Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. காசா நகர் தாக்குதலின் ஆரம்ப கட்டங்கள் துவங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு காசா நகர் முழுவதையும் கைப்பற்றி ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ள தரைவழித் தாக்குதலின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை இஸ்ரேல் இராணுவம் தொடங்கியுள்ளதாகவும், நகரின் புறநகர் பகுதிகளை ஏற்கெனவே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கான களத்தை அமைப்பதற்காக, செய்தூன் மற்றும் ஜபலியா பகுதிகளில் படைகள் ஏற்கெனவே செயல்பட்டு வருவதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் நடவடிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நடவடிக்கைகளுக்காக, செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுமார் 60,000 மேலதிக வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இது களப்பணிக்குத் தேவையான வீரர்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும். அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான கொடூரமான போரைத் தொடர்வதற்கு ஆதரவாக இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குத் தடையாக இருப்பதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் திட்டத்திற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ள நிலையில், காசா நகரில் வசிக்கும் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் காசாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலின் திட்டத்தை அதன் பல நட்பு நாடுகள் கண்டித்துள்ளன. இது “இரண்டு மக்களுக்கும் பேரழிவையே ஏற்படுத்தும். மேலும், நிரந்தரப் போர்ச் சுழற்சியில் இப்பகுதி முழுவதையும் தள்ளிவிடும்” என்று பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் புதன்கிழமை எச்சரித்துள்ளார். இதற்கிடையில், மேலும் அதிகமான மக்கள் இடம்பெயர்வதும், தாக்குதல்கள் தீவிரமடைவதும், காசாவின் 2.1 மில்லியன் மக்களுக்கான ஏற்கெனவே பேரழிவுகரமான சூழ்நிலையை மோசமாக்கும் என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக் குழு (ICRC) தெரிவித்துள்ளது. https://akkinikkunchu.com/?p=337727
  2. இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளை அன்புடன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்; தேவையான வசதிகள் வழங்கப்படும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளை அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி அன்பாக அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இதேவேளை அகதிகள் நாடு திரும்பிய போது சட்ட குறைபாடுகளால் நடந்த இரண்டு சம்பவங்களை அடிப்படையாக் கொண்டு ஐநா அகதிகள் முகாமால் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு வருவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் கவலையடைவதாகவும் , இந்த விடயம் தொடர்பில் அந்த அமைப்புடன் கலந்துரையாடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தால் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்ற ராமசாமி தேவராஜா, தேவராஜா புஸ்பராணி என்ற இருவரும் இலங்கை திரும்பிய போது கைது செய்யப்பட்டமை தொடர்பில் இந்த விவாதத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவர்கள் இலங்கையில் யுத்தம் நிலவிய காலப்பகுதியிலேயே இந்தியாவுக்கு அகதிகளாக அகதி முகாமுக்கு சென்றுள்ளனர். யுத்த சூழலின் போது எவரும் சட்டரீதியாக அகதிகளாக செல்வதில்லை. உலக நாடுகளிலும் அவ்வாறான தன்மையே காணப்படும்.தமது உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் எவ்வழியிலாவது நாட்டை விட்டுச் செல்வார்கள். இதன்படி தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் 110க்கும் அதிகளவில் காணப்படும் அகதி முகாம்கள் தொடர்பில் எமது நாட்டில் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. இந்த அகதி முகாம்களில் ஒரு இலட்சத்து 10ஆயிரம் பேர் இருப்பதாக கூறப்படுகின்றது. அவர்களில் 28ஆயிரத்து 500 பேர் வரையிலானோர் இலங்கையினதோ இந்தியாவினதோ குடியுரிமை இல்லாதவர்களாகவே இருந்துள்ளனர். இதனால் ஜே.வி.பி என்ற வகையில் நானும் இராமலிங்கம் சந்திரசேகரனும் அந்த முகாம்களுக்கு சென்று காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் இ ரட்ண சிறி விக்கிரமநாயக்கவின் உதவியுடன் பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை கொண்டுவந்து அதனை நிறைவேற்றி குறித்த 28ஆயிரத்து 500 பேருக்கும் இலங்கை குரியுரிமையை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தோம். இந்நிலையில் இப்போது யுத்தம் முடிவடைந்த பின்னர் குறித்த அகதி முகாம்களில் இருந்தவர்களில் குறைந்தது 6ஆயிரம் பேர் வரையிலானோர் இலங்கை வந்து குடியேறியுள்ளனர். கிளிநொச்சியில் கனகபுரம், பாரதிபுரம் போன்ற இடங்களில் இவ்வாறு குடியேறியவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் காணி மற்றும் மின்சாரங்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளேன். இவ்வாறான நிலைமையில் இந்தியாவில் இருந்து இலங்கை வரும் அகதிகள் கைது செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. அண்மையில் சின்னையா சிவலோகநாதன் என்பவர் பலாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தோல்வியடைந்த எம்.பியொருவர் பெரும் கோசமெழுப்பி நீதிமன்றத்திற்கும் சென்றார். ஆனால் அதன்பின்னர் நானும், குடிவரவு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் இது தொடர்பில் அவதானம் செலுத்தி 2 நாட்களில் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்யப்படுவது சரியானது அல்ல. இது அரசாங்கத்தின் கொள்கையும் அல்ல. நாங்கள் அதிகாரிகள் ஊடாகவே நாட்டை நிர்வாகம் செய்கின்றோம். இதனால் அதிகாரிகள் தவறிழைக்கலாம். இதனை அரசாங்கத்தின் செயற்பாடு என்று அரசாங்கதிற்கு சேறு பூச கூடாது. தமிழ் அகதிகளுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேண்டுமென்றே இடையூறுகளை ஏற்படுத்துகின்றது என்று காட்டுவதற்கே முயற்சிக்கின்றனர். வடக்கில் உள்ள சிலர் இவ்வாறு செய்கின்றனர். பச்சை இனவாதத்தை தமது செயற்பாடாக கொண்டவர்களே அவர்கள். வடக்கில் ராஜபக்‌ஷக்களின் பிம்பங்கள் உள்ளன. அவர்களுக்கு இந்த அரசாங்கம் தமிழ் மக்களை தமிழ் என்பதனால் பழிவாங்குகின்றது என்று காட்டவே முயற்சிக்கின்றனர். இதேவேளை ஆகஸ்ட் 6ஆம் திகதி இன்னுமொரு சம்பவம் நடந்தது. அதாவது ராமசாமி தேவராஜா, தேவராஜா புஸ்பராணி என்ற இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இலங்கை அகதிகளே. இலங்கையில் குடிவரவு, குடியகல்வு சட்டம் உள்ளது. அதன்படியே இவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் . இந்த விடயத்தில் நாங்கள் கவலையடைகின்றோம். இவ்வாறு வருபவர்களில் ஒருவர், இருவருக்காவது இவ்வாறு நடக்கலாம். இதற்கான சட்ட ரீதியான காரணங்கள் உள்ளன. ஆனால் இது மாற்ற முடியாத விடயம் அல்ல. இந்த திருத்தங்களை முன்னரே செய்திருக்கலாம். அரசாங்கம் என்ற வகையில் இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளை அன்பாக ஏற்றுக்கொள்கின்றோம். நாங்கள் அவர்களுக்கு வழங்கக்கூடிய முடிந்தளவான உதவிகளை வழங்குவோம். அமைச்சர் ஆனந்த விஜேபால புனர்வாழ்வு அதிகாரசபையின் முன்னாள் தலைவராவார். இவர் 5 வருடங்களில் விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் புலிகள் அல்லாதவர்கள் இருந்த முல்லைத்தீவு, கிளிநொச்சியில் உள்ள சகல வீடுகளுக்கும் சென்றவரே. 2015ஆம் ஆண்டின் பின்னர் வீடுகளுக்கு சென்று படிவங்களை விநியோகித்தவர்களே. இதனால் எந்த வகையிலும் கொள்கை ரீதியில் இவ்வாறு வரும் அகதிகளை தடுத்து வைத்தல் மற்றும் கைது செய்யப் போவதில்லை. இந்நிலையில் ஐநா அகதிகள் முகாமால் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு வருவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம். குறிப்பிட்ட இரண்டு சம்பங்களை பயன்படுத்தி ஏன் இவ்வாறு இலங்கைக்கு அவர்கள் வருவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அமைச்சு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும். எவ்வாறாயினும் இங்கிருந்து அகதிகளாகியுள்ள எமது மக்களுக்கு வழங்கக்கூடிய முடிந்தளவான வசதிகளை வழங்கி அவர்களை பாதுகாத்து இந்நாட்டின் பிரஜைகளாக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். இந்த விடயத்தில் சட்ட விடயத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அது தொடர்பில் ஆராய்ந்து அவ்வாறான கைதுகளை நிறுத்த நடவடிக்கை எடுப்போம். இதனால் வேறு அதிகாரிகளால் இழைக்கப்படும் தவறுகளை இனவாத அர்த்தத்தில் பார்க்க வேண்டாம். இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. அவர்களுக்கு பிணையும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் என்பதனால் அநீதிக்கு இலக்காவதாக கூறப்படும் செய்தி முதமைச்சர் கனவில் இருப்பவர்களுக்கு அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமைய பெறுமதியானதாக இருக்கலாம். ஆனால் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளவர்களுக்கு அவ்வாறான எண்ணம் இருக்காது என்று நினைக்கின்றோம். நாங்கள் ஒரே இலங்கையை அமைப்போம். குறைபாடுகளை எங்களுக்கு சுட்க்காட்டுங்கள். ஆனால் இனவாத திட்டங்களுக்கு உதவ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார். https://akkinikkunchu.com/?p=337765
  3. யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்துக்கு வருகை 21 Aug, 2025 | 11:37 AM யாழ்ப்பாண கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு உட்பட யாழ்ப்பாணத்தின் 14 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவை இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக இந்த திட்டத்தை செயற்படுத்துகின்றன. யாழ்ப்பாண வலய மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். மாணவர் பாராளுமன்றம் என்ற எண்ணக்கரு, பாடசாலைகள் ஊடாக தேசிய நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை உருவாக்குவதற்கும், அது குறித்த ஒரு கருத்தாடலைக் கட்டியெழுப்பவும் பங்களிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு “Clean Sri Lanka” வேலைத்திட்டம் மற்றும் அதன் கருத்தியல் பெறுமதி குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் அடையாள ரீதியான பரிசாக பெறுமதியான மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் பிரசன்ன சந்தித், ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படை ஒருங்கிணைப்பு பிரிவின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல ஆகியோருடன் குறித்த பாடசாலைகளின் அதிபர்கள், கல்லூரிகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/222993
  4. கைதான தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றுக்கு செய்திகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (20) மிரிஹானவில் உள்ள அவரது பிரத்தயேக இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடலில் நடந்த போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டதால் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன் பினை மனுவை சமர்ப்பித்திருந்த நிலையில், அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmekrzab80002qpu752l58f74
  5. எப்பவும் ஜெற் விமானத்தில் பறப்பவர்களுக்கு சிறிய இரட்டை என்ஜின் விமானங்களில் பறப்பது புது அனுபவமாக இருக்கலாம். 😃
  6. கிளீன் சிறிலங்கா செயற்திட்டம் - பருத்தித்துறையில் தெரிவான 36 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை! adminAugust 20, 2025 கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் மற்றும் உடுவில் பிரதேச செயலகத்திலும் நடைபெற்ற விசேட நடமாடும் சேவையில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களை நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது போது கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை மற்றும் உடுவிலில் நடைபெற்ற விசேட நடமாடும் சேவைகளானது வெற்றியடைந்துள்ளது. இரண்டு நடமாடும் சேவையிலும் எதிர்பார்த்த மக்களை விட அதிகமானோர் பங்கேற்றனர். அவ் நடமாடும் சேவைகளில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலக பிரதேச செயலக அனைத்துத் தர உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகள். மேலும், மேற்படி நடமாடும் சேவைகளில் குறிப்பாக கண் பரிசோதனை, ஆட்பதிவுச் சேவை, மருத்துவ பரிசோதனைச் சேவை, பிறப்பு இறப்பு பதிவுச் சேவை, மோட்டார் வாகன போக்குவரத்து சேவை மற்றும் ஓய்வூதியச் சேவைக்கே அதிக பொது மக்கள் பங்குபற்றினார்கள். பொது மக்களின் மேற்படி சேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக நடமாடும் சேவை நடாத்தவுள்ளது. அந்த வகையில் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி சங்கானை பிரதேச செயலகத்திலும், 30 ஆம் திகதி காரைநகர் பிரதேச செயலக த்திலும் மாவட்டச் செயலகத்தினால் நடமாடும் சேவை பிரதேச செயலக ஒத்துழைப்புடன் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேலும், பருத்தித்துறையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் கண் பரிசோதனையில் இனங்காணப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 36 பேருக்கு கண்புரை சிகிச்சை இரண்டு வாரத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் நடாத்தப்படவுள்ளது என மேலும் தெரிவித்தார். அத்துடன் மக்களுக்கான சேவையில் அனைவரதும் ஒத்துழைப்புக்களை வினைத்திறனாக வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலர் கே. சிவகரன், மேலதிக செயலர் (காணி) பா. ஜெயகரன் உள்ளிட்ட மாவட்டச் செயலகம் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2025/219495/
  7. ஹர்த்தால்: தனிநபர்களின் தோல்வியும், சமூகங்களின் வெற்றியும்! August 19, 2025 — அழகு குணசீலன் — முத்தையன்கட்டு குளத்தில் மீட்கப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம், அவரது மரணம் குறித்து பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது. இந்த நிலையில் ஆரம்பத்தில் இளைஞனின் கொலைக்கு இராணுவமே காரணம் என்று பெரும்பாலானவர்கள் நம்பிய நிலையிலேயே, தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் ஹர்த்தால் அழைப்பு வெளியானது. சுமந்திரனின் இந்த அழைப்பு தனிநபர் அழைப்பு என்பதே மக்களதும், பொது அமைப்புக்கள், கட்சிகளின் நிலைப்பாடாக ஆரம்பம் முதல் இன்று வரை இருக்கிறது. இடையில் இது குறித்த விசாரணைகள் வேறு பல குற்றவியல் உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளன. இந்த உண்மைகள் மரணம் குறித்து மக்களுக்கு இருந்த ஆத்திரத்தை தணித்தன. இராணுவ பக்கம் நீட்டப்பட்ட சுட்டுவிரலை மக்கள் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் பக்கம் திருப்பினர். இதனால் அறிவித்த வேகத்தில் ஹர்த்தாலை முன்னெடுப்பதில் மக்கள் ஒத்துழைப்பில் இருந்து விலகி இருந்தனர். கஞ்சா வியாபாரிக்கும், திருட்டு கும்பலுக்கும் நியாயம் கோரி ஹர்த்தாலா? என்று கேட்டனர். அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்தது. குறிப்பிட்ட முகாமைச் சேர்ந்த மூன்று இராணுவச்சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர். இரு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொள்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த கட்டத்திலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுமந்திரனுடன் தொடர்பு கொண்டு “அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் ஹர்த்தால் அறிவிப்பு எதற்கு” ? என்று கேட்டுள்ளார். மறுபக்கத்தில் சுமந்திரன் தன்னிச்சையான இந்த முடிவு குறித்து தமிழரசுக்கட்சிக்கு உள்ளும், வெளியும், தமிழ்த்தேசிய பரப்பிலும் அதிருப்திகள் வெளியிடப்பட்டன. ஹர்த்தாலுக்கு திகதியிடப்பட்ட 15ம்திகதி குறித்து விமர்சனங்கள் வெளிவந்தன. திகதி 18 க்கு மாற்றப்பட்டது. விமர்சனங்கள் குறையவில்லை. முழுநாள் ஹர்த்தால் அறிவிப்பை சில மணித்தியாலங்களுக்கு குறுக்க வேண்டிய நெருக்குவாரம் சுமந்திரனுக்கும், சிவஞானத்திற்கும் ஏற்பட்டது. நல்லூர் ஆலய நிருவாகம் இந்த ஹர்த்தால் பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. யாழ்.குடாநாட்டில் சுமந்திரனின் ஹர்த்தால் அறிவிப்பின் தாக்கம் ஒரு “புஷ்வாணம்” என்று நிருவாகம் நினைத்திருக்கலாம். இதை யாழ்ப்பாணத்தில் ஹர்த்தாலின் தோல்வியாக எம்.ஏ. சுமந்திரனும், சி.வி.கே. சிவஞானமும் ஊடகச் சந்திப்பில் ஏற்றுக்கொண்டனர். நல்லூர் அலட்டிக்கொள்ளாதபோதும், மன்னார் ஆயர் இல்லம் குறிப்பிட்ட 15ம் திகதி நிர்ணயம் குறித்து கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது. இதனால் பதறியடித்த ஹர்த்தால் அறிவிப்பாளர் சுமந்திரன் மன்னார் சென்று ஆயரைச்சந்திக்க முயற்சித்துள்ளார். கடையடைப்பைக் கோரிய சுமந்திரன் ஆயர் தனக்கு கதவடைப்பை செய்வார் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார். சுமந்திரனை சந்திக்க ஆயர் மறுத்துவிட்டார். குருவானவர் ஒருவரை சந்தித்து விட்டு வெறுங்கையோடு வந்த சுமந்திரன் விடுத்த மறு அறிவிப்பு தான் ஹர்த்தால் 18ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதாகும். மறுநாள் அது மற்றொரு திருத்தத்துடன் 18ம்திகதி காலை மட்டும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் கோணல் முற்றும் கோணல். இவை அனைத்தும் எதனைக் காட்டுகின்றன? 75 ஆண்டுகள் பழம்பெரும் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் எடுக்கும் சக்தியையா? பெருமையையா? தமிழரசுக்கட்சியின் யாப்பு கட்டமைப்பில் அரசியல் குழு, மத்திய குழு, வேட்பாளர் தெரிவுக்குழு, பாராளுமன்றக்குழு, மாவட்டக்குழு, பிரதேசக்குழு, கிராமியக்குழு என்பனவற்றின் ஒருங்கிணைந்த செயற்பாட்டையா? ஹர்த்தாலுக்கான இந்த முடிவை எந்த குழு, எங்கு கூடி, எப்போது எடுத்தது என்று அறியலாமா….? இவை தமிழ்ச்சமூகம் எழுப்பிய கேள்விகள். வடக்கு கிழக்கு மக்களோடு தொடர்பு பட்ட, மக்கள் அரசியல் செயற்பாட்டு முடிவில் உள்வாங்கப்பட்ட பொது சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக சமூகம், வடக்கு கிழக்கில் செயற்படும் பெண்கள் அமைப்புகள், மத நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள், …. மற்றும் அமைப்புகள் எவை? என்ற கேள்வியும் வலுப்பெற்றது. “இராணுவ பிரசன்னத்தை குறைத்தல்” என்ற இந்த ஹர்த்தாலுக்கான மகுடத்தில் உள்வாங்கப்பட்ட தமிழ்த்தேசிய, தமிழ்த்தேசியம் சாராத அரசியல் கட்சிகள் எவை? வடக்கு கிழக்கின் ரெலோ, ஜனநாயக போராளிகள் கட்சி, மற்றும் தமிழர் முற்போக்கு முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லீம் காங்கிரஸ் போன்று வெறும் ஆதரவு அறிக்கை கட்சிகள் வடக்கு கிழக்கில் நிர்வாக முடக்கத்திற்கு, கொழும்பு அரசாங்கத்தை திரும்பி பார்க்க வைப்பதற்கு இன்றைய ஹர்த்தாலுக்கு வழங்கிய வகிபாகம் என்ன? ஒரு வகையில் இந்த ஆதரவு அறிக்கைகளும் சுமந்திரன் பாணியிலான தனிநபர் அறிக்கைகள் தான். இந்த கட்சிகளின் ஆதரவாளர்கள் ஹர்த்தாலுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை. வேறு தமிழ்த்தேசிய கட்சி ஒன்று இப்படி தன்னிச்சையாக ஒரு முடிவை எடுத்து தமிழரசிடம் ஆதரவு கோரியிருந்தால் அந்த கோரிக்கையை ஏற்று தமிழரசு -சுமந்திரன் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருப்பாரா? ரி.என்.ஏ. உடைவு, பொதுவேட்பாளர், உள்ளூராட்சி தேர்தல் பொறிமுறை, தேர்தலுக்கு பின்னர் ஒன்றிணைதல்….. போன்ற அரசியல் ஏமாற்று செயற்பாடுகளில் ஒத்துப்போகாத தமிழரசுக்கும் -சுமந்திரனுக்கும் தன்னிச்சையாக முடிவை எடுத்து விட்டு மற்றைய தரப்புமீது ஆதரவு கோருவதற்கான -திணிப்பதற்கான யோக்கியதை உண்டா…? இதனால் தான் இந்த ஹர்த்தால் அறிவிப்பு சுமந்திரன் எதேச்சையாக, எடுத்த எடுப்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பு என்பதில் நியாயம் இல்லாமல் இல்லை. அத்தோடு இந்த ஹர்த்தால் படுதோல்வியில் முடிவடைந்திருப்பதற்கும் இதுவே முக்கிய காரணம். இதற்கான முற்று முழுதான பொறுப்பும் சுமந்திரனைச்சாரும். சமூக ஊடகங்களும், வடக்கு கிழக்கின் ஊடகவியலாளர்களும் ஹர்த்தால் தோல்வியையே பதிவு செய்துள்ளன. மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் கடந்த பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல்மாவட்ட மக்களால் பாராளுமன்றத்திற்கு வெளியே ஜனநாயக வழியில் தூக்கி வீசப்பட்டவர். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று 2010 முதல் தமிழ் தேசிய அரசியல் ரீதியான சுமந்திரனின் செயற்பாடுகள் மீதான அதிருப்தி. மற்றையது என்.பி.பி. அநுர அலையில் யாழ்ப்பாணம் அள்ளுண்டு போனது. எனினும் தமிழரசு என்றால் சுமந்திரன், சுமந்திரன் என்றால் தமிழரசு என்ற நிலைப்பாட்டை கட்சிக்குள் வளர்ப்பதில், தன்னைச் சுற்றி ஒரு ஆதரவாளர் கூட்டத்தை அவர் கடந்த தேர்தலுக்கு முன்னர் இருந்தே திட்டமிட்டு உருவாக்கி வந்தார். ஆனாலும் தேர்தல் தோல்வியில் இருந்து தப்பிக்க முடியவில்லை. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் தனது கையில் இல்லை என்பது சுமந்திரனுக்கு மெல்ல மெல்ல வெளிச்சமாகியது. இதன் மிகப் பிந்திய வெளிப்பாடே அவரே ஏற்றுக்கொண்ட ஹர்த்தால் தோல்வி. இப்போது சுமந்திரனுக்கு இருக்கின்ற நெருக்கடி தனது அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான மாற்று தளம் ஒன்றை தேடவேண்டும். அது யாழ்ப்பாண குடா நாட்டிற்கு வெளியே வன்னியில் அல்லது கொழும்பிலேயே சாத்தியம். இந்த நெருக்கடியில் விடப்பட்ட வெள்ளோட்டம் தான் இந்த ஹர்த்தால். வன்னியில் இராணுவ கெடுபிடிகள் அதிகம், இராணுவ பிரசன்னம் அதிகம், நில அபகரிப்பு, விகாரைகள், குடியேற்றங்கள், போரின் விளைவுகள் என்று பல பிரச்சனைகள் உண்டு இவற்றை தனது அரசியலுக்கு முதலிடும் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த ஹர்த்தால் வெள்ளோட்டம். வன்னி மக்களைப் பொறுத்தமட்டில் இராணுவ அடக்குமுறையை அவர்கள் எதிர்க்கின்ற போதும் அதைவிடவும் கடுமையாக சுமந்திரனின் அரசியலை எதிர்க்கின்றனர். வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக தன்னைத்தானே அறிவித்த சுமந்திரனுக்கு குடா நாட்டில் ஆதரவற்ற நிலையில், அதை ஈடுசெய்ய வன்னியில் வாக்கு கேட்கவேண்டிய நிலை. இது இந்த ஹர்த்தால் அறிவிப்பின் பின்னணி. 2020 வரை இராணுவத்தின் பாதுகாப்பில் பவனிவந்த சுமந்திரன் இப்போது அதே “பாதுகாப்பு” இராணுவத்தை வெளியேறத் கோருகிறார். தனக்கு பாதுகாப்பு வழங்கியது இராணுவம் அல்ல எஸ்.ரி.எப். என்ற விசேட அதிரடிப்படை என்று தமிழ்பேசும் மக்களை முட்டாள்கள் ஆக்கும் கயிறு திரிப்புகள் வேறு. இது நீதிமன்றத்தில் சட்டவாதத்திற்கு சரியாகலாம் மக்கள் அரசியலுக்கு அல்ல. இலங்கை பேரினவாத அரச இயந்திரத்தை பாதுகாக்கின்ற படைகளைக் கொண்ட பல இராணுவ கட்டமைப்புகள் உண்டு. இதில் இராணுவம் – விசேட அதிரடிப்படை இடையேயான வித்தியாசம் என்ன? எஸ்.ரி.எப். தமிழ்பேசும் மக்களின் பாதுகாப்பு படையா? கிழக்கு மாகாணத்தை சூறையாடிய விசேட அதிரடிப்படை பயங்கரவாதத்தை அழிக்க அமெரிக்க, இஸ்ரேல் ஆலோசனையில் ஜே.ஆர்.காலத்தில் அமைக்கப்பட்ட எஸ்.ரி.எப். இராணுவத்தை விடவும் மிகவும் மோசமான விசேட பொலிஸ் படையணி என்பது சுமந்திரனுக்கு தெரியாமல் இருக்க நியாயமில்லை. சம்பவம் நடந்த இராணுவ முகாம் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில் உள்ளது. 200 பேர்வரை இருந்த இந்த முகாமில் தற்போது 25 பேர் வரைதான் உள்ளனர். மூடப்படுகின்ற முகாமில் உள்ள எச்சசொச்ச பொருட்களை எடுக்கவே இந்த இளைஞர்கள் அங்கு சென்றுள்ளனர். இது அரசாங்கம் படிப்படியாக முகாம்களை மூட எடுத்துள்ள முடிவின் ஒரு விளைவு. இதில் அணில் கிணறு தோண்டிய கதையாக பேரெடுக்கும் அரசியல் செய்ய பார்க்கிறார் சுமந்திரன். இந்த ஹர்த்தால் தவறானதல்ல ஆனால் அதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை அணுகுமுறை, காலப்பொருத்தம், தவறானது. சிலர் இராணுமுகாம்களால் இராணுவம் – மக்கள் உறவு வளர்கிறது என்று கதிகலங்குகின்றனர். இராணுவம் நிலை கொண்டு இருப்பதால் தான் அரசாங்கம் அரசியல் தீர்வில் அக்கறையற்று இருக்கிறது என்றும் கதை விடுகிறார்கள். இராணுவம் இல்லாத காலத்தில் அரசியல் தீர்வு கிடைத்ததா? இராணுவம் – மக்கள் உறவு துரோகத்தனம் என்று சென்.ஜோன்ஸ். அதிபர் ஆனந்தராஜா புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் அரசியல் தீர்வு கிடைத்ததா? சுட்டுக்கொண்டவர்களும் படைத்தளபதிகளும் கை குலுக்கவில்லையா? அல்லது கிடைத்த தீர்வைத்தான் ஏற்றுக் கொண்டீர்களா? இந்த ஹர்த்தாலுக்கு பதிலாக கொழும்பில் ஒரு போராட்டத்தை ஏன்? செய்யமுடியாது என்ற கேள்வி சமூக ஊடகங்களில் கேட்கப்பட்டது. பல பதிவுகள் உண்ணாவிரதத்தை முன்மொழிந்தன. அந்த உண்ணாவிரதத்தை தமிழரசு பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டும்பேரும் செய்யவேண்டும் என்றும், முடியுமானால் சாகும்வரை செய்யவேண்டும் என்றும் கேட்கப்பட்டது. இவை ஒரு பகுதி தமிழ்பேசும் மக்களின் கருத்துக்கள். இதற்கு தமிழரசின் பதில் என்ன? முடியுமானால் ஹர்த்தாலுக்கு ஆதரவு அறிக்கை விட்டவர்களும் நோன்பிருந்தால் அதன் கனதி சர்வதேசத்தில் அதிகமாக இருக்கும். இப்பவும் காலம் கடந்து விடவில்லை. ஹர்த்தால் போட்டு அன்றாடம் உழைக்கும் கூலிகளை பட்டினி போடுவதை விடவும் இது இதயசுத்தியான அரசியல். அதுவும் ஜெனிவாவில் மனித உரிமைகள் கூட்டத்தொடர் காலத்தில், ஜனாதிபதி ஐ.நா.பொதுச்சபையில் உரையாற்றும் காலத்தில் தமிழரசு எம்.பி.க்கள் சாகும்வரை உண்ணாவிரதம்? இது எப்படி இருக்கு? இதைச் செய்யலாமே. ஒரு வகையில் மக்களுக்கு கட்டளையிட்டு அவர்களை வதைப்பதை விடவும், மக்கள் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டதாகவும் வரலாற்றில் அமையும். இராணுவ முகாம்களை மூடுவது என்பது நூறு வீதம் அரசாங்கத்தின் முடிவிலேயே தங்கியுள்ளது. காலாவதியாகிப்போன ஹர்த்தால்களால் அதை சாதிக்க முடியாது. இந்திய இராணுவம் வந்திறங்கிய போது இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவின் படி இராணுவம் முகாமுக்குள் முடங்கவில்லையா? அரசியல் தீர்வுக்கும் – இராணுவ பிரசன்னத்திற்கும் போடும் முடிச்சு முழங்காலுக்கும், மொட்டத்தலைக்குமானது. ஜதார்த்தமற்றது, உண்மையான, நேர்மையான அரசியல் அற்றது. அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கும் போது இராணுவம் வரையறுக்கப்பட்ட வகையில் குறைக்கப்படலாம். வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்றால், தனிநாடே வழி. இதற்கு போராட, புருடா விடாமல் சுமந்திரனும், தமிழரசுக்கட்சியும் தயாரா? அரசாங்கம் நல்லெண்ண அடிப்படையில் இந்த யுத்த சூழல் எச்சங்களை படிப்படியாக குறைக்க முயற்சிக்கிறது. அரசாங்கம் தென்னிலங்கை சிங்கள பௌத்த தீவிர அரசியல் சக்திகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலும் உள்ளது. இதை கவனத்தில் கொள்ளாத தமிழ்த்தேசிய உணர்ச்சி எதிர்ப்பு அரசியல் இராணுவத்தை நிலைநிறுத்தவும், இனப்பிரச்சினைக்கான தீர்வை பின் தள்ளவும், பயங்கரவாத சட்டத்தின் நீக்கத்தை தடுக்கவும் தமிழ்த்தேசியம் அரசாங்கத்திற்கு செய்யும் சேவகமாக அமையும். எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். இதுதான் தமிழரசுக்கட்சியினதும், சுமந்திரனதும் பின்கதவு இலக்கா….? இது தந்தை செல்வாவின் அசரீரி, “சுமந்திரா..! உனது முதலமைச்சர் கனவு வில்லங்கமானது. உன்னை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். ஆமேன்..!” https://arangamnews.com/?p=12259
  8. ஓமந்தை A9 வீதியில் அதிகரிக்கும் விபத்துக்கள்: ஓர் ஆய்வு August 20, 2025 10:37 am A9 வீதியில் நடக்கும் விபத்துக்களுக்கு அமானுஷ்யங்கள் தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரும் கூறிவருவதை அவதானித்து இருந்தேன். இந்த விபத்துக்களுக்கான காரணங்களில் 1% கூட இந்த அமானுஷ்யங்கள் செல்வாக்குச் செலுத்துவதில்லை. மாறாக இந்தக் கூற்றுக்கள் மேலும் விபத்துக்கள் ஏற்படுவதற்குக் காரணமான கவனக்குறைவுகளுக்கு வழி கோலுகின்றன. ஏழு ஆண்டுகள் ஓமந்தைப் பிராந்தியத்திலும் இரண்டு ஆண்டுகள் ஓமந்தையிலும் கடமையாற்றும் அனுபவத்தில் இந்த விபத்துக்களின் காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் விரிவாக எழுதியுள்ளேன். வழக்கமான காரணங்களை இந்தக் கட்டுரையில் தவிர்த்துள்ளேன். விசேடமான காரணங்களை மட்டும் இணைத்து எழுதியுள்ளேன். ஒருமுறை என்னுடைய பறக்கும் கெமரா (Drone) மூலம் மகிழங்குளம்- றம்பைக்குளம் சந்தியில் இருந்து குறிப்பிட்ட அளவு உயரம் உயர்த்தி தெற்குநோக்கி கெமராவைத் திருப்பிய போதுதான் இந்த 7.5km பிரம்மாண்டத்தை கண்ணால் கண்டுகொண்டேன், அதாவது குறிப்பிட்டளவு உயரத்திலேயே நொச்சிமோட்டையின் வளைவு மகிழங்குளத்தில் Drone மூலம் நேர்சாலையாகப் பார்க்கமுடிகிறது. வடக்கில் அதிக விபத்துக்கள் நிகழும் ஓமந்தையின் A9 வீதியானது கிட்டத்தட்ட 7.5 km நீளமான நேர்பாதையாகும். எந்த வளைவுகளும் இல்லாத வடக்கின் நேர்வேகப் பாதையின் நுழைவாயில் இதுவாகும். இதே போன்று முறிகண்டி தொடக்கம் ஆனையிறவு வரையான A9 பாதை 28 km நேர்நீளமானது. இங்கு ஏற்படாத விபத்துக்கள் ஓமந்தையில் ஏற்படப் பல பௌதிக-உளவியல் காரணங்கள் உள்ளன. ஓமந்தையில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 60% ஆனவை தென்னிலங்கையில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற போது ஏற்பட்டவையாகும். கண்டியையும் யாழ்ப்பாணத்தையும் நேரடியாக இணைக்கும் நெடுஞ்சாலைக்கு A9 வீதி என்று பெயர். இச்சாலை இலங்கையின் சகல மாவட்டங்களையும் யாழ்ப்பாணத்துடன் இணைத்துப் பயணத்திற்கு உதவுகிறது. தென்னிலங்கையில் இருந்து யாழ் செல்பவர்கள் தம்முடைய பயணத்தில் கவனச் சிதறல் ஏற்படாத வண்ணம் வவுனியா நகரை அடைந்துவிடுகின்றனர். வவுனியா நகருக்கும் கண்டிக்கும் இடையில் பலநூறு வளைவுகளைச் சந்தித்து வருவதும் இதற்கு ஒரு காரணம். வவுனியா நகரில் இருந்து யாழ் நோக்கிச் செல்லும் போது மிக வேகமாகச் செல்லக்கூடிய முதலாவது நேர்ப்பாதை நுழைவாயில் என்றால் ஓமந்தையிலுள்ள 7.5 km நீளமான நெடுஞ்சாலையாகும். இந்த 7.5 km நீளமான நெடுஞ்சாலையைக் கடக்கும் போது கடந்த எட்டுமாதங்களில் மட்டும் இருபதிற்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர், ஐம்பதிற்கும் அதிகமானவர்கள் காயமுற்றுள்ளனர், பல வாகனங்கள் வீதியை விட்டு விலகிக் குடைசாய்ந்துள்ளன. இதற்குப் பிரதான காரணங்கள் 1. பல வளைவுகள் கொண்ட ஏனைய மாவட்டங்களின் பாதைகளைக் கடந்துவரும் சாரதிகள் வடக்கின் முதலாவது நேர்பாதை நுழைவாயிலில் நுழைந்ததும் ஓட்டுநர் கவனம் சிதறல் (Driver Distraction) ஏற்பட்டு நீண்ட, நேராக செல்லும் சாலைகள் சலிப்பை ஏற்படுத்தி, ஓட்டுநர்களின் கவனத்தைச் சிதறச் செய்துவிடுகிறது. இதனால் தொடர் விபத்துக்கள் ஏற்படலாம். அத்துடன் நேராக இருக்கும் சாலைகள் ஓட்டுநர்களை அதிக வேகத்தில் செல்ல தூண்டும். இதனால் வாகனங்களின் மீது கட்டுப்பாடு இழக்கப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடுகின்றது. குறிப்பாக, வேகக் கட்டுப்பாட்டை மீறுவது, எதிர் வரும் வாகனங்களுக்கு சரியான எதிர்வினையாற்ற முடியாமல் போவது போன்ற காரணங்களால் விபத்துக்களை மேலும் தீவிரப்படுத்துகின்றது. ஆனால் சாலைகளை நேராக அமைப்பது போக்குவரத்துத் திறனை அதிகரிக்கும் என்பதனை இங்கு நாம் ஞாபகப்படுத்த வேண்டும். 2. கண்டி தொடக்கம் வவுனியா இரட்டைப் பெரியகுளம் வரையும் பலநூறு வளைவுகள் சாரதிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்கின்றது. தூக்கம் போன்ற காரணங்களைத் தவிர்த்து அவர்கள் கவனத்தைச் சிதறவிடுவது மிகக் கடினமாகும். ஆனால் ஓமந்தையின் 7.5 km நீளமான பாதை அவ்வாறானதல்ல. Travel Shock இனை அளிக்கும் வகையில் ஓமந்தைப் பகுதியிலுள்ள பௌதிகக் காரணிகள் உள்ளன. இந்த 7.5km நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் இருபதுக்கும் மேற்பட்ட குறுக்குப் பாதைகள் உள்ளன. அறுபதிற்கும் மேற்பட்ட மக்களின் வீடுகளுக்கான வழிப்பாதைகள் உள்ளன, அந்தக் குறுக்குப் பாதைகளுக்கு உள்ளாக வரும் உள்ளூர் வாசிகள் பலர் பிரதான A9 வீதியில் நுழையும் போது வாகனங்களைக் கவனிக்காமலே பிரதான சாலையில் நுழைகின்றனர், இதனால் 7.5 km நீளமான நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்தை நோக்கித் தள்ளப்படுகின்றன. 3. அண்மையில் ஓமந்தை வாகன விபத்தில் கொல்லப்பட்ட இந்திய உயர்ஸ்தானிகராலய கலாசார உத்தியோகத்தர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மரணம் கூட குறித்த காரினை ஓட்டிய குறித்த உத்தியோகத்தரின் தூக்கத்தால் ஏற்பட்ட ஒன்றுதான், ஆனால் அவர் கொழும்பில் இருந்து இவ்வளவு தூரம் வந்தபோது ஏற்படாத தூக்கம் ஓமந்தைப் பகுதியின் நீள்சாலையில் ஏற்படக் காரணம் இந்த தடுப்புகளற்ற நீளமான சாலைதான். 7.5 km சாலையின் கால்வாசிப் பகுதியில் நுழையும் போதே குறித்த கார் விபத்துக்குள்ளாகி அவர்களின் மரணம் சம்பவித்துள்ளது. 4. அண்மையில் கூட குறித்த ஓமந்தை சாலையில் விபத்து ஏற்பட்டு மூன்று பேர் மரணமடைந்துள்ளனர். சென்ற மாதம் இந்திய தூதரக அதிகாரி விபத்தில் உயிரிழந்த இடத்திற்கும், அதற்கும் முதல்மாதம் வைத்தியர் ஒருவர் அவரது Hilux இல் சென்றபோது விபத்தில் இறந்த இடத்திற்கும் இடையிலுள்ள ஒரு இடத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. 7.5 km நீளமான சாலையாக இருப்பது போக்குவரத்தை வினைத்திறனாக்கும் என்றாலும், சாரதிகளின் கவனயீனம் மற்றும் உள்ளூர் வாசிகளின் அலட்சியம் என்பவற்றால் இந்த விபத்துக்கள் அதிகம் சம்பவிக்கின்றன. அந்த கவனயீனங்கள் அதிகம் இந்தப் பகுதியில் நிகழ்வதுதான் துன்பியல் சம்பவமாகும். இவற்றைத் தடுக்க இனி என்ன செய்யலாம்? 1. நொச்சிமோட்டை- பறனட்டகல் வளைவில் தொடங்கி மகிழங்குளம்- இறம்பைக்குளம் பகுதிக்கு இடையில் இந்த 7.5km நீளமான விபத்து வழக்கமாக நடைபெறும் நேர் பாதை அமைந்துள்ளது. இந்த நேர்சாலையை தூரப்பிரதேசங்களில் இருந்துவரும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் வெறும் நான்கரை நிமிடங்களில் கடந்துவிடுகின்றன, அதாவது 100km/h வேகத்தில் செல்கின்றன. உள்ளூர் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்கள் கூட ஏழு நிமிடத்திற்குள் கடந்துவிடுகின்றன. இவை அவ்வீதியில் கட்டுப்படுத்த முடியாத வேகமாகும். முறிகண்டியில் இருந்து ஆரம்பிக்கும் நேர்ச்சாலையானது ஆனையிறவில் முடிவடைகிறது, கிட்டத்தட்ட 28 km நேரான தூரமாகும். இதனைக் கடக்க முதல் இளைப்பாறும் நிலையம் ஒன்றை முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் ஆரம்ப காலங்களில் தமிழர்கள் அமைத்துள்ளனர், விபத்துக்களைத் தவிர்க்க இது ஒரு உளவியல் செயற்பாடாகக் கருதமுடியும். ஆனால் வடக்கிற்கான நுழைவாயிலில் உள்ள 7.5km நீளமான நேர்சாலையில் அதாவது நொச்சிமோட்டைக்கும் ஓமந்தைக்கும் இடையில் ஒரு இடைத்தங்கல் இளைப்பாறல் நிலையம் ஒன்று அமைக்கப்படாமை இவ்விபத்துக்கள் நிகழ ஒரு காரணமாக இங்கு முன்மொழியலாம், அப்படி ஒன்றை அமைத்துவிடுவது இதனைக் குறைக்க ஒரு தீர்வாக இங்கு குறிப்பிடலாம். அத்துடன் 28km நேர்ச் சாலையை விடவும் 7.5 km நேர்ச்ச்லையில் நிகழும் விபத்துக்களும் மரணங்களும் அதிகம் என்பதனை நாம் உணர வேண்டும். 2. இந்த 7.5km தூரத்திற்குள் மூன்று அதிவேக மட்டுப்படுத்தல் முறைமைகளை (Overspeed Board) அமைப்பது விபத்துக்களைத் தவிர்க்க ஒரு வழியாக இருக்கும். A. நொச்சிமோட்டை வளைவுக்கும் ஓமந்தை காவல் நிலையத்திற்கு இடையிலும், B. ஓமந்தை காவல் நிலையத்திற்கும் ஓமந்தை பாடசாலைக்கு இடையிலும், C. ஓமந்தை பாடசாலைக்கும் மகிழங்குளம்-இறம்பைக்குளம் சந்திக்கு இடையிலும் (ஏற்கனவே உண்டு- இதில் விபத்துக்கள் தற்போது ஓரளவு குறைவு) அமைப்பதுவும் அதில் பொலிஸாரைக் கடமையில் ஈடுபடுத்துவதும் இப்பகுதியில் நடைபெறும் விபத்துக்களைத் தவிர்க்க மற்றொரு வழியாக அமைந்திருக்கும். 3. ஓமந்தை அம்மாச்சிக்கும், அருகில் அமைந்துள்ள மதுபான சாலைக்கும் இடையில் மஞ்சள் கடவை ஒன்றை இடுவதும், அதில் வீதிக்கரையில் வழிவியாபாரங்கள் மேற்கொள்வோரைக் கட்டுப்படுத்தலும் பிரதானமாகும், இப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் இதுவரை ஆறுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்த 7.5 km நீளமான நேர்ச்சாலையில் இடம்பெறும் விபத்துக்களைத் தவிர்க்க முறிகண்டியில் அமைக்கப்பட்டது போன்று ஒரு இடைத்தங்கல் நிலையத்தை நொச்சிமோட்டைக்கும் பறனட்டகல் சந்திக்கும் இடையில் அமைப்பதும், மூன்று வேகத்தடுப்பு பலகைகளை (Overspeed Board) பொலிசாரின் பங்கேற்புடன் கொண்டுவருவதும், இதற்கும் மேலாக இந்த 7.5km நேர் தூரத்தைக் கடக்கும்போது சாரதிகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் மனநிலை அதற்கு ஏற்ப இசைவாக்கம் அடைவதும் மிக முக்கியமாகும். (குறித்த ஓய்வு நிலையங்களை அமைக்க வாய்ப்புகள் இல்லையென்றால் பயணம் செய்யும் நபர்களாவது குறித்த இடங்களுக்கு முன்னதாகத் தரித்துச் செல்வது நல்லது) வடக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னர் குறித்த இடங்களைப் பார்வையிட வடக்கிற்கு வெளியிலுள்ள ஒன்றரைக் கோடிப் இலங்கையரும் ஆர்வமாக இருப்பர். அதனால் தினமும் ஓமந்தை நேர்ச்சாலையைப் பயன்படுத்தியே ஆகவேண்டும், ஆகவே எதிர்வரும் விபத்துக்களைத் தவிர்க்க முயன்று பார்ப்போம். வழக்கமான காரணங்களை விடுத்து விசேடமான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையுமே இங்கு என் அனுபவத்தில் இங்கு எழுதியுள்ளேன். இவற்றை எல்லாம் இணைத்தது போல வள்ளுவர் கூறுவார் “எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்” வரவிருக்கும் ஆபத்தை அறிந்து அதற்கேற்ப தன்னை காத்துக் கொள்ளும் அறிவாளிகளுக்கு, அதிர்ச்சியூட்டும் துன்பம் எதுவும் ஏற்படாது என்பது அதன்பொருள்! தொகுப்பு – சுயாந்தன் https://oruvan.com/accidents-on-the-omanthai-a9-road-are-increasing-a-study/
  9. யாழில் வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு Published By: Vishnu 20 Aug, 2025 | 09:21 AM யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (19) நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது சந்தேகத்திற்கு இடமான முறையில் உரை பை ஒன்று காணப்பட்டதை அடுத்து , கொடிகாம பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த உரை பையை மீட்டு சோதனையிட்ட போது அவற்றுக்குள் வெடிக்காத நிலையில் துப்பாக்கி ரவை கோர்வைகள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து அவற்றை மீட்டு கொடிகாம பொலிஸ் நிலையம் எடுத்து சென்ற பொலிஸார் அவற்றுள் 1393 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாகவும் , அவற்றினை நீதிமன்றில் பரப்படுத்தி நீதிமன்ற உத்தரவில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவித்தனர் https://www.virakesari.lk/article/222908
  10. சமூகத்தின் மனப்பான்மை ரீதியான மாற்றத்திற்க அரச ஊடகங்களின் பங்களிப்பைப் பெறத் திட்டம் தயாரிக்குக - ஜனாதிபதி 20 Aug, 2025 | 10:19 AM சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் உள்ள 04 திணைக்கலன்களில் உள்ள 41 நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது. சுகாதார அமைச்சின் கீழ் உள்ள ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். ஆரம்ப சுகாதார மையங்களை மேம்படுத்துவதற்கான தற்போதைய திட்டங்கள் தொடர்பாகவும் அவர் கேட்டறிந்தார். தற்போது 30,000 பேருக்கு 01 என்ற விகிதத்தில் இயங்கும் ஆரம்ப சுகாதார சேவையை 10,000 பேருக்கு 01 என்ற விகிதத்தில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது. தற்போதைய தொழில்நுட்ப மற்றும் சமூக நிலைமைகளுக்கு ஏற்ப சுகாதார சேவையில் நிறுவன மற்றும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கான திட்டங்கள் இங்கு ஆராயப்பட்டது. சுகாதாரத் துறையின் கட்டுமானங்கள் மற்றும் அதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. சுகாதாரத் துறையில் தற்போது எழுந்துள்ள ஒரு பாரிய பிரச்சினையான ஆயுர்வேதத் துறையை உள்ளடக்கிய கொள்முதல் வழிகாட்டுதல்களை புதுப்பிப்பது குறித்தும் ஆராயப்பட்டது, அதே நேரத்தில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மருந்துகளை கொள்வனவு செய்யும் போது மருந்துகளின் தரத்தை உறுதி செய்வது தொடர்பான வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது. தேசிய இரத்தமாற்று சேவை போன்ற சேவைகளுக்கு தேவையான வாகனங்களை இந்த வருடத்திற்குள் கொள்வனவு செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நவீன தொழில்நுட்பம் மற்றும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப சுகாதார சேவையின் பௌதீக மற்றும் மனித வளங்களை மாற்ற வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அடுத்த ஆண்டு ஒரு தேசிய சுகாதாரக் கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது. வெளிநாட்டு உதவி மற்றும் நன்கொடைகளின் கீழ் பெறப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்தி அவற்றினால் எதிர்பார்க்கும் பயனை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மாகாண சபை மட்டத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளை கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்து வைப்பது குறித்தும் இதன் போது பரிந்துரைக்கப்பட்டது. சுகாதாரத் துறையில் வழங்கப்படும் நன்கொடைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மானியங்களை வழங்கும் மற்றும் பெறும் நபர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவது குறித்தும் முன்மொழியப்பட்டது. தற்போது நாட்டின் 272 இடங்களில் செயற்படுத்தப்படும் சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையை மேலும் விரிவுபடுத்தி அதனை 400 இடங்கள் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. வெகுஜன ஊடக அமைச்சு தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. சமூக மனப்பாங்குகளின் மாற்றத்தில் தலையிடுவது அரச ஊடகங்களின் பொறுப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எனவே, சமூக மனப்பாங்குகளின் மாற்றத்திற்கு பங்களிக்கும் வகையில் பொருத்தமான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு அரச ஊடகங்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்று கூறினார். தபால் சேவையை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பிப்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. கூரியர் சேவைகள் போன்ற சேவைகளை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றி தபால் சேவையை புதிய மாதிரிக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது. தேவையான திட்டங்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமையே முன்பிருந்த பிரச்சினை என்றும், அந்த நிலைமையை மாற்றுவதற்காக, கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து துறைகளுக்கும் போதுமான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். குறிப்பிட்ட நிதியாண்டில் குறிப்பிட்ட திட்டங்களுக்கு அந்த ஒதுக்கீடுகள் அனைத்தையும் முறையாகப் பயன்படுத்தி, மக்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர்களான ரஸல் அபோன்சு, கபில ஜனக பண்டார மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/222916
  11. புடின் - செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு சாத்தியமானதாக இல்லை - கிரெம்ளின் 20 August 2025 ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும், யுக்ரைனின் வோலோடிமிர் செலென்ஸ்கிக்கும் இடையே விரைவில் ஒரு உச்சிமாநாடு நடைபெறுவதை கிரெம்ளின் இன்னும் சாத்தியமான விடயமாக அறிவிக்கவில்லை. எனினும், யுக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து விவாதிக்க இரண்டு தலைவர்களும் சந்திக்க வேண்டும் என்ற தனது அழைப்பை டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி கடந்த வாரம் அலஸ்காவில் புடினைச் சந்தித்தார் பின்னர், ஏழு ஐரோப்பியத் தலைவர்களையும், செலென்ஸ்கியையும் வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னரே, ரஷ்ய-யுக்ரைன் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு குறித்த அழுத்தம் வந்துள்ளது. இந்தநிலையில், "இந்த பிரச்சினை கடினமானது" என்று ட்ரம்ப் ஒப்புக் கொண்டார், அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி விரோதங்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதேவேளை, யுக்ரைனுக்கான, அமெரிக்கா அனுசரணையிலான பாதுகாப்பு உத்தரவாதங்களின் அடிப்படையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், அத்தகைய உறுதிமொழிகள் கியேவின் இறையாண்மைக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று செலென்ஸ்கியும், ஐரோப்பியத் தலைவர்களும் ட்ரம்பை நம்ப வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/415506/putin-zelensky-meeting-unlikely-kremlin
  12. முத்தையன்கட்டு சம்பவம்: கைதான 4 இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல் 20 August 2025 முல்லைத்தீவு - முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பான விசாரணைக்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு தொடர்பான விசாரணை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று இராணுவத்தினர் முன்னதாக கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, இராணுவ சிப்பாய் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையிலேயே, குறித்த சந்தேகநபரும் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, அவர்கள் நால்வரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/415507/muthaiyankattu-incident-4-arrested-army-soldiers-remanded
  13. ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்படாத காலனித்துவ நீக்க பிரச்சினையாக அங்கீகரிக்க கோரிக்கை 20 August 2025 ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்பட்டாத காலனித்துவ நீக்க பிரச்சினையாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை தமிழ் அமெரிக்க அமைப்புகள் கோரியுள்ளன. பல வருட தாமதம் காரணமாக இனப்படுகொலை குற்றவாளிகளைப் பாதுகாக்கப்பட்டு, உயிர் பிழைத்தவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன. உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு (FGTO), வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு (FeTNA), இலங்கை தமிழ் சங்கம், தமிழ் அமெரிக்கர்கள் ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு மற்றும் உலகத் தமிழ் அமைப்பு உள்ளிட்ட ஐந்து முன்னணி தமிழ் அமெரிக்க குழுக்கள், எழுதிய கூட்டு கடிதம் ஒன்றின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இதனை குறிப்பிட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிராகரித்தமைக்காக இலங்கையை அந்த அமைப்புகள் விமர்சித்துள்ளன. அத்துடன், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து 16 ஆண்டுகளில் எந்தவொரு உறுதியான பொறுப்புக்கூறலையும் வழங்குவதற்கான பேரவையின் இயலாமை குறித்து அந்த அமைப்புகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, 1998 ஆம் ஆம் ஆண்டு கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ நீதிமன்றத்தில், செம்மணியில் 300–400 உடல்கள் இராணுவ உத்தரவால் புதைக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டார். எனினும், 1999 ஆம் ஆண்டு 15 உடல்கள் மட்டுமே தோண்டியெடுக்கப்பட்டு, விசாரணைகள் நிறுத்தப்பட்டன. தற்போது செம்மணியில் 140 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டியதுடன்,சுயாதீன சர்வதேச தடயவியல் விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்தனர். அதேநேரம், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் மைய அரசியல் பிரச்சினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அமைப்புகள் தெரிவித்தன. பிரித்தானியர்கள் 1948 ஆண்டு சுதந்திரம் வழங்கியபோது, அவர்கள் தமிழர்களிடமிருந்து எந்த ஆணையையும் கோராமல் சிங்களவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்தனர். அவர்கள் தமிழ் தேசத்திற்கான சுயநிர்ணயக் கொள்கையை நிலைநிறுத்தத் தவறிய ஒரு முறையற்ற மற்றும் முழுமையற்ற காலனித்துவ நீக்க செயல்முறையை மேற்கொண்டதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த கடிதம் மூலம் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு, தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து சந்தேகிக்கப்படும் புதைகுழிகளிலும் சர்வதேச தடயவியல் விசாரணைகளை ஆதரித்தல், ஐ.நா. பாதுகாப்பு சபை மூலம் இலங்கைக்கான விசேட தீர்ப்பாயத்தை நிறுவ அழுத்தம் கொடுத்தல், ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, ஐ.நா.வின் கண்காணிப்பில் சுதந்திர வாக்கெடுப்பை நடத்த வழிவகை செய்தல் உள்ளிட்ட பரிந்துரைகளை அந்த அமைப்புகள் முன்வைத்துள்ளன. https://hirunews.lk/tm/415520/demand-to-recognize-the-eelam-tamil-struggle-as-an-unresolved-decolonization-issue
  14. தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –13 | போர்களின் மறுபக்கத்தைக் கூண்டில் நிறுத்திய நாவல் ‘கேட்ச்-22’ (Catch-22) – அ. குமரேசன் போர் மீது ஒரு வசீகரம் கட்டப்படுகிற காலக்கட்டம் இது. உலகின் பல பகுதிகளிலும் போர்க் கூச்சல்கள் செவிகளைத் துளைக்கின்றன. இந்தியா–பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணிந்ததில் இருநாட்டு மக்களும் நிம்மதியடைகிறார்கள். அதற்குள் முடிந்துவிட்டதே என்று ஆதங்கப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். போரில் ஏதாவது அறிவுடைமை இருக்கிறதா என்று கேட்க வைக்கிறது, 1961ஆம் ஆண்டில் வெளியான ‘கேட்ச்–22’ என்ற நாவல். ‘கேட்ச்-22’ (Catch-22) (பிடி–22) என்றால் என்ன? தப்பிக்க முடியாத, ஒரு சிக்கலிலிருந்து தப்புவதற்கான முயற்சியே மேலும் சிக்கல்களைக் கொண்டுவரும் இக்கட்டான நிலைமையைக் குறிப்பிடுவதற்கு இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. “அவர்கள் கேட்ச்–22 நிலைமையில் மாட்டிக்கொண்டார்கள்” –இப்படி. சுவையான தகவல் என்னவென்றால், கதையை எழுதிய ஜோசப் ஹெல்லர் (1923–1999), ஏற்கெனவே மக்கள் புழங்கிக்கொண்டிருந்த சொல்லைத் தனது நாவலுக்குப் பயன்படுத்தவில்லை, மாறாக அந்த நாவலில் வரும் சொல் மக்களிடையே புழக்கத்திற்கு வந்துவிட்டது! விமானப் படையில் ‘கேட்ச்-22’ (Catch-22) என்றொரு விதி இருப்பதாக நாவல் சொல்கிறது. அதாவது, படையில் பணி புரிகிறபோது ஒரு விமானியின் மனநலம் குன்றிவிட்டால் அவர் தன்னை விடுவிக்குமாறு விண்ணப்பிக்கலாம். ஆனால், “பிடி–22” விதியின்படி மனநலம் குன்றிய ஒருவரால் அதை உணர்ந்து அப்படிக் கோர இயலாது, அவர் அப்படிக் கோருவதே அவர் மனநலத்தோடு இருப்பதால்தான், ஆகவே விண்ணப்பம் நிராகரிக்கப்படும்! “தேசவிரோத புத்தகம்”! வேடிக்கையான இந்த வேதனை நிலைமையை வைத்து, அல்லது வேதனையான இந்த வேடிக்கை நிலைமையை வைத்து நாவலைப் புனைந்திருக்கிறார் ஹெல்லர். ஆம், வைத்துச் செய்திருக்கிறார்! ஒருபுறம் அரசுகளால் போர்களில் இறக்கிவிடப்படும் படைவீரர்களோடு பொதுமக்களும் பேரிழப்புகளை எதிர்கொள்கிறார்கள். இன்னொருபுறம் ஆயுதத் தயாரிப்பு முதலாளிகளும் ஊழல் பேர்வழிகளும் ஆதாயம் அடைகிறார்கள். இந்த நிலைமையை எடுத்துக்காட்டுகிற நாவல் அப்படியே போகிற போக்கில், இதையெல்லாம் தடுத்து மக்களைக் காப்பாற்ற முடியாத கடவுள் கையாலாகாதவர் என்றும் சாடுகிறது. இதெல்லாம் போதாதா? தேசப்பற்றுக்கு எதிராகப் பேசுகிறது, அமெரிக்க அரசின் போர் நடவடிக்கைகளைப் பகடி செய்கிறது, போர் சார்ந்த தொழில்துறையை இழிவுபடுத்துகிறது, படை அதிகாரிகள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது, ராணுவப் பணிக்கு வர விரும்பும் இளைய தலைமுறையினரிடையே பாதுகாப்புத் துறை பற்றிய தவறான கருத்துகளைப் பரப்புகிறது, கடவுள் நம்பிக்கையைக் கேள்விக்கு உட்படுத்தி ஒழுக்க வாழ்வைச் சீர்குலைக்கிறது என்று கிளம்பிவிட்டார்கள். பல பள்ளி நூலகங்களின் அடுக்கங்களிலிருந்து புத்தகம் அப்புறப்படுத்தப்பட்டது. மாணவர்களின் எதிர்ப்பையும், கருத்தாளர்களின் கண்டனங்களையும் தொடர்ந்து மறுபடியும் வைக்கப்பட்டது. நாவலுக்குள்… இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலியில் அமைக்கப்பட்ட அமெரிக்க விமானப்படைத் தளத்தில் விமானியாக இருப்பவன் யோசாரியன். தொடர்ந்து போர் விமானங்களைச் செலுத்த வேண்டிய கட்டாயம். ஆபத்தான அந்தப் பணிகளைத் தவிர்க்கப் பல முயற்சிகளை எடுக்கிறான். தனக்கு மனநலம் குன்றிவிட்டதாகக் கூறி தன்னை விடுவிக்கக் கோருகிறான். ஆனால் அந்த ‘கேட்ச்-22’ (Catch-22) விதி அவனுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. ஆகவே, நாள்பட்ட, கடுமையான ஈரல் சீர்குலைவு எனக் கூறி ராணுவ மருத்துவமனையில் சேர்கிறான். உயரதிகாரிகள் படைவீரர்களின் உயிர் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் இருப்பதையும், தங்களுடைய பதவி உயர்வு உள்ளிட்ட நோக்கங்களுடன் வீரர்களைப் பலிகொடுக்க அவர்கள் துணிவதையும் காண்கிறான். கர்னல் கேத்கார்ட் என்ற அதிகாரி, தனது பிரிவின் வீரர்களை, வேறு எந்த பிரிவையும் விடப் பல மடங்கு அதிகமான முறை தாக்குதல் விமானங்களைச் செலுத்துவதற்குக் கட்டாயப்படுத்துகிறான். அரசாங்கத்திடம் தன்னை ஒரு மகாவீரனாகக் காட்டிக்கொள்வதற்காக, வீரர்கள் வீடு திரும்ப முடியாதபடி, ஒரு சுற்றுப்பணியை முடிப்பதற்கு ஓட்டியாக வேண்டிய விமானங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து உயர்த்துகிறான். யோசாரியன் ஆகாயச் சண்டைகளையும் நண்பர்கள் உள்ளிட்ட சக வீரர்களின் மரணங்களையும் கண்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறான்; ஒவ்வொரு பணி தரப்படும்போதும் எதிரிப்படையால் கொல்லப்படலாம் என்று அஞ்சுகிறான். அவனுடைய கோழைத்தனம் வெளிப்படுகிறது. நாவலின் போக்கில் செல்லச்செல்ல, அவன் கோழையல்ல, துணிவு மிக்கவன், கட்டுப்பாடு மிக்கவன் என்று தெரியவருகிறது. அவன் கவலைப்பட்டது எதிரிகளின் வலிமையைப் பற்றியல்ல, சொந்த நாட்டு ராணுவக் கெடுபிடிகள் பற்றித்தான். கதாபாத்திரங்களுக்கிடையில் துண்டாடப்பட்ட கதை போல, சில அத்தியாயங்களில் ஒற்றைக் கால வரிசைப்படி நகர்கிற கதை, மற்ற அத்தியாயங்களில் நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்குமாக மாறிமாறிப் பயணிக்கிறது. போர்க்காலத்தின் நியாயமான அச்சம் விமானிகள் எதிர்கொள்ளும் கடும் அதிர்ச்சிகளின் மூலமாக வாசகர்களுக்குக் கடத்தப்படுகிறது. தாக்குதல்களையும் மனித உயிர்கள் கொல்லப்படுவதையும் போற்றுதலுக்குரிய வீரச்செயலாக அல்லாமல், கவலைக்குரிய சோகச் சூழலாகச் சித்தரிக்கிறது என்று நூல் திறனாய்வாளர்கள் கூறுகின்றனர். பாதுகாப்பற்ற இத்தாலிய மலை கிராமத்தின் மீது அர்த்தமற்ற தாக்குதலுடன் திகில் தொடங்குகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்களில் விரக்தி, போரில் மனிதர்கள் காணாமல் போவது என்று மேலேறும் நாவல், ஒரு வெகுளித்தனமான இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்படுவதோடு உச்சக்கட்டத்தை அடைகிறது. நாவல் பல்வேறு கோணங்களின் போர்க்களத் துயரங்களைக் காட்டினாலும், செத்துவிட்டான் என்று நினைத்த நெருங்கிய நண்பனான ஓர், சாகசமான முறையில் வேறுநாட்டுக்குச் சென்றதை அறிந்து மகிழும் யோசாரின், தானும் வெளியேறி ஓடுவதாக இன்பியல் காட்சியுடனேயே நிறைவடைகிறது. போர் வணிகமும் கடவுளும் படையின் உணவுப் பிரிவு அதிகாரி மிலோ. போர்ச் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஒரு வணிகப் பேரரசையே கட்டுகிற மிலோ உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல், பல்வேறு தளவாடங்களையும் விமானங்களையும் கூட வாங்கி விற்கிற அளவுக்குப் பணம் குவிக்கிறான். அது மட்டுமல்ல, வீரர்களுக்குத் தேசப்பற்றுடன் எதிரிகளோடு மோதுவதற்கு ஊக்கமளித்துவிட்டு, எதிரி நாட்டுடனேயே கூட தன் வணிகத்தை விரிவுபடுத்துகிறான். ஒரு கட்டத்தில் சொந்தப் படைப்பிரிவுத் தளத்தின் மீதே குண்டு வீசுவதற்குத் தயங்காமல் ஏற்பாடு செய்கிறான். லாபம்தான் குறி என்றான பின் தேசமாவது, பற்றாவது! மிலோ மூலமாக, போர் சார்ந்த பொருள்கள் தயாரிப்பின் வணிகமய வலைப் பின்னலை அறிய முடிகிறது என்று ஒரு வாசகர் பதிவிட்டிருக்கிறார். லாபத்திற்கான பீடத்தில் பலியிடப்படுகிறவர்கள் உயிருக்கு அஞ்சாத வீரர்களும், சண்டையில் மாட்டிக்கொள்ளும் பொதுமக்களும். நடப்பதையெல்லாம் கண்டு மனம் நோகிற யோசாரினிடம் யாரோ கடவுளின் சித்தம் இது என்று சொல்கிறார்கள். கடவுளின் செயல்கள் சாமானியமாகப் புரிந்துகொள்ள முடியாதவையாகப் புதிராகத்தான் இருக்கும் என்றும் கூறுகிறார்கள். ஆவேசமடையும் யோசாரின் இவ்வாறு பேசுகிறான்: “கடவுள் புதிரான வழிகளில் செயல்படுகிறார் என்று என்னிடம் சொல்லாதீர்கள். அதில் புதிர் ஒன்றுமில்லை. கடவுள் எந்த வேலையும் செய்யவில்லை. அவர் விளையாடுகிறாராக இருக்கும் நம்மை முற்றிலும் மறந்துவிட்டாராக இருக்கும் – கிராமத்தில் ஒரு மந்தமான, குழப்பமான, அறிவில்லாத, ஆணவம் பிடித்த, முரட்டுத்தனமான பண்ணையார் போல.” தன்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறவர்களிடம் தொடர்ந்து பேசுகிறான்: “நல்ல கடவுள் தனது படைப்பின் உடலில் சளி, பல் சிதைவு போன்ற தொந்தரவுகளை ஏன் சேர்க்க வேண்டும்? வயதானவர்களுக்கு மலத்தை கட்டுப்படுத்தும் சக்தியை அவர் ஏன் பறித்தார்? அவர் ஏன் வலியை உருவாக்கினார்? ஓ, வலியின் வாயிலாகவே ஆபத்தைப் பற்றி எச்சரிக்கிறாரா? அதற்குப் பதிலாக அவர் ஏன் ஓர் அழைப்பு மணியைப் பொருத்தியிருக்க முடியாது? ஆபத்து வரும்போது அவருடைய வானக கீதங்களில் ஒன்றை ஏன் ஒலிக்கச் செய்யக்கூடாது? ஒவ்வொருவரின் நெற்றியின் நடுவில்நீலம் சிவப்பு நியான் விளக்குகள் எரிந்து எச்சரிக்கிற அமைப்பை ஏன் பயன்படுத்தியிருக்க முடியாது? ஒரு ஜூக்பாக்ஸ் தயாரிப்பாளர் கூட இதைச் செய்திருக்க முடியும் என்றால் கடவுளால் ஏன் முடியவில்லை? ஒரு வேலையை சரியாகச் செய்ய அவருக்கு இருந்த வாய்ப்பையும் சக்தியையும் கருத்தில் கொண்டு பார்க்கிறபோது, அதற்கு பதிலாக அவர் உருவாக்கிய முட்டாள்தனமான, அருவருப்பான குழப்பங்கள்தான் கண்ணில் படுகின்றன. அவருடைய முழுமையான திறமையின்மை மலைத்துப்போய் நிற்க வைக்கிறது. …” தப்பியோடிய யோசாரின் போரால் சிதைந்த இத்தாலிய நகரம் ஒன்றில் நடந்து செல்லும் காட்சியைபற்றி இவ்வாறு எழுதுகிறார் ஜோசப் ஹெல்லர்: “யோசாரியன் அங்கிருந்து விலகிச் செல்ல வேகத்தை அதிகரித்தான், கிட்டத்தட்ட ஓடினான். இரவு திகில்களால் நிறைந்திருந்தது. மேலும், கிறிஸ்து உலகெங்கும் நடந்து சென்றபோது எப்படி உணர்ந்திருப்பார் என்று அவன் நினைத்துப் பார்த்தான் – பித்தர்கள் நிறைந்த மருத்துவமனையில் ஒரு மனநல மருத்துவர் நடப்பது போல, கொள்ளையர்கள் நிறைந்த சிறைக்குள் பாதிக்கப்பட்ட ஒருவன் நடப்பது போல! ஒருவரும் எஞ்சியிராத ஊரில் ஒரு தொழுநோயாளி எதிரே வந்தால் கூட எவ்வளவு வரவேற்புக்குரியவராக இருப்பார்!” ஜோசப் ஹெல்லர் ஜோசப் ஹெல்லர் (Joseph Heller) நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளினில் கான் ஐலேண்டில் ரஷ்யாவிலிருந்து வந்த ஏழை யூதப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர் எழுத்தாளர் ஜோசப் ஹெல்லர். இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்க விமானப்படையில் குண்டுவீச்சு விமானியாகப் பணியாற்றியவர். போருக்குப் பிறகு ஆங்கிலம் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார். ஆசிரியராகவும், ஒரு விளம்பர நிறுவனத்தில் படியெடுப்பு எழுத்தராகவும் வேலை செய்தவர். “சம்திங் ஹேப்பண்டு”, “குட் அஸ் காட்”, “குளோசிங் டைம்” உள்ளிட்ட அவரது நாவல்களும் புகழ்பெற்றவை. அத்தனை புத்தகங்களும் அரசியல், சமூக நிலைமைகளையும் அதிகாரத்துவத்தையும் எள்ளி நகையாடுபவைதான் என்று தெரியவருகிறது. தொடக்கத்தில் பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ‘கேட்ச்-22’ (Catch-22) பின்னர் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதன் அடுத்த பாகமாகவே “குளோசிங் டைம்” நாவலை எழுதினார் என்று கூறப்படுகிறது. புத்தகம் வெளியானபோது விற்பனை மந்தமாகவே இருந்தது. இன்று, உலகில் அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்று என்ற இடத்தைப் பிடித்திருக்கிறது. திரைப்படமாகவும், வலைத்தொடராகவும் வந்து ஏராளமானோரிடம் சென்றடைந்திருக்கிறது.. https://bookday.in/books-beyond-obstacles-13-joseph-hellers-novel-catch-22-based-article-written-by-a-kumaresan/
  15. வாகரை பனிச்சங்கேணியில் பிள்ளையானின் 50 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் 50 ஆவது பிறந்த தினம் வாகரை பனிச்சங்கேணியில் பல்வேறுபட்ட நிகழ்வுகளுடன் இன்று கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வுகளை கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வி, கலை, கலாசாரப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப் பொருளில் இரத்தான நிகழ்வு நடைபெற்றது. பலர் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர். அத்துடன் பனிச்சங்கேணி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூசையும் அன்னதான நிகழ்வும் நடைபெற்றது. குறிப்பாக அவரது 50 ஆவது அகவையினை முன்னிட்டு ஆதாரவாளர்களால் 50 மண் பானைகளில் பொங்கலிட்டு சுவாமிக்கு படைத்து வழிபட்டனர். இதன்போது அவரது கட்சியின் தற்போதைய தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான திரவியம் கட்சியின் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினருமான பிரசாந்தன், வாகரை பிரதேச சபை தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் மற்றும் கிழக்கு தமிழர் கூடட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். சிவநேசதுரை சந்திரகாந்தன் ஈஸ்டர் குண்டு தாக்குதல் மற்றும் கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தர் ரவிந்திரநாத்தின் படுகொலை தொடர்பாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.voiceofmedia.lk/14806
  16. சந்திப்பு "மிகவும் சிறந்தது" : புட்டினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்யவுள்ளதாக டிரம்ப் தெரிவிப்பு ! Published By: Priyatharshan 19 Aug, 2025 | 07:18 AM உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி மற்றும் ஏனைய ஐரோப்பிய தலைவர்களுடன் முன்னெடுக்கப்பட்ட சந்திப்பு "மிகவும் சிறந்ததாக" இருந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில், உக்ரைன் பாதுகாப்பு நிலைமை, ஐரோப்பிய நட்டு நாடுகளுடன் இணைந்த ஒத்துழைப்பு, உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான தற்போதைய பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தாம் தொலைபேசியில் உரையாடியதாகவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நேரடி சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் இந்த சந்திப்பு குறித்து கூறுகையில், "பல நல்ல விவாதங்களையும், நல்ல பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்தோம். பல வழிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன். மேலும், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், இரு தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பிற்கான ஏற்பாடுகளைத் ஆரம்பிக்குமாறு கூறியதாகவும் டிரம்ப் தெரிவித்தார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகள் குறித்து புட்டினுடன் கலந்துரையாட விரும்புவதாக டிரம்ப் கூறினார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப், ஜேர்மன் சான்சிலர் பிரீட்ரிக் மெர்ஸ் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பு உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்புக்கான ஒரு "வரலாற்று படி" என்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் மூலம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் – புட்டின் சந்திப்பு எப்போது, எங்கு நடைபெறும் என்பதற்கான விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், சர்வதேச சமூகம் இந்தச் சந்திப்பை ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222834
  17. தமிழகத்திலிருந்து இலங்கை ஏதிலிகளை திருப்பியனுப்பும் செயற்பாடு நிறுத்திவைப்பு 19 August 2025 தமிழகத்தில் இருந்து இலங்கையின் ஏதிலிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் நிறுத்தியுள்ளது. த ஹிந்து செய்தித்தாள் இந்த செய்தியைப் பிரசுரித்துள்ளது. தாம் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால், கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாகக் கூறும் தன்னார்வமாகத் திரும்புபவர்களுக்கான வசதியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து தெரிவித்துள்ளது. இலங்கைக்குத் திரும்பிச் சென்ற நிலையில் குடிவரவுச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் குறைந்தது நான்கு ஏதிலிகள், அண்மைக்காலங்களில் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ தரப்புக்களின் தகவல்படி, நாடு திரும்பிய 54 வயதான ஒருவர், 2025 ஆகஸ்ட் 12ஆம் திகதியன்று கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அதேபோன்று 2025 மே 28, மற்றொரு தமிழ் ஏதிலி யாழ்ப்பாணத்தில் தரையிறங்கிய பிறகு கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் முதல் வாரத்தில், ஐக்கிய நாடுகளின் உதவியில்லாமல் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய இலங்கை தமிழ் தம்பதியினரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 1996 முதல் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் ஏதிலிகள் முகாமில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் இலங்கையின் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்லுபடியாகும் கடவுச்சீட்டுக்கள் அல்லது பயண ஆவணங்கள் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டின் பேரில், தாமாக முன்வந்து நாடு திரும்பும் ஏதிலிகளை இலங்கை அதிகாரிகள் கைது செய்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. 2002 முதல், யுஎன்எச்சீஆர் என்ற ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் 18,643 இலங்கை தமிழ் ஏதிலிகளை, தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளது. இந்தநிலையில் தாமாக முன்வந்து நாடு திரும்பும் ஏதிலிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதே தற்போதைய நடவடிக்கைக்கான காரணம் என்று ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. பொதுவில், இன மோதலில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகப் பயந்து ஏதிலிகள் நாட்டை விட்டு வெளியேறியதால் குடியேற்றச் சட்டங்களை மீறுவது மன்னிக்கப்படுகிறது என்றும் அந்த உயர்ஸ்தானிகரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விடயம், இராஜதந்திர வழிகளில் பரிசீலிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். குடியேற்ற விதிகளை மீறியதற்காக இலங்கை ஏதிலிகள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்றும், கண்ணியத்துடன் நடத்தப்படுவார்கள் என்றும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து உத்தரவாதம் கிடைக்கும் வரை, அவர்களை திருப்பி அனுப்பும் செயல்முறை நிறுத்தி வைக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார். https://hirunews.lk/tm/415305/repatriation-of-sri-lankan-nationals-from-tamil-nadu-suspended
  18. உக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா உதவும் – ட்ரம்ப் உறுதி! உக்ரேனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு ஒப்பந்தத்திலும் உக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா உதவும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (18) ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் தெரிவித்தார். இருப்பினும் எந்த உதவியின் அளவு உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை (15) அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை ட்ரம்ப் சந்தித்த சில நாட்களுக்குப் பின்னர், ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளின் குழுவை வரவேற்ற வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு அசாதாரண உச்சிமாநாட்டின் போது ட்ரம்ப் இந்த உறுதிமொழியை அளித்தார். சந்திப்பின் பின்னர், “பாதுகாப்பைப் பொறுத்தவரை, நிறைய உதவிகள் இருக்கும்,” என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். ஐரோப்பிய நாடுகள் இதில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த வாக்குறுதியை “ஒரு பெரிய முன்னேற்றம்” என்று ஜெலென்ஸ்கி பாராட்டினார். திங்கட்கிழமை சந்திப்புகளுக்குப் பின்னர் ஒரு செய்தியாளர் சந்திப்பில், பாதுகாப்பு உத்தரவாதத்தின் ஒரு பகுதி அமெரிக்காவிற்கும் உக்ரேனுக்கும் இடையே $90 பில்லியன் (£67 பில்லியன்) ஆயுத ஒப்பந்தத்தை உள்ளடக்கும் என்றும் ஜெலென்ஸ்கி கூறினார். இதில் உக்ரேனிடம் இல்லாத அமெரிக்க ஆயுதங்களும் அடங்கும், அவற்றில் விமான அமைப்புகள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளடங்கும். கியேவிற்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் 10 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1443584
  19. கொட்டாஞ்சேனை மாணவி அம்சிகாவின் வழக்கு செப்டெம்பர் மாதம் ஒத்திவைப்பு! 2025-05-15 கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்து வந்த பாடசாலை மாணவி அம்சிகா, கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதியன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மாணவி, ஏற்கனவே பாடசாலை ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்ததாக கூறி தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் பொலிசார் தெரிவித்துள்ளனர். இதேவேளை மாணவின் மரணம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு வரும் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் கொழும்பு வடக்கு பிரிவின் பொறுப்பதிகாரி, இந்த சம்பவம் தொடர்பாகக் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதன்போது சிசிடிவி காட்சிகள் மேலதிக ஆய்வுக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன எனவும், விசாரணை அறிக்கைகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் நேற்று மன்றில் தெரிவித்திருந்தனர். இச் சம்பவம் தொடர்பாக பலரது வாக்குமூலங்களை பதிவு செய்யும் பணி நடைபெற உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும் ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு, நீதவான் இந்த விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443624
  20. புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தும் அநுர அரசு - விமல் வீரவன்ச கருத்து! அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதுடன் இவர்களை மகிழ்விப்பதற்காக மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்கும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர கொண்டு வந்த இலங்கை மின்சாரசபை சட்டத்தை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தது. மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கவாதியான கடுவலை மாநகர சபையின் தற்போதைய மேயர் ரஞ்சன் ஜயலால் சட்டவரைபை தீ வைத்து கொளுத்தினார். கஞ்சன விஜேசேகர கொண்டு வந்த சட்டத்தில் போலியான திருத்தங்களை செய்து அண்மையில் இலங்கை மின்சாரசபை சட்டவரைபு நிறைவேற்றப்பட்டது. அன்று எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இன்று முழுமையான ஆதரவளித்துள்ளார்கள். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இவ்விடயம் தொடர்பில் ஏதும் பேசுவதில்லை. அண்மையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மின்சாரசபை சட்டத்தினால் இலங்கையின் மின்சாரம் மற்றும் வலுசக்தித்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்படும். வலுசக்தி துறையின் சுயாதீனத்தை பிற நாடுகளுக்கு விட்டுக்கொடுத்து நாட்டின் இறையாண்மையை அரசாங்கம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. பிரிவினைவாத கொள்கை கொண்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. இவர்களை மகிழ்விப்பதற்காக எதிர்வரும் ஆண்டு முதல் காலப்பகுதியில் மாகாண சபைத்தேர்தலுக்கான அறிவிப்பை அரசாங்கம் விடுக்கும். மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டால் நாட்டில் தேவையில்லா பிரச்சினைகள் ஏற்படும். அண்மையில் நிறைவேற்றப்பட்ட மின்சார திருத்தச் சட்டத்தால் வலுசக்தி துறையின் தனியுரிமை கூறாக்கப்படும் என்றார். https://newuthayan.com/article/புலம்பெயர்_தமிழர்களை_திருப்திப்படுத்தும்_அநுர_அரசு_-_விமல்_வீரவன்ச_கருத்து!
  21. ஹர்த்தால் வெற்றியே என்கிறார் சுமந்திரன்! adminAugust 19, 2025 யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சுமந்திரன், வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு கோரிக்கையை முன் வைத்து ஹர்த்தாலுக்கு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று வடக்கு கிழக்கில் பெரும்பாலான இடங்களில் ஹர்த்தலுக்கு ஆதரவு கிடைத்திருந்தது. யாழ்ப்பாணத்தில் குறிப்பாக யாழ், நகர் பகுதியில் மாத்திரமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தது. அவர்கள் ஆதரவு வழங்காதது மன வருத்தமே … வடக்கு கிழக்கு முழுவதும் மக்களை ஒன்றிணைந்து போராட்டம் நடாத்த கூடிய கட்சியாக தமிழரசு கட்சியே உள்ளது. அந்த வகையில் நாம் ஹர்த்தலுக்கு அழைப்பு விடுத்தோம். அது வெற்றியை தந்துள்ளது. எமது ஹர்த்தால் அறிவிப்பு வந்தவுடனையே ஜனாதிபதி , அமைச்சர் பிமல் உள்ளிட்டவர்கள் எம்மை தொடர்பு கொண்டு பேசி இருந்தனர். முத்துஐயன்கட்டு இராணுவ முகாமை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறினார்கள். இதுவே வெற்றி. வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் அவர்கள் மக்களுடன் மக்களாக இருக்க முடியாது. தெற்கில் இராணுவ முகாம்கள் உள்ளன. அங்கு அவர்கள் இராணுவ முகாம்களுக்குள் முடங்கி காணப்படுவார்கள். ஆனால் வடக்கு கிழக்கில் அந்த நிலைமை இல்லை. அவர்கள் மக்களோடு மக்களாக , மக்களின் இயல்வு வாழ்வில் தலையீடு செய்கின்றனர். பாடசாலைகள் , தனியார் காணிகள் , ஏன் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றுக்கு சொந்தமான காணியை கூட கையகப்படுத்தி அதில் நிலைகொண்டுள்ளனர். அதனால் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும். இந்த ஹர்த்தால் ஒரு அடையாள போராட்டமே. இனிவரும் காலங்களில் இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம். வடக்கு – கிழக்கில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் தமிழரசு கட்சியின் கட்டுப்பாட்டிலையே உள்ளன. அதனால் , அந்த அந்த பிரதேசங்களில் மக்களை ஒன்றிணைந்து , அந்த பிரதேசங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளோம். பருத்தித்துறை நீதிமன்றுக்கு சொந்தமான காணியில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்ற கோரி, பருத்தித்துறை நகர சபை நகர பிதாவின் அழைப்பில் போராட்டம் நடைபெறவுள்ளது. அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றாலும் அந்த போராட்டத்திற்கு தமிழரசு கட்சி பூரண ஆதரவை வழங்கும். வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார். அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் .சி.வி.கே. சிவஞானம் கருத்து தெரிவிக்கையில், முத்துஐயன்கட்டு இளைஞன் கொலையானதும், இளைஞன் தொடர்பாகவும் சில விமர்சனங்கள் உள்ளன அவை எமக்கும் தெரியும். ஆனால் இதனை இராணுவ மயமாக்கலுக்கு எதிரான சுட்டியாக கொண்டே நாம் ஹர்த்தலுக்கு அழைப்பு விடுத்தோம். இங்கு நோக்கம் இராணுவ மயமாக்கலை எதிர்ப்பது. எனவே நோக்கம் சரியாக இருப்பின் ஹர்த்தலுக்கு ஆதரவு வழங்க வேண்டும். அதற்கு யார் அழைப்பு விடுத்தார்கள். யார் செய்கிறார்கள் என ஆராயாமல் ஆதரவு வழங்க வேண்டும். இங்கே ஒற்றுமை ஒற்றுமை என கூறி திரிபவர்கள் இந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நாம் நோக்கம் சரியாக இருந்தால் அதற்காக ஆதரவு கொடுப்பவர்கள். அவ்வாறு ஆதரவு கொடுத்து சென்றாலும் எங்களை துரத்துவதில் குறியாகவே உள்ளனர். அது தெரிந்தும் நோக்கம் சரியாக உள்ள போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம். போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளோம் என மேலும் தெரிவித்தார். P2P போராட்டத்தின் நாயகர்கள் நாமே .. யாழில்.சுமந்திரன் தெரிவிப்பு. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் நாயகர்களே நாங்கள் தான் என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, கடந்த காலங்களில் சுமந்திரன் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளதாக கேள்வியெழுப்பிய போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பலருக்கு ஞாபக மறதிகள் இருக்கலாம், அல்லது தமது அரசியலுக்காக ஞாபகம் இருந்தும் மறந்து போனது போல குற்றச்சாட்டுக்களை கூறலாம் நாம் கடந்த காலங்களிலும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடாத்தி இருந்தோம். வலி . வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க கோரி போராட்டங்களை முன்னெடுத்தோம். காணி சுவீகரிப்பு எதிராக சட்ட போராட்டங்களையும் முன்னெடுத்தோம். தற்போதும் அந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன. பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரி கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டையில் உள்ள மஹிந்த ராஜபக்சேயின் சொந்த ஊரான தங்காலை வரையில் பேரணி சென்றோம். பேரணிக்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாகனத்தை காலி முகத்திடலில் வைத்து பொலிஸார் கடத்தி சென்றனர். அதனை போராடி மீட்டே எமது பேரணியை முன்னெடுத்தோம். P2P என அழைக்கப்பட்ட பொதுவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தை முன்னின்று பொலிகண்டி வரையில் கொண்டுவந்து சேர்ந்தது நாமே. அன்றைக்கு சுமந்திரனும் , சாணக்கியனும் இல்லை என்றால் போராட்டம் பொத்துவிலுடன் முடிக்கப்பட்டு இருக்கும் என அன்றே பலர் ஊடக சந்திப்புக்களில் கூட கூறியிருந்தார்கள். நாங்கள் தான் பொலிஸ் தடைகளை உடைத்து பொலிகண்டி வரை பேரெழுச்சியாக பேரணி சென்றடைய முன்நின்றோம். அதற்காக பொலிஸ் விசாரணைகளை கூட எதிர்கொண்டோம். இந்த ஹர்த்தால் கூட ஒரு அடையாள போராட்டமே. வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் முற்றாக அகற்றப்படும் வரையில் நாம் தொடர் போராட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுப்போம் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/219445/
  22. ஒரு முகப்பட வேண்டிய சூழல் August 16, 2025 — கருணாகரன் — முல்லைத்தீவு – முத்தையன்கட்டில் இராணுவத்தினரோடு ஏற்பட்ட பிரச்சினையில் கபில்ராஜ் என்ற இளைஞர் மரணமடைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடையடைப்புப் போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரவைத் தெரிவித்துள்ளது. பொது அமைப்புகளும் தமது ஆதரவை வழங்குவதாகத் தெரிகிறது. இதற்கான முழுமையான ஆதரவை எல்லோரும் வழங்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் கோரியுள்ளார். சிவஞானத்தின் கோரிக்கை, வடக்குக் கிழக்குப் பகுதிகளில் மக்கள் வாழிடங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை விலக்க வேண்டும் என்பதேயாகும். அதற்கு அவர் இந்தக் கொலைச் சம்பவத்தோடு ஒரு மக்கள் எழுச்சியைக் கோருகிறார். இதே கருத்துப்படத்தான் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இந்தப் போராட்டம் தொடர்பாக பொது அமைப்புகளுடன் பேசிய தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன், “இராணுவம் அல்லது படையினர், மக்கள் வாழிடங்களில் நிலைகொண்டிருப்பதால்தான் இந்த மாதிரியான சம்பவங்களும் பிறழ்வு நடவடிக்கைகளும் உருவாகுவதற்கான சூழல் ஏற்படுகிறது. அத்துடன், அரசியல் தீர்வைப் பற்றி ஆட்சியாளர்கள் சிந்திக்காமல் இருப்பதற்கும் அதைத் தவிர்ப்பதற்கும் படைகளின் நிலை கொள்ளல் (படை ஆதிக்கம்) பிரதானமான காரணமாக உள்ளது. மக்களுடன் படைகளை நெருக்கமடைய வைப்பதன் மூலம் இராணுவப் பிரசன்னத்தை அல்லது படைகள் நிலைகொள்வதை நியாயப்படுத்துவதற்கு அரசு முயற்சிக்கிறது. நீண்ட காலமாக மக்கள் வாழிடங்களில் படையினர் இருக்கும்போது மக்களுக்கும் படையினருக்குமிடையில் பல வழிகளிலும் உறவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். சந்தை, கடை, அலுவலங்கள், வழி, தெரு எனச் சகல இடங்களிலும் படையினர் புழங்கும்போது மக்களுக்கும் படையினருக்குமிடையில் உறவு ஏற்படும். இது படையினரின் பிரசன்னத்தை (இராணுவ மேலாதிக்கத்தை) பற்றிய தெளிவின்மையை மக்களிடத்திலே ஏற்படுத்தும்“ என்ற அடிப்படையில் இந்த விடயத்தைப் பார்க்க வேண்டும் என்ற சாரப்படக் கூறியுள்ளார். ஆக, இந்தக் கடையடைப்புப் போராட்டம், இராணுவத்தை அல்லது படைகளை விலக்குவதையே பிரதானமாகக் கொண்டுள்ளது. அது ஒரு முக்கியமான விடயமே. யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த பிறகும் அரசியற் தீர்வைப் பற்றி நேர்மையாகச் சிங்களத் தரப்புகள் பேசவில்லை. சிந்திக்கவில்லை. அதற்காக முயற்சிக்கவே இல்லை. பதிலாக படை மேலாதிக்கத்தின் மூலமாக வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்களைக் கையாளலாம் என்று அரசு சிந்திக்கிறது. உண்மையும் அதுதான். படைமேலாதிக்கத்தில் ஆட்சியாளர்களுக்கு உள்ள நம்பிக்கையே அரசியற் தீர்வைப் பற்றிய அக்கறையின்மையாகும். 2009 க்கு முன்னர் இராணுவத்தினரைக் குறித்து மக்களிடம் இருந்த உணர்வு வேறு. இப்பொழுது உள்ள உணர்வு வேறு. அப்பொழுது படையினரைக் குறித்த அச்சமே அனைவரிடத்திலும் இருந்தது. படைகளுக்கும் அப்படித்தான். அவர்கள் எல்லோரையும் சந்தேகித்தனர். ஆக இரண்டு தரப்புக்குமிடையில் இடைவெளி இருந்தது. இந்த இடைவெளியை இல்லாதொழிக்கவே அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இதற்காக அது படையினரைப் பொது அரங்கில் இறக்கியுள்ளது. உணவுக் கடைகள், சலூன்கள், தையற்கடை போன்றவற்றைப் படையினர் நடத்துகிறார்கள். மட்டுமல்ல, மக்களுடைய காணிகளை அபகரித்து, அங்கே மரக்கறி உற்பத்தி செய்து சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். தென்னைப் பயிர்ச்செய்கை, நகர அழகு படுத்தல், சிரதானங்கள், இரத்ததானம் செய்தல் என சனங்களோடு ஐக்கியமாகும் உபாயங்களைச் செய்து கொண்டிருக்கின்றனர். சில இடங்களில் வறிய மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கிறோம் என்ற பேரில் சில வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. விளையாட்டுக் கழகங்கள் சிலவற்றுக்கு சில உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இப்படி எந்தெந்த வகையில் சனங்களுக்குள் ஊடுருவ முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டுள்ளனர். இதையெல்லாம் படைத்தரப்பு தன்னிச்சையாகச் செய்யவில்லை. இதற்குப் பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல் உண்டு. அதைக் குறித்தே நாம் தொடர்ந்து பேசி வந்திருக்கிறோம். இப்போது – இந்தச் சந்தர்ப்பத்திலும் பேச வேண்டியுள்ளது. மக்களுடன் படைகள் பல வகையிலும் உறவாடும்போது ஒரு நெருக்கமான உணர்வு மக்களுக்கு ஏற்படும். அவர்கள் பிறகு படையினரை ஒரு மேலாதிக்கச் சக்தியாகப் பார்க்க மாட்டார்கள் என்று அரசாங்கம் எண்ணுகிறது. இதில் அரசாங்கம் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது. ஏனென்றால் கிராமங்களில் உள்ள சாதாரண மக்கள் மட்டுமல்ல, படித்தவர்கள், அரசியல் செயற்பாட்டில் உள்ளவர்கள், இலக்கியத் துறையில் இயங்குகின்றவர்கள், வணிகர்கள் எனப் பலரும் படைத்தரப்போடு தனிப்பட்ட ரீதியிலும் பழகும் அளவுக்கும் உறவை வளர்த்துக் கொள்ளும் அளவுக்கும் நிலைமை வளர்ச்சி அடைந்துள்ளது. சில இடங்களில் கொண்டாட்டங்களில் படையினர் கலந்து கொள்ளும் அளவுக்கு இது உயர்ந்துள்ளது. மட்டுமல்ல, குடிவிருந்து கூட நடக்கிறது. இதையெல்லாம் சரியென்று விமல் வீரவன்ஸ கூடச் சொல்ல முடியாது. ஏனென்றால், படைகளின் வேலையே வேறு. தேசிய பந்தோபஸ்தில் (தேசிய பாதுகாப்பில்) இவை பற்றி எந்த வாக்கியமும் இல்லை. அல்லது யுத்த காலத்தில் படைகள் இந்த மாதிரிப் பணியாற்றியிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் பல ஆயிரம் பேர் உயிர் தப்பியிருப்பார்கள். அதில் பல ஆயிரம் படையினரும் இருந்திருப்பார்கள். யுத்தத்திற்குப் பிறகு, படையினர் செய்திருக்க வேண்டியது மீள்நிலைப்படுத்துதலை. அப்படியென்றால், அவர்கள் பழைய நிலைகளுக்குத் திரும்புவதைச் செய்திருக்க வேண்டும். கூடவே உடைந்த – அழிக்கப்பட்ட ஊர்களையும் கட்டிடங்களையும் மீள்நிலைப்படுத்தியிருக்கலாம். அதைக் கூடத் தனியாகச் செய்திருக்க்க் கூடாது. குறித்த பிரதேசங்களின் மக்கள் பிரதிநிதிகள், மக்கள் அமைப்புகள், அரசாங்கத் திணைக்களங்களின் திட்டம், தீர்மானம் போன்றவற்றை நிறைவேற்றும் ஒரு தரப்பாக இருந்து அந்தப் பணிகளைச் செய்திருக்கலாம். அப்படி நடக்கவே இல்லை. இப்பொழுது நடப்பதோ எதிர்மாறான சங்கதிகள். அரசாங்கம் செய்திருக்க வேண்டியது மீளமைப்பை. இயல்பு வாழ்க்கையில் மக்கள் முழுமையாக ஈடுபடக் கூடிய சூழலை உருவாக்கியிருக்க வேண்டும். அரசியல் தீர்வை எட்டியிருக்க வேண்டும். அரசியல் தீர்வு எட்டப்பட்டிருந்தால் படைகள் ஊர்களில் இருக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது. ஆக அடிப்படையிலேயே தவறு நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய பின்னணியில் – காரணங்களின் அடிப்படையில்தான் இந்தப் பிரச்சினையையும் இந்தப் போராட்டத்தையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. தமிழரசுக் கட்சி ஹர்த்தாலை அறிவித்தவுடன் அதற்கு சில இடங்களில் மாற்று நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இணையத் தளங்களிலும் இதைக் குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏன் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே சில கறுப்பாடுகள் எதிர் நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக முத்தையன்கட்டில் கொலையான கபில்ராஜின் மரணம் தொடர்பாகப் பல விதமான கதைகள் (கருத்துகள்) உண்டு. அதை விட அது ஒரு தனிப்பட்ட விவகாரம். படையினரில் சிலருக்கும் கபில்ராஜ் மற்றும் நண்பர்களுக்கும் இடையில் நடந்த கொடுக்கல் வாங்கல், மதுப் பரிமாற்றம், முகாமைக் காலி செய்யும்போது மிஞ்சும் பொருட்களை எடுத்தல் அல்லது கையகப்படுத்தல் போன்றவற்றினால் ஏற்பட்ட விளைவு என்று சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் உண்மையாக இருக்கலாம். ஆனாலும் இதனால் நடந்திருப்பது ஒரு மரணம். இப்படியெல்லாம் படைத்தரப்போடு உறவு வைத்துக் கொள்ளும் அளவுக்குத்தான் நிலைமை உள்ளது என்பதை இந்தக் கட்டுரை வாதிட்டதை இந்தக் கொலை அல்லது மரணம் நிரூபிக்கிறது; ஒப்புக்கொள்கிறது; உண்மை என ஏற்றுக்கொள்கிறது. இந்த இடத்தில் ஒரு கேள்வியை எழுப்ப வேண்டும். 2009 க்கு முன்பு இந்த மாதிரி படைத்தரப்புக்கு மதுவை வாங்கிக் கொடுப்பதற்கு யாராவது முன்வருவார்களா? அல்லது, படையினர்தான் சந்தேகமில்லாமல் அதை வாங்கிப் பருகுவார்களா? அப்பொழுது படைமுகாம்களில் யாராவது திருடவோ பொருட்களை எடுக்கவோ செல்வார்களா? செல்ல முடியுமா? அதற்குப்படையினர் அனுமதிப்பார்களா? ஆகவே இதைக் குறித்தெல்லாம் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். சமூகத்தைப் பிளவு படுத்தும் உத்தியில் அரசு திட்டமிட்டுச் செயற்படுகிறது. அதன் ஓரம்சமே இதுவும். இனி தமிழரசுக் கட்சியின் ஹர்த்தாலுக்கு வருவோம். ஹர்த்தால், ஊர்வலம், பாராளுமன்றத்தில் முழக்கம், தேர்தல் மேடைகளில் ஆவேசம், அரசியல் பத்திகளில் கண்டனம் போன்றவற்றினால் அரசியல் தீர்வோ, மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளோ கிடைக்கும் என்பது பொய்யென நிரூபிக்கப்பட்டாயிற்று. வடக்குக் கிழக்கை மையப்படுத்தி நடத்தப்படும் போராட்டங்களால் எந்தப் பயனுமில்லை. இதற்கு உதாரணம் அறகலய. அது கொழும்பில் நடத்தப்பட்டது. அரசாங்கத்தை முடக்கும் விதமாக நடத்தப்பட்டது. பல்வேறு தரப்புகளையும் பல தரப்புச் சக்திகளையும் ஒருங்கிணைத்து அல்லது அவற்றின் ஆதரவோடு நடத்தப்பட்டது. அதுதான் அந்தப் பெரிய வெற்றியை ஈட்டுவதற்குக் காரணமாகியது. வடக்கு கிழக்குக்கு மட்டுமான பிரச்சினைக்கு எப்படிக் கொழும்பில் ஆதரவைத்திரட்ட முடியும்? என்ற கேள்வியை யாரும் எழுப்பலாம். வடக்குக் கிழக்குப் பிரச்சினை என்பது வடக்குக் கிழக்குக்கு மட்டுமான பிரச்சினை இல்லை. அது முழு நாட்டுக்குமான பிரச்சினை என்பதை கடந்த கால வரலாற்று அனுபவம் சொல்கிறது. ஆகவே, அதைக்குறித்த புரிதல் உள்ள சக்திகளோடு இணைந்து எல்லோருக்கும் சொல்ல வேண்டும். நடத்தப்படும் போராட்டத்தை அரசு உணரக் கூடிய பொறிமுறை – இடம் போன்றவற்றைப் பற்றிச் சிந்திப்பது அவசியம். அதைக்குறித்து நாம் பேச வேண்டும். உரையாட வேண்டும். அதற்கு முன் சரியோ, தவறோ, தன்னுடைய பாரம்பரிய முறைமையின்படி தமிழரசுக் கட்சி இந்தப் போராட்டத்தை அறிவித்து விட்டது. அதைப் பலவீனப்படுத்தாமல் முழுமையாக்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் மனோ கணேசன் போன்றவர்களும் பேசியிருக்கிறார்கள். எதிர்காலப் போராட்டங்களைப் பற்றி புதிதாகச் சிந்திப்போம். அதற்கான உரையாடல்களை விரிந்த தளத்தில் செய்வோம். ஏனென்றால், குழுக்களாகச் செயற்படும் காலம் முடிவுக்கு வருகிறது. அதனால் எந்தப் பயனுமில்லை என்பதை அனுபவங்கள் சொல்கின்றன. பல தரப்பும் இணைந்து ஒருமுகப்பட்டுச் சிந்திப்பதும் செயற்படுவதுமே இன்று வேண்டப்படுவது. அதைச் செய்யும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இங்கே இப்பொழுது நடந்து கொண்டிருப்பது கட்சிகளுக்கிடையிலான முதன்மைப்போட்டியே தவிர, மக்களுக்கான அரசியல் விளைவுகளல்ல. என்பதால்தான் ஒரு கட்சி எடுக்கும் முயற்சியை மறு தரப்புகள் விமர்சிப்பதும் நிராகரிப்பதும் நடக்கிறது. இந்தப் பண்பு – பழக்கம் மாற வேண்டும். சரி பிழைகளுக்கு அப்பால் ஒரு தரப்பின் அறிவிப்பை மறுதரப்பு மறுதலிக்காமல் இருக்கலாம். இப்படித்தான் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்திலும் தவறுகள் இழைக்கப்பட்டன. https://arangamnews.com/?p=12257
  23. வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து! பெண் உட்பட இருவர் பலி பலரது நிலை கவலைக்கிடம் August 18, 2025 8:55 am வவுனியா ஓமந்தை ஏ9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தமையுடன் 13பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலகுரக வாகனம் வவுனியா ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுவிபத்திற்குள்ளாகியது. விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 15ற்கும் மேற்ப்பட்டோர் பயணித்துள்ளனர். விபத்தினால் வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கிவீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்திருந்தனர். மேலும் இலகுரக வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகிய பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கனரக வாகனம் குறித்த பட்டா ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. இதன்போது வீதியால் பயணித்த பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் உட்பட இருவர் உயிரிழந்தமையுடன் 13பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெண்கள் , சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர் உயிரிழந்தவர்கள் முல்லைத்தீவு விசுவமடு பகுதியை சேர்ந்த யாழினி வயது33, சுயன் வயது 30 என்று தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த அனைவரும் ஒரே குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டியில் இடம்பெற்ற மரணவீடு ஒன்றிற்கு சென்று விட்டு மீண்டும் விசுவமடு நோக்கிப்பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதேவேளை படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து தொடர்பாக வவுனியா ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். https://oruvan.com/fatal-accident-in-omanthai-vavuniya-two-people-including-a-woman-killed-many-in-critical-condition/
  24. பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள் August 18, 2025 10:33 am வடக்கு மற்றும் கிழக்கில் இன்று முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளும் வழமைப் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இன்றையதினம் (18) கடையடைப்பு போராட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வழமை போல் அனைத்து செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது. வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக இன்றையதினம் வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அதற்கு இணையாக பலரும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தனர். இதனையடுத்து, கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளும் நேரத்தை மட்டுப்படுத்தி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் நேற்றையதினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தும் அனைத்து செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது. இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை , சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள் வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது. இப்பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்துள்ள போதிலும் கற்றல் செயற்பாடு இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. மாவட்டத்தில் வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது. பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம், உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து வழமை போன்று செயற்பாட்டில் ஈடுபட்டனர். அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸாருடன் இணைந்து கடற்படை இராணுவம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர். அத்துடன் கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழ உள்ள பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது. மேலும் வியாபார நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், பாடசாலைகள், மருந்தகங்கள், வங்கிகள், எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டடு வியாபாரம் இடம்பெற்றது. எனினும் சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/hartal-ends-in-chaos-business-as-usual-in-mullaitivu-and-ampara/
  25. கிழக்கில் மக்களின் பேராதரவுடன் இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக பூரண ஹர்த்தால் இடம்பெறுவதாக சாணக்கியன் அறிவிப்பு வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னாம் முடிவுக்கு வரவேண்டும்…!; வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் இன்றைய தினம் வடக்கு மற்றும் கிழக்கில் பூரண ஹர்த்தால் மக்களின் பேராதரவுடன் இடம்பெறுகின்றது. இதனை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஏற்பாடு செய்ததுடன் இதற்கான பாரிய ஆதரவினை ஆதரவினை பலர் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகம்..! என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது..! எமது மக்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என சாணக்கியன் M.P மேலும் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=337354

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.