்? சிஐடி மற்றும் பொலிஸார் கவனிக்காவில்லை. வில்பத்து காட்டினை அழித்தல், மற்றும் வீட்டு வேலைக்காரியை கற்பழித்தல் கொலை செய்தமை, ஈஸ்டர் தாக்குதலில் தேவாலயத்தை அழித்தது, பட்டாணி ராசிக் கொலை போன்ற வழக்குகள் எம்மீது இல்லை. இவ்வளவு விடயத்திற்கு பின்னராக நாங்களும் நீங்களும் சமமென கூறுவதற்காக குறித்த சுவரொட்டி தொடர்பான விடையத்தினை கொலைக்கு மேலாக காட்டுகின்றனர். குறித்த சுவரொட்டி ரங்காவின் வழக்கு தொடர்பானது இல்லை. குறிப்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவுக்கு நேர்ந்தது மிகவும் மோசமான கொடூரமான செயல் என தெரிவித்திருக்கிறார். எனவே புதிய நீதித்துறை அமைச்சரிடமும் ஜனாதிபதியிடமும் 2012 ஆம் ஆண்டு மன்னார் நீதிமன்றத்தில் நடந்த அநியாயம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன். சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக மீண்டும் கலந்துரையாடப்பட்டு குறித்த சூத்திரதாரிகள் சவால் விட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும். இனி வரும் காலத்தில் தமிழ் மக்களின் மீது ரிஷாட் பதியுதீன் சவாரி செய்ய முடியாது என தெரிந்திருக்கின்றது. குறிப்பாக குறித்த சுவரொட்டியினை பாதாள உலகக் குழுவில் இருப்பவரான சொப்பே என்பவரின் மகனான கிப்சிறி தயாரித்துள்ளார். குறித்த கிப்சிரி கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சகல சுவரொட்டிகளை தயாரிப்பவராகும் என்றும் ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார். https://www.battinews.com/2024/10/blog-post_387.html
  18. சட்டவிரோதமாக சேர்த்த சொத்துகள் பறிமுதல் செய்ய புதிய நிறுவனம்- அரசாங்கத்தின் அடுத்த நகர்வு அரசியல்வாதிகள், அதிகாரிகள் அல்லது பிற தனிநபர்கள் முறைகேடாகச் சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்வதற்கு புதிய அரச நிறுவனமொன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த நிறுவத்தை சொத்து மீட்பு நிறுவனம் அரசாங்கம் அடையாளப்படுத்த உள்ளது. உலகின் பல வளர்ந்த நாடுகளில் இவ்வாறான நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதனை ஒத்ததாகவே இந்த நிறுவனமும் இருக்கும். வெளிநாட்டில் அல்லது நாட்டிற்குள் உள்ள பணமோசடி மற்றும் பிற வழிகளில் பெறப்பட்ட முறைகேடான ஆதாயங்கள் அல்லது பணத்தைக் கண்டறிந்து அவற்றை மீட்பதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது இந்த நிறுவனத்தின் பணியாக இருக்கும். அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள சட்டவிரோத கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் பல இரகசிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஊழல் மற்றும் மோசடிகளின் ஊடாக சேர்க்கப்பட்ட சட்டவிரோத சொத்துகள் மீட்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார். அதன் பிரகாரம் அவர் தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், ஊழல் - மோசடியில் ஈடுபட்ட அமைச்சர்கள், அரச அதிகாரிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதமாக விசாரிக்கும் உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது் https://oruvan.com/sri-lanka/2024/10/23/new-agency-to-confiscate-ill-gotten-gains-govts-next-move
  19. வடக்கு - கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவது குறித்து பிரதமருடன் பேச்சு "வடக்கு - கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கடந்த வாரம் கலந்துரையாடியிருக்கின்றோம். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இது சம்பந்தமாக முன்னெடுப்புகளை மேற்கொள்வது தொடர்பாக சில இணக்கப்பாடுகளும் எட்டுப்பட்டுள்ளன." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். வடமராட்சியில் நடைபெற்ற இளைஞர்களுடனான கேள்வி - பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "இளைஞர்கள் தற்காலத்தில் வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றார்கள். கடந்த தேர்தல் காலங்களில் தற்சார்பு பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவோம் என்ற வாக்குறுதிகளை வழங்கியிருந்தோம். அதற்கான சில முன்னெடுப்புகளை நாங்கள் ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற காலத்திலும் செய்திருந்தோம். கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலே கடந்த நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது. அதன்பின்னர் நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகப் பாதிப்படைந்திருந்தது. அப்போது ஜனாதிபதியாக இருந்த கோட்டபாயவோடு நாங்கள் வடக்கு - கிழக்கில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் ஒன்றைக் கையளித்திருந்தோம். நாட்டினுடைய ஒரு பகுதி பொருளாதாரத்தில் வளர்ச்சியடைகின்றபோது அதன் பலன் முழுநாட்டையும் சென்றடையும் என்ற விடயத்தையும் தெளிவுபடுத்தியிருந்தோம். அதன்போது வடக்கு - கிழக்குக்கான அபிவிருத்தி நிதியம் ஒன்றை உருவாக்குவதற்கான ஒரு முன்னெடுப்பு செய்யப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்துவதற்குப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. இடையிலே நாட்டிலே ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சியால் வடக்கு - கிழக்குக்கான அபிவிருத்தி நிதியக் கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சித் தலைவர்களையும் இணைத்து பொருளாதார மேம்பாடு தொடர்பான கூட்டங்களை நடத்தினோம். சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கேட்க வேண்டும் என்று அப்போதைய அரசை வலியுறுத்தி 12 கட்சித் தலைவர்களுடைய கையொப்பத்தோடு ஒரு ஆவணம் ஒன்றையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இருந்தோம். வடக்கு - கிழக்கு அபிவிருத்தி நிதியம் ஆரம்பிப்பது தொடர்பில் இந்தியா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல சர்வதேச நாடுகளுடனும் பேசியிருக்கின்றோம். அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவதற்கு நீண்ட காலம் செல்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில் விசேட காரணமாக நாடு பாரிய பொருளாதாரம் வீழ்ச்சிக்கு உள்ளானமையும் அதன் பின்னர் ஜனாதிபதிகள் மாற்றமடைந்ததையும் கூறலாம். கோட்டபாய அரசோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைப் போல் பின்னர் ஜனாதிபதியாக வந்த ரணில் விக்கிரமசிங்கவிடமும் வடக்கு - கிழக்கு அபிவிருத்தி நிதியம் தொடர்பான அறிக்கைகளையும் சமர்ப்பித்திருந்தோம். தற்போது நாட்டில் மீண்டும் ஆட்சி மாற்றம் இடம்பெற்றிருக்கின்றது. தற்போது பிரதமராகப் பதவியேற்றுள்ள ஹரிணி அமரசூரியவிடமும் வடக்கு - கிழக்கு அபிவிருத்தி நிதியம் பற்றிய விடயங்களைச் சென்ற வாரமும் கலந்துரையாடியுள்ளோம். அது நாட்டினுடைய வளர்ச்சிக்குப் பங்காற்றும் என்ற விடயங்களையும் தெளிவுபடுத்தியிருந்தோம். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் இது சம்பந்தமாக முன்னெடுப்புகளை மேற்கொள்வது தொடர்பாக சில இணக்கப்பாடுகளும் எட்டுப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுப்போம்." - என்றார். https://oruvan.com/sri-lanka/2024/10/22/discussion-with-the-prime-minister-on-creation-of-north-eastern-development-fund-sumanthran-report
  20. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீ ரங்கா தலைமறைவு! Vhg அக்டோபர் 22, 2024 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா வீட்டிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர், நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாலை அவதூறு செய்யும் வகையில் கொழும்பில் சுரொட்டிகளை ஒட்டிய சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகவும், திட்டமிட்ட நபராகவும் ஶ்ரீரங்கா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரதான சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று, குற்ற விசாரணைப் பிரிவிடம் வினவியிருந்தார். இதன்போது, ஶ்ரீரங்கா வீட்டில் இல்லை எனவும் தலைமறைவாகியுள்ளதாகவும் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஶ்ரீரங்காவை கைது செய்ய தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஶ்ரீரங்கா பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அதிகாரிகள் மேலும் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர். ஶ்ரீரங்காவின் ஆலோசனைக்கு அமைய மன்னார் நீதிபதியை இழிவுபடுத்தும் வகையில் கொழும்பில் சுவரொட்டிகளை ஒட்டியதாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இந்த வழக்கில் சாட்சியாளர்களை பொலிஸார் தடுத்து வைத்துள்ளதாக சட்டத்தரணி மைத்திரி குணரட்ன நீதிமன்றில் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியான மைத்திரி குணரட்ன இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சம்பவத்துடன் தொடர்புற்றிருக்கலாம் என சந்தேகத்தில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 பேரில் நான்கு பேரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://www.battinatham.com/2024/10/blog-post_466.html
  21. இனப்பிரச்சினை பற்றிய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையானால் புதிய அரசியல் கலாசாரம் வெற்றுச் சுலோகமே October 21, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு மாதம் நிறைவடையப்போகிறது. இந்த ஒருமாத காலத்தில் அவரும் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜனதா விமுக்தி பெரமுனயின் (ஜே.வி.பி. ) முக்கிய தலைவர்களும் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இலங்கை அரசியல் நிலக்காட்சியில் காணப்படக்கூடியதாக இருக்கும் மாறுதல்கள் குறித்து பெருமையாக பேசுகிறார்கள். பல அரசியல்வாதிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் விடுவதற்கு தீர்மானித்ததை ஜே. வி.பி.யின் தலைவர்கள் பெரிய ஒரு மாறுதலாக குறிப்பிடுகிறார்கள். தேர்தல்களில் தோல்வியடைந்தால் அல்லது இறந்து போனால் மாத்திரமே கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் ஓய்வுபெற்ற வரலாற்றைக் கொண்ட இலங்கை அரசியலில் ஓய்வு என்ற சொல்லை தேசிய மக்கள் சக்தியினால் இப்போது அறிமுகப்படுத்தக்கூடியதாக இருந்திருக்கிறது என்று கூறியிருக்கும் ஜனாதிபதி திசாநாயக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் தேர்தலில் இருந்து விலகியிருப்பது மக்கள் எதிர்பார்த்த மாற்றங்களில் ஒன்று என்று குறிப்பிட்டார். அதேவேளை, ஊழல்தனமான அரசியல்வாதிகளும் இனவாதிகளான அரசியல்வாதிகளும் தோல்வியை தவிர்ப்பதற்காக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் விடுவதற்கு தீர்மானித்ததாகவும் அத்தகைய அரசியல்வாதிகள் வேட்பாளராக வருவதற்கு கூட நினைத்துப் பார்க்காமல் இருப்பதை உறுதிசெய்ததன் மூலம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே தேசிய மக்கள் சக்தி மகத்தான வெற்றியைப் பெற்று விட்டது என்றும் ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிமால் இரத்நாயக்க கூறினார். “அநுரா குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் மூலம் ஊழல்காரர்களினதும் இனவாதிகளினதும் அரசியலுக்கு முடிவு கட்டியதற்காக மக்களுக்கு நன்றி கூறுகிறோம். அந்த அரசியல்வாதிகள் தங்களுக்கு தோல்வி நிச்சயம் என்பதை அறிந்து தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை. திசாநாயக்கவுக்கு வாக்களித்த மக்கள் ஊழல்தனமான அரசியல்வாதிகளை அரசியலில் இருந்து அகற்றியதன் மூலம் மகத்தான சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார்கள்” என்று இரத்நாயக்க மேலும் கூறினார். கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்களில் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இலங்கை அரசியலில் முன்னென்றுமே இவ்வாறு நடந்ததில்லை. அவர்களில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் அடங்குகிறார்கள். சிலர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். தங்களது தீர்மானத்துக்கு இந்த அரசியல்வாதிகள் பல்வேறு காரணங்களை கூறுகின்ற போதிலும், மக்கள் தங்களை நிச்சயம் நிராகரிப்பார்கள் என்ற பயம் காரணமாகவே அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஓய்வுபெறவேண்டிய வயதில் உள்ள சில அரசியல்வாதிகள் மாத்திரமல்ல, இளையவர்களும் கூட தங்களது கட்சிகளின் தேசியப்பட்டியலுக்குள் புகுந்துகொண்டார்கள். சில அரசியல்வாதிகள் தங்களது வாரிசுகளை தேர்தலில் போட்டியிட வைத்துவிட்டு தாங்கள் ஒதுங்கிக்கொண்டார்கள். குடும்ப அரசியலை ஒழிப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல என்பதை இது வெளிக்காட்டுகிறது. கடந்த இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இலங்கையில் குடும்ப ஆதிக்க அரசியலின் பிரத்தியேகமான அடையாளமாக விளங்கிவந்த ராஜபக்சாக்கள் சிங்கள மக்கள் தங்களைப் பற்றி உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் மூலம் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். ராஜபக்ச சகோதரர்களில் எவருமே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச நேரடியாக போட்டியிடாமல் தேசியப் பட்டியலுக்குள் பாதுகாப்பு தேடிக்கொண்டார். அரசியலில் இருந்து தற்காலிகமாகவே விலகியிருப்பதாக கூறியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தங்களது கட்சி எளிதாக வெற்றிபெறும் என்று கூட நம்பிக்கை வெளியிட்டிருக்கும் விசித்திரத்தைக் காண்கிறோம். விடுதலை புலிகளை தோற்கடித்து போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக தங்களை சிங்கள மக்கள் நெடுகவும் ஆதரிப்பார்கள் என்றும் தங்களது முறைகேடுகளைப் பொருட்படுத்தமாட்டார்கள் என்றும் ராஜபக்ச்க்கள் நம்பிக்கையை வளர்த்திருந்தார்கள். ஆனால், அவர்களின் தவறான ஆட்சியே இறுதியில் குடும்ப அரசியல் ஆதிக்கத்துக்கு எதிராகவும் பிரதான அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் இலங்கை அரசியல் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையில் மக்கள் கிளர்ந்தெழுவதற்கும் பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்துக்கு வெளியில் உள்ள ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கும் வழிவகுத்தது. 2022 மக்கள் கிளர்ச்சி உச்சக்கட்டத்தில் இருந்தபோது பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகிய பிறகு பாராளுமன்றத்தில் ஒரு தடவை உரையாற்றிய அவரது மூத்த சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமால் ராஜபக்ச தனது சகோதரர் ஜனாதிபதியாக இரண்டாவது பதவிக்காலம் முடிவடைந்தபோது அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று கூறினார். சகோதரரின் ஆலோசனையை மகிந்த ராஜபக்ச இன்று வரை கருத்தில் எடுக்கவில்லை. ராஜபக்சாக்களும் விமல் வீரவன்ச போன்ற அரசியல்வாதிகளும் பாராளுமன்ற தேர்தலில் இருந்து ஒதுங்கியிருப்பதற்கு எடுத்த தீர்மானத்தையே ஜே.வி.பி.யின் தலைவர்கள் இனவாத அரசியலின் முடிவாகக் கூறுகிறார்கள் என்றே தோன்றுகிறது. ஆனால், சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக இடையறாது பேசிவரும் உதய கம்மன்பில மற்றும் சரத் வீரசேகர போன்ற இனவாத அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இனவாத அரசியல்வாதிகள் தேர்தல்களில் போட்டியிடாமல் இருப்பதோ அல்லது அரசியலில் இருந்து ஒதுங்குவதோ இனவாத அரசியலின் முடிவாக அமைந்துவிடப் போவதில்லை. இனவாத அரசியலின் வெளிப்பாடுகளான அவர்கள் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக விதைத்த நச்சுத்தனமான சிந்தனைகள் தோற்கடிக்கப்பட வேண்டும். பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளுக்கும் அதிகாரப் பரவலாக்கத்துக்கும் எதிராக உணர்வுகள் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன. அந்த துரதிர்ஷ்டவசமான நிலைவரத்தில் ஓரளவுக்கேனும் மாற்றம் ஏற்படாதவரையில் புதிய அரசியல் கலாசாரத்தைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளுக்கும் அபிலாசைகளுக்கும் எதிராக நெடுகவும் நியாயமற்ற ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது பொருளாதார நெருக்கடி உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கும் தடையாக இருந்துவருகிறது என்ற புரிதலை இனிமேலாவது பெரும்பான்மைச் சமூகத்தவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான அரசியல் துணிவாற்றல் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு வரவேண்டும். தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு இதுகாலவரையில் முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்த ஒரு கசப்பான வரலாற்றை ஜே.வி.பி. கொண்டிருக்கிறது. 1957 பண்டா — செல்வா ஒப்பநந்தமும் 1965 டட்லி — செல்வா ஒப்பந்தமும் கைச்சாத்திட்டபோது ஜே.வி.பி. தோன்றியிருக்கவில்லை. ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கம் 1981 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய மாவட்ட சபைகள் தொடக்கம் இந்தியாவின் தலையீட்டையடுத்து அதே ஜெயவர்தன அரசாங்கம் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் ஊடாக கொண்டுவந்த மாகாணசபைகள் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நோர்வேயின் அனுசரணையுடன் முன்னெடுத்த சமாதான முயற்சிகள் வரை சகல அரசியல் தீர்வு முயற்சிகளையும் ஜே.வி.பி. எதிர்த்தது.அதன் அரசியல் அகராதியில் அதிகாரப் பரவலாக்கலுக்கு இடமிருந்ததில்லை. அரசைக் கவிழ்ப்பதற்காக இரு ஆயுதக் கிளர்ச்சிகளை முன்னெடுத்த ஜே.வி.பி.யின் வன்முறைக் கடந்த காலத்துக்கு அதை பணயக்கைதியாக வைத்திருக்காமல் தென்னிலங்கை மக்கள் மாற்றத்துக்கான தங்கள் வேட்கையில் அதை ஆட்சியதிகாரத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அதேபோன்று தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஜே. வி.பி.யினர் இதுகாலவரையில் கொண்டிருந்த எதிர்மறையான நிலைப்பாடுகளுக்கு அவர்களை பணயக் கைதியாக வைத்திருக்காமல் அவர்களுக்கு சிறுபான்மைச் சமூகங்கள் நேசக்கரம் நீட்டுவதற்கான வழியை அதன் தலைவர்கள் திறந்துவிடவேண்டிய காலம் வந்துவிட்டது. பெரும்பான்மைச் சமூகத்தின் நம்பிக்கைக்குரியவர்களாக ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் மாறியிருக்கும் தற்போதைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தை இனப்பிரச்சினை தொடர்பிலும் தென்னிலங்கையில் ஆரோக்கியமான சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தவேண்டும். ஜனாதிபதி தேர்தலில் திசாநாயக்க வெற்றிபெற்று பதவிக்கு வந்ததை தொடர்ந்து இனப்பிரச்சினை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜே.வி.பி.யின் நிவைப்பாட்டில் ஓரளவுக்கேனும் நெகிழ்ச்சித்தன்மை ஏற்படக்கூடும் என்று கணிசமான ஒரு பிரிவினர் எதிர்பார்க்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வம் வடக்கு, கிழக்கில் ஒரு கணிசமான பிரிவினர் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தங்களிடம் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறுவதைப் போன்று ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா சில தினங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறிய கருத்துக்கள் அமைந்திருந்தன. “அரசிலமைப்புக்கான 13 வது அரசியலமைப்பு திருத்தம் தமிழ் மக்களுக்கு அவசியமில்லை. அவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைக்கே தீர்வு அவசியமாகிறது. தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமே தங்களது அதிகாரத்தை தக்கவைப்பதற்காக 13 வது திருத்தத்தையும் அதிகாரப் பரவலாக்கத்தையும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் கூறினார். ஜனாதிபதி திசாநாயக்கவை பதவிக்கு கொண்டுவந்ததன் மூலம் தென்னிலங்கை மக்கள் கொண்டுவந்திருப்பதாக கூறப்படும் மாற்றத்தில் தங்களது நீண்டகால அரசியல் அபிலாசைகளுக்கு எந்தளவுக்கு இடமளிக்கப்படும் என்பதில் தமிழ் மக்களுக்கு ஏற்கெனவே இருக்கும் சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் ஜே.வி.பி. செயலாளரின் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. தமிழ் மக்கள் அல்ல தமிழ் அரசியல்வாதிகளே 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள் என்று தமிழ் மக்களின் குறைந்தபட்ச அரசியல் அபிலாசைகளைக்கூட ஏற்றுக்கொள்ள மறுத்துவரும் இனவாதிகள் நீண்டகாலமாகவே கூறிவருகிறார்கள். அது ஒன்றும் ரில்வின் சில்வாவின் கண்டுபிடிப்பு அல்ல. ஜே.வி.பி. தலைவர்கள் ஒருபுறத்தில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பிறகு இனவாத அரசியல் முடிவுக்கு வருவதாக கூறுகின்ற அதேவேளை, மறுபுறத்தில் இனவாதிகளின் பழையை கருத்தை தாங்களே திருப்பிக் கூறிக்கொண்டிருப்பது விசனத்துக்குரியது. மாற்றத்தைக் கொண்டுவரப்போவதாகவும் புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கப்போவதாகவும் சூளுரைத்துக் கொண்டு ஆட்சிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் இனவாதிகள் காலங்காலமாக மக்களை தவறாக வழிநடத்துவதற்கு கூறிவந்த கருத்துக்களையே நம்பிக்கை வைப்பதாக இருந்தால் மாற்றம் என்பதில் அர்த்தமில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் தொடர்பில் ஜே.வி.பி. தலைவர்கள் இதுகாலவரையில் கடைப்பிடித்துவந்த கொள்கைகளில் மாற்றம் செய்யாதவரை அவர்கள் பெருமையுடன் பேசுகின்ற மாற்றம் முழுமைடையப் போவதில்லை. குறைந்த பட்சம் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கேனும் வசதியான சூழ்நிலை தென்னிலங்கையில் தோன்றவில்லை என்றால் ஜனாதிபதி திசாநாயக்க கூறுகின்ற புதிய கலாசாரம் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எந்த பயனையும் கொண்டு வரப்போவதில்லை. மாற்றத்தின் மட்டுப்பாடுகள் மாத்திரமே அம்பலமாகும். இலங்கையின் இதுகாலவரையிலான இனஉறவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது சகல இனத்தவர்களையும் சமத்துவமாக நடத்தி இலங்கையர்கள் என்ற அடையாளத்தை ஏற்படுத்துவது என்பது வெறுமனே ஒரு சுலோகமாகவே இருந்து வந்திருக்கிறது. சிறுபானமைச் சமூகங்களுக்கு எதிராக படுமோசமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்ட அரசாங்க தலைவர்களும் கூட அந்த சுலோகத்தை தாராளமாகப் பயன்படுத்தினர். சமூகங்களின் கலாசார தனித்துவங்களைப் பேணக்கூடியதாகவும் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற வசதி செய்யக்கூடியதாகவும் ஒரு சட்டரீதியான கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் மாத்திரமே இலங்கையர்கள் என்ற தேசிய அடையாளத்தை சகல சமூகங்களும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வழிசெய்யமுடியும். அதற்கான நேர்மறையான சமிக்ஞை தென்னிலங்கையில் இருந்து புதிய ஆட்சியாளர்ளிடம் இருந்தே வரவேண்டும். (ஈழநாடு) ___________ https://arangamnews.com/?p=11356
  22. கனடாவில் துப்பாக்கிச்சூடு - யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! Vhg அக்டோபர் 21, 2024 கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணம் மயிலிட்டியை சொந்த இடமாகவும் மார்க்கம், ஒன்ராறியோ, கனடாவில் வசித்து வந்தவருமான பஞ்சலிங்கம் பார்த்தீபன் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். அதிகாலைவேளை இடம்பெற்ற துப்பாக்கிசூடு கனடாவின் ஒன்ராறியோ மாநிலம் மார்க்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டு வாசலில் வைத்து நேற்று (20-10-2024) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது, மேற்படி நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிருக்கு போராடியுள்ளார். இது தொடர்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது அவர் உயிரிழந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். முன்பகை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர். https://www.battinatham.com/2024/10/blog-post_966.html
  23. தனிநபரின் கம்பனியாக மாறியுள்ள தமிழரசுக் கட்சி - கே.வி.தவராசா Vhg அக்டோபர் 21, 2024 இலங்கை தமிழரசு கட்சியானது தற்போது ஒரு தனி நபருடைய கம்பனியாக மாறி இருக்கின்றது என ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நேற்றையதினம் (20-10-2024) நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனியான கட்டுக்கோப்புக்குள் கட்சி மேலும் தெரிவிக்கையில், “16 ஆண்டுகள் தமிழரசுக் கட்சியின் உள்ளே இருந்தேன். இதன்போது மத்திய குழு, அரசியல் குழு மற்றும் சட்டக் குழுவின் பல குழுக்களில் இருந்தேன். கட்சிக்கு வரும் வழக்குகளுக்கும் நான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தேன். அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது வழக்குகளில் இருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அரசியல் கைதிகளின் வழக்குகளில் நான் முன்னிலையாகி உள்ளேன். வாதாடிய வழக்குகளில் எவருமே சிறை செல்லவில்லை. இலங்கை தமிழரசு கட்சியானது தற்போது ஒரு தனி நபருடைய கம்பனியாக மாறி இருக்கின்றது. கட்சிக்குள் இருந்த அனைவரையும் விலக்கிவிட்டு தனது தனியான கட்டுக்கோப்புக்குள் கட்சியை வைத்திருக்கின்றார். கட்சியின் தலைவர் தேர்தலில் சிறீதரன் வெற்றி பெற்றிருந்தார். இருந்தாலும் அவருக்கான பதவி வழங்கப்படாது, நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது. ஒவ்வொரு பதவிகளுக்கான ஆசை தமிழ் தேசியம் தான் எமது தமிழரசு கட்சியின் தாரகை மந்திரம். தமிழ் தேசியமானது பாதுகாக்கப்பட வேண்டும். நாங்கள் இல்லாவிட்டாலும் கூட அடுத்த தலைமுறையிடம் அதனை ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும்.ஆனால் தமிழரசு கட்சிக்குள் அது நடைபெறவில்லை. கட்சிக்குள் இத்தனை பேர் இருந்தும் ஏன் எதனையும் செய்யவில்லை என நீங்கள் கேட்க கூடும். கட்சிக்குள் இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதவிகளுக்கான ஆசைகளில் இருந்தார்கள். மாகாண சபை தேர்தல் வந்தால் அந்த தேர்தலில் முதலமைச்சர் யார், அமைச்சர்கள் யார், பிரதேச சபை தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் யார் என அவர்களுக்கு பதவி வழங்கப்பட்டு விட்ட நிலையில் அவர்கள் அனைவரும் அமைதியாகி விட்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில் தான் கட்சியை நடத்த முடியாது என நான் வெளியேறி வந்தேன். நான் ஆறாம் திகதி கட்சியை விட்டு வெளியேறி வந்த பின்னர் பலர் என்னிடம் கேட்டார்கள் ஏன் கட்சியை விட்டு வெளியேறினீர்கள், கட்சிக்கு உள்ளே இருந்து சரிசெய்திருக்கலாம் தானே என்று. எட்டாம் திகதி தலைவர், தான் வகித்த சகல பதவிகளிலும் இருந்து விலகினார். இது ஒருவருடைய சர்வாதிகாரப் போக்கை காட்டுகின்றது” என்றும் குறிப்பிட்டுள்ளார். https://www.battinatham.com/2024/10/blog-post_351.html
  24. ‘இனவாதத்திலிருந்து ஜே.பி.வி இன்னும் மீளவில்லை’ : சிவாஜிலிங்கம் தெரிவிப்பு October 21, 2024 சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட நன்மைகள் கிடைக்க கூடாது என்பதற்காக அதனை எதிர்ந்து கொழும்பை முடக்கி போராட்டம் செய்தவர்கள் தான் மக்கள் விடுதலை முன்னணி என முன்னாள் நாடாளுமன்றம் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது. அண்மையில் ஜனாதிபதி தேர்தலில் அனுர. குமார திசநாயக்க ஜனாதிபதியாக தெருவு செய்யப்பட்டிருக் கின்றார். இந்த பின்னணியில் ஏதோ மாற்றம்வரும் என நம்பியவர்களுக்கு அந்த ஜே.பி.வி கட்சியினுடைய பொது செயலாளர் ரில்வின் சில்வா தமிழர்களுக்கு பிரச்சினை இல்லை, பொருளாதார ரீதியாகத்தான் பிரச்சினை இருக்கிறது என்று, இளையோர் இதைப்பற்றி கவலைப்படவில்லை, 13 வது திருத்தம் அல்லது அது போன்ற அதிகார பகிர்வு தேவை இல்லை என தெரிவித்திருக்கின்றார். இது முதலாவது அடி, இரண்டாவது ஐக்கியநாடுகள் பொதுச் சபையிலே, மனித உரிமை பேரவையிலே அங்கு வந்த தீர்மானத்திலே ஓராண்டு காலம் அவகாசம் வழங்கி விசாரணைகளை மேற்கொள்வது என்பதை மறுத்து இலங்கையினுடைய வெளிவிவகார அமைச்சர் அதனை மறுத்து உள்ளக விசாரணைதான் என கூறியிருக்கின்றார். ஆகவே இதில் என்ன தெரிகிறது என்றால் இந்த பிரச்சினையில் அவர்கள் சர்வதேசத்திற்கும் உதவ தயாராக இல்லை, இதை நம்பி எங்களுடைய மக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் பொதுத் தேர்தலில் இறங்கியுள்ளார்கள். இந்த சூழ்நிலையின் பின்னணியிலேதான் அவர்களுடைய அந்த அமைச்சரவையில் இருக்கக் கூடிய. அமைச்சர்கள் தெரிவிக்கக் கூடிய கருத்துக்கள் ஜனாதிபதியின் கருத்துக்கள் தான். வெளிவிவகார அமைச்சகமும் இவ்வாறு கூறியிருக்கின்றது என்றால் இதைவிட என்ன கருத்துக்கள் உங்களுக்கு தேவைப்படுகின்றன. புதுமையான இன்னொரு விடயத்தையும் பார்க்க வேண்டும், இதுவரை தேர்தல்களில் விருப்பு வாக்கு அழிக்கப்படாது கட்சிக்கு மட்டுமே வாக்களிக்கப்படும், ஆனால் இம்முறை விருப்பு வாக்குகளை வருகின்ற வேட்பாளர்கள் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. ஆகவே இது பேரினவாத கட்சிகளைப் போன்று அடிஎடுத்து வைக்கின்றது என்பதைச் சொல்கிறது. ஆகவே வெளிவிவகார அமைச்சர் கூறிய கருத்துக்களையும் வைத்து பார்க்கின்றபோது ஜே.பி.வி இன்னும் இனவாத்த்திலிருந்து மீளவில்லை, தமிழருக்கு தமிழினத்திறக்கு எதிரான அனியாயங்களுக்காக 8000 க்கு மேற்பட்ட படையினரை நாங்கள் தான் சேர்துக் கொடுத்தோம் என்று மார்தட்டியவர்களுக்கு எங்களுடைய மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதே இராணுவம்தான் எங்களுடைய மக்களை படுகொலை செய்தது, மானபங்க படுத்தியது, கற்பழித்தது. அவ்வாறு செய்தவர்களுக்கு நீங்கள் சாமரம் வீசுவது போல வாக்களிக்க முற்படுவது எந்த வகையில் நியாயம், இதை விட வடக்கு கிழக்கு மாகாணங்களை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரித்தவர்கள் ஜே.வி.பியினர். 2004 ம் ஆண்டு வீசிய கடற்கோள் அதாவது சுனாமியின் பின் சர்வதேச சமூகமும், இலங்கை அரசும் இணைந்து சுனாமியின் பின் அந்நேரம் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அரசாங்கமும் சேர்ந்து ஒரு ஒப்பந்தத்தை செய்தார்கள் பீரொம்ஸ். அதாவது post tsunami operational management structure சுனாமிக்கு பின்னரான மீள் கட்டுமானம். பாராளுமன்றத்திலே கொண்டுவரப்பட்டு அவற்றை எல்லாம் செயற்படுத்தப்படுகின்ற பருவம் வருகின்றபோது அதனுடைய தலமைச் செயலகம் கிளிநொச்சியிலே அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. அதற்கு எதிராகவும் நீதிமன்றம் சென்று அதனையும் தடுத்தவர்கள். அதைவிட கொழும்பிலேயும் இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் செய்தவர்கள் ஜேவிபியினர். இவ்வாறு இருக்க ஜே.பி.விபியினருக்கு நீங்கள் வாக்களிக்க முயன்றல் அது எங்களை அகல பாதாளத்தில்தான் கொண்டு சென்று விடும் என்பது எனது தாழ்மையான கருத்து என்றார். https://www.ilakku.org/இனவாதத்திலிருந்து-ஜே-பி/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.