Everything posted by கிருபன்
-
மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர் September 29, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இரு வருடங்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றம் ஜனாதிபதியாக தெரிவு செய்தபோது இலங்கை வரலாறு கண்டிராத மக்கள் கிளர்ச்சியினால் இறுதியில் பயனடைந்தவர் அவரே என்று கூறப்பட்டதுண்டு. ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் அந்த கிளர்ச்சியின் உண்மையான பயனாளி யார் என்பதை உலகிற்கு காட்டியது. இடதுசாரி அரசியல் கட்சிகளினதும் அவற்றின் தொழிற் சங்கங்களினதும் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட 1953 ஆகஸ்ட் ஹர்த்தால் போராட்டத்துக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வை பயன்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க மூன்று வருடங்களுக்கு பிறகு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவிக்கு வந்ததைப் போன்று, ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு இரு வருடங்கள் கடந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு நிகழ்வுகளுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருக்கின்றன. பண்டாரநாயக்க ஹர்த்தாலை ஆதரிக்காமலேயே அதன் விளைவாக மாற்றமடைந்த அரசியல் சூழ்நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தினார். ஹர்த்தாலை நடத்திய இடதுசாரி தலைவர்களினால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அந்த போராட்டத்தின் வெற்றியினால் தடுமாறிப்போன அவர்கள் அடுத்த நகர்வை செய்வதற்கு பயனுறுதியுடைய தந்திரோபாயத்தை வகுக்க முடியாதவர்களாக அப்போது இருந்தார்கள். ஆனால், திசாநாயக்க ‘அறகலய’வுக்கு தலைமை தாங்கவில்லை என்றபோதிலும், அவரின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவை வழங்கியது. அந்த போராட்டத்தின் விளைவாக நாட்டின் அரசியல் நிலவரத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் பயனாக அவர் இன்று ஜனாதிபதியாக வந்திருக்கிறார். அன்றைய இடதுசாரி தலைவர்களினால் அவர்களது சொந்தத்தில் ஒருபோதும் ஆட்சியதிகாரத்துக்கு வரமுடியவில்லை. ஜனாதிபதி தேர்தலில் திசாநாயக்கவின் வெற்றி இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முதலாக ஒரு இடதுசாரி அரசியல்வாதியை நாட்டின் தலைவராக உச்சநிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. அவரது வெற்றி ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக ஆட்சியில் ஏகபோகத்தை தங்கள் பிறப்புரிமை போன்று அனுபவித்த பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்திடமிருந்து அரசியல் அதிகாரத்தை ஒரு சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்ட ஒருவருக்கு கைமாற்றியிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, “திசாநாயக்க”வின் வெற்றி குறித்து கருத்துக் கூறியபோது குடும்ப ஆதிக்க அரசியலை மக்கள் நிராகரித்திருப்பது பற்றி எதுவும் கூறாமல் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் இன்று நாட்டின் உயர்பதவிக்கு வந்ததற்கு தனது தந்தையார் மண்டாரநாயக்க 1956 ஆண்டில் செய்த ‘புரட்சியே’ காரணம் என்று உரிமை கோரியிருக்கிறார். இலங்கையின் முக்கியமான அரசியல் அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொடவின் வார்த்தைகளில் கூறுவதானால் அரசியல் அதிகாரத்தின் வர்க்கத் தளங்கள் கொழும்பை மையமாகக்கொண்டு வாழும் மேற்கத்தைய பாணி வாழ்க்கை முறையைக் கொண்ட சிறுபான்மையினரான உயர்குடியினரிடம் இருந்து சாதாரண சமூக சக்திகளுக்கு மாறியிருக்கிறது. ஜனநாயகத்தின் ஊடாக நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்த அரசியல் அதிகாரத்தின் வர்க்க ஏகபோகம் அதே ஜனநாயகத்தினால் தகர்க்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். இலங்கையில் முதற்தடவையாக மார்க்சியவாதி ஒருவர் ஆட்சியதிகாரத்துக்கு வந்திருப்பதாக வர்ணிக்கப்படுகிறது. பாரம்பரிய அர்த்தத்திலான மார்க்சியவாதியாக திசாநாயக்கவை இன்று நோக்கமுடியாது. பத்து வருடங்களுக்கு முன்னர் ஜே.வி.பி.யின் தலைவராக வந்த பிறகு அவர் முன்னைய போக்குகளில் இருந்து பெரிதும் வேறுபட்ட முறையிலேயே கட்சியை வழிநடத்தி வந்திருக்கிறார். ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இன்று ஆட்சியதிகாரத்துக்கு வந்திருக்கிறது என்றால் திசாநாயக்க கட்சியின் போக்குகளில் செய்த மாற்றங்கள் அதற்கு முக்கிய காரணம். தெற்காசியாவில் நேபாளத்திற்கு பிறகு இடதுசாரி தலைவர் ஒருவரை அரசாங்க தலைவராக தெரிவு செய்த நாடாக இலங்கை விளங்குகிறது. உலகின் ஒரேயொரு இந்து இராச்சியமாக விளங்கிய நேபாளத்தில் முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவந்த மாவோவாத கம்யூனிஸ்ட் ஆயுதக்கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய பிரசண்டா முதற் தடவையாக 2008 ஆம் ஆண்டில் பிரதமராக பதவியேற்றார். இதுவரையான 18 வருடங்களில் அவர் மூன்று தடவைகள் பிரதமராக பதவிக்கு வந்தார். இப்போதும் அவரே பிரதமராக இருக்கிறார். மாவோவாதியான பிரசண்டாவும் அவரது கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சியதிகாரத்தில் இருந்துவந்த காலப்பகுதியில் அவர்களின் அணுகுமுறைகளில் ஏற்பட்ட மாற்றம் அவர்களை நேபாளத்தின் ஏனைய தாராளவாத முதலாளித்துவ கட்சிகளில் இருந்து பெருமளவுக்கு வேறுபடுத்திப் பார்க்கமுடியாத நிலையை உருவாக்கி விட்டது என்று அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள். இலங்கையில் திசாநாயக்கவின் தலைமையில் ஜே.வி.பி. ஏற்கெனவே ஒரு இடதுசாரிப் போக்கில் இருந்து பெருமளவுக்கு விடுபடத் தொடங்கி விட்டது. தீவிர வலதுசாரியான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த இரு வருடங்களாக சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுத்துவந்த பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தை தொடருவதாக உறுதியளிக்கின்ற அளவுக்கு தேசிய மக்கள் சக்தி மாறுதலுக்கு உள்ளாகியிருக்கிறது. ஜே.வி.பி.யின் கடந்த காலத்தை அடிப்படையாகக் கொண்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களுக்கு பதிலளிக்கும் வேளைகளில் எல்லாம் திசாநாயக்க அடிப்படைக் கொள்கைகளை கைவிடவில்லை என்ற போதிலும் தற்போதைய சர்வதேச நிலைவரங்களுக்கு ஏற்ற முறையில் தங்களது அணுகுமுறைகளில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று கூறிவந்திருக்கிறார். உலகில் ஒரு சோசலிச முகாம் இல்லாத காரணத்தால் இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்றும் அவர் விளக்கமளித்தார். பொருளாதார நெருக்கடி உட்பட தாங்கள் எதிர்நோக்கும் பெருவாரியான பிரச்சினைகளுக்கு பாரம்பரிய அரசியல் சக்திகளின் தவறான ஆட்சிமுறையே காரணம் என்பதை விளங்கிக் கொண்ட மக்கள் மத்தியில் பொது வாழ்வை தூய்மைப்படுத்துவது குறித்து திசாநாயக்க அளித்த உறுதிமொழி பெரும் வரவேற்பை பெற்றது. ஊழலுக்கு எதிரான அவரின் செய்தியும் புதியதொரு அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கப்போவதாக அளித்த வாக்குறுதியும் முறைமை மாற்றம் ஒன்றை வேண்டிநின்ற இளம் வாக்காளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தன. நீண்டகாலமாக பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டாலும் கூட பழைய பிரதான அரசியல் கட்சிகளையே மாறிமாறி ஆட்சிக்கு கொண்டுவந்து சலித்துப்போன மக்கள் இரு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பநிலைக்கு பிறகு பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்துக்கு வெளியில் உள்ள ஒருவரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதில் காட்டிய ஆர்வத்தை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டின. உண்மையில் இது மக்கள் செய்து பார்க்கத்துணிந்த ஒரு பரிசோதனையே என்பதில் சந்தேகமில்லை. பாரம்பரிய அதிகார வர்க்கத்தின் மீது கடுமையாக வெறுப்படைந்த மக்கள் ‘மாற்றத்துக்கான’ வேட்பாளராக திசாநாயக்காவை நோக்கினார்கள். கடந்த இரு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக தன்னால் சாதிக்க முடிந்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரசாரப்படுத்திய ‘உறுதிப்பாட்டையும் வழமை நிலையையும்’ அனுபவிக்கக்கூடியவர்களாக இருந்த பிரிவினரே அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு விக்கிரமசிங்க தனது பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் மாத்திரம் முழுமையாக தங்கியிருந்தது அவரின் தந்திரோபாயங்களில் இருந்த மிகப்பெரிய குறைபாடாகும். நீண்டகால அரசியல் அனுபவத்தையும் வளமான அறிவையும் கொண்ட அவருக்கு நாடு அண்மைக்காலமாக எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் மக்கள் பொருளாதாரக் காரணியை மாத்திரம் மனதிற்கொண்டு வாக்களிக்கப் போவதில்லை என்பது தெரிந்திருக்கவில்லை. பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடும் ஆர்வத்தில் மக்கள் இதுகாலவரையான தவறான ஆட்சிமுறை, குடும்ப ஆதிக்க அரசியல், அதிகார துஷ்பிரயோகம், சட்டத்தின் ஆட்சியின் சீர்குலைவு மற்றும் முன்னென்றும் இல்லாத ஊழலை மறந்து விடுவார்கள் என்று அவர் நினைத்தாரோ? தனது ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இல்லாத நிலையில் ராஜபக்சாக்களின் கட்சியில் இருந்தும் வேறு கட்சிகளில் இருந்தும் வந்த அரசியல்வாதிகளை நம்பி கூட்டணி ஒன்றை அமைத்து சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என்று விக்கிரமசிங்க நினைத்தது பெரும் தவறு. முன்னரைப் போன்று சிறுபான்மைச் சமூகங்களும் அவரை இந்த தடவை ஆதரிக்க முன்வரவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை பெரும்பாலான மக்கள் பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்தின் ஒரு அங்கமாகவே நோக்கினார்கள். அவருக்கு இது ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது தோல்வி. திசாநாயக்கவிடம் தோல்வி கண்டாலும் கூட விக்கிரமசிங்கவை தோற்கடித்துவிட்டதில் பிரேமதாச ஒருவிதத்தில் திருப்தியடைந்திருக்கக்கூடும். ஜனாதிபதி திசாநாயக்கவும் கூட ஐம்பது சதவீதமான வாக்குகளை பெறமுடியவில்லை. இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதன் முதலாக மற்றைய வேட்பாளர்களின் இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய நிர்ப்பந்தம் இந்த தடவையே ஏற்பட்டது. தனக்கு கிடைத்த ஆணையின் தன்மையை அவர் விளங்கிக்கொண்டு செயற்படவேண்டிய தேவை இருக்கிறது. கொழும்பில் அதிகார ஏகபோகத்தைக் கொண்டிருந்த மூன்று பிரதான அரசியல் கட்சிகளையும் கிரகணம் செய்து திசாநாயக்கவும் தேசிய ஐக்கிய மக்கள் சக்தியும் தேர்தலில் கண்டிருக்கும் வெற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேற வைத்த 2022 மக்கள் கிளர்ச்சியுடன் தொடக்கிய மாற்றத்தை நோக்கிய அரசியல் நிகழ்வுகளின் சுழற்சியை நிறைவு செய்கிறது என்று எவரும் மெத்தனமாக நினைத்து விடக்கூடாது. ஜனாதிபதி திசாநாயக்க சமாளிக்க முடியாத எண்ணற்ற சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியவராக இருக்கிறார். பாராளுமன்றத்தை கலைத்து இரு மாதங்களுக்கும் குறைவான இடைவெளிக்குள் பொதுத்தேர்தலுக்கான திகதியை அவர் அறிவித்திருக்கிறார். ஜனாதிபதி தேர்தலில் கண்ட தோல்வியின் தாக்கத்தில் இருந்து மற்றைய கட்சிகள் விடுபடுவற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. பொருளாதாரத்தை உறுதிப்பாட்டுக்கு கொண்டுவரவும் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்ற தேர்தலில் பெரிய வெற்றியைத் தரவேண்டும் என்று திசாநாயக்க தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்களிடம் கோருவார். ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்த முறையின் அடிப்படையில் தான் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அமையுமா அல்லது அவருக்கு முழுமையான வாய்ப்பைக் கொடுப்பதற்காக தேசிய மக்கள் சக்தியை மக்கள் அதிகப்பெரும்பான்மை ஆசனங்களுடன் தெரிவு செய்வார்களா என்பது முக்கியமான கேள்வி. இது இவ்வாறிருக்க, ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்த முறையின் புவியியல் ஒழுங்கை கருத்தில் எடுக்கவேண்டியதும் அவசியமாகிறது. தென்னிலங்கையில் இருந்து குறிப்பாக சிங்கள பௌத்த சமூகத்தவர்கள் அதிகப்பெரும்பான்மையாக வாழும் பிராந்தியங்களில் இருந்து பெரும்பான்மை ஆதரவைப் பெற்று திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு மாறாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மயைகத்திலும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்குமே பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள். சிறுபான்மைச் சமூகங்கள் திசாநாயக்கவுக்கு முற்றாக வாக்களிக்கவில்லை என்று கூறமுடியாது. ஆனால், பெரும்பான்மை இனத்தவர்களின் வாக்குகள் தான் அவரை வெற்றிபெற வைத்தன. அதற்காக கோட்டாபய ராஜபக்ச போன்று சிங்கள மக்களே தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள் என்று திசாநாயக்க ஒருபோதும் சொல்லப்போவதில்லை. கோட்டாபய சிங்கள மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டதற்கான காரணத்துக்கும் திசாநாயக்க தெரிவு செய்யப்பட்ட காரணத்துக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. அதேவேளை, தாங்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரு அரசியல் தலைவராக திசாநாயக்கவை சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளில் கணிசமான பிரிவினர் அடையாளம் கண்டு ஆதரவு வழங்கியிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு எதிரான அந்த தேசியவாத சக்திகளின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமல் துணிச்சலாக திசாநாயக்க நடந்து கொள்வாரா இல்லையா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும். தங்களது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து புதிய அணுகுமுறையை சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்பார்க்கின்றன. சிறுபான்மைச் சமூகங்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்று தேர்தல் முடிவுகளை வியாக்கியானம் செய்யமுடியாது. சிங்கள மக்கள் விரும்புகின்ற மாற்றத்திற்குள் தங்களது அபிலாசைகளுக்கு எந்தளவுக்கு மதிப்பளிக்கப்படும் என்பதே தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கேள்வி. எது எவ்வாறிருந்தாலும், இதுகாலவரை இலங்கை அரசியல் அதிகாரத்தை தங்களது ஏகபோகத்தில் வைத்திருந்த ஒரு வர்க்கத்துக்கு வெளியில் உள்ள ஒரு ‘ தோழர்’ ஜனநாயக வழிமுறையின் மூலமாக நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதில் உள்ள வரலாற்று முக்கியத்துவத்துவம் உரியமுறையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஜனாதிபதி திசாநாயக்க ஒரு கணிசமான காலப்பகுதிக்கு ஆட்சிசெய்த பின்னர் மாத்திரமே அவரைப் பற்றிய மதிப்பீட்டைச் செய்யமுடியும். https://arangamnews.com/?p=11287
-
பொதுத் தேர்தலுக்கு முன்னர் தொடரப்போகும் அதிரடிகள் – அகிலன்
பொதுத் தேர்தலுக்கு முன்னர் தொடரப்போகும் அதிரடிகள் – அகிலன் September 30, 2024 ஜனாதிபதித் தோ்தல் நடைபெற்று முடி வடைந்த நிலையில், அதிரடியான அரசி யல் நகா்வுகளை கடந்த சில தினங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. ஜனாதிபதி பதவியேற்பு, புதிய பிரதமா், மூன்று உறுப்பினா் அமைச்சரவை நியமனம் என்பவற்றைத் தொடா்ந்து நாடாளு மன்றமும் கலைக்கப்பட்டுவிட்டது. குறுகிய காலத்துக்குள் அடுத்த பொதுத் தோ்தலை நாடு சந்திக்கப்போகின்றது. அரசியல் கட்சிகள் அனைத் துமே பொதுத் தோ்தலை எவ்வாறு சந்திப்பது என்பதில் தமது கவனத்தைக் குவித்துள்ளன. ஜனாதிபதித் தோ்தலைப் பொறுத்தவரை யில் அதன் முடிவு ஓரளவுக்கு ஊகிக்கப்பட்டதுதான். அதேவேளையில், பல்வேறு கருத்துக் கணிப்புக் களும் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் என்பதை உறுதிப்படுத்தியிருந்தன. அதேவேளையில், எந்தவொரு வேட்பாளரும் 50 வீததத்தைப் பெறமுடியாத நிலையில், இரண்டாவது தெரிவு கணிப்பிட வேண்டிய நிலை வரலாம் என்பதும் எதிா்வு கூறப்பட்டிருந்தது. அவ்வாறே நடைபெற்றும் உள்ளது. அநுரகுமார திசநாயக்கவின் வெற்றிக் கான அடிக்கல் இரண்டு வருடங்களுக்கு முன்னரே நாட்டப்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். 2022 இல் இலங்கையில் இடம்பெற்ற மக்கள் கிளா்ச்சி நாட்டில் ஒரு முறைமை மாற்றத்தை-அதாவது சிஸ்ரம் சேஞ்சை எதிா்பாா்த்ததாகவே இருந்தது. ஆனால், ஆளும் தலைவா்கள் மாறினாா்களே தவிர, பழைய நிலைமைதான் தொடா்ந்து. அதாவது, கோட்டாபய போக ரணில் அதிகாரத்துக்கு வந்தாா். ரணிலின் தலைமை பொருளாதார குற்றங்களைச் செய்வா்கள் என நீதிமன்றத்தினாலேயே அடையாளம் காணப்பட்ட ராஜபக்ஷக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பதிலாக அவா்களைப் பாதுகாத்தது. நெருக்கடியிலிருந்து நாட்டைப் பாது காத்தவா் என்று ரணில் தரப்பினா் அவரை முன்னிலைப்படுத்திய போதிலும், மக்கள் ரணிலைத் தோற்கடிக்துள்ளாா்கள். அதற்கு பிர தான காரணங்களில் ஒன்று ராஜபக்ஷக்களை அவா் பாதுகாத்ததுதான். நாடாளுமன்றத்தில் ரணிலுக்குப் பெரும்பான்மை இருக்கவில்லை. ராஜபக்ஷக்களுக்கு ஆதரவான நாடாளுமன்றத்தை நம்பித்தான் அவா் ஆட்சியைக் கொண்டு நடத்த வேண்டியவராக இருந்தாா். “கோட்டா கோ கம” என்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், அவா்கள் கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதை மட்டும் எதிா் பாா்த்திருக்கவில்லை. அவா்கள் எதிா்பாா்த்தது அரசியல் முறைமையில் ஒரு முழுமையான மாற்றத்தைத்தான். அரசியல் தலைமை மாற்றத்தை மட்டுமல்ல. ரணில் அதனைச் செய்யவில்லை. படை பலத்தைப் பயன்படுத்தி போராட் டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாா். மறுபுறம் ராஜபக்ஷக் களைப் பாதுகாத்தாா். அவரது தோல்விக்கு அவைதான் காரண மாகியது. சஜித் பிரேமதாசவும் ஏதோ ஒரு வகையில் பாரம்பரிய அரசியல் கட்சிகளின் தொடா்ச்சி யாகவே உள்ளாா். அவா் அதிகாரத் துக்கு வந்தாலும், ஏதோ ஒருவகையில் பழை யநிலைமைகள்தான் தொடரும், சில விடயங்களில் அவா் கடுமையாக நடந்துகொள்ள முடியாதவராக இருக்கும் என்று தான் மக்கள் பாா்த்தாா்கள். அவா் அமைத்த அரசி யல் கூட்டணிகளும் அதற்குக் காரணம். “முறைமை மாற்றம்” ஒன்றை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால், பாரம்பரிய கட்சிகளை நிராகரித்துவிட்டு புதிய தலைமை ஒன்றை தோற்றுவிக்க வேண்டும் என்று சிங்கள மக் கள் சிந்தித்தாா்கள். அதன் விளைவுதான் அநுரகுமார வின் வெற்றி! மற்றையவா்களின் படுதோல்வி!!ஆக, அநுரகுமாரவிடம் மக்களின் எதிா்பாா்ப்பு அதிகமாகவே இருக்கின்றது. குறிப்பாக, ஊழல் போ்வழிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கின்றாா்கள். அதற்கான ஒரு திட்டத்துடன்தான் அநுரவின் அரசாங்கம் செயற் படுவதாகவும் தெரிகின்றது. இந்த விடயத்தில் அதிரடியான சில செயற்பாடுகளை அடுத்துவரும் வாரங்களில் எதிா்பாா்க்கலாம். மறுபுறத்தில் ஊழல் மோசடிப் போ்வழிகள், அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டவா்கள் பலா் பெரும் அச்சத்துடன் இருக்கின்றாா்கள். முக்கியமான சிலா் தோ்தலுக்கு முன்னரே விமானம் ஏற்விட்டாா்கள். வேறு சிலா் தோ்தல் முடிந்து – முடிவுகள் வெளிவருவதற்கு முன்னா் தப்பிச் சென்றுவிட்டாாா்கள். அநுர ஜனாதிபதியாக அதிகாரத்தை கைகளில் எடுத்த பின்னா் வெளிநாடு செல்ல முயன்ற சிலா் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 30 நபா்களுடைய பட்டியல் ஒன்று கட்டுநாயக்க மற்றும் பலாலி விமான நிலையங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பெயா்பட்டியல் கொடுக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் தவறானதாக இருந்தாலும், தமது பெயா்களும் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் வெளிநாடு செல்ல விரும்பிய பலா் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றாா்கள் என்பதையும் அறிய முடிகின்றது. கடந்த காலங்களில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல்களில் ஈடுபட்டவா்கள் எந்தளவுக்கு அச்சமடைந் திருக்கின்றாா்கள் என்பதற்கு, காலி முகத்திடல், சுதந்திர சதுக் கம் உட்பட பல பகுதிகளிலும் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ள சொகுசு வாகனங்கள் சாட்சி யாகவுள்ளது. சுமாா் 3 கோடி முதல் 5 கோடி வரையில் பெறுமதியான 500 க்கும் அதிகமான சொகுசுவாகனங்கள் இவ்வாறு கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளன. முன்னைய ஆட்சிக் காலத்தில் அமைச் சா்கள், அமைச்சா்களின் செயலாளா்கள், மற்றும் அதிகாரிகளால் அந்த வாகனங்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் பராமரிப்பு மற்றும் எரிபொருள் என்பவற்றுக்காக மாதாந் தம் மூன்றரை இலட்சம் ரூபா வரையில் செல விடப்பட்டிருக்கின்றது என்பது மற்றொரு அதிா்ச்சியான தகவல். மக்களின் வரிப்பணத்தில் சொகுசுவாழ்க்கையை அதிகாரத்தில் இருந்த ஒரு தரப்பினா் நடத்திவந்திருக்கின்றாா்கள் என்பதைத் தான் இந்த வாகனங்கள் பறைசாற்றி நிற்கின்றன. வழமையாக ஆட்சிகள் மாறினாலும் முன்னைய அமைச்சா்கள், அதிகாரிகள் வாகனங்களை ஒப்படைப்பதில்லை. அல்லது பல மாதங்களின் பின்னா்தான் அவற்றை ஒப்படைப் பாா்கள். ஆனால், அநுர பதவிப் பிரமாணம் செய்த உடனடியாகவே இந்த வாகனங்கள் கொண்டுவரப்பட்டு கைவிடப்பட்டிருப்பது அவா்களுடைய அச்சத்தைக் காட்டுகின்றது. புதிய ஆட்சி அதிரடியாக ரெய்ட் எதனையாவது முன்னெடுப்பதற்கு முன்னதாக அவற்றை ஒப் படைத்துவிடுவது தமக்கு பாதுகாப்பு என்று அவா்கள் கருதியிருக்கலாம். நான்கு விடயங்களை அநுர அரசு கைகளில் எடுக்கும் என்று எதிா்பாா்க்கலாம். முதலாது, ஊழல்-மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம் செய்தவா்களின் கோவைகள் அவா்களிடம் உள்ளது. இரண்டாவது, உயிா்த்த ஞாயிறு தாக்குதல். மூன்றாவது கடந்த காலங்களில் இடம்பெற்ற பத்திரிகையாளா்கள், மற்றும் படுகொலைகள். நான்காவது மத்திய வங்கி பிணைமுறி விற்பனை மோசடி. இவை அனைத்துக்கும் தேவையான கோவைகள் அநுர தரப்பினரிடம் இருப்பதாகவே தெரிகின்றது. இவை குறித்து நீதிமன்றத்தின் மூலமாகவே விசாரணைகளை முன்னெடுப்பதுதான் அவா்களு டைய திட்டம் என்று தெரிகின்றது. பொதுத் தோ்தலில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வது என்பதுதான் தேசிய மக் கள் சக்தியின் அடுத்த இலக்கு. ரணில் அரசு எதனைச் செய்வதற்கு அஞ்சியதோ அதனைச் செய்வதன் மூலமாக தமது செல்வாக்கை இன்னும் பலப்படுத்துவது அவா்களது உபாயமாக இருக்க லாம். அவற்றை முன்னெடுப்பதன் மூலமாகவே எதிரணியினரை மீண்டும் எழ முடியாத நிலையை ஏற்படுத்தலாம் என்பதும் அவா்களுக்குத் தெரியும். பொதுத் தோ்தலுக்கு முன்னதாக பல அதிரடிகளை எதிா்பாா்க்கலாம் என்கிறாா்கள் தேசிய மக்கள் சக்திக்கு நெருக்கமாகவா்கள். https://www.ilakku.org/பொதுத்-தேர்தலுக்கு-முன்/
-
கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையுங்கள்; இலங்கை தமிழ் அரசுக் கட்சி அழைப்பு
முடிவு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும்! இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானம் தொடர்பான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா தெரிவித்தார். யாழில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார். அதேவேளை தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் பொருட்டு அம்பாறை மற்றும் திருகோணமலையில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் இணைந்து போட்டியிட முடியும் என தெரிவித்தார். http://www.samakalam.com/முடிவு-செவ்வாய்க்கிழமை-அ/
-
ரணில் – சஜித் கூட்டணி முயற்சி இழுபறி நிலை!
ரணில் – சஜித் கூட்டணி முயற்சி இழுபறி நிலை! எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை முறிவடையும் நிலையை எட்டியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த இரண்டு பிரதான நிபந்தனைகளே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இதுவரையில் சுமார் எட்டு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ள போதிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு பிரதான நிபந்தனைகள் காரணமாக, கலந்துரையாடல்களை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தி, தொலைபேசி சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும், முன்னாள் ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய கூட்டணியில் இருக்கக் கூடாது என்றும் அந்த நிபந்தனைகள் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க பெற்ற பெரும்பான்மையான வாக்குகள் அவரது தனிப்பட்ட வாக்குகளாகக் கருதப்படுவதால் அவர் இல்லாத அரசியல் கூட்டணிக்கு உடன்பட முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் கருதுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள மற்றுமொரு நிபந்தனை என்னவென்றால், புதிய கூட்டணியின் தலைமைப் பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளும் இந்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இரு தரப்புக்கும் இடையிலான கூட்டணி தொடர்பிலான பேச்சுக்களை தொடர முடியாத பின்னணி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் ரணில் விக்கிரமசிங்கவே கட்சித் தலைவராக நீடிக்க வேண்டும் என நேற்று (28) கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் நெலுவ தொகுதிக் குழுவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. எவ்வாறாயினும், இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தைக்கு இன்னும் இடமுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். இதேவேளை, கம்பஹாவில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமொன்றில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, ரணில் விக்ரமசிங்கவை கௌரவத்துடன் ஓய்வு பெறுமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேவேளை, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் குழு இன்று (29) கூடியதுடன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. அதேநேரம் இலங்கை தமிழ் அரசு கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு-கிழக்கிற்கு மேலதிகமாக கொழும்பு உள்ளிட்ட தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக அதன் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/ரணில்-சஜித்-கூட்டணி-முயற/
-
அரசியலமைப்பு சபையில் புதிய மாற்றம்!
அரசியலமைப்பு சபையில் புதிய மாற்றம்! அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த நியமனம் செய்யப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இதன்படி, முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசியலமைப்பு சபையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், பிரதமராக நியமிக்கப்பட்ட கலாநிதி ஹரிணி அமரசூரிய புதிய அரசியலமைப்பு சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும், புதிய பாராளுமன்றம் அமைக்கப்படும் வரை அரசியலமைப்பு சபையின் செயற்பாடுகள் தொடரும். இதன்படி, புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 9ஆம் திகதி அரசியலமைப்பு சபை கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் சாகர காரியவசம் மற்றும் மூன்று சிவில் உறுப்பின்ர்கள் அரசியலமைப்பு சபையின் ஏனைய உறுப்பினர்களாவர். இதேவேளை, நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சின் செயலாளர் பதவி வெற்றிடமாக உள்ளது. அந்த பதவியில் கடமையாற்றிய பிரதீப் யசரத்ன நாளை (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு பெறுவதையடுத்து இந்த வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், 17 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்ட போதும், கடந்த அரசாங்கத்தில் பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற செயலாளராக கடமையாற்றிய பிரதீப் யசரத்ன மீண்டும் நியமிக்கப்பட்டார். எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமை பிரதீப் யசரத்ன செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் அரச சேவையில் இருந்து ஓய்வு பெறவுள்ளதால் குறித்த பதவியை விட்டு விலக தீர்மானித்ததாக பிரதீப் யசரத்னவிடம் வினவிய போது குறிப்பிட்டுள்ளார். http://www.samakalam.com/அரசியலமைப்பு-சபையில்-புத/
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தரும் செய்தி என்ன? — வி. சிவலிங்கம் —
இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தரும் செய்தி என்ன?(கேள்வி, பதில் வடிவில்) September 27, 2024 — வி. சிவலிங்கம் — கேள்வி: நடந்து முடிந்த 9வது ஜனாதிபதித் தேர்தல் என்பது பல வகைகளில் வித்தியாசமானது எனக் குறிப்பிடப்படுகிறது. அவை எவை? பதில்: சுதந்திரத்திற்குப் பின்னதான தேர்தல்களில் இத் தேர்தல் என்பது மிகவும் அமைதியாக நடைபெற்றதாக பலரும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இத் தேர்தலை ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறும் அமைதியான தேர்தல்களோடு பலரும் ஒப்பிடுகின்றனர். இதற்கான பிரதான காரணம் நாடு பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில் தேர்தல் செலவினம் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதை சாமான்ய மக்களே புரிந்திருந்த நிலையில் அவை சாதகமாக இருந்தன. அடுத்ததாக, தேர்தல் ஆணையம் மிகவும் இறுக்கமாக செயற்பட்டமை இம் மாற்றத்திற்கான பிரதான அம்சமாகும். பொதுவாகவே அதிகார தரப்பினர் அதிகாரத்தினைத் துஷ்பிரயோகம் செய்வது வழமையான சம்பிரதாயமாக இருந்துள்ளது. இம்முறை பாரிய அளவில் செயற்படுவதற்கான வாய்ப்புகள் கிட்டவில்லை. மக்களும் மிகவும் விழிப்பாகவே செயற்பட்டனர். சுவரொட்டிகள், ஆர்ப்பாட்டங்கள், தேவையற்ற உரைகள் போன்றன மிகவும் தவிர்க்கப்பட்டிருந்தன. இதனை அவதானிக்கும்போது தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் இறுக்கமான செயற்பாடுகளில் தங்கியிருப்பதை இத் தேர்தல் உணர்த்தியது. தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையலாம்? என்பதற்கான அறிகுறிகள் ஆரம்பத்திலேயே வெளிப்பட்டதால் பிரதான கட்சிகளைத் தவிர ஏனைய கட்சிகள் மிகவும் அடக்கியே செயற்பட்டன. குறிப்பாக, இன விரோத உரைகள், செயற்பாடுகளுக்கு மக்கள் ஆதரவை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். கேள்வி: இத் தேர்தல் முடிவுகளை அவதானிக்கும்போது அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை மக்கள் பெருமளவில் ஆதரித்த நிலையில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை இரண்டாவது நிலைக்குத் தள்ளியிருப்பது எவ்வாறான செய்தியை தருகிறது? பதில்: தேர்தல் முடிவுகளை ஆராயுமிடத்து, வாக்களிப்பில் நாடு சில பிரச்சனைகளில் ஒருமித்தும், மற்றும் சில பிரச்சனைகளில் வேறுபாடாகவும் செயற்பட்டிருக்கிறது. உதாரணமாக, தேசிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதில் பொதுவான இலக்கைக் கொண்டிருப்பினும் அவ்வாறாக பொருளாதாரத்தை விருத்தி செய்வதில் எதற்கு முக்கியத்துவம் வழங்குவது என்பதில் வேறுபாடு காணப்படுகிறது. அநுரவிற்கு தேசத்தின் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினர் ஆதரித்துள்ளதையும், அதேவேளை பொருளாதாரத்தை விருத்தி செய்வதில் நாட்டமுடைய மத்திய தர வர்க்கம் பொருளாதார உற்பத்தி வளர்ச்சியில் கவனம் செலுத்தியிருப்பதால் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஆதரித்துள்ளனர். இந்த இரு சாராரும் தமக்கே உரித்தான தேர்வை மேற்கொண்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் பொருளாதார அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்கள் அதிக விகிதாசாரத்தில் உள்ளதால் அவர்களின் வாக்குப் பலம் அநுரவை ஜனாதிபதியாக அமர்த்தியுள்ளது. கேள்வி: இக் கருத்தை அவதானிக்கும்போது இந்த இரு பிரிவினரும் எதிர், எதிர் முகாம்களாக மாறுவார்களா? அல்லது தேசத்தின் முன்னேற்றம் கருதி இணைந்து செயற்பட வாய்ப்பு உண்டா? பதில்: இதற்கான பதிலை சற்று விரிவாக தர விரும்புகிறேன். இந்த இரு பிரிவினரதும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்த நிலையில் இரு சாராரும் ஒரு பலமான அரச கட்டுமானம் அவசியம் என்பதனையும், நாட்டின் பொருளாதாரம் தனியார், பொதுத்துறை இணைந்ததாக அமைதல் அவசியம் என்பதும் தெளிவாக இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியினரின் அரசியல் ஆரம்பம் என்பது இடதுசாரி மையக் கருத்துக்களை உள்ளடக்கியதாக இருந்தது. எனவே அவர்கள் நாட்டின் அரசியல் அடிப்படை மாற்றம் என்பது வர்க்க அடிப்படையில் அணுகப்பட்டது. முதலாளித்துவ கட்டுமானம் ஒன்றினால் தேசியப் பிரச்சனைகள் உக்கிரப்படுமே தவிர தீர வாய்ப்பில்லை என்பதே விளக்கமாக அமைந்தது. ஆனால் கடந்த 40 ஆண்டுகால தாராளவாத திறந்த பொருளாதார கட்டமைப்பு பல விதங்களில் வர்க்கப் போராட்டத்திற்கான அடிப்படைகளை மாற்றி அமைத்தது. தொழிலாள வர்க்கம் கூறுகளாக்கப்பட்டு தொழிற்சங்க செயற்பாடுகள் முடக்கப்பட்டன. ஒரு புறத்தில் நாட்டின் ஜனநாயகக் கட்டுமானம் ஏகபோக அல்லது சர்வாதிகார அல்லது குடும்ப ஆட்சியை நோக்கி அதிகாரக் குவிப்பை மேற்கொண்ட நிலையில் முதலில் ஜனநாயக கட்டுமானத்தைப் பலப்படுத்துவதற்கு முன்னுரிமை தேவைப்பட்டது. இதன் காரணமாகவே இதுவரை வர்க்க அரசியலைப் பேசி வந்த ஜே வி பி இனர் பாராளுமன்ற ஆட்சிமுறையை வலியுறுத்தும் லிபரல் ஜனநாயக நெறிமுறைகளை நோக்கி தமது பாதையை மாற்றினர். இதனைச் சந்தர்ப்பவாதம் என்பதை விட தேசத்தின் நிலை அவ்வாறான மாற்றத்தை நோக்கித் தள்ளியது எனலாம். இதுவே இன்று ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நிகழ்கிறது. எனவே 2019ம் ஆண்டளவில் கல்விமான்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் மத்தியதர வர்க்கத்தினர் முதலில் நவதாராளவாத பொருளாதாரத்தையும், அதன் அரசியல் கட்டுமானத்தையும் அதன் நன்மை தரும் பகுதிகளைப் பாதிக்காத வகையில் பொறிமுறை மாற்றம் ஒன்றை நோக்கி தேசிய மக்கள் சக்தி என்ற அமைப்பினைத் தோற்றுவித்து மக்கள் மத்தியில் செயற்பட்டனர். அதன் காரணமாக மக்கள் மனதில் மாற்றங்களைக் கண்ட ஜே வி பி இனர் தேசிய மக்கள் சக்தியுடன் தம்மை இணைத்தனர். அதே போலவே நவதாராளவாத பொருளாதாரத்தையும், அதனை நிறைவேற்றும் வகையில் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்முறையை அறிமுகப்படுத்திய ஐ தே கட்சியின் ஒரு பிரிவினர் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயற்பாட்டிலிருக்கும் நவதாராளவாத பொருளாதாரக் கட்டுமானமும், அதிகாரக் குவிப்பைக் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையும் நாட்டில் எதிர்பார்த்த மாற்றத்தைத் தரவில்லை என்ற முடிவுக்கு வந்தனர். குறிப்பாக நவதாராளவாத பொருளாதாரம் நாட்டினை ஒரு நுகர்வுக் கலாச்சாரத்திற்குள் தள்ளியதோடு, தேசியத்தின் உள்நாட்டு உற்பத்தியையும் இல்லாதொழித்தது. அதனால் இறக்குமதிக் கலாச்சாரத்திற்குள் நாடு முடங்கியது. அதே போலவே அதிகாரங்கள் குவிக்கப்பட்ட ஜனாதிபதி ஆட்சிமுறை தேசிய நல்லிணக்கத்தை நலிவடையச் செய்ததோடு, நாடு தொடர்ச்சியான போர் நிலைக்குள் தள்ளி நிலைபேறான ஆட்சிக் கட்டுமானத்தைத் தோற்றுவிக்க முடியாதிருந்தது. இம் மாற்றங்களை அவதானித்த பிரதான கட்சிகளான ஜே வி பி – தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன தமது அடிப்படை நிலைப்பாடுகளிலிருந்து தம்மை மாற்றிக் கொண்டன. இதன் விளைவாகவே தேசிய மக்கள் சக்தியினர் ஒரு புறத்தில் நவதாராளவாத பொருளாதாரக் கட்டுமானத்தின் சிறந்த அம்சங்களை தொடருவதும், அதே வேளை அரசியல் கட்டுமானத்தை பாராளுமன்ற ஜனநாயக ஆட்சிக் கட்டுமானத்தை நோக்கித் திருப்பும் முடிவை எடுத்தனர். அதன் விளைவே மக்கள் அக் கட்சியினரை ஆட்சிக் கட்டுமானத்தில் உட்கார வைத்துள்ளனர். அதே போலவே ஊழல், விரயம், நல்லாட்சிக் கட்டுமானம், உள்ளுர் சிறிய, நடுத்தர உற்பத்தி நிறுவனங்களைப் பலப்படுத்தி தேசியவருமானத்தையும், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் விதத்தில் சமூக சந்தைப் பொருளாதாரக் கட்டுமானத்தை நோக்கி ஐக்கிய மக்கள் சக்தியினர் மாற்றமடைந்தனர். எனவே இரு சாராரும் எதிர், எதிர் அணிகள் அல்ல என்பதே எனது அவதானிப்பு ஆகும். கேள்வி: அவ்வாறாயின் அடுத்து வரும் பொதுத் தேர்தல் முடிவுகள் எவ்வாறான அரசியலை எமக்குத் தரப் போகிறது? பதில்: ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மையமாக வைத்துப் பார்க்கையில் பல புதிய மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். உதாரணமாக, சிங்கள அரசியல் தேசிய பொருளாதார வளர்ச்சி குறித்த விவாதங்களில் செல்லலாம். அதாவது பொருளாதாரக் கட்டுமானம் என்பது பலமான சமூகப் பாதுகாப்பும், நியாயமான செல்வப் பங்கீடும் சந்தைப் பொருளாதாரம் காரணமாக பாதிக்கப்படும் நலிவடைந்த பிரிவினருக்கான பாதுகாப்பையும் மையமாகக் கொண்ட பிரிவினருக்கு தேசிய மக்கள் சக்தி தலைமை தாங்கவும், அதே வேளை நாட்டின் பொருளாதார செயற்பாட்டில் நியாயமான, சுயாதீன பங்களிப்பைக் கோரவும், வருமான ஏற்றத்தாழ்வினைத் தடுக்கும் வகையிலான அரசின் தலையீட்டை குறிப்பாக வேலைத் தலங்களில் உள்ள தொழிற் பாதுகாப்பை அதிகரித்தல், வேலையற்றோருக்கான வருமானப் பாதுகாப்பு என்பதைக் கோரும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியினரும் தொழிற்படலாம். நாம் இப் பிரச்சனையை நாட்டில் இன்று நிலவும் நவதாராளவாத திறந்த பொருளாதாரத்தின் தாக்கங்களின் பின்னணியிலிருந்தே அணுக வேண்டும். சிலர் உணர்ச்சி தரும் உரைகளின் பின்னணியிலிருந்து நோக்கலாம். ஆனால் நாடு மிக மோசமான பொருளாதாரச் சிக்கலில் உள்ள நிலையில் இரு தரப்பினரதும் அணுகுமுறைகள் மிக அவசியமாக உள்ளன. அத்துடன் தற்போது நடைமுறையிலுள்ள நவதாராளவாத பொருளாதாரம் பல நன்மைகளையும் தந்துள்ளதை நாம் மறுக்க முடியாது. அவற்றை நிராகரித்துச் செல்லவும் முடியாது. நடைமுறையிலுள்ள திறந்த பொருளாதாரம் சுதந்திர வர்த்தகம், கட்டுப்பாடுகளை அகற்றுதல், தனியுடமையாக்கல், அரச தலையீட்டினைக் குறைத்தல் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கியது. இதன் விளைவாக, மக்கள் உற்பத்தியாளர் நிலையிலிருந்து நுகர்வோராக மாற்றப்பட்டார்கள். உள்ளுர் உற்பத்தி மிகவும் முடக்கப்பட்டது. பதிலாக நுகர்வுக் கலாச்சாரம் என்பது இறக்குமதியாளர்கள். பாரிய வியாபார நிலையங்கள், நிதி நிறுவனங்கள் என்பனவே இப் பயன்களை அனுபவித்தன. இதனால் சாமான்ய மக்கள் கடனாளிகளானார்கள். இதனை இந்த இரு தரப்பாரும் மிகவும் விமர்ச்சித்தார்கள். ஆனாலும் ஐக்கிய மக்கள் சக்தியினர் சிறிய மற்றும் மத்தியதர நிறுவனங்களே உள்ளுர் அடிப்படையில் வேலை வாய்ப்புகளையும், வருமானத்தையும் தருவதால் உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு மானியங்கள் வழங்குமாறும், சில இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளுர் உற்பத்திகளுக்கான விலையைப் பெற உதவுமாறும், உட் கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து குறிப்பாக போக்கு வரத்து, சந்தை வசதிகளை ஏற்படுத்துமாறும் கோருகின்றனர். கேள்வி: அவ்வாறாயின் தேசிய மக்கள் சக்தியினரின் கவனம் எங்கு குவிக்கப்பட்டுள்ளது? பதில்: அநுர தலைமையிலான பிரிவினர் வருமான ஏற்றத்தாழ்வு குறித்து வற்புறுத்தினர். ஏனெனில் செயற்பாட்டிலுள்ள திறந்த பொருளாதாரம் பாரிய அளவில் அதாவது ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால் சமூகம் அமைதியற்று இருந்தது. தொழிலாளர்களின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டன. திறந்த பொருளாதாரம் பெருந்தொகையான மக்களை வறுமைக் கோட்டின் கீழ் தள்ளியது. இம் மக்களின் எதிர்காலம் குறித்தே தேசிய மக்கள் சக்தியின் கவனம் அதிகளவில் இருந்தது. எனவேதான் சமூக சமத்துவத்தைக் கோரினர். வருமானத்தை நியாயமான விதத்தில் பங்கீடு செய்யுமாறு வற்புறுத்தினர். அத்துடன் தேசத்தின் பொருளாதாரத்தை ஏற்றுமதி வர்த்தகத்திற்கு மாற்றும்படி கோரினர். வருமான சமத்துவமின்மை என்பது நவதாராளவாத பொருளாதாரத்தின் விளைபொருளே என்றார்கள். இதன் விளைவாக பணக்காரர்களும், அதிகாரத்தில் இருப்பவர்களும் தொழிலாள விவசாய மக்களை கீழே தள்ளியே மேலிடத்திற்குச் சென்றார்கள். தற்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாடற்ற வர்த்தகம், தனியார் உடமையாக்குதல் போன்ற செயற்பாடுகள் செல்வத்தைச் சிலரின் கரங்களில் குவிக்க வாய்ப்பை ஏற்படுத்தியது. மலிவான தொழிலாளர் கிடைக்கும் எனக் கூறி வெளிநாட்டு முதலீடுகளை உள்நாட்டிற்கு வரவழைத்தார்கள். இதன் காரணமாக தொழிலாளர் சட்டங்கள் பலவீனப்படுத்தப்பட்டன. அவர்களின் பாதுகாப்பு கைவிடப்பட்டது. அம் மக்களின் சுகாதாரம், கல்வி, வேலையற்றோருக்கான கொடுப்பனவுகள் போன்றன கைவிடப்பட்டன. இத்தகைய கொடுமையான நிலமைகளே தேசிய மக்கள் சக்தியின் பிரதான ஆதரவுத் தளங்களாக அமைந்தன. கேள்வி: அவ்வாறாயின் இந்த இரு சாராரும் எவ் வழியில் தமது பயணத்தை மேற்கொள்ள வாய்ப்பு உண்டு? பதில்: தேசிய மக்கள் சக்தி, ஐக்;கிய மக்கள் சக்தி ஆகிய இரு சாராரையும் இரு வகைக்குள் பார்க்கலாம். அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் தேசிய செல்வத்தை நியாயமான விதத்தில் பங்கீடு செய்வதில் அதிக நாட்டம் கொண்டுள்ளவர்களாகவும், ஐக்கிய மக்கள் சக்தியினர் தேசிய உற்பத்தி வளர்ச்சியில் அதிக கவனம் கொண்டுள்ளவர்களாகவும் காண முடியும். இப் பிரச்சனையில் அரசின் செயற்பாடு குறித்து இரு தரப்பாரும் வெவ்வேறு கோட்பாடுகளில் இயங்க வாய்ப்புண்டு. உதாரணமாக சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் உள்ளுரில் செயற்படும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி உற்பத்தியை அதிகரிக்கும்படி கோரலாம். அதன் மூலம் வேலை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்திற்கான ஊக்குவிப்பாக கோரலாம். ஆனால் அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் செல்வத்தை நியாயமான விதத்தில் பகிர்ந்தளிக்கும் வகையில் வரி விதிப்பை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படலாம். இங்கு வரி விதிப்பு என்பது தொழில் நிறுவனங்களைப் பாதிக்குமாயின் உற்பத்தி தடைப்படலாம். எனவே இந்த இரு சாராரும் பொது அடிப்படையில் செயற்படுவதற்கு ஏராளமான இடமுண்டு. அதே வேளையில் முறுகல் நிலமைகளும் ஏற்படலாம். ஆனாலும் தேசத்தின் எதிர்காலம் கருதி செயற்படும் அவசியம் உண்டு. ஏற்கெனவே குறிப்பிட்டது போல இரு சாராரும் தற்போது நடைமுறையிலுள்ள திறந்த பொருளாதார கட்டமைப்பு என்பது பொருளாதார அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் இனிமேலும் பொருத்தமற்றது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஆனாலும் இப் பிரச்சனைகளுக்கான தீர்வை எட்டுவதில் பிரச்சனைகள் உள்ளன. இருப்பினும் இந்த இரு சாராரும் சந்தை நடவடிக்கைகளில் அரசின் தலையீட்டைக் கோருகின்றனர். ஒட்டு மொத்தத்தில் இரு சாராரும் ஒரு கலப்புப் பொருளாதாரத்தை நோக்கியே பயணமாகின்றனர். இப் பயணம் என்பது நோர்வே, சுவீடன் போன்ற நாடுகளில் நிலவும் சமூக சந்தைப் பொருளாதாரக் கட்டமைப்பையே வலியுறுத்துகின்றன. அதாவது சமூக ஜனநாயக இலக்கை நோக்கிய பயணமாகவே இதனைக் கொள்ள முடியும். கேள்வி: இத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் என்ற பெயரில் நிறுத்தப்பட்டவரை நிராகரித்துள்ளதோடு ஐக்கிய இலங்கை எனச் செயற்படும் கட்சிகளை நோக்கி பெருமளவில் வாக்களித்துள்ளார்கள். இதனை எவ்வாறு புரிந்து கொள்வது? பதில்: வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், முஸ்லீம் பிரதேசங்கள் மற்றும் மலையகத்திலும் மக்கள் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகளவிலும் அநுர, ரணில் ஆகியோருக்கும் வாக்களித்த நிலமைகளை அவதானிக்கும் போது ஒட்டு மொத்தமான இதர சிறுபான்மை இனங்களின் நம்பிக்கையை அநுர பெறவில்லை என்பது வெளிப்படை. அதை அவர் புரிந்துள்ள நிலையில்தான் தாம் தமக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையைப் பெற உழைக்கப் போவதாக தெரிவித்துள்ளமை உணர்த்துகிறது. இம் மக்கள் ஆழமான சந்தேகத்தில் இருப்பதை தேர்தலில் உணர்த்தியுள்ளார்கள். இந் நிலையில் நாட்டில் இறுக்கமான விதத்தில் ஜனநாயகக் கட்டுமானங்களைப் பலப்படுத்தி, சட்டம், ஒழுங்கு அடிப்படையில் நாடு முன்னேறிச் செல்லும்போது இச் சந்தேகங்கள் மறைய வாய்ப்புகள் உண்டு. இங்கு வடக்கு, கிழக்கு மாகாண அரசியலை அவதானிக்கும் போது ஒரு வரலாற்று மாற்றத்திற்கான அடிப்படைகள் தெரிகின்றன. உதாரணமாக தமிழரசுக் கட்சிக்குள் நிலவிய முரண்பாடுகளை அவதானிக்கும்போது தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு என்பது பிரிவினையா? அல்லது ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான தீர்வா? என்பதே கேள்வியாக இருந்தது. பிரிவினைவாத சக்திகள் 13வது திருத்தத்தினை முற்றாக நிராகரித்து சுயநிர்ணயம், சுயாட்சி, தன்னாட்சி எனக் கூறியதோடு தமிழ் மக்கள் இப் பிரச்சனையில் மிக ஒற்றுமையாக இருப்பதை உலகிற்கு எடுத்துக் காட்டப் போவதாகத் தெரிவித்தார்கள். ஆனால் தேர்தல் முடிவுகள் பொது வேட்பாளரை முற்றாக நிராகரித்துள்ளார்கள். இது ஒரு வகையில் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வா? அல்லது பிரிவினையா? என்பதற்கான வாக்கெடுப்பாக அமைந்தது. மக்கள் தீர்மானகரமான விதத்தில் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை எதிர்பார்ப்பதாகவே நாம் கொள்ள முடியும். தற்போது பொதுத் தேர்தல் அண்மித்துள்ள நிலையில் அடுத்த கட்ட நகர்வு என்பது எவ்வாறாக அமையலாம்? என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இத் தேர்தலின் போது தமிழரசுக் கட்சி சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிப்பதாக தெரிவித்தது. அதன் பிரகாரம் வடக்கு, கிழக்கில் பெரும்பாலானவர்களும், முஸ்லீம் மற்றும் மலையகப் பிரதேசங்களிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளார்கள். தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் பெரும்பாலான மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர். ஏற்கெனவே சில கேள்விகளுக்கான பதில்களில் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒருமித்துச் செயற்படுவதற்கான அம்சங்கள் நிறைய இருப்பதை அடையாளம் காட்டியிருந்தேன். அதே வேளை ஜனாதிபதி அநுர அவர்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய உரையில் சகல மக்களுக்கமான ஒரு ஜனாதிபதியாக செயற்படும் விதத்தில் தமக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையையும் பெற முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். எனவே தமிழரசுக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியை தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக மிக விரைவாக செயற்பட்டு தேசிய அமைதியை ஏற்படுத்தி ஜனாதிபதி கூறுவது போல ‘சகலரும் இலங்கையர்’ என்ற அடையாளத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலமே பொருளாதார அபிவிருத்தியை எட்ட முடியும். கடந்த காலங்களில் இரு பெரும் கட்சிகள் இனவாதத்தைப் பயன்படுத்தி தேசிய இனப் பிரச்சனையை உக்கிரப்படுத்தி அதிகாரத்தைக் கைப்படுத்தி நாட்டைச் சுரண்டிய வரலாறுகளே இன்று மிஞ்சியுள்ளன. இதன் விளைவாகவே சாமான்ய மக்களின் பிரதிநிதியை மக்கள் அரியாசனத்தில் இருத்தி உள்ளனர். கடந்த கால இனவாத, பிரிவினைவாத அரசியலுக்கு எதிர் காலத்தில் இடமில்லை என்பதை உணர்த்தும் விதத்தில் மாற்றங்கள் ஆரம்பித்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகிய இரு தரப்பினரையும் தேச முன்னேற்றத்தின் படிக் கற்களாகவே பார்க்கின்றனர். கடந்த இருண்ட காலம் இனிமேல் வராது என்ற நம்பிக்கையை பெற்றுள்ளனர். தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன இணைந்து ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும். கேள்வி: அவ்வாறாயின் எவ்வாறான நகர்வுகளைத் தமிழ் அரசியல் மேற்கொள்ள வேண்டும்? பதில்: முதலில் தமிழரசுக் கட்சிக்கு வெளியிலுள்ள ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகளை நேசிக்கும் உதிரிகளாக உள்ள கட்சிகள், குழுக்களாக இயங்கும் சக்திகள் முதலில் இணைய வேண்டும். இவர்களின் இலக்குகள் என்பது ஐக்கிய இலங்கைக்குள் நியாயமான தீர்வை முன்வைக்கும் கட்சிகளோடு உடன்பாட்டிற்குச் செல்லுதல், தேசிய வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையிலும், நாட்டில் புதிய சகாப்தம் தோன்றியுள்ளதை உத்தரவாதம் செய்யும் வகையிலும், இனவாத அரசியலுக்கு எதிர் காலத்தில் இடமளிக்காத வகையிலும், சிறுபான்மைத் தேசிய இனங்கள் தேசிய உருவாக்கத்தில் பங்கு கொள்ளும் வகையில் அமைச்சரவையிலும் இணைந்து செயற்பட வேண்டும். அடுத்தது கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியலைச் சீரழித்து வந்த தமிழ்க் குறும் தேசியவாத சக்திகளை தமிழ் அரசியலிலிருந்து நீக்குதல் என்பனவாகும். ஏனெனில் இந்த அரசியல் தமிழ் சமூகத்தை முன்னேறிச் செல்ல இடமளிக்கவில்லை. பதிலாக தத்தமது சுக போகங்களுக்காக பணப் பெட்டிகளை நோக்கிச் சென்றார்கள். இந்த வரலாறு முடிவுக்கு செல்ல வேண்டும். தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக செயற்படும் ஜனநாயக உரிமை சகலருக்கும் உண்டு. ஆனால் மக்கள் பெருமளவில் தமது விருப்பத்தைத் தேர்தலில் வெளிப்படுத்திய நிலையில் அப் பாதையைத் தொடர இடமளிக்க வேண்டும். ஆனால் தொடர்ச்சியாகவே முன்னேறிச் செல்ல முடியாத வகையில் தடுப்புகளைத் தொடர்ச்சியாக கட்டுவது ஜனநாயக செயற்பாடு எனக் கருத முடியவில்லை. தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் பிளவுகளுக்கு காரணமாகவுள்ள பிரிவினை சக்திகள் அகற்றப்பட்டு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை நேசிக்கும் சக்திகள் ஓர் ஜனநாயக கட்டுமானத்தை தோற்றுவிக்க வேண்டும். ஏனெனில் தேர்தல் முடிவுகள் மிகவும் தெளிவாகவே ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை வலியுறுத்தியுள்ளன. தமிழரசுக் கட்சி புதிய யுகத்தை நோக்கிச் செல்லும் வகையில் சகல ஜனநாயக சக்திகளும் ஒரே குடையின் கீழ் செயற்படும் வகையில் அறைகூவல் விடுக்க வேண்டும். தமிழ் அரசியலில் சாத்தியமான அரசியல் பாதையை ஒழுங்கமைக்கும் நோக்கில் சகல சக்திகளையும் இணைப்பதற்கு அக் கட்சி தயாராக வேண்டும். தமிழரசுக் கட்சி இத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிப்பதாக எடுத்த முடிவை தமிழ் மக்கள் ஏகோபித்த விதத்தில் ஆதரித்துள்ளனர். இதன் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைப் பெறுவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும். தற்போது சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் உறங்கு நிலைக்குச் சென்றுள்ளன. இவர்கள் மீண்டும் தழைக்க முடியாதவாறு இன்றைய ஆட்சியாளர்களைப் பலப்படுத்த வேண்டும். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சகல முயற்சிகளுக்கும் தமிழ் மக்கள் பக்க பலமாக இருத்தல் அவசியம். எதிர்வரும் தேர்தலை எதிர் கொள்வதற்கு தமிழரசுக் கட்சி சகல ஜனநாயக சக்திகளுக்கும் அறைகூவல் விடுக்க வேண்டும். நாட்டின் இன்றைய அரசியல் நிலையில் காத்திரமான முடிவுகளை எடுக்கும் வகையில் கட்சிக்குள் பலமான விதத்தில் ஜனநாயக விழுமியங்கள் தோற்றம் பெற வேண்டும். கட்சிக் கட்டுப்பாடுகளை மீறுவோர் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். இன்று நாடு புதிய ஜனநாயக மாற்றங்களை நோக்கிப் புறப்பட்டுள்ள வேளையில் தமிழ் அரசியல் அதற்கு ஏற்ற வகையில் மாற வேண்டும். தமிழ் பிரதேசங்களில் பொருளாதார அடிப்படையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் அரசியல் இணக்கம் காணப்பட வேண்டும். தமிழ் சமூகத்திலுள்ள அறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர் என்போரை குறிப்பாக பணப்பெட்டியின் பின்னால் செல்பவர்களைத் தவிர்த்து காத்திரமான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். தமிழ் அரசியல் என்பது பிற்போக்குத் தேசிய வாதத்திற்கு எதிராகவும், ஏனைய தேசிய சிறுபான்மை இனங்களுடன் ஐக்கியத்தைப் பேணும் விதத்திலான அரசியல் கூட்டணி அமைதல் அவசியம். முற்றும்.
-
அனுர செய்யக்கூடிய மாற்றம்? - நிலாந்தன்
அனுர செய்யக்கூடிய மாற்றம்? - நிலாந்தன் இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு நசுக்கப்பட்ட ஒரமைப்பு, இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட ஓரமைப்பு, அதன் தலைவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இன்றி என்கவுண்டரில் கொல்லப்பட்டவர். அப்படிப்பட்ட ஓரமைப்பின் தலைவர் இப்பொழுது நாட்டின் அரசுத் தலைவராக வந்திருக்கிறார். ஆயுதப் போராட்டத்தில் தொடங்கி அரசுத் தலைவர் பதவி வரையிலுமான இந்த வளர்ச்சியை ஏற்கனவே ஓர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களாகிய தமிழ் மக்கள் ஆர்வத்தோடு பார்க்க வேண்டும். அதன் பொருள் அனுரவின் மாற்றம் என்ற கோஷத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ, அல்லது இனப்பிரச்சினைக்கான அவருடைய தீர்வை நம்ப வேண்டும் என்பதோ அல்ல. ஆயுதப் போராட்டத்தில் தொடங்கி அரசுத் தலைவர் வரையிலுமான ஜேவிபியின் வெற்றிக்குள் இருந்து தமிழ் மக்கள் கற்றுக்கொள்ள பல விடயங்கள் உண்டு. குறிப்பாக தேசிய மக்கள் சக்தி என்று அழைக்கப்படுகின்ற புதிய கூட்டை தமிழ் மக்கள் விருப்பு வெறுப்பு இன்றிக் கற்க வேண்டும். அரசியல் செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பு அது. ஆயுதப் போராட்ட மரபில் வந்த ஓர் அமைப்பும் புத்திஜீவிகளும் இணைந்து அப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அக்கூட்டின் மையக் கட்டமைப்புக்குள் 73 உறுப்பினர்கள் உண்டு. அதில் அறுவர் மட்டுமே தமிழர்கள். அங்கு இன விகிதாசாரம் பேணப்படவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் ஜேவிபியை ஆதரிக்கும் சில படித்தவர்கள் இம்முறை தேர்தலில் இனவாதம் பின்வாங்கி விட்டது என்று புளகாங்கிதம் அடைகிறார்கள். தமிழ் பொது வேட்பாளர் இனவாதத்தை முன் வைத்ததாகவும் விமர்சிக்கின்றார்கள். ஆனால் “அரகலிய” போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் முகநூலில் எழுதியது போல, தேர்தல் பிரச்சாரங்களில் இனவாதம் பெரிய அளவில் கதைக்கப்படவில்லை என்பதை வைத்து இனவாதம் இல்லை என்ற முடிவுக்கு வரக்கூடாது. அனுர கூறும் மாற்றம் எனப்படுவது இனவாதம் இல்லாத ஓர் இலங்கை தீவா? இது தேர்தல் காலம் மட்டுமல்ல, ஐநா மனித உரிமைகள் சபையின் பொறுப்புக் கூறலுக்கான விவாதங்கள் நடக்கும் ஒரு காலகட்டமும் ஆகும். வரும் ஏழாம் திகதி வரையிலும் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெறும். இதில் பொறுப்புக் கூறல் தொடர்பில் அனுரவின் நிலைப்பாடு என்ன? அசோசியேட்டட் பிரஸ் என்ற ஊடகத்துக்கு அவர் வழங்கிய செவ்வியை இங்கு பார்க்கலாம் “பொறுப்புக் கூறல் தொடர்பான கேள்வியைப் பொறுத்தவரை அது பழிவாங்குகலுக்கான ஒரு வழியாக அமையக்கூடாது. யாரையாவது குற்றச்சாட்டுவதாகவும் அமையக்கூடாது. மாறாக உண்மையைக் கண்டுபிடிப்பதாக மட்டும் அமைய வேண்டும்….. பாதிக்கப்பட்ட மக்கள் கூட யாராவது தண்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்கள் என்ன நடந்தது என்பதனை அறிவதற்கு மட்டும்தான் விரும்புகிறார்கள் ” என்று அனுர கூறுகிறார். அதாவது அவர் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குத் தயாரில்லை. குற்றங்களை விசாரிப்பது உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு என்று கூறுகிறார். ஆயின் யார் குற்றவாளி என்ற உண்மையை கண்டுபிடித்த பின் அவரை தண்டிக்காமல் விட வேண்டும் என்று அவர் கூற வருகிறாரா? பாதிக்கப்பட்ட மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்று அவருக்கு யார் சொன்னது? அதாவது அனுர பொறுப்புக் கூறுவதற்குத் தயார் இல்லை. குற்றவாளிகளைப் பாதுகாப்பது என்பதே இனவாதம்தான். நாட்டின் இனவாதச் சூழலை அனுர மாற்றுவார் என்று தமிழ் மக்களை நம்ப வைப்பதாக இருந்தால் அவர், கடந்த காலங்களில் அவருடைய கட்சி குறிப்பாக அவர் தமிழ் மக்களுக்கு எதிராக எடுத்த இரண்டு பிரதான நிலைப்பாடுகளுக்கு பொறுப்புக் கூறுவாரா? மன்னிப்புக் கேட்பாரா? தமிழ் மக்களின் தாயகத்தை அதாவது வடக்கையும் கிழக்கையும் சட்ட ரீதியாகப் பிரித்தது ஜேவிபிதான். இது முதலாவது. இரண்டாவது, சுனாமிக்குப் பின்னரான சுனாமிப் பொதுக் கட்டமைப்பை எதிர்த்து அனுர தனது அமைச்சுப் பதவியைத் துறந்தார். சுனாமிப் பொதுக்கட்டமைப்பு எனப்படுவது மனிதாபிமான நோக்கங்களுக்கானது. இயற்கைப் பேரழிவு ஒன்றுக்குப் பின் உருவாக்கப்பட இருந்த மனிதாபிமானக் கட்டமைப்பு அது. அதைக் கூட எதிர்த்த ஒருவர் இப்பொழுது அதற்கு பொறுப்பு கூறுவாரா? தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா? அவரிடம் இனவாதம் இல்லை என்று கூறி அவருக்கு வாக்களிக்குமாறு மறைமுகமாகக் கேட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள படித்தவர்கள் இதற்குப் பதில் கூறுவார்களா? அதுமட்டுமல்ல தமிழ் பொது வேட்பாளரோடு அனுர பேச முற்படவில்லை. ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தமிழ் பொது வேட்பாளரோடு உரையாடத் தயாராக இருந்தார்கள். ஆனால் அனுர உரையாடத் தயாராக இருக்கவில்லை. யாழ்ப்பாணம் வணிகர் கழகத்திடம் ஜேவிபி அதுதொடர்பான கோரிக்கைகளை முன்வைத்ததாகத் தெரிகிறது. எனினும் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்திய தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பிடம் அவர் உத்தியோகபூர்வமான கோரிக்கைகள் எவற்றையும் முன் வைத்திருக்கவில்லை. தமிழ்ப் பொது வேட்பாளரை அவர் பொருட்படுத்தவில்லை. அதாவது தமிழ் வாக்குகளை அவர் பொருட்படுத்தவில்லை ? அவர் பதவியேற்றபோது தேசிய கீதம் இசைக்கப்படுகையில் ஒரு பகுதி பிக்குகள் எழுந்து நின்றமையை சில தமிழர்கள் பெரிய மாற்றமாகச் சித்திருக்கிறார்கள். ஆனால் பதவியேற்ற போது பௌத்தப்பிக்குகளின் முன் அவர் மண்டியிட்டு அமர்ந்து ஆசீர்வாதம் பெறுவதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர் இடதுசாரி மரபில் வந்த ஒரு தலைவர் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரால் சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பின் வழமைகளை மீறிச் செயல்பட முடியவில்லை என்பதைத்தான் அந்த ஆசீர்வாதம் பெறும் நிகழ்ச்சி நமக்கு உணர்த்தியது. அந்த மத ரீதியான சிஸ்டத்தை அவரால் மாற்ற முடியவில்லை. அவரும் அந்த சிஸ்டத்தின் கைதிதான். அதனால்தான் தமிழ் மக்கள் அவர் கூறும் மாற்றத்தை அதாவது சிஸ்டத்தில் மாற்றம் என்பதனை சந்தேகத்தோடு பார்க்கின்றார்கள். ஏனெனில், தமிழ் மக்கள் கேட்பது மேலோட்டமான சிஸ்டத்தில் மாற்றத்தை அல்ல. தமிழ் மக்கள் கேட்பது அதைவிட ஆழமான கட்டமைப்பு மாற்றத்தை. ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பில் மாற்றம். அதைச் செய்ய அனுராவால் முடியுமா? பதவியேற்ற பின் அவர் ஆற்றிய உரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பின்வருமாறு கூறுகிறார்.. “சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பேர்கராக இருந்தாலும், மலேயராக இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் “நாம் இலங்கைப் பிரஜைகள்” என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறைச்சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை, இந்த நாடு தோல்வியடையுமே தவிர வெற்றியடையாது. அதற்காக அரசியலமைப்பு ரீதியான, பொருளாதார, அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒரு போதும் நாம் பின்வாங்க மாட்டோம். தனது இனம், தனது மதம், தனது வர்க்கம், தனது சாதி என இந்த நாடு பிரிந்திருந்த காலத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசமாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம்.” இது அரசியல் அடர்த்தி குறைந்த வார்த்தைகளால் வழங்கப்படும் கவர்ச்சியான ஆனால் மேலோட்டமான வாக்குறுதி. இப்படிப்பட்ட லிபரல் வாக்குறுதிகள் பலவற்றை தமிழ் மக்கள் ஏற்கனவே கடந்து வந்து விட்டார்கள். தமிழ் மக்கள் கேட்பது அடிப்படையான கட்டமைப்பு மாற்றத்தை. இலங்கைத் தீவின் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்தும் கடடமைப்பு மாற்றத்தை. இலங்கைத் தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள், தேசங்கள் உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ளும் மாற்றத்தை. அந்த அடிப்படையில் வழங்கப்படும் ஒரு தீர்வை. தமிழ் மக்களை இறைமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கும் ஒரு தீர்வை. அப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அனுரவால் முடியுமா? https://www.nillanthan.com/6909/
-
புரட்சி – கருப்பு பட்டன் – கபர கொய்யான் – கொல்லப்பட்ட 60,000 இளைஞர்கள்: இலங்கையின் ரத்த கதை!
புரட்சி – கருப்பு பட்டன் – கபர கொய்யான் – கொல்லப்பட்ட 60,000 இளைஞர்கள்: இலங்கையின் ரத்த கதை! SelvamSep 23, 2024 13:57PM மோகன ரூபன் இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்கா வெற்றி பெற்றிருக்கிறார். இலங்கையில் அதிபர் பொறுப்பேற்ற முதல் இடதுசாரி தலைவர் என்ற பெருமையை இன்று அவர் பெற்றிருக்கிறார். 1987ஆம் ஆண்டு ஜே.வி.பி. என்ற ஜனதா விமுக்தி பெரமுனா (மக்கள் விடுதலை முன்னணி) அமைப்பில் இணைந்த இவர், இப்போது அந்த அமைப்பின் தலைவரும் கூட. அனுர குமார திசநாயக்கா, இலங்கையின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள இந்த நேரத்தில், நான் கொழும்பு நகரில் வளர்ந்தவன் என்ற அடிப்படையில், 1971ஆம் ஆண்டு ஜே.வி.பி. நடத்திய (அல்லது நடத்த முயன்ற) புரட்சியைப்பற்றி இப்போது நினைவு கூர்கிறேன். அப்போது நான் சிறுவன். சற்று மங்கலான காட்சிகளே என் மனதில் இருக்கின்றன. இலங்கைத் தலைநகர் கொழும்பில், அந்த காலகட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது, ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது எல்லாம் நினைவில் நிற்கிறது. நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த, இலங்கை வானொலியில், அப்போது அடிக்கொருமுறை ஒரு தேசபக்தி பாடல் ஒலிபரப்பாகும். ‘நமது நாடு நமது நாடு நம்நாடு’ என்று அந்தப் பாடல் தொடங்கும். ஜே.வி.பி. புரட்சி நடந்த அந்த காலகட்டத்தில், சட்டைகளில் கருப்பு நிற பொத்தான் வைக்கும் ஒரு நாகரீக மோகம் கொழும்பு நகரத்தில் இருந்தது. இந்தநிலையில், சட்டையில் கருப்பு பொத்தான் வைத்திருப்பவர்கள் எல்லாம் ஜே.வி.பி. இயக்கத்தவர்கள் என்ற பரபரப்பு ஒன்று திடீரென பரவியது. அது உண்மையா வதந்தியா என்று தெரியாது. ‘ஜே.வி.பி.அமைப்பில், முன்பின் அறிமுகம் இல்லாத இருவர் சந்தித்துக் கொள்ளும்போது அவர்களது சட்டைகளில் கருப்புப் பட்டன்கள் இருப்பதைப் பார்த்து தாங்கள் இருவரும் ஒரே அமைப்பினர் என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். அதன்மூலம் ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள்’ என்ற பரபரப்பு அது. இதையடுத்து அண்ணனின் சட்டையிலும், என் சட்டையிலும் இருந்த கருப்பு பட்டன்கள் என் அக்காள் மூலம் உடனடியாக அகற்றப்பட்டன. இதுபோல வீடுகள்தோறும் கருப்புப் பட்டன்கள் அகற்றப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். (ஆக, நானும் என் போன்ற பலரும் ஏதோ ஒருவகையில் சிறிது காலம் ஜே.வி.பி. அமைப்பில் இருந்திருக்கிறோம்!) அதேப்போல, இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் மரண அறிவித்தல்கள் சிலவற்றை ஜே.வி.பி. அமைப்பினரே பொய்யாகத் தருகிறார்கள் என்ற பரபரப்பும் அப்போது நிலவியது. ‘வர்ணகுலசூரிய இன்று மரணமடைந்தார். அவரது நல்லடக்கம் கனத்தை மயானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது’ என்பதுபோன்ற அறிவிப்புகளை ஜே.வி.பி. அமைப்பினர் ரகசிய குறியீட்டு வார்த்தைகளாக மாற்றிப் புரிந்து கொள்கிறார்கள். இலங்கை வானொலியின் மரண அறிவித்தலைப் பயன்படுத்தி அந்த அமைப்பினர் ரகசியக் கூட்டங்களை நடத்துகிறார்கள்’ என்றுகூட அந்த காலகட்டத்தில் ஒரு வதந்தி பரவியது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது. ஜே.வி.பி. புரட்சி நடத்திய காலகட்டத்தில் எர்னஸ்டே சேகுவேராவை என் வயதுள்ள யாருக்கும் தெரியாது. இலங்கையில் அப்போது நடைபெற்ற ஜே.வி.பி. புரட்சி, சேகுவேரா புரட்சி என்றே அறியப்பட்டது, அழைக்கப்பட்டது. சேகுவேரா என்ற பெயர் சேகஒரா என்று அப்போது புழக்கத்தில் இருந்தது. ஒரா என்றால் சிங்கள மொழியில் திருடன் என்று அர்த்தம். எனவே என்னையொத்த சிறுவர்கள் அந்த கால கட்டத்தில் ஜே.வி.பி. அமைப்பை, ‘ஏதோ ஒரு கொள்ளைக்கூட்டம் நாட்டைப் பிடிக்க முயற்சிக்கிறது’ என்ற அடிப்படையிலேயே புரிந்து வைத்திருந்தோம். என் புரிதல் மட்டுமல்ல, என் வயதுள்ள தமிழ், சிங்கள சிறுவர் சிறுமியர்களின் புரிதல் அப்போது அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஜே.வி.பி நடத்திய புரட்சியை நசுக்க இந்திய ராணுவம் வரவழைக்கப்பட்டது நினைவில் இருக்கிறது. இந்திய ஹெலிகாப்டர் ஒன்று வானில் பறப்பதைப் பார்த்து, என்னுடைய தாயார் புளகாகிதமடைந்து, ‘அதோ நம்ம நாட்டு ஹெலிகாப்டர்!’ என்று பரவசமடைந்ததாக ஒரு சிறிய நினைவு உள்ளது. (இலங்கைக்கு இந்திய ராணுவம் வருவது தமிழர், சிங்களவர் ஆகிய இருதரப்பினருக்குமே நல்லதல்ல என்ற புரிதல் அப்போது என் தாயாருக்கு மட்டுமல்ல, இலங்கையில் வாழ்ந்த எந்த தாய்மாருக்குமே இருந்திருக்காது.) ‘புரட்சி நசுக்கப்பட்டு, ராணுவத்துடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட ஜே.வி.பி. அமைப்பினரின் ஆயிரக்கணக்கான உடல்கள் களனி கங்கை ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதாக’ அந்த காலகட்டத்தில் பரபரப்பு நிலவியது. ஆற்றோரம் கரையொதுங்கிய உடல்களின் கண்களை ‘கபர கொய்யான்’ பிடுங்கித் தின்றுவிட்டதாக என் பள்ளித்தோழன் ஒருவன் கூறி பரபரப்பை பற்ற வைத்தது நினைவிருக்கிறது. ‘கபர கொய்யான்’ என்பது 70களில் இலங்கையில் வாழ்ந்த சிறுவர்களுக்கு ‘ஒரு படு பயங்கரமான மிருகம்’ (கபரக் கொய்யான் என்பது புனுகுப்பூனை(!) என்பதெல்லாம் பின்னர் தெரிந்து கொண்ட விவரம்) ஜே.வி.பி.யின் புரட்சி முயற்சி தோற்றுப் போய் அந்த இயக்கத்தைச் சேர்ந்த அறுபதாயிரம் இளைஞர்கள் வரை கொல்லப்பட்டனர் என்பது பிற்காலத்தில் நான் தெரிந்து கொண்ட செய்தி. அப்படி பலியானவர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்று எங்கோ படித்திருக்கிறேன். ஆக, புரட்சிகர இடதுசாரி அமைப்பாகக் கருதப்பட்ட ஜே.வி.பி. அமைப்பும்கூட, கொள்கை அடிப்படையில் மற்ற சிங்கள அமைப்புகள், சிங்களக் கட்சிகளைப் போன்றுதான் இருந்திருக்கிறது. ‘இலங்கைத்தீவு தமிழர்களுக்கும் சொந்தம்’ என்பது போன்ற பார்வை ஜே.வி.பி.க்கும் இருந்ததில்லை போலிருக்கிறது. சரி. பதிவின் இறுதிக்கு வருவோம். ஒரு காலத்தில் ஆயுதப் புரட்சி மூலம் அரசைப் பெற முயன்று தோற்ற ஜே.வி.பி. அமைப்பு, பின்னர் அரசியல் கட்சியாக மாறி, இன்று தேசிய மக்கள் கூட்டணியாக உருமாறி இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. அந்த அமைப்பின் தலைவர், இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கிறார். அனுர குமார திசநாயக்கா எப்படி ஆட்சி நடத்தப் போகிறார்? தமிழர்கள் விடயத்தில் அவரது நிலைப்பாடு என்ன என்பதெல்லாம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும்கூட, ஆயுதப் புரட்சியில் தோல்வி கண்டவர்களும், அரசியல் களத்தில் வெல்ல முடியும் என்ற புதிய நம்பிக்கையை அவரது வெற்றி விதைத்திருக்கிறது. அதற்காக அரை மனதுடன் அவரை வாழ்த்துவோம். அவர் என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். https://minnambalam.com/political-news/writer-mohana-rooban-remember-1970-jvp-protest-in-srilanka/
-
தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!
தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி! SelvamSep 28, 2024 22:20PM தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் இன்று (செப்டம்பர் 28) நாம் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். தமிழக அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆறு அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜூக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனுக்கு பால் வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுவுக்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்கவுள்ள அமைச்சர்களுக்கு நாளை மாலை 3.30 மணிக்கு கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். https://minnambalam.com/political-news/tamilnadu-cabinet-reshuffle-udhayanidhi-will-become-deputy-cm/
-
வட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்
வடமாகாண ஆளுநராக நியமனம்; ஐனாதிபதி அநுர நடவடிக்கையால் தமிழர்கள் மகிழ்ச்சி அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகன், இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதிய ஐனாதிபதி இந்த முடிவு, தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம்வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கியபகுதி வடக்கு மாகாணம் ஆகும். வடமாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கான சட்டஉருவாக்க அவையாகும். 2007-ம் ஆண்டு வடமாகாண சபை உருவாக்கப்பட்டது. இலங்கை ஐனாதிபதி தேர்தலில் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதையடுத்து, 9 மாகாணங்களைச் சேர்ந்த ஆளுநர்களும் பதவி விலகினர். தொடர்ந்து, புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகனும் ஒருவர். இவர் இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையின் உள்நாட்டு யுத்தகாலத்தில் பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து மட்டகளப்பு, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் ஆட்சியராக வேதநாயகன் பணியாற்றி உள்ளார். 2015-ம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். வேதநாயகன் பணியாற்றிய இடங்களில் சாதாரண மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியும் என்ற நிலையை உருவாக்கினார். யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, இந்தியா-இலங்கை இரு நாட்டு பக்தர்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழாவை சிறப்பாக நடத்தி உள்ளார். https://akkinikkunchu.com/?p=293162
-
முன்னாள் அமைச்சர்கள் அரச வீடுகளை மீள வழங்க வேண்டும்: காலக்கெடுவும் விதிக்கப்பட்டது
முன்னாள் அமைச்சர்கள் அரச வீடுகளை மீள வழங்க வேண்டும்: காலக்கெடுவும் விதிக்கப்பட்டது முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அந்தந்த அமைச்சு பதவிகளை வகித்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்திய அனைத்து அரசாங்க வீடு மற்றும் பங்களாக்களை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு அரச பொது நிர்வாக அமைச்சு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சுமார் 15 பேருக்கு அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றம் பங்களாக்களை ஒப்படைப்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் சில நிறுவனங்களுக்கு அரசாங்கம் 50 கொழும்பு அரச பங்களாக்களை வழங்கியிருந்தது. இந்நிலையில், மாதிவலை உத்தியோகபூர்வ இல்லங்கள் நாடாளுமன்றத் தேர்தல் வரையில் பயன்படுத்த நாடாளுமன்ற அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும் தினத்தில் அல்லது அதற்கு அடுத்த தினத்தில் குறித்த உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்க வேண்டும் என நாடாளுமன்ற அதிகாரிகள் முன்னாள் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ள அனைத்து விதத்திலும் வழங்கப்பட்டுள்ள கொடுபப்னவுகள், முத்திரை கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=293074
-
கிழக்கு மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்
கிழக்கு மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செயற்பட்டுள்ள இவர் கந்தளாய் அக்ரபோதி வித்தியாலய பழைய மாணவருமாவார். பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர நவம்பர் மாதம் 1962 ஆம் ஆண்டு பிறந்தார். மனைவியின் பெயர் மல்லிகா ரத்ணசேகர. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கின்றார். இவர் இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி முதல் நவம்பர் 2023 வரை பணியாற்றியுள்ளார். தனது ஆரம்பக் கல்வி கந்தளாயில் உள்ள அக்ரபோதி வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கொழும்பு நாலந்தா கல்லூரியிலும் (1972-1980) கற்றார். அத்துடன் ரஷ்யாவின் மக்கள் நட்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1988 இல் வேதியியலில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். 1993 இல் அவர் வேதியியலில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். 1996 ஆகஸ்ட் மாதம் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக சேர்ந்து 2018 இல் வேதியியலில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். மற்றும் 1999 முதல் 2005 வரை பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் உபவேந்தராகவும் பணியாற்றினார் 2017 ஜனவரியில் இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். 2021 இல் துணைவேந்தர்கள் மற்றும் இயக்குநர்கள் குழுவின் (CVCD) தலைவராக பணியாற்றியுள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், சுற்றுச்சூழல் வேதியியல், கோட்பாட்டு வேதியியல், உயர் கல்வியில் தர உத்தரவாதம் மற்றும் அறிவியல் கல்வி ஆகியவற்றில் அவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் உள்ளன. ரத்னசேகர பல பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் பட்டறைகளில் ஒரு பயிற்சியாளராகவும் வளவாளராகவும் இருந்துள்ளார். அவர் ஒரு ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் என நன்கு அறியப்பட்டவர். குறித்த நிகழ்வில், மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி எஸ் ரத்நாயக்க , ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி மதநாயக்க ,மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண திணைக்கள தலைவர்கள் , தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திர மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://thinakkural.lk/article/309965
-
மனோவிடமிருந்து வெளியேறினார் குருசாமி
மனோவிடமிருந்து வெளியேறினார் குருசாமி ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து தான் உடன் பதவி விலகுவதாக கே.டி. குருசுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர், குறித்த கட்சிகளின் தலைவர் மனோகணேசனுக்கு அனுப்பியுள்ள உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றிலேயே அறிவித்துள்ளார். அந்த கடிதத்தில் அவர், “நாட்டில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளையும், அதன் பின் நடக்கின்ற நிகழ்வுகளையும் உற்று நோக்கும் பொழுது, மக்களின் மனதில் மிகப் பெரிய மாற்றத்தையும், அவர்களின் எதிர்பார்ப்பு உயர்ந்திருப்பதையும் காண்கின்றோம். இந்நிலையில், மக்களோடு நேரடியாக களத்தில் பணிசெய்ய விரும்புவதால், கட்சியோடு இதுவரையில் வகித்து வந்த ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து, இன்றோடு உடனடியாக விலகிக்கொள்கின்றேன். தங்களோடும், கட்சியோடும் பயணித்த 13 ஆண்டு கால அரசியல் பாதையில் என்னை வழி நடத்தியதற்கும் நெறிப்படுத்தியதற்கும் என் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு கட்சியின் சக உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/309993
-
சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி
சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பாகப் போட்டியிடுவது தொடர்பில் அரசியல் கட்சியினருக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல் இழுபறியில் முடிவு எட்டப்படாமல் முடிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கூட்டான தமிழ் மக்கள் பொதுச் சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம்(26) யாழிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளான புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ரெலோவின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம், ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.சிறீகாந்தா, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் அதன் மத்திய குழு உறுப்பினர்களான சிவநாதன் மற்றும் பார்த்திபன், ஜனநாயகப் போராளிகள் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் வேந்தன், செயலாளர் துளசி ஆகியோரும், சிவில் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிலாந்தன், யதீந்திரா, வசந்தராஜா, யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள். இதன்போது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கருத்தைப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு சில கட்சியினர் கோரியுள்ளனர். எனினும், ஒரு தரப்பு அரசியல் பிரமுகர்கள் அதனை விரும்பவில்லை. ஒரு தரப்பினர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் குத்துவிளக்கு சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் எனக் கோரியுள்ளனர். குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடுவதெனில் தாம் பொதுக் கட்டமைப்பாகப் போட்டியிடமாட்டோம் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்காத தரப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், சிவில் சமூகங்களின் கூட்டாகக் காணப்படும் தமிழ் மக்கள் பொதுச் சபையினர் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பாகத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்தவிதமான தீர்மானத்தையும் எடுக்கவில்லை. தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது ஜனாதிபதித் தேர்தலை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. இந்நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிவில் அமைப்புகளின் கூட்டான தமிழ் மக்கள் பொதுச் சபையானது தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதா? இல்லையா என்ற முடிவை எடுப்பதற்கு சில நாட்கள் அவகாசத்தை கோரியுள்ளது. இதையடுத்து நாளைய தினம்(28) தமிழ் மக்கள் பொதுச் சபையானது இது தொடர்பில் கூடி தமது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/310007
-
பொது ஒழுங்கை நிலைநாட்ட முப்படையினருக்கு அழைப்பு
பொது ஒழுங்கை நிலைநாட்ட முப்படையினருக்கு அழைப்பு adminSeptember 27, 2024 இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை அழைக்கும் உத்தரவு அடங்கிய இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் முதன்முறையாக ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது https://globaltamilnews.net/2024/206952/
-
யாழ். பல்கலை மாணவர்களுக்கு 30 இலட்சம் ரூபா நன்கொடை
யாழ். பல்கலை மாணவர்களுக்கு 30 இலட்சம் ரூபா நன்கொடை இலங்கையின் வடக்கு - கிழக்கு பிராந்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் கல்விக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உதவித் தொகை வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களிலும் இருந்தும் சுமார் 100 மாணவர்கள் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத் திட்டத்துக்கான ரூபா 30 இலட்சம் ரூபா இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் தூதரகத்தின் துணைத்தூதுவர் ஶ்ரீ சாய்முரளி இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உதவித்தொகைக்கான காசோலையைக் கையளித்தார். இந்தியத் தூதரகத்தின் கல்வி மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதித் துணைத் தூதுவர் ஶ்ரீ கே. நாகராஜன் மற்றும் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், அதிகாரிகள், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், பயன்பெறும் மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்டுள்ள கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு வந்தாறுமூலையிலுள்ள கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகக் கட்டத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. https://newuthayan.com/article/யாழ்._பல்கலை_மாணவர்களுக்கு_30_இலட்சம்_ரூபா_நன்கொடை!
-
வட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்
வட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா் adminSeptember 27, 2024 ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய தஇனம் வெள்ளிக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதியால் நாம் எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செல்ல முடியும். இவர் ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் இந்த பதவியை பெற்றுக் கொள்கிறேன். வேறு எந்த ஜனாதிபதி வந்திருந்தாலும் இந்த பதவி எனக்கு கிடைத்திருக்கவும் மாட்டாது வேறொருவர் எனக்குப் பதவியை தந்திருந்தாலும் நான் இதனை ஏற்றுக் கொண்டிருக்கவும் மாட்டேன் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/206942/
-
விபத்தில் நாதஸ்வர வித்துவான் உயிரிழப்பு
விபத்தில் நாதஸ்வர வித்துவான் உயிரிழப்பு adminSeptember 27, 2024 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நாதஸ்வர வித்துவான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நாதஸ்வர வித்துவான்களில் ஒருவரான, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த பாலசேகர் ஹரிபிரசாத் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 14ஆம் திகதி இரவு முல்லைத்தீவு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நாதஸ்வர கச்சேரி நிகழ்வை முடித்துக்கொண்டு, மறுநாள் 15ஆம் திகதி காலை வேளை மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளை சாவகச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். https://globaltamilnews.net/2024/206949/
-
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டி?
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டி? எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பான கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் நேற்று (26) இடம்பெற்றது. ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்த பொதுஜன பெரமுன குழுக்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இங்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, பொதுத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சுவார்த்தைகள் சாதகமான நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார். பொதுத்தேர்தலில் அனைவரும் இணைந்து போட்டியிட வேண்டும் என்பது தமது ஏகோபித்த கருத்து எனவும் தெரிவித்தார். இதேவேளை, பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ். பி திஸாநாயக்க தெரிவிக்கையில், ஒரே கட்சியாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை உறுதியாக இருந்தாலும் கட்சி மற்றும் சின்னம் பின்னர் முடிவு செய்யப்படும். இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதி ருவான் விஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/அனைத்து-எதிர்க்கட்சிகளும்-ஒரே-சின்னத்தில்-போட்டி/175-344563
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
துட்டகைமுனு குறுகிப் படுத்த கதையில் இருந்தும், மகாவம்ச மனநிலையில் இருந்தும் பெரும்பான்மையான சிங்களவர்கள் விலகவில்லை. தொடர்ந்து ஆட்சியில் இருந்த மகிந்த குடும்பத்தினர் மீது, ரணில் ஜனாதிபதியாக இருக்கவும் மொட்டுக்கட்சிதான் முட்டுக்கொடுத்தது, உள்ள வெறுப்பாலும், சஜித் பிரேமதாஸவின் ஆளுமையற்ற தலைமையாலும் தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமாரவுக்கு சிங்களவர்கள் வாக்குகளை அள்ளிப்போட்டனர். ஆனால் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை (113 ஆசனங்களை) தேசிய மக்கள் சக்தி அடைவது கூட சவாலான விடயம். எனவே சிங்களவர்கள் மாறிவிட்டார்கள் புளகாங்கிதம் அடைந்து மனப்பால் குடிக்காமல் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள சரியானவர்களை வரும் தேர்தலில் தெரிவுசெய்யவேண்டும். ஆனால் தேர்தலில் கிடைக்கக்கூடிய 10-15 ஆசனங்களுக்குப் போட்டியிடவே பழசுகள் 20-25 பேர் நந்திகளாக இருக்கின்றார்கள். எனவே, தமிழர்களுக்கு சில சலுகைகளுக்கு மேல் ஒன்றும் கிடைக்காது என்பது உண்மைதான்!
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
தலைவரின் 2005 மாவீரர் நாள் உரையிலிருந்து.. சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஜே.வி.பி நிவாரணக் கட்டமைப்புக்குக் கடுமையான ஆட்சேபம் தெரிவித்து அரசிலிருந்து விலக்கிக்கொண்டது. ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற தீவிர இனவாதக் கட்சிகள் இந்த நிவாரண உடன்பாடு சிறீலங்கா அரசியலமைப்புக்கு விரோதமானதென உயர்நீதிமன்றத்தில் வழக்குகளையும் தாக்கல் செய்தன. சிங்கள இனவாதச் சக்திகளுக்குச் சார்பான முறையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சுனாமிக் கட்டமைப்பை முழுமையாக முடக்கிச் செயலிழக்கச் செய்தது. சுனாமிக் கட்டமைப்புக்குச் சாவுமணி அடிக்கப்பட்டதுடன் தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த இறுதி நம்பிக்கையையும் சிங்களப் பௌத்தப் பேரினவாதம் சாகடித்துவிட்டது அநுரகுமார சந்திரிக்கா அரசின் அமைச்சர் பதவியில் இருந்து விலகியவர். இந்த 19-20 வருடங்களில் அவர் எவ்வளவு தூரம் இனவாதத்தை விட்டார் என்று தெரியவில்லை.
-
உங்கள் மாவட்டத்தில் எத்தனை எம்.பிக்கள்?
இந்த முறை தமிழ்த்தேசியம் சார்பானவர்கள் அதிகபட்சமாக பின்வருமாறு தெரிவு செய்யப்படலாம்.. யாழ்ப்பாணம் - 4, மிகுதி இரண்டும் டக்ளஸ், அங்கயன் வன்னி - 4, மிகுதி இரண்டில் முஸ்லிம் 1, சிங்களவர் - 1 திருகோணமலை - 1 மட்டக்களப்பு - 2, மிகுதி நாலில் பிள்ளையான் குழு - 2, முஸ்லிம் - 2, வியாழன் வென்றால் தமிழ்த்தேசியர் ஒன்றாகக் குறைக்கப்படலாம் அம்பாறை - 0 தேசியப்பட்டியல் - 1
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாடாளுமன்றத் தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேண்டும்; மாவையிடம் விடுக்கப்பட்டிருக்கும் கோரிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாடாளுமன்றத் தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேண்டும்; மாவையிடம் விடுக்கப்பட்டிருக்கும் கோரிக்கை “நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாடாளுமன்றத் தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேண்டும். இதுவே மக்கள் விருப்பம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் நோக்குடன் நான் செயற்படவுள்ளேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். தெல்லிப்பழை, மாவிட்டபுரத்தில் அவரது இல்லத்தில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகள் இன்று (நேற்று) புதன்கிழமை நேரில் வந்து என்னுடன் கலந்துரையாடினார்கள். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகக் கொள்கையுடன் பயணித்த தமிழ்க் கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டு வந்ததை நினைவுகூர்ந்த அவர்கள், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், எதிர்காலத்திலும் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக மீண்டும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்றும், ஒன்றுபட்டு போட்டியிட்டு வெற்றியீட்ட வேண்டும் என்றும், இதற்கு மக்கள் பூரண ஆதரவை தெரிவித்து வருகின்றார்கள் என்றும் தெரிவித்தார்கள். அவ்வாறான கருத்தை நீண்ட நாட்களாகவும், அண்மைக்காலத்திலும் என்னிடம் வேண்டுகோளாக விடுக்கப்பட்டதை நான் கவனமாக அவதானித்து வந்துள்ளேன் . ஆகையால், இந்தக் கோரிக்கையை அவர்களிடமும் தெரிவித்தேன். நாங்கள் ஒன்றுபட்டு செயற்பட்டதால் ஏற்பட்ட நன்மைகளையும், இனத்தின் விடுதலைக்கான முன்னேற்றத்தையும் நான் நன்கு அறிந்திருந்தேன். இவர்களுடன் பகிர்ந்திருந்தேன் . இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற முறையில் நாங்கள் எதிர்காலத்திலும் தமிழினத்தின் விடுதலைக்காகவும், தமிழ்த் தேசத்துக்காகவும் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டியதை நானும் வலியுறுத்திக் கூறினேன் . இந்த வேண்டுகோளை இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத்திடம் ஏற்கனவே கூறியுள்ளேன். இந்தச் சந்திப்பையும் கொண்டு சென்று இந்த ஒற்றுமைக்காகச் செயற்படவுள்ளேன். இத்தகைய ஒற்றுமை முயற்சி தொடர்பில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சித் தலைவர்களுடனும், பல்கலைக்கழக மாணவ சமுதாயத்திடமும், அமைப்புகளுடனும் பேச்சுகள் நடத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்படவுள்ளேன். அதற்கான முயற்சிகளை உடனேயே ஆரம்பிக்கவுள்ளேன்.” – என்றார். https://thinakkural.lk/article/309948
-
உங்கள் மாவட்டத்தில் எத்தனை எம்.பிக்கள்?
பாராளுமன்றத்தில் யாழ். மாவட்டம் ஒரு ஆசனத்தை இழந்தது! நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டம் ஒரு ஆசனத்தை இழக்கவுள்ளது. நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பு மனுவில் உள்ளடக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, மொத்தமாக மாவட்டங்களில் இருந்து 196 பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் ஊடாக 19 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதன்படி, அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் கம்பஹா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை யாழ். மாவட்டத்தில் இம்முறை ஒரு ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை 07 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில், இம்முறை 6 ஆசனங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் கடந்த முறை 19 ஆசனங்கள் இருந்த நிலையில் இம்முறை 18 ஆசனங்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை கம்பஹா மாவட்டத்தில் கடந்த முறை 18 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இம்முறை 19 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் களுத்துறை மாவட்டத்தல் கடந்த முறை 10 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இம்முறை 11 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. http://www.samakalam.com/பாராளுமன்றத்தில்-யாழ்-ம/
-
தியாகி திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்
தியாகி திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் Vhg செப்டம்பர் 26, 2024 தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (26-09-2024) வியாழக்கிழமை தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கிலும், புலம்பெயர் தேசங்களிலும் கடைப்பிடிக்கப்படவுள்ளது. பிரதான நினைவேந்தல் நிகழ்வு யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியில் இன்று (26-09-2024) முற்பகல் 10.48 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும். இதேநேரம், யாழ். பல்கலைக்கழகம், தீவகம், கிழக்கு மாகாணம் உட்பட வடக்கு, கிழக்கின் பல இடங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் திலீபனை நினைவேந்தும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயரை கொண்ட திலீபன் 1963ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி யாழ்ப்பாணம் - ஊரெழுவில் பிறந்தவர். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தீவிரமடைந்தபோது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த அவர், இந்திய அமைதிப் படை நாட்டில் நிலைகொண்டிருந்தபோது, 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார். 5 அம்சக் கோரிக்கைகள் மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும், கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைக் கூடங்களிலும் இராணுவ - பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாகப் பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும் என 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி உணவு - நீரைத் தவிர்த்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு அவர் உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2024/09/37.html யாழ். ஊரெழுவில் ஆரம்பித்த தியாக தீபம் ஊர்தி நடைப் பயணம் நல்லூரை அடைந்தது! AdminSeptember 26, 2024 தியாகதீபம் திலீபன் அவர்களின் 37ஆவது ஆண்டின் இறுதி வணக்க நிகழ்வுகள் இன்றையதினம் 26/09/2024(வியாழக்கிழமை) நல்லூர் நினைவிடத்தில் நடைபெறுகின்றது. முன்னதாக ஊரெழுவில் தியாக தீபம் அவருடைய வீட்டு முற்றத்திலிருந்து இன்று காலை 7.00மணிக்கு நடைபயணம் தியாகதீபத்தின் ஊர்தி பவனியுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளின் ஊடாக சங்கிலியன் சந்தியை அடைந்து நல்லூரான் முன்றிலில் தேங்காய் உடைத்து தீபம் ஏற்றியபின் நல்லூர் தியாக தீபம் நினைவிடத்தைச் சென்றடைந்து அங்கு வணக்க நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. https://www.errimalai.com/?p=97124