Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம்! adminOctober 15, 2025 வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.10.25) சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். வல்வை முத்துமாரியம்மன் ஆலய பிரதம குருவும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய தண்டபாணிக தேசிகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது , வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ் தேசிய பேரவை சார்பில் பட்டியல் உறுப்பினராக எம். கே சிவாஜிலிங்கத்தின் பெயர் காணப்பட்டது தேர்தல் முடிவுகளின் படி, பட்டியல் உறுப்பினராக பெண் உறுப்பினர்களையே தெரிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தமையால் தமிழ் தேசிய பேரவை சார்பில் பட்டியல் உறுப்பினராக சிவாஜிலிங்கம் உறுப்பினராக முடியவில்லை. இந்நிலையில் , வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்ததன் ஊடாக அவரது வெற்றிடத்திற்கு , புதிய உறுப்பினராக சிவாஜிலிங்கம் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/221521/
  2. நேபாளத்தில் இஷார செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த யாழ் தமிழர்கள்!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் October 14, 2025 3:45 pm கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இஷார செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, நேபாளத்தில் இஷார செவ்வந்தி உள்ளிட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த யாழ்ப்பாணத்தை ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி நடந்த கொலை தொடர்பாக நீதிமன்றத்தால் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியை இலங்கை பொலிஸின் சிறப்பு குழு கைது செய்துள்ளது. இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் முக்கிய சந்தேக நபரும் மேலும் பல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேக நபரான இஷார செவ்வந்தியை கைது செய்வதற்காக சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணை மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், பல நீண்ட இரகசிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். குற்றப் புலனாய்வுத் துறை (CID), சிறப்புப் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் வெளிநாடுகளின் ஆதரவுடன் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, நேபாள அரசாங்கத்தின் ஆதரவுடன், களத்தில் கிடைத்த தொழில்நுட்பம் மற்றும் உளவுத்துறை தகவல்களைப் பயன்படுத்தி இலங்கை பொலிஸ் குழு சந்தேக நபரைக் கைது செய்ய முடிந்தது. சந்தேக நபரான இஷார செவ்வந்தி, அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் பல்வேறு கொலைகளைத் திட்டமிட்ட ஒருவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். கெஹல்பத்தர பத்மேவிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இஷார செவ்வந்தி நேபாளத்தில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, மேற்கு வடக்கு குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல உள்ளிட்ட பொலிஸ் குழு நேபாளம் சென்றிருந்தது. உள்ளூர் பொலிஸாரின் உதவியுடன், இஷார செவ்வந்தி மற்றும் அவரது குழுவினர் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்தனர். நேபாளத்தில், இஷார செவ்வந்தியுடன் மற்றொரு தமிழ் ஆணும், பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரையும் தவிர, சந்தேக நபர் மற்றும் தங்குமிடம் வழங்கிய சந்தேக நபர் உட்பட மேலும் நான்கு பேரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நான்கு பேரில் மூன்று பேர் ஆண்கள், ஒருவர் பெண் என ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு பெண் சந்தேக நபர்கள் மற்றும் நான்கு ஆண் சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு ஆகும். இஷார செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்ட மற்றையப் பெண் இஷார செவ்வந்தியை ஒத்த தோற்றமுடையவராக இருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தன்னைப் போல் தோற்றமுடைய பெண்ணை பயன்படுத்தி இஷார செவ்வந்தி நேபாளத்தில் இருந்து வேறு நாட்டிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட பின்னர் இஷார செவ்வந்தி நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. மித்தெனி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் மறைந்திருந்த அவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரின் உதவியுடன் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். கெஹல்பத்தர பத்மேவி ஆலோசனையின் பேரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்த நபர் உதவிகள் அனைத்தையும் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் மூன்று வாரங்கள் தங்கியிருந்த இஷார செவ்வந்தி அங்கிருந்து நேபாளத்திற்கு தப்பிச் செற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்திற்கு தப்பிச் செல்வதற்கும் கெஹல்பத்தர பத்மே உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில். வெளிநாடுகளில் உள்ள இந்த சந்தேக நபர்கள் தொடர்பாக இராஜதந்திர மட்டத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் பெறுவதில், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ஆனந்த விஜயபால, பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் ரவி செனவிரத் ஆகியோரின் சிறப்பு பங்களிப்பும் கிடைத்திருந்தன. கைது செய்யப்பட்ட அனைவரும் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். பல்வேறு நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் உடன்படிக்கை மூலம் நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் அவர்களை விரைவாக இலங்கைக்கு அழைத்து வர முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். https://oruvan.com/jaffna-tamils-who-gave-shelter-to-ishara-sewwandi-in-nepa/
  3. செம்மணிப் புதைகுழிகளில் உறங்கமறுங்கும் கிரிஷாந்திகளின் குரல்கள் இளங்கோ அண்மையில் கனடாவில் நடந்த தேவகாந்தனின் 'கனவுச்சிறை' ஆங்கில நூலின் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். அப்போது இதை தமிழிலிருந்து ஆங்கிலமாக்கிய நேத்ரா ரொட்ரிகோ, தனது ஓர் அனுபவத்தைச் சொன்னார். அவர் இளம்பெண்ணாக இருந்தபோது கொழும்பிலிருந்து பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு புத்தகங்களைப் படிக்கப் போவார். எப்போது அங்கே போனாலும் இராணுவத்தின் டிரக்கும் இராணுவத்தினரும் நின்றுகொண்டிருப்பார்கள் என்றார். ஒரு பெண்ணாக அதுவும் தமிழ் பெண்ணாக, சிங்கள இராணுவத்தின் மீது பயத்தோடும் பதற்றங்களோடும் அன்றைய இளம் நேத்ரா சென்று கொண்டிருந்ததை அவர் விபரித்திருந்தார். இராணுவத்தினர் ஒரு பெண் மீது செய்யும் சேட்டைகளையும் தாண்டிச் சென்ற அந்த நாட்களினது வடுக்களையும் மீண்டும் நினைவுபடுத்தினார் நேத்ரா. நான் நேத்ராவின் நனவிடைதோய்தலில், இன்னொரு காலத்தில், இன்னொரு நிலப்பரப்பில் இப்படி இராணுவக் காவலரணைத் யாழ்ப்பாணத்தில் செம்மணியில் தாண்டிக் கொண்டிருந்த கிரிஷாந்தியை நினைத்துக் கொண்டேன். தனது பதின்வயதில் உயர்தர பரிட்சையான இரசாயனவியல் பாடத்தின் தேர்வை எழுதிவிட்டு 96ம் ஆண்டில் கிரிஷாந்தி செம்மணி காவலரணைத் தாண்டிக் கொண்டிருந்திருப்பார். அன்று பரிட்சையை மதியம் எழுதிமுடித்துவிட்டு, முதல் நாள் இறந்துவிட்ட தன் தோழியின் மரணவீட்டுக்குப் போய்விட்டு கிரிஷாந்தி தனித்து அந்தத் தெருவால் வந்தபடி இருந்திருப்பார். அவரது பாடசாலைத் தோழி, அதற்கு முதல்நாள் (இராணுவ வாகனத்தால்) அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். அந்தத் தோழியின் மரணமும் சந்தேகத்துக்குரிய வகையில் இராணுவத்தினால் நிகழ்த்தப்பட்டதாக ஓர் கதையிருக்கின்றது. கிரிஷாந்தியை, காவலரணில் இருந்த இராணுவ கோப்ரலான ராஜபக்சே மறித்து பதுங்குகுழிக்குள் அடைத்து வைக்கின்றார். தனது மகள் நேரத்துக்கு வராது பதறிய கிரிஷாந்தியின் தாயார் இராசம்மா, மகள் இராணுவத்தால்தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பதை அறிந்து, அவரது தனது இளைய மகனான பிரணவனுடனும், அயலவரான கிருபாமூர்த்தியுடனும் அந்தக் காவலரணுக்குச் செல்கின்றார். இராசம்மா இதற்கு 10 வருடங்களுக்கு முன் தனது கணவரைப் புற்றுநோயிற்கு இழந்தவர். தனியொருவராக தனது இரண்டு பெண் பிள்ளைகளையும், ஒரு ஆண் பிள்ளையும் வளர்த்து வந்தவர். கிரிசாந்திக்கு மூத்த சகோதரியான பிரஷாந்தியும், இளைய சகோதரனான பிரணவனும் இருந்தார்கள். இராசம்மா மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். பின்னர் இலங்கையில் கல்விகற்று, 50களின் இறுதியில் இந்தியாவுக்கு சென்று பொருளாதாரத்தில் இளங்கலைமாணி பட்டத்தையும் பெற்று வந்து, ஒரு பாடசாலையில் உப அதிபராகப் பணிபுரிந்தவர். இராசம்மா, அவரின் இளைய மகன் பிரணவன், அயலவர் குமாரசாமி ஆகிய மூவரும் இராணுவத்திடம் கிரிஷாந்தி எங்கே என்று வினாவுகின்றனர். அவர்களோ அப்படியொருவரை தாங்கள் கைது செய்யவில்லை என்று மறுக்கின்றார்கள். அதை நம்பித் திரும்பிப் போகின்றவர்கள், இராசம்மாவின் பிடிவாதத்தால் மீண்டும் காவலரணுக்குத் திரும்பி கிரிஷாந்தி எங்கே என்று வினாவுகின்றனர். இப்போது இராசம்மா, தனது மகளை விடுதலை செய்யாதவரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றார். ஒரு தாயின் மனது, இந்த இரவை தன் மகள் இராணுவ முகாமிற்குள் கழித்து விட்டால் இனி என்றென்றைக்கும் மீள மாட்டாளென நம்பியிருக்கலாம். இராசம்மாவுக்கு சிங்களமும் நன்கு தெரியும். ஆகவே அவர் சிங்களத்தில் இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார். எப்போது துப்பாக்கியோடும், அதிகாரத்தோடும் இருக்கும் எந்த தரப்பாயினும் இப்படி ஒருவர் அடங்காது நியாயம் கேட்பது கோபத்தை வரவழைக்கத்தானே செய்யும். அதுவும் இராணுவம் என்றால் சொல்லவும் வேண்டுமா? அந்த முகாமில் இருந்த இராணுவத்தினர் இந்த மூன்று பேரையும் இன்னொரு பதுங்குகுழியில் கொண்டு போய் அடைத்து வைக்கின்றது. பிறகு நடந்தவற்றை நான் விரிவாகச் சொல்லப் போவதில்லை. ஒருபுறத்தில் கிரிஷாந்தி கூட்டு வன்புணர்வுக்கு ஆளானபோது, இவர்கள் மூன்று பேரும் அருகிலேயே வைத்து கொல்லப்படுகின்றார்கள். கிரிஷாந்தி உள்ளிட்ட இந்த நான்கு பேரும் கொல்லப்பட்ட முறை மிகக் கோரமானது. இற்றைக்கு இது நடந்து 30 வருடங்களாகி விட்டது. ஆனால் இதைச் சாட்சியமாகச் சொன்னவர்களின் வாக்குமூலங்களை வாசிக்கும்போது மனம் பதறுகின்றது. அதை தொகுத்து நூலாக்கி 'வன்மம்' என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன் இலங்கையில் வெளிவந்த நூலின் ஒவ்வொரு பக்கங்களைப் புரட்டும்போதும் கைவிரல்கள் படபடக்கின்றன. அன்று இந்த விடயம் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவின் கவனத்துக்கொண்டு செல்லப்பட்டபோது, இராணுவ/பொலிஸ் குழுவொன்றின் விரைவான விசாரணையினாலாயே இது ஒரு முக்கிய மனிதவுரிமை மீறல் சம்பவமாகப் பொதுவெளிக்கு தெரிய வந்தது. மேலும் எதற்கும் பயப்பிடாது சாட்சி சொல்ல வந்த பொதுமக்களினதும், குற்றஞ்சாட்டப்பட்ட ராஜபக்சே உள்ளிட்டவர்களிலிருந்து அரச சாட்சியாக மாறிய ச நஸார், சமரசிங்க போன்றவர்களின் சாட்சியங்களும் முக்கியமானவை. நஸாரின் சாட்சியங்களில், அவருக்கு கிரிசாந்தியின் கூட்டுப் பாலியல் வன்புணர்வில் பங்கிருக்கின்றதா இல்லையா என்று சற்றுக் குழப்பம் இருந்தாலும், அவர் அரசசாட்சியாக மாறியது இந்த வழக்கின் முக்கியமான திருப்பமாகும். அது போலவே சமரசிங்க என்று ஒரு பொலிஸ்காரர் அன்று கோப்பாயில் பணிபுரிந்து கொண்டிருந்தவர். அவர் ஒர் அரிய மனிதாபிமானியாகவே இக்கொடும் நிகழ்வில் புலப்படுகின்றார். அவரே கிரிஷாந்தி உள்ளிட்ட நால்வரின் விடுதலைக்கு அவருக்கு இயன்றமுறையில் முயற்சித்திருந்தவர். கிரிஷாந்தியைப் மதியத்தில் கைதுசெய்து காவலரணில் வைத்து விட்டு, ராஜபக்‌ஷே, சமரசிங்கவை கிரிஷாந்திக்கு விடுதலைப் புலிகளோடு தொடர்பிருக்கா என விசாரிப்பதற்காய் அங்கே வரச் சொல்கின்றார். சமரசிங்கவிற்கு தமிழ் தெரியும் என்பதால் பதுங்குகுழிக்குள் இருந்த கிரிஷாந்தியை அவர் விசாரிக்கின்றார். கிரிஷாந்தி அதை மறுப்பதுடன், எதற்காக என்னை இங்கே தடுத்து வைத்திருக்கின்றீர்கள் எனக் கேட்கின்றார். அதுவே சமரசிங்க முதலும் கடைசியுமாகக் கிரிஷாந்தியை உயிருடன் சந்திப்பது. இப்படி கிரிஷாந்தியை விசாரித்துவிட்டு பகல் 3.00 மணிக்குத் திரும்புகின்ற சமரசிங்க, மூன்று பேர் அதே காவலரண்களுக்குள் நுழைவதைக் காண்கின்றார் (இதை சமரசிங்க நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும்போது நினைவுகொள்கின்றார்). அதன் பின்னர் கோப்பாயுக்கு திரும்புகின்ற சமரசிங்க மனம் அமைதி கொள்ளாது, மாலையில் இன்னொரு பொலிஸ்காரரை சைக்கிளில் அழைத்துக் கொண்டு, கிரிஷாந்தியை கைதுசெய்யப்பட்ட காவலரணுக்குச் சென்று கிரிஷாந்தி உள்ளிட்ட மற்றவர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்யக் கேட்டிருக்கின்றார். அது வாக்குவாதமாக மாறி கோபத்தில் சமரசிங்கவையும், அவரது நண்பரையும் அங்கிருந்து ராஜபக்‌ஷே உடனே திருப்பிப் போகச் சொல்கின்றார். இந்த நிகழ்வில் குற்றஞ்சாட்டப்பட்டு, அரச தரப்புவாதியாக மாறி நஸாரின் சாட்சியம் இன்னும் கோரமானது. கிரிஷாந்தி தடுத்து வைக்கப்பட்ட காவலரணுக்கு அருகில் காவலில் இருந்தவர் நஸார். ராஜபக்‌ஷே தனது இராணுவ நண்பர்களிடம் கிரிஷாந்தியின் உடல் மீது வன்புணர்வை நடத்த அனுமதி கொடுத்தபின், நஸாரும் செல்கின்றார். தான் தமிழில் பேசியதால் முனகிக்கொண்டிருந்த கிரிஷாந்தி தன்னிடம் தண்ணீரும் கேட்கவும் தான் கொடுத்ததாகவும், அப்போது யாரோ கெட்டவார்த்தைகளால் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்று கேட்டபோது தான் அந்த இடத்திலிருந்து நகர்ந்ததாகவும் சொல்கின்றார். அப்படித் திரும்பிப் போகும்போது 75 மீட்டர் தொலைவில் கிரிஷாந்தியின் தாயார் இராசம்மா பேச்சு மூச்சின்றி இறந்து கிடந்திருக்கின்றார். இலங்கை இராணுவம் இவர்கள் அனைவரையும் சுருக்குக் கயிறை இரண்டுபக்கமும் போட்டு இழுத்தே கொன்றிருக்கின்றது. இந்தக் கொலைகள் நடக்கும்போது துப்பாக்கியோடு காவல் இருந்ததாக நஸார் சொல்கின்றார். பின்னர் இராணுவத்தினர் மண்வெட்டிகளோடு அந்த உடல்களைப் புதைக்கச் சென்றதையும் கண்டதாகச் சாட்சியில் சொல்லியிருக்கின்றார். கிரிஷாந்தியின் வழக்கு பிற வழக்குகள் போல இல்லாது, அதிகளவு அழுத்தத்தால் இரண்டு வருடங்களில் முடிந்திருக்கின்றது. இந்த நான்கு பேரும் அன்று கொலைசெய்யப்பட்ட உடனேயே ஓர் பெரும் எதிர்ப்பு எல்லாத் தரப்புக்களிலும் இருந்து வந்ததாலேயே, உரியவர்கள் கைதுசெய்யப்பட்டு, புதைக்கப்பட்ட இந்த உடல்கள் 40 நாட்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்டு மீளத்தோண்டி எடுக்கப்பட்டன. அந்த மீளக் கண்டுபிடித்தல் தமிழ் மக்களை மட்டுமில்லை, மனிதாபிமானமுள்ள சிங்களவர்களையும் தட்டியெழுப்பியது. ஆகவே இரண்டு ஆண்டுகளில் விசாரணை நடந்து தீர்ப்பும் கொடுக்கப்பட்டது. வழக்கு நடந்த சில நாட்களிலேயே, 9 குற்றவாளிகளில் முதல் குற்றவாளியான ராஜபக்‌ஷே நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடி சில வாரங்களின் பின் வேறொரு நிகழ்வால் கைதுசெய்யப்பட்டது எல்லாம், இலங்கை நீதிமன்றங்களின் வழமையாக நடக்கக்கூடிய நிகழ்வுகள் எனச் சொல்லலாம். இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளில் முடிந்தாலும், இவ்வாறு இதேகாலகட்டத்தில் வன்னியில் குமாரபுரத்தில் பால்பண்ணைக்கு அருகில் தமிழ்ப்பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்புணர்வின் தீர்ப்பை வழங்க 20 ஆண்டுகள் எடுத்திருக்கின்றது என்று இதே 'வன்மம்' நூலில் நாம் அறிய முடிகின்றது. ஆகவே நீதி என்பது எல்லோர்க்கும் சமம் இல்லை என்பதையும் நாம் கண்டுகொள்ள முடியும். கிரிஷாந்தியின் கொலைவழக்கில் எட்டுப் பேருக்கு குற்றத்தைச் செய்தற்காக தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போதுதான் ராஜபக்‌ஷே இன்னொரு பேரவலமான உண்மையையும் நீதிமன்றத்தில் அறிவித்தார். நீங்கள் என்னை இந்த நான்கு பேரைக் கொன்று புதைத்ததற்காக குற்றஞ்சாட்டுகின்றீர்கள். நானறியவே இதே செம்மணிப் பகுதியில் 300-400 தமிழர்கள் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன எனச் சொன்னார். அப்படிச் சொன்னதோடு மட்டுமில்லாது என்னால் அவற்றையெல்லாம் அடையாளம் காட்டமுடியும் என்றும் அறிவித்தார். அதில் ஒரு சம்பவமாக, தனது அதிகாரியாருவொருவர் ஒரு திருமணமான தமிழ் தம்பதியைக் கூட்டிக்கொண்டு வந்து, அந்தக் கணவனின் முன்னேயே அந்தப் பெண்ணை வன்புணர்ந்தவர்; பிறகு அவர்கள் இருவரையும் மண்வெட்டியால் அடித்துக் கொன்றுவிட்டு செம்மணியில் புதைத்தவர்; அதற்குச் சாட்சியாக நானே அந்த அதிகாரிக்கு மண்வெட்டியைக் கொடுத்தேன் என்று இன்னொரு அதிர்ச்சியான நிகழ்வைச் சொன்னார். அதேபோன்று ஒருநாளில் 22 இற்கு மேற்பட்ட ஆண்களை அரியாலையில் கைதுசெய்து சித்திரவதை செய்து புதைத்தோம் என்றிருக்கின்றார். அதில் ஒரு சிலரின் பெயர்களை, அவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை 'வன்மம்' நூலை வாசிக்கும் ஒருவர் அறியமுடியும். அதன்பின்னர் இவ்வாறு பல உண்மைகளை வெளியுலகிற்குச் சொன்ன ராஜபக்‌ஷேவிற்கு மரண அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டதும், அவரின் மனைவி தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டதுமென பலதும் இலங்கையில் நடந்திருக்கின்றது. அன்றைய சந்திரிக்காவின் காலத்தில் ராஜபக்சேவின் வாக்குமூலத்தை வைத்து செம்மணி புதைகுழிகள் மீண்டும் தோண்டப்பட்டத் தொடங்கியதும், பின்னர் இடைநிறுவில் நிறுத்தப்பட்டதுமென்பதும் கடந்தகால வரலாறு. இப்போது மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பின் செம்மணி மீண்டும் தோண்டப்படுகின்றது. இதுவரை இருநூறிற்கும் மேலான எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டிருக்கின்றன. நாம் எவ்வாறு கொல்லப்பட்டோம் என்று சொல்லாது, அமைதியாக உறங்கப் போவதில்லையென எலும்புக்கூடுகளாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை சாட்சியங்களாக நம்முன்னே எழுந்தபடி இருக்கின்றனர். *** ('வன்மம்' - ஆங்கிலத்தில் பகவதாஸ் சிறிகந்ததாஸால், கிரிசாந்தியின் கொலையின் நீதிமன்ற வழக்கின் முழுப்பிரதியை முன்வைத்து எழுதப்பட்ட நூலாகும். இது விண்மணி என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டு அண்மையில் இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது) -நன்றி: 'அம்ருதா' - ஐப்பசி, 2005- https://www.elankodse.com/post/செம்மணி?fbclid=IwdGRleANbZCtleHRuA2FlbQIxMQABHqD8R1qc8XcySqXQ3BbP5I0JfN3oEdFRgig2klNF_H6m2pD6F82a_zgMlZ8f_aem_C-KH0QyGDMcXrTF6CnuFNg
  4. விஜய்யின் அரசியல் யாருக்கானது? யாருடைய வாக்குகளைக் குறிவைத்தது? 12 Oct 2025, 7:00 AM பாஸ்கர் செல்வராஜ் கரூரில் நடைபெற்ற விஜய் அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்தது எதிர்பாராத விபத்தா? அந்தக் கூட்டத்தைக் கூட்டியவர்களின் பொறுப்பற்ற அரசியல் நோக்கம் செய்த கொலையா? என்றுதான் அந்த விவாதம் சென்று இருக்க வேண்டும். அப்படியான விவாதம் கூட்டத்தை நடத்திய விஜய்யைக் குற்றவாளி ஆக்கி அவரது அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து இருக்கும். அதனைத் தவிர்க்க அரசியல் சமூக ஊடக வலிமையைக் கொண்டு அரசின் முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு நடவடிக்கை குறைபாடுகளால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்பதாக விவாதத்தைத் திசைதிருப்பி திமுக அரசைப் பொறுப்பாக்கி முதன்மைக் குற்றவாளி ஆக்கி விஜய்யை இதிலிருந்து விடுவித்தார்கள். விஜய் அரசியலின் குழப்பம் பாதிக்கப்பட்ட மக்களுடன் பொறுப்புடன் நின்று அரசு வேகமாக செயலாற்றியதற்கு உள்நோக்கம் கற்பித்து பொய்யான கூட்ட நெருக்கடி சதிக் கோட்பாட்டைக் கட்டமைத்து அங்கே நடந்தது சதியா? இல்லையா? என்பதாக சொல்லாடலைக் கட்டமைத்தார்கள். இது மரணம் நடந்தவுடன் தொடங்கி விட்டது. இவ்வளவு வேகமாக இதனைக் கட்டமைக்கும் அளவுக்கு அரசியல் அறிவும் ஊடக பலமும் விஜய்யிடம் இல்லை. இம்மாதிரியான குயுக்தியும் அரசியல் ஊடக பலமும் பாஜகவிடம்தான் இருக்கிறது. ஆனால் இதுவரையிலும் பாஜகவை எதிர்ப்பதாக விஜய் பேசிவந்த நிலையில் அவர்கள் ஏன் இந்த அளவுக்கு தனது மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி களத்தில் இறங்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியது. அது விஜய்க்கும் பாஜகவுக்கும் இடையிலான உண்மையான உறவைப் பற்றிய ஐயத்தை ஏற்படுத்தியது. விஜய்யின் அரசியல் நுழைவு அதிமுக வாக்கு வங்கியில் உடைப்பை ஏற்படுத்தும் என்று பலரும் கருதும் நிலையில் பாஜக-அதிமுக கூட்டணி விஜய்யின் பக்கம் ஒற்றுமையாக நின்று திமுகவைக் குறிவைத்துத் தாக்கினார்கள். திமுக கூட்டணியில் இடதுசாரிகள் திமுகவுடன் நின்றார்கள். சற்று காலதாமதத்துடன் விசிக தலைவர் விஜய்யைப் பாஜகவின் ஆள் என்று தாக்கியதோடு அரசையும் விமர்சனம் செய்தார். காங்கிரசின் ராகுல்காந்தி விஜய்க்கு தொலைபேசியில் மறைமுக ஆதரவு காட்டினார். இந்த அரசியல் நகர்வுகள் விஜய்யின் அரசியல், அதிமுகவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கு எதிராக இருக்கிறது. திமுக கூட்டணி கட்சிகளின் முரண்பட்ட செயல்பாடுகள் காண்பவர்களைக் குழப்புவதாக இருக்கிறது. வெற்றி எண்ணிக்கையும் செயற்கை நுண்ணறிவும் இந்தக் குழப்பத்தைத் தேர்தல் அரசியலின் நோக்கத்தில் இருந்து பார்ப்பதன் மூலம்தான் தீர்க்க முடியும். தேர்தலின் நோக்கம் வெற்றிக்கான வாக்கு எண்ணிக்கையை அடைந்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி முதலாளிகளுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து “உரிய பலனைப்” பெற்றுக் கொள்வது. தேர்தலில் வெற்றிபெற தேவையான வாக்கு எண்ணிக்கையை அடைய ஒவ்வொரு ஊரிலும் உள்ள வாக்காளர், அவரது சாதி, பொருளாதார அரசியல் பின்புலம் அனைத்தும் கட்சிகளிடம் தரவுகளாகத் திரட்டப்பட்டு விட்டது. தற்போது வந்திருக்கும் செயற்கை நுண்ணறிவு கொண்டு அந்தத் தரவுகளைப் பகுத்துப் பார்த்து எவ்வளவு வாக்குகள் தன்னிடம் இருக்கிறது; வெற்றியடைய எவ்வளவு வாக்குகள் வேண்டும் என்பதைக் களஆய்வு, மக்களின் மனநிலை குறித்த கருத்துக் கணிப்புகள் கொண்டு துல்லியமாகக் கணக்கிடும் சூழல் உருவாகி இருக்கிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு நுட்பம் தேர்தல் அரசியலின் பரிமாணத்தையே மாற்றி இருக்கிறது எனலாம். அரசியல், பண, ஊடக பலமும் இந்த நுட்பத்தையும் கைக்கொண்டவர்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையை தேர்தல் சனநாயகம் அடைந்து இருக்கிறது. திமுக-அதிமுக ஆகிய இருகட்சிகளும் முப்பது விழுக்காடு வாக்குகளைப் பெற்று சமபலத்தில் இருந்து வருகின்றன. பகுதிவாரியாக இதில் வேறுபாடு நிலவினாலும் சமீபத்திய தேர்தல் வரை இதில் பெரிய மாற்றம் இல்லை. அந்தந்தப் பகுதிகளில் வலுவாக இருக்கும் மற்ற கட்சிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு வெற்றிக்கான எண்ணிக்கையை அடைய இருதரப்பும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்தார்கள். ஜெயலிலிதா இறப்புக்குப்பின் பாஜக அதிமுகவைத் தனது கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்தது. அடிமைப்பட்டு அதிமுகவால் ஒன்றியத்திடம் அடகு வைக்கப்பட்ட தமிழ்நாட்டில் அப்போது பார்ப்பனியம் ஆடிய ஆட்டம் மறக்க முடியாதது. கொள்கை அரசியலாக மாறிய தேர்தல் அரசியல் பாஜகவின் அந்த நுழைவு தமிழ்நாட்டு அரசியலில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒரு தரப்பாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர் தரப்பாகவும் மாற்றியது. அது பிற்போக்கு பார்ப்பனிய ஆதரவாளர்கள் ஒரு பக்கம் அதற்கு எதிரான சமூகநீதி முற்போக்கு திராவிட இடதுசாரிகள் இன்னொரு பக்கம் என்பதாகத் தெளிவாகக் கோடிட்டு பிரித்தது. வெறும் எண்ணிக்கை சார்ந்த வாக்கு அரசியல் என்பதைத் தாண்டி பார்ப்பனிய எதிர்ப்பு- மாநில தன்னாட்சி கொள்கை சார்ந்த அரசியலாக தமிழ்நாட்டு அரசியலை மாற்றி அமைத்தது. அப்படிக் கொள்கை சார்ந்து பிரிந்தும் அதன்பிறகு நடந்த இரு தேர்தல்களிலும் திமுக அணி வெற்றி பெற்று இருப்பதை வெறும் தேர்தல் வெற்றியாக மட்டும் சுருக்கிப் பார்க்கப்படுகிறது. உண்மையில் அது வாக்காளர்களிடமும் தமிழக முதலாளிகளிடமும் நிலவும் இருவேறு பண்புகளின் வெளிப்பாடுகள். வாக்காளர்கள் பெரும்பாலும் பிற்போக்கு குழுவாத சாதிய எண்ணம் கொண்டவர்கள் என்றாலும் அந்தச் சாதியவாத குழுக்களுக்குள் ஏற்றத் தாழ்வு வளர்ந்து சாதியக் குழுக்கள் உடைப்பைக் கண்டிருக்கின்றன. அதனால் முன்பு வாக்காளர்களிடம் மேலோங்கி இருந்த சாதியக் குழுவாத எண்ணத்தைப் பின்தள்ளி சொந்த நலன் சார்ந்த வர்க்க எண்ணம் தற்போது ஆக்கிரமித்து வருவதை இது உணர்த்துகிறது. இது தற்காலிகமான அளவு மாற்றம்தான். முழுமையான வர்க்க பண்பு மாற்றமல்ல என்றாலும் இது கணக்கில் கொள்ளப்பட வேண்டிய மாற்றம். இது சமூகத்தில் நிலவும் பழைய சாதிய பார்ப்பனிய அரசியல் பண்பாடு மற்றும் புதிய வளர்ந்து வரும் சாதியச் சமத்துவ சமூகநீதி அரசியல் பண்பாடு ஆகிய இருவேறு கூறுகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இப்படி மேலே இருவேறு அரசியல் பண்பாட்டுக் கூறுகள் நிலவுகிறது என்றால் அதனைத் தாங்கி நிற்கும் பொருளாதார அடித்தளத்தில் பார்ப்பனிய ஆதரவு முதலாளிகள், சமூகநீதி ஆதரவு முதலாளிகள் என்ற இருபிரிவுகள் இருக்கிறது என்றுதானே பொருள். ஆனால் எல்லோரும் முதலாளிகள்தான்; திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் திராவிடக் கட்சிகள்தான் என்பதாக நமது கண்கள் இரண்டையும் ஒன்றாக இதுவரை கண்டு வந்திருக்கிறது. ஆனால் அதனுள் முரண்பட்ட இருகூறுகள் இயங்கி வந்திருக்கிறது. (உலகில் ஏகாதிபத்தியத்தோடு சோசலிசமும் வளர்ந்த காலத்தில் பொதுவுடைக் கூறுகள் நம்மிடம் தோன்றி சோசலிச வீழ்ச்சியுடன் அந்தக் கூறும் வீழ்ச்சி கண்டிருக்கிறது) இந்த வேறுபாடு பாஜகவின் நுழைவிற்குப் பிறகு கூர்மையடைந்து அது தேர்தல் அரசியலில் இருந்து கொள்கை அரசியல் மாற்றமாக வெளிப்பட்டு இருக்கிறது. வாக்காளர்களையும் முதலாளிகளையும் அவரவர் பண்புக்கு ஏற்ப இருபக்கமாகப் பிரித்து இருக்கிறது. அப்படிப் பிரிந்த பிறகு விஜய் ஏன் இருதரப்பையும் எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டு அரசியலுக்கு வரவேண்டும் என்பது தெரியாததால் அரசியலாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அது தேர்தல் வெற்றிக்கான எண்ணை அடைய செய்யப்பட்ட ஏற்பாடு என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்கும். பாஜகவின் உத்தியால் குழம்பும் அரசியலாளர்கள் நமது சமூகத்தில் நிலைப்பெற்று இருக்கும் சாதியக் குழுவாத வேரினைப் பற்றி தேர்தலில் பாஜக-அதிமுக தரப்பு வெற்றி எண்ணை எட்ட பல உத்திகளை வகுத்து வருகிறது. 1. எதிர்த்தரப்பின் ஒற்றுமையை உடைத்து தன்பக்கம் ஈர்ப்பது 2. எந்தப்பக்கமும் சாராத வாக்காளர்களைத் தன் பக்கம் ஈர்ப்பது 3. சார்புநிலையற்ற வாக்காளர்களை எதிர்ப்பக்கம் சாராமல் பிரித்து எடுப்பது ஆகிய உத்திகளைக் கையாண்டு வருகிறது. வாக்காளரிடம் பிற்போக்கான பழைய சாதிய மதிப்பீட்டை இந்துத்துவ அரசியலின் மூலம் தூண்டி தன்பக்கம் ஈர்த்து தனது எண்ணிக்கை பலத்தைக் கூட்ட பாஜக-அதிமுக பாமக தரப்பு செய்த முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. காரணம், நடுத்தர வயது வாக்காளர்கள் இருதரப்பில் ஒருவராகத் தம்மை வலுவாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு வெளியில் இருப்பவர்கள் மத்தியில் இந்துத்துவ அரசியல் பெரிதாக ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. அந்த வாக்குகள் இவர்களுக்கு கிடைக்காது என்றால் எதிரணிக்கு போகாமல் தடுப்பதுதான் சரியான உத்தி. சீமான் மூலமாக ஈழ திமுக எதிர்ப்பு அரசியல் மூலம் இளைஞர்களைத் திரட்டி தனியாக நிற்கவைத்து வாக்குகளைப் பிரிக்கும் முயற்சி முதலில் கொஞ்சம் பலன் கொடுத்தது. ஆனால் காலப்போக்கில் அவரின் பிழைப்புவாதம் அம்பலப்பட்டு அங்கே கூட்டம் குறைந்து ஆடு, மாடு, மலை, காடுகளுடன் பேசும் நிலைக்கு அவர் வந்துவிட்டார். நடிகர் கமல் தனது திரைப்படக் கவர்ச்சியை மூலதனமாக்கி இந்துத்துவ-திமுக மையவாத நிலை எடுத்து மிதமான சாதிய எண்ணம் கொண்ட வாக்காளர்களைப் பிரிக்கும் உத்தியும் தோல்வி. அடுத்து ஆதவ் அர்ஜுனா மூலமாக விசிகவைப் பிரித்து அதிமுகவுடன் சேர்த்து வெற்றி எண்ணிக்கையை அடையும் முயற்சியும் தோல்வி அடைந்தது. ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்தபோது விஜய்யை விசிகவுடன் இணைக்கும் முயற்சிக்கு திருமா ஒத்துழைக்க மறுத்துவிட்டார். ஒருவேளை ஒத்துழைத்து இருந்தால் அது திமுகவின் கொள்கை அரசியலைக் குப்பையில் வீசி எம்ஜிஆர் என்ற நடிகரின் கவர்ச்சியில் கரைந்ததைப் போலவே அவரது கொள்கை அரசியலும் கரைந்து இருக்கும். அங்கிருந்து விரட்டப்பட்ட ஆதவ் நேராக விஜய்யுடன் இணைந்தார். இம்முறை கமலின் மையமான அரசியலுக்கு பதிலாகத் தீவிர திமுக எதிர்ப்பு கொஞ்சம் பாஜக எதிர்ப்பு உத்தி. உறங்கிக் கிடந்த விஜய்யின் கட்சி வெளியில் வந்து அரசியல்மயப்படாத இளம் வாக்களர்களைக் குறிவைத்து இயங்கியது. இதனால் தனது இடத்தைப் பறிகொடுக்கும் சீமான், விஜய் எதிர்ப்பு நிலையெடுத்து அவரின் மீது பாய்ந்தது இங்கே புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் விஜய் பிரித்தெடுக்கும் இளம் வாக்காளர்கள் யாருடைய வாக்குவங்கியை உடைக்கும் என்பதில் அரசியல் ஆய்வாளர்களுக்கு குழப்பம். விஜய் அரசியலின் சாதியக் கோணம் காரணம் இந்த நகரவாசிகளுக்குப் பெரும்பாலான கிராமத்து ஆதிக்கசாதி இளவட்டங்கள் அஜித் ரசிகராகவும் ஒடுக்கப்பட்ட சாதி இளவட்டங்கள் விஜய் ரசிகராகவும் இருக்கும் சாதியக் கோணம் தெரியாது. எனது தலைமுறையிடம் இந்த எண்ணம் வலுவாக இருந்ததை நேரில் கண்டதுண்டு. இந்தத் தலைமுறையிடம் சற்று அது குறைந்திருக்கலாம். மாறியிருக்க முடியாது. இந்தக் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடத்தக்க அளவு கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்களாகவும் ஒடுக்கப்பட்ட பின்புலத்தைக் கொண்டிருப்பதும் அந்த எண்ணத்தை வலுப்படுத்துகிறது. மேலும் விசிக கட்சியினர், விஜய் ரசிகர்கள் ஆகிய இருவரின் தரவுகளையும் பார்த்த ஆதவ் அர்ஜுனாவிற்கு இந்த இரண்டும் ஒன்றுபடும் இடம் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அது தெரிந்தேகூட இருவரின் இணைவுக்கு முயன்று இருக்கலாம். கரூர் மரணத்தின் நேர்காணலில் மென்மை காட்டிய திருமா, பாஜக-வின் விஜய் அரசியலைக் காக்க கம்பு சுற்றியதைப் பார்த்து விஜய், ஆதவ் ஆகியோர் மீது கடுமை காட்டுவது அவருக்கே இப்போதுதான் இது தெரிகிறது போலிருக்கிறது. எனவே விஜய் தனித்துப் போட்டியிட முடிவுசெய்து திமுகவை முழுமூச்சாகத் தாக்கி அவ்வப்போது பாஜகவை ஊறுகாய்போல தொட்டுக் கொண்டு அரசியல்மயப்படாத மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளில் உள்ள இளவட்டங்களின் வாக்குகளைப் பிரிக்கும் அரசியல் திமுக அணியின் வாக்கு எண்ணிக்கையை மாற்றும் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. முந்தைய மக்கள்நல கூட்டணி அனுபவமும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகள் பிரிவது திமுக வெற்றியையே பாதிக்கும் என்றுதான் சொல்கிறது. இந்த உடைப்போடு பீகாரில் கர்நாடகாவில் செய்த “சிறப்பு வாக்காளர் திருத்தமும்” தமிழ்நாட்டுக்கு வந்தால் பாஜக-அதிமுக தரப்பு வெற்றி இலக்கைத் தொடும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. அம்பலப்பட்ட கவர்ச்சி அரசியல் இந்தக் கணக்கு எல்லாம் வேலை செய்வதற்கு முன்பாகவே கரூர் மரணம் நடந்து எல்லாவற்றையும் கலைத்து இருக்கிறது. அந்த இக்கட்டான சூழலில் பாஜக, விஜய்யைக் காப்பாற்ற வந்தால் இருவருக்கும் இடையிலான உறவு பற்றிய ஐயத்தை எழுப்பும். கைவிட்டால் அவரை அரசியல் களத்தில் இருந்து வெளியேற்றி வெற்றி இலக்கை எட்டுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்ற நிலையில் களத்தில் இறங்கி கைகொடுத்து தூக்கி இருக்கிறார்கள். அம்பலப்பட்ட பின்பு தனித்து விடுவார்களா? இணைத்துக் கொள்வார்களா? என்று தெரியவில்லை. எல்லாம் சரி! ராகுல்காந்தி இதற்குள் ஏன் நுழையவேண்டும்? என்ற கேள்வி இங்கே தொக்கி நிற்கிறது. திமுகவுக்கு தமிழ்நாட்டில் காங்கிரசின் வாக்குகள் கைகொடுத்து தூக்கிவிடும் அளவு குறைவு. பாதி இந்துத்துவம் பேசிய காங்கிரசின் வாக்குகளைத் தீவிர இந்துத்துவம் பேசிய பாஜகவிடம் இழந்துவிட்டது. எனவே திமுகவுக்கு தமிழ்நாட்டில் காங்கிரசு தேவையில்லாத சுமை. ஆனால் ஒன்றிய பார்ப்பனியத்துடன் முட்டிமோத அவசியமான துணை. இந்தக் கூட்டைத் தக்கவைத்துக் கொண்டு வரப்போகும் தேர்தலில் குறைவான தொகுதிகளைக் கொடுத்து சுமையைக் குறைத்துக் கொள்ள நினைக்கிறது திமுக. தமிழ்நாட்டில் தமது பேரவலிமையைக் கூட்ட காங்கிரசிடம் எந்த அரசியல் பொருளாதார அடித்தளமும் இல்லை. அதனைப் பாஜக வளர்த்துவிடும் கவர்ச்சி நடிகர்களுடன் கைகோர்த்து சரிசெய்ய நினைக்கிறது. பாஜகவின் அழுத்தத்தைக் குறைத்து தனது அரசியல் தற்சார்பையும் பேரவலிமையையும் கூட்டிக் கொள்ள அரசியல் நடிகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நகர்வுகள் திமுக கூட்டணியின் வலுவைக் குறைப்பது என்ற நோக்கத்திற்கு மேலும் வலுசேர்ப்பதால் பாஜக தாராளமாக அனுமதிக்கிறது. வெளியில் இருந்து பார்க்கும் மக்களுக்கும் அரசியல் ஆய்வாளர்களுக்கும் அது முரணாகவும் குழப்பமாகவும் இருப்பதால் அவரவர் போக்கில் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் இந்த நகர்வுகள் திமுக தரப்பு வாக்குகளை உடைப்பது என்ற ஒற்றை நோக்கத்தில் இணைவதைக் காணத்தவறுகிறார்கள். முற்போக்கு அரசியல் ஒற்றுமையை உடைக்கும் உத்தி இப்போதைக்கு இந்தத் திரைப்பட கவர்ச்சி நடிகர்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாத சூழலில் இரண்டு அணிகளில் ஒன்றின் வெற்றிக்காகப் பயன்படும் வாய்ப்பு மட்டுமே உள்ளதையும் கணக்கில் கொண்டு பார்த்தால் இவர்களின் கவர்ச்சி அரசியல் பார்ப்பனிய எதிர்ப்பு, சமூகநீதி, மாநில தன்னாட்சி கொள்கை அரசியல் எதிர்ப்பை நீர்க்கச் செய்து முற்போக்கு பெரியாரிய அம்பேத்கரிய இடசாரிகளின் ஒற்றுமையை உடைத்து தோற்கடிக்க முன்னெடுக்கப்படும் அரசியல் உத்தி என்றுதான் முடிவுக்கு வரவேண்டி உள்ளது. இது புதிதல்ல என்று எல்லோருக்கும் தெரியும். இப்போது ஏன் அப்படியான தேவை மீண்டும் எழுந்திருக்கிறது என்றுதான் தெரியவேண்டும். உள்ளத்தில் பார்ப்பனியத்தை வைத்துக்கொண்டு வெளியில் சோசலிச சனநாயகம் பேசிய காங்கிரசு படிப்படியாக மாறி பாதி இந்துத்துவம் பேசி இப்போது சமூகநீதி அரசியல் பேசும் நிலைக்கு வந்திருக்கிறது. இதனை வெறும் அரசியல் மாற்றமாகப் பார்ப்பவர்கள் துணைக்கண்ட, தமிழக வரலாறு அறியாதவர்கள். முரணான இந்த இருகூறுகளும் திடீரென தோன்றி வளர்ந்ததல்ல; அப்படி வளரவும் முடியாது. இவை பார்ப்பனிய மற்றும் தேசியஇன முதலாளித்துவ தேவையில் இருந்து வரலாற்றின் வளர்ச்சிநிலை போக்கில் உருவாகி வளர்ந்தது. ஒன்றிய பார்ப்பனியம் மட்டும் இந்தத் திரைப்பட கவர்ச்சி நடிகர்களின் அரசியலைப் பின்னிருந்து நடத்துவதில்லை. தமிழ்நாட்டுக்குள் இருக்கும் ஒரு முதலாளித்துவ பிரிவும் இதில் இணைந்து இயங்குகிறது. எனவே இது பார்ப்பனிய-தேசியஇன முதலாளித்துவ முரண் மட்டுமல்ல தமிழ்நாட்டுக்குள் இருக்கும் இருவேறு முதலாளித்துவ முரணின் வெளிப்பாடும்கூட. இந்தத் தமிழக இருவேறு முதலாளித்துவ முரணின் வாரலாற்று வளர்ச்சியை அறிந்து சரியான முறையைக் கைக்கொண்டு தீர்ப்பது எப்படி என்று அடுத்த கட்டுரையில் காணலாம். https://minnambalam.com/who-is-vijays-politics-for-and-whose-votes-is-targeting/
  5. மாகாணசபை தேர்தல்கள்; குழப்பகரமான அறிவிப்புகளைச் செய்யும் அரசாங்கம் October 14, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — மாகாணசபை தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என்று அரசாங்க தலைவர்கள் அண்மைக் காலமாக செய்துவரும் அறிவிப்புக்கள் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என்ற நம்பிக்கையை தருவதிலும் பார்க்க சந்தேகத்தை வலுப்படுத்துபவையாகவே அமைந்திருக்கின்றன. நீண்டகாலமாக தாமதிக்கப்படும் மாகாணசபை தேர்தல்களை அடுத்த வருடத்திற்குள் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது என்றும் தற்போதைய எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடைந்தவுடன் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த வியாழக்கிழமை (9/10) பாராளுமன்றத்தில் அறிவித்தார். “மாகாணசபை தேர்தல்களை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடத்துவதா அல்லது கலப்பு தேர்தல் முறையின் கீழ் நடத்துவதா என்பதை நாம் பிறகு தீர்மானிப்போம். இதை பாராளுமன்றமே தீர்மானிக்க முடியும். தேர்தல் முறை குறித்து தீர்மானிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்” என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கமும் ஜீவன் தொண்டமானும் கிளப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் கூறினார். அண்மையில் முடிவடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 வது கூட்டத் தொடரில் உரையாற்றிய வேளையிலும் அதற்கு முன்னதாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சமர்ப்பித்த அறிக்கைக்கு பதிலளித்த வேளையிலும் விஜித ஹேரத் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பான அரசாங்கத்தின் இதே நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) பலம் பொருந்திய பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களான சபை முதல்வரும் அமைச்சருமான பிமால் இரத்நாயக்க மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நாளிந்த ஜயதிஸ்ஸ போன்றவர்களும் எல்லைநிர்ணயச் செயன்முறை நிறைவடைந்தவுடன் அடுத்த வருடம் மாகாணசபை தேர்தல்களை நடத்தப்படும் என்று கூறினார்கள். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையையும் பழைய தொகுதி அடிப்படையிலான முறையையும் உள்ளடக்கிய கலப்பு தேர்தல் முறையில் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதாக இருந்தால் மாத்திரமே எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடையும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். மாகாணசபை தேர்தல்களுக்கான புதிய எல்லை நிர்ணயக் குழுவொன்றை அமைப்பது தொடர்பில் தங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை என்றும் அந்த செயன்முறை எப்போது முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் தெளிவான தீர்மானம் ஒன்று இல்லாத நிலையில் மாகாணசபை தேர்தல்களுக்கான காத்திருப்பு தொடருகிறது என்றும் சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். இரத்நாயக்க ஊடகங்களுக்கு கூறியிருந்தார். முன்னைய குழுக்களின் அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்கும் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் வழிகாட்டல்களை வழங்குவதற்கும் புதியதொரு எல்லை நிர்ணயக்குழுவை நியமிப்பதற்கு ஆகஸ்ட் மாத முற்பகுதியில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. ஆனால், எல்லை நிர்ணயச் செயன்முறை நிறைவடைந்தவுடன் தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று முன்னதாக உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், அந்த செயன்முறைகளின் முன்னேற்றம் குறித்து பிந்திய தகவல் எதுவும் எந்த தகவலும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை. உள்ளூராட்சி தேர்தல்களைப் போன்று மாகாணசபை தேர்தல்களையும் கலப்பு முறையின் கீழ் நடத்துவதற்காக ‘நல்லாட்சி ‘ அரசாங்க காலத்தில் 2017 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் மாகாணங்களில் 2022 தேர்தல் வட்டாரங்களையும் 222 பட்டியல் அடிப்படையிலான ஆசனங்களையும் நிர்ணயம் செய்வதற்காக கலாநிதி கே. தவலிங்கம் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஆனால், அந்த குழு அதற்கான காலஅவகாசம் கடந்த நிலையில் 2018 ஆம் ஆண்டில் சமர்ப்பித்த அறிக்கையை அன்றைய அமைச்சரவை நிராகரித்தது. அவ்வாறு எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில், பிரதமர் தலைமையிலான குழு ஒன்று அதை மீள்பரிசீலனை செய்து இரு மாதங்களுக்குள் புதிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு சட்டத்தில் ஏற்பாடு இருக்கிறது. அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு இரு மாதங்களில் எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கையை முழுமையாக மீள்பரிசீலனை செய்வது சாத்தியமில்லை என்று ஒரு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு புதிய மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படாமல் 11 வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்டது. அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் கீழ் இறுதியாக 2014 ஆம் ஆண்டில் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருட காலத்திற்குள் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படும் என்று கடந்த வருட தேசிய தேர்தல்களின் போது தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி வழங்கியது. அந்த ஒரு வருடம் நிறைவு பெறுவதற்கு இன்னமும் இரு மாதமே இருக்கிறது. உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். அடுத்த வருட முதல் அரைப்பகுதியில் அந்த தேர்தல்கள் நடத்தப்படும் என்று அரசாங்கத்தின் சில தலைவர்கள் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், தற்போது வெளியுறவு அமைச்சர் அடுத்த வருடத்திற்குள் தேர்தல்கள் நடத்தப்படும் என்று கூறியிருப்பது இயல்பாகவே சந்தேகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. அமைச்சரவை ஆகஸ்டில் வழங்கிய அங்கீகாரத்தின் பிரகாரம் புதியதொரு எல்லை நிர்ணயக்குழு நியமிக்கப்படுமாக இருந்தால், அது புதிதாக அதன் செயன்முறைகளை தொடங்கும் பட்சத்தில் அடுத்த வருடம் மாகாணசபை தேர்தல்களை நடத்துவது எந்தவிதத்திலும் சாத்தியமில்லை. அதனால் மீண்டும் தேர்தல்கள் ஓரிரு வருடங்கள் தாமதிக்கப்படுவதற்கான வாய்ப்பே இருக்கிறது. ஆனால், ஏற்கெனவே ஏழு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றம் நிராகரித்த எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கையை தற்போதைய பிரதமரின் தலைமையில் குழுவொன்றை அமைத்து மீள்பரிசீலனை செய்யும் உத்தேசம் அரசாங்கத்துக்கு இருக்கிறது என்று சில அரசியல் வட்டாரங்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. மாகாணசபை தேர்தல்களை மேலும் தாமதிக்காமல் விரைவாக நடத்த வேண்டுமானால், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் அதை நடத்துவதே நடைமுறைச் சாத்தியமான ஒரேயொரு வழிமுறையாகும். அதற்கு வழிசெய்யும் வகையில் முன்னைய அரசாங்க காலத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனிநபர் பிரேரணை என்ற வடிவில் கொண்டு வந்ததைப் போன்ற சட்டமூலத்தை தற்போது தமிழரசு கட்சியின் மடடக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கொண்டு வந்திருக்கிறார். உண்மையிலேயே மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்ற அக்கறை அரசாங்கத்துக்கு இருந்தால், சாணக்கியனின் தனிநபர் பிரேரணையை சபையில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். ஆனால், அதற்கான விருப்பத்தை அரசாங்கம் வெளிக்காட்டுவதாக இல்லை என்பது மாத்திரமல்ல தானாகவே அத்தகைய சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றும் நோக்கமும் அதற்கு இல்லை. பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு இருக்கும் மூன்றில் இரண்டு ஆசனங்களுக்கும் அதிகமான பெரும்பான்மைப் பலத்தை பயன்படுத்தி அதை இலகுவாகச் செய்யமுடியும். மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கு குறுக்கே நிற்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டியது முற்று முழுதாக அரசாங்கத்தின் பொறுப்பேயாகும். தாமதத்துக்கு இடமளிக்காமல் உகந்த முறையில் தேர்தல்களை நடத்துவதாக உறுதியளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவற்றை பின்போடுவதை எந்த காரணத்தின் அடிப்படையிலும் நியாயப்படுத்த முடியாது. பாராளுமன்ற தேர்தலைப் போன்று உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு பிரமிக்கத்தக்க வெற்றி கிடைத்திருந்தால் அதைத் தொடர்ந்து உடனடியாகவே அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை நிச்சயமாக நடத்தியிருக்கும். தேர்தல்களை பின்போடுவதன் மூலமாக மேற்கொண்டும் வாக்கு வீழ்ச்சியை எந்த அரசாங்கத்தினாலும் தவிர்க்க முடியாது. தேர்தல்களை தாமதிப்பதனால் மேலும் வாக்குகளில் வீழ்ச்சி ஏற்படுமே தவிர, மக்களின் ஆதரவை எந்த வகையிலும் அதிகரிக்க முடியாது. தோல்விப் பயத்தில் தேர்தல்களை ஒத்திவைத்த சகல அரசாங்கங்களுமே படுதோல்வியையே சந்தித்தன என்பதை இன்றையா அரசாங்கத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது இவ்வாறிருக்க, தென்னிலங்கை அரசியல் நிகழ்வுப் போக்குகளில் ஒரு விசித்திரமான திருப்பத்தை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. கடந்த ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான காலமாக மாகாணசபை தேர்தல்களைப் பற்றி எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் இருந்த தற்போதைய எதிர்க்கட்சிகள் அந்த தேர்தல்களை விரைவாக நடத்துமாறு அண்மைக் காலமாக அரசாங்கத்தை வலியுறுத்தத் தொடங்கியிருக்கின்றன. மாகாணங்களுக்கான அதிகாரப்பரவலாக்கம் மீதான அக்கறை அதற்கு காரணமில்லை என்பதை புரிந்துகொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது. உள்ளூராட்சி தேர்தல்களில் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட பின்னடைவினால் உற்சாகமடைந்த எதிர்க்கட்சிகள், தேசிய தேர்தல்களின்போது தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களுக்கு வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற முடியாமல் இருப்பதன் காரணத்தினால் அடுத்து வரக்கூடிய எந்தவொரு தேர்தலிலும் அதற்கு பாரிய பின்னடைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றன. மறுபுறத்தில், மத்தியில் தற்போதைக்கு அதிகாரத்துக்கு வரக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதால், இந்த எதிர்க்கட்சிகள் ஆட்சிமுறையின் இரண்டாம் அடுக்கான மாகாணசபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் நாட்டம் காட்டுகின்றன. ஏற்கெனவே படுமோசமாக பலவீனமடைந்திருக்கும் இந்த கட்சிகள் ஏதாவது ஒரு மட்டத்தில் அதிகாரப் பதவிகளுக்கு நீண்ட காலத்துக்கு வரமுடியாவிட்டால் அவற்றின் கட்டமைப்புக்கள் மேலும் சீர்குலையாமல் தடுப்பது கஷ்டமான காரியமாக இருக்கும். மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் இந்த கட்சிகள் அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதற்கு துணிச்சல் கொண்டதற்கு இதுவே காரணமாகும். முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் சில தினங்களுக்கு முன்னர் கூட்டப்பட்ட மகாநாடு ஒன்றில் எதிர்க் கட்சிகளும் சில சிவில் சமூக அமைப்புக்களும் தாமதமின்றி விரைவாக மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு நெருக்குதல்களை கொடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தன. அடுத்த வருடம் வரை காத்திராமல் இந்த வருடத்திற்குள்ளாகவே தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் அவை கோரிக்கை விடுத்தன. தென்னிலங்கையில் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் இவ்வாறாக அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்துவரும் நிலையில், வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் இது விடயத்தில் அரசாங்கத்துக்கு நெருக்குதல்களை கொடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதில் பெரிதாக அக்கறை காட்டாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் அக்கறை காட்டாததையும் மாகாணசபை தேர்தல்கள் தாமதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டிய தமிழரசு கட்சி ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவகாசம் கோரி அவருக்கு கடிதத்தை அனுப்பியிருந்தது. ஜனாதிபதி விரைவில் தமிழரசு கட்சியின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவார் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் போன்றவர்கள் செய்தியாளர்கள் மாகாநாட்டில் கூறினார்களே தவிர, ஜனாதிபதியிடமிருந்து எந்தவிதமான பதிலும் தமிழரசு கட்சிக்கு கிடைத்ததாக அறிய வரவில்லை. https://arangamnews.com/?p=12377
  6. ஆளுநர் செயலகம் முன் தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்.. கயேந்திரகுமார் சிறிதரன் எம்பிகள் வருகை. செவ்வாய், 14 அக்டோபர் 2025 07:36 AM வடக்கு ஆசிரிய இட மாற்றத்தில் மோசடி அரசியல் தலையீடு.. இரத்து செயாவிட்டால் தொடர் போராட்டம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் எச்சரிக்கை. வட மாகாண கல்வி திணைக்களத்தினால் சேவையின் தேவை கருதி என மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும் பழிவாங்கல் நோக்கமாக கருதும் நிலையில் குறித்த இடமாற்றத்தை உடன் இடைநிறுத்தி மீள மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்றும் செவ்வாய்கிறமை போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் வட மாகாண கல்வி திணைக்களத்தினால் சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் ஆசிரியர்கள் பழிவாங்கலால் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டினர். இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த விடையம் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடுவதாக பதில் வழங்கினர். https://jaffnazone.com/news/51285
  7. 16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார் புஸ்ஸி ஆனந்த் October 14, 2025 12:19 pm தலைமறைவாகியுள்ளதாக கூறப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியே வந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட சிலர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் மத்திய மாநகர நிர்வாகி பவுன் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாகினர். இவர்களை கைது கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது இதனை தொடர்நது தலைமறைவாக இருந்த புஸ்சி ஆனந்த் , நிர்மல்குமார் நேற்று வெளியே வந்தனர். வெளியே வந்த உடன் முதலில் நிர்மகுமார் விஜய்யை சந்தித்தார். தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் விஜய்யை சந்தித்தார். புஸ்ஸி ஆனந்த் விஜய்யுடன் சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். உச்ச நீதிமன்றின் தீர்ப்பு மற்றும் கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய் மற்றும், புஸ்ஸி ஆனந்தும் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://oruvan.com/pussy-anand-comes-out-after-16-days/
  8. மாவீரர் பிரிகேடியர் விதுசாவின் தந்தை காலமானார் October 14, 2025 மண்ணுக்காக தம்மை அர்ப்பணித்த மாலதி படையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் விதுசா மற்றும் மாவீரன் விதுசான் ஆகியோரின் அன்பு தந்தை கணபதிப்பிள்ளை கந்தையா (கப்பூது ஐயா) இயற்கை எய்தினார். அவர்களின் இறுதிச்சடங்கு கரவெட்டியில் நடைபெற்றது. இன் நிகழ்வில் போராளிகள்,அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் பங்கு கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். கந்தையா ஐயாவின் இறுதி வணக்க நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதோடு இரங்கல் உரையும் ஆற்றினார் https://www.ilakku.org/brigadier-vithusha-father-passes-away/
  9. பல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் 14 Oct, 2025 | 12:11 PM பல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினருடன் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று வரும் 30 பேர் அடங்கிய குறித்த குழுவினர் , இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு , யாழ்.பொது நூலகத்தை பார்வையிட்டனர். நூலகத்திற்கு வந்த குழுவினரை , நூலகர் மற்றும் நூலக உத்தியோகஸ்தர்கள் வரவேற்று , நூலகம் தொடர்பில் விளக்கமளித்தனர். அதனை தொடர்ந்து குறித்த குழுவினர் யாழ்ப்பாண கரையோர கிராமங்கள் சிலவற்றுக்கு நேரில் சென்றதோடு, நாளைய தினம் புதன்கிழமை குறித்த குழுவினர் நெடுந்தீவுக்கு செல்லவுள்ளனர். https://www.virakesari.lk/article/227684
  10. காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இஸ்ரேல் - காசா இடையேயான போர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன் மொழிந்த 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக எகிப்தில் கையெழுத்தானது. எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் ட்ரம்ப் மற்றும் எகிப்து ஜனாதிபதி அப்தெல் பட்டா எல் சிசி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ட்ரம்ப் எகிப்து வந்து சேர்ந்தார். இந்த மாநாட்டில் ஐநா பொதுச் செயலாளர் குட்டரெஸ் மற்றும் 20 இற்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், அவர்கள் சார்பில் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். (a) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/காசா-அமைதி-ஒப்பந்தம்-கையெழுத்தானது/50-366232
  11. மாகாண சபை தேர்தலுக்கான வழி தேடல் லக்ஸ்மன் பாலஸ்தீனத்தில் பரவும் ‘நமது காலத்தில் அமைதி’ என்ற வாசகம் இலங்கையிலும் எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால், சொந்த நாட்டு மக்கள் மீதே ஒரு அரசு யுத்தத்தை நடத்தி முள்ளிவாய்க்காலில் அமைதியைப் புதைத்தது. ஆனால், இலங்கையின் அமைதி பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமானது என்றளவிலேயே இருந்து வருகிறது. வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தங்களுடைய கோரிக்கையாக சுயநிர்ணய உரிமையை முன்வைத்திருந்தனர். இப்போதும் அதனுடனேயே இருக்கின்றனர். ஆனால், இப்போது யுத்தத்தில் தோற்ற சமூகம் தங்கள் கோரிக்கையையும் கைவிட்டாக வேண்டும் என்ற நிலைமையே நீடித்துவருகிறது. இது கவலையானதாகும். இந்த வரிசையில் தான் தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வாக இந்தியாவின் அணுகலோடு முன் வைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றமை குறிப்பிடப்பட வேண்டும். ஆனால், பல ஆண்டுகளாகத் தாமதமாகி வந்த மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது என்ற தகவல் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருக்கிறது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக பரிந்துரைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவதில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் அக்கறையிருந்தாலும் நாட்டின் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கும் முழுமையான அதிகாரம் ஆணைக்குழுவுக்கே இருக்கிறது. இருந்தாலும், அது நடத்தப்படுமா அல்லது இது ஒரு பொய்யான கால தாமதிப்புக்கான மற்றொரு கருத்தா என்ற சந்தேகங்களும் வெளிவருகின்றன. இதற்கு பல்வேறு கரணங்கள் சொல்லப்பட்டாலும், முக்கியமாக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் இருப்பதாகத் தெரிகிறது. நாணய நிதியத்தின் அடுத்த கட்ட ஏற்பாடுகளுக்கு மாகாணசபைத் தேர்தல்கள் பின்னணியில், இருக்கிறது என்றால், இந்தத் தேர்தல்களை விரைவாக நடத்தி முடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன், அரசாங்கத்துக்கு இருக்கின்ற நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் அரசாங்கத்தின் எண்ணப்பாடுகள் இந்தத் தேர்தலில் தாக்கம் செலுத்தும். அதனால் தான் பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தலை மிக வேகமாக நடத்தியது போன்று நடத்துவதற்கு முடியாமலிருக்கிறது. அவசர அவசரமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் போன்று மாகாண சபைக்கு முதன்நிலை கொடுக்க முடியாமலிருக்கிறது என்பதும் இந்த இடத்தில் நினைவில் கொள்ளப்பட வேண்டும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் போரவையினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானமானது தமிழர்களுக்கு முழுமையான மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லையானாலும், இலங்கை அரசாங்கத்திற்கு சற்று நெருக்கடியானதே. அந்தவகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மார்ச் அமர்வுகளுக்கு முன்பு மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவது, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளால் அகற்றும்படி கேட்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வது போன்றவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த நிறைவேற்றல் வரிசையில் உள்ள மாகாண சபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற அதேவேளையில், எதிர்க்கட்சியினரும் அரசாங்கத்தைத் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றனர். இந்த நேரத்தில்தான், அரசாங்கம் எதிர்வரும் வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்று உறுதியான அறிவிப்பையல்ல சாதாரணமான அறிவிப்பொன்றை விடுத்திருக்கிறது. ஆனால், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மாகாண சபைத் தேர்தலையும்ந டத்துவதாக அறிவித்திருந்தாலும், பாராளுமன்றத் தேர்தலைப் போல் இல்லாமல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்பட்ட ஆதரவு வீழ்ச்சியானது மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தும் முடிவில் இருந்து பின்வாங்கும் நிலையை உருவாக்கியிருந்தமை இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டும். நாட்டிற்கு சர்வதேச அளவில் ஏற்பட்டு வருகின்ற நற்பெயரைத் தொடர்வதற்கும் மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் எண்ணங்கொண்டாலும், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியானது தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில் இருக்கின்ற சிக்கல்கள் நடவடிக்கைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. தேசிய மக்கள் சக்தியானது எதிர்க்கட்சியாக இருக்கும்வேளையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் கைவிடப்படும் என்று தெரிவித்திருந்தாலும் இப்போது அதன் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கவேண்டும் என்கிற செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி, பல நெருக்கடியான முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டியிருக்கிறது. சர்வதேச பொருளாதார அழுத்தங்கள், மக்களுக்கான ஜனநாயகக் கடமைகள் மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டிய காரணியாக இருக்கிறது. 2012ஆம் ஆண்டில் கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. 2013ஆம் ஆண்டில் மத்திய, வடமேல், வட மாகாணங்களில் தேர்தல்கள் நடந்தன. 2014ஆம் ஆண்டில் ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. ஆனால், அதன் பிறகு இதுவரையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவில்லை. தற்போது ஆளுநர்களின் ஆளுகைக்குள் இச் சபைகள் இயங்குகின்றன. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றவுடன் அனைத்து மாகாண சபைகளுக்குமான ஆளுநர்களை நியமித்தார். அதற்கு எடுத்துக் கொண்ட அவசரம் அத்தேர்தல்களில் காணப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய சட்டம் இலவ்லாமையாகும். தேர்தல் முறைமையைக் காரணம் காட்டி மாகாண சபை தேர்தல்கள் கடந்த பல வருடங்களாக நடத்தப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. இப்போது எல்லை நிர்ணயம் நிறைவடைந்தபின்னரே தேர்தலை நடத்த முடியும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இலங்கையில் நீடித்து வந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு 1987இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13ஆம் திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதுடன், மாகாணசபைத் தேர்தல் சட்டமும் உருவாக்கப்பட்டது. இம்மாகாண சபைகள் வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்லாமல் நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் உருவாக்கப்பட்டது. வடக்கும் கிழக்கும் தற்காலிக இணைப்பினடிப்படையில் ஒரே மாகாணமாக்கப்பட்டு 1988இல் முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. 1990இல் இந்தியப் படையின் வெளியேற்றத்துடன் வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். 2006இல் ஜே.வி.பி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கினால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. நல்லாட்சி அரசாங்கம் நடைமுறையிலிருந்த மாகாண சபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதைத் தொடர்ந்து மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத நிலைமை உருவாக்கப்பட்டது. பழைய முறையிலா, புதிய கலப்புத் தேர்தல் முறையிலா தேர்தல் நடைபெறும் என்பது தெரியாமலேயே மக்கள் தேர்தலை எதிர்பார்க்கின்றனர். புதிய கலப்பு முறையானது விகிதாசார முறையையும் வட்டார முறைமைமையையும் சேர்த்தாக எல்லைகளை மறுசீரமைப்பதாக எல்லை நிர்யணம் அமையவிருக்கிறது. இதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஓய்வுபெற்ற தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரான மஹிந்த தேசப்பிரிய தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு 2017இல் உருவாக்கப்பட்டிருந்தது. இவர்கள் 2018 மார்சில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது. ஆனால் நாடாளுமன்றத்தால் இந்த அறிக்கை சட்டமூலமானபோது, அது நிராகரிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னரான திருத்தங்கள் மேற்கொள்வதில் ஏற்பட்ட சிக்கலால் அது இழுபறியாகிப்போனது. இன்றுவரை ஸ்தம்பித்துள்ள மாகாண சபைத் தேர்தலைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழைய முறைமையா? புதிய முறைமையா? என்ற முடிவுக்கு வராமல் தேர்தலை நடத்த முடியாது என்று தெரிந்திருந்தாலும் அறிவிப்புகள் மாத்திரம் வந்த வண்ணமிருக்கின்றன. இந்த இடத்தில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு காரணமல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது. சட்டம் ஒன்று இன்றி ஆணைக்குழுவால் செயல்பட இயலாது என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறிரத்நாயக்க தெரிவித்திருக்கிறார். இதற்கு பாராளுமன்றம் தீர்வைச் சொல்லாத வரையில் தேர்தலை நடத்தமுடியாது என்பது பொருளாகின்றது. மாகாண சபை தேர்தலைத் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டுமாக இருந்தால் பாராளுமன்றம் முடிவுக்கு வந்தாக வேண்டும். இந்த முடிவுக்கு வருதலில் முழுமனதான முடிவு எட்டுதலே மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஒரே வழியாகும். புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். நாட்டுக்கு. அதுவே தேவை என்று கூறும் அரசாங்கம் அந்த வழியைக் கைக்கொள்ளுமா என்பதற்காகக் காத்திருப்போம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாகாண-சபை-தேர்தலுக்கான-வழி-தேடல்/91-366203
  12. திஸ்ஸ விகாரையில் கயல் மஹா உற்சவம்; காணி உரிமையாளர்கள் எதிர்த்துப் போராட்டம் தையிட்டி திஸ்ஸ விகாரையில் பலாலிப் பொலிஸாரும், காங்கேசன்துறைப் பொலிஸாரும் இணைந்து நேற்றுத் திங்கட்கிழமை காலை பெருமெடுப்பில் கயல் மஹா உற்சவத்தை நடத்தினார்கள். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றுக் காலை 6.30 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. விகாரையில் இடம்பெற்ற உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்ட பிக்குமார்கள், சிங்கள் மக்கள். பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோர் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக மாற்றுப் பாதை ஊடாக விகாரையை நோக்கிச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு விட்டுப் பின்னர் அதேபாதையால் திரும்பிச் சென்றனர். போராட்டம் காரணமாகத் தையிட்டி திஸ்ஸவிகாரைச் சூழலிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். https://newuthayan.com/article/திஸ்ஸ_விகாரையில்_கயல்_மஹா_உற்சவம்;_காணி_உரிமையாளர்கள்_எதிர்த்துப்_போராட்டம்
  13. இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை! இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization – ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாளை (15) முதல் இந்த அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும், அதன்படி இந்த அனுமதியைப் பெற வேண்டும். இதற்கிடையில், அமெரிக்கா இலங்கைக்கான அதன் பயண ஆலோசனையைப் புதுப்பித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பயண ஆலோசனையை இரண்டாம் நிலை (Level 2) கீழ் புதுப்பித்துள்ளது மற்றும் பல ஆபத்து குறிகாட்டிகளைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் அமைதியின்மை, பயங்கரவாதம் மற்றும் கண்ணிவெடிகள் போன்ற பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா தனது பயண ஆலோசனை மூலம் தெரிவித்துள்ளது. https://www.samakalam.com/இலங்கை-வரும்-வெளிநாட்டவ-2/
  14. செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி கிடைத்தது – கால நிலை சீரின்மையால் அகழ்வை ஆரம்பிப்பதில் தாமதம் adminOctober 13, 2025 செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் , புதைகுழிக்குள் வெள்ள நீர் காணப்படுவதால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது , அகழ்வு பணிக்காக பாதீடு மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு கோர பட்ட நிதியை நீதி அமைச்சு விடுவித்துள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் புதைகுழி காணப்படும் பகுதிக்கு சென்று நேரில் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என மன்றில் தெரிவிக்கப்பட்டு , இன்றைய தினம் மாலை 03 மணியளவில் புதைகுழி பகுதிக்கு நீதிபதி தலைமையில் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது. அதன் போது, யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக புதைகுழி காணப்படும் இடத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்பதுடன் , அப்பகுதிகள் சதுப்பு நிலமாகவும் காட்சியளித்தன. அதனால் , அகழ்வு பணிகளை தற்போது முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்பட்டமையால் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பில் தீர்மானிக்க எதிர்வ்ரும் 03ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் போது 240 மனித என்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , 239 என்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்டத்திற்காக அனுமதிக்கப்பட்ட 45 நாட்கள் நிறைவடைந்தமையால் , அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் , புதைகுழி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் நடவடிக்கைகள் மற்றும் நிபுணத்துவ அறிக்கைகளின் பிரகாரம் அப்பகுதியில் மேலும் மனித என்பு கூட்டு எச்சங்கள் காணப்படுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதனால் , குறித்த பகுதியில் மேலும் அகழ்வு பணிகளை முன்னெடுக்க 08 வார கால பகுதி அனுமதிக்க வேண்டும் என சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் கோரியதன் அடிப்படையில் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான செலவீன பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்குமாறு மன்று கட்டளையிட்டதை அடுத்து , பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு , தற்போது நீதி அமைச்சினால் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/221463/
  15. சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – உயிருடன் எரியூட்டப்பட்டு , கடலில் வீசப்பட்டுள்ளார் adminOctober 13, 2025 பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கரையொதுங்கிய பெண்ணின் தலையில் பலமாக தாக்கியமைக்காக சான்றுகளும் , முகத்தில் எரியக் கூடிய திரவம் ஒன்றினை ஊற்றி எரியூட்டிமைக்கான சான்றுகளும் காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கி இருந்த நிலையில் , குறித்த பெண் காரைநகர் பகுதியை சேர்ந்த 02 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான சுரேஷ்குமார் குலதீபா என அடையாளம் காணப்பட்ட நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதன் போது குறித்த பெண்ணின் தலையில் பலமாக தாக்கப் பட்டமைக்கான சான்றுகள் காணப்படுவதுடன் , முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரிய கூடிய திரவம் ஊற்றி எரியூட்டப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுகிறது. அவரது நுரையீரலுக்குள் நீர் புகுந்தமையால் , ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது அறிக்கையின் பிரகாரம் பெண்ணின் முகத்தில் எரிய ஊட்டிய பின்னரே அவரை நீரினுள் வீசி இருக்க வேண்டும் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அதேவேளை குறித்த பெண் தனது கணவருக்கு வவுனியாவில் உள்ள நண்பி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்கு செல்வதாக கூறி சென்றதாகவும் , வீட்டை விட்டு அவர் செல்லும் போது சுமார் 10 பவுண் நகைகளை அணிந்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் சடலமாக மீட்கப்பட்ட வேளை அவரது சடலத்தில் நகைகள் எவையும் காணப்படவில்லை. குறித்த கொலை சம்பவம் நகைக்காக மாத்திரம் நடைபெற்றதா ? அல்லது வேறு பின்னணிகள் உள்ளனவா என பூநகரி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை குறித்த பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தொடர்பில் தெளிவாக கூற முடியாதுள்ளதாகவும் , சடலம் நீண்ட நேரம் நீரில் மிதந்தமையால் அவற்றை உறுதியாக கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/221460/
  16. கணேமுல்ல சஞ்சீவ கொலை – இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது! adminOctober 14, 2025 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர், நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025 பெப்ரவரி 19 ஆம் திகதி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். 25 வயதான பிங்குர தேவகே இஷாரா செவ்வந்தி இந்தக் கொலையில் உதவியாகவும், உடந்தையாகவும் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.இவர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை வழிநடத்தியதாகவும், திட்டத்தைத் திட்டமிட்டதாகவும் காவற்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த நாளிலிருந்து இவர் தலைமறைவாக இருந்த நிலையில், அவர் இருக்கும் இடம் குறித்து சரியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று காவற்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று (14.10.25) நேபாள காவற்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். https://globaltamilnews.net/2025/221475/
  17. போர் முடிந்துவிட்டது என அறிவித்த டொனால்ட் ட்ரம்ப் 13 October 2025 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக இஸ்ரேலுக்குப் பயணம் செய்யும் நிலையில், “போர் முடிந்துவிட்டது” என அறிவித்துள்ளார். போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் உச்சிமாநாட்டிற்காக எகிப்திற்கு செல்வதற்கு முன்னர் அவர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் போர்நிறுத்தம் நிலைத்திருக்கும் என்றும், காசாவுக்காக விரைவில் ஒரு “அமைதிக் குழு” (Board of Peace) அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். காசா தற்போது ஒரு “சிதைவுப்பகுதி” போல தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் , இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கட்டார் ஆகியவற்றின் பங்களிப்பையும் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டினார். https://hirunews.lk/tm/424981/donald-trump-declares-the-war-is-over
  18. மாகாணசபைத் தேர்தலுக்கு தயாராகும் தேசிய மக்கள் சக்தி - வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு முதலமைச்சர் வேட்பாளர்களை தேடுகிறதாம் திங்கள், 13 அக்டோபர் 2025 06:05 AM மாகாணசபைத் தேர்தலுக்குரிய ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளை தென்னிலங்கைப் பிரதான கட்சிகள் உள்ளகரீதியில் முன்னெடுத்துள்ளன. ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி, வடக்கு - கிழக்கில் களமிறங்கவுள்ள தமது கட்சியின் முதல்வர் வேட்பாளர்கள் பற்றி அவதானம் செலுத்தியுள்ளது. குறிப்பாக வடக்கு முதல்வர் வேட்பாளரைத் தெரிவுசெய்யும் பொறுப்பு அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ். வந்தபோது கூட இது சம்பந்தமாக இராமலிங்கம் சந்திரசேகரிடம் கலந்துரையாடியுள்ளார் என அறியமுடிகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக்கட்சியின் முன்னாள் எம். பி.க்கள் பலர், மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவதற்குத் திட்டமிட்டுள்ளனர். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபைத் தேர்தல்களில் களமிறங்குவதற்குத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி மாகாணசபை முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கத் திட்டமிட்டுள்ளனர் . இதுபற்றிக் கட்சித் தலைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது. கடந்த பொதுத்தேர்தலில் பெருமளவான எம்.பி.க்கள் தோற்கடிக்கப்பட்டதால் மாகாணசபைத் தேர்தலில் அதிகளவான முன்னாள் எம்.பி.க்கள் போட்டியிடக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. https://jaffnazone.com/news/51231
  19. யாழில் வாள் வெட்டு: தேசிய மக்கள் சக்தி செயற்திட்ட இணைப்பாளர் காயம்! யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிராந்திய இணைப்பாளருக்கும் அவரது தந்தைக்கும் போதைப்பொருள் கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தும்பளை பகுதியில் அவர்களது வீட்டுக்கு சென்ற வன்முறை கும்பல் , வீட்டில் இருந்த மகன் மற்றும் தந்தையர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது . இச் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தெரியவருவதாவது தும்பளை பகுதியில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை ஆகியன அதிகரித்து உள்ளன இந்நிலையில் , போதைப்பொருள் விற்பனை தொடர்பிலான சி.சி.ரி.வி காணொளி தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை இணைப்பாளருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை அவர் பொலிஸாரிடம் கையளித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். அது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காத நிலையில் , ஓரிரு நாட்களின் பின்னர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டது. அத்துடன் , போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளருக்கும் தொலைபேசி ஊடாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த போதிலும் , பொலிஸார் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் குறித்த சம்பவங்கள் இடம்பெற்று 20 நாட்களின் பின்னர் நேற்றைய தினம் 10ஆம் திகதி அதிகாலை வேளை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் வீட்டினுள் இருந்த தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் மற்றும் , அவரது தந்தை மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. https://newuthayan.com/article/யாழில்_வாள்_வெட்டு:_தேசிய_மக்கள்_சக்தி_செயற்திட்ட_இணைப்பாளர்_காயம்!
  20. வெலிக்கடைச் சிறையில் தமிழர் படுகொலை ஒரு வாரத்துக்கு முன்பே திட்டமிடப்பட்டது சிங்கள எழுத்தாளர் யாழில் தெரிவிப்பு 1983 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை சிறையில் ஏற்பட்ட கலவரம் அல்ல. சிறைக்கு வெளியில் ஒரு வாரத்துக்கு முன் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஆட்சியின் திட்டமிட்ட படுகொலையே எனச் சிங்கள எழுத்தாளரும் முன்னாள் ஊடகவியலாளருமான நந்தன வீரரட்ன தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் தந்தை செல்வா நினைவு அரங்கில் இடம்பெற்ற கறுப்பு ஜூலையின் 7 நாள்கள் என்ற நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஊடகவியலாளராகச் செயற்பாட்டுக் கொண்டிருந்தேன். வடக்கு மாகாணம் இலங்கை இராணுவத்தின் பிடியிலும் இந்திய அமைதிப்படையின் பிடியிலும், விடுதலைப் புலிகளின் பிடியிலும் இருந்த போது அறிக்கை இடுவதற்காக யாழ்ப்பாணம் வருகைதந்தேன். அன்றைய நாள்கள் தெற்கு ஊடகத் தணிக்கைகள் காரணமாக தமிழ் பேசும் மக்களின் உண்மையான தகவல்கள் தெற்கில் திரிவுபடுத்தப்பட்டு வந்தது. அதற்காகவே 2013ஆம் ஆண்டு ‘யாழ்ப்பாணத் தீயிடல்’ என்ற நூலை சிங்கள மொழியில் புலனாய்வு அறிக்கையிடல் மூலம் எழுதினேன். இதை ஏன் நான் சிங்களமொழியில் எழுதினேன் என்றால் யாழ்ப்பாணப் பொதுநூலகம் ஏன் எரிக்கப்பட்டது யாரால் எரிக்கப்பட்டது என்ற உண்மை நான் புத்தகம் எழுதும் வரை பலருக்குத் தெரியாது. தற்போது கறுப்பு ஜூலையில் ஏழு நாள்கள் என்ற நூலை யாழ்ப்பாணத்தில் இரண்டு மொழிகளிலும் வெளியிட்டுள்ளேன். 1983ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் கைதிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுதான் குட்டிமணி உட்பட 53 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டமைக்குக் காரணமென அநேகமானவர்கள் இன்றும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மை அதுவல்ல. நான் அக்காலப் பகுதியில் வெலிக்கடைச் சிறைச்சாலையின் பிரதம சிறைக்காவலரை நேரடியாகச் சந்தித்து வாக்குமூலம் பெற்றேன். வெலிக்கடைச் சிறைச்சாலையில் குட்டி மணி உட்பட 53 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டமை சிறையில் ஏற்பட்ட கலவரம் அல்ல ஒரு வாரத்துக்கு முன்னதாக நன்கு திட்டமிட்ட கொலை முயற்சி. தமிழ் ஊடகம் ஒன்று கொழும்புக்கு வெளியில் சுயாதீனமான செய்திகளை வெளியிட்டு வந்ததால் அதனையும் தீயிட்டு கொளுத்தினர். இந்த உண்மைகளை நான் ஆராய்ந்து வைத்திருந்த நிலையில் பொது வெளியில் எழுதுவதற்குப் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் எனக்கு 40 வருடங்கள் தேவைப்பட்டன. ஆகவே இனியாவது இந்த உண்மைகள் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தெரியவேண்டும் என்ற நோக்கத்துக்காக தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த நூலை இரு மொழிகளிலும் வெளியிட்டுவைக்கிறேன் என்றார். https://newuthayan.com/article/வெலிக்கடைச்_சிறையில்_தமிழர்_படுகொலை_ஒரு_வாரத்துக்கு_முன்பே_திட்டமிடப்பட்டது
  21. விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த மகிந்த தரப்பு – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் October 12, 2025 2:19 pm விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னிடம் கூறியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். தொடந்தும்பேசிய அவர், 2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆகும் போது சீனாவில் இருந்து துப்பாக்கி ரவைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. அப்போது கோட்டபாய ராஜபக்ச நேரில் என்னை அழைத்துப் பேசினார். “பொன்சேகா நாம் கடனுக்கு அல்லவா சீனாவிடம் இருந்து பெற்றுக்கொண்டு வருகின்றோம். சீனாவில் இருந்து அனுப்பப்படாவிட்டால் எனக்கு எதனையும் செய்ய முடியாது என்றார். நான் அப்படியே பசில் ராஜபக்சவின் அலுவலகத்திற்குச் சென்றேன். இதன்போது பசில் ராஜபக்ச தொலைபேசியூடாக பி.பி.ஜயசுந்தரவிடம் கூறினார். 100 மில்லியன் டொலர்களை வழங்குமாறு கூறினார். அந்த சந்தரப்பத்தில் பசிலுடன் ஒரு மணி நேரம் கதைத்துக்கொண்டிருந்தேன். 2005ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த கதையை அவர் என்னிடம் கூறினார். “நாம் இவ்வாறானதொரு வேலையை செய்தோம். தமிழ் மக்கள் வாக்களிப்பதை நிறுத்துவதாக விடுதலைப் புலிகள் வாக்குறுதி அளித்தனர். கடற்புலிகளின் பயன்பாட்டிற்காக முன்பதிவு செய்த டோரா படகுகள் மலோசியாவில் உள்ளன. அதற்கு பணம் வழங்க வேண்டும். அதற்காக இரண்டு மில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றது என்றனர். அதில் எந்நதப் பிரச்சினையும் இல்லையென நாம் அதனை ஏற்றுக்கொண்டோம். அயல் நாடுகளில் இருந்து தேர்தல் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக இரண்டு மில்லியன் டொலர் எமக்கு கிடைத்தது. கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு கிளிநொச்சியில் பிரபாகரனிடம் வழங்கியதாக” பசில் ராஜபக்ச என்னிடம் கூறினார். அவ்வாறு பணம் வழங்கும் போது மலையக அரசியல்வாதிகள் இருந்ததாகவும் பசில் கூறினார். அந்த டோரா படகுகளை பயன்படுத்தியே விடுதலைப் புலிகள் யுத்த காலத்தில் கடற்படையின் 10 டோரா படகுகளை மூழ்கடித்தனர். அதில் 150 கடற்படையினர் உயிரிழந்தனர். மகிந்த ராஜபக்ச தன் மகனை கடற்படையில் இணைத்தார். ஆனால் மகன் கடலுக்கு செல்லவில்லை, கொழும்பில் இருந்துகொண்டு ரக்பி விளையாடினார். கார் பந்தயத்தில் கார் ஓட்டினார். 2009ஆம் ஆண்டு நாங்கள் யுத்த களத்தில் இருந்தோம். ஜனவரி 27ஆம் திகதி கோட்டபாய என்னிடம் அன்பாக கதைத்தார். “சரத் நீங்கள் இரண்டரை வரும் நன்றாக யுத்தம் செய்தீர்கள் அல்லவா. நீங்கள் களைப்படைந்திருப்பீர்கள் அல்லவா. அதனால் ஜகத் ஜயசூரிய என்ற ஒருவர் உள்ளார் அல்லவா. அவரிடம் பொறுப்பை வழங்கிவிட்டு நீங்கள் சற்று ஓய்வு எடுங்கள்” என கூறினார். நான் அவரிடம் பொறுப்பை வழங்க மாட்டேன் என கூறினேன். மறுநாள் ஜனவரி 28ஆம் திகதி மகிந்த என்னை தொடர்புகொண்டார். ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி முதலாம் திகதி தற்காலிக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டார். நான் இல்லையென்றேன். ஆனாலும் எங்களுக்கு அந்த உத்தரவை மீற முடியாத நிலை காணப்பட்டது. ஆனால் எதிரிகள் ஜனவரி 31ஆம் திகதி நந்திக்கடல் ஊடக வந்து பாரிய தாக்குதலை நடத்தினர். மார்ச் நடுப்பகுதியில் முடியவேண்டிய யுத்தம் மே மாதம் நடுப்பகுதி வரை கொண்டுச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கோடிக்கணக்கான ஆயுதங்களை நாம் இழந்தோம். இதன் போது ஏற்பட்ட அனைத்து இழப்புகளுக்கும் மகிந்த ராஜபக்ச பொறுப்பு கூற வேண்டும். நான் இந்த அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். மேற்கூறிய சம்பவங்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன். யுத்தம் நிறைவடையவிருந்த சந்தரப்பத்தில் யுத்தத்தை நிறுத்த கோட்டபாய தரப்பினர் முயற்சி செய்தனர். முக்கிய தளபதிகளை யுத்த களத்தில் இருந்து மீள அழைத்தனர். போர் முடிய வேண்டும் என இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஆசைப்பட்ட நேரத்தில் யாராவது இப்படியொரு வேலைகளில் ஈடுபடுவார்களா? “2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் ஆருகில் வருகின்றது அல்லவா, அந்த தேர்தலில் வெற்றிபெற பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டும். பிரபாகரனை உயிருடன் காப்பாற்றி தமிழ் மக்கள் கோபமடையாதவாறு யுத்தத்தினை நிறுத்தி தமிழ் மக்களை கவர்வதற்கே மகிந்த ராஜபக்ச இவ்வாறு செய்தார் என பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் காணொளி ஒன்று உள்ளது. அதனை விரைவில் வெளியிடுவேன் எனவும் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார். https://oruvan.com/mahindas-faction-gave-money-to-the-ltte-information-released-by-sarath-fonseka/
  22. ஐநா தீர்மானம்:மருத்துவர் மனோகரனின் விழிகள் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன - நிலாந்தன் மருத்துவர் மனோகரன் அண்மையில் தனது 84ஆவது வயதில் லண்டனில் உயிர் நீத்தார். அவர் யார் என்றால், “ரிங்கோ 5” என்று அழைக்கப்படுகின்ற, திருகோணமலை நகரில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தை. திருக்கோணமலையில் மக்கள் அதிகம் வாழும் மையமான ஒரு பகுதியில், 2006ஆம் ஆண்டு ஐனவரி இரண்டாந்திகதி இந்த ஐந்து மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்ட தனது மகனுக்காக இறக்கும்வரை மனோகரன் போராடினார். அவர் அணுகாத மனித உரிமை அமைப்பு இல்லை. ஐநா மனித உரிமைகள் பேரவைவரை அவர் போனார். ஆனால் அவருக்கு இறக்கும்வரை நீதி கிடைக்கவில்லை. இடையில் 2015இல் ரணில் மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில், அதாவது நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட அரசாங்கத்தின் காலத்தில், அதைவிட குறிப்பாக ஐநாவின் வார்த்தைகளில் சொன்னால், நிலைமாறு கால நீதிக்குரிய-பொறுப்புக் கூறலுக்குரிய – தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய அரசாங்கத்தின் காலத்தில், குற்றஞ் சாட்டப்பட்ட அதிரடிப் படையினர் சிலர் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள். அதற்குப்பின் யாரும் தண்டிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. மருத்துவர் மனோகரன் உயிர் பிரியும்வரை போராடினார். அவருடைய ஏனைய பிள்ளைகளுக்கும் அவருக்கும் ஆபத்து வந்தபோது நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்தார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் அவரை நினைவு கூரும் ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு செம்மணி வளைவில் “அணையா விளக்கு” போராட்டத்தை ஒருங்கமைத்த “மக்கள் செயல்” என்ற அமைப்பு அந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியது. அது ஒரு நினைவு கூரலாகவும் அதேசமயம் நீதிக்கான மக்களின் போராட்டம் தொடர்பான ஆய்வு அரங்காகவும் அமைந்தது. அதில் அரசியல் விமர்சகர்களும் அரசியல்வாதிகளும் உரையாற்றினார்கள். குறிப்பாக அதில் உரையாற்றிய கஜேந்திரகுமார், மருத்துவர் மனோகரன் தொடர்பான தனது நினைவைப் பகிர்ந்து கொண்டார். லண்டனில் இருந்து மனோகரன் கஜேந்திரகுமாருடன் கதைப்பதற்கு தொலைபேசியில் அழைத்திருக்கிறார். ஆனால் கதைக்கத் தொடங்கியதும் அழத் தொடங்கிவிட்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவர் அழுதிருக்கிறார். அதன் பின்னர் சுதாகரித்துக் கொண்டு சிறிது உரையாடியிருக்கிறார். அவரை மீண்டும் ஐரோப்பிய நாடு ஒன்றில் சந்தித்ததாக கஜேந்திரகுமார் தனது உரையில் கூறினார். அச்சந்திப்பின் போதும் கிட்டத்தட்ட அரை மணித்தியாளத்துக்கு மேலாக மருத்துவர் மனோகரன் அழுதிருக்கிறார். அன்றைய நிகழ்வில் அவருடைய மார்பளவு உருவப்படம் பெருப்பிக்கப்பட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்தது. துக்கமும் விரக்தியும் நிறைந்த மனோகரனின் கண்கள் அதைப் பார்ப்பவர்களிடம் எதையோ எதிர்பார்ப்பது போலிருந்தது. அந்த நிகழ்வு நடந்த அடுத்த நாள் திங்கட்கிழமை ஜெனிவாவில் அறுபதாவது மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பு இன்றி அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எந்த நாடும் அதை எதிர்த்து வாக்களிக்கவில்லை. அந்தத் தீர்மானம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுபோல நீர்த்துப்போன ஒரு தீர்மானமாகக் காணப்படுகிறது. வழமைபோல அதில் மாகாண சபைத் தேர்தல்களை வைக்க வேண்டும், 13ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் போன்ற திரும்பத் திரும்ப வரும் விடையங்கள் உண்டு. அதுபோலவே போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பும், அரச படைகளும் விடுதலைப் புலிகள் இயக்கமும் பொறுப்புக்கூற வேண்டும், விசாரிக்கப்பட வேண்டும் என்ற விடயமும் அதில் உண்டு. கடந்த 16 ஆண்டுகளாக மனித உரிமைகள் பேரவையில் இதுதான் நடந்து வருகிறது. இரண்டு தரப்பையும் விசாரிக்க வேண்டும்,13ஐ முழுமையாக அமல்படுத்தி மாகாண சபைகளை இயங்க வைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் திரும்பத் திரும்ப முன்வைக்கப்படுகின்றன. அதேசமயம் புதிய ஆட்சிகள் வரும் பொழுது குறிப்பாக ராஜபக்சக்கள் இல்லாத ஆட்சிகள் வரும்போது அவற்றை அரவணைத்துப் பொறுப்புக்கூற வைக்கலாம் என்று ஐ நா முயற்சித்து வருகிறது. இம்முறை தீர்மானமும் அந்த நோக்கத்திலானதுதான். ஆனால் அரசாங்கம் தெளிவாகக் கூறுகிறது, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைதான் உண்டு. வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று. அதேசமயம் ஏற்கனவே 2021ஆம் ஆண்டிலிருந்து ஒரு பன்னாட்டுப் பொறிமுறை மனித உரிமைகள் ஆணையாளருடைய அலுவலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீலங்காவை பொறுப்புக்கூற வைப்பதற்கான அலுவலகம் என்று அழைக்கப்படும் அந்தக் கட்டமைப்பானது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரித்து வருகிறது. அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் வந்து விசாரணைகளை செய்து சான்றுகளையும் சாட்சிகளையும் உறுதிப்படுத்துவதற்கு இதுவரையிலும் இருந்த எந்தவொரு அரசாங்கமும் விசா வழங்கவில்லை. கடந்த ஓராண்டு காலமாக அநுர அரசாங்கமும் விசா வழங்கவில்லை. அதேசமயம் உள்நாட்டுப் பொறி முறையைப் பொறுத்தவரையிலும் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட ரிங்கோ5 என்று அழைக்கப்படுகின்ற ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவமும் உட்பட இன்றுவரையிலும் நடந்த எத்தனை படுகொலைகளுக்கு நீதி கிடைத்திருக்கிறது? கடந்த சுமார் 30க்கும் மேற்பட்ட ஆண்டு காலப் பகுதிக்குள் மாணவி கிருசாந்தியின் கொலை வழக்கில்தான் குற்றவாளிகள் ஓரளவுக்காவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் ஒரு குற்றவாளி இன்றுவரை தலைமறைவாக இருக்கிறார். மற்றொரு குற்றவாளியாகிய லான்ஸ் கோப்ரல் சோமரட்ன ராஜபக்ஷ அக்குற்றங்களில் தனக்குச் சம்பந்தமில்லை என்றும், தனக்கு மேலதிகாரிகள் இட்ட கட்டளைகளையே தான் நிறைவேற்றியதாகவும் பகிரங்கமாகக் கூறி வருகிறார். இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, கடந்த 20 ஆண்டுகளாக அவர் அவ்வாறு கூறி வருகிறார். அவர் தனது வாக்குமூலத்தில் பெயர் குறிப்பிட்டிருக்கும் அதிகாரிகள் யாரும் இதுவரையிலும் விசாரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அனுர அரசாங்கம் கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் 80க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்திருக்கிறது. இவர்களில் தரைப்படை, கடற்படை பிரதானிகள், போலீஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகள், பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்று பல வகையினரும் அடங்குவர். ஆனால் கைது செய்யப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்த யாருமே இன முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படவில்லை. ஆனால் அவர்களில் சிலர் மீது இன முரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்டு. உதாரணமாக ஒரு கடற்படைப் பிரதானி மீது அவ்வாறான குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இன்றுவரை அரசாங்கம் கைது செய்திருக்கும் எந்த ஒரு படைத் தரப்பைச் சேர்ந்தவர் மீதும் இன முரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. அரசாங்கம் அந்த விடயத்தில் மிகத்தெளிவாக இருக்கிறது. ஆனால் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை மூலம் உண்மையைக் கண்டடையலாம், அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைக்கலாம் என்று ஐநா நம்புகின்றதா? கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் அதைத்தான் பிரதிபலிக்கின்றது. திங்கட்கிழமை மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாள் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடந்த மனோகரன் நினைவு நிகழ்வில் பேசியவர்களில் ஒருவர் திருக்கோணமலையைச் சேர்ந்த ரஜீவ் காந்த். அவர் ஓர் அரசியல் செயற்பாட்டாளர். தென்னிலங்கையில் நடந்த “அரகலய” தன்னெழுச்சிப் போராட்டங்களில் காணப்பட்ட தமிழர்களில் முக்கியமானவர். இவர் மருத்துவர் மனோகரனின் மகனின் பாடசாலையில் சமகாலத்தில் படித்தவர். அந்த ஐந்து மாணவர்களும் கொல்லப்பட்ட சம்பவத்தில் அரும்பொட்டில் உயிர் தப்பியவர். அந்த மாணவர்கள் வழமையாக ஒரு சிமெண்ட் கட்டில் உட்கார்ந்திருந்து கதைப்பதுண்டாம். அவர்களோடு சேர்ந்து இருந்திருக்க வேண்டிய ரஜீவ் அன்றைக்கு வேறொரு அலுவல் காரணமாக அங்கே வரப் பிந்திவிட்டது. அதற்குள் எமன் அவரை முந்திக் கொண்டு விட்டான். அந்த நினைவு நிகழ்வில் பேசும் பொழுது அவர் சொன்ன பல விடயங்களில் ஒன்று அந்த ஐந்து மாணவர்களில் ஒருவராகிய யோகராஜா ஹேமச்சந்திராவின் மூத்த சகோதரனைப் பற்றியது. கொல்லப்பட்ட தனது தம்பியின் பூத உடலை அழுதழுது தூக்கி கொண்டு வரும் அவருடைய அண்ணனை இப்பொழுதும் அதில் சம்பந்தப்பட்ட ஒளிப்படங்களில் காணலாம் என்று ரஜீவ் சொன்னார். ஆனால் அந்த அண்ணனும் இப்பொழுது இல்லை. ஹேமச்சந்திரனின் மூத்த சகோதரன் திருக்கோணமலையில் இயங்கிய “அக்சன் பெய்ம்” (Action Against Hunger) என்று அழைக்கப்படுகின்ற பிரான்ஸை மையமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனத்தில் வேலை செய்தவர். நாலாம் கட்ட ஈழப் போரின் தொடக்க நாட்களில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பதினேழு உள்ளூர் ஊழியர்கள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹேமச்சந்திரா கொல்லப்பட்ட ஐந்தே மாதங்களில் அவருடைய அண்ணனும் மூதூரில் தனது சக ஊழியர்களோடு கொல்லப்பட்டு விட்டார். அந்த குடும்பத்துக்கு ஐந்து மாதங்களில் இரண்டு இழப்பு. அந்தக் குடும்பத்தில் அடுத்தடுத்த நிகழ்ந்த இரண்டு இழப்புக்களுக்கும் இன்றுவரையிலும் நீதி கிடைக்கவில்லை. ஆனால் ஐநாவும் பெரும்பாலான உலக நாடுகளும் நம்புகின்றனவா, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றின் ஊடாக இலங்கையில் நிலைமாறு கால நீதியை நிலைநாட்டலாம் என்று? ஞாயிற்றுக்கிழமை தந்தை செல்வா கலையரங்கில் கூடிய கருத்தரங்கில் பேசிய யாருமே உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவும் இல்லை நம்பவும் இல்லை. அவர்கள் பேசிக் கொண்டிருந்த மேடையில் பின்னணியில் நிறுத்தப்பட்டிருந்த மருத்துவர் மனோகரனின் விழிகள், அழுதழுது களைத்துப் போன அந்த விழிகள், அங்கிருந்து எல்லாரையும் எதிர்பார்ப்போடு உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தன. https://www.nillanthan.com/7832/
  23. கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை! October 10, 2025 சமீபத்தில் கனடாவில் வாழும் தமிழ்த் தேசிய உணர்வாளப் பெண்மணி சிவவதனி பிரபாகரன் என்பவர் தனது மகளான திவ்யாவின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார். மேலும் அவர் தனது முகநூல் பதிவில் “இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் தனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது” என்றும் பதிவிட்டுள்ளார். ஒரு தாயார் தனது மகளின் திருமணத்தையிட்டு பேருவகை கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சமூக வலைத்தளத்திலேயே குடும்பம் நடத்தும் இக்காலத்தில், சிவவதனி அம்மையார் தனது மகளின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டமையும் ஒன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஆனால் திருமதி சிவவதனி பிரபாகரன் தனது சம்ந்தக்குடி பற்றி தெரிவித்த தகவல்களே சமூக வலைத்தள தமிழ்த் தலிபான்களுக்கு சும்மா மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்தமாதிரி ஆகிவிட்டது. சிவவதனி அம்மா மகள் திவ்யா காதலித்த ஆபிரிக்க நாடான கொங்கோ நாட்டு இளைஞனை திருமணம் செய்து வைத்தமையை பொறுக்காத தமிழ்த் தலிபான்கள் பின்னூட்டலில் வந்து வசை மாரி பொழிகிறார்கள். அடுத்தவர் வீட்டு படுக்கையறையை எட்டிப் பார்க்க கூடாது என்ற அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாத பண்பற்ற தமிழ் ஆண்களும் பெண்களும் புதுமணத் தம்பதிகளுக்கு சாபங்களை அள்ளிக் கொட்டுகிறார்கள். சம்பந்தப்பட்ட குடும்பத்தின் அனுமதியின்றி தம்பதிகளின் திருமணப் படங்களை பல்வேறு சமூக வலைத்தள போலிக் கணக்குகளில் பகிர்ந்து தமது காழ்ப்புணர்வை உமிழ்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் வேற்று நாட்டவர்களை மணம் புரிதல் என்பது புதிதல்ல. இரண்டாவது தலைமுறையை கடந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் இடையே வேறு இனத்தவர்களில் ஆண் மற்றும் பெண் எடுத்தல் சகஜமாக நடந்து தான் வருகிறது. அவ்வாறான திருமணப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டும் வருகின்றன. பெரும்பாலான அத்திருமணங்கள் வெள்ளையினத்தவர்களுடான தமிழ்க் கலியாணங்களாக இருக்கின்றன. வெள்ளையினத்தவர்களுடனான கலப்புத் திருமணங்களுக்கு வராத விமர்சனங்கள், கறுப்பு நிற ஆபிரிக்க இனத்தவர்களுடான திருமணங்களுக்கு வருகின்றன. இது தமிழர்களின் நிற வெறியை வெளிப்படுத்துகிறது. பெரும்பாலும் பளுப்பு நிறமுடைய தமிழர்கள் தங்களை ஆபிரிக்கர்களை காட்டிலும் உயர் இனமாக கருதுகின்றனர். அதனாலேயே வெள்ளை நிறத்தவர்களிடையே ஏற்படும் கலப்பு திருமண பந்தங்களை வரவேற்று கொண்டாடுகின்றனர். அதேநேரம் ஆபிரிக்க இனத்தவரையோ அல்லது வெள்ளையினம் சாராத ஏனைய கலப்புத் திருமணங்களை எள்ளி நகையாடுகின்றனர். இன அடக்குமுறைக்கு எதிராக விடுதலை வேண்டிப் போராடிய இனமான ஈழத்தமிழர்கள் நிறவெறி, சாதிவெறி, மதவெறி, பிரதேச வாதம் மற்றும் பெண்ணடிமைத் தனம் என்ற பிற்போக்குத் தனங்களில் இன்னமும் உழல்வது வெட்கக்கேடானது. தாயகத்தை காட்டிலும் புலத்தில் வாழும் தமிழர்களிடையே இவ்வாறான பிற்போக்குத் தனங்கள் மிகுதியாக காணப்படுகின்றன. கருத்துச் சுதந்திரத்தின் வரையறை தெரியாத காட்டுமிராண்டி சமூகமாக ஈழத்தமிழ்ச் சமூகம் புலம்பெயர் நாடுகளில் வாழ்வது தலைகுனிவானது. சிவவதனி அம்மையார் தனது மகளின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தனது மகள் கலப்புத் திருமணம் செய்ததை ஆதரித்தது உண்மையில் வரவேற்க்கத்தக்க செயலாகும். அவர் சொல்ல வந்த செய்தி கணியன் பூங்குன்றனாரின் “ யாதும் ஊரே யாவரும் கேளிர் “ என்பதன்படி தமிழர்கள் சர்வதேசவாதிகள். உலகில் வாழும் அனைவரும் எமது உறவுகளே. அதேநேரம் உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமதே என்பதாகும். சிவவதனி அம்மையாரின் தூரநோக்கு சர்வதேசப் பார்வையை புரிந்து கொள்ள திராணியற்ற கூட்டமொன்று சமூக வலைத்தளங்களில் குத்தி முறிகிறது. பாலியல் வக்கிரமான சொற்றாடல்களில் பின்னூட்டல்களை இடுகின்றது. அவ்வாறான பின்னூட்டல்களில் பெரும்பாலானவை ஆபிரிக்க மணமகனின் ஆண்குறியை மையமாக கொண்ட வக்கிர கருத்துக்களாக உள்ளன. பெரும்பாலும் இப் பின்னூட்டல்களை இடுபவர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஆண்களாகவே உள்ளனர். அவர்களுக்கு தமது ஆண்மையில் இருக்கின்ற குறைபாடுகள் காரணமாகத் தான் ஆபிரிக்க மணமகன் மீது காழ்ப்புணர்வு கொண்டு பாலியல் வக்கிரமான பின்னூட்டல்களை இடுவதாகத் தான் கருத வேண்டியுள்ளது. ஒரு பெண் யாரைத் திருமணம் செய்ய வேண்டும். யாருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட பெண் தான் தீர்மானிக்க முடியும். பெண்களின் சுதந்திரம், சமத்துவம் மற்றும் பாதுகாப்பில் கூடுதல் முன்னுரிமை கொடுக்கும் மேற்கு நாடுகளில் அகதிகளாக வந்து தஞ்சம் பெற்று வாழும் தமிழ் ஆண்களுக்கு மேற்கூறிய விடயங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பெண்கள் மீதான அத்துமீறல்களில் மற்றும் வன்முறைகளில் ஈடுபடும் ஆண்களுக்கு புலம்பெயர் நாடுகளில் எத்தகைய தண்டனைகள் வழங்கப்படும் என்பதும் தெரிந்திருக்கும். அல்லது தெரிந்து வைத்திருக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மட்டுமல்ல தாயகத்திலும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் பல்வேறு சட்டங்கள் மற்றும் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளில் ஒழிந்து கொண்டு வெட்டி வீராப்பு மற்றும் அவதூறு பரப்புகிறவர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப்படுவார்கள். எழுதியவர்: கங்கா ஜெயபாலன், சமூக சேவைப் பணியாளர், கல்வி: Social Work & Education (University of Niederrhein), சர்வதேச உறவுகள் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), அரசியல் விஞ்ஞானம் (கொழும்புப் பல்கலைக்கழகம்). https://www.thesamnet.co.uk/?p=113593
  24. முதல் பெண் மாவீரர் மாலதியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் adminOctober 10, 2025 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (10) வெள்ளிக்கிழமை மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. குடும்ப உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், அருட்தந்தை,முன்னாள் போராளிகள், உறவினர்கள் ,உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர். இதன் போது அவரது உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ,மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. https://globaltamilnews.net/2025/221354/
  25. ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின் கருத்து October 10, 2025 கறுப்பு ஜுலை கலவரங்கள் ஜே.வி.பியினாலேயே நடத்தப்பட்டதாக பொய்யாகப் பரப்புரை செய்யப்பட்ட போதிலும், அக்கலவரங்களால் நாம் வெகுவாகப் பாதிக்கப்பட்டோம் என்பதே உண்மையாகும். ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால் வடக்கு, கிழக்கு, தெற்கு என எவ்வித பேதமுமின்றி ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியிருக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா சுட்டிக்காட்டினார். நந்தன வீரரத்ன என்பவரால் எழுதப்பட்டு, மனோரஞ்சனால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ‘நாட்டை உலுக்கிய 83 கறுப்பு ஜுலையின் ஏழு நாட்கள்’ எனும் புலனாய்வு நூல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வொன்று ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (9) கொழும்பிலுள்ள மகாவலி மைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய டில்வின் சில்வா மேலும் கூறியதாவது: கறுப்பு ஜுலை பற்றிய இந்த நூலானது மறைக்கப்பட்ட அல்லது திரிபுபடுத்தப்பட்ட வரலாற்றின் உண்மைகளை வெளிக்கொணர்வதற்குப் பங்களிப்புச்செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜுலை கலவரம் தொடர்பில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேபோன்று 1988, 1989 களில் இடம்பெற்ற கலவரங்களை ‘ஜே.வி.பி கலவரம்’ என்று அடையாளப்படுத்துகின்றார்கள். ஆனால் உண்மையில் நாம் அந்தக் கலவரங்களைத் தோற்றுவிக்கவில்லை. மாறாக அவற்றால் வெகுவாகப் பாதிக்கப்பட்டோர். அதேபோன்று 1983 கறுப்பு ஜுலை கலவரத்தினால் நான் வெகுவாகப் பாதிக்கப்பட்டேன். ஏனெனில் அக்காலப்பகுதியில் நான் எமது கட்சியின் களுத்துறை மாவட்டம், பேருவளை ஒருங்கிணைப்பாளராகவும், முழுநேர கட்சி செயற்பாட்டாளராகவும் இருந்தேன். இருப்பினும் கலவரத்தை அடுத்து எமது கட்சியும் தடை செய்யப்பட்ட கட்சியாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து எமது அரசியல் செயற்பாடுகள் முடங்கியதுடன் அவற்றை இரகசியமாக முன்னெடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு ஏகாதிபத்தியவாத அரசாங்கமொன்றைக் கட்டியெழுப்பவேண்டிய தேவையிருந்தது. அதற்காக தமிழர்கள் மீது ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்து, சிங்கள தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தினார். அதுமாத்திமன்றி அரசியலமைப்பின் ஊடாக சகல அதிகாரங்களையும் கொண்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை அறிமுகப்படுத்தினார். அவ்வேளையில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டம் இப்போதும் நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் அதனை நீக்குவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளும் எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு எமக்கும், மக்களுக்கும் எதிரான சகல ஒடுக்குமுறைகளும் திட்டமிட்டுப் பிரயோகிக்கப்பட்டன. அதேவேளை ஜே.வி.பியினாலேயே கறுப்பு ஜுலை கலவரங்கள் நடத்தப்பட்டன என்ற கருத்துக்களும் தீவிரமாகப் பகிரப்பட்டன. எனவே தமிழ் மக்களின் மனங்களில் இக்கலவரங்களை நாம் (ஜே.வி.பி) தான் நடத்தினோம் என்ற எண்ணம் இருக்கின்றதா எனத் தெரியவில்லை. அதன் பின்னர் நாம் வடக்கில் உள்ள போராட்ட இயக்கங்களுடன் தொடர்புகளைப் பேணிவருவதாகவும் ஐக்கிய தேசியக்கட்சியினால் பரப்புரை செய்யப்பட்டது. இவ்விரு கருத்துக்களுக்கும் இடையிலேயே பாரிய முரண் காணப்படுகின்றது. இவ்வாறு ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் ஒரு தனிமனிதனின் அதிகார வெறியினால் வடக்கு, கிழக்கு, தெற்கு என எவ்வித பேதமுமின்றி ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியிருக்கின்றது என்றார். https://www.ilakku.org/the-entire-country-paid-a-heavy-price-for-j-r-jayewardene-tilvin-silva-comments-on-black-july/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.