Everything posted by கிருபன்
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
செவ்வந்தி விவகாரம்: ஐவர் கைது திட்டமிட்ட குற்றத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் உள்ள வீட்டின் உரிமையாளர், சந்தேக நபரை தப்பிச் செல்ல ஏற்பாடு செய்தவர் என்றும், படகை வழங்கியவர் என்றும் பொலிஸார் கூறுகின்றனர். இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கி நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட ஒன்பது பேரை பொலிஸார்இதுவரை கைது செய்துள்ளனர். பிப்ரவரி 19 ஆம் திகதி புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த பின்னர், தொடங்கொட மற்றும் மித்தெனிய பகுதிகளில் இருந்த சந்தேக நபரான செவ்வந்தி, மே 6 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நாளில் யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகு வழங்கிய நபருக்கு அதற்காக 2.5 மில்லியன் ரூபாய் பணம் கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு உதவுவதற்காக, படகை வழங்கிய நபர் மூன்று இளைஞர்களை வேலைக்கு அமர்த்தியிருப்பது விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/செவ்வந்தி-விவகாரம்-ஐவர்-கைது/175-366642
-
தனியார் காணியில் இராணுவத்தினரின் வைத்தியசாலை – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சுமந்திரன்
தனியார் காணியில் இராணுவத்தினரின் வைத்தியசாலை – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சுமந்திரன் adminOctober 21, 2025 யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வசாவிளானில் உயர் பாதுகாப்பு வலயம் என இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைத்திருக்கும் தனியார் காணியில் சட்ட விரோதமான முறையில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் காணி உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வீ.கே சிவஞானம் மற்றும் வலி வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் காணி உரிமையாளருடன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காணி அமைந்துள்ள பகுதிக்கு நேரில் சென்று , உயர் பாதுகாப்பு வலய எல்லையுடன் நின்று , வைத்தியசாலையின் கட்டட வேலைகளை நேரில் பார்வையிட்டனர். அதன் பின்னர் காணி உரிமையாளருடன் கலந்துரையாடிய எம்.ஏ. சுமந்திரன் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் வைத்தியசாலை கட்டட வேலைக்கு எதிராக மிக விரைவில் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக உறுதியளித்தார். https://globaltamilnews.net/2025/221808/
-
நிமலராஜன் நினைவேந்தல்!
நிமலராஜன் நினைவேந்தல்! adminOctober 19, 2025 படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் . ஊடக அமையத்தில் , அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிமலராஜனின் திருவுரு படத்திற்கு குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான பெடி கமகே மலர் மாலை அணிவித்தனர் , தென்னிலங்கை ஊடகவியலாளர் அஜித் பொது சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். போர் சூழலில் யாழில் இருந்து ஊடகப்பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார். அந்நிலையில் 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுத தாரிகள், வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார். கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர் , வீட்டின் மீது கைக் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர். அதன் போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தனர். இந்த படுகொலை சம்பவம் நடைபெற்று 25ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் , இதுவரையில் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. நிமலராஜன் படுகொலைக்கு நீதி கோரி யாழ் . ஊடக அமையம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/221734/
-
தனித்து விடப்படும் முதியவர்கள் - நிலாந்தன்
தனித்து விடப்படும் முதியவர்கள் - நிலாந்தன் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். அவருடைய ஊரில் அவருக்குத் தூரத்து உறவான ஒரு முதிய பெண் தனித்து வசிக்கிறார். பெரிய வீடு; வசதியான குடும்பம்; ஆனால் பிள்ளைகள் இல்லை. காசு உண்டு. ஆனால் பராமரிக்க ஆளில்லை. அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு படை முகாமில் இருப்பவர்கள் அவருக்குச் சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால் அவர் பல நாட்கள் குளித்திருக்கவில்லை என்றும் அவருடைய சுத்தம் சுகாதாரத்தைத் தொடர்ச்சியாகக் கவனிப்பதற்கு அங்கே ஆட்கள் இல்லையென்றும் நண்பர் சொன்னார். அப்படியென்றால் அவரை அழைத்துக் கொண்டு வந்து ஒன்றில் அரச முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம் அல்லது கட்டணத்தோடு முதியோரைப் பராமரிக்கும் இல்லங்களில் இணைக்கலாம்.போதியளவு பணம் இருந்தாலும் பராமரிக்க ஆளில்லாமல் தவிக்கும் முதியோரை கட்டணம் பெற்றுக்கொண்டு பராமரிக்கும் இல்லங்களில் சேர்க்கலாம். எனவே அந்த முதிய பெண்ணை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் இணைத்தால் என்ன என்று நண்பரிடம் கேட்டேன். அதற்கு நண்பர் சொன்னார்,”குறிப்பிட்ட மூதாட்டிக்கு 80 வயதுக்கு மேலாகிறது. இனி அவர் தனது வீட்டிலிருந்து வேரைப் பிடுங்கிக்கொண்டு வேறொரு இடத்துக்கு வரத் தயாராக இல்லை. எல்லாவிதமான அசௌகரியங்கள், பற்றாக்குறைகளோடும் தான் பிறந்து, வளர்ந்து, திருமணம்செய்து சந்தோஷமாக வாழ்ந்த அந்த வீட்டிலேயே இருந்து இறந்து போகத்தான் விரும்புவார் என்று தோன்றுகிறது. அவரை இந்த வயதில் வேரை அறுத்துக் வெளியே எடுப்பது சாத்தியமா?” என்று. அது சாத்தியமா இல்லையா என்பதல்ல பிரச்சினை. அவருடைய “குவாலிட்டி ஒஃப் லைஃப் “- வாழ்க்கைத் தரம் உயர்வானதா? என்பதுதான் இங்கு பிரச்சனை. அவரைப் போன்ற பல முதியவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு வெளியே வரத் தயாராக இல்லை. தாங்கள் பிறந்து வளர்ந்த அந்த வீட்டுக்குள் எல்லா விதமான பற்றாக்குறைகளோடும் ஆபத்துக்குகளோடும் சீவிப்பதில் அவர்கள் மன நிறைவடைகிறார்கள். இங்கே அடிப்படைக் கேள்வி ஒன்று எழுதுகிறது.”குவாலிட்டி ஒஃப் லைஃப் ” என்பது மனதால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதா? அல்லது உடலால் நவீன மருத்துவத் தராதரங்களுக்கு ஏற்ப பராமரிக்கப்படுகிறவர்களாக இருப்பதா? எனக்குத் தெரிந்த பல முதியவர்கள் குறிப்பாக 80 வயதுக்கு மேலானவர்கள் தாம் பிறந்து வளர்ந்த வீட்டிலேயே இருந்து சாவதைத்தான் தமது வாழ்க்கை தரத்தில் உயர்ந்த நிலை என்று கருதுவதாகத் தெரிகிறது. ஆனால் பராமரிப்பின்றி தனிமையில் உழல்வதை விடவும் முதியோர் இல்லங்களில் சக வயதினரோடு இருப்பது சந்தோஷமானது என்று கருதும் முதியோரும் உண்டு. ஓர் ஆசிரியை வெளிநாட்டுக்குப் போகும்போது தன் தகப்பனை அரசு முதியோர் இல்லத்தில் இணைத்துவிட்டுச் சென்றார். நாடு திரும்பியதும் தகப்பனை வீட்டுக்கு அழைத்து வரச் சென்ற போது தகப்பன் மறுத்துவிட்டார். இங்கே எனது வயதொத்தவர்களோடு சந்தோஷமாக இருக்கிறேன். இது எனக்கு விருப்பமாக இருக்கிறது. என்று கூறி அந்த முதியவர் அங்கேயே தங்கி விட்டார். ஆனால் இது மிகச் சிறிய தொகை. பைபிளில் கூறப்படுவது போல “பிள்ளைகள் இருக்கவும் மலடுகளாய்போன பெற்றோரின்” தொகை அதிகமுடைய ஒரு சமூகம் இது. போர் பிள்ளைகளைத் தின்றுவிட்டது. புலப்பெயர்ச்சி பிள்ளைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரித்துவிட்டது. பெற்றோர் பிள்ளைகளுக்கு இறுதிக் கிரியைகளைச் செய்யும் ஒருகாலம் வந்தபோது பிள்ளைகள் தூர தேசத்திலாவது உயிர் பிழைத்திருக்கட்டும் என்று பெற்றோரே அனுப்பி வைத்தார்கள். எனவே முதியோர் தனித்துவிடப்படுதல் என்பது போரின் நேரடி விளைவுதான். தவிர குடும்பங்களில் விழுமியங்கள் சீரழிந்ததன் விளைவுந்தான். இங்கு மூன்று உதாரணங்களைக் கூறலாம். முதலாவது உதாரணம், வன்னியில் நடந்தது. அங்குள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றுக்கு பழைய மாணவர்கள் சிலர் இணைந்து ஒரு சிற்றுண்டிச் சாலையைக் கட்டிக் கொடுத்தார்கள். அந்த சிற்றுண்டிச் சாலையை தமது பள்ளிக் காலத்தில் தமது வகுப்பு தோழர்களாக இருந்து பின்னர் போரில் நாட்டுக்காக தங்கள் உயிரைக் கொடுத்த தியாகிகளுக்கு அர்ப்பணித்திருந்தார்கள். அப்பழைய மாணவர்களில் ஒருவர் என்னைச் சந்தித்தார். அவரிடம் நான் கேட்டேன்“அந்த சிற்றுண்டிச் சாலையைத் திறக்கும் வைபவத்திற்கு குறிப்பிட்ட தியாகிகளின் பெற்றோரை அழைத்தீர்களா?” என்று. அப்பொழுதுதான் ஒரு விடயம் தெரியவந்தது. அந்தத் தியாகிகளில் ஒருவருடைய பெற்றோர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அந்தத் தியாகி ஒரு சிறந்த உதைப்பந்தாட்ட வீரர். அவரைத் தவிர ஏனைய சகோதரர்கள் ஏற்கனவே புலம்பெயர்ந்து விட்டார்கள். அவர்தான் பெற்றோருக்கு உதவியாக இருந்தார். கடைசிக் கட்டப் போரில் கட்டாய ஆட் சேர்ப்பின்போது அவர் போருக்குள் இணைக்கப்பட்டார். போர்க்களத்தில் உயர்நீத்தார். தாயும் போரில் கொல்லப்பட்டு விட்டார். தனித்து விடப்பட்ட தந்தையை புலம்பெயர்ந்து வாழும் ஒரு பிள்ளை உறவினர் ஒருவருக்கூடாக முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார். மேற்படி தகவல்களைச் சேகரித்த பழைய மாணவர்கள் அந்த முதியோர் இல்லத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால் அவர் விடுமுறையில் சென்று விட்டதாக முதியோர் இல்லத்தில் கூறப்பட்டது. விசாரித்தபோது தெரிந்தது, வெளிநாட்டில் வாழும் ஒரு பிள்ளை தாயகத்துக்கு வந்திருந்தபடியால் தகப்பனைப் பார்ப்பதற்காக முதியோர் இல்லத்தில் இருந்து அவரை தான் இருக்கும் இடத்துக்கு எடுத்திருக்கிறார். பழைய மாணவர்களில் ஒருவர் அந்தப் பிள்ளையின் கைபேசி இலக்கத்தை எடுத்து அவரோடு கதைத்திருக்கிறார். அவரையும் முதியவரையும் சந்திப்பதற்காக வரப்போவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அதன்பின் அந்தப் பிள்ளை தொடர்பு எடுக்கவில்லை மட்டுமல்ல, தகப்பனைக் கொண்டுவந்து இல்லத்தில் சேர்த்துவிட்டு வெளிநாட்டுக்குப் போய் விட்டார். இரண்டாவது உதாரணம், ஒரு பேராசிரியர். பல மாதங்களுக்கு முன்பு அவர் இறந்தபொழுது அவருடைய உடலை யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு கொடுக்குமாறு கேட்டிருந்தார். அவரும் அவருடைய மனைவியும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில்தான் வசித்து வந்தார்கள். யாழ்ப்பாணத்தின் உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் பீடாதிபதியாக இருந்தவர் அவர். மூன்றாவது உதாரணம், ஓர் அரசியல் செயற்பாட்டாளர். ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய மொழிபெயர்ப்பாளர்.நோர்வியின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளின்போது பெரும்பாலான எல்லாப் பேச்சுவார்த்தைகளிலும் அவருடைய முகம் உண்டு. அவருக்கு ஒரே பிள்ளை. அவரும் புலம்பெயர்ந்து விட்டார். 2009க்கு பின் அவரை தன்னுடன் வந்து இருக்குமாறு பிள்ளை அழைத்திருக்கிறார். ஆனால் இந்த முதியவர் தாயகத்தை விட்டு வெளியேபோக விரும்பவில்லை. எனவே அவருடைய பிள்ளை அவரை மாதாந்தம் பெருந்தொகை பணத்தை அறவிடும் தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்த்து விட்டார். அந்த மொழிபெயர்ப்பாளர் அந்த முதியோர் இல்லத்தில்தான் உயர்நீத்தார். நான்காவது உதாரணம்,சில மாதங்களுக்கு முன் நடந்தது. புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வசிக்கும் எனது நண்பர்,ஒர் அரசியற் செயற்பாட்டாளர், அண்மையில் தனது தகப்பனாரைப் பராமரிப்பதற்கு யாரையாவது ஒழுங்கு செய்ய முடியுமா என்று கேட்டார். இந்த விடயத்தில் முதியோர் இல்லத்துக்குப் போக விரும்பாத முதியவர்களைப் பராமரிப்பதற்கு ஊரில் யாராவது உதவியாளரைக் கண்டுபிடித்தால் அது நல்லது. இரண்டாவது தெரிவு,மானிப்பாயில் உள்ள மருத்துவர் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் முதியோரைப் பராமரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு உண்டு. அங்கு பயிற்றப்பட்ட தாதியர்கள் உண்டு. அவர்களைச் சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தலாம். மூன்றாவது தெரிவு,செக்யூரிட்டி நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு வீட்டுக்கு ஒரு செக்யூரிட்டியை வேலைக்கு அமர்த்தலாம். இந்த ஏற்பாடு எல்லா முதியவர்களுக்கும் பொருந்தாது. தன்னுடைய அலுவல்களைத் தானே கவனிக்கக்கூடிய அளவுக்குத் தெம்பாக உள்ள முதியவர்களுக்குத்தான் பொருந்தும். நான்காவது ஏற்பாடு,வீட்டில் கண்காணிப்புக் கமராவைப் பொருத்துவது. இதுவும் தானாக இயங்கும் முதியவர்களுக்குத்தான் பொருந்தும். ஆனால் கமரா சரிவர இயங்கவில்லை என்றாலோ அல்லது கமராவின் கண்காணிப்பு வீச்சுக்கு வெளியே முதியவர் போய்விட்டாலோ அதன் பின் அவருடைய நடமாட்டங்களைக் கவனிக்க முடியாது. இதில் கமராவைத் தொடர்ச்சியாக அடிக்கடி பார்க்க வேண்டியிருக்கும். யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் அவ்வாறு கமரா பொருத்தப்பட்டிருந்தது. பிள்ளைகள் முதியோரின் நடமாட்டத்தைக் கமரா மூலம் கண்காணிக்க முடிந்தது. ஆனால் ஒருநாள் முதியவரைக் காணவில்லை. இரண்டாம் நாளும் காணவில்லை. பிள்ளைகள் அயலவர்களோடு தொடர்புகொண்ட பொழுது அயலவர்கள் வீட்டு வளவில் கமராவின் கண்காணிப்பு வீச்சுக்கு வெளியே முதியவர் விழுந்து கிடக்கக் கண்டுபிடித்தார்கள். ஆனால் கண்டுபிடித்தபொழுது முதியவருக்கு உயிர் இருக்கவில்லை. அவர் இறந்து இரண்டு நாட்களாகி விட்டது. இந்த ஏற்பாடுகளில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்யும்படி எனது நண்பரிடம் சொன்னேன். தனித்து விடப்பட்ட முதியவர்களுக்காகக் காசு செலவழிக்கத் தயாராக இருப்பவர்களுக்குத்தான் இந்தத் தெரிவுகள். இல்லையென்றால் ஏதாவது முதியோர் இல்லத்துக்குத்தான் போக வேண்டும். Geriatrician என்று அழைக்கப்படுகின்ற முதியோர் துறைசார் மருத்துவர்கள் தமிழில் மிகக்குறைவு. அதுமட்டுமல்ல முதியோரைப் பராமரிப்பதற்கான பயிற்றப்பட்ட தாதியர்களும் தமிழ்பகுதிகளில் குறைவு. இக்கட்டுரையில் முன்பு குறிப்பிடப்பட்ட மானிப்பாய் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் முதியோர் பராமரிப்புக்கென்று பயிற்சிகளை வழங்கும்(Institute of Medical Sciences) “மருத்துவ விஞ்ஞான நிறுவனம்” என்ற நிறுவனம் உண்டு. 2013இலிருந்து முதியோரைப் பராமரிப்பதற்குரிய தொழில்சார் பயிற்சிகளை வழங்கிவருகிறது. இங்கு வழங்கப்படும் தொழில்சார் பயிற்சியானது இலங்கைத் தீவின் தேசிய தொழில்சார் தகமை மட்டத்தில் நான்காவது மட்டத்துக்குரியது. ஐந்தாவது தொழிற்சார் தகமை மட்டும்தான் டிப்ளமோ. அப்படிப் பார்த்தால் தமிழ்ப்பகுதிகளில் இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் முதியோரைப் பராமரிக்கும் தாதியர்கள் அனைவருமே குறைந்தபட்சம் டிப்ளோமா தரத்துக்குரிய தொழில் தகமையைக்கூட கொண்டிருக்கவில்லை.ஆனால் மேற்கத்திய நாடுகளில் அது நான்கு ஆண்டுகாலப் பட்டப்படிப்பாகவும் காணப்படுகிறது. வடக்கில் மானிப்பாய் கிரீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் மட்டும்தான் அவ்வாறான கற்கை நெறி உண்டு. அதேசமயம் முதியோரியல் துறைக்குரிய மருத்துவ நிபுணர்களின் தொகையும் குறைவு. ஆனால் தமிழர் தாயகத்தில் வடக்கில் மட்டும் 60வயது கடந்த முதியோர் மொத்தம் இரண்டு இலட்சத்து 29ஆயிரத்து867பேருக்கு மேல் உண்டு. இதில் யாழ்ப்பாணத்தில் மட்டும் ஒரு லட்சத்து 54ஆயிரத்து 626 முதியோர் உண்டு. வடக்கில் மட்டும் மொத்தம் 28 முதியோர் இல்லங்கள் உண்டு. இவற்றுள் ஆகப் பெரியது கைதடியில் உள்ள அரச முதியோர் இல்லந்தான். அங்கே 200க்கும் குறையாத முதியோர் உண்டு. அதாவது வடக்கில் மட்டும் மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 20 விகிதம் முதியவர்கள். எனக்குத் தெரிந்து புலம் பெயர்ந்துபோன பிள்ளைகளில் ஒரு பகுதியினர் தமது முதிய பெற்றோரைப் பராமரிப்பதற்காக ஊரில் குறிப்பிட்ட காலத்துக்கு வந்து தங்கி நிற்கிறார்கள். அதிகம் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோருக்கு தொடர்ச்சியாக யாராவது ஒரு பிள்ளை வீட்டில் நிற்கின்றது. அது ஒரு கொடுப்பினை. ஆனால் எல்லாருக்கும் இல்லை. எனவே தமிழ் மக்கள் இதுதொடர்பில் வேகமாக முடிவெடுக்க வேண்டும். தாயகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும் சேர்ந்து இதுதொடர்பாக பொருத்தமான முடிவுகளை எடுக்கலாம். இதுவிடயத்தில் பின்வரும் விடயப்பரப்புகளின் மீது கவனத்தைக் குவிக்கவேண்டும். முதலாவதாக எத்தனை முதியவர்கள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள் என்பது தொடர்பாக சரியான புள்ளி விபரங்களைச் சேகரிப்பது. இரண்டாவது, முதியோரை பராமரிப்பதற்கான நிறுவனங்களைக் கட்டியெழுப்புவது. மூன்றாவது,பராமரிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் கற்கை நெறிகளை குறைந்தபட்சம் தனியார் கல்விக் கட்டமைப்புகளுக்கு ஊடாகத் தொடங்குவது.இது ஒரு தேசியக் கடமை. முதியோர் இல்லங்களைக் கட்டியெழுப்புவது என்பது தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் தேச நிர்மாணத்தின் ஒரு பகுதிதான். முதியோரைப் பராமரிப்பதற்கு மட்டுமல்ல கைவிடப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்கள், விதவைகள்,மாற்றுத் திறனாளிகள்,மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், போதைப்பொருள் பாவனையாளர்கள் போன்ற எல்லாத் தரப்பினரையும் பராமரிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இவையாவும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான கட்டமைப்புகள்தான். இனப்பிரச்சனைக்குத் தீர்வு வரும்வரையிலும் இந்தக் கட்டமைப்புகளை ஒத்தி வைக்க முடியாது. பராமரிக்கப்பட வேண்டிய பிரிவினர் பராமரிக்கப்படாமல் அனாதைகளாக விடப்படுவது என்பது ஒரு தேசிய அவமானம். எனவே தேசத்தைக் கட்டியெழுப்புவதன் ஒரு பகுதியாக மேற்கண்ட நிறுவனங்களைக் கட்டியெழுப்ப வேண்டும். நான் இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும்போது எங்கேயோ ஒரு தொலை கிராமத்தில் யாரோ ஒரு முதியவர் உதவிக்கு ஆளில்லாமல் இறந்து போயிருக்கலாம். https://www.nillanthan.com/7852/
-
ஐநா தீர்மானமும் தமிழகமும்: தமிழகம் ; புது டில்லி ; ஜெனிவா - நிலாந்தன்
ஐநா தீர்மானமும் தமிழகமும்: தமிழகம் ; புது டில்லி ; ஜெனிவா - நிலாந்தன் “சிறிலங்கா தொடர்பான ஐநா மனிதவுரிமை பேரவையின் 60/1 தீர்மானம் நீதியைப் பெற்றுத் தராது! தமிழர்கள் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்வதே முதல் பணி!’ இது ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின் தலைப்பாகும். ஈழப் போராட்டத்திற்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஈழ உணர்வாளர்கள் இணைந்து உருவாக்கிய கட்டமைப்பே ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பாகும். கடந்த 13ஆம் திகதி அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி கையெழுத்திட்டு வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையின் ஒரு பகுதி கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் தொடர்பாக பின்வருமாறு கூறுகிறது. “இந்த தீர்மானம் முந்தைய தீர்மானங்களில் இருந்து ( 30/1 (2015), 46/1 (2021) 51/1 (2022), 57/1 (2024) ) ஒருபடி கீழே இறங்கிவிட்டது. இந்த தீர்மானத்தில் முதல் முறையாக “பன்னாட்டு” என்ற சொல் அடியோடு நீக்கப்பட்டுள்ளது. இது பன்னாட்டு உதவியுடனான பொறுப்புக்கூறல் பொறிமுறை என்ற பேரவையின் முந்தைய உறுதிப்பாட்டிலிருந்து பின்வாங்கியதைக் குறிப்பதாகும். 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீரமானம் பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு பொறிமுறை ஒன்றை முன்வைத்தது. ஆனால், பத்தாண்டுகள் கழித்து அதே பேரவையில் முந்தைய நிலைப்பாட்டை மறுத்து உள்நாட்டுப் புலனாய்வு என்று பேசுகிறது” கடந்த 16 ஆண்டு கால ஜெனிவா மைய அல்லது மேற்கு நாடுகளை நோக்கிய ஈழத் தமிழ்த் தேசிய அரசியலின் தற்போதைய நிலை குறித்து தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு செயற்பாட்டாளர்களின் கருத்து அது. தமிழகத்திலிருந்து வரும் கருத்துக்களுக்கு ஒரே சமயத்தில் இனப்பரிமாணமும் பிராந்தியப் பரிமாணமும் ராஜதந்திரப் பரிமாணமும் உண்டு. ஏனென்றால் இந்தியப் பேரரசின் அரசியல் தீர்மானங்களின் மீது தாக்கம் செலுத்தக்கூடிய ஒரே சாத்திய வெளி தமிழகம்தான். ஈழத்தமிழர்கள் நொதிக்கச் செய்ய வேண்டியது தமிழகத்தைத்தான். தமிழகத்தைத் தவிர்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் நீதிக்கான போராட்டத்தில் நிர்ணயகரமாக முன்னேற முடியாது. ஈழத் தமிழர்களுக்காக இதுவரை தமிழகத்தில் 19பேர் தீக்குளித்திருக்கிறார்கள். ஈழத்தில் இடம்பெற்ற இனஅழிப்புக்கு எதிராக முதலாவது தீர்மானத்தை நிறைவேற்றியது தமிழகந்தான். உலகில் உள்ள ஆகப்பெரிய தமிழ் சட்ட மன்றம் அது. எட்டுக் கோடி மக்களைப் பிரதிநித்துவப்படுத்துவது. அங்கே நிறைவேற்றப்படட இனஅழிப்புக்கு எதிரான தீர்மானத்துக்கு அரசியல் மற்றும் ராஜதந்திர முக்கியத்துவம் உண்டு. அதுபோல முதலாவதாக இனஅழிப்பு நினைவுத் திடலை தஞ்சாவூரில் கட்டியெழுப்பியதும் தமிழகந்தான். ஆனால் கடந்த 16ஆண்டுகளாக தமிழகத்தின் பரந்தளவிலான கவனக் குவிப்புக்குள் ஈழத்தமிழர்கள் இல்லை. ஈழத் தமிழர் விவகாரம் தமிழகத்தில் நொதிப்பை,கொந்தளிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இல்லை. செம்மணிப் புதைகுழி திறக்கப்பட்டிருந்த பின்னணிக்குள், கடந்த யூலை மாதம் 26 ஆம்திகதி நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் சுவாமி சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. கடந்த ஒகஸ்ற் 19ஆம் திகதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஏற்பாட்டில் சென்னை,சுவாமி சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில்,”ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சாட்சியாக விளங்கும் செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி விசாரணை நடத்தக் கோரி ஐநா மன்றத்தை வலியுறுத்தியும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசிற்கு அனுப்பி ஒன்றிய அரசை வலியுறுத்தக் கோரியும்” கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இப்பேரணிகள் பற்றியும் அவற்றில் பேசப்பட்ட விடயங்கள் பற்றியும் ஈழத் தமிழர்களுடைய பிரதான ஊடகங்களில் பெரிய அளவுக்குக்குப் பேசப்படவில்லை. திபெத்தியர்களின் சுதந்திரப் போராட்டத்தில் இதுவரையிலும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் திபெத்துக்காக தீக்குளித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே திபெத்தவர்கள்தான். பிற இனத்தவர்களோ பிற நாட்டவர்களோ கிடையாது. ஆனால் ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்காக இதுவரை தமிழகத்தில் 19 தியாகிகள் தீக்குளித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தமிழகத்தவர்கள். இவர்களில் யாருமே இந்தியப் பேரரசின் ராஜதந்திர இலக்குகளை முன்வைத்துத் தீக்குளிக்கவில்லை. திருகோணமலையில் உள்ள எண்ணைக் குதங்களைக் கேட்டோ,அல்லது பலாலி விமான நிலையத்தை விஸ்தரிக்க வேண்டும் என்று கேட்டோ, அல்லது காங்கேசன் துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு பயணிகள் சேவையைத் தொடங்க வேண்டும் என்று கேட்டோ,அல்லது 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டோ அவர்கள் தீக்குளிக்கவில்லை. ஈழத் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும்;நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்டுத்தான் தீக்குளித்தார்கள். உலகிலேயே கடலால் பிரிக்கப்படும் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் கடலின் மறுபுறத்தில் இருக்கும் மக்களுக்காகத் தீக்குளித்தமை என்பது நவீன வரலாற்றில் முன்னெப்பொழுதும் இடம்பெற்றிராத ஓர் அரசியல் தோற்றப்பாடு. அந்த 19 தியாகிகளுக்காக ஈழத் தமிழர்கள் என்றென்றும் தமிழகத்துக்குத் தலை வணங்க வேண்டும். அரசியல்வாதிகள் தங்களுடைய கட்சி அரசியலைத்தான் செய்வார்கள். ஆனால் அந்த 19பேரும் அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கட்சிமைய அரசியலுக்காகத் தீக்குளிக்கவில்லை. நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பின் பிரச்சாரக் கூட்டங்களை படிப்படியாக ஒழுங்குப்படுத்தி வந்த ஒரு பின்னணிக்குள், ஈழத்தமிழர்களைப் பற்றியும் பேச வேண்டி வந்தது. ஈழத் தமிழ் அரசியலை அங்கே பேச வேண்டிய ஒர் அரசியல் தேவை இருப்பதைத்தான் அது காட்டுகின்றது. தமிழகத்தைத் தவிர்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் நீதிக்கான போராட்டத்தில் நிர்ணயகரமாக முன்னேற முடியாது. நீதிக்கான போராட்டத்தில் இம்முறை ஜெனிவா தீர்மானமானது தமிழ் மக்களின் நோக்கு நிலையில் பின்னடைவுதான். ஆனால் அந்தப் பின்னடைவு கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தொடங்கிவிட்டது. அந்தத் தேர்தலில் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் அரசாங்கத்துக்கு வாக்களித்தார்கள். அரசாங்கத்திற்கு ஏழு ஆசனங்கள். தமிழ்த் தேசிய கட்சிகளில் பெரியது ஆகிய தமிழரசுக் கட்சிக்கும் ஏழு ஆசனங்கள். இதனால் அரசாங்கம் தமிழ் மக்கள் தனக்கு ஆணை வழங்கியிருப்பதாக உலகம் முழுவதும் கூறித் திரிகின்றது. எனவே ஐநாவில் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பின்னடைவு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்டுவிட்டது. வாழ்வுரிமை இயக்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதுபோல ஐநாவின் முன்னய தீர்மானங்களில் இருந்தும் புதிய தீர்மானம் வழுக்கத் தொடங்கிவிட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்காவை பொறுப்பு கூற வைப்பதற்கான அலுவலகம் ஒன்று மனித உரிமைகள் பேரவையில் உருவாக்கப்பட்டது. இப்பொழுது நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானமானது அந்த அலுவலகத்தின் பணியை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கின்றது. அந்த அலுவலகமானது சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்குரியது. அது ஒரு பன்னாட்டு அலுவலகம். அதாவது சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் ஏற்பாடு ஏற்கனவே சர்வதேசப் பரிமாணத்தைப் பெற்றுவிட்டது. அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு இன்றுவரை விசா இல்லை. அனுர ஜனாதிபதியாக வந்த பின்னரும் விசா இல்லை. மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வந்து போன பின்னரும் விசா இல்லை. இவ்வாறு ஏற்கனவே சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் விடயம் சர்வதேச மயப்பட்ட பின்னரும்,புதிய தீர்மானமானது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அமைத்துலக உதவிகளோடு பலப்படுத்த வேண்டும் என்று கூறுகின்றது. உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை பலப்படுத்துவதென்றால் பிறகு எதற்கு சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு பன்னாட்டுக் கட்டமைப்பு? சில சமயம் ஐநா கூறக்கூடும் அது ஒர் அழுத்தப் பிரயோக உத்தி என்று.அப்படிச் சொன்னாலும் ஒரு கேள்வி உண்டு.அது எதற்கான அழுத்தம்? இலங்கையைப் பொறுப்புக்கூற வைப்பதற்கான அழுத்தமா? அல்லது இலங்கை சீன விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மாறுவதில் அதற்குள்ள வரையறைகளை உணர்த்துவதற்கான ஓர் அழுத்தமா? எனவே ஐநா தீர்மானத்தில் இருந்து தமிழ்மக்கள் படிக்க வேண்டியது என்னவென்றால்,மேற்கத்திய நாடுகளை நோக்கிய ஈழத் தமிழ் அரசியலானது அதாவது குறிப்பாகச் சொன்னால் ஐநாவை நோக்கிய ஈழத் தமிழ் அரசியலானது புதிய மாற்றங்களையும் புதிய வியூகங்களையும் வேண்டி நிற்கிறது என்பதுதான். முதலில் ஈழத் தமிழர்கள் தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ருசி கண்ட அரசாங்கம் இனி வரக்கூடிய தேர்தல்களிலும் தமிழ் மக்களின் ஆணையைப் பெற முயற்சிக்கும். எனவே முதலில் ஈழத் தமிழர்கள் தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக் கொள்ளவேண்டும். அதன்பின் உலகத்தில் தமக்கு ஆதரவான சக்திகளைத் திரட்டிக் கொள்ள வேண்டும். தங்களை ஒரு தேசமாகத் திரட்டிக் கொண்டால்தான் ஓர் அரசைப்போல சிந்திக்கலாம்;செயற்படலாம். இந்தக் கட்டுரை எந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கையில் தொடங்கியதோ அதே அறிக்கையின் இறுதிப் பகுதியை இங்கு கூறி முடிக்கலாம்… “தமிழ்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஈழ ஆதரவு ஆற்றல்கள் தத்தமது அரசுகளை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திருப்புவதில் முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அரசியல் வலுப்பெற்றால்தான் இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றியமைக்க முடியும். இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாமல் மேற்குலக நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்துவிடப் போவதில்லை. https://www.nillanthan.com/7847/
-
யாழ். போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவு – விசேட தபால் தலை வெளியீடு
யாழ். போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவு - விசேட தபால் தலை வெளியீடு adminOctober 18, 2025 அந்நிகழ்வில் மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராசா , சி.சிறிதரன் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி , யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம. பிரதீபன் , வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ,வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, 1850ஆம் ஆண்டு “ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை” என்ற பெயரில், அந்த காலத்திய அரசாங்க அதிபர் மற்றும், அவருடைய நண்பர்களுடன் இணைந்து சிறிய அளவில் நிறுவப்பட்டது. பின்னர், 1907ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலைக்கு “யாழ்ப்பாணம் சிவில் வைத்தியசாலை” என்ற புதிய பெயர் வழங்கப்பட்டு, அதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன. அதற்குப் பிறகு, 1956ஆம் ஆண்டு, இது “யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை” என மாற்றப்பட்டது. 1980ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலை “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை” (Jaffna Teaching Hospital) என பெயர் மாற்றம் பெற்று, அன்றிலிருந்து அதே பெயரில் தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், எதிர்காலத்தில் “தேசிய வைத்தியசாலை” (National Hospital) என்ற அடிப்படையில் இந்த வைத்தியசாலை உயர்த்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு சேவையை நினைவு கூர்ந்து, பல்வேறு விழாக்கள் மற்றும் நிகழ்வுகள் வைத்தியசாலையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/221685/
-
போர்நிறுத்த ஒப்பந்தம் 2025
போர்நிறுத்த ஒப்பந்தம் 2025 sudumanal image: Aljazeera காஸாவில் எஞ்சியிருந்த 48 பணயக் கைதிகளில் 20 பேரை கமாஸ் விடுவித்துவிட்டது. மிகுதி 28 பேரும் இஸ்ரேலிய குண்டுவீச்சின் போது இறந்துவிட்டார்கள் என கமாஸ் உறுதிப்படுத்திவிட்டது. அவர்கள் பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன மக்களோடு இறந்த உடலங்களாக இடிபாடுகளின் கீழ் சிதைந்துபோயிருப்பார்கள். 24 பணயக் கைதிகளின் உடலங்களும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. நான்கு உடலங்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு இஸ்ரேலிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர்கள் எல்லோருமே உண்மையில் இறந்துவிட்டார்களா அல்லது கொஞ்சப் பேரை கமாஸ் வைத்திருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய எந்த ஆதாரமுமில்லை. அவர்கள் இறந்துவிட்டதாகவே எதிரிகளும் நம்புகிறார்கள். காஸாவே இடிபாடாகக் கிடக்கும்போது தேடுதல் என்பதற்கு ஏதும் அர்த்தம் இருக்குமா என்ன. அதேபோல் இஸ்ரேலிய சிறையில் கொல்லப்பட்ட பலஸ்தீன கைதிகளின் உடலங்களும் வந்திருக்கின்றன. அவர்கள் மோசமான சித்திரவதைக்கு உட்பட்ட தடயங்கள் உடலில் இருப்பதாக ஐநா செயலாளர் நாயகம் அறிவித்திருக்கிறார். இஸ்ரேலிய சிறையிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தாம் பறிகொடுத்த காலங்களின் மீதேறி மீண்டிருக்கிறார்கள். இறந்துவிட்டார்கள் என நம்பி இருந்த சில குடும்பங்களின் முன் மறுபிறவி எடுத்து வந்ததுபோல் சில கைதிகள் மீண்டு வந்திருக்கிறார்கள். சுமார் 30 வருடங்களாக, 20 வருடங்களாக கைதிகளாக இருந்தவர்களும் வந்திருக்கிறார்கள். மறுபக்கத்தில் கமாஸின் பிடியிலிருந்த பணயக் கைதிகள் இஸ்ரேல் போய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இருதரப்பிலும் இவர்களோடு தொடர்புடைய குடும்பங்கள் நட்புகள் என நெருக்கமானவர்கள் தமது கட்டியணைப்புக்குள்ளும் கண்ணீருக்குள்ளும் மகிழ்ச்சியை தெரிவித்து தீர்த்துவிட முடியாதபடி திணறிப் போய் நிற்கும் காட்சிகளை (இருதரப்பிலும்) பார்க்கிறபோது போரின் கொடுமையை சபிக்காமல் இருக்க முடியவில்லை. இன்னும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருப்பதாக சொல்கிறார்கள். எல்லோரையுமே விடுதலை செய்வது என்பது -ட்றம்ப் இன் ஆலோசகர்கள் வடிவமைத்து, நெத்தன்யாகுவுடன் மூடிய அறைக்குள் இருந்து வெட்டித் திருத்தப்பட்டு வெளிவந்த- போர்நிறுத்த உடன்படிக்கையின் விதிகளில் ஒன்று. அந்தக் கைதிகளும் முழுமையாக வந்து சேர்வார்கள் என நேரம்சமாகவே நம்புவோம். இஸ்ரேல் இதுவரை விடுவித்தவர்களில் பலரும் மேற்குக் கரை பலஸ்தீன கைதிகள். 250 அரசியல் கைதிகளும் இதற்குள் அடங்குவர். அவர்களில் 157 பேர் யசீர் அரபாத் வழிநடத்திய பி.எல்.ஓ (பலஸ்தீன விடுதலை அமைப்பு) இன் இராணுப் பிரிவான Fatah உறுப்பினர்கள் ஆவர். 65 பேர் கமாஸ் உறுப்பினர்கள். 1718 பேர் எந்த குற்றமுமில்லாமல் ஆயிரக் கணக்கில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் ஒரு பகுதியினர். இதில் இரண்டு பெண்களும் 18 வயதுக்கு உட்பட்ட 5 சிறுவர்களும் அடங்குவர். இது இவ்வாறிருக்க இஸ்ரேலிய ஊடகங்கள் “கமாஸ் விடுவித்த 20 பேர்களிலும் ஒரேயொரு பெண் மட்டும்தான் உள்ளடங்குகிறார். இறந்தவர்கள் எல்லோரும் பெண்களாக இருக்கின்றனர்” என்ற அவதூறை முன்வைத்திருக்கின்றன. அப்பட்டான பிரச்சார உத்தி இது. ஒக்ரோபர் 7 இல் 251 பேர் கமாஸ் இனால் பணயக் கைதிகாக பிடிக்கப்பட்டு காஸாவுக்குக் கொண்டவரப்பட்டனர். அதில் 41 பேர் பெண்கள். நவம்பர் 2024 இல் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் 31 பெண் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். இந்த அமளிக்குள் அதை வசதியாக சியோனிச ஊடகங்கள் மறைத்துவிடுகின்றன. அதேநேரம் இந்த ஒப்பந்தம் ட்றம் எழுதிய போர்நிறுத்த தீர்ப்பேயொழிய, பலஸ்தீன பிரச்சினைக்கான தீர்வல்ல. பணயக்கைதிகளைத் தேடி நெத்தன்யாகு ஆடிய வேட்டை 76’000 பலஸ்தீனர்களின் உயிரைக் காவுகொண்டும், காஸாவின் பௌதீகக் கட்டமைப்புகள் எல்லாவற்றையும் நாசமாக்கியும் தோல்வியில் முடிந்தது. கடைசியில், எஞ்சிய பணயக் கைதிகளை மீட்க ட்றம்ப் இனூடாக நெத்தன்யாகு கண்டுபிடித்திருக்கிற (அல்லது அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து கண்டுபிடித்திருக்கிற) வழிதான் இந்த ஒப்பந்தம். கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்ட ஒரு தேசத்தினை பாதுகாப்பு அரணாக கமாஸ் நின்று எதைச் சாதிக்க முடியும் என்ற இயலாமை, இரண்டு வருடங்களாக போர் துரத்தித் திரிந்த மண், உயிர்களை சப்பித்துப்பிய போர் அரக்கன், ஒவ்வொருநாளும் அங்குமிங்குமாக ஓடிய மக்களின் அவலம், கைதுசெய்யப்பட்ட அல்லது காணாமலாக்கப் பட்ட மனிதர்கள் குறித்த துயர், பட்டினி மரணம், குழந்தைகளின் தளிர் உடல்கள் சிதறிக் கிடக்கும் காட்சி, அதன் வலி, மருத்துவமனை தகர்ந்த நிலம். மருந்துகள் இல்லா உயிரறுநிலை, இந்த நிலைமைக்குள் நின்று கமாஸ் சிந்திக்க வேண்டிய தருணம் என எல்லாமுமாக ஒரு தற்காலிகமாகவேனும் அமைதிதேவைப்பட்டது. image: Aljazeera சம்பந்தப்பட்ட இருதரப்பும் ஓர் உருப்படியான மூன்றாவது தரப்பின் துணையுடன் அமர்ந்திருந்து உரையாடி பேரம் பேசி புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு என்றெல்லாம் எட்டப்பட்ட ஒப்பந்தம் அல்ல இது. அது சியோனிச இஸ்ரேலின் தோற்றமும், அது ஏற்படுத்திய அழிவும் தொடர் சண்டித்தனமும், அகண்ட இஸ்ரேலுக்கான அயல்நாட்டு எல்லை ஆக்கிரமிப்பும், அத்தோடு அந்த நாடுகளின் இறைமையை தூசாக மதித்தல், குண்டுவீசுதல் என்ற தொடர் பயங்கரவாதச் செயற்பாட்டு வரலாறு கொண்ட நிலையில் இந்த சமாதான உருவாக்க வழிமுறையெல்லாம் சாத்தியமுமில்லை. பணயக் கைதிகளை விடுவித்தலும், கமாஸை ஆயுதநீக்கம் செய்தலுமே இந்த ஒப்பந்தத்தின் கள்ள இலக்கு. இரண்டும் இஸ்ரேலின் காட்டுக் கத்தலாலும் காட்டுமிராண்டித்தனத்தாலும் இயலவில்லை. சர்வதேச அமைதிப்படை என்ற பெயரில் அமெரிக்கா தலைமையில் அதன் அடிவருடி அரபு நாடுகளின் படைகளும் கஸாவுக்குள் புகுந்து காலவோட்டத்தில் கமாஸ் ஒழிப்பில் இறங்கும் சாத்தியம்தான் மிக அதிகமாக உள்ளது. “கமாஸ் ஆயுதங்களை களைய வேண்டும். இல்லையேல் அந்த வேலையை நாம் செய்வோம்” என ட்றம்ப் மிரட்டுகிறார். இன்னொரு இடத்தில் தனது விமானத்தினுள் நின்று பத்திரிகையாளருக்கு சொல்கிறபோது, “அவர்கள் தாம் ஆயுதங்களைக் களைய கால அவகாசம் கேட்டிருக்கிறார்கள்” என்கிறார். ஒப்பந்தத்தில் என்னதான் எழுதப்பட்டிருக்கிறது. உடனடி ஆயுதக் களைவா அல்லது கால அவகாசத்தடனான களைவா என தெரியவில்லை. இரு-அரசுத் (two-state) தீர்வின் மூலம் பலஸ்தீன அரசை அங்கீகரித்து, பகைநிலைமையை கணக்கில் எடுத்து எல்லைகளை கறாராக வகுத்து, அதன் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் எந்த அம்சமும் இந்த ஒப்பந்தத்தில் கிடையாது. அப்படியான நோக்கத்தில் ட்றம்ப் பேசியதும் கிடையாது. மாறாக சர்ச்சைக்குரிய ஜெரூசலமை ஏற்கனவே இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த ட்றம்ப் வரைந்த ஒரு சமாதான ஒப்பந்தம் என்னவிதமான அரசியல் சாணக்கியத்தைக் கொண்டதாக இருக்கும் என சொல்ல வேண்டியதில்லை. தொடர்ச்சியாக இரு-அரசு தீர்வை எதிர்க்கும் நிகழ்ச்சிநிரலைக் கொண்ட சியோனிஸ்டுகளின் அண்மைக் கால சாட்சியாக நெத்தன்யாகு ஐநாவில் -வெறும் இருக்கைகளைப் பார்த்தபடி- பேசிய கடைசி உரை அமைந்திருந்தது. “பலஸ்தீன அரசை உருவாக்குவதை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என்றார் நெத்தன்யாகு. இதுதான் வரலாறு. கமாஸ் உம் ஆரம்பத்தில் இரு-அரசுத் தீர்வை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. அதாவது கமாஸ் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை, இஸ்ரேல் பலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை. என்றபோதும் இரு-அரசுத் தீர்வை முன்வைத்து எல்லைகளை வரையறுத்த (யசீர் அரபாத் பங்குகொண்ட) ஒஸ்லோ ஒப்பந்தத்தை (1993) சிதைப்பதற்கு கமாஸின் ஓர்-அரசுத் (one-state) திடசங்கற்பம் தமக்கு உதவி செய்யும் என சியோனிஸ்டுகள் கணித்திருந்தனர்.அதனால்தான் கமாஸ் இன் தோற்றத்தை இஸ்ரேல் ஆதரித்து ஊக்குவித்தது. உதவிசெய்தது. Fatah க்கு எதிரான கமாஸின் சகோதர இயக்கப் படுகொலைக்கு எண்ணெய் ஊற்றியது. இப்போ கமாஸ் ஓர்-அரசுத் (one state) தீர்வு பற்றி பேசுவதில்லை. image: npr .org பலஸ்தீன மக்களின் இறைமையை மதிக்க வேண்டும். அவர்கள் தம்மைத் தாமே ஆள உரிமை கொண்டவர்கள். ஆள்பவர்கள் யார் என்பதை அவர்களேதான் தீர்மானிக்க வேண்டும். கமாஸ் தாம் அதில் தலையிடப் போவதில்லை என்று திட்டவட்டமாச் சொல்லியிருக்கிறது. ஒரு சுதந்திரமான தேர்தலை நடத்த, உறுதிப்படுத்த ஐநாவால் முடியாதா என்ன. எப்போதும் நாகரிகத்தையும் ஜனநாயகத்தையும் கற்றுத்தர வகுப்பெடுக்கும் மேற்கின் காலனிய மனோபாவம் பலஸ்தீன அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்க வருகிறது. ஈராக்கைச் சிதைத்த போர்வெறியன் ரொனி பிளேயர் மேயராக (ட்றம் உடன்) இருப்பாராம். பிரிட்டிஸ் சாம்ராச்சியம் 1948 இல் உருவாக்கிய இந்தப் பிரச்சினை வளர்ந்து இந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஒரு குற்றவுணர்வுகூடக் கிடையாதா இந்த முன்னாள் காலனியவாதிகளுக்கு. பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்காத இந்த ஒப்பந்தம் நவகாலனிய கட்டமைப்புடன் முன்வைத்திருக்கிற செற் அப் இது. இந்த சூதாட்டம் பலஸ்தீனப் பிரச்சினையை இன்னும் சேறாட வைக்கும் சாத்தியமே அதிகம் உள்ளது. சமாதான காலம் என வர்ணிக்கப்படும் இந்தக் காலத்தின் ஆயுள் எவளவு குறுகியதாய் அமையும் என தெரியாது. அது பலஸ்தீன மக்கள் மூச்சுவிடவும், தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், நிம்மதியாய் இருந்து பசியாற உண்ணும் கனவை ஓரளவேனும் நிறைவேற்றும் காலமாகவும், குடும்பங்கள் ஒன்றுசேரும் காலமாகவும், இஸரேலினால் பிடித்துச் செல்லப்பட்ட கைதிகளின் வரவும் மகிழ்ச்சியும் கண்ணீரும் புத்துணர்வும் வாழ்தலின் மீதான உந்துதலும் என ஒரு மனிதஜீவியாய் அவர்களை தூக்கி நிறுத்தும் காலம். இது நீண்டு வளர வேண்டும். ஒரு தெளிவான அரசியல் தீர்வின் எல்லைவரை இது நீள வேண்டும் என அவாவுதல் ஒரு மனித வேட்கை. ஒரு கனவு. ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். பலஸ்தீனம் என்ற அரசை உறுதிசெய்வதுவரை போகாத எந்த ஒப்பந்தமும் நிரந்தரமான அரசியல் தீர்வை தரப்போவதில்லை, மீண்டும் நிம்மதியாக சனம் இருக்க வழிசமைக்கப் போவதுமில்லை என்பதை மட்டும் வேதனையோடு சொல்ல வேண்டியுள்ளது! ravindran.pa https://sudumanal.com/2025/10/17/போர்நிறுத்த-ஒப்பந்தம்-2025/
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
மேலும் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வௌிப்படுத்திய இஷாரா! கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரால் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். விசாரணையின் போது, தனது முன்னாள் காதலரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஒருவர் மூலம், 'கெஹெல்பத்தற பத்மே' என்பவரைத் தான் அறிந்துகொண்டதாக அவர் கூறியுள்ளார். கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் துப்பாக்கிதாரி என்று கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க என்பவரை 'பத்மே' தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் இஷாரா விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். " எப்படியாவது அவனை வைத்து வேலையைச் செய்து கொள்" என்று 'பத்மே' தனக்குக் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, அவருடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டு கொலையைச் செய்யுமாறு தான் அவரை இயக்கியதாகவும் இஷாரா தெரிவித்துள்ளார். 'கெஹெல்பத்தற பத்மே' உடனான நட்பு காரணமாக, கொலைக்காக எந்தப் பணமும் பெறவில்லை என்றும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட அதே நாளில், அதாவது கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு, தான் வெலிபென்ன பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் இரவு தங்கியிருந்ததாகவும், அடுத்த நாள் 'கெஹெல்பத்தற பத்மே'வின் நெருங்கிய நண்பரான மத்துகம ஷான் என்பவரின் நெருங்கிய நண்பர் ஒருவரின் தொடங்கொட பிரதேசத்தில் உள்ள வீட்டில் ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு, ஏப்ரல் 13 ஆம் திகதி, தொடங்கொடவில் இருந்து மித்தெனிய பிரதேசத்தில் அவர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றுள்ளார். புத்தாண்டுக் காலம் என்பதால், பொலிஸ் அதிகாரிகள் வருடப் பணிச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததால், அன்றைய தினத்தை அவர்கள் தெரிவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அங்கு தங்கியிருந்த அவர், மே மாதம் 6 ஆம் திகதி, அதாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற நாளில், யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகள் அன்றைய தினம் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்ததால், அந்த நாளைத் தெரிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் தான் எந்தவொரு கையடக்கத் தொலைபேசியையும் பயன்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், இஷாரா செவ்வந்தி இன்று மத்துகம பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பின்னர் அவர் தங்கியிருந்த மித்தெனிய பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கும் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அடைக்கலம் கொடுத்த வெலிபென்ன வீட்டில் உரிமையாளரையும், அவருடைய மருமகனும் அளுத்கம பொலிஸில் இணைக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளையும் கொழும்பு குற்றப் பிரிவு கைது செய்துள்ளது. அத்துடன், தொடங்கொட வீட்டில் அடைக்கலம் கொடுத்த நபரையும், மித்தெனிய பிரதேசத்தில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த வீட்டில் இருந்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். எவ்வாறாயினும், அந்தக் கைது செய்யப்பட்ட பெண், 'ஹரக் கட்டா'வைக் கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ஊழியரின் மனைவி என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் வழிகாட்டுதலின் கீழ், கொழும்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சில்வாவின் மேற்பார்வையில் கொழும்பு குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்றன. https://adaderanatamil.lk/news/cmgv328sh012oo29ntya4do2i
-
கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை
கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை adminOctober 17, 2025 மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள் போட்டியிடுவோம் என கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் , பிறகு 13ஆம் திருத்த சட்டத்தை அடியோடு மறுக்கிறோம் என்கின்றனர். அதனால் அவர்களுக்கு அது தொடர்பில் சரியான கருத்து இல்லை என்பதே உண்மை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஒரு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சவிற்ஸ்லாந்தில் இடம் பெற்ற சமஸ்டி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது சுவிஸ் அரசாங்கம் சமஸ்டித் தீர்வினை தமிழ் மக்களுக்கு வழங்க இருப்பது போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார் ஆனால் உண்மை அதுவல்ல அங்கே பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தலைவர்களை சுவிஸ் அரசாங்கம் அழைத்தது சமஸ்டி தொடர்பான ஒரு கற்பிதத்தை வழங்குவதற்கு மாத்திரமே தவிர வேறு எதற்கும் அல்ல. அங்கு அதிகம் வந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் எனவே அவர்கள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விடயங்களை முன் கொண்டு செல்வதாக தெரிவித்தார்கள். ஆனால் அது தொடர்பான எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை எனவே இதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி எமக்கு கிடைக்கின்ற குறைந்தபட்ச அதிகாரமான மாகாண சபை தேர்தலை நடத்தி அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனால் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாங்கள் அதிலே போட்டியிடுவோம். தேர்தல் தொடர்பில் பேசப்பட வேண்டும் என்று கூறுகிற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 13ஆம் திருத்தச் சட்டம் தேவை இல்லை என கூறி வருகின்றனர். எனவே இது தொடர்பில் அவர்களுக்கு சரியான கருத்துக்கள் இல்லை என்றார். https://globaltamilnews.net/2025/221656/
-
தமிழ்த் தேசியப் பேரவை அடியோடு குலைகின்றது; ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் கஜேந்திரகுமார் எம்.பி. கடும் அதிருப்தி!
தமிழ்த் தேசியப் பேரவை அடியோடு குலைகின்றது; ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் கஜேந்திரகுமார் எம்.பி. கடும் அதிருப்தி! அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை மையப்படுத்திய அரசியலமைப்பின் 13ஆம் திருத்தந்தை யைப்படுத்திய மேற்கொள்வதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டணியுடனான அரசியற் கூட்டில் (தமிழ்த் தேசியப் பேரவை) இருந்து வெளியேறுவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் 13ஆவது திருத்தத்தை முற்றாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பில் அவர்கள் தமக்குள் ஒன்றுகூடிக் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளனர். இதையடுத்தே, தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கும் போது செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு முரணாக அந்தக் கட்சிகள் நடந்துகொண்டதாகக் கருதி, பேரவையில் இருந்து வெளியேறுவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார். அதில், பேரவையில் பங்காளித்தரப்பாக உள்ள ஜனநாயகத்தமிழ்த் தேசியக் கூட்டணியினரின் செயற்பாட்டில் அதிருப்தி தெரிவித்ததுடன், கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்ததாவது:- ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து 13ஆவது திருத்தம் தொடர்பில் கதைத்துள்ளனர். நாங்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக்கூட்டணியோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஒற்றையாட்சி முறைக்குள் தமிழ்த் தேசிய அரசியலை நடத்துவதற்கு இடமில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அத்துடன், 13ஆவது திருத்தம் தமிழர்களுக்கான தீர்வல்ல, 'ஏக்கிய ராஜ்ஜிய' யோசனைகளுக்கும் இடமில்லை என்றும் தெளிவாகக் கூறியுள்ளோம். இவற்றுக்கெல்லாம் இணங்கியே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினர் எம்முடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டனர். ஆனால். எங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு முரணாகவே தற்போது அவர்கள் செயற்பட்டு வருகின்றனர். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் எம்முடன் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு எம்மூடாகப் பதவிகளைப் பெற்றுவிட்டு தற்போது ஒப்பந்தங்களுக்கு முரணாகச் செயற்படுகின்றமையை ஏற்க முடியாது. என்பதுடன், இந்தச் செயற்பாட்டை அவர்கள் தாமாகவே ஒப்பந்தத்தில் இருந்து விலகிய செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம். நாங்கள் மீண்டும் மீண்டும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினருக்கு வலியுறுத்துவது என்னவென்றால், தமிழ் மக்களுக்கு மோசமான தீங்குகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளைச் செய்யாதீர்கள் என்பதே. இந்தச் செயற்பாடுகள் சுமந்திரன் போன்றோரின் தமிழர் விரோதச் செயற்பாட்டை வலுப்படுத்துவதாகவே அமைந்துவிடும் என்றார். https://newuthayan.com/article/தமிழ்த்_தேசியப்_பேரவை_அடியோடு_குலைகின்றது;_ஜனநாயகத்_தமிழ்த்_தேசியக்_கூட்டணியில்_கஜேந்திரகுமார்_எம்.பி._கடும்_அதிருப்தி!
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
செவ்வந்தியை விட முக்கியமானவராக மாறிய யாழ்ப்பாண ஜே.கே.பாய்: வெளிநாட்டு ஆசையில் சிக்கினாரா தக்ஷி? October 16, 2025 குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணையில், இஷாரா செவ்வந்தியை மொரீஷியஸ் பெண் போல ஆள்மாறாட்டம் செய்து மொரீஷியஸுக்கு தப்பிச் செல்ல கெஹல்பத்தர பத்மே திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்ட பிறகு, இந்த நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட மொரீஷியஸ் பாஸ்போர்ட் நேபாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த பாஸ்போர்ட்டை இஷாராவுடன் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட ஜே.கே. பாய் என்ற நபர் தயாரித்தார். போலி பாஸ்போர்ட்டில் மொரீஷியஸ் குடிவரவு மற்றும் குடியேற்ற அலுவலகத்தின் சில அதிகாரப்பூர்வ முத்திரைகளை மட்டும் ஒட்டிய பிறகு, அவர் மொரீஷியஸுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.கே. பாய், துபாய்க்கு அடிக்கடி வருபவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் ஒரு ஆவணமற்ற குற்றவாளி என்றும், குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதில் ஈடுபட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. சர்வதேச மாஃபியா கும்பல்களுடன் அவருக்கு பல தொடர்புகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. கெஹல்பத்தர பத்மே, இஷாரா செவ்வந்தியை நாட்டை விட்டு தப்பிச் செல்ல ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. கெஹல்பத்தர பத்மே இதற்காக ஜே.கே. பாய்க்கு ரூ. 10 மில்லியன் வழங்கியுள்ளார். இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டாலும், மேலும் விசாரணை தேவை என்று சிஐடியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து இஷாரா செவ்வந்தி மற்றும் ஜே.கே. பாயிடம் நீண்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த அதிகாரி கூறினார். விசாரணைகளில் இருந்து இதுவரை தெரியவந்துள்ளபடி, ஜே.கே. பாய் கடைசியாக 2023 ஆம் ஆண்டு துபாய்க்கு நாட்டை விட்டு வெளியேறினார். அவர் நாட்டின் விமான நிலையம் அல்லது துறைமுகம் வழியாக சட்டப்பூர்வமாக திரும்பியதாக எந்த தகவலும் இல்லை என்றும் சிஐடியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இஷாரா செவ்வந்தியை இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை ஜே.கே. பாயின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் தங்கியிருப்பதை சிஐடி அதிகாரிகள் கண்டுபிடித்த பிறகு, அவரைப் பிடிக்கும் ரகசிய நடவடிக்கை இலங்கை காவல்துறை அதிகாரிகளின் மிகக் குறைந்த குழுவை மட்டுமே உள்ளடக்கியது. அண்டை நாட்டின் பொது புலனாய்வுப் பிரிவும் இதற்கு உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. இலங்கை ஹோட்டல் முன்பதிவு இஷாரா சேவ்வந்தி நேபாளத்தில் தங்கியிருப்பது தெளிவாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து, இன்டர்போலின் உதவியுடன் அவரைக் கைது செய்யும் நடவடிக்கையை மூத்த துணை காவல் ஆய்வாளர் அசங்க கரவிட்ட உள்ளிட்ட சிஐடி அதிகாரிகள், காவல் ஆய்வாளர் பிரியந்த வீரசூரியவின் மேற்பார்வையில் 6 வாரங்களுக்குத் திட்டமிட்டனர். இலங்கை வெளியுறவு அமைச்சகம் நேபாள வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கைக்கான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, மேற்கு மாகாணத்தின் வடக்கு மாவட்ட குற்றப் பிரிவின் இயக்குநர் உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் காவல் ஆய்வாளர் கிஹான் டி சில்வா ஆகியோர் இந்த நடவடிக்கைக்காக நேபாளத்திற்கு அனுப்பப்பட தேர்வு செய்யப்பட்டனர். இலங்கை ஹோட்டல் முன்பதிவு அதன்படி, இந்த இரண்டு அதிகாரிகளும் இஷாராவைக் கைது செய்யும் நடவடிக்கைக்காக 11 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறினார்கள். கடந்த சில நாட்களாக ரோஹன் ஒலுகல உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி வந்தார். அவர் பல நாட்களாக தனது கடமை நிலையத்திற்கு கூட வரவில்லை. 11 ஆம் திகதி காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இலங்கை விமானத்தில் நேபாளம் சென்றபோது, அவரது உடல்நிலை சீராக இருந்தது. அவர்கள் நேபாளத்தில் தரையிறங்கியபோது, அவர்களை வரவேற்க நேபாளத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் அங்கு இருந்தனர். அவர்களுடன் தூதரகத்திற்கு வந்த ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா, முதலில் அங்குள்ள இலங்கை தூதரக அதிகாரிகளைச் சந்தித்தனர். இன்டர்போலின் நேபாள கிளையின் அதிகாரிகளுடனும் அவர்கள் கலந்துரையாடினர். இலங்கை ஹோட்டல் முன்பதிவு இஷாராவைப் பிடிக்கும் நடவடிக்கையில் துபாயில் உள்ள மற்றொரு குழு ஏற்கனவே ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இஷாராவை நேபாளத்திற்கு அழைத்து வந்து தங்குமிடம் அளித்த ஜே.கே. பாய் பற்றி அவர்தான் அறிந்திருந்தார். அந்த நேரத்தில் ஜே.கே. பாய் ஏற்கனவே நேபாளத்தில் இருந்தார். இஷாரா செவ்வந்தியைப் பிடிக்கும் நடவடிக்கைக்கு நேபாளத்தில் உள்ள உள்ளூர் காவல்துறையின் ஒரு குழு ஏற்கனவே தயாராக இருந்தது. ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா அந்தக் குழுவுடன் சென்று முதலில் ஜே.கே. பாய்யைக் கைது செய்தனர். அந்த நேரத்தில் அவர் காத்மாண்டு அருகே தங்கியிருந்தார். சோதனையின் போது, அவரது சரியான இடம் குறித்து எந்த அதிகாரிக்கும் தெரியாது. எனவே, ஜே.கே. பாயை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை துபாயில் இருந்து வந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குழுவின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. கைது செய்யப்பட்ட பிறகு விசாரணையின் போது, ஜே.கே. பாய் தனக்கு எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டார், ஆனால் இந்த நாட்டிலிருந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒரு அதிகாரியின் மொபைல் போனில் இருந்து அழைப்பு வந்த பிறகு அவரது வாய் திறந்தது. அந்த அழைப்பு ஒரு உயர் போலீஸ் அதிகாரியிடமிருந்து வந்தது. அந்த அதிகாரி வீடியோ அழைப்பு மூலம் ஜே.கே. பாயை அழைத்தார். “பாய், எங்களுக்கு உதவுங்கள். இஷாரா எங்கே என்று சொல்லுங்கள்,” என்று அவர் உரையாடலைத் தொடங்கினார். “இஷாரா யார், எனக்கு எதுவும் தெரியாது,” என்று ஜே.கே. பாய் கூறினார். ஜே.கே. பாய்க்கு சிங்களம் நன்றாகப் பேசத் தெரியாது. அவருக்கு சிங்களம் நன்றாகப் புரிந்தாலும், சில வார்த்தைகளில் மட்டுமே சிங்களத்தில் பேசத் தெரியும். “நீ உன் மனைவியையும் குழந்தைகளையும் நேசிக்கிறாய், இல்லையா? தற்போது சிஐடி அவர்கள் வீட்டைச் சுற்றி வளைத்துள்ளது. இந்த விஷயத்தில் நீ எங்களுக்கு உதவவில்லை என்றால், நாங்கள் அனைவரையும் கைது செய்வோம். நீ கஷ்டப்பட வேண்டியிருக்கும், பாய்.” ஜே.கே. பாய் காவல்துறைத் தலைவரின் வலையில் சிக்கினார். “ஐயா, அந்தப் பெண் இப்போது எங்கே இருக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவளை ஒரு முகவரிடம் ஒப்படைத்தேன்.” சுமார் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் யோசித்த பிறகுதான் பாய் வாய் திறந்தார். ஜே.கே. பாய் நேபாளத்தில் உள்ள ஒரு தரகரைப் பற்றி ஏதோ சொல்லவிருந்தார். ஜே.கே. பாய் அளித்த தகவலின் அடிப்படையில் நேபாள போலீசார் அந்த தரகரைக் கைது செய்தனர். விசாரணையின் போது, தரகர் இரண்டு வாரங்களுக்கு முன்பு செவ்வந்தி வேறு இடத்திற்குச் சென்றுவிட்டதாகக் கூறினார். அது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார். ஏனென்றால் அவர் வேறொரு தரகருக்கு வேலையை ஒதுக்கியிருந்தார். தரகரைத் தொடர்பு கொண்டபோது, இஷாரா நாட்டில் பயன்படுத்தும் ஒரு மொபைல் போன் எண்ணைத் தவிர, அவரது சரியான இருப்பிடம் குறித்து வேறு எதையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றிலிருந்து, இஷாராவைப் பிடிக்கும் நடவடிக்கை அவரது மொபைல் போன் எண் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகளை ஆராய்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரது மொபைல் போன் பக்தபூர் மாவட்டத்தில் இயங்கி வருவது தெரியவந்தது. இந்தப் பகுதி இலங்கையில் உள்ள நுவரா எலியாவைப் போன்றது. நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கின் கிழக்கு முனையில், தலைநகர் காத்மாண்டுவிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் (8.1 மைல்) தொலைவில் அமைந்துள்ள பக்தபூர் நகரம், நேபாளத்தின் மிகச்சிறிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். இலங்கை ஹோட்டல் முன்பதிவு நேபாள போலீஸ் குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்மாண்டுவிலிருந்து பக்தபூருக்கு ஒலுகல மற்றும் கிஹான் சில்வாவை அழைத்துச் சென்றது. தொலைபேசி சிக்னல்கள் வெளியிடப்படும் இடம்தான் காவல் குழுவின் இலக்காக இருந்தது. சிக்னல்கள் சுமார் 800 சதுர மீட்டர் பரப்பளவில் பரவியிருந்ததால், அது அவர்கள் நினைத்த அளவுக்கு எளிதானது அல்ல என்று காவல் குழு கண்டறிந்தது. அந்தப் பகுதி மக்கள் தொகை அதிகமாகவும், சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் இடமாகவும் இருந்ததால், வீடுகளையும் கட்டிடங்களையும் சோதனை செய்து இஷாராவைத் தேடுவது எளிதான காரியமல்ல. நேபாளத்தில் உள்ள சட்டப்பூர்வ சூழ்நிலையைப் பொறுத்தவரை, வீடு வீடாகவும், கட்டிடத்திலிருந்து கட்டிடமாகவும் செல்வது சிக்கலாக உள்ளது. மத்திய காவல்துறையின் அறிவிப்பின் பேரில் உள்ளூர் காவல்துறையினர் குழு ஏற்கனவே அங்கு வந்திருந்தது. ஏற்கனவே தாமதமாகிவிட்டது. அவர்கள் வீடுகளை ஒவ்வொன்றாகச் சோதனை செய்யச் சென்றால், இருட்டுவதற்குள் வீடுகளையும் கட்டிடங்களையும் சோதனை செய்து முடிக்க முடியாது. நேபாள காவல்துறையினர் இரவில் செயல்படுவதில்லை. ஒரு சிறப்பு விஷயத்தின் காரணமாக இரவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், மேலிடத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும். இது சாத்தியமற்றது என்பதால், ரோஹன் ஒலுகல உள்ளிட்ட குழு, இஷாராவை அவரது இடத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று கைது செய்வது பொருத்தமானது என்று முடிவு செய்தது. ஜே.கே. பாய் இதற்கு பயன்படுத்தப்பட்டார். ஒரு திட்டத்தின்படி ஜே.கே. பாய் மூலம் இஷாராவின் மொபைல் போனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குற்றப் புலனாய்வுத் துறையின் உயர் அதிகாரிகள் குழுவும் இதற்குப் பின்னால் இருந்தது. அந்த அழைப்பின் மூலம், இஷாராவை ஏமாற்றி, பக்தபூரில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு தனது செலவுகளுக்குத் தேவையான பணத்தை பெற வருமாறு அழைப்பதே திட்டம். காவல்துறையின் திட்டத்தின்படி, ஜே.கே. பாய், செவ்வந்திக்கு போன் செய்து, அங்கு வர வேண்டிய நேரத்தையும் சொன்னார். அது மறுநாள் காலை. அன்று, நேபாள காவல்துறை ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா ஆகியோர் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு இடத்தை ஏற்பாடு செய்தது. ஜே.கே. பாயும் ஏற்கனவே அவர்கள் காவலில் இருந்தார். இஷாரா செவ்வந்தியைக் கைது செய்ய, நேபாள காவல்துறை குழு, ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வாவுடன் ஆகியோர் ஜே.கே. பாய் முந்தைய நாள் செவ்வந்தியை வரச் சொன்ன இடத்திற்குச் சென்றது. நேபாள உள்ளூர் காவல்துறையினர் இஷாராவை அவள் தங்கியிருந்த இடத்தில் கைது செய்யும் நம்பிக்கையை கைவிடவில்லை. இரவு முழுவதும் அந்தப் பகுதியில் தங்கியிருந்த அந்நியர்கள் மற்றும் வெளிநாட்டுப் பெண்கள் பற்றிய தகவல்களை அவர்கள் சேகரித்து வந்தனர். அதன்படி, திங்கட்கிழமை காலை, அவள் வீட்டை விட்டு வெளியே வரவிருந்தபோது உள்ளூர் காவல்துறை அதிகாரிகளால் அவள் கைது செய்யப்பட்டாள். அந்த நேரத்தில், ஒலுகல உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஏற்கனவே ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் வேறொரு இடத்தில் இருந்தனர். உள்ளூர் போலீசார் இஷாரா கைது செய்யப்பட்டதாக அவர்களுக்குத் தெரிவித்ததும், ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா, நேபாள போலீஸ் குழுவுடன் சேர்ந்து, அந்த இடத்திற்குச் சென்று, முந்தைய நாள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகிலேயே செவ்வந்தி தங்கியிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். வாரக்கணக்கில் நீடித்த சிறப்பு நடவடிக்கையின் விளைவாக இஷாராவைக் கைது செய்த பிறகு, ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா வெற்றியைக் கொண்டாடவும், அவளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரவும் அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில், அவர்களுக்கு மற்றொரு நடவடிக்கை ஒதுக்கப்பட்டது. ஜே.கே. பாயால் நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு பெண் உட்பட மூன்று பேர் அதன்படி கைது செய்யப்பட்டனர். அவர்கள் நால்வரும் நேபாளத்தின் மற்றொரு பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் அந்தப் பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். முதல் பார்வையில் அவர் இஷாராவைப் போலவே இருந்தார். இதேபோல். அதிகாரிகள் அவரை இஷாராவின் போலி என்று அழைத்தனர். அவர் பெயர் தக்ஷி. அவருடன் சுரேஷ் என்ற நபரும் இருந்தார். சுரேஷும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கொலை உட்பட பல குற்றங்களில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கேரள கஞ்சா கடத்தலிலும் அவர் ஈடுபட்டுள்ளார். அவர் தக்ஷியுடன் நேபாளத்திற்கு வந்திருந்தார். அவர்கள் இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு வந்திருந்தனர். ஜூலை 21 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவர்கள் இந்தியாவுக்குச் சென்றதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தக்ஷி நேபாளத்திற்கு வந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அவர் நேபாளத்திலிருந்து ஒரு ஐரோப்பிய நாட்டிற்குச் செல்லத் தயாராகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட மற்ற இருவர் பாபி மற்றும் பாபா. பாபி நுகேகொடவைச் சேர்ந்தவர். பாபா கம்பஹாவைச் சேர்ந்தவர். பாபி மற்றும் பாபா பாதாள உலக குற்றவாளிகள். அவர்கள் போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டவர்கள். 2019 ஆம் ஆண்டு நுகேகொடவின் ஜம்புகஸ்முல்லவில் ஒரு தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அவர் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். அந்த நேரத்தில் அவர் போலீசாரிடமிருந்து தப்பிக்க துபாய்க்கு தப்பிச் சென்றார். அவருடன் கைது செய்யப்பட்ட நபர் கெஹல்பத்தர பத்மேவின் சீடர். கம்பஹா பகுதியில் கடந்த காலங்களில் நடந்த குற்றங்களில் அவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இஷாராவை கைது செய்யச் சென்ற ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் டி சில்வா ஆகியோர் நேற்று மாலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கை வந்தனர். இந்தக் குழுவை அழைத்து வருவதற்காக நேற்று காலை இலங்கையில் இருந்து காத்மாண்டுவுக்குப் புறப்பட்ட விமானத்தில் குற்றப் புலனாய்வுத் துறையின் மேலும் இரண்டு அதிகாரிகள் இருந்தனர். இந்த காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு கூடுதலாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் காவலர்களின் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. அவர்களில் ஒரு பெண் விமானப் பாதுகாப்பு அதிகாரியும் இருந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 8 மாதங்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்ற பிறகு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தியின் விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் மேலும் விசாரணைகள் நடத்தப்படும். இலங்கை ஹோட்டல் முன்பதிவு இந்த நடவடிக்கையில், இஷாராவை விட ஜே.கே. பாய் காவல்துறைக்கு மிகவும் முக்கியமானவர். அந்த பாதாள உலகக் குற்றவாளிகளில் பலரை நாட்டிலிருந்து நாடு கடத்தி வெளிநாட்டில் தங்குமிடம் வழங்க சர்வதேச மாஃபியா குழுக்களுடன் தொடர்புகளைப் பேணி வந்தவர் அவர்தான். ஜே.கே. பாயை விசாரிப்பதன் மூலம், இந்த வலையமைப்பு அம்பலப்படுத்தப்படும் என்று குற்றப் புலனாய்வுத் துறை நம்பிக்கை கொண்டுள்ளது. https://pagetamil.com/2025/10/16/செவ்வந்தியை-விட-முக்கியம/
-
சமாதானத்துக்கான நோபல் பரிசு
சமாதானத்துக்கான நோபல் பரிசு sudumanal 2025 இன் சமாதானத்துக்கான நோபல் பரிசு வெனிசுவேலாவைச் சேர்ந்த மரியா கொரீனா மஹாடோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. “ஏழு போர்களை நிறுத்தி, பல இலட்சம் உயிர்களைக் காப்பாற்றியவன் நான். நானே சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவன்” என ட்றம்ப் எடுத்த தன்முயற்சியெல்லாம் வீணாகிப் போனது. நோபல் பரிசைப் பெற்ற மரியா கொரீனா “இப் பரிசை ட்றம்பினை கௌரவப்படுத்தி ஏற்றுக்கொள்கிறேன். ட்றம் அதற்குத் தகுதியானவர்” என அறிவித்தார். இதை தன்னிடம் அவர் சொன்னதாக ட்றம்ப் சொல்லிவிட்டு, அத்தோடு சேர்த்து ஒன்றை நகைச்சுவையின் நிழலினுள் நின்று சொன்னார். “அவர் இப்படி என்னிடம் சொன்னபோது, அப்படியாயின் அந்தப் பரிசை என்னிடம் தந்துவிடு என நான் சொல்லவில்லை” என்றார். இந்த நிழலினுள் அவர் வெளிச்சமிடுவது மரியா கொரீனா தன்னைவிட தகுதியில்லாதவர் என்பதையே என சந்தேகப்பட இடமிருக்கிறது. யார் இந்த மரியா கொரீனா. வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர். தீவிர வலதுசாரி. ஆட்சியதிகாரக் கனவில் இருப்பவர். இவர் வெனிசுவேலாவின் பெரும் முதலாளியொருவரின் மகள். பொறியியல்துறை பயின்றாலும் தந்தையைப் போலவே பெரு முதலாளியாக இருக்கிறார். பெரும் எண்ணைவளம் கொண்ட நாடு வெனிசுவேலா. வெனிசுவேலாவின் நாயகனாகத் திகழ்ந்த சாவேஸ் ஏகாதிபத்தியங்களின் -குறிப்பாக அமெரிக்காவின்- சுரண்டலிலிருந்து தனது நாட்டின் எண்ணை வளத்தை தடாலடியாக மீட்டு எடுத்தவர். அமெரிக்கக் கம்பனிகள் வெனிசுவேலா எண்ணைவள நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் கிடைத்த -நாட்டுக்கு சொந்தமான- இலாபத்தை மக்கள் நல அரசுக் கட்டமைப்புக்குள் திசைதிருப்பியவர். அதேநேரம் மரியா கொரீனா அமெரிக்காவால் இரண்டு தசாப்தங்களாக நிதியளிக்கப்பட்டு வெனிசுவேலா அரசினை கவிழ்க்க ஊக்குவிக்கப்பட்டவர். வெனிசுவேலா அரசை சர்வதேச ரீதியான கடுமையான அச்சுறுத்தலாலேயே அகற்ற முடியும் எனவும் அதற்கான சக்திகளாக அமெரிக்காவையும் இஸ்ரேலையும் தனது நாட்டின்மீது தாக்குதல் தொடுக்க அழைத்தவர். அதேபோல வெனிசுவேலா மீதான பொருளாதாரத் தடையை ஆதரித்ததின் மூலம் பலரது பட்டினி மரணத்துக்கு ஆதரவாக இருந்தவர். சாவேஸ் க்கு எதிராக இருந்து விமர்சித்தவர் மரியா கொரீனா. 2013 இல் சாவேஸ் இறந்தபின், இப்போதைய தலைவர் மடுரோ தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டு சாவேஸ் வழியில் ஆட்சியைத் தொடங்கினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூட்டாளியாக மரியா கொரீனாவும் அவரது கட்சியான “வென்ரே வெனிசுவேலா” உம் செயற்பட்டனர். நெத்தன்யாகுவின் “லிக்குவிட்” கட்சியோடு அவர்கள் கூட்டு ஒப்பந்தமொன்றும் செய்துகொண்டார்கள். “அரசியல் ரீதியிலும் கொள்கை ரீதியிலும் தமது கூட்டு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல, பூகோள அரசியல் ரீதியிலும் பாதுகாப்பு அடிப்படையிலும் அது அமைந்துள்ளது” என்றனர் அவர்கள்!. அதை அவர்கள் “கூட்டு நடவடிக்கை” என வேறு அறிவித்தனர் இதனடிப்படையிலேயே வெனிசுவேலாவில் ‘சுதந்திரத்தை மீட்க’ இஸ்ரேல் உதவ வேண்டும் என நெத்தன்யாகுவுக்கு அழைப்பு விடுத்தனர். காஸா இனப்படுகொலையைக்கூட அவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக நெத்தன்யாகுவின் அரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர், மரியா கொரீனாவும் அவரது கட்சியும்!. தான் வெனிசுவேலாவின் தலைவராக வந்தால் இஸ்ரேலின் ரெல் அவீவ் இலுள்ள வெனிசுவேலா தூதரகத்தை ஜெரூசலேமுக்கு மாற்றுவேன் என்று வேறு சூளுரைத்தார் அவர். அமைதிக்கான நோபல் பரிசின் சூட்சுமம் இங்குதான் புதைந்திருக்கிறது. வெனிசுவேலாவில் சுதந்திரத்தை மீட்க, அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் கூட்டாளிகளையும் உள்ளே அழைத்து, மீண்டும் சுரண்டவிட்டு, தானும் சுரண்டி, தமது செல்வத்தைப் பெருக்க விளையும் அவரது குரலிற்கு அங்கீகாரம் கொடுத்து, வெனிசுவேலாவின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் சூழ்ச்சி நிறைந்தது, இந்தப் பரிசு அறிவிப்பு!. கம்யூனிசமே நிலவாத இந்த உலகில் வெனிசுவேலாவில் கம்யூனிசத்தை அகற்றி ஜனநாயகத்தை மலர்விக்க வேண்டும் என்ற மேற்குலகின் கதையாடலானது தமது சுரண்டலை தொடர பாவிக்கும் லைசன்ஸ். அதற்கான கதவைத் திறக்க போராடுபவர் மரியா கொரீனா. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது, “நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். கடவுளே, என்னால் நம்பவே முடியவில்லை” என்றார் மரியா கொரீனா. அவரே தான் அதற்குத் தகுதியில்லாதவர் என்பதை இந்த வார்த்தைகளில் உளறியிருக்கிறார். ட்றம்புக்கு தான் அதை சமர்ப்பிப்பதாக வேறு சொன்னார். பூகோள அரசியல் புகுந்து வீசும் இடைவெளி சமாதானத்துக்கான நோபல் பரிசையும் விட்டுவைக்கவில்லை என்பது தொடர் வரலாறு. கடந்த காலங்களில் சமாதானத்துக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்ட பலரின் மீதும் இந்த நச்சுக் காற்று புகுந்துவிளையாடவே செய்தது. தனது பதவிக் காலத்தில் ஒரேநேரத்தில் ஆறு போர்களைச் செய்த ஒபாமாவுக்கு 2009 இல் நோபல் பரிசு கிடைத்தது. தலிபான் ஏகாதபத்தியங்களின் எதிரியாக மாறியபோது, தலிபான்களால் சுடப்பட்ட பதினேழே வயதான மலாலா யூசாப்சை (Malala Yousafzai ) கல்விப் புரட்சி செய்ததாக ஒரு கதையாடலை உருவாக்கி நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதேகாலத்தில் கல்விக்காக அதிகமும் தலைமறைவாக இருந்து உழைத்த மலாலா ஜோயா ( Malala Joya) இருட்டடிப்புச் செய்யப்பட்டார். ஏனெனில் அவர் சோவியத் யூனியன் மற்றும் தலிபான்களுக்கு மட்டுமல்ல, மேற்குலகுக்கு எதிராகவும் விமர்சனங்களை முன்வைத்தார். (article Malala Joya) நோபல் பரிசை வென்ற இளம் மலாலா இப்போதைய காஸா இனப்படுகொலை குறித்து மனிதாபிமான பெறுமதிக்கு அப்பால் சென்று பேசவில்லை. மேற்குலகின் தயாரிப்பான அவர் அரசியல் ரீதியில் மேற்குலகை செல்லமாகத்தன்னும் தீண்டாத வார்த்தைகளை உதிர்க்கிறார். நெத்தன்யாகுவையும் இஸ்ரேலையும் மட்டும் விமர்சித்து நழுவிவிடுகிறார். மியன்மாரின் ஜனநாயகப் புரட்சியாளர் என கதையாடப்பட்டு 1991 இல் நோபல் பரிசைப் பெற்றவர் Aung San Suu Kyi அவர்கள்!. அவரது நிழல் ஆட்சியில், மியன்மார் இராணுவத்தால் றொகிங்கா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இனவழிப்பாக ஐநாவால் கூட சுட்டப்பட்ட கொடுமையான நிகழ்வை அவர் விமர்சிக்கவோ, அதற்கெதிராக குரல் கொடுக்கவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லை. எரித்திரியாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவந்தார் என 2019 இல் எத்தியோப்பிய பிரதமர் Abiy Ahmed அவர்களுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2020 இல் அவர் எத்தியோப்பியாவின் வட பகுியிலுள்ள Tigray மக்கள் மீது போர் தொடுத்து இனச்சுத்திகரிப்பு செய்து இரண்டு மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்தார். வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்தார் என கென்றி கிஸிங்கருக்கு 1973 இல் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நிக்சனின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கிஸிங்கர் 500’000 தொன் குண்டுகளை லாவோஸ் மற்றும் கம்போடியா மீது விசியவர். ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் மக்களை கொன்றவர். வியட்நாம் புரட்சிப் படைகளின் தடவழியாக அவை இருந்ததாலும், ‘கம்யூனிசத்தின்’ பரவலாக்கலை தடுப்பதற்காகவும் அப்போது மேற்குலகின் சார்புநிலை கொண்ட கம்போடிய ஆட்சியை தக்கவைக்கவுமாக இந்த ‘காப்பெற்’ குண்டுவீச்சு நடத்தப்பட்டது. அதன் சூத்திரதாரியான கிஸிங்கர் நோபல் பரிசை வென்றார். இதுதான் சமாதானத்துக்கான நோபல் பரிசு -பெரும்பாலான சந்தர்ப்பங்களில்- நடந்து சென்று கொண்டிருக்கிற வழித்தடம். இதை ட்றம்ப் அறியாமலில்லை. மிக இலகுவான ஒரு கேள்வியால் அவர் கேட்கிறார். “அப்படி ஒபாமா என்னத்தைக் கிழிச்சார் நோபல் பரிசைப் பெற” என. உண்மைதான். நாம் ட்றம்ப் இன் கோரிக்கையை இந்த வழித்தடத்துக்கு வெளியே வைத்து நோக்கி, சமாதானத்துக்கான நோபல் பரிசினை புனிதப்படுத்தும் மனநிலையோடுதான் ட்றம்ப் அவர்களை (நான் உட்பட) கேலிசெய்கிறோமா என்று யோசிக்க வைக்கிறது. இந்த சமாதானத்துக்கான நோபல் பரிசின் வரலாற்றைப் பார்த்தால் ட்றம்புக்கு ஏன் அந்த ஆசை வரக் கூடாது! ravindran.pa https://sudumanal.com/2025/10/11/சமாதானத்துக்கான-நோபல்-பர/
-
ஆளுநர் செயலகம் முன் தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்.. கயேந்திரகுமார் சிறிதரன் எம்பிகள் வருகை.
பாதிக்கப்பட்டால் மேன் முறையீடு செய்யலாம் - வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பதில் சொல்லும் முகமாக அதிகாரிகளுக்கு கூறிய வடக்கு ஆளுநர் வியாழன், 16 அக்டோபர் 2025 05:51 AM வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட்ட, 2026ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றப்பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதும் எந்தவொரு ஆசிரியரும் மேன்முறையீடு மேற்கொள்ள முடியும் எனவும், மேன்முறையீடு எதிர்வரும் 22ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஆசிரியர்களின் நலன்கருதி எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. அதன் போது, வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தலைமையிலான மேன்முறையீட்டுக் குழுவால் ஆசிரியர்களால் சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு மேன்முறையீடும் உரிய முறையில் தனித்தனியாக ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மாகாணக் கல்விப் பணிப்பாளர் தலைமையிலான மேன்முறையீடுக் குழுவால் உரிய நிவாரணம் தமக்கு கிடைக்கப்பெறவில்லை எனக் கருதுவும் எந்தவொரு ஆசிரியரும் முறையே மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு, ஆளுநருக்கு மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என ஆளுநர் தெரிவித்தார். அதேவேளை ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண ஆசிரியர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/51330
-
நியாயமற்ற தற்போதைய வரிக்கட்டமைப்பை மறுசீரமையுங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்
நியாயமற்ற தற்போதைய வரிக்கட்டமைப்பை மறுசீரமையுங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் October 16, 2025 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு ஆதரவாகவும், மறுபுறம் போதிய வருமானத்தை ஈட்டித்தராததுமான தற்போதைய வரிக்கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. நாட்டின் செயற்திறனற்ற வரிக்கட்டமைப்பு மற்றும் கல்வித்துறைக்கான போதிய நிதி ஒதுக்கீடு இன்மை என்பன தொடர்பில் 101 பக்க விரிவான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், அதுகுறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: இலங்கையில் 2022ஆம் ஆண்டு உருவான தீவிர பொருளாதார நெருக்கடியில் நாட்டின் வரிக்கொள்கை மிக முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்ததுடன் கல்வி மற்றும் ஏனைய பொதுச்சேவைகளுக்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வழிகோலியது. இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு ஆதரவாகவும், மறுபுறம் போதிய வருமானத்தை ஈட்டித்தராததுமான தற்போதைய வரிக்கட்டமைப்பில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை பல தசாப்தகாலமாக வருமானத்துக்காகக் காத்திருக்கவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திய பொருளாதாரக்கொள்கைகளின் பணயக்கைதியாக இருந்துவந்திருக்கிறது. அதனையடுத்து கல்வித்துறைக்கான செலவினங்களில் ஏற்பட்ட கணிசமானளவு வீழ்ச்சி, உலகளாவிய அரங்கில் இலங்கையின் கல்வி நிலைவரத்தைப் பின்னடையச்செய்தது. இதுகுறித்து ஆராய்வதற்காக இலங்கையின் பொருளாதார நிலைவரம் மற்றும் அரச கல்விக் கட்டமைப்பின் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாக 70க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல்கள் நடாத்தப்பட்டன. அத்தோடு இலங்கையின் வரிக்கொள்கைகள் மற்றும் கல்வித்துறைக்கான செலவினங்கள் தொடர்பில் தரவு அடிப்படையிலான பரந்துபட்ட ஆய்வொன்றும் மேற்கொள்ளப்பட்டது. இந்த கொள்கைசார் தோல்விகள் சிறுவர்களின் கல்விக்கான உரிமையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட நாடுகளில் கல்வித்துறையில் பெரிதும் முன்னேற்றமடைந்திருந்த நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்த இலங்கையில் சுதந்திரத்தின் பின்னரான இரு தசாப்தங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 – 5 சதவீதமாகக் காணப்பட்ட கல்வித்துறைக்கான செலவினங்கள், கடந்த 2022ஆம் ஆண்டு 1.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோன்று 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் நாடு கடன்களை மீளச்செலுத்தமுடியாத வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படுவதற்கு குறைந்தளவு வரி வருமானமும் மிகமுக்கிய காரணமாக அமைந்தது. அதன்விளைவாக உருவான பொருளாதார நெருக்கடியை அடுத்து வேலை இழப்பு மற்றும் வருமான வீழ்ச்சி என்பன தீவிரமடைந்ததுடன் மனித உரிமைகளில் எதிர்மறைத்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவகையில் வாழ்க்கைச்செலவு வெகுவாக அதிகரித்தது. மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு பொருளாதார வளர்ச்சி மாத்திரம் போதுமானதன்று என்பதை இலங்கையின் பொருளாதார நிலைவரம் தெளிவாகப் புலப்படுத்துகிறது. இந்நிலையில் செயற்திறன்மிக்க வரிக்கட்டமைப்பு ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்துவதுடன் அவ்வருமானத்தை சகல இலங்கையர்களும் பயனடையக்கூடியவகையில் கல்வி மற்றும் ஏனைய அரசசேவை வழங்கலுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. www.ilakku.orgநியாயமற்ற தற்போதைய வரிக்கட்டமைப்பை மறுசீரமையுங்கள் - மனித...ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தக கம்பனிகள் மற்றும் தனவந்தர்களுக்கு
-
சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – உயிருடன் எரியூட்டப்பட்டு , கடலில் வீசப்பட்டுள்ளார்
சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் : மருந்தகமொன்றின் உரிமையாளரும் உதவியாளரும் கைது ! 16 Oct, 2025 | 10:24 AM பூநகரி, சங்குப்பிட்டி பகுதியில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு தீ வைத்து எரித்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் உதவியாளரும் பூநகரி பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - பூநகரி வீதியில் 18 ஆவது மைல்கல் அருகில் கடந்த 12 ஆம் திகதி மாலை 05.00 மணியளவில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொலைசெய்யப்பட்டவர் காரைநகரைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஆவார். குறித்த பெண் கடந்த 11 ஆம் திகதி பிற்பகல் 01.30 மணியளவில் வவுனியாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது கணவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், கொலை சம்பவம் தொடர்பில் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் உதவியாளரும் கடந்த செவ்வாய்க்கிழமை கொள்ளையிட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 51 வயதுடைய மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் 32 வயதுடைய அதே மருந்தகத்தின் உதவியாளரும் ஆவர். இந்த கொலை சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/227853
-
யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல்
யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல் 16 October 2025 எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் எவ்வாறு ஒன்றிணைந்து பயணிப்பது என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமையில், தமிழ் கட்சிகளின் இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முருகேசு சந்திரகுமார், வேந்தன் உள்ளிட்ட முக்கிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கலந்துரையாடலின் பின்னர் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் கருத்துரைத்தார். இதன்போது, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைத்தார். https://hirunews.lk/tm/425595/discussion-on-tamil-parties-joining-forces-in-the-jaffna-provincial-council-elections
-
முறையான அனுமதி இல்லாமல் நுண்நிதி நிறுவனங்கள் செயற்படுவதற்குத் தடை
முறையான அனுமதி இல்லாமல் நுண்நிதி நிறுவனங்கள் செயற்படுவதற்குத் தடை; முறையாக ஒழுங்குபடுத்தவும் திட்டம் வேலணை பிரதேசசபை உடும்புப்பிடி! வேலணைப் பிரதேசசபையின் ஆளுகைக்குள் நுண்கடன் நிதி நிறுவனங்கள் முறையான அனுமதி இல்லாமல் இயங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கட்டமைக்கப்பட்ட ஒழுங்குமுறை ஒன்றை உருவாக்கவும் சபை தீர்மானித்துள்ளது. வேலணைப் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது நுண்கடன் தொல்லையால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்தும், வறிய மக்களை ஏப்பமிடும் நுண் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தால் முன்மொழிவொன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. ‘வறிய மக்களை இலக்கு வைத்து, அதிக வட்டி வீதங்களுடன் பல நுண்நிதி நிறு வனங்கள் கடன்களை வழங்குகின்றன. கண்கவர் பரப்புரைகள் மூலம் பிரதேசத்துக்குள் உள்நுழைந்து மக்களை ஏமாற்றி தமது பொறிக்குள் வீழ்த்துகின்றனர். பெண் தலைமைக் குடும்பங்கள் இத்தகைய நுண்நிதி நிறுவனங்களால் பெரும் சுமைகளையும் துன்பங்களையும் எதிர்கொள்கின்றனர். சிலர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்கும் நிலையும் காணப்படுகிறது' என்று உறுப்பினர் அனுசியா ஜெயகாந் தனது உரையில் குறிப்பிட்டார். இந்த முன்மொழிவின் அவசியம் கருதி, அதை உறுப்பினர் சு.பிரகலாதன் வழி மொழிந்தார். 'தற்போதுவரை நாற்பதுக்கும் அதிகமான நுண்நிதி நிறுவனங்கள் வேலணை பிரதேசத்துக்குள் ஊடுருவியுள்ளன. இவற்றில் பல நிறுவனங்கள் பதிவுகள் அற்றவையாகக் காணப்படுகின்றன' என்று அவர் சுட்டிக்காட்டினார். சபையின் உறுப்பினர்கள் அனைவரும் இந்தப் பிரேரணைக்குத் தமது ஆதரவை வழங்கினார்கள். இதையடுத்து, வேலணைப் பிரதேசசபையின் ஆளுகைக்குள் நுண்நிதி நிறுவனங்கள் செயற்பட வேண்டுமாயின் முறையான அனுமதி பெறப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நுண்நிதி நிறுவனங்களை முறைப்படுத்தவும் திட்டம் அத்துடன், வேலணை பிரதேசத்துக்குள் செயற்படும் நுண்நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்து எதிர்வரும் வாரமளவில் கலந்துரையாடல்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1. மீளச்செலுத்தக்கூடிய நிலைமையை அறிந்து கடன் வழங்குதல், 2. அளவுக்கு அதிகமான வட்டி வீதங்களைப் பேணாது இருந்தல், 3. பெண் தலைமைக் குடும்பங்களுக்கான கடனுதவிகளில் கூடுதலான சகிப்புத்தன்மையைப் பேணுதல், 4. கடன்களை வசூலிக்கும் நேரகாலங்களைப் பேணுதல் ஆகிய விடயங்களில் நுணிநிதி நிறுவனங்களை முறையான ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவரும் நோக்கில் இந்தக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. https://newuthayan.com/article/முறையான_அனுமதி_இல்லாமல்_நுண்நிதி_நிறுவனங்கள்_செயற்படுவதற்குத்_தடை;
-
ஆளுநர் செயலகம் முன் தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்.. கயேந்திரகுமார் சிறிதரன் எம்பிகள் வருகை.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ள ஆசிரியர்கள் adminOctober 15, 2025 வடமாகாண ஆசிரியர்கள் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண ஆசிரியர்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ள்ளனர். போராட்டத்தின் போது வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினுள் போராட்டக்காரர்கள் உட்புக முயற்சித்த வேளை காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதனால் போராட்ட காலத்தில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது. https://globaltamilnews.net/2025/221572/
-
வேலன் சுவாமியை சந்தித்த கஜேந்திரகுமார்
வேலன் சுவாமியை சந்தித்த கஜேந்திரகுமார் adminOctober 15, 2025 அகில இலங்கை தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவத்திரு வேலன் சுவாமிகளை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார். நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமிகளை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து , சமகால அரசியல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இக்குறித்த கலந்துரையாடலில் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார். https://globaltamilnews.net/2025/221567/
-
ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
இடும்பன் பூசை தி. செல்வமனோகரன் அறிமுகம் இயற்கையின் மீதான ஆர்வம், அதிசயம், அச்சம் போன்றனவே அதனை வழிபடத் தூண்டின; இயற்கையின் இயல்பிறந்த ஆற்றல்கள்மீது மனிதரைக் கவனம் செலுத்தச் செய்தன. சடத்துவமான இயற்கை தானாகவே இயல்பிறந்த ஆற்றல்களை நிகழ்த்த முடியாது. இப்பிரமாண்டமான இயற்கையை இயக்க அதனிலும் ஆற்றல்வாய்ந்த சக்தி அல்லது சக்திகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட வலுப்பட இறைவன் பற்றிய பிரக்ஞை வலுப்பட்டது. இயற்கை வழிபாடு தெய்வ வழிபாடாயிற்று. இயற்கையின் இயல்பிறந்த ஆற்றல்களிலும் இறைவனது ஆற்றல்கள் மேலும் மேம்பட்டவை, கற்பனையாலும் எட்டமுடியாதவை, அதிலும் தன் தன் தெய்வத்தின் ஆற்றலே யாவற்றிலும் மேலானது என்ற கருத்துகள் மனிதகுல நாகரிக வளர்ச்சியோடு இணைந்து வலுவுற்று வளர்ந்தன. இதனால் அவ்வவ்விறைவனைப் பற்றி பல்வேறு ஐதிகக் கதைகள் தோன்றின. அவை கால, தேச, வர்த்தமானத்திற்கேற்ப மேலும் மேலும் வளர்ச்சியுற்றன. இயற்கைப் பொருள்வழி இருந்த தெய்வம் விலங்கு, பறவை, மனிதவுருப் பெற்றது. வடிவம் அல்லது உருவம் முதன்னிலை பெறத் தொடங்கியது. விலங்கு – மனிதன், பறவை – மனிதன் என இணையுருவங்களுடன் மனித, ஆஜானுபாகுவான உருவங்களும்; அவற்றுக்கு நான்கு, தொடக்கம் பன்னிரெண்டு கைகள், ஒன்று தொடக்கம் ஆறு தலைகள் எனப் பல்வேறு ‘அதீத’ நிலைகளும் உருநிலைப்படுத்தப்பட்டன. அந்தத் தெய்வத்தை கேள்வியற்ற விசுவாசத்தோடு வழிபடும் அடியவர் பெறும் பேறுகள் என்பன முதன்மைப்படுத்தப்பட்டன. இவற்றை மேலும் மேலும் வலுப்படுத்தப் பல்வேறு கதைகள் சொல்லப்பட்டன. அவை இதிகாசங்கள், புராணங்கள் எனச் செவ்விலக்கியங்களின் வழி மக்களின் மனதில் நிலைநிறுத்தப்பட்டன; சமயப்பிரசாரங்களின் பிரதான கருவியாகப் பயன்படுத்தப்பட்டன. அதிலும் இறைவன் நிகழ்த்திய அற்புதங்கள், சங்காரங்கள் என்பன விதந்துரைக்கப்பட்டன: கலை வடிவங்களாக்கப்பட்டு மக்கள் மத்தியில் மீள மீள நிகழ்த்தப்பட்டன. பொழுதுபோக்கு அம்சமாகவும், பிரசாரமாகவும், நம்பிக்கையாவும் இவை மக்கள் மனதில் நிலைத்துநிற்கச் செய்யப்பட்டு தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டன. இந்தக் கதைகளானவை, கூத்தாக, கதையாக, பாடலாக பல்வேறு ரூபங்களில் பரவின. குறித்த ஒரு தெய்வத்தின் அல்லது நபரின் கதை பரவலாக்கமுறும் போது காலம், தேசம், பண்பாடு, தேவை அதன் அரசியல் என்பவற்றுக்கு ஏற்ப மாற்றமுறச் செய்யப்பட்டே வளர்க்கப்பட்டன. இதனால் காலவோட்டத்தில் அவை வேறுபட்ட தனிக்கதைகளுமாயின. அதேவேளை குறித்த பெயரில் வெவ்வேறு காலங்களில், இடங்களில் வெவ்வேறு கதைகள் தோன்றி உருப்பெற்று வளர்ந்தன என்பதும் மனங்கொள்ளத்தக்கது. இந்தியப் பாரம்பரியத்தில் தோன்றி, புராணக்கதைகளின் வழி தமிழகத்தில் நிலைபெற்ற கதைகளில் ஒன்றாகவே இடும்பனின் கதை காணப்படுகிறது. இந்த இடும்பன் பூசை பற்றிய ஆய்வில் திரு கோ. விஜிகரன், திரு. சி. துக்ஷாந் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செல்வி ரஜீவா ஆகியோர் துணைநின்றனர். இடும்பன் இடும்பர் எனும் சொல்லுக்கு ஒருவகை இராட்சதர், ஒருவகைச் சாதியார், செருக்கர், துயர் செய்வோர் (இடும்பை – துன்பம், தீமை, நோய், வறுமை, அச்சம்; இடும்பு – அகந்தை, கொடுஞ்செயல், தீங்கு) எனப் பொருள் சுட்டப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் பெரிய உருவம் (ஆஜானுபாகுவான தோற்றம்), நீண்ட கை – கால்கள் உடையவர்கள், பயங்கரமான தோற்றம் உடையவர்கள், கை அகட்டி நடப்பவர்கள், நன்றாக உண்பவர்கள் போன்றோரை இடும்பனுக்கு ஒப்பிடுவர். ‘ஆளப் பார் இடும்பன் மாதிரி’, ‘இடும்பன் எண்டு நினைப்பு’ போன்ற சொற்றொடர்களை இதற்கு உதாரணங்களாகச் சுட்டலாம். இடும்பன் பற்றிய கதைகள் இடும்பன் பற்றி பல்வேறு கதைகள் நின்று நிலவுகின்றன. ஆரம்பத்தில் சிறந்த சிவபக்தனாக இருந்த இராட்சசனான இடும்பன் பின்பு முருகபக்தனாகத் திகழ்ந்ததாகப் பொதுவில் கூறப்பட்டாலும் இதன்னின்றும் வேறுபட்ட கதைகளும் உண்டு. இராமாயணம்: இராவணனால் கவரப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும் இராமன் சுக்கிரீவனின் உதவி பெற்று இலங்கையில் சீதை இருப்பதை அனுமன் மூலம் அறிகிறான். இராமன் சீதையை மீட்க சுக்கிரீவனின் படையோடு கரையை அடைகின்றான். கடல் குறுக்கிடுகிறது. பாலம் அமைக்க வேண்டியநிலை ஏற்படுகிறது. அந்நிலையில் சுக்கிரீவனின் சேனை வீரர்களில் ஒரு அணியின் தலைவனாக இருந்து சேதுபந்தனத்தின்போது மலைகளைப் பிரித்துவந்த மாவீரர்களில் ஒருவனாக இடும்பன் காணப்படுகின்றான். மகாபாரதம் – இடும்பவனத்தில் இடும்பன் தன் தங்கையான இடும்பியுடன் வாழ்ந்து வந்தான். அவ்வனத்துக்கு வந்த பாண்டவர்களில் ஒருவனான பீமனைக் கண்டு இடும்பி காதல் கொள்கின்றாள். அவ்விடம் வந்த இடும்பன் “மானுடர்களை உண்ணும்படி உன்னை அனுப்பினால் நீ இவன்மீது காதல் கொள்கிறாயா?” என இடும்பியை ஏசியபோது பீமன் அவனை இடைமறிக்கின்றான். “அற்ப மானுடனே நீயும் இவள்மீது காதல் கொண்டுள்ளாயோ? அவ்வாறெனில் என்னோடு போர் புரிந்து வென்றபின் அவளைத் திருமணம் செய்” எனக் கூறினான். யுத்தம் நிகழ்ந்தது. இடும்பன் இறந்தான். பீமன் இடும்பியுடன் வாழ்ந்து கடோத்கஜன் எனும் மகனைப் பெற்றான். பழனி தல புராணம்: அகத்திய முனிவர் கந்தமலையின் சிகரங்களிற் சக்தி கிரி, சிவ கிரி என்னும் இரண்டையும் சக்தி – சிவமாகப் பாவித்துப் பூசித்துக் கந்தவேளின் உத்தரவின்படி அவற்றைப் பொதியமலைக்குக் கொண்டு வந்து பூசிக்கக்கருதி பெயர்த்து வந்தார். பூர்ச்சவனம் என்னும் தலத்திலே முருகனின் திருவருளினாலே அச்சிகரங்களை வைத்துவிட்டுப் பொதிகை நோக்கி வந்து கொண்டிருந்தார். சூரபன்மன் குலத்தோர்க்கு வில்வித்தை முதலிய வித்தைகளைப் பயிற்றுவித்த இடும்பாசுரன், முருகனால் சூரன் முதலானவர்கள் அழிக்கப்பட்டபோது, தன் மனைவி இடும்பியுடன் மகேந்திரபுரியைவிட்டு வன சஞ்சாரம் சென்றான். திருக்குற்றாலத்திற்கு அருகே அகத்திய முனிவரைக் கண்டு வணங்கினான். அகத்தியர் “திருக்கேதாரத்திற்குப் பக்கத்திலுள்ள பூர்ச்சவனத்திலே இருக்கும் இரு சிகரங்களையும் எடுத்துப் பொதிகை மலைக்குக் கொண்டு வருவாயானால் பெறற்கரிய பெரும்பேறடைவாய்” எனக்கூறி அவற்றை அடையும் வழிகளை உணர்த்தினார். அவன் அகத்தியர் கூறிய வழியே சென்று இரு சிகரங்களையும் கண்டு பூசித்து மூலமந்திரத்தை விதிப்படி உச்சரித்துத் தவம் செய்தான். அப்பொழுது பிரமதண்டம் புய தண்டாகவும் அட்ட திக்கு நாகங்கள் கயிறாகவும் தன் பக்கத்தில் வந்ததைக் கண்டு, பாம்புகளை உறிக்கயிறாக பிரமதண்டுடன் பிணைத்து இரு சிகரங்களையும் இருபக்கத்திலும் பிணைத்து, தோளிற் சுமந்து காவடி எடுப்பதுபோல் நடந்துசென்று பழனியை அடைந்தபோது, முருகன் திருவிளையாடலால் இடும்பனுக்குக் காவடி அதிபாரமாகத் தோன்ற, அந்த இடத்தில் இறக்கி வைத்து இளைப்பாறினான். காவடியைப் பின்பு தூக்க முயன்றபோது முடியாது போகவே சுற்றிப் பார்த்தான். சிவகிரியின் ஒரு சாரலிலுள்ள குரா மரநிழலிலே தண்டாயுதபாணியைக் கண்டு, அவன் யாரென அறியாது வழியை விடும்படி வற்புறுத்தினான். முருகன் தன் திருவிளையாடலைத் தொடக்கி “உன்னிடம் வலிமை இருந்தால் கொண்டு செல்” எனக் கூறினார். ஆத்திரமடைந்த இடும்பன் குரா மரத்தடியில் நின்ற தண்டாயுதபாணி மேல் பாய்ந்தபோது அவர் விலக, அவ்விடத்திலேயே வீழ்ந்திறந்தான். பிரமதண்டும் நாகங்களும் அஞ்சி அகன்று அகத்தியரிடம் செய்திசொல்லின. இடும்பியின் அழுகுரலுக்கிரங்கிய முருகன் இடும்பனை உயிர்பெற்றெழச் செய்தார். இடும்பன் எழுந்து முருகனை வணங்கி அம்மலையடியில் இருந்து குற்றேவல் புரிய வரம்கேட்க, முருகனும் அவ்வாறே அருளினார். இடும்பன் கதையுடன் தொடர்புடைய காவடி இன்று பல வடிவங்களில் எடுக்கப்படுகிறது. இடும்பன், தான் இரு மலைகளையும் எடுத்து வந்ததுபோல், தமது பாபச் சுமையை நீக்கக் காவடி எடுத்துவரும் அடியார்களுக்கு அருளும்படியும் வேண்டியதாகக் கூறப்படுகின்றது. இதன் பின்னர் முருகன் கோயில்களில் இடும்பனைப் பரிவார மூர்த்தியாக வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. இவ்வாலயங்களில் முருக மஹோற்சவம் முடிந்தபின் இடும்ப பூசை நடைபெறுவது வழக்கில் காணப்படுகிறது. தமிழகத்து சற்குருநாதர் கோயிலில், தான் இழந்த சக்திகளைப் பெற்ற பிரம்மா மகிழ்ந்து பிரம்ம தீர்த்தத்தை நிறுவியதாகவும் அங்கு சென்ற சிவபக்தனான இடும்பன், தன் பாவங்கள் யாவற்றையும் போக்க இக்குளத்தில் நீராடி வழிபட்டதாகவும் சிவன் மகிழ்ந்து அவருக்குத் திருவருள் புரிந்ததாகவும் கூறப்படுகிறது. பழனி தல புராணம், அதனோடு ஒட்டிய ஐதிகக் கதைகள் மாத்திரமே முருகன் அடியாராக இடும்பனைக் குறிப்பிடுவது கவனத்திற்குரியதாகும். பொதுவில் இடும்பன் இராட்சதனாகவும், அதேவேளை ஞான நாட்டமுடைய சிறந்த பக்திமானாகவும், காவல்தெய்வமாகவும், அச்சத்தோடு மக்கள் வழிபடும் தெய்வமாகவும் அமைந்துள்ளது. இடும்பன் கோயில்கள் தமிழகத்தில் தஞ்சாவூர் காடுவெட்டி விடுதி, கீழ் மேட்டுப்பட்டி, இடும்பாவனம் என்பவற்றிலும் திருக்கன்றாப்பூர், குன்றக்குடி, திருப்பூரருகே இடுவம்பாளையம், பழனி போன்ற பல இடங்களில் இடும்பனுக்குத் தனிக்கோயில்களுண்டு. பிற கோயில்களில் பரிவார மூர்த்தியாகவும் முதன்மை கொடுக்கப்படுகின்றது. ஈழத்துப்புலத்தில் கொழும்பு வாழ் நகரத்தாரின் (செட்டிமாரின்) மூன்று கதிர்காம வேலாயுத சுவாமி கோயில்களிலும், யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு, உரும்பிராய் போன்ற இடங்களிலும் இரத்தினபுரி, நாவலப்பிட்டி, கொஸ்லந்தை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற இடங்களிலும் பரிவார தெய்வமாக இடும்பன் தனிக்கோயில் பெற்றுக் காணப்படுகின்றான். திருகோணமலையில் இடும்பன்மலை என்று ஓர் இடம் உண்டு. பண்டத்தரிப்பில் காலையடி எனும் இடம் உண்டு. ஆகம முறையிலமைந்த கோபுரத்துடன் கூடிய முருகனாலயமே காணப்படினும், இன்றும் அது இடும்பன் ஆலயம் என்றே அழைக்கப்படுகின்றது. மூலஸ்தானத்தில் மூலமூர்த்திக்கு அருகில் முன்பு இடும்பனாக வழிபடப்பட்ட வேல், இன்றும் வைத்துப் பூஜிக்கப்படுகிறது (தகவல்: ஆலய முன்னைய தலைவர், திருநாவுக்கரசு, வயது. 83). கொழும்பு வாழ் நகரத்தார் சமூகம் கதிர்காமக்கந்தன் மீது அளவற்ற பக்தி உள்ளவர்கள் என்றும், நேர்த்திக்கடன் செலுத்தக் காவடி முதலானவற்றைக் கொண்டு கொழும்பிலிருந்து கதிர்காமத்துக்குக் கால்நடையாகவே (கரப்பாதை) செல்வதாகவும், அப்போது வழித்துணையாக இடும்பனை அழைத்துச் செல்வதாகவும், அதன் நன்றிக்கடனாகவே தமது கொழும்பு முருகன் கோயில்களில் இடும்பனைப் பிரதிஷ்டை செய்ததாகவும் அறிய முடிகின்றது. மேற்படி நகரத்தார் கோயில்களில் மட்டுமே உருவவழிபாடு காணப்படுகிறது. ஏனைய கோயில்களில் பெரும்பாலும் வேல், சூலம், கல் என்பன வைத்தே வழிபடப்படுகின்றன. உரும்பிராய் அம்மன் கோயிலில் பரிவாரமாக உள்ள இடும்பன் முச்சூலம் மூன்றின் இணைந்த வடிவத்தினராகக் காணப்படுகின்றார். மையத்தில் இருக்கும் திரிசூலத்தில் இருந்து எதிர்த்திசைகளை நோக்கியதாக ஏனைய இரு திரிசூலங்களும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை இடும்பன் தெய்வமாகக் கருதப்படுதாது முருகன் அடியாராகக் கருதப்பட்டுவரும் வழக்கம் மேனிலையாக்கக் கோயில்களில் காணப்படுகின்றது. உதாரணமாக யாழ்ப்பாணத்து மடாலயங்களில் ஒன்றான நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் மஹோற்சவ கால பதினேழாந் திருவிழா இடும்பவாகனத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. இடும்பன் பூசை நடைபெறும் சந்தர்ப்பங்கள் ஈழத்துப்புலத்தில் பொதுவாக தனிக்கோயில்களிலும் இடும்பனைப் பரிவாரமாகக் கொண்ட கோயில்களிலும், கிராமிய முறை, ஆகம முறை எனும் இருதளங்களிலும் பூசைகள் நடைபெறுகின்றன. தனிக்கோயில்கள் பெரும்பாலும் பிராமணரல்லாதாரின் நாட்டார் வழக்கிலான பூசைமுறையே நடைபெறும். மேனிலையாக்கம் செய்யப்பட்ட முருகன் கோயிலாக மாற்றம்பெற்ற மற்றும் பரிவாரமாக இடும்பன் இருக்கும் ஆகம முறை சார்ந்த கோயில்களில் ஆகம முறைப்படியான பூசைகளே நடைபெற்று வருகின்றன. ஆடிவேல் உற்சவங்கள் நடைபெற்று முடிந்ததன்பின் இடும்பனுக்கு சைவ, அசைவப் படையல் வைத்து வழிபடும்முறை ஆகம முறைப்படி அமைந்த கொழும்பு கதிர்காம வேலாயுத சுவாமி கோயில்கள் மூன்றிலும் காணப்படுதல் குறிப்பிடத்தக்கது. இதேபோல கொழும்பு, மலையகம், யாழ்ப்பாணம் (வடமராட்சி) போன்ற இடங்களில் கதிர்காம யாத்திரை செய்து தமது நேர்த்திக்கடனை முடித்து வந்தவர்கள் மட்ச – மாமிசம் காய்ச்சக்கூடிய நாளொன்றில் வீட்டில் இடும்பன் பூசை செய்வர். இவ்வாறு கோயில் சார்ந்து நடைபெறும் இடும்பன் பூசைகளைத் தவிர வாழ்வியல் சார்ந்தும் இடும்பன் பூசைகள் நடைபெறுகின்றன. அவை மகிழ்வுசார் சந்தர்ப்பத்திலும், துக்கம்சார் சந்தர்ப்பத்திலும் நடைபெறுகின்றன. குடிபுகுதல் (வீடு குடி பூரல்), கிணறு வெட்டி ஊற்றுக்காணல், குறித்த நேர்த்தியை நிறைவு செய்ததன் பின்னர், எடுத்த காரியம் சிறப்புற நடைபெற்றதன் பின்னர் என மகிழ்வுசார் பூசை நடைபெறும். இறப்பின் பின்னான அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய (31) நிகழ்வு நிறைவுற்ற பின்னர் நிகழ்வதாக துக்கம்சார் பூசை நடைபெறும். இடும்பன் பூசை மேலே குறிப்பிட்டதுபோல இடும்பன் பூசை என்பது இருவிதமாக நடைபெறுகின்றது. கோயில் சார்ந்தது. கோயில் சாராது, வாழ்வியலுடன் இணைந்தது. இடும்பன் தனிக்கோயிற் கொண்டு இருக்கும் இடங்களில் தினம் விளக்கு வைத்தல், வாராந்தப் பூசை, வெள்ளியில் விளக்கு வைத்தல் மற்றும் விஷேட தின பூசை என்பன இடம்பெறுகின்றன. இங்கு நடைபெறும் விசேட தினப் பூசைகளில் சோறு, மட்சம், மாமிசம், மரக்கறி என்பன அவித்துப் படைக்கப்படும். பூசாரி தெய்வமாடி குறி சொல்லுதலும், பில்லி – சூனியம் – வசியம் முதலியன நீங்குதலும், கயிறு கட்டி திருநீறு இடுதலும் வழக்கமாக உள்ளது. அதேவேளை நேர்த்தி வைத்த மக்கள் தாமாகவே படையலை வைத்து வழிபடலும், அவற்றை மக்களுக்கு அள்ளி வழங்குதலும் உண்டு. நாற்பது வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் உள்ள அல்வாய்ப் பிரதேசத்தில் இடும்பன் கோயில் காணப்பட்டதாகவும், அங்கு சோறு, மட்சம், மாமிசம் படையலிட்டபின் அவற்றை ஒன்றாக்கிக் குழைத்து திரணைகளாக்கி (பந்து போல உருண்டையாக்கி) யாவர்க்கும் வழங்கும் வழக்கம் காணப்பட்டதாகவும் தகவல் உண்டு (தகவல் – இ. இராஜேஷ்கண்ணன், முதுநிலை விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) இக்கோயில் யுத்த காலப்பகுதியில் ஏதோ சில காரணங்களால் அகற்றப்பட்டுவிட்டதாக அறிய முடிகிறது. கொழும்பு கதிர்காம வேலாயுத சுவாமி கோயில்கள் மூன்றிலும் ஆடிவேலின் பின் இடும்பனுக்குப் படையலிட்டு அடியவர்க்கு வழங்கும் வழக்கம் காணப்படுகிறது. இங்கு ஆகமம்சார்ந்த பூசைமுறையே காணப்படினும் இத்தினத்தில் மட்டும் அசைவம் என்று சொல்லப்படும் மட்ச, மாமிசப் படையல் இடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். வாழ்வியல்சார் சடங்காக இடும்பன் பூசை மகிழ்வு சார் சடங்கு/ பூசை 1. கிணற்றில் ஊற்றுக் காணல் வீட்டுவளவில் அல்லது தோட்டங்களில் கிணறு வெட்டுவர். கிணற்றை வெட்டும்போது அத்தொழிலைச் செய்பவர் காவல் தெய்வமான இடும்பனிடம் “எந்தச் சிக்கலுமின்றி கிணறு வெட்டி முடித்து நன்னீர் ஊற்று சிறப்பாகச் சுரக்க வேண்டும்” என வேண்டிக் காரியத்தைத் தொடங்குவார். கிணறு வெட்டும்போது ஊற்றுநீரைக் கண்டவுடன் அந்த நீரை காவோலையால் (காய்ந்த பனையோலையால்) மூடிவிடுவர். அடுத்த நன்னாள் பார்த்து, உரிய நேரத்தில் இடும்பன் பூசை செய்வர். கோழி ஒன்றின் கழுத்தறுத்து எறிவதோடு இரத்தத்தைக் கிணற்றில் தெளிப்பர். காவோலை எடுக்கப்பட்டுவிடும். பலியிடப்பட்ட கோழியை உண்ணும் வழக்கம் இல்லை. வேறு இறைச்சி, மட்சம் உள்ளிட்டவை சமைத்து கிணறு வெட்டிய தொழிலாளிகளுக்கும் தமது உறவுகளுக்கும் கொடுத்துண்பர். 2. வீடு குடிபுகுதல் (வீடு குடி பூரல்) புதிதாகக் கட்டப்பட்ட வீடு குடிபுகும் சடங்கு நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு வீட்டின் மரவேலைகளைச் செய்த தச்சுத் தொழிலாளர்களால் வீட்டின் முகடு பிரித்து தச்சன் காளி விரட்டல் சடங்கு நிகழ்த்தப்படும். அதுபோல குடி புகுதல் நிகழ்வு நடைபெற்று நான்காம் நாள் அளவில் (அசைவம் புழங்கக்கூடிய நாளில்) அசைவ உணவுகள் சமைக்கப்பட்டு அவ்வீட்டைக் கட்டிய தொழிலாளர்களுக்கும் வேண்டிய உறவுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு விருந்து வைக்கப்படுதலே இடும்பன் பூசையாகச் சொல்லப்படுகிறது. யாழ்ப்பாணம், மூளாய், பொன்னாலைப் பிரதேசங்களில் அத்தினத்தில் கோழி கழுத்தறுத்துப் பலியிடப்படுதலும் தலையை வீட்டுக் கூரையின் மேலால் எறிதலுமாகிய வழக்கம் காணப்படுகிறது (தகவல் – மயூரரூபன், எழுத்தாளர், வடமராட்சி). இதேவேளை யாழ்ப்பாணம், நுணாவில், மட்டுவில் கிராமங்களின் சில பகுதிகளில் இடும்பன் பூசை நடைபெறும் நாளில் சமைக்கப்படும் சைவ, அசைவ உணவுகள் யாவற்றிலும் சிறிது அள்ளி, வடலிப் பனையோலையால் பின்னப்பட்ட தட்டுவத்தில் இட்டு, குசினி அடுப்படியில் வைத்த பின்பே உணவு பரிமாறப்படுகிறது. அன்றிரவு ஆளரவம் அடங்கியபின் அத்தட்டுவத்தை சந்தி முடக்குகளில் அல்லது சுடலைக்கண்மையில் வைத்துவிட்டு வரும் வழக்கம் காணப்படுகிறது (தகவல் – செல்வி. ரஜீவா, நுணாவில், உதவி விரிவுரையாளர், வரலாற்றுத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்). பண்டத்தரிப்புப் போன்ற பிரதேசங்களில் பந்தமும் கொண்டு சென்று இவற்றைச் சந்தியில், ஆட்கள் புழங்காத இடத்தில் வைத்துவிட்டு தமது வீட்டடியில் எச்சிலைக் காறி உமிழ்ந்து, பின்பு கால் கழுவிவிட்டு வீட்டுக்குள் செல்லும் வழக்கமுள்ளதாகக் கொத்தனார் வேலை செய்யும் தர்மலிங்கம் குகன் (வயது, 37) பேபிச்சந்திரன் விஜயகுமார் (வயது, 48) போன்றோர் தெரிவித்தனர். கோயில் திருவிழா, கந்தசஷ்டி போன்ற காலங்களில் விரதம் முடிவுற்றதன் பின்பும் கோயில்களுக்கான பாதயாத்திரைகள், நேர்த்திக்கடன்கள் முடிவுற்றதன் பின்பும் அசைவ உணவு சமைக்கப்பட்டு உறவினருக்கும் நண்பர்களுக்கும் வழங்கப்படும். துக்கம்சார் சடங்கு/ பூசை இறப்பின் பின்னான அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் நிறைவுற்ற பின்னர் நிகழ்வதாக துக்கம்சார் பூசை நடைபெறும். அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் நடைபெற்று நான்காம் நாள் அளவில் (அசைவம் புழங்கக்கூடிய நாளில்) அசைவ உணவுகள் சமைக்கப்பட்டு, அவ்விறப்பு நிகழ்வு நடைபெற்றபோதும், பின்னான நாட்களிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்விலும் துணைநின்ற அனைவருக்கும், இரத்த உரித்துடைய உறவுகளுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டு விருந்து வைக்கப்படுதலே இடும்பன் பூசையாகச் சொல்லப்படுகிறது. செட்டிமாரிடமும், பாண்டியன் தாழ்வு போன்ற பிரதேசங்களிலும் இந்த வழக்காறு இருப்பதாக திரு. ச. முருகேசபிள்ளை (வயது, 60) குறிப்பிடுகின்றார். இங்கு இடும்பன் பூசை என்பது இடுப்பன் சாமிக்கான பூசையல்ல; அசைவ உணவு சமைத்து குறித்த காரியத்தில் கை கொடுத்த, துணைநின்ற, வழித்துணையாய் அமைந்த மனிதருக்கு அன்புடன் பரிமாறும் செயற்பாடாகவே அமைந்துள்ளது. இடும்பன் பூசைக்கான படையல் இடும்பன் பூசை கோயில்களில் நடைபெற்றாலும் சரி, வீட்டில் நடைபெற்றாலும் சரி இடும்பனுக்கான படையல் தனித்துவமானது. கோயில்களில் பெரிய கிடாரங்களில் சோறு சமைக்கப்படும். ஆடு, கோழி, இறைச்சிகளும் கடலுணவுகளான நண்டு, இறால், கணவாய், மீன் என்பவற்றோடு பலவகையான, கிடைக்கக்கூடிய மரக்கறிகளும் சமைக்கப்பட்டு பனையோலைப்பாயில் படையல் வைக்கப்படும். சோறு மலைபோல் குவிக்கப்பட்டு கறிவகைகள் இடப்பட்டு, படையல் படைக்கப்படும். சில கோயில்களில் கள், சாராயம் போன்றவற்றைப் படைக்கும் வழக்கமுண்டு. வீடுகளில் நடைபெறும் இவ்வாறான பூசைகளில் சோறு, மரக்கறி, இறைச்சி வகைகளோடு புட்டு, கணவாய், இறால், மீன், பொரியல் – கறி உள்ளிட்ட பலவகையான உணவாக்கங்கள் அவரவர் வசதிக்கேற்ப ஆக்கப்படுதல் குறிப்பிடத்தக்கது. அதேபோல இப்பூசையில் பங்குபற்றுபவர்களுக்கு வேண்டிய மதுபான வகைகளும் வழங்கப்படும். இவை இன்று அநாகரிகச் செயற்பாடுகளாகக் கருதப்பட்டு தவிர்க்கப்பட்டு வருகின்றன. சில அவதானிப்புகள் இடும்பன் பற்றிய கதைகள் பலவிதமாக உள்ளன. பாரத, இராமாயண இடும்பன் இராட்சதன், காவற்காரன்; முருகனடியாராகச் சித்தரிக்கப்படும் இடும்பன் சிறந்த பக்தனாக, மலைகளைத் தூக்கவல்ல பேராற்றலானாக, வீரனாகக் காட்டப்படுகின்றார். காலந்தோறும் வந்த பல்வேறு கதைகளின் கூட்டு வெளிப்பாடாகவே இடும்பன் கதை அமைகிறது. இராட்சதன், வீரன், காவல் தெய்வம் என்பதனால்தான் என்னவோ அசைவ உணவும் மலைபோன்ற உணவுக்குவியலுமான படையல் வழங்கப்படுகிறது போலும். நாட்டுக் கோட்டைச் செட்டிமார்களின் முருக வழிபாட்டோடு இடும்பன் வழிபாடு பின்னிப்பிணைந்திருக்கிறது. நல்லூரில் கந்தசஷ்டி காலத்தில் நவவீரர் பவனி இடம்பெறுதல்போல, கொழும்பு ஆடிவேல் விழாவில் முருகனின் திருத்தேர் முன்பு பிரம்புடன் இடும்பன் ஆடிப்பாடி வருகின்ற நிகழ்வு இடம்பெறும். பிரம்புடன் வருதல் என்பது இடும்பனுக்கு கொடுக்கப்படும் முதன்மை அதிகாரத்தின் குறியீடு எனலாம். அதேவேளை நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இடும்பன், வழிபடு தெய்வமாகவன்றி சுவாமியைக் காவும் வாகனமாகவே உள்ளான். கால்களை மடக்கி கனத்தினைத் தாங்கும் இராட்சதனாக – ஒரு வீரனாக – பக்தனாக – விசுவாசியாக – தொழிலாளர் வர்க்கத்தினனாகவே சித்திரிக்கப்படுகின்றான். கலையியல் மரபில் இடும்பனுக்குத் தனிப்பங்குண்டு. மட்டக்களப்பில் ஆடப்படும் வடமோடிக் கூத்துகளில் ஒன்றாக ‘இடும்பன் போர்’ விளங்குகின்றது. அதுபோல நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் மகோற்சவத்தில் பதினேழாம் நாள் நடைபெறும் இடும்பன் வாகனத் திருவிழாவில் பூதநிருத்தம் எனும் நடனம் ஆடப்படுவது குறிப்பிடத்தக்கது. மத்தளத்தை தோளில் தூக்கியவாறு ஒற்றை காலில் ஆடி ஆடி வாசிப்பதை பூதநிருத்தம் என்பர். இவ்வாறாக பூத கண வாத்தியங்கள் முழங்க, பூத நடன சமர்ப்பணத்தோடு இடும்பன் மீது கந்தசுவாமி பவனி இடம்பெறும். ஈழத்துப்புலத்தில் கதிர்காம யாத்திரை என்பது நீண்டகாலமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. முதன்முதல் யாத்திரை போய் சிறப்பாக அதனை முடித்து வீடு திரும்பியவர் வீட்டில் இடும்பன் பூசை செய்தபிறகே அவர் மீள வீட்டுக்கு வெளியில் செல்லலாம் எனும் நடைமுறை வல்வெட்டியில் இருப்பதாக திருமதி கேசலிங்கம் தவமலர் (வயது, 78) குறிப்பிடுகின்றார். பல பிராந்தியங்களில் யாத்திரை செய்யும் தோறும் இப்பூசை இடம்பெற்று வந்துள்ளது. ஆயினும் இன்று யாத்திரை மரபும் இடும்பன் பூசையும் வழக்கிழந்து வருகின்றது. வெட்டுக்கிணறு வெட்டும் வழக்கம் இன்று அருகி குழாய்க்கிணறு முறையே பெருகிக் காணப்படுகின்றது. அதுபோல கோழி பலியிடல் அருகி அதன்வழி இடும்பன் பூசையும் வழக்கிழந்து பொங்கல் படையலே எஞ்சி நிற்கின்றது. வீடு குடி புகுதல் நிகழ்வின் பின்னான மட்சம், மாமிசம் காய்ச்சுதல் நிகழ்வாக இடும்பன் பூசை நடைபெறுவது அருகி வருகின்றது. படையலுக்குப் பயன்படும் பனையோலையாலான தட்டுவம், பாய் என்பனவும் வழக்கிழந்து விட்டன. தற்காலத்தில் வாழையிலையும் உலோக, பிளாஸ்ரிக் தட்டுகளுமே பயன்படுத்தப்படுகின்றன. எல்லா மக்களாலும் பின்பற்றப்பட்டு வந்த இடும்பன் பூசை இன்று கைவிடப்பட்டு செட்டிமார், சிறுகுடி வேளாளர் போன்றோராலேயே சிறிதளவேனும் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இடும்பனுக்கான படையல் என்பது, குறித்த பிராந்திய மக்களின் பண்பாட்டோடு இணைந்து உணவு முறை, குடிவகைசார்ந்த வெளிப்பாடாகவும் கொடுத்துண்கின்ற பண்பாட்டின் வெளிப்பாடாகவும் அமைகிறது. இன்று இடும்பன் பூசை எனும் சொல்லாட்சி அசைவ உணவை உண்ணுதல் என்பதனைக் குறிக்கும் சொல்லாக, கிண்டலாக மாறியுள்ளமை கவனத்திற்குரியது. காளியோடு இணைந்திருக்கும் இடும்பன் வழிபடு தலங்கள் புதிய தளக்கோலங்களுக்கு உரியனவாக அமைந்துள்ளன. காளி, பிள்ளைகளைப் பிடித்துண்ணுபவளாகவும், அவளைக் கட்டுப்படுத்தும் தெய்வமாக நகரத்தார் இடும்பனை வழிபட்டதாகவும், பயன்பெற்றதாகவும், தமிழகத்தில் ஓர் ஐதிகக்கதை உண்டு. மகாபாரதத்தில் இடும்பன் மனிதர்கள் உள்ளிட்ட உயிர்களை உண்பவனாகவே சித்திரிக்கப்படல் முரண் நகையாகும். ஈழத்தில் காளியோடு இணைந்த இடும்பன் வழிபடுதலங்களில் (மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்) பில்லி சூனியம், செய்வினை, வசியம் என்பன நிகழ்த்துகைகளாக உள்ளன. இது இடும்பன் வழிபாடு, நாகரிகமற்ற ஒன்று எனக் கருத வாய்ப்பளிக்கின்றது. இடும்பன் பூசை என்பது ஒரு வழிபாடு என்பதைவிட, குறித்த காரியத்தில் துணை நின்ற யாவர்க்கும் அவர் விரும்பும் உணவை, குடி வகையை விருந்தாக அளித்து நன்றி செலுத்தும் நிகழ்வு என்றே கருத வேண்டியுள்ளது. இன்னும் நுணுகியுரைக்கின் மகிழ்விலும் துக்கத்திலும் கூட இருந்தவர்களுக்கு அன்பை வெளிப்படுத்துவதாகவும் வீடு, கிணறு உருவாக்கத்தில் அர்ப்பணிப்புடன் உழைத்த உழைப்பாளிகளுக்கு நன்றி சொல்லும் வகையில் நிகழும் நிகழ்வாகவுமே இடும்பன் பூசை அமைந்துள்ளது. நிறைவுரை ஈழத்தில் நின்று நிலவுகின்ற நாட்டார், ஆகமமரபு வழி தனித்தனியேயும், இரு மரபும் இணைந்தநிலையிலும் வழிபடு தெய்வமாக இடும்பன் காணப்படுகின்றான். இடும்பன் பற்றிய கதைகள் பல இடும்பன்கள் இருந்தமையை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை அவனை இராட்சதனாக, மாமிச உண்ணியாக சித்திரிப்பதில் ஒன்றுபடுகின்றன. இடும்பன் தனிக்கோயில் கொண்டவனாக, பரிவாரத் தெய்வமாக காணப்படுகின்ற அதேவேளை, இன்று அவனது கோயில்கள் பல காணாமல் போயின அல்லது மேனிலையாக்கம் பெற்றன. ஆஜானுபாகுவான உருவமுடைய சிலை – விக்கிரக வழிபாடு காணப்படும் அதேவேளை வேல், கல், சூல வழிபாடும் உள்ளன. உரும்பிராயில் மட்டும், மூன்று திரிசூலங்கள் இணைந்து, இருபக்கமும் மேலும் நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டு, வழிபடப்படுவதைக் காண முடிகிறது. சனங்களின் உணவியல் பண்பாட்டோடு கலை மரபோடும் இணைந்த இத்தெய்வம் அரூபநிலையிலும் வழிபடப்படுகிறது. இடும்பன் பூசை ஒரு தெய்வ வழிபாடாக மட்டுமன்றி உழைப்பாளர்களை – குறித்த தொழில்களைச் செய்யும் மக்களை, அவர்களின் பணியைக் கௌரவித்து, மரியாதை செய்வதாகவும், நன்றி தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது. ஆயினும் நாகரிகம் என்ற போர்வையில் இன்று இப்பண்பாடும் பூசையும் மிகவிரைவாக வழக்கிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.ezhunaonline.com/idumban-pooja/
-
கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது எப்படி? ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது எப்படி? ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் 15 Oct 2025, 11:35 AM தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நடத்திய கரூர் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 15) அளித்த விளக்கம்: கரூர் வேலுசாமிபுரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டம் கட்டுக்கோப்பாக நடைபெற்றது; சுமார் 17,000 பேர் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர் கரூர் விஜய் பிரசார கூட்டத்துக்கு மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது; ஆனால் பகல் 12 மணிக்கே விஜய் வருவார் என தவெக பொதுச்செயலாளர் அறிவித்தார். கரூர் பிரசார கூட்டத்துக்கு விஜய் 7 மணிநேரம் தாமாக வந்தார் கரூர் வேலுசாமிபுரத்தில் போலீசார் தடுத்து நிறுத்தியும் போலீசார் அறிவுறுத்தலை மீறி 35 மீட்டர் தூரம் கூட்டத்துக்குள் விஜய் வாகனம் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது கரூர் கூட்டத்துக்கு வருபவர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் தவெகவினர் செய்யவில்லை; உணவு வழங்க ஏற்பாடு செய்யவில்லை; பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க வெளியே செல்லவும் முடியவில்லை. விஜய் கூட்டத்துக்கு 10,000 பேர் வருவர் என தவெகவினர் தெரிவித்தனர்; ஆனால் அதிகம் பேர் கூடுவர் என்பதால் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கும் பாதுகாப்பை விட கூடுதலாகவே பாதுகாப்பு அளிக்கப்பட்டது; காவலர்கள், அதிகாரிகள் என மொத்தம் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்ஸும் கூட்டத்துக்குள் செல்லவில்லை. மீட்பு பணி நடைபெற்ற போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தவெகவினர் தாக்கினர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடனேயே ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்து தவெகவினர் சேதப்படுத்தினர்; இதனால் ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தைத் துண்டித்தார். கரூர் துயர சம்பவம் அறிந்த என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. அன்று இரவே அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்; அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன; அமைச்சர்கள் பலரும் அங்கு சென்று பணியாற்றினர். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. 200 காவல்துறையினர் மருத்துவமனைக்கு பாதுகாப்பும் வழங்கினர். அனைத்து உடல்களையும் வைக்க போதுமான குளிர்சாதன வசதி இல்லை என்பதால் இரவோடு இரவாக உடற்கூறாய்வு செய்யப்பட்டது; இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வு செய்யும் பணி அதிகாலை 1.41 மணிக்கு தொடங்கியது. நான் எனது 50 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன்; இங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் அத்தகைய அனுபவம் கொண்டவர்கள்தான்; மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் நெறிமுறைகளுக்கும் பொது ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடத்தப்படுகின்றன; இத்தகைய கட்டுப்பாடுகளை மீறும் போது பாதிக்கப்படுவது அந்த கட்சியின் தொண்டர்கள்தான்; இதனை மனதில் வைத்து செயல்பட வேண்டும். https://minnambalam.com/karur-vijay-stampede-tragedy-how-did-41-people-die-why-did-the-ambulance-arrive-cm-stalin-explains-in-the-assembly/#google_vignette
-
குருந்தூர்மலை விவகாரம்: தமிழ் விவசாயிகளின் நிலங்களை அழித்து “தொல்லியல் தளம்” என அறிவிப்பு
குருந்தூர்மலை விவகாரம்: தமிழ் விவசாயிகளின் நிலங்களை அழித்து “தொல்லியல் தளம்” என அறிவிப்பு October 15, 2025 கடந்த மே மாதம் தமது பூர்வீக விவசாய நிலங்களைப் பண்படுத்தி விவசாயம் செய்ய முற்பட்ட தமிழ் விவசாயிகளை அங்குள்ள கல்கமுவ சாந்தபோதி தேரர் எனும் பெளத்த பிக்கு காவல்துறையில் பிடித்துக் கொடுத்து சிறையில் அடைந்திருந்தார் அதன் தொடர்ச்சியாக இன்று பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களை அழித்துத் தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்திருக்கின்றது. ரணில் விக்ரமசிங்ஹ அதிகாரத்திலிருந்த போது இரவோடு இரவாக தண்ணிமுறிப்பு கிராமம் உட்பட அப்பகுதியிலுள்ள சுமார் 341 ஏக்கர் நிலத்தைத் தொல்லியல் நிலம் என எல்லைக்கற்களை நாட்டியிருந்தார்கள். இருப்பினும் ரணில் விக்கிரமசிங்ஹ தலையீடு செய்த காரணத்தினால் விவசாய நடவடிக்கைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை இம் முரண்பாடுகளின் விளைவாக அப்போதைய தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் அனுர மானதுங்க தனது பதவியைக் கூட இராஜினாமா செய்திருந்தார் ஏன்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பின் அமைதியாகவிருந்த கல்கமுவ சாந்தபோதி எனும் தேரரும் தொல்லியல் திணைக்களமும் அநுர அரசு அதிகாரத்திற்கு வந்த பின்னர் குருந்தூர்மலை மலை மற்றும் அதனைச் சூழவுள்ள அந்த 341 ஏக்கர் விவசாய நிலப்பரப்புக்கும் பாதுகாப்பு வேலி ஒன்றை அமைத்து முழுமையாக ஆக்கிரமிக்க முயற்சித்து வருகின்றார்கள். அதன் முதற்கட்டமாக இராணுவத்தினரின் ஒத்துழைப்போடு நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட புறம்தள்ளி விவசாய நிலங்களை அழித்து அறிவித்தல் பலகைகளை இன்று தொல்லியல் திணைக்களம் வைத்திருக்கின்றது உள்ளூரில் அரிசி உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டிய மிக வளமான விவசாய நிலங்களை அழித்து ஆக்கிரமிக்கும் நிலையைத் தொடரவிட்டு சம நேரத்தில் மறுபுறம் மக்களின் தேவைக்கு அரிசியை இறக்குமதி செய்கின்றார்கள். 2028 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் 5.5 பில்லியன் அமெரிக்கா டொலர்கள் கடன்களை மீள செலுத்த வேண்டிய சீரழிந்த பொருளாதார சூழலுக்கு மத்தியில் இவ்வாறு இனவாதம் தொடர்ந்தால் என்ன செய்யப் போகிறது அநுர அரசு. ஆனால் பொதுப்பரப்பில் இனவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஜேவிபி ஆட்கள் வெறும் வாயில் நிறுவ முயற்சிக்கும் நிலையில் மீண்டும் மீண்டும் இனவாதம் இவ்வாறு தலைதூக்குகிறது. https://www.ilakku.org/kurundurmalai-issue-tamil-farmers-lands-destroyed-and-declared-as-archaeological-site/
-
கோப்பாய் காவல் நிலையத்தை உடனடியாக அகற்ற உத்தரவு…
கோப்பாய் காவல் நிலையத்தை உடனடியாக அகற்ற உத்தரவு… October 15, 2025 யாழ்ப்பாணம், கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இப் காவல்நிலையம், கடந்த 30 வருடங்களாக காவல்துறையினரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் உள்ள நிலையில் அக் காணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்தும் வந்த நிலையில் , அதற்கு பலன் கிட்டியிருக்கவில்லை. இந் நிலையில், 2019ஆம் ஆண்டு, இக் காணிகளுக்கு உரிமையான 9 உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். இதன் பிரகாரம் வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த யூன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன் போது பொது மக்களின் காணியிலிருந்து வெளியேறி, அந்த காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார். எனினும், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை காவல்துறையினர் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்காத நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, நீதிமன்ற பதிவாளர் கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதிக்குச் சென்று, அங்குள்ள காவல்துறையினரை வெளியேற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளார். அதேவேளை கோப்பாய் காவல் நிலையத்தை உரும்பிராய் பகுதிக்கு மாற்றும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. பகுதியளவில் இடமாற்ற நடவடிக்கைகள் முடிந்துள்ளன. எனினும், முழுமையான இடமாற்றம் நடந்து முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/order-to-immediately-remove-kopai-police-station/
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
இஷாரா செவ்வந்தி எப்படி தப்பினார்: முழு விபரம் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று, இந்தியாவில் சுமார் மூன்று வாரங்கள் தங்கி, சாலை வழியாக நேபாளத்திற்குச் சென்று, தப்பிக்க கிட்டத்தட்ட ரூ.6.5 மில்லியன் செலவிட்டதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வூட்லர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குற்றப் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி) மற்றும் ஐ.ஜி.பி.யின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படும் சிறப்பு காவல் குழுவால் செவ்வந்தி, கண்டுபிடிக்கப்பட்டு நேபாளத்தில் காவலில் எடுக்கப்பட்டார். 2025 பிப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சஞ்சீவா குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்லா சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜே.கே. பாய் என்ற கூட்டாளியின் உதவியுடன் செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல சுமார் ரூ.6.5 மில்லியன் செலவிட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு அவர் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் தங்கி, நேபாளத்தை அடைய பல்வேறு வழிகள் வழியாக பேருந்து மற்றும் ரயிலில் பயணம் செய்தார். நேபாளத்தின் மலைப்பாங்கான பகுதியில் உள்ள ஒரு பல மாடி வீட்டின் மேல் தளத்தில் மறைந்திருந்தபோது, திங்கட்கிழமை செவ்வந்தி கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றொரு பெண், கெஹல்பத்தர பத்மேவின் மூன்று நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த ஒரு தமிழ் நபர் உட்பட நான்கு பேர் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் அடுத்த சில நாட்களுக்குள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கெஹல்பத்தர பத்மேவின் குற்றவியல் வலையமைப்பால் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் கொலை தொடர்பாக செவ்வந்தி தேடப்பட்டு வந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்கா, துப்பாக்கிச் சூடு நடந்த அதே நாளில் புத்தளம், பலாவியாவில் சிறப்புப் பணிப் படையினரால் கைது செய்யப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு ஒரு பெண் துப்பாக்கியை சட்டப் புத்தகத்திற்குள் மறைத்து வைத்து உதவியதாக சிசிடிவி காட்சிகள் பின்னர் வெளிப்படுத்தின, பின்னர் அவர் மினுவங்கொடயைச் சேர்ந்த இஷாரா செவ்வந்தி என அடையாளம் காணப்பட்டார். எல்லைகளைத் தாண்டிச் செல்லவும், கைது செய்வதைத் தவிர்க்கவும் செவ்வந்தி மற்றொரு பெண்ணின் பெயரில் போலி கடவுச்சீட்டைத் தயாரித்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதற்கிடையில், இலங்கை அதிகாரிகள் இன்டர்போல் மூலம் அவரை கைது செய்ய சிவப்பு அறிவிப்பை வெளியிட்டதாக ஏஎஸ்பி வூட்லர் கூறினார். வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 40 குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 18 பேர் இந்த ஆண்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 2021 மற்றும் 2024 க்கு இடையில், அரசாங்கம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்குச் சொந்தமான ரூ. 3.9 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்துள்ளது என்று அவர் கூறினார். இதற்கிடையில், "பஸ் லலித்" என்று பரவலாக அறியப்படும் லலித் கன்னங்கர, ஒரு குற்றவியல் கும்பலின் உறுப்பினராக, துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். அவிசாவலை, ஹோமாகம மற்றும் கடுவெல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றங்களுடன் தொடர்புடையவர் அவர். ஆகஸ்ட் 12 ஆம் திகதி பாதுக்கவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த முன்னாள் ஹோமாகம பிரதேச சபை உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ மீது துப்பாக்கிச் சூடு நடத்த பஸ் லலித் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது. https://www.tamilmirror.lk/செய்திகள்/இஷாரா-செவ்வந்தி-எப்படி-தப்பினார்-முழு-விபரம்/175-366312
-
யாழ். மத்திய பேருந்து நிலையக் கடைகள் மூலம் இ.போ.ச ரூ.9.45 இலட்சம் வருமானம்!
யாழ். மத்திய பேருந்து நிலையக் கடைகள் மூலம் இ.போ.ச ரூ.9.45 இலட்சம் வருமானம்! யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் இயங்குநிலை தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 14ஆம் திகதி நடைபெற்றது. அக் கலந்துரையிடலில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையவளாகத்தை சுற்றியுள்ள கடைகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபையினர் மாதாந்தம் 09 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தினை கடையின் வாடகை வருமானமாக பெற்றுக்கொள்கின்றனர் என இலங்கை போக்குவரத்துச்சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் கே.கேதீசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட 63 கடைகளிலிருந்தும் நாளொன்றுக்கு தலா 500 ரூபா வீதம் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவரின் அனுமதியுடன் அறவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாம் புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்வது தொடர்பில் எமது தொழிற்சங்களை அழைத்துக் கலந்துரையாடவேண்டும் என்றார். இதன் பின்னர் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. நகர அபிவிருத்தி அதிகார சபை தமது முன்மொழிவுகளையும் தெரியப்படுத்தினர். புதிய பேருந்து நிலையத்தை இயங்கச் செய்வது தொடர்பில் முதலில் கள ஆய்வை மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன் , சி.சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நகர அபிவிருத்தி அதிகார சபையினர், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர், வர்த்தக சங்கத்தினர், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். https://newuthayan.com/article/யாழ்._மத்திய_பேருந்து_நிலையக்_கடைகள்_மூலம்_இ.போ.ச_ரூ.9.45_இலட்சம்_வருமானம்!